அகநானூறு – தமிழ் உரை
எளிய தமிழ் உரை – வைதேகி
Copyright © All Rights Reserved
தமிழ் உரை நூல்கள்:
அகநானூறு – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – தமிழ் மண் பதிப்பகம், சென்னை
அகநானூறு – பொ. வே. சோமசுந்தரனார், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை
அகநானூறு 1, மாமூலனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வண்டு படத் ததைந்த கண்ணி ஒண்கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி
அறு கோட்டு யானைப் பொதினி யாங்கண்,
‘சிறு காரோடன் பயினொடு சேர்த்திய 5
கல் போல் பிரியலம்’ என்ற சொல் தாம்
மறந்தனர் கொல்லோ தோழி, சிறந்த
வேய் மருள் பணைத்தோள் நெகிழச் சேய் நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக
அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின், 10
நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு
அறு நீர்ப் பைஞ்சுனை ஆம் அறப் புலர்தலின்
உகு நெல் பொரியும் வெம்மைய, யாவரும்
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய,
சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை 15
நாரில் முருங்கை நவிரல் வான் பூச்
சூரலங்கடு வளி எடுப்ப ஆருற்று
உடை திரைப் பிதிர்வின் பொங்கி முன்
கடல் போல் தோன்றல, காடு இறந்தோரே? 19
பாடல் பின்னணி: பொருள் ஈட்டும்பொருட்டுத் தலைவன் பிரிந்தபொழுது வருந்திய தலைவி தோழியிடம் சொன்னது.
பொருளுரை: தோழி! வண்டுகள் மொய்க்கும்படி அடர்ந்த மலர்களையுடைய மாலையையும் ஒளிரும் கழல்களையும் அணிந்த அஞ்சத்தக்க குதிரைகளையுடைய மழவர்களை வென்ற முருகனைப் போல், நல்ல போர் வெற்றியை உடைய பெரும் வேளிர் மன்னனான ஆவி என்பவனின் அறுத்துத் திருத்திய தந்தங்கள் உடைய (மருப்புகள் உடைய) யானைகள் கொண்ட பொதினி மலையில், சிறியவனாகிய சாணைக்கல் செய்பவன் அரக்குடன் சேர்த்து உருவாக்கிய கல்லைப் போல், பிரிய மாட்டேன் எனத் தான் கூறிய சொல்லை மறந்து விட்டாரோ,
சிறந்த மூங்கில் போன்ற என் பருத்த தோள்கள் மெலியுமாறு, தொலைவில் உள்ள நாட்டிற்குச் சென்றுப் பொன் அணிகள் மற்றும் பிற செல்வங்களை ஈட்டிக் கொண்டு வருவதற்கு, நிலம் பிளக்கும்படி தீயைப் போன்ற வெட்பம் மிகுந்த ஞாயிற்றின் கதிர்கள் பசுமை அழியும்படி காய்வதால், நிழல் குறைந்து உலர்ந்த மரங்கள் உடையனவாய், பாறைகள் காய்ந்து, நீர் இல்லாத பசிய சுனைகள் ஈரம் இல்லாதபடி உலர்ந்ததால், உதிர்கின்ற நெல் பொரியும்படியான வெப்பமுடைய, வழிப்போக்கர்கள் யாவரும் இல்லாததால் ஆறலைகள்வர்கள் தம் தொழில் செய்ய இயலாது வருந்த, பாலை நிலம் பொலிவற்ற வழிகளை உடையதாய், சுழன்று விரைந்து காற்று ஆரவாரத்துடன் வீசுவதால், அசையும் கிளைகளையுடைய நார் இல்லாத முருங்கை மரங்களின் வாடிய வெள்ளை மலர்கள், உடைந்த அலைகளின் நுரைத் துளிகள் போன்று பரவிக் கிடந்ததால், கடலின் கரையைப் போல் தோன்றுதல் உடைய காட்டினைக் கடந்துச் சென்ற நம் தலைவர்?
குறிப்பு: பிரிவிடை ஆற்றாளாகிய தலைவி தோழியிடம் சொல்லியது. பொ. வே. சோமசுந்தரனார் உரை – இஃது ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் நூற்பாவினால் அமையும். ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘முதல் கரு உரிப்பொருள்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 3) என்னுஞ் சூத்திரவுரையில் இச் செய்யுளை எடுத்துக்காட்டி, பாலைக்கு முதலுங் கருவும் வந்து முதற் பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது என்றார் நச்சினார்க்கினியர். கண்ணி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலையிற் சூடும் மாலை. முருகன் நற்போர் நெடுவேள் ஆவி (3) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – முருகனைப் போன்ற நல்ல போர் வெற்றியினையுடைய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘முருகன் பொதினி ஆங்கண்’ எனக்கொண்டு இவ்வாறுப் பொருள் தந்துள்ளார். முருகப்பெருமான் எழுந்தருளி இருக்கின்ற பொதினி மலையின் சாரலாகிய ஆங்கண். அறு கோட்டு யானை (4) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அறுத்துத் திருத்திய கோட்டினையுடைய யானை. உரு (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘உரு – அழகு எனினுமாம். இது ஒரு தமிழ்ச் சொல். உரு – உருவ என்று ஈறு திரிந்தது என்பர் பழைய உரையாசிரியர்’, ஈண்டு ‘அ’ அசை எனவே பொருந்தும். ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அஞ்சத்தக்க, உரு உருவ என ஈறு திரிந்தது. பொதினி (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொதினி என்பது பழனி, ஆவி என்பவன் நகர் எடுத்ததால் இது திருவாவினங்குடி என்று வழங்கப்படுதலும் அறிக. ஒப்புமை – அகநானூறு 356 – சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் நாவினேனாகி. அகநானூறு 61, மாமூலனாரின் பாடல் – நெடுவேள் ஆவி பொன்னுடை நெடுநகர்ப் பொதினி. வரலாறு – நெடுவேள் ஆவி, பொதினி. பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12, குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.
சொற்பொருள்: வண்டு படத் ததைந்த கண்ணி ஒண்கழல் உருவக் குதிரை மழவர் ஓட்டிய – வண்டுகள் மொய்க்கும்படி அடர்ந்த மலர்களையுடைய மாலையையும் ஒளிரும் கழல்களையும் அணிந்த அஞ்சத்தக்க குதிரைகளையுடைய மழவர்களை வென்ற (உருவ – அ அசைநிலை), முருகன் நற்போர் நெடுவேள் ஆவி அறு கோட்டு யானைப் பொதினி யாங்கண் – முருகனைப் போல் நல்ல போர் வெற்றியை உடைய பெரும் வேளிர் மன்னனான ஆவி என்பவனின் அறுத்துத் திருத்திய தந்தங்கள் உடைய (மருப்புகள் உடைய) யானைகள் கொண்ட பொதினி மலையில், சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் – சிறியவனாகிய சாணைக்கல் செய்பவன் அரக்குடன் சேர்த்து உருவாக்கிய கல்லைப் போல், பிரியலம் என்ற சொல் தாம் மறந்தனர் கொல்லோ – பிரிய மாட்டேன் எனத் தான் கூறிய சொல்லை அவர் மறந்து விட்டாரோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ –அசைநிலை), தோழி – தோழி, சிறந்த வேய் மருள் பணைத்தோள் நெகிழச் சேய் நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார் – சிறந்த மூங்கில் போன்ற என் பருத்த தோள்கள் மெலியுமாறு தொலைவில் உள்ள நாட்டிற்குச் சென்றுப் பொன் அணிகள் மற்றும் பிற செல்வங்களை ஈட்டிக் கொண்டு வருவதற்கு (மருள் – உவம உருபு, வெறுக்கை – செல்வம்), நிலம் பக அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின் – நிலம் பிளக்கும்படி தீயைப் போன்ற வெட்பம் மிகுந்த ஞாயிற்றின் கதிர்கள் பசுமை அழியும்படி காய்வதால், நிழல் தேய்ந்து உலறிய மரத்த – நிழல் குறைந்து உலர்ந்த மரங்கள் உடையனவாய் (மரத்த – அகரம் பன்மை உருபு), அறை காய்பு – பாறைகள் காய்ந்து, அறு நீர்ப் பைஞ்சுனை ஆம் அறப் புலர்தலின் – நீர் இல்லாத பசிய சுனைகள் ஈரம் இல்லாதபடி உலர்ந்ததால் (ஆம் – நீர், ஈரம்), உகு நெல் பொரியும் வெம்மைய – உதிர்கின்ற நெல் பொரியும்படியான வெப்பமுடைய, யாவரும் வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய – வழிப்போக்கர்கள் யாவரும் இல்லாததால் ஆறலைகள்வர்கள் தம் தொழில் செய்ய இயலாது வருந்த, சுரம் புல்லென்ற ஆற்ற – பாலை நிலம் பொலிவற்ற வழிகளை உடையதாய், அலங்கு சினை நார் இல் முருங்கை – அசையும் கிளைகளையுடைய நார் இல்லாத முருங்கை மரங்களின், நவிரல் வான் பூச் சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்று – வாடிய வெள்ளை மலர்கள் சுழன்று விரைந்து காற்று ஆரவாரத்துடன் வீசுவதால் (அம் – சாரியை, நவிரல் – நிலை கெட்ட, வாடிய) உடை திரைப் பிதிர்வின் பொங்கி முன் கடல் போல் தோன்றல காடு இறந்தோரே – உடைந்த அலைகளின் நுரைத் துளிகள் போன்று பரவிக் கிடந்ததால் கடலின் கரையைப் போல் தோன்றுதல் உடைய காட்டினைக் கடந்துச் சென்ற நம் தலைவர் (முன் கடல் போல் – கடல் முன் போல், இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 2, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கோழ் இலை வாழைக் கோள் மிகு பெருங்குலை
ஊழுறு தீங்கனி உண்ணுநர்த் தடுத்த
சாரல் பலவின் சுளையொடு ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன், அயலது 5
கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது,
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்,
குறியா இன்பம் எளிதின் நின் மலைப்
பல் வேறு விலங்கும் எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கெவன் அரிய 10
வெறுத்த ஏஎர் வேய் புரை பணைத்தோள்
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு, நின் மாட்டு
இவளும் இனையள் ஆயின், தந்தை
அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக்
கங்குல் வருதலும் உரியை, பைம்புதல் 15
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன
நெடுவெண்திங்களும் ஊர் கொண்டன்றே. 17
பாடல் பின்னணி: தலைவன் தலைவியை வரைய எண்ணாது களவில் வந்தொழுகுகின்றான். தலைவி இற்செறிக்கப்பட்டாள் என்பதனை அவனுக்கு அறிவுறுத்தி, வரைவு வேண்டுகின்றாள் தோழி.
பொருளுரை: வளப்பம் மிக்க இலைகளையுடைய வாழை மரங்களின் காய்த்தல் மிகுந்த பெரிய குலைகளிலிருந்து உதிர்ந்த இனிய கனிகளாலும், பிறவற்றை உண்ணாதபடி அவற்றை உண்ணுபவர்களைத் தடுத்த, முதிர்ச்சி அடைந்த, பக்கமலையில் உள்ள பலாவின் உதிர்ந்த சுளைகளாலும், பாறையில் உள்ள நெடிய சுனையில் உண்டாகிய முற்றிய கள்ளை அறியாது உண்ட ஆண்குரங்கு, அருகில் உள்ள மிளகுக்கொடிகள் படர்ந்திருக்கும் சந்தன மரத்தில் ஏறாது, நறுமண மலர்களால் ஆன படுக்கையில் மகிழ்ந்து உறங்கும், எதிர்பாராது வந்த இன்பத்தை நின் மலையில் பல்வேறு விலங்குகளும் அடையும் நாடனே!
நீ அடைய விரும்பும் இன்பங்கள் நினக்கு எவ்வாறு அரியவை ஆகும்? மிக்க அழகுடைய மூங்கில் போன்ற பருத்த தோள்களையுடைய இவள், நின் மேல் உள்ள காதலால், நிறுத்தி வைக்க இயலாத நெஞ்சத்தை உடையவளாய் இருக்கின்றாள். இவள் தந்தையின் அரிய காவல் தொழிலையுடைய காவலர் சோர்வுற்று இருக்கும் பொழுதில், மறைந்து இரவில் வருவதற்கும் நீ உரியை. பசிய புதர்கள் சூழ்ந்த வேங்கை மரங்களில் ஒளிரும் மலர்க்கொத்துக்கள் விரிந்துள்ளன. மிக்க வெண்மையுடைய நிலவும் முற்றிலும் வளர்ந்தது.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘களனும் பொழுதும் வரை நிலை விலக்கி காதல் மிகுதி உளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என்பதனாற் கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ என்னுஞ் சூத்திர உரையில் இச் செய்யுளை எடுத்துக்காட்டி, ‘விலங்கும் எய்தும் நாட’ என்று அந்நாட்டினை இறப்பக் கூறி, இந் நாடுடைமையிற் ‘குறித்த இன்பம் நினக்கெவன் அரிய’ என வரைதல் வேண்டியவாறும், வேங்கை விரிந்ததனால் தினை அறுத்தலின் இற்செறிப்புக் கூறியவாறும், ‘கங்குல் வருதலும் உரியை’ எனப் பகற்குறி மறுத்து இரவுக் குறி நேர்வாள் போல் கூறி, ‘நெடுவெண்திங்களும் ஊர் கொண்டன்றே’ என்று அதனையும் மறுத்து வரைதற்கு நல்ல நாளெனக் கூறி வரைவு கடாயவாறுங் காண்க, என்றார் நச்சினார்க்கினியர். இறப்பக் கூறி – மிகைப்படக் கூறி. உள்ளுறை – பழைய உரை – கடுவனானது தேனை அறியாது நுகர்ந்து பின்பு தன் தொழிலாகிய மரம் ஏறுதல் மாட்டாது, வேறோரிடத்துச் செல்லவும் மாட்டாது, தனக்கு அயலாகிய சந்தனத்தின் நிழலில் பூமேலே உறங்கினாற் போல, நீயும் இக்களவொழுக்கமாகிய இன்பம் நுகர்ந்து, நினது தொழிலாகிய அறநெறியையும் தப்பி இக்களவினை நீங்கி வரையுமாட்டாது, இக்களவொழுக்கமாகிய இன்பத்திலேயே மயங்கா நின்றாய் என்றவாறு. பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘ வேங்கையும் இணர் விரிந்தன’ என்றது தினை அரிக்கப்பட்டமையால் இனி தலைவியை நீ இப்புனத்தில் காண்பதும் கூடாது என்று குறிப்பால் உணர்த்தியபடியாம். ‘கங்குல் வருதும் உரியை’ என்றது, பகற்குறியிடத்தே தலைவி வரவொண்ணாதபடி இற்செறிக்கப்பட்டனள் என்று குறிப்பால் அறிவுறுத்தியவாறாம். ‘நிறுப்ப நில்லா நெஞ்சமொடு, நின் மாட்டு இவளும் இனையள்’ என்றது, நீ விரைவில் வந்து மணம் கொள்ளாய் எனில் எம் பெருமாட்டி பிரிவாற்றாமையால் இறந்துபடுதலும் கூடும் என்று வரைவு முடுக்கியபடியாம். ‘வெறுத்த ஏஎர் வேய் புரை பணைத்தோள்’ என்றது இப்பொழுது பிரிவாற்றாமையால் அழகிழந்து மெலிந்துள்ளன காண்! என்று தலைவியின் ஆற்றாமை மிகுதியை குறிப்பால் உணர்த்தியபடியாம். சுளையொடு (3) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – சுளையால். ஒப்புமை – குறிஞ்சிப்பாட்டு 187–191 – பழு மிளகு உக்க பாறை நெடுஞ்சுனை முழு முதற் கொக்கின் தீங்கனி உதிர்ந்தென புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின் நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல் நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்ச் சாறு கொள் ஆங்கண் விழவுக் களம் நந்தி அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள் கயிறு ஊர் பாணியின் தளரும்.
சொற்பொருள்: கோழ் இலை வாழைக் கோள் மிகு பெருங்குலை – வளவிய இலைகளையுடைய வாழை மரங்களின் காய்த்தல் மிகுந்த பெரிய குலைகள், ஊழுறு தீங்கனி – முதிர்ச்சி அடைந்த இனிய கனிகள், உண்ணுநர்த் தடுத்த – பிறவற்றை உண்ணாதபடி அவற்றை உண்ணுபவர்களைத் தடுத்த, சாரல் பலவின் சுளையொடு – பக்கமலையில் உள்ள பலாவின் சுளைகளால், ஊழ்படு – முற்றிய, பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல் அறியாது உண்ட கடுவன் – பாறையில் உள்ள நெடிய சுனையில் உண்டாகிய முற்றிய கள்ளை அறியாது உண்ட ஆண்குரங்கு, அயலது கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது – அருகில் உள்ள மிளகுக்கொடிகள் படர்ந்திருக்கும் சந்தன மரத்தில் ஏறாது, நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் – நறுமண மலர்களால் ஆன படுக்கையில் மகிழ்ந்து உறங்கும், குறியா இன்பம் எளிதின் நின் மலைப் பல் வேறு விலங்கும் எய்தும் நாட – எதிர்பாராது வந்த இன்பத்தை நின் மலையில் பல்வேறு விலங்குகளும் அடையும் நாடனே, குறித்த இன்பம் நினக்கெவன் அரிய – நீ அடைய விரும்பும் இன்பங்கள் நினக்கு எவ்வாறு அரியவை ஆகும், வெறுத்த ஏஎர் வேய் புரை பணைத்தோள் நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின் மாட்டு இவளும் இனையள் ஆயின் – மிக்க அழகுடைய மூங்கில் போன்ற பருத்த தோள்களையுடைய இவள் நின் மேல் உள்ள காதலால் நிறுத்தி வைக்க இயலாத நெஞ்சத்தை உடையவளாய் (வெறுத்த – மிகுதியான, ஏஎர் – அளபெடை, புரை – உவம உருபு), தந்தை அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக் கங்குல் வருதலும் உரியை – இவள் தந்தையின் அரிய காவல் தொழிலையுடைய காவலர் சோர்வுற்று இருக்கும் பொழுதில் மறைந்து இரவில் வருவதற்கும் உரியை , பைம்புதல் வேங்கையும் ஒள் இணர் விரிந்தன – பசிய புதர்கள் சூழ்ந்த வேங்கை மரங்களில் ஒளிரும் மலர்க்கொத்துக்கள் விரிந்துள்ளன (வேங்கை மரம் – Kino trees, Pterocarpus marsupium), நெடுவெண் நிலவும் திங்களும் ஊர் கொண்டன்றே – மிக்க வெண்மையுடைய நிலவும் முற்றிலும் வளர்ந்தது (கொண்டன்றே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 3, எயினந்தை மகனார் இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
இருங்கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங்கால் ஓமைக் காண்பு இன் பெருஞ்சினை
கடியுடை நனந்தலை ஈன்று இளைப்பட்ட
கொடுவாய்ப் பேடைக்கு அல்கு இரை தரீஇய,
மான்று வேட்டு எழுந்த செஞ்செவி எருவை 5
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்
துளங்கு நடை மரையா வலம்படத் தொலைச்சி,
ஒண் செங்குருதி உவற்றி உண்டு அருந்துபு
புலவுப் புலி துறந்த கலவுக் கழிக் கடு முடை
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும், 10
புல் இலை மராஅத்த அகல் சேண் அத்தம்
கலந்தரல் உள்ளமொடு கழியக் காட்டிப்
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்
வாய் போல் பொய்ம்மொழி எவ்வமென் களைமா,
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ்வாய், 15
அம் தீம் கிளவி, ஆயிழை மடந்தை
கொடுங்குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடுஞ்சேண் ஆரிடை விலங்கும் ஞான்றே? 18
பாடல் பின்னணி: முன்பு நெஞ்சினால் தூண்டப்பட்டுப் பொருள் ஈட்டி வந்த தலைவனை, மீண்டும் பொருள் ஈட்டுமாறுத் தூண்டும் நெஞ்சிடம் அவன் கூறியது.
பொருளுரை: பெரிய கழியில் வாழும் முதலையின் முதுகுத் தோல் போன்ற தோற்றமுடைய, கரிய அடியையுடைய ஓமை மரத்தின் காண்பதற்கு அரிய பெரிய கிளையின் காவலுடைய அகன்ற இடத்தில், ஈன்று காக்கப்பட்ட வளைந்த வாயை உடைய தன் பெடையின் உயிர் தங்குதல் பொருட்டு இரையைத் தேடித் தர வேண்டி, மனம் கலங்கி எழுந்த சிவந்த செவியையுடைய ஏருவைச் சேவல், வானைத் தீண்டும் உச்சியையுடைய சிறப்பான மலைப்பக்கத்தில், அசைந்த நடையையுடைய மரை ஆவினை வலப்பக்கத்தில் விழும்படிக் கொன்று, அதன் ஒள்ளிய சிவந்த குருதியை உறிஞ்சிக் குடித்துவிட்டு, புலால் நாறும் புலி கைவிட்டுச் சென்ற மூட்டுகளிலிருந்து நீக்கப்பட்ட ஊனை, கள்வர் போன்று விடாது கவர்ந்து செல்லும், புல்லிய இலைகளையுடைய கடம்ப மரங்களுடைய அகன்ற நெடிய பாலை நிலத்தில், அணிகலன்கள் ஈட்டி வரும் எண்ணத்துடன், பொருளின் சிறப்பைக் காட்டி என் பின்னால் நின்று என்னைத் தூண்டும் நெஞ்சமே!
நின் வாயின் மெய் போலும் பொய் மொழிகள், எம் துன்பத்தை எவ்வாறு நீக்கும், முருக்கம் பூ இதழ்கள் போன்ற காண்பதற்கு இனிய சிவந்த வாயையும் அழகிய இனிய சொற்களையுமுடைய, ஆராய்ந்து எடுத்த அணிகலன்களை அணிந்த நம் தலைவியின் வளைந்த காதணிக்கு மாறுபட்ட விழிகள் நம் கண் முன் தோன்றி அரிய சுரத்தில் தடுக்கும் பொழுது?
குறிப்பு: முன்னொரு காலத்தில் தன்னுடைய நெஞ்சின் தூண்டுதலால் பொருள்வயின் தலைவன் பிரிந்து மீண்டான். பின் மீண்டும் செல்லத் தூண்டிய நெஞ்சிடம் சொல்லி செலவு அழுங்கியது. பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘ஒன்றாத் தமரினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 41) என வரும் நூற்பாவின்கண் ‘ ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்’ என்பதனாற் கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இச் செய்யுளில் ‘பின்னின்று களைமா’ என்பதனை, மறுத்துரைப்பது போல நெஞ்சினை இளிவரல் பற்றிக் கூறியது, என்றார் நச்சினார்க்கினியர். ‘இன்பத்தை வெறுத்தல்’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 22) என்னுஞ் சூத்திர உரையில், எதிர் பெய்து பரிதல் என்பதற்கு ‘அம் தீம் கிளவி ……………. ஞான்றே’ என்பதனை, எடுத்துக் காட்டினர் பேராசிரியர். மேஎம் தோல் (1) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மேவும் என்பது மேஎம் எனத் திரிந்தது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முதுகிலே பொருந்திய தோல், மேவும் என்னும் செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சத்து ஈற்று உயிர் மெய் கெட்டு மேம் என நின்று ‘இன்னிசை நிரைப்ப மேஎம்’ என அளபெடுத்தது. காண்பு இன் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காணுதல் இல்லாத, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – காண்டற்கினிய. மரையா, மரை + ஆ (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆன் என்றமையால் பெண் மரை என்க. ஈன்று இளைப்பட்ட (3) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – காவற்பட்ட, பொ. வே. சோமசுந்தரனார் உரை – காத்தல் தொழிலில் ஈடுபட்ட. கலவுக் கழிக் கடு முடை (9) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மூட்டுவாய் கழிந்த மிக்க முடை வீசும் புலால், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மூட்டினின்றும் கழிக்கப்பட்ட மிக்க ஊன். ஒப்புமை – மதுரைக்காஞ்சி 633 – இரும்பிடி மேஎந்தோல் அன்ன. காண்பு இன் (15) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காண்டற்கு இனிய, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – காண்டற்கு இனிய. தான் வேட்டையாடிப் பெற்ற விலங்கு இடது பக்கம் விழுந்தால் புலி அதனை உண்ணாது – அகநானூறு 3, 29, 238, 252, 357, 389, நற்றிணை 154, புறநானூறு 190. மரை (7) – ஒரு வித மான், காட்டு ஆ. நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80). ஈன்று இளைப்பட்ட – அகநானூறு 3, 21, 238, நற்றிணை 384. கொடுங்குழைக்கு அமர்த்த நோக்கம் (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வளைந்த குழையொடு மாறுபட்ட விழிகள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வளைந்த குழையொடு மாறுபட்ட நோக்கம். பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12, குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.
சொற்பொருள்: இருங்கழி முதலை மேஎம் தோல் அன்ன – பெரிய (கரிய) கழியில் வாழும் முதலையின் மேல் தோல் போன்ற (மேஎம் தோல் – முதுகுத் தோல், மேஎம் – அளபெடை), கருங்கால் ஓமைக் காண்பு இன் பெருஞ்சினை கடியுடை நனந்தலை – கரிய அடியையுடைய ஓமை மரத்தின் காண்பதற்கு அரிய பெரிய கிளையில் காவலுடைய அகன்ற இடத்தில், ஈன்று இளைப்பட்ட கொடுவாய்ப் பேடைக்கு அல்கு இரை தரீஇய மான்று வேட்டு எழுந்த செஞ்செவி எருவை – ஈன்று காக்கப்பட்ட வளைந்த வாயை உடைய தன் பெடையின் உயிர் தங்குதல் பொருட்டு இரையைத் தேடித் தர வேண்டி மனம் கலங்கி எழுந்த சிவந்த செவியையுடைய ஏருவைச் சேவல் (தரீஇய – அளபெடை), வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன் துளங்கு நடை மரையா வலம்படத் தொலைச்சி – வானைத் தீண்டும் உச்சியையுடைய சிறப்பான மலைச்சாரலில் (மலைப்பக்கத்தில்) அசைந்த நடையையுடைய மரை ஆவினை வலப்பக்கத்தில் விழும்படிக் கொன்று (விறல் – வெற்றி, பிற மலைகளை விட வெற்றிகரமான), ஒண் செங்குருதி உவற்றி உண்டு அருந்துபு புலவுப் புலி துறந்த கலவுக் கழிக் கடு முடை – ஒள்ளிய சிவந்த குருதியை (இரத்தத்தை) உறிஞ்சிக் குடித்துவிட்டுப் புலால் நாறும் புலி கைவிட்டுச் சென்ற மூட்டுகளிலிருந்து நீக்கப்பட்ட ஊனை (முடை – ஆகுபெயர் ஊனுக்கு), கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் – கள்வர் போன்று விடாது கவர்ந்து செல்லும் (மாந்தரின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), புல் இலை மராஅத்த அகல் சேண் அத்தம் – புல்லிய இலைகளையுடைய கடம்ப மரங்களுடைய அகன்ற நெடிய பாலை நிலத்தில் (மராஅம் – அளபெடை, அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது, கடம்ப மரம், Anthocephalus cadamba, Kadampam oak), கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டிப் பின் நின்று துரக்கும் நெஞ்சம் – அணிகலன்கள் ஈட்டி வரும் எண்ணத்துடன் பொருளின் சிறப்பைக் காட்டி என் பின்னால் நின்று என்னைத் தூண்டும் நெஞ்சமே (நெஞ்சம் – விளி),
நின் வாய் வாய் போல் பொய்ம்மொழி – நின் வாயின் மெய் போலும் பொய் மொழிகள், எவ்வமென் களைமா – எம் துன்பத்தை எவ்வாறு நீக்கும் (களைமா – களையும் வழி, செய்யுள் விகாரம்), கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ்வாய் அம் தீம் கிளவி ஆயிழை மடந்தை – முருக்கம் பூ இதழ்கள் போன்ற காண்பதற்கு இனிய சிவந்த வாயையும் அழகிய இனிய சொற்களையுமுடைய ஆராய்ந்து எடுத்த அணிகலன்களையும் அணிந்த நம் தலைவி (செவ்வாய் – பண்புத்தொகை), கொடுங்குழைக்கு அமர்த்த நோக்கம் நெடுஞ்சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே – வளைந்த காதணிக்கு மாறுபட்ட விழிகள் கண் முன் தோன்றி அரிய சுரத்தில் தடுக்கும் பொழுது (கொடுங்குழைக்கு – கொடுங்குழையொடு, வேற்றுமை மயக்கம், ஞான்றே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 4, குறுங்குடி மருதனார், முல்லைத் திணை, தோழி தலைவியிடம் சொன்னது
முல்லை வைந்நுனை தோன்ற, இல்லமொடு
பைங்கால் கொன்றை மெல் பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்
பரல் அவல் அடைய இரலை தெறிப்ப,
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப, 5
கருவி வானம் கதழுறை சிதறிக்
கார் செய்தன்றே கவின் பெறு கானம்,
குரங்கு உளைப் பொலிந்த கொய் சுவல் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன வாங்கு வள் பரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த 10
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,
உவக்காண், தோன்றும், குறும்பொறை நாடன்
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,
நெடும் பெருங்குன்றத்து அமன்ற காந்தள் 15
போது அவிழ் அலரின் நாறும்
ஆய் தொடி அரிவை, நின் மாண் நலம் படர்ந்தே. 17
பாடல் பின்னணி: ‘நம் தலைவன் குறித்த கார்காலம் தொடங்கிவிட்டது. அவன் வந்துவிடுவான்’ என்று பருவ வரவை தலைவிக்குக் காட்டி, நீ வருந்தற்க என அவளை வற்புறுத்தியது.
பொருளுரை: ஆராய்ந்த வளையல்களை அணிந்த அரிவையே! முல்லைக் கொடிகளின் கூரிய நுனியையுடைய அரும்புகள் தோன்றவும், தேற்றா மரங்களின் அரும்புகளுடன் பசிய அடியையுடைய கொன்றை மரங்களின் முகைகள் மெல்லிய கட்டை நெகிழ்த்து மலரவும், இரும்பை முறுக்கினாற் போலும் கரிய பெரிய கொம்பையுடைய ஆண் மான்கள் பரற்கற்களையுடைய பள்ளங்களை அடைந்து துள்ளித் திரியவும், அகன்ற உலகில் நீர் இல்லாது வருந்திய மக்களின் வருத்தம் தீரவும், மின்னல் இடி முதலிய தொகுதிகளையுடைய முகில்கள் விரைந்து விழும் மழைத் துளிகளைச் சிதறிக் கார் பருவத்தைத் தோற்றுவித்துவிட்டன. காடு அழகை அடைந்துள்ளது.
குறிய மலைகளையுடைய நாட்டின் தலைவன், ஆரவாரத்தையுடைய விழாவை உடைய உறந்தை என்னும் ஊரின் கிழக்கே உள்ள பெரிய மலையில் உள்ள நெருங்கிய காந்தளின் அரும்பு அவிழ்ந்த மலர்கள் போல் நாறும் நின் மாட்சிமையுடைய அழகை எண்ணி, வளைந்த பொலிந்த கொய்யப்பட்ட பிடரி மயிரையுடைய குதிரைகள் இழுக்கும் கடிவாளம் நெகிழ, மலர்கள் பொருந்திய சோலையில் தம் துணையுடன் வசிக்கும் பூந்தாதினை உண்ணும் வண்டுகள் மணியின் ஒலியால் கலங்கும் என அஞ்சி, மணிகளின் நாவை ஒலிக்காதிருக்கும்படிக் கட்டிய மாண்புடைய தொழிலமைந்த தேரினை உடையவனாக வருவான். அது உவ்விடத்தே தோன்றும்.
குறிப்பு: தோழி தலைவியைப் பருவங்காட்டி வற்புறுத்தியது. பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘வகைபட வந்த கிளவி’ என்பதனால் அமைத்துக் கொள்க. இதனை ‘முல்லைக்கு முதலும் கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது’ என எடுத்துக்காட்டினர் நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம், அகத்திணையியல் 3). ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘ஏனோர் மருங்கினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 24) என்னும் சூத்திர உரையில் இச் செய்யுளை எடுத்துக்காட்டி, ‘இதனுள் முல்லைக்கு உரித்தாகிய நிலமும் காலமும் கருப்பொருளும் இருத்தலாகிய உரிப்பொருளும் வந்தவாறு கண்டு கொள்க’ எனவும், ‘முதல் கரு உரிப்பொருள்’ என்னுஞ் சூத்திரவுரையில் இதனை எடுத்துக்காட்டி, ‘முல்லைக்கு முதலும் கருவும் வந்து, உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது’ எனவும் முறையே கூறுவர் இளம்பூரணர். ‘குரங்குளை …… பரிய’ என்பதனையும், ‘இரும்பு ……… தெறிப்ப’ என்பதனையும், மொழி மாற்றுப் பொருளுக்கு எடுத்துக் காட்டினர் நச்சினார்க்கினியர். நுனை (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நுனையுடைய அரும்புகள். கருவி வானம் (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மின்னல் இடி முதலிய தொகுதிகளையுடைய முகில்கள். கறங்கு இசை விழவின் (14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இசை கறங்கு விழவின் என மாற்றுக. வரலாறு – உறந்தை. கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58). வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91). பறவை – இச்சொல் சங்கப்பாடல்களில் இன்றைய பயன்பாட்டில் உள்ளவாறும் உள்ளது. தேனீ, வௌவால், தும்பி ஆகிவற்றைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேனீ ஆக – அகநானூறு 4–11, 132–10, 332–8, 371–13, நற்றிணை 55–5, 161–4, 185–9, ஐங்குறுநூறு 82–3, கலித்தொகை 22–7, பரிபாடல் 7–6, புறநானூறு 70–11, பதிற்றுப்பத்து 66–16, பெரும்பாணாற்றுப்படை 183, 229, வௌவால் ஆக – அகநானூறு 244–2, குறுந்தொகை 201–3, 352–2, புறநானூறு 370–11, தும்பி ஆக – நற்றிணை 277–9. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – துணையோடு வதியும் வண்டு பிரிந்து வருந்துதற்கும் அஞ்சுவான் தலைவனாகலின் அவன் நின்னைப் பிரிந்திருக்க ஒருப்படான் என்பது குறிப்பு. பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவன் வண்டுகட்கு செவி அறிவின்மை அறிந்தும் அவை பேதுறும் என அஞ்சினான் என்றது தலைவனது அன்புமடம் தோழி கூறியவாறாகும். இனி, இது தோழி தலைவியை ஆற்றுதற் பொருட்டுக் கூறுகின்ற படைத்து மொழிக்கிளவி ஆகலான் அவள் தன் பேதமையால் இங்ஙனம் கூறினாள் எனினுமாம்.
சொற்பொருள்: முல்லை வைந்நுனை தோன்ற – முல்லைக் கொடிகளின் கூரிய நுனியையுடைய அரும்புகள் தோன்ற, இல்லமொடு பைங்கால் கொன்றை மெல் பிணி அவிழ – தேற்றா மரங்களின் அரும்புகளுடன் பசிய அடியையுடைய கொன்றை மரங்களின் முகைகள் மெல்லிய கட்டை நெகிழ்த்து மலர (இல்ல மரங்கள் – Thetra trees, Strychnos potatorum Linn பைங்கால் – பண்புத்தொகை, கொன்றை – Laburnum, Golden Shower Tree, Cassia fistula), இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின் பரல் அவல் அடைய இரலை தெறிப்ப – இரும்பை முறுக்கினாற் போலும் கரிய பெரிய கொம்பையுடைய ஆண் மான்கள் பரற்கற்களையுடைய பள்ளங்களை அடைந்து துள்ளித் திரிய, மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப – அகன்ற உலகில் நீர் இல்லாது வருந்திய மக்களின் வருத்தம் தீர (ஞாலம் – ஆகுபெயர் மக்கட்கு), கருவி வானம் கதழுறை சிதறிக் கார் செய்தன்றே – மின்னல் இடி முதலிய தொகுதிகளையுடைய முகில்கள் விரைந்து விழும் மழைத் துளிகளைச் சிதறிக் கார் பருவத்தைத் தோற்றுவித்துவிட்டன (கதழுறை – கதழ் உறை, வினைத்தொகை, செய்தன்றே – ஏகாரம் அசைநிலை), கவின் பெறு கானம் – காடு அழகை அடைந்துள்ளது, குரங்கு உளைப் பொலிந்த கொய் சுவல் புரவி – வளைந்த பொலிந்த கொய்யப்பட்ட பிடரி மயிரையுடைய குதிரைகள் (குரங்கு – வளைந்த, உளை – பிடரி மயிர், சுவல் – பிடரி), நரம்பு ஆர்த்தன்ன – யாழின் நரம்பு ஒலித்தாற்போன்ற, வாங்கு வள் பரிய – இழுக்கும் கடிவாளம் நெகிழ, பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாது உண் பறவை – மலர்கள் பொருந்திய சோலையில் தம் துணையுடன் வசிக்கும் பூந்தாதினை உண்ணும் வண்டுகள், பேதுறல் அஞ்சி – கலங்கும் என அஞ்சி, மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன் – மணிகளின் நாவை ஒலிக்காதிருக்கும்படிக் கட்டிய மாண்புடைய தொழிலமைந்த தேரினை உடையவன், உவக்காண் தோன்றும் – உவ்விடத்தே தோன்றும், குறும்பொறை நாடன் – குறிய மலைகளையுடைய நாட்டின் தலைவன், கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது நெடும் பெருங்குன்றத்து – ஆரவாரத்தையுடைய விழாவை உடைய உறந்தை என்னும் ஊரின் கிழக்கே உள்ள பெரிய மலையில், அமன்ற காந்தள் போது அவிழ் அலரின் நாறும் – நெருங்கிய காந்தளின் அரும்பு அவிழ்ந்த மலர்கள் போல் நாறும் (அலரின் – இன் உருபு ஒப்புப்பொருளாது, ஐந்தாம் வேற்றுமை உருபு), ஆய் தொடி அரிவை – ஆராய்ந்த வளையல்களை அணிந்த அரிவையே, நின் மாண் நலம் படர்ந்தே – நின் மாட்சிமையுடைய அழகை எண்ணி (படர்ந்தே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 5, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை, தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்,
விளி நிலை கொள்ளாள், தமியள், மென்மெல
நலமிகு சேவடி நிலம் வடுக்கொளாஅக்,
குறுக வந்து தன் கூர் எயிறு தோன்ற
வறிது அகத்து எழுந்த வாயல் முறுவலள், 5
கண்ணியது உணரா அளவை ஒண்ணுதல்,
வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்,
முளிந்த ஓமை முதையலம் காட்டுப்
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி
மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப, 10
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன்
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி
பாத்தியன்ன குடுமிக் கூர்ங்கல்
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர,
பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம் 15
இறப்ப எண்ணுதிர் ஆயின், ‘அறத்தாறு
அன்று’ என மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன ஆக என்னுநள் போல,
முன்னம் காட்டி, முகத்தின் உரையா,
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி, 20
பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு,
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூ நீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை, மா மலர்
மணி உரு இழந்த அணி அழி தோற்றம் 25
கண்டு கடிந்தனம் செலவே, ஒண்தொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ, பிரிதும் நாம் எனினே. 28
பாடல் பின்னணி: பொருள்வயின் பிரியக் கருதிய தலைவன், தன் நெஞ்சிடம் சொல்லிச் செலவு அழுங்கியது.
பொருளுரை: நெஞ்சே! ஒளியுடைய நெற்றியையுடைய நம் தலைவி, நாம் செய்யும் பெரும் பாராட்டைப் பொறுக்க முடியாது மாறுபட்ட முகத்தையுடையவளாய், நாம் அழைப்பதைக் கேளாள் ஆகத் தனித்து இருப்பவளாக, மென்மெல்ல நடந்துச் செல்லும் இயல்புடைய அழகு மிகுந்த சிவந்த காலடிகள் நிலத்தில் சுவடுகள் தோன்ற நம் அருகில் வந்து, தன் கூரிய பற்கள் தோன்றச் சிறிது தன்னிடத்தே எழுந்த உண்மை அல்லாத முறுவல் உடையவளாக, நாம் எண்ணியதை உணரும் முன்பே, நம் பொருள் ஈட்டும் பொருட்டுப் பிரிதலுக்கு உடன்படாத எண்ணத்துடன், உலர்ந்த ஓமை மரங்களையுடைய முதிய காட்டில் நெல்லி மரத்தின் பளிங்கு போன்ற பல காய்கள், உயர்ந்த பெரிய பாறைகளில் சிறுவர்கள் விளையாடும்பொருட்டு ஈட்டி வைத்திருக்கும் வட்டுக்களைப் போல் உதிர்ந்துக் கிடக்கும், கதிரவனின் கதிர்கள் காயும் பக்க மலைகளில் தீட்டப்பட்டவைப் போல் தேய்ந்த முனையைத் தோற்றுவித்து, பகுத்தாற்போல் மேல்பகுதி உடைய கூரிய கற்கள் விரலின் முனையைச் சிதைக்கும், ஒழுங்கான நிலையையுடைய, வழிகளைக் கொண்ட பரல் கற்களையுடைய மேட்டு நிலம் கொண்ட வளமை இல்லாத காட்டைக் கடக்க எண்ணுவீர் ஆனால், ‘யான் நின்னைப் பிரிவது அறநெறி இல்லை என்று நீவிர் கூறிய பண்டைய சொற்கள் ஒழிவதாக’ எனக் கூறுபவள் போல், அக்குறிப்பினைத் தன் முகக்குறிப்பால் காட்டி, ஓவியம் நிற்பதுபோல் நின்று, தான் உடன்படாமையை நினைந்து, தன் கண்ணின் பாவையை மறைக்கும் கண்ணீர் பொருந்திய பார்வையுடன், தன் மார்பில் அணைத்த புதல்வனின் புல்லிய தலையில் உள்ள தூய நீர் தந்த ஒத்த மலர்களால் தொடுத்த மாலையை மோந்து பெருமூச்சு விட்ட பொழுதில், அம்மாலையில் உள்ள பெரிய மலர்கள் அந்த வெப்பத்தால் கருகி நீலமணி நிறத்தை இழந்த அழகு அழிந்த தோற்றத்தைக் கண்டு, செல்லுவதை யாம் தவிர்த்தோம். ஒளிரும் வளையல்களை அணிந்த நம் தலைவி நாம் அருகில் இருக்கும்பொழுதும் வருந்தும் தன்மையுடையவள். உயிர் பிழைக்க மாட்டாள் நாம் பிரிவோம் எனக் கூறினால்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘ஒன்றாத் தமரினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 41) என வரும் நூற்பாவின்கண் ‘அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘கரணத்தின் அமைந்து’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என்னுஞ் சூத்திர உரையில் ‘கை விடின் அச்சமும்’ என்பதற்கு இளம்பூரணர் இச் செய்யுளை எடுத்துக் காட்டினர். ‘செலவு அழுங்கல்’ (தொல்காப்பியம், கற்பியல் 44) என்னுஞ் சூத்திர உரையில், ‘மணியுறு …………. பிரிதும் நாம் எனினே’ என்னும் பகுதிக்குப் பேராசிரியர் எடுத்துக்காட்டி, இது வன்புறை குறித்துச் செலவு அழுங்குதலிற் பாலை ஆயிற்று என்றார். ஒப்புமை – நற்றிணை 177 – உண்கண் பாவை அழிதரு வெள்ளம், அகநானூறு 5 – பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு, அகநானூறு 229 – பல்லிதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப. வாய் அல் முறுவலள் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொய்யாகிய நகைப்பினை உடையவள் ஆகி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மெய்ம்மை அல்லாத முறுவல் உடையவளாகி. முன்னம் காட்டி (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறிப்புக் காட்டி. புறநானூறு 3 – முன்னம் முகத்தின் உணர்ந்து. உரையா – உரைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. கொளாஅ – கொள்ள என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40).
சொற்பொருள்: அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள் – நாம் செய்யும் பெரும் அன்பைப் பொறுக்க முடியாதவளாய் மாறுபட்ட முகத்தையுடையவளாய், விளி நிலை கொள்ளாள் – நாம் அழைப்பதைக் கேளாள், தமியள் – தனியள், மென்மெல நலமிகு சேவடி நிலம் வடுக்கொளாஅக் குறுக வந்து – மென்மெல்ல செல்லும் இயல்புடைய அழகு மிகுந்த சிவந்த காலடிகள் நிலத்தில் சுவடுகள் தோன்ற அருகில் வந்து (வடுக்கொளாஅ –அளபெடை), தன் கூர் எயிறு தோன்ற வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள் – தன் கூரிய பற்கள் தோன்றச் சிறிது தன்னிடத்தே எழுந்த உண்மை அல்லாத முறுவல் உடையவளாக (வறிது – உரிச்சொல்), கண்ணியது உணரா அளவை – நாம் எண்ணியதை உணரும் முன்பே, ஒண்ணுதல் – ஒளியுடைய நெற்றியையுடைய நம் தலைவி (ஒண்ணுதல் – அன்மொழித்தொகை), வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன் – நம் பொருள் ஈட்டும் பொருட்டுப் பிரிதலுக்கு உடன்படாத எண்ணத்துடன், முளிந்த ஓமை முதையலம் காட்டுப் பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப உதிர்வன படூஉம் – உலர்ந்த ஓமை மரங்களையுடைய முதிய காட்டில் நெல்லி மரத்தின் பளிங்கு போன்ற பல காய்கள் உயர்ந்த பெரிய பாறைகளில் ஈட்டி வைத்திருக்கும் வட்டுக்களைப் போல் உதிர்ந்துக் கிடக்கும் (ஓமை மரம் – Dillenia indica, Toothbrush Tree, ஏய்ப்ப – உவம உருபு, முதையலம் – முதையல் அம், அம் சாரியை, பளிங்கத்து – பளிங்கு, அத்துச் சாரியை, ஏய்ப்ப – உவம உருபு, படூஉம் – அளபெடை), கதிர் தெறு கவாஅன் மாய்த்த போல மழுகு நுனை தோற்றி – கதிரவனின் கதிர்கள் காயும் பக்க மலைகளில் தீட்டப்பட்டவைப் போல் தேய்ந்த முனையைத் தோற்றுவித்து (கவாஅன் – அளபெடை), பாத்தியன்ன குடுமிக் கூர்ங்கல் விரல் நுதி சிதைக்கும் – பகுத்தாற்போல் மேல்பகுதி உடைய கூரிய கற்கள் விரலின் முனையைச் சிதைக்கும், நிரை நிலை – ஒழுங்கான நிலையையுடைய, அதர பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம் இறப்ப எண்ணுதிர் ஆயின் – வழிகளைக் கொண்ட பரல் கற்களையுடைய மேட்டு நிலம் கொண்ட வளமை இல்லாத காட்டைக் கடக்க எண்ணுவீர் ஆனால், ‘அறத்து ஆறு அன்று’ என மொழிந்த தொன்றுபடு கிளவி – யான் நின்னைப் பிரிவது அறநெறி இல்லை என்று நீவிர் கூறிய பண்டைய சொற்கள், அன்ன ஆக என்னுநள் போல – அவ்வாறு ஒழிவதாக எனக் கூறுபவள் போல், முன்னம் காட்டி முகத்தின் உரையா ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி – அக்குறிப்பினைத் தன் முகக்குறிப்பால் காட்டி ஓவியம் போல் நின்று உடன்படாமையை நினைந்து (செய்தியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு – தன் கண்ணின் பாவையை மறைக்கும் கண்ணீர் பொருந்திய பார்வையுடன் (பனி – ஆகுபெயர் கண்ணீருக்கு), ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத் தூ நீர் பயந்த துணையமை பிணையல் மோயினள் உயிர்த்த காலை – தன் மார்பில் அணைத்த புதல்வனின் புல்லிய தலையில் உள்ள தூய நீர் தந்த ஒத்த மலர்களால் தொடுத்த (இரட்டையாக அமையும்படி தொடுத்த) மாலையை மோந்து பெருமூச்சு விட்ட பொழுதில் (மோயினள் – முற்றெச்சம்), மா மலர் மணி உரு இழந்த அணி அழி தோற்றம் கண்டு – பெரிய மலர்கள் அந்த வெப்பத்தால் கருகி நீலமணி நிறத்தை இழந்த அழகு அழிந்த தோற்றத்தைக் கண்டு, கடிந்தனம் செலவே – செல்லுவதை யாம் தவிர்த்தோம், ஒண்தொடி உழையம் ஆகவும் இனைவோள் – ஒளிரும் வளையல்களை அணிந்த நம் தலைவி நாம் அருகில் இருக்கும்பொழுதும் வருந்தும் தன்மையுடையவள் (ஒண்தொடி – அன்மொழித்தொகை), பிழையலள் – உயிர் பிழைக்க மாட்டாள், மாதோ – மாது ஓ அசைநிலைகள், பிரிதும் நாம் எனினே – நாம் பிரிவோம் எனக் கூறினால் (எனினே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 6, பரணர், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை,
இழை அணி பணைத்தோள், ஐயை தந்தை,
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்,
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண், 5
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
குழை மாண் ஒள்ளிழை நீ வெய்யோளொடு,
வேழ வெண்புணை தழீஇப் பூழியர்
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு,
ஏந்து எழில் ஆகத்துப் பூந்தார் குழைய 10
நெருநல் ஆடினை புனலே இன்று வந்து
ஆக வன முலை அரும்பிய சுணங்கின்,
மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம்
முதுமை எள்ளல் அஃது அமைகும் தில்ல, 15
சுடர்ப் பூந்தாமரை நீர் முதிர் பழனத்து
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி,
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்
முள்ளரைப் பிரம்பின் மூதரில் செறியும்
பல் வேல் மத்தி கழாஅர் அன்ன எம் 20
இளமை சென்று தவத் தொல்லஃதே,
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி எமக்கே? 22
பாடல் பின்னணி: பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனிடம் தலைவி கூறியது.
பொருளுரை: மணிகளை உள்ளே கொண்ட சிலம்பினையும், ஆம்பல் மலர்களால் தொடுத்த அழகிய மாலையையும், அரத்தால் பிளந்து உருவாக்கிய அழகிய வளையல்களால் பொலிந்த முன்கையையும், அணிகலன்கள் அணிந்த மூங்கிலை ஒத்த தோள்களையுமுடைய ஐயை என்பவளின் தந்தையாகிய, மழைவளம் தோற்றுவித்த நெற் குவியல்கள் கொண்ட பெரும் வள்ளன்மையுடைய தித்தனின் உறந்தையில், மூங்கில் ஓடக்கோல் நிலைத்தல் இல்லாத காவிரியின் பெரும் நீர்ப்பெருக்கில், குழையையும் மாட்சிமைப்பட்ட ஒளிரும் பிற அணிகலன்களையும் அணிந்த, நின்னால் விரும்பப்பட்ட பரத்தையுடன், வேழக்கரும்பால் ஆகிய வெள்ளை நிறத் தெப்பத்தைக் கொண்டு பூழியர் நாட்டவரின் குளத்தில் விளையாடும் யானைகளைப் போன்று (களிறும் பிடியும் போன்று) முகமலர்ச்சியுற்று அங்கு, உயர்ந்த அழகிய மார்பில் அணிந்த மலர்மாலை அழகுகெட நேற்று நீ புனலில் விளையாடினாய்.
இன்று வந்து மார்பிலுள்ள முலையில் தோன்றிய தேமலையும் குற்றமற்ற கற்பினையுமுடைய என் புதல்வன் தாயே என்று வஞ்சனைப் பொருந்திய பொய்ச் சொற்களைக் கூறி, என் முதுமையை நீ எள்ளாதே. அது பொருந்தும். தீப்போலும் தாமரை மலர்களையுடைய நீர் மிக்க வயல்களில் அழகிய உட்துளையுடைய வள்ளையின் நுண்ணிய கொடிகளை உழக்கி வாளை மீன்களை உண்ட கூரிய பற்களையுடைய நீர் நாய், முட்கள் பொருந்திய பிரம்பின் பழைய தூறுகளில் தங்கி இருக்கும், பல வேல்களையுடைய மத்தி என்பவனின் கழாஅர் என்னும் ஊரினை ஒத்த, என் இளமை கழிந்து மிகவும் தொன்மையாயிற்று. நின் பொய்மொழிகள் எமக்கு எவ்வாறு இனிமை செய்யும்?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனைப் புலம்பு நனி காட்டி இயன்ற நெஞ்சம் தலைப் பெயர்த்து அருக்கி எதிர் பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்’ என வரும் விதி கொள்க. ஆங்கு (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவ்விடத்தே, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை –அசைநிலை. மூங்கில் நீரில் மறைதல்: கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம் – அகநானூறு 6, கழை மாய் நீத்தம் – அகநானூறு 72, நற்றிணை 7, கழை அழி நீத்தம் – அகநானூறு 341. பிண்ட நெல்லின் அள்ளூர் – அகநானூறு 46. வரலாறு – ஐயை, தித்தன், காவிரி, பூழியர் நாடு, மத்தி, கழாஅர். உள்ளுறை – பழைய உரை – நீர்நாய் வாளைக்குக் காவலாகிய வள்ளையின் நிலையை நெகிழ்த்து இழிந்ததாகிய வாளையை நுகர்ந்து பிரம்பாகிய முதிய தூற்றிலே தங்கினாற்போல, நீயும் பரத்தையர்க்குக் காவலாகிய தாய் முதலாயினாரது நிலைமையை நெகிழ்த்துக் குலமகளிரல்லாத விலைமகளிரை நுகர்ந்து முன்பு நுமக்குண்டாகிய எங்கள் பழமைப் பற்ற ஒரு பயன் கருதாது தங்குதல் மாத்திரத்திற்கு எம் இல் வந்தீர் என்றாளாம்.
சொற்பொருள்: அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை – மணிகளை உள்ளே கொண்ட சிலம்பினையும் ஆம்பல் மலர்களால் தொடுத்த அழகிய மாலையையும், அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை இழை அணி பணைத்தோள் ஐயை தந்தை – அரத்தால் பிளந்து உருவாக்கிய அழகிய வளையல்களால் பொலிந்த முன்கையையும் அணிகலன்கள் அணிந்த மூங்கிலை ஒத்த தோள்களையுமுடைய ஐயை என்பவளின் தந்தை, மழை வளம் தரூஉம் மா வண் தித்தன் பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் – மழைவளம் தோற்றுவித்த நெற் குவியல்கள் கொண்ட பெரும் வள்ளன்மையுடைய தித்தனின் உறந்தையில் (தரூஉம் – அளபெடை), கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம் – மூங்கில் ஓடக்கோல் நிலைத்தல் இல்லாத காவிரியின் நீர்ப்பெருக்கில் (பெறாஅ – அளபெடை), குழை மாண் ஒள்ளிழை நீ வெய்யோளொடு – குழையையும் மாட்சிமைப்பட்ட ஒளிரும் பிற அணிகலன்களையும் அணிந்த நின்னால் விரும்பப்பட்ட பரத்தையுடன், வேழ வெண்புணை தழீஇப் பூழியர் கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து – வேழக்கரும்பால் ஆகிய வெள்ளை நிறத் தெப்பத்தைக் கொண்டு பூழியர் நாட்டவரின் குளத்தில் விளையாடும் யானைகளைப் போன்று (களிறும் பிடியும் போன்று) முகமலர்ச்சியுற்று (தழீஇ – அளபெடை, யானையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருள் தந்தது, முகன் – முகம் என்பதன் போலி), ஆங்கு ஏந்து எழில் ஆகத்துப் பூந்தார் குழைய நெருநல் ஆடினை புனலே – அங்கு உயர்ந்த அழகிய மார்பில் அணிந்த மலர்மாலை அழகுகெட நேற்று நீ புனலில் விளையாடினாய், இன்று வந்து ஆக வன முலை அரும்பிய சுணங்கின் மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி – இன்று வந்து மார்பிலுள்ள முலையில் தோன்றிய தேமலையும் குற்றமற்ற கற்பினையுமுடைய என் புதல்வன் தாயே என்று வஞ்சனைப் பொருந்திய பொய்ச் சொற்களைக் கூறி, எம் முதுமை எள்ளல் – என் முதுமையை நீ எள்ளாதே, அஃது அமைகும் – அது பொருந்தும், தில்ல – தில் ஓர் இடைச்சொல், ஈறு திரிந்து வந்தது, சுடர்ப் பூந்தாமரை நீர் முதிர் பழனத்து அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய் முள்ளரைப் பிரம்பின் மூது அரில் செறியும் – தீப்போலும் தாமரை மலர்களையுடைய நீர் மிக்க வயல்களில் அழகிய உட்துளையுடைய வள்ளையின் நுண்ணிய கொடிகளை உழக்கி வாளை மீன்களை உண்ட கூரிய பற்களையுடைய நீர் நாய் முட்கள் பொருந்திய பிரம்பின் பழைய தூறுகளில் தங்கி இருக்கும், பல் வேல் மத்தி கழாஅர் அன்ன – பல வேல்களையுடைய மத்தி என்பவனின் கழாஅர் என்னும் ஊரினை ஒத்த (கழாஅர் – அளபெடை), எம் இளமை சென்று தவத் தொல் அஃதே – என் இளமை கழிந்து மிகவும் தொன்மையாயிற்று, இனிமை எவன் செய்வது பொய்ம்மொழி எமக்கே – நின் பொய்மொழிகள் எமக்கு எவ்வாறு இனிமை செய்யும் (எமக்கே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 7, கயமனார், பாலைத் திணை – மகளைத் தேடிச் சென்ற செவிலித்தாய் பெண் மானிடம் சொன்னது
‘முலை முகம் செய்தன, முள் எயிறு இலங்கின,
தலை முடி சான்ற, தண் தழை உடையை,
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்,
மூப்புடை முது பதி தாக்கு அணங்கு உடைய,
காப்பும் பூண்டிசின் கடையும் போகலை, 5
பேதை அல்லை மேதை அம் குறுமகள்!
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்து’ என
ஒண் சுடர் நல் இல் அருங்கடி நீவி,
தன் சிதைவு அறிதல் அஞ்சி, இன் சிலை
ஏறுடை இனத்த நாறு உயிர் நவ்வி! 10
வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர்
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு என் மகள்
இச் சுரம் படர்தந்தோளே, ஆயிடை,
அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென,
பிற்படு பூசலின் வழிவழி ஓடி 15
மெய்த் தலைப்படுதல் செய்யேன் இத்தலை
நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு
புலிப்பல் கோத்த புலம்பு மணித் தாலி,
ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல்,
ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த 20
துய்த்தலை வெண்காழ் பெறூஉம்
கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே. 22
பாடல் பின்னணி: மகட் போக்கிய செவிலித்தாய், சுரத்திடைப் பின் சென்று, அங்கே ஓர் பெண் மானைக் கண்டு அதனிடம் சொல்லியது.
பொருளுரை: இனிமையாக முழங்கும் ஆண்மான்களையுடைய மான் இனத்தைச் சார்ந்த பெண் மானே!
“அறிவாற்றல் உடைய என் இளைய மகளே! உன் முலைகள் அரும்பியுள்ளன. உன் கூரிய பற்கள் ஒளியைப் பெற்றுள்ளன. உன் கூந்தல் முடித்தலுக்கு ஏற்றவாறு வளர்ந்துள்ளது. தண்ணிய தழை ஆடையை நீ உடுத்தியுள்ளாய். சுழன்று திரியும் தோழியருடன் எங்கேயும் நீ செல்லாதே. மிகத் தொன்மையான இந்த இடத்தில் தீண்டி வருத்தும் அணங்குகள் உள்ளன. நீ காவல் உடையை. நம் இல்லத்தின் முன் வாயிலுக்கும் போகாதே. நீ பேதைப் பருவத்தினள் இல்லை. பெதும்பைப் பருவத்திலும் புறத்தே செல்கின்றாய் நீ” என நான் கூறுவதைக் கேட்டு,
பொன்னால் செய்து புலிப்பல் கோத்த தனி மணி பொருந்திய சங்கிலியையும் தழைத்த செயலை மர இலை ஆடை அணிந்த மாட்சிமையுடைய அல்குலையுமுடைய, ஆண் குரங்குகள் ஆராய்ந்து எடுத்த பலவின் சுளையிலிருந்து, தாம் உண்டபின் உதிர்க்கப்பெற்ற மேல் பகுதியில் ஆர்க்குகள் உடைய வெள்ளை விதைகள் யாரும் பெறுமாறுக் கிடக்கும், மலைகள் பொருந்திய சிறுகுடிக் கானவனின் மகளான என் மகள், தன் குற்றத்தைப் பிறர் அறிதல் அஞ்சி, ஒளி மிகுந்த எங்கள் நல்ல இல்லத்தின் அரிய காவலைக் கடந்து, வேட்டுவரின் வலையைக் கண்ட பெண்மான் போல் ஓடி, இங்கு தோற்றல் அறியாத வெள்ளிய வேலையுடைய ஒரு இளைஞனுடன் என் மகள் இப்பாலை நிலத்திற்குச் சென்றாள்.
அப்பொழுதே, பாலை நிலக்கள்வர்கள் ஆக்களைத் தொழுவினின்று நீக்கியதால், அவர்கள் பின் சென்று புரியும் போர் போல் நான் தொடர்ந்து ஓடி, அவள் மேனியைக் காண இயலாது உள்ளேன்.
இவ்விடத்தில் நின்னிடத்தில் நான் வினவுவதை நீ கேட்டு, அவர்கள் செல்லும் வழியை என்னிடம் கூறுவாயாக!
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் நூற்பாவின்கண் அமைத்துக் கொள்க. ஆசிரியர் நச்சினார்கினியரும் இந்நூற்பாவின்கண் செவிலி கூற்றிற்கு இச் செய்யுளை எடுத்துக்காட்டினர். ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘மரபே தானும்’ (தொல்காப்பியம், செய்யுளியல் 80) என்ற சூத்திரத்துப் ‘புலிப்பல் கோத்த ……… அல்குல் ‘எனும் இச் செய்யுட் பகுதியை எடுத்துக்காட்டி ‘என்பது பருவத்திற்கேற்ற அணி கூறியது’ என்பர் பேராசிரியர். துய்த்தலை (21) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பலா விதையின் தலையில் அமைந்த ஓர் உறுப்பு. இதனை ‘ஆர்க்கு’ என்பர் பழைய உரையாசிரியர். தாலி – அகநானூறு 7 – புலிப்பல் கோத்த புலம்பு மணித் தாலி, அகநானூறு 54 – பொன்னுடைத் தாலி என் மகன், குறுந்தொகை 161 – புலிப்பல் தாலிப் புதல்வர், புறநானூறு 77 – தாலி களைந்தன்றும் இலனே, புறநானூறு 374 – புலிப் பல் தாலிப் புன்தலைச் சிறாஅர். முலை வளர்ச்சி: குறுந்தொகை 337 – முலையே முகிழ் முகிழ்த்தனவே தலையே கிளைஇய மென் குரல் கிழக்கு வீழ்ந்தனவே செறி முறை வெண்பலும் பறி முறை நிரம்பின சுணங்கும் சில தோன்றினவே. சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை). அலமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310). செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34). பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12, குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.
சொற்பொருள்: 1–7: முலை முகம் செய்தன – முலைகள் அரும்பியுள்ளன, முலைகள் பருத்துள்ளன, முள் எயிறு இலங்கின – உன் கூரிய பற்கள் ஒளியைப் பெற்றுள்ளன, தலை முடி சான்ற – உன் கூந்தல் முடித்தலுக்கு ஏற்றவாறு வளர்ந்துள்ளது, தண் தழை உடையை – தண்ணிய தழை ஆடையை நீ உடுத்தியுள்ளாய், அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல் – சுழன்று திரியும் தோழியருடன் எங்கேயும் செல்லாதே (படாஅல் – அளபெடை), மூப்புடை முது பதி தாக்கு அணங்கு உடைய – மிகத் தொன்மையான இந்த இடத்தில் தீண்டி வருத்தும் அணங்குகள் உள்ளன (அணங்குகள் – கடவுள்கள்), காப்பும் பூண்டிசின் – நீ காவல் உடையை (சின் – முன்னிலை அசைச் சொல்), கடையும் போகலை – நம் இல்லத்தின் முன் வாயிலுக்கும் போகாதே, பேதை அல்லை – நீ பேதைப் பருவத்தினள் இல்லை, மேதை அம் குறுமகள் – அறிவாற்றல் உடைய என் இளைய மகளே (குறுமகள் – அண்மை விளி), பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்து என – பெதும்பைப் பருவத்திலும் புறத்தே செல்கின்றாய் என நான் கூறுவதைக் கேட்டு, ஒண் சுடர் நல் இல் அருங்கடி நீவி – ஒளி மிகுந்த எங்கள் நல்ல இல்லத்தின் அரிய காவலைக் கடந்து, தன் சிதைவு அறிதல் அஞ்சி – தன் குற்றத்தைப் பிறர் அறிதல் அஞ்சி, இன் சிலை ஏறுடை இனத்த நாறு உயிர் நவ்வி – இனிமையாக முழங்கும் ஆண்மான்களையுடைய மான் இனத்தைச் சார்ந்த பெண் மானே, வலை காண் பிணையின் போகி – வேட்டுவரின் வலையைக் கண்ட பெண்மான் போல் ஓடி, ஈங்கு ஓர் தொலைவு இல் வெள் வேல் விடலையொடு என் மகள் இச் சுரம் படர்தந்தோளே – இங்குத் தோற்றல் அறியாத வெள்ளிய வேலையுடைய ஒரு இளைஞனுடன் என் மகள் இப்பாலை நிலத்திற்குச் சென்றாள், ஆயிடை – அப்பொழுது, அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென – பாலை நிலக்கள்வர்கள் ஆக்களைத் தொழுவினின்று நீக்கியதால், பிற்படு பூசலின் வழிவழி ஓடி – அவர்கள் பின் சென்று புரியும் போர் போல் தொடர்ந்து ஓடி (வழிவழி – அடுக்குத்தொடர்), மெய்த் தலைப்படுதல் செய்யேன் – அவள் மேனியைக் காண இயலாது உள்ளேன், இத்தலை நின்னொடு வினவல் கேளாய் – இவ்விடத்தில் நின்னிடத்தில் நான் வினவுவதை நீ கேட்டு, பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்பு மணித் தாலி ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல் – பொன்னால் செய்து புலிப்பல் கோத்த தனி மணி பொருந்திய சங்கிலியையும் தழைத்த செயலை மர இலை ஆடை அணிந்த மாட்சிமையுடைய அல்குல் (அல்குல் – இடை, இடைக்குக் கீழ் உள்ள பகுதி), ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த துய்த்தலை வெண்காழ் பெறூஉம் – ஆண் குரங்குகள் ஆராய்ந்து எடுத்த பலவின் சுளையிலிருந்து தாம் உண்டபின் உதிர்க்கப்பெற்ற மேல் பகுதியில் ஆர்க்குகள் உடைய வெள்ளை விதைகள் யாரும் பெறுமாறுக் கிடக்கும் (பெறூஉம் – அளபெடை), கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே – மலைகள் பொருந்திய சிறிய ஊரின் கானவன் மகள் (மகளே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 8, பெருங்குன்றூர் கிழார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
குரும்பி வல்சிப் பெருங்கை ஏற்றைக்
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்,
பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும்
அரிய அல்ல மன், இகுளை, பெரிய 5
கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றைப்
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
கழை நரல் சிலம்பின் ஆங்கண், வழையொடு
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்
படு கடுங்களிற்றின் வருத்தம் சொலியப், 10
பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல்
விண் தோய் விடர் அகத்து இயம்பும் அவர் நாட்டு,
எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது,
மின்னு விடச் சிறிய ஒதுங்கி மென்மெலத்
துளி தலைத்தலைஇய மணி ஏர் ஐம்பால் 15
சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ,
நெறி கெட விலங்கிய நீயிர், இச் சுரம்
அறிதலும் அறிதிரோ, என்னுநர்ப் பெறினே. 18
பாடல் பின்னணி: தலைவன் களவொழுக்கத்தையே விரும்பி வரைதல் கருதாது உள்ளான் என வருந்திய தலைவி, ஒரு நாள் குறியிடத்தில் அவன் வந்து நிற்பதை அறிந்து, இதனைத் தன் தோழியிடம் கூறுகின்றாள்.
பொருளுரை: தோழியே! பெரிய ஆண் பன்றியைக் கொன்ற பிளந்த வாயையுடைய ஆண் புலி, பலா மரங்கள் அடர்ந்துள்ள பக்கமலையில் புலவு நாற்றமுடைய அப்பன்றியை இழுத்துச் செல்லும் மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசி ஒலிக்கும் அம்மலையில், சுரபுன்னை மரங்களுடன் வாழை மரங்களும் ஓங்கி வளர்ந்த தாழ்ந்த இடத்தையுடைய நீர் வடியும் குழியில் அகப்பட்ட கடிய இயல்புடைய களிற்றின் வருத்தத்தை நீக்கும்பொருட்டு, அதன் பெண் யானை தன் துணையான அக்களிறு வழுக்கி விழாமல் ஏறும்வண்ணம் படியாகப் பெரிய மரத்தை முறுக்கி இட்ட ஓசை, பெரிதாக, வானைத் தொடுகின்ற மலை முழைஞ்சுகளில் (மலைக் குகைகளில்) சென்று ஒலிக்கும் நம் தலைவரின் நாட்டில்,
எண்ணுவதற்கு அரிய மலைகளின் இடையே மான்கள் இயங்குகின்ற வழியில் மயங்கித் திரியாது மின்னல் நமக்கு வழிகாட்ட, மெல்ல நாம் நடந்து செல்லும், ஈயல்களையுடைய புற்றின் குளிர்ந்த மேல் புறத்தில் தங்கிய புற்றாஞ்சோறாகிய உணவை உடைய பெரிய கைகளையுடைய ஆண் கரடியின் தொங்கும் தோலாகிய உறையிலிருந்து வெளிப்படும் நீண்ட கூரிய நகங்கள் பற்றிக்கொள்வதால், பாம்பின் வலிமை அழியும் பாதி நாள் இரவிலும், “மழைத் துளிகளைத் தன்னிடத்தில் கொண்ட நீலமணி போன்ற ஐந்து பகுதியாகப் பின்னப்பட்ட கூந்தல் முதுகை மறைப்பதால், அக்கூந்தலைக் கோதி மயிர்த் தொகுதியைப் பிழிந்து விட்டு வருவபர்களே! வழிகள் கெடும்படி விலக்கும் இடங்களுடைய இந்த வழியில் வருவதற்கும் நீவிர் அறிந்துள்ளீரோ?” என நம்மை வினவுபவரைப் பெற்றால், நமக்கு இவ்வாறு வருவது அரியது இல்லை.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘உயிரினுஞ் சிறந்தன்று’ (தொல்காப்பியம், களவியல் 22) என வரும் நூற்பாவின்கண் ‘தா இல் நல் மொழி கிழவி கிளப்பினும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘மாட்டும் எச்சமும்’ (தொல்காப்பியம், செய்யுளியல் 211) என்னுஞ் சூத்திரத்து உரையில், இச் செய்யுளுள் முதலும் கருவும் முறை பிறழ வாராமையின், இதனைத் துறைவகை இன்றி வந்தது என்பர் பேராசிரியர். இறைச்சி – இரா. செயபால் உரை – கரடிக்குப் பாம்பை வருத்த வேண்டும் என்னும் கருத்து இல்லையாயினும், அது இரையை அகழ்ந்தெடுக்கும் தன் காரியம் செய்யவே, கூரிய நகம் படுதலாகிய அவ்வளவிற்குப் பாம்பு தன வலி அழிந்தாற்போல, தலைவரும் நம்மை வருத்த வேண்டும் என்னும் கருத்து இல்லையாயினும் தமது காரியமாக களவின்பத்தில் ஒழுகவே, அதனால் ஆறின்னாமை ஊரின்னாமை முதலாகிய இவ்வளவிற்கே நாம் வருந்தும்படி நேரிட்டது என்று கூறினாள் என்பதாம். பேழ் வாய் (6) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பிளந்த வாய், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய வாய். குரும்பி – பெரும்பாணாற்றுப்படை 277–278 – பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் பூம்புற நல் அடை, அகநானூறு 8 – ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த குரும்பி, அகநானூறு 72 – மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம் பொன் எறி பிதிரின் சுடர வாங்கிக் குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை இரும்பு செய் கொல் எனத் தோன்றும், அகநானூறு 307 – பெருங்கை எண்கினம் குரும்பி தேரும் புற்றுடைச் சுவர. கரடிகள் ஈயல் புற்றை உடைத்தல் – அகநானூறு 8, 72, 81, 88, 112, 149, 247, 257, 307, நற்றிணை 125, 325, 336. நீலமணிபோல் பெண்ணின் கூந்தல்: அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல், 112 – மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சி. ஏற்றை – ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம் ஏற்றைக் கிளவி உரித்து என மொழிப (தொல்காப்பியம், மரபியல் 50). இது கரடி புலி முதலியவற்றின் ஆணினைக் குறிக்கும் மரபுப்பெயர் ஆகும்.
சொற்பொருள்: ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த குரும்பி வல்சிப் பெருங்கை ஏற்றை – ஈயல்களையுடைய புற்றின் குளிர்ந்த மேல் புறத்தில் தங்கிய புற்றாஞ்சோறாகிய உணவை உடைய பெரிய கைகளையுடைய ஆண் கரடி, தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின் – தொங்கும் தோலாகிய உறையிலிருந்து வெளிப்படும் நீண்ட கூரிய நகங்கள் பற்றிக்கொள்வதால், பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும் – பாம்பின் வலிமை அழியும் பாதி நாள் இரவிலும், அரிய அல்ல – நமக்கு அரியது இல்லை, மன் – ஒழியிசைப் பொருளில் வந்த இடைச்சொல், இகுளை – தோழியே (விளி), பெரிய கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றைப் பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் கழை நரல் சிலம்பின் ஆங்கண் – பெரிய ஆண் பன்றியைக் கொன்ற பிளந்த வாயையுடைய ஆண் புலி பலா மரங்கள் அடர்ந்துள்ள பக்கமலையில் புலவு நாற்றமுடைய அதனை இழுத்துச் செல்லும் மூங்கில்கள் ஒலிக்கும் (ஒன்றோடு ஒன்று உரசி ஒலிக்கும்) அம்மலையில், வழையொடு வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில் – சுரபுன்னை மரங்களுடன் வாழை மரங்களும் ஓங்கி வளர்ந்த தாழ்ந்த இடத்தையுடைய நீர் வடியும் குழியில் (வழை – சுரபுன்னை மரம், Long–leaved two–sepalled gamboge, ochrocarpus longifolius), படு கடுங்களிற்றின் வருத்தம் சொலியப் பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல் – அகப்பட்ட கடிய இயல்புடைய களிற்றின் வருத்தத்தை நீக்கும்பொருட்டு அதன் பெண் யானை தன் துணையான அக்களிறு வழுக்கி விழாமல் ஏறும்வண்ணம் படியாகப் பெரிய மரத்தை முறுக்கி இட்ட ஓசை, பெரிய – பெரிதாக, விண் தோய் விடர் அகத்து இயம்பும் அவர் நாட்டு – வானைத் தொடுகின்ற மலை முழைஞ்சுகளில் (மலைக் குகைகளில்) சென்று ஒலிக்கும் நம் தலைவரின் நாட்டில், எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது மின்னு விடச் சிறிய ஒதுங்கி மென்மெல – எண்ணுவதற்கு அரிய மலைகளின் இடையே மான்கள் இயங்குகின்ற வழியில் மயங்கித் திரியாது மின்னல் வழிகாட்ட மெல்ல நடந்து, துளி தலைத்தலைஇய மணி ஏர் ஐம்பால் சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ – மழைத் துளிகளைத் தன்னிடத்தில் கொண்ட நீலமணி போன்ற ஐந்து பகுதியாகப் பின்னப்பட்ட கூந்தல் முதுகை மறைப்பதால் அக்கூந்தலைக் கோதி மயிர்த் தொகுதியைப் பிழிந்து (தலைஇய – அளபெடை, ஏர் – அழகு, உவம உருபுமாம், பிழியூஉ – அளபெடை), நெறி கெட விலங்கிய நீயிர் இச் சுரம் அறிதலும் அறிதிரோ என்னுநர்ப் பெறினே – வழிகள் கெடும்படி விலக்கும் இடங்களுடைய இந்த வழியில் வருவதற்கும் அறிந்துள்ளீரோ என வினவுபவரைப் பெற்றால் (பெறினே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 9, கல்லாடனார், பாலைத் திணை – தலைவன் தேர்ப்பாகன் கேட்கும்படி சொன்னது
கொல் வினைப் பொலிந்த கூர்ங்குறு புழுகின்,
வில்லோர் தூணி வீங்கப் பெய்த
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை,
செப்பு அடர் அன்ன செங்குழை அகந்தோறு
இழுதின் அன்ன தீம் புழல் துய்வாய் 5
உழுது காண் துளையவாகி ஆர் கழல்பு
ஆலி வானின் காலொடு பாறித்,
துப்பின் அன்ன செங்கோட்டு இயவின்,
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர், 10
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி,
நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்று பின் ஒழியப் போகி உரம் துரந்து,
ஞாயிறு படினும், ஊர் சேய்த்து எனாது, 15
துனை பரி துரக்கும் துஞ்சா செலவின்
எம்மினும் விரைந்து வல் எய்திப், பல் மாண்
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ,
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்,
கன்று புகு மாலை நின்றோள் எய்தி, 20
கை கவியாச் சென்று கண் புதையாக் குறுகி,
பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டி,
தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ,
நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல்,
அம் தீம் கிளவிக் குறுமகள் 25
மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே? 26
பாடல் பின்னணி: வினை முற்றி மீண்ட தலைவன், தேர்ப்பாகன் கேட்கத் தனக்குள் சொன்னது.
பொருளுரை: கொல்லும் தொழிலில் சிறப்புடைய, கூரிய நுனியும் அந்நுனி மழுங்காதிருக்கும்வண்ணம் சொருகப்பட்ட குப்பியையும் உடைய, வில் மறவர்களின் அம்புக்கூடு புடைக்குமாறு செறித்த அம்புகளின் நுனிகள் போன்று அரும்பிய இருப்பை மரத்தின், செப்புத் தகட்டை ஒத்த சிவந்த தளிர்களின் உள்ளிடம் தோறும், வெண்ணெய் போன்ற இனிய உட்துளையையும் துய்யையையும் உடைய பூக்களை வண்டுகள் கிண்டியதால் காணத்தக்க துளையுடையவை ஆக மலர்ந்து, காம்புகளிலிருந்து கழன்று, பனிக்கட்டி வானிலிருந்து விழுவதுபோல் காற்றினால் சிதறி, பவளம் போன்ற செந்நிற மேட்டு வழிகளில், குருதியின் மேல் கிடக்கும் கொழுப்பு போல் பரவியிருக்கும் சுரத்தில் பொருந்திய அழகிய குடிகளையுடைய சிற்றூரில், வளைந்த நுண்ணிய கூந்தலையுடைய மகளிர் உயர்த்திய பூணால் மாட்சிமைப்பட்ட உலக்கையை உரலில் வள்ளைப்பாட்டுப் பாடிக் குத்தும் ஒலி, நெடிய பெரிய பக்க மலையிலுள்ள ஆந்தை ஒலியுடன் மாறி மாறி ஒலிக்கும் குன்றுகள் பின்னே இருக்கும்படி அதற்கு முன்னே போய், வலிமையாகச் செலுத்தப்படுவதால், கதிரவன் மறைந்தாலும் ஊர் தொலைவு எனக் கருதாது விரையும் குதிரைகளைச் செலுத்தும், மடிதல் இல்லாத எம்மைக்காட்டிலும் மிகவும் விரைந்து சென்றுப் பலவாக மாட்சிமையுடைய உயர்ந்த நல்ல இல்லத்தில் ஓரிடத்தில் நின்று, பக்கத்தில் நல்ல நிமித்தம் குறிக்கும் பல்லி ஒலிக்கும்தோறும் அதனைப் போற்றி, ஆன் கன்றுகள் மேய்ச்சலிலிருந்து இல்லத்திற்கு வரும் மாலை நேரத்தில் என் வரவை எதிர்பார்த்து நின்றவளை அடைந்து, கையைக் கவித்துச் சென்று நெருங்கி அவள் கண்களைப் புதைத்து, பெண் யானையின் தும்பிக்கையை ஒத்த அவள் பின்னலைத் தீண்டி, வளையல்கள் அணிந்த கைகள் பொருந்த அவளைத் தழுவியதோ, நாணத்துடன் செறிந்த கற்பினையும், ஒளியுடைய நெற்றியினையும் அழகிய இனிய சொற்களையுமுடைய இளையோளின் மெல்லிய தோள்களை அடைவதற்கு விரும்பிச் சென்ற என் நெஞ்சம்?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘ஒன்றாத் தமரினும்’ (தொல்காப்பியம், 44) என்னும் நூற்பாவின்கண் ‘முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும்’ என்னும் விதியால் அமைத்துக்கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘நோயும் இன்பமும்’ (தொல்காப்பியம், பொருளியல் 2) என்னுஞ் சூத்திர உரையில் ‘கை கவியாச் சென்று ………… என் நெஞ்சு’ இஃது உறுப்புடையது போல் உவந்து உரைத்தது என்று நச்சினார்க்கினியரும், ‘மரபே தானும்’ (தொல்காப்பியம், செய்யுளியல் 80) என்னுஞ் சூத்திர உரையில் இச் செய்யுளை எடுத்துக்காட்டி, ‘என்றவழி குறிஞ்சிக்கும் முல்லைக்கும் ஏற்ற பொருள் தத்தம் மறப்பிற்றாய் பலவும் வந்தன கண்டு கொள்க, என்று பேராசிரியரும் கூறினர். துய்வாய் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – துய்யை உடைய பூக்கள், துய் என்பது மலரில் உள்ள பஞ்சு போன்றதொரு உறுப்பு. ஆலி வானின் காலொடு பாறி (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆலங்கட்டி மழைபோல் சிதறி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வானிலிருந்து விழும் பனிக்கட்டி போலக் காற்றால் சிதறுண்டு. துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19). புதையா (21) – புதைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 71). கவியா (21) – கவித்து, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. கவியா – நற்றிணை 57 – கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி, கலித்தொகை 42 – தாழ் இருங்கூந்தல் என் தோழியைக் கை கவியா, அகநானூறு 9 – கை கவியாச் சென்று. பல்லி நிமித்தம் – அகநானூறு 9, 88, 151, 289, 351, 387, குறுந்தொகை 16, 140, நற்றிணை 98, 169, 246, 333, கலித்தொகை 11. பறவை நிமித்தம் – நற்றிணை 161, குறுந்தொகை 210, புறநானூறு 20. பெண்கள் நல்ல நிமித்தத்திற்குக் காத்திருத்தல் – நற்றிணை 40, முல்லைப்பாட்டு 11.
சொற்பொருள்: கொல் வினைப் பொலிந்த – கொல்லும் தொழிலில் சிறப்புடைய, கூர்ங் குறு புழுகின் – கூரிய நுனியும் அந்நுனி மழுங்காதிருக்கும்வண்ணம் சொருகப்பட்ட குப்பியையும் உடைய (புழுகு – அம்பின் நுனியில் அதைப் பாதுகாக்க வைக்கும் குப்பி), வில்லோர் தூணி வீங்கப் பெய்த – வில் மறவர்களின் அம்புக்கூடு புடைக்குமாறு செறித்த, அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை – அம்புகளின் நுனிகள் போன்று அரும்பிய இருப்பை மரத்தின் (அப்பு – அம்பு என்பதன் வலித்தல் விகாரம், ஏய்ப்ப – உவம உருபு, இருப்பை – Indian Butter Tree, South Indian Mahua, இலுப்பை, வஞ்சி), செப்பு அடர் அன்ன செங்குழை அகம் தோறு – செப்புத் தகட்டை ஒத்த சிவந்த தளிர்களின் உள்ளிடம் தோறும் (அடர் – தகடு), இழுதின் அன்ன தீம் புழல் துய்வாய் – வெண்ணெய் போன்ற தேன் உடைமையால் இனிய உட்துளையையும் துய்யையையும் உடைய பூக்கள் (இழுது – வெண்ணெய், இழுதின் – இழுது இன், இன் சாரியை, அன்ன – உவம உருபு), உழுது காண் துளையவாகி – வண்டுகள் கிண்டியதால் காணத்தக்க துளையுடையவை ஆக மலர்ந்து, ஆர் கழல்பு – காம்புகளிலிருந்து கழன்று, ஆலி வானின் காலொடு பாறி – பனிக்கட்டி வானிலிருந்து விழுவதுபோல் காற்றினால் சிதறி, துப்பின் அன்ன செங்கோட்டு இயவின் – பவளம் போன்ற செந்நிற மேட்டு வழிகளில் (துப்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருள் தந்தது,), நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் – குருதியின் மேல் கிடக்கும் கொழுப்பு போல் பரவியிருக்கும் (நெய்த்தோர் – குருதி, நிணத்தின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருள் தந்தது, மீமிசை – ஒருபொருட் பன்மொழி), அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் – சுரத்தில் பொருந்திய அழகிய குடிகளையுடைய சிற்றூர், கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி – வளைந்த நுண்ணிய கூந்தலையுடைய மகளிர் உயர்த்திய பூணால் மாட்சிமைப்பட்ட உலக்கையை உரலில் வள்ளைப்பாட்டுப் பாடிக் குத்தும் ஒலி (தொடி – உலக்கையின் பூண்), நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும் குன்று பின் ஒழியப் போகி – நெடிய பெரிய பக்க மலையிலுள்ள ஆந்தை ஒலியுடன் மாறி மாறி ஒலிக்கும் குன்றுகள் பின்னே இருக்கும்படி முன்னே போய், உரம் துரந்து – வலிமையாகச் செலுத்தப்படுவதால், ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாது – கதிரவன் மறைந்தாலும் ஊர் தொலைவு எனக் கருதாது, துனை பரி துரக்கும் – விரையும் குதிரைகளைச் செலுத்தும், துஞ்சா செலவின் எம்மினும் – மடிதல் இல்லாத எம்மைக்காட்டிலும், விரைந்து வல் எய்தி – மிகவும் விரைந்து சென்று, பல் மாண் ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ – பலவாக மாட்சிமையுடைய உயர்ந்த நல்ல இல்லத்தில் ஓரிடத்தில் நின்று (நிலைஇ – அளபெடை), பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி – பக்கத்தில் நல்ல நிமித்தம் குறிக்கும் பல்லி ஒலிக்கும்தோறும் அதனைப் போற்றி, கன்று புகு மாலை நின்றோள் எய்தி – ஆன் கன்றுகள் இல்லத்திற்கு வரும் மாலை நேரத்தில் காத்து நின்றவளை அடைந்து, கை கவியாச் சென்று கண் புதையாக் குறுகி – கையைக் கவித்துச் சென்று நெருங்கி கண்களைப் புதைத்து, பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டி – பெண் யானையின் தும்பிக்கையை ஒத்த பின்னலைத் தீண்டி, தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ – வளையல்கள் அணிந்த கைகள் பொருந்தத் தழுவியதோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ –அசைநிலை), நாணொடு மிடைந்த கற்பின் – நாணத்துடன் செறிந்த கற்பினையும், வாணுதல் அம் தீம் கிளவிக் குறுமகள் – ஒளியுடைய நெற்றியினையும் அழகிய இனிய சொற்களையுமுடைய இளையோள், மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே – மெல்லிய தோள்களை அடைவதற்கு விரும்பிச் சென்ற என் நெஞ்சம் (நசைஇ – அளபெடை, நெஞ்சே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 10, அம்மூவனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய,
மீன் கண்டன்ன மெல்லரும்பு ஊழ்த்த,
முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச்சினை,
புள் இறை கூரும் மெல்லம்புலம்ப!
நெய்தல் உண்கண் பைதல கலுழப் 5
பிரிதல் எண்ணினை ஆயின், நன்றும்
அரிது துற்றனையால் பெரும! உரிதினில்
கொண்டு ஆங்குப் பெயர்தல் வேண்டும், கொண்டலொடு
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
பழந்திமில் கொன்ற புது வலைப் பரதவர் 10
மோட்டு மணல் அடைகரைக் கோட்டு மீன் கொண்டி,
மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளங்கெழு தொண்டி அன்ன இவள் நலனே. 13
பாடல் பின்னணி: இரவுக்குறி வந்து நீங்கும் தலைவனிடம் தோழி சொன்னது.
பொருளுரை: பெரிய கடல் பரப்பில் அலைகளின் தூவலை ஏற்றுக்கொண்ட, விண்மீன்களைக் கண்டாற்போன்று மெல்லிய அரும்புகள் மலர்ந்த, அடி வளைந்த முதிர்ந்த புன்னை மரத்தின் பெரிய கிளையில் பறவைகள் மிகுதியாகத் தங்கியிருக்கும் மெல்லிய கடற்கரையின் தலைவனே! நெய்தல் மலர்களை ஒத்த மையுண்ட இவள் கண்கள் வருந்தி அழ நீ பிரிய எண்ணினாய் ஆனால், பெரிதும் அரியதை மேற்கொள்வதாய் ஆயினை நீ பெருமானே. கீழ்காற்றால் ஒளி பொருந்திய கடலின் அலைகள் உடைக்கும் மணல் மேட்டில் இருக்கும் பழைய படகின் சிதைவு நீக்கிப் புது வலையினையுடைய பரதவர்கள், உயர்ந்த மணலையுடைய நீர் அடைந்த கரையில் பிடித்து வந்த சுறா மீன்களை மணம் கமழும் பாக்கத்தின்கண் பலர்க்கும் பகுத்துக் கொடுக்கும் வளம் பொருந்திய தொண்டி என்னும் பட்டினத்தைப் போன்ற இவளுடைய அழகு, இவளுக்கு உரியதாக இருக்கும்படி, அவளை வரைந்து கொண்டு நின் ஊர்க்கு நீ செல்ல வேண்டும்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘வேண்டாப் பிரிவினும்’ என வரும் விதி கொள்க. உள்ளுறை – பழைய உரை – ‘பழந்திமில் கொன்ற’ என்பது முதலாக ‘தொண்டி’ என்பது ஈறாக நின்ற சொற்கு இறைச்சி பொருள ‘பரதவர் தாம் அழிவு சோர்ந்த திமிலானும் பண்ணின வலையானும் தமது தொழிலாகிய வேட்டை மேற் செல்லாது தேடாமல் வந்த இழிந்த சுறாமீனை அகப்படுத்து, அதனை அழித்துக் கூறு வைத்து எல்லாரையும் அழைத்தாற்போல, நீயிரும் நுமக்கு உறுதியாக ஆக்கிக் கொள்ளப்பட்ட நன்மைகளான் நுமக்கு ஒழுக்கமாகிய நல்வழியில் ஒழுகாது கண்டோர் இகழ்ந்த களவொழுக்கத்தில் ஒழுகி, இக் களவினைப் பரப்பிப் பலரும் அலர் கூறும்படி பண்ணாநின்றீர்’. வரலாறு – தொண்டி. தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25). கொண்டி (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிடித்து வந்து, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கொள்ளையினை. எக்கர்ப் பழந்திமில் கொன்ற (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எக்கர் மணலானது தமது பழைய திமிலை உடைத்தமையால், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மணல் மேட்டில் கிடக்கும் பழைய படகின் சிதைவு போக்கி. நன்று – நன்று பெரிது ஆகும் (தொக்காப்பியம், உரியியல் 45).
சொற்பொருள்: வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச்சினை புள் இறை கூரும் மெல்லம்புலம்ப – பெரிய கடல் பரப்பில் அலைகளின் தூவலை ஏற்றுக்கொண்ட விண்மீன்களைக் கண்டாற்போன்று மெல்லிய அரும்புகள் மலர்ந்த அடி வளைந்த முதிர்ந்த புன்னை மரத்தின் பெரிய (கரிய) கிளையில் பறவைகள் மிகுதியாகத் தங்கியிருக்கும் மெல்லிய கடற்கரையின் தலைவனே (மெல்லம்புலம்ப – அண்மை விளி, புலம்பு – கடற்கரை, எதிரிய – ஏற்றுக்கொண்ட), நெய்தல் உண்கண் பைதல கலுழப் பிரிதல் எண்ணினை ஆயின் – நெய்தல் மலர்களை ஒத்த மையுண்ட இவள் கண்கள் வருந்தி அழ நீ பிரிய எண்ணினாய் ஆனால், நன்றும் அரிது துற்றனையால் பெரும – பெரிதும் அரியதை மேற்கொள்வதாய் ஆயினை நீ பெருமானே (துற்றனையால் – துற்றனை, ஆல் அசைநிலை, பெரும – ஐயா (அண்மை விளி), உரிதினில் – இவளுக்கு உரியதாக இருக்கும்படி, ஆங்குப் பெயர்தல் வேண்டும் கொண்டு – நின் ஊர்க்கு வரைந்து கொண்டு செல்ல வேண்டும், கொண்டலொடு குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப் பழந்திமில் கொன்ற புது வலைப் பரதவர் – கீழ்காற்றால் ஒளி பொருந்திய கடலின் அலைகள் உடைக்கும் மணல் மேட்டில் இருக்கும் பழைய படகின் சிதைவு நீக்கிப் புது வலையினையுடைய பரதவர்கள் (குரூஉ – அளபெடை), மோட்டு மணல் அடைகரைக் கோட்டு மீன் கொண்டி மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும் வளங்கெழு தொண்டி அன்ன இவள் நலனே – உயர்ந்த மணலையுடைய நீர் அடைந்த கரையில் பிடித்து வந்த சுறா மீன்களை மணம் கமழும் பாக்கத்தின்கண் பலர்க்கும் பகுத்துக் கொடுக்கும் வளம் பொருந்திய தொண்டி என்னும் பட்டினத்தைப் போன்ற இவளுடைய அழகு (தொண்டி – சேர நாட்டின் ஊர், நலனே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 11, ஔவையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்,
நெருப்பெனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு,
இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அம் சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி, 5
கயந்துகள் ஆகிய பயந்தபு கானம்
எம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென,
வம்பு விரித்தன்ன பொங்கு மணல் கான் யாற்றுப்
படுசினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்,
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் 10
அவரும் பெறுகுவர் மன்னே, நயவர
நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து
அறு குளம் நிறைக்குந போல அல்கலும்
அழுதல் மேவலவாகிப்
பழி தீர் கண்ணும் படுகுவ மன்னே. 15
பாடல் பின்னணி: பொருள்வயின் தலைவன் பிரிந்த வேளையில் தலைவி வருந்தியதைக் கண்ட தோழி வருந்தினாள். அவளிடம் தலைவி கூறியது.
பொருளுரை: வானத்தில் ஊர்ந்து செல்லும் விளங்கும் ஒளியுடைய ஞாயிறு தீயெனச் சினந்து எரித்த வெப்பம் விளங்கும் காட்டில், இலைகள் இல்லாது மலர்ந்த அரும்பில்லாத இலவ மலர்கள், ஆரவாரத்தை உடைய மகளிர் கூட்டம் மிக்குக் கூடி எடுத்த அழகிய கார்த்திகை விளக்குகளின் நீண்ட வரிசைபோல் தோன்ற, குளங்கள் நீர் இல்லாது துகள் ஆகிய வளமை அழிந்த காட்டிற்கு எம்மை உடன்கொண்டு சென்றாராயின், வெள்ளை நிறக் கச்சையை விரித்தாற்போல் தோன்றும் மிக்க மணலையுடைய காட்டாற்றின்கண் பூங்கொத்துக்களையுடைய தாழ்ந்த மரக்கிளைகள் கம்மென்று நறுமணத்தைப் பரப்பும் மணல் மேட்டில், உடல்கள் ஒன்றுடன் ஒன்று புகுவதை ஒத்த கைகளால் கவர்ந்துகொள்ளும் தழுவுதலை விருப்பம் உண்டாக நம் தலைவரும் பெறுவார். நீர் சொரியும் ஒளியுடைய மலர்கள் போன்று ஒழிதல் இல்லாது, நீர் இல்லாது வறண்ட குளத்தை நிறைப்பன போல், நாளும் நீர் சொரிந்து அழுதலைப் புரியாதாகி, குற்றம் தீர்ந்த என் கண்களும் துயிலைப் பெறும்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் நூற்பாவின்கண் அமைத்துக் கொள்க. மலிபு தொகுபு எடுத்த (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மிக்குக் கூடி ஏந்திய, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மகிழ்ந்து கூடி எடுத்த. படுசினை தாழ்ந்த பயில் இணர் (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பயில் தாழ்ந்த இணர்படு சினை. கம்மென (7) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – விரைவாக, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கம் என்று நறுமணம் கமழுகின்ற. துணியைப் போன்ற மணல்; அகநானூறு 11 – வம்பு விரித்தன்ன பொங்கு மணல், நற்றிணை 15 – முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் நுணங்கு துகில் நுடக்கம் போல கணம் கொள. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மன் கழிவின்கண் வந்தது எனக் கொள்ளின் ஆற்றாது இரங்குதல் நிகழ்ந்ததாம். நச்சினார்க்கினியர் இதனைப் பாலைக்கண் இரங்கல் நிகழ்ந்ததற்கு எடுத்துக் காட்டியவாறும் காண்க. ‘உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 13) என்னும் சூத்திரவுரைக்கண் ‘வானமூர்ந்த …………அம் காட்டு’ எனக் காடுறை உலகத்துப் பாலை வந்தது என்றும், ‘கொண்டுதலைக்கழியினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 15) என்னும் சூத்திரவுரைக்கண் ‘வானமூர்ந்த’ என்னும் அகப்பாட்டினுள் ‘மெய் புகுவன்ன ………………..மன்னே ‘ எனக் கூறி அழுதல் மேவாவாய்க் கண்ணும் துயிலுமென இரக்கம் மீக்கூறியவாறும் உணர்க’ என்றும் உரைத்தனர் நச்சினார்க்கினியர்.
சொற்பொருள்: வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம் நெருப்பெனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு – வானத்தில் ஊர்ந்து செல்லும் விளங்கும் ஒளியுடைய ஞாயிறு தீயெனச் சினந்து எரித்த வெப்பம் விளங்கும் காட்டில் (சிவந்த – சினந்த), இலை இல மலர்ந்த முகை இல் இலவம் – இலைகள் இல்லாது மலர்ந்த அரும்பில்லாத இலவ மலர்கள் (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம், இலவ மரம் – Aerua javanica, Silk cotton tree), கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த அம் சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி – ஆரவாரத்தை உடைய மகளிர் கூட்டம் மிக்குக் கூடி எடுத்த அழகிய கார்த்திகை விளக்குகளின் நீண்ட ஒழுங்குபோல் (வரிசைபோல்) தோன்ற (பொற்ப – உவம உருபு, தோன்றி – தோன்ற எனத் திரிக்க), கயம் துகள் ஆகிய பயம் தபு கானம் எம்மொடு கழிந்தனர் ஆயின் – குளங்கள் நீர் இல்லாது துகள் ஆகிய வளமை அழிந்த காட்டில் எம்மை உடன்கொண்டு சென்றாராயின் (பயம் – பயன் என்பதன் போலி), கம்மென வம்பு விரித்தன்ன பொங்கு மணல் கான் யாற்றுப் படுசினை தாழ்ந்த பயில் இணர் எக்கர் – வெள்ளை நிறக் கச்சையை விரித்தாற்போல் தோன்றும் மிக்க மணலையுடைய காட்டாற்றின்கண் பூங்கொத்துக்களையுடைய தாழ்ந்த மரக்கிளைகள் கம்மென்று நறுமணத்தைப் பரப்பும் மணல் மேட்டில் (கம்மென – விரைவுக்குறிப்பு, வம்பு – கச்சை, இணர்படு சினை – கொத்துக்களையுடைய மரக்கிளைகள்), மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் அவரும் பெறுகுவர் மன்னே நயவர – உடல்கள் ஒன்றுடன் ஒன்று புகுவதை ஒத்த கைகளால் கவர்ந்துகொள்ளும் தழுவுதலை விருப்பம் உண்டாக அவரும் பெறுவார் (அவரும் – உம்மை எச்ச உம்மை, மன்னே – மன் கழிவின்கண் வந்தது, ஏகாரம் அசைநிலை), நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து – நீர் சொரியும் ஒளியுடைய மலர்கள் போன்று ஒழிதல் இல்லாது (நிகர் – ஒளி, ஓ – ஓவுதல், ஒழிதல்), அறு குளம் நிறைக்குந போல – நீர் இல்லாது வறண்ட குளத்தை நிறைப்பன போல், அல்கலும் அழுதல் மேவலவாகி – நாளும் நீர் சொரிந்து அழுதலைப் புரியாதாகி, பழி தீர் கண்ணும் படுகுவ மன்னே – குற்றம் தீர்ந்த என் கண்களும் துயிலப்பெறும் (படுதல் – துயில்தல், மன்னே – மன், ஏ அசைநிலைகள்)
அகநானூறு 12, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
யாயே கண்ணினும் கடுங்காதலளே,
எந்தையும் நிலன் உரப் பொறாஅன் ‘சீறடி சிவப்ப
எவன் இல குறுமகள் இயங்குதி’ என்னும்,
யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்
இரு தலைப் புள்ளின் ஓர் உயிர் அம்மே, 5
ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்
கிளி விளி பயிற்றும், வெளில் ஆடு பெருஞ்சினை
விழுக்கோட் பலவின் பழுப் பயங் கொண்மார்
குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் 10
புலி செத்து வெரீஇய புகர் முக வேழம்,
மழை படு சிலம்பில் கழை படப் பெயரும்,
நல் வரை நாட! நீ வரின்,
மெல் இயல் ஓரும் தான் வாழலளே.
பாடல் பின்னணி: தோழி இரவுக்குறியை மறுத்து வரைவு கடாயது.
பொருளுரை: எங்கள் தாய் தன்னுடைய கண்களைவிட இவள்பால் மிகுந்த அன்பை உடையவள். எங்கள் தந்தை இவள் நிலத்தில் நடப்பதைப் பொறுக்காதவன். “ஏடி இளைய மகளே! உன் சிறிய அடிகள் சிவக்க எவ்வாறு நடக்கின்றாய்?” என்று கேட்பான். நானும் அவளும் இருதலைப் பறவையைப் போல் ஓர் உயிர் கொண்டவர்கள். தினைப் புனத்தைக் காக்கும் அழகிய பெண்கள் விடாது ஆரவாரிக்கும் பொழுதெல்லாம் கிளிகள் தங்கள் இனத்தை அழைக்கும் இடத்தில், அணில் விளையாடும் கிளைகளையுடைய பெரிய பழங்களையுடைய பலா மரத்தின் பழங்களின் பயனைக் கொள்வதற்குக் குறவர்கள் நட்டிய குடிசை மறையும்படி தேன் சொட்டும் வேங்கை மலர்கள் பரவியதைப் புலி என்று நினைத்து அஞ்சி புள்ளியுடைய யானைகள் முகிலினம் பொருந்திய மலைச் சரிவில் மூங்கில் முறிபட ஓடும் நல்ல மலைகளையுடைய நாடனே! நீ இரவு நேரத்தில் வந்தால் மென்மையான என் தோழி உயிர் வாழ மாட்டாள்!
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘நாற்றமும் தோற்றமும் ‘ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என்பதனால் அமைத்துக் கொள்க. ஒப்புமை – கலித்தொகை 89–4 – ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலை. வேங்கை மலரும் புலியும் – அகநானூறு 12 – வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் புலி செத்து வெரீஇய புகர் முக வேழம், அகநானூறு 141 – புலிக்கேழ் உற்ற பூ இடைப் பெருஞ்சினை நரந்த நறும்பூ நாள் மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை, அகநானூறு 227 – புலிக் கேழ் வேங்கை, அகநானூறு 228 – வேங்கை ஒள் வீப் புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், நற்றிணை 389 – வேங்கையும் புலி ஈன்றன, குறுந்தொகை 47 – வேங்கை வீ உகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றும், ஐங்குறுநூறு 396 – புலிப் பொறி வேங்கைப் பொன் இணர். விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).
சொற்பொருள்: யாயே – தாயே, கண்ணினும் கடுங்காதலளே – தன்னுடைய கண்களைவிட இவள்பால் மிகுந்த அன்பை உடையவள், எந்தையும் நிலன் உரப் பொறாஅன் – எங்கள் தந்தையும் இவள் நிலத்தில் நடப்பதைப் பொறுக்காதவன் (பொறாஅன் – அளபெடை, நிலன் – நிலம் என்பதன் போலி), சீறடி சிவப்ப – சிறிய அடிகள் சிவப்ப, எவன் – எவ்வாறு, இல குறுமகள் – ஏடி இளைய மகளே , (இல – ஏடி, விளி, இல – ஏடி என்னும் பொருளுடைய விளிப்பெயர்), இயங்குதி – நடக்கின்றாய், என்னும் – என்று கேட்பான், யாமே – நாங்கள், பிரிவு இன்று இயைந்த – பிரிவு இல்லாது ஒன்றிய, துவரா நட்பின் – துவர் இல்லாத நட்புடன், இருதலைப் புள்ளின் ஓர் உயிர் – இரு தலைப் பறவையைப் போல் இரண்டு உடலுக்கு ஓர் உயிர், அம்மே – ஓர் அசைச் சொல், ஏனல் அம் காவலர் – தினைப் புனம் காக்கும் அழகிய பெண்கள், ஆனாது – ஓயாது, ஆர்த்தொறும் – ஆரவாரிக்கும் பொழுதெல்லாம், கிளி விளி பயிற்றும் – கிளிகள் தங்கள் இனத்தை அழைக்கும், வெளில் ஆடு பெருஞ்சினை – அணில்கள் ஆடும் பெரிய கிளைகள், விழுக்கோட் பலவின் பழுப் பயங் கொண்மார் – பெரிய பழங்களையுடைய பலா மரத்தின் பழங்களின் பயனைக் கொள்வதற்கு, குறவர் ஊன்றிய குரம்பை புதைய – குறவர்கள் நட்டிய குடிசை மறைய, வேங்கை தாஅய – வேங்கை மரத்தின் மலர்கள் படர (தாஅய – அளபெடை), தேம்பாய் – தேன் ஒழுகும் (தேம் – தேன் என்றதன் திரிபு), தோற்றம் – தோற்றம், புலி செத்து வெரீஇய – புலி என்று நினைத்து அஞ்சிய (வெரீஇய – அளபெடை), புகர் முக வேழம் – முகத்தில் புள்ளிகள் உள்ள யானை, மழை படு சிலம்பில் – முகிலினம் பொருந்திய மலைச் சரிவில், கழை படப் பெயரும் – மூங்கில் முறிபட விலகிச் செல்லும், நல் வரை நாட – நல்ல மலைகளையுடைய நாடனே! நீ வரின் – நீ வந்தால், மெல் இயல் – மென்மையான தலைவி, ஓரும் – ஓர் அசைச் சொல், தான் வாழலளே – இவள் வாழ மாட்டாள் (வாழலளே – ஏகாரம் அசை நிலை)
அகநானூறு 13, பெருந்தலைச் சாத்தனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
தன் கடல் பிறந்த முத்தின் ஆரமும்,
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத்
தெறல் அரு மரபின் கடவுள் பேணிக்,
குறவர் தந்த சந்தின் ஆரமும்
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் 5
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்,
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது,
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
வள்வாய் அம்பின் கோடைப் பொருநன் 10
பண்ணி தைஇய பயங்கெழு வேள்வியின்
விழுமிது நிகழ்வது ஆயினும், தெற்கு ஏர்பு
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்துச்,
சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின்,
நோய் இன்றாக செய் பொருள், வயிற்பட 15
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை
கவவு இன்புறாமைக் கழிக, வள வயல்
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல்லின் கவை முதல் அலங்கல்
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வரப் 20
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை,
இலங்கு பூங்கரும்பின் ஏர் கழை இருந்த
வெண்குருகு நரல வீசும்
நுண் பல் துவலைய தண் பனி நாளே. 24
பாடல் பின்னணி: பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவு அழுங்குவித்தது. உடன்பட்டதுமாம்.
பொருளுரை: தன் கடலில் தோன்றிய முத்தினால் செய்த மாலையும், போரில் தோற்ற பகைவர்கள் திறை கொடுக்கும் வலிமையுடைய தன் பொதியில் மலையில் உள்ள, பகைவரால் வெல்லுதற்கு அரிய மரபினையுடைய முருகனை வழிபட்டு மலையில் வாழ்பவர்கள் கொடுத்த சந்தன மாலையும், ஆகிய இரு பெரிய மாலைகளையும் அழகுற அணியும், திருமகள் விரும்பும் மார்பினை உடைய பாண்டிய மன்னனின் படைத்தலைவன், குழியில் விழச்செய்துப் பிடித்த பழகாத யானைகளை, பழக்கும்பொருட்டுச் சொற்களால் பயிற்றுவிக்கும் சிறு காலம் மட்டுமே தன்னிடம் வைத்துக்கொள்வது அன்றி, எல்லை இல்லாமல், பொருள் வேண்டி வருபவர்க்கு அவற்றை வழங்கும், கூரிய முனையுடைய அம்பினையுடைய கோட்டூரின் தலைவனான பண்ணி என்பவன் செய்த பயன்மிக்க களவேள்வியைப் போல், பொருளால் சிறந்த பயன் நிகழ்வது ஆயினும்,
வளமான வயலில் தீயின் கொழுந்தை ஒத்த தோடுகளை ஈன்ற, வயல் நெல்லின் கிளைத்த அடியிலிருந்து தோன்றிய கதிர்கள் நிரம்பிய அகன்ற வயலில், வரப்புகளை எல்லையாகக் கொண்டு அசைய, தனிமைத் துன்பத்தைக் கொண்டுவரும் குளிர்காலத்தின் வாடைக்காற்று, விளங்கும் மலர்களையுடைய கரும்பின் ஓங்கிய தண்டின்கண் இருந்த வெள்ளை நாரை ஒலிக்கும்படி வீசுகின்ற நுண்ணிய பலவாகிய துளிகளைக் கொண்ட குளிர்ந்த பனிக்காலத்தில்,
தெற்கே எழுந்து மிக்க மழையைப் பொழியும் இப்பொழுதில், மென்மையையும் இனிமையையும் உடைய துணையாகிய இவளைப் பிரிந்து வேற்று நாட்டில் தங்குவீராயின், நீவிர் செய்யும் பொருளுக்குக் குறைபாடு எதுவும் நேராது இருப்பதாக! குற்றமற்ற தூய துணி விரிக்கப்பட்ட படுக்கையில் இவளைத் தழுவும் இன்பம் இல்லாது கழியினும் கழிக!
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என்னும் நூற்பாவின்கண் ‘பிரியும் காலை எதிர் நின்று சாற்றிய மரபு உடை எதிரும் உளப்பட பிறவும்’ என வரும் விதி கொள்க. கோடை (10) – பழைய உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கோட்டூர், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கோடை. வரலாறு – தென்னவன், கோடைப் பொருநன் பண்ணி. விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57). சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).
சொற்பொருள்: தன் கடல் பிறந்த முத்தின் ஆரமும் – தன் கடலில் தோன்றிய முத்தினால் செய்த மாலையும் (முத்தின் – இன் சாரியை), முனை திறை கொடுக்கும் துப்பின் – போரில் தோற்ற பகைவர்கள் திறை கொடுக்கும் வலிமையுடைய, தன் மலைத் தெறல் அரு மரபின் கடவுள் பேணிக் குறவர் தந்த சந்தின் ஆரமும் – தன் பொதியில் மலையில் உள்ள பகைவரால் வெல்லுதற்கு அரிய மரபினையுடைய முருகனை வழிபட்டு மலையில் வாழ்பவர்கள் கொடுத்த சந்தன மாலையும், இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் – இரு பெரிய மாலைகளையும் அழகுற அணியும் திருமகள் விரும்பும் மார்பினை உடைய பாண்டிய மன்னனின் படைத்தலைவன், குழியில் கொண்ட மராஅ யானை – குழியில் விழச்செய்துப் பிடித்த பழகாத யானைகளை (மராஅ – அளபெடை), மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது – பழக்கும்பொருட்டுச் சொற்களால் பயிற்றுவிக்கும் சிறு காலம் மட்டுமே தன்னிடம் வைத்துக்கொள்வது அன்றி, வரை நிலை இன்றி – எல்லை இல்லாமல், இரவலர்க்கு ஈயும் – பொருள் வேண்டி வருபவர்க்கு வழங்கும், வள்வாய் அம்பின் கோடைப் பொருநன் பண்ணி தைஇய பயங்கெழு வேள்வியின் – கூரிய முனையுடைய அம்பினையுடைய கோட்டூரின் தலைவனான பண்ணி என்பவன் செய்த பயன்மிக்க களவேள்வியைப் போல் (தைஇய – அளபெடை, வேள்வியின் – இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது), விழுமிது நிகழ்வது ஆயினும் – பொருளால் சிறந்த பயன் நிகழ்வது ஆயினும், தெற்கு ஏர்பு கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து – தெற்கே எழுந்து மிக்க மழையைப் பொழியும் இப்பொழுதில், சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின் – மென்மையையும் இனிமையையும் உடைய துணையாகிய இவளைப் பிரிந்து வேற்று நாட்டில் தங்குவீராயின், நோய் இன்றாக செய் பொருள் – செய்யும் பொருளுக்குக் குறைபாடு எதுவும் நேராது இருப்பதாக, வயிற்பட – தங்க, மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை கவவு இன்புறாமைக் கழிக – குற்றமற்ற தூய துணி விரிக்கப்பட்ட படுக்கையில் இவளைத் தழுவும் இன்பம் இல்லாது கழியினும் கழிக, வள வயல் அழல் நுதி அன்ன தோகை ஈன்ற – வளமான வயலில் தீயின் கொழுந்தை ஒத்த தோடுகளை ஈன்ற, கழனி நெல்லின் கவை முதல் அலங்கல் – வயல் நெல்லின் கிளைத்த அடியிலிருந்து தோன்றிய கதிர்கள், நிரம்பு அகன் செறுவில் – நிரம்பிய அகன்ற வயலில், வரம்பு அணையாத் துயல்வர – வரப்புகளை எல்லையாகக் கொண்டு அசைய, புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை – தனிமைத் துன்பத்தைக் கொண்டுவரும் குளிர்காலத்தின் வாடைக்காற்று, இலங்கு பூங்கரும்பின் ஏர் கழை இருந்த – விளங்கும் மலர்களையுடைய கரும்பின் ஓங்கிய தண்டின்கண் இருந்த, வெண்குருகு நரல வீசும் நுண் பல் துவலைய தண் பனி நாளே – வெள்ளை நாரை ஒலிக்கும்படி வீசுகின்ற நுண்ணிய பலவாகிய துளிகளைக் கொண்ட குளிர்ந்த பனிக்காலத்தில் (நாளே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 14, ஒக்கூர் மாசாத்தனார், முல்லைத் திணை – ஒரு பாணன் இன்னொரு பாணனிடம் சொன்னது
“அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி,
காயாஞ்செம்மல் தாஅய் பல உடன்
ஈயல் மூதாய் வரிப்பப் பவளமொடு
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய
அம் காட்டு ஆர் இடை, மடப் பிணை தழீஇத் 5
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள,
முல்லை வியன் புலம் பரப்பிக் கோவலர்
குறும்பொறை மருங்கின் நறும்பூ அயரப்,
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
வீங்கு மாண் செருத்தல், தீம் பால் பிலிற்ற 10
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும்
மாலையும் உள்ளார் ஆயின், காலை
யாங்கு ஆகுவம் கொல் பாண?” என்ற
மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன்,
செவ்வழி நல் யாழ் இசையினென், பையெனக் 15
கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந்நிறுத்தி,
அவர் திறம் செல்வேன் கண்டனென் யானே,
விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுகக்
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக்
கார் மழை முழக்கு இசை கடுக்கும், 20
முனை நல் ஊரன் புனை நெடுந்தேரே. 21
பாடல் பின்னணி: தலைவன் குறித்துச் சென்ற கார்ப்பருவத்தில் வரவில்லையே என வருந்தியிருந்தாள் தலைவி. பாணனும் அவள்பொருட்டு வருந்தினான். தன் யாழை இசைத்துக் கடவுளை வாழ்த்தினான் அவன். அவ்வேளையில் தலைவனின் தேர் வந்தது. தன் உள்ளம் கவர்ந்த அக்காட்சியைத் தன் தோழனிடம் விவரிக்கின்றான் பாணன்.
பொருளுரை: “சிவப்பு நிற அரக்கினை ஒத்த சிவந்த நிலத்தின் பெரிய வழியில், காயாவின் வாடிய மலர்கள் பரவிக்கிடக்க, தம்பலப்பூச்சிகள் பலவும் வரி வரியாக ஊர்ந்து செல்ல, பவளத்துடன் நீலமணி கலந்து இருந்தாற்போல் தோன்றுகின்ற குன்றுகள் சூழ்ந்த அழகிய காட்டின் அரிய இடங்களில், மடப்பத்தையுடைய பெண்மானைத் தழுவித் திரித்தாற் போன்ற கொம்பினையுடைய ஆண்மான் புல்லை அருந்தித் துள்ள, அகன்ற முல்லை நிலத்தில் ஆனினங்களை மேய விட்டு ஆயர்கள் சிறு குன்றுகளில் நறுமண மலர்களை மாலையாகத் தொடுத்து அணிய, அறுகம்புல்லை உண்ட வலிய நடையுடைய நல்ல ஆனினங்களின் பருத்த மாண்புற்ற மடி இனிய பாலைச் சொரிய, அவைத் தங்கள் கன்றுகளை நினைத்து அழைக்கும் குரல் உடையனவாய் மன்றுகளில் நிறைய நுழையும் மாலைப் பொழுதிலும் நம் தலைவர் நம்மை நினைத்து வாராது இருப்பார் ஆயின், இக்காலத்தில் யாம் எந்நிலையை அடைவோம், பாணனே?”,
எனக் கூறிய தலைவியின் சொல்லுக்கு யான் மறுமொழி கூற இயலாதவனாகி, யாழில் செவ்வழிப்பண்ணை மெல்ல இசைத்துக் கடவுளை வாழ்த்தித் துயரம் கொண்ட மெய்யினன் ஆக தலைவன்பால் செல்வேனாகிய யான் கண்டேன், தூண்டப்பட்டு விரையும் குதிரைகள் தடைகளிலிருந்து விலகி முன் செல்லும் செலவு மிக, கற்களில் மோதி ஒலிக்கும் பல ஆரங்களையுடைய நேமிகளின் (உருளிகளின், சக்கரங்களின்) ஓசையானது, கார்காலத்து மழையின் இடியினை ஒக்கும், முனையாகிய (இடமாகிய), நல்ல ஊரின் தலைவனின் புனையப்பட்ட தேரினை.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நிலம் பெயர்ந்து உரைத்தல் அவள் நிலை உரைத்தல் கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய’ (தொல்காப்பியம், கற்பியல் 28) என்னும் விதியினாற் கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘நிலம் பெயர்ந்துறைதல்’ (தொல்காப்பியம், கற்பியல் 28) என்னும் சூத்திரத்துப் பாணர்க்குக் கூற்று நிகழ்வதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினர் நச்சினார்க்கினியர். ‘மனையோள் கிளவியும்’ (தொல்காப்பியம், செய்யுளியல் 188) என்னும் சூத்திரத்து, ‘மாலையும் ………… பாண’ என்னும் இச்செய்யுட் பகுதியை, பாணன் கேட்பத் தலைவி கூற்று வந்ததற்கு எடுத்துக் காட்டினர் பேராசிரியர். மூதாய் உடைய பாடல்கள் – அகநானூறு 14, 54, 74, 134, 139, 283, 304, 374, நற்றிணை 362, கலித்தொகை 85. ஆ மன்றத்தில் புகுதல் – அகநானூறு 14 – கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும், அகநானூறு 63 – கன்று காணாது புன்கண்ண செவி சாய்த்து மன்று நிறை பைதல் கூரப் பல உடன் கறவை, அகநானூறு 64 – மன்று நிறை புகுதரும் ஆ, அகநானூறு 253 – கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம், கலித்தொகை 119 – கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர, புறநானூறு 387 – மன்று நிறையும் நிரை, குறிஞ்சிப்பாட்டு 217 – ஆன் கணம் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர. மூதாய் வரிப்ப – அகநானூறு 14 – ஈயல் மூதாய் வரிப்ப, அகநானூறு 74 – செம் மூதாய் பெருவழி மருங்கில் சிறு பல வரிப்ப, அகநானூறு 283 – மூதாய் தண் நிலம் வரிப்ப, அகநானூறு 304 – ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப. விலங்கு பரி முடுக (18) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – எதிர்ப்படுமவற்றை விலங்கி முன் செல்லும் செலவு மிக, பொ. வே. சோமசுந்தரனார் உரை – எதிர்ப்படும் தடைகளுக்கு விலகிச் செல்லுஞ்செலவினை மேலும் வலவன் விரையத் தூண்டுதலால். முனை நல் ஊரன் (21) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – முனையாகிய நல்ல ஊரிடத்தானாகிய தலைவன், பொ. வே. சோமசுந்தரனார் உரை – போர்க்களமாகிய நல்ல மாற்றாருடைய ஊரிலே உறைந்த நம் பெருமான். மதவு – மதவே மடனும் வலியும் ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 81). வியன் – வியல் என் கிளவி அகலப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 66).
சொற்பொருள்: அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி காயாஞ்செம்மல் தாஅய் – சிவப்பு நிற அரக்கினை ஒத்த சிவந்த நிலத்தின் பெரிய வழியில் காயாவின் வாடிய மலர்கள் பரவிக்கிடக்க (அரக்கத்து – அத்துச் சாரியை, காயா – Memecylon edule, ironwood tree, தாஅய் – அளபெடை), பல உடன் ஈயல் மூதாய் வரிப்ப – தம்பலப்பூச்சிகள் பலவும் வரி வரியாக ஊர்ந்து செல்ல (மூதாய் – இந்திரகோபம், பட்டுப்பூச்சி, trombidium grandissimum), பவளமொடு மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய அம் காட்டு ஆர் இடை – பவளத்துடன் நீலமணி கலந்து இருந்தாற்போல் தோன்றுகின்ற குன்றுகள் சூழ்ந்த அழகிய காட்டின் அரிய இடங்களில் (கவைஇய – அளபெடை), மடப் பிணை தழீஇத் திரி மருப்பு இரலை புல் அருந்து உகள – மடப்பத்தையுடைய பெண்மானைத் தழுவித் திரித்தாற் போன்ற கொம்பினையுடைய ஆண்மான் புல்லை அருந்தித் துள்ள (தழீஇ – அளபெடை, மேயல் – ஆகுபெயர் உணவிற்கு, அருகம்புல், ஆர்ந்து என்பது அருந்து என வந்தது, அருந்து – அருந்தி), முல்லை வியன் புலம் பரப்பிக் கோவலர் குறும்பொறை மருங்கின் நறும்பூ அயர – அகன்ற முல்லை நிலத்தில் ஆனினங்களை மேய விட்டு ஆயர்கள் சிறு குன்றுகளில் நறுமண மலர்களை மாலையாகத் தொடுத்து அணிய, பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் வீங்கு மாண் செருத்தல் – அறுகம்புல்லை உண்ட வலிய நடையுடைய நல்ல ஆனினங்கள் பருத்த மாண்புற்ற மடி, தீம் பால் பிலிற்ற – இனிய பாலைச் சொரிய, கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் மாலையும் உள்ளார் ஆயின் – கன்றுகளை நினைத்து அழைக்கும் குரல் உடையனவாய் மன்றுகளில் நிறைய நுழையும் மாலைப் பொழுதிலும் நம் தலைவர் நம்மை நினைத்து வாராது இருப்பார் ஆயின், காலை யாங்கு ஆகுவம் கொல் பாண – இக்காலத்தில் யாம் எந்நிலையை அடைவோம் பாணனே (கொல் –அசைநிலை), என்ற மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன் – எனக் கூறிய தலைவியின் சொல்லுக்கு மறுமொழி கூற யான் இயலாதவனாகி, செவ்வழி நல் யாழ் இசையினென் பையெனக் கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந்நிறுத்தி அவர் திறம் செல்வேன் – செவ்வழிப்பண்ணை மெல்ல இசைத்துக் கடவுளை வாழ்த்தித் துயரம் கொண்ட மெய்யினன் ஆக அவரிடம் செல்வேனாகிய யான், கண்டனென் – கண்டேன், யானே – யான், விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுகக் கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி – தூண்டப்பட்டு விரையும் குதிரைகள் தடைகளிலிருந்து விலகி முன் செல்லும் செலவு மிக கற்களில் மோதி ஒலிக்கும் பல ஆரங்களையுடைய நேமிகளின் ஓசையானது (நேமி – சக்கரம், உருளி), கார் மழை முழக்கு இசை கடுக்கும் – கார்காலத்து மழையின் இடியினை ஒக்கும், முனை நல் ஊரன் புனை நெடுந்தேரே – முனையாகிய (இடமாகிய), நல்ல ஊரின் தலைவனின் புனையப்பட்ட தேரினை (நெடுந்தேரே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 15, மாமூலனார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
எம் வெங்காமம் இயைவது ஆயின்,
மெய்ம்மலி பெரும்பூண் செம்மல் கோசர்
கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த
பாகல் ஆர்கைப் பறைக் கண் பீலித்
தோகைக் காவின் துளு நாட்டு அன்ன, 5
வறுங்கை வம்பலர் தாங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்
அறிந்த மாக்கட்டு ஆகுக, தில்ல,
தோழிமாரும் யானும் புலம்பச்
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன் 10
பாழி அன்ன கடி உடை வியன் நகர்ச்
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி,
அத்த இருப்பை ஆர் கழல் புதுப்பூத்
துய்த்த வாய துகள் நிலம் பரக்க
கொன்றை அம் சினைக் குழல் பழம் கொழுதி 15
வன்கை எண்கின் வய நிரை பரக்கும்,
இன்துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்குக்
குன்ற வேயின் திரண்ட என்
மென்தோள் அஞ்ஞை சென்ற ஆறே. 19
பாடல் பின்னணி: மகட் போக்கிய நற்றாய் வருந்திச் சொல்லியது.
பொருளுரை: என்னுடைய பெரிய விருப்பம் கைகூடுவதானால், தன்னுடைய இனிய துணையுடன் மாண்புமிகுந்த கொள்கையுடன் சென்ற, மலை மூங்கிலைப் போன்று திரண்ட மென்மையான தோளினையுடைய என் மகள் சென்ற வழியில், மிகுந்த மெய்மையான சொற்களையுடைய பெரிய அணிகலன்களை அணியும் மாட்சிமையுடைய கோசர்களின், திரண்ட பசுமையான காயின் நுனியில் விளைந்த பாகற் பழங்களை உண்ணும் பறை முரசைப்போன்ற புள்ளிகளைத் தங்கள் தோகையில் கொண்ட மயில்களையுடைய சோலைகளைக் கொண்ட துளு நாட்டைப் போன்று, வெறுங்கையுடன் வரும் புதியவர்களை அன்புடன் பேணும் பண்புடைய நெருங்கிய தெருக்களையும் தலைமையையும் உடைய பழைய ஊர்களும், அறன் அறிந்த சான்றோர்களும் இருக்கட்டும்!
அவளுடைய தோழியரும் நானும் வருந்த, முகபடாம் அணிந்த யானைகளையும் ஒளியுடைய அணிகலன்களையும் உடைய நன்னனின் பாழி நகரைப் போன்ற காவலையுடைய எங்கள் பெரிய இல்லத்தின் நெருங்கிய காவலைக் கடந்து, தன்னுடைய தலைவனுடன் போய் விட்டாள், இருப்பை மரத்தின் காம்பு கழன்று உதிர்ந்த புதிய மலர்களை உண்ட வாயை உடையவையாய், தூசி நிலத்தில் பரவ, கொன்றை மரத்தின் அழகிய கிளைகளில் உள்ள உட்துளைப் பொருந்திய பழங்களைத் தின்னும் வலிமையான கைகளையுடைய வலிமை மிக்க கரடிக் கூட்டம் பரவி இருக்கும் பாலை நிலத்திற்கு.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘தன்னும் அவனும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 39) என வரும் நூற்பாவின்கண் ‘தெய்வம்’ என்பதன்கண் அமைத்துக் கொள்க. நன்னன் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவன் மலைபடுகடாம் பாடலின் பாட்டுடைத் தலைவன். உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரடி ஆர்கழல் புதுப் பூவை நுகர்ந்த வாயுடையவாய், அதிலே நிறைந்து, கொன்றைப் பழத்தைக் கோதிப் போனாற்போல அவளும் தலைவனோடு கூடிய இன்பத்திலே நிறைந்த செருக்கினாலே கூடி வளர்ந்த தோழிமாரையும் என்னையும் புறக்கணித்துப் போனாள் என்றவாறு. இதனைப் பழைய உரையாசிரியர் இறைச்சிப் பொருள் என்பர். அஞ்ஞை (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை அகநானூறு 145 – அன்பு மிகுதிப் பற்றி மகளை அன்னை என்றாள். ஒப்புமை – அகநானூறு 177 – பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇக் கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை, கரடி இருப்பை மலரை உண்ணுதல் – அகநானூறு 15, 81, 95, 149, 171, 247, 267, 275, 331. வரலாறு – கோசர், துளு நாடு, நன்னன், பாழி. காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – முனைவர் கு.வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லதிகாரம், உரியியல் 57).
சொற்பொருள்: எம் வெங்காமம் இயைவது ஆயின் – என்னுடைய பெரிய விருப்பம் கைகூடுவதானால், மெய்ம் மலி – மிகுந்த மெய்மை, பெரும்பூண் செம்மல் கோசர் – பெரிய அணிகலன்களை அணியும் மாட்சிமையுடைய கோசர்கள், கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த – திரண்ட பசுமையான காயின் நுனியில் விளைந்த, பாகல் ஆர்கைப் பறைக் கண் பீலித் தோகைக் காவின் – பாகற் பழங்களை உண்ணும் பறை முரசைப்போன்ற கண்களைத் தங்கள் தோகையில் கொண்ட (புள்ளிகளைத் தங்கள் தோகையில் கொண்ட) மயில்களுடைய சோலைகளையுடைய, துளு நாட்டு அன்ன – துளு நாட்டைப் போன்று, வறுங்கை வம்பலர் தாங்கும் பண்பின் – வெறுங்கையுடன் வரும் புதியவர்களை அன்புடன் பேணும் பண்புடைய, செறிந்த சேரிச் செம்மல் மூதூர் – நெருங்கிய தெருக்களையுடைய தலைமையையும் உடைய பழைய ஊர்கள், அறிந்த மாக்கட்டு ஆகுக – அறன் அறிந்த சான்றோர்களும் இருக்கட்டும், தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், ஈறு திரிந்து வந்தது, தோழிமாரும் யானும் புலம்ப – அவளுடைய தோழியரும் நானும் வருந்த, சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன் பாழி அன்ன – முகபடாம் அணிந்த யானைகளையும் ஒளியுடைய அணிகலன்களையும் அணிந்த நன்னனின் பாழி நகரைப் போன்று, கடி உடை வியன் நகர் – காவலையுடைய பெரிய இல்லம், செறிந்த காப்பு இகந்து – நெருங்கிய காவலைக் கடந்து, அவனொடு போகி – அவனுடன் போய், அத்த இருப்பை ஆர் கழல் புதுப்பூத் துய்த்த வாய – பாலை நிலத்தில் உள்ள இருப்பை மரத்தின் காம்பு கழன்று உதிர்ந்த புதிய மலர்களை உண்ட வாயை உடையவையாய், துகள் நிலம் பரக்க – தூசி நிலத்தில் பரவ, கொன்றை அம் சினைக் குழல் பழம் கொழுதி – கொன்றை மரத்தின் அழகிய கிளைகளில் உட்துளைப் பொருந்திய பழங்களைத் தின்று, வன்கை எண்கின் வய நிரை – வலிமையான கைகளையுடைய வலிமை மிக்க கரடிகள் கூட்டம், பரக்கும் – பரவி இருக்கும், இன்துணைப் படர்ந்த – தன்னுடைய இனிய துணையுடன் சென்ற, கொள்கையொடு – நல்ல கொள்கையுடன், ஒராங்கு – ஒன்றாக, குன்ற வேயின் திரண்ட என் மென்தோள் அஞ்ஞை – மலை மூங்கிலைப் போன்று திரண்ட மென்மையான தோளினையுடைய என் அன்னை (மகள்), சென்ற ஆறே – சென்ற வழி (ஆறே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 16, சாகலாசனார், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்
மாசு இல் அங்கை, மணி மருள் அவ்வாய்,
நாவொடு நவிலா நகை படு தீஞ்சொல்,
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத் 5
தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டே
கூர் எயிற்று அரிவை குறுகினள், யாவரும்
காணுநர் இன்மையின், செத்தனள் பேணிப்
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை
“வருக மாள என் உயிர்” எனப் பெரிது உவந்து 10
கொண்டனள் நின்றோள் கண்டு நிலைச் செல்லேன்,
“மாசு இல் குறுமகள். எவன் பேதுற்றனை?
நீயும் தாயை இவற்கு” என யான் தற்
கரைய வந்து விரைவனென் கவைஇ,
களவு உடம்படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா 15
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
பேணினென் அல்லெனோ மகிழ்ந, வானத்து
அணங்கு அருங்கடவுள் அன்னோள், நின்
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே. 19
பாடல் பின்னணி: பரத்தையர் இல்லத்திலிருந்து வந்த தலைவன் யாரையும் அறியேன் என்று கூறிய வேளையில், தலைவி கூறியது.
பொருளுரை: நீர்நாய்களையுடைய பழைய நீரில் தழைத்த தாமரையின் தாதினையுடைய நடுப்பகுதியைச் சூழ்ந்த உள் இதழ்களை அடுத்துள்ள இதழ்களைப் போல் இருக்கும் குற்றமற்ற அழகிய உள்ளங்கையையும், பவளம் போன்று சிவந்த வாயினையும், நாவால் கற்றுப் பேசாத கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் இனிய சொற்களையுமுடைய யாவரும் விரும்பும் பொற்தொடியை அணிந்த நம் புதல்வனை, அவன் சிறு தேர் ஓட்டி விளையாடிய தெருவில் தனியாக இருப்பதைக் கண்டு, கூர்மையான பற்களையுடைய உன்னுடைய பரத்தையான இளம் பெண் அணுகினாள். காணுவதற்கு எவருமே இல்லாததால், உன்னைப் போல் அவன் இருப்பதைத் தன்னுடைய மனதில் எண்ணி, பொன் அணிகள் அணிந்த இள முலைகளைக் கொண்ட அவள், “வருக என்னுயிரே” என்று மிகவும் மகிழ்ந்து, அவனை அணைத்துக் கொண்டு நின்றாள். அவளைக் கண்ட நான், நின்ற இடத்திலிருந்து விலகவில்லை. “குற்றமில்லாத இளம் பெண்ணே! எதற்காகக் கலங்குகின்றாய் நீ? நீயும் இவனுக்குத் தாய் தான்” என்று நான் கூறி விரைவாக வந்து அவளை அணைத்துக் கொள்ள, அவள் தான் செய்த களவை கண்டுக் கொண்டவரின் முன் உடன்பட்டு நிற்பவர் போலத் தன்னுடைய தலையைக் கவிழ்த்து, நிலத்தைத் தன் காலால் கீறி நின்றாள். அவளுடைய நிலையைக் கண்டு, நானும், அவளை விரும்பினேன் அல்லவா தலைவா? வானத்தில் உள்ள கடவுளான அருந்ததியைப் போன்றவள், உன்னுடைய மகனுக்குத் தாய் ஆவது பொருத்தம்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘காமக் கிழத்தி தன் மகத் தழீஇ ஏமுறு விளையாட்டு இறுதிக்கண்ணும்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) எனவரும் விதி கொள்க. மாசு இல் குறுமகள் (12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாசு இல் குறுமகள் என்பது இகழ்ச்சி. ஒப்புமை – தேர் வழங்கு தெரு: அகநானூறு 16 – தேர் வழங்கு தெருவில், நற்றிணை 227 – தேர் வழங்கு தெருவின், மதுரைக்காஞ்சி 648 – தேர் வழங்கு தெருவில். தொல்காப்பியம், பொருளியல் 37 – கற்புவழிப் பட்டவள் பரத்தையை ஏத்தினும் உள்ளத்து ஊடல் உண்டென மொழிப. கிளையா – கிளைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. வானத்து அணங்கு அருங்கடவுள் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வானத்தின்கண் காண்டற்கரிய கடவுட் கற்புடைய அருந்ததி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வானத்தின் அரிய தெய்வமாகிய அருந்ததி.
சொற்பொருள்: நாயுடை முதுநீர்க் கலித்த – நீர்நாய்களையுடைய பழைய நீரில் தழைத்த, தாமரைத் தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் – தாமரையின் தாதினையுடைய நடுப்பகுதியைச் சூழ்ந்த உள் இதழ்களை அடுத்துள்ள இதழ்களை ஒக்கும், மாசு இல் அங்கை – குற்றமற்ற அழகிய உள்ளங்கை, மணி மருள் அவ்வாய் – பவளம் போன்ற வாய் (மருள் – உவம உருபு), நாவொடு நவிலா – நாவால் கற்றுப் பேசாத, நகைபடு தீஞ்சொல் – கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் இனிய சொற்கள், யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை – யாவரும் விரும்பும் பொற் தொடியை அணிந்த புதல்வனை, தேர் வழங்கு தெருவில் – அவன் சிறு தேர் ஓட்டி விளையாடிய தெருவில், தமியோன் கண்டே – அவன் தனியாக இருப்பதைக் கண்டு, கூர் எயிற்று அரிவை குறுகினள் – கூர்மையான பற்களையுடைய இளம் பெண் அணுகினாள், யாவரும் காணுநர் இன்மையின் – காணுவதற்கு யாரும் இல்லாததால், செத்தனள் பேணி – உன்னைப் போல் இருப்பதை எண்ணி, பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை – பொன் அணிகள் அணிந்த இள முலைகள், வருக மாள என் உயிர் என – வருக என்னுயிர் என்று (மாள– ஓர் அசைச் சொல்), பெரிது உவந்து – பெரிதும் மகிழ்ந்து, கொண்டனள் நின்றோள் கண்டு – அணைத்துக் கொண்டு நின்றவளைக் கண்டு, நிலைச் செல்லேன் – நின்ற இடத்திலிருந்து நான் செல்லவில்லை, மாசு இல் குறுமகள் – குற்றமில்லாத இளம் பெண்ணே, எவன் பேதுற்றனை – எதற்காக கலங்கினாய், நீயும் தாயை இவற்கு என யான் தற் கரைய – நீயும் இவனுக்குத் தாய் தான் என்று நான் கூற (ஐகாரம் சாரியை), வந்து விரைவனென் கவைஇ – வந்து விரைவாக நான் அணைத்து (கவைஇ – அளபெடை), களவு உடம்படுநரின் கவிழ்ந்து – தான் செய்த களவைக் கண்டு கொண்டவரின் முன் உடன்பட்டு நிற்பவர் போல தலையைக் கவிழ்த்து (உடம்படுநரின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது), நிலம் கிளையா நாணி நின்றோள் நிலை கண்டு – நிலத்தைக் காலால் கீறி நின்றவள் நிலையைக் கண்டு, யானும் – நானும், பேணினென் அல்லெனோ – அவளை விரும்பினேன் அல்லவா, மகிழ்ந – தலைவா, வானத்து அணங்கு அருங்கடவுள் அன்னோள் – வானத்தின் கடவுளான அருந்ததியைப் போன்றவள், நின் மகன் தாய் ஆதல் புரைவது – உன்னுடைய மகனுக்குத் தாய் ஆகுவது பொருத்தம் என்று (புரை – உவம உருபு), ஆங்கு – அசைநிலை, எனவே – எனவே, ஏகாரம் அசைநிலை
அகநானூறு 17, கயமனார், பாலைத் திணை – மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
வளங்கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும்,
இளந்துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்,
“உயங்கின்று அன்னை என் மெய்” என்று அசைஇ
மயங்கு வியர் பொறித்த நுதலள் தண்ணென
முயங்கினள் வதியும் மன்னே, இனியே, 5
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்,
நெடுமொழித் தந்தை அருங்கடி நீவி,
நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என்
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி
வல்ல கொல் செல்லத் தாமே, கல்லென 10
ஊர் எழுந்தன்ன உருகெழு செலவின்
நீர் இல் அத்தத்து, ஆர் இடை மடுத்த
கொடுங்கோல் உமணர் பகடு தெழி தெள் விளி
நெடும் பெருங்குன்றத்து இமிழ் கொள இயம்பும்,
கடுங்கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல் 15
பெருங்களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து
அருஞ்சுரக் கவலைய அதர் படு மருங்கின்,
நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர்
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்
நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி 20
வைகுறு மீனின் தோன்றும்,
மைபடு மாமலை விலங்கிய சுரனே. 22
பாடல் பின்னணி: தலைவி இற்செறிப்பை மீறித் தன் காதலனுடன் உடன்போக்கில் சென்றுவிட்டதால், செவிலித்தாய் வருந்திச் சொன்னது.
பொருளுரை: செல்வம் பொருந்திய அழகிய இல்லத்தில், சிறிது பொழுது பந்தை எறிந்து விளையாடினாலும், தன் இளைய தோழியருடன் சேர்ந்து கழங்கு விளையாட்டு விளையாடினாலும், “அன்னையே என் உடல் வருந்திற்று” எனக் கூறித் தளர்ந்து, பொருந்திய வியர்வை அரும்பிய நெற்றியை உடையவளாய், என் மேனி தண்ணெனக் குளிரும்படி என்னைத் தழுவி என்னுடன் இருப்பாள் முன்பு. இப்பொழுது, வளையல்கள் அணிந்த மாட்சிமையுடைய அவளுடைய தோழியரையும் எம்மையும் நினையாள் ஆகி, பெரும் புகழை உடைய தன் தந்தையின் அரிய காவலைக் கடந்து, ஏதிலாளனின் (புதியவனின்) நெஞ்சைத் தனக்கே முற்றிலும் பெற்ற என் சிறிய மூதறிவையுடைய மகளின் சிலம்பு பொருந்திய சிறிய காலடிகள் செல்லுவதற்கு வலிமை உடையனவோ,
கல்லென்னும் ஒலியுடன் ஊர் மக்கள் யாவரும் எழுந்து வேறிடம் செல்வதை ஒக்கும், அச்சம் மிக்க செல்லுதல் உடைய, நீர் இல்லாத பாலை நிலத்தில், அரிய இடங்களில் நகராது நிற்கும் கடாக்களை ஓட்டும் கொடிய கோல்களையுடைய உமணர்களின் கூட்டம் தங்கள் கடாக்களை உரப்பி ஓட்டும் தெளிந்த ஒலிகள், நெடிய பெரிய மலையில் எதிரொலித்து ஒலிக்கும், கடுமையான ஞாயிற்றின் கதிர்களால் காய்ந்த மூங்கில் நிறைந்த பக்க மலையில், பெரிய களிற்று யானைகள் அவற்றை உரசுவதால் மண் பொருந்திய அடியை உடைய யா மரங்களை உடைய அரிய சுரத்தில், பிரிவுகள் உடைய வழிகள் பொருந்திய பக்கங்களில், நீண்ட அடியினையுடைய இலவ மரங்களின் முதிர்ந்த பல மலர்கள், விழாக்களைத் தன்னிடத்தில் கொண்ட பழைய வெற்றிகரமான முதிய ஊரில், நெய்யை ஊற்றிய விளக்குகளிலிருந்து விழும் சுடர் போல், காற்று வீசுவதால் கீழே விழுந்து, விடியற்காலையில் தோன்றும் விண்மீன்கள் போல் தோன்றும், முகில்கள் பொருந்திய பெரிய மலைகள் குறுக்கிட்டு இருக்கும் வழியில்?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க. சிறு முதுக்குறைவி (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குல மகளிர்க்குக் கொண்டானிற் சிறந்த கேளிர் இலர் எனும் அறத்தை உணர்ந்து அவனொடு போயினமையிற் தலைவியைச் சிறு முதுக்குறைவி என்றாள். மயங்கு வியர் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருந்திய வியர்வை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – செறிந்த வியர்வை. செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34). பொ. வே. சோமசுந்தரனார் உரை – உப்பு வணிகர் மனைவி மக்களுடன் ஒருங்குகூடிச் செல்லுதல் வழக்கம் ஆதலின் அவர்கள் செலவு ஊரில் வாழும் மக்கள் எல்லாம் குடிப் பெயர்ந்து போவது போலத் தோன்றும் என்றார்.
சொற்பொருள்: வளங்கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும் இளந்துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும் “உயங்கின்று அன்னை என் மெய்” என்று அசைஇ – செல்வம் பொருந்திய அழகிய இல்லத்தில் சிறிது பொழுது பந்தை எறிந்து விளையாடினாலும் தன் இளைய தோழியருடன் சேர்ந்து கழங்கு விளையாட்டு விளையாடினாலும் ”அன்னையே என் உடல் வருந்திற்று” எனக் கூறித் தளர்ந்து (நகர் – , இல்லம், மனை, அசைஇ – அளபெடை, கழங்கு – Caesalpinia crista seeds, Molucca beans), மயங்கு வியர் பொறித்த நுதலள் தண்ணென முயங்கினள் வதியும் மன்னே – பொருந்திய வியர்வை அரும்பிய நெற்றியை உடையவளாய் என் மேனி தண்ணெனக் குளிரும்படி என்னைத் தழுவி என்னுடன் இருப்பாள் முன்பு (மன்னே – மன் கழிவுப்பொருளில் வந்த இடைச்சொல், ஏகாரம் அசைநிலை), இனியே – இப்பொழுது, தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள் – வளையல்கள் அணிந்த மாட்சிமையுடைய அவளுடைய தோழியரையும் எம்மையும் நினையாள், நெடுமொழித் தந்தை அருங்கடி நீவி – பெரும் புகழை உடைய தன் தந்தையின் அரிய காவலைக் கடந்து (நெடுமொழி – பெரும் புகழ்), நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என் சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி வல்ல கொல் – ஏதிலாளனின் (புதியவனின்) நெஞ்சைத் தனக்கே முற்றிலும் பெற்ற என் சிறிய மூதறிவையுடைய மகளின் சிலம்பு பொருந்திய சிறிய காலடிகள் வலிமை உடையனவோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்), செல்ல – செல்ல, தாமே – அவை (ஏகாரம் அசைநிலை),
கல்லென ஊர் எழுந்தன்ன – கல்லென்னும் ஒலியுடன் ஊர் மக்கள் யாவரும் எழுந்து வேறிடம் செல்வதை ஒக்கும் (கல்லென – ஒலிக்குறிப்பு, ஊர் – ஆகுபெயர் ஊர் மக்களுக்கு), உருகெழு செலவின் நீர் இல் அத்தத்து – அச்சம் மிக்க செல்லுதல் உடைய நீர் இல்லாத பாலை நிலத்தில், ஆர் இடை மடுத்த கொடுங்கோல் உமணர் பகடு தெழி தெள் விளி – அரிய இடங்களில் செல்லாது நிற்கும் கடாக்களை ஓட்டும் கொடிய கோல்களையுடைய உமணர்கள் தங்கள் கடாக்களை உரப்பி ஓட்டும் தெளிந்த ஒலிகள், நெடும் பெருங்குன்றத்து இமிழ் கொள இயம்பும் – நெடிய பெரிய மலையில் எதிரொலித்து ஒலிக்கும், கடுங்கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல் – கடுமையான ஞாயிற்றின் கதிர்களால் காய்ந்த மூங்கில் நிறைந்த பக்க மலை, பெருங்களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து – பெரிய களிற்று யானைகள் அவற்றை உரசுவதால் மண் பொருந்திய அடியை உடைய யா மரங்களை உடைய (யா மரம் – ஆச்சா மரம், Hardwickia binate), அருஞ்சுரக் கவலைய அதர் படு மருங்கின் நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர் – அரிய சுரத்தில் பிரிவுகள் உடைய வழிகள் பொருந்திய பக்கங்களில் நீண்ட அடியினையுடைய இலவ மரங்களின் முதிர்ந்த பல மலர்கள் (இலவ மரம், Silk Cotton Tree, Ceiba pentandra, கவலை – பிரிவு), விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர் – விழாக்களைத் தன்னிடத்தில் கொண்ட பழைய வெற்றிகரமான முதிய ஊர், நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி வைகுறு மீனின் தோன்றும் – நெய்யை ஊற்றிய விளக்குகளிலிருந்து விழும் சுடர் போல் காற்று வீசுவதால் விழுந்து விடியற்காலையில் தோன்றும் விண்மீன்கள் போல் தோன்றும் (சுடரின் – இன் ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு, மீனின் – இன் ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), மைபடு மாமலை விலங்கிய சுரனே – முகில்கள் பொருந்திய பெரிய மலைகள் குறுக்கிட்டு இருக்கும் வழியில் (சுரனே – சுரன் சுரம் என்பதன் போலி, ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 18, கபிலர், குறிஞ்சித் திணை, தோழி தலைவனிடம் சொன்னது
நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து,
பூ மலர் கஞலிய கடுவரல் கான்யாற்று,
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி,
மராஅ யானை மதம் தப ஒற்றி,
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம், 5
கடுங்கண் பன்றியின் நடுங்காது துறந்து,
நாம அருந்துறைப் பேர்தந்து, யாமத்து
ஈங்கும் வருபவோ, ஓங்கல் வெற்ப?
ஒரு நாள் விழுமம் உறினும், வழிநாள்
வாழ்குவள் அல்லள் என் தோழி, யாவதும் 10
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர்
நீடு இன்று ஆக இழுக்குவர் அதனால்
உலமரல் வருத்தம் உறுதும் எம் படப்பைக்
கொடுந்தேன் இழைத்த கோடு உயர் நெடுவரை
பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில் 15
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை
வாங்கு அமைக் கண் இடை கடுப்ப யாய்
ஓம்பினள் எடுத்த தட மென்தோளே. 18
பாடல் பின்னணி: களவொழுக்கத்தையே விரும்பி வரைந்து கொள்ளாது உள்ளான் தலைவன். இரவுக்குறியின்கண் அவன் வந்து மீளும்பொழுது, அவனிடம் தோழி கூறியது இது. இரவுக்குறியின் ஏதம் கூறி அதனை மறுத்து, இனி நீ பகலில் வருக எனக் கூறி அதற்கும் இடையூறு உண்டெனக் குறிப்பால் உணர்த்தி வரைவு கடாயது.
பொருளுரை: உயர்ந்த மலைகளையுடைய தலைவனே! நீரின் நிறம் மறையும்படி முதிர்ந்து உதிர்ந்து மிதக்கும் அழகிய மலர்கள் நெருங்கிய, விரைந்து ஓடும் காட்டு ஆற்றில், முதலை தங்கும் உயர்ந்த கற்பாறைகளின் மீது மோதுவதால் நீரோட்டம் மடங்கி அதனால் உண்டாகும் சுழியானது, தன் இனத்துடன் சேராத களிற்று யானையின் மதம் கெடுமாறு அதன் மீது மோதி, அதன் வலிமையை அழித்து இழுத்துச் செல்லும், காண்போர்க்கு அச்சம் தரும் வெள்ளத்தினை, அஞ்சாமையுடைய பன்றியைப் போல் நடுங்குதலின்றிக் கடந்து, அச்சம் தரும் அரிய துறையைத் தாண்டி நள்ளிரவில் இவ்விடத்திற்கு வருபவர்கள் உள்ளனரோ?
ஒரு நாள் நீ துன்பம் அடைந்தாலும் மறுநாள் உயிர் வாழ மாட்டாள் என் தோழி. இடையூறு எதுவும் இல்லாத வழிகளிலும் பலகாலும் செல்பவர்கள் நீடுதல் இல்லாதபடி தவறி விடுவார்கள். அதனால், மனம் சுழலும் வருத்தத்தை நாங்கள் அடைவோம். எங்கள் தோட்டத்தினை அடுத்துள்ள வளைந்த தேனிறாக்கள் இழைக்கப்பட்ட உச்சி உயர்ந்த மலையில், பழங்கள் தொங்குகின்ற மரச்செறிவில் காந்தள் மலர்களையுடைய புதரிடையே, பகல் வேளையில் நீ வந்தாலும் தழுவுவாய், அகன்ற மலையில் உள்ள வளைந்த மூங்கிலின் கணுக்களுக்கு நடுவான இடத்தை ஒத்த எங்கள் தாய் வளர்த்த தலைவியின் மென்மையான தோள்களை.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘களனும் பொழுதும் வரை நிலை விலக்கி காதல் மிகுதி உளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் விதி கொள்க. பழைய உரை – தேன் இழைத்த என்றதனானே தேனழிக்க வருவாராலும், பழந்தூங்கு நளிப்பென்றதனானே பழமெடுக்க வருவாராலும், காந்தளம் பொதும்பு என்றதனானே பூப்பறிக்க வருவாராலும், பகற்குறியும் அரிதென்று குறிப்பால் மறுத்தாளாம். பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெற்ப! கான்யாற்றின் நீத்தம் நடுங்காது துறந்து அருந்துறைப் பேர்தந்து ஈங்கும் வருவவோ? நீ ஒரு நாள் விழுமம் உறினும் என் தோழி வழிநாள் வாழ்குநனள் அல்லள். பயில வழங்குநர் இழுக்குவர் அதனால் யாம் வருத்தம் உறுதும். நீ பகல் பொதும்பில் வரினும் தோள் புணர்குவை (இனி இரவில் வராதே கொள்) என இயைபு காண்க. புலியூர்க் கேசிகன் உரை – நின் இரவு வருகை குறித்து யாங்கள் மனஞ்சுழலும் வருத்தத்தை அடைகின்றோம். நீர் நிறம் கரப்ப (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீர் தோன்றாதபடி மறைய என்றவாறு. ‘புண்ணிய நறுமலராடைப் போர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தனன் அடக்கிக் புனல்யாறன்றிது பூம்புனல் யாறென’ (சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், புறஞ்சேரியிறுத்த காதை 73–74). ஓங்கல் (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தொழிற்பெயர், தலைவனுடைய குடி உயர்வு கூறுவாள் அதனை அவன் நாட்டு மலைக்கு அடையாக்கினாள். இதனால் அறமருவாத இவ்வொழுக்கம் உயர்குடித் தோன்றலாகிய நினக்குப் பொருந்தாது என குறிப்பாக உணர்த்தியவாறு. இது கருட்பொருட் புறத்தே பிறந்த இறைச்சிப்பொருள். நாம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69). விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57). தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25). ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘பொழுதும் ஆறும்’ (தொல்காப்பியம், பொருளியல் 16) என்னும் சூத்திரத்து ‘அவன் ஊறு அஞ்சலும்’ என்றதற்கு ‘ஒரு நாள் விழுமம் உறினும் வழிநாள் வாழ்குவள் அல்லள் என் தோழி’ என்னும் பகுதியை எடுத்துக் காட்டினர் நச்சினார்க்கினியர்.
சொற்பொருள்: நீர் நிறம் கரப்ப ஊழுறுபு உதிர்ந்து பூ மலர் கஞலிய கடுவரல் கான்யாற்று – நீரின் நிறம் மறையும்படி முதிர்ந்து உதிர்ந்த அழகிய மலர்கள் நெருங்கிய விரைந்து ஓடும் காட்டு ஆற்றில் (கரப்ப – மறைக்க), கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி – முதலை தங்கும் உயர்ந்த கற்பாறைகளின் மீது மோதுவதால் நீரோட்டம் மடங்கி உண்டாகும் சுழி (கராஅம் – அளபெடை), மராஅ யானை மதம் தப ஒற்றி உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் – தன் இனத்துடன் சேராத களிற்று யானையின் மதம் கெடுமாறு மோதி அதன் வலிமையை அழித்து இழுத்துச் செல்லும் காண்போர்க்கு அச்சம் தரும் வெள்ளம் (மராஅ – அளபெடை, உராஅ – அளபெடை), கடுங்கண் பன்றியின் நடுங்காது துறந்து – அஞ்சாமையுடைய பன்றியைப் போல் நடுங்குதலின்றிக் கடந்து (பன்றியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), நாம அருந்துறைப் பேர்தந்து யாமத்து ஈங்கும் வருபவோ – அச்சம் தரும் அரிய துறையைத் தாண்டி நள்ளிரவில் இவ்விடத்திற்கு வருபவர்கள் உள்ளனரோ (நாம – நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது, நாம் – அச்சம், ஈங்கும் – உம்மை உயர்வு சிறப்பு), ஓங்கல் வெற்ப – உயர்ந்த மலைகளையுடைய தலைவனே (ஓங்கல் – தொழிற்பெயர்), ஒரு நாள் விழுமம் உறினும் வழிநாள் வாழ்குவள் அல்லள் என் தோழி – ஒரு நாள் நீ துன்பம் அடைந்தாலும் மறுநாள் உயிர் வாழ மாட்டாள் என் தோழி, யாவதும் ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர் நீடு இன்று ஆக இழுக்குவர் – இடையூறு எதுவும் இல்லாத வழிகளிலும் பலகாலும் செல்பவர்கள் நீடுதல் இல்லாதபடி தவறி விடுவார்கள், அதனால் – அதனால், உலமரல் வருத்தம் உறுதும் – மனம் சுழலும் வருத்தத்தை அடைவோம், எம் படப்பைக் கொடுந்தேன் இழைத்த கோடு உயர் நெடுவரை பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில் பகல் நீ வரினும் புணர்குவை – எங்கள் தோட்டத்தினை அடுத்துள்ள வளைந்த தேனிறாக்கள் இழைக்கப்பட்ட உச்சி உயர்ந்த மலையில் பழங்கள் தொங்குகின்ற மரச்செறிவில் காந்தள் மலர்களையுடைய புதரிடையே பகல் வேளையில் நீ வந்தாலும் தழுவுவாய், அகல் மலை வாங்கு அமைக் கண் இடை கடுப்ப யாய் ஓம்பினள் எடுத்த தட மென்தோளே – அகன்ற மலையில் உள்ள வளைந்த மூங்கிலின் கணுக்களுக்கு நடுவான இடத்தை ஒத்த எங்கள் தாய் வளர்த்த தலைவியின் மென்மையான தோள்களை (கடுப்ப – உவம உருபு, மென்தோளே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 19, பொருந்தில் இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே, வந்து நனி
வருந்தினை, வாழி என் நெஞ்சே, பருந்து இருந்து
உயா விளி பயிற்றும் யா உயர் நனந்தலை
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
கடுங்குரல் குடிஞைய நெடும் பெருங்குன்றம், 5
எம்மொடு இறத்தலும் செல்லாய், பின் நின்று
ஒழியச் சூழ்ந்தனை ஆயின், தவிராது
செல் இனி, சிறக்க நின் உள்ளம், வல்லே
மறவல் ஓம்புமதி, எம்மே நறவின்
சேயிதழ் அனைய ஆகிக் குவளை 10
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை,
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி,
பழங்கண் கொண்ட கலிழ்ந்து வீழ் அவிர் அறல்
வெய்ய உகுதர, வெரீஇப் பையென
சில் வளை சொரிந்த மெல் இறை முன் கை 15
பூ வீழ் கொடியின் புல்லெனப் போகி,
அடர் செய் ஆய் அகல் சுடர் துணை ஆக,
இயங்காது வதிந்த நம் காதலி
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே. 19
பாடல் பின்னணி: நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைவன், தலைவியின் நலன் நயந்து உள்ளிய தன் நெஞ்சிடம் சொன்னது.
பொருளுரை: என் நெஞ்சே! நீ நீடு வாழ்வாயாக! நான் பொருள்வயின் புறப்படும் அன்று வரமாட்டேன் எனக் கூறி மனையில் தங்கவில்லை நீ. இங்கு வந்து மிகவும் வருத்தம் அடைந்துள்ளாய். பருந்துகள் தங்கியிருந்து, வழிச்செல்வோரைத் துன்பம் அடையச்செய்யும் ஓசையைப் பலகாலும் செய்யும், யா மரங்கள் உயர்ந்துள்ள இந்த அகன்ற இடத்தில், உருள்கின்ற இழுகுபறையின் ஓசையைப்போல், கேட்போர் தம் இயல்புக்கு ஏற்றாற்போல் பொருள் தெரிய ஒலிக்கும் கடிய குரலையுடைய ஆந்தைகளையுடைய பெரிய குன்றத்தை எம்முடன் கடத்தலும் செய்யாய். எனக்குத் துணையாகாது, பிற்பட்டு நின்று, என்னை கைவிட்டுச் செல்ல எண்ணுவாய் ஆயின் தடையில்லாது இப்பொழுதே நீ செல்வாயாக விரைந்து. நின் உள்ளம் சிறப்பதாக!
முன்பு குவளை மலர்களின் கரிய இதழ்களை ஒக்கும் நீர் மிகுதல் உடைய குளிர்ந்த கண்களின் இமைகள், இப்பொழுது நரந்தம்பூவின் சிவந்த இதழ்கள் போன்று ஆகி, உள்ளம் கொதித்ததால் நினைக்கும் பொழுதெல்லாம் வற்றி, துன்பம் அடைந்த கண்கள் கலங்கி வடிக்கும் கண்ணீர் வெப்பத்துடன் கொட்ட, தன் நிலைமையைப் பிறர் அறிவர் என அஞ்சி, சில வளையல்கள் கழன்று நீங்கிய மெல்லிய மூட்டினையுடைய முன்னங்கை பூக்கள் நீங்கிய கொடிபோல் பொலிவில்லாது ஆகி, மெதுவாகச் சென்றுப் பொன் தகட்டால் செய்யப்பட்ட அழகிய அகலிடத்துத் தான் ஏற்றிய விளக்கே துணையாக, வலிமையில்லாது வாழும் நம் காதலியின் வருந்தி மெலிந்த முதுகைத் தழுவியபின், எம்மை மறக்காது இருப்பாயாக.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘புணர்தல் பிரிதல்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 14) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளைக் காட்டி, ‘இது மறவல் ஓம்புதியெனப் பிரிவு கூறிற்று’ என்றும் ‘நோயும் இன்பமும்’ (தொல்காப்பியம், பொருளியல் 2) என்னுஞ் சூத்திரத்து, ‘கைகவியாச் சென்று …….. நெஞ்சே’ என்பது, நெஞ்சினை உறுப்புடையது போல் உவந்துரைத்தது என்றும், ‘வருந்தினை வாழி என் நெஞ்சே ……… சிறக்க நின் உள்ளம்’ என்பது, நெஞ்சினை அறிவுடையது போல அழுகை பற்றிக் கூறியது என்றும் கூறினர் நச்சினார்க்கினியர். உருள் துடி மகுளியின் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உருண்ட உடுக்கை இனத்ததாகிய இழுகு பறையினது ஒலியைப் போன்று, மகுளி இழுகு பறை என்பர் பழைய உரையாசிரியர், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – உருள்கின்ற இழுகு பறையின் ஓசையைப் போல. பொ. வே. சோமசுந்தரனார் உரை – பரிபாடல் 12–41 – மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி – இசைக்கருவிகள். பூ வீழ் கொடியின் புல்லென (16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முன்னங்கைகள் பூக்கள் உதிர்ந்தொழிந்த பூங்கொடிகள் போன்று புக்கென்று தோன்றும்படி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தலைவி பூக்கள் ஒழியப்பெற்ற கொடிபோலப் பொலிவற. ஒப்புமை – பரிபாடல் 8–75 – நயவரு நறவு இதழ், மதர் உண்கண், பெரும்பாணாற்றுப்படை 386 – நறவு பெயர்த்து அமைத்த நல் எழில் மழைக்கண். உயா – உயாவே உயங்கல் (தொல்காப்பியம், உரியியல் 73). நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80). மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26). நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).
சொற்பொருள்: அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே – நான் புறப்படும் அன்று வரமாட்டேன் எனக் கூறி மனையில் தங்கவில்லை நீ (இலையே – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம், ஏகாரம் அசைநிலை), வந்து நனி வருந்தினை – இங்கு வந்து மிகவும் வருத்தம் அடைந்துள்ளாய், வாழி – நீ நீடு வாழ்வாயாக, அசைநிலை, என் நெஞ்சே – என் நெஞ்சே, பருந்து இருந்து உயா விளி பயிற்றும் – பருந்துகள் தங்கியிருந்து வழிச்செல்வோரைத் துன்பம் அடையச்செய்யும் ஓசையைப் பலகாலும் செய்யும், யா உயர் நனந்தலை உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் கடுங்குரல் குடிஞைய நெடும் பெருங்குன்றம் – யா மரங்கள் உயர்ந்துள்ள அகன்ற இடத்தில் உருள்கின்ற இழுகுபறையின் ஓசையைப்போல் பொருள் தெரிய ஒலிக்கும் கடிய குரலையுடைய ஆந்தைகளையுடைய பெரிய குன்றம் (யா மரம் – ஆச்சா மரம், Hardwickia binate, மகுளியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), எம்மொடு இறத்தலும் செல்லாய் – எம்முடன் கடத்தலும் செய்யாய், பின் நின்று ஒழியச் சூழ்ந்தனை ஆயின் தவிராது செல் இனி – பின்னே நின்று செல்ல எண்ணுவாய் ஆயின் தடையில்லாது இப்பொழுது நீ செல்வாயாக, சிறக்க நின் உள்ளம் – நின் உள்ளம் சிறப்பதாக (சிறக்க – வியங்கோள் வினைமுற்று), வல்லே – விரைந்து, மறவல் ஓம்புமதி எம்மே – எம்மை மறக்காது இருப்பாயாக (மதி – முன்னிலையசை, எம்மே – தன்மைப் பன்மை), நறவின் சேயிதழ் அனைய ஆகி – நரந்தம்பூவின் சிவந்த இதழ்கள் போன்று ஆகி (நறவ மலர், நரந்தம்பூ, Luvunga scandens), குவளை மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை – குவளை மலர்களின் கரிய இதழ்களை ஒக்கும் நீர் மிகுதல் உடைய குளிர்ந்த கண்களின் இமைகள் (புரை – உவம உருபு), உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி – உள்ளம் கொதித்ததால் நினைக்கும் பொழுதெல்லாம் வற்றி, பழங்கண் கொண்ட கலிழ்ந்து வீழ் அவிர் அறல் வெய்ய உகுதர – துன்பம் அடைந்த கண்கள் கலங்கி வடிக்கும் கண்ணீர் வெப்பத்துடன் சொரிய (கலிழ்ந்து – கலுழ்ந்து என்பதன் திரிபு), வெரீஇ – அஞ்சி (அளபெடை, வெருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது), பையென – மெதுவாக, சில் வளை சொரிந்த மெல் இறை முன் கை – சில வளையல்கள் கழன்று நீங்கிய மெல்லிய மூட்டினையுடைய முன்னங்கை, சில வளையல்கள் கழன்று நீங்கிய மெல்லிய மூட்டினையுடைய முன்னங்கையை உடையவள், பூ வீழ் கொடியின் புல்லெனப் போகி – பூக்கள் நீங்கிய கொடிபோல் பொலிவில்லாது ஆகி (கொடியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அடர் செய் ஆய் அகல் சுடர் துணை ஆக – பொன் தகட்டால் செய்யப்பட்ட அழகிய அகலிடத்துத் தான் ஏற்றிய விளக்கே துணையாக, இயங்காது வதிந்த நம் காதலி – வலிமையில்லாது வாழும் நம் காதலி, உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே – வருந்தி மெலிந்த முதுகைத் தழுவியபின், வருந்தி மெலிந்த பிடரியைத் தழுவியபின் (பின்னே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 20, உலோச்சனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பெருநீர் அழுவத்து எந்தை தந்த
கொழு மீன் உணங்கல் படுபுள் ஓப்பி,
எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி,
ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங்கழித் 5
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கிக்,
கொண்டல் இடு மணல் குரவை முனையின்
வெண்தலைப் புணரி ஆயமொடு ஆடி,
மணிப்பூம் பைந்தழை தைஇ, அணித்தகப்
பல் பூங்கானல் அல்கினம் வருதல் 10
கவ்வை நல் அணங்கு உற்ற இவ்வூர்
கொடிது அறி பெண்டிர் சொல் கொண்டு, அன்னை
கடி கொண்டனளே தோழி, பெருந்துறை
எல்லையும் இரவும் என்னாது, கல்லென
வலவன் ஆய்ந்த வண் பரி 15
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே. 16
பாடல் பின்னணி: வரைதல் கருதாமல் களவு ஒழுக்கத்தையே நீட்டிக்கும் தலைவன் கேட்கும்படித் தோழி கூறியது.
பொருளுரை: தோழி! மணல் மேட்டில் உள்ள புன்னை மரத்தின் இனிய நிழலில் தங்கிக் கடலிலிருந்து நம் தந்தை பிடித்துக் கொண்டுவந்த கொழுத்த மீன் வற்றலைக் கவர வரும் பறவைகளை விரட்டியும், சிவந்த நண்டின் ஆழமான வளைகளைத் தோண்டியும், வளைந்த உப்பங்கழியில் உள்ள தாழை விழுதால் புனைந்த கயிற்றால் தொங்கவிட்ட ஊஞ்சலைப் புலிநகக் கொன்றை மரத்தின் உயர்ந்த கிளைகளில் கட்டி ஆடியும், கீழ்க்காற்றுக் குவித்த மணலில் குரவை நடனம் ஆடியும், அதை வெறுத்தால் வெண்மையான மேற்பரப்பையுடைய கடல் நீரில் தோழியருடன் விளையாடியும், அழகிய மலர்கள் கலந்த பசிய தழையாடையை அழகு பொருந்த உடுத்திக் கொண்டும், பல பூக்களையுடைய கடற்கரைச் சோலையில் தலைவனுடன் தங்கி வருதல் பற்றி, அலர் என்னும் நல்ல பேய் பிடித்திருக்கும் இந்த ஊரில் கொடுமை கூறும் பெண்களின் சொற்களைக் கேட்டு, பெரிய துறையில் பகலும் இரவும் என்று இல்லாது எப்பொழுதும், கல்லென்னும் ஒலியுடன் தேரோட்டி ஆராய்ந்து பூட்டிய வளவிய குதிரைகளுடன் நிலவை ஒத்த மணலில் சுழன்று திரியும் ஒரு தேர் உண்டு என்று எண்ணி, அன்னை இல்லில் காவல் படுத்தினாள். இனி எவ்வாறு நாம் தலைவனைக் காண இயலும்?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘காப்பின் கடுமை கையற வரினும்’ என வரும் விதி கொள்க. ஆசிரியர் நச்சினார்க்கினியர் இச் செய்யுளைத் தலைவி கூற்றாகக் கொண்டு, ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 20) என்னும் நூற்பாவின்கண் ‘தமர் தற்காத்த காரண மருங்கினும்’ என வரும் துறைக்கு எடுத்துக் காட்டுவர். ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 20) என்னுஞ் சூத்திரத்து, பிறர் கூற்றால் தமர் தற்காத்தமைக்கு இச் செய்யுளை, ‘தேரும் யானையும்’ (தொல்காப்பியம், பொருளியல் 18) என்னுஞ் சூத்திரத்து, தலைவன் தேரூர்ந்து வருவதற்கு, ‘நிலவு மணல் கொட்குமோர் தேர் உண்டனவே’ என்பதனையும், எடுத்துக் காட்டினர் நச்சினார்க்கினியர். அல்கினம் வருதல் (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யாம் நம் மாடற்களத்தே தங்கியிருந்து நம் இல்லத்திற்கு வருவதனை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நாம் தலைவரொடு தங்கி வருதலைப்பற்றி. நல் அணங்கு (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை. ஈண்டுப் பேய். நல் அணங்கு என்றது இகழ்ச்சிக் குறிப்பு. நிலவு மணல் – அகநானூறு 20 – நிலவு மணல், அகநானூறு 200 – நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 31 – நிலவு மணல், நற்றிணை 140 – நிலவு மணல், நற்றிணை 159 – நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல், நற்றிணை 183 – நிலவு மணல், குறுந்தொகை 123 – நிலவுக் குவித்தன்ன வெண்மணல், கலித்தொகை 13 – வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர், புறநானூறு 17 – நிலவு மணல் வியன் கானல், பொருநராற்றுப்படை 213 – நிலவு எக்கர், மதுரைக்காஞ்சி 114 – நிலவுக் கானல். தாழை ஊஞ்சல் – கலித்தொகை 131 – தண் தாழை வீழ் ஊசல் – நச்சினார்க்கினியர் உரை – தாழையினது விழுதால் திரித்து இட்ட ஊசல்.
சொற்பொருள்: பெருநீர் அழுவத்து எந்தை தந்த கொழு மீன் உணங்கல் படுபுள் ஓப்பி – கடலிலிருந்து நம் தந்தை பிடித்துக் கொண்டுவந்த கொழுத்த மீன் வற்றலைக் கவர வரும் பறவைகளை விரட்டி (எந்தை – எம் + தந்தை, மருஉ மொழி), எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ – மணல் மேட்டில் உள்ள புன்னை மரத்தின் இனிய நிழலில் தங்கி (புன்னை மரம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, அசைஇ – அளபெடை), செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி – சிவந்த நண்டின் ஆழமான வளைகளைத் தோண்டி, ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த – புலிநகக் கொன்றை மரத்தின் உயர்ந்த கிளைகளில் கட்டிய (ஞாழல் மரம் – Cassia sophera, Tigerclaw tree, புலிநகக்கொன்றை), கொடுங்கழித் தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி – வளைந்த உப்பங்கழியில் உள்ள தாழை விழுதால் புனைந்த கயிற்றால் தொங்கவிட்ட ஊஞ்சலை ஆட்டி விளையாடி, கொண்டல் இடு மணல் குரவை முனையின் வெண்தலைப் புணரி ஆயமொடு ஆடி – கீழ்க்காற்றுக் குவித்த மணலில் குரவை ஆடி அதை வெறுத்தால் வெண்மையான மேற்பரப்பையுடைய கடல் நீரில் தோழியருடன் விளையாடி, மணிப்பூம் பைந்தழை தைஇ அணித்தக – அழகிய மலர்களையுடைய பசிய தழையாடையை அழகு பொருந்த உடுத்திக் கொண்டு (தைஇ – அளபெடை), பல் பூங்கானல் அல்கினம் வருதல் – பல பூக்களையுடைய கடற்கரைச் சோலையில் தலைவனுடன் தங்கி வருதல், கவ்வை நல் அணங்கு உற்ற இவ்வூர் கொடிது அறி பெண்டிர் சொல் கொண்டு – அலர் என்னும் நல்ல பேய் பிடித்திருக்கும் இந்த ஊரில் கொடுமை கூறும் பெண்களின் சொற்களைக் கேட்டு, அன்னை கடி கொண்டனளே – அன்னை இல்லில் காவல் படுத்தினாள் (கொண்டனளே – ஏகாரம் அசைநிலை), தோழி – தோழி, பெருந்துறை எல்லையும் இரவும் என்னாது – பெரிய துறையில் பகலும் இரவும் என்று இல்லாது, கல்லென வலவன் ஆய்ந்த வண் பரி நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே – கல்லென்னும் ஒலியுடன் தேரோட்டி ஆராய்ந்து பூட்டிய வளவிய குதிரைகளுடன் நிலவை ஒத்த மணலில் சுழன்று திரியும் ஒரு தேர் உண்டு என்று எண்ணி (கல்லென – ஒலிக்குறிப்பு, கொட்கும் – சுழன்று திரியும், எனவே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 21, காவன்முல்லைப் பூதனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
“மனை இளநொச்சி மௌவல் வால் முகைத்
துணை நிரைத்தன்ன மா வீழ் வெண்பல்,
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத்தோள்,
மடந்தை மாண் நலம் புலம்பச், சேய் நாட்டுச் 5
செல்லல்” என்று யான் சொல்லவும், ஒல்லாய்
வினை நயந்து அமைந்தனை ஆயினை, மனை நகப்
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே,
எழு இனி, வாழி என் நெஞ்சே, புரி இணர்
மெல் அவிழ் அம் சினை புலம்ப வல்லோன் 10
கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி,
மராஅம் அலைத்த மணவாய்த் தென்றல்
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்,
என்றூழ் நின்ற புன்தலை வைப்பில்
பருந்து இளைப்படூஉம் பாறுதலை ஓமை 15
இருங்கல் விடரகத்து ஈன்று இளைப்பட்ட
மென் புனிற்று அம் பிணவு பசித்தெனப் பைங்கண்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க,
இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச்
செங்காய் உதிர்ந்த பைங்குலை ஈந்தின் 20
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த
வல்வாய்க் கணிச்சி, கூழார் கோவலர்
ஊறாது இட்ட உவலைக் கூவல்,
வெண்கோடு நயந்த அன்பில் கானவர்
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து, 25
இருங்களிற்று இன நிரை தூர்க்கும்
பெருங்கல் அத்தம் விலங்கிய காடே. 27
பாடல் பின்னணி: பொருள்வயிற் பிரிந்த தலைவன் வருந்திய தன் நெஞ்சிடம் கூறியது.
பொருளுரை: இல்லத்தின் முற்றத்தில் உள்ள இளைய நொச்சி மரத்தின் மேல் படர்ந்த முல்லைக்கொடியின், வண்டுகள் விரும்பும் வெள்ளை அரும்புகளில் ஒத்தினவற்றை நிரல்பட (வரிசையாக) வைத்தாற்போன்ற வெள்ளை பற்களையும், அழகிய வயிற்றினையும், அகன்ற அல்குலையும், ஒப்பனை செய்யப்பட்ட தாழ்ந்து தொங்கும் மெல்லிய கூந்தலையும், பெரிய மென்மையான மூங்கிலை ஒத்த தோள்களையும் உடைய நம் தலைவியின் மாண்பு மிக்க அழகு பாழ்படும்படித் தொலைவில் உள்ள நாட்டிற்குச் செல்லாதே என்று யான் கூறவும் நீ அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பொருள் ஈட்டும் வினையை விரும்பி நீ வந்தாய். நம் இல்லம் விளங்கும்படி பல்வேறு செல்வங்களை நாம் ஈட்டித் தருவோம்.
வலதுபுறம் சுரிந்த மலர்க்கொத்துக்கள் மென்மையாக அவிழும் அழகிய கிளைகள் தனிமையுறும்படி, அவற்றில் உள்ள பூக்களைப் பறிக்க வல்லவன் மரக்கிளையை அடித்து அசைக்கும் கோல் போல், மரா மரத்தை மலர்கள் உதிரும்படி தாக்கி அலைக்கும் மலர்களின் மணத்தைக் கொண்ட தென்றல், சுரத்தில் செல்லும் மறவர்களின் குழன்ற மயிரில் அம்மலர்களைச் சொரியும், வெப்பம் நிலைபெற்ற பொலிவற்ற இடங்களுடைய ஊர்களில், பருந்து முட்டையிட்டு அடைகாக்கும் சிதறிய மேல்பகுதியை உடைய ஓமை மரங்களுடைய பெரிய மலையின் முழைஞ்சுகளில் (குகைகளில்), அண்மையில் ஈன்றுத் தன் குட்டிகளைக் காக்கும் மெல்லிய ஈன்றணிமை உடைய அழகிய பெண் செந்நாய் பசித்ததால், பசிய கண்களையுடைய அதன் ஆண் செந்நாய் ஆண் பன்றியைத் தாக்க, அஞ்சி ஓடும் அதன் பெண் பன்றி மோதியதால், அறுபட்டு உதிர்ந்த பசிய குலைகளில் உள்ள ஈந்தின் சிவந்த காய்களின் விதைகளுடன் கூடிய, மணல் மேடாகிய வலிமையான நிலத்தை உடைத்த வலிய முனையையுடைய குந்தாலியுடைய கூழை உண்ணும் கிணறு வெட்டுவோர் நீர் ஊறாததால் காய்ந்த இலைகளால் மூடிய கிணறுகளை, களிற்று யானைகளின் மருப்புகளை (தந்தங்களை) விரும்பும் அன்பு இல்லாத கானவர், தீமை இல்லை எனக் கருதிச் செல்லும் வழிகளில், தம்மை வீழ்த்திப் பற்றுவதற்கான குழிகள் அவை என நினைத்துப் பெரிய களிற்று யானைகளின் கூட்டம் வழியில் அவற்றை நிறைக்கும், பெரிய கற்குவியல்கள் குறுக்கிடும் காட்டின் இடையே நாம் செல்வதற்கு, இப்பொழுது விரைந்து எழுந்து என்னுடன் வருவாயாக.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) எனவரும் நூற்பாவில் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்’ என வரும் விதி கொள்க. மனை நொச்சி – அகநானூறு 21 – மனை இள நொச்சி, அகநானூறு 23 – மனைய தாழ்வின் நொச்சி, அகநானூறு 367 – மனை வளர் நொச்சி, நற்றிணை 246 – மனை மா நொச்சி, பொருநராற்றுப்படை 185 – மனை நொச்சி. அரும்பைப் போன்ற பற்கள் – அகநானூறு 21 – மௌவல் வால் முகைத் துணை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல், அகநானூறு 162 – முகை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல், கலித்தொகை 14 – மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண்பல், கலித்தொகை 22 – நறுமுல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த செறி முறை பாராட்டினாய் மற்று எம் பல்லின், கலித்தொகை 31 – முகை வெண் பல், கலித்தொகை 103 – முல்லை முகையும். கலித்தொகை 108 – முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லும் பணைத் தோளும். ஈன்று இளைப்பட்ட – அகநானூறு 3, 21, 238, நற்றிணை 384. புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 79). தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25). என்றூழ் – கதிரவனின் முதிர்ந்த கதிர்கள், எல் (கதிரவன்) + ஊழ் (முதிர்ச்சி). முனைவர் கு. வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம். பிணவு – பன்றி புல்வாய் நாய் என மூன்றும் ஒன்றிய என்ப பிணவின் பெயர்க்கொடை (தொல்காப்பியம், மரபியல் 58). பிணவல் – பிணவல் எனினும் அவற்றின் மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 59).
சொற்பொருள்: மனை இளநொச்சி மௌவல் வால் முகைத் துணை நிரைத்தன்ன மா வீழ் வெண்பல் – இல்லத்தின் முற்றத்தில் உள்ள இளைய நொச்சி மரத்தின் மேல் படர்ந்த முல்லைக்கொடியின் வண்டுகள் விரும்பும் வெள்ளை அரும்புகளில் ஒத்தினவற்றை நிரல்பட (வரிசையாக) வைத்தாற்போன்ற வெள்ளை பற்களையும் (மா – வண்டு, வீழ் – விருப்பம், நொச்சி மரம் – Vitex leucoxylon, Chaste tree, மௌவல் – ஒரு வித முல்லை, Jasminum angustifolium), அவ் வயிற்று அகன்ற அல்குல் – அழகிய வயிற்றினையும் அகன்ற அல்குலையும் (அல்குல் – இடை, இடைக்குக்கீழ் உள்ள பகுதி), தைஇத் தாழ் மென் கூந்தல் தட மென் பணைத்தோள் மடந்தை – ஒப்பனை செய்யப்பட்ட தாழ்ந்து தொங்கும் மெல்லிய கூந்தலையும் பெரிய மென்மையான மூங்கிலை ஒத்த தோள்களையும் உடைய நம் தலைவி (தைஇ – அளபெடை), மாண் நலம் புலம்பச் சேய் நாட்டுச் செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாய் – மாண்பு மிக்க அழகு பாழ்படும்படித் தொலைவில் உள்ள நாட்டிற்குச் செல்லாதே என்று யான் கூறவும் நீ அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை, வினை நயந்து அமைந்தனை ஆயினை – பொருள் ஈட்டும் வினையை விரும்பி நீ வந்தாய், மனை நகப் பல் வேறு வெறுக்கை தருகம் – நம் இல்லம் விளங்கும்படி பல்வேறு செல்வங்களை ஈட்டித் தருவோம், வல்லே எழு இனி – இப்பொழுது விரைந்து எழுந்து என்னுடன் வருவாயாக, வாழி – நீ நீடு வாழ்வாயாக, அசைநிலை, என் நெஞ்சே – என் நெஞ்சே, புரி இணர் மெல் அவிழ் அம் சினை புலம்ப வல்லோன் கோடு அறை கொம்பின் – வலதுபுறம் சுரிந்த மலர்க்கொத்துக்கள் மென்மையாக அவிழும் அழகிய கிளைகள் தனிமையுற அவற்றில் உள்ள பூக்களைப் பறிக்க வல்லவன் மரக்கிளையை அடித்து அசைக்கும் கோல் போல் (கொம்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), வீ உகத் தீண்டி மராஅம் அலைத்த மணவாய்த் தென்றல் சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும் என்றூழ் நின்ற புன்தலை வைப்பில் – மரா மரத்தை மலர்கள் உதிரும்படி தாக்கி அலைக்கும் மலர்களின் மணத்தைக் கொண்ட தென்றல் சுரத்தில் செல்லும் மறவர்களின் குழன்ற மயிரில் அம்மலர்களைச் சொரியும் வெப்பம் நிலைபெற்ற பொலிவற்ற இடங்களுடைய ஊர்களில் (மராஅம் – அளபெடை), பருந்து இளைப்படூஉம் பாறுதலை ஓமை இருங்கல் விடரகத்து – பருந்து முட்டையிட்டு அடைகாக்கும் சிதறிய மேல்பகுதியை உடைய ஓமை மரங்களுடைய பெரிய மலையின் முழைஞ்சுகளில் (விடரகம் – முழைஞ்சு, மலைப்பிளவு, குகை, இளைப்படூஉம் – அளபெடை), ஈன்று இளைப்பட்ட மென் புனிற்று அம் பிணவு பசித்தெனப் பைங்கண் செந்நாய் ஏற்றை கேழல் தாக்க – அண்மையில் ஈன்றுத் தன் குட்டிகளைக் காக்கும் மெல்லிய ஈன்றணிமை உடைய அழகிய பெண் செந்நாய் பசித்ததால் பசிய கண்களையுடைய அதன் ஆண் செந்நாய் ஆண் பன்றியைத் தாக்க (பைங்கண் – பண்புத்தொகை), இரியற் பிணவல் தீண்டலின் – அஞ்சி ஓடும் பெண் பன்றி மோதியதால், பரீஇச் செங்காய் உதிர்ந்த பைங்குலை ஈந்தின் பரல் – அறுபட்டு உதிர்ந்த பசிய குலைகளில் உள்ள ஈந்தின் சிவந்த காய்களின் விதைகள் (பரீஇ – அளபெடை, பரல் – விதை), மண் சுவல முரண் நிலம் உடைத்த வல்வாய்க் கணிச்சி கூழார் கூவலர் ஊறாது இட்ட உவலைக் கூவல் – மணல் மேடாகிய வலிமையான நிலத்தை உடைத்த வலிய முனையையுடைய குழிதோண்டும் கருவியாகிய குந்தாலியுடைய கூழை உண்ணும் கிணறு வெட்டுவோர் நீர் ஊறாததால் காய்ந்த இலைகளால் மூடிய கிணறுகளை, வெண்கோடு நயந்த அன்பு இல் கானவர் – களிற்று யானைகளின் மருப்புகளை (தந்தங்களை) விரும்பும் அன்பு இல்லாத கானவர், இகழ்ந்து இயங்கு இயவின் – தீமை இல்லை எனக் கருதிச் செல்லும் வழிகளில், அகழ்ந்த குழி செத்து இருங்களிற்று இன நிரை தூர்க்கும் – தம்மை வீழ்த்திப் பற்றுவதற்கான குழிகள் அவை என நினைத்துப் பெரிய களிற்று யானைகளின் கூட்டம் வழியில் அவற்றைத் தூர்க்கும் (நிறைக்கும்), பெருங்கல் அத்தம் விலங்கிய காடே – பெரிய கற்குவியல்கள் குறுக்கிடும் காடு (காடே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 22, வெறி பாடிய காமக்கண்ணியார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும்
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்
மணம் கமழ் வியன் மார்பு அணங்கிய செல்லல்
இது என அறியா மறுவரல் பொழுதில்,
“படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை 5
நெடுவேள் பேண தணிகுவள் இவள்” என
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற,
களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி,
வள நகர் சிலம்பப் பாடிப் பலி கொடுத்து,
உருவச் செந்தினை குருதியொடு தூஉய், 10
முருகு ஆற்றுப்படுத்த உருகெழு நடுநாள்,
ஆரம் நாற அரு விடர்த் ததைந்த
சாரல் பல் பூ வண்டுபடச் சூடி,
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல 15
நல் மனை நெடுநகர்க் காவலர் அறியாமை,
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப,
இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து
நக்கனென் அல்லனோ யானே, எய்த்த
நோய் தணி காதலர் வர ஈண்டு 20
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே? 21
பாடல் பின்னணி: (1) வரை பொருள் பொருட்டுச் சென்ற தலைவன் வரவு நீட்டித்தான். வருந்திய தலைவியிடம் தோழி அவன் இயல்பினைப் பழித்தாள். அதை மறுத்துத் தலைவி இவ்வாறு உரைத்தாள். (2) தலைவன் அருகில் இருப்பதை அறிந்த தோழி அவன் வரையாது ஒழுகுவதால் அவனைப் பழித்தாள். தலைவி அன்னை வேலனை அழைத்து வெறியாட்டு எடுத்தமையைத் தலைவன் கேட்குமாறுத் தோழியிடம் கூறித் தலைவன் விரைவில் வரைந்துக் கொள்வான் என்பதைப் புலப்படுத்தினாள்.
பொருளுரை: கடவுள்கள் உடைய உயர்ந்த மலை உச்சியிலிருந்து விழும் கூட்டமாகிய அருவிகளையுடைய காடுகள் பொருந்திய நாட்டையுடைய நம் தலைவனின் மணம் கமழும் அகன்ற மார்பு நம்மை வருத்திய துன்பத்தை நம் தாய் முதலியோர் இன்னதென்று அறியாது கலக்கமுற்ற பொழுதில், “தன்னை வணங்காதவர்களை அழித்த பலவகைப் புகழ்கள் கொண்ட பெரிய கைகளையுடைய முருகவேளைப் போற்றினால் இவள் துயரம் தணியும்” என்று அறிவுடைய பெண்கள் அவர்களிடம் கூற, அவர்கள் வேலனை அழைத்து, வெறியாட்டக்களத்தை நன்கு அமைத்து, வேலுக்கு மாலைகள் சூட்டி, நம் செல்வம் மிகுந்த இல்லத்தில் ஒலிக்கும்படிப் பாடிப் பலிகொடுத்து அழகிய செந்தினையைக் குருதியுடன் கலந்து தூவி முருகனை வரவழைத்த அச்சம் பொருந்திய நடு இரவில்,
மார்பில் அணிந்த சந்தனத்தின் மணம் கமழ, பக்கமலையில் உள்ள அரிய மலைப்பிளவுகளில் செறிந்த பல மலர்களை வண்டுகள் மொய்க்கும்படிச் சூடிக்கொண்டுக் களிற்று யானையை இரையாகத் தெரியும்பொருட்டு ஒதுங்கிய பார்வையுடன் மறைந்து இயங்கும் இயல்பினையுடைய வலிமையான புலியைப் போல், நல்ல மனையின்கண் உள்ள காவலர்கள் அறியாதவண்ணம் வந்து, தம்மை விரும்பும் உள்ளத்தையுடைய நம் விருப்பம் நிறைவேறும்படி, இனிய உயிர் குழையும்படி என்னை அணைக்கும் பொழுதெல்லாம் உடல் பூரித்து நகைத்தேன் அல்லவோ யான், நாம் மெலிவதற்குக் காரணமாகிய நோயைத் தணித்தற்குரிய காதலர் இங்கு வரும் வேளையில், காரணமாக இல்லாத வேலனுக்கு நம் குடும்பத்தார் வெறியாட்டம் நிகழ்த்தி அழிந்த பேதமை நிலைமையைக் கண்டு!
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரண்டனுக்கும் ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 20) என்னும் நூற்பாவின்கண் ‘வழுவின்றி நிலைஇய இயற்படு பொருளினும்’ என வரும் விதி கொள்க. தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24). ஒப்புமை – அகநானூறு 22 – உருவச் செந்தினை குருதியொடு தூஉய், அகநானூறு 272 – உருவச் செந்தினை நீரொடு தூஉய், பதிற்றுப்பத்து 19 – உருவச் செந்தினை குருதியொடு தூஉய். செல்லல் – செல்லல் இன்னல் இன்னாமையே (தொல்காப்பியம், உரியியல் 6). மெய்ம் மலிந்து – யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிகுமே (தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 62), மெல்லெழுத்துறழும் மொழியு மாருளவே தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 65).
சொற்பொருள்: அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும் கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன் – கடவுள்கள் உடைய உயர்ந்த மலை உச்சியிலிருந்து விழும் கூட்டமாகிய அருவிகளையுடைய காடுகள் பொருந்திய நாட்டையுடைய நம் தலைவன், மணம் கமழ் வியன் மார்பு அணங்கிய செல்லல் இது என அறியா மறுவரல் பொழுதில் – மணம் கமழும் அகன்ற மார்பு வருத்திய துன்பத்தை இன்னதென்று அறியாது கலக்கமுற்ற பொழுதில், படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை நெடுவேள் பேண தணிகுவள் இவள் என முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற – வணங்காதவர்களை அழித்த பலவகைப் புகழ்கள் கொண்ட பெரிய கைகளையுடைய முருகவேளைப் போற்றினால் இவள் துயரம் தணியும் என்று அறிவுடைய பெண்கள் கூற, களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி வள நகர் சிலம்பப் பாடிப் பலி கொடுத்து உருவச் செந்தினை குருதியொடு தூஉய் முருகு ஆற்றுப்படுத்த – வெறியாட்டக்களத்தை நன்கு அமைத்து வேலுக்கு மாலைகள் சூட்டி நம் செல்வம் மிகுந்த இல்லத்தில் ஒலிக்கும்படிப் பாடிப் பலிகொடுத்து அழகிய செந்தினையைக் குருதியுடன் கலந்து தூவி முருகனை வரவழைக்க (தூஉய் – அளபெடை), உருகெழு நடுநாள் – அச்சம் பொருந்திய நடு இரவில், ஆரம் நாற அரு விடர்த் ததைந்த சாரல் பல் பூ வண்டுபடச் சூடி – சந்தன மணம் கமழ பக்கமலையில் உள்ள அரிய மலைப்பிளவுகளில் செறிந்த பல மலர்களை வண்டுகள் மொய்க்கும்படிச் சூடி (சாரல் – பக்கமலை, மலைச்சரிவு), களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல – களிற்று யானையை இரையாகத் தெரியும்பொருட்டு ஒதுங்கிய பார்வையுடன் மறைந்து இயங்கும் இயல்பினையுடைய வலிமையான புலியைப் போல் (தெரீஇய – அளபெடை, பார்வல் – பார்வை), நல் மனை நெடுநகர்க் காவலர் அறியாமை – நல்ல மனையின்கண் உள்ள காவலர்கள் அறியாதவண்ணம், தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப – தம்மை விரும்பும் உள்ளத்தையுடைய நம் விருப்பம் நிறைவேறும்படி, இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து நக்கனென் அல்லனோ யானே – இனிய உயிர் குழையும்படி அணைக்கும் பொழுதெல்லாம் உடல் பூரித்து நகைத்தேன் அல்லவோ யான், எய்த்த நோய் தணி காதலர் வர – நாம் மெலிவதற்கு ஏதுவான (காரணமான) நோயைத் தணித்தற்குரிய காதலர் வர (எய்த்த நோய் – மெலிவதற்குக் காரணமான நோய்), ஈண்டு ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே – அவர் வரக் காரணமாக இல்லாத வேலனுக்கு நம் குடும்பத்தார் வெறியாட்டம் நிகழ்த்தி அழிந்த பேதமையைக் கண்டு (கண்டே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 23, ஓரோடோகத்துக் கந்தரத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மண்கண் குளிர்ப்ப வீசி தண் பெயல்
பாடு உலந்தன்றே பறைக் குரல் எழிலி,
புதல் மிசைத் தளவின் இதல் முள் செந்நனை
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழக்
காடே கம்மென்றன்றே, அவல 5
கோடு உடைந்தன்ன கோடல் பைம்பயிர்,
பதவின் பாவை முனைஇ மதவு நடை
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇத்
தண் அறல் பருகித் தாழ்ந்து பட்டனவே,
அனைய கொல் வாழி தோழி, மனைய 10
தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும்
மௌவல் மாச்சினை காட்டி
அவ்வளவு என்றார், ஆண்டுச் செய் பொருளே. 13
பாடல் பின்னணி: பொருள்வயின் தலைவன் பிரிந்த பொழுதில் தோழியிடம் தலைவி உரைத்தது. பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டு முல்லைத் திணைக்குரிய முதலும் கருவும் உரிப்பொருள் பிரிதல் நிமித்தமாதலின் பாலைத் திணைக்காயிற்று.
பொருளுரை: தோழி! நீடு வாழ்வாயாக! பறை முரசின் குரல் போன்ற ஒலியையுடைய முகில்கள், நிலத்தில் உள்ள இடமெல்லாம் குளிரும்படி குளிர்ந்த மழையைப் பெய்து, அவற்றின் இடி முழக்கமும் அடங்கிவிட்டது. புதர்களின் மேல் செம்முல்லையின் காடை முள்ளை ஒத்த சிவந்த அரும்புகள், நெருங்கிய குலைகளையுடைய பிடவத்தின் அரும்புகளுடன் ஒருசேர பிணிப்பு நீங்கி மலர, அதனால் காடு கம்மென்று மணம் கமழ்கின்றது. பள்ளங்களின்கண் உள்ள சங்கு உடைந்தாற் போல் தோன்றும் வெண்கோடலின் பசிய பயிருடன் அறுகங்கிழங்கைத் தின்று வெறுத்த செருக்கான நடையையுடைய ஆண்மான்கள், தாம் விரும்பும் தம் பெண்மான்களைத் தழுவிக் குளிர்ந்த நீரைப் பருகி ஓரிடத்தில் தங்கிவிட்டன.
மனையில் உள்ள முல்லைக் கொடிகள் சூழ்ந்து வளரும் குறிய நொச்சி மரத்தின் கரிய கிளைகளைக் காட்டி, அவற்றில் படர்ந்த முல்லை மலரும் காலத்தில், வேற்று நாட்டிலிருந்து வருவோம் எனக் கூறிச் சென்றார் நம் தலைவர். அங்கு ஈட்டும் பொருள் நம்மை விட்டு நீங்கியிருக்கும் அளவிற்குச் சிறப்பு மிக்கதோ?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க. மனை நொச்சி – அகநானூறு 21 – மனை இள நொச்சி, அகநானூறு 23 – மனைய தாழ்வின் நொச்சி, அகநானூறு 367 – மனை வளர் நொச்சி, நற்றிணை 246 – மனை மா நொச்சி, பொருநராற்றுப்படை 185 – மனை நொச்சி. மதவு – மதவே மடனும் வலியும் ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 81). ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘ஏனைப் பிரிவும் அவ்வியல் நிலையும்’ (தொல்காப்பியம், கற்பியல் 43) என்னும் சூத்திரத்து இச் செய்யுளை எடுத்துக்காட்டி இது பொருட்பிரிவின்கண் கார் குறித்து வருவல் என்றமையின் ஆறு திங்கள் இடை விட்டது என்று கூறினர் நச்சினார்க்கினியர்.
சொற்பொருள்: மண்கண் குளிர்ப்ப வீசி தண் பெயல் பாடு உலந்தன்றே – நிலத்தில் உள்ள இடமெல்லாம் குளிரும்படி குளிர்ந்த மழையைப் பெய்து ஒலி அடங்கிவிட்டது (உலந்தன்றே – ஏகாரம் அசைநிலை), பறைக் குரல் எழிலி – பறை முரசின் குரல் போன்ற ஒலியையுடைய முகில்கள், புதல் மிசைத் தளவின் இதல் முள் செந்நனை நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழக் காடே கம்மென்றன்றே – புதர்களின் மேல் செம்முல்லையின் காடை முள்ளை ஒத்த சிவந்த அரும்புகள் நெருங்கிய குலைகளையுடைய பிடவத்தின் அரும்புகளுடன் ஒரு சேர பிணிப்பு நீங்கி மலர அதனால் காடு கம்மென்று மணம் கமழ்கின்றது (இதல் – சிவல், கவுதாரி, காடை, தளவம் – golden jasmine, பிடவம் – Bedaly–nut vine, காடே – ஏகாரம் அசைநிலை), அவல கோடு உடைந்தன்ன கோடல் பைம்பயிர் பதவின் பாவை முனைஇ மதவு நடை அண்ணல் இரலை அமர் பிணை தழீஇத் தண் அறல் பருகித் தாழ்ந்து பட்டனவே – பள்ளங்களின்கண் உள்ள சங்கு உடைந்தாற் போல் தோன்றும் வெண்கோடலின் பசிய பயிருடன் அறுகங்கிழங்கைத் தின்று வெறுத்த செருக்கான நடையையுடைய ஆண் மான்கள் தாம் விரும்பும் தம் பெண் மான்களைத் தழுவிக் குளிர்ந்த நீரைப் பருகி ஓரிடத்தில் தங்கிவிட்டன (அவல் – பள்ளம், பாவை – கிழங்கு, முனைஇ – அளபெடை, பதவு – அருகம்புல், Cynodon grass, தழீஇ – அளபெடை), அனைய கொல் – அவ்வாறு தானா (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்), வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, மனைய தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும் மௌவல் மாச்சினை காட்டி அவ்வளவு என்றார் – மனையில் உள்ள முல்லைக் கொடிகள் சூழ்ந்து வளரும் குறிய நொச்சி மரத்தின் கரிய கிளைகளைக் காட்டி முல்லை மலரும் அக்கால எல்லை என்றார் (நொச்சி மரம் – Vitex leucoxylon, Chaste tree, மௌவல் – Jasminum angustifolium), ஆண்டுச் செய் பொருளே – அங்கு ஈட்டும் பொருள் (பொருளே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 24, ஆவூர் மூலங்கிழார், முல்லைத் திணை – தலைவன் பருவங்கண்டு சொன்னது
வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,
தளை பிணி அவிழா சுரி முகப் பகன்றை,
சிதரல் அம் துவலை தூவலின் மலரும்
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள், 5
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை,
விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகி,
மங்குல் மா மழை தென்புலம் படரும்
பனி இருங்கங்குலும் தமியள் நீந்தி,
தம் ஊரோளே நன்னுதல், யாமே, 10
கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து
நுதி முகம் மழுகிய மண்ணை வெண்கோட்டுச்
சிறுகண் யானை நெடுநா ஒண்மணி,
கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு,
தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து, 15
கழித்து உறை செறியா வாளுடை எறுழ்த்தோள்,
இரவு துயில் மடிந்த தானை,
உரவுச்சின வேந்தன் பாசறையேமே. 18
பாடல் பின்னணி: தலைவன் பருவங்கண்டு சொல்லியது. வினைமுற்றும் தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்லியதுமாம்.
பொருளுரை: வேள்விகளைச் செய்யாத பார்ப்பான், கூரிய அரத்தால் அறுத்த வளையல்கள் போக எஞ்சிய சங்கின் மேல் பகுதி போல், கட்டுண்ட பிணிப்பு விடாத சுரிந்த முகத்தையுடைய பகன்றையின் அரும்புகள், அழகிய சிதறும் மழைத்துளிகள் வீசுவதால் மலரும் காலமாகிய குளிந்த பெயல் நின்ற தைத் திங்களாகிய முன்பனியின் இறுதி நாளில், கதிரவனின் ஒளியுடைய கதிர்களை மறைக்கும் வாடைக் காற்றுடைய விடியற்காலையில், வானின் தோல் உரிவது போல், அகன்ற இடத்தில் அசைந்து இயங்கி இருண்ட பெரிய முகில்கள் தென்திசையின்கண் செல்லும் பனியுடைய இரவாகிய வெள்ளத்தையும் துணையின்றித் தனியளாகக் கடந்து தம் ஊரில் உள்ளாள் சிறந்த நெற்றியையுடைய நம் தலைவி. யாம், காவலையுடைய மதில் கதவின்மேல் பாய்ந்ததால் பூண் பிளக்கப்பட்டுக் கூரிய முனை மழுங்கி மட்டையான வெள்ளை மருப்புகளை உடைய சிறு கண்களையுடைய யானைகளின் நீண்ட நாவினையுடைய ஒளிரும் மணிகளின் ஓசை, கழிகளுடன் பிணிக்கப்பட்ட கரிய கேடயத்தில் பொழியும் அம்புகள் தைத்ததால் எழும் ஓசை முழங்கும் ஓசையுடைய முரசுடன் ஒலிக்கும் போர்க்களத்திலிருந்து வந்து, இரவில், உறையிலிருந்து நீக்கிய வாளை உள்ளே இடாத வாளினைக் கோத்த வலிய தோளுடையவனும், இரவில் அயர்ந்து உறங்கும் சேனைகளைக் கொண்டவனுமான மிக்க சினம் பொருந்திய வேந்தனின் பாசறையில் உள்ளோம்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவற்றிற்கு ‘கரணத்தின் அமைந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) எனவரும் நூற்பாவில் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்’ என வரும் விதி கொள்க. வேளாப் பார்ப்பான் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மறை பயின்று வேள்வி செய்யும் அறிவு மதுகையில்லாத பார்ப்பனர் அக்காலத்தே சங்கு அறுத்து வளையல் செய்தனர் என்பது இதனால் பெற்றாம். பொ. வே. சோமசுந்தரனார் உரை – யானை மணியோசையும் கிடுகில் கணை உதைக்கும் ஓசையும் தழங்குகுரல் முரசமொடு முழங்குதல் பாசறையில் இரவின்கண் நிகழ்தல் கூடாமையின் இவை எல்லாம் பகற்பொழுது நிகழ்ச்சிகளாகவும் அங்ஙனம் செய்த தானை வினைமுற்று வந்து இரவுத்துயில் மடிந்த பாசறை என இயைத்துக் கொள்க. சுரிமுக (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வலஞ்சுற்றுதலையுடைய. எறுழ் – எறுழ் வலி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 92). சங்கை வெட்டி இயற்றிய வளையல் – அகநானூறு 24 – வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த வளை, நற்றிணை 77 – வல்லோன் வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை, ஐங்குறுநூறு 194 – கடல் கோடு அறுத்த அரம் போழ் அவ்வளை, மதுரைக்காஞ்சி – அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை.
சொற்பொருள்: வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன – வேள்விகளைச் செய்யாத பார்ப்பான் கூரிய அரத்தால் அறுத்த வளையல்கள் போக எஞ்சிய சங்கின் மேல் பகுதி போன்று (வளை – சங்கு, கோடு, பணிலம், மனவு), தளை பிணி அவிழா சுரி முகப் பகன்றை சிதரல் அம் துவலை தூவலின் மலரும் தைஇ நின்ற தண் பெயல் கடை நாள் – கட்டுண்ட பிணிப்பு விடாத சுரிந்த முகத்தையுடைய பகன்றையின் அரும்புகள் அழகிய சிதறும் மழைத்துளிகள் வீசுவதால் மலரும் காலமாகிய குளிந்த பெயல் நின்ற தைத் திங்களாகிய முன்பனியின் இறுதி நாள் (தைஇ – அளபெடை, பகன்றை – Operculina turpethum, Indian jalap), வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை – கதிரவனின் ஒளியுடைய கதிர்களை மறைக்கும் வாடைக் காற்றுடைய விடியற்காலையில், விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகி மங்குல் மா மழை தென்புலம் படரும் – வானின் தோல் உரிவது போல் அகன்ற இடத்தில் இயங்கி இருண்ட பெரிய முகில்கள் தென்திசையின்கண் செல்லும், பனி இருங்கங்குலும் தமியள் நீந்தி தம் ஊரோளே நன்னுதல் – பனியுடைய இரவாகிய வெள்ளத்தையும் தனியளாகக் கடந்து தம் ஊரில் உள்ளாள் சிறந்த நெற்றியையுடைய நம் தலைவி (கங்குலும் – உம்மை சிறப்பு, நன்னுதல் – அன்மொழித்தொகை), யாமே – யாம், கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து நுதி முகம் மழுகிய மண்ணை வெண்கோட்டுச் சிறுகண் யானை நெடுநா ஒண்மணி – காவலையுடைய மதில் கதவின்மேல் பாய்ந்ததால் பூண் பிளக்கப்பட்டுக் கூரிய முனை மழுங்கி மட்டையான வெள்ளை மருப்புகளை உடைய சிறு கண்களையுடைய யானைகளின் நீண்ட நாவினையுடைய ஒளிரும் மணிகளின் ஓசை, கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து – கழிகளுடன் பிணிக்கப்பட்ட கரிய கேடயத்தில் பொழியும் அம்புகள் தைத்ததால் எழும் ஓசை முழங்கும் ஓசையுடைய முரசுடன் ஒலிக்கும் போர்க்களத்திலிருந்து வந்து இரவில் (உதைப்பு – தாக்குதல்), கழித்து உறை செறியா வாளுடை எறுழ்த்தோள் இரவு துயில் மடிந்த தானை உரவுச்சின வேந்தன் பாசறையேமே – உறையிலிருந்து நீக்கிய வாளை உள்ளே இடாத வாளினைக் கோத்த வலிய தோளுடையவனும் இரவில் அயர்ந்து உறங்கும் சேனைகளைக் கொண்டவனுமான மிக்க சினம் பொருந்திய வேந்தனின் பாசறையில் உள்ளோம் (பாசறையேமே – தன்மைப் பன்மை, ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 25, ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நெடுங்கரைக் கான்யாற்றுக் கடும் புனல் சாஅய்
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத்
தண் கயம் நண்ணிய பொழில்தொறும், காஞ்சிப்
பைந்தாது அணிந்த போது மலி எக்கர்
வதுவை நாற்றம் புதுவது கஞல, 5
மா நனை கொழுதிய மணி நிற இருங்குயில்
படு நா விளியால் நடு நின்று அல்கலும்
உரைப்ப போல ஊழ் கொள்பு கூவ,
இனச் சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்,
சினைப் பூங்கோங்கின் நுண் தாது பகர்நர் 10
பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன,
இகழுநர் இகழா இள நாள் அமையம்
செய்தோர் மன்ற குறி என, நீ நின்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப
வாராமையின் புலந்த நெஞ்சமொடு, 15
“நோவல் குறுமகள், நோயியர் என் உயிர்” என
மெல்லிய இனிய கூறி, வல்லே
வருவர், வாழி தோழி, பொருநர்
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப்
பொதியில் செல்வன் பொலந்தேர்த் திதியன் 20
இன்னிசை இயத்தின் கறங்கும்,
கல் மிசை அருவிய காடு இறந்தோரே. 22
பாடல் பின்னணி: பருவங்கண்டு வருந்திய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.
பொருளுரை: தோழி! நீ நீடு வாழ்வாயாக! நீண்ட கரையையுடைய காட்டு ஆற்றின் விரைந்தோடும் நீர் மிகவும் குறைய, ஒளிரும் அறற்பட்ட (வரிவரியாக ஆகிய) பரந்த மணலையுடைய துறையிடத்தில் உள்ள, குளிர்ந்த குளங்கள் பொருந்திய சோலைகளில் எல்லாம், காஞ்சி மரத்தின் பசிய பூந்தாதுக்களைக் கொண்ட மலர்கள் மிகுதியாக உதிர்ந்து கிடந்த மணல் மேட்டில் திருமணப் பந்தல் நாற்றம் போன்று புதியதாக மணம் மிக, மாமரத்தின் தாதினைக் கோதிய நீலமணி நிறத்தையொத்த கரிய குயில் ஒலிக்கும் நாவினால் கூவுவதால், அக்கூவுதல் நடுநிலைமையுடன் அறம் கூறுவதுபோல் நாள்தோறும் முறையாக ஒலிக்க, கூட்டமாக உள்ள வண்டுகள் உதிர்த்த இலவ மரத்தின் மலர்களையுடைய இடத்தில், பூக்கள் நிறைந்த கிளைகளில் உள்ள கோங்க மரத்தின் நுண்ணிய தாதுக்கள், பொன் விற்பவர்களின் பவளச் செப்பில் பொன்னின் பொடியைப் பெய்து வைத்தாற் போல் தோன்றும், இகழ்பவர்கள் கூட அதனை இகழாமல் விரும்புவதற்குரிய இளவேனிற்பருவம் வந்தும், இது தாம் மீண்டு வரும் காலம் எனக் குறித்துக் கூறிய அவர் வராததால் வெறுத்த நெஞ்சத்துடன், நீ நின் துன்புறும் மையுண்ட கண்களிலிருந்து கண்ணீரை முத்து முத்தாகக் கொட்டுகின்றாய். ‘உன்னைத் துன்புறச் செய்த என்னுயிர் வருந்துவதாக இளையவளே’ என மென்மையான இனிய சொற்களைக் கூறி, விரைவில் வருவார், தன்னுடன் போரிடும் பகைவர்களை வென்ற வில்லினைக் கொண்ட பெரிய கைகளையுடைய பொதியில் மலையின் மன்னனாகிய பொற்தேரினையுடைய திதியனின் இனிய வெற்றி முரசுபோல் ஒலிக்கும், மலை உச்சியிலிருந்து அருவிகள் விழும் காடுகளைத் தாண்டிச் சென்ற நம் தலைவர்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகைபட வந்த கிளவி எல்லாம் தோழிக்கு உரிய’ என்பதனாற் கொள்க. இகழுநர் இகழா இள நாள் (12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இகழுகின்ற துறவோரும் அதனை இகழாமல் உள்ளத்தூடே விரும்புதற்குரிய இந்த இள வேனில், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பிரிவால் எய்தும் துயர்களைப் புறக்கணித்துப் பிரிவோரும் அங்ஙனம் இகழ்ந்து பிரியவொண்ணாத இளவேனில் காலம். மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17). தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).
சொற்பொருள்: நெடுங்கரைக் கான்யாற்றுக் கடும் புனல் சாஅய் – நீண்ட கரையையுடைய காட்டு ஆற்றின் விரைந்தோடும் நீர் இல்லாது போக (சாஅய் – அளபெடை), அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத் தண் கயம் நண்ணிய பொழில்தொறும் – ஒளிரும் அறற்பட்ட (வரிவரியாக ஆகிய, திட்டுத் திட்டாக ஆகிய) பரந்த மணலையுடைய துறையில் குளிர்ந்த குளங்கள் பொருந்திய சோலைகளில் எல்லாம், காஞ்சிப் பைந்தாது அணிந்த போது மலி எக்கர் – காஞ்சி மரத்தின் பசிய பூந்தாதுக்களைக் கொண்ட மலர்கள் மிக உதிர்ந்துள்ள மணல்மேடு (காஞ்சி மரம் – பூவரச மரம், portia tree, Thespesia populnea), வதுவை நாற்றம் புதுவது கஞல – திருமணப் பந்தல் நாற்றம் போன்று புதியதாக மணம் மிக, மா நனை கொழுதிய மணி நிற இருங்குயில் படு நா விளியால் நடு நின்று அல்கலும் உரைப்ப போல ஊழ் கொள்பு கூவ – மாமரத்தின் தாதினைக் கோதிய நீலமணி நிறத்தையொத்த கரிய குயில் ஒலிக்கும் நாவினால் கூவுவதால் நடுநிலைமையுடன் அறம் கூறுவதுபோல் நாள்தோறும் முறையாகக் கூவ, இனச் சிதர் உகுத்த இலவத்து ஆங்கண் சினைப் பூங்கோங்கின் நுண் தாது – கூட்டமாக உள்ள வண்டுகள் உதிர்த்த இலவ மரத்தின் மலர்களையுடைய இடத்தில் பூக்கள் நிறைந்த கிளைகளில் உள்ள கோங்க மரத்தின் நுண்ணிய தாதுக்கள் (இலவ மரம் – Silk Cotton Tree, ceiba pentrandra, கோங்க மரம் – Cochlospermum gossypium), பகர்நர் பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன – பொன் விற்பவர்களின் பவளச் செப்பில் பொன்னின் பொடியைப் பெய்து வைத்தாற்போன்று, இகழுநர் இகழா இள நாள் அமையம் – இகழ்பவர்கள் கூட அதனை இகழாமல் விரும்புவதற்குரிய இளவேனிற்பருவம், செய்தோர் மன்ற குறி என – தாம் மீண்டு வரும் காலத்தைக் குறித்துக் கூறினார் என்று, நீ நின் பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப – நீ நின் துன்புறும் மையுண்ட கண்களிலிருந்து கண்ணீரை முத்து முத்தாகக் கொட்ட, வாராமையின் புலந்த நெஞ்சமொடு – அவர் வராததால் வெறுத்த நெஞ்சத்துடன், ‘நோவல் குறுமகள், நோயியர் என் உயிர்’ என மெல்லிய இனிய கூறி – ‘உன்னைத் துன்புறச் செய்த என்னுயிர் வருந்துவதாக இளையவளே’ என மென்மையான இனிய சொற்களைக் கூறி, வல்லே வருவர் – விரைவில் வருவார், வாழி – நீ நீடு வாழ்வாயாக, அசைநிலையுமாம், தோழி – தோழி, பொருநர் செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப் பொதியில் செல்வன் பொலந்தேர்த் திதியன் இன்னிசை இயத்தின் கறங்கும் கல் மிசை அருவிய காடு இறந்தோரே – தன்னுடன் போரிடும் பகைவர்களை வென்ற வில்லினைக் கொண்ட பெரிய கைகளையுடைய பொதியில் மலையின் மன்னனாகிய பொற்தேரினையுடைய திதியனின் இனிய வெற்றி முரசுபோல் ஒலிக்கும் மலை உச்சியிலிருந்து அருவிகள் விழும் காடுகளைத் தாண்டிச் சென்ற நம் தலைவர் (இயத்தின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, அருவிய – குறிப்புப் பெயரெச்சம், இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 26, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி, மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கூன் முள் முள்ளிக் குவி குலைக் கழன்ற,
மீன் முள்ளன்ன, வெண்கால் மா மலர்
பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும்
அவ் வயல் தண்ணிய வளங்கேழ் ஊரனைப்
புலத்தல் கூடுமோ தோழி? அல்கல் 5
பெருங்கதவு பொருத யானை மருப்பின்
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி,
மாக்கண் அடைய மார்பகம் பொருந்தி
“முயங்கல் விடாஅல் இவை” என மயங்கி,
யான் “ஓம்” என்னவும் ஒல்லார் தாம், மற்று 10
இவை பாராட்டிய பருவமும் உளவே, இனியே
புதல்வன் தடுத்த பாலொடு தடைஇத்,
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை
நறுஞ்சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே, 15
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே, ஆயிடைக்
கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி, மதவு நடைச்
செவிலி கை என் புதல்வனை நோக்கி,
“நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர், இஃதோ
செல்வற்கு ஒத்தனம் யாம்” என மெல்ல என் 20
மகன் வயின் பெயர்தந்தேனே, அதுகண்டு
“யாமும் காதலம் அவற்கு” எனச் சாஅய்
சிறுபுறம் கவையினனாக, உறு பெயல்
தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ்செய்
மண் போல் நெகிழ்ந்து, அவன் கலுழ்ந்தே 25
நெஞ்சு அறை போகிய அறிவினேற்கே? 26
பாடல் பின்னணி: பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் தோழியிடம் வாயில் வேண்டினான். அவள் மறுத்தாள். அவன் தலைவியை அணுகி மாயப் பொய்மொழி கூறினான். ஊடல் தீர்ந்து அவனுடன் கூடினாள் தலைவி. மறுநாள் அவள் தலைவனுடன் கூடியமைக்குக் காரணத்தைத் தோழி வினவத் தலைவி அவளிடம் காரணம் கூறுகின்றாள்.
பொருளுரை: தோழி! நாள்தோறும், பெரிய மதிற்கதவின் மீது பாய்ந்து குத்திய யானையின் கோடுகளில் (தந்தங்களில்) பொருந்திய இரும்பினால் புனைந்த பூண்களைப் போன்று அழகுடையவாய் ஆகி, கரிய கண்களையுடைய இவை, என என் மார்பகங்களைப் பாராட்டி அவற்றைத் தன் மார்பகம் அழுந்தப் பொருந்தி, முயங்குதலிலிருந்து அவர் விலக்காது இருக்க, நான் கலங்கி “விலகுவீராக” எனக் கூறியும் அதற்குப் பொருந்தாதவராக, இவற்றைப் பாராட்டிய காலமும் உண்டு.
ஆனால் இப்பொழுது, புதல்வனை எங்கும் செல்லாமல் தடுத்த பாலால் பருத்த தேமலையுடைய இனிய மெல்லிய முலைகள் அவர் நறுமணச் சந்தனம் அணிந்த நிறம் விளங்கும் மார்பில் பெரிதும் தழுவ யாம் வேண்டியபொழுதில், இனிய பால் தம் மார்பில் படுதலை அஞ்சினார். அவ்விடத்தில் முன்பு அணைத்தலை விடாத அவர் கைகள் இப்பொழுது நெகிழ்ந்ததைக் கண்டு, செவிலித்தாயின் கையில் உள்ள மெல்லிய நடையையுடைய என் புதல்வனை நோக்கி, “நீவிர் நும் பரத்தையர்க்குப் பொருந்தியவர் ஆவீர். இந்த செல்வனுக்கு யாம் பொருந்தியவள் ஆவோம்” எனக் கூறி மெல்லென மகனிடம் சென்றேன். அதைக் கண்டு தலைவர் “யாமும் மகன்பால் காதலுடையேம்” என என் முதுகை அணைத்துக் கொண்டார்.
மிக்க பெய்த குளிர்ந்த மழைத் துளிகளை ஏற்றுக்கொண்ட பலமுறை உழுத செம்மையான மண் போல் நெகிழ்ந்து, அவர் பிரிவால் கலங்கி, நெஞ்சை அறுத்து அவர்பால் சென்ற அறிவையுடையேனாகிய எனக்கு, வளைந்த முட்களை உடைய நீர்முள்ளிச் செடியின் குவிந்த குலைகளிலிருந்து கழன்று விழுந்த வெள்ளை நிறக் காம்பினையுடைய கரிய மலர்களை விளையாடும் மகளிர் தாங்கள் கொண்டாடும் விழாவிற்கு அழகு செய்வதற்குச் சேர்க்கும், அழகிய வயல்கள் பொருந்திய வளம்பொருந்திய ஊரின் தலைவருடன் ஊடிஇருத்தல் கூடுமோ?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘அவன் அறிவு’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனைப் புலம்பு நனி காட்டி இயன்ற நெஞ்சம் தலைப் பெயர்த்து அருக்கி எதிர் பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்’ என்று கொள்க. இங்ஙனம் கூறுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘அருள் முந்துறுத்த’ (தொல்காப்பியம், கற்பியல் 20) என்னும் சூத்திரத்துத் தலைவியின் அருள் முந்துறுத்த அன்புபொதி கிளவிக்கும் பணிந்த மொழிக்கும் இதில் உள்ள ‘மண் போல் நெகிழ்ந்து’, ‘இவை பாராட்டிய பருவமும் உள’, ‘நெஞ்சறைபோகிய அறிவினேற்கு’ என்பவற்றையும், ‘தன் வயிற் கரத்தல்’ (தொல்காப்பிய, பொருளதிகாரம் 11) என்னுஞ் சூத்திரத்துத் தலைவி மடன் அழிதற்கு ‘கவவுக்கை பெயர் தந்தேனே’ என்றதையும் காட்டினர் நச்சினார்க்கினியர். ஒப்புமை – குறுந்தொகை 291 – தண் துளிக்கு ஏற்ற மலர். குறுந்தொகை 382 – தண் துளிக்கு ஏற்ற பைங்கொடி முல்லை. அறை போகிய (26) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கீழறுத்துப் போதல், வஞ்சித்துப் போதல். அறிவினேற்கே (26) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புல்லறிவுடையேனுக்கு. அல்கல் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நாள்தோறும், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இரவில். உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3). மதவு – மதவே மடனும் வலியும் ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 81).
சொற்பொருள்: கூன் முள் முள்ளிக் குவி குலைக் கழன்ற மீன் முள்ளன்ன வெண்கால் மா மலர் பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும் – வளைந்த முட்களை உடைய நீர்முள்ளிச் செடியின் குவிந்த குலைகளிலிருந்து கழன்று விழுந்த வெள்ளை நிறக் காம்பினையுடைய கரிய மலர்களை விளையாடும் மகளிர் தாங்கள் கொண்டாடும் விழாவிற்கு அழகு செய்வதற்குச் சேர்க்கும் (முள்ளி – நீர் முள்ளிச் செடி, Asteracantha Longifolia), அவ் வயல் தண்ணிய வளங்கேழ் ஊரனைப் புலத்தல் கூடுமோ – அழகிய வயல்கள் பொருந்திய வளம்பொருந்திய ஊரின் தலைவருடன் ஊடி இருத்தல் கூடுமோ, தோழி – தோழி, அல்கல் – நாள்தோறும், பெருங்கதவு பொருத யானை மருப்பின் இரும்பு செய் தொடியின் ஏர ஆகி – பெரிய மதிற்கதவின் மீது பாய்ந்து குத்திய யானையின் கோடுகளில் (தந்தங்களில்) பொருந்திய இரும்பினால் புனைந்த பூண்களைப் போன்று அழகுடையவாய் ஆகி (தொடியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), மாக்கண் அடைய மார்பகம் பொருந்தி முயங்கல் விடாஅல் – கரிய கண்களையுடைய இவை எனத் தன் மார்பகம் அழுந்தப் பொருந்தி முயங்குதலிலிருந்து விலக்காதே (விடாஅல் – எதிர்மறை வியங்கோள், அளபெடை), இவை – இவை, என மயங்கி யான் ’ஓம்’ என்னவும் ஒல்லார் தாம் மற்று இவை பாராட்டிய பருவமும் உளவே – என கலங்கி விலகுவீராக எனக் கூறியும் அதற்குப் பொருந்தாதவராக இவற்றைப் பாராட்டிய காலமும் உண்டு (ஓம் – ஓவும் என்பதன் இடைக்குறை, செய்யும் என்னும் முற்று முன்னிலைக்கண் வந்தது), இனியே – இப்பொழுது, புதல்வன் தடுத்த பாலொடு தடைஇத் திதலை அணிந்த தேம் கொள் மென் முலை நறுஞ்சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம் வீங்க முயங்கல் யாம் வேண்டினமே தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே – புதல்வனை எங்கும் செல்லாமல் தடுத்த பாலால் பருத்த தேமலையுடைய இனிய மெல்லிய முலைகள் அவர் நறுமணச் சந்தனம் அணிந்த நிறம் விளங்கும் மார்பில் பெரிதும் தழுவ யாம் வேண்டியபொழுதில் இனிய பால் தம் மார்பில் படுதலை அஞ்சினார் (தடைஇ – அளபெடை), ஆயிடைக் கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடைச் செவிலி கை என் புதல்வனை நோக்கி – அவ்விடத்தில் முன்பு அணைத்தலை விடாத அவர் கைகள் இப்பொழுது நெகிழ்ந்ததைக் கண்டு செவிலியின் கையில் உள்ள மெல்லிய நடையையுடைய என் புதல்வனை நோக்கி, ‘நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் இஃதோ செல்வற்கு ஒத்தனம் யாம்’ என மெல்ல என் மகன் வயின் பெயர்தந்தேனே – ‘நீவிர் நும் பரத்தையர்க்குப் பொருந்தியவர் ஆவீர் இந்த செல்வனுக்கு யாம் பொருந்தியவள் ஆவோம் எனக் கூறி மெல்லென மகனிடம் சென்றேன் (‘செவிலி கை மதவு நடை என் புதல்வனை நோக்கி’ எனக்கொள்ளவும்), அதுகண்டு ‘யாமும் காதலம் அவற்கு’ எனச் சாஅய் சிறுபுறம் கவையினனாக – அதைக் கண்டு தலைவர் ‘யாமும் மகன்பால் காதலுடையேம்’ என என் முதுகை அணைத்துக் கொண்டார் (யாம் – தன்மைப் பன்மை, சாஅய் – அளபெடை), உறு பெயல் தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ்செய் மண் போல் நெகிழ்ந்து – மிக்க பெய்த குளிர்ந்த மழைத் துளிகளை ஏற்றுக்கொண்ட பலமுறை உழுத செம்மையான மண் போல் நெகிழ்ந்து (துளிக்கு – துளியை, உருபு மயக்கம், உறு – மிக்க), அவன் கலுழ்ந்தே – அவர் பிரிவால் கலங்கி, நெஞ்சு அறை போகிய அறிவினேற்கே – நெஞ்சை அறுத்து அவர்பால் சென்ற அறிவையுடையேனாகிய எனக்கு (அறிவினேற்கே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 27, மதுரைக் கணக்காயனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
“கொடுவரி இரும்புலி தயங்க நெடுவரை
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்
கானம் கடிய என்னார், நாம் அழ,
நின்றது இல் பொருட்பிணிச் சென்று இவண் தருமார்,
செல்ப என்ப”, என்போய், நல்ல 5
மடவை மன்ற நீயே, வட வயின்
வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கை அம் பெருந்துறை முத்தின் அன்ன
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர்வாய் 10
தகைப்பத் தங்கலர் ஆயினும், இகப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே, தேம்படத்
தெள் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளைப்
பெருந்தகை சிதைத்தும் அமையா பருந்து பட,
வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல் 15
குருதியொடு துயல்வந்தன்ன நின்
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே? 17
பாடல் பின்னணி: தலைவனின் செலவு உணர்ந்து வேறுபட்ட தலைவியிடம் தோழி சொல்லியது.
பொருளுரை: “வளைந்த வரிகளையுடைய பெரிய புலிகள் பிறர்க்கு விளங்கித் தோன்றும்படி, உயர்ந்த மலையில் அசையும் தண்டுகளையுடைய பெரிய மூங்கில்கள், மேல்காற்றுக்கு வளைந்து, அவற்றை வெளிப்படுத்தும் காடு கொடியது எனக் கருதாதவராய், நாம் இங்கு அழுதவண்ணம் இருக்க, நிலையில்லாத பொருள் பற்றினால் சென்று, அதை இங்கு ஈட்டி வரச் செல்வார் நம் தலைவர் எனக் கூறுகின்றனர்” என்று கூறுபவளே! நீ உறுதியாக நல்ல மடமையை உடையவள்!
வடதிசையின் வேங்கடத்தில் உள்ள மன்னர்கள் திறையாகக் கொடுத்த வெள்ளை மருப்புகள் (தந்தங்கள்) உடைய யானைகளையுடைய, மறம் பொருந்திய போரில் வல்ல பாண்டிய அரசர், அறத்துடன் காக்கும் கொற்கைப் பெருந்துறையில் பெறும் முத்துக்களைப் போல் முறுவலால் பொலிந்து விளங்கும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற நிறமுடைய நின் வாய் தடுக்க, அதனால் தங்காதவர் ஆயினும், தேன் உண்டாகத் தெளிந்த மழை நீரை ஏற்ற திரண்ட தண்டையுடைய குவளை மலர்களின் பெரும் அழகைக் கெடுத்தும் அமையாமல், பருந்துகள் வந்து சூழும்படி அரசர்கள் தம் போர்களை வென்ற வெற்றியுடைய நல்ல வேல் குருதியுடன் அசைந்தாற்போல் தோன்றும், நின் செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களின் மகிழ்ந்து நோக்கும் பார்வை, அவர் நின்னை நீங்கிச் செல்வதற்கு எவ்வாறு விடும்? விடாது. நீ வருந்த வேண்டாம்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘தலைவரும் விழுமம்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் நூற்பாவின்கண் ‘என்று இவை எல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் தோழி மேன’ என்பதனால் அமைத்துக் கொள்க. வட வயின் வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை மறப் போர்ப் பாண்டியர் (6–8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தமிழ்கூறு நல் உலகத்தின் வட எல்லையாகிய திருவேங்கடமலை தோற்றுவித்த வெள்ளிய மருப்புக்களையுடைய சிறந்த யானைப் படைகளாலே சிறந்த மறப்பண்புமிக்க போர்த்தொழில் ஆற்றுகின்ற பாண்டிய மன்னர், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வடதிசையின்கண் வேங்கடமலைப் பக்கத்திலுள்ள அரசர் திறையாகக் கொடுத்த வெள்ளிய கோட்டினையுடைய யானைகளையுடைய வீரம் பொருந்திய போரில் வல்ல பாண்டியர்கள். பெருந்தகை சிதைத்தும் (14) – பெரும் அழகைக் காட்டிலும் அழகாக இருந்தும், பருந்து பட (14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பருந்துகள் வீழும்படி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பருந்துகள் வந்து சூழ. ஒப்புமை – முத்தைப் போன்ற பற்கள் – அகநானூறு 27 – முத்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு, ஐங்குறுநூறு 185 – இலங்கு முத்து உறைக்கும் எயிறு, ஐங்குறுநூறு 380 – முத்து ஏர் வெண்பல், கலித்தொகை 64 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 93 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏய்க்கும் வெண்பல், கலித்தொகை 131 – முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய், பரிபாடல் 8 – எழில் முத்து ஏய்க்கும் வெண்பல், பரிபாடல் திரட்டு 2 – முத்த முறுவல், பொருநராற்றுப்படை 27 – துவர்வாய்ப் பல உறு முத்தின் பழி தீர் வெண்பல், சிறுபாணாற்றுப்படை 57 – நகாஅர் அன்ன நளி நீர் முத்தம், நெடுநல்வாடை 37 – முத்து உறழ் முறுவல். மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17). அமர்த்த நோக்கே (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உவந்து நோக்கும் நோக்கம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மாறுபட்ட பார்வை.
சொற்பொருள்: கொடுவரி இரும்புலி தயங்க – வளைந்த வரிகளையுடைய பெரிய புலிகள் பிறர்க்கு விளங்கித் தோன்றும்படி, நெடுவரை ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் கானம் கடிய என்னார் – உயர்ந்த மலையில் அசையும் தண்டுகளையுடைய பெரிய மூங்கில்கள் மேல்காற்றுக்கு வளையும் காடு கொடியது எனக் கருதாதவராய், நாம் அழ நின்றது இல் பொருட்பிணிச் சென்று இவண் தருமார் செல்ப என்ப என்போய் – நாம் அழுதிருக்க நிலையில்லாத பொருள் பற்றினால் சென்று அதை இங்கு ஈட்டி வரச் செல்வார் எனக் கூறுகின்றனர் என்று கூறுபவளே, நல்ல மடவை மன்ற நீயே – நீ உறுதியாக நல்ல மடமையை உடையவள் (மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல்), வட வயின் வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும் கொற்கை அம் பெருந்துறை முத்தின் அன்ன – வடதிசையின் வேங்கடத்தில் உள்ள மன்னர்கள் திறையாகக் கொடுத்த வெள்ளை மருப்புகள் (தந்தங்கள்) உடைய யானைகளையுடைய மறம் பொருந்திய போரில் வல்ல பாண்டிய அரசர் அறத்துடன் காக்கும் கொற்கைப் பெருந்துறையில் பெறும் முத்துக்களைப் போல் (முத்தின் – இன் சாரியை), நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர்வாய் தகைப்பத் தங்கலர் ஆயினும் – முறுவலால் பொலிந்து விளங்கும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற நிறமுடைய நின் வாய் தடுக்க அதனால் தங்காதவர் ஆயினும், இகப்ப யாங்ஙனம் விடுமோ மற்றே – எவ்வாறு நின்னை நீங்கிச் செல்வதற்கு விடும் (விடுமோ – ஓகாரம் எதிர்மறைப் பொருளை வற்புறுத்தி நின்றது, மற்றே – மற்று வினைமாற்றின்கண் வந்தது, ஏ அசைநிலை), தேம்படத் தெள் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளைப் பெருந்தகை சிதைத்தும் அமையா பருந்து பட வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல் குருதியொடு துயல்வந்தன்ன – தேன் உண்டாகத் தெளிந்த நீரை ஏற்ற திரண்ட தண்டையுடைய குவளை மலர்களின் பெரும் அழகைக் கெடுத்தும் அமையாமல் பருந்துகள் வந்து சூழும்படி அரசர்கள் தம் போர்களை வென்ற வெற்றியுடைய நல்ல வேல் குருதியுடன் அசைந்தாற்போன்ற (தேம் – தேன் என்பதன் போலி, வேத்து – வேந்து, வேத்து என விகாரமாயிற்று), நின் அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே – நின் செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களின் மகிழ்ந்து நோக்கும் பார்வை (நோக்கே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 28, பாண்டிய மன்னன் அறிவுடைநம்பி, குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
மெய்யின் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி,
கொய்யா முன்னும் குரல் வார்பு தினையே
அருவி ஆன்ற பைங்கால் தோறும்
இருவி தோன்றின பலவே, நீயே 5
முருகு முரண் கொள்ளும் தேம்பாய் கண்ணி
பரியல் நாயொடு பன்மலைப் படரும்
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை, யாழ நின்
பூக்கெழு தொடலை நுடங்க எழுந்து எழுந்து,
கிள்ளைத் தெள் விளி இடை இடை பயிற்றி 10
ஆங்காங்கு ஒழுகாய் ஆயின், அன்னை
சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் எனப்
பிறர்த் தந்து நிறுக்குவள், ஆயின்
உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே.
பாடல் பின்னணி: தலைவிக்குக் கூறுவாளாய், அன்னை இற்செறிப்பாள் என்பதை, தலைவனுக்கு அறிவுறுத்தி வரைவு கடாயது.
பொருளுரை: ஒருவர் மெய்யிலிருந்து ஒருவர் மெய் நீங்காதவாறு உள்ள உன்னுடைய பொருந்திய காதலினால் நீ நிலைமையை அறியவில்லை. ஆனாலும், நான் இதை உன்னிடம் கூறுகின்றேன், தோழி! கேட்பாயாக!
நீர்ப் பாய்ச்சல் இல்லாத நம் தினைப் புனத்தில் உள்ள கொத்துக்களையுடைய நீண்ட தினைக் கதிர்களைக் கொய்வதற்கு முன், பச்சைத் தாள்களிடையே எல்லாம் உலர்ந்த தட்டைகள் பல தோன்றியுள்ளன. நீ, பல்வேறு நறுமணங்கள் உடைய தேன் பாயும் மலர் மாலையை அணிந்த, விரைந்து செல்லும் நாய்களுடன் பல மலைகள் வழியாக வேட்டையாடி வரும் உன் தலைவனை எண்ணியபடி உள்ளாய். உன்னுடைய பூமாலை அசையும்படி நீ அவ்வப்பொழுது எழுந்து, கிளிகளை விரட்டுவதற்காகத் தெளிவாக இடையிடையே ஒலியை எழுப்பாது இருந்தாய் ஆனால், அன்னை, ‘இவளுக்குக் கிளிகளை விரட்டுவதற்குத் தெரியாது’ என்று கருதி, பிறரைக் கொண்டு வந்து நிறுத்துவாள். அவ்வாறு அவள் செய்தால், நீ உன் தலைவனின் படர்ந்த மார்பை அணைத்து மகிழ முடியாது.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘செங் கடு மொழியான் சிதைவுடைத்து ஆயினும் என்பு நெகப் பிரிந்தோள் வழிச் சென்று கடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்’ என வரும் விதி கொள்க. மெய்யின் தீரா மேவரு காமமொடு எய்யாய் (1–2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒருவர் உடம்பினின்றும் ஒருவர் உடம்பு அகலாமைக்குக் காரணமாய் ஒரு காலைக் கொருகால் மேம்பட்டு வருகின்ற நின் காமப் பண்பினாலே நினக்கு உறுதியாவதனை அறிகின்றிலை, ச. வே. சுப்பிரமணியன் உரை – மிகுதியாக வரும் அன்பினால் வரும் துன்பத்தை நீ அறியாய், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஒருவர் மெய்யினின்றும் ஒருவர் மெய் நீங்காதவாறு பொருந்திய காமத்தால் நீ அறியாய். ஆன்ற (4) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அகன்ற, இல்லையான, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அமைந்த, இல்லையான; ஆனா என்னும் எதிர்மறைச்சொல் உடன்பாட்டில் வருங்கால ஆன்ற என்று வரும். முருகு முரண் கொள்ளும் தேம்பாய் கண்ணி (6) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வேறுபட்ட பல மணங்களும் கமழும் தேன் ஒழுகும் கண்ணியையுடையனான, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவன் முருகன் அல்லன் என்று வேறுபாடு அறிதற்குக் காரணமான கடம்பின் கண்ணியல்லாத தேன்சொரியும் மலரால் இயன்ற மணமாலையைத் தலையில் சூடுகின்ற. உறற்கு (14) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அடைதற்கு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முயங்கி மகிழ்வதற்கு. வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).
சொற்பொருள்: மெய்யின் தீரா மேவரு காமமொடு எய்யாய் – ஒருவர் மெய்யிலிருந்து ஒருவர் மெய் நீங்காதவாறு உள்ள உன்னுடைய பொருந்திய காதலினால் நீ நிலைமையை அறியவில்லை, ஆயினும் – ஆனாலும், உரைப்பல் தோழி – கூறுகின்றேன் தோழி, கொய்யா முன்னும் – கொய்வதற்கு முன், குரல் வார்பு தினையே – கொத்துக்களையுடைய நீண்ட தினைக் கதிர்கள், அருவி ஆன்ற – நீர்ப் பாய்ச்சல் இல்லாத, பைங்கால் தோறும் இருவி தோன்றின – பச்சைத் தாள்களிடையே எல்லாம் உலர்ந்த தட்டைகள் தோன்றுகின்றன, பலவே – பல தோன்றியுள்ளன (ஏகாரம் அசைநிலை), நீயே – நீ, முருகு முரண் கொள்ளும் தேம்பாய் கண்ணி – பல்வேறு நறுமணங்கள் உடைய தேன் பாயும் மலர் மாலை (தேம் – தேன் என்றதன் திரிபு), பரியல் நாயொடு பன்மலைப் படரும் வேட்டுவற் பெறலொடு அமைந்தனை – விரைவான நாய்களுடன் பல மலைகள் வழியாக வேட்டையாடி வரும் உன் தலைவனை எண்ணியபடி உள்ளாய், யாழ – ஓர் அசை, நின் பூக்கெழு தொடலை நுடங்க – உன்னுடைய பூமாலை அசைய, எழுந்து எழுந்து கிள்ளைத் தெள் விளி இடை இடை பயிற்றி ஆங்காங்கு ஒழுகாய் ஆயின் – நீ அவ்வப்பொழுது எழுந்து கிளிகளை விரட்டத் தெளிவாக இடையிடையே ஒலியை எழுப்பாது இருந்தாய் ஆனால், அன்னை – அன்னை, சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் என – இவளுக்குக் கிளிகளை விரட்டுவதற்குத் தெரியாது என்று, பிறர்த் தந்து நிறுக்குவள் – பிறரைக் கொண்டு வந்து நிறுத்துவாள், ஆயின் உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே – அவ்வாறு அவள் செய்தால் உன் தலைவனின் படர்ந்த மார்பை நீ அணைத்து மகிழ முடியாது (மார்பே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 29, வெள்ளாடியனார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
“தொடங்கு வினை தவிரா அசைவில் நோன் தாள்,
கிடந்து உயிர் மறுகுவது ஆயினும், இடம்படின்
வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த
தாழ்வு இல் உள்ளம் தலைத்தலைச் சிறப்பச்,
செய் வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று 5
இரு வேறு ஆகிய தெரிதகு வனப்பின்
மாவின் நறுவடி போலக், காண்தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்,
வாழலென் யான்” எனத் தேற்றிப் பல் மாண் 10
தாழக் கூறிய தகைசால் நன்மொழி
மறந்தனிர் போறிர் எம், எனச் சிறந்த நின்
எயிறு கெழு துவர் வாய் இன்னகை அழுங்க
வினவல் ஆனாப் புனையிழை! கேள் இனி!
வெம்மை தண்டா எரி உகு பறந்தலை, 15
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி,
அறு நீர் அம்பியின் நெறி முதல் உணங்கும்
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங்கடத்திடை,
எள்ளல் நோனாப் பொருள்தரல் விருப்பொடு 20
நாணுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை,
மடங்கெழு நெஞ்சம் நின் உழையதுவே! 24
பாடல் பின்னணி: வினை முற்றி மீண்ட தலைவன் ‘எம்மை நினைத்தீரோ?’ என்று வினவிய தலைவியிடம் சொன்னது.
பொருளுரை: “தான் தொடங்கிய வினையைக் கைவிடாத தளர்ச்சி இல்லாத வலிய முயற்சி உடையதும், பட்டினி கிடந்து தன் உயிர் வருந்துவதாயினும் தான் வீழ்த்திய களிற்று யானை இடப்பக்கம் விழுந்தால் அதைத் தின்னாததுமாகிய புலியை விடவும் சிறந்த தளர்வு இல்லாத உள்ளத்தின் ஊக்கம் மென்மேலும் சிறக்க, பொருள் ஈட்டும் வினைக்கு நீயிர் எம்மைப் பிரிந்து சென்ற காலத்தில், வாளினால் (கத்தியால்) வெட்டப்பட்டு இரு பிளவாகிய ஆராய்ந்து காணப்படும் அழகுடைய மாவின் நறுமண வடுவைப் போல், காணும் பொழுதெல்லாம் மீண்டும் காண வேண்டும் என்ற விருப்பம் உண்டாகும்படி இருக்கும் உன் இனிய மையுண்ட கண்களை எண்ணாது கழித்த நாட்களில் யான் சிறிதும் உயிர் வாழேன் எனத் தெளிவாக விளக்கி, நும்முடைய பல மாண்புகளும் குறையும்படி எம்மிடத்தில் கூறிய அழகுமிக்க நல்ல சொற்களை மறந்து விட்டீர் போலும்” என்று, சிறந்த நின் பற்கள் விளங்கும் பவளம் போன்ற வாயின் இனிய முறுவல் கெட, வினவுதல் நீங்காத, அழகிய அணிகலன்களை அணிந்தவளே!
நான் கூறுவதை இப்பொழுது நீ கேட்பாயாக! வெப்பம் தணியாத தீ பரவிய பாழிடத்தில், உடலின் பருமை அழிந்த வழிச்செல்லும் யானைகள், நீருள்ள இடங்களை அறியாமல் பேய்த்தேர் தோன்றும் இடமெல்லாம் ஓடி, நீர் இல்லாத ஆற்றில் கிடக்கும் ஓடம்போல் வழியின்கண் வருந்தி இருக்கும், நினைப்போரை நடுங்கச் செய்யும் ஊக்கம் ஒழியும் காட்டிடத்தில், பிறரின் இகழ்தலைப் பொறுக்காது பொருள் ஈட்டி வரும் விருப்பத்துடன், நாணமே தளையாகக் கட்டப்பட்டு அங்குத் தங்கி, மாட்சிமையுடைய வினையின் பொருட்டு என் உடம்பு அங்குப் பிரிந்ததே அன்றி, என் அறியாமையுடைய நெஞ்சம் உன் அருகில் தான் இருந்தது.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘காமக் கிழத்தி மனையோள் என்று இவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என்னுஞ் சூத்திரத்து, மறந்தீர் போலும் என்ற மனையோள் ஏமுறு கிளவிக்குத் தலைவன் எதிர் கூறியதாகும் இச் செய்யுள் என்றனர் நச்சினார்க்கினியர். மாவடுவைப் பிளந்தாற்போன்ற கண்கள் – அகநானூறு 29 – எஃகு உற்று இரு வேறு ஆகிய தெரிதகு வனப்பின் மாவின் நறுவடி போலக் காண்தொறும் மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண், நற்றிணை 133 – கண்ணே வாள் ஈர் வடியின் வடிவு, கலித்தொகை 64 – உற்ற இரும்பு ஈர் வடி அன்ன உண்கட்கும், கலித்தொகை 108 – இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால், பரிபாடல் 7 – இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண். தான் கொன்ற விலங்கு இடப்பக்கம் விழுந்தால் புலி அதை உண்ணாது – அகநானூறு 3, 29, 238, 252, 357, நற்றிணை 154, புறநானூறு 190.
சொற்பொருள்: தொடங்கு வினை தவிரா அசைவு இல் நோன் தாள் – தான் தொடங்கிய வினையைக் கைவிடாத தளர்ச்சி இல்லாத வலிய முயற்சி, கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம்படின் வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த தாழ்வு இல் உள்ளம் தலைத்தலைச் சிறப்ப – பட்டினி கிடந்து தன் உயிர் வருந்துவதாயினும் தான் வீழ்த்திய களிற்று யானை இடப்பக்கம் விழுந்தால் அதைத் தின்னாததாகிய புலியை விடவும் சிறந்த தளர்வு இல்லாத உள்ளத்தின் ஊக்கம் மென்மேலும் சிறக்க, செய் வினைக்கு அகன்ற காலை – பொருள் ஈட்டும் வினைக்குப் பிரிந்து சென்ற காலத்தில், எஃகு உற்று இரு வேறு ஆகிய தெரிதகு வனப்பின் மாவின் நறுவடி போல – வாளினால் (கத்தியால்) வெட்டப்பட்டு இரு பிளவாகிய ஆராய்ந்து காணப்படும் அழகுடைய மாவின் நறுமண வடுவைப் போல், காண்தொறும் மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் நினையாது கழிந்த வைகல் – காணும் பொழுதெல்லாம் மீண்டும் காண வேண்டும் என்ற விருப்பம் உண்டாகும்படி இனிய மையுண்ட கண்களை எண்ணாது கழித்த நாட்களில், எனையதூஉம் வாழலென் யான் எனத் தேற்றி – யான் சிறிதும் உயிர் வாழேன் எனத் தெளிவாகக் கூறி (எனையதூஉம் – அளபெடை), பல் மாண் தாழக் கூறிய தகைசால் நன்மொழி மறந்தனிர் போறிர் எம் என – நும்முடைய பல மாண்புகளும் குறையும்படி எம்மிடத்தில் கூறிய அழகுமிக்க நல்ல சொற்களை மறந்து விட்டீர் போலும் என, சிறந்த நின் எயிறு கெழு துவர் வாய் இன்னகை அழுங்க வினவல் ஆனாப் புனையிழை – சிறந்த நின் பற்கள் விளங்கும் பவளம் போன்ற வாயின் இனிய முறுவல் கெட வினவுதல் நீங்காத அழகிய அணிகலன்களை அணிந்தவளே (புனையிழை – விளி, அன்மொழித்தொகை, அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), கேள் இனி – நான் கூறுவதை இப்பொழுது நீ கேட்பாயாக, வெம்மை தண்டா எரி உகு பறந்தலை கொம்மை வாடிய இயவுள் யானை – வெப்பம் தணியாத தீ பரவிய பாழிடத்தில் உடலின் பருமை அழிந்த வழிச்செல்லும் யானைகள் (தண்டா – தணியாத, பெயரெச்சத்து ஈறு கெட்டது, கொம்மை – பருமை, இயவு – வழி), நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி அறு நீர் அம்பியின் நெறி முதல் உணங்கும் – நீருள்ள இடங்களை அறியாமல் பேய்த்தேர் தோன்றும் இடமெல்லாம் ஓடி நீர் இல்லாத ஆற்றில் கிடக்கும் ஓடம்போல் வழியின்கண் வருந்தி இருக்கும் (அம்பியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங்கடத்திடை – நினைப்போரை நடுங்கச் செய்யும் ஊக்கம் ஒழியும் காட்டிடத்தில், எள்ளல் நோனாப் பொருள்தரல் விருப்பொடு – பிறரின் இகழ்தலைப் பொறுக்காது பொருள் ஈட்டி வரும் விருப்பத்துடன், நாணுத் தளை ஆக வைகி – நாணமே தளையாகக் கட்டப்பட்டு அங்குத் தங்கி, மாண் வினைக்கு உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை – மாட்சிமையுடைய வினையின் பொருட்டு என் உடம்பு அங்குப் பிரிந்ததே அன்றி (அல்லதை – அல்லது, ஈறு திரிந்தது), மடங்கெழு நெஞ்சம் நின் உழையதுவே – என் அறியாமையுடைய நெஞ்சம் உன் அருகில் தான் இருந்தது (உழையதுவே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 30, முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலை
கடல் பாடு அழிய இன மீன் முகந்து,
துணை புணர் உவகையர் பரத மாக்கள்,
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,
உப்பு ஒய் உமணர் அருந்துறை போக்கும் 5
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ,
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கிப்
பெருங்களம் தொகுத்த உழவர் போல,
இரந்தோர் வறுங்கலம் மல்க வீசி
பாடு பல அமைத்துக் கொள்ளை சாற்றிக், 10
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ!
பெருமை என்பது கெடுமோ, ஒரு நாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண் நறுங்கானல் வந்து, நும்
வண்ணம் எவனோ என்றனிர் செலினே? 15
பாடல் பின்னணி: பகற்குறி வந்த தலைவனிடம் தோழி சொல்லியது.
பொருளுரை: நீண்ட கயிற்றால் பின்னிய குறுகிய கண்களையுடைய (இடைவெளிகளையுடைய) அழகிய வலைகளால், கடலின் ஒலிகள் அடங்குமாறு ஆரவாரித்துக் கூட்டமாக உள்ள மீன்களைப் பிடித்துத் தங்கள் துணையுடன் கூடி மகிழ்ந்த பரதவர்களின் இளையவர்களும் முதியவர்களும் தங்கள் சுற்றத்துடன் நெருங்கி, உப்பு மூடைகளை ஏற்றிக் கடத்தற்கரிய வழிகளில் செலுத்துகின்ற உப்பு வணிகர்களின் சகடங்களில் பூட்டும் எருதுகளைப் போல் ஒன்றுகூடி, நுண்மணல் செறிந்த நீரடைந்த கரையில் ஒலிக்க வலைகளை இழுத்து, பெரிய களத்தில் நெல்லைத் தொகுத்த உழவர்கள் வழங்குவதை ஒப்ப, வேண்டுபவர்களுக்கு அவர்களுடைய வறிய கலங்கள் (கிண்ணங்கள்) நிரம்பும்படி கொடுத்து, எஞ்சியவற்றைக் கூறுகளாகப் பிரித்து விலைகூறி விற்றுக் கரை உயர்ந்த திண்ணிய மணற்பரப்பில் தூங்கும் தலைவனே!
நின் பெருமை கெட்டுப் போகுமோ, ஒரு நாள் தூய்மை செய்யப்படாத முத்துக்களைப் போன்று அரும்பியிருக்கும் புன்னை மரங்களையுடைய குளிர்ந்த நறுமண கடற்கரைச் சோலைக்கு வந்து “நும் அழகு எவ்வாறு உள்ளதோ?” என வினவிச் சென்றால்?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘வந்த கிழவனை மாயம் செப்பிப் பொறுத்த காரணம் குறித்த காலையும்’ என வரும் விதி கொள்க. பொ. வே. சோமசுந்தரனார் உரை – மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத் தண் நறுங்கானல் என்றது, பகற்குறியிடம் இன்னதென்று தலைவனுக்குக் குறிப்பால் உணர்த்தியபடியாம். நீயிர் ஒருநாள் வந்து செலின் என்றது, யாங்கள் நாள்தோறும் அச் சோலையிற்சென்று விளையாடுகின்றோம் என்று உணர்த்தியபடியாம். வண்ணம் ஈண்டு அழகு. எனவே நும் பிரிவாற்றாமையால் எம் பெருமாட்டி அழகு அழிந்து வருந்துகின்றாள். நீயிர் அன்பிலிர் போலும் என்றாளாயிற்று. கடல் பாடு அழிய (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடலின் ஆரவாரம் அடங்க, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கடலின் பெருமை குன்ற. ஒலிப்ப வாங்கி (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மீன்களால் ஒலி உண்டாகும்படி இழுத்து, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஆரவாரம் பெருக இழுத்து. வண்ணம் (15) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகு, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மேனியின் வண்ணம், வண்ணம் அழிவுப்படுவதைக் குறித்தற்கு. உள்ளுறை – பழைய உரை – பெருங்கடலுட் சிக்கிக் கிடக்கின்ற மீனை நுளையர் அதனினின்றும் நீக்கி உயிர் செகுத்துக் கண்டார் எல்லார்க்குங் கூறு வைத்துப் பரப்பியப் பின்பு உயிர் வருந்தினோமென்னும் இரக்கமின்றி, மணற்குன்றிலே உறங்கினாற் போல, பெருங்குலத்துப் பிறந்த இவளை, நீயிர் நும் வசமாக நீக்கி வருத்தி, வேறுப்பாட்டான் எல்லாரும் இவளைச் சூழும்படி அலராக்கிப் பின்பு நீர் துயரமின்றி உறங்குகின்றீர் என்றவாறு.
சொற்பொருள்: நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலை கடல் பாடு அழிய இன மீன் முகந்து – நீண்ட கயிற்றால் பின்னிய குறுகிய கண்களையுடைய (இடை வெளிகளையுடைய) அழகிய வலைகளால் கடலின் ஒலிகள் அடங்குமாறு ஆரவாரித்துக் கூட்டமாக உள்ள மீன்களைப் பிடித்து, துணை புணர் உவகையர் – தங்கள் துணையுடன் கூடி மகிழ்ந்தவர்கள், பரத மாக்கள் – பரதவர்கள், இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி – இளையவர்களும் முதியவர்களும் தங்கள் சுற்றத்துடன் நெருங்கி, உப்பு ஒய் உமணர் அருந்துறை போக்கும் ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ – உப்பு மூடைகளை ஏற்றிக் கடத்தற்கரிய வழிகளில் செலுத்துகின்ற உப்பு வணிகர்களின் சகடங்களில் பூட்டும் எருதுகளைப் போல் ஒன்றுகூடி (குழீஇ – அளபெடை), அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி – நுண்மணல் செறிந்த நீரடைந்த கரையில் ஒலிக்க வலைகளை இழுத்து, பெருங்களம் தொகுத்த உழவர் போல – பெரிய களத்தில் நெல்லைத் தொகுத்த உழவர்கள் வழங்குவதை ஒப்ப, இரந்தோர் வறுங்கலம் மல்க வீசி – வேண்டுபவர்களுக்கு அவர்களுடைய வறிய கலங்கள் (கிண்ணங்கள்) நிரம்பும்படி கொடுத்து, பாடு பல அமைத்துக் கொள்ளை சாற்றிக் கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ – எஞ்சியவற்றைக் கூறுகளாகப் பிரித்து விலைகூறி விற்றுக் கரை உயர்ந்த திண்ணிய மணற்பரப்பில் தூங்கும் தலைவனே, பெருமை என்பது கெடுமோ – நின் பெருமை கெட்டுப் போகுமோ, ஒரு நாள் மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத் தண் நறுங்கானல் வந்து நும் வண்ணம் எவனோ என்றனிர் செலினே – ஒரு நாள் தூய்மை செய்யப்படாத முத்துக்களைப் போன்று அரும்பியிருக்கும் புன்னை மரங்களையுடைய குளிர்ந்த நறுமண கடற்கரைச் சோலைக்கு வந்து எம்மிடம் “நும் அழகு எவ்வாறு உள்ளதோ?” என வினவிச் சென்றால் (புன்னை மரம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, செலினே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 31, மாமூலனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
புலங்கடை மடங்க தெறுதலின், ஞொள்கி,
நிலம் புடை பெயர்வது அன்று கொல் இன்று என,
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து,
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து 5
மேல் கவட்டு இருந்த பார்ப்பு இனங்கட்குக்
கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட,
நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்,
கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன
புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் 10
கண் உமிழ் கழுகின் கானம் நீந்திச்
சென்றார் என்பு இலர் தோழி, வென்றியொடு
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே. 15
பாடல் பின்னணி: பொருள்வயின் தலைவன் பிரிந்தபொழுது தலைவி வருந்தினாள். அவள் ஆற்றாளாயினாள் என்று பிறர் கூறக்கேட்டு வேறுபட்ட தலைவி தோழியிடம் உரைத்தது.
பொருளுரை: தோழி! தீயைப் போன்று சினந்த வெப்பம் விளங்கும் ஞாயிறு, நிலத்தில் உள்ள பயிர்கள் அழியும்படி காய்தலால், குறைவுற்று நிலம் தன் நிலையிலிருந்து பெயரும் காலம் அன்றோ எனக் கூறும்படி, நிலைபெறும் உயிர்கள் இறப்பதற்கு ஏதுவாகிய (காரணமான) மழை பெய்யாதொழிந்த காலத்தில்,
இலைகள் இல்லாத மிக உயர்ந்த நிலையையுடைய யா மரத்தின் மேல் கிளைகளிலிருந்த தம் குஞ்சுகளுக்கு, மலைகளையுடைய சிற்றூரில் உள்ள மறவர்கள் (ஆறலைக் கள்வர்கள்) வில்லால் அம்பினை எய்துவதால், நிணம் வடியும் பொலிவற்ற நிறத்தையுடைய வழிகள்தோறும், செவ்வரலி மாலையிடப்பட்டு இறந்து கிடந்ததை ஒப்ப புண்கள் வடிக்கும் குருதியும் தம்மைச் சூழக் காயம்பட்டுக் கிடக்கும் வழிப்போக்கர்களின் கண்களைக் கவர்ந்து சென்று உமிழ்ந்து கொடுக்கும் கழுகுகளையுடைய காட்டைக் கடந்து, பகைவர்களை விற்போரில் வென்று அவர்கள் தரும் திறைப் பொருட்களைப் பெற்று வாழும் மூவேந்தர்கள் காக்கும் தமிழ்நாட்டின் எல்லைக்கு அப்பாற்பட்ட, மொழி வேறுபட்ட நாட்டில் உள்ள பல மலைகளையும் கடந்து, நம் தலைவர் சென்றார் எனக் கூறுபவர்கள் இல்லை.
இவள் பிரிவு ஆற்றாது வருந்துகிறாள் என்று என்னையே பழிக்கின்றனர்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) எனவரும் விதியினால் அமைத்துக் கொள்க. கல்லுடைக் குறும்பின் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறிஞ்சி திரிந்த பாலை ஆதலின் கல்லுடை குறும்பு என்றார். நிண வரிக் குறைந்த நிறத்த அதர் தொறும் கணவிர மாலை அடூஉக் கழிந்தன்ன புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் (8–10) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பொலிவற்ற நிறத்தினுடைய வழிதோறும் செவ்வலரி மாலை இடப்பட்டு இறந்து கிடந்தாலொப்ப நிண ஒழுங்கும் புண் சொரியும் குருதியும் தம்மைச் சூழக் கிடந்தோர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தங்கள் நிணம் சிந்தி வரிவரியாய்த் தோன்றுமளவிற்கு உறைந்து கிடத்தலாலே வெண்ணிறமாகிய வழிகளில் எல்லாம் செவ்வலரி மலராற் றொடுத்த மாலையைக் கைவிட்டு போனாற்போன்று அவர் முதுகில் அம்பு பட்ட புண்கள் உமிழ்ந்த குருதி உறைந்து கிடப்பவையே தம்முடலைத் தாங்கா நிற்ப ஓடமாட்டாது இளைத்து வீழ்ந்து கிடப்பவருடைய, புலியூர் கேசிகன் உரை – செவ்வலரி மாலை இடப்பட்டு இறந்து கிடந்தாற்போல் நிண ஒழுங்கும் புண்கள் சொரியும் குருதியும் சூழக் காயம்பட்டுக் கிடந்தோர். தமிழ்கெழு மூவர் (14) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தமிழ் நாட்டினை ஆளும் மூவர். தமிழ்நாடு – வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின் நாற் பெயர் எல்லை (தொல்காப்பியம், செய்யுளியல் 75). பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12, குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.
சொற்பொருள்: நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் புலங்கடை மடங்க தெறுதலின் – தீயைப் போன்று சினந்த வெப்பம் விளங்கும் ஞாயிறு நிலத்தில் உள்ள பயிர்கள் அழியும்படி காய்தலால், ஞொள்கி நிலம் புடை பெயர்வது அன்று கொல் இன்று என – குறைவுற்று நிலம் தன் நிலையிலிருந்து பெயரும் காலம் அன்றோ எனக் கூறும்படி, மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து – நிலைபெறும் உயிர்கள் இறப்பதற்கு ஏதுவாகிய (காரணமான) மழை பெய்யாதொழிந்த காலத்தில், இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து மேல் கவட்டு இருந்த பார்ப்பு இனங்கட்கு – இலைகள் இல்லாத மிக உயர்ந்த நிலையையுடைய யா மரத்தின் மேல் கிளைகளிலிருந்த குஞ்சுகளுக்கு (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம், யாஅத்து – அளபெடை), கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட – மலைகளையுடைய சிற்றூரில் உள்ள மறவர்கள் (ஆறலைக் கள்வர்கள்) வில்லால் அம்பினை எய்துவதால், நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும் – நிணம் வடியும் பொலிவற்ற நிறத்தையுடைய வழிகள்தோறும், கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் கண் உமிழ் கழுகின் – செவ்வரலி மாலையிடப்பட்டு இறந்து கிடந்ததை ஒப்ப புண்கள் வடிக்கும் குருதியும் தம்மைச் சூழக் கிடந்தவர்களின் கண்களைக் கவர்ந்து சென்று உமிழ்ந்து கொடுக்கும் கழுகுகளையுடைய (கணவிரம் – செவ்வரலி, red oleander, இடூஉ– அளபெடை), கானம் நீந்திச் சென்றார் என்பு இலர் – காட்டைக் கடந்து நம் தலைவர் சென்றார் எனக் கூறுபவர்கள் இல்லை, தோழி – தோழி, வென்றியொடு வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத் தமிழ் கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே – பகைவர்களை விற்போரில் வென்று அவர்கள் தரும் திறைப் பொருட்களைப் பெற்று வாழும் மூவேந்தர்கள் காக்கும் தமிழ்நாட்டின் எல்லைக்கு அப்பாற்பட்ட மொழி வேறுபட்ட நாட்டில் உள்ள பல மலைகளைக் கடந்து (தமிழ்கெழு மூவர் என்பதில் தமிழ் இங்கு ஆகுபெயராய்த் தமிழ்நாட்டைக் குறித்தது, தேஎத்த – அளபெடை, இறந்தே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 32, நல்வெள்ளியார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
நெருநல் எல்லை ஏனல் தோன்றிச்
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து,
புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள
இரவல் மாக்களின் பணி மொழி பயிற்றிச்,
“சிறுதினைப் படுகிளி கடீஇயர், பன் மாண் 5
குளிர் கொள் தட்டை மதன் இல புடையாச்
சூரர மகளிரின் நின்ற நீ மற்று
யாரையோ எம் அணங்கியோய்? உண்கு” எனச்
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு,
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என் 10
உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல்
கடிய கூறி கை பிணி விடாஅ,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற
என் உரத் தகைமையின் பெயர்த்து, பிறிது என் வயின்
சொல்ல வல்லிற்றும் இலனே, அல்லாந்து 15
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
தோலாவாறு இல்லை தோழி, நாம் சென்மோ,
சாய் இறைப் பணைத்தோள் கிழமை தனக்கே
மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று
என் குறைப் புறனிலை முயலும் 20
அங்கணாளனை, நகுகம் யாமே. 21
பாடல் பின்னணி: (1) பின்னின்ற தலைவனுக்குக் குறை நேர்ந்த தோழி தலைவியிடம் கூறியது. (2) தோழிக்குத் தலைவி சொல்லியதுமாம். தோழிக்கு அறத்தொடு நிற்றலாகும்.
பொருளுரை: நேற்று பகல் நேரத்தில் தினைப்புனத்தின்கண் தோன்றி அழகிய மணிகள் ஒளிரும் அணிகலன் அணிந்தவானாக ஒருவன் வந்து, பரிசுகள் வழங்கும் புரவலன் போன்ற தன் தோற்றத்திலிருந்து மாறுபடுமாறு பரிசு வேண்டும் இரவலர் போல் பணிவுடைய சொற்களைப் பலமுறைக் கூறி, “ சிறுதினையை உண்ண வரும் கிளிகளை ஓட்டும் பொருட்டுக் குளிருடன் கூடிய தட்டை என்னும் கிளி ஓட்டும் வலிமை இல்லாத கருவிகளைப் புடைத்துச் சூரர மகளிர்போல் நின்ற நீ யாரோ, எம்மை வருத்தியவளே? நின் பெண்மை நலத்தை நுகர்வேன் யான்” எனவும் கூறி, என் முதுகை அணைத்துக் கொண்டான். அதை மனதில் கொண்டு, மழை நீரை ஏற்ற மண் போல் நெகிழ்ந்து வருத்தமுற்ற என் உள்ளத்தின் நிலையை அவன் அறிதலை அஞ்சி, என் உள்ளத்துடன் பொருந்துதல் இல்லாத கடிய சொற்களைக் கூறி, அவன் கைகளை நீக்கி, அச்சமடையும் பெண்மானைப் போல் விலகி நின்ற என் வலிமையைக் கண்டு விலகி, பிறிதொன்றும் என்னிடம் சொல்ல வலிமையில்லாதவனாக ஆகி, வருந்தித் தன் இனத்தினின்றும் நீங்கும் களிற்று யானையைப் போல் நீங்கினான். இன்றும் அவன் வந்து முயற்சியில் தோல்வி அடையாத நிலையில்லை.
தோழி! நாம் செல்வோமாக! வளைந்த முன்னங்கைகளையுடைய மூங்கில் போன்ற தோள்களுக்கு உரிமை தனக்கே உள்ளதையும் அவன் அறியான். வருந்தி என்னை அடைவதற்குப் பின்னின்று முயலும் அத் தலைவனைக் கண்டு, நகைப்போம் யாம்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – 1. இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல் வேறு கவர் பொருள் நாட்டத்தானும்’ என வரும் விதி கொள்க. 2. இதற்கு, ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 20) என வரும் நூற்பாவின்கண் ‘மனைப் பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அரு மறை உயிர்த்தலும்’ என வரும் விதி கொள்க. பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவியின் கூற்று – மறைந்தவற் காண்டல் என வரும் நூற்பாவின்கண் (தொல்காப்பியம், களவியல் 20) மனைப்பட்டு கலங்கிச் சிதைந்த வழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும் எனவரும் விதிகொள்க, தோழியின் கூற்று – இயற்கைப் புணர்ச்சியும், இடந்தலைப்பாடும், பாங்கற் கூட்டமும் எய்திய தலைவன் தோழியை மதியுடம்படுத்துத் தலைவிபால் சென்று குறை நயப்பிக்க வேண்டித் தோழியை இரந்து பின்னிற்பானாக. அவற்கு இரங்கி குறை நேர்ந்த தோழி தலைவியின்பால் சென்று குறை நயப்பிப்பாள் வழிநிலை பொய்யினால் கவர் பொருள் நாட்டத்தால் கூறியது என்றவாறு. அங்கணாளனை (21) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நம்முன் வந்துறும் அத்தலைவனை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அறிவிலியை. ஒப்புமை – நற்றிணை 128 – சிறுபுறம் கவையினனாக அதற்கொண்டு அஃதே நினைந்த நெஞ்சமொடு இஃது ஆகின்று யான் உற்ற நோயே. புடையா – புடைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. விடாஅ – விடுத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. யாரையோ (8) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை (அகநானூறு 46 – ம் பாடலின் உரையில் கூறியது) ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம். சாய் இறைப் பணைத்தோள் (18) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நுண்ணிய நல்லிலக்கண வரிகளையுடைய முன்கையினை உடைய மூங்கில் போலும் தோள்கள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வளைந்த சந்தினையுடைய பெரிய தோள். மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).
சொற்பொருள்: நெருநல் எல்லை ஏனல் தோன்றிச் திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து – நேற்று பகல் நேரத்தில் தினைப்புனத்தின்கண் தோன்றி அழகிய மணிகள் ஒளிரும் அணிகலன் அணிந்தவானாக வந்து, புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள இரவல் மாக்களின் பணி மொழி பயிற்றி – பரிசுகள் வழங்கும் புரவலன் போன்ற தன் தோற்றத்திலிருந்து மாறுபடுமாறு பரிசு வேண்டும் இரவலர் போல் பணிவுடைய சொற்களைப் பலமுறைக் கூறி (மாக்களின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), சிறுதினைப் படுகிளி கடீஇயர் பன் மாண் குளிர் கொள் தட்டை மதன் இல புடையாச் சூரர மகளிரின் நின்ற நீ மற்று யாரையோ – சிறுதினையை உண்ண வரும் கிளிகளை ஓட்டும் பொருட்டுக் குளிருடன் கூடிய தட்டை என்னும் கிளி ஓட்டும் வலிமை இல்லாத கருவிகளைப் புடைத்துச் சூரர மகளிர்போல் நின்ற நீ யாரோ (கடீஇயர் – அளபெடை, மகளிரின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது. ஐந்தாம் வேற்றுமை உருபு), எம் அணங்கியோய் – எம்மை வருத்தியவளே, உண்கு – நின் பெண்மை நலத்தை நுகர்வேன், எனச் சிறுபுறம் கவையினனாக – எனது முதுகை அணைத்துக் கொண்டான், அதற்கொண்டு – அதை மனதில் கொண்டு, இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என் உள் அவன் அறிதல் அஞ்சி – மழை நீரை ஏற்ற மண் போல் நெகிழ்ந்து வருத்தமுற்ற என் உள்ளத்தின் நிலையை அவன் அறிதலை அஞ்சி (மண்ணின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), உள் இல் கடிய கூறி கை பிணி விடாஅ வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ நின்ற – என் உள்ளத்துடன் பொருந்துதல் இல்லாத கடிய சொற்களைக் கூறி அவன் கைகளை நீக்கி அச்சமடையும் பெண்மானைப் போல் விலகி நின்ற (விடாஅ – அளபெடை, வெரூஉம் – அளபெடை, பிணையின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒரீஇ – அளபெடை), என் உரம் தகைமையின் பெயர்த்து – என் வலிமையைக் கண்டு விலகி, பிறிது என் வயின் சொல்ல வல்லிற்றும் இலனே – பிறிதொன்றும் என்னிடம் சொல்ல வலிமையில்லாதவனாக ஆகி, அல்லாந்து இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் – வருந்தித் தன் இனத்தினின்றும் நீங்கும் களிற்று யானையைப் போல் நீங்கினான், இன்றும் தோலா ஆறு இல்லை – இன்றும் அவன் முயற்சியில் தோல்வி அடையாத வழியில்லை, தோழி – தோழி, நாம் சென்மோ – நாம் செல்வோமாக, சாய் இறைப் பணைத்தோள் கிழமை தனக்கே மாசு இன்றாதலும் அறியான் – வளைந்த முன்னங்கைகளையுடைய மூங்கில் போன்ற தோள்களுக்கு உரிமை தனக்கே உள்ளதையும் அவன் அறியான் (தனக்கே – ஏகாரம் அசைநிலை), ஏசற்று என் குறைப் புறனிலை முயலும் அங்கணாளனை – வருந்தி என்னை அடைவதற்குப் பின்னின்று முயலும் அத் தலைவனை, நகுகம் யாமே – கண்டு நகைப்போம் யாம் (யாமே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 33, மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி,
மனை மாண் கற்பின் வாணுதல் ஒழியக்,
கவை முறி இழந்த செந்நிலை யாஅத்து
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை,
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல் 5
வளைவாய்ப் பேடை வருதிறம் பயிரும்
இளி தேர் தீங்குரல் இசைக்கும் அத்தம்
செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவண்
மலர் பாடு ஆன்ற மை எழில் மழைக்கண்
தெளியா நோக்கம் உள்ளினை, உளிவாய் 10
வெம்பரல் அதர குன்று பல நீந்தி,
யாமே எமியம் ஆக, நீயே
ஒழியச் சூழ்ந்தனை ஆயின், முனாஅது
வெல்போர் வானவன் கொல்லி மீமிசை,
நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத்தோள், 15
வரி அணி அல்குல் வால் எயிற்றோள் வயின்
பிரியாய் ஆயின் நன்று மன் தில்ல,
அன்று நம் அறியாய் ஆயினும், இன்று நம்
செய்வினை ஆற்றுற விலங்கின்,
எய்துவை அல்லையோ, பிறர் நகு பொருளே? 20
பாடல் பின்னணி: இடைச்சுரத்தில் தலைவன் தன் நெஞ்சிடம் சொல்லியது.
பொருளுரை: என் நெஞ்சே! பொருள் ஈட்டும் வினையால் ஆகும் நல்லவற்றை நீ என்னிடம் எடுத்துக்கூறி, மாண்புடைய கற்பினையும், ஒளிரும் நெற்றியையுமுடைய நம் தலைவி மனையில் தனியே இருக்க, கிளைகளில் தளிரை இழந்த செவ்விய யா மரத்தின் தனித்து ஓங்கி உயர்ந்த கிளையிலிருந்து வலிய பறத்தலையையும் வீளை ஒலியையுமுடைய, பருந்தின் இரையைக் கொள்ள வல்ல சேவல், வளைந்த வாயினையுடைய தன் பேடையைத் தன்பால் வரும்படி அழைக்கின்ற இளி என்னும் இசைபோன்ற இனிய குரல் ஒலிக்கும் சுரனெறிகளில் செல்வது அரியது என எண்ணாது, என்னுடன் வந்து, அதன்பின் குவளை மலரின் பெருமையை இழப்பதற்குக் காரணமான நம் தலைவியின் மையுண்ட அழகிய குளிர்ந்த கண்கள் நாம் பிரியும்பொழுது கலங்கிய நோக்கத்தை நீ எண்ணினாய்.
உளியின் மேல்பகுதி போல் கூரிய மேல்பகுதி உடைய வெம்மையான பரற்கற்கள் பொருந்திய வழிகளையுடைய மலைகள் பலவற்றைக் கடந்து வந்த பின்பும், யாம் தனியாக இங்கே இருக்கும்படி, நீ எம்மை விட்டு நீங்கிப் போக எண்ணினாய் ஆயின், போரில் வெல்லும் சேரனின் பழையதாகிய கொல்லி மலையின் மேல் உள்ள சிறிய மூங்கிலை ஒத்த வளைந்த முன்னங்கையை உடைய பெரிய தோள்களையும், திதலையுடைய அல்குலையும், வெண்மையான பற்களையுமுடைய நம் தலைவியிடமிருந்து, பொருள்வயின் பிரியாது அவளுடன் தங்கியிருந்தாய் ஆயின் நன்றாக இருந்திருக்கும். பிரிந்த அன்று நீ இதை அறியவில்லை ஆயினும், இன்று நாம் செய்ய வேண்டிய வினையை வழியில் விலக்குவாயாயின், பிறரின் நகத்தக்க இகழ்ச்சியை அடைவாய் இல்லையா?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்’ என வரும் விதி கொள்க. வெறுப்பக் காட்டி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எடுத்துக் கூறி வற்புறுத்தி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மிக எடுத்துரைத்து. இளி (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பண்களுக்கெல்லாம் அடிமணையாக அமைந்த இசை. இளியென்று தெளியும் தீங்குரல் என்றுமாம். இளிகுரலாகத் தேர்ந்து இசைக்கும் மேற் செம்பாலைப் பண் போன்றிசைக்கும் அத்தம் எனினுமாம். வரலாறு – வானவன், கொல்லி. வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 71). குரை – ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப (தொல்காப்பியம், இடையியல் 24). முனாஅது (13) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எதிர்த் திசையிடத்தே, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பழையதாகிய.
சொற்பொருள்: வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய – பொருள் ஈட்டும் வினையால் ஆகும் நல்லவற்றை எடுத்துக்கூறி மாண்புடைய கற்பினையும், ஒளிரும் நெற்றியையுமுடைய நம் தலைவி மனையில் இருக்க (வாணுதல் – வாள் நுதல், அன்மொழித்தொகை), கவை முறி இழந்த செந்நிலை யாஅத்து ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை வீளைப் பருந்தின் கோள் வல் சேவல் – கிளைகளில் தளிரை இழந்த செவ்விய யா மரத்தின் தனித்து ஓங்கி உயர்ந்த கிளையிலிருந்து வலிய பறத்தலையையும் (சிறகுகளையும்) வீளை ஒலியையுமுடைய பருந்தின் இரையைக் கொள்ள வல்ல சேவல், வளைவாய்ப் பேடை வருதிறம் பயிரும் இளி தேர் தீங்குரல் இசைக்கும் அத்தம் செலவு அருங்குரைய என்னாது சென்று – வளைந்த வாயினையுடைய தன் பேடையைத் தன்பால் வரும்படி அழைக்கின்ற இளி என்னும் இசைபோன்ற இனிய குரல் ஒலிக்கும் சுரனெறிகளில் செல்வது அரியது என எண்ணாது சென்று (அருங்குரைய – குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று), அவண் மலர் பாடு ஆன்ற மை எழில் மழைக்கண் தெளியா நோக்கம் உள்ளினை – அங்கு குவளை மலரின் பெருமையை இழப்பதற்குக் காரணமான நம் தலைவியின் மையுண்ட அழகிய குளிர்ந்த கண்களின் கலங்கிய நோக்கத்தை எண்ணினாய், உளிவாய் வெம்பரல் அதர குன்று பல நீந்தி – உளியின் மேல்பகுதி போல் கூரிய மேல்பகுதி உடைய வெம்மையான பரற்கற்கள் பொருந்திய வழிகளையுடைய மலைகள் பலவற்றைக் கடந்து, யாமே எமியம் ஆக – யாம் தனியாக இருக்கும்படி, நீயே ஒழியச் சூழ்ந்தனை ஆயின் – நீ எம்மை விட்டு நீங்கிப் போக எண்ணினாய் ஆயின் (நீயே – ஏகாரம் பிரிநிலை), முனாஅது – பழையது, எதிரே உள்ளது (அளபெடை), வெல்போர் வானவன் கொல்லி மீமிசை நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத்தோள் – போரில் வெல்லும் சேரனின் கொல்லி மலையின் மேல் உள்ள சிறிய மூங்கிலை ஒத்த வளைந்த முன்னங்கையை உடைய பெரிய தோள்களையும் (மீமிசை – ஒருபொருட் பன்மொழி, புரை – உவம உருபு), வரி அணி அல்குல் – திதலையுடைய அல்குலையும் (அல்குல் – இடை, இடைக்குக்கீழ் உள்ள பகுதி), வால் எயிற்றோள் வயின் பிரியாய் ஆயின் நன்று மன் தில்ல – வெண்மையான பற்களையுடை நம் தலைவியிடமிருந்து பிரியாது இருந்தாய் ஆயின் நன்றாகும் (மன் – மிகுதிக் குறிப்பு, தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், ஈறு திரிந்து வந்தது), அன்று நம் அறியாய் ஆயினும் – பிரிந்த அன்று நீ இதை அறியவில்லை ஆயினும், இன்று நம் செய்வினை ஆற்றுற விலங்கின் – இன்று நாம் செய்ய வேண்டிய வினையை வழியில் விலக்குவாயாயின், எய்துவை அல்லையோ – அடைவாய் இல்லையா, பிறர் நகு பொருளே – பிறரின் நகத்தக்க இகழ்ச்சியை (பொருளே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 34, மதுரை மருதன் இளநாகனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
சிறு கரும் பிடவின் வெண்தலைக் குறும் புதல்
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்,
தொடுதோல் கானவன் கவை பொறுத்தன்ன
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
செறி இலைப் பதவின் செங்கோல் மென்குரல் 5
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தித்,
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை,
மெல்கிடு கவுள துஞ்சுபுறம் காக்கும்
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுறச்
செல்க தேரே நல் வலம் பெறுந! 10
பசை கொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி
துறை விட்டன்ன தூ மயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில்,
செந்தார்ப் பைங்கிளி முன் கை ஏந்தி
“இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து” என 15
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
மழலை இன் சொல் பயிற்றும்
நாணுடை அரிவை மாண் நலம் பெறவே. 18
பாடல் பின்னணி: வினை முற்றி மீளும் தலைவன் கூறியது.
பொருளுரை: தேரைச் செலுத்துவதில் வல்லமை உடைய தேரோட்டியே! சிறிய கரிய பிடவத்தின் வெண்ணிற உச்சியையுடைய குறிய புதர்களில் பூக்கள் மாலை போல் மலர்ந்திருக்கும், குளிர்ந்த நறுமணம் பொருந்திய முல்லை நிலத்தில், செருப்பு அணிந்த கானவன் கவைக்கோலைத் தலையில் சுமந்ததை ஒத்த பெரிய முறுக்குண்ட கொம்புகளைத் தலையில் கொண்ட தலைமையுடைய கலை மான்கள், நெருங்கிய இலைகளையுடைய அறுகம்புல்லின் சிவந்த தண்டையுடைய மெல்லிய கொத்துக்களை மான் குட்டிகள் விளையாடும் பக்கத்தினையுடைய பெண்மான்களை உண்ணச் செய்து, தெளிந்த அறல் நீர் தழுவி ஓடும் நெடிய மணலுடைய கரையில் அசைவிடும் கன்னத்தை உடையனவாய், பெண்மான்களும் குட்டிகளும் துயிலும் இடத்தைக் காவல் காக்கும் பெருந்தகைமைக் கண்டு, ‘அவ்வாறு யாம் இல்லையே’ என்று வருந்தும் என் நெஞ்சம் மகிழும்படியும்,
ஆடையில் இடும் பசையைக் கரைத்து விடும் மெல்லிய விரல்களையும் பெரிய தோள்களையுமுடைய ஆடைத் துவைப்பவள் நீர்த்துறையில் அலசி விடும் அப்பசையின் நிறம் போன்ற தூய மயிரையுடைய அன்னங்கள் தம் பெடைகளுடன் விளையாடும் காவல் பொருந்திய மனையின் எல்லைக்குள், சிவந்த மாலை அணிந்தாற்போன்ற கழுத்தையுடைய பச்சை கிளியினை முன் கையில் ஏந்தி, இல்லத்தில் உள்ளவர்கள் அறிவார்களோ என்று அஞ்சி, ‘இன்று வருவார் எனக் கூறுவாயாகத் தலைவர் பற்றி நீ கூறுவதாயின்’, என மென்மையாக மழலையாகிய இனிய சொற்களைப் பலமுறைக் கூறும் நாணம் மிக்க என் காதலி தன் மாட்சிமையுடைய அழகைப் பெறவும், செலுத்துக தேரை.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘கரணத்தின் அமைந்து’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என்னுஞ் சூத்திரத்துப் பாகரிடத்தும் தலைவன் கூற்று நிகழும் என்பதற்கு ‘செல்க தேரே நல்வலம் பெருந’ என்பதனை எடுத்துக் காட்டினர் நச்சினார்க்கினியர். நாணுடை அரிவை மாண் நலம் பெறவே (18) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெண்மைப்பண்பு மிக்க என் காதலி மாட்சிமை மிக்க பேரழகினை மீண்டும் எய்தி மகிழவுமேயாம். புலைத்தி – அகநானூறு 34 – பசை கொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி, அகநானூறு 387 – பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய பூந்துகில், நற்றிணை 90 – வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கமொடு, குறுந்தொகை 330 – நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து, கலித்தொகை 72 – ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி, புறநானூறு 311 – புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை, புறநானூறு 259 முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல, கலித்தொகை 117 மாதர்ப் புலைத்தி விலை ஆகச் செய்தது ஓர் போழில் புனைந்த வரிப் புட்டில். சின், மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை). வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).
சொற்பொருள்: சிறு கரும் பிடவின் வெண்தலைக் குறும் புதல் கண்ணியின் மலரும் தண் நறும் புறவில் – சிறிய கரிய பிடவத்தின் வெண்ணிற உச்சியையுடைய குறிய புதர்களில் பூக்கள் மாலை போல் மலர்ந்திருக்கும் குளிர்ந்த நறுமணம் பொருந்திய முல்லை நிலத்தில் (கண்ணியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, பிடவம் – wild jasmine, Bedaly–nut vine), தொடுதோல் கானவன் கவை பொறுத்தன்ன இரு திரி மருப்பின் அண்ணல் இரலை – செருப்பு அணிந்த கானவன் கவைக்கோலைத் தலையில் சுமந்ததை ஒத்த பெரிய முறுக்குண்ட கொம்புகளைத் தலையில் கொண்ட தலைமையுடைய கலை மான்கள் (தொடுதோல் – செருப்பு, கவை – புதர்களை ஒடுக்குவதற்குக் கொண்ட பிரிவுடைய கோல், கலை – ஆண் மான், மருப்பு – கோடு, கொம்பு), செறி இலைப் பதவின் செங்கோல் மென்குரல் மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி – நெருங்கிய இலைகளையுடைய அறுகம்புல்லின் சிவந்த தண்டையுடைய மெல்லிய கொத்துக்களை மறி (மான் குட்டி) விளையாடும் பக்கத்தினையுடைய பெண்மான்களை உண்ணச் செய்து, தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை மெல்கிடு கவுள துஞ்சுபுறம் காக்கும் – தெளிந்த அறல் நீர் தழுவி ஓடும் நெடிய மணலுடைய கரையில் அசைவிடும் கன்னத்தை உடையனவாய் பெண்மான்களும் குட்டிகளும் துயிலும் இடத்தைக் காவல் காக்கும் (தழீஇய – அளபெடை), பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுறச் செல்க தேரே – பெருந்தகைமைக் கண்டு அவ்வாறு யாம் இல்லையே என்று வருந்தும் நெஞ்சம் மகிழும்படி செலுத்துக தேரை, நல் வலம் பெறுந – தேரைச் செலுத்துவதில் வல்லமை உடைய தேரோட்டியே, பசை கொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி துறை விட்டன்ன – ஆடையில் இடும் பசையைக் கரைத்து விடும் மெல்லிய விரல்களையும் பெரிய தோள்களையுமுடைய ஆடைத் துவைப்பவள் நீர்த்துறையில் அலசி விடும் அப்பசையின் நிறம் போன்ற, தூ மயிர் எகினம் துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில் – தூய மயிரையுடைய அன்னங்கள் தம் பெடைகளுடன் விளையாடும் காவல் பொருந்திய மனையின் எல்லைக்குள், செந்தார்ப் பைங்கிளி முன் கை ஏந்தி ‘இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து’ என – சிவந்த மாலை அணிந்தாற்போன்ற கழுத்தையுடைய பச்சை கிளியினை முன் கையில் ஏந்தி ‘இன்று வருவார் எனக் கூறுவாயாகத் தலைவர் பற்றி நீ கூறுவதாயின்’ (செந்தார், பைங்கிளி – பண்புத்தொகைகள், மோ – முன்னிலையசை, சென்றிசினோர் – சின் படர்க்கையின் கண் வந்தது), இல்லவர் அறிதல் அஞ்சி – இல்லத்தில் உள்ளவர்கள் அறிவார்களோ என அஞ்சி, மெல்லென மழலை இன் சொல் பயிற்றும் நாணுடை அரிவை மாண் நலம் பெறவே – மென்மையாக மழலையாகிய இனிய சொற்களைப் பலமுறைக் கூறும் நாணம் மிக்க என் காதலி தன் மாட்சிமையுடைய அழகைப் பெற (பெறவே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 35, அம்மூவனார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,
வான் தோய் இஞ்சி நன்னகர் புலம்பத்
தனி மணி இரட்டும் தாள் உடைக் கடிகை,
நுழை நுதி நெடுவேல் குறும்படை மழவர்
முனை ஆத் தந்து, முரம்பின் வீழ்த்த 5
வில் ஏர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல் ஆண் பதுக்கைக் கடவுள் பேண்மார்,
நடுகல் பீலி சூட்டித் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
போக்கு அருங்கவலைய புலவு நாறு அருஞ்சுரம் 10
துணிந்து, பிறள் ஆயினள் ஆயினும் அணிந்து அணிந்து,
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇத் தன்
மார்பு துணையாகத் துயிற்றுக தில்ல,
துஞ்சா முழவின் கோவல் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கால் முன்துறை, 15
பெண்ணையம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
நெறி இருங்கதுப்பின் என் பேதைக்கு,
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே. 18
பாடல் பின்னணி: மகட் போக்கிய நற்றாய் கடவுளிடம் வேண்டியது. பொ. வே. சோமசுந்தரனார் உரை – முருகவேளை உள்ளத்து நினைந்து கூறுகின்றாள்.
பொருளுரை: பெற்றுப் பேணி வளர்த்த அன்னையாகிய எம்மையும் நினையாளாய், வானளவு உயர்ந்த மதிலையுடைய எம் நல்ல இல்லம் தனிமை அடையும்படி, ஒற்றை மணி ஒலிக்கும் கடையாணி இட்ட காம்பினையும் கூரிய முனையையுமுடைய நீண்ட வேலையுடைய வெட்சி மறவர்கள் தங்கள் காவற்காட்டிற்குள் புகுந்து ஆனிரையைக் கவர்ந்துச் சென்றதால் அவர்களைத் தொடர்ந்து சென்று அவர்களிடமிருந்து ஆனிரையை மீட்டுக் கொணர்ந்த பின், மேட்டு நிலத்தில் வெட்சி மறவர்களால் வீழ்த்தப்பட்ட, வில்லை ஏராகக் கொண்ட வாழ்க்கையையுடைய சிறந்த அம்பினையுடைய கரந்தை மறவர்களின் வலிய ஆண்மைக்கு அறிகுறியாக உள்ள பதுக்கையில் உள்ள கடவுளை வழிபடும்பொருட்டு, அம்மறவர்களின் பெயரும் பீடும் எழுதி நிறுவப்பட்ட நடுகல்லிற்கு மயில் தோகையைச் சூட்டித் துடியை அடித்து, நெல்லால் ஆக்கிய கள்ளுடன் செம்மறி ஆட்டின் குட்டியைப் பலி கொடுக்கும், போவதற்கு அரிய பிரிவுகள் பொருந்திய வழிகளையுடைய புலவு நாற்றமுடைய பாலை நிலத்திற்குச் செல்லத் துணிந்து மாறுபட்டு வேறு ஒருவளாக ஆயினாள் எனினும்,
முழவு ஒலி நீங்காத திருக்கோவலூரின் தலைவனான நெடிய தேரையுடைய காரியின் கொடுங்கால் என்னும் ஊரின் துறையின் முன் உள்ள பெண்ணை ஆற்றின் நுண்ணிய கருமணலை ஒக்கும் நெளிந்த கரிய கூந்தலையுடைய என் மகளை, அவள் முன்பு அறியாத நாட்டின்கண் செலுத்திய அவளின் துணைவன், பலமுறை அன்பு மிகுந்த நெஞ்சத்துடன் அவளது அழகிய நலனை நுகர்ந்து, தன் மார்பே துணையாகத் துயில்விப்பானாக! இதுவே என் விருப்பம்!
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘தன்னும் அவனும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 36) என வரும் நூற்பாவின்கண் ‘தெய்வம்’ என்பதனால் அமைத்துக் கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘தன்னும் அவனும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 36) என்னுஞ் சூத்திரத்துத் தலைவன் தலைவிபால் மிகவும் அன்பு செய்கவென்று நற்றாய் தெய்வத்தைப் பராவியதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினர் நச்சினார்க்கினியர். இச் சூத்திரத்து இச் செய்யுளை எடுத்துக்காட்டி, இது செவிலி தெய்வம் பராஅயது, என்பர் இளம்பூரணர். புலவரின் பெயர் – பொ. வே. சோமசுந்தரனார் உரையில் புலவரின் பெயர் குடவாயிற் கீரத்தனார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை, ச. வே. சுப்பிரமணியன் உரை ஆகியவற்றில் புலவரின் பெயர் அம்மூவனார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மழவர், மறவர் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மழவர் ஈண்டு வெட்சி மறவர். மறவர் ஈண்டுக் கரந்தை மறவர். குறும்படை (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறும்பு காவற்காடு. ஈண்டு கரந்தையார் ஆனிரை நிற்கும் காடு. குறும்படை என்னும் சொற்குக் கோட்டை என்னும் பொருள் கூறப்பட்டிருத்தல் ஆராச்சிக்குரியது (பழைய உரையாசிரியரின் குறிப்புரையில்). முரம்பின் வீழ்த்த (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெட்சி மறவராலே போரின்கண் கொன்று வீழ்த்தப்பட்ட …… கரந்தை மறவர், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வெட்சியாரை மேட்டு நிலத்தில் வீழ்த்திய ….. கரந்தை வீரர்கள். பதுக்கைக் கடவுள் (7) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பதுக்கைக் கண்ணுள்ள கடவுள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கற்குவியலின் மேல் நின்ற கடவுள் தன்மையுடைய கரந்தை மறவர் ஆவி. பேணுதல் – வழிபடுதல். வரலாறு – கோவல் கோமான் நெடுந்தேர்க் காரி, கொடுங்கால், பெண்ணை ஆறு. விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57). அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே (18) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவள் பண்டு சென்றறியாத பாலை நிலத்தில் செலுத்திய அவள் துணைவன், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அவளை அறிவார் பிறர் இல்லாத நாட்டிலே அவளைச் செலுத்திப்போகும் துணைவன்.
சொற்பொருள்: ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள் – பெற்றுப் பேணி வளர்த்த எம்மையும் நினையாள், வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்ப – வானளவு உயர்ந்த மதிலையுடைய நல்ல இல்லம் தனிமையுற, தனி மணி இரட்டும் தாள் உடைக் கடிகை நுழை நுதி நெடுவேல் குறும்படை மழவர் – ஒற்றை மணி ஒலிக்கும் கடையாணி இட்ட காம்பினையும் கூரிய முனையையுமுடைய நீண்ட வேலையுடைய வெட்சி மறவர்கள் (தாள் – வேலின் இலையையும் காம்பையும் இணைக்கும் ஆணி கடையாணி எனப்பட்டது, கடிகை – காம்பு), முனை ஆத் தந்து – வெட்சி மறவர்களுடன் போரிட்டு ஆனிரையை மீட்டு, முரம்பின் வீழ்த்த வில் ஏர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் வல் ஆண் பதுக்கைக் கடவுள் பேண்மார் – மேட்டு நிலத்தில் வெட்சி மறவர்களால் வீழ்த்தப்பட்ட வில்லை ஏராகக் கொண்ட வாழ்க்கையையுடைய சிறந்த அம்பினையுடைய கரந்தை மறவர்களின் வலிய ஆண்மைக்கு அறிகுறியாக உள்ள பதுக்கையில் உள்ள கடவுளை வழிபடும்பொருட்டு (பதுக்கை – இறந்தவர்களின் உடலை மூடியிருக்கும் கற்குவியல்), நடுகல் பீலி சூட்டித் துடிப்படுத்துத் தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும் போக்கு அருங்கவலைய புலவு நாறு அருஞ்சுரம் – அம்மறவர்களுக்காக நிறுவப்பட்ட நடுகல்லிற்கு மயில் தோகையைச் சூட்டித் துடியை அடித்து நெல்லால் ஆக்கிய கள்ளுடன் செம்மறி ஆட்டின் குட்டியைப் பலி கொடுக்கும் போவதற்கு அரிய பிரிவுகள் பொருந்திய வழிகளையுடைய புலவு நாற்றமுடைய பாலை நிலத்திற்கு (துரூஉ – அளபெடை), துணிந்து பிறள் ஆயினள் ஆயினும் – செல்லத் துணிந்து மாறுபட்டு வேறு ஒருவளாக ஆயினாள் எனினும், அணிந்து அணிந்து ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ – பலமுறை அன்பு மிகுந்த நெஞ்சத்துடன் அவளது அழகிய நலனை நுகர்ந்து (அளைஇ – நுகர்ந்து, அளபெடை), தன் மார்பு துணையாகத் துயிற்றுக – தன் மார்பே துணையாக அவளைத் துயில்விப்பானாக (தில்ல – இதுவே என் விருப்பம், தில் – விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், ஈறு திரிந்து வந்தது), துஞ்சா முழவின் கோவல் கோமான் நெடுந்தேர்க் காரி கொடுங்கால் முன்துறை பெண்ணையம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் – முழவு ஒலி நீங்காத திருக்கோவலூரின் தலைவனான நெடிய தேரையுடைய காரியின் கொடுங்கால் என்னும் ஊரின் துறையின் முன் உள்ள பெண்ணை ஆற்றின் நுண்ணிய கருமணலை ஒக்கும், நெறி இருங்கதுப்பின் என் பேதைக்கு – நெளிந்த கரிய கூந்தலையுடைய என் மகளை (முன்துறை – துறைமுன், பொ. வே. சோமசுந்தரனார் உரை: என் பேதைக்கு – என் மகளை), அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே – அவள் முன்பு அறியாத நாட்டில் செலுத்திய அவளின் துணைவன் (தேஎத்து – அளபெடை, துணையே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 36, மதுரை நக்கீரர், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
பகுவாய் வராஅல் பல் வரி இரும் போத்துக்
கொடுவாய் இரும்பின் கோள் இரை துற்றி
ஆம்பல் மெல் அடை கிழியக் குவளைக்
கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்து எழுந்து
அரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கித் 5
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது
கயிறு இடு கதச் சேப் போல மத மிக்கு
நாள் கயம் உழக்கும் பூக்கேழ் ஊர
வருபுனல் வையை வார் மணல் அகன் துறைத்
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில் 10
நறும் பல் கூந்தல் குறுந்தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப அலரே
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
ஆலங்கானத்து அகன்தலை சிவப்பச்
சேரல் செம்பியன் சினங்கெழு திதியன் 15
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி
நார் அரி நறவின் எருமையூரன்
தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல் தேர்ப் பொருநன் என்று
எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல் 20
முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரை செலக்
கொன்று களம் வேட்ட ஞான்றை
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே. 23
பாடல் பின்னணி: பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனிடம் தலைவி கூறியது.
பொருளுரை: பிளந்த வாயினையும் பல வரிகளையுமுடைய பெரிய (கரிய) ஆண் வரால் மீன், வளைந்த வாயினையுடைய தூண்டிலில் தன்னைப் பற்றுவதற்காக வைத்த இரையை விழுங்கிவிட்டு, ஆம்பலின் மெல்லிய இலைகள் கிழியவும் குவளையின் அரும்பு மலர்ந்த பல மலர்கள் சிதையும்படியும் பாய்ந்து எழுந்து, ஒன்றோடு ஒன்று பிணங்கிய அழகிய வள்ளைக் கொடிகளைக் கலக்கித் தூண்டிலிட்ட மீன் பிடிப்பவன் இழுத்தும் இழுபடாமல், கயிற்றை இட்டுப் பிடிக்கப்படும் சினம் மிக்க எருது போல மிக்க செருக்குடன் விடியற்காலையில் குளத்தைக் கலக்கும் பூக்கள் பொருந்திய ஊரனே!
வெள்ளம் வரும் வையை ஆற்றின் நீண்ட அகன்ற துறையில் அழகிய மருத மரங்கள் உயர்ந்துள்ள மலர்களையுடைய சோலையில், நறுமணமுடைய அடர்ந்த கூந்தலையும் குறிய வளையல்களையும் அணிந்த பரத்தையுடன் மண விழாவை நீ புரிந்தாய் என ஊர் மக்கள் கூறுகின்றனர். பழிச்சொற்களோ, கொய்த பிடரி மயிரையுடைய குதிரைகளையும், கொடிகளையுடைய தேர்களையுமுடைய பாண்டிய வேந்தன் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னும் ஊரின் அகன்ற இடங்கள் குருதியால் சிவக்குமாறு, சேர வேந்தன், சோழ வேந்தன், திதியன் என்னும் சினம் பொருந்திய மன்னன், போரில் வலிய யானைகளையுடைய பொன் அணிகலன்களை அணிந்த எழினி என்ற மன்னன், நாரால் வடிக்கப்பட்ட கள்ளினையுடைய எருமையூரன், தேன் மணம் கமழும் மார்பில் பூசிப் புலர்ந்த சந்தனத்தை உடைய இருங்கோ வேண்மான், விரைந்து இயங்கும் தேரினையுடைய பொருநன், என்ற ஏழு மன்னர்களின் நல்ல வெற்றிகள் அழியும்படி, ஒரு பகலில் அவர்களின் முரசுகளுடன் வெண்குடைகளையும் பற்றிக்கொண்டு, தன் புகழ் உரை எங்கும் பரவ அவர்களின் படைகளைக் கொன்று களவேள்வி செய்த அன்று எழுந்த வெற்றியடைந்த வீரர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தைவிடவும் பெரிதாக உள்ளன.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என வரும் நூற்பாவின்கண் ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனைப் புலம்பு நனி காட்டி இயன்ற நெஞ்சம் தலைப் பெயர்த்து அருக்கி எதிர் பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘ பெற்றம் எருமை’ (தொல்காப்பியம், மரபியல் 41) ‘நீர்வாழ் சாதியுள்’ (தொல்காப்பியம், மரபியல் 42) என்னும் சூத்திரங்களின் உரையில், நீர்வாழ் சாதியுள் ‘போத்து’ எனும் சொல் வந்ததற்கு, ‘பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்து’ என்பதனை எடுத்துக் காட்டினர் பேராசிரியர். தலையாலங்கானம் – பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் கிள்ளிவளவன்), ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான். களவேள்வி – திருமுருகாற்றுப்படை 100 – கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே – ஒளவை துரைசாமி உரை – இவ்வாறு முருகன் களவேள்வி செய்து காட்டியது கொண்டு பின் வந்த வெற்றி வேந்தர் பலரும் இக்களவேள்வி செய்தொழுகினர் என அறியலாம். புறநானூறு 26 – அடு போர் வேட்ட வடுபோர்ச் செழிய, புறநானூறு 372 – புலவுக் களம் பொலிய வேட்டோய், அகநானூறு 36–22, கொன்று களம் வேட்ட ஞான்றை, மதுரைக்காஞ்சி 128–130 – களம்வேட்ட அடு திறல் உயர் புகழ் வேந்தே, திருமுருகாற்றுப்படை 100 – களம் வேட்டன்றே ஒரு முகம். கொடுவாய் இரும்பின் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொடுவாய் இரும்பு என்றது தூண்டிலின் முள்ளினை. உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொடுவாய் இரும்பு பாணன் வஞ்சக மொழிக்கு உவமை. கோள் இறை துற்றி என்றதை பரத்தையர் நலனைத் தலைவன் நுகர்ந்தற்கு உவமை. ஆம்பல் அடை கிழிய என்றது பரத்தையர் தாயார் நெஞ்சு வருந்தியதற்கு உவமை, கயம் உழக்குதல் தலைவன் ஊராரைக் கலக்கமுறச் செய்தற்கு உவமை. வரலாறு – வையை, தலையாலங்கானம், செழியன், சேரல், செம்பியன், திதியன், எழினி, எருமையூரன், பொருநன், இருங்கோ வேண்மான். தலையாலங்கானம் போர் – புறநானூறு – 19, 23, 25, 76, நற்றிணை 387, அகநானூறு 36, 175, 209, மதுரைக்காஞ்சி 55, 127. மத (7) – மதவு, ஈறு கெட்டது, மதவு – மதவே மடனும் வலியும் ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 81). பொலம் – பொன் என் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடர் இயலான (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 61). இரும்பின் – பெரும்பாணாற்றுப்படை 284–287 – கோள்வல் பாண்மகன் தலைவலித்து யாத்த நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ கொடுவாய் இரும்பின் மடிதலை புலம்பப் பொதி இரை கதுவிய போழ்வாய் வாளை. ஆலங்கானம் – சோழ நாட்டின் ஊர், பாண்டியன் நெடுஞ்செழியன் சேர, சோழ மன்னர்களையும் வேளிர் மன்னர்களான திதியன், எழினி, எருமையூரன், பொருநன், இருங்கோ வேண்மான் ஆகியவர்களையும் இங்குப் போரில் தோல்வியுறச் செய்தான். வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21). பழைய உரை – வேட்டுவன் தூண்டிலிற் கோத்த இரையை இலையின் கீழ்க் கிடந்த வாளை நுகர்ந்து, தூண்டிற்றுவக்கு விடாது இலை கிழிய எழுந்து குவளைப்பூ முறியப் பாய்ந்து அக் குவளையைச் சூழ்ந்த வள்ளையை மயக்கி, நாட்காலத்தே எல்லாருங் காணக் கயத்தை உழக்குகிறாற்போல, நின் பாணனுடைய நெஞ்சு வலியதாய்ப் புறம்பு மெல்லிதாயிருக்கின்ற இன்சொல்லாலே, அப்பரத்தை நலத்தை நுகர்ந்து, அப்பரத்தையர் தாய்மார் நெஞ்சு வருந்த அவ்விடத்தை விடாது அன்புடனே போந்து, நாங்கள் நுமது நிறங்கண்டு வருந்த இங்கே வந்து, குவளை மலர் சூழ்ந்த வள்ளை போலும் எங்கள் சுற்றத்தார் மயங்க, அவர்களை வருத்தி, ஊரை எல்லாம் இப்படி எல்லாரும் அறியக் கலக்குவான் அல்லையோ என்றவாறு.
சொற்பொருள்: பகுவாய் வராஅல் பல் வரி இரும் போத்துக் கொடுவாய் இரும்பின் கோள் இரை துற்றி – பிளந்த வாயினையும் பல வரிகளையுமுடைய பெரிய (கரிய) ஆண் வரால் மீன் வளைந்த வாயினையுடைய தூண்டிலில் தன்னைப் பற்றுவதற்காக வைத்த இரையை விழுங்கிவிட்டு (வராஅல் – அளபெடை), ஆம்பல் மெல் அடை கிழியக் குவளைக் கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்து எழுந்து – ஆம்பலின் மெல்லிய இலைகள் கிழியவும் குவளையின் அரும்பு மலர்ந்த பல மலர்கள் சிதையும்படியும் பாய்ந்து எழுந்து (அடை – இலை), அரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கித் தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது – ஒன்றோடு ஒன்று பிணங்கிய அழகிய வள்ளைக் கொடிகளைக் கலக்கித் தூண்டிலிட்ட மீன் பிடிப்பவன் இழுத்தும் இழுபடாமல், கயிறு இடு கதச் சேப் போல மத மிக்கு நாள் கயம் உழக்கும் பூக்கேழ் ஊர – கயிற்றை இட்டுப் பிடிக்கப்படும் சினம் மிக்க எருது போல மிக்க செருக்குடன் விடியற்காலையில் குளத்தைக் கலக்கும் பூக்கள் பொருந்திய ஊரனே (சே – ஏறு, எருது, காளை, ஊர – அண்மை விளி), வருபுனல் வையை வார் மணல் அகன் துறைத் திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில் நறும் பல் கூந்தல் குறுந்தொடி மடந்தையொடு வதுவை அயர்ந்தனை என்ப – வெள்ளம் வரும் வையை ஆற்றின் நீண்ட அகன்ற துறையில் அழகிய மருத மரங்கள் உயர்ந்துள்ள மலர்களையுடைய சோலையில் நறுமணமுடைய அடர்ந்த கூந்தலையும் குறிய வளையல்களையும் அணிந்த பரத்தையுடன் மண விழாவைப் புரிந்தாய் என ஊர் மக்கள் கூறுகின்றனர், அலரே – பழிச்சொற்களோ (ஏகாரம் அசைநிலை), கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன் ஆலங்கானத்து அகன்தலை சிவப்ப – கொய்த பிடரி மயிரையுடைய குதிரைகளையும் கொடிகளையுடைய தேர்களையுமுடைய பாண்டிய வேந்தன் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னும் ஊரின் அகன்ற இடங்கள் சிவக்குமாறு, சேரல் செம்பியன் சினங்கெழு திதியன் – சேர வேந்தன் சோழ வேந்தன் திதியன் என்னும் சினம் பொருந்திய மன்னன், போர் வல் யானைப் பொலம் பூண் எழினி – போரில் வலிய யானைகளையுடைய பொன் அணிகலன்களை அணிந்த எழினி என்ற மன்னன், நார் அரி நறவின் எருமையூரன் – நாரால் வடிக்கப்பட்ட கள்ளினையுடைய எருமையூரன், தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான் – தேன் மணம் கமழும் மார்பில் பூசிப் புலர்ந்த சந்தனத்தை உடைய இருங்கோ வேண்மான் (தேம் – தேன் என்றதன் திரிபு), இயல் தேர்ப் பொருநன் – இயன்ற தேரினையுடைய பொருநன், விரைந்து இயங்கும் தேரினையுடைய பொருநன், என்று எழுவர் நல் வலம் அடங்க – என்ற ஏழு மன்னர்களின் நல்ல வெற்றிகள் அழியும்படி, ஒரு பகல் முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரை செலக் கொன்று களம் வேட்ட ஞான்றை வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே – ஒரு பகலில் அவர்களின் முரசுகளுடன் வெண்குடைகளையும் பற்றிக்கொண்டு தன் புகழ் உரை எங்கும் பரவ அவர்களின் படைகளைக் கொன்று களவேள்வி செய்த அன்று எழுந்த வெற்றியடைந்த வீரர்களின் ஆரவாரத்தைவிடவும் பெரிதாக உள்ளன (செல – செல்ல என்பதன் இடைக்குறை, பெரிதே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 37, விற்றூற்று மூதெயினனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
மறந்து அவண் அமையார் ஆயினும் கறங்கு இசைக்
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர்
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்,
மங்குல் வானின் மாதிரம் மறைப்ப,
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டித், 5
தொழில் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக்
கிளி போல் காய கிளைத் துணர் வடித்துப்,
புளிப்பதன் அமைத்த புதுக்குட மலிர் நிறை
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங்குடைக், 10
கய மண்டு பகட்டின் பருகிக் காண்வரக்
கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக்
கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை
வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய
பருதி அம் குப்பை சுற்றிப் பகல் செல, 15
மருத மர நிழல் எருதொடு வதியும்
காமர் வேனில் மன் இது
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே. 18
பாடல் பின்னணி: (1) – பொருள்வயின் தலைவன் பிரிந்த வேளையில் தலைவி வருந்தினாள். அவளை ஆற்றுவித்த தோழியிடம் அவள் கூறியது. (2) – தலைவன் வினைவயின் பிரிவான் என்பதை உணர்ந்த தோழி தலைவியிடம் கூறியது.
பொருளுரை: ஒலிக்கும் இசையுடைய இரவு முடியும் பொழுதில் ஆள் அழைக்கும் ஆரவாரத்துடன் மிக்க களிப்புடைய உழவர்கள், பொலியினின்றும் முகந்த வலியில்லாத நுண்ணிய கூளங்கள் இருண்ட முகில்போல் திசைகளை மறைக்க, இரவில் தங்கிய இருள் நீங்கும் அந்த விடியற்காலையில் வைக்கோல் போரினைப் பிரித்துக் கடாவிட்டுக் குவித்த, தொழில் செருக்கால் வந்த மயக்கம் நீங்க, பெரும் அழகினையுடைய, காற்றினால் கிளைத்த வளமையான தளிர்களையுடைய மாமரத்தின், கிளி போன்ற உருவமுடைய காய்களைக் கிளையின் கொத்துக்களிலிருந்து பெயர்த்து எடுத்து, புளிப்பு உண்டாகும்படி பதப்படுத்திய புதுக்குடங்களில் உள்ள மிக்க சாற்றினை, வெயிலில் பின்புறம் இருக்குமாறு வைத்துப் பதப்படுத்திய மிக்க ஓலைகளையுடைய பசிய குடைகளால், குளத்தில் நீர் பருகும் எருமைக்கடாக்களைப் போல் குடித்து, அழகு பொருந்தக் கொள்ளுடன் பயறும் பாலும் கலந்து ஆக்கிய, வெள்ளிக் கோலை நறுக்கி வைத்தாற்போன்ற வெள்ளை நிறச் சோற்றுக் கஞ்சியை, வளைத்து உண்ட கை தடுத்த பின்னர், ஞாயிறு போன்ற உயர்ந்த அழகிய நெற்குவியலைச் சுற்றி ஞாயிற்றின் வெப்பம் மறைய மருத மரத்தின் நிழலில் தம் எருதுகளுடன் தங்கும், அழகிய வேனிற்காலம் இது, மாட்சிமையுடைய நலத்தைத் துய்க்கும் துணையினைப் பிரியாதவர்களுக்கு.
நம் தலைவர் நம்மை மறந்து வேற்று நாட்டில் தங்க மாட்டார் என்பதை யான் அறிவேன் ஆயினும், அவர் பிரிவு தான் என் ஆற்றாமைக்குக் காரணம்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – 1. இதற்கு, ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க. 2. இதற்கு, ‘தலைவரும் விழுமநிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 31) என வரும் நூற்பாவின்கண் ‘இவை எல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் தோழி மேன’ என்பதனால் அமைத்துக் கொள்க. பொ. வே. சோமசுந்தரனார் உரை – தோழி, பருவம் தொடக்கத்திலேயே யான் மீண்டு வருகுவல் அதுகாலும் ஆற்றியிருந்திடுக! என்று பருவம் குறித்துப் போன தலைவன் அப்பருவ நிகழ்வினும் மீண்டு வராமையால் தலைவி ஆற்றாமை மீதூர்ந்து வருந்துவாளை, தோழி பருவம் கடப்பினும் நம் பெருமான் வினைமுற்றியவுடன் விரைந்து வருவார். வாராமல் அங்கேயே தங்கிவிட மாட்டார் காண். வருந்துணையும் நீ ஆற்றியிருக்க வேண்டாவோ? என்று கழறிக் கூறியவழி, தலைவி அவ்வுண்மையை நீ கூறித்தான் யான் தெரிந்துகொள்ள வேண்டுமோ? அதனை யானும் அறிவேன் காண். நீ வாளாவிரு என்பாள் ‘மறந்து அவண் அம்மையார்’ என்று தோழி கூற்றையே அவளை இகழ்தற் பொருட்டு வழிமொழிந்தவாறாம். கறங்கு இசைக் கங்குல் ஓதை (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஊர்தோறும் ஆடலரங்கினும் பாடலரங்கினும் இன்னிசை முழங்குகின்ற இரவின்கண் ஆள் அழைக்கும் ஆரவாரத்தோடு, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஒலிக்கும் ஒலியினையுடைய வைகறையில் ஆள் அழைக்கும் ஆரவாரத்தையுடைய. தொழில் செருக்கு அனந்தர் வீட (6) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தொழிற் செருக்கால் வந்த மயக்கம் ஒழிய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தொழிலால் வந்த இளைப்பும் கள்ளுண்டமையால் வந்த மயக்கமும். பகட்டின் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எருமைக் கடாக்களைப் போன்று, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கடாக்களைப் போல. காண்வர (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – போதுமளவு, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அழகு பொருந்த. அவிழ் (13) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சோறு. அரிசி வெந்து விரிததால் அப்பெயர் பெற்றது. ஓங்கிய பருதி அம் குப்பை (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உயர்ந்த வட்ட வடிவிற்றாகக் குவித்து வைத்த அழகிய நெற்குவியல், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – உயர்ந்த ஞாயிறுபோன்ற அழகிய நெற்குவியல். காமர் வேனில் மன் (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய இளவேனில் பருவங்காண், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அழகிய வேனிற்காலம் இதுவாகும், அது கழிந்தே. ஒப்புமை – குறுந்தொகை 168 – மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை இரும் பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து, புறநானூறு 352 – பசுங்குடையான் புதன் முல்லைப் பூப்பறிக்குந்து, அகநானூறு 121 – ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண்குடை, கலித்தொகை 23 – வேணீர் உண்ட குடை ஓரன்னர்.
சொற்பொருள்: மறந்து அவண் அமையார் ஆயினும் – நம் தலைவர் நம்மை மறந்து வேற்று நாட்டில் தங்க மாட்டார் என்பதை நாம் அறிந்தாலும், கறங்கு இசைக் கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர் – ஒலிக்கும் இசையுடைய இரவு முடியும் பொழுதில் ஆள் அழைக்கும் ஆரவாரத்துடன் மிக்க களிப்புடைய உழவர்கள், பொங்கழி முகந்த தா இல் நுண் துகள் மங்குல் வானின் மாதிரம் மறைப்ப – பொலியினின்றும் முகந்த வலியில்லாத நுண்ணிய கூளங்கள் இருண்ட முகில்போல் திசைகளை மறைக்க (பொங்கழி – தூற்றாப்பொலி, கூளம் – வைக்கோல் துகள்), வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி – இரவில் தங்கிய இருள் நீங்கும் அந்த விடியற்காலையில் வைக்கோல் போரினைப் பிரித்துக் கடாவிட்டுக் குவித்த, தொழில் செருக்கு அனந்தர் வீட – தொழில் செருக்கால் வந்த மயக்கம் நீங்க, எழில் தகை – பெரும் அழகு, வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்து – காற்றினால் கிளைத்த வளமையான தளிர்களையுடைய மாமரத்தின் (சினைஇய – அளபெடை, மாஅத்து – அளபெடை, அத்துச் சாரியை), கிளி போல் காய கிளைத் துணர் வடித்து – கிளி போன்ற உருவமுடைய காய்களைக் கிளையின் கொத்துக்களிலிருந்து பெயர்த்து எடுத்து (துணர் – கொத்து), புளிப்பதன் அமைத்த புதுக்குட மலிர் நிறை – புளிப்பு உண்டாகும்படி பதப்படுத்திய புதுக்குடங்களில் உள்ள மிக்க சாற்றினை, வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங்குடை – வெயிலில் பின்புறம் இருக்குமாறு வைத்துப் பதப்படுத்திய மிக்க ஓலைகளையுடைய பசிய குடைகளால் (குடை – ஓலையால் செய்த கூடை), கய மண்டு பகட்டின் பருகி – குளத்தில் நீர் பருகும் எருமைக்கடாக்களைப் போல் குடித்து (பகட்டின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), காண்வரக் கொள்ளொடு பயறு பால் விரைஇ – அழகு பொருந்தக் கொள்ளுடன் பயறும் பாலும் கலந்து ஆக்கிய (விரைஇ – அளபெடை), வெள்ளிக் கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை – வெள்ளிக் கோலை நறுக்கி வைத்தாற்போன்ற வெள்ளை நிறச் சோற்றுக் கஞ்சியை, வாங்கு கை தடுத்த பின்றை – வளைத்து உண்ட கை தடுத்த பின்னர், ஓங்கிய பருதி அம் குப்பை சுற்றிப் பகல் செல மருத மர நிழல் எருதொடு வதியும் – ஞாயிறு போன்ற உயர்ந்த அழகிய நெற்குவியலைச் சுற்றி ஞாயிற்றின் வெப்பம் மறைய மருத மரத்தின் நிழலில் தம் எருதுகளுடன் தங்கும், காமர் வேனில் மன் இது – அழகிய வேனிற்காலம் இது, மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே – மாட்சிமையுடைய நலத்தைத் துய்க்கும் துணையினைப் பிரியாதவர்களுக்கு (உடையோர்க்கே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 38, வடம வண்ணக்கன் பேரிசாத்தனார், குறிஞ்சித் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
விரி இணர் வேங்கை வண்டுபடு கண்ணியன்,
தெரி இதழ்க் குவளைத் தேம்பாய் தாரன்,
அம் சிலை இடவது ஆக வெஞ்செலல்
கணை வலம் தெரிந்து துணை படர்ந்து உள்ளி
வருதல் வாய்வது வான்தோய் வெற்பன், 5
வந்தனன் ஆயின் அம் தளிர்ச் செயலைத்
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று
ஊசல் மாறிய மருங்கும் பாய்பு உடன்
ஆடாமையின் கலுழ்பு இல தேறி,
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் 10
கண் என மலர்ந்த சுனையும், வண் பறை
மடக் கிளி எடுத்தல் செல்லாத் தடக்குரல்
குலவுப் பொறை இறுத்த கோல்தலை இருவி
கொய்து ஒழி புனமும் நோக்கி, நெடிது நினைந்து,
பைதலன் பெயரலன் கொல்லோ? ஐ தேய்கு, 15
“அம் வெள் அருவி சூடிய உயர்வரைக்
கூஉம் கண்ணஃது எம் ஊர்” என
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே. 18
பாடல் பின்னணி: (1) தலைவன் வரையாது ஒழுகுகின்றான். அவன் குறையை அவன் உணர்ந்து கொள்ளும் பொருட்டு அவன் கேட்பத் தோழி கூறியது. (2) தலைவியிடம் கூறுவாள் போல் தலைவன் கேட்பக் கூறியது. (3) பகற்குறியிடத்து வந்த தலைவனிடம் ‘இரவுக்குறியில் வருக’ எனத் தோழி கூறியது.
பொருளுரை: வானைத் தொடும் மலைகளையுடைய நம் தலைவன், விரிந்த கொத்துக்களையுடைய வேங்கை மரத்தின் மலர்களால் தொடுத்த வண்டுகள் மொய்க்கும் கண்ணியைச் சூடியவனாகவும், தேர்ந்தெடுத்த இதழ்களையுடைய குவளை பூக்களால் தொடுத்த தேன் வடியும் மாலையை அணிந்தவனாகவும், அழகிய வில் இடது தோளின்கண் தொங்க, விரைந்த செல்லுதல் உடைய அம்புகளை வலக்கையில் பற்றிக்கொண்டு ஆராய்ந்து, துணையை நினைந்து வருந்த இங்கு வருதல் உண்மை.
அவ்வாறு வந்தான் ஆனால், அழகிய தளிர்களையுடைய அசோக மரத்தின் தாழ்தல் இல்லாத உயர்ந்த கிளையில் தொடுத்த தொங்கும் கயிற்றினாலாகிய ஊஞ்சல் இல்லாதாகிய இடத்தையும், பாய்ந்து ஒருங்கே விளையாடாமையினால் கலங்குதல் இல்லாது தெளிந்து, நீண்ட இதழ்களையுடைய நீல மலர்கள் கண் போல் மலர்ந்த சுனையையும், வலிய சிறகுகளையுடைய இளங்கிளிகள் கொய்து சுமந்து செல்ல இயலாத பெரிய கொத்துக்கள் ஆகிய வளைந்த சுமை நீக்கப்பட்டமையால், கோலாகிய தலையையுடைய தட்டைகள் பொருந்திய கொய்யப்பட்ட வறும் தினைப்புனத்தையும் நோக்கி, நீண்ட நேரம் நினைந்து, துன்புற்று மீண்டு போவானோ?
அழகிய வெள்ளை அருவிகளையுடைய உயர்ந்த மலையின்கண் கூப்பிடும் தொலைவில் உள்ளது எம் ஊர் என்று அவனிடம் கூறுவதற்கு மறந்தேன் நான். என் அழகு கெடுவதாக!
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவற்றிற்கு எல்லாம் ‘நாற்றமும் தோற்றமும்’ எனவரும் நூற்பாவின்கண் (தொல்காப்பியம், களவியல் 23) ‘ களனும் பொழுதும் வரை நிலை விலக்கி காதல் மிகுதி உளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என்னும் விதியே அமையும். இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர் இதனைத் தலைவி கூற்றாகக் கொண்டு மறைந்தவற் காண்டல் (தொல்காப்பியம், களவியல் 20) என்னும் நூற்பாவின்கண் ‘தன் குறி தள்ளிய தெருளாக் காலை வந்தவன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன் பிழைப்பாகத் தழீஇத் தேறலும்’ எனவரும் துறைக்கு எடுத்துக்காட்டி ‘இதனுள் ஊசல் மாறுதலும் புனமும் தன் குறிதன்னிய இடம், மறந்திசின் என்றது தெருளாக்காலை, கூங்கண்ணது ஊரென உணர்த்தாமையின் இடையீடு படுவதன்றி, அவன்கண் தவறுண்டோ எனத் தன் பிழைப்பாகத் தழீஇயினாள். இது சிறைப்புறமாக வரைவு கடாயது’ என விளக்கியும் கூறியுள்ளார். ஒப்புமை – இறுத்த கோல்தலை இருவி – நற்றிணை 306. சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27). தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24.
சொற்பொருள்: விரி இணர் வேங்கை வண்டுபடு கண்ணியன் – விரிந்த கொத்துக்களையுடைய வேங்கை மரத்தின் மலர்களால் தொடுத்த வண்டுகள் மொய்க்கும் கண்ணியைச் சூடியவன், தெரி இதழ்க் குவளைத் தேம்பாய் தாரன் – தேர்ந்தெடுத்த இதழ்களையுடைய குவளை பூக்களால் தொடுத்த தேன் வடியும் மாலையை அணிந்தவன் (தேம் – தேன் என்றதன் திரிபு), அம் சிலை இடவது ஆக – அழகிய வில் இடது புறம் தொங்க, வெஞ்செலல் கணை வலம் தெரிந்து – விரைந்த செல்லுதல் உடைய அம்புகளை வலக்கையில் பற்றிக்கொண்டு ஆராய்ந்து (செலல் – செல்லல் என்பதன் இடைக்குறை), துணை படர்ந்து உள்ளி வருதல் வாய்வது – துணையை நினைந்து வருந்த இங்கு வருதல் உண்மை, வான்தோய் வெற்பன் வந்தனன் ஆயின் – வானைத் தொடும் மலைகளையுடைய நம் தலைவன் வந்தான் ஆனால், அம் தளிர்ச் செயலைத் தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று ஊசல் மாறிய மருங்கும் – அழகிய தளிர்களையுடைய அசோக மரத்தின் தாழ்தல் இல்லாத உயர்ந்த கிளையில் தொடுத்த தொங்கும் கயிற்றினாலாகிய ஊஞ்சல் இல்லாதாகிய இடத்தையும், பாய்பு உடன் ஆடாமையின் கலுழ்பு இல தேறி – பாய்ந்து ஒருங்கே விளையாடாமையினால் கலங்குதல் இல்லாது தெளிந்து (இல – இல்லை என்பதன் விகாரம்), நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் கண் என மலர்ந்த சுனையும் – நீண்ட இதழ்களையுடைய நீல மலர்கள் கண் போல் மலர்ந்த சுனையும் (தலைஇய – அளபெடை), வண் பறை மடக் கிளி எடுத்தல் செல்லாத் தடக்குரல் குலவுப் பொறை – வலிய சிறகுகளையுடைய இளங்கிளிகள் கொய்து சுமந்து செல்ல இயலாத பெரிய கொத்துக்கள் ஆகிய வளைந்த சுமையை, இறுத்த கோல்தலை இருவி கொய்து ஒழி புனமும் நோக்கி – முறித்த கோலாகிய தலையையுடைய தட்டைகள் பொருந்திய கொய்யப்பட்ட வறும் தினைப்புனத்தை நோக்கி, நெடிது நினைந்து – நீண்ட நேரம் நினைந்து, பைதலன் பெயரலன் கொல்லோ – துன்புற்று மீண்டு போவானோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ –அசைநிலை), ஐ தேய்கு – அழகு கெடுவதாக, அம் வெள் அருவி சூடிய உயர்வரைக் கூஉம் கண்ணஃது எம் ஊர் என ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே – அழகிய வெள்ளை அருவிகளையுடைய உயர்ந்த மலையின்கண் கூப்பிடும் தொலைவில் உள்ளது எம் ஊர் என்று அவனிடம் கூறுவதற்கு மறந்தேன் நான் (கூஉம் – அளபெடை, ஆங்கு – அசைநிலை, சின் – தன்மை அசைச் சொல், யானே –ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 39, மதுரைச் செங்கண்ணனார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
“ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து
உள்ளியும் அறிதிரோ எம்?” என யாழ நின்
முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க,
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல நின்
ஆய் நலம் மறப்பேனோ மற்றே? சேண் இகந்து 5
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி
படு ஞெமல் புதையப் பொத்தி, நெடுநிலை
முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக்
காடு கவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின்,
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு 10
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து
இனம் தலைமயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டெனக்,
கள்படர் ஓதி, நின் படர்ந்து உள்ளி,
அருஞ்செலவு ஆற்றா ஆர் இடை ஞெரேரெனப் 15
பரந்து படு பாயல் நவ்வி பட்டென
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு,
நிலம் கிளை நினைவினை நின்ற நின் கண்டு,
“இன்னகை! இனையம் ஆகவும் எம் வயின்
ஊடல் யாங்கு வந்தன்று?” என யாழ நின் 20
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி,
நறும் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து
வறுங்கை காட்டிய வாய் அல் கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல்
போற்றாய் ஆகலின், புலத்தியால் எம்மே. 25
பாடல் பின்னணி: பொருள் முற்றிய தலைவன் தலைவியிடம் சொன்னது.
பொருளுரை: “காதலரைப் பிரியலாகாது என்று முன்னோர் வழங்கிய கொள்கையைப் பழித்த நெஞ்சத்துடன், எம்மை நினைத்தும் அறிந்தீரோ” என்று நீ கேட்கின்றாய். நின் கூரிய பற்களையுடைய பவளம் போன்ற வாயின் முறுவல் அழிய, துன்பத்தைத் தோற்றுவித்து, உண்மைக்குப் புறம்பானதை மொழியாதே. நின் ஆராயப்படும் அழகினை நான் மறப்பேனா?
பொருள் ஈட்டும்பொருட்டு யான்நெடுந்தொலைவு சென்று, ஒலிக்கின்ற மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசுவதால் அம்மூங்கில்கள் சொரியும் ஒள்ளிய தீப்பொறிகள், அங்கு உதிர்ந்து கிடக்கும் மிக்க சருகுகள் மறையும்படி நெருப்பைப்பற்ற, நெடிய இடத்திலுள்ள உலர்ந்த ஊகம்புல் மீது காற்று சுழற்றிப் பரவச்செய்த காட்டைக் கவரும் பெரிய தீயானது காற்றுச் சென்ற இடம் எல்லாம் பரவியதால், வழியைவிட்டு நீங்கி அச்சத்தால் அலறிய வணிகர்களுடன், ஓரிடத்தில் செருக்குற்ற புலிக்கு அஞ்சிய கலக்கம் மிக்க யானைக்கூட்டம் இருக்கும் அகன்ற இடத்தையுடைய பெரிய காட்டில், தாழ்ந்து தோன்றும் ஞாயிறு மயங்கி விட்டதால், வண்டு மொய்க்கும் கூந்தலை உடையவளே! நின்னை நினைந்து நினைந்து, செல்லுதல் இயலாதாகிய அந்த அரிய வழியில், விரைந்து கண் மூடிய உறக்கத்தில், பெண் மானைக் கண்டதை ஒத்த, ஒளிரும் வளையல்கள் கழன்று விழாதபடி அவற்றை மேலே ஏற்றிச் செறித்து, தாழ்ந்த பார்வையுடன் நிலத்தைக் காலால் கீறும் வருத்தம் உடையையாய் நின்ற நின்னை யான் கனவில் கண்டு, “இனிய முறுவலை உடையாய்! இவ்வாறு யான் வருந்தியிருக்கவும் எம்மிடம் நீ ஊடல் கொள்வது எவ்வாறு வந்தது?” என்று நின் பக்கம் உயர்ந்த புருவத்துடன் திரண்டு சிறுத்த நெற்றியையும் என் கையால் தடவி, நறுமணமுடைய கூந்தலைக் கோதிய நல்ல பொழுதில், நின்னைத் தழுவுதல் போன்ற என் கைகளை வறுங்கையாக்கிய அப்பொய் கனவில், நின்னைக் காணாது ஏங்கிய எம் மனற்சுழற்சியை அறியாய் ஆதலால் எம்மை நீ புலக்கின்றாய்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி இன்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும்’ என வரும் விதி கொள்க. ஆசிரியர் இளம்பூரண அடிகளாரும் நச்சினார்க்கினியரும் தத்தம் உரையில் இச் செய்யுளை இத்துறைக்கே எடுத்துக் காட்டினர். நோய் முந்துறுத்து (4) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நோயைத் தோற்றுவித்து, பொ. வே. சோமசுந்தரனார் உரை – துன்பத்தை நின் முகத்தினும் கண்ணினும் முற்படக் காட்டி. சுழற்றுறாஅ (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சுழற்றப்பட்டு, சுழற்றி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – சுழற்ற எனத் திரிக்க. கள் (14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வண்டு, வண்டுக்கு தேன் என்னும் பெயருண்மையும் நினைக. செறியா – செறித்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. சுழற்றுறாஅ – சுழற்றப்பட்டு என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80). ஒழித்தது பழித்த நெஞ்சமொடு (1) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பெண்களுக்குத் துயர் புரியலாகாது என்று முன்னோர் ஒழித்த கொள்கையைப் பழித்த உள்ளமோடு, இரவலர்க்கு இடுதற்குப் பொருளின்றி அவரை அகற்றியதனைப் பழித்தல் என்றுமாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘வினையே ஆடவற்கு உயிர்’ என்ற ஆன்றோரின் அறிவுரைக்கிணங்கி முயலாமல் தவிர்ந்திருந்தமையை இகழ்ந்து பொருள் செய்க என ஊக்கிய நெஞ்சத்தோடே.
சொற்பொருள்: ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து உள்ளியும் அறிதிரோ எம் என – காதலரைப் பிரியலாகாது என்று முன்னோர் வழங்கிய கொள்கையைப் பழித்த நெஞ்சத்துடன் எம்மை நினைத்தும் அறிந்தீரோ என்று, யாழ நின் முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல – நின் கூரிய பற்களையுடைய பவளம் போன்ற வாயின் முறுவல் அழிய துன்பத்தைத் தோற்றுவித்து உண்மைக்குப் புறம்பானதை மொழியாதே, நின் ஆய் நலம் மறப்பேனோ மற்றே – நின் ஆராயப்படும் அழகினை நான் மறப்பேனா (மற்றே – மற்று, ஏ அசைநிலைகள்), சேண் இகந்து – நெடுந்தொலைவு சென்று, ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி படு ஞெமல் புதையப் பொத்தி – ஒலிக்கின்ற மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசுவதால் அம்மூங்கில்கள் சொரியும் ஒள்ளிய தீப்பொறிகள் மிக்க சருகுகள் மறையும்படி நெருப்புப் பற்றியது (ஞெமல் – சருகு), நெடுநிலை முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக் காடு கவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின் – நெடிய இடத்திலுள்ள உலர்ந்த ஊகம்புல் மீது காற்று சுழற்றிப் பரவச்செய்த காட்டைக் கவரும் பெரிய தீயானது காற்றுச் சென்ற இடம் எல்லாம் பரவியதால் (மீமிசை – ஒருபொருட் பன்மொழி, சுழற்றுறாஅ – அளபெடை), அதர் கெடுத்து அலறிய சாத்தொடு – வழியைவிட்டு நீங்கி அச்சத்தால் அலறிய வணிகர்களுடன், ஓர் அங்கு மதர் புலி வெரீஇய மையல் வேழத்து இனம் தலைமயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு – ஓரிடத்தில் செருக்குற்ற புலிக்கு அஞ்சிய கலக்கம் மிக்க யானைக்கூட்டம் இருக்கும் அகன்ற இடத்தையுடைய பெரிய காட்டில், ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டென – தாழ்ந்து தோன்றும் ஞாயிறு மயங்கி விட்டதால் (மான்றால் – ஆல் அசைநிலை), கள்படர் ஓதி – வண்டு மொய்க்கும் கூந்தலை உடையவளே (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), நின் படர்ந்து உள்ளி – நின்னை நினைந்து நினைந்து, அருஞ்செலவு ஆற்றா ஆர் இடை – செல்லுதல் இயலாதாகிய அந்த அரிய வழியில், ஞெரேரெனப் பரந்து படு பாயல் – விரைந்து கண் மூடிய உறக்கத்தில், நவ்வி பட்டென இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு நிலம் கிளை நினைவினை நின்ற நின் கண்டு – பெண் மானைக் கண்டதை ஒத்த ஒளிரும் வளையல்கள் விழாதபடி மேலே ஏற்றிச் செறித்து தாழ்ந்த பார்வையுடன் நிலத்தைக் காலால் கீறும் வருத்தம் உடையையாய் நின்ற நின்னை யான் கனவில் கண்டு, இன்னகை – இனிய முறுவலை உடையாய் (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), இனையம் ஆகவும் எம் வயின் ஊடல் யாங்கு வந்தன்று – இவ்வாறு யான் வருந்தியிருக்கவும் எம்மிடம் நீ ஊடல் கொள்வது எவ்வாறு வந்தது, என யாழ நின் கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி – என்று நின் பக்கம் உயர்ந்த புருவத்துடன் திரண்டு சிறுத்த நெற்றியையும் தடவி (யாழ – அசைநிலை), நறும் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து – நறுமணமுடைய கூந்தலைக் கோதிய நல்ல பொழுதில், வறுங்கை காட்டிய வாய் அல் கனவின் – என் கைகளை வறுங்கையாக்கிய அப்பொய் கனவில், ஏற்று ஏக்கற்ற உலமரல் போற்றாய் ஆகலின் புலத்தியால் எம்மே – நின்னைக் காணாது ஏங்கிய எம் மனற்சுழற்சியை அறியாய் ஆதலால் எம்மை புலக்கின்றாய் (புலத்தியால் – புலத்தி முன்னிலை வினைமுற்று, ஆல் அசைநிலை, எம்மே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 40, குன்றியனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப
நீல் நிறப் பெருங்கடல் பாடு எழுந்து ஒலிப்ப,
மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி
குவை இரும் புன்னைக் குடம்பை சேர,
அசை வண்டு ஆர்க்கும் அல்குறு காலைத் 5
தாழை தளரத் தூங்கி மாலை
அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க்
காமர் நெஞ்சம் கையறுபு இனையத்,
துயரம் செய்து நம் அருளார் ஆயினும்
அறாஅலியரோ அவருடைக் கேண்மை, 10
அளி இன்மையின் அவண் உறை முனைஇ
வாரற்க தில்ல தோழி, கழனி
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை
செறி மடை வயிரின் பிளிற்றிப் பெண்ணை 15
அக மடல் சேக்கும் துறைவன்
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே. 17
பாடல் பின்னணி: தலைவன் பொருள்வயின் பிரிந்தபொழுது, தலைவி தோழியிடம் கூறியது.
பொருளுரை: தோழி! கடற்கரையின் அருகில் உள்ள உப்பங்கழியில் பூக்கள் குவியவும், நீல நிறத்தையுடைய பெரிய கடல் மிக்க ஒலியை எழுப்பவும், மீன்களை உண்ணும் குருகின் மெல்லிய சிறகுகளையுடைய கூட்டம் திரட்சி உடைய பெரிய புன்னை மரங்களிலுள்ள தங்கள் கூடுகளில் சேரவும், பறந்து திரியும் வண்டுகள் ஒலிக்கின்ற, உயிரினம் எல்லாம் தம்மிடத்தை அடைந்து தங்குகின்ற, தாழைகள் தளர்ந்து அசையும் மாலை நேரத்தில், பிரிந்தவர்கள் மிக்க வருந்துமாறு வந்த கீழ்க்காற்றினால் பெருந்துன்பம் அடைந்த அழகிய நெஞ்சம் செயலற்று வருந்த, பிரிவுத் துன்பத்தைத் தந்து நமக்கு அவர் அருள் செய்யவில்லை ஆனாலும், ஒழியாதிருப்பதாக அவருடைய நட்பு!
அவர் அருள் செய்யவில்லை என்று அவருடன் அங்கு தங்குதலை வெறுத்து இங்கு வாராதிருப்பதாக, வயலில் வெண்ணெல்லை அரிபவர்களின் பின்பு நின்று ஒலிக்கும் தண்ணுமை ஓசைக்கு அஞ்சிய பெரிய கால்களையுடைய நாரை, செறிந்த மூட்டு வாயினையுடைய வயிர் என்னும் இசைக்கருவி போல் ஒலித்து, மருத நிலத்திலிருந்து நீங்கி நெய்தல் நிலத்தில் உள்ள பனைமரத்தின் மடலின் அகத்தே தங்கும் துறையின் தலைவனின் இனிய துயிற்குரிய மார்பின் பொருட்டுச் சென்ற என் நெஞ்சம்!
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என வரும் நூற்பாவின்கண் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிது ஆகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘முதல் கரு உரிப்பொருள்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 3) என்னுஞ் சூத்திரத்து, நெய்தற்கு முதலும் கருவும் உரியும் வந்ததற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும். ‘வைகுறு விடியல்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 8) என்னுஞ் சூத்திரத்து, நெய்தற்கு மாலையும் வந்தமைக்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினர் நச்சினார்க்கினியர். உள்ளுறை – பழைய உரை – வெண்ணெல் அரிநர் தங்காரியஞ்செய்ய பறைகொட்டுவிக்க நாரை வேறு நிலத்தாகிய பெண்ணையிலே சென்று தங்கித் தான் வாழுமிடமாகிய மருத நிலத்தை மறந்தாற்போலத் தன்காரியஞ்செய்ய நம்மைப் பிரிவார் இல்லைப் (வீட்டைப்) பிரிந்தவழி நம்முடைய நெஞ்சு நம்மை விட்டுத் தனக்கு அந்நியமாகிய மார்பிலே சென்றது என்றவாறு. காமர் (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவா, அழகெனின் இகழ்ச்சிக் குறிப்பாகக் கொள்க. தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24. ஒப்புமை – வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை பன் மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும் (அகநானூறு 204).
சொற்பொருள்: கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப – கடற்கரையின் அருகில் உள்ள உப்பங்கழியில் பூக்கள் குவியவும், நீல் நிறப் பெருங்கடல் பாடு எழுந்து ஒலிப்ப – நீல நிறத்தையுடைய பெரிய கடல் மிக்க ஒலியை எழுப்பவும் (நீல் – கடைக்குறை), மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி குவை இரும் புன்னைக் குடம்பை சேர – மீன்களை உண்ணும் குருகின் மெல்லிய சிறகுகளையுடைய கூட்டம் திரட்சி உடைய பெரிய புன்னை மரங்களிலுள்ள தங்கள் கூடுகளில் சேரவும் (புன்னை மரம் – Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree), அசை வண்டு ஆர்க்கும் அல்குறு காலை – பறந்து திரியும் வண்டுகள் ஒலிக்கும் உயிரினம் எல்லாம் தம்மிடத்தை அடைந்து தங்குகின்ற பொழுது, தாழை தளரத் தூங்கி – தாழைகள் தளர்ந்து அசைந்து, மாலை – மாலை நேரத்தில், அழிதக வந்த கொண்டலொடு – பிரிந்தவர்கள் மிக்க வருந்துமாறு வந்த கீழ்க்காற்று, கழி படர்க் காமர் நெஞ்சம் கையறுபு இனையத் துயரம் செய்து நம் அருளார் ஆயினும் – பெருந்துன்பம் அடைந்த அழகிய நெஞ்சம் செயலற்று வருந்த பிரிவுத் துன்பத்தைத் தந்து நமக்கு அவர் அருள் செய்யவில்லை ஆனாலும், அறாஅலியரோ அவருடைக் கேண்மை – ஒழியாதிருப்பதாக அவருடைய நட்பு (அறாஅலியர் – எதிர்மறை வியங்கோள், அளபெடை, ஓகாரம் அசைநிலை), அளி இன்மையின் அவண் உறை முனைஇ வாரற்க – அவர் அருள் செய்யவில்லை என்று அங்கு தங்குதலை வெறுத்து இங்கு வாராதிருப்பதாக (முனைஇ – அளபெடை), தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், ஈறு திரிந்து வந்தது, தில் அசையுமாம், தோழி – தோழி, கழனி வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும் தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை – வயலில் வெண்ணெல்லை அரிபவர்களின் பின்பு நின்று ஒலிக்கும் தண்ணுமை ஓசைக்கு அஞ்சிய பெரிய கால்களையுடைய நாரை (வெரீஇய – அளபெடை), செறி மடை வயிரின் பிளிற்றிப் பெண்ணை அக மடல் சேக்கும் துறைவன் – செறிந்த மூட்டு வாயினையுடைய வயிர் என்னும் இசைக்கருவி போல் ஒலித்து மருத நிலத்திலிருந்து நீங்கி நெய்தல் நிலத்தில் உள்ள பனைமரத்தின் மடலின் அகத்தே தங்கும் துறையின் தலைவன் (வயிரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, வயிர் – துளையுடைய ஊது கொம்பு), இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே – இனிய துயிற்குரிய மார்பின் பொருட்டுச் சென்ற என் நெஞ்சம் (நெஞ்சே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 41, குன்றியனார், பாலைத் திணை – தலைவன் சொன்னது
வைகு புலர் விடியல், மை புலம் பரப்பக்,
கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரிமருள் பூஞ்சினை இனச் சிதர் ஆர்ப்ப,
நெடுநெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்துக்,
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர, 5
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்
ஓதைத் தெள் விளி புலந்தொறும் பரப்பக்,
கோழ் இணர் எதிரிய மரத்த கவினிக்,
காடு அணி கொண்ட காண்தகு பொழுதில்,
நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய், 10
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த
நல் தோள் நெகிழ வருந்தினள் கொல்லோ,
மென்சிறை வண்டின் தண் கமழ் பூந்துணர்
தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன
அம் கலுழ் மாமை கிளைஇய, 15
நுண் பல் தித்தி மாஅயோளோ?
பாடல் பின்னணி: தலைவன் பொருள்வயின் பிரிந்தவிடத்துத் தலைவியை நினைந்து கூறியது.
பொருளுரை: இரவு தங்கிய இருள் புலரும் விடியற்காலையில் எருமைகள் நிலத்தில் பரவிச் செல்ல, கருவைத் தன்னிடத்தே கொண்ட அரும்புகள் கட்டு அவிழ்ந்து மலர்ந்துள்ள முருக்க மரத்தின் தீயை ஒத்த மலர்களையுடைய கிளைகளில் கூட்டமாக வண்டுகள் ஒலிக்க, நெடிய நெற்பயிரை நட்டி முடித்த வயல்களிலுள்ள ஏர்களை தலைகுவிந்த நெற்தாளால் ஆகிய கட்டுக்களையுடைய தோட்டத்தில் சேர்த்து, மண் பிறழும்படி அரிதாளுடைய நிலத்தைப் பிளந்து, ஆராய்ந்த எருதுகளைக் கொண்ட உழவர்களின் தெளிந்த ஓசை இடங்கள்தோறும் பரவ, செழிப்பான பூங்கொத்துக்கள் தோன்றிய மரங்களையுடைய அழகிய காடு மேலும் அழகு பெற்ற காட்சி பொருந்திய பொழுதில், நாம் பிரிந்துவிட்டமையால் தனிமையில் அழகு கெட மெலிந்து, நம் பிரிவை அறியாது அழகுடன் சிறப்பாக இருந்த தன் நல்ல தோள்கள் மெலியுமாறு வருந்தினாளோ,
மெல்லிய சிறகுகளையுடைய வண்டுகள் மொய்க்கும் குளிர்ச்சியுடைய மணக்கும் பூங்கொத்துக்களில் உள்ள தாதுடன் கூடிய தேன்துளி தளிரில் ஒழுகியது போல் அழகு ஒழுகும் மாந்தளிர் நிற மேனியில் பரவித் தோன்றும் சிறிய பல தேமல்களையுடைய நம் தலைவி?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்’ என வரும் விதி கொள்க. இளம்பூரணர் ‘ஒன்றாத் தமரினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 44) என வரும் நூற்பாவின்கண் ‘பாசறைப் புலம்பலும்’ என்னுந்துறைக்கு இதனை எடுத்துக்காட்டினர். ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘ஒன்றாத் தமரினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 44) என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுள் ‘பகைவயிற் பிரியும் தலைமகன் கூற்று’ எனவும், ‘இவ்வாறு வருவன குறித்த பருவம் பிழைத்துழி என்று கொள்ள’ எனவும் கூறினார் இளம்பூரணர். மை புலம் பரப்ப (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கார் எருமைகள் புல் மேய்வதற்குக் கொல்லைகளிலே பரவிச் செல்லா நிற்பவும், எருமைகள் நண்பகலில் வெப்பம் பொறாவாகலின் வைகு புலர் விடியலிலே ஆயர்கள் அவர்களைக் கட்டவிழ்த்து விட்டமையின் மேய்தற்கு பரவிச் செல்வனவாயின என்க. இனி, மை – எருமை என்பது பழைய உரை. இதனை ஆகு பெயராகக் கொள்க. மை செம்மறியாடுமாம். மை என்ற சொல் – ஒளவை துரைசாமி உரை – புறநானூறு 33–21, 96–7, 113–1, 261–8, 364–4 – செம்மறியாடு, ஒளவை துரைசாமி – நற்றிணை83–5, பதிற்றுப்பத்து 12–17, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மதுரைக்காஞ்சி 754 – ஆடு. ஒப்புமை – குறுந்தொகை 279 – திரி மருப்பு எருமை இருள் நிறம் மை ஆன். கரு நனை (2) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பெரிய அரும்புகள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – விதையுடைய அரும்புகள். மிளிர (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நிகழா நிற்பவும் (திகழவும்), ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மண் பிறழும்படி. மாயோளே (16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாயோள் என்பது மாமை நிறமுடையோள் என்னும் தன் பொருள் குறியாது காதலி என்னும் பெயர் அளவி நின்றது. புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).
சொற்பொருள்: வைகு புலர் விடியல் மை புலம் பரப்ப – இரவு தங்கிய இருள் புலரும் விடியற்காலையில் எருமைகள் நிலத்தில் பரவிச் செல்ல (மை – ஆகுபெயர் எருமைக்கு), கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் எரிமருள் பூஞ்சினை இனச் சிதர் ஆர்ப்ப – கருவைத் தன்னிடத்தே கொண்ட அரும்புகள் கட்டு அவிழ்ந்து மலர்ந்துள்ள முருக்க மரத்தின் தீயை ஒத்த மலர்களையுடைய கிளைகளில் கூட்டமாக வண்டுகள் ஒலிக்க (சினை – மரக்கிளை), நெடுநெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்துக் குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர – நெடிய நெற்பயிரை நட்டி முடித்த வயல்களிலுள்ள ஏர்களை தலைகுவிந்த நெற்தாளால் ஆகிய கட்டுக்களையுடைய தோட்டத்தில் சேர்த்து மண் பிறழும்படி, அரிகால் போழ்ந்த – அரிதாளுடைய நிலத்தைப் பிளந்து, தெரி பகட்டு உழவர் ஓதைத் தெள் விளி புலந்தொறும் பரப்ப – ஆராய்ந்த எருதுகளைக் கொண்ட உழவர்களின் தெளிந்த ஓசை இடங்கள்தோறும் பரவ, கோழ் இணர் எதிரிய மரத்த கவினிக் காடு அணி கொண்ட காண்தகு பொழுதில் – செழிப்பான பூங்கொத்துக்கள் தோன்றிய மரங்களையுடைய அழகிய காடு மேலும் அழகு பெற்ற காட்சி பொருந்திய பொழுதில், நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய் – நாம் பிரிந்துவிட்டமையால் தனிமையில் அழகு கெட மெலிந்து (சாஅய் – அளபெடை), நம் பிரிபு அறியா நலனொடு – நம் பிரிவை அறியாது அழகுடன், சிறந்த நல் தோள் நெகிழ வருந்தினள் கொல்லோ – சிறப்பாக இருந்த தன் நல்ல தோள்கள் மெலியுமாறு வருந்தினாளோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ –அசைநிலை), மென்சிறை வண்டின் தண் கமழ் பூந்துணர் தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன அம் கலுழ் மாமை கிளைஇய நுண் பல் தித்தி மாஅயோளோ – மெல்லிய சிறகுகளையுடைய வண்டுகள் மொய்க்கும் குளிர்ச்சியுடைய மணக்கும் பூங்கொத்துக்களில் உள்ள தாதுடன் கூடிய தேன்துளி தளிரில் ஒழுகியது போல் அழகு ஒழுகும் மாந்தளிர் நிற மேனியில் பரவித் தோன்றும் சிறிய பல தேமல்களையுடைய நம் தலைவி (கிளைஇய – அளபெடை, மாஅயோளோ – அளபெடை, ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 42, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச்
செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்,
தளிர் ஏர் மேனி மாஅயோயே!
நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்சக், 5
கோடை நீடிய பைது அறு காலைக்,
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல்
என்றூழ் வியன் குளம் நிறைய வீசிப்,
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை, 10
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந்தற்று, சேண் இடை
ஓங்கித் தோன்றும் உயர்வரை
வான்தோய் வெற்பன் வந்தமாறே.
பாடல் பின்னணி: தலைவன் வரைதற்கு வருகின்றான் எனத் தோழி தலைவியிடம் சொல்லியது.
பொருளுரை: மழை மிக்க பெய்ததால் தழைத்த, கார்காலத்தில் பூக்கும் பிச்சியின் கொய்தல் இயலாத நிலையையுடைய, மழையினால் எழுச்சிபெற்ற நறுமண அரும்பின் சிவந்த பின்புறத்தை ஒக்கும் வளவிய கடைப்பகுதியையுடைய குளிர்ந்த கண்களையும், தளிர்போன்ற அழகிய மேனியையும் உடைய மாமை நிறத்தை உடையவளே!
மழை பெய்யாமையால் நாட்டில் வறுமை மிகுந்து உழவர்களின் கலப்பைகள் பயன் இல்லாது ஆகி, கோடை நீடிய பசுமை இல்லாத காலத்தில், மலைகள் போல் கரைகள் உடையனவும், நீர்ப்பறவைகள் சென்று தங்குதல் இல்லாதனவும், உள்ளே நீர் இல்லாது மிக்க வெயிலினால் காய்ந்தனவுமாகிய பெரிய குளங்கள் யாவற்றிலும், நீர் நிறையும்படி உதவி நிறைய மழை பொழிந்த இன்பம் மிக்க விடியற்காலையில், பல்லோரும் மகிழ்ந்த மகிழ்ச்சி எல்லாம் என்னுள் பெய்து வைத்தாற்போல் உள்ளது, நெடுந்தூரத்தில் உயர்ந்து தோன்றும் பக்க மலைகளையுடைய வானைத் தீண்டும் மலையின் தலைவன் வந்ததால்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘ஆங்கு அதன் தன்மையின் வன்புறை’ என்பதனால் அமைத்துக் கொள்க. நிலைஇய (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நிலைபெற்ற (நிலைஇய பெயல்), ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நிலைமையையுடைய (கொயல் அரு அரு நிலைஇய). உயர்வரை (13) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உயர்ந்த மூங்கில்கள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – உயர்ந்த பக்க மலைகள். கூர – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18). என்றூழ் – கதிரவனின் முதிர்ந்த கதிர்கள், எல் (கதிரவன்) + ஊழ் (முதிர்ச்சி). முனைவர் கு. வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம். இறைச்சி – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவனுடைய வெற்புப் போன்று இனி நுங்கள் வாழ்வும் உயர்ந்து புகழினால் சேணிடை வாழ்வோர்க்கும் தோன்றுமாறு சிறப்புற்றுத் திகழும் எனப் பொருட் புறத்தே இறைச்சி தோன்றியது.
சொற்பொருள்: மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக் கொயல் அரு நிலைஇய – மழை மிக்க பெய்ததால் தழைத்த கார்காலத்தில் பூக்கும் பிச்சியின் கொய்தல் இயலாத நிலையையுடைய (கொயல் – கொய்யல் என்பதன் இடைக்குறை விகாரம், நிலைஇய – அளபெடை), பெயல் ஏர் மண முகைச் செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண் – மழையினால் எழுச்சிபெற்ற நறுமண அரும்பின் சிவந்த பின்புறத்தை ஒக்கும் வளவிய கடைப்பகுதியையுடைய குளிர்ந்த கண்கள் (உறழும் – உவம உருபு), தளிர் ஏர் மேனி மாஅயோயே – தளிர்போன்ற அழகிய மேனி உடைய மாமை நிறத்தை உடையவளே (ஏர் – உவம உருபு, மாஅயோயே – அளபெடை, ஏகாரம் விளி)), நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்சக் கோடை நீடிய பைது அறு காலை – நாட்டில் வறுமை மிகுந்து கலப்பை பயன் இல்லாது ஆகி கோடை நீடிய பசுமை இல்லாத காலத்தில், குன்று கண்டன்ன கோட்ட – மலைகள் போல் கரைகள் உடையன, யாவையும் – யாவற்றிலும், சென்று சேக்கல்லாப் புள்ள – சென்று அடையாத நீர்ப்பறவைகளும், உள் இல் என்றூழ் வியன் குளம் – உள்ளே நீர் இல்லாது மிக்க வெயிலினால் காய்ந்த பெரிய குளங்கள், நிறைய வீசிப் பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை – நிறையும்படி உதவி நிறைய மழை பொழிந்த இன்பம் மிக்க விடியற்காலையில், பல்லோர் உவந்த உவகை எல்லாம் என்னுள் பெய்தந்தற்று – பல்லோரும் மகிழ்ந்த மகிழ்ச்சி எல்லாம் என்னுள் பெய்து வைத்தாற்போல், சேண் இடை ஓங்கித் தோன்றும் உயர்வரை வான்தோய் வெற்பன் வந்தமாறே – நெடுந்தூரத்தில் உயர்ந்து தோன்றும் பக்க மலைகளையுடைய வானைத் தீண்டும் மலையின் தலைவன் வந்ததால் (வந்தமாறே – ஏகாரம் அசைநிலை, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்)
அகநானூறு 43, மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
கடல் முகந்துகொண்ட கமஞ்சூல் மா மழை
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி,
என்றூழ் உழந்த புன்தலை மடப் பிடி
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி 5
குறு நீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி, யாமே
கொய் அகை முல்லை காலொடு மயங்கி,
மை இருங்கானம் நாறும் நறுநுதல், 10
பல் இருங்கூந்தல், மெல்லியல் மடந்தை
நல் எழில் ஆகம் சேர்ந்தனம், என்றும்
அளியரோ அளியர் தாமே, அளி இன்று
ஏதில் பொருட்பிணிப் போகித் தம்
இன்துணைப் பிரியும் மடமையோரே! 15
பாடல் பின்னணி: தலைவனின் நெஞ்சம் பொருள் ஈட்டி வர வேண்டும் என்று வற்புறுத்தியதாக, அப்பொழுது கார்ப்பருவம் வந்தமையால் பிரிவதற்கு இயலாது என்று உலகியல் மேலிட்டுக் கூறுவானாய் அவன் செலவு அழுங்கியதனை அந்நெஞ்சிற்குக் கூறியது.
பொருளுரை: தண்ணிய முழக்கத்தையுடைய முகில்கள் பெய்யும் கார்காலமானது, கடல் நீரை முகந்து கொண்ட சூலினையுடைய கரிய முகில்கள் ஒளிரும் மின்னலுடன் வலப்பக்கமாக எழுந்து ஒலிக்க, மிக்க வெயிலின் வெம்மையால் முன்பு கோடையால் வருந்தியிருந்த பொலிவற்ற தலையையுடைய இளைய பெண் யானைகள் மேலே உயர்த்திய தம் தும்பிக்கை மறையும்படியான வெள்ளத்தில் தம் களிற்று யானைகளுடன் இப்பொழுது படிந்து விளையாட, நிலமும் வானமும் மழைக்கால் நீரால் பொருந்திச் சேர்ந்திட, குறிய நீர் நிரம்பிய நாழிகை வட்டிலினால் நாழிகை அளந்து கூறுபவர்கள் அன்றி, ஞாயிற்றின் இடம் இது என்று பிறரால் அறிய இயலாமையினால் மக்கள் அஞ்சும், எங்கும் பரந்து பெய்யும் மழையுடன் பொருந்தியது.
நாம், கொய்யப்படும் தழைத்த முல்லை மலர்களின் மணம் காற்றுடன் கலந்து கரிய பெரிய காடு நாறுவதுபோல் நாறும் நறுமணமுடைய நெற்றியையும், அடர்ந்த கரிய கூந்தலையும், மென்மைத் தன்மையையுமுடைய நம் தலைவியின் அழகுடைய மார்பைப் பிரியாது உள்ளோம். இரக்கம் இல்லாது அயலதாகிய பொருளை ஈட்டும் பற்றினால் பிரிந்து செல்பவர்கள், என்றும் மிகவும் இரங்கத்தக்கவர்கள்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்’ என வரும் விதி கொள்க. தளி மயங்கின்றே (8) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மழையொடு பொருந்தியது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மழைத் துளியாலே செறிவுற்றது. குறு நீர்க் கன்னல் – முல்லைப்பாட்டு 55–58 – பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள் தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய் நின் குறு நீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப. வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1. கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம், உரியியல் 57). என்றூழ் – கதிரவனின் முதிர்ந்த கதிர்கள், எல் (கதிரவன்) + ஊழ் (முதிர்ச்சி). முனைவர் கு. வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம்.
சொற்பொருள்: கடல் முகந்துகொண்ட கமஞ்சூல் மா மழை – கடல் நீரை முகந்து கொண்ட சூலினையுடைய கரிய முகில்கள் (கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது), சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி – ஒளிரும் மின்னலுடன் வலப்பக்கமாக எழுந்து (வலிமையுடன் எழுந்து) ஒலித்து, என்றூழ் உழந்த புன்தலை மடப் பிடி கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய – மிக்க வெயிலின் வெம்மையால் வருந்திய பொலிவற்ற தலையையுடைய இளைய பெண் யானைகள் மேலே உயர்த்திய தும்பிக்கை மறையும்படியான வெள்ளத்தில் தம் களிற்று யானைகளுடன் படிந்து விளையாட (படீஇய – அளபெடை), நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி – நிலமும் வானமும் மழைக்கால் நீரால் பொருந்திச் சேர்ந்திட (நிலன் – நிலம் என்பதன் போலி), குறு நீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது – குறிய நீர் நிரம்பிய நாழிகை வட்டிலினால் நாழிகை அளந்து கூறுபவர்கள் அன்றி, கதிர் மருங்கு அறியாது அஞ்சுவரப் பாஅய் தளி மயங்கின்றே – ஞாயிற்றின் இடம் இது என்று அறிய இயலாமையினால் மக்கள் அஞ்சும் எங்கும் பரந்து பெய்யும் மழையுடன் பொருந்தியது (பாஅய் – அளபெடை), தண் குரல் எழிலி – தண்ணிய முழக்கத்தையுடைய முகில்கள் பெய்யும் கார்காலமானது (எழிலி – ஆகு பெயர் கார்ப்பருவத்திற்கு), யாமே – நாம், கொய் அகை முல்லை காலொடு மயங்கி மை இருங்கானம் நாறும் நறுநுதல் – கொய்யப்படும் தழைத்த முல்லை மலர்களின் மணம் காற்றுடன் கலந்து கரிய பெரிய காடு நாறுவதுபோல் நாறும் நறுமணமுடைய நெற்றி, பல் இருங்கூந்தல் மெல்லியல் மடந்தை நல் எழில் ஆகம் சேர்ந்தனம் – அடர்ந்த கரிய கூந்தலையும் மென்மைத் தன்மையையுமுடைய நம் தலைவியின் அழகுடைய மார்பைப் பிரியாது உள்ளோம், என்றும் அளியரோ அளியர் தாமே – என்றும் மிகவும் இரங்கத்தக்கவர்கள், அளி இன்று ஏதில் பொருட்பிணிப் போகித் தம் இன்துணைப் பிரியும் மடமையோரே – இரக்கம் இல்லாது அயலதாகிய பொருளை ஈட்டும் பற்றினால் பிரிந்து சென்று (மடமையோரே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 44, குடவாயில் கீரத்தனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
வந்து வினை முடித்தனன் வேந்தனும் பகைவரும்
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே,
முரண் செறிந்திருந்த தானை இரண்டும்
ஒன்று என அறைந்தன பணையே, நின் தேர்
முன் இயங்கு ஊர்திப் பின்னிலை ஈயாது 5
ஊர்க பாக ஒரு வினை, கழிய
நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அருங்கடுந்திறல் கங்கன், கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அருங்கட்டூர், 10
பருந்து படப் பண்ணிப் பழையன் பட்டெனக்,
கண்டது நோனானாகித், திண்தேர்க்
கணையன் அகப்படக், கழுமலம் தந்த
பிணையல் அம் கண்ணிப் பெரும்பூட்சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர், 15
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை
பொங்கடி படி கயம் மண்டிய பசுமிளை,
தண் குடவாயில் அன்னோள்
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே.
பாடல் பின்னணி: வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
பொருளுரை: பாகனே! நம் வேந்தனும் போரில் வெற்றியடைந்தான். பகைவரும் நம் அரசனுக்குத் திறையைக் கொடுத்து நண்பர் ஆயினர், முன்பு மாறுபாடு கொண்டிருந்த நம் சேனையும் பகைவர்களின் சேனையும் ஒரே படையாயின என அறிவித்துப் பணை முரசுகள் அறையப்பட்டன.
சேர வேந்தனின் படைத்தலைவர்களாகிய நன்னனும், ஏற்றையும், நல்ல அணிகலன்கள் அணிந்த அத்தியும், நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும், பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், ஆகிய அவர்கள் அன்று கூடிப் போரிட நின்ற அளத்தற்கரிய பாசறையில், பருந்து சுற்றும்படி போர் செய்து சோழ வேந்தனின் படைத்தலைவன் பழையன் இறந்தது கண்டு பொறுக்க முடியாதவனாகி, திண்ணிய தேரையுடைய சேரனின் படைத்தலைவன் கணையன் உட்பட சேரனின் கழுமலம் என்னும் ஊரைக் கைப்பற்றிய, தொடுத்த கண்ணியை அணிந்த சோழ மன்னன் பெரும்பூண் சென்னியின் அழும்பில் என்னும் ஊரை ஒத்த, நீங்காத புதுவருவாய் (வளமை) உடைய மிக்க நெல்லினையும் பல குடிகளையுமுடைய பரப்பினை உடைய, யானைகள் படியும் குளங்களையும் நெருங்கிய காவற்காடுகளையுமுடைய குளிர்ந்த குடவாயில் என்ற ஊரை ஒத்த சிறப்புடைய நம் தலைவியின் மார்பில் யான் இனிய துயிலைப் பெறும்பொருட்டு, போர் முடிந்து நாம் செல்ல, முற்படச் செல்லும் நின் தேராகிய ஊர்தியைப் பிற தேர்களுக்குப் பின் செல்லாதபடி விரைந்து செலுத்துவாயாக.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘கரணத்தின் அமைந்து’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என்னுஞ் சூத்திரத்துப் பேரிசை ஊர்திப் பாங்கினும் தலைவன் கூற்று நிகழ்வதற்கு இதனை எடுத்துக் காட்டினர் நச்சினார்க்கினியர். பருந்து பட (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பருந்துகள் வீழ்ந்து ஊன் உண்ணும்படி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பருந்து சுற்றும்படி. வரலாறு – நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை, பழையன், கணையன், கழுமலம், சென்னி, அழும்பில், குடவாயில். யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83). பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழும்பில் பாண்டிய நாட்டின்கண் உள்ள ஓர் ஊர். அது இற்றை நாள், ‘அம்புக்கோயில்’ என வழங்கப்படுகின்றது என்பர். இவ்வழும்பில் வேளிர் மரபுக்குறுநில மன்னன் ஆட்சியில் இருந்தது என்பதும் அவ்வூர் வளமிக்க ஊர்கட்கெல்லாம் எடுத்துக்காட்டாகத் தகுந்த பெரு வளஞ் சான்றதென்பதும் மதுரைக்காஞ்சியில் ஆசிரியர் மாங்குடி மருதனார், ‘நிலனும் வளனும் கண்டு அமைகல்லா விளங்கு பெருந்திருவின் மான விறல் வேள் அழும்பில் அன்ன நாடு இழந்தனரும் (343–345)’ என்றோதுதலானும் உணரலாம். வளமிக்க அழும்பில் ஈண்டு குடவாயிலுக்கு உவமையாக வந்தது. குடவாயில் தலைவிக்கு உவமையாக வந்தது. அங்ஙனமாயின் இஃதுவமைக்கு உவமையாய் ‘அடுக்கிய தோற்றம்’ என்னும் குற்றமன்றோ எனின் அற்றன்று. என்னை? அழும்பில் யாணர்க்கு உவமையாய் அத்தகைய யாணருடைய குடவாயில் எனக் குடவாயிலுக்கு அடையாள மாத்திரையாய் நிற்றலின் என்க.
சொற்பொருள்: வந்து வினை முடித்தனன் வேந்தனும் – நம் வேந்தனும் போரில் வெற்றியடைந்தான், பகைவரும் தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே – பகைவரும் நம் அரசனுக்குத் திறையைக் கொடுத்து நண்பர் ஆயினர், முரண் செறிந்திருந்த தானை இரண்டும் ஒன்று என அறைந்தன பணையே – முன்பு மாறுபாடு கொண்டிருந்த நம் சேனையும் பகைவர்களின் சேனையும் ஒரே படையாயின என பணை முரசுகள் அறையப்பட்டன, நின் தேர் முன் இயங்கு ஊர்திப் பின்னிலை ஈயாது ஊர்க – முற்படச் செல்லும் நின் தேராகிய ஊர்தியைப் பிற தேர்களுக்குப் பின் செல்லாதபடி செலுத்துவாயாக, பாக – பாகனே, ஒரு வினை கழிய – போர் முடிந்து நாம் செல்ல (பொ. வே. சோமசுந்தரனார் உரை – வினை ஈண்டுப் போர்த்தொழில்), நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி துன் அருங்கடுந்திறல் கங்கன் கட்டி பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு அன்று அவர் குழீஇய – சேர வேந்தனின் படைத்தலைவர்களாகிய நன்னனும் ஏற்றையும் நல்ல அணிகலன்கள் அணிந்த அத்தியும் நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும் கட்டியும் பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும் ஆகிய அவர்கள் அன்று கூடிப் போரிட நின்ற (ஆங்கு –அசைநிலை, குழீஇய – அளபெடை), அளப்பு அருங்கட்டூர் பருந்து படப் பண்ணிப் பழையன் பட்டெனக் கண்டது நோனானாகி – அளத்தற்கரிய பாசறையில் பருந்து சுற்றும்படி போர் செய்து சோழ வேந்தனின் படைத்தலைவன் பழையன் இறந்தது கண்டு பொறுக்க முடியாதவனாகி, திண்தேர்க் கணையன் அகப்படக் கழுமலம் தந்த பிணையல் அம் கண்ணிப் பெரும்பூட்சென்னி அழும்பில் அன்ன – திண்ணிய தேரையுடைய கணையன் உட்பட சேரனின் கழுமலம் என்னும் ஊரைக் கைப்பற்றிய தொடுத்த கண்ணியை அணிந்த சோழ மன்னன் பெரும்பூண் சென்னியின் அழும்பில் என்னும் ஊரை ஒத்த, அறாஅ யாணர் பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை – நீங்காத புதுவருவாய் (வளமை) உடைய மிக்க நெல்லினையும் பல குடிகளையுமுடைய பரப்பினை உடைய (அறாஅ – அளபெடை), பொங்கடி படி கயம் மண்டிய பசுமிளை – யானைகள் படியும் குளங்களையும் நெருங்கிய காவற்காடுகளையும், தண் குடவாயில் அன்னோள் பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே – குளிர்ந்த குடவாயில் என்ற ஊரை ஒத்த சிறப்புடைய நம் தலைவியின் மார்பில் இனிய துயிலைப் பெற (பெறவே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 45, வெள்ளிவீதியார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்பக்,
கோடை நீடிய அகன் பெருங்குன்றத்து,
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு,
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் 5
காடு இறந்தனரே காதலர், மாமை
அரி நுண் பசலை பாஅய் பீரத்து
எழில் மலர் புரைதல் வேண்டும், அலரே,
அன்னி குறுக்கைப் பறந்தலை திதியன்
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணி, 10
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
இன்னிசை ஆர்ப்பினும் பெரிதே, யானே,
காதலர் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து,
ஆதிமந்தி போலப் பேதுற்று,
அலந்தனென் உழல்வென் கொல்லோ, பொலந்தார் 15
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல்
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய
உடை மதில் ஓர் அரண் போல,
அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேனே!
பாடல் பின்னணி: வற்புறுத்தும் தோழியிடம் தலைவி கூறியது.
பொருளுரை: மழையின்றி வற்றிய வாகை மரத்தின் முதிர்ந்த நெற்கூடுளையுடைய கொத்துக்கள் காற்றில் அசைந்து, கூத்தர்கள் ஆடும் களத்தின் பறையைப் போல் விட்டு விட்டு ஒலிக்கும் வேனிற்காலம் நீடிய, அகன்ற பெரிய மலையில், நீர் இல்லாத கடத்தற்கு அரிய வழியில், உயர்ந்த களிற்று யானைகளைக் கொன்று, மக்கள் இயங்காத பாலை நிலத்தில் புலிகள் திரியும் காட்டினைக் கடந்துச் சென்றார் நம் காதலர்.
என்னுடைய மாமை நிறமானது, மிக நுண்ணிய பசலைப் பரவியதால் பீர்க்கை மலர்களைப் போன்று ஆயிற்று. ஊரில் எழுந்த அலரோ, அன்னி என்பவன் குறுக்கைப் போர்க்களத்தில் திதியன் என்பவனின் பழைய நிலையையுடைய புன்னை மரத்தின் முழு அடியையும் வெட்டிய அன்று கூத்தர்கள் எழுப்பிய இன்னிசை முழக்கத்தை விடவும் பெரியதாயிற்று.
பொன்னால் செய்த மாலையையும் கடலிடத்தினைப் பெயரச் செய்த வெற்றியையும் நல்ல வேற்படையையும் உடைய சேர அரசன் போரில் தோற்கடித்த, உடைந்த மதில்களையுடைய ஓர் அரணைப் போல் அச்சம் பொருந்திய துன்பத்துடன் துயிலாது உள்ள யான், காதலனைக் காணாததால் துன்ப நோயை மிக்க அடைந்து ஆதிமந்தியைப் போல் மனம் கலங்கி வருந்தித் தேடித் திரிவேனோ?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும் வாயிலின் வரூஉம்’ என்பதனால் அமைத்திடுக. நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு (4) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நீரில்லாத அரிய சுறநெறியில் ஓங்கின களிற்றினைக் கொன்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீரில்லாமல் வறிதே கிடக்கும் கடத்தற்கரிய காட்டு யாற்றினூடே அவற்றின் கரைகட்கு மேலே உயர்ந்து தோன்றுவனவாய் நீர் நாடிச் செல்லுகின்ற களிற்று யானைகளைக் கொன்று தின்று. மாமை அரி நுண் பசலை பாஅய் பீரத்து எழில் மலர் புரைதல் வேண்டும் (6–8) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – எனது மாமை நிறமானது ஐதாகிய நுண்ணிய பசலை பரத்ததால் பீர்க்கின் அழகிய மலரை ஒப்பாகும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – என்னுடைய மாமை நிறமோ அவர் இன்மையால் ஐதாக பசப்பூரப் பெற்றுப் பீர்க்கின் அழகிய மலர் போல் தோன்றுதலை அவாவுறுகின்றது. அவர்க்கு இன்பமான மாமை நிறமும் என்னை வெறுத்து வேறு நிறமாக மாறிற்று என்றவாறு. மாமை பீர்க்கம்பூப் போலத் தோன்றுவதற்கு அவாவும் என்பது பட ‘வேண்டும்’ என ஒரு சொற்பெய்து வைத்தமையே. இது ‘செய்யா மரபினவாகியவற்றைத் தொழிற்படுத்தி அடக்கியவாறு’ (தொல்காப்பியம், பொருளியல் 2). காதலர் (13) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இகழ்ச்சி, நம்மால் காதலிக்கப்படுபவர் நம்மைக் கைவிட்டுப் பொருளையே காதலிப்பவர் என்பது தோன்ற நிற்றலின். ஆடுகளப் பறை – அகநானூறு 45 – ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்ப, அகநானூறு 364 – ஆடுகளப் பறையின் வரி நுணல் கறங்க. ஆதிமந்தி – அகநானூறு 45 – காதலர் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து ஆதிமந்தி போலப் பேதுற்று அலந்தனென் உழல்வென் கொல்லோ, அகநானூறு 76 – கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன் வகை அமைப் பொலிந்த வனப்பு அமை தெரியல் சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ என ஆதிமந்தி பேதுற்று இனைய, அகநானூறு 135 – ஆதிமந்தியின் அறிவு பிறிதாகிப் பேதுற்றிசினே காதலம் தோழி, அகநானூறு 222 – ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத் தாழ் இருங்கதுப்பின் காவிரி வவ்வலின் மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த ஆதிமந்தி, அகநானூறு 236 – கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி போல, 396 – மந்தி பனி வார் கண்ணள் பல புலந்து உறைய, குறுந்தொகை 31, ஆதிமந்தியார் பாடல் – யாண்டும் காணேன் மாண்டக்கோனை யானும் ஓர் ஆடுகள மகளே, என் கைக் கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே. வாகை நெற்று ஒலித்தல் – குறுந்தொகை 7 – ஆரியர் கயிறாடு பறையின் கால் பொரக் கலங்கி வாகை வெண் நெற்று ஒலிக்கும், குறுந்தொகை 369 – அத்த வாகை அமலை வால் நெற்று அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பக் கோடை தூக்கும் கானம், அகநானூறு 45 – உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்ப, அகநானூறு 151 – உழுஞ்சில் தாறு சினை விளைந்த நெற்றம் ஆடுமகள் அரிக் கோல் பறையின் ஐயென ஒலிக்கும். குறுக்கைப் போரில் அன்னி என்பவன் திதியனின் புன்னை மரத்தை வெட்டுதல் – நற்றிணை 180, அகநானூறு 45, 126, 145. அன்னி மிஞிலி பற்றின குறிப்புகள் – அகநானூறு 196, 262. வரலாறு – அன்னி, குறுக்கை, திதியன், ஆதிமந்தி. பொலம் – பொன் என் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடர் இயலான (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 61).
சொற்பொருள்: வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்பக் கோடை நீடிய அகன் பெருங்குன்றத்து – மழையின்றி வற்றிய வாகை மரத்தின் முதிர்ந்த நெற்கூடுளையுடைய கொத்துக்கள் கூத்தர்கள் ஆடும் களத்தின் பறையைப் போல் விட்டு விட்டு ஒலிக்கும் வேனிற்காலம் நீடிய அகன்ற பெரிய மலையில் (உழுஞ்சில் – வாகை மரம், Mimosa Flexuosa, Sirissa Tree, அம் – சாரியை, பறையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் காடு இறந்தனரே காதலர் – நீர் இல்லாத கடத்தற்கு அரிய வழியில் உயர்ந்த களிற்று யானைகளைக் கொன்று மக்கள் இயங்காத சுரத்தில் (பாலை நிலத்தில்) புலிகள் திரியும் காட்டினைக் கடந்துச் சென்றார் நம் காதலர், மாமை அரி நுண் பசலை பாஅய் பீரத்து எழில் மலர் புரைதல் வேண்டும் – என்னுடைய மாமை நிறமானது மிக நுண்ணிய பசலைப் பரவியதால் பீர்க்கை மலர்களைப் போன்று ஆயிற்று (பாஅய் – அளபெடை, புரை – உவம உருபு, பீரத்து – அத்து – சாரியை), அலரே அன்னி குறுக்கைப் பறந்தலை திதியன் தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணி புன்னை குறைத்த ஞான்றை வயிரியர் இன்னிசை ஆர்ப்பினும் பெரிதே – ஊரில் எழுந்த அலரோ அன்னி என்பவன் குறுக்கைப் போர்க்களத்தில் திதியன் என்பவனின் பழைய நிலையையுடைய புன்னை மரத்தின் முழு அடியையும் வெட்டிய அன்று கூத்தர்கள் எழுப்பிய இன்னிசை முழக்கத்தை விடவும் பெரியதாயிற்று (அலரே – ஏகாரம் அசைநிலை, புன்னை – மரம், Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree, பெரிதே – ஏகாரம் அசைநிலை), யானே காதலர் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து ஆதிமந்தி (கரிகால் சோழனின் மகள்) போலப் பேதுற்று அலந்தனென் உழல்வென் கொல்லோ – யான் காதலனைக் காணாததால் துன்ப நோயை மிக்க அடைந்து ஆதிமந்தியைப் போல் மனம் கலங்கி வருந்தித் தேடித் திரிவேனோ (ஏகாரம் அசைநிலை, உழல்தல் – திரிதல், கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ அசைநிலை), பொலந்தார் கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல் வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய உடை மதில் ஓர் அரண் போல அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேனே – பொன்னால் செய்த மாலையையும் கடலிடத்தினைப் பெயரச் செய்த வெற்றியையும் நல்ல வேற்படையையும் உடைய வானவரம்பன் (சேர அரசன்) போரில் தோற்கடித்த உடைந்த மதில்களையுடைய ஓர் அரணைப் போல் அச்சம் பொருந்திய துன்பத்துடன் துயிலாது உள்ளேன் (துஞ்சாதேனே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 46, அள்ளூர் நன்முல்லையார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது அல்லது தலைவி தலைவனிடம் சொன்னது
சேற்று நிலை முனைஇய செங்கண் காரான்
ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய,
அம் தூம்பு வள்ளை மயக்கித், தாமரை 5
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர!
யாரையோ? நிற் புலக்கேம், வாருற்று
உறை இறந்து ஒளிரும் தாழ் இருங்கூந்தல்,
பிறரும் ஒருத்தியை நம் மனைத் தந்து,
வதுவை அயர்ந்தனை என்ப அஃது யாம் 10
கூறேம், வாழியர் எந்தை! செறுநர்
களிறு உடை அருஞ்சமம் ததைய நூறும்
ஒளிறு வாள் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க, 15
சென்றீ பெரும, நின் தகைக்குநர் யாரோ?
பாடல் பின்னணி: வாயில் வேண்டி வந்த தலைவனுக்குத் தோழி வாயில் மறுத்தது, அல்லது தலைவனிடம் தலைவி சொன்னது.
பொருளுரை: சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை, ஊர் மக்கள் துயிலும் இரவில், தன் வலிய கயிற்றை அறுத்துக்கொண்டு, கூர்மையான முள் வேலியைத் தன் கொம்பால் நீக்கிவிட்டு, நீருடைய பழனத்தில் மீன்கள் எல்லாம் ஓடுமாறு, அழகிய உள் துளையையுடைய வள்ளைக் கொடிகளை நிலைகுலையச் செய்து, வண்டுகள் ஊதும் தாமரையின் குளிர்ந்த மலர்களை உண்ணும் ஊரின் தலைவனே! நின்னை யாம் புலக்க நீ யார் எமக்கு?
நீண்ட மழைக்காலின் அழகினையும் கடந்து ஒளிரும் தாழ்ந்த கரிய கூந்தலையுடைய ஒருத்தியை வதுவை புரிந்தாய் நீ எனப் பிறரும் நம் மனைக்கு வந்துக் கூறுகின்றனர். அதனை யாம் கூறவில்லை. நீ நீடு வாழ்வாயாக! பகைவர்களின் யானைப் படைகளையுடைய அரிய போரினை சிதையும்படிக் கொன்று வெல்லும் ஒளிவீசும் வாட்படையைக் கொண்ட பாண்டியன், நெற்குவியல்களையுடைய அள்ளூர் போன்ற அழகுடைய என் ஒளிரும் வளையல்கள் நெகிழ்ந்து விழுந்தாலும் விழட்டும். நின் பரத்தையிடம் செல்வாயாக ஐயா. நின்னைத் தடுப்பவர்கள் யார்?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர் காத்த தன்மையின் கண் இன்று பெயர்ப்பினும்’ என வரும் விதி கொள்க. இனி இதனை ஆசிரியர் நச்சினார்க்கினியர் தலைவி கூற்றாகக் கருதி ‘அவன் அறிவு’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்னும் நூற்பாவில் ‘செல்லாக் காலை செல்க என விடுத்தலும்’ என வரும் துறைக்கு எடுத்துக்காட்டினர். இனி அவரே, தொல்காப்பியம் பொருளியலில் ‘உறு கண் ஓம்பல்’ என்னும் நூற்பாவின்கண் (43) இதனைத் தோழி கூற்றாகக் கொண்டு அவள் அறிவுடைமைக்குச் சான்றாகவும் எடுத்துக் காட்டினர். பழனத்து (3) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நீர் மிக்க வயலில், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீர் மிக்குள்ள பொது நிலத்தில். ஒப்புமை – பிண்ட நெல்லின் உறந்தை – அகநானூறு 6. தாமரை வண்டு ஊது பனி மலர் ஆரும் (5–6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தம் உள்ளே வண்டுகள் தாது ஊதுகின்ற குவிந்த குளிர்ந்த தாமரை மலர்களைத் தின்னுதற்கு இடமான, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வண்டுகள் உள்ளிருந்து ஊதும் குளிர்ந்த மலரை நிறையத் தின்னும். யாரையோ (7) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம். பிறரும் ஒருத்தியை நம் மனைத் தந்து வதுவை அயர்ந்தனை என்ப (9–10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவ்வூர் ஏதின் மாக்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து யாங்கள் விரும்பாத செய்தியைக் கூறுபவர், ஒரு பரத்தை மகளை வதுவை செய்து கொண்டாய் என்று கூறுகின்றனர், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இவ்வூரார் பிறரும் ஒருத்தியை எம் மனையிற் கொணர்ந்து காட்டி நீ அவளை வதுவை புரிந்தாய் என்று கூறுவர். என் ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க (15) – தோழி கூற்றாயின் தலைவிக்கும் தனக்கும் வேறுபாடு நோக்காமல் கூறியபடியாம். யாரோ (16) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஆசிரியம் ஓகாரத்தால் முடிந்தது. ஒப்புமை – புலவியஃது எவனோ அன்பு இலங்கடையே – குறுந்தொகை 93. செங்கண் காரான் ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து – அகநானூறு 46, கருங்கோட்டு எருமை கயிறு பரிந்து – ஐங்குறுநூறு 95. வரலாறு – செழியன், அள்ளூர். உள்ளுறை – பழைய உரை – காரான் தனக்கு நிலையென்று புகுத்தப்பட்ட கொட்டிலை நீராலும் சாணாகத்தாலும் தானே சேறாக்கிக் கொண்டு தளையையும் அறுத்துக்கொண்டு, பழனத்துக்குக் காவலாகிய வேலியையும் கோட்டாலெடுத்து மீன்கள் இரியத் தாமரைச் சூழ்ந்த வள்ளையை மயக்கி, மலர்ச்சியின்றி வண்டொடு குவிந்த தாமரையை ஆர்ந்தாற்போல, நீயே ஆதரித்துக் கொள்ளப்பட்ட இவளை, நீ தானே வேறுபடுத்தி, நாணமாகிய தளையையும் அறுத்துக்கொண்டு பரத்தையர்க்குக் காவலாகிய விறலியையும் பாணனாகிய கோட்டாலே நீக்கி, அப்பரத்தையருடனுறையும் தோழிமார் இரிய, அப்பரத்தையருடைய தாய்மாரையும் மயக்கி அகமலர்ந்து உன்னை எதிரேற்றுக் கொள்ளாத மகளிரை நுகர்வானொருத்தன் அல்லையோ என்றவாறு.
சொற்பொருள்: சேற்று நிலை முனைஇய செங்கண் காரான் ஊர் மடி கங்குலில் – சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை ஊர் மக்கள் துயிலும் இரவில், நோன் தளை பரிந்து கூர் முள் வேலி கோட்டின் நீக்கி – வலிய கயிற்றை அறுத்துக்கொண்டு கூர்மையான முள் வேலியைத் தன் கொம்பால் நீக்கி, நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய – நீருடைய பழனத்தில் மீன்கள் எல்லாம் ஓடுமாறு, அம் தூம்பு வள்ளை மயக்கி – அழகிய உள் துளையையுடைய வள்ளைக் கொடிகளை நிலைகுலையச் செய்து (வள்ளைக் கொடி – Creeping bindweed, Ipomaea aquatic), தாமரை வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர – வண்டுகள் ஊதும் தாமரையின் குளிர்ந்த மலர்களை உண்ணும் ஊரின் தலைவனே (ஊர – அண்மை விளி), யாரையோ நிற் புலக்கேம் – நின்னை யாம் புலக்க நீ யார் எமக்கு, வாருற்று உறை இறந்து ஒளிரும் தாழ் இருங்கூந்தல் பிறரும் ஒருத்தியை நம் மனைத் தந்து வதுவை அயர்ந்தனை என்ப – நீண்ட மழைக்காலின் அழகினையும் கடந்து ஒளிரும் தாழ்ந்த கரிய கூந்தலையுடைய ஒருத்தியை வதுவை புரிந்தாய் நீ எனப் பிறரும் நம் மனைக்கு வந்துக் கூறுகின்றனர், அஃது யாம் கூறேம் – அதனை யாம் கூறவில்லை, வாழியர் எந்தை – நீ நீடு வாழ்வாயாக (எந்தை என்பது புலனெறி வழக்கில் வரும் ஒரு விளி), செறுநர் களிறு உடை அருஞ்சமம் ததைய நூறும் ஒளிறு வாள் தானைக் கொற்றச் செழியன் – பகைவர்களின் யானைப் படைகளையுடைய அரிய போரினை சிதையும்படிக் கொன்று வெல்லும் ஒளிவீசும் வாட்படையைக் கொண்ட பாண்டியன், பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என் ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க – நெற்குவியல்களையுடைய அள்ளூர் போன்ற அழகுடைய என் ஒளிரும் வளையல்கள் நெகிழ்ந்து விழுந்தாலும் விழட்டும், சென்றீ பெரும – செல்வாயாக ஐயா (சென்றீ – முன்னிலை ஒருமை வினைத்திரி சொல், செல் என்பது திரிந்தது, பெரும – விளி), நின் தகைக்குநர் யாரோ – நின்னைத் தடுப்பவர்கள் யார் (யாரோ – ஓகாரம் அசைநிலை)
அகநானூறு 47, ஆலம்பேரிச் சாத்தனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்ப
வினை இவண் முடித்தனம் ஆயின், வல் விரைந்து
எழு இனி, வாழிய நெஞ்சே, ஒலிதலை
அலங்கு கழை நரலத் தாக்கி விலங்கு எழுந்து
கடுவளி உருத்திய கொடிவிடு கூர் எரி 5
விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
வெம்முனை அருஞ்சுரம் நீந்திக் கைம்மிக்கு
அகன்சுடர் கல் சேர்பு மறைய மனைவயின்
ஒண்தொடி மகளிர் வெண்திரிக் கொளாஅலின் 10
குறுநடைப் புறவின் செங்கால் சேவல்
நெடுநிலை வியன் நகர் வீழ் துணைப் பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை
யாண்டு உளர் கொல் எனக் கலிழ்வோள் எய்தி
இழை அணி நெடுந்தேர்க் கைவண் செழியன் 15
மழை விளையாடும் வளங்கெழு சிறுமலைச்
சிலம்பின் கூதளம் கமழும் வெற்பின்
வேய் புரை பணைத்தோள் பாயும்
நோய் அசா வீட முயங்குகம் பலவே.
பாடல் பின்னணி: பொருள் ஈட்டச் சென்ற தலைவன் இடைச்சுரத்தில் தன் நெஞ்சிடம் சொன்னது.
பொருளுரை: என் நெஞ்சே! நீ நீடு வாழ்வாயாக! சோர்வு இல்லாத நம் உள்ளம் மேலும் மேலும் சிறக்கும்படி, இங்கு நாம் கருதிய பொருள் ஈட்டும் வினையை செய்து முடித்தோம் ஆனால்,
சூறைக்காற்றினால், தழைத்த தலையையுடைய அசையும் மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று ஒலியுடன் உரசி, வெப்பமடைந்து, அதனால் எழுந்த கொழுந்துவிட்டு எரியும் மிக்க தீ ஒன்று சேர்ந்து, அவ்விடத்திலிருந்து விலகி எழுந்து, பிளப்பையும் முழைஞ்சுகளையும் (குகைகளையும்) உடைய மலைப்பக்கங்களில் பாய்ந்ததால், மூங்கிலின் கணுக்கள் வெடித்து அதனால் எழும் ஒலியானது, கூட்டமாக உள்ள கலைமான்களை அகற்றும், கொடிய போர் நிகழும் கடத்தற்கரிய பாலை நில வழியைக் கடந்து, விரிந்த கதிர்களையுடைய ஞாயிறு மேற்கு திசையில் உள்ள மலையினை அடைந்து மறைய, மனையிடத்து ஒளிரும் வளையல்களை அணிந்த பெண்கள் விளக்குகளில் வெள்ளை திரியைக் கொளுத்துவதால், குறுக அடியிட்டு நடக்கும் புறாவின் சிவந்த கால்களையுடைய சேவல் (ஆண்) தான் நெடிய மேல் நிலையுடைய பெரிய மனையின்கண் தான் விரும்பும் பெடையை அழைக்கும் தனிமையுடன் வந்த துன்பத்தைத் தரும் மாலை நேரத்தில், நம் தலைவர் எங்கு உள்ளாரோ எனக் கலங்கியிருக்கும் நம் தலைவியை அடைந்து, இழைகள் அணிந்தவனும் நெடிய தேர்களை உடையவனும் பெரும் வள்ளன்மை உடையவனுமான பாண்டியனின் சிறுமலை என்னும் பெயரையுடைய மலையின் கூதளங் கொடி மலர்களின் மணம் கமழும் பக்க மலையில், மூங்கிலை ஒத்த பருத்த தோள்களில் பரவியுள்ள அளவு கடந்த துன்பம் நீங்க பலமுறையும் அணைப்போம்.
இப்பொழுது வினையின்பொருட்டு என்னுடன் மிக விரைந்து எழுவாயாக.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்’ என வரும் விதி கொள்க. விலங்கு எழுந்து (4) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பக்கங்களில் எழுந்து, பொ. வே. சோமசுந்தரனார் உரை – விலகி உயரவெழுந்து. வரலாறு – செழியன், சிறுமலை. புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35). கைம்மிக்கு (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கைம்மிக என்பதை புன்கண்மாலை என்பதன் பின் கூட்டுக, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கைம்மிக்கு கலிழ்வோள் எனக் கூட்டுக.
சொற்பொருள்: அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப வினை இவண் முடித்தனம் ஆயின் – சோர்வு இல்லாத நம் உள்ளம் மேலும் மேலும் சிறப்ப இங்கு நாம் கருதிய பொருள் ஈட்டும் வினையை செய்து முடித்தோம் ஆனால், வல் விரைந்து எழு இனி – மிகவும் விரைந்து எழுவாயாக இப்பொழுது, வாழிய – நீ நீடு வாழ்வாயாக, நெஞ்சே – நெஞ்சே, ஒலிதலை அலங்கு கழை நரலத் தாக்கி – தழைத்த தலையையுடைய அசையும் மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று ஒலியுடன் உரசி, விலங்கு எழுந்து – விலகி எழுந்து, கடுவளி – சூறைக்காற்று, உருத்திய கொடிவிடு கூர் எரி – வெப்பமுறச் செய்து அதனால் எழுந்த கொழுந்துவிட்டு எரியும் மிக்க தீ (உருத்திய – வெப்பம் அடையச் செய்த, கூர் – மிகுதி), விடர் முகை அடுக்கம் பாய்தலின் – பிளப்பையும் முழைஞ்சுகளையும் (குகைகளையும்) உடைய மலைப்பக்கங்களில் பாய்ந்ததால், உடன் இயைந்து – ஒன்று சேர்ந்து, அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும் வெம்முனை அருஞ்சுரம் நீந்தி – மூங்கிலின் கணுக்கள் வெடித்ததால் எழும் ஒலி கூட்டமாக உள்ள கலைமான்களை அகற்றும் கொடிய போர் நிகழும் கடத்தற்கரிய பாலை நில வழியைக் கடந்து, கைம்மிக்கு – அளவு கடந்து, அகன்சுடர் கல் சேர்பு மறைய – விரிந்த கதிர்களையுடைய ஞாயிறு மேற்கு திசையில் உள்ள மலையினை அடைந்து மறைய, மனைவயின் ஒண்தொடி மகளிர் வெண்திரிக் கொளாஅலின் – மனையிடத்து ஒளிரும் வளையல்களை அணிந்த பெண்கள் விளக்குகளில் வெள்ளை திரியைக் கொளுத்துவதால் (கொளாஅலின் – அளபெடை), குறுநடைப் புறவின் செங்கால் சேவல் நெடுநிலை வியன் நகர் வீழ் துணைப் பயிரும் புலம்பொடு வந்த புன்கண் மாலை – குறுக அடியிட்டு நடக்கும் புறாவின் சிவந்த கால்களையுடைய சேவல் (ஆண்) தான் நெடிய மேல் நிலையுடைய பெரிய மனையின்கண் தான் விரும்பும் பெடையை அழைக்கும் தனிமையுடன் வந்த துன்பத்தைத் தரும் மாலை நேரம், யாண்டு உளர் கொல் எனக் கலிழ்வோள் எய்தி – நம் தலைவர் எங்கு உள்ளாரோ எனக் கலங்கியிருக்கும் நம் தலைவியை அடைந்து (கலிழ்வோள் – கலுழ்வோள் என்பதன் திரிபு), இழை அணி நெடுந்தேர்க் கைவண் செழியன் மழை விளையாடும் வளங்கெழு சிறுமலைச் சிலம்பின் கூதளம் கமழும் வெற்பின் – இழைகள் அணிந்தவனும் நெடிய தேர்களை உடையவனும் பெரும் வள்ளன்மை உடையவனுமான பாண்டியனின் சிறுமலை என்னும் பெயரையுடைய மலையின் கூதளங் கொடி மலர்களின் மணம் கமழும் பக்க மலையில் (கூதளங் கொடி – Convolvulus ipome), வேய் புரை பணைத்தோள் பாயும் நோய் அசா வீட முயங்குகம் பலவே – மூங்கிலை ஒத்த பருத்த தோள்களில் பரவியுள்ள துன்பம் நீங்க பலமுறையும் அணைப்போம் (பலவே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 48, தங்கால் முடக்கொற்றனார், குறிஞ்சித் திணை – செவிலித்தாயிடம் தோழி சொன்னது
அன்னாய் வாழி வேண்டு அன்னை! நின் மகள்
பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு
நனி பசந்தனள் என வினவுதி, அதன் திறம்
யானும் தெற்றென உணரேன், மேல் நாள்
மலி பூஞ்சாரல் என் தோழிமாரோடு 5
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி,
“புலி புலி” என்னும் பூசல் தோன்ற,
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ் செய் மாலையன்,
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன் 10
குயம் மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி,
வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டு,
யாதோ மற்று அம் மா திறம் படர் என
வினவி நிற்றந்தோனே அவர் கண்டு
எம்முள் எம்முள் மெய் மறைபு ஒடுங்கி, 15
நாணி நின்றனெமாகப் “பேணி
“ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
பொய்யும் உளவோ?” என்றனன் பையெனப்
பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர் மறுத்து, 20
நின் மகள் உண்கண் பன் மாண் நோக்கிச்
சென்றோன் மன்ற, அக் குன்று கிழவோனே,
பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து
அவன் மறை தேஎம் நோக்கி, “மற்று இவன்
மகனே தோழி!” என்றனள்; 25
அதன் அளவு உண்டு கோள் மதி வல்லோர்க்கே.
பாடல் பின்னணி: தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.
பொருளுரை: அன்னையே! நீ நீடு வாழ்வாயாக! நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக!
உன்னுடைய மகள் பாலையும் பருகாமல் உள்ளாள். துன்பம் அடைந்து, மிகவும் பசந்துள்ளாள் என நீ வினவுகின்றாய். அது ஏற்பட்டதை நானும் தெளிவாக உணரவில்லை. முன்பு ஒரு நாள், மலர்கள் நிறைந்த மலைச் சாரலில், என் தோழியருடன், தழைத்த கிளைகளை உடைய வேங்கை மரத்தின் பூக்களைப் பறிக்க சென்றபொழுது, “புலி புலி” என்ற ஆரவாரம் தோன்ற, மகளிரின் கண்கள் போல் உள்ள அழகிய இதழ்களையுடைய ஒளியுடைய செங்கழுநீர் மலர்களை, ஊசியால் சேர்த்துக் கட்டிய மலர் மாலையை அணிந்த ஒருவன், தலையில் ஒரு பக்கம் வெட்சி மலரின் கண்ணியை அணிந்தவனாய், மகளிரின் முலைகள் அழுந்துதற்கு ஏற்ப விரிந்த மார்பில் செஞ்சந்தனம் தடவி, வரிந்து கட்டிய புனைந்த வில்லை உடையவன், ஒப்பற்ற அம்பினை ஆராய்ந்து எடுத்துக் கொண்டு, அந்த விலங்கு சென்ற வழி யாது என வினவி நின்றான். அவனைக் கண்டு நாங்கள் ஒருவருக்குள் ஒருவர் உடலை மறைத்து ஒடுங்கி, நாங்கள் நாணத்துடன் நின்றோமாக. அப்பொழுது அவன், “நன்றாக எண்ணெய் முதலியன பெய்து ஐந்து பகுதியாகப் பிரித்துக் கட்டிய கருமையான கூந்தலையும் அழகிய நெற்றியையும் உடைய மகளிரே! நுமது வாயில் பொய்ச் சொற்களும் உளவோ?” என்றான், குதிரைகளின் விரைவை மெதுவாக தடுத்துத் தேரை ஓட்டுபவன் அவன். நேராக அவனை நோக்காமல் பின் உன்னுடைய மகள் தன் மையிட்ட கண்களால் பல முறை அவனை நோக்கினாள். அதன் பின் சென்றான் அம்மலையின் தலைவன். பகல் மறைந்து கதிரவன் மறைந்த அந்தி வேளையில், அவன் சென்ற திசை நோக்கி, “இவன் ஓர் ஆடவனே தோழி” என்றாள் உன் மகள். அதனைப் புரிந்து அறியும் கொள்கை அறிவு உடையோர்க்கே உண்டு.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘முன்னிலை அறன் எனப்படுதல் என்று இரு வகைப் புரை தீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘இன்பத்தை வெறுத்தல்’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 22) என்னுஞ் சூத்திரத்து ‘அன்னாய் ………….. வினவுதி’ என்றது, பசியட நிற்றல் என்னும் மெப்பாடாமென்றும், ;பிறப்பே குடிமை ‘ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 25) என்னுஞ் சூத்திரத்து, ‘நின் மகள் …………… என்றனள்’ என்பது உருவு நிறுத்த காமவாயில், என்றும் கூறினர் நச்சினார்க்கினியர். ‘எளித்தல் ஏத்தல்’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 12) என்னுஞ் சூத்திரத்து, இது தலைவனை உயர்த்துக் கூறுதல் என்றும், ‘உற்றுழியல்லது’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 13) என்னுஞ் சூத்திரத்து, ‘அன்னாய் வாழி …………….. வினவுதி’ என்றவழி செவிலி குறிப்பினால் உணர்ந்தவாறு இஃது, என்றும் கூறினர் இளம்பூரணர். தோழி – தோழி தானே செவிலி மகளே (தொல்காப்பியம், களவியல் 35). ஏத்தல் – எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல், கூறுதல், உசாதல், ஏதீடு தலைப்பாடு, உண்மை செப்புங்கிளவியொடு, தொகைஇ எழு வகைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், பொருளியல் 12) – இங்கு ஏத்தல் (தலைவனை உயர்வாகக் கூறுதல்) பொருந்தும். வேங்கை கொய்குவம் சென்றுழி புலி புலி என்னும் பூசல் தோன்ற (6–7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புலி புலி என்றுக் கூவி அச்சுறுத்தினால் ‘வேங்கை மரம் மலர்கொய்யத் தாழ்ந்து கொடுக்கும் என்னும் ஒரு பேதைத்தன்மை, அதுவும் மலையில் வாழ்வார்க்கு உள்ளதோர் பண்பு’ என்று விளக்கினார் பழையவுரையாசிரியர். குயம் மண்டு ஆகம் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மகளிர் முலைகள் அழுந்துதற்கேற்ற விரிந்த மார்பு, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மகளிர் முலைகள் பாய்தற்குரிய மார்பு. உண்கண் (21) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மையுண்ட கண்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவன் எழிலை உண்ணுகின்ற கண்கள், மையுண்ட கண் எனவும் அவன் அழகைப் பருகுகின்ற கண் எனவும் இரு பொருள் தோன்ற ‘உண்கண்’ என்றாள். ஒப்புமை – நற்றிணை 351 – இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை அருங்கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள் பசந்தனள் என்பது உணராய் பல் நாள் எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி வருந்தல் வாழி வேண்டு அன்னை. குறிஞ்சிப்பாட்டு 1–7 – அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒண்ணுதல் ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும் வேறு பல் உருவில் கடவுள் பேணி நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று எய்யா மையலை நீயும் வருந்துதி. ‘புலி புலி’ என்று ஓசை எழுப்புதல் –அகநானூறு 48 – ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி புலி புலி என்னும் பூசல் தோன்ற, அகநானூறு 52 – வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப் பொன் ஏர் புது மலர் வேண்டிய குறமகள் இன்னா இசைய பூசல் பயிற்றலின், மதுரைக்காஞ்சி 396–397 – கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர் நறும் பூக் கொய்யும் பூசல், மலைபடுகடாம் 305–306 தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை மலைமார் இடூஉம் ஏமப் பூசல். அன்னை வருந்துதல்: குறிஞ்சிப்பாட்டு 1–8 – அன்னாய் வாழி! வேண்டு அன்னை! ஒண்ணுதல் ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும், பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும், வேறு பல் உருவில் கடவுள் பேணி, நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று, எய்யா மையலை நீயும் வருந்துதி. அகநானூறு 156 – கள்ளும் கண்ணியும் கையுறையாக நிலைக் கோட்டு வெள்ளை நாள் செவிக் கிடாஅய் நிலைத் துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சித் தணி மருங்கு அறியாள் யாய் அழ மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே. நற்றிணை 351 – இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை அருங்கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள் பசந்தனள் என்பது உணராய் பல் நாள் எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி வருந்தல் வாழி! வேண்டு அன்னை! மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17). அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4). நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).
சொற்பொருள்: அன்னாய் வாழி – அன்னையே நீ நீடு வாழ்வாயாக, வேண்டு அன்னை – நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக, நின் மகள் பாலும் உண்ணாள் – உன்னுடைய மகள் பாலையும் பருகாமல் உள்ளாள், பழங்கண் கொண்டு – துன்பம் அடைந்து, நனி பசந்தனள் என வினவுதி – மிகவும் பசந்துள்ளாள் என நீ வினவுகின்றாய் (வினவுதி – முன்னிலை வினைமுற்று), அதன் திறம் யானும் தெற்றென உணரேன் – அது ஏற்பட்டதை நானும் தெளிவாக உணரவில்லை, மேல் நாள் – முன்பு ஒரு நாள், மலி பூஞ்சாரல் – மலர்கள் நிறைந்த மலைச் சாரலில், என் தோழிமாரோடு – என் தோழியருடன், ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி – தழைத்த கிளைகளை உடைய வேங்கை மரத்தின் பூக்களைப் பறிக்க சென்றபொழுது (சென்றுழி = சென்ற + உழி, உழி = ஏழாம் வேற்றுமை உருபு, உழி = பொழுது), “புலி புலி” என்னும் பூசல் தோன்ற – புலி புலி என்ற ஆரவாரம் தோன்ற, ஒண் செங்கழுநீர் – ஒளியுடைய செங்கழுநீர் மலர்களை, கண் போல் – மகளிரின் கண்கள் போல் உள்ள, ஆய் இதழ் – அழகிய இதழ்கள், ஊசி போகிய சூழ் செய் மாலையன் – ஊசியால் சேர்த்துக் கட்டிய மலர் மாலையை அணிந்தவன், பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன் – தலையில் ஒரு பக்கம் வெட்சி மலரின் கண்ணியை அணிந்தவனாய், குயம் மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி – மகளிரின் முலைகள் அழுந்துதற்கு ஏற்ப விரிந்த மார்பில் செஞ்சந்தனம் தடவி, வரி புனை வில்லன் – வரிந்து கட்டிய புனைந்த வில்லை உடையவன், ஒரு கணை தெரிந்து கொண்டு – ஒப்பற்ற அம்பினை ஆராய்ந்து எடுத்துக் கொண்டு (ஒரு – ஒப்பற்ற), யாதோ – எவ்வழியோ, மற்று – அசைநிலை, அம் மா திறம் படர் என வினவி நிற்றந்தோனே – அந்த விலங்கு சென்ற வழி யாது என வினவி நின்றான் (நிற்றந்தோனே – தருதல் பகுதிப்பொருள் விகுதி, ஏகாரம் அசைநிலை), அவன் கண்டு எம்முள் எம்முள் மெய் மறைபு ஒடுங்கி – அவனைக் கண்டு நாங்கள் ஒருவருக்குள் ஒருவர் உடலை மறைத்து ஒடுங்கி இருந்தோம், நாணி நின்றனெமாக – நாங்கள் நாணத்துடன் நின்றோமாக, பேணி ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் மை ஈர் ஓதி மடவீர் – நன்றாக எண்ணெய் முதலியன பெய்து ஐந்து பகுதியாகப் பிரித்துக் கட்டிய கருமையான கூந்தலையும் அழகிய நெற்றியையும் உடைய மகளிரே, நும் வாய்ப் பொய்யும் உளவோ – நுமது வாயில் பொய்ச் சொற்களும் உளவோ, என்றனன் – என்றான், பையென – மெதுவாக, பரி முடுகு தவிர்த்த தேரன் – குதிரைகளின் விரைவை தடுத்துத் தேரை ஓட்டுபவன், எதிர் மறுத்து – நேராக நோக்காமல், நின் மகள் உண்கண் பன் மாண் நோக்கி – உன்னுடைய மகள் தன் மையிட்ட கண்களால் பல முறை அவனை நோக்கி, சென்றோன் – சென்றான், மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், அக் குன்று கிழவோனே – அம்மலையின் தலைவன் (கிழவோனே – ஏகாரம் அசைநிலை), பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து – பகல் மறைந்து கதிரவன் மறைந்த அந்தி வேளையில், அவன் மறை தேஎம் நோக்கி – அவன் சென்ற திசை நோக்கி (தேஎம் – அளபெடை), மற்று –அசைநிலை, இவன் மகனே தோழி என்றனள் – இவன் ஓர் ஆடவனே தோழி என்றாள், அதன் அளவு உண்டு கோள் மதி வல்லோர்க்கே – அதனைப் புரிந்து அறியும் கொள்கை அறிவு உடையோர்க்கே உண்டு (வல்லோர்க்கே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 49, வண்ணப்புறக் கந்தரத்தனார், பாலைத் திணை – மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள்,
அளியும் அன்பும் சாயலும் இயல்பும்,
முன் நாள் போலாள், இறீஇயர் என் உயிர், என
கொடுந்தொடைக் குழவியொடு வயின் மரத்து யாத்த
கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கி, 5
குறுக வந்து குவவு நுதல் நீவி,
மெல்லெனத் தழீஇயினேனாக என் மகள்
நன்னர் ஆகத்து இடை முலை வியர்ப்ப,
பல் கால் முயங்கினள் மன்னே, அன்னோ!
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி, 10
வறன் நிழல் அசைஇ வான் புலந்து வருந்திய
மடமான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்
காடு உடன் கழிதல் அறியின், தந்தை
அல்கு பதம் மிகுத்த கடியுடை வியன் நகர்
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல, 15
கோதை ஆயமொடு ஓரை தழீஇத்
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள்
ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே.
பாடல் பின்னணி: உடன்போக்கில் தலைவி சென்றபின் செவிலித்தாய் வருந்தி உரைத்தது.
பொருளுரை: கிளியையும், பந்தையும், கழங்கையும் விரும்புபவள், தன் அருளிலும், அன்பிலும், மென்மையிலும், செயல்களாலும் முன்னாட்களைப் போல் இல்லாது இப்பொழுது வேறுபட்டுள்ளாள்.
‘என் உயிர் கழிவதாக’ என்று என்னை நான் நொந்து கொள்கின்றேன். வளைந்த தொடையையுடைய கன்றுடன் மரத்தில் கட்டப்பட்ட, விரைந்து விரைந்து கன்றை நோக்கும் பசுவைப் போல நான் அவள் முதுகினை நோக்கி, அவள் அருகில் வந்து, அவளுடைய வளைந்த நெற்றியைத் தடவி, அவளை மென்மையாகத் தழுவிக் கொண்டேனாக, என் மகள் தன் மார்பில் முலையிடத்து வியர்வை உண்டாக என்னைப் பல முறை நன்கு தழுவிக் கொண்டாள் முன்பு. அது கழிந்தது.
ஐயோ! வெற்றி மிக்க பெரும் தகைமையுடைய அவள் தலைவன், அவளைப் பலவாகப் பாராட்டி, உலர்ந்த நிழலில் அவளுடன் தங்கி இளைப்பாறி, மழை பெய்யாததால் முகிலை வெறுத்து வருந்திய தளர்ச்சியுற்ற இளைய மானின் கூட்டம் வற்றிய மரற்செடியைச் சுவைக்கும் காட்டில் உடன் கொண்டு செல்வதை நான் அறிந்திருந்தால், தந்தையின் மிக்க உணவு எஞ்சியிருக்கும் மிகுந்த காவலுடைய பெரிய மனையில், அவள் செல்லும் இடந்தொறும் செல்லும் இடந்தொறும் நிழல் போல் சென்று, மலர்மாலை அணிந்த தோழியருடன் விளையாட்டினை மேற்கொண்டு தொகுதியாக உள்ள பரலினையுடைய சிலம்பு ஒலிக்க விளையாடும் இடந்தொறும் விளையாடும் இடந்தொறும் அகலாது இருந்திருப்பேன் முன்னே!
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என்னும் விதி கொள்க. ஆசிரியர் நச்சினார்க்கினியரும் இதற்கு இதனைக் காட்டினர். ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘கொண்டு தலைக் கழியினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 15) என்னுஞ் சூத்திரத்து ‘அல்குபத மிகுந்த கடியுடை வியனகர்’ என நெல்லுடைமை கூறிய அதனானே வேளாண் வருணமென்று பெற்றாம் எனவும், ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என்னுஞ் சூத்திரத்து, செவிலி கூற்று நிகழ்வதற்கு இப்பாட்டினை எடுத்துக் காட்டி, ‘இவ்வகப்பாட்டு உடன் போன தலைவியை நினைந்து செவிலி மனைக்கண் மயங்கியது என்றும் கூறினர் நச்சினார்க்கினியர். வான் புலந்து வருந்திய மடமான் அசா இனம் (11–12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மழை வறந்தமையாலே உணவு பெறாமல் பசிப்பிணியால் வருத்தமுற்ற மடப்பமுடைய மானினது இளைப்புற்ற கூட்டம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மேகத்தை வெறுத்து வருந்திய தளர்ச்சியுற்ற மானின் கூட்டம். தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பூத்தொழில் அமைந்த பரலுடைய தன் சிலம்பு ஒலிக்கும்படி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தொகுதி வாய்ந்த பரலினையுடைய சிலம்பு ஒலிக்க. செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34). மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).
சொற்பொருள்: கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள் – கிளியையும் பந்தையும் கழங்கையும் விரும்புபவள், அளியும் அன்பும் சாயலும் இயல்பும் முன் நாள் போலாள் – தன் அருளிலும் அன்பிலும் மென்மையிலும் செயல்களாலும் முன்னாட்களைப் போல் இல்லாது வேறுபட்டுள்ளாள், இறீஇயர் என் உயிர் என – என் உயிர் கழிவதாக என்று (இறீஇயர் – அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி, கொடுந்தொடைக் குழவியொடு வயின் மரத்து யாத்த கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கி குறுக வந்து குவவு நுதல் நீவி மெல்லெனத் தழீஇயினேனாக – வளைந்த தொடையையுடைய கன்றுடன் மரத்தில் கட்டப்பட்ட விரைந்து விரைந்து கன்றை நோக்கும் பசுவைப் போல அவள் முதுகினை நோக்கி அருகில் வந்து வளைந்த நெற்றியைத் தடவி மென்மையாகத் தழுவிக் கொண்டேனாக (கறவையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, தழீஇயினேனாக – அளபெடை), என் மகள் நன்னர் ஆகத்து இடை முலை வியர்ப்ப பல் கால் முயங்கினள் மன்னே – என் மகள் தன் மார்பில் முலையிடத்து வியர்வை உண்டாக என்னைப் பல முறை நன்கு தழுவிக் கொண்டாள் முன்பு (நன்னர் – நல்ல), அன்னோ – ஐயோ, விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி – வெற்றி மிக்க பெரும் தகைமையுடைய அவள் தலைவன் அவளைப் பலவாகப் பாராட்டி, வறன் நிழல் அசைஇ – உலர்ந்த நிழலில் தங்கி (அசைஇ – அளபெடை), வான் புலந்து வருந்திய மடமான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் காடு உடன் கழிதல் அறியின் – மழை பெய்யாததால் முகிலை வெறுத்து வருந்திய தளர்ச்சியுற்ற இளைய மானின் கூட்டம் வற்றிய மரற்செடியைச் சுவைக்கும் காட்டில் உடன் கொண்டு செல்வதை நான் அறிந்திருந்தால், தந்தை அல்கு பதம் மிகுத்த கடியுடை வியன் நகர் செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல – தந்தையின் மிக்க உணவு எஞ்சியிருக்கும் மிகுந்த காவலுடைய பெரிய மனையில் அவள் செல்லும் இடந்தொறும் செல்லும் இடந்தொறும் நிழல் போல் (அல்கு பதம் – வைத்திருந்து உண்ணும் உணவு, மிக்க உணவு), கோதை ஆயமொடு ஓரை தழீஇத் தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப அவள் ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே – மலர்மாலை அணிந்த தோழியருடன் விளையாட்டினை மேற்கொண்டு தொகுதியாக உள்ள பரலினையுடைய சிலம்பு ஒலிக்க விளையாடும் இடந்தொறும் விளையாடும் இடந்தொறும் அகலாது இருந்திருப்பேன் முன்னே (செல்வுழி = செல் + உழி, உழி = இடம், தழீஇ – அளபெடை, மன்னே – மன் கழிவுப்பொருளில் வந்த இடைச்சொல், ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 50, கருவூர்ப் பூதஞ்சாத்தனார், நெய்தல் திணை – தோழி பாணனிடம் சொன்னது
கடல் பாடு அவிந்து தோணி நீங்கி,
நெடுநீர் இருங்கழிக் கடு மீன் கலிப்பினும்,
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்,
மாண் இழை நெடுந்தேர் பாணி நிற்பப்,
பகலும் நம் வயின் அகலான் ஆகிப் 5
பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச் சேர்ப்பன்,
இனியே மணப்பு அருங்காமம் தணப்ப நீந்தி,
“வாராதோர் நமக்கு யாஅர்” என்னாது,
மல்லல் மூதூர் மறையினை சென்று
சொல்லின் எவனோ பாண? “எல்லி 10
மனை சேர் பெண்ணை மடிவாய் அன்றில்
துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண்” எனக்
கண் நிறை நீர்கொடு கரக்கும்
ஒண்ணுதல் அரிவை, யான் என் செய்கோ எனவே?
பாடல் பின்னணி: நெய்தலுள் மருதம். தலைவன் பரத்தையர்வயின் பிரிந்த வேளையில் தலைவி வருந்தி இருந்தாள். அது கண்ட தோழி தலைவியின் நிலையைத் தலைவனுக்குக் கூறும் பொருட்டுப் பாணனுக்குச் சொல்லியது.
பொருளுரை: பாணனே! குளிர்ந்த கடற்கரையுடைய தலைவன், கடலின் ஓசை அடங்கி தோணிகள் கடலின்கண் செல்லாது நீங்கவும், மிக்க நீரினையுடைய உப்பங்கழியில் கொடிய மீன்கள் செருக்கித் திரிந்தாலும், கொடிய வாயினையுடைய பெண்கள் பழி மொழிகளைத் தூற்றினாலும், மாட்சிமையுடைய அணிகலன்களுடைய நெடிய தேர் தாழ்த்து நிற்க, பகல் நேரத்திலும் நம்மிடமிருந்து பிரியானாகி அடுத்தடுத்து வருவான் முன்பு.
கற்புக்காலமாகிய இப்பொழுது, களவுகாலத்தில் கூடுவதற்கு அரிய காதல் உணர்வு நீங்கியபடியால், தாம் இருக்கும் பரத்தையர் இடத்தைக் கடந்து வராதவர் நமக்கு யார் எனக் கருதாது, வளம் பொருந்திய பழைய ஊரின்கண் மறைந்து சென்று தலைவரிடம் தலைவியின் நிலையை நீ எடுத்துக்கூறினால் என்ன ஆகும்? இரவில் மனையைச் சார்ந்த பனைமரத்தில் வாழும் வளைந்த வாயையுடைய அன்றில் ஒன்றியிருக்கும் தன் துணை சிறிது பிரிந்தாலும் துஞ்சாது இருப்பதைக் காண் எனக் கூறி, கண்களில் நிறையும் நீரைக்கொண்டு, யான் என்ன செய்வேன் என்று தன் துன்பத்தை மறைக்கின்றாள் ஒளிரும் நெற்றியையுடைய தலைவி.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் மெல் இயல் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் முகம் புகல் முறைமையின் கிழவோற்கு உரைத்தல் அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய’ (தொல்காப்பியம், கற்பியல் 11) என வரும் விதி கொள்க. ஆசிரியர் நச்சினார்க்கினியர் இதற்கு இதனையே எடுத்துக்காட்டினர். ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘இன்பத்தை வெறுத்தல்’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 22) என்னுஞ் சூத்திரத்து, இன்பத்தை வெறுத்தல் என்பது இன்பத்திற்கு ஏதுவாகிய பொருள் கண்டவழி அவற்றின் மேல் வெறுப்புத் தோன்றுதல் என்று கூறி, அதற்கு ‘எல்லி மனைசேர் ……………… என் செய்கோ எனவே’ என்னும் பகுதியை எடுத்துக் கூறினார் பேராசிரியர். யான் என் செய்கோ (14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவி துன்பத்தில் கூறுவதாகக் கொள்கின்றார், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பாணன் தலைவனிடம் கூற வேண்டியதாகக் கொள்கின்றனர். மல்லல் – மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7). காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – முனைவர் கு.வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லியல் 355). மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).
சொற்பொருள்: கடல் பாடு அவிந்து தோணி நீங்கி நெடுநீர் இருங்கழிக் கடு மீன் கலிப்பினும் – கடலின் ஓசை அடங்கி தோணிகள் கடலின்கண் செல்லாது நீங்கவும் மிக்க நீரினையுடைய உப்பங்கழியில் கொடிய மீன்கள் செருக்கித் திரிந்தாலும், வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும் – கொடிய வாயினையுடைய பெண்கள் பழி மொழிகளைத் தூற்றினாலும், மாண் இழை நெடுந்தேர் பாணி நிற்பப் பகலும் நம் வயின் அகலான் ஆகிப் பயின்றுவரும் மன்னே – மாட்சிமையுடைய அணிகலன்களுடைய நெடிய தேர் தாழ்த்து நிற்க பகல் நேரத்திலும் நம்மிடமிருந்து பிரியானாகி அடுத்தடுத்து வருவான் முன்பு (பயின்று – அடுத்தடுத்து வருதல், மன்னே – மன் கழிவுப்பொருளில் வந்த இடைச்சொல், ஏகாரம் அசைநிலை), பனி நீர்ச் சேர்ப்பன் – குளிர்ந்த கடற்கரையுடைய தலைவன், இனியே – இப்பொழுது (ஏகாரம் அசைநிலை), மணப்பு அருங்காமம் தணப்ப – களவுகாலத்தில் கூடுவதற்கு அரிய காதல் உணர்வு நீங்க, நீந்தி வாராதோர் நமக்கு யாஅர் என்னாது – கடந்து வராதவர் நமக்கு யார் எனக் கருதாது (யாஅர் – அளபெடை), மல்லல் மூதூர் மறையினை சென்று சொல்லின் எவனோ – வளம் பொருந்திய பழைய ஊரின்கண் மறைந்து சென்று தலைவரிடம் சொன்னால் என்ன ஆகும், பாண – பாணனே (அண்மை விளி), எல்லி மனை சேர் பெண்ணை மடிவாய் அன்றில் துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண் என – இரவில் மனையைச் சார்ந்த பனைமரத்தில் வளைந்த வாயையுடைய அன்றில் ஒன்றியிருக்கும் துணை சிறிது பிரிந்தாலும் துஞ்சாது இருப்பதைக் காண் என்று, கண் நிறை நீர்கொடு கரக்கும் – கண்களில் நிறையும் நீரைக்கொண்டு தன் துன்பத்தை மறைக்கும், ஒண்ணுதல் அரிவை – ஒளிரும் நெற்றியையுடைய தலைவி, யான் என் செய்கோ எனவே – யான் என்ன செய்வேன் என்று (செய்கோ – செய்கு தன்மை ஒருமை வினைமுற்று, ஓ –அசைநிலை, எனவே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 51, பெருந்தேவனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற
நீள் எரி பரந்த நெடுந்தாள் யாத்து,
போழ் வளி முழங்கும் புல்லென் உயர்சினை
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி,
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ்செவி 5
எருவைச் சேவல் கரிபு சிறை தீய,
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை,
நீ உழந்து எய்தும் செய் வினைப் பொருட்பிணி
பல்லிதழ் மழைக் கண் மாஅயோள் வயிற்
பிரியின் புணர்வது ஆயின், பிரியாது 10
ஏந்து முலை முற்றம் வீங்கப் பல் ஊழ்
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும்
மனைமுதல் வினையொடும் உவப்ப
நினை மாண் நெஞ்சம், நீங்குதல் மறந்தே.
பாடல் பின்னணி: பொருள் ஈட்ட வேண்டும் என்று தன்னை இடைவிடாது தூண்டுகின்ற தன் நெஞ்சை நோக்கி, “நாம் இப்பொழுது சென்றால் தலைவி வருந்துவாள்” எனக் கூறிச் செலவு அழுங்குவித்தது.
பொருளுரை: என் மாண்புடைய நெஞ்சமே! மக்கள் இயங்குதல் இல்லாத பாலை நிலத்தில் ஞாயிற்றின் கதிர்கள் மிக்க வெப்பம் பரவிய, நெடிய அடியையுடைய யா மரத்தின் பிளந்து செல்லும் காற்று முழங்கும் பொலிவில்லாத உயர்ந்த கிளையில், அடைகாத்து இருப்பதால் பசி மிகுந்து புலால் விரும்பி இருக்கும் தன் பெடையின் முகத்தை நோக்கி ஊன் துண்டினைப் பதித்து வைத்தாற்போல் காண்பார்க்கு அச்சம் தரும் சிவந்த செவியினையுடைய ஆண் பருந்தின் இறகுகள், பெடைக்கு இரையைத் தேடிப் பெறும் பொருட்டுப் பறந்ததால் கரிந்து தீய்ந்து போகும்படி வேனில் காலத்தின் வெப்பம் மிகுந்திருக்கும், மூங்கில்கள் உயர்ந்த அகன்ற இடத்தில், வருந்திச் செய்யும் வினையால் கிடைக்கும் பொருள், பல இதழ்களையுடைய மலர் போன்ற குளிர்ந்த கண்களையும் மாமை நிறத்தையுமுடைய நம் தலைவியைப் பிரிந்து செல்வதால் கைகூடுவது ஆயின், ஒன்றிலிருந்து ஒன்று பிரியாது நெருங்கி இருக்கும் முலைகள் விம்ம, சிவந்த அணிகலன்கள் ஒலிக்க பல முறைத் தழுவி, நாள்தோறும் தலைவி இல்வாழ்க்கையில் செய்யும் செயல்களால் மகிழும்படி, நீ நினைப்பாயாக, அவளைப் பிரிதலை மறந்து.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘ வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘கரணத்தின் அமைந்து’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என்னும் தலைவன் கூற்று நிகழுமாறு கூறிய சூத்திரத்து, ‘நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளும்’ என்பதற்கு இச் செய்யுளை எடுத்துக்காட்டினர் இளம்பூரணர். பொருட்பிணி (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருளே பிணிபோல் வருதலின் பொருட்பிணி என்றான். வினையொடும் (13) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விருந்தோம்பல் முதலிய அறச் செயல்கள். ஒப்புமை – அகநானூறு 51 – முலை முற்றம் வீங்க, அகநானூறு 279 – செறிய வீங்கிய மென் முலை முற்றம், அகநானூறு 263 – வருமுலை முற்றத்து, அகநானூறு 361 – வார் முலை முற்றத்து, அகநானூறு 362 – முலைச் சுணங்கணி முற்றத்து, நற்றிணை 191 – வன முலை முற்றத்து. நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).
சொற்பொருள்: ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற நீள் எரி பரந்த நெடுந்தாள் யாத்து – மக்கள் இயங்குதல் இல்லாத பாலை நிலத்தில் ஞாயிற்றின் கதிர்கள் மிக்க வெப்பம் பரவிய நெடிய அடியையுடைய யா மரத்தின் (யாத்து – அத்துச் சாரியை, யா மரம் – ஆச்சா மரம், Hardwickia binate), போழ் வளி முழங்கும் புல்லென் உயர்சினை முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி ஊன் பதித்தன்ன வெருவரு செஞ்செவி எருவைச் சேவல் – பிளந்து செல்லும் காற்று முழங்கும் பொலிவில்லாத உயர்ந்த கிளையில் புலால் விரும்பி இருக்கும் தன் பெடையின் முகத்தை நோக்கி ஊன் துண்டினைப் பதித்து வைத்தாற்போல் அச்சம் தரும் சிவந்த செவியினையுடைய ஆண் பருந்து, கரிபு சிறை தீய – இறகுகள் கரிந்து தீய்ந்திட, வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை – வேனில்காலத்தின் வெப்பம் மிக்க மூங்கில்கள் உயர்ந்த அகன்ற இடத்தில், நீ உழந்து எய்தும் செய் வினைப் பொருட்பிணி – நீ வருந்திச் செய்யும் வினையால் கிடைக்கும் பொருள், பல்லிதழ் மழைக் கண் மாஅயோள் வயிற் பிரியின் – பல இதழ்களையுடைய மலர் போன்ற குளிர்ந்த கண்களையும் மாமை நிறத்தையுமுடைய நம் தலைவியைப் பிரிந்தால் (பல்லிதழ், பூவிற்கு ஆகுபெயர், அகரம் கெட்டுக் ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ – தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 160, என்றதனால் லகரம் இரட்டித்துப் பல்லிதழ் என முடிந்தது, மாஅயோள் – அளபெடை), புணர்வது ஆயின் – கைகூடுவது ஆயின், பிரியாது ஏந்து முலை முற்றம் வீங்க – ஒன்றிலிருந்து ஒன்று பிரியாது நெருங்கி இருக்கும் முலைகள் விம்ம, பல் ஊழ் சேயிழை தெளிர்ப்பக் கவைஇ – சிவந்த அணிகலன்கள் ஒலிக்க பல முறைத் தழுவி (கவைஇ – அளபெடை), நாளும் மனைமுதல் வினையொடும் உவப்ப – நாள்தோறும் தலைவி இல்வாழ்க்கையில் செய்யும் செயல்களால் மகிழ, நினை – நினைப்பாயாக, மாண் நெஞ்சம் – என் மாண்புடைய நெஞ்சமே (நெஞ்சம் – விளி), நீங்குதல் மறந்தே – அவளைப் பிரிதலை மறந்து (மறந்தே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 52, நொச்சி நியமங்கிழார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்
கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப்
பொன் ஏர் புது மலர் வேண்டிய குறமகள்
இன்னா இசைய பூசல் பயிற்றலின்,
ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின் 5
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது எனத்தம்
மலைகெழு சீறூர் புலம்பக், கல்லெனச்
சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு
அறிவிப்பேம் கொல்? அறிவியேம் கொல்? என 10
இரு பால் பட்ட சூழ்ச்சி ஒரு பால்
சேர்ந்தன்று வாழி தோழி, “யாக்கை
இன் உயிர் கழிவது ஆயினும், நின் மகள்
ஆய் மலர் உண்கண் பசலை
காம நோய்” எனச் செப்பாதீமே. 15
பாடல் பின்னணி: தலைவி இற்செறிக்கப்பட்டாள். அவள் வருத்தம் மிகுதியாயிற்று. அறத்தொடு நிற்க முயலும் தோழியை அங்ஙனம் நிற்க வேண்டாம் என்று தடுப்பாள் போல், தான் அடைந்துள்ள வருத்தம் தலைவனால் ஏற்பட்டது என்று செவிலித்தாயிடம் கூற வேண்டாம் என்று, தலைவன் அருகில் இருப்பதை அறிந்து கூறியது. வரைவு கடாயது.
பொருளுரை: தோழி! நீ நீடு வாழ்வாயாக! மரங்கள் உயர்ந்து வளர்ந்த பக்க மலையில் உள்ள, வள்ளிக் கொடி சுற்றிய வேங்கை மரத்தின் மிகவும் உயர்ந்த மரக்கிளையில் உள்ள பொன் போன்ற புதிய மலர்களைப் பறிக்க விரும்பிய கொடிச்சி ஒருத்தி, கேட்டோர்க்குத் துன்பம் தரும் ஒலியுடைய ‘புலி புலி’ என்ற ஆரவாரத்தை விடாமல் எழுப்புவதால், பெரிய மலைத் தொடரில் உள்ள இருண்ட குகைகளையுடைய பக்க மலையில் பசுக்களைக் கொல்லும் வலிய புலி ஒன்று உள்ளது என்று எண்ணி, மலையில் பொருந்திய தங்கள் சிறிய ஊர் தனித்திருக்கும்படி, கல்லென்னும் ஒலியுடன் வில்லை வைத்திருப்பவர்கள் போகும் நாடவனாகிய, என் நெஞ்சம் விரும்புகின்ற தலைவனின் மார்பு தான் காரணம் என வெளிப்படுத்தி, தாய்க்கு நாம் தெரிவிப்போமா, அல்லது அறிவிக்காது விடுவோமா என்ற இரு வகையான ஆராய்ச்சி ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
என் உயிர் என் உடலைவிட்டுப் பிரிந்தாலும், “உன்னுடைய மகளின் அழகிய மலர்போன்ற மையிட்டக் கண்களில் படர்ந்த பசலையானது, காதல் நோயினால் ஏற்பட்டது” என்று தாயிடம் நீ கூறாதே.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 20) என்னும் நூற்பாவின்கண் ‘விட்டு உயிர்த்து அழுங்கினும்’ என வரும் விதி கொள்க. ஆசிரியர் நச்சினார்க்கினியர் இதற்கு இதனைக் காட்டி இது சிறைப்புறம் என்றும் ஓதினர். வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல் கிளர்ந்த வேங்கை (1–2) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மரங்கள் உயர்ந்த பக்க மலையிடத்துச் சுற்றிய கொடியுடைய செழித்தெழுந்த வேங்கை மரங்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வள்ளிக்கொடி படர்ந்து பின்னிக்கிடத்தற்கு இடனாகிய மரங்கள் பலவும் உயர்ந்துள்ள மலைச்சாரலின்கண் உயர்ந்துள்ள வேங்கை மரங்கள். பொன் ஏர் புது மலர் வேண்டிய குறமகள் இன்னா இசைய பூசல் பயிற்றலின் (3–4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொன் போன்ற புதிய மலரைக் கொய்துக் கொள்ள நினைத்த குறத்தி, கேட்டோர்க்கு துன்பம் தருகின்ற ஒலியையுடைய புலி புலி என்னும் ஆரவாரத்தை இடையறாது உண்டாக்குதலாலே. வேங்கை மலர் கொய்யும் மகளிர் புலி புலி என்று கூவி அம்மரத்தை அச்சுறுத்தினால் அது வளைந்து கொடுக்கும் என்பது ஒரு நம்பிக்கை. ஏ கல் அடுக்கத்து (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலையின் பக்க மலையின் தொடரின்கண், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – உயர்ந்த பாறையின் அடுக்குடைய. ஏ – ஏ பெற்று ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 8). பெற்று – பெருக்கம். ‘புலி புலி’ என்று ஓசை எழுப்புதல் – அகநானூறு 48 – ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி புலி புலி என்னும் பூசல் தோன்ற, அகநானூறு 52 – வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப் பொன் ஏர் புது மலர் வேண்டிய குறமகள் இன்னா இசைய பூசல் பயிற்றலின், மதுரைக்காஞ்சி 396–397 – கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர் நறும் பூக் கொய்யும் பூசல், மலைபடுகடாம் 305–306 தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை மலைமார் இடூஉம் ஏமப் பூசல். ஒரு பால் சேர்ந்தன்று (11–12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இப்பொழுது அறிவிப்பேம் என்ற ஒரு முடிவுக்கு வந்துவிட்டது, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஒரு முடிவிற்கு வந்துள்ளது. பழைய உரை – வேங்கையைக் கொடி சூழ, அவ் வேங்கையிலே அலர் உண்டான அளவில், ஆண்டு வாழும் மகளிர் புலி புலியென்று பூப்பறித்தற்குச் சொன்ன அரவத்தாலே ஊரெல்லாம் ஆரவாரித்தாற்போல, அவரை நாம் தலைப்பெய்த அளவிலே, அலர் பிறந்ததாக, அவ்வலர் முதற்சீராலே முகிழ் முகிழ்த்துப் பின்னை எல்லாரும் அறிந்தது என்றவாறு.
சொற்பொருள்: வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல் கிளர்ந்த வேங்கை – மரங்கள் உயர்ந்து வளர்ந்த பக்க மலையில் வேங்கை மரத்தில் சுற்றிய வள்ளிக் கொடி (வள்ளிக் கொடி – valli creepers, sweet potatoes, Convolvulus batatas, மரன் – மரம் என்பதன் போலி, வேங்கை மரம் – Pterocarpus marsupium ), சேண் நெடும் பொங்கர் – மிகவும் உயர்ந்த மரக்கிளை, பொன் ஏர் புது மலர் வேண்டிய குறமகள் – வேங்கையின் பொன் போன்ற புதிய மலர்களைப் பறிக்க விரும்பிய குறமகள் (குறமகள் – கொடிச்சி, ஏர் – உவம உருபு), இன்னா இசைய பூசல் பயிற்றலின் – கேட்டோர்க்குத் துன்பம் தரும் ஒலியுடைய ‘புலி புலி’ என்ற ஆரவாரத்தை விடாமல் எழுப்புவதால், ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின் – பெரிய மலைத் தொடரில் உள்ள இருண்ட குகைகளையுடைய பக்க மலையில், ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது என – பசுக்களைக் கொல்லும் வலிய புலி என்று எண்ணி, தம் மலைகெழு சீறூர் புலம்ப – மலையில் பொருந்திய தங்கள் சிறிய ஊர் தனித்திருக்கும்படி, கல்லெனச் சிலையுடை இடத்தர் போதரும் – கல்லென்னும் ஒலியுடன் வில்லை வைத்திருப்பவர்கள் போகும், நாடன் – மலைநாடன், நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என – என் நெஞ்சம் விரும்புகின்ற தலைவனின் மார்பு தான் காரணம் என வெளிப்படுத்தி, அன்னைக்கு அறிவிப்பேம் கொல் – தாய்க்கு நாம் தெரிவிப்போமா, அறிவியேம் கொல் – அறிவிக்காது விடுவோமா, என இரு பால் பட்ட சூழ்ச்சி ஒரு பால் சேர்ந்தன்று – என்ற இரு வகையான ஆராய்ச்சி ஒரு முடிவுக்கு வந்துள்ளது, வாழி தோழி – நீ நீடு வாழ்வாயாக தோழி, யாக்கை இன் உயிர் கழிவது ஆயினும் – என் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தாலும், நின் மகள் ஆய் மலர் உண்கண் பசலை – உன்னுடைய மகளின் அழகிய மலர்போன்ற மையிட்ட கண்களில் படர்ந்த பசலை – காம நோய் எனச் செப்பாதீமே – இது காதல் நோயினால் ஏற்பட்டது என்று தாயிடம் கூறாதே (செப்பாதீமே – முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல்)
அகநானூறு 53, சீத்தலைச் சாத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அறியாய் வாழி தோழி! இருள் அற
விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக்
கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய,
நெடுங்கான் முருங்கை வெண்பூத் தாஅய்,
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, 5
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
கள்ளியங் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்,
விழுத்தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் 10
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்
அருஞ்சுரக் கவலை நீந்தி என்றும்,
‘இல்லோர்க்கு இல்’ என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல், 15
அருளே காதலர் என்றி நீயே.
பாடல் பின்னணி: வற்புறுத்தும் தோழியிடம் தலைவி சொன்னது.
பொருளுரை: தோழி! நீ நீடு வாழ்வாயாக! இருள் நீங்கும்படி வானில் ஒளிவீசும் விரைந்து செல்லும் ஞாயிற்றின் கடிய கதிர்கள் எரித்ததால் பிளப்புண்ட நிலம் நிறையும்படி, நெடிய காட்டில் முருங்கை மரங்களின் வெள்ளை பூக்கள் பரவிய, நீர் இல்லாது வறண்ட, சென்று கடக்க முடியாத நீண்ட இடத்தையுடைய, கூரிய பற்களையுடைய ஆண் செந்நாய் பசியால் வருந்தும் தன் பிணவுடன் கள்ளியுடைய காட்டு நிலத்தில், வாகை மரத்தின் அடிப்பகுதியில் ஊன் வாடிய சுரிந்த மூக்கினையுடைய நத்தைகள் அதன் அடி பொரியுடையது எனத் தோன்றுமாறு புதைந்திருக்கும், தனிமையான வழியில், சிறந்த அம்பை மறவர்கள் எய்ததால் இறந்தவர்களின் பெயரும் பீடும் எழுதிய நடுகல்லின் இனிய நிழலில் தங்கியிருக்கும், அருஞ்சுரக் கவலை நீந்தி செல்லுவதற்கு அரிய பாலை நிலத்தைக் கடந்து, பொருள் இல்லாதவர்களுக்கு ஈவதற்குப் பொருள் இல்லை எனக் கூறி மறைக்க வலிமை இல்லாத தன் நெஞ்சம் வற்புறுத்த, நம் காதலர் காதலிப்பது நம்மைவிடவும் பொருளே ஆகும். நமக்கு அருள் செய்யவே காதலர் விரும்புகின்றார் என்கின்றாய். ஆதலால் நீ அறியாய்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘அவன் அறிவாற்ற’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என வரும் நூற்பாவின்கண் ‘கொடுமை ஒழுக்கத்துத் தோழிக்கு உரியவை வடு அறு சிறப்பின் கற்பின் திரியாமை காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும்’ என்பதன்கண் அமைத்துக் கொள்க. நெடுங்கான் (4) – பழைய உரையிலும் புலியூர்க்கேசிகன் உரையிலும் இவ்வாறு உள்ளது. பொ. வே. சோமசுந்தரனார் உரையிலும், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரையிலும் நெடுங்கால் என உள்ளது. ஒப்புமை – குறுந்தொகை 331 – நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே. விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57). புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35). வறந்த – வறம் என்னும் சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சம்.
சொற்பொருள்: அறியாய் – நீ அறியவில்லை, வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, இருள் அற விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக் கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய – இருள் நீங்கும்படி வானில் ஒளிவீசும் விரைந்து செல்லும் ஞாயிற்றின் கடிய கதிர்கள் எரித்ததால் பிளப்புண்ட நிலம் நிறையும்படி (திகிரி – வட்டம், ஆகுபெயர் ஞாயிற்று மண்டிலத்திற்கு), நெடுங்கான் முருங்கை வெண்பூத் தாஅய் நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – நெடிய காட்டில் முருங்கை மரங்களின் வெள்ளை பூக்கள் பரவிய நீர் இல்லாது வறண்ட சென்று கடக்க முடியாத நீண்ட இடம் (தாஅய் – அளபெடை), வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு கள்ளி அம் காட்ட கடத்திடை – கூரிய பற்களையுடைய ஆண் செந்நாய் பசியால் வருந்தும் தன் பிணவுடன் கள்ளியுடைய காட்டு நிலத்தில் (அம் சாரியை), உழிஞ்சில் உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை பொரி அரை புதைத்த – வாகை மரத்தின் அடிப்பகுதியில் ஊன் வாடிய சுரிந்த மூக்கினையுடைய நத்தைகள் அதன் அடி பொரியுடையது எனத் தோன்றுமாறு புதைந்திருக்கும், புலம்பு கொள் இயவின் – தனிமையான வழியில், விழுத்தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும் – சிறந்த அம்பை மறவர்கள் எய்ததால் இறந்தவர்களின் பெயரும் பீடும் எழுதிய நடுகல்லின் இனிய நிழலில் தங்கியிருக்கும், அருஞ்சுரக் கவலை நீந்தி செல்லுவதற்கு அரிய பாலை நிலத்தைக் கடந்து, என்றும் இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப – பொருள் இல்லாதவர்களுக்கு ஈவதற்குப் பொருள் இல்லை எனக் கூறி மறைக்க வலிமை இல்லாத தன் நெஞ்சம் வற்புறுத்த, நம்மினும் பொருளே காதலர் காதல் – நம் காதலர் காதலிப்பது நம்மைவிடவும் பொருளே ஆகும், அருளே காதலர் என்றி நீயே – நமக்கு அருள் செய்யவே காதலர் விரும்புகின்றார் என்கின்றாய் நீ (என்றி – முன்னிலை ஒருமை, நீயே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 54, மாற்றூர் கிழார் மகனார் கொற்றங்கொற்றனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
வேந்தனும் வெம்பகை தணிந்தனன், தீம் பெயல்
காரும் ஆர்கலி தலையின்று தேரும்
ஓவத்து அன்ன கோபச் செந்நிலம்
வள்வாய் ஆழி உள் உறுபு உருளக் 5
கடவுக, காண்குவம் பாக, மதவு நடைத்
தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடியக்,
கனையலம் குரல கால் பரி பயிற்றிப்,
படுமணி மிடற்ற பய நிரை ஆயம்
கொடு மடி உடையர் கோல் கைக் கோவலர் 10
கொன்றை அம் குழலர் பின்றைத் தூங்க,
மனை மனைப் படரும் நனை நகு மாலைத்
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப்
புன் காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர் 15
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி,
“முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி,
வருகுவை ஆயின் தருகுவென் பால்” என
விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றித், 20
திதலை அல்குல் எம் காதலி
புதல்வன் பொய்க்கும் பூங்கொடி நிலையே.
பாடல் பின்னணி: போர் வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் உரைத்தது.
பொருளுரை: பாகனே! புதிய பகை அரசர் அரிய அணிகலன்களைத் திறையாகக் குவித்ததனால் நம் அரசனும் அவர்பால் போர் மேற்கொள்ளாது, தன் கொடிய பகைமை தணிந்தவனாயினான். இனிய பெய்தலையுடைய முகில்களும் ஆரவாரத்துடன் மழையைப் பெய்தன. நிறங்கள் தீட்டப்பட்ட ஓவியம் போன்ற, இந்திரகோபப் பூச்சிக்கள் ஊர்ந்து செல்லும் சிவந்த நிலத்தில், தேரை அதன் உறுதியான விளிம்பினையுடைய உருளைகள் நிலத்தில் பதிந்து விரைந்தோடும்படி செலுத்துவாயாக.
செருக்கான நடையுடைய, கயிற்றால் பிணிக்கப்பட்ட தம் இளங்கன்றுகளை நினைத்து, பால் நிறைந்து பருத்த காம்புகளை உடைய மடியினை உடையனவாய், கனைக்கின்ற குரலையுடையனவாய், கால்களின் செலவை விரைவுபடுத்துவதால் மிக்க ஒலியெழுப்பும் மணிகளைக் கழுத்தில் உடையனவாய், மக்களுக்குப் பாலாகிய பயனைத் தரும் பசுக்கூட்டம், வளைந்த மடிந்த கோலைக் கையில் கொண்டு கொன்றை மரத்தின் விதைக்கூடுகளால் செய்த அழகிய குழலினை இசைக்கும் கோவலர் தம் பின்னால் நடந்து வர, மனைகள்தொறும் செல்லும், அரும்புகள் மலரும் மாலை நேரத்தில், தனக்கென்றே வாழாத பிறர்க்கு எல்லாம் உரியவனான பண்ணன் என்பவனின் சிறுகுடியில் உள்ள தோட்டத்தில், சிறிய இலையினையும் பொலிவில்லாத விதையையுமுடைய நெல்லி மரத்தின் பசிய காய்களைத் தின்றவர்கள் அதன்பின் நீர் குடிக்கும்பொழுது எழும் சுவைபோல், இனிய மொழியில் பேசி, “அரும்பும் நிலவொளியால் திகழும் இளம் திங்களே! கழுத்தில் பொன்னால் செய்த சங்கிலியை அணிந்த என் மகனை நினைந்து நீ வருவாய் ஆயின், உனக்கும் நான் பால் தருவேன்” எனத் திங்களிடம் கூறி, ஒருபுறம் நோக்கும் அமர்த்த கண்ணுடையவளாய், அத்திங்களை அழைக்கும் பொருட்டுத் தன் விரல்களை அடுத்தடுத்து அசைத்து, மகன் பொருட்டுப் பொய்யை மெய்போல் கூறும், தேமல் படர்ந்த அல்குலையுடையவளாகிய பூங்கொடி போன்ற என் காதலியின் நிலையை, நாம் காணலாம்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும்’ என வரும் விதி கொள்க. வீங்கு சுரை மடிய (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பால் சுரந்து பருத்த காம்புகளையுடைய மடியினை உடையனவாய், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பெருத்த மடி கரைய வேண்டி. விலங்கு அமர்க் கண்ணள் (20) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒருக்கணித்து நோக்குகின்ற அமர்த்த கண்ணையுடையவளாய். தாலி – அகநானூறு 7 – புலிப்பல் கோத்த புலம்பு மணித் தாலி, அகநானூறு 54 – பொன்னுடைத் தாலி என் மகன், குறுந்தொகை 161 – புலிப்பல் தாலிப் புதல்வர், புறநானூறு 77 – தாலி களைந்தன்றும் இலனே, புறநானூறு 374 – புலிப் பல் தாலிப் புன்தலைச் சிறாஅர். கொன்றை விதைக் குழல் – அகநானூறு 54 – கோல் கைக் கோவலர் கொன்றை அம் குழலர், நற்றிணை 364 – கல்லாக் கோவலர் கொன்றை அம் தீம் குழல் மன்று தோறு இயம்ப, கலித்தொகை 106 – கொன்றைத் தீம் குழல் முரற்சியர் வழூஉ சொல் கோவலர். கோபம் – மூதாய், இந்திரகோபம் (trombidium grandissimum). பட்டுபோன்ற மென்மையான மேல் தோலையுடைய சிவந்த நிறமுடைய சிறிய பூச்சிக்கள். தென்மாவட்டங்களில் இவற்றைப் பட்டுப்பூச்சி என அழைப்பர். இவை உள்ள பாடல்கள் – அகநானூறு 14, 54, 74, 134, 139, 283, 304, 374, கலித்தொகை 85, நற்றிணை 362. சிறுகுடி – சிறுகுடி என்னும் ஊர் தலைவர்களின் பெயர்களுடன் குறிக்கப்பட்டுள்ளன இப்பாடல்களில் – அகநானூறு 54 (பண்ணன்), அகநானூறு 117 (வாணன்), அகநானூறு 204 (வாணன்), அகநானூறு 269 (வாணன்), நற்றிணை 340 (வாணன்), நற்றிணை 367 (அருமன்). புறநானூறு 70 – கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடி, புறநானூறு 388 – சிறுகுடி கிழான் பண்ணன். பிற இடங்களில், இச் சொல் சிற்றூரைக் குறிக்கின்றது. வரலாறு – பண்ணன், சிறுகுடி. மதவு – மதவே மடனும் வலியும் ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 81).
சொற்பொருள்: விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப வேந்தனும் வெம்பகை தணிந்தனன் – புதிய பகை அரசர் அரிய அணிகலன்களைத் திறையாகக் குவிக்க நம் அரசனும் கொடிய பகைமை தணிந்தவனாயினான் (வேந்தனும் – எச்சவும்மை, சிறப்பும்மைப் பொருள்படவும் நின்றது), தீம் பெயல் காரும் ஆர்கலி தலையின்று – இனிய பெய்தலையுடைய முகில்களும் ஆரவாரத்துடன் மழையைப் பெய்தன (கார் – ஆகுபெயர் முகிலுக்கு), தேரும் ஓவத்து அன்ன கோபச் செந்நிலம் வள்வாய் ஆழி உள் உறுபு உருளக் கடவுக – ஓவியம் போன்ற இந்திரகோபம் ஊர்ந்து செல்லும் சிவந்த நிலத்தில் தேரை அதன் உறுதியான விளிம்பினையுடைய உருளைகள் நிலத்தில் பதிந்து விரைந்தோடும்படி செலுத்துவாயாக (ஓவம் + அத்து, அத்துச் சாரியை, ஆழி – உருளை, சக்கரம்), காண்குவம் – நாம் காணலாம், பாக – பாகனே (அண்மை விளி), மதவு நடைத் தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடியக் கனையல் அம் குரல – செருக்கான நடையுடைய கயிற்றால் பிணிக்கப்பட்ட தம் இளங்கன்றுகளை நினைத்து பெருத்த மடி பால் நிறைந்து பருத்த காம்புகளை உடைய மடியினை உடையனவாய் கனைக்கும் குரலையுடையனவாய் (அம் – அழகு, சாரியையுமாம்), கால் பரி பயிற்றிப் படுமணி மிடற்ற பய நிரை ஆயம் – கால்களின் செலவை விரைவுபடுத்துவதால் மிக்க ஒலியெழுப்பும் மணிகளைக் கழுத்தில் உடையனவாய் மக்களுக்கு பாலாகிய பயனைத் தரும் பசுக்கூட்டம், கொடு மடி உடையர் கோல் கைக் கோவலர் கொன்றை அம் குழலர் பின்றைத் தூங்க – வளைந்த மடிந்த கோலைக் கையில் கொண்டு கொன்றை மரத்தின் விதைக்கூடுகளால் செய்த அழகிய குழலினை இசைக்கும் கோவலர் தம் பின்னால் நடந்து வர (கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்த்தர – முல்லைப்பாட்டு 15, அம் – அழகு), மனை மனைப் படரும் நனை நகு மாலை – மனைகள்தொறும் செல்லும் அரும்புகள் மலரும் மாலை நேரம், தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன் பண்ணன் சிறுகுடிப் படப்பை – தனக்கென்றே வாழாத பிறர்க்கு எல்லாம் உரியவனான பண்ணன் என்பவனின் சிறுகுடியில் உள்ள தோட்டத்தில், நுண் இலைப் புன் காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர் நீர் குடி சுவையின் – சிறிய இலையினையும் பொலிவில்லாத விதையையுமுடைய நெல்லி மரத்தின் பசிய காய்களைத் தின்றவர்கள் அதன்பின் நீர் குடிக்கும்பொழுது எழும் சுவைபோல் (பைங்காய் – பண்புத்தொகை, சுவையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), தீவிய மிழற்றி – இனிய மொழியில் பேசி, முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள் பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி வருகுவை ஆயின் தருகுவென் பால் – அரும்பும் நிலவொளியால் திகழும் இளம் திங்களே கழுத்தில் பொன்னால் செய்த சங்கிலியை அணிந்த என் மகனை நினைந்து நீ வருவாய் ஆயின் உனக்கும் நான் பால் தருவேன் (மூவா – முதிர்ச்சி அடையாத, இளமையான, திங்கள் – விளி), என விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றித் திதலை அல்குல் எம் காதலி புதல்வன் பொய்க்கும் பூங்கொடி நிலையே – என்று ஒருபுறம் நோக்கும் அமர்த்த கண்ணுடையவளாய் விரல்களால் அழைக்கும் பொருட்டு அடுத்தடுத்து அசைத்து தேமல் படர்ந்த அல்குலையுடையவளாகிய மகன் பொருட்டுப் பொய்யை மெய்போல் கூறும் பூங்கொடி போன்ற என் காதலியின் நிலையை (அல்குல் – இடை, இடைக்குக்கீழ் உள்ள பகுதி, நிலையே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 55, மாமூலனார், பாலைத் திணை – தலைவியின் தாய் அருகில் வாழ்பவர்களிடம் சொன்னது
காய்ந்து செலல் கனலி கல் பகத் தெறுதலின்,
நீந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை,
உளி முக வெம்பரல் அடி வருத்துறாலின்,
விளி முறை அறியா வேய் கரி கானம்
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள் 5
கழிந்ததற்கு அழிந்தன்றோ இலனே, ஒழிந்து யான்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அசைஇ,
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு,
கண்படை பெறேன் கனவ ஒண் படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் 10
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென
இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
பெரும்பிறிது ஆகியாங்குப் பிரிந்து இவண் 15
காதல் வேண்டி, என் துறந்து
போதல் செல்லா என் உயிரொடு புலந்தே.
பாடல் பின்னணி: உடன்போக்கில் தலைவனுடன் தலைவி சென்றதால் அவளுடைய தாய் வருந்தினாள். ஆறுதல் கூறிய அயலாரிடம் அவள் உரைத்தது.
பொருளுரை: உலகை வெம்மையுறச் செய்து வானில் செல்லும் ஞாயிறு மலைகள் பிளக்குமாறுச் சுடுவதால், பறந்து கடந்து செல்லும் குருகுகள் துன்புறும் வெப்பமிக்க நீண்ட இடத்தையுடைய, உளிபோலும் கூரிய முனையையுடைய கொடிய பரல் கற்கள் காலடியை வருத்துவதாலே வழியில் செல்பவர்கள் தாம் வீழ்ந்து சாவும் இடம் யாது என்பதை அறிய இயலாத, மூங்கில்கள் கரிந்து பாழ்படும் காட்டிற்கு, வலிய களிற்று யானையை ஒத்த இளைஞனுடன் என் மகள் உடன் போனதற்கு யான் வருந்தவில்லை. அவளைப் பிரிந்து யான் உலையில் ஊதும் துருத்தி போல் பெருமூச்சுவிட்டுத் துன்புற்று, தீயில் வேகுவது போலும் மிக்க வருந்தும் நெஞ்சத்துடன் உறக்கம் பெறாது புலம்புகின்றேன்.
ஒளிரும் போர்க்கருவிகளையுடைய கரிகால் வளவனுடன் வெண்ணிப் போர்க்களத்தில் போர் செய்து முதுகில் புண் பட்டமைக்கு நாணின பெருஞ்சேரலாதன், தான் தோற்ற அப்போர்க்களத்தில் உண்ணாது வாளுடன் வடக்கிருந்து உயிர் நீப்பானாக, இன்னாமையையும் இனிமையையும் தன்பால் கொண்ட அச்செய்தியைக் கேட்ட சான்றோர், பெறுவதற்கு அரிய மேல் உலகிற்கு அவனுடன் செல்லும் பொருட்டு உயிர் நீத்தாற்போல் என் உடலிலிருந்து விலகி, இவ்வுலகின் மேல் அன்பு கொண்டு, என்னை விட்டுப் பிரிந்து இங்கிருந்து நீங்காத என் உயிருடன் தான் நான் நொந்துள்ளேன்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘தன்னும் அவனும் அவளும் சுட்டி’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 39) என வரும் நூற்பாவின்கண் ‘அவ்வழி ஆகிய கிளவியும் அரிய’ என்பதனால் அமைத்துக் கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘தாய்க்கு முரித்தாற் போக்குடன் கிளப்பின்’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 4) என்னுஞ் சூத்திரத்து, இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், ‘கண்படை பெறேன் கனவ’ என்பதனை எடுத்துக்காட்டி, முறையே உடன் போக்கின்கண் நற்றாய்க்கும் கனவு உரித்தாயிற்று எனவும், செவிலித்தாய்க்கும் கனவு உரித்தாயிற்று எனவும் கூறினர். விளி முறை அறியா (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெப்பத்தில் வீழ்ந்து துடிப்பவர் வீழ்ந்து சாதற்கு ஓரிடம் வேண்டுவர். அத்தகைய இடத்தைக் காணவொண்ணாத வெண்பாலை. இனி, தாம் எவ்வகையால் சாவோமோ என்று அறியவொண்ணாத எனினுமாம். கனவ (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கனவுபோலக் கண்டிருக்குமாறு, கண்படை பெறேன் என்றமையே அது கனவன்று என்பதை அறிவுறுத்தல் அறிக, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – புலம்ப. சான்றோர் (13) – போரில் தலைமையுடைய வீரர்களைச் சான்றோர் என்று குறிப்பது வழக்கம் – புறநானூறு 63–5, பதிற்றுப்பத்து 14–12, 58–11, 67–18. இன்னா இன் உரை (13) – பழைய உரை – மரிக்கின்றான் என்ற இன்னாமையும் புறப்புண் பட்ட பழி தீர உயிர் விடுகின்றான் என்கின்ற இனிமையும் உடைய உரை. இவண் காதல் வேண்டி (15) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இப்புல்லிய உலகத்தே பின்னும் சிலரை அன்புசெய்து வாழ்தலை விரும்பி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இவ்வுலகத்து ஆசையை விரும்பி. வெண்ணிப் போர் – சோழன் கரிகாலன் சோழ நாட்டில் உள்ள வெண்ணி என்னும் ஊரில் பாண்டிய மன்னனையும், சேரமான் பெருஞ்சேரலாதனையும், 11 குறுநில வேளிர் மன்னர்களையும் தோற்கடித்தான். இப்போர் பற்றின விவரங்கள் உள்ள பாடல்கள் – அகநானூறு 55, 246, புறநானூறு 65, 66, பொருநராற்றுப்படை147. நற்றிணை 390ம் பாடலில் வெண்ணி சோழர்க்குரிய ஊர் என்னும் குறிப்பு உள்ளது. வரலாறு – வெண்ணி, கரிகால் வளவன், சேரலாதன். என்றூழ் – கதிரவனின் முதிர்ந்த கதிர்கள், எல் (கதிரவன்) + ஊழ் (முதிர்ச்சி). முனைவர் கு. வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம். வடக்கிருத்தல் – வடதிசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாது உயிர் துறப்பது. புறநானூறு 65 – புறப்புண் நாணி மறத்தகை மன்னன் வாள் வடக்கிருந்தனன், புறநானூறு 66 – வெண்ணிப் பறந்தலை மிகப் புகழ் உலகம் எய்திப் புறப் புண் நாணி வடக்கிருந்தோனே, அகநானூறு 55 – வெண்ணிப் பறந்தலைப் பொருது புண் நாணிய சேரலாதன் அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென.
சொற்பொருள்: காய்ந்து செலல் கனலி கல் பகத் தெறுதலின் நீந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை – உலகை வெம்மையுறச் செய்து வானில் செல்லும் ஞாயிறு மலைகள் (பாறைகள்) பிளக்குமாறுச் சுடுவதால் பறந்து கடந்து செல்லும் குருகுகள் துன்புறும் வெப்பமிக்க நீண்ட இடத்தில் (கனலி – கதிரவன், ஞாயிறு, செலல் – செல்லல் என்பதன் இடைக்குறை), உளி முக வெம்பரல் அடி வருத்துறாலின் விளிமுறை அறியா வேய் கரி கானம் வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள் கழிந்ததற்கு அழிந்தன்றோ இலனே – உளிபோலும் கூரிய முனையையுடைய வெப்பம் மிக்க (கொடிய) பரல் கற்கள் காலடியை வருத்துவதாலே வழியில் செல்பவர்கள் தாம் வீழ்ந்து சாவும் இடம் யாது என்பதை அறிய இயலாத மூங்கில்கள் கரிந்து பாழ்படும் காட்டில் வலிய களிற்று யானையை ஒத்த இளைஞனுடன் என் மகள் உடன் போனதற்கு யான் வருந்தினேன் அல்லேன் (விளிமுறை – சாவும் இடம், அழிந்தன்றோ – ஓகாரம் ஒழியிசை, இலனே – ஏகாரம் அசைநிலை, யான் வருந்தினேன் அல்லேன் – யான் வருந்தவில்லை), ஒழிந்து யாம் ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அசைஇ – அவளைப் பிரிந்து யான் உலையில் ஊதும் துருத்தி போல் பெருமூச்சுவிட்டுத் துன்புற்று (குருகின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, அசைஇ – அளபெடை), வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு கண்படை பெறேன் – தீயில் வேகுவது போலும் மிக்க வருந்தும் நெஞ்சத்துடன் உறக்கம் பெறாதுள்ளேன், கனவ – கனவில் காணுமாறு, துன்புறுமாறு, ஒண் படைக் கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் பொருது புண் நாணிய சேரலாதன் அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென – ஒளிரும் போர்க்கருவிகளையுடைய கரிகால் வளவனுடன் வெண்ணிப் போர்க்களத்தில் போர் செய்து முதுகில் புண் பட்டமைக்கு நாணின பெருஞ்சேரலாதன் தான் தோற்ற அப்போர்க்களத்தில் உண்ணாது வாளுடன் வடக்கிருந்து உயிர் நீப்பானாக (பறந்தலை – போர்க்களம்), இன்னா இன் உரை கேட்ட சான்றோர் அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர் பெரும்பிறிது ஆகியாங்கு – இன்னாமையையும் இனிமையையும் தன்பால் கொண்ட அச்செய்தியைக் கேட்ட சான்றோர் பெறுவதற்கு அரிய மேல் உலகிற்கு அவனுடன் செல்லும் பொருட்டு உயிர் நீத்தாற்போல் (அரும் பெறல் – பெறல் அரும் – பெறுவதற்கு அரிய, செலீஇயர் – அளபெடை, பெரும்பிறிது – சாவு), பிரிந்து – என் உடலிலிருந்து விலகி, இவண் காதல் வேண்டி – இவ்வுலகின் மேல் அன்பு கொண்டு, என் துறந்து போதல் செல்லா என் உயிரொடு புலந்தே – என்னை விட்டுப் பிரிந்து இங்கிருந்து நீங்காத என் உயிருடன் தான் நான் நொந்துள்ளேன் (புலந்தே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 56, மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நகை ஆகின்றே தோழி நெருநல்
மணி கண்டன்ன துணி கயம் துளங்க
இரும்பு இயன்றன்ன கருங்கோட்டு எருமை
ஆம்பல் மெல் அடை கிழியக் குவளைக்
கூம்புவிடு பன்மலர் மாந்திக் கரைய 5
காஞ்சி நுண்தாது ஈர்ம் புறத்து உறைப்ப
மெல்கிடு கவுள அல்கு நிலை புகுதரும்
தண்துறை ஊரன் திண் தார் அகலம்
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் 10
புனிற்று ஆப் பாய்ந்தெனக் கலங்கி யாழ் இட்டு
எம் மனைப் புகுதந்தோனே அது கண்டு
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர் சென்று
இம்மனை அன்று அஃது உம்மனை என்ற
என்னும் தன்னும் நோக்கி 15
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே.
பாடல் பின்னணி: பரத்தையின் மனைக்குச் செல்லும் பாணன் வந்தான் எனத் தோழிக்குத் தலைவி கூறியது.
பொருளுரை: தோழி! நேற்று, நீலமணியைக் கண்டாற்போல் தெளிந்த குளம் கலங்குமாறும், இரும்பினால் செய்தாற்போல் தோன்றும் கரிய கொம்புகளையுடைய எருமை, ஆம்பலின் மெல்லிய இலைகள் கிழியும்படியும் நீரில் பாய்ந்து, அங்கு மலர்ந்திருக்கும் குவளையின் பல மலர்களையும் உண்டு, கரையில் உள்ள காஞ்சி மரத்தின் நுண்ணிய பூந்தாது அதன் ஈரமுடைய முதுகில் சிந்த, அசையிடும் தாழ்வாயை உடையதாய், தங்கும் கொட்டிலுக்குப் புகும் குளிர்ந்த துறையின் தலைவனின் திண்ணிய மாலையை அணிந்த மார்பினோடு, திருமண நாள் ஒப்பனையையுடைய பரத்தையரைக் கூட்டும்பொருட்டு, விருப்பத்துடன் வந்த பாணன், தெருவில் அண்மையில் ஈன்ற ஆ தன்மேல் பாய்ந்ததால் கலக்கமடைந்து எம் மனைக்கண் புகுந்தான். அதைக் கண்டு, என் உடலில் எழுந்த பெரும் மகிழ்ச்சியை நான் மறைத்தவளாக, அவன் எதிரே சென்று “இம்மனை நீ புகுவதற்கு உரியதன்று, அம்மனை நீ புகுவதற்கு உரியது ஆகும்” என்று சுட்டிக் காட்டிக் கூறிய என்னையும் தன்னையும் நோக்கிக் கலங்கிய நெஞ்சினனாகக் கைகூப்பி என்னைத் தொழுது நின்ற நிலையை இப்பொழுது நினைப்பினும், எனக்கு நகைப்பு உண்டாகின்றது.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘அவன் அறிவு’ என வரும் (தொல்காப்பியம், கற்பியல் 6) என வரும் நூற்பாவின்கண் ‘வாயிலின் வரும் வகை’ என்பதனால் அமைக்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘எள்ளல் இளமை’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 4) என்னுஞ் சூத்திரத்து ‘நகையாகின்றே தோழி’ என்பது எள்ளல் பொருளாக நகை பிறந்ததென்று இளம்பூரணரும், பிறன் பேதைமை பொருளாக நகை பிறந்ததென்று பேராசிரியரும் கூறினர். பழைய உரை – இரும்பியன்றன்ன கருக்கோட்டு எருமை கயங் கலங்க ஆம்பல் மெல்லடை கிழியக் குவளை கூம்புவிடு பன்மலரை மாந்திக் காஞ்சி நுண்தாது புறத்துறைப்ப மெல்கிடு கவுளவாய்த் தங்கு நிலைக்கண் புகுதரும் என்றது, இரும்பு போன்ற நெஞ்சினையுடையராகிய பரத்தையர் ஊர் முழுதுங் கலங்கத் தான் முன்பு கூடின பரத்தையர் தாய்மார் கலங்க, அப்பரத்தையர் அவ்வாம்பற் பூப்போலக் குவியக், குவியல் விட்ட குவளை மலர்போலும் பூப்பெய்து கொள்ளப்பட்ட பரத்தையரை நுகர்ந்து பின்னுஞ் சிலரைக் கூடக் கொடு நாக்கெறிந்து கொண்டு நம் மனையிலே தங்குதற்பொருட்டு வருகின்றான் என்று தோழிக்கு வாயில் மறுத்தது. புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 79).
சொற்பொருள்: நகை ஆகின்றே – நகைப்பு உண்டாகின்றது, சிரிப்பு உண்டாகின்றது (ஆகின்றே – ஏகாரம் அசைநிலை), தோழி – தோழி, நெருநல் – நேற்று, மணி கண்டன்ன துணி கயம் துளங்க – நீலமணியைக் கண்டாற்போல் (பளிங்கினைக் கண்டாற் போல்) உள்ள தெளிந்த குளம் கலங்க, இரும்பு இயன்றன்ன கருங்கோட்டு எருமை – இரும்பினால் செய்தாற்போல் தோன்றும் கரிய கொம்புகளையுடைய எருமை, ஆம்பல் மெல் அடை கிழியக் குவளைக் கூம்புவிடு பன்மலர் மாந்திக் கரைய காஞ்சி நுண்தாது ஈர்ம் புறத்து உறைப்ப மெல்கிடு கவுள – ஆம்பலின் மெல்லிய இலைகள் கிழியும்படி நீரில் பாய்ந்து அங்கு மலர்ந்திருக்கும் குவளையின் பல மலர்களையும் உண்டு கரையில் உள்ள காஞ்சி மரத்தின் நுண்ணிய பூந்தாது ஈரமுடைய முதுகில் சிந்த அசையிடும் தாழ்வாயை உடையதாய் (அடை – இலை), அல்கு நிலை புகுதரும் – தங்கும் கொட்டிலுக்குப் புகும், தண்துறை ஊரன்– குளிர்ந்த துறையின் தலைவன், திண் தார் அகலம் வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய – திண்ணிய மாலையை அணிந்த மார்பினோடு திருமண நாள் ஒப்பனையையுடைய பரத்தையரைக் கூட்டும்பொருட்டு, பரிவொடு வரூஉம் பாணன் – விருப்பத்துடன் வந்த பாணன் (வரூஉம் – அளபெடை), தெருவில் புனிற்று ஆப் பாய்ந்தெனக் கலங்கி யாழ் இட்டு எம் மனைப் புகுதந்தோனே – தெருவில் அண்மையில் ஈன்ற ஆ (பசு) தன்மேல் பாய்ந்ததால் கலக்கமடைந்து எம் மனைக்கண் புகுந்தான் (புகுதந்தோனே – ஏகாரம் அசைநிலை), அது கண்டு – அதைக் கண்டு, மெய்ம்மலி உவகை மறையினென் – உடலில் எழுந்த பெரும் மகிழ்ச்சியை நான் மறைத்தேன் ஆக, எதிர் சென்று இம்மனை அன்று – அவன் எதிரே சென்று இம்மனை நீ புகுவதற்கு உரியதன்று, அஃது உம்மனை என்ற – உம்மனை அது ஆகும் என்று கூறிய, என்னும் தன்னும் நோக்கி மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே – என்னையும் தன்னையும் நோக்கிக் கலங்கிய நெஞ்சினனாக என்னைத் தொழுது நின்ற நிலை (நின்றதுவே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 57, நக்கீரர், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
சிறு பைந்தூவிச் செங்கால் பேடை
நெடுநீர் வானத்து வாவுப் பறை நீந்தி,
வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது,
பெறு நாள் யாணர் உள்ளிப் பையாந்து
புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக் 5
குறுங்கால் இற்றிப் புன்தலை நெடுவீழ்
இரும்பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொரப்,
பெருங்கை யானை நிவப்பின் தூங்கும்
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை,
யாமே எமியம் ஆகத் தானே 10
பசுநிலா விரிந்த பல் கதிர் மதியின்
பெரு நல் ஆய் கவின் ஒரீஇச், சிறு பீர்
வீ ஏர் வண்ணம் கொண்டன்று கொல்லோ,
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
முதுநீர் முன்றுறை முசிறி முற்றிக் 15
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்
அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது அழிந்து,
பானாள் கங்குலும் பகலும்
ஆனாது அழுவோள், ஆய் சிறு நுதலே.
பாடல் பின்னணி: தொழில்வயின் பிரிந்த தலைவன், தலைவியை நினைந்து சொல்லியது.
பொருளுரை: நெஞ்சே! சிறிய மெல்லிய சிறகினையும் சிவந்த கால்களையுமுடைய வௌவாலின் பேடை, நெடிய தன்மையுடைய வானில் தாவிப் பறந்து சென்று வெயிலின் விளங்கும் வெம்மையுடன் வந்து உண்ணுவதற்குக் கனிகளைப் பெறாது, முன்பு கனிகளைப் பெற்ற நாட்களின் அவ்விடத்து வளமையை நினைத்து வருந்தி, புகலிடம் இல்லாது ஏங்கி இருப்பதும், பொலிவற்ற கிளைகளையும் குறிய அடியையுமுடைய இற்றி மரத்தின் பொலிவற்ற உச்சியையுடைய நீண்ட விழுது, கீழே இருக்கும் பெரிய (கரிய) சருச்சரை உடைய பாறையைத் தீண்ட, காற்று அதைத் தாக்குவதால் பெரிய தும்பிக்கையையுடைய யானை அதை உயர்த்தினாற்போல் அசைவதுமாகிய, மலையிடத்து ஊர்கள் அமைந்த வெப்பம் மிக்க நீண்ட இடத்தில், யாம் தனியனாக இருக்க,
குளிர்ந்த நிலவொளி பரவிய பல கதிர்களையுடைய திங்களை ஒத்த, பெரிய சிறந்த ஆராய்ந்த அழகு நீங்கிச் சிறிய பீர்க்கை மலரின் நிறத்தைக் கொண்டதோ, கொய்யப்பட்ட பிடரிமயிரையுடைய குதிரைகளையும் கொடி கட்டிய தேரினையும் உடைய பாண்டிய மன்னன், கடலின்கண் துறைமுகத்தையுடைய சேரனின் முசிறிப் பட்டினத்தைச் சூழ்ந்து யானைகளைக் கொன்ற கல்லென ஒலி எழும்பிய போர்க்களத்தில் விழுப்புண் பட்ட மறவர்கள் போல் பெரிதும் வருந்தி, நடு இரவிலும் பகலிலும் விடாது அழும் என் காதலியின் அழகிய சிறிய நெற்றி?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்’ என வரும் விதி கொள்க. வாவல் – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வாவிப் பறத்தலின் இது வாவல் எனப் பெயர் பெறுவதாயிற்று. அரும் புண் (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெறற்கரிய விழுப்புண், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – விழுப்புண், பழைய உரை – தீர்த்தற்கரிய மருமத்திற்புண். மருமம் – மார்பு. ஒப்புமை – அகநானூறு 149 – சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண் நுரை கலங்க யவனர் தந்த வினை மாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய நெடுநல்யானை அடு போர்ச் செழியன். வரலாறு – செழியன், முசிறி. யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83). பாறையும் யானையும்: அகநானூறு 57 – இற்றிப் புன்தலை நெடுவீழ் இரும்பிணர்த் துறுகல் தீண்டி வளி பொரப் பெருங்கை யானை நிவப்பின் தூங்கும், அகநானூறு 178 – பிடி மடிந்தன்ன கல், அகநானூறு 269 – பிடி மடிந்தன்ன குறுந்தொகை 13 – மாசு அறக் கழீஇய யானை போலப் பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல், குறுந்தொகை 36 – துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சு களிறு இவரும், குறுந்தொகை 111 – கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன கேழ் இருந்துறுகல், குறுந்தொகை 279 – மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் துகள் சூழ் யானையிற் பொலியத் தோன்றும், கலித்தொகை 108 – பிடி துஞ்சு அன்ன அறை, ஐங்குறுநூறு 239 – புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம். என்றூழ் – கதிரவனின் முதிர்ந்த கதிர்கள், எல் (கதிரவன்) + ஊழ் (முதிர்ச்சி). முனைவர் கு. வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம்.
சொற்பொருள்: சிறு பைந்தூவிச் செங்கால் பேடை நெடுநீர் வானத்து வாவுப் பறை நீந்தி வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது – சிறிய மெல்லிய சிறகினையும் சிவந்த கால்களையுமுடைய வாவலின் (வௌவால்) பேடை நெடிய தன்மையுடைய வானில் தாவிப் பறந்து சென்று வெயிலின் விளங்கும் வெம்மையுடன் வந்து கனிகள் பெறாது (தூவி – சிறகு, நீர் – தன்மை, பெறாஅது – அளபெடை), பெறு நாள் யாணர் உள்ளிப் பையாந்து – முன்பு கனிகளைப் பெற்ற நாளின் வளமையை நினைத்து வருந்தி, புகல் ஏக்கற்ற – புகலிடம் இல்லாது ஏங்கி இருப்பதும், புல்லென் உலவைக் குறுங்கால் இற்றிப் புன்தலை நெடுவீழ் இரும்பிணர்த் துறுகல் தீண்டி – பொலிவற்ற கிளைகளையும் குறிய அடியையுமுடைய இற்றி மரத்தின் பொலிவற்ற உச்சியையுடைய நீண்ட விழுது பெரிய (கரிய) சருச்சரை (பிணர் – சருச்சரை, சொரசொரப்பு) உடைய பாறையைத் தீண்டி, வளி பொரப் பெருங்கை யானை நிவப்பின் தூங்கும் – காற்றுத் தாக்குவதால் பெரிய தும்பிக்கையையுடைய யானை அதை உயர்த்தினாற்போல் அசையும் (நிவப்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை யாமே எமியம் ஆக – மலையிடத்து ஊர்கள் அமைந்த வெப்பம் மிக்க நீண்ட இடத்தில் யாம் தனியனாக இருக்க, தானே – தான் (ஏகாரம் அசைநிலை), பசுநிலா விரிந்த பல் கதிர் மதியின் – குளிர்ந்த நிலவொளி பரவிய பல கதிர்களையுடைய திங்களை ஒத்த (மதியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பெரு நல் ஆய் கவின் ஒரீஇச் சிறு பீர் வீ ஏர் வண்ணம் கொண்டன்று கொல்லோ – பெரிய சிறந்த ஆராய்ந்த அழகு நீங்கிச் சிறிய பீர்க்கை மலரின் நிறத்தைக் கொண்டதோ (ஒரீஇ – அளபெடை, ஏர் – உவம உருபு, கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ –அசைநிலை), கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன் – கொய்யப்பட்ட பிடரிமயிரையுடைய குதிரைகளையும் கொடி கட்டிய தேரினையும் உடைய பாண்டிய மன்னன், முதுநீர் முன்றுறை முசிறி முற்றிக் களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் அரும் புண் உறுநரின் வருந்தினள் பெரிது – கடலின்கண் துறைமுகத்தையுடைய முசிறிப் பட்டினத்தைச் சூழ்ந்து யானைகளைக் கொன்ற கல்லென ஒலி எழும்பிய போர்க்களத்தில் விழுப்புண் பட்ட மறவர்கள் போல் பெரிதும் வருந்துபவள் (ஞாட்பின் – போர்க்களத்தில், உறுநரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, முதுநீர் – கடல்), பானாள் கங்குலும் பகலும் ஆனாது அழுவோள் – நடு இரவிலும் பகலிலும் விடாது அழுபவள், ஆய் சிறு நுதலே – அழகிய சிறிய நெற்றி (நுதலே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 58, மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார், குறிஞ்சித் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
இன்னிசை உருமொடு கனை துளி தலைஇ
மன் உயிர் மடிந்த பானாள் கங்குல்,
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது,
வரி அதள் படுத்த சேக்கை தெரி இழைத்
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை, 5
கூதிர் இல் செறியும் குன்ற நாட!
வனைந்துவரல் இள முலை ஞெமுங்கப் பல் ஊழ்
விளங்கு தொடி முன் கை வளைந்து புறம் சுற்ற,
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே
நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும் 10
தண்வரல் அசைஇய பண்பு இல் வாடை
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி,
மனை மரம் ஒசிய ஒற்றிப்
பலர் மடி கங்குல், நெடும்புற நிலையே.
பாடல் பின்னணி: தலைவன் வரையாது களவொழுக்கத்தில் வந்தொழுகினான். அவன் இரவுக்குறிக்கண் வந்தபொழுது தலைவி அவனிடம் தன்னுடைய துன்பத்தை அவன் உணரும்படி குறிப்பால் உரைக்கின்றாள்.
பொருளுரை: இனிய ஓசையுடைய இடியுடன் மிக்க மழை பெய்து, நிலைபெற்ற உயிர்கள் துயின்ற பாதி இரவில், காட்டில் விலங்குகளை ஆராயும் வேட்டைத் தொழிலின்பொழுது துயிலும் இடம் பெறாததால், ஆராய்ந்த அணிகலன்களையும் தேன் மணம் வீசும் கூந்தலையுமுடைய குறத்தியரின் தந்தைமார், வரிகளையுடைய புலித்தோலை விரித்துள்ள படுக்கையில் இல்லில் வந்து தங்கியிருக்கும், மலைகள் பொருந்திய நாட்டின் தலைவனே!
நும்மை எய்துதல் இல்லாத தனிமையில் நும்மை நினைக்கும்தோறும், வருத்தும் குளிர்ச்சியுடன் அசைந்து வரும் வாடைக்காற்றிற்கு அஞ்சி, நும் வருகையைக் குறித்த பருவத்தில் பெறாது, நும் வருகையை எதிர்பார்த்து நீண்ட பொழுது காத்திருந்து, இல்லத்தில் இருக்கும் மரம் முறியுமாறு அதை வளைத்துப் பற்றி, பலரும் துயிலும் இரவில் நெடுங்காலம் நிற்கின்ற எம் புற நிலை, செய்தாற்போன்று எழும் எம் இளமுலைகள் அழுந்த பல முறை ஒளிரும் வளையல்களுடைய முன்கை வளைந்து நின் முதுகைச் சுற்றிக் கொள்ள நின் மார்பை அணைத்தலை விடவும் இனியதாயிற்று.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 20) என வரும் நூற்பாவின்கண் ‘வந்தவழி எள்ளினும்’ என வரும் விதியால் அமைக்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 20) என்னுஞ் சூத்திரத்து ‘பெற்ற வழி மலியினும்’ என்பதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினர் நச்சினார்க்கினியர். ‘வினையுயிர் மெலிவிடத்து’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 20) என்னுஞ் சூத்திரத்து ‘உயிர் மெலிந்தவிடத்துப் புணர்ச்சி நிமித்தமெனக் கூறப்பட்டவை இன்றியும் புணர்ச்சி நிகழ்ந்தற்கு ‘வனைந்துவரல் ……… இனிதாகின்றே’ என்னும் பகுதியை எடுத்துக் காட்டினர் பேராசிரியர். உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொடிச்சியர் தந்தைமார் தம் தொழிலுக்கு இடையூறு உற்ற பொழுது மட்டுமே இல்லத்தை நினைந்து வந்து தங்குமாறு போலே நீயும் நின் காரியத்திலேயே கண்ணாயிருந்து அதனையே செய்குதி. மற்று அதற்கு இடையூறு தோன்றிய பொழுதின் மட்டுமே என்னை நினைத்து வருதி. இங்ஙனம் வருதலினும் வாராதே இனிது என அவனை எள்ளிய கருத்து இதன்கண் உள்ளுறுத்தப் பட்டமை உணர்க. புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35). ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – எல்லோரும் இனிது உறங்கும் கங்குலில் தான் உறக்கமின்றி இங்ஙனம் நிற்கும் நிலை இனிதாயிற்றென்று தலைவி கூறினும், குறிப்பால் வாடையால் எய்திய வருத்தத்தை உணர்த்தினாள். கொடிச்சியர் தந்தையர் தாம் செய்தொழிலுக்கு இடம் பெறாது கூதிர்க் காலத்து இல்லிலே செறியும் குன்ற நாட என்றது, புறத்து வினையில்லாக் காலத்து எம்மை நினைக்கின்றாய் என்னுங் குறிப்பிற்று.
சொற்பொருள்: இன்னிசை உருமொடு கனை துளி தலைஇ மன் உயிர் மடிந்த பானாள் கங்குல் – இனிய ஓசையுடைய இடியுடன் மிக்க மழை பெய்து நிலைபெற்ற உயிர்கள் துயின்ற பாதி இரவில் (தலைஇ – பெய்து, அளபெடை), காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது – காட்டில் விலங்குகளை ஆராயும் வேட்டைத் தொழிலின்பொழுது துயிலும் இடம் பெறாததால் (பெறாஅது – அளபெடை), வரி அதள் படுத்த சேக்கை – வரிகளையுடைய புலித்தோலை விரித்துள்ள படுக்கை, தெரி இழைத் தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை கூதிர் இல் செறியும் குன்ற நாட –ஆராய்ந்த அணிகலன்களையும் தேன் மணம் வீசும் கூந்தலையுமுடைய குறத்தியரின் தந்தைமார் இல்லில் வந்து தங்கியிருக்கும் மலைகள் பொருந்திய நாட்டின் தலைவனே (தெரி இழை – வினைத்தொகை, வரி – புலி, ஆகுபெயர்), வனைந்துவரல் இள முலை ஞெமுங்கப் பல் ஊழ் விளங்கு தொடி முன் கை வளைந்து புறம் சுற்ற நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே – செய்தாற்போன்று எழும் இளமுலைகள் அழுந்த பல முறை ஒளிரும் வளையல்களுடைய முன்கை வளைந்து நின் முதுகைச் சுற்றிக் கொள்ள நின் மார்பை அணைத்தலை விடவும் இனிதாகின்றது (அடைதலின் – இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது), நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும் தண்வரல் அசைஇய பண்பு இல் வாடை – நும்மை எய்துதல் இல்லாத தனிமையில் நும்மை நினைக்கும்தோறும் வருத்தும் குளிர்ச்சியுடன் அசைந்து வரும் வாடைக்காற்று (அசைஇய – அளபெடை), பதம் பெறுகல்லாது – நும் வருகையைக் குறித்த பருவத்தில் பெறாது, இடம் பார்த்து நீடி – நும் வருகையை எதிர்பார்த்து நீண்ட பொழுது காத்திருந்து, மனை மரம் ஒசிய ஒற்றி – இல்லத்தில் இருக்கும் மரம் முறியுமாறு வளைத்துப் பற்றி, பலர் மடி கங்குல் நெடும்புற நிலையே – பலரும் துயிலும் இரவில் நெடுங்காலம் நிற்கின்ற புற நிலை (நிலையே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 59, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
தண் கயத்து அமன்ற வண்டுபடு துணை மலர்ப்
பெருந்தகை இழந்த கண்ணினை, பெரிதும்
வருந்தினை, வாழியர் நீயே! வடாஅது
வண்புனல் தொழுநை வார் மணல் அகன்துறை
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் 5
மரம் செல மிதித்த மாஅல் போலப்,
புன்தலை மடப்பிடி உணீஇயர், அம் குழை
நெடுநிலை யாஅம் ஒற்றி நனை கவுள்
படி ஞிமிறு கடியும் களிறே தோழி,
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல், 10
சினம்மிகு முருகன் தண் பரங்குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கெழு நெடுவரை,
இன் தீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த
தண் நறுங்கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம்
தாம் பாராட்டிய காலையும் உள்ளார், 15
வீங்கு இறைப் பணைத்தோள் நெகிழச் சேய்ந்நாட்டு
அருஞ்செயல் பொருட்பிணி முன்னி நப்
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே.
பாடல் பின்னணி: பொருள் ஈட்டச் சென்ற தலைவனின் பிரிவால் வருந்திய தலைவியிடம் தோழி சொன்னது.
பொருளுரை: தோழி! குளிர்ந்த குளத்தில் நிறைந்த வண்டுகள் மொய்க்கும், ஒன்றுக்கொன்று நிகராகிய மலர்கள் போல் இருந்த பெரும் அழகை இழந்த கண்களை உடையவள் ஆகி, நீ மிகவும் வருந்துகின்றாய். நீ நீடு வாழ்வாயாக!
சூரனையும் அவன் சுற்றத்தையும் அழித்த, ஒளிரும் இலையுடைய நெடிய வேலினையுடைய சினம் மிகுந்த முருகனின் குளிர்ந்த திருப்பரங்குன்றத்தில் புலவர் நல்லந்துவனார் பாடிய, சந்தன மரங்கள் உடைய உயர்ந்த மலையில் உள்ள மிக்க இனிமையான பசுமையான சுனையில் அழகுடன் பொலிந்த குளிர்ந்த நறுமண குவளை மலர்களுடன் இயன்ற ஒப்பனையால் கொண்டை அசையும் உன் முதுகினை தாம் பாராட்டிய காலத்தையும் எண்ணாதவராய், பருத்த முன்கையை உடைய உன் மூங்கில் போன்ற தோள்கள் மெலியுமாறுத் தொலைவில் உள்ள நாட்டிற்கு அரும் செயலாகிய பொருள் ஈட்டுதலை நினைத்து, நம்மைப் பிரிந்து தொலைவில் உறையும் தலைவர் சென்ற வழியில், வடக்கின்கண் பெரும் நீரோட்டம் உடைய யமுனை ஆற்றின் நெடிய மணலையுடைய அகன்ற துறையில் ஆயர் மகளிர் தண்ணிய தழையாடையை உடுத்துதற்பொருட்டு, குருந்த மரம் வளையுமாறு அதனைத் தன் திருவடியால் மிதித்த மாயோன் போல், மெல்லிய தலையையுடைய தன் பெண் யானை அழகிய தளிர்களை உண்ணும்பொருட்டு, களிற்று யானை உயர்ந்த யா மரத்தினை வளைத்து, மத நீரால் நனைந்த கன்னத்தில் படியும் வண்டுகளை ஓட்டும், அன்புக் காட்சியைக் கண்ட நம் தலைவர் விரைவில் வருவார். நீ வருந்தாதே!
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘வகைபட வந்த கிளவி எல்லாம்’ என்பதனால் அமைத்திடுக. மரம் செல மிதித்த மாஅல் போல (6) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – குருந்த மரம் வளைந்து மிதித்துத் தந்த கண்ணன் போல, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரைக்கண் இருந்த குருந்த மரக்கிளை நீர் மருங்கே வளைந்து செல்லுமாறு திருவடியால் மிதித்து அருளிய மாயோனைப் போன்று, பழைய உரை – ஆயர் பெண்கள் குளியா நின்றார்களாக அவர்கள் இட்டு வைத்த துகில் எல்லாம் பின்னை எடுத்துக் கொண்டு குருந்த மரத்திலேறினாராக, அவ்வளவில் நம்பி மூத்தபிரான் வந்தவராக, அவர்க்கு ஒரு காலத்தே கூட மறைதற்கு மற்றொரு வழியின்மையின் ஏறி நின்ற குருந்த மரத்தின் கொம்பைத் தாழ்த்துக் கொடுத்தார். அதற்குள்ளே அடங்கி மறைவாராக. அவர் போகுமளவுந் தானையாக வுடுக்க தாழ்த்தார் என்பாருமுளர். இன் தீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த தண் நறுங்கழுநீர்ச் செண் (13–14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சுனையில் பூத்த பேரழகாலே மிகவும் பொலிவுடைய தண்ணிய நறிய கழுநீர் மலரால் அணி செய்யப்பட்ட கொண்டை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – சுனையில் உள்ள தண்ணிய நறிய குவளைப்பூவுடன் இயன்ற பெரிய ஒப்பனையால் பொலிவுற்ற கொண்டை. இறைச்சி – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – களிறு பிடி உண்ணுதற்கு யா மரத்தினை வளைத்துத் தருமென்றது அன்புறு தகுவந இறைச்சியுள் சுட்டியதாகும். அன்புறு தகுவன இறைச்சியிற் சுட்டலும் வன்புறை யாகும் வருந்திய பொழுதே (தொல்காப்பியம், பொருளியல் 35). வரலாறு – அந்துவன் (நல்லந்துவனார்), பரங்குன்றம் (திருப்பரங்குன்றம்), தொழுநை (யமுனை ஆறு). வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21). நப்பிரிந்து – 17–18 – நம்பிரிந்து என்றது நப்பிரிந்து என்றானது. வலித்தல் விகாரம்.
சொற்பொருள்: தண் கயத்து அமன்ற வண்டுபடு துணை மலர்ப் பெருந்தகை இழந்த கண்ணினை பெரிதும் வருந்தினை – குளிர்ந்த குளத்தில் நிறைந்த வண்டுகள் மொய்க்கும் ஒன்றுக்கொன்று நிகராகிய மலர்கள் போலும் பெரும் அழகை இழந்த கண்களை உடையவள் ஆகி மிகவும் வருந்துகின்றாய், வாழியர் – நீடு வாழ்வாயாக, நீயே – நீ, வடாஅது வண்புனல் தொழுநை வார் மணல் அகன்துறை அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் மரம் செல மிதித்த மாஅல் போல – வடக்கின்கண் பெரும் நீரோட்டம் உடைய யமுனை ஆற்றின் நெடிய மணலையுடைய அகன்ற துறையில் ஆயர் மகளிர் தண்ணிய தழையாடையை உடுத்துதற்பொருட்டு குருந்த மரம் வளையுமாறு தன் திருவடியால் மிதித்த மாயோன் போல் (வடாஅது – அளபெடை, உடீஇயர் – அளபெடை, செல – செல்ல என்பதன் இடைக்குறை, மாஅல் – அளபெடை), புன்தலை மடப்பிடி உணீஇயர் – மெல்லிய தலையையுடைய பெண் யானை உண்ணும்பொருட்டு (உணீஇயர் – அளபெடை), அம் குழை – அழகிய தளிர்கள், நெடுநிலை யாஅம் ஒற்றி நனை கவுள் படி ஞிமிறு கடியும் களிறே – உயர்ந்த யா மரத்தினை வளைத்து மத நீரால் நனைந்த கன்னத்தில் படியும் வண்டுகளை ஓட்டும் களிற்று யானை (யாஅம் – அளபெடை, களிறே – ஏகாரம் அசைநிலை), தோழி – தோழி (விளி), சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல் சினம்மிகு முருகன் தண் பரங்குன்றத்து அந்துவன் பாடிய – சூரனையும் அவன் சுற்றத்தையும் அழித்த ஒளிரும் இலையுடைய நெடிய வேலினையுடைய சினம் மிகுந்த முருகனின் குளிர்ந்த திருப்பரங்குன்றத்தில் புலவர் நல்லந்துவனார் பாடிய (பரங்குன்றத்து – அத்துச் சாரியை), சந்து கெழு நெடுவரை இன் தீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த தண் நறுங்கழுநீர்ச் செண் இயல் சிறுபுறம் தாம் பாராட்டிய காலையும் உள்ளார் – சந்தன மரங்கள் உடைய உயர்ந்த மலையில் உள்ள மிக்க இனிமையான பசுமையான சுனையில் அழகுடன் பொலிந்த குளிர்ந்த நறுமண குவளை மலர்களுடன் இயன்ற ஒப்பனையால் கொண்டை அசையும் முதுகினை தாம் பாராட்டிய காலத்தையும் எண்ணாதவர் (ஈரணி – பேரழகு, பெரிய ஒப்பனை, செண் – கொண்டை), வீங்கு இறைப் பணைத்தோள் நெகிழச் சேய்ந்நாட்டு அருஞ்செயல் பொருட்பிணி முன்னி – பருத்த முன்கையை உடைய மூங்கில் போன்ற தோள்கள் மெலியத் தொலைவில் உள்ள நாட்டிற்கு அரும் செயலாகிய பொருள் ஈட்டுதலை நினைத்து, நப் பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறே – நம்மைப் பிரிந்து தொலைவில் உறைபவர் சென்ற வழி (ஆறே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 60, குடவாயில் கீரத்தனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பெருங்கடல் பரப்பில் சேயிறா நடுங்கக்
கொடுந்தொழில் முகந்த செங்கோல் அவ் வலை
நெடுந்திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண்சோறு
அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து, 5
கொழு மீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
திண்தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம்
ஒண்தொடி ஞெமுக்காதீமோ தெய்ய,
ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை
கோதை ஆயமொடு வண்டல் தைஇ, 10
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி எனக்
கொன்னும் சிவப்போள் காணின் வென்வேல்
கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடுதரு நிதியினுஞ்செறிய
அருங்கடிப் படுக்குவள், அறன் இல் யாயே. 15
பாடல் பின்னணி: தலைவனுக்குத் தோழி இற்செறிப்பை அறிவுறுத்தி வரைவு கடாயது.
பொருளுரை: பெரிய கடற்பரப்பில் சிவந்த இறால் மீன்கள் அஞ்சி நடுங்குமாறு முகக்கும் கொடிய தொழிலுடைய செவ்விய கோல்களையுடைய அழகிய வலையால், நீண்ட படகிலிருந்து மீன் பிடிக்கும் தொழிலில் தங்கிய தன் தந்தைக்கு, உப்பு விற்றுப் பெற்ற நெல்லினால் சமைத்த வெண்சோற்றை அயிரை மீனை இட்டு ஆக்கிய அழகிய புளிக்குழம்பை ஊற்றி, மீன் துண்டுகளுடன் இளைய மகள் கொடுக்கும், திண்ணிய தேர்களையுடைய சேர மன்னனின் தொண்டியைப் போல் சிறப்புடைய ஒளிரும் வளையல்களை அணிந்த எம் தலைவியை, அவள் உடலில் தழும்பு உண்டாகும்படி அழுத்தாதீராக!
வாடைக்காற்று வீசிக் குவித்த உயர்ந்த மணல் மேடுகளையுடைய நீர் அடைந்த கடற்கரையில், மாலை அணிந்த தோழியருடன் சிற்றில் புனைந்து விளையாடினாலும், “நின் உடல் வருந்தும். நின் மேனி வாடும்” எனக் காரணம் இல்லாமல் சினக்கும் அறம் இல்லாத எம் தாய், இவள் உடல் மாறுப்பாட்டைக் கண்டால், வெல்லும் வேலையுடைய வெற்றி பொருந்திய சோழரின் குடவாயில் என்னும் ஊரின்கண் வைத்த பகைவர்களின் நாடுகள் திறையாகக் கொடுத்த நிதியைக் காப்பதைக் காட்டிலும், மிகவும் அரிய இற்செறிப்பில் வைப்பாள்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘களனும் பொழுதும் வரை நிலை விலக்கி காதல் மிகுதி உளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என்பதனால் அமைத்துக் கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘ மரபே தானும் நாற்சொல்லியலான் யாப்பு வழிப்பட்டன’ (தொல்காப்பியம், செய்யுளியல் 80) என்னுஞ் சூத்திரத்து ‘குடவாயில்’ என்பதனைக் ‘கொற்றச் சோழர் குடந்தை வைத்த’ எனவும் …… மேலையோர் திரித்த வகையான இக் காலத்தும் திரித்துக் கொள்ளப்படுவன உள’ என்றார் பேராசிரியர். மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26). ஒண்தொடி ஞெமுக்காதீமோ (8) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஒள்ளிய வளையலைத் தழும்புறும்படி அழுத்தற்க, தலைவி என்று பொருள் கூறி அவளை வருத்தாதே என்று உரைத்தலுமாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒள்ளிய வளையலுடையாளை வருத்தாதே. சேரரின் தொண்டி – நற்றிணை 8, ஐங்குறுநூறு 178. பண்ட மாற்று – அகநானூறு 60, 61, 126, 140, 245, 296, 390, நற்றிணை 183, குறுந்தொகை 221, 269, ஐங்குறுநூறு 47, பொருநராற்றுப்படை 214–215, 216–7, பட்டினப்பாலை 28–30, மலைபடுகடாம் 413–414. மீன் பிடிக்கும் வலையில் செங்கோல் – அகநானூறு 60 – செங்கோல் அவ் வலை நெடுந்திமில் தொழிலொடு, அகநானூறு 220 – இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை, நற்றிணை 214 – செங்கால் கொடு முடி அவ் வலை, நற்றிணை 303 – பரதவர் இட்ட செங்கோல் கொடு முடி அவ் வலை. வெண்ணெல் உப்பு பண்டமாற்று – அகநானூறு 140 – நெல்லின் நேரே வெண்கல் உப்பு, அகநானூறு 390 – நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளீரோ, நற்றிணை 183 – தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி, குறுந்தொகை 269 – உப்பை மாறி வெண்ணெல் தரீஇய உப்பு விளை கழனிச் சென்றனள். பண்ட மாற்று – அகநானூறு 60, 61, 126, 140, 245, 296, 390, நற்றிணை 183, குறுந்தொகை 221, 269, ஐங்குறுநூறு 47, பொருநராற்றுப்படை 214–215, 216–7, பட்டினப்பாலை 28–30, மலைபடுகடாம் 413–414. அகநானூறு 245 – அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில் மகிழ்நொடை பெறாஅர் ஆகி, நனை கவுள் கானயானை வெண்கோடு சுட்டி மன்று ஓடு புதல்வன் புன்தலை நீவும். பழைய உரை – திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு இளமகளானவள் மீன்கொண்டு வருதற்கு முன்னே தான் உப்பு விற்ற நெல்லாலே ஆக்கப்பட்ட மூரல் வெண் சோற்றையும் புளிக்கறியும் சொரிந்து கொழுமீன் தடியொடு கொடுத்தாற்போலத் தாம் வரைதற்குத் தாமும் புறம்பே முயல, நாங்களும் அறத்தொடு நிலை வகையால் ஈங்கே முயல்வேம் எனச் சொல்லியவாறாக்குக.
சொற்பொருள்: பெருங்கடல் பரப்பில் சேயிறா நடுங்கக் கொடுந்தொழில் முகந்த செங்கோல் அவ் வலை நெடுந்திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு – பெரிய கடற்பரப்பில் சிவந்த இறால் மீன்கள் நடுங்குமாறு முகக்கும் கொடிய தொழிலுடைய செவ்விய கோல்களையுடைய அழகிய வலையால் நீண்ட படகிலிருந்து மீன் பிடிக்கும் தொழிலில் தங்கிய தன் தந்தைக்கு (சேயிறா – பண்புத்தொகை, கோல் – வலையில் கட்டிய கோல்கள், தொழிலொடு – தொழிலில், வேற்றுமை மயக்கம்), உப்பு நொடை நெல்லின் மூரல் வெண்சோறு அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து கொழு மீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் – உப்பு விற்றுப் பெற்ற நெல்லினால் சமைத்த வெண்சோற்றை அயிரை மீனை இட்டு ஆக்கிய அழகிய புளிக்குழம்பை ஊற்றி மீன் துண்டுகளுடன் இளைய மகள் கொடுக்கும் (மூரல், சோறு – இருபெயரொட்டு, புளி – ஆகுபெயர் புளிக் குழம்பிற்கு), திண்தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம் ஒண்தொடி ஞெமுக்காதீமோ – திண்ணிய தேர்களையுடைய சேர மன்னனின் தொண்டியைப் போல் சிறப்புடைய ஒளிரும் வளையல்களை அணிந்த எம் தலைவியைத் தழும்பு உண்டாகும்படி அழுத்தாதீராக (ஒண்தொடி – அன்மொழித்தொகை, ஞெமுக்காதீமோ – தீ, மோ முன்னிலையசைகள்), தெய்ய – அசைநிலை, ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை கோதை ஆயமொடு வண்டல் தைஇ ஓரை ஆடினும் உயங்கும் – வாடைக்காற்று வீசிக் குவித்த உயர்ந்த மணல் மேடுகளையுடைய நீர் அடைந்த கரையில் மாலை அணிந்த தோழியருடன் சிற்றில் புனைந்து விளையாடினாலும் உடல் வருந்தும் (தைஇ – அளபெடை), நின் ஒளி என – நின் மேனி வாடும் என, கொன்னும் சிவப்போள் காணின் – காரணம் இல்லாமல் சினக்கும் யாய் காணினும், வென்வேல் கொற்றச் சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதியினுஞ்செறிய – வெல்லும் வேலையுடைய வெற்றி பொருந்திய சோழரின் குடவாயில் என்னும் ஊரின்கண் வைத்த பகைவர்களின் நாடுகள் திறையாகக் கொடுத்த நிதியைக் காப்பதைக் காட்டிலும், அருங்கடிப் படுக்குவள் அறன் இல் யாயே – மிகவும் அரிய இற்செறிப்பில் வைப்பாள் அறம் இல்லாத தாய் (அறன் – அறம் என்பதன் போலி, யாயே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 61, மாமூலனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
‘நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோள் உற விளியார் பிறர் கொள விளிந்தோர்’ எனத்
தாள் வலம்படுப்பச் சேண் புலம் படர்ந்தோர்,
நாள் இழை நெடுஞ்சுவர் நோக்கி, நோய் உழந்து
ஆழல், வாழி தோழி! தாழாஅது, 5
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால்
வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ,
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண்கோடு கொண்டு,
நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும் 10
கழல் புனை திருந்து அடிக் கள்வர் கோமான்
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்,
பழகுவர் ஆதலோ அரிதே, முனாஅது
முழவு உறழ் திணிதோள் நெடுவேள் ஆவி 15
பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்ன நின்
ஒண் கேழ் வன முலைப் பொலிந்த
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே.
பாடல் பின்னணி: தலைவன் பொருள்வயின் பிரிந்தபொழுது வருந்திய தலைவியிடம் தோழி சொன்னது.
பொருளுரை: தோழி! நீ நீடு வாழ்வாயாக! “கூற்றுவனாலே கொள்ளப்படாமல் பிறர் தம் பொருளைக் கொள்ளும்படி இறந்தவர்கள் உறுதியாகத் தவம் செய்தவர்கள்” எனக் கூறித் தம் முயற்சியில் வெற்றியடையத் தொலைவு இடத்திற்குச் சென்ற நம் தலைவர் மீண்டு வரும் நாட்களைக் கணிப்பதற்குக் கோடுகள் இட்ட நெடிய சுவரை நோக்கித் துன்பத்தில் ஆழ்ந்து அழாதே.
காலம் தாழ்த்தாது, இடியென ஒலிக்கும் ஊக்கத்துடன், பசிய அடியையும் மாண்புடைய வரியையுமுடைய வலிய வில்லில் வலிய நாணை இணைத்து, பகைவரின் அரிய மார்பில் செலுத்தும் அம்புகளையுடைய இளைஞர் பலருடன், யானையின் வெள்ளை மருப்புகளைக் கொண்டு அத்துடன் கள்ளினை விற்றுப் பெற்ற நெல்லால் நாளவையில் மகிழும் கழல்கள் அணிந்த திருந்திய அடியையுடைய கள்வர் கோமான், மழ நாட்டைத் தோற்கடித்த பெரும் வள்ளன்மையுடைய புல்லியின் திருவிழாக்களையுடைய மிக்க சிறப்பான வேங்கட மலையைப் பெற்றாலும், நம் தலைவர் அங்குப் பழகி தங்கியிருந்தால் அரிது, நினையாது முழவை ஒத்த வலிய தோளினையுடைய பெரிய வேளாகிய ஆவியின் பொன் மிக்க பெரும் நகரமான பொதினியை ஒத்த நின் ஒளி விளங்கும் அழகிய முலையால் பொலிந்த நுண்ணிய அணிகலன்களை அணிந்த ஆகத்தில் பொருந்துதல் மறந்து.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘ பிறவும் வகைபட வந்த கிளவி’ என்பதன்கண் அமைத்திடுக. இதனை, நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 44) நூற்பாவிற்கு எடுத்துக்காட்டி ‘இவ்வகப்பாட்டின் மூப்பினும் பிணியினும் இறவாது அமர்க்களத்து வீழ்ந்தாரே துறக்கம் பெருவரெனத் தன் சாதிக்கேற்ப தலைவன் புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலைத் தோழி கூறினாள்’ என்பர் நச்சினார்க்கினியர். எனவே, இதனை அவர் வேந்தற்குற்றுழிப் பிரிந்த பிரிவெனக் கருதினர் என அறிகின்றோம். அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும் (9–10) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தலைமை வாய்ந்த யானைகளின் வெள்ளிய கோடுகளைக் கொண்டு அக் கோட்டுடன் கள்ளினை விற்றுக் கொண்ட நெல்லால் நாளோலக்கச் சிறப்புச் செய்யும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைமைத் தன்மையுடைய களிற்றியானையின் வெள்ளிய மருப்புக்களையும் கைப்பற்றிக் கொணர்ந்து தேறல் விற்றுப் பெற்ற நெல்லினாலே நாட்காலத்தே களியாட்டு அயருகின்ற. ஒப்புமை –அகநானூறு 1, மாமூலனாரின் பாடல் – நெடுவேள் ஆவி அறு கோட்டு யானைப் பொதினி. சுவரில் கோடிட்டு நாட்கணக்குப் பார்த்தல் – குறுந்தொகை 358 – ஆய் கோடு இட்டுச் சுவர்வாய் பற்றும், அகநானூறு 61 – நாள் இழை நெடுஞ்சுவர் நோக்கி நோய் உழந்து, அகநானூறு 289 – நாள் முறை இழைத்த திண்சுவர் நோக்கி, பதிற்றுப்பத்து 68 – ஓவு உறழ் நெடும் சுவர் நாள் பல எழுதிச் செவ்விரல் சிவந்த. பண்ட மாற்று – அகநானூறு 60, 61, 126, 140, 245, 296, 390, நற்றிணை 183, குறுந்தொகை 221, 269, ஐங்குறுநூறு 47, பொருநராற்றுப்படை 214–215, 216–7, பட்டினப்பாலை 28–30, மலைபடுகடாம் 413–414. அகநானூறு 245 – அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில் மகிழ்நொடை பெறாஅர் ஆகி, நனை கவுள் கானயானை வெண்கோடு சுட்டி மன்று ஓடு புதல்வன் புன்தலை நீவும். வரலாறு – புல்லி, வேங்கடம், பொதினி. மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17). விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57). முனாஅது (14) – பழைய உரை – பழையதான, சோமசுந்தரனார் உரை – நினையாமல், முனாஅது மறந்து பழகுவர் ஆதல் அரிது, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மிகப்பழமை வாய்ந்த.
சொற்பொருள்: நோற்றோர் மன்ற – உறுதியாகத் தவம் செய்தவர்கள், கூற்றம் கோள் உற விளியார் பிறர் கொள விளிந்தோர் – கூற்றுவனாலே கொள்ளப்படாமல் பிறர் தம் பொருளைக் கொள்ளும்படி இறந்தவர்கள், தாமே – தாம் ஏ அசைநிலைகள், எனத் தாள் வலம்படுப்பச் சேண் புலம் படர்ந்தோர் – எனக் கூறித் தம் முயற்சியில் வெற்றியடையத் தொலைவு இடத்திற்குச் சென்றோர், நாள் இழை நெடுஞ்சுவர் நோக்கி – நாட்களைக் கணிப்பதற்குக் கோடுகள் இட்ட நெடிய சுவரை நோக்கி, நோய் உழந்து ஆழல் – துன்பத்தில் ஆழ்ந்து அழாதே (ஆழல் – நீட்டல் விகாரம், அல் ஈற்று எதிர்மறை வியங்கோள்), வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, தாழாஅது உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு – காலம் தாழ்த்தாது இடியென ஒலிக்கும் ஊக்கத்துடன் (தாழாஅது – அளபெடை), பைங்கால் வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ – பசிய அடியையும் மாண்புடைய வரியையுமுடைய வலிய வில்லில் வலிய நாணை இணைத்து (பைங்கால் – பண்புத்தொகை, கொளீஇ – அளபெடை), அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன் – பகைவரின் அரிய மார்பில் செலுத்தும் அம்புகளையுடைய இளைஞர் பலருடன், அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும் கழல் புனை திருந்து அடிக் கள்வர் கோமான் – யானையின் வெள்ளை மருப்புகளைக் கொண்டு அத்துடன் கள்ளினை விற்றுப் பெற்ற நெல்லால் நாளவையில் மகிழும் கழல்கள் அணிந்த திருந்திய அடியையுடைய கள்வர் கோமான், மழ புலம் வணக்கிய மா வண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும் – மழ நாட்டைத் தோற்கடித்த பெரும் வள்ளன்மையுடைய புல்லியின் திருவிழாக்களையுடைய மிக்க சிறப்பான வேங்கட மலையைப் பெற்றாலும், பழகுவர் ஆதலோ அரிதே – அங்குப் பழகி தங்கியிருந்தால் அரிது (ஆதலோ – ஓகாரம் அசைநிலை, அரிதே – ஏகாரம் அசைநிலை), முனாஅது முழவு உறழ் திணிதோள் நெடுவேள் ஆவி பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்ன நின் ஒண் கேழ் வன முலைப் பொலிந்த நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே – நினையாது முழவை ஒத்த வலிய தோளினையுடைய பெரிய வேளாகிய ஆவியின் பொன் மிக்க பெரும் நகரமான பொதினியை ஒத்த நின் ஒளி விளங்கும் அழகிய முலையால் பொலிந்த நுண்ணிய அணிகலன்களை அணிந்த ஆகத்தில் பொருந்துதல் மறந்து (முனாஅது – அளபெடை, உறழ் – உவம உருபு, மறந்தே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 62, பரணர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்,
ஆகத்து அரும்பிய முலையள், பணைத்தோள்,
மாத்தாள் குவளை மலர் பிணைத்தன்ன
மாஇதழ் மழைக்கண், மாஅயோளொடு 5
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்பக்
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்,
கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல, 10
நடுங்கு அஞர் தீர முயங்கி நெருநல்
ஆகம் அடைதந்தோளே, வென்வேல்
களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறு நீர் அடுக்கத்து வியல் அகம் பொற்பக்
கடவுள் எழுதிய பாவையின், 15
மடவது மாண்ட மாஅயோளே.
பாடல் பின்னணி: அல்ல குறிப்பட்ட வேளையில் தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது. இச் செய்யுள் நச்சினார்க்கினியர் கருத்தின்படி, தலைவன் தோழியை இரப்பதாகும்.
பொருளுரை: வெல்லும் வேல்களையும் யானைப் படைகளையுமுடைய சேரனின் கொல்லி மலையின் ஒளிரும் அருவிகளையுடைய பக்க மலையின் இடம் பொலியக் கடவுள் அமைத்த பாவையினைப் போன்ற, மடப்பத்தால் மாட்சிமையுடைய மாந்தளிர் நிறத்தவள் நம் தலைவி.
குளத்தில் வளர்கின்ற பைஞ்சாய்க் கோரையின் குருத்தினையொத்த, ஒளியால் பொலிந்து விளங்கும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற வாயினையும், மார்பினில் தோன்றிய முலைகளையும், மூங்கில் போன்ற தோள்களையும், கரிய தண்டினையுடைய குவளையின் மலர்களை இணைத்து வைத்தாற்போன்ற கரிய குளிர்ந்த கண்களையும் மாமை நிறத்தையுமுடைய அவளுடன், பேயும் அறியாத காலத்தில் மறைதல் அமைந்த புணர்ச்சியை, ஆரவாரமுடைய துடியைப்போல் சேர்ந்தும் தனித்தும் ஊரில் உள்ளவர்கள் அலர் கூறுவதால், முன்பு போல் மறைத்த ஒழுக்கத்திற்கு நாம் செல்வது அரியதாகும் போலும். நீர் விரைந்தோடும் காவிரி என்னும் பெரிய ஆற்றில் நெடிய சுழிகளையுடைய வெள்ளத்தில் குளிப்பவள் போல் நடுங்கும் துன்பம் தீர அணைத்து, நேற்று தன் ஆகத்தைத் தந்தவள், இன்று வரவில்லை. யாம் அல்ல குறிப்பட்டோம்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘மெய் தொட்டுப் பயிறல்’ (தொல்காப்பியம், களவியல் 11) என வரும் நூற்பாவின்கண் ‘சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகையினும்’ என்பதன்கண் அமைத்திடுக. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘மெய் தொட்டுப் பயின்றால் பயிறல்’ (தொல்காப்பியம், களவியல் 30) என்னுஞ் சூத்திரத்து, ‘களஞ்சுட்டுக் கிளவி கிழவியதாகும்’ என்பதனால் இச் செய்யுள் தலைவியாற் குறி பெற்றுத் தலைவன் தோழியை இரப்பதாகும் என்றும், ‘தன்னுறு வேட்கை’ (தொல்காப்பியம், களவியல் 28) என்னுஞ் சூத்திரத்து, ‘கடும்புனல் அடைதந்தோளே’ என்பது, தலைவி வேட்கையைத் தலைவன் குறிப்பால் உணர்ந்தது என்றும் கூறினர் நச்சினார்க்கினியர். கொல்லிப் பாவை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இது தெய்வத்தன்மை உடைத்தலாகலின் கடவுள் எழுதிய பாவை எனப்பட்டது. இனி, கடவுளால் எழுதப்பட்ட பாவை எனினுமாம். ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தெய்வமாக அமைந்த பாவை. மாஅயோளே (16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாமை நிறமுடையோள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கரியளான தலைவி. வரலாறு – காவிரி, பொறையன், கொல்லி மலை. பொற்பு – பொற்பே பொலிவு (தொல்காப்பியம், உரியியல் 39).
சொற்பொருள்: அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் ஆகத்து அரும்பிய முலையள் – குளத்தில் வளர்கின்ற பைஞ்சாய்க் கோரையின் குருத்தினையொத்த ஒளியால் பொலிந்து விளங்கும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற வாயினையும் மார்பினில் தோன்றிய முலையை உடையவளும் (அயம் – குளம், முருந்தின் – இன் சாரியை), பணைத்தோள் மாத்தாள் குவளை மலர் பிணைத்தன்ன மாஇதழ் மழைக்கண் மாஅயோளொடு – மூங்கில் போன்ற தோள்களையும் கரிய தண்டினையுடைய குவளையின் மலர்களை இணைத்து வைத்தாற்போன்ற கரிய குளிர்ந்த கண்களையுடைய மாமை நிறத்தையுடைய தலைவியுடன் (மாஅயோளொடு – அளபெடை), பேயும் அறியா மறை அமை புணர்ச்சி பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப – பேயும் அறியாத காலத்தில் மறைதல் அமைந்த புணர்ச்சியை ஆரவாரமுடைய துடியைப்போல் ஊரில் உள்ளவர்கள் சேர்ந்தும் தனித்தும் அலர் கூற (துடியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஒத்த – ஒத்த, கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின் – மறைத்த ஒழுக்கத்திற்கு நாம் செல்லுவதற்கு அரியதாகும் போலும், கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல நடுங்கு அஞர் தீர முயங்கி – நீர் விரைந்தோடும் காவிரி என்னும் பெரிய ஆற்றில் நெடிய சுழிகளையுடைய வெள்ளத்தில் குளிப்பவள் போல் நடுங்கும் துன்பம் தீர அணைத்து, நெருநல் ஆகம் அடைதந்தோளே – நேற்று தன் ஆகத்தைத் தந்தவள் (மார்பைத் தந்தவள்), வென்வேல் களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி ஒளிறு நீர் அடுக்கத்து வியல் அகம் பொற்பக் கடவுள் எழுதிய பாவையின் மடவது மாண்ட மாஅயோளே – வெல்லும் வேல்களையும் யானைப் படைகளையுமுடைய சேரனின் கொல்லி மலையின் ஒளிரும் அருவிகளையுடைய பக்க மலையின் இடம் பொலியக் கடவுள் அமைத்த பாவையினைப் போன்ற மடப்பத்தாற் மாட்சிமையுடைய மாமை நிறத்தவள் (மாந்தளிர் நிறத்தவள்), (மாஅயோளே – அளபெடை, ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 63, கருவூர்க் கண்ணம்புல்லனார், பாலைத் திணை – மகட்போக்கிய செவிலித்தாய் தன் மகளான தோழியிடம் சொன்னது
கேளாய் வாழியோ மகளை! நின் தோழி
திரு நகர் வரைப்பு அகம் புலம்ப, அவனொடு
பெருமலை இறந்தது நோவேன், நோவல்
கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி,
முடங்கு தாள் உதைத்த பொலங்கெழு பூழி 5
பெரும் புலர் விடியல் விரிந்து வெயில் எறிப்பக்,
கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல்
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்,
அஞ்சுவரத் தகுந கானம் நீந்திக்
கன்று காணாது, புன்கண்ண செவி சாய்த்து, 10
மன்று நிறை பைதல் கூரப், பல உடன்
கறவை தந்த கடுங்கான் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ,
முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை
மட மயில் அன்ன என் நடைமெலி பேதை 15
தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள்,
வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண்
சேக் கோள் அறையும் தண்ணுமை
கேட்குநள் கொல்? எனக் கலுழும் என் நெஞ்சே.
பாடல் பின்னணி: செவிலித்தாய் தன் மகளிடம் சொல்லியது. தொல்காப்பியம், களவியல் 35 – தோழி தானே செவிலி மகளே.
பொருளுரை: மகளே! நீ நீடு வாழ்வாயாக! யான் கூறுவதைக் கேட்பாயாக! நின் தோழி, நம் அழகிய இல்லின் இடமெல்லாம் தனிமையுறும்படி, தன் தலைவனுடன் பெரிய மலையைக் கடந்து உடன்போனது பற்றி யான் வருந்தவில்லை.
தறுகண்மையுடைய யானைகள் தங்கள் நீண்ட தும்பிக்கையை நிலத்தில் சேர்த்து, வளைந்த கால்களால் நிலத்தை உதைத்து உண்டாக்கிய பொன் துகள் எழும் புழுதியில், பெரும் இருள் புலர்கின்ற விடியற்காலையில், வெயில் எறிக்கும் பொழுது, கரிய மாலை போன்ற கழுத்தினையுடைய சிவந்த குறும்பூழ் சேவல் தன் சிறிய புல்லிய பெடையுடன் குடையும் இடங்களையுடைய, அச்சம் தரும் காட்டினைக் கடந்து, தம் கன்றுகளைக் காணாமல் துன்பமுடையனவாய், தம் கன்றுகளின் குரல்களைக் கேட்கும் பொருட்டுச் செவிகளைச் சாய்த்து மன்றத்தில் நிறைந்து வருத்தம் மிகக் கொண்ட பல கறவைகளையும் ஒருங்கே சேர்த்து அடைத்த, விரைந்து நடக்கும் வலிய கால்களையுடைய வெட்சி மறவர்களின் ஆரவாரத்தையுடைய சிற்றூரில் இரவில் தங்கி, முதிய பெண்களின் வளைந்த கால்களை ஒத்த குடிலின்கண், இளைய மயிலை ஒத்த, நடந்து மெலிந்த என் பேதை மகள், தன் தலைவன் அவள் தோள்களை அணைத்துத் துயில்விக்கவும் துஞ்சாளாய், வேட்டம் புரியும் கள்வர்களின் வாரினை இழுத்துக் கட்டிய கொடிய கண்ணிணையுடைய ஏறுகளைக் கொள்ளும்பொழுது அறையும் தண்ணுமையின் ஒலியைக் கேட்பாளோ என அழும் என் நெஞ்சிற்காக யான் வருந்துவேன்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘தன்னும் அவனும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 39) என வரும் நூற்பாவின்கண் ‘அச்சம்’ என்பதன்பால் அடக்குக. நச்சினார்க்கினியர் இதற்கு இதனையே காட்டினர். முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை (14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முதுமையுற்ற பெண்டு தனித்துறைகின்ற சோர்ந்த கால்களையுடைய சிறிய குடிலின்கண், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – முதுமை வாய்தலையுடைய பெண்டின் சோர்ந்த காலினையுடைய குடிலிடத்து, புலியூர்க்கேசிகன் உரை – முதுமை வாய்தலையுடைய பெண்டின் தளர்ந்த காலினைப் போல வளைந்து தோன்றும் குடிலினிடத்திலே. ஆ மன்றத்தில் புகுதல்: அகநானூறு 14 – கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும், அகநானூறு 63 – கன்று காணாது புன்கண்ண செவி சாய்த்து மன்று நிறை பைதல் கூரப் பல உடன் கறவை, அகநானூறு 64 – மன்று நிறை புகுதரும் ஆ, அகநானூறு 253 – கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம், கலித்தொகை 119 – கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர, புறநானூறு 387 – மன்று நிறையும் நிரை, குறிஞ்சிப்பாட்டு 217 – ஆன் கணம் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர. விசியுறு கடுங்கண் தண்ணுமை (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விசியுறு கடுங்கண் தண்ணுமை எனக் கூட்டுக. ஏற்றினை அச்சுறுத்திப் பற்றுதற் பொருட்டு அறையும் தண்ணுமை என்க. அதன் ஒலி கேட்பதற்கு இன்னாது ஆகும் என்பது தோன்ற விசியுறும் கடுங்கண் தண்ணுமை என்றாள். தோழி – தோழி தானே செவிலி மகளே (தொல்காப்பியம், களவியல் 35). செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34). கூர – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18). பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12, குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.
சொற்பொருள்: கேளாய் – கேட்பாயாக, வாழியோ – நீ நீடு வாழ்வாயாக (ஓ –அசைநிலை), மகளை – மகளே (ஐ – சாரியை), நின் தோழி திரு நகர் வரைப்பு அகம் புலம்ப அவனொடு பெருமலை இறந்தது நோவேன – நின் தோழி அழகிய இல்லின் இடமெல்லாம் தனிமையுறும்படி அவனுடன் பெரிய மலையைக் கடந்து உடன்போனது பற்றி யான் வருந்தவில்லை, நோவல் – யான் வருந்துவேன், கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி முடங்கு தாள் உதைத்து உண்டாக்கிய பொலங்கெழு பூழி பெரும் புலர் விடியல் விரிந்து வெயில் எறிப்பக் கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல் சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண் – தறுகண்மையுடைய (கொடிய) யானைகள் நீண்ட தும்பிக்கையை நிலத்தில் சேர்த்து வளைந்த கால்களால் உதைத்த பொன் துகள் எழும் புழுதியில் பெரும் இருள் புலர்கின்ற விடியற்காலையில் வெயில் எறிக்கும் பொழுது கரிய மாலை போன்ற கழுத்தினையுடைய சிவந்த குறும்பூழ் சேவல் தன் சிறிய புல்லிய பெடையுடன் குடையும் அவ்விடம், அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி – அச்சம் தரும் காட்டினைக் கடந்து, கன்று காணாது புன்கண்ண செவி சாய்த்து மன்று நிறை பைதல் கூரப் பல உடன் கறவை தந்த கடுங்கால் மறவர் கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ – தம் கன்றுகளைக் காணாமல் துன்பமுடையனவாய்ச் செவிகளைச் சாய்த்து மன்றத்தில் நிறைந்து துன்பம் மிக பல கறவைகளையும் ஒருங்கே சேர்த்து அடைத்த விரைந்து நடக்கும் வலிய கால்களையுடைய வெட்சி மறவர்களின் ஆரவாரத்தையுடைய சிற்றூரில் இரவில் தங்கி (புன்கண் – துன்பம், பைதல் – துன்பம், கல்லென் – ஒலிக்குறிப்பு, அசைஇ – அளபெடை), முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை – முதிய பெண்களின் வளைந்த கால்களை ஒத்த குடில் (பெண்டின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), மட மயில் அன்ன என் நடைமெலி பேதை – இளைய மயிலை ஒத்த நடந்து மெலிந்த என் பேதை மகள், தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள் வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண் சேக் கோள் அறையும் தண்ணுமை கேட்குநள் கொல் – தன் தலைவன் அவள் தோள்களை அணைத்துத் துயில்விக்கவும் துஞ்சாளாய் வேட்டம் புரியும் கள்வர்களின் வாரினை இழுத்துக் கட்டிய கொடிய கண்ணிணையுடைய ஏறுகளைக் கொள்ளும்பொழுது அறையும் தண்ணுமையின் ஒலியைக் கேட்பாளோ, எனக் கலுழும் என் நெஞ்சே – என அழும் என் நெஞ்சு (நெஞ்சே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 64, ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
களையும் இடனால் பாக! உளை அணி
உலகு கடப்பன்ன புள் இயல் கலி மா
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரியத்
தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெருவழி,
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் 5
வென்வேல் இளையர் வீங்கு பரி முடுகச்
செலவு நாம் அயர்ந்தனம் ஆயின், பெயல
கடு நீர் வரித்த செந்நில மருங்கின்
விடுநெறி ஈர் மணல் வாரணம் சிதரப்,
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி, 10
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ
ஊர் வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன்,
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும்
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன்னிசை 15
புலம்பு கொள் மாலை கேட்டொறும்
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே.
பாடல் பின்னணி: வினை முற்றி வரும் தலைவன் தன் தேர்ப்பாகனிடம் சொன்னது.
பொருளுரை: பாகனே! உலகையே கடப்பதற்கு வல்லமை உடையன போன்ற, பறவையை ஒத்த வேகம் கொண்ட, பிடரி மயிரால் அழகுற்ற, செருக்குடைய குதிரைகளைச் செலுத்தும் கூறுபாடு அமைந்த அழகான கடிவாள வாரினை நீ ஆராய்ந்து கொண்டு, செம்முல்லையின் அரும்பு விரிந்த குளிர்ந்த பொழுதில் பெரிய வழியில், அழகாக விளங்கும் அகன்ற இலையினையும் எண்ணெய் கனிந்த வலிய தண்டினையும் உடைய வெற்றி பொருந்திய வேலை ஏந்திய ஏவலர்கள் செல்லும் விரைந்த செலவைவிடவும் விரையுமாறு, நாம் செலவை மேற்கொள்வோம் ஆயின், மழை விரைந்து விழுந்ததால் நீர் வரிவரியாக இழைத்த செம்மண் நிலத்தில், தேர் செல்லும் வழியில் உள்ள ஈர மணலைக் காட்டுக்கோழி கிளற, பாம்பு வாழும் புற்றின் ஈரமுடைய பகுதியில் குத்தியமையால் மருப்புகளில் (தந்தங்களில்) மண் உடைய தலைமையுடைய ஏறுகள், தம்முடன் நிற்றலை விரும்பும் தம் பசுக்களைத் தழுவி, ஊரின்கண் வரும் பொழுதில், ஒன்று சேர்ந்து கன்றுகளை அழைக்கும் குரலை உடையனவாய் மன்றம் நிறையும்படி புகும் ஆக்கள் கழுத்தில் பூண்ட தெளிந்த மணியின் அழகாக ஒலிக்கும் இனிய ஓசையைத் தனிமையாக இருக்கும் மாலைப்பொழுதில் கேட்கும் பொழுதெல்லாம், கலங்கி உறையும் நம் தலைவியின் செயலற்ற நிலை நீங்கும் இடமாகும் இது.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை– ‘எருமையும் மரையும் பெற்றமும் நாகே’ (தொல்காப்பியம், மரபியல் 62) என்னும் சூத்திரத்து, பெற்றத்திற்கு நாகு எனும் பெண்பாற் பெயர் வந்ததற்கு, ‘உடனிலை வேட்கையின் மடநாகு தழீஇ’ என்பதனை எடுத்துக்காட்டினர் பேராசிரியர். விடுநெறி ஈர் மணல் (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விளிம்பாக விடுபட்ட நெறி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தேர்விடும் நெறி. ஆ மன்றத்தில் புகுதல் – அகநானூறு 14 – கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும், அகநானூறு 63 – கன்று காணாது புன்கண்ண செவி சாய்த்து மன்று நிறை பைதல் கூரப் பல உடன் கறவை, அகநானூறு 64 – மன்று நிறை புகுதரும் ஆ, அகநானூறு 253 – கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம், கலித்தொகை 119 – கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர, புறநானூறு 387 – மன்று நிறையும் நிரை, குறிஞ்சிப்பாட்டு 217 – ஆன் கணம் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர. புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35). நாகு – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3). புள் இயல் கலிமா – வினை வயின் பிரிந்தோன் மீண்டு வரு காலை இடைச்சுர மருங்கின் தவிர்தல் இல்லை உள்ளம் போல உற்றுழி உதவும் புள் இயல் கலி மா உடைமையான (தொல்காப்பியம், கற்பியல் 53).
சொற்பொருள்: களையும் இடனால் – நீங்கும் இடமாகும் இது (இடன் – இடம் என்பதன் போலி, இடனால் – ஆல் அசைநிலை), பாக – பாகனே (விளி), உளை அணி – பிடரி மயிரால் அழகுற்ற, பிடரி மயிர் அணிந்த, உலகு கடப்பன்ன புள் இயல் கலி மா வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய – உலகையே கடப்பதற்கு வல்லமை உடையன போன்ற பறவையை ஒத்த வேகம் கொண்ட செருக்குடைய குதிரைகளைச் செலுத்தும் கூறுபாடு அமைந்த அழகான கடிவாள வாரினை நீ ஆராய்ந்து, தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெருவழி – செம்முல்லையின் அரும்பு விரிந்த குளிர்ந்த பொழுதில் பெரிய வழியில், ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் வென்வேல் இளையர் – அழகாக விளங்கும் அகன்ற இலையினையும் எண்ணெய் கனிந்த வலிய தண்டினையும் உடைய வெற்றி பொருந்திய வேலை ஏந்திய ஏவலர்கள், வீங்கு பரி முடுகச் செலவு நாம் அயர்ந்தனம் ஆயின் – செல்லும் விரைந்த செலவைவிடவும் விரையுமாறு நாம் செலவை மேற்கொள்வோம் ஆயின், பெயல கடு நீர் வரித்த செந்நில மருங்கின் – மழை விரைந்து விழுந்ததால் நீர் வரிவரியாக இழைத்த செம்மண் நிலத்தில், விடுநெறி ஈர் மணல் வாரணம் சிதர – தேர் செல்லும் வழியில் உள்ள ஈர மணலைக் காட்டுக்கோழி கிளற, பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு – பாம்பு வாழும் புற்றின் ஈரமுடைய பகுதியில் குத்தியமையால் மருப்புகளில் (தந்தங்களில்) மண் உடைய தலைமையுடைய ஏறுகள் (புற்றத்து – அத்துச் சாரியை, ஏஎறு – அளபெடை), உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ ஊர் வயின் பெயரும் பொழுதில் – தம்முடன் நிற்றலை விரும்பும் தம் பசுக்களைத் தழுவி ஊரின்கண் வரும் பொழுதில் (தழீஇ – அளபெடை), சேர்பு உடன் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் – ஒன்று சேர்ந்து கன்றுகளை அழைக்கும் குரலை உடையனவாய் மன்றம் நிறையும்படி புகும், ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன்னிசை புலம்பு கொள் மாலை கேட்டொறும் – ஆக்கள் கழுத்தில் பூண்ட தெளிந்த மணியின் மென்மையாக (அழகாக , விட்டு விட்டு) ஒலிக்கும் இனிய ஓசையைத் தனிமையாக இருக்கும் மாலைப்பொழுதில் கேட்கும்பொழுதெல்லாம், கலங்கினள் உறைவோள் கையறு நிலையே – கலங்கி உறையும் நம் தலைவியின் செயலற்ற நிலை (நிலையே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 65, மாமூலனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம்
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
சேரி அம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல் 5
பாடிச் சென்ற பரிசிலர் போல
உவ இனி வாழி தோழி அவரே
பொம்மல் ஓதி நம்மொடு ஒராங்குச்
செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும்
மால் கழை பிசைந்த கால்வாய் கூர் எரி 10
மீன் கொள் பரதவர் கொடுந்திமில் நளி சுடர்
வான் தோய் புணரி மிசைக் கண்டாங்கு
மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை
உயவல் யானை வெரிநுச் சென்றன்ன
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறிக் 15
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்
ஆறு கடி கொள்ளும் அருஞ்சுரம் பணைத்தோள்
நாறு ஐங்கூந்தல் கொம்மை வரி முலை
நிரை இதழ் உண்கண் மகளிர்க்கு
அரியவால் என அழுங்கிய செலவே. 20
பாடல் பின்னணி: இடையூறு காரணமாகத் தலைவி தலைவனைக் காணப்பெறாது வருந்தினாள். அது கண்ட தோழி அவளை ஆற்றுவித்தது.
பொருளுரை: தோழி! நீ நீடு வாழ்வாயாக! நம் தலைவர், மலைகள்தோறும் பெரிய மூங்கில்கள் ஒன்றோடொன்று உரசியமையால் எழுந்த தீ, வீசும் காற்றினால் பரவி, அதன் மிக்க தீச்சுடர்கள், மீன் பிடிக்கும் பரதவர்களின் வளைந்த படகுகளில் தோன்றும் செறிந்த விளக்குளை, வானளாவிய கடல் அலைகள் மீது காண்பது போல் பொருந்தத் தோன்றும், யா மரங்கள் உயர்ந்துள்ள அகன்ற இடத்தில் வருந்தி மெலிந்த யானையின் முதுகில் நடந்து செல்வது போல், பாறைகளில் ஏறியும் இறங்கியும் செல்லும் மூங்கில்கள் காய்ந்த சிறிய வழிகள் கொண்ட காட்டை உயர்த்திக் கூறுவதற்குக் காரணமான நிமிர்ந்த மருப்புகளையுடைய (தந்தங்களையுடைய) களிற்று யானைகள் வழிகளைக் காக்கும் அரிய பாலை நிலம், மூங்கில் போன்ற தோள்களையும் நறுமணம் உடைய ஐம்பால் கூந்தலையும் திரண்ட தேமல் பொருந்திய முலைகளையும் மலர்கள் போலும் மையுண்ட கண்களையுமுடைய மகளிர் கடப்பதற்கு அரியதாகும் எனத் தடுத்திருந்த உடன்போக்கினை, இன்று நம்முடன் ஒருபடியாக உடன்பட்டவராய் உடன்செல்ல விரும்பினார்.
பொலிந்த கூந்தலை உடையாய்! தன் உள்ளத்தில் உள்ளவற்றை மறைத்து இருக்கும் அன்னையின் கடிய சொற்களிலிலிருந்து நாம் தப்புவோம். சிறிதும் அன்பு இல்லாத இயல்புடைய பொய்யான சொற்களைக் கூறும் ஊர்ப்பெண்களின் அலரினின்றும் நாம் தப்புவோம். தன் நாட்டின் எல்லையை விரிவுப்படுத்திய உதியஞ்சேரல் என்னும் மன்னனிடம் பாடிச் சென்ற பரிசிலரைப் போல் இப்பொழுது நீ மகிழ்ச்சி அடைவாயாக!
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘தலைவரும் விழுமம்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் நூற்பாவின்கண் ‘தலைவரும் விழும நிலை எடுத்துரைப்பினும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘தலைவரும் விழுமம் நிலையெடுத்து உரைப்பினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 39) என்னுஞ் சூத்திரத்து, ‘விடுதற் கண்ணும்’ என்பதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இஃது உடன்போக்கு நயப்பித்தது என்றனர் இளம்பூரணர். இச் சூத்திரத்து, இச் செய்யுளை எடுத்துக் காட்டி ‘இதனுள் அன்னை சொல்லும் பெண்டிர் கௌவையும் தலைவரும் விழுமமென்று தோழி தலைவிக்குக் கூறினாள்’ என்றனர் நச்சினார்க்கினியர். ‘பெருமையும் சிறுமையும் மெய்ப்பாடு எட்டன் வழி மருங்கு அறியத் தோன்றும் என்ப’ (தொல்காப்பியம், உவமையியல் 19) என்னுஞ் சூத்திரத்து, பாடிச் சென்ற பரிசிலர் போல, உவ இனி வாழி தோழி என்பது உவகை உவமை என்றனர் பேராசிரியர். ஒப்புமை – அகநானூறு 128 – யானைக் கயிற்றுப் புறத்தன்ன கல் மிசைச் சிறு நெறி. புல் சாய் (15) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மூங்கில்கள் கரிந்து சாய்ந்துள்ள, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மூங்கில்கள் சாய்ந்த. ஒப்புமை – அகநானூறு 65 – புல் சாய் சிறு நெறி, அகநானூறு 89 – புல் சாய் விடரகம், 357 – அகநானூறு புல் சாய் சிறு நெறி. அகநானூறு 128 – யானைக் கயிற்றுப் புறத்தன்ன கல் மிசைச் சிறு நெறி. வரலாறு – உதியஞ்சேரல். நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).
சொற்பொருள்: உன்னம் கொள்கையொடு – நம் கருத்தினை உணர்ந்துகொண்ட அறிவுடன், உளம் கரந்து உறையும் அன்னை சொல்லும் உய்கம் – தன் உள்ளத்தில் உள்ளவற்றை மறைத்து இருக்கும் அன்னையின் கடிய சொற்களிலிலிருந்து நாம் தப்புவோம் (உளம் – உள்ளம் என்பதன் இடைக்குறை), என்னதூஉம் ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச் சேரி அம் பெண்டிர் கௌவையும் ஒழிகம் – சிறிதும் அன்பு இல்லாத இயல்புடைய பொய்யான சொற்களைக் கூறும் ஊர்ப்பெண்களின் அலரினின்றும் நாம் தப்புவோம் (என்னதூஉம் – அளபெடை, சேரி – ஊர், குடியிருப்பு, தெரு, அம் –அசைநிலை), நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல் பாடிச் சென்ற பரிசிலர் போல உவ இனி – தன் நாட்டின் எல்லையை விரிவுப்படுத்திய உதியஞ்சேரல் என்னும் மன்னனிடம் பாடிச் சென்ற பரிசிலரைப் போல் இப்பொழுது நீ மகிழ்ச்சி அடைவாயாக, வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, அவரே – அவர், நம் தலைவர் (ஏகாரம் அசைநிலை), பொம்மல் ஓதி – அடர்ந்த கூந்தலை உடையாய், பொலிந்த கூந்தலை உடையாய் (பொம்மல் ஓதி – அன்மொழித்தொகை, அண்மை விளி), நம்மொடு ஒராங்குச் செலவு அயர்ந்தனரால் – நம்முடன் ஒருபடியாக உடன்செல்ல விரும்பினார் (அயர்ந்தனரால் – அயர்ந்தனர் + ஆல், ஆல் அசைநிலை), இன்றே – இன்று (ஏகாரம் அசைநிலை), மலைதொறும் மால் கழை பிசைந்த கால்வாய் கூர் எரி மீன் கொள் பரதவர் கொடுந்திமில் நளி சுடர் வான் தோய் புணரி மிசைக் கண்டாங்கு மேவரத் தோன்றும் – மலைகள்தோறும் பெரிய மூங்கில்கள் ஒன்றோடொன்று உரசியமையால் எழுந்த தீ, வீசும் காற்றினால் பரவி அதன் மிக்க தீச்சுடர்கள் மீன் பிடிக்கும் பரதவர்களின் வளைந்த படகுகளில் தோன்றும் செறிந்த விளக்குளை வானளாவிய கடல் அலைகள் மீது காண்பது போல் பொருந்தத் தோன்றும் (கழை – மூங்கில்), யாஅ உயர் நனந்தலை உயவல் யானை வெரிநுச் சென்றன்ன – யா மரங்கள் உயர்ந்துள்ள அகன்ற இடத்தில் வருந்தி மெலிந்த யானையின் முதுகில் நடந்து செல்வது போல் (யாஅ – அளபெடை, யா மரம் – ஆச்சா மரம், Hardwickia binate), கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி – பாறைகளில் ஏறியும் இறங்கியும் செல்லும் மூங்கில்கள் காய்ந்த சிறிய வழிகள் (புல் – மூங்கில்), காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல் ஆறு கடி கொள்ளும் அருஞ்சுரம் – காட்டை உயர்த்திக் கூறுவதற்குக் காரணமான நிமிர்ந்த மருப்புகளையுடைய (தந்தங்களையுடைய) களிற்று யானைகள் வழிகளைக் காக்கும் அரிய பாலை நிலம், பணைத்தோள் நாறு ஐங்கூந்தல் கொம்மை வரி முலை நிரை இதழ் உண்கண் மகளிர்க்கு அரியவால் என அழுங்கிய செலவே – மூங்கில் போன்ற தோள்களையும் நறுமணம் உடைய ஐம்பால் கூந்தலையும் திரண்ட தேமல் பொருந்திய முலைகளையும் மலர்கள் போலும் மையுண்ட கண்களையுமுடைய மகளிர் கடப்பதற்கு அரியதாகும் எனத் தடுத்திருந்த உடன்போக்கினை (நிரை இதழ் – ஆகுபெயர் நிரைத்த இதழுடைய மலருக்கு, அரியவால் – ஆல் அசைநிலை, செலவே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 66, செல்லூர்க் கோசிகன் கண்ணனார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
‘இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப,
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்’ எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் 5
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி,
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டிப், புதுவதின்
இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்
மாண் தொழில் மா மணி கறங்கக் கடை கழிந்து, 10
காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும்
பூங்கண் புதல்வனை நோக்கி, “நெடுந்தேர்
தாங்குமதி வலவ” என்று இழிந்தனன், தாங்காது
மணி புரை செவ்வாய் மார்பகம் சிவணப்
புல்லிப் “பெரும! செல் இனி அகத்து” எனக் 15
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்த
மாநிதிக்கிழவனும் போன்ம் என, மகனொடு
தானே புகுதந்தோனே, யான் அது
படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன்
கலக்கினன் போலும் இக்கொடியோன் எனச்சென்று 20
அலைக்கும் கோலொடு குறுகத், தலைக்கொண்டு
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப்
பயிர்வன போல வந்து இசைப்பவும் தவிரான்,
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய
பழம் கண்ணோட்டமும் நலிய, 25
அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனே.
பாடல் பின்னணி: பரத்தையிற் பிரிந்த தலைவனுக்கு வாயிலாக வந்த தோழியிடம் தலைவி வாயில் நேர்ந்ததையும் அவன் பண்டு செய்ததையும் கூறியது.
பொருளுரை: பகைவரும் விரும்பும் குற்றமற்ற அழகையுடைய சிறுவர்களைப் பெற்ற தலைமையுடையோர் இவ்வுலகத்தில் புகழுடன் விளங்கி மறு உலக வாழ்க்கையையும் குற்றமின்றி அடைவார்கள் எனப் பலர் கூறிய பழைய சொற்கள் எல்லாம், உண்மை ஆகுதலைக் கண்டோம் தோழி.
என் கணவன் வரிசையாக மாலைகளை அணிந்தவனாக, நேற்று ஒருத்தியை மணம் புரிய விரும்பி, புதிதாகச் செய்த ஒப்பனை உடையவனாக, இத் தெருவைக் கடந்து சென்றான். தொழிலில் சிறந்த குதிரையின் மணி ஒலிக்க இல்லத்தின் வாயிலைக் கடந்து அவன் செல்லும்போது, தன்னைக் காணும் விருப்பத்துடன் தளர்ந்து தளர்ந்து ஓடி வந்த பூப்போன்ற கண்களையுடைய தன் புதல்வனைக் கண்டவுடன், தேரோட்டியை நோக்கி, “நீண்ட தேரினை நிறுத்துவாயாகத் தேரோட்டி!” எனக் கூறி, கீழே இறங்கினான். நேரம் தாழ்த்தாது, மகனின் பவளம் போன்ற சிவந்த வாய் தனது மார்பில் பொருந்த அணைத்து, “பெரும! நீ இல்லத்திற்குள் செல்” எனக் கூறினான். என் மகன் ஒத்துக்கொள்ளாமல் அழுதான். அவன் அழுததால், தன்னைத் தடுத்த மகனுடன், குபேரன் போலும் எனக் காண்பவர்கள் கூறும்படி, இல்லத்திற்குள் வந்தான் என் கணவன். நான் தான் மகனைத் தூண்டி இச் செயலைச் செய்வித்தேன் என அவன் எண்ணுவான் என்று நாணி, இக்கொடியவன் (என் மகன்) தலைவனின் மண நிகழ்வை இடையூறு செய்து கலக்கிவிட்டான் போலும் என்று அவனை அடிப்பதற்குக் கோலுடன் அவனை நான் நெருங்க, அவன் மகனை அணைத்துக்கொண்டான். அப்பரத்தையரின் இல்லத்தில் இருந்து வந்த ஒலிக்கும் கண்ணுடைய முழவின் இனிய இசை அவனை அழைப்பது போன்று ஒலிக்கவும் அவன் செல்லவில்லை.
முன்னொரு காலம் கழங்காடும் நம் தோழியரிடையே வந்து நமக்கு அவன் செய்த அருள் செயலைக் கெடுக்கும், தான் செய்ய விரும்பிய தன் வதுவையை, அவன் தவிர்த்தான் அல்லவா?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘கொடுமை ஒழுக்கம் ………….. வாயிலின் வரூஉம் வகையொடு’ என்பதன்கண் வரும் ‘பெட்டலும்’ என்பதனால் அமைத்திடுக. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘நிகழ்தகை மருங்கின்’ (தொல்காப்பியம், பொருளியல் 34) என்னுஞ் சூத்திரத்து, ‘நிரைதார் மார்ப நெருநல் ஒருத்தியொடு ……’ என்றது தலைவி புலவிக்கட் புகழ்ந்தது என்றும், ‘வாயிற் கிளவி’ (தொல்காப்பியம், பொருளியல் 47) என்னுஞ் சூத்திரத்து, தோழி வாயிலாகச் சென்றுழி, தலைவி வெளிப்படக் கூறுதலுங் கொள்க; அஃது ‘இம்மை யுலகு’ என்னும் அகப்பாட்டினுட் காண்க என்றும் கூறினர் நச்சினார்க்கினியர். மாநிதிக்கிழவனும் போன்ம் என (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன்னைத் தடுத்த மகனையும் அவனை ஏந்தி வருகின்ற குபேரனையும் ஒக்கும் எனக் கண்டோர் கூறும்படி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தடுத்த மகனோடு இவன் குபேரனும் ஆவான் எனக் கூறி. இம்மை – அகநானூறு 66, 101, 311, குறுந்தொகை 49, கலித்தொகை 14, புறநானூறு 134, 236. மறுமை – அகநானூறு 66, குறுந்தொகை 49, 199, கலித்தொகை 14, 103, and புறநானூறு 134 and 141. மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26). தானே – தான், ஏ அசை நிலைகள், புகுதன்தோன் – ஆ ஓ ஆயிற்று செய்யுள் ஆகலின். போன்ம் – போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது. மணன் – மணம் என்றதன் போலி. ஆயத்து (24) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தோழியர் கூட்டத்தினின்றும் பிரிந்து, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஆயத்தாரிடை. அயர்ந்த (26) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விரும்பிய, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தொடங்கிய.
சொற்பொருள்: இம்மை உலகத்து இசையொடும் விளங்கி மறுமை உலகமும் மறு இன்று எய்துப – இவ்வுலகத்தில் புகழுடன் விளங்கி மறு உலக வாழ்க்கையையும் குற்றமின்றி அடைவார்கள், செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்மலோர் என – பகைவரும் விரும்பும் குற்றமற்ற அழகையுடைய சிறுவர்களைப் பெற்ற தலைமையுடையோர் என்று, பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் – பலர் கூறிய பழைய சொற்கள் எல்லாம், வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி – உண்மை ஆகுதலை கண்டோம் தோழி, நிரை தார் மார்பன் – வரிசையாக மாலைகளை அணிந்தவனாக, நெருநல் ஒருத்தியொடு வதுவை அயர்தல் வேண்டி – நேற்று ஒருத்தியை மணம் புரிய விரும்பி, புதுவதின் இயன்ற அணியன் – புதிதாக செய்த ஒப்பனை உடையவனாக, இத்தெரு இறப்போன் – இத் தெருவைக் கடந்து செல்பவன், மாண் தொழில் மா மணி கறங்கக் கடை கழிந்து – தொழிலில் சிறந்த குதிரையின் மணி ஒலிக்க இல்லத்தின் வாயிலைக் கடந்து, காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும் – தன்னைக் காணும் விருப்பத்துடன் தளர்ந்து தளர்ந்து ஓடி வந்த, பூங்கண் புதல்வனை நோக்கி – பூப்போன்ற கண்களையுடைய தன் புதல்வனைக் கண்டு, நெடுந்தேர் தாங்குமதி வலவ என்று இழிந்தனன் – நீண்ட தேரினை நிறுத்துவாயாகத் தேரோட்டி எனக் கூறி கீழே இறங்கினான் (மதி – முன்னிலையசை), தாங்காது – தாழ்த்தாது, மணி புரை செவ்வாய் மார்பகம் சிவணப் புல்லி – மகனின் பவளம் போன்ற சிவந்த வாய் தனது மார்பில் பொருந்த அணைத்து (புரை – உவம உருபு, செவ்வாய் – பண்புத்தொகை), பெரும! செல் இனி அகத்து எனக் கொடுப்போற்கு ஒல்லான் – பெரும! நீ இல்லத்திற்குள் செல் என கூறுபவனுக்கு ஒத்துக்கொள்ளாமல் (பெரும – விளி), கலுழ்தலின் – அழுததால், தடுத்த மாநிதிக்கிழவனும் போன்ம் என – தடுத்த மகனையும் அவனுடன் வரும் தலைவன் குபேரன் போலும் எனக் கூறும்படி (மாநிதிக்கிழவனும் – உம்மை உயர்வு சிறப்பு, போன்ம் – போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது), மகனொடு தானே புகுதந்தோனே – மகனுடன் தான் இல்லத்திற்குள் வந்தான் (தானே – தான், ஏ அசைநிலைகள், புகுதன்தோன் – ஆ ஓ ஆயிற்று செய்யுள் ஆகலின்), யான் அது படுத்தனென் ஆகுதல் நாணி – நான் இச் செயலைச் செய்வித்தேன் என அவன் எண்ணுவான் என்று நாணி, இடித்து இவன் கலக்கினன் போலும் இக்கொடியோன் எனச்சென்று அலைக்கும் கோலொடு குறுக – இக்கொடியவன் (என் மகன்) தலைவனின் மண நிகழ்வை இடையூறு செய்து கலக்கிவிட்டான் போலும் என்று அவனை அடிப்பதற்குக் கோலுடன் அவனை நான் நெருங்க, தலைக்கொண்டு – மகனை அணைத்துக்கொண்டு, இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப் பயிர்வன போல வந்து இசைப்பவும் தவிரான் – அப்பரத்தையரின் இல்லத்தில் இருந்து வந்த ஒலிக்கும் கண்ணுடைய முழவின் இனிய இசை அழைப்பது போன்று ஒலிக்கவும் செல்லவில்லை அவன், கழங்கு ஆடு ஆயத்து – கழங்கு விளையாடிய தோழியருடன், அன்று – அன்று, நம் அருளிய பழம் கண்ணோட்டமும் நலிய – நமக்கு அருள் செய்த அருள் செயலைக் கெடுக்கும், அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனே – விரும்பிய தன் வதுவையைத் தவிர்த்தான் அல்லவா (மணனே – மணன் மணம் என்றதன் போலி, ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 67, நோய் பாடியார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
யான் எவன் செய்கோ தோழி? பொறி வரி
வானம் வாழ்த்தி பாடவும் அருளாது
உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன்
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை
அரம் போழ் நுதிய வாளி அம்பின், 5
நிரம்பா நோக்கின் நிரையங்கொண்மார்,
நெல்லி நீளிடை எல்லி மண்டி
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் 10
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
மொழிபெயர் தேஎம் தருமார், மன்னர்
கழிப்பிணிக் கறைத் தோல் நிரை கண்டன்ன
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை,
உருஇல் பேஎய் ஊராத் தேரோடு 15
நிலம் படு மின்மினி போலப் பல உடன்
இலங்கு பரல் இமைக்கும் என்ப, நம்
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே.
பாடல் பின்னணி: பொருள்வயின் தலைவன் பிரிந்தான். அப்பொழுது வருந்திய தலைவியை, “நீ ஆற்றியிருக்க வேண்டும்” எனக் கூறிய தோழியிடம் தலைவி உரைத்தது.
பொருளுரை: தோழி! நம் நலத்தைத் துறந்து வேற்று நாட்டில் உறைகின்ற நம் தலைவர் சென்ற வழிகளில்,
புள்ளிகளையும் வரிகளையுமுடைய வானம்பாடிகள் வாழ்த்தி பாடியபொழுதும் அவற்றிற்கு அருள் செய்யாது, மழை பெய்தலை நீக்கி முகில்கள் அங்கிருந்து நீங்கியதால், இலைகள் கரிந்து மரங்கள் யாவும் பொலிவிழந்த உயர்ந்துள்ள அகன்ற இடங்களில், அரத்தினால் அராவிய முனையுடன் பற்களையுடைய அம்புகளையும் கண்களை இடுக்கிக் குறிபார்க்கும் பார்வையையும் உடையவர்களாய், தம் ஆநிரையை மீட்கும் பொருட்டு, நெல்லி மரங்கள் உடைய நீண்ட வழியில் இரவில் சென்று வெட்சியாருடன் நிகழ்ந்த நல்ல போரினை வென்று வீழ்ந்த மானமுடைய கரந்தை மறவர்களின் பெயரினையும் சிறப்புகளையும் பொறித்த, வழிகள்தோறும் மயில் இறகு சூட்டிய விளங்கும் நிலையுடைய நடுகற்களைச் சுற்றி வேல்கள் நட்டப்பட்டு அவற்றில் கேடயங்களைச் சாற்றிப், பகைவர்களுடன் போர் புரியும் போர்முனை போல் தோன்றும், வேற்று மொழியுடைய நாட்டைக் கொள்ளும் பொருட்டு, மன்னர்களின் கம்புகளால் பிணித்த கரிய கேடயங்களின் வரிசையைக் கண்டாற்போன்ற, இறந்தவர்களை இட்டுத் தழைகளால் மூடிய கற்குவியல்களையுடைய பாழ் நிலத்தில், உருவம் இல்லாத ஊராத பேய்த்தேருடன் (கானல் நீருடன்) நிலத்தில் பொருந்திய மின்மினிப் பூச்சியைப் போல் விளங்கும் பரல் கற்கள் ஒளிரும், என அறிந்தவர்கள் கூறுவர். யான் என்ன செய்வேனோ?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் நூற்பாவால் அமைத்திடுக. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 40) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள் மண்டிலத் தருமை தலைவன் கூறக்கேட்ட தோழி கூறியது என்றார் நச்சினார்க்கினியர். ஒப்புமை – கலித்தொகை 46 – துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின், பட்டினப்பாலை 3 – தற்பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி, ஐங்குறுநூறு 418 – வானம்பாடி வறம் களைந்து ஆனாது அழி துளி தலைஇய, புறநானூறு 198 – துளி நசைப் புள்ளின். பறைபு (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேய்வு, இதனைப் பறத்தல் என்பாருமுளர். இலை கரிந்து தீய்தலின் மரம் வளர்தற்கு மாறாக தேய்ந்து புற்கெனத் தோன்றும் என்றலே நல்லுரையாம் என்க. நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80). வாளி அம்பின் (5) – பொ.வே. சோமசுந்தரனார் உரை – நுனி கவர்த்த பிறைவாய் அம்பினை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பற்களையுடைய அம்பினையும். நிரம்பா நோக்கின் நிரையம் கொண்மார் (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இடுங்கிய நோக்குடையவராய் வந்து ஆனிரைகளைக் கவர்பவர்களாகிய வெட்சி மறவரை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இடுக்கிக் குறி பார்க்கும் பார்வையினையுமுடையராய் (கரந்தை வீரர்கள்) தம் நிரையை மீட்க வேண்டி.
சொற்பொருள்: யான் எவன் செய்கோ – யான் என்ன செய்வேனோ (செய்கோ – செய்கு தன்மை ஒருமை வினைமுற்று, ஓ –அசைநிலை), தோழி – தோழி, பொறி வரி வானம் வாழ்த்தி பாடவும் அருளாது உறை துறந்து எழிலி நீங்கலின் – புள்ளிகளையும் வரிகளையுமுடைய வானம்பாடிகள் வாழ்த்தி பாடவும் அருள் செய்யாது மழை பெய்தலை நீக்கி முகில்கள் நீங்கியதால், பறைபு உடன் மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை – இலைகள் கரிந்து மரங்கள் யாவும் பொலிவிழந்த உயர்ந்துள்ள அகன்ற இடம், அரம் போழ் நுதிய வாளி அம்பின் நிரம்பா நோக்கின் நிரையம் கொண்மார் – அரத்தினால் அராவிய முனையுடன் பற்களையுடைய அம்புகளையும் இடுக்கிய பார்வையையும் உடையவர்களாய் தம் ஆநிரையை மீட்கும் பொருட்டு (நிரையம் – அம் சாரியை), நெல்லி நீளிடை எல்லி மண்டி நல் அமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி – நெல்லி மரங்கள் உடைய நீண்ட வழியில் இரவில் சென்று வெட்சியாருடன் நிகழ்ந்த நல்ல போரினை வென்று வீழ்ந்த மானமுடைய கரந்தை மறவர்களின் பெயரினையும் சிறப்புகளையும் பொறித்து, அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் – வழிகள்தோறும் மயில் இறகு சூட்டிய விளங்கும் நிலையுடைய நடுகற்கள் வேல்கள் நட்டப்பட்டுக் கேடயங்களை அவற்றில் சாற்றிப் பகைவர்களுடன் போர் புரியும் போர்முனை போல் இருக்கும் (பலகை –கேடயம்), மொழிபெயர் தேஎம் தருமார் – வேற்று மொழியுடைய நாட்டைக் கொள்ளும் பொருட்டு (தேஎம் – அளபெடை), மன்னர் கழிப்பிணிக் கறைத் தோல் நிரை கண்டன்ன – மன்னர்களின் கம்புகளால் பிணித்த கரிய கேடயங்களின் வரிசையைக் கண்டாற்போன்ற (கழி – கம்பு, குச்சி, தோல் – கேடயம்), உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை – இறந்தவர்களை இட்டுத் தழைகளால் மூடிய கற்குவியல்களையுடைய பாழ் நிலம், உருஇல் பேஎய் ஊராத் தேரோடு நிலம் படு மின்மினி போலப் பல உடன் இலங்கு பரல் இமைக்கும் என்ப – உருவம் இல்லாத ஊராத பேய்த்தேருடன் (கானல் நீருடன்) நிலத்தில் பொருந்திய மின்மினிப் பூச்சியைப் போல் விளங்கும் பரல் கற்கள் ஒளிரும் எனக் கூறுவர் (உருவமில்லாத ஊராத தேராகிய பேய்த் தேருடன், வெளிப்படை, பேய்த்தேர் = கானல் நீர், பேஎய் – அளபெடை), நம் நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே – நம் நலத்தைத் துறந்து வேற்று நாட்டில் உறைகின்ற நம் தலைவர் சென்ற வழி (ஆறே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 68, ஊட்டியார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
“அன்னாய் வாழி! வேண்டு அன்னை! நம் படப்பைத்
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய,
இன்னிசை அருவிப் பாடும் என்னதூஉம்
கேட்டியோ?” “வாழி வேண்டு அன்னை! நம் படப்பை
ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை 5
ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என,
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே,
பின்னும் கேட்டியோ” எனவும், அஃது அறியாள்,
அன்னையும் கனை துயில் மடிந்தனள், அதன்தலை
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் 10
வருவர் ஆயின் பருவம் இது எனச்
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம் வயின்
படர்ந்த உள்ளம் பழுது அன்றாக
வந்தனர், வாழி தோழி, அந்தரத்து
இமிழ் பெயல் தலைஇய இனப்பல் கொண்மூத் 15
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்பக்,
கன்று கால் ஒய்யும் கடுஞ்சுழி நீத்தம்
புன்தலை மடப்பிடிப் பூசல் பல உடன்
வெண்கோட்டு யானை விளி படத் துழவும்
அகல்வாய்ப் பாந்தள் படாஅர்ப் 20
பகலும் அஞ்சும் பனிக்கடுஞ்சுரனே.
பாடல் பின்னணி: தலைவன் இரவுக்குறி வந்தமை அறிந்த தோழி, அன்னை துயில்கின்றாளா என்பதை ஆராய்ந்து கொண்ட பின்னர், தலைவியை எழுப்பி அவன் வரவினைத் தலைவிக்குக் கூறியது.
பொருளுரை: தோழி! நீ நீடு வாழ்வாயாக! அவள் துயில்கின்றாளா என அறிவதற்காக நான் அன்னையை நோக்கி, “அன்னையே! நீ நீடு வாழ்வாயாக! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக. நம் தோட்டத்தில் உள்ள குளிர்ந்த பள்ளத்தில் நிறைந்துள்ள கூதளம் செடி குழையுமாறு இனிய இசையுடன் விழும் அருவியின் ஒலியைச் சிறிதேனும் நீ கேட்டாயா?” என்றும், அதன் பின் “நீ நீடு வாழ்வாயாக! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக அன்னையே! நம் தோட்டத்தில் உள்ள, அரக்கை ஊட்டினாற்போலும் ஒளிரும் தளிர்களையுடைய அசோக மரத்தின் உயர்ந்த கிளையில் கட்டிய ஊஞ்சல் கயிற்றை பாம்பு என எண்ணி, அம்மரம் முழுவதும் வேரோடு அழியும்படி இடி அதன் மீது விழுந்தது. அதன் ஓசையை நீ கேட்டாயா?” என்றும் நான் கூற, அதை அறியாதவளாய் அன்னை மிக்க துயிலில் ஆழ்ந்துள்ளாள். மேலும் உலகில் நிலைபெற்ற எல்லா உயிர்களும் உறங்கும் பொழுதாகவும் இது அமைந்துள்ளது. நம் தலைவர் வரும் பருவம் இது என யாம் கருதும்படி, விட்டு விட்டு விளங்கும் ஒளியுடைய வளையல்கள் கழன்றிடும் நம்மிடம் படர்ந்த தம் உள்ளம் குற்றமில்லாது இருக்குமாறு வந்தார், வானில் கூட்டமான பல முகில்கள் இடியுடன் பெய்தலைச் செய்து, நீங்குதல் இல்லாத வெள்ளம் இடந்தொறும் மிகுந்ததால், யானைக்கன்றின் கால்களை இழுத்துச் சென்ற விரைந்த சுழிகளையுடைய நீரோட்டத்தில் மெல்லிய தலையையுடைய பெண் யானைகளின் ஆரவாரம் பலவுடன் வெள்ளை மருப்புகளையுடைய (தந்தங்களையுடைய) களிற்று யானைகளும் கன்றுகளைப் பற்றும்பொருட்டு ஆரவாரத்துடன் நீரைத் துழவும், அகன்ற வாயை உடைய பாம்புகள் பொருந்திய செடிகளை உடைய பகலிலும் அஞ்சப்படும் மிகுந்த நடுக்கத்தைச் செய்யும் பாலை நிலத்தின் வழியில்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘புணர்ச்சி வேண்டினும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஊட்டாததனை ஊட்டியது போலக் கூறலின் வேறோர் உவமை இலக்கணமாம் என்பர் நச்சினார்க்கினியர். ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என்னும் தோழி கூற்று உணர்த்தும் சூத்திரத்து இச் செய்யுளை எடுத்துக்காட்டி, இது தாயது துயிலுணர்ந்து தலைவன் வந்தமை தோழி தலைவிக்குக் கூறிக் குறிவயிற் சென்றது என்றனர் நச்சினார்க்கினியர். பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவன் வரவை அவன் குறிசெய்ததால் அறிந்த தோழி முன்னம் அன்னையின் துயில் ஆராய்ந்தறிந்து பின்னர்த் தலைவியை எழுப்பித் தான் துயில் ஆராய்ந்த முறையை அவட்கு இவ்வாறு கூறி விளக்குகின்றாள். முன்னர் அருவி ஓசையைக் கேட்டாயோ என வினவியவள் அன்னை அதனைப் பொருட்டாகக் கொள்ளாமல் விடை கூறாது இருத்தலும் கூடும் என்று ஐயுற்றவள், பின்னர் அவள் துணுக்குற்று விடையிறுத்தற்கு இயன்றதொரு வினாவை வினவிய நுணுக்கம் அறிக. அருவி வீழ்கிறது என்புழி வீழ்ந்தால் வீழட்டும் என்று துயில்மயக்குடையோர் வாய்வாளாதிருத்தலும் இயல்பே. வீட்டின் பின்புறத்தே பேரிடி வீழ்ந்ததென்று கூறக்கேட்டால் யார் தாம் வாய்வாளாதிருப்பர்? விழித்திருப்பின் ஒருதலையாக அதனை ஆராய்ந்து அறியவே முயல்வரல்லரோ? இதற்கும் விடை கூறாமையின் அன்னை நன்றாக உறங்கிக் கிடக்கின்றாள் என்று ஐயமின்றி அறிந்து கொண்டேன் என்பது கருத்து. இடி பாம்பைத் தாக்குதல் கொல்லுதல் – அகநானூறு 68, 92, 119, 182, 202, 274, 323, 328, கலித்தொகை 45, 113, குறுந்தொகை 158, 190, 268, 391, நற்றிணை 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, புறநானூறு 17, 58, 126, 211, 366, 369. அயத்து (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குளத்தில், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பள்ளத்தே. வாழி தோழி (14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தோழி என்னும் விளி துயில் எழுவாயாக என்பதுபட நின்றது, வாழி அசைச்சொல், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தோழி வாழி, புலியூர்க்கேசிகன் உரை – தோழி நீ வாழ்வாயாக. அகல்வாய்ப் பாந்தள் படாஅர் (20) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அகன்ற வாயினையுடைய பாம்பு போலும் இயல்புடைய ஒரு செடி, அகன்ற வாயினையுடைய பாம்புகள் பொருந்திய செடி என்பதும் பொருந்தும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – இடம் அகன்று அடர்ந்த பாம்புச் செடிகள். அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4). எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).
சொற்பொருள்: அன்னாய் வாழி – அன்னையே நீ நீடு வாழ்வாயாக, வேண்டு அன்னை – நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக, நம் படப்பைத் தண் அயத்து அமன்ற கூதளம் குழைய இன்னிசை அருவிப் பாடும் என்னதூஉம் கேட்டியோ – நம் தோட்டத்தில் உள்ள குளிர்ந்த பள்ளத்தில் நிறைந்துள்ள கூதளம் செடி குழையுமாறு இனிய இசையுடன் விழும் அருவியின் ஒலியைச் சிறிதேனும் நீ கேட்டாயா (அமன்ற – நிறைந்த, என்னதூஉம் – அளபெடை, கேட்டியோ – ஓகாரம் ஐயப்பொருட்டு, கூதளம் – a three–lobed night shade plant, Convolvulus,) வாழி – நீ நீடு வாழ்வாயாக, வேண்டு அன்னை – நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக அன்னையே, நம் படப்பை ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை ஓங்கு சினைத் தொடுத்த ஊசல் பாம்பு என முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே – நம் தோட்டத்தில் உள்ள அரக்கை ஊட்டினாற்போலும் ஒளிரும் தளிர்களையுடைய அசோக மரத்தின் உயர்ந்த கிளையில் கட்டிய ஊஞ்சல் கயிற்றை பாம்பு என எண்ணி அம்மரம் முழுவதும் வேரோடு அழியும்படி இடி அதன் மீது விழுந்தது (அசோக மரம் – Saraca indica, எறிந்தன்றே – ஏகாரம் அசைநிலை), பின்னும் – அதன் பின்னும், கேட்டியோ எனவும் – கேட்டாயா எனக் கூறவும் (கேட்டியோ – ஓகாரம் ஐயப்பொருட்டு), அஃது அறியாள் அன்னையும் கனை துயில் மடிந்தனள் – அதை அறியாதவளாய் அன்னை மிக்க துயிலில் ஆழ்ந்துள்ளாள், அதன்தலை மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே – மேலும் உலகில் நிலைபெற்ற எல்லா உயிர்களும் உறங்கும் பொழுதாகவும் அமைந்துள்ளது (மடிந்தன்றால் – ஆல் அசைநிலை, பொழுதே – ஏகாரம் அசைநிலை), காதலர் வருவர் ஆயின் பருவம் இது என – நம் தலைவர் வரும் பருவம் இது என, சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம் வயின் படர்ந்த உள்ளம் பழுது அன்றாக வந்தனர் – விட்டு விட்டு விளங்கும் ஒளியுடைய வளையல்கள் கழன்றிடும் நம்மிடம் படர்ந்த தம் உள்ளம் குற்றமில்லாது இருக்குமாறு வந்தார், வாழி – நீ நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, அந்தரத்து இமிழ் பெயல் தலைஇய இனப்பல் கொண்மூ – வானில் இடியுடன் பெய்தலைச் செய்த கூட்டமான பல முகில்கள் (தலைஇய – அளபெடை), தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்பக் கன்று கால் ஒய்யும் கடுஞ்சுழி நீத்தம் புன்தலை மடப்பிடிப் பூசல் பல உடன் வெண்கோட்டு யானை விளி படத் துழவும் – நீங்குதல் இல்லாத வெள்ளம் இடந்தொறும் மிகுந்ததால் யானைக்கன்றின் கால்களை இழுத்துச் சென்ற விரைந்த சுழிகளையுடைய நீரோட்டத்தில் மெல்லிய தலையையுடைய பெண் யானைகளின் ஆரவாரம் பலவுடன் வெள்ளை மருப்புகளையுடைய (தந்தங்களையுடைய) களிற்று யானைகளும் ஆரவாரத்துடன் நீரைத் துழவும், அகல்வாய்ப் பாந்தள் படாஅர்ப் பகலும் அஞ்சும் பனிக்கடுஞ்சுரனே – அகன்ற வாயை உடைய பாம்புகள் பொருந்திய செடிகளை உடைய பகலிலும் அஞ்சப்படும் மிகுந்த நடுக்கத்தைச் செய்யும் பாலைநில வழி (படாஅர் – அளபெடை, சுரனே – சுரன் சுரம் என்பதன் போலி, ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 69, உமட்டூர்கிழார் மகனார் பரங்கொற்றனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
ஆய் நலம் தொலைந்த மேனியும், மா மலர்த்
தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல
வண்ணம் வாடிய வரியும் நோக்கி,
ஆழல் ஆன்றிசின் நீயே, உரிதினின்
ஈதல் இன்பம் வெஃகி மேவரச் 5
செய் பொருள் திறவர் ஆகிப், புல் இலைப்
பராரை நெல்லியம் புளித் திரள் காய்
கான மடமரைக் கண நிரை கவரும்
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று,
விண்பொரு நெடுவரை இயல் தேர் மோரியர் 10
பொன் புனை திகிரி திரிதர குறைத்த
அறை இறந்து அகன்றனர் ஆயினும், எனையதூஉம்
நீடலர் வாழி தோழி! ஆடு இயல்
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம்
சிலை மாண் வல்வில் சுற்றிப் பல மாண் 15
அம்புடைக் கையர் அரண் பல நூறி,
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன்
சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத்
தலைநாள் அலரின் நாறும் நின்
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே. 20
பாடல் பின்னணி: பொருள்வயின் தலைவன் பிரிந்தபொழுது வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்தது.
பொருளுரை: தோழி! நீ நீடு வாழ்வாயாக! ஆராயும் அழகு தொலைந்த நின் மேனியையும் கரிய (பெரிய) குவளை மலரின் சிறந்த அழகை இழந்த கண்களையும், முன்பு இருந்த இயல்பு இல்லாது அழகு வாடிய திதலையையும் நோக்கித் துயரத்தில் மூழ்கிவிடாதே. பிறர்க்கு ஈதல் இன்பத்தைப் பெரிதும் விரும்பிப் பொருள் ஈட்டும் திறத்தில் முயல்வாராகி, சிறிய இலைகளையும் பருத்த அடியையுமுடைய நெல்லி மரத்தின் அழகிய புளிப்பினையுடைய திரண்ட காய்களைக் காட்டில் உள்ள மடப்பமுடைய மரைமானின் மிக்க கூட்டம் தின்னும், வெப்பம் மிகுந்த வழி எனக் கருதாது, மயங்கி, விண்ணைத் தொடும் உயர்ந்த மலையில் செல்லும் தேர்களையுடைய மோரியர் இரும்பினால் செய்த உருளி செல்லும்பொருட்டுப் பாறைகளை வெட்டிய வழியில் சென்றார் ஆயினும், சிறிதும் காலம் தாழ்த்த மாட்டார்,
ஆடும் இயல்புடைய இளைய மயில் உதிர்த்த தோகையைக் கிழித்துத் தம் ஓசை மிக்க வலிய வில்லில் சுற்றி, பல மாட்சிமையுடைய அம்புகளைக் கையில் உடையவர்களாய்ப், பகைவர்களின் அரண்கள் பலவற்றை அழித்து நல்ல அணிகலன்களைக் கொண்டுவரும் வீரர்களின் தலைவனாகிய, சுடரும் மணிகள் பதித்த பெரும் அணிகலன்களை அணிந்த ஆய் என்ற மன்னனின் காட்டின்கண், அன்று மலர்ந்த புதிய மலர் போன்று மணக்கும், நின் பரந்த முலைகளையுடைய மார்பின்கண் துயிலை மறந்து.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகைபட வந்த கிளவி’ என்பதனால் அமைத்திடுக. மோரியர்களின் ஆக்கிரமிப்பு – அகநானூறு 69, 251, 281, புறநானூறு 175. மோரியர்களின் ஆட்சிக்காலம் கி. மு 321–185. பொன் – பொன் என்னும் சொல், சில பாடல்களில் இரும்பு எனப் பொருள் கொண்டது. குறுந்தொகை 16 – பொன் புனை பகழி செப்பங்கொண்மார், உ. வே. சாமிநாதையர் உரை – பொன் என்றது இரும்பை. ‘பொன்னியற் புனை தோட்டியான்’, ‘விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகை’ (புறநானூறு 14:3, 15:12) என்பவற்றையும் அவற்றின் உரைகளையும், ‘மின்னும் தமனியமும் வெற்றிரும்பும் ஒன்றாகிப் பொன்னின் பெயர்படைத்தாற் போலாதே’ (தொல்காப்பியம், புறத் 35, ந. மேற்). புறநானூறு 14 – பொன் இயல் புனை தோட்டியால், ஒளவை துரைசாமி உரை – பொன் – இரும்பு. புறநானூறு 14 – விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையொடு, ஒளவை துரைசாமி உரை – பொன் – இரும்பு, அகநானூறு 72 – பொன் எறி பிதிரின் சுடர – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரும்பு, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இரும்பு. சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை). வண்ணம் வாடிய (3) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அழகு இழந்த, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நிறம் மழுங்கிப் போன. மடமரை கண நிரை (8) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இளைய மரைமானின் மிக்க கூட்டம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மடப்பமுடைய மரைமான் இனமாகிய கூட்டம். மரைமான் ஆணும் பெண்ணும் அஞ்சும் இயல்புடையன ஆதல் கருதி மடமரை எனப் பொதுவின் ஓதினள். மரை நெல்லி உண்ணுதல்: அகநானூறு 69 – புல் இலைப் பராரை நெல்லியம் புளித் திரள் காய் கான மடமரைக் கண நிரை கவரும். அகநானூறு 399 – மையில் பளிங்கின் அன்ன தோற்றப் பல் கோள் நெல்லிப் பைங்காய் அருந்தி, மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம், குறுந்தொகை 235 – நெல்லி மரை இனம் ஆரும் முன்றில், புறநானூறு 170 – மரை பிரித்து உண்ட நெல்லி வேலி. ஏமுற்று (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இன்பமாகக் கொண்டு, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மயக்கமுற்று.
சொற்பொருள்: ஆய் நலம் தொலைந்த மேனியும் மா மலர்த் தகை வனப்பு இழந்த கண்ணும் வகை இல வண்ணம் வாடிய வரியும் நோக்கி – ஆராயும் அழகு தொலைந்த மேனியையும் கரிய (பெரிய) குவளை மலரின் சிறந்த அழகை இழந்த கண்களையும் முன்பு இருந்த இயல்பு இல்லாது அழகு வாடிய திதலையையும் நோக்கி, (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), ஆழல் ஆன்றிசின் நீயே – துயரத்தில் மூழ்கிவிடாதே நீ, துயரத்தால் அழாதே நீ (ஆழல் – அல் ஈற்று எதிர்மறை வியங்கோள், ஆழ்ந்துவிடாதே, அழாதே – நீட்டல் விகாரம், சின் – முன்னிலை அசை, நீயே – ஏகாரம் அசைநிலை), உரிதினின் ஈதல் இன்பம் வெஃகி மேவரச் செய் பொருள் திறவர் ஆகி – பிறர்க்கு ஈதல் இன்பத்தைப் பெரிதும் விரும்பிப் பொருள் ஈட்டும் திறத்தில் முயல்வாராகி, புல் இலைப் பராரை நெல்லி அம் புளித் திரள் காய் கான மடமரைக் கண நிரை கவரும் – சிறிய இலைகளையும் பருத்த அடியையுமுடைய நெல்லி மரத்தின் அழகிய புளிப்பினையுடைய திரண்ட காய்களைக் காட்டில் உள்ள மடப்பமுடைய (இளைய) மரைமானின் மிக்க கூட்டம் தின்னும் (பராரை – பரு அரை பராரை எனப் புணர்ந்தது), வேனில் அத்தம் என்னாது – வெப்பம் மிகுந்த வழி எனக் கருதாது, ஏம் உற்று – இன்பம் அடைந்து, மயங்கி, விண்பொரு நெடுவரை இயல் தேர் மோரியர் பொன் புனை திகிரி திரிதர குறைத்த அறை இறந்து அகன்றனர் ஆயினும் – விண்ணைத் தொடும் உயர்ந்த மலையில் செல்லும் தேர்களையுடைய மோரியர் இரும்பினால் செய்த உருளி செல்லும்பொருட்டுப் பாறைகளை வெட்டிய வழியில் சென்றார் ஆயினும், எனையதூஉம் நீடலர் – சிறிதும் காலம் தாழ்த்த மாட்டார் (எனையதூஉம் – அளபெடை), வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, ஆடு இயல் மட மயில் ஒழித்த பீலி வார்ந்து – ஆடும் இயல்புடைய இளைய மயில் உதிர்த்த தோகையைக் கிழித்து, தம் சிலை மாண் வல்வில் சுற்றி – தம் ஓசை மிக்க வலிய வில்லில் சுற்றி, தம் சிலை மரத்தால் செய்த வில்லில் கட்டி, பல மாண் அம்புடைக் கையர் அரண் பல நூறி நன்கலம் தரூஉம் – பல மாட்சிமையுடைய அம்புகளைக் கையில் உடையவர்களாய்ப் பகைவர்களின் அரண்கள் பலவற்றை அழித்து நல்ல அணிகலன்களைக் கொண்டுவரும் (தரூஉம் – அளபெடை), வயவர் பெருமகன் சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத் தலைநாள் அலரின் நாறும் – வீரர்களின் தலைவனாகிய சுடரும் மணிகள் பதித்த பெரும் அணிகலன்களை அணிந்த ஆய் என்ற மன்னனின் காட்டின்கண் அன்று மலர்ந்த மலர் போன்று மணக்கும் (ஆஅய் – அளபெடை, அலரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நின் அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே – நின் பரந்த முலைகளையுடைய மார்பின்கண் துயிலை மறந்து (மறந்தே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 70, மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கொடுந்திமில் பரதவர் வேட்டம் வாய்த்தென,
இரு புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங்கண் அவ் வலைப் பயம் பாராட்டி,
கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே 5
அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்,
பலரும் ஆங்கு அறிந்தனர் மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றைப் புதுவது
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்,
கானல் அம் பெருந்துறைக் கழனி மா நீர்ப் 10
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென்வேல் கவுரியர் தொல் முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை,
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த 15
பல் வீழ் ஆலம் போல,
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே.
பாடல் பின்னணி: தலைவன் வரைதற்கு வருகின்றமை அறிந்த தோழி, தலைவியிடம் கூறி அவளை மகிழ்வித்தது.
பொருளுரை: வளைந்த படகுகளையுடைய பரதவர்களின் மீன் வேட்டை நன்கு கைகூடியதால், பெரிதும் புலால் நாற்றம் வீசும் சிறிய குடிகளையுடைய கடற்கரை ஊரில், குறுகிய கண்களையுடைய அழகிய வலையின் பயனைப் பாராட்டிக் கொழுவிய கண்களையுடைய அயிரை மீனைப் பரதவர்கள் யாவர்க்கும் பகுத்துக் கொடுக்கும் துறையின் தலைவன் நம்முடன் கொண்ட காதல் உறவை, முன்பு அலர்கூறும் வாயையுடைய பெண்கள் அம்பலாக்கிப் பரப்ப, அங்குள்ள பலரும் அதை அறிந்தனர். அது கழிந்தது.
இப்பொழுது, திருமணம் உறுதி என்று ஆன பின், புதிய பொன் நிற மலர்களையுடைய ஞாழல் மரங்களும் புன்னை மரங்களும் பூக்களையும் தாதினையும் உதிர்த்து அழகு செய்யும் கடற்கரைச் சோலையையுடைய அழகிய பெரிய துறையில், வயல்களின் கரிய நீரில் பசிய இலைகளையும் திரண்ட தண்டினையுமுடைய நெய்தலின் மலர்களை விழாவிற்கு ஒப்பனைச் செய்யும் மகளிர் தங்கள் தழை ஆடைக்கு அழகுசெய்யும் பொருட்டுச் சேர்க்கும், வெற்றி வேலையுடைய பாண்டிய மன்னனின் மிக்க பழமையுடைய கோடிக்கரையில் அமைந்த, முழங்கும் பெரிய கடலின் ஒலிக்கும் துறையின் முன், போர்களில் வெற்றி அடையும் இராமன் அரிய மறையினை ஆராய்தற் பொருட்டு பறவைகளின் ஒலியை அடக்கிய, பல விழுதுகளையுடைய ஆலமரம் போல், ஒலி அடங்கியது இந்த ஆரவாரமுடைய ஊரில்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட’ என்பதனால் அமைத்துக் கொள்க. உள்ளுறை – பழைய உரை – பரதவர் தம் முயற்சியாலே வேட்டை வாய்த்ததாகிலும் குறுங்கண் வலையைப் பாராட்டி, அம் முயற்சியாலுண்டான அயிலைக் கடலினின்றும் நீக்கி எல்லார்க்கும் பகுத்துக் கொடுத்து மகிழ்வித்தாற்போல, தலைவரும் தம்முடைய முயற்சியானே வதுவை கூடிற்றாயினும் அதற்குத் துணையாக நின்ற என்னைக் கொண்டாடி நின்னைப் பெரிய இச்சுற்றத்தினின்றும் கொண்டுப் போய் தம்மூரின் கண்ணே நின்னைக் கொண்டு விருந்து புறந்தந்து தம் ஊரையெல்லாம் மகிழ்விப்பார் என்றவாறு. வரலாறு – கவுரியர் (பாண்டியர்), கோடி (திருவணைக்கரை). கோடி (13) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – திருவணைக்கரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கோடிக்கரை.
சொற்பொருள்: கொடுந்திமில் பரதவர் வேட்டம் வாய்த்தென – வளைந்த படகுகளையுடைய பரதவர்களின் மீன் வேட்டை நன்கு கைகூடியதால், இரு புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக் குறுங்கண் அவ் வலைப் பயம் பாராட்டி கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன் – பெரிதும் புலால் நாற்றம் வீசும் சிறிய குடிகளையுடைய கடற்கரை ஊரில் குறுகிய கண்களையுடைய (இடைவெளிகளையுடைய) அழகிய வலையின் பயனைப் பாராட்டிக் கொழுவிய கண்களையுடைய அயிரை மீனை யாவர்க்கும் பகுத்துக் கொடுக்கும் துறையின் தலைவன், நம்மொடு புணர்ந்த கேண்மை – நம்முடன் கொண்ட காதல் உறவு, முன்னே அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப் பலரும் ஆங்கு அறிந்தனர் – முன்பு அலர்கூறும் வாயையுடைய பெண்கள் அம்பலாக்கிப் பரப்ப பலரும் அங்கு அறிந்தனர் (பலரும் – உம் அசை), மன்னே – அது கழிந்தது (மன் – கழிவுப்பொருளில் வந்த இடைச்சொல், ஏ –அசைநிலை), இனியே – இப்பொழுது (ஏகாரம் அசைநிலை), வதுவை கூடிய பின்றை – திருமணம் உறுதி என்று ஆன பின், புதுவது பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும் கானல் அம் பெருந்துறை – புதிய பொன் நிற மலர்களையுடை ஞாழல் மரங்களும் புன்னை மரங்களும் பூக்களையும் தாதினையும் உதிர்த்து அழகு செய்யும் கடற்கரைச் சோலையையுடைய அழகிய பெரிய துறையில் (ஞாழல் – Cassia sophera, Tigerclaw tree, புலிநகக்கொன்றை, புன்னை – Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree), கழனி மா நீர்ப் பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல் விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும் வென்வேல் கவுரியர் தொல் முது கோடி – வயல்களின் கரிய நீரில் பசிய இலைகளையும் திரண்ட தண்டினையுமுடைய நெய்தலின் மலர்களை விழாவிற்கு ஒப்பனைச் செய்யும் மகளிர் தங்கள் தழை ஆடைக்கு அழகுசெய்யும் பொருட்டுச் சேர்க்கும் வெற்றி வேலையுடைய பாண்டிய மன்னனின் மிக்க பழமையுடைய கோடிக்கரை, முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை – முழங்கும் பெரிய கடலின் ஒலிக்கும் துறையின் முன் (முன்துறை – துறைமுன்), வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த – போர்களில் வெற்றி அடையும் இராமன் அரிய மறையினை ஆராய்தற் பொருட்டு பறவைகளின் ஒலியை அடக்கிய, பல் வீழ் ஆலம் போல – பல விழுதுகளையுடைய ஆலமரம் போல், ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே – ஒலி அடங்கியது இந்த ஆரவாரமுடைய ஊரில் (ஊரே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 71, அந்தி இளங்கீரனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர்
பயன் இன்மையின் பற்று விட்டு ஒரூஉம்
நயன் இல் மாக்கள் போல, வண்டினம்
சுனைப்பூ நீத்துச் சினைப் பூப் படர,
மை இல் மான் இனம் மருளப் பையென 5
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப,
ஐ அறிவு அகற்றும் கையறு படரோடு
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈனப்,
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக, 10
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிச்
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி,
மதுகை மாய்தல் வேண்டும், பெரிது அழிந்து, 15
இது கொல், வாழி தோழி, என் உயிர்
விலங்கு வெங்கடு வளி எடுப்பத்
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?
பாடல் பின்னணி: தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது. இதனைத் தலைவியின் கூற்றாகக் கொண்டார் நச்சினார்க்கினியர். பழைய உரையில் இது தோழியின் கூற்றாக உள்ளது. பொ. வே. சோமசுந்தரனார், வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை ஆகிய பேரறிஞர்களின் உரைகளிலும் இப்பாடல் தோழியின் கூற்றாகவே உள்ளது.
பொருளுரை: தோழி! நீ நீடு வாழ்வாயாக! செல்வம் நிறைந்தவர்களைத் தேர்ந்து அடையும் நெஞ்சுடன், செல்வம் குறைந்தவர்களால் பயன் இல்லாமையினால் அவர்பால் இருந்த பற்றை நீக்கிவிட்டு நீங்கும், நற்பண்பு இல்லாத மக்களைப் போல், வண்டின் கூட்டங்கள் சுனையில் உள்ள மலர்களிலிருந்து நீங்கி மரக்கிளைகளில் உள்ள மலர்களை அடையவும், குற்றமற்ற மான் கூட்டங்கள் மருளவும், உலையில் காய்ந்து மெல்லென ஆறிவரும் பொன்போல் அந்தி நேரம் மலரவும், வியக்கத்தக்க அறிவினைப் போக்கும் செயலற்ற துன்பத்துடன் அகன்ற பெரிய வானம் அழகிய இள முகில்களைத் தரவும், ஞாயிற்றைப் போக்கிய துன்பத்தினைத் தரும் மாலை நேரத்தில் காதலரைப் பிரிந்தவர்கள் தனிமையால் வருந்தியிருக்கவும், மிக்க துன்பத்தை அடைந்த அவர்களின் மார்பைக் குறித்துக் கூர்மையான வேலை எறிபவர் போல், குற்றமில்லாது இயற்றிய உருவம் காணும் கண்ணாடியின் உள்ளே ஊதப்பட்ட ஆவி போல், சிறிது சிறிதாகக் குறைந்து வந்து, என் வலிமை மாய்தல் உறுதி. தாக்கும் மிக்க கடிய சூறாவளி அலைப்ப, அசையும் மரத்தில் உள்ள பறவை போல் பெரிது அழிந்து, என் உயிர் என் உடலைத் துறக்கும் பொழுது இதுவே போலும்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனைத் தலைவி கூற்றாகவே கொள்வர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். ஈண்டு யாம் பழைய உரை ஆசிரியர் கருதியதற்கிணங்க தோழி கூற்றாகவே கொண்டு உரை கூறுவாம். தலைவியின் கூற்றெனக் கொள்ளின் ‘அவனறிவு’ என வரும் நூற்பாவின்கண் (தொல்காப்பியம், கற்பியல் 6) ‘ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும்’ என்பதனால் அமைத்திடுக. ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ என வரும் நூற்பாவின்கண் (தொல்காப்பியம், கற்பியல் 9) பிறவும் வகை பட வந்த கிளவி எல்லாம் தோழிக்கு உரிய என்பதனால் அமைத்திடுக. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘வேட்கை ஒருதலை’ (தொல்காப்பியம், களவியல் 9) என்னுஞ் சூத்திரத்து, தலைவி சாக்காடு என்னும் அவத்தை எய்தியமைக்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினார் நச்சினார்க்கினியர். ‘கிழக்கிடு பொருளோடு ஐந்தும் ஆகும்’ (தொல்காப்பியம், உவமையியல் 5) என்னுஞ் சூத்திரத்து, உவம நிலைக்களத்துள் ஒன்றாகிய கிழக்கிடு பொருளிற்கு ‘உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி’ என்பதனை எடுத்துக் காட்டினர் பேராசிரியர். புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35). பொன்னின் அந்தி பூப்ப (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொன் போன்ற நிறமுடைய செவ்வந்தி அரும்புகள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பொன்னின் நிறம்போலச் செக்கர் வானம் பூத்தலைச் செய்யும். நிழல் காண் மண்டிலத்து உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி (13–14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கண்ணாடி மண்டிலத்தின் அகத்தே வாயினால் ஊதப்பட்ட ஆவியைப்போல் மெல்ல மெல்லக் குறைந்து. மதுகை மாய்தல் வேண்டும் (15) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – என் வலிமை மாய்தல் வேண்டியிரா நின்றது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவருடைய ஆற்றல் அழிதல் தேற்றம்.
சொற்பொருள்: நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர் பயன் இன்மையின் பற்று விட்டு ஒரூஉம் நயன் இல் மாக்கள் போல – செல்வம் நிறைந்தவர்களைத் தேர்ந்து அடையும் நெஞ்சுடன் செல்வம் குறைந்தவர்களால் பயன் இல்லாமையினால் அவர்பால் இருந்த பற்றை நீக்கிவிட்டு நீங்கும் நற்பண்பு இல்லாத மக்களைப் போல் (ஒரூஉம் – அளபெடை), வண்டினம் சுனைப்பூ நீத்துச் சினைப் பூப் படர – வண்டின் கூட்டங்கள் சுனையில் உள்ள மலர்களிலிருந்து நீங்கி மரக்கிளைகளில் உள்ள மலர்களை அடைய, மை இல் மான் இனம் மருள – குற்றமற்ற மான் கூட்டங்கள் மருள, பையென வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப – உலையில் காய்ந்து மெல்லென ஆறிவரும் பொன்போல் அந்தி நேரம் மலர, மெல்லென உலையில் காய்ந்த பொன்போல் செவ்வந்தி நேரம் மலர (அந்தி ஆகுபெயராக – செவ்வந்திப்பூவாம், பொன்னின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஐ அறிவு அகற்றும் கையறு படரோடு அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன – வியக்கத்தக்க அறிவினைப் போக்கும் செயலற்ற துன்பத்துடன் அகன்ற பெரிய வானம் அழகிய இள முகில்களைத் தரவும், பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக – ஞாயிற்றைப் போக்கிய துன்பத்தினைத் தரும் மாலை நேரத்தில் காதலரைப் பிரிந்தவர்கள் தனிமையால் வருந்தியிருக்கவும், ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிச் கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது – மிக்க துன்பத்தை அடைந்தவர்களின் மார்பைக் குறித்துக் கூர்மையான வேலை எறிபவர் போல் வருந்துதல் நீங்காது (எறிஞரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து உள் ஊது ஆவியின் – குற்றமில்லாது இயற்றிய உருவம் காணும் கண்ணாடியின் உள்ளே ஊதப்பட்ட ஆவி போல் (ஆவியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பைப்பய நுணுகி மதுகை மாய்தல் வேண்டும் – சிறிது சிறிதாகக் குறைந்து வந்து என் வலிமை மாய்தல் உறுதி (பைப்பய – பையப்பைய பைப்பய என மருவியது), பெரிது அழிந்து – பெரிது அழிந்து, இது கொல் – இதுவே போலும், வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, என் உயிர் – என் உயிர், விலங்கு வெங்கடு வளி எடுப்பத் துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே – தாக்கும் மிக்க கடிய சூறாவளி அலைப்ப அசையும் மரத்தில் உள்ள பறவை போல் என் உடலைத் துறக்கும் பொழுது (பொழுதே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 72, எருமை வெளியனார் மகனார் கடலானார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
இருள் கிழிப்பது போல் மின்னி, வானம்
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்,
மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கிக்
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை, 5
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண்,
ஆறே அரு மரபினவே யாறே
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய,
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க
அஞ்சுவம் தமியம் என்னாது மஞ்சு சுமந்து, 10
ஆடு கழை நரலும் அணங்குடைக் கவாஅன்,
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய,
இருங்களிறு அட்ட பெருஞ்சின உழுவை
நாம நல் அராக் கதிர்பட உமிழ்ந்த
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் 15
வாள் நடந்தன்ன வழக்கு அருங்கவலை,
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி,
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக
வந்தோன் கொடியனும் அல்லன், தந்த
நீ தவறு உடையையும் அல்லை நின்வயின் 20
ஆனா அரும் படர் செய்த
யானே தோழி தவறு உடையேனே.
பாடல் பின்னணி: தலைவன் இரவுக்குறியின்கண் வந்ததை அறிந்த வேளையில் கூறியது. வரைவு கடாயது. 1. தலைவி தோழியிடம் சொன்னது. 2. தோழி தலைவியிடம் சொன்னது.
பொருளுரை: தோழி! இருளைக் கிழிப்பது போல் மின்னி, முகில்கள் நீர்த் துளிகளைத் தம்மிடத்தில் கொண்ட மிக்க பெயலை உடைய நடுஇரவில், மின்மினிப் பூச்சிகள் மொய்த்திருக்கும் முரிந்த இடத்தையுடைய புற்றினை, இரும்பினைக் காய்ச்சி அடிக்குங்கால் சிதறும் தீப்பொறிகள் போல அம் மின்மினிப் பூச்சிகள் ஒளிவிடப் பெயர்த்துப் புற்றாஞ்சோற்றினைத் தோண்டி எடுக்கும் பெரிய கைகளையுடைய ஆண் கரடியானது, இரும்பு வேலை செய்யும் கொல்லன் போல் தோன்றும் காட்டில் உள்ள வழி செல்லுவதற்கு அரிய தன்மையுடையது. அங்குள்ள ஆறுகள், நினைப்பவர்களை நடுங்கச் செய்யும் அச்சமுடைய முதலைகளை உடையன. அவற்றின் ஓடக்கோலை மூழ்கச்செய்யும் வெள்ளம், பாறைகளில் இடித்து ஒலிக்க, தனியே செல்வதற்கு அஞ்சுவேம் எனக் கருதாது, இள முகில்களைச் சுமந்து அசையும் மூங்கில்கள் ஒலிக்கும், அச்சம் தரும் வருத்தும் கடவுள்களையுடைய பக்க மலையில், கருவுற்றிருக்கும் துணையின் துன்பமிக்க பசியைத் தீர்க்கும்பொருட்டுப் பெரிய பன்றியைக் கொன்ற பெருஞ்சினம் கொண்ட ஆண்புலி, அச்சம்தரும் நல்ல பாம்பு மேய்தற்குச் செல்ல ஒளியுண்டாக உமிழ்ந்த மணியின் ஒளியில் அப்பன்றியின் குருதி படிந்து வரும்படி அதனை இழுக்கும், வாளின் கூர்மையை ஒத்த செல்லுதற்கு அரிய வழியாகிய, கடக்க எண்ணுபவர்கள் அஞ்சும் கற்கள் அடர்ந்த சிறு வழியில், நமக்கு அருள் புரியும் நெஞ்சுடன் வேலைத் துணையாகக் கொண்டு வந்த நம் தலைவன் கொடியவன் இல்லை. அவனை குறிமூலம் வரச்செய்த நீயும் தவறு உடையவள் இல்லை. நின்பால் நீங்காத அரிய துன்பத்தைச் செய்த யானே தவறு உடையேன்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – 1. இதற்கு, ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்னும் நூற்பாவின்கண் ‘அவன் அளி சிறப்பினும்’ என வரும் விதி கொள்க. 2. இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘களனும் பொழுதும் வரை நிலை விலக்கி காதல் மிகுதி உளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்ற சூத்திரத்து, ‘வந்தவன் பெயர்ந்த வறுங் களம் நோக்கித் தன் பிழைப்பாகத் தழீஇத் தேறலும்’ என்பதற்கு ‘வாள் நடந்தன்ன ………………. தவறு உடையேன்’ என்பதை எடுத்துக்காட்டினார் இளம்பூரணர். ‘பொழுது ஆறும்’ (தொல்காப்பியம், பொருளியல் 16) என்னுஞ் சூத்திரத்து, ‘தன்னை அழிதலும்’ என்னும் பகுதிக்கு, ‘நீ தவறு உடையையும் அல்லை ………………. யானே தோழி தவறு உடையேனே’ என்பதனை எடுத்துக்காட்டி, அவன் வரவினை உவவாது துன்பங்கூர்தல் வழுவாயினும் அதுவும் அவன்கண் அன்பாதலின் அமைத்தார் என்று உரைத்தனர் நச்சினார்க்கினியர். மூங்கில் நீரில் மறைதல் – கழை மாய் நீத்தம் – அகநானூறு 72, நற்றிணை 7, கழை அழி நீத்தம் – அகநானூறு 341, கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம் – அகநானூறு 6. குரும்பி – பெரும்பாணாற்றுப்படை 277–278 – பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் பூம்புற நல் அடை, அகநானூறு 8 – ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த குரும்பி, அகநானூறு 72 – மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம் பொன் எறி பிதிரின் சுடர வாங்கிக் குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை இரும்பு செய் கொல் எனத் தோன்றும், அகநானூறு 307 – பெருங்கை எண்கினம் குரும்பி தேரும் புற்றுடைச் சுவர. பாம்பு மணியை உமிழ்தல் – புறநானூறு 294, அகநானூறு 72, 92, 138, 192, 372, குறுந்தொகை 239, நற்றிணை 255. கரடிகள் ஈயல் புற்றை உடைத்தல் – அகநானூறு 8, 72, 81, 88, 112, 149, 247, 257, 307, நற்றிணை 125, 325, 336. களிறு – ஆண் யானைக்கு ஏறத்தாழ 175 சங்கப்பாடல்களில் பயன்பட்ட இச்சொல், இங்கு ஆண் பன்றியைக் குறிக்கின்றது. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஆண் பன்றி. புறநானூறு 41, 325 ஆகிய பாடல்களிலும் இச்சொல் ஆண் பன்றியைக் குறித்துள்ளது. வேழற்கு உரித்தே விதந்து களிறு என்றல் கேழற்கண்ணும் கடி வரை இன்றே (தொல்காப்பியம், மரபியல் 35). நாம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69). பொன் – பொன் என்னும் சொல், சில பாடல்களில் இரும்பு எனப் பொருள் கொண்டது. குறுந்தொகை 16 – பொன் புனை பகழி செப்பங்கொண்மார், உ. வே. சாமிநாதையர் உரை – பொன் என்றது இரும்பை. ‘பொன்னியற் புனை தோட்டியான்’, ‘விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகை’ (புறநானூறு 14:3, 15:12) என்பவற்றையும் அவற்றின் உரைகளையும், ‘மின்னும் தமனியமும் வெற்றிரும்பும் ஒன்றாகிப் பொன்னின் பெயர்படைத்தாற் போலாதே’ (தொல்காப்பியம், புறத் 35, ந. மேற்). புறநானூறு 14 – பொன் இயல் புனை தோட்டியால், ஒளவை துரைசாமி உரை – பொன் – இரும்பு. புறநானூறு 14 – விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையொடு, ஒளவை துரைசாமி உரை – பொன் – இரும்பு, அகநானூறு 72 – பொன் எறி பிதிரின் சுடர – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரும்பு, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இரும்பு, அகநானூறு 69 – பொன் புனை திகிரி.
சொற்பொருள்: இருள் கிழிப்பது போல் மின்னி வானம் துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள் – இருளைக் கிழிப்பது போல் மின்னி முகில்கள் நீர்த் துளிகளைத் தம்மிடத்தில் கொண்ட மிக்க பெயலை உடைய நடுஇரவில் (வானம் – ஆகுபெயர் முகிலுக்கு), மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம் பொன் எறி பிதிரின் – மின்மினிப் பூச்சிகள் மொய்த்திருக்கும் முரிந்த இடத்தையுடைய புற்றினை இரும்பினைக் காய்ச்சி அடிக்குங்கால் சிதறும் தீப்பொறிகள் போல அம் மின்மினிப் பூச்சிகள் (புற்றம் – அம் சாரியை, பிதிரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), சுடர வாங்கிக் குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண் – ஒளிவிடப் பெயர்த்துப் புற்றாஞ்சோற்றினைத் தோண்டி எடுக்கும் பெரிய கைகளையுடைய ஆண் கரடியானது இரும்பு வேலை செய்யும் கொல்லன் போல் தோன்றும் அவ்விடத்தே (ஆங்கண் – அவ்விடத்தே, அசையுமாம்), ஆறே அரு மரபினவே – வழி செல்லுவதற்கு அரிய தன்மையுடையது (மரபினவே – ஏகாரம் அசைநிலை), யாறே – ஆறுகள் (ஏகாரம் அசைநிலை), சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய – நினைப்பவர்களை நடுங்கச் செய்யும் அச்சமுடைய முதலைகளை உடையன, கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க – ஓடக்கோலை மூழ்கச்செய்யும் வெள்ளம் பாறைகளில் இடித்து ஒலிக்க, அஞ்சுவம் தமியம் என்னாது – தனியே செல்வதற்கு அஞ்சுவேம் எனக் கருதாது, மஞ்சு சுமந்து ஆடு கழை நரலும் அணங்குடைக் கவாஅன் – இள முகில்களைச் சுமந்து அசையும் மூங்கில்கள் ஒலிக்கும் அச்சம் தரும் சூர் உடைய (வருத்தும் கடவுள்களையுடைய) பக்க மலை (கவாஅன் – அளபெடை), ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய இருங்களிறு அட்ட பெருஞ்சின உழுவை – கருவுற்றிருக்கும் துணையின் துன்பமிக்க பசியைத் தீர்க்கும்பொருட்டுப் பெரிய பன்றியைக் கொன்ற பெருஞ்சினம் கொண்ட ஆண்புலி (களைஇய – அளபெடை), நாம நல் அராக் கதிர்பட உமிழ்ந்த மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் – அச்சம்தரும் நல்ல பாம்பு மேய்தற்குச் செல்ல ஒளியுண்டாக உமிழ்ந்த மணியின் ஒளியில் அப்பன்றியின் குருதி படிந்து வரும்படி இழுக்கும் (நாம – நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது), வாள் நடந்தன்ன வழக்கு அருங்கவலை – வாளின் கூர்மையை ஒத்த செல்லுதற்கு அரிய வழி, உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி – கடக்க எண்ணுபவர்கள் அஞ்சும் கற்கள் அடர்ந்த சிறு வழி, அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக வந்தோன் கொடியனும் அல்லன் – நமக்கு அருள் புரியும் நெஞ்சுடன் வேலைத் துணையாகக் கொண்டு வந்த நம் தலைவன் கொடியவன் இல்லை, தந்த நீ தவறு உடையையும் அல்லை – அவனை குறிமூலம் வரச்செய்த நீயும் தவறு உடையவள் இல்லை, நின்வயின் ஆனா அரும் படர் செய்த யானே – நின்பால் நீங்காத அரிய துன்பத்தைச் செய்த யானே, தோழி – தோழி, தவறு உடையேனே – தவறு உடையேன் (உடையேனே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 73, எருமை வெளியனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பின்னொடு முடித்த மண்ணா முச்சி
நெய்கனி வீழ் குழல் அகப்படத் தைஇ,
வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு
ஒரு காழ் முத்தம் இடை முலை விளங்க,
அணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய், 5
நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர
“என் ஆகுவள் கொல் அளியள் தான்?” என
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும்
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி
இருவேம் நம் படர் தீர வருவது 10
காணிய வம்மோ காதலம் தோழி!
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம்
மடி பதம் பார்க்கும் வயமான் துப்பின்,
ஏனல் அம் சிறு தினைச் சேணோன் கையதைப்
பிடிக்கை அமைந்த கனல்வாய்க் கொள்ளி 15
விடு பொறிச் சுடரின் மின்னி, அவர்
சென்ற தேஎத்து நின்றதால் மழையே.
பாடல் பின்னணி: பொருள்வயின் பிரிந்த தலைவன் குறித்த பருவத்தில் வராததால் வருந்திய தலைவியிடம் தோழி கூறியது.
பொருளுரை: பேரன்பு மிக்க தோழியே! பின்னலுடன் முடித்த, ஒப்பனை எதுவும் செய்யாத கொண்டையில், எண்ணெய் தடவிய சுருண்ட கூந்தலைச் சேர்த்துக் கட்டி, காட்டுப் பூனை இருளில் விழித்துப் பார்த்தாற்போல் ஒளிவிடுகின்ற ஒற்றை முத்து வடம் முலையிடத்தே ஒளிர, கடவுட் தன்மை போன்ற கற்பினால் மடப்பத்துடன் மிகவும் மெலிந்து, நின் நோயினால் மட்டும் வருந்தியிருப்பாயும் இல்லை. என் நிலை நோக்கி நினக்கு அச்சம் தோன்ற, ‘இரங்கத்தக்காள் ஆகிய இவள் என்ன ஆவாளோ?’ என்று, என் அழிவுக்கு இரங்குகின்ற நின்னொடு யானுமாகிய, ‘ஒருவர் செய்வது நெறி இல்லை’ என்று எண்ணாத வேற்றுமையில்லாத அறிவினையுடைய நம் இருவரின் வருத்தமும் நீங்குமாறு, நம் தலைவர் வருவதைக் காண்பதற்கு வருவாயாக.
கொடிகள் பின்னிய சிறு காட்டில் இருண்ட நிறத்தையுடைய யானையின் சோரும் செவ்வியைப் பார்க்கும், சிங்கத்தின் வலிமை போன்ற வலிமையையுடைய, தினை வகையில் ஒன்றாகிய அழகிய சிறுதினையைக் காக்கும், பரண்மேல் உள்ள கானவன் கையின்கண் உள்ள கைப்பிடி அமைந்த, தீயைத் தன்னிடத்தில் கொண்ட கொள்ளி விடும் தீப்பொறிகள் போல் மின்னி, தலைவர் சென்ற நாட்டில் நின்றுப் பெய்கின்றது மழை. ஆதலால் அவர் இப்பொழுதே வருவார்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ”பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘வகைபட வந்த கிளவி எல்லாம்’ என்பதனால் அமைத்திடுக. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘இளிவே இழவே’ என்னுஞ் சூத்திரத்து ‘அணங்குறு கற்பொடு ……….. நின்னொடு யானும்’ என்னும் பகுதியை எடுத்துக்காட்டி, இது தலைமகன் பிரிவிற்குத் தோழி படர்கூர்ந்தாள் எனச் சொல்லியமையின் பிறன்கட் தோன்றிய இழிவு பற்றி அவலம் பிறந்ததாம் என்பர் பேராசிரியர். பின்னொடு முடித்த மண்ணா முச்சி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பின்னுதல் மாத்திரையோடு பிறிது யாதும் ஒப்பனை செய்யாமல் முடித்த முச்சி என்றவாறு, நீராடுதல் இல்லாத முச்சி எனினுமாம். நெய் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எண்ணெய், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நெய். அணங்குறு கற்பொடு (5) – பழைய உரை – அருந்ததி கற்பினால், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அருந்ததி போலுற்ற கற்பினால், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தெய்வத்தன்மையுடைய கற்புடைமையோடு. சேணோன் – உ. வே. சாமிநாதையர் உரை, குறுந்தொகை 150ம் பாடலில் – வேங்கை மரத்தின் மீது கட்டப்பட்ட பரணிலும் யானைகளாலும் எட்ட முடியாத குன்றின் மீது கட்டப்பட்ட பரணிலும் இருப்பவன் ஆதலின் இவன் சேணோன் எனப்பட்டான்.
சொற்பொருள்: பின்னொடு முடித்த மண்ணா முச்சி – பின்னலுடன் முடித்த ஒப்பனை எதுவும் செய்யாத கொண்டையில், நெய்கனி வீழ் குழல் அகப்படத் தைஇ – எண்ணெய் தடவிய சுருண்ட கூந்தலைச் சேர்த்துக் கட்டி (நெய் – இச்சொல் நெய், நெய் ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது, குழல் – சுருண்ட கூந்தல், தைஇ – அளபெடை), வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு – காட்டுப் பூனை இருளில் விழித்துப் பார்த்தாற்போல் ஒளிவிடுகின்ற (வெருகு – காட்டுப் பூனை), ஒரு காழ் முத்தம் இடை முலை விளங்க – ஒற்றை முத்து வடம் முலையிடத்தே ஒளிர, அணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய் – கடவுட் தன்மை போன்ற கற்பினால் மடப்பத்துடன் மிகவும் மெலிந்து (சாஅய் – அளபெடை), நின் நோய்த் தலையையும் அல்லை – நின் நோயினால் மட்டும் வருந்தியிருப்பாயும் இல்லை, தெறுவர – அச்சம் வர, என் ஆகுவள் கொல் அளியள் தான் என – இரங்கத்தக்காள் ஆகிய இவள் என்ன ஆவாளோ என்று, என் அழிபு இரங்கும் – என் அழிவுக்கு இரங்குகின்ற, நின்னொடு யானும் – நின்னொடு யானுமாகிய, ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி – நெறி இல்லை என்று எண்ணாத வேற்றுமையில்லாத அறிவினையுடைய, இருவேம் நம் படர் தீர வருவது காணிய வம்மோ – நம் இருவரின் வருத்தமும் நீங்குமாறு நம் தலைவர் வருவதைக் காண்பதற்கு வருவாயாக (வம்மோ – வம் வா என்னும் பொருட்டு, ஓ அசைநிலை), காதலம் தோழி – பேரன்பு மிக்க தோழியே (அம்அசைநிலை), கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம் மடி பதம் பார்க்கும் – கொடிகள் பின்னிய சிறு காட்டில் இருண்ட நிறத்தையுடைய யானையின் சோரும் செவ்வியைப் பார்க்கும் (அரில் – தூறு, புதர், சிறுகாடு, நாகம் – யானை, செவ்வி – உரிய பொழுது), வயமான் துப்பின் – சிங்கத்தின் வலிமை போன்ற வலிமையையுடைய (துப்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஏனல் அம் சிறு தினைச் சேணோன் – தினை வகையில் ஒன்றாகிய அழகிய சிறுதினையைக் காக்கும் பரண்மேல் உள்ள கானவன், கையதைப் பிடிக்கை அமைந்த – கையின்கண் உள்ள கைப்பிடி அமைந்த (கையதை – ஐ சாரியை), கனல்வாய்க் கொள்ளி விடு பொறிச் சுடரின் மின்னி – தீயைத் தன்னிடத்தில் கொண்ட கொள்ளி விடும் தீப்பொறிகள் போல் மின்னி, அவர் சென்ற தேஎத்து நின்றதால் மழையே – தலைவர் சென்ற நாட்டில் (திசையில்) நின்றுப் பெய்கின்றது மழை (நின்றதால் – ஆல் அசைநிலை, தேஎத்து – அளபெடை, மழையே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 74, மதுரைக் கவுணியன் பூதத்தனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து,
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்தத்,
தண் பெயல் பொழிந்த பைதுறு காலை,
குருதி உருவின் ஒண் செம் மூதாய்
பெருவழி மருங்கில் சிறு பல வரிப்பப், 5
பைங்கொடி முல்லை மென் பதப் புது வீ
வெண்களர் அரி மணல் நன் பல் தாஅய்,
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில்
கருங்கோட்டு இரலைக் காமர் மடப் பிணை
மருண்ட மான் நோக்கம் காண்தொறும், நின் நினைந்து, 10
“திண் தேர் வலவ! கடவு” எனக் கடைஇ
இன்றே வருவர், ஆன்றிகம் பனி என
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும்
நின் வலித்து அமைகுவென் மன்னோ, அல்கல்
புன்கண் மாலையொடு பொருந்திக் கொடுங்கோல் 15
கல்லாக் கோவலர் ஊதும்
வல்வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே!
பாடல் பின்னணி: தலைவன் பொருள்வயின் பிரிந்தபொழுது வருந்திய தலைவி, வற்புறுத்தும் தோழியிடம் சொன்னது.
பொருளுரை: “போர் வினையை வெற்றியுடன் முடித்து, அவ்வெற்றியின் பொருட்டு மகிழ்ச்சியால் சிறப்புற்று, போரில் வல்ல இளைய மறவர் தன் வெற்றியை வாழ்த்த, குளிர்ந்த மழை பெய்ததால் நிலம் பசுமையுற்ற வேளையில் குருதியின் நிறத்தை ஒத்த ஒளிரும் சிவந்த தம்பலப்பூச்சிகள் பெரிய வழியின் பக்கங்களில் சிறிய பல வரிகளாக இருக்க, பசிய முல்லைக்கொடியின் மென்மையான பதத்தையுடைய நல்ல பல புதிய மலர்கள் வெள்ளைக் களரின் அறல்பட்ட மணலில் பரவியிருக்க, வண்டுகள் அரும்புகளைக் கிண்டி மலரச்செய்யும் குளிர்ந்த மணம் கமழும் முல்லை நிலத்தில், கரிய கொம்புகளையுடைய ஆண்மானின் விருப்பமுடைய இளைய பெண்மானின் மருண்ட பார்வையைக் காணும்பொழுதெல்லாம் நின்னை நினைத்து, ‘திண்ணிய தேரைச் செலுத்தும் பாகனே! நின் தேரை விரைந்து செலுத்துவாயாக’ எனக் கூறிச் செலுத்தி இன்றே வருவார். அவர் வரும் வரையும் நாம் துன்பத்தை மறப்போம்” என்று வற்புறுத்திக் கூறும் இனிய நல்ல சொற்களைப் பலமுறைக் கூறும், உன் சொற்களால் துணிந்து இருப்பேன், நாள்தோறும் துன்பம் தரும் மாலைப் பொழுதுடன் கூடி, வளைந்த கோலினையுடைய தம் தொழிலன்றிப் பிறதொழிலைக் கற்காத கோவலர் ஊதும் வலிய வாயையுடைய சிறு குழலை ஊதி வருத்தாதிருந்தால்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிது ஆகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதனாற் கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘இன்பத்தை வெறுத்தல் ‘ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 22) என்னுஞ் சூத்திரத்து, ‘கல்லாக் கோவலர் ஊதும் வல்வாய்ச் சிறுகுழல் வருந்தாக்காலே’ என்புழி இன்பத்தை வெறுத்தனளாயினும் புணர்ச்சிக்கு ஏதுவாம் என்பது கருத்து, என்றார் பேராசிரியர். சிறு பல வரிப்ப (4) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பல சிறிய வரிகளாகப் பரப்ப, பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிறிய பற்பல ஓவியங்களைத் தோற்றுவியாநிற்ப. மூதாய் வரிப்ப – அகநானூறு 14 – ஈயல் மூதாய் வரிப்ப, அகநானூறு 74 – செம் மூதாய் பெருவழி மருங்கில் சிறு பல வரிப்ப, அகநானூறு 283 – மூதாய் தண் நிலம் வரிப்ப, அகநானூறு 304 – ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப. மூதாய் – தம்பலப்பூச்சி, இந்திரகோபம், பட்டுப்பூச்சி, trombidium grandissimum. சிறிய சிவந்த நிறமுடைய பூச்சிகள் இவை. நிலத்தில் தவழ்வன. வெல்வெட் போன்ற மேல்பகுதியைக் கொண்டவை. மழைக்காலத்தில் இவற்றைக் காணலாம். இவை உள்ள பாடல்கள் – அகநானூறு 14, 54, 74, 134, 139, 283, 304, 374, கலித்தொகை 85, நற்றிணை 362. கொடுங்கோல் – பொ. வே. சோமசுந்தரனார் உரை, நெடுநல்வாடை 3 – ஆ முதலியவற்றை அலைந்து அச்சுறுத்தும் கோலாகலான் கொடுங்கோல். இனி வளைந்த கோல் எனினுமாம்.
சொற்பொருள்: வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த – போர் வினையை வெற்றியுடன் முடித்து அவ்வெற்றியின் பொருட்டு மகிழ்ச்சியால் சிறப்புற்று போரில் வல்ல இளைய மறவர் தன் வெற்றியை வாழ்த்த, தண் பெயல் பொழிந்த பைதுறு காலை குருதி உருவின் ஒண் செம் மூதாய் பெருவழி மருங்கில் சிறு பல வரிப்ப – குளிர்ந்த மழை பெய்ததால் நிலம் பசுமையுற்ற வேளையில் குருதியின் நிறத்தை ஒத்த ஒளிரும் சிவந்த தம்பலப்பூச்சிகள் பெரிய வழியின் பக்கங்களில் சிறிய பல வரிகளாக இருக்க (உருவின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பைங்கொடி முல்லை மென் பதப் புது வீ வெண்களர் அரி மணல் நன் பல் தாஅய் – பசிய முல்லைக்கொடியின் மென்மையான பதத்தையுடைய நல்ல பல புதிய மலர்கள் வெள்ளைக் களரின் அறல்பட்ட மணலில் பரவியிருக்க (பைங்கொடி – பண்புத்தொகை, தாஅய் – அளபெடை), வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில் – வண்டுகள் அரும்புகளைக் கிண்டி மலரச்செய்யும் குளிர்ந்த மணம் கமழும் முல்லை நிலத்தில், கருங்கோட்டு இரலைக் காமர் மடப் பிணை மருண்ட மான் நோக்கம் காண்தொறும் நின் நினைந்து – கரிய கொம்புகளையுடைய ஆண்மானின் விருப்பமுடைய (அழகிய) இளைய பெண்மானின் மருண்ட பார்வையைக் காணும்பொழுதெல்லாம் நின்னை நினைத்து, திண் தேர் வலவ! கடவு எனக் கடைஇ இன்றே வருவர் – ‘திண்ணிய தேரைச் செலுத்தும் பாகனே! நின் தேரை விரைந்து செலுத்துவாயாக’ எனக் கூறிச் செலுத்தி இன்றே வருவார் (கடைஇ – அளபெடை), ஆன்றிகம் பனி என வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும் – அவர் வரும் வரையும் நாம் துன்பத்தை மறப்போம் என்று வற்புறுத்திக் கூறும் இனிய நல்ல சொற்களைப் பலமுறைக் கூறும், நின் வலித்து அமைகுவென் – உன் சொற்களால் துணிந்து இருப்பேன், மன்னோ – மன், ஓ அசைநிலைகள், அல்கல் புன்கண் மாலையொடு பொருந்தி – நாள்தோறும் துன்பம் தரும் மாலைப் பொழுதுடன் கூடி, கொடுங்கோல் கல்லாக் கோவலர் ஊதும் வல்வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே – வளைந்த (கொடிய) கோலினையுடைய தம் தொழிலன்றிப் பிறதொழிலைக் கற்காத கோவலர் ஊதும் வலிய வாயையுடைய சிறு குழலை ஊதி வருத்தாதிருந்தால் (வருத்தாக்காலே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 75, மதுரைப் போத்தனார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
அருள் அன்று ஆக ஆள் வினை ஆடவர்
பொருள் என வலித்த பொருள் அல் காட்சியின்
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது,
எரி சினம் தவழ்ந்த இருங்கடற்று அடைமுதல்
கரிகுதிர் மரத்த கான வாழ்க்கை, 5
அடு புலி முன்பின் தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழல் படுக்கும்
அண்ணல் நெடுவரை, ஆம் அறப் புலர்ந்த
கல் நெறிப் படர்குவர் ஆயின் நன்னுதல்,
செயிர் தீர் கொள்கை, சின்மொழி துவர் வாய், 10
அவிர் தொடிய முன் கை ஆயிழை மகளிர்
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து,
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது
சென்று படு விறல் கவின் உள்ளி, என்றும்
இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவரும் 15
தருநரும் உளரோ இவ் உலகத்தான், என
மாரி ஈங்கை மாத்தளிர் அன்ன
அம் மா மேனி ஐது அமை நுசுப்பின்,
பல் காசு நிரைத்த, கோடு ஏந்து அல்குல்
மெல்லியல் குறுமகள், புலந்து பல கூறி 20
ஆனா நோயை ஆக யானே
பிரியச் சூழ்தலும் உண்டோ,
அரிது பெறு சிறப்பின் நின்வயினானே?
பாடல் பின்னணி: பொருள்வயின் தலைவன் பிரிவான் என வருந்திய தலைவியிடம் தலைவன் கூறியது. பழைய உரையில் இது தோழியின் கூற்றாக உள்ளது. பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனைத் தோழி கூற்றாகக் கருதுவாரும் உளர். அது பொருத்தமாகத் தோன்றவில்லை. தலைவன் கூற்றாகக் கோடலே நேரிதாம்.
பொருளுரை: மழைக்காலத்து ஈண்டையின் கரிய தளிரை ஒத்த அழகிய மாமை நிற மேனியையும், நுண்ணியதாக அமைந்த இடையையும், பல பொற்காசுகள் வரிசையாகக் கட்டப்பட்ட மேகலையுடைய பக்கம் உயர்ந்த அல்குலையும், மென்மைத் தன்மையையுமுடைய இளையவளே!
ஆண்கள், அருள் இல்லாது, பொருள் ஈட்டும் ஆள் வினை தான் உண்மைப் பொருள் எனத் துணிந்த, உண்மை இல்லாத அறிவையுடைய, வலிமை மிக்க உள்ளத்துடன், தளர்வு இல்லாது, தீயின் வெப்பம் படர்ந்த பெரிய காட்டின் புகுமிடத்தில், கருகிய இலைகள் உதிரப்பெற்ற மரங்களையுடைய, காட்டு வாழ்க்கையையுடைய கொல்லும் புலியின் வலிமையையும் வீரக்கழல் கட்டிய அடியையுமுடைய மறவர்கள், பண்டைய இயல்புடைய சிறுகுடி மன்றத்து நிழலில் படுக்கும், பெருமையுடைய உயர்ந்த மலையில் உள்ள நீர் இல்லாது புலர்ந்த கற்களுடைய வழியில் செல்வாராயின், நல்ல நெற்றியையும் குற்றமற்ற கொள்கையையும் சிலவாகிய சொற்களையும் பவளம் போன்ற வாயினையும் ஒளிரும் வளையல்கள் அணிந்த முன்கையினையும் ஆராய்ந்த அணிகலன்களையுமுடைய மகளிரின் முத்தாரம் பூண்ட பரந்த முலைகளையுடைய மார்பில், பெரும் காதலுடன், தங்கள் மலர் மாலைகளைக் குழையச்செய்யாது, தொலைந்த வெற்றிகரமான அழகை நினைத்து, என்றும் இரக்கம் கொள்பவர்கள் அல்லாது அழகை மீட்டுக் கொணர்ந்து கொடுப்பவர்கள் இவ்வுலகத்தில் உள்ளார்களோ என்று, வெறுத்துப் பலவும் கூறி, அமையாத துன்ப நோய் உடையை ஆக நீ இருக்கவும், யானே, பிரிவதை எண்ணுதலும் உண்டோ, அரிதாகப் பெற்ற சிறப்புடைய நின்னிடமிருந்து?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்’ என வரும் விதி கொள்க. அடைமுதல் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இலை முதலியன, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – புகுமிடம். அம் மா மேனி (18) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய கரிய நிறம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அழகிய மாமை நிறம். அடைமுதல் – இருங்கடற்று அடைமுதல் – அகநானூறு 75, வெங்கடற்று அடைமுதல் – அகநானூறு 389, வெங்கடற்று அடைமுதல் – நற்றிணை 164.
சொற்பொருள்: அருள் அன்று ஆக – அருள் இல்லாது ஆக, ஆள் வினை – பொருள் ஈட்டும் ஆள் வினை, ஆடவர் – ஆண்கள், பொருள் என வலித்த – உண்மைப் பொருள் எனத் துணிந்த, பொருள் அல் காட்சியின் – உண்மை இல்லாத அறிவையுடைய, மைந்து மலி உள்ளமொடு – வலிமை மிக்க உள்ளத்துடன், துஞ்சல் செல்லாது – தளர்வு இல்லாது, எரி சினம் தவழ்ந்த இருங்கடற்று அடைமுதல் – தீயின் வெப்பம் படர்ந்த பெரிய காட்டின் புகுமிடத்தில் (சினம் – நெருப்புக்கு ஆகுபெயர்), கரிகு உதிர் மரத்த – கருகிய இலைகள் உதிரப்பெற்ற மரங்களையுடைய (கரிகு – கரிகுபு என்னும் எச்சம் கரிகு என விகாரப்பட்டது, கரிகுதிர் – கரிந்த குதிர் என்றுமாம், மரத்த – அகரம் பன்மை உருபு), கான வாழ்க்கை அடு புலி முன்பின் தொடு கழல் மறவர் – காட்டு வாழ்க்கையையுடைய கொல்லும் புலியின் வலிமையையும் வீரக்கழல் கட்டிய அடியையுமுடைய மறவர்கள் (முன்பின் – வலிமை), தொன்று இயல் சிறுகுடி மன்று நிழல் படுக்கும் – பண்டைய இயல்புடைய சிறுகுடி மன்றத்து நிழலில் படுக்கும், அண்ணல் நெடுவரை ஆம் அறப் புலர்ந்த கல் நெறிப் படர்குவர் ஆயின் – பெருமையுடைய உயர்ந்த மலையில் உள்ள நீர் இல்லாது புலர்ந்த கற்களுடைய வழியில் செல்வாராயின், நன்னுதல் செயிர் தீர் கொள்கை சின்மொழி துவர் வாய் அவிர் தொடிய முன் கை ஆயிழை மகளிர் ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – நல்ல நெற்றியையும் குற்றமற்ற கொள்கையையும் சிலவாகிய சொற்களையும் பவளம் போன்ற வாயினையும் ஒளிரும் வளையல்கள் அணிந்த முன்கையினையும் ஆராய்ந்த அணிகலன்களையுமுடைய மகளிரின் முத்தாரம் பூண்ட பரந்த முலைகளையுடைய மார்பில், ஆராக் காதலொடு – பெரும் காதலுடன், தாரிடைக் குழையாது – தங்கள் மலர் மாலைகளைக் குழையச்செய்யாது (தாரிடைக் குழையாது – இடக்கரடக்கு), சென்று படு விறல் கவின் உள்ளி – சென்று அழிந்த வெற்றிகரமான அழகை நினைத்து, என்றும் இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவரும் தருநரும் உளரோ இவ் உலகத்தான் என – என்றும் இரக்கம் கொள்பவர்கள் அல்லாது அழகை மீட்டுக் கொணர்ந்து கொடுப்பவர்கள் இவ்வுலகத்தில் உள்ளார்களோ என்று (உளரோ – ஓகாரம் வினா), மாரி ஈங்கை மாத்தளிர் அன்ன அம் மா மேனி ஐது அமை நுசுப்பின் பல் காசு நிரைத்த, கோடு ஏந்து அல்குல் மெல்லியல் குறுமகள் – மழைக்காலத்து ஈண்டையின் கரிய தளிரை ஒத்த அழகிய மாமை நிற மேனியையும் நுண்ணியதாக அமைந்த இடையையும் பல பொற்காசுகள் வரிசையாகக் கட்டப்பட்ட மேகலையுடைய பக்கம் உயர்ந்த அல்குலையும் மென்மைத் தன்மையையுமுடைய இளையவளே (குறுமகள் – விளி), புலந்து பல கூறி – வெறுத்துப் பலவும் கூறி, ஆனா நோயை ஆக – அமையாத துன்ப நோய் உடையை நீ இருக்கவும், யானே – யானே, பிரியச் சூழ்தலும் உண்டோ – பிரியுமாறு எண்ணுதலும் உண்டோ, அரிது பெறு சிறப்பின் நின்வயினானே – அரிதாகப் பெற்ற சிறப்புடைய நின்னிடமிருந்து (வயினானே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 76, பரணர், மருதத் திணை – பரத்தை சொன்னது
மண்கனை முழவொடு மகிழ் மிகத் தூங்கத்
தண்துறை ஊரன் எம் சேரி வந்தென,
இன் கடுங்கள்ளின் அஃதை களிற்றொடு
நன்கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை
அவை புகு பொருநர் பறையின் ஆனாது 5
கழறுப என்ப அவன் பெண்டிர், அந்தில்
“கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன்,
வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை தெரியல்
சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ?” என
ஆதிமந்தி பேதுற்று இனைய 10
சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும்
அம் தண் காவிரி போல,
கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின் யானே.
பாடல் பின்னணி: பரத்தை தலைவியின் தோழியர் கேட்பக் கூறியது.
பொருளுரை: மண் செறிந்த (மார்ச்சனை உடைய) முழவுடன் காண்போர் மிகவும் மகிழ்ச்சி அடையும்படி நாங்கள் கூத்தாடிய பொழுது, குளிர்ந்த துறையினையுடைய ஊரின் தலைவன் எம் தெருவிற்கு வந்தான் என்பதை அறிந்த அவன் மனைவி, இனிய கடிய கள்ளினையுடைய அஃதை என்பவனின் யானைகளையும் நல்ல அணிகலன்களையும் வழங்கும் மகிழ்ச்சி பொருந்திய நாளோலக்கத்தை உடைய அவையில் புகும் பொருநர்களின் பறையைப் போல், விடாது என்னை இகழ்கின்றாள் எனக் கூறுகின்றனர். “கச்சினையும் கழலினையும் தேனொழுகும் தார் அணிந்த மார்பினை உடையவனும் கூறுபாட்டு அமைந்த பொலிந்த அழகுடைய மாலையை அணிந்தவனும் சுருண்ட மயிரினையுமுடைய அழகிய கூத்தனாகிய என் கணவன் ஆட்டனத்தியைக் கண்டீரோ?”, என ஆதிமந்தி கலங்கி வருந்திட, கரையில் மோதிப் பரவி, நேர் கிழக்கே ஓடும் அழகிய குளிர்ந்த காவிரி தன் அலைகளால் ஆட்டனத்தியைக் கைக்கொண்டாற் போல், அவள் கணவனைப் பற்றிக் கொள்ள யான் எண்ணியுள்ளேன்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்’ (தொல்காப்பியம், கற்பியல் 10) என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்’ (தொல்காப்பியம், கற்பியல் 10), என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுள் தலைவனின் காமக் கிழத்தியாய இளமைப் பருவத்தாள் ஒருத்தி, தன்பாற் தலைவன் வருவது பற்றித் தலைவி புலந்ததாகக் கேட்டவுழிப் பெருமிதம் கொண்டு கூறியதாகும் என்பர் நச்சினார்க்கினியர். சேரி (குறுந்தொகை 231ம் பாடல், 298ம் பாடல்) – உ. வே. சாமிநாதையர் உரை – தெரு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தெரு. பெண்டிர் (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவன் பெண்டிர் கழறுப என்றது தலைவியைக் குறித்து கூறியவாறு. ஈண்டுச் செறலால் ஒருமை பன்மையாயிற்று. ஒப்புமை – அகநானூறு 76 – அவை புகு பொருநர் பறையின் ஆனாது கழறுப என்ப அவன் பெண்டிர், அகநானூறு 216 – தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப் பெட்டாங்கு மொழிப என்ப, அகநானூறு 276, அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காணத் தாரும் தானையும் பற்றி, ஐங்குறுநூறு 40 – மகிழ்நன் ஒண்தொடி முன் கை யாம் அழப் பிரிந்து, தன் பெண்டிர் ஊர் இறை கொண்டனன் என்ப. கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன் (7) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன் என்னும் குறிப்பு முற்றுக்கள் எச்சமாய்ப் பொருநன் என்னும் பெயர்கொண்டு முடிந்தன. ஒப்புமை – அகநானூறு 45 – காதலர் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து ஆதிமந்தி போலப் பேதுற்று அலந்தனென் உழல்வென் கொல்லோ, அகநானூறு 76 – கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன் வகை அமைப் பொலிந்த வனப்பு அமை தெரியல் சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ என ஆதிமந்தி பேதுற்று இனைய, அகநானூறு 135 – ஆதிமந்தியின் அறிவு பிறிதாகிப் பேதுற்றிசினே காதலம் தோழி, அகநானூறு 222 – ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத் தாழ் இருங்கதுப்பின் காவிரி வவ்வலின் மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த ஆதிமந்தி, அகநானூறு 236 – கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி போல, 396 – மந்தி பனி வார் கண்ணள் பல புலந்து உறைய, குறுந்தொகை 31, ஆதிமந்தியார் பாடல் – யாண்டும் காணேன் மாண்டக்கோனை யானும் ஓர் ஆடுகள மகளே, என் கைக் கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே. வரலாறு – அஃதை, ஆதிமந்தி, காவிரி. சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27). அந்தில் – அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவி என்று ஆயிரண்டு ஆகும் இயற்கைத்து என்ப (இடையியல் 19, தொல்காப்பியம்).
சொற்பொருள்: மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்கத் தண்துறை ஊரன் எம் சேரி வந்தென – மண் செறிந்த (மார்ச்சனை உடைய) முழவுடன் காண்போர் மிகவும் மகிழ்ச்சி அடையும்படி நாங்கள் கூத்தாட குளிர்ந்த துறையினையுடைய ஊரின் தலைவன் எம் சேரிக்கு வந்தானாக (சேரி – தெரு, குடியிருப்பு), இன் கடுங்கள்ளின் அஃதை களிற்றொடு நன்கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை அவை புகு பொருநர் பறையின் ஆனாது கழறுப என்ப அவன் பெண்டிர் – இனிய கடிய கள்ளினையுடைய அஃதை என்பவனின் யானைகளையும் நல்ல அணிகலன்களையும் வழங்கும் மகிழ்ச்சி பொருந்திய நாளோலக்கத்தை உடைய அவையில் புகும் பொருநர்களின் பறையைப் போல் விடாது என்னை இகழ்கின்றாள் அவன் மனைவி எனக் கூறுகின்றனர் (நாளோலக்கம் – மன்னர் அமைச்சர்களுடன் காலையில் கூடும் மண்டபம், பறையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அந்தில் – அசைநிலை, கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன் வகை அமைப் பொலிந்த வனப்பு அமை தெரியல் சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ – கச்சினையும் கழலினையும் தேனொழுகும் தார் அணிந்த மார்பினை உடையவனும் கூறுபாட்டு அமைந்த பொலிந்த அழகுடைய மாலையை அணிந்தவனும் சுருண்ட மயிரினையுமுடைய அழகிய கூத்தனாகிய ஆட்டனத்தியைக் கண்டீரோ (தேம் – தேன் என்றதன் திரிபு, கண்டீரோ – ஓகாரம் வினா), என ஆதிமந்தி பேதுற்று இனைய – என ஆதிமந்தி கலங்கி வருந்திட , சிறை பறைந்து உரைஇ – கரையில் மோதிப் பரவி (உரைஇ – அளபெடை), செங்குணக்கு ஒழுகும் அம் தண் காவிரி போல கொண்டு கை வலித்தல் – நேர் கிழக்கே ஓடும் அழகிய குளிர்ந்த காவிரி தன் அலைகளால் கைக்கொண்டாற் போல் பற்றிக் கொள்ளுதலை, சூழ்ந்திசின் யானே – யான் எண்ணியுள்ளேன் (சூழ்ந்திசின் – சின் தன்மை அசைச் சொல், யானே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 77, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
நன்னுதல் பசப்பவும் ஆள் வினை தரீஇயர்
துன் அருங்கானம் துன்னுதல் நன்று எனப்
பின்னின்று சூழ்ந்தனை ஆயின் நன்று இன்னாச்
சூழ்ந்திசின் வாழிய நெஞ்சு வெய்துற
இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும் 5
குடி பதிப் பெயர்ந்த சுட்டுடை முது பாழ்
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்
உயிர் திறம் பெயர நல் அமர்க் கடந்த
தறுகணாளர் குடர் தரீஇத் தெறுவரச் 10
செஞ்செவி எருவை அஞ்சுவர இகுக்கும்
கல் அதர்க் கவலை போகின் சீறூர்ப்
புல் அரை இத்திப் புகர்படு நீழல்
எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை
வானவன் மறவன் வணங்கு வில் தடக்கை 15
ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன்
பொருந்தா மன்னர் அருஞ்சமத்து உயர்த்த
திருந்து இலை எஃகம் போல
அருந்துயர் தரும் இவள் பனி வார் கண்ணே.
பாடல் பின்னணி: தலைவன் பிரியக்கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்குவித்தது.
பொருளுரை: என் நெஞ்சே! நீ நீடு வாழ்வாயாக! நம் தலைவியின் நல்ல நெற்றி பசலை அடையும்படிப் பொருள் ஈட்டிக் கொண்டுவரும் பொருட்டுச் செல்லுவதற்கு அரிய காட்டிற்குச் செல்லுதல் நல்லது என, என் பின் நின்று நீ எண்ணுகின்றாய் ஆயின், மிகவும் கொடியதை நீ எண்ணுகின்றாய்.
வெம்மை மிகும்படி, இடியை உமிழும் மழை முகில்கள் நீங்கியதால், எங்கும் குடிகள் தத்தம் இருப்பிடங்களை விட்டு நீங்கி வேறு இடங்களுக்குச் சென்று விட்டதைப் பலரும் சுட்டிக் காட்டும் அளவிற்கு உள்ள பழைய பாழ்பட்ட பாலை நிலத்தில், கயிற்றால் பிணிக்கப்பட்ட குடத்தில் உள்ள ஓலையை எடுத்துக் கொள்ளும் பொருட்டு, அக்குடத்தின் மேல் இட்ட இலச்சினையை ஆராய்ந்து நீக்கும் ஆவண மக்கள் போல், நல்ல போரினை வென்று இறந்த அஞ்சாத மறவர்களின் குடலை அவர்கள் உடலிலிருந்து நீக்கும் பொருட்டு அச்சம் தரும் சிவந்த காதினையுடைய பருந்துகள் கண்டவர்கள் அஞ்சுமாறு இழுத்து எடுக்கும், கற்கள் பொருந்திய பிரிவுகளையுடைய வழியில் யாம் சென்றால், சிற்றூர்களில் பொலிவில்லாத அடியையுடைய இத்தி மரத்தின் புள்ளியுடைய நிழலில், பெருங்காற்று வீசும் இருள் மிக்க மாலை நேரத்தில், சேரனின் படைத்தலைவனான வளைந்த வில்லைப் பெரிய கைகளில் கொண்ட, எல்லையில்லாத கள்ளின் மிக்க மகிழ்ச்சியையுடைய பிட்டன் என்பவன், பகை மன்னருடன் பொருதுகின்ற வெல்லுதற்கு அரிய போரில் உயர்த்திய, திருத்தமான இலையையுடைய வேல் போல் தோன்றி, பொறுத்தற்கு அரிய துன்பத்தைத் தரும், நம் தலைவியின் கண்ணீரை வடிக்கும் கண்கள்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்’ என வரும் விதி கொள்க. வரலாறு – வானவன் மறவன் பிட்டன். தேர்தல் – சங்க இலக்கியத்தில் தேர்தல் பற்றின குறிப்பு இப்பாடல் ஒன்றில் மட்டுமே உள்ளது. சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை). தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24). ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்’ என்றது, ஊராண்மை நாட்டாண்மைக் கழகங்கட்கு உறுப்பினரைச் தேர்ந்தெடுக்கும்பொருட்டு, உடன்பாடு தெரிவிக்கும் தகுதியுடையோர் பலரும் எழுதி குடத்தின்கண் போகட்ட ஆவண மாக்கள் பலர் முன் குடத்தின் மேலிட்ட இலச்சினையைக் கண்டு நீக்கி, உள்ளிருக்கும் ஓலைகளை எடுத்து எண்ணித் தேரப்பட்டார் இவரென முடிபு செய்வதோர் வழக்கத்தினைக் குறிப்பது. இது குடவோலை என்று கூறப்படும். பழைய கல்வெட்டுக்களில் இம்முறை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
சொற்பொருள்: நன்னுதல் பசப்பவும் ஆள் வினை தரீஇயர் – நல்ல நெற்றி பசலை அடையும்படிப் பொருள் ஈட்டிக் கொண்டுவரும் பொருட்டு (ஆள் வினை – பொருள் ஈட்டும் முயற்சி, தரீஇயர் – பொருள் தரீஇயர் என விரித்துரைக்க, அளபெடை), துன் அருங்கானம் துன்னுதல் நன்று எனப் பின்னின்று சூழ்ந்தனை ஆயின் – செல்லுவதற்கு அரிய காட்டிற்குச் செல்லுதல் நல்லது என என் பின் நின்று எண்ணுகின்றாய் ஆயின், நன்று இன்னாச் சூழ்ந்திசின் – மிகவும் கொடியதை நீ எண்ணுகின்றாய் (சின் – முன்னிலை அசைச் சொல்), வாழிய – நீ நீடு வாழ்வாயாக, நெஞ்சு – என் நெஞ்சே (விளி), வெய்து உற – வெம்மை மிகும்படி, இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும் குடி பதிப் பெயர்ந்த சுட்டுடை முது பாழ் – இடியை உமிழும் முகில்கள் நீங்கியதால் எங்கும் குடிகள் தத்தம் இருப்பிடங்களை விட்டு நீங்கி வேறு இடங்களுக்குச் சென்று விட்டதைப் பலரும் சுட்டிக் காட்டும் அளவிற்கு உள்ள பழைய பாழ்பட்ட பாலை நிலத்தில் (நீங்கி – நீங்கலால் எனத் திரிக்க), கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார் பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் – கயிற்றால் பிணிக்கப்பட்ட குடத்தில் உள்ள ஓலையை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அக்குடத்தின் மேல் இட்ட இலச்சினையை ஆராய்ந்து நீக்கும் ஆவண மக்கள் போல் (மாக்களின் – அதிகாரிகள் போல், இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), உயிர் திறம் பெயர நல் அமர்க் கடந்த தறுகணாளர் – நல்ல போரினை வென்று இறந்த அஞ்சாத மறவர்களின், குடர் தரீஇத் தெறுவரச் செஞ்செவி எருவை – குடலைக் கொள்ளும் பொருட்டு அச்சம் தரும் சிவந்த காதினையுடைய பருந்துகள் (குடர் – குடல் என்பதன் போலி, தரீஇ – அளபெடை), அஞ்சுவர இகுக்கும் கல் அதர்க் கவலை போகின் – கண்டவர்கள் அஞ்சுமாறு இழுத்து எடுக்கும் கற்கள் பொருந்திய பிரிவுகளையுடைய வழியில் யாம் சென்றால், சீறூர்ப் புல் அரை இத்திப் புகர்படு நீழல் – சிற்றூர்களில் பொலிவில்லாத அடியையுடைய இத்தி மரத்தின் புள்ளியுடைய நிழலில் (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை – பெருங்காற்று வீசும் இருள் மிக்க மாலை நேரத்தில், வானவன் மறவன் வணங்கு வில் தடக்கை ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன் – சேரனின் படைத்தலைவனான வளைந்த வில்லைப் பெரிய கைகளில் கொண்ட எல்லையில்லாத கள்ளின் மிக்க மகிழ்ச்சியையுடைய பிட்டன் என்பவன், பொருந்தா மன்னர் அருஞ்சமத்து உயர்த்த – பகை மன்னருடன் பொருதுகின்ற வெல்லுதற்கு அரிய போரில் உயர்த்திய, திருந்து இலை எஃகம் போல – திருத்தமான இலையையுடைய (அகன்ற மேல் பகுதியையுடைய) வேலைப்போல், அருந்துயர் தரும் – பொறுத்தற்கு அரிய துன்பத்தைத் தரும், இவள் பனி வார் கண்ணே – இவளுடைய கண்ணீரை வடிக்கும் கண்கள் (கண்ணே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 78, மதுரை நக்கீரனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின்,
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு கடாஅத்துப்,
பொறி நுதல் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல்
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ, 5
கடுஞ்சூல் மடப்பிடி நடுங்கும் சாரல்,
தேம்பிழி நறவின் குறவர் முன்றில்,
முந்தூழ் ஆய் மலர் உதிரக் காந்தள்
நீடு இதழ் நெடுந்துடுப்பு ஒசியத் தண்ணென
வாடை தூக்கும் வருபனி அற்சிரம், 10
நம் இல் புலம்பின், நம் ஊர்த் தமியர்
என் ஆகுவர் கொல் அளியர் தாம், என
எம் விட்டு அகன்ற சின்னாள் சிறிதும்
உள்ளியும் அறிதிரோ, ஓங்கு மலை நாட,
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை 15
வாய்மொழிக் கபிலன் சூழச், சேய் நின்று
செழுஞ்செய்ந்நெல்லின் விளை கதிர் கொண்டு
தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி
யாண்டு பல கழிய வேண்டு வயிற் பிழையா,
தாள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி, 20
ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய,
கடும் பரிப் புரவிக் கைவண் பாரி
தீம் பெரும் பைஞ்சுனைப் பூத்த
தேம் கமழ் புது மலர் நாறும், இவள் நுதலே?
பாடல் பின்னணி: களவுக் காலத்தில் பிரிந்து வந்த தலைவனுக்குத் தோழி உரைத்தது.
பொருளுரை: உயர்ந்த மலைகள் பொருந்திய நாட்டின் தலைவனே! அகன்ற இடத்தையுடைய காட்டில், ஆளிக்கு (யாளிக்கு) அஞ்சித் தன் இனத்தைத் தன்னிடத்தில் கூட்டிக் கொள்ளும், விளங்கித் தோன்றும் மிக்க வலிமையையும், வாயில் புகும் வரிகளையுடைய வண்டுகள் ஒலிப்பதற்குக் காரணமான மத நீரையுமுடைய, புள்ளிகள் பொருந்திய நெற்றியுடன் பொலிந்த வலிமை பொருந்திய ஆண் யானைகளின் தலைவன், தன் கரிய சருச்சரை (சொரசொரப்பு) உடைய பெரிய தும்பிக்கையால் பாதுகாக்கும் பொருட்டுத் தழுவ, முதல் சூலையுடைய (கர்ப்பதையுடைய) அதன் இளைய பிடி யானை நடுங்கும் பக்க மலையில், தேனில் பிழிந்த கள்ளினையுடைய குறவர்களின் முற்றத்தில், மூங்கில்களின் அழகிய மலர்கள் உதிரவும், நீண்ட இதழ்களையுடைய காந்தள் மலர்களின் நீண்ட தண்டுகள் முறியவும், குளிருடன் வாடைக்காற்று வீசும் பனி தோன்றும் முன்பனிக் காலத்தில், நம் இல்லம் தனித்திருக்கும்படி, ‘நம் ஊரில் தனியாக இருப்பவர்கள் என்ன ஆவார்களோ? அளியத்தக்கவர்கள் அவர்கள்’ என எம்மை விட்டு நீங்கிய சில நாட்களுக்குள் நினைத்துப் பார்த்தீரோ,
உலகெல்லாம் பரவும் பலரும் புகழும் நல்ல புகழினையும் மெய் மொழிகளையுமுடைய புலவர் கபிலன் சூழ, தொலைவில் உள்ள வளமையான நெற்கதிர்களைக் கொண்டு வந்து பெரிய தண்டுகளையுடைய ஆம்பல் மலர்களுடன் சமைத்து உண்டு, ஆண்டுகள் பல கழியவும், விரும்பும் இடத்திலிருந்து நகராமல், முயற்சியை மேற்கொண்டு, வாட்போரினால் கலக்கி, உயர்ந்த மருப்புகளைக் (கோடுகளைக், தந்தங்களைக்) கொண்ட களிற்று யானைகளையுடைய மூவேந்தர்களையும் ஓடச் செய்த, மிக்க விரையும் குதிரைகளையும் பெரும் வள்ளன்மையையும் உடைய பாரியின் பறம்பு மலையில் உள்ள, இனிய பெரிய பசிய சுனையில் மலர்ந்த தேன் மணம் கமழும் புதிய மலர்போல் மணக்கும் இவளுடைய நெற்றியை?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘வேண்டாப் பிரிவினும்’ என வரும் விதி கொள்க. பறம்பு மலையின் சுனை – அகநானூறு 78 – கடும் பரிப் புரவிக் கைவண் பாரி தீம் பெரும் பைஞ்சுனை, குறுந்தொகை 196 – பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண்ணீர், புறநானூறு 109 – வானத்து மீன் கண் அற்று அதன் சுனையே, புறநானூறு 116 – தீ நீர்ப் பெருங்குண்டு சுனை, புறநானூறு 176 – பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண்ணீர், புறநானூறு 337 – பாரி பறம்பின் பனிச் சுனை. ஆளி – நற்றிணை 205 – ஆளி நன்மான் வேட்டு எழு கோள் உகிர்ப் பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி ஏந்து வெண்கோட்டு வயக் களிறு இழுக்கும். ஆளி இருக்கும் பாடல்கள் – அகநானூறு 78, 252, 381, நற்றிணை 205, புறநானூறு 207, குறிஞ்சிப்பாட்டு 252, பெரும்பாணாற்றுப்படை 258, பொருநராற்றுப்படை 139. வரலாறு – பாரி, கபிலன். நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80). தேம்பிழி நறவின் குறவர் முன்றில் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேனினைப் பிழித்தெடுத்த கள்ளினை உடைய குறவரின் முற்றத்தில், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இனிமையுறப் பிழிந்த கள்ளினையுடைய குறவர்களது முற்றத்தில். காந்தள் நீடு இதழ் நெடுந்துடுப்பு (8–9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீண்ட இதழ்களையுடைய காந்தள் மலர்களின் நெடிய தண்டு, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – காந்தளது நீண்ட இதழையுடைய பெரிய மலர். தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25). எறுழ் – எறுழ் வலி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 92). புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35). ஆளி (பொருநராற்றுப்படை 139) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரிமா, அரிமாப் போன்ற வேறொரு விலங்கென எண்ணவும் இடமுள்ளது. பழைய உரை – ‘நனந்தலை …….. மடப்பிடி நடுங்கும்’ என்றது, ‘யானை காக்கவும் பிடி நடுங்கினாற்போல’ நீயிர் இவளைப் பாதுகாக்க வேண்டும் என்னுங் கருத்துடையரா இருக்கவும் பிரிவிற்கு அஞ்சா நின்றான் என்றவாறு. பொ. வே. சோமசுந்தரனார் உரை – மூவேந்தரும் பாரியின் பறம்புமலையை முற்றியிருந்த பொழுது கபிலர் கிளிகளைப் பழக்கிச் சேய்மையிற் சென்று நெற்கதிர் கொய்து கொணரச்செய்து அதனால் அரண்மனை அகத்துள்ளாரை இனிதாக உண்பித்த வரலாறு குறிப்பிட்டிருத்தலும் உணர்க. இவ்வரலாற்றை புறநானூற்றிலும் காணலாம். அகநானூறு 303ம் செய்யுளில் ஒளவையார் ‘உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் நிரை பறைக் குரீஇ இனம் காலைப் போகி முடங்கு புறச் செந்நெல் தரீஇயர் ஓராங்கு இரை தேர் கொட்பினவாகிப் பொழுதுபடப் படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு’ எனக் குறிப்பிட்டுள்ளமை உணர்க.
சொற்பொருள்: நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி இனம் தலைத் தரூஉம் எறுழ் கிளர் முன்பின் – அகன்ற இடத்தையுடைய காட்டில் ஆளிக்கு அஞ்சித் தன் இனத்தைத் தன்னிடத்தில் கூட்டிக் கொள்ளும் விளங்கித் தோன்றும் மிக்க வலிமையுடன் (தலை – அசையுமாம், தரூஉம் – அளபெடை, எறுழ் – வலிமை, முன்பு – வலிமை, ஒருபொருட் பன்மொழி), வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து – வரிகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் வாயில் புகும் மத நீரை உடைய (ஞிமிறு – மிஞிறு, எழுத்து மாறியபடியாம், வண்டு என்பது தான் இரண்டிற்கும் பொருள், கடாஅத்து – அளபெடை, அத்துச் சாரியை), பொறி நுதல் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல் இரும் பிணர்த் தடக் கையின் ஏமுறத் தழுவ – புள்ளிகள் பொருந்திய நெற்றியுடன் பொலிந்த வலிமை பொருந்திய ஆண் யானைகளின் தலைவன் கரிய சருச்சரை (சொரசொரப்பு) உடைய பெரிய தும்பிக்கையால் பாதுகாக்கும் பொருட்டுத் தழுவ, கடுஞ்சூல் மடப்பிடி நடுங்கும் சாரல் – முதல் சூலையுடைய (கர்ப்பதையுடைய) அதன் இளைய பிடி யானை நடுங்கும் பக்க மலையில் (கடுஞ்சூல், முதல் கர்ப்பம்), தேம்பிழி நறவின் குறவர் முன்றில் – தேனில் பிழிந்த கள்ளினையுடைய குறவர்களின் முற்றத்தில் (முன்றில் – இல்முன்), முந்தூழ் ஆய் மலர் உதிரக் காந்தள் நீடு இதழ் நெடுந்துடுப்பு ஒசியத் தண்ணென வாடை தூக்கும் – மூங்கில்களின் அழகிய மலர்கள் உதிரவும் நீண்ட இதழ்களையுடைய காந்தள் மலர்களின் தண்டுகள் முறியவும் குளிருடன் வாடைக்காற்று வீசும், வருபனி அற்சிரம் – பனி தோன்றும் முன்பனிக் காலத்தில், நம் இல் புலம்பின் – நம் இல்லம் தனித்திருக்கும்படி, நம் ஊர்த் தமியர் என் ஆகுவர் கொல் அளியர் தாம் என – நம் ஊரில் தனியாக இருப்பவர்கள் என்ன ஆவார்களோ அளியத்தக்கவர்கள் அவர்கள் என, எம் விட்டு அகன்ற சின்னாள் சிறிதும் உள்ளியும் அறிதிரோ – எம்மை விட்டு நீங்கிய சில நாட்களுக்குள் நினைத்துப் பார்த்தீரோ (அறிதிரோ – ஓகாரம் வினா), ஓங்கு மலை நாட – உயர்ந்த மலைகள் பொருந்திய நாட்டின் தலைவனே (விளி), உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை வாய்மொழிக் கபிலன் சூழ – உலகெல்லாம் பரவும் பலரும் புகழும் நல்ல புகழினையும் மெய் மொழிகளையுமுடைய புலவர் கபிலன் சூழ, சேய் நின்று செழுஞ்செய்ந் நெல்லின் விளை கதிர் கொண்டு தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி – தொலைவில் உள்ள வளமையான நெற்கதிர்களைக் கொண்டு வந்து பெரிய தண்டுகளையுடைய ஆம்பல் மலர்களுடன் சமைத்து உண்டு, யாண்டு பல கழிய – ஆண்டுகள் பல கழியவும், வேண்டு வயிற் பிழையா – விரும்பும் இடத்திலிருந்து நகராமல் (பிழையா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்), தாள் இடூஉக் கடந்து – முயற்சியை மேற்கொண்டு (இடூஉ – அளபெடை), வாள் அமர் உழக்கி – வாட்போரினால் கலக்கி (தாள் – முயற்சி), ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய – உயர்ந்த மருப்புகளைக் (கோடுகளைக், தந்தங்களைக்) கொண்ட களிற்று யானைகளையுடைய மூவேந்தர்களையும் ஓடச் செய்த, கடும் பரிப் புரவிக் கைவண் பாரி – மிக்க விரையும் குதிரைகளையும் பெரும் வள்ளன்மையையும் உடைய பாரியின், தீம் பெரும் பைஞ்சுனைப் பூத்த தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே – இனிய பெரிய பசிய சுனையில் மலர்ந்த தேன் மணம் கமழும் புதிய மலர்போல் மணக்கும் இவளுடைய நெற்றியை (தேம் – தேன் என்றதன் திரிபு, நுதலே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 79, குடவாயில் கீரத்தனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
தோள் பதன் அமைத்த கருங்கை ஆடவர்
கனை பொறி பிறப்ப நூறி வினைப் படர்ந்து,
கல் உறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில்,
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
வன்புலம் துமியப் போகிக், கொங்கர் 5
படுமணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந்நிலக் குரூஉத் துகள்
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
நனந்தலை அழுவம் நம்மொடு துணைப்ப,
வல்லாங்கு வருதும் என்னாது அல்குவர 10
வருந்தினை வாழி என் நெஞ்சே, இருஞ்சிறை
வளைவாய்ப் பருந்தின் வான் கண் பேடை,
ஆடுதொறு கனையும் அவ்வாய்க் கடும் துடிக்
கொடுவில் எயினர் கோள் சுரம் படர
நெடுவிளி பயிற்றும் நிரம்பா நீள் இடை, 15
கல் பிறங்கு அத்தம் போகி,
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்த நீயே.
பாடல் பின்னணி: பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைச் சுரத்தில் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பொருளுரை: என் நெஞ்சே! நீ நீடு வாழ்வாயாக! ஆடுந்தோறும் ஒலிக்கும் அழகிய வாயையுடைய கடிய துடியையும் வளைந்த (கொடிய) வில்லையுமுடைய எயினர், வழிப்போக்கர்களின் பொருட்களைக் கொள்ளும் பாலை நிலத்தில் செல்ல, பெரிய சிறகினையும் வளைந்த வாயினையுமுடைய பருந்தின் வெண்ணிறக் கண்களையுடைய பேடை தன் துணையை நோக்கி, நெடிய கூப்பிடுதலைச் செய்யும், செல்லத் தொலையாத நீண்ட இடமாகிய, கற்கள் விளங்கும் காட்டில் நடந்து, நிலையில்லாத பொருள் விருப்பத்தினால் நம் தலைவியைப் பிரிந்த நீ,
தோளில் கட்டுச் சோற்றைத் தொங்கவிட்ட வலிமையான கைகளையுடைய ஆண்கள், தம் தொழிலில் சென்று, மிகுதியான தீப்பொறி உண்டாகப் பாறைகளை வெட்டி, தோண்டுதலைச் செய்து இயற்றிய மிக்க உவர்ப்புடைய கிணற்றில், மண் உடைய பக்கத்தில் நீரைக் குடிக்கும் பொருட்டு, வன்னிலம் கால்களால் வெட்டுப்படும்படிச் சென்று, ஒலிக்கும் மணிகள் பூண்ட கொங்கு நாட்டவரின், நீரைக் குடிப்பதற்குத் தலை நிமிர்ந்து செல்லும் சிவந்த ஆக்கள் (பசுக்கள்) கூட்டம் கிளப்பிய செம்மண் நிலத்தின் நிறம் பொருந்திய புழுதி எழுந்து, அகன்ற பெரிய வானின்கண் மிகுதியாகத் தோன்றும், இடம் அகன்ற காட்டிற்கு நம்முடன் துணையாக வலிமையுடன் செல்வோம் என்னாது, இங்கே வந்து தங்கிய அளவில் நீ வருந்துகின்றாய்!
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்’ என வரும் விதி கொள்க. வரலாறு – கொங்கர். நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).
சொற்பொருள்: தோள் பதன் அமைத்த கருங்கை ஆடவர் – தோளில் கட்டுச் சோற்றைத் தொங்கவிட்ட வலிமையான கைகளையுடைய ஆண்கள், கனை பொறி பிறப்ப நூறி – மிகுதியான தீப்பொறி உண்டாகப் பாறைகளை வெட்டி, வினைப் படர்ந்து – தம் தொழிலில் சென்று, கல் உறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில் – தோண்டுதலைச் செய்து இயற்றிய மிக்க உவர்ப்புடைய கிணற்றில், பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய – மண் உடைய பக்கத்தில் நீரைக் குடிக்கும் பொருட்டு, வன்புலம் துமியப் போகிக் கொங்கர் படுமணி ஆயம் – வன்னிலம் வெட்டுப்படும்படிச் சென்று ஒலிக்கும் கொங்கு நாட்டவரின் மணிகளையுடைய ஆக்கள் (பசுக்கள்), நீர்க்கு நிமிர்ந்து செல்லும் சேதா எடுத்த செந்நிலக் குரூஉத் துகள் – நீரைக் குடிப்பதற்குத் தலை நிமிர்ந்து செல்லும் சிவந்த ஆக்கள் கிளப்பிய செம்மண் நிலத்தின் நிறம் பொருந்திய புழுதி (குரூஉ – அளபெடை), அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும் – அகன்ற பெரிய வானின்கண் மிகுதியாகத் தோன்றும், நனந்தலை அழுவம் நம்மொடு துணைப்ப வல்லாங்கு வருதும் என்னாது – இடம் அகன்ற காட்டிற்கு நம்முடன் துணையாக வலிமையுடன் செல்வோம் என்னாது, அல்குவர வருந்தினை – இங்கே வந்து தங்கிய அளவில் நீ வருந்துகின்றாய் (அல்குதல் – தங்குதல்), வாழி – நீ நீடு வாழ்வாயாக, என் நெஞ்சே – என் நெஞ்சே, இருஞ்சிறை வளைவாய்ப் பருந்தின் வான் கண் பேடை – பெரிய சிறகினையும் வளைந்த வாயினையுமுடைய பருந்தின் வெண்ணிறக் கண்களையுடைய பேடை, ஆடுதொறு கனையும் – ஆடுந்தோறும் ஒலிக்கும், அவ்வாய்க் கடும் துடிக் கொடுவில் எயினர் – அழகிய வாயையுடைய கடிய துடியையும் வளைந்த (கொடிய) வில்லையுமுடைய எயினர், கோள் சுரம் படர – வழிப்போக்கர்களின் பொருட்களைக் கொள்ளும் பாலை நிலத்தில் செல்ல, நெடுவிளி பயிற்றும் நிரம்பா நீள் இடை – நெடிய கூப்பிடுதலைச் செய்யும் செல்லத் தொலையாத நீண்ட இடம், கல் பிறங்கு அத்தம் போகி நில்லாப் பொருட்பிணிப் பிரிந்த நீயே – கற்கள் விளங்கும் காட்டில் நடந்து நிலையில்லாத பொருள் விருப்பத்தினால் பிரிந்த நீ (நீயே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 80, மருங்கூர் கிழார் பெருங்கண்ணணார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கொடுந்தாள் முதலையொடு கோட்டு மீன் வழங்கும்
இருங்கழி இட்டுச் சுரம் நீந்தி இரவின்
வந்தோய் மன்ற, தண் கடல் சேர்ப்ப,
நினக்கு எவன் அரியமோ யாமே? எந்தை
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த 5
பல் மீன் உணங்கல் படு புள் ஓப்புதும்,
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
ஒண் பன் மலரக் கவட்டு இலை அடும்பின்
செங்கேழ் மென் கொடி ஆழி அறுப்ப,
இன மணிப் புரவி நெடுந்தேர் கடைஇ, 10
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன்
தண் நறும் பைந்தாது உறைக்கும்
புன்னை அம் கானல், பகல் வந்தீமே.
பாடல் பின்னணி: இரவுக்குறி வந்த தலைவனிடம் தோழி சொல்லியது. இரவுக்குறி மறுத்து இனிப் பகற்குறிக்கண் வருக என்றது.
பொருளுரை: நெய்தல் நிலத் தலைவனே! வளைந்த கால்களையுடைய முதலைகளோடு, கொம்பையுடைய மீன்கள் உலவும், பெரிய உப்பங்கழி வழியாகக் குறுகிய அரிய பாதையில் நீ வந்துள்ளாய்!
நீர்முள்ளிச் செடிகள் தழைத்த நீரடைந்த கடற்கரையில், ஒளியுடைய பல மலர்களையுடைய பிளவுபட்ட இலைகளையுடைய அடும்பின் சிவந்த நிறமுடைய மெல்லிய கொடிகளை உன்னுடைய தேரின் உருள் (சக்கரம்) அறுத்துவர, பல மணிகளை அணிந்த குதிரைகளைப் பூட்டிய உயர்ந்த தேரினைச் செலுத்தி, ஒளியுடைய இலைகளுடன் பொலிந்து விளங்கும் பூங்கொத்துக்கள் மலர்ந்த பொன்போலும் குளிர்ச்சியுடைய, நறுமணமான, பசுமையான தாதுக்களைச் சொரியும் புன்னை மரங்களுடைய அழகிய கடற்கரைச் சோலைக்குப் பகலில் வருவாயாக.
அங்கு நாங்கள், எங்கள் தந்தை, பொருந்திய அலைகளையுடைய கடலில் துழாவிக் கொணர்ந்த, பல வகை மீன்களை உலர வைத்து, அவற்றைத் தாக்கும் பறவைகளை விரட்டிக் கொண்டிருப்போம். இவ்வாறு எம்மிடம் வருவது கடினம் என்று ஏன் நினைக்கின்றாய்?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘களனும் பொழுதும் வரை நிலை விலக்கி காதல் மிகுதி உளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என்பதன்கண் அமைத்திடுக. பகற்குறி – அகநானூறு 80 – புன்னை அம் கானல் பகல் வந்தீமே, அகநானூறு 218 – தண் பெருஞ்சாரல் பகல் வந்தீமே, நற்றிணை 156 – அதனால் பகல் வந்தீமோ. மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).
சொற்பொருள்: கொடும் தாள் – வளைந்த கால்கள், முதலையொடு – முதலைகளோடு, கோட்டு மீன் வழங்கும் – கொம்பையுடைய மீன் திரியும், சுறா மீன் திரியும், இருங்கழி – பெரிய உப்பங்கழி, கரிய உப்பங்கழி, இட்டுச் சுரம் நீந்தி – குறுகிய அரிய பாதையில், இரவின் வந்தோய் – இரவு வேளையில் வருகின்றாய் (வந்தோய் – ஆ ஓ ஆயிற்று செய்யுள் ஆகலின்), மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், தண் கடல் சேர்ப்ப – குளிர்ந்த கடலையுடைய நெய்தல் நிலத் தலைவனே (சேர்ப்ப – அண்மை விளி), நினக்கு எவன் அரியமோ யாமே – எம்மை அடைவது எவ்வாறு கடினமோ (கடினமோ – ஓகாரம் வினா, யாமே – ஏகாரம் அசைநிலை), எந்தை – எங்கள் தந்தை (எந்தை – எம் + தந்தை, மருஉ மொழி), புணர் திரைப் பரப்பகம் – அலைகள் பொருந்திய அகன்ற கடல், துழைஇத் தந்த – நுழைந்து வலை முதலியவற்றால் பிடித்துக் கொண்டு தந்த (துழைஇ – அளபெடை), பல் மீன் உணங்கல் – பல மீன் வற்றல், படு புள் ஓப்புதும் – தாக்கும் பறவைகளை விரட்டிக் கொண்டிருப்போம் நாங்கள், முண்டகம் கலித்த – நீர்முள்ளிச் செடிகள் நிறைந்த (முண்டகம் – நீர் முள்ளி, Hygrophila spinosa), முதுநீர் அடை கரை – நீர் அடைகின்ற கடற்கரையில், ஒண் பன் மலர – ஒளியுடைய பல மலர்களையுடைய, கவட்டு இலை – பிளவுபட்ட இலைகள், அடும்பின் – அடும்பினது, செங்கேழ் – சிவந்த நிறமுடைய, மென்கொடி – மெல்லிய கொடிகள், ஆழி அறுப்ப – தேரின் உருளிகள் (சக்கரங்கள்) அறுக்கும்படி, இன மணி – பல மணிகள், ஒரே மாதிரியான மணிகள், புரவி – குதிரைகள், நெடுந்தேர் கடைஇ – உயர்ந்த தேரினைச் செலுத்தி (கடைஇ – அளபெடை), மின் இலைப் பொலிந்த – ஒளியுடைய இலைகளோடு பொலிந்து விளங்கும், விளங்கு இணர் – ஒளியுடைய பூங்கொத்துக்கள், அவிழ் – மலர்ந்த, பொன் தண் நறும் பைந்தாது – பொன்னிறமான நறுமணமுடைய புதிய தாதினை, உறைக்கும் – கொட்டும், புன்னை – புன்னை மரங்கள், அம் கானல் – அழகிய கடற்கரைச் சோலை, பகல் வந்தீமே – பகலில் வருவாயாக (வந்தீமே – முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல்)
அகநானூறு 81, ஆலம்பேரிச் சாத்தனார், பாலைத் திணை, தோழி தலைவனிடம் சொன்னது
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்
ஓங்கு சினை இருப்பைத் தீம் பழம் முனையின்
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை
ஒருங்கு முயன்று எடுத்த நனைவாய் நெடுங்கோடு,
இரும்பு ஊது குருகின், இடந்து இரை தேரும் 5
மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக்
கதிர் தெறக் கவிழ்ந்த உலறுதலை நோன் சினை
நெறி அயல் மராஅம் ஏறிப், புலம்பு கொள
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை
வெம்முனை அருஞ்சுரம் நீந்திச், சிறந்த 10
செம்மல் உள்ளம் துரத்தலின் கறுத்தோர்
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும்
மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம்
மை எழில் உண்கண் கலுழ,
ஐய சேறிரோ, அகன்று செய் பொருட்கே? 15
பாடல் பின்னணி: தலைவன் பொருள்வயின் பிரியக் கருதினான். அதை அறிந்த தலைவி வருந்தினாள். அது கண்ட தோழி, தலைவியின் நிலையைத் தலைவனிடம் கூறிச் செலவு அழுங்குவித்தது.
பொருளுரை: ஐயா! சிறந்த தலைமை வாய்ந்த நும் உள்ளம் தூண்டுவதால், பகைவர்களின் ஒளிர்கின்ற வேல்களையுடைய போர்க்களத்தில் யானைகள் மடிய வெல்லும், மிக்க வள்ளன்மை உடைய கடலன் என்பவனின் விளங்கில் என்னும் ஊர் போன்ற அழகிய மையுண்ட கண்களையுடைய எம் தலைவி அழுமாறு,
விடியற்காலையில் எழுந்து உலவிய, தன் இரையைக் கொள்ளுவதில் வல்ல கரடி, உயர்ந்த கிளைகளையுடைய இருப்பை மரத்தின் இனிய பழத்தை வெறுத்ததால், புல்லிய அளைகளையுடைய புற்றின், பலவாகிய கூட்டங்களை உடைய கறையான்கள், ஒன்றுகூடி நனைந்த வாயால் முயன்றுக் கட்டிய நெடிய உச்சியை, இரும்பு உலையில் ஊதும் துருத்தியைப் போல் ஊதிப் பெயர்த்துப் புற்றாஞ்சோற்றினைக் கொள்ளும், மண் பிளவுபடுமாறு வறட்சியுற்ற பாலை நிலத்தில், பார்க்க இயலாதபடி கண்களைத் தாக்கும் ஞாயிற்றின் கதிர்கள் காய்வதால் இலைகள் வாடிக் கவிழ்ந்த உலர்ந்த உச்சியையுடைய, வழியின் அருகில் உள்ள கடம்ப மரத்தின் வலிய கிளைகளில் ஏறி, தனிமையில் இருந்து இரையைப் பாய்ந்து எடுக்கும் பருந்து வருந்தும் வெப்பம் மிகுந்த இடங்களையுடைய கடத்தற்கு அரிய பாலை நிலவழிகளைத் தாண்டிச் செல்லுவீரோ, எம்மை விட்டு நீங்கிச் சென்று ஈட்டும் பொருளுக்கு?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘தலைவரும் விழுமம்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் நூற்பாவின்கண் ‘தலைவரும் விழும நிலை எடுத்து உரைப்பினும்’ என்பதனால் அமைத்திடுக. சிதலை ஒருங்கு முயன்று எடுத்த நனைவாய் நெடுங்கோடு – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கரையான் நனைந்த வாயால் ஒருங்குக் கூடி வருந்திக் கட்டிய நெடிய உச்சியினை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிதலைகள் ஒருங்கு கூடிப் பெரிதும் முயற்சி செய்து கட்டிய நெடிய வாயையுடைய நெடிய உச்சிகளை. விளங்கில் அன்ன எம் மை எழில் உண்கண் கலுழ – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – விளங்கில் என்னும் பதியை ஒத்த எமது அழகிய மையுண்ட கண்ணினளான தலைவி அழ. உண்கண் –ஆகுபெயர்; தலைவியை உளப்படுத்தி எம் கண் கலுழ என்று உறைத்தாளுமாம். பொ. வே. சோமசுந்தரனார் உரை – விளங்கில் என்னும் மூதூர் போல இன்பமும் அழகும் நிரம்பிய எம்முடைய அழகிய மையுண்ட கண்கள் அழ. விளங்கில் தலைவியின் கண்ணுக்கு உவமை. ஊரைப் போன்ற தலைவி – அகநானூறு 6 – பல் வேல் மத்தி கழாஅர் அன்ன எம் இளமை, 27 – கொற்கை அம் பெருந்துறை முத்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர்வாய், 44 – தண் குடவாயில் அன்னோள், 60 – திண்தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம் ஒண்தொடி ஞெமுக்காதீமோ, 61 – பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்ன நின் ஒண் கேழ் வன முலை, 81 – மா வண் கடலன் விளங்கில் அன்ன எம் மை எழில் உண்கண் கலுழ, 231 – கூடல் அன்ன நின் ஆடு வண்டு அரற்றும் முச்சித் தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே, 186 – காவிரி வைப்பின் போஒர் அன்ன என் செறி வளை உடைத்தலோ இலனே, 396 – வஞ்சியன்ன என் நலம் தந்து சென்மே, நற்றிணை 35 – துறை கெழு மரந்தை அன்ன இவள் நலம், 39 – பெரும் பெயர்க் கூடல் அன்ன நின் கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே, 350 – தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என் தொல் கவின் தொலையினும் தொலைக, 260 – மலி புனல் வாயில் இருப்பை அன்ன என் ஒலி பல் கூந்தல், 358 – பசும்பூண் வழுதி மருங்கை அன்ன என் அரும் பெறல் ஆய் கவின், 395 – கடல் கெழு மரந்தை அன்ன, எம் வேட்டனை அல்லையால், நலம் தந்து சென்மே, குறுந்தொகை 34 – குட்டுவன் மரந்தை அன்ன எம் குழை விளங்கு ஆய் நுதல், 258 – அழிசி ஆர்க்காடு அன்ன இவள் பழி தீர் மாண் நலம், ஐங்குறுநூறு 55 – தேர் வண் கோமான் தேனூர் அன்ன இவள் நல் அணி, 56 – ஆமூர் அன்ன இவள் நலம், 58 – கைவண் விராஅன் இருப்பை அன்ன இவள் அணங்கு உற்றனை போறி, 61 – மத்தி கழாஅர் அன்ன நல்லோர் நல்லோர், 174 – அணங்குடைப் பனித் துறைத் தொண்டி அன்ன மணங்கமழ் பொழில் குறி நல்கினள், 175 – வாழியோ மடந்தை தொண்டி அன்ன நின் பண்பு பல கொண்டே, 177 – முண்டக நறு மலர் கமழும் தொண்டி அன்னோள், 180 – துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே. ஊரைப் போன்ற தலைவன் – ஐங்குறுநூறு 178 – குட்டுவன் தொண்டி அன்ன என் கண்டும். கரடி இருப்பை மலரை உண்ணுதல் – அகநானூறு 15, 81, 95, 149, 171, 247, 267, 275, 331. வரலாறு – கடலன், விளங்கில். கரடிகள் ஈயல் புற்றினை உடைத்தல் – அகநானூறு 8, 72, 81, 88, 112, 149, 247, 257, 307, நற்றிணை 125, 325, 336. புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35). வறந்த – வறம் என்னும் சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சம். என்றூழ் – கதிரவனின் முதிர்ந்த கதிர்கள், எல் (கதிரவன்) + ஊழ் (முதிர்ச்சி). முனைவர் கு. வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம்.
சொற்பொருள்: நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் ஓங்கு சினை இருப்பைத் தீம் பழம் முனையின் – விடியற்காலையில் எழுந்து உலவிய தன் இரையைக் கொள்ளுவதில் வல்ல கரடி உயர்ந்த கிளைகளையுடைய இருப்பை மரத்தின் இனிய பழத்தை வெறுத்ததால், புல் அளைப் புற்றின் – புல்லிய அளைகளையுடைய புற்றின், பல் கிளைச் சிதலை – பலவாகிய கூட்டங்களை உடைய கறையான்கள், ஒருங்கு முயன்று எடுத்த நனைவாய் நெடுங்கோடு – ஒன்றுகூடி நனைந்த வாயால் முயன்றுக் கட்டிய நெடிய உச்சியை, இரும்பு ஊது குருகின் இடந்து இரை தேரும் – இரும்பு உலையில் ஊதும் துருத்தியைப் போல் ஊதிப் பெயர்த்து, மண் பக வறந்த ஆங்கண் – மண் பிளவுபடுமாறு வறட்சியுற்ற பாலை நிலத்தில், கண் பொரக் கதிர் தெறக் கவிழ்ந்த உலறுதலை நோன் சினை நெறி அயல் மராஅம் ஏறி – பார்க்க இயலாதபடி கண்களைத் தாக்கும் ஞாயிற்றின் கதிர்கள் காய்வதால் இலைகள் வாடிக் கவிழ்ந்த உலர்ந்த உச்சியையுடைய வழியின் அருகில் உள்ள கடம்ப மரத்தின் வலிய கிளைகளில் ஏறி (மராஅம் – அளபெடை), புலம்பு கொள எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை – தனிமையில் இருந்து இரையைப் பாய்ந்து எடுக்கும் பருந்து வருந்தும் வெப்பம் மிக்க நீண்ட இடங்கள், வெம்முனை அருஞ்சுரம் நீந்தி – வெப்பம் மிகுந்த இடங்களையுடைய கடத்தற்கு அரிய பாலை நிலவழிகளைத் தாண்டி, சிறந்த செம்மல் உள்ளம் துரத்தலின் – சிறந்த தலைமை வாய்ந்த நும் உள்ளம் தூண்டுவதால், கறுத்தோர் ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும் – பகைவர்களின் ஒளிர்கின்ற வேல்களையுடைய போர்க்களத்தில் யானைகள் மடிய வெல்லும், மா வண் கடலன் விளங்கில் அன்ன – மிக்க வள்ளன்மை உடைய கடலன் என்பவனின் விளங்கில் என்னும் ஊர் போன்ற சிறப்பான, எம் மை எழில் உண்கண் கலுழ – எம் அழகிய மையுண்ட கண்களையுடைய தலைவி அழுமாறு (எம் ஆகுபெயர் தலைவிக்கு, தலைவியை உளப்படுத்தி எம் கண் கலுழ என்று உறைத்தாளுமாம்), ஐய – ஐயா (விளி), சேறிரோ – செல்லுவீரோ, அகன்று செய் பொருட்கே – எம்மை விட்டு நீங்கிச் சென்று ஈட்டும் பொருளுக்கு (பொருட்கே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 82, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை ஆக,
பாடு இன் அருவிப் பனி நீர் இன்னிசைத்
தோடு அமை முழவின் துதை குரல் ஆகக்,
கணக் கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு 5
மலைப் பூஞ்சாரல் வண்டு யாழ் ஆக,
இன் பல் இமிழ் இசை கேட்டுக் கலி சிறந்து
மந்தி நல் அவை மருள்வன நோக்கக்
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில்
நனவுப்புகு விறலியின் தோன்றும் நாடன், 10
உருவ வல் வில் பற்றி அம்பு தெரிந்து,
செருச் செய் யானை செல் நெறி வினாஅய்ப்
புலர் குரல் ஏனல் புழையுடை ஒரு சிறை,
மலர் தார் மார்பன் நின்றோன் கண்டோர்
பலர் தில், வாழி தோழி, அவருள் 15
ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி,
ஓர் யான் ஆகுவது எவன் கொல்
நீர் வார் கண்ணொடு நெகிழ்தோளேனே?
பாடல் பின்னணி: தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது.
பொருளுரை: தோழி! நீ நீடு வாழ்வாயாக! அசையும் மூங்கில்களின் வண்டுகளால் துளைக்கப்பட்ட விளங்கும் துளைகளினிடத்து வீசும் மேல் காற்றினால் எழும் அழகிய இசை குழலின் இசையாகவும், இனிய ஒலியையுடைய அருவியின் குளிர்ந்த நீரின் இன்னிசை கூட்டமாக அமைந்த முழவின் நெருங்கிய முழக்கமாகவும், கூட்டமாக கலைமான்கள் தாழ ஒலிக்கும் கடிய குரல் பெருவங்கியம் (நீண்ட உட்துளையுடைய ஊதப்படும் இசைக்கருவி) என்ற கருவியின் இசையாகவும், மலைச் சாரலில் உள்ள பூக்களில் ஒலிக்கும் வண்டுகளின் ஓசையே யாழின் இசையாகவும், இனிய பலவாக ஒலிக்கும் இசையினைக் கேட்டு ஆரவாரம் மிக்க மந்திகள் நல்ல கூட்டமாக வியப்புற்று நோக்க, மூங்கில்கள் வளரும் பக்க மலையில் அசைந்து நடந்து ஆடும் மயில்கள் களத்தில் புகுந்து ஆடும் விறலியர் போல் தோன்றும் நாட்டின் தலைவன், அழகிய வலிய வில்லைக் கையில் பற்றிக்கொண்டு அம்பினை ஆராய்ந்து, தன்னால் அம்பு எய்தப்பட்ட யானை சென்ற வழியினை வினவி, முற்றிய கதிர்களையுடைய தினைப்புனத்தின் நுழை வாயிலின் ஒரு பக்கத்தில் மலர் மாலையை மார்பில் அணிந்து நின்றதனைக் கண்டவர்கள் பல மகளிர். அவர்களுள், செறிந்த இருளுடைய இரவில் படுக்கையில் கிடந்து, கண்ணீர் வடியும் கண்களுடன் மெலிந்த தோளுடையேன் ஆக யான் ஒருத்தி மட்டுமே என்ன ஆவேனோ?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘வரைவிடை வைத்த’ (தொல்காப்பியம், களவியல் 21) என வரும் நூற்பாவின்கண் ‘வரையா நாளிடை வந்தோன் முட்டினும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘வரைவிடை வைத்த வரைவு இடை வைத்த காலத்து வருந்தினும் வரையா நாளிடை வந்தோன் முட்டினும் உரை எனத் தோழிக்கு உரைத்தற்கண்ணும் தானே கூறும் காலமும் உளவே’ (தொல்காப்பியம், களவியல் 21) என்னும் சூத்திரத்து இச் செய்யுளை எடுத்துக்காட்டி, ‘அவனை ஆயத்தார் பலருங் கண்டாரென வந்தோன் முட்டியவாறும், அவருள் நெகிழ் தோளேன் யானே எனத் தானே கூறியவாறுங் காண்க’ என்று உரைத்தனர் நச்சினார்க்கினியர். உருவ (11) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அழகிய, உருவ என்றதனை உரிச்சொல் ஈறு திரிந்ததெனக் கொண்டு உட்குப் பொருந்திய என்றலுமாம். கண்டோர் பலர் (14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பார்த்த மகளிர் பலராவர், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கண்டோர் பலர், புலியூர்க்கேசிகன் உரை – கண்டோர் குறமகளிர் தம்முள்ளே பலராவர். தலைவன் கெடுதி பற்றி வினவுதல் – குறிஞ்சிப்பாட்டு 139–142 – “ஒண்தொடி அசைமென் சாயல் அவ்வாங்கு உந்தி மட மதர் மழைக் கண் இளையீர்! இறந்த கெடுதியும் உடையேன்” என்றனன். இசைக்கருவிகளின் சேர்க்கை – மலைபடுகடாம் 1–13 – திருமழை தலைஇய இருள் நிற விசும்பின் விண் அதிர் இமிழிசை கடுப்ப பண் அமைத்துத் திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி, நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில், மின் இரும் பீலி அணித்தழைக் கோட்டொடு, கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின், இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு, விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ, நடுவு நின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை, கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய், எல்லரி நொடிதரு பாணிய பதலையும் பிறவும், கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப, நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர். புறநானூறு 152 – பாடுவல் விறலி! ஓர் வண்ணம் நீரும் மண் முழா அமைமின்! பண் யாழ் நிறுமின்! கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்! எல்லரி தொடுமின் ஆகுளி தொடுமின்! பதலை ஒருகண் பையென இயக்குமின் மதலை மாக்கோல் கைவலம் தமின்! நனவு – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).
சொற்பொருள்: ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் கோடை அவ்வளி குழலிசை ஆக – அசையும் மூங்கில்களின் துளைக்கப்பட்ட விளங்கும் துளைகளினிடத்து வீசும் மேல் காற்றினால் எழும் அழகிய இசை குழலின் இசையாகவும், பாடு இன் அருவிப் பனி நீர் இன்னிசைத் தோடு அமை முழவின் துதை குரல் ஆக – இனிய ஒலியையுடைய அருவியின் குளிர்ந்த நீரின் இன்னிசை கூட்டமாக அமைந்த முழவின் நெருங்கிய முழக்கமாகவும், கணக் கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு – கூட்டமாக கலைமான்கள் தாழ ஒலிக்கும் கடிய குரல் பெருவங்கியம் (நீண்ட உட்துளையுடைய இசைக்கருவி) என்ற கருவியின் இசையாகவும், மலைப் பூஞ்சாரல் வண்டு யாழ் ஆக – மலைச் சாரலில் உள்ள பூக்களில் ஒலிக்கும் வண்டுகளின் ஓசையே யாழின் இசையாகவும், இன் பல் இமிழ் இசை கேட்டுக் கலி சிறந்து மந்தி நல் அவை மருள்வன நோக்க – இனிய பலவாக ஒலிக்கும் இசையினைக் கேட்டு ஆரவாரம் மிக்க மந்திகள் நல்ல கூட்டமாக வியப்புற்று நோக்க, கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில் நனவுப்புகு விறலியின் தோன்றும் நாடன் – மூங்கில்கள் வளரும் பக்க மலையில் அசைந்து நடந்து ஆடும் மயில்கள் களத்தில் புகுந்து ஆடும் விறலியர் போல் தோன்றும் நாட்டின் தலைவன் (விறலியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), உருவ வல் வில் பற்றி அம்பு தெரிந்து – அழகிய வலிய வில்லைக் கையில் பற்றிக்கொண்டு அம்பினை ஆராய்ந்து, செருச் செய் யானை செல் நெறி வினாஅய் – தன்னால் அம்பு எய்தப்பட்ட யானை சென்ற வழியினை வினவி (வினாஅய் – அளபெடை), புலர் குரல் ஏனல் புழையுடை ஒரு சிறை மலர் தார் மார்பன் நின்றோன் கண்டோர் பலர் – முற்றிய கதிர்களையுடைய தினைப்புனத்தின் நுழை வாயிலின் ஒரு பக்கத்தில் மலர் மாலையை மார்பில் அணிந்து நின்றவனைக் கண்டவர்கள் பலர், தில் – அசைநிலை, வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, அவருள் – அவர்களுள், ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி – செறிந்த இருளுடைய இரவில் படுக்கையில் கிடந்து, ஓர் யான் ஆகுவது எவன் கொல் – யான் ஒருத்தி மட்டுமே என்ன ஆவேனோ (கொல் – அசைநிலை), நீர் வார் கண்ணொடு நெகிழ்தோளேனே – கண்ணீர் வடியும் கண்களுடன் மெலிந்த தோளுடையேன் (தோளேனே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 83, கல்லாடனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வலஞ்சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச்
சுரி ஆர் உளைத்தலை பொலியச் சூடி
கறை அடி மடப்பிடி கானத்து அலறக்
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர் கலி சிறந்து
கருங்கால் மராஅத்து கொழுங் கொம்பு பிளந்து 5
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்
நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும் 10
சேயர் என்னாது அன்பு மிகக் கடைஇ
எய்த வந்தனவால் தாமே நெய்தல்
கூம்பு விடு நிகர் மலர் அன்ன
ஏந்து எழில் மழைக்கண் எம் காதலி குணனே.
பாடல் பின்னணி: பொருள்வயின் பிரிந்த தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பொருளுரை: பாலை நிலத்தில் நறுமணத்தைப் பரப்பும் வலதுபுறமாகச் சுரித்த வெண்கடம்ப மரத்தின் புதிய மலர்களை, உளையைப் போன்றுள்ள தங்களுடைய சுருண்ட தலைமயிரில் விளங்கும்படி அணிந்து, உரலைப் போன்ற அடியுடைய இளைய பெண் யானையானது காட்டில் அலற அதனுடைய ஆண் கன்றைப் பற்றிக் கொண்ட மகிழ்ச்சி உடையவர்களாகச் செருக்கு மிகுந்து, வலிமையான அடிப்பகுதியை உடைய வெண்கடம்ப மரத்தின் பருத்த கிளையைப் பிளந்து, பெரிதாக உரித்த அதன் வெள்ளை நாரால் அதன் காலில் வடு உண்டாகும்படி கட்டி, உயர்ந்த கொடிகள் பறக்கும் கடை வீதியையுடைய பழைய ஊரின் கள் விற்கும் நல்ல இல்லத்தின் வாயிலில் அந்த யானையின் கன்றினைக் கட்டும், தம் தொழிலையன்றிப் பிறவற்றைக் கல்லாத இளைஞர்களின் தலைவனான புல்லி என்பவனின் அகன்ற இடத்தையுடைய நல்ல நாட்டின் வேங்கட மலையைக் கடந்து சென்றாலும், அவர் தொலைவில் இருக்கின்றார் என்னாது, மிகுந்த அன்பு செலுத்த, நெய்தலின் அரும்பு அவிழ்ந்த ஒளியுடைய மலர்களைப் போன்ற ஏந்திய அழகான குளிர்ச்சி பொருந்திய கண்களையுடைய என் காதலியின் நல்ல தன்மை நம்மை வந்து அடைந்துள்ளது.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘வெறியறி சிறப்பின்’ (தொல்காப்பியம், புறத்திணையியல் 5) என்னுஞ் சூத்திரத்து, தருதலும் என்ற மிகையால், நிரையல்லாத கோடலும் அத் துறைப்பாற்படும் என்றுரைத்து, ‘கறையடி மடப்பிடி கானத்தலறக் களிற்றுக் கன்றொழித்த உவகையர் கலி சிறந்து, …….. கல்லா விளையர் பெருமகன் புல்லி’ என்ற அடிகளைக்காட்டி …… யானைக் கன்றைக் கவர்ந்தவாறு காண்க என்றனர் நச்சினார்க்கினியர். வலஞ்சுரி மராஅம் – அகநானூறு 83 – வலஞ்சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீ, ஐங்குறுநூறு 348 – வலஞ்சுரி மராஅம் வேய்ந்து நம் மணங்கமழ் தண் பொழில், ஐங்குறுநூறு 383 – நெடுங்கால் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி வலஞ்சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற, குறுந்தொகை 22 – சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து வேனில் அம் சினை கமழும். உளைத்தலை (2) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – உளை போன்ற மயிரினையுடைய தலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை தலையாட்டம் போன்று அசையும்படி தலை மயிரின் மேல், உளை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலையாட்டம் என்னும் ஒரு வகைக் குதிரை அணி. ஒப்புமை – குறுந்தொகை 281 – சுரி ஆர் உளைத்தலை பொலியச் சூடி. ‘உளைத்தலை’ குறுந்தொகை உரைகள் – தமிழண்ணல் உரை – தலை உச்சி, உ. வே. சாமிநாதையர் உரை – மயிரையுடைய தலை. கறையடி யானை – அகநானூறு 83–3,142–9, புறநானூறு 39–1, 135–12, 323–6, பெரும்பாணாற்றுப்படை 351. வரலாறு – புல்லி, வேங்கடம்.
சொற்பொருள்: வலஞ்சுரி மராஅத்து – வலதுபுறமாக சுரித்த வெண்கடம்ப மரத்தின் (மராஅத்து – அத்து சாரியை, அளபெடை), சுரம் – பாலை நிலம், கமழ் புது வீ – நறுமணமுடைய புதிய மலர்கள், சுரி ஆர் – சுருள் கொண்ட, உளைத்தலை பொலியச் சூடி – குதிரை உளையைப் போன்றுள்ள தங்களுடைய சுருண்ட தலைமயிரில் விளங்கும்படி அணிந்து, கறை அடி மடப்பிடி கானத்து அலற – உரலைப் போன்ற அடியுடைய இளைய பெண் யானை காட்டில் அலற, களிற்றுக் கன்று ஒழித்த உவகையர் – ஆண் கன்றைப் பற்றிக் கொண்ட மகிழ்ச்சி உடையவர்கள், கலி சிறந்து – செருக்கு மிகுந்து, கருங்கால் மராஅத்து கொழுங் கொம்பு பிளந்து – வலிமையான அடிப்பகுதியை உடைய கடம்ப மரத்தின் பருத்த கிளையைப் பிளந்து (மராஅத்து – அத்து சாரியை, அளபெடை), பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி – பெரிதாக உரித்த வெள்ளை நாரால் வடு உண்டாகும்படி கட்டி, நெடுங்கொடி நுடங்கும் – உயர்ந்த கொடிகள் பறக்கும், நியம மூதூர் – கடை வீதியையுடைய பழைய ஊர், நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும் – கள் விற்கும் நல்ல இல்லத்தின் வாயிலில் கட்டும், கல்லா இளையர் – தம் தொழிலையன்றி பிறவற்றைக் கல்லாத இளைஞர்கள், பெருமகன் புல்லி – தலைவனான புல்லி, வியன்தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும் – அகன்ற இடத்தையுடைய நல்ல நாட்டின் வேங்கட மலையைக் கடந்துச் சென்றாலும், சேயர் என்னாது – தொலைவில் இருக்கின்றார் என்னாது, அன்பு மிகக் கடைஇ – மிகுந்த அன்பு செலுத்த (கடைஇ – அளபெடை), எய்த வந்தனவால் தாமே – அவை வந்தன (வந்தனவால் – ஆல் அசைநிலை, தாமே – தாம் ஏ அசைநிலைகள்), நெய்தல் கூம்பு விடு நிகர் மலர் அன்ன – நெய்தலின் அரும்பு அவிழ்ந்த ஒளியுடைய மலர்களைப் போன்ற, ஏந்து எழில் மழைக்கண் – ஏந்திய அழகான குளிர்ந்த கண்கள், எம் காதலி குணனே – என் காதலியின் நல்ல தன்மை (குணன் – குணம் என்றதன் போலி, ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 84, மதுரை எழுத்தாளன், முல்லைத் திணை – தலைவன் சொன்னது, பாசறையில் இருந்து
மலை மிசைக் குலைஇய உருகெழு திரு வில்
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கித்,
தாழ் பெயல் பெருநீர் வலன் ஏர்பு, வளைஇ,
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர
இருநிலம் கவினிய ஏமுறு காலை 5
நெருப்பின் அன்ன சிறுகண் பன்றி,
அயிர்க் கண் படாஅர்த் துஞ்சு புறம் புதைய,
நறுவீ முல்லை நாள் மலர் உதிரும்
புறவு அடைந்திருந்த அரு முனை இயவின்
சீறூரோளே ஒண்ணுதல், யாமே, 10
எரி புரை பன் மலர் பிறழ வாங்கி
அரிஞர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு
கள் ஆர் வினைஞர் களந்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்
அருந்திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து, 15
வினை வயின் பெயர்க்குந்தானைப்,
புனை தார் வேந்தன் பாசறையேமே.
பாடல் பின்னணி: பாசறையில் இருக்கும் தலைவன் தன்னுள் வருந்திக் கூறியது.
பொருளுரை: மலை மீது, வளைந்த, நிறம் பொருந்திய அழகிய வானவில்லை உடைய, முரசு போல் முழங்கும் முகில்கள், கடலில் நீரை முகந்து கொண்டு, தாழ்ந்து பெய்தற்குரிய உரிய மிக்க நீருடன் வலப்பக்கமாக எழுந்து, உலகை வளைத்துத் திசைகள் மறையும்படி பொழிந்ததால், இனிய காட்சி உண்டாகப் பெரிய நிலம் அழகு பெற்று முல்லை நிலத்தில் வாழும் மக்கள் இன்பம் எய்திய காலத்தில், நெருப்பை ஒத்த சிறிய கண்களையுடைய பன்றி நுண் மணலின்கண் உள்ள தூற்றில் உறங்கும் பொழுது அதன் முதுகு மறையும்படி முல்லையின் நறுமணமுடைய புதிய மலர்கள் உதிரும் காட்டைச் சார்ந்திருக்கும், அரிய முனைகளையுடைய வழியில் உள்ள சிற்றூரின்கண் உள்ளாள், ஒளிரும் நெற்றியை உடைய தலைவி.
யாமோ, நெருப்பை ஒத்த பல மலர்களை மாறுபட வைத்து இழுத்து, நெல்லை அரிகின்ற உழவர்கள் கட்டிய அசைகின்ற மேல் பகுதிகளையுடைய பெரிய நெற்கூட்டினைக் கள்ளைக் குடித்த தொழிலாளிகள் சுமந்துகொண்டு களம் தோறும் செல்லும், மருத நிலம் சூழ்ந்த, கொடிகள் அசையும் மதில் சூழ்ந்த ஊரைப் பகைவர் அரிய திறையைக் கொடுக்கவும் ஏற்றுக் கொள்ளான் ஆகி, சினம் மிகுந்து, போரின்கண் செலுத்தும் சேனையையுடைய, மாலை அணிந்த வேந்தனின் பாசறையில் உள்ளோம்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘ஒன்றாத் தமரினும்’ என வரும் நூற்பாவின்கண் (தொல்காப்பியம், அகத்திணையியல் 44) ‘பாசறைப் புலம்பலும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘ஏவன் மரபின்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 24) என்னுஞ் சூத்திரத்து, இச்செய்யுளை எடுத்துக்காட்டி, இது தூது கண்டு வருந்திக் கூறியது எனவும், இதன்கண் தன்னூரும் அருமுனை இயவிற் சீறூர் என்றலின், தான் குறுநில என்பது பெற்றாம் என்றும், ‘தானே சேறலும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 27) என்னுஞ் சூத்திரத்து, ‘இது குறுநில மன்னர் போல்வார் சென்றமை தோன்றக் கூறியது’ என்றும், ‘ஒன்றாத் தமரினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 41) என்னுஞ் சூத்திரத்து, இது ‘ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்’ என்றதற்கு உதாரணமாகும் என்றும் ‘கூதிர் வேனில்’ (தொல்காப்பியம், புறத்திணையியல் 21) என்னுஞ் சூத்திரத்து, ‘வினைவயிற் பாசறையேமே’ எனத் தலைவியை நினைவன வாகைக்கு வழுவாம்; அகத்திற்கு வழுவன்று’ என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1. உருகெழு (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நிறம் பொருந்திய, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அச்சம் பொருந்திய. அலங்குதலை (12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அசைகின்ற தலையையுடைய, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அசையும் பக்கங்களையுடைய.
சொற்பொருள்: மலை மிசைக் குலைஇய உருகெழு திரு வில் பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கித் தாழ் பெயல் பெருநீர் வலன் ஏர்பு – மலை மீது வளைந்த நிறம் பொருந்திய அழகிய வானவில்லை உடைய முரசு போல் முழங்கும் முகில்கள் கடலில் நீரை முகந்து கொண்டு தாழ்ந்து பெய்தற்கு உரிய மிக்க நீருடன் வலப்பக்கமாக எழுந்து (குலைஇய – அளபெடை), வளைஇ மாதிரம் புதைப்பப் பொழிதலின் – உலகை வளைத்துத் திசைகள் மறையும்படி பொழிந்ததால் (வளைஇ – அளபெடை), காண்வர இருநிலம் கவினிய ஏம் உறு காலை – காட்சி உண்டாகப் பெரிய நிலம் அழகு பெற்று முல்லை நிலத்தில் வாழும் மக்கள் இன்பம் எய்திய காலத்தில் (ஏம் – ஏமம் என்பதன் விகாரம்), நெருப்பின் அன்ன சிறுகண் பன்றி அயிர்க் கண் படாஅர்த் துஞ்சு புறம் புதைய நறு வீ முல்லை நாள் மலர் உதிரும் – நெருப்பை ஒத்த சிறிய கண்களையுடைய பன்றி நுண் மணலின்கண் உள்ள தூற்றில் உறங்கும் பொழுது அதன் முதுகு மறையும்படி முல்லையின் நறுமணமுடைய புதிய மலர்கள் உதிரும் (நெருப்பின் – இன் சாரியை, படாஅர் – அளபெடை), புறவு அடைந்திருந்த அரு முனை இயவின் சீறூரோளே – காட்டைச் சார்ந்திருக்கும் அரிய முனைகளையுடைய வழியில் உள்ள சிற்றூரின்கண் உள்ளாள், ஒண்ணுதல் – ஒளிரும் நெற்றியை உடைய தலைவி (அன்மொழித்தொகை), யாமே – யாமோ, எரி புரை பன் மலர் பிறழ வாங்கி – நெருப்பை ஒத்த பல மலர்களை மாறுபட வைத்து இழுத்து (புரை – உவம உருபு), அரிஞர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு கள் ஆர் வினைஞர் களந்தொறும் மறுகும் – நெல்லை அரிகின்ற உழவர்கள் கட்டிய அசைகின்ற மேல் பகுதிகளையுடைய (அசைகின்ற பக்கங்களையுடைய) பெரிய நெற்கூட்டினைக் கொண்டு கள்ளைக் குடித்த தொழிலாளிகள் சுமந்துக் களம் தோறும் செல்லும், தண்ணடை தழீஇய – மருத நிலம் சூழ்ந்த (தழீஇ – அளபெடை), கொடி நுடங்கு ஆர் எயில் அருந்திறை கொடுப்பவும் கொள்ளான் – கொடிகள் அசையும் மதில் சூழ்ந்த ஊரைப் பகைவர் அரிய திறையைக் கொடுக்கவும் ஏற்றுக் கொள்ளான் ஆகி, சினம் சிறந்து – சினம் மிகுந்து, வினை வயின் பெயர்க்கும் தானைப் புனை தார் வேந்தன் பாசறையேமே – போரின்கண் செலுத்தும் சேனையையுடைய மாலை அணிந்த வேந்தனின் பாசறையில் உள்ளோம் (பாசறையேமே – தன்மைப் பன்மை, ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 85, காட்டூர் கிழார் மகனார் கண்ணனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
“நன்னுதல் பசப்பவும், பெருந்தோள் நெகிழவும்,
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
இன்னம் ஆகவும் இங்கு நத் துறந்தோர்
அறவர் அல்லர் அவர்” எனப் பல புலந்து
ஆழல், வாழி தோழி, சாரல் 5
ஈன்று நாள் உலந்த மென் நடை மடப்பிடி,
கன்று பசி களைஇய பைங்கண் யானை
முற்றா மூங்கில் முளை தருபு, ஊட்டும்
வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை, 10
நன்னாள் பூத்த நாகு இள வேங்கை
நறுவீ ஆடிய பொறி வரி மஞ்ஞை
நனைப் பசும் குருந்தின் நாறு சினை இருந்து,
துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார்
வருதும் யாம் எனத் தேற்றிய 15
பருவம் காண் அது பாயின்றால் மழையே.
பாடல் பின்னணி: தலைவன் பொருள்வயின் பிரிந்தான். அவன் கூறிய பருவத்தில் வராததால், வருந்தும் தலைவியிடம் தோழி கூறியது.
பொருளுரை: தோழி! நீ நீடு வாழ்வாயாக! நல்ல நெற்றி பசலையடையவும் பெரிய தோள்கள் மெலியவும் உணவு உண்ணாத துன்பத்துடன் உயிர் நீங்கும்படி உடல் மெலிந்து நாம் இந்நிலை ஆகவும், “இங்கு நம்மைவிட்டுப் பிரிந்த நம் தலைவர் அறமுடையவர் அல்லர்” எனப் பலவும் கூறி வெறுத்துத் துன்பத்தில் ஆழ்ந்துவிடாதே. மலைப்பக்கத்தில் கன்றை ஈன்று சில நாட்கள் கழிந்த மெல்லிய நடையையுடைய இளைய பெண் யானையினதும் அதன் கன்றினதும் பசியைப் போக்குவதற்குப் பசிய கண்களையுடைய களிற்று யானை முற்றாத மூங்கிலின் முளையைக் கொண்டுவந்து ஊட்டும், வெற்றி வேலையுடைய திரையன் என்பவனின் வேங்கடம் என்னும் நெடிய மலையில் , நல்ல காலை நேரத்தில் பூத்த மிக இளைய வேங்கை மரத்தின் நறுமண மலர்களின் இடையே நுழைந்து அவற்றின் துகளைப் பெற்ற, பொறிகளையும் வரிகளையுமுடைய மயில், தேனை உடைய பசிய குருந்த மரத்தின் நறுமணம் வீசும் கிளையிலிருந்து தன் துணையை அழைத்துக் கூப்பிடும், துணையைத் தரும் குளிர்ந்த கார்காலத்தில் வருவோம் யாம் எனத் தேற்றிக் கூறிய பருவம் இது. மழை பரவி விழுகின்றது. நீ அதனைக் காண்பாயாக.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘வகைபட வந்த கிளவி எல்லாம்’ என வரும் விதி கொள்க. வரலாறு – திரையன், வேங்கடம். நாள் உலந்த (6) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நாள் முடிந்த, ஈன்றணிமை கழிந்த என்றபடி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈன்று சின்னாள் கழிந்த. நன்னாள் பூத்த (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய விடியற்காலத்தே மலர்ந்துள்ள, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நல்ல நாட்காலையிற் பூத்த, வேங்கை பூக்குங் காலம் மணநாள் ஆகலின், நன்னாட் பூத்த என்றாள் எனினுமாம். துணைதரு (14) – பழைய உரையில் இவ்வாறு உள்ளது. பொ. வே. சோமசுந்தரனார் உரை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை ஆகியவற்றில் துனைதரு என உள்ளது.
சொற்பொருள்: நன்னுதல் பசப்பவும் பெருந்தோள் நெகிழவும் உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய் இன்னம் ஆகவும் – நல்ல நெற்றி பசலையடையவும் பெரிய தோள்கள் மெலியவும் உணவு உண்ணாத துன்பத்துடன் உயிர் நீங்கும்படி உடல் மெலிந்து நாம் இந்நிலை ஆகவும் (சாஅய் – அளபெடை), இங்கு நத் துறந்தோர் அறவர் அல்லர் அவர் எனப் பல புலந்து ஆழல் – இங்கு நம்மைவிட்டுப் பிரிந்த நம் தலைவர் அறமுடையவர் அல்லர் எனப் பலவும் கூறி வெறுத்துத் துன்பத்தில் ஆழ்ந்துவிடாதே (நம் துறந்தோர் என்பது நத் துறந்தோர் என விகாரமாயிற்று, அல் ஈற்று எதிர்மறை வியங்கோள், ஆழல் – ஆழ்ந்துவிடாதே, அழாதே, நீட்டல் விகாரம்), வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, சாரல் ஈன்று நாள் உலந்த மென் நடை மடப்பிடி கன்று பசி களைஇய பைங்கண் யானை முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும் – மலைப்பக்கத்தில் கன்றை ஈன்று அணிமை கழிந்த மெல்லிய நடையையுடைய இளைய பெண் யானையினதும் அதன் கன்றினதும் பசியைப் போக்குவதற்குப் பசிய கண்களையுடைய களிற்று யானை முற்றாத மூங்கிலின் முளையைக் கொண்டுவந்து ஊட்டும் (பைங்கண்– பண்புத்தொகை, களைஇய – அளபெடை), வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை – வெற்றி வேலையுடைய திரையன் என்பவனின் வேங்கடம் என்னும் நெடிய மலையில், நன்னாள் பூத்த நாகு இள வேங்கை நறுவீ ஆடிய பொறி வரி மஞ்ஞை நனைப் பசும் குருந்தின் நாறு சினை இருந்து துணைப் பயிர்ந்து அகவும் – நல்ல காலை நேரத்தில் பூத்த மிக இளைய வேங்கை மரத்தின் நறுமண மலர்களின் இடையே நுழைந்து அவற்றின் துகளைப் பெற்ற பொறிகளையும் வரிகளையுமுடைய மயில் தேனை உடைய பசிய குருந்த மரத்தின் நறுமணம் வீசும் கிளையிலிருந்து தன் துணையை அழைத்துக் கூப்பிடும் (நாகு இள – ஒருபொருட் பன்மொழி), துணைதரு தண் கார் வருதும் யாம் – துணையைத் தரும் குளிர்ந்த கார்காலத்தில் வருவோம் யாம், எனத் தேற்றிய பருவம் –எனத் தேற்றிக் கூறிய பருவம் இது, காண் அது – அதனைக் காண்பாயாக, பாயின்றால் மழையே – மழை பரவி விழுகின்றது (பாயின்றால் – பாயின்று + ஆல், ஆல் அசைநிலை, மழையே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 86, நல்லாவூர் கிழார், மருதத் திணை – தலைவன் வாயில் மறுத்த தோழியிடம் சொன்னது
உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி,
மனை விளக்குறுத்து மாலை தொடரிக்,
கனை இருள் அகன்ற கவின் பெறு காலைக், 5
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகன் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப், 10
புதல்வற் பயந்த திதலை அவ்வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடிக்,
“கற்பினின் வழாஅ நற் பல உதவிப்,
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக” என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி 15
பல் இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நன் மணம் கழிந்த பின்றைக்,
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து,
“பேர் இற் கிழத்தி ஆக” எனத் தமர் தர,
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல், 20
கொடும் புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்த காலை யாழ, “நின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை” என 25
இன்னகை இருக்கை பின் யான் வினவலின்,
செஞ்சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,
அகமலி உவகையள் ஆகி முகன் இகுத்து,
ஒய்யென இறைஞ்சியோளே, மாவின்
மடங்கொள் மதைஇய நோக்கின், 30
ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே.
பாடல் பின்னணி: வாயில் மறுத்த தோழிக்குத் தலைவன் சொல்லியது.
பொருளுரை: உழுந்தம் பருப்பைக் கூட்டிச் சமைத்த பொங்கலோடு பெரிய சோற்றுத் திரளை உண்ணுதல் ஆரவாரத்துடன் நிகழ, வரிசையாக நடப்பட்ட கால்களையுடைய (கம்பங்களுடைய, தூண்களுடைய) பெரிய பந்தலில், கொணர்ந்து இட்ட புதிய மணலைப் பரப்பி, மனையில் விளக்குகளை ஏற்றி வைத்து, மாலைகளைத் தொங்கவிட்டு, தீய கோள்களின் தொடர்பு நீங்கிய, வளைந்த வெண்ணிலாவைக் குற்றமற்ற சிறந்த புகழையுடைய உரோகிணி என்னும் நாள் அடைந்த வேளையில், மிக்க இருள் நீங்கிய அழகான காலை நேரத்தில், தலை உச்சியில் குடத்தை வைத்திருப்பவர்களும், புதிய அகன்ற வாயையுடைய மண்டை என்னும் பானையை உடையவர்களும் ஆகிய திருமணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர், முன்னே தருவனவாகவும் பின்னே தருவனவாகவும் முறையே மீண்டும் மீண்டும் தந்திட, புதல்வர்களைப் பெற்ற, தேமலுடைய அழகிய வயிற்றையுடைய, தூய அணிகளை அணிந்த நான்கு பெண்கள் கூடி, ‘கற்பினின்று வழுவாது நல்ல பேறுகளைத் தந்து உன்னை எய்திய கணவனை விரும்பிப் பேணும் பெண்ணாக நீ ஆக’ என்று தண்ணீருடன் கூடிய ஈரமான இதழ்களையுடைய மலர்களை நெல்லுடன் அவளுடைய அடர்ந்த கருமையான கூந்தலில் தூவி வாழ்த்தினர். இவ்வாறு திருமணம் முடிந்த பின்னர், அவளுடைய சுற்றத்தார் ஒலியுடன் விரைந்து வந்து, ‘பெரிய மனைக் கிழத்தி ஆவாயாக நீ’ என்று அவளை வாழ்த்தி, என்னிடம் அவளைத் தந்தனர்.
நாங்கள் இருவரும் புணர்ச்சிக்குரிய ஓர் அறையில் தனிமையில் இருந்தோம். தன் முதுகினை வளைத்து, நாணத்துடன் தன்னுடைய புத்தாடையில் ஒதுங்கினாள் அவள். அவளை அணைக்கும் விருப்பத்துடன், நாணத்தினால் அவள் தன் முகத்தினை மறைத்த ஆடையை நான் நீக்க, அவள் அஞ்சி பெருமூச்சு விட்டாள். ‘உன் நெஞ்சில் உள்ளதை மறைக்காது என்னிடம் கூறு’ என்றேன் நான். இனிய மகிழ்ச்சியுடன், நாங்கள் ஒன்றாக இருந்த அந்த இருக்கையில், மானின் மடப்பத்தையும், பெருமையான பார்வையையும், ஒடுங்கிய குளிர்ந்த கூந்தலையும் உடையவளாக, சிவப்பு மணிகள் பதித்த காதணி தன் அழகிய காதுகளில் அசைய, நெஞ்சில் மிக்க மகிழ்ச்சியுடன், விரைந்து தலைகுனிந்தாள் அந்த மாமை நிறமுடைய பெண்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘அன்ன பிறவும் மடம் பட வந்த தோழிக் கண்ணும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘கற்பெனப் படுவது’ (தொல்காப்பியம், கற்பியல் 1) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளை எடுத்துக்காட்டி, ‘இதனுள் வதுவைக்கு ஏற்ற காரணங்கள் நிகழ்ந்தவாறும், தமர் கொடுத்தவாறுங் காண்க. சுற்றஞ் சூழ்ந்து நிற்றலானும் தமர் அறிய மணவறைச் சேறலானும் களவாற் சுருங்கி நின்ற நாண் சிறந்தமையைப் பின்னர்த் தலைமகன் வினவ, அவள் மறுமொழி கொடாது நின்றமையைத் தலைவன் தோழிக்குக் கூறியவாறு காண்க. இதனானே இது களவின்படி நிகழ்ந்த கற்பாயிற்று’ என்றும் ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என்னுஞ் சூத்திரத்து ‘முகன் இகுத்து ஒய்யென இறைஞ்சியோளே என்பது கரணத்தின் அமைந்து முடிந்தது’ என்றும் கூறினர் நச்சினார்க்கினியர். ‘புகுமுகம் புரிதல்’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 13) என்னுஞ் சூத்திரத்து, அகமலி உவகையள் ஆகி முகன் இகுத்து ஒய்யென இறைஞ்சியோளே’ என்பது சிதைவு பிறர்க்கின்மை என்னும் மெய்ப்பாட்டிற்கு உதாரணமாகக் காட்டி, இது தலைமகன் அறிய மெய்ப்பட்டது என்பது என்றும், ‘மறை வெளிப்படுதலும் தமரிற் பெறுதலும்’ (தொல்காப்பியம், செய்யுளியல் 187) என்னுஞ் சூத்திரத்து, ‘தமர் தர ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்’ என்பது தமரிற் பெறுதல் என்றும் உரைத்தனர் பேராசிரியர். ஒப்புமை – அகநானூறு 136 – அம் கண் இரு விசும்பு விளங்கத் திங்கள் சகடம் (உரோகிணி) மண்டிய துகள் தீர் கூட்டத்து. பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் (9) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொதுப்பணி செய்வதில் ஆர்வமும் ஆரவாரமும் உடைய முதுமையுடைய மங்கல நாண் உடைய பேரிளம் பெண்டிர். கம்பலை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53). ஞெமிர்தல் – ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தல் பொருள (தொல்காப்பியம், உரியியல் 65). விழு – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57). செஞ்சூட்டு ஒண் குழை (27) – பொ.வே. சோமசுந்தரனார் உரை – செ சூடு ஒண்குழை, சிவந்த அணிகலனாகிய ஒள்ளிய குழைகள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – சிவந்த மணிகள் பதித்த ஒள்ளிய குழை.
சொற்பொருள்: உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை – உழுந்தம் பருப்பைக் கூட்டிச் சமைத்த செம்மையான குழைதலையுடைய பொங்கலோடு, பெருஞ்சோற்று அமலை நிற்ப – பெரிய சோற்றுத் திரளை உண்ணுதல் ஆரவாரத்துடன் நிகழ, நிரை கால் – வரிசையான கால்கள், தண் பெரும் பந்தர் – குளிர்ந்த பெரிய பந்தல் (பந்தர் – பந்தல் என்பதன் போலி), தரு மணல் – கொணர்ந்து இட்ட மணல், ஞெமிரி – பரப்பி, மனை விளக்கு உறுத்து – மனையில் விளக்குகளை ஏற்றி, மாலை – மலர் மாலைகள், தொடரி – தொங்கவிட்டு, கனை இருள் – மிக்க இருள், அகன்ற – நீங்கிய, கவின் பெறு காலை – அழகிய விடியற்காலை, கோள் கால் நீங்கிய – தீய கோள்களின் தொடர்பு நீங்கிய, கொடு வெண் திங்கள் – வளைந்த வெண்ணிலா, கேடு இல் – குற்றமற்ற, விழுப்புகழ் – சிறந்த புகழ், நாள் தலை வந்தென – உரோகிணி என்னும் நாள் அடைந்த வேளையில், உச்சி குடத்தர் – தலை உச்சியில் குடத்தை வைத்திருப்பவர்கள், புத்தகன் மண்டையர் – புதிய அகன்ற பானைகளைத் தூக்கி வைத்திருப்பவர்கள், பொது செய் கம்பலை – மணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரம், முது செம் பெண்டிர் – வயதான மங்கல மகளிர், முன்னவும் பின்னவும் – முன்னும் பின்னும், முறை முறை – முறையாக, தரத்தர – மீண்டும் மீண்டும் தந்திட, புதல்வற் பயந்த – புதல்வர்களைப் பெற்ற, திதலை – தேமல், அவ் வயிற்று – அழகிய வயிற்றையுடைய, வால் இழை மகளிர் – தூய அணிகளையுடைய மகளிர், நால்வர் கூடி – நான்கு பேர் கூடி, கற்பினின் வழாஅ – கற்பினின்று வழுவாது (வழாஅ –அளபெடை), நற்பல உதவி – நல்ல பேறுகளைத் தந்து, பெற்றோர் – உன்னை அடைந்தவன், பெட்கும் பிணையை ஆக – விரும்பிப் பேணும் பெண்ணாக நீ ஆக, என – என்று, நீரொடு – தண்ணீருடன், சொரிந்த – ஊற்றிய, ஈர் இதழ் அலரி – ஈரமான இதழ்களையுடைய மலர்கள், பல் இருங்கதுப்பின் – அடர்ந்த கருமையான கூந்தலில், நெல்லொடு – நெல்லுடன், தயங்க – விளங்க, வதுவை – மணம், நன்மணம் – நல்ல மணம், கழிந்த பின்றை – முடிந்த பின்பு, கல்லென் – ஆரவாரத்துடன் (ஒலிக்குறிப்பு மொழி), சும்மையர் – ஒலியினர், ஞெரேரெனப் புகுதந்து – விரைந்து வந்து, பேர் இல் கிழத்தி ஆக – பெரிய மனைக் கிழத்தி ஆவாயாக, என – என்று, தமர் தர – அவள் குடும்பத்தினர் அவளை எனக்குத் தர, ஓர் இல் – ஓர் அறை, கூடிய உடன் புணர் கங்குல் – உடன்கூடிய புணர்ச்சிக்குரிய இரவு, கொடும் புறம் வளைஇ – முதுகினை வளைத்து, கோடிக் கலிங்கத்து – புத்தாடையில், ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் – ஒரு புறம் ஒதுங்கினாள், தழீஇ – தழுவி (தழீஇ – அளபெடை), முயங்கல் விருப்பொடு – அணைக்கும் விருப்பத்துடன், முகம் புதை – மறைத்த முகம், திறப்ப – திறக்க, அஞ்சினள் – அஞ்சினாள், உயிர்த்த காலை – பெருமூச்சு விட்ட வேளை, யாழ – ஓர் அசைச் சொல், நின் நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை – உன் நெஞ்சில் உள்ளதை மறைக்காது கூறு, என – என்று, இன்நகை – இனிய மகிழ்ச்சி, இருக்கை – இடம், பின்யான் வினவலின் – நான் கேட்டதால், செஞ்சூட்டு – சிவந்த மணிகள் பதித்த, ஒண் குழை – விளங்கும் காதணிகள், வண் காது – அழகிய காது, துயல்வர – அசைய, அகமலி உவகையள் ஆகி – உள்ளத்தில் மிக மகிழ்ச்சியுடையவள் ஆக ஆகி, முகன் இகுத்து – முகத்தைத் தாழ்த்தி (முகன் – முகம் என்பதன் போலி), ஒய்யென இறைஞ்சியோளே – விரைந்து தலைகுனிந்தாள் (ஒய்யென – விரைவுக்குறிப்பு, இறைஞ்சியோளே – ஏகாரம் அசைநிலை), மாவின் – மானின், மடம் கொள் – மடத்தினைக் கொண்டதும், மதைஇய நோக்கின் – செருக்கான பார்வையும் (மதைஇய – அளபெடை), ஒடுங்கு – ஒடுங்கிய, ஈர் ஓதி – ஈரமான கூந்தல், மாஅயோளே – மாமை நிறைத்தையுடையவள், மாந்தளிர் நிறமுடைய பெண் (அளபெடை, ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 87, மதுரைப் பேராலவாயர், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
தீந்தயிர் கடைந்த திரள் கால் மத்தம்,
கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும்
படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை,
நல்கூர் சீறூர் எல்லித் தங்கிக்,
குடுமி நெற்றி நெடுமரச் சேவல் 5
தலைக் குரல் விடியல் போகி, முனாஅது,
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடங்கண் பாணி,
அருஞ்சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணெனக்
குன்று சேர் கவலை இசைக்கும் அத்தம், 10
நனி நீடு உழந்தனை மன்னே, அதனால்
உவ இனி வாழிய நெஞ்சே, மை அற
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியன் நகர்ச்
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டித்,
தாழ் இருங்கூந்தல் நம் காதலி 15
நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே.
பாடல் பின்னணி: வினை முற்றி மீளும் தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது.
பொருளுரை: என் நெஞ்சே! நீ நீடு வாழ்வாயாக! இனிய தயிரைக் கடைந்த திரண்ட அடியையுடைய மத்து கன்று தன் வாயால் சுவைக்கும்படி முற்றத்தில் தொங்கும், இலைகள் பொருந்திய மரத்தின் நிழலாகிய பந்தலையும் புல்லால் வேயப்பட்ட குடில்களையுமுடைய வறுமையுடைய சிறிய ஊரின்கண் தங்கிச், சூட்டினையுடைய நெற்றியையுடைய உயர்ந்த மரத்தில் உள்ள சேவல் முதல் கூவுதலை எழுப்பிய விடியற்காலையில் போய், முன்பாக உள்ள, அஞ்சாமையுடைய மறவர்களின் கற்கள் பொருந்திய காட்டு அரண்களில் எழுந்த தண்ணுமையின் அகன்ற பகுதியிலிருந்து எழும் ஓசை கடத்தற்கரிய பாலை நில வழியில் செல்பவர்களின் நெஞ்சம் நடுங்கும்படி, மலையைச் சார்ந்த பிரிவுகளையுடைய வழியில் ஒலிக்கும், பாலை நிலத்தில் நீ மிக நீண்ட நேரம் வருந்தினாய். ஆதலால், இருள் நீங்க விடியும் வரை விளங்கும் விளக்குகளையுடைய வானைத் தொடும் நம் பெரிய மாளிகையில் நம் காதலியின் தேமலுடைய அழகிய முலையின் நல்லியல்பைப் பாராட்டி, நீண்ட மூங்கில் போன்ற தோள்களையும் அணைத்து, இப்பொழுது மகிழ்வாயாக
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்’ என வரும் விதி கொள்க. நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3). முனாஅது (6) – சோமசுந்தரனார் உரை – முற்படக்கிடந்த, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பழமையுடையதாகிய.
சொற்பொருள்: தீந்தயிர் கடைந்த திரள் கால் மத்தம் கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும் – இனிய தயிரைக் கடைந்த திரண்ட அடியையுடைய மத்து கன்று தன் வாயால் சுவைக்கும்படி முற்றத்தில் தொங்கும் (முன்றில் – இல்முன்), படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை நல்கூர் சீறூர் எல்லித் தங்கி – இலைகள் பொருந்திய மரத்தின் நிழலாகிய பந்தலையும் புல்லால் வேயப்பட்ட குடில்களையுமுடைய வறுமையுடைய சிறிய ஊரின்கண் தங்கி (படலை – தழை, மரத்தின் தழை நிழல், பந்தர் – பந்தல் என்பதன் போலி), குடுமி நெற்றி நெடுமரச் சேவல் தலைக் குரல் விடியல் போகி – சூட்டினையுடைய நெற்றியையுடைய உயர்ந்த மரத்தில் உள்ள சேவல் முதல் கூவுதலை எழுப்பிய விடியற்காலையில் போய், முனாஅது – பழமை உடையது, முன்பாக உள்ளது (முனாஅது – அளபெடை), கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின் எழுந்த தண்ணுமை இடங்கண் பாணி அருஞ்சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணெனக் குன்று சேர் கவலை இசைக்கும் – அஞ்சாமையுடைய மறவர்களின் கற்கள் பொருந்திய காட்டு அரண்களில் எழுந்த தண்ணுமையின் அகன்ற பகுதியிலிருந்து எழும் ஓசை கடத்தற்கரிய பாலை நில வழியில் செல்பவர்களின் நெஞ்சம் நடுங்கும்படி மலையைச் சார்ந்த பிரிவுகளையுடைய வழியில் ஒலிக்கும், அத்தம் நனி நீடு உழந்தனை மன்னே – பாலை நிலத்தில் நீ மிக நீண்ட நேரம் வருந்தினாய் (மன் – கழிவுப்பொருளில் வந்த இடைச்சொல், ஏகாரம் அசைநிலை), அதனால் உவ இனி – ஆதலால் இப்பொழுது மகிழ்வாயாக, வாழிய – நீ நீடு வாழ்வாயாக, நெஞ்சே – என் நெஞ்சே, மை அற வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியன் நகர்ச் சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டித் தாழ் இருங்கூந்தல் நம் காதலி நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே – இருள் நீங்க விடியும் வரை விளங்கும் விளக்குகளையுடைய வானைத் தொடும் நம் பெரிய மாளிகையில் நம் காதலியின் தேமலுடைய அழகிய முலையின் நல்லியல்பைப் பாராட்டி நீண்ட மூங்கில் போன்ற தோள்களையும் அணைத்து (தோளுமார் – தோளும் + ஆர், ஆர் அசைநிலை, அணைந்தே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 88, ஈழத்துப் பூதந்தேவனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
முதைச்சுவல் கலித்த மூரிச் செந்தினை
ஓங்கு வணர்ப் பெருங்குரல் உணீஇய, பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லி பாடு ஓர்த்துக் குறுகும்
புருவைப் பன்றி வருதிறம் நோக்கி,
கடுங்கைக் கானவன் கழுது மிசைக் கொளீஇய 5
நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்து, நம்
நடுங்கு துயர் களைந்த நன்னராளன்
சென்றனன் கொல்லோ தானே, குன்றத்து
இரும்புலி தொலைத்த பெருங்கை யானைக்
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் 10
இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து,
இருங்கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றிக்,
கொடு விரல் உளியம் கெண்டும்
வடுவு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே? 15
பாடல் பின்னணி: இரவுக்குறி வந்த தலைவன் அருகில் இருப்பதை அறிந்த தோழி கூறியது.
பொருளுரை: முதிய கொல்லையாகிய மேட்டு நிலத்தில் தழைத்த கொழுத்த செந்தினையின் உயர்ந்த வளைந்த பெரிய கதிரை உண்ணும்பொருட்டு, பக்கத்தில் பிளந்த வாயினையுடைய பல்லியின் ஒலியாகிய நிமித்தம் கேட்டு அணுகும் இளம் பன்றி வருகின்ற திசையை நோக்கி, வலிய கைகளையுடைய கானவன் பரண் மீது கொளுத்தி வைத்த நீண்ட சுடரின் ஒளியை நோக்கி வந்து, நம்முடைய நடுக்கம்தரும் துயரை நீக்கிய நன்மையாளன் ஆகிய நம் தலைவன்,
மலையின்கண் பெரிய புலியைக் கொன்ற பெரிய தும்பிக்கையை உடைய யானையின் கன்னத்திலிருந்து மிகுந்து ஒழுகும் அழகிய மதநீரை உண்ணும் பொருட்டு மொய்க்கின்ற கரிய சிறகுகளையுடைய வண்டின் கூட்டம் ஒலிக்க, அதனை யாழின் இசை என எண்ணி பெரிய மலையின் பிளப்பாகிய குகைகளில் உள்ள அசுணங்கள் உற்றுக் கேட்கும், மூங்கில்கள் நிறைந்த, பாம்புகள் சாவும்படி நெருங்கி வளைந்த விரல்களையுடைய கரடிகள் தோண்டும் வடுக்கள் பொருந்திய புற்றுக்களையுடைய, மக்கள் செல்லுவதற்கு அரிய வழியின்கண் சென்றானோ?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘களனும் பொழுதும் வரை நிலை விலக்கி காதல் மிகுதி உளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என்னும் விதியால் அமைத்துக் கொள்க. பகுவாய்ப் பல்லி பாடு ஓர்த்துக் குறுகும் புருவைப் பன்றி (3–4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பன்றி தினைக்கதிரைத் தின்ன வரும்பொழுது பல்லி சொல்வதை ஆராய்ந்து பார்த்து நன்னிமித்தமாயின் வரும் என்றது. நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீண்ட ஒளியினையுடைய விளக்கினை அடையாளமாக வைத்து, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நீண்ட சுடரின் ஒளியினை நோக்கி. பல்லி நிமித்தம் – அகநானூறு 9, 88, 151, 289, 351, 387, குறுந்தொகை 16, 140, நற்றிணை 98, 169, 246, 333, கலித்தொகை 11. பறவை நிமித்தம் – நற்றிணை 161. நல்ல நிமித்தம் பொருட்டுக் காத்திருத்தல் – நற்றிணை 40, முல்லைப்பாட்டு 11. கரடிகள் புற்றுக்களைத் தாக்குதல் – அகநானூறு 8, 72, 81, 88, 112, 149, 247, 257, 307, நற்றிணை 125, 325, 336. பழைய உரை – தினை நுகர்தற்குப் பன்றி நிமித்தம் பார்த்து வருகையைச் செய்தேயும், கானவன் அது வரும் திறம் அறிந்து சுடர் கொளுத்தினாற்போல, தாமும் பேணி வந்தாரே ஆயினும் வரவு வெளிப்படும் என்றவாறு.
சொற்பொருள்: முதைச்சுவல் கலித்த மூரிச் செந்தினை ஓங்கு வணர்ப் பெருங்குரல் உணீஇய – முதிய கொல்லையாகிய மேட்டு நிலத்தில் தழைத்த கொழுத்த செந்தினையின் உயர்ந்த வளைந்த பெரிய கதிரை உண்பதற்கு (உணீஇய – அளபெடை), பாங்கர்ப் பகுவாய்ப் பல்லி பாடு ஓர்த்துக் குறுகும் புருவைப் பன்றி வருதிறம் நோக்கி – பக்கத்தில் பிளந்த வாயினையுடைய பல்லியின் ஒலியாகிய நிமித்தம் கேட்டு அணுகும் இளம் பன்றி வருகின்ற திசையை நோக்கி (பாங்கர் – பக்கம்), கடுங்கைக் கானவன் கழுது மிசைக் கொளீஇய நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்து – வலிய கைகளையுடைய கானவன் பரண் மீது கொளுத்தி வைத்த நீண்ட சுடரின் ஒளியை நோக்கி வந்து (கொளீஇய – அளபெடை), நம் நடுங்கு துயர் களைந்த நன்னராளன் – நம்முடைய நடுக்கம்தரும் துயரை நீக்கிய நன்மையாளன் ஆகிய நம் தலைவன், சென்றனன் கொல்லோ – சென்றானோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்), தானே – தான், ஏ அசைநிலைகள், குன்றத்து இரும்புலி தொலைத்த பெருங்கை யானைக் கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் – மலையின்கண் பெரிய புலியைக் கொன்ற பெரிய தும்பிக்கையை உடைய யானையின் கன்னத்திலிருந்து மிகுந்து ஒழுகும் அழகிய மதநீரை (கடாஅம் – அளபெடை), இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து இருங்கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் – கரிய சிறகுகளையுடைய வண்டின் கூட்டம் ஒலிக்க அதனை யாழின் இசை என எண்ணி பெரிய மலையின் பிளப்பாகிய குகைகளில் உள்ள அசுணங்கள் உற்றுக் கேட்கும் (இருஞ்சிறை – அன்மொழித்தொகை, செத்து – எண்ணி, விடர் அளை – இருபெயரொட்டு), காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றிக் கொடு விரல் உளியம் கெண்டும் வடுவு ஆழ் புற்றின – மூங்கில்கள் நிறைந்த பாம்புகள் சாவும்படி நெருங்கி வளைந்த விரல்களையுடைய கரடிகள் தோண்டும் வடுக்கள் பொருந்திய புற்றுக்களையுடைய (காம்பு – மூங்கில், இறும்பு – குறுங்காடு, உளியம் – கரடி), வழக்கு அரு நெறியே – மக்கள் செல்லுவதற்கு அரிய வழியின்கண் (நெறியே –ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 89, மதுரைக் காஞ்சிப் புலவர், பாலைத் திணை – மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந்தலை,
உருத்து எழு குரல குடிஞைச் சேவல்
புல் சாய் விடரகம் புலம்ப வரைய
கல்லெறி இசையின் இரட்டும் ஆங்கண், 5
சிள்வீடு கறங்கும் சிறி இலை வேலத்து
ஊழுறு விளை நெற்று உதிரக் காழியர்
கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப்பு ஒழியக்,
களரி பரந்த கல் நெடுமருங்கின்
விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர் 10
மைபடு திண் தோள் மலிர வாட்டிப்,
பொறை மலி கழுதை நெடுநிரை தழீஇய
திருந்து வாள் வயவர் அருந்தலை துமித்த
படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து,
அருங்கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர், 15
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது,
மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள் கொல்லோ தானே, தேம் பெய்து
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள், 20
இடு மணல் பந்தருள் இயலும்,
நெடுமென் பணைத்தோள் மாஅயோளே?
பாடல் பின்னணி: மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.
பொருளுரை: தேனைப் பெய்து கலந்த இனிய பாலை, நான் அச்சுறுத்தி ஊட்டவும் குடிக்காது, மணல் இட்ட பந்தலில் இங்கும் அங்கும் ஓடும், நெடிய மெல்லிய மூங்கில் போன்ற தோள்களையுடைய மாமை நிறத்தினள் ஆகிய என் மகள்,
சுடும் கதிர்களையுடைய கதிரவன் வானின் நடு உச்சியில் நின்று எரித்ததால், மழை இல்லாது வறண்டுபோன, பேய்த்தேர் ஓடும் அகன்ற இடத்தில், சினத்துடன் எழுகின்ற குரலையுடைய பேராந்தைச் சேவல், புல் அழிந்த மலை வெடிப்புகளின் உட்பகுதி (தம் பொந்துகள்) தனித்திருக்குமாறுப் பறந்து போய், மலையிலுள்ள கற்கள் உருண்டு விழும்போது எழும் ஓசைபோல் மாறி மாறி ஒலிக்கும் அவ்விடத்தில், சிள்வீடு என்னும் வண்டு ஒலிக்கும் சிறிய இலைகளையுடைய வேல மரத்தின் முற்றி விளைந்த விதை நெற்றுக்கள் உதிர, வண்ணார்கள் தொழிலுக்கு வேண்டிய உவர் மண் நீக்கியக் களர் மண் படர்ந்த, கற்களைக் கொண்ட நீண்ட இடத்தையுடைய, கொழுப்பையுடைய ஊனைத் தின்ற பெரிய வில்லைக் கொண்ட எயினர் கரிய வலிய தோள்கள் பூரிக்கும்படி, பாரம் மிக்க கழுதைகளின் நீண்ட வரிசையைப் பின்பற்றி வரும் திருத்தமான வாளினைக் கொண்ட வீரர்களாகிய வணிகர்களைத் துன்புறுத்தி அவர்களின் அரிய தலையை வெட்டிய, மிக்க புலவு நாறும் போர்க்களத்தில், துடியை அடித்து அரிய அணிகலன்களைத் திறையாகப் பெற்றுக் குவித்த பெரிய போர் விருப்பம் கொண்ட வெல்பவர்கள், விற்கள் உடைய அரண்களில் அவரவர் கொள்ள வேண்டிய முறைப்படி பகுத்துக் கொள்ளும், கொல்லையினை உடைய பெரிய காடு நீண்டது எனக் கருதாமல், மெல்லிய சிவந்த அடிகள் வருந்தச் செல்வதற்கு வலிமையுடையவள் ஆவாளோ?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என்பதனால் அமைத்துக் கொள்க. ஞாயிறு நடு நின்று காய்தலின் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கதிரவன் வானத்து உச்சியில் நின்று எரித்ததால், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஞாயிறு முதுவேனில் காலத்து இடை நாட்களில் நின்று எரித்தலின். வீங்கு சிலை மறவர் (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கட்டிய வில்லையுடைய மறவர்கள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – விசைகொண்ட சிலையினரான மறவர்கள், அகநானூறு 377–4 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய வில்லையுடைய எயின மறவர்கள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பெருத்த வில்லையுடைய மறவர்கள். வயவர் (13) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வயவர் என்றது வணிகரை, அவருள்ளும் வீரர் உள்ளர் ஆதலின் சாத்து என்னாது வயவர் என்றார். ஒப்புமை – அகநானூறு 65 – புல் சாய் சிறு நெறி, அகநானூறு 89 – புல் சாய் விடரகம், 357 – அகநானூறு புல் சாய் சிறு நெறி. நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80). புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35). செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34). உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3). வறந்த – வறம் என்னும் சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சம். பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12, குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.
சொற்பொருள்: தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின் உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந்தலை – சுடும் கதிர்களையுடைய கதிரவன் வானின் நடு உச்சியில் நின்று எரித்ததால் மழை இல்லாது வறண்ட பேய்த்தேர் ஓடும் அகன்ற இடம், உருத்து எழு குரல குடிஞைச் சேவல் – சினத்துடன் எழுகின்ற குரலையுடைய பேராந்தைச் சேவல், புல் சாய் விடர் அகம் புலம்ப வரைய கல்லெறி இசையின் இரட்டும் – புல் அழிந்த மலை வெடிப்புகளின் உட்பகுதி (தம் பொந்துகள்) தனித்திருக்குமாறுப் பறந்து போய் மலையிலுள்ள கற்கள் உருண்டு விழும்போது எழும் ஓசைபோல் மாறி மாறி ஒலிக்கும் (இசையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஆங்கண் – அங்கு, சிள்வீடு கறங்கும் சிறி இலை வேலத்து ஊழுறு விளை நெற்று உதிர – சிள்வீடு என்னும் வண்டு ஒலிக்கும் சிறிய இலைகளையுடைய வேல மரத்தின் முற்றி விளைந்த விதை நெற்றுக்கள் உதிர (வேலத்து – அத்துச் சாரியை, வேல் – கருவேலம், panicled babool, Acacia leucophloea), காழியர் கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப்பு ஒழியக் களரி பரந்த – வண்ணார்கள் தொழிலுக்கு வேண்டிய உவர் மண் நீக்கியக் களர் மண் படர்ந்த, கல் நெடுமருங்கின் – கற்களைக் கொண்ட நீண்ட இடத்தையுடைய, விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர் மைபடு திண் தோள் மலிர – கொழுப்பையுடைய ஊனைத் தின்ற பெரிய வில்லைக் கொண்ட எயினர் கரிய வலிய தோள்கள் பூரிக்க, வாட்டி – துன்புறுத்தி, பொறை மலி கழுதை நெடுநிரை தழீஇய திருந்து வாள் வயவர் அருந்தலை துமித்த படு புலாக் கமழும் ஞாட்பில் – பாரம் மிக்க கழுதைகளின் நீண்ட வரிசையைப் பின்பற்றி வரும் திருத்தமான வாளினைக் கொண்ட வீரர்களாகிய வணிகர்களின் அரிய தலையை வெட்டிய மிக்க புலவு நாறும் போர்க்களத்தில் (தழீஇய – அளபெடை), துடி இகுத்து அருங்கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர் வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும் – துடியை அடித்து அரிய அணிகலன்களைத் திறையாகப் பெற்றுக் குவித்த பெரிய போர் விருப்பம் கொண்ட வெல்பவர்கள் விற்கள் உடைய அரண்களில் அவரவர் கொள்ள வேண்டிய முறைப்படி பகுத்துக் கொள்ளும், கொல்லை இரும் புனம் நெடிய என்னாது – கொல்லையினை உடைய பெரிய காடு நீண்டது எனக் கருதாமல், மெல்லென் சேவடி மெலிய ஏக வல்லுநள் கொல்லோ – மெல்லிய சிவந்த அடிகள் வருந்தச் செல்வதற்கு வலிமையுடையவள் ஆவாளோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ –அசைநிலை), தானே – தான், ஏ – அசைநிலைகள், தேம் பெய்து அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள் – தேனைப் பெய்து கலந்த இனிய பாலை அச்சுறுத்தி ஊட்டவும் குடிக்க மாட்டாள் (தேம் – தேன் என்றதன் திரிபு), இடு மணல் பந்தருள் இயலும் நெடுமென் பணைத்தோள் மாஅயோளே – மணல் இட்ட பந்தலில் ஓடும் நெடிய மெல்லிய மூங்கில் போன்ற தோள்களையுடைய மாமை நிறத்தினள் (பந்தர் – பந்தல் என்பதன் போலி, மாஅயோளே – அளபெடை, ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 90, மதுரை மருதன் இளநாகனார், நெய்தல் திணை, தோழி தலைவனிடம் சொன்னது
மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி
இளையோர் ஆடும் வரி மனை சிதைக்கும்
தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந்துறை,
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ,
இல் வயின் செறித்தமை அறியாய் பன்னாள் 5
வருமுலை வருத்தா அம் பகட்டு மார்பின்,
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின் வயின்
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ?
அருந்திறல் கடவுள் செல்லூர்க் குணாஅது,
பெருங்கடல் முழக்கிற்று ஆகி யாணர் 10
இரும்பு இடம்படுத்த வடுவுடை முகத்தர்
கருங்கண் கோசர் நியமம் ஆயினும்,
உறும் எனக் கொள்குநர் அல்லர்
நறுநுதல் அரிவை பாசிழை விலையே.
பாடல் பின்னணி: பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு நின்று இற்செறிப்பு அறிவுறுத்தியது. குறிப்பாக வரைவு கடாயது.
பொருளுரை: முதியோரின் நரைத்த தலையை ஒத்த வெள்ளை நிறத் தலையையுடைய கடல் அலைகள் இளைய மகளிர் விளையாடிப் பண்ணின மணல் வீட்டை அழிக்கும், கட்டு அவிழ்ந்து மலர்ந்த தாழைகளையுடைய சோலைகள் பொருந்திய பெரிய கடற்துறையின்கண், சிலர் செவிகளில் மட்டுமே பட்டிருந்த இயற்கைப் புணர்ச்சி, அலராகிப் பரவியதால் தாய் இவளை இல்வயின் செறித்ததை நீ அறியாய். பல நாளும், நின் அழகிய பெருமையுடைய மார்பினால், வளரும் முலையை உடையவளை வருத்தும், தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின் வயின் “நீங்குக” என்று நான் எவ்வாறு கூறுவேன்?
அரிய வலிமை கொண்ட கடவுள்களையுடைய செல்லூரின் கீழ்த்திசையில் உள்ள பெரிய கடல்போலும் ஆரவாரம் உடையதாகி, போர்க்கருவிகள் உண்டாக்கிய வடுக்களையுடைய முகத்தினராய் உள்ள கோசர்களின் வளம் மிக்க நியமம் என்ற ஊரினைக் கொடுத்தாலும், அது பொருந்தும் எனக் கொள்பவர்கள் இல்லை எம் சுற்றத்தார், நறுமண நெற்றியையுடைய இவளது அணிகலன்களுக்கு விலையாக.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள் ‘பொருள் மிகக் கொடுத்தல் வேண்டுமென்றது’ என்றனர் நச்சினார்க்கினியர். பரிசம் உடைய பாடல்கள் – ஐங்குறுநூறு 147, புறநானூறு 343, 344, 345, 352, கலித்தொகை 103. வரி மனை (2) – பழைய உரை – பண்ணின சிற்றில், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மணலால் வரிவரியாகக் கோலும் சிற்றில். அருந்திறல் கடவுள் செல்லூர் (9) – பழைய உரை – தெய்வங்கள் எல்லாம் பலி பெறுவதற்காகிய செல்லூர், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அரிய வலி கொண்ட தெய்வங்களையுடைய செல்லூர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரிய திறலையுடைய தெய்வங்கள் பலி கொள்ளுகின்ற செல்லூர். யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83). வருத்தா – வருத்தும் என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. தெருமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல்லதிகாரம் 310). பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ உன்னுடைய சான்றோரைக் கொண்டு மகட் பேசி எமரையும் அமைதி செய்து கொண்டு வரைதல் கோடல் வேண்டும் என்பது கருத்தாயிற்று.
சொற்பொருள்: மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி இளையோர் ஆடும் வரி மனை சிதைக்கும் – முதியோரின் நரைத்த தலையை ஒத்த வெள்ளை நிறத் தலையையுடைய கடல் அலைகள் இளைய மகளிர் விளையாடிப் பண்ணின மணல் வீட்டை அழிக்கும், தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந்துறை – கட்டு அவிழ்ந்து மலர்ந்த தாழைகளையுடைய சோலைகள் பொருந்திய பெரிய கடற்துறையின்கண் (தாழை – Pandanas odoratissimus), சில் செவித்து ஆகிய புணர்ச்சி – சிலர் செவிகளில் மட்டுமே பட்டிருந்த இயற்கைப் புணர்ச்சி, அலர் எழ இல் வயின் செறித்தமை அறியாய் – அலராகிப் பரவியதால் இவளை இல்வயின் செறித்ததை நீ அறியாய், பன்னாள் வருமுலை வருத்தா அம் பகட்டு மார்பின் – பல நாளும் வளரும் முலையை உடையவளை நின் அழகிய பெருமையுடைய மார்பினால் வருத்தும் (வருமுலை – அன்மொழித்தொகை), தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின் வயின் நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ – கலங்கும் உள்ளத்துடன் வருந்தும் நின்னிடம் ‘நீங்குக’ என்று நான் எவ்வாறு கூறுவேன் (மொழிகு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓ – அசைநிலை), அருந்திறல் கடவுள் செல்லூர்க் குணாஅது பெருங்கடல் முழக்கிற்று ஆகி – அரிய வலிமை கொண்ட கடவுள்களையுடைய செல்லூரின் கீழ்த்திசையில் உள்ள பெரிய கடல்போலும் ஆரவாரம் உடையதாகி (குணாஅது – அளபெடை), யாணர் – புது வருவாய், வளமை, இரும்பு இடம்படுத்த வடுவுடை முகத்தர் கருங்கண் கோசர் நியமம் ஆயினும் – போர்க்கருவிகள் உண்டாக்கிய வடுக்களையுடைய முகத்தினராய் உள்ள கோசர்களின் நியமம் என்ற ஊரினைக் கொடுத்தாலும், உறும் எனக் கொள்குநர் அல்லர் – பொருந்தும் எனக் கொள்பவர்கள் இல்லை, நறுநுதல் அரிவை பாசிழை விலையே – நறுமண நெற்றியையுடைய இவளது அணிகலன்களுக்கு விலையாக (விலையே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 91, மாமூலனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
விளங்கு பகல் உதவிய பல்கதிர் ஞாயிறு
வளங்கெழு மாமலை பயங்கெடத் தெறுதலின்,
அருவி ஆன்ற பெருவரை மருங்கில்
சூர்ச் சுனை துழைஇ நீர்ப் பயங்காணாது,
பாசி தின்ற பைங்கண் யானை 5
ஓய் பசிப் பிடியொடு ஒரு திறன் ஒடுங்க,
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்,
பெரும் பேர் அன்பினர் தோழி, இருங்கேழ்
இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கைக் 10
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங்கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
விசி பிணி முழவின் குட்டுவன் காப்பப்
பசி என அறியாப் பணை பயில் இருக்கைத்,
தட மருப்பு எருமை தாமரை முனையின் 15
முட முதிர் பலவின் கொழு நிழல் வதியும்
குடநாடு பெறினும் தவிரலர்,
மட மான் நோக்கி நின் மாண் நலம் மறந்தே.
பாடல் பின்னணி: தலைவன் பொருளீட்டுவதற்குப் பிரிந்தான். வருந்திய தலைவியை ஆற்றியிருக்குமாறு வற்புறுத்திக் கூறியது.
பொருளுரை: தோழி! உலகம் விளங்குவதற்குக் காரணமான பகலினைத் தந்து உதவிய பல கதிர்களையுடைய ஞாயிறு, வளம் பொருந்திய பெரிய மலையின் பயன் கெடுமாறுக் காய்ந்ததால், அருவிகள் இல்லாது போன பெரிய மலையின் பக்கத்தில், கடவுள் இருக்கும் சுனையைத் துழாவி, அங்கு நீராகிய பயனைக் காணாது பாசியினைத் தின்ற பசிய கண்களையுடைய களிற்று யானை, தளர்ந்துப் போவதற்குக் காரணமான பசியுடன் தன் பிடியுடன் ஒரு பக்கத்தில் ஒடுங்கி இருக்க, மூங்கிலின் கணுக்கள் உடைந்த வெயில் விளங்கும் அகன்ற இடத்திற்கு அரிய பொருள் விருப்பத்தால் நம்மைப் பிரிந்து சென்றார் ஆயினும், நம் தலைவர் பெரும் அன்புடையவர்.
கரிய நிறமுடைய ஆண்மான்கள் தங்கும் பரல் கற்களையுடைய உயர்ந்த கற்குவியலில் அஞ்சாமையுடைய மழவர்கள் களவு செய்யும் தொழிலுக்கு எழுந்த, நெடிய அடியையுடைய ஆசினிப் பலா மரங்களையுடைய ஒடுங்காடு என்னும் ஊர்க்கு அப்பால், இறுகக் கட்டிய முழவை உடைய சேர மன்னன் காப்பதால் பசி என்பதை அறியாத மருத நிலம் மிக்க ஊர்களையுடைய, வளைந்த கொம்பினையுடைய எருமை தான் மேயும் தாமரையை வெறுத்ததால் அடி வளைந்த பலா மரத்தின் அடர்ந்த நிழலில் தங்கும் குடநாட்டைப் பெற்றாலும் தங்க மாட்டார், இளமான் போன்ற பார்வையை உடையாய், நின் மாட்சிமையுடைய நலத்தை மறந்து.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகைபட வந்த கிளவி’ என்னும் விதி கொள்க. கடுங்கண் மழவர் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆக்களைக் களவு செய்யும் அஞ்சாமையுடைய மழ நாட்டினர், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வன்கண்மையினையுடைய மழவர். மழநாடு – ஒளவை துரைசாமி உரை (நற்றிணை 387) – சிராப்பள்ளி மாவட்டத்தில் கொல்லி மலைக்கும் கொள்ளிடத்திற்கும் இடையே காவிரியின் வடகரையில் உள்ளது மழநாடு. ஒடுங்காடு (12) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஒடு ஒருவகை மரம் என்பதும், அதன் முன் வல்லெழுத்து வரின் மெலிமிகும் என்பதும் ‘உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 41) ‘ஒடுமரக் கிளவி உதி மர இயற்றே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 60) என்பவற்றால் அறியப்படும். ஈண்டு ஒடு மரங்கள் சூழ்ந்தமையின் ஒடுங்காடு எனப்பட்டது என்க. வரலாறு – ஒடுங்காடு, குட்டுவன், குடநாடு. நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80). தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25). பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12, குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.
சொற்பொருள்: விளங்கு பகல் உதவிய பல்கதிர் ஞாயிறு வளங்கெழு மாமலை பயங்கெடத் தெறுதலின் – உலகம் விளங்குவதற்குக் காரணமான பகலினைத் தந்து உதவிய பல கதிர்களையுடைய ஞாயிறு வளம் பொருந்திய பெரிய மலையின் பயன் கெடுமாறுக் காய்ந்ததால், அருவி ஆன்ற பெருவரை மருங்கில் – அருவிகள் இல்லாது போன பெரிய மலையின் பக்கத்தில், சூர்ச் சுனை துழைஇ நீர்ப் பயங்காணாது பாசி தின்ற பைங்கண் யானை – கடவுள் இருக்கும் சுனையைத் துழாவி நீராகிய பயனைக் காணாது பாசியினைத் தின்ற பசிய கண்களையுடைய களிற்று யானை (துழைஇ – அளபெடை), ஓய் பசிப் பிடியொடு ஒரு திறன் ஒடுங்க – தளர்ந்துப் போவதற்குக் காரணமான பசியுடன் தன் பிடியுடன் ஒரு பக்கத்தில் ஒடுங்கி இருக்க, வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும் – மூங்கிலின் கணுக்கள் உடைந்த வெயில் விளங்கும் அகன்ற இடத்திற்கு அரிய பொருள் விருப்பத்தால் நம்மைப் பிரிந்து சென்றார் ஆயினும், பெரும் பேர் அன்பினர் – அவர் பெரும் அன்புடையவர், தோழி – தோழி, இருங்கேழ் இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கைக் கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த – கரிய நிறமுடைய ஆண்மான்கள் தங்கும் பரல் கற்களையுடைய உயர்ந்த கற்குவியலில் அஞ்சாமையுடைய மழவர்கள் களவு செய்யும் தொழிலுக்கு எழுந்த, நெடுங்கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர் – நெடிய அடியையுடைய ஆசினிப் பலா மரங்களையுடைய ஒடுங்காடு என்னும் ஊர்க்கு அப்பால், விசி பிணி முழவின் குட்டுவன் காப்பப் பசி என அறியாப் பணை பயில் இருக்கை – இறுகக் கட்டிய முழவை உடைய சேர மன்னன் காப்பதால் பசி என்பதை அறியாத மருத நிலம் மிக்க ஊர்களையுடைய, தட மருப்பு எருமை தாமரை முனையின் முட முதிர் பலவின் கொழு நிழல் வதியும் குடநாடு பெறினும் தவிரலர் – வளைந்த கொம்பினையுடைய எருமை தான் மேயும் தாமரையை வெறுத்ததால் அடி வளைந்த பலா மரத்தின் அடர்ந்த நிழலில் தங்கும் குடநாட்டைப் பெற்றாலும் தங்க மாட்டார், மட மான் நோக்கி – இளமான் போன்ற பார்வையை உடையாய் (விளி), நின் மாண் நலம் மறந்தே – நின் மாட்சிமையுடைய நலத்தை மறந்து (மறந்தே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 92, மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நெடுமலை அடுக்கம் கண் கெட மின்னிப்
படுமழை பொழிந்த பானாள் கங்குல்,
குஞ்சரம் நடுங்கத் தாக்கிக் கொடுவரிச்
செங்கண் இரும்புலி குழுமும் சாரல்
வாரல் வாழியர் ஐய! நேர் இறை 5
நெடுமென் பணைத்தோள் இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே, நாளை
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின்
ஒண் செங்காந்தள் அவிழ்ந்த ஆங்கண்,
தண் பல் அருவித் தாழ் நீர் ஒரு சிறை 10
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின்
திரு மணி விளக்கின் பெறுகுவை,
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே.
பாடல் பின்னணி: இரவுக்குறிச் சென்று தலைவியைக் கண்ணுற்று நீங்கும் தலைவனிடம் “இரவில் வராதே, பகலில் வருக” எனக் கூறியது. தோழி வரைவு கடாயது.
பொருளுரை: ஐயா! நீ நீடு வாழ்வாயாக! உயர்ந்த மலைச் சாரலில் கண் ஒளி கெடுமாறு மின்னி மிக்க மழை பொழிந்த நடு இரவில், யானை நடுங்கும்படி அதைத் தாக்கி, வளைந்த வரிகளையும் சிவந்த கண்களையுமுடைய பெரிய புலி முழங்கும் மலைப்பக்கத்தில் நீ வராது இருப்பாயாக.
நாளைப் பகற்பொழுதில், அழகிய முன்கையினையும் நீண்ட மெல்லிய மூங்கில் போன்ற தோள்களையுமுடைய என் தோழியும் நானும் தினைப்புனத்தைக் காவல் செய்ய எண்ணியுள்ளோம். அப்பொழுது நீ அங்கு வந்தால், மந்தியும் ஏறி அறிய இயலாத உயர்ந்த மரங்கள் செறிந்த காட்டில், ஒளிரும் செங்காந்தள் மலர்ந்த அவ்விடத்தில், குளிர்ந்த பல அருவிகளின் நீர் வீழும் ஓர் இடத்தில், இடி சினந்து தாக்குவதால் வலிமை அழிந்த பாம்பு உமிழ்ந்த அழகிய மணியின் ஒளியில் பெறுவாய், இருண்ட மெல்லிய கூந்தலில் இன்பம் பெரும் துயிலை.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘களனும் பொழுதும் வரை நிலை விலக்கி காதல் மிகுதி உளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க. தாழ் நீர் (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீர் விழுகின்ற, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – சுனை. மந்தியும் அறியா – அகநானூறு 92 – மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின், நற்றிணை 194 – மந்தியும் அறியா மரம் பயில், திருமுருகாற்றுப்படை 42 – மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து. இடி பாம்பைத் தாக்குதல் கொல்லுதல் – அகநானூறு 68, 92, 119, 182, 202, 274, 323, 328, கலித்தொகை 45, 113, குறுந்தொகை 158, 190, 268, 391, நற்றிணை 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, புறநானூறு 17, 58, 126, 211, 366, 369. பாம்பு மணியை உமிழ்தல் – புறநானூறு 294, அகநானூறு 72, 92, 138, 192, 372, குறுந்தொகை 239, நற்றிணை 255. பொ. வே. சோமசுந்தரனார் உரை – அருவி பாய்ந்து காந்தள் முதலிய மலர்கள் மலர்தலின் அங்கு மலர் பறிக்க வருவாரும் உளர். ஆதலின், பகற்குறியும் இன்னல் உடைத்து என்னும் இறைச்சிப் பொருளில் குறித்தவாறும் உணர்க.
சொற்பொருள்: நெடுமலை அடுக்கம் கண் கெட மின்னிப் படுமழை பொழிந்த பானாள் கங்குல் – உயர்ந்த மலைச் சாரலில் கண் ஒளி கெடுமாறு மின்னி மிக்க மழை பொழிந்த நடு இரவில், குஞ்சரம் நடுங்கத் தாக்கிக் கொடுவரிச் செங்கண் இரும்புலி குழுமும் சாரல் வாரல் – யானை நடுங்கும்படி தாக்கி வளைந்த வரிகளையும் சிவந்த கண்களையுமுடைய பெரிய புலி முழங்கும் மலைப்பக்கத்தில் நீ வராது இருப்பாயாக (குஞ்சரம் – யானை, வாரல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று), வாழியர் – நீ நீடு வாழ்வாயாக, ஐய – ஐயா, நேர் இறை நெடுமென் பணைத்தோள் இவளும் யானும் காவல் கண்ணினம் தினையே – அழகிய முன்கையினையும் நீண்ட மெல்லிய மூங்கில் போன்ற தோள்களையுமுடைய என் தோழியும் நானும் தினைப்புனத்தைக் காவல் செய்ய எண்ணியுள்ளோம், நாளை – நாளைப் பகற்பொழுதில், மந்தியும் ஏறி அறியா மரம் பயில் இறும்பின் ஒண் செங்காந்தள் அவிழ்ந்த ஆங்கண் – மந்தியும் ஏறி அறிய இயலாத உயர்ந்த மரங்கள் செறிந்த காட்டில் ஒளிரும் செங்காந்தள் மலர்ந்த அவ்விடத்தில், தண் பல் அருவித் தாழ் நீர் ஒரு சிறை – குளிர்ந்த பல அருவிகளின் நீர் வீழும் ஓர் இடத்தில், உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் திரு மணி விளக்கின் பெறுகுவை இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே – இடி சினந்து தாக்குவதால் வலிமை அழிந்த பாம்பு உமிழ்ந்த அழகிய மணியின் ஒளியில் பெறுவாய் இருண்ட மெல்லிய கூந்தலில் இன்பம் பெரும் துயிலை (ஏம் – ஏமம் என்பதன் விகாரம், துயிலே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 93, கணக்காயனார் மகனார் நக்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
ஆள் வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து,
ஆரங்கண்ணி அடு போர்ச் சோழர்
அறங்கெழு நல் அவை உறந்தை அன்ன 5
பெறல் அரு நன்கலம் எய்தி, நாடும்
செயல் அருஞ்செய் வினை முற்றினம் ஆயின்,
அரண் பல கடந்த முரண் கொள் தானை,
வாடா வேம்பின் வழுதி கூடல்
நாள் அங்காடி நாறும் நறுநுதல் 10
நீள் இருங்கூந்தல் மாஅயோளொடு,
வரை குயின்றன்ன வான்தோய் நெடுநகர்,
நுரை முகந்தன்ன மென் பூஞ்சேக்கை
நிவந்த பள்ளி, நெடுஞ்சுடர் விளக்கத்து,
நலங்கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப, 15
முயங்குகம் சென்மோ நெஞ்சே, வரிநுதல்
வயம் திகழ்பு இமிழ்புதரும் வாய் புகு கடாஅத்து,
மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி,
ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக்கைக்
கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை 20
திருமா வியன் நகர்க் கருவூர் முன்துறைத்,
தெண் நீர் உயர் கரைக் குவைஇய
தண் ஆன்பொருநை மணலினும் பலவே.
பாடல் பின்னணி: வினை முற்றி மீளும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பொருளுரை: நெஞ்சே! உறவினர்களின் துன்பத்தை நீக்கி அவர்களைத் தாங்கவும், சுற்றத்தார் உண்ணவும், சுற்றத்தார் அல்லாதவர்கள் சுற்றத்தார் போல் பொருந்தியவர்களாக இருக்கவும், பொருள் ஈட்டும் முயற்சிக்கு ஏற்ற ஊக்கத்துடன் விருப்பத்தால் சிறப்புற்று, ஆத்திமாலை அணிந்தவனும், போரில் பகைவரைக் கொல்பவனுமான சோழ வேந்தனின் அறம் பொருந்திய நல்ல அவையையுடைய உறந்தை என்னும் ஊரை ஒத்த, பெறுவதற்கு அரிய நல்ல அணிகலன்களை அடைந்து, யாவரும் விரும்பும் செய்தற்கு அரிய பொருள் செய்யும் வினையை முடித்தோம் ஆனால், பகைவர்களின் அரண்கள் பலவற்றை வென்ற வலிமை மிகுந்த படைகளையுடைய, பொன்னால் செய்த வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டிய வேந்தனின் கூடல் என்னும் ஊரில் உள்ள காலைக் கடைவீதி போல் மணக்கும் நறுமணம் உடைய நெற்றியையும் நீண்ட கரிய கூந்தலையுமுடைய மாமை நிறத்தை உடைய தலைவியுடன், மலையைக் குடைந்து இயற்றியதை ஒத்த வானைத் தொடும் நெடிய இல்லத்தில், நுரையை முகந்து வைத்தாற்போல் மென்மையான பூக்கள் பொருந்திய படுக்கையையுடைய உயர்ந்த கட்டிலில், நெடிய விளக்கின் ஒளியில், நன்மை பொருந்திய நம் மார்பில் அவளுடைய அணிகலன்கள் வடுக்கள் செய்ய, நாம் அவளை அணைப்போம்,
வரியுடைய நெற்றியையும், வலிமை மிகுந்து முழங்கும் வாயில் புகும் மத நீரையும், கூற்றுவனை ஒத்த வலிமையுடன் நிலத்தில் எறிந்து, நெருங்கி வந்து, ஆட்களைக் கொல்லுவதில் தப்பாத, அச்சம் வருவதற்குக் காரணமான பெரிய தும்பிக்கையுடைய கடிய பெரிய யானைப்படையையும், நெடிய தேர்களையுமுடைய சேர வேந்தனின் செல்வம் மிகுந்த பெரிய நகராகிய கருவூர் என்னும் ஊரின் துறைமுன், தெளிந்த நீரையுடைய குளிர்ந்த ஆன்பொருநை என்னும் ஆற்றின் உயர்ந்த கரையில் குவிந்த மணலைவிடவும் பல முறை. நீ என்னுடன் வருவாயாக.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘மேவிய சிறப்பின்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 28) என்னுஞ் சூத்திரத்து, ‘கேள் கேடு ஊன்றவும் ……… புகல் சிறந்து’ என்பது ‘வணிகர் பொருள்வயிற் பிரிந்தவாறு’ என்றும் ‘புறத்திணை மருங்கின்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 55) என்னுஞ் சூத்திரத்து, இப்பாட்டு ‘புறத்திணைத் தலைவர் பலராய் அகத்திணைக்கண் அளவி வந்தது’ என்றும் ‘கரணத்தின் அமைந்து’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என்னுஞ் சூத்திரத்து ‘கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்’ என்பது ‘அவ்வழிப் பெருகிய சிறப்பு’ என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். ‘பிறப்பே குடிமை’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 25) என்னுஞ் சூத்திரத்து ‘கேள் கேடு ஊன்றவும் ……… புகல் சிறந்து’ என்புழி இன்ன காரணத்திற் பிரிந்து போந்து வினை முடித்தனமாயினும், அவளை ‘முயங்குகம் சென்மோ’ என்றமையின் தன் ஆள்வினைக்குத் தக்க பெண்மையான் அவள் ஆற்றியிருந்தாள் என்பதூஉம் கருதிய கருதினாற் காமக் குறிப்புப் பிறந்தமையின், அஃது ஆண்மையாயிற்று எனவும், ‘மறை வெளிப்படுத்தும்’ (தொல்காப்பியம், செய்யுளியல் 187) என்னுஞ் சூத்திரத்து, ‘நலங்கேழ் ஆகம் ….. சென்மோ நெஞ்சே’ என்பது மலிதல் எனவும் கூறுவர் பேராசிரியர். வரலாறு – சோழர், உறந்தை, வழுதி, கூடல், கோதை, கருவூர், ஆன்பொருநை (இன்றைய அமராவதி ஆறு). இப்பாடலில் சோழர், பாண்டியர், சேரர் என்னும் மூவேந்தரும் அவர்களின் தலைநகரமான உறந்தை, கூடல், கருவூர் ஆகியவையும் உள்ளன. எறியா – எறிந்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. மணலினும் பலவே – அகநானூறு 93 – தண் ஆன்பொருநை மணலினும் பலவே, புறநானூறு 9– நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே, புறநானூறு 43 – எக்கர் இட்ட மணலினும் பலவே, புறநானூறு 55 – வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே, புறநானூறு 136 – நுண் பல மணலினும் ஏத்தி, புறநானூறு 363 – இடு திரை மணலினும் பலரே, புறநானூறு 387 – கல்லென் பொருநை மணலினும், மதுரைக்காஞ்சி 236 – திரை இடு மணலினும் பலரே, மலைபடுகடாம் 556 – வடு வாழ் எக்கர் மணலினும் பலரே. தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24). கிளைஞர் ஆரவும் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சுற்றத்தார்கள் பெருகவும், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கிளைகளாயுள்ளார் உண்ணவும். மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).
சொற்பொருள்: கேள் கேடு ஊன்றவும் – உறவினர்களின் துன்பத்தை நீக்கி அவர்களைத் தாங்கவும் (கேள் – கேளிர் என்னும் பொருட்டு), கிளைஞர் ஆரவும் – சுற்றத்தார் உண்ணவும், சுற்றத்தார் பெருகவும், கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் – சுற்றத்தார் அல்லாதவர்கள் சுற்றத்தார் போல் பொருந்தியவர்களாக இருக்கவும் (கெழீஇயினர் – அளபெடை), ஆள் வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து – பொருள் ஈட்டும் முயற்சிக்கு ஏற்ற ஊக்கத்துடன் விருப்பத்தால் சிறப்புற்று (எதிரிய – செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்), ஆரங்கண்ணி அடு போர்ச் சோழர் அறங்கெழு நல் அவை உறந்தை அன்ன – ஆத்திமாலை அணிந்தவனும் போரில் பகைவரைக் கொல்பவனுமான சோழ வேந்தனின் அறம் பொருந்திய நல்ல அவையையுடைய உறந்தை என்னும் ஊரை ஒத்த, பெறல் அரு நன்கலம் எய்தி – பெறுவதற்கு அரிய நல்ல அணிகலன்களை அடைந்து, நாடும் செயல் அருஞ்செய் வினை முற்றினம் ஆயின் – யாவரும் விரும்பும் செய்தற்கு அரிய பொருள் செய்யும் வினையை முடித்தோம் ஆனால், அரண் பல கடந்த முரண் கொள் தானை வாடா வேம்பின் வழுதி கூடல் நாள் அங்காடி நாறும் நறுநுதல் நீள் இருங்கூந்தல் மாஅயோளொடு – பகைவர்களின் அரண்கள் பலவற்றை வென்ற வலிமை மிகுந்த படைகளையுடைய பொன்னால் செய்த வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டிய வேந்தனின் கூடல் என்னும் ஊரில் உள்ள காலைக் கடைவீதி போல் மணக்கும் நறுமணம் உடைய நெற்றியையும் நீண்ட கரிய கூந்தலையுமுடைய மாமை நிறத்தை உடைய (மாந்தளிர் நிறத்தை உடைய) தலைவியுடன் (மாஅயோளொடு – அளபெடை), வரை குயின்றன்ன வான்தோய் நெடுநகர் நுரை முகந்தன்ன மென் பூஞ்சேக்கை நிவந்த பள்ளி நெடுஞ்சுடர் விளக்கத்து – மலையைக் குடைந்து இயற்றியதை ஒத்த வானைத் தொடும் நெடிய இல்லத்தில் நுரையை முகந்து வைத்தாற்போல் மென்மையான பூக்கள் பொருந்திய படுக்கையையுடைய உயர்ந்த கட்டிலில் நெடிய விளக்கின் ஒளியில், நலங்கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப முயங்குகம் – நன்மை பொருந்திய நம் மார்பில் அவளுடைய அணிகலன்கள் வடுக்கள் செய்ய நாம் அவளை அணைப்போம், சென்மோ – என்னுடன் வருவாயாக (மோ – முன்னிலை அசைச்சொல்), நெஞ்சே – நெஞ்சே, வரிநுதல் வயம் திகழ்பு இமிழ்புதரும் வாய் புகு கடாஅத்து மீளி மொய்ம்பொடு நிலன் எறியா – வரியுடைய நெற்றியையும் வலிமை மிகுந்து முழங்கும் வாயில் புகும் மத நீரையும் கூற்றுவனை ஒத்த வலிமையுடன் நிலத்தில் எறிந்து (மீளி – கூற்றுவன், மறமுமாம், கடாஅத்து – அளபெடை, அத்துச் சாரியை), குறுகி ஆள் கோள் பிழையா நெருங்கி வந்து ஆட்களைக் கொல்லுவதில் தப்பாத (பிழையா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்), அஞ்சுவரு தடக்கைக் கடும் பகட்டு யானை – அச்சம் வருவதற்குக் காரணமான பெரிய தும்பிக்கையுடைய கடிய பெரிய யானைப் படையையும், நெடுந்தேர்க் கோதை திருமா வியன் நகர்க் கருவூர் முன்துறை – நெடிய தேர்களையுமுடைய சேர வேந்தனின் செல்வம் மிகுந்த பெரிய நகராகிய கருவூர் என்னும் ஊரின் துறைமுன், தெண் நீர் உயர் கரைக் குவைஇய தண் ஆன்பொருநை மணலினும் பலவே – தெளிந்த நீரையுடைய குளிர்ந்த ஆன்பொருநை என்னும் ஆற்றின் உயர்ந்த கரையில் குவிந்த மணலைவிடவும் பல முறை (குவைஇய – அளபெடை, பலவே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 94, நன்பலூர்ச் சிறுமேதாவியார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது, அல்லது, தலைவன் தன் நண்பனிடம் சொன்னது
தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவை இலை முசுண்டை வெண்பூக் குழைய
வான் எனப் பூத்த பானாள் கங்குல்
மறித் துரூஉத் தொகுத்த பறிப்புற இடையன்
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ 5
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன்
ஐது படு கொள்ளி அங்கை காயக்
குறுநரி உளம்பும் கூர் இருள் நெடுவிளி
சிறுகண் பன்றிப் பெரு நிரை கடிய
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் 10
கருங்கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்
வன்புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
ஆர்வம் சிறந்த சாயல்
இரும் பல் கூந்தல் திருந்திழை ஊரே.
பாடல் பின்னணி: (1) வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் சொல்லியது. (2) – தலைவன் தன் தோழனிடம் சொல்லியது.
பொருளுரை: தேனடைகள் உடைய மலை உச்சியின் பக்கத்தில், செறிந்த குவிந்த இலைகளையுடைய முசுண்டையின் வெண்ணிற மலர்கள், வானத்தில் விண்மீன்கள் பூத்தது போல் குழைந்து பூத்த நடுஇரவில், தன் ஆட்டுக்குட்டிகளை ஒன்றாகத் தொகுத்த ஓலைப்பாயை முதுகில் கொண்ட இடையன், குளிர்ந்த நறுமணம் கமழும் முல்லைப் பூக்களைத் தோன்றிப் பூக்களுடன் கலந்து வண்டுகள் மொய்க்க தொடுத்த நீர் வடியும் மாலையை அணிந்தவனாக, மென்மையான கொள்ளியின் தீயில் உள்ளங்கை காய்ந்திட, மிக்க இருளில் குறுநரிகளை விரட்டும் நீண்ட ஒலியானது, சிறிய கண்களையுடைய பன்றியின் பெருங்கூட்டத்தை விரட்டுவதற்கு முற்றிய தினையுடைய புனத்தைக் காக்கும் காவலர் அவை வருவதை எண்ணி ஊதும் கரிய கொம்பின் ஓசையொடு ஒன்று சேர்ந்து ஒலிக்கும், வன்புலமாகிய காட்டின் அகத்தில் உள்ள நாட்டில் உள்ளது, அன்பால் உள்ளம் கலந்து விருப்பம் மிக்க மென்மைத் தன்மையையும் கரிய அடர்ந்த கூந்தலையுமுடைய திருத்தமான அணிகலன்களை அணிந்த என் தலைவியின் ஊர்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘புணர்தல் பிரிதல்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 14) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள், ‘இருத்தல் நிமித்தமாம்; இக்காலம் வருந்துணையும் ஆற்றினாள் எனத் தான் வருந்துதலின்’ என்றார் நச்சினார்க்கினியர். வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன் ஐது படு கொள்ளி அங்கை காயக் குறுநரி உளம்பும் கூர் இருள் நெடுவிளி – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வண்டுகள் மொய்க்கும்படி தொடுக்கப்பட்ட நீர் துளிக்கின்ற மாலையைத் தலையில் அணிந்தவனாய் மெலிதாய்த் தேய்ந்த கொள்ளிக்கட்டையானது அகங்கையிடத்தே பிடிக்கப்பட்டு எரியாநிற்ப (எரிய) குறுநரிகளை ஓட்டுவதற்கு மிக்க இருளுனூடே செல்கின்ற நெடிய விளிக் குரல், உரை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வண்டுகள் மொய்க்கத் தொடுத்த நீர் ஒழுகுகின்ற கண்ணியனாய் மென்மை வாய்ந்த கொள்ளியின் தீயில் அகங்கை காய்ந்திட மிக்க இருளில் குறுநரிகளை அலைத்தோட்டும் நீண்ட ஒலி. சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).
சொற்பொருள்: தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய குவை இலை முசுண்டை வெண்பூக் குழைய வான் எனப் பூத்த பானாள் கங்குல் – தேனடைகள் உடைய மலை உச்சியின் பக்கத்தில் செறிந்த குவிந்த இலைகளையுடைய முசுண்டையின் வெண்ணிற மலர்கள் வானத்தில் விண்மீன்கள் பூத்தது போல் குழைந்து பூத்த நடுஇரவில் (தேம் – தேன் என்றதன் திரிபு), மறித் துரூஉத் தொகுத்த பறிப்புற இடையன் – தன் ஆட்டுக்குட்டிகளை ஒன்றாகத் தொகுத்த ஓலைப்பாயை முதுகில் கொண்ட இடையன் (துரூஉ – அளபெடை), தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன் – குளிர்ந்த நறுமணம் கமழும் முல்லைப் பூக்களைத் தோன்றிப் பூக்களுடன் கலந்து வண்டுகள் மொய்க்க தொடுத்த நீர் வடியும் மாலையை அணிந்தவன் (முல்லை – மலருக்கு ஆகுபெயர், தோன்றி – மலருக்கு ஆகுபெயர், விரைஇ – அளபெடை), ஐது படு கொள்ளி அங்கை காயக் குறுநரி உளம்பும் கூர் இருள் நெடுவிளி – மென்மையான கொள்ளியின் தீயில் உள்ளங்கை காய்ந்திட மிக்க இருளில் குறுநரிகளை விரட்டும் நீண்ட ஒலி (குறுநரி – பண்புத்தொகை), சிறுகண் பன்றிப் பெரு நிரை கடிய முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் கருங்கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும் – சிறிய கண்களையுடைய பன்றியின் பெருங்கூட்டத்தை விரட்டுவதற்கு முற்றிய தினையுடைய புனத்தைக் காக்கும் காவலர் அவை வருவதை எண்ணி ஊதும் கரிய கொம்பின் ஓசையொடு ஒன்று சேர்ந்து ஒலிக்கும், வன்புலக் காட்டு நாட்டதுவே – வன்புலமாகிய காட்டின் அகத்தில் உள்ள நாட்டில் உள்ளது (நாட்டதுவே – ஏகாரம் அசைநிலை, வன்புலம் – குறிஞ்சியும் முல்லையுமாம் – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை), அன்பு கலந்து ஆர்வம் சிறந்த சாயல் இரும் பல் கூந்தல் திருந்திழை ஊரே – அன்பால் உள்ளம் கலந்து விருப்பம் மிக்க மென்மைத் தன்மையையும் கரிய அடர்ந்த கூந்தலையுமுடைய திருத்தமான அணிகலன்களை அணிந்த என் தலைவியின் ஊர் (திருந்திழை – அன்மொழித்தொகை, ஊரே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 95, ஓரோடோகத்துக் கந்தரத்தனார், பாலைத் திணை, தலைவி தோழியிடம் சொன்னது
பைபயப் பசந்தன்று நுதலும், சாஅய்
ஐது ஆகின்று என் தளிர் புரை மேனியும்,
பலரும் அறியத் திகழ்தரும் அவலமும்,
உயிர்கொடு கழியின் அல்லதை நினையின்
எவனோ? வாழி தோழி! பொரி கால் 5
பொகுட்டு அரை இருப்பைக் குவி குலைக் கழன்ற
ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வீ,
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க
ஈனல் எண்கின் இருங்கிளை கவரும்
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார் 10
கௌவை மேவலர் ஆகி, “இவ் ஊர்
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
புரைய அல்ல என் மகட்கு” எனப் பரைஇ,
நம் உணர்ந்து ஆறிய கொள்கை
அன்னை முன்னர் யாம் என் இதற்படலே? 15
பாடல் பின்னணி: தலைவனுடன் போக உடன்பட்ட தலைவி தோழியிடம் கூறியது.
பொருளுரை: தோழி! நீ நீடு வாழ்வாயாக! என் நெற்றியும் மெல்ல மெல்ல பசந்தது. என் தளிரை ஒத்த மேனியும் மெலிந்து தேய்கின்றது. பலரும் அறியும்படி விளங்கும் துயரமும் என் உயிரைக் கொண்டு செல்வது இல்லாது எண்ணினால் வேறு என்ன செய்யும்? பொரிந்த அடியையும் முரடுடைய அரையையுமுடைய இருப்பை மரத்தின் குவிந்த குலையிலிருந்து கழன்ற பனிக்கட்டி போல் தோன்றும் உள்ளே துளையுடைய திரண்ட மலர்களை, வழியில் செல்லும் புதியவர்கள் நீண்ட இடத்தில் தடைபட்டுத் தங்கும்படி, ஈன்ற கரடிகளின் பெரிய கூட்டம் கவர்ந்து உண்ணும், பாலை நில வழிகள் பலவற்றைக் கடந்து சென்ற நம் தலைவர்க்கு இரங்குதல் இயல்பே என நினையாராய், அலர் தூற்றுவதில் விருப்பமுடையவர்கள் இவ்வூரில் உள்ள நிரையம் புகுதற்குரிய பெண்கள் இன்னாத சொற்களைக் கூறுவது என் மகளுக்குப் பொருத்தம் இல்லை எனக் கடவுளைப் பாராட்டி, நம் களவொழுக்கத்தை அறிந்து அமைதியான கொள்கையுடைய அன்னையின் முன், யாம் இக்களவொழுக்கத்தில் ஒழுகல் எவ்வாறு இயலும்?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் நூற்பாவினால் அமைத்துக் கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளை எடுத்துக்காட்டி, இது போக்குடன் பட்டமை தலைவி தோழிக்கு உரைத்தது, என்றனர் நச்சினார்க்கினியர். கரடி இருப்பை மலரை உண்ணுதல் – அகநானூறு 15, 81, 95, 149, 171, 247, 267, 275, 331. உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆறு செல்வோர் வழியில் நிற்கும் கரடிக் கூட்டத்திற்கு அஞ்சிச் செலவு அழுங்கினாற்போல யானும் நமது ஒழுக்கத்திற்கு இடையூறாக அலர் தூற்றும் நிரையப் பெண்டிர்க்கு அஞ்சி, அன்னை முன் செல்ல நாணுகின்றேன் என உள்ளுறுத்துக்கொண்டு ஆதலால் போக்கு உடன்பட்டேன் என்றாளும் ஆயிற்று.
சொற்பொருள்: பைபயப் பசந்தன்று நுதலும் – நெற்றியும் மெல்ல மெல்ல பசந்தது (பைபய – பைய பைய என்றது பைபய என மரூஉ ஆயிற்று), சாஅய் ஐது ஆகின்று என் தளிர் புரை மேனியும் – மெலிந்து தேய்கின்றது என் தளிரை ஒத்த மேனியும் (சாஅய் – அளபெடை, புரை – உவம உருபு), பலரும் அறியத் திகழ்தரும் அவலமும் உயிர்கொடு கழியின் அல்லதை நினையின் எவனோ – பலரும் அறியும்படி விளங்கும் துயரமும் என் உயிரைக் கொண்டு செல்வது இல்லாது எண்ணினால் வேறு என்ன செய்யும் (அல்லதை – அல்லது, ஈறு திரிந்தது), வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, பொரி கால் பொகுட்டு அரை இருப்பைக் குவி குலைக் கழன்ற ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வீ – பொரிந்த அடியையும் முரடுடைய அரையையுமுடைய இருப்பை மரத்தின் குவிந்த குலையிலிருந்து கழன்ற பனிக்கட்டி போல் தோன்றும் உள்ளே துளையுடைய திரண்ட மலர்களை (இருப்பை – Indian Butter Tree, South Indian Mahua, இலுப்பை மரம்), ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க ஈனல் எண்கின் இருங்கிளை கவரும் – வழியில் செல்லும் புதியவர்கள் நீண்ட இடத்தில் தடைபட்டுத் தங்கும்படி ஈன்ற கரடிகளின் பெரிய கூட்டம் கவர்ந்து உண்ணும், சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார் – பாலை நில வழிகள் பலவற்றைக் கடந்து சென்ற நம் தலைவர்க்கு இரங்குதல் இயல்பே என நினையாராய், கௌவை மேவலர் ஆகி – அலர் தூற்றுவதில் விருப்பமுடையவர்கள் ஆகி, இவ் ஊர் நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ புரைய அல்ல என் மகட்கு என – இவ்வூரில் உள்ள நிரையம் புகுதற்குரிய பெண்கள் இன்னாத சொற்களைக் கூறுவது என் மகளுக்குப் பொருத்தம் இல்லை என, பரைஇ – கடவுளைப் பாராட்டி (அளபெடை), நம் உணர்ந்து ஆறிய கொள்கை அன்னை முன்னர் – நம் களவொழுக்கத்தை அறிந்து அமைதியான கொள்கையுடைய அன்னையின் முன், யாம் என் இதற்படலே – யாம் இக்களவொழுக்கத்தில் ஒழுகல் எவ்வாறு இயலும் (இதற்படலே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 96, மருதம் பாடிய இளங்கடுங்கோ, மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்துப்
பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும்
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
அரவாய் அன்ன அம் முள் நெடுங்கொடி
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி, 5
அசைவரல் வாடை தூக்கலின், ஊது உலை
விசை வாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும்
கழனி அம் படப்பைக் காஞ்சி ஊர!
ஒண்தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
கொண்டனை என்ப ஓர் குறுமகள் அதுவே, 10
செம்பொன் சிலம்பின் செறிந்த குறங்கின்
அம் கலுழ் மாமை அஃதை தந்தை
அண்ணல் யானை அடு போர்ச் சோழர்
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய, 15
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை
களிறு கவர் கம்பலை போல,
அலர் ஆகின்றது பலர் வாய்ப்பட்டே.
பாடல் பின்னணி: தோழி வாயில் மறுத்தது.
பொருளுரை: கள் குடித்த கிண்ணம் கழுவப்பட்ட நீரை உண்ட இறால் மீன், கள்ளினால் செருக்குற்று நாணின் கயிறு அறுந்த வில் தெறிப்பது போல் நெற்கூட்டின் அடியில் துள்ளி விழும், மருத நிலத்தின் குளத்தின் மணல் அடைந்த கரையில் உள்ள, அரத்தின் வாய் போன்ற அழகிய முட்களையுடைய பிரம்பின் நீண்ட கொடி, அருவியிலிருந்து வீழும் நீரில் உள்ள ஆம்பலின் அகன்ற இலையினைச் சுற்றிக் கொள்ள, அசைந்து வரும் வாடைக்காற்று அந்த இலையைத் தூக்குவதால், ஊதப்படும் கொல்லனின் உலையில் விசைக்கயிற்றால் இழுக்கப்படும் துருத்தி போல் அந்த இலை புடைத்துச் சுருங்கும், வயல்களையும் காஞ்சி மரங்களுடைய தோட்டங்களையும் உடைய ஊரின் தலைவனே!
ஒளிரும் வளையல்களை அணிந்த பரத்தையர் கூட்டத்துள்ளும் நீ ஓர் இளையவளை விரும்பி மணந்து கொண்டனை எனக் கூறுகின்றனர். நின்னுடைய அச் செயல், சிவந்த பொன்னால் செய்த சிலம்பையும், நெருங்கிய தொடையையும், அழகு ஒழுகும் மாமை நிறத்தையும் உடைய அஃதை என்பவளின் தந்தையாகிய, தலைமையுடைய யானைகளையுடைய, கொல்லும் போரில் வெல்லும் சோழ வேந்தர், தம்முடன், வெண்ணெல் விளையும் வயல்களையுடைய பருவூரின் போர்க்களத்தில், சேரர் பாண்டியர் ஆகிய இருபெரும் வேந்தர்களும் செய்த போரில் வீழ, விளங்கும் வாளினால் செய்த நல்ல போரில் வென்றபொழுது களிறுகளைக் கவர்ந்துகொண்ட வேளையில் எழுந்த ஆரவாரம் போல், அலர் ஆயிற்று பலர் வாயிலும் பொருந்தி.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘புல்லுதல் மயக்கும்’ (தொல்காப்பியம், கற்பியல் 30) என்னுஞ் சூத்திரத்து, ‘ஒண்தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து கொண்டனை என்ப ஓர் குறுமகள்’ எனக் காமஞ் சாலா இளமையோளைக் கூறிற்று’ என்றனர் நச்சினார்க்கினியர். ‘தெய்வம் அஞ்சல்’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 24) என்னுஞ் சூத்திரத்து, ‘களிறு கவர் கம்பலை போல அலர் ஆகின்றது பலர் வாய்ப்பட்டே’ என்பது புறச்சொல் மாணாக் கிளவிக்கு உதாரணமாகும், என்றனர் பேராசிரியர். ‘ஒருமை சுட்டிய’ (தொல்காப்பியம், எச்சவியல் 65) என்னுஞ் சூத்திரத்து, ‘பன்மைக்கு ஆகும் இடனுமார் உண்டே’ என்பது, ஒருமைச் சொல் பன்மைச் சொல்லோடு தொடர்தற்குப் பொருந்தும் இடமும் உண்டென்பதூஉம் பட நின்றமையால், ‘அஃதை தந்தை ………… சோழர்’ என ஒருமைச் சொல் பன்மைச் சொல்லோடு தொடர்தலுங் கண்டுகொள்க. ஈண்டு ஒருமைச் சொல் பன்மைச் சொல்லோடு மயங்குதல் உடைமையான் ‘ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி’ என்புழி அடங்காமை அறிக என்றனர் சேனாவரையர். அச் சூத்திரத்து ‘அஃதை தந்தை ………… சோழர்’ என்புழிச் சோழரெல்லாரும் அஃதைக்குத் தந்தையாம் முறையராய் நிற்றலின், ‘தந்தை’ என்னும் ஒருமை, சோழர் என்னும் பன்மையோடு தனித்தனி சென்று கூடுதலின் வாழுவின்றேனும் ஈற்றுப் பன்மைபற்றி வழுவமைத்தார், என்றனர் நச்சினார்க்கினியர். உள்ளுறை – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பொய்கைப்பரத்தையர் சேரியாகவும், முள்ளுடைப் பிரம்பின் கொடிய அதனைச் சூழ்ந்து திரியும் நெஞ்சு வலிய பாணனாகவும், ஆம்பல் இலையைக் காமம் சாலாக் குருமகளாகவும், அதனைக் கொடி நுடக்கியதனைப் பாணன் அவளைத் தலைமகனோடு கூட்டியதாகவும், வாடையைத் தலைமகனாகவும், அது தூக்குந்தோறும் அவ்விலை வீங்கித் தூக்காதவழி நெகிழ்ந்ததனை, தலைவன் அவளை முயங்கியவழி அவள் களிப்புற்று, நீங்கியவழி மெலிந்த தன்மையாகவும் கொள்க. மற்றும், இதில் ‘நறவுண் மண்டை ……….கூட்டு’ முதற் றெறிக்கும்’ என்றது நறவு கலந்த இழிந்த நீரை உண்ட இறால் அச் செருக்கினால் கூட்டு முதல் தெறித்தது போலப் பரத்தையரின் இழிந்த இன்பத்தை நுகர்ந்த தலைவனும் செருக்குற்றுத் தனக்குப் புறம்பாகிய வேறிடத்தே தங்கிக் கிடக்கின்ற தன்மையாகவும் கொள்க. ஒப்புமை – புறநானூறு 287 – கூட்டு முதல் புரளும். வரலாறு – அஃதை தந்தை, சோழர், பருவூர். இறா இறவு என வந்தது. ‘குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32). கம்பலை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).
சொற்பொருள்: நறவு உண் மண்டை நுடக்கலின் இறவுக் கலித்துப் பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும் பழனப் பொய்கை அடைகரை – கள் குடித்த கிண்ணம் கழுவப்பட்ட நீரை உண்ட இறால் மீன் செருக்குற்று நாணின் கயிறு அறுந்த வில் தெறிப்பது போல் நெற்கூட்டின் அடியில் துள்ளி விழும் மருத நிலத்தின் குளத்தின் மணல் அடைந்த கரையில் உள்ள (வில்லின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பிரம்பின் அரவாய் அன்ன அம் முள் நெடுங்கொடி – அரத்தின் வாய் போன்ற அழகிய முட்களையுடைய பிரம்பின் நீண்ட கொடி, அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி அசைவரல் வாடை தூக்கலின – அருவியிலிருந்து வீழும் நீரில் உள்ள ஆம்பலின் அகன்ற இலையினைச் சுற்றிட அசைந்து வரும் வாடைக்காற்று அந்த இலையைத் தூக்குவதால், ஊது உலை விசை வாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும் – ஊதப்படும் கொல்லனின் உலையில் விசைக்கயிற்றால் இழுக்கப்படும் துருத்தி போல் புடைத்துச் சுருங்கும் (தோலின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), கழனி அம் படப்பைக் காஞ்சி ஊர – வயல்களையும் காஞ்சி மரங்களுடைய தோட்டங்களையும் உடைய ஊரின் தலைவனே (ஊர – அண்மை விளி), ஒண்தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து கொண்டனை என்ப ஓர் குறுமகள் – ஒளிரும் வளையல்களை அணிந்த பரத்தையர் கூட்டத்துள்ளும் நீ ஓர் இளையவளை விரும்பி மணந்து கொண்டனை எனக் கூறுகின்றனர், அதுவே – அது, செம்பொன் சிலம்பின் செறிந்த குறங்கின் அம் கலுழ் மாமை அஃதை தந்தை – சிவந்த பொன்னால் செய்த சிலம்பையும் நெருங்கிய தொடையையும் அழகு ஒழுகும் மாமை நிறத்தையும் உடைய அஃதை என்பவளின் தந்தை (கலுழ் – வழிகின்ற, ஒழுகின்ற), அண்ணல் யானை அடு போர்ச் சோழர் – தலைமையுடைய யானைகளையுடைய கொல்லும் போரில் வெல்லும் சோழ வேந்தர், வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய – வெண்ணெல் விளையும் வயல்களையுடைய பருவூரின் போர்க்களத்தில் சேரர் பாண்டியர் ஆகிய இருபெரும் வேந்தர்களும் செய்த போரில் வீழ, ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை களிறு கவர் கம்பலை போல – விளங்கும் வாளினால் செய்த நல்ல போரில் வென்றபொழுது களிறுகளைக் கவர்ந்துகொண்ட வேளையில் எழுந்த ஆரவாரம் போல், அலர் ஆகின்றது பலர் வாய்ப்பட்டே – அலர் ஆயிற்று பலர் வாயிலும் பொருந்தி (வாய்ப்பட்டே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 97, மாமூலனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
“கள்ளியங் காட்ட புள்ளி அம் பொறிக் கலை
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து,
புலவுப் புலி துறந்த கலவுக் கழிக் கடு முடை,
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து,
இருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் 5
கொலை வில் ஆடவர் போலப், பலவுடன்
பெருந்தலை எருவையொடு பருந்து வந்து இருக்கும்
அருஞ்சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்,
இருங்கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறை மகளிரொடு 10
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி
நறவு மகிழ் இருக்கை நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்ன, நின்
அலர் முலை ஆகம் புலம்பப் பல நினைந்து
ஆழேல்” என்றி தோழி யாழ, என் 15
கண் பனி நிறுத்தல் எளிதோ, குரவு மலர்ந்து
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில்
அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடைகரைத்
துறை அணி மருது தொகல் கொள ஓங்கிக்,
கலிழ் தளிர் அணிந்த இருஞ்சினை மாஅத்து 20
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர்ப்
புகை புரை அம் மஞ்சு ஊர,
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே?
பாடல் பின்னணி: தலைவன் பொருள்வயின் பிரிந்த வேளையில் தலைவி வருந்தினாள். அவளை ஆற்றியிருக்குமாறு வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது.
பொருளுரை: தோழி! “கள்ளிகளுடைய காட்டில் புள்ளிகளாகிய பொறிகள் பொருந்திய கலைமானை, அதன் வறட்சியுற்ற கொம்புகள் உதிரும்படி அதனை வென்று பற்றித் தின்று, புலாலை உண்ண விரும்பும் புலி கைவிட்டுப் போன மூட்டுவாய் நீக்கப்பட்ட கடிய நாற்றமுடைய தசை இருக்கும் இடத்தில், இரவில், காட்டு அரணில் உள்ள கரந்தை மறவர்கள் அலற அவர்களைக் கொன்றுக் கைப்பற்றிய அவர்களின் ஆநிரைகளைப் பகுத்துக் கொண்டு, பெரிய கற்பாறையின் முடுக்கில் அந்த ஆக்களின் தசையினை அறுத்துத் தின்னும் கொலைத் தொழிலில் வல்ல வெட்சி மறவர்கள் போல், பெரிய தலையினையுடைய கழுகுகளுடன் பருந்துகள் பலவும் வந்து சூழ்ந்திருக்கும் அரிய பாலை நிலத்தைக் கடந்த கொடியவராகிய நம் தலைவரின் பொருட்டு நாள்தோறும், பெரிய மூங்கில்களையுடைய சிறு காட்டில் ஆராய்ந்து கொண்டு அறுத்த சிறிய கணுக்களையுடைய கோலைக் கொண்ட வளைந்த முன்கையையுடைய விறலியருடன் பாணர்களை அன்புடன் பாதுகாக்கும், கழலும் தொடியினையும் கள்ளுண்டு மகிழும் இருக்கையையுமுடைய நன்னன் வேண்மானின் வயலைக்கொடி படர்ந்த வியலூர் போன்ற, நின் பரந்த முலையுடைய ஆகம் தனித்து வருந்த, பலவற்றையும் நினைத்து துன்பத்தில் ஆழ்ந்துவிடாதே” என நீ என்னிடம் கூறுகின்றாய்.
கண்ணீரை நிறுத்துதல் எளிதோ, குரவ மலர்கள் பூத்து முன்பனிக்காலம் நீங்கிய பெறுதற்கரிய செவ்வியையுடைய இளவேனிற்காலத்தில், அற்றற்று நீர் ஒழுகுகின்ற விளங்கும் நீண்ட மணலையுடைய நீர் அடைந்த கரையில், துறையை அழகு செய்யும் மருத மரங்களுடன் தொகுதியாக உள்ள உயர்ந்த அழகு ஒழுகும் தளிர்களைக் கொண்ட பெரிய கிளைகளையுடைய மாமரத்தின்கண், கொத்துக்களாக நெருங்கிய புதிய மலர்கள் செறிந்த சோலையில், புகையை ஒத்த அழகிய மஞ்சு (வெண்முகில்) தவழும் காலத்தில், நுகரும் குயில்கள் பாடும் குரலினைக் கேட்பவர்களுக்கு?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகைபட வந்த கிளவி’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘நடுவு நிலைத்திணையே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 9) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளை எடுத்துக்காட்டி, இதன்கண் இருவகை வேனிலும் பாலைக் கண் வந்தன, என்றார் நச்சினார்க்கினியர். வலம் கடந்து (2) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அதன் ஓட்டத்தினை வென்று பற்றித் தின்ற, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அதன் வெற்றியையும் கடந்து பற்றிக்கொண்ட, புலியூர்க்கேசிகன் உரை – அதனை துரத்திக் கொன்று தின்ற. மகளிர் (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கூத்தியர், நுணங்கு கண் சிறு கோல் என்றது தலைக்கோலை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – விறலியர், இவர் கையிலே சிறிய மூங்கிற் கோலையுடையவர் என்பது ‘வெண்கடைச் சிறுகோல் அகவன்மகளிர்’ (குறுந்தொகை 298) என்பதனாலும் அறியப்படும். அகவுநர் – அகவல் மகள் – குறுந்தொகை 23, உ. வே. சாமிநாதையர் உரை – கட்டுவிச்சி, அகநானூறு 152, 208 – நுண் கோல் அகவுநர், அகநானூறு 249 – இன் குரல் அகவுநர், பரிபாடல் 15–42 – அகவுநர் நா நவில் பாடல் முழவு எதிர்ந்தன்ன, குறுந்தொகை 298 – சிறுகோல் அகவல் மகளிர். என் (15) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – என்னையோ, இவ்வாறு கூறுதற்குக் காரணம் நின் அறியாமையே என்பாள் என்னையோ என்று வினவினள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இஃது என்னை, எவ்வாறு இயலும் என்றபடி, இனி என் கண் பனி என்றுரைத்தலுமாம். வரலாறு – நன்னன் வேண்மான், வியலூர். வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).
சொற்பொருள்: கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை வறன் உறல் அம் கோடு உதிர வலம் கடந்து – கள்ளிகளுடைய காட்டில் புள்ளிகளாகிய பொறிகள் பொருந்திய கலைமானை அதன் வறட்சியுற்ற கொம்புகள் உதிரும்படி அதனை வென்று பற்றித் தின்று (அம் இரண்டும் அசைநிலை, வலம் – வலிமை, வெற்றி), புலவுப் புலி துறந்த கலவுக் கழிக் கடு முடை – புலாலை உண்ண விரும்பும் புலி கைவிட்டுப் போன மூட்டுவாய் நீக்கப்பட்ட கடிய நாற்றமுடைய தசை (முடை – ஆகுபெயர் ஊனுக்கு), இரவுக் குறும்பு அலற நூறி நிரை பகுத்து – இரவில் காட்டு அரணில் உள்ள கரந்தை மறவர்கள் அலற அவர்களைக் கொன்றுக் கைப்பற்றிய ஆநிரைகளைப் பகுத்துக் கொண்டு, இருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் கொலை வில் ஆடவர் போல – பெரிய கற்பாறையின் முடுக்கில் ஆக்களின் தசையினை அறுத்துத் தின்னும் கொலைத் தொழிலில் வல்ல வெட்சி மறவர்கள் போல், பலவுடன் பெருந்தலை எருவையொடு பருந்து வந்து இருக்கும் அருஞ்சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும் – பெரிய தலையினையுடைய கழுகுகளுடன் பருந்துகள் பலவும் வந்து சூழ்ந்திருக்கும் அரிய பாலை நிலத்தைக் கடந்த கொடியவராகிய நம் தலைவரின் பொருட்டு நாள்தோறும் (எருவை – பிணம் தின்னும் கழுகு), இருங்கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறை மகளிரொடு அகவுநர்ப் புரந்த அன்பின் – பெரிய மூங்கில்களையுடைய சிறு காட்டில் ஆராய்ந்து கொண்டு அறுத்த சிறிய கணுக்களையுடைய கோலைக் கொண்ட வளைந்த முன்கையையுடைய விறலியருடன் பாணர்களை அன்புடன் பாதுகாக்கும், கழல் தொடி நறவு மகிழ் இருக்கை நன்னன் வேண்மான் வயலை வேலி வியலூர் அன்ன – கழலும் தொடியினையும் கள்ளுண்டு மகிழும் இருக்கையையுமுடைய நன்னன் வேண்மானின் வயலைக்கொடி படர்ந்த வியலூர் போன்ற (நறவு – நறா நற என்றாகி உகரம் ஏற்றது, வயலைக்கொடி – purslane vine, Portulaca quadrifida), நின் அலர் முலை ஆகம் புலம்ப – நின் பரந்த முலையுடைய ஆகம் தனித்து வருந்த, பல நினைந்து ஆழேல் என்றி – பலவற்றையும் நினைத்து துன்பத்தில் ஆழ்ந்துவிடாதே எனக் கூறுகிறாய் (என்றி – முன்னிலை ஒருமை), தோழி – தோழி, யாழ – முன்னிலை அசை, என் – எவ்வாறு இயலும், என்னுடை (இரண்டு பொருளும் பொருந்தும்), கண்பனி நிறுத்தல் எளிதோ – கண்ணீரை நிறுத்துதல் எளிதோ, குரவு மலர்ந்து அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் – குரவ மலர்கள் பூத்து முன்பனிக்காலம் நீங்கிய பெறுதற்கரிய செவ்வியையுடைய இளவேனிற்காலத்தில் (குரவ மரம் – Webera Corymbosa, Bottle Flower Tree), அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடைகரை – அற்றற்று நீர் ஒழுகுகின்ற விளங்கும் நீண்ட மணலையுடைய நீர் அடைந்த கரையில், துறை அணி மருது தொகல் கொள ஓங்கிக் கலிழ் தளிர் அணிந்த இருஞ்சினை மாஅத்து – துறையை அழகு செய்யும் மருத மரங்களுடன் தொகுதியாக உள்ள உயர்ந்த அழகு ஒழுகும் தளிர்களைக் கொண்ட பெரிய கிளைகளையுடைய மாமரத்தின்கண் (மருது – மருதொடு என மூன்றனுருபு விரித்துரைக்க, மாஅத்து – அளபெடை), இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர் – கொத்துக்களாக நெருங்கிய புதிய மலர்கள் செறிந்த சோலையில், புகை புரை அம் மஞ்சு ஊர – புகையை ஒத்த அழகிய மஞ்சு (வெண்முகில்) தவழ (புரை – உவம உருபு), நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே – நுகரும் குயில்கள் பாடும் குரலினைக் கேட்பவர்களுக்கு (கேட்போர்க்கே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 98, வெறி பாடிய காமக்கண்ணியார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பனி வரை நிவந்த பயங்கெழு கவாஅன்,
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த
இனிய உள்ளம் இன்னா ஆக,
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்
சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல் 5
அறிந்தனள் அல்லள் அன்னை, வார் கோல்
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கிக்
கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப்
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ,
“முருகன் ஆர் அணங்கு” என்றலின், அது செத்து, 10
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்,
“பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின்
பண்டையின் சிறக்க என் மகட்கு” எனப் பரைஇ,
கூடு கொள் இன் இயம் கறங்கக் களன் இழைத்து,
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர், 15
வெண்போழ் கடம்பொடு சூடி, இன் சீர்
ஐது அமை பாணி இரீஇக், கை பெயராச்
செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன்
வெறி அயர் வியன் களம் பொற்ப, வல்லோன்
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின் 20
என் ஆம் கொல்லோ தோழி? மயங்கிய
மையல் பெண்டிற்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும் வாடிய மேனி
பண்டையின் சிறவாது ஆயின், இம்மறை
அலர் ஆகாமையோ அரிதே அஃதான்று 25
அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி
வெறி கமழ் நெடுவேள் நல்குவனே எனின்,
“செறி தொடி உற்ற செல்லலும் பிறிது” எனக்
கான் கெழு நாடன் கேட்பின்,
யான் உயிர் வாழ்தல் அதனினும் அரிதே. 30
பாடல் பின்னணி: வரையாது வந்தொழுகும் தலைவனுக்கு வெறியாட்டு அறிவுறுத்தி வரைவு கடாயது. பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனைத் தோழியின் கூற்றாகக் கொள்ளின் அவள் தலைவியையே யான் என்கிறாளாகக் கொள்க. இச் செய்யுள் தலைவி கூற்றெனக் கொள்ளுதலே நேரிதாம்.
பொருளுரை: தோழி! குளிர்ந்த மலையின் உயர்ந்த வளம் பொருந்திய பக்கமலையின்கண், வெறுப்பில்லாத கொள்கையுடன் நம் தலைவர் நம்பொருட்டு வந்ததால் இனிமையாகிய நம் நெஞ்சம், அவர் வராமையால் துன்பம் உடையதாய் ஆகி, நாம் வாழ்க்கையை வெறுக்குமாறு நம்மிடத்தில் அவரால் நிறுத்தப்பட்ட அவர் தந்த வருத்தமானது, கடவுள் உறையும் மலைநாட்டின் தலைவனின் மார்பைத் தழுவினால் தணியும் என்பதை நம் தாய் அறியவில்லை.
என் நீண்டு திரண்ட நெருங்கி ஒளிரும் வளையல்கள் நெகிழ்ந்ததைக் கண்டு, செயலற்ற உள்ளத்தை உடையவளாய் அவள் வினவியதால், அறிவாற்றல் உடைய, பொய் கூறுவதில் வல்லமையுடைய கட்டுவிச்சியர், பிரப்பு அரிசியைத் தரையில் பரப்பி வைத்து “இது முருகனால் ஏற்பட்ட அரிய வருத்தம்” எனக் கூறியதால், அதை உண்மை என எண்ணி, “ஓவியம் போன்ற தொழிலால் புனையப்பட்ட நல்ல இல்லத்தில் பாவையை ஒத்த பலரால் ஆராயப்பட்ட என் மகளின் மாண்புற்ற அழகானது முன்புபோல் சிறப்பு அடையட்டும்” எனக் கடவுளை வேண்டி, இணைந்த இனிய இசைக்கருவிகள் முழங்க, வெறியாடும் களத்தை இயற்றி, ஆடுதற்கு ஏற்ற அழகு செய்த அகன்ற பெரிய பந்தலில், வெள்ளை பனந்தோட்டினைக் கடம்ப மலர்களுடன் அணிந்து, இனிய சீர் அமைந்த தாளத்துடன் பொருந்தி, கைகளை உயர்த்தி முருகக்கடவுளின் பெரும் புகழைக் கூறிப் புகழ்ந்து வேலன் வெறியாடும் பெரிய களம் அழகுபெற, வல்லோன் ஆட்டுவிக்கும் பொறி அமைந்த பாவையைப் போல் ஆடுதலைத் தாய் விரும்பினால் என்ன ஆகுமோ?
வெறியாட்டக்களத்தில் கூடிய, மயக்கம் பொருந்திய பெண்களுக்குத் துன்பம் உண்டாக, வேலன் ஆடிய பின்பும் என் வாடிய மேனி முன்புபோல் சிறப்பு அடையாது ஆனால், இக்களவு ஒழுக்கம் அலர் ஆகாதிருப்பது அரிது. அது மட்டும் அல்லாது, நம் தலைவர் செய்த அல்லலைக் கண்டு அருள் புரிந்து, மணங்கமழும் முருகவேள் நல்குவான் என்றால், நெருங்கிய வளையல்களை அணிந்த நம் தலைவி அடைந்த துன்பமும் வேறு காரணத்தால் என்று, காடு பொருந்திய நாட்டினையுடைய நம் தலைவன் கேட்டு அறிந்தால், யான் உயிர் வாழ்தல் அதனினும் அரிது.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, தோழி கூற்றாயின் ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க. இனி, ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 20) என வரும் நூற்பாவின்கண் ‘வெறியாட்டிடத்து வெருவின்கண்ணும்’ என வரும் விதிக்கு எடுத்துக்காட்டி நச்சினார்க்கினியர் இதனைத் தலைவி கூற்றாகக் கொள்வர். வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார். பெயரா – பெயர்த்து (நகர்த்தி) என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. பொற்பு – பொற்பே பொலிவு (தொல்காப்பியம், உரியியல் 39). அஃதான்று – இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி நின்ற இகரம் உகரம் ஆதல் தொன்று இயல் மருங்கின் செய்யுளுள் உரித்தே (தொல்காப்பியம், உயிர்மயங்கியல் 35). எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21). வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).
சொற்பொருள்: பனி வரை நிவந்த பயங்கெழு கவாஅன் துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த இனிய உள்ளம் – குளிர்ந்த மலையின் உயர்ந்த வளம் பொருந்திய பக்கமலையின்கண் வெறுப்பில்லாத கொள்கையுடன் அவர் நம்பொருட்டு வந்ததால் இனிமையாகிய நம் நெஞ்சம் (கவாஅன் – அளபெடை), இன்னா ஆக முனிதக நிறுத்த நல்கல் எவ்வம் – துன்பம் உடையதாய் ஆகி நாம் வாழ்க்கையை வெறுக்குமாறு நம்மிடத்தில் அவரால் நிறுத்தப்பட்ட அவர் தந்த வருத்தம், சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல் அறிந்தனள் அல்லள் அன்னை – கடவுள் உறையும் மலைநாட்டின் தலைவனின் மார்பைத் தழுவினால் தணியும் என்பதை நம் தாய் அறியவில்லை, வார் கோல் செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கிக் கையறு நெஞ்சினள் வினவலின் – நீண்டு திரண்ட நெருங்கி ஒளிரும் வளையல்கள் நெகிழ்ந்ததைக் கண்டு செயலற்ற உள்ளத்தை உடையவளாய் அவள் வினவியதால், முதுவாய்ப் பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ முருகன் ஆர் அணங்கு என்றலின் – அறிவாற்றல் உடைய பொய் கூறுவதில் வல்லமையுடைய கட்டுவிச்சியர் பிரப்பு அரிசியைப் பரப்பி வைத்து இது முருகனால் ஏற்பட்ட அரிய வருத்தம் எனக் கூறியதால் (இரீஇ – அளபெடை), அது செத்து – அதை உண்மை என எண்ணி, ஓவத்து அன்ன வினை புனை நல் இல் பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின் பண்டையின் சிறக்க என் மகட்கு எனப் பரைஇ – ஓவியம் போன்ற தொழிலால் புனையப்பட்ட நல்ல இல்லத்தில் பாவையை ஒத்த பலரால் ஆராயப்பட்ட மாண்புற்ற அழகானது முன்புபோல் சிறப்பு அடையட்டும் என் மகளுக்கு எனக் கடவுளை வேண்டி (ஓவம், அத்துச் சாரியை, பண்டையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, பரைஇ – அளபெடை), கூடுகொள் இன் இயம் கறங்கக் களன் இழைத்து ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர் வெண்போழ் கடம்பொடு சூடி – இணைந்த இனிய இசைக்கருவிகள் முழங்க வெறியாடும் களத்தை இயற்றி ஆடுதற்கு ஏற்ற அழகு செய்த அகன்ற பெரிய பந்தலில் வெள்ளை பனந்தோட்டினைக் கடம்ப மலர்களுடன் அணிந்து (களன் – களம் என்பதன் போலி), இன் சீர் ஐது அமை பாணி இரீஇ – இனிய சீர் அமைந்த தாளத்துடன் பொருந்தி (இரீஇ – அளபெடை), கை பெயராச் செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன் வெறி அயர் வியன் களன் பொற்ப – கைகளை உயர்த்தி முருகக்கடவுளின் பெரும் புகழைக் கூறிப் புகழ்ந்து வேலன் வெறியாடும் பெரிய களம் அழகுபெற வல்லோன் பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின் என் ஆம் கொல்லோ – வல்லோன் ஆட்டுவிக்கும் பொறி அமைந்த பாவையைப் போல் ஆடுதலைத் தாய் விரும்பினால் என்ன ஆகுமோ (பாவையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, கொல்லோ – கொல் ஓ அசைநிலைகள்), தோழி – தோழி, மயங்கிய மையல் பெண்டிற்கு நொவ்வல் ஆக – வெறியாட்டக்களத்தில் கூடிய மயக்கம் பொருந்திய பெண்களுக்குத் துன்பம் உண்டாக, ஆடிய பின்னும் வாடிய மேனி பண்டையின் சிறவாது ஆயின் – வேலன் ஆடிய பின்பும் என் வாடிய மேனி முன்புபோல் சிறப்பு அடையாது ஆனால் (பண்டையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), இம்மறை அலர் ஆகாமையோ அரிதே – இக்களவு ஒழுக்கம் அலர் ஆகாதிருப்பது அரிது, அஃதான்று அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி வெறி கமழ் நெடுவேள் நல்குவனே எனின் – அது மட்டும் அல்லாது நம் தலைவர் செய்த அல்லலைக் கண்டு அருள் புரிந்து மணங்கமழும் முருகவேள் நல்குவான் என்றால், செறி தொடி உற்ற செல்லலும் பிறிது என – நெருங்கிய வளையல்களை அணிந்த நம் தலைவி அடைந்த துன்பமும் வேறு காரணத்தால் என்று, கான் கெழு நாடன் கேட்பின் யான் உயிர் வாழ்தல் அதனினும் அரிதே – காடு பொருந்திய நாட்டினையுடைய நம் தலைவன் கேட்டு அறிந்தால் யான் உயிர் வாழ்தல் அதனினும் அரிது (செறிதொடி – அன்மொழித்தொகை, அரிதே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 99, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
வாள்வரி வயமான் கோள் உகிர் அன்ன
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின்
சிதர் ஆர் செம்மல் தாஅய், மதர் எழில்
மாண் இழை மகளிர் பூணுடை முலையின்
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை 5
அதிரல் பரந்த அம் தண் பாதிரி
உதிர் வீ அம் சினை தாஅய், எதிர் வீ
மராஅ மலரொடு விராஅய்ப், பராஅம்
அணங்குடை நகரின் மணந்த பூவின்
நன்றே கானம் நயவரும் அம்ம, 10
கண்டிசின் வாழியோ குறுமகள், நுந்தை
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின்
பிடி மிடை களிற்றின் தோன்றும்,
குறு நெடுந்துணைய குன்றமும் உடைத்தே.
பாடல் பின்னணி: உடன்போகிய தலைவியிடம் தலைவன் சொன்னது.
பொருளுரை: இளமடந்தையே! நீ நீடு வாழ்வாயாக! நான் கூறுவதைக் கேட்பாயாக! வாள் போலும் வரிகளையுடைய வலிமையான புலியின் கொல்லும் நகம் போல் தோன்றும் சிவந்த அரும்புகள் மலர்ந்த, முள் நிறைந்த முருக்க மரத்தின் வண்டு சூழ்ந்த வாடிய பூக்கள் பரவி, மதர்த்த அழகையும் மாண்புற்ற அணிகலன்களையும் உடைய மகளிரின் பூண் அணிந்த முலையைப் போன்ற அரும்புகள் மலர்ந்த கோங்க மலர்களுடன் தங்கி, அரும்பிய அதிரல் பூக்கள் பரவி, அழகிய குளிர்ச்சியுடைய பாதிரி மரத்தின் அழகிய கிளைகளிலிருந்து உதிர்ந்த மலர்கள் பரவி, மாறுபட்ட மலர்களான இவை வெண்கடம்ப மரத்தின் பூக்களுடன் கலந்து, வழிபாடு செய்யப்படும் கடவுள் இருக்கும் கோவிலின்கண் கலந்து கிடக்கும் பூக்கள் போல், காடு பெரிதும் விரும்பத்தக்கதாய் உள்ளது.
மற்றும் இக்காடு, நின் தந்தையின் பகைவரைக் கொல்லும் போர்க்களத்தில் பாய்ந்து போரிட்டதால், சிதைந்த கோடுகளை (தந்தங்களை) உடையவும் பிடி யானைகளும் களிற்று யானைகளும் சேர்ந்து இருந்தாற்போல் தோன்றும் சிறியவும் பெரியவும் ஆகிய அளவில் உள்ள குன்றங்களையும் உடையது. நீ இதனைக் காண்பாயாக!
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘ஒன்றாத் தமரினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் நூற்பாவின்கண் ‘அப்பாற்பட்ட ஒரு திறத்தானும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘ஒன்றாத் தமரினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 41) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளைக் கூறி, ‘இது தலைவியை மருட்டியது’ என்று கூறினர் நச்சினார்க்கினியர். எதிர் வீ (7) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மாறுபட்ட மலர்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பூக்கும் பருவத்தை எதிர்ந்த. மணந்த பூவின் (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மணங்கமழுகின்ற பல்வேறு மலர்களுடைமையால், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கலந்து கிடைக்கும் பூக்களைப் போல். பிடி மிடை களிற்றின் (13) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பிடிகள் சூழப் பெற்றவுமாய களிறுகளைப் போல, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிடியானைகளும் களிற்றுயானைகளும் போல. கோங்க முகைப்போன்ற முலை: அகநானூறு 99 – மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு, அகநானூறு 240 – கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து, குறுந்தொகை 254 – முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர், கலித்தொகை 56 – முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை எனப் பெயல் துளி முகிழ் எனப் பெருத்த நின் இள முலை, கலித்தொகை 117 – கோங்கின் முதிரா இள முகை ஒப்ப, புறநானூறு 336 – கோங்கின் முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை, திருமுருகாற்றுப்படை 34 – தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் குவி முகிழ் இளமுலை, சிறுபாணாற்றுப்படை 25–26 – யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை. அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28). சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை). பராஅம் – பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள (தொல்காப்பியம், உரியியல் 86).
சொற்பொருள்: வாள்வரி வயமான் கோள் உகிர் அன்ன – வாள் போலும் வரிகளையுடைய வலிமையான புலியின் கொல்லும் நகம் போல், செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் சிதர் ஆர் செம்மல் தாஅய் – சிவந்த அரும்புகள் மலர்ந்த முள் நிறைந்த முருக்க மரத்தின் வண்டு சூழ்ந்த வாடிய பூக்கள் பரவி (முருக்க மரம் – coral trees, Erythrina variegate), மதர் எழில் மாண் இழை மகளிர் பூணுடை முலையின் – மதர்த்த (திரண்ட, செருக்குற்ற) அழகையும் மாண்புற்ற அணிகலன்களையும் உடைய மகளிரின் பூண் அணிந்த முலையைப் போன்ற (முலையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ – அரும்புகள் மலர்ந்த கோங்க மலர்களுடன் தங்கி (கோங்க மரம் – Cochlospermum Gossypium, அசைஇ – அளபெடை), நனை அதிரல் பரந்த – அரும்பிய அதிரல் பூக்கள் பரவிய, அம் தண் பாதிரி உதிர் வீ அம் சினை தாஅய் – அழகிய குளிர்ச்சியுடைய பாதிரி மரத்தின் அழகிய கிளைகளிலிருந்து உதிர்ந்த மலர்கள் பரவி (பாதிரி மரம் – Stereospermum chelonoides, Trumpet flower, தாஅய் – அளபெடை), எதிர் வீ மராஅ மலரொடு விராஅய் – மாறுபட்ட மலர்களான இவை வெண்கடம்ப மரத்தின் பூக்களுடன் கலந்து (மராஅ – அளபெடை, விராஅய் – அளபெடை, கடம்ப மரம் – Neolamarckia or Anthocephalus cadamba, Kadampa oak), பராஅம் அணங்குடை நகரின் மணந்த பூவின் – வழிபாடு செய்யப்படும் கடவுள் இருக்கும் கோவிலின்கண் கலந்து கிடக்கும் பூக்கள் போல் (பராஅம் – அளபெடை, பரவுதல், பாராட்டுதல், வழிபடுதல்), நன்றே கானம் நயவரும் – காடு பெரிதும் விரும்பத்தக்கதாய் உள்ளது, அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், உரையசையுமாம், கண்டிசின் – காண்பாயாக (சின் – முன்னிலை அசை), வாழியோ – நீ நீடு வாழ்வாயாக, குறுமகள் – இளமடந்தையே (அண்மை விளி), நுந்தை அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின் – நின் தந்தையின் பகைவரைக் கொல்லும் போர்க்களத்தில் பாய்ந்து போரிட்டதால் சிதைந்த கோடுகளை (தந்தங்களை) உடையவும் (நுந்தை – நும் + தந்தை, மருஉ மொழி), பிடி மிடை களிற்றின் தோன்றும் குறு நெடுந்துணைய குன்றமும் உடைத்தே – பிடி யானைகளும் களிற்று யானைகளும் சேர்ந்து இருந்தாற்போல் தோன்றும் சிறியவும் பெரியவும் ஆகிய அளவில் உள்ள குன்றங்களையும் உடையது (களிற்றின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, மிடை – சூழ்ந்த, இணைந்த, நெருங்கியுள்ள, துணைய – அளவில் உள்ள, உடைத்தே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 100, உலோச்சனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
அரையுற்று அமைந்த ஆரம் நீவிப்,
புரையப் பூண்ட கோதை மார்பினை,
நல் அகம் வடுக் கொள முயங்கி நீ வந்து
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே,
பெருந்திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த 5
கொண்டல் இரவின் இருங்கடல் மடுத்த
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர்
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை,
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த
ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும் 10
பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான்,
பரியுடை நல் தேர்ப் பெரியன் விரி இணர்ப்
புன்னை அம் கானல் புறந்தை முன்துறை
வம்ப நாரை இனன் ஒலித்தன்ன
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் 15
வைகுறு விடியல் போகிய எருமை
நெய்தல் அம் புது மலர் மாந்தும்
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே.
பாடல் பின்னணி: நெய்தலுள் குறிஞ்சி. வரையாது களவொழுக்கத்தில் வந்து ஒழுகும் தலைவனிடம் தோழி கூறியது. வரைவு கடாயது.
பொருளுரை: அரைக்கப்பட்ட சந்தனத்தைப் பூசிய, நறுமணம் சிறக்கும்படி மாலையை அணிந்த மார்பினையுடையாய்! நீ இரவில் வந்து நல்ல மார்பில் வடு உண்டாகும்படி அணைத்துவிட்டுச் செல்லுதல் எமக்கும் இனிது. பெரிய கடலின் ஒலியுடன் அலைகளின் இயக்கம் ஓய்ந்திருந்த முகில்கள் சூழ்ந்த இரவில், கரிய கடலில் மீன் பிடிப்பவர்கள் செலுத்திய படகின் ஒளிரும் சுடர் போல் தோன்றும், புறமுதுகிடாத கொள்கையுடைய வேந்தனின் பாசறையில் உள்ள அசையும் இயல்பையுடைய யானைகளின் அழகிய முகத்தில் பிணித்த ஓடையின் ஒளிரும் சுடர் போல் தோன்றும் இடமாகிய, பாடி வருபவர்களைத் தன்னுடன் சேர்த்துகொள்ளும் வள்ளன்மையுடைய கோமான் ஆகிய, குதிரைகள் பூண்ட சிறந்த தேரினையுடைய பெரியன் என்பவனின், விரிந்த மலர்க்கொத்துக்களை உடைய புன்னை மரங்களுடைய அழகிய சோலை சூழ்ந்த புறையாறு என்னும் பட்டினத்தின் துறைமுன், புதிய நாரையின் கூட்டம் ஒலித்தாற்போன்று, அலர், குளிர்ந்த இருள் புலரும் விடியற்காலையில் சென்ற எருமை நெய்தலின் புதிய மலரை உண்ணும் தாழை வெளிகளையுடைய அழகிய தோட்டங்களையுடைய எம் ஆரவாரம் மிக்க ஊரின்கண், எழுந்தது. ஆதலால் நீ இரவு வேளையில் இனி வராதே.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘களனும் பொழுதும் வரை நிலை விலக்கி காதல் மிகுதி உளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க. எனக்குமார் (4) – மார் – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை –அசைநிலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆர் இசைநிறை. ஒப்புமை – நற்றிணை 229 – இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி. இறைச்சி – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ இரவில் வருவது தீதே எனக் கருட் பொருள் புறத்தே இறைச்சி தோற்றுவித்தமையும் நுண்ணிதின் உணர்க. வரலாறு – பெரியன், புறந்தை.
சொற்பொருள்: அரையுற்று அமைந்த ஆரம் நீவிப் புரையப் பூண்ட கோதை மார்பினை – அரைக்கப்பட்ட சந்தனத்தைப் பூசிய நறுமணம் சிறக்கும்படி மாலையை அணிந்த மார்பினையுடையாய், நல் அகம் வடுக் கொள முயங்கி நீ வந்து எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே – நல்ல மார்பில் வடு உண்டாகும்படி நீ இரவில் வந்து அணைத்துவிட்டுச் செல்லுதல் எமக்கும் இனிது (எனக்குமார் – உம்மை எச்சப்பொருட்டு, மார் அசைநிலை, இனிதே – ஏகாரம் அசைநிலை), பெருந்திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த கொண்டல் இரவின் இருங்கடல் மடுத்த கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர் – பெரிய கடலின் ஒலியுடன் அலைகளின் இயக்கம் ஓய்ந்திருந்த முகில்கள் சூழ்ந்த இரவில் கரிய கடலில் மீன் பிடிப்பவர்கள் செலுத்திய படகின் ஒளிரும் சுடர், ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும் – புறமுதுகிடாத கொள்கையுடைய வேந்தனின் பாசறையில் உள்ள அசையும் இயல்பையுடைய யானைகளின் அழகிய முகத்தில் பிணித்த ஓடையின் ஒளிரும் சுடர் போல் தோன்றும், பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான் பரியுடை நல் தேர்ப் பெரியன் – பாடி வருபவர்களைத் தன்னுடன் சேர்த்துகொள்ளும் வள்ளன்மையுடைய கோமான் ஆகிய குதிரைகள் பூண்ட சிறந்த தேரினையுடைய பெரியன் என்பவனின், விரி இணர்ப் புன்னை அம் கானல் புறந்தை முன்துறை வம்ப நாரை இனன் ஒலித்தன்ன – விரிந்த மலர்க்கொத்துக்களை உடைய புன்னை மரங்களுடைய அழகிய சோலை சூழ்ந்த புறையாறு என்னும் பட்டினத்தின் துறைமுன் புதிய நாரையின் கூட்டம் ஒலித்தாற்போன்று (முன்துறை – துறைமுன், இனன் – இனம் என்பதன் போலி, புன்னை மரம், Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree), அம்பல் – அலர், வாய்த்த – எழுந்தது, தெய்ய – அசைநிலை, தண் புலர் வைகுறு விடியல் போகிய எருமை நெய்தல் அம் புது மலர் மாந்தும் கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே – குளிர்ந்த இருள் புலரும் விடியற்காலையில் சென்ற எருமை நெய்தலின் புதிய மலரை உண்ணும் தாழை வெளிகளையுடைய அழகிய தோட்டங்களையுடைய எம் ஆரவாரம் மிக்க ஊரின்கண் (ஊரே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 101, மாமூலனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! ‘இம்மை
நன்று செய் மருங்கில் தீது இல்’ என்னும்
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று கொல்?
தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த
சுவல் மாய் பித்தைச் செங்கண் மழவர் 5
வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்
தீப்படு சிறு கோல் வில்லொடு பற்றி,
நுரை தெரி மத்தம் கொளீஇ நிரைப் புறத்து
அடி புதை தொடுதோல் பறைய ஏகிக்,
கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர் 10
இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு,
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போலப்,
பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு ஊரிய சுழன்றுவரு கோடைப்,
புன்கால் முருங்கை ஊழ் கழி பன் மலர் 15
தண் கார் ஆலியின் தாவன உதிரும்,
பனிபடு பன்மலை இறந்தோர்க்கு
முனிதகு பண்பு யாம் செய்தன்றோ இலமே.
பாடல் பின்னணி: தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்தான். பிரிவாற்றாத தலைவி, தோழியிடம் கூறியது. தோழி தலைவியிடம் கூறி வருந்தியதுமாம்.
பொருளுரை: தோழி! நீ நீடு வாழ்வாயாக! நான் கூறுவதைக் கேட்பாயாக! ‘இப்பிறப்பில் ஒருவர் நல்லது செய்யுமிடத்து அவர்க்குத் தீமை வருவதில்லை’, என்று பண்டைய காலம் முதல் வழங்கும் பழமொழி இன்று பொய் ஆகியதோ?
செம்மறிக்கிடாவின் கொம்பு போல் முறுக்குண்டு சுருண்ட, பிடரியை மறைக்கும் தலைமயிரையும், சிவந்த கண்களையுமுடைய மறவர்கள், வாயின் பகையாகிய இருமல் எழாமல் தடுக்கும் மருந்தாகிய புற்றுமண்ணை வாயில் கொண்டவர்களாய், கடும் திறல் பொருந்திய நெருப்பு உண்டாக்கும் சிறிய அம்பினை வில்லுடன் கையில் பற்றிக்கொண்டு, தயிரைக் கடையும்பொழுது நுரையை வெளிப்படுத்தும் மத்தினைக் கவர்ந்துகொண்டு, ஆனிரைகள் இருக்கும் இடத்திற்குத் தம் காலடியை மறைக்கும் செருப்புகள் தேயச்சென்றுப் பகைவரின் காவல் இடத்தில் கவர்ந்த கன்றுகளுடன் ஆனிரைகளையும் கொள்ளையிட்டவர்களாக, ஆனிரைகளை அங்கிருந்து கொண்டு போகும் அகன்ற இடத்தையுடைய பெரிய காட்டில், அகன்ற பெரிய வானமாகிய கடலில் தோணி போல் பகலில் நின்ற பல கதிர்களையுடைய ஞாயிற்றின் வெப்பம் விளங்கிப் பரவிய, சுழன்று வரும் மேல்காற்றினால், புல்லிய அடியையுடைய முருங்கை மரத்தின் முதிர்ந்து கழியும் பல மலர்கள் குளிர்ந்த கார்காலத்தின் ஆலங்கட்டி போல் பரவி உதிரும், நடுக்கம் உண்டாகும் பல மலைகளைக் கடந்துச் சென்ற நம் தலைவர்க்கு, வெறுக்கத்தக்க செயல் எதையும் நாம் செய்தது இல்லை.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘ஆங்கு அதன் தன்மையின் வன்புறை’ என வரும் விதி கொள்க. நுரை தெரி மத்தம் (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தயிரினது நுரை காணப்படுகின்ற மத்தம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வெண்ணையை வெளிப்படுத்தும் கடையும் மத்தம். இம்மை – அகநானூறு 66, 101, 311, குறுந்தொகை 49, கலித்தொகை 14, புறநானூறு 134, 236. மறுமை – அகநானூறு 66, குறுந்தொகை 49, 199, கலித்தொகை 14, 103, and புறநானூறு 134 and 141. நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80). அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28). பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12, குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.
சொற்பொருள்: அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, இம்மை நன்று செய் மருங்கில் தீது இல் என்னும் தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று கொல் – இப்பிறப்பில் ஒருவர் நல்லது செய்யுமிடத்து அவர்க்குத் தீமை வருவதில்லை என்று பண்டைய காலம் முதல் வழங்கும் பழமொழி இன்று பொய் ஆகியதோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்), தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த சுவல் மாய் பித்தைச் செங்கண் மழவர் – செம்மறிக்கிடாவின் கொம்பு போல் முறுக்குண்டு சுருண்ட பிடரியை மறைக்கும் தலைமயிரையும் சிவந்த கண்களையுமுடைய மறவர்கள், வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல் தீப்படு சிறு கோல் வில்லொடு பற்றி – வாயின் பகையாகிய இருமல் எழாமல் தடுக்கும் மருந்தாகிய புற்றுமண்ணை வாயில் கொண்டவர்களாய்க் கடும் திறல் பொருந்திய நெருப்பு உண்டாக்கும் சிறிய அம்பினை வில்லுடன் கையில் பற்றிக்கொண்டு, நுரை தெரி மத்தம் கொளீஇ – தயிரைக் கடையும்பொழுது நுரையை வெளிப்படுத்தும் மத்தினைக் கவர்ந்துகொண்டு (கொளீஇ – அளபெடை), நிரைப் புறத்து அடி புதை தொடுதோல் பறைய ஏகிக் கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர் – ஆனிரைகள் இருக்கும் இடத்திற்குத் தம் காலடியை மறைக்கும் செருப்புகள் தேயச்சென்றுப் பகைவரின் காவல் இடத்தில் கவர்ந்த கன்றுகளுடன் ஆனிரைகளையும் கொள்ளையிட்டவர்களாக (தொடுதோல் – செருப்பு), இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு – ஆனிரைகளை அங்கிருந்து கொண்டு போகும் அகன்ற இடத்தையுடைய பெரிய காட்டில், அகல் இரு விசும்பிற்கு ஓடம் போலப் பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று உருப்பு அவிர்பு ஊரிய – அகன்ற பெரிய வானமாகிய கடலில் தோணி போல் பகலில் நின்ற பல கதிர்களையுடைய ஞாயிற்றின் வெப்பம் விளங்கிப் பரவிய (விசும்பிற்கு – விசும்பின்கண், வேற்றுமை மயக்கம்), சுழன்றுவரு கோடை – சுழன்று வரும் மேல்காற்றினால், புன்கால் முருங்கை ஊழ் கழி பன் மலர் தண் கார் ஆலியின் தாவன உதிரும் – புல்லிய அடியையுடைய முருங்கை மரத்தின் முதிர்ந்து கழியும் பல மலர்கள் குளிர்ந்த கார்காலத்தின் ஆலங்கட்டி போல் பரவி உதிரும் (ஆலியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பனிபடு பன்மலை இறந்தோர்க்கு முனிதகு பண்பு யாம் செய்தன்றோ இலமே – நடுக்கம் உண்டாகும் பல மலைகளைக் கடந்துச் சென்ற நம் தலைவர்க்கு வெறுக்கத்தக்க செயல் எதையும் நாம் செய்தது இல்லை (இலமே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 102, மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங்கூத்தனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
உளைமான் துப்பின் ஓங்கு தினைப் பெரும்புனத்துக்
கழுதில் கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென,
உரைத்த சந்தின் ஊரல் இருங்கதுப்பு
ஐதுவரல் அசை வளி ஆற்றக் கை பெயரா
ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி 5
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாடக்,
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது,
படாஅப் பைங்கண் பாடு பெற்று ஒய்யென
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்,
ஆர மார்பின் வரி ஞிமிறு ஆர்ப்பத் 10
தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன்,
காவலர் அறிதல் ஓம்பிப் பையென
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து,
உயங்கு படர் அகலம் முயங்கித் தோள் மணந்து,
இன் சொல் அளைஇப் பெயர்ந்தனன் தோழி, 15
இன்று எவன் கொல்லோ? கண்டிகும் மற்று அவன்
நல்காமையின் அம்பல் ஆகி,
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின்
இருஞ்சூழ் ஓதி ஒண்ணுதல் பசப்பே.
பாடல் பின்னணி: தலைவன் களவு ஒழுக்கத்திலேயே ஒழுகுகின்றான். இவ்வாறு வந்து மீளுகின்றவனை வரைவு கடாதற்பொருட்டுத் தோழிக்குச் சொல்லுவாள் போல், தலைவன் கேட்பச் சொல்லியது.
பொருளுரை: தோழி! பிடரி மயிரினையுடைய சிங்கம் போல் வலிமையுடையவனாகத் தன் பெரிய தினைப்புனத்தின் உயர்ந்த பரணில் கானவன் கள்ளை உண்டு களித்துத் தங்கி இருந்தனனாக, பூசிய மயிர்ச்சாந்தினையுடைய பரந்த கரிய கூந்தலை, மெதுவாக அசைந்து வரும் காற்றுப் புகுந்து புலர்த்த, அடர்ந்து நீண்ட கூந்தலைக் கோதிக்கொண்டு, கொடிச்சி, பெரிய மலையின் பக்கத்தில் குறிஞ்சிப்பண்ணில் பாடவும், தான் கொண்ட தினைக் கதிரின் கொத்துக்களை உண்ணாது, நின்ற இடத்தினின்றும் அகலாது, துயில்வராத பசிய கண்கள் துயில் வரப்பெற்று மறத்தை விரும்பும் இளங்களிற்று யானை உறங்கும் நாட்டின் தலைவன், சந்தனம் பூசிய தன் மார்பின்கண் அழகிய வண்டுகள் ஒலிப்ப மாலையையும் கண்ணியையும் அணிந்தவனாக, வேலை வலக்கையில் உடையவனாக, காவலர் அறியாதபடி மறைந்து வந்து தாழ் வீழ்த்தாத கதவருகில் தங்கி மெதுவாகப் புகுந்தான். வருத்தும் துன்பம் நீங்க அணைத்துத் தோளுடன் இணைந்து இனிய சொற்களைக் கலந்துக் கூறிச் சென்றவன், இன்று அருள் செய்யாததால் ஊரில் அம்பல் ஆகி, மகிழ்ச்சியை விளைவிக்கும் தன்மையுடைய கரிய கூந்தலால் சூழப்பட்ட ஒளிரும் நெற்றியின் பசலையை நாம் காண்பது ஏனோ.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 20) என வரும் நூற்பாவின்கண் ‘அன்னவும் உளவே’ என்பதனால் அமைத்துக் கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘இரவுக்குறியே ………… மலையகம் புகாக் காலையான’ (தொல்காப்பியம், களவியல் 40) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளைக் கூறி, இது மனையகம் புக்கது என்றுரைத்தார் நச்சினார்க்கினியர். இன்று எவன் கொல்லோ கண்டிகும் (16) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நாம் கண்டது என்னையோ, பொ. வே. சோமசுந்தரனார் உரை – யாம் ஏனோ இந்தப் பசலையைக் காண்கின்றோமோ? இந்நிலை நீடிக்கும் எனின் யாம் எவ்வாறு உய்வேம். உவக்கும் பண்பின் (18) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மகிழ்ச்சியை விளைவிக்கும் இயல்பினுடைய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஏதிலார் மகிழ்தற்கு காரணமாக. உள்ளுறை – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கொடிச்சி கானவனுக்கு இன்பம் உண்டாகப் பாடிய குறிஞ்சிப்பண், யானையைத் தினை உண்ணாமற் செய்ததன்றி, பசி ஒருபுறம் நலிய, அதனை உறங்கவும் செய்தது போல, அம்பற் பெண்டிர், தாய்க்கு உணர்த்திய அலர், தலைவன் தலைவியை நுகராமற் செய்ததன்றி, வேட்கை ஒருபுறம் நலிய, அவன் வாளாதே புறத்தே அயர்ந்திருக்கவும் செய்தது என்க. பெயரா – பெயர்த்து (நகர்த்தி) என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. மழ – மழவும் குழவும் இளமைப் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 15). வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).
சொற்பொருள்: உளைமான் துப்பின் ஓங்கு தினைப் பெரும்புனத்துக் கழுதில் கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென – பிடரி மயிரினையுடைய சிங்கம் போல் வலிமையுடையவனாகத் தன் பெரிய தினைப்புனத்தின் உயர்ந்த பரணில் கானவன் கள்ளை உண்டு களித்துத் தங்கி இருந்தனனாக, உரைத்த சந்தின் ஊரல் இருங்கதுப்பு ஐதுவரல் அசை வளி ஆற்றக் கை பெயரா ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி – பூசிய மயிர்ச்சாந்தினையுடைய பரந்த கரிய கூந்தலை மெதுவாக அசைந்து வரும் காற்றுப் புகுந்து புலர்த்த அடர்ந்து நீண்ட கூந்தலைக் கோதினாள் கொடிச்சி, பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாடக் குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது – பெரிய மலையின் பக்கத்தில் குறிஞ்சிப்பண்ணில் அவள் பாடவும் தான் கொண்ட தினைக் கதிரின் கொத்துக்களை உண்ணாது நின்ற இடத்தினின்றும் அகலாது, படாஅப் பைங்கண் பாடு பெற்று ஒய்யென மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன் – துயில்வராத பசிய கண்கள் துயில் வரப்பெற்று மறத்தை விரும்பும் இளங்களிற்று யானை உறங்கும் நாட்டின் தலைவன் (படாஅ – அளபெடை, பைங்கண்– பண்புத்தொகை), ஆர மார்பின் வரி ஞிமிறு ஆர்ப்பத் தாரன் கண்ணியன் எஃகுடை வலத்தன் காவலர் அறிதல் ஓம்பிப் பையென வீழாக் கதவம் அசையினன் புகுதந்து – சந்தனம் பூசிய தன் மார்பின்கண் அழகிய வண்டுகள் ஒலிப்ப மாலையையும் கண்ணியையும் அணிந்தவனாக வேலை வலக்கையில் உடையவனாக காவலர் அறியாதபடி மறைந்து வந்து தாழ் வீழ்த்தாத கதவருகில் வந்து தங்கி மெதுவாகப் புகுந்தான், உயங்கு படர் அகலம் முயங்கித் தோள் மணந்து இன் சொல் அளைஇப் பெயர்ந்தனன் – வருத்தும் துன்பம் நீங்க அணைத்துத் தோளுடன் இணைந்து இனிய சொற்களைக் கலந்துக் கூறிச் சென்றவன் (அளைஇ – விரவி, கலந்து, அளபெடை), தோழி – தோழி, இன்று – இன்று, எவன் கொல்லோ கண்டிகும் – நாம் காண்பது ஏனோ (கொல் – அசைநிலை, ஓ –அசைநிலை), மற்று– வினைமாற்றின்கண் வந்தது, அவன் நல்காமையின் அம்பல் ஆகி – அவன் அருள் செய்யாததால் ஊரில் அம்பல் ஆகி, ஒருங்கு வந்து உவக்கும் பண்பின் இருஞ்சூழ் ஓதி ஒண்ணுதல் பசப்பே – மகிழ்ச்சியை விளைவிக்கும் தன்மையுடைய கரிய கூந்தலால் சூழப்பட்ட ஒளிரும் நெற்றியின் பசலை (பசப்பே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 103, காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த
கதிர்த்த சென்னி, நுணங்கு செந்நாவின்,
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறிக்
காமர் சேவல் ஏமம் சேப்ப,
முளி அரில் புலம்பப் போகி முனாஅது 5
முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து,
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி,
உறையுநர் போகிய ஓங்கு நிலை வியன் நகர்
இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா உயிர்க்கும்,
வெம்முனை அருஞ்சுரம் நீந்தித் தம் வயின் 10
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர் மன் என,
நள்ளென் யாமத்து உயவுத் துணை ஆக
நம்மொடு பசலை நோன்று தம்மொடு
தானே சென்ற நலனும்
நல்கார் கொல்லோ, நாம் நயந்திசினோரே? 15
பாடல் பின்னணி: பொருள் ஈட்டத் தலைவன் சென்றான். அவன் திரும்பி வரக் காலம் நீட்டித்ததால், தலைவி பெரிதும் வருந்தித் தோழிக்குச் சொல்லியது.
பொருளுரை: நிழல் இல்லாத பெரிய இடத்தில் வல்லூறு என்னும் பறவையால் தாக்குவதற்குக் குறிக்கப்பட்ட, ஒளியுடைய தலையையும், நுண்ணிய சிவந்த நாவினையும், தெளித்தன போல் அழகிய நுண்ணிய பல புள்ளிகளையுமுடைய அழகிய குறும்பூழ்ச் சேவல், பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல எண்ணி, தான் இருந்த காய்ந்த சிறு தூறு தனித்திருக்கும்படி அங்கிருந்து பறந்து சென்று, முன்பக்கத்தில் இருந்த வன்னிலத்தைச் சார்ந்திருந்த பழைய பெரிய மன்றத்தில், ஆறலை கள்வர்கள் வழியைப் பார்த்து தங்கியிருக்கும், பசுக்கள் உடைய சிறிய ஊரில் வாழ்பவர்கள் விட்டுப் போன, உயர்ந்த நிலையையுடைய பெரிய மனையில் இறை நிழலின் ஒரு பக்கம் தங்கித் தனிமையில் பெருமூச்சு விடும், கொடிய போர்முனையுடைய கடத்தற்கு அரிய பாலை நிலத்தைக் கடந்து, தம்மிடம் வந்த பொருள் ஈட்டும் வினைக்கு மீண்டும் சென்றார் என, நள்ளென்ற நடு இரவிலும் துன்பத்தின் துணையாக, நம்முடன் பசலையைப் பொறுத்திருந்து, அவருடன் சென்ற நம் நலத்தை அருள்வாரோ, நாம் விரும்பும் நம் தலைவர்?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என வரும் நூற்பாவின்கண் ‘ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும் வாயிலின் வரூஉம்’ என வரும் விதியால் அமைத்துக் கொள்க. எழால் (1) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – புல்லூறு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வல்லூறு (falcon). கதிர்த்த (2) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பெரிய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒளியுடைய. காமர் சேவல் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அழகிய குறும்பூழ்ச் சேவல். சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27). நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80). புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35). முனாஅது (5) – சோமசுந்தரனார் உரை – முன் பக்கத்தே. நாம் நயந்திசினோர் (15) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவர் நம்மை நயந்திலர் என்பது தோன்ற நாம் நயந்திசினோர் என்றாள்.
சொற்பொருள்: நிழல் அறு நனந்தலை எழால் ஏறு குறித்த – நிழல் இல்லாத பெரிய இடத்தில் வல்லூறு என்னும் பறவையால் தாக்குவதற்குக் குறிக்கப்பட்ட, கதிர்த்த சென்னி நுணங்கு செந்நாவின் விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறிக் காமர் சேவல் ஏமம் சேப்ப – ஒளியுடைய தலையையும் நுண்ணிய சிவந்த நாவினையும் தெளித்தன போல் அழகிய நுண்ணிய பல புள்ளிகளையுமுடைய அழகிய குறும்பூழ்ச் சேவல் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல எண்ணி, முளி அரில் புலம்பப் போகி – காய்ந்த சிறு தூறு தனித்திருக்கும்படி அங்கிருந்து பறந்து சென்று, முனாஅது முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து – முன்பக்கத்தில் இருந்த வன்னிலத்தைச் சார்ந்திருந்த பழைய (பெரிய) மன்றத்தில் (முனாஅது – அளபெடை), அதர் பார்த்து அல்கும் – ஆறலை கள்வர்கள் வழியைப் பார்த்து தங்கியிருக்கும், ஆ கெழு சிறுகுடி உறையுநர் போகிய – பசுக்கள் உடைய சிறிய ஊரில் வாழ்பவர்கள் விட்டுப் போன, ஓங்கு நிலை வியன் நகர் இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா உயிர்க்கும் – உயர்ந்த நிலையையுடைய பெரிய மனையில் இறை நிழலின் ஒரு பக்கம் தங்கித் தனிமையில் பெருமூச்சு விடும் (இறை – வீட்டின் வெளிச்சுவர்க்கு அப்பால் உள்ள கூரையின் கீழ் உள்ள பலகைகள் பொருந்திய இடம்), வெம்முனை அருஞ்சுரம் நீந்தி – கொடிய போர்முனையுடைய கடத்தற்கு அரிய பாலை நிலத்தைக் கடந்து, தம் வயின் ஈண்டு வினை மருங்கின் மீண்டோர் மன் என – தம்மிடம் வந்த பொருள் ஈட்டும் வினைக்கு மீண்டும் சென்றார் என (மன் – அசைநிலை), நள்ளென் யாமத்து உயவுத் துணை ஆக – நள்ளென்ற நடு இரவிலும் துன்பத்தின் துணையாக, நம்மொடு பசலை நோன்று – நம்முடன் பசலையைப் பொறுத்திருந்து, தம்மொடு தானே சென்ற நலனும் நல்கார் கொல்லோ நாம் நயந்திசினோரே – அவருடன் சென்ற நம் நலத்தை அருள்வாரோ நாம் விரும்பும் நம் தலைவர் (கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ அசைநிலை, நயந்திசினோரே – இசின் படர்க்கையின் கண் வந்தது, ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 104, மதுரை மருதன் இளநாகனார், முல்லைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வேந்து வினை முடித்த காலைத், தேம் பாய்ந்து
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின்
வென்வேல் இளையர் இன்புற, வலவன்
வள்பு வலித்து ஊரின் அல்லது முள் உறின்
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா 5
நன்னால்கு பூண்ட கடும் பரி நெடுந்தேர்,
வாங்கு சினை பொலிய ஏறிப் புதல
பூங்கொடி அவரைப் பொய் அதள் அன்ன
உள் இல் வயிற்ற வெள்ளை வெண்மறி,
மாழ்கியன்ன தாழ் பெருஞ்செவிய, 10
புன்தலை சிறாரோடு உகளி, மன்றுழைக்
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும்
சீறூர் பல பிறக்கு ஒழிய, மாலை
இனிது செய்தனையால் எந்தை, வாழிய!
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும் 15
ஆய் தொடி அரிவை கூந்தல்
போது குரல் அணிய வேய்தந்தோயே.
பாடல் பின்னணி: வினை முற்றி மீளும் தலைவனுக்குத் தோழி உரைத்தது.
பொருளுரை: தலைவா! வேந்தன் போர் வினையை முடித்த காலத்தில், திசைகள்தோறும் பறந்து வண்டின் கூட்டம் ஆரவாரிக்கும் குளிர்ந்த நறுமணமுடைய முல்லை நிலத்தில், வெற்றி பொருந்திய வேலையுடைய இளைய வீரர்கள் இன்பம் அடையும்படித் தேர்ப்பாகன் கடிவாளத்தை இழுத்துப் பிடித்துச் செலுத்தினால் அல்லது தாற்றுக்கோலால் தீண்டினால், கடல் சூழ்ந்த உலகம் ஆதி என்னும் விரைந்த ஓட்டத்திற்குப் பற்றாத, மிக்க விரைதலுடைய நல்ல நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட நெடிய தேரில், வளைந்த கொடிஞ்சி என்னும் தாமரை வடிவில் செய்யப்பட்ட உறுப்பு பொலிய ஏறி,
புதர்களில் படர்ந்த பூக்களையுடைய அவரைக் கொடியில் உள்ள அவரைப் பிஞ்சின் பொய்த்தோல் போன்ற, உள்ளே ஒன்றுமில்லாத வயிற்றுடன் வெள்ளாட்டின் வெள்ளைக் குட்டிகள், மயங்கிக் கிடந்தாற் போன்ற தாழ்ந்து தொங்கும் பெரிய செவியை உடையனவாய், புல்லிய தலையையுடைய சிறுவர்களுடன் குதித்து விளையாடி, மன்றத்தின்கண் சுவையான இலைகளையுடைய ஆத்தியின் அழகிய தளிரைக் கடிக்கும் சிறிய ஊர்கள் பின்னே ஒழிந்திட வந்து, மாலை நேரத்தில் இனியதை நீ செய்தாய். கண்ணீர் வடியும் கண்களையுடையவளாகப் பலவற்றையும் கூறி வெறுத்து வாழும் ஆராய்ந்த வளையல்களை அணிந்த தலைவியின் அடர்ந்த கூந்தலில் அணிய மலர்களை நீ சூட்டினை. நீ நீடு வாழ்வாயாக!
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகைபட வந்த கிளவி எல்லாம்’ என்பதனால் அமைத்திடுக. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘வெறியறி சிறப்பின்’ (தொல்காப்பியம், புறத்திணையியல் 5) என்னுஞ் சூத்திரத்து, வஞ்சிக்கண்ணும் பொதுவியல் வருவன உள என்று கூறி, அது ‘வேந்து வினை முடித்த’ என்னும் அகப்பாட்டினுள், சுட்டி ஒருவர் பெயர் கூறா வஞ்சி பொதுவியலாய் வந்தவாறு காண்க’ என்றும், ‘வினைவயிற் பிரிந்தோன்’ (தொல்காப்பியம், கற்பியல் 53) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளைக் காட்டி, இதனுள் வினைமுடித்த காலைத் தேர் இளையர் செலவுக்கேற்ப ஊராது கோல் ஊன்றின் உலகிறந்தன செலவிற்குப் பற்றாத குதிரைத் தேரேறி இடைச்சுரத்தில் தங்காது மாலைக்காலத்து வந்து பூச்சூட்டினை; இனிது செய்தனை; எந்தை வாழிய, எனத் தோழி கூறியவாறு காண்க, என்றும் உரைத்தனர், நச்சினார்க்கினியர். தேம் பாய்ந்து (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நாற்றிசையிலும் சென்று, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – திசைகள்தோறும் பறந்து, புலியூர்க்கேசிகன் உரை – தேன் பாய்ந்து. முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது. முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை. கொடிஞ்சி – அகநானூறு 110 – நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி நின்றோன் போலும், அகநானூறு 230 – கடும் பரி நல் மான் கொடிஞ்சி நெடுந்தேர் கைவல் பாகன் பையென இயக்க, 334 – நால்குடன் பூண்ட கால் நவில் புரவிக் கொடிஞ்சி நெடுந்தேர் கடும் பரி தவிராது, அகநானூறு 344 – வயக்குறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து இயக்குமதி, இது கொடுஞ்சி என்றும் உள்ளது இப்பாடல்களில் – அகநானூறு 194, 250, 320, குறுந்தொகை 212, 345, புறநானூறு 77, 368, பெரும்பாணாற்றுப்படை 416, பொருநராற்றுப்படை 163, மதுரைக்காஞ்சி 752.
சொற்பொருள்: வேந்து வினை முடித்த காலைத் தேம் பாய்ந்து இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின் வென்வேல் இளையர் இன்புற – வேந்தன் போர் வினையை முடித்த காலத்தில் திசைகள்தோறும் பறந்து (மலர்த்தேனில் பாய்ந்து) வண்டின் கூட்டம் ஆரவாரிக்கும் குளிர்ந்த நறுமணமுடைய முல்லை நிலத்தில் வெற்றி பொருந்திய வேலையுடைய இளைய வீரர்கள் இன்பம் அடையும்படி (தேம் – திசை, தேன் எனக் கொண்டால் – தேம் தேன் என்றதன் திரிபு), வலவன் வள்பு வலித்து ஊரின் அல்லது முள் உறின் – தேர்ப்பாகன் கடிவாளத்தை இழுத்துப் பிடித்துச் செலுத்தினால் அல்லது தாற்றுக்கோலால் தீண்டினால் (வள்பு – வார், கடிவாளம்), முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா – கடல் சூழ்ந்த உலகம் ஆதி என்னும் விரைந்த ஓட்டத்திற்குப் பற்றாத (ஆதி – குதிரைகள் நேராக ஓடும் ஓட்டம்), நன்னால்கு பூண்ட கடும் பரி நெடுந்தேர் – மிக்க விரைதலுடைய நல்ல நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட நெடிய தேரில் (நால்கு – நான்கு என்னும் எண்ணுப்பெயர் திரிசொல்), வாங்கு சினை பொலிய ஏறி – வளைந்த கொடிஞ்சி என்னும் உறுப்பு பொலிய ஏறி (கொடிஞ்சி – கையால் பற்றிக்கொள்வதற்கு உரிய தாமரை வடிவில் உள்ள ஒரு தேர் உறுப்பு), புதல பூங்கொடி அவரைப் பொய் அதள் அன்ன – புதர்களில் படர்ந்த பூக்களையுடைய அவரைக் கொடியில் உள்ள அவரைப் பிஞ்சின் பொய்த்தோல் போன்ற, உள் இல் வயிற்ற வெள்ளை வெண்மறி – உள்ளே ஒன்றுமில்லாத வயிற்றுடன் வெள்ளாட்டின் வெள்ளைக் குட்டிகள், மாழ்கியன்ன தாழ் பெருஞ்செவிய – மயங்கிக் கிடந்தால் போன்ற தாழ்ந்து தொங்கும் பெரிய செவியை உடையனவாய், புன்தலை சிறாரோடு உகளி – புல்லிய தலையையுடைய சிறுவர்களுடன் குதித்து விளையாடி, மன்று உழைக் கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் சீறூர் பல பிறக்கு ஒழிய – மன்றத்தின்கண் சுவையான இலைகளையுடைய ஆத்தியின் அழகிய தளிரைக் கடிக்கும் சிறிய ஊர்கள் பின்னே ஒழிந்திட வந்து, மாலை இனிது செய்தனையால் – மாலை நேரத்தில் இனியதை நீ செய்தாய் (செய்தனையால் – ஆல் அசைநிலை), எந்தை – தலைவா, வாழிய – நீ நீடு வாழ்வாயாக, பனி வார் கண்ணள் பல புலந்து உறையும் ஆய் தொடி அரிவை கூந்தல் போது குரல் அணிய வேய்தந்தோயே – கண்ணீர் வடியும் கண்களையுடையவளாகப் பலவற்றையும் கூறி வெறுத்து வாழும் ஆராய்ந்த வளையல்களை அணிந்த தலைவியின் அடர்ந்த கூந்தலில் அணிய மலர்களை நீ சூட்டினை (போது – மலர், குரல் – அடர்த்தி, தந்தோயே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 105, தாயங்கண்ணனார், பாலைத் திணை – உடன்போக்கில் தலைவியும் தலைவனும் சென்ற பொழுது தலைவியின் தாய் சொன்னது
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை
ஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லென
நல் வரை நாடன் தற்பாராட்ட,
யாங்கு வல்லுநள் கொல் தானே, தேம் பெய்து
மணி செய் மண்டைத் தீம்பால் ஏந்தி 5
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள்,
நிழல் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின்
எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம் மருண்டு,
பந்து புடைப்பன்ன பாணிப் பல்லடிச்
சில் பரிக் குதிரை பல் வேல் எழினி 10
கெடல் அருந் துப்பின் விடு தொழில் முடிமார்
கனை எரி நடந்த கல் காய் கானத்து
வினை வல் அம்பின் விழுத்தொடை மறவர்
தேம் பிழி நறுங்கள் மகிழின் முனை கடந்து,
வீங்கு மென் சுரைய ஏற்று இனம் தரூஉம் 15
முகை தலை திறந்த வேனில்
பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே?
பாடல் பின்னணி: மகட் போக்கிய நற்றாய் சொல்லியது.
பொருளுரை: அகன்ற பாறையிடத்து மலர்ந்த வேங்கை மலர்களோடு ஒளியுடைய இலைகளைத் தொடுத்த மாலையை அணிந்த அவளைப் பாராட்டிய நல்ல மலை நாடனான தலைவனுடன் சென்று விட்டாள் என் மகள். மணிகள் இழைத்த பொற்கலத்தில் உள்ள இனிய பாலில் தேனை ஊற்றி, கையில் ஏந்தி, அவளுடைய செவிலித் தாயர் ஊட்டினாலும் குடிக்க மாட்டாள். நிழலுடைய குளத்தைப் போன்ற எங்கள் பெரிய இல்லத்தில் உள்ள மிகுந்த செல்வத்தையும் அவள் எண்ணவில்லை. அவளுடைய காதலனின் பொய்யை மெய் என்று நம்பி விட்டாள்.
பந்து புடைக்கப்பட்டு எழுவதை ஒத்த தாளத்தினை உடைய பல அடிகளையும் சில ஓட்டங்களையும் உடைய குதிரைகளையும், பல வேற்படைகளையும் உடைய எழினி என்ற குறுநில மன்னனுடைய, கெடுதல் இல்லாத வலிமை பொருந்திய, ஏவி விட்ட தொழிலை முடிக்கும் பொருட்டு மிகுந்த தீப் படர்ந்ததால் காய்ந்திருக்கும் பாறையுடைய காட்டில், போர்த் திறமையினால் அம்பைக் குறி தவறாது செலுத்தும் மறவர்கள், பிழிந்த தேனால் செய்த கள்ளினை உண்ட மகிழ்ச்சியால், போர் முனையை வென்று, பருத்த மெல்லிய மடியை உடைய பசுக்களோடும் ஏறுகளோடும் உடைய ஆநிரைகளைக் கொணர்ந்து தரும், மலைக் குகைகள் வெடித்த வேனில் காலத்தில் பகைவர்களுடன் போரிடுதலை உடைய, பல பாதைகளில் செல்வதற்கு எவ்வாறு வல்லமை உடையவள் ஆயினாள் என் மகள்?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க. பகைதலை மணந்த (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பகைவரொடு கூடிய, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பகைவருடன் பொருதல் கூடிய. ஈனாத் தாயர் – வெளிப்படை, தலைவியைப் பெறாத தாயர் ஆகிய செவிலித் தாயர். தாயர் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – செவிலிமாருள் ஊட்டுவாள். ஐங்குறுநூறு 380–3 – தாயர் என்னும் பெயரே வல்லாறு எடுத்தேன். வரலாறு – எழினி. விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57). குதிரையின் பந்து அன்ன ஓட்டம்: அகநானூறு 105 – பந்து புடைப்பு அன்ன பாணிப் பல்லடிச் சில் பரிக் குதிரை, நற்றிணை 249 – வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇப் பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவ. பொய்ம் மருண்டு – யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிகுமே (தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 62), மெல்லெழுத்துறழும் மொழியு மாருளவே (தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 65).
சொற்பொருள்: அகல் அறை – அகன்ற பாறை, மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை – அரும்பு முதிர்ந்த வேங்கை மலரோடு, ஒள் இலைத் தொடலை தைஇ – ஒளியுடைய இலைகளையுடைய மாலையை தொடுத்து (தைஇ – அளபெடை), மெல்லென – மெல்ல மெல்ல, நல் வரை நாடன் – நல்ல மலை நாடனான தலைவன், தற்பாராட்ட – தன்னைப் பாராட்ட, யாங்கு வல்லுநள் கொல் – எவ்வாறு வல்லமை உடையவள் ஆயினாள் (கொல் –அசைநிலை), தானே – தானே, தேம் பெய்து மணி செய் மண்டைத் தீம்பால் – இனிய பாலில் தேனை ஊற்றி மணிகள் இழைத்த பொற்கலத்தில் கலந்து (தேம் – தேன் என்றதன் திரிபு), ஏந்தி – கையில் ஏந்தி, ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள் – அவளை ஈனாத செவிலித் தாயர் ஊட்டவும் குடிக்க மாட்டாள், நிழல் கயத்து அன்ன – நிழலுடைய குளத்தைப்போல் (கயத்து – கயம், அத்துச் சாரியை), நீள் நகர் வரைப்பின் எம்முடைச் செல்வமும் உள்ளாள் – எங்கள் பெரிய இல்லத்தில் உள்ள மிகுந்த செல்வத்தையும் அவள் எண்ணவில்லை, பொய்ம் மருண்டு – பொய்யை மெய் என்று மயங்கி, பந்து புடைப்பன்ன பாணிப் பல்லடிச் சில் பரிக் குதிரை – பந்து புடைக்கப்பட்டு எழுவதை ஒத்த தாளத்தினை உடைய பல அடிகளையும் சில ஓட்டங்களையுமுடைய குதிரைகள், பல் வேல் – பல வேற்படைகளை உடைய, எழினி – எழினி என்ற குறுநில மன்னன், கெடல் அருந்துப்பின் – கெடுதல் இல்லாத வலிமைப் பொருந்திய, விடு தொழில் முடிமார் – ஏவி விட்ட தொழிலை முடிக்கும் பொருட்டு, கனை எரி நடந்த கல் காய் கானத்து – மிகுந்த எரி படர்ந்ததால் காய்ந்திருக்கும் பாறையுடைய காட்டில், வினை வல் அம்பின் விழுத்தொடை மறவர் – போர்த் திறமையினால் அம்பைக் குறி தவறாது செலுத்தும் மறவர்கள், தேம் பிழி நறுங்கள் மகிழின் – பிழிந்த தேனால் செய்த கள்ளினை உண்ட மகிழ்ச்சியால் (தேம் – தேன் என்றதன் திரிபு), முனை கடந்து – போர் முனையை வென்று, வீங்கு மென் சுரைய ஏற்று இனம் தரூஉம் – பருத்த மெல்லிய மடியை உடைய பசுக்களோடும் ஏறுகளோடும் உடைய ஆநிரைகளைக் கொணர்ந்து தரும் (தரூஉம் – அளபெடை), முகை தலை திறந்த – மலைக் குகைகள் வெடித்த, வேனில் – வேனில் காலத்தில், பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே – பகைவர்களுடன் போரிடுதலை உடைய பல பாதைகளில் செல்லுதல் (செலவே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 106, ஆலங்குடி வங்கனார், மருதத் திணை – பரத்தை தன் தோழியிடம் சொன்னது
எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்துப்
பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன்
வெறி கொள் பாசடை உணீஇயர், பைப்பயப்
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும்
துறை கேழ் ஊரன் பெண்டு, தன் கொழுநனை 5
நம்மொடு புலக்கும் என்ப, நாம் அது
செய்யாம் ஆயினும், உய்யாமையின்
செறி தொடி தெளிர்ப்ப வீசிச் சிறிது அவண்
உலமந்து வருகம், சென்மோ தோழி,
ஒளிறு வாள் தானைக் கொற்றச் செழியன், 10
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும்
களிறு பெறு வல்சிப் பாணன் எறியும்
தண்ணுமை கண்ணின், அலைஇயர் தன் வயிறே.
பாடல் பின்னணி: தலைவி தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட பரத்தை, தலைவியின் தோழியர் கேட்பச் சொல்லியது.
பொருளுரை: தோழி! தீ கொழுந்துவிட்டாற் போல் தோன்றும் தாமரைப் பூக்களையுடைய வயலில், நெல்லைப் பொரிக்கும் பொழுது நெற்பொரிகள் சிதறி விழுவது போல் துள்ளி விழும் பல சிறிய மீன்களை உண்ணும்பொருட்டு, மணங்கொண்ட பசிய இலையில், பறத்தல் ஒழிந்த முதிய சிச்சிலிப்பறவை மெல்ல மெல்ல அசைந்து வந்து இருக்கும் துறை பொருந்திய ஊர்த் தலைவனின் மனைவி, தன் கணவனை நம்மோடு சேர்த்து வெறுக்கின்றாள் எனக் கூறுகின்றனர்.
நாம் அதற்குரிய எதையும் செய்யவில்லை ஆனாலும், அவளுடைய பழியிலிருந்துத் தப்ப முடியாததால், செறிந்த வளையல்கள் ஒலிக்க நம் கைகளை வீசிச் சிறிது நேரம் அங்கு உலவி வருவோம். என்னுடன் வருவாயாக. விளங்கும் வாள் ஏந்திய படைகளையும் வெற்றியையுமுடைய பாண்டியன் குற்றமற்ற நெருங்கிய போரில் வெற்றிபெறும் பொழுதெல்லாம் களிற்று யானைகளைப் பரிசாகப் பெறும் பாணன் அடிக்கும் தண்ணுமை முரசின் கண்போல் அடிக்கட்டும் தன் வயிற்றை.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘புல்லுதல் மயக்கும்’ (தொல்காப்பியம், கற்பியல் 10) என வரும் நூற்பாவின்கண் ‘இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்ணும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘பரத்தை வாயில்’ (தொல்காப்பியம், செய்யுளியல் 199) என்னுஞ் சூத்திரத்து, ‘செறிதொடி தெளிர்ப்ப வீசிச் சிறிது அவண் ………….. உலமந்து வருகஞ் சென்மோ தோழி’ என்றக்கால் தலைவிக்குப் பாங்காயினர் கேட்பச் சொல்லிக் கூறல் வேண்டுமென்பது, என்றனர் பேராசிரியர். உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெறிகொள் பாசடை நறுமணம் மிக்க தன் மனையாகவும் துள்ளிக்குதிக்கும் சிறுமீன் தன் மனைக்கு வரும் தலைவனாகவும், அத் தலைவனைக் கவர்ந்துகொள்ளக் கருதி மெல்ல மெல்ல தன்னைப் பற்றிப் பேசுகின்ற தலைவி முதிர்ந்த சிரலாகவும் உள்ளுறுத்து வைத்து இப்பரத்தை தலைவி முதுமையையும் அவள் கருத்துக் கைகூடாமையை இகழ்ந்து பேசுதல் உணர்க. ஓர் ஆன் வல்சி – குறுந்தொகை 395 – உ. வே. சாமிநாதையர் உரை – ஒரு பசுவினால் வரும் ஊதியத்தைக் கொண்டு உண்ணும் உணவையுடைய வாழ்க்கை. நற்றிணை 310 – களிறு பெறு வல்சிப் பாணன். வயிற்றில் அடித்தல் – நற்றிணை 179 – அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள், நற்றிணை 379 – அவ் வயிறு அலைத்தலின், நற்றிணை 398 – அவ் வயிறு அலைப்ப உடன் இயைந்து ஓரை மகளிரும், அகநானூறு 106 –பாணன் எறியும் தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே. வரலாறு – செழியன். மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).
சொற்பொருள்: எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்துப் பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன் உணீஇயர் வெறி கொள் பாசடை – தீ கொழுந்துவிட்டாற் போல் தோன்றும் தாமரைப் பூக்களையுடைய வயலில் நெல்லைப் பொரிக்கும் பொழுது நெற்பொரிகள் சிதறி விழுவது போல் துள்ளி விழும் பல சிறிய மீன்களை உண்ணும்பொருட்டு மணங்கொண்ட பசிய இலையில் (உணீஇயர் – அளபெடை), பைப்பயப் பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும் துறை கேழ் ஊரன் பெண்டு – பறத்தல் ஒழிந்த முதிய சிச்சிலிப்பறவை மெல்ல மெல்ல அசைந்து வந்து இருக்கும் துறை பொருந்திய ஊர்த் தலைவனின் மனைவி (பையப்பைய பைப்பய என மருவியது), தன் கொழுநனை நம்மொடு புலக்கும் என்ப – தன் கணவனை நம்மோடு சேர்த்து வெறுக்கின்றாள் எனக் கூறுகின்றனர், நாம் அது செய்யாம் ஆயினும் – நாம் அதற்குரிய எதையும் செய்யவில்லை ஆனாலும், உய்யாமையின் – அவளுடைய பழியிலிருந்துத் தப்ப முடியாததால், செறி தொடி தெளிர்ப்ப வீசிச் சிறிது அவண் உலமந்து வருகம் – செறிந்த வளையல்கள் ஒலிக்க கைகளை வீசிச் சிறிது நேரம் அங்கு உலவி வருவோம் (தெளிர்ப்ப – ஒலிக்க), சென்மோ – என்னுடன் வருவாயாக (மோ – முன்னிலை அசை), தோழி – தோழி, ஒளிறு வாள் தானைக் கொற்றச் செழியன் வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும் களிறு பெறு வல்சிப் பாணன் எறியும் தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே – விளங்கும் வாள் ஏந்திய படைகளையும் வெற்றியையுமுடைய பாண்டியன் குற்றமற்ற நெருங்கிய போரில் வெற்றிபெறும் பொழுதெல்லாம் களிற்று யானைகளைப் பரிசாகப் பெறும் பாணன் அடிக்கும் தண்ணுமை முரசின் கண்போல் அடிக்கட்டும் தன் வயிற்றை (கண்ணின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, அலைஇயர் – அளபெடை, இயர் வியங்கோள் வினைமுற்று விகுதி, வயிறே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 107, காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நீ செலவு அயரக் கேட்டொறும் பல நினைந்து,
அன்பின் நெஞ்சத்து அயாஅப் பொறை மெலிந்த
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு
கருங்கல் வியல் அறை கிடப்பி, வயிறு தின்று
இரும்புலி துறந்த ஏற்று மான் உணங்கல் 5
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்,
ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண்சோறு
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும், 10
கல்லா நீள்மொழிக் கதநாய் வடுகர்
வல் ஆண் அரு முனை நீந்தி அல்லாந்து,
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து,
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு 15
அம் குழை இருப்பை அறைவாய் வான் புழல்
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி,
மரை கடிந்து ஊட்டும் வரையகச் சீறூர்
மாலை இன் துணை ஆகிக் காலைப்
பசு நனை நறுவீப் பரூஉப் பரல் உறைப்ப, 20
மண மனை கமழும் கானம்
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே.
பாடல் பின்னணி: இடையூறுகள் ஏற்பட்டதால் தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்லக் கருதிய தலைவன் அதை தோழிக்குக் கூற, அவள் அதைத் தலைவிக்குக் கூறி, அவள் உடன்பாட்டைக் குறிப்பினால் அறிந்து வந்து தலைவனுக்குச் சொல்லியது.
பொருளுரை: நீ அவளை உடன்கொண்டு செல்ல எண்ணுவதைக் கேட்குந்தோறும் அன்பினுடைய நெஞ்சத்துடன், வருத்தத்தைத் தாங்குவதால் மெலிந்த என் நெஞ்சத்தில் உள்ள துன்பத்தை நீக்கும் பொருட்டு,
பெரிய புலியானது கரிய கற்கள் உடைய அகன்ற பாறையில் கிடத்தி வயிறு நிறையத் தின்றுவிட்டுப் போன ஆண் மானின் உலர்ந்த தசையை, வழியில் செல்லும் புதியவர்கள் கண்டு மகிழ்ந்தவர்களாக, ஒன்றோடு ஒன்று உரசி ஒலிக்கும் மூங்கில்களின் விதையாகிய அரிசியுடன் ஒன்று சேர்த்து, ஆயர் குடியிருப்பின் மாட்டுத் தொழுவத்தில் உள்ள தயிரைப் பெய்து சமைத்த வெள்ளை கொழுப்பினை உருக்கிக் கூட்டிய மிகவும் வெண்மையான சோற்றினைப், புள்ளிகள் உடைய அடியையுடைய தேக்கு மரத்தின் இலையில் வைத்து உண்ணும் அவ்விடத்தில், கல்வி இல்லாதவர்களாய் நெடுமொழியையும் சினம் மிக்க நாய்களையுமுடைய வடுகர்களின் வலிய ஆண்மை விளங்கும் அரிய போர்முனையைக் கடந்து சென்று, இடிந்து விழும் மண்ணின் இடையூறுக்கு அஞ்சும் ஒற்றையடிப் பாதையில் வழுக்கி விழுந்து கால்கள் முடம்பட்டுத் துன்புற்று, தனிமையில் கிடக்கும் மிகுந்த வலிமையுடைய எருதினை, அழகிய தளிர்களையுடைய இருப்பை மரத்தின் வெள்ளை நிறத்தையும் உள்ளே துளையையுமுடைய பூக்களைப் புல்லிய தலைமயிரையுடைய சிறுவர்கள் தங்கள் வில்லினால் வீழ்த்தி, அவற்றை உண்ண வரும் மரைமானை விரட்டி விட்டு உண்ணச்செய்யும், மலையிடத்து உள்ள சிறு ஊரில் மாலை நேரத்தில் நினக்கு இனிய துணையாகித் தங்கி, காலை வேளையில் புதிய தேனையுடைய நறுமண மலர்கள் பெரிய பரல் கற்களில் உதிர்ந்து கிடப்பதால், திருமண மனைபோல் மணம் வீசும் காட்டின்கண், நின் துணையாகிய குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழி நின்னுடன் வருவாள்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘தலைவரும் விழும நிலை எடுத்துரைப்பினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 21) என வரும் நூற்பாவின்கண் ‘போக்கற் கண்ணும்’ என வரும் விதி கொள்க. ஆன் நிலைப் பள்ளி (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பசுக்கிடை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஆயர் சேரி. உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புலி விட்டுப் போன மானிறைச்சியை வழியில் கண்டு அங்குள்ள மூங்கில் அரிசியோடும் அளையோடும் சமைத்த சோற்றினைத் தேக்கின் இலையிலிட்டு இனிதாக உண்ணுமாறு போலே, நீயும் தலைவியை நின் முயற்சி இன்றியே பெற்று மகிழ்ந்தனை. இவளை நின்னொடு அழைத்துப் போய் நின் சுற்றத்தாரோடு சேர்த்து நின் இல்லத்தில் இன்புற்று இனிது வாழ்க என்பதாம். வடுகர் – ஒளவை துரைசாமி உரை புறநானூறு 278 – தொண்டை நாட்டுத் திருவேங்கடத்திற்கு வடக்கில் உள்ள நாட்டவராதலால் வடுகர் எனப்பட்டனர், பொ. வே. சோமசுந்தரனார் உரை அகநானூறு 213 – வடுகர் தெலுங்கர். வரலாறு – வடுகர். வடுகர் – அகநானூறு 107, 213, 253, 281, 295, 375, 381, குறுந்தொகை 11, நற்றிணை 212, புறநானூறு 378. பட்டத்து (18) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒற்றையடிப் பாதையில், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஒரே துறையில் உள்ள ஓடையினுள்ள.
சொற்பொருள்: நீ செலவு அயரக் கேட்டொறும் பல நினைந்து அன்பின் நெஞ்சத்து – நீ அவளை உடன்கொண்டு செல்ல எண்ணுவதைக் கேட்குந்தோறும் அன்பினுடைய நெஞ்சத்துடன், அயாஅப் பொறை மெலிந்த என் அகத்து இடும்பை களைமார் – வருத்தத்தைத் தாங்குவதால் மெலிந்த என் நெஞ்சத்தில் உள்ள துன்பத்தை நீக்கும் பொருட்டு (அயாஅ – அளபெடை), நின்னொடு – நின்னுடன், கருங்கல் வியல் அறை கிடப்பி வயிறு தின்று இரும்புலி துறந்த ஏற்று மான் உணங்கல் நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண் – பெரிய புலியானது கரிய கற்கள் உடைய அகன்ற பாறையில் கிடத்தி வயிறு நிறையத் தின்றுவிட்டுப் போன ஆண் மானின் உலர்ந்த தசையை வழியில் செல்லும் புதியவர்கள் கண்டு மகிழ்ந்த அவ்விடத்தில், ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட வால் நிணம் உருக்கிய வாஅல் வெண்சோறு புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும் – ஒன்றோடு ஒன்று உரசி ஒலிக்கும் மூங்கில்களின் விதையாகிய அரிசியுடன் ஒன்று சேர்த்து ஆயர் குடியிருப்பின் மாட்டுத் தொழுவத்தில் தயிரைப் பெய்து சமைத்த வெள்ளை கொழுப்பினை உருக்கிக் கூட்டிய மிகவும் வெண்மையான சோற்றினைப் புள்ளிகள் உடைய அடியையுடைய தேக்கு மரத்தின் இலையில் வைத்து உண்ணும் (வாஅல் – அளபெடை), கல்லா நீள்மொழிக் கதநாய் வடுகர் வல் ஆண் அரு முனை நீந்தி – கல்வி இல்லாதவர்களாய் நெடுமொழியையும் சினம் மிக்க நாய்களையுமுடைய வடுகர்களின் வலிய ஆண்மை விளங்கும் அரிய போர்முனையைக் கடந்து சென்று, அல்லாந்து – துன்புற்று, உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு – இடிந்து விழும் மண்ணின் இடையூறுக்கு அஞ்சும் ஒற்றையடிப் பாதையில் வழுக்கி விழுந்து கால்கள் முடம்பட்டுத் தனிமையில் கிடக்கும் மிகுந்த வலிமையுடைய எருது, அம் குழை இருப்பை அறைவாய் வான் புழல் புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி மரை கடிந்து ஊட்டும் – அழகிய தளிர்களையுடைய இருப்பை மரத்தின் வெள்ளை நிறத்தையும் உள்ளே துளையையுமுடைய பூக்களைப் புல்லிய தலைமயிரையுடைய சிறுவர்கள் தங்கள் வில்லினால் வீழ்த்தி அவற்றை உண்ண வரும் மரைமானை விரட்டி விட்டு உண்பிக்கும் (சிறாஅர் – அளபெடை), வரையகச் சீறூர் மாலை இன் துணை ஆகி – மலையிடத்து உள்ள சிறு ஊரில் மாலை நேரத்தில் நினக்கு இனிய துணையாகித் தங்கி, காலைப் பசு நனை நறுவீப் பரூஉப் பரல் உறைப்ப – காலை வேளையில் புதிய தேனையுடைய நறுமண மலர்கள் பெரிய பரல் கற்களில் உதிர்ந்து கிடப்பதால் (பரூஉ – அளபெடை), மண மனை கமழும் கானம் – திருமண மனைபோல் மணம் வீசும் காட்டின்கண், துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே – நின் துணையாகிய குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழி வருவாள் (வருமே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 108, தங்கால் பொற்கொல்லனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு
ஒத்தன்று மன்னால் எவன் கொல் முத்தம்
வரை முதல் சிதறியவை போல் யானைப்
புகர் முகம் பொருத புது நீர் ஆலி
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்பக் 5
கார் கதம் பட்ட கண் அகன் விசும்பின்
விடு பொறி ஞெகிழியிற் கொடிபட மின்னி
படுமழை பொழிந்த பானாள் கங்குல்
ஆர் உயிர்த் துப்பின் கோண்மா வழங்கும்
இருளிடைத் தமியன் வருதல் யாவதும் 10
அருளான் வாழி தோழி அல்கல்
விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ அரவின்
அணங்குடை அருந்தலை பை விரிப்பவை போல்
காயா மென் சினை தோய நீடிப்
பஃறுடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள் 15
அணி மலர் நறும் தாது ஊதும் தும்பி
கை ஆடு வட்டின் தோன்றும்
மை ஆடு சென்னிய மலை கிழவோனே.
பாடல் பின்னணி: தலைவன் திருமணம் செய்யாது ஒழுகுகின்றான். ஒரு நாள் இரவில் அவன் சிறைப்புறமாக நிற்பதை அறிந்த தோழி, வரைவு கடாதற்பொருட்டு, அவன் கேட்குமாறுத் தலைவியிடம் கூறுகின்றாள்.
பொருளுரை: தோழி! நீ நீடு வாழ்வாயாக! சிறகுகளில் புள்ளிகள் விரவிய மயிலைக் கண்டு அஞ்சி, பாம்பின், வருத்தத்தைச் செய்யும், நோக்குதற்கு அரிய நஞ்சினையுடைய தலைகள் படத்தை விரிப்பது போல், காயாவின் மெல்லிய கிளைகள் தீண்ட, நீண்டு பல இதழ்களுடன் மலர்ந்த, அசையும் கொத்துக்களையுடைய காந்தளின் அழகிய பூக்களில் உள்ள நறுமண தாதினைக் குடைந்து உண்ணும் தும்பிகள், மகளிர் தங்கள் கையில் வைத்து விளையாடும் வட்டுக்கள் போல் தோன்றும், முகில்கள் தவழும் உச்சியுடைய மலையின் தலைவன்,
முத்துக்கள் மலை உச்சியில் சிதறிக் கிடப்பவைப் போல் தோன்றும் யானையின் புள்ளியுடைய முகத்தில் மோதி விழுந்த புதிய ஆலங்கட்டிகள், பளிங்கினைச் சொரிவது போல் பாறையில் விழுந்து அழகு செய்ய, முகில்கள் சினம் கொண்ட இடமான அகன்ற வானில் பொறிகளைச் சிதறும் கொள்ளி போல் மின்னி, மிக்க மழை பொழிந்த நடு இரவில், அரிய உயிர்களை உணவாகக் கொள்ளும் விலங்குகள் வழங்கும் இருளிடையே தனியே வருவதால் சிறிதும் அருள் செய்யாதவன்.
ஆழ்ந்த நட்புடையவர்களின் துன்பத்தை நீக்கி அருளுதலும் அறிவுடையவர்களுக்குப் பொருந்திய செயல். நம் தலைவன் அவ்வாறு செய்யாதது எதனால்?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘விரவியும் வரூஉம் மரபின என்ப’ (தொல்காப்பியம், உவமையியல் 3) என்னுஞ் சூத்திரத்து ‘காயா மென்சினை ………….. மலை கிழவோனே’ என்புழி, ஆடுதற் தொழில் பற்றியும் வடிவு பற்றியும் வண்ணம் பற்றியும் (உவமை) வந்தது என்பர் பேராசிரியர். கோண்மா (9) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – சிங்கம் முதலியன. ஒருவகை விலங்குமாம். என்னை? ‘அச்சப்பொருளாவன: வள்ளெயிற்று அரிமா வாள்வரி வேங்கை, முள்ளெயிற்று அரவே, முழங்கு அழல் செந்தீ, ஈற்றா மதமா ஏகபாதம், கூற்றங் கொண்மா, குன்றுறை அசுணம் என்று சொல்லப்பட்டன போல்வன’ என்றார் பேராசிரியர். அணங்குடை அருந்தலை (13) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வருத்தத்தைச் செய்யும் அரிய நஞ்சினையுடைய தலைகள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – துன்பம் செய்தலையுடைய நோக்கற்கரிய தலைகள். அணங்குடை அருந்தலை – அகநானூறு 108, நற்றிணை 37, பரிபாடல் 1–1. பஃறுடுப்பு (பல் துடுப்பு) எடுத்த அலங்கு குலைக் காந்தள் (15) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பலவாகிய மலர்களோடே அசைகின்ற கொத்தாகிய காந்தளினது, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பல துடுப்புகள் போலும் அசைகின்ற குலைகளையுடைய காந்தளது. உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காந்தளின் மலர்கள் தம்மைக் கண்டார்க்குத் தமது அழகால் இன்பம் தருதல் ஒழித்துப் பாம்பின் படம்போல் தோன்றி அச்சந்தருமாறு போலே நம் பெருமானும் நம்மை மணந்து கொண்டு நமக்கு இனியனாகத் தோன்றாமல் இரவுக் குறிக்கண் வருதலாலே நமக்குப் பெரிதும் துன்பம் தருகின்றான் என இதன்கண் உள்ளுறை காண்க.
சொற்பொருள்: புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு ஒத்தன்று – ஆழ்ந்த நட்புடையவர்களின் துன்பத்தை நீக்கி அருளுதலும் அறிவுடையவர்களுக்குப் பொருந்திய செயல் (ஒத்தன்று – பொருந்தியது ஆகும்), மன் – இடைச்சொல், ஆல் – அசைநிலை, எவன் – எதனால், கொல் – அசைநிலை, முத்தம் வரை முதல் சிதறியவை போல் யானைப் புகர் முகம் பொருத புது நீர் ஆலி பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப – முத்துக்கள் மலை உச்சியில் சிதறியவை போல் தோன்றும் யானையின் புள்ளியுடைய முகத்தில் மோதி விழுந்த புதிய ஆலங்கட்டிகள் பளிங்கினைச் சொரிவது போல் பாறையில் விழுந்து அழகு செய்ய, கார் கதம் பட்ட கண் அகன் விசும்பின் விடு பொறி ஞெகிழியின் கொடிபட மின்னி படுமழை பொழிந்த பானாள் கங்குல் – முகில்கள் சினம் கொண்ட இடமான அகன்ற வானில் பொறிகளைச் சிதறும் கொள்ளி போல் மின்னி மிக்க மழை பொழிந்த நடு இரவில் (ஞெகிழியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஆர் உயிர்த் துப்பின் கோள் மா வழங்கும் இருளிடைத் தமியன் வருதல் யாவதும் அருளான் – அரிய உயிர்களை உணவாகக் கொள்ளும் விலங்குகள் வழங்கும் இருளிடையே தனியே வருவதால் சிறிதும் அருள் செய்யாதவன், வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, அல்கல் – இரவில், விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ அரவின் அணங்குடை அருந்தலை பை விரிப்பவை போல் – புள்ளிகள் விரவிய மயிலைக் கண்டு அஞ்சி பாம்பின் வருத்தத்தைச் செய்யும் அரிய நஞ்சினையுடைய தலைகள் படத்தை விரிப்பது போல் (வெரீஇ – அளபெடை, வெருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது), காயா மென் சினை தோய நீடிப் பஃறுடுப்பு எடுத்த – காயாவின் மெல்லிய கிளைகள் தீண்ட நீண்டு பல இதழ்களுடன் மலர்ந்த (பஃறுடுப்பு – பல் துடுப்பு, நிலைமொழி ஈற்று லகர மெய் ஆய்தமாகத் திரிந்தது), அலங்கு குலைக் காந்தள் அணி மலர் நறும் தாது ஊதும் தும்பி கை ஆடு வட்டின் தோன்றும் – அசையும் கொத்துக்களையுடைய காந்தளின் அழகிய பூக்களில் உள்ள நறுமண தாதினைக் குடைந்து உண்ணும் தும்பிகள் கையில் வைத்து விளையாடும் வட்டுக்கள் போல் தோன்றும் (வட்டின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), மை ஆடு சென்னிய மலை கிழவோனே – முகில்கள் தவழும் உச்சியுடைய மலையின் தலைவன் (கிழவோனே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 109, கடுந்தொடைக் காவினார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
பல்லிதழ் மென் மலர் உண்கண் நல் யாழ்
நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
காடு கால் யாத்த நீடு மரச் சோலை 5
விழை வெளில் ஆடும் கழை வளர் நனந்தலை
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர்
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கைச்
சுரம் கெழு கவலை கோட்பாற் பட்டென
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர் 10
கைப் பொருள் இல்லை ஆயினும் மெய்க்கொண்டு
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்குப்
பெருங்களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்
அறன் இல் வேந்தன் ஆளும்
வறன் உறு குன்றம் பல விலங்கினவே. 15
பாடல் பின்னணி: பொருள் ஈட்டச் சென்ற தலைவன் இடைச்சுரத்தில் தன் நெஞ்சிடம் சொல்லியது.
பொருளுரை: பல இதழ்களையுடைய மென்மையான மலர் போன்ற மையுண்ட கண்களையும், நல்ல யாழின் நரம்பு இசைத்தாற்போன்று மிக இனிய மொழியினையுமுடைய நலன் தரும் ஒப்பற்ற தலைவி இருக்கும் ஊரானது,
மருப்பினால் (தந்தத்தால்) பகையாயினவற்றைக் குத்தி உழும் (குத்துதலைச் செய்யும்) களிற்று யானையின் கூட்டம் கூடிய காட்டு இடம் பரந்த நீண்ட மரங்களையுடைய சோலையில், ஒன்றையொன்று விரும்பும் அணில்கள் கூடி விளையாடும் மூங்கில் வளர்ந்த அகன்ற இடத்தில், வெள்ளை நுனியையுடைய அம்புகள் விரைவாக செலுத்தப்பட்டதால் இறந்தவர்களின் எண்ணினால் எல்லை காணுதற்கு அரிய, தழையால் மறைத்த பதுக்கைகளையுடைய, சுரத்தில் பொருந்திய பிரிவுகளையுடைய வழிகள் ஆறலை கள்வர்களின் பகுதியில் உள்ளதென்று, வழிப்போக்கர்கள் இல்லாது போன சுரநெறியில், செல்லுபவர்களின் கைகளில் பொருள் இல்லை என்றாலும், அவர்களின் உடலைப் பற்றிக்கொண்டு அவர்களின் இனிய உயிரைக் கொல்லாது விட்ட தப்பிற்காக, பெரிய களிற்று யானைகளின் கோடுகளுடன் (தந்தங்களுடன்) புலிகளின் வரி பொருந்திய தோலைத் தண்டமாகப் பெறும் அறம் இல்லாத எயினர்களின் வேந்தன் (தலைவன்) ஆளும், வறட்சியுற்ற மலைகள் பல குறுக்கிட்டுள்ள நிலையை உடையது.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்’ என வரும் விதி கொள்க. வேந்தன் (14) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘வெறியறி சிறப்பின்’ (தொல்காப்பியம், புறத்திணையியல் 5) என்னுஞ் சூத்திரத்து ‘அறனில் வேந்தன் ஆளும் வறனுறு குன்றம் பல விலங்கினவே’ என காட்டுத் தலைவனை நாட்டுத் தலைவன் பெயராற் கூறினர் என்றனர் நச்சினார்க்கினியர். விழை வெளில் (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காதலிக்கின்ற அணில்கள், கண்டோர் விரும்பிப் பார்க்கும் அணில்கள் எனினுமாம். நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).
சொற்பொருள்: பல்லிதழ் மென் மலர் உண்கண் நல் யாழ் நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே – பல இதழ்களையுடைய மென்மையான மலர் போன்ற மையுண்ட கண்களையும் நல்ல யாழின் நரம்பு இசைத்தாற்போன்று மிக இனிய மொழியினையுமுடைய நலன் தரும் ஒப்பற்ற தலைவி இருக்கும் ஊர் (பல்லிதழ் – அகரம் கெட்டுக் ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 160) என்றதனால் லகரம் இரட்டித்துப் பல்லிதழ் என முடிந்தது, இன் தீம் – இனிமை, ஒருபொருட் பன்மொழி, ஊரே – ஏகாரம் அசைநிலை), கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக் காடு கால் யாத்த நீடு மரச் சோலை – மருப்பினால் (தந்தத்தால்) பகையாயினவற்றைக் குத்தி உழும் (குத்துதலைச் செய்யும்) களிற்று யானையின் கூட்டம் கூடிய காட்டு இடம் பரந்த நீண்ட மரங்களையுடைய சோலையில், விழை வெளில் ஆடும் கழை வளர் நனந்தலை – ஒன்றையொன்று விரும்பும் அணில்கள் கூடி விளையாடும் மூங்கில் வளர்ந்த அகன்ற இடத்தில், வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர் எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கை – வெள்ளை நுனியையுடைய அம்புகள் விரைவாக செலுத்தப்பட்டதால் இறந்தவர்களின் எண்ணினால் எல்லை காணுதற்கு அரிய தழையால் மறைத்த பதுக்கைகளையுடைய, சுரம் கெழு கவலை கோள் பால் பட்டென – சுரத்தில் பொருந்திய பிரிவுகளையுடைய வழிகள் ஆறலை கள்வர்களின் பகுதியில் உள்ளதென்று, வழங்குநர் மடிந்த அத்தம் – வழிப்போக்கர்கள் இல்லாது போன சுரநெறியில், இறந்தோர் கைப் பொருள் இல்லை ஆயினும் – செல்லுபவர்களின் கைகளில் பொருள் இல்லை என்றாலும், மெய்க்கொண்டு இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்கு – அவர்களின் உடலைப் பற்றிக்கொண்டு அவர்களின் இனிய உயிரைக் கொல்லாது விட்ட தப்பிற்காக (செகாஅர் – அளபெடை), பெருங்களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் அறன் இல் வேந்தன் ஆளும் வறன் உறு குன்றம் பல விலங்கினவே – பெரிய களிற்று யானைகளின் கோடுகளுடன் (தந்தங்களுடன்) புலிகளின் வரி பொருந்திய தோலைத் தண்டமாகப் பெறும் அறம் இல்லாத எயினர்களின் வேந்தன் (தலைவன்) ஆளும் வறட்சியுற்ற மலைகள் பல குறுக்கிட்டுள்ளன (வரி – புலி, ஆகுபெயர், அறன் – அறம் என்பதன் போலி, விலங்கினவே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 110, போந்தைப் பசலையார், நெய்தல் திணை – தோழி செவிலித்தாயிடம் சொன்னது
அன்னை அறியினும் அறிக, அலர்வாய்
அம்மென் சேரி கேட்பினும் கேட்க,
பிறிது ஒன்று இன்மை அறியக் கூறிக்
கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்
கடுஞ்சூள் தருகுவன் நினக்கே, கானல் 5
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்,
சிற்றில் இழைத்தும், சிறு சோறு குவைஇயும்,
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது
இருந்தனமாக, எய்த வந்து
“தட மென் பணைத்தோள் மட நல்லீரே! 10
எல்லும் எல்லின்று, அசைவு மிக உடையேன்,
மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு, யானும் இக்
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ?”
என மொழிந்தனனே ஒருவன், அவன் கண்டு,
இறைஞ்சிய முகத்தெம், புறம் சேர்பு பொருந்தி, 15
“இவை நுமக்கு உரிய அல்ல, இழிந்த
கொழு மீன் வல்சி” என்றனம், இழுமென
நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணாமோ எனக் காலின் சிதையா,
நில்லாது பெயர்ந்த பல்லோர் உள்ளும், 20
என்னே குறித்த நோக்கமொடு, “நன்னுதால்!
ஒழிகோ யான்” என அழிதகக் கூறி,
யான் “பெயர்க” என்ன நோக்கித் தான் தன்
நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி
நின்றோன் போலும் இன்றும் என் கட்கே. 25
பாடல் பின்னணி: தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. களவொழுக்கத்தின்கண் தலைவனின் பிரிவினால் தலைவி வருந்தியிருந்தாள். அவள் மேனியின் வேறுபாட்டைக் கண்ட செவிலித்தாய், ‘எதனால் அவள் இவ்வாறு ஆயினள்?’ எனக் கேட்டாள். அவள் கற்புக்கடம் பூண்டதைச் செவிலித்தாய்க்குக் குறிப்பால் உணர்த்தும்படிக் கூறியது.
பொருளுரை: அன்னை அறிந்தாலும் அறியட்டும். அலர் கூறும் வாயினையுடைய ஆரவாரமுடைய தெருவில் உள்ளவர்கள் கேட்டாலும் கேட்கட்டும். வேறு ஒன்றும் இல்லாமையை நீ அறியும்படிக் கூறி, வளைந்த சுழிகள் உடைய புகாரில் உள்ள கடவுளை நோக்கிக் கடிய உறுதிமொழியைத் தருவேன் உனக்கு.
மாலை அணிந்த தோழியருடன் கடலில் ஒன்றுகூடி விளையாடியும், கடற்கரைச் சோலையில் சிறு மணல் வீடு கட்டியும், சிறு சோறு சமைத்துக் குவித்தும், வருந்திய வருத்தம் நீங்க யாம் சிறிது இளைப்பாறி இருந்தோமாக, அப்பொழுது ஒருவன் எங்களை அணுகி வந்து, “பெரிய மெல்லிய மூங்கில் போன்ற தோள்களையுடைய இளைய நல்லவர்களே! பகலும் ஒளியை இழந்துவிட்டது. மிகவும் தளர்ச்சி உடையவனாக உள்ளேன். மெல்லிய இலைப்பரப்பில் உங்களுடன் விருந்து உண்டு யானும் இந்த ஆரவாரமுடைய சிறுகுடியில் தங்கினால் என்னவாகும்?” எனக் கூறினான். அவனைக் கண்டு கவிழ்ந்த முகத்தை உடையவர்களாய், ஒருவர் பின் ஒருவர் மறைந்து நின்று, “இவை நுமக்கு உரியது இல்லை. கடலினின்று கரையில் விழுந்த மீன் உணவு” எனக் கூறினோம் மெதுவாக. “நெடிய கொடிகள் அசையும் கப்பல்கள் தோன்றுவனவற்றை யாம் காண்பேம் அல்லவோ” எனக் கூறி எங்கள் சிறு வீட்டைத் தன் காலால் சிதைத்தான். அங்கு நிற்காது நகர்ந்த பலர் உள்ளும், என்னையே குறித்து நோக்கிய பார்வையுடன், “நல்ல நெற்றியையுடையவளே! யான் செல்கின்றேன்” என்று என் நெஞ்சம் அழியும்படிக் கூறினான். நான் “செல்க” என்றலும், என்னை நோக்கியவனாய் அவன் தன் நெடிய தேரின் கொடிஞ்சியைப் பற்றிக்கொண்டு நின்ற நிலை, இன்றும் என் கண்முன் நிற்பது போல் உள்ளது.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘முன்னிலை அறன் எனப்படுதல் என்று இரு வகைப் புரை தீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘கண்ணினுஞ் செவியினும்’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 27) என்னுஞ் சூத்திரத்து ‘ஒழிகோ யானென அழிதகக் கூறி’ என்புழி, தலைமகன் மனத்து நிகழ்ந்த அழிவெல்லாம் ஒழிகோ யான் என்று உரையானே உணர்ந்தமையின் அது செவியுணர்வு எனப்படும் என்று கூறினர் பேராசிரியர். தொல்காப்பியம், களவியல் 35 – தோழி தானே செவிலி மகளே. தொல்காப்பியம், பொருளியல் 12 – எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல், கூறுதல் உசாதல், ஏதீடு, தலைப்பாடு, உண்மை செப்புங்கிளவியொடு, தொகைஇ எழு வகைய என்மனார் புலவர் – இங்கு எளித்தல் (தலைவனை எளியவனாகக் கூறுதல்) பொருந்தும். இழிந்த கொழு மீன் (16–17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இழிந்ததான கொழுமீன், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இழிவாய கொழு மீன். பேரறிஞர் V.S. ராஜம் அவர்கள், தன் ஆங்கில நூல் ‘Reference Grammar of Classical Tamil poetry’ என்பதில் ‘எறி திரை தந்திட இழிந்த மீன் (கலித்தொகை 121–20), என்பதை ‘அலைகளால் வீசப்பட்டுக் கரையில் விழுந்த மீன்கள்’ என விளக்கியுள்ளார் (the fish which came down the shore as the tossing waves brought and dropped them). மேலும், ‘இழிந்த’ என்பது ‘கீழ்நோக்கிச் செல்வது’ என்னும் பொருளில் தான் மிகுதியாக வந்துள்ளது என்றும் எழுதியுள்ளார். கலித்தொகை 121 – எறி திரை தந்திட இழிந்த மீன் – நச்சினார்க்கினியர் உரை – எறிகின்ற திரை ஏறக் கொண்டு வந்து போடுகையினால் எக்கரிலே கிடந்த மீன், கலித்தொகை 131– திரை உறப் பொன்றிய புலவு மீன். தொடலை ஆயமொடு (6) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மாலை போன்ற ஆயத்தாரோடு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாலை போலத் தொடர்ந்து வரும் ஆயத்தாரோடு, உ. வே. சாமிநாதையர் உரை குறுந்தொகை 294 பாடலுக்கு – மாலையையுடைய மகளிர் கூட்டத்தோடு. கோதை ஆயமொடு (அகநானூறு 49–16, 60–10,180–2) – மாலையையுடைய மகளிர் என்ற பொருளே பொ. வே. சோமசுந்தரனார் மற்றும் ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரைகளில் உள்ளன. காணாமோ (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காண்போம் அல்லமோ, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – காண்போம் அல்லேமோ, ச. வே. சுப்பிரமணியன் உரை – காண்போம். ஆயமொடு – அகநானூறு 230 – விளையாட்டு ஆயமொடு வெண்மணல் உதிர்த்த புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு மனைபுறம் தருதி ஆயின் எனையதூஉம் இம்மனைக் கிழமை எம்மொடு புணரின் தீதும் உண்டோ மாதராய். சிதையா – சிதைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. அழிதக (22) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தனது நெஞ்சம் அழியுமாறு விடை இரப்ப, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – என் நெஞ்சம் அழிந்திடக் கூறி. தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25). காலின் சிதையா (19) – ச. வே. சுப்பிரமணியன் – எங்களது சிற்றில் இடங்களைக் காலால் அழித்து விட்டு அங்கு நில்லாமல் சென்றான், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தமது சிற்றில் முதலியவற்றைக் காலால் சிதைத்து விட்டு, அவன் முன்னாள் நில்லாது சென்ற மகளிர். நோக்கி (23) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவியை நோக்கி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தோழியை நோக்கி. கொடிஞ்சி – கையால் பற்றுதற்குரிய தாமரை மொட்டுப் போன்ற தேர் உறுப்பு. கடவுள் முன் சூளுரைத்தல் – அகநானூறு 110 – கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக் கடுஞ்சூள் தருகுவன் நினக்கே, அகநானூறு 266 – திரு மணி விளக்கின் அலைவாய்ச் செருமிகு சேஎயொடு உற்ற சூளே, அகநானூறு 396 – தெறல் அரும் கடவுள் முன்னர்த் தேற்றி மெல் இறை முன் கை பற்றிய சொல் இறந்து, நற்றிணை 386 – அணங்குடை அரும் சூள் தருகுவென் என, குறுந்தொகை 53 – நேர் இறை முன்கை பற்றிச் சூரர மகளிரோடு உற்ற சூளே, கலித்தொகை 108 – மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத் தலையினால் தொட்டு உற்றேன் சூள், கலித்தொகை 124 – பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்தக்கால் அரிது என்னாள். சேரி – (குறுந்தொகை 231, 298, 320), உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தெரு.
சொற்பொருள்: அன்னை அறியினும் அறிக – அன்னை அறிந்தாலும் அறியட்டும் (அன்னை – நற்றாய்), அலர்வாய் அம்மென் சேரி கேட்பினும் கேட்க – அலர் கூறும் வாயினையுடைய ஆரவாரமுடைய தெருவில் உள்ளவர்கள் கேட்டாலும் கேட்கட்டும் (சேரி – ஆகுபெயர் அங்கு வாழ்பவர்களுக்கு), பிறிது ஒன்று இன்மை அறியக் கூறிக் கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக் கடுஞ்சூள் தருகுவன் நினக்கே – வேறு ஒன்றும் இல்லாமையை நீ அறியும்படிக் கூறி வளைந்த சுழிகள் உடைய புகாரில் உள்ள கடவுளை நோக்கிக் கடிய உறுதிமொழியைத் தருவேன் உனக்கு (புகாஅர்– அளபெடை), கானல் – கடற்கரைச் சோலை, தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும் சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும் – மாலை அணிந்த தோழியருடன் கடலில் ஒன்றுகூடி விளையாடியும் சிறு மணல் வீடு கட்டியும் சிறு சோறு சமைத்துக் குவித்தும் (குவைஇயும் – அளபெடை), வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது இருந்தனமாக – வருந்திய வருத்தம் நீங்க யாம் சிறிது இளைப்பாறி இருந்தோமாக, எய்த வந்து – அணுகி வந்து, தட மென் பணைத்தோள் மட நல்லீரே – பெரிய மெல்லிய மூங்கில் போன்ற தோள்களையுடைய இளைய (மடப்பம் பொருந்திய) நல்லவர்களே, எல்லும் எல்லின்று – பகலும் ஒளியை இழந்துவிட்டது, அசைவு மிக உடையேன் – மிகவும் தளர்ச்சி உடையவனாக உள்ளேன், மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு யானும் இக் கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ – மெல்லிய இலைப்பரப்பில் உங்களுடன் விருந்து உண்டு யானும் இந்த ஆரவாரமுடைய சிறுகுடியில் தங்கினால் என்னவாகும் (கல்லென் – ஒலிக்குறிப்பு மொழி, மற்று – வினைமாற்றின்கண் வந்தது), என மொழிந்தனனே ஒருவன் – என ஒருவன் கூறினான் (மொழிந்தனனே – ஏகாரம் அசைநிலை), அவன் கண்டு இறைஞ்சிய முகத்தெம் புறம் சேர்பு பொருந்தி – அவனைக் கண்டு கவிழ்ந்த முகத்தை உடையவர்களாய் ஒருவர் பின் ஒருவர் மறைந்து நின்று, ‘இவை நுமக்கு உரிய அல்ல – இவை நுமக்கு உரியது இல்லை, இழிந்த கொழு மீன் வல்சி என்றனம் இழுமென – கடலினின்று கடலினின்று கரையில் விழுந்த மீன் உணவு எனக் கூறினோம் மெதுவாக, நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ காணாமோ எனக் காலின் சிதையா – நெடிய கொடிகள் அசையும் கப்பல்கள் தோன்றுவனவற்றை யாம் காண்பேம் அல்லவோ எனக் கூறித் தன் காலால் சிதைத்து, நில்லாது பெயர்ந்த பல்லோர் உள்ளும் – அங்கு நிற்காது நகர்ந்த பலர் உள்ளும், என்னே குறித்த நோக்கமொடு – என்னையே குறித்து நோக்கிய பார்வையுடன் (என்னையே எனக் கொள்க, தொகுத்தல் விகாரம், சிதையா – சிதைத்து), நன்னுதால் ஒழிகோ யான் என அழிதகக் கூறி – நல்ல நெற்றியையுடையவளே யான் செல்கின்றேன் என்று என் நெஞ்சம் அழியும்படிக் கூறி, யான் பெயர்க என்ன – நான் செல்க என்றலும், நோக்கித் தான் தன் நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி நின்றோன் போலும் இன்றும் என் கட்கே – நோக்கியவனாய் அவன் தன் நெடிய தேரின் கொடிஞ்சியைப் பற்றிக்கொண்டு நின்றது இன்றும் என் கண்முன் நிற்பது அந்நிலையே போலும் (கட்கே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 111, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
உள்ளாங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர்
எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி
வருவர், வாழி தோழி, அரச
யானை கொண்ட துகிற்கொடி போல,
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி 5
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர,
மழை என மருண்ட மம்மர் பல உடன்
ஓய் களிறு எடுத்த நோயுடை நெடுங்கை
தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
அத்தக் கேழல் அட்ட நற்கோள் 10
செந்நாய் ஏற்றைக் கம்மென ஈர்ப்பக்,
குருதி ஆரும் எருவைச் செஞ்செவி
மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட
புண் தேர் விளக்கின் தோன்றும்
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே. 15
பாடல் பின்னணி: தலைவன் பொருளீட்டச் சென்ற பொழுதில் பிரிவின்கண் வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்தது.
பொருளுரை: தோழி! நீ நீடு வாழ்வாயாக! தம்மிடம் உள்ள பொருள் அளவிற்கு மகிழ்தல் இல்லாதவராய்ப், பகைவர்கள் இகழும் நெஞ்சத்துடன் கூறும் அம்பு போலும் சொற்களுக்கு நாணி, அரசர்களின் யானை மீது இருக்கும் துகிற்கொடி போல், ஓடை என்னும் மலையில், காய்ந்த மேல்பகுதி உடைய ஞெமைய மரத்தின் மீது பின்னிய சிலந்தியின் கூடு, மேல்காற்றினால் அசைய, அதனை முகில் என எண்ணி மருட்சி அடைந்த மயக்கத்தினை உடைய இளைத்த களிற்று யானைகள் ஒன்று கூடி உயர்த்திய, நீர் இல்லாமையால் துன்புற்ற நீண்ட தும்பிக்கைகள், புகழ்ச் சொற்களைத் தொகுத்துப் பாடும் கூத்தர்களின் தூம்பு போல் தோன்றி ஒலிக்கும் பாலை நிலத்தில், ஆண் பன்றியைக் கொன்ற, தான் வேண்டும் விலங்கினைப் பற்றும் திறமையுள்ள ஆண் செந்நாய் விரைவாக அதன் உடலை இழுக்க, அப்பொழுது அங்கு ஒழுகிய குருதியைப் பருகும் பருந்தின் சிவந்த செவிகள், போர்க்களத்தில் இரவில் வீரர்களின் புண்களை ஆராய்வதற்குரிய விளக்குகள் போல் தோன்றும், வானைத் தொடும் ஒளிரும் மலையைக் கடந்துச் சென்ற நம் தலைவர், விரைந்து வருவார்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘ பிறவும் வகைபட வந்த கிளவி’ என்பதன்கண் அமைத்திடுக. உள்ளுறை – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – சிலம்பிக் கூட்டினை மேகமெனக் கருதும் யானையைக் காணும் தலைவர், தாம் பொருள் அல்லதனைப் பொருளெனக் கருதியதனை உணர்ந்து விரைய மீள்வர் என்றபடி. ஒப்புமை – புறநானூறு 152–15 – கண் விடு தூம்பின் களிற்று உயிர், ஐங்குறுநூறு 377–1,2 – யானை இயம் புணர் தூம்பின் உயிர்க்கும், பரிபாடல் 21–33 – விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப, மலைபடுகடாம் 6, 7 – கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின் இளிப்பயிர் இமிரும் குறும்பரம் தூம்பொடு, மலைபடுகடாம் 533 – கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர.
சொற்பொருள்: உள்ளாங்கு உவத்தல் செல்லார் – தம்மிடம் உள்ள பொருள் அளவிற்கு மகிழ்தல் இல்லாதவராய், கறுத்தோர் எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி – பகைவர்கள் இகழும் நெஞ்சத்துடன் கூறும் அம்பு போலும் சொற்களுக்கு நாணி (ஏஎ –அளபெடை, ஏ – அம்பு), வருவர் – விரைந்து வருவார், வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, அரச யானை கொண்ட துகிற்கொடி போல அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி – அரசர்களின் யானை மீது இருக்கும் துகிற்கொடி போல் காய்ந்த மேல்பகுதி உடைய ஞெமைய மரத்தின் மீது பின்னிய சிலந்தியின் கூடு (அலந்த தலை அலந்தலை என வந்தது, ஞெமையத்து – அத்து சாரியை, ஞெமை மரம் – Anogeissus latifolia), ஓடைக் குன்றத்து – ஓடை என்னும் மலையில், கோடையொடு துயல்வர – மேல்காற்றினால் அசைய, மழை என மருண்ட மம்மர் பல உடன் ஓய் களிறு எடுத்த நோயுடை நெடுங்கை – முகில் என மருட்சி அடைந்த மயக்கத்தினை உடைய இளைத்த களிற்று யானைகள் ஒன்று கூடி நீர் இல்லாமையால் உயர்த்திய துன்புற்ற நீண்ட தும்பிக்கைகள், தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும் அத்த – புகழ்ச் சொற்களைத் தொகுத்துப் பாடும் கூத்தர்களின் தூம்பு போல் தோன்றி ஒலிக்கும் பாலை நிலத்தில் (தூம்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கேழல் அட்ட நற்கோள் செந்நாய் ஏற்றைக் கம்மென ஈர்ப்பக் குருதி ஆரும் எருவைச் செஞ்செவி மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட புண் தேர் விளக்கின் தோன்றும் – ஆண் பன்றியைக் கொன்ற பற்றும் திறமையுள்ள ஆண் செந்நாய் விரைவாக அதன் உடலை இழுக்க ஒழுகிய குருதியைப் பருகும் பருந்தின் சிவந்த செவிகள் போர்க்களத்தில் இரவில் வீரர்களின் புண்களை ஆராய்வதற்குரிய விளக்குகள் போல் தோன்றும் (விளக்கின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே – வானைத் தொடும் ஒளிரும் மலையைக் கடந்துச் சென்ற நம் தலைவர் (இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 112, நெய்தல் சாய்த்துய்த்த ஆவூர் கிழார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி
சிதலை செய்த செந்நிலைப் புற்றின்
மண் புனை நெடுங்கோடு உடைய வாங்கி,
இரை நசைப் பரிக்கும் அரை நாள் கங்குல்
ஈன்று அணி வயவுப்பிணப் பசித்தென, மறப் புலி 5
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும்
பனி இருஞ்சோலை, எமியம் என்னாய்
தீங்கு செய்தனையே ஈங்கு வந்தோயே,
நாள் இடைப்படின் என் தோழி வாழாள்,
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை, 10
கழியக் காதலர் ஆயினும் சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்
வரையின் எவனோ வான்தோய் வெற்ப!
கணக்கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
மணப்பு அருங்காமம் புணர்ந்தமை அறியார், 15
தொன்று இயல் மரபின் மன்றல் அயரப்
பெண் கோள் ஒழுக்கம் கண் கொள் நோக்கி
நொதுமல் விருந்தினம் போல, இவள்
புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே.
பாடல் பின்னணி: இரவுக்குறி வந்த தலைவனை எதிர்ப்பட்டு நின்று தோழி சொல்லி வரைவு கடாயது.
பொருளுரை: வானைத் தீண்டுகின்ற மலைகள் உடைய நாட்டின் தலைவனே! கூனலுடைய முதுகினையும் சிறு அடியிட்டு நடக்கும் நடையினையும் உடைய கரடிகளின் கூட்டம், கரையான் இயற்றிய சிவந்த நிலையையுடைய புற்றினது மண்ணால் புனைந்த உயர்ந்த உச்சி உடைந்து போகும்படித் தோண்டி, அண்மையில் ஈன்ற வேட்கையுடைய பெண் புலி பசியுடன் இருப்பதால் வலிமையுடைய அதன் ஆண்புலி ஒளியுடைய உயர்ந்த கோட்டுடைய (தந்தத்தை உடைய) களிற்று யானையைக் கொன்று முழங்குகின்ற குளிர்ந்த பெரிய (கரிய) சோலைக்கு, யாம் தனியாக உள்ளோம் என்று நினையாதவனாய் நீ வருவதால், எமக்குத் தீங்கு செய்தாய் ஆவாய். நீ வராத ஒரு நாள் இடைப்பட்டாலும் என் தோழி உயிர் வாழ மாட்டாள். என் தோழியின் தோள்களைத் தழுவுவதை நீயும் விரும்புகின்றாய். மிகவும் காதல் கொண்டவர்கள் ஆனாலும், சான்றோர் பழியுடன் வரும் இன்பத்தை விரும்ப மாட்டார்கள். நீ இவளைத் திருமணம் செய்துகொண்டால் என்ன குறை ஆகும்? கலைமான்களின் கூட்டம் தாழ ஒலிக்கும், மிளகுக் கொடிகள் படர்ந்த மலைச்சாரலில், எய்துவதற்கு அரிய காதலால் நீவிர் கூடிய களவு ஒழுக்கத்தினை அறியாத எம் சுற்றத்தார், தொன்று தொட்டு வரும் முறைப்படி திருமணத்தை நிகழ்த்திட, நீ இவளை மணம் புரிவதைக் கண்ணார நோக்கி, யாம் அயலவள் ஆகிய புதியவள் போல், இவளுடைய புதிய நாணமுடைய ஒடுக்கத்தையும் காண்போம்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘கல்வி தறுகண்’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 9) என்னுஞ் சூத்திரத்து, ‘கழியாக் காதலராயினுஞ் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்’ என்பது புகழ் பற்றிப் பிறந்த பெருமிதம், என்பர் பேராசிரியர். ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என்னுஞ் சூத்திரத்து, ‘ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்’ என்பதற்கு இப்பாட்டு உதாரணமாகும் என்றும், ‘பொழுது மாறுங் காப்பும்’ (தொல்காப்பியம், பொருளியல் 16) என்னுஞ் சூத்திரத்து ‘நன்மையுந் தீமையும் பிரிதினைக் கூறலும்’ என்ற பகுதிக்கு, ‘கழி பெருங்காதலர் ஆயினுஞ் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்’ எனப் பிறர் மேல் வைத்துத் தலைவனை அறிவு கொளுத்தினமையின் வலுவாய் அமைந்தது என்றும், ‘பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்’ எனவே, புகழொடு வரூஉம் இன்பம் வெஃகுவரெனக் கொள்ள வைத்தாள், நன்மையுந் தீமையும் பிறிதின்மேல் வைத்துக் கூறிற்றாம், என்றும் கூறினர் நச்சினார்க்கினியர். உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரடிகள் கரையான் பெரிதும் முயன்று செய்த புற்றை ஒரு பொழுது உணவின் பொருட்டு உடைத்து அழித்தல் போல நீ இக்களவின்பத்தின் பொருட்டு எளியேமாகிய தலைவியும் யானும் அரிதின் முயன்று வளர்த்துள்ள எமது காதல் உள்ளத்தை நினது இவ்வொழுக்கத்தாலும் வரையாமையாலும் சிதைத்து ஒழிகின்றாய். ஒப்புமை – நற்றிணை 393 – வாழி தோழி நம் காதலர் புதுவர் ஆகிய வரவும் நின் வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே. கலித்தொகை 52 – புதுவை போலும் நின் வரவும் இவள் வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே. அண்மையில் ஈன்ற துணைக்கு உணவு தேடல் – புலி – நற்றிணை 29, 148, 332, 383, அகநானூறு 112, 147, 238, கழுகு – அகநானூறு, செந்நாய் – அகநானூறு 21, யானை – அகநானூறு 85. கரடிகள் ஈயல் புற்றை உடைத்தல் – அகநானூறு 8, 72, 81, 88, 112, 149, 247, 257, 307, நற்றிணை 125, 325, 336. பெண் கோள் ஒழுக்கம் (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வதுவைச் சடங்கு செய்து பெண்ணைக் கைப்பிடித்தல், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வரைந்துக் கொள்ளும் ஒழுக்கம். காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – முனைவர் கு.வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லதிகாரம், உரியியல் 57).
சொற்பொருள்: கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி சிதலை செய்த செந்நிலைப் புற்றின் மண் புனை நெடுங்கோடு உடைய வாங்கி இரை நசைப் பரிக்கும் அரை நாள் கங்குல் – கூனலுடைய முதுகினையும் சிறு அடியிட்டு நடக்கும் நடையினையும் உடைய கரடிகளின் கூட்டம் கரையான் இயற்றிய சிவந்த நிலையையுடைய புற்றினது மண்ணால் புனைந்த உயர்ந்த உச்சி உடைந்து போகும்படித் தோண்டி, ஈன்று அணி வயவுப்பிணப் பசித்தென மறப் புலி ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும் பனி இருஞ்சோலை – அண்மையில் ஈன்ற வேட்கையுடைய பெண் புலி பசியுடன் இருப்பதால் வலிமையுடைய அதன் ஆண்புலி ஒளியுடைய உயர்ந்த கோட்டுடைய (தந்தத்தை உடைய) களிற்று யானையைக் கொன்று முழங்குகின்ற குளிர்ந்த பெரிய (கரிய) சோலைக்கு (பிண – பிணா, ஈறு குறுகியது, வயா என்பது வயவு ஆயிற்று), எமியம் என்னாய் தீங்கு செய்தனையே ஈங்கு வந்தோயே – யாம் தனியாக உள்ளோம் என்று நினையாதவனாய் இங்கு வருவதால் நீ எமக்குத் தீங்கு செய்தாய் ஆவாய் (வந்தோயே – வந்தாய், ஆகாரம் ஓகாரம் ஆயிற்று, ஏகாரம் அசைநிலை), நாள் இடைப்படின் என் தோழி வாழாள் – நீ வராத ஒரு நாள் இடைப்பட்டாலும் என் தோழி உயிர் வாழ மாட்டாள், தோளிடை முயக்கம் நீயும் வெய்யை – என் தோழியின் தோள்களைத் தழுவுவதை நீயும் விரும்புகிறாய், கழியக் காதலர் ஆயினும் – மிகவும் காதல் கொண்டவர்கள் ஆனாலும், சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் – சான்றோர் பழியுடன் வரும் இன்பத்தை விரும்ப மாட்டார்கள் (வரூஉம் – அளபெடை), வரையின் எவனோ – நீ இவளைத் திருமணம் செய்துகொண்டால் என்ன குறை ஆகும், வான்தோய் வெற்ப – வானைத் தீண்டுகின்ற மலைகள் உடைய நாட்டின் தலைவனே (வெற்ப – விளி), கணக்கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின் – கலைமான்களின் கூட்டம் தாழ ஒலிக்கும் மிளகுக் கொடிகள் படர்ந்த மலைச்சாரலில், மணப்பு அருங்காமம் புணர்ந்தமை அறியார் தொன்று இயல் மரபின் மன்றல் அயர – எய்துவதற்கு அரிய காதலால் நீவிர் கூடிய களவு ஒழுக்கத்தினை அறியாத எம் சுற்றத்தார் தொன்று தொட்டு வரும் முறைப்படி திருமணத்தை நிகழ்த்திட, பெண் கோள் ஒழுக்கம் கண் கொள் நோக்கி – நீ இவளை மணம் புரிவதைக் கண்ணார நோக்கி, நொதுமல் விருந்தினம் போல – யாம் அயலவள் ஆகிய புதியவள் போல் (தன்மைப் பன்மை), இவள் புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே – இவளுடைய புதிய நாணமுடைய ஒடுக்கத்தையும் யாம் காண்போம் (யாமே – தன்மைப் பன்மை, ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 113, கல்லாடனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நன்று அல் காலையும் நட்பின் கோடார்,
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியில்,
புன்தலை மடப்பிடி அகவுநர் பெருமகன்
அமர் வீசு வண் மகிழ் அஃதைப் போற்றிக்,
காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர் 5
இளங்கள் கமழும் நெய்தலஞ்செறுவின்
வளங்கெழு நன்னாடு அன்ன என் தோள் மணந்து,
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற
நல்காது துறந்த காதலர், ‘என்றும்
கல் பொரூஉ மெலியாப் பாடு இன் நோன் அடியன் 10
அல்கு வன் சுரைப் பெய்த வல்சியன்
இகந்தன ஆயினும் இடம் பார்த்துப் பகைவர்
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில்
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும்
கனை இருஞ்சுருணைக் கனி காழ் நெடுவேல் 15
விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி
எழாஅப் பாணன் நன்னாட்டு உம்பர்,
நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்
எறி படை கழீஇய சேயரிச் சின்னீர்
அறு துறை அயிர் மணல் படு கரைப் போகிச், 20
சேயர்’ என்றலின் சிறுமை உற்ற என்
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க,
அழாஅம் உறைதலும் உரியம், பராரை
அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப்
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு 25
மெய் இவண் ஒழியப் போகி, அவர்
செய் வினை மருங்கிற் செலீஇயர், என் உயிரே.
பாடல் பின்னணி: தலைவன் பொருள்வயின் பிரிந்தான். பிரிவாற்றாது வருந்திய தலைவியிடம் தோழி “நீ ஆற்றியிருக்க வேண்டும்” என்று கூறினாள். அதற்கு மறுமொழியாகத் தன்னால் ஆற்றியிருக்க இயலாது எனத் தோழியிடம் தலைவி உரைத்தாள்.
பொருளுரை: நன்மை இல்லாத காலத்திலும் நட்புத் தன்மையில் மாறுபடாமல், நண்பர்பால் அவருடைய வழியில் சென்று, அவர்க்கு நன்மை செய்யும் பிறழாத கோட்பாடு உடைய, புல்லிய தலையையுடைய இளைய பிடியானைகளைப் போர்க்களத்தில் பாணர்களுக்கு அளிக்கும் தலைவனாய்த், தன் வள்ளன்மையால் இன்புறும் அஃதை என்பவனைப் பாதுகாத்து, அவனைக் காவலுடைய இடத்தில் நிலைநிறுத்திய பல வேற்படையையுடைய கோசரின், புதிய கள் கமழும் நெய்தலஞ்செறு என்னும் வளம் பொருந்திய நல்ல நாட்டை ஒத்த, என் தோள்களைக் கூடி, ஆராவாரத்தையுடைய பழைய ஊர் மக்கள் பழியை எங்கும் தூற்றும்படி அருளாது என்னைத் துறந்த காதலர்,
என்றும் செருப்புகள் கற்களை இடிப்பதால் மெலியாத இனிய ஓசையை எழுப்பும், வலிய காலடியை உடையவன், மிக்க வலிய மூங்கில் குழாயில் பெய்த உணவை உடையவன், தன் நாட்டின் எல்லையைக் கடந்து தொலைவில் உள்ளவனாயினும் இடத்தைப் பார்த்து பகைவர் தங்கள் ஆக்களைப் பாதுகாக்கும் உணவு மிக்க அரணங்களுக்குச் சென்று திரண்ட இமிலையுடைய காளைகளுடன் உள்ள பகைப்புலத்து ஆக்களைக் கவர்ந்து செல்லும், செறிந்த கரிய பூணையும் நெய் தடவிய தண்டையுடைய நீண்ட வேலினையும் விழாக் கொண்டாடினாற்போல் கொழுமையான பல உணவுகளையுமுடைய, பகைவர்களுக்குப் புறங்கொடாத பாணன் என்பவனின் நல்ல நாட்டிற்கு அப்பாற்பட்ட, வழியில் செல்லும் புதியவர்களைக் கொன்ற ஆறலைகள்வர், தாங்கள் கொல்லுவதற்குப் பயன்படுத்திய படைக்கலத்தைக் கழுவிய சிவந்த அரித்து ஓடும் சிறு அளவு நீரையுடைய, மக்கள் இயங்குதல் இல்லாத துறையாகிய நுண்மணல் பொருந்திய கரையைத் தாண்டி, தொலைவில் உள்ளார் எனப் பலரும் கூறுவதால், துன்ப நோயுற்ற என் செயலற்ற நெஞ்சத்தின் வருத்தம் நீங்க, யாம் அழாது உறைவதற்கு உரியவள் ஆவேம்.
பருத்த அடியுடைய மரத்தின் அசையும் அழகிய கிளையில் உள்ள கூடு பொலிவில்லாது ஆகும்படி, அதை விட்டு நீங்கி வேறு ஒரு இடத்திற்குப் பறவை சென்றாற்போல், என் உடல் இங்குத் தனியாக இருக்க என் உயிர் பிரிந்து சென்று அவர் வினை செய்யும் இடத்திற்குச் செல்வதாக!
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என வரும் நூற்பாவின்கண் ‘ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும் வாயிலின் வரூஉம்’ என்பதனால் அமைத்துக் கொள்க. நெய்தலஞ்செறு (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஓர் ஊர், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஒரு நாடு. மெலியாப் பாடு இன் நோன் அடியன் (10) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – செருப்பணிந்து பரலில் நடத்தலின் ஓசை இனிய என்றார். பாணன் என்ற மன்னன் – அகநானூறு 113 – எழாஅப் பாணன், அகநானூறு 155 – பல் வயின் பய நிரை சேர்ந்த பாண் நாட்டு, அகநானூறு 226 – வலி மிகும் முன்பின் பாணனொடு, அகநானூறு 325 – நல் வேல் பாணன் நல் நாட்டு, அகநானூறு 386 – பாணன் மல்லடு மார்பின் வலியுற, பறையன்பட்டு கல்வெட்டில் பாணனின் நாடான பாணாடு குறிக்கப்பட்டுள்ளது – Early Tamil Epigraphy, page 629, Iravatham Mahadevan, Harvard University Press. வரலாறு – அஃதை, கோசர், பாணன், நெய்தலஞ்செறு. கோசர் பற்றின குறிப்புகள் – அகநானூறு 15, 90, 113, 193, 205, 216, 251, 262, குறுந்தொகை 15, 73, புறநானூறு 169, 283, 396, மதுரைக்காஞ்சி 509, 773.
சொற்பொருள்: நன்று அல் காலையும் நட்பின் கோடார் சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியில் – நன்மை இல்லாத காலத்திலும் நட்புத் தன்மையில் மாறுபடாமல் நண்பர்பால் அவருடைய வழியில் சென்று அவர்க்கு நன்மை செய்யும் பிறழாத கோட்பாடு உடைய (வழிப்படூஉம் – அளபெடை), புன்தலை மடப்பிடி அகவுநர் பெருமகன் – புல்லிய தலையையுடைய இளைய பிடியானைகளைப் பாணர்களுக்கு அளிக்கும் தலைவன், அமர் வீசு வண் மகிழ் அஃதைப் போற்றி – போர்க்களத்தில் அளிக்கும் தன் வள்ளன்மையால் இன்புறும் அஃதை என்பவனைப் பாதுகாத்து, காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர் – அவனைக் காவலுடைய இடத்தில் நிலைநிறுத்திய பல வேற்படையையுடைய கோசர், இளங்கள் கமழும் நெய்தலஞ்செறுவின் வளங்கெழு நன்னாடு அன்ன – புதிய கள் கமழும் நெய்தலஞ்செறு என்னும் வளம் பொருந்திய நல்ல நாட்டை ஒத்த, என் தோள் மணந்து அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற நல்காது துறந்த காதலர் – என் தோள்களைக் கூடி ஆராவாரத்தையுடைய பழைய ஊர் மக்கள் பழியை எங்கும் தூற்றும்படி அருளாது என்னைத் துறந்த காதலர், என்றும் கல் பொரூஉ மெலியாப் பாடு இன் நோன் அடியன் – என்றும் செருப்புகள் கற்களை இடிப்பதால் மெலியாத இனிய ஓசையை எழுப்பும் வலிய காலடியை உடையவன் (பொரூஉ – அளபெடை), அல்கு வன் சுரைப் பெய்த வல்சியன் – மிக்க வலிய மூங்கில் குழாயில் பெய்த உணவை உடையவன், இகந்தன ஆயினும் இடம் பார்த்துப் பகைவர் ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில் குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் – தன் நாட்டின் எல்லையைக் கடந்து தொலைவில் உள்ளவனாயினும் இடத்தைப் பார்த்து பகைவர் தங்கள் ஆக்களைப் பாதுகாக்கும் உணவு மிக்க அரணங்களுக்குச் சென்று திரண்ட இமிலையுடைய காளைகளுடன் உள்ள பகைப்புலத்து ஆக்களைக் கவர்ந்து செல்லும், கனை இருஞ்சுருணைக் கனி காழ் நெடுவேல் விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி – செறிந்த கரிய பூணையும் நெய் தடவிய தண்டையுடைய நீண்ட வேலினையும் விழாக் கொண்டாடினாற்போல் கொழுமையான பல உணவுகளையுமுடைய, எழாஅப் பாணன் நன்னாட்டு உம்பர் – பகைவர்களுக்குப் புறங்கொடாத பாணன் என்பவனின் நல்ல நாட்டிற்கு அப்பாற்பட்ட, நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர் – வழியில் செல்லும் புதியவர்களைக் கொன்ற ஆறலைகள்வர், எறி படை கழீஇய சேயரிச் சின்னீர் – தாங்கள் கொல்லுவதற்குப் பயன்படுத்திய படைக்கலத்தைக் கழுவிய சிவந்த அரித்து ஓடும் சிறு அளவு நீரையுடைய (கழீஇய – அளபெடை), அறு துறை அயிர் மணல் படு கரைப் போகி – மக்கள் இயங்குதல் இல்லாத துறையாகிய நுண்மணல் பொருந்திய கரையைத் தாண்டி, சேயர் என்றலின் – தொலைவில் உள்ளார் எனப் பலரும் கூறுவதால், சிறுமை உற்ற என் கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க – துன்ப நோயுற்ற என் செயலற்ற நெஞ்சத்தின் வருத்தம் நீங்க, அழாஅம் உறைதலும் உரியம் – யாம் அழாது உறைவதற்கு உரியவள் ஆவேம் (அழாஅம் – அளபெடை), பராரை அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப் புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு – பருத்த அடியுடைய மரத்தின் அசையும் அழகிய கிளையில் உள்ள கூடு பொலிவில்லாது ஆகும்படி அதை விட்டு நீங்கி வேறு ஒரு இடத்திற்குப் பறவை சென்றாற்போல் (பரு அரை பராரை எனப் புணர்ந்தது), மெய் இவண் ஒழியப் போகி அவர் செய் வினை மருங்கிற் செலீஇயர் என் உயிரே – என் உடல் இங்குத் தனியாக இருக்க என் உயிர் பிரிந்து சென்று அவர் வினை செய்யும் இடத்திற்குச் செல்வதாக (உயிரே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 114, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
கேளாய் எல்ல தோழி வேலன்
வெறி அயர் களத்துச் சிறு பல தாஅய
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்
உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு
அரவு நுங்கு மதியின் ஐயென மறையும் 5
சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என
நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க
நூல் அறி வலவ கடவுமதி உவக்காண்
நெடுங்கொடி நுடங்கும் வான்தோய் புரிசை
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் 10
வானக மீனின் விளங்கித் தோன்றும்
அருங்கடிக் காப்பின் அஞ்சுவரு மூதூர்த்
திரு நகர் அடங்கிய மாசு இல் கற்பின்
அரி மதர் மழைக் கண் அமை புரை பணைத்தோள்
அணங்கு சால் அரிவையைக் காண்குவம் 15
பொலம்படைக் கலி மாப் பூண்ட தேரே.
பாடல் பின்னணி: வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
பொருளுரை: நூல்கள் கற்ற தேரோட்டியே! பொன் சேணத்தினை அணிந்த செருக்கான குதிரைகள் பூண்ட தேரினை விரைந்து செலுத்துவாயாக ஆங்கு!
என்னுடைய காதலி தன் தோழியை நோக்கி இவ்வாறு கூறுவாள், “கேட்பாயாக, ஏடி தோழி! வேலன் வெறியாடும் களத்தில் பரப்பிய பல கலந்த மலர்களைப் போல், பூக்கள் உதிர்ந்த நறுமணமான முல்லை நிலத்தில், வலிய கதிர்களின் வெப்பம் தணிந்த மேற்கு மலையை அடைந்த கதிரவன் பாம்பு விழுங்கிய நிலவைப் போன்று மெல்ல மறைகின்ற சிறிய புல்லிய மாலைக் காலத்திலும் நம்மை அவர் நினைக்கவில்லை”.
என்னை வெறுத்து வாழும் அவளுடைய துன்பம் நீங்க, நெடிய கொடி வானைத் தோயும் மதிலில் இரவு நேரத்தில் காவல் புரிபவர்கள் ஏற்றிய விளக்குகளின் ஒளியுடைய சுடர்கள் வானின் விண்மீன்களைப் போல் ஒளியுடன் தோன்றும், அணுகுதற்கரிய, காவலுடன் பகைவர்க்கு அச்சம் தரும் அழகிய ஊரில் உள்ள, குற்றமற்ற கற்பினையுடைய, செவ்வரி படர்ந்த செருக்குடைய ஈரக் கண்களையும் மூங்கிலை ஒத்த பருத்த தோள்களையும் கொண்ட, துன்பத்தை உடைய அந்த இளம் பெண்ணை நாம் காணுவோம்.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்’ என வரும் விதி கொள்க. ஐயென (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மெல்லென, இனி கண்டோர் வியக்கும்படி எனினுமாம். உவக்காண் (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டுத் தலைவன் செல்லவேண்டிய வழியைச் சுட்டிக் காட்டியதாம். அரவு நுங்கு மதி – குறுந்தொகை 395 – அரவு நுங்கு மதியினுக்கு, அகநானூறு 114 – அரவு நுங்கு மதியின், அகநானூறு 313 – அரவு நுங்கு மதியின், நற்றிணை 377 – அரவுக் குறைபடுத்த பசுங்கதிர் மதியத்து, புறநானூறு 260 – பாம்பின் வை எயிற்று உய்ந்த மதியின், கலித்தொகை 15 – பாம்பு சேர் மதி போல, கலித்தொகை 104 – பால் மதி சேர்ந்த அரவினை, பரிபாடல் 10–76 – அரவு செறி உவவு மதியென, பரிபாடல் 11 – பாம்பு ஒல்லை மதியம் மறையவரு நாளில், சிறுபாணாற்றுப்படை 185 – மதி சேர் அரவின். பொலம் படை மா – அகநானூறு 114 – பொலம்படைக் கலி மா, அகநானூறு 124 – பொன் இயல் புனை படைக் கொய் சுவல் புரவி, நற்றிணை 78 – பொலம் படைக் கலி மா, நற்றிணை 361 – பொலம் படைக் கலி மா, புறநானூறு 116 – பொலம் படைக் கலி மா, புறநானூறு 135 – ஒளிறு படைப் புரவிய தேரும், புறநானூறு 359 – பொலம் படைய மா, மலைபடுகடாம் 574 – பொலம் படைப் பொலிந்த கொய் சுவற் புரவி. மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26). ஐ – ஐ வியப்பு ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 89). வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார்வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேல் என்றார். பொலம் – பொன் என் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடர் இயலான (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 61).
சொற்பொருள்: கேளாய் – கேட்பாயாக, எல்ல தோழி – ஏடி தோழி, வேலன் வெறி அயர் களத்துச் சிறு பல தாஅய விரவு வீ – வேலன் வெறியாடும் களத்தில் பரப்பிய பல கலந்த மலர்களைப் போல் (தாஅய – அளபெடை), உறைத்த ஈர் நறும் புறவின் – பூக்கள் உதிர்ந்த நறுமணமான முல்லை நிலத்தில், உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு – வலிய கதிர்களின் வெப்பம் தணிந்த மேற்கு மலையை அடைந்த கதிரவன், அரவு நுங்கு மதியின் – பாம்பு விழுங்கிய நிலவைப் போன்று (மதியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஐயென மறையும் – மெல்ல மறைகின்ற, சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என – சிறிய புல்லிய மாலைக் காலத்திலும் நம்மை அவர் நினைக்கவில்லை என்று, நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க – என்னை வெறுத்து வாழும் துன்பம் நீங்க (நம் – தன்மைப் பன்மை), நூல் அறி வலவ – நூல்கள் கற்ற தேரோட்டியே, கடவுமதி – விரைந்து செலுத்துவாயாக (மதி – முன்னிலையசை), அங்குக் காண் – ஆங்கு, நெடுங்கொடி நுடங்கும் வான்தோய் புரிசை – நெடிய கொடி வானைத் தோயும் மதில், யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் – இரவு நேரத்தில் காவல் புரிபவர்கள் ஏற்றிய விளக்குகளின் ஒளியுடைய சுடர்கள், வானக மீனின் விளங்கித் தோன்றும் – வானின் விண்மீன்களைப் போல் ஒளியுடன் தோன்றும் (மீனின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அருங்கடிக் காப்பின் – அணுகுதற்கரிய காவலுடன் (கடிக்காப்பு – ஒருபொருட் பன்மொழி), அஞ்சுவரு மூதூர்த் திரு நகர் அடங்கிய – பகைவர்க்கு அச்சம் தரும் அழகிய ஊரில் உள்ள, மாசு இல் கற்பின் – குற்றமற்ற கற்பினையுடைய, அரி மதர் மழைக் கண் – செவ்வரி படர்ந்த செருக்குடைய ஈரக் கண்கள், அமை புரை பணைத்தோள் – மூங்கிலை ஒத்த பருத்த தோள்கள், அணங்கு சால் அரிவையைக் காண்குவம் – துன்பத்தை உடைய இளம் பெண்ணை நாம் காணுவோம், கடவுள் தன்மையுடைய இளம் பெண்ணை நாம் காணுவோம், பொலம்படைக் கலி மாப் பூண்ட தேரே – பொன் சேணத்தினை அணிந்த செருக்கான குதிரைகள் பூண்ட தேர் (தேரே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 115, மாமூலனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்
பழி இலர் ஆயினும், பலர் புறங்கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகிய வெஞ்சொல்
சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக,
நுண் பூண் எருமை குட நாட்டன்ன என் 5
ஆய் நலம் தொலையினும் தொலைக, என்றும்
நோய் இலராக நம் காதலர், வாய்வாள்
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய
வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச் 10
சுடர்ப் பூங்கொன்றை ஊழுறு விளை நெற்று
அறை மிசைத் தாஅம் அத்த நீளிடைப்,
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை
சினம் மிகு முன்பின் வாமான் அஞ்சி,
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை 15
நன்னர் ஆய் கவின் தொலையச் சேய் நாட்டு
நம் நீத்து உறையும் பொருட்பிணிக்
கூடாமையின், நீடியோரே.
பாடல் பின்னணி: தலைவன் பொருள்வயின் பிரிந்தான். பிரிவாற்றாது வருந்திய தலைவியிடம் தோழி “நீ ஆற்றியிருக்க வேண்டும்” என்று கூறினாள். தன்னால் ஆற்றியிருக்க இயலாது எனத் தோழியிடம் தலைவி உரைத்தாள்.
பொருளுரை: என்றும் நீங்காத விழாக்களையுடைய, பகைவர்களுக்கு அச்சம் தரும் பண்டைய ஊரின்கண், பழி எதுவம் இல்லாதவர்கள் ஆனாலும், பலரிடமும் சென்று அவர்களைப் புறச்சொற்கள் கூறும் அம்பல் ஒழுக்கத்தையும் கொடிய சொற்களையுமுடை இத்தெருவில் உள்ள பெண்கள், நம்மை இகழ்ந்தாலும் இகழட்டும். நுண்ணிய வேலைப்பாடு உடைய அணிகலன்களை அணிந்த எருமை என்பவனின் குடநாட்டினை ஒத்த என் அழகிய நலம் தொலைந்தாலும் தொலையட்டும்.
குறி தப்பாத வாளினையுடைய எவ்வி என்பவன் வீழ்ந்த போர்க்களத்தில், மிகுந்த வருத்தத்தால் பாணர்கள், கையால் தொழும் மரபுடன் முன்பு வாழ்த்திய யாழின் வளமையான ஒலியையுடைய வளைந்த கோட்டை ஒடித்துப் போட்டதை ஒத்த, ஒளிரும் கொத்துக்களையுடைய சுடர் போல் மலர்களையுடை கொன்றை மரத்தின் முறையாக முற்றிய விளைந்த விதைக்கூடுகள் பாறை மீது பரவிக் கிடக்கும் சுரத்தின் நீண்ட வழியில் உள்ள, பிறை நிலவை ஒத்த வெள்ளை மருப்புகளையும் (தந்தங்களையும்) தலைமைத் தன்மையையுமுடைய யானைகளையும், சினம் மிக்க வலிமையையும், தாவும் தன்மையையுமுடைய குதிரைகளையுமுடைய அஞ்சி என்பவன் பகைவர்களின் ஆனிரைகளைக் கைப்பற்றி மறைத்திடும், அச்சம் தோன்றும் பிரிவுகளையுடைய வழியில், நல்ல நம் அழகு தொலைய நம்மைப் பிரிந்து நெடுந்தொலைவில் உள்ள நாட்டில் வாழ்வதற்குக் காரணமான பொருள் ஈட்டும் செயல் முற்றாமையால் காலம் தாழ்த்தியிருப்பவர் ஆகிய நம் தலைவர், என்றும் நோய் இல்லாதவராக இருப்பாராக.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனை, ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும் வாயிலின் வரூஉம்’ என்பதனால் அமைத்திடுக. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘மங்கல மொழியும் வைஇய மொழியும்’ (தொல்காப்பியம், பொருளியல் 50) என்னுஞ் சூத்திரத்து, ‘நோயிலராக நங்காதலர்’ எனக் கூறுவது, நம்மை அறனின்றித் துறத்தலின் தீங்கு வருமென்று அஞ்சி வாழ்த்தியது, நம்பொருட்டுத் தீங்கு வருமென நினைத்தாள் வழுவாய் அமைந்தது என்றனர், நச்சினார்க்கினியர். பலர் புறங்கூறும் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பலரிடமும் சென்று புறங்கூறித் திரியும், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பலரையும் புறஞ்சொல் கூறுதலாகிய. பாணர் கை தொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய வள் உயிர் வணர் மருப்பு (9–10) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பாணர் யாழிலிலே தெய்வம் உறைதல் பற்றியும், தமக்கு உணவளிக்கும் உதவியுடையமை பற்றியும் யாழினைத் தொழுது பரவுவார் எனவும், எவ்வி இறந்தபின் இனித்த தம் பாட்டினைக் கேட்டு பரிசில் அளிப்பார் இலரென்றும் வருத்த மிகுதியால் யாழினை முறித்துப் போகட்டார் எனவும் கொள்க. வரலாறு – எருமை, குடநாடு, எவ்வி, அஞ்சி. எவ்வி – மிழலை நாட்டின் மன்னன் – தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் கொல்லப்பட்டான் – புறநானூறு 24, எவ்வி இழந்த வறுமை யாழ்ப் பாணர் பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று இனைமதி வாழிய நெஞ்சே – குறுந்தொகை 19, இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் பூண் போர் அடு தானை எவ்வி – புறநானூறு 233. பழிச்சும் – பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 86).
சொற்பொருள்: அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்ப் பழி இலர் ஆயினும் பலர் புறங்கூறும் அம்பல் ஒழுக்கமும் ஆகிய வெஞ்சொல் சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக – என்றும் நீங்காத விழாக்களையுடைய பகைவர்களுக்கு அச்சம் தரும் பண்டைய ஊரின்கண் பழி எதுவம் இல்லாதவர்கள் ஆனாலும் பலரிடமும் சென்று அவர்களைப் புறச்சொற்கள் கூறும் அம்பல் ஒழுக்கத்தையும் கொடிய சொற்களையுமுடை இத்தெருவில் உள்ள பெண்கள் இகழ்ந்தாலும் இகழட்டும் (பலர் – பலரும், முற்றும்மை தொக்கது), நுண் பூண் எருமை குட நாட்டன்ன என் ஆய் நலம் தொலையினும் தொலைக – நுண்ணிய வேலைப்பாடு உடைய அணிகலன்களை அணிந்த எருமை என்பவனின் குடநாட்டினை ஒத்த என் அழகிய நலம் தொலைந்தாலும் தொலையட்டும், என்றும் நோய் இலராக நம் காதலர் – என்றும் நோய் இல்லாதவராக இருப்பாராக நம் தலைவர், வாய்வாள் எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் கைதொழு மரபின் – குறி தப்பாத வாளினையுடைய எவ்வி என்பவன் வீழ்ந்த போர்க்களத்தில் பாணர்கள் கையால் தொழும் மரபுடன், முன் – முன்பு, பரித்து இடூஉ – ஒடித்துப் போட்டது (இடூஉ– அளபெடை), பழிச்சிய – யாழினைப் பாராட்டிய, வாழ்த்திய, வள் உயிர் வணர் மருப்பு அன்ன – வளமையான ஒலியையுடைய வளைந்த கோட்டை ஒத்த, ஒள் இணர்ச் சுடர்ப் பூங்கொன்றை ஊழுறு விளை நெற்று அறை மிசைத் தாஅம் அத்த நீளிடை – ஒளிரும் கொத்துக்களையுடைய சுடர் போல் மலர்களையுடை கொன்றை மரத்தின் முறையாக முற்றிய விளைந்த விதைக்கூடுகள் பாறை மீது பரவிக் கிடக்கும் சுரத்தின் நீண்ட வழியில் உள்ள (தாஅம் – அளபெடை, கொன்றை மரம் – Laburnum, Golden Shower Tree, Cassia fistula), பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை சினம் மிகு முன்பின் வாமான் அஞ்சி இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை – பிறை நிலவை ஒத்த வெள்ளை மருப்புகளையும் (தந்தங்களையும்) தலைமைத் தன்மையையுமுடைய யானைகளையும் சினம் மிக்க வலிமையையும் தாவும் தன்மையையுமுடைய குதிரைகளையுமுடைய அஞ்சி என்பவன் பகைவர்களின் ஆனிரைகளைக் கைப்பற்றி மறைத்திடும் அச்சம் தோன்றும் பிரிவுகளையுடைய வழியில், நன்னர் ஆய் கவின் தொலையச் சேய் நாட்டு நம் நீத்து உறையும் பொருட்பிணிக் கூடாமையின் நீடியோரே – நல்ல நம் அழகு தொலைய நம்மைப் பிரிந்து நெடுந்தொலைவில் உள்ள நாட்டில் வாழ்வதற்குக் காரணமான பொருள் ஈட்டும் செயல் முற்றாமையால் காலம் தாழ்த்தியிருப்பவர் (நீடியோரே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 116, பரணர், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
எரி அகைந்தன்ன தாமரை இடை இடை
அரிந்து கால் குவித்த செந்நெல் வினைஞர்
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்,
ஆய் கரும்பு அடுக்கும் பாய் புனல் ஊர!
பெரிய நாண் இலை மன்ற, “பொரி எனப் 5
புன்கு அவிழ் அகன் துறைப் பொலிய, ஒண்ணுதல்
நறுமலர்க் காண்வரும் குறும்பல் கூந்தல்,
மாழை நோக்கின் காழ் இயன் வன முலை,
எஃகுடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநை
வைகு புனல் அயர்ந்தனை” என்ப, அதுவே, 10
பொய் புறம் பொதிந்து யாம் கரப்பவும் கை இகந்து
அலர் ஆகின்றால் தானே, மலர் தார்
மை அணி யானை மறப்போர்ச் செழியன்
பொய்யா விழவின் கூடல் பறந்தலை,
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர் 15
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி,
இரங்கு இசை முரசம் ஒழியப் பரந்து அவர்
ஓடு புறம் கண்ட ஞான்றை
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே.
பாடல் பின்னணி: தோழி தலைவனை வாயில் மறுத்தது. தலைவன் பரத்தை ஒருத்தியுடன் நீராடினான். பின் அவன் தன் மனைக்கு வந்தபோது அவனுடன் தலைவி ஊடினாள். ஊடலைத் தீர்த்துத் தலைவியைத் தன்னுடன் கூட்டும்படித் தோழியை வேண்டினான். அவன் வேண்டுகோளை மறுத்துத் தோழி சொன்னது.
பொருளுரை: நெருப்புக் கொழுந்துவிட்டாற் போல் தோன்றும் தாமரை மலர்களின் இடையிடையே விளைந்த செந்நெல்லை அரிந்து ஓரிடத்தில் குவித்த உழவர் கள்ளினைக் கொண்டுத் திரியும் வண்டி, சேற்றில் சிக்கினால் அழகிய கரும்புகளை அடுத்தடுத்து அடுக்கி வண்டியை நகரச் செய்யும், புனல் பாயும் ஊரனே! உறுதியாக நீ பெரிதும் நாணம் இல்லாதவன்!
பொரி போல் புன்க மரத்தின் பூ மலரும் அகன்ற நீர்த்துறை பொலிய, ஒளியுடைய நெற்றியையும் நறுமண மலர்கள் அணிந்த காண்பவர்க்கு விருப்பம் தரும் குறிய அடர்ந்த கூந்தலையும் மாவடு போன்ற கண்களையும் முத்து வடம் அசையும் அழகிய முலையினையும் நுண்ணிய அழகையுமுடைய ஒரு பரத்தையொடு, இடைவிடாது ஓடும் நீரில் நேற்று விளையாடினாய் என அதை அறிந்தவர்கள் கூறுகின்றனர். அது பொய் என்று யாம் மறைத்தபொழுதும், அதை எம்மையும் கடந்து, மலர் மாலையையும் தலையில் மை அணிந்த யானைகளையுமுடைய மறம் பொருந்திய போரில் வல்ல பாண்டியனின் திருவிழாக்கள் நீங்காத கூடல் போர்க்களத்தில், ஒன்று சேர்ந்து போரிட எழுந்து வந்த சோழ சேர வேந்தர்களின் கடல் போன்ற பெரிய படை கலங்கும்படித் தாக்கி, முழங்கும் ஒலியுடைய முரசுகளைக் கைவிட்டுப் பரவி அவர்கள் புறமுதுகிட்டு ஓடுவதைக் கண்ட நாளில், வெற்றி அடைந்த பெரிய போர்க்களத்தின் ஆரவாரத்தை விடவும் பெரிது, அலர் ஆகிவிட்டது.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘கிழவோன் விளையாட்டாங்கு மற்றே ‘ (தொல்காப்பியம், கற்பியல் 23) என்னுஞ் சூத்திரத்து, ‘எஃகுடை எழில் நலத்து ஒருத்தியொடு ………. அலர் ஆகின்றால் தானே’ என்பது, தலைவி பிறர் அலர் கூறியவழி காமஞ் சிறந்து புலந்தவாறு என்றும், ‘வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல்’ (தொல்காப்பியம், பொருளியல் 47) என்னுஞ் சூத்திரத்து, ‘எரி அகைந்தன்ன தாமரை இடை இடை ……….. ஆர்ப்பினும் பெரிதே’ என்பதனுள், ‘நாணிலை மன்ற’ எனத் தோழி கூறி அலராகின்றால் என வெளிப்படக் கிளத்தலின் வழுவாய் அமைந்தது என்றும் கூறினர், நச்சினார்க்கினியர். நெற்பொரியைப் போல் புன்கு – அகநானூறு 116 – பொரி எனப் புன்கு அவிழ் அகன் துறை, பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி, நற்றிணை 9 – பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி, குறுந்தொகை 53 – நனை முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறி அயர் களந்தொறும் செந்நெல் வான் பொரி சிதறியன்ன, குறுந்தொகை 341 – பொரிப் பூம் புன்கொடு, ஐங்குறுநூறு 347 – பொரிப்பூம் புன்கின், ஐங்குறுநூறு 368 – எரிப்பூ இலவத்து ஊழ் கழி பன் மலர் பொரிப்பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும். எஃகுடை (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கூர்மையாகிய, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நுண்ணிய. மாழை நோக்கின் (8) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மாவடுப் போன்ற கண்ணினையும், மாழை – இளமை என்றும் அழகு என்றுமாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மடப்பத்தையுடைய நோக்கத்தினையும், மாழை = பேதைமை, ஈண்டு மடம் என்க. எழில் நலத்து (9) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அழகின் நலத்தினையுடைய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – எழுச்சியாகிய இளமை அழகினை, எழில் – எழுச்சி, இதனை நச்சினார்க்கினியர் ‘வளர்ந்தமைந்த பருவத்தும் இது வளர்ந்து மாறியதன்றி இன்னும் வளரும் என்பது போன்று காட்டுதல்’ என்பர். வரலாறு – செழியன், கூடல் பறந்தலை, இரு பெரு வேந்தர். மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).
சொற்பொருள்: எரி அகைந்தன்ன தாமரை இடை இடை அரிந்து கால் குவித்த செந்நெல் வினைஞர் கள் கொண்டு மறுகும் சாகாடு – நெருப்புக் கொழுந்துவிட்டாற் போல் தோன்றும் தாமரை மலர்களின் இடையிடையே விளைந்த செந்நெல்லை அரிந்து ஓரிடத்தில் குவித்த உழவர் கள்ளினைக் கொண்டுத் திரியும் வண்டி, அளற்று உறின் ஆய் கரும்பு அடுக்கும் பாய் புனல் ஊர – சேற்றில் சிக்கினால் அழகிய கரும்புகளை அடுக்கி வண்டியை நகரச் செய்யும் புனல் பாயும் ஊரனே (ஊர – அண்மை விளி), பெரிய நாண் இலை மன்ற – உறுதியாக நீ பெரிதும் நாணம் இல்லாதவன் (இலை – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம், மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல்), பொரி எனப் புன்கு அவிழ் அகன் துறைப் பொலிய – பொரி போல் புன்க மரத்தின் பூ மலரும் அகன்ற நீர்த்துறை பொலிய (புன்க மரம் – Pongamia Glabra or Pongamia Pinnata, Indian Beech tree), ஒண்ணுதல் நறுமலர்க் காண்வரும் குறும்பல் கூந்தல் மாழை நோக்கின் காழ் இயன் வன முலை எஃகுடை எழில் நலத்து ஒருத்தியொடு – ஒளியுடைய நெற்றியையும் நறுமண மலர்கள் அணிந்த காண்பவர்க்கு விருப்பம் தரும் குறிய அடர்ந்த கூந்தலையும் மாவடு போன்ற கண்களையும் முத்து வடம் அசையும் அழகிய முலையினையும் நுண்ணிய அழகையுமுடைய ஒரு பரத்தையொடு, நெருநை வைகு புனல் அயர்ந்தனை என்ப – நேற்று இடைவிடாது ஓடும் நீரில் விளையாடினாய் எனக் கூறுகின்றனர், அதுவே பொய் புறம் பொதிந்து யாம் கரப்பவும் கை இகந்து அலர் ஆகின்றால் – அது பொய் என்று யாம் மறைக்கவும் எம்மையும் கடந்து அலர் ஆகிவிட்டது (ஆகின்றால் – ஆகின்று + ஆல், ஆல் அசைநிலை), தானே – தான், ஏ அசைநிலைகள், மலர் தார் மை அணி யானை மறப்போர்ச் செழியன் பொய்யா விழவின் கூடல் பறந்தலை – மலர் மாலையையும் தலையில் மை அணிந்த யானைகளையுமுடைய மறம் பொருந்திய போரில் வல்ல பாண்டியனின் திருவிழாக்கள் நீங்காத கூடல் போர்க்களத்தில், உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர் கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி – ஒன்று சேர்ந்து வந்த சோழ சேர வேந்தர்களின் கடல் போன்ற பெரிய படை கலங்கும்படித் தாக்கி (மருள் – உவம உருபு), இரங்கு இசை முரசம் ஒழியப் பரந்து அவர் ஓடு புறம் கண்ட ஞான்றை – முழங்கும் ஒலியுடைய முரசுகளைக் கைவிட்டுப் பரவி அவர்கள் புறமுதுகிட்டு ஓடுவதைக் கண்ட நாளில், ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே – வெற்றி அடைந்த பெரிய போர்க்களத்தின் ஆரவாரத்தை விடவும் பெரிது (பெரிதே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 117, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும்,
அவ்வரி அல்குல் ஆயமும் உள்ளாள்,
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை
வளங்கெழு திருநகர் புலம்பப் போகி
வெருவரு கவலை ஆங்கண், அருள்வரக், 5
கருங்கால் ஓமை ஏறி, வெண்தலைப்
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்,
பொலந்தொடி தெளிர்ப்ப வீசிச் சேவடிச்
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே,
சாந்து உளர் வணர் குரல் வாரி வகை வகுத்து 10
யான் போது துணைப்பத் தகரம் மண்ணாள்,
தன் ஓரன்ன தகை வெங்காதலன்
வெறி கமழ் பன்மலர் புனையப் பின்னு விடச்,
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன கொல்,
நெடுங்கால் மாஅத்து ஊழுறு வெண்பழம் 15
கொடுந்தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர்,
வாணன் சிறுகுடி வடாஅது
தீம் நீர்க் கான் யாற்று அவிர் அறல் போன்றே?
பாடல் பின்னணி: தலைவி உடன்போக்கில் தலைவனுடன் சென்றதால், வருந்திய செவிலித்தாய் சொன்னது.
பொருளுரை: எங்கள் மனையில் உள்ள முல்லை மலர்களுடன் பூத்த (கரிய) பெரிய கொத்தினையுடைய நொச்சி மரத்தின் மலர்களையும், அழகிய வரிகள் பொருந்திய அல்குலையுடைய தன் தோழியரையும் நினையாள் ஆகி, பிறன் ஒருவனின் பொய்ச் சொற்களை நம்பி, அழகிய வேலைப்பாடு வாய்ந்த வளம் பொருந்திய செல்வ மனை தனிமையுறும்படிச் சென்று, அச்சம் தரும் பிரிவுகளையுடைய வழியுடைய அவ்விடத்தில், இரக்கம் உண்டாக கரிய அடியையுடைய ஓமை மரத்தின் மீது ஏறி வெள்ளை தலையையுடைய பருந்து தன் பெடையை அழைக்கும் பாழ்பட்ட நாட்டிடத்தில், பொன் வளையல்கள் ஒலிக்கக் கைகளை வீசியும் சிவந்த அடிகளில் சிலம்பு விளங்கவும் நடந்துச் சென்ற என் மகளுக்கு, சாந்தை விரல்களால் தோய்த்துக் கோதப்பட்ட சுருண்ட அடர்ந்த கூந்தலை வாரிவிட்டு அதில் யான் மலர்களைச் சேர்த்து மயிர்ச் சாந்தினை பூசிக்கொள்ள வேண்டுவதை மறுக்கின்றவள், தன்னை ஒத்த தலைமையுடைய தன் மேல் விருப்பத்தையுடைய காதலன், நறுமணம் கமழும் பல மலர்களைப் புனைந்துத் தன் கூந்தலைப் பின்னலாகப் பின்னிவிட, பிடரி மறையும்படி நெறிந்து அப்பின்னல்கள் தொங்குகின்றனவோ, நெடிய அடியையுடைய மாமரத்தின் முதிர்ந்த வெள்ளை பழத்தை வளைந்த கால்களையுடைய ஆமை தன் குட்டியுடன் கவர்ந்து உண்ணும், பொய்கைகள் சூழ்ந்த வளமை குன்றாத, வாணன் என்பவனின் சிறுகுடி என்னும் ஊரின் வடக்கில் உள்ள இனிய காட்டாற்றின் ஒளிரும் கருமணல் போன்று?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க. சிறுகுடி – சிறுகுடி என்னும் ஊர் தலைவர்களின் பெயர்களுடன் குறிக்கப்பட்டுள்ளன இப்பாடல்களில் – அகநானூறு 54 (பண்ணன்), அகநானூறு 117 (வாணன்), அகநானூறு 204 (வாணன்), அகநானூறு 269 (வாணன்), நற்றிணை 340 (வாணன்), நற்றிணை 367 (அருமன்). புறநானூறு 70 – கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடி, புறநானூறு 388 – சிறுகுடி கிழான் பண்ணன். பிற இடங்களில், இச் சொல் சிற்றூரைக் குறிக்கின்றது. மனையில் நொச்சி மரம் – அகநானூறு 21 – மனை இள நொச்சி மௌவல் வால் முகை, அகநானூறு 23 – மனைய தாழ்வின் நொச்சி, அகநானூறு 203 – நுனை குழைத்து அலமரும் நொச்சி மனை, அகநானூறு 367 – மனை வளர் நொச்சி, நற்றிணை 115 – மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி மனை நடு மௌவலொடு, நற்றிணை 246 – மனை மா நொச்சி, பொருநராற்றுப்படை 185 – மனை நொச்சி. வரலாறு – வாணன், சிறுகுடி. யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83). புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35). செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34).
சொற்பொருள்: மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும் அவ்வரி அல்குல் ஆயமும் உள்ளாள் – முல்லை மலர்களுடன் பூத்த (கரிய) பெரிய கொத்தினையுடைய நொச்சி மரத்தின் மலர்களையும் அழகிய வரிகள் பொருந்திய அல்குலையுடைய தன் தோழியரையும் நினையாள் (நொச்சி மரம் – Vitex leucoxylon, Chaste tree, Water peacock’s foot tree, அல்குல் – இடை, இடைக்குக்கீழ் உள்ள பகுதி) ஏதிலன் பொய்ம்மொழி நம்பி – பிறன் ஒருவனின் பொய்ச் சொற்களை நம்பி, ஏர் வினை வளங்கெழு திருநகர் புலம்பப் போகி – அழகிய வேலைப்பாடு வாய்ந்த வளம் பொருந்திய செல்வ மனை தனிமையுறும்படிச் சென்று, வெருவரு கவலை ஆங்கண் – அச்சம் தரும் பிரிவுகளையுடைய வழியுடைய அவ்விடத்தில், அருள்வரக் கருங்கால் ஓமை ஏறி வெண்தலைப் பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண் – இரக்கம் உண்டாக கரிய அடியையுடைய ஓமை மரத்தின் மீது ஏறி வெள்ளை தலையையுடைய பருந்து தன் பெடையை அழைக்கும் பாழ்பட்ட நாட்டிடத்தில், பொலந்தொடி தெளிர்ப்ப வீசிச் சேவடிச் சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே – பொன் வளையல்கள் ஒலிக்கக் கைகளை வீசியும் சிவந்த அடிகளில் சிலம்பு விளங்கவும் நடந்துச் சென்ற என் மகளுக்கு (மகட்கே – ஏகாரம் அசைநிலை), சாந்து உளர் வணர் குரல் வாரி வகை வகுத்து யான் போது துணைப்பத் தகரம் மண்ணாள் – சாந்தை விரல்களால் தோய்த்துக் கோதப்பட்ட சுருண்ட அடர்ந்த கூந்தலை வாரிவிட்டு அதில் யான் மலர்களைச் சேர்த்து மயிர்ச் சாந்தினை பூசிக்கொள்ள வேண்டுவதை மறுக்கின்றவள், தன் ஓரன்ன தகை வெங்காதலன் – தன்னை ஒத்த தலைமையுடைய விருப்பத்தையுடைய காதலன், வெறி கமழ் பன்மலர் புனையப் பின்னு விடச் சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன கொல் – நறுமணம் கமழும் பல மலர்களைப் புனைந்துத் தன் கூந்தலைப் பின்னலாகப் பின்னிவிட பிடரி மறையும்படி நெறிந்து அப்பின்னல்கள் தொங்குகின்றனவோ (கொல் – கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்), நெடுங்கால் மாஅத்து ஊழுறு வெண்பழம் கொடுந்தாள் யாமை பார்ப்பொடு கவரும் – நெடிய அடியையுடைய மாமரத்தின் முதிர்ந்த வெள்ளை பழத்தை வளைந்த கால்களையுடைய ஆமை தன் குட்டியுடன் கவர்ந்து உண்ணும் (மாஅத்து – அத்துச் சாரியை, அளபெடை), பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர் – பொய்கைகள் சூழ்ந்த வளமை குன்றாத, வாணன் சிறுகுடி வடாஅது தீம் நீர்க் கான் யாற்று அவிர் அறல் போன்றே – வாணன் என்பவனின் சிறுகுடி என்னும் ஊரின் வடக்கில் உள்ள இனிய காட்டாற்றின் ஒளிரும் கருமணல் போன்று (வடாஅது – அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது, போன்றே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 118, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன்,
தேம் கமழ் இணர வேங்கை சூடித்,
தொண்டகப் பறைச் சீர்ப் பெண்டிரொடு விரைஇ,
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து,
இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட 5
பகல் வரின் கவ்வை அஞ்சுதும், இகல் கொள,
இரும் பிடி கன்றொடு விரைஇய கயவாய்ப்
பெருங்கை யானைக் கோள் பிழைத்து இரீஇய
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள்
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும், 10
என் ஆகுவள் கொல் தானே? பல் நாள்
புணர் குறி செய்த புலர் குரல் ஏனல்
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்,
அளியள் தான் நின் அளி அலது இலளே.
பாடல் பின்னணி: வரையாது களவிலேயே வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி பகற்குறியையும் இரவுக்குறியையும் மறுத்து, வரைவு கடாயது.
பொருளுரை: தலைவா! ஆரவாரமுடைய வெள்ளை அருவியையுடைய ஒளியுடைய மலைச் சரிவில், தேன் மணம் கமழும் பூங்கொத்தாக மலர்ந்த வேங்கை மரத்தின் மலர்களைச் சூடி, தொண்டகப் பறையின் தாளத்திற்கு ஆண்கள் மகளிருடன் சேர்ந்துத் தெருவில் குரவைக் கூத்து ஆடுகின்ற எங்கள் சிறுகுடியின்கண், முருகனை ஒத்த அழகுடையாய், வலிய வேட்டை நாய்களுடன் நீ பகலில் வந்தால் அலர் ஏற்படும் என நாங்கள் அஞ்சுகின்றோம்.
பகைமை கொள்வதற்கு அஞ்சி, கரிய பெண் யானையோடும் கன்றினோடும் கூடிய பெரிய வாயையும் பெரிய தும்பிக்கையையுமுடைய களிற்று யானை, கொல்லப்படுவதிலிருந்து தப்பித்து விலகிய, கொல்லும் புலிகள் திரியும் வழியில், நிறைந்த இருளில் நீ நடு இரவில் தனியாக வருதலை, அதனைக் காட்டிலும் அஞ்சுகின்றோம்.
தினை முதிர்ந்து கதிரும் கொய்யப்பட்டன. பல நாட்கள் நீ அவளைக் கூடுவதற்குக் குறியிடமாக எம்மால் காட்டப்பட்ட தினைப் புனத்திற்கு வந்து பாடி கிளியை விரட்ட முடியாதவாறு அவள் இற்செறிக்கப்பட்டாள். அவளுடைய நிலைமை என்னாகுமோ? இரங்கத்தக்கவள் அவள். உன்னுடைய அருள் இல்லாமல் வேறு துணை அவளுக்கு இல்லை.
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘களனும் பொழுதும் வரை நிலை விலக்கி காதல் மிகுதி உளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘பொழுது மாறும்’ (தொல்காப்பியம், பொருளியல் 16) என்ற சூத்திரத்து, ‘பகல் வாரல்’ என்பதற்கு ‘பகல்வரிற் கவ்வை யஞ்சுதும்’ என்பதனை எடுத்துக்காட்டினர் நச்சினார்க்கினியர். ஒப்புமை – அகநானூறு 118 – குரல் ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள், அகநானூறு 194 – கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும், குறுந்தொகை 142 – புனக் கிளி கடியும் பூங்கண் பேதை, குறுந்தொகை 198 – படுகிளி கடிகம் சேறும், குறுந்தொகை 217 – தினை கிளி கடிக எனின், குறுந்தொகை 291 – ஏனல் படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே இசையின் இசையா இன்பாணித்தே, குறுந்தொகை 360 – ஏனல் உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே, பதிற்றுப்பத்து 78 – மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலிக் கிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல. பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ முருகனைப் போலவே அழகுடையை; கானவர் குரவைக் கூத்தாடும்பொழுது வருவதனால் நின்னை எம்மவர் முருகன் நமக்கிரங்கி எழுந்தருளுகின்றான் என்று எண்ணி மகிழ்வாரல்லர். ஏற்றாலெனின் உனக்கு அறுமுகமில்லை, அணிமயிலில்லை, நின்னை வயநாய்கள் மட்டுமே தொடர்கின்றன. ஆதலால் காண் என்றவாறு. எனவே உன்னை இக்குறிஞ்சித் தலைவன் என்றுக் கொண்டு இவ்வூர் பெண்டிர் பழிதூற்றுவர். யாம் அதற்கு அஞ்சுகின்றோம். ஆதலின் நீ இவ்வாறு பகலில் வாராதே கொள். கய – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).
சொற்பொருள்: கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன் – ஆரவாரமுடைய வெள்ளை அருவியையுடைய ஒளியுடைய மலைச் சரிவில் (கவாஅன் – அளபெடை), தேம் கமழ் இணர வேங்கை சூடி – தேன் மணம் கமழும் பூங்கொத்தாக மலர்ந்த வேங்கை மரத்தின் மலர்களைச் சூடி (தேம் – தேன் என்றதன் திரிபு, வேங்கை மரம் – kino tree, Pterocarpus marsupium), தொண்டகப் பறைச் சீர் – தொண்டகப் பறையின் தாளம், பெண்டிரொடு விரைஇ – ஆண்கள் மகளிருடன் கலந்து (விரைஇ – அளபெடை), மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து – தெருவில் குரவைக் கூத்து ஆடுகின்ற சிறுகுடியில், இயல் முருகு ஒப்பினை – முருகனை ஒத்த அழகுடையாய், வய நாய் பிற்பட பகல் வரின் கவ்வை அஞ்சுதும் – வலிய வேட்டை நாய்களுடன் நீ பகலில் வந்தால் அலர் ஏற்படும் என நாங்கள் அஞ்சுகின்றோம், இகல் கொள – பகைமை கொள்வதற்கு அஞ்சி, இரும் பிடி கன்றொடு விரைஇய கயவாய்ப் பெருங்கை யானை – கரிய பெண் யானையோடும் கன்றினோடும் கூடிய பெரிய வாயையும் பெரிய தும்பிக்கையையுமுடைய களிற்று யானை (விரைஇய – அளபெடை), கோள் பிழைத்து இரீஇய – கொல்லப்படுவதிலிருந்து தப்பித்து விலகிய (இரீஇய – அளபெடை), அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள் தனியை வருதல் – கொல்லும் புலி திரியும் வழியில் நிறைந்த இருளில் நீ நடு இரவில் தனியாக வருதல், அதனினும் அஞ்சுதும் – அதனைக் காட்டிலும் அஞ்சுகின்றோம், என் ஆகுவள் கொல் தானே – அவளுடைய நிலைமை என்னாகுமோ (கொல் –அசைநிலை, தானே – தான், ஏ அசைநிலைகள்), பல் நாள் புணர் குறி செய்த புலர் குரல் ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள் – பல நாட்கள் நீ அவளைக் கூடுவதற்குக் குறியிடமாக எம்மால் காட்டப்பட்ட தினைப் புனத்திற்கு வந்து பாடி கிளியை விரட்ட முடியாதவாறு இற்செறிக்கப்பட்டாள் (ஏனல் ஆகுபெயர் தினைப்புனத்திற்கு), அளியள் தான் – இரங்கத்தக்கவள் அவள், நின் அளி அலது இலளே – உன்னுடைய அருள் இல்லாமல் வேறு துணை அவளுக்கு இல்லை (இலளே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 119, குடவாயில் கீரத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது, தோழி தலைவியிடம் சொன்னது
‘நுதலும், தோளும், திதலை அல்குலும்,
வண்ணமும், வனப்பும், வரியும் வாட,
வருந்துவள் இவள்’ எனத் திருந்துபு நோக்கி
வரைவு நன்று என்னாது அகலினும், அவர் வறிது
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை, 5
ஏறு பெறு பாம்பின் பைந்துணி கடுப்ப,
நெறியயல் திரங்கும் அத்தம், வெறிகொள
உமண் சாத்து இறந்த ஒழிகல் அடுப்பில்,
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்
சுரன் வழக்கு அற்றது என்னாது உரஞ்சிறந்து 10
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலைத்
தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை,
மடை அமை திண்சுரை மாக்காழ் வேலொடு
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்பத்,
துணிகுவர் கொல்லோ தாமே, துணிகொள 15
மறப்புலி உழந்த வசிபடு சென்னி
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டிப்,
படி முழம் ஊன்றிய நெடுநல் யானை
கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ்சுனை
மை தோய் சிமைய மலைமுதல் ஆறே? 20
பாடல் பின்னணி: வேந்தன் பணிக்குத் தலைவன் பிரிவதை அறிந்த தோழி தலைவியிடம் கூறியது. தலைவனின் எண்ணத்தை அறிந்த தலைவி தோழிக்குக் கூறியதுமாம். பொ. வே. சோமசுந்தரனார் உரை – இது தலைவி கூற்றாயின் ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்’ (தொல்காப்பியம், களவியல் 21) என வரும் விதி கொள்க. இது தோழி கூற்றாயின் ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் வகையும் என்பதனால் அமைக்க.
பொருளுரை: நம் தலைவர், ‘நெற்றியும் தோள்களும் தேமலையுடைய அல்குலும் நிறமும் அழகும் வரியும் வாட வருந்துவாள் இவள்’ எனத் திருத்தமாக ஆராய்ந்து உணர்ந்து, ‘இவளைத் திருமணம் செய்து கொள்வது நல்லது’ எனக் கருதாது அகன்றாலும்,
மறத்தையுடைய புலியுடன் போரிட்டுத் துண்டாகப் பிளந்த தலையில் உண்டான நோயான துன்பத்துடன் நீர் உண்ணுவதற்கு மண்டியிட்டு முழங்காலை நிலத்தில் ஊன்றிய நெடிய நல்ல யானை, தும்பிக்கையால் தோய்த்தும் நீர் இல்லாததால் பெருமூச்சு விடும், வறண்ட சுனையினையுடைய, முகில்கள் படியும் உச்சிகளையுடைய மலையிடத்தில்,
வழியில் செல்லும் மக்கள் அறுத்துப் போட்ட பிரண்டைத் தண்டின் கொடி, இடியால் தாக்குற்ற பாம்பின் பசிய துண்டுகள் போல் வழியின் பக்கத்தில் வீணாக உலர்ந்துக் கிடக்கும் இடத்தில், உப்பு வணிகர்கள் அங்கிருந்து நீங்கும்பொழுது விட்டுச் சென்ற கல் அடுப்பில், வலிய வில்லையுடைய மறவர்கள் மணக்கும்படி ஊனைப் புழுக்கி உண்ணும் இடமான பாலை நில வழிகள் மக்கள் இயங்குதல் இல்லாதவை எனக் கருதாது, தம் வலிமையினால் சிறப்புற்று, நெய்தல் மலர் வடிவினையுடைய அழகாக விளங்கும் அகன்ற இலையினையும் தொடுத்தல் அமைந்த மயில் தோகையால் பொலிந்த காம்பினையும் மூட்டுவாய் அமைந்த திண்ணிய சுரையினையும் கரிய தண்டினையுமுடைய வேலுடன், பகைமையைத் தணிவிக்கச் செல்லும் போர்க்களத்திற்கு நாமும் தன்னுடைய துணையாகச் செல்ல துணிவாரோ?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்’ (தொல்காப்பியம், களவியல் 21) என வரும் நூற்பாவின் விதி கொள்க. ஏறு (6) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இடி ஏறு எனவும் எறிதல் எனவும் இரட்டுற மொழிதலாகக் கொள்க. உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புலியால் தாக்குண்டு சென்னி பிளவுபட்டு வருந்தும் வருத்தத்தோடு நீர் வேட்கை கொண்டு அது தணிதற்கு வறிய சுனையில் கைவிட்டுத் துழாவிப் பார்த்தும் நீர் கொள்ளாமல் நெட்டுயிர்ப்புக்கொள்ளும் யானை போன்று, யானும் அம்பற் பெண்டிரால் அலர் தூற்றப்பெற்ற வருத்தத்தோடு, நம் பெருமான்பால் காதல் வேட்கையும் உயையேமாய் நமது அறிவாலாந்துணையும் அவர்பால் வரைவு கடாவிப் பார்த்தும், அவர்பால் அருள் காணப்படாமையின் இனி நாம் ஈண்டு தனியே வருந்தி, உயிர்த்துக் கிடப்போம். இதையும் அவர்பால் கூறுதி என இதன்கண்ணும் நுண்ணிதின் உள்ளுறை கண்டு மகிழ்க. இடி பாம்பைத் தாக்குதல் கொல்லுதல் – அகநானூறு 68, 92, 119, 182, 202, 274, 323, 328, கலித்தொகை 45, 113, குறுந்தொகை 158, 190, 268, 391, நற்றிணை 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, புறநானூறு 17, 58, 126, 211, 366, 369. வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40).
சொற்பொருள்: நுதலும் தோளும் திதலை அல்குலும் வண்ணமும் வனப்பும் வரியும் வாட வருந்துவள் இவள் எனத் திருந்துபு நோக்கி – நெற்றியும் தோள்களும் தேமலையுடைய அல்குலும் நிறமும் அழகும் வரியும் வாட வருந்துவாள் இவள் எனத் திருத்தமாக ஆராய்ந்து உணர்ந்து, வரைவு நன்று என்னாது அகலினும் – இவளைத் திருமணம் செய்து கொள்வது நல்லது எனக் கருதாது அகன்றாலும், அவர் – நம் தலைவர், வறிது – வீணாக, ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை ஏறு பெறு பாம்பின் பைந்துணி கடுப்ப நெறி அயல் திரங்கும் அத்தம் – வழியில் செல்லும் மக்கள் அறுத்துப் போட்ட பிரண்டைத் தண்டின் கொடி இடியால் தாக்குற்ற பாம்பின் பசிய துண்டுகள் போல் வழியின் பக்கத்தில் உலர்ந்துக் கிடக்கும் (கடுப்ப – உவம உருபு), வெறிகொள – மணக்கும்படி, உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில் நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் சுரன் வழக்கு அற்றது என்னாது – உப்பு வணிகர்கள் நீங்கும்பொழுது விட்டுச் சென்ற கல் அடுப்பில் வலிய வில்லையுடைய மறவர்கள் ஊனைப் புழுக்கி உண்ணும் இடமான பாலை நில வழிகள் மக்கள் இயங்குதல் இல்லாதவை எனக் கருதாது (சுரன் – சுரம் என்பதன் போலி), உரம் சிறந்து – வலிமையினால் சிறப்புற்று, நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலைத் தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை மடை அமை திண்சுரை மாக்காழ் வேலொடு – நெய்தல் மலர் வடிவினையுடைய அழகாக விளங்கும் அகன்ற இலையினையும் தொடுத்தல் அமைந்த மயில் தோகையால் பொலிந்த காம்பினையும் மூட்டுவாய் அமைந்த திண்ணிய சுரையினையும் கரிய தண்டினையுமுடைய வேலுடன் (உருவின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்பத் துணிகுவர் கொல்லோ – பகைமையைத் தணிவிக்கச் செல்லும் போர்க்களத்திற்கு நாமும் தன்னுடைய துணையாகச் செல்ல துணிவாரோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசைநிலை), தாமே – தாம் ஏ அசைநிலைகள், துணிகொள – துண்டாகப் பிளவுபட்ட, மறப்புலி உழந்த வசிபடு சென்னி உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டிப் படி முழம் ஊன்றிய நெடுநல் யானை கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ்சுனை – மறத்தையுடைய புலியுடன் போரிட்டுத் துண்டாகப் பிளந்த தலையில் உண்டான நோயான துன்பத்துடன் நீர் உண்ணுவதற்கு மண்டியிட்டு முழங்காலை நிலத்தில் ஊன்றிய நெடிய நல்ல யானை தும்பிக்கையால் தோய்த்தும் நீர் இல்லாததால் பெருமூச்சு விடும் வறண்ட சுனை (உணீஇய – அளபெடை), மை தோய் சிமைய மலைமுதல் ஆறே – முகில்கள் படியும் உச்சிகளையுடைய மலையிடத்தில் உள்ள வழி (ஆறே – ஏகாரம் அசைநிலை)
அகநானூறு 120, நக்கீரனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நெடுவேள் மார்பின் ஆரம் போலச்
செவ்வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும்
பைங்கால் கொக்கு இனம் நிரை பறை உகப்ப,
எல்லை பைப்பய கழிப்பிக் குடவயின்
கல் சேர்ந்தன்றே பல் கதிர் ஞாயிறு, 5
மதர் எழில் மழைக் கண் கலுழ, இவளே,
பெரு நாண் அணிந்த நறுமென் சாயல்
மாண் நலம் சிதைய ஏங்கி, ஆனாது
அழல் தொடங்கினளே பெரும, அதனால்
கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி 10
நெடுநீர் இருங்கழி பரி மெலிந்து அசைஇ,
வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ,
பெண்ணை ஓங்கிய வெண்மணல் படப்பை
அன்றில் அகவும் ஆங்கண், 15
சிறு குரல் நெய்தல் எம் பெருங்கழி நாட்டே?
பாடல் பின்னணி: மாலை நேரத்தில் தலைவியைக் களவுக்குக் குறித்த இடத்தில் சேர்த்துவிட்டு வரும் தோழி, எதிரே வரும் தலைவனிடம் கூறுகின்றாள்.
பொருளுரை: பெருமானே! நெடிய புகழுடைய முருகவேளின் மார்பில் உள்ள முத்து ஆரம் போல் சிவந்த நிற வானைத் தொட்டு, மீன் உண்ணும் பசிய கால்களையுடைய வெண்ணிறக் கொக்கின் இனம் வரிசையாக பறந்திட, பகல் பொழுதை மெல்ல மெல்ல நீக்கி மேற்கு திசையில் மறையும் மலையை அடைந்தது பல கதிர்களையுடைய ஞாயிறு.
செழிப்பான (பெரிய) அழகிய கண்கள் கலங்கிட, இவளே விடாது அழுவதைத் தொடங்கியுள்ளாள், அதனால் உப்பங்கழியில் உள்ள சுறா மீன் தாக்கியதால் புண்கள் உடைய கால்களையுடைய கோவேறு கழுதை நீண்ட நீருடைய கரிய (பெரிய) கழியில் செல்லுதல் மெலிந்திடலாலும் வலிய வில்லையுடைய நின் ஏவலர்களுடன் இரவில் செல்லாது இங்கு தங்கிச் சென்றால் கெடுவது எதுவும் உள்ளதா, பனை மரங்கள் உயர்ந்துள்ள வெள்ளை மணல் உடைய தோட்டங்களில் அன்றில் தன் துணையை அழைக்கும் அவ்விடத்தில் சிறிய மலர்க் கொத்துக்களையுடைய நெய்தல் உடைய எம்முடைய பெரிய கழி சூழ்ந்த நாட்டில்?
குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘வேளாண் பெரு நெறி வேண்டிய இடத்தினும்’ என வரும் விதி கொள்க. ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்னுஞ் சூத்திரத்து, தோழி தலைவனை வேளாண் பெருநெறி வேண்டிக் கோடற்கு இச் செய்யுளை எடுத்துக்காட்டினர் இளம்பூரணர். ‘வைகுறு விடியல்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 8) என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுள், பகற்குறிக்கண் இடத்துய்த்துத் தலைவனை எதிர்ப்பட்டு உரைத்தது என்றும், ஈண்டு நெய்தற்கு எற்பாடு வந்ததென்றும், ‘பொழுதும் ஆறும் காப்பும்’ (தொல்காப்பியம், பொருளியல் 16) என்னுஞ் சூத்திரத்து, ‘வல்வில் இளையரொடு ……….. பெருங்கழி நாட்டே’ என்பது ‘இரவிலும் பகலினும் நீ வா’ எனத் தோழி கூறுவதற்கு உதாரணமாகும் என்றும், இங்ஙனம் களவு அறிவுறுமென்று அஞ்சாது வருக என்றாள் வழுவேனும் தலைவன் வருத்தம் பற்றிக் கூறலின் அமைத்தார் என்றும் ‘தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்தனர் இயங்கலும் உரியன் என்ப’ (தொல்காப்பியம், பொருளியல் 18) என்னுஞ் சூத்திரத்து, ‘பிற’ ஆவன கோவேறு கழுதையும் சிவிகையும் முதலியனவாம் என்றும், ‘கழிச்சுறா எறிந்த புண் தாள் அத்திரி …………. பரி மெலிந்து அசைஇ’ என வருதல் அதற்கு உதாரணமாகும் என்றும், இன்னும் இச் சூத்திரத்து (இயங்கலும் என்ற) உம்மையால் இளையரோடு தனித்துக் கூடுதலுங் கொள்க; இதற்கு, ‘வல்வில் இளையரொடு ………….. சிதைவது உண்டோ’ என்பது உதாரணமாகும் என்றும் கூறினர் நச்சினார்க்கினியர். சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).
சொற்பொருள்: நெடுவேள் மார்பின் ஆரம் போலச் செவ்வாய் வானம் தீண்டி – நெடிய புகழுடைய முருகவேளின் மார்பில் உள்ள முத்து ஆரம் போல் சிவந்த நிற வானைத் தொட்டு (செவ்வாய் – பண்புத்தொகை), மீன் அருந்தும் பைங்கால் கொக்கு இனம் நிரை பறை உகப்ப – மீன் உண்ணும் பசிய கால்களையுடைய வெண்ணிறக் கொக்கின் இனம் வரிசையாக பறந்திட (பைங்கால் – பண்புத்தொகை), எல்லை பைப்பய கழிப்பிக் குடவயின் கல் சேர்ந்தன்றே பல் கதிர் ஞாயிறு – பகல் பொழுதை மெல்ல மெல்ல நீக்கி மேற்கு திசையில் மறையும் மலையை அடைந்தது பல கதிர்களையுடைய ஞாயிறு (பைப்பய – பையப்பைய பைப்பய என மருவியது), மதர் எழில் மழைக் கண் கலுழ – செழிப்பான (பெரிய) அழகிய கண்கள் கலங்கிட, இவளே – இவள் (ஏகாரம் அசைநிலை), பெரு நாண் அணிந்த நறுமென் சாயல் மாண் நலம் சிதைய ஏங்கி, ஆனாது அழல் தொடங்கினளே – விடாது அழுவதைத் தொடங்கியுள்ளாள் (தொடங்கினளே – ஏகாரம் அசைநிலை), பெரும – பெருமானே (விளி), அதனால் கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி நெடுநீர் இருங்கழி பரி மெலிந்து அசைஇ வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ – அதனால் உப்பங்கழியில் உள்ள சுறா மீன் தாக்கியதால் புண்கள் உடைய கால்களையுடைய கோவேறு கழுதை நீண்ட நீருடைய கரிய (பெரிய) கழியில் செல்லுதல் மெலிந்திடலாலும் வலிய வில்லையுடைய நின் ஏவலர்களுடன் இரவில் செல்லாது இங்கு தங்கிச் சென்றால் கெடுவது எதுவும் உள்ளதா (அசைஇ – அளபெடை, செலினே – ஏகாரம் அசைநிலை), பெண்ணை ஓங்கிய வெண்மணல் படப்பை அன்றில் அகவும் ஆங்கண் சிறு குரல் நெய்தல் எம் பெருங்கழி நாட்டே – பனை மரங்கள் உயர்ந்துள்ள வெள்ளை மணல் உடைய தோட்டங்களில் அன்றில் தன் துணையை அழைக்கும் அவ்விடத்தில் சிறிய மலர்க் கொத்துக்களையுடைய நெய்தல் உடைய எம்முடைய பெரிய கழி சூழ்ந்த நாட்டில் (நாட்டே – ஏகாரம் அசைநிலை)