தமிழ் உரை – அகநானூறு 121-300

மணிமிடை பவளம் 121–300

அகநானூறு 121, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
நாம் நகை உடையம் நெஞ்சே, கடும் தெறல்
வேனில் நீடிய வான் உயர்வழி நாள்,
வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத்
தொடு குழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணிச், 5
சேறு கொண்டாடிய வேறுபடு வயக்களிறு
செங்கோல் வால் இணர் தயங்கத் தீண்டிச்,
சொரி புறம் உரிஞிய, நெறி அயல் மராஅத்து
அல்குறு வரி நிழல் அசைஇ, நம்மொடு
தான் வரும் என்ப, தட மென் தோளி,  10
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண்குடைக்
கனை விசைக் கடு வளி எடுத்தலின், துணை செத்து
வெருள் ஏறு பயிரும் ஆங்கண்
கரு முக முசுவின் கானத்தானே.  15

பாடல் பின்னணி:  தலைவி உடன்வருவாள் எனத் தோழியின் மூலம் அறிந்த தலைவன், தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 

பொருளுரை:  நெஞ்சே!  நாம் நகை உடையேம்.  பகைவர்களைத் துன்புறுத்தும் மழவர்களின் தேர்ச் சக்கரங்கள் (ஆழிகள், உருளைகள்) படிந்து உண்டாக்கிய வழியில் செல்லும் மக்களின், சோற்றை உண்டு எறிந்த வெள்ளை பனை ஓலையால் செய்த குடைகளை, மிக்க விரைதலையுடைய சூறாவளிக் காற்று அம்பு போல் விரைந்து அலைத்ததால் எழுந்த ஒலியை, தன் துணையின் குரல் என்று எண்ணி அஞ்சிய ஆண் மான் அதை அழைத்திடும் இடத்தையுடைய, கரிய முகத்தையுடைய குரங்குகளையுடைய கானத்தின்கண்,

மிக்க காய்ந்த வேனில் காலம் நீடிய மிகவும் உயர்ந்த வழியில், நாள்தோறும் வறுமை மிக, குளிக்கும் நீராகிய சிறு குளத்தில் தோண்டப்பட்ட குழியில் உண்ணுதற்கு இயலாத கலங்கிய நீரால் கன்றினையுடைய தன் இளைய பிடியின் மெல்லிய தலையைக் கழுவி விட்டுச் சேற்றினை தன் மீது பூசிக்கொண்டு வேறுபட்ட வலிய ஆண் யானை, சிவந்த காம்பினை உடைய வெள்ளை மலர்க்கொத்துக்கள் அசையத் தன் தும்பிக்கையால் அதைப் பற்றித் தன் முதுகினைச் சொரிந்த, வழியின் அருகில் உள்ள கடம்ப மரத்தின் சுருங்கிய வரி வரியாக உள்ள நிழலில் தங்கி, பெரிய மென்மையான தோளையுடைய தலைவி நம்முடன் வருவாள் எனக் கூறுகின்றனர்.  

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘உடன் சேறல் செய்கையொடு அன்னவை பிறவும் மடம் பட வந்த தோழிக்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  ஆசிரியர் நச்சினார்க்கினியரும் இவ்விதிக்கே இச் செய்யுளை எடுத்துக்காட்டினர்.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘எள்ளல் இளமை’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 4) என்னுஞ் சூத்திரத்து, ‘நாம் நகையுடைமை நெஞ்சே நம்மொடு தான் வருமென்ப தட மென் தோளி’ என்பது பிறர் மடம் பொருளாக நகை தோன்றியது, என்றனர் பேராசிரியர்.  13வது அடியில் பாட வேறுபாடு – பழைய உரை – கன்மிசைக் கடுவளி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கனைவிசைக் கடுவளி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கணைவிசைக் கடுவளி.  வான் உயர் வழி (2) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மிக உயர்ந்த நெறி, பொ. வே. சோமசுந்தரனார் உரை– முகில்கள் பெய்யாது நீங்கிப்போன வழி.  உறுகண் மழவர் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பகைவர்க்குத் துன்பஞ் செய்யும் போர் மறவர்கள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வழிச்செல்வார்க்குத் துன்பத்தைச் செய்யும் மழவர்.  உருள் கீண்டிட்ட (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உருள் கிழித்துப் போகட்ட குடையினது கிழிகளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – உருள் கிழித்துச் சென்ற சுவடாகிய நெறியில்.  துணை செத்து (13) – வே. சோமசுந்தரனார் உரை – தன் பிணைமானை நினைந்து, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தனது பிணையினது குரலென எண்ணி.  ஒப்புமை – குறுந்தொகை 168 – மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை இரும் பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து, புறநானூறு 352 – பசுங்குடையான் புதன் முல்லைப் பூப்பறிக்குந்து, அகநானூறு 37 – பயில் இதழ்ப் பசுங்குடைக் கய மண்டு பகட்டின் பருகி, கலித்தொகை 23 – வேணீர் உண்ட குடை ஓரன்னர்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25). 

சொற்பொருள்:  நாம் நகை உடையம் – நாம் நகை உடையேம், நெஞ்சே – நெஞ்சே, கடும் தெறல் வேனில் நீடிய வான் உயர்வழி நாள் வறுமை கூரிய – மிக்க காய்ந்த வேனில் காலம் நீடிய மிகவும் உயர்ந்த வழியில் நாள்தோறும் வறுமை மிக, மண் நீர்ச் சிறு குளத் தொடு குழி மருங்கில் துவ்வாக் கலங்கல் கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணிச் சேறு கொண்டாடிய வேறுபடு வயக்களிறு – குளிக்கும் நீராகிய சிறு குளத்தில் தோண்டப்பட்ட குழியில் உண்ணுதற்கு இயலாத கலங்கிய நீரால் கன்றினையுடைய தன் இளைய பிடியின் மெல்லிய தலையைக் கழுவி விட்டுச் சேற்றினை தன் மீது பூசிக்கொண்டு வேறுபட்ட வலிய ஆண் யானை (தொடு – தோண்டப்பட்ட), செங்கோல் வால் இணர் தயங்கத் தீண்டிச் சொரி புறம் உரிஞிய – சிவந்த காம்பினை உடைய வெள்ளை மலர்க்கொத்துக்கள் அசையத் தன் தும்பிக்கையால் அதைப் பற்றித் தன் முதுகினைச் சொரிந்த, நெறி அயல் மராஅத்து அல்குறு வரி நிழல் அசைஇ – வழியின் அருகில் உள்ள கடம்ப மரத்தின் சுருங்கிய வரி வரியாக உள்ள நிழலில் தங்கி (மராஅத்து – கடம்ப மரம், – அளபெடை, அத்து சாரியை, Anthocephalus or Neolamarckiacadamba, Kadampam oak, அல்குறு – சுருங்கிய, அசைஇ – அளபெடை), நம்மொடு தான் வரும் என்ப – நம்முடன் தான் வருவாள் எனக் கூறுகின்றனர், தட மென் தோளி – பெரிய மென்மையான தோளையுடைய தலைவி, உறுகண் மழவர் உருள் கிண்டி இட்ட ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண்குடைக் கணை விசைக் கடு வளி எடுத்தலின் – பகைவர்களைத் துன்புறுத்தும் மழவர்களின் தேர்ச் சக்கரங்கள் (ஆழிகள், உருளைகள்) படிந்து உண்டாக்கிய வழியில் செல்லும் மக்களின் சோற்றை உண்டு எறிந்த வெள்ளை பனை ஓலையால் செய்த குடைகளை மிக்க விரைதலையுடைய சூறாவளிக் காற்று அம்பு போல் விரைந்து அலைத்ததால் எழுந்த ஒலியை, துணை செத்து வெருள் ஏறு பயிரும் ஆங்கண் கரு முக முசுவின் கானத்தானே – தன் துணையின் குரல் என்று எண்ணி அஞ்சிய ஆண் மான் அதை அழைத்திடும் இடத்தையுடைய கரிய முகத்தையுடைய குரங்குகளையுடைய கானத்தின்கண் (செத்து – எண்ணி, வெருள் – அச்சம், கானத்தானே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 122, பரணர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
இரும்பிழி மாரி அழுங்கல் மூதூர்
விழவு இன்றாயினும் துஞ்சாது ஆகும்,
மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின்,
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்,
பிணி கோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின்,  5
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்,
இலங்கு வேல் இளையர் துஞ்சின், வை எயிற்று
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்,
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின்,
பகலுரு உறழ நிலவுக் கான்று விசும்பின்  10
அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே,
திங்கள் கல் சேர்வு கனை இருள் மடியின்,
இல் எலி வல்சி வல்வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்,
வளைக் கண் சேவல் வாளாது மடியின்,  15
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்,
எல்லாம் மடிந்த காலை, ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே, அதனால்
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து
ஆதி போகிய பாய் பரி நன் மா  20
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல் முதிர் புறங்காட்டன்ன,
பல் முட்டின்றால் தோழி, நம் களவே.

பாடல் பின்னணி:  தலைவன் சிறைப்புறத்தானாகத் தன் இடையூறுகளை தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

பொருளுரை:  மழையைப் போன்று மிக்க கள்ளுடைய ஆரவாரத்தையுடைய பழைய ஊரானது, திருவிழா இல்லாவிட்டாலும் உறங்காது.  அங்குள்ள வளமான கடைவீதியும் வேறு தெருக்களும் அடங்கினாலும், வலிய ஒலியுடன் கூடிய கடிய சொற்களைக் கூறும் அன்னை உறங்க மாட்டாள்.  என்னை இறுக்கமாகப் பிடித்துக் காவல் காக்கும் அன்னை தூங்கினாலும், காவலாளிகள் உறங்காது சுற்றி வருவார்கள்.  ஒளியுடைய வேலையுடைய இளைய காவலாளிகள் தூங்கினாலும், வலது பக்கமாகச் சுருண்ட வாலையுடைய நாய்கள் குரைக்கும்.  ஒலிமிக்க நாய்கள் குரைக்காமல் தூங்கினாலும், பகலின் ஒளியினை ஒத்த நிலவினைத் தந்து வானத்தில் அகன்ற நிலா நின்று ஒளி வீசும்.  நிலா மலையை அடைந்து மிக்க இருள் தங்கினால், வீட்டில் உள்ள எலியைத் தின்னும் வலுவான வாயை உடைய ஆந்தையானது, பேய்கள் திரியும் இரவு நேரத்தில், அழிவு உண்டாகும்படிக் கூவும்.  பொந்தில் வாழும் அந்த ஆந்தைத் தூங்கினால், வீட்டில் உள்ள சேவல் மிகுதியான ஒலியை எழுப்பும்.  இவை எல்லாம் மடிந்த பொழுது, நிலைபெறாத நெஞ்சத்தையுடைய அவர் வரவில்லை.
அதனால், பரலையுடைய சலங்கைகள் ஒலிக்க, ஓட்டத்தில் சிறந்து, ஆதி என்னும் ஓட்டத்தில் தேர்ச்சிப் பெற்ற, பாய்ந்து ஓடும் நல்ல குதிரைகளையுடைய, மதிலாகிய வேலியையுடைய தித்தனின் உறந்தையின் பாறைகள் நிறைந்த காவற்காடு போன்ற பல தடங்கல்களை உடையது என்னுடைய களவு ஒழுக்கம்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘இருவகைக் குறி’ (தொல்காப்பியம், களவியல் 16) என்னும் சூத்திரத்தின்கண் ‘காணா வகையின் பொழுது நனி இகப்பினும்’ என வரும் விதி கொள்க.  இதனை ஆசிரியர் நச்சினார்க்கினியர் இத் துறைக்கே எடுத்துக் காட்டினர்.  நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே (18) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘நிலைபெறாத நெஞ்சத்தினையுடைய நம் தலைவர் வருதிலர்’, பொ. வே. சோமசுந்தரானார் உரை – ‘நில்லாத நமது நெஞ்சத்தின்கண் உறைபவராகிய நம்பெருமான் ஈண்டு வாராதொழிவர்’.  வரலாறு – தித்தன், உறந்தை.  குறிஞ்சிப்பாட்டு 237–243 – அதற்கொண்டு, அன்றை அன்ன விருப்பொடு என்றும் இரவரல் மாலையனே வருதோறும் காவலர் கடுகினும், கத நாய் குரைப்பினும், நீ துயில் எழினும், நிலவு வெளிப்படினும், வேய் புரை மென் தோள் இன்துயில் பெறாஅன் பெயரினும், முனியல் உறாஅன்.  மனைச் செறி கோழி (16) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மனையிற் தங்கிய கோழிச் சேவல் மாண்புற்ற குரலை எழுப்பிக் கூவும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – இல்லத்தில் நம்மால் வளர்க்கப்பட்டு உறைகின்ற கோழிச் சேவல் தமது மாட்சிமையுடைய பெருங்குரலெடுத்துக் கூவா நிற்கும்.  மல்லல் – மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7).  வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

சொற்பொருள்:  இரும்பிழி – நிறைய கள் (பிழி – கள், காரணப்பெயர்), மாரி – மழை, அழுங்கல் மூதூர் – ஆரவாரத்தையுடைய பழைய ஊர், விழவு இன்றாயினும் துஞ்சாது ஆகும் – திருவிழா இல்லாவிட்டாலும் தூங்காது, மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின் – வளமான கடைவீதியும் வேறு தெருக்களும் அடங்கினாலும், வல் உரைக் கடும் சொல் அன்னை துஞ்சாள் – வலிய ஒலியுடன் கூடிய கடிய சொற்களைக் கூறும் அன்னை உறங்க மாட்டாள், பிணி கோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின் – இறுக்கமாகப் பிடித்துக் காவல் காக்கும் அன்னை தூங்கினாலும், துஞ்சாக் கண்ணர் காவலர் – காவலாளிகள் உறங்க மாட்டார்கள், கடுகுவர் – சுற்றி வருவார்கள், இலங்கு வேல் இளையர் துஞ்சின் – ஒளியுடைய வேலையுடைய இளைய காவலாளிகள் தூங்கினால், வை எயிற்று – கூர்மையான பற்களையுடைய, வலம் சுரித் தோகை – வலப்புறமாகச் சுருண்ட வால், ஞாளி – நாய்கள், மகிழும் – குரைக்கும், அரவ வாய் ஞமலி மகிழாது மடியின் – ஒலிமிக்க நாய்கள் குரைக்காது தூங்கினாலும், பகலுரு உறழ நிலவுக் கான்று – பகலின் ஒளியினை ஒத்த நிலவினைத் தந்து, விசும்பின் அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே – வானத்தில் அகன்ற நிலா நின்று ஒளி வீசும் (விரியும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), திங்கள் கல் சேர்வு கனை இருள் மடியின் – நிலா மலையை அடைந்து மிக்க இருள் தங்கினால், இல் எலி வல்சி வல்வாய்க் கூகை – வீட்டில் உள்ள எலியைத் தின்னும் வலுவான வாயை உடைய ஆந்தை (வல்சி – உணவு), கழுது வழங்கு யாமத்து – பேய்கள் திரியும் இரவு நேரத்தில், அழிதகக் குழறும் – அழிவு உண்டாகும்படிக் கூவும், வளைக் கண் சேவல் வாளாது மடியின் – பொந்தில் வாழும் அந்த ஆந்தை கூவாமல் தூங்கினால், மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும் – வீட்டில் உள்ள சேவல் மிகுதியான ஒலியை எழுப்பும், எல்லாம் மடிந்த காலை – இவை எல்லாம் மடிந்த பொழுது, ஒரு நாள் – ஒரு நாள், நில்லா நெஞ்சத்து – நிலைபெறாத நெஞ்சத்தையுடைய, அவர் வாரலரே – அவர் வரவில்லை (வாரலரே – ஏகாரம் அசைநிலை), அதனால் – அதனால், அரி பெய் புட்டில் – பரலையுடைய சலங்கைகள், ஆர்ப்ப – ஒலிக்க, பரி சிறந்து – ஓட்டத்தில் சிறந்து, ஆதி போகிய – ஆதி என்னும் ஓட்டத்தில் தேர்ச்சி பெற்ற, பாய் பரி நன் மா – பாய்ந்து ஓடும் நல்ல குதிரைகள், நொச்சி வேலித் தித்தன் உறந்தை – மதிலாகிய வேலியையுடைய தித்தனின் உறந்தை, நொச்சி மரங்களை வேலியாகக் கொண்ட உறந்தை (நொச்சி மரம் – Vitex leucoxylon, Chaste tree), கல் முதிர் புறங்காட்டன்ன – கல் நிறைந்த காவற்காடு போன்ற, பல் முட்டின்றால் – பல முட்டுக்களை உடையது (முட்டின்று + ஆல் , ஆல் அசைநிலை), தோழி – என் தோழியே (விளி), நம் களவே – என்னுடைய களவு (களவே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 123, காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார், பாலைத் திணை தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
ஆடாப் படிவத்து ஆன்றோர் போல,
வரை செறி சிறு நெறி நிரைபுடன் செல்லும்
கான யானை கவின் அழி குன்றம்
இறந்து பொருள் தருதலும் ஆற்றாய், சிறந்த  5
சில் ஐங்கூந்தல் நல் அகம் பொருந்தி
ஒழியின் வறுமை அஞ்சுதி அழிதகவு
உடைமதி, வாழிய நெஞ்சே! நிலவு என
நெய்கனி நெடுவேல் எஃகிலை இமைக்கும்
மழை மருள் பல் தோல் மா வண் சோழர்  10
கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந்துறை
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங்கடல் ஓதம் போல,
ஒன்றிற் கொள்ளாய், சென்றுதரு பொருட்கே.

பாடல் பின்னணி:  பொருள் ஈட்டற்பொருட்டு வேறு நாட்டிற்குச் செல்லும் தலைவன், இடைச்சுரத்தில் தன் நெஞ்சிடம் சொல்லியது. 

பொருளுரை:  என் நெஞ்சே!  நீ நீடு வாழ்வாயாக!  உண்ணாமை நோன்பினால் வாடிய வயிற்றினையும் நீராடாத நோன்பினையும் உடைய சமணத்துறவிகள் போல, மலைகள் செறிந்த சிறிய வழிகளில் வரிசையாக செல்லும் காட்டு யானைகளின் அழகு அழியும் குன்றத்தைக் கடந்து, பொருள் ஈட்டி வருதலும் செய்கின்றாய் இல்லை.  சிறப்புடைய சிலவாகிய ஐந்து பகுதியுடைய கூந்தலையுடைய நம் தலைவியின் நல்ல ஆகத்தில் பொருந்தி மனையில் தங்கினால் வறுமை வந்து விடும் என அஞ்சுகின்றாய். 

சென்று ஈட்டி வரும் பொருளுக்கு, நிலவு போல் கூர்மையான இலை ஒளிரும், நெய் தடவிய நெடிய வேலையும், கரிய முகில் போன்ற நிறமுள்ள பல கிடுகளையுடைய பெரிய வள்ளன்மை வாய்ந்த சோழரின், ஓடக்கோலை மூழ்கவைக்கும் நீருடைய காவிரி ஆறு கடலில் சேரும் பெரிய துறையில், இறால் மீன்களுடன் கரைக்கு வந்து அங்கு கிடக்கும் மலர் மாலைகளுடன் செல்லும் பெரிய கடலின் அலைகள் போல், இரண்டில் ஒன்றை உறுதியாகக் கொள்ளாதுள்ளாய் நீ.  வருந்துதலை உடையை நீ.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என்னுஞ் சூத்திரத்து, ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்’ என்னும் பகுதியில், அஃதாவது, பிரிவு ஒருப்பட்ட பின்பு போவேமோ தவிர்வேமோ எனச் சொல்லும் மன நிகழ்ச்சி என்றுரைத்து, அதற்கு இச் செய்யுளை உதாரணமாகக் காட்டினர் இளம்பூரணர்.  அச் சூத்திரத்து அப் பகுதியில் இச் செய்யுளைக் காட்டி, இது போவேமோ தவிர்வேமோ என்றது என்றும், ‘நோயும் இன்பமும்’ (தொல்காப்பியம், பொருளியல் 3) என்னுஞ் சூத்திரத்து, உண்ணாமையின் என்னும் அகப்பாட்டினுள் ‘இறவொடு வந்து கோதையொடு பெயரும் பெருங்கடல் ஓதம் போல ஒன்றிற் கொள்ளாய், சென்றுதரு பொருட்கே’ என்றவழி ‘அழிதகவு உடைமதி, வாழிய நெஞ்சே’ என்றதனான், நிலையின்றாகுதி என நெஞ்சினை உறுப்புடையது போல கழறி நன்குரைத்தவாறும், ஓதத்தையும் நெஞ்சையும் உயர்திணையாக்கி உவமவாயிற் படுத்தாலும் காண்க, என்றும் உரைத்தனர் நச்சினார்க்கினியர்.  உண்ணாமையின் உயங்கிய மருங்கின் ஆடாப் படிவத்து ஆன்றோர் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உண்ணாமையின் உயங்கிய மருங்கின் ஆடாப் படிவத்து ஆன்றோர் என்றது, சமண சமயத்துத் துறவோரை.  ஆடாப் படிவம் – நீராடா நோன்பு.  இவ்வுவமையால் பாலையின் கொடுமை நுண்ணிதின் கூறியமை உணர்க, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – உண்ணாமையாலே வாடிய வயிற்றினையும் நீராடாத விரதத்தினையுமுடைய தவத்தினர்.  வரலாறு – சோழர், காவிரி.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  அகநானூறு 123 – இறவொடு வந்து கோதையொடு பெயரும், அகநானூறு 149 – பொன்னொடு வந்து கறியொடு பெயரும், குறுந்தொகை 221 – பாலொடு வந்து கூழொடு பெயரும்.  ஒழியின் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முயற்சியை விட்டுவிட்டாலோ, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மனையில் தங்கிவிடினும்.  ஒப்புமை – நற்றிணை 141– நீடிய சடையோடு ஆடா மேனிக் குன்று உறை தவசியர் போல. 

சொற்பொருள்:  உண்ணாமையின் உயங்கிய மருங்கின் ஆடாப் படிவத்து ஆன்றோர் போல – உண்ணாமை நோன்பினால்  வாடிய வயிற்றினையும் நீராடாத நோன்பினையும் உடைய சமணத்துறவிகள் போல, வரை செறி சிறு நெறி நிரைபுடன் செல்லும் கான யானை கவின் அழி குன்றம் இறந்து – மலைகள் செறிந்த சிறிய வழிகளில் வரிசையாக செல்லும் காட்டு யானைகளின் அழகு அழியும் குன்றத்தைக்கடந்து, பொருள் தருதலும் ஆற்றாய் – பொருள் ஈட்டி வருதலும் செய்கின்றாய் இல்லை, சிறந்த சில் ஐங்கூந்தல் நல் அகம் பொருந்தி ஒழியின் வறுமை அஞ்சுதி – சிறப்புடைய சிலவாகிய ஐந்து பகுதியுடைய கூந்தலையுடைய நம் தலைவியின் நல்ல ஆகத்தில் பொருந்தி மனையில் தங்கினால் வறுமை வந்து விடும் என அஞ்சுகின்றாய், அழிதகவு உடைமதி – நீ வருந்துதலை உடையை, வாழிய – நீ நீடு வாழ்வாயாக, நெஞ்சே – என் நெஞ்சே, நிலவு என நெய்கனி நெடுவேல் – நிலவு போல் நெய் தடவிய நெடிய வேலையும், எஃகு இலை இமைக்கும் – கூர்மையான இலை ஒளிரும், மழை மருள் பல் தோல் மா வண் சோழர் – கரிய முகில் போன்ற நிறமுள்ள பல கிடுகளையுடைய பெரிய வள்ளன்மை வாய்ந்த சோழரின் (மருள் – உவம உருபு), கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந்துறை – ஓடக்கோலை மூழ்கவைக்கும் நீருடைய காவிரி ஆறு கடலில் சேரும் பெரிய துறையில், இறவொடு வந்து கோதையொடு பெயரும் பெருங்கடல் ஓதம் போல – இறால் மீன்களுடன் கரைக்கு வந்து அங்கு கிடக்கும் மலர் மாலைகளுடன் செல்லும் பெரிய கடலின் அலைகள் போல், ஒன்றிற் கொள்ளாய் – இரண்டில் ஒன்றை உறுதியாகக் கொள்ளாதுள்ளாய் நீ, சென்றுதரு பொருட்கே – சென்று ஈட்டி வரும் பொருளுக்கு (பொருட்கே –ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 124, மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், முல்லைத் திணைதலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
நன்கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி
வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து,
“சென்றீக” என்ப ஆயின், வேந்தனும்
நிலம் வருத்துறாஅ ஈண்டிய தானையொடு
இன்றே புகுதல் வாய்வது நன்றே,  5
மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத்
துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுறப்
பாசறை வருத்தம் வீட, நீயும்
மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயல் புனை படைக்
கொய் சுவல் புரவிக் கை கவர் வயங்கு பரி  10
வண் பெயற்கு அவிழ்ந்த பைங்கொடி முல்லை
வீ கமழ் நெடுவழி ஊது வண்டு இரிய
காலை எய்தக் கடவுமதி, மாலை
அந்திக் காவலர் அம் பணை இமிழ் இசை
அரமிய வியல் அகத்து இயம்பும்  15
நிரை நிலை ஞாயில் நெடுமதில் ஊரே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீண்ட தலைவன் தேர்ப்பாகனிடம் கூறியது. 

பொருளுரை:  நல்ல அணிகலன்களைக் களிற்று யானைகளுடன் பகைவர் திறையாகக் கொடுத்து வணங்கிப் பணிவானச் சொற்களைக் கூறி “நீவிர் சொல்லுக” எனக் கூறுவர் ஆயின், நம் வேந்தனும் நிலம் வருந்தும்படி செறிந்து இருக்கும் படையுடன் இன்றே செல்லுவது உண்மையாகும்.  அது மிகவும் நல்லது நமக்கு.

மாடங்களால் மாண்புற்ற எம் இல்லத்தில் பெருமையுடைய படுக்கையின்கண் வெறுப்பற்ற கொள்கையுடைய நம் தலைவி இனிமை அடையவும், பாசறையின்கண் நாம் அடைந்த வருத்தம் தீரவும், பாகனே, நீயும், மின்னல் பரவி விளங்கினாற்போல் பொன்னால் இயன்ற ஒப்பனை செய்யப்பட்ட கலனையும், கொய்யப்பட்ட பிடரி மயிரினையும், கையால் செலுத்தும் விளக்கம் அமைந்த குதிரைகளை, வள்ளன்மையுடைய மழையால் மலர்ந்த பசிய முல்லைக்கொடியின் மலர்கள் மணக்கும் நெடிய வழியில் ஊதும் வண்டுகள் அஞ்சி அகல, அந்தி நேரத்தின் காவலர்களின் அழகிய பணை முரசின் முழங்கும் இசை, அகன்ற இடமாகிய நிலா முற்றத்தில் ஒலிக்கும், வரிசையாக நிற்கும் ஞாயில்களையுடைய (சூட்டுக்களையுடைய) நெடிய மதில்களையுடைய ஊரினை, குறிப்பிட்ட பொழுதாகிய இன்றைய மாலை நேரத்தில் நாம் அடையும்படி, செலுத்துவாயாக. 

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘மேலோர் முறைமை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 29) என்னுஞ் சூத்திரத்து, ‘நன்கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து’ என்புழி, நன்கலந் திறை கொடுத்தோர் என்றலிற் பகைவயிற் பிரிவே பொருள் வருவாயாயிற்று, என்றனர் நச்சினார்க்கினியர்.  நிலம் வருத்துறாஅ (4) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – புவியினை வருத்துதல் செய்து, தாம் கைப்பற்றிய நாட்டினரை வருத்துறாமல் என்றுமாம், வகுத்துறாஅ என்பது பாடமாயின் நிலத்தை வகுத்துக் கொண்டு என்க, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நிலமகளும் சுமக்க முடியாமல் வருந்தும்படி.  கை கவர் (10) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – செலுத்தும் கை விரும்பும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – செலுத்துவதற்குக் காரணமான.  பொலம் படை மா – அகநானூறு 114 – பொலம்படைக் கலி மா, அகநானூறு 124 – பொன் இயல் புனை படைக் கொய் சுவல் புரவி, நற்றிணை 78 – பொலம் படைக் கலி மா, நற்றிணை 361 – பொலம் படைக் கலி மா, புறநானூறு 116 – பொலம் படைக் கலி மா, புறநானூறு 135 – ஒளிறு படைப் புரவிய தேரும், புறநானூறு 359 – பொலம் படைய மா, மலைபடுகடாம் 574 – பொலம் படைப் பொலிந்த கொய் சுவற் புரவி.  மின்னல் நிமிர்ந்தாற்போல் – மின்னு நிமிர்ந்தன்ன – அகநானூறு 124, 158, நற்றிணை 51, புறநானூறு 57, மின்னு நிமிர்ந்தாங்கு – பெரும்பாணாற்றுப்படை 484, மின்னு நிமிர்ந்தனைய – மதுரைக்காஞ்சி 679.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  வருத்துறாஅ – வருந்தி என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  கவர்வு – கவர்வு விருப்பு ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 66). 

சொற்பொருள்:  நன்கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து சென்றீக என்ப ஆயின் – நல்ல அணிகலன்களைக் களிற்று யானைகளுடன் பகைவர் திறையாகக் கொடுத்து வணங்கிப் பணிவானச் சொற்களைக் கூறி நீவிர் சொல்லுக எனக் கூறுவர் ஆயின் (சென்றீக – முற்றுவினைத் திரிசொல்), வேந்தனும் நிலம் வருத்துறாஅ ஈண்டிய தானையொடு – நம் வேந்தனும் நிலம் வருந்தும்படி செறிந்து இருக்கும் படையுடன் (வருத்துறாஅ – அளபெடை), இன்றே புகுதல் வாய்வது – இன்றே செல்லுவது உண்மையாகும், நன்றே – நன்று, மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத் துனி தீர் கொள்கை நம் தலைவி இனிதுறப்  – மாடங்களால் மாண்புற்ற எம் இல்லத்தில் பெருமையுடைய படுக்கையின்கண் வெறுப்பற்ற கொள்கையுடைய நம் காதலி இனிமை அடைய, பாசறை வருத்தம் வீட – பாசறையின்கண் நாம் அடைந்த வருத்தம் தீர, நீயும் – நீயும், மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயல் புனை படைக் கொய் சுவல் புரவிக் கை கவர் வயங்கு பரி – மின்னல் பரவி விளங்கினாற்போல் பொன்னால் இயன்ற ஒப்பனை செய்யப்பட்ட கலனையும் கொய்யப்பட்ட பிடரி மயிரினையும் கையால் செலுத்தும் விளக்கம் அமைந்த குதிரைகளை, வண் பெயற்கு அவிழ்ந்த பைங்கொடி முல்லை வீ கமழ் நெடுவழி ஊது வண்டு இரிய – வள்ளன்மையுடைய மழையால் மலர்ந்த பசிய முல்லைக்கொடியின் மலர்கள் மணக்கும் நெடிய வழியில் ஊதும் வண்டுகள் அஞ்சி அகல (பெயற்கு – பெயலால், வேற்றுமை மயக்கம், பைங்கொடி – பண்புத்தொகை), காலை எய்தக் கடவுமதி மாலை – குறிப்பிட்ட பொழுதாகிய இன்றைய மாலை நேரத்தில் அடையும்படி செலுத்துவாயாக (மதி – முன்னிலையசை), அந்திக் காவலர் அம் பணை இமிழ் இசை – அந்தி நேரத்தின் காவலர்களின் அழகிய பணை முரசின் முழங்கும் இசை, அரமிய வியல் அகத்து இயம்பும் – அகன்ற இடமாகிய நிலா முற்றத்தில் ஒலிக்கும், நிரை நிலை ஞாயில் நெடுமதில் ஊரே – வரிசையாக நிற்கும் ஞாயில்களையுடைய (சூட்டுக்களையுடைய) நெடிய மதில்களையுடைய ஊர் (ஊரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 125, பரணர், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது, வாடைக் காற்றிடம் கூறுவதைப் போல்
அரம் போழ் அவ்வளை தோள் நிலை நெகிழ,
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி,
இரங்காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை
ஆலியன்ன வால் வீ தாஅய்
வை வால் ஓதி மை அணல் ஏய்ப்பத்,  5
தாது உறு குவளைப் போது பிணி அவிழப்
படாஅப் பைங்கண் பாவடிக் கயவாய்க்
கடாஅம் மாறிய யானை போலப்,
பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதரப்,  10
பனி அடூஉ நின்ற பானாள் கங்குல்
தமியோர் மதுகை தூக்காய் தண்ணென,
முனிய அலைத்தி முரண் இல் காலை,
கைதொழு மரபின் கடவுள் சான்ற
செய் வினை மருங்கிற் சென்றோர் வல்வரின்,  15
விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான்
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
சூடா வாகைப் பறந்தலை ஆடுபெற
ஒன்பது குடையும் நன்பகல் ஒழித்த  20
பீடு இல் மன்னர் போல,
ஓடுவை மன்னால் வாடை, நீ எமக்கே.

பாடல் பின்னணி:  தலைவன் வினை முற்றி மீண்டமை உணர்த்த உரைத்தது.

பொருளுரை:  இரவம் விதையை ஒத்த அரும்பு முதிர்ந்த ஈங்கையின் ஆலங்கட்டி போன்ற வெள்ளை மலர்கள் பரவ, கூர்மையான வாலினையுடைய ஓந்தியின் (ஓணானின்) கரிய தாடி போன்ற தாது மிக்க குவளையின் மலர்கள் கட்டு அவிழ்ந்து மலர, உறங்காத பசிய கண்களையும் பரந்த காலடிகளையும் பெரிய வாயையுமுடிய மதம் ஓய்ந்த யானை போல, பெய்து வற்றிய பொங்கிய செலவையுடைய முகில்கள் கருமை நிறம் பொருந்திய வானில் திசைகளில் திரிய, பனி துன்புறுத்தும் நடு இரவின் இருளில் தனியாக இருப்பவர்களின் வலிமையை ஆராயாது, மாறுபாடு இல்லாத காலத்திலும்,  வெறுக்கும்படி குளிரும்படி வீசுகின்றாய்.

நிரம்பாத இல்வாழ்க்கை சிறக்க வேண்டி, அரத்தால் பிளந்து செய்யப்பட்ட அழகிய வளையல்கள் தோளிலிருந்து நெகிழும்படி, கையால் தொழும் மரபையுடைய கடவுள் தன்மையுடைய ஓதல் (கல்வி) வினைக்குச் சென்ற தலைவர் விரைந்து வந்தால், வாடைக்காற்றே!   விரிந்த பிடரி மயிரால் பொலிந்த விரைந்த ஓட்டத்தையுடைய நல்ல குதிரைகளுடன் அச்சம் தரும் தானையுடன் தான் விரும்பும் நிலத்தில் தங்கிய செல்வம் உடைய சோழ வேந்தன் கரிகாலன் முன் நிற்றல் செய்ய இயலாதவர்களாக, வாகைப் பறந்தலை என்னும் போர்க்களத்தில் அவன் வெற்றி அடைய, ஒன்பது குடைகளையும் நல்ல பகல் நேரத்தில் விட்டுச் சென்ற பெருமை இல்லாத மன்னர்கள் போல் புறமிட்டு நீ ஓடுவாய், எம் முன் நில்லாது.  

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகைபட வந்த கிளவி’ என்பதனால் அமைத்துக் கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘மேவிய சிறப்பின்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 28) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளைக் கூறி, இது தேவர் காரணமாகப் பிரியும் பிரிவு என்றனர் இளம்பூரணர்.  ‘பனியெதிர் பருவமும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 7) என்னுஞ் சூத்திரத்து, ‘உரித்து என்றதனாற் கூதிர் பெற்ற யாமமும் முன்பனி பெற்று வரும்’ என்று கூறி, ‘பனி அடூஉ நின்ற பானாள் கங்குல் ………. முரண் இல் காலை’ என்பதனைக் காட்டி, முன்பனி யாமம் குறிஞ்சிக்கண் வந்தது என்றும், ‘அவற்றுள் ஓதலும் தூதும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 26) என்னுஞ் சூத்திரத்து, ‘இச் செய்யுளைக் காட்டி, இதனுட் பலருங் கைதொழும் மரபினையுடைய கடவுட்டன்மை அமைந்த செய்வினை எனவே, ஓதற் பிரிவென்பது பெற்றாம் என்றும், மேலும், ‘சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே’ என்பதனாற் கிழவனுங் கிழத்தியும் இல்லறத்திற் சிறந்தது பயிற்றாக்கால் இறந்ததனாற் பயனின்று ஆதலின், இல்லறம் நிரம்பாது என்றற்கு, ‘நிரம்பா வாழ்க்கை’ என்றார் என்றும், ‘வேண்டிய கல்வி’ (தொல்காப்பியம், கற்பியல் 47) என்னுஞ் சூத்திரத்து, ஓதற் பிரிவுக்குக் காலவரை இன்றென்று கூறி, ‘அரம் போழ் அவ்வளை’ என்னும் பாட்டினுள், ‘பானாட் கங்குல் ……… முனிய அலைத்தி, கடவுள் சான்ற, செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின், ஓடுவை’  என்றது, இராப்பொழுது அகலாது நீட்டித்தற்கு ஆற்றாளாய்க் கூறினாலே என்று உணர்க என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.  கடவுள் சான்ற செய்வினை (14) – பொ.வே. சோமசுந்தரனார் உரை – கல்விப் பயன் கடவுளைத் தொழுதலே ஆதலின் அக்கல்வி பயில்தலைக் கடவுள் சான்ற செய்வினை என்றாள் என்க.  வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91). 

சொற்பொருள்:  அரம் போழ் அவ்வளை தோள் நிலை நெகிழ – அரத்தால் பிளந்து செய்யப்பட்ட அழகிய வளையல்கள் தோளிலிருந்து நெகிழ, நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி – நிரம்பாத இல்வாழ்க்கை சிறக்க வேண்டி, இரங்காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை ஆலியன்ன வால் வீ தாஅய் – இரவம் விதையை ஒத்த அரும்பு முதிர்ந்த ஈங்கையின் ஆலங்கட்டி போன்ற வெள்ளை மலர்கள் பரவ (தாஅய் – அளபெடை), வை வால் ஓதி மை அணல் ஏய்ப்பத் தாது உறு குவளைப் போது பிணி அவிழ – கூர்மையான வாலினையுடைய ஓந்தியின் (ஓணானின்) கரிய தாடி போன்ற தாது மிக்க குவளையின் மலர்கள் கட்டு அவிழ்ந்து மலர (ஏய்ப்ப – உவம உருபு), படாஅப் பைங்கண் பாவடிக் கயவாய்க் கடாஅம் மாறிய யானை போல – உறங்காத பசிய கண்களையும் பரந்த காலடிகளையும் பெரிய வாயையுமுடிய மதம் ஓய்ந்த யானை போல (படாஅ – அளபெடை, பைங்கண் – பண்புத்தொகை), பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர – பெய்து வற்றிய பொங்கிய செலவையுடைய முகில்கள் கருமை நிறம் பொருந்திய வானில் திசைகளில் திரிய, பனி அடூஉ நின்ற பானாள் கங்குல் தமியோர் மதுகை தூக்காய் தண்ணென முனிய அலைத்தி – பனி துன்புறுத்தும் நடு இரவின் இருளில் தனியாக இருப்பவர்களின் வலிமையை ஆராயாது வெறுக்கும்படி குளிரும்படி வீசுகின்றாய் (அடூஉ– அளபெடை), முரண் இல் காலை – மாறுபாடு இல்லாத காலத்தில், கைதொழு மரபின் கடவுள் சான்ற செய் வினை மருங்கிற் சென்றோர் வல் வரின் – கையால் தொழும் மரபையுடைய கடவுள் தன்மையுடைய ஓதல் (கல்வி) வினைக்குச் சென்ற தலைவர் விரைந்து வந்தால், விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான் வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார் – விரிந்த பிடரி மயிரால் பொலிந்த விரைந்த ஓட்டத்தையுடைய நல்ல குதிரைகளுடன் அச்சம் தரும் தானையுடன் தான் விரும்பும் நிலத்தில் தங்கிய பெரும் செல்வம் உடைய கரிகாலன் முன் நிற்றல் செய்ய இயலாதவர்களாக (கரிகால் – சோழ வேந்தன் கரிகாலன், அன்மொழித்தொகை), சூடா வாகைப் பறந்தலை ஆடுபெற – வாகைப் பறந்தலை என்னும் போர்க்களத்தில் அவன் வெற்றி அடைய (சூடா வாகை – சூடப்படாத வாகையாகிய வாகை என்ற ஊர், வெளிப்படை), ஒன்பது குடையும் நன்பகல் ஒழித்த – ஒன்பது குடைகளையும் நல்ல பகல் நேரத்தில் விட்டுச் சென்ற பீடு இல் மன்னர் போல ஓடுவை மன் ஆல் – பெருமை இல்லாத மன்னர்கள் போல் நீ ஓடுவாய் (மன்னால் – மன் இடைச்சொல், ஆல் அசைநிலை), வாடை – வாடைக்காற்றே, நீ எமக்கே – நீ நமக்கு (எமக்கே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 126, நக்கீரர், மருதத் திணை தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
நினவாய் செத்து நீ பல உள்ளிப்,
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்
மலை மிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலைநாள் மா மலர் தண் துறைத் தயங்கக்
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று  5
அறல் வார் நெடுங்கயத்து அரு நிலை கலங்க
மால் இருள் நடுநாள் போகித், தன் ஐயர்
காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக்கு,
அவ் வாங்கு உந்தி அம் சொல் பாண்மகள்
நெடுங்கொடி நுடங்கு நறவு மலி மறுகில்   10
பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள்,
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயங்கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்,
பொன் இணர் நறுமலர்ப் புன்னை வெஃகித்  15
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை கொல்லோ, நீயே, கிளியெனச்
சிறிய மிழற்றும் செவ்வாய்ப், பெரிய
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப்
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்,  20
மின் நேர் மருங்குல் குறுமகள்
பின்னிலை விடாஅ மடங்கெழு நெஞ்சே?

பாடல் பின்னணி:  (1) கற்புக்காலத்தே தலைவி தலைவனுடன் ஊடியிருந்தாள்.  அவன் பணிமொழி கூறி இரந்தும் அவள் தேற்றாளாய்ப் பின்னும் ஊடினாள்.  அவன் தன் நெஞ்சிடம் வருந்திக் கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘பரிவுற்று மெலியினும்’ என வரும் விதி கொள்க.  (2) தலைவன் குறியிடத்தே சென்றான்.  அங்கு அக்குறி பிழைத்தமையால் தன் நெஞ்சிடம் கூறியது. (3) தலைவன் தோழியிடம் தலைவியை கூட்டுவிக்க வேண்டித்தாழ்ந்து பணிந்து நின்றான்.  அந்நிலையில் தலைவியை நினைந்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  

பொருளுரை:  கிளி போலும் சிறிய சொற்களைக் கூறும் சிவந்த வாயினையும், பெரிய கயல் மீன்கள் என்னுமாறு ஒன்றை ஒன்று பொருதும் கண்களையும், முகில் என்னும்படி முதுகில் தாழ்ந்த கரிய விளங்கும் அடர்ந்த ஐந்து பகுதிகளையுடைய கூந்தலையும், மின்னலை ஒத்த இடையையுமுடைய இளைய தலைவியின் பின் தாழ்ந்து நிற்றலை விடாத என் அறியாமை உடைய நெஞ்சமே!

 நீ உன் எண்ணங்களை உண்மை என எண்ணி மிகப்பெரும் துன்பத்தை உடையையாய் வருந்துதல் அன்றியும், மலை மேலிருந்து தொடர்ந்து விழுந்த அருவியின் மிக்கச் செல்லுதலையுடைய வெள்ளத்தால் முதல் நாள் பூத பெரிய மலர் குளிர்ந்த துறைகளில் விளங்க கடற்கரையினைக் கரைத்திடும் காவிரியாகிய பெரிய ஆற்றின், கருமணல் நீடிய நீண்ட மடுவின் நிலைத்தல் இல்லாத நீர் கலங்குமாறு கரிய இருளுடைய நடு இரவில் சென்று, தன் அண்ணன்மார் காலையில் தந்த திரண்ட கோட்டினையுடைய வாளை மீனுக்கு விலையாக, அழகிய வளைந்த கொப்பூழினையும் அழகிய சொற்களையுமுடைய பாண்மகள் நெடிய கொடிகள் அசையும் கள் மிக்க தெருவில் பழைய செந்நெல்லின் முகந்து தருவதைக் கொள்ளாதவளாக, கழங்கினை ஒத்த பெரிய முத்துக்களுடன் நல்ல அணிகலன்களைப் பெறும், பயனுடைய ஊர்களையும் பல வேற்படைகளையும் உடைய எவ்வி என்பவன், நலத்தைத் தரும் நல்ல சொற்களைக் கூறியும் சினம் தணியாதவனாகப் பொன் போலும் கொத்துக்களாகிய நறுமண மலர்களையுடைய புன்னை மரத்தை வெட்ட விரும்பித் திதியன் என்பவனுடன் போரிட்டு இறந்த அன்னி போல், நீ இறந்துபடுவாய் போலும்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) என வரும் நூற்பாவின்கண் ‘பரிவுற்று மெலியினும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘மெய் தொட்டுப் பயிறல்’ (தொல்காப்பியம், களவியல் 11) என்னுஞ் சூத்திரத்து, ‘மற்றைய வழியும்’ என்னும் பகுதிக்கு இப்பாட்டினை எடுத்துக் காட்டி, இது நெஞ்சினை இரவு விளக்கியது என்றனர் நச்சினார்க்கினியர்.  திணை மயக்கம் – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – உணர்ப்புவரை இறப்பினும் செய்குறி பிழைப்பினும் புலத்தலும் ஊடலும் கிழவோற்குரிய’ (தொல்காப்பியம், கற்பியல் 15) என்னுஞ் சூத்திரத்தாற் கற்பின்கண் தலைவற்கும் ஊடல் நிகழும் எனக்கொள்க.  பின் இரண்டு துறைகளுமாயின், மருதத்துள் களவு நிகழ்ந்ததென்று கொள்க.  இது திணை மயக்கம்.  வரலாறு – எவ்வி, திதியன், அன்னி, காவிரி.  குறுக்கைப் போரில் அன்னி என்பவன் திதியனின் புன்னை மரத்தை வெட்டுதல் – நற்றிணை 180, அகநானூறு 45, 126, 145.  அன்னி மிஞிலி பற்றின குறிப்புகள் – அகநானூறு 196, 262.  பண்ட மாற்று – அகநானூறு 60, 61, 126, 140, 245, 296, 390, நற்றிணை 183, குறுந்தொகை 221, 269, ஐங்குறுநூறு 47, பொருநராற்றுப்படை 214–215, 216–7, பட்டினப்பாலை 28–30, மலைபடுகடாம் 413–414.  அமர்த்த உண்கண் (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கண்டோர் நெஞ்சைப் பருகுகின்ற பெரிய கண்கள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஒன்றையொன்று பொருதும் மையிட்ட கண்கள்.  வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).  பாணரும் மீனும்அகநானூறு 126 – தன் ஐயர் காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக்கு அவ் வாங்கு உந்தி அம் சொல் பாண்மகள் ….. முத்தமொடு நன்கலம் பெறூஉம், அகநானூறு 196 – வராஅல் துடிக் கண் கொழுங்குறை நொடுத்து உண்டு ஆடி வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி ஆம்பல் அகல் இலை அமலை வெஞ்சோறு தீம் புளிப் பிரம்பின் திரள் கனி பெய்து, அகநானூறு 216 – நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள், ஐங்குறுநூறு 47 – முள் எயிற்றுப் பாண் மகள் இன் கெடிறு சொரிந்த, ஐங்குறுநூறு 48 – வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள் வராஅல் சொரிந்த, ஐங்குறுநூறு 49 – பாண்மகள் சில் மீன் சொரிந்து,  ஐங்குறுநூறு 111 – பாணன் சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇச் சினைக் கயல் மாய்க்கும், புறநானூறு 348 – மீன் சீவும் பாண் சேரி, மதுரைக்காஞ்சி 269 – மீன் சீவும் பாண் சேரியொடு, பெரும்பாணாற்றுப்படை 284–285 – கோள்வல் பாண்மகன் தலைவலித்து யாத்த நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ.  

சொற்பொருள்:  நின வாய் செத்து நீ பல உள்ளிப் பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும் – நீ உன் எண்ணங்களை உண்மை என எண்ணி மிகப்பெரும் துன்பத்தை உடையையாய் வருந்துதல் அன்றியும், மலை மிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம் தலைநாள் மா மலர் தண் துறைத் தயங்கக் கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று – மலை மேலிருந்து தொடர்ந்து விழுந்த அருவியின் மிக்கச் செல்லுதலையுடைய வெள்ளத்தால் முதல் நாள் பூத பெரிய மலர் குளிர்ந்த துறைகளில் விளங்க கடற்கரையினைக் கரைத்திடும் காவிரியாகிய பெரிய ஆற்றின் (செலல் – இடைக்குறை), அறல் வார் நெடுங்கயத்து அரு நிலை கலங்க மால் இருள் நடுநாள் போகி – கருமணல் நீடிய நீண்ட மடுவின் நிலைத்தல் இல்லாத நீர் கலங்குமாறு கரிய இருளுடைய நடு இரவில் சென்று, தன் ஐயர் காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக்கு அவ் வாங்கு உந்தி அம் சொல் பாண்மகள் நெடுங்கொடி நுடங்கு நறவு மலி மறுகில் பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள் – தன் அண்ணன்மார் காலையில் தந்த திரண்ட கோட்டினையுடைய வாளை மீனுக்கு விலையாக அழகிய வளைந்த கொப்பூழினையும் அழகிய சொற்களையுமுடைய பாண்மகள் நெடிய கொடிகள் அசையும் கள் மிக்க தெருவில் பழைய செந்நெல்லின் முகந்து தருவதைக் கொள்ளாதவளாக, கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம் – கழங்கினை ஒத்த பெரிய முத்துக்களுடன் நல்ல அணிகலன்களைப் பெறும் (உறழ் – உவம உருபு, (பெறூஉம் – அளபெடை), பயங்கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி – பயனுடைய ஊர்களையும் பல வேற்படைகளையும் உடைய எவ்வி என்பவன், நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான் பொன் இணர் நறுமலர்ப் புன்னை வெஃகித் திதியனொடு பொருத அன்னி போல விளிகுவை கொல்லோ நீயே – நலத்தைத் தரும் நல்ல சொற்களைக் கூறியும் சினம் தணியாதவனாகப் பொன் போலும் கொத்துக்களாகிய நறுமண மலர்களையுடைய புன்னை மரத்தை வெட்ட விரும்பித் திதியன் என்பவனுடன் போரிட்டு இறந்த அன்னி போல் நீ இறந்துபடுவாய் போலும் (கொல்லோ – கொல், ஓ அசைநிலைகள்), கிளியெனச் சிறிய மிழற்றும் செவ்வாய்ப் பெரிய கயல் என அமர்த்த உண்கண் புயல் எனப் புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் மின் நேர் மருங்குல் குறுமகள் பின் நிலை விடாஅ மடங்கெழு நெஞ்சே – கிளி போலும் சிறிய சொற்களைக் கூறும் சிவந்த வாயினையும் பெரிய கயல் மீன்கள் என்னுமாறு ஒன்றை ஒன்று பொருதும் கண்களையும் முகில் என்னும்படி முதுகில் தாழ்ந்த கரிய விளங்கும் அடர்ந்த ஐந்து பகுதிகளையுடைய கூந்தலையும் மின்னலை ஒத்த இடையையுமுடைய இளைய தலைவியின் பின் தாழ்ந்து நிற்றலை விடாத என் அறியாமை உடைய நெஞ்சமே (விடாஅ – அளபெடை, நெஞ்சே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 127, மாமூலனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
இலங்கு வளை நெகிழச் சாஅய் அல்கலும்,
கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய
வலம்படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து,  5
நன் நகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடு சால் நன்கலம்
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்றுவாய் நிறையக் குவைஇ, அன்று அவண்
நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன,  10
ஒரு நாள் ஒரு பகல் பெறினும், வழிநாள்
தங்கலர் வாழி தோழி! செங்கோற்
கருங்கால் மராஅத்து வாஅல் மெல் இணர்ச்
சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடிக்,
கல்லா மழவர் வில் இடம் தழீஇ,  15
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
பழி தீர் காதலர் சென்ற நாட்டே.

பாடல் பின்னணி:  பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது. 

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  விளங்கும் வளையல்கள் கழலும்படி மெலிந்து, நாளும் கலங்கும் துன்பத்தில் ஆழ்ந்து நாம் இங்கே தனித்திருக்க,

சிவந்த காம்பினையுடைய கடம்ப மரத்தின் வெள்ளை நிற மெல்லிய பூங்கொத்தைத் தங்கள் சுருண்டு வளைந்த தலைமயிர் பொலியும்படிச் சூடி ஆறலைத்தொழில் அன்றி பிற தொழிலைக் கற்காத எயின மழவர்கள் வில்லைத் தங்கள் இடது புறத்தில் தழுவிக் கொண்டு, வழிப்போக்கர்களைப் பார்த்திருக்கும் அச்சம் வரும் பிரிவுகளையுடைய வழிகள் உடைய, மொழி வேறுபாடும் நாட்டில் உள்ளார் ஆயினும்,

வெற்றி பொருந்திய முரசையுடைய சேரலாதன் என்னும் வேந்தன் கடலில் தன் கப்பலைச் செலுத்திப் பகைவர்களை விரட்டி, அவர்கள் தீவில் உள்ள காவல் மரமான கடம்ப மரத்தினை வெட்டி, இமய மலையில் தம் முன்னோரை ஒப்ப வளைந்த வில்லைப் பொறித்து, மாந்தை என்னும் ஊரில் உள்ள தன் நல்ல அரண்மனையின் முற்றத்தில் பகைவர்கள் பணிந்து திறையாகக் கொடுத்த பெருமை சான்ற நல்ல அணிகலன்களையும் பொன்னால் செய்த பாவையினையும் வயிரமுடன், ஆம்பல் என்னும் எண்ணிக்கை அளவு இடம் நிறையக் குவித்து, அன்று அங்கு நிலம் தின்னும்படி கைவிட்டுப் போன பொருள் போன்று, ஒரு நாளில் ஒரு பகலில் பெற்றாலும், மறுநாள் தங்கியிருக்க மாட்டார், குற்றமற்ற தம் தலைவர் சென்ற நாட்டில்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகைபட வந்த கிளவி’ என்பதனால் அமைத்துக் கொள்க.  வரலாறு – சேரலாதன், மாந்தை, இமயம்.  பதிற்றுப்பத்து 11 – 20 – சேர அரசன் நெடுஞ்சேரலாதனுக்காகப் புலவர் குமட்டூர் கண்ணனார் எழுதியவை.  மாந்தை என்ற ஊர் மரந்தை என்றும் சில பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.  சேரலாதன் பகைவரின் கடம்ப மரத்தை வெட்டியது – பதிற்றுப்பத்து 11 – ஓம்பிய திரள் பூங்கடம்பின் கடி உடை முழு முதல் துமிய ஏஎய் வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர் நார் அரி நறவின், ஆர மார்பின் போர் அடு தானைச் சேரலாத!, 12 – இடங்கவர் கடும்பின் அரசு தலை பனிப்பக் கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின வேந்தே!, 17 – கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை, 20 – இரு முந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச்சென்று கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின் நெடுஞ்சேரலாதன்.  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.

சொற்பொருள்:  இலங்கு வளை நெகிழச் சாஅய் அல்கலும் கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய – விளங்கும் வளையல்கள் கழலும்படி மெலிந்து நாளும் கலங்கும் துன்பத்தில் ஆழ்ந்து நாம் இங்கே தனித்திருக்க (சாஅய் – உரிச்சொல், அளபெடை), வலம்படு முரசின் சேரலாதன் முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமயத்து முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து – வெற்றி பொருந்திய முரசையுடைய சேரலாதன் என்னும் வேந்தன் கடலில் தன் கப்பலைச் செலுத்திப் பகைவர்களை விரட்டி அவர்கள் தீவில் உள்ள காவல் மரமான கடம்ப மரத்தினை வெட்டி இமய மலையில் தம் முன்னோரை ஒப்ப வளைந்த வில்லைப் பொறித்து (மருள – உவம உருபு, கடம்ப மரம் – Anthocephalus cadamba or Neolamarckia cadamba, Kadampam oak), நன் நகர் மாந்தை முற்றத்து ஒன்னார் பணி திறை தந்த பாடு சால் நன்கலம் பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல் ஒன்றுவாய் நிறையக் குவைஇ – மாந்தை என்னும் ஊரில் உள்ள தன் நல்ல அரண்மனையின் முற்றத்தில் பகைவர்கள் பணிந்து திறையாகக் கொடுத்த பெருமை சான்ற நல்ல அணிகலன்களையும் பொன்னால் செய்த பாவையினையும் வயிரமுடன் ஆம்பல் என்னும் எண்ணிக்கை அளவு இடம் நிறையக் குவித்து (பதிற்றுப்பத்து 20 – துருத்தியுள் முரணியோர்த் தலைச்சென்று கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின் நெடுஞ்சேரலாதன், குவைஇ – அளபெடை), அன்று அவண் நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன – அன்று அங்கு நிலம் தின்னும்படி கைவிட்டுப் போன பொருள் போன்று (தின தின்ன என்பதன் விகாரம், நிதியத்து – நிதியம், அத்துச் சாரியை), ஒரு நாள் ஒரு பகல் பெறினும் – ஒரு நாளில் ஒரு பகலில் பெற்றாலும், வழிநாள் தங்கலர் – மறுநாள் தங்கியிருக்க மாட்டார், வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, செங்கோல் கருங்கால் மராஅத்து வாஅல் மெல் இணர்ச் சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடிக் கல்லா மழவர் வில் இடம் தழீஇ வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை – சிவந்த காம்பினையுடைய கடம்ப மரத்தின் வெள்ளை நிற மெல்லிய பூங்கொத்தைத் தங்கள் சுருண்டு வளைந்த தலைமயிர் பொலியும்படிச் சூடி ஆறலைத்தொழில் அன்றி பிற தொழிலைக் கற்காத எயின மழவர்கள் வில்லைத் தங்கள் இடது புறத்தில் தழுவிக் கொண்டு வழிப்போக்கர்களைப் பார்த்திருக்கும் அச்சம் வரும் பிரிவுகளையுடைய வழிகள் (மரா மரம் – கடம்ப மரம், Anthocephalus cadamba or Neolamarckia cadamba, Kadampam oak, மராஅத்து – அத்துச் சாரியை, தழீஇ – அளபெடை), மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் – மொழி வேறுபாடும் நாட்டில் உள்ளார் ஆயினும், பழி தீர் காதலர் சென்ற நாட்டே – குற்றமற்ற தம் தலைவர் சென்ற நாட்டில் (நாட்டே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 128, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே,
கொன்றோர் அன்ன கொடுமையோடு இன்றே
யாமம் கொளவரின் கனைஇக், காமம்
கடலினும் உரைஇக் கரை பொழியும்மே,
எவன் கொல், வாழி தோழி, மயங்கி  5
இன்னம் ஆகவும் நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு,
இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ்சிலம்பில்
குறுஞ்சுனைக் குவளை வண்டு படச் சூடிக்,
கான நாடன் வரூஉம் யானைக்  10
கயிற்றுப் புறத்தன்ன, கல் மிசைச் சிறு நெறி,
மாரி வானந்தலைஇ நீர் வார்பு,
இட்டு அருங்கண்ண படுகுழி இயவின்,
இருள் இடை மிதிப்புழி நோக்கி அவர்
தளர் அடி தாங்கிய சென்றது இன்றே?  15

பாடல் பின்னணி:  இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாகத், தலைவி தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  ஊரின் பொது இடங்களில் ஒலி அடங்கிவிட்டது. இல்லங்களில் மக்கள் உறங்கிவிட்டனர்.  கொன்றது போலும் கொடுமையுடன் இன்று நடுயாமம் கொள்ள வந்தால், மிகுந்த காதல் கடலைக்காட்டிலும் பெரிதும் ஆரவாரித்து, கரை கடந்து செல்லும்.  

நாம் இவ்வாறு கலங்கி இருக்கவும், என் நல்ல நெஞ்சம், உன்னோடும் என்னோடும் இருந்து ஆராய்ந்து நமக்குத் துணையாக இல்லாமல், கை கடந்து, சிறுகாட்டில் இருண்ட சிறிய கடத்தற்கரிய மலையில் சிறு சுனையில் உள்ள குவளை மலரை வண்டுபட அணிந்து, காட்டு நாடனான நம் தலைவன் வரும் யானையின் முதுகில் உள்ள கயிற்றின் தழும்பை ஒத்த, மலையில் உள்ள சிறு வழியில், மழை பொழிந்து நீர் ஓடியதால் செல்லுதற்கு அரிய சிறு இடங்களில், தாமே உண்டான குழிகள் உள்ள வழியில், இருளில், மிதிக்கும் இடத்தைப் பார்த்து நடக்கும் , அவரது தளர்ந்த அடியைத் தாங்க, சென்றது இன்று.  இது எதனால்?  

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘பொழுதும் ஆறும் புரைவது அன்மையின் அழிவு தலைவந்த சிந்தைக்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  ஆசிரியர் நச்சினார்க்கினியரும் இத் துறைக்கே இச் செய்யுளைக் காட்டியுள்ளார்.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 20) என்னுஞ் சூத்திரத்து, ‘பொழுதும் ஆறும் புரைவது அன்மையின் அழிவு தலைவந்த சிந்தைக்கண்ணும்’  என்ற பகுதியில், இச் செய்யுளைக் காட்டி, காமம் கரை பொழியா நிற்கவும், என்ன நன்றி கருதி, இருவரொடுஞ் சூழாது சென்றது நெஞ்சென இரண்டும் (பொழுதும் ஆறும்) கூறினாள்.  மனை மடிந்தன்றென்பது பொழுது; சிறுநெறி என்பது ஆறின்னாமை என்றும், ‘நோயும் இன்பமும்’ (தொல்காப்பியம், பொருளியல் 2) என்னுஞ் சூத்திரத்து, ‘நெஞ்சம் ….. தளரடி தாங்கிய சென்றது இன்றே’ என்பது, நெஞ்சினை உறுப்புடையது போல் அழுகைப் பற்றிக் கூறியது என்றும், ‘பொழுதும் ஆறும்’ (தொல்காப்பியம், பொருளியல் 16) என்னுஞ் சூத்திரத்து, ‘மன்று பாடவிந்து’ என்பது, பொழுது வழுவதலிற் குற்றங்காட்டியது என்றும் கூறுவர், நச்சினார்க்கினியர்.  ‘முட்டுவயிற் கழறல்’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 23) என்னுஞ் சூத்திரத்து, அச்சத்தின் அகறல் என்னும் மெய்ப்பாட்டிற்கு, இப் பாட்டினைக் காட்டி, இதன் கருத்தாவது, ‘நாம் அவர் இருளிடை வருதல் ஏதம் அஞ்சி அகன்று அவலித்திருப்பவும் என்னையும் நின்னையும் கேளாது என் நெஞ்சு போவானேன் என்றவாறாயிற்று’ என்பர் பேராசிரியர்.  உரைஇ (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆரவாரித்து, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பரவி.  ஒப்புமை – அகநானூறு 65 – உயவல் யானை வெரிநுச் சென்றன்ன கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி.  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – முனைவர் கு.வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லதிகாரம், உரியியல் 57). 

சொற்பொருள்:  மன்று பாடு அவிந்து – ஊரின் பொது இடங்களில் ஒலி அடங்கியது (மன்றம் ஆகுபெயர் அங்கிருந்த மக்களுக்கு), மனை மடிந்தன்றே – இல்லங்களில் மக்கள் உறங்கிவிட்டனர் (மனை ஆகுபெயர் மக்களுக்கு), கொன்றோர் அன்ன கொடுமையோடு இன்றே யாமம் – கொன்றது போலும் கொடுமையுடன் இன்று நடுயாமம் (இன்றே – ஏகாரம் அசை நிலை), கொள வரின் – கொள்ள வந்தால், கனைஇக் காமம் – மிகுந்த காதல் (கனைஇ – அளபெடை), கடலினும் உரைஇ – கடலைக்காட்டிலும் பெரிதும் ஆரவாரித்து (உரைஇ – அளபெடை), கரை பொழியும்மே – எல்லையையும் கடந்து போகும், கரை கடந்து செல்லும், (பொழியும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), எவன் கொல் – இது எதனால் (கொல் – அசைநிலை), வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, மயங்கி இன்னம் ஆகவும் – நாம் இவ்வாறு கலங்கி இருக்கவும், நன்னர் நெஞ்சம் – என் நல்ல நெஞ்சம், என்னொடும் நின்னொடும் சூழாது – உன்னோடும் என்னோடும் இருந்து ஆராய்ந்து நமக்கு துணையாக இல்லாமல், கைம்மிக்கு – கை கடந்து, இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ்சிலம்பில் – சிறுகாட்டில் இருண்ட சிறிய கடத்தற்கரிய மலையில், குறுஞ்சுனைக் குவளை வண்டு படச் சூடி – சிறு சுனையில் உள்ள குவளை மலரை வண்டுபட அணிந்து, கான நாடன் வரூஉம் – காட்டு நாடனான நம் தலைவன் வரும் (வரூஉம் – அளபெடை), யானைக் கயிற்றுப் புறத்தன்ன – யானையின் முதுகில் உள்ள கயிற்றின் தழும்பை ஒத்த, கல் மிசைச் சிறு நெறி – மலையில் உள்ள சிறு வழியில், மாரி வானந்தலைஇ நீர் வார்பு – மழை பொழிந்து நீர் ஓடியதால் (தலைஇ – அளபெடை), இட்டு அருங்கண்ண – செல்லுதற்கு அரிய சிறு இடங்களில், படுகுழி இயவின் – தாமே உண்டான குழிகள் உள்ள வழியில்,        இருள் இடை – இருளில், மிதிப்புழி நோக்கி – மிதிக்கும் இடத்தைப் பார்த்து (மிதிப்புழி – மிதிப்பு + உழி, உழி ஏழாம் வேற்றுமை உருபு), அவர் தளர் அடி தாங்கிய – அவரது தளர்ந்த அடியைத் தாங்க, சென்றது இன்றே – சென்றது இன்று (இன்றே – ஏகாரம் அசை நிலை)

அகநானூறு 129, குடவாயில் கீரத்தனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என
நள்ளென் கங்குல் நடுங்கு துணையாயவர்
நின் மறந்து உறைதல் யாவது? புல் மறந்து
அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கிக்
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண்,  5
கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்
தாழி முதல் கலித்த கோழ் இலைப் பருத்திப்
பொதி வயிற்று இளங்காய் பேடை ஊட்டிப்,
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண்காழ்
நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும்  10
கலங்கு முனைச் சீறூர் கை தலை வைப்பக்
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர்,
செருப்புடை அடியர், தெண் சுனை மண்டும்
அருஞ்சுரம் அரியவல்ல வார் கோல்
திருந்திழைப் பணைத்தோள், தேன் நாறு கதுப்பின்  15
குவளை உண்கண் இவளொடு செலற்கு என
நெஞ்சுவாய் அவிழ்ந்தனர் காதலர்,
அம் சில் ஓதி ஆயிழை, நமக்கே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் தலைவன் பிரிந்ததால் வருந்திய தலைவியிடம் தோழி உரைத்தது. 

பொருளுரை:  அழகிய மென்மையான கூந்தலையும் ஆராய்ந்த அணிகலன்களையுமுடைய தலைவியே!  இவளைப் பிரிந்து சென்றபின், இவளையே நினைத்து வருந்த வேண்டி வரும் என்று, இருள் மிக்க இரவில் அன்பினால் நடுங்கும் துணைவரான நம் தலைவர்,

புல் தின்னுவதை மறந்து அசையும் நெடிய மூங்கிலிருந்து உதிர்ந்த விதைகளைப் பார்த்து ஆண்மான் தன் பிணையை அழைக்கும் காட்டிடத்தில், பாறையைச் சேர்ந்திருந்த சிதைந்த குடிலில் தாழியில் தழைத்த கொழுவிய இலைகளையுடைய பருத்திச் செடியின் பருத்த வயிற்றை உடைய இளங்காயைத் தன் பேடைக்கு ஊட்டி ஆண் போகில் பறவை பிளந்து போட்ட மிகுதியான வெள்ளை கொட்டைகளை வறுமையுற்ற மகளிர் வைத்துண்ணும் உணவாகச் சேர்த்து வைக்கும், கலங்குவதற்குக் காரணமான போர்முனையுடைய சிறிய ஊரில் உள்ளவர்கள் தங்கள் கையைத் தலைமீது வைத்து அலற, கொழுத்த ஆக்களைக் கொன்று தின்ற கூரிய போர்க்கருவிகள் உடைய எயின மழவர்கள், செருப்பை அணிந்தவர்களாய் தெளிந்த சுனை நீரைப் பருகும் கடத்தற்கரிய பாலை நிலம், நெடிய உருண்ட வளையல்களையும் திருத்தமான அணிகலன்களையும் மூங்கில் போன்ற தோள்களையும் தேன் மணக்கும் கூந்தலையும் குவளை மலர்கள் போன்ற மையுண்ட கண்களையும் உடைய இவளுடன் செல்லுவதற்கு, அருமையுடையது அல்ல என்று நம்மிடம் தன் உள்ளத்தில் உள்ளதை வாய்விட்டு மொழிந்தார்.

ஆதலால், நின்னை மறந்து வேறு நாட்டில் அவர் தங்குவது எவ்வாறு?  அவர் விரைவில் வந்து விடுவார்.  நீ வருந்த வேண்டாம்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை,’பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) எனவரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகைபட வந்த கிளவி’ என்பதனால் அமைத்துக் கொள்க.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கலைமான் கழைநெல் உதிர்தல் கண்டுழிப் புல் மேயல் மறந்து பிணை மானை விளிக்கும் என்பது, நம் பெருமான் பொருள் ஈட்டுங்கால் சிறப்பாகப் பொருள் வருவாய் மிக்குழி நின்னை நினைந்து வந்து நின்னையும் அழைத்துப்போவார் காண் என்னும் உள்ளுறைக்கு உவமம் என்க.  போகில் (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆண் பறவை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஆண் பறவை, அ. தட்சிணாமூர்த்தி உரை, ஐங்குறுநூறு 303, 325 உரை – போகில் என்னும் பறவை.  வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:   உள்ளல் வேண்டும் – இவளை நினைத்து வருந்த வேண்டி வரும் என்று, ஒழிந்த பின் – இவளைப் பிரிந்து சென்றபின், என – என்று, நள்ளென் கங்குல் நடுங்கு துணையாயவர் – இருள் மிக்க இரவில் நடுங்கும் துணையாயிருந்தவர், நின் மறந்து உறைதல் யாவது – நின்னை மறந்து வேறு நாட்டில் தங்குவது எவ்வாறு, புல் மறந்து அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கிக் கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண் – புல் தின்னுவதை மறந்து அசையும் நெடிய மூங்கிலிருந்து உதிர்ந்த விதைகளைப் பார்த்து ஆண்மான் தன் பிணையை அழைக்கும் காட்டிடமாகிய அங்கு, கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத் தாழி முதல் கலித்த கோழ் இலைப் பருத்திப் பொதி வயிற்று இளங்காய் பேடை ஊட்டிப் போகில் பிளந்திட்ட பொங்கல் வெண்காழ் நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும் – பாறையைச் சேர்ந்திருந்த சிதைந்த குடிலில் தாழியில் தழைத்த கொழுவிய இலைகளையுடைய பருத்திச் செடியின் பருத்த வயிற்றை உடைய இளங்காயைத் தன் பேடைக்கு ஊட்டி ஆண் போகில் பறவை பிளந்து போட்ட மிகுதியான வெள்ளை கொட்டைகளை வறுமையுற்ற மகளிர் வைத்துண்ணும் உணவாகச் சேர்த்து வைக்கும் (அல்கல் – சேமித்து வைத்தல், ஆகுபெயர் உணவிற்கு, இரவுமாம்), கலங்கு முனைச் சீறூர் கை தலை வைப்ப – கலங்குவதற்குக் காரணமான போர்முனையுடைய சிறிய ஊரில் உள்ளவர்கள் தங்கள் கையைத் தலைமீது வைத்து அலற, கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர் – கொழுத்த ஆக்களைக் கொன்று தின்ற கூரிய போர்க்கருவிகள் உடைய எயின மழவர்கள், செருப்புடை அடியர் தெண் சுனை மண்டும் அருஞ்சுரம் – செருப்பை அணிந்தவர்களாய் தெளிந்த சுனை நீரைப் பருகும் கடத்தற்கரிய பாலை நிலம், அரிய அல்ல – அருமையுடையது அல்ல, வார் கோல் திருந்திழைப் பணைத்தோள், தேன் நாறு கதுப்பின் குவளை உண்கண் இவளொடு செலற்கு என – நெடிய உருண்ட வளையல்களையும் திருத்தமான அணிகலன்களையும் மூங்கில் போன்ற தோள்களையும் தேன் மணக்கும் கூந்தலையும் குவளை மலர்கள் போன்ற மையுண்ட கண்களையும் உடைய இவளுடன் செல்லுவதற்கு என, நெஞ்சுவாய் அவிழ்ந்தனர் – தன் உள்ளத்தில் உள்ளதை வாய்விட்டு மொழிந்தார், காதலர் – நம் தலைவர், அம் சில் ஓதி ஆயிழை – அழகிய மென்மையான கூந்தலையும் ஆராய்ந்த அணிகலன்களையுமுடைய தலைவியே (ஆயிழை – அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), நமக்கே – நம்மிடம் நமக்கே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 130, வெண்கண்ணனார், நெய்தல் திணைதலைவன் தன் நண்பனிடம் சொன்னது
அம்ம வாழி, கேளிர்! முன் நின்று
கண்டனிர் ஆயின், கழறலிர் மன்னோ,
நுண் தாது பொதிந்த செங்கால் கொழுமுகை
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரைப்
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை  5
எயிறுடை நெடுந்தோடு காப்பப் பலவுடன்
வயிறுடைப் போது வாலிதின் விரீஇப்,
புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின்
இவர் திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர் நடைப் புரவிக் கால் வடுத் தபுக்கும்  10
நற்தேர் வழுதி கொற்கை முன்துறை
வண்டு வாய் திறந்த வாங்கு கழி நெய்தல்
போது புறங்கொடுத்த உண்கண்
மாதர் வாண் முகம் மதைஇய நோக்கே.

பாடல் பின்னணி:  கழறிய தோழனுக்குத் தலைவன் கழற்றெதிர் உரைத்தது.  

பொருளுரை:  நண்பரே!  நீயிர் நீடு வாழ்வீராக!  யான் கூறுவதைக் கேட்பீராக.

நுண்ணிய பூந்தாதினால் மூடப்பட்ட சிவந்த தண்டையும் கொழுவிய அரும்பினையும் உடைய கழிமுள்ளிச் செடிகள் பொருந்திய உயர்ந்த மணல் அடைந்த கரையில், பேயின் தலை போன்ற தலையையும் சருச்சரை உடைய அடியையுமுடைய தாழையின் முள்ளாகிய பற்களையுடைய நீண்ட புற மடல்கள் பலவும் சேர்ந்து காப்ப, உள்ளே உள்ள மலர் தூய்மையாக விரிந்து புலவு நாற்றத்தைத் தாக்கி அழித்த மலர்களின் நறுமணம் கமழும் இடத்தில், தவழ்ந்து வரும் அலைகள் கரைக்குக் கொண்டு வந்த குளிர்ந்த ஒளிரும் முத்துக்கள் கண்டோர் விரும்பும் அழகிய நடையையுடைய குதிரைகளின் கால்களில் வடுக்கள் செய்து அவற்றின் செலவைத் தடுக்கும் பாண்டியனின் கொற்கை என்னும் ஊரின் கடல் துரையின் முன், வண்டுகள் கிண்டி மலர்ந்த வளைந்த உப்பங்கழியில் உள்ள நெய்தல் மலர்கள் தோற்றுப் புறங்கொடுத்த, ஒளி பொருந்திய அழகிய முகத்தில் உள்ள மையுண்ட கண்களின் செருக்கான பார்வையினை, முன்னே நின்று கண்டீர் ஆனால், இவ்வாறு இகழ்ந்து உரைக்க மாட்டீர்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘மெய் தொட்டுப் பயிறல்’ (தொல்காப்பியம், களவியல் 11) என வரும் நூற்பாவின்கண் ‘நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும்’ என வரும் விதி கொள்க.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாழையின் பூ மணம் கடற்கரையின் புலால் நாற்றத்தைப் பொருது அழித்தது என்றது, அவள் தன் காதல் நோக்கம் எனக்கியல்பான நிறை முதலியவற்றை அழித்தது காண்.  யான் அவளையன்றி உயிர் வாழ்தல் அரிது என்னும் உள்ளுறை உடைத்தென்க. பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொற்கை முன்துறையில் திரை தந்த முத்து குதிரையின் செலவினைத் தடுக்கும் என்றதும், அவள் காதல் என் நெஞ்சைத் தடுத்துத் தன்பால் நிறுத்திக்கொண்டது.  ஆதலின் நீ அவளை என்னோடு இயைத்தல் வேண்டும் எனக் குறிப்பால் உணர்த்தினான்.  வரலாறு – வழுதி கொற்கை.  கவர் நடை (10) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – விரும்பும் நடையினையுடைய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கண்டோர் உள்ளத்தைக் கவருகின்ற அழகு நடை.  அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல்.  அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).  கவர்வு – கவர்வு விருப்பு ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 66).

சொற்பொருள்:   அம்ம – யான் கூறுவதைக் கேட்பீராக, வாழி – நீயிர் நீடு வாழ்வீராக, கேளிர் – நண்பரே, முன் நின்று கண்டனிர் ஆயின் கழறலிர் – முன்னே நின்று கண்டீர் ஆனால் இவ்வாறு இகழ்ந்து உரைக்க மாட்டீர், மன்னோ – மன் ஓ அசைநிலைகள், நுண் தாது பொதிந்த செங்கால் கொழுமுகை முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை – நுண்ணிய பூந்தாதினால் மூடப்பட்ட சிவந்த தண்டையும் கொழுவிய அரும்பினையும் உடைய கழிமுள்ளிச் செடிகள் பொருந்திய உயர்ந்த மணல் அடைந்த கரையில் (கெழீஇய – அளபெடை), பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை எயிறுடை நெடுந்தோடு காப்பப் பலவுடன்  – பேயின் தலை போன்ற தலையையும் சருச்சரை உடைய அடியையுமுடைய தாழையின் முள்ளாகிய பற்களையுடைய நீண்ட புற மடல்கள் பலவும் சேர்ந்து காப்ப (பேஎய் – அளபெடை), வயிறுடைப் போது வாலிதின் விரீஇப் புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின் – உள்ளே உள்ள மலர் தூய்மையாக விரிந்து புலவு நாற்றத்தைத் தாக்கி அழித்த மலர்களின் நறுமணம் கமழும் இடத்தில் (விரீஇ – அளபெடை), இவர் திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம் கவர் நடைப் புரவிக் கால் வடுத் தபுக்கும் நற்தேர் வழுதி கொற்கை முன்துறை – தவழ்ந்து வரும் அலைகள் கரைக்குக் கொண்டு வந்த குளிர்ந்த ஒளிரும் முத்துக்கள் கண்டோர் விரும்பும் அழகிய நடையையுடைய குதிரைகளின் கால்களில் வடுக்கள் செய்து அவற்றின் செலவைத் தடுக்கும் பாண்டியனின் கொற்கை என்னும் ஊரின் கடல் துரையின் முன், வண்டு வாய் திறந்த வாங்கு கழி நெய்தல் போது புறங்கொடுத்த – வண்டுகள் கிண்டி மலர்ந்த வளைந்த உப்பங்கழியில் உள்ள நெய்தல் மலர்கள் தோற்றுப் புறங்கொடுத்த, உண்கண் மாதர் வாண் முகம் மதைஇய நோக்கே – ஒளி பொருந்திய அழகிய முகத்தில் உள்ள மையுண்ட கண்களின் செருக்கான பார்வை (மதைஇய – அளபெடை, நோக்கே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 131, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
விசும்புற நிவந்த மாத்தாள் இகணைப்
பசுங்கேழ் மெல்லிலை அருகு நெறித்தன்ன
வண்டுபடுபு இருளிய தாழ் இருங்கூந்தல்
சுரும்பு உண விரிந்த பெருந்தம் கோதை
இவளினும் சிறந்தன்று ஈதல் நமக்கு என,  5
வீளை அம்பின் விழுத்தொடை மழவர்
நாள் ஆ உய்த்த நாம வெஞ்சுரத்து
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின்
கடைமணி உகு நீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்,  10
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
வெருவரு தகுந கானம், நம்மொடு
வருக என்னுதி ஆயின்,
வாரேன் நெஞ்சம், வாய்க்க நின் வினையே.  15

பாடல் பின்னணி:  பொருளீட்ட வேண்டும் என வற்புறுத்திய நெஞ்சிடம் தலைவன் கூறியது. 

பொருளுரை:  என் நெஞ்சே!  வானளவு உயர்ந்த பெரிய (கரிய) அடியையுடைய இகணை மரத்தின் பசிய நிறமுள்ள மென்மையான இலைகளை நெருக்கமாகச் செறித்து வைத்தாற்போல், வண்டுகள் மொய்க்கும் இருண்ட தாழ்ந்த பெரிய கூந்தலையும், வண்டுகள் தேன் உண்ணும்படி மலர்ந்த பூக்களையுடைய பெரிய குளிர்ந்த மாலையினையும் உடைய, இவளைவிடவும், ஈதலே சிறந்தது நமக்கு என்று, சீழ்க்கை போலும் ஒலியெழுப்பிச் செல்லும் அம்பினைத் தப்பாது தொடுக்கும் வெட்சி மறவர்கள் அதிகாலையில் ஆக்களைக் கவர்ந்து கொண்டு சென்ற அச்சம் தரும் சுரத்தில், நெடுந்தூரம் சென்றதால் நடை மெலிந்த கன்றுகளின் கடைக்கண்களிலிருந்து வடியும் கண்ணீரைத் துடைத்த கரந்தை மறவர்களின் பெயரையும் சிறப்பையும் பொறித்து, மயில் தோகை சூட்டப்பட்ட விளங்கும் நிலைமையுடைய நடுகல்லின் முன் ஊன்றிய வேலும் அதில் சாத்திய கேடயமும், வழிகள்தோறும், பகைவரின் போர் முனையை ஒத்திருக்கும் அச்சம் தரும் தன்மையுடைய காட்டிற்கு, எம்முடன் வருக என்பாய் ஆனால், நான் வரமாட்டேன்.  நீ மேற்கொண்ட வினை வாய்ப்பதாக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘வெறியறி சிறப்பின்’ (தொல்காப்பியம், புறத்திணையியல் 5) என்னுஞ் சூத்திரத்து, ‘ஆ பெயர்த்துத் தருதலும்’ என்னும் பகுதிக்கு இச் செய்யுளையும் காட்டி, இதனுள் ‘மறவர் நாள் ஆ உய்த்த’ என வேந்துறு தொழில் அல்லாத வெட்சித்திணையும் பொதுவியல் கரந்தைக்கண்ணே கொள்க; இஃது எழற்கும் பொதுவாகலின் என்றும், இச் சூத்திரம் ‘பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்’ என அகத்திற்கும் வருதலிற் பொதுவியலாயிற்று என்றும், ‘நோயும் இன்பமும்’ (தொல்காப்பியம், பொருளியல் 2) என்னுஞ் சூத்திரத்து ‘வருக என்னுதியாயின் வாரேன் நெஞ்சம் வாய்க்க நின் வினையே’ என்பது ‘மறுத்துரைப்பது போல் தறுகண்மை பற்றிய பெருமிதங் கூறிற்று; என்றுங் கூறினார் நச்சினார்க்கினியர்.  வண்டுபடுபு இருளிய தாழ் இருங்கூந்தல் (3) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வண்டு மொய்த்து இருண்ட தாழ்ந்த பெரிய கூந்தல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வண்டுகள் ஊடே அகப்பட்டுக்கொள்ளுமாறு இருண்டு புறத்தே சரிந்து மிற்கு கிடக்கும் கூந்தல்.  ஒப்புமை – பட்டினப்பாலை 78–79 – கிடுகு நிரைத்து, எஃகு ஊன்றி நடுகல்லின் அரண், பட்டினப்பாலை, 167–168 – பசு மெழுக்கில் காழ் ஊன்றிய கவி கிடுகின் மேல், முல்லைப்பாட்டு 41–42 – பூந்தலைக் குந்தம் குத்தி கிடுகு நிரைத்து வாங்கு வில் அரணம் அரணமாக, பெரும்பாணாற்றுப்படை 119–120 – எஃகம் வடிமணிப் பலகையொடு நிரைஇ.  நாம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57). 

சொற்பொருள்:  விசும்புற நிவந்த மாத் தாள் இகணைப் பசுங்கேழ் மெல்லிலை அருகு நெறித்தன்ன – வானளவு உயர்ந்த பெரிய (கரிய) அடியையுடைய இகணை மரத்தின் பசிய நிறமுள்ள மென்மையான இலைகளை நெருக்கமாகச் செறித்து வைத்தாற்போல், வண்டுபடுபு இருளிய தாழ் இருங்கூந்தல் சுரும்பு உண விரிந்த பெரும் தண் கோதை இவளினும் – வண்டுகள் மொய்க்கும் இருண்ட தாழ்ந்த பெரிய கூந்தலையும் வண்டுகள் தேன் உண்ணும்படி மலர்ந்த பூக்களையுடைய பெரிய குளிர்ந்த மாலையினையும் உடைய (உண – உண்ண என்பதன் விகாரம்), இவளைவிடவும், சிறந்தன்று ஈதல் நமக்கு என – ஈதலே சிறந்தது நமக்கு என்று, வீளை அம்பின் விழுத் தொடை மழவர் நாள் ஆ உய்த்த நாம வெஞ்சுரத்து – சீழ்க்கை போலும் ஒலியெழுப்பிச் செல்லும் அம்பினைத் தப்பாது தொடுக்கும் வெட்சி மறவர்கள் அதிகாலையில் ஆக்களைக் கவர்ந்து கொண்டு சென்ற அச்சம் தரும் சுரத்தில் (நாம – நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது), நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின் கடைமணி உகு நீர் துடைத்த ஆடவர் பெயரும் பீடும் எழுதி – நெடுந்தூரம் சென்றதால் நடை மெலிந்த கன்றுகளின் கடைக்கண்களிலிருந்து வடியும் கண்ணீரைத் துடைத்த கரந்தை மறவர்களின் பெயரையும் சிறப்பையும் பொறித்து, அதர்தொறும் – வழிகள்தோறும், பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் வேல் ஊன்று பலகை – மயில் தோகை சூட்டப்பட்ட விளங்கும் நிலைமையுடைய நடுகல்லின் முன் ஊன்றிய வேலும் அதில் சாத்திய கேடயமும், வேற்று முனை கடுக்கும் வெருவரு தகுந கானம் – பகைவரின் போர் முனையை ஒத்திருக்கும் அச்சம் தரும் தன்மையுடைய காட்டிற்கு, நம்மொடு வருக என்னுதி ஆயின் – எம்முடன் வருக என்பாய் ஆனால், வாரேன் – நான் வரமாட்டேன், நெஞ்சம் – என் நெஞ்சே, வாய்க்க நின் வினையே – நீ மேற்கொண்ட வினை வாய்ப்பதாக (இகழ்ச்சிக்குறிப்பு, வினையே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 132, தாயங்கண்ணனார், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன, நோய் மலிந்து,
ஆய் கவின் தொலைந்த இவள் நுதலும் நோக்கி
ஏதில மொழியும் இவ்வூரும், ஆகலின்,
களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி,
வால் நிணப் புகவின், கானவர் தங்கை  5
அம் பணை மென்தோள் ஆய் இதழ் மழைக்கண்
ஒல்கு இயல் கொடிச்சியை நல்கினை ஆயின்,
கொண்டனை சென்மோ, நுண் பூண் மார்ப,
துளி தலைத் தலைஇய சாரல் நளி சுனைக்
கூம்பு முகை அவிழ்த்த குறுஞ்சிறைப் பறவை  10
வேங்கை விரி இணர் ஊதிக் காந்தள்
தேனுடைக் குவி குலைத் துஞ்சி யானை
இருங்கவுள் கடாஅம் கனவும்
பெருங்கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே.

பாடல் பின்னணி:  தோழி தலைவியை குறியிடத்து உய்த்து வந்து, தலைவனை எதிர்ப்பட்டு நின்று வரைவு கடாயது. 

பொருளுரை:  நுண்ணிய வேலைப்பாடு உடைய அணிகலன் அணிந்த மார்பனே!  எம்முடைய புனத்தில் முற்றிக் கவிழ்ந்த தினைக் கதிர்க்கொத்துக்கள் அறுக்கப்பட்டன.  பிரிவுத் துன்பம் மிகுந்ததால் பிறரால் ஆராய்ந்துப் போற்றப்படும் அழகு தொலைந்த இவளுடைய நெற்றியை நோக்கிப் பொருந்தாத பழிச்சொற்களைக் கூறுகின்றனர் இவ்வூரில் உள்ளவர்கள். 

ஆதலால்,  மதநீர் ஒழுகும் கன்னத்தை உடைய களிற்று யானையின் முகத்தைக் கிழித்த அம்பினையும் வெள்ளை நிற கொழுப்புடன் கூடிய உணவையும் உடைய கானவரின் தங்கையான, அழகிய மூங்கிலை ஒத்த மெல்லிய தோள்களையும் அழகிய இமைகளுடன் கூடிய குளிர்ந்த கண்களையுமுடைய அசைநடையுடைய கொடிச்சியை, அருள் செய்தாய் ஆனால், அவளைத் திருமணம் செய்துகொண்டு செல்வாயாக, மழைத்துளிகள் பெய்த பக்க மலையின் பெரிய சுனையில் அரும்புகளை விரித்த சிறிய சிறகுகளையுடைய வண்டுகள், வேங்கை மரத்தின் விரிந்த மலர்க்கொத்துக்களில் காதினை ஊதி காந்தளின் குவிந்த குலைகளில் உறங்கி பெரிய யானைகளின் கன்னத்தில் வடியும் மதத்தினைக் கனவில் காணும், உறைவதற்கு இனியதான நும் ஊர்க்கு.    

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘களனும் பொழுதும் வரை நிலை விலக்கி காதல் மிகுதி உளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘ஆயர் வேட்டுவர்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 21) என்னுஞ் சூத்திரத்து, ஆயர் வேட்டுவர் என்னும் இரண்டு பெயரேயன்றி ஒன்றென முடித்தலாற் கொள்ளப்படும் தலைவரும் தலைவியரும் உளர் என்றுரைத்து, ‘வானிண புகவிற் கானவர் தங்கை ‘ என வருவனவுங் கொள்க, என்றனர் நச்சினார்க்கினியர்.  பறவை – இச்சொல் சங்கப்பாடல்களில் இன்றைய பயன்பாட்டில் உள்ளவாறும் உள்ளது.  தேனீ, வௌவால், தும்பி ஆகிவற்றைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  தேனீ – அகநானூறு 4–11, 132–10, 332–8, 371–13, நற்றிணை 55–5, 161–4, 185–9, ஐங்குறுநூறு 82–3, கலித்தொகை 22–7, பரிபாடல் 7–6, புறநானூறு 70–11, பதிற்றுப்பத்து 66–16, பெரும்பாணாற்றுப்படை 183, 229, வௌவால் – அகநானூறு 244–2, குறுந்தொகை 201–3, 352–2, புறநானூறு 370–11, தும்பி – நற்றிணை 277–9.  தினை அறுவடைக் காலம் வேங்கை மலர்கள் பூக்கும் – அகநானூறு 132, நற்றிணை 125, 259, 313, 389.  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  ஒப்புமை – குறுந்தொகை 335 – வல் வில் கானவர் தங்கைப் பெருந்தோள் கொடிச்சி, குறுந்தொகை 393 – கடமை மிடைந்த துடவை அம் சிறு தினைத் துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை, ஐங்குறுநூறு 363 – சிலை வில் பகழிச் செந்துவர் ஆடை கொலை வல் எயினர் தங்கை.  நளி (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குளிர்ந்த, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பெரிய.  நளி – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 22), நளி என் கிளவி செறிவும் ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 25).

சொற்பொருள்:   ஏனலும் இறங்கு குரல் இறுத்தன – தினையும் முற்றிக் கவிழ்ந்த கதிர்க்கொத்துக்கள் அறுக்கப்பட்டன, நோய் மலிந்து ஆய் கவின் தொலைந்த இவள் நுதலும் நோக்கி ஏதில மொழியும் இவ்வூரும் – பிரிவுத் துன்பம் மிகுந்ததால் பிறரால் ஆராய்ந்துப் போற்றப்படும் அழகு தொலைந்த நெற்றியையும் நோக்கிப் பொருந்தாத பழிச்சொற்களைக் கூறும் இவ்வூர் மக்களும், ஆகலின் – ஆதலால், கவுள் உடை களிற்று முகம் திறந்த பகழி வால் நிணப் புகவின் கானவர் தங்கை – மதநீர் ஒழுகும் கன்னத்தை உடைய களிற்று யானையின் முகத்தைக் கிழித்த அம்பினையும் வெள்ளை நிற கொழுப்புடன் கூடிய உணவையும் உடைய கானவரின் தங்கை (நிணம் – கொழுப்பு, கொழுப்புடன் கூடிய தசை), அம் பணை மென்தோள் ஆய் இதழ் மழைக்கண் ஒல்கு இயல் கொடிச்சியை – அழகிய மூங்கிலை ஒத்த மெல்லிய தோள்களையும் அழகிய இமைகளுடன் கூடிய குளிர்ந்த கண்களையுமுடைய அசைநடையுடைய கொடிச்சியை (கொடிச்சி – குறிஞ்சி நிலப்பெண்), நல்கினை ஆயின் கொண்டனை சென்மோ – அருள் செய்தாய் ஆனால் வரைந்துகொண்டு (திருமணம் செய்துகொண்டு) செல்வாயாக (கொண்டனை – முற்றெச்சம், சென்மோ – மோ முன்னிலையசை), நுண் பூண் மார்ப – நுண்ணிய தொழில் பொருந்திய (வேலைப்பாடு உடைய) அணிகலன் அணிந்த மார்பனே, துளி தலைத் தலைஇய சாரல் நளி சுனைக் கூம்பு முகை அவிழ்த்த குறுஞ்சிறைப் பறவை – மழைத்துளிகள் பெய்த பக்க மலையின் பெரிய (செறிந்த) சுனையில் அரும்புகளை விரித்த சிறிய சிறகுகளையுடைய வண்டுகள் (தலைஇய – அளபெடை, சாரல் – பக்க மலை), வேங்கை விரி இணர் ஊதிக் காந்தள் தேனுடைக் குவி குலைத் துஞ்சி யானை இருங்கவுள் கடாஅம் கனவும் – வேங்கை மரத்தின் விரிந்த மலர்க்கொத்துக்களில் காதினை ஊதி காந்தளின் குவிந்த குலைகளில் உறங்கி பெரிய யானைகளின் கன்னத்தில் வடியும் மதத்தினைக் கனவில் காணும் (இணர் – கொத்து, கடாஅம் – அளபெடை), பெருங்கல் வேலி நும் பெரிய மலைகளால் சூழப்பட்ட உறைவு இன் ஊர்க்கே – உறைவதற்கு இனியதான நும் ஊர்க்கு (ஊர்க்கே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 133, உறையூர் மருத்துவன் தாமோதரனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
“குன்றி அன்ன கண்ண குரூஉ மயிர்ப்
புன் தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
நன்னாள் வேங்கை வீ நன்களம் வரிப்பக்
கார் தலைமணந்த பைம்புதல் புறவின்,  5
வில் எறி பஞ்சியின் வெண்மழை தவழும்
கொல்லை இதைய குறும்பொறை மருங்கில்
கரி பரந்தன்ன காயாஞ்செம்மலொடு
எரி பரந்தன்ன இல மலர் விரைஇப்,
பூங்கலுழ் சுமந்த தீம் புனல் கான் யாற்று  10
வான் கொள் தூவல் வளிதர உண்கும்,
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?” எனக்
கொன் ஒன்று வினவினர் மன்னே தோழி,
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
கொல் புனக் குருந்தொடு கல் அறை தாஅம்  15
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ்சுவல் கலித்த
வரி மரல் கறிக்கும் மடப்பிணைத்
திரி மருப்பு இரலைய காடு இறந்தோரே.

பாடல் பின்னணி:  தலைவன் வினைவயின் பிரிந்த காலத்தில் தலைவியின் துன்ப மிகுதியைக் கண்டு வருந்திய தோழியிடம் தலைவி கூறியது. 

பொருளுரை:  தோழி!  குறும்பூழின் காலில் உள்ள முள்ளை ஒத்த அரும்பு முதிர்ந்த வெட்சி மரத்தின் பூக்கள், வெட்டித் திருத்திய கொல்லையில் குருந்த மலர்களுடன் பாறைகளில் பரவி கிடக்கும், மிளை என்னும் நாட்டின் பாலை நிலத்தில், ஈரமுடைய மேட்டு நிலத்தில் வரிகளையுடைய மரலைக் கடித்து உண்ணும், மடப்பதையுடைய தம் பெண் மானுடன் கூடிய முறுக்குண்ட கொம்பையுடைய ஆண்மான்கள் உடைய காட்டைக் கடந்து சென்ற நம் தலைவர்,

குன்றிமணி போன்ற கண்களையும் நல்ல நிறமுடைய மயிரையும் மெல்லிய கால்களையும் தாடியையுமுடைய வெள்ளெலியின் ஆண், சிவந்த பரற்கற்களுடைய மேட்டு நிலத்தில் கிளறிய புழுதியில், நல்ல நாளான திருமண நாளை அறிவிக்கும் வேங்கை மலர்கள் உதிர்ந்து வெறியாட்டுக் களம் போல் சிதறிக் கிடக்க, கார்ப்பருவத்தைப் பெற்றதால் பசுமையான புதர்கள் உடைய முல்லை நிலத்தில் வில்லினால் அடித்த பஞ்சு போல் வெள்ளை முகில்கள் தவழ்ந்திடும் புதுக் கொல்லைகளையுடைய சிறிய மலையின் பக்கத்தில், கரி பரவியது போல் தோன்றும் காயாவின் வாடல் மலர்களுடன் நெருப்புப் பரவினாற்போல் தோன்றும் இலவ மலர்கள் கலந்து அப்பூக்களைச் சுமந்து வரும் இனிய புனலையுடைய காட்டு ஆற்றிலிருந்து காற்று எழுப்புவதால், வானில் ஏறி விழும் நீர்த்துளிகளை உண்ணும் எம்முடன் வருவதற்கு வலிமையுடையையோ என்று, நான் அஞ்சுவதற்குக் காரணமாகிய ஒரு வினாவை எழுப்பினார்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘புணர்ந்து உடன் போகிய’ (தொல்காப்பியம், கற்பியல் 7) என வரும் நூற்பாவின்கண் ‘கிழவோள் மனை இருந்து இடைச் சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி அன்புறு தக்க கிளத்தல் தானே கிழவோன் செய் வினைக்கு அச்சம் ஆகும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘கொண்டு தலைக் கழியினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 15) என்னுஞ் சூத்திரத்து, இது பாலைக்கண் இரங்கல் நிகழ்ந்ததென்றார் நச்சினார்க்கினியர்.  கொன் (13) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அச்சம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பெருமை.  ஒப்புமை – அகநானூறு 133 – வில் எறி பஞ்சியின், அகநானூறு 217 – பொங்கல் வெண்மழை எஃகுறு பஞ்சித் துய்ப்பட்டன்ன, நற்றிணை 247 – இன் குரல் எழிலி எஃகுறு பஞ்சிற்று ஆகி, நற்றிணை 299 – வில் எறி பஞ்சி போல.  கொன் – அச்சம், பயம் இலி, காலம், பெருமை, என்று அப் பால் நான்கே கொன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 6).  வரலாறு – மிளை நாட்டு. 

சொற்பொருள்:   குன்றி அன்ன கண்ண குரூஉ மயிர்ப் புன் தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை – குன்றிமணி போன்ற கண்களையும் நல்ல நிறமுடைய மயிரையும் மெல்லிய கால்களையும் தாடியையுமுடைய வெள்ளெலியின் ஆண் (முகவாய் என்பது மோவாய் எனத் திரிந்து நின்றது, ஈண்டு முகவாயின்கண் உள்ள மயிரைக் குறித்தது), செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி நன்னாள் வேங்கை வீ  நன்களம் வரிப்ப – சிவந்த பரற்கற்களுடைய மேட்டு நிலத்தில் கிளறிய புழுதியில் நல்ல நாளான திருமண நாளை அறிவிக்கும் வேங்கை மலர்கள் உதிர்ந்து வெறியாட்டுக் களம் போல் சிதறிக் கிடக்க, கார் தலைமணந்த பைம்புதல் புறவின் வில் எறி பஞ்சியின் வெண்மழை தவழும் கொல்லை இதைய குறும்பொறை மருங்கில் – கார்ப்பருவத்தைப் பெற்றதால் பசுமையான புதர்கள் உடைய முல்லை நிலத்தில் வில்லினால் அடித்த பஞ்சு போல் வெள்ளை முகில்கள் தவழ்ந்திடும் புதுக் கொல்லைகளையுடைய சிறிய மலையின் பக்கத்தில் (வில் – பஞ்சைத் தூய்மைப்படுத்தும் இரும்புக் கருவி, பஞ்சியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு எரி பரந்தன்ன இல மலர் விரைஇப் பூங்கலுழ் சுமந்த தீம் புனல் கான் யாற்று – கரி பரவியது போல் தோன்றும் காயாவின் வாடல் மலர்களுடன் நெருப்புப் பரவினாற்போல் தோன்றும் இலவ மலர்கள் கலந்து அப்பூக்களைச் சுமந்து வரும் இனிய புனலையுடைய காட்டு ஆற்றிலிருந்து (இல – இலவ என்பதன் விகாரம், விரைஇ – அளபெடை, காயா மரம் – Memecylon edule, ironwood tree, இலவ மரம் – Aerua javanica, Silk cotton tree) வான் கொள் தூவல் வளிதர உண்கும் – காற்று எழுப்புவதால் வானில் ஏறி விழும் நீர்த்துளிகளை உண்ணும் யாம், எம்மொடு வருதல் வல்லையோ மற்று என – எம்முடன் வருவதற்கு வலிமையுடையையோ என்று, கொன் ஒன்று வினவினர் – நான் அஞ்சுவதற்குக் காரணமாகிய ஒரு வினாவை எழுப்பினார், மன்னே – மன் ஒழியிசை, ஏ அசைநிலை, தோழி – தோழி, இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி கொல் புனக் குருந்தொடு கல் அறை தாஅம் மிளை நாட்டு அத்தத்து – குறும்பூழின் காலில் உள்ள முள்ளை ஒத்த அரும்பு முதிர்ந்த வெட்சி மரத்தின் பூக்கள் வெட்டித் திருத்திய கொல்லையில் குருந்த மலர்களுடன் பாறைகளில் பரவி இருக்கும் மிளை என்னும் நாட்டின் பாலை நிலத்தில், ஈர்ஞ்சுவல் கலித்த வரி மரல் கறிக்கும் மடப்பிணைத் திரி மருப்பு இரலைய காடு இறந்தோரே – ஈரமுடைய மேட்டு நிலத்தில் வரிகளையுடைய மரலைக் கடித்து உண்ணும் மடப்பதையுடைய தம் பெண் மானுடன் கூடிய முறுக்குண்ட கொம்பையுடைய ஆண்மான்கள் உடைய காட்டைக் கடந்து சென்ற நம் தலைவர் (இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 134, சீத்தலைச் சாத்தனார், முல்லைத் திணைதலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
கமஞ்சூல் மா மழை கார் பயந்து இறுத்தென,
மணி மருள் பூவை அணி மலர் இடை இடைச்
செம்புற மூதாய் பரத்தலின், நன்பல
முல்லை வீ கழல் தாஅய், வல்லோன்  5
செய்கை அன்ன செந்நிலப் புறவின்,
வாஅப் பாணி வயங்கு தொழில் கலி மாத்
தாஅத் தாளிணை மெல்ல ஒதுங்க
இடி மறந்து, ஏமதி வலவ, குவி முகை
வாழை வான் பூ ஊழ் உறுபு உதிர்ந்த  10
ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை
கடுமான் தேர் ஒலி கேட்பின்,
நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது.  

பொருளுரை:  பாகனே!  நிறைந்த சூலினையுடைய கரிய முகில்கள் கார்காலத்தைத் தோற்றுவித்துத் தங்கி, மழையைத் தவறாது பெய்ததால், காடு அழகு அடைந்துள்ளது.  நீலமணியின் நிறத்தை ஒத்த காயா மரத்தின் உதிர்ந்த அழகிய மலர்களின் இடையே, சிவந்த புறத்தை உடைய இந்திரகோபப் பூச்சிகள் பரவியதுடன், நல்ல பல வெண்ணிற முல்லை மலர்களும் உதிர்ந்துப் பரவிக் கிடந்ததால், ஓவியக் கலையில் வல்லவன் செய்த ஓவியம் போன்ற தோற்றத்தையுடைய சிவந்த முல்லை நிலத்தில், தாவிச் செல்லும் தாளச்சீர் விளங்கும் நடையையுடைய செருக்கான குதிரையின் தாவிச் செல்லும் கால்கள் மெல்ல நடக்கும்படி, தாற்றுக் கோலால் குற்றுதலை மறந்து, செலுத்துவாயாக.

வாழையின் பெரிய பூ மடல்கள் முறையாக மலர்ந்து உதிர்ந்து, எஞ்சிய குவிந்த மொட்டும் உதிர்ந்த ஒழிந்த குலையை ஒத்த முறுக்கிய கொம்பினை உடைய ஆண் மானுடன் திரண்ட கால்களையுடைய அழகிய பெண் மானின் விருப்பமான புணர்ச்சி நிலை, விரையும் குதிரைகள் பூண்ட தேரின் ஒலியைக் கேட்டால், நடுநாளின் கூடுதல் நிகழ்தலும் ஆகாது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்’ என வரும் விதி கொள்க.  நடுநாள் (14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நண்பகல், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நள்ளிரவு.  ஆகலும் உண்டே (14)பொ. வே. சோமசுந்தரனார் உரை – நிகழ மாட்டா அன்றே ஆதலாற் காண் என்பதாம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நிகழ்தலும் கூடுமோ? கூடாதாகலின்.மூதாய் – தம்பலப்பூச்சி, இந்திரகோபம், பட்டுப்பூச்சி, trombidium grandissimum.  சிறிய சிவந்த நிறமுடைய பூச்சிகள் இவை.  நிலத்தில் தவழ்வன.  வெல்வெட் போன்ற மேல்பகுதியைக் கொண்டவை.  மழைக்காலத்தில் இவற்றைக் காணலாம்.  இவை உள்ள பாடல்கள் – அகநானூறு 14, 54, 74, 134, 139, 283, 304, 374, கலித்தொகை 85, நற்றிணை 362.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம், உரியியல் 57).

சொற்பொருள்:   வானம் வாய்ப்ப – மழை தவறாது பெய்ததால் (வானம் – ஆகுபெயர் மழைக்கு), கவினிக் கானம் – அழகு அடைந்துள்ளது (காடு கானம் கவினி எனக் கொள்ளவும்), கமஞ்சூல் மா மழை கார் பயந்து இறுத்தென – நிறைந்த சூலினையுடைய கரிய முகில்கள் கார்காலத்தைத் தோற்றுவித்துத் தங்கிவிட்டதால் (கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது), மணி மருள் பூவை அணி மலர் இடை இடைச் செம்புற மூதாய் பரத்தலின் – நீலமணியின் நிறத்தை ஒத்த காயா மரத்தின் அழகிய மலர்களின் இடையே சிவந்த புறத்தை உடைய இந்திரகோபப் பூச்சிகள் பரவியதுடன் (பூவை – காயா மரம், Memecylon edule, ironwood), நன்பல முல்லை வீ கழல் தாஅய் – நல்ல பல வெண்ணிற முல்லை மலர்களும் உதிர்ந்துப் பரவிக் கிடந்ததால், வல்லோன் செய்கை அன்ன செந்நிலப் புறவின் – ஓவியக் கலையில் வல்லவன் செய்த ஓவியம் போன்ற தோற்றத்தையுடைய சிவந்த முல்லை நிலத்தில், வாஅப் பாணி வயங்கு தொழில் கலி மாத் தாஅத் தாளிணை மெல்ல ஒதுங்க இடி மறந்து – தாவிச் செல்லும் தாளச்சீர் விளங்கும் நடையையுடைய செருக்கான குதிரையின் தாவிச் செல்லும் கால்கள் மெல்ல நடக்கும்படித் தாற்றுக் கோலால் குற்றுதலை மறந்து (வாஅ – அளபெடை, அளபெடை, தாவ எனத் திரிக்க), ஏமதி – செலுத்துவாயாக (ஏவுமதி என்பது ஏமதி ஆயிற்று, மதி – முன்னிலையசை), வலவ – பாகனே (விளி), குவி முகை வாழை வான் பூ ஊழ் உறுபு உதிர்ந்த ஒழி குலை அன்ன – வாழையின் பெரிய பூ மடல்கள் முறையாக மலர்ந்து உதிர்ந்து எஞ்சிய குவிந்த மொட்டும் உதிர்ந்த ஒழிந்த குலையை ஒத்த, திரி மருப்பு ஏற்றொடு கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை  – முறுக்கிய கொம்பினை உடைய ஆண் மானுடன் திரண்ட கால்களையுடைய அழகிய பெண் மானின் விருப்பமான புணர்ச்சி நிலை, கடுமான் தேர் ஒலி கேட்பின் நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே – விரையும் குதிரைகள் பூண்ட தேரின் ஒலியைக் கேட்டால் நடுநாளின் கூடுதல் நிகழ்தலும் ஆகாது (கடுமான் – பண்புத்தொகை, உண்டே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 135, பரணர், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்கப்,
புதலிவர் பீரின் எதிர்மலர் கடுப்பப்
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி
எழுது எழில் மழைக்கண் கலுழ, நோய் கூர்ந்து
ஆதிமந்தியின் அறிவு பிறிதாகிப்,  5
பேதுற்றிசினே காதலம் தோழி
காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி
ஆடு தளிர் இருப்பைக் கூடுகுவி வான்பூக்,
கோடு கடை கழங்கின் அறை மிசைத் தாஅம்
காடு இறந்தனரே காதலர், அடு போர்  10
வீயா விழுப்புகழ் விண் தோய் வியன் குடை
ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போலக்
கலங்கின்று மாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே.

பாடல் பின்னணி:  தலைவன் பொருளீட்டும் பொருட்டுப் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவி தோழியிடம் கூறியது.  

பொருளுரை:  பேரன்பையுடைய அழகு தோழியே! ஞாயிற்றின் வெப்பமிக்க கதிர்கள் தாக்குவதால் காற்று மிகுந்து, அசையும் தளிர்களையுடைய இருப்பை மரத்தின் இதழ்கள் குவிந்த வெள்ளை மலர்கள், யானையின் மருப்பினால் கடைந்து செய்த கழங்குகளைப் போல் தோன்றிப் பாறைகள் மீது பரவிக் கிடக்கும் காட்டைக் கடந்து சென்றுள்ளார், நம் தலைவர். 

அவருடைய சொற்களால், அவர் பிரிய மாட்டார் எனத் தெளிந்திருந்த என் நெஞ்சு, பகைவரைக் கொல்லும் போர்த் திறமையையும், கெடாத சிறந்த புகழையும், வானளாவிய பெரிய குடையையுமுடைய, பதினான்கு வேளிர் மன்னர்கள் ஒன்றுகூடித் தாக்கிய கழுவுள் என்பவனின் காமூரைப் போல் கலங்கியுள்ளது.   

தேமலையுடைய எனது மாமை நிறமும் மாந்தளிர் போன்ற என் அழகும் பாழ்பட, புதர்களில் படர்ந்த பீர்க்கையின் அன்று மலர்ந்த மலர் போன்ற பசலை பரவிய நெற்றியை உடையவள் ஆகி, ஓவியர்கள் வரைந்தாற்போன்ற என் அழகிய குளிர்ந்த கண்கள் அழ, துன்பம் மிகுந்து ஆதிமந்தி போல் அறிவு திரிந்து யான் கலங்கியுள்ளேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘அவன் அறிவாற்ற’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என வரும் நூற்பாவின்கண் ‘ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்’ என்பதனால் அமைத்துக் கொள்க.  ஒப்புமை – அகநானூறு 365 – மாவண் கழுவுள் காமூர், அகநானூறு 45 – காதலர் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து ஆதிமந்தி போலப் பேதுற்று அலந்தனென் உழல்வென் கொல்லோ, அகநானூறு 76 – கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன் வகை அமைப் பொலிந்த வனப்பு அமை தெரியல் சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ என ஆதிமந்தி பேதுற்று இனைய, அகநானூறு 135 – ஆதிமந்தியின் அறிவு பிறிதாகிப் பேதுற்றிசினே காதலம் தோழி, அகநானூறு 222 – ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத் தாழ் இருங்கதுப்பின் காவிரி வவ்வலின் மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த ஆதிமந்தி, அகநானூறு 236 – கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி போல, 396 – மந்தி பனி வார் கண்ணள் பல புலந்து உறைய, குறுந்தொகை 31, ஆதிமந்தியார் பாடல் – யாண்டும் காணேன் மாண்டக்கோனை யானும் ஓர் ஆடுகள மகளே, என் கைக் கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே.  வரலாறு –ஆதிமந்தி, கழுவுள், காமூர், ஈர் எழு வேளிர்.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  கூடுகுவி வான்பூ (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உட்பொய்யாகிய குவிந்த வெள்ளிய பூ.  இருப்பை அரும்பு கூடுடையதாயிருத்தலும் காண்க, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இதழ் குவிந்த வெள்ளிய பூக்கள்.   உட்துளையுடைய இருப்பை மலர்கள் – அகநானூறு 149 – இருப்பைத் தொள்ளை வான் பூ, அகநானூறு 171 – பழம் போல் சேற்ற தீம்புழல் உணீஇய கருங்கோட்டு இருப்பை ஊரும், அகநானூறு 351 – புழல் வீ இருப்பை.

சொற்பொருள்:   திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க – தேமலையுடைய மாமை நிறமும் மாந்தளிர் போன்ற அழகும் பாழ்பட, புதலிவர் பீரின் எதிர்மலர் கடுப்பப் பசலை பாய்ந்த நுதலேன் ஆகி – புதர்களில் படர்ந்த பீர்க்கையின் அன்று மலர்ந்த மலர் போன்ற பசலை பரவிய நெற்றியை உடையவள் ஆகி (பீரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, எதிர்மலர் – புதிய மலர், கடுப்ப – உவம உருபு), எழுது எழில் மழைக்கண் கலுழ – ஓவியர்கள் வரைந்தாற்போன்ற அழகிய குளிர்ந்த கண்கள் அழ, நோய் கூர்ந்து ஆதிமந்தியின் அறிவு பிறிதாகிப் பேதுற்றிசினே – துன்பம் மிகுந்து ஆதிமந்தி போல் அறிவு திரிந்து யான் கலங்கியுள்ளேன், காதல் அம் தோழி – பேரன்பையுடைய அழகு தோழியே, காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி – ஞாயிற்றின் வெப்பமிக்க கதிர்கள் தாக்குவதால் காற்று மிகுந்து வீசி (கனைந்து – மிகுந்து, கால் – காற்று), ஆடு தளிர் இருப்பைக் கூடு குவி வான்பூக் கோடு கடை கழங்கின் அறை மிசைத் தாஅம் காடு இறந்தனரே காதலர் – அசையும் தளிர்களையுடைய இருப்பை மரத்தின் இதழ்கள் குவிந்த வெள்ளை மலர்கள் யானையின் மருப்பினால் கடைந்து செய்த கழங்குகளைப் போல் தோன்றிப் பாறைகள் மீது பரவிக் கிடக்கும் காட்டைக் கடந்து சென்றுள்ளார் நம் தலைவர் (கழங்கின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, இருப்பை மரம் – Indian Butter Tree, South Indian Mahua), அடு போர் வீயா விழுப்புகழ் விண் தோய் வியன் குடை – பகைவரைக் கொல்லும் போர்த் திறமையையும் கெடாத சிறந்த புகழையும் வானளாவிய பெரிய குடையையுமுடைய, ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த கழுவுள் காமூர் போலக் கலங்கின்று – பதினான்கு வேளிர் மன்னர்கள் ஒன்றுகூடித் தாக்கிய கழுவுள் என்பவனின் காமூரைப் போல் கலங்கியுள்ளது, மாது – அசைநிலை, அவர்த் தெளிந்த என் நெஞ்சே – அவருடைய சொற்களால் தெளிந்திருந்த என் நெஞ்சு (நெஞ்சே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 136, விற்றூற்று மூதெயினனார், மருதத் திணை தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
மைப்பு அறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்,
புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்கத் திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்துக்,  5
கடி நகர் புனைந்து கடவுள் பேணிப்,
படு மண முழவொடு பரூஉப்பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்,
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய
மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை  10
பழங்கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மா இதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு வெண்ணூல் சூட்டித்,
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி,  15
மழை பட்டன்ன மணன் மலி பந்தர்,
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றித்
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
“உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம் படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்  20
பெரும் புழுக்குற்ற நின் பிறை நுதல் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற” என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென 25
நாணினள் இறைஞ்சியோளே, பேணிப்
பரூஉப் பகை ஆம்பல் குரூஉத் தொடை நீவிச்,
சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.

பாடல் பின்னணி:  தலைவி ஊடல் கொண்டபொழுதில், தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது.

பொருளுரை:  குற்றம் உண்டாகாதபடி சமைக்கப்பட்ட நெய் மிக்க வெள்ளைச் சோற்றை எல்லை இல்லாத வள்ளன்மைப் பண்புடன் சுற்றத்தார்க்கும் சான்றோர்களுக்கும்  உண்ணக் கொடுத்து அவர்களைக் கவனித்து,  புள் நிமித்தம் (நல்ல நேரம்) பொருந்தி இருக்கும் இனிமையான வேளையில், தெளிவான அழகிய பெரிய வானம் ஒளியாகும்படி நிலவை உரோகிணிக் கூடிய குற்றமற்ற நல்ல நாளில், மண மனையை அழகுப்படுத்தி, கடவுளை வழிபட்டு, ஒலிக்கும் மண முரசுடன், பெரிய பணை முரசும் ஒலிக்க, தலைவியை நீராட்டிய பெண்கள், தங்களின் மலர் போன்ற கண்களால் இமைக்காமல் அவளை நோக்கி, பின் விரைந்து மறைய, முதிய கன்று மென்மையான மலர்களையுடைய வாகை மரத்தின் புல்லிய (சிறப்பு இல்லாத) பின்புறத்தையுடைய பிரிவு உடைய இலைகளை உண்டப் பள்ளத்தில் படர்ந்துள்ள, ஒலிக்கும் வானின் முதல் மழைக்குத் துளிர்த்த கழுவிய நீலமணியை ஒத்தக் கரிய இதழ்களையும் கிழங்கையும் உள்ள அறுகம் புல்லின் குளிர்ந்த நறுமணமான அரும்புடன் தொடுத்த வெள்ளை நூலை அவளுக்குச் சூட்டி, முகில்கள் ஒலித்தாற்போல் ஒலியுடைய திருமணப் பந்தலில், அணிகளைச் சிறப்புடன் அணிந்த அவளின் வியர்வையைத் துடைத்து, அவள் குடும்பத்தார் அவளை எனக்குத் தர, முதல் நாள் இரவில், வெறுப்பு இல்லாத கற்புடைய அவள், என் உயிர்க்கு உடம்பாகப் பொருந்தும் அவள், கசங்காத புத்தாடையால் தான் உடலை முழுக்கப் போர்த்தியிருக்க, “உன் பிறை நெற்றியில் அதிகப் புழுக்கத்தினால் அரும்பியுள்ள வியர்வையை மிக்க காற்றால் போக்க, உன் ஆடையைக் கொஞ்சம் திற” என்று கூறி ஆர்வ நெஞ்சத்துடன் மூடிய அவளுடைய ஆடையை நான் கவர, உறையினின்று எடுத்த வாள் போல அவள் உருவம் வெளிப்பட்டு விளங்க, மறைக்கும் வழியை அறியாதவள் ஆகி, விரைவாக நாணம் அடைந்து, தான் அணிந்திருந்த ஆம்பல் மலர்களுடன் புனைந்த நிறம் பொருந்திய பருத்த மாலையை நீக்கி, வண்டுகள் சூழ்ந்து ஒலிக்கும் அழகிய மலர்களை அணிந்த தன்னுடைய கருமையான அடர்ந்த கூந்தலின் இருளால், தன் உடலை மறைத்து என் முன் தலைக் குனிந்தாள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘கைவிடின் அச்சமும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘பொய்யும் வழுவும்’ (தொல்காப்பியம், கற்பியல் 4) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள், ‘களவின்வழி நிகழ்ந்த கற்புங்கோடற்கு உதாரணமாகும்’ என்றார் நச்சினார்க்கினியர்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பழந்தமிழ் மக்கள் உரோகிணியைத் திருமணத்திற்குச் சிறந்த நாளாகக் கொண்டிருந்தனர். கடவுள் பேணி என்பதனால், திருமணத்தின் தொடக்கத்தில் கடவுளை வழிபடும் வழக்கம் பண்டும் உளதென்பது பெற்றதாம்.  அகநானூறு 86 – கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென.  மழை பட்டன்ன மணன் மலி பந்தர் (16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மழை பெய்தாற்போன்ற ஒலியை உடைய புது மணல் மிக்க மணப் பந்தரிலே, வேங்கடசாமி நாட்டார்  உரை – மேகம் ஒலித்தால் ஒத்த மண ஒலி மிக்க பந்தலிலே. பரூஉப் பகை (27) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன் இடைக்குப் பருமனால் பகையாகிய.  வெண்ணூல் (14) – பழைய உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெண்ணூல், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வெண்நூல், ச. வே. சுப்பிரமணியன் – வெண்நூல், புலியூர்க்கேசிகன் உரை – வெந்நூல். 

சொற்பொருள்:   மைப்பு அற – குற்றம் இல்லாத, புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு – சமைக்கப்பட்ட நெய் மிக்க வெள்ளைச் சோறு, வரையா வண்மையொடு – எல்லை இல்லாத வள்ளன்மைப் பண்புடன், புரையோர்ப் பேணி – சான்றோர்களுக்கு உணவைக் கொடுத்து அவர்களைக் கவனித்து, புள்ளுப் புணர்ந்து இனிய ஆக – புள் நிமித்தம் பொருந்தி இனிமையாக, தெள் ஒளி – தெளிவான ஒளி, அம் கண் – அழகிய இடம்,  இரு விசும்பு – பெரிய வானம்,  விளங்க – ஒளிர, திங்கள் சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து – நிலவை உரோகிணிக் கூடிய குற்றமற்ற நல்ல நாள் சேர்கையில், கடி நகர் புனைந்து – மண மனையை அழகுப்படுத்தி,  கடவுள் பேணி – கடவுளை வழிபட்டு,  படு மண முழவொடு – ஒலிக்கும் மண முரசுடன், பரூஉப்பணை இமிழ – பெரிய பணை முரசும் ஒலிக்க (பரூஉ –அளபெடை), வதுவை மண்ணிய மகளிர் – தலைவிக்கு நீராட்டிய பெண்கள், விதுப்புற்று – விரைந்து, விருப்பம் அடைந்து, பூக்கணும் இமையார் நோக்குபு – மலர் போன்ற கண்களால் இமைக்காமல் நோக்கி (பூக்கணும் – பூக்கண்ணும், கண்ணும், இடைக்குறை), மறைய – மறைய, மென்பூ – மென்மையான மலர்கள், வாகை – வாகை மரம், புன்புறக் கவட்டிலை – புல்லிய பின்புறத்தையுடைய பிளவு உடைய இலை, பழங்கன்று கறித்த – முதிய கன்று உண்ட,  பயம்பு அமல் அறுகை – பள்ளத்தில் படர்ந்த அறுகம்புல்,  தழங்கு குரல் – ஒலிக்கும் குரல், வானின் தலைப்பெயற்கு – மேகத்தின் முதல் மழை பெய்தலால், ஈன்ற – ஈன்ற,  மண்ணு மணி அன்ன – கழுவிய நீலமணியை ஒத்த, மா இதழ் – கரிய இதழுடைய, பாவை – அறுகம்புல்லின் கிழங்கு, தண் நறு முகையொடு – தண்ணிய நறுமணமான அரும்புடன், வெண்ணூல் சூட்டி – வெள்ளை நூலைச் சூட்டி, தூ உடைப் பொலிந்து – தூய உடையால் பொலியச் செய்து, மேவரத் துவன்றி – விருப்பம் உண்டாகக் கூடி, மழை பட்டன்ன – மழை பெய்தாற்போல், முகில்கள் ஒலித்தாற்போல், மணன் மலி பந்தர் – மண ஒலியுடைய பந்தல் (மணன் – மணம் என்றதன் போலி), மணல் நிறைந்த பந்தல் பந்தர் – பந்தல் என்பதன் போலி, இழை அணி சிறப்பின் – அணிகளை அணிந்த சிறப்புடன், பெயர் வியர்ப்பு ஆற்றி – தோன்றிய வியர்வையை துடைத்து, தமர் நமக்கு ஈத்த – அவள் குடும்பத்தார் எனக்குத் தந்த,  தலை நாள் இரவின் – முதல் நாள் இரவில், உவர் நீங்கு கற்பின் – வெறுப்பு நீங்கிய கற்புடைய, எம் உயிர் உடம் படுவி – என் உயிர்க்கு உடம்பாகப் பொருந்தும் இவள்,  முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ – கசங்காத புத்தாடையால் முழுக்க போர்த்தி (வளைஇ – அளபெடை), பெரும் புழுக்கு உற்ற – அதிகமாக புழுக்கமாகிய, நின் பிறை நுதல் – உன் பிறை நெற்றி, பொறி வியர் – அரும்பியுள்ள வியர்வை, உறு வளி ஆற்ற – மிக்க காற்றால் போக்க, சிறு வரை திற – சிறிது நேரம் திற, என ஆர்வ நெஞ்சமொடு – என்று ஆர்வ நெஞ்சுடன், போர்வை வவ்வலின் – மூடிய ஆடையை பற்றிக் கவர்ந்ததால், உறை கழி வாளின் – உறையினின்று எடுத்த வாள் போல (வாளின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), உருவு பெயர்ந்து இமைப்ப – உருவம் வெளிப்பட்டு விளங்க,  மறை திறன் அறியாள் ஆகி – மறைக்கும் வழியை அறியாதவள் ஆகி, ஒய்யென நாணினள் – விரைவாக நாணம் அடைந்தாள் (ஒய்யென – விரைவுக்குறிப்பு), இறைஞ்சியோளே பேணி –  கெஞ்சினாள், என்னை வணங்கினாள், பரூஉப் பகை – பருமையால் பகையாகிய (பரூஉ – அளபெடை), ஆம்பல் – ஆம்பல் மலர்கள், குரூஉ  – நிறம் பொருந்திய (குரூஉ – அளபெடை), தொடை – மாலை, நீவி – நீக்கி,  சுரும்பு இமிர் – வண்டு ஒலிக்கும், ஆய் மலர் வேய்ந்த – அழகிய மலர்களை அணிந்த, தேர்ந்தெடுத்த மலர்களை அணிந்த,  இரும் பல் கூந்தல் – கருமையான அடர்ந்த கூந்தல், இருள் – கூந்தலின் இருள், மறை ஒளித்தே – மறைத்து ஒளித்து (ஒளித்தே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 137, உறையூர் முதுகூத்தனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
சிறும் பல் கேணிப் பிடி அடி நசைஇச்,
களிறு தொடூஉக் கடக்கும் கான் யாற்று அத்தம்
சென்று சேர்பு ஒல்லார் ஆயினும், நினக்கே,
வென்று எறி முரசின் விறல் போர்ச் சோழர்  5
இன் கடுங்கள்ளின் உறந்தை ஆங்கண்,
வருபுனல் நெரிதரும் இகு கரைப் பேரியாற்று
உருவ வெண்மணல் முருகு நாறு தண் பொழில்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
வீ  இலை அமன்ற மரம் பயில் இறும்பில்  10
தீ இல் அடுப்பின் அரங்கம் போலப்,
பெரும் பாழ் கொண்டன்று நுதலே, தோளும்
தோளா முத்தின் தெண் கடல் பொருநன்
திண்தேர்ச் செழியன் பொருப்பின் கவாஅன்
நல் எழில் நெடுவேய் புரையும்  15
தொல் கவின் தொலைந்தன, நோகோ யானே.

பாடல் பின்னணி:  தலைவன் வினைவயின் பிரிவானோ என வருந்திய தலைவியிடம் தோழி கூறியது. 

பொருளுரை:  பாலைநில வழியில் செல்லும் புதியவர்கள் சேற்றைக் கிண்டிக் குடித்த சிறிய பல குழிகளை தன் பிடியின் காலடிச் சுவடுகள் என்று விரும்பிக் களிற்று யானைகள் தொட்டுப் பார்த்துக் கடந்து செல்லும், காட்டு ஆற்றினையுடைய வழியில் சென்று சேர்தலுக்கு நம் தலைவர்உடன்படாதவர் ஆயினும்,

பகைவரை வென்று முழங்கும் முரசையும் போர் வெற்றியையும் உடைய சோழரின் இனிப்பு மிக்க கள்ளையுடைய உறையூரில், வருகின்ற நீர் இடிக்கும் மெலிந்த கரையையுடைய பெரிய ஆறாகிய காவிரியின் அழகிய வெண்மணல் நிறைந்த தேனின் நறுமணம் வீசும் சோலையில், பங்குனி விழா முடிந்த அடுத்த நாள் பூக்களுடன் கூடிய இலைகள் நிறைந்த மரங்கள் அடர்ந்த குறுங்காட்டில் தீ இல்லாத வெறும் அடுப்புகளை உடைய ஆற்றிடைக்குறை போல் பாழாகிவிட்டது நின் நெற்றி.  நின் தோள்களும் துளையிடாத முத்துக்கள் விளையும் தெளிந்த கடலையுடைய மறம் மிகுந்தவனாக திண்ணிய தேர்களையுடைய பாண்டியனின் பொதிய மலையின் பக்கத்தில் உள்ள நல்ல அழகிய உயர்ந்த மூங்கிலை ஒக்கும் பண்டைய அழகை இழந்துவிட்டன.  நினக்கு யான் வருந்துகின்றேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) எனவரும் நூற்பாவின்கள் ‘வகைபட வந்த கிளவி’ என்பதனால் அமைத்துக் கொள்க.  பங்குனி முயக்கம் (9) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – முயக்கம் கூட்டம், உத்தரமும் நிறைமதியும் கூடிய கூட்டம்.  பங்குனித் திங்களில் உத்தரமும் நிறைமதியும் கூடிய நாள் நன்னாளாகும்.  திருவரங்கத்தில் பங்குனி உத்திர விழா கொண்டாடப்பட்டது.  வரலாறு – சோழர், செழியன், உறந்தை, பேரியாறு (காவிரி), பொருப்பு (பொதிய மலை). 

சொற்பொருள்:  ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட சிறும் பல் கேணிப் பிடி அடி நசைஇச் களிறு தொடூஉக் கடக்கும் – பாலைநில வழியில் செல்லும் புதியவர்கள் சேற்றைக் கிண்டிக் குடித்த சிறிய பல குழிகளை தன் பிடியின் காலடிச் சுவடுகள் என்று விரும்பிக் களிற்று யானைகள் தொட்டுப் பார்த்துக் கடந்து செல்லும் (நசைஇ – அளபெடை, தொடூஉ – அளபெடை), கான் யாற்று அத்தம் சென்று சேர்பு ஒல்லார் ஆயினும் – காட்டு ஆற்றினையுடைய வழியில் சென்று சேர்தலுக்கு உடன்படாதவர் ஆயினும், நினக்கே – நினக்கு, வென்று எறி முரசின் விறல் போர்ச் சோழர் இன் கடுங்கள்ளின் உறந்தை ஆங்கண் – பகைவரை வென்று முழங்கும் முரசையும் போர் வெற்றியையும் உடைய சோழரின் இனிப்பு மிக்க கள்ளையுடைய உறையூரில், வருபுனல் நெரிதரும் இகு கரைப் பேரியாற்று உருவ வெண்மணல் முருகு நாறு தண் பொழில் – வருகின்ற நீர் இடிக்கும் மெலிந்த கரையையுடைய பெரிய ஆறாகிய காவிரியின் அழகிய வெண்மணல் நிறைந்த தேனின் நறுமணம் வீசும் சோலையில், பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள் வீ  இலை அமன்ற மரம் பயில் இறும்பில் தீ இல் அடுப்பின் அரங்கம் போலப் பெரும் பாழ் கொண்டன்று நுதலே – பங்குனி விழா முடிந்த அடுத்த நாள் பூக்களுடன் கூடிய இலைகள் நிறைந்த மரங்கள் அடர்ந்த குறுங்காட்டில் தீ இல்லாத வெறும் அடுப்புகளை உடைய ஆற்றிடைக்குறை போல் பாழாகிவிட்டது நின் நெற்றி (நுதலே – ஏகாரம் அசைநிலை), தோளும் தோளா முத்தின் தெண் கடல் பொருநன் திண்தேர்ச் செழியன் பொருப்பின் கவாஅன் நல் எழில் நெடுவேய் புரையும் தொல் கவின் தொலைந்தன – தோள்களும் துளையிடாத முத்துக்கள் விளையும் தெளிந்த கடலையுடைய மறம் மிகுந்தவனாக திண்ணிய தேர்களையுடைய பாண்டியனின் பொதிய மலையின் பக்கத்தில் உள்ள நல்ல அழகிய உயர்ந்த மூங்கிலை ஒக்கும் பண்டைய அழகை இழந்துவிட்டன  (கவாஅன் – அளபெடை, புரை – உவம உருபு), நோகோ யானே – யான் வருந்துகின்றேன் (நோகோ – நோகு செய்கென்னும் தன்மை வினை, ஓகாரம் –அசைநிலை, இரக்கக் குறிப்பு, யானே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 138, எழூஉப்பன்றி நாகன் குமரனார், குறிஞ்சித் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
இகுளை!  கேட்டிசின் காதலம் தோழி!
குவளை உண்கண் தெண் பனி மல்க,
வறிதியான் வருந்திய செல்லற்கு அன்னை
பிறிதொன்று கடுத்தனள் ஆகி, வேம்பின்
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி, 5
உடலுநர்க் கடந்த கடல் அம் தானைத்
திருந்து இலை நெடுவேல் தென்னவன் பொதியில்,
அருஞ்சிமை இழிதரும் ஆர்த்துவரல் அருவியின்
ததும்பு சீர் இன்னியங்கறங்கக் கைதொழுது,
உருகெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇக்,  10
கடம்பும் களிறும் பாடி நுடங்குபு
தோடுந்தொடலையும் கைக்கொண்டு, அல்கலும்
ஆடினர் ஆதல் நன்றோ? நீடு
நின்னொடு தெளித்த நன் மலை நாடன்
குறிவரல் அரை நாள் குன்றத்து உச்சி  15
நெறி கெட வீழ்ந்த துன்னருங் கூர் இருள்,
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள்
கொழு மடல் புதுப் பூ ஊதும் தும்பி
நன்னிறம் மருளும் அரு விடர்
இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே.  20

பாடல் பின்னணி:  வரையாது களவிலேயே வந்தொழுகும் தலைவன் அண்மையில் இருப்பதை அறிந்த தலைவி, தோழியிடம் சொல்லுவாளாய் அவனுக்கு அறிவுறுத்தியது.  

பொருளுரை:  இகுளையே!  பேரன்புமிக்க தோழியே!  கேட்பாயாக!  நெடு நாட்களாக நின்னிடம் “நான் அவளை வரைந்துகொள்வேன்” எனத் தெளிவாகக் கூறிய, நல்ல மலைநாடனாகிய நம் தலைவன், இரவுக்குறிக்கு வரும் நள்ளிரவில், குன்றின் உச்சியில், வழி கெடுமாறு உண்டாகிய நெருங்குதற்கு அரிய மிக்க இருளில் தன் மணியை உமிழ்த்த பாம்பு, காந்தளின் கொழுவி மடலையுடைய புதிய மலர்களை ஊதும் வண்டின் நல்ல நிறத்தைக் கண்டு மயங்கும், அரிய பிளவுகளையுடைய துன்புறுத்தும் நீண்ட வழியை நினைத்து வருந்துகின்றது என் நெஞ்சு.

குவளை மலர்களை ஒத்த எனது மையுண்ட கண்களில் தெளிந்த நீர் பெருகுமாறு சிறிது யான் வருந்திய துன்பத்திற்கு, அன்னை காரணம் வேறு எனக்கருதி ஐயமுற்றாள் ஆகி, வேம்பின் நாற்றமுடைய பசிய இலைகளுடன் நீல மலர்களை அணிந்து, மாறுபட்ட பகைவர்களை வென்ற கடல்போல் சேனைகளையும் திருந்திய இலையைக் கொண்ட நெடிய வேலையுடைய பாண்டிய மன்னனின் பொதியமலையில் அடைதற்கு அரிய உச்சியிலிருந்து, ஆரவாரத்துடன் கீழே வரும் அருவியின் ஒலி போல், முழங்கும் சீரையுடைய இனிய இசைக்கருவிகள் ஒலிக்கக் கையால் வணங்கி, அச்சம் பொருந்திய தலைமையுடைய முருக்கடவுளை மனைக்கு வருவித்து அவனுடைய கடம்ப மரத்தையும் களிற்று யானையையும் பாடி, பனந்தோட்டையும் கடம்ப மலர் மாலையையும் கைகளில் கொண்டு இரவெல்லாம் வேலன் அசைந்து ஆடினால் நல்லதாகுமோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘வெறியாட்டிடத்து ‘வெருவின் கண்ணும்’ (தொல்காப்பியம், களவியல் 30) என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘களவு அலராயினும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்னுஞ் சூத்திரத்து ‘கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் ஒட்டிய திறத்தான் செய்திக்கண்ணும்’ என்ற துறைக்கு இச் செய்யுளைக் காட்டி, ‘இதன்கண் கட்டென்றாயினும் கழங்கென்றாயினும் விதந்து கூறாமையின் இரண்டும் ஒருங்கு வந்தன’ என்றும், ‘பொழுதும் ஆறும்’ (தொல்காப்பியம், பொருளியல் 16) என்னுஞ் சூத்திரத்து, ‘அன்னவை பிறவும்’ என்னும் பகுதியில், ‘கடம்பும் களிறும் ……….. ஆதல் நன்றோ’ என்பது, தலைவற்கு வெறியாட்டு உணர்த்தியது என்றும் கூறினர் நச்சினார்க்கினியர்.  ஆடினர் (13) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கட்டுவிச்சியும் வேலனும் ஆடலின் ஆடினார் என்று பன்மையால் கூறினாள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஆடுதல்.  வீழ்ந்த துன்னருங் கூர் இருள் (16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பனி வீழ்ந்தது மழை வீழ்ந்தது என்புழிப் போல வீழ்ந்த இருள் என்றது ஆக்கத்தின் மேனின்றது.  உள்ளுறை – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – திருமணி உமிழ்ந்த நாகம், காந்தட் பூவை நுகர்ந்ததனாற் நன்னிறம் பெற்ற தும்பியைக் கண்டு, ஐயுற்று மயங்குதல் போல, நம் அன்னை தலைவனோடு இன்பம் துய்த்ததனாற் புதுச் செவ்வியுற்ற என்னைக் கண்டு மயங்குகின்றாள் என்றவாறு.  வரலாறு – தென்னவன், பொதியை மலை. பாம்பு மணியை உமிழ்தல் – புறநானூறு 294, அகநானூறு 72, 92, 138, 192, 372, குறுந்தொகை 239, நற்றிணை 255.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40).    

சொற்பொருள்:  இகுளை – இகுளையே (இகுளை – உறுவினள்), கேட்டிசின் – கேட்பாயாக listen (சின் – முன்னிலை அசைச் சொல்), காதலம் தோழி – பேரன்புமிக்க தோழியே (அம் அசைநிலை), குவளை உண்கண் தெண் பனி மல்க வறிதியான் வருந்திய செல்லற்கு அன்னை பிறிதொன்று கடுத்தனள் ஆகி – குவளை மலர்களை ஒத்த எனது மையுண்ட கண்களில் தெளிந்த நீர் பெருகுமாறு சிறிது யான் வருந்திய துன்பத்திற்கு அன்னை காரணம் வேறு எனக்கருதி (முருகனின் வணங்கினால் ஏற்பட்டது என எண்ணி) ஐயமுற்றாள் ஆகி, வேம்பின் வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி உடலுநர்க் கடந்த கடல் அம் தானைத் திருந்து இலை நெடுவேல் தென்னவன் பொதியில் அருஞ்சிமை இழிதரும் ஆர்த்துவரல் அருவியின் – வேம்பின் நாற்றமுடைய பசிய இலைகளுடன் நீல மலர்களை அணிந்து மாறுபட்ட பகைவர்களை வென்ற கடல்போல் சேனைகளையும் திருந்திய இலையைக் கொண்ட நெடிய வேலையுடைய பாண்டிய மன்னனின் பொதியமலையில் அடைதற்கு அரிய உச்சியிலிருந்து ஆரவாரத்துடன் கீழே வரும் அருவியின் ஒலி போல் (வேம்பு, வேப்ப மரம் – neem tree, Azadirachta indica, அம் அசைநிலை, அருவியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ததும்பு சீர் இன் இயம் கறங்கக் கைதொழுது – முழங்கும் சீரையுடைய இனிய இசைக்கருவிகள் ஒலிக்கக் கையால் வணங்கி, உருகெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇக் கடம்பும் களிறும் பாடி – அச்சம் பொருந்திய தலைமையுடைய முருக்கடவுளை மனைக்கு வருவித்து அவனுடைய கடம்ப மரத்தையும் களிற்று யானையையும் பாடி (தரீஇ – அளபெடை, கடம்ப மரம் – Anthocephalus cadamba, Kadampa Oak) நுடங்குபு – அசைந்து, தோடும் தொடலையும் கைக்கொண்டு அல்கலும் ஆடினர் ஆதல் நன்றோ – பனந்தோட்டையும் கடம்ப மலர் மாலையையும் கைகளில் கொண்டு வேலன் இரவெல்லாம் ஆடினால் நல்லதாகுமோ, நீடு நின்னொடு தெளித்த – நெடு நாட்களாக நின்னிடம் நான் அவளை வரைந்துகொள்வேன் எனத் தெளிவாகக் கூறிய, நன் மலை நாடன் குறிவரல் அரை நாள் குன்றத்து உச்சி – நல்ல மலைநாடனாகிய நம் தலைவன் இரவுக்குறி வரும் நள்ளிரவில் குன்றின் உச்சியில், நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள் திரு மணி உமிழ்ந்த நாகம் – வழி கெடுமாறு உண்டாகிய நெருங்குதற்கு அரிய மிக்க இருளில் தன் மணியை உமிழ்த்த பாம்பு, காந்தள் கொழு மடல் புதுப் பூ ஊதும் தும்பி நன்னிறம் மருளும் – காந்தளின் கொழுவி மடலையுடைய புதிய மலர்களை ஊதும் வண்டின் நல்ல நிறத்தைக் கண்டு மயங்கும், அரு விடர் இன்னா நீள் இடை – அரிய பிளவுகளையுடைய துன்புறுத்தும் நீண்ட வழியை, நினையும் என் நெஞ்சே – நினைக்கும் என் நெஞ்சு (நெஞ்சே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 139, இடைக்காடனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
துஞ்சுவது போல இருளி விண் பக
இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு
ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ,
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு
ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள்,  5
ஈன்று நாள் உலந்த வாலா வெண்மழை
வான் தோய் உயர்வரை ஆடும் வைகறைப்,
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலைத்,
தண் நறும் படுநீர் மாந்திப் பதவு அருந்து
வெண்புறக்கு உடைய திரி மருப்பு இரலை,  10
வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு நிழல்
காமர் துணையொடு ஏமுற வதிய,
அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய்
பரப்பியவை போல் பாஅய்ப் பலவுடன்
நீர் வார் மருங்கின் ஈர் அணி திகழ,  15
இன்னும் வாரார் ஆயின் நன்னுதல்
யாது கொல் மற்று அவர் நிலையே காதலர்
கருவிக் கார் இடி இரீஇய
பருவ மன், அவர் வருதும் என்றதுவே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வருந்திய தலைவி, தோழிக்குச் சொல்லியது. 

பொருளுரை:  நல்ல நெற்றியையுடையவளே!  முகில்கள், உறங்குவன போல் இருண்டு, கண் இமைப்பது போல் வானம் பிளக்கும்படி மின்னி, கடல் நீரை முகந்து கொண்டு வானில் ஏறுவதுபோல் முழக்கம் மிகுந்த இடமெல்லாம் பரவி, நிலத்தின் நெஞ்சு அஞ்சி நடுங்கும்படி விடாது இடித்து, மிக்க நீரைப் பொழிந்த நீண்ட பெய்தல் கொண்ட இறுதி நாளில், பெய்த நாள் கழிந்த தூய்மையில்லாத வெள்ளை முகில்கள் வானத்தைத் தீண்டும் உயர்ந்த மலையில் தவழும், வைகறையாகிய கதிரவன் ஒளியால் புதர்கள் சிறந்து காண்பதற்கு இனிமையாக இருக்கும் காலத்தில், குளிர்ந்த நறுமண குளத்தின் நீரைப் பருகி அறுகம்புல்லை மேயும் வெள்ளை புறத்தையும் திரிந்த கொம்பையுமுடைய ஆண்மான் நீண்ட மணலின் ஒரு பக்கத்தில் பூக்கள் மலர்ந்த பிடவ மரத்தின் கொழுவிய நிழலில் அழகிய துணையுடன் இன்பத்துடன் தங்க, செவ்வரக்கு அன்ன நிறத்தையும் அழகினையும் உடைய தம்பலப் பூச்சிகள் பரப்பி வைக்கப்பட்டவை போல் பலவும் பரவி, நீர் ஒழுகும் இடம் அழகுடன் விளங்க, இன்னும் நம் தலைவர் வரவில்லை ஆனால், அவரது நிலைமை எவ்வாறு உள்ளதோ?  இது அவர் மீண்டு வருவேன் எனக் கூறிய, தொகுதியையுடைய முகில்கள் இடிக்கும் தொழிலைக் கொண்டுள்ள பருவம் அன்றோ!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 43) என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘திணை மயக்குறுதலும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 12) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுட்கண், பாலைக்கண் முன்பனியும் வைகறையும் ஒருங்கு வந்தன என்றும், ‘வேந்துறு தொழிலே யாண்டினது அகமே’ (தொல்காப்பியம், கற்பியல் 48) என்னுஞ் சூத்திரத்து, ‘கருவிக் கார் இடி இரீஇய பருவ மன், அவர் வருதும் என்றதுவே’ என்னும் இது, ‘கார் குறித்து வருவரென்றாலின், அறு திங்கள் இடையிட்டது’ என்றும் கூறினர் நச்சினார்க்கினியர்.  கருவிக் கார் (18) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மின்னல் முதலிய தொகுதிகளையுடைய முகில்கள்.  திணை மயக்கம் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதை பாலைக்கண் முன்பனியும் வைகறையும் ஒருங்கு வந்தமையின் திணை மயக்கமாம்.  இஃது உரிப்பொருளால் பாலை என்க.  மூதாய் – தம்பலப்பூச்சி, இந்திரகோபம், பட்டுப்பூச்சி, trombidium grandissimum.  சிறிய சிவந்த நிறமுடைய பூச்சிகள் இவை.  நிலத்தில் தவழ்வன.  வெல்வெட் போன்ற மேல்பகுதியைக் கொண்டவை.  மழைக்காலத்தில் இவற்றைக் காணலாம்.  இவை உள்ள பாடல்கள் – அகநானூறு 14, 54, 74, 134, 139, 283, 304, 374, கலித்தொகை 85, நற்றிணை 362.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21). 

சொற்பொருள்:  துஞ்சுவது போல இருளி – முகில்கள் உறங்குவன போல் இருண்டு, விண் பக இமைப்பது போல மின்னி – கண் இமைப்பது போல் வானம் பிளக்கும்படி மின்னி, உறைக்கொண்டு ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ – கடல் நீரை முகந்து கொண்டு வானில் ஏறுவதுபோல் முழக்கம் மிகுந்த இடமெல்லாம் பரவி (உறை ஆகுபெயர் நீருக்கு, உரைஇ – அளபெடை), நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து – நிலத்தின் நெஞ்சு அஞ்சி நடுங்கும்படி விடாது இடித்து, ஆங்கு – அசை, ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள் – மிக்க நீரைப் பொழிந்த நீண்ட பெய்தல் கொண்ட இறுதி நாளில், ஈன்று நாள் உலந்த வாலா வெண்மழை – பெய்த நாள் கழிந்த தூய்மையில்லாத வெள்ளை முகில்கள், வான் தோய் உயர்வரை ஆடும் வைகறைப் புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை – வானத்தைத் தீண்டும் உயர்ந்த மலையில் தவழும் வைகறையாகிய கதிரவன் ஒளியால் புதர்கள் சிறந்து காண்பதற்கு இனிமையாக இருக்கும் காலத்தில், தண் நறும் படுநீர் மாந்திப் பதவு அருந்து வெண்புறக்கு உடைய திரி மருப்பு இரலை வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு நிழல் காமர் துணையொடு ஏமுற வதிய – குளிர்ந்த நறுமண குளத்தின் நீரைப் பருகி அறுகம்புல்லை மேயும் வெள்ளை புறத்தையும் திரிந்த கொம்பையுமுடைய ஆண்மான் நீண்ட மணலின் ஒரு பக்கத்தில் பூக்கள் மலர்ந்த பிடவ மரத்தின் கொழுவிய நிழலில் அழகிய துணையுடன் இன்பத்துடன் தங்க (படு – குளம், அறுகம்புல் – Cynodon grass, அருந்து – ஆர்ந்து என்பது அருந்து என வந்தது, பிடவ மரம் – Randia malabarica, Randia genus occurs as plants and trees) அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய் பரப்பியவை போல் பாஅய்ப் பலவுடன் நீர் வார் மருங்கின் ஈர் அணி திகழ – செவ்வரக்கு அன்ன நிறத்தையும் அழகினையும் உடைய தம்பலப் பூச்சிகள் பரப்பி வைக்கப்பட்டவை போல் பலவும் பரவி நீர் ஒழுகும் இடம் அழகுடன் விளங்க (பாஅய் – அளபெடை), இன்னும் வாரார் ஆயின் – இன்னும் அவர் வரவில்லை ஆனால், நன்னுதல் – நல்ல நெற்றியையுடையவளே (விளி), யாது கொல் மற்று அவர் நிலையே – அவரது நிலைமை எவ்வாறு உள்ளதோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், மற்று – அசைநிலை), காதலர் – நம் தலைவர், கருவிக் கார் இடி இரீஇய பருவம் – தொகுதியையுடைய முகில்கள் இடிக்கும் தொழிலைக் கொண்டுள்ள இப்பருவம், மன் – கழிவுக் குறிப்பு, அவர் வருதும் என்றதுவே – அவர் மீண்டு வருவேன் எனக் கூறியது (என்றதுவே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 140, அம்மூவனார், நெய்தல் திணைதலைவன் தோழனிடம் சொன்னது
பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங் கழிச்செறுவின் உழாஅது செய்த
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி,
என்றூழ் விடர குன்றம் போகும்
கதழ் கோல் உமணர் காதல் மட மகள்  5
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி,
நெல்லின் நேரே வெண்கல் உப்பு எனச்
சேரி விலைமாறு கூறலின், மனைய
விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு,  10
இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும்
மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வம் தீர வாங்குந்தந்தை
கை பூண் பகட்டின் வருந்தி,
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே.  15

பாடல் பின்னணி:  இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைவன் தோழனுக்குச் சொல்லியது.  

பொருளுரை:  பெரிய கடலில் மீன் பிடிக்கும் தொழிலைச் செய்யும் சிறிய குடியில் வாழும் பரதவர்கள், பெரிய கழியாகிய வயலின்கண் ஏர் செலுத்தி உழாது விளைவித்த வெள்ளை உப்பின் விலையைக் கூறி, கதிரவனின் வெம்மையான கதிர்களால் பிளவுகள் உடைய குன்றங்களைக் கடந்து போகும், கடாக்களை விரையும்படித் தூண்டும் கோலினையுடைய உப்பு வணிகரின் பேரன்பினையுடைய இளைய மகள், தான் அணிந்திருந்த சில திரண்ட ஒளிரும் வளையல்கள் ஒலிக்கும்படி தன் கைகளை வீசி, “நெல்லுக்கு ஒத்த அளவு இந்த வெள்ளை கல்லுப்பு” என்று தெருவில் பண்டமாற்றாக விலை கூறிச் செல்வதால், அத்தெருவில் உள்ள ஒரு மனையில் இருக்கும் நாய் ஒன்று அவள் குரலைக் கேட்டு குரைக்கவும், அதற்கு அஞ்சிய, அவளுடைய மதர்த்த கயல் மீன்கள் இரண்டு ஒன்றோடு ஒன்று பொருவது போன்ற கண்களால், புதுக்கொல்லை உருவாக்க முயலும் குறவன் மரங்களை வெட்டித் தீயில் எரிக்கும் எரிக்கும் வேளையில் எழும் புகையின் அடர்ந்த நிழலை ஒக்கும் கரிய பழைய சேற்றில் அழுந்திய வண்டியின் இடையூறு நீங்க இழுக்கும் அவள் தந்தை கையில் பற்றிய எருது போல் வருந்தி, வெய்யவாகப் பெருமூச்சு விடும் நோய் ஆகின்றது, எமக்கு.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘மெய் தொட்டுப் பயிறல்’ (தொல்காப்பியம், களவியல் 11) என வரும் நூற்பாவின்கண் ‘பிரிந்த வழிக் கலங்கலும்’ என வரும் விதி கொள்க.  மதர் கயல் மலைப்பின் அன்ன கண் (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – செருக்குற்ற கயல் மீன்கள் இரண்டு தம்முள் போரிட்டாற்போன்ற விழிகள்.  பண்ட மாற்று – அகநானூறு 60, 61, 126, 140, 245, 296, 390, நற்றிணை 183, குறுந்தொகை 221, 269, ஐங்குறுநூறு 47, பொருநராற்றுப்படை 214–215, 216–7, பட்டினப்பாலை 28–30, மலைபடுகடாம் 413–414.  வெண்ணெல் உப்பு பண்டமாற்று – அகநானூறு 140 – நெல்லின் நேரே வெண்கல் உப்பு, அகநானூறு 390 – நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளீரோ, நற்றிணை 183 – தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி, குறுந்தொகை 269 – உப்பை மாறி வெண்ணெல் தரீஇய உப்பு விளை கழனிச் சென்றனள்.  நெல்லின் நேரே வெண்கல் உப்பு (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டு உப்பிற்குப் பண்ட மாற்றாகக் கொண்ட நெல் என்க.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).  என்றூழ் – கதிரவனின் முதிர்ந்த கதிர்கள், எல் (கதிரவன்) + ஊழ் (முதிர்ச்சி).  முனைவர் கு. வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம்.

சொற்பொருள்:  பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி – பெரிய கடலில் மீன் பிடிக்கும் தொழிலைச் செய்யும் சிறிய குடியில் வாழும் பரதவர்கள் பெரிய (கரிய) கழியாகிய வயலின்கண் உழாது விளைவித்த வெள்ளை உப்பின் விலையைக் கூறி (கழிச்செறு – உப்புப்பாத்தி, உழாஅது – அளபெடை), என்றூழ் விடர குன்றம் போகும் – கதிரவனின் வெம்மையான கதிர்களால் பிளவுகள் உடைய குன்றங்களைக் கடந்து போகும், கதழ் கோல் உமணர் காதல் மட மகள் – கடாக்களை விரையும்படித் தூண்டும் கோலினையுடைய உப்பு வணிகரின் பேரன்பினையுடைய இளைய மகள், சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி – சில திரண்ட ஒளிரும் வளையல்கள் ஒலிக்கும்படி தன் கைகளை வீசி, நெல்லின் நேரே வெண்கல் உப்பு எனச் சேரி விலைமாறு கூறலின் – நெல்லுக்கு ஒத்த அளவு இந்த வெள்ளை கல்லுப்பு என்று தெருவில் பண்டமாற்றாக விலை கூறிச் செல்வதால், மனைய விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய மதர் கயல் மலைப்பின் அன்ன கண் – மனையில் உள்ள நாய் குரைக்கவும் அதற்கு அஞ்சிய மதர்த்த கயல் மீன்கள் இரண்டு பொருவது போன்ற கண்கள் (மலைப்பின் – இன் சாரியை), எமக்கு – எமக்கு, இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும் – புதுக்கொல்லை உருவாக்க முயலும் குறவன் மரங்களைச் சுட்டு எரிக்கும் புகையின் நிழலை ஒக்கும், மா மூது அள்ளல் அழுந்திய சாகாட்டு எவ்வம் தீர வாங்கும் தந்தை கை பூண் பகட்டின் வருந்தி – கரிய பழைய சேற்றில் அழுந்திய வண்டியின் இடையூறு நீங்க இழுக்கும் அவள் தந்தை கையில் பற்றிய எருது போல் வருந்தி (பகட்டின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே – வெய்யவாகப் பெருமூச்சு விடும் நோய் ஆகின்றது (நோயாகின்றே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 141, நக்கீரர், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி!  கைம்மிகக்
கனவும் கங்குல் தோறு இனிய நனவும்,
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின,
நெஞ்சும் நனி புகன்று உறையும் எஞ்சாது
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி,  5
மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து,
அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள்,
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்,
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய  10
விழவு உடன் அயர வருக தில் அம்ம,
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலித்
தகரம் நாறுந்தண் நறுங்கதுப்பின்
புது மண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ,  15
கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்துப்,
பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு
தீங்குலை வாழை ஓங்கு மடல் இராது,  20
நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றும்
செல்குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால்
வெல்போர்ச் சோழன் இடையாற்று அன்ன
நல்லிசை வெறுக்கை தருமார் பல் பொறிப்
புலிக்கேழ் உற்ற பூ இடைப் பெருஞ்சினை  25
நரந்த நறும்பூ நாள் மலர் உதிரக்,
கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கைத்
தேங்கமழ் நெடுவரைப் பிறங்கிய
வேங்கட வைப்பில் சுரன் இறந்தோரே.

பாடல் பின்னணி:  தலைவன் பொருள் ஈட்டப் பிரிந்த காலத்தில், தலைவியின் துன்ப மிகுதியைக் கண்டு வருந்திய தோழியிடம் தலைவி கூறியது. 

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!       இரவுதோறும் கனவுகள் மிகவும் இனிமையாக உள்ளன.  நனவும் அழகுடன் புனையப்பட்ட நல்ல மனையில் புள் நிமித்தங்களுடன் நன்றாக உள்ளது.  என் நெஞ்சம் மிகவும் விருப்பம் கொண்டு உறைகின்றது. 

முற்றிலும் உலர்ந்த, தூய மலர்கள் நெருக்கமாக அணியப்பட்ட, மயிர்ச்சாந்து மணக்கும் தண்ணிய நறுமணம் பொருந்திய கூந்தலையுடைய புதிய மணமகள், உணவு மிக்க திருமண இல்லத்தில், பல பக்கங்களையுடைய அடுப்பில் பாலை உலையாக வார்த்து, கூழையாகிய கூந்தலையும் சிறு வளையல்களையும் உடைய தன் தோழியருடன், பெரிய வயலில் விளைந்த நெல்லின் வளைந்த கதிர்களை முறித்துப் பசிய அவலாக இடிக்கும் கரிய வைரம்பாய்ந்த உலக்கையின் விரைந்து இடிக்கும் ஒலிக்கு அஞ்சி, நிறைந்த சூலினையுடைய வெள்ளை குருகுகள், இனிய பழக் குலையையுடைய வாழையின் உயர்ந்த மடலில் தங்காது, நெடிய அடியையுடைய மாமரத்தின்கண் குறுகப் பறந்து செல்லும், தன் நாட்டின்கண் உள்ள கெட்ட குடிகளைத் தாங்கிய பெரும் புகழையுடைய கரிகால் சோழனின் இடையாறு என்னும் ஊரை ஒத்த நல்ல புகழையுடைய செல்வத்தை ஈட்டி வர,

மலையில் உள்ள வேங்கை மரத்தின் பல புள்ளிகளை உடைய புலியின் நிறம் பொருந்திய பூக்களின் இடையே, பெரிய கிளைகளையுடைய நாரத்தை மரத்தின் நறுமணமுடைய புதிய மலர்கள் உதிரும்படி, முசுக்கலைகள் பாய்ந்து தாவும், தேனின் மணம் கமழும் உயர்ந்து விளங்கிய வேங்கட மலையைச் சார்ந்த பாலைநில வழிகளைக் கடந்து சென்ற நம் தலைவர்,

உலகின் தொழில்கள் யாவும் எஞ்சாது கெடவும், கலப்பைகள் பயன்படாது இருக்குமாறும், மழை பெய்தல் நீங்கிய வானின்கண், குறிய முயலாகிய களங்கம் விளங்க நிலவு நிறைவுற்று, அறுமீனாகிய கார்த்திகையைச் சேரும் இருள் அகன்ற நடு இரவில், தெருக்களில் விளக்குகளை ஏற்றி மாலைகளைத் தொங்கவிட்டு பழமையான வெற்றியையுடைய பண்டைய ஊரில் பலரும் சேர்ந்து விழாவினைக் கொண்டாட, வருவாராக!  

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும் வாயிலின் வரூஉம்’ என்பதனால் அமைத்துக் கொள்க.  எஞ்சாது (4) – இரா. வேங்கடாசலம் பிள்ளை ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ‘நெஞ்சும் எஞ்சாது நனி புகன்று உறையும்’ எனக் கொண்டு பொருள் கூறுகின்றார், பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘உலகு தொழில் எஞ்சாது உலந்து’ எனக் கொண்டு பொருள் கூறியுள்ளார்.  கூழை (16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முடியில் சேராத மயிரைக் கூழை என்றாள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கூழையாகிய கூந்தல்.  செல்குடி நிறுத்த (22) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாம் பிறந்த நாட்டினின்றும் வயிரோம்பற் பொருட்டு வேற்று நாட்டிற்குச் செல்லுதற்குக் காரணமான குடிமக்களைப் பாதுகாத்து, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கெட்ட குடிகளைத் தாங்கிய.  வேங்கை மலரும் புலியும் – அகநானூறு 12 – வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் புலி செத்து வெரீஇய புகர் முக வேழம், அகநானூறு 141 – புலிக்கேழ் உற்ற பூ இடைப் பெருஞ்சினை நரந்த நறும்பூ நாள் மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை, அகநானூறு 227 – புலிக் கேழ் வேங்கை, அகநானூறு 228 – வேங்கை ஒள் வீப் புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், நற்றிணை 389 – வேங்கையும் புலி ஈன்றன, குறுந்தொகை 47 – வேங்கை வீ உகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றும், ஐங்குறுநூறு 396 – புலிப் பொறி வேங்கைப் பொன் இணர்.  வரலாறு –கரிகால் சோழன், இடையாறு, வேங்கடம்.  கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம், உரியியல் 57).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28). 

சொற்பொருள்:  அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக (கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல்), வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, கைம்மிகக் கனவும் கங்குல் தோறு இனிய – இரவுதோறும் கனவுகள் மிகவும் இனிமையாக உள்ளன, நனவும் புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின – நனவும் அழகுடன் புனையப்பட்ட நல்ல மனையில் புள் நிமித்தங்களுடன் நன்றாக உள்ளது, நெஞ்சும் நனி புகன்று உறையும் – என் நெஞ்சம் மிகவும் விருப்பம் கொண்டு உறையும், எஞ்சாது உலகு தொழில் உலந்து – உலகின் தொழில்கள் யாவும் எஞ்சாது கெட, நாஞ்சில் துஞ்சி – கலப்பைகள் பயன்படாது, மழைகால் நீங்கிய மாக விசும்பில் –  மழை பெய்தல் நீங்கிய வானின்கண் (மாக விசும்பில் – இருபெயரொட்டு), குறுமுயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து – குறிய முயலாகிய களங்கம் விளங்க நிலவு நிறைவுற்று, அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள் – அறுமீனாகிய கார்த்திகையைச் சேரும் இருள் அகன்ற நடு இரவில், மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவு உடன் அயர – தெருக்களில் விளக்குகளை ஏற்றி மாலைகளைத் தொங்கவிட்டு பழமையான வெற்றியையுடைய பண்டைய ஊரில் பலரும் சேர்ந்து விழாவினைக் கொண்டாட, வருக – வருவாராக, தில் – விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், அம்ம –அசைநிலை, துவரப் புலர்ந்து தூ மலர் கஞலித் தகரம் நாறுந்தண் நறுங்கதுப்பின் புது மண மகடூஉ அயினிய கடிநகர்ப் பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ – முற்றிலும் உலர்ந்து தூய மலர்கள் செறித்து மயிர்ச்சாந்து மணக்கும் தண்ணிய நறுமணம் பொருந்திய கூந்தலையுடைய புதிய மணமகள் உணவு மிக்க திருமண இல்லத்தில் பல பக்கங்களையுடைய அடுப்பில் பாலை உலையாக வார்த்து (மகடூஉ– அளபெடை, இரீஇ – அளபெடை), கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர் – கூழையாகிய கூந்தலையும் சிறு வளையல்களையும் உடைய பெண்கள், பெருஞ்செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்துப் பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக் கடிது இடி வெரீஇய – பெரிய வயலில் விளைந்த நெல்லின் வளைந்த கதிர்களை முறித்துப் பசிய அவலாக இடிக்கும் கரிய வைரம்பாய்ந்த உலக்கையின் விரைந்து இடிக்கும் ஒலிக்கு அஞ்சி (வெரீஇய – அளபெடை), கமஞ்சூல் வெண்குருகு தீங்குலை வாழை ஓங்கு மடல் இராது நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றும் – நிறைந்த சூலினையுடைய வெள்ளை குருகுகள் இனிய குலையையுடைய வாழையின் உயர்ந்த மடலில் தங்காது நெடிய அடியையுடைய மாமரத்தின்கண் குறுகப் பறந்து செல்லும் (மாஅத்து – அத்துச் சாரியை), செல்குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால் வெல்போர்ச் சோழன் இடையாற்று அன்ன – கெட்ட குடிகளைத் தாங்கிய (நாட்டை விட்டு நீங்கிச் செல்லும் குடிகளைத் தாங்கிய) பெரும் புகழையுடைய கரிகால் சோழனின் இடையாறு என்னும் ஊரை ஒத்த நல்லிசை வெறுக்கை தருமார் – நல்ல புகழையுடைய செல்வத்தை ஈட்டி வர, பல் பொறிப் புலிக்கேழ் உற்ற பூ இடை – பல புள்ளிகளை உடைய புலியின் நிறம் போன்ற நிறமுடைய பூக்களின் இடையே (உற்ற – போன்ற), பெருஞ்சினை நரந்த நறும் பூ நாள் மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் – பெரிய கிளைகளையுடைய நாரத்தை மரத்தின் நறுமணமுடைய புதிய மலர்கள் உதிரும்படி முசுக்கலைகள் பாய்ந்து தாவும், கல் சேர் வேங்கைத் – மலையில் உள்ள வேங்கை மரத்தின், தேங்கமழ் – தேனின் மணம் கமழும், நெடுவரைப் பிறங்கிய வேங்கட வைப்பில் சுரன் இறந்தோரே – உயர்ந்து விளங்கிய வேங்கட மலையைச் சார்ந்த பாலைநில வழிகளைக் கடந்து சென்றவர் (சுரன் – சுரம் என்பதன் போலி), இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 142, பரணர், குறிஞ்சித் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
இலமலர் அன்ன அம் செந்நாவில்
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்தப்,
பலர் மேந்தோன்றிய கவிகை வள்ளல்
நிறை அருந்தானை வெல் போர் மாந்தரம்
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற  5
குறையோர் கொள் கலம் போல நன்றும்
உவ இனி, வாழிய நெஞ்சே! காதலி
முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற
கறையடி யானை நன்னன் பாழி,
ஊட்டு அரு மரபின் அஞ்சுவரு பேய்எக்  10
ஊட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
வெள்ளத் தானை அதிகன் கொன்று, உவந்து
ஒள் வாள் அமலை ஞாட்பின்,
பலர் அறிவுறுதல் அஞ்சிப், பைப்பய,  15
நீர்த்திரள் கடுக்கும் மாசில் வெள்ளிச்
சூர்ப்புறு கோல் வளை செறித்த முன் கைக்,
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்,
இடனில் சிறு புறத்து இழையொடு துயல்வரக்,
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து,  20
உருவு கிளர் ஏர் வினைப் பொலிந்த பாவை
இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து,
பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங்கோதை
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்பத்
தொடிக்கண் வடுக் கொள முயங்கினள், 25
வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே.

பாடல் பின்னணி:  இரவுக்குறி வந்து நீங்கும் தலைவன், தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

பொருளுரை:  என் நெஞ்சே!  நீ நீடு வாழ்வாயாக!  நம் தலைவி, அறம் வழுவாமல் கடமையைப் புரிந்து அடைந்த, உரல் போல் காலடிகளை உடைய யானைகளையுடைய நன்னனின் பாழியில், பலி கொடுக்கும் மரபின்படி அச்சம் தரும் பேய்க்கு ஊட்டுதலை ஏற்றுக்கொண்ட வாய்மை பொருந்திய மிஞிலி என்பவன், பறவைகளுக்குப் பாதுகாவல் ஆகிய, பெரும் புகழையுடைய வெள்ளம் போன்ற சேனையையுடைய அதிகன் என்பவனைக் கொன்று மகிழ்ந்து ஒள் வாள் அமலை என்னும் வெற்றிக்கூத்தை ஆடிய போர்க்களத்தின் பூசல் போல், பலர் அறிந்து அலர் கூறுதலை அஞ்சி,

நீரின் திரட்சியை ஒக்கும் குற்றமற்ற வெள்ளியினால் செய்த வளைவு பொருந்திய திரண்ட வளையல்கள் செறிக்கப்பட்ட கைகள் உடையவளாய், நீர் குறைந்து ஓடும்பொழுது உள்ள கருமணல் போன்ற கரிய அடர்ந்த கூந்தல் மெலிந்த முதுகில் உள்ள அணிகலனுடன் அசைய, கடலில் மீன்கள் துஞ்சும் நள்ளிரவிலும், அழகு கிளர்ந்த பொலிந்த வினையையுடைய பாவை நடை கற்றாற்போல், நடையையுடையவளாய் மெல்ல மெல்ல வந்து,

மழையின் அலைத்தலாற் கலங்கிய மலைப் பூக்களால் தொடுத்த மாலையிலிருந்து, கொல்லனின் உலைக்களத்தில் அடிக்கும்பொழுது தெறிக்கும் பொன்னின் தூள் போல் தேன் துளிகள் சிதற, வடித்த யாழின் நரம்பின் ஒலிபோல் இனிய மொழிகளைக் கூறித் தன் வட்டமான முலையின் கண்ணின் வடு நம் மேல் உண்டாகத் தழுவினாள்.

இலவமலர் போன்ற அழகிய சிவந்த நாவினால் அறிவுடைமையால் உயர்த்திக் கூறப்படுகின்ற சான்றோர்கள் புகழ, பலரைவிடவும் மேம்பட்ட கவிந்த கைகளால் கொடுத்த வள்ளல், நிறுத்தற்கு அரிய போரில் வெல்லும் மாந்தரம் பொறையன் கடுங்கோ என்னும் சேர மன்னனைப் பாடிச் சென்ற வறியோரின் பிச்சை ஏற்கும் கலம் போல், பெரிதும் இனி நீ மகிழ்வாயாக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) என வரும் நூற்பாவின்கண் ‘ அவட் பெற்று மலியினும் ‘ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘செல்வம் புலனே’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 11) என்னுஞ் சூத்திரத்து, ‘தொடிக்கண் வடுக் கொள முயங்கினள் வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே’ என்பது புணர்ச்சி பற்றிய உவகையென்றும், ‘வினைபயன் மெய்யுரு’ (தொல்காப்பியம், உவமையியல் 1) என்னுஞ் சூத்திரத்து, ‘உருவு கிளர் ஏர் வினைப் பொலிந்த பாவை இயல் கற்றன்ன ஒதிக்கினள்’ என்பது வடிவு பற்றிய உவமம் என்றும் கூறினார் பேராசிரியர்.  தொடிக்கண் வடுக் கொள முயங்கினள் (25) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வட்டமாய முலைக் கண்ணின் வடு உண்டாகத் தழுவினாள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வட்டமான தனது முலைக்கண்ணின் வடு உண்டாகத் தழுவினள்தொடி வடு – கலித்தொகை 71 – தொடி வடு, கலித்தொகை 78 – தொடி உற்ற வடு, கலித்தொகை 91 – தொடி உற்ற வடுவும்.  மதுரைக்காஞ்சி 569 – நுண் பூண் ஆகம் வடுக்கொள முயங்கி.  அறல் போல் கூந்தல் – அகநானூறு 142 – அறல் அன்ன இரும் பல் கூந்தல், அகநானூறு 162 – அறல் என அவிர்வரும் கூந்தல், அகநானூறு 213 – அறலென நெறிந்த கூந்தல், அகநானூறு 265 – அறலின் நெறித்த கூந்தல், அகநானூறு 299 – அறல் மருள் கூந்தலின், குறுந்தொகை 116 – தேம் பாய் கூந்தல் வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை நுண் மணல் அறல் வார்ந்தன்ன, குறுந்தொகை 286 – அறல் போல் கூந்தல், கலித்தொகை 71 – கதுப்பு அறல், கலித்தொகை 98 – நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக, பொருநராற்றுப்படை 25 – அறல் போல் கூந்தல்.  ஊட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பேய்க்கு ஊட்டுதலை உட்கொண்ட எதிர்காலத்தைத் தன்பாற் கொண்டதாகிய வஞ்சின மொழியையுடைய மிஞிலி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஊட்டுதலை ஏற்றுக் கொண்ட வாய்மை பொருந்திய மிஞிலி.  அமலை (14) – போரின்பின் வெற்றியடைந்த வாள் மறவர் ஆடும் வெற்றிக்கூத்து.  பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும் (தொல்காப்பியம், பறத்திணையியல் 14).  வரலாறு – மாந்தரம் பொறையன் கடுங்கோ, மிஞிலி, அதிகன், நன்னன், பாழி.  கறையடி யானை – அகநானூறு 83–3,142–9, புறநானூறு 39–1, 135–12, 323–6, பெரும்பாணாற்றுப்படை 351. 

சொற்பொருள்:  இலமலர் அன்ன அம் செந்நாவில் புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த – இலவமலர் போன்ற அழகிய சிவந்த நாவினால் அறிவுடைமையால் உயர்த்திக் கூறப்படுகின்ற சான்றோர்கள் புகழ (இல – இலவ என்பதன் விகாரம்), பலர் மேந்தோன்றிய கவிகை வள்ளல் – பலரைவிடவும் மேம்பட்ட கவிந்த கைகளால் கொடுத்த வள்ளல், நிறை அருந்தானை வெல் போர் மாந்தரம் பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற குறையோர் கொள் கலம் போல – நிறுத்தற்கு அரிய போரில் வெல்லும் மாந்தரம் பொறையன் கடுங்கோ என்னும் சேர மன்னனைப் பாடிச் சென்ற வறியோரின் பிச்சை ஏற்கும் கலம் போல், நன்றும் உவ இனி – பெரிதும் இனி நீ மகிழ்வாயாக, வாழிய – நீ நீடு வாழ்வாயாக, நெஞ்சே – என் நெஞ்சே, காதலி – நம் தலைவி, முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற – அறம் வழுவாமல் கடமையைப் புரிந்து அடைந்த (வழாஅது – அளபெடை), கறையடி யானை நன்னன் பாழி – உரல் போல் காலடிகளை உடைய யானைகளையுடைய நன்னனின் பாழியில், ஊட்டு அரு மரபின் அஞ்சுவரு பேய்எக் ஊட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி – பலி கொடுக்கும் மரபின்படி அச்சம் தரும் பேய்க்கு ஊட்டுதலை ஏற்றுக்கொண்ட வாய்மை பொருந்திய மிஞிலி என்பவன், புள்ளிற்கு ஏமம் ஆகிய – பறவைகளுக்கு பாதுகாவல் ஆகிய, பெரும் பெயர் வெள்ளத் தானை அதிகன் கொன்று உவந்து ஒள் வாள் அமலை ஞாட்பின் – பெரும் புகழையுடைய வெள்ளம் போன்ற சேனையையுடைய அதிகன் என்பவனைக் கொன்று மகிழ்ந்து ஒள் வாள் அமலை என்னும் வெற்றிக்கூத்தை ஆடிய போர்க்களத்தின் பூசல் போல், பலர் அறிவுறுதல் அஞ்சி – பலர் அறிந்து அலர் கூறுதலை அஞ்சி, பைப்பய – மெல்ல மெல்ல (பையப்பைய பைப்பய என மருவியது), நீர்த்திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச் சூர்ப்புறு கோல் வளை செறித்த முன் கை – நீரின் திரட்சியை ஒக்கும் குற்றமற்ற வெள்ளியினால் செய்த வளைவு பொருந்திய திரண்ட வளையல்கள் செறிக்கப்பட்ட கைகள், குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல் இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர – நீர் குறைந்து ஓடும்பொழுது உள்ள கருமணல் போன்ற கரிய அடர்ந்த கூந்தல் மெலிந்த முதுகில் உள்ள அணிகலனுடன் அசைய (இடன் – இடம் என்பதன் போலி), கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து – கடலில் மீன்கள் துஞ்சும் நள்ளிரவிலும், உருவு கிளர் ஏர் வினைப் பொலிந்த பாவை இயல் கற்றன்ன – அழகு கிளர்ந்த பொலிந்த வினையையுடைய பாவை நடை கற்றாற்போல், ஒதுக்கினள் வந்து – நடையையுடையவளாய் வந்து, பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங்கோதை – மழையின் அலைத்தலாற் கலங்கிய மலைப் பூக்களால் தொடுத்த மாலையிலிருந்து, இயல் எறி பொன்னின் – கொல்லனின் உலைக்களத்தில் அடிக்கும்பொழுது தெறிக்கும் பொன்னின் தூள் போன்று (பொன்னின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கொங்கு சோர்பு உறைப்ப – தேன் துளிகள் சிதற,  தொடிக்கண் வடுக் கொள முயங்கினள் – தன் வட்டமான முலையின் கண்ணின் வடு உண்டாகத் தழுவினாள்,  வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே – வடித்த யாழின் நரம்பின் ஒலிபோல் இனிய மொழிகளைக் கூறி (நரம்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, மொழிந்தே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 143, ஆலம்பேறிச் சாத்தனார், பாலைத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
செய்வினைப் பிரிதல் எண்ணிக், கைம்மிகக்
காடு கவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின்,
நீடு சினை வறியவாக, ஒல்லென
வாடு பல் அகலிலை கோடைக்கு ஒய்யும்
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு,  5
முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரிச்
சுடர் நிமிர் நெடுங்கொடி விடர் முகை முழங்கும்
வெம்மலை அருஞ்சுரம் நீந்தி, ஐய,
சேறும் என்ற சிறு சொற்கு இவட்கே,
வசை இல் வெம்போர் வானவன் மறவன்  10
நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும்,
பொய்யா வாய்வாள் புனை கழல் பிட்டன்
மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன்
அகல் அறை நெடுஞ்சுனை துவலையின் மலர்ந்த
தண் கமழ் நீலம் போலக்,  15
கண் பனி கலுழ்ந்தன நோகோ யானே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரியக்கருதிய தலைவனைத் தோழி தலைவியின் ஆற்றாமை கண்டு செலவு அழுங்குவித்தது. 

பொருளுரை:  ஐயா!  பொருள் ஈட்டும் வினைக்கண் பிரிதலை எண்ணி, காட்டின் அழகு கெடும்படி ஞாயிற்றின் கடிய கதிர்கள் அளவு கடந்து காய்வதால், நீண்ட மரக்கிளைகள் வறியனவாக, ஒல்லென்னும் ஒலியுடன், வாடிய பல அகன்ற இலைகள் மேல் காற்றினால் உதிர்க்கப்படும் தேக்கு மரங்கள் நிறைந்த பக்கமாலையாகிய அவ்விடத்தில், காய்ந்த தூறுகளில் பிறந்துக் காற்றினால் வளர்ந்த மிக்க தீயின் ஒளிரும் நீண்ட கொடிகள், மேற்கில் எழுந்து, மலைப்பிளவுகளில் முழங்கும் வெப்பம் மிக்க மலையின் கடத்தற்கு அரிய சுரத்தினைக் கடந்து, செல்லுவோம் எனக் கூறிய நும் சொல்லைக் கேட்டதனால்,

இவளுடைய, குற்றமற்ற கொடிய போரில் வல்ல சேரனின் படைத்தலைவனான, பரிசில் விருப்பத்துடன் வாழ்பவர்களுக்கு நல்ல அணிகலன்களை அளிக்கும், குறி தப்பாத வாளினையும் புனைந்த கழல்களையும் உடைய பிட்டன் என்பவனின் முகில்கள் தவழும் உயர்ந்த உச்சியையுடைய குதிரை மலையின் பக்கமலையில் உள்ள அகன்ற பாறையில் உள்ள நெடிய சுனையில் மழைத்துளிகளால் மலர்ந்த, குளிர்ந்த மணம் கமழ்கின்ற நீலமலர் போன்ற கண்கள் நீரைச் சொரிந்தன.  யான் வருந்துகின்றேன்

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 44) என வரும் விதி கொள்க.  ஒப்புமை – ஐங்குறுநூறு 395 – வளி வளர் கூர் எரிச் சுடர்விடு நெடுங்கொடி.  வரலாறு –வானவன் மறவன் பிட்டன், குதிரை மலை.  வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40).  குதிரை மலை – புறநானூறு 158 – ஊராது ஏந்திய குதிரைக் கூர் வேல் கூவிளங்கண்ணிக் கொடும் பூண் எழினியும், புறநானூறு 168 – செழுங்கோள் வாழை அகல் இலைப் பகுக்கும் ஊராக் குதிரைக் கிழவ.

சொற்பொருள்:  செய்வினைப் பிரிதல் எண்ணி – பொருள் ஈட்டும் வினைக்கண் பிரிதலை எண்ணி (செய்வினை – வினைத்தொகை), கைம்மிக – அளவு கடந்து, காடு கவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின் – காட்டின் அழகு கெடும்படி ஞாயிற்றின் கடிய கதிர்கள் காய்வதால் (கடுங்கதிர் – ஞாயிறு, ஆகுபெயர்), நீடு சினை வறியவாக – நீண்ட மரக்கிளைகள் வறியனவாக, ஒல்லென வாடு பல் அகல் இலை கோடைக்கு ஒய்யும் தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் – ஒல்லென்னும் ஒலியுடன் வாடிய பல அகன்ற இலைகள் மேல் காற்றினால் உதிர்க்கப்படும் தேக்கு மரங்கள் நிறைந்த பக்கமாலையாகிய அவ்விடத்தில் (கோடை – மேல் காற்று), மேக்கு எழுபு – மேற்கில் எழுந்து, முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரிச் சுடர் நிமிர் நெடுங்கொடி விடர் முகை முழங்கும் வெம்மலை அருஞ்சுரம் நீந்தி – காய்ந்த தூறுகளில் பிறந்துக் காற்றினால் வளர்ந்த மிக்க தீயின் ஒளிரும் நீண்ட கொடிகள் மலைப்பிளவுகளில் முழங்கும் வெப்பம் மிக்க மலையின் கடத்தற்கு அரிய சுரத்தினைக் கடந்து (முளியரில் – முளி அரில், வினைத்தொகை, விடர் முகை – இருபெயரொட்டு), ஐய – ஐயா, சேறும் என்ற சிறு சொற்கு – செல்லுவோம் எனக் கூறிய நும் சொல்லைக் கேட்டதனால், இவட்கே – இவளுக்கு, வசை இல் வெம்போர் வானவன் மறவன் நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும் பொய்யா வாய்வாள் புனை கழல் பிட்டன் மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன் – குற்றமற்ற கொடிய போரில் வல்ல சேரனின் படைத்தலைவனான பரிசில் விருப்பத்துடன் வாழ்பவர்களுக்கு நல்ல அணிகலன்களை அளிக்கும் குறி தப்பாத வாளினையும் புனைந்த கழல்களையும் உடைய பிட்டன் என்பவனின் முகில்கள் தவழும் உயர்ந்த உச்சியையுடைய குதிரை மலையின் பக்கமலையில் (வானவன் – சேரன், கவாஅன் – அளபெடை), அகல் அறை நெடுஞ்சுனை துவலையின் மலர்ந்த தண் கமழ் நீலம் போலக் கண் பனி கலுழ்ந்தன – அகன்ற பாறையில் உள்ள நெடிய சுனையில் மழைத்துளிகளால் மலர்ந்த குளிர்ந்த மணம் கமழ்கின்ற நீலமலர் போன்ற கண்கள் நீரைச் சொரிந்தன, நோகோ யானே – யான் வருந்துகின்றேன் (நோகோ – நோகு செய்கென்னும் தன்மை வினை, ஓ –அசைநிலை, இரக்கக் குறிப்பு, யானே – ஏ அசைநிலை)

அகநானூறு 144, மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார், முல்லைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது, தேர்ப்பாகன் கேட்கும்படியாக
வருதும் என்ற நாளும் பொய்த்தன,
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா,
தண் கார்க்கு ஈன்ற பைங்கொடி முல்லை
வை வாய் வான் முகை அவிழ்ந்த கோதை,
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார்,  5
அருள் கண் மாறலோ மாறுக அந்தில்
அறன் அஞ்சலரே ஆயிழை நமர் எனச்
சிறிய சொல்லிப் பெரிய புலம்பினும்
பனி படு நறும் தார் குழைய நம்மொடு
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல  10
உவக்குநள் வாழிய நெஞ்சே விசும்பின்
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறைப்
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை
கூர் வாள் குவி முகம் சிதைய நூறி  15
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின் வயின் இமைப்ப
அமர் ஓர்த்து அட்ட செல்வம்
தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுவானாய்த் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது. 

பொருளுரை:  நெஞ்சே – என் நெஞ்சே!  நீ நீடு வாழ்வாயாக!   

நம் தலைவி தன் தோழியிடம், “ஆராய்ந்த அணிகலன்களை அணிந்தவளே!  நம் தலைவர் தாம் வருவோம் எனக் கூறிய நாட்களும் பொய் ஆயின.  என் செவ்வரி படர்ந்த அழகிய மையுண்ட கண்களிலிருந்து கண்ணீரும் நில்லாது வடிகின்றது.  குளிர்ந்த கார்காலம் ஈன்ற பசிய முல்லைக் கொடியின் கூரிய முனையையுடைய வெள்ளை அரும்புகள் மலர்ந்த பூக்களால் தொடுத்த மாலையைச் சூடும் அழகை இழந்துவிட்ட என் கூந்தலையும் நினையாதவர் ஆயினர் அவர்.  அவர் நம்பால் அருள்செய்யும் கண்ணோட்டம் மாறினாலும் மாறுக.  அறத்திற்கு அஞ்சாதவர் அவர்”, என்று சிறியவாகச் சொல்லிப் பெரிதும் வருந்தினாலும்,  

வானில் இடி ஏறு முழங்கினாலும் அதற்கு எதிராக எழுந்து முழங்கும் மதம் பொருந்திய களிற்று யானைச் சுழலும் பாசறைக்கண், போர் விருப்பம் கொண்டு எழுந்த வீரர்களின் கைகளில் உள்ள கூரிய வாளின் குவிந்த முனை சிதையும்படிப் பகைவர்களின் படையைக் கொன்று மானின் அடிப்பதிந்த பள்ளங்களில் பாய்ந்த குருதி, வானில் உள்ள மீன் போன்று இடந்தொறும் இடந்தொறும் மின்னி ஆராய்ந்து அறிந்து, போரில் வென்ற செல்வத்தை, நம் சுற்றத்தார் விரைந்து சென்று உரைக்கக் கேட்கும்பொழுது, குளிர்ச்சி பொருந்திய தன் நறுமண மாலை குழைந்திட, நம்முடன் வெறுப்பு நீங்கிய புணர்ச்சியைப் பெற்றவள் போல் மகிழ்வாள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘ஏவன் மரபின்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 24) என்னுஞ் சூத்திரத்து, இப்பாட்டினுள், வேந்தன் தலைவனாயினவாறும், தான் அமரகத்து அட்ட செல்வத்தையே மிக்க செல்வமாகக் கருதற்குரியாள் அரச வருணத்தின் தலைவியே என்பதூஉம் உணர்க’ என்றனர் நச்சினார்க்கினியர்.  ‘இன்பத்தை வெறுத்தல்’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 22) என்னுஞ் சூத்திரத்து, ‘பொய்யாகக் கோடல்’ என்ற துறைக்கு மெய்யைப் பொய்யாக் கோடல் என்றுரைத்து, ‘வருதும் என்ற நாளும் பொய்த்தன, அரி ஏர் உண்கண் நீரும் நில்லா’ எனவரும் என்றார் பேராசிரியர்.  அந்தில் – அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவி என்று ஆயிரண்டு ஆகும் இயற்கைத்து என்ப (இடையியல் 19, தொல்காப்பியம்).  வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91). 

சொற்பொருள்:  வருதும் என்ற நாளும் பொய்த்தன – தாம் வருவோம் எனக் கூறிய நாட்களும் பொய் ஆயின, அரி ஏர் உண்கண் நீரும் நில்லா – செவ்வரி படர்ந்த அழகிய மையுண்ட கண்களிலிருந்து கண்ணீரும் நில்லாது வடிகின்றது, தண் கார்க்கு ஈன்ற பைங்கொடி முல்லை வை வாய் வான் முகை அவிழ்ந்த கோதை பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார் – குளிர்ந்த கார்காலம் ஈன்ற பசிய முல்லைக்கொடியின் கூரிய முனையையுடைய வெள்ளை அரும்புகள் மலர்ந்த பூக்களால் தொடுத்த மாலையைச் சூடும் அழகை இழந்துவிட்ட கூந்தலையும் நினையாதவர் ஆயினர் (கார்க்கு – உருபு மயக்கம், பைங்கொடி – பண்புத்தொகை), அருள் கண் மாறலோ மாறுக – நம்பால் அருள்செய்யும் கண்ணோட்டம் மாறினாலும் மாறுக, அந்தில் – அசைநிலை, அறன் அஞ்சலரே – அறத்திற்கு அஞ்சாதவர் (அறன் – அறம் என்பதன் போலி, அஞ்சலரே – ஏகாரம் அசைநிலை), ஆயிழை – ஆராய்ந்த அணிகலன்களை அணிந்தவளே (அன்மொழித்தொகை, விளி), நமர் – நம் தலைவர், எனச் சிறிய சொல்லிப் பெரிய புலம்பினும் – என்று சிறியவாகச் சொல்லிப் பெரிதும் வருந்தினாலும், பனி படு நறும் தார் குழைய நம்மொடு துனி தீர் முயக்கம் பெற்றோள் போல உவக்குநள் – குளிர்ச்சி பொருந்திய நறுமண மாலை குழைந்திட நம்முடன் வெறுப்பு நீங்கிய புணர்ச்சியைப் பெற்றவள் போல் மகிழ்வாள், வாழிய – நீ நீடு வாழ்வாயாக, நெஞ்சே – என் நெஞ்சே, விசும்பின் ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும் கடாஅ யானை கொட்கும் பாசறை – வானில் இடி ஏறு முழங்கினாலும் அதற்கு எதிராக எழுந்து முழங்கும் மதம் பொருந்திய களிற்று யானைச் சுழலும் பாசறைக்கண் (கடாஅ – அளபெடை), போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை கூர் வாள் குவி முகம் சிதைய நூறி மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி – போர் விருப்பம் கொண்டு எழுந்த வீரர்களின் கைகளில் உள்ள கூரிய வாளின் குவிந்த முனை சிதையும்படிப் பகைவர்களின் படையைக் கொன்று மானின் அடிப்பதிந்த பள்ளங்களில் பாய்ந்த குருதி (கையதை – ஐ சாரியை), வான மீனின் வயின் வயின் இமைப்ப அமர் ஓர்த்து அட்ட செல்வம் தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே – வானில் உள்ள மீன் போன்று இடந்தோறும் இடந்தொறும் மின்னி ஆராய்ந்து அறிந்து போரில் வென்ற செல்வத்தை நம் சுற்றத்தார் விரைந்து சென்று உரைக்கக் கேட்கும்பொழுது (ஞான்றே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 145, கயமனார், பாலைத் திணைமகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
வேர் முழுது உலறி நின்ற புழல் கால்
தேர்மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்,
வற்றல் மரத்த பொன்தலை ஓதி
வெயிற்கவின் இழந்த வைப்பில் பையுள் கொள,
நுண்ணிதின் நிவக்கும் வெண்ஞெமை வியன் காட்டு  5
ஆளில் அத்தத்து, அளியள் அவனொடு
வாள்வரி பொருத புண்கூர் யானை
புகர் சிதை முகத்த குருதி வார,
உயர் சிமை நெடுங்கோட்டு உருமென முழங்கும்
அருஞ்சுரம் இறந்தனள் என்ப, பெருஞ்சீர்  10
அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன்
தொல்நிலை முழு முதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல் இணர்ப் புன்னை போலக்
கடு நவைப் படீஇயர் மாதோ, களி மயில்
குஞ்சரக் குரல குருகோடு ஆலும்  15
துஞ்சா முழவின் துய்த்தியல் வாழ்க்கைக்
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால்
சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது,
எறி கோல் சிதைய நூறவும், “சிறுபுறம் 20
எனக்கு உரித்து” என்னாள், நின்ற என்
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே.

பாடல் பின்னணி:  மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. 

பொருளுரை:  வேர் முதல் முழுவதும் உலர்ந்து நின்ற, துளையுடைய அடியை உடையதும், தேரின் மணிகள் ஒலிப்பது போன்று சிள்வீடு ஒலிக்கும் வற்றலான மரத்தின்கண் உள்ள, பொன்னிறத் தலையையுடைய ஓந்திகள், வெயிலினால் அழகு இழந்த ஊர்களில், வெப்பத்தினால் துன்புற்று மெல்ல ஏறும், வெள்ளை ஞெமை மரங்களையுடைய அகன்ற காட்டின்கண் உள்ள ஆள் இல்லாத நெறியில், இரங்கத்தக்கவளான என் மகள், அத் தலைவனுடன், வாள்போலும் வரியுடைய புலியுடன் போரிட்டதால் புண் மிக்க யானைகள் புள்ளிகள் சிதைந்த முகத்தை உடையனவாக, குருதி வடிய, உயர்ந்த உச்சியையுடைய நெடிய சிகரத்தில் இடிக்கும் இடி போல் முழங்குகின்ற, கடத்தற்கரிய பாலை நிலத்தில் சென்றாள், எனக் கண்டவர்கள் கூறுகின்றனர்.

களிப்புடைய மயில்கள் யானையின் குரல் கொண்ட யானையங் குருகுடன் சேர்ந்து ஒலிக்கும், இடைவிடாது முழங்கும் முழவினையும் செல்வத்தை நுகர்ந்து வாழும் வாழ்க்கையையும் உடைய நெல் மிக்க தந்தையின் அகன்ற இடமுடைய இல்லத்தில், முறையாக அடியெடுத்து நடந்தாலும் வருந்தும், ஐந்து பகுதியாக உள்ள சிறிய அடர்ந்த கூந்தலை அணிந்த மாலையுடன் கையால் பற்றி, இரங்காது அடிக்கும் கோல் கொண்டு அக்கோல் சிதையும்படி யான் அடிக்கவும், “என் முதுகு எனக்கு உரியது” எனக் கூறாது நின்ற, என் அமர்த்த கண்களையுடைய என் மகளைத் துன்புறுத்திய கைகள்,

பெரிய புகழையுடைய அன்னி என்பவன் குறுக்கைப் போர்க்களத்தில் திதியன் என்பவனின் பழமையான நிலையையுடைய அடிமரம் துணியும்படி செய்த நல்ல மெல்லிய பூங்கொத்துக்களையுடைய புன்னை மரம் போல் பெரிய துன்பத்தை அடைவனவாக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘கொண்டு தலைக் கழியினும் ‘ (தொல்காப்பியம், அகத்திணையியல் 15) என்னுஞ் சூத்திரத்து, ‘கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின் ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும்’ என நெல்லுடைமை கூறிய அதனானே, வேளாண் வருணமென்பது பெற்றதாம், என்றனர் நச்சினார்க்கினியர்.  அஞ்ஞை (22) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அன்னை, அன்பு மிகுதிப் பற்றி அன்னை என்றாள்.  வரலாறு –அன்னி, குறுக்கைப் பறந்தலை, திதியன்.  குறுக்கைப் போரில் அன்னி என்பவன் திதியனின் புன்னை மரத்தை வெட்டுதல் – நற்றிணை 180, அகநானூறு 45, 126, 145.   ஒப்புமை – குறுந்தொகை 107–5 – கடு நவைப் படீஇயரோ.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 71).  யானையங்குருகு – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – யானை போலும் குரலுடைமையான் யானையங்குருகு எனப்படும் பறவை.  குறுந்தொகை 34 – யானையங் குருகின் பெருந்தொடு, மதுரைக்காஞ்சி 674 – யானையங் குருகின் சேவலோடு.  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34). 

சொற்பொருள்:  வேர் முழுது உலறி நின்ற புழல் கால் தேர்மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும் வற்றல் மரத்த – வேர் முதல் முழுவதும் உலர்ந்து நின்ற துளையுடைய அடியை உடையதும் தேரின் மணிகள் ஒலிப்பது போன்று சிள்வீடு ஒலிக்கும் வற்றலான மரத்தின்கண் (இசையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பொன் தலை ஓதி – பொன்னிறத் தலையையுடைய ஓந்திகள் (ஓதி – ஓந்தி, இடைக்குறை), வெயிற்கவின் இழந்த வைப்பில் – வெயிலினால் அழகு இழந்த ஊர்களில், பையுள் கொள நுண்ணிதின் நிவக்கும் – வெப்பத்தினால் துன்புற்று மெல்ல ஏறும், வெண்ஞெமை வியன் காட்டு ஆளில் அத்தத்து – வெள்ளை ஞெமை மரங்களையுடைய அகன்ற காட்டின்கண் உள்ள ஆள் இல்லாத நெறியில், அளியள் – இரங்கத்தக்கவளான என் மகள், அவனொடு – அவனுடன், வாள்வரி பொருத புண்கூர் யானை புகர் சிதை முகத்த குருதி வார – வாள்போலும் வரியுடைய புலியுடன் போரிட்டதால் புண் மிக்க யானைகள் புள்ளிகள் சிதைந்த முகத்தை உடையனவாக குருதி வடிய (வாள்வரி – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, ஆகுபெயருமாம்), உயர் சிமை நெடுங்கோட்டு உருமென முழங்கும் – உயர்ந்த உச்சியையுடைய நெடிய சிகரத்தில் இடிக்கும் இடி போல் முழங்குகின்ற, அருஞ்சுரம் இறந்தனள் என்ப – கடத்தற்கரிய பாலை நிலத்தில் அவனுடன் சென்றாள் எனக் கண்டவர்கள் கூறுகின்றனர், பெருஞ்சீர் அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன் தொல்நிலை முழு முதல் துமியப் பண்ணிய நன்னர் மெல் இணர்ப் புன்னை போலக் கடு நவைப் படீஇயர் – பெரிய புகழையுடைய அன்னி என்பவன் குறுக்கைப் போர்க்களத்தில் திதியன் என்பவனின் பழமையான நிலையையுடைய அடிமரம் துணியும்படி செய்த நல்ல மெல்லிய பூங்கொத்துக்களையுடைய புன்னை மரம் போல் பெரிய துன்பத்தை அடைவனவாக (நன்னர் – நல்ல, படீஇயர் – அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி, இகழ்ச்சிப் பொருளில் வந்தது), மாதோ – மாது, ஓ அசைநிலைகள், களி மயில் குஞ்சரக் குரல குருகோடு ஆலும் – களிப்புடைய மயில்கள் யானையின் குரல் கொண்ட யானையங் குருகுடன் சேர்ந்து ஒலிக்கும், துஞ்சா முழவின் துய்த்தியல் வாழ்க்கைக் கூழுடைத் தந்தை இடன்  உடை வரைப்பின் – இடைவிடாது முழங்கும்  முழவினையும் செல்வத்தை நுகர்ந்து வாழும் வாழ்க்கையையும் உடைய நெல் மிக்க தந்தையின் அகன்ற இடமுடைய இல்லத்தில் (இடன் – இடம் என்பதன் போலி), ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் – முறையாக அடியெடுத்து நடந்தாலும் வருந்தும், ஐம்பால் சிறு பல் கூந்தல் போது பிடித்து – ஐந்து பகுதியாக உள்ள சிறிய அடர்ந்த கூந்தலை அணிந்த மாலையுடன் கையால் பற்றி, அருளாது எறி கோல் சிதைய நூறவும் – இரங்காது அடிக்கும் கோல் கொண்டு அக்கோல் சிதையும்படி யான் அடிக்கவும், ‘சிறுபுறம் எனக்கு உரித்து’ என்னாள் நின்ற – என் முதுகு எனக்கு உரியது எனக் கூறாது நின்ற, என் அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே – என் அமர்த்த கண்களையுடைய என் மகளைத் துன்புறுத்திய கைகள் (கையே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 146, உவர்க்கண்ணூர் புல்லங்கீரனார், மருதத் திணை தலைவி பாணனிடம் சொன்னது
வலிமிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி,
மடக்கண் எருமை மாண் நாகு தழீஇ,
படப்பை நண்ணிப் பழனத்து அல்கும்
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந்தேர்,  5
ஒள்ளிழை மகளிர் சேரிப் பல் நாள்
இயங்கல் ஆனாது ஆயின், வயங்கிழை
யார் கொல்? அளியள் தானே எம் போல்,
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின்  10
கண் பனி ஆகத்து உறைப்பக் கண் பசந்து,
ஆயமும் அயலும் மருளத்,
தாய் ஓம்பு ஆய் நலம் வேண்டாதோளே.

பாடல் பின்னணி:  வாயில் வேண்டி வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது. 

பொருளுரை:  வலிமை மிகுந்த தலைமையையும் உடல் வலிமையையுமுடைய எருமைக்கடா, குளிர்ந்த மலர்களையுடைய பொய்கையில் பகற்பொழுதில் சுழன்று திரிந்து, மடப்பம் பொருந்திய கண்களையுடைய மாண்புற்ற பெண் எருமையை அணைத்துத் தோட்டத்தை அடைந்து, அதன்பின் வயலில் (ஊரின் பொது நிலத்தில்) தங்கும் ஆரவாரமும் மகிழ்ச்சியையுமுடைய ஊரனின், ஒலிக்கும் மணிகளையுடைய நெடிய தேர் ஒளிரும் அணிகலன்களை அணிந்த மகளிரின் தெருவின்கண் பல நாட்கள் இயங்குதல் அமையாது ஆனால்,

பொய்யை மெய் போல் பேசும் பரத்தமைத் தொழிலுடைய தலைவனின் சொற்களை, எம் போல், உண்மையென நம்பி, காற்று மோதுவதால் அசையும் மழைத்துளிகள் பெய்யப்பட்ட மலரைப் போல் கண்கள் கண்ணீரை மார்பில் சொரியவும் கண்கள் பசப்பவும், தன் தோழியரும் அயலாரும் மருண்டு நோக்கவும், தன் தாய் பாதுகாத்த அழகிய நலனை வேண்டாது இழப்பவள் ஆகிய, விளங்கும் அணிகலன்களை அணிந்தவள் யார்?  அவள் இரங்கத்தக்கவள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என வரும் நூற்பாவின்கண் ‘வாயிலின் வரூஉம் வகை’ என்னும் விதி கொள்க.  மாய (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொய், வஞ்சமுமாம்.  உள்ளுறை – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – எருமை ஏறு பொய்கையிற் பகல் செல மறுகி, எருமை நாகு தழீஇப் படப்பை நண்ணிப் பழனத்து அல்கும் என்றது, தலைவன் பரத்தையர் சேரியில் திரிந்து அவர்களை நுகர்ந்து, பின்பு இளையவளான பரத்தையொடும் சோலையில் விளையாடி, சேற்றினையுடைய பழனம் போலும் எம் இல்லில் தங்குதல் மாத்திரைக்கு இப்பொழுது வந்துள்ளான் என்றவாறு.  நாகு – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).  எருமையும் மரையும் பெற்றமும் நாகே (தொல்காப்பியம், மரபியல் 62).  ஏறு – பன்றி புல்வாய் உழையே கவரி என்று இவை நான்கும் ஏறு எனற்கு உரிய.  எருமையும் மரையும் பெற்றமும் அன்ன (தொல்காப்பியம், மரபியல் 39). 

சொற்பொருள்:  வலிமிகு முன்பின் அண்ணல் ஏஎறு – வலிமை மிகுந்த தலைமையையும் உடல் வலிமையையுமுடைய எருமைக்கடா (ஏஎறு – அளபெடை), பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி – குளிர்ந்த மலர்களையுடைய பொய்கையில் பகற்பொழுதில் சுழன்று திரிந்து (செல – செல்ல என்பதன் இடைக்குறை), மடக்கண் எருமை மாண் நாகு தழீஇ படப்பை நண்ணிப் பழனத்து அல்கும் கலி மகிழ் ஊரன் – மடப்பம் பொருந்திய கண்களையுடைய மாண்புற்ற பெண் எருமையை அணைத்துத் தோட்டத்தை அடைந்து அதன்பின் வயலில் (ஊரின் பொது நிலத்தில்) தங்கும் ஆரவாரமும் மகிழ்ச்சியையுமுடைய ஊரனின் (தழீஇய – அளபெடை), ஒலி மணி நெடுந்தேர் ஒள்ளிழை மகளிர் சேரிப் பல் நாள் இயங்கல் ஆனாது ஆயின் – ஒலிக்கும் மணிகளையுடைய நெடிய தேர் ஒளிரும் அணிகலன்களை அணிந்த மகளிரின் தெருவின்கண் பல நாட்கள் இயங்குதல் அமையாது ஆனால், வயங்கிழை யார் – விளங்கும் அணிகலன்களை அணிந்தவள் யார், கொல் – அசைநிலை, அளியள் – அவள் இரங்கத்தக்கவள், தானே – தான், ஏ அசைநிலைகள், எம் போல் – எம்மைப்போல், மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி – பொய்யை மெய் போல் பேசும் பரத்தமைத் தொழிலுடைய தலைவனின் சொற்களை உண்மையென நம்பி, வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின் கண் பனி ஆகத்து உறைப்பக் கண் பசந்து – காற்று மோதுவதால் அசையும் மழைத்துளிகள் பெய்யப்பட்ட மலரைப் போல் கண்கள் கண்ணீரை மார்பில் சொரியவும் கண்கள் பசப்பவும் (மலரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஆயமும் அயலும் மருளத் தாய் ஓம்பு ஆய் நலம் வேண்டாதோளே – தன் தோழியரும் அயலாரும் மருண்டு நோக்கவும் தன் தாய் பாதுகாத்த அழகிய நலனை வேண்டாது இழப்பவள் (வேண்டாதோளே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 147, ஔவையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஓங்கு மலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன,
ஊன்பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை
மூன்றுடன் ஈன்ற முடங்கர் நிழத்த
துறுகல் விடர் அளைப் பிணவு பசி கூர்ந்தெனப்,  5
பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்,
நெறி படு கவலை நிரம்பா நீளிடை,
வெள்ளிவீதியைப் போல நன்றும்
செலவு அயர்ந்திசினால் யானே, பல புலந்து  10
உண்ணா உயக்கமொடு, உயிர் செலச் சாஅய்
தோளும், தொல் கவின் தொலைய, நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி,
மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே.

பாடல் பின்னணி:  தலைவனின் செலவு உணர்த்திய தோழிக்குத் தலைவி கூறியது.

பொருளுரை:  தோழி! தலைவன் பிரிந்ததால், பலவற்றையும் வெறுத்து, உண்ணாத வருத்தத்துடன், உயிர் போகுமளவு மெலிந்து, தோளின் அழகுக் கெட்டு, நாள்தோறும் துன்புறுகின்றேன்.  அவர் நீங்கிய வருத்தத்திற்கு மருந்து ஒன்றும் இல்லாததால், உயிரோடு இருந்தும் செயலற்று இருக்கின்றேன்.

ஆதலால், உயர்ந்த மலைச் சாரலில், பிடவ மலர்களுடன் மலர்ந்த நறுமணமான வேங்கை மலர்களின் இலையைப் போல், பகுதி, பகுதியாக வகுத்து வைத்தாற்போல், தசையின் மறைப்பு நீங்காத வளைந்த நகத்தையுடைய குட்டிகள் மூன்றைப் பெற்ற, ஒதுங்கிய இடத்தில், மலைப் பிளவாகிய குகையில் உள்ள தன் பெண் புலி மிகுந்த பசியை அடைந்ததால், பொறி விளங்கும் பிளந்த வாயை உடைய ஆண் புலி, உடைந்த கொம்பையுடைய ஆண் மானின் குரலைக் கேட்கும், பிரிந்த பாதைகள் பொருந்திய எல்லையில்லாத பெரிய காட்டிலே, தன் கணவனைத் தேடிச் சென்ற வெள்ளிவீதியைப் போல் செல்லுதலைப் பெரிதும் விரும்புகின்றேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கொண்டுதலைக் கழியினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 17) என வரும் நூற்பாவின்கண் ‘பிரிந்து அவண் இரங்கலும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘கொண்டு தலைக் கழியினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 17) என்னுஞ் சூத்திரத்து, ‘தலைவி பிரிந்திருப்பது மிகவும் இரங்குதலின், இரங்கினும் எனச் சூத்திரஞ் செய்து அதனானே பாலைப் பொருட்கண் இரங்கற்பொருள் நிகழுமென்றார்.  உதாரணம் – ஓங்கு மலைச் சிலம்பில் …….. வினை இலனே என்பது, இதனுள் வெள்ளிவீதியைப் போலச் செல்லத் துணிந்து, ‘யான் பலவற்றிற்கும் புலந்திருந்து, பிரிந்தோரிடத்தினின்றும் பிரிந்த பெயர்வுக்குத் தோள் நலந்தொலைய உயிர் செலச் சாஅய், இரங்கிப் பிறிது மருந்தின்மையிற் செயலற்றேனென மிகவும் இரங்கியவாறு மெய்ப்பாடுபற்றி உணர்க’ என்றும் ‘மக்கள் நுதலிய’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 54) என்னுஞ் சூத்திரத்து ‘வெள்ளி வீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே’ என்பதன்கண் பெயர் அகத்திணைக்கட் சார்த்து வகையான் வந்ததன்றித் தலைமை வகையாக வந்திலது, என்றும் கூறினார் நச்சினார்க்கினியர்.  இரா. இராகவையங்கார் உரை வெள்ளிவீதியாரின் குறுந்தொகை 27ம் பாடலுக்கு – இது வெள்ளிவீதியார் என்னும் நல்லிசைப் புலமை மெல்லியர் தம் தலைவன் பிரிவிடை ஆற்றாது சொல்லியது என்பது (தொல்காப்பியம், அகத்திணையியல் 54) நச்சினார்க்கினியரின் உரையால் அறியப்படுகின்றது.  இப்பாடலைக் கூறிய பின்னர்ப் பிரிவு பொறாது தம் காதலர் உள்ள ஊருக்குச் செல்லத் தலைப்பட்டனர் என்பது ஒளவையாரின் பாட்டால் (அகநானூறு 147 வரிகள் 8–10 “நெறிபடு கவலை நிரம்பா நீளிடை வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே”) அறியப்படுகின்றது.  வரலாறு – வெள்ளிவீதியார்.  வேங்கை வெறித் தழை (2) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வெறி கமழும் பூவுடன் கூடிய தழையை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வேங்கை மரத்தின் மணங்கமழும் தழை.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27). 

சொற்பொருள்:  ஓங்கு மலை – உயர்ந்த மலை, சிலம்பில் மலைச் சரிவில், பிடவுடன் மலர்ந்த வேங்கை – பிடவத்துடன் மலர்ந்த வேங்கை மலர்கள் (வேங்கை மரம் – Pterocarpus marsupium, பிடவச் செடி – Randia malabarica), வெறி – நறுமணம், தழை வேறு வகுத்தன்ன – இலை வேறு வேறாகப் பிரித்தாற்போல், ஊன் பொதி அவிழா – தசையின் மறைப்பு நீங்காத, கோட்டு உகிர் குருளை மூன்றுடன் – வளைந்த நகத்தையுடைய குட்டிகள் மூன்றுடன், ஈன்ற – பெற்ற, முடங்கர் – முடக்கமான இடத்தில், நிழத்த – ஓய்ந்திருக்கும், துறுகல் விடர் அளை – கல்லின் பிளவு, குகை (விடர் அளை – இருபெயரொட்டு), பிணவு – பெண், பசி கூர்ந்தென – பசி மிகுந்தலால், பொறி கிளர் – புள்ளிகள் திகழும், உழுவை – புலி, போழ் வாய் ஏற்றை – பிளந்த வாயையுடைய ஆண், அறு கோட்டு – உடைந்த கொம்பு, உழை மான் – உழை மான் (இரு பெயரொட்டு), ஆண் குரல் ஓர்க்கும் – ஆண் குரலைக் கேட்கும், நெறி படு கவலை – பிரிவு உடையப் பாதை, நிரம்பா நீளிடை – எல்லையில்லாத நீண்ட பாதை, வெள்ளிவீதியைப் போல – வெள்ளிவீதியைப் போல, நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே – பெரிதும் செல்லத் துணிந்தேன், பல புலந்து – பலவற்றை வெறுத்து, உண்ணா உயக்கமொடு – உண்ணாது வருந்தி, உயிர் செல – உயிர் போகுமளவு, சாஅய் – மெலிந்து (அளபெடை), தோளும் தொல் கவின் தொலைய – தோள்கள் பழைய அழகை இழக்க, நாளும் – தினமும், பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி – பிரித்துச் சென்ற தலைவருக்காகத் தினமும் வருந்தி, மருந்து பிறிது இன்மையின் – வேறு ஒரு மருந்தும் இல்லாததால், இருந்து – உயிரோடு இருந்து, வினை இலனே – செயலற்று இருக்கின்றேன் (இலனே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 148, பரணர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
பனைத்திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக்கைச்,
கொலைச் சினந்தவிரா மதனுடை முன்பின்,
வண்டுபடு கடாஅத்து உயர் மருப்பு யானை
தண் கமழ் சிலம்பின் மரம்படத் தொலைச்சி,
உறு புலி உரறக் குத்தி விறல் கடிந்து  5
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட!
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந்தேர் மிஞிலியொடு பொருது களம் பட்டெனக்,
காணிய செல்லாக் கூகை நாணிக்,
கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை  10
பெரிதால் அம்ம இவட்கே, அதனால்
மாலை வருதல் வேண்டும், சோலை
முளை மேய் பெருங்களிறு வழங்கும்
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே.

பாடல் பின்னணி:  களவொழுக்கத்தின்போது காவல் கடுமையானதால், வரைவு கடாவுதற் பொருட்டுப் பகற்குறிக்கு வரும் தலைவனிடம் தோழி சொன்னது.  பகலில் வரும் தலைவனைத் தோழி இரவில் வா என்றது.   

பொருளுரை:  திரண்ட பனையை ஒத்த, பருத்த அழகிய வலிய வளைந்த தும்பிக்கையையும், கொல்லும் சினம் தணியாத செருக்குடைய வலிமையையும், வண்டுகள் மொய்க்கும் மதத்தினையும், உயர்ந்த கோட்டினையும் (தந்தத்தையும்) உடைய களிற்று யானை, குளிர்ந்த மணம் கமழும் பக்கமலையில் மரத்தை உடைத்துத் தள்ளி, மாறுபடும் புலியை அது கதறும்படி தன் கோட்டால் குத்தி, அதன் வெற்றியை அழித்து, சிறுதினை விளைந்த பெரிய புனத்தில் நுழைந்து தினையைக்  கவரும் நாடனே!  

விரைந்த செலவினையுடைய குதிரைகளையுடைய ஆய் எயினன் என்பவன் நெடிய தேரையுடைய மிஞிலி என்பவனுடன் போரிட்டு, அப் போர்க்களத்தில் இறந்தானாக, அதைக் காண இயலாத கூகை நாணி கடும்பகலில் இயங்காது துன்பமுற்றாற் போல், இவளுக்குப் பகற்குறியின்கண் செல்ல இயலாததால் துன்பம் பெரியதாயிற்று.  அதனால் மாலை நேரத்தில் நீ வரவேண்டும், சோலையின்கண் மூங்கில் குருத்தை மேயும் பெரிய களிற்று யானை இயங்குகின்ற மலைச்சரிவில் உள்ள சிறிய பாறைகள் உடைய வழியில்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 22) என வரும் நூற்பாவின்கண் ‘காப்பின் கடுமை கையற வரினும்’ என வரும் விதி கொள்க.  வரலாறு –ஆஅய் எயினன், மிஞிலி.  மிஞிலி என்பவன் ஆய் எயினன் என்பவனைக் கொல்லுதல் – அகநானூறு 148, 181, 208.  இவை யாவும் புலவர் பரணரின் பாடல்கள்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  உறு புலி (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எதிரே வந்த, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மாறுபாடு உடைய.  ஒப்புமை – அகநானூறு 208 – வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தெனப், புள் ஒருங்கு அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று ஒண் கதிர் தெறாமை சிறகு அரில் கோலி நிழல் செய்து.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நன்னன் என்பான் பகலிற் செல்லா ஒப்புமை பற்றி இச் செய்யுளிற் ‘கூகையென வழங்கப்பட்டானாவன்’ எனக் கருதுவாருமுளர்.  கடும்பகல் வழங்காக் கூகை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடிய பகற்காலத்தே வெளிப்பட்டு இயங்காத கூகை போல்வானாகிய நன்னன்.  எறுழ் – எறுழ் வலி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 92).

சொற்பொருள்:  பனைத்திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக்கைச் கொலைச் சினந்தவிரா மதனுடை முன்பின் வண்டுபடு கடாஅத்து உயர் மருப்பு யானை – திரண்ட பனையை ஒத்த பருத்த அழகிய வலிய வளைந்த தும்பிக்கையையும் கொல்லும் சினம் தணியாத செருக்குடைய வலிமையையும் வண்டுகள் மொய்க்கும் மதத்தினையும் உயர்ந்த கோட்டினையும் (தந்தத்தையும்) உடைய களிற்று யானை (திரள்பனை அன்ன என மாற்றுக), தண் கமழ் சிலம்பின் மரம்படத் தொலைச்சி உறு புலி உரறக் குத்தி விறல் கடிந்து சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட – குளிர்ந்த மணம் கமழும் பக்கமலையில் மரத்தை உடைத்துத் தள்ளி மாறுபடும் புலியை அது கதறும்படி தன் கோட்டால் குத்தி அதன் வெற்றியை அழித்து சிறுதினை விளைந்த பெரிய புனத்தில் நுழைந்து தினையைக்  கவரும் நாடனே, கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன் நெடுந்தேர் மிஞிலியொடு பொருது களம் பட்டென – விரைந்த செலவினையுடைய குதிரைகளையுடைய ஆய் எயினன் என்பவன் நெடிய தேரையுடைய மிஞிலி என்பவனுடன் போரிட்டு அப் போர்க்களத்தில் இறந்தானாக (ஆய் எயினன் பறவைகளின் பாதுகாவலன்), காணிய செல்லாக் கூகை நாணிக் கடும் பகல் வழங்காதாஅங்கு இடும்பை பெரிதால் அம்ம இவட்கே – அக் காட்சியைக் காண இயலாத கூகை நாணி கடும்பகலில் இயங்காது துன்பமுற்றாற் போல் இவளுக்குப் பகற்குறியின்கண் செல்ல இயலாததால் துன்பம் பெரியதாயிற்று (வழங்காதாஅங்கு – அளபெடை), அதனால் மாலை வருதல் வேண்டும் – அதனால் மாலை நேரத்தில் நீ வரவேண்டும், சோலை முளை மேய் பெருங்களிறு வழங்கும் மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே – சோலையின்கண் மூங்கில் குருத்தை மேயும் பெரிய களிற்று யானை இயங்குகின்ற மலைச்சரிவில் உள்ள சிறிய பாறைகள் உடைய வழியில் (ஆறே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 149, எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின்,
புல்லரை இருப்பைத் தொள்ளை வான் பூப்
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள் இடைப் போகி, நன்றும்  5
அரிது செய் விழுப்பொருள் எளிதினின் பெறினும்
வாரேன், வாழி என் நெஞ்சே, சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண் நுரை கலங்க
யவனர் தந்த வினை மாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்  10
வளங்கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ,
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடு போர்ச் செழியன்
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது,
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய  15
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே.

பாடல் பின்னணி:  தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லி செலவு அழுங்கியது. 

பொருளுரை:  என் நெஞ்சே!  நீ நீடு வாழ்வாயாக!  சிறிய புல்லிய கறையான் நெடிது முயன்று செய்த உயர்ந்த சிவந்த புற்றில் மறைந்து இருந்த புற்றாஞ்சோற்றை வெறுத்து, புல்லிய அடிப்பகுதியையுடைய இருப்பை மரத்தின் உட்துளை உடைய வெள்ளை மலர்களைப் பெரிய கைகளையுடைய கரடியின் பெரிய கூட்டம் கவர்ந்து உண்ணும் சுரத்தின் கடத்தற்கு அரிய வழியில் சென்று, பெரிதும் அரிதாகிய ஈட்டும் சிறந்த பொருளை எளிதாகப் பெறுவதாயினும், சேரரின் சுள்ளி என்ற பெரிய ஆற்றில் வெள்ளை நுரை கலங்க யவனர் கொண்டு வந்த மாட்சிமையுடைய நல்ல கப்பல்கள் பொன்னுடன் வந்து மிளகுடன் செல்லும் வளம் மிகுந்த முசிறி என்னும் ஊரை ஆரவாரத்துடன் வளைத்து, அரிய போரினை வென்று பொன்னால் செய்த பாவையைக் கவர்ந்த, உயரமான நல்ல யானைகளையுடைய பகைவரைக் கொல்லும் போரைப் புரியும் பாண்டியன், கொடி அசையும் கூடலின் மேற்கில் உள்ள, பல பொறிகளையுடைய மயில் உடைய வெற்றிக் கொடி உயர்த்தப்பட்ட இடைவிடாது விழாக்களையுடைய முருகனின் திருப்பரங்குன்றத்தில் உள்ள, வண்டு வந்து தீண்ட நீண்ட அழகான சுனையில் மலர்ந்த நீல மலர்களைப் கட்டினாற்போல் உள்ள (குவளை மலர்கள்),  இவளுடைய செவ்வரி படர்ந்த குளிர்ந்த மதர்த்த (அழகிய, செருக்கான) கண்கள் தெளிந்த கண்ணீரைக் கொள்ள, நான் வரமாட்டேன். 

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து’ (தொல்காப்பியம், களவியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்’ என வரும் விதி கொள்க.  சுள்ளியம் பேரியாற்று (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சுள்ளி என்பதும் பேரியாறு என்பதும் ஓர் யாற்றின் பெயர்களே என்க, இதனை இக்காலத்தார் பெரியாறு என்று வழங்குவர்.  வரலாறு – செழியன், முசிறி, கூடல், சேரலர், சுள்ளி ஆறு, நெடியோன் குன்றம்.  ஒப்புமை – அகநானூறு 57 – கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன் முதுநீர் முன்றுறை முசிறி முற்றிக் களிறு பட எருக்கிய.  கரடிகள் ஈயல் புற்றை உடைத்தல் – அகநானூறு 8, 72, 81, 88, 112, 149, 247, 257, 307, நற்றிணை 125, 325, 336.  கரடி இருப்பை மலரை உண்ணுதல் – அகநானூறு 15, 81, 95, 149, 171, 247, 267, 275, 331.  அகநானூறு 123 – இறவொடு வந்து கோதையொடு பெயரும், அகநானூறு 149 – பொன்னொடு வந்து கறியொடு பெயரும், குறுந்தொகை 221 – பாலொடு வந்து கூழொடு பெயரும்.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).  யவனர் – அயோனியா என்ற கிரேக்க நாட்டின் பகுதியிலிருந்து வருபவர்களை இச்சொல் குறித்தாலும் இது பின்னால் வந்த ரோமானியர், துருக்கர், எகிப்தியர் ஆகியோரையும் குறித்திருக்கலாம் எனச் சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  மலர்ப் பிணையல் அன்ன கண்கள் – அகநானூறு 149–18 – எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள் அரி மதர் மழைக் கண், நற்றிணை 160 – எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள் அரி மதர் மழைக் கண், பரிபாடல் 2–53 – கண்ணே புகழ் சால் தாமரை அலர் இணைப் பிணையல்.

சொற்பொருள்:  சிறு  புன்  சிதலை சேண் முயன்று எடுத்த – சிறிய புல்லிய கறையான் நெடிது முயன்று செய்த, நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின் – உயர்ந்த சிவந்த புற்றில் மறைந்து இருந்த புற்றாஞ்சோற்றை வெறுத்து, புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூ – புல்லிய அடிப்பகுதியையுடைய இருப்பை மரத்தின் உட்துளை உடைய வெள்ளை மலர்கள்(இலுப்பை மரம், வஞ்சி மரம்), பெருங்கை எண்கின்  இருங்கிளை கவரும் – பெரிய கைகளையுடைய கரடியின் பெரிய கூட்டம் கவர்ந்து உண்ணும், அத்த நீள் இடைப் போகி – சுரத்தின் கடத்தற்கு அரிய வழியில் சென்று, நன்றும் அரிது செய் விழுப்பொருள் எளிதினின் பெறினும் – பெரிதும் அரிதாகிய ஈட்டும் சிறந்த பொருளை எளிதாகப் பெறுவதாயினும், வாரேன் – நான் வரமாட்டேன், வாழி – அசைச்சொல், நீடு வாழ்வாயாக, என் நெஞ்சே – என் நெஞ்சே, சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண் நுரை கலங்க – சேரரின் சுள்ளி என்ற பெரிய ஆற்றில் வெள்ளை நுரை கலங்க, யவனர் தந்த வினை மாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – யவனர் கொண்டு வந்த மாட்சிமையுடைய நல்ல கப்பல்கள் பொன்னுடன் வந்து மிளகுடன் செல்லும், வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ – வளம் மிகுந்த முசிறி என்னும் ஊரை ஆரவாரத்துடன் வளைத்து (அளபெடை), அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய – அரிய போரினை வென்று பொன்னால் செய்த பாவையைக் கவர்ந்த, நெடுநல் யானை அடு போர்ச் செழியன் – நெடிய நல்ல யானைகளையுடைய பகைவரைக் கொல்லும் போரைப் புரியும் பாண்டியன், கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது – கொடி அசையும் கூடலின் மேற்கில் உள்ள (குடாஅது – மேற்கில், இசை நிறை அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து – பல பொறிகளையுடைய மயில் உடைய வெற்றிக் கொடி உயர்த்தப்பட்ட இடைவிடாது விழாக்களையுடைய முருகனின், வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து எதிர்மலர் பிணையல் அன்ன – வண்டு தீண்ட நீண்ட அழகான சுனையில் மலர்ந்த நீல மலர்களைப் கட்டினாற்போல் உள்ள (குவளை மலர்கள்), இவள் அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே – இவளுடைய செவ்வரி படர்ந்த குளிர்ந்த மதர்த்த (அழகிய, செருக்கான) கண்கள் தெளிந்த நீரைக் கொள்ள (பனி – ஆகுபெயர் கண்ணீருக்கு, கொளவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 150, குறுவழுதியார், நெய்தல் திணைதோழி தலைவனிடம் சொன்னது
பின்னு விட நெறித்த கூந்தலும், பொன்னென
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக்
கண் உருத்து எழுதரு முலையும் நோக்கி,
எல்லினை பெரிது எனப் பன் மாண் கூறிப்,
பெருந்தோள் அடைய முயங்கி நீடு நினைந்து,  5
அருங்கடிப்படுத்தனள் யாயே, கடுஞ்செலல்
வாள் சுறா வழங்கும் வளை மேய் பெருந்துறைக்
கனைத்த நெய்தல் கண் போல் மாமலர்
நனைத்த செருந்திப் போது வாய் அவிழ,
மாலை மணி இதழ் கூம்பக், காலைக்  10
கள் நாறு காவியொடு தண்ணென மலரும்
கழியும் கானலும் காண்தொறும் பல புலந்து,
வாரார் கொல் எனப் பருவரும்,
தார் ஆர் மார்ப, நீ தணந்த ஞான்றே.

பாடல் பின்னணி:  பகற்குறி வந்து நீங்கும் தலைவனிடம் தோழி இற்செறிப்பு அறிவுறுத்தி வரைவு கடாயது.  

பொருளுரை:  மாலை பொருந்திய மார்பனே!  நீ பிரிந்த பொழுது, எம் அன்னை, என் தோழியின் பின்னப்பட்டதால் நெளிந்த கூந்தலையும், பொன் போல் மார்பில் தோன்றிய தேமலையும், கட்டிய கச்சு நெகிழும்படி கண்ணுடன் உருப்பெற்று எழுந்த முலையையும் நோக்கி, “பெரிதும் அழகுடையை நீ” எனப் பல முறையும் அவளிடம் கூறி, அவளுடைய பெரிய தோள்களை முற்றிலும் அணைத்து, நெடிது நினைந்து, அரிய காவலில் வைத்தாள்,

விரைந்து செல்லும் வாள் போன்ற கொம்பினையுடைய சுறா மீன்கள் இயங்கும் சங்குகள் மேயும் பெரிய துறையிடத்து, கண்கள் போல் தோன்றும் இதழ்கள் செறிந்த நெய்தலின் பெரிய மலர்கள் மாலை வேளையில் அழகிய இதழ்களைக் குவித்துக் கொள்ள, காலை நேரத்தில், அரும்பிய செருந்தியின் மலர்கள் விரிந்து, தேன் நாறும் குவளையுடன் தண்ணென மலரும் உப்பங்கழியையும் கானலையும் காணுந்தோறும், பலவாக வெறுத்து, நம் தலைவர் நம்மை நினைத்து வரமாட்டார் என வருந்துவாள் என் தோழி.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘காப்பின் கடுமை கையற வரினும் ………….. அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘களவு அலர் ஆயினும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்னும் (செவிலி கூற்று நிகழுமாறு கூறும்) சூத்திரத்து, ‘அளவு மிகத் தோன்றினும்’ என்னும் துறைக்கண், இச் செய்யுள் தோழி செவிலி கூறியதைக் கொண்டு கூறியது, என்று கூறினர் நச்சினார்க்கினியர்.  ‘இன்பத்தை வெறுத்தல்’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 22) என்னுஞ் சூத்திரத்து, ‘ஏதம் ஆய்தல்’ என்னும் மெய்ப்பாட்டிற்கு, கூட்டத்திற்கு வரும் இடையூறு உண்டென்று பலவும் ஆராய்தல்.  அது, நொதுமலர் வரையக் கருதுவர் கொல் எனவும், பிரிந்தோர் மறந்து இனி வாரார்கொல் எனவும் தோன்றும் உள்ள நிகழ்ச்சி என்று உரைத்து, அது, ‘வாரார் கொல் எனப் பருவரும், தார் ஆர் மார்ப, நீ தணந்த ஞான்றே’ என வரும் என்று கூறினர் பேராசிரியர்.  பின்னு விட நெறித்த கூந்தலும் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தான் பின்னி விட்ட பின்னல் விட்டமையாலே பெரிதும் நெளிந்துள்ள கூந்தலையும், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பின்னும்படி வளர்ந்து நெளிந்த கூந்தலையும்.  உருத்து (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சினந்து, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – உருப்பெற்று.  ஒப்புமை – குறுந்தொகை 276 – உருத்தெழு வன முலை. 

சொற்பொருள்:  பின்னு விட நெறித்த கூந்தலும் – பின்னப்பட்டதால் நெளிந்த கூந்தலையும், பொன்னென ஆகத்து அரும்பிய சுணங்கும் – பொன் போல் மார்பில் தோன்றிய தேமலையும், வம்பு விடக் கண் உருத்து எழுதரு முலையும் நோக்கி – கட்டிய கச்சு நெகிழும்படி கண்ணுடன் உருப்பெற்று எழுந்த முலையையும் நோக்கி, எல்லினை பெரிது எனப் பன் மாண் கூறி – பெரிதும் அழகுடையை எனப் பல முறையும் கூறி, பெருந்தோள் அடைய முயங்கி நீடு நினைந்து அருங்கடிப்படுத்தனள் – பெரிய தோள்களை முற்றிலும் அணைத்து நெடிது நினைந்து அரிய காவலில் வைத்தாள், யாயே – அன்னை (ஏகாரம் அசைநிலை), கடுஞ்செலல் வாள் சுறா வழங்கும் வளை மேய் பெருந்துறை – விரைந்து செல்லும் வாள் போன்ற கொம்பினையுடைய சுறா மீன்கள் இயங்கும் சங்குகள் மேயும் பெரிய துறையிடத்து (செலல் – செல்லல் என்பதன் இடைக்குறை), கனைத்த நெய்தல் கண் போல் மாமலர் – கண்கள் போல் தோன்றும் இதழ்கள் செறிந்த நெய்தலின் பெரிய மலர்கள், நனைத்த செருந்திப் போது வாய் அவிழ – அரும்பிய செருந்தியின் மலர்கள் விரிய, மாலை மணி இதழ் கூம்ப – மாலை வேளையில் அழகிய இதழ்கள் குவிய, காலை – காலை நேரத்தில், கள் நாறு காவியொடு தண்ணென மலரும் கழியும் கானலும் காண்தொறும் – தேன் நாறும் குவளையுடன் தண்ணென மலரும் உப்பங்கழியையும் கானலையும் காணுந்தோறும், பல புலந்து வாரார் கொல் எனப் பருவரும் – பலவாக வெறுத்து நம் தலைவர் வாரார் என வருந்துவாள் (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்), தார் ஆர் மார்ப – மாலை பொருந்திய மார்பனே (மார்ப – விளி), நீ தணந்த ஞான்றே – நீ பிரிந்த பொழுது (ஞான்றே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 151, காவன்முல்லைப் பூதரத்தனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
தம் நயந்து உறைவோர்த் தாங்கித் தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ,
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என,
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
ஆப மன், வாழி தோழி, கால் விரிபு  5
உறு வளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக்
கலைமான் தலையின் முதன் முதல் கவர்த்த
கோடலங்கவட்ட குறுங்கால் உழுஞ்சில்
தாறு சினை விளைந்த நெற்றம், ஆடுமகள்
அரிக் கோல் பறையின் ஐயென ஒலிக்கும்  10
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்,
கள்ளி முள் அரைப் பொருந்திச், செல்லுநர்க்கு
உறுவது கூறும் சிறு செந்நாவின்
மணி ஓர்த்தன்ன தெண்குரல்
கணிவாய்ப் பல்லிய காடு இறந்தோரே.  15

பாடல் பின்னணி:  தலைவனின் பிரிவால் வருந்திய தலைவி தோழியிடம் உரைத்தது.  

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  இடம் எல்லாம் பரவி வீசும் சூறைக்காற்று தாக்குந்தோறும், இங்கும் அங்கும் அசையும், பொறிகளையும் வரிகளையுமுடைய கலைமானின் தலையில் புத்தம் புதியதாகக் கிளைத்த கொம்புகள் போன்ற பிரிவுகளையுடைய, குறிய அடியையுடைய வாகை மரத்தின் கிளைகளில் விளைந்த கொத்தாகிய விதைக்கூடுகள், ஆடும் பெண்ணின் கோலால் அரித்து எழும் ஓசையை உண்டாக்கும் பறைபோல் வியக்கும்படி ஒலிக்கும், பதுக்கைகள் உடைய குறைந்த நிழலையுடைய கள்ளியின் முட்கள் உடைய அடியில் பொருந்தி, வழியில் செல்பவர்களுக்கு நிகழப்போவதைக் கூறும் சிறிய செவ்விய நாவினால், மணியின் ஒலியைக் கேட்டாற்போல், தெளிந்த குரலில் சோதிடம் கூறும் பல்லிகளையுடைய காட்டைக் கடந்து சென்ற நம் தலைவர்,

தம்மை விரும்பி வாழ்பவர்களைப் புரந்து, தாம் விரும்பும் இனிமை பொருந்திய நண்பர்களுடன் (சுற்றத்தாருடன்) இன்பத்துடன் பொருந்தி, மகிழ்ந்திருக்கும் ஆற்றல் இல்லாதவர்கள் வறுமையுற்றோர் என்று, அவர்களுக்கு உதவும்பொருட்டு, மிக்க பொருளை ஈட்ட எண்ணும் நெஞ்சத்தை உடையவர் ஆதலால், நம்பால் அருளுடையவர் அல்லர்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என்னும் நூற்பாவாற் கொள்க.  முதன் முதல் கவர்த்த (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புத்தம் புதியனவாகக் கிளைத்த, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அடியிடத்திற் கப்புவிட்ட.  நெற்றம், நெற்று அம் (9) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அம் அசைநிலை, பகுதிப்பொருள் விகுதி என்றலுமாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அம் சாரியை.  செதுக்கை (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரடு முரடான நிலம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – குறைந்த.  ஒப்புமை வாகை நெற்று ஒலித்தல் – குறுந்தொகை 7 – ஆரியர் கயிறாடு பறையின் கால் பொரக் கலங்கி வாகை வெண் நெற்று ஒலிக்கும், குறுந்தொகை 369 – அத்த வாகை அமலை வால் நெற்று அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பக் கோடை தூக்கும் கானம், அகநானூறு 45 – உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்ப, அகநானூறு 151 – உழுஞ்சில் தாறு சினை விளைந்த நெற்றம் ஆடுமகள் அரிக் கோல் பறையின் ஐயென ஒலிக்கும். பல்லி நிமித்தம் – அகநானூறு 9, 88, 151, 289, 351, 387, குறுந்தொகை 16, 140, நற்றிணை 98, 169, 246, 333, கலித்தொகை 11.   மகளிர் நல்ல நிமித்தற்குக் காத்திருத்தல் – நற்றிணை 40, முல்லைப்பாட்டு 11.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12,  குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.

சொற்பொருள்:  தம் நயந்து உறைவோர்த் தாங்கித் தாம் நயந்து இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ – தம்மை விரும்பி வாழ்பவர்களைப் புரந்துத் தாம் விரும்பும் இனிமை பொருந்திய நண்பர்களுடன் (சுற்றத்தாருடன்) இன்பத்துடன் பொருந்தி (கெழீஇ – அளபெடை), நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு  – மகிழ்ந்திருக்கும் ஆற்றல் இல்லாதவர்கள் வறுமையுற்றோர் என்று மிக்க பொருளை ஈட்ட எண்ணும் நெஞ்சுடன், அருள் பிறிது ஆப மன் – நம்பால் அருளுடையவர் அல்லர் (மன் – அசைநிலை), வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, கால் விரிபு உறு வளி எறிதொறும் – இடம் எல்லாம் பரவி வீசும் சூறைக்காற்று தாக்குந்தோறும், கலங்கிய – இங்கும் அங்கும் அசையும், பொறி வரிக் கலைமான் தலையின் முதன் முதல் கவர்த்த கோடு அல் அம் கவட்ட – பொறிகளையும் வரிகளையுமுடைய கலைமானின் தலையில் புத்தம் புதியதாகக் கிளைத்த கொம்புகள் போன்று பிரிவுகளையுடைய (அல், அம் – சாரியைகள்), குறுங்கால் உழுஞ்சில் தாறு சினை விளைந்த நெற்றம் – குறிய அடியையுடைய வாகை மரத்தின் கிளைகளில் விளைந்த கொத்தாகிய விதைக்கூடுகள் (தாறு – குலை, நெற்றம் – அம் அசைநிலை),  உழுஞ்சில் – வாகை மரம், Mimosa Flexuosa, Sirissa Tree), ஆடுமகள் அரிக் கோல் பறையின் ஐ என ஒலிக்கும் – ஆடும் பெண்ணின் கோலால் அரித்து எழும் ஓசையை உண்டாக்கும் பறைபோல் வியக்கும்படி ஒலிக்கும் (பறையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல் கள்ளி முள் அரைப் பொருந்தி – பதுக்கைகள் உடைய குறைந்த நிழலையுடைய கள்ளியின் முட்கள் உடைய அடியில் பொருந்தி (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), செல்லுநர்க்கு உறுவது கூறும் சிறு செந்நாவின் மணி ஓர்த்தன்ன – வழியில் செல்பவர்களுக்கு நிகழப்போவதைக் கூறும் (சோதிடம் கூறும்) சிறிய செவ்விய நாவினால் மணியின் ஒலியைக் கேட்டாற்போல், தெண்குரல் கணிவாய்ப் பல்லிய காடு இறந்தோரே – தெளிந்த குரலில் சோதிடம் கூறும் பல்லிகளையுடைய காட்டைக் கடந்து சென்ற நம் தலைவர் (இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 152, பரணர், குறிஞ்சித் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து,
குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண்
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால்,
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச்,
சினங்கெழு தானைத் தித்தன் வெளியன்,  5
இரங்கு நீர்ப் பரப்பின் கானலம் பெருந்துறைத்,
தனந்தரு நன்கலம் சிதையத் தாக்கும்
சிறு வெள்ளிறவின் குப்பை அன்ன
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்
முனை முரண் உடையக் கடந்த வென்வேல்,  10
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ்ப்
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்
ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பில்
களிமயில் கலாவத்து அன்ன, தோளே
வல்வில் இளையர் பெருமகன் நள்ளி  15
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த
கடவுள் காந்தள் உள்ளும் பலவுடன்
இறும்பூது கஞலிய ஆய் மலர் நாறி,
வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்குச்
சால் அவிழ் நெடுங்குழி நிறைய வீசும்  20
மாஅல் யானை ஆஅய் கானத்துத்
தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல்
வேய் அமைக் கண் இடை புரைஇச்,
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே.

பாடல் பின்னணி:  இரவுக்குறி வந்து நீங்கும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

பொருளுரை:  நம் நெஞ்சம் நடுங்குவதற்குக் காரணமான, தீர்த்தற்கு அரிய துன்பம் தீரும்படி வந்து நம்முடன் கூடி, குன்றில் பொருந்திய தன் சிறிய ஊர்க்குச் செல்ல மீளும் நம் தலைவியின் வளைந்த சுருண்ட கூந்தல், நுண்ணிய கோலையுடைய பாணர்களைப் புரந்த பெரும் புகழையும் சினம் பொருந்திய படையையுமுடைய தித்தன் வெளியன் என்பவனின் ஒலிக்கும் நீர்ப்பரப்பினையுடைய கானலம் பெருந்துறை என்னும் பட்டினத்தில், வேற்று நாட்டிலிருந்து பொன்னைக் கொண்டுவரும் நல்ல கப்பல்கள் சிதையமாறுத் தாக்கும் சிறிய வெள்ளை இறால்மீனின் கூட்டம் போன்று, மிக்க பகைமையைத் தரும் வலிமை மிகுந்த பிண்டன் என்பவனின் போர் புரியும் மாறுபாடு சிதைய வென்ற வெற்றி வேலையும், புகழ் பொருந்திய ஈகையையும், களிற்று யானைகளை வழங்கும் வள்ளன்மையாகிய களிப்பினையுமுடைய பாரம் என்னும் ஊருக்குத் தலைவனான முத்து ஆரம் பூண்ட நன்னன் என்பவனின், ஏழில் என்னும் நெடிய மலையின் பாழி என்னும் பக்கமலையில் வாழும் களிப்புடைய மயில்களின் தோகையை ஒத்துள்ளது. 

இவள் தோள்கள், வலிய வில்லையுடைய வீரர்களுக்குத் தலைவனான நள்ளி என்பவனின் சோலைகள் மிக்க பக்கமலையில், வண்டுகள் தேன் உண்ணும்படி விரிந்த, கடவுளுக்குச் சூடுதற்கு உரிய காந்தள் மலர்கள் உள்ளும் வியப்பு மிக்க அழகிய மலர்கள் பலவும் ஒன்றாக நாறுவது போல் நாறி, கல்வியில் வல்லுனராயினும் வல்லமை இல்லாதவராயினும், அவனிடம் பரிசில் வேண்டிச் சென்றவர்களுக்கு மிடாவில் (பெரிய பானையில்) சமைத்த சோற்றை அவர்களுடைய கிண்ணங்களின் குழி நிறையும்படி அளிக்கும், பெரிய யானைகளையுடைய ஆய் என்பவனின் காட்டினையுடைய தலையாறு என்னும் இடத்தில் நிலைபெற்ற, மிக்க உயர்ந்த மலையில் உள்ள மூங்கிலின் கணுக்களின் இடையில் உள்ள இடத்தை ஒத்து, தொலைவில் இருப்பவை ஆயினும், நாம் நடுங்கத்தக்க துன்பத்தைத் தரும்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) என வரும் ‘பெற்று மெலியினும்’ என வரும் விதி கொள்க.  கானலம் பெருந்துறை (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடற்கரையின் கண்ணதாகிய சோலையையுடைய அழகிய பெரிய முன்துறையின் கண்ணே, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கானலம் பெருந்துறை என்ற பட்டினத்தே.  வரலாறு – தித்தன் வெளியன், பிண்டன், நன்னன், பாரம் என்ற ஊர், ஏழில் மலை, பாழி மலை, நள்ளி, ஆஅய், தலையாறு.  நெடுங்குழி நிறைய வீசும் (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வயிறு நிரம்ப வழங்கும், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மண்டையின் (மண்டை – இரப்போரின் கலம், பாணர்களின் கிண்ணம்) நெடிய குழி நிறையும்படியாக அளிக்கும்.  ஏழில் மலை – அகநானூறு 152–13, 345–7, 349–9, நற்றிணை 391–7, குறுந்தொகை 138–2.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  மொய்ம் மூசு – யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிகுமே (தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 62), மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே (தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 65).

சொற்பொருள்:  நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண் செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் – நம் நெஞ்சம் நடுங்குவதற்குக் காரணமான தீர்த்தற்கு அரிய துன்பம் தீரும்படி வந்து கூடி குன்றில் பொருந்திய சிறிய ஊர்க்குச் செல்ல மீளும் நம் தலைவியின் வளைந்த சுருண்ட கூந்தல் (செலீஇய – அளபெடை), நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச் சினங்கெழு தானைத் தித்தன் வெளியன் இரங்கு நீர்ப் பரப்பின் கானலம் பெருந்துறை – நுண்ணிய கோலையுடைய பாணர்களைப் புரந்த பெரும் புகழையும் சினம் பொருந்திய படையையுமுடைய தித்தன் வெளியன் என்பவனின் ஒலிக்கும் நீர்ப்பரப்பினையுடைய கானல் அம் பெருந்துறை என்னும் பட்டினத்தில் (அம் – சாரியை), தனந்தரு நன்கலம் சிதையத் தாக்கும் சிறு வெள்ளிறவின் குப்பை அன்ன – பொன்னைக் கொண்டுவரும் நல்ல கப்பல்கள் சிதையமாறுத் தாக்கும் சிறிய வெள்ளை இறால்மீனின் கூட்டம் போன்று (வெள்ளிறவு – பண்புத்தொகை), உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன் முனை முரண் உடையக் கடந்த வென்வேல் – மிக்க பகைமையைத் தரும் வலிமை மிகுந்த பிண்டன் என்பவனின் போர் புரியும் மாறுபாடு சிதைய வென்ற வெற்றி வேலையும் (உறு – மிக்க, தரூஉம் – அளபெடை), இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ்ப் பாரத்துத் தலைவன் ஆர நன்னன் – புகழ் பொருந்திய ஈகையையும் களிற்று யானைகளை வழங்கும் வள்ளன்மையாகிய களிப்பினையுமுடைய பாரம் என்னும் ஊருக்குத் தலைவனான ஆரம் பூண்ட நன்னன் என்பவனின், ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பில் களிமயில் கலாவத்து அன்ன – ஏழில் என்னும் நெடிய மலையின் பாழி என்னும் பக்கமலையில் வாழும் களிப்புடைய மயில்களின் தோகையை ஒத்துள்ளது, தோளே – இவள் தோள்கள் (ஏகாரம் அசைநிலை), வல்வில் இளையர் பெருமகன் நள்ளி சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த கடவுள் காந்தள் உள்ளும் பலவுடன் இறும்பூது கஞலிய ஆய் மலர் நாறி – வலிய வில்லையுடைய வீரர்களுக்குத் தலைவனான நள்ளி என்பவனின் சோலைகள் மிக்க பக்க மலையில் வண்டுகள் தேன் உண்ணும்படி விரிந்த கடவுளுக்குச் சூடுதற்கு உரிய காந்தள் மலர்கள் உள்ளும் வியப்பு மிக்க அழகிய மலர்கள் பலவும் ஒன்றாக நாறுவது போல் நாறி (உண – உண்ண என்பதன் விகாரம்), வல்லினும் வல்லார் ஆயினும் – கல்வியில் வல்லுனராயினும் வல்லமை இல்லாதவராயினும், சென்றோர்க்குச் சால் அவிழ் நெடுங்குழி நிறைய வீசும் – அவனிடம் பரிசில் வேண்டிச் சென்றவர்களுக்கு மிடாவில் (பெரிய பானையில்) சமைத்த சோற்றை அவர்களுடைய கிண்ணங்களின் குழி நிறையும்படி அளிக்கும் (சால் – பெரிய பானை), மாஅல் யானை ஆஅய் கானத்துத் தலையாற்று நிலைஇய – பெரிய யானைகளையுடைய ஆய் என்பவனின் காட்டினையுடைய தலையாறு என்னும் இடத்தில் நிலைபெற்ற (மாஅல் – அளபெடை, ஆஅய் – அளபெடை, நிலைஇய – அளபெடை), சேய் உயர் பிறங்கல் வேய் அமைக் கண் இடை புரைஇ – மிக்க உயர்ந்த மலையில் உள்ள மூங்கிலின் கணுக்களின் இடையில் உள்ள இடத்தை ஒத்து (சேய் உயர் – ஒருபொருட் பன்மொழி), சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே – தொலைவில் இருப்பவை ஆயினும் நாம் நடுங்கத்தக்க துன்பத்தைத் தரும் (தருமே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 153, சேரமான் இளங்குட்டுவன், பாலைத் திணைமகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
நோகோ யானே!  நோதகும் உள்ளம்,
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇப்,
பந்துவழிப் படர்குவள் ஆயினும் நொந்து நனி
வெம்பும் மன் அளியள் தானே, இனியே,
வன்கணாளன் மார்பு உற வளைஇ  5
இன் சொல் பிணிப்ப நம்பி நம் கண்
உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத்
தெறு கதிர் உலைஇய வேனில் வெங்காட்டு
உறு வளி ஒலி கழைக் கண்ணுறுபு தீண்டலின்
பொறி பிதிர்பு எடுத்த பொங்கி எழு கூர் எரிப்  10
பைதறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை
நல் அடிக்கு அமைந்த அல்ல மெல்லியல்
வல்லுநள் கொல்லோ தானே, எல்லி
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
மீனொடு பொலிந்த வானின் தோன்றித்  15
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க் கோங்கின்
காலுறக் கழன்ற கண் கமழ் புது மலர்
கைவிடு சுடரின் தோன்றும்,
மைபடு மா மலை விலங்கிய சுரனே?

பாடல் பின்னணி:  மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது.

பொருளுரை:  என் மகள் மிகவும் இரங்கத்தக்கவள்.  அழகிய இனிய சொற்களையுடைய அவள், தன் தோழியருடன் கூடிப் பந்தாடிவிட்டு வருவாளாயினும், நொந்து, மிகவும் வருந்துவாள்.   

இப்பொழுது, கொடியவனான அவள் தலைவன் தன் மார்பினால் முற்றிலும் வளைத்து இனிய சொற்களால் அவளைப் பிணிக்க, அவற்றை விரும்பி, அவள் பிரிவினால் நம்மிடத்தில் ஏற்பட்ட துன்பத்தினை நினையாதவளாய், விரைந்து, காய்கின்ற கதிர்கள் கெடுத்த, வேனில் காலத்தில் வெப்பமான காட்டில், விரைந்து வீசும் காற்றானது, தழைத்த மூங்கிலின் கணுக்களைப் பொருந்தித் தாக்குவதால், பொறிகளைச் சிதறிப் பொங்கி எழும் மிக்க நெருப்பினால், பசுமை இல்லாத மலை உச்சியின் பயன் நீங்கிய அரிய வழிகள், தன் நல்ல அடிக்கு ஏற்றன அல்லாதவை ஆகியதால், மென்மைத் தன்மையுடைய அவள், எவ்வாறு வல்லமை உடையவளோ,

உயர்ந்த மலைச் சாரலில் உள்ள, வண்டுகள் பாய்ந்து ஆரவாரிக்கும் விளங்கும் மலர்க்கொத்துக்களை உடைய கோங்க மரத்தின் உயர்ந்த உச்சி, இரவில் விண்மீன்களுடன் பொலிந்த வானம் போல் தோன்றி, அதன் பின் காற்று அடித்ததால் சுழன்று விழும் நறுமணம் கமழும் புதிய மலர்கள், கைகளினால் விடப்பட்ட சுடர்ப்பொறிகள் போல் தோன்றும், முகில்கள் பொருந்திய பெரிய மலை குறுக்கிட்ட பாலை நில வழிகளில் செல்வதற்கு?  அவளை நினைத்து யான் வருந்துகின்றேன்.  என் உள்ளமும் வருந்துகின்றது. 

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இது, ‘தன்னும் அவளும் சுட்டி’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 39) என வரும் நூற்பாவின்கண் அச்சம் என்பது பற்றி நற்றாய் புலம்பலும் என்னும் உம்மையால் செவிலிமேற்றாயிற்று எனக் கொள்க.  அம் தீம் கிளவி ஆயமொடு (2) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அழகிய இனிய சொற்களையுடைய ஆயத்தாருடன், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய இனிய மொழியுடைய மகள் ஆயத்தாருடன்.  தேம் பாய்ந்து (16) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வண்டுகள் பாய்ந்து, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேன் ஒழுகப்பட்டு.  கை விடு சுடரின் தோன்றும் (18) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கையினால் விடப்பெறும் சுடர்ப்பொறி போலத் தோன்றும், கைவிடு சுடர் – பரணின் மீதுள்ள கானவர் கையினின்றும் விடுத்த பந்தம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தனதிடத்தினின்றும் வீழ்கின்ற விண் வீழ் கொள்ளிப் போலத் தோன்றும், கை = உற்கை என்ற சொல்லின் தலைக்குறை என்று கொண்டு விண் வீழ் கொள்ளி விடுகின்ற சுடர் போலத் தோன்றும் எனினுமாம்.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).  நம்பி – நம்பும் மேவும் நசை ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 33).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  நோகோ யானே – யான் வருந்துகின்றேன் (நோகு – செய்கென்னும் தன்மை வினை, ஓ – அசைநிலை, இரக்கக் குறிப்பு), நோதகும் உள்ளம் – என் உள்ளம் வருந்துகின்றது, அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇப் பந்துவழிப் படர்குவள் ஆயினும் நொந்து நனி வெம்பும் – அழகிய இனிய சொற்களையுடைய அவள் தன் தோழியருடன் கூடிப் பந்தாடிவிட்டு வருவாளாயினும் நொந்து மிகவும் வருந்துவாள் (அம் தீம் கிளவி – அன்மொழித்தொகை), மன் அளியள் – மிகவும் இரங்கத்தக்கவள் (மன் –அசைநிலை, மிகுதி குறித்தது), தானே – தான், ஏ அசைநிலைகள், இனியே – இப்பொழுது (ஏகாரம் அசைநிலை), வன்கணாளன் மார்பு உற வளைஇ இன் சொல் பிணிப்ப நம்பி நம் கண் உறுதரு விழுமம் உள்ளாள் – கொடியவன் தன் மார்பினால் முற்றிலும் வளைத்து இனிய சொற்களால் அவளைப் பிணிக்க அவற்றை விரும்பி நம்மிடத்தில் ஏற்பட்ட துன்பத்தினை நினையாதவளாய், ஒய்யென – விரைந்து (விரைவுக்குறிப்பு), தெறு கதிர் உலைஇய – காய்கின்ற கதிர்கள் கெடுத்த (உலைஇய – அளபெடை), வேனில் வெங்காட்டு – வேனில் காலத்தில் வெப்பமான காட்டில், உறு வளி ஒலி கழைக் கண்ணுறுபு தீண்டலின் பொறி பிதிர்பு எடுத்த பொங்கி எழு கூர் எரி – விரைந்து வீசும் காற்று தழைத்த மூங்கிலின் கணுக்களைப் பொருந்தித் தாக்குவதால் பொறிகளைச் சிதறிப் பொங்கி எழும் மிக்க நெருப்பினால், பைதறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை – பசுமை இல்லாத மலை உச்சியின் பயன் நீங்கிய அரிய வழிகளை, நல் அடிக்கு அமைந்த அல்ல – தன் நல்ல அடிக்கு ஏற்றன அல்லாதவையாகிய, மெல்லியல் – மென்மைத் தன்மையுடையவள், வல்லுநள் கொல்லோ – வல்லமை உடையவளோ (மெல்லியல் – அன்மொழித்தொகை, கொல் – ஐயம் என்ற பொருளில் வந்த இடைச்சொல், ஓ – அசைநிலை), தானே – தான் ஏ அசைநிலைகள், எல்லி – இரவில், ஓங்கு வரை அடுக்கத்து – உயர்ந்த மலைச்சாரலில் உள்ள, உயர்ந்த சென்னி – உயர்ந்த உச்சியில், மீனொடு பொலிந்த வானின் தோன்றி – விண்மீன்களுடன் பொலிந்த வானம் போல் தோன்றி (வானின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க் கோங்கின் – வண்டுகள் பாய்ந்து ஆரவாரிக்கும் விளங்கும் மலர்க்கொத்துக்களை உடைய கோங்க மரத்தின் (தேம் – தேன் என்றதன் திரிபு), கால் உறக் கழன்ற கண் கமழ் புது மலர் – காற்று அடித்ததால் சுழன்று விழும் நறுமணம் கமழும் புதிய மலர்கள், கைவிடு சுடரின் தோன்றும் – கைகளினால் விடப்பட்ட சுடர்ப்பொறிகள் போல் தோன்றும், தன் இடத்திலிருந்து விழும் விண்மீன் கொள்ளி போல் தோன்றும், மைபடு மா மலை விலங்கிய சுரனே – முகில்கள் பொருந்திய பெரிய மலை குறுக்கிட்ட பாலை நில வழிகளில் (சுரன் – சுரம் என்பதன் போலி, ஏகாரம் –அசைநிலை)

அகநானூறு 154, பொதும்பில் புல்லாளங்கண்ணியார், முல்லைத் திணைதலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
படுமழை பொழிந்த பய மிகு புறவின்
நெடுநீர் அவல பகுவாய்த் தேரை
சிறு பல் இயத்தின் நெடுநெறிக் கறங்கக்,
குறும்புதற் பிடவின் நெடுங்கால் அலரி
செந்நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப,  5
வெஞ்சின அரவின் பை அணந்தன்ன
தண்கமழ் கோடல் தாது பிணி அவிழத்,
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதியக்
காடு கவின் பெற்ற தண் பதப் பெருவழி  10
ஓடு பரி மெலியாக் கொய் சுவற் புரவித்
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி வலவ தேரே, சீர் மிகுபு
நம்வயின் புரிந்த கொள்கை
அம் மா அரிவையைத் துன்னுகம் விரைந்தே.  15

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது. 

பொருளுரை:  – பாகனே!  மிக்க மழை பெய்தமையால் பயன் மிக்க முல்லை நிலத்தில், ஆழமான நீரை உடைய பள்ளங்களில் உள்ள, பிளந்த வாயையுடைய தேரைகள் சிறு பல இசைக்கருவிகள் போல் நீண்ட வழிகளில் ஒலிக்கவும், குறிய புதர்களாகிய பிடவின் நீண்ட காம்பையுடைய மலர்கள் செம்மண் நிலத்தில் நுண்ணிய மணலில் கோலஞ் செய்யவும், கொடிய சினமுடைய பாம்பின் படம் நிமிர்ந்தாற்போல் தண்ணென்று மணம் கமழும் கோடல் பூக்களின் தாது கட்டு அழிந்து விரியவும், முறுக்கிய கொம்பினையுடைய ஆண்மான் தெளிந்த நீரைக் குடித்துவிட்டு விருப்பமுடைய பெண்மானுடன் இன்பத்துடன் வாழும் காடு அழகு பெற்ற குளிர்ந்த பதமுடைய பெரிய வழியில், ஓடும் வேகம் குறையாத கத்தரிக்கோலால் கொய்யப்பட்ட பிடரி மயிரை உடைய குதிரைகளின் கால்கள் அளவு தாழ்ந்த மாலையில் கட்டிய மணிகள் விளங்கி ஒலிக்கும்படியாகச் செலுத்துவாயாக தேரை, சீர் மிக்கு எம்மிடத்து விரும்பிய கொள்கையையுடைய அழகிய மாமை நிறத்தையுடைய எம் தலைவியை நாம் அடைவோம் விரைவில்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்த’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘பேர் இசை ஊர்திப் பாகர் பாங்கினும்’ என வரும் விதி கொள்க.  அம் மா அரிவை (15) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய மாமை நிறமுடையவள், ‘அ’ சுட்டுச் சொல் எனக் கொண்டு அந்தப் பெருந்தகைத் தலைவி எனலுமாம். மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்:  படுமழை பொழிந்த பய மிகு புறவின் நெடுநீர் அவல பகுவாய்த் தேரை சிறு பல் இயத்தின் நெடுநெறிக் கறங்க – மிக்க மழை பெய்தமையால் பயன் மிக்க முல்லை நிலத்தில் ஆழமான நீரை உடைய பள்ளங்களில் உள்ள பிளந்த வாயையுடைய தேரைகள் சிறு பல இசைக்கருவிகள் போல் நீண்ட வழிகளில் ஒலிக்கும், குறும்புதற் பிடவின் நெடுங்கால் அலரி செந்நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப – குறிய புதர்களாகிய பிடவின் நீண்ட காம்பையுடைய மலர்கள் செம்மண் நிலத்தில் நுண்ணிய மணலில் கோலஞ் செய்ய, வெஞ்சின அரவின் பை அணந்தன்ன தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ –  கொடிய சினமுடைய பாம்பின் படம் நிமிர்ந்தாற்போல் தண்ணென்று மணம் கமழும் கோடல் பூக்களின் தாது கட்டு அழிந்து விரியவும், திரி மருப்பு இரலை தெள் அறல் பருகிக் காமர் துணையொடு ஏமுற வதியக் காடு கவின் பெற்ற தண் பதப் பெருவழி – முறுக்கிய கொம்பினையுடைய ஆண்மான் தெளிந்த நீரைக் குடித்துவிட்டு விருப்பமுடைய பெண்மானுடன் இன்பத்துடன் வாழும் காடு அழகு பெற்ற குளிர்ந்த பதமுடைய பெரிய வழி, ஓடு பரி மெலியாக் கொய் சுவற் புரவித் தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப ஊர்மதி – ஓடும் வேகம் குறையாத கொய்யப்பட்ட பிடரி மயிரை உடைய குதிரைகளின் கால்கள் அளவு தாழ்ந்த மாலையில் கட்டிய மணிகள் விளங்கி ஒலிக்கும்படியாகச் செலுத்துவாயாக, வலவ – பாகனே, தேரே – தேரை, சீர் மிகுபு நம்வயின் புரிந்த கொள்கை அம் மா அரிவையைத் துன்னுகம் விரைந்தே – சீர் மிக்கு எம்மிடத்து விரும்பிய கொள்கையையுடைய அழகிய மாமை நிறத்தையுடைய எம் தலைவியை நாம் அடைவோம் விரைவில்

அகநானூறு 155, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
“அறன் கடைப்படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன் கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும்
பொருளின் ஆகும் புனை இழை” என்று நம்
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே,
நோய் நாம் உழக்குவம் ஆயினும் தான் தம்  5
செய் வினை முடிக்க தோழி, பல்வயின்
பய நிரை சேர்ந்த பாண் நாட்டு ஆங்கண்
நெடுவிளிக் கோவலர் கூவல் தோண்டிய
கொடுவாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி,
நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது 10
பெருங்களிறு மிதித்த அடி அகத்து இரும்புலி
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர்வழி,
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை
மண் ஆர் முழவின் கண் அகத்து அசைத்த
விரல் ஊன்று வடுவின் தோன்றும்  15
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவி, தோழியிடம் கூறியது.  

பொருளுரை:  தோழி!  “அழகிய அணிகலன்களை உடையவளே!  அறத்திற்கு புறம்பே செல்லாத வாழ்க்கையும் என்றும் பிறர் மனை வாயிலில் சென்று நிற்காத சிறப்பும் ஆகிய இரண்டும் பொருள் ஆகும்”, எனக் கூறி நம் இருண்ட அழகிய கூந்தலைத் தடவிய தலைவர்,

பல இடங்களிலும் பாலாகிய பயனைத் தரும் ஆனிரைகள் குழுமிய பாண் நாடு என்னும் இடத்தில், நெடிய சீழ்க்கை உடைய கோவலர் தோண்டிய கிணற்றிலிருந்து நீரை முகக்கும் வளைந்த வாயை உடைய பத்தலிலிருந்து நீர் வடிந்து விழுந்து நிரம்பிய சிறிய குழிகளில் நீர் வற்றியதால் ஏற்பட்ட வருத்தத்துடன், சேரத்தக்க வேறு இடம் பெறாமையால், பெரிய களிற்று யானைகள் மிதித்த அடிச்சுவட்டில் பெரிய புலிகள் அடியிட்டுச் சென்ற, சேற்றினையுடைய  ஈரமான வழிகள், குற்றமற்ற நாவினையுடைய கூத்தர்கள் தம் முதுகில் கட்டிய மார்ச்சனை அமைந்த (மண் பூசப்பட்ட) முழவின் கண்ணில் விரல்கள் உண்டாக்கிய வடுக்கள் போல் தோன்றும், மரல் செடிகள் வாடிய இடங்களையுடைய மலையைக் கடந்து சென்றவர், பிரிவுத் துன்பத்தால் நாம் வருந்துவோம் ஆயினும், பொருள் ஈட்டும் வினையை முடித்துவிட்டு வருவாராக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘புணர்ந்து உடன் போகிய  ………. அச்சமாகும்’ (தொல்காப்பியம், கற்பியல் 7) என்னும் நூற்பாவிற்கு, உடன் போகாது பிரிவு உடன்பட்ட தலைவி மனைக்கணிழிந்து தன் உடன்பாட்டைத் தோழிக்குக் கூறியதென பொருள் கொள்க.  பாணன் என்ற மன்னன் –அகநானூறு 113 – எழாஅப் பாணன், அகநானூறு 155 – பல் வயின் பய நிரை சேர்ந்த பாண் நாட்டு, அகநானூறு 226 – வலி மிகும் முன்பின் பாணனொடு, அகநானூறு 325 – நல் வேல் பாணன் நல் நாட்டு, அகநானூறு 386 – பாணன் மல்லடு மார்பின் வலியுற, பறையன்பட்டு கல்வெட்டில் பாணனின் நாடான பாணாடு குறிக்கப்பட்டுள்ளது – Early Tamil Epigraphy, page 629, Iravatham Mahadevan, Harvard University Press.

சொற்பொருள்:  அறன் கடைப்படாஅ வாழ்க்கையும்  என்றும் பிறன் கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும் பொருளின் ஆகும் – அறத்திற்கு புறம்பே செல்லாத வாழ்க்கையும் என்றும் பிறர் மனை வாயிலில் சென்று நிற்காத சிறப்பும் ஆகிய இரண்டும் பொருள் ஆகும் (அறன் – அறம் என்பதன் போலி, கடைப்படாஅ – அளபெடை, செலாஅ – அளபெடை, பொருளின் – இன் சாரியை), புனை இழை – அழகிய அணிகலன்களை உடையவளே (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), என்று நம் இருள் ஏர் ஐம்பால் நீவியோரே – எனக் கூறி நம் இருண்ட அழகிய (இருளை ஒத்த) கூந்தலைத் தடவிய தலைவர், நோய் நாம் உழக்குவம் ஆயினும் தான் தம் செய் வினை முடிக்க – பிரிவுத் துன்பத்தால் நாம் வருந்துவோம் ஆயினும் அவர் பொருள் ஈட்டும் வினையை முடித்துவிட்டு வருவாராக, தோழி – தோழி, பல்வயின் பய நிரை சேர்ந்த பாண் நாட்டு ஆங்கண் – பல இடங்களிலும் பாலாகிய பயனைத் தரும் ஆனிரைகள் குழுமிய பாண் நாடு என்னும் இடத்தில், நெடுவிளிக் கோவலர் கூவல் தோண்டிய கொடுவாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி – நெடிய சீழ்க்கை உடைய கோவலர் தோண்டிய கிணற்றிலிருந்து வளைந்த வாயை உடைய பத்தலிலிருந்து நீர் வடிந்து விழுந்து நிரம்பிய சிறிய குழிகள் (பத்தல் – நீர் இறைக்குங் கருவி), நீர் காய் வருத்தமொடு சேர்வு இடம் பெறாது – நீர் வற்றியதால் ஏற்பட்ட வருத்தத்துடன் சேரத்தக்க வேறு இடம் பெறாமையால், பெருங்களிறு மிதித்த அடி அகத்து இரும்புலி ஒதுங்குவன கழிந்த – பெரிய களிற்று யானைகள் மிதித்த அடிச்சுவட்டில் பெரிய புலிகள் அடியிட்டுச் சென்ற, செதும்பல் ஈர்வழி – சேற்றினையுடைய  ஈரமான வழிகள் (செதும்பு – சேறு, அல் பகுதிப்பொருள் விகுதி), செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை மண் ஆர் முழவின் கண் அகத்து அசைத்த விரல் ஊன்று வடுவின் தோன்றும் – குற்றமற்ற நாவினையுடைய கூத்தர்கள் தம் முதுகில் கட்டிய மார்ச்சனை அமைந்த (மண் பூசப்பட்ட) முழவின் கண்ணில் விரல்கள் உண்டாக்கிய வடுக்கள் போல் தோன்றும் (வடுவின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது), மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே – மரல் செடிகள் வாடிய இடங்களையுடைய மலையைக் கடந்து சென்றவர் (இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 156, ஆவூர் மூலங்கிழார், மருதத் திணை தோழி தலைவனிடம் சொன்னது
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டு
மூட்டுறு கவரி தூக்கியன்ன,
செழுஞ்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர்
மூது ஆ தின்றல் அஞ்சிக், காவலர்
பாகல் ஆய் கொடிப் பகன்றையொடு பரீஇக்,  5
காஞ்சியின் அகத்துக் கரும்பு அருத்தி யாக்கும்
தீம்புனல் ஊர! திறவிதாகக்
குவளை உண்கண் இவளும் யானும்
கழனி ஆம்பல் முழு நெறிப் பைந்தழை,
காயா ஞாயிற்று ஆகத்துப் அலைப்பப்,  10
“பொய்தல் ஆடிப் பொலிக” என வந்து
நின் நகாப் பிழைத்த தவறே பெரும,
கள்ளும் கண்ணியும் கையுறையாக
நிலைக் கோட்டு வெள்ளை நால் செவிக் கிடாஅய்
நிலைத் துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சித்,  15
தணி மருங்கு அறியாள், யாய் அழ
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே.

பாடல் பின்னணி:  தலைவியை இடத்து உய்த்து வந்த தோழி, தலைவனை வரைவு கடாயது.  

பொருளுரை:  முரசுகளை உடைய செல்வந்தர்களின் குதிரைகளின் தலை மேல் இணைத்துக் கட்டிய கவரியை நிமிர்த்தி வைத்தாற்போல் தோன்றும், செழுமையான வயலிலுள்ள நெல்லின் சிவந்த முதிர்ந்த நெற்கதிர்களை முதிய பசு தின்னுவிடுமென அஞ்சி, காவலர்கள் பாகலின் சிறந்த கொடியை பகன்றையின் கொடியுடன் அறுத்துக் கொணர்ந்து அவற்றால் காஞ்சி மரத்தில் கட்டி வைக்கும், இனிய நீர்வளம் பொருந்திய ஊரின் தலைவனே!

பெருமானே!  எம் அன்னை, நீர்த் துறையில் நிலைபெற்ற கடவுளுக்கு வழிப்பாட்டுப் பொருட்களாக, கள்ளையும் மாலையையும் நிமிர்ந்த கொம்பினையும் தொங்கும் காதுகளையும் உடைய கிடாயையும் செலுத்தி, இவளுடைய துன்ப நோயைத் தணிக்கும் வழியை அறியாள் ஆக அழுகின்றாள்.  

நீலமணி போன்ற இவள் மேனி பசலையால் பொன்னின் நிறத்தை அடைந்தது, குவளை மலர்களை ஒத்த மையுண்ட கண்களையுடைய என் தோழியும் யானும், செவ்விதாக, வயலின் ஆம்பல் மலர்களின் இதழ் ஒடியாத ஆம்பல் மலர்களால் புனைந்த தழை ஆடை ஞாயிறு காயாத காலை வேளையில் மார்பின்கண் அலைத்திட, “நீவிர் பொய்கை விளையாடிப் பொலிவீர்களாக” எனத் தாய் எம்மை விடுத்ததால், வந்து நின்னுடன் நகையாடிக் பிழையைச் செய்த தவற்றினால் அன்றோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மருதத்துக் களவு.  தீம்புனலூர என்பதால் இது மருதத்திணை ஆயிற்று.  இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனை நிலை வகையால் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  புரவிச் சூட்டும் மூட்டுறு கவரி தூக்கியன்ன (1–2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குதிரையின் தலையின் மேல் தைக்கின்ற கவரியைத் தொங்கவிட்டாற்போல், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – குதிரையின் தலையின் உச்சியிடத்து இணைத்துத் தைத்த கவரியை நிமிர்த்து வைத்தால் ஒத்த.  பொய்தல் ஆடிப் பொலிக (11) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – விளையாடி நீ வாழ்வாயாக எனக் கூறி, நீவிர் பொய்தல் ஆடிப்பொலிக எனத் தாய் விடுக்க வந்து என்றுரைத்தலுமாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – விளையாட்டு அயர்ந்து அழகு எய்துவேம் எனக் கருதி, விளையாட்டு அழகு உண்டாக்கும் என்னும் கொள்கை பண்டைக்காலத்தில் உண்மை என்பது ‘பொய்தல் ஆடிப் பொலிக’ என்பதனால் உணர்க.  ஒப்புமை –அகநானூறு 156 – முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும் மூட்டுறு கவரி, பதிற்றுப்பத்து 90 – ஆய் மயிர்க் கவரிப் பாய் மா, பரிபாடல் 19 – நின யானைச் சென்னி நிறம் குங்குமத்தால் புனையா பூ நீர் ஊட்டி புனை கவரி சார்த்தா.  அன்னை வருந்துதல்:  குறிஞ்சிப்பாட்டு 1–8 – அன்னாய் வாழி! வேண்டு அன்னை! ஒண்ணுதல் ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும், பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும், வேறு பல் உருவில் கடவுள் பேணி, நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று, எய்யா மையலை நீயும் வருந்துதி.  அகநானூறு 48 –அன்னாய் வாழி! வேண்டு அன்னை! நின் மகள் பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனி பசந்தனள் என வினவுதி.  நற்றிணை 351 – இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை அருங்கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள் பசந்தனள் என்பது உணராய் பல் நாள் எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி வருந்தல் வாழி! வேண்டு அன்னை!   நகா – நகைத்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 79).

சொற்பொருள்:  முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டு மூட்டுறு கவரி தூக்கி அன்ன செழுஞ்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர் மூது ஆ தின்றல் அஞ்சி – முரசுகளை உடைய செல்வந்தர்களின் குதிரைகளின் தலை மேல் இணைத்துக் கட்டிய கவரியை நிமிர்த்தி வைத்தாற்போல் தோன்றும் செழுமையான வயலிலுள்ள நெல்லின் சிவந்த முதிர்ந்த நெற்கதிர்களை முதிய பசு தின்னுவிடுமென அஞ்சி, காவலர் பாகல் ஆய் கொடிப் பகன்றையொடு பரீஇக் காஞ்சியின் அகத்துக் கரும்பு அருத்தி யாக்கும் – காவலர்கள் பாகலின் சிறந்த கொடியை பகன்றையின் கொடியுடன் அறுத்து காஞ்சி மரத்தில் கட்டி வைக்கும் (பரீஇ – அளபெடை), பகன்றை – Operculina turpethum, Indian jalap) தீம்புனல் ஊர – இனிய நீர்வளம் பொருந்திய ஊரின் தலைவனே (ஊர – அண்மை விளி), திறவிதாக – செவ்விதாக, குவளை உண்கண் இவளும் யானும் – குவளை மலர்களை ஒத்த மையுண்ட கண்களையுடைய என் தோழியும் யானும், கழனி ஆம்பல் முழு நெறிப் பைந்தழை காயா ஞாயிற்று ஆகத்துப் அலைப்ப – வயலின் ஆம்பல் மலர்களின் இதழ் ஒடியாத ஆம்பல் மலர்களால் புனைந்த தழை ஆடை ஞாயிறு காயாத காலை வேளையில் மார்பின்கண் அலைத்திட  (தழை – தழை ஆடைக்கு ஆகுபெயர்), பொய்தல் ஆடிப் பொலிக – நீவிர் பொய்கை விளையாடிப் பொலிவீர்களாக, விளையாடி அழகு எய்துவோம், விளையாடி ‘நீ வாழ்வாயாக’, என வந்து நின் நகாப் பிழைத்த தவறே – என்று வந்து நின்னுடன் நகையாடிக் பிழையைச் செய்த தவற்றினால், பெரும – பெருமானே, கள்ளும் கண்ணியும் கையுறையாக நிலைக் கோட்டு வெள்ளை நால் செவிக் கிடாஅய் நிலைத் துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சித் தணி மருங்கு அறியாள் யாய் அழ – கள்ளையும் மாலையையும் வழிப்பாட்டுப் பொருள்களாக நிமிர்ந்த கொம்பினையும் தொங்கும் காதுகளையும் உடைய கிடாயையும் நீர்த்துறையில் நிலைபெற்ற கடவுளுக்குச் செலுத்தி நோயைத் தணிக்கும் வழியை அறியாள் ஆக அன்னை அழ, மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே – நீலமணி போன்ற மேனி பசலையால் பொன்னின் நிறத்தை அடைதல் (மருள் – உவம உருபு, கொளலே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 157, வேம்பற்றூர்க் குமரனார், பாலைத் திணை தலைவி தோழியிடம் சொன்னது
அரியல் பெண்டிர் அல்குல் கொண்ட
பகுவாய்ப் பானைக் குவி முனை சுரந்த
அரி நிறக் கலுழி ஆர மாந்திச்,
செரு வேட்டுச் சிலைக்கும் செங்கண் ஆடவர்,
வில் இட வீழ்ந்தோர் பதுக்கைக் கோங்கின்  5
எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல்
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கிக்,
கான யானை கவளம் கொள்ளும்
அஞ்சுவரு நெறி இடைத் தமியர் சென்மார்
நெஞ்சு உண மொழிப மன்னே தோழி,  10
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்துப்
பெயலுற நெகிழ்ந்து வெயிலுறச் சாஅய்
வினை அழி பாவையின் உலறி,
மனை ஒழிந்து இருத்தல் வல்லுவோர்க்கே.

பாடல் பின்னணி:  தலைவனின் பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.

பொருளுரை:  தோழி!  போர் நிகழ்வு குடிமக்களைத் தங்கள் இடத்திலிருந்து நீங்கச் செய்ததால், பொலிவற்று இருக்கும் ஊர் மன்றத்தில் மழை பெய்யும்பொழுது இளகியும் வெயில் அடித்தால் காய்ந்து நுணுகியும், வேலைப்பாடு அழிந்த பாவையைப் போல், உடல் மெலிந்து மனையில் தலைவரைப் பிரிந்து உயிர் வாழ்தல் வல்லமை உடையவர்களுக்கே.

கள் விற்கும் பெண்கள் தம் இடையில் சுமந்து வந்த விரிந்த வாயையுடைய பானையின் குவிந்த முனையால் வார்ந்த அரித்த நிறமுடைய கள்ளின் கலங்கலை நிறையக் குடித்து, போரை விரும்பி ஆரவாரிக்கும் சிவந்த கண்ணையுடைய வீரர்கள் வில்லைச் செலுத்தியதால் இறந்தவர்களின் மேல் உள்ள கற்குவியலின் அயலில் உள்ள கோங்க மரத்தின் மீது படர்ந்த இரவில் மலர்ந்த பசிய அதிரல் கொடியை, பெரிய இருள் புலர்கின்ற விடியற்காலையில், காட்டு யானை அரும்புடன் இழுத்துக் கவளமாக உண்ணும் அச்சம் வருகின்ற சுரநெறியில், தனியாகச் செல்லும் நம் தலைவர், அதனை தன் மனம் ஏற்றுக்கொள்ளும்படிக் கூறுவார்.  யான் தனித்திருக்க வல்லமை உடையேன் அல்லேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என வரும் நூற்பாவின்கண் ‘கொடுமை ஒழுக்கம் …………… பல்வேறு நிலையிலும்’ என்பதன்கண் அடக்குக.

சொற்பொருள்:  அரியல் பெண்டிர் அல்குல் கொண்ட பகுவாய்ப் பானைக் குவி முனை சுரந்த அரி நிறக் கலுழி ஆர மாந்தி – கள் விற்கும் பெண்கள் தம் இடையில் சுமந்து வந்த விரிந்த வாயையுடைய பானையின் குவிந்த முனையால் வார்ந்த அரித்த நிறமுடைய கள்ளின் கலங்கலை நிறையக் குடித்து (குவி முனை – கள்ளை ஊற்றுவதற்கு மூக்குபோல் குவிந்திருக்கும் வாய்), செரு வேட்டுச் சிலைக்கும் செங்கண் ஆடவர் வில் இட வீழ்ந்தோர் பதுக்கைக் கோங்கின் எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல் – போரை விரும்பி ஆரவாரிக்கும் சிவந்த கண்ணையுடைய வீரர்கள் வில்லைச் செலுத்தியதால் இறந்தவர்களின் மேல் உள்ள கற்குவியலின் அயலில் உள்ள கோங்க மரத்தின் மீது படர்ந்த இரவில் மலர்ந்த பசிய அதிரல் கொடியை (கோங்க மரம் – Cochlospermum gossypium, பைங்கொடி – பண்புத்தொகை, அதிரல் கொடி – Derris Scandens, Jewel vine), பெரும் புலர் வைகறை – பெரிய இருள் புலர்கின்ற விடியற்காலையில், அரும்பொடு வாங்கிக் கான யானை கவளம் கொள்ளும் அஞ்சுவரு நெறி இடை – காட்டு யானை அரும்புடன் இழுத்துக் கவளமாக உண்ணும் அச்சம் வருகின்ற சுரநெறியில், தமியர் சென்மார் நெஞ்சு உண மொழிப – தனியாகச் செல்லும் நம் தலைவர் அதனை தன் மனம் ஏற்றுக்கொள்ளும்படிக் கூறுவார் (உண – உண்ண என்பதன் விகாரம்), மன்னே – ஒழியிசை, ஏ அசைநிலை, தோழி – தோழி, முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்துப் பெயலுற நெகிழ்ந்து வெயிலுறச் சாஅய் வினை அழி பாவையின் உலறி மனை ஒழிந்து இருத்தல் வல்லுவோர்க்கே – போர் நிகழ்வு குடிமக்களைத் தங்கள் இடத்திலிருந்து நீங்கச் செய்ததால் பொலிவற்று இருக்கும் மன்றத்தில் மழை பெய்யும்பொழுது இளகியும் வெயில் அடித்தால் காய்ந்து நுணுகியும் வேலைப்பாடு அழிந்த பாவையைப்போல்  உடல் மெலிந்து மனையில் தலைவரைப் பிரிந்து வாழும் உயிர் வல்லமை உடையவர்களுக்கு (சாஅய் – அளபெடை, பாவையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, வல்லுவோர்க்கே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 158, கபிலர், குறிஞ்சித் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
‘உரும் உரறு கருவிய பெருமழை தலைஇப்
பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள்,
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்பப்,
பின்னு விடு நெறியில் கிளைஇய கூந்தலள்
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி  5
மிடை ஊர்பு இழியக் கண்டனென் இவள்’, என
அலையல், வாழி வேண்டு அன்னை, நம் படப்பைச்
சூர் உடைச் சிலம்பில் சுடர்ப் பூ வேய்ந்து
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே,
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்  10
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே, இவள் தான்
சுடர் இன்று தமியளும் பனிக்கும் வெருவர
மன்ற மராஅத்த கூகை குழறினும்,
நெஞ்சு அழிந்து அரணம் சேரும் அதன்தலைப்
புலிக் கணத்து அன்ன நாய் தொடர் விட்டு,  15
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல்
எந்தையும் இல்லன் ஆக,
அஞ்சுவள் அல்லளோ, இவளிது செயலே?

பாடல் பின்னணி:  செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்த் தலைவன் கேட்பச் சொல்லியது.  தோழி வரைவு கடாயது.  

பொருளுரை:  அன்னையே!  நீ நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக!  “முழங்கும் இடியுடனும் மின்னலுடனும் தொகுதியாக உள்ள முகில்கள் மிக்க மழையைப் பெய்துவிட்டு, அப்பெயல் நீங்கி ஒலி அடங்கிய அடர்ந்த இருளையுடைய நடு இரவில், மின்னல் நிமிர்ந்ததை ஒத்த கனத்த காதணிகள் ஒளிரப் பின்னல் நெகிழ்ந்த நெறிப்புடன் அகன்ற கூந்தலையுடையவளாய், இவள் மலையிலிருந்து இறங்கும் மயில் போல் தளர்ந்து நடந்து பரணில் நடந்து இறங்கக் கண்டேன்” எனக் கூறி இவளை நீ வருத்தாதே. 

கடவுள்கள் உடைய மலையில் பொருந்திய நம் தோட்டத்தின்கண், ஒளியுடைய மலர்களை அணிந்து தாம் விரும்பும் உருவத்தை மேற்கொண்டு பெண் கடவுள்கள் வருவது உண்டு.  நனவின் உண்மைத் தோற்றம் போல், உறங்குபவர்களைக் கனவு அங்கு மயக்குதலும் உண்டு.  இவள் விளக்கு இல்லாமல் தனியாக இருக்க அஞ்சி நடுங்குவாள்.  அச்சம் தோன்ற மன்றத்தில் உள்ள கடம்ப மரத்தில் உள்ள கூகை குழறினாலும் மனம் நடுங்கிப் பாதுகாப்பான இடத்திற்கு வந்துவிடுவாள்.  அதற்கு மேலும், புலிக்கூட்டத்தினை ஒத்த நாய்கள் தொடரும் வேட்டைத் தொழிலைப் புரியாது முருகனை ஒத்த சினத்தையும் மிக்க வலிமையையுமுடைய எம் தந்தையும் இல்லத்தில் இருப்பான் ஆகவும், படப்பைக்குச் சென்று வருவதற்கு இவள் அஞ்சுவாள் இல்லையா?   

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘ஐயச் செய்கை தாய்க்கு எதிர் மறுத்துப் பொய் என மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்’ என வரும் விதியும் ‘அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதியும் கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘நாற்றமும் தோற்றமும் ‘ (தொல்காப்பியம், களவியல் 23’ என்னுஞ் சூத்திர உரையில் இச் செய்யுளை எடுத்துக்காட்டி, இது மிடை ஏறி இழிந்தாள் என்றது காரணமாக ஐயுற்ற தாயைக் கனவு மருட்டலும் உண்டென்றது முதலாகப் பொய்யென மாற்றி அணங்கும் வருமென மெய்வழிக் கொடுத்தது, இது சிறைப்புறமாகக் கூறி வரைவு கடாயது என்றும், ‘களவு அலர் ஆயினும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்னுஞ் சூத்திரத்து உரையில், இப்பாட்டினுள் ‘மிடை ஊர்பு இழியக் கண்டனென் இவள் என அலையல் வாழி வேண்டன்னை’ என்றது தலைவி புறத்துப் போக கண்டு செவிலி கூறியதனைத் தோழி கொண்டு கூறினாள் என்றும் கூறினர் நச்சினார்க்கினியர்.  தொல்காப்பியம், களவியல் 35 – தோழி தானே செவிலி மகளே.  பின்னு விடு (4) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பின்னல் நெகிழ்ந்தமையின், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பின்னல் அவிழ்ந்தமையாலே.  மின்னல் நிமிர்ந்தாற்போல் – மின்னு நிமிர்ந்தன்ன – அகநானூறு 124, 158, நற்றிணை 51, புறநானூறு 57, மின்னு நிமிர்ந்தாங்கு – பெரும்பாணாற்றுப்படை 484, மின்னு நிமிர்ந்தனைய – மதுரைக்காஞ்சி 679.  உரும் உரறு கருவிய (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முழங்குகின்ற மின்னல் முதலிய தொகுதிகளையுடைய.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 56).  நெறியில் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெறிப்புடைமையாலே, நெறிப்பு – அறல், அறல்பட்ட கூந்தல் பின்னல் தளர்ந்துழிப் பிதிர்ந்து போதல் இயல்பு. கிளைஇய என்பது பிதிர்ந்த என்னும் பொருட்டு.  மிடை ஊர்பு இழிய (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மிடையின்கண் நடந்து கீழிறங்க, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பரணில் ஏறி இறங்கி.  கூகை குழறினால் மகளிர் அஞ்சுதல் – அகநானூறு 158 – வெருவர மன்ற மராஅத்த கூகை குழறினும் நெஞ்சு அழிந்து அரணம் சேரும், நற்றிணை 83 – கூகை …… அஞ்சு வரக் கடுங்குரல் பயிற்றாதீமே, நற்றிணை 218 – பராரை வேம்பின் படுசினை இருந்த குராஅல் கூகையும் இராஅ இசைக்கும் ஆனா நோய் அட வருந்தி, குறுந்தொகை 153 – குன்றக் கூகை குழறினும் முன்றில் பலவின் இருஞ்சினைக் கலை பாய்ந்து உகளினும் அஞ்சுமன் அளித்து என் நெஞ்சம்.  

சொற்பொருள்:  உரும் உரறு கருவிய பெருமழை தலைஇப் பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள் – முழங்கும் இடியுடனும் மின்னலுடனும் தொகுதியாக உள்ள முகில்கள் மிக்க மழையைப் பெய்துவிட்டு அப்பெயல் நீங்கி ஒலி அடங்கிய அடர்ந்த இருளையுடைய நடு இரவில்  (தலைஇ – அளபெடை), மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்பப் பின்னு விடு நெறியில் கிளைஇய கூந்தலள் – மின்னல் நிமிர்ந்ததை ஒத்த கனத்த காதணிகள் ஒளிரப் பின்னல் நெகிழ்ந்த நெறிப்புடன் அகன்ற கூந்தலையுடையவளாய் (கிளைஇய – அளபெடை), வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி மிடை ஊர்பு இழியக் கண்டனென் இவள் என அலையல் – மலையிலிருந்து இறங்கும் மயில் போல் தளர்ந்து நடந்து பரணில் நடந்து இறங்கக் கண்டேன் எனக் கூறி இவளை வருத்தாதே (மிடை – பரண்), வாழி – நீ நீடு வாழ்வாயாக, வேண்டு அன்னை – நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக, நம் படப்பை – நம் தோட்டத்தின்கண், சூர் உடைச் சிலம்பில் – கடவுள்கள் உடைய மலையில், சுடர்ப் பூ வேய்ந்து தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே – ஒளியுடைய மலர்களை அணிந்து தாம் விரும்பும் உருவத்தில் பெண் கடவுள்கள் வருவது உண்டு (அணங்குமார் – மார் அசைநிலை), நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் கனவு ஆண்டு மருட்டலும் உண்டே – நனவின் உண்மைத் தோற்றம் போல் உறங்குபவர்களைக் கனவு அங்கு மயக்குதலும் உண்டு, இவள் தான் சுடர் இன்று தமியளும் பனிக்கும் – இவள் விளக்கு இல்லாமல் தனியாக இருக்க அஞ்சி நடுங்குவாள், வெருவர மன்ற மராஅத்த கூகை குழறினும் நெஞ்சு அழிந்து அரணம் சேரும் – அச்சம் தோன்ற மன்றத்தில் உள்ள கடம்ப மரத்தில் உள்ள கூகை குழறினாலும் மனம் நடுங்கிப் பாதுகாப்பான இடத்திற்கு வந்துவிடுவாள், அதன்தலைப் புலிக் கணத்து அன்ன நாய் தொடர் விட்டு முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல் எந்தையும் இல்லன் ஆக – அதற்கு மேலும் புலிக்கூட்டத்தினை ஒத்த நாய்கள் தொடரும் வேட்டைத் தொழிலைப் புரியாது முருகனை ஒத்த சினத்தையும் மிக்க வலிமையையுமுடைய எம் தந்தையும் இல்லத்தில் இருப்பான் ஆகவும் (கணத்து – கணம், அத்துச் சாரியை), அஞ்சுவள் அல்லளோ – அஞ்சுவாள் இல்லையா, இவளிது செயலே – இவளது செயல் (செயலே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 159, ஆமூர்க் கவுதமன் சாதேவனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது 
தெண் கழி விளைந்த வெண்கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை
உரனுடைச் சுவல பகடு பல பரப்பி
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்,
வடியுறு பகழிக் கொடு வில் ஆடவர்  5
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கிப்
பல் ஆன் நெடுநிரை தழீஇக், கல்லென
வருமுனை அலைத்த பெரும் புகல் வலத்தர்,
கனை குரல் கடுந்துடிப் பாணி தூங்கி
உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும்  10
கவலை காதலர் இறந்தனர் என, நனி
அவலம் கொள்ளன்மா, காதலம் தோழி!
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேட்சிமை
நறும் பூஞ்சாரல் குறும்பொறைக் குணாஅது,
வில் கெழு தடக்கை வெல் போர் வானவன்  15
மிஞிறு மூசு கவுள சிறுகண் யானைத்
தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறிக்,
கொடுமுடி காக்குங்குரூஉக்கண் நெடுமதில்
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்,
ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர், நின்  20
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வருந்திய தலைவியைத் தோழி வற்புறுத்தியது. 

பொருளுரை:  பேரன்பு மிக்க தோழியே!  தெளிந்த உப்பங்கழியில் விளைந்த வெள்ளை உப்பின் விலையைக் கூறி விற்ற உப்பு வணிகர்கள், வளைந்த நுகத்தையுடைய வண்டியில் கட்டிய தங்கள் வலிமை மிகுந்த பிடரியையுடைய எருதுகள் பலவற்றை பரக்க மேயவிட்டுத் தாமும் இளைப்பாறி விட்டுச் சென்ற பின், வீணே கிடக்கும் கல் அடுப்புகளில், வடித்து செய்த அம்பினையும் வளைந்த வில்லினையுமுடைய கரந்தை வீரர்கள், பகைவர்க்கு வருத்தம் தரும் வலிமை மிக்க வில்லை வளைத்து பல பசுக்களை உடைய பெரிய நிரையினைக் கவர்ந்து கொண்டு, கல்லென்னும் ஒலியுடன் வரும் வெட்சி மறவர்களின் போரினை அலைத்து அவர்களை விரட்டிய பெரிய செருக்கினையும் வெற்றியையுமும் உடையவர்களாக மிக்க ஒலியையுடைய கடிய துடியின் ஓசைக்கு ஒத்த தாளத்துடன் ஆடி, தழையுடன் தொடுத்த கண்ணிகளை அணிந்தவர்களாய் ஊனைப் புழுக்கி உண்ணும் பிரிவுகளையுடைய வழிகளில், நம் தலைவர் சென்றார் என்று, மிகுந்த துன்பத்தைக் கொள்ளாதே. 

வானில் சிறந்த இடி முழங்கும் நெடிய உச்சியை உடைய நறுமண மலர்கள் கொண்ட பக்கமலைகளை உடைய குறும்பொறை என்னும் மலைக்கு கிழக்கில் உள்ளது ஆகிய, வில்லுடைய பெரிய கைகளை உடைய போரில் வெற்றி பெறும் சேரனின் வண்டுகள் மொய்க்கும் கன்னத்தினையும் சிறிய கண்களையும் உடைய யானையின் பூண் அணிந்த பெரிய கோட்டினை (தந்தத்தினை) ஓடியும்படி அழித்து, கொடுமுடி என்பவன் காக்கும், விளங்கிய இடத்தை உடைய நெடிய மதில்கள் சூழ்ந்த நெடும் தூரம் விளங்கும் சிறப்புடைய ஆமூரை அடைந்தாலும், அங்கு அமைந்து தங்கிவிட மாட்டார், நின் அணிகலன் அணிந்த ஆகத்தில் பொருந்துதலை மறந்து.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘மரபு நிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 48) என வரும் நூற்பாவினால் அமைத்துக் கொள்க.  ஆடவர் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆடவர் என்பது வெட்சி மறவரை.  இனி கல்லென வருமுனை என்றது கரந்தை மறவரை.  கொள்ளன்மா (12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொள்ளன்மா என்புழி மா வியங்கோளசை.  மா – மா என் கிளவி வியங்கோள் அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 25).  வடியுறு பகழி (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொல் உலையில் வடித்த அம்புகள்.  வரலாறு – வானவன் (சேர மன்னன்), கொடுமுடி, ஆமூர், குறும்பொறை மலை.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  தெண் கழி விளைந்த வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை உரன் உடைச் சுவல பகடு பல பரப்பி உமண் உயிர்த்து இறந்த ஒழி கல் அடுப்பின் – தெளிந்த உப்பங்கழியில் விளைந்த வெள்ளை உப்பின் விலையைக் கூறி விற்ற உப்பு வணிகர்கள் வளைந்த நுகத்தையுடைய வண்டியில் கட்டிய வலிமை மிகுந்த பிடரியையுடைய எருதுகள் பலவற்றை பரக்க மேயவிட்டுத் தாமும் இளைப்பாறி விட்டுச் சென்ற பின் வீணே கிடக்கும் கல் அடுப்புகளில், வடியுறு பகழிக் கொடு வில் ஆடவர் அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கிப் பல் ஆன் நெடுநிரை தழீஇக் கல்லென – வடித்து செய்த அம்பினையும் வளைந்த வில்லினையுமுடைய கரந்தை வீரர்கள் பகைவர்க்கு வருத்தம் தரும் வலிமை மிக்க வில்லை வளைத்து பல பசுக்களை உடைய பெரிய நிரையினைக் கவர்ந்து கொண்டு கல்லென்னும் ஒலியுடன் (தழீஇ – அளபெடை, கல்லென – ஒலிக்குறிப்பு மொழி), வருமுனை அலைத்த பெரும் புகல் வலத்தர் கனை குரல் கடுந்துடிப் பாணி தூங்கி – வரும் வெட்சி மறவர்களின் போரினை அலைத்து அவர்களை விரட்டிய பெரிய செருக்கினையும் வெற்றியையுமும் உடையவர்களாக மிக்க ஒலியையுடைய கடிய துடியின் ஓசைக்கு ஒத்த தாளத்துடன் ஆடி, உவலைக் கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் கவலை காதலர் இறந்தனர் என – தழையுடன் தொடுத்த கண்ணிகளை அணிந்தவர்களாய் ஊனைப் புழுக்கி உண்ணும் பிரிவுகளையுடைய வழிகளில் நம் தலைவர் சென்றார் என்று, நனி அவலம் கொள்ளன்மா – மிகுந்த துன்பத்தைக் கொள்ளாதே (கொள்ளன்மா – மா வியங்கோள் அசை), காதலம் தோழி – பேரன்பு மிக்க தோழியே, பெருங்காதல் கொண்ட தோழியே, விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேட்சிமை நறும் பூஞ்சாரல் குறும்பொறைக் குணாஅது – வானில் சிறந்த இடி முழங்கும் நெடிய உச்சியை உடைய நறுமண மலர்கள் கொண்ட பக்கமலைகளை உடைய குறும்பொறை என்னும் மலைக்கு கிழக்கில் உள்ளது (குணாஅது – அளபெடை), வில் கெழு தடக்கை வெல் போர் வானவன் – வில்லுடைய பெரிய கைகளை உடைய போரில் வெற்றி பெறும் சேரனின், மிஞிறு மூசு கவுள சிறுகண் யானைத் தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறிக் கொடுமுடி காக்கும் – வண்டுகள் மொய்க்கும் கன்னத்தினையும் சிறிய கண்களையும் உடைய யானையின் பூண் அணிந்த பெரிய கோட்டினை (தந்தத்தினை) ஓடியும்படி அழித்து, கொடுமுடி என்பவன் காக்கும், குரூஉக்கண் நெடுமதில் சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும் ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர் – விளங்கிய இடத்தை உடைய நெடிய மதில்கள் சூழ்ந்த நெடும் தூரம் விளங்கும் சிறப்புடைய ஆமூரை அடைந்தாலும் அங்கு அமைந்து தங்கிவிட மாட்டார் (குரூஉ – அளபெடை), நின் பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே – நின் பூண் அணிந்த ஆகத்தில் பொருந்துதலை மறந்து (மறந்தே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 160, குமிழி ஞாழலார் நப்பசலையார், நெய்தல் திணைதோழி தலைவியிடம் சொன்னது
ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ?
நடுங்கின்று அளித்து என் நிறை இல் நெஞ்சம்,
அடும்பு கொடி சிதைய வாங்கிக் கொடுங்கழிக்
குப்பை வெண்மணல் பக்கம் சேர்த்தி
நிறைச்சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த  5
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டைப்
பார்ப்பிடன் ஆகும் அளவை பகுவாய்க்
கணவன் ஓம்பும் கானலஞ்சேர்ப்பன்,
முள் உறின் சிறத்தல் அஞ்சி மெல்ல
வாவு உடைமையின் வள்பின் காட்டி, 10
ஏத்தொழில் நவின்ற எழில் நடைப் புரவி
செழு நீர்த் தண்கழி நீந்தலின், ஆழி
நுதி முகங்குறைந்த பொதி முகிழ் நெய்தல்
பாம்பு உயர் தலையின் சாம்புவன நிவப்ப,
இர வந்தன்றால் திண்தேர், கரவாது  15
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல்வாய்
அரவச் சீறூர் காணப்
பகல் வந்தன்றால் பாய் பரி சிறந்தே.

பாடல் பின்னணி:  தலைவன் தலைவியை வரைதற்குப் பகற்பொழுது வருகின்றான்.  அந்நற்செய்தியை அறிந்த தோழி, தலைவியிடம் நகையாடிச் சொல்லியது. 

பொருளுரை:  ஒடுங்கிய எண்ணெய் பூசிய நெய்ப்புடைய கூந்தலை உடையவளே!  நிறைந்த சூலை உடைய ஆமை, அடும்புகொடி சிதையும்படி அதனை இழுத்து வளைந்த உப்பங்கழி அருகில் உள்ள வெள்ளை மணல் மேட்டின் பக்கத்தில் சேர்த்து, மறைத்து ஈன்று புதைத்த. யானையின் மருப்பினால் (தந்தத்தினால்) செய்த வட்டைப் போன்ற வடிவமுடைய புலால் நாறும் முட்டைகளைக் குஞ்சுகள் அவற்றிலிருந்து வெளியே வரும் அளவிற்கு பிளந்த வாயினையுடை ஆண் ஆமை பாதுகாக்கும், சோலையையுடைய கடற்கரையின் தலைவனின் வலிய தேரானது, அம்பு போல் வேகத்துடன் செல்லுதலைப் பழகிய அழகிய நடையையுடைய குதிரைகள் தாற்றுக்கோலால் குத்தப்பெற்றால் வேகம் அளவு கடக்கும் என்று அஞ்சி, தேரோட்டி கடிவாளத்தின் வாரால் தன் கருத்தைக் குறிப்பால் வெளிப்படுத்த, மெல்லத் தாவிச் செல்லுதல் கொண்டமையால், செழுமையான நீரையுடைய குளிர்ந்த உப்பங்கழியைக் கடக்கும்பொழுது தேர் உருளையின் கூரிய முனையால் அறுக்கப்பட்ட பொதிந்த அரும்புகளையுடைய நெய்தல், பாம்பின் மேலே உயர்த்திய தலையைப் போல் வாடி மேல் எழ, இரவில் மட்டுமே வந்து கொண்டிருந்தது. 

இன்று, பாயும் குதிரைகள் வேகத்தால் சிறப்புற்று, மறைக்காமல் ஒல்லென ஆரவாரம் செய்யும் ஏவல் இளைஞர்களுடன், வலிய வாயால் அலராகிய ஒலியைச் செய்யும் சிறு ஊர் மக்கள் காணும்படி, பகலில் வந்துள்ளது.

அதனால், என் நிறைவு இல்லாத நெஞ்சம் நடுங்கியது.  அது இரங்கத்தக்கது.  நினக்கும் அவ்வாறு நெஞ்சம் நடுங்கியதோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண், ‘ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட’ என வரும் விதி கொள்க.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெண் யாமை முட்டையீன்று மறைத்து வைத்ததனை அம்முட்டை குஞ்சாந்துணையும் பாதுகாத்து உய்த்தாற்போல் நம் பெருமான்பால் யாம் களவு வகையாற் கொண்ட கேண்மையை இருவகைக் குறிகளானும் பாதுகாத்து அது கற்பொழுக்கமாந்துணையும் நன்கு பாதுகாத்து அளி செய்தான் என உள்ளுறை காண்க.  இனி நம் பெருமான் தேர் ஆழியிற்பட்டு அறுபட்டுச் சாம்பி நெய்தல் அரும்புகள் வெளிப்பட்டு அழிந்தாற்போல நம் பெருமான் வரைவொடு வந்தமையால் வல்வாய்ப் பெண்டிர் அலறும் அழிந்து போயிற்று எனவும் உள்ளுறை காண்க.  ஒடுங்கீர் ஓதி (1) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஒடுங்கிய கருமையான கூந்தலையுடையவளே, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தலையுடையவளே.  ஒடுங்கு ஈர் ஓதி (குறுந்தொகை 70) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இருபுறமும் ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தல், உ. வே. சாமிநாதையர் உரை – ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தல், ஐவகைக் கூந்தற் பகுப்பில் ஒன்றாகிய சுருளை, இரா. இராகவையங்கார் உரை – இடத்தும் வலத்தும் ஒடுங்கிய ஈர்ந்த கூந்தல், தமிழண்ணல் உரை – ஒடுக்கி கொண்டையாக முடித்த எண்ணெய் பூசிய நெய்ப்புடைய கூந்தல்.

சொற்பொருள்:  ஒடுங்கு ஈர் ஓதி – ஒடுங்கிய எண்ணெய் பூசிய நெய்ப்புடைய கூந்தலை உடையவளே (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), நினக்கும் அற்றோ நடுங்கின்று – நினக்கும் அவ்வாறு நெஞ்சம் நடுங்கியதோ, அளித்து – அளியது, இரங்கத்தக்கது, என் நிறை இல் நெஞ்சம் – என் நிறைவு இல்லாத நெஞ்சம், அடும்பு கொடி சிதைய வாங்கிக் கொடுங்கழிக் குப்பை வெண்மணல் பக்கம் சேர்த்தி – அடும்புகொடி சிதையும்படி அதனை இழுத்து வளைந்த உப்பங்கழி அருகில் உள்ள வெள்ளை மணல் மேட்டின் பக்கத்தில் சேர்த்து, நிறைச்சூல் யாமை – நிறைந்த சூலை உடைய ஆமை, மறைத்து ஈன்று புதைத்த கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டைப் பார்ப்பு இடன் ஆகும் அளவை பகுவாய்க் கணவன் ஓம்பும் – மறைய ஈன்று புதைத்த – மறைத்து ஈன்று புதைத்த, யானையின் மருப்பினால் (தந்தத்தினால்) செய்த வட்டைப் போன்ற வடிவமுடைய புலால் நாறும் முட்டைகளைக் குஞ்சுகள் அவற்றிலிருந்து வெளியே வரும் அளவிற்கு பிளந்த வாயினையுடை ஆண் ஆமை பாதுகாக்கும் (உருவின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கானல் அம் சேர்ப்பன் – சோலையையுடைய கடற்கரையின் தலைவன், முள் உறின் சிறத்தல் அஞ்சி – தாற்றுக்கோலால் குத்தப்பெற்றால் வேகம் அளவு கடக்கும் என்று அஞ்சி, மெல்ல வாவு உடைமையின் – மெல்லத் தாவிச் செல்லுதல் கொண்டமையால், வள்பின் காட்டி – தேரோட்டி கடிவாளத்தின் வாரால் தன் கருத்தைக் குறிப்பால் வெளிப்படுத்த, ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி – அம்பு போல் வேகத்துடன் செல்லுதலைப் பழகிய அழகிய நடையையுடைய குதிரைகள், செழு நீர்த் தண்கழி நீந்தலின் ஆழி நுதி முகங் குறைந்த பொதி முகிழ் நெய்தல் பாம்பு உயர் தலையின் சாம்புவன நிவப்ப – செழுமையான நீரையுடைய குளிர்ந்த உப்பங்கழியைக் கடக்கும்பொழுது தேர் உருளையின் கூரிய முனையால் அறுக்கப்பட்ட பொதிந்த அரும்புகளையுடைய நெய்தல் பாம்பின் மேலே உயர்த்திய தலையைப் போல் வாடி மேல் எழ (தலையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), இர வந்தன்றால் – இரவில் வந்தது, திண்தேர் – வலிய தேரானது, கரவாது ஒல் என ஒலிக்கும் இளையரொடு – மறைக்காமல் ஒல்லென ஆரவாரம் செய்யும் ஏவல் இளைஞர்களுடன், வல்வாய் அரவச் சீறூர் காணப் பகல் வந்தன்றால் – வலிய வாயால் அலராகிய ஒலியைச் செய்யும் சிறு ஊர் மக்கள் காணும்படி (ஊர் –ஆகுபெயர் ஊர் மக்களுக்கு, வந்தன்றால் – ஆல் அசைநிலை), பகலில் வந்தது, பாய் பரி சிறந்தே – பாயும் குதிரைகள் வேகத்தால் சிறப்புற்று (சிறந்தே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 161, மதுரைப் புல்லங்கண்ணனார், பாலைத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
வினைவயின் பிரிதல் யாவது? வணர் சுரி
வடியாப் பித்தை வன்கண் ஆடவர்
அடியமை பகழி ஆர வாங்கி,
வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலைப்
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ்செவி  5
எருவைச் சேவல் ஈண்டு கிளை பயிரும்
வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து
இறப்ப எண்ணினிர் என்பது சிறப்பக்
கேட்டனள் கொல்லோ தானே? தோட்டு ஆழ்பு
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல், 10
அம் மா மேனி, ஆயிழைக் குறுமகள்,
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த
நல்வரல் இளமுலை நனைய,
பல்லிதழ் உண்கண் பரந்தன பனியே.

பாடல் பின்னணி:  பிரிவு உணர்த்திய தோழி, தலைவியின் வேறுபாட்டினைக் கண்டுத் தலைவனைச் செலவு அழுங்கியது. 

பொருளுரை:  சூடியுள்ள மலர் இதழ்களில் ஆழ்ந்து தேன் உண்ண வண்டுகள் வரும், தழைத்த கரிய அடர்ந்த கூந்தலையும், அழகிய மாமை நிறமுடைய (மாந்தளிர் நிறமுடைய) மேனியையும், ஆராய்ந்த அணிகலன்களையுமுடைய இளைய தலைவியின் திதலை படர்ந்த மார்பில், அணங்கு (வருத்தும் கடவுள்) என உருவம் கொண்ட, நன்கு வளர்ந்த இளமுலைகள் நனைய, பல இதழ்களையுடைய குவளை மலர் போன்ற மையுண்ட கண்களில் நீர் பரந்து வடிந்தது.

வளைந்து சுருண்ட கோதப்படாத மயிரையுடைய கொடிய ஆரலைகள்வர் அடி அமைந்த அம்பை முற்றிலும் இழுத்து விடுத்து வழியில் செல்லும் புதியர்களைக் கொல்லும் அச்சம் தோன்றும் பிரிவுகளையுடைய வழியில், உண்டாகும் ஊன் நாறும் புலாலை விரும்பி உண்ணும் வாழ்க்கையையுடைய சிவந்த செவியையுடைய பருந்தின் சேவல் தன் நெருங்கிய சுற்றத்தை அழைக்கும், அச்சம் தரும் காட்டைக் கடந்து, பொருளை விரும்பி கடந்து செல்ல எண்ணுகின்றீர் என்பதை அவள் ஐயமின்றிக் கேட்டாளோ?  பொருள் ஈட்டும் வினையின்கண் நீ பிரிவது எத்தன்மை உடையது?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 44) என வரும் விதி கொள்க.  பல்லிதழ் (14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அன்மொழித்தொகை, ஒளவை துரைசாமி உரை, ஐங்குறுநூறு 2 – அகரம் கெட்டுக் ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 160) என்றதனால் லகரம் இரட்டித்துப் பல்லிதழ் என முடிந்தது.  அணங்கு (12) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வீற்றுத்தெய்வம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வீற்றுத்தெய்வம், அஃதாவது முலைமேல் தோன்றுமொரு தெய்வம்.  ஆசிரியர் அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் மனையறம்படுத்த காதையில் ‘திருமுலைத்தடத்திடை’ என்பதற்கு வகுத்த விளக்கவுரையானும் ‘ஆமணங்கு குடியிருந்தஞ்சுணங்கு பரந்தனவே’ எனவரும் சீவக சிந்தாமணியானும் உணர்க.

சொற்பொருள்:  வினைவயின் பிரிதல் யாவது – பொருள் ஈட்டும் வினையின்கண் நீ பிரிவது எத்தன்மை உடையது, வணர் சுரி வடியாப் பித்தை வன்கண் ஆடவர் அடி அமை பகழி ஆர வாங்கி வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை – வளைந்து சுருண்ட கோ தப்படாத மயிரையுடைய கொடிய ஆரலைகள்வர் அடி அமைந்த அம்பை முற்றிலும் இழுத்து விடுத்து வழியில் செல்லும் புதியர்களைக் கொல்லும் அச்சம் தோன்றும் பிரிவுகளையுடைய வழியில், படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ்செவி எருவைச் சேவல் ஈண்டு கிளை பயிரும் – உண்டாகும் ஊன் நாறும் புலாலை விரும்பி உண்ணும் வாழ்க்கையையுடைய சிவந்த செவியையுடைய பருந்தின் சேவல் தன் நெருங்கிய சுற்றத்தை அழைக்கும் (நசைஇய – அளபெடை), வெருவரு கானம் நீந்தி – அச்சம் தரும் காட்டைக் கடந்து, பொருள் புரிந்து இறப்ப எண்ணினிர் என்பது சிறப்பக் கேட்டனள் கொல்லோ – பொருளை விரும்பி கடந்து செல்ல எண்ணுகின்றீர் என்பதை அவள் நன்கு கேட்டாளோ (கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ – அசைநிலை),  தானே – தான், ஏ –அசைநிலைகள், தோட்டு ஆழ்பு சுரும்பு உண – சூடியுள்ள மலர் இதழ்களில் ஆழ்ந்து தேன் உண்ண வரும் வண்டுகள் (உண – உண்ண என்பதன் விகாரம்), ஒலிவரும் இரும் பல் கூந்தல் – தழைத்த கரிய அடர்ந்த கூந்தல், அம் மா மேனி – அழகிய மாமை நிறமுடைய (மாந்தளிர் நிறமுடைய) மேனி, ஆயிழைக் குறுமகள் சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த – ஆராய்ந்த அணிகலன்களை அணிந்த இளைய தலைவியின் திதலை படர்ந்த மார்பில் அணங்கு (வருத்தும் கடவுள்) என உருவம் கொண்ட, நல்வரல் இளமுலை நனைய பல்லிதழ் உண்கண் பரந்தன பனியே – நன்கு வளர்ந்த இளமுலைகள் நனைய பல இதழ்களையுடைய குவளை மலர் போன்ற மையுண்ட கண்களில் நீர் பரந்து வடிந்தது (பனியே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 162, பரணர், குறிஞ்சித் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது  
கொளக் குறைபடாஅக் கோடு வளர் குட்டத்து
அளப்பு அரிது ஆகிய குவை இருந்தோன்றல,
கடல் கண்டன்ன மாக விசும்பின்
அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்கக்
கடிது இடி உருமொடு கதழ் உறை சிதறி,  5
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடுநாள்
அருங்கடிக் காவலர் இகழ் பதம் நோக்கிப்,
பனி மயங்கு அசை வளி அலைப்பத் தந்தை
நெடுநகர் ஒரு சிறை நின்றனென் ஆக,
அறல் என அவிர்வரும் கூந்தல் மலர் என  10
வாள் முகத்து அலமரும் ஆய் இதழ் மழைக் கண்,
முகை நிரைத் தன்ன மா வீழ் வெண்பல்,
நகை மாண்டு இலங்கும் நலங்கெழு துவர் வாய்க்,
கோல் அமை விழுத் தொடி விளங்க வீசிக்,
கால் உறு தளிரின் நடுங்கி, ஆனாது,  15
நோய் அசா வீட முயங்கினள், வாய்மொழி
நல்லிசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய
நசை பிழைப்பு அறியாக் கழல் தொடி அதிகன்
கோள் அறவு அறியாப் பயங்கெழு பலவின்
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய,  20
வில் கெழு தானைப் பசும்பூண் பாண்டியன்
களிறு அணி வெல் கொடி கடுப்பக், காண்வர
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி
நேர் கொள் நெடுவரை கவாஅன்
சூரர மகளிரிற் பெறற்கு அரியோளே.  25

பாடல் பின்னணி:  இரவுக்குறிக்கண் தலைவியைக் கண்ணுற்று நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  

பொருளுரை: முகில்கள் முகந்து கொள்ளவும் அளவில் குறையாத, பெருகும் ஆழத்தையுடைய அளப்பதற்கு அரிதாகிய திரண்ட கரிய தோற்றத்தையுடைய கடலைக் கண்டாற்போல், மாகமாகிய வானில் தீயின் கொடி போன்று மின்னல் முகில்களைப் பிளந்து அசைந்து செல்ல, கடுமையாக இடிக்கும் இடியுடன் விரைந்த நீரைச் சிதறி முடிவிடம் அறியாதவாறு முகில்கள் பெய்யும் நடு இரவில், அரிய காவல் தொழிலுடைய காவலரின் தளர்ந்த நிலையை நோக்கி, குளிர் பொருந்திய அசையும் வாடைக்காற்று வருத்த, அவள் தந்தையின் உயர்ந்த இல்லத்தின் ஒரு புறம் யான் நின்றேன் ஆக,

கருமணல் போல் விளங்கும் கூந்தலையும், குவளை மலர்களை ஒத்த ஒளியுடைய முகத்தில் சுழலும் அழகிய இமைகளையுடைய குளிர்ந்த கண்களையும், வண்டுகள் விரும்பும் முல்லை அரும்புகளை வரிசையாக வைத்தாற்போன்ற வெள்ளை பற்களையும், புன்னகையால் மாண்புற்று விளங்கும் நன்மை பொருந்திய பவளம் போன்ற வாயினையும் உடையவளாய்த், தன் திரண்ட சிறந்த வளையல்கள் விளங்கக் கைகளை வீசிக், காற்று அசைத்த தளிர் போல் நடுங்கி, நம் காதல் துன்பம் நீங்குமாறு விடாது அணைத்தாள்,

வாய்மைச் சொற்களையும், நல்ல புகழை உருவாக்கும் இரவலர்களுக்கு அவர்கள் எண்ணிய விருப்பம் பிழையாகாதவாறு வழங்கும் வள்ளன்மை உடையவனுமான, கழலும் வீர வளையல்களை அணிந்த அதிகனின், காய்த்தல் நீங்குதலை அறியாத பயன் பொருந்திய பலா மரங்களுடன் வேங்கை மரங்கள் பொருந்தின மலையிடம் பொலிவுற, வில்லையுடைய சேனைகளையுடைய பசும்பூண் பாண்டியனின் களிற்று யானையின் மீது உயர்த்திய வெற்றிக் கொடிகள் போன்று, காண்பதற்கு இனிய ஒளிவீசி வீழும் உயர்ந்து தோன்றும் அருவிகளையுடைய, நெடிய மலையின் சரிவில் உள்ள சூர் மகளிரைப் போல் பெறுவதற்கு அரிய நம் தலைவி.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) என வரும் நூற்பாவின்கண் ‘அவட் பெற்று மலியினும்’ என வரும் விதி கொள்க.  கோடு வளர் குட்டத்து (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன் அகத்திலே மலைகள் வளர்தற்கு இயன்ற ஆழத்தையுடைய, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – சங்குகள் பெருகும் ஆழத்தினையுடைமையால்.  வரலாறு – பசும்பூண் பாண்டியன்.  அறல் போல் கூந்தல் – அகநானூறு 142 – அறல் அன்ன இரும் பல் கூந்தல், அகநானூறு 162 – அறல் என அவிர்வரும் கூந்தல், அகநானூறு 213 – அறலென நெறிந்த கூந்தல், அகநானூறு 265 – அறலின் நெறித்த கூந்தல், அகநானூறு 299 – அறல் மருள் கூந்தலின், குறுந்தொகை 116 – தேம் பாய் கூந்தல் வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை நுண் மணல் அறல் வார்ந்தன்ன, குறுந்தொகை 286 – அறல் போல் கூந்தல், கலித்தொகை 71 – கதுப்பு அறல், கலித்தொகை 98 – நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக, பொருநராற்றுப்படை 25 – அறல் போல் கூந்தல்.  அரும்பைப் போன்ற பற்கள் – அகநானூறு 21 – மௌவல் வால் முகைத் துணை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல், அகநானூறு 162 – முகை நிரைத் தன்ன மா வீழ் வெண் பல், கலித்தொகை 14 –மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண்பல், கலித்தொகை 22 – நறுமுல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த செறி முறை பாராட்டினாய் மற்று எம் பல்லின், கலித்தொகை 31 – முகை வெண் பல், கலித்தொகை 103 – முல்லை முகையும்.  கலித்தொகை 108 – முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லும் பணைத் தோளும்.  மின்னல் பிளத்தல் – மின்னு வசிபு – அகநானூறு 162, 212, 322, நற்றிணை 228, 261, மலைபடுகடாம் 97, மின்னு வசி – நற்றிணை 334.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 71).  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).

சொற்பொருள்:  கொளக் குறைபடாஅ – முகில்கள் முகந்து கொள்ளவும் அளவில் குறையாத, கோடு வளர் குட்டத்து அளப்பு அரிது ஆகிய குவை இருந்தோன்றல கடல் கண்டன்ன – சங்குகள் பெருகும் ஆழத்தையுடைய அளப்பதற்கு அரிதாகிய திரண்ட கரிய தோற்றத்தையுடைய கடலைக் கண்டாற்போல், மாக விசும்பின் அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க – மாகமாகிய வானில் தீயின் கொடி போன்று மின்னல் முகில்களைப் பிளந்து அசைந்து செல்ல (மாக விசும்பு – இருபெயரொட்டு), கடிது இடி உருமொடு கதழ் உறை சிதறி விளிவு இடன் அறியா வான் உமிழ் நடுநாள் – கடுமையாக இடிக்கும் இடியுடன் விரைந்த நீரைச் சிதறி முடிவிடம் அறியாதவாறு முகில்கள் பெய்யும் நடு இரவில் (கதழ் உறை – வினைத்தொகை, மாகம் – வானம்), அருங்கடிக் காவலர் இகழ் பதம் நோக்கிப் பனி மயங்கு அசை வளி அலைப்பத் தந்தை நெடுநகர் ஒரு சிறை நின்றனென் ஆக – அரிய காவல் தொழிலுடைய காவலரின் தளர்ந்த நிலையை நோக்கி குளிர் பொருந்திய அசையும் வாடைக்காற்று வருத்த அவள் தந்தையின் உயர்ந்த இல்லத்தின் ஒரு புறம் நின்றேன் ஆக, அறல் என அவிர்வரும் கூந்தல் மலர் என வாள் முகத்து அலமரும் ஆய் இதழ் மழைக் கண் – கருமணல் போல் விளங்கும் கூந்தலையும் குவளை மலரென ஒளியுடைய முகத்தில் சுழலும் அழகிய இமைகளையுடைய குளிர்ந்த கண்களையும், முகை நிரைத் தன்ன மா வீழ் வெண்பல் நகை மாண்டு இலங்கும் நலங்கெழு துவர் வாய் – வண்டுகள் விரும்பும் முல்லை அரும்புகளை வரிசையாக வைத்தாற்போன்ற வெள்ளை பற்களையும் புன்னகையால் மாண்புற்று விளங்கும் நன்மை பொருந்திய பவளம் போன்ற வாயினையும் உடையவளாய், கோல் அமை விழுத் தொடி விளங்க வீசிக் கால் உறு தளிரின் நடுங்கி – திரண்ட சிறந்த வளையல்கள் விளங்கக் கைகளை வீசிக் காற்று அசைத்த தளிர் போல் நடுங்கி (தளிரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஆனாது  நோய் அசா வீட முயங்கினள் – நம் காதல் துன்பம் நீங்குமாறு விடாது அணைத்தாள், வாய்மொழி நல்லிசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய நசை பிழைப்பு அறியாக் கழல் தொடி அதிகன் – வாய்மைச் சொற்களையும் நல்ல புகழை உருவாக்கும் இரவலர்களுக்கு அவர்கள் எண்ணிய விருப்பம் பிழையாகாதவாறு வழங்கும் வள்ளன்மை உடையவனுமான கழலும் வீர வளையல்களை அணிந்த அதிகன் (தரூஉம் – அளபெடை, (கழல் தொடி – வினைத்தொகை, கோள் அறவு அறியாப் பயங்கெழு பலவின் வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய – காய்த்தல் இல்லாததை அறியாத பயன் பொருந்திய பலா மரங்களுடன் வேங்கை மரங்கள் பொருந்தின மலையிடம் பொலிவுற, வில் கெழு தானைப் பசும்பூண் பாண்டியன் களிறு அணி வெல் கொடி கடுப்ப – வில்லையுடைய சேனைகளையுடைய பசும்பூண் பாண்டியனின் களிற்று யானையின் மீது உயர்த்திய வெற்றிக் கொடிகள் போன்று (கடுப்ப – உவம உருபு), காண்வர ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி – காண்பதற்கு இனிய ஒளிவீசி வீழும் உயர்ந்து தோன்றும் அருவிகளையுடைய, நேர் கொள் நேரான நெடுவரை கவாஅன் சூரர மகளிரிற் பெறற்கு அரியோளே – நெடிய மலையின் சரிவில் (நெடிய மூங்கில் உடைய பக்கமலையில்) உள்ள சூர் மகளிரைப் போல் பெறுவதற்கு அரிய நம் தலைவி (வரை – மலை, மூங்கில், கவாஅன் – அளபெடை, அரியோளே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 163, கழார்க்கீரன் எயிற்றியார், பாலைத் திணைதலைவி தோழியிடமும் வாடைக்காற்றிடமும் சொன்னது
விண் அதிர்பு தலைஇய விரவு மலர் குழையத்
தண் மழை பொழிந்த தாழ் பெயல் கடை நாள்,
எமியம் ஆகத் துனி உளம் கூரச்
சென்றோர் உள்ளிச் சில் வளை நெகிழப்,
பெரு நசை உள்ளமொடு வருதிசை நோக்கி  5
விளியும் எவ்வமொடு அளியள் என்னாது
களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை
முளரி கரியும் முன்பனிப் பானாள்,
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை!
எனக்கே வந்தனை போறி! புனல் கால்  10
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழக்,
கொடியோர் சென்ற தேஎத்து மடியாது
இனையை ஆகிச் செல்மதி,
வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே.

பாடல் பின்னணி:  தலைவன் பொருள்வயின் பிரிந்தான்.  பிரிவாற்றாது வருந்திய தலைவியிடம் தோழி “நீ ஆற்றியிருக்க வேண்டும்” என்று கூறினாள்.  அது கேட்ட தலைவி, தன் ஆற்றாமை தோன்ற வாடைக் காற்றை விளித்துக் கூறியது.  

பொருளுரை:  பலவகை மலர்களும் குழையும்படி, வானில் முழங்கிக் கூடிய குளிர்ந்த முகில்கள் பொழிந்த பின், அம்மழை தணிந்துவிட்ட கூதிர்காலத்தின் இறுதி நாளில், யாம் தனியாக இருந்து துன்ப நெஞ்சுடன் பிரிந்து சென்ற தலைவரை மிக்க நினைந்து, எஞ்சிய சில வளையல்களும் கழன்று போக, பெரிய விருப்பம் கொண்ட உள்ளத்துடன் அவர் மீண்டு வரும் திசையை நோக்கி இறப்பதற்குரிய துன்பத்துடன் இருப்பவள் இரங்கத்தக்காள் என்று நினைக்காது, களிற்று யானை நீரைப்பருகி தும்பிக்கையால் அதைச் சிதறுவது போலும், இடம் மறைய வீசும் பனித்துளிகளால் தாமரை மலர் கரிந்திடும் முன்பனிக் காலத்து நடுஇரவில், மலைகளை நடுங்கச் செய்வது போன்ற குளிர் பொருந்திய வாடைக்காற்றே!

என்னையே துன்புறுத்த நீ வந்தாய் போலும்.  வாய்க்கால் நீர் கரையில் இட்ட நுண்மணல் மேடு போல், நெஞ்சு நெகிழ்ந்து இளக, கொடிய எம் தலைவர் சென்ற நாட்டிற்கு, அயராது இத் தன்மையுடையாய் ஆகி நீ செல்வாயாக.  நீ சென்றால், பொருள் ஈட்டும் வினையில் பெரும் விருப்புடையவர் என்னை நினைத்து வருதலும் கூடும்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘அவனறிவு ஆற்ற அறியுமாகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 4) என வரும் நூற்பாவின்கண் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிது ஆகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்’ என வரும் விதிகொள்க.  கண் அழி துவலை (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கண் பார்வையை மறைக்கின்ற பனித்துளிகள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இடம் மறைய வீசும் பனித்துளிகள்.  போறி (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இது ஒப்புமை உணர்த்தாமையின் ஒப்பில் போலி, அ. தட்சிணாமூர்த்தி உரை – ஐங்குறுநூறு 58 (இவள் அணங்கு உற்றனை போறி) – முன்னிலை வினைமுற்று.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  கூர – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

சொற்பொருள்:  விண் அதிர்பு தலைஇய – வானில் முழங்கிக் கூடிய (தலைஇய – அளபெடை), விரவு மலர் குழைய – பலவகை மலர்களும் குழையும்படி, தண் மழை பொழிந்த – குளிர்ந்த முகில்கள் பொழிந்த, தாழ் பெயல் கடை நாள் – பின் அம்மழை தணிந்துவிட்ட கூதிர்காலத்தின் இறுதி நாளில், எமியம் ஆகத் துனி உளம் கூரச் சென்றோர் உள்ளி – யாம் தனியாக இருந்து துன்ப நெஞ்சுடன் பிரிந்து சென்ற தலைவரை மிக்க நினைந்து (எமியம் – தன்மைப் பன்மை, உளம் – உள்ளம் என்பதன் இடைக்குறை), சில் வளை நெகிழப் பெரு நசை உள்ளமொடு வருதிசை நோக்கி விளியும் எவ்வமொடு அளியள் என்னாது – எஞ்சிய சில வளையல்களும் கழன்று போக பெரிய விருப்பம் கொண்ட உள்ளத்துடன் அவர் மீண்டு வரும் திசையை நோக்கி இறப்பதற்குரிய துன்பத்துடன் இருப்பவள் இரங்கத்தக்காள் என்று நினைக்காது, களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை முளரி கரியும் முன்பனிப் பானாள் – களிற்று யானை நீரைப்பருகி தும்பிக்கையால் சிதறுவது போலும் இடம் மறைய வீசும் பனித்துளிகளால் தாமரை மலர் கரிந்திடும் முன்பனிக் காலத்து நடுஇரவில், குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை – மலைகளை நடுங்கச் செய்வது போன்ற குளிர் பொருந்திய வாடைக்காற்றே, எனக்கே வந்தனை போறி – என்னையே துன்புறுத்த நீ வந்தாய் போலும், புனல் கால் அயிர் இடு குப்பையின் – வாய்க்கால் நீர் கரையில் இட்ட நுண்மணல் மேடு போல் (குப்பையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நெஞ்சு நெகிழ்ந்து அவிழக் கொடியோர் சென்ற தேஎத்து – நெஞ்சு நெகிழ்ந்து இளக கொடிய எம் தலைவர் சென்ற நாட்டிற்கு, மடியாது இனையை ஆகிச் செல்மதி – அயராது இத் தன்மையுடையாய் ஆகி நீ செல்வாயாக (தேஎத்து – அளபெடை, மதி – முன்னிலையசை), வினை விதுப்பு உறுநர் உள்ளலும் உண்டே – பொருள் ஈட்டும் வினையில் பெரும் விருப்புடையவர் என்னை நினைத்தலும் உண்டு (உண்டே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 164, மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார், முல்லைத் திணை தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
கதிர் கையாக வாங்கி ஞாயிறு
பைது அறத் தெறுதலின், பயன் கரந்து மாறி,
விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம்
காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின்,
பொறி வரி இன வண்டு ஆர்ப்பப் பலவுடன்  5
நறுவீ முல்லையொடு தோன்றி தோன்ற,
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம்,
எவன் கொல் மற்று அவர் நிலை என மயங்கி,
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு ஆங்கு
இன்னாது உறைவி தொன்னலம் பெறூஉம்  10
இது நற் காலம் கண்டிசின், பகைவர்
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின்
கந்து கால் ஒசிக்கும் யானை
வெஞ்சின வேந்தன் வினை விடப்பெறினே.

பாடல் பின்னணி:  பாசறைக்கண் இருந்த தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 

பொருளுரை:  என் நெஞ்சே!  ஞாயிறு தன் கதிர்களையே கைகளாகக் கொண்டு நீரைக் கவர்ந்து பசுமை இல்லாது காய்வதால், பயன்கள் மறைந்து மாறுபட்டு பிளவுற்று இருக்கும் அகன்ற இடத்தையுடைய பெரிய நிலத்தில் காடு அழகை அடைய, மிக்க மழை பொழிந்ததால், புள்ளிகளையும் வரிகளையுமுடைய வண்டுக் கூட்டங்கள் ஆரவாரம் செய்ய, நறுமணம் பொருந்திய முல்லை மலர்களுடன் செங்காந்தள் மலர்களும் வேறு பல மலர்களுடன் பூக்க, நறுமணம் பொருந்தியது மலர் நாறும் காடு.

பகைவர்களின் மதில் கதவுகளைச் சிதைத்த பூண் ஒடிந்த கோட்டினையும் (தந்தத்தினையும்) கட்டப்பட்டிருக்கும் தறிகளை ஒடிக்கும் கால்களையும் உடைய யானைகளையுடைய, கொடிய சினத்தையுடைய நம் வேந்தன் போரினைக் கைவிட்டால், என்ன ஆயிற்றோ நம் தலைவரின் நிலை, எனக் கலங்கி நீரைச் சிந்தும் கண்களுடன், மனையில் துன்பத்துடன் வதிக்கும் நம் தலைவி பண்டைய நலத்தினை அடையும் நல்ல காலம் இது.  இதை நீ காண்பாயாக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘ஏனோர் மருங்கினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 24) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள் பிரிதற் பகுதியாகிய பாசறைப் புலம்பல் எனினும் நிலம் பற்றி முல்லையாயிற்று, என்றுரைத்தனர் இளம்பூரணர்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

சொற்பொருள்:  கதிர் கையாக வாங்கி ஞாயிறு பைது அறத் தெறுதலின் – ஞாயிறு தன் கதிர்களையே கைகளாகக் கொண்டு நீரைக் கவர்ந்து பசுமை இல்லாது காய்வதால், பயன் கரந்து மாறி விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம் காடு கவின் எதிர – பயன்கள் மறைந்து மாறுபட்டு பிளவுற்று இருக்கும் அகன்ற இடத்தையுடைய பெரிய நிலத்தில் காடு அழகை அடைய, கனை பெயல் பொழிதலின் – மிக்க மழை பொழிந்ததால், பொறி வரி இன வண்டு ஆர்ப்ப – புள்ளிகளையும் வரிகளையுமுடைய வண்டுக் கூட்டங்கள் ஆரவாரம் செய்ய, பலவுடன் நறுவீ முல்லையொடு தோன்றி தோன்ற – நறுமணம் பொருந்திய முல்லை மலர்களுடன் செங்காந்தள் மலர்களும் வேறு பல மலர்களுடன் பூக்க, வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம் – நறுமணம் பொருந்தியது மலர் நாறும் காடு, எவன் கொல் மற்று அவர் நிலை – என்ன ஆயிற்றோ நம் தலைவரின் நிலை, என மயங்கி இகு பனி உறைக்கும் கண்ணொடு – எனக் கலங்கி நீரைச் சிந்தும் கண்களுடன், இனைபு ஆங்கு இன்னாது உறைவி தொன்னலம் பெறூஉம் – மனையில் துன்பத்துடன் வதிக்கும் நம் தலைவி பண்டைய நலத்தினை அடையும், இது நற் காலம் – இது நல்ல காலம், கண்டிசின் – காண்பாயாக, பகைவர் மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின் கந்து கால் ஒசிக்கும் யானை – பகைவர்களின் மதில் கதவுகளைச் சிதைத்த பூண் ஒடிந்த கோட்டினையும் (தந்தத்தினையும்) கட்டப்பட்டிருக்கும் தறிகளை ஒடிக்கும் கால்களையும் உடைய யானைகளையுடைய, வெஞ்சின வேந்தன் வினை விடப்பெறினே – கொடிய சினத்தையுடைய வேந்தன் போரினைக் கைவிட்டால் 

அகநானூறு 165, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணைமகட்போக்கிய தாயைக் கண்டார் கூறியது
கயந்தலை மடப்பிடி பயம்பில் பட்டெனக்
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ,
ஒய்யென எழுந்த செவ்வாய்க் குழவி
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண்,
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும்  5
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று, தாயும்
“இன் தோள் தாராய், இறீஇயர் என் உயிர்!” எனக்
கண்ணும் நுதலும் நீவித், தண்ணெனத்
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇத், 10
தாழிக் குவளை வாடு மலர் சூட்டித்
“தருமணல் கிடந்த பாவை என்
அரு மகளே” என முயங்கினள் அழுமே.

பாடல் பின்னணி:  மகட்போக்கிய தாயது நிலைமையைக் கண்டவர்கள் சொல்லியது. 

பொருளுரை:  மெல்லிய தலையையுடைய இளைய பெண் யானை குழியில் அடப்பட்டதால், அதன் களிற்று யானை கூப்பிடும் ஆரவாரத்திற்கு அஞ்சி, விரைந்து எழுந்த சிவந்த வாயையுடைய அதன் கன்று தாதாகிய எருவினையுடைய தெருக்களுடைய பண்டைய ஊரின்கண் எருமையாகிய நல்ல மாட்டிடம் பெறுகின்ற முலைப்பாலை உண்ணும் பல நாடுகளைக் கடந்து சென்ற நன்மையுடையவள் பொருட்டு, அவளுடைய தோழியரும் பொலிவு இழந்து வருந்துகின்றனர். 

அவளுடைய தாயும், “என் உயிர் கெடுவதாக”, என மணல் மீது இட்ட மகளின் விளையாட்டுப் பாவையை எடுத்து, அதன் கண்களையும் நெற்றியையும் தடவி, வளைந்து நிற்கும் நொச்சி மரத்தின் வரி வரியாக உள்ள நிழலில் கிடத்தி, தாழியில் வளரும் குவளையில் வாடிய மலரைச் சூட்டி, ”என் அரிய மகளே.  உன் இனிய தோளைத் தருவாயாக” எனத் தழுவி அழுகின்றாள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘தன்னும் அவளும் (தொல்காப்பியம், அகத்திணையியல் 36) என வரும் நூற்பாவின்கண் ‘தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும் போகிய திறத்து நற்றாய் புலம்பலும் ஆகிய கிளவியும் அவ் வழி உரிய’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘தன்னும் அவனும் அவளும் சுட்டி’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 36) என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுள் ‘தாய் நிலையம் ஆயத்து நிலையம் கண்டோர் கூறியவாறு உணர்க’ என்றும் ‘பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே’ (தொல்காப்பியம், பொருளியல் 5) என்னுஞ் சூத்திரத்து, ‘தருமணற் கிடந்த பாவை என் அருமகளேயென முயங்கினள் அழுமே’ ‘இது நற்றாய் மணற்பாவையைப் பெண்பாலாகக் கூறித் தழீஇக் கொண்டு அழுதலிற் பால்கெழு கிளவியாயிற்று’ என்றும் கூறினர் நச்சினார்க்கினியர்.  தாது எரு மறுகின் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பூந்துகளாகிய எருவினையுடைய தெருவினையுடைய, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தாதாகிய எருவினையுடைய தெருக்களையுடைய.  நன்னராட்டி (6) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கற்புக்கடன் பூண்டு கணவனுடன் சென்றாளாகலின் நன்னராட்டி என்றார்.  கம்பலை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25), கய என் கிளவி மென்மையும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 26). தாது எரு – அகநானூறு 165 – தாது எரு மறுகின் மூதூர், குறுந்தொகை 46 – மன்றத்து எருவின் நுண் தாது, நற்றிணை – 271 பைந்தாது எருவின் வைகு, கலித்தொகை 103 – தாது எரு மன்றத்து, கலித்தொகை 108 – தாது உக்கன்ன தாது எரு மன்றத்து, புறநானூறு 33 – தாது எரு மறுகின், புறநானூறு 215 – தாது எரு மறுகின், புறநானூறு 311 – தாது எரு மறுகின், பதிற்றுப்பத்து 13–17 – தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து மலைபடுகடாம் 531 – தாது எருத் ததைந்த முற்றம்.

சொற்பொருள்:  கயந்தலை மடப்பிடி பயம்பில் பட்டெனக் களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ – மெல்லிய தலையையுடைய இளைய பெண் யானை குழியில் அடப்பட்டதால் அதன் களிற்று யானை கூப்பிடும் ஆரவாரத்திற்கு அஞ்சி (வெரீஇ – அளபெடை, வெருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது), ஒய்யென எழுந்த செவ்வாய்க் குழவி தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண் எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் – விரைந்து எழுந்த சிவந்த வாயையுடைய அதன் கன்று தாதாகிய எருவினையுடைய தெருக்களுடைய பண்டைய ஊரின்கண் எருமையாகிய நல்ல மாட்டிடம் பெறுகின்ற முலைப்பாலை உண்ணும் (செவ்வாய் – பண்புத்தொகை, தாது – பூந்தாது, சாணம்), நாடு பல இறந்த நன்னராட்டிக்கு – பல நாடுகளைக் கடந்து சென்ற நன்மையுடையவள் பொருட்டு, ஆயமும் அணி இழந்து அழுங்கின்று – அவளுடைய தோழியரும் பொலிவு இழந்து வருந்துகின்றனர், தாயும் – அவளுடைய தாயும், இன் தோள் தாராய் – உன் இனிய தோளைத் தருவாயாக, இறீஇயர் என் உயிர் – என் உயிர் கெடுவதாக (இறீஇயர் – அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி, இகழ்ச்சிப் பொருளில் வந்தது), எனக் கண்ணும் நுதலும் நீவி – என்று கண்களையும் நெற்றியையும் தடவி, தண்ணெனத் தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ – வளைந்த நிற்கும் நொச்சி மரத்தின் வரி வரியாக உள்ள நிழலில் கிடத்தி (அசைஇ – அளபெடை, நொச்சி மரம் – Vitex leucoxylon, Chaste tree), தாழிக் குவளை வாடு மலர் சூட்டி – தாழியில் வளரும் குவளையில் வாடிய மலரைச் சூட்டி, தருமணல் கிடந்த பாவை – மணல் மீது இட்ட மகளின் விளையாட்டுப் பாவை, என் அரு மகளே என முயங்கினள் அழுமே – என் அரிய மகளே எனத் தழுவி அழுபவள் (அழுமே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 166, இடையன் நெடுங்கீரனார், மருதத் திணை பரத்தை தன் தோழியிடம் சொன்னது
நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின்,
மயங்கு மழைத் துவலையின் மறுகுடன் பனிக்கும்
பழம் பல் நெல்லின் வேளூர் வாயில்,
நறுவிரை தெளித்த நாறு இணர் மாலைப்  5
பொறி வரி இன வண்டு ஊதல கழியும்
உயர் பலி பெறூஉம் உருகெழு தெய்வம்,
புனை இருங்கதுப்பின் நீ கடுத்தோள் வயின்
அனையேன் ஆயின் அணங்குக என், என
மனையோள் தேற்றும் மகிழ்நன் ஆயின்  10
யார் கொல்? வாழி தோழி! நெருநல்
தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ
வதுவை ஈர் அணிப் பொலிந்து, நம்மொடு
புதுவது வந்த காவிரிக்
கோடு தோய் மலிர் நிறை ஆடியோரே.  15

பாடல் பின்னணி:  பரத்தையொடு புனலாடிய தலைவன் தலைவியிடம் ‘யான் ஆடிற்றிலன்’ என சூளுற்றான் எனக் கேட்ட பரத்தை, தன் தோழியர் கேட்பத் தலைவனை இகழ்ந்துக் கூறியது. 

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  நல்ல மரங்கள் சூழ்ந்த இடத்தில் பல நாட்கள் வடிக்கப்பட்ட கள் நிறைந்த சாடியை முகக்கும் கலம் உடைந்தால், விரவிய மழைத்துளிகள் போல் தெருவெங்கும் கள்ளின் துளிகள் துளிக்கும், பழைய பலவகை நெல்லை உடைய வேளூரின் வாயிலில் உள்ள, நறுமண நீர் தெளித்த மணம் நாறும் கொத்துக்களையுடைய பூமாலையின்கண் புள்ளிகளையும் வரிகளையும் உடைய வண்டின் தொகுதி தேன் பருகாதுக் கழிவதற்குக் காரணமான, உயர்ந்த பலியைப் பெறும் அச்சம் தரும் அக் கடவுளானது, புனைந்த கரிய கூந்தலை உடையவளான நின்னால் ஐயுறப்பட்டவளுடன் நீ கருத்தினாற்போல் நான் புனலாடி வந்தேன் ஆனால் என்னை வருத்துவதாக, எனத் தன் மனைவியை அவன் சூளுரைத்து தெளிவிப்பான் ஆனால், நேற்று, காவிரியின் புதிதாக அமைந்த கரை உச்சியை இடித்து வரும் மிக்க வெள்ளத்தில், மாலை அணிந்த களிற்று யானையைப் போல் புணையின் தலைப்பகுதியைத் தழுவி புணர்ச்சிக்குரிய பெரிய அணியால் பொலிந்து, நம்முடன் புனலாடியவர் யார்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘புல்லுதல் மயக்கும்’ (தொல்காப்பியம், கற்பியல் 10) என வரும் நூற்பாவின்கண் ‘இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்ணும்’ என வரும் விதிக்கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘புல்லுதல் மயக்கும்’ (தொல்காப்பியம், கற்பியல் 10) என்னுஞ் சூத்திரத்து, ‘இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்ணும்’ என்னும் பகுதிக்கு இச் செய்யுளை எடுத்துக்காட்டி, இது ‘இளையோர் கூற்று’ என்றும், ‘கிழவோன் விளையாட்டு ஆங்கும் அற்றே’ (தொல்காப்பியம், கற்பியல் 23) என்னுஞ் சூத்திரத்து ‘கோடு தோய் மலிர்நிறை ஆடியோரே’ எனப் பரத்தை பிறர் அலர் கூறியவழிக் காமஞ் சிறந்து புலந்தவாறு காண்க என்றும் கூறினர் நச்சினார்க்கினியர்.  பாட வேறுபாடு (2வது அடியில்) – பழைய உரை – கோயுடைப்பின், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை, புலியூர்க்கேசிகன் உரை – கோஒய் உடைப்பின், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கோதுடை வைப்பின்.   ஈர் அணி (13) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நனைந்த ஆடை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பெரிய அணி.  மயங்கு மழை (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருந்திய மழைத் துளி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – விரவிய மழைத் துளி.  வரலாறு – வேளூர். 

சொற்பொருள்:  நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின் – நல்ல மரங்கள் சூழ்ந்த இடத்தில் பல நாட்கள் வடிக்கப்பட்ட கள் நிறைந்த சாடியை முகக்கும் கலம் உடைந்தால் (குழீஇய – அளபெடை, கோஒய் – அளபெடை), மயங்கு மழைத் துவலையின் மறுகுடன் பனிக்கும் – விரவிய மழைத்துளிகள் போல் தெருவெங்கும் கள்ளின் துளிகள் துளிக்கும், பழம் பல் நெல்லின் வேளூர் வாயில் – பழைய பலவகை நெல்லை உடைய வேளூரின் வாயிலில், நறுவிரை தெளித்த நாறு இணர் மாலைப் பொறி வரி இன வண்டு ஊதல கழியும் – நறுமண நீர் தெளித்த மணம் நாறும் கொத்துக்களையுடைய பூமாலையின்கண் புள்ளிகளையும் வரிகளையும் உடைய வண்டின் தொகுதி தேன் பருகாதுக் கழியும், உயர் பலி பெறூஉம் உருகெழு தெய்வம் – உயர்ந்த பலியைப் பெறும் அச்சம் தரும் கடவுள் (பெறூஉம் – அளபெடை), புனை இருங்கதுப்பின் நீ கடுத்தோள் வயின் – புனைந்த கரிய கூந்தலை உடையவளான நின்னால் ஐயுறப்பட்டவளுடன், அனையேன் ஆயின் அணங்குக என் என – நீ கருத்தினாற்போல் நான் புனலாடி வந்தேன் ஆனால் என்னை வருத்துவதாக, மனையோள் தேற்றும் மகிழ்நன் ஆயின் – தன் மனைவியை அவன் சூளுரைத்து தெளிவிப்பான் ஆனால், யார் – யார், கொல் – அசைநிலை, வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, நெருநல் – நேற்று, தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ வதுவை ஈர் அணிப் பொலிந்து – மாலை அணிந்த களிற்று யானையைப் போல் புணையின் தலைப்பகுதியைத் தழுவி புணர்ச்சிக்குரிய பெரிய அணியால் பொலிந்து (களிற்றின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, தழீஇ – அளபெடை), நம்மொடு – நம்முடன், புதுவது வந்த காவிரிக் கோடு தோய் மலிர் நிறை ஆடியோரே – காவிரியின் புதிதாக அமைந்த கரை உச்சியை இடித்து வரும் மிக்க வெள்ளத்தில் நம்முடன் புனலாடியவர் (ஆடியோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 167, கடியலூர் உருத்திரங்கண்ணனார், பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வயங்கு மணி பொருத வகையமை வனப்பின்
பசுங்காழ் அல்குல் மாஅயோளொடு
வினை வனப்பு எய்திய புனை பூஞ்சேக்கை,
விண்பொரு நெடுநகர்த் தங்கி, இன்றே
இனிதுடன் கழிந்தன்று மன்னே, நாளைப்  5
பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச்
சேக்குவம் கொல்லோ நெஞ்சே! சாத்து எறிந்து
அதர் கூட்டு உண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடு வில் ஆடவர் படுபகை வெரீஇ
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முதுபாழ்  10
முருங்கை மேய்ந்த பெருங்கை யானை
வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென,
மணிப்புறாத் துறந்த மரம் சோர் மாடத்து
எழுது அணி கடவுள் போகலின் புல்லென்று  15
ஒழுகு பலி மறந்த மெழுகாப் புன் திணைப்
பால் நாய் துன்னிய பறைக்கண் சிற்றில்,
குயில் காழ் சிதைய மண்டி, அயில்வாய்க்
கூர் முகச் சிதலை வேய்ந்த
போர் மடி நல் இறைப் பொதியிலானே.  20

பாடல் பின்னணி:  பொருளீட்டத் தூண்டிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.  

பொருளுரை:  என் நெஞ்சே!  ஒளிரும் மணிகள் ஒன்றோடொன்று இடிக்கும், கூறுபாடு அமைந்த, அழகுடைய பசிய சரத்தை இடுப்பில் அணிந்த மாமை நிறத்தையுடைய தலைவியுடன், அழகிய வேலைப்பாடு அமைந்த புனையப்பட்ட பூக்கள் சேர்க்கப்பட்ட படுக்கையில் வானைத் தொடும் நெடிய மனையில் தங்கியதால் இன்று முழுவதும் இனிமையாகக் கழிந்தது. 

வழியில் செல்லும் வணிகர்களைக் கொன்று அவர்களின் பொருள்களைக் கொள்ளை கொண்டு உண்ணும், துன்புறுத்தும் அம்பினையும் வளைந்த வில்லையும் உடைய மறவர்களின் மிக்க பகைமையை அஞ்சி, ஊரில் உள்ள மக்கள் பெயர்ந்ததால், வளமை அழிந்த பீர்க்கைப் படர்ந்த பெரிய பாழிடத்தில், முருங்கை மரத்தை ஒடித்து உண்ட பெரிய தும்பிக்கையையுடைய யானையின் முதுகின் உயர்ந்த பிடரி உரசுவதால் தளர்ந்து செங்கல்லால் கட்டிய நெடிய சுவரில் உள்ள விட்ட மரம் வீழ்ந்ததால், அச்சம் அடைந்து மணிப்புறாக்கள் நீங்கிய கைமரங்கள் தளர்ந்த மாடத்தில், வரைந்த அழகிய கடவுள் போய் விட்டதால் பொலிவற்று தொடர்ந்து நிகழும் பலி இல்லாத மெழுகப்படாத புல்லிய திண்ணையில் அண்மையில் ஈன்ற நாய் இருந்த தேய்ந்து போன சிற்றிலையும், இயற்றப்பட்ட கைமரங்கள் சிதையுமாறு பரவி, வேலின் முனை போல் கூரிய முகத்தையுடைய கறையான் மூடிக்கொள்ள, கூரை மடிந்த நல்ல இறப்பினையுமுடைய அம்பலத்தின்கண், உறங்காத கண்களை உடையேமாய், நாளைப் பொழுதில், தனிமை நம்மைத் துன்புறுத்த நாம் தங்கி இருப்போமோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘தான் அவட் பிழைத்த நிலையின்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘கரணத்தின் அமைந்த’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என்னுஞ் சூத்திரத்து, ‘தான் அவட் பிழைத்த நிலையின் கண்ணும்’ என்னும் பகுதியில் இச் செய்யுள் நெஞ்சினாற் பிரியக்கருதி வருந்திக் கூறியது, என்றார் நச்சினார்க்கினியர்.  முருங்கை மேய்ந்த பெருங்கை யானை (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முருங்கை மரத்தை முறித்துத் தின்ற பெரிய கையையுடைய யானை.  ஒப்புமை – அகநானூறு 373 – பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சக் செது காழ் சாய்ந்த முது கால் பொதியில்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  வயங்கு மணி பொருத வகை அமை வனப்பின் பசுங்காழ் அல்குல் மாஅயோளொடு – ஒளிரும் மணிகள் ஒன்றோடொன்று இடிக்கும் கூறுபாடு அமைந்த அழகுடைய பசிய சரத்தை இடுப்பில் அணிந்த மாமை நிறத்தையுடைய தலைவியுடன் (மாஅயோளொடு – அளபெடை), வினை வனப்பு எய்திய புனை பூஞ்சேக்கை விண்பொரு நெடுநகர்த் தங்கி இன்றே இனிதுடன் கழிந்தன்று – அழகிய வேலைப்பாடு அமைந்த புனையப்பட்ட பூக்கள் சேர்க்கப்பட்ட படுக்கையில் வானைத் தொடும் நெடிய மனையில் தங்கியதால் இன்று முழுவதும் இனிமையாகக் கழிந்தது, மன்னே – மன் கழிவுப்பொருளில் வந்த இடைச்சொல், ஏ அசைநிலை, நாளைப் பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச் சேக்குவம் கொல்லோ – நாளை உறங்காத கண்களை உடையேமாய் தனிமை நம்மைத் துன்புறுத்தத் தங்கி இருப்போமோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ அசைநிலை), நெஞ்சே – என் நெஞ்சே, சாத்து எறிந்து அதர் கூட்டு உண்ணும் அணங்குடைப் பகழிக் கொடு வில் ஆடவர் படுபகை வெரீஇ – வழியில் செல்லும் வணிகர்களைக் கொன்று அவர்களின் பொருள்களைக் கொள்ளை கொண்டு உண்ணும் துன்புறுத்தும் அம்பினையும் வளைந்த வில்லையும் உடைய மறவர்களின் மிக்க பகைமையை அஞ்சி, ஊர் எழுந்து – ஊரில் உள்ள மக்கள் குடிபெயர்ந்து (ஊர் – ஆகுபெயர் ஊர் மக்களுக்கு), உலறிய பீர் எழு முதுபாழ் முருங்கை மேய்ந்த பெருங்கை யானை வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென – வளமை அழிந்த பீர்க்கைப் படர்ந்த பெரிய பாழிடத்தில் முருங்கை மரத்தை ஒடித்து உண்ட பெரிய தும்பிக்கையையுடைய யானையின் முதுகின் உயர்ந்த பிடரி உரசுவதால் தளர்ந்து செங்கல்லால் கட்டிய நெடிய சுவரில் உள்ள விட்ட மரம் வீழ்ந்ததால், மணிப்புறாத் துறந்த மரம் சோர் மாடத்து – மணிப்புறாக்கள் நீங்கிய கைமரங்கள் தளர்ந்த மாடத்தில், எழுது அணி கடவுள் போகலின் புல்லென்று ஒழுகு பலி மறந்த மெழுகாப் புன் திணைப் பால் நாய் துன்னிய பறைக்கண் சிற்றில் – வரைந்த அழகிய கடவுள் போய் விட்டதால் பொலிவற்று தொடர்ந்து நிகழும் பலி இல்லாத மெழுகப்படாத புல்லிய திண்ணையில் அண்மையில் ஈன்ற நாய் இருந்த தேய்ந்து போன சிற்றிலையும் (திணை – திண்ணை என்பதன் இடைக்குறை), குயில் காழ் சிதைய மண்டி – இயற்றப்பட்ட கைமரங்கள் சிதையுமாறு பரவி, அயில்வாய்க் கூர் முகச் சிதலை வேய்ந்த போர் மடி நல் இறைப் பொதியிலானே – வேலின் முனை போல் கூரிய முகத்தையுடைய கறையான் மூடிக்கொள்ள கூரை மடிந்த நல்ல இறப்பினையுமுடைய அம்பலத்தின்கண் (பொதியிலானே – ஏகாரம் –அசைநிலை)

அகநானூறு 168, கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
யாமம் நும்மொடு கழிப்பி நோய் மிக
பனி வார் கண்ணேம் வைகுதும், இனியே,
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப!
பல்லான்குன்றில் படுநிழல் சேர்ந்த
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்,  5
கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து
அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்,
ஈன்று அணி இரும் பிடி தழீஇக் களிறு தன்
தூங்கு நடைக் குழவி துயில் புறங்காப்ப,  10
ஒடுங்கு அளை புலம்பப் போகிக் கடுங்கண்
வாள்வரி வயப் புலி கல் முழை உரற,
கானவர் மடிந்த கங்குல்
மான் அதர்ச் சிறு நெறி வருதல் நீயே.

பாடல் பின்னணி:  இரவுக்குறி வந்த தலைவனை இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது. 

பொருளுரை:  வானைத் தொடும் மலையையுடைய தலைவனே!  இரவு நேரத்தை நும்முடன் கழித்து, நோய் மிகுந்து நீர் ஒழுகும் கண்களை உடையேம் ஆக உள்ளோம் யாம்.  பல்லான்குன்று என்ற மலையின் பொருந்தும் நிழலில் சேர்ந்த நல்ல ஆனிரைகளை உடைய குழுமூரிடத்தில், வள்ளன்மையை ஏற்றுக்கொண்ட நடுவு நிலைமை பிறழாத நெஞ்சையுடைய உதியஞ்சேரலின் அடுக்களையைப் போல், ஒலி எழுந்து அருவிகள் ஆரவாரித்து வீழும் பெரிய மலையின் பக்கமலையில், அண்மையில் ஈன்ற பெரிய பிடியைத் தழுவிக்கொண்டு களிற்று யானை தன் அசைந்த நடையையுடைய குழவி உறங்கும் இடத்தைக் காத்திருக்க, கொடிய வாள்போன்ற வரிகளையுடைய வலிய புலி மலையின் ஒடுங்கிய பிளப்புகளில் (குகையில்) முழங்க, கானவர்களும் உறங்கும் இரவில், விலங்குகள் செல்லும் சிறிய வழியில் வருதலை இனி நீ ஒழிதல் வேண்டும்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘களனும் பொழுதும் வரை நிலை விலக்கி காதல் மிகுதி உளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  ஒப்புமை –அகநானூறு 168 – மான் அதர்ச் சிறு நெறி, அகநானூறு 203 – மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி, அகநானூறு 318 – கான மான் அதர் யானையும் வழங்கும், அகநானூறு 388 – காட்டு மான் அடிவழி ஒற்றி.  வரலாறு –பல்லான்குன்றம், குழுமூர், உதியன்.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 71).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  உதியன் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உதியன் என்னும் இவ்வள்ளல் பெருமான், பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் வேந்தன் போலும்.  அகநானூறு 233ம் செய்யுளினும் இவன் பெயர் கூறப்படுவது உணர்க.  அகநானூறு 233 – துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை.

சொற்பொருள்:  யாமம் நும்மொடு கழிப்பி நோய் மிக பனி வார் கண்ணேம் வைகுதும் – இரவு நேரத்தை நும்முடன் கழித்து, நோய் மிகுந்து நீர் ஒழுகும் கண்களை உடையேம் ஆக உள்ளோம் யாம், இனியே – இனியே, ஆன்றல் வேண்டும் – ஒழிதல் வேண்டும், வான் தோய் வெற்ப – வானைத் தொடும் மலையையுடைய தலைவனே, பல்லான்குன்றில் படுநிழல் சேர்ந்த – பல்லான்குன்று என்ற மலையின் பொருந்தும் நிழலில் சேர்ந்த, நல்ல ஆனிரைகளை உடைய குழுமூரிடத்தில், கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில் போல – வள்ளன்மையை ஏற்றுக்கொண்ட நடுவு நிலைமை பிறழாத நெஞ்சையுடைய உதியஞ்சேரலின் அடுக்களையைப் போல், ஒலி எழுந்து அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின் – ஒலி எழுந்து அருவிகள் ஆரவாரித்து வீழும் பெரிய மலையின் பக்கமலையில், ஈன்று அணி இரும் பிடி தழீஇக் களிறு தன் தூங்கு நடைக் குழவி துயில் புறங்காப்ப – அண்மையில் ஈன்ற பெரிய பிடியைத் தழுவிக்கொண்டு களிற்று யானை தன் அசைந்த நடையையுடைய குழவி உறங்கும் இடத்தைக் காத்திருக்க (தழீஇ – அளபெடை), ஒடுங்கு அளை புலம்பப் போகிக் கடுங்கண் வாள்வரி வயப் புலி கல் முழை உரற – கொடிய வாள்போன்ற வரிகளையுடைய வலிய புலி மலையின் ஒடுங்கிய பிளப்புகளில் (குகையில்) முழங்க, கானவர் மடிந்த கங்குல் – கானவர்களும் உறங்கும் இரவில், மான் அதர்ச் சிறு நெறி – விலங்குகள் செல்லும் சிறிய வழியில், வருதல் நீயே – நீ வருதலை (நீயே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 169, தொண்டி ஆமூர்ச் சாத்தனார், பாலைத் திணை தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட,
அலங்கு கதிர் வேய்ந்த அழல் திகழ் நனந்தலைப்
புலி தொலைத்து உண்ட பெருங்களிற்று ஒழி ஊன்
கலி கெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை,
ஞெலி கோல் சிறு தீ மாட்டி, ஒலி திரைக்  5
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர்
சுனை கொள் தீ நீர்ச் சோற்று உலைக் கூட்டும்
சுரம் பல கடந்த நம் வயின் படர்ந்து, நனி
பசலை பாய்ந்த மேனியள் நெடிது நினைந்து,
செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை  10
மெல் விரல் சேர்த்திய நுதலள், மல்கிக்
கயல் உமிழ் நீரின் கண் பனி வாரப்
பெருந்தோள் நெகிழ்ந்த செல்லலொடு
வருந்துமால் அளியள், திருந்திழை தானே.

பாடல் பின்னணி:  தலைவன் இடைச்சுரத்தில் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 

பொருளுரை:  மரங்களின் உச்சிகள் கரியவும், நிலத்தின் வளமை அழியவும் அசையும் ஞாயிற்றின் கதிர்கள் சூழ்ந்த வெப்பம் விளங்கும் அகன்ற இடத்தில், புலி கொன்று உண்ட பெரிய களிற்று யானையின் எஞ்சிய ஊனை ஆரவாரம் மிக்க பாலை நில மறவர்கள் தம் கோலில் கோத்துக்கொண்டது போக எஞ்சியதை, தீக்கடையும் கோலால் கடைந்து உருவாக்கிய சிறு தீயில் வதக்கி, ஒலிக்கும் அலைகளையுடைய கடலில் விளையும் உப்பினைக் கொண்டு வரும் மிகுந்த கூட்டமாக உள்ள உப்பு வணிகர்கள் சுனையில் கொண்ட இனிய நீரால் சமைத்த சோற்றுடன் கூட்டும் இடமான, பல சுரங்களைக் கடந்து வந்த நம்மிடம் தன் உள்ளம் படர்வதால்,  

மறையும் கதிர்கள் மங்கிய தனிமையுற்ற மாலை வேளையில், மிக்க பசலை படர்ந்த மேனியை உடையவளாய், நீண்ட நேரம் நினைந்துத் தன் மெல்லிய விரல்களை நெற்றியில் சேர்த்தவளாய், கயல் மீன்கள் உமிழ்கின்ற நீர்போல் தன் கண்களில் நீர் நிறைந்து வடிய, பெரிய தோள்கள் மெலியும்படி துன்பத்துடன் வருந்தும், திருந்திய அணிகலன்களை அணிந்த நம் தலைவி, இரங்கத்தக்கவள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்’ என வரும் விதி கொள்க.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12,  குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.

சொற்பொருள்:  மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட அலங்கு கதிர் வேய்ந்த அழல் திகழ் நனந்தலை – மரங்களின் உச்சிகள் கரியவும் நிலத்தின் வளமை அழியவும் அசையும் ஞாயிற்றின் கதிர்கள் சூழ்ந்த வெப்பம் விளங்கும் அகன்ற இடத்தில், புலி தொலைத்து உண்ட பெருங்களிற்று ஒழி ஊன் கலி கெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை – புலி கொன்று உண்ட பெரிய களிற்று யானையின் எஞ்சிய ஊனை ஆரவாரம் மிக்க பாலை நில மறவர்கள் தம் கோலில் கோத்துக்கொண்டது போக எஞ்சியதை (காழ் – கோல்), ஞெலி கோல் சிறு தீ மாட்டி – தீக்கடையும் கோலால் கடைந்து உருவாக்கிய சிறு தீயில் வதக்கி, ஒலி திரைக் கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர் சுனை கொள் தீ நீர்ச் சோற்று உலைக் கூட்டும் – ஒலிக்கும் அலைகளையுடைய கடலில் விளையும் உப்பினைக் கொண்டு வரும் மிகுந்த கூட்டமாக உள்ள உப்பு வணிகர்கள் சுனையில் கொண்ட இனிய நீரால் சமைத்த சோற்றுடன் கூட்டும் இடமான (கடல் விளை அமிழ்து – உப்பு), சுரம் பல கடந்த நம் வயின் படர்ந்து – பல சுரங்களைக் கடந்து வந்த நம்மிடம் தன் உள்ளம் படர்வதால், நனி பசலை பாய்ந்த மேனியள் – மிக்க பசலை படர்ந்த மேனியையுடையவள், நெடிது நினைந்து – நீண்ட நேரம் நினைந்து, செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை – மறையும் கதிர்கள் மங்கிய தனிமையுற்ற (துன்புற்ற) மாலை வேளையில், மெல் விரல் சேர்த்திய நுதலள் – மெல்லிய விரல்களை நெற்றியில் சேர்த்தவள், மல்கிக் கயல் உமிழ் நீரின் கண் பனி வார – கயல் மீன்கள் உமிழ்கின்ற நீர்போல் கண்களில் நீர் நிறைந்து வடிய (நீரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பெருந்தோள் நெகிழ்ந்த செல்லலொடு வருந்துமால் – பெரிய தோள்கள் மெலியும்படி துன்பத்துடன் வருந்துபவள், அளியள் – இரங்கத்தக்கவள், திருந்திழை தானே – திருந்திய அணிகலன்களை அணிந்த நம் தலைவி (திருந்திழை – அன்மொழித்தொகை, தானே – தான், ஏ அசைநிலைகள்)

அகநானூறு 170, மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார், நெய்தல் திணை தலைவி நண்டிடம் சொன்னது
கானலும் கழறாது கழியும் கூறாது,
தேன் இமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே,
இருங்கழி மலர்ந்த கண் போல் நெய்தல்
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇத்,  5
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து
பறைஇய தளரும் துறைவனை, நீயே,
சொல்லல் வேண்டுமால் அலவ பல் கால்
கைதையம் படுசினை எவ்வமொடு அசாஅம்
கடல் சிறு காக்கை காமர் பெடையொடு  10
கோட்டு மீன் வழங்கும் வேட்ட மடி பரப்பின்
வெள்ளிறாக் கனவும் நள்ளென் யாமத்து,
நின்னுறு விழுமம் களைந்தோள்
தன்னுறு விழுமம் நீந்துமோ எனவே.

பாடல் பின்னணி:  களவு காலத்தில் தலைவன் நீண்ட நாட்கள் வராமையால் தலைவி வேட்கை மிகுதியால் வருந்தி, நண்டிடம் கூறியது. 

பொருளுரை:  நண்டே!  கடற்கரைச் சோலையும் எம்பொருட்டு அவரிடம் எதுவும் சொல்லாது.   உப்பங்கழியும் ஒன்றும் கூறாது.  வண்டுகள் ஒலிக்கும் நறுமலர்களையுடைய புன்னை மரங்களும் எதுவும் மொழியாது.  அவரிடம் தூதாகச் செல்வதற்கு, நின்னை அன்றி வேறு துணை யாதும் எமக்கு இல்லை.

பெரிய உப்பங்கழியில் மலர்ந்த, கண்கள் போல் தோன்றும் நெய்தல் பூக்களின் இதழ்களின் மணத்தை அமிழ்தம் என்று விரும்பிச் சென்று அவற்றின் குளிர்ந்த தாதினை உண்ட வண்டின் கூட்டம் களிப்பு மிகுந்து பறக்க இயலாது தளரும் துறைவனிடம், நீயே தூதாகச் சென்று கூற வேண்டும்.

தாழை மரத்தின் தாழ்ந்த கிளையில், சிறிய கடற் காக்கை விருப்பமுடைய துணையுடன் வருத்தத்துடன் தளர்ந்திருக்கும், கோட்டினையுடைய சுறா மீன்கள் வழங்கும், பரதவர்கள் மீன் வேட்டைத் தொழில் நீங்கிய இடத்தில், வெள்ளை இறால் மீனை உண்ணுவதாகக் கனவு காணும், இருள் செறிந்த நள்ளிரவில், நின்னுடைய துயரினை பல முறை நீக்கியவள், தான் அடைந்த மிக்க துன்பத்தை கடக்க வல்லவளோ என்று.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்’ (தொல்காப்பியம், களவியல் 21) என வரும் விதி அமைத்துக் கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘இன்பத்தை வெறுத்தல்’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 22) என்னுஞ் சூத்திரத்து, ‘நின்னுறு விழுமம் களைந்தோள் தன்னுறு விழுமம் நீந்துமோ எனவே’ என்பது துன்பத்துப் புலம்பல் என்னும் மெய்ப்பாடு ஆகுமென்றும், ‘முட்டு வயிற் கழறல்’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 23) என்னுஞ் சூத்திரத்து, ‘கானலும் கழறாது …………. நீயே சொல்லல் வேண்டுமால் அலவ’ என்பது தூது முனிவின்மை என்னும் மெய்ப்பாடு ஆகுமென்றும், கூறினர் பேராசிரியர்.  பல்கால் – இதை ‘பல்கால் நள்ளென் யாமத்து’ அல்லது ‘பல்கால் உடைய கைதை’ அல்லது ‘பல்கால் தலைவனிடம் நீயே சொல்லல் வேண்டும்’ எனக் கொள்ளலாம்.    உள்ளுறை:  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – காக்கை பேடையொடு யாமத்து இராக் கனவும் என்றது, தலைவி தலைவனுடன் கூடியிருந்து முன்பு பெற்ற இன்பத்தை நினைந்து வருந்துகின்றாள் என்பது.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).

சொற்பொருள்:  கானலும் கழறாது – கடற்கரைச் சோலையும் எம்பொருட்டு அவரிடம் எதுவும் சொல்லாது, கழியும் கூறாது – உப்பங்கழியும் ஒன்றும் கூறாது, தேன் இமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது – வண்டுகள் ஒலிக்கும் நறுமலர்களையுடைய புன்னை மரங்களும் எதுவும் மொழியாது (புன்னை மரம் – Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree), ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே – நின்னை அன்றி வேறு துணை யாதும் எமக்கு இல்லை, இருங்கழி மலர்ந்த கண் போல் நெய்தல் கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇத் தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து பறைஇய தளரும் துறைவனை – பெரிய உப்பங்கழியில் மலர்ந்த கண்கள் போல் தோன்றும் நெய்தல் பூக்களின் இதழ்களின் மணத்தை அமிழ்தம் என்று விரும்பிச் சென்று அவற்றின் குளிர்ந்த தாதினை உண்ட வண்டின் கூட்டம் களிப்பு மிகுந்து பறக்க இயலாது தளரும் துறைவனிடம் (பறைஇய – அளபெடை), நீயே சொல்லல் வேண்டுமால் – நீயே அவர்பால் சென்று கூற வேண்டும் (வேண்டுமால் – ஆல் அசைநிலை), அலவ – நண்டே (அண்மை விளி), பல் கால் – பல முறை, பல அடிகள் (தரையின் மேல் உள்ள தாழை மரத்தின் அடி போல் தோன்றும் மிகத் திரண்ட வேர்கள் எனக் கொண்டால்), கைதையம் படுசினை – தாழை மரத்தின் தாழ்ந்த கிளையில், எவ்வமொடு அசாஅம் கடல் சிறு காக்கை காமர் பெடையொடு – சிறிய கடற் காக்கை விருப்பமுடைய துணையுடன் வருத்தத்துடன் தளர்ந்திருக்கும், கோட்டு மீன் வழங்கும் – கோட்டினையுடைய சுறா மீன்கள் வழங்கும், வேட்ட மடி பரப்பின் வெள்ளிறாக் கனவும் – மீன் வேட்டைத் தொழில் நீங்கிய இடத்தில் வெள்ளை இறால் மீனை உண்ணுவதாகக் கனவு காணும் (வெள்ளிறா – பண்புத்தொகை), நள்ளென் யாமத்து – இருள் செறிந்த நள்ளிரவில், நின்னுறு விழுமம் களைந்தோள் – நின்னுடைய துயரினை நீக்கியவள், தன்னுறு விழுமம் நீந்துமோ எனவே – தான் அடைந்த மிக்க துன்பத்தை கடக்க வல்லவளோ என்று (நீந்துமோ – ஓகாரம் வினா, எனவே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 171, கல்லாடனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
நுதலும் நுண் பசப்பு இவரும், தோளும்
அகன் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
பணை எழில் அழிய வாடும், நாளும்
நினைவல் மாது அவர் பண்பு என்று ஓவாது
இனையல், வாழி தோழி, புணர்வர்,  5
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழப், பொருள் புரிந்து
அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்திருந்த
மால் வரைச் சீறூர் மருள் பன் மாக்கள்
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார்,
திருத்திக் கொண்ட அம்பினர், நோன் சிலை  10
எருத்தத்து இரீஇ இடந்தொறும் படர்தலின்,
கீழ்ப்படு தாரம் உண்ணா மேல் சினைப்
பழம் போல் சேற்ற தீம்புழல் உணீஇய
கருங்கோட்டு இருப்பை ஊரும்
பெருங்கை எண்கின் சுரன் இறந்தோரே.  15

பாடல் பின்னணி:  தலைவன் பொருள்வயின் பிரிந்தான்.  பிரிவாற்றாது வருந்திய தலைவியைத் தோழி வற்புறுத்தியது. 

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  “நாள்தோறும் அவர் நற்பண்புகளை யான் நினைப்பேன்” என்று கூறி, நீ விடாது வருந்தாதே.  அவ்வாறு நீ வருந்தினால், நெற்றியும் நுண்ணிய பசலையைப் பரவப் பெறும்.  தோள்களும் அகன்ற மலைகளையுடைய காட்டில் ஆராய்ந்துகொண்டு அறுத்த துண்டுகளை ஒத்த அழகு கெட்டு மெலிந்து விடும்.  வாடிய மேல்பகுதியை உடைய ஞெமை மரங்களுடைய வழியைச் சேர்ந்த பெரிய மலையிலுள்ள சிறிய ஊரில் உள்ள மருண்ட பல மக்கள், கொல்லுதல் வல்ல ஆண் கரடியின் ஒலியைக் கேட்டு, அம்பை ஏந்தியவர்களாய் வலிய வில்லைத் தோளில் தொங்கவிட்டு, இடமெல்லாம் பரவி வருவதால், கீழே விழுந்த கிடக்கும் உணவினை உண்ணாதனவாய், மேலே உள்ள கிளைகளில் உள்ள பழங்கள் போல் இனிக்கும் சாற்றினையும் துளைகளையுமுடைய மலர்களை உண்ணும்பொருட்டு, கரிய கிளைகளையுடைய இருப்பை மரங்களின் மீது ஏறும் பெரிய கைகளையுடைய கரடிகளுடைய பாலைநில வழியைக் கடந்து, விளங்கும் திரண்ட அழகிய நின் வளையல்கள் கழன்று விழுமாறுப் பொருளை விரும்பிச் சென்ற நம் தலைவர், விரைந்து வந்து நின்னைக் கூடுவர்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘தன்னுறு விழும நிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என்னும் நூற்பாவின்கண் ‘நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களை என மொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு’ என வரும் விதி கொள்க.  கரடி இருப்பை மலரை உண்ணுதல் – அகநானூறு 15, 81, 95, 149, 171, 247, 267, 275, 331.  தீம்புழல் (13) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அன்மொழித்தொகை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஆகுபெயர்.

சொற்பொருள்:  நுதலும் நுண் பசப்பு இவரும் – நெற்றியும் நுண்ணிய பசலையைப் பரவப் பெறும், தோளும் அகன் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த பணை எழில் அழிய வாடும் – தோள்களும் அகன்ற மலைகளையுடைய காட்டில் ஆராய்ந்துகொண்டு அறுத்த துண்டுகளை ஒத்த அழகு கெட்டு மெலிந்து விடும், நாளும் நினைவல் மாது அவர் பண்பு என்று ஓவாது இனையல் – நாள்தோறும் அவர் நற்பண்புகளை யான் நினைப்பேன் என்று கூறி விடாது வருந்தாதே (மாது –அசைநிலை), வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, புணர்வர் – மீண்டு வந்து நின்னைக் கூடுவர், இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ – விளங்கும் திரண்ட அழகிய நின் வளையல்கள் கழன்று விழ, பொருள் புரிந்து – பொருளை விரும்பி, அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்திருந்த மால் வரைச் சீறூர் மருள் பன் மாக்கள் – வாடிய மேல்பகுதியை உடைய ஞெமை மரங்களுடைய வழியைச் சேர்ந்த பெரிய மலையிலுள்ள சிறிய ஊரில் உள்ள மருண்ட பல மக்கள் (அலந்தலை – அலந்த தலை அலந்தலை என வந்தது, ஞெமை மரம் – Anogeissus latifolia) கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார் திருத்திக் கொண்ட அம்பினர் நோன் சிலை எருத்தத்து இரீஇ இடந்தொறும் படர்தலின் – கொல்லுதல் வல்ல ஆண் கரடியின் ஒலியைக் கேட்டவர்களாய் அம்பை உடையவர்களாய் வலிய வில்லைத் தோளில் தொங்கவிட்டு இடமெல்லாம் பரவி வருவதால் (இரீஇ – அளபெடை), கீழ்ப்படு தாரம் உண்ணா – கீழே விழுந்த கிடக்கும்  உணவினை உண்ணாதனவாய், மேல் சினைப் பழம் போல் சேற்ற தீம்புழல் உணீஇய – மேலே உள்ள கிளைகளில் உள்ள பழங்கள் போல் இனிக்கும் சாற்றினையும் துளைகளையுமுடைய மலர்களை உண்ணும்பொருட்டு (உணீஇய – அளபெடை), கருங்கோட்டு இருப்பை ஊரும் பெருங்கை எண்கின் சுரன் இறந்தோரே – கரிய கிளைகளையுடைய இருப்பை மரங்களின் மீது ஏறும் பெரிய கைகளையுடைய கரடிகளுடைய பாலைநில வழியைக் கடந்து சென்றவர் (சுரன் – சுரம் என்பதன் போலி, இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 172, மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில்
பிரசமொடு விரைஇய வயங்கு வெள்ளருவி
இன்னிசை இமிழ் இயம் கடுப்ப இம்மெனக்
கல் முகை விடர்அகம் சிலம்ப, வீழும்
காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல்,  5
இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன்
விரி மலர் மராஅம் பொருந்திக் கோல் தெரிந்து
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி,
இகல் அடு முன்பின் வெண்கோடு கொண்டு, தன்
புல் வேய் குரம்பை புலர ஊன்றி,  10
முன்றில் நீடிய முழவு உறழ் பலவின்
பிழி மகிழ் உவகையன் கிளையொடு கலி சிறந்து,
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும்
குன்ற நாட! நீ அன்பு இலை ஆகுதல்
அறியேன் யான், அஃது அறிந்தனென் ஆயின்  15
அணியிழை உண்கண், ஆய் இதழ்க் குறுமகள்
மணி ஏர் மாண் நலம் சிதையப்
பொன் நேர் பசலை பாவின்று மன்னே.

பாடல் பின்னணி:  தலைவியை இடத்து உய்த்து வந்த தோழி, தலைவனை வரைவு கடாயது.  

பொருளுரை:  யானைகள் பிளிறும் நீர் மிக்க உள்ள பக்கமலையில், தேனுடன் கலந்து வரும் ஒளிரும் வெள்ளை அருவிகள், இன்னிசை முழங்கும் முழவு போல் இம்மென்னும் ஒலியுடன் மலையின் முழைஞ்சுகளிலும் (குகைகளிலும்) பிளவுகளிலும் ஒலித்து விழுகின்ற உயர்ந்த மலைச்சரிவில், இரும்பை உருக்கி வார்த்துச் செய்தாற்போன்ற வலிமையான கைகளையுடைய கானவன், விரிந்த மலர்களையுடைய கடம்ப மரத்தின் மேல் சாய்ந்துகொண்டு, அம்பினை ஆராய்ந்து வரி பொருந்திய நெற்றியையுடைய யானையின் ஊடுதற்கு அரிய மார்பில் செலுத்தி, பகையைக் கொல்லும் வலிமையுடைய அதன் வெள்ளை மருப்பைக் (தந்தத்தைக்) கொண்டு வந்து, புல்லால் கூரை வேய்ந்த தன் குடிசையில் ஊன் புலரும்பொருட்டு ஊன்றி, குடிசையின் முற்றத்தில், உயர்ந்த முழவு போன்று உள்ள பலாப்பழத்திலிருந்து பிழிந்தெடுத்த மதுவினை உண்ட களிப்பு உடையவன் ஆகத் தன் சுற்றத்துடன் ஆரவாரம் மிகுந்து, சந்தன விறகால் ஆன தீயில் ஊனுடன் சேர்ந்த சோற்றை சமைத்து உண்ணும் மலை நாட்டின் தலைவனே!

நீ அன்புடையவன் இல்லை என்பதை யான் அறியவில்லை.  யான் அதை அறிந்திருந்தேன் ஆனால், அழகிய அணிகலன்களையும் மையுண்ட கண்களையும் ஆராய்ந்து அணிந்த மலர்களையுமுடைய தலைவியின் நீலமணியை ஒத்த மாட்சிமையுடைய அழகு கெடும்படி, பொன்னை ஒத்த பசலை அவள் மேனியில் பரவியிருக்காது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின் கண் ‘அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ எனவரும் விதி கொள்க.  நீர் திகழ் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீர் மிக்கு விளங்குகின்ற, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தன்மை வாய்ந்த.  இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன் (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரும்பை உருக்கி வார்த்தியற்றினாற் போன்ற வன்மையான கையையுடைய குறவன்.  ஒப்புமை – பெரும்பாணாற்றுப்படை 221–222 – இரும்பு வடித்தன்ன மடியா மென் தோல் கருங்கை வினைஞர்.  புலர ஊன்றி (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புலரும்பொருட்டு நட்டு வைத்து, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – புலால் நாற்றம் வீச ஊன்றுதல் செய்து. 

சொற்பொருள்:  வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் – யானைகள் பிளிறும் நீர் மிக்க உள்ள பக்கமலையில், பிரசமொடு விரைஇய வயங்கு வெள்ளருவி இன்னிசை இமிழ் இயம் கடுப்ப இம்மெனக் கல் முகை விடர் அகம் சிலம்ப வீழும் காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல் – தேனுடன் கலந்து வரும் ஒளிரும் வெள்ளை அருவிகள் இன்னிசை முழங்கும் முழவு போல் இம்மென்னும் ஒலியுடன் மலையின் முழைஞ்சுகளிலும் (குகைகளிலும்) பிளவுகளிலும் ஒலித்து விழுகின்ற உயர்ந்த மலைச்சரிவில் (விரைஇய – அளபெடை, கடுப்ப – உவம உருபு), இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன் விரி மலர் மராஅம் பொருந்திக் கோல் தெரிந்து வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி – இரும்பை உருக்கி வார்த்துச் செய்தாற்போன்ற வலிமையான கைகளையுடைய கானவன் விரிந்த மலர்களையுடைய கடம்ப மரத்தின் மேல் சாய்ந்துகொண்டு அம்பினை ஆராய்ந்து வரி பொருந்திய நெற்றியையுடைய யானையின் ஊடுதற்கு அரிய மார்பில் செலுத்தி (கடம்ப மரம் – Anthocephalus cadamba or Neolamarckia cadamba, மராஅம் – அளபெடை), இகல் அடு முன்பின் வெண்கோடு கொண்டு –  பகையைக் கொல்லும் வலிமையுடைய அதன் வெள்ளை மருப்பைக் (தந்தத்தைக்) கொண்டு வந்து, தன் புல் வேய் குரம்பை புலர ஊன்றி – புல்லால் கூரை வேய்ந்த தன் குடிசையில் ஊன் புலரும்பொருட்டு ஊன்றி, முன்றில் நீடிய முழவு உறழ் பலவின் பிழி மகிழ் உவகையன் கிளையொடு கலி சிறந்து சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும் குன்ற நாட – குடிசையின் முற்றத்தில் உயர்ந்த முழவு போன்று உள்ள பலாப்பழத்திலிருந்து பிழிந்தெடுத்த மதுவினை உண்ட களிப்பு உடையவன் ஆகத் தன் சுற்றத்துடன் ஆரவாரம் மிகுந்து சந்தன விறகால் ஆன தீயில் ஊனுடன் சேர்ந்த சோற்றை சமைத்து உண்ணும் மலை நாட்டின் தலைவனே (பலவு – ஆகுபெயர் பலாப்பழத்திற்கு, உறழ் – உவம உருபு, தலைவனே – விளி), நீ அன்பு இலை ஆகுதல் அறியேன் யான் – நீ அன்புடையவன் இல்லை என்பதை யான் அறியவில்லை (இலை – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), அஃது அறிந்தனென் ஆயின் – யான் அதை அறிந்திருந்தேன் ஆனால், அணியிழை உண்கண் ஆய் இதழ்க் குறுமகள் மணி ஏர் மாண் நலம் சிதையப் பொன் நேர் பசலை பாவின்று மன்னே – அழகிய அணிகலன்களையும் மையுண்ட கண்களையும் ஆராய்ந்து அணிந்த மலர்களையுமுடைய தலைவியின் நீலமணியை ஒத்த மாட்சிமையுடைய அழகு கெடும்படி பொன்னை ஒத்த பசலை அவள் மேனியில் பரவியிருக்காது (ஏர் – உவம உருபு, மன்னே – மன் ஒழியிசை, ஏ அசைநிலை)

அகநானூறு 173, முள்ளியூர்ப் பூதியார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
‘அறம் தலைப்பிரியாது ஒழுகலும் சிறந்த
கேளிர் கேடு பல ஊன்றலும் நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்’ எனச்
செய் வினை புரிந்த நெஞ்சினர், “நறுநுதல்
மை ஈர் ஓதி! அரும் படர் உழத்தல்  5
சில நாள் தாங்கல் வேண்டும்” என்று நின்
நல் மாண் எல் வளை திருத்தினர் ஆயின்
வருவர், வாழி தோழி! பல புரி
வார் கயிற்று ஒழுகை நோன் சுவல் கொளீஇ
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ,  10
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓடக்
காடு கவின் அழிய உரைஇக், கோடை
நின்று தின விளிந்த அம் பணை நெடுவேய்க்
கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
கழங்கு உறழ் தோன்றல, பழங்குழித் தாஅம்  15
இன் களி நறவின் இயல் தேர் நன்னன்
விண்பொரு நெடுவரைக் கவாஅன்
பொன்படு மருங்கின் மலை இறந்தோரே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிவின்கண் வருந்திய தலைவியிடம் தோழி கூறியது.  

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  பல புரிகளால் ஆன நீண்ட கயிற்றால் பிணித்த வண்டியை எருதுகளின் வலிய பிடரியில் பூட்டி, ஏற்றமான துறைகளில் ஓட்டும்பொழுது உப்பு வணிகர்கள் எருதுகளை உரப்புகின்ற ஒலியைக் கேட்டு அஞ்சி, ஆண்மான்களும் பெண்மான்களும் ஆகிய கூட்டங்கள் கெட்டு ஓடவும், காடுகளின் அழகு அழியும்படி கோடை பரவியதால், நின்று நீரை உறிஞ்சுவதால் பட்டுப்போன அழகிய பெரிய மூங்கிலின் கணுக்கள் பிளக்கத் தெறித்து விழும் கழுவாத விதைகள், கழங்கினை ஒத்த தோற்றம் உடையவனாய் பழைய குழிகளில் விழும் இடமான,

இனிய களிப்பைத் தரும் கள்ளினையும் இயலும் தேரையுமுடைய நன்னனின் வானை அளாவிய உயர்ந்த மலையின் பக்கத்தில் அமைந்த பொன் பொருந்திய மலையைக் கடந்து சென்ற நம் தலைவர், அறநெறியிலிருந்து விலகாது இல்வாழ்க்கையை நடத்தலும், சிறந்த சுற்றத்தார்களின் பல துன்பங்களைத் தாங்குதலும், எந்நாளும் முயற்சியால் மெய் வருந்தாமைக்குக் காரணமான ஊக்கமில்லாத நெஞ்சுடன் இருந்தவர்களுக்கு இல்லையாகும் என்று, பொருள் ஈட்டும் வினையை விரும்பிய நெஞ்சையுடையவராய், நின்னிடம், “நறுமண நெற்றியையும் கரிய நெய்ப்புடைய (எண்ணெய் தேய்த்த) கூந்தலையும் உடையவளே!  பொறுத்தற்கு அரிய துன்பத்தால் வருந்துவதை நீ சில நாட்கள் தாங்க வேண்டும்”, என்று நின் நல்ல மாண்புற்ற ஒளிரும் வளையல்களைத் திருத்தி அருள் செய்தனர் ஆதலால், விரைவில் வருவார்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘தலைவரும் விழும நிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) எனவரும் நூற்பாவின்கண் ‘நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களை என மொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு’ என வரும் விதி கொள்க.  வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு (3) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – எஞ்ஞான்றும் (முயற்சியால்) மெய் வருந்தாமைக்கு ஏதுவாகிய (ஊக்கமில்லாத) உள்ளமோடு இருந்தோர்க்கு.  வரலாறு – நன்னன்.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

சொற்பொருள்:  அறம் தலைப்பிரியாது ஒழுகலும் சிறந்த கேளிர் கேடு பல ஊன்றலும் – அறநெறியிலிருந்து விலகாது இல்வாழ்க்கையை நடத்தலும் சிறந்த சுற்றத்தார்களின் பல துன்பங்களைத் தாங்குதலும், நாளும் வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல் எனச் செய் வினை புரிந்த நெஞ்சினர் – எந்நாளும் முயற்சியால் மெய் வருந்தாமைக்குக் காரணமான ஊக்கமில்லாத நெஞ்சுடன் இருந்தவர்களுக்கு இல்லையாகும் என்று பொருள் ஈட்டும் வினையை விரும்பிய நெஞ்சையுடையவராய், நறுநுதல் மை ஈர் ஓதி – நறுமண நெற்றியையும் கரிய நெய்ப்புடைய (எண்ணெய் தேய்த்த) கூந்தலையும் உடையவளே (நறுநுதல் – அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, மை ஈர் ஓதி – அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), அரும் படர் உழத்தல் சில நாள் தாங்கல் வேண்டும் – பொறுத்தற்கு அரிய துன்பத்தால் வருந்துவதை நீ சில நாட்கள் தாங்க வேண்டும், என்று நின் நல் மாண் எல் வளை திருத்தினர் ஆயின் – என்று நின் நல்ல மாண்புற்ற ஒளிரும் வளையல்களைத் திருத்தி அருள் செய்தனர் ஆதலால், வருவர் – விரைவில் வருவார், வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, பல புரி வார் கயிற்று ஒழுகை நோன் சுவல் கொளீஇ பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட – பல புரிகளால் ஆன நீண்ட கயிற்றால் பிணித்த வண்டியை எருதுகளின் வலிய பிடரியில் பூட்டி ஏற்றமான துறைகளில் ஓட்டும்பொழுது உப்பு வணிகர்கள் அவற்றை உரப்புகின்ற ஒலியைக் கேட்டு அஞ்சி ஆண்மான்களும் பெண்மான்களும் ஆகிய கூட்டங்கள் கெட்டு ஓடவும் (கொளீஇ – அளபெடை, வெரீஇ – அளபெடை, வெருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது, இனன் – இனம் என்பதன் போலி, உழைமான் – இரு பெயரொட்டு), காடு கவின் அழிய உரைஇக் கோடை  – காடுகளின் அழகு அழியும்படி கோடை பரவியதால் (உரைஇ – அளபெடை), நின்று தின விளிந்த அம் பணை நெடுவேய்க் கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம் கழங்கு உறழ் தோன்றல பழங்குழித் தாஅம் – நின்று நீரை உறிஞ்சுவதால் பட்டுப்போன அழகிய பெரிய மூங்கிலின் கணுக்கள் பிளக்கத் தெறித்து விழும் கழுவாத விதைகள் கழங்கினை ஒத்த தோற்றம் உடையவனாய் பழைய குழிகளில் விழும் (தின – தின்ன என்பதன் விகாரம், தாஅம் – அளபெடை), இன் களி நறவின் இயல் தேர் நன்னன் விண்பொரு நெடுவரைக் கவாஅன் பொன்படு மருங்கின் மலை இறந்தோரே – இனிய களிப்பைத் தரும் கள்ளினையும் இயலும் தேரையுமுடைய நன்னனின் வானை அளாவிய உயர்ந்த மலையின் பக்கத்தில் அமைந்த பொன் பொருந்திய மலையைக் கடந்து சென்ற நம் தலைவர் (கவாஅன் – அளபெடை, இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 174, மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், முல்லைத் திணை தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
‘இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து
ஒரு படை கொண்டு வருபடை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்’ எனப்
பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கிச்
செல்வேம் ஆதல் அறியாள், முல்லை  5
நேர் கால் முது கொடி குழைப்ப, நீர் சொரிந்து
காலை வானத்துக் கடுங்குரல் கொண்மூ
முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நம் புலந்து,
பழங்கண் கொண்ட பசலை மேனியள்
யாங்கு ஆகுவள் கொல் தானே, வேங்கை  10
ஊழுறு நறுவீ கடுப்பக் கேழ் கொள
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள்,
நன் மணல் வியல் இடை நடந்த
சின் மெல் ஒதுக்கின் மாஅயோளே?

பாடல் பின்னணி:  பாசறைக்கண் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  

பொருளுரை:  இரு பெரு வேந்தர்கள் பகைமைக் கொண்டு போரிடும் பெரிய போர்க்களத்தில், “ஒப்பற்ற படைக்கலன்களால் எதிர் வரும் படைகளை ஓடச் செய்யும் வெற்றியாகிய செல்வம் உடையவர்களுக்கு இப்பெருமை நிலைபெற்றது” எனக் கூறி, தண்ணுமை முழக்கத்துடன் அரசன் அளிக்கும் பூகோளினையும் தவிர்த்து, நாம் அவள்பால் செல்லுதலை அறியாளாய், 

வேங்கை மரத்தில் பூத்த நறுமண மலரை ஒத்த நிறத்துடன் மார்பில் தோன்றிய குற்றமற்ற தேமலையுடையவளாய், நல்ல மணலையுடைய அகன்ற இடத்தில் நடந்த சிலவாகிய மென்மையான நடையையுடைய மாமை நிறத்தையுடைய (மாந்தளிர் நிறத்தையுடைய) நம் தலைவி,

முல்லையின் நேராக நிற்கின்ற முதிய கொடிகள் தளிர்க்கும்படி விடியற்காலையில் வானில் எழுந்த கடிய குரலையுடைய முகில்கள் நீரைப்பெய்து முழங்கும் பொழுதெல்லாம், செயலற்று நம்மை வெறுத்து ஒடுங்கித் துன்பத்தை அடைந்த பசலை பாய்ந்த மேனியை உடையவளாய், இந்நிலையை அடைவாளோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) எனவரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்’ எனவரும் விதி கொள்க.  இது தலைவியின் உருவத்தைத் தன் மனக்கண் முன்னர்க் கண்டு கூறியவாறு.  தான் விடை கொண்டு பிரியும்பொழுது ஆற்றாமையால் முன்றிலிலே சிறிது தொலைவு நடந்து பின் திகைப்புற்று நின்றாள் என்பான் நன் மணல் வியலிடை நடந்த மாயோள் என்றான்.  இத்தகையோள் இதுகாறும் எவ்வாறு தான் ஆற்றியிருப்பாளோ என இரங்குகின்றான்.  இதனால் தலைவனுக்குத் தலைவிப்பால் உள்ள பேரன்பு தெற்றனப் புலப்படுதல் உணர்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘ஏவன் மரபின்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 24) என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுள் மீள்வான் தன் நெஞ்சிற்கு உரைத்தது என்றும், இதனுள் பூக்கோளேய தண்ணுமை விலக்கிச் செல்வேம் என்றலின், அரசனாற் சிறப்புப்பெற்ற தலைவனாயிற்று என்றும், ‘ஒன்றாத் தமரினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 41) என்னுஞ் சூத்திரத்து, ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும் என்னும் துறைக்கு, தனக்கு ஆக்கம் சிறந்த நட்புடையோராகித் தோன்றும் நட்புடையோர்க்கு உற்றுழி உதவச் சேறற்கண்ணும் என்று பொருள் கூறி, இச் செய்யுள் அதற்கு உதாரணமாகும், என்றும் கூறினர் நச்சினார்க்கினியர்.  ஒரு படை கொண்டு (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒரே படைக்கலத்தால், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஒப்பற்ற படைக்கலத்தைக்கொண்டு.  பூக்கோள் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வீரத்திற்கு அறிகுறியாக அரசன் வழங்கும் பொற்பூவாகிய வெற்றிச் சின்னம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மாற்றாரை வென்ற வெற்றி வீரர்க்கு அரசன் பொற்பூ அளித்துச் சிறப்புச் செய்வான்.  புறநானூறு 289 – பாசறைப் பூக்கோள் இன்று என்று அறையும் மடிவாய்த் தண்ணுமை – ஒளவை துரைசாமி உரை – போர்க்குரிய மறவர்க்குப் போர்ப் பூவைத் தருவது, உ. வே. சாமிநாதையர் உரை – பூவைக் கொள்ளுதல், அஃதாவது வெட்சி முதலிய புறத்திணைக்குரிய பூக்களைத் தம் தொழிலுக்கேற்ப சூடுதற்கு நல்ல நாளிற் கைக்கொள்ளல்.

சொற்பொருள்:  இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து – இரு பெரு வேந்தர்கள் பகைமைக் கொண்டு போரிடும் பெரிய போர்க்களத்தில், ஒரு படை கொண்டு வருபடை பெயர்க்கும் செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல் என – ஒப்பற்ற படைக்கலன்களால் எதிர் வரும் படைகளை ஓடச் செய்யும் வெற்றியாகிய செல்வம் உடையவர்களுக்கு இப்பெருமை நிலைபெற்றது எனக் கூறி (ஒரு – ஒப்பற்ற), பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கிச் செல்வேம் ஆதல் அறியாள் – தண்ணுமை முழக்கத்துடன் அரசன் அளிக்கும் பூகோளினையும் தவிர்த்து நாம் அவள்பால் செல்லுதலை அறியாள், முல்லை நேர் கால் முது கொடி குழைப்ப நீர் சொரிந்து காலை வானத்துக் கடுங்குரல் கொண்மூ முழங்குதொறும் – முல்லையின் நேராக நிற்கின்ற முதிய கொடிகள் தளிர்க்கும்படி விடியற்காலையில் வானில் எழுந்த கடிய குரலையுடைய முகில்கள் நீரைப்பெய்து முழங்கும் பொழுதெல்லாம், கையற்று ஒடுங்கி நம் புலந்து பழங்கண் கொண்ட பசலை மேனியள் யாங்கு ஆகுவள் – செயலற்று நம்மை வெறுத்து ஒடுங்கித் துன்பத்தை அடைந்த பசலை பாய்ந்த மேனியை உடையவளாய் இந்நிலையை அடைவாளோ, கொல் – அசைநிலை, தானே – தான், ஏ அசைநிலைகள், வேங்கை ஊழுறு நறுவீ கடுப்பக் கேழ் கொள ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள் – வேங்கை மரத்தில் பூத்த நறுமண மலரை ஒப்ப நிறம் கொள்ள மார்பில் தோன்றிய குற்றமற்ற தேமலையுடையவள் (வேங்கை மரம் – Pterocarpus marsupium, கடுப்ப – உவம உருபு), நன் மணல் வியல் இடை நடந்த சின் மெல் ஒதுக்கின் மாஅயோளே – நல்ல மணலையுடைய அகன்ற இடத்தில் நடந்த சிலவாகிய மென்மையான நடையையுடைய மாமை நிறத்தையுடைய (மாந்தளிர் நிறத்தையுடைய) நம் தலைவி (மாஅயோளே – அளபெடை, ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 175, ஆலம்பேரிச் சாத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
விடுதொறும் விளிக்கும் வெவ்வாய் வாளி
ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின்,
பாறு கிளை பயிர்ந்து படு முடை கவரும்  5
வெஞ்சுரம் இறந்த காதலர் நெஞ்சு உணர
அரிய வஞ்சினம் சொல்லியும், பல்மாண்
தெரி வளை முன்கை பற்றியும் வினை முடித்து
வருதும் என்றனர் அன்றே தோழி,
கால் இயல் நெடுந் தேர்க் கைவண் செழியன்  10
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த
வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி
நேர் கதிர் நிரைத்த நேமியம் செல்வன்
போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல்,  15
திரு வில் தேஎத்துக் குலைஇ உருகெழு
மண் பயம் பூப்பப் பாஅய்த்,
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே.

பாடல் பின்னணி:  (1) தலைவனின் பிரிவின்கண் வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி சொன்னது, (2) தலைவனின் பிரிவின்கண் வேறுபட்ட தலைவி, தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  தடித்த தோளின் விளிம்பினை உரசிய வேகம் அமைந்த வலிமையான வில்லில் வைத்து இழுத்து விடும் அம்பினை குறி தப்புதல் இல்லாமல் செலுத்தும் கொடூர ஆண்கள் எய்யும்பொழுதெல்லாம் ஒலித்துச் செல்லும் கொடிய முனையையுடைய அம்புகள் வழியில் செல்லும் புதியவர்களின் உயிரை அழிப்பதால், பாறு (பிணம் தின்னும் கழுகு) தன் கிளையினை அழைத்து இறந்தவர்களின் ஊனை உண்ணும் கொடிய பாலை நிலத்து வழிகளைக் கடந்து போன நம் தலைவர், செல்லும் முன், உள்ளம் உணர மிக உறுதியான உறுதிமொழிகளை உரைத்தும், பல முறை ஆராய்ந்து அணியப்பட்ட வளையுடைய என் முன்கையைப் பற்றியும், “பணியை முடித்து வருவேன்” என்று கூறினார் அல்லவோ, காற்றுப் போல செல்லும் உயர்ந்த தேரினையும் வள்ளன்மையையுமுடைய பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துப் போரில் வென்று உயர்த்திய வேலைக் காட்டிலும் பலமுறை மின்னி, முரசம் போன்று பெரிய வானில் தொடர்ந்து பலமாக இடித்து, நிறைந்த கதிர்களையுடைய ஆழியையுடைய (சக்கரத்தையுடைய) திருமாலின் பகைவர்களை அழித்து வென்ற மார்பின்கண் உள்ள மாலைபோன்று பல்வேறு நிறங்கள் கொண்ட அழகிய வானவில்லை வளைத்து, நிலம் பயன் அடையும்படி பரவி, குளிர்ந்த மழையையுடைய முகில்கள் இறங்கிப் பெய்யும் காலத்தில்!  அவர் இன்னும் வரவில்லையே! என்ன செய்வது?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, (இரண்டு துறைக்கும்) ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இல’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 45) என்னும் விதி கொள்க.  வரலாறு – தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.  பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் கிள்ளிவளவன்), ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான்.  நேர் கதிர் நிரைத்த நேமி (14) – வேங்கடசாமி நாட்டார்  உரை, இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நிரம்பிய கதிர்களின் ஒழுங்கினைக் கொண்ட ஆழி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நுண்ணிய ஒளிகள் ஒழுங்குற்ற ஆழிப்படை.  விளிம்பு உரீஇய (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தோளின் விளிம்பு உராயும்படி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தோளின் விளிம்பினை உரசிய, அகநானூறு 371–1 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய விளிம்புகளைக் கையால் உருவி நாணேற்றிய,  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அழகிய விளிம்பினை உருவி நாண் ஏற்றிய, குறுந்தொகை 297–1 – உ. வே. சாமிநாதையர் உரை – மேல் விளிம்பை உருவிய, தமிழண்ணல் உரை – இழுத்துக் கட்டிய, இரா. இராகவையங்கார் உரை – விளிம்பின் நாண் உருவி.  தலையாலங்கானம் போர் – புறநானூறு – 19, 23, 25, 76, நற்றிணை 387, அகநானூறு 36, 175, 209, மதுரைக்காஞ்சி 55, 127. 

சொற்பொருள்:  வீங்கு விளிம்பு உரீஇய – தடித்த தோளின் விளிம்பினை உரசிய (உரீஇய – அளபெடை), விசை அமை நோன் சிலை – வேகம் அமைந்த வலிமையான வில், வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர் – இழுத்து விடும் அம்பு குறி தவறாமல் செலுத்தும்  கொடூர ஆண்கள் (தொடை – ஆகுபெயர் அம்பிற்கு, பிழையா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்), விடுதொறும் விளிக்கும் வெவ்வாய் வாளி – எய்யும்பொழுதெல்லாம் ஒலித்துச் செல்லும் கொடிய வாயுடைய அம்பு, ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின் – வழியில் செல்லும் புதியவர்களின் உயிர் அழிய போக்குவதால் (செல – செல்ல என்பதன் இடைக்குறை), பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும் – பாறு (பிணம் தின்னும் கழுகு) தன் கிளையினை அழைத்து இறந்தவர்களின் ஊனை உண்ணும், வெஞ்சுரம் இறந்த காதலர் – கொடிய பாலை நிலத்து வழிகளைக் கடந்து போன நம் தலைவர், நெஞ்சு உணர அரிய வஞ்சினம் சொல்லியும் – உள்ளம் உணர கடிய சூள் உரைத்தும், பல்மாண் தெரி வளை முன்கை பற்றியும் – பல முறை ஆராய்ந்து அணியப்பட்ட வளையுடைய என் முன்கையைப் பற்றியும், வினை முடித்து வருதும் என்றனர் அன்றே தோழி – பணியை முடித்து வருவேன் என்று கூறினார் அல்லவோ தோழி, கால் இயல் நெடுந்தேர்க் கைவண் செழியன் – காற்றுப் போல செல்லும் உயர்ந்த தேரினையும் வள்ளன்மையுமுடைய பாண்டிய மன்னன், ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த வேலினும் – தலையாலங்கானத்துப் போரில் வென்று உயர்த்திய வேலைக் காட்டிலும், பல் ஊழ் மின்னி – பலமுறை மின்னி, முரசு என மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி – முரசம் போன்று பெரிய வானில் தொடர்ந்து பலமாக இடித்து, நேர் கதிர் நிரைத்த நேமியம் செல்வன் – நிறைந்த கதிர்களையுடைய ஆழியையுடைய (சக்கரத்தையுடைய) திருமால், போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல் – பகைவர்களை அழித்து வென்ற மார்பின்கண் உள்ள மாலைபோன்று, திரு வில் தேஎத்துக் குலைஇ – பல்வேறு நிறம் கொண்ட அழகிய வானவில்லை வளைத்து (தேஎத்து – அளபெடை, குலைஇ – அளபெடை), உருகெழு – அழகிய, மண் பயம் பூப்பப் பாஅய் – நிலம் பயன் அடையும்படி பரவி (பாஅய் – அளபெடை), தண் பெயல் எழிலி – குளிர்ந்த மழையையுடைய முகில்கள், தாழ்ந்த போழ்தே – இறங்கிப் பெய்யும் காலத்தில் (போழ்தே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 176, மருதம் பாடிய இளங்கடுங்கோ, மருதத் திணை தோழி தலைவனிடம் சொன்னது
கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின்
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின்
கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால்,
களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில்
கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை  5
முறுவல் முகத்தின் பன் மலர் தயங்கப்,
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து,
வேப்பு நனை அன்ன நெடுங்கண் நீர் ஞெண்டு
இரை தேர் வெண்குருகு அஞ்சி, அயலது
ஒலித்த பகன்றை இருஞ்சேற்று அள்ளல்  10
திதலையின் வரிப்ப ஓடி விரைந்து தன்
நீர் மலி மண் அளைச் செறியும் ஊர!
மனை நகு வயலை மரன் இவர் கொழுங்கொடி
அரி மலர் ஆம்பலொடு ஆர் தழை தைஇ,
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து,  15
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக்
குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்தது
உடன்றனள் போலும் நின் காதலி? எம் போல்
புல் உளைக் குடுமிப் புதல்வன் பயந்து
நெல் உடை நெடுநகர் நின்னின்று உறைய,  20
என்ன கடத்தளோ மற்றே? தன் முகத்து
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி
வடித்து என உருத்த தித்திப் பல் ஊழ்
நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு,
கூர் நுனை மழுகிய எயிற்றள்  25
ஊர் முழுது நுவலும் நின் காணிய சென்மே.

பாடல் பின்னணி:  தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தது.  

பொருளுரை:  கடலைக் கண்டாற்போல் இடம் அகன்ற நிலப்பரப்பில், நிலம் பிளக்குமாறு கீழே இறங்கிய, வேரில் முதிர்ந்த கிழங்கையும், மூங்கிலைக் கண்டாற்போன்ற துளையுடைய திரண்ட தண்டினையும், களிற்று யானையின் செவி போன்ற பசிய இலைகளின் அருகில் கழுமரம் உயர்ந்து தோன்றுவதை ஒத்த கொழுத்த அரும்புகளின் இடையிடையே முறுவலையுடைய முகம் போல் விளங்க மலர்ந்த பல மலர்களையுடைய தாமரைச் செடிகள் உடைய பறவைகள் ஒலிக்கும் வயலில், வேம்பின் அரும்பு போன்ற நீண்ட கண்களையுடைய நண்டு இரை தேடும் வெண்குருகுக்கு அஞ்சி, அருகில் உள்ள தழைத்த பகன்றைக் கொடி படர்ந்த கரிய சேற்றில் தேமல் போல் வரி உண்டாக விரைந்து ஓடித் தன் ஈரம் மிக்க மண் அளையுள் பதுங்கும் ஊரனே!

மனையில் விளங்கும் வயலையின் மரத்தில் படரும் கொழுத்த கொடியை விளங்கும் மலர்களையுடைய ஆம்பலுடன் சேர்த்துக் கட்டிய தழை ஆடையை அணிந்து விழாவில் ஆடும் மகளிருடன் தழுவி ஆடும் அணிகலன்களால் பொலிவுற்று, மலரை ஒத்த மையுண்ட கண்களையும் மாண்புற்ற அணிகலன்களையும் உடைய நின் பரத்தை, தன் குறிய வளையல்கள் அணிந்த முன்கையினால் பிணித்த நெடிய பிணைப்பினை நீ விடுத்துச் சென்றதற்கு வெகுண்டாள் போலும். 

தன் முகத்தின் கண்மை எழுதப்பட்ட அழகு பாழ்படும்படி ஏங்கி அழுதவளாக, பொன்னை உருக்கி வார்த்தாற்போன்ற தேமலையும், பல முறை நொடித்ததால் சிவந்த மெல்லிய விரல்களையும், திருகிக் கடித்ததால் கூரிய முனை மழுங்கிய பற்களையும் உடையாளாய், ஊரில் உள்ளவர்களால் பழி தூற்றப்படும் நின்னைக் காண்பதற்குச் செல்கின்றாள்.

எம்மைப் போல் புல்லிய உளை போலும் குடுமியையுடைய புதல்வனைப் பெற்று நெல்லுடைய நீண்ட மனையில் நின்னைப் பிரிந்து வாழ, என்ன கடமையை உடையவளோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர் காத்த தன்மையின் கண் இன்று பெயர்ப்பினும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்னுஞ் சூத்திரத்து, ‘புகன்ற உள்ளமொடு ……………… ஈரத்து மருங்கினும்’ என்னும் துறைக்கண், இச் செய்யுளை உதாரணமாகக் காட்டி, மறுப்பாள் போல நயந்தாளாயிற்று என்று கூறினர் நச்சினார்க்கினியர்.  ‘இளிவே இழவே ………….. அழுகை நான்கே’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 5) என்னுஞ் சூத்திரத்து எழுதெழில் சிதைய அழுத்தனள் ஏங்கி …………….. நிற்காணிய சென்மே’ என்பது தன்கண் தோன்றிய இளிவரல் பொருளாக அவலச்சுவை பிறந்தது என்றும், ‘தெய்வம் அஞ்சல்’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 24) என்னும் சூத்திரத்து, ‘வேம்பு நனையன்ன செறியும் ஊர’ என்பது தலைமகன் வாயில் வேண்டச் சென்றானைப் பிறர் கூறும் பழிக்கு வந்தாய் என்றமையின், இஃது உள்ள துவர்த்தல் எனும் மெய்ப்பாடு ஆயிற்று, என்றும் கூறினர் நச்சினார்க்கினியர்.  எம் போல் (18) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவிக்கும் தனக்கும் வேற்றுமை கருதாமல் ‘எம் போல்’ என்றாளேனும் தலைவி போல் என்பது கருத்தாகக் கொள்க.  என்னை?  ‘தாயத்தின் அடையா’ (தொல்காப்பியம், பொருளியல் 25) என்னும் விதியால் ‘எம் என வரூஉம் கிழமைத் தோற்றம்’ தோழி கூறப் புலனெறி வழக்கிற் பொருந்தி வருதல் உண்மையாலென்க.  எழுது எழில் சிதைய (22) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கண்ணில் எழுதப்பட்ட மையின் அழகு கெடும்படி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – எழுதுவதற்கு ஏதுவாகிய அழகு கெட.  சென்மே (26) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஈற்று மிசை உகரம் மெய்யொடும் கெட்டது.  ஒப்புமை –ஐங்குறுநூறு 30 – வேப்பு நனை அன்ன நெடுங்கண் களவன்.  

சொற்பொருள்:  கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின் – கடலைக் கண்டாற்போல் இடம் அகன்ற நிலப்பரப்பில், நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின் கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால் – நிலம் பிளக்குமாறு கீழே இறங்கிய வேரில் முதிர்ந்த கிழங்கையும் மூங்கிலைக் கண்டாற்போன்ற துளையுடைய திரண்ட தண்டினையும் (கிழங்கின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில் கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை  முறுவல் முகத்தின் பன் மலர் தயங்கப் பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து – களிற்று யானையின் செவி போன்ற பசிய இலைகளின் அருகில் கழுமரம் உயர்ந்து தோன்றுவதை ஒத்த கொழுத்த அரும்புகளின் இடையிடையே முறுவலையுடைய முகம் போல் விளங்க மலர்ந்த பல மலர்களையுடைய தாமரைச் செடிகள் உடைய பறவைகள் ஒலிக்கும் வயலில் (முகத்தின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), வேப்பு நனை அன்ன நெடுங்கண் நீர் ஞெண்டு இரை தேர் வெண்குருகு அஞ்சி – வேம்பின் அரும்பு போன்ற நீண்ட கண்களையுடைய நண்டு இரை தேடும் வெண்குருகுக்கு அஞ்சி (ஞெண்டு – நண்டு என்பதன் போலி), அயலது ஒலித்த பகன்றை இருஞ்சேற்று அள்ளல் திதலையின் வரிப்ப ஓடி விரைந்து – அருகில் உள்ள தழைத்த பகன்றைக் கொடி படர்ந்த கரிய சேற்றில் தேமல் போல் வரி உண்டாக விரைந்து ஓடி (பகன்றைக் கொடி – Operculina turpethum, Ipomaea turpethum, Indian jalap), தன் நீர் மலி மண் அளைச் செறியும் ஊர – தன் ஈரம் மிக்க மண் அளையுள் பதுங்கும் ஊரனே (ஊரனே – அண்மை விளி), மனை நகு வயலை மரன் இவர் கொழுங்கொடி அரி மலர் ஆம்பலொடு ஆர் தழை தைஇ விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து – மனையில் விளங்கும் வயலையின் மரத்தில் படரும் கொழுத்த கொடியை விளங்கும் மலர்களையுடைய ஆம்பலுடன் சேர்த்துக் கட்டிய தழை ஆடையை அணிந்து விழாவில் ஆடும் மகளிருடன் தழுவி ஆடும் அணிகலன்களால் பொலிவுற்று (நகு – விளங்கும், வயலைக் கொடி– purslane vine, Portulaca quadrifida, மரன் – மரம் என்பதன் போலி, தைஇ – அளபெடை, தழூஉ – அளபெடை), மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக் குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்தது உடன்றனள் போலும் நின் காதலி – மலரை ஒத்த மையுண்ட கண்களையும் மாண்புற்ற அணிகலன்களையும் உடைய நின் பரத்தை தன் குறிய வளையல்கள் அணிந்த முன்கையினால் பிணித்த நெடிய பிணைப்பினை நீ விடுத்துச் சென்றதற்கு வெகுண்டாள் போலும் (ஏர் – உவம உருபு, போலும் – ஒப்பில் போலி), எம் போல் புல் உளைக் குடுமிப் புதல்வன் பயந்து நெல் உடை நெடுநகர் நின்னின்று உறைய என்ன கடத்தளோ – எம்மைப் போல் புல்லிய உளை போலும் குடுமியையுடைய புதல்வனைப் பெற்று நெல்லுடைய நீண்ட மனையில் நின்னைப் பிரிந்து வாழ என்ன கடமையை உடையவளோ, மற்றே – மற்று, ஏ அசைநிலைகள், தன் முகத்து எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி – தன் முகத்தின் கண்மை எழுதப்பட்ட அழகு பாழ்படும்படி ஏங்கி அழுதவளாக, வடித்து என உருத்த தித்தி – பொன்னை உருக்கி வார்த்தாற்போன்ற தேமலையும் (உருத்த – உருவம் கொண்ட), பல் ஊழ் நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு கூர் நுனை மழுகிய எயிற்றள் – பல முறை நொடித்ததால் சிவந்த மெல்லிய விரல்களையும் திருகிக் கடித்ததால் கூரிய முனை மழுங்கிய பற்களையும் உடையாளாய், ஊர் முழுது நுவலும் நின் காணிய சென்மே – ஊரில் உள்ளவர்களால் பழி தூற்றப்படும் நின்னைக் காண்பதற்குச் செல்கின்றாள் (ஊர்– ஆகுபெயர் ஊர்மக்களுக்கு, சென்மே – முன்னிலை ஏவல் வினைமுற்று)

அகநானூறு 177, செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
“தொன்னலம் சிதையச் சாஅய் அல்கலும்
இன்னும் வாரார், இனி எவன் செய்கு?” எனப்
பெரும் புலம்புறுதல் ஓம்புமதி, சிறுகண்
இரும் பிடித் தடக்கை மான, நெய் அருந்து
ஒருங்கு பிணித்து இயன்ற வெறி கொள் ஐம்பால் 5
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார், காண்பின்
கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக்
கதிர் கதம் கற்ற ஏகல் நெறியிடைப்,
பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇக்,
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை 10
அயிரியாற்று அடைகரை வயிரின் நரலும்
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்,
வல்லே வருவர் போலும், வென்வேல்
இலை நிறம் பெயர ஓச்சி மாற்றோர்
மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த  15
கழற்கால் பண்ணன் காவிரி வடவயின்
நிழற்கயம் தழீஇய நெடுங்கால் மாவின்
தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த
அணங்குடை வன முலைத் தாஅய நின்
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே.  20

பாடல் பின்னணி:  தலைவனின் பிரிவின்கண் வருந்திய தலைவியிடம் தோழி கூறியது.  

பொருளுரை:  தோழி!  காண்பதற்கு இனிய மூங்கில் நிறைந்த பக்கமலையில், சுரபுன்னை மரங்களின் உச்சி வாடும்படி, ஞாயிற்றின் கதிர்கள் சினம் கற்ற பெருக்கமான கற்களையுடைய வழியின்கண், பசிய பாகற்கொடியின் சிவந்த பழத்தை விரும்பி காட்டிலுள்ள மயிலின் நிறைந்த சூலினை உடைய பெரிய பெடை அயிரியாற்றின் மணல் அடைந்த கரையில் ஊதுகொம்பு போல் ஒலிக்கும், காட்டினைக் கடந்துச் சென்ற நம் தலைவர் காலம் தாழ்த்தி வராது இருப்பார் ஆயினும்,

சிறிய கண்களையுடைய பெண் யானையின் பெரிய தும்பிக்கையை ஒத்த நெய் பூசப்பெற்று ஒரு சேர கட்டிவிட்ட நறுமணம் உடைய கூந்தலில் தேன் மணக்கும் நறுமண மலர்களைச் சூட்டவும், வெற்றி வேலின் இலையின் நிறம் மாறும்படிச் செலுத்திப் பகைவர்களின் மலை போன்ற யானைகளை மிக்க போரில் அழித்த, கால்களில் வீரக்கழல் அணிந்த பண்ணனின், காவிரி ஆற்றின் வடக்கில் சிறுகுடி என்னும் ஊரின்கண் உள்ள குளிர்ந்த குளத்தை ஒட்டி நிற்கும், நெடிய அடியையுடைய மா மரத்தின் தளிரை ஒத்த ஆகத்தில் அழகு அடைய அரும்பிய, வருத்தும் தன்மையுடைய நின் அழகிய முலைகளில் பரவிய தேமலுக்கு இடையே தொய்யில் எழுதுதலையும் நினைத்து, விரைவில் வருவார்.

பண்டைய அழகு சிதைய வருந்தி நாள்தோறும் ‘அவர் இன்னும் வந்திலர் இனி யான் என்ன செய்வேன்’ என்று மிக்க துன்புறுதலை ஒழிப்பாயாக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘தலைவரும் விழும நிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் ‘நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களை என மொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு’ என்னும் விதி கொள்க.  ஏகல் நெறி (8) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பெருகிய கற்கள் பொருந்திய சுரநெறி, உயர்ச்சியுடைய நெறியுமாம்.  ‘ஏகல் வெற்பன்’ (குறுந்தொகை 365) என்பது காண்க.  அயிரியாறு (11) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அயிரியாறு தமிழ்நாட்டின் வடக்கின்கண் உள்ளதோர் யாறு என்பது ‘வடுகர் பெருமகன் பேரிசை எருமை நன்னாட்டுள்ளதை அயிரியாறு இறந்தனர் ஆயினும்’ (அகநானூறு 253) என்பதனால் அறியப்படும்.  பண்ணன் காவிரி வடவயின் (16) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பண்ணனது ஊர் சிறுகுடி என்பதனை ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் பண்ணன் சிறுகுடிப் படைப்பை’ என்பதனால் அறியப்படும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பண்ணனின் ஊரின் பெயர் சிறுகுடி.  அணங்குடை வன முலை (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வீற்றுத்தெய்வம் உறைகின்ற அழகிய முலைகள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வருத்தும் இயல்புடைய அழகிய முலை. ஒப்புமை – அகநானூறு 15 – மயில் பாகற் கனியை உண்ணுதலை பாகல் ஆர்கைப் பறைக் கண் பீலித்தோகை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம், உரியியல் 57).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).   – ஏ பெற்று ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 7).

சொற்பொருள்:  தொல் நலம் சிதையச் சாஅய் அல்கலும் இன்னும் வாரார், இனி எவன் செய்கு எனப் பெரும் புலம்புறுதல் ஓம்புமதி – பண்டைய அழகு சிதைய வருந்தி நாள்தோறும் ‘அவர் இன்னும் வந்திலர் இனி யான் என்ன செய்வேன்’ என்று மிக்க துன்புறுதலை ஒழிப்பாயாக (நலம் – அழகு, சாஅய் – அளபெடை, செய்கு தன்மை ஒருமை வினைமுற்று, மதி – முன்னிலையசை), சிறுகண் இரும் பிடித் தடக்கை மான நெய் அருந்து ஒருங்கு பிணித்து இயன்ற வெறி கொள் ஐம்பால் தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார் – சிறிய கண்களையுடைய பெண் யானையின் பெரிய தும்பிக்கையை ஒத்த நெய் பூசப்பெற்று ஒரு சேர கட்டிவிட்ட நறுமணம் உடைய கூந்தலில் தேன் மணக்கும் நறுமண மலர்களைச் சூட்டவும் (மான – உவம உருபு, ஆர்ந்து என்பது அருந்து என வந்தது, தேம் – தேன் என்றதன் திரிபு), காண்பு இன் கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக் கதிர் கதம் கற்ற ஏ கல் நெறியிடை – காண்பதற்கு இனிய மூங்கில் நிறைந்த பக்கமலையில் சுரபுன்னை மரங்களின் உச்சி வாடும்படி ஞாயிற்றின் கதிர்கள் சினம் கற்ற பெருக்கமான கற்களையுடைய வழியின்கண் (உயர்ந்த மலைகளுடைய வழியின்கண்), (அமல் – செறிந்த, சுரபுன்னை மரம் – Long–leaved two–sepalled gamboge flower tree, ochrocarpus longifolius, sarangi, கதம் – சினம்), பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇக் கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை அயிரியாற்று அடைகரை வயிரின் நரலும் – பசிய பாகற்கொடியின் சிவந்த பழத்தை விரும்பி காட்டிலுள்ள மயிலின் நிறைந்த சூலினை உடைய பெரிய பெடை அயிரியாற்றின் மணல் அடைந்த கரையில் ஊதுகொம்பு போல் ஒலிக்கும் (நசைஇ – அளபெடை, கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது, வயிரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது) காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும் – காட்டினைக் கடந்துச் சென்ற நம் தலைவர் காலம் தாழ்த்தி வராது இருப்பார் ஆயினும், வல்லே வருவர் – விரைவில் வருவார், போலும் – ஒப்பில் போலி, வென்வேல் இலை நிறம் பெயர ஓச்சி மாற்றோர் மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த கழற்கால் பண்ணன் – வெற்றி வேலின் இலையின் நிறம் மாறும்படிச் செலுத்திப் பகைவர்களின் மலை போன்ற யானைகளை மிக்க போரில் அழித்த கால்களில் வீரக்கழல் அணிந்த பண்ணனின் (மருள் – உவம உருபு), காவிரி வடவயின் நிழற் கயம் தழீஇய – காவிரி ஆற்றின் வடக்கில் உள்ள குளிர்ந்த குளத்தை ஒட்டி நிற்கும் (தழீஇய – அளபெடை), நெடுங்கால் மாவின் தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த – நெடிய அடியையுடைய மா மரத்தின் தளிரை ஒத்த ஆகத்தில் அழகு அடைய அரும்பிய (ஏர் – உவம உருபு), அணங்குடை வன முலைத் தாஅய நின் சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே – வருத்தும் தன்மையுடைய நின் அழகிய முலைகளில் பரவிய தேமலுக்கு இடையே தொய்யில் எழுதுதலையும் நினைத்து (தாஅய – அளபெடை, நினைந்தே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 178, பரணர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது
வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின்,
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி
பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி,
நீலத்து அன்ன அகல் இலைச் சேம்பின்
பிண்டம் அன்ன கொழுங்கிழங்கு மாந்தி,  5
பிடி மடிந்தன்ன கல் மிசை ஊழ் இழிபு
யாறு சேர்ந்தன்ன ஊறு நீர்ப் படாஅர்ப்
பைம் புதல் நளி சினைக் குருகு இருந்தன்ன,
வண் பிணி அவிழ்ந்த வெண்கூதாளத்து
அலங்கு குலை அலரி தீண்டித் தாது உக  10
பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வரக்
கிளை அமல் சிறு தினை விளை குரல் மேய்ந்து,
கண் இனிது படுக்கும் நன் மலை நாடனொடு
உணர்ந்தனை புணர்ந்த நீயும், நின் தோள்
பணைக் கவின் அழியாது துணைப் புணர்ந்து என்றும்  15
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி,
‘எல்லையும் இரவும் என்னாது கல்லெனக்
கொண்டல் வான்மழை பொழிந்த வைகறைத்
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது’ எனக்
கனவினும் பிரிவு அறியலனே, அதன்தலை  20
முன் தான் கண்ட ஞான்றினும்
பின் பெரிது அளிக்கும் தன் பண்பினானே.

பாடல் பின்னணி:  தலைவன் தலைவியை மணந்து கொள்ள வருதலை அறிந்த தோழி, அதனைத் தலைவிக்குக் கூறியது.  

பொருளுரை:  தோழி!  வயிரத்தை ஒத்த கூரிய உயர்ந்திருக்கும் கோட்டினையும், மூங்கிலின் வேரை ஒத்த பருத்த மயிரையுமுடைய பன்றி, பறையின் கண்ணை ஒத்த நிறைந்த சுனையில் நீரைக் குடித்து விட்டு, நீலமணி போன்ற நிறத்தையுடைய அகன்ற இலைகளையுடைய சேம்பின் பிண்டம் போன்ற கொழுத்த கிழங்கினை உண்டு, அதன்பின், பெண் யானை துயின்று கிடந்தாற்போல் தோன்றிய பாறையின் மீது முறையாக இறங்கி வந்து, ஆற்றின்கண் சேர்ந்தாற்போல் நீர் ஊறும் இடத்தில் உள்ள சிறு தூறுகளையுடைய, பசிய புதர்களின் செறிந்த கிளைகளில் வெண்குருகுகள் இருந்தாற்போல், வளம் பொருந்திய கட்டு அவிழ்ந்து மலர்ந்த, வெண்கூதாளத்தின் அசையும் குலைகளில் உள்ள மலர்களைத் தீண்டி, அவற்றின் பூந்தாது உதிர்ந்ததால், பொன்னை உரைக்கும் கட்டளைக்கல் அன்ன அழகாகத் தோன்றி, கிளைகள் செறிந்த சிறு தினையின் விளைந்த கதிர்க் கொத்துக்களை உண்டு, இனிது கண்ணுறங்கும் நல்ல மலைநாட்டையுடைய தலைவனுடன், அவன் பண்பாட்டை உணர்ந்து அவனுடன் கூடிய நீயும், நின் தோள்களின் மூங்கில் போன்ற அழகு அழியாது நின் தலைவனுடன் சேர்ந்து வாழ்ந்து என்றும் கெடாத மறுமை உலகத்தில் வாழ்வீராக! 

பகலும் இரவும் என்றில்லாது, கல்லென்னும் ஒலியுடன் முகில்கள் பெரும் மழையைப் பெய்த விடியற்காலையில், குளிர்ந்த பனியையுடைய அற்சிரக்காலம் தனித்திருப்பவர்களுக்கு தங்குவதற்கு அரிது, என்று கனவிலும் அவன் உன்னிடமிருந்துப் பிரிதலை அறியான்.  அதற்கு மேலும், முதன்முதலில் தான் கண்ட நாளைவிடவும், பின் வரும் நாட்களில் பெரிதும் அருள் செய்யும் பண்பினன் அவன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என்னும் நூற்பாவின்கண் ‘ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட’ என்னும் விதி கொள்க.  உள்ளுறை – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பன்றி சுனை பருகிக் கிழங்கு மாந்தித் தினை விளை குரல் மேய்ந்து இனிது கண்படுக்கும் நாடன் என்றது, தலைவன் தான் கருதிய பொருளெலாம் பெற்றுத் தலைவியை மணந்து இன்பந் துய்த்து இனிது வாழ்வான் என்றபடியாம்.  ஒப்புமை – அகநானூறு 57 – இற்றிப் புன்தலை நெடுவீழ் இரும்பிணர்த் துறுகல் தீண்டி வளி பொரப் பெருங்கை யானை நிவப்பின் தூங்கும், அகநானூறு 178 – பிடி மடிந்தன்ன கல், அகநானூறு 269 – பிடி மடிந்தன்ன குறுந்தொகை 13 – மாசு அறக் கழீஇய யானை போலப் பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல், குறுந்தொகை 36 – துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சு களிறு இவரும், குறுந்தொகை 111 – கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன கேழ் இருந்துறுகல், குறுந்தொகை 279 – மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் துகள் சூழ் யானையிற் பொலியத் தோன்றும், கலித்தொகை 108 – பிடி துஞ்சு அன்ன அறை, ஐங்குறுநூறு 239 – புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம்.  வயிரத்தன்ன வை ஏந்து மருப்பின் (1) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வைரத்தை ஒத்த கூரிய மேனோக்கிய கோட்டினையுடைய. வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

சொற்பொருள்:  வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின் வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி – வயிரத்தை ஒத்த கூரிய உயர்ந்திருக்கும் கோட்டினையும் மூங்கிலின் வேரை ஒத்த பருத்த மயிரையுமுடைய பன்றி (வயிரத்து – வயிரம், அத்துச் சாரியை,  பரூஉ – அளபெடை), பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி நீலத்து அன்ன அகல் இலைச் சேம்பின் பிண்டம் அன்ன கொழுங்கிழங்கு மாந்தி – பறையின் கண்ணை ஒத்த நிறைந்த சுனையில் நீரைக் குடித்து விட்டு நீலமணி போன்ற நிறத்தையுடைய அகன்ற இலைகளையுடைய சேம்பின் பிண்டம் போன்ற கொழுத்த கிழங்கினை உண்டு (நீலத்து – நீலம், அத்துச் சாரியை, பிண்டம் = மாவுப் பிண்டம், சோற்றுப் பிண்டம்), பிடி மடிந்தன்ன கல் மிசை ஊழ் இழிபு – பெண் யானை துயின்று கிடந்தாற்போல் தோன்றிய பாறையின் மீது முறையாக இறங்கி வந்து,  யாறு சேர்ந்தன்ன ஊறு நீர்ப் படாஅர் – ஆற்றின்கண் சேர்ந்தாற்போல் நீர் ஊறும் இடத்தில் உள்ள சிறு தூறுகளையுடைய, பைம் புதல் நளி சினைக் குருகு இருந்தன்ன – பசிய புதர்களின் செறிந்த கிளைகளில் வெண்குருகுகள் இருந்தாற்போல் (படாஅர் – அளபெடை), வண் பிணி அவிழ்ந்த – வளம் பொருந்திய கட்டு அவிழ்ந்து மலர்ந்த, வெண்கூதாளத்து அலங்கு குலை அலரி தீண்டித் தாது உக பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வர – வெண்கூதாளத்தின் அசையும் குலைகளில் உள்ள மலர்களைத் தீண்டி அவற்றின் பூந்தாது உதிர்ந்ததால் பொன்னை உரைக்கும் கட்டளைக்கல் அன்ன அழகாகத் தோன்றி (வெண்கூதாளம் – Convolvulus ipome, a three–lobed nightshade vine, கடுப்ப – உவம உருபு), கிளை அமல் சிறு தினை விளை குரல் மேய்ந்து – கிளைகள் செறிந்த சிறு தினையின் விளைந்த கதிர்க்கொத்துக்களை உண்டு (அமல் – செறிந்த), கண் இனிது படுக்கும் நன் மலை நாடனொடு – இனிது கண்ணுறங்கும் நல்ல மலைநாட்டையுடைய தலைவனுடன், உணர்ந்தனை புணர்ந்த நீயும் – அவன் பண்பாட்டை உணர்ந்து அவனுடன் கூடிய நீயும், நின் தோள் பணைக் கவின் அழியாது துணைப் புணர்ந்து என்றும் தவல் இல் உலகத்து உறைஇயரோ – நின் தோள்களின் மூங்கில் போன்ற அழகு அழியாது நின் தலைவனுடன் சேர்ந்து வாழ்ந்து என்றும் கெடாத மறுமை உலகத்தில் வாழ்வீராக உறைஇயரோ – ஓகாரம் அசைநிலை), தோழி – தோழி, ‘எல்லையும் இரவும் என்னாது கல்லெனக் கொண்டல் வான்மழை பொழிந்த வைகறைத் தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது – பகலும் இரவும் என்றில்லாது கல்லென்னும் ஒலியுடன் முகில்கள் பெரும் மழையைப் பெய்த விடியற்காலையில் குளிர்ந்த பனியையுடைய அற்சிரக்காலம் தனித்திருப்பவர்களுக்கு தங்குவதற்கு அரிது, எனக் கனவினும் பிரிவு அறியலனே – என்று கனவிலும் பிரிதலை அறியான், அதன்தலை முன் தான் கண்ட ஞான்றினும் பின் பெரிது அளிக்கும் தன் பண்பினானே – அதற்கு மேலும் முதன்முதலில் தான் கண்ட நாளினும் பின் வரும் நாட்களில் பெரிதும் அருள் செய்யும் பண்பினன் அவன் (பண்பினானே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 179, கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார், பாலைத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
வெண்தேர் ஓடும் கடங்காய் மருங்கில்
துனை எரி பரந்த துன்னரும் வியன் காட்டுச்,
சிறுகண் யானை நெடுங்கை நீட்டி
வான்வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது,  5
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின்
விடுவாய்ச் செங்கணைக் கொடு வில் ஆடவர்
நல் நிலை பொறித்த கல் நிலை அதர
அரம்பு கொள் பூசல் களையுநர்க் காணாச்
சுரம் செல விரும்பினிர் ஆயின், இன் நகை  10
முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர் வாய்
குவளை நாள் மலர் புரையும் உண்கண் இம்
மதி ஏர் வாணுதல் புலம்ப,
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ நுமக்கே?

பாடல் பின்னணி:  பிரிவு உணர்த்திய தலைவனுக்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது.  

பொருளுரை:  தலைவா!  விண்ணைத் தொடும் உச்சியையுடைய பெருமை பொருந்திய மலையின் பக்கமலையின்கண், பேய்த்தேர் (கானல்நீர்) ஓடும் காய்ந்த காட்டின் பக்கத்தில், விரைந்த தீ பரவிய நெருங்குதற்கு அரிய பெரிய காட்டில், சிறிய கண்களையுடைய யானை, நெடிய தும்பிக்கையை நீட்டி பெரிய வாயினைத் திறந்தும் வளவிய நீரைப் பெறாமையினால் காட்டை வெறுத்து நீங்கும் இடம் அகன்ற நிலப்பரப்பில், இலக்கு தப்பாமல் விடுதல் வாய்ந்த சிவந்த அம்பினையும் வளைந்த வில்லையும் கொண்ட மறவர்களின் நல்ல வெற்றி நிலை பொறித்த நடுகற்கள் நிலைகொண்ட வழிகளையுடைய, ஆரலைகள்வர்கள் வருத்தம் செய்யும் பூசலை நீக்குபவர்களைக் காணாத சுரத்தைக் கடந்து செல்ல விரும்பினீர் ஆனால், இனிய புன்னகையையும் மயில் இறகின் அடியெனத் திரண்ட முள் போலும் கூரிய பற்களையும் சிவந்த வாயினையும் குவளையில் அன்று மலர்ந்த மலர் போன்ற மையுண்ட கண்களையும் ஒளியுடைய நெற்றியையுமுடைய இவள் வருந்த, நம் இல்லத்திலிருந்து நீங்கி வேற்று நாட்டில் தங்குவது பொருந்துமோ நுமக்கு?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘தலைவரும் விழும நிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 39) என்னும் விதி கொள்க.  ஒப்புமை – அகநானூறு 179 – முருந்து எனத் திரண்ட முள் எயிற்று, அகநானூறு 193 – முருந்து ஏர் முறுவல் இளையோள், நற்றிணை 179 – முருந்து ஏர் வெண்பல் முகிழ் நகை.  விடுவாய் (7) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – விடுதல் வாய்ந்த, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இலக்குத் தப்பாமல் விடுதற்கியன்ற.  அரம்புகொள் பூசல் (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆறலைக்கள்வர் செய்யும் குறும்புடைய கலகம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – குறும்பர்கள் செய்யும் பூசல்.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 71).

சொற்பொருள்:  விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன் வெண்தேர் ஓடும் கடம் காய் மருங்கில் – விண்ணைத் தொடும் உச்சியையுடைய பெருமை பொருந்திய மலையின் பக்கமலையின்கண் பேய்த்தேர் (கானல்நீர்) ஓடும் காய்ந்த காட்டின் பக்கத்தில் (கவாஅன் – அளபெடை), துனை எரி பரந்த துன்னரும் வியன் காட்டுச் சிறுகண் யானை – விரைந்த தீ பரவிய நெருங்குதற்கு அரிய பெரிய காட்டில் சிறிய கண்களையுடைய யானை, நெடுங்கை நீட்டி வான்வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின் – நெடிய தும்பிக்கையை நீட்டி பெரிய வாயினைத் திறந்தும் வளவிய நீரைப் பெறாமையினால் காட்டை வெறுத்து நீங்கும் இடம் அகன்ற நிலப்பரப்பில் (பெறாஅது – அளபெடை), விடுவாய்ச் செங்கணைக் கொடு வில் ஆடவர் நல் நிலை பொறித்த கல் நிலை அதர – இலக்கு தப்பாமல் விடுதல் வாய்ந்த சிவந்த அம்பினையும் வளைந்த வில்லையும் கொண்ட மறவர்களின் நல்ல வெற்றி நிலை பொறித்த நடுகற்கள் நிலைகொண்ட வழிகளையுடைய, அரம்பு கொள் பூசல் களையுநர்க் காணாச் சுரம் செல விரும்பினிர் ஆயின் – ஆரலைகள்வர்கள் வருத்தம் செய்யும் பூசலை நீக்குபவர்களைக் காணாத சுரத்தைக் கடந்து செல்ல விரும்பினீர் ஆனால் (அரம்பு – வருத்தம், செல – செல்ல என்பதன் இடைக்குறை), இன் நகை முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர் வாய் குவளை நாள் மலர் புரையும் உண்கண் இம் மதி ஏர் வாணுதல் புலம்ப – இனிய புன்னகையையும் மயில் இறகின் அடியெனத் திரண்ட முள் போலும் கூரிய பற்களையும் சிவந்த வாயினையும் குவளையில் அன்று மலர்ந்த மலர் போன்ற மையுண்ட கண்களையும் ஒளியுடைய நெற்றியையுமுடைய இவள் வருந்த, பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ நுமக்கே – நம் இல்லத்திலிருந்து நீங்கி வேற்று நாட்டில் தங்குவது பொருந்துமோ நுமக்கு (நுமக்கே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 180, கருவூர்க் கண்ணம்பாளனார், நெய்தல் திணைதோழி தலைவியிடம் சொன்னது, அல்லது தலைவி தோழியிடம் சொன்னது சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நகை நனி உடைத்தால் தோழி! தகை மிக
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி
வீ ததை கானல் வண்டல் அயர,
கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து
தண் கயத்து அமன்ற ஒண் பூங்குவளை 5
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி
பின்னுப்புறம் தாழக் கொன்னே சூட்டி,
நல்வரல் இளமுலை நோக்கி நெடிது நினைந்து
நில்லாது பெயர்ந்தனன் ஒருவன், அதற்கே
புலவு நாறு இருங்கழி துழைஇப் பல உடன்  10
புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந்தோட்டுத்
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇப்,
படப்பை நின்ற முடத்தாள் புன்னைப்
பொன் நேர் நுண் தாது நோக்கி,
என்னும் நோக்கும் இவ் அழுங்கல் ஊரே.  15

பாடல் பின்னணி:  (1) இரந்து பின்னின்ற தலைவனுக்குக் குறை நேர்ந்த தோழி, தலைவிக்குக் கூறியது. (2) தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவி தோழிக்குக் கூறியது.   புலியூர்க்கேசிகன் விளக்கம் – யாதோ ஒரு காரணம் பற்றி தலைவி தலைவனோடு ஊடி இருக்கின்றாள். அவன் தோழிபால் தனக்கு உதவ வேண்டுகின்றான்.  அவனுக்குச் சாதகமாக தலைவியை இசைவிக்கச் சென்று வேண்டும் தோழி, இப்படிக் கூறுகின்றாள்.  அல்லது, தலைவன் வரைதல் வேட்கையற்றுப் பிரிந்துறைதலால் ஊடிய தலைவியானவள், அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குத் தன் நிலைமையை இப்படி விளக்கிக் கூறுகின்றாள்.

பொருளுரை:  தோழி!  இது நகைச்சுவை மிகவும் உடையது.  தகைமை மிகுந்த மாலைகள் அணிந்த தோழியருடன் குவிந்த மணல் மேட்டில் ஏறி மலர்கள் செறிந்த கடற்கரைச் சோலையில் யான் விளையாடுதல் செய்ய, விரைந்து ஓடும் குதிரைகளையுடைய வலிய தேரைச் செலுத்தி வந்து, குளிர்ந்த குளத்தில் நிறைந்த ஒளிரும் பூக்களையுடைய குவளையில் அரும்பை விரித்துக்கட்டிய வண்டுகள் மொய்க்கும் மலர்ச்சரத்தை பின்னலைக் கொண்ட முதுகில் நான் விரும்பாதிருக்கவும் தாழச் சூட்டி, நன்கு வளர்ந்த என் இளமுலைகளை நோக்கி, நீண்ட நேரம் நினைந்து அங்கு நிற்காது போயினான்.  அந்த அளவிற்கே, புலால் நாற்றம் வீசும் உப்பங்கழியைத் துழாவிப் பலவகைப் பறவைகளும் சேர்ந்து தங்கியிருக்கும், முள்ளுடைய நெடிய மடல்களையுடைய தாழையைச் சேர்ந்து புலிநகக் கொன்றையுடன் பொருந்தி, தோட்டத்தில் நிற்கும் வளைந்த அடியையுடைய புன்னை மரத்தின் பொன்னை ஒத்த நுண்ணிய தாதினை நோக்கி, என்னையும் நோக்கும், இந்த ஆரவாரம் மிக்க ஊர்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – (1) இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘குறைந்து அவட் படரினும்’ எனவரும் விதி கொள்க.  (2) இதற்கு, ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்னும் விதி கொள்க.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  கொன்னே (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யான் விரும்பாதிருக்கவும் வாளாது, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – யான் வேண்டாதே.  பொன் நேர் நுண் தாது நோக்கி (14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இப்பொன்னிறப் புன்னை பூந்தாது போல் இவள் மேனியும் பொன்னிறப் பசலை பூத்துள்ளது என்று ஒப்பு நோக்கிக் காண்பர் என்றவாறு.

சொற்பொருள்:  நகை நனி உடைத்தால் – நகைச்சுவை மிகவும் உடையது (ஆல் –அசைநிலை), தோழி – தோழி, தகை மிக கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி வீ ததை கானல் வண்டல் அயர – தகைமை மிகுந்த மாலைகள் அணிந்த தோழியருடன் குவிந்த மணல் மேட்டில் ஏறி மலர்கள் செறிந்த கடற்கரைச் சோலையில் விளையாடுதல் செய்ய, கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து – விரைந்து ஓடும் குதிரைகளையுடைய வலிய தேரைச் செலுத்தி வந்து  (கடைஇ – அளபெடை), தண் கயத்து அமன்ற ஒண் பூங்குவளை அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி பின்னுப்புறம் தாழக் கொன்னே சூட்டி – குளிர்ந்த குளத்தில் நிறைந்த ஒளிரும் பூக்களையுடைய குவளையில் அரும்பை விரித்துக்கட்டிய வண்டுகள் மொய்க்கும் மலர்ச்சரத்தை பின்னலைக் கொண்ட முதுகில் நான் விரும்பாதிருக்கவும் தாழச் சூட்டி, நல்வரல் இளமுலை நோக்கி நெடிது நினைந்து நில்லாது பெயர்ந்தனன் ஒருவன் – நன்கு வளர்ந்த இளமுலைகளை நோக்கி நீண்ட நேரம் நினைந்து அங்கு நிற்காது போயினான், அதற்கே – அந்த அளவிற்கே, புலவு நாறு இருங்கழி துழைஇப் பல உடன் புள் இறை கொண்ட – புலால் நாற்றம் வீசும் உப்பங்கழியைத் துழாவிப் பலவகைப் பறவைகளும் சேர்ந்து தங்கியிருக்கும்  (துழைஇ – அளபெடை), முள்ளுடை நெடுந்தோட்டுத் தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ – முள்ளுடைய நெடிய மடல்களையுடைய தாழையைச் சேர்ந்து புலிநகக் கொன்றையுடன் பொருந்தி, படப்பை நின்ற முடத்தாள் புன்னைப் பொன் நேர் நுண் தாது நோக்கி என்னும் நோக்கும் – தோட்டத்தில் நிற்கும் வளைந்த அடியையுடைய புன்னை மரத்தின் பொன்னை ஒத்த நுண்ணிய தாதினை நோக்கி என்னையும் நோக்கும் (புன்னை மரம் – Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree), இவ் அழுங்கல் ஊரே – இந்த ஆரவாரம் மிக்க ஊர் (ஊரே – ஊர் ஆகுபெயர் மக்களுக்கு, ஏகாரம் –அசைநிலை)

அகநானூறு 181, பரணர், பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
துன் அருங்கானமும் துணிதல் ஆற்றாய்,
பின் நின்று பெயரச் சூழ்ந்தனை ஆயின்,
என் நிலை உரைமோ நெஞ்சே, ஒன்னார்
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந்தானை
அடு போர் மிஞிலி செருவிற்கு உடைஇ,  5
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப,
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு
விசும்பிடை தூர ஆடி மொசிந்து உடன், 10
பூவிரி அகன் துறைக் கணை விசைக் கடு நீர்க்
காவிரிப் பேர்யாற்று அயிர் கொண்டு ஈண்டி,
எக்கர் இட்ட குப்பை வெண்மணல்
வைப்பின் யாணர் வளங்கெழு வேந்தர்
ஞாலம் நாறும் நலங்கெழு நல்லிசை  15
நான்மறை முதுநூல் முக்கண் செல்வன்
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
கை செய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
மகர நெற்றி வான் தோய் புரிசைச் 20
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்
புகாஅர் நல் நாட்டதுவே, பகாஅர்
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால்,
பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென்தோள்,
அணங்கு சால் அரிவை இருந்த  25
மணம் கமழ் மறுகின் மணல் பெருங்குன்றே.

பாடல் பின்னணி:  வினைமேல் செல்லும் தலைவன் இடைவழியில் தலைவியை நினைத்து, மீளக் கருதிய தன் நெஞ்சை இடித்துரைத்தது.   

பொருளுரை:  என் நெஞ்சே!  பல்வேறு பொருட்களை விற்பவர்களின் நறுமணப் பண்டங்களின் மணம் கமழ்கின்ற, வண்டுகள் மொய்க்கும் ஐந்து பகுதியாக உள்ள கூந்தலையும், மூங்கிலின் தகைமையுடைய, வளைந்த, காண்பதற்கு இனிய மெல்லிய தோள்களையுமுடைய அழகு மிக்க நம் தலைவியிருந்த, மணம் கமழும் தெருக்களையுடைய மணலால் இயன்ற பெரிய குன்றம்,

ஆய் எயினன் என்பவன், முருகனை ஒத்த வலிமையுடன், பகைவர்கள் பாதுகாக்கும் அரண்களை வென்ற மிக்க பெரிய சேனைகளையுடைய கொல்லும் போரில் வல்ல மிஞிலி என்பவனுடன் போரிட்டுப் போர்க்களம் குருதியால் சிவப்ப, தோற்று வீழ்ந்தான் என, கதிரவனின் ஒளிரும் கதிர்களின் வெப்பம் அவன் உடலில் படாது மறைக்க, புதிய பறவைகளின் ஆரவாரம் பொருந்திய பெரிய கூட்டம் வானில் வட்டமிட்டுப் பறந்து, அதன் பின் ஒன்று கூடி, பூக்கள் விரிந்த அகன்ற துறையை உடைய காவிரியாகிய பெரிய ஆற்றின் மிக்க விரைவுடன் வரும் நீர், நுண்மணலைக் கொண்டு திரட்டி மேடாக்கிய வெள்ளை மணல் குவியல்களையும் புது வருவாயையுமுடைய ஊர்களையுடைய செல்வம் மிக்க சோழ வேந்தரால் பாதுகாக்கப்படும், உலகமெங்கும் பரவும் நன்மை பொருந்திய நல்ல புகழையுடைய நான்கு வேதங்களாகிய பழைய நூலை மூன்று கண்களையுடைய சிவபெருமானின் ஆலமுற்றும் என்னும் இடத்தில், அழகு பெற இயற்றப்பட்ட பொய்கையைச் சூழ்ந்துள்ள பொழிலில், சிற்றில் புனைந்து விளையாடும் சிறுமிகளின் செய்யப்பட்ட பாவைகளையுடைய துறையின்கண், அப்பறவைகள் வந்து தங்கும், மீன் கொடியை உச்சியில் கொண்ட வானைத் தொடும் மதிலையும் மிகவும் உயர்ந்த நல்ல இல்லங்களையுமுடைய காவிரிப்பூம்பட்டினத்தை உடைய நல்ல சோழ நாட்டின்கண் உள்ளதாகும்.  

நெருங்குவதற்கு அரிய காட்டைக் கடக்க நீ துணிவு இல்லாதாய் உள்ளாய்.  பின்னால் நின்று பெயர்ந்து என் தலைவியின்பால் மீளக் கருதினை ஆயின், என் நிலையினை அவளிடம் கூறுவாயாக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  மகர நெற்றி (20) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மகர மீனின் முதுகு போன்ற உச்சியையுடைய, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மகரக் கொடியினை உச்சியிற் கொண்ட.  வரலாறு –மிஞிலி, ஆஅய் எயினன், ஆலமுற்றம், புகாஅர் (காவிரிப்பூம்பட்டினம்), பேர்யாறு (காவிரி).  மிஞிலி என்பவன் ஆய் எயினன் என்பவனைக் கொல்லுதல் – அகநானூறு 148, 181, 208.  இவை யாவும் புலவர் பரணரின் பாடல்கள்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  கம்பலை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்:  துன் அருங்கானமும் துணிதல் ஆற்றாய் – நெருங்குவதற்கு அரிய காட்டைக் கடக்க நீ துணிவு இல்லாதாய் உள்ளாய் (கானமும் – உம் எச்சப்பொருட்டு, அசைநிலையுமாம்), பின் நின்று பெயரச் சூழ்ந்தனை ஆயின் என் நிலை உரைமோ – பின்னால் நின்று பெயர்ந்து என் தலைவியின்பால் மீளக் கருதினை ஆயின் என் நிலையினை அவளிடம் கூறுவாயாக (மோ – முன்னிலையசை), நெஞ்சே – என் நெஞ்சே, ஒன்னார் ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந்தானை அடு போர் மிஞிலி செருவிற்கு உடைஇ – பகைவர்கள் பாதுகாக்கும் அரண்களை வென்ற மிக்க பெரிய சேனைகளையுடைய கொல்லும் போரில் வல்ல மிஞிலி என்பவனுடன் போரிட்டுத் தோற்று வீழ்ந்தான் (உடைஇ – அளபெடை), முருகு உறழ் முன்பொடு – முருகனை ஒத்த வலிமையுடன் (உறழ் – உவம உருபு), பொருது களம் சிவப்ப – போரிட்டுப் போர்க்களம் குருதியால் சிவப்ப, ஆஅய் எயினன் வீழ்ந்தென – ஆய் எயினன் என்பவன் வீழ்ந்தான் என (ஆஅய் – அளபெடை), ஞாயிற்று ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு விசும்பு இடை தூர ஆடி மொசிந்து உடன் – கதிரவனின் ஒளிரும் கதிர்களின் வெப்பம் அவன் உடலில் படாது மறைக்க புதிய பறவைகளின் ஆரவாரம் பொருந்திய பெரிய கூட்டம் வானில் வட்டமிட்டுப் பறந்து ஒன்று கூடி, பூவிரி அகன் துறைக் கனை விசைக் கடு நீர்க் காவிரிப் பேர்யாற்று – பூக்கள் விரிந்த அகன்ற துறையை உடைய காவிரியாகிய பெரிய ஆற்றின் மிக்க விரைவுடன் வரும் நீர், அயிர் கொண்டு ஈண்டி எக்கர் இட்ட குப்பை வெண்மணல் வைப்பின் யாணர் வளங்கெழு வேந்தர் – நுண்மணலைக் கொண்டு திரட்டி மேடாக்கிய வெள்ளை மணல் குவியல்களையும் புது வருவாயையுமுடைய ஊர்களையுடைய செல்வம் மிக்க சோழ வேந்தரால் பாதுகாக்கப்படும், ஞாலம் நாறும் நலங்கெழு நல்லிசை நான்மறை முதுநூல் முக்கண் செல்வன் ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய பொய்கை சூழ்ந்த பொழில் – உலகமெங்கும் பரவும் நன்மை பொருந்திய நல்ல புகழையுடைய நான்கு வேதங்களாகிய பழைய நூலை மூன்று கண்களையுடைய சிவபெருமானின் ஆலமுற்றும் என்னும் இடத்தில் அழகு பெற இயற்றப்பட்ட பொய்கையைச் சூழ்ந்துள்ள பொழிலில் (தைஇய – அளபெடை), மனை மகளிர் கை செய் பாவைத் துறைக்கண் இறுக்கும் – சிற்றில் புனைந்து விளையாடும் சிறுமிகளின் செய்யப்பட்ட பாவைகளையுடைய துறையின்கண் வந்து தங்கும், மகர நெற்றி வான் தோய் புரிசைச் சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல் புகாஅர் நல் நாட்டதுவே – மீன் கொடியை உச்சியில் கொண்ட வானைத் தொடும் மதிலையும் மிகவும் உயர்ந்த நல்ல இல்லங்களையுமுடைய காவிரிப்பூம்பட்டினத்தை உடைய நல்ல சோழ நாட்டின்கண் உள்ளதாகும் (புகாஅர் – அளபெடை), பகாஅர் பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால் பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென்தோள் அணங்கு சால் அரிவை இருந்த  மணம் கமழ் மறுகின் மணல் பெருங்குன்றே – விற்பவர்களின் நறுமணப் பண்டங்களின் மணம் கமழ்கின்ற வண்டுகள் மொய்க்கும் ஐந்து பகுதியாக உள்ள கூந்தலையும் மூங்கிலின் தகைமையுடைய வளைந்த காண்பதற்கு இனிய மெல்லிய தோள்களையுமுடைய அழகு மிக்க நம் தலைவியிருந்த மணம் கமழும் தெருக்களையுடைய மணலால் இயன்ற பெரிய குன்றம் (பகாஅர் – அளபெடை, பகர்வார் என்பது பகாஅர் எனத் திரிந்து நின்றது, தடைஇய – தட என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினை, அளபெடை, பெருங்குன்றே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 182, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
பூங்கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து,
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ,
தீம் பழப் பலவின் சுளை விளை தேறல்
வீளை அம்பின் இளையரொடு மாந்தி,
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட,  5
வேட்டம் போகிய குறவன் காட்ட
குளவித் தண் புதல் குருதியொடு துயல்வர,
முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட!
அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து
உரவு மழை பொழிந்த பானாள் கங்குல்  10
தனியை வந்த ஆறு நினைந்து அல்கலும்,
பனியொடு கலுழும் இவள் கண்ணே அதனால்
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய,
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ
உயர் சிமை நெடுங்கோட்டு உகள, உக்க  15
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன்
வெறி அயர் வியன் களம் கடுக்கும்
பெருவரை நண்ணிய சாரலானே.

பாடல் பின்னணி:  இரவில் வரும் தலைவனைப் பகலில் வா என்றது.  

பொருளுரை:  அழகிய இடத்தில் நிற்கும் வேங்கை மரத்தின் பொன்னிற பூங்கொத்துக்களைச் சூடி, வளைந்த மூங்கிலால் செய்த வலிய வில்லைத் தோளில் மாட்டிக்கொண்டு, இனிய பலாப்பழத்தின் சுளைகளிருந்து விளைந்த மதுவினை சீழ்க்கை ஒலியுடன் செல்லும் அம்பினையுடைய இளைய ஏவலர்களுடன் குடித்து, விலங்குகளைத் துரத்திப் பற்றும் தன்மையில் பிழை இல்லாத வலிய நாய்கள் பின்னால் வர, வேட்டைக்குச் சென்ற குறவன், காட்டில் மல்லிகையின் குளிர்ந்த புதர் குருதியுடன் அசையும்படி, அதன்கண் பதுங்கியிருக்கும் முளவுப் பன்றியைக் கொன்று வீழ்த்தும் மலை நாடனே!

பாம்பினைத் தாக்கிக் கொல்லும் இடியுடன் கூடிய மழைக்கால் இறங்கி பெரு மழை விழுந்த நடுஇரவில், நீ தனியாக வந்த வழியை நினைந்து நாள்தோறும் இவளுடைய கண்கள் கலங்கிக் கண்ணீர் வடிக்கும்.  அதனால், அதிரும் குரலையுடைய முதிய முசுக்கலை மிளகின் தளிரை உண்டு வெறுத்து உயர்ந்த உச்சியையுடைய மலையின்கண் உள்ள நெடிய மரக்கிளைகளில் தாவுவதால் மணம் கமழும் இதழ்களையுடைய மலர்கள் பரந்து வேலனின் வெறியாடும் களத்தை ஒக்கும் பெரிய மலையை அடுத்துள்ள மலைச்சரிவின்கண், நண்பகலில் நீ வர வேண்டும்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்’ என வரும் விதி கொள்க.  உள்ளுறை – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – குறவன் முளவுமாவைக் கொள்ள அதற்கு இடமாகிய புதல் குருதியொடு அசைந்து தோன்றியதென்பது, தலைவன் தலைவியொடு களவு ஒழுக்கத்தில் ஒழுக, அவ்வொழுக்கம் தலைவியின் மேனி வேறுபாட்டால் தாய் முதலியோருக்குப் புலனாயிற்று என்றவாறாம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குரங்கு தளிரைத் தின்று விட்டு வெறியினால் உகள உதிர்ந்த மலர்கள் யாண்டும் பரவிக் கிடக்கும் என்றது, நீ நின் களவொழுக்கத்தின் பொருட்டு அங்கும் இங்குமாய் இரவும் பகலும் திரிவதனால் தோன்றிய அலர் ஊர் முழுவதும் பரவுவதாயிற்று என உள்ளுறுத்து அலர் மிகுதி கூறி வரைவு கடாவினாளும் ஆயிற்று. ஓட்டு இயல் பிழையா வய நாய் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தனக்கு இயல்பான ஓடும் தன்மையில் தவறுதல் இல்லாத ஆற்றல் வாய்ந்த வேட்டை நாய்கள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – விலங்குகளைத் துரத்திப் பற்றும் இயல்பு தப்புதல் இல்லாத வலிய நாய்.  இடி பாம்பைத் தாக்குதல், கொல்லுதல் – அகநானூறு 68, 92, 119, 182, 202, 274, 323, 328, கலித்தொகை 45, 113, குறுந்தொகை 158, 190, 268, 391, நற்றிணை 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, புறநானூறு 17, 58, 126, 211, 366, 369.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.

சொற்பொருள்:  பூங்கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து – அழகிய இடத்தில் நிற்கும் வேங்கை மரத்தின் பொன்னிற பூங்கொத்துக்களைச் சூடி (பூ – அழகு), வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ தீம் பழப் பலவின் சுளை விளை தேறல் வீளை அம்பின் இளையரொடு மாந்தி – வளைந்த மூங்கிலால் செய்த வலிய வில்லைத் தோளில் மாட்டிக்கொண்டு இனிய பலாப்பழத்தின் சுளைகளிருந்து விளைந்த மதுவினை சீழ்க்கை ஒலியுடன் செல்லும் அம்பினையுடைய இளைய ஏவலர்களுடன் குடித்து (இரீஇ – அளபெடை), ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட வேட்டம் போகிய குறவன் – விலங்குகளைத் துரத்திப் பற்றும் தன்மையில் பிழை இல்லாத வலிய நாய்கள் பின்னால் வர வேட்டைக்குச் சென்ற குறவன் (பிழையா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்), காட்ட குளவித் தண் புதல் குருதியொடு துயல்வர – காட்டில் மல்லிகையின் குளிர்ந்த புதர் குருதியுடன் அசையும்படி, முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட – முளவுப் பன்றியைக் கொன்று வீழ்த்தும் மலை நாடனே (விளி), அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து உரவு மழை பொழிந்த பானாள் கங்குல் – பாம்பினைத் தாக்கிக் கொல்லும் இடியுடன் கூடிய மழைக்கால் இறங்கி பெரு மழை விழுந்த நடுஇரவில், தனியை வந்த ஆறு நினைந்து அல்கலும் பனியொடு கலுழும் இவள் கண்ணே – நீ தனியாக வந்த வழியை நினைந்து நாள்தோறும் இவளுடைய கண்கள் கலங்கிக் கண்ணீர் வடிக்கும், அதனால் கடும் பகல் வருதல் வேண்டும் – அதனால் நண்பகலில் நீ வர வேண்டும், தெய்ய – அசைநிலை, அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ உயர் சிமை நெடுங்கோட்டு உகள உக்க கமழ் இதழ் அலரி தாஅய் வேலன் வெறி அயர் வியன் களம் கடுக்கும் பெருவரை நண்ணிய சாரலானே – அதிரும் குரலையுடைய முதிய முசுக்கலை மிளகின் தளிரை உண்டு வெறுத்து உயர்ந்த உச்சியையுடைய மலையின்கண் உள்ள நெடிய மரக்கிளைகளில் தாவுவதால் மணம் கமழும் இதழ்களையுடைய மலர்கள் பரந்து வேலனின் வெறியாடும் களத்தை ஒக்கும் பெரிய மலையை அடுத்துள்ள மலைச்சரிவின்கண் (முனைஇ – அளபெடை, தாஅய் – அளபெடை, சாரலானே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 183, கருவூர்க் கலிங்கத்தார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத்
திதலை அல்குல் அவ்வரி வாடவும்,
அத்தம் ஆர் அழுவம் நத்துறந்து அருளார்
சென்று சேண் இடையர் ஆயினும், நன்றும்
நீடலர் என்றி தோழி, பாடு ஆன்று  5
பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகி,
குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு
வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி,
இருங்கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி
காலை வந்தன்றால் காரே, மாலைக்  10
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற,
பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு
வருந்துவம் அல்லமோ பிரிந்திசினோர் திறத்தே?  15

பாடல் பின்னணி:  பருவ வரவு கண்டு ஆற்றாமை மிகுந்துத் தலைவி கூறியது. 

பொருளுரை:  தோழி!  குவளை மலர்களை ஒத்த என் மையுண்ட கண்கள் அழவும், திருந்திய அணிகலன்களையும் தேமலையும் உடைய என் அல்குலின் அழகிய வரிகள் வாடவும், அருள் செய்யாதவராய் நம்மைப் பிரிந்துக் கடத்தற்கு அரிய பாலை நிலத்தைக் கடந்து சென்று தொலைவிடத்தில் உள்ளார் ஆயினும், மிகவும் தாழ்த்தாது வருவார் என்கின்றாய்.

பெரிய கூட்டமாக முகில்கள், வளைந்த அலைகளையும் குளிர்ந்த துறையையுமுடைய பெரிய கடலில் சென்று நீரினைப் பருகிய மிகுதி உடையனவாய், மேற்கு திசையில் வானில் எழுந்து, சூலுற்ற பெண் யானையின் கூட்டம் போல் இடந்தொறும் தோன்றி, ஆரவாரத்துடன், பெய்வதற்கு ஒருசேர நெருங்கி, அவர் வருவேம் எனக் கூறிச்சென்ற கார்காலம் விடியற்காலையில் வந்துவிட்டது என்றாலும், மாலை நேரத்தில் குளிர்ச்சி பொருந்திய பிடவத்தின் கூரிய அரும்புகளின் வாயை வண்டுகள் கிளறித் திறந்ததால் இடைவிடாத நறுமணத்தை, குளிர் காலத்திலும் முன்பனிக்காலத்திலும் வீசும் வாடைக்காற்று நம் மேல் தூற்ற, பனி அலைத்ததால் கலங்கிய நெஞ்சத்துடன் வருந்துவோம் இல்லையா யாம், பிரிந்த நம் தலைவரின் பொருட்டு?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என வரும் நூற்பாவின்கண் ‘ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும்’ என்னும் விதி கொள்க.  வண்டு மலரை மலரச் செய்தல் – அகநானூறு 183 – அலரி வண்டு வாய் திறக்கும், நற்றிணை 238 – வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம், குறுந்தொகை 265 – காந்தள் அம் கொழு முகை  காவல் செல்லாது வண்டு வாய் திறக்கும், குறுந்தொகை 370 – ஆம்பல் அணி நிறக் கொழு முகை வண்டு வாய் திறக்கும்.

சொற்பொருள்:  குவளை உண்கண் கலுழவும் திருந்து இழைத் திதலை அல்குல் அவ்வரி வாடவும் – குவளை மலர்களை ஒத்த என் மையுண்ட கண்கள் அழவும் திருந்திய அணிகலன்களையும் தேமலையும் உடைய என் அல்குலின் அழகிய வரிகள் வாடவும் (அல்குல் – இடை, இடைக்குக் கீழ் உள்ள பகுதி, அவ்வரி, அ + வரி, அ – அழகிய), அத்தம் ஆர் அழுவம் நத்துறந்து அருளார் சென்று சேண் இடையர் ஆயினும் – அருள் செய்யாதவராய் நம்மைப் பிரிந்துக் கடத்தற்கு அரிய பாலை நிலத்தைக் கடந்து சென்று தொலைவிடத்தில் உள்ளார் ஆயினும் (நத்துறந்து – நம் துறந்து நத்துறந்து என விகாரமாயிற்று), நன்றும் நீடலர் என்றி – மிகவும் தாழ்த்தாது வருவார் என்கின்றாய், தோழி – தோழி, பாடு ஆன்று – ஆரவாரத்துடன், பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகி – குளிர்ந்த துறையையுடைய பெரிய கடலில் சென்று நீரினைப் பருகி, குவவுத் திரை அருந்து கொள்ளைய – வளைந்த அலைகளில் நீரினைப் பருகிய மிகுதி உடையனவாய் (ஆர்ந்து என்பது அருந்து என வந்தது), குடக்கு ஏர்பு – மேற்கு திசையில் வானில் எழுந்து, வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி – சூலுற்ற பெண் யானையின் கூட்டம் போல் இடந்தொறும் தோன்றி (இனத்தின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, வயா என்பது வயவு ஆயிற்று), இருங்கிளைக் கொண்மூ – பெரிய கூட்டமாக முகில்கள், ஒருங்குடன் துவன்றி – ஒருசேர நெருங்கி, காலை வந்தன்றால் காரே – கார்காலம் விடியற்காலையில் வந்துவிட்டது (வந்தன்றால் – ஆல் அசைநிலை, காரே – ஏகாரம் அசைநிலை), மாலைக் குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம் – மாலை நேரத்தில் குளிர்ச்சி பொருந்திய பிடவத்தின் கூரிய அரும்புகளின் வாயை வண்டுகள் கிளறித் திறந்ததால் இடைவிடாத நறுமணம் (பிடவம் – Bedaly–nut plant, Randia malabarica), கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற – குளிர் காலத்திலும் முன்பனிக்காலத்திலும் வாடைக்காற்று தூற்ற, பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு வருந்துவம் அல்லமோ பிரிந்திசினோர் திறத்தே – பனி அலைத்ததால் கலங்கிய நெஞ்சத்துடன் வருந்துவோம் இல்லையா பிரிந்தவரின் பொருட்டு (பிரிந்திசினோர் – இசின் படர்க்கையின்கண் வந்தது, திறத்தே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 184, மதுரை மருதன் இளநாகனார், முல்லைத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய
புதல்வன் பயந்த புகழ் மிகு சிறப்பின்
நன்னராட்டிக்கு அன்றியும் எனக்கும்
இனிது ஆகின்றால், சிறக்க நின் ஆயுள்!
அருந்தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு  5
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட,
வெண்பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில்
குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப்
புன்தலை புதைத்த கொழுங்கொடி முல்லை
ஆர் கழல் புதுப்பூ உயிர்ப்பின் நீக்கித்,  10
தெள் அறல் பருகிய திரிமருப்பு எழில் கலை
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண்
கோடுடைக் கையர் துளர் எறி வினைஞர்,
அரியல் ஆர்கையர், விளை மகிழ் தூங்கச்,
செல் கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச்  15
செக்கர் வானம் சென்ற பொழுதில்
கல் பால் அருவியின் ஒலிக்கும் நற்தேர்
தார் மணி பல உடன் இயம்ப
சீர் மிகு குருசில், நீ வந்து நின்றதுவே.

பாடல் பின்னணி:  வினைவயின் பிரிந்த தலைவன் தான் குறித்த பருவத்தில் தப்பாது மீண்டு வந்தான்.  அதனால் மகிழ்ச்சியுற்ற தோழி, தலைவனைப் பாராட்டிக் கூறியது

பொருளுரை:  சிறப்பு மிகுந்த தலைவனே!  வெள்ளை பிடவ மலர்கள் அரும்பிய மலர் மணம் கமழும் முல்லை நிலத்தில், குறிய கிளைகளையும் குறிய முட்களையும் உடைய கள்ளியின் புல்லிய உச்சியை மறைத்த வளவிய முல்லைக் கொடியின் காம்பு கழன்று உதிர்ந்த புதிய மலர்களைத் தன் மூச்சால் நீக்கி, தெளிந்த நீரைக் குடித்த முறுக்குண்ட கோட்டினையுடைய அழகிய ஆண்மான் புள்ளிகளையுடைய தன் பெண்மானுடன் தங்கும் அவ்விடத்தில், களைக்கொட்டினையுடைய கையினராய்க் களையை வெட்டி நீக்கும் தொழில் செய்பவர்கள், அரித்த கள்ளினை உண்டு களிப்பு மிகும், செல்லும் கதிர்களின் ஒளி மழுங்கிய உருவத்தை உடைய ஞாயிற்றால் உண்டான செவ்வானம் பரவிய பொழுதில், மலையின்பால் உள்ள அருவி போல் ஒலிக்கும் நல்ல தேரில் உள்ள சேர்த்துக் கட்டிய மாலையாக உள்ள மணிகள் பலவும் ஒன்றாக ஒலிக்க, வண்டுகள் ஒலிக்கும் காடு பின்னே போக, செய்தற்கரிய தொழிலை முடித்த தலைமையுடைய நெஞ்சத்துடன் நீ இங்கு வந்து நின்றது, கடவுள் தன்மையுடைய கற்புடன், நின் குடிக்கு விளக்கு ஆகிய, மகனைப் பெற்ற புகழ் மிகுந்த சிறப்பினையுடைய நன்மையுடைய தலைவிக்கு மட்டுமல்லாமல், எனக்கும் இனிமையானதாக உள்ளது.  நின் ஆயுள் சிறக்கட்டும்!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகை பட வந்த கிளவி எல்லாம் தோழிக்கு உரிய என்மனார் புலவர்’ என்னும் மிகையால் அமைத்துக் கொள்க.  உள்ளுறை – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தலைவன் போந்த நாட்டின்கண் முல்லை, கள்ளியின் புன்தலையாய மறைந்திருப்பது, தலைவி தன் பிரிவால் உளதாகிய வருத்தம் புறந்தோன்றாமல் கற்பினால் ஆற்றியிருத்தலையும், மறைத்த பூவை உயிர்ப்பினால் நீக்கி நீரினைப் பருகிய கலை பிணையொடு வதிதல், தான் தலைவியின் மெலிவினை நீக்கி அவளுடன் இன்புற்று வதியப் போவதையும் அவனுக்குப் புலப்படுத்தி மனவெழுச்சி தருவன என்க.  கற்பு – கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் மெல் இயல் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் (தொல்காப்பியம், கற்பியல் 11).

சொற்பொருள்:  கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய புதல்வன் பயந்த புகழ் மிகு சிறப்பின் நன்னராட்டிக்கு அன்றியும் – கடவுள் தன்மையுடைய கற்புடன் நின் குடிக்கு விளக்கு ஆகிய மகனைப் பெற்ற புகழ் மிகுந்த சிறப்பினையுடைய நன்மையுடைய தலைவிக்கு மட்டுமல்லாமல், எனக்கும் இனிது ஆகின்றால் – எனக்கும் இனிமையானதாக உள்ளது (ஆகின்றால் – ஆகின்று + ஆல், ஆல் – அசைநிலை), சிறக்க நின் ஆயுள் – நின் ஆயுள் சிறக்கட்டும், அருந்தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு – செய்தற்கரிய தொழிலை முடித்த தலைமையுடைய நெஞ்சத்துடன், சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட – வண்டுகள் ஒலிக்கும் காடு பின்னே போக, வெண்பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் – வெள்ளை பிடவ மலர்கள் அரும்பிய மலர் மணம் கமழும் முல்லை நிலத்தில் (பிடவம் – Bedaly–nut plant, Randia malabarica), குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப் புன்தலை புதைத்த கொழுங்கொடி முல்லை ஆர் கழல் புதுப்பூ உயிர்ப்பின் நீக்கி – குறிய கிளைகளையும் குறிய முட்களையும் உடைய கள்ளியின் புல்லிய உச்சியை மறைத்த வளவிய முல்லைக் கொடியின் காம்பு கழன்று உதிர்ந்த புதிய மலர்களைத் தன் மூச்சால் நீக்கி (குண்டை – குட்டை, குறிய), தெள் அறல் பருகிய திரிமருப்பு எழில் கலை புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண் – தெளிந்த நீரைக் குடித்த முறுக்குண்ட கோட்டினையுடைய அழகிய ஆண்மான் புள்ளிகளையுடைய தன் பெண்மானுடன் தங்கும் அவ்விடத்தில், கோடுடைக் கையர் – களைக்கொட்டினையுடைய கையினர், துளர் எறி வினைஞர் – களையை வெட்டி நீக்கும் தொழில் செய்பவர்கள், அரியல் ஆர்கையர் விளை மகிழ் தூங்க – அரித்த கள்ளினை உண்டு களிப்பு மிக, செல் கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச் செக்கர் வானம் சென்ற பொழுதில் – செல்லும் கதிர்களின் ஒளி மழுங்கிய உருவத்தை உடைய ஞாயிற்றால் உண்டான செவ்வானம் பரவிய பொழுதில், கல் பால் அருவியின் ஒலிக்கும் நற்தேர் தார் மணி பல உடன் இயம்ப – மலையின்பால் உள்ள அருவி போல் ஒலிக்கும் நல்ல தேரில் உள்ள மாலையாக உள்ள மணிகள் பலவும் ஒன்றாக ஒலிக்க (அருவியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), சீர் மிகு குருசில் – சிறப்பு மிகுந்த தலைவனே, நீ வந்து நின்றதுவே – நீ இங்கு வந்து நின்றது separated (பிரிந்திசினோர் – இசின் படர்க்கையின்கண் வந்தது, திறத்தே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 185, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
எல் வளை ஞெகிழச் சாஅய், ஆயிழை
நல் எழில் பணைத் தோள் இருங்கவின் அழிய,
பெருங்கையற்ற நெஞ்சமொடு நத்துறந்து,
இரும்பின் இன் உயிர் உடையோர் போல
வலித்து வல்லினர் காதலர், வாடல்  5
ஒலி கழை நிவந்த நெல் உடை நெடுவெதிர்
கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய
பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண், வான் உலந்து
அருவி ஆன்ற உயர் சிமை மருங்கில்  10
பெரு விழா விளக்கம் போலப், பலவுடன்
இலை இல மலர்ந்த இலவமொடு
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வருந்திய தலைவி, தோழிக்குச் சொல்லியது.

பொருளுரை:  வாடிய, ஒலிக்கின்ற, மேல்நோக்கி உயர்ந்திருக்கும் தண்டினையும் விதைகளையும் உடைய நீண்ட மூங்கில்கள், வெப்பத்தால், ஆரவாரம் கொண்ட மறவர்களின் வில்லிலிருந்து எழும் அம்பின் வேகத்தால் பிளந்துத் தெறிப்பது போல் தெறிப்ப, பசுமை இல்லாத, வெப்பமுற்ற பரல் கற்கள் உறுத்துகின்ற வேனிலால் வறண்ட காட்டில், முகில்கள் பெய்யாமையால் அருவிகள் இல்லாத உயர்ந்த மலை உச்சிகளில், பெரும் விழாவான கார்த்திகை விழாவிற்கு ஏற்றும் விளக்குகள் போல், இலைகள் முற்றிலும் இல்லாது பூக்கள் மலர்ந்திருக்கும் இலவமரங்கள் கொண்ட உயர்ந்த விளக்கமுடைய மலைகளைக் கடந்து சென்றவர்,

ஒளி பொருந்திய வளையல்கள் நெகிழும்படி மெலிய, ஆராய்ந்து எடுத்த அணிகலன்கள் உடைய நல்ல அழகிய மூங்கில் போலும் தோள்களின் பேரழகு பாழ்பட, பெரிய செயலற்ற நெஞ்சத்துடன் நம்மைக் கைவிட்டு, இரும்பினால் இயன்ற இனிய உயிரை உடையவர் போல் வலிமையுடன் இருக்க வன்மையுடையவர், நம் தலைவர்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இது ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 45) என வரும் விதியால் அமையும்.  ஆயிழை (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘விளி’ ‘அழகிய அணிகலன்’ ஆகிய இரண்டுமே பொருந்தும் எனக் கொள்கின்றார், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஆய்ந்தெடுத்த அணிகலன்கள் எனக் கொள்கின்றார்.  நெடு வெதிர் கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய (5–6) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நீண்ட மூங்கில் ஆரவாரம் கொண்ட மறவரது வில்லினின்று எழும் அம்பின் விசையால் பிளந்திட, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெடிய மூங்கில் ஆரவாரமுடைய போர் மறவர் வில்லை விசைக்குங்கால் தெறிப்பதுப் போல தெறியா நிற்பவும்.  பெரு விழா விளக்கம் (11) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பெரிய கார்த்திகை விழாவிற்கு இடும் விளக்குகள், பெரிய திருவிழா நாளாகிய கார்த்திகை விழாவிற்கு ஏற்றிய விளக்குகள்.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

சொற்பொருள்:  எல் வளை ஞெகிழச் சாஅய் – ஒளி பொருந்திய வளையல்கள் நெகிழும்படி மெலிய (ஞெகிழ – நெகிழு என்பதன் போலி, சாஅய் – அளபெடை), ஆயிழை நல் எழில் பணைத் தோள் இருங்கவின் அழிய – ஆராய்ந்து எடுத்த அணிகலன்கள் உடைய நல்ல அழகிய மூங்கில் போலும் தோள்களின் பேரழகு பாழ்பட, பெருங் கையற்ற நெஞ்சமொடு நத்துறந்து – பெரிய செயலற்ற நெஞ்சத்துடன் நம்மைக் கைவிட்டு (நத்துறந்து – நம் துறந்து நத்துறந்து என விகாரமாயிற்று), இரும்பின், இரும்பின் இன் உயிர் உடையோர் போல வலித்து வல்லினர் – இரும்பினால் இயன்ற இனிய உயிரை உடையவர் போல் வலிமையுடன் இருக்க வன்மையுடையவர் (இரும்பின் – இரும்பினால் செய்த), காதலர் – நம் தலைவர், வாடல் ஒலி கழை நிவந்த நெல் உடை நெடு வெதிர் – வாடிய ஒலிக்கின்ற மேல்நோக்கி உயர்ந்திருக்கும் தண்டினையும் விதைகளையும் உடைய நீண்ட மூங்கில்கள், கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய – ஆரவாரம் கொண்ட மறவர்களின் வில்லிலிருந்து எழும் அம்பின் வேகத்தால் பிளந்துத் தெறிப்பது போல் தெறிப்ப (விசையின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின் வேனில் அத்தத்து ஆங்கண் – பசுமை இல்லாத வெப்பமுற்ற பரல் கற்கள் உறுத்துகின்ற வேனிலால் வறண்ட காட்டில், வான் உலந்து அருவி ஆன்ற உயர் சிமை மருங்கில் – முகில்கள் பெய்யாமையால் அருவிகள் இல்லாத உயர்ந்த மலை உச்சிகளில் (வான் – ஆகுபெயர் முகிலுக்கு), பெரு விழா விளக்கம் போலப் பலவுடன் இலை இல மலர்ந்த இலவமொடு நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே பெரும் விழாவான கார்த்திகை விழாவிற்கு ஏற்றும் விளக்குகள் போல் இலைகள் முற்றிலும் இல்லாது பூக்கள் மலர்ந்திருக்கும் இலவமரங்கள் கொண்ட உயர்ந்த விளக்கமுடைய மலைகளைக் கடந்து சென்றவர் (இல – இல்லை என்பதன் இடைக்குறை, இலவமரம் – Aerua javanica, Silk cotton tree, இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 186, பரணர், மருதத் திணை பரத்தை சொன்னது, தலைவியின் தோழியர் கேட்கும்படி
வானம் வேண்டா வறன் இல் வாழ்க்கை
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்,
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
நீர் மிசை நிவந்த நெடுந்தாள் அகல் இலை
இருங்கயம் துளங்கக் கால் உறுதொறும்  5
பெருங்களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு
எழுந்த கௌவையோ பெரிதே, நட்பே
கொழுங்கோல் வேழத்துப் புணை துணையாகப்
புனல் ஆடு கேண்மை அனைத்தே, அவனே,
ஒண்தொடி மகளிர் பண்டை யாழ் பாட,  10
ஈர்ந்தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப,
தண் நறும் சாந்தம் கமழும் தோள் மணந்து
இன்னும் பிறள் வயினானே மனையோள்
எம்மொடு புலக்கும் என்ப வென்வேல்
மாரி அம்பின் மழைத்தோல் பழையன்  15
காவிரி வைப்பின் போஒர் அன்ன என்
செறி வளை உடைத்தலோ இலனே, உரிதினின்
யாம் தன் பகையேம் அல்லேம், சேர்ந்தோர்
திரு நுதல் பசப்ப நீங்கும்
கொழுநனும் சாலும் தன் உடன் உறை பகையே.  20

பாடல் பின்னணி:  தலைவி தன்னைப் பழித்தாள், எனக் கேள்விப்பட்ட பரத்தை, தலைவியின் தோழியர் கேட்குமாறுத் தன் நிலையை எடுத்துக் கூறியது.

பொருளுரை:  மழை பெய்தலை விரும்பாத, வறுமை இல்லாத வாழ்க்கையையுடைய, வலிய தூண்டில் கயிற்றை உடைய மீனவர்கள், மீன்களைக் கொள்ளுதலை அறிந்து அகப்படுத்தும், மீன்கள் மிக்க பொய்கையில் தழைத்த தாமரையின் நீருக்கு மேல் உயர்ந்த நெடிய காம்பையுடைய அகன்ற இலைகள், அப்பெரிய பொய்கை கலங்கும்படி காற்று வந்து தாக்கும்பொழுதெல்லாம் பெரிய களிற்று யானையின் காது போல் அசையும் ஊரானால் எனக்கு உண்டான அலரோ பெரியது.  அவன் நட்போ கொழுவிய கோலையுடைய கொறுக்கம் புல்லினால் செய்யப்பட்ட புணையைத் துணையாகக் கொண்டு நான் அவனுடன் புனல் விளையாடும் நட்பின் அளவே ஆகும். 

ஒளிரும் வளையல்கள் அணிந்த பரத்தை மகளிர் பழைய யாழை வருடிப் பாடவும், மிகவும் குளிர்ந்த முழவினை குறுந்தடியால் அடிக்கவும், குளிர்ந்த நறுமணம் கமழும் தோள்களைக் கூடி இப்பொழுதும் பரத்தை ஒருத்தியின் மனையில் அவன் உறைகின்றான்.  அவன் மனைவி எம்முடன் வெறுப்புக்கொண்டுள்ளாள் எனக் கூறுகின்றனர்.  வெற்றி வேலையும் மழைத்துளிகள் போல் மிக்க அம்புகளையும் முகில் போலும் கரிய கேடயங்களையும் உடைய பழையன் என்பவனின் காவிரி நாட்டில் போர் என்னும் ஊரினை ஒத்த என் நெருங்கிய வளையல்களை யான் உடைத்தலும் இல்லை, உரிமையால்.  யாம் அவளுக்குப் பகை அல்லேம்.  தன்னைச் சேர்ந்தவர்களின் அழகிய நெற்றி பசலை அடையும்படி அவர்களிடமிருந்து நீங்கும், அவளுடன் வாழும் அவள் கணவனே அவளுடைய பகைவன் என்பது தான் பொருந்தும்.  

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘புல்லுதல் மயக்கும்’ (தொல்காப்பியம், கற்பியல் 10) என வரும் நூற்பாவின்கண் ‘இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  வானம் வேண்டா வறன் இல் வாழ்க்கை (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மீன் பிடிக்கும் தொழிலுக்கு மழை இடையூறு விளைக்குமாதலால் வலைஞர் வானம் வேண்டாராயினர்.  ஞாண் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – போலி, வலைக்கு ஆகுபெயர், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தூண்டிற் கயிறு.  பண்டை யாழ் பாட (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பண் + தை என கண்ணழித்துக் கொள்க.  தை – செய்து.  இதற்கு அளபெடை இருந்து ஏடு எழுதுவோரால் விடப்பட்டிருத்தல் வேண்டுமென்பது எம் கருத்து.  இங்ஙனமின்றி பழைய யாழினை என்று பொருள் கூறுவது பொருந்தாமையுணர்க, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பழைய யாழினைப் பாட.  மாரி அம்பின் (15) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மழை போலப் பொழிகின்ற அம்புகளையும், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மழைத்துளி போன்ற மிக்க அம்பினையும்.  போஒர் (16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வைக்கோல் போர்வு போன்ற, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – போர் என்னும் ஊர்.  வளையலை உடைத்தல் – அகநானூறு 186 – காவிரி வைப்பின் போஒர் அன்ன என் செறி வளை உடைத்தலோ இலனே, அகநானூறு 336 – ஆரியர் படையின் உடைக என் நேர் இறை முன் கை வீங்கிய வளையே.  வரலாறு –பழையன், காவிரி, போஒர்.

சொற்பொருள்:   வானம் வேண்டா வறன் இல் வாழ்க்கை – மழை பெய்தலை விரும்பாத வறுமை இல்லாத வாழ்க்கையையுடைய, நோன் ஞாண் வினைஞர் –  வலிய தூண்டில் கயிற்றை உடைய மீனவர்கள், வலிய கயிற்றால் பின்னிய வலைகளையுடைய மீனவர்கள், கோள் அறிந்து ஈர்க்கும் மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை நீர் மிசை நிவந்த நெடுந்தாள் அகல் இலை – மீன்களைக் கொள்ளுதலை அறிந்து அகப்படுத்தும் மீன்கள் மிக்க பொய்கையில் தழைத்த தாமரையின் நீருக்கு மேல் உயர்ந்த நெடிய காம்பையுடைய அகன்ற இலைகள், இருங்கயம் துளங்கக் கால் உறுதொறும் பெருங்களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு – அப்பெரிய பொய்கை கலங்கும்படி காற்று வந்து தாக்கும்பொழுதெல்லாம் பெரிய களிற்று யானையின் காது போல் அசையும் ஊரானால் (செவியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), எழுந்த கௌவையோ பெரிதே – எனக்கு உண்டான அலரோ பெரியது, நட்பே கொழுங்கோல் வேழத்துப் புணை துணையாகப் புனல் ஆடு கேண்மை அனைத்தே – அவன் நட்போ கொழுவிய கோலையுடைய கொறுக்கம் புல்லினால் செய்யப்பட்ட புணையைத் துணையாகக் கொண்டு புனல் விளையாடும் நட்பின் அளவே ஆகும், அவனே ஒண்தொடி மகளிர் பண்டை யாழ் பாட ஈர்ந்தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப தண் நறும் சாந்தம் கமழும் தோள் மணந்து இன்னும் பிறள் வயினானே – அவன் ஒளிரும் வளையல்கள் அணிந்த பரத்தை மகளிர் பழைய யாழை வருடிப் பாடவும் மிகவும் குளிர்ந்த முழவினை குறுந்தடியால் அடிக்கவும் குளிர்ந்த நறுமணம் கமழும் தோள்களைக் கூடி இப்பொழுதும் பரத்தை ஒருத்தியின் மனையில் உறைகின்றான், மனையோள் எம்மொடு புலக்கும் என்ப – அவன் மனைவி எம்முடன் வெறுப்புக்கொண்டுள்ளாள் எனக் கூறுகின்றனர், வென்வேல் மாரி அம்பின் மழைத்தோல் பழையன் காவிரி வைப்பின் போஒர் அன்ன என் செறி வளை உடைத்தலோ இலனே – வெற்றி வேலையும் மழைத்துளிகள் போல் மிக்க அம்புகளையும் (மழைபோல் பொழியும் அம்புகளையும்) முகில் போலும் கரிய கேடயங்களையும் உடைய பழையன் என்பவனின் காவிரி நாட்டில் போர் என்னும் ஊரினை ஒத்த என் நெருங்கிய வளையல்களை யான் உடைத்தலும் இல்லை (இலனே –அசைநிலை), உரிதினின் – உரிமையால், யாம் தன் பகையேம் அல்லேம் – யாம் அவளுக்குப் பகை அல்லேம் (யாம், பகையேம், அல்லேம் – தன்மைப் பன்மை), சேர்ந்தோர் திரு நுதல் பசப்ப நீங்கும் – தன்னைச் சேர்ந்தவர்களின் அழகிய நெற்றி பசலை அடையும்படி அவர்களிடமிருந்து நீங்கும், கொழுநனும் சாலும் தன் உடன் உறை பகையே – அவளுடன் வாழும் அவள் கணவனே அவளுடைய பகைவன் என்பது தான் பொருந்தும் (கொழுநனும் – உம் அசைநிலை, பகையே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 187, மாமூலனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி
நாண் உடைமையின் நீங்கிச் சேய் நாட்டு
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி,
நம் உயர்வு உள்ளினர் காதலர், கறுத்தோர்  5
தெம்முனை சிதைத்த கடும் பரிப் புரவி,
வார் கழல் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன,
தருமணல் ஞெமிரிய திரு நகர் முற்றம்
புலம்புறும் கொல்லோ தோழி, சேண் ஓங்கு  10
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண்,
கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து,
எல் விருந்து அயர ஏமத்து அல்கி,
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து  15
வேனில் வெற்பின் கானம் காய,
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை,
பனை வெளிறு அருந்து பைங்கண் யானை
ஒண் சுடர் முதிரா இளங்கதிர் அமையத்து,
கண்படு பாயல் கை ஒடுங்கு அசைநிலை  20
வாள்வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி,
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர்
வைகு கடல் அம்பியின் தோன்றும்
மைபடு மா மலை விலங்கிய சுரனே?

பாடல் பின்னணி:  (1) பிரிவு உணர்த்திய தோழியிடம் தலைவி உரைத்தது.  (2) தலைவன் பிரிவின்கண் தலைவிக்குத் தோழி சொல்லியது. 

பொருளுரை:  தோழி!  நம் தோள்களின் தனிமை நீங்கும்பொருட்டு நம்முடன் துயின்றுப் பல நாட்கள் நீட்டித்த களவுப் புணர்ச்சியை, வினையில்லாது இருப்பதற்கு நாணம் உடைமையால் நீங்கித் தொலைவில் உள்ள நாட்டிற்கு அரிய பொருளை ஈட்டும் பொருட்டுத் துணிந்த நெஞ்சுடன்,

மனையில் வதியும் சேவற் கோழியின் தொங்குகின்ற தாடியை ஒத்த கவர்த்த (பிரிவுகளையுடைய) ஒளிரும் தளிர்களையும் கரிய அடியினையும் உடைய யா மரங்களையுடைய, வேனில் வெப்பமுடைய மலையை ஒட்டிய காடு காய்ந்திட, காட்டு அரண்களில் உள்ள குடிகள் நீங்கிச் சென்றமையால் பாழ்பட்ட நாட்டின் அரிய இடத்தில், பனங்குருத்தை உண்ணும் பசிய கண்களையுடைய யானை, ஒளிரும் கதிர்கள் முதிராத இளைய ஞாயிற்றையுடைய பொழுதில், உறங்கும் இடத்தில் செயலின்றி அசையும் நிலை, வாள் போன்ற வாயை உடைய சுறா மீன்கள் வழங்கும் குளிர்ந்த துறைகளை நீந்திச் சென்று, விடியற்காலையில் மீன் வேட்டைக்கு எழுந்த, அன்பில்லாத பரதவர்கள் தங்குவதற்குரிய கடலின்கண் உள்ள தோணிகள் போல் தோன்றும், முகில்கள் பொருந்திய பெரிய மலை குறுக்கிட்ட பாலை நிலத்தின்கண்,

மிகவும் உயர்ந்த உலர்ந்த உச்சியையுடைய ஞெமை மரங்களையுடைய ஆள் இல்லாத அவ்விடத்தில், மலையைச் சார்ந்து இருந்த சில குடிகளையுடைய பாக்கத்தில் இரவு விருந்தோம்பல் பொருட்டுப் பாதுகாவலாகத் தங்கிச் செல்லுதலால், நம் உயர்வைக் கருதினார் நம் தலைவர். 

அதனால், பகைவர்களைப் போரில் வென்று அழித்த விரைந்த செலவையுடைய குதிரைகளையுடைய நீண்ட கழல்களால் பொலிந்த தறுகண்மையுடைய (கொடூரமான) மறவர்களின் பூந்தொடை விழாவின் முதல் நாளை ஒத்த பொலிவை உடைய, கொணர்ந்து இட்ட மணல் பரப்பிய நம் அழகிய இல்லத்தின் முற்றம் தனிமை அடையுமோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – (1) இதற்கு, ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 45) என வரும்.  (2) இதற்கு ‘நோய் மிகப்பெருகி நெஞ்சு கலுழ்ந்தோளை ‘அழிந்தது களை என மொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) எனவரும் விதி கொள்க.  நாண் உடைமையின் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நாம் இடையறாது வரைவு கடாவுதற்குத் தம்முள் நாணுகின்ற நாணுடைமையால், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வினையின்றி இருத்தற்கு நாணுதல் உடைமையானே.  பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன(8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய அம்பு தொடுத்தற்குரிய விழா நிகழ்ச்சியினுடைய முதல் நாள் போல, தொடை விழா = மறவர் மக்கள் முதன் முதலாக அம்பு தொடுத்தற்பொருட்டு நிகழ்த்தும் ஒரு திருவிழா.  சுறா சுறவு என வந்தது – ‘குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  ஞெமிர்தல் – ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தல் பொருள (தொல்காப்பியம், உரியியல் 65).  கரந்து உறை புணர்ச்சி (8) – சோமசுந்தரனார் உரை – இஃது இடக்கரடக்கல்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  தோள் புலம்பு அகலத் துஞ்சி நம்மொடு நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி – நம் தோள்களின் தனிமை நீங்கும்பொருட்டு நம்முடன் துயின்றுப் பல நாட்கள் நீட்டித்த களவுப் புணர்ச்சியை, நாண் உடைமையின் நீங்கிச் சேய் நாட்டு அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு – வினையில்லாது இருப்பதற்கு நாணம் உடைமையால் நீங்கித் தொலைவில் உள்ள நாட்டிற்கு அரிய பொருளை ஈட்டும் பொருட்டுத் துணிந்த நெஞ்சுடன், ஏகி – சென்று, நம் உயர்வு உள்ளினர் காதலர் – நம் உயர்வைக் கருதினார் நம் தலைவர், கறுத்தோர் தெம்முனை சிதைத்த கடும் பரிப் புரவி வார் கழல் பொலிந்த வன்கண் மழவர் பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன – பகைவர்களைப் போரில் வென்று அழித்த விரைந்த செலவையுடைய குதிரைகளையுடைய நீண்ட கழல்களால் பொலிந்த தறுகண்மையுடைய (கொடூரமான) மறவர்களின் பூந்தொடை விழாவின் முதல் நாளை ஒத்த பொலிவை உடைய, தருமணல் ஞெமிரிய திரு நகர் முற்றம் புலம்புறும் கொல்லோ – கொணர்ந்து இட்ட மணல் பரப்பிய அழகிய இல்லத்தின் முற்றம் தனிமை அடையுமோ (கொல்லோ – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசைநிலை), தோழி – தோழி, சேண் ஓங்கு அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண் – மிகவும் உயர்ந்த உலர்ந்த உச்சியையுடைய ஞெமை மரங்களையுடைய ஆள் இல்லாத அவ்விடத்தில் (அலந்த தலை அலந்தலை என வந்தது, ஞெமையத்து – அத்துச் சாரியை,  ஞெமை மரம் – Anogeissus latifolia, சேண் ஓங்கு – ஒருபொருட் பன்மொழி), கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து எல் விருந்து அயர ஏமத்து அல்கி – மலையைச் சார்ந்து இருந்த சில குடிகளையுடைய பாக்கத்தில் இரவு விருந்தோம்பல் பொருட்டுப் பாதுகாவலாகத் தங்கி, மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து – மனையில் வதியும் சேவற் கோழியின் தொங்குகின்ற தாடியை ஒத்த கவர்த்த (பிரிவுகளையுடைய) ஒளிரும் தளிர்களையும் கரிய அடியினையும் உடைய யா மரங்களையுடைய (யாஅத்து – அத்துச் சாரியை, யா மரம் – ஆச்சா மரம், Hardwickia binate), வேனில் வெற்பின் கானம் காய – வேனில் வெப்பமுடைய மலையை ஒட்டிய காடு காய்ந்திட, முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை – காட்டு அரண்களில் உள்ள குடிகள் நீங்கிச் சென்றமையால் பாழ்பட்ட நாட்டின் அரிய இடத்தில், பனை வெளிறு அருந்து பைங்கண் யானை – பனங்குருத்தை உண்ணும் பசிய கண்களையுடைய யானை (பைங்கண் – பண்புத்தொகை), ஒண் சுடர் முதிரா இளங்கதிர் அமையத்து – ஒளிரும் கதிர்கள் முதிராத இளைய ஞாயிற்றையுடைய பொழுதில், கண்படு பாயல் கை ஒடுங்கு அசைநிலை – உறங்கும் இடத்தில் செயலின்றி அசையும் அந்த யானையின் நிலை (பாயல் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இடம் என்னும் பொருட்டு), வாள்வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி – வாள் போன்ற வாயை உடைய சுறா மீன்கள் வழங்கும் குளிர்ந்த துறைகளை நீந்திச் சென்று (சுறவு – சுறா சுற என்றாகி உகரம் ஏற்றது), நாள் வேட்டு எழுந்த – விடியற்காலையில் மீன் வேட்டைக்கு எழுந்த, நயன் இல் பரதவர் வைகு கடல் அம்பியின் தோன்றும் – அன்பில்லாத பரதவர்கள் தங்குவதற்குரிய கடலின்கண் உள்ள தோணிகள் போல் தோன்றும் (அம்பியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), மைபடு மா மலை விலங்கிய சுரனே – முகில்கள் பொருந்திய பெரிய மலை குறுக்கிட்ட பாலை நிலத்தின்கண் (சுரன் – சுரம் என்பதன் போலி, ஏகாரம் –அசைநிலை)

அகநானூறு 188, வீரை வெளியன் தித்தனார், குறிஞ்சித் திணைதோழி எழிலியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ!
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇப்
போர்ப்புறு முரசின் இரங்கி, முறை புரிந்து
அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர்
அருஞ்சமத்து எதிர்ந்த பெருஞ்செய் ஆடவர்  5
கழித்து எறி வாளின் நளிப்பன விளங்கும்
மின்னுடைக் கருவியை ஆகி, நாளும்
கொன்னே செய்தியோ அரவம்? பொன்னென
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சிப்
பொலிந்த ஆயமொடு காண்தக இயலித்  10
தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும்
அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும்,
குறமகள் காக்கும் ஏனல்
புறமும் தருதியோ? வாழிய மழையே.

பாடல் பின்னணி:  வரையாது களவிலே வந்தொழுகும் தலைவன் ஓர் இரவில் அண்மையில் இருப்பதை அறிந்த தோழி கூறியது. 

பொருளுரை:  பெரிய கடலில் நீரை முகந்துகொண்டு பெருஞ்சுற்றத்துடன் இருக்கும் முகிலே!  இருண்டு உயர்ந்த வானில் வலது புறமாக ஏறி சுற்றி, தோல் போர்வையுடைய முரசைப்போல் முழங்கி, செங்கோன்மையுடன் அறநெறி வழுவாத திறமையுடைய மன்னர்களின் அரிய போரில் பகைவர்களுடன் எதிர்த்துப் போர் புரியும் ஆண்மையுடைய மறவர்கள் உறையிலிருந்து நீக்கி வீசும் வாள் போல, செறிவாக விளங்கும் மின்னலின் தொகுதியை உடையவை ஆகி, நாள்தோறும் பயன் இன்றி ஆரவாரம் செய்கின்றாயா?

பொன் போல மலர்ந்த வேங்கை மரத்தின் மலர்களால் தொடுத்த மாலையைச் சூடி, பொலிந்த தோழியருடன் அழகு பொருந்த நடந்துத் தழலைச் சுற்றியும் தட்டையைத் தட்டியும், அழல் போன்ற அசோக மரத்தின் அழகிய தழையை அசைத்தும் (தழையாடையை அணிந்தும்) எம் தலைவி காக்கும் தினைப்புனத்தில் மழையை நீ பொழிவாயோ?  நீடு வாழ்வாயாக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  மின்னுடைக் கருவியை (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மின்னல் முதலிய தொகுதியை உடையை.  அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும் (12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தீப் பிழம்பு போன்ற அசோகினது அழகிய தழையை அசைத்தும், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தீயின் கொழுந்தினை ஒத்த அசோக்கின் தழையாலாய உடையினை உடுத்தும்.  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.  கொன் – அச்சம், பயம் இலி, காலம், பெருமை, என்று அப் பால் நான்கே கொன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 6).  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).

சொற்பொருள்:  பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ – பெரிய கடலில் நீரை முகந்துகொண்டு பெருஞ்சுற்றத்துடன் இருக்கும் முகிலே, இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇப் போர்ப்புறு முரசின் இரங்கி – இருண்டு உயர்ந்த வானில் வலது புறமாக ஏறி சுற்றி தோல் போர்வையுடைய முரசைப்போல் முழங்கி (முரசின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), முறை புரிந்து அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர் அருஞ்சமத்து எதிர்ந்த பெருஞ்செய் ஆடவர் கழித்து எறி – செங்கோன்மையுடன் அறநெறி வழுவாத திறமையுடைய மன்னர்களின் அரிய போரில் பகைவர்களுடன் எதிர்த்துப் போர் புரியும் ஆண்மையுடைய மறவர்கள் உறையிலிருந்து நீக்கி வீசும் (அறன் – அறம் என்பதன் போலி, பிழையா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்), வாளின் நளிப்பன விளங்கும் மின்னுடைக் கருவியை ஆகி – வாள் போல செறிவாக விளங்கும் மின்னலின் தொகுதியை உடையவை ஆகி, நாளும் கொன்னே செய்தியோ அரவம் – நாள்தோறும் பயன் இன்றி ஆரவாரம் செய்கின்றாயா  (செய்தியோ – ஓகாரம் வினா, கொன்னே – கொன் பயனின்மை என்ற பொருளில் வரும் இடைச்சொல், ஏகாரம் அசைநிலை), பொன்னென மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சிப் பொலிந்த ஆயமொடு காண்தக இயலித் தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும் – பொன் போல மலர்ந்த வேங்கை மரத்தின் மலர்களால் தொடுத்த மாலையைச் சூடி பொலிந்த தோழியருடன் அழகு பொருந்த நடந்துத் தழலைச் சுற்றியும் தட்டையைத் தட்டியும், அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும் குறமகள் காக்கும் ஏனல் புறமும் தருதியோ – அழல் போன்ற அசோக மரத்தின் அழகிய தழையை அசைத்தும் (தழையாடையை அணிந்தும்) எம் தலைவி காக்கும் தினைப்புனத்தில் மழையை நீ பொழிவாயோ (தருதியோ – ஓகாரம் வினா), வாழிய  – நீ நீடு வாழ்வாயாக, மழையே – மழை (மழையே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 189, கயமனார், பாலைத் திணைமகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
பசும் பழப் பலவின் கானம் வெம்பி
விசும்பு கண் அழிய வேனில் நீடிக்,
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின்
நாறு உயிர் மடப்பிடி தழீஇ, வேறு நாட்டு
விழவுப் படர் மள்ளரின் முழவு எடுத்து உயரிக்,  5
களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன்
வெவ்வரை அத்தம் சுட்டிப் பையென
வயலை அம் பிணையல் வார்ந்த கவாஅன்
திதலை அல்குல் குறுமகள் அவனொடு
சென்று பிறள் ஆகிய அளவை, என்றும்  10
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ,
மனை மருண்டு இருந்த என்னினும், நனை மகிழ்
நன்னராளர் கூடு கொள் இன் இயம்
தேர் ஊர் தெருவில் ததும்பும்
ஊர் இழந்தன்று, தன் வீழ்வு உறு பொருளே.  15

பாடல் பின்னணி:  களவொழுக்கத்திற்கு இடையூறு நிகழ்ந்தமையால், தலைவி தமர் அறியாமல் தலைவனுடன் சென்று விட்டாள்.  இதை அறிந்த செவிலித்தாய் வருந்திக் கூறியது.

பொருளுரை:  பசிய பழங்களை உடைய பலா மரங்களையுடைய காடு வறட்சி அடையவும், வானிடத்தில் முகில்கள் இல்லாது ஒழியவும் வேனிற்காலம் நீடிப்பதால், குளங்களில் நீர் இல்லாது பாறைகள் உயர்ந்த இடங்களில், பெருமூச்சு விடும் தங்கள் இளைய பெண் யானைகளைத் தழுவிக் கொண்டு, களிற்று யானைகள், வேறு நாட்டு விழாவிற்குத் தங்கள் முழவுகளை உயர்த்திக் கொண்டு செல்லும் மள்ளர்களைப் போல் வழியில் சென்ற, மலைகள் உயர்ந்த பக்க மலையைச் சார்ந்த சுரத்தைக் கடந்துச் செல்லத் துணிந்து, மெதுவாக, வயலைக் கொடியால் ஆகிய அழகிய தழை ஆடையையுடைய தாழ்ந்த துடையினையும் தேமல் படர்ந்த அல்குலையும் உடைய என் இளைய மகள் தன் தலைவனுடன் சென்று, எங்களை விட்டு நீங்கிப் பிறள் ஒருத்தி ஆகியபோது, எப்பொழுதும் நினைத்து மிக்க துன்பத்துடன் திசைகளில் எல்லாம் தேடி, இல்லத்தில் கலங்கி இருந்த என்னை விடவும், கள்ளின் களிப்புடைய நல்ல கலைஞர்கள் ஒன்று கூடி இசைக்கும் இனிய இசைக்கருவிகள் தேர்கள் ஓடும் தெருக்களின் விடாது ஒலிக்கும் இந்த ஊர், தன் விருப்பம் மிக்க பொருளை இழந்துவிட்டது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  விசும்பு கண் அழிய (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வானின் கண்ணோட்டம் அழியாநிற்ப (அழிய), கண்ணோட்டத்தின் செயலாகிய மழை இல்லை என்றவாறு, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வானிடத்தில் ஒழிதலின்.  கயம் கண் அற்ற (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சுனைகள் ஊற்றுக்கண் அற்றுப்போன, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – குளங்கள் தம்மிடத்தே நீரற்று இருக்கும்.  ஊர் (15) – ஊர் என்றது ஈண்டு நற்றாய், ஆயத்தார் முதலியோரைக் குறித்து நின்றது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவ்வூரில் வாழ்வோர்.  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  பசும் பழப் பலவின் கானம் வெம்பி – பசிய பழங்களை உடைய பலா மரங்களையுடைய காடு வெம்பவும் (வறட்சி அடையவும்), விசும்பு கண் அழிய – வானிடத்தில் முகில்கள் இல்லாது ஒழியவும், வேனில் நீடிக் கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் – வேனிற்காலம் நீடிப்பதால் குளங்களில் நீர் இல்லாது பாறைகள் உயர்ந்த இடங்களில், நாறு உயிர் மடப்பிடி தழீஇ – பெருமூச்சு விடும் தங்கள் இளைய பெண் யானைகளைத் தழுவிக் கொண்டு (தழீஇ – அளபெடை), வேறு நாட்டு விழவுப் படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி – வேறு நாட்டு விழாவிற்குத் தங்கள் முழவுகளை உயர்த்திக் கொண்டு செல்லும் மள்ளர்களைப் போல், களிறு – களிற்று யானைகள், அதர்ப்படுத்த – வழியில் சென்ற, கல் உயர் கவாஅன் வெவ்வரை அத்தம் சுட்டி – மலைகள் உயர்ந்த பக்க மலையைச் சார்ந்த சுரத்தைக் கடந்துச் செல்லத் துணிந்து (கவாஅன் – அளபெடை), பையென – மெதுவாக, வயலை அம் பிணையல் வார்ந்த கவாஅன் திதலை அல்குல் குறுமகள் அவனொடு சென்று – வயலைக் கொடியால் ஆகிய அழகிய தழை ஆடையையுடைய தாழ்ந்த துடையினையும் தேமல் படர்ந்த அல்குலையும் உடைய என் இளைய மகள் அவனுடன் சென்று (கவாஅன் – அளபெடை), பிறள் ஆகிய அளவை – எங்களை விட்டு நீங்கிப் பிறள் ஒருத்தி ஆகியபோது, என்றும் படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ – எப்பொழுதும் நினைத்து மிக்க துன்பத்துடன் திசைகளில் எல்லாம் தேடி (துழைஇ – அளபெடை), மனை மருண்டு இருந்த என்னினும் – இல்லத்தில் கலங்கி இருந்த என்னை விடவும், நனை மகிழ் நன்னராளர் கூடு கொள் – கள்ளின் களிப்புடைய நல்ல கலைஞர்கள் ஒன்று கூடி இசைக்கும், இன் இயம் தேர் ஊர் தெருவில் ததும்பும் ஊர் – இனிய இசைக்கருவிகள் தேர்கள் ஓடும் தெருக்களின் விடாது ஒலிக்கும் ஊர், இழந்தன்று தன் வீழ்வு உறு பொருளே – தன் விருப்பம் மிக்க பொருளை இழந்துவிட்டது (உறு – மிக்க, பொருளே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 190, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி செவிலித்தாயிடம் சொன்னது
திரை உழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு
உப்பின் குப்பை ஏறி எல் பட,
வருதிமில் எண்ணும் துறைவனொடு ஊரே,
ஒருதன் கொடுமையின் அலர் பாடும்மே,
அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள்  5
அலையல், வாழி வேண்டு அன்னை, உயர் சிமைப்
பொதும்பில் புன்னைச் சினை சேர்பு இருந்த
வம்ப நாரை இரிய, ஒரு நாள்
பொங்குவரல் ஊதையொடு புணரி அலைப்பவும்
உழைக்கடல் வழங்கலும் உரியன், அதன்தலை  10
இருங்கழி புகாஅர் பொருந்தத் தாக்கி
வயச் சுறா எறிந்தென, வலவன் அழிப்ப
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில
நிரை மணிப் புரவி விரை நடை தவிர,
இழுமென் கானல் விழு மணல் அசைஇ  15
ஆய்ந்த பரியன் வந்து, இவண்
மான்ற மாலைச் சேர்ந்தன்றே இலனே.

பாடல் பின்னணி:  தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.

பொருளுரை:  நீடு வாழ்வாயாக அன்னையே! நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக! அலைகளில் விளையாடியதால் தளர்ச்சியுற்ற, அடுக்காக வளையல்கள் அணிந்த தோழியருடன், உப்புக்குவியலின் மீது ஏறி, கதிரவன் மறையும் பொழுது, மீன் பிடித்து வரும் பரதவரின் படகுகளை எண்ணும் மகளிரையுடைய துறையையுடைய தலைவனுடன், உன் மகளைச் சேர்த்து இந்த ஊரானது கொடுமையான அலரினைக் கூறும்.

சுழல்கின்ற குளிர்ந்த கண்களையுடைய உன் மகள் அவனை நோக்கவில்லை.  நீ அவளைத் துன்புறுத்தாதே.  உயர்ந்த மணற்குன்றின் உச்சியில் உள்ள சோலையில் புன்னை மரக்கிளைகளில் இருந்த புதிய நாரைகள் விலகிச் செல்லுமாறு, ஒரு நாள், பொங்கி வரும் வாடைக்காற்றுடன் கடல் அலைகள் கரையில் மோதி இருக்கவும், அக்கடலோரத்தில் தேரில் வர உரிமையுடையவன் ஆனான் தலைவன்.

அதற்கு மேலும், பெரிய உப்பங்கழியினை உடைய துறைமுகத்தில் வலிமையான சுறா மீன் தாக்கியதால், தேரோட்டி குதிரைகளின் பூட்டுக்களை நீக்க, தமது அழகும் பயனும் குறைந்து, கட்டுப்பாடு இல்லாத, வரிசையாக மணிகள் அணிந்த குதிரைகள், விரைந்து செல்ல முடியாத நிலையில் இருந்ததால், ஒலியுடைய கடற்கரையின் சிறந்த மணலில் தங்கி மெலிந்த குதிரைகளையுடைய அத் தலைவன் இங்கு, மயங்கிய மாலை நேரத்தில் தங்கியிருக்கவும் இல்லை.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘முன்னிலை அறன் எனப்படுதல் என்று இரு வகைப் புரை தீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்’ என வரும் விதி கொள்க.  தொல்காப்பியம், களவியல் 35 – தோழி தானே செவிலி மகளே.  நிரைவளை ஆயமொடு (1) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நிரைத்த வளையலையுடைய மகளிர் கூட்டத்துடன், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நிரைவளை அன்மொழி, தலைவி, ஆயமொடு திரையுழந்து அசைஇய நிரைவளை எனக் கூட்டுக.  தலைவி தன் வழக்கம் போலவே அங்குச் சென்றாள்.  அலமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).  ஆய்ந்த பரியன் (16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மெலிந்த குதிரைகளையுடையவன், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – சிறந்த குதிரைகளையுடையவன்.  தோழி – தோழி தானே செவிலி மகளே (தொல்காப்பியம், களவியல் 25).

சொற்பொருள்:  திரை உழந்து – அலைகளில் விளையாடி, அசைஇய – தளர்ச்சியுற்ற (அளபெடை), நிரைவளை ஆயமொடு – அடுக்காக வளையல்கள் அணிந்த தோழியருடன், உப்பின் குப்பை ஏறி – உப்புக்குவியலின் மீது ஏறி, எல் பட – கதிரவன் மறையும் பொழுது, வரு திமில் எண்ணும் துறைவனொடு – மீன் பிடித்து வரும் பரதவரின் படகுகளை எண்ணும் துறையையுடைய அத் தலைவனுடன், ஊரே ஒருதன் கொடுமையின் அலர் பாடும்மே – உன் மகளைச் சேர்த்து இந்த ஊரானது கொடுமையான அலரினைக் கூறும் (ஊரே – ஊர் ஆகுபெயர் அலர் கூறுபவர்களுக்கு, ஏகாரம் –அசைநிலை, (பாடும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள் – அவனைச் சுழல்கின்ற குளிர்ந்த கண்களையுடைய உன் மகள் நோக்கவில்லை, அலையல் – நீ அவளைத் துன்புறுத்தாதே, வாழி – நீடு வாழ்வாயாக, வேண்டு – நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக, அன்னை – அன்னையே, உயர் சிமைப் பொதும்பில் – உயர்ந்த மணற்குன்றின் உச்சியில் உள்ள சோலையில், புன்னைச் சினை சேர்பு இருந்த வம்ப நாரை இரிய – புன்னை மரக்கிளைகளில் இருந்த புதிய நாரைகள் விலகிச் செல்ல (புன்னை மரம் – Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree), ஒரு நாள் – ஒரு நாள், பொங்குவரல் ஊதையொடு புணரி அலைப்பவும் – பொங்கி வரும் வாடைக்காற்றுடன் கடல் அலைகள் கரையில் மோதி இருக்கவும், உழைக்கடல் வழங்கலும் உரியன் – அக்கடலோரத்தில் தேரில் வர உரிமையுடையவன் ஆனான் ஒரு தலைவன், அதன்தலை – அதற்கு மேலும், இருங்கழி புகாஅர் பொருந்தத் தாக்கி வயச் சுறா எறிந்தென – பெரிய உப்பங்கழியினை உடைய துறைமுகத்தில் வலிமையான சுறா மீன் தாக்கியதால் (புகாஅர் – அளபெடை), வலவன் அழிப்ப – தேரோட்டி குதிரைகளின் பூட்டுக்களை நீக்க, எழில் பயம் குன்றிய – தமது அழகும் பயனும் குறைந்து, சிறை அழி தொழில நிரை மணிப் புரவி – கட்டுப்பாடு இல்லாத வரிசையாக மணிகள் அணிந்த குதிரைகள், விரை நடை தவிர – விரைந்து செல்ல முடியாத, இழுமென் கானல் விழு மணல் – ஒலியுடைய கடற்கரையில் சிறந்த மணல், அசைஇ – தங்கி (அளபெடை), ஆய்ந்த பரியன் வந்து – மெலிந்த குதிரைகளையுடைய அத் தலைவன் வந்து, இவண் – இங்கு, மான்ற மாலைச் சேர்ந்தன்றே இலனே – மயங்கிய மாலை நேரத்தில் தங்கியிருக்கவும் இல்லை (சேர்ந்தன்றே, இலனே – ஏகாரம் –அசைநிலைகள்)

அகநானூறு 191, ஓரோடகத்துக் கந்தரத்தனார், பாலைத் திணை தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அத்தப் பாதிரித் துய்த்தலைப் புது வீ
எரி இதழ் அலரியொடு இடைப்பட விரைஇ,
வெண்தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணி
தோல் புதை சிரற்று அடிக் கோல் உடை உமணர்
ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி,  5
அருஞ்சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள்
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி புரிந்து அவர்
மடி விடு வீளையொடு கடிது எதிர் ஓடி,
ஓமை அம் பெருங்காட்டு வரூஉம் வம்பலர்க்கு
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை  10
அரும் பொருள் நசைஇப், பிரிந்து உறை வல்லி,
சென்று வினை எண்ணுதி ஆயின், நன்றும்,
உரைத்திசின், வாழி என் நெஞ்சே, நிரை முகை
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி
அறல் என விரிந்த உறல் இன் சாயல்  15
ஒலி இருங்கூந்தல் தேறும் என,
வலிய கூறவும் வல்லையோ மற்றே?

பாடல் பின்னணி:  தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.

பொருளுரை:  என் நெஞ்சே!  நீ நீடு வாழ்வாயாக!   பாலை நிலத்தில் உள்ள துய்யினை உச்சியில் கொண்ட புதிய பாதிரி மலர்களை, நெருப்பை ஒத்த இதழ்களை உடைய இலவ மலர்களுடன் இடையிடையே கலந்து, வெண்மை பொருந்திய தாழம்பூவின் இதழுடன் கட்டிய, வண்டுகள் மொய்க்கும் கண்ணியினைச் சூடிய, பொதிந்த செருப்பு ஒலிக்கும் அடியினையும் எருதுகளை அடிக்கும் கோலினையும் உடைய உப்பு வணிகர்கள், ஊரைக் கண்டாற்போல் குழுமி, மணலில் அழுந்திய வண்டியின் ஆரக்கால்களை இழுத்து கடத்தற்கு அரிய பாலை வழியில் சென்ற, தளர்வு இல்லாத வலிய முயற்சியையுடைய திருத்தமான எருதுகளின் கழுத்தில் கட்டப்பட்ட வளைந்த மணிகளின் ஒலி, அவர்கள் வாயினை மடித்து விடும் சீழ்க்கை ஒலியுடன் விரைந்து எதிரே ஓடி, ஓமை மரங்களையுடைய பெரிய காட்டில் வரும் புதிய வழிப்போக்கர்களுக்குப் பாதுகாவலைக் கூறும், கதிரவனின் வெப்பம் மிக்க நெடிய இடத்தில், அரிய பொருளை விரும்பி நம் தலைவியைப் பிரிந்து உறையும் வல்லமை உடையையாய் சென்று பொருள் ஈட்டும் வினையை நீ எண்ணுவாய் ஆனால்,

அணைப்பதற்கு இனிய மென்மைத் தன்மையையும், வரிசையாகத் தொடுத்த முல்லையின் அரும்புகளைச் சூடி, மென்மைத் தன்மை உடையவனாய் ஆகி, கருமணல் போல் விரிந்த, அடர்ந்த கரிய கூந்தலையுடைய நம் தலைவி, தெளிவிப்பாள் என்று, வலிய சொற்களைக் கூறவும் வலிமை உயையையோ?  வல்லமை உடையை ஆயின், அவளிடம் நீ சென்றும் பெரிதும் கூறுவாயாக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘ஒன்றாத் தமரினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 41) என வரும் நூற்பாவின்கண் ‘அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்’ என வரும் விதி கொள்க.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  உறல் இன் சாயல் (15) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – உறுதற்கு இனிய சாயல்.  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).  என்றூழ் – கதிரவனின் முதிர்ந்த கதிர்கள், எல் (கதிரவன்) + ஊழ் (முதிர்ச்சி).  முனைவர் கு. வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம்.

சொற்பொருள்:  அத்தப் பாதிரித் துய்த்தலைப் புது வீ எரி இதழ் அலரியொடு இடைப்பட விரைஇ – பாலை நிலத்தில் உள்ள துய்யினை உச்சியில் கொண்ட புதிய பாதிரி மலர்களை நெருப்பை ஒத்த இதழ்களை உடைய இலவ மலர்களுடன் இடையிடையே கலந்து (விரைஇ – அளபெடை), வெண்தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணி தோல் புதை சிரற்று அடிக் கோல் உடை உமணர் ஊர் கண்டன்ன – வெண்மை பொருந்திய தாழம்பூவின் இதழுடன் கட்டிய வண்டுகள் மொய்க்கும் கண்ணியினைச் சூடிய பொதிந்த செருப்பு ஒலிக்கும் அடியினையும் எருதுகளை அடிக்கும் கோலினையும் உடைய உப்பு வணிகர்கள் ஊரைக் கண்டாற்போல் குழுமி (தோல் – செருப்பு), ஆரம் வாங்கி அருஞ்சுரம் இவர்ந்த – வண்டியின் ஆரக்கால்களை இழுத்து கடத்தற்கு அரிய பாலை வழியில் சென்ற (ஆரம் – வண்டிக்கு ஆகுபெயர்), அசைவு இல் நோன் தாள் திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி புரிந்து அவர் மடி விடு வீளையொடு கடிது எதிர் ஓடி ஓமை அம் பெருங்காட்டு வரூஉம் வம்பலர்க்கு ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை – தளர்வு இல்லாத வலிய முயற்சியையுடைய திருத்தமான எருதுகளின் கழுத்தில் கட்டப்பட்ட வளைந்த மணிகளின் ஒலி அவர்கள் வாயினை மடித்து விடும் சீழ்க்கை ஒலியுடன் விரைந்து எதிரே ஓடி ஓமை மரங்களையுடைய பெரிய காட்டில் வரும் புதிய வழிப்போக்கர்களுக்குப் பாதுகாவலைக் கூறும் கதிரவனின் வெப்பம் மிக்க நெடிய இடத்தில் (ஓமை மரம் – Dillenia indica, Toothbrush Tree, வரூஉம் – அளபெடை), அரும் பொருள் நசைஇப் பிரிந்து உறை வல்லி சென்று வினை எண்ணுதி ஆயின் – அரிய பொருளை விரும்பி நம் தலைவியைப் பிரிந்து உறையும் வல்லமை உடையையாய் சென்று பொருள் ஈட்டும் வினையை நீ எண்ணுவாய் ஆனால் (நசைஇ – அளபெடை), நன்றும் உரைத்திசின் – அவளிடம் சென்றும் பெரிதும் கூறுவாயாக (சின் – முன்னிலை அசைச் சொல், an expletive of the second person), வாழி – நீ நீடு வாழ்வாயாக, என் நெஞ்சே – என் நெஞ்சே, நிரை முகை முல்லை அருந்தும் – வரிசையாகத் தொடுத்த முல்லையின் அரும்புகளைச் சூடி (அருந்து ஆர்ந்து என்பதன் விகாரம், குறுக்கும் வழி குறுக்கல்), மெல்லிய ஆகி – மென்மைத் தன்மை உடையவனாய் ஆகி, அறல் என விரிந்த – கருமணல் போல் விரிந்த, உறல் இன் சாயல் – அணைப்பதற்கு இனிய மென்மைத் தன்மை, ஒலி இருங்கூந்தல் தேறும் என – அடர்ந்த கரிய கூந்தலையுடைய நம் தலைவி (இருங்கூந்தல் – அன்மொழித்தொகை), தெளிவிப்பாள் என்று,  வலிய கூறவும் வல்லையோ மற்றே – வலிய சொற்களைக் கூறவும் வலிமை உயையையோ (மற்றே – மற்று, ஏ அசைநிலைகள்)

அகநானூறு 192, பொதும்பில் கிழான் வெண்கண்ணனார், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
மதி இருப்பன்ன மாசு அறு சுடர் நுதல்
பொன் நேர் வண்ணம் கொண்டன்று, அன்னோ!
யாங்கு ஆகுவள் கொல் தானே? விசும்பின்
எய்யா வரி வில் அன்ன பைந்தார்ச்
செவ்வாய்ச் சிறு கிளி சிதைய வாங்கி  5
பொறை மெலிந்திட்ட புன் புறப் பெருங்குரல்
வளை சிறை வாரணம் கிளையொடு கவர,
ஏனலும் இறங்கு பொறை உயிர்த்தன பானாள்
வந்து அளிக்குவை எனினே மால் வரை
மைபடு விடரகம் துழைஇ ஒய்யென  10
அருவி தந்த அரவு உமிழ் திரு மணி
பெருவரைச் சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின்,
இரவும் இழந்தனள் அளியள் உரவுப் பெயல்
உருமிறை கொண்ட உயர் சிமைப்
பெருமலை நாட, நின் மலர்ந்த மார்பே.  15

பாடல் பின்னணி:  களவு ஒழுக்கத்தையே விரும்பும் தலைவனுக்குத் தோழி இரவுக்குறி மறுத்தது.  வரைவு கடாயது.

பொருளுரை:  வலிய மழையுடன் இடி தங்கியுள்ள உயர்ந்த உச்சியையுடைய பெரிய மலைநாட்டின் தலைவனே!

வானில் உள்ள எய்யப்படாத வில்லாகிய அழகிய வானவில்லை ஒத்த பசிய மாலையினையும் சிவந்த வாயினையும் உடைய சிறு கிளிகள், தினைக்கதிர்கள் சிதையும்படி அவற்றைக் கொய்து, பாரத்தைச் சுமக்க இயலாது தளர்ந்து நிலத்தில் இட்ட புல்லிய புறத்தை உடைய பெரிய கதிர்க்கொத்துக்களை, வளைந்த சிறகுகளையுடைய கானக்கோழி தன் இனத்துடன் உண்ணும்படி, தினையும் வளைந்த கதிர்களை ஈன்றன.

நடுஇரவில் இரவுக்குறியிடத்தில் வந்து நீ அருள்வாய் என்று கூறினால், அதற்கு இடையூறு உள்ளது.  பெரிய மலையின் இருள் பொருந்திய குகைகளின் உள்ளிடங்களைத் துழாவி ஒய்யென அருவி கொண்டு தந்த பாம்புகள் உமிழ்ந்த அழகிய மணிகள், பெரிய மலையில் உள்ள எம் சிற்றூரின் தெருவில் ஒளியைத் தருவதால், நின் அகன்ற மார்புடன் பொருந்துதலை இரவிலும் இழந்தவள் ஆவாள் அவள்.

பிறை நிலவைப் போன்ற அவளுடைய குற்றமற்ற ஒளியுடைய நெற்றி பசலையால் பொன்னை ஒத்த நிறத்தைக் கொண்டுள்ளது.   ஐயோ!  எங்ஙனம் ஆகுவாளோ?  அவள் இரங்கத்தக்கவள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனை நிலைவகையால் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  பாட வேறுபாடு – பழைய உரை – மதி இருப்பன்ன, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மதி அரும்பன்ன, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மதி அரும்பன்ன.  பாம்பு மணியை உமிழ்தல் – புறநானூறு 294, அகநானூறு 72, 92, 138, 192, 372, குறுந்தொகை 239, நற்றிணை 255.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தினைக்கதிர் முதிர்ந்தன என்றது, இனி எம் பெருமாட்டி ஒருதலையாக இற்செறிக்கப்படுவாள் ஆதலால் இனி நீ பகற்குறியின்கண் வாரற்க எனப் பகற்குறியைக் குறிப்பாக மறுத்தவாறு ஆயிற்று.  இறைச்சி – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிறுகிளி தினையை முழுதுங் கவரமாட்டாமல் சிதைத்துக் கவர்ந்து அதனையும் தாங்க மாட்டாமல் போகட்டது போல நீதானும் எம் பெருமாட்டியை முழுவதும் உன் காதலியாகும்படி வரைந்துகொள்ள மாட்டாமல் களவொழுக்கத்தால் மாத்திரம் ஓரளவே அவளைக் கவர்ந்துள்ளாய்.  இனி அக்களவொழுக்கமும் கைகூடா வண்ணம் இற்செறிப்பு விட்டொழிந்தனை என இறைச்சிப்பொருள் தோன்றுதலும் உணர்க. 

சொற்பொருள்:  மதி இருப்பன்ன மாசு அறு சுடர் நுதல் பொன் நேர் வண்ணம் கொண்டன்று – பிறை நிலவைப் போன்ற குற்றமற்ற ஒளியுடைய நெற்றி பொன்னை ஒத்த நிறத்தைக் கொண்டுள்ளது , அன்னோ – ஐயோ, யாங்கு ஆகுவள் கொல் – எங்ஙனம் ஆகுவாளோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்), தானே – தான், ஏ அசைநிலைகள், விசும்பின் எய்யா வரி வில் அன்ன பைந்தார்ச் செவ்வாய்ச் சிறு கிளி – வானில் உள்ள எய்யப்படாத வில்லாகிய அழகிய வானவில்லை ஒத்த பசிய மாலையினையும் சிவந்த வாயினையும் உடைய சிறு கிளிகள் (எய்யா வில் – எய்யப்படாத வில்லான வானவில், வெளிப்படை, (வரி – அழகு (பைந்தார், செவ்வாய் – பண்புத்தொகை), சிதைய வாங்கி பொறை மெலிந்து இட்ட புன் புறப் பெருங்குரல் – தினைக்கதிர்கள் சிதையும்படி அவற்றைக் கொய்து பாரத்தைச் சுமக்க இயலாது தளர்ந்து நிலத்தில் இட்ட புல்லிய புறத்தை உடைய பெரிய கதிர்க்கொத்துக்களை, வளை சிறை வாரணம் கிளையொடு கவர – வளைந்த சிறகுகளையுடைய கானக்கோழி தன் இனத்துடன் உண்ணும்படி, ஏனலும் இறங்கு பொறை உயிர்த்தன – தினையும் வளைந்த கதிர்களை ஈன்றன, பானாள் வந்து அளிக்குவை எனினே – நடுஇரவில் வந்து நீ அளிப்பாய் என்று கூறினால், மால் வரை மைபடு விடர் அகம் துழைஇ ஒய்யென அருவி தந்த அரவு உமிழ் திரு மணி – பெரிய மலையின் இருள் பொருந்திய குகைகளின் உள்ளிடங்களைத் துழாவி ஒய்யென அருவி கொண்டு தந்த பாம்புகள் உமிழ்ந்த அழகிய மணிகள் (ஒய்யென – விரைவுக்குறிப்பு), பெருவரைச் சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின் – பெரிய மலையில் உள்ள எம் சிற்றூரின் தெருவில் ஒளியைத் தருவதால், இரவும் இழந்தனள் – இரவிலும் இழந்தவள் ஆவாள், அளியள் – இரங்கத்தக்கவள், உரவுப் பெயல் உருமிறை கொண்ட உயர் சிமைப் பெருமலை நாட – வலிய மழையுடன் இடி தங்கியுள்ள உயர்ந்த உச்சியையுடைய பெரிய மலைநாட்டின் தலைவனே, நின் மலர்ந்த மார்பே – நின் அகன்ற மார்பு (மார்பே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 193, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
கான் உயர் மருங்கில் கவலை அல்லது
வானம் வேண்டா வில் ஏர் உழவர்
பெருநாள் வேட்டம் கிளை எழ வாய்த்த,
பொரு களத்து ஒழிந்த குருதிச் செவ்வாய்ப்
பொறித்த போலும் வால் நிற எருத்தின்,  5
அணிந்த போலும் செஞ்செவி எருவை
குறும்பொறை எழுந்த நெடுந்தாள் யாஅத்து
அருங்கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட,
விரைந்து வாய் வழுக்கிய கொழுங்கண் ஊன் தடி
கொல் பசி முது நரி வல்சி ஆகும்  10
சுரன் நமக்கு எளிய மன்னே, நல் மனைப்
பன் மாண் தங்கிய சாயல் இன் மொழி
முருந்து ஏர் முறுவல் இளையோள்,
பெருந்தோள் இன் துயில் கைவிடுகலனே.

பாடல் பின்னணி:  பொருள் வேண்டிய நெஞ்சிற்குச் சொல்லித் தலைவன் செலவு அழுங்கியது.  

பொருளுரை:  உயர்ந்த காட்டில் உள்ள பிரிவுகளையுடைய வழிகள் அல்லாது, மழையை விரும்பாத வில்லாகிய ஏரால் உழுது வாழும் ஆரலை கள்வர்கள், சிறந்த நாளில் வேட்டத்திற்குத் தம் சுற்றத்துடன் எழுந்து செல்லுகையில் கிடைத்த பொருதும் களத்தில் வீழ்ந்த வழிப்போக்கர்களின் உடலிலிருந்து ஒழுகிய குருதியைப் பருகியதால் சிவந்த வாயினையும், பொறித்தாற்போல் வெள்ளை நிறக் கழுத்தையும், செய்து அணிவித்தது போலும் சிவந்த செவியையுமுடைய கழுகு, சிறிய மலையில் வளரும் நெடிய அடியையுடைய யா மரத்தின் ஏறுதற்கு அரிய பிரிவுகளையுடைய உயர்ந்த கிளையில் தன் குஞ்சுகளுக்கு உண்பிக்க, ஊட்டுதல் விரைவதால் வாயிலிருந்து வழுக்கி விழுந்த கொழுத்த ஊன் துண்டு பழைய பசியையுடைய முதிய நரிகளுக்கு உணவாகும் காடுகள் நாம் செல்வதற்கு எளியவாகும்.

ஆயினும், நம் நல்ல மனையில் உள்ள, பல மாண்புகளையுடைய மென்மைத் தன்மையையும், இனிய சொற்களையும், மயிலிறகின் அடியை ஒத்த பற்களையுமுடைய நம் தலைவியின் பெரிய தோள்களில், இனிய துயிலைக் கைவிடும் ஆற்றல் உடையேன் அல்லேன் யான். 

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘ஒன்றாத் தமரினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 41) என வரும் நூற்பாவின்கண் ‘அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்’ என வரும் விதி கொள்க.  வானம் வேண்டா வில் ஏர் உழவர் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மழை வளத்தை விரும்புதலில்லாத வில்லாகிய ஏரினை உழும் உழவராகிய ஆறலை கள்வர்.பொறித்த போலும் வால் நிற எருத்தின் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரைந்து வைத்தாற்போல் வெண்ணிறமான புறக் கழுத்தினையும், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பொறித்து வைத்தாற்போலும் வெண்ணிறம் வாய்ந்த கழுத்தினையும்.  ஒப்புமை – அகநானூறு 179 – முருந்து எனத் திரண்ட முள் எயிற்று, அகநானூறு 193 – முருந்து ஏர் முறுவல் இளையோள், நற்றிணை 179 – முருந்து ஏர் வெண்பல் முகிழ் நகை.  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).

சொற்பொருள்:  கான் உயர் மருங்கில் கவலை அல்லது – உயர்ந்த காட்டில் உள்ள பிரிவுகளையுடைய வழிகள் அல்லாது, வானம் வேண்டா வில் ஏர் உழவர் – மழையை விரும்பாத வில்லாகிய ஏரால் உழுது வாழும் ஆரலைகள்வர்கள், பெருநாள் வேட்டம் கிளை எழ வாய்த்த பொரு களத்து ஒழிந்த – சிறந்த நாளில் வேட்டத்திற்குத் தம் சுற்றத்துடன் எழுந்து செல்லுகையில் கிடைத்த பொருதும் களத்தில் வீழ்ந்த, குருதிச் செவ்வாய்ப் பொறித்த போலும் வால் நிற எருத்தின் அணிந்த போலும் செஞ்செவி எருவை – குருதியைப் பருகியதால் சிவந்த வாயினையும் பொறித்தாற்போல் வெள்ளை நிறக் கழுத்தையும் செய்து அணிவித்தது போலும் சிவந்த செவியையுமுடைய கழுகு (செவ்வாய் – பண்புத்தொகை), குறும்பொறை எழுந்த நெடுந்தாள் யாஅத்து அருங்கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட – சிறிய மலையில் வளரும் நெடிய அடியையுடைய யா மரத்தின் ஏறுதற்கு அரிய பிரிவுகளையுடைய உயர்ந்த கிளையில் தன் குஞ்சுகளுக்கு உண்பிக்க (யாஅத்து – அத்துச் சாரியை, யா மரம் – ஆச்சா மரம், Hardwickia binate) விரைந்து வாய் வழுக்கிய கொழுங்கண் ஊன் தடி கொல் பசி முது நரி வல்சி ஆகும் சுரன் நமக்கு எளிய மன்னே – விரைவதால் வாயிலிருந்து வழுக்கி விழுந்த கொழுத்த ஊன் துண்டு பழைய பசியையுடைய முதிய நரிகளுக்கு உணவாகும் காடுகள் நாம் செல்வதற்கு எளியவாகும் (சுரன் – சுரம் என்பதன் போலி, மன்னே – மன் ஒழியிசை, ஏ அசைநிலை) நல் மனைப் பன் மாண் தங்கிய சாயல் இன் மொழி முருந்து ஏர் முறுவல் இளையோள் பெருந்தோள் இன் துயில் கைவிடுகலனே – நம் நல்ல மனையில் உள்ள பல மாண்புகளையுடைய மென்மைத் தன்மையையும் இனிய சொற்களையும் மயிலிறகின் அடியை ஒத்த பற்களையுமுடைய நம் தலைவியின் பெரிய தோள்களில் இனிய துயிலைக் கைவிடும் ஆற்றல் உடையேன் அல்லேன் (ஏர் – உவம உருபு, முறுவல் – பல், கைவிடுகலனே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 194, இடைக்காடனார், முல்லைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை,
ஏர் இடம்படுத்த இருமறுப் பூழிப்
புற மாறுபெற்ற பூவல் ஈரத்து
ஊன் கிழித்தன்ன, செஞ்சுவல் நெடுஞ்சால்
வித்திய மருங்கின் விதை பல நாறி,  5
இரலை நன்மான் இனம் பரந்தவை போலக்
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்
கறங்கு பறை சீரின் இரங்க வாங்கி,
களை கால் கழீஇய பெரும்புன வரகின்
கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட,  10
குடுமி நெற்றி நெடுமாத் தோகை
காமர் கலவம் பரப்பி, ஏமுறக்
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த
வல் இலைக் குருந்தின் வாங்கு சினை இருந்து,
கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும்  15
கார் மன் இதுவால் தோழி, “போர் மிகக்
கொடுஞ்சி நெடுந்தேர் பூண்ட கடும் பரி
விரி உளை நல் மான் கடைஇ
வருதும்” என்று அவர் தெளித்த போழ்தே.

பாடல் பின்னணி:  பருவம் கண்டு ஆற்றாமை மிகுந்தவளாய் வருந்தித் தோழியிடம் கூறியது.  

பொருளுரை:  தோழி!  போர் மிகுந்தால், போர் பணிக்குச் செல்லும்பொழுது, “கொடுஞ்சி என்னும் உறுப்புடைய நெடிய தேரில் பூட்டப்பட்ட விரைந்த ஓட்டத்தையுடைய நல்ல குதிரைகளைச் செலுத்தி யாம் வருவேம்” என்று நம் தலைவர் தெரிவித்த பொழுதாகிய,

பெரிய மழை பெய்த நன்கு இருள் புலர்ந்த காலைப்பொழுதில் ஏர்களைப் பூட்டி, இடம் உண்டாக பெரிய வடுக்களையுடைய, கீழ் மேலாக புரண்ட புழுதியையுடைய, செம்மண் நிலத்தில் ஈரமுடையதால் ஊனைக் கிழித்தாற்போல் சிவந்த மேட்டு நிலத்தைப் பிளந்து சென்ற நெடிய படைச்சாலினிடத்து, விதைத்த இடங்களில் விதைகள் பல முளைத்து வளர, நல்ல கலைமான் கூட்டம் பரவியதைப் போல் கோட்டினையுடைய ஓலைக்கூடையைத் தலையில் அணிந்த உழவர்கள், ஒலிக்கும் பறையின் ஒலியுடன் பயிர்கள் வளையும்படி ஒதுக்கிக் களையைப் பறித்துத் தூய்மை செய்த, பெரிய புனத்தில் விளைந்த வரகின் கவர்த்த கதிர்களின் கரிய புறத்தைக் கொத்தி உண்ட குடுமி பொருந்திய தலையையுடைய நீண்ட கரிய மயில்கள் அழகிய தோகையை விரித்து, முகில்களைக் கண்டதால் இன்பம் அடைய, கொல்லையை உழும் உழவர்கள், கூழை உண்ணுவதற்கு நிழலாக விட்டு வைத்த, வலிய இலைகளையுடைய குருந்த மரத்தின் வளைந்த கிளைகளில் இருந்து கிளிகளை விரட்டும் மகளிர் போல் ஒலி உண்டாகும்படி அகவும், கார்காலம் இது.  நான் எவ்வாறு ஆற்றியிக்க முடியும்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘அவன் அறிவு ஆற்ற அறியும்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என வரும் நூற்பாவின்கண் ‘ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும்’ என்பதனால் அமைத்துக்கொள்க.  நாறி (5) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நாற எனத் திரிக்க. கோடுடைத் தலைக்குடை (7) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கோட்டினையுடைய ஓலைக்குடையை தலையிற் சூடிய கொல்லை உழவர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரு மருங்கிலும் கொம்புகளையுடையதாய்ப் பின்னப்பெற்ற தலையில் கவிழ்க்கும் குடையைச் சூடிய தொழிலாளர்.  குடுமி நெற்றி (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சூட்டினையுடைய நெற்றி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – குடுமி பொருந்திய தலை.  கொடுஞ்சி – கையால் பற்றுதற்குரிய தாமரை மொட்டுப் போன்ற தேர் உறுப்பு.  ஒப்புமை –அகநானூறு 118 – குரல் ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள், அகநானூறு 194 – கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும், குறுந்தொகை 142 – புனக் கிளி கடியும் பூங்கண் பேதை, குறுந்தொகை 198 – படுகிளி கடிகம் சேறும், குறுந்தொகை 217 – தினை கிளி கடிக எனின், குறுந்தொகை 291 – ஏனல் படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே இசையின் இசையா இன்பாணித்தே, குறுந்தொகை 360 – ஏனல் உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே, பதிற்றுப்பத்து 78 – மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலிக் கிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல. 

சொற்பொருள்:  பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை ஏர் இடம் படுத்த இரு மறு – பெரிய மழை பெய்த நன்கு இருள் புலர்ந்த காலைப்பொழுதில் ஏர்களால் இடம் உண்டாக பெரிய வடுக்களையுடைய (தலைஇய – அளபெடை), பூழிப் புற மாறுபெற்ற – கீழ் மேலாக புரண்ட புழுதியையுடைய, பூவல் ஈரத்து ஊன் கிழித்தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால் – செம்மண் நிலத்தில் ஈரமுடையதால் ஊனைக் கிழித்தாற்போல் சிவந்த மேட்டு நிலத்தைப் பிளந்து சென்ற நெடிய படைச்சாலினிடத்து (நெடுஞ்சால் – விதைப்பதற்காகத் தோண்டப்படும் நீண்ட குழி), வித்திய மருங்கின் விதை பல நாறி – விதைத்த இடங்களில் விதைகள் பல முளைத்து வளர, இரலை நன்மான் இனம் பரந்தவை போலக் கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர் – நல்ல கலைமான் கூட்டம் பரவியதைப் போல் கோட்டினையுடைய ஓலைக்கூடையைத் தலையில் அணிந்த உழவர்கள், கறங்கு பறை சீரின் இரங்க வாங்கி களை கால் கழீஇய – ஒலிக்கும் பறையின் ஒலியுடன் பயிர்கள் வளையும்படி ஒதுக்கிக் களையைப் பறித்துத் தூய்மை செய்த (கழீஇய – அளபெடை), பெரும்புன வரகின் கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட குடுமி நெற்றி நெடுமாத் தோகை காமர் கலவம் பரப்பி – பெரிய புனத்தில் விளைந்த வரகின் கவர்த்த கதிர்களின் கரிய புறத்தைக் கொத்தி உண்ட குடுமி பொருந்திய தலையையுடைய நீண்ட கரிய மயில்கள் அழகிய தோகையை விரித்து (கதூஉ – அளபெடை, நெற்றி – ஆகுபெயர் தலைக்கு), ஏம் உற – இன்பம் உற, கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த – கொல்லையை உழும் உழவர்கள் கூழை உண்ணுவதற்கு நிழலாக விட்டு வைத்த, வல் இலைக் குருந்தின் வாங்கு சினை இருந்து கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும் – வலிய இலைகளையுடைய குருந்த மரத்தின் வளைந்த கிளைகளில் இருந்து கிளிகளை விரட்டும் மகளிர் போல் ஒலி உண்டாகும்படி அகவும் (மகளிரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, (குருந்த மரம் – wild orange tree, citrus indica), கார் மன் இதுவால் – கார்காலம் இது, தோழி – தோழி,  போர் மிகக் கொடுஞ்சி நெடுந்தேர் பூண்ட கடும் பரி விரி உளை நல் மான் கடைஇ வருதும் என்று அவர் தெளித்த போழ்தே – போர் மிகுந்தால் அப்போருக்குச் செல்லும்பொழுது ‘கொடுஞ்சி என்னும் உறுப்புடைய நெடிய தேரில் பூட்டப்பட்ட விரைந்த ஓட்டத்தையுடைய நல்ல குதிரைகளைச் செலுத்தி யாம் வருவேம்’ என்று நம் தலைவர் தெரிவித்த காலம் (கடைஇ – அளபெடை, போழ்தே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 195, கயமனார், பாலைத் திணைமகட்போக்கிய தாய் வேலனிடம் சொன்னது
அருஞ்சுரம் இறந்த என் பெருந்தோள் குறுமகள்
திருந்து வேல் விடலையொடு வரும் எனத், தாயே,
புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி,
மனை மணல் அடுத்து மாலை நாற்றி,
உவந்து இனிது அயரும் என்ப, யானும்,  5
மான் பிணை நோக்கின் மட நல்லாளை
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும்,
இன்னகை முறுவல் ஏழையைப் பல் நாள்
கூந்தல் வாரி நுசுப்பு இவர்ந்து ஓம்பிய
நலம் புனை உதவியும் உடையன் மன்னே,  10
அஃது அறிகிற்பினோ நன்று மன் தில்ல,
அறுவை தோயும் ஒரு பெருங்குடுமி,
சிறு பை நாற்றிய பஃறலைக் கொடுங்கோல்,
ஆகுவது அறியும் முதுவாய் வேல!
கூறுக மாதோ நின் கழங்கின் திட்பம்,  15
மாறா வருபனி கலுழும் கங்குலில்
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர்,
எம் மனை முந்துறத் தருமோ?
தன் மனை உய்க்குமோ? யாது அவன் குறிப்பே?

பாடல் பின்னணி:  மகட் போக்கிய நற்றாய் வருந்திக் கூறியது.

பொருளுரை:  கடத்தற்கரிய பாலை நிலத்தைக் கடந்து சென்ற என் பெரிய தோள்களையுடைய இளைய மகள் திருந்திய வேலையுடைய தலைவனுடன் வருவாள் என்று அவனுடைய தாய், புனைந்ததால் மாட்சிமைப்பட்ட இல்லத்தின் புறச்சுவரில் எல்லாம் செம்மண் பூசி, மனையில் முற்றத்தில் மணல் பெய்து, மாலைகளைத் தொங்கவிட்டு, மகிழ்ந்து இனிதாகச் செய்கின்றாள் எனக் கூறுகின்றனர். 

யானும், பெண் மானின் பார்வையையுடைய இளைய நல்லவளை ஈன்றவள் என்று என்பால் அன்பால் அருள் செய்யான் ஆயினும், இனிய புன்னகையுடன் கூடிய பற்களையுடைய அவளை பல நாட்கள் கூந்தலை வாரி முடித்து இடுப்பில் வைத்துப் பாதுகாத்த நன்மையுடைய உதவியையும் செய்தவள் ஆவேன், என்பதனை அவன் அறிந்தால் நல்லது.  ஆடை சுற்றிய பெரிய குடுமியினையும் சிறிய பை தொங்கவிடப்பட்ட பல தலையையுடைய வளைந்த கோளினையும் உடையவனாய், நிகழ்வனவற்றை அறிந்து கூறும் அறிவு வாய்ந்த வேலனே!  கூறுவாயாக, உன் கழங்கின் திண்ணிய குறியை!  இரவில் இடைவிடாது கலங்கி அழுது வருந்தும் எம் கண்கள் இனிது துயிலும் பொருட்டு, எம் மனைக்கு அழைத்து வருவானோ?  தன் மனைக்கு அழைத்துச் செல்வானோ?  யாது அவன் எண்ணுவது?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘தன்னும் அவனும் அவளும் சுட்டி’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 39) என வரும் நூற்பாவின்கண் ‘மன்னும் நிமித்தம் மொழிப் பொருள் தெய்வம் நன்மை தீமை அச்சம் சார்தல்’ என்னும் இவற்றினுள் தெய்வத்தொடும் நன்மையொடும் படுத்து நற்றாய் கூறியதென்று கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘தன்னும் அவனும் அவளும் சுட்டி’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 39) என்னுஞ் சூத்திரத்து, இப்பாட்டினைக் கூறி, இது தெய்வத்தொடு படுத்துப் புலம்பியது என்றும், ‘களவு அலர் ஆயினும் காமம் மெய்ப்படுப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்னுஞ் சூத்திரத்து, ‘போக்கு உடன் அறிந்த பின் தோழியொடு கெழீஇக் கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்ணும்’ என்னும் துறைக்கு ‘எம் மனை முந்துறத் தருமோ? தன் மனை உய்க்குமோ?  யாது அவன் குறிப்பே?’ என்ற பகுதியை உதாரணமாகக் காட்டி, இது ‘கற்பினாக்கத்துக் கருத்து நிகழ்தல்’ என்றும் ‘வெளிப்பட வரைதல் படாமை வரைதல்’ (தொல்காப்பியம், களவியல் 49) என்னுஞ் சூத்திரத்து ‘எம் மனை …….. யாது அவன் குறிப்பே’ இது ‘போல்வன வெளிப்படுவதன் முன்னர்க்கொண்டு தலைக் கழிந்துழிக் கொடுப்போர் இன்றியும் கரணம் நிகழ்ந்தமையின் அதுவும் வெளிப்படாமல் வரைந்ததாம்’ என்றும் ‘கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே’ (தொல்காப்பியம், கற்பியல் 2) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள் ‘கொடுப்போர் இன்றிக் கரணம் நிகழ்ந்தது’ என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.  ‘மறை வெளிப்படுதலும்’ (தொல்காப்பியம், செய்யுளியல் 187) என்னுஞ் சூத்திரத்து எம் மனை …….. யாது அவன் குறிப்பே’ என்பது மறை வெளிப்பாடு என்றனர் பேராசிரியர்.

சொற்பொருள்:  அருஞ்சுரம் இறந்த என் பெருந்தோள் குறுமகள் திருந்து வேல் விடலையொடு வரும் எனத் தாயே – கடத்தற்கரிய பாலை நிலத்தைக் கடந்து சென்ற என் பெரிய தோள்களையுடைய இளைய மகள் திருந்திய வேலையுடைய தலைவனுடன் வருவாள் என்று அவனுடைய தாய் (தாயே – ஏகாரம் அசைநிலை), புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி மனை மணல் அடுத்து மாலை நாற்றி உவந்து இனிது அயரும் என்ப – புனைந்ததால் மாட்சிமைப்பட்ட இல்லத்தின் புறச்சுவரில் எல்லாம் செம்மண் பூசி மனையில் முற்றத்தில் மணல் பெய்து மாலைகளைத் தொங்கவிட்டு மகிழ்ந்து இனிதாகச் செய்கின்றாள் எனக் கூறுகின்றனர் (இஞ்சி – மனையை அடுத்து உள்ள வெளிச்சுவர்), யானும் – யானும், மான் பிணை நோக்கின் மட நல்லாளை ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும் – பெண் மானின் பார்வையையுடைய இளைய நல்லவளை ஈன்றவள் என்று என்பால் அன்பால் அருள் செய்யான் ஆயினும், இன்னகை முறுவல் ஏழையைப் பல் நாள் கூந்தல் வாரி நுசுப்பு இவர்ந்து ஓம்பிய நலம் புனை உதவியும் உடையன் – இனிய புன்னகையுடன் கூடிய பற்களையுடைய அவளை பல நாட்கள் கூந்தலை வாரி முடித்து இடுப்பில் வைத்துப் பாதுகாத்த நன்மையுடைய உதவியையும் செய்தவள் ஆவேன், மன்னே – மன் ஒழியிசை, ஏகாரம் அசைநிலை, அஃது அறிகிற்பினோ நன்று – அதனை அவன் அறிந்தால் நல்லது, மன் – அசைநிலை, தில்ல – தில் ஓர் இடைச்சொல், ஈறு திரிந்து வந்தது, அறுவை தோயும் ஒரு பெருங்குடுமி சிறு பை நாற்றிய பஃறலைக் கொடுங்கோல் ஆகுவது அறியும் முதுவாய் வேல – ஆடை சுற்றிய பெரிய குடுமியினையும் சிறிய பை தொங்கவிடப்பட்ட பல தலையையுடைய வளைந்த கோளினையும் உடையாய் நிகழ்வனவற்றை அறிந்து கூறும் அறிவு வாய்ந்த வேலனே (பஃறலை – பல்தலை, லகரம் ஆய்தமாய்த்  திரிந்தது, வேல – விளி), கூறுக – கூறுவாயாக, மாதோ – மாது ஓ அசைநிலைகள், நின் கழங்கின் திட்பம் – உன் கழங்கின் திண்ணிய குறியை, மாறா வருபனி கலுழும் கங்குலில் – இரவில் இடைவிடாது கலங்கி அழும், ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர் – விடாது துன்புறும் எம் கண்கள் இனிது துயிலும் பொருட்டு, எம் மனை முந்துறத் தருமோ – எம் மனைக்கு அழைத்து வருவானோ, தன் மனை உய்க்குமோ – தன் மனைக்கு அழைத்துச் செல்வானோ (உய்க்குமோ – ஓகாரம் வினா), யாது அவன் குறிப்பே – யாது அவன் எண்ணுவது (குறிப்பே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 196, பரணர், மருதத் திணை தலைவி தலைவனிடம் சொன்னது
நெடுங்கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து
நாள் துறைப் பட்ட மோட்டு இரு வராஅல்
துடிக் கண் கொழுங்குறை நொடுத்து, உண்டு ஆடி,
வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி
ஆம்பல் அகல் இலை அமலை வெஞ்சோறு  5
தீம் புளிப் பிரம்பின் திரள் கனி பெய்து,
விடியல் வைகறை இடூஉம் ஊர!
தொடுகலம் குறுக வாரல், தந்தை
கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று முரண் போகிய  10
கடுந்தேர்த் திதியன் அழுந்தை, கொடுங்குழை
அன்னி மிஞிலியின் இயலும்
நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே.

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனிடம் ஊடல்கொண்ட தலைவி கூறியது.  

பொருளுரை:  நீண்ட கொடிகள் அசையும் கள் மிக்க ஊரில், விடியற்காலையில் நீர்த்துறையில் அகப்பட்ட பெரிய வயிற்றினையுடைய வரால் மீனின், துடியின் கண் போன்ற கொழுவிய துண்டுகளை விற்று கள்ளுண்டு களித்து ஆடி, மீன் வேட்டையை மறந்து உறங்கும் தங்கள் கணவன்மார்க்கு அவர்களின் மனைவிமார் ஆம்பலின் அகன்ற இலையில் திரண்ட விரும்பும் சோற்றுடன் பிரம்பின் இனிய புளிப்பையுடைய திரண்ட பழத்தால் சமைத்த குழம்பைப் பெய்து விடியற்காலைக்கு முற்பட்ட வைகறைப் பொழுதில் இடும் ஊரனே! 

தன் தந்தையின் கண்களின் அழகை அழித்த தவற்றிற்காக, நெடிய மொழிகளையுடைய கோசர்களை, விரைந்த தேரினையுடைய திதியனின் அழுந்தை என்னும் ஊரில், அவன் உதவியால், அச்சம் உண்டாகக் கொன்று, மாறுபாட்டைத் தீர்த்த, வளைந்த காதணிகளை அணிந்த அன்னி மிஞிலி என்பவள் போல் களிப்புடன் நடக்கும், நின் நலத்திற்கு பொருந்திய பரத்தையைத் தழுவிய மார்பு, யாம் தொட மாட்டேம்.  எம்மை அணுகி வராதே!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘அவன் அறிவு’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என வரும் நூற்பாவின்கண் புகன்ற உள்ளமொடு புதியோர் சாயற்கு அகன்ற கிழவனை புலம்பு நனி காட்டி இயன்ற நெஞ்சம் தலைபெயர்த்துத் தருக்கி எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்’ என வரும் விதி கொள்க.  பாணரும் மீனும் – அகநானூறு 126 – தன் ஐயர் காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக்கு அவ் வாங்கு உந்தி அம் சொல் பாண்மகள் ….. முத்தமொடு நன்கலம் பெறூஉம், அகநானூறு 196 – வராஅல் துடிக் கண் கொழுங்குறை நொடுத்து உண்டு ஆடி வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி ஆம்பல் அகல் இலை அமலை வெஞ்சோறு தீம் புளிப் பிரம்பின் திரள் கனி பெய்து, அகநானூறு 216 – நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள், குறுந்தொகை 169 – பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல, ஐங்குறுநூறு 47 – முள் எயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த, ஐங்குறுநூறு 48 – வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள் வராஅல் சொரிந்த, ஐங்குறுநூறு 49 – பாண்மகள் சில் மீன் சொரிந்து,  ஐங்குறுநூறு 111 – பாணன் சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇச் சினைக் கயல் மாய்க்கும், புறநானூறு 348 – மீன் சீவும் பாண் சேரி, மதுரைக்காஞ்சி 269 – மீன் சீவும் பாண் சேரியொடு, பெரும்பாணாற்றுப்படை 284–285 – கோள்வல் பாண்மகன் தலைவலித்து யாத்த நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவர் மீன் பிடித்து விற்கும் தொழிலுடையோர் என்பது பெற்றாம்.  மருத நிலத்துப் பாணர்கள் மீன் பிடித்து விற்கும் தொழிலும் செய்வர்.  வரலாறு –திதியன், அழுந்தை, அன்னி மிஞிலி.  அன்னி மிஞிலி பற்றின குறிப்புகள் – அகநானூறு 196, 262.  திதியனின் உதவியால் கோசர்களைக் கொல்லுதல், அகநானூறு 262 – வாய்மொழித் தந்தையைக் கண் களைந்து அருளாது ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின் கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள் சினத்தின் கொண்ட படிவம் மாறாள், மறங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன் செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர் இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய அன்னி மிஞிலி போல மெய்ம் மலிந்து ஆனா உவகையேம் ஆயினெம்.

சொற்பொருள்:  நெடுங்கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து – நீண்ட கொடிகள் அசையும் கள் மிக்க ஊரில், நாள் துறைப் பட்ட மோட்டு இரு வராஅல் துடிக் கண் கொழுங்குறை நொடுத்து உண்டு ஆடி – விடியற்காலையில் நீர்த்துறையில் அகப்பட்ட பெரிய வயிற்றினையுடைய வரால் மீனின் துடியின் கண் போன்ற கொழுவிய துண்டுகளை விற்று கள்ளுண்டு களித்து ஆடி, வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி ஆம்பல் அகல் இலை அமலை வெஞ்சோறு தீம் புளிப் பிரம்பின் திரள் கனி பெய்து விடியல் வைகறை இடூஉம் ஊர – மீன் வேட்டையை மறந்து உறங்கும் தங்கள் கணவன்மார்க்கு அவர்களின் மனைவிமார் ஆம்பலின் அகன்ற இலையில் திரண்ட விரும்பும் சோற்றுடன் பிரம்பின் இனிய புளிப்பையுடைய திரண்ட பழத்தால் சமைத்த குழம்பைப் பெய்து விடியற்காலைக்கு முற்பட்ட வைகறைப் பொழுதில் இடும் ஊரனே (வராஅல் – அளபெடை, இடூஉம் – அளபெடை, ஊர – அண்மை விளி), தொடுகலம் – தொட மாட்டேம், குறுக வாரல் – எம்மை அணுகி வராதே (வாரல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று), தந்தை கண் கவின் அழித்ததன் தப்பல் – தன் தந்தையின் கண்களின் அழகை அழித்த தவற்றிற்காக, தெறுவர – அச்சம் உண்டாக, ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று – நெடிய மொழிகளையுடைய கோசர்களைக் கொன்று, முரண் போகிய – மாறுபாட்டைத் தீர்த்த, கடுந்தேர்த் திதியன் அழுந்தை – விரைந்த தேரினையுடைய திதியனின் அழுந்தை என்னும் ஊரில், கொடுங்குழை அன்னி மிஞிலியின் இயலும் – வளைந்த காதணிகளை அணிந்த அன்னி மிஞிலி என்பவள் போல் களிப்புடன் நடக்கும் (மிஞிலியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே – நின் நலத்திற்கு பொருந்திய பரத்தையைத் தழுவிய மார்பு (மார்பே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 197, மாமூலனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும்,
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும்,
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த
தொன்னலம் இழந்த துயரமொடு என்னதூஉம்
இனையல், வாழி தோழி! முனை எழ  5
முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின்
மறமிகு தானைக் கண்ணன் எழினி
தேமுது குன்றம் இறந்தனர் ஆயினும்
நீடலர் யாழ நின் நிரைவளை நெகிழத்,
தோள் தாழ்பு இருளிய குவை இருங்கூந்தல்  10
மடவோள் தழீஇய விறலோன் மார்பில்
புன்தலைப் புதல்வன் ஊர்பு இழிந்தாங்கு
கடுஞ்சூல் மடப்பிடி தழீஇய வெண்கோட்டு
இனஞ்சால் வேழம் கன்று ஊர்பு இழிதரப்,
பள்ளி கொள்ளும் பனிச் சுரம் நீந்தி  15
ஒள் இணர்க் கொன்றை ஓங்கு மலை அத்தம்
வினை வலியுறூஉம் நெஞ்சமொடு
இனையர் ஆகி நம் பிரிந்திசினோரே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தியது. 

பொருளுரை:  மா மலர் வண்ணம் இழந்த கண்ணும் பூ நெகிழ் அணையின் சாஅய தோளும் – கருங்குவளை மலரின் அழகை ஒத்த பழைய அழகை இழந்த கண்களும் அழகு நெகிழ்ந்த தலையணை போன்ற மெலிந்த தோள்களும், நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த தொன்னலம் இழந்த துயரமொடு – நன்மையுடைய தோழியர் விரும்பி ஆராய்ந்த பண்டைய அழகு இழந்த துயரத்துடன், என்னதூஉம் இனையல் – சிறிதளவும் வருந்தாதே, வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, முனை எழ முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின் – போர் செய்ய வந்தவர்களை ஒட்டிய வலிமை மிக்க செல்வத்தையும் , மறமிகு தானைக் கண்ணன் எழினி தேமுது குன்றம் இறந்தனர் ஆயினும் நீடலர் – வீரமிக்க படைகளை உடைய கண்ணன் எழினி என்பவனின் மலையைக் கடந்து சென்றாராயினும் நீட்டிக்க மாட்டார், யாழ நின் நிரைவளை நெகிழ – வரிசையாக அணிந்துள்ள நின் வளையல்கள் நெகிழ, தோள் தாழ்பு இருளிய குவை இருங்கூந்தல் மடவோள் தழீஇய விறலோன் மார்பில் – தோள்களில் தாழ்ந்த கரிய திரண்ட கூந்தலையுடைய மடப்பத்தையுடைய மனைவியைத் தழுவிய வெற்றியுடைய தலைவனின் மார்பில், புன்தலைப் புதல்வன் ஊர்பு இழிந்தாங்கு – புல்லிய தலையையுடைய புதல்வன் ஏறி இறங்குவது போன்று (தழீஇய – அளபெடை), கடுஞ்சூல் மடப்பிடி தழீஇய வெண்கோட்டு இனஞ்சால் வேழம் கன்று ஊர்பு இழிதரப் பள்ளி கொள்ளும் – நிறைந்த சூலினை உடைய இளைய பிடியினைத் தழுவிய வெள்ளை மறுப்புகளையுடைய இனத்துடன் கூடிய களிற்று யானை தன் கன்று தன் மீது ஏறி இறங்க படுத்திருக்கும் (தழீஇய – அளபெடை), பனிச் சுரம் நீந்தி ஒள் இணர்க் கொன்றை ஓங்கு மலை அத்தம் – நடுக்கத்தைச் செய்யும் பாலை நிலத்தைக் கடந்து ஒளிரும் மலர்க்கொத்துக்களையுடைய கொன்றை மரங்கள் உடைய உயர்ந்த மலையைச் சார்ந்த வழியில், வினை வலியுறூஉம் நெஞ்சமொடு – பொருள் ஈட்டும் வினையை வலியுறுத்தும் நெஞ்சத்துடன், இனையர் ஆகி – இவ்வாறு அருள் இல்லாதவர் ஆகி நம் பிரிந்திசினோரே நம்மைப் பிரிந்து சென்ற நம் தலைவர் (இசின் – படர்க்கையின் கண் வந்தது, ஏகாரம் –அசைநிலை)

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் பிறவும் என்பதன்கண் அடக்குக.  வரலாறு –கண்ணன் எழினி.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

சொற்பொருள்:  மா மலர் வண்ணம் இழந்த கண்ணும் பூ நெகிழ் அணையின் சாஅய தோளும் – கருங்குவளை மலரின் அழகை ஒத்த பழைய அழகை இழந்த கண்களும் அழகு நெகிழ்ந்த தலையணை போன்ற மெலிந்த தோள்களும், நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த தொன்னலம் இழந்த துயரமொடு – நன்மையுடைய தோழியர் விரும்பி ஆராய்ந்த பண்டைய அழகு இழந்த துயரத்துடன், என்னதூஉம் இனையல் – சிறிதளவும் வருந்தாதே, வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, முனை எழ முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின் – போர் செய்ய வந்தவர்களை ஒட்டிய வலிமை மிக்க செல்வத்தையும் , மறமிகு தானைக் கண்ணன் எழினி தேமுது குன்றம் இறந்தனர் ஆயினும் நீடலர் – வீரமிக்க படைகளை உடைய கண்ணன் எழினி என்பவனின் மலையைக் கடந்து சென்றாராயினும் நீட்டிக்க மாட்டார், யாழ – அசைநிலை, நின் நிரைவளை நெகிழ – வரிசையாக அணிந்துள்ள நின் வளையல்கள் நெகிழ, தோள் தாழ்பு இருளிய குவை இருங்கூந்தல் மடவோள் தழீஇய விறலோன் மார்பில் – தோள்களில் தாழ்ந்த கரிய திரண்ட கூந்தலையுடைய மடப்பத்தையுடைய மனைவியைத் தழுவிய வெற்றியுடைய தலைவனின் மார்பில், புன்தலைப் புதல்வன் ஊர்பு இழிந்தாங்கு – புல்லிய தலையையுடைய புதல்வன் ஏறி இறங்குவது போன்று (தழீஇய – அளபெடை), கடுஞ்சூல் மடப்பிடி தழீஇய வெண்கோட்டு இனஞ்சால் வேழம் கன்று ஊர்பு இழிதரப் பள்ளி கொள்ளும் – நிறைந்த சூலினை உடைய இளைய பிடியினைத் தழுவிய வெள்ளை மறுப்புகளையுடைய இனத்துடன் கூடிய களிற்று யானை தன் கன்று தன் மீது ஏறி இறங்க படுத்திருக்கும் (தழீஇய – அளபெடை), பனிச் சுரம் நீந்தி ஒள் இணர்க் கொன்றை ஓங்கு மலை அத்தம் – நடுக்கத்தைச் செய்யும் பாலை நிலத்தைக் கடந்து ஒளிரும் மலர்க்கொத்துக்களையுடைய கொன்றை மரங்கள் உடைய உயர்ந்த மலையைச் சார்ந்த வழியில், வினை வலியுறூஉம் நெஞ்சமொடு – பொருள் ஈட்டும் வினையை வலியுறுத்தும் நெஞ்சத்துடன், இனையர் ஆகி – இவ்வாறு அருள் இல்லாதவர் ஆகி நம் பிரிந்திசினோரே நம்மைப் பிரிந்து சென்ற நம் தலைவர் (இசின் – படர்க்கையின் கண் வந்தது, ஏகாரம் –அசைநிலை)

அகநானூறு 198, பரணர், குறிஞ்சித் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
‘கூறுவம் கொல்லோ? கூறலம் கொல்?’ எனக்
கரந்த காமம் கைந்நிறுக்கல்லாது
நயந்து நாம் விட்ட நல்மொழி நம்பி,
அரை நாள் யாமத்து விழு மழை கரந்து
கார் விரை கமழும் கூந்தல் தூவினை  5
நுண் நூல் ஆகம் பொருந்தினள், வெற்பின்
இளமழை சூழ்ந்த மட மயில் போல
வண்டு வழிப்படரத் தண் மலர் வேய்ந்து,
வில் வகுப்பு உற்ற நல் வாங்கு குடைச்சூல்
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து,  10
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்,
ஆன்ற கற்பின் சான்ற பெரியள்,
அம் மா அரிவையோ அல்லள் தெனாஅது
ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில்
கவிரம் பெயரிய உருகெழு கவாஅன்,  15
நேர் மலர் நிறை சுனை உறையும்
சூர்மகள் மாதோ, என்னும் என் நெஞ்சே.

பாடல் பின்னணி:  புணர்ந்து நீங்கிய தலைவியின் பண்புகளை எண்ணித் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 

பொருளுரை:  என் நெஞ்சே!  அவளிடம் நாம் கூறுவோமா அல்லது கூறாமல் விடுவோமா என எண்ணி, அவாவை அடக்க இயலாது விரும்பி நாம் விட்ட நல்ல சொற்களை விரும்பி, பாதி இரவில் பெய்யும் மழையில் மறைந்து, கார்காலத்தின் மணம் கமழும் கூந்தலுடன் தூய வேலைப்பாடு அமைந்த நுண்ணிய நூலால் செய்த ஆடையைத் தன் உடம்பில் அணிந்தவளாய், இளமுகில் சூழ்ந்த மடப்பத்தையுடைய மயில் போல், வண்டுகள் பின்தொடர்ந்து வருமாறு குளிர்ந்த மலர்களை அணிந்து வில்லின் பிரிவுகள் போன்ற பிரிவுகளையும் குடம் போன்ற புடைப்பினையும் உடைய அழகிய சிலம்புகளின் ஓசையை அடக்கி, அச்சத்துடன் வந்து, ஊர்மக்கள் உறங்கும் இரவில் நம்மைத் தழுவி மீள்பவள், நிறைந்த கற்பினால் பெரும் சிறப்புற்ற அழகிய மாமை நிறமுடைய பெண்ணோ அல்லள்.  அவள், தென்திசையில் உள்ள ஆய் என்பவனின் நல்ல நாட்டில் உள்ள கடவுள்கள் கொண்ட மலையில் கவிரம் என்னும் பெயரையுடைய அச்சம் பொருந்திய பக்கமலையில் மெல்லிய மலர்களையுடைய சுனையில் உறையும் சூரர மகள் என்போம்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) என்னும் நூற்பாவின்கண் ‘அவட் பெற்று மலியினும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுளைக் காட்டி, இது இரவு குறிக்கண் ‘அவட் பெற்று மலியினும்’ என்றும் ‘இரவுக் குறியே இல்லகத்துள்ளும் மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே’ (தொல்காப்பியம், களவியல் 40) என்னுஞ் சூத்திரத்து, ‘அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்’ என வருவது ‘மனையோர் கிளவி கேட்கும் வழியது’ என்றும் கூறினர் நச்சினார்க்கினியர்.  வரலாறு –ஆஅய், கவிரம்.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).  கடையெழு வள்ளல்கள் – ஆய், பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், நள்ளி.  நம்பி – நம்பும் மேவும் நசை ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 33).  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – முனைவர் கு.வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லதிகாரம், உரியியல் 57). 

சொற்பொருள்:  கூறுவம் கொல்லோ – அவளிடம் நாம் கூறுவோமா (கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ அசைநிலை), கூறலம் கொல் – அல்லது கூறாமல் விடுவோமா (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்), எனக் கரந்த காமம் கைந்நிறுக்கல்லாது நயந்து நாம் விட்ட நல்மொழி நம்பி – என எண்ணி அவாவை அடக்க இயலாது விரும்பி நாம் விட்ட நல்ல சொற்களை விரும்பி, அரை நாள் யாமத்து விழு மழை கரந்து கார் விரை கமழும் கூந்தல் தூவினை நுண் நூல் ஆகம் பொருந்தினள் வெற்பின் இளமழை சூழ்ந்த மட மயில் போல – பாதி இரவில் பெய்யும் மழையில் மறைந்து கார்காலத்தின் மணம் கமழும் கூந்தலுடன் தூய வேலைப்பாடு அமைந்த நுண்ணிய நூலால் செய்த ஆடையைத் தன் உடம்பில் அணிந்தவளாய் இளமுகில் சூழ்ந்த மடப்பத்தையுடைய மயில் போல், வண்டு வழிப்படரத் தண் மலர் வேய்ந்து வில் வகுப்பு உற்ற நல் வாங்கு குடைச்சூல் அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து – வண்டுகள் பின்தொடர்ந்து வருமாறு குளிர்ந்த மலர்களை அணிந்து வில்லின் பிரிவுகள் போன்ற பிரிவுகளையும் குடம் போன்ற புடைப்பினையும் உடைய அழகிய சிலம்புகளின் ஓசையை அடக்கி அச்சத்துடன் வந்து (உற்ற – போன்ற), துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள் பெயர்வோள் – ஊர்மக்கள் உறங்கும் இரவில் நம்மைத் தழுவி மீள்பவள், ஆன்ற கற்பின் சான்ற பெரியள் – நிறைந்த கற்பினால் பெரும் சிறப்புற்ற, அம் மா அரிவையோ அல்லள் – அழகிய மாமை நிறமுடைய பெண்ணோ அல்லள், தெனாஅது ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில் கவிரம் பெயரிய உருகெழு கவாஅன் நேர் மலர் நிறை சுனை உறையும் சூர்மகள் மாதோ என்னும் – தென்திசையில் உள்ள ஆய் என்பவனின் நல்ல நாட்டில் உள்ள கடவுள்கள் கொண்ட மலையில் கவிரம் என்னும் பெயரையுடைய அச்சம் பொருந்திய பக்கமலையில் மெல்லிய மலர்களையுடைய சுனையில் உறையும் சூரர மகள் என்போம் (தெனாஅது – அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது, ஆஅய் – அளபெடை, கவாஅன் – அளபெடை, மாதோ – மாது, ஓ – அசைநிலைகள்), என் நெஞ்சே – என் நெஞ்சே

அகநானூறு 199, கல்லாடனார், பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
கரை பாய் வெண்திரை கடுப்பப் பல உடன்
நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும்
வரை சேர் மராஅத்து ஊர் மலர் பெயல் செத்து,
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமரச்,
சிலம்பி வலந்த வறுஞ்சினை வற்றல்  5
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇத்,
திரங்கு மரல் கவ்விய கையறு தொகு நிலை
அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன,
திண்ணிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்
வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய  10
கெடு மான் இன நிரை தரீஇய, கலையே
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும்
கடல் போல் கானம் பிற்படப் பிறர் போல்
செல்வேம் ஆயின் எம் செலவு நன்று என்னும்
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப,  15
நீ செலற்கு உரியை நெஞ்சே! வேய் போல்
தடையின மன்னும் தண்ணிய திரண்ட
பெருந்தோள் அரிவை ஒழியக், குடாஅது
இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய,  20
வலம்படு கொற்றம் தந்த வாய்வாள்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
இழந்த நாடு தந்தன்ன
வளம் பெரிது பெறினும், வாரலென் யானே.

பாடல் பின்னணி:  பொருள் ஈட்ட வேண்டும் என எண்ணிய நெஞ்சிற்குத் தலைவன் கூறியது. 

பொருளுரை:  நெஞ்சே!  கரையில் பாயும் வெள்ளை அலைகளை ஒப்ப, வரிசையாக வீசும் காற்றுத் தாக்குவதால், பல ஒன்று சேர்ந்து, பாறைகளின் மேல் உதிர்கின்ற மலையின்கண் நிற்கும் கடம்ப மரங்களின் மலர்களை, மழை பெய்வதாக எண்ணி, நீர் வேட்கையால் வருந்தும் யானைகள் வேட்கையைத் தணிக்கும் பொருட்டுச் சுழலும், சிலந்திப்பூச்சிகள் தங்கள் நூலால் கூடுகள் பின்னிய உலர்ந்த கிளைகளின் வற்றிய அசையும் மர நிழலில் தங்கி, வாடிய மரல் செடியைக் கவ்விய செயலற்ற கூட்டத்தை, அரத்தால் அராவப்பட்ட ஊசியின் திரண்ட முனையை ஒத்த உறுதியான பற்களையுடைய செந்நாய் தாக்குதலால், காற்றின் முன் அகப்பட்ட பூளைப்பூ போல் விரைந்து அலறி ஓடிய அப் பெண் மான் கூட்டத்தை அழைக்கும் பொருட்டு, கலைமான் கதிரவன் மறையும் மாலை வேளையில் தன் ஆண் குரலில் அழைக்கும், கடல் போல் தோன்றும் பெரிய காடு பின்னால் போக, பிறர் போல் யாம் செல்வேம் ஆனால், யாம் செல்லுதல் நல்லது என்று நினைக்கும் நின் ஆசை உள்ளம் விடாது துரத்த நீ செல்லுவதற்கு உரியை ஆவாய்.

யானோ, மூங்கில் போலும் வளைந்த குளிர்ந்த திரண்ட பெரும் தோள்களையுடைய நம் தலைவி தனித்திருக்க, மேற்கு திசையில் உள்ள பெரும் பொன்னையுடைய வாகை மரங்கள் நிற்கும் பெருந்துறை என்னும் இடத்தில் நடந்த போரில், பொன் அணிகலன்களை அணிந்த நன்னன் போர்க்களத்தில் மடிய, வென்ற வெற்றியினைத் தந்த தப்பாத வாளையுடைய களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்னும் சேர வேந்தன் தான் முன்பு இழந்த நாட்டைப் பெற்றதை ஒத்த, பெரும் செல்வத்தைப் பெற்றாலும், வரமாட்டேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின்’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘செலவிடை அழுங்கல் செல்லாமை யன்றே’ (தொல்காப்பியம், கற்பியல் 44) என்னுஞ் சூத்திரத்து ‘களங்காய்க்கண்ணி …………. வாரலென் யானே’ என்னும் அடிகளைக் காட்டி, இவை வன்புறை குறித்துச் செலவு அழுங்குதலின் பாலையாயிற்று, என்றார் நச்சினார்க்கினியர்.  செந்நாய் எடுத்தலின் (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – துரத்துதலாலே, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தாக்குதலின்.  ஒப்புமை – அகநானூறு 199 – வளி முனைப் பூளையின், அகநானூறு 217 – கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர.  வரலாறு –நன்னன், களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல், பெருந்துறை.  பதிற்றுப்பத்து 31–40 – சேர மன்னன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலுக்கு, புலவர் காப்பியாற்றுக் காப்பியனார் பாடியவை.  பதிற்றுப்பத்து 40 – பொன் அம் கண்ணிப் பொலந்தேர் நன்னன் சுடர் வீ வாகைக் கடி முதல் தடிந்த தார் மிகு மைந்தின் நார்முடிச் சேரல்.  பொலம் – பொன் என் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடர் இயலான (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 61).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

சொற்பொருள்:  கரை பாய் வெண்திரை கடுப்ப – கரையில் பாயும் வெள்ளை அலைகளை ஒப்ப (கடுப்ப – உவம உருபு), பல உடன் – பல ஒன்று சேர்ந்து, நிரை கால் ஒற்றலின் – வரிசையாக வீசும் காற்றுத் தாக்குவதால், கல் சேர்பு உதிரும் வரை சேர் மராஅத்து ஊர் மலர் பெயல் செத்து – பாறைகளின் மேல் உதிர்கின்ற மலையின்கண் நிற்கும் கடம்ப மரங்களின் மலர்களை மழை பெய்வதாக எண்ணி (மராஅத்து – அத்து சாரியை, கடம்ப மரம் – Anthocephalus cadamba, Kadampam oak), உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர – நீர் வேட்கையால் வருந்தும் யானைகள் வேட்கையைத் தணிக்கும் பொருட்டுச் சுழலும், சிலம்பி வலந்த வறுஞ்சினை வற்றல் அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ – சிலந்திப்பூச்சிகள் தங்கள் நூலால் கூடுகள் பின்னிய உலர்ந்த கிளைகளின் வற்றிய அசையும் மர நிழலில் தங்கி  (அசைஇ – அளபெடை), திரங்கு மரல் கவ்விய கையறு தொகு நிலை – வாடிய மரல் செடியைக் கவ்விய செயலற்ற கூட்டத்தை, அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன திண்ணிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின் வளி முனைப் பூளையின்– அரத்தால் அராவப்பட்ட ஊசியின் திரண்ட முனையை ஒத்த உறுதியான பற்களையுடைய செந்நாய் தாக்குதலால் காற்றின் முன் அகப்பட்ட பூளைப்பூ போல், ஒய்யென்று அலறிய கெடு மான் இன நிரை தரீஇய – விரைந்து அலறி ஓடிய அப் பெண் மான் கூட்டத்தை அழைக்கும் பொருட்டு (தரீஇய – அளபெடை), கலையே கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும் – கலைமான் கதிரவன் மறையும் மாலை வேளையில் தன் ஆண் குரலில் அழைக்கும், கடல் போல் கானம் பிற்பட – கடல் போல் தோன்றும் பெரிய காடு பின்னால் போக, பிறர் போல் செல்வேம் ஆயின் – பிறர் போல் யாம் செல்வேம் ஆனால், எம் செலவு நன்று என்னும் ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப நீ செலற்கு உரியை – யாம் செல்லுதல் நல்லது என்று நினைக்கும் நின் ஆசை உள்ளம் விடாது துரத்த நீ செல்லுவதற்கு உரியை ஆவாய், நெஞ்சே – நெஞ்சே (விளி), வேய் போல் தடையின மன்னும் தண்ணிய திரண்ட பெருந்தோள் அரிவை ஒழிய – மூங்கில் போலும் வளைந்த குளிர்ந்த திரண்ட பெரும் தோள்களையுடைய நம் தலைவி தனித்திருக்க, குடாஅது இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் – மேற்கு திசையில் உள்ள பெரும் பொன்னையுடைய வாகை மரங்கள் நிற்கும் பெருந்துறை என்னும் இடத்தில் நடந்த போரில் (அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய – பொன் அணிகலன்களை அணிந்த நன்னன் போர்க்களத்தில் மடிய, வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் இழந்த நாடு தந்தன்ன – வென்ற வெற்றியினைத் தந்த தப்பாத வாளையுடைய களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்னும் சேர வேந்தன் தான் முன்பு இழந்த நாட்டைப் பெற்றதை ஒத்த, வளம் பெரிது பெறினும் வாரலென் யானே – பெரும் செல்வத்தைப் பெற்றாலும் வரமாட்டேன் யான் (யானே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 200, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில்,
புலால் அம் சேரிப் புல் வேய் குரம்பை ஊர் என
உணராச் சிறுமையொடு நீர் உடுத்து
இன்னா உறையுட்டு ஆயினும், இன்பம்
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும், வழி நாள்  5
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி
வந்தனை சென்மோ, வளை மேய் பரப்ப,
பொம்மல் படு திரை கம்மென உடைதரும்
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி,
எல்லை எம்மொடு கழிப்பி, எல் உற  10
நல் தேர் பூட்டலும் உரியீர் அற்றன்று
சேந்தனிர் செல்குவிர் ஆயின், யாமும்
எம் வரை அளவையின் பெட்குவம்,
நும் ஒப்பதுவோ உரைத்திசின் எமக்கே.

பாடல் பின்னணி:  தலைவியின் குறிப்பறிந்த தோழி, தலைவன் இரவிலும் தலைவியுடன் இருக்க வேண்டும் என்று உரைத்தது.

பொருளுரை:  சங்கு மேயும் நெய்தல் நிலத் தலைவனே!  நிலாவைப் போல் வெண்மையான மணல் உள்ள தெருவில் உள்ள புல்லால் வேயப்பட்ட குடிசைகளையுடைய, மீனின் நாற்றத்தைக் கொண்ட எங்கள் குடியிருப்பு, ஓர் ஊர் என்ற உணராத சிறுமையுடன், நீரால் சூழப்பட்டு, இன்னா உடையது ஆனாலும், ஒரு நாள் தங்குபவர்களுக்கு அது இன்பமானது.  அடுத்து வரும் நாளில், அவர்கள் தங்களுடைய ஊரை மறக்கச் செய்யும் தன்மையுடையது. எங்கள் ஊருக்கு வந்துவிட்டுச் செல்வாயாக.  நிறைந்த அலைகள் ஒலித்து உடையும் கரையில், உயர்ந்த மரங்கள் ஒரு பக்கம் இருக்கும் இடத்தில், உன்னுடைய தன்மைகளை நாங்கள் பாராட்ட, பகல் பொழுதை எங்களுடன் கழித்து விட்டு, இரவு ஆகும்பொழுது, உன்னுடைய நல்ல தேரைப் பூட்டி செல்வதற்கு உரியர் ஆகுவீர்.  ஆனால், எங்கள் ஊரில் தங்கிவிட்டு செல்லுவீர் ஆயின், நாங்கள் எங்களால் முடிந்த அளவில் உன்னைப் பேணுவோம்.  இது உனக்கு ஒப்புதல் ஆக உள்ளதா?  எங்களிடம் கூறுவாயாக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘நன்னயம் பெற்றுழி நயம் புரி இடத்தினும்’ என வரும் விதி கொள்க.  ஒப்புமை நிலவு மணல் – அகநானூறு 20 – நிலவு மணல், அகநானூறு 200 – நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 31 – நிலவு மணல், நற்றிணை 140 – நிலவு மணல், நற்றிணை 159 – நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல், நற்றிணை 183 – நிலவு மணல், குறுந்தொகை 123 – நிலவுக் குவித்தன்ன வெண்மணல், கலித்தொகை 13 – வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர், புறநானூறு 17 – நிலவு மணல் வியன் கானல், பொருநராற்றுப்படை 213 – நிலவு எக்கர், மதுரைக்காஞ்சி 114 – நிலவுக் கானல்.  சின், மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27). 

சொற்பொருள்:  நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில் – நிலாவைப் போல் மணல் உள்ள தெருவில் (நிலாவின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), புலால் அம் சேரி – புலால் (மீனின் நாற்றம்) நாறும் குடியிருப்பு (அம் – சாரியை), புல் வேய் குரம்பை – புல்லால் வேயப்பட்ட குடிசைகள், ஊர் என உணராச் சிறுமையொடு – ஓர் ஊர் என்ற உணராத சிறுமையுடன், நீர் உடுத்து – நீர் சூழப்பட்டு, இன்னா உறையுட்டு ஆயினும் – இன்னா உடையது ஆனாலும், இன்பம் ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் – ஒரு நாள் தங்குபவர்களுக்கும் இன்பமானது, வழி நாள் – பின் உள்ள நாள், தம் பதி மறக்கும் பண்பின் – தம்முடைய ஊரை மறக்கச் செய்யும் தன்மையுடையது, எம் பதி வந்தனை சென்மோ – எங்கள் ஊருக்கு வந்துவிட்டு செல்வாயாக (சென்மோ – மோ முன்னிலையசை), வளை மேய் பரப்ப – சங்கு மேயும் நெய்தல் நிலத் தலைவனே, பொம்மல் படு திரை கம்மென உடைதரும் – நிறைந்த அலைகள் ஒலித்து கரையில் உடையும் (கம்மென – விரைவுக்குறிப்பு), மரன் ஓங்கு ஒரு சிறை – மரங்கள் உயர்ந்து இருக்கும் ஒரு பக்கம் (மரன் – மரம் என்பதன் போலி), பல பாராட்டி – பலவாக பாராட்டி, எல்லை எம்மொடு கழிப்பி – பகல் பொழுதினை எங்களுடன் கழித்து, எல் உற – இரவு ஆகும்பொழுது, நல் தேர் பூட்டலும் உரியீர் – உன்னுடைய நல்ல தேரைப் பூட்டி செல்வதற்கு உரியர் ஆகுவீர், அற்றன்று – அதுவே அன்றி, சேந்தனிர் செல்குவிர் ஆயின் – எங்கள் ஊரில் தங்கிவிட்டு செல்லுவீர் ஆயின், யாமும் எம் வரை அளவையின் பெட்குவம் – நாங்கள் எங்களால் முடிந்த அளவில் உன்னைப் பேணுவோம், நும் ஒப்பதுவோ – இது உனக்கு ஒப்புதல் ஆக உள்ளதா (ஒப்பதுவோ– ஓகாரம் வினா), உரைத்திசின் எமக்கே – எங்களிடம் கூறுவாயாக (உரைத்திசின் – சின் முன்னிலை அசைச் சொல், எமக்கே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 201, மாமூலனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி!  பொன்னின்
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை
வினை நவில் யானை விறல் போர்ப் பாண்டியன்
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை,
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து  5
தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனித் துறைப் பரவ,
பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை,
உருகெழு பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு,
அலரும் மன்று பட்டன்றே அன்னையும்  10
பொருந்தா கண்ணள் வெய்ய உயிர்க்கும், என்று
எவன் கையற்றனை இகுளை? சோழர்
வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும்,
ஆண்டு அமைந்து உறைநர் அல்லர் முனாஅது
வான் புகு தலைய குன்றத்து கவாஅன்,  15
பெருங்கை எண்கின் பேழ்வாய் ஏற்றை
இருள் துணிந்தன்ன குவவு மயிர்க் குருளைத்
தோல் முலைப் பிணவொடு திளைக்கும்
வேனில் நீடிய சுரன் இறந்தோரே.

பாடல் பின்னணி:  பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.  

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  பொன்னினால் செய்த ஒளிரும் அழகுடன் அசையும் அழகு மிக்க நெற்றிப்பட்டத்தை அணிந்த போர்த்தொழிலில் பயின்ற யானைகளையுடைய, போரில் வெற்றி அடையும் பாண்டிய வேந்தனின், புகழ் மிகுந்த சிறப்புடைய கொற்கையின் துறை முன், ஒளியுடைய முத்துக்களுடன் வலம்புரிச் சங்குகளையும் சொரிந்து, தழை ஆடையால் பொலிந்த பக்கம் உயர்ந்த அல்குலையுடைய நெய்தல் நிலத்து மகளிர், குளிர்ந்த துறையில் கடவுளை வழிபட, கதிரவன் மறைந்த அந்தியாகிய அரிய பொழுதில் அச்சம் பொருந்திய பெரிய கடல் முழு நிலா நாளில் ஆரவாரத்துடன் எழுந்தாற்போல், அலரும் ஊர் மன்றத்தில் பரவியது.  அன்னையும் கண் துயிலாதவளாக வெம்மையுடன் பெருமூச்சு விடுகின்றாள், என்று ஏன் நீ செயலற்றனை?

என் தோழியே!   சோழர்களின் வெண்ணெல் விளையும் ஊர்களையுடைய நல்ல நாட்டினைப் பெறுவதாயினும், வேறு நாட்டில் பொருந்தித் தங்குபவர் இல்லை, பழையதாகிய வானைத் தொடும் உயர்ந்த உச்சியையுடைய மலையின் சாரலில் பெரிய கைகளையுடைய கரடியின் பிளந்த வாயை உடைய ஆண் இருளை வெட்டி வைத்தாற்போல் அடர்ந்த கரிய மயிரையுடைய குட்டியுடனும் திரங்கிய முலைகளையுடைய பெண் கரடியுடனும் மகிழ்ந்திருக்கும், வெம்மை மிக்க பாலை நிலத்தைக் கடந்து சென்ற நம் தலைவர்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பிறவும்’ என்பதனால் அமைத்துக் கொள்க.  வரலாறு –பாண்டியன், கொற்கை, சோழர்.  ஒப்புமை –மலைபடுகடாம் 247 – இருள் துணிந்தன்ன.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).  

சொற்பொருள்:  அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக (கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல்) வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, பொன்னின் அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை வினை நவில் யானை விறல் போர்ப் பாண்டியன் – பொன்னினால் செய்த ஒளிரும் அழகுடன் அசையும் அழகு மிக்க நெற்றிப்பட்டத்தை உடைய போர்த்தொழிலில் பயின்ற யானைகளையுடைய போரில் வெற்றி அடையும் பாண்டிய வேந்தனின் (விறல் – வெற்றி), புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை – புகழ் மிகுந்த சிறப்புடைய கொற்கையின் துறை முன், அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து – ஒளியுடைய முத்துக்களுடன் வலம்புரிச் சங்குகளையும் சொரிந்து, தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல் பழையர் மகளிர் – தழை ஆடையால் பொலிந்த பக்கம் உயர்ந்த அல்குலையுடைய நெய்தல் நிலத்து மகளிர் (பழையர் = கள் விற்போர், அல்குல் – இடை, இடைக்குக்கீழ் உள்ள பகுதி) பனித் துறைப் பரவ – குளிர்ந்த துறையில் கடவுளை வழிபட, பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை உருகெழு பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு அலரும் மன்று பட்டன்றே – கதிரவன் மறைந்த அந்தியாகிய அரிய பொழுதில் அச்சம் பொருந்திய பெரிய கடல் முழு நிலா நாளில் எழுந்தாற்போல் அலரும் ஊர் மன்றத்தில் பரவியது (உவவு – உவா நாள், முழு நிலவு நாள், குறியதின் இறுதிச் சினை கெட்டு உகரம் பெற்று முடிந்தது), அன்னையும் பொருந்தா கண்ணள் வெய்ய உயிர்க்கும் – அன்னையும் கண் துயிலாதவளாக வெம்மையுடன் பெருமூச்சு விடுகின்றாள், என்று எவன் கையற்றனை – என்று ஏன் நீ செயலற்றனை, இகுளை – என் தோழியே (இகுளை – விளி), சோழர் வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும் ஆண்டு அமைந்து உறைநர் அல்லர் – சோழர்களின் வெண்ணெல் விளையும் ஊர்களையுடைய நல்ல நாட்டினைப் பெறுவதாயினும் வேறு நாட்டில் பொருந்தித் தங்குபவர் இல்லை, முனாஅது வான் புகு தலைய குன்றத்து கவாஅன் பெருங்கை எண்கின் பேழ்வாய் ஏற்றை இருள் துணிந்தன்ன குவவு மயிர்க் குருளைத் தோல் முலைப் பிணவொடு திளைக்கும் வேனில் நீடிய சுரன் இறந்தோரே – பழையதாகிய வானைத் தொடும் உயர்ந்த உச்சியையுடைய மலையின் சாரலில் பெரிய கைகளையுடைய கரடியின் பிளந்த வாயை உடைய ஆண் இருளை வெட்டி வைத்தாற்போல் அடர்ந்த கரிய மயிரையுடைய குட்டியுடனும் திரங்கிய முலைகளையுடைய பெண் கரடியுடனும் மகிழ்ந்திருக்கும் வெம்மை மிக்க பாலை நிலத்தைக் கடந்து சென்ற நம் தலைவர் (முனாஅது – அளபெடை, கவாஅன் – அளபெடை, சுரன் – சுரம் என்பதன் போலி, இறந்தோரே– ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 202, ஆவூர் கிழார் மகனார் கண்ணனார், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன்,
கயந்தலை மடப் பிடி இனன் ஏமார்ப்பப்,
புலிப் பகை வென்ற புண்கூர் யானை
கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின்,
நல் இணர் வேங்கை நறுவீ  கொல்லன்  5
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி,
சிறு பல் மின்மினி போலப் பல உடன்
மணி நிற இரும் புதல் தாவும் நாட!
யாமே அன்றியும் உளர் கொல் பானாள்,
உத்தி அரவின் பைத்தலை துமிய,  10
உர உருமு உரறும் உட்குவரு நனந்தலைத்,
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாகக்,
கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி
தேராது வரூஉம் நின் வயின்
ஆர் அஞர் அரும் படர் நீந்துவோரே?  15

பாடல் பின்னணி:  இரவுக்குறிக்கண் வந்து நீங்கும் தலைவனுக்குத் தோழி சொல்லி வரைவு கடாயது. 

பொருளுரை:  விளங்கும் வெள்ளை அருவிகளையுடைய மலையின் சாரலில் மெல்லிய தலையையுடைய தன் இளைய பெண் யானையும் சுற்றமும் இன்புறும்படி, புலியாகிய பகையைப் போர் செய்து வென்ற புண் மிக்க களிற்று யானை, கற்களையுடைய பக்க மலையில் துன்பிக்கையை உயர்த்திப் பெருமூச்சு விடும்பொழுது, நல்ல கொத்துக்களை உடைய வேங்கை மரத்தின் நறுமண மலர்கள், கொல்லனின் துருத்தியை மிதித்து ஊதும் உலையில் எழும் தீப்பொறிகள் போல் சிதறி, சிறிய பல மின்மினிப் பூச்சிகளைப் போல் பலவுடன் நீலமணியின் நிறத்தை ஒத்த புதர்களில் பரவி விழும் நாடனே!

நடு இரவில் பாம்பின் புள்ளிகளையுடைய படம் பொருந்திய தலை வெட்டுப்படுமாறு வலிய இடி முழங்கும், அச்சம் வரும் அகன்ற இடத்தில், ஊக்கம் குறையாத உள்ளத்துடன் கையில் ஏந்திய வேலே துணையாக, செறிந்த இருள் படர்ந்த, கற்களையுடைய ஒடுங்கிய வழியில். ஆராயாது வரும் நின் பொருட்டு, பொறுத்தற்கு அரியதும் கடத்தற்கு அரியதுமாகிய பெரும் துன்பத்தில் நீந்துபவர்கள், எம்மை அன்றிப் பிறர் யாரேனும் உள்ளனரோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘களனும் பொழுதும் …………….. அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என்னும் விதியால் அமைத்துக் கொள்க.  உத்தி அரவின் பைத்தலை (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாம்பினது கோடுகளையுடைய படத்தையுடைய தலைகள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பாம்பினது புள்ளிகளையுடைய படம் பொருந்திய தலை.  ஒப்புமை – அகநானூறு 202 – குருகு ஊது மிதி உலை, குறுந்தொகை 172 – உலை வாங்கு மிதி தோல், பெரும்பாணாற்றுப்படை 207 – மென்தோல் மிதி உலைக் கொல்லன்.  இடி பாம்பைத் தாக்குதல் கொல்லுதல் – அகநானூறு 68, 92, 119, 182, 202, 274, 323, 328, கலித்தொகை 45, 113, குறுந்தொகை 158, 190, 268, 391, நற்றிணை 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, புறநானூறு 17, 58, 126, 211, 366, 369.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).

சொற்பொருள்:  வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன் – விளங்கும் வெள்ளை அருவிகளையுடைய மலையின் சாரலில் (அருவிய – குறிப்புப் பெயரெச்சம், கவாஅன் – அளபெடை), கயந்தலை மடப் பிடி இனன் ஏமார்ப்பப் புலிப் பகை வென்ற புண்கூர் யானை – மெல்லிய தலையையுடைய தன் இளைய பெண் யானையும் சுற்றமும் இன்புறும்படி புலியாகிய பகையைப் போர் செய்து வென்ற புண் மிக்க களிற்று யானை (இனன் – இனம் என்பதன் போலி), கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின் – கற்களையுடைய பக்க மலையில் துன்பிக்கையை உயர்த்திப் பெருமூச்சு விடும்பொழுது, நல் இணர் வேங்கை நறு வீ  – நல்ல கொத்துக்களை உடைய வேங்கை மரத்தின் நறுமண மலர்கள் (வேங்கை மரம் – Pterocarpus marsupium), கொல்லன் குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி சிறு பல் மின்மினி போலப் பல உடன் மணி நிற இரும் புதல் தாவும் நாட – கொல்லனின் துருத்தியை மிதித்து ஊதும் உலையில் எழும் தீப்பொறிகள் போல் சிதறி சிறிய பல மின்மினிப் பூச்சிகளைப் போல் பலவுடன் நீலமணியின் நிறத்தை ஒத்த புதர்களில் பரவி விழும் நாடனே (பிதிர்வின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, நாட – விளி), யாமே அன்றியும் உளர் கொல் – எம்மை அன்றிப் பிறர் யாரேனும் உள்ளனரோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்), பானாள் உத்தி அரவின் பைத்தலை துமிய உர உருமு உரறும் – நடு இரவில் பாம்பின் புள்ளிகளையுடைய படம் பொருந்திய தலை வெட்டுப்படுமாறு வலிய இடி முழங்கும், உட்குவரு நனந்தலை – அச்சம் வரும் அகன்ற இடத்தில், தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாக – ஊக்கம் குறையாத உள்ளத்துடன் கையில் ஏந்திய வேலே துணையாக, கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி தேராது வரூஉம் நின் வயின் – செறிந்த இருள் படர்ந்த கற்களையுடைய ஒடுங்கிய வழியில் ஆராயாது வரும் நின் பொருட்டு (வரூஉம் – அளபெடை), ஆர் அஞர் அரும் படர் நீந்துவோரே – பொறுத்தற்கு அரியதும் கடத்தற்கு அரியதுமாகிய பெரும் துன்பத்தில் நீந்துபவர்கள் (நீந்துவோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 203, கபிலர், பாலைத் திணை – மகட்போக்கிய தாய் அல்லது செவிலித்தாய் சொன்னது
உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும்,
யாய் அறிந்து உணர்க என்னார், தீ வாய்
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்,
இன்னள் இனையள் நின் மகள் எனப் பல் நாள்
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன்,  5
நாணுவள் இவள் என நனி கரந்து உறையும்
யான் இவ் வறுமனை ஒழிய, தானே
அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல் எனக் கழல் கால்
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுறப்  10
பன் மலை அருஞ்சுரம் போகிய தனக்கு, யான்
அன்னேன் அன்மை நன் வாய்யாக,
மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி
வெய்து இடையுறாஅது எய்தி முன்னர்ப்
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர்  15
செல் விருந்து ஆற்றித் துச்சில் இருத்த
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுக மன்னே.

பாடல் பின்னணி:  மகட்போக்கிய தாய் சொல்லியது.

பொருளுரை:  கொடிய வாயினால் பேசி, பழித் தூற்றுதலை விரும்பும் புறங்கூறும் பெண்கள், தாய் மகிழ்வாள் ஆயினும், ஆத்திரம் அடைவாள் ஆயினும், தானே அவள் உணரட்டும் என்று எண்ணாது, பல நாட்களாக ‘உன் மகள் இவ்வாறு உள்ளாள்’ என்று என்னிடம் உரைத்தார்கள்.  நான் அந்தச் செய்தியை என் மகளிடம் கூறவில்லை.  அவள் நாணம் அடைவாள் என்று மிகவும் மறைத்து விட்டேன்.  தன்னுடைய தாய், தன் களவு ஒழுக்கத்தைப் பற்றி அறிந்தால், இங்கு வாழ்வது கடினம் என்று எண்ணி, என்னைத் தனியே இந்த வெற்று மனையில் விட்டு விட்டு, வீரக் கழல்களைக் காலில் அணிந்த, ஒளியுடைய நீண்ட வேலையுடைய இளைஞனைப் பின்பற்றிப் பல மலைகளையுடைய பாலை நிலத்தின் வழியே சென்று விட்டாள் என் மகள்.  நான் அத்தன்மை உடையவளாக அல்லாது நல்ல உண்மையாகத் தோன்றும் பொருட்டு, விலங்குகள் நடந்து உண்டாக்கிய மலை அடிவாரத்தில் உள்ள பின்னியப் பாதையில், தீங்கு உண்டாகாதவாறு அவர்களுக்கு முன்னமே சென்று சேர்ந்து, பொலிவற்ற பெரிய மலையைச் சார்ந்த தனிமையான சிறிய ஊரில், அவர்கள் இருவரையும் விருந்தினராய் ஏற்று, அவர்களுக்கு உணவைக் கொடுத்துத் தங்குவதற்குத் தனியிடம் கொடுத்து, முனைகள் (நுனிகள்) தளிர்க்கப்பெற்று அசைந்தாடும் நொச்சி மரங்கள் சூழ்ந்த இல்லத்தின் பெண்ணாக நான் ஆவேனாக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதியால் அமைத்துக் கொள்க.  மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி (13) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விலங்குகள் இயங்குதலால் உண்டான சிறிய வழிகள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – விலங்குகள் செல்லும் பின்னிக் கிடக்கும் சிறிய நெறிகளில்.  ஒப்புமை – அகநானூறு 168 – மான் அதர்ச் சிறு நெறி, அகநானூறு 203 – மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி, அகநானூறு 318 – கான மான் அதர் யானையும் வழங்கும், அகநானூறு 388 – காட்டு மான் அடிவழி ஒற்றி.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  இடையுறாஅது – இசை நிறை அளபெடை.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34).  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  உவக்குநள் ஆயினும் – மகிழ்வாள் ஆயினும், உடலுநள் ஆயினும் – ஆத்திரம் கொள்வாள் ஆயினும் (உடலுதல் – வெகுளுதல், சினத்தல்), யாய் அறிந்து உணர்க என்னார் – தாய் அறிந்து உணரட்டும் என்று எண்ணாதவர்கள், தீ வாய் – தீயச் சொற்கள், அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர் – பழித் தூற்றுதலையே விரும்பும் புறங் கூறும் பெண்கள், இன்னள் இனையள் நின் மகள் எனப் பல் நாள் எனக்கு வந்து உரைப்பவும் – உன் மகள் இவ்வாறு உள்ளாள் என்று பல நாட்கள் என்னிடம் கூறவும், தனக்கு உரைப்பு அறியேன் – நான் அவளிடம் கூறவில்லை, நாணுவள் இவள் என – இவள் நாணம் அடைவாள் என்று, நனி கரந்து உறையும் – மிகவும் மறைந்து இருக்கும், யான் இவ் வறுமனை ஒழிய – இந்த வெற்று இல்லத்தில் நான் தனித்து இருக்க விட்டு, தானே – அவளே, அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை எனக்கு எளிது ஆகல் இல் என – தாய் என்னுடைய களவு ஒழுக்கத்தை அறிந்தால் இங்கு வாழ்க்கை எளியதாக இருக்காது என்று, கழல் கால் – வீரக் கழல்களை அணிந்த கால்கள், மின் ஒளிர் நெடு வேல் – மின்னலைப் போன்ற ஒளியுடைய நீண்ட வேல், இளையோன் – இளைஞன், முன்னுற – முன்னே செல்ல, பன் மலை அருஞ்சுரம் போகிய தனக்கு – பல மலைகளையுடைய பாலை நிலத்தின் வழியே சென்ற அவளுக்கு, யான் அன்னேன் அன்மை – நான் அத்தன்மை உடையவளாக அல்லாது, நன் வாய்யாக – நல்ல உண்மையாகத் தோன்றும் பொருட்டு, மான் – விலங்குகள், அதர் மயங்கிய – பின்னியப் பாதைகள், மலை முதல் – மலையடி, சிறு நெறி – சிறிய பாதை, வெய்து இடையுறாஅது – துன்பம் நிகழாது (இடையுறாஅது – அளபெடை), எய்தி – சேர்ந்து, முன்னர் – முன்னர், புல்லென் மா மலை – பொலிவு அற்ற பெரிய மலை, புலம்பு கொள் – தனிமை உடைய, சீறூர் – சிறிய ஊர், செல் விருந்து ஆற்றி – வருகின்ற விருந்தாக ஏற்று அவர்களுக்கு உணவுக் கொடுத்து, துச்சில் இருத்த – தனியிடத்தில் இருக்கச் செய்து, நுனை குழைத்து அலமரும் நொச்சி மனை கெழு பெண்டு யான் ஆகுக – முனைகள் (நுனிகள்) தளிர்க்கப்பெற்று அசைந்தாடும் நொச்சி மரங்கள் சூழ்ந்த இல்லத்தின் பெண்ணாக நான் ஆவேனாக, மன்னே – மன் ஒழியிசை, ஏகாரம் அசைநிலை

அகநானூறு 204, மதுரைக் காமக்கனி நப்பாலத்தனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
உலகுடன் நிழற்றிய தொலையா வெண்குடைக்,
கடல் போல் தானைக் கலிமா வழுதி
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச்
சென்று வினை முடித்தனம் ஆயின், இன்றே
கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில்  5
கணங்கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி
மணங்கமழ் முல்லை மாலை ஆர்ப்ப,
உதுக்காண் வந்தன்று பொழுதே வல் விரைந்து
செல்க பாக நின் நல் வினை நெடுந்தேர்
வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை 10
பன் மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும்
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித்
தண்டலை கமழும் கூந்தல,
ஒண்தொடி மடந்தை தோள் இணை பெறவே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது.

பொருளுரை:  பாகனே! உலகத்துக்கெல்லாம் நிழல் கொடுத்த கெடாத வெண்குடையையும், கடல் போன்ற சேனையையும், செருக்கிய குதிரைகளையும் உடைய பாண்டியன் போரில் முயன்று வென்ற அகன்ற பெரிய பாசறையின்கண் சென்று, வினையை வெற்றிபெற முடித்தோம் ஆதலினால், கார்காலத்தின் மழையை ஏற்றுக்கொண்டு தழைத்த இனிய காட்டில், கூட்டம் கூட்டமாக வரும் அழகிய சிறையையுடைய வண்டின் தொழுதி மணம் வீசும் முல்லை மலர்களில் மாலைக் காலத்தில் ஆரவாரிக்கும் காலம் வந்துவிட்டது. இப்பொழுதே பெரிதும் விரைந்து செல்லுவாயாக உனது நல்ல தொழில் திறம் அமைந்த நீண்ட தேரினை, வெண்ணெல்லை அறுப்பவர்கள் தோல் மடங்கிய வாயையுடைய தண்ணுமை முரசின் ஒலியினால் பல மலர்களையுடைய பொய்கையில் பொருந்திய நெல்லைக் கவர வரும் பறவைகளை விரட்டும் விளைந்த நெற்கதிர்களையுடைய வயல்களையும் தோட்டங்களையுமுடைய வாணனது சிறுகுடியில் உள்ள சோலை என மணக்கும் கூந்தலையுடைய, ஒளி பொருந்திய வளையலை அணிந்த என் தலைவியின் தோளை நான் அணைப்பதற்கு.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘பேரிசை ஊர்திப் பாங்கர் பாங்கினும்’; என வரும் விதி கொள்க.  சிறுகுடி – சிறுகுடி என்னும் ஊர் தலைவர்களின் பெயர்களுடன் குறிக்கப்பட்டுள்ளன இப்பாடல்களில் – அகநானூறு 54 (பண்ணன்), அகநானூறு 117 (வாணன்), அகநானூறு 204 (வாணன்), அகநானூறு 269 (வாணன்), நற்றிணை 340 (வாணன்), நற்றிணை 367 (அருமன்).  புறநானூறு 70 – கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடி, புறநானூறு 388 – சிறுகுடி கிழான் பண்ணன்.  பிற இடங்களில், இச் சொல் சிற்றூரைக் குறிக்கின்றது.  வரலாறு – வழுதி (பாண்டிய மன்னன்), வாணன், சிறுகுடி.

சொற்பொருள்:  உலகுடன் நிழற்றிய தொலையா வெண்குடை – உலகத்துக்கெல்லாம் நிழல் கொடுத்த கெடாத வெண்குடை, கடல் போல் தானைக் கலிமா வழுதி – கடல் போன்ற சேனையையுடைய செருக்கிய குதிரைகளையுடைய பாண்டியன், வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச் சென்று – போரில் முயன்று வென்ற அகன்ற பெரிய பாசறையின்கண் சென்று, வினை முடித்தனம் ஆயின் – வினையை வெற்றிபெற முடித்தோம் ஆதலினால், இன்றே – இப்பொழுதே (ஏகாரம் –அசைநிலை), கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில் – கார்காலத்தின் மழையை ஏற்றுக்கொண்டு தழைத்த இனிய காட்டில், கணங்கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி – கூட்டம் கூட்டமாக வரும் அழகிய சிறையையுடைய வண்டின் தொழுதி, மணங்கமழ் முல்லை மாலை ஆர்ப்ப – மணம் வீசும் முல்லை மலர்களில் மாலைக் காலத்தில் ஆரவாரிக்க, உதுக்காண் – அங்கே காண்பாயாக (உது – இடைச்சுட்டு), வந்தன்று பொழுதே – கார்காலம் வந்துவிட்டது (பொழுதே – ஏகாரம் அசைநிலை), வல் விரைந்து செல்க பாக – பெரிதும் விரைந்து செல்லுவாயாக பாகனே, நின் நல் வினை நெடுந்தேர் – உனது நல்ல தொழில் திறம் அமைந்த நீண்ட தேர், வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை பன் மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும் – வெண்ணெல்லை அறுப்பவர்கள் தோல் மடங்கிய வாயையுடைய தண்ணுமை முரசின் பல மலர்களையுடைய பொய்கையில் பொருந்திய நெல்லைக் கவர வரும் பறவைகளை விரட்டும், காய் நெல் படப்பை – விளைந்த நெற்கதிர்களையுடைய வயல்களையும் தோட்டங்களையுமுடைய, வாணன் சிறுகுடித் தண்டலை கமழும் கூந்தல – வாணனது சிறுகுடியில் உள்ள சோலை என மணக்கும் கூந்தலையுடைய, ஒண்தொடி மடந்தை தோள் இணை பெறவே – ஒளி பொருந்திய வளையலை அணிந்த தலைவியின் தோளை அணைப்பதற்கு (பெறவே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 205, நக்கீரர், பாலைத் திணை, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
“உயிர் கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின்
செயிர்தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போலத்
தையல் நின் வயின் பிரியலம் யாம்” எனப்
பொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி,
துணிவு இல் கொள்கையர் ஆகி இனியே  5
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்பு ஊர,
நாம் அழத் துறந்தனர் ஆயினும், தாமே
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல்லிசை
வளங்கெழு கோசர் விளங்கு படை நூறி,
நிலங்கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி  10
பூ விரி நெடுங்கழி நாப்பண் பெரும் பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத்து அன்ன
செழு நகர் நல் விருந்து அயர்மார், ஏமுற
விழு நிதி எளிதினின் எய்துக தில்ல,
மழைகால் அற்சிரத்து மால் இருள் நீக்கி,  15
நீடு அமை நிவந்த நிழல்படு சிலம்பில்
கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி
புலி உரி வரி அதள் கடுப்பக் கலி சிறந்து,
நாட் பூ வேங்கை நறுமலர் உதிர  20
மேக்கு எழு பெருஞ்சினை ஏறிக், கணக்கலை
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக்
கல் பிறங்கு ஆரிடை விலங்கிய
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே.

பாடல் பின்னணி:  பிரிவின்கண் வேறுபட்ட தலைவி, வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. 

பொருளுரை:  தாம், உயிருடன் உயிர் கலந்து பொருந்திய பண்டைய நட்பினால் குற்றமற்ற நெஞ்சத்துடன் நம்முடன் நெருங்கியவர் போல், “பெண்ணே!  நின்னிடத்திலிருந்து யாம் பிரியேம்” எனப் பொய்யைக் கூறவல்ல உள்ளத்துடன், யாம் விரும்புமாறு கூறி, உறுதியில்லாத கொள்கை உடையவராகி, இப்பொழுது, துன்பம் மிகுந்த வருத்தத்தால் நெற்றியில் பசலை பரவ நாம் அழும்படி நம்மைப் பிரிந்து சென்றார் ஆயினும்,

மழை போல் பெய்யும் முன்பனிப் பருவத்தில் மயக்கத்தினைத் தரும் இருள் நீங்க, நீண்ட மூங்கில் உயர்ந்த நிழலுடைய பக்க மலையில், மத நீர் வடியும் களிற்று யானையின் கன்னத்தின் பக்கத்தை ஒத்த அருவி நீர் கீழே வடியும் அழகிய உச்சி மலையில், புலியின் வரி வரியாக உள்ள தோலை ஒப்ப, செருக்கு மிகுந்து, அன்று மலர்ந்த வேங்கை மரத்தின் நறுமண மலர்கள் உதிரும்படி, மேல் நோக்கி எழுந்த பெரிய கிளைகளில் ஏறிக் கூட்டமாக ஆண் குரங்குகள் தங்கள் இனத்தை அழைத்துத் தாவும், மலைகளுக்கு இடைய செல்லும் சிறிய வழிகளாகிய கற்கள் விளங்கும் கடத்தற்கு அரிய இடங்கள் குறுக்கிட்டு இருக்கும், மொழி வேறுபட்ட நாட்டில் உள்ள பாலை நிலத்தைக் கடந்து சென்றவர்,

உண்மை நிலைபெற்ற, நெடுந்தூரம் விளங்கும் நல்ல புகழையுடைய செல்வம் மிக்க கோசர்களின் விளங்கும் படையை அழித்து, அவர்களின் நிலத்தைக் கைப்பற்ற விரும்பிய, பொன்னால் செய்த அணிகலன்களை அணிந்த சோழ மன்னன் கிள்ளி, பூக்கள் மலர்ந்த நெடிய கழியின் நடுவில், பெரும் புகழையும் தோட்டங்களையும் உடைய காவிரிப்பூம்பட்டினத்தைப் போன்ற, செல்வம் மிக்க நம் மனையில் நல்ல விருந்து ஆற்றும்பொருட்டு பெரும் பொருளை அடைவாராக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து இடைச் சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி அன்புறு தக்க கிளத்தல் தானே கிழவோன் செய் வினைக்கு அச்சம் ஆகும்’ (தொல்காப்பியம், கற்பியல் 7) என வரும் நூற்பாவின் விதி கொள்க.  தொன்றுபடு நட்பின் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மிகவும் பழமையான நட்புடையார் போல, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பல பிறவிகளினும் தொடர்ந்து வரும் நட்பினால்.  நாள் பூ (20) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அன்று அலர்ந்த மலர்கள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மணநாளைக் காட்டும் பூக்கள், புதிய பூ எனினுமாம்.  வரலாறு –கோசர், கிள்ளி, காவிரிப் படப்பைப்பட்டினம்.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).  பொலம் – பொன் என் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடர் இயலான (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 61).

சொற்பொருள்:  உயிர் கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின் செயிர்தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல – உயிருடன் உயிர் கலந்து பொருந்திய பண்டைய நட்பினால் குற்றமற்ற நெஞ்சத்துடன் நம்முடன் நெருங்கியவர் போல், தையல் நின் வயின் பிரியலம் யாம் – பெண்ணே நின்னிடத்திலிருந்து யாம் பிரியேம், எனப் பொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி – எனப் பொய்யைக் கூறவல்ல உள்ளத்துடன் யாம் விரும்புமாறு கூறி (உண உண்ண என்பதன் விகாரம்), துணிவு இல் கொள்கையர் ஆகி – உறுதியில்லாத கொள்கை உடையவராகி, இனியே – இப்பொழுது, நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்பு ஊர நாம் அழத் துறந்தனர் ஆயினும் – துன்பம் மிகுந்த வருத்தத்தால் நெற்றியில் பசலை பரவ நாம் அழும்படி நம்மைப் பிரிந்து சென்றார் ஆயினும், தாமே – தாம் (ஏகாரம் அசைநிலை), வாய்மொழி நிலைஇய – உண்மை நிலைபெற்ற (நிலைஇய – அளபெடை), சேண் விளங்கு நல்லிசை வளங்கெழு கோசர் விளங்கு படை நூறி நிலங்கொள வெஃகிய – நெடுந்தூரம் விளங்கும் நல்ல புகழையுடைய செல்வம் மிக்க கோசர்களின் விளங்கும் படையை அழித்து அவர்களின் நிலத்தைக் கைப்பற்ற விரும்பிய, பொலம் பூண் கிள்ளி – பொன்னால் செய்த அணிகலன்களை அணிந்த சோழ மன்னன் கிள்ளி, பூ விரி நெடுங்கழி நாப்பண் – பூக்கள் மலர்ந்த நெடிய கழியின் நடுவில், பெரும் பெயர்க் காவிரிப் படப்பைப் பட்டினத்து அன்ன – பெரும் புகழையும் தோட்டங்களையும் உடைய காவிரிப்பூம்பட்டினத்தைப் போன்ற (பட்டினத்து – பட்டினம், அத்துச் சாரியை), செழு நகர் நல் விருந்து அயர்மார் ஏமுற விழு நிதி எளிதினின் எய்துக – செல்வம் மிக்க நம் மனையில் நல்ல விருந்து ஆற்றும்பொருட்டு பெரும் பொருளை அடைவாராக, தில்ல – தில் விழைவுப் பொருட்டு வந்த ஓர் இடைச்சொல், ஈறு திரிந்து வந்தது, மழைகால் அற்சிரத்து மால் இருள் நீக்கி – மழை போல் பெய்யும் முன்பனிப் பருவத்தில் மயக்கத்தினைத் தரும் இருள் நீங்க (மழை கால் – மழை போல் காலுகின்ற, மழை போல் வெளிப்படுத்துகின்ற), நீடு அமை நிவந்த நிழல்படு சிலம்பில் – நீண்ட மூங்கில் உயர்ந்த நிழலுடைய பக்க மலையில், கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி – மத நீர் வடியும் களிற்று யானையின் கன்னத்தின் பக்கத்தை ஒத்த அருவி நீர் கீழே வடியும் அழகிய உச்சி மலையில் (கடாஅ – அளபெடை), புலி உரி வரி அதள் கடுப்ப – புலியின் வரி வரியாக உள்ள தோலை ஒப்ப (கடுப்ப – உவம உருபு), கலி சிறந்து நாட் பூ வேங்கை நறுமலர் உதிர – செருக்கு மிகுந்து அன்று மலர்ந்த வேங்கை மரத்தின் நறுமண மலர்கள் உதிரும்படி (வேங்கை மரம் – Pterocarpus marsupium), மேக்கு எழு பெருஞ்சினை ஏறிக் கணக்கலை கூப்பிடூஉ உகளும் – மேல் நோக்கி எழுந்த பெரிய கிளைகளில் ஏறிக் கூட்டமாக ஆண் குரங்குகள் தங்கள் இனத்தை அழைத்துத் தாவும், குன்றகச் சிறு நெறிக் கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய – மலைகளுக்கு இடைய செல்லும் சிறிய வழிகளாகிய கற்கள் விளங்கும் கடத்தற்கு அரிய இடங்கள் குறுக்கிட்டு இருக்கும், சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே – மொழி வேறுபட்ட நாட்டில் உள்ள பாலை நிலத்தைக் கடந்து சென்றவர் (தேஎத்த – அளபெடை, சுரன் – சுரம் என்பதன் போலி, இறந்தோரே– ஏகாரம் அசைநிலை)  

அகநானூறு 206, மதுரை மருதன் இளநாகனார், மருதத் திணை தலைவி விறலிக்கு வாயில் மறுத்தது
என்னெனப் படுங்கொல் தோழி, நல் மகிழ்ப்
பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப,
நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை
மயிர்க் கவின் கொண்ட மாத்தோல் இரும்புறம்,
சிறுதொழில் மகாஅர் ஏறிச் சேணோர்க்குத்  5
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்,
மாரி ஈங்கை மாந்தளிர் அன்ன
அம் மா மேனி ஆயிழை மகளிர்
ஆரந்தாங்கிய அலர் முலை ஆகத்து
ஆராக் காதலொடு தாரிடை குழைய,  10
முழவு முகம் புலரா விழவுடை வியன் நகர்,
வதுவை மேவலன் ஆகலின், அது புலந்து
அடு போர் வேளிர் வீரை முன்துறை
நெடுவெள் உப்பின் நிரம்பாக் குப்பை,
பெரும்பெயற்கு உருகியாஅங்குத்,  15
திருந்திழை நெகிழ்ந்தன தட மென் தோளே.

பாடல் பின்னணி:  தலைவனுக்காக வாயில் வேண்டிச்சென்ற விறலிக்குத் தலைவி வாயில் மறுத்தது.  அவ்விறலி கேட்பத் தோழியிடம் கூறியது.

பொருளுரை:  தோழி!  நல்ல களிப்புடன் பேடிப் பெண்ணின் உருவம் பூண்டு ஆடுபவனின் உயர்த்திய கைகளைப் போன்ற, விளங்குதல் அடையப் பெருத்த பெரிய முறுக்குண்ட கொம்புகளையுடைய எருமையின் மயிரால் அழகு அடைந்த கரிய தோலையுடைய முதுகில், சிறு பணிகள் செய்யும் சிறுவர்கள் ஏறி அமர்ந்திருப்பது, தொலைவில் இருந்து காண்பவர்களுக்குப் பாறையின் மீது இருக்கும் குரங்குகள் போல் தோன்றும் ஊரன்,

கார்காலத்தின் ஈங்கைச் செடியில் தோன்றும் சிறந்த தளிர் போன்ற அழகிய மாமை நிறத்தையுடைய மேனியையும், ஆராய்ந்த அணிகலன்களையும் உடைய பரத்தையரின் முத்து மாலை பரந்த முலைகளையுடைய மார்பில், அமையாத காதலுடன், மலர்மாலை இடையில் அகப்பட்டுக் குழைய, முழவின் முழக்கம் நீங்காத விழாவினை உடைய பெரிய மனையில் வதுவையை விரும்புபவன் ஆகையால், அந்தச் செயலை வெறுத்து, வெல்லும் போரைப் புரியும் வேளிர்களின் வீரை என்னும் இடத்தில் உள்ள துறையில் முன் நீண்டு கிடக்கும் வெள்ளை உப்பின் முழுமை பெறாத குவியல், பெரும் மழையால் உருகினாற்போல், என் பெரிய மெல்லிய தோள்கள் மெலிந்து என் வளையல்கள் நெகிழ்ந்தன.  இங்ஙனம் இருக்க, தலைவனின் தூதாக நம்மிடம் வந்த இந்த விறலியின் கூற்று என்னவென்று சொல்லப்படும்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘கொடியோர் கொடுமை சுடும் என ஒடியாது நல் இசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ பகுதியின் நீங்கிய தகுதிக்கண்ணும்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என வரும் விதி கொள்க.  பேடிப் பெண் கொண்டு ஆடு கை கடுப்ப (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பேடி பெண் உருவம் புனைந்து ஆடுங்கால் அவளது கைகளைப் போன்று, பேடியானவள் பெண் வேடம் புனைந்து ஆடுங்கால், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பேடியாகிய பெண்ணின் உருவம் பூண்டு ஆடுவானது பின் சென்று மேல் வளைந்த கையையொப்ப.  நகுவர (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காண்போர்க்கு நகைப்பு உண்டாக, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – விளங்குதலுற.  வதுவை மேவலன் ஆகலின் (12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வதுவைச் சடங்கு செய்து கொள்ளுதலில் பெரிதும் விருப்பம் உடையன் ஆதலின், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மணத்தினைப் பொருந்துதல் ஆகலின்.  முழவு முகம் புலரா – அகநானூறு பாடல்கள் 206, 222, 397 – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – முழவின் ஒலி ஓயாத, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முழவின் முழக்கம் ஒழியாத.  முழவு முகம் புலர்ந்து – நற்றிணை 360 – ஒளவை துரைசாமி உரை – முழவின் மார்ச்சனை புலர்ந்து, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மத்தள முகத்து வைத்த மார்ச்சனை வறந்து.  ஒப்புமை – கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு உருகி உகுதல் அஞ்சுவல் – நற்றிணை 88, உப்பு இயல் பாவை உறை உற்றது போல உக்கு விடும் என் உயிர் – கலித்தொகை 138.  வரலாறு –வேளிர், வீரை.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

சொற்பொருள்:  என்னெனப் படுங்கொல் – என்னவென்று சொல்லப்படும், தோழி – தோழி, நல் மகிழ்ப் பேடிப் பெண் கொண்டு ஆடு கை கடுப்ப – நல்ல களிப்புடன் பேடிப் பெண்ணின் உருவம் பூண்டு ஆடுபவனின் உயர்த்திய கைகளைப் போன்ற (பேடிப் பெண் – பேடியாகிய பெண்ணென இருபெயரொட்டு, கடுப்ப – உவம உருபு), நகுவர – நகைப்பு உண்டாக, விளங்குதல் அடையப் பெருத்த, பணைத்த திரி மருப்பு எருமை மயிர்க் கவின் கொண்ட மாத்தோல் இரும்புறம் சிறுதொழில் மகாஅர் ஏறி – பெரிய முறுக்குண்ட கொம்புகளையுடைய எருமையின் மயிரால் அழகு அடைந்த கரிய தோலையுடைய முதுகில் சிறு பணிகள் செய்யும் சிறுவர்கள் ஏறி (மகாஅர் – அளபெடை), சேணோர்க்குத் துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன் – தொலைவில் இருந்து காண்பவர்களுக்குப் பாறையின் மீது இருக்கும் குரங்குகள் போல் தோன்றும் ஊரன் (மந்தியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), மாரி ஈங்கை மாந்தளிர் அன்ன அம் மா மேனி ஆய் இழை மகளிர் ஆரந்தாங்கிய அலர் முலை ஆகத்து ஆராக் காதலொடு தாரிடை குழைய  – கார்காலத்தின் ஈங்கைச் செடியில் தோன்றும் சிறந்த தளிர் போன்ற அழகிய மாமை நிறத்தையுடைய மேனியையும் ஆராய்ந்த அணிகலன்களையும் உடைய பரத்தையரின் முத்து மாலை பரந்த முலைகளையுடைய மார்பில் அமையாத காதலுடன் மலர்மாலை இடையில் அகப்பட்டுக் குழைய, முழவு முகம் புலரா விழவுடை வியன் நகர் வதுவை மேவலன் ஆகலின் – முழவின் முழக்கம் நீங்காத விழாவினை உடைய பெரிய மனையில் வதுவையை விரும்புபவன் ஆகையால், அது புலந்து – அந்தச் செயலை வெறுத்து, அடு போர் வேளிர் வீரை முன்துறை – வெல்லும் போரைப் புரியும் வேளிர்களின் வீரை என்னும் இடத்தில் உள்ள துறையில் முன் (முன்துறை – துறைமுன்), நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை – நீண்டு கிடக்கும் வெள்ளை உப்பின் முழுமை பெறாத குவியல், பெரும்பெயற்கு உருகியாஅங்கு – பெரும் மழையால் உருகினாற்போல் (உருகியாஅங்கு – அளபெடை), திருந்து இழை நெகிழ்ந்தன – திருந்திய வளையல்கள் நெகிழ்ந்தன, தட மென் தோளே – என் பெரிய மெல்லிய தோள்கள் (தோளே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 207, மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார், பாலைத் திணைமகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்கு திறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம்
குடபுல மருங்கின் உய்ம்மார், புள் ஓர்த்துப்
படை அமைத்து எழுந்த பெருஞ்செய் ஆடவர்
நிரைப் பரப் பொறைய நரைப் புற கழுதைக்  5
குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின்,
வெஞ்சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை
மிஞிறு ஆர் கடாஅம் கரந்துவிடு கவுள
வெயில் தின வருந்திய நீடு மருப்பு ஒருத்தல்
பிணர் அழி பெருங்கை புரண்ட கூவல்  10
தெண்கண் உவரிக் குறைக்குட முகவை
அறன் இலாளன் தோண்ட, வெய்து உயிர்த்துப்
பிறை நுதல் வியர்ப்ப உண்டனள் கொல்லோ,
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக்
கூழை உளர்ந்து மொழிமை கூறவும்,  15
மறுத்த சொல்லள் ஆகி,
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே?

பாடல் பின்னணி:  தலைவி தலைவனுடன் பாலை நிலத்தின் வழியாகச் சென்றமை அறிந்த செவிலித்தாய் வருந்திக் கூறியது.

பொருளுரை:  கடவுள் உடைய கடலின் நீர் பரவிய உப்பளத்தில் உள்ள நீர் வெயிலில் காய்ந்தால், தன்மையில் வேறாகிய வெள்ளை உப்பாகிய அமிழ்தத்தை, மேற்குத் திசையில் உள்ள ஊர்களுக்கு எடுத்துக்கொண்டு போய் விற்கும் பொருட்டு, நல்ல நிமித்தம் பார்த்துப் படைக்கலன்களை அமைத்து எழுந்த பெரிய மறச் செயல்களைச் செய்யும் உப்பு வணிகர்கள், வரிசையாக அடுக்கிய உப்புப் பொதியாகிய சுமையை உடைய வெள்ளை முதுகையுடைய கழுதைகளின் தேய்ந்த குளம்புகள் உதைத்ததால் கற்கள் பிறழ்ந்து கிடைக்கும் வழியாகிய கொடிய பாலை நிலத்தை ஊடுறுத்துப் போகும் அச்சம் தோன்றும் பிரிவுகளையுடைய வழிகளில், வண்டுகள் மொய்க்கும் மதநீர் வற்றிய மறைந்த கன்னத்தையுடைய வெயில் துன்புறுத்துவதால் வருந்திய நீண்ட கோடுகளையுடைய (தந்தங்களையுடைய) களிற்று யானையின் சொரசொரப்பு அழிந்த பெரிய தும்பிக்கை நீர் வேண்டித் துழாவிய கிணற்றினை, அறம் இல்லாதவன் தோண்டியதால் ஊறிய தெளிந்த உவர் உடையதாகிய குறைக்குடமாக முகக்கப்பட்ட நீரை, தேனை நன்கு கலந்த இனிய பாலை கையில் ஏந்திக் கொண்டு, கூந்தலைக் கோதி நல்ல சொற்களை நான் கூறவும் மறுத்து உரைப்பவள் ஆகி, அதனை வெறுத்த உள்ளத்துடன் பருகாதவள் ஆகிய என் மகள், வெப்பத்துடன் மூச்சுவிட்டுப் பிறை போன்ற நெற்றியை உடையவள் பருகினாளோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  அணங்கு உடை (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தெய்வத்தன்மை உடைய, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தெய்வத்தையுடைய.   வெஞ்சுரம் (7) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கொடிய பாலை நிலம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெம்மையான பாலை நிலம்.  பாட வேறுபாடு 15வது அடியில் – பழைய உரை – மொழிமை கூறவும், புலியூர்க்கேசிகன் உரை – மொழிமை கூறவும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மோழமை கூறவும், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மோழமை கூறவும்.  மோழமை – ந. மு. வேங்கடசாமி நாட்டார் – விரும்பும் மொழிகள், நயந்து கூறுதல், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நயமொழி, தாழ்ந்த மொழி.  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு உரை, மண்ணை படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் பத்துப்பாட்டு உரை.  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34).

சொற்பொருள்:  அணங்கு உடை முந்நீர் பரந்த செறுவின் உணங்கு திறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம் – கடவுள் உடைய கடலின் நீர் பரவிய உப்பளத்தில் உள்ள நீர் வெயிலில் காய்ந்தால் தன்மையில் வேறாகிய வெள்ளை உப்பாகிய அமிழ்தத்தை, குடபுல மருங்கின் உய்ம்மார் – மேற்குத் திசையில் உள்ள ஊர்களுக்கு எடுத்துக்கொண்டு போய் விற்கும் பொருட்டு, புள் ஓர்த்துப் படை அமைத்து எழுந்த பெருஞ்செய் ஆடவர் – நல்ல நிமித்தம் பார்த்துப் படைக்கலன்களை அமைத்து எழுந்த பெரிய மறச் செயல்களைச் செய்யும் ஆடவர் (செய் – முதனிலைத் தொழிற்பெயர்), நிரைப் பரப் பொறைய நரைப் புற கழுதைக் குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின் வெஞ்சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை – வரிசையாக அடுக்கிய உப்புப் பொதியாகிய சுமையை உடைய வெள்ளை முதுகையுடைய கழுதைகளின் தேய்ந்த குளம்புகள் உதைத்ததால் கற்கள் பிறழ்ந்து கிடைக்கும் வழியாகிய கொடிய பாலை நிலத்தை ஊடுறுத்துப் போகும் அச்சம் தோன்றும் பிரிவுகளையுடைய வழிகளில் (பரம் – பாரம் என்பதன் குறுக்கல் விகாரம்), மிஞிறு ஆர் கடாஅம் கரந்துவிடு கவுள வெயில் தின வருந்திய நீடு மருப்பு ஒருத்தல் பிணர் அழி பெருங்கை புரண்ட கூவல் – வண்டுகள் மொய்க்கும் மதநீர் வற்றிய மறைந்த கன்னத்தையுடைய வெயில் துன்புறுத்துவதால் வருந்திய நீண்ட கோடுகளையுடைய (தந்தங்களையுடைய) களிற்று யானையின் சொரசொரப்பு அழிந்த பெரிய தும்பிக்கை நீர் வேண்டித் துழாவிய கிணற்றினை (அளபெடை, தின தின்ன என்பதன் விகாரம்), தெண்கண் உவரிக் குறைக் குட முகவை அறன் இலாளன் தோண்ட – அறம் இல்லாதவன் தோண்டியதால் ஊறிய தெளிந்த உவர் உடையதாகிய குறைக்குடமாக முகக்கப்பட்ட நீரை (கண் –அசைநிலை, முகவை – முகக்கப்பட்ட நீர், அறன் – அறம் என்பதன் போலி), வெய்து உயிர்த்துப் பிறை நுதல் வியர்ப்ப உண்டனள் கொல்லோ – வெப்பத்துடன் மூச்சுவிட்டுப் பிறை போன்ற நெற்றியை உடையவள் பருகினாளோ, தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்தி – தேனை நன்கு கலந்த இனிய பாலை கையில் ஏந்திக் கொண்டு (தேம் – தேன் என்றதன் திரிபு, அளைஇய – அளபெடை), கூழை உளர்ந்து மொழிமை கூறவும் மறுத்த சொல்லள் ஆகி – கூந்தலைக் கோதி நல்ல சொற்களை நான் கூறவும் மறுத்து உரைப்பவள் ஆகி, வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே – அதனை வெறுத்த உள்ளத்துடன் பருகாதவள் (உண்ணாதோளே – ஏகாரம் –அசைநிலை)

அகநானூறு 208, பரணர், குறிஞ்சித் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
யாம இரவின் நெடுங்கடை நின்று
தே முதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண்கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்,  5
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து,
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தெனப், புள் ஒருங்கு
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று  10
ஒண் கதிர் தெறாமை சிறகு அரில் கோலி
நிழல் செய்து உழறல் காணேன் யான் எனப்
படுகளம் காண்டல் செல்லான், சினஞ் சிறந்து,
உருவினை நன்னன், அருளான், கரப்பப்,
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர்  15
குரூஉப் பூம் பைந்தார் அருக்கிய பூசல்,
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந்தானை
அகுதை களை தந்தாங்கு, மிகு பெயல்
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி,  20
நல்கினள் வாழியர், வந்தே, ஓரி
பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லிக்
கார் மலர் கடுப்ப நாறும்
ஏர் நுண் ஓதி மாஅயோளே. 

பாடல் பின்னணி:  புணர்ந்து நீங்கும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  

பொருளுரை:  என் நெஞ்சே!  இரவின் கடையாமத்தில் நீண்ட கடைவாயிலில் நின்று, தேன் மிக்க உச்சியையுடைய தன் மலையினைப் பாடும், சிறிய கோலை உடைய அகவுநர்கள் விரும்பினால், வெள்ளை மருப்புகளையும் (தந்தங்களையும்) தலைமையையும் உடைய யானைகளை வழங்கும் வள்ளன்மையையும், மகிழ்ச்சியையும், அருள் பொருந்திய வாழ்க்கையையும் உடைய வெளியன் வேண்மான் ஆஅய் எயினன், பாழி என்னும் ஊரில் உள்ள போர்க்களத்தில் முகபடாம் அணிந்த யானைகளையும் இயலும் தேரினையும் உடைய மிஞிலி என்பவனுடன் நண்பகல் நேரத்தில் செய்த போரில், ஒளிரும் வாளோடு வாள் பொருதும் களத்தில் மிக்க புண்ணுற்று வீழ்ந்தான் என்று, பறவைகள் ஒன்று கூடி, அழகிய இடமான வானில் விளங்கிய ஞாயிற்றின் ஒளிரும் கதிர்கள் அவன் உடலைக் காய்தல் செய்யாதவாறு, தம் சிறகுகளால் பந்தலிட்டு நிழலைச் செய்து சுழன்று கொண்டிருப்பதை யான் காணேன் என்று, அவன் வீழ்ந்த போர்க்களத்தைக் காண்பதற்குச் செல்லாதவனாய், சினம் மிகுந்து அச்சம் தரும் போரினைச் செய்யும் நன்னன் அருளாதவனாக மறைந்து கொள்ள, பெரிதும் விரைவுற்று பல வேளிர் மகளிர் நிறம் மிக்க பூக்களால் தொடுத்த அழகிய மலர் மாலைகளை அழித்துவிட்டு செய்த அழுகையின் ஆரவாரத்தை, விளங்கும் பழி நீங்கும்படி மாற்றாரை வெல்லும் பெரிய சேனையையுடைய அகுதை என்பவன் நீக்கினாற்போல், மிகுந்த மழையால், உப்பினால் செய்த தடுப்பினால் நிறுத்த முடியாத வெள்ளத்தைப் போல், நாணத்தின் எல்லையில் அடங்காத காதலுடன் வந்து அருள் செய்தாள் நம் தலைவி.  ஓரி என்பவனின் பல பழங்களுடைய பலா மரங்களையுடைய பயன் பொருந்திய கொல்லி மலையின், கார்கால மலர்களை ஒப்ப மணம் வீசும், அழகும் மென்மையும் பொருந்திய கூந்தலையுடைய மாமை நிறத்தையுடைய (மாந்தளிர் நிறத்தையுடைய) அவள் நீடு வாழ்வாளாக!  

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘மெய் தொட்டுப் பயிறல்’ (தொல்காப்பியம், களவியல் 11) என வரும் நூற்பாவின்கண் ‘பெற்றவழி மகிழ்ச்சியும்’ என வரும் விதி கொள்க.  நுண் கோல் அகவுநர் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நுண்ணிய நரம்பினை வருடிப் பாடுகின்ற பாணர்கள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – சிறிய பிரப்பங் கோலைக் கொண்ட பாடுநர்.  வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் (5) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வெளியன் வேண்மானுக்கு மகனாகிய ஆய் எயினன் என்றதால், வெளியன் வேண்மானாகிய ஆய் எயினன் என்றாதல் கொள்க.  முன்னதற்கு வெளியன் என்பது தந்தையின் பெயரும், பின்னதற்கு எயினனது மற்றொரு பெயரும் ஆகும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் என்பவன்.  வரலாறு –வெளியன் வேண்மான், ஆஅய் எயினன், பாழி, மிஞிலி, நன்னன், வேள் மகளிர், ஓரி, அகுதை, கொல்லி.   மிஞிலி என்பவன் ஆய் எயினன் என்பவனைக் கொல்லுதல் – அகநானூறு 148, 181, 208.  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – முனைவர் கு.வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லதிகாரம், உரியியல் 57).

சொற்பொருள்:  யாம இரவின் நெடுங்கடை நின்று தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும் நுண் கோல் அகவுநர் வேண்டின் – இரவின் கடையாமத்தில் நீண்ட கடைவாயிலில் நின்று தேன் மிக்க உச்சியையுடைய தன் மலையினைப் பாடும் சிறிய கோலை உடைய அகவுநர்கள் விரும்பினால் (தேம் – தேன் என்றதன் திரிபு), வெண்கோட்டு அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் – வெள்ளை மருப்புகளையும் (தந்தங்களையும்) தலைமையையும் உடைய யானைகளை வழங்கும் வள்ளன்மையையும் மகிழ்ச்சியையும் உடைய வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் (ஆஅய் – அளபெடை), அளி இயல் வாழ்க்கை – அருள் பொருந்திய வாழ்க்கையை உடைய, பாழிப் பறந்தலை இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு நண்பகல் உற்ற செருவில் – பாழி என்னும் ஊரில் உள்ள போர்க்களத்தில் முகபடாம் (ஓடை) அணிந்த யானைகளையும் இயலும் தேரினையும் உடைய மிஞிலி என்பவனுடன் நண்பகல் நேரத்தில் செய்த போரில், புண்கூர்ந்து ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென – ஒளிரும் வாளோடு வாள் பொருதும் களத்தில் மிக்க புண்ணுற்று வீழ்ந்தனனாக, புள் ஒருங்கு அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று ஒண் கதிர் தெறாமை சிறகு அரில் கோலி நிழல் செய்து உழறல் காணேன் யான் என – பறவைகள் ஒன்று கூடி அழகிய இடமான வானில் விளங்கிய ஞாயிற்றின் ஒளிரும் கதிர்கள் அவன் உடலைக் காய்தல் செய்யாதவாறு தம் சிறகுகளால் பந்தலிட்டு நிழலைச் செய்து சுழன்று கொண்டிருப்பதை யான் காணேன் என்று, படுகளம் காண்டல் செல்லான் – அவன் வீழ்ந்த போர்க்களத்தைக் காண்பதற்குச் செல்லாதவனாய், சினஞ் சிறந்து உருவினை நன்னன் அருளான் கரப்ப – சினம் மிகுந்து அச்சம் தரும் போரினைச் செய்யும் நன்னன் அருளாதவனாக மறைந்து கொள்ள, பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர் குரூஉப் பூம் பைந்தார் அருக்கிய பூசல் – பெரிதும் விரைவுற்று பல வேளிர் மகளிர் நிறம் மிக்க பூக்களால் தொடுத்த அழகிய மலர் மாலைகளை அழித்துவிட்டு செய்த அழுகையின் ஆரவாரத்தை (குரூஉ – அளபெடை), வசை விடக் கடக்கும் வயங்கு பெருந்தானை அகுதை களை தந்தாங்கு – விளங்கும் பழி நீங்கும்படி மாற்றாரை வெல்லும் பெரிய சேனையையுடைய அகுதை என்பவன் நீக்கினாற்போல், மிகு பெயல் – மிகுந்த மழையால், உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல நாணு வரை நில்லாக் காமம் நண்ணி நல்கினள் –  உப்பினால் செய்த தடுப்பினால் நிறுத்த முடியாத வெள்ளத்தைப் போல் நாணத்தின் எல்லையில் அடங்காத காதலுடன் வந்து அருள் செய்தாள், வாழியர் – அவள் நீடு வாழ்வாளாக, வந்தே – வந்து, ஓரி பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி – ஓரி என்பவனின் பல பழங்களுடைய பலா மரங்களையுடைய பயன் பொருந்திய கொல்லி மலையின், கார் மலர் கடுப்ப நாறும் – கார்கால மலர்களை ஒப்ப மணம் வீசும் (கடுப்ப – உவம உருபு), ஏர் நுண் ஓதி மாஅயோளே – அழகும் மென்மையும் பொருந்திய கூந்தலையுடைய மாமை நிறத்தையுடைய (மாந்தளிர் நிறத்தையுடைய) நம் தலைவி (மாஅயோளே – அளபெடை, ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 209, கல்லாடனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
தோளும் தொல்கவின் தொலைந்தன, நாளும்
அன்னையும் அருந்துயர் உற்றனள், அலரே
பொன் அணி நெடுந்தேர்த் தென்னர் கோமான்
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன்
நேரா எழுவர் அடிப்படக் கடந்த  5
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என,
ஆழல் வாழி, தோழி, அவரே
மாஅல் யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர்
அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து  10
உள்ளார் ஆதலோ அரிதே, செவ்வேல்
முள்ளூர் மன்னன் கழல் தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி  15
நிலைபெறு கடவுள் ஆக்கிய
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வருந்திய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.  

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  “என் தோள்களும் தம் பண்டைய அழகை இழந்துவிட்டன.  நம் அன்னையும் என் உடல் மெலிவைக் கண்டு பெரும் துயரத்தை அடைந்துள்ளாள்.  ஊரில் எழுந்த அலரானது, பொன்னால் அழகு செய்யப்பட்ட நெடிய தேரையுடைய தென்னாட்டின் மன்னனாகிய, கணைய மரத்தை ஒத்த திண்மையான தோள்களையும் நன்கு இயன்ற தேரினையுமுடைய பாண்டியன் நெடுஞ்செழியன், பகைவர்கள் ஏழு பேரை அடக்கி வென்ற ஆலங்கானத்துப் போர்க்களத்தில் எழுந்த ஆரவாரத்தைவிடவும் பெரிது” எனக் கூறி அழாதே.

நம் தலைவர், பெரிய யானைகளையும் மறத்துடன் போர் புரியும் ஆற்றலையும் உடைய புல்லி என்பவனின் மூங்கில்களையுடைய நெடிய மலையான வேங்கடத்திற்கு அப்பால் கடந்து சென்றார் ஆயினும், சிவந்த வேலினையும் வீரக் கழல்களையும் வீர வளையல்களையும் உடைய முள்ளூர் மன்னன் காரி, வல்வில் ஓரியைக் கொன்று, சேர மன்னர்க்குக் கொடுத்த சிவந்த வேர்களையுடைய பலா மரங்களின் பயன் பொருந்திய கொல்லி மலையில், நிலைபெற்ற கடவுளால் இயற்றப்பட்ட, பலரும் புகழும் கொல்லிப்பாவையை ஒத்த நின் அழகை, நிறைவான நிலையைக் கடந்து, நினையாது இருப்பது அரிது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘என்பு நெகப் பிரிந்தோள் வழிச் சென்று கடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  நிலைபெறு கடவுள் ஆக்கிய (16) – ந. மு. வேங்கடசாமி நாட்டார் – இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நிலைபெற்ற தெய்வத் தச்சனால் இயற்றப்பட்ட, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நிலைபெற்ற தேவர்களால் ஆக்கப்பட்ட.  வரலாறு –செழியன், ஆலங்கானம், புல்லி, வேங்கடம், முள்ளூர், காரி, ஓரி, கொல்லி மலை, சேரலர்.  பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் கிள்ளிவளவன்), ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான்.  தலையாலங்கானம் போர் பற்றின குறிப்புகள் – புறநானூறு 19, 23, 25, 76, நற்றிணை 387, மதுரைக்காஞ்சி 55, 127, அகநானூறு 36, 175, 209.  காரி ஓரியைக் கொல்லுதல் – நற்றிணை 320, அகநானூறு 209, சிறுபாணாற்றுப்படை 110–111.

சொற்பொருள்:  தோளும் தொல்கவின் தொலைந்தன – என் தோள்களும் அழகை இழந்துவிட்டன, நாளும் அன்னையும் அருந்துயர் உற்றனள் – நம் அன்னையும் என் உடல் மெலிவைக் கண்டு பெரும் துயரத்தை அடைந்துள்ளாள், அலரே பொன் அணி நெடுந்தேர்த் தென்னர் கோமான் எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன் நேரா எழுவர் அடிப்படக் கடந்த ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது – ஊரில் எழுந்த அலரானது பொன்னால் அழகு செய்யப்பட்ட நெடிய தேரையுடைய தென்னாட்டின் மன்னனாகிய கணைய மரத்தை ஒத்த திண்மையான தோள்களையும் நன்கு இயன்ற தேரினையுமுடைய பாண்டியன் நெடுஞ்செழியன் பகைவர்கள் ஏழு பேரை அடக்கி வென்ற ஆலங்கானத்துப் போர்க்களத்தில் எழுந்த ஆரவாரத்தைவிடவும் பெரிது, என ஆழல் – எனக் கூறி அழாதே, எனக் கூறி நீ துன்பத்தில் ஆழ்ந்துவிடாதே (அல் ஈற்று எதிர்மறை வியங்கோள், நீட்டல் விகாரம்), வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, அவரே – நம் தலைவர், மாஅல் யானை மறப்போர்ப் புல்லி காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர் அறை இறந்து அகன்றனர் ஆயினும் – பெரிய யானைகளையும் மறத்துடன் போர் புரியும் ஆற்றலையும் உடைய புல்லி என்பவனின் மூங்கில்களையுடைய நெடிய மலையான வேங்கடத்திற்கு அப்பால் கடந்து சென்றார் ஆயினும் (மாஅல் – அளபெடை), நிறை இறந்து – நிறைவான நிலையைக் கடந்து, உள்ளார் ஆதலோ அரிதே – நினையாது இருப்பது அரிது, செவ்வேல் முள்ளூர் மன்னன் கழல் தொடிக் காரி செல்லா நல்லிசை நிறுத்த வல்வில் ஓரிக் கொன்று – சிவந்த வேலினையும் வீரக் கழல்களையும் வீர வளையல்களையும் உடைய முள்ளூர் மன்னன் காரி வல்வில் ஓரியைக் கொன்று (செவ்வேல் – பண்புத்தொகை), சேரலர்க்கு ஈத்த செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி – சேர மன்னர்க்குக் கொடுத்த சிவந்த வேர்களையுடைய பலா மரங்களின் பயன் பொருந்திய கொல்லி மலையில் (செவ்வேர் – பண்புத்தொகை), நிலைபெறு கடவுள் ஆக்கிய பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே –  நிலைபெற்ற கடவுளால் இயற்றப்பட்ட பலரும் புகழும் கொல்லிப்பாவையை ஒத்த நின் அழகை (நலனே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 210, உலோச்சனார், நெய்தல் திணைதோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
குறி இறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர்
எறி உளி பொருத ஏமுறு பெருமீன்
புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட,
விசும்பு அணி வில்லின் போகி, பசும் பிசிர்த்
திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து  5
நிரை திமில் மருங்கில் படர்தரும் துறைவன்,
பானாள் இரவில் நம் பணைத்தோள் உள்ளி,
தான் இவண் வந்த காலை நம் ஊர்க்
கானலம் பெருந்துறைக் கவின் பாராட்டி,
ஆனாது புகழ்ந்திசினோனே இனித் தன்  10
சாயல் மார்பின் பாயல் மாற்றிக்,
கைதை அம் படுசினைக் கடும் தேர் விலங்கச்
செலவு அரிது என்னும் என்பது
பல கேட்டனமால் தோழி, நாமே.

பாடல் பின்னணி:  தலைவனின் வரவை உணராதாள் போல், அவன் அன்பிலன் என்பதுபடக் கூறியது. 

பொருளுரை:  தோழி!  குறிய இறப்பினையுடைய குடிசையில் வாழும், கொலைத் தொழில் புரியும் கொடிய பரதவர் எறிந்த உளி தாக்கிய செருக்குடைய பெரிய மீனின் உடலில் உள்ள புண்ணிலிருந்து வடியும் குருதியால், புலவு நாறும் கடலின் நீரில் களங்கம் உண்டாகும்படி, வானில் உள்ள அழகிய வில்லைப் போல் தோன்றும்படித் தாவி, பசிய நீர்துளிகளையுடைய அலைகள் நெருங்கிய கடல் பரப்பைக் கலக்கி, வலிமை அழிந்து, வரிசையாக உள்ள படகின் பக்கத்தில் வந்து சேரும் துறையின் தலைவன்,

நடு இரவில் நம் மூங்கில் போன்ற தோள்களை நினைத்து இங்கு வந்தபோது, நம் ஊரின் சோலைகளையுடைய பெரிய துறையில் நம் அழகைப் பாராட்டி விடாது புகழ்ந்தான்.  இப்பொழுதோ, தன் மென்மையான மார்பில் யாம் துயில்வதை விலக்கி, தாழையின் தாழ்ந்த கிளைகளால், விரைந்து வரும் தன் தேர் தடைப்படுவதால், அதைச் செலுத்துவது அரிது எனக் கூறுகின்றான் என்பதைப் பல முறை கேட்டோம் நாம்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  நம் பணைத்தோள் உள்ளி (7) – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள் தோழி.  கானல் அம் பெருந்துறைக் கவின் பாராட்டி (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நம்முடைய ஊரின்கண் உள்ள கடற்கரைச் சோலையுடைய பெரிய துறையின் அழகினைப் பாராட்டி.  பண்டு துறையின்கண் நம் கவினைப் பாராட்டிப் புகழ்ந்தான் என்பதுபடப் பொருள் கூறினும் அமையும்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீரின் குருதி கடல் நீரைக் களங்கமாக்கும் என்றது, தலைவன் அலர்க்கு அஞ்சித் தன் இல்லத்தில் தங்கி ஒருவாறு உய்ந்தான் ஆயினும் அவனால் உண்டான அலர் நம்மைக் களங்கப்படுத்தி விட்டது.  ஆதலின் ஒருவழித் தணத்தலும் பயன் இல்லை, என உள்ளுறையால் வற்புறுத்தினாள் ஆயிற்று.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – உளி பொருத பெருமீன் மறுப்படப் போகி அழுவம் உழக்கி உரன் அழிந்து திமில் மருங்கிற் படரும் என்றது, அவனால் நலன் நுகரப்பட்டு வேறுபாடுற்ற நாம் இற்பழியாக்கி, ஊர் அலர் தூற்ற வலியழிந்து இறந்துபடுவதே பயனாயிற்று என்றவாறு.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).

சொற்பொருள்:  குறி இறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர் – குறிய இறப்பினையுடைய குடிசையில் வாழும் கொலைத் தொழில் புரியும் கொடிய பரதவர் (இறை – மனையின் வெளிச்சுவர்க்கு அடுத்து உள்ள கூரையின் அடிப்பகுதி), எறி உளி பொருத ஏமுறு பெருமீன் புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட – எறிந்த உளி தாக்கிய செருக்குடைய பெரிய மீனின் உடலில் உள்ள புண்ணிலிருந்து வடியும் குருதியால் புலவு நாறும் கடலின் நீரில் களங்கம் உண்டாகும்படி, விசும்பு அணி வில்லின் போகி – வானில் உள்ள அழகிய வில்லைப் போல் தோன்றும்படித் தாவி (வில்லின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பசும் பிசிர்த் திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து – பசிய நீர்துளிகளையுடைய அலைகள் நெருங்கிய கடல் பரப்பைக் கலக்கி வலிமை அழிந்து, நிரை திமில் மருங்கில் படர்தரும் துறைவன் – வரிசையாக உள்ள படகின் பக்கத்தில் வந்து சேரும் துறையின் தலைவன், பானாள் இரவில் நம் பணைத்தோள் உள்ளி தான் இவண் வந்த காலை – நடு இரவில் நம் மூங்கில் போன்ற தோள்களை நினைத்து அவன் இங்கு வந்தபோது, நம் ஊர்க் கானல் அம் பெருந்துறைக் கவின் பாராட்டி ஆனாது புகழ்ந்திசினோனே – நம் ஊரின் சோலைகளையுடைய பெரிய துறையைப் பாராட்டி விடாது புகழ்ந்தான், நம் ஊரின் சோலைகளையுடைய பெரிய துறையில் நம் அழகைப் பாராட்டி விடாது புகழ்ந்தான்  (அம் – சாரியை, இசின் – படர்க்கையின் கண் வந்தது, ஏ அசைநிலை), இனி – இப்பொழுது, தன் சாயல் மார்பின் பாயல் மாற்றி – தன் மென்மையான மார்பில் யாம் துயில்வதை விலக்கி, கைதை அம் படுசினை – தாழையின் தாழ்ந்த கிளைகளால், கடும் தேர் விலங்கச் செலவு அரிது என்னும் என்பது பல கேட்டனமால் – விரைந்து வரும் தன் தேர் தடைப்படுவதால் அதைச் செலுத்துவது அரிது எனக் கூறுகின்றான் என்பதைப் பல முறை கேட்டோம் (அம் – சாரியை, கேட்டனமால் – ஆல் அசைநிலை), தோழி – தோழி, நாமே – நாம் (நாமே –  ஏ அசைநிலை)

அகநானூறு 211, மாமூலனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
கேளாய் எல்ல தோழி! வாலிய
சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம்
பறை கண்டன்ன பாவடி நோன் தாள்
திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும்,
தண் மழை ஆலியின் தாஅய், உழவர்  5
வெண்ணெல் வித்தின் அறை மிசை உணங்கும்
பனி படு சோலை வேங்கடத்து உம்பர்,
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர்,
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை
பிடி படு பூசலின் எய்தாது ஒழியக்  10
கடுஞ்சின வேந்தன் ஏவலின் எய்தி,
நெடுஞ்சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்
மத்தி நாட்டிய கல் கெழுப் பனித் துறை 15
நீர் ஒலித்தன்ன பேஎர்
அலர் நமக்கு ஒழிய அழப் பிரிந்தோரே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிவின்கண் வருந்திய தலைவியிடம் தோழி கூறியது. 

பொருளுரை:  ஏடி தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  வெள்ளை சுண்ணாம்பு பரவினாற்போன்ற கடம்ப மரத்தின் பல மலர்கள், பறையை ஒத்த வட்டமாகிய பரந்த அடியையுடைய வலிய கால்களையும், திண்மையான கோடுகளையும் (தந்தங்களையும்) உடைய வலிய களிற்று யானை உரசும்போதெல்லாம் குளிர்ந்த மழையுடன் விழும் பனிக்கட்டிகள் போல் தாவி, உழவர்களின் வெள்ளை நெல் போல் பாறைகளின் மீது காய்ந்து கிடக்கும், குளிந்த சோலைகளையுடைய வேங்கட மலைக்கு அப்பால் உள்ள மொழி வேறுபட்ட நாட்டில் இருப்பவர் ஆனாலும், அருள் செய்வார்,

பள்ளத்தில் அகப்படுத்திய கன்றுகளையும் பிடி யானைகளையும் உடைய பெரிய கூட்டத்தை அகப்படுத்தும் பூசலின்கண், தன் ஏவலின்படி வராமல் ஒழிந்தமையால், பெருஞ்சினம் கொண்ட சோழ மன்னனின் ஏவலால் சென்று மிகவும் சேய்மையில் உள்ள நாட்டில் முதல் படையில் அகப்பட்ட, கல்லாத எழினியின் பற்களைப் பறித்து வந்து பதித்த வலிய கதவையுடைய வெண்மணி என்னும் ஊரில் வாயிலில் மத்தி என்னும் குறுநில மன்னன் என்பவன் நட்டிய, வீரக்கல் பொருந்திய குளிர்ந்த கடலின் துறையின்கண் நீர் மோதி ஒலிப்பதை ஒத்த பெரும் அலர் நம்பால் வரவும், நாம் அழவும் பிரிந்த நம் தலைவர்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகை பட வந்த கிளவி’ என்பதனால் அமைத்துக் கொள்க.  வரலாறு –வேங்கட மலை, எழினி, மத்தி. வெண்மணி வாயில், வேந்தன் (சோழ மன்னன்.  ஒப்புமை –நற்றிணை 18 – மூவன் முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின் கானல் அம் தொண்டிப் பொருநன் வென் வேல் தெறல் அருந்தானைப் பொறையன்.  அலர் நமக்கு ஒழிய (17) – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள் தோழி.  

சொற்பொருள்:  எல்ல தோழி – ஏடி தோழி, கேளாய் – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாலிய சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம் – வெள்ளை சுண்ணாம்பு பரவினாற்போன்ற கடம்ப மரத்தின் பல மலர்கள் (மராஅம் – அளபெடை, கடம்ப மரம் – Anthocephalus cadamba, Kadampam oak), பறை கண்டன்ன பாவடி நோன் தாள் திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும் தண் மழை ஆலியின் தாஅய் – பறையை ஒத்த வட்டமாகிய பரந்த அடியையுடைய வலிய கால்களையும், திண்மையான கோடுகளையும் (தந்தங்களையும்) உடைய வலிய களிற்று யானை உரசும்போதெல்லாம் குளிர்ந்த மழையுடன் விழும் பனிக்கட்டிகள் போல் தாவி (ஆலியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, தாஅய் – அளபெடை), உழவர் வெண்ணெல் வித்தின் அறை மிசை உணங்கும் – உழவர்களின் வெள்ளை நெல் போல் பாறைகளின் மீது காய்ந்து கிடக்கும், பனி படு சோலை வேங்கடத்து உம்பர் மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர் – குளிந்த சோலைகளையுடைய வேங்கட மலைக்கு அப்பால் உள்ள மொழி வேறுபட்ட நாட்டில் இருப்பவர் ஆனாலும் அருள் செய்வார் (தேஎத்தர் – அளபெடை), குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை பிடி படு பூசலின் எய்தாது ஒழிய – பள்ளத்தில் அகப்படுத்திய கன்றுகளையும் பிடி யானைகளையும் உடைய பெரிய கூட்டத்தை அகப்படுத்தும் பூசலின்கண் தன் ஏவலின்படி வராமல் ஒழிந்தமையால், கடுஞ்சின வேந்தன் ஏவலின் எய்தி நெடுஞ்சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட – பெருஞ்சினம் கொண்ட சோழ மன்னனின் ஏவலால் சென்று மிகவும் சேய்மையில் உள்ள நாட்டில் முதல் படையில் அகப்பட்ட, கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய வன்கண் கதவின் வெண்மணி வாயில் மத்தி நாட்டிய – கல்லாத எழினியின் பற்களைப் பறித்து வந்து பதித்த வலிய கதவையுடைய வெண்மணி என்னும் ஊரில் வாயிலில் மத்தி என்னும் குறுநில மன்னன் என்பவன் நட்டிய, கல் கெழுப் பனித் துறை நீர் ஒலித்தன்ன பேஎர் அலர் நமக்கு ஒழிய அழப் பிரிந்தோரே – வீரக்கல் பொருந்திய குளிர்ந்த கடலின் துறையின்கண் நீர் மோதி ஒலிப்பதை ஒத்த பெரும் அலர் நம்பால் வரவும் நாம் அழவும் பிரிந்த நம் தலைவர் (பிரிந்தோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 212, பரணர், குறிஞ்சித் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
தா இல் நன்பொன் தைஇய பாவை
விண் தவழ் இளவெயிற் கொண்டு நின்றன்ன,
மிகு கவின் எய்திய, தொகு குரல் ஐம்பால்,
கிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற
முளை ஓரன்ன மின் எயிற்றுத் துவர் வாய்,  5
நயவன் தைவரும் செவ்வழி நல்யாழ்
இசை ஓர்த்தன்ன இன் தீங்கிளவி,
அணங்கு சால் அரிவையை நசைஇப் பெருங்களிற்று
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில்,
பெறல் அருங்குரையள் என்னாய் வைகலும் 10
இன்னா அருஞ்சுரம் நீந்தி நீயே
என்னை இன்னல் படுத்தனை, மின்னு வசிபு
உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று
விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ,
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை  15
மட்டு அவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன்
பொரு முரண் பெறாஅது விலங்கு சினஞ் சிறந்து,
செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி,
ஓங்கு திரைப் பௌவம் நீங்க ஓட்டிய
நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக்  20
கூர் மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது
எளியள் அல்லோள் கருதி,
விளியா எவ்வம் தலைத்தந்தோயே.

பாடல் பின்னணி:  அல்ல குறிப்பட்டு நீங்கும் தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது.  

பொருளுரை:  நெஞ்சே!  வலிமை இல்லாத நெகிழும் நல்ல பொன்னால் இயற்றப்பட்ட பாவை வானில் தவழ்கின்ற இளவெயிலை ஏற்றுக்கொண்டு நிற்றாற்போல், மிக்க அழகு பொருந்தியவளும், திரண்ட அடர்ந்த ஐந்து பகுதியான கூந்தலையும், கிளைத்த புதராகிய நாணலின் கிழங்கு மணலில் ஈன்ற முளைகளை ஒத்த கூரிய பற்களையுடைய சிவந்த வாயினையும், இசையில் வல்லவன் இயக்கும் நல்ல யாழின் செவ்வழிப் பண்ணின் இசையைக் கேட்டாற்போல் மிகவும் இனிய சொற்களையுமுடைய, கடவுளின் இயல்பையுடைய அரிவையை விரும்பி, பெரிய களிற்று யானைக்கூட்டம் இறங்கி கலக்கிய நீரைப்போல் நீ கலக்கம் அடைந்தபோது, இவள் பெறுவதற்கு அறியவள் என எண்ணாதாய், நாள்தோறும் இன்னாமையுடைய கடத்தற்கு அரிய வழியைக் கடந்து, நீ என்னை துன்பத்தில் ஆழ்த்தினாய்.  காண்பதற்கு எளியவள் அல்லாத இவளை விடாது எண்ணி, நீங்காத துன்பத்தினை என்னிடம் தந்தாய்.

வானைப் பிளக்கின்ற முகிலைப் போன்று பகைத்து வலிமை கொண்டு, பல மொழிகள் கலந்த பாசறையை தான் வேண்டும் இடங்களில் அமைத்து, போர்க்கருவிகள் ஒளி வீசும் கடலைப் போன்ற தானையை உடைய, தேன் ஒழுகும் மலர் மாலையை அணிந்த, மறத்துடன் போர் புரியும் சேர அரசன் குட்டுவன், தன்னுடன் போர் புரியும் பகையை நிலத்தின் காணாததால் சினம் மிகுந்து, போர் புரியும் வலிமையினால் கடலை வளைத்து, உயர்ந்த அலைகளையுடைய கடலை விரட்டினான்.  அவனுடைய மாண்புற்ற தன்மையுடைய வேலானது, நின் மார்பில் தைத்து அழுந்திட நின் மிகுந்த செருக்கு அழியட்டும்!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) என வரும் நூற்பாவின்கண் ‘பரிவுற்று மெலியினும்’ என்னும் விதி கொள்க.  தா இல் நன்பொன் தைஇய பாவை (12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வன்மையில்லாது நெகிழும் தன்மையுடைய சிறந்த பொன்னால் இயற்றப்பெற்ற பாவை.  வசிபு (12) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வானைப் பிளந்து, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இருளைப் பிளக்கின்ற.  பௌவம் (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பௌவம் என்றது ஆகுபெயர். பௌவம் – கடல்.  கடலை அரணாகக் கொண்டு தீவுகளில் உறைந்த பகைவரையெல்லாம் செங்குட்டுவன் வென்று ஒழித்தான் ஆதலின் அவனைக் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்பர்.  பதிற்றுப்பத்து பாடல்கள் 41–50, புறநானூறு பாடல் 369 – புலவர் பரணர் சேர மன்னன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனுக்காக எழுதியவை.  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு உரை, மண்ணை படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் பத்துப்பாட்டு உரை.  மின்னல் பிளத்தல் – மின்னு வசிபு – அகநானூறு 162, 212, 322, நற்றிணை 228, 261, மலைபடுகடாம் 97, மின்னு வசி – நற்றிணை 334.  வரலாறு – குட்டுவன் (சேரன்).  குரை – ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப (தொல்காப்பியம், இடையியல் 24).

சொற்பொருள்:  தா இல் நன்பொன் தைஇய பாவை விண் தவழ் இளவெயிற் கொண்டு நின்றன்ன – வலிமை இல்லாத நெகிழும் நல்ல பொன்னால் இயற்றப்பட்ட பாவை வானில் தவழ்கின்ற இளவெயிலை ஏற்றுக்கொண்டு நிற்றாற்போல் (தைஇய – அளபெடை), மிகு கவின் எய்திய – மிக்க அழகு பொருந்தியவளும், தொகு குரல் ஐம்பால் – திரண்ட அடர்ந்த ஐந்து பகுதியான கூந்தலையும், கிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற முளை ஓரன்ன மின் எயிற்றுத் துவர் வாய் – கிளைத்த புதராகிய நாணலின் கிழங்கு மணலில் ஈன்ற முளைகளை ஒத்த கூரிய பற்களையுடைய சிவந்த வாயினையும் (மணற்கு – மணலின்கண், வேற்றுமை மயக்கம், நான்கனுருபு ஏழாவதன்கண் மயங்கிற்று), நயவன் தைவரும் செவ்வழி நல்யாழ் இசை ஓர்த்தன்ன இன் தீங்கிளவி அணங்கு சால் அரிவையை நசைஇ – இசையில் வல்லவன் இயக்கும் நல்ல யாழின் செவ்வழிப் பண்ணின் இசையைக் கேட்டாற்போல் மிகவும் இனிய சொற்களையுமுடைய கடவுளின் இயல்பையுடைய அரிவையை விரும்பி (நசைஇ – அளபெடை), பெருங்களிற்று இனம் படி நீரின் கலங்கிய பொழுதில் – பெரிய களிற்று யானைக்கூட்டம் இறங்கி கலக்கிய நீரைப்போல் நீ கலக்கம் அடைந்தபோது, பெறல் அருங்குரையள் என்னாய் – இவள் பெறுவதற்கு அறியவள் என எண்ணாதாய் (அருங்குரையள் – குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று), வைகலும் இன்னா அருஞ்சுரம் நீந்தி – நாள்தோறும் இன்னாமையுடைய கடத்தற்கு அரிய வழியைக் கடந்து, நீயே என்னை இன்னல் படுத்தனை – நீ என்னை துன்பத்தில் ஆழ்த்தினாய், மின்னு வசிபு உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று – வானைப் பிளக்கின்ற முகிலைப் போன்று பகைத்து வலிமை கொண்டு (வசிபு – பிளந்து, கடுப்ப – உவம உருபு), விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ – பல மொழிகள் கலந்த பாசறையை தான் வேண்டும் இடங்களில் அமைத்து (கட்டூர் – பாசறை, கொளீஇ – அளபெடை), படை நிலா இலங்கும் கடல் மருள் தானை – போர்க்கருவிகள் ஒளி வீசும் கடலைப் போன்ற தானையை உடைய (மருள் – உவம உருபு), மட்டு அவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன் – தேன் ஒழுகும் மலர் மாலையை அணிந்த மறத்துடன் போர் புரியும் சேர அரசன் குட்டுவன், பொரு முரண் பெறாஅது விலங்கு சினஞ் சிறந்து செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி ஓங்கு திரைப் பௌவம் நீங்க ஓட்டிய – தன்னுடன் போர் புரியும் பகையை நிலத்தின் காணாததால் சினம் மிகுந்து போர் புரியும் வலிமையினால் கடலை வளைத்து உயர்ந்த அலைகளையுடைய கடலை விரட்டிய (பெறாஅது – அளபெடை), நீர் மாண் எஃகம் – மாண்புற்ற தன்மையுடைய வேல் (நீர் – தன்மை), நிறத்துச் சென்று அழுந்தக் கூர் மதன் அழியரோ – நின் மார்பில் தைத்து அழுந்திட நின் மிகுந்த செருக்கு அழியட்டும், நெஞ்சே – என் நெஞ்சே, ஆனாது எளியள் அல்லோள் கருதி – காண்பதற்கு எளியவள் அல்லாத இவளை விடாது எண்ணி, விளியா எவ்வம் தலைத்தந்தோயே – நீங்காத துன்பத்தினை என்னிடம் தந்தாய் (விளியா – விளியாத என்னும் பெயரெச்சத்தின் ஈறு கெட்டது, தலைத்தந்தோயே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 213, தாயங்கண்ணனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
வினை நவில் யானை விறல் போர்த் தொண்டையர்
இன மழை தவழும் ஏற்று அரு நெடுங்கோட்டு
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்க்,
கொய் குழை அதிரல் வைகு புலர் அலரி
சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி,  5
இகல் முனைத் தரீஇய ஏருடைப் பெரு நிரை
நனை முதிர் நறவின் நாள் பலி கொடுக்கும்
வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து
நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை
அழல் அவிர் அருஞ்சுரம் நெடிய என்னாது,  10
அகறல் ஆய்ந்தனர் ஆயினும், பகல் செலப்
பல் கதிர் வாங்கிய படுசுடர் அமையத்துப்
பெருமரம் கொன்ற கால் புகு வியன் புனத்து,
எரி மருள் கதிர திருமணி இமைக்கும்
வெல் போர் வானவன் கொல்லிக் குடவரை  15
வேய் ஒழுக்கு அன்ன சாய் இறைப் பணைத்தோள்
பெருங்கவின் சிதைய நீங்கி, ஆன்றோர்
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்,
சென்று தாம் நீடலோ இலரே என்றும்
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக்கை  20
வலம்படு வென்றி வாய்வாள் சோழர்
இலங்கு நீர்க் காவிரி இழி புனல் வரித்த
அறலென நெறிந்த கூந்தல்
உறலின் சாயலொடு ஒன்றுதல் மறந்தே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வருந்திய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.  

பொருளுரை:  தோழி!  போர் வினையைப் பயின்ற யானைகளையுடைய, திறமையுடன் போரிட வல்ல தொண்டையர்களின், கூட்டமாக முகில்கள் தவழும், ஏறுவதற்கு அரிய உயர்ந்த உச்சியிலிருந்து வீழ்கின்ற, உயர்ந்து தோன்றும் வெள்ளை அருவிகளையுடைய வேங்கட மலைக்கு அப்பால் உள்ள, கொய்யப்பட்ட காட்டு மல்லிகையின் வைகறையில் மலரும் பூக்களைச் சுருண்ட கரிய மயிரில் வண்டு மொய்க்கச் சூடி, பகைவர்களின் போர்முனையில் வென்று ஏறுகளையுடைய பெரிய ஆனிரைகளைக் கவர்ந்துகொண்டு வருவதற்கு, மலரின் தேனால் இயன்ற முதிர்ந்த கள்ளை விடியற்காலையில் பலியாகக் கொடுக்கும், வெள்ளை கொழுப்புடைய சோற்றை உண்ணும் வடுகர்களின் நாட்டில் உள்ள, நிழலின் அழகை இழந்த நீர் இல்லாத நீண்ட இடத்தையுடைய தீயின் வெப்பம் விளங்கும் கடத்தற்கரிய பாலை நிலத்தின் வழிகள் நீளமானவை என எண்ணாது பிரிந்து செல்லுத்துவதற்குத் துணிந்தாராயினும்,

எப்பொழுதும் அணிகலன்களைப் பரிசிலர்க்கு ஈயும்பொருட்டுக் கவிழ்ந்துள்ள சுழலும் தொடிகள் அணிந்த பெரிய கைகளையும், வலிமையுடன் வெற்றியைத் தரும் தப்பாத வாளினையும் உடைய சோழரின், விளங்கும் நீரையுடைய காவிரியின் வடிந்த நீர் வரி வரியாக இழைத்த கருமணம் போன்ற கூந்தலையும், அணைப்பதற்கு இனிய மென்மையையும் உடைய உன்னுடன் கூடுதலை மறந்து,

பகற்பொழுது நீங்கும்பொருட்டுக் கதிரவன் தன் பல கதிர்களையும் சுருக்கிய ஒளி மழுங்கும் நேரத்தில், பெரிய மரங்களை வெட்டி நீக்கியதால் காற்று புகும் பெரிய கொல்லையில், தீயைப் போன்ற கதிர்களையுடைய அழகிய மணிகள் மிளிரும், வெல்லும் போரையுடைய சேரனின் கொல்லி மலையின் மேற்கில் உள்ள மூங்கிலின் நேரிய பகுதி போன்ற, மெலிந்த முன்கையையுடைய பெரிய தோள்களின் பெரும் அழகு பாழ்படும்படி நீங்கி, மேல் உலகில் உள்ளவர்களின், பெறுவதற்கு அரிய உலகை அங்குள்ள அமிழ்தத்துடன் பெற்றாலும், சென்ற நம் தலைவர் காலம் தாழ்த்த மாட்டார்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகை பட வந்த கிளவி’ என வரும் விதியால் அமைத்துக்கொள்க.  தொண்டையர் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சோழ நாட்டின் குறுநில மன்னருள் ஒரு சாரார்.  வடுகர் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தெலுங்கர், ஒளவை துரைசாமி உரை, புறநானூறு 278 – தொண்டை நாட்டுத் திருவேங்கடத்திற்கு வடக்கில் உள்ள நாட்டவராதலால் வடுகர் எனப்பட்டனர்.  வடுகர் – அகநானூறு 107, 213, 253, 281, 295, 375, 381, குறுந்தொகை 11, நற்றிணை 212, புறநானூறு 378.  தொண்டையர் – குறுந்தொகை 260–6 – வண் தேர்த் தொண்டையர்.  இகல் முனைத் தரீஇய ஏருடைப் பெரு நிரை (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காளைகளையுடைய பெரிய ஆனிரைகளைப் பகைவர் ஊரின்கண் சென்று கவர்ந்து கொணர்வதற்கு, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பகைவர் போர்முனையில் வென்று கொண்ட ஏறுகளையுடைய பெரிய ஆனிரைக்காக.  நனை முதிர் நறவின் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலரின் முதிர்ந்த தேனால் இயன்ற தேறலோடு, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – முதிர்ந்த கள்ளாகிய நறவினை, ஒளவை துரைசாமி உரை – புறநானூறு 297 பாடலில் – பூக்களையிட்டு முதிர்வித்த கள்.  நனை அமை கள்ளின் (பதிற்றுப்பத்து 12) – அருள் அம்பலவாணர் உரை – அரும்பில் அமைத்த கள், ஒளவை துரைசாமி உரை – மலர் அரும்பு பெய்து பக்குவம் செய்யப்பட்ட கள்.  அறல் போல் கூந்தல் – அகநானூறு 142 – அறல் அன்ன இரும் பல் கூந்தல், அகநானூறு 162 – அறல் என அவிர்வரும் கூந்தல், அகநானூறு 213 – அறலென நெறிந்த கூந்தல், அகநானூறு 265 – அறலின் நெறித்த கூந்தல், அகநானூறு 299 – அறல் மருள் கூந்தலின், குறுந்தொகை 116 – தேம் பாய் கூந்தல் வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை நுண் மணல் அறல் வார்ந்தன்ன, குறுந்தொகை 286 – அறல் போல் கூந்தல், கலித்தொகை 71 – கதுப்பு அறல், கலித்தொகை 98 – நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக, பொருநராற்றுப்படை 25 – அறல் போல் கூந்தல்.  வரலாறு – தொண்டையர், வேங்கட மலை, வடுகர், வானவன், கொல்லி மலை, சோழர், காவிரி.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

சொற்பொருள்:  வினை நவில் யானை விறல் போர்த் தொண்டையர் – போர் வினையைப் பயின்ற யானைகளையுடைய திறமையுடன் போரிட வல்ல தொண்டையர்களின், இன மழை தவழும் ஏற்று அரு நெடுங்கோட்டு ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர் – கூட்டமாக முகில்கள் தவழும் ஏறுவதற்கு அரிய உயர்ந்த உச்சியிலிருந்து வீழ்கின்ற உயர்ந்து தோன்றும் வெள்ளை அருவிகளையுடைய வேங்கட மலைக்கு அப்பால் உள்ள, கொய் குழை அதிரல் வைகு புலர் அலரி சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி – கொய்யப்பட்ட காட்டு மல்லிகையின் வைகறையில் மலரும் பூக்களைச் சுருண்ட கரிய மயிரில் வண்டு மொய்க்கச் சூடி, இகல் முனைத் தரீஇய ஏருடைப் பெரு நிரை – பகைவர்களின் போர்முனையில் வென்று ஏறுகளையுடைய பெரிய ஆனிரைகளைக் கவர்ந்துகொண்டு வருவதற்கு (தரீஇய – அளபெடை), நனை முதிர் நறவின் நாள் பலி கொடுக்கும் – மலரின் தேனால் இயன்ற முதிர்ந்த கள்ளை விடியற்காலையில் பலியாகக் கொடுக்கும், வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து – வெள்ளை கொழுப்புடைய சோற்றை உண்ணும் வடுகர்களின் நாட்டில் உள்ள (புகாஅ – புகவு என ஆக்குறுகி உகரம் ஏற்றது, தேஎத்து – அளபெடை), நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை அழல் அவிர் அருஞ்சுரம் நெடிய என்னாது – நிழலின் அழகை இழந்த நீர் இல்லாத நீண்ட இடத்தையுடைய தீயின் வெப்பம் விளங்கும் கடத்தற்கரிய பாலை நிலத்தின் வழிகள் நீளமானவை என எண்ணாது, அகறல் ஆய்ந்தனர் ஆயினும் – பிரிந்து செல்லுத்துவதற்குத் துணிந்தாராயினும், பகல் செலப் பல் கதிர் வாங்கிய படுசுடர் அமையத்துப் பெருமரம் கொன்ற கால் புகு வியன் புனத்து – பகற்பொழுது நீங்கும்பொருட்டுக் கதிரவன் தன் பல கதிர்களையும் சுருக்கிய ஒளி மழுங்கும் நேரத்தில் பெரிய மரங்களை வெட்டி நீக்கியதால் காற்று புகும் பெரிய கொல்லையில் (செல – இடைக்குறை), எரி மருள் கதிர திருமணி இமைக்கும் – தீயைப் போன்ற கதிர்களையுடைய அழகிய மணிகள் மிளிரும் (மருள் – உவம உருபு), வெல் போர் வானவன் கொல்லிக் குடவரை வேய் ஒழுக்கு அன்ன – வெல்லும் போரையுடைய சேரனின் கொல்லி மலையின் மேற்கில் உள்ள மூங்கிலின் நேரிய பகுதி போன்ற, சாய் இறைப் பணைத்தோள் பெருங்கவின் சிதைய நீங்கி – மெலிந்த முன்கையையுடைய பெரிய தோள்களின் பெரும் அழகு பாழ்படும்படி நீங்கி, ஆன்றோர் அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும் சென்று தாம் நீடலோ இலரே – மேல் உலகில் உள்ளவர்களின் பெறுவதற்கு அரிய உலகை அங்குள்ள அமிழ்தத்துடன் பெற்றாலும் சென்ற அவர் காலம் தாழ்த்த மாட்டார் (அரும் பெறல் – பெறல் அரும் – பெறுவதற்கு அரிய, இலரே – ஏகாரம் அசைநிலை), என்றும் கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக்கை வலம்படு வென்றி வாய்வாள் சோழர் – எப்பொழுதும் அணிகலன்களைப் பரிசிலர்க்கு ஈயும்பொருட்டுக் கவிழ்ந்துள்ள சுழலும் தொடிகள் அணிந்த பெரிய கைகளையும் வலிமையுடன் வெற்றியைத் தரும் தப்பாத வாளினையும் உடைய சோழரின், இலங்கு நீர்க் காவிரி இழி புனல் வரித்த அறலென நெறிந்த கூந்தல் உறலின் சாயலொடு ஒன்றுதல் மறந்தே – விளங்கும் நீரையுடைய காவிரியின் வடிந்த நீர் வரி வரியாக இழைத்த கருமணம் போன்ற கூந்தலையும் அணைப்பதற்கு இனிய மென்மையையும் உடைய உன்னுடன் கூடுதலை மறந்து (உறுதல் – தொடுதல், மறந்தே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 214, வடம வண்ணக்கன் பேரிசாத்தனார், முல்லைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய்ப்,
பகலுடன் கரந்த பல் கதிர் வானம்
இருங்களிற்று இன நிரை குளிர்ப்ப வீசிப்,
பெரும் பெயல் அழிதுளி பொழிதல் ஆனாது,
வேந்தனும் வெம்பகை முரணி ஏந்திலை  5
விடுகதிர் நெடுவேல் இமைக்கும் பாசறை,
அடுபுகழ் மேவலொடு கண்படை இலனே
அமரும் நம் வயினதுவே நமர் என
நம்மறிவு தெளிந்த பொம்மல் ஓதி
யாங்கு ஆகுவள் கொல் தானே, ஓங்கு விடைப்  10
படு சுவல் கொண்ட பகுவாய்த் தெள் மணி
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇப்,
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப
ஆருயிர் அணங்கும் தெள் இசை
மாரி மாலையும் தமியள் கேட்டே?  15

பாடல் பின்னணி:  பாசறைக்கண் தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது.

பொருளுரை:  என் நெஞ்சே!  அகன்ற பெரிய வானின் இடமெல்லாம் மறையும்படிப் பரவி பல கதிர்களையுடைய ஞாயிற்றை மறைத்த முகில்கள், பெரிய களிற்று யானைகளையுடைய யானைக் கூட்டங்கள் குளிருந்தபடி பெரும் பெயலாகிய மிக்க துளிகள் பொழிதலை ஒழியாது உள்ளன.  வேந்தனும் பெரும் பகையுடைய பகைவர்களுடன் மாறுபட்டு நிமிர்ந்த இலையையுடைய ஒளிவிடுகின்ற நீண்ட வேல் மின்னும் பாசறையில் இருந்து, பகைவரை வென்று அடையும் புகழை விரும்பி, துயிலுதல் செய்யாது உள்ளான்.

போரின் பொறுப்பு நம்மிடம் உள்ளது.  அவர் நம் கேளிர் எனக் கொண்டு, “கார்ப்பருவத்தின் தொடக்கத்தில் யாம் மீண்டு வருவோம்” என நாம் கூறியதைத் தன் அறிவாற்றலால் ஏற்றுத் தெளிந்த, பொலிந்திருக்கும் கூந்தலையுடைய நம் தலைவி எந்நிலையை அடைவாளோ, உயர்ந்த ஏற்றின் கழுத்தில் கட்டிய பெரிய வாயையும் தெளிந்த ஓசையையுமுடைய மணிகள் ஒலிக்கும்படி ஆக்களை மீட்டு வரும் கோவலர்களின் ஆம்பல் குழல் ஓசையுடன், பிரிந்தவர்களைத் துன்புறுத்தும் நல்ல யாழின்கண் செவ்வழிப் பண்ணைப் பிறர் இசைக்கும் ஓசையும் கலந்து, அரிய உயிரை வருத்தும் தெளிந்த ஓசையை, கார்கால மாலை நேரத்தில் தனியளாக கேட்டு?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘ஏவன் மரபின் ஏனோரும் உரியர்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 24) என்னுஞ் சூத்திரத்து, இவ்வகப்பாட்டும் பொருணோக்கினால் தூது கண்டு வருந்திக் கூறியது, என்பர் நச்சினார்க்கினியர்.  நமர் என நம்மறிவு தெளிந்த (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நம்முடைய சுற்றத்தாருள் இவரே தலைசிறந்தவர் என உட்கொண்டு நாம் கார்ப்பருவத்துத் தொடக்கத்தே மீண்டு வருவேம் எனக் கூறிய அறிவுரையை வாய்மை என்று தெளிந்து அது பற்றுக்கோடாக ஆற்றியிருக்கின்ற, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நம் கேளிர் என்று நம்மைத் தன் அறிவினால் தெருண்ட.

சொற்பொருள்:  அகல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்ப் பகலுடன் கரந்த பல் கதிர் வானம் – அகன்ற பெரிய வானின் இடமெல்லாம் மறையும்படிப் பரவி பல கதிர்களையுடைய ஞாயிற்றை மறைத்த முகில்கள் (பாஅய் – அளபெடை, வானம் – ஆகுபெயர் முகிலுக்கு), இருங்களிற்று இன நிரை குளிர்ப்ப வீசிப் பெரும் பெயல் அழிதுளி பொழிதல் ஆனாது – பெரிய களிற்று யானைகளையுடைய யானைக் கூட்டங்கள் குளிருந்தபடி பெரும் பெயலாகிய மிக்க துளிகள் பொழிதலை ஒழியாது, வேந்தனும் வெம்பகை முரணி ஏந்து இலை  விடுகதிர் நெடுவேல் இமைக்கும் பாசறை அடுபுகழ் மேவலொடு கண்படை இலனே – வேந்தனும் பெரும் பகையுடைய பகைவர்களுடன் மாறுபட்டு நிமிர்ந்த இலையையுடைய ஒளிவிடுகின்ற நீண்ட வேல் மின்னும் பாசறையில் இருந்து பகைவரை வென்று அடையும் புகழை விரும்பி துயிலுதல் செய்யாது உள்ளான், அமரும் நம் வயினதுவே – போரின் பொறுப்பு நம்மிடம் உள்ளது, நமர் என நம் அறிவு தெளிந்த – நம் கேளிர் என்று நம்மைத் தன் அறிவாற்றலால் ஏற்றுத் தெளிந்த, பொம்மல் ஓதி யாங்கு ஆகுவள் கொல் – பொலிந்திருக்கும் கூந்தலையுடைய நம் தலைவி எந்நிலையை அடைவாளோ (பொம்மல் ஓதி – அன்மொழித்தொகை), தானே – தான் ஏ அசைநிலைகள், ஓங்கு விடைப் படு சுவல் கொண்ட பகுவாய்த் தெள் மணி ஆ பெயர் கோவலர் – உயர்ந்த ஏற்றின் கழுத்தில் கட்டிய பெரிய வாயையும் தெளிந்த ஓசையையுமுடைய மணிகள் ஒலிக்கும்படி ஆக்களை மீட்டு வரும் கோவலர்களின், ஆம்பலொடு – ஆம்பல் குழல் ஓசையுடன் (விடை – காளை, ஏறு), அளைஇ – கலந்து (அளபெடை), பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப – பிரிந்தவர்களைத் துன்புறுத்தும் நல்ல யாழின்கண் செவ்வழிப் பண்ணைப் பிறர் இசைக்க, ஆருயிர் அணங்கும் தெள் இசை – அரிய உயிரை வருத்தும் தெளிந்த ஓசையை, மாரி மாலையும் தமியள் கேட்டே – கார்கால மாலை நேரத்தில் தனியளாக கேட்டு (கேட்டே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 215, இறங்குகுடிக் குன்ற நாடன், பாலைத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
விலங்கு இருஞ்சிமையக் குன்றத்து உம்பர்,
வேறு பன் மொழிய தேஎம் முன்னி,
வினை நசைஇப் பரிக்கும் உரன்மிகு நெஞ்சமொடு
புனை மாண் எஃகம் வலவயின் ஏந்தி,
செலல் மாண்பு உற்ற நும் வயின் “வல்லே  5
வலன் ஆகு” என்றலும் நன்று மன் தில்ல,
கடுத்தது பிழைக்குவது ஆயின் தொடுத்த
கை விரல் கவ்வும் கல்லாக் காட்சிக்,
கொடுமரம் பிடித்த கோடா வன்கண்
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர்,  10
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கைக்
கூர் நுதிச் செவ்வாய் எருவைச் சேவல்
படுபிணப் பைந்தலை தொடுவன குழீஇ,
மல்லல் மொசி விரல் ஒற்றி மணி கொண்டு
வல்வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண்,  15
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே.

பாடல் பின்னணி:  செலவு உணர்த்திய தோழி, தலைவியின் குறிப்பறிந்து தலைவனைச் செலவு அழுங்குவித்தது.  

பொருளுரை:  தாம் குறித்த இலக்குத் தவறினால், அம்பினைப் பற்றிய கைவிரலை வாயால் கவ்வும், கல்லாத அறிவினையும், வில்லை ஏந்திய மாறாத கொடூரத்தையும், கொல்லனின் உலையில் வடித்தல் செய்த அம்பினையும் உடைய ஏவும் மறவர்கள் வழிப்போக்கர்களைக் கொன்று அவர்கள் உடலை மூடிக் குவித்து உயர்த்திய, கண்டார்க்கு அச்சம் தரும் கற்குவியல்களில், கூரிய அலகையும் சிவந்த வாயையும் உடைய ஆண் பருந்துகள் ஒன்றுகூடி இறந்து கிடக்கும் பிணங்களின் பசிய தலையைத் தோண்டி, வலிய நெருங்கிய விரல்களால் தோண்டி கண்ணின் மணியை எடுத்துக் கொண்டு, வலிய வாயை உடைய தன் பெடைக்குச் சொரியும், அவ்விடம் சென்றவர்க்கு, இரங்கும் நெஞ்சுடன் அவரைப் பிரிந்து இவ்விடத்தில் தங்கும் ஆற்றல் உடையவர்களுக்கு,

குறுக்காகக் கிடக்கும் பெரிய உச்சியையுடைய மலைக்கு அப்பால் உள்ள வேறு பல மொழிகள் உள்ள நாடுகளை எண்ணி வினையை விரும்பி இழுக்கும் வலிமை மிகுந்த நெஞ்சத்துடன், அழகிய மாண்புற்ற வேலை வலக்கையில் ஏந்தி செல்லுதல் மாட்சியுற்ற நும்மிடம், “விரைந்து வெற்றி அடைக” எனக் கூறி விடுதலும் நன்றாகும்.  ஆனால் யாம் அங்ஙனம் வாழ்த்தும் ஆற்றல் பெற்றிலேம்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகைபட வந்த கிளவி’ என்பதனால் அமைத்திடுக.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘வேந்து வினை இயற்கை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 32) என்னுஞ் சூத்திரத்து, முடியுடை வேந்தர்க்குரிய தொழிலாகிய இலக்கணங்கள் ………………. குறுநில மன்னரிடத்தும் பொருந்தும் இடனுடையது என்றுரைத்து, அதற்கு உதாரணமாக ‘ விலங்கு இருஞ்சிமையக் குன்றத்து உம்பர் ……………. செலல் மாண்பு உற்ற’ என்ற அடிகளைக் காட்டி, ‘வேறுபன் மொழிய தேஎத்தைக் கொள்ளக் கருதிப் போர்த்தி தொழிலைச் செலுத்தும் உறன்மிக்க நெஞ்சமென்றலின், இது குறுநில மன்னன் தன் பகைவயின் நாடு கொள்ளச் சென்றதாம், வேந்தன் எனப் பெயர் கூறாமையின்’ என்றார் நச்சினார்க்கினியர்.  மன் (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒழியிசை, அத்தகைய செவ்வியைப் பெற்றிலேன் என ஒழிந்த பொருள் தருவது.  வடி நவில் அம்பின் (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொல் உலையில் வடித்தல் செய்த அம்பினையுடைய.

சொற்பொருள்:  விலங்கு இருஞ் சிமையக் குன்றத்து உம்பர் வேறு பன் மொழிய தேஎம் முன்னி வினை நசைஇப் பரிக்கும் உரன்மிகு நெஞ்சமொடு – குறுக்காகக் கிடக்கும் பெரிய உச்சியையுடைய மலைக்கு அப்பால் உள்ள வேறு பல மொழிகள் உள்ள நாடுகளை எண்ணி வினையை விரும்பி இழுக்கும் வலிமை மிகுந்த நெஞ்சத்துடன் (தேஎம் – அளபெடை, நசைஇ – அளபெடை), புனை மாண் எஃகம் வலவயின் ஏந்தி செலல் மாண்பு உற்ற நும் வயின் – அழகிய மாண்புற்ற வேலை வலக்கையில் ஏந்தி செல்லுதல் மாட்சியுற்ற நும்மிடம் (செலல் – இடைக்குறை), வல்லே வலன் ஆகு என்றலும் நன்று – விரைந்து வெற்றி அடைக எனக் கூறி விடுதலும் நன்றாகும், மன் – ஒழியிசை, தில்ல – தில் ஓர் இடைச்சொல், ஈறு திரிந்து வந்தது, கடுத்தது பிழைக்குவது ஆயின் – தாம் குறித்த இலக்குத் தவறினால், தொடுத்த கை விரல் கவ்வும் கல்லாக் காட்சிக் கொடுமரம் பிடித்த கோடா வன்கண் வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர் – அம்பினைப் பற்றிய கைவிரலை வாயால் கவ்வும் கல்லாத அறிவினையும் வில்லை ஏந்திய மாறாத கொடூரத்தையும் கொல்லனின் உலையில் வடித்தல் செய்த அம்பினையும் உடைய ஏவும் மறவர்கள் (கொடுமரம் – வளைந்த வில்), ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை – வழிப்போக்கர்களைக் கொன்று அவர்கள் உடலை மூடிக் குவித்து உயர்த்திய கண்டார்க்கு அச்சம் தரும் கற்குவியல்களில், கூர் நுதிச் செவ்வாய் எருவைச் சேவல் படுபிணப் பைந்தலை தொடுவன குழீஇ – கூரிய அலகையும் சிவந்த வாயையும் உடைய ஆண் பருந்துகள் இறந்து கிடக்கும் பிணங்களின் பசிய தலையைத் தோண்டி ஒன்றுகூடி (செவ்வாய் – பண்புத்தொகை, குழீஇ – அளபெடை), மல்லல் மொசி விரல் ஒற்றி மணி கொண்டு – வலிய நெருங்கிய விரல்களால் தோண்டி கண்ணின் மணியை எடுத்துக் கொண்டு, வல்வாய்ப் பேடைக்குச் சொரியும் – வலிய வாயை உடைய தன் பெடைக்குச் சொரியும், ஆங்கண் கழிந்தோர்க்கு – அவ்விடம் சென்றவர்க்கு, இரங்கும் நெஞ்சமொடு ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே – இரங்கும் நெஞ்சுடன் அவரைப் பிரிந்து இவ்விடத்தில் தங்கும் ஆற்றல் உடையவர்களுக்கு (ஆற்றுவோர்க்கே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 216, ஐயூர் முடவனார், மருதத் திணை பரத்தை தன் தோழியிடம் சொன்னதுதலைவியின் தோழியர் கேட்கும்படி
நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள்
தான் புனல் அடைகரைப்படுத்த வராஅல்
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்
தண் துறை ஊரன் பெண்டிர், எம்மைப்  5
பெட்டாங்கு மொழிப என்ப, அவ்வலர்
பட்டனம் ஆயின் இனியெவன் ஆகியர்,
கடலாடு மகளிர் கொய்த ஞாழலும்,
கழனி உழவர் குற்ற குவளையும்,
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு  10
பல் இளம் கோசர் கண்ணி அயரும்
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல்
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய
பெருங்களிற்று எவ்வம் போல,  15
வருந்துப மாது அவர் சேரி யாம் செலினே.

பாடல் பின்னணி:  தலைவியின் தோழியர் கேட்கும்படியாகத் தன் தோழியரிடம் பரத்தைக் கூறியது.

பொருளுரை:  கயிற்றைக் கொண்ட நுண்ணிய தூண்டிலால் மீனைப் பிடிக்கும் பாணரது மகள், நீர் அடைந்த கரையில் இழுத்துப்போட்ட வரால் மீனை, பன்னாடையினால் அரிக்கப்பட்ட கள்ளை உண்டு களித்திருந்த தன் தந்தைக்கு, வஞ்சி மரத்தின் விறகால் சுட்டு வாயில் உண்பிக்கும் குளிர்ந்த துறையையுடைய ஊரனின் மனைவி, எம்மை தாம் விருப்பியவாறெல்லாம் பழி தூற்றுகின்றாள் என்கின்றனர்.  அத்தகைய பழிக்கு நாம் ஆளாகிவிட்டோம் என்றால் இனி என்ன நிகழ்ந்தாலும் நிகழ்க.  கடலில் நீராடும் பெண்கள் கொய்த புலிநகக் கொன்றை மலர்களையும், வயலில் உழுபவர்கள் கொய்த குவளை மலர்களையும், காவல் காட்டில் மலர்ந்த முல்லை மலர்களுடன் பல இளைய கோசர்கள் கண்ணியாகக் கட்டி விளையாடும், மிக்க வளம் பொருந்திய செல்லூர் மன்னனான ஆதன் எழினி பகைவர் மீது எறியும்பொழுது சிதையாத சுரை செறிந்த வெள்ளை வேல், தனது மார்பில் பாய்ச்சப்பட்ட பெரிய களிற்று யானையின் துன்பம் போல வருந்துவாள் தலைவி, அவளுடைய தெருவிற்கு நாம் சென்றால்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘புல்லுதல் மயக்கும்’ (தொல்காப்பியம், கற்பியல் 10) என வரும் நூற்பாவின்கண் ‘இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதன்கண் ஞாழல், குவளை, முல்லை என வந்தமை திணை மயக்கமாம்.  பெண்டிர் (5) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பெண்டிர்கள், தலைமகளும் அவள் தோழியரும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெண்டிர் என்பது செறலால் ஒருமையைப் பன்மையாகக் கூறியபடியாம்’.  ஒப்புமை – அகநானூறு 76 – அவை புகு பொருநர் பறையின் ஆனாது கழறுப என்ப அவன் பெண்டிர், அகநானூறு 216 – தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப் பெட்டாங்கு மொழிப என்ப, அகநானூறு 276, அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காணத் தாரும் தானையும் பற்றி, ஐங்குறுநூறு 40 – மகிழ்நன் ஒண்தொடி முன் கை யாம் அழப் பிரிந்து, தன் பெண்டிர் ஊர் இறை கொண்டனன் என்ப.  பாணரும் மீனும் – அகநானூறு 126 – அகநானூறு 196 – வராஅல் துடிக் கண் கொழுங்குறை நொடுத்து உண்டு ஆடி வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி ஆம்பல் அகல் இலை அமலை வெஞ்சோறு தீம் புளிப் பிரம்பின் திரள் கனி பெய்து, அகநானூறு 216 – நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள், ஐங்குறுநூறு 47 – முள் எயிற்றுப் பாண் மகள் இன் கெடிறு சொரிந்த, ஐங்குறுநூறு 48 – வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள் வராஅல் சொரிந்த, ஐங்குறுநூறு 49 – பாண்மகள் சில் மீன் சொரிந்து,  ஐங்குறுநூறு 111 – பாணன் சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇச் சினைக் கயல் மாய்க்கும், புறநானூறு 348 – மீன் சீவும் பாண் சேரி, மதுரைக்காஞ்சி 269 – மீன் சீவும் பாண் சேரியொடு, பெரும்பாணாற்றுப்படை 284–285 – கோள்வல் பாண்மகன் தலைவலித்து யாத்த நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ.  வரலாறு – கோசர், செல்லிக் கோமான் (செல்லூர் மன்னன்), ஆதன் எழினி.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:  நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள் – கயிற்றைக் கொண்ட நுண்ணிய தூண்டிலால் மீனைப் பிடிக்கும் பாணரது மகள், தான் – அசை நிலை, புனல் அடைகரைப்படுத்த வராஅல் – நீர் அடைந்த கரையில் இழுத்துப்போட்ட வரால் மீன் (வராஅல் – அளபெடை), நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு – பன்னாடையினால் அரிக்கப்பட்ட கள்ளை உண்டு களித்திருந்த தன் தந்தைக்கு, வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும் – வஞ்சி மரத்தின் விறகால் சுட்டு வாயில் உண்பிக்கும், தண்துறை ஊரன் – குளிர்ந்த துறையையுடைய ஊரன், பெண்டிர் – மனைவி, எம்மைப் பெட்டாங்கு மொழிப என்ப – எம்மை தாம் விருப்பியவாறெல்லாம் பழி தூற்றுகின்றாள் என்பார்கள், அவ்வலர் பட்டனம் ஆயின் இனியெவன் ஆகியர் – அத்தகைய பழிக்கு நாம் ஆளாகிவிட்டோம் என்றால் இனி என்ன நிகழ்ந்தாலும் நிகழ்க, கடலாடு மகளிர் கொய்த ஞாழலும் – கடலில் நீராடும் பெண்கள் கொய்த புலிநகக் கொன்றை மலர்களும், கழனி உழவர் குற்ற குவளையும் – வயலில் உழுபவர்கள் கொய்த குவளை மலர்களையும், கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு – காவல் காட்டில் மலர்ந்த முல்லை மலர்களுடன், பல் இளம் கோசர் கண்ணி அயரும் – பல இளைய கோசர்கள் கண்ணியாகக் கட்டி விளையாடும், மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் – மிக்க வளம் பொருந்திய செல்லூர் மன்னன், எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல் ஆதன் எழினி – ஆதன் எழினி பகைவர் மீது எறியும்பொழுது சிதையாத சுரை செறிந்த வெள்ளை வேல், அரு நிறத்து அழுத்திய பெருங்களிற்று எவ்வம் போல வருந்துப – தனது மார்பில் பாய்ச்சப்பட்ட பெரிய களிற்று யானையின் துன்பம் போல வருந்துவாள் (வருந்துப – படர்க்கைப் பன்மை), மாது – அசை நிலை, அவர் சேரி யாம் செலினே – அவளுடைய தெருவிற்கு நாம் சென்றால் (செலினே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 217, கழார்க்கீரன் எயிற்றியார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
பெய்து புலம் திறந்த பொங்கல் வெண்மழை,
எஃகுறு பஞ்சித் துய்ப்பட்டன்ன,
துவலை தூவல் கழிய அகல் வயல்
நீடு கழைக் கரும்பின் கணைக்கால் வான் பூக்
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர,  5
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை
நீல் உண் பச்சை நிற மறைத்து அடைச்சிய
தோல் எறி பாண்டிலின் வாலிய மலரக்,
கோழ் இலை அவரைக் கொழு முகை அவிழ
ஊழுறு தோன்றி ஒண்பூத் தளை விட , 10
புலந்தொறும் குருகினம் நரலக் கல்லென
அகன் துறை மகளிர் அணி துறந்து நடுங்க,
அற்சிரம் வந்தன்று அமைந்தன்று இதுவென
எப்பொருள் பெறினும் பிரியன்மினோ எனச்
செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே,  15
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த
பாழ்படு மேனி நோக்கி நோய் பொர,
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு புணர்வு வேட்டு
எயிறு தீப் பிறப்பத் திருகி,
நடுங்குதும் பிரியின் யாம் கடும் பனி உழந்தே.  20

பாடல் பின்னணி:  பிரிவு உணர்த்திய தோழியிடம் தலைவி உரைத்தது.  

பொருளுரை:  தோழி!  பெய்து பின் திசைகளை வெளிப்படுத்திய பொங்கிய வெள்ளை முகில்கள், இரும்பு வில்லால் அடிக்கப்பட்ட பஞ்சியின் துகள் பரவினாற்போன்ற மழைத்துளிகளைப் பெய்து பின் தூவுதல் ஒழிய, அகன்ற வயலில் உள்ள நீண்ட தண்டை உடைய கரும்பின் திரண்ட காம்பையுடைய வெள்ளை மலர்கள் கோடைக் காலத்தின் பூளைப் பூப்போல் வாடைக்காற்றால் அசைய, பசிய இலைகள் நெருங்கிய புதர்கள் தோறும் பகன்றை மலர்கள் நீலம் ஊட்டிய பச்சை நிறம் மறையும்படி கேடயத்தில் பதித்த வட்டக் கண்ணாடி போல் வெள்ளை நிறத்தில் பூக்க, கொழுத்த இலைகளையுடைய அவரையின் கொழுத்த அரும்புகள் அவிழ, முறையாக முற்றிய தோன்றியின் ஒளிரும் மலர்கள் பிணிப்பு விட, இடந்தொறும் குருகுகள் கல்லென்று ஒலிக்க, அகன்ற துறையில் உள்ள மகளிர் அழகு இழந்து நடுங்க, பனிப்பருவம் வந்துவிட்டது.   

“இப்பருவம் பொருள்வயின் பிரிபவர்களுக்கு ஏற்றது என எண்ணி, எத்துணைச் சிறந்த பொருளைப் பெறுவதனாலும், பிரியாதீர் என்று எமக்குத் துணையாக உள்ள நுமக்கு யான் செப்புவேன்.  நீவிர் நீடு வாழ்க”, என்று நீ நம் தலைவரிடம் கூறுவாயாக.

அதனைக் கேட்டும், நமக்கு அருள் செய்யாத அவர் நம்மைப் பிரிந்து சென்றால், நம் நலத்தினை நுகர்ந்து கைவிட்ட பாழாகிய மேனியைக் கண்டு துன்ப நோய் வருத்த, தொடர்பு விட்டு உடையும் நெஞ்சத்துடன், அவருடன் இணைதலை விரும்பி, யாம் கடும் பனியால் வருந்திப் பற்களைத் தீயுண்டாகக் கடித்து நடுங்குவோம்.  

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  வில் எறி பஞ்சி – ஒளவை துரைசாமி உரை – நற்றிணை 247 – இரும்பு வில்லால் அடிக்கப்பட்ட பஞ்சி, நற்றிணை 299 – வில்லிடத்து எறியப்பட்ட பஞ்சி, கொட்டையும் கோதும் ஆயவற்றின் நீக்குதற்குப் பயன்படும் கருவி வில் போறலின் வில் எனப்பட்டது.  ஒப்புமை – அகநானூறு 133 – வில் எறி பஞ்சியின், அகநானூறு 217 – பொங்கல் வெண்மழை எஃகுறு பஞ்சித் துய்ப்பட்டன்ன, நற்றிணை 247 – இன் குரல் எழிலி எஃகுறு பஞ்சிற்று ஆகி, நற்றிணை 299 – வில் எறி பஞ்சி போல.  இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு (18) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நம்மோடு தொடர்பற்றுத் தானே உடைந்து அழியும் நெஞ்சத்தினோடே, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மதுகை இற்று உடையும் நெஞ்சத்துடன்.

சொற்பொருள்:  பெய்து புலம் திறந்த பொங்கல் வெண்மழை எஃகுறு பஞ்சித் துய்ப் பட்டன்ன – பெய்து பின் திசைகளை வெளிப்படுத்திய பொங்கிய வெள்ளை முகில்கள் இரும்பு வில்லால் அடிக்கப்பட்ட பஞ்சியின் துகள் பரவினாற்போன்ற, துவலை தூவல் கழிய – சிறிய துளிகளைப் பெய்து பின் தூவுதல் ஒழிய, அகல் வயல் நீடு கழைக் கரும்பின் கணைக்கால் வான் பூக் கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர – அகன்ற வயலில் உள்ள நீண்ட தண்டை உடைய கரும்பின் திரண்ட காம்பையுடைய வெள்ளை மலர்கள் கோடைக் காலத்தின் பூளைப் பூப்போல் வாடைக்காற்றால் அசைய (பூளையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை நீல் உண் பச்சை நிற மறைத்து அடைச்சிய தோல் எறி பாண்டிலின் வாலிய மலர – பசிய இலைகள் நெருங்கிய புதர்கள் தோறும் பகன்றை மலர்கள் நீலம் ஊட்டிய பச்சை நிறம் மறையும்படி கேடயத்தில் பதித்த வட்டக் கண்ணாடி போல் வெள்ளை நிறத்தில் பூக்க (நீல் – கடைக்குறை, தோல் – ஆகுபெயர், கிடுகு, கேடயம், பாண்டில் – வட்டம், இங்கு வட்டக்கண்ணாடி, வால் – வெண்மை) கோழ் இலை அவரைக் கொழு முகை அவிழ – கொழுத்த இலைகளையுடைய அவரையின் கொழுத்த அரும்புகள் அவிழ, ஊழுறு தோன்றி ஒண்பூத் தளைவிட – முறையாக முற்றிய தோன்றியின் ஒளிரும் மலர்கள் பிணிப்பு விட, புலந்தொறும் குருகினம் நரல கல்லென – இடந்தொறும் குருகுகள் கல்லென்று ஒலிக்க (கல்லென – ஒலிக்குறிப்பு மொழி), அகன் துறை மகளிர் அணி துறந்து நடுங்க – அகன்ற துறையில் உள்ள மகளிர் அழகு இழந்து நடுங்க, அற்சிரம் வந்தன்று – பனிப்பருவம் வந்துவிட்டது, அமைந்தன்று இதுவென எப்பொருள் பெறினும் பிரியன்மினோ என – இப்பருவம் பொருள்வயின் பிரிபவர்களுக்கு ஏற்றது என எண்ணி எத்துணைச் சிறந்த பொருளைப் பெறுவதனாலும் பிரியாதீர் என்று (பிரியன்மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, ஓகாரம் அசைநிலை), செப்புவல் – யான் செப்புவேன், வாழியோ – நீவிர் நீடு வாழ்க, துணையுடையீர்க்கே – எமக்குத் துணையாக உள்ள நுமக்கு (துணையுடையீர்க்கே– ஏகாரம் அசைநிலை), நல்காக் காதலர் – நமக்கு அருள் செய்யாத நம் தலைவர், நலன் உண்டு துறந்த பாழ்படு மேனி நோக்கி நோய் பொர இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு – நம் நலத்தினை நுகர்ந்து கைவிட்ட பாழாகிய மேனியைக் கண்டு துன்ப நோய் வருத்த தொடர்பு விட்டு உடையும் நெஞ்சத்துடன், புணர்வு வேட்டு எயிறு தீப் பிறப்பத் திருகி நடுங்குதும் – அவருடன் இணைதலை விரும்பி பற்களைத் தீயுண்டாகக் கடித்து நடுங்குவோம், பிரியின் – அவர் நம்மைப் பிரிந்து சென்றால், யாம் கடும் பனி உழந்தே – கடும் பனியால் வருந்தி (உழந்தே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 218, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
கிளை பாராட்டும் கடு நடை வயக்களிறு
முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த,
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி,
பரூஉ உறைப் பல் துளி சிதறி, வான் நவின்று
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்துப்,  5
புயல் ஏறு உரைஇய வியல் இருள் நடுநாள்,
விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல்
தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை,
படாஅ ஆகும் எம் கண் என, நீயும்
இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி  10
வரி வயங்கு இரும்புலி வழங்குநர்ப் பார்க்கும்
பெருமலை விடரகம் வர அரிது என்னாய்,
வர எளிதாக எண்ணுதி, அதனால்,
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம்
தண்ணிது கமழும் நின் மார்பு ஒருநாள்  15
அடைய முயங்கேம் ஆயின், யாமும்
விறல் இழை நெகிழச் சாஅய்தும், அதுவே
அன்னை அறியினும் அறிக, அலர்வாய்
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க,
வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு  20
ஒண் பூ வேங்கை கமழும்
தண் பெருஞ்சாரல் பகல் வந்தீமே.

பாடல் பின்னணி:  தலைவியை இடத்து உய்த்து வந்த தோழி, இரவுக்குறியை மறுத்து அடுத்து பகற்குறியினால் ஏற்படும் இடர்பாடுகளைக் கூறி, வரைவு கடாயது.  

பொருளுரை:  தன் இனம் பாராட்டும், விரைந்த நடையையுடைய வலிய களிற்று யானை, மூங்கில் முளைகளைத் தந்து தன் சுற்றத்திற்கு ஊட்டி, வேண்டும் தழைகளையும் உண்பிக்க, வாளின் நிறம் போல் ஒளியுடன் மின்னி பருத்த பல மழைத்துளிகளைச் சிதறி, வானில் பயின்று பெரிய மலையின் குளிர்ந்த உச்சி அதிரும்படிச் சூழ்ந்து கொண்டு முகில்கள் இடியுடன் பரவிய மிக்க இருள் கொண்ட நடு இரவில், சிறந்த அணிகலன்களால் பொலிவுற்ற காண்பதற்கு இனிய மென்மைத் தன்மை உடையதாய், வளைந்து திரண்ட நின் தோள்களைச் சேர்ந்தால் அல்லது எம் கண்கள் துயிலாதவை ஆகும் என்று, நீயும் இருள் மயக்கும் நடு யாமத்தில் வழியின் இடையூறுகளால் விலகி, வரிகள் விளங்கும் பெரிய புலிகள் வழியில் வருபவர்களைப் பார்த்திருக்கும் பெரிய மலையின் பிளப்புகள் உள்ள இடத்தில், வருவது அரிது என நினையாதாய் வருவதற்கு எளிது என எண்ணுகின்றாய்.

நுண்ணிதாக ஆராய்ந்து பல நறுமணப் பொருட்களைக் கூட்டிய மாண்புடைய சந்தனத்தின் மணம் தண்ணிதாகக் கமழும் நின் மார்பை, ஒரு நாள் முழுவதும் தழுவாது இருந்தோமாயின், யாமும் மேன்மையுடைய எம் அணிகலன்கள் நெகிழும்படி மெலிவோம்.  அதனால் அதனை எம் அன்னை அறிந்தாலும் அறியட்டும்.  அலர் கூறும் பெண்களின் வாயிலிருந்து வரும் சொற்களை இந்த முதிய ஊர் கேட்பினும் கேட்பதாக. வண்டுகள் தங்கியுள்ள தீயை ஒத்த தோன்றி மலர்களுடன், ஒளிரும் வேங்கை மலர்களின் மணம் கமழும் குளிர்ந்த பெரிய மலைச்சாரலில் பகலில் வருவீராக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘களனும் பொழுதும் ……………. அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும் என வரும் விதியால் அமைத்துக் கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘முதல் கரு உரிப்பொருள்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 3) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளை இத் துறைக்கே கொண்டு, இது குறிஞ்சிக்கு முதலுங் கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது, என்றார் நச்சினார்க்கினியர்.  எம் கண், முயங்கேம், சாஅய்தும் – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள் தோழி.  கிளை பாராட்டும் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன் சுற்றத்தைப் பேணிப் புரக்கும், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தன் இனங்கள் பாராட்டும்.  வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒளியே நிறமாக உள்ள உருவத்தோடே ஒளிவிட்டு மின்னுதலைச் செய்து, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வாளின் நிறம்போலும் உருவுடன் ஒளிருமாறு மின்னி.  உரைஇய (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உராய்ந்த, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பரந்த.  பகற்குறி – அகநானூறு 80 – புன்னை அம் கானல் பகல் வந்தீமே, அகநானூறு 218 – தண் பெருஞ்சாரல் பகல் வந்தீமே, நற்றிணை 156 – அதனால் பகல் வந்தீமோ.  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

சொற்பொருள்:  கிளை பாராட்டும் கடு நடை வயக்களிறு முளை தருபு ஊட்டி வேண்டு குளகு அருத்த – தன் இனம் பாராட்டும் விரைந்த நடையையுடைய வலிய களிற்று யானை மூங்கில் முளைகளைத் தந்து ஊட்டி வேண்டும் தழைகளையும் உண்பிக்க, வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி பரூஉ உறைப் பல் துளி சிதறி – வாளின் நிறம் போல் ஒளியுடன் மின்னி பருத்த பல மழைத்துளிகளைச் சிதறி உருவின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, பரூஉ – அளபெடை), வான் நவின்று பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்துப் புயல் ஏறு உரைஇய வியல் இருள் நடுநாள் – வானில் பயின்று பெரிய மலையின் குளிர்ந்த உச்சி அதிரும்படிச் சூழ்ந்து கொண்டு முகில்கள் இடியுடன் பரவிய மிக்க இருள் கொண்ட நடு இரவில் (புயல் – ஆகுபெயர் முகிலுக்கு, உரைஇய – அளபெடை), விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல் – சிறந்த அணிகலன்களால் பொலிவுற்ற காண்பதற்கு இனிய மென்மைத் தன்மை உடையதாய், தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை படாஅ ஆகும் எம் கண் என – வளைந்து திரண்ட நின் தோள்களைச் சேர்ந்தால் அல்லது எம் கண்கள் துயிலாதவை ஆகும் என்று (தடைஇ – அளபெடை, அல்லதை – அல்லது, ஈறு திரிந்தது, படாஅ – அளபெடை), நீயும் இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி – நீயும் இருள் மயக்கும் நடு யாமத்தில் வழியின் இடையூறுகளால் விலகி, வரி வயங்கு இரும்புலி வழங்குநர்ப் பார்க்கும் பெருமலை விடரகம் – வரிகள் விளங்கும் பெரிய புலிகள் வழியில் வருபவர்களைப் பார்த்திருக்கும் பெரிய மலையின் பிளப்புகள் உள்ள இடத்தில், வர அரிது என்னாய் வர எளிதாக எண்ணுதி – வருவது அரிது என நினையாதாய் வருவதற்கு எளிது என எண்ணுகின்றாய், அதனால் – அதனால், நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம் தண்ணிது கமழும் நின் மார்பு ஒரு நாள் அடைய முயங்கேம் ஆயின் – நுண்ணிதாக ஆராய்ந்து பல நறுமணப் பொருட்களைக் கூட்டிய மாண்புடைய சந்தனத்தின் மணம் தண்ணிதாகக் கமழும் நின் மார்பை ஒரு நாள் முழுவதும் தழுவாது இருந்தோமாயின், யாமும் விறல் இழை நெகிழச் சாஅய்தும் – யாமும் மேன்மையுடைய எம் அணிகலன்கள் நெகிழும்படி மெலிவோம் (சாஅய்தும் – அளபெடை), அதுவே – அதனை, அன்னை அறியினும் அறிக – எம் அன்னை அறிந்தாலும் அறியட்டும், அலர்வாய் அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க – அலர் கூறும் பெண்களின் வாயிலிருந்து வரும் சொற்களை இந்த முதிய ஊர் கேட்பினும் கேட்பதாக, வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு – வண்டுகள் தங்கியுள்ள தீயை ஒத்த தோன்றி மலர்களுடன் (மருள் – உவம உருபு), ஒண் பூ வேங்கை கமழும் தண் பெருஞ்சாரல் பகல் வந்தீமே – ஒளிரும் வேங்கை மலர்களின் மணம் கமழும் குளிர்ந்த பெரிய மலைச்சாரலில் பகலில் வருவீராக (வந்தீமே – முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல்)

அகநானூறு 219, கயமனார், பாலைத் திணைசெவிலித்தாய் சொன்னது
சீர் கெழு வியன் நகர்ச் சிலம்பு நக இயலி,
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும்
வாராயோ என்று ஏத்திப் பேர் இலைப்
பகன்றை வான் மலர் பனி நிறைந்தது போல்
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி,  5
என் பாடு உண்டனை ஆயின் ஒருகால்
நுந்தை பாடும் உண் என்று ஊட்டிப்,
பிறந்ததற் கொண்டும் சிறந்தவை செய்து யான்
நலம் புனைந்து எடுத்த என் பொலந்தொடிக் குறுமகள்
அறன் இலாளனொடு இறந்தனள் இனி என  10
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்,
பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்றுச்
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல்
பொரி அரை விளவின் புன்புற விளை புழல்,
அழல் எறி கோடை தூக்கலின், கோவலர்  15
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை,
மடத் தகை மெலியச் சாஅய்
நடக்கும் கொல்? என நோவல் யானே.

பாடல் பின்னணி:  மகட்போக்கிய செவிலித்தாய் ஆற்றாமை மிக்கு இரங்கிக் சொல்லியது.  

பொருளுரை:  சிறப்புப் பொருந்திய எம் அகன்ற மனையில் சிலம்பு ஒலிக்க நடந்து, விளையாடும் தோழியருடன் பந்தினைச் சிறிது எறிந்தாலும், “இங்கு வருவாயாக” என நான் அவளை அழைத்துப் பாராட்டி, பெரிய இலைகளையுடைய பகன்றைக் கொடியின் வெள்ளை மலர்கள் பனியால் நிறைந்தாற்போல் போல் தோன்றுகின்ற பால் பெய்யப்பட்ட நிரம்புதல் உடைய கிண்ணத்தை என் கையில் பற்றிக்கொண்டு, “என் பகுதிக்கு இதனை உண்டாய் ஆனால், இனி ஒரு முறை உன் தந்தையின் பகுதிக்கும் உண்பாயாக” எனக் கூறி ஊட்டி, அவள் பிறந்த நாள் முதல் சிறப்புகளைச் செய்து அவளுடைய நலத்தைப் பேணி வளர்த்த நான், என் பொன் வளையல்கள் அணிந்த இளைய மகள், அறம் இல்லாத ஒருவனுடன் சென்றாள் இப்பொழுது என்று, மறந்து இருத்தல் இல்லாத நெஞ்சத்தால் வருந்துவேன் அல்லேன். 

பொன்னை நீட்டி அமைந்தாற்போன்ற கூரிய பற்களையுடைய செந்நாயினை அஞ்சி, புள்ளிகளையுடைய கலைமான், பொரிந்த அடியினையுடைய விளா மரத்தின் புல்லிய புறத்தையுடைய பழத்தின் ஓட்டில் உள்ள துளைகளில் வெப்பத்தை வீசும் மேல் காற்று நுழைந்து ஒலிப்பதால், அது கோவலரின் குழல் ஓசை என நினைக்கும், நீர் இல்லாத நீண்ட வழியில், மடப்பமுடைய தன்அழகு கெட மெலிந்து நடப்பாளோ அவள், என யான் வருந்துகின்றேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் நூற்பாவினால் அமைத்துக் கொள்க.  ஒப்புமை –கலித்தொகை 85 – நுந்தை பால் உண்டி சில, பருகீத்தை தண்டுவென் ஞாயர் மாட்டைப் பால், பூ எழில் உண்கண் பனி பரப்பக் கண்படா ஞாயர் பால் உண்டி சில.  கோவலர் குழல் என நினையும் (15, 16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆயர்கள் அருகில் உளர் என்று அச்சம் தவிரும் என்பது கருத்து.  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34). வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).  வார் –வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  சீர் கெழு வியன் நகர்ச் சிலம்பு நக இயலி ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும் – சிறப்புப் பொருந்திய எம் அகன்ற மனையில் சிலம்பு ஒலிக்க நடந்து விளையாடும் தோழியருடன் பந்தினைச் சிறிது எறிந்தாலும், வாராயோ என்று ஏத்தி – இங்கு வருவாயாக என அழைத்துப் பாராட்டி, பேர் இலைப் பகன்றை வான் மலர் பனி நிறைந்தது போல் பால் பெய் வள்ளம் சால்கை பற்றி – பெரிய இலைகளையுடைய பகன்றைக் கொடியின் வெள்ளை மலர்கள் பனியால் நிறைந்தாற்போல் போல் தோன்றுகின்ற பால் பெய்யப்பட்ட நிரம்புதல் உடைய கிண்ணத்தைப் பற்றிக்கொண்டு (பகன்றை – Operculina turpethum, Indian jalap), என் பாடு உண்டனை ஆயின் ஒருகால் நுந்தை பாடும் உண் என்று ஊட்டி – என் பகுதிக்கு இதனை உண்டாய் ஆனால் ஒரு முறை உன் தந்தையின் பகுதிக்கும் உண்பாயாக எனக் கூறி ஊட்டி (ஒருகால் – ஒருபொழுது, நுந்தை – நும் + தந்தை, மருஉ மொழி), பிறந்ததற் கொண்டும் சிறந்தவை செய்து யான் நலம் புனைந்து எடுத்த என் பொலந்தொடிக் குறுமகள் – அவள் பிறந்த நாள் முதல் சிறப்புகளைச் செய்து அவளுடைய நலத்தைப் பேணி வளர்த்த நான் என் பொன் வளையல்கள் அணிந்த இளைய மகள், அறன் இலாளனொடு இறந்தனள் இனி என – அறம் இல்லாத ஒருவனுடன் சென்றாள் இப்பொழுது என்று, மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன் – மறந்து இருத்தல் இல்லாத நெஞ்சத்தால் வருந்துவேன் அல்லேன் (இராஅ – அளபெடை), பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்றுச் செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல் – பொன்னை நீட்டி அமைந்தாற்போன்ற கூரிய பற்களையுடைய செந்நாயினை அஞ்சி புள்ளிகளையுடைய கலைமான் (வெரீஇய – அளபெடை), பொரி அரை விளவின் புன்புற விளை புழல் அழல் எறி கோடை தூக்கலின் – பொரிந்த அடியினையுடைய விளா மரத்தின் புல்லிய புறத்தையுடைய பழத்தின் ஓட்டில் உள்ள துளைகளில் வெப்பத்தை வீசும் மேல் காற்று நுழைந்து ஒலிப்பதால், கோவலர் குழல் என நினையும் – அது கோவலரின் குழல் ஓசை என நினைக்கும், நீர் இல் நீள் இடை மடத் தகை மெலியச் சாஅய் நடக்கும் கொல் – நீர் இல்லாத நீண்ட வழியில் மடப்பமுடைய அழகு கெட மெலிந்து நடப்பாளோ அவள் (சாஅய் – அளபெடை, கொல் – ஐயப்பொருட்டு), என நோவல் யானே – என யான் வருந்துகின்றேன் (யானே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 220, மதுரை மருதன் இளநாகனார், நெய்தல் திணைதோழி தலைவனிடம் சொன்னது
ஊருஞ்சேரியும் உடன் இயைந்து அலர் எழத்,
தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும்,
கெடாஅத் தீயின் உருகெழு செல்லூர்க்,
கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய
மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்  5
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி,
கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின்,
அருங்கடி நெடுந்தூண் போல யாவரும்
காணலாகா மாண் எழில் ஆகம்
உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை, நீயே  10
நெடும் புற நிலையினை வருந்தினை ஆயின்,
முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும்,
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண்,
நோலா இரும்புள் போல நெஞ்சு அமர்ந்து,
காதல் மாறாக் காமர் புணர்ச்சியின்  15
இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும்
நெடுங்கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து,
யாணர்த் தண் பணை உறும் எனக் கானல்
ஆயம் ஆய்ந்த சாய் இறைப் பணைத்தோள் 20
நல் எழில் சிதையா ஏமம்
சொல் இனித் தெய்ய யாம் தெளியுமாறே.

பாடல் பின்னணி:  இரவுக்குறி வந்து நீங்கும் தலைவனை எதிர்ப்பட்டுத் தோழி கூறியது.  வரைவு கடாயது.  

பொருளுரை:  ஊரும் தெருவும் ஒன்று சேர்ந்து பழிச் சொற்கள் பேசும்படி தேருடன் வந்து திரிந்தும், பணிவான சொற்களைப் பலமுறைக் கூறியும், எப்பொழுதும் நீங்காத வேள்வித் தீயை உடைய அழகு பொருந்திய செல்லூரின்கண், மதம் பொருந்திய யானைக்கூட்டம் போரில் அழிய மன்னரின் வழிமுறையை அறுத்த வாளை உடைய பரசுராமன், முன்பு அருமையாகச் செய்த வேள்வியின்கண், கயிற்றை அரையில் சுற்றிய, காண்பதற்கு அழகுடைய அரிய காவலைக் கொண்ட நெடிய வேள்வித்தூண் போல, யாவரும் காண இயலாத மாண்புடைய அழகையுடைய எம் தலைவியின் மார்பை நினைக்கும்போதெல்லாம் நடுங்கும் நெஞ்சினை உடையையாகி, நீ புறத்தே நெடிது நிற்று வருந்தினாய் ஆதலால்,

முழங்கும் கடலின் அலைகள் காலையில் சுழலும் பழைய நெல்லையுடைய ஊணூரில், பிரிந்து இருத்தலைத் தாங்க இயலாத மகன்றில் போல் ஒருவர் நெஞ்சில் ஒருவர் பொருந்தி, காதல் நீங்காத அழகிய புணர்ச்சியினால், பெரிய உப்பங்கழியில் துழாவி முகந்த சிவந்த கோல்கள் பொருந்திய அழகிய வலைகளால் முடங்கிய புறத்தினையுடைய இறால் மீன்களுடன் வேறு மீன் இனங்களையும் பற்றிக் குவிக்கும், நீண்ட கதிர்களையுடைய வயல்கள் கொண்ட தண்ணிய சாய்க்கானம் என்னும் ஊரில் உள்ள, அழகிய குளிர்ந்த மூங்கிலை ஒக்கும் என்று கடற்கரைச் சோலையில் தோழியர் ஆராய்ந்துப் புகழ்ந்த, வளைந்த முன்கையை உடைய பருத்த தோள்களின் நல்ல அழகு கெடாமைக்கு ஏதுவாகிய பாதுகாவலை, இப்பொழுது நீ கூறுவாயாக, யாம் தெளிவாக உணருமாறு.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  சேரி – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஊரின் ஒரு பகுதி, தெரு.  ‘ஓரூர் வாழினுஞ் சேரி வாரார்’ (குறுந்தொகை 231) காண்க.  குறுந்தொகை 231 – உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தெரு.  ஊரும் சேரியும் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஊர் என்பது ஏதிலார்க்கு ஆகுபெயர்.  சேரி என்பது சுற்றத்தார்க்கு ஆகுபெயர்.  இரும்புள் (14) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பெரிய மகன்றில் பறவைகள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய அன்றில் பறவைகள்.  மகன்றில் புணர்ச்சி – குறுந்தொகை 57 – நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல, பரிபாடல் 8–44 – அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி, ஐங்குறுநூறு 381 – குறுங்கால் மகன்றில் அன்ன உடன் புணர் கொள்கை, அகநானூறு 220 – நோலா இரும்புள் போல நெஞ்சு அமர்ந்து காதல் மாறாக் காமர் புணர்ச்சியின்.   வலையின் செங்கோல் – அகநானூறு 60 – செங்கோல் அவ் வலை நெடுந்திமில் தொழிலொடு, அகநானூறு 220 – இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை, நற்றிணை 214 – செங்கால் கொடு முடி அவ் வலை, நற்றிணை 303 – பரதவர் இட்ட செங்கோல் கொடு முடி அவ் வலை.  வரலாறு –செல்லூர், ஊணூர், சாய்க்கானம்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:  ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழத் தேரொடு மறுகியும் பணி மொழி பயிற்றியும் – ஊரும் தெருவும் ஒன்று சேர்ந்து பழிச் சொற்கள் பேசும்படி தேருடன் வந்து திரிந்தும் பணிவான சொற்களைப் பலமுறைக் கூறியும், கெடாஅத் தீயின் உருகெழு செல்லூர்க் கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் – எப்பொழுதும் நீங்காத வேள்வித் தீயை உடைய அழகு பொருந்திய செல்லூரின்கண் மதம் பொருந்திய யானைக்கூட்டம் போரில் அழிய மன்னரின் வழிமுறையை அறுத்த வாளை உடைய பரசுராமன் (கடாஅ – அளபெடை, குழூஉ – அளபெடை, மழுவாள் – இருபெயரொட்டு, நெடியோன் – நெடுமாலின் தோற்றம் ஆகலின் நெடியோன்) முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி – முன்பு அருமையாகச் செய்த வேள்வியின்கண் கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின் அருங்கடி நெடுந்தூண் போல – கயிற்றை அரையில் சுற்றிய காண்பதற்கு அழகுடைய அரிய காவலைக் கொண்ட நெடிய வேள்வித்தூண் போல, யாவரும் காணலாகா மாண் எழில் ஆகம் உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை – யாவரும் காண இயலாத மாண்புடைய அழகையுடைய எம் தலைவியின் மார்பை நினைக்கும்போதெல்லாம் நடுங்கும் நெஞ்சினை உடையையாகி, நீயே நெடும் புற நிலையினை வருந்தினை ஆயின் – நீ புறத்தே நெடிது நிற்று வருந்தினாய் ஆதலால், முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும் பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண் – முழங்கும் கடலின் அலைகள் காலையில் சுழலும் பழைய நெல்லையுடைய ஊணூரில், நோலா இரும்புள் போல நெஞ்சு அமர்ந்து காதல் மாறாக் காமர் புணர்ச்சியின் – பிரிந்து இருத்தலைத் தாங்க இயலாத மகன்றில் போல் ஒருவர் நெஞ்சில் ஒருவர் பொருந்தி காதல் நீங்காத அழகிய புணர்ச்சியினால், இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் – பெரிய உப்பங்கழியில் துழாவி முகந்த சிவந்த கோல்கள் பொருந்திய அழகிய வலைகளால் முடங்கிய புறத்தினையுடைய இறால் மீன்களுடன் வேறு மீன் இனங்களையும் பற்றிக் குவிக்கும், நெடுங்கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து – நீண்ட கதிர்களையுடைய வயல்கள் கொண்ட தண்ணிய சாய்க்கானம் என்னும் ஊரில் உள்ள, யாணர்த் தண் பணை உறும் எனக் கானல் ஆயம் ஆய்ந்த சாய் இறைப் பணைத்தோள் நல் எழில் சிதையா ஏமம் – அழகிய குளிர்ந்த மூங்கிலை ஒக்கும் என்று கடற்கரைச் சோலையில் தோழியர் ஆராய்ந்துப் புகழ்ந்த வளைந்த முன்கையை உடைய பருத்த தோள்களின் நல்ல அழகு கெடாமைக்கு ஏதுவாகிய பாதுகாவலை (உறும் என – ஒக்கும் என), சொல் இனி – இப்பொழுது நீ கூறுவாயாக, தெய்ய –அசைநிலை, யாம் தெளியுமாறே – யாம் தெளிவாக உணருமாறு (தெளியுமாறே – ஏகாரம் அசைநிலை, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்)

அகநானூறு 221, கயமனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
நனை விளை நறவின் தேறல் மாந்திப்,
புனை வினை நல் இல் தருமணல் குவைஇப்,
‘பொம்மல் ஓதி எம் மகள் மணன்’ என
வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால்
புதுவது புனைந்த சேயிலை வெள் வேல்  5
மதி உடம்பட்ட மை அணல் காளை
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்துத்,
தேம் பாய் மெல்லிணர் தளிரொடு கொண்டு நின்
தண் நறுமுச்சி புனைய அவனொடு
கழை கவின் போகிய மழை உயர் நனந்தலை,  10
களிற்று இரை பிழைத்தலின் கயவாய் வேங்கை
காய் சினம் சிறந்து குழுமலின் வெரீஇ,
இரும் பிடி இரியும் சோலை
அருஞ்சுரம் சேறல் அயர்ந்தனென் யானே.

பாடல் பின்னணி:  தலைவன் தலைவியை உடன் அழைத்துச் செல்ல விரும்பினான்.  அதை தோழியிடம் கூறினான்.  அக்கருத்திற்கு தோழி உடன்பட்டு பின்னர்த் தலைவியும் அக்கருத்திற்கு இயையும் வண்ணம் அவள்பாற் சென்று சொல்லியது என்றவாறு. 

பொருளுரை:  மலர் அரும்புகளிருந்து உண்டாக்கிய கள்ளின் தெளிவைப் பருகி, ஒப்பனை செய்யப்பட்ட நம் நல்ல இல்லில் கொணர்ந்த மணலைக் குவித்து, ‘பொலிவுற்ற கூந்தலையுடைய எம் மகளுக்கு திருமணம் நிகழும்’ என்று திருமணத்திற்கு உரியன செய்துள்ளார்கள் நம் குடும்பத்தார். 

அதனால், புதிதாக வடித்த செவ்விய இலை பொருந்திய வெள்ளிய வேலை ஏந்திய, உடன்போக்கு பற்றின என் அறிவுரைக்கு உடன்பட்ட கரிய தாடியினையுடைய நம் தலைவன், வளைந்த கிளைகள் மிகுந்த திரண்ட அடியையுடைய கடம்ப மரத்தின் தேன் பாயும் மெல்லிய மலர்க் கொத்துக்களை தளிருடன் கொண்டு வந்து நின் தண்ணிய நறிய கூந்தலில் சூட, அவனுடன், மூங்கில்கள் அழகு இழந்து முகில்கள் பெய்யாது மேலே சென்ற அகன்ற இடத்தில், இரை எனக் கருதிய களிற்று யானை தப்பித்ததால், பெரிய வாயையுடைய புலி கொதிக்கும் சினம் மிகுந்து முழங்குவதால் அதற்கு அஞ்சி கரிய பெண்யானை ஓடும் சோலையுடைய,  அரிய பாலை நில வழியில் நீ செல்லுதலை யான் துணிந்துள்ளேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘தலைவரும் விழுமநிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 39) என வரும் நூற்பாவின்கண் ‘போக்கற்கண்ணும் விடுத்தற்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறிஞ்சி நிலத்தில் வேட்டையாடும் வேங்கை, களிறாகிய இரை தப்பியதனால் சினந்து முழங்கும் அம்முழக்கத்திற்கு அஞ்சி அதன்பிடி இரியும் என்றது, நம் சுற்றத்தார் தாம் கருதிய மணமகனுக்கு நீ உடன்படாது மறுப்பாய் எனின், அவர் சினந்து உன்னைத் துன்புறுத்தலும் கூடும்.  ஆகவே நீ கற்பு அறம் பேணும் பொருட்டு நம் பெருமானோடு போதலே நன்றென உள்ளுறுத்தமை காண்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வதுவை அயர்ந்தனர் நமர் என்றது, நமர் வேற்று வரைவினை உடன்பட்டார் என்றபடி.  அருஞ்சுரம் சேரல் அயர்ந்தனென் என்றது தலைவனுடன் போக்கு உடன்பட்டேன் என்றமையால்.  அவன் காட்டிடையே எத்துணையும் ஏதுமின்றிக் காக்கவல்லன் என்பதும், மெல்லிணர் தளிரொடு கொண்டு நின் முச்சி புனைய என்றமையால், சுரத்திலே நடந்து செல்லும் வருத்தம் தோன்றாதவாறு அன்பினால் நின்னைப் பாராட்டி அழைத்து ஏகுவன் என்பதும் கூறியவாறாம்.  நனை விளை நறவின் தேறல் (1) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அரும்பினின்றும் உண்டாகிய கள் தெளிவு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேனால் சமைத்த கள்.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).

சொற்பொருள்:  நனை விளை நறவின் தேறல் மாந்திப் புனை வினை நல் இல் தருமணல் குவைஇ – மலர் அரும்புகளிருந்து உண்டாக்கிய கள்ளின் தெளிவைப் பருகி ஒப்பனை செய்யப்பட்ட நம் நல்ல இல்லில் கொணர்ந்த மணலைக் குவித்து (குவைஇ – அளபெடை), ‘பொம்மல் ஓதி எம் மகள் மணன்’ என வதுவை அயர்ந்தனர் நமரே – ‘பொலிவுற்ற கூந்தலையுடைய எம் மகளுக்கு திருமணம் நிகழும்’ என்று திருமணத்திற்கு உரியன செய்துள்ளார்கள் நம் குடும்பத்தார் (ஏகாரம் அசைநிலை), அதனால் – அதனால், புதுவது புனைந்த சேயிலை வெள் வேல் மதி உடம்பட்ட மை அணல் காளை – புதிதாக வடித்த செவ்விய இலை பொருந்திய வெள்ளிய வேலை ஏந்திய என் அறிவுரைக்கு உடன்பட்ட கரிய தாடியினையுடைய நம் தலைவன், வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்துத் தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு நின் தண் நறுமுச்சி புனைய – வளைந்த கிளைகள் மிகுந்த திரண்ட அடியையுடைய கடம்ப மரத்தின் தேன் பாயும் மெல்லிய மலர்க்கொத்துக்களை தளிருடன் கொண்டு வந்து நின் தண்ணிய நறிய கூந்தலில் சூட (தேம் – தேன் என்றதன் திரிபு, மராஅத்து – அத்து சாரியை, கடம்ப மரம் – Anthocephalus cadamba, Kadampam oak) அவனொடு – அவனுடன், கழை கவின் போகிய மழை உயர் நனந்தலை களிற்று இரை பிழைத்தலின் – மூங்கில்கள் அழகு இழந்து முகில்கள் பெய்யாது மேலே சென்ற அகன்ற இடத்தில் இரை எனக் கருதிய களிற்று யானை தப்பித்ததால், கயவாய் வேங்கை காய் சினம் சிறந்து குழுமலின் வெரீஇ இரும் பிடி இரியும் சோலை – பெரிய வாயையுடைய புலி கொதிக்கும் சினம் மிகுந்து முழங்குவதால் அதற்கு அஞ்சி கரிய பெண்யானை ஓடும் சோலையுடைய (வெரீஇ – அளபெடை, வெருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது), அருஞ்சுரம் சேறல் அயர்ந்தனென் யானே –  அரிய பாலை நில வழியில் நீ செல்லுதலை யான் துணிந்துள்ளேன் (யானே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 222, பரணர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
வானுற நிவந்த நீல்நிறப் பெருமலைக்
கான நாடன் உறீஇய நோய்க்கு, உன்
மேனி ஆய் நலம் தொலைதலின், மொழிவென்,
முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண்,
கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும்,  5
ஈட்டெழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்,
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத்
தாழ் இருங்கதுப்பின் காவிரி வவ்வலின்,
மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த
ஆதிமந்தி காதலற் காட்டிப்  10
படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின்
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்,
சென்மோ, வாழி தோழி, பல் நாள்
உரவுரும் ஏறொடு மயங்கி
இரவுப் பெயல் பொழிந்த ஈர்ந்தண் ஆறே.  15

பாடல் பின்னணி:  களவு ஒழுக்கத்தையே விரும்பி ஒழுகும் தலைவனுக்குத் தலைவியை வரைந்து கொள்ளுமாறு அறிவுறுத்த விரும்பிய தோழி, அவன் அருகில் இருப்பதை அறிந்து உரைத்தது.  

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  வானைத் தொடுமளவு  உயர்ந்த நீல நிறமுடைய பெரிய மலையில் உள்ள காடுகள் பொருந்திய நாட்டின் தலைவன் செய்த நோயால், உன் மேனியின் ஆராயப்பட்ட அழகு அழிந்ததால், யான் இதனைக் கூறுவேன்.

முழவின் முழக்கம் நீங்காத ஆரவாரமுடைய கழார் என்னும் இடத்தின் பெரிய துறையிடத்து, விழாவில் ஆடிய, திரண்ட அழகால் பொலிந்த, நிமிர்ந்த நீண்ட தோளினையுடைய ஆட்டன் அத்தி என்பவனின் அழகை விரும்பிப் பரந்து வந்து, தாழ்ந்து தொங்கும் கரிய கூந்தலையுடைய காவிரி கவர்ந்து கொண்டதால், திசை எல்லாம் தன் கணவனைத் தேடி மதி மயங்கி வருந்திய ஆதிமந்திக்கு அவள் கணவனைக் காட்டிவிட்டு,  ஒலிக்கும் கடலில் புகுந்து மறைந்த, பாடுதற்கு அமைந்த சிறப்பினை உடைய மருதி என்பவளை ஒத்த பெரும் புகழைப் பெரும்பொருட்டு, பல நாட்கள் வலிய இடியுடன் கலந்து இரவெல்லாம் மழை பெய்ததால் ஈரம் மிக்க வழியில், நீ செல்லுவாயாக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனைநிலை வகையான்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘மருதியன்ன மாண்புகழ் பெறீஇயர் சென்மோ’ என்று தோழி கூறியது, நாமும் தலைவனைத் தேடிச் சென்று அவனைக் காணமாட்டாது உயிர் துறந்தேமாயினும் அதனால் விழுப்புகழ் எய்துவோம் என்பாள் போன்று, தலைமகனை வரைவு கடாயினவாறு என்க.  செல்கம் (13) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ சென்று புகுவாயாக, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – செல்வோமாக, செல்கம் என்பது சென்மோ என விகாரமாயிற்று.  ஈர்ந்தண் ஆறு (15) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஈரம் மிக்க சேற்று நெறியில், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மிகவும் குளிர்ந்த ஆற்று வெள்ளத்தினூடே.  முழவு முகம் புலரா – அகநானூறு பாடல்கள் 206, 222, 397 – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – முழவின் ஒலி ஓயாத, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முழவின் முழக்கம் ஒழியாத.  ஆதிமந்தி – அகநானூறு 45 – காதலர் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து ஆதிமந்தி போலப் பேதுற்று அலந்தனென் உழல்வென் கொல்லோ, அகநானூறு 76 – கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன் வகை அமைப் பொலிந்த வனப்பு அமை தெரியல் சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ என ஆதிமந்தி பேதுற்று இனைய, அகநானூறு 135 – ஆதிமந்தியின் அறிவு பிறிதாகிப் பேதுற்றிசினே காதலம் தோழி, அகநானூறு 222 – ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத் தாழ் இருங்கதுப்பின் காவிரி வவ்வலின் மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த ஆதிமந்தி, அகநானூறு 236 – கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி போல, 396 – மந்தி பனி வார் கண்ணள் பல புலந்து உறைய, குறுந்தொகை 31, ஆதிமந்தியார் பாடல் – யாண்டும் காணேன் மாண்டக்கோனை யானும் ஓர் ஆடுகள மகளே, என் கைக் கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே.  முழவு முகம் புலர்ந்து – நற்றிணை 360 – ஒளவை துரைசாமி உரை – முழவின் மார்ச்சனை புலர்ந்து, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மத்தள முகத்து வைத்த மார்ச்சனை வறந்து.  வரலாறு –கழாஅர், ஆதிமந்தி, காவிரி, ஆட்டன் அத்தி, மருதி.  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்:  வான் உற நிவந்த நீல் நிறப் பெருமலைக் கான நாடன் உறீஇய நோய்க்கு உன் மேனி ஆய் நலம் தொலைதலின் – வானைத் தொடுமளவு  உயர்ந்த நீல நிறமுடைய பெரிய மலையில் உள்ள காடுகள் பொருந்திய நாட்டின் தலைவன் செய்த நோயால் உன் மேனியின் ஆராயப்பட்ட அழகு அழிந்ததால், மொழிவென் – யான் இதனைக் கூறுவேன், முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண் கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும் – முழவின் முழக்கம் நீங்காத ஆரவாரமுடைய கழார் என்னும் இடத்தின் பெரிய துறையிடத்து விழாவில் ஆடிய, ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின் ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத் தாழ் இருங்கதுப்பின் காவிரி வவ்வலின் – திரண்ட அழகால் பொலிந்த நிமிர்ந்த நீண்ட தோளினையுடைய ஆட்டன் அத்தி என்பவனின் அழகை விரும்பிப் பரந்து வந்து தாழ்ந்து தொங்கும் கரிய கூந்தலையுடைய காவிரி கவர்ந்து கொண்டதால், மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த ஆதிமந்தி காதலற் காட்டிப் படுகடல் புக்க – திசை எல்லாம் தன் கணவனைத் தேடி மதி மயங்கி வருந்திய ஆதிமந்திக்கு அவள் கணவனைக் காட்டிவிட்டு  ஒலிக்கும் கடலில் புகுந்து மறைந்த, பாடல்சால் சிறப்பின் மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர் – பாடுதற்கு அமைந்த சிறப்பினை உடைய மருதி என்பவளை ஒத்த பெரும் புகழைப் பெரும்பொருட்டு, சென்மோ – நாம் செல்வோமாக, நீ செல்லுவாயாக (மோ – முன்னிலை அசை), வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, பல் நாள் உரவு உரும் ஏறொடு மயங்கி இரவுப் பெயல் பொழிந்த ஈர்ந் தண் ஆறே – பல நாட்கள் வலிய இடியுடன் கலந்து இரவெல்லாம் மழை பெய்ததால் ஈரம் மிக்க வழியில் (ஆறே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 223, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
‘பிரிதல் வல்லியர், இது நத்துறந்தோர்
மறந்தும் அமைகுவர் கொல்?’ என்று எண்ணி
ஆழல், வாழி தோழி! கேழல்
வளை மருப்பு உறழும் உளைநெடும் பெருங்காய்
நனை முதிர் முருக்கின் சினை சேர் பெருங்கல்,  5
காய் சினக் கடு வளி எடுத்தலின், வெங்காட்டு
அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும்
நிழலில் ஓமை நீரில் நீளிடை,
இறந்தனர் ஆயினும் காதலர் நம்வயின்
மறந்து கண்படுதல் யாவது, புறம் தாழ்  10
அம் பணை நெடுந்தோள் தங்கித் தும்பி
அரியினம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால்
நுண்கேழ் அடங்க வாரிப், பையுள் கெட,
நன் முகை அதிரல் போதொடு குவளைத்
தண் நறுங்கமழ் தொடை வேய்ந்த, நின்  15
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே?

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தியது. 

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  பிரிதற்கு வல்லமை உடையவராய், நம்மைப் பிரிந்து சென்றவர், நம்மை மறந்தும் தங்குதல் செய்வாரோ என்று எண்ணி, அழாதே. 

பன்றியின் வளைந்த கொம்புகள் போன்று துய் பொருந்திய நீண்ட பெரிய காயை உடைய முருக்க மரத்தின் கிளைகளின் அருகில் உள்ள பெரிய பாறை, மிக்க வேகமுடைய கடிய காற்று மூட்டுவதால், வெப்பம் மிக்க காட்டில் அழலால் மூடப்பட்ட யானையைப் போல் வியப்பாகத் தோன்றும், நிழல் இல்லாத, ஓமை மரங்களையுடைய நீர் இல்லாத நீண்ட இடத்தைக் கடந்து சென்றார் ஆயினும், நின் முதுகில் தாழ்ந்து, அழகிய மூங்கில் போன்ற நீண்ட தோள்களில் கிடந்து, வண்டினம் போல் தோன்றும் வளைந்த ஐந்து பகுதியாக உள்ள கூந்தலிலை, தன் துன்பம் கெடும்படி, காட்டு மல்லிகையின் நல்ல அரும்புகள் கூடிய மலர்களுடன் தண்ணிய நறிய குவளையைச் சேர்த்துத் தொடுத்த மாலையைச் சூட்டிய, நின் நீராட்டப்பட்ட கூந்தலில் பொருந்திய துயிலை மறந்து, நம் தலைவர் அங்குத் துயில்தல் எவ்வாறு இயலும்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகைபட வந்த கிளவி’ என்பதனால் அமைத்துக் கொள்க.  உளை (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – துய் பொருந்தின, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஆர்க்கினையுடைய.  கடு வளி எடுத்தலின் (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடியக் கோடை காற்று அசைத்தலாலே, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வேகமுடைய காற்று மூட்டுதலின்.  மரீஇய துயில் (16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – படுத்து உறங்கிய உறக்கம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பொருந்திய துயில்.

சொற்பொருள்:  பிரிதல் வல்லியர் – பிரிதற்கு வல்லமை உடையவர், இது – இதை, நத்துறந்தோர் மறந்தும் அமைகுவர் கொல் என்று எண்ணி – நம்மைப் பிரிந்து சென்றவர் நம்மை மறந்தும் தங்குதல் செய்வாரோ என்று எண்ணி (நத்துறந்தோர் – நம் துறந்தோர் நத்துறந்தோர் என விகாரமாயிற்று), ஆழல் – துன்பத்தில் ஆழ்ந்து விடாதே, அழாதே (அல் ஈற்று எதிர்மறை வியங்கோள்), வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, கேழல் வளை மருப்பு உறழும் உளைநெடும் பெருங்காய் நனை முதிர் முருக்கின் சினை சேர் பெருங்கல் – பன்றியின் வளைந்த கொம்புகள் போன்று துய் பொருந்திய நீண்ட பெரிய காயை உடைய முருக்க மரத்தின் கிளைகளின் அருகில் உள்ள பெரிய பாறை (முருக்க மரம் – Coral tree, Erythrina indica), காய் சினக் கடு வளி எடுத்தலின் – மிக்க வேகமுடைய கடிய காற்று மூட்டுவதால், வெங்காட்டு அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும் – வெப்பம் மிக்க காட்டில் அழலால் மூடப்பட்ட யானையைப் போல் வியப்பாகத் தோன்றும், நிழல் இல் – நிழல் இல்லாத, ஓமை நீர் இல் நீள் இடை இறந்தனர் ஆயினும் – ஓமை மரங்களையுடைய நீர் இல்லாத நீண்ட இடத்தைக் கடந்து சென்றார் ஆயினும், காதலர் நம்வயின் மறந்து கண்படுதல் யாவது – நம் தலைவர் நம்மை மறந்து அங்குத் துயில்தல் எவ்வாறு இயலும், புறம் தாழ் அம் பணை நெடுந்தோள் தங்கித் தும்பி அரியினம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால் – நின் முதுகில் தாழ்ந்து அழகிய மூங்கில் போன்ற நீண்ட தோள்களில் கிடந்து வண்டினம் போல் தோன்றும் வளைந்த ஐந்து பகுதியாக உள்ள கூந்தலிலை, நுண்கேழ் அடங்க வாரி – நுண்ணிய கருநிறம் அடங்க சீப்பினால் வாரிப், பையுள் கெட – தன் துன்பம் கெடும்படி, நன் முகை அதிரல் போதொடு குவளைத் தண் நறுங்கமழ் தொடை வேய்ந்த –  காட்டு மல்லிகையின் நல்ல அரும்புகள் கூடிய மலர்களுடன் தண்ணிய நறிய குவளையைச் சேர்த்துத் தொடுத்த மாலையைச் சூட்டிய, நின் மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே – நின் நீராட்டப்பட்ட கூந்தலில் பொருந்திய துயிலை (மரீஇய – அளபெடை, துயிலே – ஏகாரம் –அசைநிலை)

அகநானூறு 224, ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார், முல்லைத் திணைதலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
செல்க பாக எல்லின்று பொழுதே,
வல்லோன் அடங்கு கயிறு அமைப்பக் கொல்லன்
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிராக்,
கொடு நுகத்து யாத்த தலைய கடு நடைக்
கால் கடுப்பு அன்ன கடுஞ்செலல் இவுளி,  5
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன,
வால் வெண்தெவிட்டல் வழி வார் நுணக்கம்
சிலம்பி நூலின் நுணங்குவன பாறிச்,
சாந்து புலர் அகலம் மறுப்பக் காண்தகப்
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில்  10
தெறி நடை மரைக் கணம் இரிய, மனையோள்
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த
திரிமரக் குரலிசைப் கடுப்ப, வரி மணல்
அலங்கு கதிர் திகிரி ஆழி போழ,
வரும் கொல் தோழி நம் இன் உயிர்த் துணை எனச்  15
சில் கோல் எல் வளை ஒடுக்கிப் பல் கால்
அருங்கடி வியன் நகர் நோக்கி,
வருந்துமால் அளியள் திருந்திழை தானே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. 

பொருளுரை:  பாகனே!  பொழுதும் இரவாயிற்று.  தேரை விரைந்து செலுத்துவாயாக. 

“வல்லவனாகிய பாகன் அடக்கிச் செலுத்துவதற்கு உரிய கடிவாளக் கயிற்றைப் பற்றிக்கொண்டு செலுத்த, கொல்லன் வலித்து இழுக்கும் துருத்தியைப் போல் வெப்பமாகப் பெருமூச்சு விட்டு, வளைந்த நுகத்தில் கட்டப்பட்ட தலையை உடையவனாய், விரைந்த நடையையுடைய காற்றின் வேகத்தை ஒத்த விரைந்து ஓடும் குதிரைகளின், பாலைக் கடையும்போது தோன்றுகின்ற நுரையின் பெரிய திரள் போன்ற, மிகவும் வெள்ளை நிறமுடைய வாயின் நுரையானது, வழிந்து நீண்டு சிலம்பின் நூல் போல் நுணுகிச் சிதறி, சந்தனம் பூசிய மார்பைக் களங்கப்படுத்த, காண்பதற்கு இனிய புதிய அழகு பெற்ற வெம்மை நீங்கிய காட்டில் துள்ளிச் செல்லும் மரையினம் அஞ்சி ஓடவும், இல்லத்தில் உள்ள பெண் நன்கு காய்ந்த அரிசியைப் பெய்து சுற்றுதல் செய்த சுழலும் திரிகையின் ஓசையை ஒத்த ஓசை உண்டாக, வரிப்பட்ட மணலில் சுழலும் கதிரையுடைய வட்ட உருளி நிலத்தை அறுத்துக்கொண்டு செல்லவும், வருவாரா தோழி, நம் இனிய உயிர்த்துணையான நம் தலைவர்” என்று, சிலவாகிய திரண்ட ஒளிரும் வளையல்களை வழுக்கி விழாதவாறு ஒடுக்கி பல முறை அரிய காவலுடைய பெரிய இல்லத்தில் இருந்து வெளியே நோக்கி வருந்தும், திருந்திய அணிகலன்களை அணிந்த நம் தலைவி இரங்கத்தக்கவள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘பேரிசை ஊர்திப் பாகர்ப் பாங்கினும்’ என வரும் விதி கொள்க.  உயிரா – உயிர்த்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).  வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  செல்க – தேரை விரைந்து செலுத்துவாயாக, பாக – பாகனே, எல்லின்று பொழுதே – பொழுதும் இரவாயிற்று, வல்லோன் அடங்கு கயிறு அமைப்பக் கொல்லன் விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா – வல்லவனாகிய பாகன் அடக்கிச் செலுத்துவதற்கு உரிய கடிவாளக் கயிற்றைப் பற்றிக்கொண்டு செலுத்த கொல்லன் வலித்து இழுக்கும் துருத்தியைப் போல் வெப்பமாகப் பெருமூச்சு விட்டு, கொடு நுகத்து யாத்த தலைய – வளைந்த நுகத்தில் கட்டப்பட்ட தலையை உடையவனாய், கடு நடைக் கால் கடுப்பு அன்ன கடுஞ்செலல் இவுளி – விரைந்த நடையையுடைய காற்றின் வேகத்தை ஒத்த விரைந்து ஓடும் குதிரைகளின் (செலல் – இடைக்குறை, இவுளி – குதிரை), பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன – பாலைக் கடையும்போது தோன்றுகின்ற நுரையின் பெரிய திரள் போன்ற (பரூஉ – அளபெடை), வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம் சிலம்பி நூலின் நுணங்குவன பாறி – மிகவும் வெள்ளை நிறமுடைய வாயின் நுரையானது வழிந்து நீண்டு சிலம்பின் நூல் போல் நுணுகிச் சிதறி, சாந்து புலர் அகலம் மறுப்ப – சந்தனம் பூசிய மார்பைக் களங்கப்படுத்த, காண்தகப் புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில் தெறி நடை மரைக் கணம் இரிய – காண்பதற்கு இனிய புதிய அழகு பெற்ற வெம்மை நீங்கிய காட்டில் துள்ளிச் செல்லும் மரையினம் அஞ்சி ஓடவும் (தெறிநடை – வினைத்தொகை), மனையோள் ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த திரிமரக் குரலிசைப் கடுப்ப – இல்லத்தில் உள்ள பெண் நன்கு காய்ந்த அரிசியைப் பெய்து சுற்றுதல் செய்த சுழலும் திரிகையின் ஓசையை ஒத்த ஓசை உண்டாக (கடுப்ப – உவம உருபு), வரி மணல் அலங்கு கதிர் திகிரி ஆழி போழ – வரிப்பட்ட மணலில் சுழலும் கதிரையுடைய வட்ட உருளி நிலத்தை அறுத்துக்கொண்டு செல்லவும், வரும் கொல் தோழி – வருவாரா தோழி, நம் இன் உயிர்த் துணை – நம் இனிய உயிர்த்துணையான நம் தலைவர், என – என்று, சில் கோல் எல் வளை ஒடுக்கிப் பல் கால் அருங்கடி வியன் நகர் நோக்கி வருந்துமால் – சிலவாகிய திரண்ட ஒளிரும் வளையல்களை ஒடுக்கி பல முறை அரிய காவலுடைய பெரிய இல்லத்தில் இருந்து வெளியே நோக்கி வருந்துவாள் (ஆல் அசைநிலை), அளியள் திருந்திழை தானே – இரங்கத்தக்கவள் திருந்திய அணிகலன்களை அணிந்த நம் தலைவி (திருந்திழை – அன்மொழித்தொகை, தானே – தான், ஏ அசைநிலைகள்)

அகநானூறு 225, எயினந்தை மகனார் இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அன்பும், மடனும், சாயலும், இயல்பும்,
என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும்,
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி,
இன்றே இவணம் ஆகி, நாளைப்
புதல் இவர் ஆடு அமைத் தும்பி குயின்ற  5
அகலா அம் துளை கோடை முகத்தலின்
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல்
ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும்
தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ்சுரத்து,
யாத்த தூணித்தலை திறந்தவை போல்  10
பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர்
கழல் துளை முத்தின் செந்நிலத்து உதிர,
மழை துளி மறந்த அங்குடிச் சீறூர்ச்
சேக்குவம் கொல்லோ நெஞ்சே, பூப் புனை
புயல் என ஒலிவரும் தாழ் இருங்கூந்தல்  15
செறி தொடி முன் கை நம் காதலி
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே?

பாடல் பின்னணி:  பொருளீட்டத் தூண்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.

பொருளுரை:  என் நெஞ்சே! அன்பும், மடனும், மென்மையும், ஒழுக்கமும், எலும்பை நெகிழ்விக்கும் சொல்லும், ஏனையவும் தலைவியுடன் ஒன்றுபட்டுள்ள நல்ல கொள்கையுடன் ஒன்றிக் கலந்து இன்று இவ்வாறு ஆகி, நாளை புதர்கள் பரவிய இடத்தில் உள்ள அசையும் மூங்கிலில் வண்டு துளைத்த குறுகிய அழகிய மேல்காற்று புகுந்து வருதலால், நீர்பருகச் செல்லும் ஆநிரைக்குப் பின்னே வரும் நீண்ட கோலினையுடைய ஆயர்கள் தங்கள் குழலில் இசைக்கும் இசையைப் போன்று ஒலிக்கும் தேக்கு மரங்கள் நிறைந்த சோலைகளையுடைய, காடு உயர்ந்த அரிய பாலை நிலத்தில், அம்புக்கூடுகள் மூடி திறந்தவைப் போலப் பூத்த இருப்பை மரத்தின் தளிர் பொதியப்பட்ட குவிந்த பூங்கொத்துக்கள் கழன்று துளையுடைய முத்துக்களைப் போன்று செந்நிலத்தில் உதிர, மழையை மறந்த அழகிய சிற்றூரைச் சென்று அடைவோமா, பூவால் ஒப்பனை செய்யப்பட்ட முகிலை ஒத்த தழைத்து தாழ்ந்த கரிய கூந்தலையும், முன் கையில் நெருங்கின வளையல்களையும் உடைய நம்முடைய காதலியின் அறிவு கலங்கிய பார்வையினையும் ஊடலையும் எண்ணி?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 41) என வரும் விதி கொள்க.  இதனை (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘தான் அவள் பிழைத்த நிலையின் கண்ணும்’ என்னும் துறைக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டினர்.  நூல் அறுந்த முத்து வடம்– அகநானூறு 225 – துளை முத்தின் செந்நிலத்து உதிர, அகநானூறு 289 – நெகிழ் நூல் முத்தின், குறுந்தொகை 51 – நூல் அறு முத்தின், குறுந்தொகை 104 – நூல் அறு முத்தின், கலித்தொகை 82 – கண்ணீர் சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன.  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).  வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  அன்பும் மடனும் சாயலும் இயல்பும் என்பு நெகிழ்க்கும் கிளவியும் – அன்பும் மடனும் மென்மையும் ஒழுக்கமும் எலும்பையும் நெகிழ்விக்கும் சொல்லும் (மடன் – மடம் என்பதன் போலி), பிறவும் – ஏனையவும், ஒன்றுபடு கொள்கையொடு – தலைவியுடன் ஒன்றுபட்டுள்ள நல்ல கொள்கையுடன், ஓராங்கு முயங்கி – ஒன்றிக் கலந்து (ஓராங்கு – ஒருசேர), இன்றே இவணம் ஆகி – இன்று இவ்வாறு ஆகி, நாளை – நாளைப்பொழுதில், புதல் இவர் ஆடு அமை – புதர்கள் பரவிய இடத்தில் உள்ள அசையும் மூங்கில், தும்பி குயின்ற அகலா அம் துளை கோடை முகத்தலின் – வண்டு துளைத்த குறுகிய அழகிய மேல்காற்று புகுந்து வருதலால் (ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – புகுந்து வருதலின்), நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை – நீர் பருகச் செல்லும் ஆநிரைக்கு பின்னே வரும், வார் கோல் ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும் – நீண்ட கோலினையுடைய ஆயர்கள் தங்கள் குழலில் இசைக்கும் இசையைப் போன்று ஒலிக்கும் , தேக்கு அமல் சோலை – தேக்கு மரங்கள் நிறைந்த சோலை, கடறு ஓங்கு அருஞ்சுரத்து (பாணியின் – (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), யாத்த தூணித்தலை திறந்தவை போல் – காடு உயர்ந்த அரிய பாலை நிலத்தில் அம்புக்கூடுகள் மூடி திறந்தவைப் போல, பூத்த இருப்பைக் குழை – பூத்த இருப்பை மரத்தின் தளிர், பொதி குவி இணர் – பொதியப்பட்ட குவிந்த பூங்கொத்துக்கள், கழல் துளை முத்தின் செந்நிலத்து உதிர – கழன்று செந்நிலத்தில் விழுகின்ற துளையுடைய முத்துக்களைப் போன்று (முத்தின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது), மழை துளி மறந்த அங்குடிச் சீறூர்ச் சேக்குவம் கொல்லோ – மழையை மறந்த அழகிய சிற்றூரைச் சென்று அடைவோமோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ அசைநிலை), நெஞ்சே – என் நெஞ்சே, பூப் புனை புயல் என ஒலிவரும் தாழ் இருங்கூந்தல் – பூவால் ஒப்பனை செய்யப்பட்ட முகிலை ஒத்த தழைத்து தாழ்ந்த கரிய கூந்தல், செறி தொடி – நெருங்கின வளையல்கள், முன் கை – முன் கை, நம் காதலி – நம்முடைய காதலி, அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே – அறிவு கலங்கிய பார்வையினையும் ஊடலையும் எண்ணி (நினைந்தே –  ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 226, பரணர், மருதத் திணை தோழி தலைவனிடம் சொன்னது
உணர்குவென் அல்லென், உரையல் நின் மாயம்,
நாணிலை மன்ற யாணர் ஊர!
அகலுள் ஆங்கண் அம் பகை மடிவைக்
குறுந்தொடி மகளிர் குரூஉப் புனல் முனையின்,
பழனப் பைஞ்சாய் கொழுதிக் கழனிக்  5
கரந்தை அம் செறுவின் வெண்குருகு ஓப்பும்,
வல் வில் எறுழ்த் தோள் பரதவர் கோமான்,
பல் வேல் மத்தி கழாஅர் முன்துறை,
நெடுவெண்மருதொடு வஞ்சி சாஅய்
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி,  10
தொடி அணி முன் கை நீ வெய்யோளொடு
முன் நாள் ஆடிய கவ்வை, இந்நாள்
வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த்
தித்தன் வெளியன் உறந்தை நாளவைப்
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி,  15
போர் அடு தானைக் கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே.

பாடல் பின்னணி:  தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தது.     

பொருளுரை:  புதிய வருவாயுடைய ஊரின் தலைவனே!  நின் வஞ்சனையான சொற்களைக் கூறாதே.  நான் அவற்றை உண்மையெனக் கொள்ள மாட்டேன்.  நீ தேற்றமாக நாணம் உடையவன் இல்லை.

அகன்ற அவ்வூரில், அழகிய பகுப்பையுடைய தழையாடையையும் குறிய வளையல்களையும் அணிந்த மகளிர் செந்நிறம் மிக்க நீரில் புனலாட்டத்தை வெறுத்ததால், பொய்கையில் உள்ள கோரைப்புல்லைக் கோதி கரந்தைச் செடிகளுடைய வயலில் வெள்ளை குருகுகளை விரட்டும், வலிய வில்லையும் வலிமையான தோள்களையுமுடைய பராதவர்களுக்குத் தலைவனான, பல வேற்படைகளையுடைய மத்தி என்பவனின் கழார் என்னும் ஊரின் துறையின் முன், நெடிய வெள்ளை மருத மரங்களுடன் வஞ்சி மரங்களையும் சாய்த்து மிக்க நீரையுடைய காவிரி ஆற்றில், நேற்று வளையல் அணிந்த முன்கையை உடைய, உன்னால் விரும்பப்பட்ட பரத்தையுடன் நீ விளையாடியதால் எழுந்த அலரானது, இன்று வலிமை மிக்க ஆற்றலையுடைய பாணன் என்பவனுடன் கூடிப் போரில் பகைவர்களைக் கொல்லும் ஆற்றல் உடைய கட்டி என்பவன் போர் புரிய வந்து, மிக்க மாலைகள் அணிந்த தித்தன் வெளியன் என்பவனின் உறந்தையில் உள்ள நாள் அவையில் எழுந்த, இனிய தெளிந்த கிணை ஓசையைக் கேட்டு அஞ்சி, போர் புரியாது ஓடியபொழுது உண்டான ஆரவாரத்தை விடவும் பெரியது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவில் ‘பெறு தகை இல்லாப் பிழைப்பினும்’ என வரும் விதிக்கொள்க.  பாணன் என்ற மன்னன் – அகநானூறு 113 – எழாஅப் பாணன், அகநானூறு 155 – பல் வயின் பய நிரை சேர்ந்த பாண் நாட்டு, அகநானூறு 226 – வலி மிகும் முன்பின் பாணனொடு, அகநானூறு 325 – நல் வேல் பாணன் நல் நாட்டு, அகநானூறு 386 – பாணன் மல்லடு மார்பின் வலியுற.  பறையன்பட்டு கல்வெட்டு – இதில் பாணாடு என்ற குறிப்பு உள்ளது – Early Tamil Epigraphy, page 629, Iravatham Mahadevan, Harvard University Press.  வரலாறு – காவிரி, மத்தி, கழாஅர், பாணன், தித்தன் வெளியன். உறந்தை, கட்டி.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  எறுழ் – எறுழ் வலி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 92).

சொற்பொருள்:  உணர்குவென் அல்லென் – நான் அவற்றை உண்மையெனக் கொள்ள மாட்டேன், உரையல் நின் மாயம் – நின் வஞ்சனையான சொற்களைக் கூறாதே, நாணிலை மன்ற – நீ தேற்றமாக நாணம் உடையவன் இல்லை (இலை – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), யாணர் ஊர – புதிய வருவாயுடைய ஊரின் தலைவனே, வளமையான ஊரின் தலைவனே, அகலுள் ஆங்கண் – அகன்ற அவ்வூரில், அம் பகை மடிவைக் குறுந்தொடி மகளிர் குரூஉப் புனல் முனையின் பழனப் பைஞ்சாய் கொழுதிக் கழனிக் கரந்தை அம் செறுவின் வெண்குருகு ஓப்பும் – அழகிய பகுப்பையுடைய தழையாடையையும் குறிய வளையல்களையும் அணிந்த மகளிர் செந்நிறம் மிக்க நீரில் புனலாட்டத்தை வெறுத்ததால் பொய்கையில் உள்ள கோரைப்புல்லைக் கோதி கரந்தைச் செடிகளுடைய வயலில் வெள்ளை குருகுகளை விரட்டும் (குரூஉ – அளபெடை), வல் வில் எறுழ்த் தோள் பரதவர் கோமான் பல் வேல் மத்தி கழாஅர் முன்துறை – வலிய வில்லையும் வலிமையான தோள்களையுமுடைய பராதவர்களுக்குத் தலைவனான பல வேற்படைகளையுடைய மத்தி என்பவனின் கழார் என்னும் ஊரின் துறையின் முன், நெடு வெண்மருதொடு வஞ்சி சாஅய் விடியல் வந்த பெரு நீர்க் காவிரி – நெடிய வெள்ளை மருத மரங்களுடன் வஞ்சி மரங்களையும் சாய்த்து மிக்க நீரையுடைய காவிரி ஆற்றில் (சாஅய் – அளபெடை), தொடி அணி முன் கை நீ வெய்யோளொடு முன் நாள் ஆடிய கவ்வை – நேற்று வளையல் அணிந்த முன்கையை உடைய உன்னால் விரும்பப்பட்ட பரத்தையுடன் நீ விளையாடியதால் எழுந்த அலர், இந்நாள் வலி மிகும் முன்பின் பாணனொடு – இன்று வலிமை மிக்க ஆற்றலையுடைய பாணன் என்பவனுடன் கூடி, மலி தார்த் தித்தன் வெளியன் உறந்தை நாள் அவை – மிக்க மாலைகள் அணிந்த தித்தன் வெளியன் என்பவனின் உறந்தையில் உள்ள நாள் அவை (தித்தன் வெளியன் – இரு பெயரொட்டு), பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி – ஓசை இனிய தெளிந்த கிணை ஓசையைக் கேட்டு அஞ்சி, போர் அடு தானைக் கட்டி – போரில் பகைவர்களைக் கொல்லும் ஆற்றல் உடைய கட்டி என்பவன், பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே – போர் புரியாது ஓடியபொழுது உண்டான ஆரவாரத்தை விடவும் பெரியது (பொராஅது – அளபெடை, பெரிதே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 227, நக்கீரர், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது, அல்லது தலைவி தோழியிடம் சொன்னது
நுதல் பசந்தன்றே தோள் சாயினவே
திதலை அல்குல் வரியும் வாடின
என் ஆகுவள் கொல் இவள் எனப் பல் மாண்
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி
இனையல் வாழி தோழி நனை கவுள்  5
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு
முன்னிலை பொறாஅது முரணிப் பொன் இணர்ப்
புலிக் கேழ் வேங்கைப் பூஞ்சினை புலம்ப
முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல்
செந்நிலப் படு நீறு ஆடிச் செரு மலைந்து  10
களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்
பல இறந்து அகன்றனர் ஆயினும் நிலைஇ
நோய் இலராக நம் காதலர் வாய்வாள்
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின்
வருநர் வரையாப் பெருநாள் இருக்கை  15
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல்லிசைப்
பிடிமிதி வழுதுணைப் பெரும் பெயர்த் தழும்பன்
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர்
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர்
இருங்கழிப் படப்பை மருங்கூர்ப்பட்டினத்து  20
எல் உமிழ் ஆவணத்து அன்ன
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே.

பாடல் பின்னணி:  (1) தலைவன் பிரிவின்கண் வேறுபட்ட தலைவியிடம் தோழி கூறியது. (2) – தலைவன் பிரிவின்கண் தலைவியின் பொருட்டு வருந்தி வேறுபட்ட தோழியிடம் தலைவி கூறியது.  

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  “இவள் நெற்றியும் பசலை அடைந்துள்ளது.  தோள்கள் மெலிந்துவிட்டன.  தேமல் படர்ந்த அல்குலின் வரிகளும் வாடிவிட்டன.  இனி இவள் என்ன நிலைமை அடைவாளோ” என்று நீண்ட நேரம் நினைத்து ஆராய்ந்து வருந்தாதே!

நனைந்த கன்னத்திலிருந்து வாயில் புகும் மத நீருடன், மிக்க சினம் கொண்ட, தன் பகையாகிய புலி தன் முன்னால் நிற்றலைக் காணப் பொறாமல் பகைத்து பொன்னிற கொத்துக்களையுடைய புலியின் நிறத்தை உடைய வேங்கை மரத்தின் பூக்கள் கொண்ட கிளைகள் பூக்களை இழந்து தனிமையுறும்படி அடிமரத்தில் பாய்ந்த மிக்க வலிமையுடைய களிற்று யானை, செம்மண் நிலத்தில் உள்ள புழுதியில் புரண்டுப் போர் புரிந்து களத்தில் வெற்றி அடைந்த வீரர் போல் முழங்கும், பாலை நில வழிகள் பலவற்றைக் கடந்து அகன்று சென்றாராயினும்,

தப்பாத வாளினையும், தமிழ்நாடு முழுவதையும் அகப்படுத்தியதால் முழங்கும் வெற்றி முரசையும், பரிசில் வேண்டி வருபவர்களுக்கு எல்லை இல்லாது வழங்கும் நாள் அவையையும், புலவர் தூங்கலோரியார் பாடிய மிக உயர்ந்த நல்ல புகழ் உடைய, பிடி யானை மிதித்தால் வழுதுணங்காய் போலும் தழும்புடையதால் வழுதுணைத் தழும்பான் என்னும் சிறந்த பெயரை உடையவனின், காவல் மதில்களை எல்லையில் கொண்ட ஊணூர்க்கு அப்பால் உள்ள, செல்வம் மிகுந்திருக்கும் பெருமை கொண்ட அழகிய நகராகிய, பெரிய உப்பங்கழிகளையும் தோட்டங்களையும் உடைய மருங்கூர்ப்பட்டினத்தின், ஒளி வீசும் கடைத் தெருவைப் போல் கல் என்னும் அலரை எழுச் செய்து அகன்ற நம் தலைவர், நோய் இல்லாதவராக நிலைபெற்று வாழ்வாராக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – (1) இதனை ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகைபட வந்த கிளவி ‘ என்பதனால் அமைத்துக் கொள்க. (2) இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘மங்கல மொழியும்’ (தொல்காப்பியம், பொருளியல் 244) என்னுஞ் சூத்திரத்து மங்கலமொழி என்பதற்குத் ‘தலைவற்குத் தீங்கு வருமென்று உட்கொண்டு தோழியும் தலைவியும் அதற்கு அஞ்சி அவனை வழுத்தலும்’ என்று பொருள் கூறி, அதற்கு, ‘நோயிலராக நங்காதலர்’ என்னும் இதனை எடுத்துக்காட்டினர் நச்சினார்க்கினியர்.  ஒப்புமை – நற்றிணை 300 – பெரும் புண் ஏஎர் தழும்பன் ஊணூர், வேங்கை மலரும் புலியும் – அகநானூறு 12 – வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் புலி செத்து வெரீஇய புகர் முக வேழம், அகநானூறு 141 – புலிக்கேழ் உற்ற பூ இடைப் பெருஞ்சினை நரந்த நறும்பூ நாள் மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை, அகநானூறு 227 – புலிக் கேழ் வேங்கை, அகநானூறு 228 – வேங்கை ஒள் வீப் புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், நற்றிணை 389 – வேங்கையும் புலி ஈன்றன, குறுந்தொகை 47 – வேங்கை வீ உகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றும், ஐங்குறுநூறு 396 – புலிப் பொறி வேங்கைப் பொன் இணர்.  வரலாறு –தூங்கலேரியார், தழும்பன், ஊணூர், மருங்கூர்ப்பட்டினம்.  கம்பலை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).  நம் காதலர் – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள்.  

சொற்பொருள்:  நுதல் பசந்தன்றே – நெற்றியும் பசலை அடைந்துள்ளது (பசந்தன்றே – ஏகாரம் அசைநிலை), தோள் சாயினவே – தோள்கள் மெலிந்துவிட்டன (சாயினவே – ஏகாரம் அசைநிலை), திதலை அல்குல் வரியும் வாடின – தேமல் படர்ந்த அல்குலின் வரிகளும் வாடிவிட்டன (அல்குல் – இடை, இடைக்குக்கீழ் உள்ள பகுதி), என் ஆகுவள் கொல் இவள் எனப் பல் மாண் நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி இனையல் – இனி இவள் என்ன நிலைமை அடைவாளோ என்று நீண்ட நேரம் நினைத்து ஆராய்ந்து வருந்தாதே, வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி  – தோழி, நனை கவுள் காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு – நனைந்த கன்னத்திலிருந்து வாயில் புகும் மத நீருடன் மிக்க சினம் கொண்ட, முன்னிலை பொறாஅது முரணிப் பொன் இணர்ப் புலிக் கேழ் வேங்கைப் பூஞ்சினை புலம்ப முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல் – தன் பகையாகிய புலி தன் முன்னால் நிற்றலைக் காணப் பொறாமல் பகைத்து பொன்னிற கொத்துக்களையுடைய புலியின் நிறத்தை உடைய வேங்கை மரத்தின் பூக்கள் கொண்ட கிளைகள் பூக்களை இழந்து தனிமையுறும்படி அடிமரத்தில் பாய்ந்த மிக்க வலிமையுடைய களிற்று யானை (பொறாஅது – அளபெடை, வேங்கை மரம் – Pterocarpus marsupium), செந்நிலப் படு நீறு ஆடிச் செரு மலைந்து களம் கொள் மள்ளரின் முழங்கும் – செம்மண் நிலத்தில் உள்ள புழுதியில் புரண்டுப் போர் புரிந்து களத்தில் வெற்றி அடைந்த வீரர் போல் முழங்கும் (மள்ளரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அத்தம் பல இறந்து அகன்றனர் ஆயினும் – பாலை நில வழிகள் பலவற்றைக் கடந்து அகன்று சென்றாராயினும், நிலைஇ நோய் இலராக நம் காதலர் – நோய் இல்லாதவராக நிலைபெற்று வாழ்வாராக நம் தலைவர் (நிலைஇ – அளபெடை), வாய்வாள் – தப்பாத வாளினையும், தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின் – தமிழ்நாடு முழுவதையும் அகப்படுத்தியதால் முழங்கும் வெற்றி முரசையும் (தமிழ் – தமிழ்நாட்டிற்கு ஆகுபெயர்), வருநர் வரையாப் பெருநாள் இருக்கை – பரிசில் வேண்டி வருபவர்களுக்கு எல்லை இல்லாது வழங்கும் நாள் அவையையும், தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல்லிசை – புலவர் தூங்கலோரியார் பாடிய மிக உயர்ந்த நல்ல புகழ் உடைய, பிடி மிதி வழுதுணைப் பெரும் பெயர்த் தழும்பன் – பிடி யானை மிதித்தால் வழுதுணங்காய் போலும் தழும்புடையதால் வழுதுணைத் தழும்பான் என்னும் சிறந்த பெயரை உடையவனின், கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர் – காவல் மதில்களை எல்லையில் கொண்ட ஊணூர்க்கு அப்பால் உள்ள, விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர் – செல்வம் மிகுந்திருக்கும் பெருமை கொண்ட அழகிய நகராகிய, இருங்கழிப் படப்பை மருங்கூர்ப்பட்டினத்து – பெரிய உப்பங்கழிகளையும் தோட்டங்களையும் உடைய மருங்கூர்ப்பட்டினத்தின், எல் உமிழ் ஆவணத்து அன்ன கல்லென் கம்பலை செய்து அகன்றோரே – ஒளி வீசும் கடைத் தெருவைப் போல் கல் என்னும் அலரை எழுச் செய்து அகன்றவர் (ஆவணத்து – ஆவணம், அத்துச் சாரியை, கல்லென் – ஒலிக்குறிப்பு மொழி, அகன்றோரே – ஏகாரம் –அசைநிலை)

அகநானூறு 228, அண்டர் மகன் குறவழுதியார், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பிரசப் பல் கிளை ஆர்ப்பக் ,கல்லென
வரை இழி அருவி ஆரம் தீண்டித்
தண் என நனைக்கும் நளிர் மலைச் சிலம்பில்,
கண் என மலர்ந்த மா இதழ்க் குவளைக்
கல் முகை நெடுஞ்சுனை நம்மொடு ஆடிப்  5
பகலே இனிதுடன் கழிப்பி, இரவே
செல்வர் ஆயினும் நன்று மன் தில்ல,
வான் கண் விரிந்த பகல் மருள் நிலவின்
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப்  10
புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், கயவாய்
இரும் பிடி இரியும் சோலைப்
பெருங்கல் யாணர்த் தம் சிறுகுடியானே.

பாடல் பின்னணி:  தலைவன் இரவுக்குறியிடத்தே வந்து ஒரு பக்கதே மறைந்து நின்றான்.  அதைக் கண்ட தோழி இரவின்கண் வரும் ஏதங்களைக் குறிப்பாக எடுத்துக் கூறிப் ‘பகற்பொழுதில் வருவது நல்லது’ என அவன் கேட்குமாறு கூறியது. 

பொருளுரை:  தேனை உண்ணும் பல வண்டின் இனங்களும் ஆரவாரிக்க, கல்லென்னும் ஒலியுடன் மலையிலிருந்து வீழும் அருவி, சந்தன மரத்தின் மீது வீழ்ந்து அதனைத் குளிர்ச்சியுடன் நனைக்கும் செறிந்த பக்க மலையில் உள்ள, கண் போல் மலர்ந்த கரிய இதழ்களையுடைய குவளை மலர்களையுடைய மலை முழைஞ்சில் உள்ள சுனையில் நம்முடன் விளையாடி பகல் பொழுதை இனிமையுடன் கழித்து, வானில் விரிந்த பகலை ஒத்த நிலவின் ஒளியில், பிரம்புக் காட்டினையுடைய மலைச் சரிவில் உள்ள வழியில், மலையின் மேல் உள்ள வேங்கை மரத்தின் ஒளிரும் மலர்கள் புலியின் பொறிகள் போல் தோன்றுவதால், பெரிய வாயையுடைய பெண் யானைகள் அஞ்சி ஓடும் சோலையையுடைய பெரிய மலையில் உள்ள வளமை பொருந்திய தம் சிற்றூர்க்கு, இரவில் செல்வாராயினும் நன்றாகும்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘களனும் பொழுதும் ………………. அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  வேங்கை மலரும் புலியும் – அகநானூறு 12 – வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் புலி செத்து வெரீஇய புகர் முக வேழம், அகநானூறு 141 – புலிக்கேழ் உற்ற பூ இடைப் பெருஞ்சினை நரந்த நறும்பூ நாள் மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை, அகநானூறு 227 – புலிக் கேழ் வேங்கை, அகநானூறு 228 – வேங்கை ஒள் வீப் புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், நற்றிணை 389 – வேங்கையும் புலி ஈன்றன, குறுந்தொகை 47 – வேங்கை வீ உகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றும், ஐங்குறுநூறு 396 – புலிப் பொறி வேங்கைப் பொன் இணர்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:  பிரசப் பல் கிளை ஆர்ப்பக் கல்லென வரை இழி அருவி – தேனை உண்ணும் பல வண்டின் இனங்களும் ஆரவாரிக்க கல்லென்னும் ஒலியுடன் மலையிலிருந்து வீழும் அருவி (பிரசம் – தேன், தேன் உண்ணும் வண்டுகளைக் குறிக்கின்றது இங்கு, கல்லென்னும் – ஒலிக்குறிப்பு மொழி), ஆரம் தீண்டித் தண் என நனைக்கும் நளிர் மலைச் சிலம்பில் – சந்தன மரத்தின் மீது வீழ்ந்து அதனைத் குளிர்ச்சியுடன் நனைக்கும் செறிந்த பக்க மலையில் உள்ள, கண் என மலர்ந்த மா இதழ்க் குவளைக் கல் முகை நெடுஞ்சுனை நம்மொடு ஆடிப் பகலே இனிதுடன் கழிப்பி – கண் போல் மலர்ந்த கரிய இதழ்களையுடைய குவளை மலர்களையுடைய மலை முழைஞ்சில் உள்ள சுனையில் நம்முடன் விளையாடி பகல் பொழுதை இனிமையுடன் கழித்து, இரவே செல்வர் ஆயினும் நன்று – இரவில் செல்வாராயினும் நன்றாகும், மன் – அசைநிலை, தில்ல – தில் விழைவின்கண் வந்த இடைச்சொல், ஈறு திரிந்து வந்தது, வான் கண் விரிந்த பகல் மருள் நிலவின் – வானில் விரிந்த பகலை ஒத்த நிலவின் ஒளியில் (மருள் – உவம உருபு), சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று – பிரம்புக் காட்டினையுடைய மலைச் சரிவில் உள்ள வழியில், ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப் புலிப் பொறி கடுப்பத் தோன்றலின் – மலையின் மேல் உள்ள வேங்கை மரத்தின் ஒளிரும் மலர்கள் புலியின் பொறிகள் போல் தோன்றுவதால் (கடுப்ப – உவம உருபு), கயவாய் இரும் பிடி இரியும் சோலைப் பெருங்கல் யாணர்த் தம் சிறுகுடியானே – பெரிய வாயையுடைய பெண் யானைகள் அஞ்சி ஓடும் சோலையையுடைய பெரிய மலையில் உள்ள வளமை பொருந்திய தம் சிற்றூர்க்கு (சிறுகுடியானே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 229, மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், பாலைத் திணை தலைவி தோழியிடம் சொன்னது
பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன்
அகல்வாய் வானத்து ஆழி போழ்ந்தென,
நீர் அற வறந்த நிரம்பா நீளிடைக்,
கயந்தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பலவுடன்  5
பாழூர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண்,
நெடுஞ்சேண் இடைய குன்றம் போகி,
பொய்வலாளர் முயன்று செய் பெரும்பொருள்
நம் இன்று ஆயினும் முடிக வல்லெனப்
பெருந்துனி மேவல், நல்கூர் குறுமகள்!  10
நோய் மலிந்து உகுத்த நொசிவரல் சில் நீர்
பல்லிதழ் மழைக் கண் பாவை மாய்ப்பப்,
பொன் ஏர் பசலை ஊர்தரப், பொறி வரி
நல் மா மேனி தொலைதல் நோக்கி
இனையல் என்றி தோழி, சினைய  15
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப்
போது அவிழ் அலரி கொழுதித் தாது அருந்து,
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசைச்
செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம்
இன் இளவேனிலும் வாரார்,  20
இன்னே வருதும் எனத் தெளித்தோரே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவி வற்புறுத்தும் தோழியிடம் கூறியது.

பொருளுரை:  தோழி!  நீ என்னிடம்,வருந்தியிருந்த பெற்றோரின் அரும்பெறலாகிய இளைய தலைவியே! பகலைச் செய்யும் பல கதிர்களையுடைய ஞாயிறு ஆகிய அழகிய செல்வன் அகன்ற இடமான வானில் உள்ள தன் தேரின் ஆழியால் பிளக்கப்பட்ட, நீர் இல்லாது வறண்ட செல்லத் தொலையாத நீண்ட வழியில், மெல்லிய தலையையுடைய கன்றையும் கவிந்த நகத்தையும் உடைய இளைய பெண் யானை தன் கன்று உண்ணும்பொருட்டுத் தழையை மறுத்து வாடிய, பாழ்பட்ட ஊரின் குடிசைகள் போல் தோன்றும், நெடிய தொலைவில் உள்ள இடைவெளியுடைய மலைகளைத் தாண்டிச் சென்ற பொய் கூறுவதில் வல்லவர் முயன்று ஈட்டும் பெரும் பொருள், நாம் இல்லையானாலும் விரைவில் கைகூடுவதாக என்று பெரும் வெறுப்பைக் கொள்ளாதே.  வருத்தம் மிகுந்து வீழ்ந்த கண்ணீர், பல இதழ்களையுடைய தாமரை மலர் போன்ற கண்களில் உள்ள கருமணிகளை மறைக்க, பொன்னைப் போன்ற பசலை பரவிட, பொறியாகவும் புள்ளிகளாகவும் உள்ள தேமலையுடைய நல்ல மாந்தளிர் போன்ற மேனியின் அழகு தொலைதலை நோக்கி நீ வருந்தாதே” எனக் கூறுகிறாய்.

அழகிய அரும்புகளை ஈன்ற கிளைகளையுடைய, சிவந்த அரும்புகளையுடைய முருக்க மரத்தின் விரிந்த மலர்களைக் கிண்டிப் பூந்தாதினை உண்டு, அழகிய தளிர்களையுடைய மாமரத்தின் அசையும் கிளைகளின் உச்சியில் இருக்கும் சிவந்த கண்களையுடைய கரிய குயில்கள் விருப்பம் வரும்படியாகக் கூவும் இனிய இளவேனில் காலத்திலும் அவர் வந்திலர், இப்பொழுதில் வருவேம் எனத் தெளிவாகக் கூறிச்சென்ற நம் தலைவர்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் என்பதனால் அமைத்துக் கொள்க.  முருக்கின (16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – முருக்கின் + அ (அ = அழகிய).  கண்ணின் பாவை – நற்றிணை 177 – உண்கண் பாவை அழிதரு வெள்ளம், அகநானூறு 5 – பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு, அகநானூறு 229 – பல்லிதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப.  நொசி – நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை (தொல்காப்பியம், உரியியல் 78).  வறந்த – வறம் என்னும் சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சம்.  பல்லிதழ் (12) அகரம் கெட்டுக் ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 160) என்றதனால் லகரம் இரட்டித்து, பல்லிதழ் என முடிந்தது. 

சொற்பொருள்:  பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன் அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென – பகலைச் செய்யும் பல கதிர்களையுடைய ஞாயிறு ஆகிய அழகிய செல்வன் அகன்ற இடமான வானில் உள்ள தன் தேரின் ஆழியால் பிளக்கப்பட்ட (போழ்ந்தென – போழப்பட்டு என என்க), நீர் அற வறந்த நிரம்பா நீளிடை – நீர் இல்லாது வறண்ட செல்லத் தொலையாத நீண்ட வழியில், கயந்தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பலவுடன் – மெல்லிய தலையையுடைய கன்றையும் கவிந்த நகத்தையும் உடைய இளைய பெண் யானை தன் கன்று உண்ணும்பொருட்டுத் தழையை மறுத்து வாடிய, பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண் – பாழ்பட்ட ஊரின் குடிசைகள் போல் தோன்றும் (குரம்பையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நெடுஞ்சேண் இடைய குன்றம் போகி பொய்வலாளர் முயன்று செய் பெரும்பொருள் – நெடிய தொலைவில் உள்ள இடைவெளியுடைய மலைகளைத் தாண்டிச் சென்ற பொய் கூறுவதில் வல்லவர் முயன்று ஈட்டும் பெரும் பொருள் (இடைய – இடைவெளியுடைய), நம் இன்று ஆயினும் முடிக – நாம் இல்லையானாலும் விரைவில் கைகூடுவதாக, வல்லெனப் பெருந்துனி மேவல் – பெரும் வெறுப்பைக் கொள்ளாதே, நல்கூர் குறுமகள் – வருந்தியிருந்த பெற்றோரின் அரும்பெறலாகிய இளைய தலைவியே, நோய் மலிந்து உகுத்த நொசிவரல் சில் நீர் பல்லிதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப – வருத்தம் மிகுந்து வீழ்ந்த கண்ணீர் பல இதழ்களையுடைய தாமரை மலர் போன்ற கண்களில் உள்ள கருமணிகளை மறைக்க, பொன் ஏர் பசலை ஊர்தர – பொன்னைப் போன்ற பசலை பரவிட, பொறி வரி நல் மா மேனி தொலைதல் நோக்கி இனையல் என்றி தோழி – பொறியாகவும் புள்ளிகளாகவும் உள்ள தேமலையுடைய நல்ல மாந்தளிர் போன்ற மேனியின் அழகு தொலைதலை நோக்கி நீ வருந்தாதே எனக் கூறுகிறாய் தோழி, சினைய பாசரும்பு ஈன்ற – அழகிய அரும்புகளை ஈன்ற கிளைகளையுடைய, செம் முகை முருக்கினப் போது அவிழ் அலரி கொழுதித் தாது அருந்து – சிவந்த அரும்புகளையுடைய முருக்க மரத்தின் விரிந்த மலர்களைக் கிண்டிப் பூந்தாதினை உண்டு (முருக்க மரம் – Coral tree, Erythrina variegata), அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசைச் செங்கண் இருங்குயில்கள் நயவரக் கூஉம் இன் இளவேனிலும் வாரார் – அழகிய தளிர்களையுடைய மாமரத்தின் அசையும் கிளைகளின் உச்சியில் இருக்கும் சிவந்த கண்களையுடைய கரிய குயில்கள் விருப்பம் வரும்படியாகக் கூவும் இனிய இளவேனில் காலத்திலும் அவர் வந்திலர் (மாஅத்து – மாஅத்து, மீமிசை – ஒருபொருட் பன்மொழி, கூஉம் – அளபெடை), இன்னே வருதும் எனத் தெளித்தோரே – இப்பொழுதில் வருவேம் எனத் தெளிவாகக் கூறியவர் (தெளித்தோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 230, மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், நெய்தற் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
சிறு கரு நெய்தல் கண் போல் மா மலர்ப்
பெருந்தண் மாத்தழை இருந்த அல்குல்,
ஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று,
மை ஈர் ஓதி வாணுதல் குறுமகள்,  5
விளையாட்டு ஆயமொடு, வெண் மணல் உதிர்த்த
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு
மனை புறந்தருதி ஆயின் எனையதூஉம்
இம்மனைக் கிழமை எம்மொடு புணரின்
தீதும் உண்டோ, மாதராய், எனக்  10
கடும் பரி நல் மான் கொடிஞ்சி நெடுந்தேர்
கை வல் பாகன் பையென இயக்க,
யாம் தற்குறுகினமாக, ஏந்து எழில்
அரி வேய் உண்கண் பனிவரல் ஒடுக்கிச்,
சிறிய இறைஞ்சினள் தலையே,  15
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே.

பாடல் பின்னணி:  தலைவியைக் கண்ணுற்று நீங்கும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

பொருளுரை:  பெரிய உப்பங்கழியின் அருகில், கடல் நீரினால் மலர்ந்த கரிய, பெரிய, கண்களைப் போன்ற மலர்களுடன் கூடிய பெரிய குளிர்ந்த தழையுடை அணிந்த அல்குலையும், மென்மையான தேமலையும், கூர்மையான பற்களையும், கருமையான எண்ணெய்த் தேய்த்த கூந்தலையையும், ஒளியுடைய நெற்றியையுமுடைய இளம் பெண் தன் விளையாட்டுத் தோழியருடன் இருந்தாள்.  விரைந்து செல்லும் நல்ல குதிரைகளைப் பூண்ட கொடிஞ்சியுடைய உயர்ந்த தேரினை கைத் திறமை மிக்க பாகன் மெதுவாக இயக்க, நான் அவளை அணுகி கேட்டேன், “வெள்ளை மணலில் புன்னை மரங்கள் உதிர்த்த நுண்ணிய தாதினை பொன்னினைப் போல் முகந்து என்னுடன் உரிமையில் சேர்ந்து இல்லறம் நடத்துவாயாயின் தீமை ஏதேனும் உண்டா பெண்ணே?” என்று.  தன்னுடைய மிக அழகிய வரியுடைய மையிட்ட கண்களில் தோன்றிய கண்ணீரை மறைத்து, சிறிது தலை குனிந்தாள் அவள்.  நான் பெருந்துன்பத்தில் ஆழ்ந்தேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘மெய் தொட்டுப் பயிறல்’ (தொல்காப்பியம், களவியல் 11) என்னும் நூற்பாவின்கண் பிரிந்தவழிக் கலங்கலும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 20) என்னுஞ் சூத்திரத்துக் ‘கைப்பட்டுக் கலங்கினும்’ என்னும் துறைக்கு இதனைக் காட்டி, இது தலைவன் கூறியது, என்றனர் நச்சினார்க்கினியர்.  ஒப்புமை –அகநானூறு 110 – தட மென் பணைத்தோள் மட நல்லீரே எல்லும் எல்லின்று அசைவு மிக உடையேன் மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு யானும் இக் கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ?  ஐய (4) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பெயரெச்சக் குறிப்பு, வினையெச்சக் குறிப்பாக்கி மென்மையவாக அரும்பிய என்று உரைத்தலுமாம்.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 71).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).  கொடிஞ்சி – கையால் பற்றுதற்குரிய தாமரை மொட்டுப் போன்ற தேர் உறுப்பு.

சொற்பொருள்:   உறு கழி மருங்கின் – பெரிய உப்பங்கழியின் அருகில், ஓதமொடு மலர்ந்த சிறு கரு நெய்தல் – கடல் நீரினால் மலர்ந்த கரிய நெய்தல் மலர்கள், கண் போல் மா மலர் – கண்களைப் போன்ற பெரிய மலர்கள், பெருந்தண் மாத் தழை இருந்த அல்குல் – பெரிய குளிர்ச்சியான பெரிய தழையை அணிந்த அல்குல், ஐய அரும்பிய சுணங்கின் – மென்மையான தேமலை உடைய, வை எயிற்று – கூர்மையான பற்களையுடைய, மை ஈர் ஓதி – கருமையான எண்ணெய்த் தேய்த்த கூந்தல், வாணுதல் குறுமகள் – ஒளியுடைய நெற்றியுடைய இளம் பெண், விளையாட்டு ஆயமொடு – தன் விளையாட்டு தோழியருடன், வெண் மணல் உதிர்த்த புன்னை நுண் தாது – வெள்ளை மணலில் புன்னை மரங்கள் உதிர்த்த நுண்ணிய தாது (புன்னை மரம் – Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree), பொன்னின் – பொன்னினைப் போல்  (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது), நொண்டு – முகந்து, மனை புறந்தருதி ஆயின் – இல்லறம் நடத்துவாயாயின், எனையதூஉம் இம்மனைக் கிழமை எம்மொடு புணரின் – இல்லற உரிமையில் என்னுடன் பொருந்துவாய் ஆயின் (கிழமை – அறம், எனையதூஉம் – அளபெடை),  தீதும் உண்டோ – தீமை உண்டா, மாதராய் – பெண்ணே (விளி), என – என்று, கடும் பரி நல் மான் – விரைந்து செல்லும் நல்ல குதிரைகள், கொடிஞ்சி – தேரின் அலங்கார அங்கம், நெடுந்தேர் – உயர்ந்த தேர், கை வல் பாகன் பையென இயக்க – கைத் திறமை மிக்க பாகன் தேரினை மெதுவாக இயக்க (கைவல் – தொழிலில் திறமையுடைய), யாம் தற் குறுகினமாக – நான் அவளை அனுகினேனாக, ஏந்து எழில் அரி வேய் உண்கண் – மிக அழகிய வரியுடைய மையிட்ட கண்கள், பனிவரல் ஒடுக்கி – கண்ணீர் வருதலை மறைத்து, சிறிய இறைஞ்சினள் தலையே – சிறிது தலை குனிந்தாள், பெரிய எவ்வம் யாம் இவண் உறவே – பெரிய துன்பத்தை நான் இங்கு அடைய (உறவே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 231, மதுரை ஈழத்துப் பூதன்தேவனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
‘செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு
உறுமிடத்து உய்க்கும் உதவி ஆண்மையும்
இல்லிருந்து அமைவோர்க்கு இல்’ என்று எண்ணி,
நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்
கொடுவிற் கானவர் கணைஇடத் தொலைந்தோர்,  5
படுகளத்து உயர்த்த மயிர்த்தலைப் பதுக்கைக்
கள்ளி அம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அரும் கடத்திடை
வெஞ்சுரம் இறந்தனர் ஆயினும், நெஞ்சுருக
வருவர், வாழி தோழி! பொருவர்  10
செல்சமம் கடந்த செல்லா நல்லிசை,
விசும்பிவர் வெண்குடைப் பசும்பூண் பாண்டியன்
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின்
ஆடு வண்டு அரற்றும் முச்சித்
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே.  15

பாடல் பின்னணி:  தலைவன் பிரிவின்கண் வேறுபட்ட தலைவியிடம் தோழி கூறியது.   

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  தம் பகைவர்களின் செருக்கை அழித்தலும், தம்மைச் சேர்ந்தவர்களுக்கு இடுக்கண் வரும்பொழுது உதவி செய்யும் ஆண்மையும், மனையின்கண் சோம்பி வாளாது இருப்பவர்களுக்கு இல்லை என்று எண்ணி, நல்ல புகழைக் கருதிய நாண் உடைய மனத்தரான நம் தலைவர்,

கொடிய வில்லையுடைய ஆறலைக் கள்வர்கள் அம்பை விடுத்ததால் இறந்து கிடைக்கும் களத்தில் உயர்த்திய, இறந்தவர்களின் மயிருடைய தலைகளையுடைய கற்குவியல்கள், கள்ளிச் செடிகளையுடைய பாழிடமாகிய களர்நிலம் தோறும் கூடிக்கிடந்து நினைப்பவர்களை நடுங்கச் செய்வதால் யாரும் செல்லத் துணியாத காட்டின் உள்ள கொடிய சுரத்தைக் கடந்தனர் ஆனாலும்,

பகைவர்களைப் போரில் தோற்கடித்த, கெடாத நல்ல புகழையும் வானளவு உயர்ந்த வெண்குடையையும் உடைய பசும்பூண் பாண்டியனின் பெருமையும் சிறப்பும் உடைய கூடலை ஒத்த, நின் அசையும் வண்டுகள் ஒலிக்கும்  பூவிதழ்கள் பொருந்திய கூந்தலில் துயின்றவர் ஆகிய அவர், தம் நெஞ்சம் உருக வருவார்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகைபட வந்த கிளவி’ என்பதனால் அமைத்துக் கொள்க.  செம்மல் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைமை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – செருக்கு.  வரலாறு – பசும்பூண் பாண்டியன், கூடல்.

சொற்பொருள்:   செறுவோர் செம்மல் வாட்டலும் – தம் பகைவர்களின் செருக்கை அழித்தலும், சேர்ந்தோர்க்கு உறுமிடத்து உய்க்கும் உதவி ஆண்மையும் – தம்மைச் சேர்ந்தவர்களுக்கு இடுக்கண் வரும்பொழுது உதவி செய்யும் ஆண்மையும், இல்லிருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணி – மனையின்கண் சோம்பி வாளாது இருப்பவர்களுக்கு இல்லை என்று எண்ணி, நல்லிசை வலித்த நாணுடை மனத்தர் – நல்ல புகழைக் கருதிய நாண் உடைய மனத்தரான நம் தலைவர், கொடுவிற் கானவர் கணை இடத் தொலைந்தோர் படுகளத்து உயர்த்த மயிர்த்தலைப் பதுக்கை – கொடிய (வளைந்த) வில்லையுடைய ஆறலைக் கள்வர்கள் அம்பை விடுத்ததால் இறந்து கிடைக்கும் களத்தில் உயர்த்திய இறந்தவர்களின் மயிருடைய தலைகளையுடைய கற்குவியல்கள், கள்ளி அம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ – கள்ளிச் செடிகளையுடைய பாழிடமாகிய களர்நிலம் தோறும் கூடிக்கிடந்து (அம் – சாரியை, குழீஇ – அளபெடை), உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அரும் கடத்திடை வெஞ்சுரம் இறந்தனர் ஆயினும் – நினைப்பவர்களை நடுங்கச் செய்வதால் யாரும் செல்லத் துணியாத காட்டின் உள்ள கொடிய (வெப்பமுடைய) சுரத்தைக் கடந்தனர் ஆனாலும், நெஞ்சுருக வருவர் – தம் நெஞ்சம் உருக வருவார், வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, பொருவர் செல் சமம் கடந்த – பகைவர்களைப் போரில் தோற்கடித்த, செல்லா நல்லிசை விசும்பு இவர் வெண்குடைப் பசும்பூண் பாண்டியன் பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன – கெடாத நல்ல புகழையும் வானளவு உயர்ந்த வெண்குடையையும் உடைய பசும்பூண் பாண்டியனின் பெருமையும் சிறப்பும் உடைய கூடலை ஒத்த, நின் ஆடு வண்டு அரற்றும் முச்சித் தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே – நின் அசையும் வண்டுகள் ஒலிக்கும்  பூவிதழ்கள் பொருந்திய கூந்தலில் துயின்றவர் (மரீஇயோரே – அளபெடை, ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 232, கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார், குறிஞ்சித் திணை தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
காண் இனி வாழி தோழி! பானாள்
மழை முழங்கு அரவம் கேட்ட கழை தின்
மாஅல் யானை, புலி செத்து வெரீஇ,
இருங்கல் விடரகம் சிலம்பப் பெயரும்
பெருங்கல் நாடன் கேண்மை, இனியே,  5
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்,
மன்ற வேங்கை மண நாள் பூத்த
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய்
வியல் அறை வரிக்கும் முன்றில், குறவர்
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும்  10
ஆர்கலி விழவுக் களம் கடுப்ப, நாளும்
விரவுப்பூம் பலியொடு விரைஇ, அன்னை
கடியுடை வியல் நகர்க் காவல் கண்ணி,
முருகு என வேலன் தரூஉம்,
பருவமாகப் பயந்தன்றால் நமக்கே.  15

பாடல் பின்னணி:  களவு ஒழுக்கத்தின்கண் விருப்பம் கொண்டு வரையாது ஒழுகும் தலைவனுக்கு, அன்னை அறிந்ததையும், தலைவிக்கு காவல் மிகுந்தமையும், வெறியாடல் தொடங்குதலும் அறிவுறுத்தற் பொருட்டுத் தோழி கூறியது.  வரைவு கடாயது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  முதிர் மகளிரொடு (10) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஆடுதல் வல்ல மகளிரோடு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முதிய மகளிரோடு.  விரைஇ (12) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பொருந்தி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – விரைந்து.  உள்ளுறைபொ. வே. சோமசுந்தரனார் உரை – முகில் முழக்கத்தை யானை புலி முழக்கம் என்று கருதி அஞ்சி ஓடும் என்றது நம் சுற்றத்தார் இனியவே பேசுவாராகவும் நம் பெருமான் அவர் மகட்கொடை மறுத்து இன்னாதன கூறுவரோ என்று அஞ்சி இரவிலே நாள்தோறும் வந்து வந்து ஓடி விடுகின்றான்.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார்வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேல் என்றார்.

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதை உணர்வாயாக!  நடு இரவில் முழங்கும் இடியொலியைக் கேட்ட, மூங்கிலைத் தின்னும் பெரிய யானை ஒன்று அவ்வொலி புலியின் உறுமல் என்று எண்ணி அஞ்சி, பெரிய மலையின் குகைகளில் எதிரொலி செய்ய ஒலித்து ஓடும் பெரிய மலைகள் பொருந்திய நாடனுடைய நட்பு,

இனி, குன்றுகளை வேலியாகக் கொண்ட சிற்றூரில் மன்றத்தில் உள்ள வேங்கை மரம் மண நாளில் பூத்த மணியை ஒத்த அரும்பின் பொன் நிறமான மலர்கள் அகன்ற பாறைகளில் விழுந்து அவற்றை அழகுபடுத்தும் இல்லத்தின் முற்றத்தில், மலையில் வாழ்பவர்கள் மனையில் உள்ள முதிய மகளிருடன் குரவை ஆட்டம் ஆடும் ஆரவாரம் மிக்க விழாக்களை ஒப்ப, நாள்தோறும், கலந்த பல வகை மலர்களுடன் பொருந்தி, அன்னை, காவல் பொருந்திய அகன்ற மனையின் காவலை எண்ணி, உன்னுடைய மெலிவு முருகனால் ஏற்பட்டது என்று எண்ணி, வேலனை அழைக்கும் பருவமாக அமைந்தது நமக்கு.

சொற்பொருள்:  காண் இனி தோழி – நான் கூறுவதை உணர்வாயாக தோழி, வாழி – நீ நீடு வாழ்வாயாக, பானாள் மழை முழங்கு அரவம் கேட்ட – நடு இரவில் முழங்கும் இடியொலியைக் கேட்ட, கழை தின் மாஅல் யானை – மூங்கிலைத் தின்னும் பெரிய யானை, புலி செத்து வெரீஇ – புலி என்று எண்ணி அஞ்சி (வெரீஇ – அளபெடை, வெருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது), இருங்கல் விடரகம் சிலம்பப் பெயரும் – பெரிய மலையின் குகைகளில் எதிரொலி செய்ய ஓடும், பெருங்கல் நாடன் கேண்மை – பெரிய மலைகள் பொருந்திய நாடனுடைய நட்பு, இனியே – இனி, குன்ற வேலிச் சிறுகுடி – குன்றுகளை வேலியாகக் கொண்ட சிற்றூர், ஆங்கண் – அங்கே, மன்ற வேங்கை மண நாள் பூத்த – மன்றத்தில் உள்ள வேங்கை மரம் மண நாளில் பூத்த, மணி ஏர் அரும்பின் – மணியை ஒத்த அரும்பினுடைய, பொன் வீ தாஅய் வியல் அறை வரிக்கும் – பொன் நிறமான மலர்கள் அகன்ற பாறைகளில் விழுந்து அவற்றை அழகுபடுத்தும் flowers, (தாஅய் – அளபெடை), முன்றில் – முற்றத்தில், குறவர் – மலையில் வாழ்பவர்கள், மனை முதிர் மகளிரொடு – மனையில் உள்ள திறமை மிக்க மகளிருடன், மனையில் உள்ள முதிய மகளிருடன், குரவை தூங்கும் – குரவை ஆட்டம் ஆடும், ஆர்கலி விழவுக் களம் கடுப்ப – ஆரவாரம் மிக்க விழாக்களை ஒப்ப, நாளும் – நாள்தோறும், விரவுப் பூம் பலியொடு விரைஇ – கலந்த பல வகை மலர்களுடன் பொருந்தி (விரைஇ – அளபெடை), அன்னை – அன்னை, கடியுடை வியல் நகர்க் காவல் கண்ணி – காவல் பொருந்திய அகன்ற மனையின் காவலை எண்ணி, முருகு என – முருகன் எனக் கருதி, வேலன் தரூஉம் – வேலனை அழைக்கும் (தரூஉம் – அளபெடை), பருவமாகப் பயந்தன்றால் நமக்கே – பருவமாக அமைந்தது நமக்கு (நமக்கே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 233, மாமூலனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
அலமரல் மழைக்கண் மல்கு பனி வார, நின்
அலர் முலை நனைய, அழாஅல் தோழி!
எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலப்
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென,
ஊன் இல் யானை உயங்கும் வேனில்  5
மறப்படைக் குதிரை, மாறா மைந்தின்,
துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை
முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை, இரும் பல்
கூளிச் சுற்றம் குழீஇயிருந்தாங்கு,  10
குறியவும் நெடியவும் குன்றுதலை மணந்த
சுரன் இறந்து அகன்றனர் ஆயினும் மிக நனி
மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ
பொருள்வயின் நீடலோ இலர், நின்
இருள் ஐங்கூந்தல் இன்துயில் மறந்தே.  15

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

பொருளுரை:  தோழி!  கலங்குகின்ற குளிர்ந்த கண்களிலிருந்து நிறைந்த கண்ணீர் ஒழுக, நின் பரந்த முலைகள் நனையும்படி, நீ அழாதே. 

நெருப்புச் சூழ்ந்து உண்ட கரிந்த இடங்களையுடைய பெரிய நிலத்தை, வளம் பொருந்திய வேறு இடங்களுக்கு ஓடும் முகில்கள் துறந்துவிட்டதால், உணவு இன்மையின்தசை குறைந்த யானை வருந்தும் வேனிற்காலத்தில், மறம் பொருந்திய குதிரை படைகளுடன் புறக்கிடாத வலிமையையுடைய, மேல் உலகம் அடைந்த கெடாத நல்ல புகழையுடைய முன்னோர்களுக்கு உரிய கடனை ஆற்றிய, உதியஞ்சேரல் பலியாகப் பெருஞ்சோறு கொடுத்த நாளில், கரிய பல பேய்ச் சுற்றங்கள் கூடியிருந்தாற்போல், குறியனவாகவும் நெடியனவாகவும் குன்றுகள் இடந்தொறும் உள்ள பாலை நிலத்தைக் கடந்து சென்றார் ஆனாலும், மிகப் பெரிதும் அடங்காத உள்ளத்துடன் அறிவு மயங்கி, பொருள் ஈட்டும் பொருட்டுக் காலம் தாழ்த்த மாட்டார், நின் கரிய ஐந்து பகுதியாகப் பிரித்த கூந்தலில் பெரும் இனிய துயிலை மறந்து.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘தலைவரும் விழுமநிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் நூற்பாவின்கண் ‘நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களை என மொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு என்று இவை எல்லாம்’ என வரும் விதி கொள்க.  வரலாறு –உதியஞ்சேரல்.  அலமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).  மயக்குறாஅ – மயக்குற்று என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  அலமரல் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மனம் சுழலாதே, வியங்கோள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கலங்குகின்ற கண்கள்.  புறநானூறு 2 – அலங்கு உளைப் புரவி ஐவரோடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம் பூந்தும்பை ஈரைம்பதின்மரும் பொருது களத்து ஒழியப், பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!  பேணிய (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பேணுதற்பொருட்டு, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கடன் ஆற்றிய.

சொற்பொருள்:  அலமரல் மழைக்கண் மல்கு பனி வார நின் அலர் முலை நனைய – கலங்குகின்ற குளிர்ந்த கண்களிலிருந்து நிறைந்த கண்ணீர் ஒழுக நின் பரந்த முலைகள் நனையும்படி, அழாஅல் – நீ அழாதே, நீ துன்பத்தில் ஆழ்ந்துவிடாதே (அழாஅல் – அளபெடை), தோழி – தோழி, எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலப் பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென – நெருப்புச் சூழ்ந்து உண்ட கரிந்த இடங்களையுடைய பெரிய நிலத்தை வளம் பொருந்திய வேறு இடங்களுக்கு ஓடும் முகில்கள் துறந்துவிட்டதால், ஊன் இல் யானை உயங்கும் வேனில் – தசை குறைந்த யானை வருந்தும் வேனிற்காலத்தில், மறப்படைக் குதிரை மாறா மைந்தின் – மறம் பொருந்திய குதிரை படைகளுடன் புறக்கிடாத வலிமையையுடைய, துறக்கம் எய்திய தொய்யா நல் இசை முதியர்ப் பேணிய – மேல் உலகம் அடைந்த கெடாத நல்ல புகழையுடைய முன்னோர்களுக்கு உரிய கடனை ஆற்றிய, உதியஞ்சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை – உதியஞ்சேரல் பலியாகப் பெருஞ்சோறு கொடுத்த நாளில், இரும் பல் கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு – கரிய பல பேய்ச் சுற்றங்கள் கூடியிருந்தாற்போல் (குழீஇ – அளபெடை), குறியவும் நெடியவும் குன்றுதலை மணந்த சுரன் இறந்து அகன்றனர் ஆயினும்  – குறியனவாகவும் நெடியனவாகவும் குன்றுகள் இடந்தொறும் உள்ள பாலை நிலத்தைக் கடந்து சென்றார் ஆனாலும் (தலை – அசைநிலை, இடமுமாம், சுரன் – சுரம் என்பதன் போலி), மிக நனி மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ – மிகப் பெரிதும் அடங்காத உள்ளத்துடன் அறிவு மயங்கி (மிக நனி – ஒருபொருட் பன்மொழி), பொருள்வயின் – பொருள் ஈட்டும் பொருட்டு, நீடலோ இலர் – காலம் தாழ்த்த மாட்டார் (நீடலோ – ஓகாரம் அசைநிலை), நின் இருள் ஐங்கூந்தல் இன்துயில் மறந்தே – நின் கரிய ஐந்து பகுதியாகப் பிரித்த கூந்தலில் பெரும் இனிய துயிலை மறந்து (மறந்தே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 234, பேயனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை,
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்,
நிரை பறை அன்னத்து அன்ன விரை பரிப்
புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய
வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய  5
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்பக்,
கால் என மருள, ஏறி நூல் இயல்
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந்தேர்
வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந,
ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை  10
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள,
அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி
முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத,
எல்லை போகிய புல்லென் மாலைப்
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர்,  15
கழிபடர் உழந்த பனி வார் உண்கண்
நல் நிறம் பரந்த பசலையள்
மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

பொருளுரை:  தேரைச் செலுத்துவதில் வெற்றியுள்ள பாகனே!  முகில்கள் நீரைப் பொழிந்து நீர் வளம் மிக்கு விளங்குகின்ற இந்த நாளில், நுண்ணிய மணல் படர்ந்த குளிர்ந்த நீர் நிலையின் அருகில் வரிசையாக பறத்தலை உடைய அன்னப் பறவையை ஒத்த, விரைந்து ஓடும் புல்லிய பிடரி மயிரையுடைய செருக்கான குதிரைகளின் மென்மையாக பூட்டிய கடிவாள வாரினைப் பற்றி, பதிந்த பல ஆரங்களையுடைய உருளைகள் மென்மையான நிலத்தை அறுப்ப, காற்று என்று வியக்கும்படி, நூலின்படி இயற்றப்பட்ட, கண் பார்வையில் அமையாமல் விரைவாக ஓடுகின்ற, புனையப்பட்ட உயர்ந்த தேரினை மிக வேகமாக செலுத்துவாயாக, நெருங்கின தழையைத் தின்று வெறுத்த துள்ளும் நடையுடைய இளைய பெண்மான் தன்னுடைய ஆண் மானுடன் கூடி மகிழ்ச்சி உடையதாய் இடையூறு இன்றித் துள்ளித் திரிய, அழகிய சிறையையுடைய வண்டின் மென்மையான பறத்தலையுடைய கூட்டம் முல்லையின் நறுமணமுடைய மலர்களின் தாதினை விரும்பி ஊத, பகல் பொழுது கழிந்த புல்லிய மாலைப் பொழுதில், முல்லை நிலத்தைச் சார்ந்த உறைவதற்கு இனிமையான நல்ல ஊரில் உள்ள, மிக்க துன்பத்தால் வருந்திய, கண்ணீர் வடியும் மையிட்ட கண்களையும், நல்ல மேனியில் பரந்த பசலையுமுடைய என் தலைவியின் மின்னலை ஒத்த கூந்தலின் பிணிப்பு நீங்குவதற்கு.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் முடிந்து அமைந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்’ என வரும் விதி கொள்க.  மின் நேர் ஓதி (18) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மின்னலை ஒத்த கூந்தல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மின்னல் போன்று மெலிந்த எம் காதலியின் கூந்தல்.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல்,  (தொல்காப்பியம், இடையியல் 26).  அன்னத்து – அன்னம், அத்து சாரியை, முனைஇய – அளபெடை, மதி – முன்னிலையசை.

சொற்பொருள்:  கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை – முகில்கள் நீரைப் பொழிந்து நீர் வளம் மிக்கு விளங்குகின்ற நாளில், நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின் – நுண்ணிய மணல் படர்ந்த குளிர்ந்த நீர் நிலையின் அருகில், நிரை பறை அன்னத்து அன்ன – வரிசையாக பறத்தலை உடைய அன்னப் பறவையை ஒத்த (அன்னத்து – அன்னம், அத்துச் சாரியை), விரை பரிப் புல் உளைக் கலி மா – விரைந்து ஓடும் புல்லிய பிடரி மயிரையுடைய செருக்கான குதிரைகள், மெல்லிதின் கொளீஇய வள்பு ஒருங்கு அமையப் பற்றி – மென்மையாக பூட்டிய கடிவாள வாரினைப் பற்றி (கொளீஇய – அளபெடை), முள்கிய பல் கதிர் ஆழி – பதிந்த பல ஆரங்களையுடைய உருளை, மெல் வழி அறுப்ப – மென்மையான நிலத்தை அறுப்ப, கால் என மருள – காற்று என்று வியக்க, ஏறி – ஏறி, நூல் இயல் – நூலின்படி இயற்றப்பட்ட, கண் நோக்கு ஒழிக்கும் – கண் பார்வையில் அமையாமல் ஓடுகின்ற, பண் அமை நெடுந்தேர் – செய்யப்பட உயர்ந்த தேர், வல் விரைந்து – மிக வேகமாக, ஊர்மதி – செலுத்துவாயாக (மதி – முன்னிலையசை), நல் வலம் பெறுந – தேர் செலுத்துவதில் வெற்றியுடைய பாகனே (விளி), ததர் தழை முனைஇய – நெருங்கின தழையைத் தின்று வெறுத்த (முனைஇய – அளபெடை), தெறி நடை மடப் பிணை – துள்ளும் நடையுடைய இளைய பெண்மான், ஏறு புணர் உவகைய – ஆண் மானுடன் கூடி மகிழ்ச்சி உடையதாய், ஊறு இல உகள – இடையூறு இன்றித் துள்ளித் திரிய (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி – அழகிய சிறையையுடைய வண்டின் மென்மையான பறத்தலையுடைய கூட்டம், முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத – முல்லையின் நறுமணமுடைய மலர்களின் தாதினை விரும்பி ஊத, எல்லை போகிய புல்லென் மாலை – பகல் பொழுது கழிந்த புல்லிய மாலைப் பொழுது, புறவு அடைந்திருந்த – முல்லை நிலத்தைச் சார்ந்திருந்த, உறைவு இன் நல் ஊர் – உறைவதற்கு இனிமையான நல்ல ஊர், கழிபடர் உழந்த – மிக்க துன்பத்தால் வருந்திய, பனி வார் உண்கண் – கண்ணீர் வடியும் மையிட்ட கண்கள், நல் நிறம் பரந்த பசலையள் – நல்ல மேனியில் பரந்த பசலையுடைய என் தலைவி, மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே – மின்னலை ஒத்த கூந்தலின் பிணிப்பு நீங்க (விடவே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 235, கழார்க்கீரன் எயிற்றியார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது 
அம்ம வாழி தோழி! பொருள் புரிந்து
உள்ளார் கொல்லோ காதலர்? உள்ளியும்
சிறந்த செய்தியின் மறந்தனர் கொல்லோ?
பயன் நிலம் குழைய வீசிப் பெயல் முனிந்து,
விண்டு முன்னிய கொண்டல் மா மழை  5
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப,
வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழச்,
சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணியக்  10
களவன் மண் அளைச் செறிய அகல்வயல்
கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ
மாரி அம் குருகின் ஈரிய குரங்க,
நனி கடுஞ்சிவப்பொடு நாமம் தோற்றிப்,
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை  15
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய
நுதல் இறை கொண்ட அயல் அறி பசலையொடு
தொன்னலம் சிதையச் சாஅய்,
என்னள் கொல் அளியள்? என்னாதோரே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவியை வற்புறுத்தும் தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக.  பயன் தரும் நிலங்கள் குழையப் பெய்து பின் பெய்தலை வெறுத்து மலையைச் சேர்ந்த கீழ்க்காற்றுடன் வந்த கரிய (பெரிய) முகில்கள், இரவில் வந்து தங்கிப் பொங்கித் துளிகளை வீச, வாடைக்காற்றினால் உயர்ந்த அழகிய இதழ்களைக் கொண்ட செங்காந்தளின் அரும்புகள் சுடரைக் கொண்ட அகல் விளக்குகள் போல் மலர, சுரிந்த அரும்புகளை உடைய முசுண்டைச் செடியின் கட்டு அவிழ்ந்த வெண்ணிற மலர்கள் வானை அழகு செய்யும் விண்மீன்களைப் போல் புதர்களை அழகு செய்ய, நண்டுகள் தம் மண் வளைகளை அடைய, அகன்ற வயல்களில் உள்ள கிளைத்த விரிந்த கரும்பின் திரண்ட காம்பையுடைய வெள்ளை மலர்கள் மழையில் நனைந்த குருகுகள் போல் ஈரத்துடன் வளைந்திருக்க, மிக்க சினத்துடன் அச்சத்தை உண்டாக்கி பனியுடன் இருக்கும் நல்ல பண்பு இல்லாத வாடைக்காற்று, கலக்கத்தையுடைய மாலை பொழுதுடன் சேர்ந்து அருள் இல்லாது துன்புறுத்த, நெற்றியில் தங்கிய பிறரால் அறியப்படும் பசலையுடன் பண்டைய அழகு கெட மெலிந்து, என்ன நிலையில் உள்ளாளோ, அவள் இரங்கத்தக்கவள் என எண்ணாதவராய், பொருள் ஈட்டுதலை விரும்பி நம்மை நினைக்காது உள்ளாரோ நம் தலைவர்?  நினைத்தும் பொருள் ஈட்டுவதையே தன் குறிக்கோளாகக் கொண்டமையால் நம்மை மறந்துவிட்டாரோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  களவன் (11) – கள்வன் என்றும் சில உரைகளில் உள்ளது.  நச்சினார்க்கினியரின் கலித்தொகை உரை நூலில் ‘களவன்’ என்று உள்ளது (பாடல் 88).  பொ. வே. சோமசுந்தரனார், வேங்கடசாமி நாட்டார், ஒளவை துரைசாமி, உ. வே. சாமிநாதையர் ஆகியவர்களின் அகநானூறு, ஐங்குறுநூறு உரை நூல்களில் ‘கள்வன்’ என்று உள்ளது.  நாம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  கொண்டல் மா மழை (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கீழ்த்திசை காற்றோடு வந்த பெரிய முகில், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கொண்டலாகிய கரிய மேகம்.  ஒப்புமை – பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண்மழை அகல் இரு விசும்பில் துவலை கற்ப – நெடுநல்வாடை 19–20.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  அம்ம நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, பொருள் புரிந்து உள்ளார் கொல்லோ காதலர் – பொருள் ஈட்டுதலை விரும்பி நம்மை நினைக்காது உள்ளாரோ நம் தலைவர் (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ அசைநிலை), உள்ளியும் சிறந்த செய்தியின் மறந்தனர் கொல்லோ – நினைத்தும் பொருள் ஈட்டுவதையே தன் குறிக்கோளாகக் கொண்டமையால் நம்மை மறந்துவிட்டாரோ, பயன் நிலம் குழைய வீசிப் பெயல் முனிந்து விண்டு முன்னிய கொண்டல் மா மழை – பயன் தரும் நிலங்கள் குழையப் பெய்து பின் பெய்தலை வெறுத்து மலையைச் சேர்ந்த கீழ்க்காற்றுடன் வந்த கரிய (பெரிய) முகில்கள் (குழைய – தளிர்க்க எனினுமாம்), மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப – இரவில் வந்து தங்கிப் பொங்கித் துளிகளை வீச, வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ – வாடைக்காற்றினால் உயர்ந்த அழகிய இதழ்களைக் கொண்ட செங்காந்தளின் அரும்புகள் சுடரைக் கொண்ட அகல் விளக்குகள் போல் மலர (அகலின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய – சுரிந்த அரும்புகளை உடைய முசுண்டைச் செடியின் கட்டு அவிழ்ந்த வெண்ணிற மலர்கள் வானை அழகு செய்யும் விண்மீன்களைப் போல் புதர்களை அழகு செய்ய (மீனின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, முசுண்டை – Rivea ornata, Leather–berried bindweed), களவன் மண் அளைச் செறிய – நண்டுகள் தம் மண் வளைகளை அடைய, அகல் வயல் கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ மாரி அம் குருகின் ஈரிய குரங்க – அகன்ற வயல்களில் உள்ள கிளைத்த விரிந்த கரும்பின் திரண்ட காம்பையுடைய வெள்ளை மலர்கள் மழையில் நனைந்த குருகுகள் போல் ஈரத்துடன் வளைந்திருக்க (குருகின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, குரங்குதல் – வளைதல்), நனி கடும் சிவப்பொடு நாமம் தோற்றிப் பனி கடி கொண்ட பண்பு இல் வாடை – மிக்க சினத்துடன் அச்சத்தை உண்டாக்கி பனியுடன் இருக்கும் நல்ல பண்பு இல்லாத வாடைக்காற்று (நாமம் – நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது), மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய – கலக்கத்தையுடைய மாலை பொழுதுடன் சேர்ந்து அருள் இல்லாது துன்புறுத்த, நுதல் இறை கொண்ட அயல் அறி பசலையொடு தொல் நலம் சிதையச் சாஅய் – நெற்றியில் தங்கிய பிறரால் அறியப்படும் பசலையுடன் பண்டைய அழகு கெட மெலிந்து (அயல் – ஆகுபெயர் அயலோர்க்கு, சாஅய் – அளபெடை), என்னள் கொல் – என்ன நிலையில் உள்ளாளோ, அளியள் என்னாதோரே – அவள் இரங்கத்தக்கவள் என எண்ணாதவர் (என்னாதோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 236, பரணர், மருதத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
மணி மருள் மலர முள்ளி அமன்ற
துணி நீர், இலஞ்சிக் கொண்ட பெருமீன்
அரிநிறக் கொழுங்குறை வௌவினர் மாந்தி,
வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை
இடன் இல நெரிதரு நெடுங்கதிர்ப் பல்சூட்டுப் 5
பனிபடு சாய்ப்புறம் பரிப்பக், கழனிக்,
கருங்கோட்டு மாஅத்து அலங்குசினைப் புதுப்பூ
மயங்கு மழைத் துவலையின் தாஅம் ஊரன்
காமம் பெருமை அறியேன், நன்றும்
உய்ந்தனென் வாழி தோழி, அல்கல் 10
அணிகிளர் சாந்தின் அம்பட்டு இமைப்பக்
கொடுங்குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை
அறியாமையின் அழிந்த நெஞ்சின்,
ஏற்றியல் எழினடைப் பொலிந்த மொய்ம்பின்,
தோட்டு இருஞ்சுரியல் மணந்த பித்தை 15
ஆட்டன் அத்தியைக் காணீரோ? என
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக்
கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த
ஆதிமந்தி போல, 20
ஏதம் சொல்லி, பேது பெரிது உறலே.

பாடல் பின்னணி:  தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தினால் வருந்தி, அவனுடன் ஊடியிருந்த தலைவி, அவன் வந்தபொழுது ஊடாது அவனுடன் மகிழ்ந்திருந்தாள்.  பின்னொரு நாள் தலைவன் இல்லாதபொழுது அங்குச் சென்ற தோழிக்குத் தலைவி தான் ஊடாமை எதனால் எனக் கூறியது. 

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  நீலமணியை ஒத்த மலர்களையுடைய முள்ளிச் செடிகள் நிறைந்த தெளிந்த நீரையுடைய குளத்தில் கொண்ட பெரிய மீன்களின் வரியும் நிறமும் பொருந்திய கொழுத்த துண்டுகளை கவ்வி உண்டு, வெள்ளை நெல்லை அறுவடை செய்பவர்கள், நீக்கியதைக் கொணர்ந்து போட்ட பின்னர், வெற்றிடம் இல்லாதபடி சேர்ந்துள்ள நீண்ட கதிர்களையுடைய பல நெல் கட்டுக்களை உடைய பனி விழுந்து நனைந்த பக்கங்கள் தாங்கும்படி, வயலின் அருகில் உள்ள கரிய வரம்பு மேல் நிற்கும் மாமரத்தின் அசையும் கிளைகளிலுள்ள புதிய மலர்கள் கலந்து, பெய்யும் மழைத்துளிகள் போல் உதிர்ந்து பரவிக்கிடக்கும் ஊரின் தலைவனின், காமத்தின் சிறப்பை அறியாதேன் ஆக,

இரவில், அழகு விளங்கும் சாந்துடன் அழகிய பட்டு ஆடிய ஒளிர, வளைந்த காதணிகளை அணிந்த மகளிரைப் போல், நம் தலைவன் நாணியிருந்த நிலையைக் கண்டு, அறியாமையால் அழிந்த நெஞ்சை உடையவளாக ஆயினேன்.  ஏற்றின் தன்மையுடைய அழகு நடையையும் பொலிவுடைய தோள்களையும், மலர் சூடிய கரிய சுருண்ட தலைமயிரை உடைய ஆட்டம் அத்தியைக் கண்டீரோ, என்று நாடுதோறும் ஊர்தோறும் சென்று, அவனைக் கடல் கொண்டது போலும் ஆறு கொண்டது போலும் என்று அழுத கண்களையுடையவள் ஆக, தன் கணவனை இழந்த ஆதிமந்தி போல், துன்பத்தைச் சொல்லி, பெரிதும் மனக்கலக்கம் அடைதலிலிருந்தும் பெரிதும் தப்பினேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘கொடுமை ஒழுக்கத்துத் தோழிக்கு உரியவை வடு அறு சிறப்பின் கற்பின் திரியாமை காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்பதனால் அமைத்துக் கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘அணங்கே விலங்கே’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 8) என்னுஞ் சூத்திரத்தே, புலவி பொருளாக அச்சம் வருதற்கு இப்பாட்டின் ‘அணிகிளர் சாந்தின் அம்பட்டு இமைப்பக் கொடுங்குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை’ என்ற அடிகளைக் காட்டினர் பேராசிரியர்.  ஒப்புமை – நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் குடி முறை குடி முறை தேரின் கெடுநரும் உளரோ நம் காதலோரே – குறுந்தொகை 130.  பனி படு சாய்ப் புறம் பரிப்ப (6) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பனி தங்கிய கோரையையுடைய களன் எல்லாம் சூழ, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பனியால் நனைந்த பக்கங்கள் தாங்கும்படி.  தோட்டு இருஞ்சுரியன் மணந்த பித்தை (15) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தொகுதி கொண்ட கரிய சுருளைப் பொருந்திய தலை மயிரினையுமுடைய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலர் சூடிய கரிய சுருள் பொருந்திய தலை மயிரினையுமுடைய.  ஆதிமந்தி – அகநானூறு 45 – காதலர் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து ஆதிமந்தி போலப் பேதுற்று அலந்தனென் உழல்வென் கொல்லோ, அகநானூறு 76 – கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன் வகை அமைப் பொலிந்த வனப்பு அமை தெரியல் சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ என ஆதிமந்தி பேதுற்று இனைய, அகநானூறு 135 – ஆதிமந்தியின் அறிவு பிறிதாகிப் பேதுற்றிசினே காதலம் தோழி, அகநானூறு 222 – ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத் தாழ் இருங்கதுப்பின் காவிரி வவ்வலின் மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த ஆதிமந்தி, அகநானூறு 236 – கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி போல, 396 – மந்தி பனி வார் கண்ணள் பல புலந்து உறைய.  குறுந்தொகை 31, ஆதிமந்தியார் பாடல் – யாண்டும் காணேன் மாண்டக்கோனை யானும் ஓர் ஆடுகள மகளே, என் கைக் கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே.  வரலாறு – ஆட்டன் அத்தி, ஆதிமந்தி.  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – முனைவர் கு.வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லதிகாரம், உரியியல் 57).

சொற்பொருள்:  மணி மருள் மலர முள்ளி அமன்ற துணி நீர் இலஞ்சிக் கொண்ட பெருமீன் அரிநிறக் கொழுங்குறை வௌவினர் மாந்தி – நீலமணியை ஒத்த மலர்களையுடைய முள்ளிச் செடிகள் நிறைந்த தெளிந்த நீரையுடைய குளத்தில் கொண்ட பெரிய மீன்களின் வரியும் நிறமும் பொருந்திய கொழுத்த துண்டுகளை கவ்வி உண்டு,  வெண்ணெல் அரிநர் – வெள்ளை நெல்லை அறுவடை செய்பவர்கள், பெயர்நிலைப் பின்றை – நீக்கியதைக் கொணர்ந்து போட்ட பின்னர், இடன் இல நெரிதரு நெடுங்கதிர்ப் பல் சூட்டுப் பனிபடு சாய்ப்புறம் பரிப்ப – வெற்றிடம் இல்லாதபடி சேர்ந்துள்ள நீண்ட கதிர்களையுடைய பல நெல் கட்டுக்களை உடைய பனி விழுந்து நனைந்த பக்கங்கள் தாங்கும்படி, கழனிக் கருங்கோட்டு மாஅத்து அலங்குசினைப் புதுப்பூ மயங்கு மழைத் துவலையின் தாஅம் ஊரன் – வயலின் அருகில் உள்ள கரிய வரம்பு மேல் நிற்கும் மாமரத்தின் அசையும் கிளைகளிலுள்ள புதிய மலர்கள் கலந்து பெய்யும் மழைத்துளிகள் போல் உதிர்ந்து பரவிக்கிடக்கும் ஊரின் தலைவனின், காமம் பெருமை அறியேன் – காமத்தின் சிறப்பை அறியாதேன், நன்றும் உய்ந்தனென் – பெரிதும் தப்பினேன், வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, அல்கல் – இரவில், அணிகிளர் சாந்தின் அம்பட்டு இமைப்ப – அழகு விளங்கும் சாந்துடன் அழகிய பட்டு ஆடிய ஒளிர, கொடுங்குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை – வளைந்த காதணிகளை அணிந்த மகளிரைப் போல் நம் தலைவன் நாணியிருந்த நிலையைக் கண்டு, அறியாமையின் அழிந்த நெஞ்சின் – அறியாமையால் அழிந்த நெஞ்சை உடையவளாக, ஏற்று இயல் எழில் நடைப் பொலிந்த மொய்ம்பின் – ஏற்றின் தன்மையுடைய அழகு நடையையும் பொலிவுடைய தோள்களையும், தோட்டு இருஞ்சுரியல் மணந்த பித்தை ஆட்டன் அத்தியைக் காணீரோ – மலர் சூடிய கரிய சுருண்ட தலைமயிரை உடைய ஆட்டம் அத்தியைக் கண்டீரோ, என நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் – என்று நாடுதோறும் ஊர்தோறும் சென்று, கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் – கடல் கொண்டது போலும் ஆறு கொண்டது போலும் என்று அழுத கண்களையுடையவள் ஆக, காதலற் கெடுத்த ஆதிமந்தி போல – தன் கணவனை இழந்த ஆதிமந்தி போல், ஏதம் சொல்லி – துன்பத்தைச் சொல்லி, பேது பெரிது உறலே – பெரிதும் மனக்கலக்கம் அடைதல்

அகநானூறு 237, தாயங்கண்ணனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
‘புன் கால் பாதிரி அரி நிறத் திரள் வீ
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்
தேன் இமிர் நறுஞ்சினைத் தென்றல் போழக்,
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து  5
இன்னா கழியும் கங்குல்’ என்று நின்
நல் மா மேனி அணி நலம் புலம்ப,
இனைதல் ஆன்றிசின் ஆயிழை! கனை திறல்
செந்தீ அணங்கிய செழு நிணக் கொழுங்குறை
மென் தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு,  10
இருங்கதிர் அலமரும் கழனிக் கரும்பின்
விளை கழை பிழிந்த அம் தீஞ்சேற்றொடு,
பால் பெய் செந்நெல் பாசவல் பகுக்கும்
புனல் பொரு புதவின் உறந்தை எய்தினும்
வினை பொருளாகத் தவிரலர், கடை சிவந்து  15
ஐய அமர்த்த உண்கண் நின்
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தியது.  

பொருளுரை:  அழகிய அணிகலன்களை அணிந்த தலைவியே!  புல்லிய அடியையுடைய பாதிரி மரத்தின் வரிகள் உடைய நிறமுடைய திரண்ட மலர்கள் மெல்லிய கொடியாகிய அதிரலின் மலர்களுடன் நுண்ணிய மணலில் கோலம் செய்ய, பாம்பின் பற்கள் போன்ற அரும்புகள் முதிர்ந்த குரவ மரத்தின் வண்டுகள் இமிரும் நறிய கிளைகளில் தென்றல் ஊடுறுத்துச் செல்ல, குயில்கள் கூவுதலைப் பயின்ற வேனில் காலத்திலும், உறக்கம் இல்லாமல் வருந்தும்படி கழியும் இரவு என்று கூறி, நின் நல்ல மாமை நிறமுடைய மேனியின் சிறந்த அழகை பாழ்படுத்தும், வருந்துதலை விடுவாயாக! 

மிக்க வலிய செந்தீயில் சுட்ட வளமான நிணத்தின் கொழுத்த துண்டுகளை, மெல்லிய தினைச் சோற்றில் சொரிந்த கலத்துடன், பெரிய நெற்கதிர்கள் சுழலும் வயலில் முற்றிய கரும்பின் தண்டைப் பிழிந்த அழகிய இனிய சாற்றுடன் பாலைப் பெய்து கலந்த பசிய அவலை யாவருடனும் பகிரும், ஆற்று நீர் தாக்குகின்ற மதகுகளையுடைய உறந்தையைப் பெற்றாலும், நம் தலைவர் பொருள் ஈட்டும் வினையின்பொருட்டு, தவிர்க்க மாட்டார், கடை சிவந்து வியக்கும்படியாக் உள்ள மையுண்ட கண்களையுடைய நின் கூரிய அழகிய வெள்ளை பற்களில் ஊறிய நீரினைப் பருகுவதை.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘தலை வரும் விழும நிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 39) என வரும் நூற்பாவின்கண் ‘நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களை என மொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு என்று இவை எல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் தோழி மேன’ என வரும் விதி கொள்க.  புன் கால் பாதிரி அரி நிறத் திரள் வீ (1) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – புல்லிய காம்பினுடைய பாதிரியின் வரிகள் பொருந்திய நிறமுடைய திரண்ட மலர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – புல்லிய அடிப்பகுதியையுடைய பாதிரியின் வரியும் நிறமும் உடைய திரண்ட மலர்கள்.  வரலாறு – உறந்தை.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  ஐய அமர்த்த உண்கண் (16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வியத்தனவாக ஒன்றனோடு ஒன்று பொருதுகின்ற மையுண்ட கண்கள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வியக்குமாறு பொருந்திய மையுண்ட கண்கள்.  வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

சொற்பொருள்:  புன் கால் பாதிரி அரி நிறத் திரள் வீ நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப – புல்லிய அடியையுடைய பாதிரி மரத்தின் வரிகள் உடைய நிறமுடைய திரண்ட மலர்கள் மெல்லிய கொடியாகிய அதிரலின் மலர்களுடன் நுண்ணிய மணலில் கோலம் செய்ய (பாதிரி மரம் – Stereospermum chelonoides, Trumpet flower, அதிரல் – காட்டு மல்லிகை, புன அதிரல், புனலி) அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின் தேன் இமிர் நறுஞ்சினைத் தென்றல் போழ – பாம்பின் பற்கள் போன்ற அரும்புகள் முதிர்ந்த குரவ மரத்தின் வண்டுகள் இமிரும் நறிய கிளைகளில் தென்றல் ஊடுறுத்துச் செல்ல (குரவ மரம் – Webera Corymbosa, Bottle Flower Tree), குயில் குரல் கற்ற வேனிலும் – குயில்கள் கூவுதலைப் பயின்ற வேனில் காலத்திலும், துயில் துறந்து இன்னா கழியும் கங்குல் என்று – உறக்கம் இல்லாமல் வருந்தும்படி கழியும் இரவு என்று கூறி, நின் நல் மா மேனி அணி நலம் புலம்ப – நின் நல்ல மாமை நிறமுடைய மேனியின் சிறந்த அழகை பாழ்படுத்தும், இனைதல் ஆன்றிசின் – வருந்துதலை விடுவாயாக (சின் – முன்னிலை அசைச் சொல்), ஆயிழை – அழகிய அணிகலன்களை அணிந்த தலைவியே (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), கனை திறல் செந்தீ அணங்கிய செழு நிணக் கொழுங்குறை – மிக்க வலிய செந்தீயில் சுட்ட வளமான நிணத்தின் கொழுத்த துண்டுகளை (அணங்கிய – சுட்ட), மென் தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு – மெல்லிய தினைச் சோற்றில் சொரிந்த கலத்துடன், இருங்கதிர் அலமரும் கழனிக் கரும்பின் விளை கழை பிழிந்த அம் தீஞ்சேற்றொடு பால் பெய் செந்நெல் பாசவல் பகுக்கும் – பெரிய நெற்கதிர்கள் சுழலும் வயலில் முற்றிய கரும்பின் தண்டைப் பிழிந்த அழகிய இனிய சாற்றுடன் பாலைப் பெய்து கலந்த பசிய அவலை யாவருடனும் பகிரும், புனல் பொரு புதவின் உறந்தை எய்தினும் – ஆற்று நீர் தாக்குகின்ற மதகுகளையுடைய உறந்தையைப் பெற்றாலும், வினை பொருளாகத் தவிரலர் – பொருள் ஈட்டும் வினையின்பொருட்டு தவிர்க்க மாட்டார், கடை சிவந்து ஐய அமர்த்த உண்கண் நின் வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே – கடை சிவந்து வியக்கும்படியாக் உள்ள மையுண்ட கண்களையுடைய நின் கூரிய அழகிய வெள்ளை பற்களில் ஊறிய நீரினை (நீரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 238, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
மான்று அமை அறியா மரம் பயில் இறும்பின்
ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்தென,
மடமான் வல்சி தரீஇய, நடுநாள்
இருள் முகைச் சிலம்பின், இரை வேட்டு எழுந்த
பனை மருள் எருத்தின் பல்வரி இரும்போத்து,  5
மடக் கண் ஆமான் மாதிரத்து அலறத்,
தடக் கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு
நனந்தலைக் கானத்து வலம்படத் தொலைச்சி
இருங்கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும்
பெருங்கல் நாட! பிரிதி ஆயின்,  10
மருந்தும் உடையையோ மற்றே, இரப்போர்க்கு
இழை அணி நெடுந்தேர் களிறொடு என்றும்
மழை சுரந்தன்ன ஈகை வண் மகிழ்க்
கழல் தொடித் தடக்கைக் கலிமான், நள்ளி
நளி முகை உடைந்த நறும் கார் அடுக்கத்து  15
போந்தை முழு முதல் நிலைஇய காந்தள்
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த
தண் கமழ் புது மலர் நாறும் நறுநுதற்கே?

பாடல் பின்னணி:  இரவுக்குறி வந்து நீங்கும் தலைவனை எதிர்ப்பட்டுத் தோழி கூறியது. வரைவு கடாயது.  

பொருளுரை:  ஒன்றோடு ஒன்று பின்னியிருத்தல் அறியாதவாறு மரங்கள் அடுத்தடுத்து உள்ள காட்டில், ஈன்று காவற்பட்ட வயவு வருத்தமுடைய பெண் புலி பசியுற்றதால், இளைய மானாகிய உணவைக் கொண்டு வந்து தரும் பொருட்டு நடு இரவில் இருண்ட முழைஞ்சினை (குகையை) உடைய பக்க மலையில், பனந்துண்டைப் போன்ற பிடரியையும் பல வரிகளையும் உடைய பெரிய ஆண் புலி, மடப்பம் பொருந்திய கண்களையுடைய காட்டுப்பசு திசையெல்லாம் பரவும்படி அலற, வளைந்த கொம்பினை உடைய அப்பசுவின் ஏற்றினை அகன்ற இடமுடைய காட்டில் வலப்பக்கம் வீழும்படிக் கொன்று, பெரிய மலையின் அகன்ற பாறைகள் குருதியால் சிவக்க இழுக்கும் பெரிய மலைகள் பொருந்திய நாட்டை உடையவனே!

இவளைப் பிரிந்து நீ செல்வாயாயின், பரிசில் வேண்டுபவர்களுக்கு  அணிகலன்களையும் நெடிய தேர்களையும் களிற்று யானைகளையும், நாள்தோறும், முகில்கள் அளிப்பது போல் தரும் ஈகையையும் மிக்க மகிழ்ச்சியையும் கழல் அணிந்த அடிகளையும் தொடிகள் அணிந்த பெரிய கைகளையும் செருக்கான குதிரைகளையும் உடைய நள்ளியின், செறிந்த அரும்புகள் மலர்ந்த நறிய கரிய பக்கமலையில், பனை மரத்தின் பெரிய அடியின் பக்கத்தில் நிலைபெற்ற காந்தள் செடிகளின் மெல்லிய பிணிக்கப்பட்ட அரும்புகள் அவிழ்ந்து மலர்ந்த குளிர்ச்சியுடன் கமழும் புதிய மலர்கள் போன்ற நறிய நெற்றியையுடைய இவளுக்கு, நீ மருந்தினை உடையையோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனைநிலையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  பிரிதியாயின் மருந்தும் உடையையோ (10–11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ இரவின்கண் இத்தகைய கொடிய வழியில் வருதல் கருதியும் நினது பிரிவினை ஆற்றாதும் தலைவி மெலிந்து வருகின்றாள். நீ இங்ஙனமே செய்யின் அவள் ஒரு நாள் இறந்து படுதல் தேற்றம்.  அங்ஙனம் இறந்து படாமல் செய்வதற்கு நீ மருந்தும் உடையையோ என்று வினவியபடியாம்.  இவ்வாற்றால் இத் தோழி தலைவியின் ஆற்றாமை கூறி இரவுக்குறி மறுத்து நீ அவளை வரைந்து கோடல் வேண்டும் என வரைவு முடுக்கியமை உணர்க.  கழல் தொடி தடக்கை (14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வீரக்கழல் அணிந்த அடியினையும் வீரவலையம் அணிந்த பெரிய கையினையும், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கழலவிட்ட தொடியணிந்த பெரிய கையினையும்.  வரலாறு –நள்ளி.  தான் கொன்ற விலங்கு இடப்பக்கம் விழுந்தால் புலி அதை உண்ணாது – அகநானூறு 3, 29, 238, 252, 357, நற்றிணை 154, புறநானூறு 190.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  ஈன்று இளைப்பட்ட – அகநானூறு 3, 21, 238, நற்றிணை 384.

சொற்பொருள்:  மான்று அமை அறியா மரம் பயில் இறும்பின் ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்தென – ஒன்றோடு ஒன்று பின்னியிருத்தல் அறியாதவாறு மரங்கள் அடுத்தடுத்து உள்ள காட்டில் ஈன்று காவற்பட்ட வயவு வருத்தமுடைய பெண் புலி பசியுற்றதால் (மான்று – பின்னி, பிண – பிணா, ஈறு குறுகியது, வயா என்பது வயவு ஆயிற்று, இறும்பு – காடு), மடமான் வல்சி தரீஇய நடுநாள் இருள் முகைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த பனை மருள் எருத்தின் பல்வரி இரும்போத்து – இளைய மானாகிய உணவைக் கொண்டு வந்து தரும் பொருட்டு நடு இரவில் இருண்ட முழைஞ்சினை (குகையை) உடைய பக்க மலையில் பனந்துண்டைப் போன்ற பிடரியையும் பல வரிகளையும் உடைய பெரிய ஆண் புலி (தரீஇய – அளபெடை, மருள் – உவம உருபு, பல்வரி – ஆகுபெயர் புலிக்கு), மடக் கண் ஆமான் மாதிரத்து அலறத் தடக் கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு நனந்தலைக் கானத்து வலம்படத் தொலைச்சி – மடப்பம் பொருந்திய கண்களையுடைய காட்டுப்பசு திசையெல்லாம் பரவும்படி அலற வளைந்த கொம்பினை உடைய அப்பசுவின் ஏற்றினை அகன்ற இடமுடைய காட்டில் வலப்பக்கம் வீழும்படிக் கொன்று (ஏஎறு – அளபெடை), இருங்கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும் பெருங்கல் நாட – பெரிய மலையின் அகன்ற பாறைகள் குருதியால் சிவக்க இழுக்கும் பெரிய மலைகள் பொருந்திய நாட்டை உடையவனே, பிரிதி ஆயின் – இவளைப் பிரிந்து நீ செல்வாயாயின், மருந்தும் உடையையோ – மருந்தினை உடையையோ, மற்றே – மற்று ஏ அசைநிலைகள், இரப்போர்க்கு இழை அணி நெடுந்தேர் களிறொடு என்றும் மழை சுரந்தன்ன ஈகை வண் மகிழ்க் கழல் தொடித் தடக்கைக் கலிமான் நள்ளி – பரிசில் வேண்டுபவர்களுக்கு  அணிகலன்களையும் நெடிய தேர்களையும் களிற்று யானைகளையும் நாள்தோறும் முகில்கள் அளிப்பது போல் தரும் ஈகையையும் மிக்க மகிழ்ச்சியையும் கழல் அணிந்த அடிகளையும் தொடிகள் அணிந்த பெரிய கைகளையும் செருக்கான குதிரைகளையும் உடைய நள்ளியின், நளி முகை உடைந்த நறும் கார் அடுக்கத்து – செறிந்த அரும்புகள் மலர்ந்த நறிய கரிய பக்கமலையில், போந்தை முழு முதல் நிலைஇய காந்தள் மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த தண் கமழ் புது மலர் நாறும் நறுநுதற்கே – பனை மரத்தின் பெரிய அடியின் பக்கத்தில் நிலைபெற்ற காந்தள் செடிகளின் மெல்லிய பிணிக்கப்பட்ட அரும்புகள் அவிழ்ந்து மலர்ந்த குளிர்ச்சியுடன் கமழும் புதிய மலர்கள் போன்ற நறிய நெற்றியையுடைய இவளுக்கு (நிலைஇய – அளபெடை, நறுநுதல் – அன்மொழித்தொகை, நறுநுதற்கே – ஏகாரம் –அசைநிலை)

அகநானூறு 239, எயினந்தை மகன் இளங்கீரனார், பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அளிதோ தானே, எவன் ஆவது கொல்?
மன்றும் தோன்றாது மரனும் மாயும்,
புலி என உலம்பும் செங்கண் ஆடவர்,
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர்,
எல் ஊர் எறிந்து பல் ஆத் தழீஇய  5
விளிபடு பூசல் வெஞ்சுரத்து இரட்டும்
வேறு பல் தேஅத்து ஆறு பல நீந்திப்,
புள்ளித் தொய்யில் பொறிபடு சுணங்கின்,
ஒள்ளிழை மகளிர் உயர் பிறை தொழூஉம்
புல்லென் மாலை யாம் இவண் ஒழிய  10
ஈட்டு அருங்குரைய பொருள் வயின் செலினே,
நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர் எனக்
குறு நெடு புலவி கூறி நம்மொடு
நெருநலும் தீம் பல மொழிந்த
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே.  15

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 

பொருளுரை:  என் நெஞ்சே!  “பெரும் தகைமை உடையவரே!  புலி போல் முழங்கும் சிவந்த கண்களையுடைய வெட்சி மறவர்கள், தீக்கொள்ளியுடன் பற்றியுள்ள, நீண்ட திரண்ட அம்பினை உடையவர்களாக, இரவில் கரந்தை மறவர்களின் ஊரைத் தாக்கி பல ஆனிரைகளைக் கவர்ந்துக் கொண்டதால் ஏற்பட்ட, ஒலி மிக்க ஆரவாரம் கொடிய சுரத்தில் மாறி மாறி ஒலிக்கும், வேறு பல நாடுகளில் உள்ள வழிகள் பலவற்றைக் கடந்து, புள்ளி வடிவில் உள்ள தொய்யிலையும் பொறிகள் உடைய தேமலையும் உடைய ஒளிரும் அணிகலன்களை அணிந்த மகளிர், உயர்ந்த பிறையைத் தொழும் பொலிவற்ற மாலை வேளையில், யாம் இங்கே தனித்து இருக்க, ஈட்டுவதற்கு அரிய பொருள் ஈட்டும்பொருட்டு சென்றால், மீண்டு வருவதற்குக் காலம் தாழ்த்துவீர் அல்லீரோ”,

என்று குறியவும் நெடியவாகவும் ஊடிக் கூறி, நேற்றும் நம்முடன் இனிய பலவற்றைக் கூறிய, இளமை பொருந்திய நல்லவளான நம் தலைவியின் பெரிய நல்ல ஊரின் மன்றமும் தோன்றாமல் மறைகின்றது.  மரங்களும் மறைகின்றன.  நம் நிலைமை இனி எத்தன்மையது ஆகுமோ?  அது இரங்கத்தக்கது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்’ என வரும் விதி கொள்க.  குரை – ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப (தொல்காப்பியம், இடையியல் 24).  வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  அளிதோ – இரங்கத்தக்கது, தானே – தான் ஏ அசைநிலைகள், எவன் ஆவது – எத்தன்மையது ஆகுமோ, கொல் – அசைநிலை, மன்றும் தோன்றாது – மன்றமும் தோன்றாமல் மறைகின்றது, மரனும் மாயும் – மரங்களும் மறைகின்றன (மரன் – மரம் என்பதன் போலி), புலி என உலம்பும் செங்கண் ஆடவர் ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர் – புலி போல் முழங்கும் சிவந்த கண்களையுடைய வெட்சி மறவர்கள் தீக்கொள்ளியுடன் பற்றியுள்ள நீண்ட திரண்ட அம்பினை உடையவர்களாக (ஞெலி – தீக்கொள்ளி), எல் ஊர் எறிந்து பல் ஆத் தழீஇய – இரவில் கரந்தை மறவர்களின் ஊரைத் தாக்கி பல ஆனிரைகளைக் கவர்ந்துக் கொண்டதால் (தழீஇய – அளபெடை), விளிபடு பூசல் வெஞ்சுரத்து இரட்டும் – ஒலி மிக்க ஆரவாரம் கொடிய சுரத்தில் மாறி மாறி ஒலிக்கும், வேறு பல் தேஅத்து ஆறு பல நீந்தி – வேறு பல நாடுகளில் உள்ள வழிகள் பலவற்றைக் கடந்து, புள்ளித் தொய்யில் பொறிபடு சுணங்கின் ஒள் இழை மகளிர் – புள்ளி வடிவில் உள்ள தொய்யிலையும் பொறிகள் உடைய தேமலையும் உடைய ஒளிரும் அணிகலன்களை அணிந்த மகளிர், உயர் பிறை தொழூஉம் புல்லென் மாலை – உயர்ந்த பிறையைத் தொழும் பொலிவற்ற மாலை வேளையில் (தொழூஉம் – அளபெடை), யாம் இவண் ஒழிய – யாம் இங்கே தனித்து இருக்க, ஈட்டு அரும் குரைய பொருள் வயின் செலினே – ஈட்டுவதற்கு அரிய பொருள் ஈட்டும்பொருட்டு சென்றால் (குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று), நீட்டுவிர் அல்லிரோ – காலம் தாழ்த்துவீர் அல்லீரோ, நெடுந்தகையீர் – பெரும் தகைமை உடையவரே, எனக் குறு நெடு புலவி கூறி – என்று குறியவும் நெடியவாகவும் ஊடிக் கூறி, நம்மொடு நெருநலும் தீம் பல மொழிந்த – நேற்றும் நம்முடன் இனிய பலவற்றைக் கூறிய, சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே – இளமை பொருந்திய நல்லவளான நம் தலைவியின் பெரிய நல்ல ஊர் (ஊரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 240, எழூஉப்பன்றி நாகன் குமரனார், நெய்தல் திணைதோழி தலைவனிடம் சொன்னது
செவ்வீ ஞாழல் கருங்கோட்டு இருஞ்சினைத்
தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை
மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப,
இனிப் புலம்பின்றே கானலும், நளி கடல்
திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில்  5
பன்மீன் கூட்டம் என் ஐயர் காட்டிய
எந்தையும் செல்லுமார் இரவே, அந்தில்
அணங்குடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி,
யாயும் ஆயமோடு அயரும், நீயும்
தேம்பாய் ஓதி திருநுதல் நீவிக்,  10
கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து
இன்துயில் அமர்ந்தனை ஆயின், வண்டு பட
விரிந்த செருந்தி வெண்மணல் முடுக்கர்ப்
பூ வேய் புன்னை அம் தண் பொழில்
வாவே தெய்ய மணந்தனை செலற்கே.  15

பாடல் பின்னணி:  தலைவனுக்கு இரவுக்குறியின் ஏதம் காட்டி, இனி நீ இரவில் வருவது ஒழி என்பதுபடப் பகற்குறி இடம் கூறியது என்றவாறு.  

பொருளுரை:  சிவந்த மலர்களையுடைய ஞாழல் மரத்தின் கரிய கொம்புகளையுடைய பெரிய கிளையில் தனியே இருக்கும் தன் குஞ்சியை நினைத்த, தாழ்வாகப் பறக்கும் நாரை, நீலமணியின் நிறத்தையுடைய நெய்தல் பூக்களையுடைய கரிய உப்பங்கழியிலிருந்து மேலே எழுந்து பறந்திட, இப்பொழுது கடற்கரைச் சோலையும் தனிமை அடைந்துள்ளது.  செறிந்த கடலின் அலைகளையுடைய பரப்பில் திரிந்த திண்மையான படகின் ஒளியால் பல மீன் கூட்டங்களை எம் அண்ணன்மார்க்குக் காட்டிய எம் தந்தையும் இரவில் இல்லத்திற்கு வருவார்.  கடவுள் உடைய குளிர்ந்த துறையில், அக்கடவுளைக் கையால் தொழுது வாழ்த்தி யாயும் ஆயத்தாருடன் சிறப்புச் செய்வாள்.  நீயும் தேன் ஒழுகும் கூந்தலை உடைய தலைவியின் அழகிய நெற்றியைப் தடவி கோங்க மரத்தின் அரும்புகளை ஒத்த குவிந்த முலைகளையுடைய அவள் மார்பில் இனிய துயிலை விரும்பினாய் ஆயின், வண்டுகள் மொய்க்க மலர்ந்த பூக்களையுடைய செருந்தி மரங்கள் பொருந்திய வெள்ளை மணல் பரந்த முடுக்கில் பூக்கள் உடைய புன்னை மரங்களையுடைய அழகிய தண்ணிய சோலைக்கண் வருவாயாக, அவளுடன் கூடிச் செல்வதற்கு.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘களனும் பொழுதும் வரை நிலை விலக்கி காதல் மிகுதி உளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘மாயோன் மேய’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 5) என்னுஞ் சூத்திரத்து ‘அணங்குடை அயரும்’ என்பது ‘நெய்தன் மகளிர் கிளையுடன் குழீஇ வருணற்குப் பரவுக்கடன் கொடுப்பது என்றும், ‘தோழியின் முடியும் இடனுமார் உண்டே’ (தொல்காப்பியம், களவியல் 30) என்னுஞ் சூத்திரத்து ‘பூ வேய் புன்னையந் தண்பொழில் நீ வா’ என்பதனை இது தோழி களஞ் சுட்டியது என்றும், ‘பகற்புணர் களனே’ (தொல்காப்பியம், களவியல் 41) என்னுஞ் சூத்திரத்து, இது தோழி பகற்குறி உரைத்தது என்றும் ‘பொழுதும் ஆறும்’ (தொல்காப்பியம், பொருளியல் 16) என்னுஞ் சூத்திரத்து, இது ‘பகல் நீ வா’ என்றல் வழுவமைதி, என்றும் கூறினர் நச்சினார்க்கினியர்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கானல் புலம்பின்று என்றது பகற்குறிக்கு இடையூறு இன்மை காட்டியபடியாம்.  எந்தை இரவில் இல்லத்திற்குச் செல்லுவர் என்றும் யாய் ஆயமோடு அணங்கிற்கு விழா அயரும் என்றதும் இரவுக்குறிக்கண் நிகழும் இடையூறுகள் காட்டி இரவின்கண் வராதே கொள் எனக் குறிப்பாக மறுத்தபடியாம்.  கோங்க முகைப்போன்ற முலை – அகநானூறு 99 – மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு, அகநானூறு 240 – கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து, குறுந்தொகை 254 – முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர், கலித்தொகை 56 – முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை எனப் பெயல் துளி முகிழ் எனப் பெருத்த நின் இள முலை, கலித்தொகை 117 – கோங்கின் முதிரா இள முகை ஒப்ப திருமுருகாற்றுப்படை 34 – தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் குவி முகிழ் இளமுலை, சிறுபாணாற்றுப்படை 25–26 – யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை.  என் ஐயர் காட்டிய (6) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – என் அண்ணன்மார்க்குக் காட்டுவதற்கு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அண்ணன்மார்க்குக் காட்டிய.  அந்தில் – அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவி என்று ஆயிரண்டு ஆகும் இயற்கைத்து என்ப (இடையியல் 19, தொல்காப்பியம்).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  செவ்வீ ஞாழல் கருங்கோட்டு இருஞ்சினைத் தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை – சிவந்த மலர்களையுடைய ஞாழல் மரத்தின் கரிய கொம்புகளையுடைய பெரிய கிளையில் தனியே இருக்கும் தன் குஞ்சியை நினைத்த தாழ்வாகப் பறக்கும் நாரை (ஞாழல் – புலிநகக்கொன்றை மரம், Cassia sophera , Tigerclaw tree, செவ்வீ – பண்புத்தொகை), மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப இனிப் புலம்பின்றே கானலும் – நீலமணியின் நிறத்தையுடைய நெய்தல் பூக்களையுடைய கரிய உப்பங்கழியிலிருந்து மேலே எழுந்து பறந்திட இப்பொழுது கடற்கரைச் சோலையும் தனிமை அடைந்துள்ளது, நளி கடல் திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில் பன்மீன் கூட்டம் என் ஐயர் காட்டிய எந்தையும் செல்லுமார் இரவே – செறிந்த கடலின் அலைகளையுடைய பரப்பில் திரிந்த திண்மையான படகின் ஒளியால் பல மீன் கூட்டங்களை எம் அண்ணன்மார்க்குக் காட்டிய எம் தந்தையும் இரவில் இல்லத்திற்கு வருவார், அந்தில் – அசைநிலை, அணங்குடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி யாயும் ஆயமோடு அயரும் – கடவுள் உடைய குளிர்ந்த துறையில் அக்கடவுளைக் கையால் தொழுது வாழ்த்தி யாயும் ஆயத்தாருடன் சிறப்புச் செய்வாள், நீயும் தேம்பாய் ஓதி திருநுதல் நீவிக் கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து இன்துயில் அமர்ந்தனை ஆயின் – நீயும் தேன் ஒழுகும் கூந்தலை உடைய தலைவியின் அழகிய நெற்றியைப் தடவி கோங்க மரத்தின் அரும்புகளை ஒத்த குவிந்த முலைகளையுடைய அவள் மார்பில் இனிய துயிலை விரும்பினாய் ஆயின் (தேம் பாய் ஓதி – அன்மொழித்தொகை, தேம் – தேன் என்றதன் திரிபு, கோங்க மரம் – Cochlospermum gossypium) வண்டு பட விரிந்த செருந்தி வெண்மணல் முடுக்கர்ப் பூ வேய் புன்னை அம் தண் பொழில் வாவே தெய்ய மணந்தனை செலற்கே – வண்டுகள் மொய்க்க மலர்ந்த பூக்களையுடைய செருந்தி மரங்கள் பொருந்திய வெள்ளை மணல் பரந்த முடுக்கில் பூக்கள் உடைய புன்னை மரங்களையுடைய அழகிய தண்ணிய சோலைக்கண் வருவாயாக அவளுடன் கூடிச் செல்வதற்கு (செருந்தி மரம் – Ochna squarrosa, Panicled golden–blossomed pear tree, புன்னை மரம் – Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree, தெய்ய –அசைநிலை, செலற்கே  – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 241, காவன்முல்லைப் பூதனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
“துனி இன்று இயைந்த துவரா நட்பின்
இனியர் அம்ம அவர்” என முனியாது
நல்குவர் நல்ல கூறினும், அல்கலும்
பிரியாக் காதலொடு உழையர் ஆகிய
நமர் மன், வாழி தோழி! உயர் மிசை  5
மூங்கில் இள முளை திரங்கக் காம்பின்
கழை நரல் வியல் அகம் வெம்ப மழை மறந்து
அருவி ஆன்ற வெருவரு நனந்தலைப்
பேஎய் வெண்தேர்ப் பெயல் செத்து ஓடி,
தாஅம் பட்ட தனி முதிர் பெருங்கலை  10
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது, அலங்குதலை
விருந்தின் வெங்காட்டு வருந்தி வைகும்
அத்த நெல்லித் தீஞ்சுவைத் திரள் காய்
வட்டக் கழங்கின் தாஅய்த் துய்த்தலைச்
செம்முக மந்தி ஆடும்  15
நல்மர மருங்கின் மலை இறந்தோரே.

பாடல் பின்னணி:  பிரிவின்கண் வேறுபட்ட தலைவி வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது.   

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  வெறுப்பு இன்றி ஒன்றிய பிளவுபடாத நட்பினையுடைய இனியவர், வெறுக்காது அருள்வார், என அவருடைய நல்ல இயல்புகளைப் பாராட்டினாலும், என்றும் காதலுடன் நம் அருகில் உள்ளவர் ஆகிய நம் தலைவர்,

உயர்ந்த மலை உச்சியில் உள்ள மூங்கிலின் இளைய முளைகள் வதங்கவும் மூங்கில் ஒன்றோடொன்று உரசி ஒலிக்கும் அகன்ற இடம் வெம்பவும் மழை பெய்யாது அருவிகள் இல்லாதாகிய அச்சம் வரும் பெரிய இடம், கானல் நீரை மழை நீர் என நினைத்து ஓடிய தாகம் அடைந்த தனி முதிய கலைமான் வேறு இடத்திற்குச் சென்று தங்குதல் இயலாமல், அசையும் இடமான புதிய வெப்பமுடைய காட்டில் வருந்தித் தங்கும், பாலை நிலத்தில் உள்ள நெல்லி மரத்தின் இனிய சுவை பொருந்திய திரண்ட காய்களை வட்டமான கழங்குகளாகக் கொண்டு, பஞ்சு போன்ற மயிரையும் சிவந்த முகத்தையும் உடைய மந்திகள் தாவி விளையாடும், நல்ல மரங்கள் பொருந்திய மலையைக் கடந்து சென்றுள்ளார் இப்பொழுது.  ஆதலால் ஆற்ற இயலாது உள்ளேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).  நெல்லித் தீஞ்சுவைத் திரள் காய் வட்டக் கழங்கின் தாஅய்த் துய்த்தலைச் செம்முக மந்தி ஆடும் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெல்லியினது இனிய சுவையை உடைய இனிய திரண்ட காய்களைக் கைக்கொண்டு வட்டமான கழங்காடுதல் போலத் தாவி விளையாடும், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நெல்லியின் இனிய சுவை பொருந்திய திரண்ட காய்களாகிய  வட்டமான கழங்குகளைக் கொண்டு விளையாடும்.  மருங்கின் (16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மருங்கு இல், பக்கத்தில் இல்லாத, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பொருந்திய பக்கத்தையுடைய.

சொற்பொருள்:  துனி இன்று இயைந்த துவரா நட்பின் இனியர் – வெறுப்பு இன்றி ஒன்றிய பிளவுபடாத நட்பினையுடைய இனியவர், அம்ம –அசைநிலை, அவர் என – அவர் என்று, முனியாது நல்குவர் நல்ல கூறினும் – வெறுக்காது அருள்வார் என அவருடைய நல்ல இயல்புகளைப் பாராட்டினாலும், அல்கலும் பிரியாக் காதலொடு உழையர் ஆகிய நமர் – என்றும் காதலுடன் நம் அருகில் உள்ளவர் ஆகிய நம் தலைவர், மன் – அசைநிலை, வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, உயர் மிசை மூங்கில் இள முளை திரங்கக் காம்பின் கழை நரல் வியல் அகம் வெம்ப மழை மறந்து அருவி ஆன்ற வெருவரு நனந்தலை – உயர்ந்த மலை உச்சியில் உள்ள மூங்கிலின் இளைய முளைகள் வதங்கவும் மூங்கில் ஒன்றோடொன்று உரசி ஒலிக்கும் அகன்ற இடம் வெம்பவும் மழை பெய்யாது அருவிகள் இல்லாதாகிய அச்சம் வரும் பெரிய இடம் (உயர் மிசை – ஒருபொருட் பன்மொழி), பேஎய் வெண்தேர்ப் பெயல் செத்து ஓடி தாஅம் பட்ட தனி முதிர் பெருங்கலை புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது – கானல் நீரை மழை நீர் என நினைத்து ஓடிய தாகம் அடைந்த தனி முதிய கலைமான் வேறு இடத்திற்குச் சென்று தங்குதல் இயலாமல் (பேய்த்தேர் – வெண்தேர், கானல் நீர், பேஎய் – அளபெடை, தாஅம் – தாகம் என்பதன் விகாரம்), அலங்குதலை விருந்தின் வெங்காட்டு வருந்தி வைகும் – அசையும் இடமான புதிய வெப்பமுடைய காட்டில் வருந்தித் தங்கும், அத்த நெல்லித் தீஞ்சுவைத் திரள் காய் வட்டக் கழங்கின் – பாலை நிலத்தில் உள்ள நெல்லி மரத்தின் இனிய சுவை பொருந்திய திரண்ட காய்களை வட்டமான கழங்குகளாகக் கொண்டு, தாஅய்த் துய்த்தலைச்  செம்முக மந்தி ஆடும் – பஞ்சு போன்ற மயிரையும் சிவந்த முகத்தையும் உடைய மந்திகள் தாவி விளையாடும் (தாஅய் – அளபெடை), நல்மர மருங்கின் மலை இறந்தோரே – நல்ல மரங்கள் பொருந்திய மலையைக் கடந்து சென்றவர் (இறந்தோரே – ஏகாரம் –அசைநிலை)

அகநானூறு 242, பேரி சாத்தனார், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென்சினைச்
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண்தாது
மணி மருள் கலவத்து உறைப்ப, அணிமிக்கு
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலைப்
பைந்தாள் செந்தினைக் கொடுங்குரல் வியன் புனம் , 5
செந்தார்க் கிள்ளை நம்மொடு கடிந்தோன்
பண்புதர வந்தமை அறியாள், ‘நுண் கேழ்
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு
அறிதல் வேண்டும்’ எனப் பல் பிரப்பு இரீஇ,
அறியா வேலன் தரீஇ, அன்னை  10
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி
மறி உயிர் வழங்கா அளவை சென்று யாம்
செலவரத் துணிந்த, சேண் விளங்கு எல் வளை
நெகிழ்ந்த முன் கை நேர் இறைப் பணைத்தோள்,
நல் எழில் அழிவு இல் தொல்கவின் பெறீஇய,  15
முகிழ்த்துவரல் இள முலை மூழ்கப் பல் ஊழ்
முயங்கல் இயைவது மன்னோ தோழி,
நறை கால் யாத்த நளிர் முகைச் சிலம்பில்
பெரு மலை விடரகம் நீடிய சிறு இலைச்
சாந்த மென்சினை தீண்டி, மேலது  20
பிரசம் தூங்கும் சேண் சிமை
வரையக வெற்பன் மணந்த மார்பே.

பாடல் பின்னணி:  தலைவிக்கு கூறுவாளாய்ச் சிறைப்புறத்தானாகிய தலைவனுக்கு உணர்த்தியது.

பொருளுரை:  தோழி!  அரும்புகள் முதிர்ந்து அசையும் மெல்லிய கிளைகளில் வண்டுகள் மலர்களின் வாயைத் திறந்தலால், பொன்னை ஒத்த நுண்ணிய பூந்தாதுக்கள் நீலமணி போன்ற தோகையில் உதிர்ந்ததால், அழகு மிகுந்து விளங்குகின்ற பொறிகளையுடைய மயில்கள் ஆடும் சோலையில், பசிய தாளை உடைய சிவந்த தினையின் வளைந்த கதிர்களையுடைய பெரிய கொல்லையில் வரும் சிவந்த வரியமைந்த கழுத்தை உடைய கிளிகளை, நம்முடன் ஒட்டிய நம் தலைவனின் நல்ல இயல்புகளால் உன் உடல் மெலிவு வந்ததை அறியாள் ஆகி, ‘நுண்ணிய நிறம் பொருந்திய தளிரை ஒத்த அழகையுடைய என் மகளின் துயர் எதனால் எனத் தெரிய வேண்டும்’ எனப் பல பொருட்களைப் பலியாக பரப்பி, உண்மையை உணர இயலாத வேலனை அழைத்து, அன்னை வெறியாடும் பெரிய களம் பொலியுமாறு முருகனைப் புகழ்ந்து, ஆட்டுக்குட்டியைப் பலியிடும் முன்னரே,

ஏறி இறங்கும் அளவில் சேர்த்த, தொலைவில் ஒளிரும் விளங்கும் வளையல்கள் கழன்ற உன் முன்கையும், நேரிய சந்தினையுடைய மூங்கில் போன்ற உன் தோள்களும், தம் பண்டைய அழகை அடைய, யாம் சென்று,

தேன் கூடுகள் தொகுக்கப்பெற்ற குளிர்ந்த முழைஞ்சுகளையுடைய (குகைகளையுடைய) பக்க மலைகளைக் கொண்ட பெரிய மலையின் பிளப்புகளில், நீண்ட சிறிய இலைகளையுடைய சந்தன மரத்தின் மெல்லிய கிளைகள் தீண்ட, மேலே தேன் கூடுகள் தொங்கும் நெடிய உச்சியையுடைய மலைநாடனின் முன்பு கூடிய மார்பை, அரும்பி வரும் இள முலைகள் மூழ்கிட பலமுறை தழுவுதல் தகுந்தது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘நாற்றமும் தோற்றமும் ‘ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதியால் அமைத்துக் கொள்க.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

சொற்பொருள்:  அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென்சினைச் சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண்தாது மணி மருள் கலவத்து உறைப்ப – அரும்புகள் முதிர்ந்து அசையும் மெல்லிய கிளைகளில் வண்டுகள் மலர்களின் வாயைத் திறந்தலால் பொன்னை ஒத்த நுண்ணிய பூந்தாதுக்கள் நீலமணி போன்ற தோகையில் உதிர்ந்திட (புரை – உவம உருபு), அணிமிக்கு அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை – அழகு மிகுந்து விளங்குகின்ற பொறிகளையுடைய மயில்கள் ஆடும் சோலையில், பைந்தாள் செந்தினைக் கொடுங்குரல் வியன் புனம் செந்தார்க் கிள்ளை – பசிய தாளை உடைய சிவந்த தினையின் வளைந்த கதிர்களையுடைய பெரிய கொல்லையில் வரும் சிவந்த வரியமைந்த கழுத்தை உடைய கிளிகளை, நம்மொடு கடிந்தோன் பண்புதர வந்தமை அறியாள் – நம்முடன் ஒட்டிய நம் தலைவனின் நல்ல இயல்புகளால் உன் உடல் மெலிவு வந்ததை அறியாள் ஆகி, ‘நுண் கேழ் முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு அறிதல் வேண்டும்’ – நுண்ணிய நிறம் பொருந்திய தளிரை ஒத்த அழகையுடைய என் மகளின் துயர் எதனால் எனத் தெரிய வேண்டும் (புரை – உவம உருபு), எனப் பல் பிரப்பு இரீஇ அறியா வேலன் தரீஇ – என்று பல பொருட்களைப் பலியாக பரப்பி உண்மையை உணர இயலாத வேலனை அழைத்து (இரீஇ – அளபெடை, தரீஇ – அளபெடை), அன்னை வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி – அன்னை வெறியாடும் பெரிய களம் பொலியுமாறு முருகனைப் புகழ்ந்து, மறி உயிர் வழங்கா அளவை – ஆட்டுக்குட்டியைப் பலியிடும் முன்னரே, சென்று யாம் – யாம் சென்று, செல வரத் துணிந்த – ஏறி இறங்கும் அளவில் சேர்த்த, சேண் விளங்கு எல் வளை நெகிழ்ந்த முன் கை நேர் இறைப் பணைத்தோள் நல் எழில் அழிவு இல் தொல்கவின் பெறீஇய – தொலைவில் ஒளிரும் விளங்கும் வளையல்கள் கழன்ற முன்கையும் நேரிய சந்தினையுடைய மூங்கில் போன்ற தோள்களும்  பண்டைய அழகை அடைய, முகிழ்த்துவரல் இள முலை மூழ்கப் பல் ஊழ் முயங்கல் இயைவது – அரும்பி வரும் இள முலைகள் மூழ்கிட பலமுறை தழுவுதல் தகுந்தது, மன்னோ – மன் ஓ அசைநிலைகள், தோழி – தோழி, நறை கால் யாத்த நளிர் முகைச் சிலம்பில் பெரு மலை விடர் அகம் – தேன் கூடுகள் தொகுக்கப்பெற்ற குளிர்ந்த முழைஞ்சுகளையுடைய (குகைகளையுடைய) பக்க மலைகளைக் கொண்ட பெரிய மலையின் பிளப்புகளில் (நளிர் – குளிர்), நீடிய சிறு இலைச் சாந்த மென்சினை தீண்டி – நீண்ட சிறிய இலைகளையுடைய சந்தன மரத்தின் மெல்லிய கிளைகள் தீண்ட, மேலது பிரசம் தூங்கும் சேண் சிமை வரையக வெற்பன் மணந்த மார்பே  – மேலே தேன் கூடுகள் தொங்கும் நெடிய உச்சியையுடைய மலைநாடனின் முன்பு கூடிய மார்பை (மார்பே –  ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 243, கொடியூர்கிழார் மகனார் நெய்தற்றத்தனார், பாலைத் திணை தலைவி தோழியிடம் சொன்னது
அவரை ஆய் மலர் உதிரத், துவரின்
வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப,
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றைக்
கறங்கு நுண் துவலையின் ஊர் உழை அணியப்,
பெயல் நீர் புதுவரல் தவிரச், சினை நேர்பு  5
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க் கழனி
நெல் ஒலி பாசவல் துழைஇக், கல்லெனக்
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை,
நெடிது வந்தனை என நில்லாது ஏகிப்
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை  10
நம் வலத்து தன்மை கூறி, அவர் நிலை
அறியும் ஆயின் நன்று மன் தில்ல,
பனி வார் கண்ணேம் ஆகி இனி அது
நமக்கே எவ்வம் ஆகின்று,
அனைத்தால் தோழி, நம் தொல் வினைப் பயனே.  15

பாடல் பின்னணி:  பிரிவின்கண் வேறுபட்ட தலைவி வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. 

பொருளுரை:  தோழி!  அவரையின் அழகிய மலர்கள் உதிரவும், சிவந்த வளைந்த துளையையுடைய பவளம் போல் ஈங்கை மலரவும், வளைந்து மலர்ந்த குளிர்ந்த பகன்றை ஒலிக்கும் வாடையின் நுண்ணிய மழைத்துளிகளால் ஊரின் அருகே அழகு செய்யவும், மழையாகிய புது நீர் வருதல் இல்லாததாகவும், கிளைகள் பொருந்திய சூல் கொண்டு விரிந்து வளைந்த விளங்கும் கதிர்களையுடைய வயலில் நெற்கள் ஒலிக்கும் பசிய பள்ளங்களைத் துழாவிக் கல் என்னும் ஒலியுடன் விரைந்து வந்து தங்கிய கண்ணோட்டம் இல்லாத வாடைக்காற்று,

காலம் தாழ்த்தாது தலைவரிடம் விரைந்து சென்று, “நீ வந்து நீண்ட காலம் தாழ்த்தினாய்” என்று, பலவற்றை வெறுத்து வாழும் துணைவருடன் இல்லாத நம் வாழ்க்கையின் வலித் தன்மையை அவரிடம் கூறி, அவருடைய நிலையை அறிந்தால் நன்றாகும்.  கண்ணீர் வடிக்கும் கண்களை உடையேம் ஆகிய நமக்கு, இப்பொழுது வாடைக்காற்று துன்பம் தருவதாக ஆகின்றது.  இது நம் பழைய தீவினையின் பயன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என்பதனால் அமைத்துக் கொள்க.  கண் இல் (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கண்ணோட்டம் இல்லாத, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இரக்கம் இல்லாத.  இறங்கு போது அவிழ்ந்த (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வளைந்து மலர்ந்த, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஞாயிறு தாழும்போது விரிந்த.  பாசவல் (பசு அவல்) 7 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பசிய மேட்டு நிலம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பசிய பள்ளம்.

சொற்பொருள்:  அவரை ஆய் மலர் உதிர – அவரையின் அழகிய மலர்கள் உதிரவும் (அவரை – dolichos lablab), துவரின் வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப – சிவந்த வளைந்த துளையையுடைய பவளம் போல் ஈங்கை மலரவும் (துவரின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, ஈங்கை – Mimosa pudica, Touch–me–not, தொட்டாச்சுருங்கி), இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றைக் கறங்கு நுண் துவலையின் ஊர் உழை அணிய – வளைந்து மலர்ந்த குளிர்ந்த பகன்றை ஒலிக்கும் வாடையின் நுண்ணிய மழைத்துளிகளால் ஊரின் அருகே அழகு செய்யவும் (பகன்றை – Ipomaea turpethum, Operculina turpethum, Indian jalap), பெயல் நீர் புதுவரல் தவிர – மழையாகிய புது நீர் வருதல் இல்லாததாகவும், சினை நேர்பு பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க் கழனி நெல் ஒலி பாசவல் துழைஇக் கல்லெனக் கடிது வந்து இறுத்த கண் இல் வாடை – கிளைகள் பொருந்திய சூல் கொண்டு விரிந்து வளைந்த விளங்கும் கதிர்களையுடைய வயலில் நெற்கள் ஒலிக்கும் பசிய பள்ளங்களைத் துழாவிக் கல் என்னும் ஒலியுடன் விரைந்து வந்து தங்கிய கண்ணோட்டம் இல்லாத வாடைக்காற்று (துழைஇ – அளபெடை, கல்லென– ஒலிக்குறிப்பு மொழி), நெடிது வந்தனை என – நீ வந்து நீண்ட காலம் தாழ்த்தினாய், நில்லாது ஏகி – காலம் தாழ்த்தாது விரைந்து சென்று, பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை – பலவற்றை வெறுத்து வாழும் துணைவருடன் இல்லாத வாழ்க்கை, நம் வலத்து தன்மை கூறி – நம் வலிமையின் தன்மையைக் கூறி, அவர் நிலை அறியும் ஆயின் நன்று – அவர் தன் நிலையை அறிந்தால் நன்றாகும், மன் – அசைநிலை, தில்ல – தில்ல – தில் ஓர் இடைச்சொல், ஈறு திரிந்து வந்தது, பனி வார் கண்ணேம் ஆகி – கண்ணீர் வடிக்கும் கண்களை உடையேம் ஆகி, இனி அது நமக்கே எவ்வம் ஆகின்று அனைத்தால் – இப்பொழுது அது நமக்கு துன்பம் தருவதாக ஆகின்றது, தோழி – தோழி, நம் தொல் வினைப் பயனே – நம் பழைய தீவினையின் பயன் (பயனே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 244, மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார், முல்லைத் திணைதலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
“பசைபடு பச்சை நெய் தோய்த்தன்ன
சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை
பகல் உறை முதுமரம் புலம்பப் போகி,
முகைவாய் திறந்த நகைவாய் முல்லை
கடிமகள் கதுப்பின் நாறிக், கொடி மிசை  5
வண்டு இனம் தவிர்க்கும் தண் பதக்காலை
வரினும் வாரார் ஆயினும், ஆண்டு அவர்க்கு
இனிது கொல், வாழி தோழி!” எனத்தன்
பல்லிதழ் மழைக் கண் நல் அகம் சிவப்ப,
அருந்துயர் உடையள் அவள் என விரும்பிப்  10
பாணன் வந்தனன் தூதே, நீயும்
புல்லார் புரவி வல் விரைந்து பூட்டி
நெடுந்தேர் ஊர்மதி வலவ,
முடிந்தன்று அம்ம நாம் முன்னிய வினையே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது. 

பொருளுரை:  தன் தோழியிடம், “தோழி!  வாழி!  பசையுடைய தோலை நெய்யில் தோய்த்தாற் போன்ற கரிய சிறகையுடைய வாவல் பகலில் தங்கியிருந்த மிக உயர்ந்த கிளைகளையுடைய முதிய மரம் தனித்திற்கும்படி போக, கொடியின் மீது அரும்புகள் வாய் திறந்து ஒளிரும் முல்லை மலர்கள், மணமகளின் கூந்தல்போல் நாறி, வண்டின் கூட்டத்தைச் செல்ல விடாது தடுக்கும், குளிர்ந்த தன்மையை உடைய கார்காலத்தில், அவர் இங்கு வந்தாலும் வராதிருந்தாலும், அவர் சென்ற இடம் அவர்க்கு இனிது போலும்” எனக் கூறும் நம் தலைவி, பல இதழ்களையுடைய தாமரை மலர் போன்ற குளிர்ந்த கண்களின் நல்ல உள்ளிடம் சிவப்ப, பொறுத்தற்கு அரிய துயரத்தை உடையவள் என்பதால், விருப்பத்துடன் பாணன் அவளுடைய தூதுவனாக வந்தான்.   

பாகனே!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நீயும் புல்லை உண்ணும் குதிரைகளைப் பூட்டி நெடிய தேரினை மிக விரைந்து செலுத்துவாயாக.  நாம் எண்ணி வந்த வினை முடிந்தது.

குறிப்பு:  புலவரின் பெயர் மதுரை ………….. மள்ளனார் என ஏட்டில் உள்ளது.  முழுப்பெயர் இல்லை.  ஆனால் மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் என்ற புலவர் எழுதியதாக நமக்குக் கிடைத்த பிற பாடல்கள் – அகநானூறு 33, 144, 174, 314, 344, 353, குறுந்தொகை 188, 215, நற்றிணை 297, 321, புறநானூறு 388.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘பேரிசை ஊர்திப் பாங்கர் பாங்கினும்’ என வரும் விதி கொள்க.  நகைவாய் முல்லை (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலர்ந்த வாயையுடைய முல்லை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஒளி பொருந்திய முல்லை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  பறவை – இச்சொல் சங்கப்பாடல்களில் இன்றைய பயன்பாட்டில் உள்ளவாறும் உள்ளது.  தேனீ, வௌவால், தும்பி ஆகிவற்றைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  தேனீ – அகநானூறு 4–11, 132–10, 332–8, 371–13, நற்றிணை 55–5, 161–4, 185–9, ஐங்குறுநூறு 82–3, கலித்தொகை 22–7, பரிபாடல் 7–6, புறநானூறு 70–11, பதிற்றுப்பத்து 66–16, பெரும்பாணாற்றுப்படை 183, 229, வௌவால் – அகநானூறு 244–2, குறுந்தொகை 201–3, 352–2, புறநானூறு 370–11, தும்பி – நற்றிணை 277–9.  பல்லிதழ் – அகரம் கெட்டுக் ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 160) என்றதனால் லகரம் இரட்டித்துப் பல்லிதழ் என முடிந்தது.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28). 

சொற்பொருள்:  பசைபடு பச்சை நெய் தோய்த்தன்ன சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை பகல் உறை முதுமரம் புலம்பப் போகி – பசையுடைய தோலை நெய்யில் தோய்த்தாற் போன்ற கரிய சிறகையுடைய வாவல் பகலில் தங்கியிருந்த மிக உயர்ந்த கிளைகளையுடைய முதிய மரம் தனித்திற்கும்படி போக (சேய் உயர் – ஒருபொருட் பன்மொழி, போகி – போக எனத் திரிக்க), முகைவாய் திறந்த நகைவாய் முல்லை – அரும்புகள் வாய் திறந்து ஒளிரும் முல்லை மலர்கள், கடிமகள் கதுப்பின் நாறி – மணமகளின் கூந்தல்போல் நாறி (கதுப்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கொடி மிசை – கொடியின் மீது, வண்டு இனம் தவிர்க்கும் – வண்டின் கூட்டத்தைச் செல்ல விடாது தடுக்கும், தண் பதக்காலை வரினும் வாரார் ஆயினும் – குளிர்ந்த தன்மையை உடைய கார்காலத்தில் இங்கு வந்தாலும் வராதிருந்தாலும், ஆண்டு அவர்க்கு இனிது கொல் – அவர் சென்ற இடம் அவர்க்கு இனிது போலும், வாழி – நீ நீடு வாழ்வாயாக, அவர் நீடு வாழ்வாராக, அசைநிலை, தோழி – தோழி, எனத் தன் பல்லிதழ் மழைக் கண் நல் அகம் சிவப்ப – என்று தன் பல இதழ்களையுடைய தாமரை மலர் போன்ற குளிர்ந்த கண்களின் நல்ல உள்ளிடம் சிவப்ப, அருந்துயர் உடையள் அவள் என – பொறுத்தற்கு அரிய துயரத்தை உடையவள் என்று, விரும்பிப் பாணன் வந்தனன் தூதே – விருப்பத்துடன் பாணன் தூதாக வந்தான், நீயும் புல் ஆர் புரவி வல் விரைந்து பூட்டி நெடுந்தேர் ஊர்மதி – நீயும் புல்லை உண்ணும் குதிரைகளைப் பூட்டி நெடிய தேரினை மிக விரைந்து செலுத்துவாயாக, வலவ – பாகனே, முடிந்தன்று – முடிந்தது, அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக (கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல்), நாம் முன்னிய வினையே – நாம் எண்ணி வந்த வினை (வினையே  – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 245, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
‘உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார்
நன்று புரி காட்சியர் சென்றனர் அவர்’ என
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல்
நீ நற்கு அறிந்தனை ஆயின், நீங்கி
மழை பெயன் மறந்த கழை திரங்கு இயவில்  5
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை
வல்வில் இளையர் தலைவர், எல்லுற
வரிகிளர் பணைத் தோள் வயிறு அணி திதலை
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில்
மகிழ்நொடை பெறாஅர் ஆகி, நனை கவுள்  10
கானயானை வெண்கோடு சுட்டி,
மன்று ஓடு புதல்வன் புன்தலை நீவும்
அரு முனைப் பாக்கத்து அல்கி, வைகுற
நிழல் படக் கவின்ற நீள் அரை இலவத்து
அழல் அகைந்தன்ன அலங்கு சினை ஒண் பூக்  15
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண்,
குறும்பொறை உணங்கும் ததர் வெள் என்பு
கடுங்கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
கல் நெடுங்கவலைய கானம் நீந்தி,
அம்மா அரிவை ஒழிய  20
சென்மோ நெஞ்சம்! வாரலென் யானே!

பாடல் பின்னணி:  பொருளீட்ட வேண்டும் என வற்புறுத்திய நெஞ்சினைக் கழறித், தலைவன் செலவு அழுங்குவித்தது. 

பொருளுரை:  என் நெஞ்சே!  ‘உயிரை விடவும் சிறந்த ஒளிரும் பொருளைத் தரும் பொருட்டு நன்மை செய்வதை விரும்பிய அறிவினையுடைய நம் தலைவர் சென்றார்’ என்று மனையின்கண் தங்கியிருக்கும் நம் தலைவி வலிமையுடையவள் ஆகுதலை நீ நன்கு அறிந்தனை ஆனால், அவளை விட்டு நீங்கி, முகில்கள் மழை பெய்தலை மறந்தமையால் மூங்கில்கள் பட்டுப்போன வழியில், செல்லும் வணிகர்களைத் தாக்கும் பண்பு இல்லாத வாழ்க்கையையுடைய வலிய வில்லையுடைய எயின மறவர்களின் தலைவர், இரவு வர, வரி விளங்கும் பருத்த தோள்களையும் தேமல் பொருந்திய வயிற்றையுமுடைய கள் விற்கும் பெண்கள் தங்கியிருக்கும் மனையில் கள்ளிற்கு உரிய விலைப்பொருள் கிடைக்காதவர் ஆகி, மதநீரால் நனைந்த கன்னத்தையுடைய யானையின் வெள்ளை மருப்புகளை (தந்தங்களை) எடுத்து வருதல் குறித்து, மன்றத்தில் ஓடி விளையாடும் புதல்வனின் புல்லிய தலையைத் தடவி ஏவும், வெல்லுதற்கு அரிய போர்க்களங்கள் உடைய பாக்கத்தில் தங்கி,

விடியற்காலையில் நிழல் உண்டாக அழகு பெற்ற நெடிய அடியையுடைய இலவ மரத்தின் நெருப்புத் தளிர்த்தாற் போன்ற, அசையும் கிளைகளில் உள்ள ஒளிரும் பூக்களில் குழல் போலும் இசையுடைய வண்டுகள் ஒலிக்கும் இடமாகிய, பாறைகளில் காய்ந்து நெருங்கி கிடக்கும் சுள்ளி போலும் வெள்ளை எலும்புகள் விரைந்து ஓடும் கால்களையுடைய ஒட்டகத்தின் மிக்க பசியைப் போக்கும், கற்கள் பொருந்திய நீண்ட பிரிவுகளையுடைய காட்டைக் கடந்து அழகிய மாமை நிறத்தையுடைய நம் தலைவி தனியே இருக்க, யான் நின்னுடன் வாரேன்.  நீ செல்லுவாயாக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்’ என வரும் விதி கொள்க.  செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே வன்புறை குறித்த தவிர்ச்சி ஆகும் (தொல்காப்பியம், கற்பியல் 44) என்பதனால் செலவு அழுங்குதலும் பாலையாயிற்று.  பண்ட மாற்று – அகநானூறு 60, 61, 126, 140, 245, 296, 390, நற்றிணை 183, குறுந்தொகை 221, 269, ஐங்குறுநூறு 47, பொருநராற்றுப்படை 214–215, 216–7, பட்டினப்பாலை 28–30, மலைபடுகடாம் 413–414.  அகநானூறு 245 – அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில் மகிழ்நொடை பெறாஅர் ஆகி, நனை கவுள் கானயானை வெண்கோடு சுட்டி மன்று ஓடு புதல்வன் புன்தலை நீவும்.  ததர் (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிதைந்த, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – சுள்ளிபோலும்.  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12,  குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.

சொற்பொருள்:  உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார் நன்று புரி காட்சியர் சென்றனர் அவர் – உயிரை விடவும் சிறந்த ஒளிரும் பொருளைத் தரும் பொருட்டு நன்மை செய்வதை விரும்பிய அறிவினையுடைய நம் தலைவர் சென்றார், என மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல் நீ நற்கு அறிந்தனை ஆயின் – என்று மனையின்கண் தங்கியிருக்கும் வலிமையுடையவள் ஆகுதலை நீ நன்கு அறிந்தனை ஆனால் (நற்கு – நன்கு என்பதன் விகாரம்), நீங்கி – அவளை விட்டு நீங்கி, மழை பெயன் மறந்த கழை திரங்கு இயவில் – முகில்கள் மழை பெய்தலை மறந்தமையால் மூங்கில்கள் பட்டுப்போன வழியில், செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை வல்வில் இளையர் தலைவர் – செல்லும் வணிகர்களைத் தாக்கும் பண்பு இல்லாத வாழ்க்கையையுடைய வலிய வில்லையுடைய எயின மறவர்களின் தலைவர், எல் உற வரி கிளர் பணைத் தோள் வயிறு அணி திதலை அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில் மகிழ் நொடை பெறாஅர் ஆகி – இரவு வர வரி விளங்கும் மூங்கில் போன்ற தோள்களையும் (பருத்த தோள்களையும்) தேமல் பொருந்திய வயிற்றையுமுடைய கள் விற்கும் பெண்கள் தங்கியிருக்கும் மனையில் கள்ளிற்கு உரிய விலைப்பொருள் கிடைக்காதவர் ஆகி (பெறாஅர் – அளபெடை), நனை கவுள் கானயானை வெண்கோடு சுட்டி – மதநீரால் நனைந்த கன்னத்தையுடைய யானையின் வெள்ளை மருப்புகளை (தந்தங்களை) எடுத்து வருதல் குறித்து, மன்று ஓடு புதல்வன் புன்தலை நீவும் – மன்றத்தில் ஓடி விளையாடும் புதல்வனின் புல்லிய தலையைத் தடவி ஏவும், அரு முனைப் பாக்கத்து அல்கி – வெல்லுதற்கு அரிய போர்க்களங்கள் உடைய பாக்கத்தில் தங்கி, வைகு உற நிழல் படக் கவின்ற நீள் அரை இலவத்து அழல் அகைந்தன்ன – விடியற்காலையில் நிழல் உண்டாக அழகு பெற்ற நெடிய அடியையுடைய இலவ மரத்தின் நெருப்புத் தளிர்த்தாற் போன்ற, அலங்கு சினை ஒண் பூக் குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண் – அசையும் கிளைகளில் உள்ள ஒளிரும் பூக்களில் குழல் போலும் இசையுடைய வண்டுகள் ஒலிக்கும் இடமாகிய, குறும்பொறை உணங்கும் ததர் வெள் என்பு கடுங்கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் – பாறைகளில் காய்ந்து நெருங்கி கிடக்கும் (சிதைந்து கிடக்கும்) சுள்ளி போலும் வெள்ளை எலும்புகள் விரைந்து ஓடும் கால்களையுடைய ஒட்டகத்தின் மிக்க பசியைப் போக்கும், கல் நெடுங்கவலைய கானம் நீந்தி அம் மா அரிவை ஒழிய – கற்கள் பொருந்திய நீண்ட பிரிவுகளையுடைய காட்டைக் கடந்து அழகிய மாமை நிறத்தையுடைய நம் தலைவி தனியே இருக்க. சென்மோ – நீ செல்லுவாயாக (சென்மோ – மோ முன்னிலையசை), நெஞ்சம் – என் நெஞ்சே, வாரலென் யானே – யான் நின்னுடன் வாரேன் (யானே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 246, பரணர், மருதத் திணை தோழி தலைவனிடம் சொன்னது
பிணர் மோட்டு நந்தின் பேழ்வாய் ஏற்றை
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக,
நெடுநீர்ப் பொய்கைத் துணையொடு புணரும்
மலிநீர் அகல்வயல் யாணர் ஊர!
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு  5
தாது ஆர் காஞ்சித் தண் பொழில் அகல் யாறு
ஆடினை என்ப நெருநை; அலரே,
காய்சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்  10
இமிழிசை முரசம் பொரு களத்து ஒழியப்
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய
மொய் வலி அறுத்த ஞான்றை
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே.

பாடல் பின்னணி:  தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தது. 

பொருளுரை:  சருச்சரை (சொரசொரப்பு) உடைய வயிற்றினையும் பிளந்த வாயினையும் உடைய ஆண் சங்கு, கூரிய மூக்கையுடைய ஆரல் மீன் சாட்சியாக, ஆழ்ந்த நீரையுடைய பொய்கையில் பெண் சங்குடன் கூடும், நீர் மிக்க அகன்ற வயல்களையுடைய வளமை மிக்க ஊரின் தலைவனே!

மலர்கள் சூடிய கூந்தலையுடைய, நின்னால் விரும்பப்பட்ட பரத்தையுடன், பூந்தாதுக்கள் நிறைந்த காஞ்சி மரங்களையுடைய குளிர்ந்த சோலைக்கு அருகில் உள்ள அகன்ற ஆற்றில் நேற்று நீ நீர் விளையாட்டு ஆடினாய் எனக் கூறுகின்றனர்.  அதனால் எழுந்த அலர், மிக்க சினமும் வலிமையையும் உடைய, பெரும் புகழையுடைய சோழ வேந்தன் கரிகாலனின் ஆராவாரம் மிக்க கள் வளம் உடைய வெண்ணிவாயில் என்னும் இடத்தில், சிறப்புப் பொருந்திய பகை மன்னர்கள் மாறுபட்டு எழுந்த போரில், மிக்க ஓசையையுடைய முரசுகள் போர்க்களத்தில் அழியப் பதினொரு வேளிர்களுடன் இரு பெரும் வேந்தர்களும் தோற்க, அவர்களின் மிக்க வலிமையை அழித்த அன்று, அழுந்தூர் என்னும் ஊரின்கண் எழுந்த குறையாத ஆரவாரத்தை விடவும் பெரியது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர் காத்த தன்மையின் கண் இன்று பெயர்ப்பினும்’ என வரும் விதி கொள்க.  களவன் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – களவன், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கள்வன்.  வரலாறு –கரிகாலன், வெண்ணி, பதினொரு வெளிர், இருபெரும் வேந்தர்கள் (பாண்டிய சேர மன்னர்கள்).  வெண்ணிப் போர் – சோழன் கரிகாலன் சோழ நாட்டில் உள்ள வெண்ணி என்னும் ஊரில் பாண்டிய மன்னனையும், சேரமான் பெருஞ்சேரலாதனையும், 11 குறுநில வேளிர் மன்னர்களையும் தோற்கடித்தான்.  இப்போர் பற்றின விவரங்கள் உள்ள பாடல்கள் – அகநானூறு 55, 246, புறநானூறு 65, 66, பொருநராற்றுப்படை147.  நற்றிணை 390ம் பாடலில் வெண்ணி சோழர்க்குரிய ஊர் என்னும் குறிப்பு உள்ளது.  ஒப்புமை – புறநானூறு 266 – கதிர் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை – ஒளவை துரைசாமி உரை – கதிர் போலும் கோட்டையுடைய நத்தையினது கரிய முகத்தையுடைய ஏற்றை.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:  பிணர் மோட்டு நந்தின் பேழ்வாய் ஏற்றை – சருச்சரை (சொரசொரப்பு) உடைய வயிற்றினையும் பிளந்த வாயினையும் உடைய ஆண் சங்கு (நந்து – இச்சொல் நத்தை, சங்கு ஆகிய இரண்டு பொருள்களைக் கொண்டது), கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக – கூரிய மூக்கையுடைய ஆரல் மீன் சாட்சியாக, நெடு நீர்ப் பொய்கைத் துணையொடு புணரும் – ஆழ்ந்த நீரையுடைய பொய்கையில் பெண் சங்குடன் கூடும், மலி நீர் அகல் வயல் யாணர் ஊர – நீர் மிக்க அகன்ற வயல்களையுடைய வளமை மிக்க ஊரின் தலைவனே (ஊர – அண்மை விளி), போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு தாது ஆர் காஞ்சித் தண் பொழில் அகல் யாறு ஆடினை என்ப நெருநை – மலர்கள் சூடிய கூந்தலையுடைய நின்னால் விரும்பப்பட்ட பரத்தையுடன் பூந்தாதுக்கள் நிறைந்த காஞ்சி மரங்களையுடைய குளிர்ந்த சோலைக்கு அருகில் உள்ள அகன்ற ஆற்றில் நீர் விளையாட்டு ஆடினாய் நேற்று எனக் கூறுகின்றனர், அலரே – எழுந்த அலர் (ஏகாரம் அசைநிலை), காய்சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால் ஆர்கலி நறவின் வெண்ணி வாயில் – மிக்க சினமும் வலிமையையும் உடைய பெரும் புகழையுடைய சோழ வேந்தன் கரிகாலனின் ஆராவாரம் மிக்க கள் வளம் உடைய வெண்ணிவாயில் என்னும் இடத்தில், சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் – சிறப்புப் பொருந்திய பகை மன்னர்கள் மாறுபட்டு எழுந்த போரில், இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழியப் பதினொரு வேளிரொடு வேந்தர் சாய மொய் வலி அறுத்த ஞான்றை – மிக்க ஓசையையுடைய முரசுகள் போர்க்களத்தில் அழியப் பதினொரு வேளிர்களுடன் இரு பெரும் வேந்தர்களும் தோற்க அவர்களின் மிக்க வலிமையை அழித்த அன்று, தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே – அழுந்தூர் என்னும் ஊரின்கண் எழுந்த குறையாத ஆரவாரத்தை விடவும் பெரியது (பெரிதே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 247, மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மண்ணா முத்தம் ஒழுக்கிய வனமுலை
நன் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர்
அருளிலர், வாழி தோழி, பொருள் புரிந்து,
இருங்கிளை எண்கின் அழல்வாய் ஏற்றை
கருங்கோட்டு இருப்பை வெண்பூ முனையின்  5
பெருஞ்செம்புற்றின் இருந்தலை இடக்கும்
அரிய கானம் என்னார், பகை பட
முனை பாழ் பட்ட ஆங்கண் ஆள் பார்த்துக்
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும்
ஊறுபடு கவலைய ஆறு பல நீந்திப்,  10
படுமுடை நசைஇய பறை நெடுங்கழுத்தின்
பாறு கிளை சேக்கும் சேண் சிமைக்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட  தலைவியின் வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைவி கூறியது.

பொருளுரை:  நீ நீடு வாழ்வாயாக தோழி! பொருளை விரும்பி, பெரிய சுற்றத்தையுடைய வெப்பமான வாயையுடைய ஆண் கரடி கரிய கிளைகளையுடைய இருப்பை மரத்தின் வெள்ளை மலர்களை வெறுத்ததால் ஈயலின் பெரிய செம்மண் புற்றின் மேல்பகுதியை உடைத்திடும் கொடிய காடு என்று நினையாராய், பகைமையுடன் போர் செய்வதால் சீறூர் பாழாகிய அவ்விடத்தில், ஆட்கள் வருவதை நோக்கி கொல்லுதலில் வல்ல யானை பாலை நிலத்தின் வழியைக் காவல்காத்துக் கொண்டிருப்பதால், இடையூறு மிகுந்த பிரிவுகள் உள்ள பல வழிகளைக் கடந்து, இறந்தவர்களின் ஊனை விரும்பும் நீண்ட கழுத்தினையுடைய பாறு மரக்கிளைகளில் தங்கி இருக்கும் உயர்ந்த உச்சியினையும் உயர்ந்த சிகரங்களையுடைய பக்க மலைகளும் உடைய மலையைக் கடந்து சென்ற நம் தலைவர், கழுவாத முத்துப்போன்ற கண்ணீர்த் துளிகள் ஒழுகும் அழகிய முலையுடைய என்னுடைய நல்ல மார்பு தனித்து வருந்தத் துறந்து சென்றவர் ஆதலின், அருள் இல்லாதவர்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேனுடைய இருப்பைப் பூக்களை மிகுதியாகத் தின்று வெறுப்புற்ற ஏற்றைக் கரடி இழிந்த புற்றாஞ்சோற்றினை விரும்பி அதனைப் பெறும் பொருட்டுப் புற்றினைத் தோண்டுவது போல, அன்பினால் நம்மை விரும்பி நம்மோடு உறைந்து நுகரும் இன்பத்தை வெறுத்து இப்பொழுது இழிந்த பொருளை விரும்பி வேற்று நாடுகளில் சென்று அரிதில் முயன்று ஈட்டுகின்றார்.  கரடி இருப்பை மலரை உண்ணுதல் – அகநானூறு 15, 81, 95, 149, 171, 247, 267, 275, 331.  கரடிகள் ஈயல் புற்றை உடைத்தல் – அகநானூறு 8, 72, 81, 88, 112, 149, 247, 257, 307, நற்றிணை 125, 325, 336. 

சொற்பொருள்:  மண்ணா முத்தம் ஒழுக்கிய வனமுலை – கழுவாத முத்துப்போன்ற கண்ணீர்த்துளிகள் ஒழுகும் அழகிய முலை (மண்ணா முத்தம் – வெளிப்படை, மண்ணுதல் – கழுவுதல்), நன் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர் அருளிலர் – நல்ல மார்பு தனித்து வருந்தத் துறந்து சென்றவர் அருள் இல்லாதவர், வாழி தோழி – நீடு வாழ்வாயாக தோழி, பொருள் புரிந்து – பொருளை விரும்பி, இருங்கிளை எண்கின் அழல்வாய் ஏற்றை – பெரிய சுற்றத்தையுடைய வெட்பமுடைய வாயையுடைய ஆண் கரடி, கருங்கோட்டு இருப்பை வெண்பூ முனையின் – கரிய கிளைகளையுடைய இருப்பை மரத்தின் வெள்ளை மலர்களை வெறுத்ததால் (இருப்பை மரம் – இலுப்பை மரம், Indian Butter Tree, South Indian Mahua), பெருஞ்செம்புற்றின் இருந்தலை இடக்கும் – பெரிய செம்மண் புற்றின் மேல்பகுதியை உடைத்திடும், அரிய கானம் என்னார் – கடிய காடு என்று எண்ணார், பகை பட முனை பாழ் பட்ட ஆங்கண் – பகைமையுடன் போர் செய்வதால் சீறூர் பாழாகிய அவ்விடத்தில், ஆள் பார்த்துக் கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும் – ஆட்கள் வருவதை நோக்கி கொல்லுதலில் வல்ல யானை பாலை நிலத்தின் வழியைக் காவல் கொண்டிருப்பதால், ஊறுபடு கவலைய ஆறு பல நீந்தி – இடையூறு மிகுந்த பிரிவுகள் உள்ள பல வழிகளைக் கடந்து, படுமுடை நசைஇய பறை நெடுங்கழுத்தின் பாறு – இறந்தவர்களின் ஊனை விரும்பும் நீண்ட கழுத்தினையுடைய பாறு (நசைஇய – அளபெடை), கிளை சேக்கும் – மரக்கிளைகளில் தங்கி இருக்கும், சேண் சிமைக் கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – உயர்ந்த உச்சியினையும் உயர்ந்த சிகரங்களையுடைய பக்க மலைகளும் உடைய மலையைக் கடந்து சென்ற நம் தலைவர் (இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 248, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நகை நீ கேளாய் தோழி! அல்கல்
வய நாய் எறிந்து வன் பறழ் தழீஇ
இளையர் எய்துதல் மடக்கிக் கிளையொடு
நால்முலைப் பிணவல் சொலியக் கான் ஒழிந்து,
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற  5
தறுகண் பன்றி நோக்கிக் கானவன்
குறுகினன், “தொடுத்த கூர்வாய்ப் பகழி
மடை செலல் முன்பின் தன் படை செலச் செல்லாது,
அருவழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம்” என
எய்யாது பெயரும் குன்ற நாடன்,  10
செறி அரில் துடக்கலின் பரீஇப் புரி அவிழ்ந்து
ஏந்து குவவு மொய்ம்பின் பூச் சோர் மாலை
ஏற்று இமில் கயிற்றின் எழில் வந்து துயல்வர,
இல் வந்து நின்றோன் கண்டனள் அன்னை
வல்லே என் முகம் நோக்கி  15
“நல்லை மன்” என நகூஉப் பெயர்ந்தோளே.

பாடல் பின்னணி:  தாய் களவொழுக்கத்தை அறிந்தமையை எடுத்துக் கூறித் தலைவனை வரைவு கடாவியது.  நச்சினார்க்கினியரும் பேராசிரியரும் இச்செய்யுளைத் தலைவியின் கூற்றாகக் கொண்டனர். 

பொருளுரை:  தோழி!  நேற்று இரவில் நிகழ்ந்த நகைப்பதற்கு உரிய இச்செய்தியை நீ கேட்பாயாக!

வலிய வேட்டை நாயைத் தாக்கித், தன் வலிய குட்டிகளைத் தழுவிக்கொண்டு, இளைய வேட்டுவர் நெருங்குவதைக் தடுத்துத், தொங்கும் முலையை உடைய தன் பெண் பன்றி தன் கிளையுடன் அங்கிருந்து தப்பி நீங்கும்படி, காட்டிலிருந்து வெளியே வந்த, நுழைதற்கு அரிய வாயிலை உடைய முடுக்கில் வேடவர்களை எதிர்நோக்கி நின்ற அஞ்சாமை உடைய பன்றியை, வேட்டுவன் அண்மையில் சென்று நோக்கி, வில்லில் கோத்த கூரிய முனையையுடைய அம்பினை, தடுக்கும் ஆற்றல் உடைய, தன் படை செல்லவும் தான் மட்டும் செல்லாது, பகைவர்கள் வரும் கடத்தற்கு அரிய வழியில் அவர்களைத் தடுத்து நிறுத்தும் எம்முடைய பெரிய ஆற்றலுடைய படை மறவர் போன்றது என்று, அப்பன்றியின் மீது எய்யாது நீங்கிய, மலை பொருந்திய நாட்டையுடைய நம் தலைவன்,

வரும் வழியில் அடர்ந்த தூறுகள் பற்றியதால் அறுபட்டுக் கட்டு அவிழ்ந்து, உயர்ந்து திரண்ட தோள்களில் பூக்கள் உதிர்ந்த மாலையானது, எருதின் இமிலின்கண் கிடக்கும் கயிற்றைப் போல் அழகுடன் அசைந்திட, நம் இல் முன் வந்து நின்றதனை நம் அன்னை கண்டு, விரைந்து என் முகத்தை நோக்கி, ‘நீ நல்லவள்’ எனக் கூறி நகைத்து அங்கிருந்து சென்றாள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனைநிலை வகையான் வரைவு வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்னுஞ் சூத்திரத்தே, தலைவி கூற்றிற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இது வந்தோன் செவிலியை எதிர்ந்துழிக் கூறியது என்றனர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன்னை எதிர்த்த ஆண் பன்றியின் வீரத்தை மதித்து கானவன் அம்பு எய்யாமல் மீண்டது போல அன்னையும் நம் காதலனுடைய பெருந்தன்மையை நினைத்து அவனைக் கடிதலின்றி வாளாது போயினள் என உள்ளுறை கூறினள்.  எம் பெரு விறல் போன்ம் (9) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – எம்முடைய பெரிய வல்லாளனைப் போலும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – எம்முடைய பெரிய மறப் பண்பையே ஒக்கும்.  பறழ் – நாயே பன்றி புலி முயல் நான்கும் ஆயும் காலை குருளை என்ப.  குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார் (தொல்காப்பியம், மரபியல் 8,10).

சொற்பொருள்:  நகை நீ கேளாய் – நகைப்பதற்கு உரிய செய்தியை நீ கேட்பாயாக, தோழி – தோழி, அல்கல் – இரவில், வய நாய் எறிந்து – வலிய வேட்டை நாயைத் தாக்கி, வன் பறழ் தழீஇ – தன் வலிய குட்டிகளைத் தழுவிக்கொண்டு (தழீஇ – அளபெடை), இளையர் எய்துதல் மடக்கிக் கிளையொடு நால்முலைப் பிணவல் சொலிய – இளைய வேட்டுவர் நெருங்குவதைக் தடுத்துத் தொங்கும் முலையை உடைய தன் பெண் பன்றி தன் கிளையுடன் நீங்க, கான் ஒழிந்து அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற தறுகண் பன்றி நோக்கிக் கானவன் குறுகினன் – காட்டிலிருந்து வெளியே வந்த நுழைதற்கு அரிய வாயிலை உடைய முடுக்கில் வேடவர்களை எதிர்நோக்கி நின்ற அஞ்சாமை உடைய பன்றியை நோக்கி வேட்டுவன் அண்மையில் சென்றான், தொடுத்த கூர்வாய்ப் பகழி – வில்லில் கோத்த கூரிய முனையையுடைய அம்பினை, மடை செலல் முன்பின் தன் படை செலச் செல்லாது – தடுக்கும் ஆற்றல் உடைய தன் படை செல்லவும் தான் மட்டும் செல்லாது (செலல் – இடைக்குறை), அருவழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம் என எய்யாது பெயரும் – பகைவர்கள் வரும் கடத்தற்கு அரிய வழியில் அவர்களைத் தடுத்து நிறுத்தும் எம்முடைய பெரிய ஆற்றலுடைய படை மறவர் போலும் என அப்பன்றியின் மீது எய்யாது நீங்கிய (போன்ம் – போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது), குன்ற நாடன் – மலை பொருந்திய நாட்டையுடைய நம் தலைவன், செறி அரில் துடக்கலின் பரீஇப் புரி அவிழ்ந்து – அடர்ந்த தூறுகள் பற்றியதால் அறுபட்டுக் கட்டு அவிழ்ந்து (பரீஇ – அளபெடை), ஏந்து குவவு மொய்ம்பின் பூச் சோர் மாலை ஏற்று இமில் கயிற்றின் எழில் வந்து துயல்வர – உயர்ந்து திரண்ட தோள்களில் பூக்கள் உதிர்ந்த மாலையானது எருதின் இமிலின்கண் கிடக்கும் கயிற்றைப் போல் அழகுடன் அசைந்திட, இல் வந்து நின்றோன் கண்டனள் அன்னை – நம் இல் முன் வந்து நின்றவனை நம் அன்னை கண்டாள், வல்லே என் முகம் நோக்கி நல்லை மன் என நகூஉப் பெயர்ந்தோளே – விரைந்து என் முகத்தை நோக்கி ‘நீ நல்லவள்’ எனக் கூறி நகைத்து அங்கிருந்து சென்றாள் (நல்லை என்பது இகழ்ச்சிக்குறிப்பு, மன் –அசைநிலை, நகூஉ – அளபெடை, பெயர்ந்தோளே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 249, நக்கீரனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! பல் நாள்
இவ் ஊர் அம்பல் எவனோ? வள்வார்
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை
இன் குரல் அகவுநர் இரப்பின், நாள்தொறும்
பொன் கோட்டுச் செறித்துப் பொலந்தார் பூட்டிச்,  5
சாந்தம் புதைத்த ஏந்து துவங்கு எழில் இமில்
ஏறு முந்துறுத்துச் சால் பதம் குவைஇ,
நெடுந்தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண்
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்
நல் எழில் இளநலம் தொலையினும், நல்கார்,  10
பல் பூங்கானத்து அல்கு நிழல் அசைஇத்
தோகைத் தூவித் தொடைத்தார் மழவர்
நாகு ஆ வீழ்த்துத் திற்றி தின்ற
புலவுக் களம் துழைஇய துகள்வாய்க் கோடை
நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த  15
வாள்வரி வயப் புலி தீண்டிய விளி செத்து,
வேறு வேறு கவலைய ஆறு பரிந்து, அலறி
உழைமான் இன நிரை ஓடும்
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவியின் வேறுபாடு கண்டு வருந்தும் தோழிக்குத் தலைவி கூறியது. 

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக! நான் கூறுவதைக் கேட்பாயாக! 

மயிலின் சிறகால் தொடுத்த மாலையை அணிந்த மழவர்கள், பல பூக்களையுடைய காட்டில் குறைந்த நிழலில் தங்கி, இளைய பசுவைக் கொன்று, அதன் தசையைத் தின்ற இடமாகிய, புலவு நாறும் இடத்தினைத் துழவிய புழுதியைக் கொண்ட மேல் காற்றின் ஒலியை,

உயர்ந்த மூங்கில்களைக் கொண்ட மலையில், இரையை விரும்பி எழுந்த ஒளிரும் வரிகளையுடைய வலிமையான புலி ஒன்று மானைப் பற்றியதால் எழுந்த ஒலி எனக் கருதி, வேறு வேறு பிரிவுகளையுடைய வழிகளில் வருந்தி அலறி உழைமான் என்னும் மானின் இனமாகிய கூட்டம் ஓடும், மூங்கில்கள் மறைக்கும் உயர்ந்த மலையின் வழிகளில் சென்ற நம் தலைவர்,

வளமான வாரினால் இழுத்துக் கோத்துக் கட்டிய அரித்து ஒலிக்கும் கோலின் தெளிவான ஒலியையுடைய கிணைப்பறையுடன் தம் இனிய குரலை எழுப்பிப் பாடும் பாணர்கள் வேண்டினால், ஒவ்வொரு நாளும், பொற்கம்பிகளை நெருக்கமாக இணைத்து புனைந்த பொன் மாலையைக் கழுத்தில் அணிவித்து, சந்தனம் தடவிய உயர்ந்து அசையும் அழகிய திமிலையுடைய ஏற்றை முன்னால் நிறுத்தி, மிகுந்த உணவைக் குவித்து வைத்து, நெடிய தேர்களையும் களிற்று யானைகளுடன் கொடுக்கும், வளைந்த அணிகலன்களையும் பல வேல்களையும் உடைய முசுண்டை என்பவனின் வேம்பி என்னும் ஊர் போன்ற, என்னுடைய நல்ல அழகிய இளமை நலம் தொலைந்தாலும், அருள் செய்யவில்லை.  அவ்வாறாக இருந்தும், பல நாட்களாக இந்த ஊரில் உள்ளவர்களின் பழிப்பேச்சு எதனாலோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  தீண்டிய (16) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பற்றியதால், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பற்றுவதற்கு.  வரலாறு –முசுண்டை, வேம்பி.  பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12,  குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.

சொற்பொருள்:  அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீ நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, பல் நாள் இவ் ஊர் அம்பல் எவனோ – பல நாட்களாக இந்த ஊரில் உள்ளவர்களின் பழிப்பேச்சு எதனாலோ, வள் வார் விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை இன் குரல் அகவுநர் இரப்பின் – வளமான வாரினால் இழுத்துக் கோத்துக் கட்டிய அரித்து ஒலிக்கும் கோலின் தெளிவான ஒலியையுடைய கிணைப்பறையுடன் தம் இனிய குரலை எழுப்பிப் பாடும் பாணர்கள் வேண்டினால், நாள்தொறும் – ஒவ்வொரு நாளும், பொன் கோட்டுச் செறித்துப் பொலந்தார் பூட்டி – பொற்கம்பிகளை நெருக்கமாக இணைத்து புனைந்த பொன் மாலையைக் கழுத்தில் அணிவித்து, சாந்தம் புதைத்த ஏந்து துவங்கு எழில் இமில் ஏறு முந்துறுத்து – சந்தனம் தடவிய உயர்ந்து அசையும் அழகிய திமிலையுடைய ஏற்றை முன்னால் நிறுத்தி, சால் பதம் குவைஇ – மிகுந்த உணவைக் குவித்து வைத்து, நெடுந்தேர் களிற்றொடு சுரக்கும் – நெடிய தேர்களையும் களிற்று யானைகளுடன் கொடுக்கும், கொடும் பூண் பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன – வளைந்த அணிகலன்களையும் பல வேல்களையும் உடைய முசுண்டை என்பவனின் வேம்பி என்னும் ஊர் போன்ற, என் நல் எழில் இளநலம் தொலையினும் – என்னுடைய நல்ல அழகிய இளமை நலம் தொலைந்தாலும், நல்கார் – அருள் செய்யவில்லை அவர், பல் பூங்கானத்து அல்கு நிழல் அசைஇ – பல பூக்களையுடைய காட்டில் குறைந்த நிழலில் தங்கி (அளபெடை), தோகைத் தூவித் தொடைத்தார் மழவர் – மயிலின் சிறகால் தொடுத்த மாலையை அணிந்த மழவர்கள், நாகு ஆ வீழ்த்துத் திற்றி தின்ற புலவுக் களம் துழைஇய துகள்வாய்க் கோடை – இளைய பசுவைக் கொன்று அதன் தசையைத் தின்ற இடமாகிய புலவு நாறும் இடத்தினைத் துழவிய புழுதியைக் கொண்ட மேல் காற்றின் ஒலியை (நாகு ஆ – இளைய பசு, துழைஇய – அளபெடை), நீள் வரைச் சிலம்பின் – உயர்ந்த மூங்கில்களைக் கொண்ட மலையில், இரை வேட்டு எழுந்த வாள்வரி வயப் புலி தீண்டிய விளி செத்து – இரையை விரும்பி எழுந்த ஒளிரும் வரிகளையுடைய வலிமையான புலி ஒன்று மானைப் பற்றியதால் எழுந்த ஒலி எனக் கருதி, வேறு வேறு கவலைய ஆறு பரிந்து அலறி உழைமான் இன நிரை ஓடும் – வேறு வேறு பிரிவுகளையுடைய வழிகளில் வருந்தி அலறி உழைமான் என்னும் மானின் இனமாகிய கூட்டம் ஓடும் (உழைமான் – இரு பெயரொட்டு), கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே – மூங்கில்கள் மறைக்கும் உயர்ந்த மலையின் வழிகளில் சென்றவர் (இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 250, செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார், நெய்தல் திணைதோழி தலைவியிடம் சொன்னது
எவன் கொல் வாழி தோழி மயங்கு பிசிர்
மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப
மணம் கமழ் இளமணல் எக்கர்க் காண்வரக்
கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாடக்  5
கொடுஞ்சி நெடுந்தேர் இளையரொடு நீக்கித்
தாரன் கண்ணியன் சேர வந்து ஒருவன்
வரி மனை புகழ்ந்த கிளவியன் யாவதும்
மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன் அதற்கொண்டு
அரும் படர் எவ்வமொடு பெருந்தோள் சாஅய்  10
அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறுகுடி
வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு
துறையும் துஞ்சாது கங்குலானே.

பாடல் பின்னணி:  தலைவியை கூட்டுவிக்கத் தோழியைத் தலைவன் வேண்டினான்.  தோழியும் தலைவியிடம் வந்து தலைவன் வேண்டுகோளுக்கு இணங்குமாறு அவள் நயக்கும்படி கூறியது.  

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  நெருங்கிய துவலைகள் மிக்க அலைகளால் தாக்குண்ட அசைந்த நிலையையுடைய, புன்னை மரங்களின் வண்டுகள் ஓலிக்கின்ற மலர்க்கொத்துக்களின் நுண்ணிய பூந்தாது உதிர்ந்து அழகு செய்ய, நறுமணம் கமழ்கின்ற மென்மையான மணல் மேட்டில், காண்பதற்கு இன்பம் வருமாறு நாம் தோழியர் கூட்டத்துடன் சேர்ந்து விளையாட, கொடுஞ்சியுடைய நெடிய தேரில் உள்ள இளைய ஏவலாளர்களிடமிருந்து விலகி கழுத்தில் மாலையையும் தலையில் தண்ணியையும் அணிந்தவனாக அணுகி வந்து, ஒரு தலைவன், யாம் வரி வரியாக இழைத்த வண்டல் மனைகளைப் பாராட்டிய சொற்களை உடையவனாகவும், நம்மிடமிருந்து மறுமொழி பெறாதானாகவும் மீண்டு சென்றனன்.

 அது முதல் கடத்தற்கு அரிய பெரும் துன்பத்துடன், பெரிய தோள்கள் மெலிய, அழகிய வலைகளையுடைய பரதவரின் கடற்கரையில் உள்ள சிற்றூரில் உள்ள கொடிய வாயை உடைய பெண்களின் அலரால் மனம் கலங்கி, முன்கையில் நெகிழ்ந்த வளையல்களை உடைய நம்முடன் இரவு நேரத்தில் கடல் துறையும் துஞ்சாது உள்ளது, இதற்குக் காரணம் என்னவோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘குறைந்து அவட் படரினும்’ என வரும் விதி கொள்க.  வரி மனை (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரிவரியாகிய மணல் வீடுகள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வண்டல் மனை.  கொடுஞ்சி – கையால் பற்றுதற்குரிய தாமரை மொட்டுப் போன்ற தேர் உறுப்பு.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நாம் உற்ற நோய்க்குக் காரணம், நம் உள்ளம் அவன் கண்ணதாக நாம் அவனைப் பிரிந்து இருத்தலேயாம் என்பதும், நம்மொடு கங்குலானே துறையும் துஞ்சாது என்றமையால், அவனைப் பிரிந்த வருத்தத்தால் நாம் இரவிலே துயிலின்றி வருந்துகின்றோம் என்பதும் கூறினாளாம்.  துறையும் துஞ்சாது என்றது, இரவிலே தோன்றி மிக வருந்துதலின், நம்மைப் போல் இக்கடலும் துஞ்சுகின்றது இலதே, இஃது என்னை என்றும் கூறினாளாம்.  எனவே நாம் உற்ற நோயும் வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வையும் ஒழிய வேண்டின், அப்பெருந்தகையின் குறையினை நயந்து ஏற்றுக்கோடல் வேண்டும் எனத் தோழி குறை நயப்பக் கூறினாளாம் என்க.

சொற்பொருள்:  எவன் கொல் – இதற்குக் காரணம் என்னவோ (கொல் – அசைநிலை), வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, மயங்கு பிசிர் மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப மணம் கமழ் இளமணல் எக்கர் – நெருங்கிய துவலைகள் மிக்க அலைகளால் தாக்குண்ட அசைந்த நிலையையுடைய புன்னை மரங்களின் வண்டுகள் ஓலிக்கின்ற மலர்க்கொத்துக்களின் நுண்ணிய பூந்தாது உதிர்ந்து அழகு செய்ய நறுமணம் கமழ்கின்ற மென்மையான மணல் மேட்டில் (புன்னை மரம் – Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree), காண்வரக் கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட – காண்பதற்கு இன்பம் வருமாறு நாம் தோழியர் கூட்டத்துடன் சேர்ந்து விளையாட, கொடுஞ்சி நெடுந்தேர் இளையரொடு நீக்கித் தாரன் கண்ணியன் சேர வந்து – கொடுஞ்சியுடைய நெடிய தேரில் உள்ள இளைய ஏவலாளர்களிடமிருந்து விலகி கழுத்தில் மாலையையும் தலையில் தண்ணியையும் அணிந்தவனாக அணுகி வந்து, ஒருவன் – ஒரு தலைவன், வரி மனை புகழ்ந்த கிளவியன் யாவதும் மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன் – யாம் வரி வரியாக இழைத்த வண்டல் மனைகளைப் பாராட்டிய சொற்களை உடையவனாகவும்  நம்மிடமிருந்து மறுமொழி பெறாதானாகவும் மீண்டு சென்றனன் (பெறாஅன் – அளபெடை), அதற்கொண்டு அரும் படர் எவ்வமொடு – அது முதல் கடத்தற்கு அரிய பெரும் துன்பத்துடன், பெருந்தோள் சாஅய் – பெரிய தோள்கள் மெலிய (சாஅய் – அளபெடை, சாஅய எனத் திரிக்க), அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறுகுடி வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி – அழகிய வலைகளையுடைய பரதவரின் கடற்கரையில் உள்ள சிற்றூரில் உள்ள கொடிய வாயை உடைய பெண்களின் அலரால் மனம் கலங்கி (கலங்கி – கலங்க எனத் திரிக்க), இறை வளை நெகிழ்ந்த நம்மொடு துறையும் துஞ்சாது கங்குலானே – முன்கையில் நெகிழ்ந்த வளையல்களை உடைய நம்முடன் இரவு நேரத்தில் கடல் துறையும் துஞ்சாது உள்ளது sleep (கங்குலானே –  ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 251, மாமூலனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
தூதும் சென்றன, தோளும் செற்றும்,
ஓதி ஒண்ணுதல் பசலையும் மாயும்,
வீங்கு இழை நெகிழச் சாஅய்ச், செல்லலொடு
நாம் படர் கூரும் அருந்துயர் கேட்பின்,
நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண்  5
தங்கலர், வாழி தோழி! வெல்கொடித்
துனைகால் அன்ன புனை தேர்க் கோசர்
தொல்மூது ஆலத்து அரும் பணைப் பொதியில்,
இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்கத்
தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர்  10
பணியாமையின், பகை தலைவந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனை தேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய அறைவாய் உம்பர்,
மாசு இல் வெண்கோட்டு அண்ணல் யானை  15
வாயுள் தப்பிய அருங்கேழ் வயப்புலி
மா நிலம் நெளியக் குத்திப், புகலொடு
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை
நிரம்பா நீளிடைப் போகி
அரம் போழ் அம்வளை நிலை நெகிழ்த்தோரே.  20

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவியிடம் தோழி சொல்லியது.  

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  வெற்றிக்கொடியையும் விரையும் காற்றை ஒத்த ஓட்டத்தையும் உடைய ஒப்பனை செய்யப்பட்ட தேர்களையுடைய கோசர்களின் மிக்க தொன்மையான ஆலமரத்தின் அரிய கிளைகளையுடைய மன்றத்தில், இனிய இசையையுடைய முரசுகளைக் தடியால் அடித்து ஒலித்துப் பகைவர்களின் போர்முனையை அழித்த காலத்தில், மோகூரின் மன்னனான பழையன் என்பவன் பணியாததால், அவன் மேல் பகைமையை மேற்கொண்டு வந்த, குதிரைகள் பொருந்திய சேனையை உடைய புதிய மோரியர்கள், தங்கள் புனையப்பட்ட தேர்களின் உருளைகள் தடையின்றி செல்லும்பொருட்டு உடைத்து வழி உண்டாக்கிய, ஒளிரும் வெள்ளை அருவிகளையுடைய கற்பாறைகளுக்கு அப்பால் உள்ள, மாசு இல்லாத வெள்ளை மருப்புகளை (தந்தங்களை) உடைய தலைமையுடைய யானையின் வாயிலிருந்து தப்பிய அரிய நிறத்தையுடைய வலிய புலியை பெரிய நிலம் நெளியுமாறுக் குத்திச் செருக்குடன் காவல் இன்றித் தங்கியிருக்கும், தேக்கு மரங்கள் நிறைந்த காடாகிய தொலையாத நீண்ட இடத்தில் சென்று, அரத்தால் அறுத்து இயற்றிய அழகிய வளையல்களை நிலையிலிருந்து நெகிழச் செய்தவர்பால்,

நாம் விடுத்த தூதுவர்களும் சென்றுள்ளனர்.  நம் செறிந்த அணிகலன்கள் நெகிழ்ந்து விழ மெலிந்து, நாம் வருத்தத்துடன் நினைக்கும் தாங்குதற்கு அரிய துன்பம் மிகுவதை அவர் கேட்டால், நந்தன் என்பவனின் செல்வத்தை எய்துவாராயினும், இனி அங்கு அவர் தங்கியிருக்க மாட்டார்.   தோள்களிலும் வளையல்கள் செறிவுறும், ஓதி ஒண்ணுதல் பசலையும் மாயும் – கூந்தல் சூழ்ந்த ஒளிரும் நெற்றியில் படர்ந்த பசலையும் நீங்கும், , ,

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘தலைவரும் விழும நிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 39) என வரும் நூற்பாவின்கண் ‘நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களை என மொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு’ என வரும் விதி கொள்க.  வாயுள் தப்பிய அருங்கேழ் வயப்புலி (16) –ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தன் வாயினின்றும் தப்பிய அரிய நிறத்தையுடைய வலிய புலியைப் பெரிய நிலம் குழியக் குத்திக் கொன்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன் வாயில் நின்றும் தப்பிப் போன தீட்டுதற்கரிய நிறம் அமைந்த புலியைப் பெரிய நிலம் குழிந்துப் போகும்படி மருப்பினால் குத்திக் கொன்று, புலியூர்க் கேசிகன் உரை – தன்னைக் கடித்துக் கொல்லுதலின்றும் தப்பிய அரிய நிறத்தையுடைய புலியினைப் பெரிய நிலம் பள்ளமாகுமாறு தன் கொம்புகளால் வீழ்த்திக் குத்திக் கொன்றது.  வரலாறு – நந்தன், கோசர், மோகூர், மோரியர். மோரியர்களின் ஆக்கிரமிப்பு – அகநானூறு 69, 251, 281, புறநானூறு 175.  மோரியர்களின் ஆட்சிக்காலம் கி. மு 321–185.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  காப்பு இல வைகும் (18) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன்னைக் காவல் செய்வன பிற யானைகள் இலவாகத் தனித்துக் கிடக்கின்ற.  செற்றும் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பூரிக்கும்.  மோரியர் – அகநானூறு 69–10, 251–12, 281–8, புறநானூறு 175–6.

சொற்பொருள்:  தூதும் சென்றன – நாம் விடுத்த தூதுவர்களும் சென்றுள்ளனர், தோளும் செற்றும் – தோள்களிலும் வளையல்கள் செறிவுறும், ஓதி ஒண்ணுதல் பசலையும் மாயும் – கூந்தல் சூழ்ந்த ஒளிரும் நெற்றியில் படர்ந்த பசலையும் நீங்கும், வீங்கு இழை நெகிழச் சாஅய்ச் செல்லலொடு நாம் படர் கூரும் அருந்துயர் கேட்பின் – செறிந்த அணிகலன்கள் நெகிழ்ந்து விழ மெலிந்து நாம் வருத்தத்துடன் நினைக்கும் தாங்குதற்கு அரிய துன்பம் மிகுவதை அவர் கேட்டால் (சாஅய் – அளபெடை), நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண் தங்கலர் – நந்தன் என்பவனின் செல்வத்தை எய்துவாராயினும் இனி அங்கு அவர் தங்கியிருக்க மாட்டார், வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, வெல்கொடித் துனை கால் அன்ன புனை தேர்க் கோசர் தொல்மூது ஆலத்து அரும் பணைப் பொதியில் – வெற்றிக்கொடியையும் விரையும் காற்றை ஒத்த ஓட்டத்தையும் உடைய ஒப்பனை செய்யப்பட்ட தேர்களையுடைய கோசர்களின் மிக்க தொன்மையான ஆலமரத்தின் அரிய கிளைகளையுடைய மன்றத்தில், இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை – இனிய இசையையுடைய முரசுகளைக் தடியால் அடித்து ஒலித்துப் பகைவர்களின் போர்முனையை அழித்த காலத்தில், மோகூர் பணியாமையின் – மோகூரின் மன்னனான பழையன் என்பவன் பணியாததால், பகை தலைவந்த மா கெழு தானை வம்ப மோரியர் புனை தேர் நேமி உருளிய குறைத்த – பகைமையை மேற்கொண்டு வந்த குதிரைகள் பொருந்திய சேனையை உடைய புதிய மோரியர்கள் புனையப்பட்ட தேர்களின் உருளைகள் தடையின்றி செல்லும்பொருட்டு உடைத்து வழி உண்டாக்கிய, இலங்கு வெள் அருவிய அறைவாய் உம்பர் – ஒளிரும் வெள்ளை அருவிகளையுடைய கற்பாறைகளுக்கு அப்பால், மாசு இல் வெண்கோட்டு அண்ணல் யானை வாயுள் தப்பிய அருங்கேழ் வயப்புலி மா நிலம் நெளியக் குத்தி – மாசு இல்லாத வெள்ளை மருப்புகளை (தந்தங்களை) உடைய தலைமையுடைய யானையின் வாயிலிருந்து தப்பிய அரிய நிறத்தையுடைய வலிய புலியை பெரிய நிலம் நெளியுமாறுக் குத்தி,  புகலொடு காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை நிரம்பா நீள் இடைப் போகி – செருக்குடன் காவல் இன்றித் தங்கியிருக்கும் தேக்கு மரங்கள் நிறைந்த காடாகிய தொலையாத நீண்ட இடத்தில் சென்று (இல – இல்லை என்பதன் இடைக்குறை), அரம் போழ் அம் வளை நிலை நெகிழ்த்தோரே – அரத்தால் அறுத்து இயற்றிய அழகிய வளையல்களை நிலையிலிருந்து நெகிழச் செய்தவர் (நெகிழ்த்தோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 252, நக்கண்ணையார், குறிஞ்சித் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல் வந்து, ஆளி
உயர்நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி,
வெண்கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப்
பெருவரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தித்,  5
தனியன் வருதல் அவனும் அஞ்சான்
பனி வார் கண்ணேன் ஆகி நோய் அட,
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்,
யாங்குச் செய்வாம் கொல் தோழி! ஈங்கைத்
துய் அவிழ் பனி மலர் உதிர வீசித்  10
தொழில் மழை பொழிந்த பானாள் கங்குல்,
எறி திரைத் திவலை தூஉம் சிறு கோட்டுப்
பெருங்குளம் காவலன் போல,
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே.

பாடல் பின்னணி:  தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவனுக்குத் தாயின் காவல் மிகுந்தமையை உணர்த்தினாள். 

பொருளுரை:  தோழி!  தான் கொல்லும் விலங்குகள் இடது பக்கத்தில் விழுவதை அறியாத வெற்றிகரமாக வேட்டையாடும் புலியும் நடுங்குமாறு, விரும்பி வந்து ஆளியானது, உயர்ந்த நெற்றியையுடைய யானையின் புள்ளிகள் பொருந்திய முகத்தைத் தாக்கி, அதன் வெள்ளை மருப்பை (தந்தத்தை) பிடுங்கும், குளிர்ந்த நறுமணம் கமழும் சோலைகளையுடைய பெரிய மலைச் சாரலில், ஒரு வேலைத் தன் கையில் ஏந்தித் தனியனாக வருவதற்கு நம் தலைவன் அஞ்சவில்லை.

கண்ணீர் வடிக்கும் கண்களை உடையவளாகி துன்பம் வருத்த, தனித்து இருப்பதை யானும் பொறுக்க இயலாது உள்ளேன் யான்.  ஈங்கைச் செடியின் ஆர்க்குகள் அவிழ்ந்த குளிர்ந்த மலர்கள் உதிருமாறு பெய்தல் தொழிலையுடைய முகில்கள் நீரைப் பொழிந்த நடு இரவில், வீசும் அலைகளின் துளிகள் தூவும், சிறிய கரையையுடைய பெரிய குளத்தின் காவலன் போல், அன்னையும் துயில்வதை மறந்துவிட்டாள்.  யாம் என்ன செய்யலாம்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 20) என வரும் நூற்பாவின்கண் ‘பொழுதும் ஆறும் புரைவது அன்மையின் அழிவு தலைவந்த சிந்தைக் கண்ணும்’ என வரும் விதி கொள்க.  ஒப்புமை –நற்றிணை 205 – ஆளி நன்மான் வேட்டு எழு கோள் உகிர்ப் பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி ஏந்து வெண்கோட்டு வயக் களிறு இழுக்கும்.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பெரிய குளத்தைக் காப்பவன், அதன் கரை உடையாதபடி துயிலென்பது சிறிதும் இன்றி அதனைச் சூழ் வந்து காப்பன் ஆகலின், அவ்வாறு நள்ளிரவிலும் துயிலாது தன்னைப் பலகாலும் நோக்குதலையுடைய அன்னைக்குக் குளத்தின் காவலனை உவமை கூறினாள்.  காவலன் துயிலின்றிக் குளத்தைக் காத்தல் போல, அன்னையும் துயிலின்றி என்னைக் காக்கின்றாள் எனத் தொழில் உவமம் கொள்க.  ஆளி இருக்கும் பாடல்கள் – அகநானூறு 78, 252, 381, நற்றிணை 205, புறநானூறு 207, குறிஞ்சிப்பாட்டு 252, பெரும்பாணாற்றுப்படை 258, பொருநராற்றுப்படை 139.  ஆளி (பொருநராற்றுப்படை 139) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரிமா, அரிமாப் போன்ற வேறொரு விலங்கென எண்ணவும் இடமுள்ளது.  வரலாறு – பாரி, கபிலன்.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).  தான் வேட்டையாடிப் பெற்ற விலங்கு இடது பக்கம் விழுந்தால் புலி அதனை உண்ணாது – அகநானூறு 3, 29, 238, 252, 357, 389, நற்றிணை 154, புறநானூறு 190.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 71). 

சொற்பொருள்:  இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து வாள்வரி நடுங்கப் – தான் கொல்லும் விலங்குகள் இடது பக்கத்தில் விழுவதை அறியாத வெற்றிகரமாக வேட்டையாடும் புலியும் நடுங்குமாறு (வாள்வரி – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, ஆகுபெயருமாம்), புகல் வந்து ஆளி – விரும்பி வந்து ஆளியானது உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி வெண்கோடு புய்க்கும் – உயர்ந்த நெற்றியையுடைய யானையின் புள்ளிகள் பொருந்திய முகத்தைத் தாக்கி அதன் வெள்ளை மருப்பை (தந்தத்தை) பிடுங்கும், தண் கமழ் சோலைப் பெரு வரை அடுக்கத்து – குளிர்ந்த நறுமணம் கமழும் சோலைகளையுடைய பெரிய மலைச் சாரலில், ஒரு வேல் ஏந்தித் தனியன் வருதல் அவனும் அஞ்சான் – ஒரு வேலைத் தன் கையில் ஏந்தித் தனியனாக வருவதற்கு நம் தலைவன் அஞ்சவில்லை, பனி வார் கண்ணேன் ஆகி நோய் அட – கண்ணீர் வடிக்கும் கண்களை உடையவளாகி துன்பம் வருத்த, எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன் – தனித்து இருப்பதை யானும் பொறுக்க இயலாது உள்ளேன், யாங்குச் செய்வாம் – யாம் என்ன செய்யலாம், கொல் – அசைநிலை, தோழி – தோழி, ஈங்கைத் துய் அவிழ் பனி மலர் உதிர வீசித் தொழில் மழை பொழிந்த பானாள் கங்குல் – ஈங்கைச் செடியின் ஆர்க்குகள் அவிழ்ந்த குளிர்ந்த மலர்கள் உதிருமாறு பெய்தல் தொழிலையுடைய முகில்கள் நீரைப் பொழிந்த நடு இரவில் (ஈங்கை – Mimosa pudica, Touch–me–not, தொட்டாச்சுருங்கி, தொழில் மழை – உழுதொழிலுக்கு உதவும் மழை என்றலுமாம்), எறி திரைத் திவலை தூஉம் – வீசும் அலைகளின் துளிகள் தூவும் (தூஉம் – அளபெடை), சிறு கோட்டுப் பெருங்குளம் காவலன் போல அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே – சிறிய கரையையுடைய பெரிய குளத்தின் காவலன் போல் அன்னையும் துயில்வதை மறந்துவிட்டாள் (மறந்தனளே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 253, நக்கீரர், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
வைகல்தோறும் பசலை பாய, என்
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று, ஒய்யென
அன்னையும் அமரா முகத்தினள், அலரே
வாடாப் பூவிற் கொங்கர் ஓட்டி
நாடு பல தந்த பசும்பூண் பாண்டியன்  5
பொன் மலி நெடுநகர்க் கூடல் ஆடிய
இன்னிசை ஆர்ப்பினும் பெரிதே, ஈங்கு யான்
சில நாள் உய்யலென் போன்ம் எனப் பல நினைந்து
ஆழல், வாழி தோழி! வடாஅது,
ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ ஒய்யப்,  10
பகை முனை அறுத்துப் பல் இனம் சாஅய்,
கணம் சால் கோவலர் நெடுவிளிப் பயிர் அறிந்து,
இனம் தலைத்தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்றுத்
தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய
அம் தூம்பு அகல் அமைக் கமம் செலப் பெய்த  15
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி,
கன்றுடைப் பெருநிரை மன்று நிறை தரூஉம்
நேரா வன்தோள் வடுகர் பெருமகன்
பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை
அயிரியாறு இறந்தனர் ஆயினும், மயர் இறந்து  20
உள்ளுப தில்ல தாமே, பணைத்தோள்
குரும்பை மென்முலை அரும்பிய சுணங்கின்
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இருங்கூந்தல்,
மாக விசும்பின் திலகமொடு பதித்த
திங்கள் அன்ன நின் திருமுகத்து,  25
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவியிடம் தோழி சொல்லியது.  

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  “நாள்தோறும் பசலை படர்வதால் என் உடலும் செத்து வருகின்றது.  ஒய்யென அன்னையும் வெறுத்த முகத்தை உடையவளாக உள்ளாள்.  எழுந்த அலரோ, பொற்பூவை அணிந்த கொங்கரை விரட்டி அவர்களின் நாடு பலவற்றைக் கைப்பற்றிய பசும்பூண் பாண்டியன் என்னும் மன்னன், தான் வெற்றி அடைந்ததால், பொன்மிக்க பெரிய நகரமான கூடலில் கொண்டாடிய விழாவில் எழுந்த இனிய இசையின் ஆரவாரத்தை விடவும் பெரியது.  இங்கு யான் இனிச் சில நாட்களும் உயிர் வாழ மாட்டேன் போலும்” எனக் கூறித் துன்பத்தில் ஆழ்ந்துவிடாதே.

வடக்கில் உள்ள மிக்க இருளையுடைய நடு இரவில் அழகிய ஆனிரைகளைக் கவர்ந்துக் கொணர்வதற்குப் பகைவரைப் போர்முனையில் வென்று பல இனங்களை ஓட்டிக் கொண்டு வந்த,

நெடிய கூப்பிடும் ஒலியை அறிந்து, ஆனிரைகளைத் தம்மிடத்தே கொண்டு வரும், அசையும் இமிலையுடைய நல்ல ஏறுகளின் சருக்கரை அமைந்த கழுத்தில் தொங்கும்படி கட்டப்பட்ட, அழகிய உட்துளையையுடைய அகன்ற மூங்கில் குழாயில் நிறைய இருக்குமாறு பெய்த செறிந்த உணவை உடையவர்களாகிய, கூட்டமாக உள்ள கோவலரின் தொழுவத்தில் உள்ள ஆனிரைகளைக் கவர்ந்து, கன்றுகளையுடைய பெரிய ஆநிரைகளை மன்றங்கள் நிறையுமாறு கொண்டு வரும், ஒப்பில்லாத வலிய தோளினையுடைய வடுகர்கள் தலைவனான பெரிய புகழையுடைய எருமை என்பவனின் நல்ல நாட்டில் உள்ளதாகிய, அயிரி என்னும் ஆற்றைக் கடந்து சென்றனர் ஆயினும்,  

மூங்கில் போன்ற தோள்களையும் குரும்பை போன்ற மெல்லிய முலைகளையும் அரும்பிய சுணங்கினையும், இடையினை வருத்தித் தழைத்த தாழ்ந்த கரிய கூந்தலையும் உடைய நின், மாகமாகிய வானில் பொட்டு இட்ட திங்களைப் போன்ற அழகிய முகத்தில் உள்ள, ஒளிரும் மத்தக மணி பதித்து விளங்கும் குழை என்னும் காதணிகளுடன் போரிடும் நின் கண்களின் நோக்கினை, மயக்கம் தீர்ந்து நினைப்பார்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகைபட வந்த கிளவி’ என்பது விதியாகக் கொள்க.  வரலாறு –கொங்கர், பசும்பூண் பாண்டியன், கூடல், வடுகர் பெருமகன் எருமை, அயிரியாறு.   மன்றத்தில் புகுதல் – அகநானூறு 14 – கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும், அகநானூறு 63 – கன்று காணாது புன்கண்ண செவி சாய்த்து மன்று நிறை பைதல் கூரப் பல உடன் கறவை, அகநானூறு 64 – மன்று நிறை புகுதரும் ஆ, அகநானூறு 253 – கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம், கலித்தொகை 119 – கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர, புறநானூறு 387 – மன்று நிறையும் நிரை, குறிஞ்சிப்பாட்டு 217 – ஆன் கணம் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர.  மூங்கில் குழாயில் உணவு – அகநானூறு 253 – கோவலர் நெடு விளிப் பயிர் அறிந்து இனம் தலைத்தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்றுத் தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய அம் தூம்பு அகல் அமைக் கமம் செலப் பெய்த துறு காழ் வல்சியர், அகநானூறு 311– கோவலர் மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி.  வடுகர் – ஒளவை துரைசாமி உரை புறநானூறு 278 – தொண்டை நாட்டுத் திருவேங்கடத்திற்கு வடக்கில் உள்ள நாட்டவராதலால் வடுகர் எனப்பட்டனர், பொ. வே. சோமசுந்தரனார் உரை அகநானூறு 213 – வடுகர் தெலுங்கர்.  வடுகர் – அகநானூறு 107, 213, 253, 281, 295, 375, 381, குறுந்தொகை 11, நற்றிணை 212, புறநானூறு 378.கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம், உரியியல் 57).  அமரா முகத்து அன்னை – அகநானூறு 253 – அன்னையும் அமரா முகத்தினள், அகநானூறு 378 – உடன்ற அன்னை அமரா நோக்கமும், நற்றிணை 122–9 – அன்னையும் அமரா முகத்தினள்.  நுசுப்பு அழித்து (23) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இடையினை மறைத்து, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இடையினை வருத்தி.

சொற்பொருள்:  வைகல்தோறும் பசலை பாய என் மெய்யும் பெரும்பிறிது ஆகின்று – நாள்தோறும் பசலை படர்வதால் என் உடலும் செத்து வருகின்றது, ஒய்யென அன்னையும் அமரா முகத்தினள் – ஒய்யென அன்னையும் வெறுத்த முகத்தை உடையவளாக உள்ளாள் (ஒய்யென – விரைவுக்குறிப்பு), அலரே வாடாப் பூவிற் கொங்கர் ஓட்டி நாடு பல தந்த பசும்பூண் பாண்டியன் பொன் மலி நெடுநகர்க் கூடல் ஆடிய இன்னிசை ஆர்ப்பினும் பெரிதே – எழுந்த அலரோ பொற்பூவை அணிந்த கொங்கரை விரட்டி அவர்களின் நாடு பலவற்றைக் கைப்பற்றிய பசும்பூண் பாண்டியன் என்னும் மன்னன் பொன்மிக்க பெரிய நகரமான கூடலில் தான் வெற்றி அடைந்ததால் கொண்டாடிய விழாவில் எழுந்த இனிய இசையின் ஆரவாரத்தை விடவும் பெரியது (வாடாப் பூ – பொன்னால் செய்த பூவிற்கு வெளிப்படை, அலரே – ஏகாரம் அசைநிலை, பெரிதே – ஏகாரம் அசைநிலை), ஈங்கு யான் சில நாள் உய்யலென் போன்ம் எனப் பல நினைந்து ஆழல் – இங்கு யான் இனிச் சில நாட்களும் உயிர் வாழ மாட்டேன் போலும் எனக் கூறித் துன்பத்தில் ஆழ்ந்துவிடாதே (போன்ம் – போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது, ஆழல் – அல் ஈற்று எதிர்மறை வியங்கோள், ஆழ்ந்துவிடாதே, துன்பத்தில் அழாதே எனக் கொண்டால் அழாதே – நீட்டல் விகாரம்), வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி தோழி, வடாஅது ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ ஒய்யப் பகை முனை அறுத்துப் பல் இனம் சாஅய் – வடக்கில் உள்ள மிக்க இருளையுடைய நடு இரவில் அழகிய ஆனிரைகளைக் கவர்ந்துக் கொணர்வதற்குப் பகைவரைப் போர்முனையில் வென்று பல இனங்களை ஓட்டிக்கொண்டு (வடாஅது – அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது, சாஅய் – அளபெடை), கணம் சால் கோவலர் – கூட்டமாக உள்ள கோவலர், நெடுவிளிப் பயிர் அறிந்து – நெடிய கூப்பிடும் ஒலியை அறிந்து, இனம் தலைத்தரூஉம் – ஆனிரைகளைத் தம்மிடத்தே கொண்டு வரும் (தரூஉம் – அளபெடை), துளங்கு இமில் நல் ஏற்றுத் தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய – அசையும் இமிலையுடைய நல்ல ஏறுகளின் சருக்கரை அமைந்த கழுத்தில் தொங்கும்படி கட்டப்பட்ட (தழூஉப் பிணர் – பிணர் தழூஉ என மாறுக, தழூஉ – அளபெடை), அம் தூம்பு அகல் அமைக் கமம் செலப் பெய்த துறு காழ் வல்சியர் – அழகிய உட்துளையையுடைய அகன்ற மூங்கில் குழாயில் நிறைய இருக்குமாறு பெய்த செறிந்த உணவை உடையவர்களாக, தொழு அறை வௌவி – தொழுவத்தில் உள்ள ஆனிரைகளைக் கவர்ந்து, கன்றுடைப் பெருநிரை மன்று நிறை தரூஉம் – கன்றுகளையுடைய பெரிய ஆநிரைகளை மன்றங்கள் நிறையுமாறு கொண்டு வரும்,  நேரா வன்தோள் வடுகர் பெருமகன் பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை – ஒப்பில்லாத வலிய தோளினையுடைய வடுகர்கள் தலைவனான பெரிய புகழையுடைய எருமை என்பவனின் நல்ல நாட்டில் உள்ளதாகிய (உள்ளதை – ஐ பகுதிப்பொருள் விகுதி), அயிரியாறு இறந்தனர் ஆயினும் – அயிரி என்னும் ஆற்றைக் கடந்து சென்றனர் ஆயினும், மயர் இறந்து உள்ளுப – மயக்கம் தீர்ந்து நினைப்பார், தில்ல – தில் ஓர் இடைச்சொல், ஈறு திரிந்து வந்தது, தாமே – தாம் ஏ அசைநிலைகள், பணைத்தோள் குரும்பை மென்முலை அரும்பிய சுணங்கின் – மூங்கில் போன்ற தோள்களையும் குரும்பை போன்ற மெல்லிய முலைகளையும் அரும்பிய சுணங்கினையும், நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இருங்கூந்தல் – இடையினை வருத்தித் தழைத்த தாழ்ந்த கரிய கூந்தலையும் உடைய, மாக விசும்பின் திலகமொடு பதித்த திங்கள் அன்ன நின் திருமுகத்து – மாகமாகிய வானில் பொட்டு இட்ட திங்களைப் போன்ற நின் அழகிய முகத்தில் உள்ள (மாக விசும்பு – இருபெயரொட்டு), ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே – ஒளிரும் மத்தக மணி பதித்து விளங்கும் குழை என்னும் காதணிகளுடன் போரிடும் நின் கண்களின் நோக்கு (நோக்கே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 254, மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், முல்லைத் திணைதலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
நரை விராவுற்ற நறுமென்கூந்தல்
செம்முது செவிலியர் பல பாராட்டப்,
பொலஞ்செய் கிண்கிணி நலம் பெறு சேவடி
மணன் மலி முற்றத்து நிலம் வடுக்கொளாஅ,
மனை உறை புறவின் செங்கால் சேவல்  5
துணையொடு குறும்பறை பயிற்றி, மேல் செல,
விளையாடு ஆயத்து இளையோர்க் காண்தொறும்
நம்வயின் நினையும் நன்னுதல் அரிவை
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல,
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி  10
வந்து வினை முடித்தனம் ஆயின், நீயும்
பணை நிலை முனைஇய வினை நவில் புரவி
இழை அணி நெடுந்தேர் ஆழி உறுப்ப,
நுண் கொடி மின்னின் பைம்பயிர் துமியத்
தளவ முல்லையொடு தலைஇத் தண்ணென  15
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின்
நெடியிடை பின்படக் கடவுமதி என்று யான்
சொல்லிய அளவை, நீடாது வல்லெனத்
தார் மணி மா அறிவுறாஅ,
ஊர் நணித் தந்தனை உவகை யாம் பெறவே.  20

பாடல் பின்னணி:  வினைமுற்று வந்தெய்திய தலைவன் தேர்ப்பாகனிடம் உரைத்தது. 

பொருளுரை:  பாகனே! நரை கலந்த நறிய மெல்லிய கூந்தலையுடைய செவ்விய முதிய செவிலித்தாயர் பல கூறி பாராட்ட, பொன்னால் செய்த சலங்கையை அணிந்த அழகிய அடியால் மணல் நிறைந்த முற்றத்தில் நிலம் வடுக்கொள்ளுமாறு, மனையில் உறையும் சிவந்த காலையுடைய புறாவின் சேவல் தன் துணையுடன் குறுகக் குறுகப் பறந்து அதன் பின் மேலே செல்ல, விளையாடும் தன் இளைய தோழியரைக் காணும் பொழுதெல்லாம், நம்மை நினையும் அழகிய நெற்றியையுடைய நம் தலைவி, தனிமையில் தங்கியிருக்கும் மிக்க துன்பம் நீங்க, நம் வேந்தன் அடைந்த போர்ப்பணியால் நாம் வேற்று நாட்டிற்கு வந்து தங்கி மேற்கொண்ட வினையை முடித்தோம் ஆகலின், நீயும், பந்தியில் நிற்பதை வெறுத்த போர்த்தொழிலில் பயின்ற குதிரைகள் பூட்டிய, அணிகலனால் ஒப்பனை செய்யப்பட்ட நெடிய தேரின் உருளையை நுண்ணிய மின்னலின் கொடி போன்றுச் செலுத்துவதால், பசிய பயிர்கள் அறுபட்டுத் தளவமும் முல்லையும் கூடி, குளிர்ச்சியுடன் நறுமணம் கமழும் மலர்கள் செறிந்த காட்டின், நீண்ட இடம் பின்னால் போகும்படி செலுத்துவாயாக, என்று நான் கூறிய அளவில், தாழ்த்தாது விரைவாக மணியை மாலையாக அணிந்த குதிரையின் இயல்பை அறிந்து ஊர்க்கு அருகில் தேரினைக் கொண்டு வந்தாய், யாம் உவகை அடையவே.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘பேரிசை ஊர்திப் பாங்கர் பாங்கினும்’ என வரும் விதி கொள்க.  நுண் கொடி மின்னின் (14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நுண்ணிய மின்னல் கொடி மின்னல்களைப் போன்ற அணிகலன் அணியப்பெற்ற தேர், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நுண்ணிய மின்னல் கொடி போன்று தேர் உருளை செலுத்தப் பெறுதலின்.  ஒப்புமை –நெடுநல்வாடை 93 – பணை நிலை முனைஇய பல் உளைப் புரவி.  குறுந்தொகை 190 – வெண்தேர் முடுக இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி விசும்பு வீழ் கொள்ளியின் பைம்பயிர் துமிப்ப.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  கொளாஅ – கொள்ள என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  அறிவுறாஅ – அறிந்து, (செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, அளபெடை.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  நரை விராவுற்ற நறு மென் கூந்தல் செம்முது செவிலியர் பல பாராட்ட – நரை கலந்த நறிய மெல்லிய கூந்தலையுடைய செவ்விய முதிய செவிலித்தாயர் பல கூறி பாராட்ட, பொலஞ்செய் கிண்கிணி நலம் பெறு சேவடி மணன் மலி முற்றத்து நிலம் வடுக்கொளாஅ – பொன்னால் செய்த சலங்கையை அணிந்த அழகிய அடியால் மணல் நிறைந்த முற்றத்தில் நிலம் வடுக்கொள்ளுமாறு (வடுக்கொளாஅ – வடுக்கொள்ள, அளபெடை), மனை உறை புறவின் செங்கால் சேவல் துணையொடு குறும்பறை பயிற்றி மேல் செல – மனையில் உறையும் சிவந்த காலையுடைய புறாவின் சேவல் தன் துணையுடன் குறுகக் குறுகப் பறந்து அதன் பின் மேலே செல்ல (செல – செல்ல என்பதன் இடைக்குறை), விளையாடு ஆயத்து இளையோர்க் காண்தொறும் – விளையாடும் தன் இளைய தோழியரைக் காணும் பொழுதெல்லாம், நம்வயின் நினையும் நன்னுதல் அரிவை – நம்மை நினையும் அழகிய நெற்றியையுடைய நம் தலைவி, புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல – தனிமையில் தங்கியிருக்கும் மிக்க துன்பம் நீங்க, வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி வந்து வினை முடித்தனம் ஆயின் – நம் வேந்தன் அடைந்த போர்ப்பணியால் நாம் வேற்று நாட்டிற்கு வந்து தங்கி மேற்கொண்ட வினையை முடித்தோம் ஆகலின், நீயும் – நீயும், பணை நிலை முனைஇய வினை நவில் புரவி – பந்தியில் நிற்பதை வெறுத்த போர்த்தொழிலில் பயின்ற குதிரைகள் பூட்டிய (முனைஇய – அளபெடை), இழை அணி நெடுந்தேர் ஆழி உறுப்ப – அணிகலனால் ஒப்பனை செய்யப்பட்ட நெடிய தேரின் உருளையைச் செலுத்துவதால், நுண் கொடி மின்னின் – நுண்ணிய மின்னலின் கொடி போன்று (மின்னின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பைம்பயிர் துமியத் தளவ முல்லையொடு தலைஇ – பசிய பயிர்கள் அறுபட்டுத் தளவமும் முல்லையும் கூடி (தலைஇ – அளபெடை), தண்ணென வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின் – குளிர்ச்சியுடன் நறுமணம் கமழும் மலர்கள் செறிந்த காட்டின், நெடியிடை பின்படக் கடவுமதி – நீண்ட இடம் பின்னால் போகும்படி செலுத்துவாயாக (நெடியிடை – நெடிய இடை என்பது நெடியிடை என விகாரமாயிற்று, மதி – முன்னிலையசை), என்று யான் சொல்லிய அளவை – என்று நான் கூறிய அளவில், நீடாது வல்லெனத் தார் மணி மா அறிவுறாஅ ஊர் நணித் தந்தனை – தாழ்த்தாது விரைவாக மணியை மாலையாக அணிந்த குதிரையின் இயல்பை அறிந்து ஊர்க்கு அருகில் தேரினைக் கொண்டு வந்தாய் (அறிவுறாஅ – அளபெடை), உவகை யாம் பெறவே – யாம் உவகை அடையவே (பெறவே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 255, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீர் இடைப் போழ,
இரவும் எல்லையும் அசைவின்று ஆகி
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்டக்,
கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான்  5
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய,
ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல
கழியாமையே அழிபடர் அகல
வருவர் மன்னால் தோழி! தண் பணைப்
பொருபுனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண்,  10
கருவிளை முரணிய தண் புதல் பகன்றைப்
பெருவளம் மலர அல்லி தீண்டிப்,
பலவுக் காய்ப் புறத்த பசும்பழப் பாகல்
கூதள மூது இலைக் கொடி நிரைத் தூங்க
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை  15
கடி மனை மாடத்துக் கங்குல் வீசத்,
“திருந்திழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய,
நிரைவளை ஊருந்தோள்” என
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே.

பாடல் பின்னணி:  தலைவன் திரைக்கடலில் கப்பல் மூலம் பொருள் ஈட்டச் சென்றான்.  அவன் காலம் தாழ்த்தியமையால் பெரிதும் வருந்திய தலைவி, ஆற்றாமையினால் தோழியிடம் சொல்லியது. 

பொருளுரை:  தோழி!  உலகம் புடை பெயர்ந்தாற்போல் அச்சம் தரும் மரக்கலம், புலால் நாற்றம் வீசும் அலைகளையுடைய பெரிய கடல் நீரைப் பிளந்து செல்ல, இரவும் பகலும் ஓரிடத்தில் தங்குதல் இல்லாதாகி விரைந்து செல்லும் தன்மையுடைய காற்று வீசுவதால், கரை உயர்ந்த செறிந்த மணலையுடைய அகன்ற துறையிடத்துகப்பலை ஓட்டுபவன் கலங்கரை விளக்கின் ஒளிரும் விளக்கினால் இடம் அறிந்து செலுத்த, பொருள் ஈட்டும் பொருட்டுப் பிரிந்து சென்ற நம் தலைவர்,

குளிர்ந்த மருத நிலமாகிய நீர் மோதும் நாட்டில் உள்ள நம் ஊரில், கருவிளை மலர்களுடன் மாறுபட்ட குளிர்ந்த பகன்றைச் செடியின் மிகவும் செழுமையான மலர்களின் அக இதழ்களைத் தீண்டிப் பலாக்காயின் புறத்தைப் போன்ற புறத்தினையுடைய பசிய பழத்தையுடைய பாகற்கொடிகள், கூதளத்தின் முதிய இலைகளையுடைய கொடிகளின் மீது கிடந்து அசையும்பட, அறம் இல்லாது வருத்தும், நீங்காத வாடைக்காற்று காவல் பொருந்திய இல்லத்தின் மாடத்தில் இரவில் வீசி வருத்துவதால், திருந்திய அணிகலன்கள் நெகிழ்ந்துப் பெரும் அழகை இழக்க, தோளில் வரிசையாக உள்ள வளையல்கள் கழன்று விழும், என்று சொற்களைக் கொண்டு தூது செல்லும் அன்புடையவரை நாம் பெறுவோம் ஆயின், பல நாட்கள் தாழ்த்தாது நம் பெரும் துன்பம் அகல விரைந்து வருவார்.  ஆனால் அவரிடம் சென்று உரைப்பாரை யாம் பெறவில்லை.  ஆதலின் யாம் ஆற்றியிருப்பது எங்ஙனம்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 37) என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுள் கலத்திற் பிரிவு தலைமகளையொழியப் பிரிந்தமைக்கு உதாரணம், என்றனர் இளம்பூரணர்.  ‘இருவகைப் பிரிவும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 11) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள் தூது விடுவது காரணமாக உரைத்தது எனவும், இம் மணிமிடை பவளத்துப் பின்பனி வந்தவாறும் நண்பகல் கூறாமையின் அவர் குறித்த காலம் இதுவென்பது தோன்றியவாறும் காண்க எனவும், ‘ஏவன் மரபின்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 24) என்னுஞ் சூத்திரத்து, இப்பாட்டுள் வணிகன் தலைவனாகவும் கொள்ளக் கிடத்தலின், தலைவியும் அவ்வருணத் தலைவியாம் என்றுணர்க எனவும் கூறினர் நச்சினார்க்கினியர்.  ஒப்புமை –பெரும்பாணாற்றுப்படை 346–349 – வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாத்திய ஏற்று அருஞ்சென்னி விண்பொர நிவந்த வேயா மாடத்து இரவில் மாட்டிய இலங்கு சுடர்.  அழிபடர் (8) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மிக்க துன்பம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழிக்கின்ற துன்பம்.  பொருள் ஈட்டும்பொருட்டுத் தலைவன் கப்பலில் செல்வது – இப்பாடலில் மட்டுமே இதை நாம் காண்கின்றோம்.

சொற்பொருள்:  உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் புலவுத் திரைப் பெருங்கடல் நீர் இடைப் போழ – உலகம் புடை பெயர்ந்தாற்போல் அச்சம் தரும் மரக்கலம் புலால் நாற்றம் வீசும் அலைகளையுடைய பெரிய கடல் நீரைப் பிளந்து செல்ல (வங்கம் – கப்பல், மரக்கலம், நாவாய்), இரவும் எல்லையும் அசைவின்று ஆகி – இரவும் பகலும் ஓரிடத்தில் தங்குதல் இல்லாதாகி, விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட – விரைந்து செல்லும் தன்மையுடைய காற்று வீசுவதால் (செலல் – செல்லல் என்பதன் இடைக்குறை), கோடு உயர் திணி மணல் அகன் துறை – கரை உயர்ந்த செறிந்த மணலையுடைய அகன்ற துறையிடத்து, நீகான் மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய – கப்பலை ஓட்டுபவன் கலங்கரை விளக்கின் ஒளிரும் விளக்கினால் இடம் அறிந்து செலுத்த, ஆள் வினைப் பிரிந்த காதலர் – பொருள் ஈட்டும் பொருட்டுப் பிரிந்து சென்ற நம் தலைவர், நாள் பல கழியாமையே அழிபடர் அகல வருவர் – பல நாட்கள் தாழ்த்தாது நம் பெரும் துன்பம் அகல விரைந்து வருவார் (கழியாமையே – ஏகாரம் அசைநிலை), மன்னால் – மன் இடைச்சொல், ஆல் அசைநிலை, தோழி – தோழி, தண் பணைப் பொருபுனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண் – குளிர்ந்த மருத நிலமாகிய நீர் மோதும் நாட்டில் உள்ள நம் ஊரில், கருவிளை முரணிய தண் புதல் பகன்றைப் பெருவளம் மலர அல்லி தீண்டி – கருவிளை மலர்களுடன் மாறுபட்ட குளிர்ந்த பகன்றைச் செடியின் மிகவும் செழுமையான மலர்களின் அக இதழ்களைத் தீண்டி (கருவிளை – Clitoria ternatea, Mussel shell creeper, பகன்றைச் செடி – Operculina turpethum, Indian jalap), பலவுக் காய்ப் புறத்த பசும்பழப் பாகல் கூதள மூது இலைக் கொடி நிரைத் தூங்க –  பலாக்காயின் புறத்தைப் போன்ற புறத்தினையுடைய பசிய பழத்தையுடைய பாகற்கொடிகள் கூதளத்தின் முதிய இலைகளையுடைய கொடிகளின் மீது கிடந்து அசையும்படி (கூதளம் – Convolvulus ipome, a three–lobed nightshade vine), அறன் இன்று அலைக்கும் – அறம் இன்றி வருத்தும் (அறன் – அறம் என்பதன் போலி, இன்று – குற்றியலிகரம் உகரமாயிற்று செய்யுளாதலால்) ஆனா வாடை கடி மனை மாடத்துக் கங்குல் வீச – நீங்காத வாடைக்காற்று காவல் பொருந்திய இல்லத்தின் மாடத்தில் இரவில் வீசி வருத்துவதால், திருந்திழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய நிரை வளை ஊரும் தோள் – திருந்திய அணிகலன்கள் நெகிழ்ந்துப் பெரும் அழகை இழக்க தோளில் வரிசையாக உள்ள வளையல்கள் கழன்று விழும், என உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே – என்று சொற்களைக் கொண்டு தூது செல்லும் அன்புடையவரை நாம் பெறுவோம் ஆயின் (பெறினே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 256, மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார், மருதத் திணை தோழி தலைவனிடம் சொன்னது
பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில்
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை
நொடி விடு கல்லிற் போகி, அகன்துறைப்
பகுவாய் நிறைய நுங்கின் கள்ளின்
உகுவு ஆர் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு  5
தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர!
பொய்யால் அறிவென் நின் மாயம் அதுவே
கையகப்பட்டமை அறியாய்; நெருநை
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை  10
ஏர்தரு புதுப் புனல் உரிதினின் நுகர்ந்து,
பரத்தை ஆயம் கரப்பவும் ஒல்லாது
கவ்வை ஆகின்றால் பெரிதே; காண்தகத்
தொல் புகழ் நிறைந்த பல் பூங்கழனிக்
கரும்பு அமல் படப்பைப் பெரும் பெயர்க் கள்ளூர்த்  15
திருநுதல் குறுமகள் அணி நலம் வவ்விய
அறனிலாளன் அறியேன் என்ற
திறன் இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய்,
முறி ஆர் பெருங்கிளை செறியப் பற்றி
நீறு தலைப் பெய்த ஞான்றை,  20
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே.

பாடல் பின்னணி:  தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தது. 

பொருளுரை:  பின்னிய நூறுகளையுடைய வள்ளைக் கொடியின் நீண்ட இலைகள் அடர்ந்த பொந்தில் சோம்பிக் கிடக்கும், துயிலை வெறுத்த வலிய நகத்தையுடைய ஆமை, ஒலி உண்டாக்கும் பரல் கற்களின் மேல் நடந்து, அகன்ற துறையில், பிளந்த வாய் நிறையும்படி உண்பவர்கள் அருந்தும்பொழுது சிந்திய பனங்கள்ளின் ஒழுக்கினை உண்ட களிப்புடன் செல்லும் நடையொடு, இனிய பெரிய வயல்களில் சேற்றைக் கலக்கி அருகில் உள்ள ஆம்பலின் மெல்லிய இலைகளின் கீழ் ஒடுங்கும் ஊரனே! 

நீ பொய்யைக் கூறாதே!  நின் வஞ்சனையை யான் அறிவேன்.  நின் குற்றத்தை யாம் அறிந்தோம் என்பதை நீ அறியாய்.  நேற்று, மையுண்ட அழகிய கண்களையுடைய பரத்தையுடன் வையை ஆற்றின் அழகிய புதுப்புனலில் உரிமையுடன் இன்பம் நுகர, அதனைப் பரத்தையர் கூட்டமும் பிறர் அறியாமல் மறைக்கவும், மறைக்க முடியாமல் அலர் பெரிதும் எழுகின்றது.  காண்பதற்கு இனிய பலவாகிய மலர்கள் நிறைந்த வயல்களையும் கரும்பு மிக்க தோட்டங்களையுமுடைய பெரும் புகழையுடைய கள்ளூர் என்னும் ஊரில், அழகிய நெற்றியையுடைய இளையவள் ஒருத்தியின் அழகிய நலத்தைக் கவர்ந்துண்ட அறம் இல்லாதவன், பின் அவளை அறியேன் எனக் கூறிய பண்பு இல்லாத கொடிய சூளினை, அவர்களின் கூட்டத்தை அறிந்த சான்றோரை வினவி உணர்ந்து, தளிர்கள் பொருந்திய பெரிய மரத்தின் கிளையில் அவனை இறுகப் பிணித்து, நீற்றினை அவன் தலையில் பெய்த வேளையில், சிறப்பு மிக்க அவையின்கண் எழுந்த ஆரவாரத்தை விடவும் பெரியதாயிற்று.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும்’ என வரும் விதி கொள்க.  உள்ளுறை – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘வள்ளை நீடு இலைப் பொதும்பில் மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை, கள்ளின் உகுவு ஆர் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர’ என்றது, நின் மனையிடத்துத் துயில்வதை வெறுத்துச் சென்று, பரத்தையர் சேரியில் அவர் இன்பம் நுகர்ந்த பெருமிதத்தோடு, இற்பரத்தைபாற் சென்று தங்குவை என்றவாறாம்.  நுங்கின் கள்ளின் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நுங்கின் கள் என்றது பனங்கள்ளினை.  நுங்கு பாளைக்கு ஆகுபெயர்.  பகுவாய் நிறைய நுங்கின் கள்ளின் உகுவு ஆர் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு (4–5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தனது பிளந்த வாய் நிறையும்படி பனையினது கள்ளினது ஒழுக்கினை வயிறு நிரம்ப அருந்தியமையாலே களித்து இயங்குகின்ற நடையோடே, பனையினின்றும் ஒழுகுகின்ற கள்ளை வாயைப் பிளந்து ஏற்றுப் பருகி அதனால் சிறிது வெறி கொண்டு இயங்கும் என்றவாறு, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பிளந்த வாய் நிரம்பிட பனங்கள்ளின் அருந்துங்கால் சிந்திய ஒழுக்கினை உண்ட களிப்புடன் செல்லும் நடையொடு, ச. வே. சுப்பிரமணியன் உரை – கள் பருகிக் கொண்டிருந்தவர்கள் சிந்திய துளிகளை உண்டு, மயக்கத்தோடு மெல்ல நகர்ந்து.  நீறு (20) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சுண்ணாம்பு நீறு.  இவ் வரலாற்றைக் கூறினாள், நீயும் ஒருத்தியோடு கூடி யான் அவளை அறியேன் என்கின்றாய் எனக் குறிப்பால் உணர்த்தும்பொருட்டு என்க.  

சொற்பொருள்:  பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில் மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை – பின்னிய நூறுகளையுடைய வள்ளைக் கொடியின் நீண்ட இலைகள் அடர்ந்த பொந்தில் சோம்பிக் கிடக்கும் துயிலை வெறுத்த வலிய நகத்தையுடைய ஆமை (முனைஇய – அளபெடை), நொடி விடு கல்லிற் போகி – ஒலி உண்டாக்கும் பரல் கற்களின் மேல் நடந்து, அகன் துறைப் பகுவாய் நிறைய நுங்கின் கள்ளின் உகுவு ஆர் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு – அகன்ற துறையில் பிளந்த வாய் நிறையும்படி உண்பவர்கள் அருந்தும்பொழுது சிந்திய பனங்கள்ளின் ஒழுக்கினை உண்ட களிப்புடன் செல்லும் நடையொடு (உகுவு – ஒழுக்கு, ஆர்ந்து என்பது அருந்து என வந்தது), தீம் பெரும் பழனம் உழக்கி அயலது ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர – இனிய பெரிய வயல்களில் சேற்றைக் கலக்கி அருகில் உள்ள ஆம்பலின் மெல்லிய இலைகளின் கீழ் ஒடுங்கும் ஊரனே (ஊர – அண்மை விளி), பொய்யால் – நீ பொய்யைக் கூறாதே, அறிவென் நின் மாயம் – நின் வஞ்சனையை யான் அறிவேன், அதுவே கையகப்பட்டமை அறியாய் – நின் குற்றத்தை யாம் அறிந்தோம் என்பதை நீ அறியாய், நெருநை மை எழில் உண்கண் மடந்தையொடு வையை ஏர்தரு புதுப் புனல் – நேற்று மையுண்ட அழகிய கண்களையுடைய பரத்தையுடன் வையை ஆற்றின் அழகிய புதுப்புனலில், உரிதினின் நுகர்ந்து பரத்தை ஆயம் கரப்பவும் – உரிமையுடன் இன்பம் நுகர அதனைப் பரத்தையர் கூட்டமும் பிறர் அறியாமல் மறைக்கவும், ஒல்லாது கவ்வை ஆகின்றால் பெரிதே – மறைக்கவும் மறைக்க முடியாமல் அலர் பெரிதும் எழுகின்றது (ஆகின்றால் – ஆகின்று + ஆல், ஆல் – அசைநிலை), காண்தகத் தொல் புகழ் நிறைந்த பல் பூங்கழனிக் கரும்பு அமல் படப்பைப் பெரும் பெயர்க் கள்ளூர் – காண்பதற்கு இனிய பலவாகிய மலர்கள் நிறைந்த வயல்களையும் கரும்பு மிக்க தோட்டங்களையுமுடைய பெரும் புகழையுடைய கள்ளூர் என்னும் ஊரில், திருநுதல் குறுமகள் அணி நலம் வவ்விய அறனிலாளன் – அழகிய நெற்றியையுடைய இளையவள் ஒருத்தியின் அழகிய நலத்தைக் கவர்ந்துண்ட அறம் இல்லாதவன், அறியேன் என்ற திறன் இல் வெஞ்சூள் – அவளை அறியேன் எனக் கூறிய பண்பு இல்லாத கொடிய சூளினை, அறிகரி கடாஅய் முறி ஆர் பெருங்கிளை செறியப் பற்றி நீறு தலைப் பெய்த ஞான்றை – அவர்களின் கூட்டத்தை அறிந்த சான்றோரை வினவி உணர்ந்து தளிர்கள் பொருந்திய பெரிய மரத்தின் கிளையில் அவனை இறுகப் பிணித்து நீற்றினை அவன் தலையில் பெய்த வேளையில் (கடாஅய் – அளபெடை), வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே – சிறப்பு மிக்க அவையின்கண் எழுந்த ஆரவாரத்தை விடவும் பெரியதாயிற்று (பெரிதே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 257, உறையூர் மருத்துவன் தாமோதரனார், பாலைத் திணைதலைவன் தலைவியிடம் சொன்னது
வேனில் பாதிரிக் கூனி மாமலர்
நறைவாய் வாடல் நாறும் நாள் சுரம்
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப,
எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின்
பொம்மல் ஓதி பொதுள வாரி,  5
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச்
சுரும்பு சூழ் அலரி தைஇ வேய்ந்த நின்
தேம்பாய் கூந்தல் குறும்பல மொசிக்கும்
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன் கை  10
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி
வல்லுவை மன்னால் நடையே, கள்வர்
பகை மிகு கவலைச் செல்நெறி காண்மார்,
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்துக்,  15
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும்,
துன்புறு தகுந ஆங்கண், புன்கோட்டு
அரிலிவர் புற்றத்து அல்கு இரை நசைஇ,
வெள் அரா மிளிர வாங்கும்  20
பிள்ளை எண்கின் மலை வயினானே.

பாடல் பின்னணி:  உடன்போக்கில் தன்னுடன் சென்ற தலைவியிடம் தலைவன் கூறியது. 

பொருளுரை:  வேனில் பருவத்துப் பாதிரி மரத்தின் வளைந்த பெரிய மலர்களின் தேன் பொருந்திய வாடிய மலர்களின் நறுமணம் உடைய பகற்பொழுதில் சுரத்தில், பரற்கற்கள் ஒலிக்கும் சிலம்பை அணிந்த நின் சிறிய அடிகள் சிவக்க, எம்முடன் ஒரு வழியில் வருவதற்கு, நின் பொலிந்த கூந்தலை நெருக்கமாக வாரி, அரும்பு இல்லாது மலர்ந்த அழகிய பூக்களையுடைய கடம்ப மரத்தின் வண்டுகள் சூழ்ந்த மலர்களைத் தொடுத்துச் சூடிய, நின் தேன் பொருந்திய கூந்தலில் குறியனவாகப் பலவாக மொய்க்கும் வண்டுகளைக் கடிந்து பாதுகாத்தலை நீ அறியாய்.

ஆறலை கள்வர்களுடைய பகை மிக்க பிரிவுகளையுடைய வழிகளில் புதிய வழிப்போக்கர்கள் தாம் செல்லுதற்கு வழி இது எனக் காணும் பொருட்டு, மரத்தின் மீது ஏணி சாத்தி வைத்த பிரிவுகளையும் தளிர்களையுமுடைய யா மரத்தின், நாரினை உடைய அடிமரத்தில் நீர் வரும்படி உரித்துக் களிற்று யானை சுவைத்துப் போட்ட சக்கையானது, கல்லாத உப்பு வணிகர்களுக்குத் தீ மூட்டுவதற்கு ஆகும், துன்பம் உறுவதற்கு உரிய அங்கு, புல்லிய பக்கங்களை உடைய தூறுகள் படர்ந்த ஈயல் புற்றில் இரவில் உண்ணும் இரையினை விரும்பி வெள்ளை பாம்புகள் பிரளும்படி கையால் இழுத்துப் பற்றும் குட்டிக் கரடிகளை உடைய மலையிடத்தில்,

அழகு உண்டாகும்படி நுண்ணிய திரண்ட ஒளிரும் வளையல்கள் ஒலிக்கும் முன் கையையுடைய மெல்லிய மூட்டு அமைந்த மூங்கில் போன்ற தோள்கள் விளங்க வீசி பெரிதும் நடத்தலில் வல்லமை உடையை ஆகின்றாய்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘கொண்டு தலைக் கழியினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 15) என வரும் விதியால் அமைத்திடுக.  ஆசிரியர் நச்சினார்க்கினியர் இதனை இதற்கு எடுத்துக்காட்டி ‘இது கொண்டுதலைக் கழிதற்கண் தலைவன் நடையை வியந்தது’ என்றனர்.  கரடிகள் ஈயல் புற்றை உடைத்தல் – அகநானூறு 8, 72, 81, 88, 112, 149, 247, 257, 307, நற்றிணை 125, 325, 336.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).  பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12,  குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.

சொற்பொருள்:  வேனில் பாதிரிக் கூனி மாமலர் நறைவாய் வாடல் நாறும் நாள் சுரம் – வேனில் பருவத்துப் பாதிரி மரத்தின் வளைந்த பெரிய மலர்களின் தேன் பொருந்திய வாடிய மலர்களின் நறுமணம் உடைய பகற்பொழுதில் சுரத்தில் (பாதிரி – Trumpet tree, Stereospermum chelonoides – yellow, Stereospermum suaveolens – purple, Stereospermum xylocarpum – white), அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப – பரற்கற்கள் ஒலிக்கும் சிலம்பை அணிந்த நின் சிறிய அடிகள் சிவக்க, எம்மொடு ஓர் ஆறு படீஇயர் – எம்முடன் ஒரு வழியில் வருவதற்கு, யாழ – அசைநிலை, நின் பொம்மல் ஓதி பொதுள வாரி அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச் சுரும்பு சூழ் அலரி தைஇ வேய்ந்த – நின் பொலிந்த கூந்தலை நெருக்கமாக வாரி அரும்பு இல்லாது மலர்ந்த அழகிய பூக்களையுடைய கடம்ப மரத்தின் வண்டுகள் சூழ்ந்த மலர்களைத் தொடுத்துச் சூடிய, நின் தேம்பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும் வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய் – நின் தேன் பொருந்திய கூந்தலில் குறியனவாகப் பலவாக மொய்க்கும் வண்டுகளைக் கடிந்து பாதுகாத்தலை அறியாய் (தேம் – தேன் என்றதன் திரிபு), அணி கொள நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன் கை மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி வல்லுவை மன்னால் நடையே – அழகு உண்டாகும்படி நுண்ணிய திரண்ட ஒளிரும் வளையல்கள் ஒலிக்கும் முன் கையையுடைய மெல்லிய மூட்டு அமைந்த மூங்கில் போன்ற தோள்கள் விளங்க வீசி பெரிதும் நடத்தலில் வல்லமை உடையை ஆகின்றாய் (மன்னால் – மன் இடைச்சொல், ஆல் அசைநிலை), கள்வர் பகை மிகு கவலைச் செல்நெறி காண்மார் – ஆறலை கள்வர்களுடைய பகை மிக்க பிரிவுகளையுடைய வழிகளில் புதிய வழிப்போக்கர்கள் தாம் செல்லுதற்கு வழி இது எனக் காணும் பொருட்டு, மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து – மரத்தின் மீது ஏணி சாத்தி வைத்த பிரிவுகளையும் தளிர்களையுமுடைய யா மரத்தின் (மிசை மரம் சேர்த்திய – மரம் மிசை சேர்த்திய), யாஅத்து – அத்துச் சாரியை, யா மரம் – ஆச்சா மரம், Hardwickia binata tree), நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்துக் களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல் கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும் – நாரினை உடைய அடிமரத்தில் நீர் வரும்படி உரித்துக் களிற்று யானை சுவைத்துப் போட்ட சக்கையானது கல்லாத உப்பு வணிகர்களுக்குத் தீ மூட்டுவதற்கு ஆகும், துன்புறு தகுந ஆங்கண் – துன்பம் உறுவதற்கு உரிய அங்கு, புன்கோட்டு அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ வெள் அரா மிளிர வாங்கும் பிள்ளை எண்கின் மலை வயினானே – புல்லிய பக்கங்களை உடைய தூறுகள் படர்ந்த ஈயல் புற்றில் இரவில் உண்ணும் இரையினை விரும்பி வெள்ளை பாம்புகள் பிரளும்படி கையால் இழுத்துப் பற்றும் குட்டிக் கரடிகளை உடைய மலையிடத்தில் (நசைஇ – அளபெடை, வயினானே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 258, பரணர், குறிஞ்சித் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
நன்னன் உதியன் அருங்கடிப் பாழித்
தொன் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமை நற்கு அறிந்தும், அன்னோள்
துன்னல மாதோ எனினும், அஃது ஒல்லாய்
தண் மழை தவழும் தாழ் நீர் நனந்தலைக்  5
கடுங்காற்று எடுக்கும் நெடும் பெருங்குன்றத்து
மாய இருள் அளை மாய் கல் போல,
மாய்க தில் வாழிய நெஞ்சே நாளும்
மெல் இயர் குறுமகள் நல் அகம் நசைஇ,
அரவு இயல் தேரும் அஞ்சுவரு சிறு நெறி  10
இரவின் எய்தியும் பெறாஅய் அருள் வரப்
புல்லென் கண்ணை புலம்பு கொண்டு உலகத்து
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகையாக,
காமம் கைம்மிக உறுதர
ஆனா அரும் படர் தலைத்தந்தோயே.  15.

பாடல் பின்னணி:  அல்ல குறிப்பட்டு தன் ஊர் திரும்பும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 

பொருளுரை:  என் நெஞ்சே!  நீ நீடு வாழ்வாயாக!  நன்னன் என்னும் மன்னனின் அரிய காவலையுடைய பாழி என்னும் இடத்தில், மிகப் பண்டைய மரபையுடைய வேளிர் பாதுகாத்து வைத்த பொன்னைவிடவும் அரியவள் என்பதை நன்கு அறிந்தும், அவளை யாம் நெருங்குவேம் அல்லேம் என யான் கூறினும், நீ அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

ஒவ்வொரு நாளும் மெல்லிய தன்மையுடைய இளைய தலைவியை நின் நல்ல உள்ளத்தில் விரும்பி, பாம்புகள் இரை தேடித் திரியும் அச்சம் தரும் சிறிய வழியில் இரவில் சென்றும் பெறாதாய், கண்டவர்களுக்கு அருள் உண்டாகும்படி பொலிவில்லாத கண்களை உடையையாய்த் தனிமையுற்று, உலகில் உள்ளவர்களுக்கு எல்லாம் பெரும் நகைப்பு உண்டாகும்படி, காதல் அளவு கடந்து மிகுந்தால் அடங்காத தாங்குதற்கு அரிய துன்பத்தைத் தந்தாய்.

குளிர்ந்த முகில்கள் தவழும் அருவிகளையுடைய பெரிய இடத்தினை உடைய கடுங்காற்று வீசும் நெடிய பெரிய குன்றத்தில், கலக்கத்தைத் தரும் இருள்மிக்க குகையில் ஒளியில்லாது மறையும் மணிகள் போல் போல் ஒளி இழந்து நீ அழிவாயாக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘மெய் தொட்டுப் பயிறல்’ (தொல்காப்பியம், களவியல் 11) என்னும் நூற்பாவின்கண் ‘மற்றைய வழியும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மெய் தொட்டுப் பயிறல்’ (தொல்காப்பியம், களவியல் 11) என்னுஞ் சூத்திரத்து இப்பாட்டு நெஞ்சினை இரவு விலக்கியது, என்பர் நச்சினார்க்கினியர்.  வரலாறு – நன்னன் உதியன், பாழி.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – முனைவர் கு.வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லதிகாரம், உரியியல் 57).

சொற்பொருள்:  நன்னன் உதியன் அருங்கடிப் பாழித் தொன் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த பொன்னினும் அருமை நற்கு அறிந்தும் – நன்னன் என்னும் மன்னனின் அரிய காவலையுடைய பாழி என்னும் இடத்தில் மிகப் பண்டைய மரபையுடைய வேளிர் பாதுகாத்து வைத்த பொன்னைவிடவும் அரியவள் என்பதை நன்கு அறிந்தும் (தொன் முதிர் – ஒரு பொருட் பன்மொழி, நற்கு – நன்கு என்பதன் விகாரம்), அன்னோள் துன்னல மாதோ எனினும் – அவளை யாம் நெருங்குவேம் அல்லேம் என யான் கூறினும் – மாதோ – மாது, ஓ அசைநிலைகள், அஃது ஒல்லாய் – நீ அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை, தண் மழை தவழும் தாழ் நீர் நனந்தலைக் கடுங்காற்று எடுக்கும் நெடும் பெருங்குன்றத்து – குளிர்ந்த முகில்கள் தவழும் அருவிகளையுடைய பெரிய இடத்தினை உடைய கடுங்காற்று வீசும் நெடிய பெரிய குன்றத்தில், மாய இருள் அளை மாய் கல் போல மாய்க – கலக்கத்தைத் தரும் இருள்மிக்க குகையில் ஒளியில்லாது மறையும் மணிகள் போல் ஒளி இழந்து நீ அழிவாயாக, தில் – அசைநிலை, வாழிய – நீ நீடு வாழ்வாயாக, நெஞ்சே – நெஞ்சே, நாளும் மெல் இயர் குறுமகள் நல் அகம் நசைஇ – ஒவ்வொரு நாளும் மெல்லிய தன்மையுடைய இளைய தலைவியை நின் நல்ல உள்ளத்தில் விரும்பி (நசைஇ – அளபெடை), அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி இரவின் எய்தியும் பெறாஅய் – பாம்புகள் இரை தேடித் திரியும் அச்சம் தரும் சிறிய வழியில் இரவில் சென்றும் பெறாதாய் (பெறாஅய் – அளபெடை), அருள் வரப் புல்லென் கண்ணை புலம்பு கொண்டு – கண்டவர்களுக்கு அருள் உண்டாகும்படி பொலிவில்லாத கண்களை உடையையாய்த் தனிமையுற்று (கண்ணை – கண்களையுடையாய், முற்றெச்சம்), உலகத்து உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகையாக – உலகில் உள்ளவர்களுக்கு எல்லாம் பெரும் நகைப்பு உண்டாகும்படி, காமம் கைம்மிக உறுதர ஆனா அரும் படர் தலைத்தந்தோயே – காதல் அளவு கடந்து மிகுந்தால் அடங்காத தாங்குதற்கு அரிய துன்பத்தைத் தந்தாய் (தலைத்தந்தோயே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 259, கயமனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
வேலும் விளங்கின, இளையரும் இயன்றனர்,
தாரும் தையின, தழையும் தொடுத்தன,
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கப்
பெயல் நீர் தலைஇ உலவை இலை நீத்துக்
குறு முறி ஈன்றன மரனே, நறு மலர் 5
வேய்ந்தன போலத் தோன்றிப் பல உடன்
தேம்படப் பொதுளின பொழிலே, கானமும்
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழிநாள்
பால் எனப் பரத்தரும் நிலவின் மாலைப்
போது வந்தன்று தூதே, நீயும்  10
கலங்கா மனத்தை ஆகி என் சொல்
நயந்தனை கொண்மோ, நெஞ்சு அமர் தகுவி,
தெற்றி உலறினும், வயலை வாடினும்,
நொச்சி மென்சினை வணர் குரல் சாயினும்,
நின்னினும் மடவள் நனி நின் நயந்த  15
அன்னை அல்லல் தாங்கி, நின் ஐயர்
புலி மருள் செம்மல் நோக்கி
வலியாய், இன்னும் தோய்க நின் முலையே.

பாடல் பின்னணி:  உடன்போக்கு நேர்ந்த தோழி தலைவியிடம் கூறியது.

பொருளுரை:  வேல்களும் திருத்தப் பெற்று விளங்குவன ஆயின. ஏவலாளரும் புறப்பட அமைந்து நின்றனர்.  மாலைகளும் கட்டப்பட்டன. தழை ஆடைகளும் தொடுக்கப்பட்டன.

நிலத்தில் நீர் இல்லாமையால் ஏற்பட்ட வெம்மை நீங்குமாறு பெய்த மழையை ஏற்றுத் தங்களுடைய உலர்ந்த இலைகளை நீக்கிச் சிறிய தளிர் இலைகளை ஈன்றன மரங்கள்.  நறுமணம் நிறைந்த மலர்களால் வேயப்பட்டது போலத் தோன்றி பலவும் தேன் பொருந்திச் செறிந்தன சோலைகள்.  காடுகள் மிகவும் நன்றாக உள்ளன.  பனிக்காலம் கழிந்த பின்னாகிய இளவேனில் காலத்தில் பால் எனப் பரவிய நிலாவைக் கொண்ட மாலைப் பொழுது தூதாக வந்தது.  நீயும் கலங்கா மனதுடையவளாக ஆகி நான் சொல்லுவதை விரும்பி கேட்பாயாக, என் உள்ளம் விரும்பும் தகுதியை உடையவளே!

மேட்டில் உள்ள மலர்கள் உலர்ந்தாலும், வயலைச் செடிகள் வாடினாலும், இல்லத்தில் உள்ள நொச்சி மரத்தின் வளைந்த கிளைகளில் உள்ள பூங்கொத்துக்கள் வாடினாலும், இவற்றையெல்லாம் நினையாதே. உன்னைக் காட்டிலும் மடப்பத்தை உடைய உன்னை மிகவும் விரும்பும் உன் அன்னையின் அல்லலையும் உன்னுடைய அண்ணன்மாரின் புலியை ஒத்த அச்சம் தரும் தலைமைத் தன்மையையும் நினைத்து கலங்காது, உன் தலைவனுடன் செல்வதற்குத் துணிவாயாக.

போகுமுன் உன்னுடைய முலைகள் என்னுடைய மார்பில் அழுந்தும்படி என்னைத் தழுவாயாக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘தலைவரும் விழும நிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 39) என வரும் நூற்பாவின்கண் ‘போக்கற்கண்ணும் விடுத்தற்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  வேய்ந்தன போலத் தோன்றி (4) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – புனையப்பட்டன போலத் தோன்றி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வேயப்பட்டன போல் காணப்பட்டு.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26). 

சொற்பொருள்:  வேலும் விளங்கின – வேல்களும் திருத்தப் பெற்று விளங்குவன ஆயின, இளையரும் இயன்றனர் – ஏவலாளரும் புறப்பட அமைந்து நின்றனர், தாரும் தையின – மாலைகளும் கட்டப்பட்டன, தழையும் தொடுத்தன – தழை ஆடைகளும் தொடுக்கப்பட்டன, நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கப் பெயல் நீர் தலைஇ – நிலத்தில் நீர் இல்லாமையால் ஏற்பட்ட வெம்மை நீங்குமாறு பெய்த மழையை ஏற்று (தலைஇ – அளபெடை), உலவை இலை நீத்துக் குறு முறி ஈன்றன மரனே – தங்களுடைய உலர்ந்த இலைகளை நீக்கிச் சிறிய தளிர் இலைகளை ஈன்றன மரங்கள் (மரன் – மரம் என்பதன் போலி, ஏகாரம் அசைநிலை), நறு மலர் வேய்ந்தன போலத் தோன்றி – நறுமணம் நிறைந்த மலர்களால் வேயப்பட்டது போலத் தோன்றி, பல உடன் தேம்படப் பொதுளின – பலவும் தேன் பொருந்திச் செறிந்தன (தேம் – தேன் என்றதன் திரிபு), பொழிலே – சோலைகளில், கானமும் நனி நன்று ஆகிய – காடுகள் மிகவும் நன்றாக உள்ளன, பனி நீங்கு வழிநாள் – பனிக்காலம் கழிந்த பின்னாகிய இளவேனில், பால் எனப் பரத்தரும் நிலவின் – பால் எனப் பரவிய நிலாவைக் கொண்ட, மாலைப் போது வந்தன்று தூதே – மாலைப் பொழுது தூதாக வந்தது, நீயும் கலங்கா மனத்தை ஆகி என் சொல் நயந்தனை கொண்மோ – நீயும் கலங்கா மனதுடையவளாக ஆகி நான் சொல்லுவதை விரும்பி கேட்பாயாக (மோ – முன்னிலையசை), நெஞ்சு அமர் தகுவி – என் உள்ளம் விரும்பும் தகுதியை உடையவளே, தெற்றி உலறினும் – மேட்டில் உள்ள மலர்கள் உலர்ந்தாலும், வயலை வாடினும் – வயலைச் செடிகள் வாடினாலும் (வயலைக் கொடி – Portulaca quadrifida, Purslane creeper), நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும் – இல்லத்தில் உள்ள நொச்சி மரத்தின் வளைந்த கிளைகளில் உள்ள பூங்கொத்துக்கள் வாடினாலும் (நொச்சி மரம் – Vitex leucoxylon, Chaste tree), நின்னினும் மடவள் – உன்னைக் காட்டிலும் மடப்பத்தை உடையவள், நனி நின் நயந்த அன்னை அல்லல் தாங்கி – உன்னை மிகவும் விரும்பும் உன் அன்னையின் துன்பத்தைத் தாங்கி, நின் ஐயர் புலி மருள் செம்மல் நோக்கி – உன்னுடைய அண்ணன்மாரின் புலியை ஒத்த அச்சம் தரும் தலைமைத் தன்மையை நினைத்து (மருள் – உவம உருபு), வலியாய் – உன் தலைவனுடன் செல்வதற்குத் துணிவாயாக, இன்னும் தோய்க நின் முலையே – உன்னுடைய முலைகள் என்னுடைய மார்பில் அழுந்தும்படி என்னைத் தழுவாயாக (முலையே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 260, மோசிக் கரையனார், நெய்தல் திணைதோழியும் தலைவியும் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
மண்டிலம் மழுக மலை நிறம் கிளர,
வண்டு இனம் மலர் பாய்ந்து ஊத, மீமிசைக்
கண்டல் கானல் குருகினம் ஒலிப்பக்,
கரை ஆடு அலவன் அளைவயின் செறியத்,
திரை பாடு அவியத் திமில் தொழில் மறப்பச்,  5
செக்கர் தோன்றத் துணை புணர் அன்றில்
எக்கர்ப் பெண்ணை அக மடல் சேரக்,
கழி மலர் கமழ் முகம் கரப்பப் பொழில் மனைப்
புன்னை நறுவீ பொன் நிறம் கொளாஅ,
எல்லை பைப்பய கழிப்பி, எல் உற  10
யாங்கு ஆகுவள் கொல் தானே?  நீங்காது
முது மரத்து உறையும் முரவுவாய் முது புள்
கதுமெனக் குழறும் கழுது வழங்கு அரை நாள்
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த,
அன்பிலாளன் அறிவு நயந்தேனே.  15

பாடல் பின்னணி:  இரவுக்குறிக்கண் தலைவன் சிறைப்புறமாக, தோழியால் சொல் எடுக்கப்பட்டுத், தலைவி கூறியது.  தலைவியும் தோழியும் பேசுவதாக அமைந்த ஒரே அகநானூறு பாடல் இது.  இருவரும் பேசுவதாக அமைந்த பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகிய அக நூல்களில் இல்லை.  கலித்தொகையில் மட்டுமே உள்ளன.

பொருளுரை:  மலைகள் விளங்கித் தோன்றவும், வண்டின் கூட்டம் மலர்களில் பாய்ந்து ஊதவும், தாழையுடைய கடற்கரைச் சோலைகளின் மேல் மிக உயரத்தில் பறந்து நாரைக் கூட்டங்கள் ஒலிக்கவும், கடற்கரையில் விளையாடும் நண்டுகள் அளையின் உள்ள செல்லவும், அலைகள் அடங்கவும், தோணிகள் வேட்டையாடலைக் கைவிடவும், செவ்வானம் தோன்றவும், துணையுடன் சேர்ந்திருக்கும் அன்றில் பறவை மணல் மேட்டில் உள்ள பனைமரத்தின் உள் மடலில் சேர்ந்து தங்கவும், உப்பங்கழியில் உள்ள நறுமண மலர்களின் இதழ்கள் குவியவும், சோலையிடத்தும் மனையிலும் புன்னை மரங்களின் நறிய மலர்கள் பொன்னின் நிறம்கொண்டு விரியவும், ஞாயிற்றின் ஒளியும் வெப்பமும் குறைய, பகற்பொழுதை மெல்ல மெல்ல நீக்கி இரவு வரும்பொழுது, என்ன நிலையை அடைவாளோ?

நீங்காமல் முதிய மரத்தின்கண் தங்கும் முழங்கும் வாயையுடைய முதிய பேராந்தை விரைந்து ஒலிக்கும், பேய்கள் இயங்கும் நடு இரவில், என் நெஞ்சம் நெகிழும்படி துன்பத்தைச் செய்த அன்பு இல்லாதவனின் அறிவுரையை உண்மையென்று நம்பினேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘எழுத்து முதலா ஈண்டிய அடியில்’ (தொல்காப்பியம், செய்யுளியல் 78) என்னுஞ் சூத்திரத்து, எழுத்து முதலா ஈண்டிய அடியில் குறித்த பொருளை முடிய நாட்டுதல் என்பதற்கு உதாரணம் காட்டுமிடத்தே, ‘மண்டிலம் முழுக  …………. குருகினம் ஒலிப்ப’, என்னும் பகுதியை எடுத்துக்காட்டி, இது இருசீரானும் முச்சீரானும் நாற்சீரானும் குறித்த பொருளை முடிய நாட்டினவாறு கண்டுகொள்க, என்றார் பேராசிரியர். ‘அடிதொறும் தலையெழுத்து ஒப்பது மோனை’ (தொல்காப்பியம், செய்யுளியல் 92) என்னுஞ் சூத்திரத்தில் ‘கண்டற் ……. ஒலிப்ப, கரையாடலைவன் …….. செறிய’ என்பது அடிதொறும் முதல் எழுத்துத் தோன்றி மோனைத் தொடை வந்தவாறு, என்றார் பேராசிரியர்.  அச் சூத்திரத்தில், அதற்கு இவ்வடிகளைக் காட்டி, இது சீர்வகையடி தொடுத்தது, என்றார் நச்சினார்க்கினியர்.  கொளாஅ – கொள்ள என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்:  மண்டிலம் மழுக – ஞாயிற்றின் ஒளியும் வெப்பமும் குறைய, மலை நிறம் கிளர – மலைகள் விளங்கித் தோன்றவும், வண்டு இனம் மலர் பாய்ந்து ஊத – வண்டின் கூட்டம் மலர்களில் பாய்ந்து ஊதவும், மீமிசைக் கண்டல் கானல் குருகினம் ஒலிப்ப – தாழையுடைய கடற்கரைச் சோலைகளின் மேல் மிக உயரத்தில் பறந்து நாரைக் கூட்டங்கள் ஒலிக்கவும் (கண்டல் – Rhizophora mucronate அல்லது Pandanus odoratissimus, University of Madras Lexicon, மீமிசை – ஒருபொருட் பன்மொழி), கரை ஆடு அலவன் அளைவயின் செறிய – கடற்கரையில் விளையாடும் நண்டுகள் அளையின் உள்ள செல்லவும், திரை பாடு அவிய – அலைகள் அடங்கவும், திமில் தொழில் மறப்ப – தோணிகள் வேட்டையாடலைக் கைவிடவும், செக்கர் தோன்ற – செவ்வானம் தோன்றவும், துணை புணர் அன்றில் எக்கர்ப் பெண்ணை அக மடல் சேர – துணையுடன் சேர்ந்திருக்கும் அன்றில் பறவை மணல் மேட்டில் உள்ள பனைமரத்தின் உள் மடலில் சேர்ந்து தங்கவும், கழி மலர் கமழ் முகம் கரப்ப – உப்பங்கழியில் உள்ள நறுமண மலர்களின் இதழ்கள் குவியவும், பொழில் மனைப் புன்னை நறுவீ பொன் நிறம் கொளாஅ – சோலையிடத்தும் மனையிலும் புன்னை மரங்களின் நறிய மலர்கள் பொன்னின் நிறம்கொண்டு விரியவும் (புன்னை மரம் – Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree), எல்லை பைப்பய கழிப்பி எல் உற – பகற்பொழுதை மெல்ல மெல்ல நீக்கி இரவு வரும்பொழுது (பைப்பய – பையப்பைய பைப்பய என மருவியது), யாங்கு ஆகுவள் – என்ன நிலையை அடைவாளோ, கொல் –அசைநிலை, தானே – தான் ஏ அசைநிலைகள், நீங்காது முது மரத்து உறையும் முரவுவாய் முது புள் கதுமெனக் குழறும் கழுது வழங்கு அரை நாள் – நீங்காமல் முதிய மரத்தின்கண் தங்கும் முழங்கும் வாயையுடைய முதிய பேராந்தை விரைந்து ஒலிக்கும் பேய்கள் இயங்கும் நடு இரவில் (கதுமென – விரைவுக்குறிப்பு), நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த அன்பிலாளன் அறிவு நயந்தேனே – என் நெஞ்சம் நெகிழும்படி துன்பத்தைச் செய்த அன்பு இல்லாதவனின் அறிவுரையை உண்மையென்று நம்பினேன் (நயந்தேனே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 261,  சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணைதலைவன் தோழியிடம் சொன்னது
கானப் பாதிரிக் கருந்தகட்டு ஒள் வீ
வேனில் அதிரலொடு விரைஇக், காண்வர
சில் ஐங்கூந்தல் அழுத்தி மெல் இணர்த்
தேம்பாய் மராஅம் அடைச்சி, வான் கோல்
இலங்கு வளை தெளிர்ப்ப வீசிச், சிலம்பு நகச்  5
சில மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, “நின்
அணி மாண் சிறுபுறம் காண்கம், சிறு நனி
ஏகு” என ஏகல் நாணி, ஒய்யென
மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய்
நின்று தலை இறைஞ்சியோளே, அது கண்டு  10
யாம் முந்துறுதல் செல்லேம், ஆயிடை
அருஞ்சுரத்து அல்கியேமே, இரும்புலி
களிறு அட்டுக் குழுமும் ஓசையும் களிபட்டு
வில்லோர் குறும்பில் ததும்பும்
வல்வாய்க் கடுந்துடிப் பாணியும் கேட்டே.  15

பாடல் பின்னணி:  உடன்போக்கில் தலைவியை அழைத்துச் சென்ற தலைவன் மீண்டும் தலைவியின் இல்லம் வந்தான்.  அப்பொழுது தோழிக்கு இருவரும் சுரவழியில் சென்றபோது இடைவழியில் நிகழ்ந்ததொரு நிகழ்ச்சியைச் சொல்லியது.   

பொருளுரை:  இளவேனில் பருவத்தில் மலர்ந்த, காட்டில் உள்ள பாதிரி மரத்தின் கரிய புற இதழ்களையுடைய ஒளி பொருந்திய மலர்களை, அதிரல் மலர்களுடன் கலந்துக், காண்பதற்கு இனிதாக உள்ள, சிலவாகிய ஐம்பால் கூந்தலில் செருகி, மெல்லிய கொத்துக்களையுடைய தேன் பாயும் கடம்ப மரத்தின் மலர்களைச் சூடிப், பெரிய திரண்ட ஒளிரும் வளையல்கள் ஒலிக்கக் கைகளை வீசிக், காலில் அணிந்த சிலம்புகள் ஒலிக்கச் சில மெல்லிய அடியெடுத்து என்னுடன் வந்தவளிடம், “நீ மெல்ல மெல்லச் செல்வாயாக.  நின் அழகால் சிறப்புற்ற சிறு முதுகை யாம் காண்பேமாக.  சிறிது தூரம் எம் முன்னால் நடப்பாயாக” என்று யான் கூற, மேலும் செல்வதற்கு நாணி, விரைவாக மானை ஒத்த நோக்கத்துடன் மடப்பம் தோன்ற விலகி நின்று, தலைவணங்கி நின்றாள்.  அதனைக் கண்டு யாம் முன்னே செல்லுதல் இல்லேம்.

கடத்தற்கு அரிய சுரமாகிய இவ்விடத்தில் தங்கினோம், பெரிய புலி களிற்று யானையைக் கொன்று முழங்கும் ஓசையையும், கள்ளைக் குடித்த களிப்பினால் வில்லை உடையவர்களின் சிற்றூரில் முழங்குகின்ற வலிய மேல் பகுதியையுடைய கடிய துடியின் ஒலியையும் கேட்டு.  

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘மரபு நிலை திரியா மாட்சிய ஆகி’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 45) என வரும் நூற்பாவினால் அமைத்துக் கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘மரபு நிலை திரியா மாட்சிய ஆகி’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 45) என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுள் மீண்டு வந்தோன் தோழிக்கு உரைத்தது, என்றார் நச்சினார்க்கினியர்.  மா கொள் நோக்கமொடு (9) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மானை ஒத்த நோக்கமொடு, மாவடுவை ஒத்த கண்ணின் பார்வை என்றுமாம்.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3). சிறு நனி – அணி மாண் சிறுபுறம் காண்கம், அகநானூறு 261 – சிறு நனி ஏகு, அகநானூறு 301 – பிரிந்தோர் உள்ளுபு நினைதல் சிறு நனி ஆன்றிகம், ஐங்குறுநூறு 180 – சிறு நனி வரைந்தனை கொண்மோ, கலித்தொகை 12 – சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும், புறநானூறு 247 – சிறு நனி தமியள் ஆயினும் இன்னுயிர் நடுங்கும், புறநானூறு 376 – அந்தி சிறு நனி பிறந்த பின்றை, புறநானூறு 381 – சிறு நனி ஒருவழிப் படர்க என்றோனே.

சொற்பொருள்:  கானப் பாதிரிக் கருந் தகட்டு ஒள் வீ வேனில் அதிரலொடு விரைஇ – இளவேனில் பருவத்தில் மலர்ந்த காட்டில் உள்ள பாதிரி மரத்தின் கரிய புற இதழ்களையுடைய ஒளி பொருந்திய மலர்களை அதிரல் மலர்களுடன் கலந்து (பாதிரி மரம் – Stereospermum chelonoides, Trumpet flower tree, அதிரல் கொடி – Wild jasmine, Derris Scandens, Jewel vine), காண்வர சில் ஐங்கூந்தல் அழுத்தி – காண்பதற்கு இனிய சிலவாகிய ஐம்பால் கூந்தலில் செருகி, மெல் இணர்த் தேம்பாய் மராஅம் அடைச்சி – மெல்லிய கொத்துக்களையுடைய தேன் பாயும் கடம்ப மரத்தின் மலர்களைச் சூடி (தேம் – தேன் என்றதன் திரிபு, மராஅம் – அளபெடை, கடம்ப மரம், Anthocephalus cadamba, Kadampam oak), வான் கோல் இலங்கு வளை தெளிர்ப்ப வீசி – பெரிய திரண்ட ஒளிரும் வளையல்கள் ஒலிக்கக் கைகளை வீசி, சிலம்பு நகச் சில மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி – சிலம்புகள் ஒலிக்கச் சில மெல்லிய அடியெடுத்து மெல்ல மெல்லச் சென்று, நின் அணி மாண் சிறுபுறம் காண்கம் – நின் அழகால் சிறப்புற்ற சிறு முதுகை யாம் காண்பேமாக, சிறு நனி ஏகு – சிறிது தூரம் எம் முன்னால் நடப்பாயாக, என – என்று நான் கூற, ஏகல் நாணி ஒய்யென மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய் நின்று தலை இறைஞ்சியோளே – மேலும் செல்வதற்கு நாணி விரைவாக மானை ஒத்த நோக்கத்துடன் மடப்பம் தோன்ற விலகி நின்று தலைவணங்கி நின்றாள் (சாஅய் – அளபெடை, இறைஞ்சியோளே – ஏகாரம் அசைநிலை), அது கண்டு யாம் முந்துறுதல் செல்லேம் – அதனைக் கண்டு யாம் முன்னே செல்லுதல் இல்லேம், ஆயிடை அருஞ்சுரத்து அல்கியேமே – கடத்தற்கு அரிய சுரமாகிய இவ்விடத்தில் தங்கினோம் (அல்கியேமே – ஏகாரம் அசைநிலை), இரும்புலி களிறு அட்டுக் குழுமும் ஓசையும் – பெரிய புலி களிற்று யானையைக் கொன்று முழங்கும் ஓசையும், களிபட்டு வில்லோர் குறும்பில் ததும்பும் வல்வாய்க் கடுந்துடிப் பாணியும் கேட்டே – கள்ளைக் குடித்த களிப்பினால் வில்லை உடையவர்களின் சிற்றூரில் முழங்குகின்ற வலிய மேல் பகுதியையுடைய கடிய துடியின் ஒலியையும் கேட்டு (கேட்டே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 262, பரணர், குறிஞ்சித் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
முதைபடு பசுங்காட்டு அரில் பவர் மயக்கிப்,
பகடு பல பூண்ட உழவுறு செஞ்செய்,
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்துப்,
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென,
வாய்மொழித் தந்தையைக் கண் களைந்து அருளாது  5
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்,
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
மறங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன்
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர் 10
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
அன்னி மிஞிலி போல மெய்ம் மலிந்து
ஆனா உவகையேம் ஆயினெம், பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
நுண் பல துவலை புதல் மிசை நனைக்கும்  15
வண்டுபடு நறவின் வண் மகிழ்ப் பேகன்
கொண்டல் மா மலை நாறி
அம் தீம் கிளவி வந்தமாறே.

பாடல் பின்னணி:  இரவுக்குறிகண் தலைவியை புணர்ந்து நீங்கும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  

பொருளுரை:  பூக்களை நிறையக் கொண்டு அருவிகள் ஆரவாரித்து விழும் சுனைகள் விளங்கும் பக்க மலையில் எழும் நுண்ணிய பலவாகிய நீர்த் துவலைகள், அங்குள்ள புதர்களின் மேலிடத்தை நனைக்கும், வண்டுகள் வந்து மொய்க்கின்ற கள்ளினையும் கொடையால் அடையும் மகிழ்ச்சியையும் உடைய பேகன் என்னும் அரசனின், முகில்கள் தவழும் பெரிய மலைபோல் கமழ்ந்து, அழகிய இனிய சொற்களையுடைய நம் தலைவி வந்து நம்மைக் கூடியமையால்,

பழமையான பசுமை பொருந்திய காட்டில் பின்னிக் கிடக்கும் கொடிகளை அழித்து எருதுகள் பூண்ட பல ஏர்களால் உழுவதைப் பெற்ற சிவந்த புன்செய் நிலத்தில், இடப்படுவனவற்றை முறையே நிரப்பி, முடிந்த வினையால் தழைத்த, பசிய இலைகள் நிறைந்த பயற்றங் கொடிகளில் பசுக்கள் புகுந்து மேய்ந்ததால், வாய்மை மிக்க தன் தந்தையின் கண்களை அருளாதுப் பிடுங்கிப் பழமையான ஊர்களையுடைய கோசர்கள் துன்புறுத்திய சிறுமைச் செயலால், உண்கலத்தில் உணவை உண்ணாமல் தூய உடையையும் அணியாள் ஆகி, சினத்தினால் தான் மேற்கொண்ட நோன்பிலிருந்து மாறுபடாது இருந்து, மறம் பொருந்திய சேனையைக் கொண்ட வெற்றி பொருந்திய அரண்களை உடையவனும், போர் ஆற்றல் உடைய நல்ல குதிரைகளை உடையவனுமான திதியனிடம் நிலைமையை உரைத்து, அவன் அக்கோசர்களின் இனிய உயிரை அழிக்கக் கண்டு, சினம் நீங்கி மகிழ்ந்த அன்னி மிஞிலி என்பவள் போல், உடல் பூரித்து அமையாத உவகை உடையேம் ஆயினோம்.   

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘மெய் தொட்டுப் பயிறல்’ (தொல்காப்பியம், களவியல் 11) என்னும் நூற்பாவின்கண் ‘பெற்றவழி மகிழ்ச்சியும்’ என வரும் விதி கொள்க.  வரலாறு – கோசர், திதியன், அன்னி மிஞிலி, பேகன்.   அன்னி மிஞிலி பற்றின குறிப்புகள் – அகநானூறு 196, 262.  அன்னி பற்றின குறிப்புகள் – அகநானூறு 45, 126 145, நற்றிணை 180.  மெய்ம் மலிந்து – யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிகுமே (தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 62), மெல்லெழுத்துறழும் மொழியு மாருளவே.(தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 65).

சொற்பொருள்:  முதைபடு பசுங்காட்டு அரில் பவர் மயக்கிப் பகடு பல பூண்ட உழவுறு செஞ்செய் – பழமையான பசுமை பொருந்திய காட்டில் பின்னிக் கிடக்கும் கொடிகளை அழித்து எருதுகள் பூண்ட பல ஏர்களால் உழுவதைப் பெற்ற சிவந்த புன்செய் நிலத்தில், இடு முறை நிரம்பி – இடப்படுவனவற்றை முறையே நிரப்பி (பொ. வே. சோமசுந்தரனார் உரை – எருவிடுதல் முதலிய செயல் முறை பலவும் நிரம்பப்பெற்று), ஆகு வினைக் கலித்து – முடிந்த வினையால் தழைத்து, பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென – பசிய இலைகள் நிறைந்த பயற்றங் கொடிகளில் பசுக்கள் புகுந்து மேய்ந்ததால், வாய்மொழித் தந்தையைக் கண் களைந்து அருளாது ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின் – வாய்மை மிக்க தன் தந்தையின் கண்களை அருளாதுப் பிடுங்கி பழமையான ஊர்களையுடைய கோசர்கள் துன்புறுத்திய சிறுமைச் செயலால், கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள் – கலத்தில் உணவை உண்ணாமல் தூய உடையையும் அணியாள் (உடாஅள் – அளபெடை), சினத்தின் கொண்ட படிவம் மாறாள் – சினத்தினால் மேற்கொண்ட நோன்பிலிருந்து மாறுபடாது இருந்து, மறங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன் – மறம் பொருந்திய சேனையைக் கொண்ட வெற்றி பொருந்திய அரண்களை உடையவன், செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து – போர் ஆற்றல் உடைய நல்ல குதிரைகளை உடைய திதியனுக்கு உரைத்து, அவர் இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய அன்னி மிஞிலி போல – அக்கோசர்களின் இனிய உயிரை அழிக்கக் கண்டு சினம் நீங்கி மகிழ்ந்த அன்னி மிஞிலி போல, மெய்ம் மலிந்து ஆனா உவகையேம் ஆயினெம் – உடல் பூரித்து அமையாத உவகை உடையேம் ஆயினோம், பூ மலிந்து அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் நுண் பல துவலை புதல் மிசை நனைக்கும் – பூக்களை நிறையக் கொண்டு அருவிகள் ஆரவாரித்து விழும் சுனைகள் விளங்கும் பக்க மலையில் எழும் நுண்ணிய பலவாகிய நீர்த் துவலைகள் அங்குள்ள புதர்களின் மேலிடத்தை நனைக்கும், வண்டுபடு நறவின் வண் மகிழ்ப் பேகன் – வண்டுகள் வந்து மொய்க்கின்ற கள்ளினையும் கொடையால் அடையும் மகிழ்ச்சியையும் உடைய பேகன் என்னும் அரசனின், கொண்டல் மா மலை நாறி – முகில்கள் தவழும் பெரிய மலைபோல் கமழ்ந்து, அம் தீம் கிளவி வந்தமாறே – அழகிய இனிய சொற்களையுடைய நம் தலைவி வந்து நம்மைக் கூடியமையால் (அம்தீம் கிளவி – அன்மொழித்தொகை, வந்தமாறே – ஏகாரம் அசைநிலை, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்)

அகநானூறு 263, கருவூர்க் கண்ணம்பலனார், பாலைத் திணைமகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
தயங்கு திரைப் பெருங்கடல் உலகு தொழத் தோன்றி,
வயங்கு கதிர் விரிந்த உருகெழு மண்டிலம்
கயங்கண் வறப்பப் பாஅய், நல் நிலம்
பயங்கெடத் திருகிய பைது அறு காலை
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு  5
ஆறு செல் வம்பலர் வருதிறம் காண்மார்,
வில் வல் ஆடவர் மேலான் ஒற்றி
நீடு நிலை யாஅத்துக் கோடு கொள் அருஞ்சுரம்
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு
அவள் துணிவு அறிந்தனென் ஆயின், அன்னோ!  10
ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க,
இனிதினின் புணர்க்குவென் மன்னோ, துனி இன்று
திரு நுதல் பொலிந்த என் பேதை
வருமுலை முற்றத்து ஏமுறு துயிலே.  15

பாடல் பின்னணி:  செவிலித்தாய் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.   

பொருளுரை:  அசையும் அலைகளையுடைய பெரிய கடலில் உலகத்தில் உள்ளவர்கள் வணங்கத் தோன்றித் தன் கதிர்கள் விரியப்பெற்ற, அச்சம் தரும் ஞாயிற்று மண்டிலமானது, குளங்களில் உள்ள நீர் வற்றிடத் தன் வெப்பத்தைப் பரப்பி, நல்ல நிலங்களின் வளம் கெடுமாறு அழித்த பசுமை இல்லாத வேனில் காலத்தில், வேறு பல பிரிவுகளையுடைய அச்சம் வரும் பெரிய காட்டில், வழியில் செல்லும் புதியவர்கள் வரும் தன்மையைக் காணும்பொருட்டு, வலிய வில்லையுடைய ஆறலை கள்வர்கள், உயர்ந்த யா மரத்தின் மேலிடத்துக் கிளைகளை இடமாகக் கொண்டு மறைந்திருக்கும் அரிய பாலை நிலத்தில், என் மகளை உடன்கொண்டு சென்ற வலிமையுடைய காளையிடம் அவள் கொண்ட உறுதியான அன்பினை யான் அறிந்திருந்தேன் ஆயின், ஐயோ, ஒளி வீசும் வேலையுடைய சேர வேந்தன் பாதுகாத்து ஆளும் வஞ்சி நகர் போன்ற என் வளமான மனை விளங்க, வெறுப்பு இல்லாது, அழகிய நெற்றியால் பொலிந்த என் இளமகளின் வளரும் முலைப்பரப்பில் அவள் தலைவன் இன்புறக் காரணமான துயிலைப் பெறுவதற்கு, அவர்களை இனிமையாகக் கூட்டி வைத்திருப்பேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  ஒப்புமை – அகநானூறு 51 – முலை முற்றம் வீங்க, அகநானூறு 279 – செறிய வீங்கிய மென் முலை முற்றம், அகநானூறு 263 – வருமுலை முற்றத்து, அகநானூறு 361 – வார் முலை முற்றத்து, அகநானூறு 362 – முலைச் சுணங்கணி முற்றத்து, நற்றிணை 191 – வன முலை முற்றத்து.  வரலாறு –கோதை (சேரன்), வஞ்சி (இன்றைய கரூர்).  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34).  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  தயங்கு திரைப் பெருங்கடல் உலகு தொழத் தோன்றி வயங்கு கதிர் விரிந்த உருகெழு மண்டிலம் – அசையும் அலைகளையுடைய பெரிய கடலில் உலகத்தில் உள்ளவர்கள் வணங்கத் தோன்றித் தன் கதிர்கள் விரியப்பெற்ற அச்சம் தரும் ஞாயிற்று மண்டிலம், கயம் கண் வறப்பப் பாஅய் நல் நிலம் பயங்கெடத் திருகிய பைது அறு காலை – குளங்களில் உள்ள நீர் வற்றிடத் தன் வெப்பத்தைப் பரப்பி நல்ல நிலங்களின் வளம் கெடுமாறு அழித்த பசுமை இல்லாத வேனில் காலத்தில் (கண் – இடம், அசையுமாம், பாஅய் – அளபெடை), வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு ஆறு செல் வம்பலர் வருதிறம் காண்மார் – வேறு பல பிரிவுகளையுடைய அச்சம் வரும் பெரிய காட்டில் வழியில் செல்லும் புதியவர்கள் வரும் தன்மையைக் காணும்பொருட்டு, வில் வல் ஆடவர் மேலான் ஒற்றி – வலிய வில்லையுடைய ஆறலை கள்வர்கள் மேலிடத்தில் மறைந்து, நீடு நிலை யாஅத்துக் கோடு கொள் அருஞ்சுரம் – உயர்ந்த யா மரத்தின் கிளைகளை இடமாகக் கொண்ட அரிய பாலை நிலத்தில் (யா மரம் – ஆச்சா மரம், Hardwickia binata tree), கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு அவள் துணிவு அறிந்தனென் ஆயின் – என் மகளை உடன்கொண்டு சென்ற வலிமையுடைய காளையிடம் அவள் கொண்ட உறுதியான அன்பினை யான் அறிந்தேன் ஆயின், அன்னோ – ஐயோ (இரக்கக்குறிப்பு), ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும் வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க இனிதினின் புணர்க்குவென் – ஒளி வீசும் வேலையுடைய சேர வேந்தன் பாதுகாத்து ஆளும் வஞ்சி நகர் போன்ற என் வளமான மனை விளங்க அவர்களை இனிமையாகக் கூட்டி வைத்திருப்பேன் (ஓம்பிக் காக்கும் – ஒருபொருட் பன்மொழி), மன்னோ – மன் ‘அது கழிந்தது’ என்னும் பொருளில் வந்தது, ஓ அசைநிலை, துனி இன்று – வெறுப்பு இல்லாது, திரு நுதல் பொலிந்த என் பேதை வருமுலை முற்றத்து ஏமுறு துயிலே – அழகிய நெற்றியால் பொலிந்த என் இளமகளின் வளரும் முலைப்பரப்பில் அவள் தலைவன் இன்புறக் காரணமான துயிலை (துயிலே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 264, உம்பற்காட்டு இளங்கண்ணனார், முல்லைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
மழை இல் வானம் மீன் அணிந்தன்ன
குழை அமல் முசுண்டை வாலிய மலர,
வரி வெண்கோடல் வாங்கு குலை வான் பூப்
பெரிய சூடிய கவர் கோல் கோவலர்
எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு,  5
நீர் திகழ் கண்ணியர், ஊர் வயின் பெயர்தர,
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து
ஏர்தரு கடு நீர் தெருவு தொறு ஒழுகப்,
பேரிசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கிக்
கூதிர் நின்றன்றால் பொழுதே, காதலர்  10
நம் நிலை அறியார் ஆயினும் தம் நிலை
அறிந்தனர் கொல்லோ தாமே, ஓங்கு நடைக்
காய் சின யானை கங்குல் சூழ,
அஞ்சுவர இறுத்த தானை
வெஞ்சின வேந்தன் பாசறையோரே?  15

பாடல் பின்னணி:  (1) பருவங்கண்டு வருந்திய தலைவியிடம் தோழி கூறியது.  (2) தலைவிக்கு தோழி கூறியது. 

பொருளுரை:  முகில்கள் இல்லாத வானம் விண்மீன்களை அணிந்தாற்போல், தளிர் செறிந்த முசுண்டைக் கொடியில் பூக்கள் வெண்ணிறத்தில் மலரவும், வரிகளையுடைய வெண்காந்தளின் வளைந்த கொத்துக்களில் உள்ள வெள்ளைப் பூக்களை மிகுதியாகச் சூடிய கவர்த்த (பிரிவுகளையுடைய) கோலினையுடைய கோவலர், பகற்பொழுதில் பெய்த மழையால் வருந்திய பசுக்கூட்டத்துடன் நீர் விளங்கும் மாலைகளை அணிந்தவர்களாய் ஊரின்கண் மீண்டு வரவும், மிகவும் தொலைவில் உள்ள முகில்கள், பெரும் இடி முழக்கத்துடன், சிறந்து, ஒன்றோடு ஒன்று கலந்துப் பெய்யும் துளிகளால் சிறப்புற்று, எழுச்சியுடைய விரைந்த நீர் தெருக்கள்தோறும் செல்லவும், கூதிர்ப்பருவம் நிலைபெற்ற இப்பொழுதில், நம் தலைவர் நம் துன்ப நிலையை அறியார் ஆயினும், தன் நிலையை அறிந்துள்ளாரா, உயர்ந்த நடையையும் பெரும் சினத்தையும் உடைய யானைகள் இரவில் சூழ்ந்திருக்க, அச்சம் உண்டாகத் தங்கிய சேனைகளையுடைய, கொடிய சினத்தையுடைய வேந்தனின் பாசறையில் உள்ள நம் தலைவர்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘அவன் அறிவு ஆற்ற அறியுமாகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என வரும் நூற்பாவின்கண் ‘தோழிக்கு உரியவை வடு அறு சிறப்பின் கற்பின் திரியாமை காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்’ என்பதன்கண் வரும் ‘காய்தலும்’ என வரும் விதி கொள்க.  இனி, தோழி கூற்றாயின் ‘பெறற்கு அரும்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகைபட வந்த கிளவி ‘ என்பதனால் அமைத்துக் கொள்க.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  மழை இல் வானம் மீன் அணிந்தன்ன குழை அமல் முசுண்டை வாலிய மலர – முகில்கள் இல்லாத வானம் விண்மீன்களை அணிந்தாற்போல் தளிர் செறிந்த முசுண்டைக் கொடியில் பூக்கள் வெண்ணிறத்தில் மலரவும் (முசுண்டைக் கொடி – Leather–berried bindweed, Rivea ornata), வரி வெண்கோடல் வாங்கு குலை வான் பூப் பெரிய சூடிய கவர் கோல் கோவலர் – வரிகளையுடைய வெண்காந்தளின் வளைந்த கொத்துக்களில் உள்ள வெள்ளைப் பூக்களை மிகுதியாகச் சூடிய கவர்த்த (பிரிவுகளையுடைய) கோலினையுடைய கோவலர், எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு நீர் திகழ் கண்ணியர் ஊர் வயின் பெயர்தர – பகற்பொழுதில் பெய்த மழையால் வருந்திய பசுக்கூட்டத்துடன் நீர் விளங்கும் மாலைகளை அணிந்தவர்களாய் ஊரின்கண் மீண்டு வரவும், நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து ஏர்தரு கடு நீர் தெருவு தொறு ஒழுக – மிகவும் தொலைவில் உள்ள முகில்கள் பெய்யும் துளிகளால் சிறப்புற்று எழுச்சியுடைய விரைந்த நீர் தெருக்கள்தோறும் சென்று, பேரிசை முழக்கமொடு – பெரும் இடி முழக்கத்துடன், சிறந்து நனி மயங்கி – சிறந்து ஒன்றோடு ஒன்று கலந்து, கூதிர் நின்றன்றால் பொழுதே – கூதிர்ப்பருவம் நிலைபெற்ற பொழுது, காதலர் நம் நிலை அறியார் ஆயினும் – நம் தலைவர் நம் துன்ப நிலையை அறியார் ஆயினும், தம் நிலை அறிந்தனர் கொல்லோ – தன் நிலையை அறிந்துள்ளாரா (கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ அசைநிலை), தாமே – தாம் ஏ அசைநிலைகள், ஓங்கு நடைக் காய் சின யானை கங்குல் சூழ அஞ்சுவர இறுத்த தானை – உயர்ந்த நடையையும் பெரும் சினத்தையும் உடைய யானைகள் இரவில் சூழ்ந்திருக்க அச்சம் உண்டாகத் தங்கிய சேனைகளையுடைய, வெஞ்சின வேந்தன் பாசறையோரே – கொடிய சினத்தையுடைய வேந்தனின் பாசறையில் உள்ள நம் தலைவர் (பாசறையோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 265, மாமூலனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து,
பனி ஊர் அழல் கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செவ்வரை மானும் கொல்லோ?
பல் புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர் மிகு பாடலிக் குழீஇக் கங்கை  5
நீர் முதல் கரந்த நிதியம் கொல்லோ?
எவன் கொல்? வாழி தோழி! வயங்கு ஒளி
நிழல் பால் அறலின் நெறித்த கூந்தல்
குழல் குரல் பாவை இரங்க நத்துறந்து,
ஒண்தொடி நெகிழச் சாஅய்ச் செல்லலொடு  10
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழியப் பொறை அடைந்து,
இன் சிலை எழில் ஏறு கெண்டிப் புரைய
நிணம் பொதி விழுத்தடி நெருப்பின் வைத்து எடுத்து,
அணங்கரு மரபின் பேஎய் போல
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்கத்  15
துகள் அற விளைந்த தோப்பி பருகித்,
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்
புலாஅல் கையர் பூசா வாயர்,
ஒராஅ உருட்டும் குடுமிக் குராலொடு
மராஅஞ்சீறூர் மருங்கில் தூங்கும்  20
செந்நுதல் யானை வேங்கடம் தழீஇ,
வெம்முனை அருஞ்சுரம் இறந்தோர்
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவி ஆற்றாமையினால் தோழியிடம் சொல்லியது.

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  விளங்கும் ஒளியுடைய நிழலில் உள்ள கருமணல் போல் நெளிவுடைய கூந்தலையும், குழலோசை போலும் இனிய குரலையுமுடைய பாவை போன்ற நீ இரங்க, ஒளிரும் வளையல்கள் நெகிழ, மெலிந்து துன்பத்துடன் கண்கள் கண்ணீருடன் கலங்கி யாம் அழிய, நம்மைத் துறந்து,

மலையை ஒட்டிய நிலத்தை அடைந்து, இனிய முழக்கம் செய்யும் அழகான ஏறுகளைக் கொன்று, அவற்றின் உயர்ந்த  கொழுப்புப் பொருந்திய சிறந்த தசையை நெருப்பில் வைத்துச் சுட்டு எடுத்து, கண்டவர்களை வருத்தும் மரபினையுடைய பேய் போல், வெளுத்த ஊனைத் தின்றதால் ஏற்பட்ட நீர் வேட்கை நீங்கும்பொருட்டு குற்றமற்ற முதிர்ந்த கள்ளைப் பருகி, வளைந்த வில்லையும் கொடிய பார்வையையுமுடைய மறவர்கள், புலால் நீங்காத கையை உடையவர்களாக, கழுவாத வாயினர்களாக, விடாது விட்டு விட்டு ஒலிக்கும் குடுமியையுடைய கோட்டானின் ஒலியுடன் கடம்ப மரங்கள் உடைய சிறிய ஊர்ப்பக்கத்தில் கூத்தாடும், சிவந்த நெற்றியையுடைய யானைகளையுடைய வேங்கட மலையில் பொருந்திய கொடிய போர்முனையில் உடைய கடத்தற்கரிய சுரத்தைக் கடந்து சென்ற நம் தலைவர், நம்மைக்காட்டிலும் சிறந்ததாகக் கருதிய பொருள்,

புகைபோல் பொங்கி அகன்ற வானில் உயர்ந்து பனிப் படர்ந்த தீச்சுடரைப் போல் தோன்றும் இமயம் என்ற சிவந்த மலையை ஒத்ததோ, பல்வேறு புகழை உடைய போரில் வெற்றிபெறும் நந்தர்கள் என்பவர்களின் சிறப்பு மிகுந்த பாடலிபுரத்தில் திரண்டிருந்து அதன்பின் கங்கை ஆற்றின் நீரடியில் மறைத்து வைத்த செல்வமோ?  எத்தகையதோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் நூற்பாவினால் அமைத்துக் கொள்க.  ஒப்புமை – குறுந்தொகை 75 – வெண்கோட்டு யானை சோணை படியும் பொன் மலி பாடலி.  அறல் போல் கூந்தல் – அகநானூறு 142 – அறல் அன்ன இரும் பல் கூந்தல், அகநானூறு 162 – அறல் என அவிர்வரும் கூந்தல், அகநானூறு 213 – அறலென நெறிந்த கூந்தல், அகநானூறு 265 – அறலின் நெறித்த கூந்தல், அகநானூறு 299 – அறல் மருள் கூந்தலின், குறுந்தொகை 116 – தேம் பாய் கூந்தல் வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை நுண் மணல் அறல் வார்ந்தன்ன, குறுந்தொகை 286 – அறல் போல் கூந்தல், கலித்தொகை 71 – கதுப்பு அறல், கலித்தொகை 98 – நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக, பொருநராற்றுப்படை 25 – அறல் போல் கூந்தல்.  நீர் முதல் கரந்த நிதியம் (6) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கங்கையின் நீர் அடியில் மறைவுற்ற செல்வம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கங்கை நீராலே முழுதும் மறைந்துபோன நிதி.  வரலாறு – நந்தர், கங்கை, பாடலி, வேங்கடம்.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).  உகந்து – உகப்பே உயர்தல் (தொல்காப்பியம், உரியியல் 8).

சொற்பொருள்:  புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து பனி ஊர் அழல் கொடி கடுப்பத் தோன்றும் இமயச் செவ்வரை மானும் கொல்லோ – புகைபோல் பொங்கி அகன்ற வானில் உயர்ந்து பனிப் படர்ந்த தீச்சுடரைப் போல் தோன்றும் இமயம் என்ற சிவந்த மலையை ஒத்ததோ (புகையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, கடுப்ப – உவம உருபு, செவ்வரை – பண்புத்தொகை, கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ அசைநிலை), பல் புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர் மிகு பாடலிக் குழீஇக் கங்கை நீர் முதல் கரந்த நிதியம் கொல்லோ – பல்வேறு புகழை உடைய போரில் வெற்றிபெறும் நந்தர்கள் என்பவர்களின் சிறப்பு மிகுந்த பாடலிபுரத்தில் திரண்டிருந்து அதன்பின் கங்கை ஆற்றின் நீரடியில் மறைத்து வைத்த செல்வமோ (குழீஇ – அளபெடை, கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ அசைநிலை), எவன் கொல் – எத்தகையதோ (கொல் – அசைநிலை), வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, வயங்கு ஒளி நிழல் பால் அறலின் நெறித்த கூந்தல் குழல் குரல் பாவை இரங்க – விளங்கும் ஒளியுடைய நிழலில் உள்ள கருமணல் போல் நெளிவுடைய கூந்தலையும் குழலோசை போலும் இனிய குரலையுமுடைய பாவை போன்ற நீ இரங்க (அறலின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நத்துறந்து – நம்மைத் துறந்து, ஒண்தொடி நெகிழச் சாஅய்ச் செல்லலொடு கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய – ஒளிரும் வளையல்கள் நெகிழ மெலிந்து துன்பத்துடன் கண்கள் கண்ணீருடன் கலங்கி யாம் அழிய (சாஅய் – அளபெடை), பொறை அடைந்து இன் சிலை எழில் ஏறு கெண்டிப் புரைய நிணம் பொதி விழுத்தடி நெருப்பின் வைத்து எடுத்து – மலையை ஒட்டிய நிலத்தை அடைந்து இனிய முழக்கம் செய்யும் அழகான ஏறுகளைக் கொன்று அவற்றின் உயர்ந்த  கொழுப்புப் பொருந்திய சிறந்த தசையை நெருப்பில் வைத்துச் சுட்டு எடுத்து, அணங்கரு மரபின் பேஎய் போல – கண்டவர்களை வருத்தும் மரபினையுடைய பேய் போல் (பேஎய் – அளபெடை), விளர் ஊன் தின்ற வேட்கை நீங்கத் துகள் அற விளைந்த தோப்பி பருகித் குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர் – வெளுத்த ஊனைத் தின்றதால் ஏற்பட்ட நீர் வேட்கை நீங்கும்பொருட்டு குற்றமற்ற முதிர்ந்த கள்ளைப் பருகி வளைந்த வில்லையும் கொடிய பார்வையையுமுடைய மறவர்கள் (குலாஅ – அளபெடை, விளர் – வெண்மை, மென்மை), புலாஅல் கையர் பூசா வாயர் – புலால் நீங்காத கையை உடையவர்களாக கழுவாத வாயினர்களாக (அளபெடை), ஒராஅ உருட்டும் குடுமிக் குராலொடு மராஅம் சீறூர் மருங்கில் தூங்கும் – விடாது விட்டு விட்டு ஒலிக்கும் குடுமியையுடைய கோட்டானின் ஒலியுடன் கடம்ப மரங்கள் உடைய சிறிய ஊர்ப்பக்கத்தில் கூத்தாடும் (ஒராஅ – ஒராஅ – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம், அளபெடை, மராஅம் – அளபெடை), செந்நுதல் யானை வேங்கடம் தழீஇ வெம்முனை அருஞ்சுரம் இறந்தோர் – சிவந்த நெற்றியையுடைய யானைகளையுடைய வேங்கட மலையில் பொருந்திய கொடிய போர்முனையில் உடைய கடத்தற்கரிய சுரத்தைக் கடந்து சென்ற நம் தலைவர் (தழீஇ – அளபெடை), நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே – நம்மைக்காட்டிலும் சிறந்ததாகக் கருதிய பொருள் (வலிதா – வலிமையாக, வலிமையுடன், பொருளே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 266, பரணர், மருதத் திணை தலைவி தலைவனிடம் சொன்னது
கோடு உற நிவந்த நீடு இரும் பரப்பின்
அம் தீம் பாஅய புதுப் புனல் நெருநை,
மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ,
நரந்தம் நாறும் குவை இருங்கூந்தல்
இளந்துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ,  5
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக்கண்
நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்வு இலையாகிக்,
காமம் கைம்மிகச் சிறத்தலின் நாண் இழந்து,
ஆடினை என்ப மகிழ்ந! அதுவே
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்  10
வாய்வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர்
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்,
கள்ளுடைப் பெருஞ்சோற்று எல் இமிழ் அன்ன
கவ்வை ஆகின்றால் பெரிதே, இனி அஃது  15
அவலம் அன்று மன் எமக்கே, அயல
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த
கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை
அணங்குடை வரைப்பு அகம் பொலிய வந்து இறுக்கும்
திரு மணி விளக்கின் அலைவாய்ச்  20
செருமிகு சேஎயொடு உற்ற சூளே.

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுடன் ஊடிய தலைவி சொல்லியது.  

பொருளுரை:  மகிழ்ந!  கரையின் உச்சியைத் தொடுமாறு உயர்ந்த நீண்ட பெரிய பரப்பையுடைய அழகிய இனிய புது நீர்ப் பெருக்கில் நேற்று, மிகுந்த வலிமையுடைய களிற்று யானை போல் தெப்பத்தின் தலைப்புறத்தைத் தழுவி, நரந்தப்புல்லின் மணம் கமழும் திரண்ட கரிய கூந்தலையுடைய இளைய துணையாகிய பரத்தை மகளிருடன் நீராடுவதற்குரிய ஆடையுடன் கலந்து, உயர்ந்த அழகிய குளிர்ந்த கண்கள் நின்னை நோக்கும்தோறும் நோக்கும்தோறும் நீ தவிர்க்காது, காதல் அளவு கடந்து மிகுந்தலால் நீ நாணத்தை இழந்து விளையாடினாய் எனக் கூறுகின்றனர். 

அச்செயல், யாழின் இசை ஒலிக்கும் தெருக்களையுடைய நீடூரின் தலைவனான வாள் வெற்றி வாய்ந்த எவ்வி என்பவன் தன் ஏவலை ஏற்றுக்கொள்ளாத பகைவரின் மிக்க வலிமையைக் கெடுத்த, பசிய பொன் அணிகலன்களை அணிந்த அப் பகைவரின் அரிமணவாயில் உறத்தூர் என்ற இடத்தில், கள்ளுடன் கூடிய பெருஞ்சோறு வழங்கிய பகலில் எழுந்த ஆரவாரம் போன்று அலர் மிகவும் பெரியதாக ஆகியது.  இப்பொழுது அது எமக்கு துன்பம் தருவது அன்று.  அருகில் உள்ள வயல்களில் உள்ள உழவர்கள் செருக்குடன் எழுப்பிய ஒலிக்கும் ஆரவாரத்திற்கு அஞ்சிப் பறந்து போன மயில், கடவுள்கள் இருக்கும் எல்லையிடம் (கோட்டம்) பொலிவுற வந்து தங்கும் அழகிய மணிவிளக்குகள் ஒளிரும் திருச்சீரலைவாய் உள்ள போர் வல்லமையுடைய முருகனுடன் பொருந்திச் செய்த உறுதிமொழியே துன்பம் தருவதாகும்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனைப் புலம்பு நனி காட்டி இயன்ற நெஞ்சம் தலைப் பெயர்த்து அருக்கி எதிர் பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என வரும் விதி கொள்க.  நரந்தம் (4) – 1. நரந்தப்புல் என்னும் நறுமணமுடைய புல், 2. நாரத்தை, bitter orange, Citrus aurantium.  அணங்குடை வரைப்பு (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தெய்வங்களையுடைய கோட்டகம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தெய்வத்தையுடைய குன்றிடத்தே.  வரலாறு –நீடூர், எவ்வி, அரிமணவாயில் உறத்தூர், அலைவாய் (திருச்செந்தூர்).  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – முனைவர் கு.வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லதிகாரம், உரியியல் 57).  கடவுள் முன் சூளுரைத்தல் – அகநானூறு 110 – கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக் கடுஞ்சூள் தருகுவன் நினக்கே, அகநானூறு 266 – திரு மணி விளக்கின் அலைவாய்ச் செருமிகு சேஎயொடு உற்ற சூளே, அகநானூறு 396 – தெறல் அரும் கடவுள் முன்னர்த் தேற்றி மெல் இறை முன் கை பற்றிய சொல் இறந்து, நற்றிணை 386 – அணங்குடை அரும் சூள் தருகுவென் என, குறுந்தொகை 53 – நேர் இறை முன்கை பற்றிச் சூரர மகளிரோடு உற்ற சூளே, கலித்தொகை 108 – மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத் தலையினால் தொட்டு உற்றேன் சூள், கலித்தொகை 124 – பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்தக்கால் அரிது என்னாள்.

சொற்பொருள்:  கோடு உற நிவந்த நீடு இரும் பரப்பின் அம் தீம் பாஅய புதுப் புனல் நெருநை – கரையின் உச்சியைத் தொடுமாறு உயர்ந்த நீண்ட பெரிய பரப்பையுடைய அழகிய இனிய புது நீர்ப் பெருக்கில் நேற்று (பாஅய – அளபெடை), மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ – மிகுந்த வலிமையுடைய களிற்று யானை போல் தெப்பத்தின் தலைப்புறத்தைத் தழுவி (தழீஇ – அளபெடை), நரந்தம் நாறும் குவை இருங்கூந்தல் இளந்துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ – நரந்தப்புல்லின் மணம் கமழும் திரண்ட கரிய கூந்தலையுடைய இளைய துணையாகிய பரத்தை மகளிருடன் நீராடுவதற்குரிய ஆடையுடன் கலந்து, நீர் பெயர்ந்து ஆடிய – நீரில் பெயர்ந்து ஆடிய அவர்களின் ஏந்து எழில் மழைக்கண் நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்வு இலை ஆகி – உயர்ந்த அழகிய குளிர்ந்த கண்கள் நின்னை நோக்கும்தோறும் நோக்கும்தோறும் நீ தவிர்க்காது (இலை – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), காமம் கைம்மிகச் சிறத்தலின் நாண் இழந்து ஆடினை என்ப – காதல் அளவு கடந்து மிகுந்தலால் நீ நாணத்தை இழந்து விளையாடினாய் எனக் கூறுகின்றனர், மகிழ்ந – மகிழ்ந, அதுவே – அது, அச்செயல், யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் வாய்வாள் எவ்வி ஏவல் மேவார் நெடு மிடல் சாய்த்த – யாழின் இசை ஒலிக்கும் தெருக்களையுடைய நீடூரின் தலைவனான வாள் வெற்றி வாய்ந்த எவ்வி என்பவன் தன் ஏவலை ஏற்றுக்கொள்ளாத பகைவரின் மிக்க வலிமையைக் கெடுத்த, பசும்பூண் பொருந்தலர் அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண் – பசிய பொன் அணிகலன்களை அணிந்த அப் பகைவரின் அரிமணவாயில் உறத்தூர் என்ற இடத்தில், கள்ளுடைப் பெருஞ்சோற்று எல் இமிழ் அன்ன கவ்வை ஆகின்றால் பெரிதே – கள்ளுடன் கூடிய பெருஞ்சோறு வழங்கிய பகலில் எழுந்த ஆரவாரம் போன்று அலர் மிகவும் பெரியதாக ஆகியது (ஆகின்று + ஆல், ஆல் – அசைநிலை), இனி அஃது அவலம் அன்று மன் எமக்கே – இப்பொழுது அது எமக்கு துன்பம் தருவது அன்று, அயல கழனி உழவர் கலி சிறந்து எடுத்த கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை – அருகில் உள்ள வயல்களில் உள்ள உழவர்கள் செருக்குடன் எழுப்பிய ஒலிக்கும் ஆரவாரத்திற்கு அஞ்சிப் பறந்து போன மயில் (வெரீஇய – அளபெடை), அணங்குடை வரைப்பு அகம் பொலிய வந்து இறுக்கும் திரு மணி விளக்கின் அலைவாய்ச் செருமிகு சேஎயொடு உற்ற சூளே – கடவுள்கள் இருக்கும் எல்லையிடம் (கோட்டம்) பொலிவுற வந்து தங்கும் அழகிய மணிவிளக்குகள் ஒளிரும் திருச்சீரலைவாய் உள்ள போர் வல்லமையுடைய முருகனுடன் பொருந்திச் செய்த உறுதிமொழியே துன்பம் தருவதாகும் (சேஎயொடு – அளபெடை, சூளே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 267, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை தலைவி தோழியிடம் சொன்னது
‘நெஞ்சு நெகிழ்தகுந கூறி அன்பு கலந்து
அறாஅ வஞ்சினம் செய்தோர் வினை புரிந்து
திறம் வேறு ஆகல் எற்று’ என்று ஒற்றி
இனைதல் ஆன்றிசின் நீயே, சினை பாய்ந்து
உதிர்த்த கோடை உட்குவரு கடத்திடை  5
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை,
மருப்புக் கடைந்தன்ன கொள்ளை வான் பூ,
மயிர்க் கால் எண்கின் ஈர் இனம் கவர,
மை பட்டன்ன மா முக முசுவினம்
பைது அறு நெடுங்கழை பாய்தலின், ஒய்யென  10
வெதிர் படு வெண்ணெல் வெவ்வறைத் தாஅய்,
உகிர் நெரி ஓசையிற் பொங்குவன பொரியும்
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர்
தாம் பழி உடையர் அல்லர், நாளும்
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா வயங்கு வினை  15
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த
தோளே தோழி, தவறு உடையவ்வே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவியின் வேறுபாடு கண்டு வருந்தும் தோழிக்குத் தலைவி கூறியது.  

பொருளுரை:  தோழி!  நீ தான், நம் நெஞ்சம் நெகிழும்படித் தக்கவற்றைக் கூறி அன்பினால் உள்ளம் கலந்து ‘ஒருபோதும் பிரியேன்’ என உறுதிமொழியைச் செய்த நம் தலைவர், ‘பொருள் ஈட்டும் தொழிலை விரும்பி வேறு தன்மையர் ஆனது எதனால்?’ என்று ஆராய்ந்து வருந்துதலை நீக்குவாயாக. 

அச்சம் தோன்றும் காட்டிடத்தில், கோடைக்காற்றுக் கிளைகளில் மோதி உதிர்த்த, காட்டுப் பூனையின் அடியை ஒத்த குவிந்த அரும்பினையுடைய, யானையின் கோட்டினைக் (தந்தத்தினைக்) கடைந்தாற்போல் தோன்றும் இருப்பை மரத்தின் மிகுதியான வெள்ளை மலர்களை, மயிர் மிக்க கால்களையுடைய கரடியின் பெரிய கூட்டம் கவர்ந்து உண்ண, மை பூசினாற்போன்ற முகத்தையுடைய குரங்குக் கூட்டம் பசுமையற்ற நீண்ட மூங்கிலில் பாய்ந்ததால், விரைந்து மூங்கிலின் முற்றிய வெள்ளை விதைகள் வெப்பம் மிகுந்த பாறைகளில் உதிர்ந்து பரவி நகத்தை நெறிக்கும் பொழுது எழும் ஓசையைப் போன்ற ஒலிகளுடன் பொங்கிப் பொரிந்திடும், உயர்ந்த மலைகளையுடைய பாலை நிலங்கள் பலவற்றைக் கடந்து சென்ற அவர், பழி உடையவர் அல்லர்.  எந்நாளும், தன்னை விரும்பி வந்தவரைப் பற்றிக்கொள்ளுதலை அறியாத, விளங்கும் தொழில் ஆற்றல் உடைய வாளால் அறுத்து அழகு செய்யப்பட்ட ஒளிரும் வளையல்களை நெகிழவிட்ட நம் தோள்களே, தவறு உடையன.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலனே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  முசுவினம் (9) – பழைய உரையில் இவ்வாறு உள்ளது.  பொ. வே. சோமசுந்தரனார், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை ஆகியோரின் உரைகளில் முசுக்கலை என உள்ளது.  கரடி இருப்பை மலரை உண்ணுதல் – அகநானூறு 15, 81, 95, 149, 171, 247, 267, 275, 331.  குறுந்தொகை 121 – மை பட்டன்ன மா முக முசுக்கலை.  குறுந்தொகை 77 – தவறு எனின் தவறோவிலவே வெஞ்சுரத்து உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை நெடு நல் யானைக்கு இடு நிழலாகும் அரிய கானம் சென்றோர்க்கு எளியவாகிய தட மென்தோளே.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

சொற்பொருள்:  நெஞ்சு நெகிழ்தகுந கூறி அன்பு கலந்து அறாஅ வஞ்சினம் செய்தோர் – நம் நெஞ்சம் நெகிழும்படித் தக்கவற்றைக் கூறி அன்பினால் உள்ளம் கலந்து ஒருபோதும் பிரியேன் என உறுதிமொழியைச் செய்த நம் தலைவர் (அறாஅ – அளபெடை), வினை புரிந்து திறம் வேறு ஆகல் எற்று என்று ஒற்றி இனைதல் ஆன்றிசின் – பொருள் ஈட்டும் தொழிலை விரும்பி வேறு தன்மையர் ஆனது எதனால் என்று ஆராய்ந்து வருந்துதலை நீக்குவாயாக (சின் – முன்னிலை அசைச் சொல்), நீயே – நீ (ஏகாரம் அசைநிலை), சினை பாய்ந்து உதிர்த்த கோடை – கிளைகளில் மோதி உதிர்த்த கோடைக்காற்று, உட்குவரு கடத்திடை – அச்சம் தோன்றும் காட்டிடத்தில், வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை மருப்புக் கடைந்தன்ன – காட்டுப் பூனையின் அடியை ஒத்த குவிந்த அரும்பினையுடைய இருப்பை மரத்தின் யானையின் கோட்டினைக் (தந்தத்தினை) கடைந்தாற்போல் தோன்றும், கொள்ளை வான் பூ – மிகுதியான வெள்ளை மலர்களை (இருப்பை மரம் – இலுப்பை, வஞ்சி, Indian Butter Tree, South Indian Mahua), மயிர்க் கால் எண்கின் ஈர் இனம் கவர – மயிர் மிக்க கால்களையுடைய கரடியின் பெரிய கூட்டம் கவர்ந்து உண்ண, மை பட்டன்ன மா முக முசுவினம் பைது அறு நெடுங்கழை பாய்தலின் – மை பூசினாற்போன்ற முகத்தையுடைய குரங்குக் கூட்டம் பசுமையற்ற நீண்ட மூங்கிலில் பாய்ந்ததால், ஒய்யென வெதிர் படு வெண்ணெல் வெவ் அறைத் தாஅய் உகிர் நெரி ஓசையிற் பொங்குவன பொரியும் – விரைந்து மூங்கிலின் முற்றிய வெள்ளை விதைகள் வெப்பம் மிகுந்த பாறைகளில் உதிர்ந்து பரவி நகத்தை நெறிக்கும் பொழுது எழும் ஓசையைப் போன்ற ஒலிகளுடன் பொங்கிப் பொரிந்திடும் (ஒய்யென – விரைவுக்குறிப்பு, தாஅய் – அளபெடை, ஓசையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர் தாம் பழி உடையர் அல்லர் – உயர்ந்த மலைகளையுடைய பாலை நிலங்கள் பலவற்றைக் கடந்து சென்ற அவர் பழி உடையவர் அல்லர், நாளும் – எந்நாளும், நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா – தன்னை விரும்பி வந்தவரைப் பற்றிக்கொள்ளுதலை அறியாத, வயங்கு வினை வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த தோளே தோழி, தவறு உடைய அவ்வே – விளங்கும் தொழில் ஆற்றல் உடைய வாளால் அறுத்து அழகு செய்யப்பட்ட ஒளிரும் வளையல்களை நெகிழவிட்ட நம் தோள்களே தவறு உடையன (அவ்வே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 268, வடம வண்ணக்கன் பேரி சாத்தனார், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது
அறியாய்!  வாழி தோழி!  பொறி வரிப்
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த
குருதிச் செங்களம் புலவு அற, வேங்கை
உருகெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய  5
காமம் கலந்த காதல் உண்டெனின்,
நன்று மன் அது நீ நாடாய் கூறுதி,
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின்,
யான் அலது இல்லை இவ் உலகத்தானே
இன்னுயிர் அன்ன நின்னொடும் சூழாது,  10
முளை அணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த
பெரும் பெயர் எந்தை அருங்கடி நீவிச்,
செய்து பின் இரங்கா வினையொடு
மெய்யல பெரும் பழி எய்தினென் யானே.

பாடல் பின்னணி:  குறைவேண்டிப் பின்னின்ற தலைவனுக்குக் குறைநேர்ந்த தோழி, தலைவியிடம் சென்று தலைவன் வேண்டுகோளுக்கு இணங்க வேண்டும் எனக் கூறியது. 

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  நீ ஆராய்ந்து அறிவாயாக!  புள்ளிகளையும் வரிகளையுமுடைய பொலிவுற்ற நெற்றியையுடைய யானையுடன் புலி போரிட்டதால், குருதியால் குழைவுற்ற சிவந்த களத்தில் புலால் நாற்றம் நீங்க, வேங்கை மரத்தின் நிறம் பொருந்திய மலர்களின் நாற்றம் காட்டு மல்லிகை மலர்களுடன் கூடி நாற்றத்தை மாற்றும் பெரிய மலைநாட்டையுடைய தலைவனுடன், குற்றம் இல்லாது ஆகிய, பேரன்பு கலந்த காதல் உளதானால் நன்றாக இருக்கும்.  அதனை நீ ஆராயாமல் கூறுகிறாய்.

இனிய உயிரைப் போன்ற நின்னுடன் கலந்து ஆராயாது, முளைகளால் அழகு பெற்று விளங்கும் மூங்கில் போல் சுற்றத்துடன் பொலிந்த, பெரும் புகழ் பொருந்திய நம் தந்தையின் கடத்தற்கு அரிய காவலைக் கடந்து, செய்து பின்னர் வருந்துவதற்குக் காரணமாகாத நல்ல வினையைச் செய்தமையால், மெய் இல்லாத பெரிய பழியை அடைந்துள்ளேன் யான்.

இவ்வுலகத்தில், நாணமும் நட்பும் இல்லாதவர்களை ஆராய்ந்தால் என்னையொழிய யாரும் இல்லை.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்,  ‘செய்யென் கிளவி ஆகு இடன் உடைத்தே’ (தொல்காப்பியம், சொல்லதிகாரம், எச்சவியல் 54), என்னுஞ் சூத்திரத்து, ‘அறியாய் வாழி தோழி’ என்னும் அகப்பாட்டினுள், ‘அறியாய்’ என்றது, ‘காமம் கலந்த காதல் உண்டெனின் நன்று மன் அது நீ நாடாய் கூறுதி’ என்றதனோடு இயையுங்கால், அவனோடு கூட்டம் உண்டெனின் அது மிக நன்று, அதனை நீ ஆராயாமல் கூறுகின்றாய், அதனை நீ மனத்தால் ஆராய்ந்து பாராய் என வேண்டிக் கோடற்பொருள் தந்து, முன்னிலை ஏவல் உடன்பாடாய் நின்றவாறுங் காண்க, என்றார் நச்சினார்க்கினியர்.  அறியாய் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யான் கூறுவதனை ஆராய்ந்து அறிவாயாக, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – யான் கூறுவதை நீ மனத்தான் ஆராய்ந்து பாராய்.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தலைவனுக்குக் குறை நேர்ந்த தோழி, தலைவனொடு கூட்டம் உண்டெனின் நன்று.  அதனை ஆராய்ந்து பார் என்று தலைவிக்குக் கூறியவழி, அவள் அதற்கு இசையாள் போன்று இருந்தனள் ஆகலின், யான் பெரும் பழி எய்தினேன், இவ்வுலகில் நாணும் நட்பும் இல்லோர் என்னையன்றிப் பிறர் இலர் என அவள் குறை நயப்பான் வேண்டி வன்மையாற் கூறினாள் என்க. இன்னுயிர் அன்ன நின்னொடும் சூழாது என்றது, என்னின் வேறல்லாத நின்னொடும் சூழாதது குற்றம் ஆகாது என்பதும், செய்துபின் இரங்காவினை என்றது, தான் செய்தது பழியாகாத நல்வினையே என்பதும், பெரும்பழி எய்தினேன் என்றது, யான் அங்ஙனம் செய்தும் ஏலாத பழியை எய்தினேன் என்பதும் கூறியபடியாம். தோழி கூறியதற்குத் தலைவி நாணினாள் ஆதலின், இவ்வுலகில் யானே நாண் இல்லாதவள் என்றும், கெழு தகைமையாற் கேளாது செய்ததற்கு இசைந்து மகிழாமையின் யானே நட்பில்லாதவள் என்றும் வலிதிற் கூறினாள் என்க.  அதன் பயன் தலைவி குறை நயப்பாளாவது.  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – முனைவர் கு.வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லதிகாரம், உரியியல் 57).

சொற்பொருள்:  அறியாய் – நீ ஆராய்ந்து பாராய், நீ ஆராய்ந்து அறிவாயாக, வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, பொறி வரிப் பூ நுதல் யானையொடு புலி பொர – புள்ளிகளையும் வரிகளையுமுடைய பொலிவுற்ற நெற்றியையுடைய யானையுடன் புலி போரிட்டதால், குழைந்த குருதிச் செங்களம் புலவு அற – குருதியால் குழைவுற்ற சிவந்த களத்தில் புலால் நாற்றம் நீங்க, வேங்கை உருகெழு நாற்றம் குளவியொடு விலங்கும் மா மலை நாடனொடு – வேங்கை மரத்தின் நிறம் பொருந்திய மலர்களின் நாற்றம் காட்டு மல்லிகை மலர்களுடன் கூடி நாற்றத்தை மாற்றும் பெரிய மலைநாட்டையுடைய தலைவனுடன் (வேங்கை மரம் – Pterocarpus marsupium), மறு இன்று ஆகிய – குற்றம் இல்லாது ஆகிய, காமம் கலந்த காதல் உண்டெனின் நன்று – பேரன்பு கலந்த காதல் உளதானால் நன்றாக இருக்கும், மன் – அசைநிலை, அது நீ நாடாய் கூறுதி – அதனை நீ ஆராயாமல் கூறுகிறாய், நாணும் நட்பும் இல்லோர்த் தேரின் யான் அலது இல்லை – நாணமும் நட்பும் இல்லாதவர்களை ஆராய்ந்தால் என்னையொழிய யாரும் இல்லை, இவ் உலகத்தானே – இவ்வுலகத்தில் (ஏகாரம் அசைநிலை), இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது – இனிய உயிரைப் போன்ற நின்னுடன் கலந்து ஆராயாது, முளை அணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த – முளைகளால் அழகு பெற்று விளங்கும் மூங்கில் போல் சுற்றத்துடன் பொலிந்த (மூங்கிலின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பெரும் பெயர் எந்தை அருங்கடி நீவி – பெரும் புகழ் பொருந்திய நம் தந்தையின் கடத்தற்கு அரிய காவலைக் கடந்து (எந்தை – எம் + தந்தை, மருஉ மொழி), செய்து பின் இரங்கா வினையொடு – செய்து பின்னர் வருந்துவதற்குக் காரணமாகாத நல்ல வினையைச் செய்தமையால், மெய் அல பெரும் பழி எய்தினென் யானே – மெய் இல்லாத பெரிய பழியை அடைந்துள்ளேன் யான் (யானே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 269, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க!
நெறி இருங்கதுப்பின் கோதையும் புனைக!
ஏறுடை இன நிரை பெயரப் பெயராது
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய
தறுகணாளர் நல்லிசை நிறுமார்,  5
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின்,
நட்ட போலும் நடாஅ நெடுங்கல்
அகலிடம் குயின்ற பல் பெயர் மண்ணி,
நறுவிரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின்  10
செம் பூங்கரந்தை புனைந்த கண்ணி
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டிக் கழல் கால்
இளையர் பதிப் பெயரும் அருஞ்சுரம் இறந்தோர்,
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்  15
நலங்கேழ் மாக் குரல் குழையொடு துயல்வரப்,
பாடு ஊர்பு எழுதரும் பகுவாய் மண்டிலத்து
வயிர் இடைப் பட்ட தெள் விளி இயம்ப
வண்டல் பாவை உண் துறை தரீஇத்,
திருநுதல் மகளிர் குரவை அயரும்  20
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை,
வாணன் சிறுகுடி வணங்கு கதிர் நெல்லின்
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த
ஒண் செங்கழுநீர் அன்ன நின்
கண் பனி துடைமார் வந்தனர் விரைந்தே.  25

பாடல் பின்னணி:  பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது. 

பொருளுரை:  காளைகளை உடைய ஆனிரையைக் கவர முயலவும் அவற்றைக் கவரவிடாது நின்று, செறித்த சுரையையுடைய வெள்ளிய வேலையுடைய வெட்சி வீரர்களைத் தடுத்து நிறுத்தி வீழ்ந்த, அஞ்சாமையுடைய கரந்தை வீரர்களின் நல்ல புகழை நிலை நிறுத்துமாறு, பிடி யானைகள் படுத்துக் கிடந்ததை ஒத்த சிறிய குன்றின் அருகில், நட்டியது போல் தோன்றும் இயற்கையாகவே உள்ள உயர்ந்த கற்களின் அகன்ற இடத்தைச் செதுக்கி இயற்றிய பல பெயர்களையும் நீராட்டி, நறுமண மஞ்சளை அவற்றின் ஈரமுடைய புறத்தில் பொலியுமாறு பூசி, அம்பினால் அறுத்தெடுத்த ஆத்தி மரத்தின் பட்டை நாரினால் சிவந்த கரந்தை மலர்களைத் தொடுத்து இயற்றிய கண்ணியை வரிகளையுடைய வண்டுகள் ஒலிக்கச் சூட்டி, காலில் கழல் அணிந்த இளைய வீரர்கள் தம் ஊர்க்கு மீளும் அரிய காட்டைக் கடந்து சென்று நம் தலைவர்,  

தைத் திங்களின் எஞ்சியிருக்கும் குளிர்ந்த மழையுடைய இறுதி நாட்களில், பொற்காசுகளைத் தொடுத்து அணிந்த பக்கம் உயர்ந்த அல்குலில் நல்ல நிறமுடைய பெரிய பூங்கொத்துக்கள் தழையுடன் அசைய, ஓசை பரவி எழும் பெரிய வட்டத்தை உடைய ஊது கொம்பில் எழுந்த தெளிந்த இசை ஒலிக்க, உண்ணும் துறையில் வண்டல் விளையாட்டுப் பாவையை கொண்டு வந்து, அழகிய நெற்றியையுடைய மகளிர் குரவைக் கூத்தாடும், கடற்கரைச் சோலை சூழ்ந்த ஊராகிய வாணன் என்பவனின் சிறுகுடியில் உள்ள, வளைந்த கதிர்கள் கொண்ட நெல்லினையுடைய வளமான குளிர்ந்த வயலில், அரும்பு இதழ்கள் விரிந்து மலர்ந்த ஒளிரும் செங்கழுநீர் மலர் போன்ற நின் கண்களிலிருந்து வடியும் கண்ணீரைத் துடைக்கும்பொருட்டு விரைந்து வந்துள்ளார்.

நின் வளையல்கள் நெகிழாமல் நின் தோளில் ஏறட்டும்.  நின் துன்பமும் தீரட்டும். நெளிந்த கரிய கூந்தலில் மலர் மாலையையும் நீ அணிவாயாக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘தலைவரும் விழும நிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) எனவரும் நூற்பாவின்கண் நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களை என மொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு என்று இவை எல்லாம்’ என வரும் விதி கொள்க.  வண்டல் பாவை உண் துறை தரீஇத் திருநுதல் மகளிர் குரவை அயரும் (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விளையாட்டுப் பாவையை நீர்த்துறையில் கொணர்ந்து மகளிர் குரவை அயரும் என்றது தை நீராடல் எனக் கொள்ளுதலும் கூடும்.  சிறுகுடி – சிறுகுடி என்னும் ஊர் தலைவர்களின் பெயர்களுடன் குறிக்கப்பட்டுள்ளன இப்பாடல்களில் – அகநானூறு 54 (பண்ணன்), அகநானூறு 117 (வாணன்), அகநானூறு 204 (வாணன்), அகநானூறு 269 (வாணன்), நற்றிணை 340 (வாணன்), நற்றிணை 367 (அருமன்).  புறநானூறு 70 – கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடி, புறநானூறு 388 – சிறுகுடி கிழான் பண்ணன்.  இச் சொல் சிறிய குடியிருப்பு என்னும் பொருளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வந்துள்ளது.  ஒப்புமை – அகநானூறு 178 – பிடி மடிந்தன்ன கல், அகநானூறு 269 – பிடி மடிந்தன்ன குறும்பொறை, குறுந்தொகை 111 – கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன கேழ் இருந்துறுகல், கலித்தொகை 108 – பிடி துஞ்சு அன்ன அறை, ஐங்குறுநூறு 239 – புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  பொலம் – பொன் என் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடர் இயலான (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 61).  பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12.  குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.

சொற்பொருள்:  தொடி தோள் இவர்க – நின் வளையல்கள் நெகிழாமல் நின் தோளில் ஏறட்டும், எவ்வமும் தீர்க – நின் துன்பமும் தீரட்டும், நெறி இருங்கதுப்பின் கோதையும் புனைக – நெளிந்த கரிய கூந்தலில் மலர் மாலையையும் நீ அணிவாயாக, ஏறுடை இன நிரை பெயரப் பெயராது – காளைகளை உடைய ஆனிரையைக் கவர முயலவும் அவற்றைக் கவரவிடாது நின்று, செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய – செறித்த சுரையையுடைய வெள்ளிய வேலையுடைய வெட்சி வீரர்களைத் தடுத்து நிறுத்திய, தறுகணாளர் நல் இசை நிறுமார் – அஞ்சாமையுடைய கரந்தை வீரர்களின் நல்ல புகழை நிலை நிறுத்துமாறு, பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின் – பிடி யானைகள் படுத்துக் கிடந்ததை ஒத்த சிறிய குன்றின் அருகில், நட்ட போலும் நடாஅ நெடுங்கல் அகலிடம் குயின்ற பல் பெயர் மண்ணி – நட்டியது போல் தோன்றும் இயற்கையாகவே உள்ள உயர்ந்த கற்களின் அகன்ற இடத்தைச் செதுக்கி இயற்றிய பல பெயர்களையும் நீராட்டி (நடாஅ – அளபெடை), நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் செம் பூங்கரந்தை புனைந்த கண்ணி வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி – நறுமண மஞ்சளை அவற்றின் ஈரமுடைய புறத்தில் பொலியுமாறு பூசி அம்பினால் அறுத்தெடுத்த ஆத்தி மரத்தின் பட்டை நாரினால் சிவந்த கரந்தை மலர்களைத் தொடுத்து இயற்றிய கண்ணியை வரிகளையுடைய வண்டுகள் ஒலிக்கச் சூட்டி (ஆத்தி மரம் – bauhina tree, கரந்தைச் செடி – Globe thistle or basil), கழல் கால் இளையர் பதிப் பெயரும் அருஞ்சுரம் இறந்தோர் – காலில் கழல் அணிந்த இளைய வீரர்கள் தம் ஊர்க்கு மீளும் அரிய காட்டைக் கடந்து சென்று நம் தலைவர், தைஇ நின்ற தண் பெயல் கடை நாள் – தைத் திங்களின் எஞ்சியிருக்கும் குளிர்ந்த மழையுடைய இறுதி நாட்களில் (தைஇ – அளபெடை), பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் நலங்கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர – பொற்காசுகளைத் தொடுத்து அணிந்த பக்கம் உயர்ந்த அல்குலில் நல்ல நிறமுடைய பெரிய பூங்கொத்துக்கள் தழையுடன் அசைய (அல்குல் – இடை, இடைக்குக் கீழ் உள்ள பகுதி), பாடு ஊர்பு எழுதரும் பகுவாய் மண்டிலத்து வயிர் இடைப் பட்ட தெள் விளி இயம்ப – ஓசை பரவி எழும் பெரிய வட்டத்தை உடைய ஊது கொம்பில் எழுந்த தெளிந்த இசை ஒலிக்க, வண்டல் பாவை உண் துறை தரீஇ – வண்டல் விளையாட்டுப் பாவையை உண்ணும் துறையில் கொண்டு வந்து (தரீஇ – அளபெடை), திருநுதல் மகளிர் குரவை அயரும் – அழகிய நெற்றியையுடைய மகளிர் குரவைக் கூத்தாடும், பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை வாணன் சிறுகுடி – கடற்கரைச் சோலை சூழ்ந்த ஊராகிய வாணன் என்பவனின் சிறுகுடியில் உள்ள (தழீஇய – அளபெடை), வணங்கு கதிர் நெல்லின் யாணர்த் தண் பணை – வளைந்த கதிர்கள் கொண்ட நெல்லினையுடைய வளமான குளிர்ந்த வயலில், போது வாய் அவிழ்ந்த ஒண் செங்கழுநீர் அன்ன நின் கண் பனி துடைமார் வந்தனர் விரைந்தே – அரும்பு இதழ்கள் விரிந்து மலர்ந்த ஒளிரும் செங்கழுநீர் மலர் போன்ற நின் கண்களிலிருந்து வடியும் கண்ணீரைத் துடைக்கும்பொருட்டு விரைந்து வந்துள்ளார் (விரைந்தே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 270, சாகலாசனார், நெய்தல் திணைதோழி தலைவனிடம் சொன்னது
இருங்கழி மலர்ந்த வள் இதழ் நீலம்,
புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து
இன மீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும்
மெல்லம்புலம்ப! நெகிழ்ந்தன தோளே,
சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப்படு திரை  5
பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும்
கானல் பெருந்துறை நோக்கி இவளே,
கொய் சுவல் புரவிக் கைவண் கோமான்
நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன
அம் மா மேனி தொல் நலம் தொலைய,  10
துஞ்சாக் கண்ணள் அலமரும், நீயே
கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச்
சேவலொடு புணராச் சிறு கரும் பேடை
இன்னாது உயங்கும் கங்குலும்
நும் ஊர் உள்ளுவை, நோகோ யானே.  15

பாடல் பின்னணி:  பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது.  

பொருளுரை:  புலால் நாற்றம் வீசும் தெருவின்கண் சிறிய குடியிருப்புகளை உடைய பாக்கத்தில் வாழும், கூட்டமாக மீன் வேட்டையாடும் மீனவர்கள், பெரிய உப்பங்கழியில் மலர்ந்த வளம் பொருந்திய இதழ்களையுடைய குவளை மலர்களை ஞாழல் மலர்களுடன் சூடும், மெல்லிய நெய்தல் நிலத்தலைவனே!

இவள் தோள்கள் மெலிந்தன.  இவள், சிவந்த இறால் மீன்கள் கலக்கிய நுரையுடன் கூடிய திவலையுடைய அலைகள் பருத்த அடியையுடைய புன்னை மரங்களின் வளைந்த கிளைகளில் பொருந்தும், கடற்கரைச் சோலையை அடுத்துள்ள பெரிய துறையை நோக்கி, கொய்யப்பட்ட பிடரி மயிரையுடைய குதிரைகளையுடைய பெரும் வள்ளன்மையுடைய தலைவனாகிய நல்ல தேர்களையுடைய குட்டுவன் என்னும் சேர அரசனின் கழுமலம் போன்ற, அழகிய மாந்தளிர் நிறமுடைய (மாமை நிறமுடைய) தன் மேனியின் பண்டைய அழகு கெட, கண் துயிலாது மனம் கலங்குகின்றாள்.

நீ, கடவுள் உடைய மரத்தில் முள்ளால் இயற்றப்பட்ட கூட்டில், தன் சேவலுடன் கூட இயலாத சிறு கரிய அன்றில் பறவை, துன்பமுற்று வருந்தும் இரவிலும் நும் ஊர்க்குச் செல்லுதலை எண்ணுகின்றீர்.  யான் வருந்துகின்றேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  உள்ளுறை – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கானலம் பெருந்துறை நோக்கி துஞ்சாக்கண்ணள் அலமரும் என்றதனால், முன்பு நின்னுடன் தலைப்பெய்து இன்பம் துய்த்த அவ்விடத்திலே, இனிப் பகற்குறிக்கண் கூடுதல் அரிது என்னும் கருத்தினால் தலைவி துயிலாது வருந்துகின்றாள் என்பதும், சேவலொடு புணராப் பேடை இன்னாது உயங்கும் கங்குலும் நும் ஊர் உள்ளுதிர் என்றதனால், நீர் இரவுக்குறிக்கண் வந்தாதல் தலைவியின் வருத்தத்தைப் போக்க நினைக்கின்றிலீர் என்பதும், இவ்வாற்றால் பகற்குறியினும் இரவுக் குறியினும் நும்மைத் தலைப்படுமாறின்றித் தலைவி எய்தும் வருத்தத்தினை நோக்கி, யான் வருந்துகின்றேன் என்பதும் தோழி தலைவனிடத்துக் கூறி, ஒரு ஞான்றும் பிரியாது இன்பம் துய்த்தற்கு இனி நீர் வரைந்து கொள்ள வேண்டுமெனக் குறிப்பித்தாளாம்.  வரலாறு –குட்டுவன் (சேரன்), கழுமலம்.  மரங்களில் கடவுள் உறைதல் – அகநானூறு 270 – கடவுள் மரத்த, அகநானூறு 309 – தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில், நற்றிணை 83 – கடவுள் முது மரத்து.

சொற்பொருள்:  இருங்கழி மலர்ந்த வள் இதழ் நீலம் புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து இன மீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும் மெல்லம்புலம்ப – பெரிய உப்பங்கழியில் மலர்ந்த வளம் பொருந்திய இதழ்களையுடைய குவளை மலர்களை புலால் நாற்றம் வீசும் தெருவின்கண் சிறிய குடியிருப்புகளையுடைய பாக்கத்தில் வாழும் கூட்டமாக மீன் வேட்டையாடும் மீனவர்கள் ஞாழல் மலர்களுடன் சூடும் மெல்லிய நெய்தல் நிலத்தலைவனே (புலாஅல் – அளபெடை, மெல்லம்புலம்ப – விளி, அம் – சாரியை, புலம்பு – கடற்கரை, ஞாழல் – புலிநகக்கொன்றை, tigerclaw tree, Cassia Sophera), நெகிழ்ந்தன தோளே – இவள் தோள்கள் மெலிந்தன, சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப்படு திரை பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும் – சிவந்த இறால் மீன்கள் கலக்கிய நுரையுடன் கூடிய திவலையுடைய அலைகள் பருத்த அடியையுடைய புன்னை மரங்களின் வளைந்த கிளைகளில் பொருந்தும் (பராஅரை – அளபெடை), கானல் பெருந்துறை நோக்கி – கடற்கரைச் சோலையை அடுத்துள்ள பெரிய துறையை நோக்கி, இவளே – இவள், கொய் சுவல் புரவிக் கைவண் கோமான் நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன – கொய்யப்பட்ட பிடரி மயிரையுடைய குதிரைகளையுடைய பெரும் வள்ளன்மையுடைய தலைவனாகிய நல்ல தேர்களையுடைய குட்டுவன் என்னும் சேர அரசனின் கழுமலம் போன்ற (கழுமலத்து – கழுமலம், அத்துச் சாரியை), அம் மா மேனி தொல் நலம் தொலைய துஞ்சாக் கண்ணள் அலமரும் – அழகிய மாந்தளிர் நிறமுடைய (மாமை நிறமுடைய) மேனியின் பண்டைய அழகு கெட கண் துயிலாது மனம் கலங்குகின்றாள், நீயே – நீ, கடவுள் மரத்த முள் மிடை குடம்பை – கடவுள் உடைய மரத்தில் முள்ளால் இயற்றப்பட்ட கூட்டில், சேவலொடு புணராச் சிறு கரும் பேடை – தன் சேவலுடன் கூட இயலாத சிறு கரிய அன்றில் பறவை, இன்னாது உயங்கும் கங்குலும் நும் ஊர் உள்ளுவை – துன்பமுற்று வருந்தும் இரவிலும் நும் ஊர்க்குச் செல்லுதலை எண்ணுகின்றீர், நோகோ யானே – யான் வருந்துகின்றேன் (நோகோ – நோகு செய்கென்னும் தன்மை வினை, ஓகாரம் அசைநிலை, இரக்கக் குறிப்பு, யானே –ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 271, காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார், பாலைத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
பொறி வரிப் புறவின் செங்கால் சேவல்
சிறு புன் பெடையொடு சேண்புலம் போகி,
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு
வரி மரல் வாடிய வான் நீங்கு நனந்தலைக்
குறும்பொறை மருங்கின் கோள் சுரம் நீந்தி,  5
நெடுஞ்சேண் வந்த நீர் நசை வம்பலர்
செல் உயிர் நிறுத்த சுவைக் காய் நெல்லிப்
பல்காய் அம் சினை அகவும் அத்தம்
சென்று நீர் அவணிர் ஆகி, நின்று தரும்
நிலை அரும்  பொருட்பிணி நினைந்தனிர் எனினே, 10
வல்வதாக நும் செய் வினை! இவட்கே,
களி மலி கள்ளில் நல் தேர் அவியன்
ஆடியல் இள மழை சூடித் தோன்றும்
பழம் தூங்கு விடரகத்து எழுந்த காம்பின்
கண்ணிடை புரையும் நெடுமென் பணைத்தோள்  15
திருந்து கோல் ஆய்தொடி ஞெகிழின்,
மருந்தும் உண்டோ பிரிந்து உறை நாட்டே?

பாடல் பின்னணி:  செலவு உணர்த்திய தோழி, தலைவியின் குறிப்பறிந்து, தலைவனைச் செலவு அழுங்கச் சொல்லியது.  

பொருளுரை:  புள்ளிகளையும் வரிகளையும் சிவந்த கால்களையும் உடைய ஆண் புறா சிறிய புல்லிய பெடையுடன் தொலைவில் உள்ள இடத்திற்குச் சென்று விளங்கும் மணலையுடைய வழியில் கிடக்கும் பரற்கற்களை ஆராய்ந்து உண்டு, வரிகளையுடைய மரல் செடிகள் வாடியுள்ள முகில்கள் நீங்கிய அகன்ற இடத்தையுடைய சிறிய குன்றுகளின் அருகில் ஆறலைக் கள்வர்களால் பொருளும் உயிரும் கொள்ளப்படும் சுரத்தினைக் கடந்து, நெடுந்தூரம் வந்த நீர் வேட்கை உடைய புதிய வழிப்போக்கர்களின் போகும் உயிரை போகவிடாது நிறுத்திய சுவையான காய்களைக் கொண்ட நெல்லி மரத்தின் பல காய்களையுடைய அழகிய கிளையிலிருந்து ஒலிக்கும், காட்டு வழியில் சென்று நீர் அவ்விடத்தீர் ஆகி முயற்சியுடன் அங்கு இருந்து, ஈட்டி வரும் நிலையில்லாத அரிய பொருளை நினைத்தீராயின், வலிமையுறுவதாக நும் பொருள் ஈட்டும் வினை!

இத் தலைவிக்கு, கள்ளின் களிப்பு மிக்க கள்ளில் என்ற ஊரினையும் நல்ல தேர்களையும் உடைய அவியன் என்பவனின் அசைதலுடைய இள முகில்களை அணிந்து தோன்றும் பழங்கள் பொருந்திய மலையில் உள்ள பிளவுகளில் வளர்ந்த, மூங்கிலின் கணுக்களின் இடையே உள்ள பகுதி போல் தோன்றும் நீண்ட மெல்லிய பெரிய தோள்களில் அணிந்த திருந்திய திரண்ட அழகிய வளையல்கள் நெகிழ்ந்தால், அவற்றின் நெகிழ்வைத் தடுப்பதற்கு மருந்தும் உண்டோ நீர் பிரிந்து உறையும் நாட்டில்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘தலைவரும் விழுமநிலை எடுத்துரைப்பினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 39) என வரும் விதி கொள்க.  வரலாறு –கள்ளில், அவியன்.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).  ஒப்புமை – அறம் தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய் – குறுந்தொகை 209.

சொற்பொருள்:  பொறி வரிப் புறவின் செங்கால் சேவல் சிறு புன் பெடையொடு சேண்புலம் போகி அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு – புள்ளிகளையும் வரிகளையும் சிவந்த கால்களையும் உடைய ஆண் புறா சிறிய புல்லிய பெடையுடன் தொலைவில் உள்ள இடத்திற்குச் சென்று விளங்கும் மணலையுடைய வழியில் கிடக்கும் பரற்கற்களை ஆராய்ந்து உண்டு, வரி மரல் வாடிய வான் நீங்கு நனந்தலைக் குறும்பொறை மருங்கின் கோள் சுரம் நீந்தி – வரிகளையுடைய மரல் செடிகள் வாடியுள்ள முகில்கள் நீங்கிய அகன்ற இடத்தையுடைய சிறிய குன்றுகளின் அருகில் ஆறலைக் கள்வர்களால் பொருளும் உயிரும் கொள்ளப்படும் சுரத்தினைக் கடந்து (மரல் செடி – Hemp, Sansevieria trifasciata), நெடுஞ்சேண் வந்த நீர் நசை வம்பலர் செல் உயிர் நிறுத்த சுவைக் காய் நெல்லிப் பல்காய் அம் சினை அகவும் – நெடுந்தூரம் வந்த நீர் வேட்கை உடைய புதிய வழிப்போக்கர்களின் போகும் உயிரை போகவிடாது நிறுத்திய சுவையான காய்களைக் கொண்ட நெல்லி மரத்தின் பல காய்களையுடைய அழகிய கிளையிலிருந்து ஒலிக்கும், அத்தம் சென்று நீர் அவணிர் ஆகி நின்று – காட்டு வழியில் சென்று நீர் அவ்விடத்தீர் ஆகி முயற்சியுடன் அங்கு இருந்து, தரும் நிலை அரும்  பொருட்பிணி நினைந்தனிர் எனினே வல்வதாக நும் செய் வினை – ஈட்டி வரும் நிலையில்லாத அரிய பொருளை நினைத்தீராயின் வலிமையுறுவதாக நும் பொருள் ஈட்டும் வினை, இவட்கே – இவளுக்கு (ஏகாரம் அசை நிலை), களி மலி கள்ளில் நல் தேர் அவியன் ஆடியல் இள மழை சூடித் தோன்றும் பழம் தூங்கு விடரகத்து எழுந்த – கள்ளின் களிப்பு மிக்க கள்ளில் என்ற ஊரினையும் நல்ல தேர்களையும் உடைய அவியன் என்பவனின் அசைதலுடைய இள முகில்களை அணிந்து தோன்றும் பழங்கள் பொருந்திய மலையில் உள்ள பிளவுகளில் வளர்ந்த, காம்பின் கண்ணிடை புரையும் நெடுமென் பணைத்தோள் திருந்து கோல் ஆய்தொடி ஞெகிழின் – மூங்கிலின் கணுக்களின் இடையே உள்ள பகுதி போல் தோன்றும் நீண்ட மெல்லிய பெரிய தோள்களில் அணிந்த திருந்திய திரண்ட அழகிய வளையல்கள் நெகிழ்ந்தால் (புரை – உவம உருபு), மருந்தும் உண்டோ பிரிந்து உறை நாட்டே – மருந்தும் உண்டோ நீர் பிரிந்து உறையும் நாட்டில் (உண்டோ – ஓகாரம் வினா, நாட்டே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 272, மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப்
புலவு நாறு புகர் நுதல் கழுவக், கங்குல்
அருவி தந்த அணங்குடை நெடுங்கோட்டு
அஞ்சுவரு விடர் முகை ஆர் இருள் அகற்றிய,
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்கத்  5
தனியன் வந்து, பனி அலை முனியான்,
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற
குளவியொடு மிடைந்த கூதளங்கண்ணி
அசையா நாற்றம் அசை வளி பகரத்,
துறுகல் நண்ணிய கறி இவர் படப்பைக்  10
குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும்
மெய்ம் மலி உவகையன், அந்நிலை கண்டு,
‘முருகு’ என உணர்ந்து, முகமன் கூறி,
உருவச் செந்தினை நீரொடு தூஉய்
நெடுவேள் பரவும் அன்னை, அன்னோ!  15
என் ஆவது கொல் தானே, பொன்னென
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய
மணி நிற மஞ்ஞை அகவும்
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?

பாடல் பின்னணி:  இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாகத், தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.  காப்பு மிகுந்ததை அவனுக்கு உணர்த்தினாள்.

பொருளுரை:  பெரிய புலியைக் கொன்ற, பெரிய தும்பிக்கையையுடைய யானையின் புலவு நாறும் புள்ளிகளையுடைய நெற்றியைக் கழுவுவதற்கு இரவில் அருவியைத் தந்த, கடவுளுடைய பெரிய உச்சியையுடைய மலையின், அச்சம் தரும் பிளப்பாகிய முழைஞ்சுகளில் (குகைகளில்) உள்ள செறிந்த இருளை அகற்றிய மின்னல் போல் விளங்கும் வேல் வழியைக் காட்ட, நம் தலைவன் தனியனாக வந்து, பனி துன்புறுத்துவதையும் வெறுக்காதவனாய், நீர் ஒழுகுகின்ற பக்கத்தையுடைய செல்லுவதற்கு அரிய இடத்தில், நெருங்கிய காட்டு மல்லிகை மலர்களுடன் கூதள மலர்களையும் சேர்த்துத் தொடுத்த கண்ணியின் நீங்காத மணத்தை வீசும் காற்றுப் பரப்ப, பாறைகள் பொருந்திய மிளகுக்கொடிகள் படர்ந்த தோட்டத்தையுடைய, குறிய இறப்பினையுடைய குடிலாகிய நம் மனையின்கண் உடல் பூரித்த மகிழ்ச்சி உடையவனாய் புகும், அந்நிலையை நோக்கி, முருகன் என உணர்ந்து, நல்ல நிறமுடைய செந்தினை நீருடன் அவன் வந்த திசை நோக்கித் தூவி முருகனை கைதொழுது வணங்கத் தொடங்கிவிட்டாள் நம் அன்னை.  ஐயோ!   என்ன நிலையை அடையுமோ, பொன் நிறத்துடன் மலர்ந்த வேங்கை மரத்தின் அசையும் கிளைகள் பொலியும்படி அவற்றில் ஏறி இருந்து நீலமணி நிறத்தையுடைய மயில்கள் கூவும் மலைநாட்டின் தலைவனுடன் நாம் கொண்ட நட்பு?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘களவு அலராயினும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளைக் கூறி, இம் மணிமிடை பவளத்துத் தலைவனைச் செவிலி கண்டு முருகெனப் பராவினமை தோழி கொண்டு கூறினாள் என்றார் நச்சினார்க்கினியர்.  தோழியின் கூற்று – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதன்கண் தோழி தலைவியை நோக்கிக் கூறுபவை எல்லாம் படைத்து மொழிக் கிளவிகள்.  உண்மை நிகழ்ச்சிகள் அல்ல ஆயினும் தலைவன் உண்மை என உணரும்படி இம்மகளிர் இங்ஙனம் திறம்படப் பேசுகின்றனர் என்றுணர்க.  முருகு என உணர்ந்து (13) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வேல் உடைமையானும் அஞ்சாமையானும் கண்ணி நாற்றத்தானும் தலைவனை முருகென உணர்ந்தாளென்று கொள்க.  முருகென உணர்ந்து அன்னை பரவும் என்றமையால், முருகனால் நமக்குத் தீங்கு உண்டாகும் என்று அஞ்சி இனி இற்செறிப்பள் என்பது புலப்படுத்தி, அதனால் தலைவனொடு அமைந்த நம் தொடர்பு இனி யாதாகுமோ எனத் தோழி தலைவிக்குக் கூறினாள் என்க.  சிறைப்புறத்தானாகிய தலைவன் கேட்டு வரைந்து கொள்ளுதல் இதன் பயனாம் என்க.  மலர்ந்த வேங்கை (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மணப்பருவமும் வந்து எய்தியதனை வேங்கை மலர்ந்தது என்பதனால் நினைவுறுத்தினள்.  ஒப்புமை – அகநானூறு 22 – உருவச் செந்தினை குருதியொடு தூஉய், அகநானூறு 272 – உருவச் செந்தினை நீரொடு தூஉய், பதிற்றுப்பத்து 19 – உருவச் செந்தினை குருதியொடு தூஉய்.  மெய்ம் மலி – யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிகுமே (தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 62), மெல்லெழுத்துறழும் மொழியு மாருளவே (தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 65).

சொற்பொருள்:  இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப் புலவு நாறு புகர் நுதல் கழுவக் கங்குல் அருவி தந்த அணங்குடை நெடுங்கோட்டு – பெரிய புலியைக் கொன்ற பெரிய தும்பிக்கையையுடைய யானையின் புலவு நாறும் புள்ளிகளையுடைய நெற்றியைக் கழுவுவதற்கு இரவில் அருவியைத் தந்த கடவுளுடைய பெரிய உச்சியையுடைய மலையின், அஞ்சுவரு விடர் முகை ஆர் இருள் அகற்றிய மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்கத் தனியன் வந்து – அச்சம் தரும் பிளப்பாகிய முழைஞ்சுகளில் (குகைகளில்) உள்ள செறிந்த இருளை அகற்றிய மின்னல் போல் விளங்கும் வேல் வழியைக் காட்ட நம் தலைவன் தனியனாக வந்து, பனி அலை முனியான் – பனி துன்புறுத்துவதையும் வெறுக்காதவனாய், நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற குளவியொடு மிடைந்த கூதளங்கண்ணி அசையா நாற்றம் அசை வளி பகரத் துறுகல் நண்ணிய கறி இவர் படப்பை – தோட்டத்தில் உள்ள – நீர் ஒழுகுகின்ற பக்கத்தையுடைய செல்லுவதற்கு அரிய இடத்தில் நெருங்கிய காட்டு மல்லிகை மலர்களுடன் கூதள மலர்களையும் சேர்த்துத் தொடுத்த கண்ணியின் நீங்காத மணத்தை வீசும் காற்றுப் பரப்ப பாறைகள் பொருந்திய மிளகுக்கொடிகள் படர்ந்த தோட்டத்தையுடைய (குளவி – Millingtonia hortensis, கூதளக் கொடி – Convolvulus ipome, a three–lobed nightshade vine), குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும் மெய்ம் மலி உவகையன் – குறிய இறப்பினையுடைய குடிலாகிய நம் மனையின்கண் உடல் பூரித்த மகிழ்ச்சி உடையவனாய் புகும், அந்நிலை கண்டு ‘முருகு’ என உணர்ந்து – அந்நிலையை நோக்கி முருகன் என உணர்ந்து, முகமன் கூறி உருவச் செந்தினை நீரொடு தூஉய் நெடுவேள் பரவும் அன்னை – நல்ல நிறமுடைய செந்தினை நீருடன் அவன் வந்த திசை நோக்கித்தூவி முருகனை கைதொழுது வணங்கத் தொடங்கிவிட்டாள் நம் அன்னை (தூஉய் – அளபெடை), அன்னோ – ஐயோ (இரக்கக்குறிப்பு), என் ஆவது – என்ன நிலையை அடையுமோ, கொல் – அசைநிலை, தானே – தான் ஏ அசைநிலைகள், பொன்னென மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய மணி நிற மஞ்ஞை அகவும் அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே – பொன் நிறத்துடன் மலர்ந்த வேங்கை மரத்தின் அசையும் கிளைகள் பொலியும்படி அவற்றில் ஏறி இருந்து நீலமணி நிறத்தையுடைய மயில்கள் கூவும் மலைநாட்டின் தலைவனுடன் நாம் கொண்ட நட்பு (தொடர்பே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 273, ஔவையார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
விசும்பு விசைத்து எறிந்த கூதளங்கோதையின்
பசுங்கால் வெண்குருகு வாப்பறை வளைஇ,
ஆர்கலி வளவயின் போதொடு பரப்பப்
புலம் புனிறு தீர்ந்த புதுவரல் அற்சிரம்,
நலம் கவர் பசலை நலியவும் நம் துயர்  5
அறியார் கொல்லோ தாமே? அறியினும்,
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின்,
நம்முடை உலகம் உள்ளார் கொல்லோ?
யாங்கென உணர்கோ யானே? வீங்குபு
தலைவரம்பு அறியாத் தகைவரல் வாடையொடு  10
முலையிடைத் தோன்றிய நோய் வளர் இள முளை
அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி,
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை
ஆராக் காதல் அவிர் தளிர் பரப்பிப்,
புலவர் புகழ்ந்த நாண் இல் பெருமரம்  15
நிலவரை எல்லாம் நிழற்றி,
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே.

பாடல் பின்னணி:  பிரிவின்கண் வருந்திய தலைவி அறிவு மயங்கித் தன் நெஞ்சிற்குக் கூறுவாளாய்த் தோழி கேட்பக் கூறியது.   

பொருளுரை:  முடிவிற்கு எல்லை அறியப்படாத தன்மையுடன் மிகுந்து வரும் வாடைக்காற்றின் வரவினால், எம் முலையிடத்துத் தோன்றிய வேட்கை நோயாகிய வளரும் இள முளையானது, தளர்ச்சியுடைய நெஞ்சத்தில் வருத்தமாகிய திரண்ட அடியாக நீண்டு, ஊரில் உள்ளவர்கள் எழுப்பிய அலராகிய அழகிய கிளைகளுடன், அடங்காத காதல் என்னும் ஒளிரும் தளிர்களைப் பரப்பிப், புலவர்கள் புகழ்ந்த நாணம் இல்லாத பெரிய மரம் ஆகி, நிலத்தின் எல்லையில் எல்லாம் நிழலைக் கொடுத்து, அலர் ஆகிய மலர்களை உதிர்ப்பவும் வராத நம் தலைவர்,

வானில் வேகத்துடன் எறிந்த கூதள மலர்மாலை போன்ற, பசிய கால்களையுடைய வெள்ளாங்குருகுகள் தாவும் சிறகினை வளைத்து வளம் பொருந்திய கடல் பக்கத்தில் நாட்காலையில் பரவி அமர, விளை நிலங்கள் கதிர்களை ஈன்ற அணிமை நீங்கிய புதிதாக வந்த அற்சிரக்காலத்தில், நம் அழகினைக் கவர்ந்த பசலை நம்மை வருந்தவும், நம் துயரத்தை அறியவில்லையோ?

இல்லை அறிந்திருந்தாலும், நம் மனம் போன்ற மென்மைத் தன்மை தன் நெஞ்சத்திற்கு இல்லாததால், நம் பெண்டிர் உலகின் இயல்பை அவர் நினைக்கவில்லையோ?  என்னவென்று யான் உணர்வேன்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலனே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  போதொடு (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அந்தி மாலைப் பொழுதோடு, காலைப் பொழுது எனினுமாம்.  புனிறு (4) – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே, தொல்காப்பியம், உரியியல் 79.  நம்முடை உலகம் (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நம்முடை உலகம் என்றது துணை இன்றி வருந்தும் மகளிர் கூட்டத்தை.

சொற்பொருள்:  விசும்பு விசைத்து எறிந்த – வானில் வேகத்துடன் எறிந்த, வானில் விசையாக எறியப்பட்ட, கூதளங்கோதையின் பசுங்கால் வெண்குருகு வாப்பறை வளைஇ ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப – கூதள மலர்மாலை போன்ற பசிய கால்களையுடைய வெள்ளாங்குருகுகள் தாவும் சிறகினை வளைத்து வளம் பொருந்திய கடல் பக்கத்தில் நாட்காலையில் பரவி அமர  (கூதளம் – Convolvulus ipome, a three–lobed nightshade vine, கோதையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, வளைஇ  – அளபெடை), புலம் புனிறு தீர்ந்த புதுவரல் அற்சிரம் – விளை நிலங்கள் கதிர்களை ஈன்ற அணிமை நீங்கிய புதிதாக வந்த அற்சிரக்காலத்தில், நலம் கவர் பசலை நலியவும் நம் துயர் அறியார் கொல்லோ – நம் அழகினைக் கவர்ந்த பசலை நம்மை வருந்தவும் நம் துயரத்தை அறியவில்லையோ, தாமே – தாம் ஏ அசைநிலைகள், அறியினும் – இல்லை அறிந்திருந்தாலும், நம் மனத்து அன்ன மென்மை இன்மையின் – நம் மனம் போன்ற மென்மைத் தன்மை தன் நெஞ்சத்திற்கு இல்லாததால் (மனத்து – மனம், அத்துச் சாரியை), நம்முடை உலகம் உள்ளார் கொல்லோ – நம் பெண்டிர் உலகின் இயல்பை அவர் நினைக்கவில்லையோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ அசைநிலை), யாங்கு என உணர்கோ யானே – என்னவென்று யான் உணர்வேன் (உணர்கோ – உணர்கு + ஓ, யானே – ஏகாரம் அசைநிலை), வீங்குபு – மிகுந்து, தலைவரம்பு அறியாத் தகைவரல் வாடையொடு – முடிவிற்கு எல்லை அறியப்படாத தன்மையுடன் வரும் வாடைக்காற்றின் வரவினால், முலையிடைத் தோன்றிய நோய் வளர் இள முளை அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி – முலையிடத்துத் தோன்றிய வேட்கை நோயாகிய வளரும் இள முளையானது தளர்ச்சியுடைய நெஞ்சத்தில் வருத்தமாகிய திரண்ட அடியாக நீண்டு, ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை ஆராக் காதல் அவிர் தளிர் பரப்பி – ஊரில் உள்ளவர்கள் எழுப்பிய அலராகிய அழகிய கிளைகளுடன் அடங்காத காதல் என்னும் ஒளிரும் தளிர்களைப் பரப்பி (அம்பல் – அலர், பழிச்சொற்கள்), புலவர் புகழ்ந்த நாண் இல் பெருமரம் – புலவர்கள் புகழ்ந்த நாணம் இல்லாத பெரிய மரம் ஆகி, நிலவரை எல்லாம் நிழற்றி அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே – நிலத்தின் எல்லையில் எல்லாம் நிழலைக் கொடுத்து அலர் ஆகிய மலர்களை உதிர்ப்பவும் வராத நம் தலைவர் (வாராதோரே – ஏகாரம் அசைநிலை)  

அகநானூறு 274, இடைக்காடனார், முல்லைத் திணைதலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
இரு விசும்பு அதிர முழங்கி, அர நலிந்து
இகு பெயல் அழிதுளி தலைஇ, வானம்
பருவம் செய்த பானாள் கங்குல்,
ஆடுதலைத் துருவின் தோடு ஏமார்ப்ப,
கடை கோல் சிறு தீ அடைய மாட்டித்  5
திண் கால் உறியன், பானையன், அதளன்,
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்பத்
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்,
மடி விடு வீளை கடிது சென்று இசைப்பத்,
தெறி மறி பார்க்கும் குறுநரி வெரீஇ  10
முள்ளுடைக் குறுந்தூறு இரியப் போகும்
தண் நறும் புறவினதுவே, நறுமலர்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியல் குறுமகள் உறைவு இன் ஊரே.

பாடல் பின்னணி:  வினை முற்றிய தலைவன், தலைவியைக் காணுதற்கு விதுப்புற்ற நெஞ்சத்துடன் தேர்ப்பாகனை நோக்கித் தேரினை விரைந்து செலுத்துக என்பதுபட கூறியது. 

பொருளுரை:  நறுமணமுடைய முல்லை மலர்களை அணிந்த, கற்பினையுடைய மென்மைத் தன்மை வாய்ந்த நம் தலைவி உறையும் இனிய ஊரானது,   

பெரிய வானம் அதிரும்படி முழங்கிப் பாம்புகளை வருத்தி, மிக்க துளிகளைப் பெய்து முகில்கள் கார்ப்பருவத்தினைச் செய்த நடு இரவில், அசையும் தலையினை உடைய செம்மறி ஆட்டின் தொகுதி பாதுகாவலாக இருக்கும்பொருட்டுக் கடையும் கோலினால் மூட்டிய சிறு தீயை விறகில் எரியவிட்டு, திண்ணிய அடியையுடைய உறியையும் பானையையும் தோல் படுக்கை உடையவனுமான, நுண்ணிய பல மழைத்துளிகள் தன் ஒரு பக்கத்தை நனைத்திட கோலினைக் காலின் அருகில் ஊன்றிய தனியே நிற்பவனுமான இடையன், உதட்டினை மடித்து எழுப்பும் சீழ்க்கை விரைந்து சென்று ஒலித்ததால், துள்ளி ஓடும் ஆட்டுக்குட்டியைக் கவரப் பார்த்திருக்கும் குள்ளநரி அஞ்சி, முட்கள் உடைய குறிய தூற்றின்கண் ஓடிப்போகும், குளிர்ந்த நறுமண காட்டின்கண் உள்ளது,  

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்’ என வரும் விதி கொள்க.  இடி பாம்பைத் தாக்குதல் கொல்லுதல் – அகநானூறு 68, 92, 119, 182, 202, 274, 323, 328, கலித்தொகை 45, 113, குறுந்தொகை 158, 190, 268, 391, நற்றிணை 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, புறநானூறு 17, 58, 126, 211, 366, 369.  முல்லை சான்ற கற்பின் (13) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – முல்லை மலர் அணிந்த கற்புபினையுடைய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முல்லை மாலை சூடுதற்கு அமைந்த கற்பொழுக்கதையுடைய.  முல்லை சான்ற கற்பு – முல்லை சான்ற முல்லை அம் புறவின் (சிறுபாணாற்றுப்படை 169) – நச்சினார்க்கினியர் உரை – கணவன் கூறிய சொற்பிழையாது இல்லிலிருந்து நல்லறம் செய்து ஆற்றி இருந்த தன்மை அமைந்த முல்லைக் கொடி படர்ந்த.  ஒப்புமை – அகநானூறு 274 – முல்லை சான்ற கற்பின், நற்றிணை 142 – முல்லை சான்ற கற்பின், பரிபாடல் 15 – முல்லை முறை, சிறுபாணாற்றுப்படை 30 – முல்லை சான்ற கற்பின், மதுரைக்காஞ்சி 285 – முல்லை சான்ற புறவு.  பொ. வே. சோமசுந்தரனார் சிறுபாணாற்றுப்படை உரை – முல்லை சூடுதற்கு அமைந்த கற்பு.  ஒளவை துரைசாமி நற்றிணை 142ம் பாடலின் உரை – முல்லை இருத்தல் என்னும் கற்பு நெறி.  பொ. வே. சோமசுந்தரனார் பரிபாடல் 15ம் பாடல் உரை – முல்லை முறை என்பது முல்லை மகளிரின் கற்பு.  நற்றிணை 142 (இடைக்காடனாரின் பாடல்) – இடையன் நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி.

சொற்பொருள்:  இரு விசும்பு அதிர முழங்கி அர நலிந்து இகு பெயல் அழிதுளி தலைஇ வானம் பருவம் செய்த பானாள் கங்குல் – பெரிய வானம் அதிரும்படி முழங்கிப் பாம்புகளை வருத்தி மிக்க துளிகளைப் பெய்து முகில்கள் கார்ப்பருவத்தினைச் செய்த நடு இரவில் (தலைஇ – அளபெடை), ஆடுதலைத் துருவின் தோடு ஏம் ஆர்ப்ப கடை கோல் சிறு தீ அடைய மாட்டித் திண் கால் உறியன் பானையன் அதளன் – அசையும் தலையினை உடைய செம்மறி ஆட்டின் தொகுதி பாதுகாவலாக இருக்கும்பொருட்டுக் கடையும் கோலினால் மூட்டிய சிறு தீயை விறகில் எரியவிட்டு திண்ணிய அடியையுடைய உறியையும் பானையையும் தோல் படுக்கை உடையவனுமான, நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்பத் தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன் – நுண்ணிய பல மழைத்துளிகள் தன் ஒரு பக்கத்தை நனைத்திட கோலினைக் காலின் அருகில் ஊன்றிய தனியே நிற்பவனுமான இடையன், மடி விடு வீளை கடிது சென்று இசைப்பத் தெறி மறி பார்க்கும் குறுநரி வெரீஇ முள்ளுடைக் குறுந்தூறு இரியப் போகும் – உதட்டினை மடித்து எழுப்பும் சீழ்க்கை விரைந்து சென்று ஒலித்ததால் துள்ளி ஓடும் ஆட்டுக் குட்டியைக் கவரப் பார்த்திருக்கும் குள்ளநரி அஞ்சி முட்கள் உடைய குறிய தூற்றின்கண் ஓடிப்போகும் (அளபெடை, வெருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது), தண் நறும் புறவினதுவே – குளிர்ந்த நறுமண காட்டின்கண் உள்ளது (புறவினதுவே – ஏகாரம் அசைநிலை), நறுமலர் முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள் உறைவு இன் ஊரே – நறுமணமுடைய முல்லை மலர்களை அணிந்த கற்பினையுடைய மென்மைத் தன்மை வாய்ந்த நம் தலைவி உறையும் இனிய ஊர் (ஊரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 275, கயமனார், பாலைத் திணை – மகட்போக்கிய தாய் சொன்னது
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்திக்
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலைப் பந்து எறிந்து ஆடி
இளமைத் தகைமையை வளமனைக் கிழத்தி
பிதிர்வை நீரை பெண் நீறு ஆக என  5
யாம் தற் கழறுங்காலைத் தான் தன்
மழலை இன் சொல் கழறல் இன்றி
இன் உயிர் கலப்பக் கூறி நன்னுதல்
பெருஞ்சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்
ஏதிலாளன் காதல் நம்பித்  10
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக்
குருளை எண்கின் இருங்கிளை கவரும்
வெம்மலை அருஞ்சுரம் நம் இவண் ஒழிய
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம்
நெருநைப் போகிய பெரு மடத் தகுவி  15
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும்
கூழை நொச்சிக் கீழது என் மகள்
செம்புடைச் சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டிரோ கண்  உடையீரே?

பாடல் பின்னணி:  மகட்போக்கிய நற்றாய் உரைத்தது.

பொருளுரை:  “வளம் பொருந்திய இல்லத்தின் செல்வியே ! உயர்ந்த நிலைத் தாழி நிறையப் பெய்து வைத்துப் பின் பனங் குடையினால் முகந்து அந்த நீரினைப் பெய்து வளர்த்த வயலைக்கொடிப் பந்தலின் கீழே, பந்தினை எறிந்து விளையாடும் இளமைத் தன்மையை உடையவளாய், திரியும் தன்மையுடையவளாக உள்ளாய் நீ. உன் பெண்மை அழிவதாக” என்று நான் கடிந்துக் கூறும் காலத்தில், தன்னுடைய மழலையான இனிய சொற்களால் என்னிடம் கடியச் சொற்கள் கூறாமல் இனிய உயிருடன் பொருந்தும்படி கூறும் அழகிய நெற்றியையுடையவள், பெருஞ்சோறு வழங்கும் எங்கள் இல்லத்தில் எம்முடன் இங்குக் கூடி இராதவளாய், பிறன் ஒருவன் பேசிய காதல் மொழிகளை நம்பி, திரண்ட அடியையுடைய இருப்பை மரத்தின் துளையுடைய வெள்ளை மலர்களைக் குட்டிக் கரடிகள் பெரும் கூட்டமாக உண்ணும் இடமான பாலை நிலத்தின் பெரிய நிலம் வெப்பம் தாங்காமல் அஞ்சி உயிர்க்கும் அல்லல் பொருந்திய காட்டிற்கு, நான் இங்கிருந்து வருந்தும்படி, நேற்றுச் சென்ற பெரிய மடப்பம் உடைய என் மகள், அகன்ற அல்குலில் அணியும் தழை ஆடைக்காகக் கொய்யும் இலைகளையுடைய குறிய நொச்சி மரத்தின் கீழே தன்னுடைய சிவந்த பக்கத்தையுடைய சிறு விறல்களால் இயற்றிய சிற்றில்லை நீங்கள் கண்டீர்களா, கண்கள் உடையவர்களே?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘ஏமப் பேரூர் சேரியும் சுரத்தும் தாமே செல்லும் தாயரும் உளரே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 37) என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை –  ‘ஏமப் பேரூர்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 37) என்னுஞ் சூத்திரத்து, ‘வெம்மையை அருஞ்சுரம் ………….. கண்ணுடையீரே’ என்பதன்கண், வண்டலைக் காணார் தேஎத்து நின்று, காணல் ஆற்றீர் எனக் கூறினமையின் ஆயத்திற்கின்றிப் புறஞ்சென்று சேரியோர்க்கு உரைத்ததாயிற்று, என்றார் நச்சினார்க்கினியர்.  அல்குல் தழை அணிக் கூட்டும் கூழை நொச்சி – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகியதாக அகன்ற அல்குலிடத்தே தழையாகிய அணிக்குக் கொய்யும் குறிய நொச்சி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை –  மடப்பம் உடையவளுக்கு அழகியதாக அகன்ற அல்குலுக்குத் தழை அணிதற்குக் கொய்த குறிய நொச்சி.  கரடி இருப்பை மலரை உண்ணுதல் – அகநானூறு 15, 81, 95, 149, 171, 247, 267, 275, 331.

சொற்பொருள்:  ஓங்கு நிலைத் தாழி – உயர்ந்த நிலைத் தாழி, மல்கச் சார்த்தி – நிறையப் பெய்து வைத்து, குடை அடை நீரின் மடையினள் எடுத்த பந்தர் வயலை – பனங் குடையினால் முகந்து நீரினைப் பெய்து வளர்த்த வயலைக்கொடி படர்ந்த பந்தலில் (பந்தர் – பந்தல் என்பதன் போலி, வயலைக்கொடி – purslane vine, Portulaca quadrifida), பந்து எறிந்து ஆடி – பந்தினை எறிந்து விளையாடி, இளமைத் தகைமையை – இளமைத் தன்மையை உடையையாய், வளமனைக் கிழத்தி – வளம் பொருந்திய இல்லத்தின் செல்வியே, பிதிர்வை நீரை – திரியும் தன்மையுடையவளாக உள்ளாய், பெண் நீறு ஆக என யாம் தற் கழறுங்காலை – உன் பெண்மை அழிவதாக என்று நான் கடிந்துக் கூறும் காலத்தில், தான் தன் மழலை இன் சொல் – தன்னுடைய மழலையான இனியச் சொற்களால், கழறல் இன்றி – என்னிடம் கடிய சொற்கள் கூறாமல், இன் உயிர் கலப்பக் கூறி – இனிய உயிருடன் பொருந்தும்படி கூறி, நன்னுதல் – அழகிய நெற்றியையுடையவள் (அன்மொழித்தொகை), பெருஞ்சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள் – பெருஞ்சோறு வழங்கும் எங்கள் இல்லத்தில் எம்முடன் இங்கு கூடி இராதவளாய் (இராஅள் – அளபெடை), ஏதிலாளன் காதல் நம்பி – பிறன் ஒருவன் பேசிய காதல் மொழிகளை நம்பி, திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக் குருளை எண்கின் இருங்கிளை கவரும் வெம்மலை அருஞ்சுரம் – திரண்ட அடியையுடைய இருப்பை மரத்தின் துளையுடைய வெள்ளை மலர்களை குட்டிக் கரடிகள் பெரும் கூட்டமாக உண்ணும் பாலை நிலத்திற்கு (இருப்பை மரம் – இலுப்பை மரம், வஞ்சி மரம், Indian Butter Tree, South Indian Mahua), நம் இவண் ஒழிய – நான் இவ்விடத்திலிருந்து வருந்தும்படி, இரு நிலன் உயிர்க்கும் – பெரிய நிலம் அஞ்சி பெருமூச்சு விடும் (நிலன் – நிலம் என்பதன் போலி), இன்னாக் கானம் – அல்லல் உடைய காடு, நெருநைப் போகிய – நேற்றுச் சென்ற, பெரு மடத் தகுவி – பெரிய மடப்பம் உடையவளும், ஐது அகல் அல்குல் – அழகிய அகன்ற அல்குல், தழை அணிக் கூட்டும் கூழை நொச்சிக் கீழது – தழை ஆடைக்காக கொய்யும் குறிய நொச்சி மரத்தின் கீழே (நொச்சி மரம் – Vitex leucoxylon, Chaste tree) என் மகள் செம்புடைச் சிறு விரல் வரித்த வண்டலும் காண்டிரோ – என் மகள் தன்னுடைய சிவந்த பக்கத்தையுடைய சிறு விறல்களால் இயற்றிய சிற்றில்லை நீங்கள் கண்டீர்களா (காண்டிரோ – ஓகாரம் வினா), கண் உடையீரே – கண்கள் உடையவர்களே (உடையீரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 276, பரணர், மருதத் திணை பரத்தை சொன்னது, தலைவியின் தோழியர் கேட்கும்படியாக
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த
வாளை வெண்போத்து உணீஇய, நாரை தன்
அடி அறிவுறுதல் அஞ்சிப் பைப்பயக்
கடி இலம் புகூஉம் கள்வன் போலச்,
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு  5
ஆவது ஆக! இனி நாண் உண்டோ?
வருக தில் அம்ம எம் சேரி சேர,
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காணத்
தாரும் தானையும் பற்றி, ஆரியர்
பிடி பயின்று தரூஉம் பெருங்களிறு போலத் 10
தோள் கந்து ஆகக் கூந்தலின் பிணித்து, அவன்
மார்பு கடி கொள்ளேன் ஆயின், ஆர்வுற்று
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல்,
பரந்து வெளிப்படாது ஆகி
வருந்துக தில்ல, யாய் ஓம்பிய நலனே.  15

பாடல் பின்னணி:  தலைவியின் தோழியர் கேட்பப் பரத்தை சொல்லியது. 

பொருளுரை:  நீண்ட பெரிய பொய்கையில் இரையை விரும்பிச் சென்ற வெள்ளை ஆண் வாளை மீனை உண்ணும்பொருட்டு, நாரையானது தன் காலடி ஒலியை அம்மீன் அறிவதை அஞ்சி மெல்ல மெல்ல, காவல் பொருந்திய இல்லத்தில் புகும் கள்வனைப் போல் தளர்ந்து நடக்கும் துறை பொருந்திய ஊரானாகிய தலைவனுடன், இனி நமக்கு நாணம் என்பது உண்டோ?

ஊரன் எம் சேரிக்கண் வருவானாக.  செவ்வரி பொருந்திய மையிட்ட கண்களையுடைய அவன் மனைவி காணும்படி, அவன் மாலையையும் ஆடையையும் பற்றிக்கொண்டு, ஆரியர்கள் பழக்கிய பெண் யானை பழகிக் கொண்டு வரும் களிற்று யானை போல், தோள் தறியாக அதில் கூந்தலாகிய கயிற்றால் கட்டி அவன் மார்பினைச் சிறை செய்யேன் ஆயின், பொருள் வேண்டி ஆர்வத்துடன் இரந்தவர்களுக்கு ஈயாமல் சேர்த்து வைத்தவன் பொருள் போல் வெளிப்பட்டு பரவாது ஆகி வருந்தி அழிவதாக, என் தாய் பாதுகாத்த என் அழகு!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்’ (தொல்காப்பியம், கற்பியல் 10) என வரும் நூற்பாவின்கண் ‘இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்’ (தொல்காப்பியம், கற்பியல் 10) என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுளைக் காட்டி, இதனுட் ‘பரந்து வெளிப்படாது ஆகி வருந்துக என்னலம்’, என்றமையின் சேரிப்பரத்தையைப் புலந்து கூறுதல் முதலியனவுங் கொள்க, என்றார் நச்சினார்க்கினியர். ‘விழைவே காலம்’  (தொல்காப்பியம், இடையியல் 5) என்னுஞ் சூத்திரத்து, ‘தில்’ ஒழியிசைப் பொருளில் வந்ததற்கு, ‘வருக தில் அம்ம’ என்பதனை எடுத்துக் காட்டி, வந்தக்கால் இன்னது செய்வல் என்பது பொருள் என்றனர் இளம்பூரணர், சேனாவரையர், தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர்.  அவன் பெண்டிர் (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘அவன் பெண்டிர் என்றது தலைவியை.  செறலால் ஒருமைச் சொல் பன்மைச் சொல்லாயிற்று’.  ஒப்புமை – அகநானூறு 76 – அவை புகு பொருநர் பறையின் ஆனாது கழறுப என்ப அவன் பெண்டிர், அகநானூறு 216 – தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப் பெட்டாங்கு மொழிப என்ப, அகநானூறு 276, அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காணத் தாரும் தானையும் பற்றி, ஐங்குறுநூறு 40 – மகிழ்நன் ஒண்தொடி முன் கை யாம் அழப் பிரிந்து, தன் பெண்டிர் ஊர் இறை கொண்டனன் என்ப.  வரலாறு ஆரியர் – அகநானூறு 276–9, 336–22, 396–16, 398–18, நற்றிணை 170–6, குறுந்தொகை 7–3, பதிற்றுப்பத்து 11–23.    

சொற்பொருள்:  நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த வாளை வெண்போத்து உணீஇய – நீண்ட பெரிய பொய்கையில் இரையை விரும்பிச் சென்ற வெள்ளை ஆண் வாளை மீனை உண்ணும்பொருட்டு (உணீஇய – அளபெடை), நாரை தன் அடி அறிவுறுதல் அஞ்சிப் பைப்பயக் கடி இலம் புகூஉம் கள்வன் போலச் சாஅய் ஒதுங்கும் – நாரையானது தன் காலடி ஒலியை அம்மீன் அறிவதை அஞ்சி மெல்ல மெல்ல காவல் பொருந்திய இல்லத்தில் புகும் கள்வனைப் போல் தளர்ந்து நடக்கும் (பைப்பய – பையப்பைய பைப்பய என மருவியது, இலம் – இல்லம் என்ற சொல்லின் இடைக்குறை, புகூஉம் – அளபெடை, சாஅய் – அளபெடை, கடி – காவல்), துறை கேழ் ஊரனொடு ஆவது ஆக – துறை பொருந்திய ஊரானாகிய தலைவனுடன் ஆவது ஆகட்டும், இனி நாண் உண்டோ – இனி நமக்கு நாணம் என்பது உண்டோ, வருக தில் அம்ம எம் சேரி சேர – ஊரன் எம் சேரிக்கண் வருவானாக (தில் – விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், அம்ம –அசைநிலை), அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காணத் தாரும் தானையும் பற்றி – செவ்வரி பொருந்திய மையிட்ட கண்களையுடைய அவன் மனைவி காணும்படி அவன் மாலையையும் ஆடையையும் பற்றிக்கொண்டு, ஆரியர் பிடி பயின்று தரூஉம் பெருங்களிறு போலத் தோள் கந்து ஆகக் கூந்தலின் பிணித்து அவன் மார்பு கடி கொள்ளேன் ஆயின் – ஆரியர்கள் பழக்கிய பெண் யானை பழகிக் கொண்டு வரும் களிற்று யானை போல் தோள் தறியாக அதில் கூந்தலாகிய கயிற்றால் கட்டி அவன் மார்பினைச் சிறை செய்யேன் ஆயின் (தரூஉம் – அளபெடை), ஆர்வுற்று இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல் பரந்து வெளிப்படாது ஆகி வருந்துக – பொருள் வேண்டி ஆர்வத்துடன் இரந்தவர்களுக்கு ஈயாமல் சேர்த்து வைத்தவன் பொருள் போல் வெளிப்பட்டு பரவாது ஆகி வருந்தி அழிவதாக, தில்ல – தில்ல –  ஒழியிசை என்னும் பொருளில் வந்த இடைச்சொல், ஈறு திரிந்து வந்தது, யாய் ஓம்பிய நலனே – என் தாய் பாதுகாத்த என் அழகு (நலனே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 277, கருவூர் நன்மார்பன், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
தண் கதிர் மண்டிலம் அவிர் அறச் சாஅய்ப்
பகல் அழி தோற்றம் போலப் பையென
நுதல் ஒளி கரப்பவும், ஆள் வினை தருமார்
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆகக்,
கடையல் அம் குரல வாள்வரி உழுவை  5
பேழ்வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது,
இரும் பனஞ்செறும்பின் அன்ன பரூஉ மயிர்ச்
சிறுகண் பன்றி வருதிறம் பார்க்கும்
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை,
பொத்துடை மரத்த புகர்படு நீழல்  10
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும்,
ஈரம் இல் வெஞ்சுரம் இறந்தோர் நம் வயின்
வாரா அளவை ஆயிழை! கூர்வாய்
அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர்
மனை உறை கோழி மறனுடைச் சேவல்  15
போர் புரி எருத்தம் போலக் கஞலிய
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி,
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
வந்தன்று அம்ம தானே,
வாரார் தோழி நம் காதலோரே.   20

பாடல் பின்னணி:  பருவ வரவு கண்டு ஆற்றாமை மிகுந்துத் தலைவி கூறியது.

பொருளுரை:  ஆராய்ந்த அணிகலன்களை அணிந்தவளே!  குளிர்ந்த கதிர்களையுடைய திங்கள் மண்டிலம் ஒளி இல்லாது ஓய்ந்து பகலில் மறையும் தோற்றம் போல், மெல்லென நம் நெற்றியில் ஒளி மறையவும், பொருள் ஈட்டும் வினையின்பொருட்டுக் கெடாத ஊக்கத்துடன் தம் வேல் ஒன்றையே துணையாகக் கொண்டு, தயிர் கடைவது போன்ற குரலையுடைய ஒளிரும் வரிகளையுடைய புலியானது, பிளந்த வாயையுடைய தன் பெண் புலியின் மிக்க பசியைக் கண்டு பொறுக்க இயலாது, கரிய பனையின் செறும்பு போன்ற பருத்த மயிரையும் சிறிய கண்களையுமுடைய பன்றி வருகின்ற வழியைப் பார்த்து இருக்கும், வழிகள் பொருந்திய காடுகள் உடைய அகன்ற பாலை நிலத்தில், பொந்துகளையுடைய மரங்களின் புள்ளியுடைய நிழலில் வழியில் செல்லும் புதியவர்கள் தங்கியிருக்கும் ஈரம் இல்லாத வெப்பமுடைய பாலை நிலத்தைக் கடந்து சென்ற நம் தலைவர், நம்பால் மீண்டு வராத வேளையில்,

கூர்மையான அழகினையும், தீ கொழுந்துவிட்டு எரிந்தாற்போல் உள்ள அழகியச் செறிந்த மயிர்ச் சிறகுகளையும் உடைய வீட்டுக் கோழியின் வலிமையுடைய சேவல் தன் பகைச் சேவல்களுடன் போரிடும்பொழுது நிமிர்ந்து செறிந்த மயிருடைய கழுத்து போல் தோன்றும், நெருங்கிய தீயின் நிறமுடைய முருக்க மரத்தின் ஒளிரும் மலர்க் கொத்துக்களில் உள்ள தேனைக் குடித்து, வண்டுகள் அத் தேன் சிதறும்படி உதிர்த்த இளவேனில் பருவம் வந்துவிட்டது.   

இன்னும் வரவில்லை, தோழி, நம் தலைவர்.  யான் எவ்வாறு ஆற்றியிருப்பேன்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  பேழ்வாய் (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய வாய், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பிளந்த வாய்.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 71).  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).  நம் காதலோரே (20) – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள் தலைவி.

சொற்பொருள்:  தண் கதிர் மண்டிலம் அவிர் அறச் சாஅய்ப் பகல் அழி தோற்றம் போலப் பையென நுதல் ஒளி கரப்பவும் – குளிர்ந்த கதிர்களையுடைய திங்கள் மண்டிலம் ஒளி இல்லாது ஓய்ந்து பகலில் மறையும் தோற்றம் போல் மெல்லென நம் நெற்றியில் ஒளி மறையவும்  (சாஅய் – அளபெடை), ஆள் வினை தருமார் தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக – பொருள் ஈட்டும் வினையின்பொருட்டுக் கெடாத ஊக்கத்துடன் தம் வேல் ஒன்றையே துணையாகக் கொண்டு, கடையல் அம் குரல வாள்வரி உழுவை பேழ்வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது இரும் பனஞ்செறும்பின் அன்ன பரூஉ மயிர்ச் சிறுகண் பன்றி வருதிறம் பார்க்கும் – தயிர் கடைவது போன்ற குரலையுடைய ஒளிரும் வரிகளையுடைய புலியானது பிளந்த வாயையுடைய தன் பெண் புலியின் மிக்க பசியைக் கண்டு பொறுக்க இயலாது கரிய பனையின் செறும்பு போன்ற பருத்த மயிரையும் சிறிய கண்களையுமுடைய பன்றி வருகின்ற வழியைப் பார்த்து இருக்கும் (பனஞ்செறும்பின் – இன் சாரியை, பரூஉ – அளபெடை), அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை – வழிகள் பொருந்திய காடுகள் உடைய அகன்ற பாலை நிலத்தில் (ஆர் – பொருந்திய), பொத்துடை மரத்த புகர்படு நீழல் ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும் ஈரம் இல் வெஞ்சுரம் இறந்தோர்– பொந்துகளையுடைய மரங்களின் புள்ளியுடைய நிழலில் வழியில் செல்லும் புதியவர்கள் தங்கியிருக்கும் ஈரம் இல்லாத வெப்பமுடைய பாலை நிலத்தைக் கடந்து சென்ற நம் தலைவர் (மரத்த – அகரம் பன்மை உருபு, நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), நம் வயின் வாரா அளவை – நம்பால் மீண்டு வராத வேளையில், ஆயிழை – ஆராய்ந்த அணிகலன்களை அணிந்தவளே (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), கூர்வாய் அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர் மனை உறை கோழி மறனுடைச் சேவல் போர் புரி எருத்தம் போல – கூர்மையான அழகினையும் தீ கொழுந்துவிட்டு எரிந்தாற்போல் உள்ள அழகியச் செறிந்த மயிர்ச் சிறகுகளையும் உடைய வீட்டுக் கோழியின் வலிமையுடைய சேவல் தன் பகைச் சேவல்களுடன் போரிடும்பொழுது நிமிர்ந்து செறிந்த மயிருடைய கழுத்து போல் தோன்றும், கஞலிய பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி – நெருங்கிய தீயின் நிறமுடைய முருக்க மரத்தின் ஒளிரும் மலர்க் கொத்துக்களில் உள்ள தேனைக் குடித்து (முருக்க மரம் – Coral tree, Erythrina variegate), சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில் வந்தன்று – வண்டுகள் அத் தேன் சிதறும்படி உதிர்த்த இளவேனில் பருவம் வந்துவிட்டது, அம்ம அசைநிலை, தானே – தான் ஏ அசைநிலைகள், வாரார் – அவர் இன்னும் வரவில்லை, தோழி – தோழி, நம் காதலோரே – நம் தலைவர் (காதலோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 278, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
குணகடல் முகந்த கொள்ளை வானம்
பணைகெழு வேந்தர் பல் படைத் தானைத்
தோல் நிரைத்து அனைய ஆகி வலன் ஏர்பு,
கோல் நிமிர் கொடியின் வசிபட மின்னி
உரும் உரறு அதிர் குரல் தலைஇப் பானாள்,  5
பெருமலை மீமிசை முற்றின ஆயின்,
வாள் இலங்கு அருவி தாஅய், நாளை,
இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி
வருவது மாதோ, வண் பரி உந்தி,
நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறைப்  10
பனிபொரு மழைக் கண் சிவப்ப பானாள்
முனி படர் அகல மூழ்குவம் கொல்லோ,
மணிமருள் மேனி ஆய் நலம் தொலைய,
தணிவு அருந்துயரம் செய்தோன்
அணி கிளர் நெடுவரை ஆடிய நீரே?  15

பாடல் பின்னணி:  இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாகத், தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. 

பொருளுரை:  கீழ்கடலில் நீரை மிகுதியாக முகந்துகொண்ட முகில்கள், பணை முரசுடைய வேந்தர்களின் பல போர்க்கருவிகளையுடைய தானைகளின் அருகில் யானைகள் வரிசையாக நிற்பது போல் தோன்றி, வலிமையுடன் எழுந்து, கோலின்கண் நிமிர்ந்த கொடி போல் வானம் பிளக்கும்படி மின்னி, இடி இடித்து நிலம் அதிரும்படி முழங்கி வந்து, நடு இரவில் பெரிய மலையின் மிக்க உச்சியைச் சூழ்ந்தன ஆதலால், ஒளி விளங்கும் அருவி பரந்து, நாளை, பெரிய மூங்கிலின் அழகிய தண்டுகள் முறியும்படி தாக்கி வரும். 

அவ்வாறு வந்தால், அழகிய குதிரை மரங்களைச் சாய்த்து மிகப் பெரிய பரப்பையுடைய நம் ஊரின் நீர்த்துறையில், பனியை ஒத்த நம் குளிர்ந்த கண்கள் சிவக்க நள்ளிரவில் பெரும் துன்பம் நீங்க மூழ்குவோமா, மணி போன்ற மேனியின் அழகிய நலம் கெடும்படி நீக்குவதற்கு அரிய துயரத்தைச் செய்தவனின், அழகு விளங்கும் உயர்ந்த மலையில் தோய்ந்து வரும் நீரின்கண்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘களனும் பொழுதும் வரை நிலை விலக்கி காதல் மிகுதி உளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதியால் அமைத்துக் கொள்க.  அதிர் குரல் தலைஇ (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நிலம் அதிர்வதற்குக் காரணமான ஆரவாரத்தோடே வந்து, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மிக்க முழக்கத்தைப் பொருந்தி.  பரி (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குதிரை மரம் – நீரைத் தேக்குவதற்குக் கால்களை கடாவி நிறுத்தப்படுகின்ற மரம்.  இவ்வாறு குதிரை மரம் நடுதல் இக்காலத்திலும் உண்டு.  குதிரை மரம் என்றே வழங்குகின்றது. இஃது இரவுக்குறியின்கண் வருவதற்கு இடையூறு உண்டென உணர்த்தியபடியாம்.  உந்தி (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தள்ளிக்கொண்டு, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – சாய்த்து.  பனி பொரு (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பனி போல் வெளுத்திருக்கின்ற.  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  குணகடல் முகந்த கொள்ளை வானம் பணைகெழு வேந்தர் பல் படைத் தானைத் தோல் நிரைத்து அனைய ஆகி – கீழ்கடலில் நீரை மிகுதியாக முகந்துகொண்ட முகில்கள் பணை முரசுடைய வேந்தர்களின் பல போர்க்கருவிகளையுடைய தானைகளின் அருகில் யானைகள் வரிசையாக நிற்பது போல் தோன்றி, வலன் ஏர்பு – வலது புறமாக எழுந்து, வலிமையுடன் எழுந்து, கோல் நிமிர் கொடியின் வசிபட மின்னி – கோலின்கண் நிமிர்ந்த கொடி போல் வானம் பிளக்கும்படி மின்னி, உரும் உரறு அதிர் குரல் தலைஇ – இடி இடித்து நிலம் அதிரும்படி முழங்கி வந்து (தலைஇ – அளபெடை), பானாள் பெருமலை மீமிசை முற்றின ஆயின் – நடு இரவில் பெரிய மலையின் மிக்க உச்சியைச் சூழ்ந்தன ஆதலால் (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), வாள் இலங்கு அருவி தாஅய் – ஒளி விளங்கும் அருவி பரந்து (தாஅய் – அளபெடை), நாளை – நாளை, இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி வருவது – பெரிய மூங்கிலின் அழகிய தண்டுகள் முறியும்படி தாக்கி வரும், மாதோ – மாது, ஓ அசைநிலைகள், வண் பரி உந்தி நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை – அழகிய குதிரை மரங்களைச் சாய்த்து மிகப் பெரிய பரப்பையுடைய நம் ஊரின் நீர்த்துறையில், பனி பொரு மழைக் கண் சிவப்ப பானாள் முனி படர் அகல மூழ்குவம் கொல்லோ – பனியை ஒத்த நம் குளிர்ந்த கண்கள் சிவக்க நள்ளிரவில் பெரும் துன்பம் நீங்க மூழ்குவோமா (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் – அசைநிலை), மணி மருள் மேனி ஆய் நலம் தொலைய தணிவு அருந்துயரம் செய்தோன் – மணி போன்ற மேனியின் அழகிய நலம் கெடும்படி நீக்குவதற்கு அரிய துயரத்தைச் செய்தவனின் (மருள் – உவம உருபு), அணி கிளர் நெடுவரை ஆடிய நீரே – அழகு விளங்கும் உயர்ந்த மலையில் தோய்ந்து வரும் நீர் (நீரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 279, இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார், பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
‘நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும்,
ஒட்டாது உறையுநர் பெருக்கமும், காணூஉ
ஒரு பதி வாழ்தல் ஆற்றுப தில்ல,
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
மென்முலை முற்றம் கடவாதோர்’ என  5
நள்ளென் கங்குலும் பகலும் இயைந்து இயைந்து
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி
ஆள் வினை மாரியின் அவியா, நாளும்
கடறு உழந்து இவணம் ஆகப் படர் உழந்து
யாங்கு ஆகுவள் கொல் தானே, தீந்தொடை  10
விளரி நரம்பின் நயவரு சீறியாழ்
மலி பூம் பொங்கர் மகிழ் குரல் குயிலொடு
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும்,
நம்முடை மதுகையள் ஆகி அணி நடை
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலிக்  15
கையறு நெஞ்சினள், அடைதரும்
மை ஈர் ஓதி மாஅயோளே?

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  

பொருளுரை:  பொன் போல் ஒளிரும் சுணங்குடன் நெருங்கிப் பருத்த மெல்லிய முலைப்பரப்பினைக் கடந்து செல்லாதவர்கள், நட்பு உடையவர்களின் இல்லாமையையும் சுற்றத்தாரின் துன்பத்தையும் மனம் பொருந்தாது உறைவபர்களின் செருக்கினையும் கண்டு ஒரே இடத்தில் வாழ்வதைப் பொறுத்திருப்பார்கள் என்று, நள் என்னும் ஓசையுடைய இரவிலும் பகலிலும் பொருந்திப் பொருந்தி நம் உள்ளத்தில் மூண்ட நெஞ்சினைச் சுடும் கவலையாகிய மிக்க தீ, முயற்சி என்னும் மழையால் அவித்து, ஒவ்வொரு நாளும் காட்டில் துன்புற்று நாம் இங்கே இருப்போம் ஆக, துன்பத்தில் ஆழ்ந்து என்ன நிலைமையை அடைவாளோ,

இனிதாகத் தொடுத்த விளரி என்னும் நரம்பின் இனிமையுடைய சிறிய யாழின் இசை, மிக்க மலர்களையுடைய சோலையில் மகிழ்ந்து கூவும் குயிலின் குரலுடன் சேர்ந்து துயிலை எழுப்பும் நீர் தெளிந்து ஓடும் காலத்திலும், நம்மை வலிமையாகக் கொண்டவளாகி, மாண்புற்ற பெண் அன்னம் போலும் அழகிய நடையால் மெதுவாக நடந்து, செயலற்ற நெஞ்சினளாகி, நம்மை அணைக்கும், கரிய நெய்ப்புடைய கூந்தலையுடைய மாமை நிறமுடைய (மாந்தளிர் நிறமுடைய) நம் தலைவி?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  ஒப்புமை –அகநானூறு 51 – முலை முற்றம் வீங்க, அகநானூறு 279 – செறிய வீங்கிய மென் முலை முற்றம், அகநானூறு 263 – வருமுலை முற்றத்து, அகநானூறு 361 – வார் முலை முற்றத்து, அகநானூறு 362 – முலைச் சுணங்கணி முற்றத்து, நற்றிணை 191 – வன முலை முற்றத்து.  அவியா – அவித்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்:  நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும் ஒட்டாது உறையுநர் பெருக்கமும் காணூஉ ஒரு பதி வாழ்தல் ஆற்றுப – நட்பு உடையவர்களின் இல்லாமையையும் சுற்றத்தாரின் துன்பத்தையும் மனம் பொருந்தாது உறைவபர்களின் செருக்கினையும் கண்டு ஒரே இடத்தில் வாழ்வதைப் பொறுத்திருப்பார்கள் (காணூஉ – அளபெடை), தில்ல – தில் ஓர் இடைச்சொல், ஈறு திரிந்து வந்தது, பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய மென்முலை முற்றம் கடவாதோர் – பொன் போல் ஒளிரும் சுணங்குடன் நெருங்கிப் பருத்த மெல்லிய முலைப்பரப்பினைக் கடந்து செல்லாதவர்கள், என – என்று, நள்ளென் கங்குலும் பகலும் இயைந்து இயைந்து உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி – நள் என்னும் ஓசையுடைய இரவிலும் பகலிலும் பொருந்திப் பொருந்தி நம் உள்ளத்தில் மூண்ட நெஞ்சினைச் சுடும் கவலையாகிய மிக்க தீ, ஆள் வினை மாரியின் அவியா நாளும் கடறு உழந்து இவணம் ஆக – முயற்சி என்னும் மழையால் அவித்து ஒவ்வொரு நாளும் காட்டில் துன்புற்று நாம் இங்கே இருப்போம் ஆக, படர் உழந்து யாங்கு ஆகுவள் – துன்பத்தில் ஆழ்ந்து என்ன நிலைமையை அடைவாளோ, கொல் – அசைநிலை, தானே – தான், ஏ அசைநிலைகள், தீந்தொடை விளரி நரம்பின் நயவரு சீறியாழ் மலி பூம் பொங்கர் மகிழ் குரல் குயிலொடு புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும் – இனிதாகத் தொடுத்த விளரி என்னும் நரம்பின் இனிமையுடைய சிறிய யாழின் இசை மிக்க மலர்களையுடைய சோலையில் மகிழ்ந்து கூவும் குயிலின் குரலுடன் சேர்ந்து துயிலை எழுப்பும் நீர் தெளிந்து ஓடும் காலத்திலும், நம்முடை மதுகையள் ஆகி – நம்மை வலிமையாகக் கொண்டவளாகி, அணி நடை அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி – மாண்புற்ற பெண் அன்னம் போலும் அழகிய நடையால் மெதுவாக நடந்து (பெடையின்– இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கையறு நெஞ்சினள் அடைதரும் – செயலற்ற நெஞ்சினளாகி நம்மை அணைக்கும், மை ஈர் ஓதி மாஅயோளே – கரிய நெய்ப்புடைய கூந்தலையுடைய மாமை நிறமுடைய (மாந்தளிர் நிறமுடைய) நம் தலைவி (அளபெடை, ஏகாரம் –அசைநிலை)

அகநானூறு 280, அம்மூவனார், நெய்தற் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்
பன் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,
திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,
நலஞ்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும்,  5
பெறல் அருங்குரையள் ஆயின், அறம் தெரிந்து,
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு
இருநீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம் இருப்பின்,  10
தருகுவன் கொல்லோ தானே, விரி திரைக்
கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்,
கானலம் பெருந்துறைப் பரதவன் எமக்கே?

பாடல் பின்னணி:  (1) தலைவியைக் கண்ணுற்று நீங்கும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  (2) அல்ல குறிப்பட்டுத் திரும்பும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

பொருளுரை:  பொன்னால் புனைந்த செருந்தியின் ஒளியுடைய கொத்துக்களாகிய பல மலர்கள் கொண்ட அழகான மாலையை அணிந்தவளும், மணல் நிறைந்த நீர் அடைந்த கரையில் நண்டுடன் விளையாடி இளைப்பாறி இருந்த அழகிய தொடியை அணிந்த இளையவளுமானத் தலைவி, நாம் நன்மைப் பொருந்தியப் பொன்னையும் மணியையும் கொடுத்தாலும் பெறுவதற்கு அரியவள் ஆனால், நாம் வாழும் நாட்டிலிருந்து விலகி வந்து, இங்கு அவனொடு கடற்கரையில் உப்புக்குவியலில் பணி புரிந்தாலும், அவனுடன் படகில் கடலுள் புகுந்தும், அவனுடன் நாம் மீன் வேட்டையாடினாலும், அவனுக்கு அடிபணிந்து நடந்தாலும், அவனுக்கு அருகில் இருந்தாலும், அறத்தினை உணர்ந்து அவளை எனக்குத் தருவானா, அகன்ற கடலிலிருந்து திரண்ட முத்துக்களைக் கொண்டு வந்து வண்டுகள் ஒலிக்கும் அகன்ற கடற்கரைச் சோலையில் அவற்றைப் பெரிய துறையின் மீனவனான அவளுடைய தந்தை?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) என வரும் நூற்பாவின்கண் ‘பரிவுற்று மெலியினும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நச்சினார்க்கினியர் இச் செய்யுளைத் தலைவன் பொருவயிற் பிரியக் கருதியதாகக் கொண்டு உரைப்பர்.  ‘வெளிப்படை தானே’ (தொல்காப்பியம், களவியல் 50) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளைக் காட்டி, இதனுள் பொருள் கொடுத்தாற் பெறல் அரியளாயின், தன்னை வழிபட்டால் தந்தை தருவனோ?  அது நமக்கு அரிதாகலின், இன்னும் பொருள் நாம் மிகத் தேடி வந்து வரைதும் எனப் பொருள்வயிற் பிரியக் கருதியவாறு காண்க என்பர், நச்சினார்க்கினியர்.  படுத்தனம் (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை –  அவனோடு மீன் வேட்டையாடி மீனை அகப்படுத்தும், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அவன் வயமாகியும்.  விரி திரைக் கண் திரள் முத்தம் கொண்டு (11–12) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – விரிந்த கடலில் திரண்ட வடிவினையுடைய முத்துக்களைக் கொண்டு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – விரிந்த திரைக்கடலில் சென்று காண்போர் கண்ணொளி திரண்டு நோக்குதற்குக் காரணமான முத்துக்களை வாரிக் கொணர்ந்து.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).  குரை – ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப (தொல்காப்பியம், இடையியல் 24).

சொற்பொருள்:  பொன் அடர்ந்தன்ன – பொன்னால் செய்த, ஒள் இணர்ச் செருந்திப் பன் மலர் வேய்ந்த – செருந்தி மரத்தின் ஒளியுடைய கொத்துக்களாகிய பல மலர்கள் அணிந்த (செருந்தி மரம் – Ochna squarrosa, Panicled golden–blossomed pear tree), நலம் பெறு கோதையள் – அழகான மாலையை அணிந்தவள், திணி மணல் – மணல் அடர்ந்த, அடைகரை – நீர் அடைந்த கரை, அலவன் ஆட்டி – நண்டுடன் விளையாடி, அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள் – இளைப்பாறி இருந்த அழகிய தொடியை அணிந்த இளைய பெண், நலஞ்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும் – நன்மை பொருந்திய பொன்னையும் மணியையும் கொடுத்தாலும், பெறல் அருங்குரையள் ஆயின் – பெறுவதற்கு அரியவள் ஆயின் (அருங்குரையள் – குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று), அறம் தெரிந்து – அறம் அறிந்து, நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து – நாம் வாழும் நாட்டிலிருந்து விலகி வந்து (தேஎம் – அளபெடை, மரூஉ – முற்றெச்சம், அளபெடை), அவனொடு – அவனுடன், இரு நீர்ச் சேர்ப்பின் – கடற்கரையில், உப்புடன் உழுதும் – உப்புக்குவியலில் வேலை செய்தும், பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும் – அவனுடன் படகில் கடலுள் புகுந்தும், படுத்தனம் – அவனுடன் நாம் மீன் வேட்டையாடினாலும் (படுத்தனம் – முற்றெச்சம்), பணிந்தனம் – அவனுக்கு அடிபணிந்து நடந்தாலும் (பணிந்தனம் – முற்றெச்சம்), அடுத்தனம் இருப்பின் – அவனுக்கு அருகில் இருந்தாலும் (அடுத்தனம் – முற்றெச்சம்), தருகுவன் கொல்லோ – அவன் தருவானா (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் – அசைநிலை), தானே – தான் ஏ – அசைநிலைகள், விரி திரைக்கண் திரள் முத்தம் கொண்டு – அகன்ற கடலிலிருந்து திரண்ட முத்துக்களை கொண்டு வந்து, ஞாங்கர் – அங்கு,தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும் கானல் அம் பெருந்துறைப் பரதவன் – வண்டுகள் ஒலிக்கும் அகன்ற கடற்கரைச் சோலையில் பகுக்கும் பெரிய துறையின் மீனவன் (அம் – சாரியை), எமக்கே – எனக்கு (ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 281, மாமூலனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
செய்வது தெரிந்திசின் தோழி! அல்கலும்
அகலுள் ஆண்மை அச்சறக் கூறிய
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது,
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி
வான் போழ் வல்வில் சுற்றி நோன் சிலை  5
அவ்வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வியல்
கனை குரல் இசைக்கும் விரை செல் கடுங்கணை
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனி இருங்குன்றத்து  10
ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து அவரோ சென்றனர்,
பறை அறைந்தன்ன, அலர் நமக்கு ஒழித்தே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட  தலைவியின் வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைவி கூறியது.

பொருளுரை:  செய்ய வேண்டியதை ஆராய்ந்து காண்பாயாகத் தோழி!  தினமும் நம்முடைய பெரிய ஊரில் அவர் நமக்கு அச்சம் இல்லாது கூறிய சொற்கள் பொய்க்கும் என்று அஞ்சாமல், தளர்ந்து நடக்கும், மடப்பமுடைய மயில் உதிர்த்து விட்ட தோகையை நீண்ட பிளப்புகளையுடைய வலிய வில்லில் சுற்றி, அந்த வில்லின் அழகிய வார் விளிம்பில் பொருத்தி, மிக்க ஒலியுடன் விரைந்து செல்லும் கொடிய அம்புகளையுடைய செலுத்தும் மாறுபாடு மிக்க உடைய வடுகர் முன்னே வர, மோரியர் தெற்கில் உள்ள நாட்டைப் பற்ற வரும் பொருட்டு விண்ணளவு உயர்ந்த குளிர்ந்த பெரிய மலையில் ஒளியுடைய சக்கரங்கள் உருளுவதற்காகச் செதுக்கிய பாறைகளைக் கடந்து, நம் மீது பறையைக் கொட்டியதைப் போன்ற பழிச் சொற்கள் எழுமாறு தலைவர் சென்றார்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  வான் போழ் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீண்ட பிளப்பு, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நீண்ட வார்.  வரலாறு – வடுகர், மோரியர்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  வடுகர் – ஒளவை துரைசாமி உரை புறநானூறு 278 – தொண்டை நாட்டுத் திருவேங்கடத்திற்கு வடக்கில் உள்ள நாட்டவராதலால் வடுகர் எனப்பட்டனர், பொ. வே. சோமசுந்தரனார் உரை அகநானூறு 213 – தெலுங்கர்.  வடுகர் – அகநானூறு 107, 213, 253, 281, 295, 375, 381, குறுந்தொகை 11, நற்றிணை 212, புறநானூறு 378.மோரியர் – அகநானூறு 69–10, 251–12, 281–8, புறநானூறு 175–6.

சொற்பொருள்:  செய்வது தெரிந்திசின் தோழி – செய்ய வேண்டியதை ஆராய்ந்து காண்பாயாகத் தோழி, அல்கலும் – தினமும், அகலுள் – ஊரில், பெரிய இடத்தில், ஆங்கண் – அங்கு, அச்சு அற – அச்சம் இல்லாது (அச்சு – அச்சம் அச்சு என விகாரமாய் நின்றது), கூறிய சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது – கூறிய சொற்கள் பொய்க்கும் என்று அஞ்சாமல், ஒல்கு இயல் – ஒதுங்கி நடக்கும், தளர்ந்து நடக்கும், மட மயில் – மடப்பமுடைய மயில், ஒழித்த பீலி – உதிர்த்து விட்ட தோகை, வான் போழ் வல்வில் சுற்றி – நீண்ட பிளப்புகளையுடைய வலிய வில்லில் சுற்றி, நோன் சிலை – வலிய வில், அவ்வார்– அழகிய வார், விளிம்பிற்கு அமைந்த – விளிம்பிற்குப் பொருந்திய, நொவ்வு இயல் – விரைந்த தன்மை, கனை குரல் – மிக்க ஒலி, இசைக்கும் – ஒலிக்கும், விரை செல் கடுங்கணை – விரைந்து செல்லும் கொடிய அம்பு, முரண் மிகு வடுகர் – மாறுபாடு மிக்க உடைய வடுகர் (தெலுங்கர்), முன்னுற – முன்னே வர, மோரியர் தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு – மோரியர் தெற்கில் உள்ள நாட்டைப் பற்ற வரும் பொருட்டு, விண்ணுற ஓங்கிய – விண்ணளவு உயர்ந்த, பனி இருங்குன்றத்து – குளிர்ந்த பெரிய மலையில், ஒண் கதிர் திகிரி உருளிய – ஒளியுடைய சக்கரங்கள் உருளுவதற்காக, குறைத்த அறை – செதுக்கிய பாறை, இறந்து அவரோ சென்றனர் – அவர் கடந்து சென்றார் (அவரோ – ஓகாரம் அசைநிலை), பறை அறைந்தன்ன – பறையைக் கொட்டியதைப் போல், அலர் நமக்கு ஒழித்தே – நமக்கு அலரைக் கொடுத்து (ஒழித்தே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 282, தொல்கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி, அல்லது தலைவி தோழியிடம் சொன்னது
பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய
செறி மடை அம்பின், வல் வில் கானவன்
பொருது தொலை யானை வெண்கோடு கொண்டு
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன்,
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப,  5
வைந்நுதி வால் மருப்பு ஒடிய உக்க
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு,
சாந்தம் பொறை மரம் ஆக நறை நார்
வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு 10
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து
எந்தையும் எதிர்ந்தனன் கொடையே, அலர்வாய்
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்,
சாய் இறைத் திரண்ட தோள் பாராட்டி
யாயும் ‘அவனே’ என்னும், யாமும்  15
வல்லே வருக வரைந்த நாள் என
நல் இறை மெல்விரல் கூப்பி,
இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே.

பாடல் பின்னணி:  (1) இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாகத், தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. (2) பிரிவின்கண் தோழிக்குத் தலைவி சொல்லியது.  

பொருளுரை:  பெரிய மலையின் பக்க மலையில் வேட்டைக்குச் சென்ற செறிந்த மூட்டினையுடைய அம்பையும் வலிய வில்லையுமுடைய கானவன், தன்னுடன் போரிட்டு இறந்த யானையின் வெள்ளை மருப்பைக் (தந்தத்தைக்) கொண்டு நீர் விளங்கும் மலையில் நல்ல பொன்னைத் தோண்டி எடுப்பவன், மிக்க ஒளியால் கண்களைக் கூசச் செய்யும் திண்ணிய மணிகள் விளங்க, கூரிய முனையையுடைய வெள்ளை யானை மருப்பு ஒடிந்ததால் அதிலிருந்து உதிர்ந்த தெளிந்த தன்மையையுடைய ஆலங்கட்டியை ஒத்த முத்துக்களுடன், பொன் மணி முத்து ஆதியை மூன்று பொருட்களையும் ஒரு சேரக் கொண்டு, சந்தன மரத்தின் கிளையைக் காவு மரமாகக் (காவடியாகக்) கொண்டு, நறைக்கொடி நாரினால் வேங்கை மலர்களைத் தொடுத்த கண்ணியை அணிந்தவன் ஆக, மலையிலிருந்து இறங்கி வரும், அம்மலை நாட்டின் தலைவனுக்கு,

மிக்க இனிமையான பலா பழங்கள் கொண்ட மரங்களையுடைய அழகு பொருந்திய செல்வத்தையுடைய நம் தந்தையும் நின்னைக் கொடுத்தலை ஏற்றுக்கொண்டான்.  பழிமொழிகளைக் கூறும் ஊர் மக்களும் அவனுடன் நின்னைச் சேர்த்துக் கூறுகின்றனர். மெல்லிய இறையையுடைய திரண்ட தோள்களைப் பாராட்டி அவனே நினக்கு உரியவன் எனக் கூறுகின்றாள் தாய்.  நாமும், ‘விரைவில் வருக திருமணத்திற்குக் குறிப்பிட்ட நாள்’ என்று, நல்ல இறையையுடைய மெல்லிய விரல்களைக் குவித்து நம் இல்லத்தில் உள்ள கடவுளுக்குப் பலியை செலுத்துவோமாக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘வரைவு உடன்பட்டோர்  கடாவல் வேண்டினும்’ என்னும் விதி கொள்க.  தலைவி கூற்றாயின் ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என வரும் நூற்பாவின்கண் ‘வரைவு தலைவரினும்’ என்னும் விதி கொள்க.  யானையின் தந்தத்தில் முத்து:  அகநானூறு 282 – வால் மருப்பு ஒடிய உக்க தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, நற்றிணை 202 – புலி பொரச் சிவந்த புலால் அம் செங்கோட்டு ஒலி பல் முத்தம், புறநானூறு 161 – முத்துப்படு முற்றிய உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, புறநானூறு 170 – வெண்கோடு பயந்த ஒளி திகழ் முத்தம், பதிற்றுப்பத்து 32 – முத்துடை மருப்பின், கலித்தொகை 40 – முத்து ஆர் மருப்பின், திருமுருகாற்றுப்படை 304 – பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇ,  குறிஞ்சிப்பாட்டு 36 – முத்து ஆர் மருப்பின், மலைபடுகடாம் 518 – முத்துடை மருப்பின். வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

சொற்பொருள்:  பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய செறி மடை அம்பின் வல் வில் கானவன் – பெரிய மலையின் பக்க மலையில் வேட்டைக்குச் சென்ற செறிந்த மூட்டினையுடைய அம்பையும் வலிய வில்லையுமுடைய கானவன், பொருது தொலை யானை வெண்கோடு கொண்டு நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன் – தன்னுடன் போரிட்டு இறந்த யானையின் வெள்ளை மருப்பைக் (தந்தத்தைக்) கொண்டு நீர் விளங்கும் மலையில் நல்ல பொன்னைத் தோண்டி எடுப்பவன், கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப – மிக்க ஒளியால் கண்களைக் கூசச் செய்யும் திண்ணிய மணிகள் விளங்க, வைந்நுதி வால் மருப்பு ஒடிய உக்க தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு – கூரிய முனையையுடைய வெள்ளை யானை மருப்பு ஒடிந்ததால் அதிலிருந்து உதிர்ந்த தெளிந்த தன்மையையுடைய ஆலங்கட்டியை ஒத்த முத்துக்களுடன், மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு – பொன் மணி முத்து ஆதியை மூன்று பொருட்களையும் ஒரு சேரக் கொண்டு, சாந்தம் பொறை மரம் ஆக – சந்தன மரத்தின் கிளையைக் காவு மரமாகக் கொண்டு (பொறை மரம் – காவுதடி, காவடி), நறை நார் வேங்கைக் கண்ணியன் – நறைக்கொடி நாரினால் வேங்கை மலர்களைத் தொடுத்த கண்ணியை அணிந்தவன், இழிதரும் – மலையிலிருந்து இறங்கி வரும், நாடற்கு – அம்மலை நாட்டின் தலைவனுக்கு, இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து எந்தையும் எதிர்ந்தனன் கொடையே – மிக்க இனிமையான பலா பழங்கள் கொண்ட மரங்களையுடைய அழகு பொருந்திய செல்வத்தையுடைய நம் தந்தையும் (இன் தீம் – ஒருபொருட் பன்மொழி, கொடையே – ஏகாரம் அசைநிலை), அலர்வாய் அம்பல் ஊரும் அவனொடு மொழியும் – பழிமொழிகளைக் கூறும் ஊர் மக்களும் அவனுடன் நின்னைச் சேர்த்துக் கூறுகின்றனர் (ஊர் – ஆகுபெயர் ஊர் மக்களுக்கு), சாய் இறைத் திரண்ட தோள் பாராட்டி யாயும் ‘அவனே’ என்னும் – மெல்லிய இறையையுடைய திரண்ட தோள்களைப் பாராட்டி அவனே நினக்கு உரியவன் எனக் கூறுகின்றாள் தாய், யாமும் – நாமும், வல்லே வருக வரைந்த நாள் என – விரைவில் வருக திருமணத்திற்குக் குறிப்பிட்ட நாள் என்று, நல் இறை மெல்விரல் கூப்பி இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே – நல்ல இறையையுடைய மெல்லிய விரல்களைக் குவித்து நம் இல்லத்தில் உள்ள கடவுளுக்குப் பலியை செலுத்துவோமாக (பலியே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 283, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
நன்னெடுங்கதுப்பொடு பெருந்தோள் நீவிய,
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும்,
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி,
பல் கவர் மருப்பின் முது மான் போக்கிச்,
சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர்  5
திரிவயின், தெவுட்டும் சேண் புலக் குடிஞைப்
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்தொறும்,
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு
அரிய ஆகும் என்னாமைக், கரி மரம்
கண் அகை இளங்குழை கால் முதல் கவினி  10
விசும்புடன் இருண்டு வெம்மை நீங்கப்
பசுங்கண் வானம் பாய் தளி பொழிந்தெனப்
புல் நுகும்பு எடுத்த நல் நெடுங்கானத்து,
ஊட்டுறு பஞ்சிப் பிசிர் பரந்தன்ன
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப,  15
இனிய ஆகுக தணிந்தே,
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே.

பாடல் பின்னணி:  தலைவியை தலைவனுடன் போக்குதற்குத் துணிந்த தோழி, தன் எண்ணத்தைத் தலைவனுக்குக் கூறியது. 

பொருளுரை:  தலைவியின் நல்ல நீண்ட கூந்தலுடன் பெரிய தோள்களைத் தடவிய, நின்னை நீங்கி அவள் இங்கு இருத்தலை அஞ்சிய என்னைவிடவும், உடன்போக்கை மேற்கொண்டு பெரிதும் விதுப்புறும் தலைவிக்கு, பல கிளைகளையுடைய கொம்பினையுடைய முதிய மான்களைத் துரத்திவிட்டுச் சிறிய அளவு உணவைக் கொண்டு வந்த சிற்றூரில் வாழும் மகளிர் திரியும் இடங்களில், தொலைவிலிருந்து ஒலிக்கும் பேராந்தையின் வருத்தம் தரும் குரல் மென்மையாக வந்து ஒலிக்குந்தோறும், வழிப்போக்கர்கள் கேட்டுத் துன்புறும் வழிகள், செல்லுவதற்கு அரியவாகும் என நீ கருதாமையால்,

கரிந்த மரங்களிடத்தில் அவற்றில் கணுக்களிலிருந்து தளிர்க்கின்ற இளம் தளிர்கள் அடி முதல் கிளைத்து அழகு பெறவும், வானில் முகில்கள் இருண்டு, வெப்பம் நீங்க பசிய இடத்தையுடைய வானில் பரவி மழையைப் பெய்ததால் புற்கள் குருத்து விட்ட நல்ல நெடிய காட்டில், செந்நிறம் ஊட்டிய பஞ்சியின் பிதிர்கள் பரவினாற்போல் தோன்றும், செந்நிற தம்பலப்பூச்சிகள் குளிர்ந்த நிலத்தை அழகு செய்ய, வெப்பம் தணிந்து இனிமையாக ஆகட்டும், துன்பம் தரும் வழியில் நின்னுடன் செல்வதற்கு.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘தலைவரும் விழும நிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) எனவரும் நூற்பாவில் ‘போக்கற் கண்ணும்’ என்னும் விதி கொள்க.  தெவுட்டும் (6) – பழைய உரையில் இவ்வாறு உள்ளது.  பொ. வே. சோமசுந்தரனார், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை ஆகியோர் உரையில் ‘தெவிட்டும்’ என உள்ளது.  மூதாய் வரிப்ப – அகநானூறு 14 – ஈயல் மூதாய் வரிப்ப, அகநானூறு 74 – செம் மூதாய் பெருவழி மருங்கில் சிறு பல வரிப்ப, அகநானூறு 283 – மூதாய் தண் நிலம் வரிப்ப, அகநானூறு 304 – ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப.  மூதாய் – தம்பலப்பூச்சி, இந்திரகோபம், பட்டுப்பூச்சி, trombidium grandissimum.  சிறிய சிவந்த நிறமுடைய பூச்சிகள் இவை.  நிலத்தில் தவழ்வன.  வெல்வெட் போன்ற மேல்பகுதியைக் கொண்டவை.  மழைக்காலத்தில் இவற்றைக் காணலாம்.  இவை உள்ள பாடல்கள் – அகநானூறு 14, 54, 74, 134, 139, 283, 304, 374, கலித்தொகை 85, நற்றிணை 362.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58). 

சொற்பொருள்:  நல் நெடுங் கதுப்பொடு பெருந்தோள் நீவிய – தலைவியின் நல்ல நீண்ட கூந்தலுடன் பெரிய தோள்களைத் தடவிய, நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும் – நின்னை நீங்கி அவள் இங்கு இருத்தலை அஞ்சிய என்னைவிடவும், செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி – உடன்போக்கை மேற்கொண்டு பெரிதும் விதுப்புறும் தலைவி (விதுப்புறுதல் – ஆர்வமுடன் விரைதல், ஆர்வமுடன் அஞ்சுதல்), பல் கவர் மருப்பின் முது மான் போக்கிச் சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர் திரிவயின் – பல கிளைகளையுடைய கொம்பினையுடைய முதிய மான்களைத் துரத்திவிட்டுச் சிறிய அளவு உணவைக் கொண்டு வந்த சிற்றூரில் வாழும் மகளிர் திரியும் இடங்களில் (உணா – உணவு, வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது), தெவுட்டும் சேண் புலக் குடிஞைப் பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்தொறும் – தொலைவிலிருந்து ஒலிக்கும் பேராந்தையின் வருத்தம் தரும் குரல் மென்மையாக வந்து ஒலிக்குந்தோறும், போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு அரிய ஆகும் என்னாமை – வழிப்போக்கர்கள் கேட்டுத் துன்புறும் வழிகள் செல்லுவதற்கு அரியவாகும் என நீ கருதாமையால் (ஆறே – ஏகாரம் அசைநிலை), கரி மரம் கண் அகை இளங்குழை கால் முதல் கவினி – கரிந்த மரங்களிடத்தில் அவற்றில் கணுக்களிலிருந்து தளிர்க்கின்ற இளம் தளிர்கள் அடி முதல் கிளைத்து அழகு பெறவும், விசும்புடன் இருண்டு – வானில் முகில்கள் இருண்டு, வெம்மை நீங்கப் பசுங்கண் வானம் பாய் தளி பொழிந்தெனப் புல் நுகும்பு எடுத்த நல் நெடுங்கானத்து – வெப்பம் நீங்க பசிய இடத்தையுடைய வானில் முகில்கள் பரவி மழையைப் பெய்ததால் புற்கள் குருத்து விட்ட நல்ல நெடிய காட்டில் (வானம் – ஆகுபெயர் முகிலுக்கு), ஊட்டுறு பஞ்சிப் பிசிர் பரந்தன்ன வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப – செந்நிறம் ஊட்டிய பஞ்சியின் பிதிர்கள் பரவினாற்போல் தோன்றும், செந்நிற தம்பலப்பூச்சிகள் குளிர்ந்த நிலத்தை அழகு செய்ய, இனிய ஆகுக தணிந்தே – வெப்பம் தணிந்து இனிமையாக ஆகட்டும் (ஏகாரம் அசைநிலை), இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே – துன்பம் தரும் வழியில் நின்னுடன் செல்வதற்கு (செலற்கே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 284, இடைக்காடனார், முல்லைத் திணைதலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது, அல்லது தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
சிறியிலை நெல்லிக்காய் கண்டன்ன
குறுவிழிக் கண்ண கூரல் அம் குறுமுயல்
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு
குடந்தை அம் செவிய கோள் பவர் ஒடுங்கி
இன்துயில் எழுந்து, துணையொடு போகி,  5
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும்
புன்புலம் தழீஇய பொறை முதல் சிறுகுடித்
தினை கள் உண்ட தெறிகோல் மறவர்,
விசைத்த வில்லர் வேட்டம் போகி,
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும்  10
காமர் புறவினதுவே, காமம்
நம்மினும் தான் தலைமயங்கிய
அம் மா அரிவை உறைவு இன் ஊரே.

பாடல் பின்னணி:  (1) வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது.  (2) வினை முற்றி மீளும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 

பொருளுரை:  காதலால் நம்மை விடவும் மிக்க மயக்கமுற்ற, அழகிய மாமை நிறத்தையுடைய (மாந்தளிர் நிறத்தையுடைய) நம் தலைவி உறையும் இனிய ஊரானது,

சிறிய இலைகளையுடைய நெல்லி மரத்தின் காய்களைக் கண்டாற்போன்ற குறிய கண்களையும் கூரிய மயிரினையுமுடைய அழகிய சிறிய முயல்கள், வளைந்த வரகின் பருத்த கதிரை உண்டு, வளைந்த அழகிய செவியை உடையனவாய் காய்களைக் கொண்ட கொடிகளில் பதுங்கி உறங்கி, அதன்பின் இனிய துயிலிலிருந்து எழுந்து, தம் துணையுடன் போய், அவ்விடத்தில் உள்ள வீட்டு முற்றத்தில் உள்ள சிறு அளவு நிறைந்த நீரைக் கண்டுப் பருகும், முல்லை நில ஊர்கள் சூழ்ந்த மலையின் அடியில் உள்ள சிறிய ஊர்களிடத்தில், தினையால் செய்த கள்ளைப் பருகிய, தெறித்து எய்யப்படும் அம்பினையுடைய மறவர்கள், விரைந்து இழுத்து நாணைப் பொருந்திய வில்லையுடையவர்களாய் வேட்டையாடி, முல்லை நிலத் தோட்டத்தில் மானை அறுத்து உண்ணும், அழகிய காட்டில் உள்ளது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘பேரிசை ஊர்திப் பாகர்ப் பாங்கினும்’ என வரும் விதி கொள்க.  வரகின் வீங்கு பீள் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரகின் பருத்த சூல், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வரகினது பருத்த குருத்து.  முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும் (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முற்றத்திலே சிறிதாக நிறைந்து தெளிந்து நிற்கும் நீரை ஆராய்ந்து கண்டு பருகுதற்கு இடனான, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வீட்டு முற்றத்திலுள்ள சிறிய சால்களிலுள்ள நீரைக் கண்டு பருகும்.   கூரல் அம் குறுமுயல் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மயிரால் உண்டாகிய அழகையுடைய குறுமுயல்கள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கூரிய மயிரினை உடைய குறுமுயல்கள்.   புறநானூறு 321– குடந்தை அம் செவிய.  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – முனைவர் கு.வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லதிகாரம், உரியியல் 57). புல்வாய் – இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய (தொல்காப்பியம், மரபியல் 46).

சொற்பொருள்:  சிறியிலை நெல்லிக்காய் கண்டன்ன குறுவிழிக் கண்ண கூரல் அம் குறுமுயல் – சிறிய இலைகளையுடைய நெல்லி மரத்தின் காய்களைக் கண்டாற்போன்ற குறிய கண்களையும் கூரிய மயிரினையுமுடைய அழகிய சிறிய முயல்கள் (சிறியிலை – சிறிய இலை, தொகுத்தல் விகாரம், குறுமுயல் – பண்புத்தொகை), முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு குடந்தை அம் செவிய கோள் பவர் ஒடுங்கி இன்துயில் எழுந்து துணையொடு போகி – வளைந்த வரகின் பருத்த கதிரை உண்டு வளைந்த அழகிய செவியை உடையனவாய் காய்களைக் கொண்ட கொடிகளில் பதுங்கி உறங்கி இனிய துயிலிலிருந்து எழுந்து துணையுடன் போய், முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும் – வீட்டு முற்றத்தில் உள்ள சிறு அளவு நிறைந்த நீரைக் கண்டுப் பருகும் (முன்றில் – இல்முன்), புன்புலம் தழீஇய பொறை முதல் சிறுகுடி – முல்லை நில ஊர்கள் சூழ்ந்த மலையின் அடியில் உள்ள சிறிய ஊர்களிடத்தில் (தழீஇய – அளபெடை), தினை கள் உண்ட தெறிகோல் மறவர் விசைத்த வில்லர் வேட்டம் போகி – தினையால் செய்த கள்ளைப் பருகிய தெறித்து எய்யப்படும் அம்பினையுடைய மறவர்கள் விரைந்து இழுத்து நாணைப் பொருந்திய வில்லையுடையவர்களாய் வேட்டையாடி (தெறிகோல் – வினைத்தொகை), முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும் – முல்லை நிலத் தோட்டத்தில் மானை அறுத்து உண்ணும், காமர் புறவினதுவே – அழகிய காட்டில் உள்ளது (புறவினதுவே – ஏகாரம் அசைநிலை), காமம் நம்மினும் தான் தலைமயங்கிய அம் மா அரிவை உறைவு இன் ஊரே – காதலால் நம்மை விடவும் மிக்க மயக்கமுற்றஅழகிய மாமை நிறத்தையுடைய (மாந்தளிர் நிறத்தையுடைய) நம் தலைவி உறையும் இனிய ஊர் (ஊரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 285, காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், பாலைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
ஒழியச் சென்மார் செல்ப என்று, நாம்
அழிபடர் உழக்கும் அவல நெஞ்சத்து
எவ்வம் இகந்து சேண் அகல வை எயிற்று
ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர்,
காடு தேர் மடப் பிணை அலறக் கலையின்  5
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய, பயில் வரி
இரும்புலி வேங்கைக் கருந்தோல் அன்ன
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி, 10
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை
ஆடு செவி நோக்கும் அத்தம், பணைத்தோள்
குவளை உண்கண் இவளும் நம்மொடு
வரூஉம் என்றனரே காதலர்,
வாராய் தோழி, முயங்குகம் பலவே.  15.

பாடல் பின்னணி:  உடன்போக்கு உடன்படுவித்த தோழி தலைவிக்குச் சொல்லியது. 

பொருளுரை:  தோழி!  நம் தலைவர் நம்மை விட்டு நீங்கிப் பொருள் ஈட்டச் செல்லுவார் என்று, நாம் மிக்க துன்பத்தால் வருந்தும் ஆற்றாமையுடைய நெஞ்சத்தில் உள்ள துன்பம் தொலை தூரம் நீங்கும்படி,

கூர்மையான பற்களையுடைய, ஊனை விரும்பும் தன் பெண் நாயின் மிக்க பசியைப் போக்கும்பொருட்டுத் தன் கலையைத் தேடும் பெண் மான் கதற, ஓடுகின்ற அக்கலை மானின் தொடையைக் கவ்வி அறுத்த செந்நாயின் ஆண், வெப்பத்தை வெறுத்து மெலியும், வெப்பம் உடையனவாகவும் அடுத்தடுத்து வரிகள் பொருந்திய பெரிய புலியின் கருந்தோல் போன்ற, கற்களை ஆறலை கள்வர்கள் எடுத்து எறிந்ததால் கிழிந்த உடையையும் உலர்ந்த குடையையுமுடைய புதிய வழிப்போக்கர்கள், உயர்ந்த மரத்தில் ஏறி, தாக்கி எடுக்கும் உணவை விரும்பி எழுந்த இனத்தினின்றும் பிரிந்து வந்த பருந்தின் பறக்கும் செவ்வியை நோக்கும் பாலை நில வழியில், மூங்கில் போன்ற தோள்களையும் குவளை மலர்கள் போன்ற மையுண்ட கண்களையுமுடைய இவள் நம்முடன் வருவாள் எனக் கூறினார் அவர்.  

வருவாயாக!  இந் நற்செய்தியைக் கேட்ட நாம் தழுவிக் கொள்வோம் பலமுறை!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகை பட வந்த கிளவி’ என வரும் விதி கொள்க.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3). வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).  பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12,  குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.

சொற்பொருள்:  ஒழியச் சென்மார் செல்ப என்று – நம்மை விட்டு நீங்கிப் பொருள் ஈட்டச் செல்லுவார் என்று, நாம் அழிபடர் உழக்கும் அவல நெஞ்சத்து எவ்வம் இகந்து சேண் அகல – நாம் மிக்க துன்பத்தால் வருந்தும் ஆற்றாமையுடைய நெஞ்சத்தில் உள்ள துன்பம் தொலை தூரம் நீங்க, வை எயிற்று ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர் காடு தேர் மடப் பிணை அலறக் கலையின் ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை – கூர்மையான பற்களையுடைய ஊனை விரும்பும் தன் பெண் நாயின் மிக்க பசியைப் போக்கும்பொருட்டுத் தன் கலையைத் தேடும் பெண் மான் கதற ஓடுகின்ற அக்கலை மானின் தொடையைக் கவ்வி அறுத்த செந்நாயின் ஆண் (உறு – மிக்க, களைஇயர் – அளபெடை), வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய பயில் வரி இரும்புலி வேங்கைக் கருந்தோல் அன்ன – வெப்பத்தை வெறுத்து மெலியும் வெப்பம் உடையனவாகவும் அடுத்தடுத்து வரிகள் பொருந்திய பெரிய புலியின் கருந்தோல் போன்ற, கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி – கற்களை ஆறலை கள்வர்கள் எடுத்து எறிந்ததால் கிழிந்த உடையையும் உலர்ந்த குடையையுமுடைய புதிய வழிப்போக்கர்கள் உயர்ந்த மரத்தில் ஏறி, ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை ஆடு செவி நோக்கும் அத்தம் – தாக்கி எடுக்கும் உணவை விரும்பி எழுந்த இனத்தினின்றும் பிரிந்து வந்த பருந்தின் பறக்கும் செவ்வியை நோக்கும் பாலை நில வழியில் (ஏறு – எறிதல், தாக்குதல், செவி – செவ்வி செவி ஆகியது, செவ்வி – பொழுது, காட்சி), பணைத்தோள் குவளை உண்கண் இவளும் நம்மொடு வரூஉம் என்றனரே காதலர் – மூங்கில் போன்ற தோள்களையும் குவளை மலர்கள் போன்ற மையுண்ட கண்களையுமுடைய இவள் நம்முடன் வருவாள் எனக் கூறினார் நம் தலைவர் (வரூஉம் – அளபெடை, என்றனரே – ஏகாரம் அசைநிலை), வாராய் – வருவாயாக,தோழி – தோழி,  முயங்குகம் பலவே – பலமுறை நாம் தழுவிக் கொள்வோம் (பலவே – ஏகாரம் அசைநிலை)  

அகநானூறு 286, ஓரம்போகியார், மருதத் திணை தோழி தலைவனிடம் சொன்னது
வெள்ளி விழுத்தொடி மென் கருப்பு உலக்கை
வள்ளி நுண் இடை வயின்வயின் நுடங்க,
மீன் சினை அன்ன வெண்மணல் குவைஇக்,
காஞ்சி நீழல் தமர் வளம் பாடி,
ஊர்க் குறுமகளிர் குறுவழி விறந்த  5
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்
தாழ் சினை உறங்கும் தண்துறை ஊர!
விழையா உள்ளம் விழையும் ஆயினும்
என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு,
அறனும் பொருளும் வழாமை நாடி,  10
தற்தகவு உடைமை நோக்கி மற்று அதன்
பின் ஆகும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால்,
அரிய பெரியோர்த் தெரியுங்காலை
நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன  15
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்,
மெய்யாண்டு உளதோ இவ்வுலகத்தானே?

பாடல் பின்னணி:  பொருளீட்டி வரும் பொருட்டுத் தலைவன் பிரியக் கருதினான்.  உரிய காலத்தில் மீண்டு வந்து தலைவியை மணந்து கொள்வேன்.  ‘அதுவரை ஆற்றிடுக’ எனத் தோழியின் கையைத் தொட்டுக் கூறினான்.  அதனைச் சூள்மொழி எனக் கருதிய தோழி அது மிகையானது எனப்பட தலைவனிடம் கூறியது. 

பொருளுரை:  வெள்ளியால் செய்த சிறந்த பூணையுடைய மெல்லிய கரும்பாகிய உலக்கையால், கொடியை ஒத்த தங்கள் நுண்ணிய இடை அங்கும் இங்கும் அசைய, மீனின் முட்டைகள் போன்ற வெள்ளை நிற மணலில் குவித்து காஞ்சி மரத்தின் நிழலில், தங்கள் சுற்றத்தாரின் வளத்தைப் புகழ்ந்து பாடி ஊரிலுள்ள இளைய மகளிர் குற்றும்பொழுது, செறிந்த வரால் மீனைத் தின்ற சிரல் பறவை மருத மரத்தின் தாழ்ந்த கிளைகளில் உறங்கும் குளிர்ந்த துறையையுடைய ஊரனே!

என்றும் எதனையும் விரும்பாத உள்ளம் அதன்பின் மயங்கி விரும்பும் ஆயினும், என்றும் கேட்ட அறிவுரைகளை அங்குசமாகக் கொண்டு உள்ளமாகிய யானையைத் தடுத்து, அங்கு அறத்திலும் பொருளிலும் வழுவாது பொருந்துவதை ஆராய்ந்து அறிந்து, தம் தகுதி உடைமையை உணர்ந்து, அதன் பின் தாம் கருதியதை முடித்தல் தன்மையுடையவை பெரியவர்களின் ஒழுக்கங்கள். 

அதனால் காண்டற்கு அரிய அப்பெரியவர்களின் செயல்களை ஆராயும்பொழுது, நும்மை ஒத்தவர்கள் மாட்டும், இத்தகைய பொய்யுடன் கூடிய மொழிகள் பிறக்குமாயின், இவ்வுலகத்தில் உண்மை எங்கு உளதோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘ஓம்படைக் கிளவிப் பாங்கின்கண்ணும்’ என்னும் விதியால் அமைத்திடுக.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘கூதிர் வேனில் என்று இரு பாசறை’ (தொல்காப்பியம், புறத்திணையியல் 21) என்னுஞ் சூத்திரத்து, ‘கட்டு அமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும்’ என்னும் பகுதிக்கு, இச் செய்யுளில் ‘விழையா உள்ளம் விழையும் ஆயினும் ………. அரிய பெரியோர்த் தெரியுங்காலை’ என்னும் பகுதியை எடுத்துக் காட்டி, இது தொகுத்துக் கூறியது என்றும், ‘பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்த பின் வந்த’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என்னுஞ் சூத்திரத்து, ‘பெரியோர் ஒழுக்கம் பெரிது எனக் கிளந்து பெறு தகை இல்லாப் பிழைப்பினும்’ என்ற பகுதியில் இச் செய்யுளைக் காட்டி, இதனுள் அறன் என்றது, இல்லறத்தை; ‘தற்தகவு உடைமை நோக்கி’ என்றது தன்னால் அவ்வறனும் பொருளும் தகுதிப்பாடு உடையவனவாம் தன்மை நோக்கி என்றவாறாம்; முன்னியது என்றது, புறத்தொழுக்கத்தை; பெரியோர் ஒழுக்கம் அனைய என்றது, பெரியோர் ஒழுக்கம் பெரிய என்றவாறு, என்று உரைத்தது.  இது முன்னர் நிகழ்ந்த பொய்ச்சூள் பற்றி, நும்மனோர் மாட்டும் இன்ன பொய்ச்சூள் பிறக்குமாயின் இவ்வுலகத்து மெய்ச்சூள் இனி இன்றாம்; அதனால் பெரியோரைத் தமது ஒழுக்கத்தைத் தேருங்காலை அரியவாய் இருந்தனவெனத் தலைவனை நோக்கித் தோழி கூறலின், அவனை வழிபாடு தப்பினாளாயிற்று.  உள்ளுறை உவமம் இதற்கு ஏற்குமாறு உணர்க என்றும் கூறினார் நச்சினார்க்கினியர்.  அரிய பெரியோர் (14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காண்டற்கரிய பெரியோர், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அரிய பெரியோர்.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).  கருப்பு உலக்கை (1) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கருப்பு உலக்கையால் – குறுவர் என்றது மருத நிலத்தின் வள மிகுதி கூறியபடி.

சொற்பொருள்:  வெள்ளி விழுத்தொடி மென் கருப்பு உலக்கை – வெள்ளியால் செய்த சிறந்த பூணையுடைய மெல்லிய கரும்பாகிய உலக்கையால் (கருப்பு – கரும்பு என்பதன் வலித்தல் விகாரம்), வள்ளி நுண் இடை வயின்வயின் நுடங்க – கொடியை ஒத்த நுண்ணிய இடை அங்கும் இங்கும் அசைய, மீன் சினை அன்ன வெண்மணல் குவைஇக் காஞ்சி நீழல் – மீனின் முட்டைகள் போன்ற வெள்ளை நிற மணலில் குவித்து காஞ்சி மரத்தின் நிழலில் (குவைஇ – அளபெடை, காஞ்சி மரம் – பூவரச மரம், portia tree, Thespesia populnea, நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்),  தமர் வளம் பாடி ஊர்க் குறுமகளிர் குறுவழி – தம் சுற்றத்தாரின் வளத்தைப் புகழ்ந்து பாடி ஊரிலுள்ள இளைய மகளிர் குற்றும்பொழுது, விறந்த வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின் தாழ் சினை உறங்கும் தண்துறை ஊர – செறிந்த வரால் மீனைத் தின்ற சிரல் பறவை மருத மரத்தின் தாழ்ந்த கிளைகளில் உறங்கும் குளிர்ந்த துறையையுடைய ஊரனே (வராஅல் – அளபெடை, மருத மரம் – Terminalia arjuna),  விழையா உள்ளம் விழையும் ஆயினும் – என்றும் எதனையும் விரும்பாத உள்ளம் மயங்கி விரும்பும் ஆயினும், என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு – என்றும் கேட்ட அறிவுரைகளை அங்குசமாகக் கொண்டு உள்ளமாகிய யானையைத் தடுத்து, ஆங்கு அறனும் பொருளும் வழாமை நாடி – அங்கு அறத்திலும் பொருளிலும் வழுவாது பொருந்துவதை ஆராய்ந்து அறிந்து (அறன் – அறம் என்பதன் போலி), தற்தகவு உடைமை நோக்கி மற்று அதன் பின் – தம் தகுதி உடைமையை உணர்ந்து அதன் பின், ஆகும்மே முன்னியது முடித்தல் அனைய பெரியோர் ஒழுக்கம் – தாம் கருதியதை முடித்தல் தன்மையுடையவை ஆகும் பெரியவர்களின் ஒழுக்கங்கள் (ஆகும்மே – ஆகுமே என்பதன் விரித்தல் விகாரம், செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), அதனால் அரிய பெரியோர்த் தெரியுங்காலை – அதனால் காண்டற்கு அரிய அப்பெரியவர்களின் செயல்களை ஆராயும்பொழுது, நும்மோர் அன்னோர் மாட்டும் – நும்மை ஒத்தவர்கள் மாட்டும், இன்ன பொய்யொடு மிடைந்தவை தோன்றின் – இத்தகைய பொய்யுடன் கூடிய மொழிகள் பிறக்குமாயின், மெய் யாண்டு உளதோ இவ்வுலகத்தானே – இவ்வுலகத்தில் உண்மை எங்கு உளதோ (இவ்வுலகத்தானே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 287, குடவாயில் கீரத்தனார், பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
தொடி அணி முன் கைத் தொகு விரல் குவைஇப்
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக
நோம் கொல்? அளியள் தானே! தூங்கு நிலை
மரை ஏறு சொறிந்த மாத் தாள் கந்தின்
சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர்  5
நாள் பலி மறந்த நரைக்கண் இட்டிகை,
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை
துணைப் புறா இரிக்கும் தூ மழை நனந்தலைக்
கணைக்கால் அம் பிணை ஏறு புறம் நக்க,  10
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த
அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க,
அரம்பு வந்து அலைக்கும் மாலை
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே.

பாடல் பின்னணி:  தலைவன் இடைச்சுரத்தில் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 

பொருளுரை:  அசைகின்ற நிலையையுடைய ஆண் மரை மான்கள் உரசிய பெரிய அடிபொருந்திய தூண்களையுடைய, சுரைக்கொடி படர்ந்த அம்பலத்தில், அழகிய குடிகளை உடைய சிறிய ஊரில், விடியற்காலையில் பலி கொடுத்து வழிபடுவது மறந்துபோன, வெற்றிடமாக உள்ள பலிபீடத்தையும் மதிலையும் மறைத்த, பொரிகளுடைய அடியையுடைய ஆல மரத்தின், ஒன்றாய் தனித்துள்ள நீண்ட விழுதுகளைத் தாக்கும் கோடைக் காற்றானது தம் துணையுடன் இருக்கும் புறாக்களை அங்கிருந்துப் பறந்து போகச் செய்யும், மழை இல்லாத அகன்ற இடத்தில், திரண்ட கால்களையுடைய அழகிய பெண் மானை அதன் கலைமான் முதுகில் நக்க, அசைகின்ற நிலையையுடைய யா மரத்தின் உயர்ந்த கிளைகள் தந்த வரி வரியாக உள்ள நிழலில் தங்கினேம் ஆக நோக்கவும், துன்பம் வந்து வருத்தும் மாலை வேளையில் தொலையாத இந்த நீண்ட வழியில் யாம் வருந்துகின்றோம்.

வளையல்கள் அணிந்த முன்கையில் பொருந்தியுள்ள விரல்களைக் குவித்து விரதம் கொண்ட நெஞ்சுடன் பகல் நேரமே தனக்குத் துணையாக இருக்க வருந்துவாளோ நம் தலைவி? அவள் இரங்கத்தக்கவள்!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).

சொற்பொருள்:  தொடி அணி முன் கைத் தொகு விரல் குவைஇப் படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக நோம் கொல் – வளையல்கள் அணிந்த முன்கையில் பொருந்தியுள்ள விரல்களைக் குவித்து விரதம் கொண்ட நெஞ்சுடன் பகல் நேரமே தனக்குத் துணையாக இருக்க வருந்துவாளோ (குவைஇ – அளபெடை), அளியள்  – அவள் இரங்கத்தக்கவள், தானே – தான் ஏ அசைநிலைகள், தூங்கு நிலை – அசையும் நிலை, மரை ஏறு சொறிந்த மாத் தாள் கந்தின் சுரை இவர் பொதியில் – ஆண் மரை மான்கள் உரசிய பெரிய அடிபொருந்திய தூண்களையுடைய சுரைக்கொடி படர்ந்த அம்பலத்தில், அம் குடிச் சீறூர் – அழகிய குடிகளை உடைய சிறிய ஊரில், நாள் பலி மறந்த – விடியற்காலையில் பலி கொடுத்து வழிபடுவது மறந்த, நரைக்கண் இட்டிகை புரிசை மூழ்கிய – வெற்றிடமாக உள்ள பலிபீடத்தையும் மதிலையும் மறைத்த, பொரி அரை ஆலத்து – பொரிகளுடைய அடியையுடைய ஆல மரத்தின், ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை துணைப் புறா இரிக்கும் – ஒன்றாய் தனித்துள்ள நீண்ட விழுதுகளைத் தாக்கும் கோடைக்காற்று துணையுடன் இருக்கும் புறாக்களை அங்கிருந்துப் பறந்து போகச் செய்யும், தூ மழை நனந்தலை – மழை இல்லாத அகன்ற இடத்தில், கணைக்கால் அம் பிணை ஏறு புறம் நக்க – திரண்ட கால்களையுடைய அழகிய பெண் மானை அதன் கலைமான் முதுகில் நக்க, ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க – அசைகின்ற நிலையையுடைய யா மரத்தின் உயர்ந்த கிளைகள் தந்த வரி வரியாக உள்ள நிழலில் தங்கினேம் ஆக நோக்கவும் (யாஅத்து – அத்துச் சாரியை, யா மரம் – ஆச்சா மரம், Hardwickia binata tree), அரம்பு வந்து அலைக்கும் – துன்பம் வந்து வருத்தும், மாலை நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே  – மாலை வேளையில் தொலையாத இந்த நீண்ட வழியில் யாம் வருந்துகின்றோம் (யாமே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 288, விற்றூற்று மூதெயினனார், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
சென்மதி! சிறக்க நின் உள்ளம்! நின் மலை
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை
சாரல் வேங்கைப் படுசினைப் புதுப் பூ
முருகு முரண் கொள்ளும் உருவக் கண்ணியை,
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல்,  5
எவ்வம் கூரிய வைகலும் வருவோய்!
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின்
எண்மை செய்தனை ஆகுவை நண்ணிக்
கொடியோர் குறுகும் நெடி இருங்குன்றத்து,
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி  10
அருவரை இழிதரும் வெருவரு படாஅர்க்
கயந்தலை மந்தி உயங்கு பசி களைஇயர்,
பார்ப்பின் தந்தை பழச் சுளை தொடினும்
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து
மகளிர் மாங்காட்டு அற்றே, துகள் அறக்  15
கொந்தோடு உதிர்த்த கதுப்பின்
அம் தீம் கிளவித் தந்தை காப்பே.

பாடல் பின்னணி:  பகற்குறிக்கண் வந்த தலைவனிடம் தோழி இற்செறிப்பு அறிவுறுத்தி வரைவு கடாயது.  

பொருளுரை:  நின் மலையின் சந்தனம் பூசப்பட்ட அழகிய விளக்கமுடைய மார்பினை உடையையாய், மலைச் சரிவில் உள்ள வேங்கை மரத்தின் உயர்ந்த (மிக்க) கிளைகளில் உள்ள புதிய பூக்களால் தொடுத்த, மணம் பிறவற்றிலிருந்து வேறுபாடும் கண்ணியை அணிந்தவனாய், தீயால் காட்டினை எரித்து உருவாக்கிய கொல்லையில் உள்ள, கதிர்கள் முதிர்ந்து வளைந்த தினைப்புனத்திற்கு, உன் துன்பத்தைக் கூறுவதற்கு நாள்தோறும் வருபவனே!

கனிகள் முதிர்ந்த பக்க மலையில் எம் தனிமையைக் காண்பதால் எம்மை எளிமை உடையவர்களாக நீ எண்ணுகின்றாய்.  கொடியவர்கள் வந்து நெருங்கும் உயர்ந்த பெரிய மலையின் குறுகிய வழியில் ஒலிக்கும் ஒளிவிட்டு விளங்கும் அருவிகள், ஏறுவதற்கு அரிய மலையிலிருந்து வீழும், அச்சம்தரும் சிறு தூறுகளில் இருக்கின்ற மெல்லிய தலையையுடைய பெண் குரங்கின் வருத்தும் பசையை நீக்கும்பொருட்டு அதன் குட்டியின் தந்தையாகிய கடுவன் (ஆண் குரங்கு) பலாப்பழத்தின் சுளையைத் தோண்டினாலும் மிக்க துன்பம் வந்து வருத்தும், நடுங்கச் செய்யும் பக்க மலையில், சூரரமகளிர் வாழும் மாங்காடு போன்றது, குற்றமில்லாத பூங்கொத்துக்களை உதிர்த்து அணிந்த கூந்தலையும் அழகிய இனிய சொற்களையுமுடைய இவளுடை தந்தையில் காவல்.  அவளை இப்பகற்குறிக்கு அழைத்து வர என்னால் இயலவில்லை.  ஆதலால் நீ நின் ஊர்க்குத் திரும்பிச் செல்லுவாயாக.  சிறக்கட்டும் நின் உள்ளம்!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  கூறிய (6) – இச் சொல் ச.வே. சுப்பிரமணியன், புலியூர்க்கேசிகன் ஆகிய அறிஞர்களின் உரையில் ‘கூரிய’ என உள்ளது.  எவ்வம் கூரிய – ‘மிக்க துன்பத்துடன்’ என்ற பொருளில் வந்துள்ளது.  வரலாறு –மாங்காடு.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  சென்மதி – நீ செல்லுவாயாக, சிறக்க நின் உள்ளம் – சிறக்கட்டும் நின் உள்ளம் (சிறக்க – வியங்கோள் வினைமுற்று), நின் மலை ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை – நின் மலையின் சந்தனம் பூசப்பட்ட அழகிய விளக்கமுடைய மார்பினை உடையையாய், சாரல் வேங்கைப் படுசினைப் புதுப் பூ முருகு முரண் கொள்ளும் உருவக் கண்ணியை – மலைச் சரிவில் உள்ள வேங்கை மரத்தின் உயர்ந்த (மிக்க) கிளைகளில் உள்ள புதிய பூக்களால் தொடுத்த மணம் பிறவற்றிலிருந்து வேறுபாடும் கண்ணியை அணிந்தவனாய் (வேங்கை மரம் – Pterocarpus marsupium), எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல் எவ்வம் கூறிய வைகலும் வருவோய் – தீயால் காட்டினை எரித்து உருவாக்கிய கொல்லையில் உள்ள கதிர்கள் முதிர்ந்து வளைந்த தினைப்புனத்திற்கு உன் துன்பத்தைக் கூறுவதற்கு நாள்தோறும் வருபவனே, கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின் எண்மை செய்தனை ஆகுவை – கனிகள் முதிர்ந்த பக்க மலையில் எம் தனிமையைக் காண்பதால் எம்மை எளிமை உடையவர்களாக நீ எண்ணுகின்றாய், நண்ணிக் கொடியோர் குறுகும் நெடி இருங்குன்றத்து இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி அருவரை இழிதரும் – கொடியவர்கள் வந்து நெருங்கும் உயர்ந்த பெரிய மலையின் குறுகிய வழியில் ஒலிக்கும் ஒளிவிட்டு விளங்கும் அருவிகள் ஏறுவதற்கு அரிய மலையிலிருந்து வீழும் (நெடி – நெடிய என்பதன் விகாரம்), வெருவரு படாஅர்க் கயந்தலை மந்தி உயங்கு பசி களைஇயர் பார்ப்பின் தந்தை பழச் சுளை தொடினும் – அச்சம்தரும் சிறு தூறுகளில் இருக்கின்ற மெல்லிய தலையையுடைய பெண் குரங்கின் வருத்தும் பசையை நீக்கும்பொருட்டு அதன் குட்டியின் தந்தையாகிய கடுவன் (ஆண் குரங்கு) பலாப்பழத்தின் சுளையைத் தோண்டினாலும் (படாஅர் – அளபெடை, களைஇயர் – அளபெடை), நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து – மிக்க துன்பம் வந்து வருத்தும் நடுங்கச் செய்யும் பக்க மலையில், மகளிர் மாங்காட்டு அற்றே – சூரரமகளிர் வாழும் மாங்காடு போன்றது, துகள் அறக் கொந்தோடு உதிர்த்த கதுப்பின் அம் தீம் கிளவித் தந்தை காப்பே – குற்றமில்லாத பூங்கொத்துக்களை உதிர்த்து அணிந்த கூந்தலையும் அழகிய இனிய சொற்களையுமுடைய இவளுடை தந்தையில் காவல் (கொந்தோடு – கொந்துகளை, வேற்றுமை மயக்கம், அம் தீம் கிளவி – அன்மொழித்தொகை, காப்பே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 289, எயினந்தை மகன் இளங்கீரனார், பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர்
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்
நெடுநிலை நடுகல் நாள் பலிக் கூட்டும்
சுரனிடை விலங்கிய மரன் ஓங்கு இயவின்,
வந்து வினை வலித்த நம்வயின் என்றும்  5
உள்ளமொடு வருந்தல் ஆனாது,
நெகிழா மென்பிணி வீங்கிய கை சிறிது
அவிழினும் உயவும் ஆய் மடத் தகுவி,
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த
திண்சுவர் நோக்கி நினைந்து கண் பனி,  10
நெகிழ் நூல் முத்தின் முகிழ் முலைத் தெறிப்ப,
மை அற விரிந்த படை அமை சேக்கை
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள்
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி, 15
நல்ல கூறு என நடுங்கிப்,
புல்லென் மாலையொடு பொரும் கொல் தானே.

பாடல் பின்னணி:  பொருள் தேடும் பொருட்டுப் பிரிந்து செல்லும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  

பொருளுரை:  என் நெஞ்சே! ஆறலை கள்வர்களின் வில்லில் தொடுத்த அம்பினால் வீழ்ந்து இறந்த புதிய வழிப்போக்கர்களின் உடலை மூடிய, உயர்ந்த கற்குவியலில் படர்ந்த நெருங்கிய கொடியாகிய காட்டு மல்லிகையின் மலர்கள், உயர்ந்த நிலையையுடைய, போரின்கண் வீழ்ந்த மறவர்களின் பெயரும் செயலும் பொறிக்கப்பட்ட நடுகல்லின் காலைப் பலிக்குச் சேர்க்கப்படும், பாலை நிலத்தில் குறுக்கிட்டுச் செல்லும் மரங்கள் உயர்ந்த வழியில், வந்து பொருள் ஈட்டும் பணியில் உறுதியாயுள்ள நம்மிடத்தில் எப்பொழுதும் உள்ளத்தால் வருந்துதல் ஒழியாது, நெகிழ்ந்து மென்மையான பிணிப்பு மிக்க நம் கை சிறிது விலகினாலும் வருந்தும், அழகிய மடப்பம் பொருந்திய நம் தலைவி, நாம் தொலைவில் உறையும் தனிமையால் நாள்தோறும் முறையாகக் கோடு இழைத்த திண்ணிய சுவரை நோக்கி நினைந்து, கண்ணீர்த் துளிகள் நூல் அறுபட்டு விழும் முத்துக்களைப் போல் அரும்பிய முலையில் தெறிக்க, குற்றம் இல்லாது அகன்ற படுத்தற்கு அமைந்த படுக்கையில் அழகிய மெல்லிய அன்னத்தின் சிறகால் ஆகிய தலையணையைச் சேர்த்துத் தங்கி, மனக்கலக்கம் கொண்ட வலிமை அழிந்து இருப்பவளாகி, பிளந்த வாயினையுடைய பல்லி ஒலிக்குந்தோறும், கடவுளைத் தொழுது, அப்பல்லியிடம் “நல்லதை நீ கூறுவாயாக” என வேண்டி, மனம் நடுங்கிப் பொலிவற்ற மாலைக்காலத்துடன் மாறுபடுவாளோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  நூல் அறுந்த முத்து வடம் – அகநானூறு 225 – துளை முத்தின் செந்நிலத்து உதிர, அகநானூறு 289 – நெகிழ் நூல் முத்தின், குறுந்தொகை 51 – நூல் அறு முத்தின், குறுந்தொகை 104 – நூல் அறு முத்தின், கலித்தொகை 82 – கண்ணீர் சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன.  சுவரில் கோடிட்டு நாட்கணக்குப் பார்த்தல் – குறுந்தொகை 358 – ஆய் கோடு இட்டுச் சுவர்வாய் பற்றும், அகநானூறு 61 – நாள் இழை நெடுஞ்சுவர் நோக்கி நோய் உழந்து, அகநானூறு 289 – நாள் முறை இழைத்த திண்சுவர் நோக்கி, பதிற்றுப்பத்து 68 – ஓவு உறழ் நெடும் சுவர் நாள் பல எழுதிச் செவ்விரல் சிவந்த.  பல்லி நிமித்தம் – அகநானூறு 9, 88, 151, 289, 351, 387, குறுந்தொகை 16, 140, நற்றிணை 98, 169, 246, 333, கலித்தொகை 11.  பெண்கள் நல்ல நிமித்தத்திற்காக காத்திருத்தல் – நற்றிணை 40, முல்லைப்பாட்டு 11.  நெகிழா – நெகிழ்ந்து (தளர்ந்து) என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12,  குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.

சொற்பொருள்:  சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர் உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல் – வில்லில் தொடுத்த அம்பினால் வீழ்ந்து இறந்த புதிய வழிப்போக்கர்களின் உடலை மூடிய உயர்ந்த கற்குவியலில் படர்ந்த நெருங்கிய கொடியாகிய காட்டு மல்லிகையின் மலர்கள் (பதுக்கு – பதுக்கை), நெடுநிலை நடுகல் நாள் பலிக் கூட்டும் – உயர்ந்த நிலையையுடைய நடுகல்லின் காலைப் பலிக்குச் சேர்க்கப்படும், சுரன் இடை விலங்கிய மரன் ஓங்கு இயவின் – பாலை நிலத்தில் குறுக்கிட்டுச் செல்லும் மரங்கள் உயர்ந்த வழியில் (மரன் – மரம் என்பதன் போலி), வந்து வினை வலித்த நம்வயின் என்றும் உள்ளமொடு வருந்தல் ஆனாது – வந்து பொருள் ஈட்டும் பணியில் உறுதியாயுள்ள நம்மிடத்தில் எப்பொழுதும் உள்ளத்தால் வருந்துதல் ஒழியாது, நெகிழா மென்பிணி வீங்கிய கை சிறிது அவிழினும் உயவும்  – நெகிழ்ந்து மென்மையான பிணிப்பு மிக்க நம் கை சிறிது விலகினாலும் வருந்தும், ஆய் மடத் தகுவி – அழகிய மடப்பம் பொருந்திய நம் தலைவி, சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த திண்சுவர் நோக்கி நினைந்து – நாம் தொலைவில் உறையும் தனிமையால் நாள்தோறும் முறையாகக் கோடு இழைத்த திண்ணிய சுவரை நோக்கி நினைந்து, கண் பனி நெகிழ் நூல் முத்தின் முகிழ் முலைத் தெறிப்ப – கண்ணீர்த் துளிகள் நூல் அறுபட்டு விழும் முத்துக்களைப் போல் அரும்பிய முலையில் தெறிக்க (முத்தின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), மை அற விரிந்த படை அமை சேக்கை ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ – குற்றம் இல்லாது அகன்ற படுத்தற்கு அமைந்த படுக்கையில் அழகிய மெல்லிய அன்னத்தின் சிறகால் ஆகிய தலையணையைச் சேர்த்துத் தங்கி (அசைஇ – அளபெடை), மையல் கொண்ட மதன் அழி இருக்கையள் – மனக்கலக்கம் கொண்ட வலிமை அழிந்து இருப்பவளாகி, பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி நல்ல கூறு என நடுங்கிப் புல்லென் மாலையொடு பொரும் கொல் தானே – பிளந்த வாயினையுடைய பல்லி ஒலிக்குந்தோறும் கடவுளைத் தொழுது நல்லதை நீ கூறுவாயாக என்று மனம் நடுங்கிப் பொலிவற்ற மாலைக்காலத்துடன் மாறுபடுவாளோ (கொல் ஐயப்பொருட்டு வந்தது, தானே – தான், ஏகாரம் அசைநிலைகள்)

அகநானூறு 290, நக்கீரர், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
குடுமிக் கொக்கின் பைங்கால் பேடை,
இருஞ்சேற்று அள்ளல் நாள் புலம் போகிய
கொழு மீன் வல்சிப் புன்தலைச் சிறாஅர்,
நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென,
அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது,  5
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென
அம் கண் பெண்ணை அன்புற நரலும்
சிறு பல் தொல் குடிப் பெருநீர்ச் சேர்ப்பன்,
கழி சேர் புன்னை அழி பூங்கானல்
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம்  10
மணவா முன்னும் எவனோ தோழி,
வெண்கோட்டு யானை விறல் போர்க் குட்டுவன்
தென் திரைப் பரப்பின் தொண்டி முன்துறைச்,
சுரும்பு உண மலர்ந்த பெருந்தண் நெய்தல்
மணி ஏர் மாண் நலம் ஒரீஇப்,  15
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே?

பாடல் பின்னணி:  இரவுக்குறிக்கண் தலைவன் சிறைப்புறமாகத், தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி கூறியது. 

பொருளுரை:  தோழி!  கரிய சேற்றினை உடைய நிலத்தில் காலையில் மீன் வேட்டைக்குச் சென்ற, கொழுத்த மீனை உணவாகக் கொண்ட, புல்லிய தலையையுடைய சிறுவர்களின் நுண்ணிய கயிற்றால் பின்னிய அழகிய வலையில் தன் சேவல் அகப்பட்டதால், சூட்டினை உடைய அக்கொக்கின் பசிய கால்களையுடைய பெடையானது, தான் தனித்துத் தங்கியிருக்கும் பொழுதில் மெல்லும் இரையை உண்ணாது, துன்புறும் தன் குஞ்சினைத் தழுவி, ஒய்யென அம் கண் பெண்ணை அன்புற நரலும் – அழகிய இடத்தில் இருக்கின்ற பனைமரத்தின்கண் இருந்து அன்பு தோன்ற விரைந்து ஒலிக்கும், சிறிய பல பழைய குடிகளைக் கொண்ட கடற்கரையின் தலைவன்,

உப்பங்கழியின் அருகில் உள்ள புன்னை மரங்களின் மிக்க மலர்கள் உடைய சோலையில், காதல் நீங்காத நெஞ்சுடன் தனியனாக வந்து நம்முடன் கூடுவதற்கு முன்னும், வெள்ளை மருப்புகளை (தந்தங்களை) உடைய யானைகளையும் போர் வெற்றியையும் உடையவனாகிய குட்டுவன் என்னும் அரசனின் தொண்டியில் உள்ள துறைமுகத்தில், வண்டுகள் தேன் உண்ணும்படி மலர்ந்த பெரிய குளிர்ந்த நெய்தல் பூவின், நீலமணியை ஒத்த மாண்புற்ற அழகைக் கைவிட்டு, பொன் போலும் நிறத்தைக் கொண்ட என் கண்கள்.  இது என்னவோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 20) என வரும் நூற்பாவின்கண் ‘பொழுதும் ஆறும் புரைவது அன்மையின் அழிவு தலைவந்த சிந்தைக்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  வரலாறு – குட்டுவன், தொண்டி.  மணவா – பொருந்துவதற்கு (கூடுவதற்கு, கலத்தற்கு) என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  ஒப்புமை – அகநானூறு 290 – தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம் மணவா முன்னும், நற்றிணை 31 – உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே, குறுந்தொகை 357 – வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே.  நம் மணவா (10) – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள் தலைவி.

சொற்பொருள்:  குடுமிக் கொக்கின் பைங்கால் பேடை – சூட்டினை உடைய கொக்கின் பசிய கால்களையுடைய பேடை (பைங்கால் – பண்புத்தொகை), இருஞ்சேற்று அள்ளல் நாள் புலம் போகிய – கரிய சேற்றினை உடைய நிலத்தில் காலையில் மீன் வேட்டைக்குச் சென்ற, கொழு மீன் வல்சி – கொழுத்த மீனை உணவாகக் கொண்ட, புன்தலைச் சிறாஅர் நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென – புல்லிய தலையையுடைய சிறுவர்களின் நுண்ணிய கயிற்றால் பின்னிய அழகிய வலையில் தன் சேவல் அகப்பட்டதால் (சிறாஅர் – அளபெடை), அல்கு உறு பொழுதின் மெல்கு இரை மிசையாது பைதல் பிள்ளை தழீஇ – தனித்தத் தங்கியிருக்கும் பொழுதில் மெல்லும் இரையை உண்ணாது துன்புறும் தன் குஞ்சினைத் தழுவி (தழீஇ – அளபெடை), ஒய்யென அம் கண் பெண்ணை அன்புற நரலும் – அழகிய இடத்தில் இருக்கின்ற பனைமரத்தின்கண் இருந்து அன்பு தோன்ற விரைந்து ஒலிக்கும் (ஒய்யென – விரைவுக்குறிப்பு), சிறு பல் தொல் குடிப் பெருநீர்ச் சேர்ப்பன் – சிறிய பல பழைய குடிகளைக் கொண்ட கடற்கரையின் தலைவன், கழி சேர் புன்னை அழி பூங்கானல் தணவா நெஞ்சமொடு தமியன் வந்து நம் மணவா முன்னும் – உப்பங்கழியின் அருகில் உள்ள புன்னை மரங்களின் மிக்க மலர்கள் உடைய சோலையில் காதல் நீங்காத நெஞ்சுடன் தனியனாக வந்து நம்முடன் கூடுவதற்கு முன்னும் (புன்னை மரம் – Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree), எவனோ – இது என்னவோ (ஓகாரம் அசைநிலை), தோழி – தோழி, வெண்கோட்டு யானை விறல் போர்க் குட்டுவன் தென் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை – வெள்ளை மருப்புகளை (தந்தங்களை) உடைய யானைகளையும் போர் வெற்றியையும் உடையவனாகிய குட்டுவன் என்னும் அரசனின் தொண்டியில் உள்ள துறைமுகத்தில், சுரும்பு உண மலர்ந்த பெருந்தண் நெய்தல் – வண்டுகள் தேன் உண்ணும்படி மலர்ந்த பெரிய குளிர்ந்த நெய்தல் பூவின், மணி ஏர் மாண் நலம் ஒரீஇ – நீலமணியை ஒத்த மாண்புற்ற அழகைக் கைவிட்டு (ஏர் – உவம உருபு, ஒரீஇ – அளபெடை), பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே – பொன் போலும் நிறத்தைக் கொண்ட என் கண்கள் (கண்ணே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 291, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வானம் பெயல் வளம் கரப்பக் கானம்
உலறி இலை இலவாகப் பல உடன்
ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்பக்,
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப்
பெரு வரை நிவந்த மருங்கில் கொடுவரிப்  5
புலியொடு பொருது சினஞ் சிவந்து வலியோடு
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப் பரல்,
சிறு பல் மின்மினி கடுப்ப எவ்வாயும்
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை
எருவை இருஞ்சிறை இரீஇய விரி இணர்த்  10
தாது உண் தும்பி முரல் இசை கடுப்பப்,
பரியினது உயிர்க்கும் அம்பினர் வெருவர
உவலை சூடிய தலையர், கவலை
ஆர்த்து உடன் அரும் பொருள் வவ்வலின், யாவதும்
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதரச்  15
சிறி இலை நெல்லித் தீம்சுவைத் திரள் காய்
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி,
அறு மருப்பு ஒழித்த தலைய தோல் பொதி
மறு மருப்பு இளங்கோடு அதிரக் கூஉம்  20
சுடர் தெற வருந்திய அருஞ்சுரம் இறந்து, ஆங்கு
உள்ளினை வாழிய நெஞ்சே போது எனப்
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல்,
நல் எழில் மழைக் கண் நம் காதலி,
மெல் இறைப் பணைத் தோள் விளங்கும் மாண் கவினே.  25

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைச்சுரத்தில் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 

பொருளுரை:  என் நெஞ்சே!  நீ நீடு வாழ்வாயாக!  நறுமண மலர் போன்று இடமெல்லாம் மணம் கமழ்கின்ற கரிய அடர்ந்த கூந்தலையும், அழகிய குளிர்ந்த கண்களையுமுடைய நம் காதலியின் மெல்லிய முன்கையை உடைய மூங்கில் போன்ற தோள்களின் விளங்கும் மாண்புடைய அழகினை,

முகில்கள் மழை வளத்தை வழங்காமல் மறைந்ததால் காடுகள் காய்ந்து மரங்களும் செடிகளும் கொடிகளும் இலைகள் இல்லாது ஆகவும், பல உடன் ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப – பலவும் ஒன்று சேர்ந்த ஏறுகள் உடைய ஆனிரைக் கூட்டங்களைப் பசி வருத்தவும், குளங்களும் நீர் இல்லாது வற்றிய கோடைக் காலத்தில், வளம் அழிந்த பெரிய மலையின் உயர்ந்த பக்கத்தில் வளைந்த வரிகளையுடைய புலியுடன் போரிட்டுச் சினம் மிகுந்து பெரும் வலிமையுடைய களிற்று யானை நடந்து சென்ற, பருத்த பரற்கற்கள் சிறிய பலவாகிய மின்மினிப் பூச்சிகளைப் போல் எவ்விடத்திலும் நிறைந்து ஒளிரும், செல்லத் தொலையாத நீண்ட இடத்தில்,

பெரிய சிறகையுடைய பருந்துகள் அஞ்சி நீங்கும்படி, விரிந்த பூங்கொத்துக்களில் தாதினை உண்ணும் வண்டுகள் ஒலிக்கும் இசை போல் ஒலித்து விரைந்து செல்லும் அம்பினை உடையவர்களாகிய, காண்பவர்களுக்கு அச்சம் தரும் தழையால் தொடுத்த கண்ணியை அணிந்த ஆறலை கள்வர்கள், பிரிவுகளையுடைய வழிகளில் ஆரவாரித்து வழிப்போக்கர்கள் கொண்டு வரும் அரிய பொருட்களைக் கவர்ந்து கொள்வதால், வணிகர்கள் சிறிதும் செல்லுதல் இல்லாத உயர்ந்த மலையுச்சியை அடுத்த வழிகளில், சிறிய இலைகளையுடைய நெல்லி மரத்தின் இனிய சுவையையுடைய திரண்ட காய்கள் உதிர்ந்து பரவிக் கிடக்கும் காட்டில், தவிர்தல் இல்லாது புள்ளிகளையுடைய அழகிய பெண்மான் உண்ண நினைத்து, அற்று உதிர்ந்த கொம்பினை ஒழித்த தலையில் தோலால் மூடப்பட்ட மீண்டும் முளைக்கின்ற இளம் கொம்புகள் அதிரும்படி கூவி அழைக்கும், ஞாயிறு சுடுவதால் உயிர்கள் வருத்தமுற்ற கடத்தற்கு அரிய பாலை நிலத்தைக் கடந்து வந்து, நீ நினைத்தாய்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வரைவின் கண்ணும்’ என வரும் விதி கொள்க.  எருவை இருஞ்சிறை இரீஇய விரி இணர்த் தாது உண் தும்பி முரல் இசை கடுப்பப் பரியினது உயிர்க்கும் அம்பினர் (10–12) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பெரிய சிறகினையுடைய பருந்து அஞ்சி ஓட, விரிந்த பூங்கொத்துக்களில் பூந்துகளை உண்ணும் வண்டுகள் ஒலிக்கும் இசையைப் போல விரைந்து செல்வதாய் ஒலிக்கும் அம்பினையுடையோரும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கழுகினது பெரிய சிறகை வைத்துக் கட்டப்பெற்றதும் விரிந்த பூங்கொத்தின்கண் தாது உண்கின்ற தும்பிகள் முரலுகின்ற இசையை ஒப்பப் பாயுங்கால் ஒலிக்கும் அம்பினை உடையவரும்.  வறந்த – வறம் என்னும் சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சம்.  பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12,  குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.

சொற்பொருள்:  வானம் பெயல் வளம் கரப்பக் கானம் உலறி இலை இலவாக – முகில்கள் மழை வளத்தை வழங்காமல் மறைந்ததால் காடுகள் காய்ந்து இலைகள் இல்லாது ஆகவும், பல உடன் ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப – பலவும் ஒன்று சேர்ந்த ஏறுகள் உடைய ஆனிரைக் கூட்டங்களைப் பசி வருத்தவும் (ஆயத்து – அத்துச் சாரியை), கயன் அற வறந்த கோடையொடு – குளங்களும் நீர் இல்லாது வற்றிய கோடைக் காலத்தில், நயன் அறப் பெரு வரை நிவந்த மருங்கில் கொடுவரிப் புலியொடு பொருது சினஞ் சிவந்து வலியோடு உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில் – வளம் அழிந்த பெரிய மலையின் உயர்ந்த பக்கத்தில் வளைந்த வரிகளையுடைய புலியுடன் போரிட்டுச் சினம் மிகுந்து பெரும் வலிமையுடைய களிற்று யானை நடந்து சென்ற இடத்தில், பரூஉப் பரல் சிறு பல் மின்மினி கடுப்ப எவ்வாயும் நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை – பருத்த பரற்கற்கள் சிறிய பலவாகிய மின்மினிப் பூச்சிகளைப் போல் எவ்விடத்திலும் நிறைந்து ஒளிரும் செல்லத் தொலையாத நீண்ட இடத்தில் (பரூஉ – அளபெடை), எருவை இருஞ்சிறை இரீஇய – பெரிய சிறகையுடைய பருந்துகள் அஞ்சி நீங்கும்படி (இரீஇய – அளபெடை), விரி இணர்த் தாது உண் தும்பி முரல் இசை கடுப்பப் பரியினது உயிர்க்கும் அம்பினர் – விரிந்த பூங்கொத்துக்களில் தாதினை உண்ணும் வண்டுகள் ஒலிக்கும் இசை போல் ஒலித்து விரைந்து செல்லும் அம்பினை உடையவர்கள் (கடுப்ப – உவம உருபு), வெருவர உவலை சூடிய தலையர் – காண்பவர்களுக்கு அச்சம் தரும் தழையால் தொடுத்த கண்ணியை அணிந்தவர்கள், கவலை ஆர்த்து உடன் அரும் பொருள் வவ்வலின் – பிரிவுகளையுடைய வழிகளில் ஆரவாரித்து அவர்கள் கொண்டு வரும் அரிய பொருட்களைக் கவர்ந்து கொள்வதால், யாவதும் சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதர – வணிகர்கள் சிறிதும் வழியில் செல்லுதல் இல்லாத உயர்ந்த மலையுச்சியை அடுத்த வழிகளில், சிறி இலை நெல்லித் தீம்சுவைத் திரள் காய் உதிர்வன தாஅம் அத்தம் – சிறிய இலைகளையுடைய நெல்லி மரத்தின் இனிய சுவையையுடைய திரண்ட காய்கள் உதிர்ந்து பரவிக் கிடக்கும் காட்டில் (தாஅம் – அளபெடை), தவிர்வு இன்று புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி – தவிர்தல் இல்லாது புள்ளிகளையுடைய அழகிய பெண்மான் உண்ண நினைத்து, அறு மருப்பு ஒழித்த தலைய தோல் பொதி மறு மருப்பு இளங்கோடு அதிரக் கூஉம் – அற்று உதிர்ந்த கொம்பினை ஒழித்த தலையில் தோலால் மூடப்பட்ட மீண்டும் முளைக்கின்ற இளம் கொம்புகள் அதிரும்படி கூவி அழைக்கும் (கூஉம் – அளபெடை), சுடர் தெற வருந்திய அருஞ்சுரம் இறந்து – ஞாயிறு சுடுவதால் உயிர்கள் வருத்தமுற்ற கடத்தற்கு அரிய பாலை நிலத்தைக் கடந்து, ஆங்கு – அசைநிலை, உள்ளினை – நினைத்தாய், வாழிய – நீ நீடு வாழ்வாயாக, நெஞ்சே – நெஞ்சே, போது எனப் புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல் நல் எழில் மழைக் கண் – மலர் போன்று இடமெல்லாம் நறுமணம் கமழ்கின்ற கரிய அடர்ந்த கூந்தலையும் அழகிய குளிர்ந்த கண்களையுமுடைய, நம் காதலி மெல் இறைப் பணைத் தோள் விளங்கும் மாண் கவினே – நம் காதலியின் மெல்லிய முன்கையை உடைய மூங்கில் போன்ற தோள்களின் விளங்கும் மாண்புடைய அழகு (கவினே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 292, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கூறாய் செய்வது தோழி!  வேறு உணர்ந்து,
அன்னையும் பொருள் உகுத்து அலமரும், மென் முறிச்
சிறு குளகு அருந்து தாய் முலை பெறாஅ
மறி கொலைப்படுத்தல் வேண்டி, வெறிபுரி
ஏதில் வேலன் கோதை துயல்வரத்  5
தூங்கும் ஆயின், அதூஉம் நாணுவல்,
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல், புலம் படர்ந்து
இரவின் மேயல் மரூஉம் யானைக்
கால்வல் இயக்கம் ஒற்றி, நடுநாள்
வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன்  10
கடுவிசைக் கவணின் எறிந்த சிறு கல்,
உடுஉறு கணையின் போகிச், சாரல்
வேங்கை விரி இணர் சிதறித் தேன் சிதையூஉ,
பலவின் பழத்துள் தங்கும்
மலைகெழு நாடன் மணவாக்காலே.  15

பாடல் பின்னணி:  தாய் வேலனை அழைத்து வெறியாட்டம் நிகழ்த்த இருப்பதையும், அவன் இரவில் வரும் வழியின் ஏதம் குறித்துத் தான் வருந்துவதனையும் அவனுக்கு எடுத்துக் கூறும்பொருட்டு, அவன் கேட்பத் தோழியிடம் கூறியது.

பொருளுரை:  என்ன செய்வது என்று கூறுவாயாக என் தோழி! என் நிலைமையைத் தவறாக புரிந்துக் கொண்ட அன்னையும் கட்டுவிச்சி வேலன் முதலியோருக்கு வீணே பொருளைக் கொடுத்து, மனம் சுழலுகின்றாள். சிறிய இளந்தளிரை உண்ணும், தாய்ப் பாலைப் பெறாத ஆட்டுக்குட்டியைக் கொலை செய்வதற்கு விரும்பி, வெறியாட்டத்தை விரும்புகின்ற தொடர்பில்லாத வேலன் தன்னுடைய மலர்மாலை அசையும்படி வெறியாடுவான் ஆயின், அத்தகையை செயலுக்கு நான் நாணுகின்றேன்.

என்னுடைய ஒளியுடைய வளையல்கள் நெகிழும்படியான துன்பத்தைக் கண்டு, தன்னுடைய தினைப் புனத்திற்கு இரவில் மேய வரும் யானையின் காலின் நடையை அறிந்து, நடு இரவில் மலைமேல் உள்ள பரணில் இருக்கும் வலிய கைகளையுடைய கானவன் விரைந்து செலுத்தும் கவணில் வைத்து செலுத்தப்பட்ட சிறிய கல் ஒன்று இறகுடைய அம்பைப் போலச் சென்று, மலைச் சரிவில் உள்ள வேங்கை மரத்தின் மலர் கொத்துக்களைச் சிதறச் செய்து அதிலுள்ள தேன் கூட்டைச் சிதைத்து, அருகில் உள்ள பலாவினது பழத்தில் தங்கும், மலை பொருந்திய நாட்டின் தலைவன் என்னை மணக்காத வேளையில்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 20) என வரும் நூற்பாவின்கண் ‘வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும்’ என வரும் விதி கொள்க.  உடு (12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நாணிற் பொருத்தும் அம்பின் அடியுமாம்.  ஒப்புமை – கலித்தொகை 41 – பிடியொடு மேயும் புன்செய் யானை அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன் நெடு வரை ஆசினிப் பணவை ஏறிக் கடு விசை கவணையில் கல் கை விடுதலின் இறு வரை வேங்கையின் ஒள் வீ சிதறி ஆசினி மெல் பழம் அளிந்தவை உதிராத் தேன் செய் இறாஅல் துளைபடப் போகி நறு வடி மாவின் பை துணர் உழக்கிக் குலை உடை வாழைக் கொழு மடல் கிழியாப் பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனைப் பாடுகம் வா வாழி தோழி.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார்வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேல் என்றார்.  செல்லல் – செல்லல் இன்னல் இன்னாமையே (தொல்காப்பியம், உரியியல் 6).  உள்ளுறை – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கானவன் எறிந்த கல் வேங்கை விரியிணர் சிதறி தேன் சிதையூஉ பலவின் பழத்துள் தங்கும் என்றது, வெறியாடலால் எழும் அலர் தலைவன் குறியிடத்து வருதலைக் கெடுத்து நமது இன்பத்தை அழித்து, நமது உள்ளத்தில் தங்குவதாகும்.

சொற்பொருள்:  கூறாய் செய்வது தோழி – என்ன செய்வது என்று கூறுவாயாக என் தோழி, வேறு உணர்ந்து அன்னையும் பொருள் உகுத்து – என் நிலைமையைத் தவறாக புரிந்துக் கொண்ட அன்னையும் பொருளைக் கொடுத்து, அலமரும் – மனம் சுழலுகின்றாள், மென் முறிச் சிறு குளகு அருந்து – சிறிய இளந்தளிரை உண்ணும் (ஆர்ந்து என்பது அருந்து என வந்தது), தாய் முலை பெறாஅ மறி – தாய்ப் பாலைப் பெறாத ஆட்டுக்குட்டி (பெறாஅ – அளபெடை), கொலைப்படுத்தல் வேண்டி – கொலை செய்வதற்கு விரும்பி, வெறி புரி ஏதில் வேலன் – வெறியாட்டத்தை விரும்புகின்ற தொடர்பில்லாத வேலன், கோதை துயல்வரத் தூங்கும் ஆயின் – தன்னுடைய மாலை அசையும்படி வெறியாடுவான் ஆயின், அதூஉம் நாணுவல் – அத்தகையை செயலுக்கு நான் நாணுகின்றேன் (அதூஉம் – அளபெடை), இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல் – என்னுடைய ஒளியுடைய வளையல்கள் நெகிழும்படியான துன்பம், புலம் படர்ந்து இரவின் மேயல் மரூஉம் யானை – தன்னுடைய தினைப் புனத்திற்கு இரவில் மேய வரும் யானை (மரூஉம் – அளபெடை), கால்வல் இயக்கம் ஒற்றி – காலின் நடையை அறிந்து, நடுநாள் – நடு இரவு, வரையிடைக் கழுதின் – மலைமேல் உள்ள பரணில், வன் கைக் கானவன் – வலிய கைகளையுடைய கானவன், கடுவிசைக் கவணின் எறிந்த – விரைந்து செல்லும் கவணால் செலுத்தப்பட்ட, சிறு கல் – சிறிய கல், உடுஉறு கணையின் போகி – இறகுடைய அம்பைப் போலச் சென்று, சாரல் வேங்கை விரி இணர் சிதறித் தேன் சிதையூஉ – மலைச் சரிவில் உள்ள வேங்கை மரத்தின் மலர் கொத்துக்களைச் சிதறச் செய்து தேன்கூட்டைச் சிதைத்து (சிதையூஉ – அளபெடை, வேங்கை மரம் – Pterocarpus marsupium), உள்ள பலவின் பழத்துள் தங்கும் – அருகில் உள்ள பலாவினது பழத்தில் தங்கும், மலைகெழு நாடன் மணவாக்காலே – மலை பொருந்திய நாட்டின் தலைவன் என்னை மணக்காத வேளையில் மணவாக்காலே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 293, காவன்முல்லைப் பூதனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
இலை ஒழித்து உலறிய புன்தலை உலவை
வலை வலந்தனைய ஆகப் பல உடன்
சிலம்பி சூழ்ந்த புலங்கெடு வைப்பின்,
துகில் ஆய் செய்கைப் பா விரிந்தன்ன
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ்வெங்களரி,  5
குயில் கண் அன்ன குரூஉக் காய் முற்றி,
மணிக் காசு அன்ன மால் நிற இருங்கனி
உகாஅ மென்சினை உதிர்வன கழியும்
வேனில் வெஞ்சுரம் தமியர் தாமே
செல்ப என்ப தோழி! யாமே  10
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த
நெஞ்சு அமர் குழவி போல, நொந்து நொந்து,
இன்னா மொழிதும் என்ப,
என் மயங்கினர் கொல் நம் காதலோரே?

பாடல் பின்னணி:  (1) பொருள்வயின் பிரியக்கருதிய தலைவனின் குறிப்பை அறிந்து, தலைவி தோழிக்குச் சொல்லியது.  (2) – தலைவனின் பிரிவைக் குறிப்பால் அறிந்த தோழி தலைவிக்குக் கூறியது. 

பொருளுரை:  தோழி!  இலைகளை உதிர்த்து வற்றிய பொலிவில்லாத உச்சியையுடைய மரங்களின் சுள்ளிகள் வலைகள் பின்னப்பட்டன போல் தோன்றும்படி, சிலந்தி பலவும் ஒன்று சேர்ந்து நூலால் சுற்றிய நிலம் பாழ்பட்ட இடங்களுடைய, ஆடையை நுணுக்கமாக நெய்யும்பொழுது பா (தறியில் விரிக்கப்பட்ட நூல்) விரிந்தாற்போல் வெயில் விளங்கி அசையும் வெப்பமுடைய காட்டில், குயிலின் கண்கள் போன்ற நிறமுடைய காய்கள் முற்றி, அழகிய பொற்காசுகள் போன்ற பெருமை பொருந்திய நிறத்தை உடைய பெரிய கனிகள் உகா மரத்தின் மெல்லிய கிளைகளிலிருந்து உதிர்ந்து ஒழியும், வேனிலால் வெப்பமுற்ற பாலை நிலத்திற்குத் தனியராக நம் தலைவர் செல்லுவார் என ஊரார் கூறுகின்றனர்.

இரக்கம் இல்லாத இடையர்கள் தாயைப் பிரித்துக் கட்டிய நெஞ்சத்தில் அத் தாயை விரும்பிய கன்று போல, நாம் நொந்து நொந்து இன்னாதவற்றைக் கூறுகின்றோம் எனவும் நம் மேல் பழி தூற்றுகின்றனர்.  அவர் இவ்வாறு மயங்கினது எதனாலோ?    

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – (1) இதற்கு, ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க, (2) இதனை ‘பிறவும் வகைபட என வரும் கிளவி’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என்பதனால் அமைத்துக் கொள்க.  உலவை (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மரங்களின் சுள்ளிகள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை, ச.வே. சுப்பிரமணியன் உரை – வேல மரம்.  என் மயங்கினர் கொல் (14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தூற்றுபவர்கள் இங்ஙனம் கூறுவதற்குக் காரணம் என்னையோ, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நம் தலைவர் இங்ஙனம் மயங்கியது என்னையோ.  நம் காதலோரே (14) – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள்.

சொற்பொருள்:  இலை ஒழித்து உலறிய புன்தலை உலவை வலை வலந்தனைய ஆகப் பல உடன் சிலம்பி சூழ்ந்த புலங்கெடு வைப்பின் – இலைகளை உதிர்த்து வற்றிய பொலிவில்லாத உச்சியையுடைய மரங்களின் சுள்ளிகள் வலைகள் பின்னப்பட்டன போல் தோன்றும்படி சிலந்தி பலவும் ஒன்று சேர்ந்து நூலால் சுற்றிய நிலம் பாழ்பட்ட இடங்களுடைய (உலவை – சுள்ளி, வேல மரம், Acacia planifrons, Umbrella–thorn babul), துகில் ஆய் செய்கைப் பா விரிந்தன்ன வெயில் அவிர்பு நுடங்கும் வெவ் வெங் களரி – ஆடையை நுணுக்கமாக நெய்யும்பொழுது பாவானது விரிந்தாற்போல் வெயில் விளங்கி அசையும் வெப்பமுடைய காட்டில் (பா – தறியில் விரிக்கப்பட்ட நூல்), குயில் கண் அன்ன குரூஉக் காய் முற்றி – குயிலின் கண்கள் போன்ற நிறமுடைய காய்கள் முற்றி, மணிக் காசு அன்ன மால் நிற இருங்கனி உகாஅ மென்சினை உதிர்வன கழியும் – அழகிய பொற்காசுகள் போன்ற பெருமை பொருந்திய நிறத்தை உடைய பெரிய கனிகள் உகா மரத்தின் மெல்லிய கிளைகளிலிருந்து உதிர்ந்து ஒழியும் (உகா மரம் – Toothbrush Tree, Salvadora persica), வேனில் வெஞ்சுரம் தமியர் தாமே செல்ப என்ப – வேனிலால் வெப்பமுற்ற பாலை நிலத்திற்குத் தனியராக அவர் செல்லுவார் என ஊரார் கூறுகின்றனர், தோழி – தோழி, யாமே – நாமே, பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த நெஞ்சு அமர் குழவி போல – இரக்கம் இல்லாத இடையர்கள் தாயைப் பிரித்துக் கட்டிய நெஞ்சத்தில் அத் தாயை விரும்பிய கன்று போல, நொந்து நொந்து இன்னா மொழிதும் என்ப – நாம் நொந்து நொந்து இன்னாதவற்றைக் கூறுகின்றோம் எனவும் நம் மேல் பழி தூற்றுகின்றனர், என் மயங்கினர் கொல் நம் காதலோரே – நம் தலைவர் இவ்வாறு மயங்கினது எதனாலோ (கொல் – அசைநிலை, காதலோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 294, கழார்க்கீரன் எயிற்றியார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கித்
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகையுறப்
புள்ளி நுண் துவலைப் பூவகம் நிறையக்,
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
நீர்வார் கண்ணின் கருவிளை மலரத்,  5
துய்த்தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை
நெய் தோய்ந்தன்ன நீர் நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர,
அவரைப் பைம் பூப் பயில அகல்வயல்
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்சக்,  10
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள்
காய்சின வேந்தன் பாசறை நீடி,
நம் நோய் அறியா அறனிலாளர்
இந்நிலை களைய வருகுவர் கொல், என
ஆனாது எறிதரும் வாடையொடு  15
நோனேன் தோழி, என் தனிமையானே.

பாடல் பின்னணி:  பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி கூறியது.

பொருளுரை:  மிக இருண்ட முகில்கள் வானில் அதிர்ந்து முழங்கி குதிக்கின்ற மழையைப் பெய்து போன பின்னர், புகையை ஒத்த பனியின் நுண்ணிய துளிகளை ஏற்று மலர்கள் நிறைந்து நிற்க, தம் காதலரைப் பிரிந்த செயலற்ற மகளிரின் நீர் வடியும் கண்களைப் போல கருவிளம் பூக்கள் மலர, பஞ்சு போன்ற தலையையுடைய மலர்களையுடையதும் புதர்களில் படர்வதுமான ஈங்கையின் நெய்யில் தோய்த்தாற்போல் உள்ள நீரில் நனைந்த அழகிய தளிர்கள் இரு பிளவாய் உள்ள ஈரலைப் போல ஈரத்துடன் அசைய, அவரையின் அழகிய மலர்கள் மிகுந்திருக்க, அகன்ற வயல்களில் நீண்டு நன்கு காய்த்த நெற்கதிர்கள் கண்ணுக்கு இனிமையாகத் தலை வளைந்திருக்க, வண்டுகள் கிளைகளில் அசைந்திருக்கும் இந்த முன்பனிக்காலத்து நள்ளிரவில், சினம் மிக்க அரசனின் பாசறையின்கண் நீண்ட காலம் இருந்து, நாம் உற்ற துன்ப நோயை அறியாத அறன் இல்லாத தலைவர் நம்முடைய துன்ப நிலைமையைத் தீர்க்க வருவாரா என்று எண்ணி, இடை இல்லாது தொடர்ந்து வீசும் வாடைக் காற்றால், என் தனிமைத் துயரை நான் பொறுக்க இயலாதுள்ளேன் தோழி.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘அவன் அறிவு’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என வரும் நூற்பாவின்கண் ‘ தோழிக்கு உரியவை வடு அறு சிறப்பின் கற்பின் திரியாமை காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘திணை மயக்குறுதலும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 12) என்னுஞ் சூத்திரத்து, இச்செய்யுளைக் காட்டி, இம் மணிமிடை பவளத்து முல்லையுள் முன்பனி வந்தது, நிலமும் கருவும் மயங்கிற்று, என்றார் நச்சினார்க்கினியர்.  வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  மங்குல் மா மழை – மிக இருண்ட முகில்கள், விண் அதிர்பு முழங்கி – வானில் அதிர்ந்து முழங்கி, துள்ளுப் பெயல் கழிந்த பின்றை – குதிக்கின்ற மழையைப் பெய்து போன பின், புகையுறப் புள்ளி நுண் துவலைப் பூவகம் நிறைய – புகையை ஒத்த பனியின் நுண்ணிய துளிகளை ஏற்று மலர்கள் நிறைந்து நிற்க, காதலர்ப் பிரிந்த கையறு மகளிர் – தம் காதலரைப் பிரிந்த செயலற்ற மகளிர், நீர்வார் கண்ணின் கருவிளை மலர – நீர் வடியும் கண்களைப் போல கருவிளம் பூக்கள் மலர (கண்ணின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, கருவிளை – Clitoria ternatea, Mussel shell creeper), துய்த்தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை – பஞ்சு போன்ற தலையையுடைய மலர்களையுடைய புதர்களில் படரும் ஈங்கை (ஈங்கை – Mimosa Pudica), நெய் தோய்ந்தன்ன நீர் நனை அம் தளிர் – நெய்யில் தோய்த்தாற்போல் நீரில் நனைந்த அழகிய தளிர்கள், இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர – இரு பிளவாய் உள்ள ஈரலைப் போல ஈரத்துடன் அசைய (ஈருளின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அவரைப் பைம் பூப் பயில – அவரையின் அழகிய மலர்கள் மிகுந்திருக்க, அகல் வயல் கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச – அகன்ற வயல்களில் நீண்டு நன்கு காய்த்த நெற்கதிர்கள் கண்ணுக்கு இனிமையாகத் தலை வளைந்திருக்க, சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள் – வண்டுகள் கிளைகளில் அசைந்திருக்கும் முன்பனிக்காலத்து நள்ளிரவில், காய்சின வேந்தன் பாசறை நீடி – சினம் மிக்க அரசனின் பாசறையின்கண் நீண்ட காலம் இருந்து, நம் நோய் அறியா அறனிலாளர் இந்நிலை களைய வருகுவர் கொல் – நாம் உற்ற துன்ப நோயை அறியாத அறன் இல்லாத தலைவர் நம்முடைய துன்ப நிலைமையைத் தீர்க்க வருவாரா (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்), என – என்று, ஆனாது எறிதரும் வாடையொடு – இடையறாது வீசும் வாடைக் காற்றால், நோனேன் – என் துயரை நான் பொறுக்க இயலாதுள்ளேன், தோழி – தோழி (விளி, ), என் தனிமையானே – என்னுடைய தனிமையால் (தனிமையானே – ஏகாரம் அசை நிலை)

அகநானூறு 295, மாமூலனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்பக்,
குன்று கோடு அகையக் கடுங்கதிர் தெறுதலின்,
என்றூழ் நீடிய வேய்படு நனந்தலை
நிலவு நிற மருப்பின் பெருங்கை சேர்த்தி,
வேங்கை வென்ற வெருவரு பணைத்தோள்  5
ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பிப்,
பல் மர ஒருசிறைப் பிடியொடு வதியும்
கல்லுடை அதர கானம் நீந்திக்
கடல் நீர் உப்பின் கணஞ்சால் உமணர்
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து  10
அகல் இடம் குழித்த அகல்வாய்க் கூவல்
ஆறு செல் வம்பலர் அசைவிட ஊறும்
புடையல் அம் கழல் கால் புல்லி குன்றத்து,
நடை அருங்கானம் விலங்கி நோன் சிலைத்
தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர்,  15
பிழி ஆர் மகிழ்நர் கலி சிறந்து ஆர்க்கும்
மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும்
பழி தீர் மாண் நலம் தருகுவர் மாதோ,
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும்
அம் கலுழ் கொண்ட செங்கடை மழைக்கண்  20
மணங்கமழ் ஐம்பால் மடந்தை, நின்
அணங்கு நிலைபெற்ற தட மென்தோளே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவியிடம் தோழி சொல்லியது. 

பொருளுரை:  மழைக்காலத்தில் மலரும் பிச்சிப்பூக்களின் குளிர்ந்த இதழ்களைப் போன்ற அழகு ஒழுகும் சிவந்த கடைப்பகுதி உடைய குளிர்ந்த கண்களையும், நறுமணம் கமழும், ஐந்து பகுதியாக உள்ள கூந்தலையுமுடைய மடந்தையே!

நிலம் நீர் இல்லாதாகி, நீண்ட சுனைகள் வறளவும், மலையில் மரக்கிளைகள் எரியவும், ஞாயிற்றின் கடிய கதிர்கள் சுடுவதால், வெப்பம் மிகுந்து மூங்கில்கள் பட்டுப்போன அகன்ற இடத்தில், நிலாவின் வெள்ளை நிறத்தையுடைய கோட்டில் (தந்தத்தில்) தன் பெரிய தும்பிக்கையைச் சேர்த்து புலியை வென்ற அச்சம் தரும் பருத்த தோள்களையுடைய மலை போன்ற யானை வருந்தி, மதம் நீங்கிப் பல மரங்களுடைய ஒரு பக்கத்தில் தன் பெண் யானையொடு வாழும், கற்கள் உடைய வழிகளையுடைய காட்டைக் கடந்து,

கடல் நீரால் விளைந்த உப்பைக் கொண்டுவரும் உப்பு வணிகர் கூட்டம், உப்புப் பொறையுடைய வண்டியை இழுப்பதால் வருந்தும் தங்கள் எருதுகள் இளைப்பாறும்பொருட்டுத் தங்கிக், கற்கள் பொருந்திய நிலத்தை இடித்து அகன்ற இடத்தில் தோண்டிய அகன்ற வாயை உடைய கிணறு, வழியில் செல்லும் புதியவர்களின் தளர்வு நீங்க நீர் ஊறும், ஒலிக்கும் அழகிய கழல் அணிந்த காலையுடைய புல்லி என்பவனின் வேங்கடமலையைச் சார்ந்த, செல்லுவதற்கு அரிய காட்டைக் கடந்து, வலிய வில்லில் தொடுத்த அம்புகளுடன் நெருங்கி வாழும் வடுகர்கள், கள்ளை உண்ட மகிழ்ச்சி உடையவர்களாக ஆரவாரிக்கும், மொழி மாறுபட்ட நாட்டைக் கடந்து சென்றார் ஆயினும்,

நின் நின் அழகு நிலைபெற்ற, பெரிய மெல்லிய தோள்களின் குற்றமற்ற மாண்புடைய நலத்தைத் தருவார்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘தலைவரும் விழுமநிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) ‘நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களை என மொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு என்று இவை எல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் தோழி மேன’ என வரும் விதி கொள்க.  கோடு அகைய (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குவடுகள் பொடிய, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மரக்கிளைகள் எரிய.  வரலாறு –வடுகர், புல்லி.  வடுகர் – ஒளவை துரைசாமி உரை புறநானூறு 278 – தொண்டை நாட்டுத் திருவேங்கடத்திற்கு வடக்கில் உள்ள நாட்டவராதலால் வடுகர் எனப்பட்டனர், பொ. வே. சோமசுந்தரனார் உரை அகநானூறு 213 – தெலுங்கர்.  வடுகர் – அகநானூறு 107, 213, 253, 281, 295, 375, 381, குறுந்தொகை 11, நற்றிணை 212, புறநானூறு 378.நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  துவன்று – துவன்று நிறைவு ஆகும் – (தொல்காப்பியம், உரியியல் 36).  என்றூழ் – கதிரவனின் முதிர்ந்த கதிர்கள், எல் (கதிரவன்) + ஊழ் (முதிர்ச்சி).  முனைவர் கு. வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம்.

சொற்பொருள்:  நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்பக் குன்று கோடு அகையக் கடுங்கதிர் தெறுதலின் – நிலம் நீர் இல்லாதாகி நீண்ட சுனைகள் வறளவும்  மலையில் மரக்கிளைகள் எரியவும் ஞாயிற்றின் கடிய கதிர்கள் சுடுவதால், என்றூழ் நீடிய வேய்படு நனந்தலை – வெப்பம் மிகுந்து மூங்கில்கள் பட்டுப்போன அகன்ற இடத்தில், நிலவு நிற மருப்பின் பெருங்கை சேர்த்தி வேங்கை வென்ற வெருவரு பணைத்தோள் ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பிப் பல் மர ஒருசிறைப் பிடியொடு வதியும் – நிலாவின் வெள்ளை நிறத்தையுடைய கோட்டில் (தந்தத்தில்) தன் பெரிய தும்பிக்கையைச் சேர்த்து புலியை வென்ற அச்சம் தரும் பருத்த தோள்களையுடைய மலை போன்ற யானை வருந்தி மதம் நீங்கிப் பல மரங்களுடைய ஒரு பக்கத்தில் தன் பெண் யானையொடு வாழும், கல்லுடை அதர கானம் நீந்தி – கற்கள் உடைய வழிகளையுடைய காட்டைக் கடந்து, கடல் நீர் உப்பின் கணஞ்சால் உமணர் – கடல் நீரால் விளைந்த உப்பைக் கொண்டுவரும் உப்பு வணிகர் கூட்டம், உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ – வருந்தும் எருதுகள் இளைப்பாறும்பொருட்டுத் தங்கி (அளபெடை), முரம்பு இடித்து அகல் இடம் குழித்த அகல்வாய்க் கூவல் – கற்கள் பொருந்திய நிலத்தை இடித்து அகன்ற இடத்தில் தோண்டிய அகன்ற வாயை உடைய கிணறு, ஆறு செல் வம்பலர் அசைவிட ஊறும் – வழியில் செல்லும் புதியவர்களின் தளர்வு நீங்க நீர் ஊறும், புடையல் அம் கழல் கால் புல்லி குன்றத்து நடை அருங்கானம் விலங்கி – ஒலிக்கும் அழகிய கழல் அணிந்த காலையுடைய புல்லி என்பவனின் வேங்கடமலையைச் சார்ந்த செல்லுவதற்கு அரிய காட்டைக் கடந்து, நோன் சிலைத் தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர் – வலிய வில்லில் தொடுத்த அம்புகளுடன் நெருங்கி வாழும் வடுகர்கள், பிழி ஆர் மகிழ்நர் கலி சிறந்து ஆர்க்கும் – கள்ளை உண்ட மகிழ்ச்சி உடையவர்களாக ஆரவாரிக்கும், மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும் – மொழி மாறுபட்ட நாட்டைக் கடந்து சென்றார் ஆயினும் (தேஎம் – அளபெடை), பழி தீர் மாண் நலம் தருகுவர் – குற்றமற்ற மாண்புடைய நலத்தைத் தருவார், மாதோ – மாது ஓ அசைநிலைகள், மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும் அம் கலுழ் கொண்ட செங்கடை மழைக்கண் – மழைக்காலத்தில் மலரும் பிச்சிப்பூக்களின் குளிர்ந்த இதழ்களைப் போன்ற அழகு ஒழுகும் சிவந்த கடைப்பகுதி உடைய குளிர்ந்த கண்களையும் (புரை – உவம உருபு), மணங்கமழ் ஐம்பால் மடந்தை – நறுமணம் கமழும் ஐந்து பகுதியாக உள்ள கூந்தலையுமுடைய மடந்தையே, நின் அணங்கு நிலைபெற்ற தட மென்தோளே – நின் அழகு நிலைபெற்ற பெரிய மெல்லிய தோள்கள் (மென்தோளே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 296, மதுரைப் பேராலவாயார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது

கோதை இணர குறுங்கால் காஞ்சிப்
போது அவிழ் நறுந்தாது அணிந்த கூந்தல்,
அரி மதர் மழைக் கண் மாஅயோளொடு
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி, இன்றும்
பெரு நீர் வையை அவளொடு ஆடிப்  5
புலரா மார்பினை வந்து நின்று எம் வயின்
கரத்தல் கூடுமோ மற்றே? பரப்பில்
பன் மீன் கொள்பவர் முகந்த இப்பி
நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும்
பேர் இசை கொற்கைப் பொருநன், வென்வேல்  10
கடும் பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன்
மலை புரை நெடுநகர்க் கூடல் நீடிய
மலிதரு கம்பலை போல,
அலர் ஆகின்று அது பலர் வாய்ப்பட்டே.

பாடல் பின்னணி:  வாயில் வேண்டிச் சென்ற தலைவனுக்கு வாயில் மறுக்கும் தோழி கூறியது.

பொருளுரை:  தொடுத்த மாலை போன்ற பூங்கொத்துக்களையுடைய குறுகிய அடியையுடைய காஞ்சி மரத்தின் மலர் விரிந்து உதிர்ந்த நறுமண பூந்துகளை அணிந்த கூந்தலையுடைய, செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்களையுடைய, மாமை நிறத்தையுடைய பரத்தையுடன் நேற்றும் மணம் கமழும் பொழிலிலே துயின்று இன்றும் அவளுடன் வையை ஆற்றின் நீர்ப்பெருக்கில் விளையாடி, புலராத மார்பினை உடையையாய் என் முன் வந்து நின்று அதை மறைக்கவும் முடியுமா?  கடலில் பல மீன்களைப் பிடிப்பவர்கள் அவற்றுடன் கொள்ளும் சிப்பிகளை பன்னாடையில் அரிக்கப்பட்ட மகிழ்ச்சிதரும் கள்ளின் விலையாகக் கொடுக்கும் பெரும்புகழையுடைய கொற்கைக்குத் தலைவனான வெற்றித் தரும் வேலையும் கடிய பெரிய யானையையும் நெடிய தேரையுமுடைய நெடுஞ்செழியனின் மலையை ஒத்த நெடிய மாளிகைகளை உடைய மதுரையில் உள்ள மிகுந்த ஆரவாரம்போல், பலர் வாயில்பட்டு அலராகின்றது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர் காத்த தன்மையின் கண் இன்று பெயர்ப்பினும்’ என வரும் விதி கொள்க.  வரலாறு – செழியன், வையை, கொற்கை, கூடல்.  மாற்று – அகநானூறு 60, 61, 126, 140, 245, 296, 390, நற்றிணை 183, குறுந்தொகை 221, 269, ஐங்குறுநூறு 47, பொருநராற்றுப்படை 214–215, 216–7, பட்டினப்பாலை 28–30, மலைபடுகடாம் 413–414.  ஒப்புமை – அகநானூறு 245 – அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில் மகிழ்நொடை பெறாஅர் ஆகி, நனை கவுள் கானயானை வெண்கோடு சுட்டி மன்று ஓடு புதல்வன் புன்தலை நீவும்.  புலரா மார்பினை (6) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இரட்டுற மொழிதலாகக் கொண்டு பரத்தை செய்த குறி நீங்காத மார்பினையுடையாய் எனவும் உரைத்துக் கொள்க.   மலை புரை நெடுநகர்க் கூடல் (12) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மலையை ஒத்த கோவிலையுடைய (அரண்மனை) மதுரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெடிய மாட மாளிகைகளையுடைய மதுரை நகரம்.  கம்பலை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

சொற்பொருள்:  கோதை இணர குறுங்கால் காஞ்சிப் போது அவிழ் நறுந்தாது – தொடுத்த மாலை போன்ற பூங்கொத்துக்களையுடைய குறுகிய அடியையுடைய காஞ்சி மரத்தின் மலர் விரிந்த நறுமண பூந்துகளை, அணிந்த கூந்தல் – அணிந்த கூந்தல், அரி மதர் மழைக் கண் மாஅயோளொடு – செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்களையுடைய மாமை நிறத்தையுடையவளுடன் (மாஅயோளொடு – இசைநிறை அளபெடை), நெருநையும் கமழ் பொழில் துஞ்சி – நேற்றும் மணம் கமழும் பொழிலிலே துயின்று (துஞ்சி – இடக்கரடக்கு), இன்றும் பெரு நீர் வையை அவளொடு ஆடி – இன்றும் அவளுடன் வையை ஆற்றின் நீர்ப்பெருக்கில் விளையாடி, புலரா மார்பினை வந்து நின்று எம் வயின் கரத்தல் கூடுமோ மற்றே – புலராத மார்பினை உடையையாய் என் முன் வந்து நின்று மறைக்கவும் முடியுமா (மற்றே – மற்று, ஏ அசைநிலைகள்), பரப்பில் பன் மீன் கொள்பவர் – கடலில் பல மீன்களைப் பிடிப்பவர்கள், முகந்த இப்பி நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும் – அவற்றுடன் கொள்ளும் சிப்பிகளை பன்னாடையில் அரிக்கப்பட்ட மகிழ்ச்சிதரும் கள்ளின் விலையாகக் கொடுக்கும், பேர் இசை கொற்கைப் பொருநன் – பெரும்புகழையுடைய கொற்கைக்குத் தலைவன், வென்வேல் கடும் பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன் – வெற்றித் தரும் வேலையும் கடிய பெரிய யானையையும் நெடிய தேரையுமுடைய நெடுஞ்செழியன், மலை புரை நெடுநகர்க் கூடல் – மலையை ஒத்த நெடிய மாளிகைகளை உடைய மதுரை (புரை – உவம உருபு), நீடிய மலிதரு கம்பலை போல – நிறைந்த ஆரவாரம்போல், அலர் ஆகின்று அது பலர் வாய்ப்பட்டே – பலர் வாயில்பட்டு அலராகின்றது (வாய்ப்பட்டே – ஏகாரம் அசை நிலை)

அகநானூறு 297, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
பானாள் கங்குலும் பெரும் புன் மாலையும்,
ஆனா நோயொடு அழிபடர்க் கலங்கி
நம் வயின் இனையும் இடும்பை கைம்மிக
என்னை ஆகுமோ நெஞ்சே, நம் வயின்
இருங்கவின் இல்லாப் பெரும் புன் தாடிக்  5
கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென,
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது, அசைவுடன்
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும்  10
சூர் முதல் இருந்த ஓமையம் புறவின்
ஈர் முள் வேலிப் புலவு நாறு முன்றில்,
எழுதியன்ன கொடிபடு வெருகின்
பூளையன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை
மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம்,  15
சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு
எருவைச் சேவல் இருஞ்சிறை பெயர்க்கும்
வெருவரு கானம், நம்மொடு
வருவல் என்றோள் மகிழ் மட நோக்கே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைச்சுரத்தில் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  

பொருளுரை:  என் நெஞ்சே!   பெரும் அழகு இல்லாத பெரிய பொலிவில்லாத தாடியையும் கொடிய கண்களையுமுடைய மறவர்களின் அம்பு தேய்த்ததால், பக்கம் தேய்ந்த அச்சம் மிக்க நடுகல்லில் பெயரையும் பீடையும் பொறித்த எழுத்துக்களை அறிந்து பொருளுடன் படிக்க இயலாது, தளர்ச்சியுடன் வழியில் செல்லும் புதிய வழிப்போக்கர்கள் அதனை விட்டு நீங்கும், கடவுள் இருக்கும் ஓமை மரங்களுடைய காட்டில், கிழிக்கின்ற முள்ளால் இயன்ற வேலியையுடைய புலால் நாற்றமுடைய இல்லத்தின் முன், ஓவியத்தில் வரைந்தாற்போல் மெலிந்து நீண்ட பூனையின் பூளை மலர்களைப் போன்ற குட்டிகள், நிலவைச் சூழ்ந்த விண்மீன்கள் போல் தாயைச் சுற்றியிருக்கும், சிறிய குடியில் உள்ள மறவர்களின் ஏறுகளைக் கொள்ளும் தண்ணுமை முரசு ஒலிக்கு அஞ்சி ஆண் பருந்து பறந்து போகும், அச்சம் தரும் காட்டிற்கு நம்முடன் வருவேன் எனக் கூறிய நம் தலைவியின் மடப்பம் பொருந்திய நோக்கம்,

நடு இரவிலும் மிக்க பொலிவில்லாத மாலை நேரத்திலும் ஒழியாத காதல் துன்பத்துடன் மிகுந்த வருத்தத்தால் மனம் கலங்கி நம்மை நினைத்ததால் அடையும் துன்பம் அளவு கடந்தால், நம்பால் என்ன தீங்கு விளையுமோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து (8) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பெயரும் பீடும் விரியத் தோன்றுமாறு பொறித்த எழுத்துக்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வீரருடைய புகழ் உலகோர்க்கு பயன்படும்படி பரவும் பொருட்டுப் பொறிக்கப்பட்டுக் காணப்படுகின்ற செதுக்கிய கல் எழுத்துக்கள்.  நோக்கல் செல்லாது அசைவுடன் ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் (9–10) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நோக்குதல் மாட்டாராய்த் தளர்ச்சியுடன் வழிச் செல்லும் புதியவர் அதனை விடுத்து, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வழிப்போக்கர் அவற்றைப் படித்துப் பார்க்க முயன்று அம்முயற்சி பயன்படாமல் வாளாது போயினர் என்றவாறு.  புறவு (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டு முல்லை நிலம் திரிந்த பாலை என்க.  பேம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).  பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12,  குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.

சொற்பொருள்:  பானாள் கங்குலும் பெரும் புன் மாலையும் ஆனா நோயொடு அழிபடர்க் கலங்கி நம் வயின் இனையும் இடும்பை கைம்மிக என்னை ஆகுமோ – நடு இரவிலும் மிக்க பொலிவில்லாத மாலை நேரத்திலும் ஒழியாத காதல் துன்பத்துடன் மிகுந்த வருத்தத்தால் மனம் கலங்கி நம்மை நினைத்ததால் அடையும் துன்பம் அளவு கடந்தால் என்ன தீங்கு விளையுமோ, நெஞ்சே – என் நெஞ்சே, நம் வயின் – நம்பால், இருங்கவின் இல்லாப் பெரும் புன் தாடிக் கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென – பெரும் அழகு இல்லாத பெரிய பொலிவில்லாத தாடியையும் கொடிய கண்களையுமுடைய மறவர்களின் அம்பு தேய்த்ததால், மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல் பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து இயைபுடன் நோக்கல் செல்லாது – பக்கம் தேய்ந்த அச்சம் மிக்க நடுகல்லில் பெயரையும் பீடையும் பொறித்த எழுத்துக்களை அறிந்து பொருளுடன் படிக்க இயலாது (பேஎம் – அளபெடை), அசைவுடன் ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் – தளர்ச்சியுடன் வழியில் செல்லும் புதிய வழிப்போக்கர்கள் அதனை விட்டு நீங்கும், சூர் முதல் இருந்த ஓமையம் புறவின் – கடவுள் இருக்கும் ஓமை மரங்களுடைய காட்டில் (ஓமை மரம் – Dillenia indica, Toothbrush Tree), ஈர் முள் வேலிப் புலவு நாறு முன்றில் எழுதியன்ன கொடிபடு வெருகின் பூளையன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை – கிழிக்கின்ற முள்ளால் இயன்ற வேலியையுடைய புலால் நாற்றமுடைய இல்லத்தின் முன் ஓவியத்தில் வரைந்தாற்போல் மெலிந்து நீண்ட பூனையின் பூளை மலர்களைப் போன்ற குட்டிகள் (ஈர்முள் – வினைத்தொகை, முன்றில் – இல்முன்), மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம் – நிலவைச் சூழ்ந்த விண்மீன்கள் போல் தாயைச் சுற்றியிருக்கும் (மீனின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு எருவைச் சேவல் இருஞ்சிறை பெயர்க்கும் – சிறிய குடியில் உள்ள மறவர்களின் ஏறுகளைக் கொள்ளும் தண்ணுமை முரசு ஒலிக்கு அஞ்சி ஆண் பருந்து பறந்து போகும், வெருவரு கானம் நம்மொடு வருவல் என்றோள் மகிழ் மட நோக்கே – அச்சம் தரும் காட்டிற்கு நம்முடன் வருவேன் எனக் கூறிய நம் தலைவியின் மடப்பம் பொருந்திய நோக்கு (நோக்கே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 298, மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார், குறிஞ்சித் திணைதலைவி தலைவனிடம் சொன்னது
பயங்கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு
வயங்கு தொழில் தரீஇயர், வலன் ஏர்பு விளங்கி
மல்கு கடல் தோன்றியாங்கு, மல்குடை
மணி மருள் மாலை மலர்ந்த வேங்கை
ஒண் தளிர் அவிர்வரும் ஒலிகெழு பெருஞ்சினைத்  5
தண் துளி அசை வளி தைவரும் நாட!
கொன்று சினம் தணியாது வென்று முரண் சாம்பாது
இரும் பிடித் தொழுதியின் இனம் தலைமயங்காது,
பெரும் பெயல் கடாஅம் செருக்கி வள மலை
இருங்களிறு இயல்வரும் பெருங்காட்டு இயவின்,  10
ஆர் இருள் துமிய வெள்வேல் ஏந்தி,
தாழ் பூங்கோதை ஊது வண்டு இரீஇ,
மென்பிணி அவிழ்ந்த அரை நாள் இரவு இவண்
நீ வந்ததனினும் இனிது ஆகின்றே,
தூவல் கள்ளின் துனை தேர் எந்தை  15
கடியுடை வியல் நகர் ஓம்பினள் உறையும்
யாய் அறிவுறுதல் அஞ்சிப் பானாள்
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன்
யான் நின் கொடுமை கூற நினைபு ஆங்கு,
இனையல், வாழி தோழி! நத்துறந்தவர்  20
நீடலர் ஆகி வருவர் வல்லென
கங்குல் உயவுத் துணை ஆகிய
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே.

பாடல் பின்னணி:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரவுக்குறியிடத்தே தலைவனோடு ஆடி மகிழ்ந்த தலைவி, தனது பிரிவாற்றாமையும் தனது உறுதுயர்க்கு உசாஅத்துணையாக அமைந்த தோழியின் மாண்பும் தோன்றத் தலைவனுக்குக் கூறியது என்றவாறு. 

பொருளுரை:  உலகிற்குப் பயன்பொருந்திய வளங்களைத் தரும் ஞாயிறு, விளங்கும் தொழில்களைத் தரும்பொருட்டு, வலப்பக்கத்தில் எழுந்து விளங்கி நீர் மிக்க கடலில் தோன்றினாற்போல், நீலமணி போன்ற நிறத்தையுடைய மாலை நேரத்தில் மிகுதியாக மலர்ந்த வேங்கை மரத்தின் ஒளிரும் தளிர்கள் தழைத்தல் பொருந்திய, பெரிய கிளைகளில் தொங்கும் குளிர்ந்த துளிகளை அசைந்துவரும் காற்று உதிர்க்கும் நாடனே!

தன் பகையான புலியைக் கொன்றும் சினம் தணியாது, அதனை வென்றும் மாறுபாடு குறையாது, பெரிய பெண் யானைகளைக் கொண்ட தன் இனத்துடன் சேராமல், பெரு மழைபோன்ற மதத்தால் செருக்குற்று, வளம் மிகுந்த மலையில் பெரிய களிற்று யானை இயங்கும் பெரிய காட்டு வழியில், அடர்ந்த இருள் நீங்கும்படி வெள்ளிய வேலை ஏந்தியபடி, தாழ்ந்த பூமாலையில் ஊதும் வண்டுகளை ஒட்டி, நடு இரவில் இங்கு நீ வருவதைவிடவும், எனக்கு இனிமையாக உள்ளது,

மழை போன்ற கள்ளையும் விரைந்து ஓடும் தேரினையும் உடைய எம் தந்தையின் காவல் உடைய பெரிய மனையில் எம்மைப் பாதுகாத்து இருக்கும் எம் தாய் அறிதலை அஞ்சி, நடு இரவில் மறைத்தலையுடைய நெஞ்சுடன், என் காதலைக் கூறாது, யான் நின் வராமை என்னும் கொடுமையைக் கூறவும், அங்கு என் கருத்தை உணர்ந்து, “தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  வருந்தாதே.  நம்மைத் துறந்த நம் தலைவர் காலம் தாழ்த்தாது விரைவில் வருவார்” எனக் கூறி, இரவில் நான் துன்புறும்பொழுது எனக்குத் துணை ஆகித் துஞ்சாது இருந்த என் தோழியாகிய இவள் மகிழ்ந்தது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 20) என வரும் நூற்பாவின்கண் ‘பெற்றவழி மலியினும்’ என வரும் விதி கொள்க.  வலன் ஏர்பு (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வலப்பக்கத்திலே எழுந்து.  காவல் நெஞ்சமொடு (18) – பழைய உரை – காவல் நெஞ்சமொடு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரவல் நெஞ்சமொடு, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கரவல் நெஞ்சமொடு, புலியூர்க்கேசிகன் உரை – காவல் நெஞ்சமொடு.  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.   துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – முனைவர் கு.வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லதிகாரம், உரியியல் 57).

சொற்பொருள்:  பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு வயங்கு தொழில் தரீஇயர் வலன் ஏர்பு விளங்கி மல்கு கடல் தோன்றியாங்கு – உலகிற்குப் பயன்பொருந்திய வளங்களைத் தரும் ஞாயிறு விளங்கும் தொழில்களைத் தரும்பொருட்டு வலப்பக்கத்தில் எழுந்து விளங்கி நீர் மிக்க கடலில் தோன்றினாற்போல், மல்கு உடை – மிகுதியாக, மணி மருள் மாலை மலர்ந்த வேங்கை ஒண் தளிர் அவிர்வரும் ஒலி கெழு பெருஞ்சினைத் தண் துளி அசை வளி தைவரும் நாட – நீலமணி போன்ற நிறத்தையுடைய மாலை நேரத்தில் மலர்ந்த வேங்கை மரத்தின் ஒளிரும் தளிர்கள் தழைத்தல் பொருந்திய பெரிய கிளைகளில் தொங்கும் குளிர்ந்த துளிகளை அசைந்துவரும் காற்று உதிர்க்கும் நாடனே (மருள் – உவம உருபு, வேங்கை மரம் –  kino flowers, Pterocarpus marsupium), கொன்று சினம் தணியாது வென்று முரண் சாம்பாது இரும் பிடித் தொழுதியின் இனம் தலைமயங்காது பெரும் பெயல் கடாஅம் செருக்கி – தன் பகையான புலியைக் கொன்றும் சினம் தணியாது அதனை வென்றும் மாறுபாடு குறையாது பெரிய பெண் யானைகளைக் கொண்ட தன் இனத்துடன் சேராமல் பெரு மழைபோன்ற மதத்தால் செருக்குற்று (கடாஅம் – அளபெடை), வள மலை இருங்களிறு இயல்வரும் பெருங்காட்டு இயவின் – வளம் மிகுந்த மலையில் பெரிய களிற்று யானை இயங்கும் பெரிய காட்டு வழியில், ஆர் இருள் துமிய வெள்வேல் ஏந்தி தாழ் பூங்கோதை ஊது வண்டு இரீஇ மென்பிணி அவிழ்ந்த அரை நாள் இரவு இவண் நீ வந்ததனினும் – அடர்ந்த இருள் நீங்கும்படி வெள்ளிய வேலை ஏந்தியபடி  தாழ்ந்த பூமாலையில் ஊதும் வண்டுகளை ஒட்டி நடு இரவில் இங்கு நீ வருவதைவிடவும், இனிது ஆகின்றே – எனக்கு இனிமையாக உள்ளது (இரீஇ – அளபெடை), தூவல் கள்ளின் துனை தேர் எந்தை கடியுடை வியல் நகர் ஓம்பினள் உறையும் யாய் அறிவுறுதல் அஞ்சிப் பானாள் காவல் நெஞ்சமொடு – மழை போன்ற கள்ளையும் விரைந்து ஓடும் தேரினையும் உடைய எம் தந்தையின் காவல் உடைய பெரிய மனையில் எம்மைப் பாதுகாத்து இருக்கும் எம் தாய் அறிதலை அஞ்சி நடு இரவில் மறைத்தலையுடைய நெஞ்சுடன் (எந்தை – எம் + தந்தை, மருஉ மொழி), காமம் செப்பேன் – என் காதலைக் கூறாது, யான் நின் கொடுமை கூற நினைபு ஆங்கு – யான் நின் வராமை என்னும் கொடுமையைக் கூறவும் அங்கு என் கருத்தை உணர்ந்து இனையல் – வருந்தாதே, வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, நம் துறந்தவர் நீடலர் ஆகி வருவர் வல்லென – நம்மைத் துறந்த நம் தலைவர் காலம் தாழ்த்தாது விரைவில் வருவார் எனக் கூறி, கங்குல் உயவுத் துணை ஆகிய – இரவில் நான் துன்புறும்பொழுது எனக்குத் துணை ஆகிய, துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே – துஞ்சாது இருந்த என் தோழியாகிய இவள் மகிழ்ந்தது (உவந்ததுவே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 299, எயினந்தை மகனார் இளங்கீரனார், பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
எல்லையும் இரவும் வினை வயின் பிரிந்த
உள்ளம் முன் உறுபு அடைய உள்ளிய
பதி மறந்து உறைதல் வல்லுநம் ஆயினும்,
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே,
கடு வளி எடுத்த கால்கழி தேக்கு இலை  5
நெடுவிளிப் பருந்தின் வெறி எழுந்தாங்கு,
விசும்பு கண் புதையப் பாஅய்ப் பல உடன்
அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய்க்
கவலை கரக்கும் காடு அகல் அத்தம்,
செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்தென  10
வைகு நிலை மதியம் போலப் பையெனப்,
புலம்பு கொள் அவலமொடு புதுக் கவின் இழந்த
நலம் கெழு திரு முகம் இறைஞ்சி நிலம் கிளையா,
நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண்
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்பக்  15
கால் நிலை செல்லாது கழி படர்க் கலங்கி,
நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு
அறல் மருள் கூந்தலின் மறையினள், “திறல் மாண்டு
திருந்துக மாதோ நும் செலவு”, என வெய்து உயிராப்
பருவரல் எவ்வமொடு அழிந்த  20
பெரு விதுப்பு உறுவி பேதுறு நிலையே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைச்சுரத்தில் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 

பொருளுரை:  பகலிலும் இரவிலும் விடாது நினைத்துப் பொருள் ஈட்டும் பொருட்டு நம் தலைவியைப் பிரிந்த என் உள்ளமே!   

நம் ஊரை மறந்து வேறு நாட்டிடத்தில் தங்குவதற்கு நாம் வல்லமை உடையேம் ஆயினும், கடிய காற்று வீசியதால் காம்பிலிருந்து கழிந்த தேக்கு மரத்தின் இலைகள், நீண்ட கூப்பிட்டலை உடைய பருந்தின் கூட்டம் வெறித்து எழுந்து பறந்தாற்போன்று, வானிடம் மறையும்படி பரவிப் பலவும் ஒன்று சேர்ந்து, அகன்ற பாலை நிலத்தில் செல்லுபவர்களின் அறிவு கெடும்படி பரவி விழுந்துப் பிரிவுடைய வழிகளை எல்லாம் மறைக்கும், அகன்ற காடுகளையுடைய பாலை நிலத்திற்குப் பொருள் ஈட்டும் வினையின்பொருட்டு யான் செல்லுதலை அவளுக்கு உரைத்தேனாக, வைகைறைப்பொழுதில் வானத்தில் உள்ள நிலவு போல், மெதுவாக, தனிமையுறும் துன்பத்துடன், புதிய அழகை இழந்த நலம் பொருந்திய அழகிய முகத்தைக் கவிழ்த்துத், தன் கால் விரலால் நிலத்தைக் கிளைத்துக், கண்ணீருடன் கூடிய ஈர இதழ்களையுடைய குளிர்ந்த கண்கள் சொரிகின்ற தெளிந்த கண்ணீர் மார்பில் விழ, கால்கள் ஒரு நிலையில் இல்லாது, மிக்க துன்பத்தால் கலங்கி, நாவானது நடுக்கமுற்றுத் தெளிவில்லாத சொற்களுடன், கருமணல் போன்ற தன் கூந்தலில் மறைந்தவளாகி, “ நும் பொருள் ஈட்டும் செலவு திறம்பட மாட்சிமையுடன் சிறப்பதாக”, எனக் கூறி வெய்தாக பெருமூச்சு விட்டுத், துன்புறும் வருத்தத்துடன் அழிந்த மிக்க விரைவினை அடைந்த தலைவியின் மனம் கலங்கிய நிலை ஆகிய, அதை மறந்து தங்குதல் அரிதாக உள்ளது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்’ என வரும் விதி கொள்க.  உயிரா – உயிர்த்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  கிளையா – கிளைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  அறல் போல் கூந்தல் – அகநானூறு 142 அறல் அன்ன இரும் பல் கூந்தல், அகநானூறு 162 – அறல் என அவிர்வரும் கூந்தல், அகநானூறு 213 – அறலென நெறிந்த கூந்தல், அகநானூறு 265 – அறலின் நெறித்த கூந்தல், அகநானூறு 299 – அறல் மருள் கூந்தலின், குறுந்தொகை 116 – தேம் பாய் கூந்தல் வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை நுண் மணல் அறல் வார்ந்தன்ன, குறுந்தொகை 286 – அறல் போல் கூந்தல், கலித்தொகை 71 – கதுப்பு அறல், கலித்தொகை 98 – நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக, பொருநராற்றுப்படை 25 – அறல் போல் கூந்தல்.  வைகு நிலை மதியம் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வைகறைப் பொழுதில் வானத்தே நிலைகொண்ட திங்கள் மண்டிலம் போல, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இரவு புலரும் காலத்து மதியினைப் போல.

சொற்பொருள்:  எல்லையும் இரவும் வினை வயின் பிரிந்த உள்ளம் – பகலிலும் இரவிலும் விடாது நினைத்துப் பொருள் ஈட்டும் பொருட்டு நம் தலைவியைப் பிரிந்த என் உள்ளமே, முன் உறுபு அடைய  உள்ளிய பதி மறந்து உறைதல் வல்லுநம் ஆயினும் – நம் ஊரை மறந்து வேறு நாட்டிடத்தில் தங்குவதற்கு நாம் வல்லமை உடையேம் ஆயினும், அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே – அதை மறந்து தங்குதல் அரிதாக உள்ளது, கடு வளி எடுத்த கால் கழி தேக்கு இலை நெடுவிளிப் பருந்தின் வெறி எழுந்தாங்கு – கடிய காற்று வீசியதால் காம்பிலிருந்து கழிந்த தேக்கு மரத்தின் இலைகள் நீண்ட கூப்பிட்டலை உடைய பருந்தின் கூட்டம் வெறித்து எழுந்து பறந்தாற்போன்று, விசும்பு கண் புதையப் பாஅய்ப் பல உடன் அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய் – வானிடம் மறையும்படிப் பரவிப் பலவும் ஒன்று சேர்ந்து அகன்ற பாலை நிலத்தில் செல்லுபவர்களின் அறிவு கெடும்படிப் பரவி (தாஅய் – அளபெடை), கவலை கரக்கும் காடு அகல் அத்தம் – பிரிவுடைய வழிகளை எல்லாம் மறைக்கும் அகன்ற காடுகளையுடைய பாலை நிலத்தில், செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்தென – பொருள் ஈட்டும் வினையின்பொருட்டு யான் செல்லுதலை அவளுக்கு உரைத்தேனாக (மருங்கு – கண்ணோட்டம்), வைகு நிலை மதியம் போல – வைகைறைப்பொழுதில் வானத்தில் உள்ள நிலவு போல், பையெனப் புலம்பு கொள் அவலமொடு – மெதுவாக தனிமையுறும் துன்பத்துடன், புதுக் கவின் இழந்த நலம் கெழு திரு முகம் இறைஞ்சி நிலம் கிளையா – புதிய அழகை இழந்த நலம் பொருந்திய அழகிய முகத்தைக் கவிழ்த்துத் தன் கால் விரலால் நிலத்தைக் கிளைத்து (கிளையா – கிளைத்து), நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண் இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப – கண்ணீருடன் கூடிய ஈர இதழ்களையுடைய குளிர்ந்த கண்கள் சொரிகின்ற தெளிந்த கண்ணீர் மார்பில் விழ, கால் நிலை செல்லாது கழி படர்க் கலங்கி நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு – கால்கள் ஒரு நிலையில் இல்லாது மிக்க துன்பத்தால் கலங்கி நாவானது நடுக்கமுற்றுத் தெளிவில்லாத சொற்களுடன், அறல் மருள் கூந்தலின் மறையினள் – கருமணல் போன்ற தன் கூந்தலில் மறைந்தவளாகி, திறல் மாண்டு திருந்துக மாதோ நும் செலவு – நும் பொருள் ஈட்டும் செலவு திறம்பட மாட்சிமையுடன் சிறப்பதா (மாதோ – மாது, ஓ அசைநிலைகள்), என வெய்து உயிரா – எனக் கூறி வெய்தாக பெருமூச்சு விட்டு (உயிரா – உயிர்த்து), பருவரல் எவ்வமொடு அழிந்த பெரு விதுப்பு உறுவி பேதுறு நிலையே – துன்புறும் வருத்தத்துடன் அழிந்த மிக்க விரைவினை (துன்பத்தை) அடைந்த தலைவியின் மனம் கலங்கிய நிலை (நிலையே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 300, உலோச்சனார், நெய்தல் திணைதோழி தலைவனிடம் சொன்னது
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர்
நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார்,
பறி கொள் கொள்ளையர், மறுக உக்க
மீன் ஆர் குருகின் கானலம் பெருந்துறை,
எல்லை தண் பொழில் சென்றெனச், செலீஇயர்,  5
தேர் பூட்டு அயர ஏஎய் வார்கோல்
செறி தொடி திருத்திப் பாறு மயிர் நீவிச்
“செல் இனி மடந்தை, நின் தோழியொடு மனை” எனச்
சொல்லிய அளவை, தான் பெரிது கலுழ்ந்து
தீங்கு ஆயினள் இவள் ஆயின் தாங்காது  10
நொதுமலர் போலப் பிரியின் கதுமெனப்
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல், அதனால்
சேணின் வருநர் போலப் பேணாய்
இருங்கலி யாணர் எம் சிறுகுடித் தோன்றின்,
வல் எதிர்கொண்டு மெல்லிதின் வினைஇத்  15
“துறையும் மான்றன்று பொழுதே, சுறவும்
ஓதம் மல்கலின் மாறு ஆயினவே,
எல்லின்று தோன்றல், செல்லாதீம்” என
எமர் குறை கூறத் தங்கி ஏமுற
இளையரும் புரவியும் இன்புற, நீயும்  20
இல் உறை நல் விருந்து அயர்தல்
ஒல்லுதும் பெரும, நீ நல்குதல் பெறினே.

பாடல் பின்னணி:  பகற்குறி வந்து நீங்கும் தலைவனிடம் தோழி கூறியது. 

பொருளுரை:  பெருமானே!  நாட்காலையில் வலையினால் மீன்களை முகந்துகொண்ட மீன் பிடிப்பதில் வல்ல பரதவர்கள், பறியினால் மீனைக் கொள்பவர்கள், நுண்ணிய மணலில் மீன்களைக் காயுமாறு பெய்தவர்களாகிய அவர்கள் வருந்தும்படி, சொரிந்த அம் மீன்களை உண்ண வரும் பறவைகளையுடைய சோலைகளையுடைய அழகிய பெரிய கடல் துறையில்,

குளிர்ந்த சோலையில் பகல் பொழுது கழிந்ததால், நின் ஊர்க்குச் செல்லும்பொருட்டு தேரைப் பூட்டுமாறுப் பாகனை ஏவி, இவளது நீண்ட திரண்ட நெருங்கிய வளையல்களை முன்பு இருந்தாற்போல் திருத்தி, கலைந்த கூந்தலைத் தடவி, “மடந்தையே!  நின் மனைக்கு நின் தோழியுடன் செல்வாயாக!” எனக் கூறிய அளவில், இவள் மிகவும் அழுது வருந்துகிறாள் ஆதலின், அதை நினையாது அன்னியர் போல் நீ பிரிந்து சென்றால், விரைந்து வேறு தீங்கு அடைவாள் இவள் என யான் அஞ்சுகின்றேன். 

அதனால், நீ தொலைவிலிருந்து வருபவர் போல், எதையும் எண்ணாது, மிகுந்த ஆரவாரம் உடைய வளம் பொருந்திய எம் சிற்றூர்க்கு வந்தால், விரைவில் நின்னை அன்புடன் எதிர்கொண்டு வினவி, “தலைவா!  பொழுது மயங்கியது. அலைகள் பெருகி துறையும் சுறா மீன்களும் பகையாயின.  இருட்டி விட்டது.  இவ்வேளையில் செல்லாதீர்”, என்று எம் சுற்றத்தார் நும்மிடம் குறை இரந்து வேண்ட, நின் ஏவலரும் குதிரைகளும் நீயும் இன்பம் அடையும்படி எம் இல்லில் தங்கி இருக்க, நல்ல விருந்தினர்களாக யாம் பேணுவோம், நீ உன் உடன்பாட்டை வழங்கினால்.    

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘வேளாண் பெரு நெறி வேண்டிய இடத்தினும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘இருவகைக் குறி பிழைப்பாகிய இடத்தும்’ (தொல்காப்பியம், களவியல் 16) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளைக் காட்டி, இதனுள் தான் பெரிது கலுழ்ந்து தீங்காயினள் எனவே அக்குறிப்புத் தலைவன் போகாமல் தடுப்பக் கூறியது என்று உணர்ந்து தோழி கூறினாள் என்றும், ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என்னுஞ் சூத்திரத்து, ‘வேளாண் பெருநெறி வேண்டியவிடத்தும்’ என்ற பகுதியில், இச் செய்யுளும் அது, என்றும் கூறினர் நச்சினார்க்கினியர்.  பிரியின் கதுமெனப் பிறிது ஒன்று ஆகலும் (11–12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ பிறர் போல இவளைப் பிரிந்து போனால் இவள் ஞெரேலென இறந்துபடுதலும் கூடும் என நான் அஞ்சுகிறேன்.  பிறிதொன்றாதல் – இறத்தல்.   அமங்கலத்தை வேறு வாய்பாட்டால் கூறியபடியாம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஏதிலர் போலப் பிரிந்து செல்லின் விரைந்து இவள் வேறு தீங்கு அடையினும் அடைவளென அஞ்சுகின்றேன்.  வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  சுறா சுறவு என வந்தது. ‘குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32). சொற்பொருள்:  நாள் வலை முகந்த கோள் வல் பரதவர்  – நாட்காலையில் வலையினால் மீன்களை முகந்துகொண்ட மீன் பிடிப்பதில் வல்ல பரதவர்கள், நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார் – நுண்ணிய மணலில் காயுமாறு பெய்பவர்கள், பறி கொள் கொள்ளையர் – பறியினால் மீனைக் கொள்பவர்கள் (பறி – மீன் பிடிக்கும் ஓலைக்கூடை), மறுக – வருந்தும்படி, உக்க மீன் ஆர் குருகின் கானலம் பெருந்துறை – சொரிந்த மீன்களை உண்ண வரும் பறவைகளையுடைய சோலைகளையுடைய அழகிய பெரிய கடல் துறையில், எல்லை தண் பொழில் சென்றெனச் செலீஇயர் தேர் பூட்டு அயர ஏஎய் – பகல் பொழுது குளிர்ந்த சோலையில் கழிந்ததால் நின் ஊர்க்குச் செல்லும்பொருட்டு தேரைப் பூட்டுமாறுப் பாகனை ஏவி, வார்கோல் செறி தொடி திருத்தி – நீண்ட திரண்ட நெருங்கிய வளையல்களை முன்பு இருந்தாற்போல் திருத்தி, பாறு மயிர் நீவி – கலைந்த கூந்தலைத் தடவி, செல் இனி மடந்தை, நின் தோழியொடு மனை எனச் சொல்லிய அளவை – மடந்தையே நின் மனைக்கு நின் தோழியுடன் செல்வாயாக எனக் கூறிய அளவில், தான் பெரிது கலுழ்ந்து தீங்கு ஆயினள் இவள் ஆயின் தாங்காது நொதுமலர் போலப் பிரியின் – இவள் மிகவும் அழுது வருந்துகிறாள் ஆதலின் அதை நினையாது ஏதிலர் போல் பிரிந்து சென்றால் (நொதுமலர் – ஏதிலர், அன்னியர், புதியவர்), கதுமெனப் பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல் – விரைந்து வேறு தீங்கு அடைவாள் இவள் என யான் அஞ்சுகின்றேன், அதனால் – அதனால், சேணின் வருநர் போலப் பேணாய் – நீ தொலைவிலிருந்து வருபவர் போல் எதையும் எண்ணாது, இருங்கலி யாணர் எம் சிறுகுடித் தோன்றின் – மிகுந்த ஆரவாரம் உடைய வளம் பொருந்திய எம் சிற்றூர்க்கு வந்தால், வல் எதிர்கொண்டு மெல்லிதின் வினைஇ – விரைவில் நின்னை அன்புடன் எதிர்கொண்டு வினவி, துறையும் – துறையும், மான்றன்று பொழுதே – பொழுது மயங்கியது, சுறவும் ஓதம் மல்கலின் மாறு ஆயினவே – அலைகள் பெருகி சுறா மீன்களும் பகையாயின, எல்லின்று – இருட்டி விட்டது, தோன்றல் – தலைவா, செல்லாதீம் – செல்லாதீர், என எமர் குறை கூற – என்று எம் சுற்றத்தார் குறை இரந்து வேண்ட, தங்கி ஏமுற இளையரும் புரவியும் இன்புற – நின் ஏவலரும் குதிரைகளும் நீயும் இன்புறத் தங்கி, நீயும் இல் உறை நல் விருந்து அயர்தல் ஒல்லுதும் – எம் இல்லில் தங்கும் நல்ல விருந்தினர்களாக பேணுவோம், பெரும – பெருமானே, நீ நல்குதல் பெறினே – நீ உன் உடன்பாட்டை வழங்கினால்