தமிழ் உரை – கலித்தொகை

கலித்தொகை

எளிய தமிழ் உரை – வைதேகி

கலித்தொகை 6, பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தலைவி தலைவனிடம் சொன்னது
மரையா மரல் கவர மாரி வறப்ப
வரை ஓங்கு அருஞ் சுரத்து ஆர் இடைச் செல்வோர்
சுரை அம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர் தம்
உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந் துயரம் 5
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால்
என் நீர் அறியாதீர் போல இவை கூறல்
நின் நீர அல்ல நெடுந்தகாய் எம்மையும்
அன்பு அறச் சூழாதே ஆற்று இடை நும்மொடு
துன்பம் துணை ஆக நாடின் அது அல்லது 10
இன்பமும் உண்டோ எமக்கு.

பொருளுரை: காட்டுப் பசுவானது உண்ண வேறு உணவு எதுவும் இல்லாததால் மரல் செடியை உண்ணுமாறு, மழை இல்லாது வறண்டு போக, மலை ஓங்கிய அரிய வழியில் செல்வபவர்கள், ஆறலைக் கள்வர்களின் சுரைப் பொருந்திய அம்புகள் தங்கள் உடலைத் தைத்ததால், வருந்தி, நீர் வற்றி வறண்டு வருந்தும் நாவிற்கு நீர் பெற முடியாத சூழ்நிலையில் தம் கண்ணீரால் நாவின் வறட்சியை நீக்கிப் போக்கும் கொடுமையான காடு என்று காரணம் காட்டி என்னை விட்டுப் பிரிய நீர் நினைத்தீர் ஆயின், என்னை நீர் அறியாதவர் போல் இவற்றைக் கூறுகின்றீர்.  இவை நன்றாகிய தன்மை உடையவை அல்ல, ஐயா.  அன்பு நீங்க பிரிதலைக் கருதாது, உம்முடன் வழியில் துன்பத்திற்குத் துணையாக நான் வர விரும்புகின்றேன். அதைவிட வேறு இன்பம் எனக்கு உண்டா?

குறிப்பு:  சுரை = அம்பின் தலைப்பகுதி.

சொற்பொருள்:  மரையா மரல் கவர – காட்டுப் பசு மரலை உண்ண, மாரி வறப்ப – மழை வறண்டு போக, வரை ஓங்கு அருஞ் சுரத்து ஆர் இடைச் செல்வோர் – மலை ஓங்கிய அரிய வழியில் செல்பவர்கள், சுரை அம்பு மூழ்க – சுரையுடன் கூடிய அம்புகள் உடம்பில் தைக்க, சுருங்கி – சுருங்கி, புரையோர் – ஆறலை கள்வர்கள், தம் உள் நீர் வறப்ப – உள்ளுண்டாகிய நீர் வற்ற, புலர் வாடு நாவிற்குத் தண்ணீர் பெறாஅ – வறண்டு வருந்தும் நாவிற்கு நீர் பெற முடியாத, தடுமாற்று அருந்துயரம் – மனத் தடுமாற்றத்தையுடைய கண்ணீர், நனைக்கும் – கண்ணீர் நனைக்கும், கடுமைய காடு என்றால் – கொடுமையான காடு என்றால், என் நீர் அறியாதீர் போல இவை கூறல் – என்னை நீர் அறியாதவர் போல் இவற்றைக் கூறுதல், நின் நீர அல்ல – இவை நன்றாகிய தன்மை உடையவை அல்ல, நெடுந்தகாய் – தலைவனே, எம்மையும் அன்பு அறச் சூழாதே – அன்பு நீங்க பிரிதலைக் கருதாது, ஆற்று இடை நும்மொடு துன்பம் துணை ஆக நாடின் – உன்னுடன் வழியில் துன்பத்திற்கு துணையாக வர விரும்பினால், அது அல்லது இன்பமும் உண்டோ எமக்கு – அதை விட வேறு இன்பம் எனக்கு உண்டா

கலித்தொகை 9, பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தலைவியின் செவிலித்தாயும் வைணவத் துறவியும் சொன்னது

செவிலித்தாய் வைணவத் துறவியிடமும் அவருடைய மாணாக்களிடமும் சொன்னது :

எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
உறித் தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
நெறிப்பட சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!
வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர் இவ் இடை  5
என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்
தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்
அன்னார் இருவரை காணிரோ பெரும?

வைணவத் துறவி:

காணேம் அல்லேம்!  கண்டனம்!  கடத்து இடை
ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய,  10
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்!

பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலை உளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும்?
நினையுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,  15
நீர் உளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும்?
தேருங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழ் உளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?
சூழுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!  20

என, ஆங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்!
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்,
அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே.

பொருளுரை:

செவிலித்தாய்: காயும் ஞாயிற்றின் கதிர்களின் வெட்பத்தைத் தாங்கி நிழலைத் தரும் குடைகளை கைகளில் ஏந்தி, உறியில் தொங்கும் தண்ணீர்க் கமண்டலத்தையும் முக்கோலையும் முறைப்பட தோளில் சுமந்து, இறைவனைத் தவிர வேறு எதையும் எண்ணாத நெஞ்சத்துடன், ஐம்பொறிகளும் நீங்கள் ஏவிய வழியில் நடப்பதை முறையாகப் பெற்ற அந்தணர்களே! வெட்பம் மிகுந்த காட்டு வழியில் செல்லும் சிறந்த ஒழுக்கத்தை உடையவர்களே!

ஐயா! பிறர் அறியாமல் இணைந்த என் மகளும் ஒருத்தியின் மகனும், பிறர் அறிந்ததால் இந்தப் பாதையில் செல்லுவதை கண்டீர்களா?

வைணவத் துறவி: நாங்கள் காணாது இருக்கவில்லை. கண்டோம். அழகான சிறந்த ஆணுடன் கடுமையான காட்டு வழியில் செல்லும் அழகிய அணிகளை அணிந்த இளம் பெண்ணின் தாயாக இருப்பீர் போலும்,

பல மணங்களையுடைய நறுமணம் கொண்ட சந்தனமானது உபயோகிப்பவர்களுக்குப் பயன் கொடுப்பது அல்லாது, தான் பிறந்த மலைக்கு எந்த வகையில் பயன்படும்? நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே,

சிறப்பு மிகுந்த வெள்ளை முத்துக்கள் அணிபவர்களுக்கு அழகைக் கொடுப்பது அல்லாது, தாம் பிறந்த கடலுக்கு எந்த வகையில் பயன்படும்? நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே

ஏழு நரம்புகளில் எழும் இனிய இசை, இசைப்பவர்களுக்கு அல்லாது, யாழில் பிறந்தாலும் யாழ்க்கு எந்த வகையில் பயன்படும்? நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே

ஆதலால், சிறந்த கற்பு நெறியை மேற்கொண்டு, தலைசிறந்த ஒருவனை ஏற்றுக் கொண்டு சென்ற உன் மகளை எண்ணி நீ வருந்தாதே! அவள் சென்ற வழி அறத்தொடு ஒத்தது ஆகும்!

குறிப்பு: முக்கோல் என்பது முத்தண்டு.  திரிதண்டம் என்றும் கூறப்படும்.  மூன்று கோல்களை இணைத்துக்  கட்டிய இதனை வைணவத் துறவிகள் (முக்கோல் பகவர், திரிதண்டி) கையில் வைத்திருப்பார்கள். முக்கோல் பகவர் என்பவர்கள் ‘உள்ளம், மெய், நா’ ஆகியவற்றை அடக்கியவர்கள்.  கலித்தொகை 126 – முக்கோல் கொள் அந்தணர், முல்லைப்பாட்டு 38 – கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல். நச்சினார்க்கினியர் உரை – ‘அரி, அயன், அரன் என்னும் மூவரும் ஒருவர் என்று சொல்லுதல் தன்னிடத்தே அமைந்த முக்கோல்’.

சொற்பொருள்:  எறித்தரு கதிர் தாங்கி – காயும் ஞாயிற்றின் கதிர்களின் வெட்பத்தைத் தாங்கி, ஏந்திய குடை – பிடித்த குடை, நீழல் – நிழல், உறித் தாழ்ந்த கரகமும் – உறியில் தங்கிய கமண்டலமும், உரை சான்ற முக்கோலும் புகழ் பெற்ற திரிதண்டமும், நெறிப்படச் சுவல் அசைஇ – முறைப்படத் தோளில் வைத்து, வேறு ஓரா நெஞ்சத்து – இறைவனைத் தவிர வேறு எதையும் எண்ணாத நெஞ்சத்துடன், குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்- ஐம்பொறிகளும் நீங்கள் ஏவிய வழியில் நடப்பதை முறையாகப் பெற்ற அந்தணர்களே, வெவ் இடைச் செலல் – வெட்பம் மிகுந்த காட்டு வழியில் செல்லுதல், மாலை ஒழுக்கத்தீர் – சிறந்த ஒழுக்கத்தை உடையவர்களே, இவ் இடை – இந்தப் பாதையில், என் மகள் ஒருத்தியும் – என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும் – வேறு பெண்ணின் மகன் ஒருவனும், தம் உளே புணர்ந்த – பிறர் அறியாமல் தாங்கள் இணைந்த, தாம் – அவர்கள், அறி புணர்ச்சியர் – அவர்களுடையப் புணர்ச்சி பிறரால் அறியப்பட்டது, அன்னார் இருவரை காணிரோ – அவர்கள் இருவரையும் கண்டீர்களா, பெரும – ஐயா (பெரும – நச்சினார்க்கினியர் உரை – பெரும என்றாள், அவர்கள் ஆசிரியனாக பெரியோனை),

காணேம் அல்லேம் – நாங்கள் காணாது இருக்கவில்லை, கண்டனம் – கண்டோம், கடத்து இடை  – காட்டில், ஆண் எழில் அண்ணலோடு – அழகான சிறந்த ஆணுடன், அருஞ் சுரம் முன்னிய – கடுமையான காட்டு வழியில் செல்லும், மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர் – நீங்கள் அழகிய அணிகளை அணிந்த இளம் பெண்ணின் தாயாக இருப்பீர் போலும்,

பல உறு நறும் சாந்தம் – பல மணங்களையுடைய நறுமணமானச் சந்தனம்,  படுப்பவர்க்கு அல்லதை – உபயோகிப்பவர்களுக்கு அல்லாமல், மலை உளே பிறப்பினும் – மலையில் பிறந்தாலும், மலைக்கு அவை தாம் என் செய்யும் – மலைக்கு எந்த வகையில் பயன்படும், நினையுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே,

சீர்கெழு – சிறப்பு மிகுந்த, வெண் முத்தம் – வெள்ளை முத்துக்கள், அணிபவர்க்கு அல்லதை – அணிபவர்களுக்கு இல்லாமல், நீர் உளே பிறப்பினும் – கடல் நீரில் பிறந்தாலும், நீர்க்கு அவை தாம் என் செய்யும் – கடலுக்கு எந்த வகையில் பயன்படும், தேருங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே,

ஏழ் புணர் – ஏழு நரம்புகளில் எழும் இசை, இன் இசை – இனிமையான இசை, முரல்பவர்க்கு அல்லதை – இசைப்பவர்களுக்கு அல்லாது, யாழ் உளே பிறப்பினும் – யாழில் பிறந்தாலும், யாழ்க்கு அவை தாம் என் செய்யும் – யாழ்க்கு எந்த வகையில் பயன்படும், சூழுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே,

என – என்று, ஆங்கு – எங்கு, இறந்த கற்பினாட்கு – கற்பு நெறியை மேற்கொண்டவளுக்கு,  எவ்வம் படரன்மின் – வருந்தாதே, சிறந்தானை வழிபடீஇச் சென்றனள் – தலைசிறந்த ஒருவனை ஏற்றுக் கொண்டு சென்றுள்ளாள், அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே – அவள் சென்ற வழி அறத்தொடு ஒத்தது ஆகும்

கலித்தொகை 37, கபிலர், குறிஞ்சி, தலைவி தோழியிடம் சொன்னது
கய மலர் உண்கண்ணாய்! காணாய்! ஒருவன்
வய மான் அடித் தேர்வான் போலத் தொடை மாண்ட
கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு,
முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும் மன் பல் நாளும்,  5
பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன் வயின்
சேயேன் மன் யானும் துயர் உழப்பேன், ஆயிடைக்
கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன், ஆயின்
பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின் இன்னதூஉம்
காணான் கழிதலும் உண்டு என்று, ஒரு நாள் என் 10
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்
நாண் இன்மை செய்தேன், நறு நுதால், ஏனல்
இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்
ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று, வந்தானை,
“ஐய சிறிது என்னை ஊக்கி” எனக் கூறத்  15
“தையால் நன்று” என்று அவன் ஊக்கக் கை நெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பில், வாய்யாச் செத்து
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான், மேல்
மெய் அறியாதேன் போல் கிடந்தேன் மன், ஆயிடை
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின், மற்று ஒய்யென  20
ஒண் குழாய் செல்க எனக் கூறி விடும் பண்பின்
அங்கண் உடையன் அவன்.

பொருளுரை:   குளத்தில் உள்ள குவளை மலர்போலும் மைதீட்டிய கண்களை உடைய என் தோழியே! நான் கூறுவதைக் கேட்பாயாக! வில்லைத் தன் கையில் ஏந்திய, மாட்சிமைப்பட்ட மலர்ச்சரத்தை அணிந்த ஒருவன், வலிமையான விலங்கின் காலடியைத் தேடுபவன் போல் வந்து, என்னை நோக்கி, அவனுடைய குறிப்பால் காட்டுவது அன்றி, என் மேல் தான் உற்ற காதல் நோயைப் பற்றிக் கூறாமல் சென்றான், பல நாட்களாக. நான் உறக்கம் பெறாமல் வருத்தம் அடைந்தேன். அவனுடன் உறவில்லாத நான் பெரும் வருத்தத்தில் ஆழ்ந்தேன்.  என் முன்னால் வந்து தன்னுடைய மனதில் உள்ளதைக் கூற முடியாதவன் அவன். என்னுடைய உணர்வுகளைக் கூறுவது பெண்மைத் தன்மை உடையது இல்லை.  ஆனால் அவன் என்னுடைய உணர்வை அறியாமல் போய் விடுவானோ என்று எண்ணி, ஒரு நாள், என் தோள்கள் மெலிந்து நான் உற்ற வருத்தத்தால், துணிவுடன், நாணம் இல்லாத செயல் ஒன்றை நான் செய்தேன், நறுமணமான நெற்றியையுடைய என் தோழியே. கிளிகளை விரட்டி நாம் காக்கும் தினைப் புனத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சலில் நான் ஆடிக் கொண்டிருந்தேன்.  அப்பொழுது அங்கு வந்த அவனை நோக்கி, “ஐயா! என்னைக் கொஞ்சம் ஆட்டு என்று நான் கூற, “பெண்ணே! நல்லது” என்று அவன் ஊஞ்சலை ஆட்ட, கை நழுவியது போல் நான் நடித்து அவன் மார்பில் பொய்யாக வீழ்ந்தேன்.  அது உண்மை என்று எண்ணி, அவன் என்னை வாரி எடுத்து அணைத்துக் கொண்டான்.  அங்கு நான் அறியாதவள் போல் கிடந்தேன்.  நான் என்னுடைய மயக்கம் தீர்த்தாற்போல் எழுவேன் ஆயின், விரைந்து ‘ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளே! எழுந்து செல்” என்று கூறும் பண்புடையவன் அவன்.

சொற்பொருள்: கய மலர் – குளத்தில் உள்ள மலர்கள், உண்கண்ணாய் – மையிட்ட கண்களை உடையாய், காணாய் – காண்பாயாக, ஒருவன் – ஒருவன், வய மான் அடித் தேர்வான் போல – வலிமையான விலங்கின் அடியைத் தேடுபவன் போல், தொடை – தொடுத்த, மாண்ட கண்ணியன் – மாட்சிமைப்பட்ட மலர்ச் சரத்தை அணிந்தவன், வில்லன் – வில்லைக் கையில் கொண்டவன், வரும் என்னை நோக்குபு – வந்து என்னை நோக்கி, முன்னத்தின் காட்டுதல் அல்லது – குறிப்பால் காட்டுவது அன்றி, தான் உற்ற நோய் உரைக்கல்லான் பெயரும் – தான் உற்ற காதல் நோயைப் பற்றி அவன் கூறாமல் செல்வான், மன் – ஓர் அசை, பல் நாளும் – பல நாட்கள், பாயல் பெறேஎன் படர் கூர்ந்து – உறக்கம் பெறாமல் வருத்தம் அடைந்து, அவன் வயின் சேயேன் – அவனுடன் உறவில்லாத நான், மன் – ஓர் அசை, யானும் துயர் உழப்பேன் – நானும் வருத்தத்தில் ஆழ்வேன், ஆயிடைக் கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன் – அங்கு என் முன்னால் வந்து வந்து தன்னுடைய மனதில் உள்ளதைக் கூற முடியாதவன் அவன், ஆயின் பெண் அன்று உரைத்தல் நமக்கு – பெண்ணின் தன்மை இல்லை என் வருத்தத்தைக் கூற, ஆயின் இன்னதூஉம் காணான் கழிதலும் உண்டு என்று – ஆனால் அவன் என்னுடைய உணர்வை அறியாமல் போய் விடுவானோ என்று, ஒரு நாள் – ஒரு நாள், என் தோள் நெகிழ்பு உற்ற துயரால் – என் தோளை மெலியச் செய்த துயரத்தால், துணிதந்து ஓர் நாண் இன்மை செய்தேன் – துணிவுடன் நாணம் இல்லாத செயலை நான் செய்தேன், நறு நுதால் – நறுமணமான நெற்றியையுடைய என் தோழியே, ஏனல் இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல் – கிளிகளை விரட்டி நாம் காக்கும் தினைப் புனத்திற்கு அருகில், ஊசல் ஊர்ந்து ஆட – நான் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தேன், ஒரு ஞான்று வந்தானை – அப்பொழுது அங்கு வந்தவனை, ஐய சிறிது என்னை ஊக்கி எனக் கூற – ஐயா!  என்னைக் கொஞ்சம் ஆட்டு என்று நான் கூற, தையால் நன்று என்று அவன் ஊக்க – பெண்ணே! நல்லது என்று அவன் ஊஞ்சலை ஆட்ட, கை நெகிழ்பு பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பில் – கை நழுவியது போல் நான் நடித்து அவன் மார்பில் பொய்யாக வீழ்ந்தேன், வாய்யாச் செத்து ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான் – அது உண்மை என்று எண்ணி என்னை வாரி எடுத்து அணைத்துக் கொண்டான், மேல் மெய் அறியாதேன் போல் கிடந்தேன் – அங்கு நான் அறியாதவள் போல் கிடந்தேன், மன் – ஓர் அசை, ஆயிடை மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின் – நான் என்னுடைய மயக்கம் தீர்த்தாற்போல் எழுவேன் ஆயின், மற்று ஒய்யென ஒண் குழாய் செல்க எனக் கூறி விடும் பண்பின் அங்கண் உடையன் அவன் – அதன் பின் அவன் விரைவில் ‘ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளே! எழுந்து செல்வாயாக’ என்று கூறும் பண்புடையவன் அவன்

கலித்தொகை 51, கபிலர், குறிஞ்சி, தலைவி தோழியிடம் சொன்னது
சுடர் தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, “இல்லிரே  5
உண்ணு நீர் வேட்டேன்” என வந்தாற்கு அன்னை
“அடர் பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர் இழாய்
உண்ணு நீர் ஊட்டி வா” என்றாள் என, யானும்
தன்னை அறியாது சென்றேன், மற்று என்னை
வளை முன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு  10
“அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண்” என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்
“உண்ணு நீர் விக்கினான்” என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம்  15
செய்தான் அக் கள்வன் மகன்.

பொருளுரை:  ஒளியுடைய வளையல்களை அணிந்த என் தோழியே!  இதைக் கேட்பாயாக! முன்பு நம்முடைய சிறிய மணல் வீடுகளை உடைத்தும், நாம் சூடியிருந்த மலர்ச்சரத்தை அறுத்தும், நம்முடைய வரிப்பந்தை எடுத்துக் கொண்டும் ஓடி நோவுதலைச் செய்த பொறுப்பற்றவன், ஒரு நாள் என் தாயும் நானும் வீட்டிலிருந்த பொழுது வந்து, “வீட்டில் உள்ளவர்களே! நான் தாகத்தில் இருக்கின்றேன். எனக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்டான். என்னுடைய தாய், “ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளே! அடர்ந்த பொன்னினால் செய்த கிண்ணத்தில் தண்ணீர் வார்த்து  அவனுக்குக் கொடு” என்றாள். அவன் யார் என்பதை அறியாமல் நான் அவனிடம் சென்றேன். வளையல் அணிந்த என் முன் கையைப் பற்றி என்னை வருத்தினான் அவன். “அம்மா! இவன் செய்ததைப் பார்” என்று நான் கலக்கத்துடன் கூறினேன்.  என் தாய் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி வந்தாள். அவள் அங்கு வந்தவுடன் “நீர் குடிக்கும் பொழுது விக்கினான்” என்று கூறினேன்.  என் தாய் அவனுடைய முதுகைத் தடவிக் கொடுத்தாள்.  தன் கடைக்கண்ணால் என்னைக் கொல்லுவது போல் என்னைப் பார்த்து நட்புடன் சிரித்தான், அந்தக் கள்வன்.

குறிப்பு: வரிப் பந்து (3) –  நச்சினார்க்கினியர் உரை – வரியினையுடைய பந்து.  திருமுருகாற்றுப்படை 68  – வரிப் புனை பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து,  நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து,  வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி  உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து.  பெரும்பாணாற்றுப்படை 333 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரியப்பட்ட பந்து, நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிதலையுடைய பந்து, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – நூலால் வரிதலையுடைய பந்து.

சொற்பொருள்:   சுடர் தொடீஇ – ஒளியுடைய வளையல்களை அணிந்தவளே, கேளாய் – கேட்பாயாக, தெருவில் – தெருவில், நாம் ஆடும் – நாம் விளையாடும், மணல் சிற்றில் – சிறிய மணல் வீடு, காலின் சிதையா – காலினால் சிதைத்து, அடைச்சிய கோதை – சூடியிருந்த மலர்ச் சரத்தை, பரிந்து – அறுத்து, வரிப் பந்து கொண்டு ஓடி – வரிகளையுடைய பந்தை எடுத்துக் கொண்டு ஓடி, நோதக்க செய்யும் சிறு பட்டி – நோவுதலைச் செய்யம் பொறுப்பற்றவன், மேல் ஓர் நாள் – முன்னொரு நாள், அன்னையும் யானும் இருந்தேமா – அன்னையும் நானும் இருக்கும் பொழுது, இல்லிரே – வீட்டில் உள்ளவர்களே, உண்ணு நீர் வேட்டேன் – தாகத்தில் இருக்கின்றேன், என வந்தாற்கு – என்று வந்தவனுக்கு, அன்னை – தாய், அடர் பொன் சிரகத்தால் வாக்கி – அடர்ந்தப் பொன்னினால் செய்யப்பட்டக் கலத்தில் வார்த்து, சுடர் இழாய் – ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளே, உண்ணு நீர் ஊட்டி வா – குடிக்கத் தண்ணீரைக் கொடுத்து விட்டு வா, என்றாள் என – கூறினாள் என்று, யானும் – நானும், தன்னை அறியாது – அவன் தான் என்று அறியாது, சென்றேன் – சென்றேன், மற்று என்னை வளை முன்கை பற்றி – அங்கு அவன் வளையல் அணிந்த என்னுடைய முன் கையைப் பற்றி, நலிய – வருத்த, தெருமந்திட்டு – கலக்கத்துடன், அன்னாய் – அம்மா, இவன் ஒருவன் செய்தது காண் – இவன் செய்ததை நீ பார், என்றேனா – என்று கூறினேன், அன்னை அலறிப் படர்தர – என்னுடைய தாய் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி வந்தாள், தன்னை – அவனை, யான் – நான், உண்ணு நீர் விக்கினான் என்றேனா – நீர் குடிக்கும் போது விக்கினான் என்றேன், அன்னையும் – என்னுடைய தாயும், தன்னைப் புறம்பு அழித்து நீவ – அவனுடைய முதுகைத் தடவிக் கொடுத்தாள், மற்று என்னைக் கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி – அதன் பின் அவன் தன் கடைக் கண்களால் கொல்பவன் போல் என்னை நோக்கி, நகை கூட்டம் செய்தான் – மகிழ்ச்சியுடன் நட்பைச் செய்தான், அக் கள்வன் மகன் – அந்தக் கள்ளன்

 

Advertisements
%d bloggers like this: