தமிழ் உரை – ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு – தமிழ் உரையுடன்      

எளிய தமிழ் உரை – வைதேகி

Copyright ©  All Rights Reserved

தமிழ் உரை நூல்கள்:
ஐங்குறுநூறு – ஔவை துரைசாமி – தமிழ் மண் பதிப்பகம், சென்னை
ஐங்குறுநூறு – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை
ஐங்குறுநூறு – தி. சதாசிவ ஐயர் – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
ஐங்குறுநூறு – ஐங்குறுநூறு – புலியூர்க் கேசிகன், பாரி நிலையம், சென்னை

குறிஞ்சித் திணை – புணர்ச்சியும் புணர்ச்சி நிமித்தமும்

முல்லைத் திணை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

மருதத் திணை – ஊடலும் ஊடல் நிமித்தமும்

நெய்தற்  திணை – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

பாலைத் திணை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

குறிஞ்சித் திணையில் அடிக்கடி வரும் சொற்கள்:  வரை (mountain), மலை, குன்று, சாரல் (mountain slope), அடுக்கம் (mountain range), கிளி, ஏனல் (தினை), அவணை (millet field), தினை, இறடி (millet),  இருவி (millet stubble), தாள் (stubble), குரல் (millet spikes), தட்டை (stubble) – and also bamboo rattle to chase parrots – வெதிர் புனை தட்டை, குளிர், தழல் (gadgets used to chase parrots), கவண், தினை, புனவன் (mountain farmer), குறவன்,  கானவன், கொடிச்சி, கழுது, இதண், மிடை  (Platform in the millet field), ஓப்புதல் (chase parrots and other birds that come to eat the grain), குறவன், கொடிச்சி, யானை, குரங்கு, மஞ்ஞை (peacock), புலி, பாம்பு, பன்றி (wild boar), வரை ஆடு,  அருவி, சுனை, பலாமரம், பலாப்பழம், சந்தன மரம், மா மரம், பணை (bamboo), வேங்கை மரம், அகில் மரம், மாமரம், குறிஞ்சி, குவளை, காந்தள், தேன், வண்டு, சுரும்பு, ஞிமிறு, தும்பி (honeybee), மஞ்சு, மழை (word is used for both cloud and rain), பெயல் (rain), ஐவனம் (wild rice)

மருதத் திணையில் அடிக்கடி வரும் சொற்கள்:  வயல், பழனம் (pond), கழனி, குளம்,  வாளை மீன், கெண்டை மீன், ஆமை, உழவர், அரிநர், நெல், மாமரம், ஞாழல் மரம் , நொச்சி மரம், கரும்பு, நீர்நாய்  (otter), ஆம்பல் (white waterlily), தாமரை, பொய்கை, கயம் (pond), குருவி, கோழி, சேவல்,  கழனி, கொக்கு, காரான் (buffalo), காஞ்சி மரம்,  மருத மரம், அத்தி மரம், எருமை, முதலை, களவன் (நண்டு)

முல்லைத் திணையில் அடிக்கடி வரும் சொற்கள் – புறவு (முல்லை நிலம்), இரலை மான், முயல், ஆ (பசு), கன்று, மழை, முல்லை, காயா, கொன்றை, தோன்றல், தேர், பாகன், மாரி, பித்திகம், கோவலர், ஆயர் (cattle herders), ஆடு, குழல், மஞ்ஞை (peacock),  குருந்தம், மழை

 நெய்தல் திணையில்  அடிக்கடி வரும் சொற்கள் –   கடல், கடற்கரை, பரதவர், மீன், சுறா, முதலை, திரை (wave), அலை, கானல் (கடற்கரை சோலை),  திமில் (boat), அம்பி (boat), சேரி (settlement) , புன்னை, ஞாழல், தாழை, கைதல், கைதை (screwpine), உப்பு, உப்பங்கழி (backwaters, salty lakes), மணல், எக்கர் (மணல் மேடு), அலவன் (நண்டு), அடும்பு (a creeper with beautiful pink flowers), நெய்தல் ஆம்பல் (white waterlily), கோடு, வளை (conch shell), வலை, குருகு, நாரை, அன்றில்

பாலைத் திணையில்  அடிக்கடி வரும் சொற்கள்  –  அத்தம் (harsh path), சுரம் (wasteland), எயினர் (tribes living in the wasteland), வழிப்பறி கள்வர், பல்லி, ஓதி, ஓந்தி (big garden lizard), பாதிரி (summer blooming flower), கள்ளி (cactus), யா மரம், ஓமை மரம், குரவம், கள்ளிச்செடி, கோங்கு மரம்,  ஞெமை, இருப்பை மரம், வேம்பு, யாமரம், உகாய், கழுகு, கடுஞ்சுரம், அருஞ்சுரம் (harsh wasteland), செந்நாய் (wild dog), யானை, புலி, மூங்கில், பதுக்கை (leaf heap, usually a shallow grave), நெல்லி, நெறி (path), ஆறு (path), வேனிற்காலம்,  பரல் கற்கள், இறத்தல் (கடப்பது)

மருதத் திணை, ஓரம்போகியார்ஊடலும் ஊடல் நிமித்தமும்

இங்கு நிகழ்பவை:  தலைவன் பரத்தமை மேற்கொள்வது, தலைவி வருந்தி ஊடல் கொள்வது, தோழி தலைவனைப் பழிப்பது, பரத்தை தன் உணர்வுகளைக் கூறுவது, பரத்தை தலைவி பற்றிக் கூறுவது, மனைக்கு வர விரும்பும் தலைவன் பாணன் நண்பர்கள் ஆகியோரை அனுப்பி வாயில் வேண்டுவது, தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தல், தலைவி தலைவனிடம் தன் வருத்தத்தைக் கூறுவது, தலைவி பாணனிடம் தன் வருத்தத்தைக் கூறுவது, தலைவி ஊரில் எழுந்த அலர் பற்றித் தலைவனிடம் கூறுவது.

வேட்கைப்பத்து

பாடல்கள் 1–10:  இப்பாடல்கள் தோழி தலைவனிடம் கூறுவதாக அமைந்துள்ளன.  தலைவியை ‘யாய்; என அவள் குறிப்பிடுகின்றாள்.  யாயே (3) – பழைய உரை – தலைவியை யாயென்றது புலத்தற்குக் காரணமாயின உளவாகவும் அவை மனங்கொள்ளாத சிறப்பை நோக்கி.  யாமே (3) – பழைய உரை:  யாமே எனப் பன்மை வாய்பாட்டாற் கூறியது, ஆயத்தாரையும் உளப்படுத்தற்கு.  ஆதன், அவினி – சேர மன்னர்கள்.

ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வாழி ஆதன்!  வாழி அவினி!
நெல் பல பொலிக, பொன் பெரிது சிறக்க,
என வேட்டோளே யாயே, யாமே,
நனைய காஞ்சிச் சினைய சிறு மீன்
யாணர் ஊரன் வாழ்க,
பாணனும் வாழ்க, என வேட்டேமே.

பாடல் பின்னணிபரத்தமையை மேற்கொண்ட தலைவன், பின் அது தீய ஒழுக்கம் எனத் தெளிந்தவனாகத் தன் இல்லத்திற்குள் புகுகின்றான்.  தலைவி அவனை ஏற்றுக் கொள்கின்றாள்.  தலைவன் தோழியிடம், “நான் தீநெறிச் சென்ற காலத்தில் எவ்வாறு இருந்தீர்கள்?” என்று கேட்க, அதற்கு மறுமொழியாக அவள் சொன்னது.

பொருளுரை:  வாழ்க ஆதன்!  வாழ்க அவினி!  ‘நெல் நிறைய விளையட்டும், செல்வம் பெரிது கொழிக்கட்டும்’, என்று என் தோழி விரும்பினாள்.  ‘அரும்புகளையுடைய காஞ்சி மரங்களும், சிறிய சினை மீன்களுடைய செல்வம் நிறைந்த ஊரன் ஆகிய தலைவன் வாழ்க, அவனுடைய பாணனும் வாழ்க’ என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம்.

குறிப்பு:  பழைய உரை – ‘காவற்பொருட்டு அரசன் வாழ்க.  விருந்தாற்றுதற் பொருட்டு நெற்பல பொலிக, இரவலர்க்கு ஈதற்பொருட்டுப் பொன் மிகவுண்டாக’ என யாய் இல்லறத்திற்கு வேண்டுவனவே விரும்பி ஒழுகியதல்லது பிறிது நினைத்திலள்.  அவள் இத்தன்மையளாக, நீ ஒழுகிய ஒழுக்கத்தால் நினக்கும் உன் ஒழுக்கத்திற்குத் துணையாகிய பாணனுக்கும் தீங்கு வருமென்று அஞ்சி, யாணர் ஊரன் வாழ்க அவன் பாணனும் வாழ்க என்றவாறு. தலைவியை யாய் என்றது, அவை மனங்கொள்ளாத சிறப்பை நோக்கி.  தோழி யாங்கள் என உளப்படுத்தது ஆயத்தாரை நோக்கி எனக் கொள்க.  ஒளவை துரைசாமி உரை – இது தோழியிடைத் தோன்றிய முன்னிலைப் புறமொழி.  ‘முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும் பின்னிலைத் தோன்றும் என்மனார் புலவர்’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 167) என்பது இலக்கணம். பிரிந்து ஒழுகிப் போந்த தலைமகற்குத் தோழி முன்பு நிகழ்ந்தது கூறும் பொருளதாகலின், தலைமகள் மாண்புகளையும், தன் செயல்களையும் வகுத்துக் கூறினாள்.  உள்ளுறை – பழைய உரை – பூவும் புலாலும் ஒக்க விளையும் ஊரன் என்றது குலமகளிரைப் போலப் பொது மகளிரையும் ஒப்புக் கொண்டொழுகுவான் என்பதாம்.  யாமே (3) – ஒளவை துரைசாமி உரை – யாமே எனப் பன்மை வாய்பாட்டாற் கூறியது, ஆயத்தாரையும் உளப்படுத்தற்கு.  இலக்கணக் குறிப்பு – பொலிக, சிறக்க, வாழ்க – வியங்கோள் வினைமுற்றுக்கள், நனைய – பெயரெச்சம், சினைய – பெயரெச்சம், வேட்டோள் – வேட்டாள் என்பது வேட்டோள் எனத் திரிந்தது, யாணர் ஊரன் – யாணர் புதியது ஆகுபெயரால், செல்வ வருவாய் குறித்தது, யாமே – ஏகாரம் பிரிநிலை, யாயே – ஏகாரம் தேற்றம், பாணனும் – உம்மை இறந்தது தழுவியது; இழிவு சிறப்புமாம், வேட்டோளே – ஏகாரம் அசைநிலை, என வேட்டேமே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  வாழி ஆதன் வாழி அவினி – வாழ்க ஆதன்! வாழ்க அவினி!, நெல் பல பொலிக – நெல் நிறைய விளையட்டும், பொன் பெரிது சிறக்க – செல்வம் பெரிது கொழிக்கட்டும் (பொன் – செல்வத்திற்கு ஆகுபெயர்), என வேட்டோளே யாயே – என்று விரும்பினாள் என் தோழி, யாமே – நாங்கள், நனைய காஞ்சி – அரும்புகளையுடைய காஞ்சி மரங்கள், சினைய சிறு மீன் – சிறிய சினை மீன்கள், யாணர் ஊரன் – செல்வம் பொருந்திய ஊரன் ஆகிய தலைவன், வாழ்க – வாழ்க, பாணனும் வாழ்க – அவனுடைய பாணனும் வாழ்க, என வேட்டேமே – என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம்

ஐங்குறுநூறு 2, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வாழி ஆதன்! வாழி அவினி!
விளைக வயலே, வருக இரவலர்,
என வேட்டோளே யாயே, யாமே,
பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண் துறை ஊரன் கேண்மை
வழி வழிச் சிறக்க, என வேட்டேமே.

பாடல் பின்னணிபரத்தமையை மேற்கொண்ட தலைவன், பின் அது தீய ஒழுக்கம் எனத் தெளிந்தவனாகத் தன் இல்லத்திற்குள் புகுகின்றான்.  தலைவி அவனை ஏற்றுக் கொள்கின்றாள்.  தலைவன் தோழியிடம், “நான் தீநெறிச் சென்ற காலத்தில் எவ்வாறு இருந்தீர்கள்?” என்று கேட்க, அதற்கு மறுமொழியாக அவள் சொன்னது.

பொருளுரை:  வாழ்க ஆதன்!  வாழ்க அவினி!  ‘வயல்களில் விளைச்சல் சிறக்கட்டும், இரவலர் வரட்டும்’ என்று விரும்பினாள் என் தோழி.  ‘பல இதழ்களையுடைய கருங்குவளை மலர்களுடன் நெய்தல் மலர்கள் ஒப்ப மலரும் குளிர்ச்சியான துறையின் ஊரன் என் தோழியோடு கொண்டுள்ள ஆழ்ந்த நட்பு என்றும் தழைக்க வேண்டும்’ என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம்.

குறிப்பு:  பழைய உரை – தலைவி இல்லறமே நினைந்து ஒழுகினாள்.  யாங்கள் நின் காதல் அவள் மேல் சுருங்குகின்ற திறம் நோக்கி, ‘நின் கேண்மை வழி வழிச் சிறக்க’ என விரும்பினேம் என்றவாறு.  உள்ளுறை – பழைய உரை – சிறப்புடைய கருங்குவளையுடனே சிறப்பில்லாத நெய்தல் நிகர்க்கும் ஊரன் என்றது, குலமகளிருடனே பொதுமகளிர் இகலும் ஊரன் என்றவாறு.  ஒளவை துரைசாமி உரை – தலைமகன் புறத்தொழுக்கம் உடையவனாகலின், அவன் காதல் பொதுமகளிர்பாற் செல்லுமுகத்தால் தலைமகள்பால் சுருங்குதல் கண்டு, அது நிகழாமை குறித்து, ஊரன் கேண்மை வழிவழிச் சிறக்க எனத் தோழி வேட்டாள். ‘உறுகண் ஓம்பல் தன்னியல்பாகலின்’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 229) என்பதனால், தோழி உரனுடையளாய் அவன் கேண்மை சிறக்க வேண்டுதல் அமையும் என்க.  பல்லிதழ் (4) – ஒளவை துரைசாமி உரை – அகரம் கெட்டுக் ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 160) என்றதனால் லகரம் இரட்டித்து, பல்லிதழ் என முடிந்தது.  இலக்கணக் குறிப்பு – விளைக, வருக, சிறக்க – வியங்கோள் வினைமுற்றுக்கள், வேட்டோள் – வேட்டாள் என்பது வேட்டோள் எனத் திரிந்தது, யாமே – ஏகாரம் பிரிநிலை, யாயே – ஏகாரம் தேற்றம், வயலே – ஏகாரம் அசைநிலை, வேட்டோளே – ஏகாரம் அசைநிலை, வேட்டேமே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  வாழி ஆதன் வாழி அவினி – வாழ்க ஆதன்! வாழ்க அவினி!, விளைக வயலே – வயல்களில் நிறைய விளைச்சல் அமையட்டும், வருக இரவலர் – பிச்சை வேண்டி வருபவர்கள் வரட்டும், என வேட்டோளே யாயே – என்று விரும்பினாள் என் தோழி, யாமே – நாங்கள், பல் இதழ் நீலமொடு – பல இதழ்களையுடைய நீல மலர்களுடன் (கருங்குவளை மலர்களுடன்), நெய்தல் நிகர்க்கும் – நெய்தல் மலர்கள் ஒப்ப மலரும், தண் துறை ஊரன் – குளிர்ச்சியான துறையைக் கொண்ட ஊரன், கேண்மை – தொன்மையான நட்பு, தோழமை, நட்பு, வழி வழிச் சிறக்க என வேட்டேமே – என்றும் தொடர்ந்து சிறக்க வேண்டும் என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம்

ஐங்குறுநூறு 3, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
வாழி ஆதன்! வாழி அவினி!
பால் பல ஊறுக, பகடு பல சிறக்க,
என வேட்டோளே யாயே, யாமே,
வித்திய உழவர் நெல்லொடு பெயரும்
பூக்கஞல் ஊரன், தன் மனை
வாழ்க்கை பொலிக என வேட்டேமே.

பாடல் பின்னணிபரத்தமையை மேற்கொண்ட தலைவன், பின் அது தீய ஒழுக்கம் எனத் தெளிந்தவனாகத் தன் இல்லத்திற்குள் புகுகின்றான்.  தலைவி அவனை ஏற்றுக் கொள்கின்றாள்.  தலைவன் தோழியிடம், “நான் தீநெறிச் சென்ற காலத்தில் எவ்வாறு இருந்தீர்கள்?” என்று கேட்க, அதற்கு மறுமொழியாக அவள் சொன்னது.

பொருளுரை:  வாழ்க ஆதன்!  வாழ்க அவினி!  ‘பால் வளம் பெருகட்டும், எருதுகள் பலவாக சிறக்கட்டும்’ என்று விரும்பினாள் என் தோழி.  ‘விதை வித்திய உழவர்கள் முதிர்ந்த நெல்லைக்கொண்டு வரும் பூக்கள் நிறைந்த ஊரன் தன் மனை வாழ்க்கையில் பொலிவானாக’ என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம்.

குறிப்பு:  பழைய உரை – தலைவி இல்லறமே நினைந்து ஒழுகினாள்.  அவன் பொது மனையில் வாழ்க்கை ஒழிந்து தன்மனையிலே வாழ்வானாக என வேட்டேம் யாங்கள்.  உள்ளுறை – பழைய உரை – உழவர் முன்பு விளைந்த செருவின் நெல்லொடு பெயருமென்றது, பின்வரும் பரத்தையர்க்கு வருவாய்பண்ணி அக்காலத்து உளராகிய பரத்தையரோடு இன்பம் நுகர்வான் என்பதாம்.  இறைச்சி – ஒளவை துரைசாமி உரை – விளைவு வேண்டி விதைத்த உழவர், அவ்வாறே விளைந்த நெல்லைக்கொண்டு பெயரும் ஊரனாயினும், இல்லறப் பயனை வேண்டி இவளை மணந்த பின், அது பெறாமை ஒழுகியது என்னை என இறைச்சி தோற்றியவாறும் காண்க.  ‘இறைச்சி தானே பொருட்புறத்து அதுவே’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 229) என்பது விதி.  பகடு (2) – உ. வே. சாமிநாதையர் உரை – எருது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – எருமைக்கடா, ஒளவை துரைசாமி உரை – பகடு எருமை.  எருதிற்கும் யானைக்குமாம்.  இலக்கணக் குறிப்பு – ஊறுக, சிறக்க, பொலிக – வியங்கோள் வினைமுற்றுக்கள், வேட்டோள் – வேட்டாள் என்பது வேட்டோள் எனத் திரிந்தது, யாமே – ஏகாரம் பிரிநிலை, யாயே – ஏகாரம் தேற்றம், வேட்டோளே – ஏகாரம் அசைநிலை, வேட்டேமே – ஏகாரம் அசைநிலை.  வித்திய உழவர் நெல்லொடு பெயரும் (4) – ஒளவை துரைசாமி உரை – விளைத்தற்குச் சென்ற உழவர் முன்னே விளைந்துள்ள நெல்லைக் கொண்டு மீளும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கழனியிலே வித்தினை விதைத்த உழுதொழிலாளர் கூலி நெல்லோடு செல்லும்.

சொற்பொருள்:  வாழி ஆதன் வாழி அவினி – வாழ்க ஆதன்! வாழ்க அவினி!, பால் பல ஊறுக – பால் வளம் பெருகுக, பகடு பல சிறக்க – எருதுகள் பலவாக சிறக்க, என வேட்டோளே யாயே – என்று விரும்பினாள் என் தோழி, யாமே – நாங்கள், வித்திய உழவர் நெல்லொடு பெயரும் பூக்கஞல் ஊரன் தன் மனை வாழ்க்கை பொலிக என வேட்டேமே – விதை வித்திய உழவர்கள் முதிர்ந்த நெல்லைக்கொண்டு வரும் பூக்கள் நிறைந்த ஊரன் தன் மனை வாழ்க்கையில் பொலிவானாக என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம்

ஐங்குறுநூறு 4, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
வாழி ஆதன்! வாழி அவினி!
பகைவர் புல் ஆர்க, பார்ப்பார் ஓதுக,
என வேட்டோளே யாயே, யாமே,
பூத்த கரும்பின், காய்த்த நெல்லின்
கழனி ஊரன் மார்பு
பழனம் ஆகற்க, என வேட்டேமே.

பாடல் பின்னணிபரத்தமையை மேற்கொண்ட தலைவன், பின் அது தீய ஒழுக்கம் எனத் தெளிந்தவனாகத் தன் இல்லத்திற்குள் புகுகின்றான்.  தலைவி அவனை ஏற்றுக் கொள்கின்றாள்.  தலைவன் தோழியிடம், “நான் தீநெறிச் சென்ற காலத்தில் எவ்வாறு இருந்தீர்கள்?” என்று கேட்க, அதற்கு மறுமொழியாக அவள் சொன்னது.

பொருளுரை:  வாழ்க ஆதன்! வாழ்க அவினி!  ‘பகைவர்கள் புல்லரிசியை உண்ணுக, பார்ப்பனர்கள் மறை ஓதுக’ என்று விரும்பினாள் என் தோழி.  ‘பூத்த கரும்பையும் முதிர்ந்த நெல்லையும் உடைய கழனியுடைய ஊரனின் மார்பு பழனம்போல் பொதுவாக இல்லாமல் எம் தலைவிக்கே உரித்தாகுக’ என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம்.

குறிப்பு:  பழைய உரை – இவள் இல்லறமே விரும்பி ஒழுகினாள்.  அவன் மார்பு ஊரவர்க்கெல்லாம் பொதுவாகிய பழனம் போலாது இவட்கே உரித்தாக என விரும்பினோம் யாங்கள் என்றவாறு.  உள்ளுறை – பழைய உரை – பூத்துப் பயன்படாக் கரும்பினையும் காய்த்துப் பயன்படும் நெல்லினையுடைய ஊரன் என்றது, ஈன்று பயன்படாத பொது மகளிரையும் பயன்படும் குலமகளிரையும் ஒப்ப நினைப்பான் என்றவாறு.  இலக்கணக் குறிப்பு – ஆர்க, ஓதுக – வியங்கோள் வினைமுற்றுக்கள், வேட்டோள் – வேட்டாள் என்பது வேட்டோள் எனத் திரிந்தது, யாமே – ஏகாரம் பிரிநிலை, யாயே – ஏகாரம் தேற்றம், வேட்டோளே – ஏகாரம் அசைநிலை, ஆகற்க – வியங்கோள் எதிர்மறை, வேட்டேமே – ஏகாரம் அசைநிலை.  புல் (2) – தி. சதாசிவ ஐயர் உரை – புல் உணவு, ச. வே. சுப்ரமணியன் – புல், ஒளவை துரைசாமி உரை – புல்லரிசி.  புறநானூறு 248 உரையில் புல் என்பதற்கு ஒளவை துரைசாமி உரை – புல்லரிசி.  நெல் அல்லா உணவெல்லாம் புல்லென்றல் மரபு.

சொற்பொருள்:  வாழி ஆதன் வாழி அவினி – வாழ்க ஆதன்! வாழ்க அவினி!, பகைவர் புல் ஆர்க – பகைவர்கள் புல்லரிசியை உண்ணுக, பார்ப்பார் ஓதுக – பார்ப்பனர்கள் மறை ஓதுக, என வேட்டோளே யாயே – என்று விரும்பினாள் என் தோழி, யாமே – நாங்கள், பூத்த கரும்பின் காய்த்த நெல்லின் கழனி ஊரன் மார்பு பழனம் ஆகற்க என வேட்டேமே – பூத்த கரும்பையும் முதிர்ந்த நெல்லையும் உடைய கழனியுடைய ஊரனின் மார்பு பழனம்போல் பொதுவாக இல்லாமல் எம் தலைவிக்கே உரித்தாகுக என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம் (பழனம் – வயல், குளம், மருத நிலம் என்ற பொருள்கள் உடையது)

ஐங்குறுநூறு 5, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
வாழி ஆதன்! வாழி அவினி!
பசியில் ஆகுக, பிணி சேண் நீங்குக,
என வேட்டோளே யாயே, யாமே,
முதலை போத்து முழு மீன் ஆரும்
தண்துறை ஊரன் தேர், எம்
முன்கடை நிற்க, என வேட்டேமே.

பாடல் பின்னணிபரத்தமையை மேற்கொண்ட தலைவன், பின் அது தீய ஒழுக்கம் எனத் தெளிந்தவனாகத் தன் இல்லத்திற்குள் புகுகின்றான்.  தலைவி அவனை ஏற்றுக் கொள்கின்றாள்.  தலைவன் தோழியிடம், “நான் தீநெறிச் சென்ற காலத்தில் எவ்வாறு இருந்தீர்கள்?” என்று கேட்க, அதற்கு மறுமொழியாக அவள் சொன்னது.

பொருளுரை:   வாழ்க ஆதன்! வாழ்க அவினி!  ‘உயிர்களைத் துன்புறுத்தும் பசி இல்லாது ஆகட்டும், நோய் நெடுந்தூரம் சென்று நீங்கட்டும்’ என விரும்பினாள் என் தோழி.  ‘ஆண் முதலை முழு மீனை உண்ணும் குளிர்ந்த துறையின் ஊரனின் தேர் எம்முடைய இல் முன் நிற்க வேண்டும்’ என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம்.

குறிப்பு:  பழைய உரை – இவள் இல்லறமே விரும்பி ஒழுகினாள்.  யாங்கள் அவன் தேர் பிற மகளிர் முன்கடை நிற்றல் ஒழிந்து எம் முன்கடை நிற்க என விரும்பினேம் என்றவாறு.  உள்ளுறை – பழைய உரை – முதலை போத்து முழு மீன் ஆரும் தண்துறை ஊரன் என்றது, ஒருங்கு வாழ்வாரைப் பழைமை நோக்காது உயிர் கவர்வான் என்பதாம், ஒளவை துரைசாமி உரை – துறைக்கண் வாழும் முதலைப் போத்து உடனுறையும் முழுமீன்களின் முதுமை கருதாது உண்டொழுகும் ஊரன் என்றது, தலைமகன் தன் மனைக்கண் தன்னொடு உடனுறையும் தலைமைகளின் நிலைமை கருதாது அவள் நலம் கெடுக்கின்றான் எனத் துனியுறு கிளவி தோன்ற உள்ளுறைத்தவாறு.  முதலை போத்து (3) – தி. சதாசிவ ஐயர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆண் முதலை, ஒளவை துரைசாமி உரை – இள முதலை.  இலக்கணக் குறிப்பு – ஆகுக, நீங்குக, நிற்க – வியங்கோள் வினைமுற்றுக்கள், வேட்டோள் – வேட்டாள் என்பது வேட்டோள் எனத் திரிந்தது, யாமே – ஏகாரம் பிரிநிலை, யாயே – ஏகாரம் தேற்றம், வேட்டோளே – ஏகாரம் அசைநிலை, வேட்டேமே – ஏகாரம் அசைநிலை. போத்து – ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும் சேவும் சேவலும் இரலையும் கலையும் மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும் யாத்த ஆண்பாற் பெயர் என மொழிப (தொல்காப்பியம், மரபியல் 2).

சொற்பொருள்:  வாழி ஆதன் வாழி அவினி – வாழ்க ஆதன்! வாழ்க அவினி!, பசி இல் ஆகுக – உயிர்களைத் துன்புறுத்தும் பசி இல்லாது ஆகட்டும், பிணி சேண் நீங்குக – நோய் நெடுந்தூரம் சென்று நீங்கட்டும், என வேட்டோளே யாயே – என்று விரும்பினாள் என் தோழி, யாமே – நாங்கள், முதலை போத்து முழு மீன் ஆரும் தண்துறை ஊரன் தேர் எம் முன்கடை நிற்க – ஆண் முதலை முழு மீனை உண்ணும் குளிர்ந்த துறையின் ஊரனின் தேர் எம்முடைய இல் முன் நிற்க வேண்டும், என வேட்டேமே – என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம்

ஐங்குறுநூறு 6, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
வாழி ஆதன்! வாழி அவினி!
வேந்து பகை தணிக, யாண்டு பல நந்துக,
என வேட்டோளே யாயே, யாமே,
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண்துறை ஊரன் வரைக,
எந்தையும் கொடுக்க, என வேட்டேமே.

பாடல் பின்னணி: மருதத்துள் குறிஞ்சி.  தலைவன் களவு இன்பத்தையே பெரிதும் விரும்பி வரையாது (மணம் புரியாது) வெகு நாட்களாக இருந்தான்.  அதன் பின் தோழியின் வற்புறுத்தலால் தலைவியை மணந்து கொண்டான்.  ஒரு நாள் தோழியிடம், “நான் வரைவு நீட்டித்த காலத்தில் நீயிர் எவ்வாறு இருந்தீர்?” என்று வினவியபொழுது, அதற்கு மறுமொழியாக அவள் சொன்னது.

பொருளுரை:  வாழ்க ஆதன்! வாழ்க அவினி!  ‘வேந்தனின் பகைமை நீங்குவதாக, அவன் நெடுநாள் வாழ்வானாக’ என்று விரும்பினாள் என் தோழி.  ‘அகன்ற பொய்கையில் அரும்பிய தாமரையுடைய குளிர்ந்த துறையின் ஊரன் இவளை மணம் புரிவானாக, எம் தந்தையும் இவளை அவனுக்குக் கொடுப்பானாக’ என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம்.

குறிப்பு:  பழைய உரை – நின்னை எதிர்ப்பட்ட அன்றே வரைந்தாய் எனக் கொண்டு இல்லறத்திற்கு வேண்டுவன விரும்பி ஒழுகி அல்லது தலைவி பிறிதொன்றும் நினைத்திலள்.  யாங்கள் அகன்ற பொய்கைக்கு அணியாகத் தாமரையையுடைய ஊரனாதலால் அத் தண்டுறையூரன் மனைக்கு அணியாம் வண்ணம் இவளை வரைவானாக, எந்தையும் கொடுப்பானாக என விரும்பினேம் என்றவாறு.  ஈண்டுத் தலைவியை யாய் என்றது, எதிர்ப்பட்ட ஞான்றே கற்புப் பூண்டு ஒழுகலுற்று நின்ற சிறப்பு நோக்கி. உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொய்கைக்கண் அரும்பெடுத்த தாமரையுடைய தண்துறை என்றது, சிறந்த குடியின்கண் தோன்றிய எம்பெருமான் வாழ்க்கைத் துணைவியைத் தேர்ந்து கொண்டனை, அவளும் அறவாழ்க்கைக்குச் சமைந்து நின்றாள்.  அவளை மணந்துகொண்டு நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்னும் குறிப்புடையேம் யாங்கள் என்னும் உள்ளுறை பொருளுடையது என்க.  இலக்கணக் குறிப்பு – தணிக, நந்துக, கொடுக்க, வரைக – வியங்கோள் வினைமுற்றுக்கள், வேட்டோள் – வேட்டாள் என்பது வேட்டோள் எனத் திரிந்தது, யாமே – ஏகாரம் பிரிநிலை, யாயே – ஏகாரம் தேற்றம், வேட்டோளே – ஏகாரம் அசைநிலை, வேட்டேமே – ஏகாரம் அசைநிலை, எந்தை – என் தந்தை என்றதன் மரூஉ.

சொற்பொருள்:  வாழி ஆதன் வாழி அவினி – வாழ்க ஆதன்! வாழ்க அவினி!, வேந்து பகை தணிக – வேந்தனின் பகைமை நீங்குவதாக, யாண்டு பல நந்துக – அவன் நெடுநாள் வாழ்வானாக, என வேட்டோளே யாயே – என்று விரும்பினாள் என் தோழி, யாமே – நாங்கள், மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண்துறை ஊரன் வரைக எந்தையும் கொடுக்க – அகன்ற பொய்கையில் அரும்பிய தாமரையுடைய குளிர்ந்த துறையின் ஊரன் இவளை மணம் புரிவானாக எம் தந்தையும் இவளை அவனுக்குக் கொடுப்பானாக, என வேட்டேமே – என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம்

ஐங்குறுநூறு 7, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
வாழி ஆதன்! வாழி அவினி!
அறன் நனி சிறக்க, அல்லது கெடுக,
என வேட்டோளே யாயே, யாமே,
உளைப்பூ மருதத்துக் கிளைக் குருகு இருக்கும்
தண்துறை ஊரன், தன்னூர்க்
கொண்டனன் செல்க, என வேட்டேமே.

பாடல் பின்னணி: மருதத்துள் குறிஞ்சி.  தலைவன் களவு இன்பத்தையே பெரிதும் விரும்பி வரையாது (மணம் புரியாது) வெகு நாட்களாக இருந்தான்.  அதன் பின் தோழியின் வற்புறுத்தலால் தலைவியை மணந்து கொண்டான்.  ஒரு நாள் தோழியிடம், “நான் வரைவு நீட்டித்த காலத்தில் நீயிர் எவ்வாறு இருந்தீர்?” என்று வினவியபொழுது, அதற்கு மறுமொழியாக அவள் சொன்னது.

பொருளுரை:  வாழ்க ஆதன்! வாழ்க அவினி!  ‘அறச்செயல்கள் மிகவும் சிறக்கட்டும், தீய வினைகள் கெடட்டும்’ என்று விரும்பினாள் என் தோழி. ‘உளைப்பொருந்திய மலர்களையுடைய மருத மரத்தில் குருகுகள் இருக்கும் குளிர்ச்சியுடைய துறையின் ஊரன் இவளை மணம் புரிந்து கொண்டு தன் ஊர்க்கு அழைத்துச் செல்ல வேண்டும்’ என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம்.

குறிப்பு:  உள்ளுறை – தி. சதாசிவ ஐயர் உரை – உளைப்பூ மருதத்துக் கிளைக் குருகு இருக்கும் தண்துறை ஊரன் என்றது, செல்வமனைக்கண் கிளையோடு கிளைஞர் குறைவின்றி வாழும் ஊரன் என்றதாம்.  அ. தட்சிணாமூர்த்தி உரை – களவு வெளிப்படின் அலர் தோன்றும் என்றும், நொதுமலர் மகட்பேசி வரக்கூடுமென்றும் ஆயத்தார் அஞ்சினர் ஆதலின் ‘கொண்டனன் செல்க’ என விழைத்தனர்.  தலைவியின் கற்பைக் காப்பாற்ற இதனினும் வேறு வழியில்லை எனத் துணிந்தபோது தோழி உடன்போக்கினுக்கு உதவுவது அறநெறியாதலின் அங்ஙனம் வேண்டினர் என்க.  இலக்கணக் குறிப்பு – அறன் – அறம் என்பதன் போலி, சிறக்க, கெடுக, செல்க – வியங்கோள் வினைமுற்றுக்கள், வேட்டோள் – வேட்டாள் என்பது வேட்டோள் எனத் திரிந்தது, யாமே – ஏகாரம் பிரிநிலை, யாயே – ஏகாரம் தேற்றம், வேட்டோளே – ஏகாரம் அசைநிலை, வேட்டேமே – ஏகாரம் அசைநிலை, கொண்டனன் – முற்றெச்சம்.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  வாழி ஆதன் வாழி அவினி – வாழ்க ஆதன்! வாழ்க அவினி!, அறன் நனி சிறக்க – அறச்செயல்கள் மிகவும் சிறக்கட்டும், அல்லது கெடுக – தீய வினைகள் கெடட்டும், என வேட்டோளே யாயே – என்று விரும்பினாள் என் தோழி, யாமே – நாங்கள், உளைப்பூ மருதத்துக் கிளைக் குருகு இருக்கும் தண்துறை ஊரன் தன்னூர் கொண்டனன் செல்க என வேட்டேமே – உளையினுடைய மலர்களையுடைய மருத மரத்தில் குருகுகள் இருக்கும் குளிர்ச்சியுடைய துறையின் ஊரன் இவளை மணம்புரிந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம் (மருத மரம் – Arjuna Tree, Terminalia arjuna)

ஐங்குறுநூறு 8, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
வாழி ஆதன்! வாழி அவினி!
அரசு முறை செய்க, களவு இல் ஆகுக,
என வேட்டோளே யாயே, யாமே,
அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும்
பூக்கஞல் ஊரன், சூள் இவண்
வாய்ப்பதாக, என வேட்டோமே.

பாடல் பின்னணி: மருதத்துள் குறிஞ்சி.  தலைவன் களவு இன்பத்தையே பெரிதும் விரும்பி வரையாது (மணம் புரியாது) வெகு நாட்களாக இருந்தான்.  அதன் பின் தோழியின் வற்புறுத்தலால் தலைவியை மணந்து கொண்டான்.  ஒரு நாள் தோழியிடம், “நான் வரைவு நீட்டித்த காலத்தில் நீயிர் எவ்வாறு இருந்தீர்?” என்று வினவியபொழுது, அதற்கு மறுமொழியாக அவள் சொன்னது.

பொருளுரைவாழ்க ஆதன்! வாழ்க அவினி!  ‘வேந்தன் செங்கோன்மையுடன் ஆட்சி புரிவானாக, நாட்டில் களவு இல்லாது ஆகுக’ என்று விரும்பினாள் என் தோழி.  ‘அசையும் கிளைகளையுடைய மாமரத்தில் அழகிய மயில் இருக்கும் பூக்கள் நிறைந்த ஊரனின் உறுதிமொழி இப்பொழுது பொய்க்காமல் நிறைவேறுவதாக’ என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம்.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாமரத்தின்கண் அணிமயில் இருக்கும் ஊரன் என்றதற்கு, அது போல எம் பெருமானுடைய சுற்றம் கெழுமிய அறத் திருமனைக்கு விளக்காக எம்பெருமாட்டி வீற்றிருந்து அணி செய்வாளாக என்று விரும்பினேம் என்பது.  ஒளவை துரைசாமி உரை – களவின்கண் நீ பிரிந்தொழுகிய ஞான்றெல்லாம், யாம் குறிப்பாலும் வெளிப்படையாலும் வரைவு கடாவியும் நீ அக்களவே விரும்பித் தாழ்த்தவிடத்து, தலைமகள் எய்திய வேறுபாடு கண்டு நீ செய்த சூளினை மறந்தனை கொல்லோ என அஞ்சினோமாகலின், சூள் இவண் வாய்ப்பதாக என வேட்டேம் என்றாள்.  இலக்கணக் குறிப்பு – செய்க, ஆகுக, வாய்ப்பதாக – வியங்கோள் வினைமுற்றுக்கள், வேட்டோள் – வேட்டாள் என்பது வேட்டோள் எனத் திரிந்தது, யாமே – ஏகாரம் பிரிநிலை, யாயே – ஏகாரம் தேற்றம், வேட்டோளே – ஏகாரம் அசைநிலை, வேட்டேமே – ஏகாரம் அசைநிலை, மாஅத்து – அத்து சாரியை.

சொற்பொருள்:  வாழி ஆதன் வாழி அவினி – வாழ்க ஆதன்! வாழ்க அவினி!, அரசு முறை செய்க – வேந்தன் செங்கோன்மையுடன் ஆட்சி புரிவானாக, களவு இல் ஆகுக – நாட்டில் களவு இல்லாது ஆகுக, என வேட்டோளே யாயே – என்று விரும்பினாள் என் தோழி, யாமே – நாங்கள், அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும் பூக்கஞல் ஊரன் சூள் இவண் வாய்ப்பதாக என வேட்டேமே – அசையும் கிளைகளையுடை மாமரத்தில் அழகிய மயில் இருக்கும் பூக்கள் நிறைந்த ஊரனின் உறுதிமொழி இப்பொழுது பொய்க்காமல் நிறைவேறுவதாக என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம்

ஐங்குறுநூறு 9, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
வாழி ஆதன்! வாழி அவினி!
நன்று பெரிது சிறக்க, தீது இல் ஆகுக,
என வேட்டோளே யாயே, யாமே,
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்
தண்துறை ஊரன் கேண்மை,
அம்பல் ஆகற்க, என வேட்டேமே.

பாடல் பின்னணி: மருதத்துள் குறிஞ்சி.  தலைவன் களவு இன்பத்தையே பெரிதும் விரும்பி வரையாது (மணம் புரியாது) வெகு நாட்களாக இருந்தான்.  அதன் பின் தோழியின் வற்புறுத்தலால் தலைவியை மணந்து கொண்டான்.  ஒரு நாள் தோழியிடம், “நான் வரைவு நீட்டித்த காலத்தில் நீயிர் எவ்வாறு இருந்தீர்?” என்று வினவியபொழுது, அதற்கு மறுமொழியாக அவள் சொன்னது.

பொருளுரை:  வாழ்க ஆதன்! வாழ்க அவினி!  ‘நல்லவை பெரிதும் சிறப்பாக ஆகுக, தீமை இல்லாது ஆகுக’ என்று விரும்பினாள் என் தோழி.  ‘கயல் மீன்களை உண்ணும் நாரை நெற்போரில் இருக்கும் குளிர்ந்த துறையின் ஊரனுடன் இவள் கொண்ட நட்பு அம்பல் ஆகாது இருக்க’ என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம்.

குறிப்பு:  பழைய உரை – இன்பம் நுகர்ந்தவன் செல்வ மனைக்கண்ணே வைகும் வண்ணம், வரையுந்துணையும் அவன் கேண்மை அம்பலாகாது ஒழிக என விரும்பினேம் யாங்கள் என்பது.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – தலைவியின் நலன் உண்டவன் அவளை உடனே வரைந்து கொள்ள நினையாது வரைவிடை வைத்துப் பிரிந்து தன் மனைக் கண்ணே தங்கினான் எனத் தான் அக்காலத்தில் கருதியமை தோன்ற, கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் தண்துறை ஊரன் என உள்ளுறைத்தாள்.  தி. சதாசிவ ஐயர் உரை – கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் தண்துறை ஊரன் என்றது, நாரை இரை தப்பாது கவர்ந்து கொள்ளற்குக் காலம் பார்த்துத் தங்கியிருத்தல்போல அவனும் தப்பாது வரைந்து கொள்ளும் ஊரன் என்பதாம்.  ஒளவை துரைசாமி உரை – ‘அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின், அங்கு அதன் முதல்வன் கிழவனாகும்’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 139) என்பது களவியல்.  அம்பலுக்குப் பொருள் தலைமகனாயினும், அவனது தொடர்பே அதற்குக் காரணமாதல் பற்றி கேண்மை அம்பல் ஆகற்க என்றாள்.  இலக்கணக் குறிப்பு – சிறக்க, ஆகுக – வியங்கோள் வினைமுற்றுக்கள், வேட்டோள் – வேட்டாள் என்பது வேட்டோள் எனத் திரிந்தது, யாமே – ஏகாரம் பிரிநிலை, யாயே – ஏகாரம் தேற்றம், வேட்டோளே – ஏகாரம் அசைநிலை, வேட்டேமே – ஏகாரம் அசைநிலை, ஆகற்க – வியங்கோள் எதிர்மறை.

சொற்பொருள்:  வாழி ஆதன் வாழி அவினி – வாழ்க ஆதன்! வாழ்க அவினி!, நன்று பெரிது சிறக்க – நல்லவை பெரிதும் சிறப்பாக ஆகுக, தீது இல் ஆகுக – தீமை இல்லாது ஆகுக, என வேட்டோளே யாயே – என்று விரும்பினாள் என் தோழி, யாமே – நாங்கள், கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் தண்துறை ஊரன் கேண்மை அம்பல் ஆகற்க என வேட்டேமே – கயல் மீன்களை உண்ணும் நாரை நெற்போரில் இருக்கும் குளிர்ந்த துறையின் ஊரனின் நட்பு அம்பல் ஆகாது இருக்க என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம்

ஐங்குறுநூறு 10, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
வாழி ஆதன்! வாழி அவினி!
மாரி வாய்க்க, வளம் நனி சிறக்க,
என வேட்டோளே யாயே, யாமே,
பூத்த மாஅத்துப் புலால் அம் சிறுமீன்
தண்துறை ஊரன், தன்னொடு
கொண்டனன் செல்க, என வேட்டேமே.

பாடல் பின்னணி:  மருதத்துள் குறிஞ்சி.  தலைவன் களவு இன்பத்தையே பெரிதும் விரும்பி வரையாது (மணம் புரியாது) வெகு நாட்களாக இருந்தான்.  அதன் பின் தோழியின் வற்புறுத்தலால் தலைவியை மணந்து கொண்டான்.  ஒரு நாள் தோழியிடம், “நான் வரைவு நீட்டித்த காலத்தில் நீயிர் எவ்வாறு இருந்தீர்?” என்று வினவியபொழுது, அதற்கு மறுமொழியாக அவள் சொன்னது.

பொருளுரை:  வாழ்க ஆதன் வாழ்க அவினி!  ‘மழை தப்பாது பெய்வதாக, வளங்கள் மிகவும் பெருகுவதாக’ என்று விரும்பினாள் என் தோழி.  ‘பூத்த மாமரங்களையும் புலால் நாறும் சிறு மீன்களையும் உடைய குளிர்ந்த துறையின் ஊரன் இவளைத் தன்னுடன் கொண்டு செல்வானாக’ என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம்.

குறிப்பு:  பழைய உரை – இவள் நின்னை எதிர்ப்பட்ட அன்றே வரைந்தாய் எனக் கொண்டு இல்லறத்திற்கு வேண்டுவன விரும்பி ஒழுகினாள்.  யாங்கள் அவன் வரைந்துகொள்ள நினையானாயின், பூத்த மாவினையும் புலாலஞ் சிறுமீனுடைய ஊரனாதலால், அதற்கேற்ப, எம் ஊர்க்கண் அறத்தொடு நிலை வகையால் கற்புடைமையும், எதிர்ப்பாட்டினால் அலரும் கிளைப்பவாயினும், உடன்கொண்டு செல்வாயாக என விரும்பினேம் என்பது.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலர்ந்து மணங்கமழும் மாமரத்தையும் புலால் நாறும் சிறுமீனையும் ஒருங்கே தண்துறை உடைத்தாற்போன்று இவ்வூரின்கண், நின்னை அகமலர்ந்து வரவேற்கும் யாங்களும் உளேம், அலர் தூற்றும் சிறுபுன்மாக்களும் உளர்.  ஆதலால் எம்பெருமான் விரைந்து தலைவியை உடன்கொண்டு செல்க என்று விரும்பினேம் என்னும் குறிப்புடையது என்க.  இலக்கணக் குறிப்பு – வாய்க்க, சிறக்க, செல்க – வியங்கோள் வினைமுற்றுக்கள், வேட்டோள் – வேட்டாள் என்பது வேட்டோள் எனத் திரிந்தது, யாமே – ஏகாரம் பிரிநிலை, யாயே – ஏகாரம் தேற்றம், வேட்டோளே – ஏகாரம் அசைநிலை, வேட்டேமே – ஏகாரம் அசைநிலை, மாஅத்து – அத்து சாரியை, கொண்டனன் – முற்றெச்சம்.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  வாழி ஆதன் வாழி அவினி – வாழ்க ஆதன்! வாழ்க அவினி!, மாரி வாய்க்க – மழை தப்பாது பெய்வதாக, வளம் நனி சிறக்க – வளங்கள் மிகவும் பெருகுவதாக, என வேட்டோளே யாயே – என்று விரும்பினாள் என் தோழி, யாமே – நாங்கள், பூத்த மாஅத்து புலால் அம் சிறுமீன் தண்துறை ஊரன் தன்னொடு கொண்டனன் செல்க என வேட்டேமே – பூத்த மாவினையும் புலால் நாறும் சிறு மீன்களையும் உடைய குளிர்ந்த துறையின் ஊரன் இவளைத் தன்னுடன் கொண்டு செல்வானாக என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம்

வேழம் பத்து

பாடல்கள் 11–20:  தலைவனின் பரத்தமை சூழ்நிலைகள் இப்பாடல்களில் உள்ளன.  ஒளவை துரைசாமி உரை – கரும்பும் மூங்கிலும் புல் வகையில் அடங்கும்.  வேழமும் புல்லே எனத் தாவர நூலார் கூறுவர், தி. சதாசிவ ஐயர் உரை – வேழம் என்பது கொறுக்கை, ச.வே. சுப்பிரமணியன் உரை – வேழம் என்பது நாணல், கொறுக்கச்சி, கொறுக்கந்தட்டை என்ற புல்வகை.

ஐங்குறுநூறு 11, ஓரம்போகியார், மருதத் திணை தலைவி தோழியிடம் அல்லது பாணனிடம் சொன்னது
மனை நடு வயலை வேழம் சுற்றும்
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி,
நல்லன் என்றும் யாமே,
அல்லன் என்னும் என் தட மென்தோளே.

பாடல் பின்னணி:  1. வாயிலாக வந்த பாணனிடம் தலைவி சொன்னது.  2. தலைவன் தப்பி ஒழுகினும் ‘நீ புலத்தல் தகாது’ எனக் கூறிய தோழியிடம் தலைவி சொன்னது.

பொருளுரை:  மனையில் நட்டப்பட்ட வயலைக் கொடியானது, வேழத்தைச் சுற்றிக்கொண்டு வளரும் துறை பொருந்திய ஊரனின் கொடுமையை நாணி, அவனை நல்லவன் என யாம் கூறினேம்.  அவன் நல்லவன் இல்லை என என் பெரிய மெல்லிய தோள்கள் கூறுகின்றன.

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – மனைக்கண் வயலை புறத்து வேழம் சுற்றும் ஊரன் என்றது, மணமனைக்கண்ணே வைகு ஞான்றும் பரத்தையர் திறமே சூழ்வான் என்பதாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மனைநடு வயலை என்றது கட்டுக் காவலுள் அடங்கிய மனையிலே நட்டுப் பேணி வளர்க்கப்படும் வயலைக் கொடி என்பதுபட நின்றது.  இஃது அறநெறிக்கண் அடங்கி ஒழுக வேண்டியவனான தலைவனுக்கு உள்ளுறை உவமம்.  இனி, வேழம் என்றதும் கட்டுங் காவலுமின்றி மனம் போனவாறு ஒழுகும் பரத்தையர்க்கு உள்ளுறை உவமம்.  இலக்கணக் குறிப்பு – கொடுமை நாணி – கொடுமைக்கு நாணி, குவ்வுருபு தொக்கது, என்றும் – தன்மைப் பன்மை வினைமுற்று, யாமே – யாம் தன்மைப் பன்மை, ஏகாரம் அசைநிலை, என்னும் – அஃறிணைப் பன்மை வினைமுற்று, தட – உரிச்சொல், தோளே – ஏகாரம் அசைநிலை, தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

சொற்பொருள்:  மனை நடு வயலை வேழம் சுற்றும் துறை கேழ் ஊரன் கொடுமை நாணி நல்லன் என்றும் யாமே – மனையில் நட்டப்பட்ட வயலைக் கொடி வேழத்தைச் சுற்றிக்கொண்டு வளரும் துறை பொருந்திய ஊரனின் கொடுமையை நாணி அவனை யாம் நல்லவன் எனக் கூறினேம், அல்லன் என்னும் என் தட மென்தோளே – அவன் நல்லவன் இல்லை என என் பெரிய மெல்லிய தோள்கள் கூறுகின்றன

ஐங்குறுநூறு 12, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தனக்குள் சொன்னது
கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும்
துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுக தில்ல யாமே,
தோற்க தில்ல, என் தட மென் தோளே.

பாடல் பின்னணி:  வாயில்கள் வற்புறுத்தியதால் தலைவனை ஏற்றுக் கொள்ளக் கருதினாள் தலைவி.  ஆனால் அவன் பரத்தையரின் கூட்டுறவு உடையவன் என அறிந்து மனம் வருந்தித் தனக்குள் கூறியது.

பொருளுரை:  கரையின்கண் இருக்கும் வேழமானது, கரும்பு போல் பூத்திருக்கின்ற நீர்த்துறையுடைய ஊரனின் கொடுமையை யாம் நன்கு பொறுத்திருப்போம்.  நம்முடன் ஒத்துக்கொள்ளாத இந்தப் பெரிய மெல்லிய தோள்கள் மட்டும் மெலிகின்றன.  அவை தோற்கட்டும்!  யான் மட்டும் ஆற்றியிருப்பேன்!

குறிப்பு:  உள்ளுறை பழைய உரை – கரை மருங்கு நிற்கும் வேழம் வயலகத்து விளைக்கும் தீங்கரும்பு போலப் பொலியும் ஊரன் என்றது, பொது மகளிர்க்குக் குலமகளிரைப் போலச் சிறப்புச் செய்கிற்பான் என்றவாறு.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும் ஊரன் என்றது, வரம்பினுள் அடங்காமல் வரம்பின் மேல் தன் விருப்பப்படி வளரும் வேழம் சாறும் இனிமையும் அற்றதாய் உட்துளையுடையதாய் இருந்தும், அகத்தே செறிவுடையதும் ஆற்றவும் இனிமைபயப்பதும் பெரும்பயன் தருவதும் வயலகத்தே அடங்கி வாழ்வதுமாகிய கரும்புபோல் பூத்துக் காண்போரை மருட்டும் துறையை உடையனாகலின் தலைவன், அகத்தே அன்பும் இனிமையும் அற்றவராய் அகத்தே பொய்மையேயுடையரும், பயன் அற்றவரும் ஆகிய பரத்தையரின் புறத் தோற்றத்தால் மயங்கி எம்மை புறக்கணிக்கின்றான் என்பது.  துறை கேழ் ஊரன் (2) – ஒளவை துரைசாமி உரை – கெழுவென் சாரியை கேழ் எனச் ‘செய்யுள் தொடர்வயின் மெய்பெற நின்று’ கேழ் ஊரன் என முடிந்தவாறு அறிக.  ஆசிரியர் அடியார்க்கு நல்லார் ‘சாரியையாவது சொல் தொடர்ந்து செல்லும் நெறிக்கண் நின்று அதற்கு பற்றுக்கோடாக சிறிது பொருள் பயந்தும் பயவாததுமாய் நிற்பது; பொருந்துதல் என்னும் பொருண்மை சாரும்’ என்பர்.  எனவே துறை கேழ் ஊரன் என்பது துறை பொருந்திய ஊரன் என்னும் பொருண்மைத்து என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – கரும்பின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு, ஆற்றுக, தோற்க – இவை இரண்டும் வியங்கோள் வினைமுற்றுக்கள், யாமே – யாம் தன்மைப் பன்மை, ஏகாரம் அசைநிலை, தில்ல – தில் என்னும் இடைச் சொல் ஈறு திரிந்து வந்தது, ஆற்றுக தில்ல என்றவிடத்து விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்தது, தில்ல – தில் என்னும் இடைச் சொல் ஈறு திரிந்து வந்தது, தோற்க தில்ல என்றவிடத்து ஒழியிசை என்னும் பொருளில் வந்தது, தட – உரிச்சொல், தோளே – ஏகாரம் அசைநிலை.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 26).

சொற்பொருள்:  கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும் துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும் ஆற்றுக தில்ல யாமே – கரையின்கண் இருக்கும் வேழம் கரும்பு போல் பூத்திருக்கின்ற நீர்த்துறையுடைய ஊரனின் கொடுமையை யாம் நன்கு பொறுத்திருப்போம், தோற்க தில்ல – அவை தோற்கட்டும், என் தட மென் தோளே – நம்முடன் ஒத்துக்கொள்ளாத இந்தப் பெரிய மெல்லிய தோள்கள் மட்டும் மெலிகின்றன

ஐங்குறுநூறு 13, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி வாயில்களிடம் சொன்னது
பரியுடை நன்மான் பொங்குளையன்ன
அடைகரை வேழம் வெண்பூப் பகரும்,
தண்துறை ஊரன் பெண்டிர்,
துஞ்சு ஊர் யாமத்தும், துயில் அறியலரே.

பாடல் பின்னணி:  ‘தலைவனை ஏற்றுக் கொள்க’ என்று தன்னை வேண்டிய தோழி முதலிய வாயில்களிடம் தலைவி கூறியது.

பொருளுரை:  ஓட்டத்தையுடைய நல்ல குதிரையின் தலையில் அணிந்த விரிந்த கவரியைப் போன்ற வெள்ளை மலர்களை வேழம் கொடுக்கும் (பயக்கும்) குளிர்ந்த நீர்த்துறையை உடைய ஊரனின் பரத்தையர், ஊரில் உள்ளவர்கள் யாவரும் உறங்கும் இரவு வேளையிலும் உறங்காமல் விழித்திருப்பார்கள்.

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – பரியுடை நன்மான் தலைக்கணிந்த வெண்கவரிப் போல வேழம் வெண்பூவைக் கொள்வாரைக் குறித்துக் கொடுக்கும் ஊரன் என்றது, நன்றுபோலக் காட்டித் தம் நலத்தினை விற்பார் வாழும் ஊர் என்றவாறு.  அடைகரை (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீரடைகரை, ஒளவை துரைசாமி உரை – அடையே கரையே ஆகலினாலும் அடையாகிய கரையென ஒன்றையொன்று சிறப்பித்து நிற்பதனாலும், இஃது இருபெயரொட்டுப் பண்புத் தொகையாம்.  மான் (1) – ஒளவை துரைசாமி உரை – மா, குதிரை, ‘னகரம் ஒற்றும் மாவும் ஆவும்’ (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 231) என்றதனால் மான் என நின்றது.  இலக்கணக் குறிப்பு – பரி – பரிதல் என்று பொருள் தரும் முதனிலைத் தொழிற் பெயர், பொங்குளை – வினைத்தொகை, அடைகரை – இரு பெயரொட்டுப் பண்புத் தொகை, யாமத்தும் – உம்மை உயர்வு சிறப்பு, துஞ்சு ஊர் – ஊர் துஞ்சு என்பது முன்பின்னாகத் தொக்கது, ஊர் – ஆகுபெயர் ஊரில் உள்ளவர்களுக்கு, அறியலரே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்பரியுடை நன்மான் பொங்கு உளையன்ன அடைகரை வேழம் வெண்பூப் பகரும் தண்துறை ஊரன் பெண்டிர் – ஓட்டத்தையுடைய நல்ல குதிரையின் தலையில் அணிந்த விரிந்த கவரியைப் போன்ற வெள்ளை மலர்களை வேழம் கொடுக்கும் (பயக்கும்) குளிர்ந்த நீர்த்துறையை உடைய ஊரனின் பரத்தையர், துஞ்சு ஊர் யாமத்தும் துயில் அறியலரே – ஊரில் உள்ளவர்கள் யாவரும் உறங்கும் இரவு வேளையிலும் உறங்காமல் விழித்திருப்பார்கள்

ஐங்குறுநூறு 14, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
கொடிப் பூ வேழம் தீண்டி அயல
வடுக்கொண் மாஅத்து வண் தளிர் நுடங்கும்
அணித்துறை ஊரன் மார்பே,
பனித் துயில் செய்யும் இன் சாயற்றே.

பாடல் பின்னணி:  தலைவியின் புணர்ச்சி வேட்கையை உணர்ந்த தோழி ‘அவன் கொடுமை நினையாது, அவனை எண்ணி நீ ஆற்றாளாய் இருப்பது எதனால்?’ என வினவியபோது, ‘அவன் கொடியவனாக இருப்பினும் அவன் மார்பு குளிர்ந்த துயிலைச் செய்யும் சாயலை உடையது ‘ என்று தலைவி சொன்னது.

பொருளுரை:  நீண்ட மலர்களையுடைய வேழம் தீண்டுதலால், அருகில் உள்ள வடுக்கள் கொண்ட மாமரத்தின் வளமான தளிர்கள் அசையும் அழகிய துறையையுடைய ஊரனின் மார்பு, குளிர்ந்த துயில் உண்டாவதற்குரிய இனிய மென்மை இயல்பை உடையது.

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – நீண்ட பூவினுடைய வேழம் தீண்டுதலான் வடுக்கொண் மாஅத்து வண்தளிர் நுடங்குமென்றது, பரத்தையரால் தனக்கு உளதாகிய மெலிவு கூறியவாறு.  இலக்கணக் குறிப்பு – தீண்டி – தீண்ட என்ற எச்சத்தின் திரிபு, மார்பே – பிரிநிலை, சாயற்றே – ஏகாரம் அசைநிலை.  சாயற்று – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சாயலை உடையது.  சாயல் – ஐம்பொறியால் நுகரும் மென்மை.  ஒளவை துரைசாமி உரை – சாயல் என்னும் உரிச்சொல் மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐந்து பொறியானும் நுகரப்படும் மென்மையினை உணர்த்தும் என ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறுவர்.

சொற்பொருள்கொடிப் பூ வேழம் தீண்டி அயல வடுக்கொண் மாஅத்து வண் தளிர் நுடங்கும் அணித்துறை ஊரன் மார்பே – நீண்ட மலர்களையுடைய வேழம் தீண்ட அருகில் உள்ள வடுக்கள் கொண்ட மாமரத்தின் வளமான தளிர்கள் அசையும் அழகிய துறையையுடைய ஊரனின் மார்பு, பனித் துயில் செய்யும் இன் சாயற்றே – குளிர்ந்த துயில் உண்டாவதற்குரிய இனிய மென்மை இயல்பை உடையது

ஐங்குறுநூறு 15, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
மணலாடு மலிர்நிறை விரும்பிய ஒண் தழைப்
புனல் ஆடு மகளிர்க்குப் புணர் துணை உதவும்,
வேழ மூதூர் ஊரன்,
ஊரன் ஆயினும், ஊரன் அல்லன்னே.

பாடல் பின்னணி:  தலைவியின் வேறுபாட்டிற்குக் காரணம் கேட்ட தோழியிடம் தலைவி சொன்னது.

பொருளுரை:  மணலை அலைத்துக்கொண்டு ஓடும் நிறைந்த நீரில் ஆடும் ஒளிரும் தழை ஆடையை அணிந்த மகளிர்க்கு, அவர்கள் விரும்பும் தெப்பத்தைத் தந்து உதவும் வேழம் வளரும் பழைய ஊரின் தலைவன், ஊரில் உறைபவன் ஆயினும், அவனுடைய பரத்தமையினால், அவன் ஊரில் உள்ளவன் இல்லை.

குறிப்பு:  தெப்பம் – நீர் விளையாட்டுக்கு மிதவையாக உதவுவது.  விரும்பிய (1) – ஒளவை துரைசாமி உரை – விரும்பிய ஒள்ளிய தழை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மகளிர் வேண்டுகின்ற தெப்பம்.  உள்ளுறை – பழைய உரை – புனலாடும் மகளிர்க்குப் புணர்ந்த துணையை உதவுகின்ற வேழத்தையுடைய ஊரன் ஆதலால் புனலாடும் பரத்தையர்க்கு வேழம் செய்வனவெல்லாம் செய்வான் (அவர்களுக்குத் தெப்பமாக இருப்பான்) என்பதாம், புலியூர்க் கேசிகன் உரை – வேழப் புணை புனலாடு மகளிர்க்குப் பற்றும் துணையாகி விளங்குதலே போலத் தலைவனும் பற்றும் துணையாகி ஒழுகுதலால் அவன் அவற் பால் செல்லும் மனத்தினன் அன்றி, நம்பாற் கலந்த உளத்தன் ஆகாமையின் ‘ஊரன் அல்லன்’ என்கிறாள்.  மணலாடு (1) – ஒளவை துரைசாமி உரை – மணலடு என்பது மணலாடு என நின்றது.  மலிர்நிறை (1) – ஒளவை துரைசாமி உரை – நீர்ப்பெருக்கு, வினைத்தொகை, மலிர்தல் நிறைதலுமாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மிக்க வெள்ளம்.  இலக்கணக் குறிப்பு – மலிர்நிறை – வினைத்தொகை, ஆயினும் – உம்மை எதிர்மறை எச்சமாய் எதிர்மறை முடிபு கொண்டது (எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின – தொல்காப்பியம், சொல்லதிகாரம் 435), அல்லன்னே – விரித்தல் விகாரம்.  புணர் துணை (2) – அ. தட்சிணாமூர்த்தி உரை – புணர் துணை என்றது வேழத்தால் செய்யப்பட்ட தெப்பமாகும்.  இனி, புணர்துணையாகும் தலைவன் என்று பொருள் கூறலும் உண்டு.

சொற்பொருள்மணலாடு மலிர்நிறை விரும்பிய ஒண் தழைப் புனல் ஆடு மகளிர்க்குப் புணர் துணை உதவும் வேழ மூதூர் ஊரன் – மணலை அலைத்துக்கொண்டு ஓடும் நிறைந்த நீரில் ஆடும் ஒளிரும் தழை ஆடையை அணிந்த மகளிர்க்கு அவர்கள் விரும்பும் தெப்பத்தைத் தந்து உதவும் வேழம் வளரும் பழைய ஊரின் தலைவன், ஊரன் ஆயினும் ஊரன் அல்லன்னே – ஊரில் உறைபவன் ஆயினும் அவனுடைய பரத்தமை ஒழுக்கத்தால் அவன் ஊரில் உள்ளவன் இல்லை

ஐங்குறுநூறு 16, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தூது வந்த பாணனிடம் சொன்னது
ஓங்குபூ வேழத்துத் தூம்பு உடைத் திரள்கால்
சிறு தொழு மகளிர் அஞ்சனம் பெய்யும்
பூக்கஞல் ஊரனை உள்ளிப்,
பூப் போல் உண்கண் பொன் போர்த்தனவே.

பாடல் பின்னணி:  வாயிலாக வந்த பாணன் முதலியோரிடம் தோழி சொன்னது.  வாயில் மறுத்தது.

பொருளுரை:  உயர்ந்த மலர்களையுடை வேழத்தின் உட்டுளையுடைய திரண்ட தண்டில் சிறிய பணிகள் செய்யும் மகளிர் அஞ்சனத்தை இட்டு வைக்கும் மலர்கள் நிறைந்த ஊரனை எண்ணி, இவளுடைய மலர்போன்ற மையிட்ட கண்களில் பொன்னைப் போன்ற பசலை படர்ந்தது.

குறிப்புபழைய உரை – ஓங்கு பூ ………………….பூக்கஞல் ஊரன் என்றது இழிந்தார்க்குப் பயன்படும் ஊரன் என்றவாறு.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – சிறுதொழுமகளிர் தம் அஞ்சனம் கெடாதவாறு பெய்து வைதற்கு வேழம் பயன்படுமாறு போல, பரத்தையர் தம் நலம் கெடாதவாறு கூடியிருந்து பயன் நுகரும் வகையில் அவர்கட்கு எளியனாய் இயைந்து தலைவன் ஒழுகுகின்றான் எனக் கொள்க.  இலக்கணக் குறிப்பு – ஓங்குபூ, திரள்கால் – வினைத் தொகைகள், பொன் – ஆகுபெயர் பசலைக்கு, போர்த்தனவே – ஏகாரம் அசைநிலை.  ஓங்குபூ வேழத்து (1) – உ. வே. சாமிநாதையர் உரை – ஓங்குபூ வேழத்து என்றது இழிந்தார்க்குப் பயன்படும் ஊரன் என்றது.  பூக்கஞல் (3) – தி. சதாசிவ ஐயர் உரை – பொலிவு நிறைந்த, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலர் நிரம்பிய, ஒளவை துரைசாமி உரை – பூக்கள் நிறைந்த.

சொற்பொருள்:  ஓங்குபூ வேழத்துத் தூம்பு உடைத் திரள்கால் சிறு தொழு மகளிர் அஞ்சனம் பெய்யும் பூக்கஞல் ஊரனை உள்ளி – உயர்ந்த மலர்களையுடை வேழத்தின் உட்டுளையுடைய (உள்ளே துளையுடைய) திரண்ட தண்டில் சிறிய பணிகள் செய்யும் மகளிர் அஞ்சனத்தை (கண் மையை) இட்டு வைக்கும் மலர்கள் நிறைந்த ஊரனை எண்ணி, பூப் போல் உண்கண் பொன் போர்த்தனவே – மலர்போன்ற மையிட்ட கண்களில் பொன்னைப் போன்ற பசலை படர்ந்தது

ஐங்குறுநூறு 17, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
புதர் மிசை நுடங்கும் வேழ வெண் பூ
விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன்,
புதுவோர் மேவலன் ஆகலின்,
வறிதாகின்று, என் மடங்கெழு நெஞ்சே.

பாடல் பின்னணி:  அவளின் ஆற்றாமைக்குக் காரணம் வினவிய தோழியிடம் தலைவி சொன்னது.

பொருளுரை:  புதர்களின் மேலே அசையும் வேழத்தின் வெள்ளை மலர்கள் வானத்தில் பறக்கும் குருகுகளைப் போன்று தோன்றும் ஊரின் தலைவன் பரத்தையரை விரும்பிச் செல்கின்றான்.  அதனால் என் மட நெஞ்சம் வருந்துகின்றது.

குறிப்பு:  பழைய உரை – புறத்தொழுக்கம் உளதாகிய துணையே அன்றி, நாடோறும் கனவில் வந்து வருத்துதலும் உடையனாதலால், என் நெஞ்சு பெருமை இழந்து மெலிகின்றது என்பதாம்.  புதன்மிசையே நுடங்கும் வேழ வெண்பூ கரிதான விசும்பின்கண்ணே பறக்கும் குருகு போலத் தோன்றும் ஊரன் என்றது, தன்மை தோன்றாது ஒழுகுவாரையுடையான் என்றவாறு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முட் புதரிலே நின்று அதன் மேல் அசையும் மணமற்ற இழிந்த வேழ வெண்பூ தூயதான வானத்தில் பறக்கும் சிறந்த அன்னம் போலக் காணப்படுதல் போன்று இவனுக்கும் இழிகுலத்தில் தோன்றி நடிக்கும் பரத்தையர், தூயவரும் சிறந்தவருமாகிய குலமகளிர் போலக் காணப்படுகின்றனர் என்பதாம்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நாள்தோறும் புதிய புதிய பரத்தையரை விரும்பும் இயல்புடையவன்.  இலக்கணக் குறிப்பு – குருகின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருள் தந்தது, நெஞ்சே – ஏகாரம் அசைநிலை.  வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40). 

சொற்பொருள்:  புதர் மிசை நுடங்கும் – புதர்களின் மேலே அசையும், வேழ வெண் பூ – வேழத்தின் வெள்ளை மலர்கள், விசும்பு ஆடு குருகின் தோன்றும் – வானத்தில் பறக்கும் குருகுகளைப் போன்று தோன்றும், ஊரன் – ஊரில் உள்ளவன், புதுவோர் மேவலன் ஆகலின் – புதிய பெண்களை விரும்புவதால், வறிதாகின்று என் மடங்கெழு நெஞ்சே – என் மடமையுடைய நெஞ்சு வருந்துகின்றது

ஐங்குறுநூறு 18, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவி தலைவனின் தூதுவர்களிடம் (வாயில்களிடம்) சொன்னது
இருஞ்சாய் அன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி ஊரன்,
பொருந்தும் மலரன்ன என் கண் அழப்
பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே?

பாடல் பின்னணி:  தலைவனின் வாயிலாக வந்தவர்களிடம் தலைவனின் கொடுமை கூறி வாயில் மறுத்தது.

பொருளுரை:  கரிய தண்டாங்கோரைப்புல் போன்ற செருந்தியுடன், நாணலானது கரும்பினைப் போல் அசைகின்ற வயல்களை உடைய ஊரன், பிரிய மாட்டேன் என்று கூறியபின்,  பொருந்தும் மலர்களைப் போல் உள்ள என் கண்கள் அழுமாறு என்னைப் பிரிந்து விட்டான்.

குறிப்பு:  பழைய உரை – செருந்திப் பூவொடு வேழம் கரும்புபோல் அலமரும் ஊரன் என்றது தம் பாங்கியரோடு பொதுமகளிர் குலமகளிரைப் போலத் தருக்கி ஒழுகும் ஊரன் என்றவாறு.  உள்ளுறை  – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வேழமானது தன்னைப் போன்ற பயனற்ற தண்டாங்கோரையோடும் நெட்டிக்கோரையோடும் சுழன்றாற் போன்று இழிந்த பரத்தையர் தம் தோழியரோடு குலமகளிரைப் போலத் தருக்கித் திரிகின்றமையால் தலைவன் அவர் மயக்கிற்பட்டுத் தன் உறுதிமொழியையும் தப்பி ஒழுகாநின்றான் என்பதாம்.  சாய் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை, அ. தட்சிணாமூர்த்தி உரை, தி. சதாசிவ ஐயர் உரை – தண்டான்கோரை.  செருந்தி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை, தி. சதாசிவ ஐயர் உரை – பஞ்சாய்க்கோரை, அ. தட்சிணாமூர்த்தி உரை – நெட்டிக்கோரை.  பொருந்தும் மலர் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மணம் பொருந்திய தாமரை மலர், ஒளவை துரைசாமி உரை – அழகிய மலர், அ. தட்சிணாமூர்த்தி உரை – இணைந்த மலர்கள்.  இலக்கணக் குறிப்பு – அன்ன – உவம உருபு, கரும்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருள் தந்தது, என்றே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  இருஞ்சாய் –  கரிய தண்டாங்கோரைப் புல், அன்ன – போல்,  செருந்தியொடு – நெட்டிக்கோரையுடன், பஞ்சாய்க்கோரையுடன், வேழம் – நாணல், கரும்பின் அலமரும் – கரும்பினைப் போல் ஆடும், கழனி – வயல்,  ஊரன் – ஊரில் உள்ளவன், பொருந்தும் மலரன்ன – பொருந்தும் பூக்களைப்போல், அழகிய மலர்களைப் போல், தாமரை மலர்களைப் போல், என் கண் அழ – என் கண்கள் அழுமாறு, பிரிந்தனன் அல்லனோ – பிரிந்தான் அல்லவா, பிரியலென் என்றே – பிரியமாட்டேன் என்று கூறியபின்

ஐங்குறுநூறு 19, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
எக்கர் மாஅத்துப் புதுப் பூம் பெருஞ்சினை
புணர்ந்தோர் மெய்ம் மணங்கமழும் தண் பொழில்,
வேழ வெண்பூ வெள்ளுளை சீக்கும்
ஊரன் ஆகலின், கலங்கி,
மாரி மலரின் கண் பனி உகுமே.

பாடல் பின்னணி:  தலைவன் பரத்தையருடன் உறைதலைக் கண்டு வருந்தினாள் தலைவி.  அது கண்ட தோழி, ‘அவன் முன்பு நெடுந்தொலைவில் தங்கியபோது அப்பிரிவைப் பொறுத்த நீ, இப்பொழுது சில நாட்கள் பிரிவிற்கு வருந்துவது ஆகாது’ என்றபோது, தலைவி சொன்னது.

பொருளுரை:  நீரால் குவிக்கப்பட்ட மணல் மேட்டில் மாமரத்தின் புதிய மலர்களையுடைய பெரிய கிளை, புதிதாகக் கூடிய மகளிரின் மணம் போன்று கமழும் குளிர்ந்த சோலையில் வேழத்தின் வெள்ளை மலர்களின் துய் அம் மாமரத்தின் அரும்புகளை உரசும் ஊரன் ஆதலால், கலங்கி மழையில் நனைந்த மலர்கள் நீரை வடிப்பதுபோல் என்னுடைய கண்கள் கண்ணீரை வடிக்கின்றன.

குறிப்பு:  பழைய உரை – மாங்கொம்பு பூத்து வதுவை மகளிர் மெய்ம்மணங்கமழக் கடவ பொழிலை அம்மலர் அரும்பாகிய பருவத்தே வேழங்களின் பூத் துடைக்கும் ஊரன் என்றது, சேணிடைப் பிரிந்து வந்து தன் உடனாய் நிகழ்கின்ற பருவத்து இன்பங்கள் நுகராமல் இடையே விலக்குகின்ற பரத்தையரை உடையான் என்றவாறு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாமரத்தின் சினைக்கண் புதுவதாக அரும்பும் நறுமணமுடைய மலரை அதன்கீழ் வளர்ந்துவரும் வேழத்தினது மணமற்ற இழிந்த பூத்துடைத்து அழித்தல் போன்று, சேணிடைப் பிரிந்துபோய் மீண்ட தலைவனோடு நான் புதிய இன்பம் நுகர்வதனை, அன்பும் பயனும் இல்லாத பரத்தையர் அவனை மடக்கிக் கொண்டு அழித்தொழியா நின்றனர் என்பதாம்.  புணர்ந்தோர் மெய்ம் மணங்கமழும் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புதுவதாக மணந்த மணமகளிர் மெய்போன்று நறுமணம் கமழ்கின்ற, அ. தட்சிணாமூர்த்தி உரை – திருமணத்தில் கூடிய பெண்களின் உடல்கள் மணப்பது போல், வதுவையில் கூடிய மகளிரது மெய்ம்மணம் கமழும், தி. சதாசிவ ஐயர் உரை – வதுவை மகளிர் மெய் மணம் கமழும்.  உளை (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலரினது துய் (பஞ்சு), ஒளவை துரைசாமி உரை – பூவின் இதழாகிய உளை.  இலக்கணக் குறிப்பு – மலரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, உகுமே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  எக்கர் மாஅத்துப் புதுப் பூம் பெருஞ்சினை புணர்ந்தோர் மெய்ம் மணங்கமழும் தண் பொழில் வேழ வெண்பூ வெள்ளுளை சீக்கும் ஊரன் ஆகலின் – நீரால் குவிக்கப்பட்ட மணல் மேட்டில் மாமரத்தின் புதிய மலர்களையுடைய பெரிய கிளை புதிதாகக் கூடிய மகளிரின் மணம் போன்று கமழும் குளிர்ந்த சோலையில் வேழத்தின் வெள்ளை மலர்களின் துய் அம் மாமரத்தின் அரும்புகளை உரசும் ஊரன் ஆதலால், கலங்கி மாரி மலரின் கண் பனி உகுமே – கலங்கி மழையில் நனைந்த மலர்கள் நீரை வடிப்பதுபோல் என்னுடைய கண்கள் கண்ணீரை வடிக்கின்றன

ஐங்குறுநூறு 20, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
அறுசில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்
காம்பு கண்டன்ன தூம்பு உடை வேழத்துத்
துறை நணி ஊரனை உள்ளி, என்
இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே.

பாடல் பின்னணி:  தலைவனின் வாயிலாக வந்து தலைவனை ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினாள் தோழி.  தலைவி வாயில் மறுத்து உரைத்தது.

பொருளுரை:  ஆறாகிய சில கால்களையும் அழகிய சிறகுகளையும் உடைய தும்பி, நூறு இதழ்களைக் கொண்ட தாமரை மலர்களில் இட்டு வைத்த முட்டைகளை அழிக்கும் மூங்கிலை ஒத்த உட்டுளையுடைய வேழத்தையுடைய துறையின் அண்மையில் உள்ள ஊரையுடைய தலைவனை எண்ணி, என்னுடைய முன்கையில் அணியப்பட்ட அழகிய ஒளியுடைய வளையல்கள் நில்லாது நெகிழ்ந்து ஓடும்.

குறிப்பு:  பழைய உரை – தாமரைப் பூவகத்து உளதாகிய தும்பிச் சினையை வேழம் சீக்கும் என்றது, தன்மாட்டு என் புதல்வன் உறைதலையும் விலக்குவாராகிய பொதுமகளிரை உடையான் என்றவாறு.  சினைச் சேக்கும் என்று பாடமோதுநர் தும்பிச்சினை வருந்த வேழம் தங்கும் என்று பொருளுரைப்ப.  நூற்றிதழ்த் தாமரை (2) – ஒளவை துரைசாமி உரை – நூறாகிய பல இதழ்கள், புறநானூறு 27 ஒளவை துரைசாமி உரை – நூறாகிய இதழ் என்றவிடத்து நூறென்பது அப்பொருள் உணர்த்தும் எண்ணைக் குறியாது பல என்னும் பொருள் குறித்து நின்றது, ‘சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ் நூற்றிதழ்’ என பிறரும் கூறுப (புறநானூறு 27), அ. தட்சிணாமூர்த்தி உரை – நூறு என்பது மிகுதி என்ற பொதுவான பொருள் தந்தது.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – தாமரைப் பூவகத்து உளவாகிய தும்பியின் சினையை வேழத்தின் பூச் சிதைக்கும் என்றது, தலைமகள்பால் தங்கின தலைமகனைப் பரத்தையர் விலக்குவர் என்றவாறு.  இலக்கணக் குறிப்பு – பூச்சினை – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை, ஓடும்மே – விரித்தல் விகாரம், எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21).

சொற்பொருள்:  அறுசில் கால அம் சிறைத் தும்பி நூற்றிதழ்த் தாமரைப் பூச் சினை சீக்கும் காம்பு கண்டன்ன தூம்பு உடை வேழத்துத் துறை நணி ஊரனை உள்ளி – ஆறாகிய சில கால்களையும் அழகிய சிறகுகளையும் உடைய தும்பி நூறு இதழ்களைக் கொண்ட தாமரை மலர்களில் இட்டு வைத்த முட்டைகளை அழிக்கும் மூங்கிலை ஒத்த உட்டுளையுடைய (உள்ளே துளையுடைய) வேழத்தையுடைய துறையின் அண்மையில் உள்ள ஊரையுடைய தலைவனை எண்ணி (சினை – முட்டை), என் இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே – என்னுடைய முன்கையில் அணியப்பட்ட அழகிய ஒளியுடைய வளையல்கள் நில்லாது நெகிழ்ந்து ஓடும் (ஏர் – அழகு)

கள்வன் பத்து (களவன் பத்து)

பாடல்கள் 21–30:  இவை நண்டு பற்றினவை.  பாடல் 27 தலைவன் பொருள் ஈட்டச் சென்றது பற்றியது.  பாடல்கள் 28, 29, 30 – திருமணத்திற்கு முன்பு உள்ள சூழ்நிலை உடையன.  மருதத்துள் குறிஞ்சி.  தலைவியும் தோழியும் ஒருவரை ஒருவர் ‘அன்னாய்’ என்றும் ‘தோழி’ என்றும் அழைப்பர்.  நச்சினார்க்கினியரின் கலித்தொகை உரை நூலில் ‘களவன்’ என்று உள்ளது (பாடல் 88).  பொ. வே. சோமசுந்தரனார், வேங்கடசாமி நாட்டார், ஒளவை துரைசாமி, உ. வே. சாமிநாதையர் ஆகியவர்களின் அகநானூறு, ஐங்குறுநூறு உரை நூல்களில் ‘கள்வன்’ என்று உள்ளது.  அன்னை – அன்னை என்னை (என் ஐ) என்றலும் உளவே தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்மனார் புலவர் (தொல்காப்பியம், பொருளியல் 50).  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது. ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

ஐங்குறுநூறு 21, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும்,
தண்துறை ஊரன் தெளிப்பவும்,
உண்கண் பசப்பது, எவன் கொல் அன்னாய்?

பாடல் பின்னணி:  ‘புறத்தொழுக்கம் எனக்கு இனி இல்லை’ என்று தலைவன் தெளிப்பவும், ‘அஃது உளது’ என்று வேறுபடும் தலைவியிடம் தோழி சொன்னது.

பொருளுரை:  அன்னையே!  முள்ளிச் செடிகள் நீண்டு வளர்ந்துள்ள பழைய நீர்நிலையின் மணல் அடைந்த கரையில் உள்ள புள்ளிகளையுடை நண்டுகள், ஆம்பலின் தண்டுகளை அறுக்கும் குளிர்ந்த நீர்த்துறையையுடைய ஊரின் தலைவன், “புறத்தொழுக்கம் எனக்கு இல்லை” எனத் தெளிவாகக் கூறியும், உன்னுடைய மையிட்ட கண்கள் பசலை அடைவது எதனால்?

குறிப்புபழைய உரை – முள்ளி நீடிய ………………… ஊரன் என்றது தனக்கு உரித்தாகிய இல்லின்கண் ஒழுகிப் பரத்தையரோடு தொடர்ச்சி அறுப்பான் என்றவாறு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நண்டு ஆம்பலின் தண்டை அறுத்து தனக்குரித்தாகிய அடைகரையின் கண்ணே உறையுமாறு போன்று தலைவனும் இனி பரத்தையர் தொடர்பை விடுத்து இல்லின்கண் எஞ்ஞான்றும் நின்னைப் பிரியாது உறைவான்.  இலக்கணக் குறிப்பு – அடைகரை – இரு பெயரொட்டுப் பண்புத் தொகை, ஆம்பல் – ஆம்பல் தண்டினைக் குறித்தமையின் ஆகுபெயர், கொல் – அசைநிலை.  அடைகரை (1) – மணல் அடைந்த கரை, நீர் அடைந்த கரை.

சொற்பொருள்:  முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப் புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும் தண்துறை ஊரன் தெளிப்பவும் – முள்ளிச் செடிகள் நீண்டு வளர்ந்துள்ள பழைய நீர்நிலையின் மணல் அடைந்த கரையில் உள்ள புள்ளிகளையுடை நண்டுகள் ஆம்பலின் தண்டுகளை அறுக்கும் குளிர்ந்த நீர்த்துறையையுடைய ஊரின் தலைவன் ‘புறத்தொழுக்கம் எனக்கு இல்லை’ எனத் தெளிவாகக் கூறியும், உண்கண் பசப்பது எவன் கொல் அன்னாய் – உன்னுடைய மையிட்ட கண்கள் பசலை அடைவது எதனால் அன்னை, உண்கண் பசப்பது

ஐங்குறுநூறு 22, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அள்ளல் ஆடிய புள்ளிக் களவன்
முள்ளி வேர் அளைச் செல்லும் ஊரன்.
நல்ல சொல்லி மணந்து, இனி
நீயேன் என்றது எவன் கொல் அன்னாய்?

பாடல் பின்னணி:  களவினில் புணர்ந்து பின்பு வரைந்து கொண்ட தலைவன் புறத்தொழுக்கம் பூண்டு பிரிந்தமை கண்டு வருந்திய தலைவி, தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  அன்னையே!  சேற்றில் விளையாடும், புள்ளிகளை உடைய நண்டுகள் முள்ளிச் செடியின் வேர்களில் உள்ள சிறிய பொந்துகளில் ஒளிந்துக்கொள்ளும் நாட்டவனான நம் தலைவன், நல்ல சொற்களைக் கூறி என்னுடன் இணைந்து, “உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்” என்று என்னிடம் சொன்னான்.  இப்பொழுது பிரிந்துப் போய் விட்டான்.  அவன் கூறிய உறுதிமொழி இப்பொழுது என்ன ஆயிற்று?

குறிப்பு:  பழைய உரை – நல்ல …………………..அன்னாய் என்றது, இக்காலத்து இங்ஙனம் ஒழுகுகின்றான்.  அக்காலத்து அங்ஙனம் கூறியது என்கொல் என்றவாறு.  சேறாடிய கள்வன் முள்ளி வேரளைச் செல்லும் என்றது, பிறர் கூறும் அலரஞ்சாது பரத்தையர் மனைக்கட் செல்வான் என்பதாம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சேற்றில் அளைந்த நண்டு அச்சேற்றோடு அளையில் செல்லுமாறுபோல இவனும் ஊரவர் தூற்றும் பழி தன் மேலதுவாகவே நாணாது பரத்தையர் இல்லின்கண் செல்கின்றான் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – வேரளை – ஏழாம் வேற்றுமை, கொல் – அசைநிலை.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

சொற்பொருள்:  அள்ளல் – சேறு,  ஆடிய – விளையாடிய,  புள்ளிக் களவன் – புள்ளியுடைய நண்டு (களவன், கள்வன் = நண்டு), முள்ளி வேர் – முள்ளிச் செடியின் வேரில்,  அளை – ஒளிந்துக் கொள்ளும் இடம், பொந்து, செல்லும் – செல்லும், ஊரன் – ஊரன், நல்ல சொல்லி மணந்து – நல்ல சொற்களைக் கூறி என்னுடன் இணைந்தான்/என்னை மணந்தான், இனி – இனி, நீயேன் என்றது – உன்னை விட்டுப் பிரிய மாட்டேன் என்று சொன்னது, எவன் கொல் அன்னாய் – என்ன ஆயிற்று அன்னையே

ஐங்குறுநூறு 23, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
முள்ளி வேர் அளைக் களவன் ஆட்டிப்
பூக்குற்று எய்திய புனல் அணி ஊரன்,
தேற்றம் செய்து நப்புணர்ந்து, இனித்
தாக்கணங்கு ஆவது, எவன் கொல் அன்னாய்?

பாடல் பின்னணி:  களவினில் புணர்ந்து பின்பு வரைந்து கொண்ட தலைவன் புறத்தொழுக்கம் பூண்டு பிரிந்தமை கண்டு வருந்திய தலைவி, தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  அன்னையே!  மகளிர் முள்ளிச் செடியின் வேர் பொந்துகளில் வாழும் நண்டுகளை விரட்டித் துன்புறுத்தி அதன்பின் மலர்களைப் பறித்து விளையாடும் இடமான நீர்நிலைகள் அழகு செய்த ஊரின் தலைவன், முன்பு தெளிவித்து நம்முடன் கூடி, இப்பொழுது தீண்டி வருத்தும் கடவுள் போல் மாறியது எதனால்? 

குறிப்பு:   பழைய உரை – தன்னூர் விளையாட்டு மகளிர் அளையின்கண் வாழும் அலவனை அலைத்துப் பூக்குற்று விளையாடினாற் போலத் தன் மனைக்கண் வாழும் நம்மை வருத்திப் புறத்துப் போய் இன்பம் நுகர்வான் என்றவாறு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மகளிர் தம் வளையகத்தே வாழும் நண்டினை அலைத்துப் பின்னும் பல்வேறு மலர்களையும் பறித்து வருமாறு போல இவனும் இல்லின்கண் வதியும் என்னையும் வருத்திப் பல்வேறு பரத்தையரையும் நுகர்ந்து வருகின்றான் என்பது.  இலக்கணக் குறிப்பு – நப்புணர்ந்து – நம்புணர்ந்து என்றது நப்புணர்ந்து என்றானது வலித்தல் விகாரம், கொல் – அசைநிலை.

சொற்பொருள்:  முள்ளி வேர் அளைக் களவன் ஆட்டிப் பூக்குற்று எய்திய புனல் அணி ஊரன் தேற்றம் செய்து நப்புணர்ந்து – முள்ளிச் செடியின் வேர் பொந்துகளில் வாழும் நண்டுகளை விரட்டித் துன்புறுத்தி அதன்பின் மலர்களைப் பறித்து வரும் இடமான நீர்நிலைகள் அழகு செய்த ஊரின் தலைவன் முன்பு தெளிவித்து நம்முடன் கூடி, இனித் தாக்கணங்கு ஆவது எவன் கொல் அன்னாய் – இப்பொழுது தீண்டி வருத்தும் கடவுள் போல் மாறியது எதனால் அன்னையே

ஐங்குறுநூறு 24, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு,
பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்,
எய்தினன் ஆகின்று கொல்லோ? மகிழ்நன்
பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
நலங்கொண்டு துறப்பது, எவன் கொல் அன்னாய்?

பாடல் பின்னணி:  பரத்தையருள்ளும் ஒருத்தியை விட்டு ஒருத்தியைப் பற்றி ஒழுகுகின்றான் எனக் கேட்ட தோழி, வாயிலாக வந்தவர்கள் கேட்கும்வண்ணம் தலைவியிடம் சொன்னது.

பொருளுரை:  அன்னையே!  தாய் சாகும்படி பிறக்கும் புள்ளிகளை உடைய நண்டுகளுடன் தன் பிள்ளைகளை உண்ணும் முதலைகளையும் உடையது அவனுடைய ஊர்.  அவனுடைய ஊரின் கொடுமைகளைத் தானும் அடைந்தவனோ நம் தலைவன்? பொன் வளையல்கள் அணிந்த மகளிரின் நலத்தை உண்டு விட்டு, அவன் அவர்களைத் துறப்பது யாது கருதி அன்னையே?

குறிப்பு:  பழைய உரை – தாய்சாப் பிறக்கும் …………………….. அவனூர் என்றது, தொன்னலம் சாம்வண்ணம் பிறக்கும் பொய்யுடனே செய்தன சிதையத் தோன்றும் அருளின்மையுடையான் என்றவாறு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாய் சாப்பிறக்கும் புள்ளிக் கள்வனுடைய என்றது, நம்முடைய பழைய நலம் அழியும்படி கூறும் பொய்யை உடையவன் என்றும், பிள்ளை தின்னும் முதலைத்து என்றது, தன்னுடைய இசை கெடும்படி ஒழுகுபவன் என்பது.  புலியூர்க் கேசிகன் உரை – தாய் சாவப் பிறக்கும் களவனையும் தன் பிள்ளைத் தின்னும் முதலையையும் உடைய கொடுமையான ஊரினன் ஆதலால், அவன் விரும்பிய மகளிரை முயங்குதலும், நலன் உண்ணலும், பின் அன்பற்றுத் துறத்தலும் அவனுக்கும் உரிய அருளற்ற கொடுந்தன்மையேயாம் என்று கூறுவதாகக் கொள்க.  இலக்கணக் குறிப்பு – சாப் பிறக்கும் – சாவ என்பதன் இறுதி வகரம் கெட்டுச் சாப்பிறக்கும் என்றாயிற்று (சாவ என்னும் செயவென் எச்சத்து இறுதி வகரம் கெடுதலும் உரித்தே (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 209), முதலைத்து – குறிப்பு வினை முற்று, கொல்லோ – கொல் ஐயம் என்ற பொருளில் வந்த இடைச்சொல், ஓ அசைநிலை, பொலந்தொடி – பொன் + தொடி, செய்யுளாதலின் பொலந்தொடி என்றாயிற்று, கொல் – அசைநிலை.  பிள்ளை – பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை, தவழ்பவை தாமும் அவற்று ஓரன்ன (தொல்காப்பியம், மரபியல் 4,5).  முயங்கியவர் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன்னால் தழுவப்பட்ட மகளிர், ஒளவை துரைசாமி உரை – தன்னைக் கூடிய மகளிர், அ. தட்சிணாமூர்த்தி உரை – தான் தழுவிய மகளிர்.

சொற்பொருள்:  தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர் – தாய் சாகும்படி பிறக்கும் புள்ளிகளை உடைய நண்டுகளுடன் தன் பிள்ளைகளை உண்ணும் முதலைகளையும் உடையது அவனுடைய ஊர், எய்தினன் ஆகின்று கொல்லோ மகிழ்நன் – அவனுடைய ஊரின் கொடுமைகளைத் தானும் அடைந்தவனோ நம் தலைவன், பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர் நலங்கொண்டு துறப்பது எவன் கொல் அன்னாய் – பொன் வளையல்கள் அணிந்த மகளிரின் நலத்தை உண்டு விட்டு அவன் அவர்களைத் துறப்பது யாது கருதி அன்னையே

ஐங்குறுநூறு 25, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
அயல் புறந்தந்த புனிற்று வளர் பைங்காய்
வயலைச் செங்கொடி களவன் அறுக்கும்,
கழனி ஊரன் மார்பு, பலர்க்கு
இழை நெகிழ் செல்லல் ஆகும் அன்னாய்.

பாடல் பின்னணி:  பரத்தையருள்ளும் ஒருத்தியை விட்டு ஒருத்தியைப் பற்றி ஒழுகுகின்றான் எனக் கேட்ட தோழி, வாயிலாக வந்தவர்கள் கேட்கும்வண்ணம் தலைவியிடம் சொன்னது.

பொருளுரை:  அன்னையே!  இல்லத்தின் அருகில் நட்டுப் பேணி வளர்த்த இளமையுடைய வளர்கின்ற பசிய காயையுடைய வயலையின் சிவந்த கொடிகளை நண்டு அறுக்கும் வயல்களையுடைய ஊரனின் மார்பு, மகளிர் பலர்க்கு அணிகலன்கள் நெகிழும்படியான இன்னலைத் தருவது ஆகும்.

குறிப்பு:  பழைய உரை – அயல் புறந்தந்த ……………………. அறுக்கும் என்றது, எம் புதல்வன் வருந்துவதும் உணராது நம்மை வருத்துவான் என்றவாறு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவனால் திருமணம் செய்து கொள்ளப்பட்டு மகவீன்று மனைக் கண் இருந்து வாழும் என் இன்ப வாழ்க்கையைப் பரத்தையர் கெடுக்கின்றனர் என்பது. புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 79).  செல்லல் – செல்லல் இன்னல் இன்னாமையே (தொல்காப்பியம், உரியியல் 6).

சொற்பொருள்:  அயல் புறந்தந்த புனிற்று வளர் பைங்காய் வயலைச் செங்கொடி களவன் அறுக்கும் கழனி ஊரன் மார்பு பலர்க்கு இழை நெகிழ் செல்லல் ஆகும் அன்னாய் – இல்லத்தின் அருகில் நட்டுப் பேணி வளர்த்த இளமையுடைய வளர்கின்ற பசிய காயையுடைய வயலையின் சிவந்த கொடிகளை நண்டு அறுக்கும் வயல்களையுடைய ஊரனின் மார்பு மகளிர் பலர்க்கு அணிகலன்கள் நெகிழும்படியான இன்னலைத் தருவது ஆகும் அன்னையே

ஐங்குறுநூறு 26, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
கரந்தை அம் செறுவில் துணை துறந்து, களவன்
வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன்,
எம்மும் பிறரும் அறியான்,
இன்னன் ஆவது, எவன் கொல் அன்னாய்?

பாடல் பின்னணி:  தலைவனின் வாயிலாக வந்தவர்கள் ‘தலைவன் நின் சினத்திற்கு அஞ்சி நல்ல நெறியில் வாழ்கின்றான்’ எனக் கூறியது கேட்ட தோழி, தலைவியிடம் சொல்வதுபோல் பாவித்து, அவன் இன்னும் திருந்தவில்லை என்பதுபடச் சொன்னது.

பொருளுரை:  அன்னையே!  கரந்தைக்கொடி உடைய அழகிய வயலில் தன் துணையான பெண் நண்டைத் துறந்து வள்ளைக் கொடியின் மெல்லிய தண்டை அறுக்கும் ஊரின் தலைவன், எம்முடைய துன்பத்தையும் பிற மகளிரின் துன்பத்தையும் அறியான் ஆவது எதனால்?

குறிப்பு:   பழைய உரை – துணை துறந்து ……………….. ஊரன் என்றது, தான் துணையாகக் காதலித்து ஒழுகுகின்ற பரத்தையையும் நீங்கி எம்மையும் வருத்தி ஒழுகுவான் என்றவாறு.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – கரந்தைச் செறுவில் துணை துறந்து சென்ற கள்வன் வள்ளைக் கொடியின் மெல்லிய தண்டினை அறுக்கும் ஊரன் என்றதனால், தலைவன் தான் காதலித்த பரத்தையைக் கைவிட்டுப் பிற பரத்தையரைப் பற்றிப் பின் அவரையும் அம்முறையே துறந்து ஒழுகுகின்றான் என்பது.  துணை துறந்து (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன் காதலியாகிய நண்டினைப் பிரிந்து போய்.  இலக்கணக் குறிப்பு – அறியான் – முற்றெச்சம், எதிர்மறை வினைமுற்றுமாம், கொல் – அசைநிலை.

சொற்பொருள்:  கரந்தை அம் செறுவில் துணை துறந்து களவன் வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன் – கரந்தைக்கொடி உடைய அழகிய வயலில் தன் துணையான பெண் நண்டைத் துறந்து வள்ளைக் கொடியின் மெல்லிய தண்டை அறுக்கும் ஊரின் தலைவன் (கரந்தை – globe thistle, Spaeranthus indicus, or fragrant basil), எம்மும் பிறரும் அறியான் இன்னன் ஆவது எவன் கொல் அன்னாய் – எம்முடைய துன்பத்தையும் பிற மகளிரின் துன்பத்தையும் அறியான் ஆவது எதனால் அன்னையே

ஐங்குறுநூறு 27, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
செந்நெல் அம் செறுவில் கதிர் கொண்டு, களவன்
தண் அக மண் அளைச் செல்லும் ஊரற்கு,
எல் வளை நெகிழச் சாஅய்,
அல்லல் உழப்பது எவன் கொல் அன்னாய்?

பாடல் பின்னணி:  தலைவன் மனைக்கண் வருங்காலத்து வராது இருந்ததால் ‘புறத்தொழுக்கம் உளதாயிற்று’ எனக் கருதி வருந்தும் தலைவியிடம் தோழி சொன்னது.

பொருளுரை:  அன்னையே!  நண்டு செந்நெல் இருக்கும் அழகிய வயலுக்குச் சென்று அங்குள்ள கதிர்களைக் கொய்துகொண்டு குளிர்ச்சியான உள்ளிடத்தை உடைய தன்னுடைய மண் பொந்திற்குச் செல்லும் ஊரனின் பொருட்டு, ஒளிரும் வளையல் கழலும்படி மெலிந்து, நீ துன்பத்தில் உழல்வது எதற்காக?

குறிப்பு:  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – அலவன் நெற்கதிரைக் கொண்டு மண் அளைக்குட் செல்லும் என்றதனால், தலைமகன் செய்வினைப் பயன் கொண்டு விரைய மீளுவன் என உள்ளுறை கொள்க.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவன் நாடோறும் இல்லத்திற்கு வேண்டிய பொருளை ஈட்டி வருவதன் காரணமாகக் காலந்தாழ்த்து வருகின்றனன் அல்லால் பிழையேதுமிலன் என்றாள்.  இலக்கணக் குறிப்பு – ஊரற்கு – குவ்வுருபு பொருட்டு என்னும் பொருளில் வந்தது, சாஅய் – அளபெடை, கொல் – அசைநிலை.  சாஅய் – ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (தொல்காப்பியம், உரியியல் 32).  எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21).

சொற்பொருள்:  செந்நெல் அம் செறுவில் கதிர் கொண்டு களவன் தண் அக மண் அளைச் செல்லும் ஊரற்கு – நண்டு செந்நெல் இருக்கும் அழகிய வயலுக்குச் சென்று அங்குள்ள கதிர்களைக் கொய்துகொண்டு குளிர்ச்சியான உள்ளிடத்தை உடைய தன்னுடைய மண் பொந்திற்குச் செல்லும் ஊரனின் பொருட்டு, எல் வளை நெகிழச் சாஅய் அல்லல் உழப்பது எவன் கொல் அன்னாய் – ஒளிரும் வளையல் கழலும்படி மெலிந்து துன்பத்தில் உழல்வது எதற்காக அன்னையே

ஐங்குறுநூறு 28, ஓரம்போகியார், மருதத் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
உண் துறை அணங்கு இவள் உறை நோய் ஆயின்,
தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு,
ஒண்தொடி நெகிழச் சாஅய்
மென் தோள் பசப்பது, எவன் கொல் அன்னாய்?

பாடல் பின்னணி:  மருதத்துள் குறிஞ்சி.  தலைவி இற்செறிக்கப்பட்டாள்.  அவள் எய்திய வேறுபாடு கண்டு, அவள் குடும்பத்தார் முருகவேளுக்கு வெறியாட்டம் நிகழ்த்த முயன்றனர்.  அதை விலக்கக் கருதிய தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.

பொருளுரை:  அன்னையே!  உண்ணும் நீரைக் கொள்ளும் துறையில் உள்ள கடவுள் இவளுடைய நோய்க்குக் காரணம் எனக் கருதுவாய் ஆயின், குளிர்ந்த சேற்றில் நண்டுகள் தங்கள் கால்களால் கோடுகள் இழைக்கும் ஊரையுடைய தலைவன் பொருட்டு, இவளுடைய ஒளிரும் வளையல்கள் கழலும்படி மெலிந்து, மெல்லிய தோள்கள் பசப்பது எதனால்?

குறிப்பு:  தோழி தானே செவிலி மகளே (தொல்காப்பியம், களவியல் 35).  உள்ளுறை – புலியூர்க் கேசிகன் உரை – அலவன் வரித்ததாலே தண் சேறும் அழகுற்றுத் தோன்றுமாப்போலே, தலைவன் வரைந்து வந்து இவளை கோடலால் இவளும் இந்நலிவின் நீங்கிப் புதுப் பொலிவு அடைவாள் என்பதாம்.  மருதத் திணை – உ. வே. சாமிநாதையர் உரை – மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது.  இலக்கணக் குறிப்பு – சாஅய் – செய்யுளிசை அளபெடை, கொல் – அசைநிலை.  சாஅய் – ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (தொல்காப்பியம், உரியியல் 32).  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘உண் துறை உறை அணங்கு’ என மாற்றுக.

சொற்பொருள்:  உண் துறை அணங்கு இவள் உறை நோய் ஆயின் தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு – உண்ணும் நீரைக் கொள்ளும் துறையில் உள்ள கடவுள் இவளுடைய நோய்க்குக் காரணம் எனக் கருதுவாய் ஆயின் குளிர்ந்த சேற்றில் நண்டுகள் தங்கள் கால்களால் கோடுகள் இழைக்கும் ஊரையுடைய தலைவன் பொருட்டு, ஒண்தொடி நெகிழச் சாஅய் மென் தோள் பசப்பது எவன் கொல் அன்னாய் – ஒளிரும் வளையல்கள் கழலும்படி மெலிந்து மெல்லிய தோள்கள் பசப்பது எதனால் அன்னையே

ஐங்குறுநூறு 29, ஓரம்போகியார், மருதத் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
மாரி கடி கொளக் காவலர் கடுக,
வித்திய வெண்முளை களவன் அறுக்கும்,
கழனி ஊரன் மார்புற மரீஇத்,
திதலை அல்குல் நின் மகள்
பசலை கொள்வது, எவன் கொல் அன்னாய்?

பாடல் பின்னணி:  மருதத்துள் குறிஞ்சி.  தலைவன் வரைவு வேண்டி வந்தபொழுது தலைவியின் சுற்றத்தார் மறுத்தமை கண்ட தோழி, செவிலிக்கு அறத்தொடு நின்றது.

பொருளுரை:  அன்னையே!  மழை மிகுதியாகப் பெய்யவும், காவலர் விரைந்து காவல் செய்யவும், விதைத்த வெள்ளை நெல் முளையை நண்டுகள் அறுக்கும் வயல்களையுடைய ஊரனின் மார்பை பொருந்தித் தழுவியபோதும், தேமல் பொருந்திய அல்குலையுடைய உன் மகள் பசலை அடைவது எதனால்?

குறிப்பு:  தோழி தானே செவிலி மகளே (தொல்காப்பியம், களவியல் 35).  பழைய உரை – மாரி கடிகொள …………………… கடுக என்றது, மாரி நின்ற யாமத்துக் காவலரைத் தப்பி அவன் தலைவியை எதிர்ப்பட்டமை உணர்த்தியது எனக் கொள்க.  இஃது உண்மை செப்பல் என்னும் அறத்தொடு நிலை.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாரி கடி கொளவும் காவலர் கடுகவும் நண்டு உழவர் வித்திய வெண்முளையை அறுத்தாற்போன்று ஊரனும் தமர் அறியாமலும் காவல் கடந்து வந்தும் நின் மகளைக் கூடினான் என்பது, ஒளவை துரைசாமி உரை – வித்திய விதையிடத்துத் தோன்றும் வெண்முளையைக் கள்வன் அறுக்கும் என்றது, தாம் பயந்த மகளிடத்துத் தோன்றும் குடிமைச் சிறப்பினை வரைவு எதிர்கொள்ளாது தமர் அவண் மறுத்துச் சிதைக்கின்றனர் என்பது.  இலக்கணக் குறிப்பு – கடி – உரிச்சொல், மரீஇ – செய்யுளிசை அளபெடை, கொல் – அசைநிலை.

சொற்பொருள்:  மாரி கடி கொளக் காவலர் கடுக வித்திய வெண்முளை களவன் அறுக்கும் கழனி ஊரன் மார்புற மரீஇ – மழை மிகுதியாகப் பெய்யவும் காவலர் விரைந்து காவல் செய்யவும் விதைத்த வெள்ளை நெல் முளையை நண்டுகள் அறுக்கும் வயல்களையுடைய ஊரனின் மார்பைப் பொருந்தித் தழுவியபோதும், திதலை அல்குல் நின் மகள் பசலை கொள்வது எவன் கொல் அன்னாய் – தேமல் பொருந்திய அல்குலையுடைய உன் மகள் பசலை அடைவது எதனால் அன்னையே (அல்குல் – இடை, இடைக்குக் கீழ் உள்ள பகுதி)

ஐங்குறுநூறு 30, ஓரம்போகியார், மருதத் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
வேப்பு நனை அன்ன நெடுங்கண் களவன்,
தண் அக மண் அளை நிறைய நெல்லின்
இரும் பூ உறைக்கும் ஊரற்கு, இவள்
பெருங்கவின் இழப்பது, எவன் கொல் அன்னாய்?

பாடல் பின்னணி:  மருதத்துள் குறிஞ்சி.  தலைவன் வரைவு வேண்டி வந்தபொழுது தலைவியின் சுற்றத்தார் மறுத்தமை கண்ட தோழி, செவிலிக்கு அறத்தொடு நின்றது.

பொருளுரை:  அன்னையே!  வேப்ப மரத்தின் அரும்பை ஒத்த நீண்ட கண்களையுடைய நண்டின் குளிர்ந்த உள்ளிடத்தை உடைய மண் பொந்து நிறையும்படி, நெல்லின் பெரிய மலர்கள் உதிரும் ஊரின் தலைவன் பொருட்டு, இவள் தன்னுடைய பெரிய அழகை இழப்பது எதனால்?

குறிப்பு:  பழைய உரை – அலவன் மண்ணளை நிறைய நெல்லின் பூ உறைக்கும் ஊரன் என்றது, தலைவன் மனையிடத்து உளவாகிய வருவாய்ச் சிறப்புக் கூறியது எனக் கொள்க என்பது.  தோழி தானே செவிலி மகளே (தொல்காப்பியம், களவியல் 35).  அகநானூறு 176 – வேப்பு நனை அன்ன நெடுங்கண் நீர் ஞெண்டு.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – அலவன் மண் அளை நிறைய நெற்பூ உதிர்ந்து கிடத்தல் போலத் தலைமகன் மலையகம் நிறையத் தீதின்றியன்ற செல்வம் மிகுந்துள்ளது என்பது.  மருதத் திணை – உ. வே. சாமிநாதையர் உரை – மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது.  இலக்கணக் குறிப்பு – வேப்பு – வேம்பு வேப்பு என்றானது வலித்தல் விகாரம், அன்ன – உவம உருபு, ஊரற்கு – குவ்வுருபு பொருட்டு என்னும் பொருளில் வந்தது, கொல் – அசைநிலை.

சொற்பொருள்:  வேப்பு நனை அன்ன நெடுங்கண் களவன் தண் அக மண் அளை நிறைய நெல்லின் இரும் பூ உறைக்கும் ஊரற்கு, – வேப்ப மரத்தின் அரும்பை ஒத்த நீண்ட கண்களையுடைய நண்டின் குளிர்ந்த உள்ளிடத்தை உடைய மண் பொந்து நிறையும்படி நெல்லின் பெரிய மலர்கள் உதிரும் ஊரின் தலைவன் பொருட்டு, இவள் பெருங்கவின் இழப்பது, எவன் கொல் அன்னாய் – இவள் தன்னுடைய பெரிய அழகை இழப்பது எதனால் அன்னையே

தோழிக்கு உரைத்த பத்து

பாடல்கள் 31–40:  இவை யாவும் ‘அம்ம வாழி தோழி’ எனத் தொடங்குகின்றன. அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல்.  அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).  தலைவி தன் தோழியிடம் கூறுவதாக உள்ள பாடல்கள் 30–36.  பரத்தை தன் தோழியிடம் கூறுவதாக உள்ள பாடல்கள் 37–40.

ஐங்குறுநூறு 31, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி!  மகிழ்நன்
கடன் அன்று என்னும் கொல்லோ,
நம் ஊர் முட முதிர் மருதத்துப் பெருந்துறை
உடனாடு ஆயமோடு உற்ற சூளே?

பாடல் பின்னணி:  தலைவனின் வாயில்கள் (தூதுவர்கள்) கேட்கும்படி  உரைத்தது.

பொருளுரை:  தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நம் தலைவன், நம் ஊரில் உள்ள வளைந்த முதிர்ந்த மருத மரங்களுடைய பெரிய துறையில் நம்முடன் நீராடிய (விளையாடிய) தோழியர் கேட்பக் கொடுத்த உறுதிமொழியை ‘தன்னால் கடைப்பிடிக்க இயலாது’ எனக் கருதுவானோ?

குறிப்பு:  ஒப்புமை – ஐங்குறுநூறு 75 – தொன்னிலை மருதத்துப் பெருந்துறை.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, கொல்லோ – கொல் ஐயம் என்ற பொருளில் வந்த இடைச்சொல், சூளே – ஏகாரம் அசைநிலை.  வாழி (1) – ஒளவை துரைசாமி உரை – உரையசை, அ. தட்சிணாமூர்த்தி உரை – நீ வாழ்க.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – சூள் உரைத்தும் அதனைக் கடைப்பிடிக்காத கயமையாளன் என்று இகழ்ந்து உரைத்தவாறு.

சொற்பொருள்:  அம்ம – கேட்பாயாக என்ற பொருளில் வந்த ஓர் இடைச்சொல், வாழி – அசைநிலை, தோழி – தோழி, மகிழ்நன் கடன் அன்று என்னும் கொல்லோ – நம் தலைவன் ‘தன்னால் கடைப்பிடிக்க இயலாது’ எனக் கருதுவானோ, நம் ஊர் முட முதிர் மருதத்துப் பெருந்துறை உடனாடு ஆயமோடு உற்ற சூளே – நம் ஊரில் உள்ள வளைந்த முதிர்ந்த மருத மரங்களுடைய பெரிய துறையில் நம்முடன் நீராடிய (விளையாடிய) தோழியர் கேட்பக் கொடுத்த உறுதிமொழி

ஐங்குறுநூறு 32, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி!  மகிழ்நன்
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு, எழு நாள்
அழுப என்ப அவன் பெண்டிர்,
தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே.

பாடல் பின்னணி:  தலைவனின் வாயில்கள் (தூதுவர்கள்) கேட்கும்படி உரைத்தது.

பொருளுரை:  தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நம் தலைவன் ஒரு நாள் நம்முடைய இல்லத்திற்கு வந்ததற்கு, அவனுடைய பரத்தையர் தீயில் பட்ட மெழுகைப் போன்று விரைந்து உள்ளம் உருகி, ஏழு நாட்கள் அழுதார்கள் என்று கூறுகின்றனர்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘கற்பு வழிபட்டவள் பரத்தை ஏத்தினும், உள்ளத்தூடல் உண்டென மொழிப’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 233) என்றலின், ஈண்டுத் தலைவி பரத்தையை நலம் பாராட்டியது மறுத்தற் குறிப்பே என உணர்க.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, மெழுகின் – ‘இன்’  ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, உறழ்ச்சிப் பொருளில் வந்ததுமாம், ஞெகிழ்வனர் – முற்றெச்சம், நெகிழ் என்பது ஞெகிழ் ஆனது முதற்போலி, வந்ததற்கு – குவ்வுருபு பொருட்டுப் பொருள் தந்தது, விரைந்தே – ஏகாரம் அசைநிலை.  தீ உறு மெழுகு – தீயில் பட்ட மெழுகு, தீயில் இட்ட மெழுகு.

சொற்பொருள்:  அம்ம – கேட்பாயாக என்ற பொருளில் வந்த ஓர் இடைச்சொல், வாழி – அசைநிலை, தோழி – தோழி, மகிழ்நன் ஒரு நாள் நம் இல் வந்ததற்கு – நம் தலைவன் ஒரு நாள் நம்முடைய இல்லத்திற்கு வந்ததற்கு, எழு நாள் அழுப என்ப அவன் பெண்டிர் – அவனுடைய பெண்கள் ஏழு நாட்கள் அழுதார்கள் என்று கூறுகின்றனர், தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் – தீயில் பட்ட மெழுகைப் போன்று உள்ளம் உருகினார்கள், விரைந்தே – விரைவாக

ஐங்குறுநூறு 33, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி!  மகிழ்நன்
மருது உயர்ந்து ஓங்கிய விரி பூம் பெருந்துறைப்
பெண்டிரோடு ஆடும் என்ப, தன்
தண் தார் அகலம் தலைத்தலைக் கொளவே.

பாடல் பின்னணி:  தலைவனின் வாயில்கள் (தூதுவர்கள்) கேட்கும்படி உரைத்தது.

பொருளுரை:  தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நம் தலைவன், மருத மரங்கள் உயர்ந்து வளர்ந்த மலர்ந்த பூக்கள் உடைய பெரிய துறையில், தன் குளிர்ந்த மாலை அணிந்த மார்பை, தன் பரத்தையர் ஒவ்வொருவரும் இடந்தொறும் இடந்தொறும் பற்றிக் கொள்ளும்படியாக அவர்களுடன் நீராடுகின்றான் எனக் கூறுகின்றனர்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பலரும் அறிய நீராடினன் என்பாள், ‘பெருந்துறை’ என்றாள்.  பரத்தையர் விரும்பும் பொழுதெல்லாம் மார்பை முயங்கும்படி ஆடினன் என்பாள், ‘அகலந்தலைக் கொள’ என்றாள்.  ஒளவை துரைசாமி உரை – உயர்ந்து ஓங்கிய என்பது மிகுதிக்கண் வந்தது.  உயர்வினை மருதுக்கும் ஓங்குதலைப் பெருந்துறைக்கும் ஏற்றினுமாம்.  நீரின் நிறம் தெரியா வகைப் பூக்கள் விரிந்து பரந்து கிடத்தலின் விரிப்பூம் பெருந்துறை எனப்பட்டது என்க.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, உயர்ந்து ஓங்கிய – ஒருபொருட் பன்மொழி, கொளவே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  அம்ம – கேட்பாயாக என்ற பொருளில் வந்த ஓர் இடைச்சொல், வாழி – அசைநிலை, தோழி – தோழி, மகிழ்நன் மருது உயர்ந்து ஓங்கிய விரி பூம் பெருந்துறைப் பெண்டிரோடு ஆடும் என்ப  – நம் தலைவன் மருத மரங்கள் உயர்ந்து வளர்ந்த மலர்ந்த பூக்கள் உடைய பெரிய துறையில் தன் பரத்தையருடன் நீராடுகின்றான் எனக் கூறுகின்றனர், தன் தண் தார் அகலம் தலைத்தலைக் கொளவே – தன் குளிர்ந்த மாலை அணிந்த மார்பை ஒவ்வொருவரும் இடந்தொறும் இடந்தொறும் பற்றிக் கொள்ள

ஐங்குறுநூறு 34, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி!  நம் ஊர்ப்
பொய்கைப் பூத்த புழைக்கால் ஆம்பல்
தாது ஏர் வண்ணம் கொண்டன,
ஏதிலாளர்க்குப் பசந்த என் கண்ணே.

பாடல் பின்னணி:  தலைவனின் வாயில்கள் (தூதுவர்கள்) கேட்கும்படி உரைத்தது.

பொருளுரை:  தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நம் ஊரில் உள்ள குளத்தில் மலர்ந்த உட்டுளையை உடைய தண்டையுடைய ஆம்பல் மலர்களின் பூந்துகள் போன்ற நிறத்தைக் கொண்டன, அயலானாகிய தலைவன் செய்த கொடுமையினால் பசலை அடைந்த என் கண்கள்.

குறிப்பு:  பொய்கைப் பூத்த புழைக்கால் ஆம்பல் ………………. கண்ணே – ஒளவை துரைசாமி உரை – பொய்கையிற் பூத்த புழை பொருந்திய தண்டினையுடைய ஆம்பற்பூவின் தாது போலும் நிறத்தை அடைந்தன என் பசப்புற்ற கண்கள்.  ஆம்பலின் கால் புழையுடையது என்றதனால், தலைமகன்பால் அன்பின்மையும் தோன்றினமையின் ஏதிலாளர் என எடுத்துக் கூறினாள் என்றலும் ஒன்று.  இவ்வாறு தலைமகன் தவற்றினை வெளிப்படையாகக் கூறல் வழுவாயினும் ‘வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல் தாவின்று உரிய தத்தங் கூற்றே’ (தொல்காப்பியம், பொருளுரை 241) என்பதனால் அமையும் என்க.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, கண்ணே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  அம்ம – கேட்பாயாக என்ற பொருளில் வந்த ஓர் இடைச்சொல், வாழி – அசைநிலை, தோழி – தோழி, நம் ஊர்ப் பொய்கைப் பூத்த புழைக்கால் ஆம்பல் தாது ஏர் வண்ணம் கொண்டன – நம் ஊரில் உள்ள குளத்தில் மலர்ந்த உட்டுளை உடைய (உள்ளே துளையை உடைய) தண்டையுடைய ஆம்பல் மலர்களின் பூந்துகள் (பூந்தாதுகள்) போன்ற நிறத்தைக் கொண்டன, ஏதிலாளர்க்குப் பசந்த என் கண்ணே – அயலானாகிய தலைவன் செய்த கொடுமையினால் பசலை அடைந்த என் கண்கள்

ஐங்குறுநூறு 35, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி!  நம் ஊர்ப்
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால்
நிறத்தினும் நிழற்றுதல் மன்னே,
இனிப் பசந்தன்று, என் மாமைக் கவினே.

பாடல் பின்னணி:  தலைவன் தூயன் தவறிலன் எனக் கூறிவந்த வாயில்கள் (அவன் தூதுவர்கள்) கேட்கும்படி உரைத்தது.

பொருளுரைதோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நம் ஊர்ப் பொய்கையில் உள்ள ஆம்பலின் நார் உரிக்கப்பட்ட தண்டின் நிறத்தைவிடவும் முன்பு ஒளிர்ந்த என் மாமை அழகு, இப்பொழுது பசலை அடைந்துள்ளது.

குறிப்பு:  உள்ளுறை – புலியூர்க் கேசிகன் உரை – நார் உரிக்கப்பட்ட ஆம்பலின் தண்டு பேரெழிலும் ஒளியும் உடையதேனும், அதனைக் கவிந்து பேணிக் காக்கும் நாரினை இழந்தமையாலே விரைவில் அழகிழந்து வாடிப் போவது போல, அவன் செய்யும் கொடுமையால் என் மாமைக் கவினும் காப்பாரின்றிக் கெட்டது என்பது.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, மன்னே – மன் கழிவுப்பொருளில் வந்த இடைச்சொல், ஏகாரம் அசைநிலை, கவினே – ஏகாரம் அசைநிலை.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  மாமைக் கவின் – ஒளவை துரைசாமி உரை – நோயின்றியன்ற யாக்கை நலமும், அழகு திகழும் இளமை நலமும் ஒருங்கு விளங்கும் மகளிரது மேனி நலம் மழையால் நனைந்து நீர் துளித்து நிற்கும் பச்சிளந் தளிரையும், நீலமணி பதித்த பொன்னையும் உவமை கூறுவர்.  ‘கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் நீர் மலி கதழ் பெயல் தலைஇய ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே’ – நற்றிணை 205 என்றும், ‘பூந்துணர் தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன அம் கலுழ் மாமை கிளைஇய நுண் பல் தித்தி மாஅயோளோ’ – அகநானூறு 41 என்றும், ‘பொன் உரை மணி அன்ன மாமைக் கண் பழி உண்டோ’ – கலித்தொகை 48 என்றும், ‘மணி மிடை பொன்னின் மாமை’ – நற்றிணை 304 என்றும் வருவன காண்க.  மாமைக் கவின் – ஒளவை துரைசாமி உரை, ஐங்குறுநூறு 134 – மாந்தளிரின் தன்மையினையுடைய அழகு, ஒளவை துரைசாமி உரை, ஐங்குறுநூறு 286 – மாந்தளிர் போலும் நிறம் திகழும் அழகு.

சொற்பொருள்:  அம்ம – கேட்பாயாக என்ற பொருளில் வந்த ஓர் இடைச்சொல், வாழி – அசைநிலை, தோழி – தோழி, நம் ஊர்ப் பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால் நிறத்தினும் நிழற்றுதல் – நம் ஊர்ப் பொய்கையில் உள்ள ஆம்பலின் நார் உரிக்கப்பட்ட தண்டின் நிறத்தைவிடவும் ஒளிர்ந்து, மன்னே – முன்பு, இனிப் பசந்தன்று என் மாமைக் கவினே – இப்பொழுது என் மாமை அழகு பசலை அடைந்துள்ளது

ஐங்குறுநூறு 36, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! ஊரன்
நம் மறந்து அமைகுவன் ஆயின், நாம் மறந்து
உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே,
கயல் எனக் கருதிய உண்கண்,
பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே.

பாடல் பின்னணி:  தலைவனின் வாயில்கள் (தூதுவர்கள்) கேட்கும்படி உரைத்தது.

பொருளுரை:  தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நம் தலைவன் நம்மை மறந்து இருப்பானாயின், நாமும் அவனை மறந்து நினைக்காமல் இருக்கக்கூடும், கயல் மீன்களோ என எண்ணப்படும் மையிட்ட நம் கண்கள் பசலையை அடையாது இருந்தால்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஊரன் என்றது, தலைவனது ஏதின்மை தோன்ற நின்றது.  நம் என்பது, அவனால் மறக்கப்படாத அன்பும் உரிமையுமுடைய நம்மை என்பதுபட நின்றது.  செற்றார் பின் செல்லாப் பெருந்தகைமை நாம் உடையேம்.  இந்தக் கண்களோ அந்தப் பெருந்தகைமை இலவாய் அவனைக் காண விரும்பிப் பொலிவிழப்பன.  ஆதலால் நாம் அவ்வுறுதியைக் கடைப்பிடிக்க இயலாதேம் ஆயினேம் என்பதாம்.  எனவே தலைவி தனது ஆற்றாமையைக் கண்மேல் ஏற்றித் தோழிக்கு உணர்த்தியவாறாயிற்று.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, மன்னே – மன் ஒழியிசைப் பொருளில் வந்த இடைச்சொல், ஏகாரம் அசைநிலை, பெறினே – ஏகாரம் அசைநிலை.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  நம் மறந்து (2) – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள்.

சொற்பொருள்:  அம்ம – கேட்பாயாக என்ற பொருளில் வந்த ஓர் இடைச்சொல், வாழி – அசைநிலை, தோழி – தோழி, ஊரன் நம் மறந்து அமைகுவன் ஆயின் நாம் மறந்து உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே – நம் தலைவன் நம்மை மறந்து இருப்பானாயின் நாமும் அவனை மறந்து நினைக்காமல் இருப்போம், கயல் எனக் கருதிய உண்கண் பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே – கயல் மீன்களோ என எண்ணப்படும் மையிட்ட நம் கண்கள் பசலையை அடையாது இருந்தால்

ஐங்குறுநூறு 37, ஓரம்போகியார், மருதத் திணைகாதற்பரத்தை தன் தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! மகிழ்நன்
நயந்தோர் உண்கண் பசந்து பனி மல்க
வல்லன் வல்லன், பொய்த்தல்
தேற்றான் உற்ற சூள் வாய்த்தல்லே.

பாடல் பின்னணி:  தலைவியின் தோழியர் கேட்பத் தன் தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நம் தலைவன் தன்னை விரும்பிய மகளிரின் மையிட்ட கண்கள் பசலை அடைந்து அவற்றில் கண்ணீரைப் பெருகச் செய்வதில் மிகவும் வல்லவன்.  மகளிர்க்குத் தான் கொடுத்த உறுதிமொழிகள் உண்மையாகுவதைப் பேணுதலில் தெளியாதவன்.

குறிப்பு:  காதற்பரத்தை – நச்சினார்க்கினியர் உரை – பரத்தையர் என்பாருள் காமக்கிழத்தியாவார் கடனறியும் வாழ்க்கை உடையராகிக் காமக் கிழமைபூண்டு இல்லறம் நிகழ்த்தும் பரத்தையர், அ. தட்சிணாமூர்த்தி உரை – காதற்பரத்தையாவாள் பொது மகளாகப் பலர்க்கு உரிமை பூண்டாளன்றி பரத்தையின் மகளாகப் பிறப்பினும் ஒருவன் தனக்கே உரிமை பூண்டு வாழ்பவள்.  தன் காதலன் தனக்குக் கூறிய உறுதிமொழிகளை மறந்து இப்பொழுது தன் மனைவிபால் மீளளின், தனக்கு நேர்ந்த துன்பத்தினைப் பட்டறிவால் அறிந்தவளாதலின் ‘பொய்த்தல் வல்லன் வல்லன்’ என்றாள். அத்தகையோன் இப்பொழுது தலைவியிடம் உறுதிமொழி கூறுகின்றானெனில், தன் இயல்புப்படி அவளையும் ஏமாற்றி வருந்தச் செய்வது உறுதி என்றாளாம். ஒளவை துரைசாமி உரை – தலைமகன் தலைவியைச் சூளினால் தெளிவிக்கின்றான் என்பது கேட்டு, அவள் அதனால் தெளியாதவாறு விலக்கும் கருதினள் ஆகலின், அவட்கு பாங்காயினர் கேட்பக் காதற்பரத்தை, தேற்றான் உற்ற சூள் வாய்த்தல் என்றதனோடு நில்லாது, வல்லன் வல்லன் பொய்த்தல் என்றும் கூறினாள். இது ‘புல்லுதன் மயக்கும்’ என்னும் சூத்திரத்து ‘இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும்’ (தொல்காப்பியம், கற்பியல் 10) என்பதனால், தலைவன் தலைவியைச் சூளினால் தெளிவித்துக் கூடுதலை இகழ்ந்துரைத்தவாறு.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, வல்லன் வல்லன் – அடுக்குத் தொடர், பொய்த்தல் – தொழிற்பெயர், வாய்த்தல்லே – வாய்த்தல் என்பதன் விரித்தல் விகாரம்.

சொற்பொருள்:  அம்ம – கேட்பாயாக என்ற பொருளில் வந்த ஓர் இடைச்சொல், வாழி – அசைநிலை, தோழி – தோழி, மகிழ்நன் நயந்தோர் உண்கண் பசந்து பனி மல்க வல்லன் வல்லன் – நம் தலைவன் தன்னை விரும்பிய மகளிரின் மையிட்ட கண்கள் பசலை அடைந்து அவற்றில் கண்ணீரைப் பெருகச் செய்வதில் மிகவும் வல்லவன், பொய்த்தல் தேற்றான் உற்ற சூள் வாய்த்தல்லே – மகளிர்க்குத் தான் கொடுத்த உறுதிமொழி உண்மையாகுவதைப் பேணுதலில் தெளியாதவன்

ஐங்குறுநூறு 38, ஓரம்போகியார், மருதத் திணைபரத்தை தன் தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! மகிழ்நன்
தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும்,
தண்தளிர் வெளவும் மேனி,
ஒண்தொடி முன் கை யாம் அழப் பிரிந்தே.

பாடல் பின்னணி:  தலைவன் தன் மனைவியிடம் செல்ல எண்ணுவதை அறிந்த பரத்தை உரைத்தது. 

பொருளுரை:  தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  குளிர்ந்த மாந்தளிரின் அழகைக் கவரும் மேனியையும் ஒளிரும் வளையல்களை முன்கையில் அணிந்தவர்களுமாகிய நாம் வருந்தி அழும்படி நம்மைப் பிரிந்து போகும் நம் தலைவன், எப்பொழுதும் தன் சொற்களை உண்மையென்று நம்பி வாழும் தன்மையுடைய மகளிரின் பண்பை அறியாதவன்,

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – பரத்தையர் இவ்வாறு தலைமகனைப் புலந்து கூறல் வழுவாயினும் அஃது அமையும் என்பதனைப் ‘புல்லுதல் மயக்கும்’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 151) என்ற சூத்திரத்து இவற்றொடு பிறவும் என்றதனாற் கொள்க.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, தண்தளிர் – ஆகுபெயர், தளிரின் அழகைக் குறித்ததால், ஒண்தொடி – அன்மொழித்தொகை, பிரிந்தே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  அம்ம – கேட்பாயாக என்ற பொருளில் வந்த ஓர் இடைச்சொல், வாழி – அசைநிலை, தோழி – தோழி, மகிழ்நன் தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும் – நம் தலைவன் தன் சொற்களை உண்மையென்று நம்பி வாழும் தன்மையுடைய மகளிரின் பண்பை அறியாதவன் எப்பொழுதும், தண்தளிர் வெளவும் மேனி ஒண்தொடி முன் கை யாம் அழப் பிரிந்தே – குளிர்ந்த மாந்தளிரின் அழகைக் கவரும் மேனியையும் ஒளிரும் வளையல்களை முன்கையில் அணிந்தவர்களுமாகிய நாம் வருந்தி அழும்படி நம்மைப் பிரிந்து போகும்

ஐங்குறுநூறு 39, ஓரம்போகியார், மருதத் திணைபரத்தை தன் தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி!  ஊரன்
வெம்முலை அடைய முயங்கி நம்வயின்
திருந்திழைப் பணைத்தோள் ஞெகிழப்
பிரிந்தனன் ஆயினும், பிரியலன் மன்னே.

பாடல் பின்னணி:  தலைவியின் தோழியர் கேட்குமாறு பரத்தை உரைத்தது, தலைவன் தன்னிடம் வருவான் எனத் தலைவி கூறியதை அறிந்து.

பொருளுரை:  தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  தலைவன் விருப்பம் தரும் நம் முலைகளைப் பொருந்தத் தழுவி, நம் திருத்தமான அணிகலன்கள் மூங்கில் போன்ற தோள்களில் இருந்து கழலுமாறு நம்மைப் பிரிந்துத் தன் மனைக்கண் சென்றானாயினும், அவன் உண்மையாக நம்மைப் பிரியவில்லை.

குறிப்புபொ. வே. சோமசுந்தரனார் உரை – அவன் விரைவிலேயே மீண்டும் நம்பால் வருதல் ஒருதலை என்பது குறிப்புப் பொருளாயிற்று.  வெம்முலையடைய முயங்கி என்றது, அவன் அத்தகைய முயக்கத்தை மறந்து தன் மனைக்கண் அமைவானல்லன் என்பதற்குக் குறிப்பேதுவாய் நின்றது.  அவ்வாறு அவன் பிரிந்த அந்தச் சிறு பிரிவிற்கே நாம் ஆற்றேமாயினேம் எனத் தன் அன்பைச் சிறப்பிப்பாள், ‘திருந்திழைப் பணைத்தோள் நெகிழ நம்வயிற் பிரிந்தான்’ என்றாள்.  வெம்முலை (2) – ஒளவை துரைசாமி உரை – விருப்பம் தரும் நம்முடைய மார்பகம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – விரும்புவதற்குக் காரணமான முலைகள்.  பணைத்தோள் ஞெகிழ (3) – ஒளவை துரைசாமி உரை – அழகிய இழை அணிந்த பெரிய தோள்கள் மெலிந்து நெகிழ்ந்து மெலியுமாறு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – திருத்தமுடைய அணிகலன்கள் மூங்கிலை ஒத்த தோள்களிலிருந்து கழலும்படி.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, பணைத்தோள் – உவமைத்தொகை, ஞெகிழ – நெகிழ என்பதன் போலி, மன்னே – மன் ஒழியிசைப் பொருளில் வந்த இடைச்சொல், ஏகாரம் அசைநிலை.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  அம்ம – கேட்பாயாக என்ற பொருளில் வந்த ஓர் இடைச்சொல், வாழி – அசைநிலை, தோழி – தோழி, ஊரன் வெம்முலை அடைய முயங்கி நம்வயின் திருந்திழைப் பணைத்தோள் ஞெகிழப் பிரிந்தனன் ஆயினும், பிரியலன் மன்னே – தலைவன் விருப்பம் தரும் நம்முடைய முலைகளைப் பொருந்தத் தழுவி நம்முடைய திருத்தமான அணிகலன்கள் மூங்கில் போன்ற தோள்களில் இருந்து கழலுமாறு நம்மைப் பிரிந்தான் என்றாலும் அவன் நம்மைப் பிரியவில்லை

ஐங்குறுநூறு 40, ஓரம்போகியார், மருதத் திணைபரத்தை தன் தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! மகிழ்நன்
ஒண்தொடி முன் கை யாம் அழப் பிரிந்து, தன்
பெண்டிர் ஊர் இறை கொண்டனன் என்ப,
கெண்டை பாய்தர அவிழ்ந்த
வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே.

பாடல் பின்னணி:  தலைவியின் தோழியர் கேட்குமாறு பரத்தை உரைத்தது.

பொருளுரை:  தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  கெண்டை மீன்கள் பாய்ந்ததால் மலர்ந்து வண்டுகளைப் பிணிக்கும் ஆம்பல் மலர்களையுடைய நாட்டின் தலைவன், ஒளிரும் வளையல்களை முன்கையில் அணிந்த நாம் அழுமாறு நம்மைப் பிரிந்து தன் மனைவியின்கண் சென்று தங்கினான் என்கின்றார்கள்.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வண்டுபிணி ஆம்பலையுடைய ஊரன் எனவே ஆம்பல் வண்டு ஓரோவழி பிறவிடங்களினும் செல்லுவதுண்டாயினும் அவற்றை மீண்டும் தம்பால் வருவித்துக் கொள்ளும் இயல்புடைய தேனைத் தன்பால் உடையவாய் அவற்றைப் பிணித்துக் கொள்ளுதல் போன்று, தலைவன் உலகியல்பற்றித் தன் மனைக்கண் சென்றானாயினும், மீண்டும் எம்மனைக்கு வருமாறு செய்யும் பெண்மை நலமும் பேரழகும் உடையேம் யாம் என்க, புலியூர்க் கேசிகன் உரை – கெண்டை பாய்தற்கு ஆம்பல் மலரினும், அது தான் வண்டைப் பிணித்து நிற்பதேயன்றிக் கெண்டையை அல்லவாதல் போல, உலகியல்பற்றி அவன் தன் மனை சென்றானாயினும், அவன் அன்பு எம்மிடத்தேயே என்றும் மாறாதபடி நிலவுவதாகும் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, கிழவோனே – ஏகாரம் அசைநிலை.  தன் பெண்டிர் – புலியூர் கேசிகன் உரை – மனைவியைக் குறித்து.  இற்பெண்டிர் என்பது வழக்கு, உ. வே. சாமிநாதையர் உரை – இற்பெண்டிர், தலைவி, ஒளவை துரைசாமி உரை – தன் பெண்டாகிய மனைவி, அ. தட்சிணாமூர்த்தி உரை – தலைவனை மணந்தோராவர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன் கிழத்தியர்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அகநானூறு 76, 276 – அவன் பெண்டிர், அகநானூறு 216 – ஊரன் பெண்டிர்.  பரத்தையின் கூற்றாக அமைந்த இம்மூன்று மருதத்திணை பாடல்களிலும் அவன் பெண்டிர் என்றது தலைவியைக் குறித்து கூறியவாறு.  ஈண்டுச் செறலால் ஒருமை பன்மையாயிற்று.

சொற்பொருள்:  அம்ம – கேட்பாயாக என்ற பொருளில் வந்த ஓர் இடைச்சொல், வாழி – அசைநிலை, தோழி – தோழி, மகிழ்நன் ஒண்தொடி முன் கை யாம் அழப் பிரிந்து தன் பெண்டிர் ஊர் இறை கொண்டனன் என்ப – நம் தலைவன் ஒளிரும் வளையல்களை முன்கையில் அணிந்த நாம் அழுமாறு நம்மைப் பிரிந்து தன் மனைவியின் ஊர்க்குச் சென்று தங்கினான் என்கின்றார்கள், கெண்டை பாய்தர அவிழ்ந்த வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே – கெண்டை மீன்கள் பாய்ந்ததால் மலர்ந்து வண்டுகளைப் பிணிக்கும் (வண்டுகள் விரும்பும்) ஆம்பல் மலர்களையுடைய நாட்டின் தலைவன்

புலவிப் பத்து

பாடல்கள் 41–50:  இவை தலைவன் தலைவி ஊடல் பற்றினவை.  தலைவனின் பரத்தமையினால் ஊடல் நிகழ்கின்றது.  பாடல்கள் 41, 42, 42, 43. 47, 48, 49, 50 ஆகியவை தலைவியின் கூற்றாக அமைந்துள்ளன.  பாடல்கள் 44, 45, 46 ஆகியவை தோழியின் கூற்றாக அமைந்துள்ளன.

ஐங்குறுநூறு 41, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி பாணனிடமும் தலைவனின் நண்பர்களிடமும் சொன்னது
தன் பார்ப்புத் தின்னும் அன்பு இல் முதலையொடு
வெண்பூம் பொய்கைத்து அவன் ஊர் என்ப, அதனால்
தன் சொல் உணர்ந்தோர் மேனி
பொன் போல் செய்யும் ஊர் கிழவோனே.

பாடல் பின்னணி:  தலைவனை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிய பாணனிடமும் தலைவனின் நண்பர்களிடமும் தலைவி சொன்னது.  இப்பாட்டை நச்சினார்க்கினியர் தோழியின் கூற்றாகக் கொண்டார்.

பொருளுரை:  தன் பிள்ளைகளைத் தின்னும் அன்பு இல்லாத முதலையுடன் வெள்ளை நிற மலர்களையுடைய நீர்நிலைகளை உடையது அவனுடை ஊர் எனக் கூறுவர்.  அதனால் தன்னுடைய பொய்யை மெய் என்று நம்பும் மகளிரின் மேனியில் பசலையைப் பரவச் செய்யும் கொடுமையுடையவனாக உள்ளான், அவ்வூரில் உள்ள தலைவன்.

குறிப்பு:  பழைய உரை – அன்பில் முதலை என்றது தலைவனை நோக்கியதெனவும், பொய்கையில் வெண்பூ என்றது, புறத்தொழுக்கத்திற்குத் துணையாகிய அறிவிலாதாரை நோக்கியெனவும் கொள்க.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன் பார்ப்புத் தின்னும் அன்பு இல் முதலையையும் வெள்ளிய பூவையும் ஒருசேரவுடைய ஊரன் என்பது, தலைவன் தன்னை நம்பி வாழ்வோரை வருத்துகின்றவனும், அன்பு சிறிதும் இல்லாதவனும் என்றாகும்.  இனி வெண்பூ என்றது அவன் சொல்லை மெய்யென்று நம்பும் இயல்புடைய வெள்ளை மனமுடைய தன்னை நோக்கியது என்று கோடலே சிறப்பு.  இலக்கணக் குறிப்பு – ஊர் – முன்னிலைப் புறமொழி, கிழவோனே – ஏகாரம் அசைநிலை.  பார்ப்பு – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

சொற்பொருள்:  தன் பார்ப்புத் தின்னும் அன்பு இல் முதலையொடு வெண்பூம் பொய்கைத்து அவன் ஊர் என்ப – தன் பிள்ளைகளைத் தின்னும் அன்பு இல்லாத முதலையுடன் வெள்ளை நிற மலர்களையுடைய நீர்நிலைகளை உடையது அவனுடை ஊர் எனக் கூறுவர், அதனால் தன் சொல் உணர்ந்தோர் மேனி பொன் போல் செய்யும் ஊர் கிழவோனே – அதனால் தன்னுடைய பொய்யை மெய் என்று நம்பும் மகளிரின் மேனியில் பசலையைப் பரவச் செய்யும் கொடுமையுடையவனாக உள்ளான் அவ்வூரில் உள்ள தலைவன்

ஐங்குறுநூறு 42, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தலைவனிடம் சொன்னது
மகிழ் மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ
யாணர் ஊர, நின் மாண் இழை அரிவை?
காவிரி மலிர் நிறை அன்ன நின்
மார்பு நனி விலக்கல் தொடங்கியோளே.

பாடல் பின்னணி:  பரத்தை ஒருத்தி, தலைவன் பிற பரத்தையர்களுடன் ஒழுகினான் என்பதால் புலந்தாள் என்பதை அறிந்த தலைவி, தான் அதை அறிந்தமை தோன்றச் சொன்னது.

பொருளுரை:  வளமையான ஊரின் தலைவனே!  உன்னுடைய மாட்சிமை உடைய அணிகலன்களை அணிந்த பரத்தை, காவிரி ஆற்றின் பெருகி வரும் வெள்ளம் போன்ற நின் மார்பில் பொருந்தாது வன்மையாக அதை விலக்கத் தொடங்கியவள், கள்ளுண்ட வெறி மிகவும் சிறத்ததால் அறிவு மயங்கினாளோ?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ஆசிரியர் நச்சினார்க்கினியர், இதனைத் தோழி கூற்றாகக் கொண்டு, “உயர்மொழிக் கிளவியும் உரியவால் அவட்கே” என்பதற்கு (தொல்காப்பியம், பொருளதிகாரம் 240) உதாரணமாகக் காட்டி “இதனுட் காவிரி பெருக்குப் போலத் தலைவியை நோக்கி வருகின்ற மார்பினைத் தான் விலக்குமாறு என்னை எனத் தலைவியை உயர்த்துக் கூறியவாறு காண்க” என்பர்.  அவ்வாறு விலக்குதற்குக் காரணம் மகிழ்மிகச் சிறத்தலாற் பிறக்கும் மயக்கம் போலும் என்கின்றாள் ஆகலினாலும், அஃது உயர்மொழிக் கிளவியாகாமையாலும் அவர் கூறியது பொருந்தாமை உணர்ந்து கொள்க.  இலக்கணக் குறிப்பு – மகிழ் – மகிழ்வு என்று பொருள்படும் முதனிலைத் தொழிற்பெயர், சிறப்ப – ஏதுப்பொருளில் வந்த செயவென் எச்சம், கொல்லோ – கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ அசைநிலை, யாணர் ஊர – யாணர் புதியது ஆகுபெயரால், செல்வ வருவாய் குறித்தது, அன்ன – உவம உருபு, நனி – மிகுதிப் பொருள் தரும் உரிச்சொல், தொடங்கியோளே – ஏகாரம் அசைநிலை.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  மகிழ் மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ – கள்ளுண்ட வெறி மிகவும் சிறத்ததால் அறிவு மயங்கினாளோ, யாணர் ஊர – புதிய வருவாயையுடைய ஊரனே, வளமையான ஊரின் தலைவனே, நின் மாண் இழை அரிவை காவிரி மலிர் நிறை அன்ன நின் மார்பு நனி விலக்கல் தொடங்கியோளே – உன்னுடைய மாட்சிமை உடைய அணிகலன்களை அணிந்த பரத்தை காவிரி ஆற்றின் பெருகி வரும் வெள்ளம் போன்ற நின் மார்பில் பொருந்தாது வன்மையாக அதை விலக்கத் தொடங்கியவள்

ஐங்குறுநூறு 43, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவி  தலைவனிடம் சொன்னதுஅவன் பாணனுடன் வந்தபொழுது
அம்பணத்தன்ன யாமை ஏறிச்
செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும்
யாணர் ஊர! நின்னினும்
பாணன் பொய்யன், பல் சூளினனே.

பாடல் பின்னணி:  மருதத் திணையில் பாணர்கள் தலைவனின் நண்பர்கள்.  தலைவன் பரத்தையிடம் செல்லும் பொழுது தலைவி ஊடல் கொள்வாள்.  பாணன் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே தூது செல்வான்.

பொருளுரைஅளவை அன்ன இருக்கும் தாய் ஆமையின் முதுகில் ஏறும் செம்பு போன்ற சிவந்த நிறமுடைய குட்டிகளை உடைய செழிப்பான ஊரனே, உன்னை விட உன் பாணன் அதிகப் பொய் சொல்லுபவன்.  உறுதி மொழிகளையும் கூறும் சூது உடையவன்.

குறிப்பு:   உள்ளுறை – பழைய உரை – யாமைப் புறத்து ஏறிப் பார்ப்புப் பல துஞ்சும் ஊர என்றது மார்பில் துயில்கின்ற புதல்வரையுடையாய் என்றவாறு.  மகப் பெற்று வாழ்வார்க்குப் பொய் கூறல் ஆகாது என்பதாம், ஒளவை துரைசாமி உரை – யாமையின் மீது அதன் பார்ப்பு ஏறித் துஞ்சும் என்றதனால், தலைமகன் மார்பின்மீது அவன் புதல்வன் அமர்ந்து துயில்கின்றமை பெற்றதாம்.  பெறவே மகப்பயந்து வாழ்வார்க்கு அம்மக்கள் தம் மார்பின்மீது ஏறி விளையாட்டு அயர்தலும் அமர்ந்து கிடக்கும் துயிறலுமாகிய இச் செயல்களாற் இன்பத்திலும் இம்மைக்கண் சீறியது பிறிதின்மையின் அதனைச் சுட்டி உள்ளுரைத்தவாறு ஆயிற்று.  இலக்கணக் குறிப்பு – யாணர் ஊர – யாணர் புதியது ஆகுபெயரால், செல்வ வருவாய் குறித்தது, அன்ன – உவம உருபு, சூளினனே – ஏகாரம் அசைநிலை.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).   பார்ப்பு – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

சொற்பொருள்:  அம்பணத்தன்ன – அளவை அன்ன, மரக்கால் போல், யாமை – ஆமை, ஏறி – ஏறி, செம்பின் அன்ன – செம்பு நிறமுள்ள, பார்ப்பு – குட்டிகள், பல துஞ்சும் – சில தூங்கும், யாணர் – புது வருவாய், ஊர – ஊரன், நின்னினும் – உன்னை விட, பாணன் பொய்யன் – உன் பாணன் பொய் சொல்பவன், பல் சூளினனே – உறுதி மொழிகளைக் கூறும் சூது நிறைந்தவன்

ஐங்குறுநூறு 44, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்புத்,
தாய் முகம் நோக்கி வளர்ந்திசினாஅங்கு,
அதுவே ஐய நின் மார்பே,
அறிந்தனை ஒழுகுமதி, அறனுமார் அதுவே.

பாடல் பின்னணி:  பரத்தையர் மனையில் பல நாட்கள் தங்கித் தன் மனைக்கு வந்த தலைவனிடம் தோழி கூறியது.

பொருளுரை:  ஐயா!  இனிய பெரிய பொய்கையில் உள்ள ஆமையின் இளம் குட்டிகள் தங்கள் தாய் முகத்தை நோக்கி வளர்ந்தாற்போன்றது, இவள் நின் மார்பை நோக்கி வாழும் இயல்பு.  அதை அறிந்தவனாக ஒழுகுவாயாயாக.  அதுவே அறமும் ஆகும்.

குறிப்பு:  பழைய உரை – நின் மார்பாற் கொள்ளும் பயனின்றிக் காட்சி எய்தவும் பெறகின்றிலள் எனப் புலந்து கூறியவாறறிக.  அ. தட்சிணாமூர்த்தி உரை – யாமைகள் கரையின்கண் முட்டையிட்டுப் புதைத்து நீங்கும்.  முட்டையிலிருந்து பார்ப்புகள் வெளிப்பட்டு நீர்க்குள் செல்லும்.  அவை தாயால் வளர்க்கப்படுவதில்லை.  ஒளவை துரைசாமி உரை – தம் தாய் தம்மை ஓம்பாவிடினும் தாம் அதன் முகம் நோக்கி வளர்ந்தது போல, இவள் நீ நல்காயாயினும் நின் மார்பினையே நோக்கி வாழும் இயல்பினள் ஆயினள்.  இலக்கணக் குறிப்பு – வளர்ந்திசினாஅங்கு – செய்யுளிசை அளபெடை, இசின் படர்க்கை அசை, மார்பே – ஏகாரம் அசைநிலை, அறிந்தனை – அறிந்தனையாய், முற்றெச்சம், ஒழுகுமதி – மதி முன்னிலையசை, அறனுமார் – அறனும், ஆர் அசைநிலை, உம்மை – எச்ச உம்மை, அதுவே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26).

சொற்பொருள்:  தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்புத் தாய் முகம் நோக்கி வளர்ந்திசினாஅங்கு – இனிய பெரிய பொய்கையில் உள்ள ஆமையின் இளம் குட்டிகள் தங்கள் தாய் முகத்தை நோக்கி வளர்ந்தாற்போல், அதுவே ஐய நின் மார்பே – அத்தன்மையை உடையது ஐயா நின் மார்பு, அறிந்தனை ஒழுகுமதி – அதனை அறிந்தவனாக ஒழுகுவாயாயாக, அறனுமார் அதுவே – அதுவே அறம் – (ஒளவை துரைசாமி உரை – ஆர் அசைநிலை, உ. வே. சாமிநாதையர் உரை – மார் அசைநிலை),

ஐங்குறுநூறு 45, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது – தலைவி கூறுவதைப் போல் தோழி தலைவனிடம் சொன்னது
கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து,
வேனில் ஆயின் மணி நிறங்கொள்ளும்
யாறு அணிந்தன்று நின் ஊரே,
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந, என் கண்ணே.

பாடல் பின்னணி:  பரத்தையர் மனையில் பல நாட்கள் தங்கித் தன் மனைக்கு வந்த தலைவனிடம் தோழி கூறியது.  

பொருளுரை:  தலைவா!  உன்னுடைய ஊரில் உள்ள ஆறு, குளிர் காலத்தில் குளிர்ந்த கலங்கிய நீரைக் கொண்டு வருகின்றது.  கோடைக் காலத்தில் அது நீலமணியின் நிறத்து நீரைக் கொண்டு அழகுடன் விளங்குகின்றது.  ஆனால் என் கண்களோ, நீ என்னை விட்டு அகன்றதால், எல்லாக் காலங்களிலும் பசலை நிறத்தைக் கொண்டுள்ளன.

குறிப்பு:  பழைய உரை – கலங்குதலும் தெளிதலும் உடைத்தாகிய யாற்றின் இயல்பும் பெறாது என்றும் பசந்தே ஒழுகுகின்றாள் இவள் என்பதாம்.  இப்பாடல் தோழியின் கூற்றாக அமைந்துள்ளது, ஒளவை துரைசாமி உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரைகளில்.  ஒளவை துரைசாமி தன்னுடைய உரையில் ‘இதனைத் தலைவி கூற்றாகக் கோடற்கும் இயைபுண்டு என அறிக’ என்கின்றார்.  தி. சதாசிவ ஐயர் உரை – தாயத்தின் அடையா (பொருளியல் 24) என்னுஞ் சூத்திர விதிபற்றித் தலைவிக் கண்ணைத் தோழி தன் கண்ணாகக் கூறினாள்.   உ. வே. சாமிநாதையர் உரை – என் கண் என்றாள் ஒற்றுமைப்பற்றி தோழி தலைவி உறுப்பினைத் தன் உறுப்பென்றல் மரபாதலின்.  ஒன்றித் தோன்றுந் தோழி மேன (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என்பதனால் தோழி கூற்றும் தலைவி கூற்றாகும் எனக் கூறுவர் பேராசிரியர்.  குறுந்தொகை 236ஆம் பாடலின் தமிழண்ணல் உரை – இது நாடக வழக்கு.  வழக்கறிஞர் கட்சிக்காரராக தம்மை எண்ணிப் பேசுவது போன்றது.  தலைவி கூற்று எனற்பாலது சிறிது மிகைப்படின், பண்பு கருதி தோழி கூற்றென வகுத்துள்ளனர்.  தோழியாகவே தோன்றும் உண்மைப் பாத்திரமாகவும் தலைவியின் குரலாக ஒலிக்கும் நிழற்பாத்திரமாகவும் இருவகைப்பட இருப்பதைப் பகுத்தறிய வேண்டும்.  தலைவி கூறுவதுபோல் தோழி கூறுதல் – அகநானூறு 362, நற்றிணை 28, 98, 124, 132, 175, 178, 191, 211, கலித்தொகை 18, 70, குறுந்தொகை 236, 238, ஐங்குறுநூறு 45.  இலக்கணக் குறிப்பு – அணிந்தனவால் – ஆல் அசைநிலை, கண்ணே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  கூதிர் ஆயின் – குளிர் காலமானால், தண் கலிழ் தந்து – குளிர்ந்த கலங்கிய நீரைக் கொண்டு வந்து, வேனில் ஆயின் – கோடை ஆனால், மணி நிறங் கொள்ளும் – நீலமணி நிறமாகும், யாறு – ஆறு, அணிந்தன்று – அழகு செய்கின்றது, அணிகின்றது, நின் ஊரே – உன்னுடைய ஊர், பசப்பு அணிந்தனவால் – பசப்பு அடைந்தன, மகிழ்ந – தலைவா, என் கண்ணே – என் கண்கள்

ஐங்குறுநூறு 46, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
நினக்கே அன்று அஃது எமக்குமார் இனிதே,
நின் மார்பு நயந்த நன்னுதல் அரிவை
வேண்டிய குறிப்பினை ஆகி,
ஈண்டு நீ அருளாது, ஆண்டு உறைதல்லே.

பாடல் பின்னணி:  பரத்தையின் மனையிலிருந்து வந்த தலைவனிடம் தோழி புலந்து சொன்னது. 

பொருளுரை:  நின் மார்பை விரும்பிய அழகிய நெற்றியையுடை பரத்தையின் குறிப்பை உணர்ந்தவனாகி, எமக்கு நீ அருள் செய்யாமல் அவள் மனையில் இருப்பது, உனக்கு மட்டும் இல்லை, எமக்கும் இனியது.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை, தி. சதாசிவ ஐயர் உரை – இந்த உரைகளில் இப் பாடல் தோழியின் கூற்றாக உள்ளது.  எனினும் நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் தங்களுடைய தொல்காப்பிய உரையில் இந்தப் பாடலைத் தலைவியின் கூற்றாகவே கொண்டனர் என்று தனது உரையில் அறிஞர் ஒளவை துரைசாமி குறிப்பிட்டுள்ளார்.  பழைய உரை – இவ்வாறு வருதலின் வாராமையே இனிது என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – எமக்குமார் – ஆர் அசைநிலை, உறைதல்லே – விரித்தல் விகாரம்.

சொற்பொருள்:  நினக்கே அன்று அஃது எமக்குமார் இனிதே – உனக்கு மட்டும் இல்லை எமக்கும் இனியது, நின் மார்பு நயந்த நன்னுதல் அரிவை வேண்டிய குறிப்பினை ஆகி ஈண்டு நீ அருளாது ஆண்டு உறைதல்லே – நின் மார்பை விரும்பிய அழகிய நெற்றியையுடை பரத்தையின் குறிப்பை உணர்ந்தவனாகி எமக்கு நீ அருள் செய்யாமல் அவள் மனையில் இருப்பது

ஐங்குறுநூறு 47, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தலைவனிடம் சொன்னது
முள்ளெயிற்றுப் பாண் மகள் இன் கெடிறு சொரிந்த
அகன் பெரு வட்டி நிறைய, மனையோள்
அரிகால் பெரும் பயறு நிறைக்கும் ஊர!
மாண் இழை ஆயம் அறியும், நின்
பாணன் போலப் பல பொய்த்தல்லே.

பாடல் பின்னணி:  பாணற்கு வாயில் மறுத்த தலைவி, பின் பாணனுடன் தலைவன் வந்தபொழுது கூறியது.

பொருளுரை:  கூரிய பற்களையுடைய பாண்மகள் இனிய கெளிற்று மீனைக் கொண்டு வந்து கொட்டிய அகன்ற பெரிய கூடை நிரம்பும்படி மனையில் உள்ள பெண் பண்ட மாற்றாக அரிகாலிடத்து விதைத்துப் பெற்ற பெரும் பயற்றைக் கொடுக்கும் ஊரனே!  மாட்சிமையுடைய அணிகலன்களை அணிந்த தோழியர் கூட்டமும் அறியும், நின் பாணன் போல் நீயும் பல பொய்மொழிகள் கூறுவதை.

குறிப்பு:  பழைய உரை – மாணிழை ஆயம் அறியும் என்ற கருத்து, நீ கூறுங் காதன்மை பொய்யென்பது ஆயமெல்லாம் அறியும்.  நான் இதனை மெய்யென்று கொள்ளினும் அவர் கொள்ளார் என்பதாம்.  கெடிறு சொரிந்த வட்டி நிறைய மனையோள் பயறு நிறைக்கும் ஊர என்றது, நீ நின் காதல் சொல்லி விடுத்து அவர் சிறந்த காதல் சொல்லி வரவிடப் பெறுவாய் என்றவாறு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாண்மகள் கொணர்ந்த இழிந்த மீனுக்குச் சமமாக மனையாட்டி சிறந்த நெல்லைக் கொடுப்பது போன்று நீயும் பரத்தையர் தரும் இழிந்த காம இன்பத்திற்கு ஈடாக உயர்ந்தோரிடத்துச் செய்ய வேண்டிய தலையளியை அவர்பாற் செய்யாநின்றனை.  பண்ட மாற்று – அகநானூறு 60, 61, 126, 140, 245, 296, 390, நற்றிணை 183, குறுந்தொகை 221, 269, ஐங்குறுநூறு 47, 48, 49, பொருநராற்றுப்படை 214–215, 216–7, பட்டினப்பாலை 28–30, மலைபடுகடாம் 413 –414.  பாணரும் மீனும் – அகநானூறு 196 – வராஅல் துடிக் கண் கொழுங்குறை நொடுத்து உண்டு ஆடி வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி ஆம்பல் அகல் இலை அமலை வெஞ்சோறு தீம் புளிப் பிரம்பின் திரள் கனி பெய்து, அகநானூறு 216 – நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள், குறுந்தொகை 169 – பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல, ஐங்குறுநூறு 47 – முள் எயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த, ஐங்குறுநூறு 48 – வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள் வராஅல் சொரிந்த, ஐங்குறுநூறு 49 – பாண்மகள் சில் மீன் சொரிந்து, ஐங்குறுநூறு 111 – பாணன் சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇச் சினைக் கயல் மாய்க்கும், புறநானூறு 348 – மீன் சீவும் பாண் சேரி, மதுரைக்காஞ்சி 269 – மீன் சீவும் பாண் சேரியொடு, பெரும்பாணாற்றுப்படை 284–285 – கோள்வல் பாண்மகன் தலைவலித்து யாத்த நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ.  இலக்கணக் குறிப்பு – முள்ளெயிறு – உவமத்தொகை, அரிகால் – அன்மொழித் தொகை, அரிந்த கால்கள் நின்ற வயல் என விரியும், அறியும் – உம்மை தொக்கது, ஆயம் – ஆயமும் எனல் வேண்டிய எச்சவும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது, பொய்த்தல்லே – பொய்த்தலே என்பதன் விரித்தல் விகாரம்.

சொற்பொருள்:  முள்ளெயிற்றுப் பாண் மகள் இன் கெடிறு சொரிந்த அகன் பெரு வட்டி நிறைய மனையோள் அரிகால் பெரும் பயறு நிறைக்கும் ஊர – கூரிய பற்களையுடைய பாண்மகள் இனிய கெளிற்று மீனைக் கொண்டு வந்து கொட்டிய அகன்ற பெரிய கூடை நிரம்பும்படி மனையில் உள்ள பெண் அரிகாலிடத்து விதைத்துப் பெற்ற பெரும் பயற்றைக் கொடுக்கும் ஊரனே (அரிகால் – நெல் அரிந்து விட்ட வயல்), மாண் இழை ஆயம் அறியும் நின் பாணன் போலப் பல பொய்த்தல்லே – மாட்சிமையுடைய அணிகலன்களை அணிந்த தோழியர் கூட்டமும் அறியும் நின் பாணன் போல் நீயும் பல பொய்மொழிகள் கூறுவதை

ஐங்குறுநூறு 48, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தலைவனிடம் சொன்னது
வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள்
வராஅல் சொரிந்த வட்டியுள், மனையோள்
யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊர!
வேண்டேம் பெரும, நின் பரத்தை
யாண்டுச் செய் குறியோடு, ஈண்டு நீ வரலே.

பாடல் பின்னணி:  பரத்தையர் மனையிலிருந்து வந்த தலைவனிடம் தலைவி கூறியது.

பொருளுரை:  வலையால் மீன் பிடிக்கும் பாணனின் வெள்ளை நிறப் பற்களையுடைய இளைய மகள் (மடப்பத்தை உடைய மகள்) வரால் மீனைக் கொண்டுவந்து கொட்டிய கூடையில், ஓராண்டு கழிந்த வெள்ளை நெல்லை கொட்டி நிரப்பும் ஊரனே!  நின் பரத்தை ஆங்குச் செய்த அடையாளத்துடன் இங்கு நீ வர வேண்டாம் பெருமானே.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இழிந்த வரால்மீனின் பொருட்டுச் சிறந்த வெண்ணெல்லைக் கொடுக்கும் மனையாள் போன்று நீயும் புல்லிய காம இன்பத்தால் உயரிய பண்பாட்டினை இழக்கின்றனை என்றது.  பாணரும் மீனும் – அகநானூறு 196 – வராஅல் துடிக் கண் கொழுங்குறை நொடுத்து உண்டு ஆடி வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி ஆம்பல் அகல் இலை அமலை வெஞ்சோறு தீம் புளிப் பிரம்பின் திரள் கனி பெய்து, அகநானூறு 216 – நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள், குறுந்தொகை 169 – பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல, ஐங்குறுநூறு 47 – முள் எயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த, ஐங்குறுநூறு 48 – வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள் வராஅல் சொரிந்த, ஐங்குறுநூறு 49 – பாண்மகள் சில் மீன் சொரிந்து, ஐங்குறுநூறு 111 – பாணன் சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇச் சினைக் கயல் மாய்க்கும், புறநானூறு 348 – மீன் சீவும் பாண் சேரி, மதுரைக்காஞ்சி 269 – மீன் சீவும் பாண் சேரியொடு, பெரும்பாணாற்றுப்படை 284–285 – கோள்வல் பாண்மகன் தலைவலித்து யாத்த நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ.  பண்ட மாற்று – அகநானூறு 60, 61, 126, 140, 245, 296, 390, நற்றிணை 183, குறுந்தொகை 221, 269, ஐங்குறுநூறு 47, 48, 49, பொருநராற்றுப்படை 214–215, 216–7, பட்டினப்பாலை 28–30, மலைபடுகடாம் 413 –414.  இலக்கணக் குறிப்பு – வராஅல் – அளபெடை, வரலே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள் வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள் யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊர – வலையால் மீன் பிடிக்கும் பாணனின் வெள்ளை நிறப் பற்களையுடைய இளைய மகள் (மடப்பத்தை உடைய மகள்) வரால் மீனைக் கொண்டுவந்து கொட்டிய கூடையில் ஓராண்டு கழிந்த வெள்ளை நெல்லை கொட்டி நிரப்பும் ஊரனே, வேண்டேம் பெரும நின் பரத்தை யாண்டுச் செய் குறியோடு ஈண்டு நீ வரலே – வேண்டாம் பெருமானே நின் பரத்தை ஆங்குச் செய்த அடையாளத்துடன் இங்கு நீ வருதல்

ஐங்குறுநூறு 49, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தலைவனிடம் சொன்னது
அம் சில் ஓதி அசை நடைப் பாண்மகள்,
சில் மீன் சொரிந்து, பல் நெல் பெறூஉம்
யாணர் ஊர! நின் பாண்மகன்
யார் நலம் சிதையப் பொய்க்குமோ இனியே?

பாடல் பின்னணி:  ஊடிய பரத்தையுடன் பாணனின் முயற்சியால் கூடினான் தலைவன் என்பதை அறிந்த தலைவி, தனக்கும் தலைவனுக்கும் உள்ள ஊடலைத் தீர்க்கும் பொருட்டுப் பாணனுடன் வந்த தலைவனிடம் கூறியது.

பொருளுரை:  அழகிய சிலவாகிய கூந்தலையும் அசைந்த நடையையும் உடைய பாண்மகள் சில மீன்களைக் கொண்டுவந்து, அதற்குப் பண்டமாற்றாக பல்வேறு நெற்களையும் பெறும் ஊரனே!  நின் பாணன் யாருடைய அழகு கெடும்படி பொய்யைக் கூறுவானோ இனி!

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாண்மகள் சில மீன் கொடுத்துப் பல வேறு நெற்களையும் பெரும் ஊரன் என்றது ஒரு சில பொய்களைக் கூறியே பல வேறு மகளிரின் நலத்தை நீ நுகர்வை என்பதாம்.  பல் நெல் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பல்வேறு நெற்கள், ஒளவை துரைசாமி உரை – பலவாகிய நெல், அ. தட்சிணாமூர்த்தி உரை – பலவாகிய நெற்கள், தி. சதாசிவ ஐயர் உரை – பல நெல்.  பாணரும் மீனும் – அகநானூறு 196 – வராஅல் துடிக் கண் கொழுங்குறை நொடுத்து உண்டு ஆடி வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி ஆம்பல் அகல் இலை அமலை வெஞ்சோறு தீம் புளிப் பிரம்பின் திரள் கனி பெய்து, அகநானூறு 216 – நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள், குறுந்தொகை 169 – பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல, ஐங்குறுநூறு 47 – முள் எயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த, ஐங்குறுநூறு 48 – வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள் வராஅல் சொரிந்த, ஐங்குறுநூறு 49 – பாண்மகள் சில் மீன் சொரிந்து, ஐங்குறுநூறு 111 – பாணன் சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇச் சினைக் கயல் மாய்க்கும், புறநானூறு 348 – மீன் சீவும் பாண் சேரி, மதுரைக்காஞ்சி 269 – மீன் சீவும் பாண் சேரியொடு, பெரும்பாணாற்றுப்படை 284–285 – கோள்வல் பாண்மகன் தலைவலித்து யாத்த நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ.   பண்ட மாற்று – அகநானூறு 60, 61, 126, 140, 245, 296, 390, நற்றிணை 183, குறுந்தொகை 221, 269, ஐங்குறுநூறு 47, 48, 49, பொருநராற்றுப்படை 214–215, 216–7, பட்டினப்பாலை 28–30, மலைபடுகடாம் 413–414.  இலக்கணக் குறிப்பு – யாணர் ஊர – யாணர் புதியது ஆகுபெயரால், செல்வ வருவாய் குறித்தது, பெறூஉம் – செய்யுளிசை அளபெடை, பொய்க்குமோ – ஓகாரம் வினா, இனியே – ஏகாரம் அசைநிலை.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:  அம் சில் ஓதி அசை நடைப் பாண்மகள் சில் மீன் சொரிந்து பல் நெல் பெறூஉம் யாணர் ஊர – அழகிய சிலவாகிய கூந்தலையும் அசைந்த நடையையும் உடைய பாண்மகள் சில மீன்களைக் கொண்டுவந்து அதற்குப் பண்டமாற்றாக மிகுதியான நெல்லைப் பெறும் ஊரனே, அழகிய சிலவாகிய கூந்தலையும் அசைந்த நடையையும் உடைய பாண்மகள் சில மீன்களைக் கொண்டுவந்து பண்டமாற்றாக பல வேறு நெற்களையும் பெறும் ஊரனே, நின் பாண்மகன் யார் நலம் சிதையப் பொய்க்குமோ இனியே – நின் பாணன் யாருடைய அழகு கெடும்படி பொய்யைக் கூறுவானோ இனி

ஐங்குறுநூறு 50, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது  
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர!
தஞ்சம் அருளாய் நீயே, நின்
நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே.

பாடல் பின்னணி:  மனையின் நீங்கிப் பரத்தையிடத்துப் பல நாட்கள் தங்கி வந்த தலைவனுக்குத் தோழி சொல்லியது

பொருளுரை:  வஞ்சிக் கொடி தழைக்கும் புது வருவாயை உடைய ஊரனே!  நானும் இவளுடைய பெற்றோரும் தோழியரும் மிகவும் வருந்துகின்றோம்.  உன்னைத் தஞ்சமாக எண்ணி வாழ்பவளுக்கு உன் அருளை நல்குவாயாக.  உன்னைத் தன் நெஞ்சில் வைத்திருக்கும் இவள் அழுகின்றாள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – தலைமகள் முன்னின்று அவனது பரத்தமை மறுத்தல் வேண்டி ‘தஞ்சம் அருளாய் நீ’ என்றதனால் அன்பின்மையும் ‘துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்’ என்றதனால் கொடுமையையும் கூறலின், மெய்ப்பாடு வெகுளியும், பயன் வாயில் மறுத்தலுமாம்.  ‘பரத்தமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி, மடத்தகு கிழமை உடமையானும், அன்பிலை கொடியை என்றலும் உரியள்’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 158) என்பதனால், தலைவிக்கு உரிமை எய்தும் இக்கூற்று, அவள் குறிப்பின்வழி மொழியும் தோழிக்கும் அமையுமாறு கண்டுகொள்க.  துணையோர் செல்வமும் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின்னைப் பற்றுக்கோடாகக் கொண்டு வாழும் இயல்புடைய சுற்றத்தார் செல்வமும். இலக்கணக் குறிப்பு – யாணர் ஊர – யாணர் புதியது ஆகுபெயரால், செல்வ வருவாய் குறித்தது, இவளுமார் – ஆர் இசைநிறை, இவளும் – உம்மை உயர்வு சிறப்பு, அழுமே – ஏகாரம் அசைநிலை.  .  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:  துணையோர் செல்வமும் – தோழியரும் பெற்றோரும், யாமும் – நானும், வருந்துதும் – வருந்துகின்றோம், வஞ்சி – வஞ்சிக் கொடி, (Tinospora Cardifolia) அல்லது இலுப்பை மரம் (Glabrous mahua of the Malabar coast, Bassia malabarica), ஓங்கிய – தழைக்கும், யாணர் ஊர – புது வருவாயையுடைய ஊரனே, தஞ்சம் அருளாய் நீயே – உன்னை தஞ்சமாக எண்ணி வாழ்பவளுக்கு உன் அருளை நல்குவாயாக, நின் – உன்னை, நெஞ்சம் பெற்ற – நெஞ்சில் வைத்திருக்கும், இவளுமார் அழுமே – இவள் அழுகின்றாள்

தோழி கூற்றுப் பத்து

பாடல்கள் 51–60 – தோழி கூற்றாக அமைந்தவை.  பாடல்கள் 51, 52–59 – தலைவன் மனைக்கு வருகின்றான்.  தோழி அவனிடம் கூறுகின்றதாக அமைந்துள்ளன இப்பாடல்கள்.  பாடல் 53 தோழியின் கூற்று அல்லது தலைவியின் கூற்று.  பாடல் 60 – திருமணத்திற்கு முன் உள்ள சூழ்நிலையைக் கொண்டது.

ஐங்குறுநூறு 51, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
நீர் உறை கோழி நீலச் சேவல்
கூர் உகிர்ப் பேடை வயாஅம் ஊர!
புளிங்காய் வேட்கைத்தன்று நின்
மலர்ந்த மார்பு, இவள் வயாஅ நோய்க்கே.

பாடல் பின்னணி:  பரத்தமையினால் ஊடியிருந்த தலைவியிடம் இரந்து வாயில் பெற்று அவளுடன் மனையில் இருந்த தலைவன், மீண்டும் பரத்தமையை மேற்கொண்டான்.  தலைவி ஊடினாள்.  மீண்டும் வாயில் வேண்டிய தலைவனைத் தோழி இடித்துக் கூறி வாயில் மறுத்தாள்.

பொருளுரை:  நீரில் வாழும் நீலநிறக் கோழிச் சேவலைக் கூர்மையான நகங்களையுடைய அதன் பெடை தன் வயா நோய் தீர்வதற்கு நினைத்திருக்கும் ஊரனே!  புளியங்காய் வேட்கையைப் போன்றது இல்லை உன்னுடைய அகன்ற மார்பு, இவளுடைய வேட்கை நோய்க்கு.

குறிப்புஉள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பேடையானது சேவலை நினைத்து கடுஞ்சூலான் வந்த வயாநோய் தீரும் ஊரன் என்றது, அதுபோல் இவளும் தன் வேட்கையை நின் மார்பை நினைந்தே ஒருவாறு ஆற்றுவாளாயினள் என்பதாம்.   ஒப்புமை – குறுந்தொகை 87 – முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர் போல.  வயாஅம் (2) – ஒளவை துரைசாமி உரை – வேட்கைப் பெருக்கம் உணர்த்தும் உரிச்சொல் அடியாகப் பிறந்த பெயரெச்சவினை, ச.வே. சுப்பிரமணியன் உரை – சூல் கொண்ட உயிர்களுக்குப் பொதுவாக வரும் நோய், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வேட்கைய வேட்கை உண்டாகும் நோய்.  புளிங்காய் வேட்கைத்தன்று நின் மலர்ந்த மார்பு (3, 4) – உ. வே. சாமிநாதையர் உரை, சதாசிவ ஐயர் உரை, புலியூர்க் கேசிகன் உரை – இவற்றில் ‘தலைவனின் மார்பு தலைவிக்குப் புளியங்காய் வேட்கை போன்றுள்ளது’ என்றுள்ளது.  ஒளவை துரைசாமி, பொ. வே. சோமசுந்தரனார் உரைகளில் ‘முன்பு புளியங்காய் வேட்கை போன்றிருந்தது.  இப்பொழுது அவ்வாறில்லை’ என்றுள்ளது.   இலக்கணக் குறிப்பு – வயாஅம் – வேட்கைப் பெருக்கம் உணர்த்தும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினை, இஃது ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட்டு ஏதுப்பெயர் கொண்டது, வயாஅம் – செய்யுளிசை அளபெடை, நோய்க்கே – ஏகாரம் அசைநிலை.  வேட்கைத்து (3) – ஒளவை துரைசாமி உரை – வேட்கைத்து என்புழிச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது.

சொற்பொருள்:  நீர் உறை கோழி நீலச் சேவல் கூர் உகிர்ப் பேடை வயாஅம் ஊர – நீரில் வாழும் நீலநிறக் கோழிச் சேவலைக் கூர்மையான நகங்களையுடைய அதன் பெடை தன் வயா நோய் தீர்வதற்கு நினைத்திருக்கும் ஊரனே, புளிங்காய் வேட்கைத்தன்று நின் மலர்ந்த மார்பு – புளியங்காய் வேட்கையைப் போன்றது இல்லை உன்னுடைய அகன்ற மார்பு, புளியங்காய் வேட்கையைப் போன்றது உன்னுடைய அகன்ற மார்பு, இவள் வயாஅ நோய்க்கே – இவளுடைய வேட்கை நோய்க்கு

ஐங்குறுநூறு 52, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் நகையாடிச் சொன்னது
வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச்,
செவ்விரல் சிவந்த, சேய் அரி மழைக்கண்,
செவ்வாய்க் குறுமகள் இனைய,
எவ்வாய் முன்னின்று மகிழ்ந, நின் தேரே?

பாடல் பின்னணி:  பரத்தையர் மனையில் பல நாட்கள் தங்கி, அதன் பின் வாயில் வேண்டி வந்த தலைவனிடம் தோழி நகையாடிக் கூறியது.

பொருளுரைதலைவனே!  சிவந்த வயலையின் செங்கொடியால் மாலை தொடுத்ததால் மேலும் சிவந்திருக்கும் சிவந்த விரல்களையும், சிவந்த வரிகள் கொண்ட குளிர்ந்த கண்களையும், சிவந்த வாயையுமுடைய இந்த இளமகள் வருந்தும்படி, எவ்விடத்தை அடைய எண்ணியுள்ளது உன் தேர்?

குறிப்பு:  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – மனையகத்துத் தான் பேணி வளர்த்த கொடியே ஆயினும் அதனாற் பிணையல் தொடுத்தது பொறாது சிவக்கும் செவ்விரலுடையவள் என்றது, நின்னால் பேணப்படும் நலமுடையளாயினும் நின் தேர் பிறிதோரிடத்து நின்றவழியும் பொறாது கண்கலுழ்ந்து வாய்வெருவி மெய் வேறுபடுவாளாயினள் எனத் தலைவியின் ஆற்றாமையைச் சுட்டி நிற்பது தோன்ற, ‘பிணையல் தைஇச் செவ்விரல் சிவந்த சேய் அரி மழைக்கண் செவ்வாய்க் குறுமகள்’ என்றாள்.   இலக்கணக் குறிப்பு – தைஇ – சொல்லிசை அளபெடை, செவ்வாய் – பண்புத்தொகை, தேரே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச் செவ்விரல் சிவந்த வயலையின் செங்கொடியால் மாலை தொடுத்ததால் சிவந்த விரல்கள் மேலும் சிவந்த, சேய் அரி மழைக்கண் செவ்வாய்க் குறுமகள் இனைய – சிவந்த வரிகள் கொண்ட குளிர்ந்த கண்களையும் சிவந்த வாயையுமுடைய இந்த இளமகள் வருந்தும்படி, எவ்வாய் முன்னின்று மகிழ்ந நின் தேரே – எவ்விடத்தை அடைய எண்ணியுள்ளது தலைவனே உன் தேர்

ஐங்குறுநூறு 53, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தலைவனிடம் சொன்னது அல்லது தோழி தலைவனிடம் சொன்னது
துறை எவன் அணங்கும் யாம் உற்ற நோயே?
சிறை அழி புதுப் புனல் பாய்ந்தெனக் கலங்கிக்
கழனித் தாமரை மலரும்
பழன ஊர, நீ உற்ற சூளே!

பாடல் பின்னணி:  பண்டு பரத்தையருடன் நீராடிய துறையில் ஒரு நாள் தலைவியுடன் நீராடினான் தலைவன்.  பண்டு நிகழ்ந்ததை அறிந்த தலைவி வருந்தி, அங்கிருந்து நீங்கி மனைக்குள் புகுந்தபொழுது அவளுடைய முகவாட்டம் எதனால் எனத் தலைவன் கேட்டான்.  அது கேட்ட தோழி கூறியது இது.

பொருளுரை:  அணையை (கரையை) அழித்துக் கொண்டு வரும் புது வெள்ளம் பாய்ந்ததால் கலங்கி, அதன்பின் தாமரை மலரும் பொது நிலத்தையுடைய ஊரனே!  எம்மை நீர்த்துறையில் உள்ள கடவுள் எவ்வாறு துன்புறுத்தும்?  அது துன்புறுத்தவில்லை.  எம்முடைய துன்புறுத்தும் நோய்க்குக் காரணம் நீ கொடுத்த உறுதிமொழியைப் பேணாமை தான்.

குறிப்பு:  தி. சதாசிவ ஐயர் உரை – இச்செய்யுள் தலைவி கூற்றாக எழுதப்பட்டிருக்கிறது. அது அதிகாரத்தாலும் ‘யாம்’ என்பதாலும் பொருத்தமின்று.   தோழியின் கூற்று – ஒளவை துரைசாமி உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை, தி. சதாசிவ ஐயர் உரை,  தலைவியின் கூற்று – உ. வே. சாமிநாதையர் உரை, அ. தட்சிணாமூர்த்தி உரை.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புதுப்புனல் அணையை உடைத்துக்கொண்டு பாய்ந்த அளவிலே கலங்கிப் பின்னர் மலருந் தாமரையையுடைய ஊரன் என்றது, சூள்மொழியைத் தப்பி நீ சென்றபொழுது தலைவி நின்னோடு பிணங்கிப் பின்னர் நின்னைக் கூடி மகிழ்தற்கேதுவாக பரத்தமையுடையை என்பதாம், ஒளவை துரைசாமி உரை – சிறையழிக்கும் புதுப்புனல் பாயக் கழனித் தாமரை கலங்கி மலரும் பழனங்களையுடைய ஊரன் என்றது, மகளிர் நலம் சிதைக்கும் புறவொழுக்கத்தை நீ மேற்கொண்டு ஒழுகுவதால் பொறாது முன்னர் வேறுபட்டுப் பின்னர்க் கூடும் பரத்தையர் பலரை உடையையாயினாய் என்றவாறாம்.  துறை எவன் அணங்கும் (1) – ஒளவை துரைசாமி உரை – துறை ஆகுபெயர், துறைகளில் தெய்வம் உறையும் என்பது பண்டையோர் கொள்கை.  அணங்குடைப் பனித்துறை – ஐங்குறுநூறு 174, அணங்குடைப் பணித்துறை கைதொழுது ஏத்தி யாயும் ஆயமோடு அயரும் – அகநானூறு 240, நிலத்துறைக் கடவுள் – அகநானூறு 156, துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும் முறையுளிப் பராஅய்ப் பாய்ந்தனர் தொழுஉ – கலித்தொகை 101.  நீ உற்ற சூளே (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ செய்த சூளைத் தப்பி நீ ஒழுகினமை.  பழன (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொது நிலங்களையுடைய, ஒளவை துரைசாமி உரை – ஊரவர்க்கெல்லாம் பொதுவாகிய நிலம்.  இலக்கணக் குறிப்பு – துறை – ஆகுபெயர் துறையில் உறையும் கடவுளுக்கு, யாம் – தன்மைப் பன்மை, நோயே – ஏகாரம் அசைநிலை, சூளே – பிரிநிலை.

சொற்பொருள்:  துறை எவன் அணங்கும் – துறையில் உள்ள கடவுள் எவ்வாறு வருத்தும், யாம் உற்ற நோயே – யாம் உற்ற துன்ப நோய், சிறை அழி புதுப் புனல் பாய்ந்தெனக் கலங்கிக் கழனித் தாமரை மலரும் பழன ஊர – அணையை (உயர்ந்த கரையை) அழித்துக் கொண்டு வரும் புது வெள்ளம் பாய்ந்ததால் கலங்கி அதன்பின் தாமரை மலரும் பொது நிலத்தையுடைய ஊரனே, நீ உற்ற சூளே – நீ கொடுத்த உறுதிமொழிகள்

ஐங்குறுநூறு 54, ஓரம்போகியார், மருதத் திணை தோழி வாயில் மறுத்து, தலைவனிடம் சொன்னது
திண்தேர்த் தென்னவன் நன்னாட்டு உள்ளதை
வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும்
தேனூர் அன்ன இவள் தெரி வளை நெகிழ,
ஊரின் ஊரனை, நீ தர வந்த
பஞ்சாய்க் கோதை மகளிர்க்கு
அஞ்சுவல் அம்ம, அம்முறை வரினே.

பாடல் பின்னணி:  வாயில் வேண்டி வந்த தலைவனிடம், தலைவியின் குறிப்பை அறிந்த தோழி சொன்னது.

பொருளுரை:  திண்மையான தேர்களையுடைய பாண்டியனின் நல்ல நாட்டில் உள்ள, கோடைக் காலத்திலும் குளிர்ந்த நீர் ஆற்றில் ஓடும் தேனூர் போன்ற அழகான இவளின் ஆராய்ந்து அணிந்த வளையல்கள் நெகிழுமாறு, பரத்தையரின் தெருவிற்குச் செல்லும் ஊரனே!  நான் உன்னைத் தேடி வரும் முறை வந்தால், உன்னால் தேடிக் கொள்ளப்பட்டு வந்த பஞ்சாய்க் கோரையால் புனைந்த மாலையை அணிந்த பரத்தையர்க்கு நான் அஞ்சுகிறேன்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – உலகியல் பற்றி வருதலாகிய அம்முறை வரின் என்றதனால், அம்முறை இல்வழி வாராய் எனத் தலைவன்பால் அன்பின்மையும் கொடுமையும், உவமையால் தலைவிபால் அன்புடைமையும் கூறித் தோழி மறுத்தவாறாம்.  இவ்வாறு தலைவியது புலவிக் குறிப்பறிந்து கொடுமையும் அன்பின்மையும் தோழி கூறுவது தலைவனது பரத்தமை மறுத்தல் வேண்டி நிகழ்தலின் அமையும் என்க.  பரத்தமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி, மடத்தகு கிழமை உடமையானும், அன்பிலை கொடியை என்றலும் உரியள் (தொல்காப்பியம், பொருளதிகாரம் 158) என ஆசிரியர் அமைக்குமாறு காண்க.  ஊரின் ஊரனை (4) – உ. வே. சாமிநாதையர் உரை – பரத்தையர் சேரியிடத்தே தேர் ஊர்ந்து செய்வாயாயின், பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஊரின்கண் இருந்தேயும் வேற்றூர் போல்வதாகிய பரத்தையர் சேரியின்கண் வதிகின்ற பெருமானே, ஒளவை துரைசாமி உரை – முதற்கண் நின்ற ஊர் ஊரின் ஒரு பகுதியாகிய பரத்தையர் சேரியைக் குறித்து நின்றது, ஊரனை என்பது முன்னிலைக்கண் வந்தமை அறிக.  அம்முறை (4) – உ. வே. சாமிநாதையர் உரை – பிரிவால் பரத்தையர்க்கு வளை நெகிழ்தல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – யான் உலகியல் ஆகிய செவ்வணி அணிந்துவரும் அந்த முறையை மேற்கொண்டு வருவதற்கு, ஒளவை துரைசாமி உரை – நெய்யணி குறித்து யான் அத்தெருவின் முறையே வருதல் உறின், தி. சதாசிவ ஐயர் உரை – அவர்க்குச் செய்த முறையோடும் இவ்விடத்தின்கண் வரின்.   இலக்கணக் குறிப்பு – உள்ளதை – ஐ சாரியை, வேனில் ஆயினும் – உம்மை இழிவு சிறப்பு, அன்ன – உவம உருபு, ஊரனை – ஐ சாரியை, ஐ அசையுமாம், அம்ம – அசை, முன்னிலைக் கண் வந்தது, வரினே – ஏகாரம் அசைநிலை.  நெய்யணி – ஒளவை துரைசாமி உரை – நெய்யணியாவது மகப் பயந்த மகளிர் அவ்வாலாமை நீங்க நெய்யாடுதல்.  தோழி பரத்தையர் தெருக்கண் சென்று தலைமகற்கு உணர்த்துவது முறைமை.  இதனால் அம்முறை வரினே என்று தோழி கூறினாள்.

சொற்பொருள்:  திண்தேர்த் தென்னவன் நன்னாட்டு உள்ளதை வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும் தேனூர் அன்ன இவள் தெரி வளை நெகிழ ஊரின் ஊரனை – திண்மையான தேர்களையுடைய பாண்டியனின் நல்ல நாட்டில் உள்ள கோடைக் காலத்திலும் குளிர்ந்த நீர் ஆற்றில் ஓடும் தேனூர் போன்ற அழகான இவளின் ஆராய்ந்து அணிந்த வளையல்கள் நெகிழுமாறு பரத்தையரின் தெருவிற்குச் செல்லும் ஊரனே, நீ தர வந்த பஞ்சாய்க் கோதை மகளிர்க்கு அஞ்சுவல் அம்ம – உன்னால் தேடிக் கொள்ளப்பட்டு வந்த பஞ்சாய்க் கோரையால் புனைந்த மாலையை அணிந்த பரத்தையர்க்கு நான் அஞ்சுகிறேன் (பைஞ்சாய், கோரைப்புல், Cyperus rotundus tuberosus, sedge), அம்முறை வரினே – உன்னைத் தேடி வரும் முறை வந்தால்

ஐங்குறுநூறு 55, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும்
தேர் வண் கோமான் தேனூர் அன்ன இவள்
நல் அணி நயந்து நீ துறத்தலின்,
பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே.

பாடல் பின்னணி:  புறத்தொழுக்கம் மேற்கொண்ட தலைவன் வாயில் வேண்டி வந்தபொழுது தோழி சொன்னது.

பொருளுரை:  சாற்றினைப் பிழிவதற்காகக் கரும்பை நெறிக்கும் எந்திரம் எழுப்பும் ஓசையைப் போல் களிற்று யானைப் பிளிறும், தேர்களை வழங்கும் கொடைத் தன்மையுடைய பாண்டியனின் தேனூர் போன்ற இவளுடைய நல்ல அழகை நீ விரும்பி, அதன்பின் அவளைத் துறந்ததால், பலர் அறியுமாறு பசந்துவிட்டது அவளுடைய நெற்றி.

குறிப்பு:  பழைய உரை – களிற்றெதிர் பிலிற்றும் என்றது, நீ கூறுகின்ற பொலிவுக்கு மேலே மெலிவு கூறுகின்றது இவள் நுதல் என்பதாம்.  களிற்று எதிர் பிளிற்றும் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – கரும்பின் ஆலை முழக்கிற்கு யானை முழக்கம் உவமை.  ஒளவை துரைசாமி உரை – ஆலையில் எழும் ஓசையை ஒப்ப களிறு பிளிறும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரும்பாட்டும் ஆலைப் பொறி ஆண் யானையின் பிளிற்று ஒலிக்கு மாறாக ஒலிக்கும்.  ஒப்புமை – பெரும்பாணாற்றுப்படை – 259–260 – கணம் சால் வேழம் கதழ்வுற்றாங்கு எந்திரம் சிலைக்கும்.  புறநானூறு 322 – கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது இருஞ்சுவல் வாளை பிறழும்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – களிற்று எதிர் கரும்பின் எந்திரம் பிளிற்றும் என்றது, உயிருடைய யானைக்கு மாறாக உயிரற்ற பொறி ஆரவாரித்தல் போன்று, கற்புடைய தலைவிக்கு மாறாகக் கய மகளிர் நின்னைக் கைக்கொண்டு விட்டனர் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – அன்ன – உவம உருபு, நுதலே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும் தேர் வண் கோமான் தேனூர் அன்ன இவள் நல் அணி நயந்து நீ துறத்தலின் – சாறைப் பிழிவதற்காகக் கரும்பை நெறிக்கும் எந்திரம் எழுப்பும் ஓசையைப் போல் களிற்று யானைப் பிளிறும் தேர்களை வழங்கும் கொடைத் தன்மையுடைய பாண்டியனின் தேனூர் போன்ற இவளுடைய நல்ல அழகை நீ விரும்பி அதன்பின் அவளைத் துறந்ததால், பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே – பலர் அறியுமாறு பசந்துவிட்டது அவளுடைய நெற்றி

ஐங்குறுநூறு 56, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா
வெல்போர்ச் சோழர் ஆமூர் அன்ன இவள்
நலம் பெறு சுடர்நுதல் தேம்ப,
எவன் பயம் செய்யும் நீ தேற்றிய மொழியே?

பாடல் பின்னணி:  தலைவி தன் புறத்தொழுக்கத்தை அறிந்திருந்தும், தான் தூயவன் என அவளிடம் தெளித்துக் கூறிய தலைவனைத் தோழி இடித்து உரைத்தது.

பொருளுரை:  பகல் போன்ற ஒளியுடைய விளக்குகள் உள்ளதால் இரவுக்காலத்தை அறியாத போரில் வெற்றி பெறும் சோழரின் ஆமூர் போன்ற, இவளுடைய அழகிய ஒளிரும் நெற்றி மழுங்குவதால், உன்னுடைய தேற்றும் சொற்கள் என்ன பயனை அளிக்கும்?

குறிப்பு:  பழைய உரை – தேம்ப என்பது தேம்பா நிற்க என்றவாறு.  பகல் கொள் விளக்கோடு …………. அன்ன என்பது, ஒரு நாளும் மெலிவு அறியாத இவள் மெலிவு அறிய ஒழுகினாய் என்பதாம்.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – இராநாள் உளதாகவும், விளக்கங்கள் தம் ஒளியால் அதனை அறியாவண்ணம் மறைப்பதுபோல, நின்பாற் பரத்தமை உளதாகவும், அதனை இப்பொய்ம்மொழிகளால் மறைத்துத் தெளிவிக்கின்றாய் என்பது.  இலக்கணக் குறிப்பு – பகல் – ஆகுபெயர், நண்பகற் போதின் நல்லொளி, விளக்கோடு – விளக்கொடு, ஓடு உருபு ஆல் உருபின் பொருட்டு, இரா – இரவு, வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது, அன்ன – உவம உருபு, வெல்போர் – வினைத்தொகை, மொழியே – ஏகாரம் அசைநிலை.  ஒளவை துரைசாமி உரை – ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘சூள்நயத் திறத்தாற் சோர்வு கண்டழியினும்’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 150) என்புழி இதனைக் காட்டி, “இதனுள் இவள் நுதல் தேம்பும்படி நீ தேற்றிய சொல் எனவே.  சோர்வு கண்டு அழிந்தாள் என்பது உணர்ந்தும் இப்பொய்ச் சூள் நினக்கு என்ன பயனைத் தரும் எனத் தோழி தலைவனை நோக்கிக் கூறியவாறு காண்க” என்பர்.

சொற்பொருள்:  பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா வெல்போர்ச் சோழர் ஆமூர் அன்ன இவள் நலம் பெறு சுடர்நுதல் தேம்ப – பகல் போன்ற ஒளியுடைய விளக்குகள் உள்ளதால் இரவுக்காலத்தை அறியாத போரில் வெற்றி பெறும் சோழரின் ஆமூர் போன்ற இவளுடைய அழகிய ஒளிரும் நெற்றி வாடும்படி, எவன் பயம் செய்யும் நீ தேற்றிய மொழியே – என்ன பயனை அளிக்கும் உன்னுடைய தேற்றும் சொற்கள்

ஐங்குறுநூறு 57, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
பகலின் தோன்றும் பல் கதிர்த் தீயின்
ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன
இவள் நலம் புலம்பப் பிரிய,
அனை நலம் உடையளோ மகிழ்ந, நின் பெண்டே?

பாடல் பின்னணி:  தலைவனுக்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்று என்பதைக் கேட்ட தோழி அவனை வினவியது.

பொருளுரை:  தலைவா!  கதிரவன் போல் தோன்றும் பல சுடர்களையுடைய வேள்வித்தீயினையும் ஆம்பல் மலர்கள் நிறைந்த வயல்களையுமுடைய தேனூர் போன்ற இவளுடைய அழகு பாழ்பட்டு வருந்துமாறு நீ பிரிவதால், அத்தகைய பெண்மை நலம் உடையவளோ உன்னுடைய பரத்தை?

குறிப்பு:  பழைய உரை – வேள்வித் தீயினையும் ஆம்பலஞ் செறுவினையும் உடைய தேனூர் என்றது மனத்தொழுக்கத் தூய்மையும் …….. .கூறியவாறு.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – இல்வாழ்வார்க்கு உரிய வேள்வியினையும் வளவயற்கு அணி செய்யும் ஆம்பலினையும் கூறியதால், தலைவிபால் மனையறம் புரிதற்குரிய மாட்சியும் கொடைக்கடன் இறுத்தற்குரிய வளமையும் கூறிச் சிறப்பித்தவாறாயிற்று, புலியூர்க் கேசிகன் உரை – ஆம்பலுக்கு உவமையாகப் பகலில் தோன்றும் பல்கதிர்ப் பெருந்தீயினைக் கொண்டால், அழகான மெல்லியராகத் தோன்றும் பரத்தையர், அவரைச் சார்ந்தாரைப் பகல் எரி தீப்போல் தவறாதே எரித்தழிக்கும் கொடிய இயல்பினர் என்பது.  பகலின் (1) – தி. சதாசிவ ஐயர் உரை, புலியூர்க் கேசிகன் உரை – பகல் போல, ஒளவை துரைசாமி உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஞாயிற்றைப் போல.  அனை (4) – ஒளவை துரைசாமி உரை – அத்துணை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அத்தகைய.  இலக்கணக் குறிப்பு – பகல் – ஆகுபெயர் ஞாயிற்றுக்கு, பொருள் ஞாயிறு எனக் கொண்டால், ‘நண்பகற் போதின் நல்லொளி’ பகல் எனக் கொண்டால், பகலின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, அன்ன – உவம உருபு, உடையளோ – ஓகாரம் வினா, பெண்டே – ஏகாரம் அசைநிலை.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  பகலின் தோன்றும் பல் கதிர்த் தீயின் ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன – கதிரவன் போல் தோன்றும் பல சுடர்களையுடைய வேள்வித்தீயினையும் ஆம்பல் மலர்கள் நிறைந்த வயல்களையுமுடைய தேனூர் போன்ற, இவள் நலம் புலம்பப் பிரிய – இவளுடைய அழகு பாழ்பட்டு வருந்துமாறு நீ பிரிவதால், இவளுடைய பெண்மை நலம் தனித்திருக்கும்படி நீ பிரிவதால், அனை நலம் உடையளோ – அத்தகைய பெண்மை நலம் உடையவளோ, மகிழ்ந – தலைவா, நின் பெண்டே – உன்னுடைய பரத்தை

ஐங்குறுநூறு 58, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
விண்டு அன்ன வெண்ணெல் போர்வின்
கைவண் விராஅன் இருப்பை அன்ன
இவள் அணங்கு உற்றனை போறி,
பிறர்க்கும் அனையையால் வாழி நீயே.

பாடல் பின்னணி:  தலைவனின் புறத்தொழுக்கத்தால் தலைவி ஊடினாள்.  தலைவன் அவளை அச்சுறுத்தும் பொருட்டு தானே ஊடினான்.  அவனது ஊடலை உணர்த்தும்படி தோழி கூறியது.

பொருளுரைமலை போன்ற வெள்ளை நெல்லின் நெற்போர்கள் உடைய, பெரும் வள்ளன்மையுடைய விரான் என்பவனின் இருப்பை என்னும் ஊர் போன்ற அழகுடைய இவளால், நீ  பெரிதும் துன்பமடைந்தாய் போலும்.  நீ நின் பரத்தையராலும் இவ்வாறு துன்புறுவாய் போலும்.  நீ நீடுவாழ்வாயாக!

குறிப்பு:  பழைய உரை  கைவண் விராஅன் இருப்பை அன்ன என்றது, நினது இல் வாழ்க்கைக்கு உரியதாகிய குணங்களால் உயர்ந்ததால் என்றவாறு.  இவள் அணங்கு உற்றனை போறி (3) – தி. சதாசிவ ஐயர் உரை – இவளைத் துயரமடையச் செய்தவன் போல்கின்றாய், பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவளால் துன்புறுத்தப்பட்டாய் போன்று காணப்படுகின்றனை, ஒளவை துரைசாமி உரை – இவளால் வருத்தமுற்றாய் போல வருந்தினை.  வாழி (4) – தி. சதாசிவ ஐயர் உரை – வாழ்வாயாக, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெடிது வாழ்வாயாக, ஒளவை துரைசாமி உரை – அசைநிலை.  பிறர்க்கும் (4) – உ. வே. சாமிநாதையர் உரை – பிற பெண்டிர், ஒளவை துரைசாமி உரை – பிற மகளிர்.  இலக்கணக் குறிப்பு – விராஅன் – செய்யுளிசை அளபெடை, அன்ன – உவம உருபு, அனையையால் –ஆல் அசைநிலை, வாழி – அசைநிலை, நீடு வாழ்வாயாக எனினுமாம், நீயே – ஏகாரம் அசைநிலை.  போறி – அ. தட்சிணாமூர்த்தி உரை – முன்னிலை வினைமுற்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அகநானூறு 163 (எனக்கே வந்தனை போறி) – இது ஒப்புமை உணர்த்தாமையின் ஒப்பில் போலி, பிறர்க்கும் – பிறராலும், உருபு மயக்கம்.

சொற்பொருள்:  விண்டு அன்ன வெண்ணெல் போர்வின் கைவண் விராஅன் இருப்பை அன்ன இவள் அணங்கு உற்றனை போறி – மலை போன்ற வெள்ளை நெல்லின் நெற்போர்கள் உடைய பெரும் வள்ளன்மையுடைய விரான் என்பவனின் இருப்பை என்னும் ஊர் போன்ற அழகுடைய இவளால் பெரிதும் துன்பமடைந்தாய் போலும், பிறர்க்கும் அனையையால் – நீ நின் பரத்தையராலும் இவ்வாறு துன்புறுவாய் போலும், வாழி நீயே – நீ நீடு வாழ்வாயாக

ஐங்குறுநூறு 59, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
கேட்டிசின் வாழியோ மகிழ்ந! ஆற்றுற
மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர
நினக்கு மருந்தாகிய யான், இனி,
இவட்கு மருந்து அன்மை, நோம் என் நெஞ்சே.

பாடல் பின்னணி:  பரத்தையர் மனையிலிருந்து வந்த தலைவனிடம், அவன் தலைவியை அளி செய்யும் பொருட்டுப் புலந்து கூறியது.

பொருளுரை:  தலைவா!  நீ நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நீ ஆறுதல் அடைய, உன்னுடை மயங்கிய நெஞ்சத்திற்கு உன் துன்பம் எல்லாம் தீரும்படி மருந்தாக இருந்த நான், இப்பொழுது இவள் உன்னால் அடைந்த துன்பத்திற்கு மருந்து ஆக இருக்க இயலாது உள்ளேன்.  என் நெஞ்சம் வருந்துகின்றது.

குறிப்பு:  மையல் நெஞ்சிற்கு ………………. மருந்தாகிய யான் – ஒளவை துரைசாமி உரை – களவுக்காலத்து நிகழ்ந்த இடையீடுகளால் தலைமகன் தலைவியை எய்தப் பெறானாய் ஆற்றாது மையலுற்ற காலங்களில், ஆற்றத் தாக்குவது கூறி ஆற்றுவித்து, இடமும் காலமும் வாய்ப்புழிக் கூட்டமும் எய்துவித்துத் தோழி அவனது எவ்வம் களைந்தலாகளின், ‘மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர நினக்கு மருந்தாகிய யான்’ என்றாள்.  இலக்கணக் குறிப்பு – கேட்டிசின் – சின் முன்னிலை அசை, வாழியோ – முன்னிலை அசை, வாழி – நீடு வாழ்வாயாக என்பதுமாம், நோம் – அஃறிணை ஒருமை வினைமுற்று, நோகும் என்பது ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட்டு நோம் என நின்றது என்பதுமுண்டு, நெஞ்சே – ஏகாரம் அசைநிலை. சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

சொற்பொருள்:  கேட்டிசின் – கேட்பாயாக, வாழியோ – நீடு வாழ்வாயாக, அசைநிலை, மகிழ்ந – தலைவா, ஆற்று உற மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர நினக்கு மருந்தாகிய யான் – நீ ஆறுதல் அடைய உன்னுடை மயங்கிய நெஞ்சத்திற்கு உன் துன்பம் எல்லாம் தீரும்படி மருந்தாக இருந்த நான், இனி இவட்கு மருந்து அன்மை – இப்பொழுது இவளுக்கு மருந்து ஆக இருக்க இயலாது உள்ளேன், நோம் என் நெஞ்சே – என் நெஞ்சம் வருந்துகின்றது

ஐங்குறுநூறு 60, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
பழனக் கம்புள் பயிர்ப் பெடை அகவும்
கழனி ஊர! நின் மொழிவல் என்றும்
துஞ்சு மனை நெடுநகர் வருதி,
அஞ்சாயோ இவள் தந்தை கை வேலே?

பாடல் பின்னணி:  மருதத்துள் குறிஞ்சி.  வரைவு கடாயது.  வரையாது வந்தொழுகும் தலைவனிடம் தோழி சொன்னது.

பொருளுரை:  பொது இடத்தில் உள்ள சம்பங்கோழிச் சேவல் தன்னைக் காதலால் அழைக்கும் தன் பெடையைத் தன்பால் கூவி அழைக்கும் வயல்கள் கொண்ட ஊரின் தலைவனே!  நாள்தோறும் மனையில் இருப்பவர்கள் உறங்கும் பெரிய ஊர்க்கு நீ வருகின்றாய்.  உன்னை நான் வினவுகின்றேன். இவளுடைய தந்தையின் கையில் உள்ள வேலுக்கு நீ அஞ்சவில்லையா?

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பழனக் கம்புள் பயிர்ப் பெடை அகவும் கழனியூர என்றது பழனத்தின்கண் உள்ள சம்பங்கோழியின் சேவல், வரம்புடைய கழனியிலிருந்து தன்னைக் காதலித்து அழைக்கும் பெடையின் இயல்பறியாமல் அதனை வருந்திக் கூவி அழைப்பது போன்று நீயும் கடிமனைக்கண்ணிருந்து நின் வரைவினை எதிர்பார்த்து வருந்தியிருக்கும் தலைவியின் நிலையறிந்து வரையாமல் வீணே இருளிலும் பகலிலும் வந்து வந்து போகின்றாய் என்றவாறாம்.  மருதத் திணை – உ. வே. சாமிநாதையர் உரை – திணை மயக்குறுதலுள் மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது.  இலக்கணக் குறிப்பு – வருதி – முன்னிலை ஒருமை வினைமுற்று, மொழிவல் – தன்மை ஒருமை வினைமுற்று, வேலே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  பழனக் கம்புள் பயிர்ப் பெடை அகவும் கழனி ஊர – வயலில் உள்ள (குளத்தில் உள்ள, பொது இடத்தில் உள்ள)  சம்பங்கோழிச் சேவல் தன்னைக் காதலால் அழைக்கும் தன் பெடையைத் தன்பால் கூவி அழைக்கும் வயல்கள் கொண்ட ஊரின் தலைவனே, நின் மொழிவல் – உனக்கு ஒன்றை நான் கூறுவேன், ‘உன்னை நான் வினவுகின்றேன்’ என்ற பொருளில் வந்தது, என்றும் துஞ்சு மனை நெடுநகர் வருதி – நாள்தோறும் மனையில் இருப்பவர்கள் உறங்கும் பெரிய ஊர்க்கு நீ வருகின்றாய், அஞ்சாயோ இவள் தந்தை கை வேலே – இவளுடைய தந்தையின் கையில் உள்ள வேலுக்கு நீ அஞ்சவில்லையா

கிழத்திக் கூற்றுப் பத்து

பாடல்கள் 61–70 – பரத்தமை மேற்கொண்ட தலைவனிடம் தலைவி கூறுவதாக அமைந்துள்ளன.

ஐங்குறுநூறு 61, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தலைவனிடம் சொன்னது
நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம்பழம்
நெடு நீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம்,
கைவண் மத்தி கழாஅர் அன்ன,
நல்லோர் நல்லோர் நாடி,
வதுவை அயர விரும்புதி நீயே.

பாடல் பின்னணி:  தலைவன் அடுத்தடுத்து பல பரத்தையரை மணந்தான் என்பதை அறிந்த தலைவி, அவன் இல்லம் வந்தபொழுது ஊடி, நொந்து உரைத்தது.

பொருளுரை:  நறிய வடுக்களை உடைய மாமரத்திலிருந்து முதிர்ந்து விழும் இனிய பழம் ஆழ்ந்த நீரையுடைய பொய்கையில் துடுமென்ற ஓசையுடன் விழும், பெரும் வள்ளன்மை உடைய மத்தி என்பவனின் கழார் என்னும் ஊரைப் போன்ற வெவ்வேறு நல்ல மகளிரை நாடி, வதுவை செய்வதை நீ விரும்புகிறாய்.

குறிப்புநல்லோர் நல்லோர் (4) – ஒளவை துரைசாமி உரை – அடுக்கு இழித்தற்கண் வந்தது.  வதுவை அயர (5) – ஒளவை துரைசாமி உரை – பரத்தையரைத் தலைவன் கூட.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழம் அதற்கு உரிமையுடையோர்க்குப் பயன்படாமல் பொய்கையில் வீழ்ந்து அங்கு வாழும் மீன்கட்கே இறையாதல் போன்று இல்லற உரிமையுடைய எனக்குப் பயன்படாமல் பரத்தையர் சேரியிற் சென்று ஆண்டுறையும் பரத்தையர் பலர்க்கும் பயப்படுவாயாயினை என்பது, ஒளவை துரைசாமி உரை – நறுவடி மாவின்கண் விளைந்து முதிர்ந்த தீம்பழம் அதனின் நீங்கி நெடுநீர்க் குட்டத்துத் துடும் என விழும் என்றது, பரத்தையர் சேரிக்கண் நலங்கனிந்து சிறந்த பரத்தையர் தம் தாயர் முதலாயினாரின் நீங்கி நின்னொடு வதுவையிற் கூடி மகிழ்வர் என்பது, புலியூர்க் கேசிகன் உரை – மாவின் முதிர்ந்த கனி தானாகவே குளத்து நீரில் துடுமென விழூஉம் என்றது, அவ்வாறே பரத்தையர் சேரியிலே பக்குவமான இளங்கன்னியர் தலைவனின் வலையிலே தாமாகவே வந்து ஆரவாரத்துடன் விழுவாராயினர் என்பது.  இல்லறமாற்றி இன்புற்றிருந்த தலைவன் அப்பிடியினின்றும் விலகி பரத்தையரின் போய் வீழ்ந்தான் என்பது, மாவின் நறுங்கனி பொய்கையின்கண் வீழ்ந்து அழிவது போலாகும் என்பதும் பொருந்தும்.  ஒப்புமை – குறுந்தொகை 8 – கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் பழன வாளை கதூஉம்.  இலக்கணக் குறிப்பு – விழூஉம் – அளபெடை, அன்ன – உவம உருபு, நீயே – ஏகாரம் அசைநிலை, விரும்புதி – முன்னிலை வினைமுற்று, மாஅத்து – அத்து சாரியை.

சொற்பொருள்:  நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம்பழம் நெடு நீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம் கைவண் மத்தி கழாஅர் அன்ன – நறிய வடுக்களை உடைய மாமரத்திலிருந்து முதிர்ந்து விழும் இனிய பழம் ஆழ்ந்த நீரையுடைய பொய்கையில் துடுமென்ற ஓசையுடன் விழும் பெரும் வள்ளன்மை உடைய மத்தி என்பவனின் கழார் என்னும் ஊரைப் போன்ற (துடுமென – ஒலிக்குறிப்பு, கழாஅர் – செய்யுளிசை அளபெடை), நல்லோர் நல்லோர் நாடி வதுவை அயர விரும்புதி நீயே – வெவ்வேறு நல்ல மகளிரை நாடி வதுவை செய்வதை நீ விரும்புகிறாய்

ஐங்குறுநூறு 62, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தலைவனிடம் சொன்னது
இந்திர விழவின் பூவின் அன்ன,
புன்தலைப் பேடை வரி நிழல் அகவும்,
இவ்வூர் மங்கையர்த் தொகுத்து, இனி
எவ்வூர் நின்றன்று மகிழ்ந நின் தேரே?

பாடல் பின்னணி:  தலைவன் அடுத்தடுத்து பல பரத்தையரை மணந்தான் என்பதை அறிந்த தலைவி, அவன் இல்லம் வந்தபொழுது ஊடி, நொந்து உரைத்தது.

பொருளுரை:  தலைவா!  பூவை ஒத்த புல்லிய தலையையுடைய மயில் பேடை குறைவாக உள்ள நிழலில் நின்று தன் சேவலை அழைக்கும் இடமான இந்த ஊரில் நிகழும் இந்திர விழாவில், பரத்தையர் பலரையும் கூட்டி வந்த நின் தேர், இப்பொழுது எந்த ஊரின்கண் சென்று நிற்கின்றது?

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புன்தலைப் பெடை நிரம்பா நிழலிருந்து அகவும் இவ்வூர் என்றது, நின் பிரிவாலே பொலிவிழந்து ஆதரவற்ற இவ்வில்லின்கண் யான் இருந்து தேம்பாநின்றேன் என்பது, இந்திரவிழவிற் பூவினன்ன என்பதை மங்கையர்க்கு அடையாக்கி, ஒளவை துரைசாமி உரை – இந்திரவிழவின்கண் வேறுவேறு நிலத்தினின்றும் பூக்கள் பல கொணர்ந்து தொகுத்துப் பயன்கோடல் போல, வேறுவேறு ஊர்களிலிருந்தும் மகளிரைக் கொணர்ந்து வதுவையின்பம் கொள்கின்றாய் என்பது.  இலக்கணக் குறிப்பு –   பூவின் – இன் சாரியை, அன்ன – உவம உருபு, தேரே – ஏகாரம் அசைநிலை.  நின்றன்று (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நிற்கின்றது, எதிர்காலம் நிகழ்காலம் ஆயிற்று.

சொற்பொருள்:  இந்திர விழவின் பூவின் அன்ன புன்தலைப் பேடை வரி நிழல் அகவும் இவ்வூர் – பூவை ஒத்த புல்லிய தலையையுடைய மயில் பேடை குறைவாக உள்ள நிழலில் நின்று தன் சேவலை அழைக்கும் இடமான இந்த ஊரில் நிகழும் இந்திர விழாவில், மங்கையர்த் தொகுத்து – பரத்தையர் பலரையும் கூட்டி, இனி எவ்வூர் நின்றன்று – இப்பொழுது எந்த ஊரின்கண் சென்று நிற்கின்றது, மகிழ்ந – தலைவா, நின் தேரே – உன் தேர்

ஐங்குறுநூறு 63, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தலைவனிடம் சொன்னது
பொய்கைப் பள்ளிப் புலவு நாறு நீர்நாய்,
வாளை நாள் இரை பெறூஉம் ஊர!
எம் நலம் தொலைவது ஆயினும்,
துன்னலம் பெரும, பிறர்த் தோய்ந்த மார்பே.

பாடல் பின்னணி:  பரத்தையரைப் பிரிந்து வாயில் வேண்டி வந்த தலைவனுடன் ஊடிச் சொன்னது.

பொருளுரை:  பொய்கையாகிய இடத்தில் வாழும் புலால் நாறும் நீர்நாய், வாளை மீனை காலை இரையாகப் பெறும் ஊரனே!  எம்முடைய அழகு அழிவது ஆனாலும், நெருங்கி அணைக்க மாட்டேம், பரத்தையருடன் சேர்ந்த நின் மார்பை.

குறிப்புஉள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீர்நாய் பொய்கையைத் தான் வாழுமிடமாகக் கொண்டிருந்தும் தன்னுடலில் நாறும் புலானாற்றத்தைக் கழுவிக் கொள்ளாமல் மீண்டும் புலனாறும் இழிதகவுடைய வாளை மீனையே இரையாகப் பெறுதல் போன்று நீதானும் நினது குடிப் பிறப்பிற்கேற்றப்படி தூய காதல் நெறியிலே நில்லாயாய் இழிந்த காம இன்பமே காமுற்று நாடோறும் பரத்தையரை நாடி நுகர்கின்றனை என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – பொய்கைப்பள்ளி – இருபெயரொட்டு, பொய்கையாகிய இடம், பெறூஉம் – செய்யுளிசை அளபெடை, மார்பே – ஏகாரம் அசைநிலை.  நலம் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெண்மை நலம், ஒளவை துரைசாமி உரை – நலம், அ. தட்சிணாமூர்த்தி உரை – அழகு, தி. சதாசிவ ஐயர் உரை – அழகு.

சொற்பொருள்:  பொய்கைப் பள்ளிப் புலவு நாறு நீர்நாய் வாளை நாள் இரை பெறூஉம் ஊர – பொய்கையாகிய இடத்தில் வாழும் புலால் நாறும் நீர்நாய் வாளை மீனை காலை இரையாகப் பெறும் ஊரனே, எம் நலம் தொலைவது ஆயினும் – எம்முடைய அழகு அழிவது ஆனாலும், துன்னலம் பெரும பிறர்த் தோய்ந்த மார்பே – நெருங்கி அணைக்க மாட்டேம் பெருமானே பரத்தையருடன் சேர்ந்த நின் மார்பை

ஐங்குறுநூறு 64, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தலைவனிடம் சொன்னது
அலமரல் ஆயமோடு அமர் துணை தழீஇ,
நல மிகு புதுப் புனல் ஆடக் கண்டோர்,
ஒருவரும் இருவரும் அல்லர்,
பலரே தெய்ய, எம் மறையாதீமே!

பாடல் பின்னணி:  தலைவன் பரத்தையர் மனையிலிருந்து திரும்பி வந்தான்.  அவன் பரத்தையருடன் புனலாடியதை மறுத்து வாயில் வேண்டினான்.  அவனுக்கு வாயில் மறுத்த தலைவி சொன்னது.

பொருளுரை:  சுழன்று திரியும் தோழியருடன் இருந்த, நின்னால் விரும்பப்பட்ட பரத்தையை அணைத்து, அழகுமிக்கப் புதுப்புனலில் நீராடக் கண்டவர்கள் ஒருவரோ இருவரோ இல்லை.  பலர். அதை எம்மிடமிருந்து மறைக்காதீர்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – பல்வகை நறுமலரும் சுமந்து அளி மொய்ப்ப ஒளி சிறந்து காட்சியின்பமும், துணையொடு கூடி ஆடுவார்க்கு ஊற்றின்பமும் பயக்கும் சிறப்புடைய புதுநீர்ப் பெருக்காதலால், அதனை நலமிகு புதுப்புனல் என்றாள்.  இதனைக் கண்டோர் ஒருவர் இருவராயின் நீ மறைத்தல் தகும் என்பாள், ஒருவரும் இருவரும் அல்லர் என்றும், நீ புனலாடிய செய்கை அலராய் ஊரெங்கும் பரவிப் பலரும் அறிபொருளாயிற்று என்றதற்கு பலரே என்றும் கூறினாள்.  தலைவன்பாற் பரத்தமை கண்டு, தன்வயின் உள்ள உரிமையால் உயர்வு தோன்ற எம் எனப் பன்மையாற் கூறினாள்.  இது புலவியாகலின், ‘மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் நினையுங்காலைப் புலவியுள் உரிய’ என்பது தொல்காப்பியம் (பொருளியல் 227).  இலக்கணக் குறிப்பு – தழீஇ – செய்யுளிசை அளபெடை, பலரே – ஏகாரம் அசைநிலை, தெய்ய – அசைநிலை, மறையாதீமே – முன்னிலைப் பன்மை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல் (ஒளவை துரைசாமி உரை), ஈ, ஏ – முன்னிலையசை நிலைகள் (பொ. வே. சோமசுந்தரனார் உரை).  அலமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல்லதிகாரம் 310).  அலமரல் (1) – ஒளவை துரைசாமி உரை – சூழ்ந்து திரியும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – சுழன்று திரியும்.  நல மிகு புதுப் புனல் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இன்பம் மிகுதற்குக் காரணமான புதுப்புனல், ஒளவை துரைசாமி உரை – அழகுமிக்க புதுப்புனல், அ. தட்சிணாமூர்த்தி உரை – அழகுடைய புதுப்புனல், தி. சதாசிவ ஐயர் உரை – நன்மை மிகுந்த புதிய புனல்.

சொற்பொருள்:  அலமரல் ஆயமோடு அமர் துணை தழீஇ – சுழன்று திரியும் தோழியருடன் இருந்த நின்னால் விரும்பப்பட்ட பரத்தையை அணைத்து, நல மிகு புதுப் புனல் ஆடக் கண்டோர் ஒருவரும் இருவரும் அல்லர் – அழகுமிக்கப் புதுப்புனலில் நீராடக் கண்டவர்கள் ஒருவரோ இருவரோ இல்லை, பலரே – பலர், தெய்ய – அசைநிலை, எம் மறையாதீமே – எம்மிடமிருந்து மறைக்காதீர்

ஐங்குறுநூறு 65, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தலைவனிடம் சொன்னது
கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல்
சுரும்பு பசி களையும் பெரும் புனல் ஊர!
புதல்வனை ஈன்ற எம் மேனி
முயங்கன்மோ, தெய்ய, நின் மார்பு சிதைப்பதுவே.

பாடல் பின்னணி:  பரத்தையர் மனைக்கண் இருந்த தலைவன், புதல்வன் பிறந்ததை அறிந்து இல்லம் திரும்பினான்.  அவன் தலைவியை முயங்க நெருங்கியபோது அவள் சொன்னது.

பொருளுரை:  கரும்பு நட்டிய பாத்தியில் தானே தோன்றித் தழைத்த ஆம்பலின் மலர்கள் வண்டுகளின் பசியை அகற்றுகின்ற மிக்க நீர்வளம் கொண்ட ஊரின் தலைவனே!  புதல்வனைப் பெற்ற என் மேனியை நீ தழுவாதே.  நீ என்னைத் தழுவினால், என் மார்பில் உள்ள பால் உன் மார்பின் அழகைக் கெடுத்துவிடும்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – உள்ளுறையால், தான் இல்லிலிருந்து தனக்குரிய நல்லறத்தை வழுவாது ஆற்றும் உயர்வு தோன்ற, எம் மேனி எனப் பன்மை வாய்பாட்டாற் கூறினாள்.  புதல்வர் பயந்த மேனி திதலையணிந்து தீம்பால் கமழ்தலின், பூவினும் சாந்தினும் புதுமணம் கமழும் நின் மார்பின் நறுமணம் கெடும் என்பாள் எம் மேனி முயங்கன்மோ என்றும், நின் மார்பு சிதைப்பதுவே என்றும் புலந்து கூறினாள்.  இலக்கணக் குறிப்பு – முயங்கன்மோ – மோ முன்னிலை அசை, மார்பு – மார்பின் அழகு, ஆகுபெயர், தெய்ய – அசைநிலை, சிதைப்பதுவே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல் சுரும்பு பசி களையும் பெரும் புனல் ஊர – கரும்பு நட்டிய பாத்தியில் தானே தோன்றித் தழைத்த ஆம்பலின் மலர்கள் வண்டுகளின் பசியை அகற்றுகின்ற மிக்க நீர்வளம் கொண்ட ஊரின் தலைவனே, புதல்வனை ஈன்ற எம் மேனி முயங்கன்மோ – புதல்வனைப் பெற்ற என் மேனியைத் தழுவாதே, தெய்ய – அசைநிலை, நின் மார்பு சிதைப்பதுவே – என் மார்பில் உள்ள பால் உன் மார்பின் அழகைக் கெடுத்துவிடும்

ஐங்குறுநூறு 66, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தலைவனிடம் சொன்னது
உடலினென் அல்லேன், பொய்யாது உரைமோ,
யார் அவள் மகிழ்ந, தானே தேரொடு,
தளர் நடைப் புதல்வனை உள்ளி, நின்
வள மனை வருதலும், வெளவியோளே?

பாடல் பின்னணி:  புதல்வனைப் பிரியாதவன் பிரிந்துப் பரத்தையர்பால் தங்கிய தலைவன் தன் மனைக்கு வந்தபோது  அவனுடன் புலந்து தலைவி சொன்னது.

பொருளுரை:  தலைவா!  உன்மேல் சினம் கொண்டு மாறுபட்டு நான் வினவவில்லை.  பொய் கூறாமல் உண்மையைக் கூறுவாயாக.  நீ உன் தேரைச் செலுத்தி, உன் தளர்ந்த நடையுடைய மகனை நினைத்து, நம் வள மனைக்கு வருவதைத் தடுத்தவள் யார்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பரத்தையர் சேரியில் நீ காமவின்பம் பெறுதல் கூடுமாயின் அதனினுஞ் சிறந்த மகவின்பம் பெறுதல் இயலாதே.  அவ்வின்பத்தையும் மறந்து வைகும்படி நின்னைப் பற்றிக்கொண்டவள் எத்தகையளோ என்பாள், ‘தளர் நடைப் புதல்வனை உள்ளி, நின் வள மனை வருதலும், வெளவியோளே’ என வியந்தனள்.  இலக்கணக் குறிப்பு – உரைமோ – மோ முன்னிலை அசை, தானே – தான், ஏ அசைநிலைகள், வருதலும் – உம்மீற்று வினையெச்சம் முடிக்கும் வினையது வினை நிகழ்ச்சியின் விரைவு மிகுதி சுட்டி நின்றது, வெளவியோளே – ஏகாரம் அசைநிலை.  தேர் – தி. சதாசிவ ஐயர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை, அ. தட்சிணாமூர்த்தி உரை – தலைவனின் தேர், ஒளவை துரைசாமி உரை – புதல்வனின் உருட்டி விளையாடும் சிறுதேர்.

சொற்பொருள்:  உடலினென் அல்லேன் – உன்மேல் சினம் கொண்டு மாறுபட்டு வினவவில்லை, பொய்யாது உரைமோ – பொய் கூறாமல் உண்மையைக் கூறுவாயாக, யார் அவள் – யார் அவள், மகிழ்ந – தலைவா, தானே தேரொடு தளர் நடைப் புதல்வனை உள்ளி நின் வள மனை வருதலும், வெளவியோளே – நீ உன் தேரோடு தளர்ந்த நடையுடைய மகனை நினைத்து நம் வள மனைக்கு வருவதைத் தடுத்தவள், உருட்டி விளையாடும் சிறு தேரின் பின் தளர்ந்த நடையுடையவனாக இருக்கும் மகனை நினைத்து நம் வள மனைக்கு வருவதைத் தடுத்தவள்

ஐங்குறுநூறு 67, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தலைவனிடம் சொன்னது
மடவள் அம்ம நீ இனிக் கொண்டோளே,
தன்னொடு நிகரா என்னொடு நிகரிப்
பெரு நலம் தருக்கும் என்ப, விரி மலர்த்
தாது உண் வண்டினும் பலரே,
ஓதி ஒண்ணுதல் பசப்பித்தோரே.

பாடல் பின்னணி:  தன்னைப் பரத்தை புறனுரைத்தாள் என அறிந்த தலைவி, வாயில்கள் கேட்பத் தலைவனிடம் சொன்னது.  

பொருளுரை:  நீ இப்பொழுது வதுவை அயர்ந்துகொண்ட பரத்தை அறியாமையுடையவள்.  தன்னுடன் ஒப்பில்லாத என்னுடன் தன்னை ஒப்பிட்டுத், தன் பெண்மை நலம் சிறப்பு என்று மிகுந்த செருக்குடன் இருக்கின்றாள் எனக் கேட்டவர்கள் கூறுகின்றனர்.  முன்பு உன்னால் நலம் நுகரப்பட்ட மகளிர், கூந்தல் அருகில் உள்ள ஒளியுடைய நெற்றியில்  பசலையுறப்பட்டவர்கள், மலர்ந்த பூக்களின் தாதினை உண்ணும் வண்டுகளைக் காட்டிலும் பலர் உள்ளார்கள் என்பதை அவள் அறியவில்லை.

குறிப்பு:  பசப்பித்தோரே (5) – ஒளவை துரைசாமி உரை – நின்னால் நலன் நுகரப்பட்டு ஒள்ளிய நுதல் பசக்கப்பட்ட மகளிர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவளிடத்தினின்றும் நின்னைப் பிரியும்படி செய்து அவளுடைய நெற்றியில் பசலை பாயும்படி செய்யும் மகளிர், உ. வே. சாமிநாதையர் உரை – நீ பசப்பித்தோர், ச. வே. சுப்பிரமணியன் உரை – உன்னுடன் இணைந்து தங்கள் நெற்றியைப் பசப்பித்துக் கொண்டோர்.  உள்ளுறை – புலியூர்க் கேசிகன் உரை – வண்டொன்று பலப்பல மலரினும் சென்று சென்று தேனுண்டு, பின் அப்பூக்களை நாடாது வாடி உதிரவிட்டுக் கழித்தல் போலத் தலைவனும் புதியரான பரத்தையரை நாடிச் சென்று கூடி இன்புற்று அவர்களை கைவிட்டு விடும் இயல்பினன் என்பது.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், கொண்டோளே – ஏகாரம் அசைநிலை, பலரே – ஏகாரம் அசைநிலை, பசப்பித்தோரே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  மடவள் – அறியாமையுடையவள், அம்ம – கேட்பாயாக, நீ இனிக் கொண்டோளே – நீ இப்பொழுது வதுவை அயர்ந்துகொண்டவள், தன்னொடு நிகரா என்னொடு நிகரிப் பெரு நலம் தருக்கும் என்ப – தன்னுடன் ஒப்பில்லாத என்னுடன் தன்னை ஒப்பிட்டுத் தன் பெண்மை நலம் சிறப்பு என்று மிகுந்த செருக்குடன் இருக்கின்றாள் எனக் கேட்டவர்கள் கூறுகின்றனர், விரி மலர்த் தாது உண் வண்டினும் பலரே – மலர்ந்த பூக்களின் தாதினை உண்ணும் வண்டுகளைக் காட்டிலும் பலர், ஓதி ஒண்ணுதல் பசப்பித்தோரே – கூந்தல் அருகில் உள்ள ஒளியுடைய நெற்றியில் பசலையுறப்பட்டவர்கள் (ஓதி – கூந்தல்)

ஐங்குறுநூறு 68, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தலைவனிடம் சொன்னது
கன்னி விடியல் கணைக் கால் ஆம்பல்,
தாமரை போல மலரும் ஊர!
பேணாளோ நின் பெண்டே,
யான் தன் அடக்கவும், தான் அடங்கலளே.

பாடல் பின்னணி:  தன்னைக் புறங்கூறினாள் பரத்தை என்பதை அறிந்த தலைவி, தலைவனிடம் இங்ஙனம் கூறுகின்றாள்.

பொருளுரை:  இருள் முற்றிலும் நீங்காத விடியற்காலையில் திரண்ட தண்டையுடைய ஆம்பல் மலர் தாமரை மலர் போல் மலரும் ஊரனே!  பேண வேண்டியவற்றைப் பேணாத அறியாமை உடையவள் நீ காதலிக்கும் பெண். நான் அவளை அடக்க முயன்றாலும் அவள் அடங்காது உள்ளாள்.

குறிப்புஉள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இழிந்த ஆம்பல் உயரிய தாமரை மலர்போலத் தோன்றுதற்குக் காரணம் விடியற்காலத்திற்கு இயல்பான இருள் கதிரவனால் நன்கு அழிக்கப்பட்டாமையே ஆதல் போன்று நின் பெண்டின் பேதைமை நீ நன்கு அகற்றாமையே ஆகும்.  அகற்றியிருப்பையேல் அவள் என்னைப் பழிதூற்றாது அமைந்திருத்தலும் கூடும், ஒளவை துரைசாமி உரை – சிறப்பில்லாத ஆம்பல் தாமரைபோல மலரும் என்றதனால், கற்புச் சிறப்பு இன்மையால் அடங்கிக் கிடைத்தற்குரிய பரத்தை, குலமகளிர் போலச் சிறப்புடையாள் எனக் கருதித் தருக்குகின்றாள் என்றவாறு.  இலக்கணக் குறிப்பு – பெண்டே – ஏகாரம் தேற்றம், அடங்கலளே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்கன்னி விடியல் கணைக் கால் ஆம்பல் தாமரை போல மலரும் ஊர – இருள் முற்றிலும் நீங்காத விடியற்காலையில் திரண்ட தண்டையுடைய ஆம்பல் மலர் தாமரை மலர் போல் மலரும் ஊரனே, பேணாளோ நின் பெண்டே – பேண வேண்டியவற்றைப் பேணாத அறியாமை உடையவள் நீ காதலிக்கும் பெண், யான் தன் அடக்கவும் தான் அடங்கலளே – நான் அவளை அடக்க முயன்றாலும் அவள் அடங்காது உள்ளாள்

ஐங்குறுநூறு 69, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தலைவனிடம் சொன்னது
கண்டனெம் அல்லமோ மகிழ்ந, நின் பெண்டே,
பலர் ஆடு பெருந்துறை மலரொடு வந்த
தண் புனல் வண்டல் உய்த்தென,
உண்கண் சிவப்ப, அழுது நின்றோளே.

பாடல் பின்னணி:  பரத்தை ஒருத்தியுடன் உறவுகொண்டு தலைவன் அதை மறுத்தபொழுது, அவன் பரத்தமையை அறிந்த தலைவி சொன்னது.

பொருளுரை:  தலைவனே!   பலர் நீராடும் பெரிய துறையில் மலர்களுடன் வந்த குளிர்ந்த நீர், தன்னுடை வண்டல் பாவையை அழித்ததால் வருந்தி மையிட்ட கண்கள் சிவக்க அழுது நின்ற உன்னுடைய பரத்தையை யாம் கண்கூடாகக் கண்டேம்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – தலைவி காமக்கிழத்தியின் நலங்கூறுவாள் போலத் தலைவனது புறத்தொழுக்கத்தின் தீமையைக் காட்டிப் புலத்தலின், இஃது, ‘அவனறிவாற்ற வறியுமாகலின்’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 147) என்ற சூத்திரத்துக் ‘காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின்கண்’ தலைவி நிகழ்த்தும் கூற்று வகையுள் அடங்கும்.  இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர், இதனை, இச் சூத்திரத்துப் ‘பல்வேறு நிலையினும்’ என்றதனால் அமைத்து, ‘இது காமஞ் சாலா இளமையோளைக் களவில் மணந்தமை அறிந்தேன் என்றது’ என்பர்.  இலக்கணக் குறிப்பு – பெண்டே– ஏகாரம் தேற்றம், சிவப்ப – செயவென் எச்சம், உய்த்தென – செய்தெனவென எச்சம், நின்றோளே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  கண்டனெம் அல்லமோ – யாம் கண்டேம் இல்லையா, மகிழ்ந – தலைவனே, நின் பெண்டே – உன்னுடைய பரத்தையை, பலர் ஆடு பெருந்துறை மலரொடு வந்த தண் புனல் வண்டல் உய்த்தென உண்கண் சிவப்ப அழுது நின்றோளே – பலர் நீராடும் பெரிய துறையில் மலர்களுடன் வந்த குளிர்ந்த நீர் தன்னுடை வண்டல் பாவையை அழித்ததால் வருந்தி மையிட்ட கண்கள் சிவக்க அழுது நின்றவள்

ஐங்குறுநூறு 70, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தலைவனிடம் சொன்னது
பழனப் பன் மீன் அருந்த நாரை,
கழனி மருதின் சென்னிச் சேக்கும்,
மா நீர்ப் பொய்கை யாணர் ஊர!
தூயர் நறியர் நின் பெண்டிர்,
பேஎய்  அனையம் யாம், சேய் பயந்தனமே.

பாடல் பின்னணி:  பரத்தையருடன் பொழுது போக்கி நெடிது துய்த்து வந்த தலைவனிடம் தலைவி சொன்னது.

பொருளுரை:  நீர் நிலையில் பல மீன்களை உண்ட நாரை, வயலருகில் உள்ள மருத மரத்தின் உச்சியில் தங்கும், மிக்க நீருடைய குளங்களையுடைய வளமையான ஊரின் தலைவனே!  உன்னுடைய பரத்தையர் தூய்மையும் நறுமணமும் கொண்டவர்கள்.  யாம் குழந்தையைப் பெற்றதால், உனக்குப் பேய் போல் தோன்றுகின்றேம்.

குறிப்புபழனம் – ஒளவை துரைசாமி உரை – நீர்நிலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஊர்ப்பொது நிலம், தி. சதாசிவ ஐயர் உரை – வயல், அ. தட்சிணாமூர்த்தி உரை – ஊர்ப் பொதுநிலத்தில் உள்ள நீர்நிலை.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நாரை பொது நிலத்தில் உள்ள பல்வேறு மீன்களையும் பிடித்துத் தின்றுவிட்டு வாளா தங்குதற் பொருட்டே நன்செய் நிலத்திலுள்ள மருதமரத்தின் உச்சிக்கு வருதல் போன்று, நீயும் பொழுதெல்லாம் பல்வேறு பரத்தை மகளிரை ஆராய்ந்து கூடியிருந்து தூய இவ் இல்லத்திற்கு வாளா உலகியல்பு குறித்தே வருகின்றனை என்பது.  இலக்கணக் குறிப்பு –   அருந்த – அருந்திய என்னும் எச்சத்தின் திரிபு, அன்றி வினையெச்சமாகவே கொண்டு பல்மீன் அருந்துதற் பொருட்டு மருந்தின் உச்சி சேக்கும் எனினும் பொருந்தும், ஆர்ந்த என்னும் பெயரெச்சம் அருந்த என்று திரிந்ததுமாம், பேஎய் – செய்யுளிசை அளபெடை, யாம் – தன்மைப் பன்மை, பயந்தனமே – தன்மைப் பன்மை, ஏகாரம் அசைநிலை.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:  பழனப் பன் மீன் அருந்த நாரை கழனி மருதின் சென்னிச் சேக்கும் மா நீர்ப் பொய்கை யாணர் ஊர – நீர் நிலையில் பல மீன்களை உண்ட நாரை வயலருகில் உள்ள மருத மரத்தின் உச்சியில் தாங்கும் மிக்க நீருடைய குளங்களையுடைய வளமையான ஊரின் தலைவனே, தூயர் நறியர் நின் பெண்டிர் – உன்னுடைய பரத்தையர் தூய்மையும் நறுமணமும் கொண்டவர்கள், பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனமே – யாம் குழந்தையைப் பெற்றதால் உனக்குப் பேய் போல் தோன்றுகின்றேம்

புனலாட்டுப் பத்து

பாடல்கள் 71–80 – நீர் விளையாடல் பற்றி வருபவை.

ஐங்குறுநூறு 71, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது – அவன் பரத்தையுடன் சென்றதை அறிந்தபின் சொன்னது
சூது ஆர் குறுந்தொடிச் சூரமை நுடக்கத்து
நின்வெங் காதலி தழீஇ நெருநை
ஆடினை என்ப புனலே, அலரே
மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந,
புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே?

பாடல் பின்னணி:  பரத்தையருடன் புனலாடினான் எனக் கேட்டுப் புலந்த தலைவி, தலைவன் அதனை மறுத்து மறைத்துழிச் சொன்னது.

பொருளுரை:  தலைவா, நேற்று நீ   உட் துளையுடைய அழகிய சிறு வளையல்களை அணிந்த, நீ விரும்பும், வஞ்சகம் பொருந்திய காதலியைத் தழுவி, ஆற்றில் விளையாடினாய் என்று கூறுகின்றனர்.  ஊரில் பழிச் சொற்கள் எழுந்துவிட்டன.  அதை மறைக்க முடியுமா?  கதிரவனின் ஒளியை புதைக்க முடியுமா?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – விண்ணிலும் மண்ணிலும் தன் ஒண்கதிர் பரப்பிப் பேரொளி செய்யும் ஞாயிற்றை ஒருகால் கார்முகிற் கூட்டம் சிறிது மறைக்க முயலினும், ஞாயிற்று ஒளி மறையாது விண்ணகத்தும் அம் முகிற் கூட்டத்தின் அடியிலுள்ள நிலப்பகுதி சிறிது ஒழிந்த பிறாண்டும் நன்கு விளங்குதல் போல, நீ மறைக்க முயலும் அலர் நின்னாற் காதலிக்கப்பட்ட நின் பரத்தை ஒழியப் பிறர் பலரும் அறிய நிற்பதாயிற்று என்பாள், ‘புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றின் ஒளியை’ என்றாள்.  இது பிறிது மொழிதல்.  நின்செயல் சிறிதும் மறைக்கப்படாது என்பது கருத்து.  புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஞாயிற்று மண்டிலத்தின் உலகெங்கும் பரந்த ஒளியைப் புதைத்தல் கூடுமோ,  ஒளவை துரைசாமி உரை – ஞாயிற்றின் ஒளியை எவற்றாலும் எத்துணையும் மறைத்தல் கூடாதவாறு.  சூது ஆர் (1) – ஒளவை துரைசாமி உரை – சூது, சூதாடுவோர் இயக்கும் காய். தொடியின் மூட்டுவாய் அச்சூதாடுகாய் போறலின், சூதென்றது ஆகுபெயர்.  உள்ளே புழையுடைய என்றும் உண்டு.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – வஞ்சகம் பொருந்திய காதலி.  சூர் அமை நுடக்கத்து (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நல்லோர் அஞ்சுவதற்குக் காரணமான நடையினையும், ஒளவை துரைசாமி உரை – சூர்ப்புற்ற வளை துவண்டு நுடங்கியது போன்று இருப்பது குறித்தது, அ. தட்சிணாமூர்த்தி உரை – பரத்தை தன் கைகளை வீசி ஒலி எழுப்பிக் கண்டார் அனைவரையும் கவரும் வகையில் குலுக்கியும் அசைத்தும் நடந்தனள்.  இலக்கணக் குறிப்பு – தழீஇ – செய்யுளிசை அளபெடை, ஒல்லுமோ – ஓகாரம் எதிர்மறைப் பொருளது, என்ப – பலரறி சொல், ஒளியே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  சூது – உட் துளை, ஆர் – அழகிய, குறுந்தொடி – சிறு வளையல்கள், சூரமை நுடக்கத்து – வளைந்த அசைவுடைய, வஞ்சகம் பொருந்திய, நின்வெங் காதலி – நீ விரும்பியக் காதலி, தழீஇ – தழுவி, நெருநை – நேற்று, ஆடினை என்ப – விளையாடினாய் என்கின்றனர், புனலே – ஆற்றிலே, அலரே – பழி எழுந்தது, மறைத்தல் ஒல்லுமோ – மறைக்க முடியுமோ, மகிழ்ந – மருத நிலத்தின் தலைவனே, புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே – சூரியனின் ஒளியை புதைக்க முடியுமா

ஐங்குறுநூறு 72, ஓரம்போகியார், மருதத் திணைதலைவன் தோழியிடம் சொன்னது
வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழைத்
திதலை அல்குல், துயல்வரும் கூந்தல்,
குவளை உண்கண், ஏஎர் மெல்லியல்,
மலர் ஆர் மலிர் நிறை வந்தெனப்,
புனலாடு புணர் துணை ஆயினள் எமக்கே.

பாடல் பின்னணி:  தலைவி புலவி நீக்கித் தன்னுடன் புதுப்புனல் ஆட வேண்டிய தலைவன், களவுக் காலத்தில் நிகழ்ந்த புனலாட்டு நிகழ்வை, அவள் கேட்பத் தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  வயலின்கண் மலர்ந்த ஆம்பல் மலர்களால் தொடுக்கப்பட்ட மூட்டுவாயையுடைய அசையும் தழை ஆடையையும், தேமல் படர்ந்த அல்குலையும், அசைகின்ற கூந்தலையும், குவளையை ஒத்த மையிட்ட கண்களையும், அழகையும் மென்மையையும் உடைய இவள், மலர்கள் நிறைந்த மிக்க புது நீர் வந்தபொழுதில் தழுவி விளையாடும் துணையாக இருந்தாள் எமக்கு, யாம் களவு ஒழுக்கத்தை மேற்கொண்ட காலத்தில்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – இவள் அன்று கொண்ட இன்று சுருங்கிற்றாகலின் இப்போழ்தும் புனலாடப் போந்து புணர் துணையாவாள் என்பான், புனலாடு புணர் துணையாயினள் எமக்கே என இறந்த காலத்துக் குறிப்பே எய்தக் கூறினான்.  யாறும் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 191) என்பதற்கு இதனைக் காட்டி, இது தலைவி புலவி நீங்கித் தன்னொடு புனலாடல் வேண்டிய தலைவன், முன்பு புனலாடியதனை அவள் கேட்பத் தோழிக்கு உரைத்தது’ என நச்சினார்க்கினியர் கூறுவர்.  இலக்கணக் குறிப்பு – மலர் ஆம்பல் – வினைத்தொகை, ஏஎர் – அளபெடை, மெல்லியல் – அன்மொழித்தொகை, வந்தென – வந்ததென என்பதின் திரிபு, நுடங்கு தழை – வினைத்தொகை, எமக்கே – தன்மைப் பன்மை, ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழைத் திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் குவளை உண்கண் ஏஎர் மெல்லியல் – வயலின்கண் மலர்ந்த ஆம்பல் மலர்களால் தொடுக்கப்பட்ட மூட்டுவாயையுடைய அசையும் தழை ஆடையையும் தேமல் படர்ந்த அல்குலையும் அசைகின்ற கூந்தலையும் குவளையை ஒத்த மையிட்ட கண்களையும் அழகையும் மென்மையையும் உடைய இவள், மலர் ஆர் மலிர் நிறை வந்தெனப் புனலாடு புணர் துணை ஆயினள் எமக்கே – மலர்கள் நிறைந்த மிக்க புது நீர் வந்தபொழுதில் தழுவி விளையாடும் துணையாக இருந்தாள் எமக்கு

ஐங்குறுநூறு 73, ஓரம்போகியார், மருதத் திணைதலைவன் தோழியிடம் சொன்னது
வண்ண ஒண் தழை நுடங்க, வால் இழை,
ஒண்ணுதல் அரிவை, பண்ணை பாய்ந்தெனக்,
கள் நறுங்குவளை நாறித்
தண் என்றிசினே, பெருந்துறைப் புனலே.

பாடல் பின்னணி:  தலைவி புலவி நீக்கித் தன்னுடன் புதுப்புனல் ஆட வேண்டிய தலைவன், களவுக் காலத்தில் நிகழ்ந்த புனலாட்டு நிகழ்வை, அவள் கேட்பத் தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  நிறம் மிகுந்த ஒளிரும் தழை ஆடை அசைய, தூய அணிகலன்களையும் ஒளிரும் நெற்றியையுமுடைய அரிவை, முன்பு களவுக் காலத்தில், நீர் விளையாட்டிற்குப் பாய்ந்தாளாக, தேனுடைய நறிய குவளை மலர்களின் நறுமணம் கமழ்ந்து குளிர்ச்சி உடையதாக ஆயிற்று பெரிய துறையில் உள்ள நீர்.

குறிப்பு:  பண்ணை (2) – ஒளவை துரைசாமி உரை – புனலாடலும் விளையாட்டே யாதலின் பண்ணை எனப்பட்டது.  பண்ணை – கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு என்ப (தொல்காப்பியம், உரியியல் 23).  என்றிசினே (4) – ஒளவை துரைசாமி உரை – இறந்தகால முற்றுவினைத் திரிசொல்.  ‘அவற்றுள் இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகுநிலை உடையன என்மனார் புலவர்’ (தொல்காப்பியம், சொல் 275) என்பதனால், சின் படர்க்கைக்கும் அமைவதாயிற்று, உ. வே. சாமிநாதையர் உரை – இசின் – அசை.  . வே. சாமிநாதையர் உரை – அத் தடம் போல இவள் உறக் கலங்கித் தெளிந்து தண் என்றாள் என்பது கருதி உணரப்பட்டது.  இலக்கணக் குறிப்பு – என்றிசினே – சின் படர்க்கை அசைச்சொல், இறந்தகால முற்றுவினைத் திரிசொல், ஏகாரம் அசைநிலை, புனலே – ஏகாரம் அசைநிலை.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

சொற்பொருள்:  வண்ண ஒண் தழை நுடங்க வால் இழை ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தென – நிறம் மிகுந்த ஒளிரும் தழை ஆடை அசைய தூய அணிகலன்களையும் ஒளிரும் நெற்றியையுமுடைய அரிவை நீர் விளையாட்டிற்குப் பாய்ந்தாளாக, கள் நறுங் குவளை நாறித் தண் என்றிசினே பெருந்துறைப் புனலே – தேனுடைய நறிய குவளை மலர்களின் நறுமணம் கமழ்ந்து குளிர்ச்சி உடையதாக ஆயிற்று பெரிய துறையில் உள்ள நீர்

ஐங்குறுநூறு 74, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவன் தோழியிடம் சொன்னது
விசும்பு இழி தோகைச் சீர் போன்றிசினே,
பசும் பொன் அவிர் இழை பைய நிழற்றக்,
கரை சேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள், தண் நறும் கதுப்பே.

பாடல் பின்னணி:  தலைவி புலவி நீக்கித் தன்னுடன் புதுப்புனல் ஆட வேண்டிய தலைவன், களவுக் காலத்தில் நிகழ்ந்த புனலாட்டு நிகழ்வை, அவள் கேட்பத் தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  களவுக் காலத்தில் நாங்கள் நீராடியபொழுது, அவளுடைய பொன் நகைகள் ஒளியைப் பரப்ப, கரையில் உள்ள மருத மரத்தில் ஏறி, அவள் நீரில் பாய்ந்து விளையாடினாள்.  பாய்ந்த பொழுது அவளுடைய நறு மணம் மிகுந்த அழகிய கூந்தல், வானத்திலிருந்து இறங்கும் மயிலின் தோகையைப் போன்று காட்சி அளித்தது.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – களவுக்காலத்து நிகழ்ந்தனை நினைப்பிக்கும் முகத்தால் கற்பினுள் தலைவன் தலைவியின் அழகினைப் புகழ்வது வேட்கை மிகுதியால் அவளது புலவி நீக்கும் குறிப்பிற்றாதலின் அமையும் என்க.  ‘நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியின் புகழ்தகை வரையார் கற்பினுள்ளே’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 228) என ஆசிரியர் தொல்காப்பியனார் விளங்கக் கூறுமாற்றாலும் இவ்வமைதி துணியப்படும்.  இலக்கணக் குறிப்பு – போன்றிசினே – இடைச்சொல் அடியாகப் பிறந்த முற்றுவினைத் திரிசொல், ஏகாரம் அசைநிலை, கதுப்பே – ஏகாரம் அசைநிலை.  பண்ணை – கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு என்ப (தொல்காப்பியம், உரியியல் 23).

சொற்பொருள்:  விசும்பு – வானம், இழி – இறங்கும், வடியும், தோகை – மயிலின் தோகை, சீர் – அழகு, போன்று – போன்று, பசும்பொன் – புதிய பொன் நகை, அவிர் – ஒளி, இழை – நகை, பைய – மெதுவாக, நிழற்ற – ஒளி நிறைந்த, கரைசேர் – கரையில் உள்ள, மருதம் – மருத மரம், ஏறி – ஏறி, பண்ணை – நீர் விளையாட்டு, பாய்வோள் – பாய்ந்தாள், தண் – குளிர்ச்சியான, நறும் – நறுமணம், கதுப்பு – கூந்தல்

ஐங்குறுநூறு 75, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந, அதனால்
அலர் தொடங்கின்றால் ஊரே, மலர
தொன்னிலை மருதத்துப் பெருந்துறை
நின்னோடு ஆடினள் தண் புனல் அதுவே.

பாடல் பின்னணி:  பரத்தையுடன் நீராடி வந்த தலைவன் தோழியிடம் வாயில் வேண்டியபொழுது, அவள் வாயில் மறுத்துக் கூறியது.

பொருளுரை:  தலைவா!  இவ்விடத்தில், செய்த குற்றத்தை நீ ஒப்புக்கொள்ளவில்லை.  மலர்களைக் கொண்ட பழமையான மருத மரங்கள் நிற்கும் பெரிய துறையில் உன்னுடன் ஒருத்தி நீராடினாள் குளிர்ந்த நீரில்.  அதனைக் கண்டவர்கள் பலர்.  அதனால் ஊரில் அலர் எழுத் தொடங்கியது.

குறிப்பு:  ஒப்புமை – ஐங்குறுநூறு 31 – முதிர் மருதத்துப் பெருந்துறை.  ஒளவை துரைசாமி உரை – தோழி தலைமகனினும் உயர்ந்தாள் போலக் கூறுதல் வழுவாயினும், அவன் செய்கையால் தலைவிக்கு உளதாகும் உறுகணைத் தாங்குதல் அவட்கு இயல்பாகலின் அமையும் என்பர், ‘உறுகண் ஓம்பல் தன்னியல்பாகலின் உரியதாகும் தோழிகண் உரனே’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 239) என ஆசிரியர் அமைக்குமாறு காண்க.  ‘ஊர!  பெரிய நாண் இலை மன்ற, “பொரி எனப் புன்கு அவிழ் அகன் துறைப் பொலிய, ஒண்ணுதல் நறுமலர்க் காண்வரும் குறும்பல் கூந்தல், மாழை நோக்கின் காழ் இயன் வன முலை, எஃகுடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநை வைகு புனல் அயர்ந்தனை என்ப, அதுவே பொய் புறம் பொதிந்து யாம் கரப்பவும் கை இகந்து அலர் ஆகின்றால் தானே’ (அகநானூறு 116) என வரும் பரணர் பாட்டினும் தோழி அலர் பொருளாகத் தலைவனைக் கழறிக் கூறுமாறு என்க.  இலக்கணக் குறிப்பு – தொடங்கின்றால் – ஆல் அசைநிலை, அதுவே – ஏகாரம் அசைநிலை.  ஒவ்வாய் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ ஒப்புக்கொள்வாய் அல்லை, தி. சதாசிவ ஐயர் உரை – நீ பொருந்துதல் உடையை அல்லை.

சொற்பொருள்:  பலர் – பலர், இவண் – இங்கு, ஒவ்வாய் – நீ ஒப்புக்கொள்ளவில்லை, மகிழ்ந – தலைவா, அதனால் அலர் தொடங்கின்றால் ஊரே – அதனால் ஊரில் அலர் எழுத் தொடங்கியது, மலர தொன்னிலை மருதத்துப் பெருந்துறை நின்னோடு ஆடினள் தண் புனல் – மலர்களைக் கொண்ட பழமையான மருத மரங்கள் செறிந்த பெரிய துறையில் உன்னுடன் நீராடினாள் குளிர்ந்த நீரில் (மருத மரம் – Arjuna Tree, Terminalia arjuna), அதுவே – அதை

ஐங்குறுநூறு 76, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
பஞ்சாய்க் கூந்தல், பசுமலர்ச் சுணங்கின்,
தண் புனல் ஆடித் தன் நலம் மேம்பட்டனள்,
ஒண்தொடி மடவரல், நின்னோடு,
அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே.

பாடல் பின்னணி:  பரத்தையுடன் நீராடி வந்த தலைவன் தோழியிடம் வாயில் வேண்டியபொழுது, அவள் வாயில் மறுத்துக் கூறியது.

பொருளுரை:  பஞ்சாய்க் கோரை போன்ற கூந்தலையும், பசிய வேங்கை மலர் போன்ற தேமலையும், ஒளிரும் வளையல்களையும், மடப்பத்தையும் கொண்ட இளையவள் ஒருத்தி, உன்னுடன் குளிர்ந்த நீரில் விளையாடி, அதனால் தன் பெண்மை நலம் மேம்பட்டு, வானுலகில் உள்ள மகளிர் வணங்கும் தெய்வம் என்று எண்ணும்படி சிறப்பை எய்தினாள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – குலமகளிர் தம் கற்புடைமையால் அந்தர மகளிரும் வணங்கும் பத்தினித் தெய்வமாய் நலம் மேம்பட்டுப் பலரும் அறியத்தக்க விளக்கம் எய்துவர். ‘வானுறை மகளிர் நலன் இகல் கொள்ளும் வயங்கு இழை கரந்த வண்டுபடு கதுப்பின் ஒடுங்கு ஈர் ஓதிக் கொடுங்குழை கணவ’ (பதிற்றுப்பத்து 14:13–15) என்பதனால் குலமகளிர் கற்பால் வானோர் பரவும் நலம் மேம்படுமாறு காண்க.  மற்று, நின் மடவரல், நின்னொடு தண் புனலாடிய சிறப்பினால், பலரும் அறிய நிற்பதொரு விளக்கமெய்தினள் என்பாள் அந்தர மகளிர்க்குத் தெய்வம் போன்று என்றாள்.  பஞ்சாய்க் கூந்தல் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒருவகைக் கோரை.  இது கூந்தற்கு வடிவு உவமை.  இனி, பஞ்சாய் என்பதனை, அக்கோரையின் நாரால் தொடுக்கப்பட்ட மலர்மாலைக்கு ஆகுபெயராக்கி அம்மலர் மாலை சூடப்பட்ட கூந்தல் எனினுமாம், ஒளவை துரைசாமி உரை – தண்டான் கோரை போலும் கூந்தல், உ. வே. சாமிநாதையர் உரை – தண்டான் கோரை நாரால் புனைந்த மாலையை அணிந்த கூந்தல்.  இலக்கணக் குறிப்பு – பஞ்சாய் – மாலையைக் குறித்தால் ஆகுபெயர்,பசுமலர் – பண்புத்தொகை, போன்றே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  பஞ்சாய்க் கூந்தல் பசுமலர்ச் சுணங்கின் – பஞ்சாய்க் கோரை போன்ற கூந்தலையும் பசிய வேங்கை மலர் போன்ற தேமலையும் (பைஞ்சாய், கோரைப்புல், Cyperus rotundus tuberosus, வேங்கை மலர் பொன் நிறமுடையது, வேங்கை மரம் – kino tree, Pterocarpus marsupium), தண் புனல் ஆடித் தன் நலம் மேம்பட்டனள் – குளிர்ந்த நீரில் விளையாடி அதனால் தன் பெண்மை நலம் மேம்பட்டு, ஒண்தொடி மடவரல் – ஒளிரும் வளையல்களையும் மடப்பத்தையும் கொண்ட இளையவள், நின்னோடு – உன்னுடன், அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே – வானுலகில் உள்ள மகளிர்க்கு தெய்வம் போன்று

ஐங்குறுநூறு 77, ஓரம்போகியார், மருதத் திணைபரத்தை தலைவனிடம் சொன்னது
அம்ம வாழியோ, மகிழ்ந! நின் மொழிவல்!
பேரூர் அலர் எழ நீரலைக் கலங்கி,
நின்னொடு தண் புனல் ஆடுதும்,
எம்மோடு சென்மோ, செல்லல் நின் மனையே.

பாடல் பின்னணி:  தலைவியுடன் முன்பு புனலாடினான் தலைவன் என கேட்ட பரத்தை ஊடினாள்.  அதை அறிந்த தலைவன் அவளை நீராடுவதற்கு அழைத்தான்.  மறுமொழியாக அவள் கூறியது.

பொருளுரை:  தலைவனே!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக, உன்னிடம் கூறுகின்றேன், பெரிய ஊரில் அலர் எழுமாறு நீர் அலைகள் கலங்க உன்னுடன் குளிர்ந்த நீரில் விளையாடுவோம்.  எம்முடன் செல்வாயாக, நின் மனைக்கு நீ செல்லாதே.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மொழிவல் என்று தன்மை ஒருமையிற் கூறியவள் பின்னர்த் தன் தோழியரை உளப்படுத்தி எம் என்றும் ஆடுதும் என்றும் பன்மை கூறினள் ஆகலின் வழுவன்மை உணர்க.  வாழியோ (1) – சதாசிவ ஐயர் உரை – முன்னிலை அசை, மெய்ப்பாடு பெருமிதம், அ. தட்சிணாமூர்த்தி உரை – நீ வாழ்க.  நீரலைக் கலங்கி (2) – ச.வே. சுப்பிரமணியன் உரை, அ. தட்சிணாமூர்த்தி உரை – நீரில் அலை எழும்பும் வண்ணம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீர் அலையினாலே கலங்கும்படி, நீரலைக் கலங்கி என்புழிச் செய்தெனெச்சத்தைச் செயவென் எச்சமாக்குக ஒளவை துரைசாமி உரை – நீர் அலைத்ததாற் கலங்கி, தி. சதாசிவ ஐயர் உரை – நீரிடத்து அலைபோல் கலக்கமுற்று.  அம்ம – ஒளவை துரைசாமி உரை – கேட்பித்தற் பொருட்டாய இடைச்சொல்.  இலக்கணக் குறிப்பு – வாழியோ – வாழி, ஓ – அசைநிலைகள், மொழிவல் – தன்மை ஒருமை வினைமுற்று, ஆடுதும் – தன்மைப் பன்மை வினைமுற்று, சென்மோ – மோ முன்னிலையசை, செல்லல் – எதிர்மறை வியங்கோள் வினைமுற்று, மனையே – ஏகாரம் அசைநிலை.  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்:  அம்ம – கேட்பாயாக, வாழியோ – நீடு வாழ்வாயாக, மகிழ்ந – தலைவனே, நின் மொழிவல் – உன்னிடம் கூறுகின்றேன், பேரூர் அலர் எழ நீர் அலைக் கலங்கி நின்னொடு தண் புனல் ஆடுதும் – பெரிய ஊரில் அலர் எழுமாறு நீர் அலைகள் கலங்க உன்னுடன் குளிர்ந்த நீரில் விளையாடுவோம், எம்மோடு சென்மோ – எம்முடன் செல்வாயாக, செல்லல் நின் மனையே – நின் மனைக்கு நீ செல்லாதே

ஐங்குறுநூறு 78, ஓரம்போகியார், மருதத் திணைபரத்தை தலைவனிடம் சொன்னது
கதிர் இலை நெடுவேல் கடுமான் கிள்ளி
மதில் கொல் யானையின், கதழ்பு நெறி வந்த
சிறை அழி புதுப் புனல் ஆடுகம்,
எம்மொடு கொண்மோ, எம் தோள் புரை புணையே.

பாடல் பின்னணி:  தலைவியுடன் முன்பு புனலாடினான் தலைவன் என கேட்ட பரத்தை ஊடினாள்.  அதை அறிந்த தலைவன் அவளை நீராடுவதற்கு அழைத்தான்.  மறுமொழியாக அவள் கூறியது.

பொருளுரை:  ஒளிரும் இலையுடைய நெடிய வேலையும் விரைந்து ஓடும் குதிரைகளையுமுடைய கிள்ளியின் மதிலை அழிக்கும் யானையைப் போல் தன் நெறியில் விரைந்து வந்த, அணையை (உயர்ந்த கரையை) அழிக்கும் புது வெள்ளத்தில் நாம் ஆடுவோம்.  எம் தோளை ஒத்த புணையை எம்முடன் சேர்ந்து பற்றுவாயாக.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – பகைவர் தமக்கு அரணாக அமைத்த மதிலைக் கிள்ளியின் யானை அழித்தாற்போல, உயிர்களின் நலப்பேற்றுக்கு அரணமாக அமைந்த சிறையினைப் புதுப்புனல் அழிக்கும் என்றதனால், எங்கள் இன்பப்பேற்றுக்கு அரணாக அமைந்த நின் கூட்டத்தை நீ தலைவியுடன் ஆடும் புனலாட்டு அழிக்கும் என்றாளாம்.  இலக்கணக் குறிப்பு – கடுமான் – பண்புத்தொகை, யானையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, கடு – கடி என்ற உரிச்சொல் திரிந்து கடுவாயிற்று, கொண்மோ – மோ முன்னிலை அசை, புரை – உவம உருபு, புணையே – ஏகாரம் அசைநிலை.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்:  கதிர் இலை நெடுவேல் கடுமான் கிள்ளி மதில் கொல் யானையின் கதழ்பு நெறி வந்த – ஒளிரும் இலையுடைய நெடிய வேலையும் விரைந்து ஓடும் குதிரைகளையுமுடைய கிள்ளியின் மதிலை அழிக்கும் யானையைப் போல் தன் நெறியில் விரைந்து வந்த, சிறை அழி புதுப் புனல் ஆடுகம் – அணையை (உயர்ந்த கரையை) அழிக்கும் புது வெள்ளத்தில் நாம் ஆடுவோம், எம்மொடு கொண்மோ – எம்முடன் சேர்ந்து பற்றுவாயாக, எம் தோள் புரை புணையே – எம் தோளை ஒத்த புணையை

ஐங்குறுநூறு 79, ஓரம்போகியார், மருதத் திணைபரத்தையின் தோழி தலைவனிடம் சொன்னது
புதுப்புனல் ஆடி அமர்த்த கண்ணள்,
யார் மகள் இவளெனப் பற்றிய மகிழ்ந!
யார் மகள் ஆயினும் அறியாய்,
நீ யார் மகனை, எம் பற்றியோயே?

பாடல் பின்னணி:  தலைவன் தனியே நீராடினான். பரத்தை ஊடினாள்.  அவள் ஊடலை அறியாத தலைவன் அவள் கைகளைப் பற்றினான்.  அப்பொழுது அருகிலிருந்த அப்பரத்தையின் தோழி சொன்னது.

பொருளுரை:  புதிய நீரில் ஆடியதால் சிவந்த கண்களையுடைய இவள் யார் மகள் என இவளைப் பற்றிய தலைவா!  இவள் யார் மகளாயினும் நீ அறிந்துகொள்ள மாட்டாய்.  எம்மைப் பற்றிய நீ யார் மகன்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவளருமையை நீ முன்னும் அறிந்திலை ஆகலான் இப்பொழுதும் நீ அறிந்து கொள்ள மாட்டாய் என்று இகழ்ந்தபடியாம்.  எம் கையைப் பற்றுதற்கு உனக்கு என்ன உரிமை உள்ளது என்பாள். ‘எம் பற்றியோய் நீ யார் மகன்?’ என வினவினாள்.  அறியாத ஒரு மகளின் கையைப் பற்றுதல் இழிவு என்றும் ஆயிற்று.  இலக்கணக் குறிப்பு – ஆடி – எச்சம் திரிபு, ஆடியமையாலே எனக் காரணப் பொருட்டாக்குக, மகனை – ஐ சாரியை, பற்றியோயே – பற்றியோய் வினையாலணையும் பெயர், ஏகாரம் அசைநிலை.  அமர்த்த கண்ணள் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாறுபட்ட கண்ணையுடைய இவள், ஒளவை துரைசாமி உரை – சிவந்த கண்ணையுடையளாகிய இவள், தி. சதாசிவ ஐயர் உரை – போர் செய்தலுடைய கண்களையுடைய இவள், ச.வே. சுப்பிரமணியன் உரை – பொருகின்ற கண்களையுடைய இவள்.

சொற்பொருள்:  புதுப்புனல் ஆடி அமர்த்த கண்ணள் யார் மகள் இவள் எனப் பற்றிய – புதிய நீரில் ஆடியதால் சிவந்த கண்களையுடைய இவள் யார் மகள் என இவளைப் பற்றிய, மகிழ்ந – தலைவா, யார் மகள் ஆயினும் அறியாய் – இவள் யார் மகளாயினும் நீ அறிந்துகொள்ள மாட்டாய், நீ யார் மகனை எம் பற்றியோயே – எம்மைப் பற்றிய நீ யார் மகன்

ஐங்குறுநூறு 80, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
புலக்குவெம் அல்லேம், பொய்யாது உரைமோ,
நலத்தகு மகளிர்க்குத் தோள் துணை ஆகித்,
தலைப் பெயல் செம் புனல் ஆடித்,
தவ நனி சிவந்தன மகிழ்ந, நின் கண்ணே.

பாடல் பின்னணி:  தலைவன் பரத்தையோடு நீராடினான் என ஐயுற்ற தலைவி புலந்து சொல்லியது.

பொருளுரை:   பெரும!  யாம் வெறுக்க மாட்டோம்.  பொய் கூறாது நடந்ததை நடந்தபடி கூறுவாயாக.  அழகில் தகுதியுடைய பரத்தையர்க்கு, தோளால் தழுவுவதற்கு உரிய துணை ஆகி, முதல் முறையாகப் பெய்த மழையினால் சிவந்த நிறமாகிய ஆற்று நீரில் நீ விளையாடியதால், உன்னுடைய கண்கள் மிக மிகச் சிவந்துள்ளன.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – புதுப்புனல் எய்துங்கால் காதலனுடன் கூடியாடுதற்கு இக்கற்புக்காலத்தே அன்றிக் கழிந்த களவுகாலத்தும் விருப்பம் மிக உடையளாயிருந்தமையின், அது தோன்றத் தலைப்பெயற் செம்புனல் எனச் சிறப்பித்தாள். களவுக்காலத்தில் ‘காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது, அரிமதர் மழைக் கண் சிவப்ப நாளைப் பெருமலை நாடன் மார்பு புணையாக ஆடுகம் வம்மோ, காதலம் தோழி ……………… கொடிபட மின்னிப் பாயின்றால் மழையே’ (அகநானூறு 312) எனத் தலைவி கூறுதல் காண்க.  இலக்கணக் குறிப்பு – புலக்குவெம் – தன்மைப் பன்மை, அல்லேம் – தன்மைப் பன்மை, உரைமோ – மோ முன்னிலையசை, தவநனி – ஒரு பொருட்பன்மொழி, தவ – மிகுதிப்பொருள் தரும் உரிச்சொல்,  நனி – மிகுதிப்பொருள் தரும் உரிச்சொல், கண்ணே – ஏகாரம் அசைநிலை.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்:  புலக்குவெம் – வெறுப்போம், அல்லேம் – மாட்டோம், பொய்யாது – பொய்  கூறாது, உரைமோ – கூறுவாயாக, நலத்தகு மகளிர்க்கு – அழகில் தகுதியுடைய பெண்களுக்கு (பரத்தையர்க்கு), தோள் துணை ஆகி – தோளால் தழுவுவதற்கு உரிய துணை ஆகி, தலைப் பெயல் செம் புனல் ஆடி – முதல் முறையாகப் பெய்த மழையினால் சிவந்த நிறமாகிய ஆற்று நீரில் விளையாடியதால், தவ நனி சிவந்தன – மிக மிகச் சிவந்தன, மகிழ்ந – பெரும, நின் கண்ணே – உன்னுடைய கண்கள்

புலவி விராய பத்து

பாடல்கள் 81–90 – புலவி பற்றியவை.  தலைவியும், தோழியும், பரத்தையும் புலந்து கூறுவனவும் வாயில் மறுத்துக்  கூறுவனவும் பிறவுமாய் கலந்து வருகின்றது.  புலத்தல் – ஊடுதல், வெறுத்தல்.

ஐங்குறுநூறு 81, ஓரம்போகியார், மருதத் திணைபரத்தை தலைவனிடம் சொன்னது
குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை,
அரிப் பறை வினைஞர் அல்கு மிசைக் கூட்டும்,
மலர் அணி வாயில் பொய்கை ஊர! நீ
என்னை நயந்தனென் என்றி நின்
மனையோள் கேட்கின், வருந்துவள் பெரிதே.

பாடல் பின்னணி:  தலைவி தன்னைப் புறங்கூறினாள் என்பதை அறிந்த பரத்தை தலைவனிடம் சொன்னது, தலைவியின் தோழியர் கேட்கும்படி.

பொருளுரை:  குருகு உடைத்து உண்ட வெள்ளை வயிற்றையுடைய ஆமையின் எஞ்சிய தசையை, அரித்த ஓசையை உடைய பறையை முழக்குபவர்கள், இரவு நேர உணவாகச் சேர்த்து வைக்கும், மலர்களால் அழகுபெற்ற துறையையுடைய பொய்கைகளை உடைய ஊரனே!  நீ என்னை விரும்புகின்றேன் எனக் கூறுகிறாய்.  இதை உன் மனைவி கேட்டால் மிகவும் வருந்துவாள்.

குறிப்பு:  பழைய உரை – குருகுடைத்துண்ட யாமை மிச்சிலை வினைஞர் உணவிற் கூட்டும் ஊர எனவே, நாங்கள் நுகர்ந்து கழித்த மார்பை நுகர்வாள் என்று தலைமகளைப் பழித்தவாறாம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குருகால் உண்ணப்பட்ட யாமைத் தசையைப் பறையர் இரவு உணவிற்குச் சேர்த்து வைப்பர் என்றது, எம்மால் நுகர்ந்து எச்சிலாகிய நின் மார்பையே தலைவி நுகர்தற்குக் காவல் செய்து போற்றுகின்றாள் என்பது.  இலக்கணக் குறிப்பு – முன்னிலை ஒருமை, என்றி – றகரம் ஊர்ந்த முன்னிலை நிகழ்கால முற்றுவினை, பெரிதே – ஏகாரம் அசைநிலை.  அல்கு மிசைக் கூட்டும் (2) – ஒளவை துரைசாமி உரை – மிக்க உணவோடு கூட்டி உண்ணும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – இராக்கால உணவாக சேர்த்து வைக்கும், ‘அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ’ என வரும் அகத்தினும் (அகநானூறு 257) அல்கு இப்பொருள் ஆதல் அறிக.

சொற்பொருள்:  குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை அரிப் பறை வினைஞர் அல்கு மிசைக் கூட்டும் மலர் அணி வாயில் பொய்கை ஊர – குருகு உடைத்து உண்ட வெள்ளை வயிற்றையுடைய ஆமையின் எஞ்சிய தசையை அரித்த ஓசையை உடைய பறையை முழக்குபவர்கள் இரவு நேர உணவாகச் சேர்த்து வைக்கும் மலர்களால் அழகுபெற்ற துறையையுடைய பொய்கைகளை உடைய ஊரனே, நீ என்னை நயந்தனென் என்றி – நீ என்னை விரும்புகின்றேன் எனக் கூறுகிறாய், நின் மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே – உன் மனைவி கேட்டால் மிகவும் வருந்துவாள்

ஐங்குறுநூறு 82, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி பாணனிடம் சொன்னது
வெகுண்டனள் என்ப பாண, நின் தலைமகள்,
மகிழ்நன் மார்பின் அவிழ் இணர் நறும் தார்த்
தாது உண் பறவை வந்து, எம்
போது ஆர் கூந்தல் இருந்தன எனவே.

பாடல் பின்னணி:  தலைவனின் தூதுவனாக மனைக்கு வந்த பாணனிடம் தலைவி கூறியது.

பொருளுரை:  பாணனே!  தலைவன் மார்பில் அணிந்த நறிய மாலையில் உள்ள மலர்க்கொத்துக்களில் உள்ள பூந்தாதினை உண்ணுகின்ற வண்டுகள் எம் மலர் பொருந்திய கூந்தலில் வந்து தங்கின என்று, நின் தலைவி சினம் கொண்டாள் என்று கண்டவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பு:  பழைய உரை – இதுவும் பொறாதவள் நீ ஈண்டு வருதல் பொறாள். கடிதிற் செல்க என்பதாம்.  தலைமகள் (1) – அ. தட்சிணாமூர்த்தி உரை – பரத்தையைத் தலைமகள் என்றது இகழ்ச்சிக் குறிப்பாம்.  கூந்தல் இருந்தன எனவே (4) – ஒளவை துரைசாமி உரை – கூந்தலில் தங்கின என்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கூந்தலின்கண்ணே வந்து மொய்த்தன என்று.  இலக்கணக் குறிப்பு – பாண – அண்மை விளி, எனவே – ஏகாரம் அசைநிலை.  பறவை – இச்சொல் சங்கப்பாடல்களில் இன்றைய பயன்பாட்டில் உள்ளவாறும் உள்ளது.  தேனீ – அகநானூறு 4–11, 132–10, 332–8, 371–13, நற்றிணை 55–5, 161–4, 185–9, ஐங்குறுநூறு 82–3, கலித்தொகை 22–7, பரிபாடல் 7–6, புறநானூறு 70–11, பதிற்றுப்பத்து 66–16, பெரும்பாணாற்றுப்படை 183, 229, வௌவால் – அகநானூறு 244–2, குறுந்தொகை 201–3, 352–2, புறநானூறு 370–11, தும்பி – நற்றிணை 277–9.  ஒளவை துரைசாமி உரை – இஃது ‘அவனறிவு ஆற்ற அறியுமாகலின்’ என்ற சூத்திரத்து, ‘வாயிலின் வரூஉம் பகை’ என்பதனுள் அடங்கும்.

சொற்பொருள்:  வெகுண்டனள் என்ப – சினம் கொண்டாள் என்று கண்டவர்கள் கூறுகின்றனர், பாண – பாணனே, நின் தலைமகள் – நின் தலைவியாகிய பரத்தை, மகிழ்நன் மார்பின் அவிழ் இணர் நறும் தார்த் தாது உண் பறவை வந்து எம் போது ஆர் கூந்தல் இருந்தன எனவே – தலைவன் மார்பில் அணிந்த நறிய மாலையில் உள்ள மலர்க்கொத்துக்களில் உள்ள பூந்தாதினை உண்ணுகின்ற வண்டுகள் எம் மலர் பொருந்திய கூந்தலில் வந்து தங்கின என்று

ஐங்குறுநூறு 83, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தலைவனிடம் சொன்னது
மணந்தனை அருளாய் ஆயினும், பைபையத்
தணந்தனை ஆகி உய்ம்மோ நும்மூர்,
ஒண்தொடி முன் கை ஆயமும்,
தண்துறை ஊரன் பெண்டு எனப்படற்கே.

பாடல் பின்னணி:  திருமணம் நிகழ்ந்த அண்மைக் காலத்திலேயே பரத்தமையை மேற்கொண்ட தலைவனிடம் தலைவி ஊடிக் கூறியது.

பொருளுரை:  என்னை மணந்துகொண்டு நீ எனக்கு அருள் செய்யாவிட்டாலும், மெல்ல மெல்ல என்னைவிட்டு விலகிச் செல்வாயாக, உன் ஊரில் உள்ள ஒளிரும் வளையல்களை முன்கையில் அணிந்த பரத்தையர் மகளிர் யாவரும் குளிர்ந்த துறையுடைய ஊரனின் பெண்கள் எனப் பிறர் கருதுமாறு.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ என்னைப் பிரிந்து நாடோறும் புதிய புதிய பரத்தை மகளிரை மணந்து எண்ணிறைந்த பெண்களையுடையவன் இவன் என்னும் புகழை அடைக என்றவாறு.  எனவே, இல்லறம் நிகழ்த்துதலோ அன்பு செய்தலோ நின் குறிக்கோள் அன்று என இடித்து உரைத்தாளாயிற்று.  இனி நீ ஈண்டு வாரற்க.  பரத்தையர் சேரிக்கே செல்க என்பது குறிப்பு.  நும்மூர் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நம்மூர் என்றதற்குத் தனக்குத் தலைவன் உரிமை தந்ததில்லை என்பது தோன்ற நும்மூர் என்றாள்.  தண்துறை ஊரன் பெண்டு (4) – ஒளவை துரைசாமி உரை – தண்ணிய துறையினையுடைய ஊரற்குரிய காமக்கிழத்தியர்.  இலக்கணக் குறிப்பு – மணந்தனை – முற்றெச்சம், பைபைய – பைய பைய என்ற அடுக்கு பைபய என மரூஉ ஆயிற்று, தணந்தனை – முற்றெச்சம், உய்ம்மோ – மோ முன்னிலையசை, ஆயமும் – உம்மை இழிவு சிறப்பு, எனப்படற்கே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  மணந்தனை அருளாய் ஆயினும் – என்னை மணந்துகொண்டு நீ எனக்கு அருள் செய்யாவிட்டாலும், பைபையத் தணந்தனை ஆகி உய்ம்மோ – மெல்ல மெல்ல என்னைவிட்டு விலகிச் செல்வாயாக, நும் ஊர் ஒண்தொடி முன் கை ஆயமும் தண்துறை ஊரன் பெண்டு எனப்படற்கே – உன் ஊரில் உள்ள ஒளிரும் வளையல்களை முன்கையில் அணிந்த பரத்தையர் மகளிர் யாவரும் குளிர்ந்த துறையுடைய ஊரனின் பெண்கள் எனப் பிறர் கருதுமாறு

ஐங்குறுநூறு 84, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
செவியின் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள்,
கண்ணிற் காணின் என் ஆகுவள் கொல்,
நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண் கயம் போலப்,
பலர் படிந்து உண்ணு, நின் பரத்தை மார்பே?

பாடல் பின்னணி:  பரத்தையர் மனையிலிருந்து, அவர்களுடன் கூடிய அடையாளங்களுடன் வந்த தலைவனிடம், தோழி சொன்னது.

பொருளுரை:  உன் புறத்தொழுக்கத்தைப் பற்றிப் பிறர் சொன்னாலும் சொற்களால் கூற இயலாத அளவிற்குச் சினம் கொள்பவள், நறுமண மலர்களை அணிந்த ஐந்து பிரிவாக உள்ள கூந்தலையுடைய கன்னி மகளிர் தைத் திங்களில் நீராடும் குளிர்ந்த குளம் போல் பரத்தையர் பலர் அணைத்து மகிழ்ந்த உன் பரத்தமை அடையாளமுடைய மார்பைத் தன் கண்களால் காணும்பொழுது என்ன ஆவாளோ?

குறிப்பு:  சொல் இறந்து வெகுள்வோள் (1) – தி. சதாசிவ ஐயர் உரை – அளவைக் கடந்து வெகுள்பவள், பொ. வே. சோமசுந்தரனார் உரை– சொல் அவிந்து பெரிதும் சினம் கொள்பவள், ஒளவை துரைசாமி உரை – சொல்லாடுவதற்கு நாவெழாத அத்துணை அளவிறந்த சினம் கொள்பவள், அ. தட்சிணாமூர்த்தி உரை – சொற்களால் கூறமுடியாத அளவில் சினம் கொள்பவள்.  இலக்கணக் குறிப்பு – கொல் – அசைநிலை, தைஇ– சொல்லிசை அளபெடை, மார்பே – ஏகாரம் அசைநிலை.  அ. தட்சிணாமூர்த்தி உரை – தைத் திங்களில் கன்னிப் பெண்கள் நீராடி நோன்பு இயற்றுதல் பண்டைய வழக்கமாகும்.  இதனைத் தைந்நீராடல், தைநோன்பு என வழங்குப.  இதனை அம்பாவாடல் என்றும் வழங்குவர்.  இதுவே பின்னாட்களில் மார்கழி நீராடல் என வழங்கிற்று என்ப அறிஞர். தைத் திங்களில் மகளிர் நீராடல் – நற்றிணை 80 – தைஇத் திங்கள் தண் கயம் படியும் பெருந்தோள் குறுமகள், ஐங்குறுநூறு 84 – நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண் கயம் போல, கலித்தொகை 59–13 – நீ தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ, பரிபாடல் 11–81 – அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர் முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட (அம்பா ஆடல் – தைந் நீராடல்), பரிபாடல் 11–91 – தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல், பரிபாடல் 11–134 – இன்ன பண்பின் நின் தைந்நீராடல் மின் இழை நறுநுதல் மகள்.

சொற்பொருள்:  செவியின் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள் கண்ணிற் காணின் என் ஆகுவள் கொல் – உன் புறத்தொழுக்கத்தைப் பற்றிப் பிறர் சொன்னாலும் சொற்களால் கூற இயலாத அளவிற்குச் சினம் கொள்பவள் தன் கண்களால் அதனைக் காணும்பொழுது என்ன ஆவாளோ, நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண் கயம் போலப் பலர் படிந்து உண்ணு நின் பரத்தை மார்பே – நறுமண மலர்களை அணிந்த ஐந்து பிரிவாக உள்ள கூந்தலையுடைய கன்னி மகளிர் தைத் திங்களில் நீராடும் குளிர்ந்த குளம் போல் பரத்தையர் பலர் அணைத்து மகிழ்ந்த உன் பரத்தமை அடையாளமுடைய மார்பு

ஐங்குறுநூறு 85, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி தலைவனிடம் சொன்னது
வெண் நுதல் கம்புள் அரிக்குரல் பேடை,
தண் நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்,
மறு இல் யாணர் மலி கேழ் ஊர! நீ
சிறுவரின் இனைய செய்தி,
நகாரோ பெரும, நின் கண்டிசினோரே?

பாடல் பின்னணி:  பரத்தையர் மேல் காதல் கொண்ட தலைவன் மனைக்கு வந்தபொழுது தலைவி புலந்து கூறியது.

பொருளுரை:  வெள்ளை நெற்றியையுடைய சம்பங்கோழியின் அரித்த குரலையுடைய பேடை குளிர்ந்த நறிய பழனத்தில் (ஊரின் பொது நிலத்தில்) தன் சுற்றத்துடன் ஒலிக்கின்ற குறை இல்லாத வளமை மிகுந்த ஊரின் தலைவனே!  , நீ விளைவு எண்ணாத சிறுவர்களைப் போன்ற நடத்தையை உடையாய்.  எள்ளி நகையாடமாட்டார்களா பெருமானே இதனைக் கண்டவர்கள்? 

குறிப்பு:   பழைய உரை – கம்புட் பேடை சேவலொழியக் கிளையுடனே ஆலும் ஊர என்றது, கிளையுடனே வாழ்கின்ற எமக்கு நின்னின் நீங்கிய மெலிவு உளதாகக் கூறுகின்றேமல்லேம்.  நின் குலத்தொழுக்கத்திற்குத் தகாது எனக் கழறியதாம். ‘தாய்போற் கழறித் தழீஇக் கோடல் ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 173) என்றதூஉம் இத்திறன் நோக்கி எனக் கொள்க.  அரிக்குரல் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – இனிய குரல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரித்தெழும் ஓசை, ஒளவை துரைசாமி உரை – அரித்தெழும் ஓசை.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சம்பங்கோழிப் பெடை (தன் சேவலன்றியும்) தனது கிளையோடு மகிழ்ந்து ஆலும் என்றது, “பெருமானே, நீ அவ்வாறு தணந்து போயினை எனினும் யான் எனக்குரிய கடமைகளிலே நெஞ்சு நிறுத்தி நமது சுற்றத்தோடு ஒருவாறு மகிழ்ந்திருக்கின்றேன்” என்பது.  இலக்கணக் குறிப்பு – கேழ் – கெழு என்றதன் திரிபு, சிறுவரின் – ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, நகாரோ – ஓகாரம் வினா, உடன்பாட்டுப் பொருளில் வந்தது, செய்தி – முன்னிலை வினைமுற்று, கண்டிசினோரே – வினைமுதன் மேனின்ற வினையாலணையும் பெயர், இசின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல், ஏகாரம் அசைநிலை.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:  வெண் நுதல் கம்புள் அரிக்குரல் பேடை தண் நறும் பழனத்துக் கிளையோடு ஆலும் மறு இல் யாணர் மலி கேழ் ஊர – வெள்ளை நெற்றியையுடைய சம்பங்கோழியின் அரித்த குரலையுடைய பேடை குளிர்ந்த நறிய பழனத்தில் (ஊரின் பொது நிலத்தில்) தன் சுற்றத்துடன் ஒலிக்கின்ற குறை இல்லாத வளமை மிகுந்த ஊரின் தலைவனே, நீ சிறுவரின் இனைய செய்தி – நீ விளைவு எண்ணாத சிறுவர்களைப் போன்ற நடத்தையை உடையாய், நகாரோ பெரும நின் கண்டிசினோரே – எள்ளி நகையாடமாட்டார்களா வெண் நுதல் கம்புள் அரிக்குரல் பேடை தண் நறும் பழனத்துக் கிளையோடு ஆலும் மறு இல் யாணர் மலி கேழ் ஊர – வெள்ளை நெற்றியையுடைய சம்பங்கோழியின் அரித்த குரலையுடைய பீடை குளிர்ந்த நறிய பழனத்தில் (ஊரின் பொது நிலத்தில்) தன் சுற்றத்துடன் ஒலிக்கின்ற குறை இல்லாத வளமை மிகுந்த ஊரின் தலைவனே, நீ சிறுவரின் இனைய செய்தி – நீ விளைவு எண்ணாத சிறுவர்களைப் போன்ற நடத்தையை உடையாய், நகாரோ பெரும நின் கண்டிசினோரே – எள்ளி நகையாடமாட்டார்களா பெருமானே இதனைக் கண்டவர்கள்

ஐங்குறுநூறு 86, ஓரம்போகியார், மருதத் திணைபரத்தை தலைவனிடம் சொன்னது
வெண்தலைக் குருகின் மென்பறை விளிக் குரல்,
நீள் வயல் நண்ணி இமிழும் ஊர!
எம் இவண் நல்குதல் அரிது,
நும் மனை மடந்தையொடு தலைப்பெய்தீமே.

பாடல் பின்னணி:  தலைவன் பரத்தையின் இல்லத்தில் இருக்கின்றான்.  அவனுடைய இளைய புதல்வனிடமிருந்து ஒரு செய்தியைத் தோழி கொண்டுவருகின்றாள்.  அவன் மனம் நெகிழ்கின்றான்.  தோழி கூறியதைக் கேட்ட பரத்தை தலைவனைச் சினந்து கூறியது.

பொருளுரை:  வெண்மையான தலையையுடைய நாரையின் மெல்லிய சிறகுகள் கொண்ட குஞ்சுகளின் அழைக்கும் குரல் நீண்ட வயல்களை அடைந்து ஒலிக்கும் ஊரனே!  இனி நீ எம்முடன் இங்கு இருந்து எமக்கு அருள் செய்வது இயலாதது.  உன் மனைவியுடன் கூடி இருப்பாயாக.

குறிப்பு:  பழைய உரை – குருகின் பார்ப்பு அழைக்கும் குரல் வயல் நண்ணி இமிழும் ஊர என்றது, நின் புதல்வன் கூறிவிடுத்தல் நீ கேட்டமை சேரி எல்லாம் அறிந்தது.  நின்னால் மறைத்தல் அரிது என்பதாம்.  பார்ப்பினம் மெல்லிதாகப் பறத்தல்பற்றி மென்பறை என்று ஆகுபெயராற் கூறியதெனக் கொள்க.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குருகின் பார்ப்புக்களின் விளிக்குரல் நெடிய கழனிக்கண் சென்று ஒலிக்கும் ஊரன் என்றது, நின்னுடைய மகவின் இனிய அழைப்பாகிய மழலைமொழி இப் பரத்தையர் சேரிவரையில் எட்டுவதாயிற்று என்பது.  இலக்கணக் குறிப்பு – மென்பறை – அன்மொழித்தொகை (பொ. வே. சோமசுந்தரனார் உரை), ஆகுபெயர் (பழைய உரையாசிரியர்), தலைப்பெய்தீமே – முன்னிலை பன்மை ஏவல் வினைமுற்று, தலைப்பெய்தீமே – முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல்.  நீள் வயல் நண்ணி (2) – ஒளவை துரைசாமி உரை – நீண்ட வயல்களை அடைந்து, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெடிய கழனிகளை எய்து, அ. தட்சிணாமூர்த்தி உரை – நெடிய வயல்களுக்கு நெருக்கமாக.  ஒளவை துரைசாமி உரை – தலைப்பெய்தல் ஒரு சொல்:  தலைக்கூடல், தலைப்பிரிதல் என்றாற்போல.

சொற்பொருள்:  வெண்தலைக் குருகின் மென்பறை விளிக் குரல் நீள் வயல் நண்ணி இமிழும் ஊர – வெண்மையான தலையையுடைய நாரையின் மெல்லிய சிறகுகள் கொண்ட குஞ்சுகளின் அழைக்கும் குரல் நீண்ட வயல்களை அடைந்து ஒலிக்கும் ஊரனே, எம் இவண் நல்குதல் அரிது – நீ எம்முடன் இங்கு இருந்து அருள் செய்வது இயலாதது, நும் மனை மடந்தையொடு தலைப்பெய்தீமே – உன் மனைவியுடன் கூடி இருப்பாயாக

ஐங்குறுநூறு 87,  மருதத் திணை – பரத்தை தலைவனிடம் சொன்னது
பகன்றைக் கண்ணிப் பல் ஆன் கோவலர்
கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்
யாணர் ஊர! நின் மனையோள்
யாரையும் புலக்கும், எம்மை மற்று எவனோ?

பாடல் பின்னணி:  தலைவி தன்னைப் புறங்கூறினாள் என்பதை அறிந்த பரத்தை தலைவியின் தோழியர் கேட்கும்படி தலைவனிடம் சொன்னது.

பொருளுரை:  பல பசுக்களையுடைய பகன்றை மாலையை அணிந்த இடையர்கள், கரும்பைக் கோலாக பயன்படுத்தி, மாங்கனிகளை உதிர்க்கும் புது வருவாயுடைய ஊரனே!   உன் மனைவி எல்லோரையும் வெறுப்பவள்.  என்னை மட்டும் விட்டு வைப்பாளா?

குறிப்பு:  பழைய உரை – கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும் ஊர என்றது, யாங்கள் பழித்தேமென்று அவட்கு இனியசொற் கூறி அவள் எங்களைப் பழித்துக் கூறும் சொற்களை நினக்கு இனியவாகப் பெறுவாய் என்றது.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கோவலர் கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும் யாணர் ஊர என்றது, இனிய உணவாகிய கரும்பினையே இன்னாமை செய்யும் குணிலாக மாற்றிக் கொண்டு இனிய மாவின் கனியை உதிர்த்தது போல நின் மனையாட்டி என்னுடைய இனிய செயல்களையே இன்னாச் செயல்களாகத் திரித்துக் கொண்டு என்னைத் தூற்றிப் பொல்லாங்கு செய்வாளாயினள் என்பது, புலியூர்க் கேசிகன் உரை – கரும்பைக் கைக்கொண்ட கோவலர், அதனைச் சுவைத்தும் இன்புற்றதோடும் அமையாராய், அதனையே குறுந்தடியாகக் கொண்டு எறிந்து மாங்கனியையும் உதிர்க்கும் வளமுடைய ஊரன் என்றது, இவ்வாறே தலைவனும் பரத்தையரை நுகர்ந்து இன்புற்றபின் அவரையே இகழ்ந்துக் கூறித் தலைவியைத் தெளிவித்து அவளையும் அடையும் இயல்பினன் என்று கூறுகின்றாள்.  இலக்கணக் குறிப்பு – மற்று – அசைநிலை, வினை மாற்றின்கண் வந்தது, எவனோ – ஓகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  பகன்றை – சிவதை மலர், சீந்தில் மலர், Indian jalap, கண்ணி – மாலை, பல்ஆன் கோவலர் – பல மாடுகளையுடைய இடையர்கள், கரும்பு குணிலா – கரும்பை குறும் தடியாக (பயன்படுத்தி), மாங்கனி உதிர்க்கும் – மாங்கனிகளை உதிர்க்கும் யாணர் ஊர – புது வருமானம் உடைய ஊரில் உள்ளவனே, நின் மனையோள் – உன் மனைவி,  யாரையும் புலக்கும் – எல்லோரையும்  வெறுப்பாள், எம்மை மற்று எவனோ – என்னை மட்டும் விட்டு வைப்பாளா?

ஐங்குறுநூறு 88, ஓரம்போகியார், மருதத் திணை பரத்தை சொன்னது, தலைவியின் தோழியர் கேட்கும்படியாக
வண்டு உறை நயவரும் வள மலர்ப் பொய்கைத்
தண்துறை ஊரனை, எவ்வை, எம் வயின்
வருதல் வேண்டுதும் என்ப,
ஒல்லேம் போல் யாம் அது வேண்டுதுமே.

பாடல் பின்னணி:  தலைவி தன்னைப் புறங்கூறினாள் என்பதை அறிந்த பரத்தை, தலைவியின் தோழியர் கேட்கும்படி சொன்னது.

பொருளுரை:  வண்டுகள் உறையும் யாவரும் விரும்பும் மிக்க மலர்களையுடைய பொய்கையையும், அதன்கண் குளிர்ந்த நீராடும் துறையையுடைய ஊரின் தலைவனை, எம் தமக்கை (அவனுடைய மனைவி), யாம் எப்பொழுதும் எம் இல்லத்திற்கு வருமாறு செய்தலை விரும்புகின்றோம் எனக் கூறுகின்றாள் எனக் கூறுகின்றனர், அதை விரும்பாதது போல் வெளியில் காட்டிக்கொண்டு, அதையே யாம் விரும்புகின்றோம்.

குறிப்புபழைய உரை – இவ்வாறு என்னைக் கூறுகை தவிராளாயின் அதனை முடியச் செய்து விடுகிறேன் என்பதாம்.  வள்ளிய துறைகளின்கண்ணே எல்லாரும் கொள்ளும் வண்ணம் நயந்து பூக்கின்ற மலர்களையுடைய பொய்கையூரன் என்றது, மகளிரெல்லார்க்கும் பொதுப் பட்டிருப்பான் என்றவாறு.  வண்டு உறை நயவரும் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வண்டுகள் தாமே உறைதலை விரும்புவதற்குக் காரணமான, ஒளவை துரைசாமி உரை – வண்டுகள் உறையும் யாவரும் விரும்புகின்ற.  எவ்வை (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எம் தமக்கையார், ஈண்டுத் தவ்வை எவ்வை என வந்தது, ஒளவை துரைசாமி உரை – எம் தங்கை.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வண்டு உறை நயவரும் வள மலர்ப் பொய்கைத் தண்துறை ஊரன் என்றது, தலைவனை யாம் வலிந்து மடக்கிக் கொள்கின்றோமில்லை.  மலர்ச் சிறப்பாலே வண்டுகள் தாமே அவற்றில் சென்று உறைதலை நயந்தாற்போல எமது பெண்மைநலச் சிறப்பாலே அவன் தானே எம்மனைக்கண் வருதலை விரும்பி வந்து உறைகின்றான்.  எனவே தான் பழியுடையாள் அல்லல் என்றாளுமாயிற்று.  தண்துறை என்றது, எம்பால் வருவற்கு யாம் மிகவும் இன்பஞ்செய்யும் இயல்புடையேம் என்னும் குறிப்புடையது, புலியூர்க் கேசிகன் உரை – வள்ளிய துறையிடத்தே பூத்துக் கிடக்கும் வளவிய புதுமலர்களைக் கொண்ட பொய்கையுடைய ஊரன் என்றது, காண்பார் யாரும் விறுப்போடே தாம் வேண்டுமட்டும் கொய்துக் கொள்ளுதலைப் போலத் தலைவனும் அவனை விரும்புகின்ற மகளிரெல்லாம் எளிதாக அடைந்து இன்புறுதற்குரிய பொதுநிலைத் தன்மை கொண்டவன் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – உறை – தொழிற்பெயர், உறைதல் என்க.  ஒல்லேம் – தன்மைப் பன்மை வினை முற்று, வேண்டுதுமே – தன்மைப் பன்மை வினை முற்று, ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  வண்டு உறை நயவரும் வள மலர்ப் பொய்கைத் தண்துறை ஊரனை – வண்டுகள் உறையும் யாவரும் விரும்பும் மிக்க மலர்களையுடைய பொய்கையையும் அதன்கண் குளிர்ந்த நீராடும் துறையையுடைய ஊரின் தலைவனை, எவ்வை – எம் தமக்கை (அவனுடைய மனைவி), எம் வயின் வருதல் வேண்டுதும் என்ப – யாம் எப்பொழுதும் எம் இல்லத்திற்கு வருமாறு செய்தலை விரும்புகின்றோம் எனக் கூறுகின்றாள் எனக் கூறுகின்றனர், ஒல்லேம் போல் யாம் அது வேண்டுதுமே – அதை விரும்பாதது போல் காட்டிக்கொண்டு அதையே யாம் விரும்புகின்றோம்

ஐங்குறுநூறு 89, மருதத் திணைபரத்தை பாணனிடம் சொன்னது, தலைவியின் தோழியர் கேட்கும்படியாக
அம்ம வாழி பாண! எவ்வைக்கு
எவன் பெரிது அளிக்கும் என்ப, பழனத்து
வண்டு தாது ஊதும் ஊரன்
பெண்டென விரும்பின்று அவள் தன் பண்பே.

பாடல் பின்னணி:  தலைவன் தலைவியைப் போற்றி வாழ்கின்றான் என்பதைக் கேட்ட பரத்தை, தலைவியின் தோழியர் கேட்கும்படி பாணனிடம் சொன்னது.

பொருளுரை:  பாணனே!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  பழனத்தில் உள்ள மலர்களில் வண்டுகள் தாதை உண்ணும் (தேனை உண்ணும்) ஊரின் தலைவன், எம் தமக்கைக்குப் பெரிதும் அளி செய்கின்றான் எனக் கூறுகின்றனர். அவளைத் தன் பெண்டு என அவன் கருதியதற்குக் காரணம் அவளுடை நல்ல பண்புகளே.

குறிப்பு:  பழைய உரை – அவன் ஆங்கு ஒழுகுகின்றது அவன் பண்புடைமையல்லது வேறு காரணம் இல்லை என இகழ்ந்து கூறியவாறாம்.  தாது ஊதும் (3) – தி. சதாசிவ ஐயர் உரை – பூந்தாதுகளை உண்ணும், ஒளவை துரைசாமி உரை – தேனை உண்ணும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாது உண்ணும்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வண்டு பழனத்துத் தாது ஊதும் ஊரன் என்றது, வண்டுகள் பொது நிலத்தே மலரும் மலர்களை நாடி நாடிச் சென்று தாது ஊதல் போன்று, தலைவனும் பெண்மை நலம் நுகர்தற் பொருட்டு எம் சேரியையே நாடுகிறான், தலைவி அவனுக்கு அத்தகைய இன்பம் தரும் இயல்புடையவள் அல்லள் என்பது.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், பண்பே – ஏகாரம் அசைநிலை.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  அம்ம வாழி பாண – நான் கூறுவதைக் கேட்பாயாக பாணனே (வாழி – அசைநிலை), எவ்வைக்கு எவன் பெரிது அளிக்கும் என்ப – எம் தமக்கைக்கு பெரிதும் அளி செய்கின்றான் எனக் கூறுகின்றனர், பழனத்து வண்டு தாது ஊதும் ஊரன் – பழனத்தில் உள்ள மலர்களில் வண்டுகள் தாதை உண்ணும் (தேனை உண்ணும்) ஊரின் தலைவன், பெண்டென விரும்பின்று அவள் தன் பண்பே – அவளைத் தன் பெண்டு எனக் கருதியதற்குக் காரணம் அவளுடை நல்ல பண்புகளே

ஐங்குறுநூறு 90, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவியின் தோழியர் கேட்குமாறு பரத்தை தலைவனிடம் சொன்னது
மகிழ்நன் மாண் குணம் வண்டு கொண்டன கொல்?
வண்டின் மாண் குணம் மகிழ்நன் கொண்டான் கொல்?
அன்னது ஆகலும் அறியாள்,
எம்மொடு புலக்கும் அவன் புதல்வன் தாயே.

பாடல் பின்னணி:  ‘தலைவனை தன் மனைக்கண் செல்லவிடாது தடுக்கின்றாள் இவள்’ எனத் தன்னைப் பற்றி தலைவி கூறியதை அறிந்த பரத்தை கூறியது. 

பொருளுரை:  தலைவனின் தன்மையை வண்டுகள் பெற்றனவா? அல்லது வண்டுகளின் தன்மையைத் தலைவன் பெற்றானா?  இதை அவள் அறியவில்லை. அறியாது, என்னை வெறுத்துப் பேசுகின்றாள், அவனுடைய மனைவி.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு – கொல் – ஈரிடத்திலேயும் ஐயப் பொருட்டு வந்த இடைச்சொல், அறியாள் – அறியாளாய், முற்றெச்சம், தாயே – ஏகாரம் அசைநிலை.  ஒப்புமை – நற்றிணை 25 – தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா வண்டு ஓரன்ன அவன், 290 – அவனே ‘நெடு நீர்ப் பொய்கை நடுநாள் எய்தித் தண் கமழ் புது மலர் ஊதும் வண்டு என மொழிப மகன்’ என்னாரே.  மாண் குணம் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இகழ்ச்சி.  இழிகுணம் என்பது கருத்து.  அ. தட்சிணாமூர்த்தி உரை – புதல்வன் தாய் என்பது இகழ்ச்சிக் குறிப்பு.  அவள் வயதில் தன்னினும் மிக்காள் என்பது படவும், மகனுக்குத் தாயாகும் தகுதி மட்டுமே கொண்டு, தன் காதலனைத் தன்பால் இருத்திக்கொள்ளுவதற்கு ஏற்ற அழகும் இளமையும் இல்லாதவள் என்பது படவும். மேலும், ‘தன் கணவனைத் தகைத்துக் கொள்ளத் தகுதி இல்லாதவள் என்னை இகழ்தல் என்னே’ எனத் திகழ்ந்தாள் என்றுமாம்.  அகநானூறு 6 – மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம் முதுமை எள்ளல் அஃது அமைகும் தில்ல.

சொற்பொருள்:  மகிழ்நன் – தலைவன், மாண் குணம் – சிறந்த தன்மையை, வண்டு கொண்டன கொல் – வண்டுகள் பெற்றனவா, வண்டின் மாண் குணம் – வண்டின் சிறந்தத் தன்மையை, மகிழ்நன் கொண்டான் கொல் – தலைவன் பெற்றானா, அன்னது ஆகலும் அறியாள் – அவ்வாறு உள்ள அதை அறியவில்லை அவள்,  எம்மொடு புலக்கும் அவன் புதல்வன் தாயே – என்னை வெறுத்துப் பேசுகின்றாள் அவன் மனைவி

எருமைப் பத்து

பாடல்கள் 91–100 – மருத நிலத்தின் கருப்பொருளான எருமை ஒவ்வொரு பாடலிலும் உள்ளது.  பாடல்கள் 91, 92, 93, 94 திருமணத்திற்கு முன் உள்ள நிலை பற்றின.

ஐங்குறுநூறு 91, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து
வெறி மலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும்,
கழனி ஊரன் மகள் இவள்,
பழன வெதிரின் கொடிப்பிணையலளே.

பாடல் பின்னணி:  மருதத்துள் குறிஞ்சி.  குறை வேண்டி வந்த தலைவனைத் தோழி  சேட்படுத்தியது.

பொருளுரைவளைந்த கொம்புகளையுடைய கரு நீல ஆண் எருமை, மிக்க நறுமணமுள்ள, குளத்தில் வளரும் வெள்ளை ஆம்பலின் மலர்களைச் சிதைக்கும் வயல்கள் நிறைந்த ஊரனின் மகள் இவள்.  வயலில் உள்ள கரும்பு மலர்களை மாலையாகப் பின்னி அணிந்துள்ளாள்.

குறிப்பு:  பழைய உரை – நாற்றம் கொள்ளப்படாத கரும்பின் பூவாற் செய்யப்பட்ட நெடிய மாலையையுடையவள் என்பதால் பேதை என்றவாறு அறிக.  எருமைப் போத்து வெறிமலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும் ஊர் என்றது, நல்ல தன்மையை ஆராயாது கெடுக்கும் ஊராதலால், நினக்கு ஈண்டு வருதல் பொருந்தாது என்பதாம்.  பழன வெதிர் என்பது கரும்பு.  நெறி மருப்பு எருமை (1) – ஒளவை துரைசாமி உரை – முடங்கிய கொம்புகளையுடைய எருமை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இடையிடையே நெறித்துவிட்டாற்போன்று வரி வரியாக அமைந்த கொம்பினையுடைய எருமை, புலியூர்க் கேசிகன் உரை – வளைந்த கொம்பு, தி. சதாசிவ ஐயர் உரை – திருகிய கொம்பு.  வெதிர் (4) – ஒளவை துரைசாமி உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மூங்கில், அ. தட்சிணாமூர்த்தி உரை – கரும்பு.  மருதத் திணை – உ. வே. சாமிநாதையர் உரை –  திணை மயக்குறுதலுள் மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நாற்றங்கொள்ளப்படாத கரும்பின் பூவாற் செய்யப்பட்ட நெடிய மாலையுடையவள் என்பதால் பேதையென்றவாறு அறிக.  எருமைப் போத்து வெறிமலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும் ஊரன் என்றது, நல்ல தன்மையை ஆராயாது கெடுக்கும் ஊரனாதலால் நினக்கு ஈண்டு வருதல் பொருந்தாது என்பதாம். இலக்கணக் குறிப்பு – வெதிர் – ஆகு பெயரால் அதன் மலர்க்காயிற்று, பிணையலளே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நெறி மருப்பு – வளைந்த கொம்புகள், எருமை – எருமை,  நீல இரும் – நீல கருமையான, போத்து – ஆண் எருமை, வெறி மலர் – மிகுந்த நறுமணம்,  பொய்கை ஆம்பல் – குளத்தின் ஆம்பல்  (அல்லி மலர்),  மயக்கும் – சிதைக்கும், கழனி ஊரன் மகள் இவள் – வயலை உடைய ஊரனின் மகள் இவள், பழன வெதிரின் – வயலின் கரும்பின் (மலர்களை), கொடிப்பிணையலளே – மாலையாக அணிந்துள்ளாள்

ஐங்குறுநூறு 92, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
கருங்கோட்டு எருமைச் செங்கண் புனிற்று ஆக்
காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும்,
நுந்தை நும்மூர் வருதும்,
ஒண் தொடி மடந்தை நின்னை யாம் பெறினே.

பாடல் பின்னணி:  மருதத்துள் குறிஞ்சி.  வரையாது களவில் வந்தொழுகும் தலைவனிடம் விரைவில் தலைவியை வரைந்து கொள்ளும்படி வேண்டினாள் தோழி. தான் வந்து மணந்துகொள்வதாக அவன் தலைவியிடம் கூறுகின்றான்.  மருதத் திணை – உ. வே. சாமிநாதையர் உரை –  திணை மயக்குறுதலுள் மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது.

பொருளுரை:  ஒளியுடைய வளையல்களை அணிந்தப் பெண்ணே!  உன்னை யான் பெறக்கூடுமானால், கரிய கொம்புகளையும் சிவந்த கண்களையும் உடைய, அண்மையில் ஈன்ற தாய் எருமை, தன் அன்புக் கன்றுக்குப் பால் சுரந்துக் கொடுக்கும், உன் தந்தையின் ஊர்க்கு, யான் வருவேன்.

குறிப்பு:  மருதத் திணை – உ. வே. சாமிநாதையர் உரை – திணை மயக்குறுதலுள் மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது.  பழைய உரை – எருமைப் புனிற்றாத் தன் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும் என்றது, அவள் பொருட்டு உற்றார் பக்கல் தான் பெறுவனவும் கூறியவாறு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எருமை புனிற்றா தன் அன்புடைய குழவிக்கு ஊறுமுலை மடுக்கும் என்றது, என் அன்பிற்குரிய நின்னை நான் விரைந்து மணந்து நன்கு தலையளி செய்வேன் என்பது, புலியூர்க் கேசிகன் உரை – ‘தலைவியின் தாய் தன் மகள் மீதுள்ள பேரன்பினால் தமர் மறுத்தவிடத்தும் அறத்தொடு நின்று மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவள்’ என்னும் உறுதியைப் புலப்படுத்தவே அவ்வூர்க்கண் கன்று ஈன்ற எருமையும் தன் கன்றுக்கு ஊறுமுலை மடுக்கும் அன்பு மிகுதியைச் சுட்டிக் கூறினன் எனலாம். ‘பெறினே வருதும்’ என்றது ‘பெறுவதானால் வரைவொடு வருவோம்’ என உரைத்துத் தோழியது ஒத்துழைப்பை விரும்பியதாம் இலக்கணக் குறிப்பு – குழவிக்கு – ‘கு’ ‘வ்’ உருபு பொருட்டு என்னும் பொருள்பட வந்தது, மடந்தை – அண்மை விளி, யாம்  – தன்மைப்பன்மை, பெறினே – பெறின் செயின் என்னும் எச்சம், ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  கருங்கோட்டு – கருமையானக் கொம்புகளும்,  எருமைச் செங்கண் – சிவந்தக் கண்களையும் உடைய எருமை,  புனிற்று – குட்டி ஈன்றது,  ஆ – பெண் எருமை, காதல் குழவிக்கு – விருப்பமுள்ள கன்றுக்கு,  ஊறு முலை மடுக்கும் – மடுவில் ஊறும் பாலைக் கொடுக்கும், நுந்தை – உன் தந்தை,  நும்மூர் – உன்னுடைய ஊர்,  வருதும் – வருவதானால், ஒண் தொடி – ஒளியுடைய வளையல்கள்,  மடந்தை – பெண்,  நின்னை யாம் பெறினே – உன்னை யாம் பெறக்கூடுமானால்

ஐங்குறுநூறு 93, ஓரம்போகியார், மருதத் திணைதோழி செவிலித் தாயிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
எருமை நல் ஏற்று இனம் மேயல் அருந்தெனப்,
பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா
செய்த வினைய, மன்ற பல் பொழில்
தாது உண் வெறுக்கைய ஆகி, இவள்
போது அவிழ் முச்சி ஊதும் வண்டே.

பாடல் பின்னணி:  மருதத்துள் குறிஞ்சி.  தலைவனுடன் கூடியதால் புதிய மணத்தை அடைந்த தலைவியின் கூந்தலில் புதிய வண்டுகள் மொய்த்ததால், அதன் காரணத்தை வினவிய செவிலித்தாய்க்குக் கூறுபவள் போல், சிறைப்புறத்தில் தலைவன் இருப்பதை அறிந்த தோழி சொன்னது.

பொருளுரை:  எருமையின் நல்ல கடாக்களின் தொகுதி (கூட்டம்) மேய்ந்து உண்டு பசிய செங்கருங்காலி மலர்களும் ஆம்பல் மலர்களும் பொருந்தாதபடி (இல்லையாகும்படி) செய்த செயலால், பல பொழில்களில் பூந்தாதை உண்ண வெறுத்துத் தேற்றமாக இவளுடைய கூந்தலில் உள்ள மலர்ந்த பூக்களை மொய்க்கின்றன வண்டுகள்.

குறிப்பு:  மருதத் திணை – உ. வே. சாமிநாதையர் உரை – திணை மயக்குறுதலுள் மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது.  அருந்தென (4) – ஒளவை துரைசாமி உரை – ஆர்ந்தென என்பது அருந்தென வந்தது மேயல் ஆர்ந்தென்பது ஒரு சொல்லாய் மேய்ந்து என்னும் பொருளாயிற்று.  வெறுக்கைய (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெறுத்தன, அ. தட்சிணாமூர்த்தி உரை – செறிந்தன.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வண்டுகள் வறிய பொழிலை வெறுத்து இவள் முச்சி ஊதும் என்றது, சிறைப்புறத்தே நின்ற தலைவனுக்கு, தலைவியின் தமர் ஐயுற்று இற்செறித்து விட்டமையால் இவள் அவர்களை வெறுத்து நின் தண்ணளி ஒன்றையே விரும்புகிறாள்.  ஆதலின் விரைந்து வரைந்து கோடல் நன்றென குறிப்பால் உணர்த்தியமையும் என்க, ஒளவை துரைசாமி உரை – எருமையின் ஏற்றினம் மேய்ந்தமையால் வண்டினம் மோரோடமும் ஆம்பலும் ஒல்லாவாயின என்றது, தலைவனோடு கூடியதால் தலைமகள்பால் உற்ற வேறுபாட்டினை அவள் தமர் உணர்ந்து இற்செறித்தமையும் அவை தாதுண வெறுக்கையவாகி இவள் போது அவிழ் முச்சி ஊதும் என்றது, அயலார் தமக்குரிய செயல் மேற் செல்லாது இவளது வேறுபாட்டினைச் சூழ்ந்து அலர் கூறாநிற்பர் என்பது.  இலக்கணக் குறிப்பு – மேயல் – ஆகுபெயர் உணவிற்கு, அருந்தென – செய்தென என்னும் எச்சம், ஒல்லா – அஃறிணை எதிர்மறை வினைமுற்று, வினைய – முற்றெச்சம், முச்சி – கூந்தலுக்கு ஆகுபெயர், வண்டே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  எருமை நல் ஏற்று இனம் மேயல் அருந்தெனப் பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா செய்த வினைய – எருமையின் நல்ல கடாக்களின் தொகுதி (கூட்டம்) மேய்ந்து உண்டு பசிய செங்கருங்காலி மலர்களும் ஆம்பல் மலர்களும் பொருந்தாதபடி (இல்லையாகும்படி) செய்த செயலால், மன்ற பல் பொழில் தாது உண் வெறுக்கைய ஆகி இவள் போது அவிழ் முச்சி ஊதும் வண்டே – பல பொழில்களில் பூந்தாதை உண்ண வெறுத்து தேற்றமாக இவளுடைய கூந்தலில் உள்ள மலர்ந்த பூக்களை மொய்க்கின்றன வண்டுகள்

ஐங்குறுநூறு 94, ஓரம்போகியார், மருதத் திணை தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை
மகளிர் அன்ன துணையொடு வதியும்
நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே
கழனித் தாமரை மலரும்,
கவின் பெறு சுடர்நுதல் தந்தை ஊரே.

பாடல் பின்னணி:  மருதத்துள் குறிஞ்சி.  வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன் மீள்கின்றான்.

பொருளுரை:  வயல்களில் தாமரை மலரும், அழகான ஒளிரும் நெற்றியையுடைய என் தலைவியின் தந்தையின் ஊர், போர் மறவர் போன்ற தோற்றமுடைய (வலிமையுடைய) பெரிய கொம்பினை உடைய எருமைகள் அவர்களின் மகளிர் போன்ற தங்கள் துணையுடன் தங்கும் நிழல் மிக்க நீர்நிலைகள் உடைய பொது இடங்களை உடையது.

குறிப்பு:  பழைய உரை – எருமை துணையொடு வதியும் என்றது வரைந்து எய்திய வழித் தலைமகளொடு தான் ஒழுகும் இன்ப ஒழுக்கத்தினை நினைந்து கூறியவாறு.  கழனித் தாமரை மலரும் என்றது அவ்விடத்துத் தன்னைக் கண்டு மகிழ்வார் முகமலர்ச்சி கூறியவாறாம்.  இறைச்சி – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இனித் தலைவியோடு வதியலாம் என்னும் நினைவானும், தாமரை மலரும் என்றது, தன் வரவினால் முகமலர்ந்து மகிழ்வாள் என்னும் நினைவானும் எழுந்த இறைச்சி.  இலக்கணக் குறிப்பு – அன்ன – உவம உருபு, சுடர்நுதல் – அன்மொழித்தொகை, ஊரே – ஏகாரம் அசைநிலை.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

சொற்பொருள்:  மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை மகளிர் அன்ன துணையொடு வதியும் நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே – போர் மறவர் போன்ற வலிமையுடைய பெரிய கொம்பினை உடைய எருமைகள் அவர்களின் மகளிர் போன்ற தங்கள் துணையுடன் தங்கும் நிழல் மிக்க நீர்நிலைகள் உடைய பொது இடத்தில், கழனித் தாமரை மலரும் கவின் பெறு சுடர்நுதல் தந்தை ஊரே – வயல்களில் தாமரை மலரும் அழகான ஒளிரும் நெற்றியையுடைய தலைவியின் தந்தையின் ஊர்

ஐங்குறுநூறு 95, ஓரம்போகியார், மருதத் திணைதலைவி வாயில்களிடம் சொன்னது
கருங்கோட்டு எருமை கயிறு பரிந்து அசைஇ
நெடுங்கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும்,
புனல் முற்று ஊரன், பகலும்
படர் மலி அரு நோய் செய்தனன், எமக்கே.

பாடல் பின்னணி:  தலைவன் நெடுநாட்கள் பரத்தையின் மனையில் தங்கிவிட்டான்.  அதன்பின் தன் மனைக்கு வர விரும்பி, பாணன் நண்பர்கள் ஆகியோரைத் தூதாக அனுப்பினான்.  அவர்களிடம் தலைவி சினந்துகூறி வாயில் மறுத்தது.

பொருளுரை:  கரிய கொம்பினையுடைய எருமை கயிற்றை அறுத்துக் கொண்டு சென்று நெடிய கதிர்களையுடைய நெல்லினை நாள் உணவாக உண்ணும், நீர் சூழ்ந்த ஊரின் தலைவன், பகல் நேரத்திலும் நினைத்தல் மிக்க நீக்குதற்கு அரிய துன்பத்தைத் தந்தான்.

குறிப்பு:  பழைய உரை – எருமை கயிற்றைப் பரிந்து போய் நாண்மேயல் ஆரும் என்றது, விளக்குவார்க்கு அடங்காது புறத்தொழுக்கம் விரும்புவான் என்றவாறு.  ஒப்புமை – அகநானூறு 46 – செங்கண் காரான் ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து, ஐங்குறுநூறு 95 – கருங்கோட்டு எருமை கயிறு பரிந்து.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எருமை கயிற்றை அறுத்துக் கொண்டு புதிய மேயலாகிய நெற்பயிரைத் தின்னுவது போன்று தலைவன் இல்லத்தார்க்கு ஓதிய அறத்தினைப் பெரிதும் புறக்கணித்துத் தீநெறியிலே சென்று வறிய காம இன்பம் துய்க்கின்றான் என்பது, புலியூர்க் கேசிகன் உரை – எருமை தன்னைக் கட்டிய கயிற்றை அறுத்துப் போய் நெற்பயிரைச் சென்று மேயும் ஊரன் என்றது, அவ்வாறே தலைவனும் தன் குடிப் பெருமையும் காதல் மனைவிக்குச் செய்யும் கடமையுமாகிய கட்டுப்பாடுகளை விட்டு நீங்கிச் சென்று பரத்தையோடு உறவாடிக் களிப்பானாயினான்.  உழவரின் சினத்துக்கும் ஒறுப்புக்கும் சிறிதும் அஞ்சாதே தன் நாச் சுவையே கருதிச் செல்லும் எருமைபோல ஊராரின் பழிக்கும் உறவினரின் வெறுப்புக்கும் கவலையற்றுத் தன் இன்பமே நச்சித் திரியும் மடவோனாயினன் தலைவன் என்பதும் அவனைத் தகைப்பாரிலரே என்பதும் ஆம்.  இனி எருமை கட்டிய கயிறு அறுத்துப் போய் விளை வயலை மேய்ந்து கழித்தாற்போலப் பரத்தையும் தன் தாயின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று தலைவனோடு உறவாடி இன்புறுவதன் மூலம் விளைவயல் போலப் பெரும்பயன் தருதற்குரிய தலைவியின் மனையற வாழ்க்கையைச் சிதைப்பவள் ஆயினள் என்றலும் பொருந்தும்.  இலக்கணக் குறிப்பு – அசைஇ – அளபெடை, நெல்லின் – இன் சாரியை, மேயல் – ஆகுபெயர் உணவிற்கு, பகலும் – இறந்தது தழுவிய எச்ச உம்மை, எமக்கே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள் கருங்கோட்டு எருமை கயிறு பரிந்து அசைஇ நெடுங்கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும் புனல் முற்று ஊரன் – கரிய கொம்பினையுடைய எருமை கயிற்றை அறுத்துக் கொண்டு சென்று நெடிய கதிர்களையுடைய நெல்லினை நாள் உணவாக உண்ணும் நீர் சூழ்ந்த ஊரின் தலைவன், பகலும் படர் மலி அரு நோய் செய்தனன் எமக்கே – பகல் நேரத்திலும் நினைத்தல் மிக்க நீக்குதற்கு அரிய துன்பத்தைத் தந்தான்

ஐங்குறுநூறு 96, ஓரம்போகியார், மருதத் திணைதலைவனின் தோழர்கள் சொன்னது
அணி நடை எருமை ஆடிய அள்ளல்
மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும்,
கழனி ஊரன் மகள் இவள்,
பழன ஊரன் பாயல் இன் துணையே.

பாடல் பின்னணி:  தலைவனின் பரத்தமைக்கு வருந்தி ஊடியிருந்த தலைவி, அவன் இல்லத்திற்கு வந்தபொழுது அவனை ஏற்றுக்கொண்டாள்.  அதைக் கண்ட வாயில்கள் தமக்குள் சொல்லியது.

பொருளுரை:  அழகிய நடையையுடை எருமைகள் உழக்கியதால் உண்டான சேற்றில் நீலமணி நிற நெய்தல் மலர்கள் ஆம்பல் மலர்களுடன் தழைத்திருக்கும் வயல்களையுடைய ஊரனின் மகளாகிய இவள், பழனங்களையுடைய ஊரின் தலைவனுக்கு இனிய துணை ஆவாள்.

குறிப்பு:  பழைய உரை – எருமை உழுது உழக்கிய அள்ளற்கண்ணே நெய்தலும் ஆம்பலும் கலிக்கும் என்றது, தலைமகற்கு வேண்டுவன புரிகின்ற இல்வாழ்க்கைக் கண்ணே தாம் பெறுகின்ற சிறப்புக் கூறியவாறு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எருமை பாய்ந்து உழக்கிய சேற்றின் கண்ணேயே அதற்கு நல்லுணவாகிய நெய்தலும் ஆம்பலும் மலர்ந்து அதற்கும் பேரின்பம் நல்குமாறு போல நம்பெருமாட்டி நம்பெருமானால் பெரிதும் நலிவுற்றிருந்தும் அதனைப் பாராட்டாமல் அவனைக் கண்டபொழுதே அகமும் புறமும் ஒருங்கே மலர்ந்து இன்பம் நல்குவாளாயினள் என்பது.  இனி மணிநிற நெய்தலோடு ஆம்பல் மலரும் ஊரன் என அவள் தந்தைக்கு அடையாகி நின்று அவளது குடிப்பெருமை உணர்த்தலும் உணர்க.  இனி பழன ஊரன் என்று தலைவனைக் கூறியது ஊர்ப்பொதுநிலம் போன்று மகளிர் பலர்க்கும் பயன்படுபவன் என அவன் பரத்தமையைக் குறித்தது, புலியூர்க் கேசிகன் உரை – தலைவன் ஊர் பொதுநிலம் போல பரத்தையர் பலருக்கும் இன்பமளிக்கும் தன்மையனாயினும், அவள் உரிமையுடைய கழனியைக் காத்துப் பயன்கொள்ளும் ஊரனின் மகளாதலின் அவன் தனக்கே உரியவன் என்னும் மணம் பெற்ற உரிமையால், அவனை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு மகிழ்ச்சி தந்து உதவும் செவ்வியலாயினள் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – துணையே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  அணி நடை எருமை ஆடிய அள்ளல் மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் கழனி ஊரன் மகள் இவள் – அழகிய நடையையுடை எருமைகள் உழக்கிய சேற்றில் நீலமணி நிற நெய்தல் மலர்கள் ஆம்பல் மலர்களுடன் தழைத்திருக்கும் வயல்களையுடைய ஊரனின் மகள் இவள், பழன ஊரன் பாயல் இன் துணையே – பழனங்களையுடைய ஊரின் தலைவனுக்கு இனிய துணை

ஐங்குறுநூறு 97, ஓரம்போகியார், மருதத் திணை தலைவன் தனக்குள் சொன்னது
பகன்றை வான் மலர் மிடைந்த கோட்டைக்
கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம்,
பொய்கை ஊரன் மகள் இவள்,
பொய்கைப் பூவினும் நறுந்தண்ணியளே.

பாடல் பின்னணி:  தலைவனின் பரத்தமையின் காரணமாகத் தலைவி ஊடினாள், அவளுடைய ஊடலைத் தீர்த்து அவளுடன் கூடிய தலைவன் அவளைப் பாராட்டித் தனக்குள் சொல்லியது.

பொருளுரை:  பகன்றையின் வெள்ளை மலர்கள் சிக்கிய தன் தாயின் கொம்பைக் கண்டு கரிய கால்களையுடைய எருமைக் கன்று அஞ்சும் பொய்கைகளை உடைய ஊரனின் மகளாகிய இவள், பொய்கைகளில் உள்ள மலர்களைவிடவும் நறுமணமும் குளிர்ச்சியும் உடையவள்.

குறிப்பு:  பழைய உரை – தாயினுடைய பகன்றைமலர் மிடைந்த கோட்டைக் கன்று வெரூஉம் என்றது, தன் தோளில் அணிந்த மாலையைப் பிறிதொன்றற்கணிந்த மாலையெனக் கருதினாள் என்பதாம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எருமைக் கன்று தாயின் கொம்பில் சிக்கிய பகன்றை மலரைக் கண்டு தாயன்று என்று கருதி வெரூஉம் ஊரன் மகள் என்றது, இவளும் யான் அணிந்த மாலையைக் கண்டு இவன் பரத்தையர் பொருட்டு இதனை அணிந்தனன் போலும் என்று கருதி ஊடாநிற்பள் என்று அவள் பேதமைக் கருதித் தலைவன் தன் நெஞ்சினுள்ளே நகைத்தான் என்பது, புலியூர்க் கேசிகன் உரை – தாய் எருமையின் கோட்டில் கிடந்த பகன்றை மலரைக் கண்டு, அதனை வேறாக நினைத்து அதன் கன்று வெருவினாற் போல, தன் மார்பிடத்து மாலையினைக் கண்டு, பிறர் சூட்டியது எனப் பிறழக் கொண்டு தன்னை வேறுபட்டானாக நினைத்துத் தலைவியும் வெருவி அஞ்சினள்.  கன்று அஞ்சினும் அதனை நெருங்கி அதன் அச்சம் தீர்த்துப் பாலூட்டி இன்புறுத்தும் தாய் எருமையின் செவ்விபோல அவள் தன்னைப் புறக்கொழுக்கத்தான் என மயங்கிப் புலம்பினும் தான் அப்புலவி நீக்கி அவளை இன்புறுத்தும் அன்புச் செவ்வியன் என்று தலைவன் சொல்லுவதாகவும் உவமையால் உய்த்து உணரப்படும்.  இலக்கணக் குறிப்பு – பூவினும் – உம்மை உயர்வு குறித்தது, வெரூஉம் – செய்யுளிசை அளபெடை, தண்ணியளே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  பகன்றை வான் மலர் மிடைந்த கோட்டைக் கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம் பொய்கை ஊரன் மகள் இவள் – பகன்றையின் வெள்ளை மலர்கள் சிக்கிய தன் தாயின் கொம்பைக் கண்டு கரிய கால்களையுடைய எருமைக் கன்று அஞ்சும் பொய்கைகளை உடைய ஊரனின் மகள், பொய்கைப் பூவினும் நறுந்தண்ணியளே – பொய்கைகளில் உள்ள மலர்களைவிடவும் நறுமணமும் குளிர்ச்சியும் உடையவள்

ஐங்குறுநூறு 98, ஓரம்போகியார், மருதத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
தண் புனல் ஆடும் தடங்கோட்டு எருமை,
திண் பிணி அம்பியின் தோன்றும் ஊர!
ஒண்தொடி மடமகள் இவளினும்,
நுந்தையும் யாயும் கடியரோ நின்னே?

பாடல் பின்னணி:  தலைவன் பரத்தமை மேற்கொண்ட பொழுதில் அவனுடன் ஊடி வாயில் மறுத்த தலைவியின் செயல் கடியது என அவன் கூறிய பொழுது, அது கேட்ட தோழி இவ்வாறு சொன்னது.

பொருளுரை:  குளிர்ந்த நீரில் ஆடும் பெரிய கொம்பினை உடைய எருமையானது திண்மையாகக் கட்டப்பட்டத் தோணி போல் தோன்றும் ஊரனே!  ஒளிரும் வளையல்களை அணிந்த இவளைவிடவும், உன்னிடம் உன் தந்தையும் தாயும் கடுமையுடையவர்கள் ஆவார்களோ?

குறிப்பு:  பழைய உரை – இவளினும் நுந்தையும் யாயுங் கடியரோ என்றது, நின்னிடத்துக் குற்றம் உளதாகியவழிக் கழறுங்கால் இவளினும் கடியரோ நுந்தையும் யாயும் என்றவாறு.  அவரினும் கடுமையாற் கூறுதற்குரியாள் இவள் என்பதாம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எருமை தன் இயல்புக்கேற்ப நீராடுங்கால் காண்போர் காட்சிப் பிழையாலே தோணிபோல் தோன்றுதல் போன்று, தலைவியும் தனக்குரிய உரிமையாலே நின்னை ஒறுக்குங்கால், நினைத்துக் கருத்து பிழையாலே மிகை செய்வாளாகத் தோன்றுகின்றது என்பது.  இலக்கணக் குறிப்பு – தட – உரிச்சொல், அம்பியின் – இன் ஒப்புப்பொருள் தரும் ஐந்தாம் வேற்றுமை உருபு, நின்னே – ஏகாரம் அசைநிலை.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 26).

சொற்பொருள்:  தண் புனல் ஆடும் தடங்கோட்டு எருமை திண் பிணி அம்பியின் தோன்றும் ஊர – குளிர்ந்த நீரில் ஆடும் பெரிய கொம்பினை உடைய எருமை திண்மையாகக் கட்டப்பட்டத் தோணி போல் தோன்றும் ஊரனே, ஒண்தொடி மடமகள் இவளினும் நுந்தையும் யாயும் கடியரோ நின்னே – ஒளிரும் வளையல்களை அணிந்த இவளைவிடவும் உன் தந்தையும் தாயும் கடுமையுடையவர்கள் ஆவார்களோ உன்னிடம்

ஐங்குறுநூறு 99, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவன் சொன்னது
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி எருமை கதிரொடு மயக்கும்,
பூக்கஞல் ஊரன் மகள் இவள்,
நோய்க்கு மருந்தாகிய பணைத் தோளோளே.

பாடல் பின்னணி:  தலைவியிடம் தோழியர் தலைவனின் கொடுமைகூறி விலக்கவும், வாயில் வேண்டிவந்த தலைவனை அவள் ஏற்றுக்கொண்டபொழுது, அவன் உவந்து சொன்னது.  

பொருளுரை:  வயலில் வளரும் பாகல் கொடியிடையே எறும்புகள் கூடு கட்டி வாழும்.  அங்கு உள்ள எருமைகள் பாகல் கொடியையும், நெற் கதிரையும் சேரச் சிதைக்கும், பூக்கள் நிறைந்த வளமான ஊரனின் மகள் இவள்.  இவளின் பருத்த தோள்கள் தான் என் நோய்க்கு மருந்தாகும்.

குறிப்பு:  பழைய உரை – முயிறு மூசு குடம்பையை நெற்கதிரோடு எருமை மயக்கும் என்றது, யான் செய்த கொடுமையையும் அவர்கள் தன்மேற் காதலித்துக் கூறியவற்றையும் சிதைத்து என்பக்கலே நின்றாள் என்பதாம்.  பாகல் – ஒளவை துரைசாமி உரை – பாகற்கொடி.  ‘பாகல் பலா என்று உரைப்பாருமுளர்’ எனப் புறநானூற்று உரைகாரர் கூறுவர்.  இனி மருதனிளநாகனார் பாகற் பழத்தை ‘பலவுக்காய்ப் புறத்த பசும்பழப் பாகல்’ (அகநானூறு 255) என்றலின் பாகல் வேறு பலா வேறு என்பது விளங்கும்.  பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை (1) – ஒளவை துரைசாமி உரை – பழனங்களில் உள்ள பாகற்கொடி இலைகளில் முயிறுகள் உறைகின்ற கூடுகள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பழனத்தின்கண் படர்ந்த பாகற் கொடியின்கண் முயிற்று எறும்புகள் மொய்த்து இயற்றிய கூடு.  நற்றிணை 180 உரை – பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வயல் அருகிலிருக்கின்ற பலா மரத்தின் இலைகளைக் கூடாக்கி முயிறுகள் முட்டையிட்டு நெருங்கியுறைகின்ற கூடுகள், ஒளவை துரைசாமி உரை – பழனக் கரையினின்ற பலாமரத்தில் வாழும் முயிறுகள் கூடியமைத்த கூடு.  நோய்க்கு மருந்தாகிய பணைத்தோளாள் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன்னால் உற்ற நோய்க்கு மருந்தாக அமைந்த மூங்கில் போன்ற தோள்களையும் உடையவள் என்பதாம், – அ. தட்சிணாமூர்த்தி உரை – வாயில்கள் விலக்கியதையும் பொருட்படுத்தாமல் தன்னோடு கூடி மகிழ்ந்த பெருந்தகைமை நோக்கி அவளைப் பாராட்டும் முகமாக அவள் தோள்களைப் பாராட்டினான் என்க, ஒளவை துரைசாமி உரை – வாயில்கள் விலக்குவதால் விலங்கி வாயில் நேராள் கொல்லோ என்று எய்திய வருத்தம் அவள் அது நேர்தலும் தோளோடு கூடி நீங்கினானாகலின் நோய்க்கு மருந்தாகிய பணைத் தோள் எனச் சிறப்பித்தான்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முயிறு மூசு குடம்பையை நெற்கதிரோடு எருமை மயக்குமென்றது, யான் செய்த கொடுமையையும் அவர்கள் தன் மேல் காதலித்துக் கூறியவற்றையும் சிதைத்துத் தன் பக்கத்தில் நின்றாள் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – கஞல்ஊரன் – வினைத்தொகை, பணைத்தோள் – உவமத்தொகை, தோளோளே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  பழனப் பாகல் – வயலில் வளரும் பாகற்காய் கொடி, முயிறு – எறும்புகள்,  மூசு – கூடி,  குடம்பை – கூடுகள்,  கழனி எருமை – வயலில் உள்ள எருமைகள்,  கதிரொடு மயக்கும் – நெற்கதிரோடு சேரச் சிதைக்கும், பூக்கஞல் – பூக்கள் நிறைந்த, ஊரன் – ஊரன், மகள் – மகள், இவள் – இவள்,  நோய்க்கு மருந்தாகிய –  நோய்க்கு மருந்து ஆகுவள், பணைத் தோளோளே – பருத்த தோள்களை உடையவள், மூங்கிலை ஒத்த தோள்களை உடையவள்

ஐங்குறுநூறு 100, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
புனலாடு மகளிர் இட்ட ஒள் இழை
மணலாடு சிமையத்து எருமை கிளைக்கும்,
யாணர் ஊரன் மகள் இவள்,
பாணர் நரம்பினும் இன் கிளவியளே.

பாடல் பின்னணி:  பரத்தமை மேற்கொண்ட தலைவன் மனைக்கு வர விரும்பி தோழியிடம் வாயில் வேண்டினான்.  அவள் அவனைப் பழித்தாள்.  ஆனால் தலைவி அவனைப் பாராட்டுகின்றாள்.  தலைவியின் உடன்பாடு அறிந்த தோழி, தலைவனிடம் சொல்லியது. 

பொருளுரை:   நீராடும் பெண்கள் நீராடும் முன் தம் அணிகலன்களைக் கரையில் உள்ள மணலில் புதைத்து வைப்பர்.  காற்று வீசுவதால் அங்கு மணல் மேடுகள் உருவாகும்.  எருமைகள் தன் கொம்பால் அதைக் கிண்டி நகைகளை வெளிப்படுத்தும். அத்தகைய புது வருவாயுடைய வளமான ஊரனின் மகள் அவள். அவள் சொற்கள் பாணனின் யாழிசையை விட இனிமையானவை.

குறிப்பு:  பழைய உரை – மகளிரது மறைந்த இழையை எருமை கிளைக்கும் ஊரன் மகள் என்றது, இப்போது வாயில் நேர்தலையன்றிக் களவுக்காலத்து நீ செய்த நன்மை மறைந்தனவும் எடுத்துக் கூறினாள் என்பதாம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புனலாடு மகளிர் சிமையத்து இட்டு மறந்த இழையைக் கிளைத்துப் புலப்படுத்தினாற் போன்று, தலைவி நீ பண்டு களவுக் காலத்தே செய்து மறந்த நலன்களையெல்லாம் எடுத்துக் காட்டி நின்னைப் பாராட்டுகின்றனள் என்பது.   இலக்கணக் குறிப்பு – நரம்பு – நரம்பிடத்தில் உள்ள இசையைக் குறித்தலின் ஆகுபெயர், கிளவியளே – ஏகாரம் அசைநிலை.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:  புனல் ஆடு மகளிர் – நீரில் (ஆற்றில் அல்லது குளத்தில்) விளையாடும் பெண்கள், இட்ட – புதைத்து வைத்த, ஒள் இழை – ஒளியுடைய நகைகள், மணல் ஆடு – காற்றினால் நகரும் மணலின், சிமையத்து – மேடுகளை, எருமை கிளைக்கும் – எருமை கிண்டி தோண்டும், யாணர் – புது வருமானம் உள்ள வளப்பமான, ஊரன் – ஊரன் மகள் இவள் – ஊரன் மகள் இவள், பாணர் நரம்பினும் – பாணர்களின் யாழிசையை விட, இன் கிளவியளே – இனிய சொற்கள்

அம்மூவனார், நெய்தல் திணைஇரங்கலும் இரங்கல் நிமித்தமும்

இங்கு நிகழ்பவை:  தலைவி தலைவனுக்காக ஏங்கி காத்திருப்பது, தலைவியும் தோழியும் கடற்கரையில் மீனைக் காய வைப்பது, அவர்களுடைய தந்தையும் அண்ணன்மாரும் மீன் பிடிக்கச் செல்லுதல், தலைவியும் தோழியின் ஆயத்தாருடன் கடற்கரையில் விளையாடுவது, ஊரில் அலர் எழுவது, தலைவியின் உடல் மெலிவது, தோழி தலைவியை ஆற்றுப்படுத்தல்.  

தாய்க்கு உரைத்த பத்து

பாடல்கள் 101–110 – தோழி செவிலித்தாயிடம் சொன்னது.  தங்கள் தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் 110ம் பாடலை தலைவியின் கூற்றாகக் கொண்டனர்.  ஆனால் உரையாசிரியர்கள் தி. சதாசிவ ஐயர், ஒளவை துரைசாமி, பொ. வே. சோமசுந்தரனார் ஆகியோரும் பிறரும் தோழியின் கூற்றாகவே இப்பாடலைக் கொண்டுள்ளனர்.  தலைவி கூறுவதுபோல் தோழி கூறுதல் – அகநானூறு 362, நற்றிணை 28, 98, 124, 175, 178, 191, 211, 251, 292, கலித்தொகை 18, 70, குறுந்தொகை 236, 238, ஐங்குறுநூறு 45.  ஆய் பெருஞ்சிறப்பின் அரு மறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34).  நச்சினார்க்கினியர் உரை – ஆராய்ந்து துணியப்பட்ட பெருஞ்சிறப்புக் காரணமாக, கூறுதற்கரிய மறைப் பொருளெல்லாம் குறிப்பாலன்றிக் கூற்றால் கூறத்தக்காள் ஆதலின் தாயெனச் சிறப்பித்துச் சொல்லப்படுவாள் செவிலியேயாம். தோழி – தோழி தானே செவிலி மகளே (தொல்காப்பியம், களவியல் 35).

ஐங்குறுநூறு 101, அம்மூவனார் – நெய்தல் திணை – தோழி செவிலித்தாயிடம் சொன்னது
அன்னை வாழி! வேண்டன்னை! உதுக்காண்!
ஏர் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று, நின் மகள்
பூப்போல் உண்கண் மரீஇய
நோய்க்கு மருந்தாகிய கொண்கன் தேரே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் குறிஞ்சி.  அறத்தொடு நின்ற பின்னர் வரைதற்பொருட்டுப் பிரிந்த தலைவன் வரைவொடு புகுந்தவழித் தோழி செவிலித்தாயிடம் சொன்னது.

பொருளுரை:   அன்னையே!  நீ வாழ்க!  நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக அன்னையே!  அங்கே பார்!  உன் மகளின் பூப்போன்ற மை இட்ட கண்களில் தோன்றிய பசலை நோயைத் தீர்க்கும் மருந்தாகிய நெய்தல் நிலத் தலைவனின் தேர், ஊர்ந்து, மேலும் கீழும் அசைந்து, அழகிய அடும்புக்கொடிகளை அறுத்து, நெய்தல் மலர்களைச் சிதைத்துக் கொண்டு வந்தது.

குறிப்பு:  இது நெய்தலில் குறிஞ்சி வந்த திணை மயக்கம் (நச்சினார்க்கினியர் உரை – தொல்காப்பியம், பொருளதிகாரம் 12).   பழைய உரை – தேர் அடும்பு பரிய அதனை ஊர்ந்து இழிந்து நெய்தலை மயக்கி வந்தது என்றது, களவில் கூட்டம் வெளிப்பட்ட பின்பும் வரையாது பிரிந்தான் என்று அலர் கூறுவார் வருந்த வந்தான் என்றவாறு. இலக்கணக் குறிப்பு – அன்னை – ஈரிடத்திலேயும் விளி, உது – இடைச்சுட்டு, பாசடும்பு – பண்புத்தொகை, ஊர்பு – செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம், இழிபு – செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம், மரீஇய – செய்யுளிசை அளபெடை, நோய்க்கு மருந்து – குவ்வுருபு பகைப்பொருட்டு, தேரே – ஏகாரம் அசைநிலை.  ஊர்பு இழிபு – அகநானூறு 330 – உதுவ காண் அவர் ஊர்ந்த தேரே! குப்பை வெண்மணல் குவவு மிசையானும், எக்கர்த் தாழை மடல் வயினானும், ஆய் கொடிப் பாசடும்பு அரிய ஊர்பு இழிபு.

சொற்பொருள்:  அன்னை – அன்னை, வாழி – நீ வாழ்வாயாக, வேண்டு – நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக, அன்னை – அன்னை, உதுக்காண் – அங்கே பார்,  ஏர்கொடி – அழகியக் கொடி,  பாசடும்பு – பசிய அடும்பு, பரி – விரைவாக, ஊர்பு – நகரும், இழிபு – கீழே இறங்கி, நெய்தல் – குவளை மலர்கள், மயக்கி – சிதைத்து, கலந்து, வந்தன்று – வந்துள்ளது,  நின் மகள் – உன்னுடைய மகள், பூப்போல் – பூப் போன்ற,  உண்கண் – மை உண்ட கண்கள், மரீஇய – தோன்றிய,  நோய்க்கு மருந்தாகிய – பசலை நோய்க்கு மருந்து ஆகிய, கொண்கன் – தலைவன்,  தேரே – தேர்

ஐங்குறுநூறு 102, அம்மூவனார், நெய்தல் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
அன்னை வாழி! வேண்டு அன்னை! நம் ஊர்
நீல் நிறப் பெருங்கடல் புள்ளின் ஆனாது,
துன்புறு துயரம் நீங்க,
இன்புற இசைக்கும், அவர் தேர் மணிக் குரலே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் குறிஞ்சி.  அறத்தொடு நின்ற பின்னர் வரைதற்பொருட்டுப் பிரிந்த தலைவன் வரைவொடு புகுந்தவழித் தோழி செவிலித்தாயிடம் சொன்னது.

பொருளுரை:  அன்னையே!  நீ வாழ்க!  நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக அன்னையே!  நம் ஊரின் நீல நிறமுடைய பெரிய கடலின்கண் வாழும் பறவைகள் போல், இடையறாது துன்பத்தையுடைய துயரம் நீங்குமாறும் இன்பம் அடையும்படியும் ஒலிக்கும், அவருடைய தேரில் கட்டிய மணிகளின் ஒலி.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேர்மணிக்குரல் புள்ளின் இசைப்ப வருதலால் அவன் பண்டு போலக் களவின்பம் காமுற்று வருவான் அல்லன் வரைவொடு வருகின்றான் என்பது தோன்ற, தேர்மணிக்குரல் இசைக்கும் என்றாள்.  இலக்கணக் குறிப்பு – அன்னை – ஈரிடத்திலேயும் விளி, நீல் – கடைக்குறை, புள்ளின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, துன்புறு துயரம் – வினைத்தொகை, இன்புற – செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அவர் – பண்டறி சுட்டு, குரலே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  அன்னை – அன்னை, வாழி – நீ வாழ்வாயாக, வேண்டு – நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக, அன்னை – அன்னை, நம் ஊர் நீல் நிறப் பெருங்கடல் புள்ளின் – நம் ஊரின் நீல நிறமுடைய பெரிய கடலின்கண் வாழும் பறவைகள் போல், ஆனாது துன்புறு துயரம் நீங்க இன்புற இசைக்கும் – இடையறாது துன்பத்தையுடைய துயரம் நீங்குமாறும் இன்பம் அடையும்படியும் ஒலிக்கும், அவர் தேர் மணிக் குரலே – அவருடைய தேரில் கட்டிய மணிகளின் ஒலி

ஐங்குறுநூறு 103, அம்மூவனார், நெய்தல் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
அன்னை வாழி! வேண்டு அன்னை! புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணந்துறைவன்
இவட்கு அமைந்தனனால், தானே
தனக்கு அமைந்ததன்று இவள் மாமைக் கவினே.

பாடல் பின்னணி:  தலைவிக்கும் தலைவனுக்கும் திருமணம் நடந்த பொழுது தோழி செவிலித்தாயிடம் இதனைக் கூறுகின்றாள்.  

பொருளுரைஅன்னையே!  நீ வாழ்க!  நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக அன்னையே!  புன்னை மலர்களுடன் ஞாழல் மலர்கள் பூக்கும் குளிர்ந்த துறையின் தலைவன் என் தோழிக்கு அமைந்தான்.  ஆதலின், தலைவனுக்குப் பொருந்தியது, இவளுடைய மாந்தளிரின் தன்மையுடைய அழகு.

குறிப்பு:  பழைய உரை – புன்னையொடு ஞாழல் பூக்குமென்றது, குடிப்பிறப்பும் உருவும் நலனும் ஒத்தல் கூறியவாறு.  இலக்கணக் குறிப்பு – அன்னை – ஈரிடத்திலேயும் விளி, தண்ணந்துறைவன் – தண்துறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, அம் – சாரியை, விரிக்கும் வழி விரித்தல், அமைந்தனனால் – ஆல் அசைநிலை, தானே – தான், ஏ அசைநிலைகள், கவினே – ஏகாரம் அசைநிலை.  மாமைக் கவின் – ஒளவை துரைசாமி உரை – மாந்தளிரின் தன்மை பெற்ற அழகு.  மாமை மாவினது தன்மை.  தனக்கு அமைந்ததன்று இவள் மாமைக் கவினே – தி. சதாசிவ ஐயர் உரை – நின் மகளுடைய மாமை அழகு பிறிதொருவருக்கும் இன்றித் தலைவனுக்குப் பொருந்தியது, ஒளவை துரைசாமி உரை – இவளது மாமைக்கவினும் தானே அமைவதாயிற்று, இனி மாமைக்கவினும் இவட்கு அமைவதாயிற்று என்றாலும் ஒன்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவளுடைய மாமையாகிய திருமேனி எழில் இப்பொழுது நன்கு சிறந்து தனக்குத் தானே பொருந்திவிட்டமை காண்.  தோழி – தோழி தானே செவிலி மகளே (தொல்காப்பியம், களவியல் 35).

சொற்பொருள்:  அன்னை – அன்னை, வாழி – நீ வாழ்வாயாக, வேண்டு – நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக, அன்னை – அன்னை, புன்னையொடு ஞாழல் பூக்கும் தண்ணந்துறைவன் இவட்கு அமைந்தனனால் – புன்னையுடன் ஞாழல் மலரும் குளிர்ந்த துறையின் தலைவன் என் தோழிக்கு அமைந்தான் ஆதலின், தானே தனக்கு அமைந்ததன்று – தலைவனுக்குப் பொருந்தியது, இவள் மாமைக் கவினே – இவளுடைய மாந்தளிரின் தன்மையுடைய அழகு

ஐங்குறுநூறு 104, அம்மூவனார், நெய்தல் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
அன்னை வாழி! வேண்டு அன்னை! நம் ஊர்ப்
பலர் மடிபொழுதின் நலம் மிகச் சாஅய்,
நள்ளென வந்த இயல்தேர்ச்
செல்வக் கொண்கன் செல்வன் அஃது ஊரே.

பாடல் பின்னணி:  அறத்தொடு நின்று திருமணம் நடக்க உதுவினாள் தோழி.  அதன்பின் தலைவி மகவுப் பெற்றதை அறிந்து செவிலி அவளுடைய மனைக்குச் சென்று வந்தாள்.  அவளிடம் தோழி தலைவனின் ஊர் நலத்தைப் பாராட்டிச் சொல்லியது.

பொருளுரை:  அன்னையே!  நீ வாழ்க!  நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக அன்னையே!  களவுக் காலத்தில், நம் ஊரில் பலரும் உறங்கும் வேளையில், தன் அழகு மிகவும் பாழ்பட,  நள்ளிரவில் வந்த, இயலும் தேரையுடைய தலைவனாகிய கொண்கனின் செல்வனுடைய ஊர் அது.

குறிப்பு:  பழைய உரை – செல்வக் கொண்கன் செல்வன் என்றது புதல்வனை.  செல்வக் கொண்கன் செல்வன் ஊர் என்னும் எழுவாயின் முற்றுச் சொல் அஃது என்னும் பெயர்.   இலக்கணக் குறிப்பு – அன்னை – ஈரிடத்திலேயும் விளி, மடிபொழுது – வினைத்தொகை, இயல்தேர் – வினைத்தொகை, சாஅய் – அளபெடை, ஊரே – ஏகாரம் அசைநிலை.  இயல்தேர் – ஒளவை துரைசாமி உரை – இயன்ற தேர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – இலக்கணம் அமைந்த தேர், இயல் இலக்கணம், இனி வினைத்தொகை எனினுமாம், அ. தட்சிணாமூர்த்தி உரை – இயலிச் செல்லும் தேர், இயலுதல் – அசைதல்.  சாஅய் – ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (தொல்காப்பியம், உரியியல் 32).

சொற்பொருள்:  அன்னை – அன்னை, வாழி – நீ வாழ்வாயாக, வேண்டு – நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக, அன்னை – அன்னை, நம் ஊர்ப் பலர் மடிபொழுதின் – நம் ஊரில் பலரும் உறங்கும் வேளையில், நலம் மிகச் சாஅய் – தன் அழகு மிகவும் பாழ்பட்டு, நள்ளென வந்த – நள்ளிரவில் வந்த, இயல்தேர்ச் செல்வக் கொண்கன் செல்வன் அஃது ஊரே – இயலும் தேரையுடைய தலைவனாகிய கொண்கனின் செல்வனுடைய ஊர் அது

ஐங்குறுநூறு 105, அம்மூவனார், நெய்தல் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
அன்னை வாழி! வேண்டு அன்னை! முழங்கு கடல்
திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்
தண்ணந்துறைவன் வந்தெனப்,
பொன்னினும் சிவந்தன்று, கண்டிசின் நுதலே.

பாடல் பின்னணி:  தலைவன் வரைவிற்கு வந்தமையால் தலைவியின் பசலை நீங்கிற்று. வருந்தியிருந்த தன் தாய்க்கு அதைச் சுட்டிக் காட்டித் தோழி சொன்னது.

பொருளுரை:  அன்னையே!  நீ வாழ்க!  நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக அன்னையே!  முழங்குகின்ற கடலின் அலைகள் கரை மீது எறிந்த முத்துக்கள் வெள்ளை மணலில் கிடந்து மின்னும் இடமான குளிர்ந்த துறையின் தலைவன் வந்ததால், பொன்னைவிடவும் சிவந்து ஒளிரும் இவளுடைய நெற்றியைக் காண்பாயாக.

குறிப்பு:  பழைய உரை – ஓதத்தால் அலைப்புண்டு போந்த முத்தம் மணற் கண்ணே கிடந்து விளங்கும் என்றது, தன் வருத்தம் நோக்காது நமக்கு நிலைநின்ற இன்பத்தைத் தருவான் என்றவாறு.  இலக்கணக் குறிப்பு – அன்னை – ஈரிடத்திலேயும் விளி, முழங்கு கடல் – வினைத்தொகை, தரு முத்தம் – வினைத்தொகை, தண்ணந்துறைவன் – தண்துறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, அம் – சாரியை, விரிக்கும் வழி விரித்தல், வந்தென – செய்தென என்னும் வினையெச்சம்,  பொன்னினும் – உம்மை உயர்வு சிறப்பு, கண்டிசின் – சின் முன்னிலை அசைச்சொல், நுதலே – ஏகாரம் அசைநிலை.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

சொற்பொருள்அன்னை – அன்னை, வாழி – நீ வாழ்வாயாக, வேண்டு – நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக, அன்னை – அன்னை, முழங்கு கடல் திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும் தண்ணந்துறைவன் வந்தெனப் பொன்னினும் சிவந்தன்று, முழங்குகின்ற கடலின் அலைகள் கரை மீது எறிந்த முத்துக்கள் வெள்ளை மணலில் கிடந்து மின்னும் இடமான குளிர்ந்த துறையின் தலைவன் வந்ததால் பொன்னைவிடவும் சிவந்து ஒளிரும், கண்டிசின் நுதலே – இவளுடைய நெற்றியைக் காண்பாயாக

ஐங்குறுநூறு 106, அம்மூவனார், நெய்தல் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
அன்னை வாழி! வேண்டு அன்னை! அவர் நாட்டுத்
துதிக்கால் அன்னம் துணை செத்து மிதிக்கும்
தண் கடல் வளையினும் இலங்கும், இவள்
அம் கலிழ் ஆகம், கண்டிசின் நினைந்தே.

பாடல் பின்னணி:  தலைவியின் உடலில் ஏற்பட்ட மாறுபாடு கண்டு வருந்திய தாயிடம், தலைவி உற்ற நோய்க்குக் காரணம் காதல் என்று உண்மையை வெளிப்பதினாள் தோழி.  அதன் பின்னும் தெளிவு அடையாத தாயை வற்புறுத்தி அவள் சொல்லியது.

பொருளுரை:  அன்னையே!  நீ வாழ்க!  நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக அன்னையே!  அவருடைய நாட்டில் தோல் அடியைக் கொண்ட அன்னம் தன் பெடை அன்னம் என்று எண்ணிப் புணர முயலும் (மிதித்து நோக்கும்) குளிர்ந்த கடலில் உள்ள சங்கைவிடவும் வெளிறித் தோன்றும், இவளுடைய அழகு ஒழுகும் மேனி.  இதை நீ கண்டு ஆராய்ந்து அறிவாயாக.

குறிப்பு:  பழைய உரை – தண்கடல் வளையினும் இலங்கும் என்றது மேனியில் வேறுபாடு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவள் ஆகம்  சங்குபோல் வெளிறுற்று ஆதலால் இது காமநோயே அன்றித் தெய்வம் முதலியவற்றால் உண்டான பிறிதொரு நோயன்று என அறிந்து கொள்க என்றவாறு.  அன்னம் வளையைத் துணையெனக் கருதி அணைய முயலும் என்றது, அன்னாய் நீ தலைவனால் உண்டான பசலை நோயைப் பிறிது நோயெனக் கருதி மருள்கின்றனை என்னும் குறிப்புடையது.  இலக்கணக் குறிப்பு – அன்னை – ஈரிடத்திலேயும் விளி, அவர் – பண்டறி சுட்டு, கண்டிசின் – சின் முன்னிலை அசைச்சொல், மிதிக்கும் – இடக்கரடக்கல், கலிழ் – கலுழ் என்பதன் திரிபு, நினைந்தே – ஏகாரம் அசைநிலை.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26), சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  மிதிக்கும் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புணர முயலும், இடக்கரடக்கல், ஒளவை துரைசாமி உரை – காலை வைத்து மிதித்து நோக்கும்.  துதி – தோல் உறை, தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின் பாம்பு மதன் அழியும் (அகநானூறு 8).  வளையினும் இலங்கும் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சங்கினும் வெளிறித் தோன்றும், அ. தட்சிணாமூர்த்தி உரை – சங்கினும் மிகுதியாக மின்னும், ஒளவை துரைசாமி உரை – மிகப் பசந்து தோன்றுவதாயிற்று.

சொற்பொருள்அன்னை – அன்னை, வாழி – நீ வாழ்வாயாக, வேண்டு – நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக, அன்னை – அன்னை, அவர் நாட்டுத் துதிக்கால் அன்னம் துணை செத்து மிதிக்கும் தண் கடல் வளையினும் இலங்கும் – அவருடைய நாட்டில் தோல் அடியைக் கொண்ட அன்னம் தன் பெடை அன்னம் என்று எண்ணிப் புணர முயலும் குளிர்ந்த கடலில் உள்ள சங்கைவிடவும் வெளிறித் தோன்றும், இவள் அம் கலிழ் ஆகம் – இவளுடைய அழகு ஒழுகும் மேனி, கண்டிசின் நினைந்தே – கண்டு ஆராய்ந்து அறிவாயாக

ஐங்குறுநூறு 107, அம்மூவனார், நெய்தல் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
அன்னை வாழி! வேண்டு அன்னை! என் தோழி
சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர் மெலிந்து,
தண் கடல் படுதிரை கேட்டொறும்
துஞ்சாள் ஆகுதல், நோகோ யானே.

பாடல் பின்னணி:  தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.

பொருளுரை:  அன்னையே!  நீ வாழ்க!  நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக அன்னையே!  என்னுடைய தோழியின் ஒளிரும் நெற்றி பசலை அடைந்து, துன்பத்தால் அவளுடைய உடல் மெலிந்து, குளிர்ந்த கடலின் முழக்கத்தை அவள் கேட்கும் பொழுதெல்லாம் உறங்காதவளாக இருப்பதால், யான் வருந்துகின்றேன்

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – ‘படுதிரை’ என்றது திரையின் இரைச்சலை.  அலைகள் என்றும் ஓய்வதில்லை எனவே, அலையொளி கேட்டொறும் துஞ்சாள் என்றது, அவள் இரவும் பகலும் துஞ்சாள் என்று பொருள் தந்து நின்றது.  அவள் மேனி மீண்டும் அழகு பெறவும், நுதல் தான் இழந்த ஒளியை மீண்டும் பெறவும், அவள் இழந்த உறக்கத்தை மீண்டும் எய்தவும், அத்தலைவனைக் கணவனாக அடைதலே ஒரே வழி என்று வற்புறுத்தினாள் என்க.  ‘நோகோ யானே’ என்றாள், நீ நோகுமாறு யானும் நோகின்றேன் என்று பொருள்படும்படியாக.  படர் (2) – உ. வே. சாமிநாதையர் உரை – நினைவு, துன்பமுமாம்.  படர் மெலிந்து (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிதும் மெய்ம்மெலிந்து, நினைவால் வருந்தி, ஒளவை துரைசாமி உரை – உடம்பு நனி சுருங்கல்.  இலக்கணக் குறிப்பு – அன்னை – ஈரிடத்திலேயும் விளி, சாஅய் – அளபெடை, நோகோ – நோகு செய்கென்னும் தன்மை வினை, ஓகாரம் அசைநிலை, இரக்கக் குறிப்பு, யானே – ஏகாரம் அசைநிலை.  சாஅய் – ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (தொல்காப்பியம், உரியியல் 32).

சொற்பொருள்அன்னை – அன்னை, வாழி – நீ வாழ்வாயாக, வேண்டு – நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக, அன்னை – அன்னை, என் தோழி சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர் மெலிந்து தண் கடல் படுதிரை கேட்டொறும் துஞ்சாள் ஆகுதல் – என்னுடைய தோழியின் ஒளிரும் நெற்றி பசலை அடைந்து துன்பத்தால் அவளுடைய உடல் மெலிந்து குளிர்ந்த கடலின் முழக்கத்தை அவள் கேட்கும் பொழுதெல்லாம் உறங்காதவளாக இருப்பதால், நோகோ யானே – யான் வருந்துகின்றேன்

ஐங்குறுநூறு 108, அம்மூவனார், நெய்தல் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
அன்னை வாழி! வேண்டு அன்னை! கழிய
முண்டகம் மலரும் தண் கடல் சேர்ப்பன்
எம் தோள் துறந்தனன் ஆயின்,
எவன் கொல் மற்று, அவன் நயந்த தோளே?

பாடல் பின்னணி:  தோழி அறத்தொடு நிற்றபின், தலைவன் விரைவில் வராததால் வருந்திய செவிலித்தாயிடம் அவள் சொன்னது.

பொருளுரை:  அன்னையே!  நீ வாழ்க!  நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக அன்னையே! உப்பங்கழியின்கண் உள்ள முண்டகச் செடிகள் மலர்ந்து இருக்கும் குளிர்ந்த கடலின் தலைவன், எம்முடைய தோள்களை துறந்தான் ஆயின், அவன் விரும்பிய தோள்கள் என்னவாகும்?

குறிப்பு:  பழைய உரை – முண்டகம் மலரும் …………………….. சேர்ப்பன் என்றது, அன்பிலன் போலத் தோன்றினும் அகத்தே திரியாத அன்புடையன் என்றவாறு.  எம் தோள் (3) – அ. தட்சிணாமூர்த்தி உரை – தலைவிக்கும் தனக்கும் உள்ள பிரிவு அரிய நட்புப் பற்றி ‘எம் தோள்’ என்றாள்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கழிய முண்டகம் மலரும் சேர்ப்பன் என்றது, முள்ளுடையதாய் இன்னாதாய்த் தோன்றினும் முள்ளி நறுமணங் கமழ மலர்தல் போன்று, வரைவு நீட்டித்தலாலே கொடியவன் போலக் காணப்படினும் அகத்தே அன்பு நிரம்பியவன் ஆகலின் விரைந்து வந்து தலைவியை மணந்து கொண்டு அளிப்பன், ஐயுற வேண்டாம் என்னும் குறிப்புடையது என்க.  பேராசிரியர் தன்னுடைய தொல்காப்பிய உரையில் ‘கிழவோட்கு உவமம் ஈரிடத்து உரித்தே’ (தொல்காப்பியம், உவமயியல் 29) இச்செய்யுளை எடுத்துக்காட்டி, ‘கழிய முண்டக மலரும் என முள்ளுடையதனைப் பூ மலருமென்று உள்ளுறுத்ததனால் இருவர் காமத்துறைக்கண்ணும் ஒருதலை இன்னா ஒருதலை இனிதென்றாள் என்பது, என்று கூறியுள்ளார்.  இலக்கணக் குறிப்பு – அன்னை – ஈரிடத்திலேயும் விளி, கொல் – அசைநிலை, மற்று – அசைநிலை, தோளே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  அன்னை – அன்னை, வாழி – நீ வாழ்வாயாக, வேண்டு – நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக, அன்னை – அன்னை, கழிய முண்டகம் மலரும் தண் கடல் சேர்ப்பன் எம் தோள் துறந்தனன் ஆயின் – உப்பங்கழியின்கண் உள்ள முண்டகச் செடிகள் மலர்ந்து இருக்கும் குளிர்ந்த கடலின் தலைவன் எம்முடைய தோள்களை துறந்தான் ஆயின், எவன் கொல் மற்று அவன் நயந்த தோளே – அவன் விரும்பிய தோள்கள் என்னவாகும்

ஐங்குறுநூறு 109, அம்மூவனார், நெய்தல் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
அன்னை வாழி! வேண்டு அன்னை! நெய்தல்
நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்
எந்தோள் துறந்த காலை, எவன் கொல்
பன்னாள் வரும் அவன் அளித்த பொழுதே?

பாடல் பின்னணி:  தோழி அறத்தொடு நிற்றபின், தலைவன் விரைவில் வராததால் வருந்திய செவிலித்தாயிடம் அவள் சொன்னது.

பொருளுரை:  அன்னையே!  நீ வாழ்க!  நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக அன்னையே!  நெய்தலின் நீரில் படரும் புழையுடைய கொடியுடன் மலரும் பூக்கள் பொருந்திய துறையின் தலைவன், எம் தோள்களைத் துறந்த காலத்தில், முன்பு அவன் அருள்புரிந்த வேளையில் உள்ள நினைவுகள் பல நாளும் வரும். அதன் காரணம் என்ன என்பதை யான் அறியேன்.

குறிப்பு:  நீர்ப்படர் தூம்பின் (2) – ஒளவை துரைசாமி உரை – நீர்ப்பூவாகிய நெய்தலின் கொடி தண்டு போல் புழை உடைமை பற்றி நீர்ப்படர் தூம்பு எனப்பட்டது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீரோடு மதகு வழியின்கண், அ. தட்சிணாமூர்த்தி உரை – நீரில் வாழ்தல் உடைய உட்துளையை உடைய, சதாசிவ ஐயர் உரை – நீர் செல்கின்ற மதகின்கண்.  உள்ளுறை – புலியூர்க் கேசிகன் உரை – நெய்தல் நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு தலைவன் என்றது, நீர் உள்ளேயே படர்ந்து வெளித்தோன்றாது மறைந்து விளங்கினும், நெய்தல் கொடியானது பூக் கெழுமிய தன் தன்மையிற் குன்றாதாய்ப் புறத்தே பலர் கண்டு மகிழுமாறு போலத் தலைவனும் தன் நிலைமை பற்றி யாதும் நமக்கு உணர்த்தாதேயும், சொன்னபடி வாராதேயும், காலம் தாழ்த்தவனாக விளங்கினும், மணத்தோடு ஊரறிய வருதலில் ஒருபோதும் தவற மாட்டான்.  இலக்கணக் குறிப்பு – அன்னை – ஈரிடத்திலேயும் விளி, பொழுதே – பொழுது ஆகுபெயராய் அப்பொழுதில் தலைவன் வற்புறுத்திய சொற்கள் மேல் நின்றது, ஏகாரம் அசைநிலை.  எந்தோள் (3) – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள் தோழி.

சொற்பொருள்:  அன்னை – அன்னை, வாழி – நீ வாழ்வாயாக, வேண்டு – நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக, அன்னை – அன்னை, நெய்தல் நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன் எந்தோள் துறந்த காலை – நெய்தலின் நீரில் படரும் புழையுடைய கொடியுடன் மலரும் பூக்கள் பொருந்திய துறையின் தலைவன் எம் தோள்களைத் துறந்த காலத்தில், எவன் கொல் – அதன் காரணம் என்ன என்பதை அறியேன், பன்னாள் வரும் அவன் அளித்த பொழுதே – முன்பு அவன் அருள்புரிந்த வேளையில் உள்ள நினைவுகள் பல நாளும் வரும்

ஐங்குறுநூறு 110, அம்மூவனார், நெய்தல் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
அன்னை வாழி! வேண்டு அன்னை! புன்னை
பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை
‘என்னை’ என்றும் யாமே, இவ்வூர்
பிறிது ஒன்றாகக் கூறும்
ஆங்கும் ஆக்குமோ? வாழிய பாலே.

பாடல் பின்னணி:  நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.  தலைவியின் கூற்று – ஒளவை துரைசாமி உரை – ஆசிரியர் இளம்பூரணர் ‘மறைந்தவற் காண்டல்’ என்ற சூத்திரத்து ‘வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்கண்’ நிகழும் கூற்றுக்கு இப்பாட்டினை உதாரணமாக்குவர். நச்சினார்க்கினியர் தன்னுடைய தொல்காப்பிய உரையில், “இறந்துபாடு பயக்குமாற்றால் தன் திறத்து அயலார் வரையக் கருதிய ஞான்று அதனை மாற்றுவதற்கு தலைவி கூற்று நிகழும்” என உரைத்து இதனை எடுத்துக் காட்டினர்.  இப்பாட்டு தாய்க்குரைத்த பத்தில் கோக்கப்பட்டமையாலும், தலைவி நேரே தாய்க்கு அறத்தொடு நில்லாள் ஆதலாலும், தலைவி கூற்றினைத் தோழி கொண்டெடுத்து மொழிதலாலும், ஈண்டுத் தோழி கூற்றென்று கோடல் பொருந்துமெனக் கொள்க.

பொருளுரை:  அன்னையே!  நீ வாழ்க!  நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக அன்னையே!  புன்னை மரங்களில் பொன் நிறத்தில் மலர்ந்த பூக்கள் பொருந்தியிருக்கும் துறைவனை ‘எங்கள் தலைவன்’ எனக் கூறுவோம் யாம்.  இந்த ஊரில் வாழும் மக்கள் வேறு விதமாகக் கூறுவர்.  ஊழ் அவ்வாறு ஆக்குமோ?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – உள்ளுறையால் தலைவனது செல்வ மிகுதி கூறி, ‘என்னை என்றும்’ என்றது ஏத்தல்.  புன்னை பொன்னிறம் விரியும் என்றது தலைவனது செல்வ மிகுதி கூறியவாறு.  பால் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தெய்வம், ஒளவை துரைசாமி உரை, தி. சதாசிவ ஐயர் உரை – ஊழ்.  வாழிய (5) – உ. வே. சாமிநாதையர் உரை – வெறுப்புக் குறிப்பு, ஒளவை துரைசாமி உரை – அசை, தி. சதாசிவ ஐயர் உரை – வாழ்வினையுடைய.  இலக்கணக் குறிப்பு – அன்னை – ஈரிடத்திலேயும் விளி, என்றும் – தன்மைப் பன்மை வினைமுற்று, யாமே – ஏகாரம் பிரிநிலை, ஊர் – ஊர்மக்களுக்கு ஆகுபெயர், ஆங்கும் – ஆங்கு உவம உருபு, உம்மை இழிவு சிறப்பு, உம்மை இறந்தது தழுவிய எச்சம், வாழிய – வியங்கோள் வினைமுற்று, அசைநிலையுமாம், பாலே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  அன்னை – அன்னை, வாழி – நீ வாழ்வாயாக, வேண்டு – நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக, அன்னை – அன்னை, புன்னை பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை ‘என் ஐ’ என்றும் யாமே – புன்னை மரங்களில் பொன் நிறத்தில் மலர்ந்த பூக்கள் பொருந்தியிருக்கும் துறைவனை ‘எங்கள் தலைவன். எனக் கூறுவோம், இவ்வூர் பிறிது ஒன்றாகக் கூறும் – இந்த ஊரில் வாழும் மக்கள் வேறு விதமாகக் கூறுவர், ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே – ஊழ் அவ்வாறு ஆக்குமோ

தோழிக்கு உரைத்த பத்து

பாடல்கள் 111–120 – ‘அம்ம வாழி தோழி’ எனத் தொடங்கும் இப்பாடல்கள் யாவும் தலைவி தோழியிடம் கூறுவதாக உள்ளவை.  அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல்.  அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

ஐங்குறுநூறு 111, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி! பாணன்
சூழ்கழி மருங்கின் நாண் இரை கொளீஇச்
சினைக் கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை,
பிரிந்தும் வாழ்துமோ நாமே,
அருந்தவம் முயறல் ஆற்றாதேமே?

பாடல் பின்னணி:  தன்னை இற்செறிப்பாள் தாய் என உணர்ந்த தலைவி, வரையாது வந்தொழுகும் தலைவன் அருகில் இருப்பதை அறிந்து தோழிக்குச் சொன்னது.

பொருளுரை:  தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  ஊரைச் சூழ்ந்த உப்பங்கழியின் அருகில் இருந்து, தூண்டில் கயிற்றில் உள்ள முள்ளில் இரையை மாட்டிக் கருக் கொண்ட கயல் மீன்களைப் பிடித்துக் கொல்லும் துறைவனின் நட்பைப் பிரிந்தும் உயிர் வாழும் தன்மை உடையேமோ, கூடியிருந்து வாழ்வதற்கு அரிய தவத்தினை முயன்று செய்யாத நாம்?

குறிப்பு:   பாணரும் மீனும்:  அகநானூறு 196 – வராஅல் துடிக் கண் கொழுங்குறை நொடுத்து உண்டு ஆடி வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி ஆம்பல் அகல் இலை அமலை வெஞ்சோறு தீம் புளிப் பிரம்பின் திரள் கனி பெய்து, அகநானூறு 216 – நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள், குறுந்தொகை 169 – பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல, ஐங்குறுநூறு 47 – முள் எயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த, ஐங்குறுநூறு 48 – வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள் வராஅல் சொரிந்த, ஐங்குறுநூறு 49 – பாண்மகள் சில் மீன் சொரிந்து, ஐங்குறுநூறு 111 – பாணன் சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇச் சினைக் கயல் மாய்க்கும், புறநானூறு 348 – மீன் சீவும் பாண் சேரி, மதுரைக்காஞ்சி 269 – மீன் சீவும் பாண் சேரியொடு, பெரும்பாணாற்றுப்படை 284–285 – கோள்வல் பாண்மகன் தலைவலித்து யாத்த நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாணன் கழிமருங்கின் நாணில் இரை கொளீஇ இரக்கமின்றிக் கொண்ட கயலைக் கொல்லுமாறு போல, இனி நம் உறவினரும், ஈண்டுப் புறத்தே திரிந்து ஆடல் பயிலும் நம்மை நல்லன போலவும் நயவ போலும் வஞ்சகமொழி கூறி யாம் கற்புக்கடம் பூண்டமையையும் பொருட்படுத்தாராய் இற்செறிப்பர், ஒளவை துரைசாமி உரை – பாணன் நாண் இரை கொள்வித்துச் சினைக் கயலை மாய்க்கும் துறைவன் என்றது தன் கேண்மையால் இன்பம் நுகர்வித்துக் கடிது வரையாது வருத்துகின்றான் என்றது.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, சூழ்கழி – வினைத்தொகை, நாண் – முள்ளைக் குறித்ததால் ஆகுபெயர், கொளீஇ – அளபெடை, வாழ்துமோ – தன்மைப் பன்மை, ஓகாரம் எதிர்மறை, நாமே – தன்மைப் பன்மை, ஏகாரம் அசைநிலை, ஆற்றாதேமே – ஏகாரம் அசைநிலை.  அருந்தவம் (5) – ஒளவை துரைசாமி உரை – தவமானது தைந்நீராடல் முதலாயின, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முற்பிறவியின் தவம்.

சொற்பொருள்:  அம்ம வாழி தோழி – தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக, பாணன் சூழ்கழி மருங்கின் நாண் இரை கொளீஇச் சினைக் கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை – ஊரைச் சூழ்ந்த உப்பங்கழியின் அருகில் இருந்து தூண்டில் கயிற்றில் உள்ள முள்ளில் இரையை மாட்டிக் கருக் கொண்ட கயல் மீன்களைப் பிடித்துக் கொல்லும் துறைவனின் நட்பு, பிரிந்தும் வாழ்துமோ – பிரிந்தும் உயிர் வாழும் தன்மை உடையேமோ, நாமே – நாம், அருந்தவம் முயறல் ஆற்றாதேமே – கூடியிருந்து வாழ்வதற்கு அரிய தவத்தினை முயன்று செய்யாத நாம்

ஐங்குறுநூறு 112, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! பாசிலைச்
செருந்தி தாய இருங்கழிச் சேர்ப்பன்
தான் வரக் காண்குவம் நாமே,
மறந்தோம் மன்ற நாணுடை நெஞ்சே.

பாடல் பின்னணி:  களவு நீடித்தபொழுது தலைவன் வரைவானோ என அஞ்சிய தோழிக்குத் தலைவி சொன்னது.  தோழியை ஆற்றுவித்தது.

பொருளுரை:  தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  பசிய இலைகளையுடை செருந்தி மரங்கள் பரவிய பெரிய உப்புங்கழிக் கரையின் தலைவன் வருவதை நாம் உறுதியாகக் காண்போம்.  நம்முடைய நாணமுடைய நெஞ்சத்தினால், நம்மிடம் தெளிவாக அவன் கூறியதை நாம் மறந்துவிட்டோம்.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவனுடைய நெய்தல் நிலப்பரப்பின்கண் பசிய இலைகளையுடைய செருந்தி மரங்கள் பரவி நின்று உயிரினங்களுக்கு நறு நிழல் தந்து புரக்குமாறு போல அவனுடைய தேற்றுரைகளிடத்தே நமக்கு ஆறுதல் அளிக்கும் நன்மொழிகளும் பல உள்ளது என்பது, ஒளவை துரைசாமி உரை – பாசிலைச் செருந்தி தாய இருங்கழிச் சேர்ப்பன் என்றது தலைவனின் செல்வ மனையின் சிறப்புணர்த்தியவாறு.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், நாமே – ஏகாரம் அசைநிலை, நெஞ்சே – ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்:  அம்ம வாழி தோழி – தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக, பாசிலைச் செருந்தி தாய இருங்கழிச் சேர்ப்பன் தான் வரக் காண்குவம் – பசிய இலைகளையுடை செருந்தி மரங்கள் பரவிய பெரிய உப்புங்கழிக் கரையின் தலைவன் வருவதை நாம் உறுதியாகக் காண்போம், நாமே – நாம், மறந்தோம் மன்ற – தெளிவாக அவன் கூறியதை நாம் மறந்துவிட்டோம், நாணுடை நெஞ்சே – நாணமுடைய நெஞ்சத்தினால்

ஐங்குறுநூறு 113, அம்மூவனார் – நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி! நென்னல்
ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு
ஊரார் பெண்டென மொழிய, என்னை
அது கேட்ட ‘அன்னாய்’ என்றனள் அன்னை,
பைபய, ‘எம்மை’ என்றனென் யானே.

பாடல் பின்னணி:  வரையாது வந்தொழுகும் தலைவன் சிறைப்புறத்தானாக இருப்பதை அறிந்த தலைவி, நேற்று இல்லத்தில் நிகழ்ந்தது இதுவெனத் தோழியிடம் சொன்னது.

பொருளுரை:   தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நேற்று வெள்ளை மணலுடைய கரையை மோதி உடைக்கும் துறையின் தலைவனுக்கு நான் பெண்டு ஆயினேன் என ஊரார் என்னை அலர் தூற்ற, அவர்கள் கூறியதைக் கேட்ட அன்னை ‘அத்தன்மை’ உடையையோ என என்னைக் கேட்டதற்கு, மெல்ல மெல்ல ‘யாம் தான்’ என்றேன் யான்.

குறிப்பு:   எம்மை (5) – அ. தட்சிணாமூர்த்தி உரை, ச. வே. சுப்பிரமணியன் உரை – எம்மை, பொ. வே. சோமசுந்தரனார் உரை, ஒளவை துரைசாமி உரை – வெம்மை.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – ஓங்குதிரை வெண்மணற் கரையை உடைக்கும் என்றதனால், ஊரில் எழுந்த அலர் இவ்வொழுக்கத்தினைச் சிதைப்பதாயிற்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடல் திரை கரையகத்து வெண்மணலைச் சிதைப்பது போன்று, ஊரவர் கூறும் அலர்மொழி என் வெள்ளை மனத்தைச் சிதையாநிற்கும் என்றாள்.  பைபய எம்மை என்றனென் யானே –  ஒளவை துரைசாமி உரை – ஊரார் கூறும் அலர்க்குப் பொருளாயினர் தலைமக்கள் இருவருமாகலின் ‘எம்மை’ என்றாள், தோழியை உளப்படுத்தற்கு எம்மை என்றாள் என்றலும் உண்டு, ‘யாம் எம்மை என்றனன்’ என இயைக்க, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெம்மை – மெல்ல மெல்ல இது கொடுமை என்று என்னுள்ளேயே சொல்லிக் கொண்டேன் காண் என்பது.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, யானே – ஏகாரம் அசைநிலை

சொற்பொருள்:  அம்ம வாழி தோழி – தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக, நென்னல் ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு ஊரார் பெண்டென மொழிய என்னை– நேற்று வெள்ளை மணலுடைய கரையை மோதி உடைக்கும் துறையின் தலைவனுக்கு நான் பெண்டு ஆயினேன் என ஊரார் என்னை அலர் தூற்ற, அது கேட்ட ‘அன்னாய்’ என்றனள் அன்னை – அவர்கள் கூறியதைக் கேட்ட அன்னை ‘அத்தன்மை’ உடையையோ என என்னைக் கேட்டதற்கு, பைபய, ‘எம்மை’ என்றனென் யானே – மெல்ல மெல்ல ‘ யாம் தான்’ என்றேன் யான்

ஐங்குறுநூறு 114, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி! கொண்கன்
நேரேம் ஆயினும், செல்குவம் கொல்லோ,
கடலின் நாரை இரற்றும்
மடலம் பெண்ணை அவனுடை நாட்டே?

பாடல் பின்னணி:  இடையிட்டு வந்தொழுகும் தலைவன் சிறைப்புறமாக இருப்பதை அறிந்த தலைவி அவன் கேட்கும்படி தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  தலைவனை நாம் இங்கு எதிர்படவில்லை. அவன் வரவில்லை என்றாலும், நாம் செல்லலாமா கடலின்கண் உள்ள நாரைகள் சென்று ஆரவாரிக்கும் மடல் அமைந்த அழகிய பனை மரங்கள் உடைய அவனுடைய நாட்டிற்கு?

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடலிடத்தாகிய நாரை சென்று ஆரவாரிக்கும் பனையையுடைய நாடு என்றது, நாமும் அந்த நாரை போன்று அவனிருக்குமிடம் சென்று நம் குறையைக் கூறுவோம் என்பது, கடற்கண்ணுள்ள மீனைக் கவர்ந்து உண்டற்குரிய நாரை பெண்ணை மடலின்கண் தங்கி இரற்றுதல் போலச் செறிப்புற்றுக் கிடக்கும் என் ஐ வரைதலை நினையாது தன் மனைக்கண்ணே தங்கினான் எனச், சிறைப்புறத்து நின்ற தலைமகனை வரைவு கடாதாற்பயத்ததாய் என்பது.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, நேரேம் – தன்மைப் பன்மை வினைமுற்று, கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ – அசைநிலை, நாட்டே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  அம்ம வாழி தோழி – தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக, கொண்கன் நேரேம் – தலைவனை நாம் இங்கு எதிர்படவில்லை, ஆயினும் – அவன் வரவில்லை என்றாலும், செல்குவம் கொல்லோ கடலின் நாரை இரற்றும் மடல் அம் பெண்ணை அவனுடை நாட்டே – நாம் செல்லலாமா கடலின்கண் உள்ள நாரைகள் சென்று ஆரவாரிக்கும் மடல் அமைந்த அழகிய பனை மரங்கள் உடைய அவனுடைய நாட்டிற்கு

ஐங்குறுநூறு 115, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி! பன் மாண்
நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய
தண்ணந்துறைவன் மறைஇ,
அன்னை அருங்கடி வந்து நின்றோனே.

பாடல் பின்னணி:  இற்செறிப்பு நிகழ்ந்த பின்பும் வரைந்து கொள்ள நினையாது தலைவன் வந்தான்.  அதனை அறிந்த தலைவி, அவன் கேட்கும்படி தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  பல மாட்சிமையுடைய நுண்ணிய மணல் நிறைந்த கடற்கரையில் நம்முடன் விளையாடிய குளிர்ந்த துறையையுடைய தலைவன், மறைந்து, அன்னையின் கடத்தற்கு அரிய காவல் அமைந்த நம் இற்புறத்தில் வந்து நிற்கின்றான்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவி காப்பு மிகுதி கூறி விரைவில் வரைந்து கோடலே நேரிது.  இவ்வாறு வருதல் எம்மை வருத்துவதன்றிப் பிறிதில்லை என உணர்த்தித் திறம்பட வரைவு கடாவினமை உணர்க.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, தண்ணந்துறைவன் – தண்துறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆனது, அம் – சாரியை, விரிக்கும் வழி விரித்தல், மறைஇ – அளபெடை, அம் – சாரியை, கடி – உரிச்சொல், நின்றோனே – ஆகாரம் (நின்றான்) ஓகாரமானது (நின்றோன்) செய்யுள் விகாரம், ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  அம்ம வாழி தோழி – தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக, பன் மாண் நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய தண்ணந்துறைவன் – பல மாட்சிமையுடைய நுண்ணிய மணல் நிறைந்த கடற்கரையில் நம்முடன் விளையாடிய குளிர்ந்த துறையையுடைய தலைவன், மறைஇ – மறைந்து, அன்னை அருங்கடி வந்து நின்றோனே – அன்னையின் கடத்தற்கு அரிய காவல் அமைந்த நம் இற்புறத்தில் வந்து நிற்கின்றான்

ஐங்குறுநூறு 116, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி! நாம் அழ,
நீல இருங்கழி நீலம் கூம்பும்
மாலை வந்தன்று மன்ற,
காலையன்ன காலை முந்துறுத்தே.

பாடல் பின்னணி:  பிற்பகலில் (எற்பாடு நேரத்தில்) தலைவன் சிறைப்புறத்தில் இருப்பதை அறிந்த தலைவி சொன்னது.

பொருளுரை:  தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நாம் அழும்படி, நீல நிற பெரிய கழியில் நீல மலர்கள் கூம்பும் வேளையான மாலை நேரம் வந்துவிட்டது தேற்றமாக, காலைப் பொழுதாகிய காலையை முற்படவிட்டு.

குறிப்பு:  காலையன்ன காலை முந்துறுத்தே (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காலைப் பொழுதாகிய அந்தப் பொல்லாத காலைப் பொழுதினைத் தன் வரவிற்கு அறிகுறியாக முற்படவிடுத்து, காலைத் தொடங்கி தான் ஆற்றாமையால் வருந்துகின்றாள் ஆகலின் இந்நோய் அரும்புதற்குக் காரணமான அந்தப் பொல்லாத காலை என்பாள் மீண்டும் அன்ன காலை என்றாள், ஒளவை துரைசாமி உரை – காலைப்போதும் மருண்மாலை போல இருளும் ஒளியும் விரவி நிற்கும் இயைபு பற்றி ‘காலையன்ன காலை என்றார்’.  ‘காலையன்ன மாலை முந்துறுத்தே’ என்று பிறரும் கூறுவர் (தொல்காப்பியம், பொருளதிகாரம் 148. இளம்பூரணம்), உ. வே. சாமிநாதையர் உரை – யமனைப் போன்ற தென்றற் காற்றை முன்னிட்டு.  இறைச்சி – ஒளவை துரைசாமி உரை – பிரிந்து உறை மகளிர் காதலர் வருவரெனக் கருதி ஆற்றுமாறு பயக்கும் காலைப் பொழுது போலும் காலையை முந்துற விடுத்து, ஆற்றாமை பயக்கும் மாலைப் பொழுது பின் வந்தது என்றதனால், அருளுவான் போல முந்துற வந்து கூடி இப்பொழுது வரையாமல் வருத்துகின்றான்.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல். முந்துறுத்தே – ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்:  அம்ம வாழி தோழி – தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக, நாம் அழ – நாம் அழும்படி, நீல இருங்கழி நீலம் கூம்பும் மாலை வந்தன்று மன்ற – நீல நிற பெரிய கழியில் நீல மலர்கள் கூம்பும் வேளையான மாலை நேரம் வந்துவிட்டது தேற்றமாக (தெளிவாக, உறுதியாக), காலையன்ன காலை முந்துறுத்தே – காலைப் பொழுதாகிய காலையை முற்படவிட்டு

ஐங்குறுநூறு 117, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி! நலனே
இன்னது ஆகுதல் கொடிதே, புன்னை
அணி மலர் துறைதொறும் வரிக்கும்
மணி நீர்ச் சேர்ப்பனை மறவாதோர்க்கே.

பாடல் பின்னணி:  வரையாது வந்தொழுகும் தலைவன் சிறைப்புறமாக இருந்தபொழுது அவனைத் தோழி பழித்தாள். அது கேட்ட தலைவி, அவனுடைய நட்பைப் பாராட்டிக் கூறியது.

பொருளுரை:  தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  புன்னை மரங்களின் அழகிய மலர்கள் துறைகள்தோறும் கோலஞ் செய்யும் நீலமணி போலும் கடலின் தலைவனை மறக்காது இருப்போர்க்கு, அழகு இவ்வாறு சிதைதல் கொடியது.

குறிப்பு:  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – புன்னையினுடைய அணிமலர் துறைதோறும் வரிக்கும் என்றதனால், தலைமகனுடைய கூட்டம் நமக்கு எய்துந்தோறும் மேனி நலம் பெறுவதாயிற்று என்றாள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – புன்னை அணி மலர் துறைதோறும் உதிர்ந்து கோலஞ் செய்தாற் போன்று சேர்ப்பனும் குறியிடந்தோறும் நம்மைத் தலைக்கூடித் தண்ணளி புரிந்தனன், அந்நன்றி மறக்கப்பாலதன்று.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, கொடிதே – ஏகாரம் அசைநிலை, மறவாதோர்க்கே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  அம்ம வாழி தோழி – தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக, நலனே இன்னது ஆகுதல் கொடிதே – அழகு இவ்வாறு சிதைதல் கொடியது, புன்னை அணி மலர் துறைதொறும் வரிக்கும் மணி நீர்ச் சேர்ப்பனை மறவாதோர்க்கே – புன்னை மரங்களின் அழகிய மலர்கள் துறைகள்தோறும் கோலஞ் செய்யும் நீலமணி போலும் கடலின் தலைவனை மறக்காது இருப்போர்க்கு

ஐங்குறுநூறு 118, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி! யான் இன்று
அறன் இலாளன் கண்ட பொழுதில்,
சினவுவென், தகைக்குவென் சென்றனென்,
பின் நினைந்து, இரங்கிப் பெயர்தந்தேனே.

பாடல் பின்னணி:  ஊடுதற்குக் காரணம் இருந்தும் தலைவி அவனை ஏற்றுக் கொண்டதற்கு காரணம் வினவிய தோழிக்குத் தலைவி கூறியது.  அல்லது, அவள் கேளாமல் தலைவன் மீண்டு வந்தபொழுது ஆற்றாமையின் காரணமாகத் தான் நடந்து கொண்டதனைத் தோழிக்குக் கூறியது.

பொருளுரை:  தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  யான் இன்று அறம் இல்லாத நம் தலைவனைக் கண்டபொழுது சினம் கொள்வேன் உறுதியாக மறுப்பேன் எனக் கருதிச் சென்றேன். அதன்பின் அவன் செய்த தலையளியை நினைந்து இரக்கம் கொண்டு ஒன்றும் செய்யாது மீண்டேன்.

குறிப்பு:  சினவுவென் – ஒளவை துரைசாமி உரை – விரைந்து வரைதலைச் செய்யாது நீட்டித்து அலர் விளைத்தல் குறித்துச் சினவுவென் என்றாள்.  அறன் இலாளன் (2) – ஒளவை துரைசாமி உரை –  தன் துயர் துடைக்காத தலைமகனை அறன் இலாளன் என்றாள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அறத்தைக் கைப்பிடித்தல் இல்லாதவன்.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, அறன் – அறம் என்பதன் போலி, பெயர்தந்தேனே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  அம்ம வாழி தோழி – தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக, யான் இன்று அறன் இலாளன் கண்ட பொழுதில் சினவுவென் தகைக்குவென் சென்றனென் – யான் இன்று அறம் இல்லாத நம் தலைவனைக் கண்டபொழுது சினம் கொள்வேன் உறுதியாக மறுப்பேன் எனக் கருதிச் சென்றேன், பின் நினைந்து இரங்கிப் பெயர்தந்தேனே – அதன்பின் அவன் செய்த தலையளியை நினைந்து இரக்கம் கொண்டு மீண்டேன்

ஐங்குறுநூறு 119, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி! நன்றும்
எய்யாமையின் ஏதில பற்றி,
அன்பிலன் மன்ற பெரிதே,
மென்புலக் கொண்கன் வாராதோனே.

பாடல் பின்னணி:  வரையாது வந்தொழுகும் தலைவன் அருகில் இருப்பதை அறிந்த தலைவி சொன்னது.

பொருளுரை:  தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  தன் அறியாமையால், நம் நிலைமையை நன்கு உணராது, வேறு செயல்களை மேற்கொண்டவன் ஆதலால், தெளிவாக நம் மீது அன்பு பெரிதும் இல்லாதவன், வரைவுடன் வராத மென்மையான நெய்தல் நிலத்தின் தலைவன்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – வரைவுக்கு இடையீடாக அயல் வரைவு நிகழினும் அலர் வெளிப்படினும் யாம் இறந்து படுவேம் என்பது அறிந்திலன் என்பாள், நன்றும் எய்யாமையின் என்றும், தான் வேண்டும் களவொழுக்கமே விரும்பி அதனை நீட்டித்து ஒழுகுகின்றான் என்பாள், ஏதில பற்றி என்றும், இவ்வாறு பல்லாற்றானும் தலைவன் வரைவிடை வைத்து ஒழுகலின் தலைவி ஆற்றாளாய்த் தோழி வினவாக் காலத்தும் தானே அவன் அன்பின்மையை எடுத்துக் கூறி, வரைதல் வேட்கை புலப்பட நிற்றலின் அன்பிலன் மன்ற என்றும் கூறினாள்.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், வாராதோனே – ஆகாரம் (வாராதான்) ஓகாரமானது (வாராதோன்) செய்யுள் விகாரம், ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  எய்யாமை – எய்யாமையே அறியாமையே (தொல்காப்பியம், உரியியல் 44).

சொற்பொருள்:  அம்ம வாழி தோழி – தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக, நன்றும் எய்யாமையின் – அறியாமையால் நம் நிலைமையை நன்கு உணராமையால், ஏதில பற்றி அன்பிலன் மன்ற பெரிதே – வேறு செயல்களை மேற்கொண்டவன் ஆதலால் தெளிவாக அன்பு பெரிதும் இல்லாதவன், மென்புலக் கொண்கன் – மென்மையான நெய்தல் நிலத்தின் தலைவன், வாராதோனே – வரைவுடன் வராதவன்

ஐங்குறுநூறு 120, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி! நல மிக
நல்ல ஆயின அளிய மென்தோளே,
மல்லல் இருங்கழி நீர் அறல் விரியும்
மெல்லம்புலம்பன் வந்தமாறே.

பாடல் பின்னணி:  திருமணத்திற்கு வேண்டியவற்றைச் செய்துகொண்டு வருவதாக சொல்லிச் சென்ற தலைவன், வீட்டின் புறத்தே இருப்பதை அறிந்த தலைவி மகிழ்ந்து உரைத்தது.

பொருளுரை:  தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  பெரிய உப்பங்கழியில் உள்ள நீர் கருமணலைப் பரப்பும் நெய்தல் நிலத்தின் தலைவன் வந்ததால், இழந்த பண்டைய அழகை விடவும் மிக அழகாக ஆயின அவன் பிரிவால் அளியத் தக்கனவாக மெலிந்திருந்த தோள்கள்.

குறிப்பு:  இறைச்சி – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரைவதற்கு வேண்டுவன ஈட்டிக் கொணர்ந்தமை தோன்ற மல்லல் இருங்கழி நீர் அறல் விரியும் என்றாள்.  அவன் அளியினை நினைந்து மகிழ்வாள் மெல்லம்புலம்பன் என இழுமென் மொழியால் இயம்பினாள்.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, மென்தோளே, வந்தமாறே – ஏகாரம் அசைநிலை, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்.  மல்லல் – மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7).

சொற்பொருள்:  அம்ம வாழி தோழி – தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக, நல மிக நல்ல ஆயின அளிய மென்தோளே – இழந்த பண்டைய அழகை விடவும் அழகாக ஆயின அவன் பிரிவால் அளியத் தக்கனவாக மெலிந்திருந்த தோள்கள், மல்லல் இருங்கழி நீர் அறல் விரியும் மெல்லம்புலம்பன் வந்தமாறே – பெரிய உப்பங்கழியில் உள்ள நீர் கருமணலைப் பரப்பும் நெய்தல் நிலத்தின் தலைவன் வந்ததால்

கிழவற்கு உரைத்த பத்து

பாடல்கள் 121–128 – தலைவனிடம் கூறப்பட்டவை.  நெய்தலுள் மருதம்.    பரத்தையின் கூற்று அல்லது தோழியின் கூற்று – தி. சதாசிவ ஐயர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை, ஒளவை துரைசாமி உரை, அ. தட்சிணாமூர்த்தி உரை.  தலைவியின் கூற்று – தலைவி இடையீடின்றித் தலைவனை எதிர்ப்படப் பெற்ற ஞான்று புதுவது மலியின் அவளுக்குக் கூற்று நிகழும் – தொல்காப்பியம், களவு 20, நச்சினார்க்கினியர் உரை, பெற்றவழி மலியின் தலைவிக்குக் கூற்று நிகழும் – தொல்காப்பியம், களவு 21 – இளம்பூரணர் உரை.

ஐங்குறுநூறு 121, அம்மூவனார்,  நெய்தல் திணை – பரத்தை அல்லது தலைவியின் தோழி தலைவனிடம் சொன்னது
கண்டிகும் அல்லமோ கொண்க, நின் கேளே,
முண்டகக் கோதை நனையத்
தெண் திரைப் பௌவம் பாய்ந்து நின்றோளே.

பாடல் பின்னணி:  1. பரத்தை தலைவனிடம் சொன்னது. 2. தலைவன் பரத்தை ஒருத்தியுடன் உறவு கொண்டுள்ளான் என ஐயுற்ற தலைவி அவனுடன் ஊடினாள்.  தலைவன் அதை மறுத்தான்.  தோழியிடம் ஊடல் நீக்க உதவி வேண்டினான், அதற்கு உடன்பட்ட தோழி சொன்னது.

பொருளுரை:  நெய்தல் நிலத் தலைவனே!  முள்ளிச் செடியின் மலர்களால் பின்னப்பட்ட மாலையை அணிந்துக் கொண்டு, அது நனையுமாறு தெளிந்த கடல் நீரில் பாய்ந்து விளையாடிய நின் காதலியை யாம் கண்டோம் அல்லவா?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – மகளிர் கடலில் படிந்தாடுங்கால் தம்மை கழி முண்டகத்தின் பூவால் தொடுக்கப்பட்ட மாலையணிந்து ஒப்பனை செய்து கொண்டு ஆடுதல் மரபு.  ‘அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇத் துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி’ (நற்றிணை 245) எனவும் ‘, ‘வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல் முண்டகக் கோதை ஒண்தொடி மகளிர் …………….. முந்நீர்ப் பாயும், தாங்கா உறையுள் நல்லூர்’ (புறநானூறு 24) எனவும் சான்றோர் உரைப்பது காண்க.  இலக்கணக் குறிப்பு – கண்டிகும் – தன்மை வினைமுற்று திரிசொல், இகும் தன்மை அசைநிலை, கொண்க – விளி, கேளே – ஏகாரம் தேற்றம், நின்றோளே – ஆகாரம் ஓகாரம் ஆனது செய்யுள் விகாரம், ஏகாரம் அசைநிலை.  கண்டிகும் – ‘இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகுநிலை உடையன என்மனார் புலவர்’ (தொல்காப்பியம், இடையியல் 27).

சொற்பொருள்:  கண்டிகும் அல்லமோ – யாம் கண்டோம் அல்லவா, கொண்க – நெய்தல் நிலத் தலைவனே, நின் கேளே – உன்னிடம் காதல் உறவுக் கொண்டவளை, முண்டகக் கோதை – முள்ளிச் செடியின் மலர்களால் பின்னப்பட்ட மாலை, நனைய – நனைய, தெண் திரை – தெளிந்த அலைகள், பௌவம் – கடல், பாய்ந்து நின்றோளே – பாய்ந்து ஆடினாள்

ஐங்குறுநூறு 122, அம்மூவனார், நெய்தல் திணைபரத்தை அல்லது தலைவியின் தோழி தலைவனிடம் சொன்னது
கண்டிகும் அல்லமோ கொண்க, நின் கேளே,
ஒள்ளிழை உயர் மணல் வீழ்ந்தென,
வெள்ளாங்குருகை வினவுவோளே?

பாடல் பின்னணி:  1. பரத்தை தலைவனிடம் சொன்னது. 2. தலைவன் பரத்தை ஒருத்தியுடன் உறவு கொண்டுள்ளான் என ஐயுற்ற தலைவி அவனுடன் ஊடினாள்.  தலைவன் அதை மறுத்தான்.  தோழியிடம் ஊடல் நீக்க உதவி வேண்டினான், அதற்கு உடன்பட்ட தோழி சொன்னது.

பொருளுரை:  நெய்தல் நிலத் தலைவனே!  தன் ஒளியுடைய அணிகலன் மணல் மேட்டில் விழுந்ததால் வெள்ளாங்குருகிடம், “நீ அதைக் கண்டாயா” என வினவிய நின் காதலியை யாம் கண்டோம் அல்லவா?

குறிப்பு:  நெய்தலுள் மருதம்.  அ. தட்சிணாமூர்த்தி உரை – பொன்னும் மணிகளும் கொண்டு செய்யப்பட்டது என்னும் குறிப்பில் ‘ஒள்ளிழை’ என்றாள்.  உயர்மணலில் வீழ்ந்ததற்குக் காரணம், அவட்கு விளையாட்டின் மேலிருந்த மிகு விருப்பமாகும்.  அஃதாவது, விளையாட்டுப் பருவம் நீங்காத பேதைப்பெண் என்பது கருத்து.  அவளுடைய பேதமைக்கு மேலும் ஒரு சான்றாக, பேசாத வெள்ளாங்குருகை வினவியதைச் சுட்டினாள்.  தன்னைப் போலத் தலைவனுக்குக் காம இன்பம் தரும் தகுதி இல்லாதவள் அவள் எனப் பழித்தாள் என்றறிக.  இலக்கணக் குறிப்பு – கண்டிகும் – தன்மை வினைமுற்று திரிசொல், இகும் தன்மை அசைநிலை, கொண்க – விளி, கேளே – ஏகாரம் தேற்றம், வினவுவோளே – ஆகாரம் ஓகாரமானது செய்யுள் விகாரம், ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  கண்டிகும் அல்லமோ – யாம் கண்டோம் அல்லவா, கொண்க – நெய்தல் நிலத் தலைவனே, நின் கேளே – உன்னிடம் காதல் உறவுக் கொண்டவளை, ஒள்ளிழை உயர் மணல் வீழ்ந்தென வெள்ளாங்குருகை வினவுவோளே – தன் ஒளியுடைய அணிகலன் மணல் மேட்டில் விழுந்ததால் வெள்ளாங்குருகிடம் நீ கண்டாயா என வினவினாள்

ஐங்குறுநூறு 123, அம்மூவனார், நெய்தல் திணைபரத்தை அல்லது தலைவியின் தோழி தலைவனிடம் சொன்னது
கண்டிகும் அல்லமோ கொண்க, நின் கேளே,
ஒண்ணுதல் ஆயம் ஆர்ப்பத்,
தண்ணென் பெருங்கடல் திரை பாய்வோளே?

பாடல் பின்னணி:  1. பரத்தை தலைவனிடம் சொன்னது. 2. தலைவன் பரத்தை ஒருத்தியுடன் உறவு கொண்டுள்ளான் என ஐயுற்ற தலைவி அவனுடன் ஊடினாள்.  தலைவன் அதை மறுத்தான்.  தோழியிடம் ஊடல் நீக்க உதவி வேண்டினான், அதற்கு உடன்பட்ட தோழி சொன்னது.

பொருளுரை:  நெய்தல் நிலத் தலைவனே!  ஒளிரும் நெற்றியையுடைய தோழியர் கூட்டம் ஆரவாரிக்கக் குளிர்ந்த பெரிய கடலின் அலைகளில் பாய்ந்து விளையாடிய நின் காதலியை யாம் கண்டோம் அல்லவா?

குறிப்பு:  நெய்தலுள் மருதம்.  ஒளவை துரைசாமி உரை – சிறுவர் பலர் சேர்ந்து கடலாடும் போழ்தில், இனிய சொற்களாலும் பாட்டினாலும் பேரோசை செய்தல் இயல்பாகலின், ஒண்ணுதல் ஆயம் ஆர்ப்ப என்றும், உயரிய பெருந்திரை வருமிடத்து, அதனூடு பாய்ந்தவழி, ஊசலாட்டிடைப் போல் உவகை பயத்தலின் ஆடினாளென்னாது, திரை பாய்வோள் என்றும் கூறினாள்.  ‘ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர்’ (நற்றிணை 395) எனப் பிறாண்டும் வழங்குதல் காண்க.  தி. சதாசிவ ஐயர் உரை – திரை மீது பாய்ந்து விளையாடல் மகளிர் இயல்பாதலின் திரை பாய்வோளெனக் கூறப்பட்டது.  இலக்கணக் குறிப்பு – கண்டிகும் – தன்மை வினைமுற்று திரிசொல், இகும் தன்மை அசைநிலை, கொண்க – விளி, கேளே – ஏகாரம் தேற்றம், பாய்வோளே – ஆகாரம் ஓகாரமானது செய்யுள் விகாரம், ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  கண்டிகும் அல்லமோ – யாம் கண்டோம் அல்லவா, கொண்க – நெய்தல் நிலத் தலைவனே, நின் கேளே – உன்னிடம் காதல் உறவுக் கொண்டவளை, ஒண்ணுதல் ஆயம் ஆர்ப்பத் தண்ணென் பெருங்கடல் திரை பாய்வோளே – ஒளிரும் நெற்றியையுடைய தோழியர் ஆரவாரிக்கக் குளிர்ந்த பெரிய கடலின் அலைகளில் பாய்ந்து விளையாடினாள்

ஐங்குறுநூறு 124, அம்மூவனார், நெய்தல் திணைபரத்தை அல்லது தலைவியின் தோழி தலைவனிடம் சொன்னது
கண்டிகும் அல்லமோ கொண்க, நின் கேளே,
வண்டற் பாவை வெளவலின்,
நுண் பொடி அளைஇக் கடல் தூர்ப்போளே?

பாடல் பின்னணி:  1. பரத்தை தலைவனிடம் சொன்னது. 2. தலைவன் பரத்தை ஒருத்தியுடன் உறவு கொண்டுள்ளான் என ஐயுற்ற தலைவி அவனுடன் ஊடினாள்.  தலைவன் அதை மறுத்தான்.  தோழியிடம் ஊடல் நீக்க உதவி வேண்டினான், அதற்கு உடன்பட்ட தோழி சொன்னது.

பொருளுரை:  நெய்தல் நிலத் தலைவனே!  அலைகள் தன்னுடைய வண்டல் பாவையைக் கவர்ந்து சென்றதால், நுண்ணிய மணலை வாரி எறிந்து அக்கடலை தூர்த்தற்கு (நிரைத்தற்கு) முயன்ற நின் காதலியை யாம் கண்டோம் அல்லவா?

குறிப்பு:  நெய்தலுள் மருதம்.  ஒளவை துரைசாமி உரை – வண்டலாடுபவள் தானிழைத்த வண்டற்பாவையைக் கடல் அழிப்ப, அது கவர்ந்ததாகப் பிறழ உணர்ந்து சினமுற்றுத் தூர்க்கலாகாத பெருங்கடலை மணற்பொடியால் தூர்க்க முயலும் அத்துணைப் பேதைமை உடையாளென அவள் மடமை கூறி நகையாடியவாறு.  வண்டல் பாவை – ஒளவை துரைசாமி உரை – வண்டல் மணலால் விளையாட்டு மகளிர் சிற்றில் இழைத்தும் சிறு சோறு அட்டும், கோரையாற் பாவை செய்து வண்டல் என்றும், பாவையை வண்டற் பாவை என்றும் சான்றோர் குறிக்கின்றனர்.  இலக்கணக் குறிப்பு – கண்டிகும் – தன்மை வினைமுற்று திரிசொல், இகும் தன்மை அசைநிலை, கொண்க – விளி, கேளே – ஏகாரம் தேற்றம், அளைஇ – சொல்லிசை அளபெடை, தூர்ப்போளே – ஆகாரம் ஓகாரமானது செய்யுள் விகாரம், ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்: கண்டிகும் அல்லமோ – யாம் கண்டோம் அல்லவா, கொண்க – நெய்தல் நிலத் தலைவனே, நின் கேளே – உன்னிடம் காதல் உறவுக் கொண்டவளை, வண்டல் பாவை வெளவலின் நுண் பொடி அளைஇக் கடல் தூர்ப்போளே – அலைகள் தன்னுடைய வண்டல் பாவையைக் கவர்ந்து சென்றதால் நுண்ணிய மணலை வாரி எறிந்து அக்கடலை தூர்த்தற்கு (நிரைத்தற்கு) முயன்றாள்

ஐங்குறுநூறு 125, அம்மூவனார், நெய்தல் திணைபரத்தை அல்லது தலைவியின் தோழி தலைவனிடம் சொன்னது
கண்டிகும் அல்லமோ கொண்க, நின் கேளே,
தெண் திரை பாவை வெளவ,
உண்கண் சிவப்ப அழுது நின்றோளே?

பாடல் பின்னணி:  1. பரத்தை தலைவனிடம் சொன்னது. 2. தலைவன் பரத்தை ஒருத்தியுடன் உறவு கொண்டுள்ளான் என ஐயுற்ற தலைவி அவனுடன் ஊடினாள்.  தலைவன் அதை மறுத்தான்.  தோழியிடம் ஊடல் நீக்க உதவி வேண்டினான், அதற்கு உடன்பட்ட தோழி சொன்னது.

பொருளுரை:  நெய்தல் நிலத் தலைவனே!  தெளிந்த கடல் அலைகள் அவளுடைய பாவையைக் கவர்ந்து சென்றதால், மையிட்ட கண்கள் சிவக்க அழுது நின்ற நின் காதலியை யாம் கண்டோம் அல்லவா?

குறிப்பு:  நெய்தலுள் மருதம்.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – மகளிர் அமைத்து நிறுவி மகிழும் வண்டல் மனையையும் பாவையையும் தெண் திரை வௌவியது என்றது, வள மனைக்கண் மகப்பயந்து சிறப்பு மிகும் இல்வாழ்க்கையை நின் புறத்தொழுக்கம் போந்து சிதைக்கின்றது என உள்ளுறை கொள்க.  இலக்கணக் குறிப்பு – கண்டிகும் – தன்மை வினைமுற்று திரிசொல், இகும் தன்மை அசைநிலை, கொண்க – விளி, கேளே – ஏகாரம் தேற்றம், நின்றோளே – ஆகாரம் ஓகாரமானது செய்யுள் விகாரம், ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்: கண்டிகும் அல்லமோ – யாம் கண்டோம் அல்லவா, கொண்க – நெய்தல் நிலத் தலைவனே, நின் கேளே – உன்னிடம் காதல் உறவுக் கொண்டவளை, தெண் திரை பாவை வெளவ உண்கண் சிவப்ப அழுது நின்றோளே – தெளிந்த கடல் அலைகள் அவளுடைய பாவையைக் கவர்ந்து சென்றதால் மையிட்ட கண்கள் சிவக்க அழுது நின்றாள்

ஐங்குறுநூறு 126, அம்மூவனார், நெய்தல் திணை – பரத்தை அல்லது தலைவியின் தோழி தலைவனிடம் சொன்னது
கண்டிகும் அல்லமோ கொண்க, நின் கேளே,
உண்கண் வண்டினம் மொய்ப்பத்,
தெண் கடல் பெருந்திரை மூழ்குவோளே.

பாடல் பின்னணி:  1. பரத்தை தலைவனிடம் சொன்னது. 2. தலைவன் பரத்தை ஒருத்தியுடன் உறவு கொண்டுள்ளான் என ஐயுற்ற தலைவி அவனுடன் ஊடினாள்.  தலைவன் அதை மறுத்தான்.  தோழியிடம் ஊடல் நீக்க உதவி வேண்டினான், அதற்கு உடன்பட்ட தோழி சொன்னது.

பொருளுரை:  நெய்தல் நிலத் தலைவனே!  வண்டுகள் தன்னுடைய மையிட்ட கண்களைக் குவளை மலரென்று எண்ணி மொய்த்ததால், அவ்வண்டுகளை நீக்குவதற்கு, தெளிந்த கடலின்பெரிய அலைகளில் மூழ்கின நின் காதலியை யாம் கண்டோம் அல்லவா?

குறிப்பு:  நெய்தலுள் மருதம்.  ஒளவை துரைசாமி உரை – மைதீட்டிய கண் பூப்போறலின், வண்டினம் உண்மை அறியாது மொய்த்தன என்பாள், உண்கண் மொய்ப்ப என்றாள்.  இஃது ஒருவாற்றால் பரத்தை நலம் பாராட்டியது கூறியதாம்.  மூழ்குவதற்கு உரித்தில்லாத கடல் நீரில் மூழ்குகின்றாள் என்று நகையாடியவாறுமாம்.  இது புலவிக் கூற்றாயவழி, வண்டினம் மொய்த்தல் போல் நின் மனம் அவளிற் பிரியாது சூழ்வந்தெனச் சினந்து கூறியதாம்.  இலக்கணக் குறிப்பு – கண்டிகும் – தன்மை வினைமுற்று திரிசொல், இகும் தன்மை அசைநிலை, கொண்க – விளி, கேளே – ஏகாரம் தேற்றம், நின்றோளே – ஆகாரம் ஓகாரமானது செய்யுள் விகாரம், ஏகாரம் அசைநிலை

சொற்பொருள்:  கண்டிகும் அல்லமோ – யாம் கண்டோம் அல்லவா, கொண்க – நெய்தல் நிலத் தலைவனே, நின் கேளே – உன்னிடம் காதல் உறவுக் கொண்டவளை, உண்கண் வண்டினம் மொய்ப்ப – மையிட்ட கண்களை வண்டுகள் மொய்த்ததால், தெண் கடல் – தெளிந்த நீரையுடைய கடல், பெருந்திரை மூழ்குவோளே – பெரிய அலைகளில் மூழ்கினாள்

ஐங்குறுநூறு 127, அம்மூவனார், நெய்தல் திணைபரத்தை அல்லது தலைவியின் தோழி தலைவனிடம் சொன்னது
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே,
தும்பை மாலை இளமுலை,
நுண் பூண் ஆகம் விலங்குவோளே?

பாடல் பின்னணி:  1. பரத்தை தலைவனிடம் சொன்னது. 2. தலைவன் பரத்தை ஒருத்தியுடன் உறவு கொண்டுள்ளான் என ஐயுற்ற தலைவி அவனுடன் ஊடினாள்.  தலைவன் அதை மறுத்தான்.  தோழியிடம் ஊடல் நீக்க உதவி வேண்டினான், அதற்கு உடன்பட்ட தோழி சொன்னது.

பொருளுரை:  நெய்தல் நிலத் தலைவனே!  தும்பை மாலை பொருந்திய தன் இள முலைகள் மீது நுண்ணிய அணிகலன் அணிந்த உன்னுடைய மார்பு தோயாதவாறு நின்னுடன் ஊடி உன்னை விலக்கின நின் காதலியை யாம் கண்டோம் அல்லவா?

குறிப்பு:  நெய்தலுள் மருதம்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தும்பை தானே நெய்தலது புறனே (தொல்காப்பியம், புறத்திணையியல் 14) என்னும் விதியால், தும்பையும் நெய்தற் கருப்பொருளாதல் உணர்க.  பரத்தை கூற்றிற்கு, அத்தகையாள் ஒருத்தியைக் கண்டேம் என்று ஊடினாள் என்க.  தோழி கூற்றிற்கு ஆடவர் போர்க்காலத்தே அணியும் தும்பை மாலையாகிய அடையாளப் பூவை அணிதலின் விளைவறியாப் பேதைப் பருவத்தாள் என்பது உணர்த்தித் தலைவியைத் தெளித்தாள் எனக் கொள்க.  இலக்கணக் குறிப்பு – கண்டிகும் – தன்மை வினைமுற்று திரிசொல், இகும் தன்மை அசைநிலை, கொண்க – விளி, கேளே – ஏகாரம் தேற்றம், விலங்குவோளே – ஆகாரம் ஓகாரமானது செய்யுள் விகாரம், ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்: கண்டிகும் அல்லமோ – யாம் கண்டோம் அல்லவா, கொண்க – நெய்தல் நிலத் தலைவனே, நின் கேளே – உன்னிடம் காதல் உறவுக் கொண்டவளை, தும்பை மாலை இளமுலை நுண் பூண் ஆகம் விலங்குவோளே – தும்பை மாலை பொருந்திய தன் இள முலைகள் மீது நுண்ணிய அணிகலன் அணிந்த உன்னுடைய மார்பு தோயாதவாறு நின்னுடன் ஊடி உன்னை விலக்கினவள்

ஐங்குறுநூறு 128, அம்மூவனார், நெய்தல் திணைபரத்தை அல்லது தலைவியின் தோழி தலைவனிடம் சொன்னது
கண்டிகும் அல்லமோ கொண்க, நின் கேளே,
உறாஅ வறுமுலை மடாஅ,
உண்ணாப் பாவையை ஊட்டுவோளே?

பாடல் பின்னணி:  1. பரத்தை தலைவனிடம் சொன்னது. 2. தலைவன் பரத்தை ஒருத்தியுடன் உறவு கொண்டுள்ளான் என ஐயுற்ற தலைவி அவனுடன் ஊடினாள்.  தலைவன் அதை மறுத்தான்.  தோழியிடம் ஊடல் நீக்க உதவி வேண்டினான், அதற்கு உடன்பட்ட தோழி சொன்னது.

பொருளுரை:  நெய்தல் நிலத் தலைவனே!  பால் சுரத்தல் இல்லாத தன் வறுமுலையை உண்ணும் இயல்பில்லாத பாவையின் வாயில் வைத்து ஊட்டின நின் காதலியை யாம் கண்டோம் அல்லவா?

குறிப்பு:  நெய்தலுள் மருதம்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தோழி கூற்றிற்கு உண்ணாப்பாவையை ஊட்டுதல் பேதைப் பருவத்தினள் என்பதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்க.  இலக்கணக் குறிப்பு – கண்டிகும் – தன்மை வினைமுற்று திரிசொல், இகும் தன்மை அசைநிலை, கொண்க – விளி, கேளே – ஏகாரம் தேற்றம், உறாஅ – அளபெடை, உறாஅத, ஈறு கெட்ட பெயரெச்சம், மடாஅ – மடுத்து (குடிக்கச் செய்து) என்பது பொருள், அளபெடை, செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சம், உண்ணாப் பாவையை – வெளிப்படை, உண்ணும் இயல்பு இல்லாத பொம்மையை, ஊட்டுவோளே – ஆகாரம் ஓகாரமானது செய்யுள் விகாரம், ஏகாரம் அசைநிலை.  உறாஅ – ஒளவை துரைசாமி உரை – ஊறா என்பது உறாஅ என வந்தது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – உறாஅத, ஈறு கெட்ட பெயரெச்சம்.

சொற்பொருள்: கண்டிகும் அல்லமோ – யாம் கண்டோம் அல்லவா, கொண்க – நெய்தல் நிலத் தலைவனே, நின் கேளே – உன்னிடம் காதல் உறவுக் கொண்டவளை, உறாஅ வறுமுலை மடாஅ உண்ணாப் பாவையை ஊட்டுவோளே – பால் சுரத்தல் இல்லாத தன் வறுமுலையை உண்ணும் இயல்பில்லாத பாவையின் வாயில் வைத்து ஊட்டினாள்

  1. கிடைக்காத பாடல்.
  2. கிடைக்காத பாடல்.

பாணற்கு உரைத்த பத்து

பாடல்கள் 131–140 – பாணற்குத் தலைவி உரைத்த பத்து.   139ம் பாடல் ஒன்று மட்டுமே, பாணன் அருகில் இருக்கும்பொழுது அவன் கேட்கும்படி தலைவி தலைவனிடம் கூறுவதாக உள்ளது.

ஐங்குறுநூறு 131, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி பாணனிடம் சொன்னது
நன்றே பாண கொண்கனது நட்பே,
தில்லை வேலி இவ்வூர்க்
கல்லென் கௌவை எழாஅக் காலே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  பரத்தையின் இல்லத்திலிருந்து தலைவனின் தூதாக வந்த பாணன், தலைவி மீது தலைவன் பேரன்புடையவன் எனக் கூறியபொழுது, வாயில் மறுத்துத் தலைவி சொன்னது.

பொருளுரை:  பாணனே!  தில்லை மரங்களை வேலியாகக் கொண்ட இந்த ஊரில் கல்லென்னும் ஒலியுடைய பழிமொழிகள் எழாது இருந்தால், நீ கூறியவாறு தலைவனது நட்பு மிகவும் நன்மையுடையது எனக் கருதக்கூடும்.

குறிப்பு:  உள்ளுறை உவமம் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தில்லை மரத்தின் கீழ் இருப்போர் மெய்யும் கண்ணும் வெந்து துன்புறுமாறுபோல, நின் தலைவன் அளியின்கண் பட்ட யான் பெரிதும் வருந்துவது இயல்பாயிற்று என்றவாறு.  ஒளவை துரைசாமி உரை – தில்லைச் சிற்றம்பலம் என்ற பழைய பெயர்களுள், தில்லை மறையவும், சிற்றம்பலம் சிதம்பரம் எனச் சிதைந்து மருவி விட்டது.  இலக்கணக் குறிப்பு – நன்றே – ஏகாரம் தேற்றம், பாண – விளி, நட்பே – ஏகாரம் பிரிநிலை, எழாஅ – செய்யுளிசை அளபெடை, காலே – கால் ஏழாம் வேற்றுமைப் பொருள்தரும் இடைச்சொல், ஏகாரம் அசைநிலை, கல் – ஒலிக்குறிப்பு, ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நன்றே – நல்லது, பாண – பாணனே, கொண்கனது நட்பே – தலைவனது நட்பு, தில்லை வேலி இவ்வூர்க் கல்லென் கௌவை எழாஅக் காலே – தில்லை மரங்களை வேலியாகக் கொண்ட இந்த ஊரில் கல்லென்னும் ஒலியுடைய பழிமொழிகள் எழாது இருந்தால்

ஐங்குறுநூறு 132, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி பாணனிடம் சொன்னது
அம்ம வாழி பாண! புன்னை
அரும்பு மலிகானல் இவ்வூர்
அலர் ஆகின்று, அவர் அருளுமாறே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  பரத்தையின் இல்லத்திலிருந்து தலைவனின் தூதாக வந்த பாணன், தலைவியிடம் ‘நீர் தலைவன் மேல் பழி கூற வேண்டாம்.  அவர் நும் மீது அருள் உடையவர்’ எனக் கூறியபொழுது, அவனிடம் தலைவி சொன்னது.

பொருளுரை:  வாழி பாணனே!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  புன்னை மரங்களில் அரும்புகள் மிகுந்திருக்கும் இந்த கடற்கரை ஊரில் அலர் எழுந்தது. நம் தலைவர் எனக்கு அருள் செய்யும் முறையைப் பற்றி.

குறிப்பு:   உள்ளுறை உவமம் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவ்வூரின்கண் இப்பொழுது எவ்வாறு புன்னை மரந்தொறும் அரும்புகள் முகிழ்கின்றனவோ, அவ்வாறே அவன் பழியும் எல்லா மக்கள்பாலும் அரும்பி அலரா நின்றது என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, பாண – விளி, மலிகானல் – வினைத்தொகை, ஆகின்று – ஆகின்றது, அருளுமாறே – ஏகாரம் அசைநிலை, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்.  வாழி பாண – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வாழி பாண்மகனே, வாழி இடைச்சொல், அ. தட்சிணாமூர்த்தி உரை– பாணனே! நீ வாழி, ச.வே. சுப்பிரமணியன் உரை – பாணனே நீ வாழ்க.  அம்ம வாழி – தி. சதாசிவ ஐயர் உரை – முன்னிலை அசை.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்: அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி பாண – நீ வாழி பாணனே, அசைநிலையுமாம், புன்னை அரும்பு மலிகானல் இவ்வூர் அலர் ஆகின்று அவர் அருளுமாறே – புன்னை மரங்களில் அரும்புகள் மிகுந்திருக்கும் இந்த கடற்கரை ஊரில் அலர் எழுந்தது நம் தலைவர் எனக்கு அருள் செய்யும் முறையைப் பற்றி (புன்னை மரம், laurel tree, Mast wood Tree, Calophyllum inophyllum)

ஐங்குறுநூறு 133, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி பாணனிடம் சொன்னது
யானெவன் செய்கோ பாண, ஆனாது
மெல்லம்புலம்பன் பிரிந்தெனப்
புல்லென்றன என் புரி வளைத் தோளே?

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிவு.  வினையின் காரணமாகத் தலைவன் பிரிந்த பொழுது, ஊடியிருந்த தலைவியிடம், தலைவனின் தூதாத வந்த பாணன், இவ்வாறு ஊடியிருப்பது தகுமோ என வினவினான்.  அதுகேட்ட தலைவி அவனிடம் சொன்னது.

பொருளுரை:  பாணனே!  நெய்தல் நிலத்தலைவன் பிரிந்ததால், ஆற்றாது மெலிந்து பொலிவிழந்தன என்னுடைய முறுக்குண்ட வளையல்கள் அணிந்த தோள்கள்.  யான் என்ன செய்வேன்?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – என் மெலிவுக்குக் காரணம் அவனது பிரிவேயாகலின் பிரிவு செய்த அவனுக்கு அது தகாமை கூறிக் கொணர்தல் ஒழித்து என்பாற் கூறுதல் நினக்குத் தகாது என வாயில் மறுத்தவாறு.  இது ‘தலைவன் புறத்துப்போன அத்துணைக்கு ஆற்றாயாகுதல் தகாது என்ற பாணற்குத் தலைவி கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  இலக்கணக் குறிப்பு – செய்கோ – செய்கு தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை, இரக்கக்குறிப்பு, பாண – விளி, பிரிந்தென – செய்தென என்னும் வினையெச்சம், தோளே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  யான் எவன் செய்கோ – யான் என்ன செய்வேன், பாண – பாணனே, ஆனாது மெல்லம்புலம்பன் பிரிந்தெனப் புல்லென்றன என் புரி வளைத் தோளே – ஆற்றாது நெய்தல் நிலத்தலைவன் பிரிந்ததால் பொலிவு இழந்தன என்னுடைய முறுக்குண்ட வளையல்கள் அணிந்த தோள்கள் மெலிந்து பொலிவிழந்தன

ஐங்குறுநூறு 134, அம்மூவனார், நெய்தல் திணை – தலைவி பாணனிடம் சொன்னது
காண்மதி பாண! இருங்கழிப்
பாய் பரி நெடுந்தேர்க் கொண்கனோடு
தான் வந்தன்று, என் மாமைக் கவினே.

பாடல் பின்னணி:  தலைவனின் பிரிவின்கண் கவின் தொலைவு கண்டு வெறுத்து ஒழுகுகின்ற பாணற்குத் தலைவன் வந்துழிக் கவின் எய்திய தலைவி சொன்னது.

பொருளுரை:  காண்பாயாகப் பாணனே!  என்னுடைய மாந்தளிர் நிறமுடைய அழகானது, பெரிய உப்பங்கழியிடத்து பாய்ந்து செல்லும் குதிரைகள் பூட்டிய நெடிய தேரினையுடைய என் தலைவன் வந்ததும், தானாகவே என்னிடம் வந்து விட்டது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொண்கனோடு பிரிந்துபோன கவின் அவன் வரத் தானே வந்தெய்தியது என்க.  எனவே அவன் பிரிவினை ஆற்றிக் கவின் அழியாதிருத்தல் எனக்கு இயல்பன்று.  ஆதலின் நீ என்னைக் குறை கூறுதல் பயனின்று என்பதாம்.  இக்கூற்றினைத் தலைவன் பாணன் வாயிலாகக் கேட்பவே கூறுகின்றாள் ஆகலான், இதனால் அவனுக்கு அவன் கொடுமை உணர்த்தியவாறாயிற்று.  தலைவனோடு சென்ற நலம் – தம்மொடு தானே சென்ற நலனும்.  யானே யீண்டையேனே என் நலனே ……………….கானக நாடனொடு, ஆண்டு ஒழிந்தன்றே (அகநானூறு 103).  மாமைக் கவின் – ஒளவை துரைசாமி உரை – மாந்தளிரின் தன்மையினையுடைய அழகு.  இலக்கணக் குறிப்பு – மதி – முன்னிலையசை, பாண – விளி, பாய் பரி  – வினைத்தொகை, கவினே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம்.  இடையியல் 26).

சொற்பொருள்: காண்மதி பாண – காண்பாயாக பாணனே, இருங்கழி – பெரிய உப்பங்கழி, கருமையான உப்பங்கழி, பாய் பரி – பாயும் குதிரைகள், நெடுந்தேர் – நெடிய தேர், கொண்கனோடு – என் தலைவனோடு, தான் வந்தன்று – அது வந்தது, என் மாமைக் கவினே – என் கருமை அழகு, என் மாந்தளிர் நிறமுடைய அழகு

ஐங்குறுநூறு 135, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி பாணனிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பைதலம் அல்லேம் பாண, பணைத்தோள்
ஐது அமைந்து அகன்ற அல்குல்
நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  பரத்தை ஒருத்தி மீது காதல் கொண்டு அவளை அடைய முயன்றான் தலைவன்.  அதை அறிந்த தலைவி, அவன் கேட்கும்படி அவன் அனுப்பிய பாணனிடம் சொன்னது.

பொருளுரை:  பாணனே, மூங்கில் போன்ற தோள்களையும் மென்மை பொருந்தி அகன்ற அல்குலையும் நெய்தல் மலர்கள் போன்ற கண்களையும் உடைய பரத்தைக்கு ஒப்பாக இருப்பதை யாம் பெற்றால், துன்பம் அடைய மாட்டேம்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பணைத் தோளும், அல்குலும், கண்ணுமாகிய புற உறுப்புகளின்பால் அவாவுற்றே நின் தலைவன் அவளை நாடித் திரிகின்றான்.  ஆகலின் அவன் எம்மை விரும்பாது அவளையே காமுற்றுத் திரிபவனாகி விட்டான்.  இந்நிலையில் யாம் துன்புறாது என் செய்ய வல்லேம் என்று சினந்து கூறியவாறு என்க.  இலக்கணக் குறிப்பு – பாண – விளி, பணைத்தோள் – உவமைத்தொகை, பெறினே – ஏகாரம் அசைநிலை.  நேர்தல் நாம் பெறினே (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒப்பாதலைப் பெருவேமாயின், ஒளவை துரைசாமி உரை – எதிர்பெய்தலைப் பெறுவேமாயின், அ. தட்சிணாமூர்த்தி உரை– எதிர்ப்படுவோம் ஆயின், தி. சதாசிவ ஐயர் உரை – யாம் அறியப் பெறுவோமாயின்.

சொற்பொருள்:  பைதலம் அல்லேம் – துன்பம் அடைய மாட்டேம், பாண – பாணனே, பணைத்தோள் ஐது அமைந்து அகன்ற அல்குல் நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே – மூங்கில் போன்ற தோள்களையும் மென்மை பொருந்தி அகன்ற அல்குலையும் நெய்தல் மலர்கள் போன்ற கண்களையும் உடைய பரத்தைக்கு ஒப்பாக இருப்பதை யாம் பெற்றால் (அல்குல் – இடை, இடைக்குக் கீழ் உள்ள பகுதி)

ஐங்குறுநூறு 136, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி பாணனிடம் சொன்னது
நாணிலை மன்ற பாண, நீயே
கோண் ஏர் இலங்குவளை நெகிழ்த்த
கானலம் துறைவற்குச் சொல் உகுப்போயே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  பரத்தமை மேற்கொண்ட தலைவன் வாயில் வேண்டிப் பாணனை அனுப்புகின்றான்.  பாணனும் தலைவியிடம் வந்து தலைவனைப் பாராட்டினான்.  அதுகேட்ட தலைவி சினந்து வாயில் மறுத்தது.

பொருளுரை:  பாணனே!  என்னுடைய வளைந்த அழகிய ஒளிரும் வளையல்கள் நெகிழும்படி எம்மைப் பிரிந்து சென்ற, சோலைகளையுடை கடற்கரையின் தலைவன் பொருட்டு, நல்ல சொற்களை மொழிகின்றாய்.  தேற்றமாக நீ நாணம் இல்லாதவன்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ஒருவர்க்கு ஒன்று கூறுவோர் தம் கூற்றுப் பொய்யாதல் தோன்றியவழி நாணுவாராக, நீ நாணாது பலவும் கூறினை என்பாள், நாணிலை மன்ற என்றும், அதனால் நீ கூறுவன யாவும் பொய்யாய்ப் பயனின்று ஒழிந்தன என்பாள், சொல் உகுப்போயே என்றாள்.  வளை நெகிழ்தற்குரிய பிரிவினைத் தலைவன் மேல் வைத்து, நெகிழ்த்த தலைவன் என்றாள், பாணனை மறுத்து உரைக்கின்றாள் ஆகலின்.  இலக்கணக் குறிப்பு – இலை – இல்லை என்பதன் விகாரம், மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், பாண – விளி, நீயே – ஏகாரம் அசைநிலை, இலங்குவளை – வினைத்தொகை, கானலம் – அம் சாரியை, உகுப்போயே – ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்:  நாண் இலை மன்ற – தேற்றமாக (தெளிவாக, உறுதியாக) நாணம் இல்லை, பாண – பாணனே, நீயே – நீ, கோண் ஏர் இலங்குவளை நெகிழ்த்த கானலம் துறைவற்குச் சொல் உகுப்போயே – என்னுடைய வளைந்த அழகிய ஒளிரும் வளையல்கள் நெகிழும்படி எம்மைப் பிரிந்து சென்ற சோலைகளையுடை கடற்கரையின் தலைவன் பொருட்டு நல்ல சொற்களை மொழிகின்றாய்

ஐங்குறுநூறு 137, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி பாணனிடம் சொன்னது
நின் ஒன்று வினவுவல் பாண, நும் ஊர்த்
திண் தேர்க் கொண்கனை நயந்தோர்
பண்டைத் தம் நலம் பெறுபவோ மற்றே?

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  பரத்தமையை மேற்கொண்ட தலைவன் வாயில் பெற்றுப் பின் நீங்கினான்.  அவன் முன்பு செய்த தீங்கின் காரணமாக வேறுபட்டிருந்தாள் தலைவி. அவளுடைய வேறுப்பாடு எதனால் என வினவிய பாணனுக்கு உரைத்தது.

பொருளுரை:  பாணனே!  நின்னை ஒன்று வினவுகின்றேன்.  உன்னுடைய ஊர்த் தலைவனான திண்ணிய தேரினைக் கொண்ட கொண்கனை விரும்பிய பெண்கள், தம்முடைய பண்டைய நலத்தை மீண்டும் பெறுவார்களா?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவன் தன்பால் ஆழ்ந்த அன்புடையவன் அல்லன் என அவனது அயன்மை தோன்ற நும்மூர்க் கொண்கன் என்றாள்.  அ. தட்சிணாமூர்த்தி உரை – நும்மூர்க் கொண்கன் என்று பாணனுக்குச் சொன்னது, அதனால் அவனுடைய ஒழுகலாறுகளை அவன் முழுமையும் அறிந்திருத்தல் பற்றியாம்.  திண்தேர்க் கொண்கன் என்றாள், அவன் திண்ணிய தேரினன் ஆயினும், திண்ணிய ஒழுக்கமுடையான் அல்லன் என்னும் குறிப்புடன்.  நயந்தோர் என்றாள் அவனை நயந்த பெண்டிர் தன்னினும் பலவாய் அவ்வூரில் உள்ளனர் என்பது பற்றி.  இலக்கணக் குறிப்பு – ஒன்று – ஆகுபெயர் (ஒரு செய்தி), வினவுவல் – தன்மை ஒருமை வினைமுற்று, பாண – விளி, பெறுபவோ – ஓகாரம் எதிர்மறை, மற்றே – மற்று வினை மாற்று, ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நின் ஒன்று வினவுவல் – நின்னை ஒன்று வினவுகின்றேன், பாண – பாணனே, நும் ஊர்த் திண் தேர்க் கொண்கனை நயந்தோர் பண்டைத் தம் நலம் பெறுபவோ மற்றே – உன்னுடைய ஊர்த் தலைவனான திண்ணிய தேரினைக் கொண்ட கொண்கனை விரும்பிய பெண்கள் தம்முடைய பண்டைய நலத்தை மீண்டும் பெறுவார்களா?

ஐங்குறுநூறு 138, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி பாணனிடம் சொன்னது
பண்பிலை மன்ற பாண, இவ்வூர்
அன்பில கடிய கழறி
மென்புலக் கொண்கனைத் தாராதோயே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  தலைவன் வாயில் பெற்றுப் புகுந்ததை அறியாது வந்த பாணனிடம் தலைவி நகையாடி உரைத்தது.

பொருளுரை:  பாணனே! இவ்வூரின்கண் அன்பில்லாத கடிய சொற்களைக் கூறி நெய்தல் நிலத்தின் தலைவனைப் பரத்தையரிடமிருந்து விலக்கி என்னுடன் கூட்டுவிக்க நீ முயலவில்லை.  தேற்றமாக நற்பண்பு இல்லாதவன் நீ.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒருவரோடு கேண்மை கொண்டு ஒழுகுவோர் அவர் மிகை செய்யுங்கால் மேற்சென்று இடித்தலே நற்பண்பாகும்.  அங்ஙனமின்றிஅவர் தீச்செயலுக்கெல்லாம் உறுதுணையாதல் மிகவும் இழிதகவு உடைத்தாகலின் பண்பில்லை என்றாள்.  இலக்கணக் குறிப்பு – இலை – இல்லை என்பதன் விகாரம், மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், இல – இல்லை என்பதன் விகாரம், பாண – விளி, தாராதோயே – ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்:  பண்பு இல மன்ற – தேற்றமாக நற்பண்பு இல்லாதவன்,  பாண – பாணனே, இவ்வூர் அன்பில கடிய கழறி மென்புலக் கொண்கனைத் தாராதோயே – இவ்வூரின்கண் அன்பில்லாத கடிய சொற்களைக் கூறி நெய்தல் நிலத்தின் தலைவனை என்னுடன் கூட்டுவிக்க நீ முயலவில்லை

ஐங்குறுநூறு 139, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தலைவனிடம் சொன்னது
அம்ம வாழி கொண்க! எம் வயின்
மாண் நலம் மருட்டும் நின்னினும்,
பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  பரத்தையர் இல்லத்திலிருந்து தன் இல்லம் திரும்பினான் தலைவன்.  தன் ஆற்றாமையின் காரணமாக அவனைத் தலைவி ஏற்றுக் கொண்டாள்.  அவனிடம்,  பாணன் அங்கு வந்தபொழுது அவள் கூறியது.

பொருளுரை:  நெய்தல் நிலத்தலைவனே!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  எம்முடைய மாட்சிமையுடைய அழகை சிதைக்கும் நின்னைவிடவும் நின் பாணன் மகளிரின் அழகைச் சிதைக்க வல்லவன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின்னினும் பாணன் நலஞ்சிதைக்கும் என்றது, நீ நலஞ் சிதைத்தல் கூற வேண்டா என்றவாறு.  தலைவன் நலஞ்சிதைத்தல் தலைவியைப் பிரிதலாலும், பாணன் நலஞ்சிதைத்தல் தலைவனைப் பாராட்டுவானாய்த் தன்பால்வந்து அவன் பிரிவினை நினைவுறுத்தி ஆற்றாமை மிகுவித்தலானும், கூடியிருக்கும் தலைவன் பரத்தையர் சேரிக்குச் செல்லுதற்கு உறுதுணையாய் இருத்தலானும் பிறவாற்றானுங் கொள்க.  ஒப்புமை – குறுந்தொகை 127 – ஒரு நின் பாணன் பொய்யனாக உள்ள பாணர் எல்லாம் கள்வர் போல்வர், நற்றிணை 200 – கை கவர் நரம்பின் பனுவல் பாணன் செய்த அல்லல் பல்குவ வை எயிற்று ஐது அகல் அல்குல் மகளிர் இவன் பொய் பொதி கொடுஞ்சொல் ஓம்புமின்.  இலக்கணக் குறிப்பு – சிதைக்கும்மே – சிதைக்குமே என்பதன் விரித்தல் விகாரம்.  வாழி (1) – அசை எனக் கொண்டனர் அறிஞர்கள் தி. சதாசிவ ஐயர், ஒளவை துரைசாமி, பொ. வே. சோமசுந்தரனார் வாழ்க எனக் கொண்டனர் அறிஞர்கள் ச.வே. சுப்பிரமணியன், அ. தட்சிணாமூர்த்தி.  மருட்டும் (2) – ஒளவை துரைசாமி உரை – கலக்கமுறுதல், நலம் கலங்குதலாவது, பிரிவு நினைந்து வருந்துதலால் மேனி வாடுதல், தி. சதாசிவ ஐயர் உரை – வேறுபடச் செய்யும், அ. தட்சிணாமூர்த்தி உரை – சிதைக்கும்.

சொற்பொருள்:  அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – வாழ்வாயாக, அசைநிலை, கொண்க – நெய்தல் நிலத்தலைவனே, எம் வயின் மாண் நலம் மருட்டும் நின்னினும் பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே – எம்முடைய மாட்சிமையுடைய அழகை சிதைக்கும் நின்னைவிடவும் நின் பாணன் மகளிரின் அழகைச் சிதைக்க வல்லவன் ((நல்லோர் – மகளிர்))

ஐங்குறுநூறு 140, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி பாணனிடம் சொன்னது
காண்மதி பாண, நீ உரைத்தற்கு உரியை
துறை கெழு கொண்கன் பிரிந்தென
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  தலைவன் பரத்தையர் மனையில் இருக்கும்பொழுது, இல்லத்திற்கு வந்த பாணனிடம், தலைவன்பால் தூது அனுப்பும்பொருட்டுத் தலைவி தன் மெலிவைக் கூறியது.

பொருளுரை:  பாணனே!  நீ உரைப்பதற்கு உரியவன் ஆதலால், துறைகள் பொருந்திய நெய்தல் நிலத்தலைவன் பிரிந்ததால், நான் துன்பத்தால் மெலிந்து, ஒளியுடைய வளையல்கள் முன்னங்கையிலிருந்து கழன்று விழுந்த என் நிலையை நீ கண்கூடாகக் காண்பாயாக.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – பரத்தையற் பிரிவின்கண் பாணன் பெரும்பான்மையும் தலைமகளை வாயில் நேர்வித்தற்கும், தலைமகன் காதன்மை கூறுவதற்கும் உரியவன் ஆவான்.  வாயில் நேர்விப்பான் கூறுதலும், தலைமகன் காதன்மை கூறலும், தூதின்பாற் படுமாயினும், ஒரோவழித் தலைமகன் விடுப்ப வாராது, தானே வருதலும் அவன்பால் உண்மையின், ஒருவர் விடுப்ப வருவதே தூதின் இயல்பு என அறிக.  பாணன் – தோழி தாயே பார்ப்பான் பாங்கன் பாணன் பாட்டி இளையர் விருந்தினர் கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப (தொல்காப்பியம், கற்பியல் 52).  பாட்டி = பாடினி.  இலக்கணக் குறிப்பு – மதி – முன்னிலையசை, நிலையே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21).

சொற்பொருள்:  காண்மதி – காண்பாயாக, பாண – பாணனே, நீ உரைத்தற்கு உரியை – நீ என் நிலையை உரைப்பதற்கு உரியவன், துறை கெழு கொண்கன் பிரிந்தென இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே – துறைகள் பொருந்திய நெய்தல் நிலத்தின் தலைவன் பிரிந்ததால் என்னுடைய ஒளியுடைய வளையல்கள் முன்னங்கையிலிருந்து கழன்று விழுந்த நிலையை

ஞாழல் பத்து

பாடல்கள் 141–150 ‘எக்கர் ஞாழல்’ எனத் தொடங்குகின்றன.  ஞாழல் மரம் – University of Madras Lexicon – புலிநகக்கொன்றை, Cassia sophera, Tigerclaw tree, identified as Garcinia spicata by R. Panchavarnam and Heritiera Littoralis by P. L. Sami is Cassia Sophera – புலிநகக்கொன்றை, tigerclaw tree, Cassia sophera.  பாடல் 143, 150 பரத்தமை சூழ்நிலை உடையன.  பாடல்கள் 148, 149 திருமணத்திற்கு பின் உள்ள சூழ்நிலை உடையன.

ஐங்குறுநூறு 141, அம்மூவனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண் துளி வீசிப்
பயலை செய்தன பனி படு துறையே.

பாடல் பின்னணி:  தலைவன் திருமண ஏற்பாடுகளைச் செய்வதற்குத் தன் ஊர் சென்றபொழுது, தலைவியின் ஆற்றாமையைக் கண்ட தோழி ‘அவன் உன்னை மணந்துக்கொள்வதற்குப் பிரியவும் நீ ஏன் வருந்துகின்றாய்?’ என வினவ, அதற்குத் தலைவி சொன்னது.  

பொருளுரை:  மணல் மேடுகளில் ஞாழல் மரங்களும் செருந்தி மரங்களும் நறுமணத்தைப் பரப்புகின்றன. குளிர்ந்த கடற்கரைத் துறையின் நீர்த் துவலைகள் என் மீது விழுந்தன.  என் மேனி பசலை அடைந்தது.

குறிப்பு:  பழைய உரை – துறை பயலை செய்தன என்றது யாம் ஆற்றியிருப்பமாயினும் ஆற்றாமையே மிகாநின்றது என்றவாறு.  இலக்கணக் குறிப்பு – பயலை – பசலை என்பதன் போலி, துறையே – ஏகாரம் அசைநிலை.  ஒளவை துரைசாமி உரை – பூவின் மணம் ஒரு புடையிற் கமழ, நீர்த்திவலைகள் காற்றிற் பரந்து குளிர் செய்யக் காமக்குறிப்பு நிகழ்தலின், துறைகள் தன்னைப் பிரிந்த தலைவனை நினைப்பித்து வருத்தம் உறுவித்தன என்பாள், பயலை செய்தன பனிபடு துறையே என்றாள்.

சொற்பொருள்:  எக்கர் – மணல் மேடு,  ஞாழல் – ஞாழல் மரங்கள், செருந்தியொடு – செருந்தி மரங்களுடன், கமழ – நறுமணத்தைப் பரப்புகின்றன, துவலை – நீர்த் துளிகள்,  தண்துளி – குளிர்ந்த துளிகள், வீசி – வீசி,  பயலை – பசலை, செய்தன – செய்தன,  பனிபடு துறையே – குளிர்ந்த கடற்கரைத் துறையில்

ஐங்குறுநூறு 142, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப்படு சினைப்
புள் இறை கூரும் துறைவனை
உள்ளேன் தோழி, படீஇயர் என் கண்ணே.

பாடல் பின்னணி:  வரையாது வந்தொழுகும் தலைவன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, ‘துயில்தல் பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்’ எனக் கூறிய தோழியிடம் தலைவி சொன்னது.

பொருளுரை:  தோழி!  மணற்பரப்பின் மேல் நின்ற ஞாழல் மரத்தின் தாழ்ந்த, பூங்கொத்துக்கள் மலர்ந்த கிளையின் மேல், பறவைகள் தங்கியிருக்கும் துறையின் தலைவனை நான் நினையாது இருப்பேன்.  என் கண்கள் உறங்குவனவாகுக!

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – ஞாழலில் தாழ்ந்த பூச்சினை வருந்தப் புள் வதியும் என்றது, தாம் வரையாது நமக்கு வருநோய் அறியாது தான் வேண்டுமின்பமே முடிப்பான் என்றவாறு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஞாழலின் தாழ்ந்த கிளையிலே மலர்கள் வருத்தப் பறவைகள் நெடும்பொழுது உறையும் என்பது, தலைவன் யான் பிரிவாற்றாமையாலே பெரிதும் வருந்துதலையும் பொருட்படுத்தாமல் வரைதற்கு வராமலும் நெடிது தங்கினான் என்பது, புலியூர்க் கேசிகன் உரை – ஞாழலின் தாழ்ந்த பூச்சினைகள் புள்ளினம் வரத் தாம் வருந்தி கெடுதலுறுமாறுபோல பிரிவென்னும் துயரம் என்பால் வந்து தங்குதலாலே, யானும் படர் மிகுந்து நலிந்து மெலிவேன் என்றதாம்,  இலக்கணக் குறிப்பு – இறங்கு இணர் – வினைத்தொகை, உள்ளேன் – தன்மை எதிர்மறை வினைமுற்று, படீஇயர் – இயர் ஈற்று வியங்கோள் வினைமுற்று, செய்யுளிசை அளபெடை, படர்க்கையில் வந்தது, கண்ணே – ஏகாரம் அசைநிலை.  புள் இறை கூரும் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பறவைகள் நெடும்பொழுது தங்கியிருக்கும், ஒளவை துரைசாமி உரை – பறவைகள் வந்து தங்கும், இறைகூர்தல் ஒரு சொல்லாய் இறுத்தல் என்னும் பொருளது, இறுத்தல் தங்குதல்.  புள் இறை கூரும் (அகநானூறு 10–4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மிகவும் தங்குவதற்கு இடமான, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மிகத் தங்கியிருக்கும்.

சொற்பொருள்:  எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப்படு சினைப் புள் இறை கூரும் துறைவனை உள்ளேன் – மணற்பரப்பின் மேல் நின்ற ஞாழல் மரத்தின் தாழ்ந்த பூங்கொத்துக்கள் மலர்ந்த கிளையின் மேல் பறவைகள் தங்கியிருக்கும் துறையின் தலைவனை நினையாது இருப்பேன், தோழி – தோழி, படீஇயர் என் கண்ணே – உறங்குவனவாகுக என் கண்கள்

ஐங்குறுநூறு 143, அம்மூவனார், நெய்தல் திணைதோழி தலைவனிடம் சொன்னது
எக்கர் ஞாழல் புள் இமிழ் அகன் துறை
இனிய செய்த நின்று பின்
முனிவு செய்த, இவள் தட மென் தோளே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  பரத்தையர் மனையில் தங்கியிருந்து மீண்டு வந்து தோழியை வாயில் வேண்டியபொழுது அவள் அவனுக்குச் சொன்னது.

பொருளுரை:  மணற்பரப்பின்கண் உள்ள ஞாழல் மரத்தின் மேல் இருந்து பறவைகள் ஆரவாரம் செய்யும் அகன்ற கடற்துறையில், முன்பு உனக்கு இனிமை செய்தன, இவளுடைய பெரிய மெல்லிய தோள்கள். அதன்பின், இப்பொழுது அவை நினக்கு வெறுப்பை விளைவிப்பன ஆயின.

குறிப்பு:  பழைய உரை – இனிய செய்து ……………… தட மென்றோள் என்றது, அக்காலத்து நினக்கு இனிமை செய்து பின் முனிவைச் செய்தன ஆதலால், இஃது இத்தோள்களின் தவறல்லது நின் தவறன்று என்பதாம்.  ஞாழற்கண்ணே புள்ளிமிழ் அகன்றுறை என்றது, இவ்வூர் அகன்றுறையார் அலர் தூற்றுவர் என்பதாம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஞாழலின்கண் புள் இமிழ் அகன் துறை என்றது, இக்காலத்தே நின்னொழுக்கம்பற்றி ஊரில் உள்ளோர் அனைவரும் பழி தூற்றா நின்றனர் என்பது.  இலக்கணக் குறிப்பு – செய்த – ஈரிடத்தும் பலவின்பால் வினைமுற்று, தட – உரிச்சொல், தோளே – ஏகாரம் அசைநிலை.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அகன் துறை நின்று இனிய செய்த என மாறிக் கூட்டுக.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

சொற்பொருள்:  எக்கர் ஞாழல் புள் இமிழ் அகன் துறை இனிய செய்த நின்று – மணற்பரப்பின்கண் உள்ள ஞாழல் மரத்தின் மேல் இருந்து பறவைகள் ஆரவாரம் செய்யும் அகன்ற கடற்துறையில் இனிமை செய்தன, பின் முனிவு செய்த இவள் தட மென் தோளே – அதன்பின் வெறுப்பை விளைவித்தன இவளுடைய பெரிய மெல்லிய தோள்கள்

ஐங்குறுநூறு 144, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது
எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த்
தனிக்குருகு உறங்கும் துறைவற்கு,
இனிப் பசந்தன்று, என் மாமைக் கவினே.

பாடல் பின்னணி:  தலைவன் திருமணம் பற்றி நினையாது களவை நீட்டித்தமை கண்டு தலைவி மேனி வேறுபட்டபோது, ‘தலைவன் விரைவில் வந்து மணம் புரிவான், நீ ஆற்றியிருக்க வேண்டும்’ எனக் கூறிய தோழிக்குத் தலைவி சொன்னது.

பொருளுரை:  மணற்பரப்பில் நிற்கும் பூங்கொத்துக்கள் பொருந்திய ஞாழல் மரங்கள் இருக்கும் சோலையில், தனித்த நாரை ஒன்று உறங்கும் துறையின் தலைவன் பொருட்டு, இப்பொழுது பசலையடைந்தது, என்னுடைய மாந்தளிரின் தன்மையுடைய அழகு.

குறிப்பு:   உள்ளுறை – பழைய உரை – எக்கர் ஞாழல் …… உறங்கும் என்றது, இனிக் காலம் வந்தவிடத்தும் வரைந்துகொண்டு ஒன்றுபட்டு ஒழுக நினையாது தனித்து உறைதலே விரும்புவான் என்றவாறு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இணர்படு பொதும்பர் தரும் இன்பத்தாலே குருகு தன் பெடையை மறந்து இனிதே அப் பொழிலிலே உறங்கினாற் போன்று துறைவனும் தன் செல்வமனைக்கண் சென்றபொழுது ஆண்டுளவாகும் பிற இன்பங்களினாலே நம்மை மறந்து உறைகின்றான் என்பது.  மாமைக் கவின் – ஒளவை துரைசாமி உரை, ஐங்குறுநூறு 134 – மாந்தளிரின் தன்மையினையுடைய அழகு, ஒளவை துரைசாமி உரை, ஐங்குறுநூறு 286 – மாந்தளிர் போலும் நிறம் திகழும் அழகு.  இலக்கணக் குறிப்பு – கவினே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த் தனிக்குருகு உறங்கும் துறைவற்கு – மணற்பரப்பில் நிற்கும் பூங்கொத்துக்கள் பொருந்திய ஞாழல் மரங்கள் இருக்கும் சோலையில் தனித்த நாரை ஒன்று உறங்கும் துறையின் தலைவன் பொருட்டு, இனிப் பசந்தன்று – இப்பொழுது பசலையடைந்தது, என் மாமைக் கவினே – என்னுடைய மாந்தளிரின் தன்மையுடைய அழகு

ஐங்குறுநூறு 145, அம்மூவனார், நெய்தல் திணைதோழி சொன்னது, தலைவி கேட்கும்படியாக
எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை
ஓதம் வாங்கும் துறைவன்,
மாயோள் பசலை நீக்கினன் இனியே.

பாடல் பின்னணி:  தலைவியின் குடும்பத்தார் திருமணத்திற்கு உடன்படாததால் தலைவன் சான்றோரை அனுப்பினான். அதை அறிந்த தோழி வரைவு இனி நிகழும் என தலைவியை ஆற்றுவித்தது.

பொருளுரை:  மணற்பரப்பில் நிற்கும் ஞாழல் மரங்களின் சிறிய இலைகளையுடைய பெரிய கிளைகளைக் கடல் அலைகள் பெருகி வந்து வளைக்கும் துறையின் தலைவன், இப்பொழுது மாமை நிறமுடைய தலைவியின் பசலையை நீக்கினான்.

குறிப்பு:  பழைய உரை – ஞாழற் சினையை ஓதம் வளைக்கும் துறைவன் என்றது, தன் வழி வாராத சுற்றத்தாரைத் தன்வழி ஆக்குகின்றான் என்பதாம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஞாழலின் சினையை ஓதம் வளைக்கும் துறைவன் என்றது, முன்னர் நம் சுற்றத்தாரை நம் பெருமான் ஆன்றோரை விடுத்து உடன்படவித்து விட்டனன் என்னும் குறிப்புடையது.  முன்னர் உடன்படாமைக்கு நம் சுற்றத்தாருள் எம்பெருமான் மாண்பினை உணராத சிறுமையுடையோரும் பலர் உளர்.  பின்னர் உடன்பட்டமைக்கு அவருள் அவன் தகவு உணரும் பெருமையுடையோரும் சிலர் உளர் என்பாள் சிறிய இலைகளையுடைய பெரிய சினை என்றாள்.  இலக்கணக் குறிப்பு – நீக்கினன் – கால வழுவமைதி, மகட்கொடை நேரும் என அறிந்த தோழி ‘மாயோள் பசலை நீக்கினான் இனி’ என்றாள், சிறியிலைப் பெருஞ்சினை – முரண்தொடை, சிறியிலை – சிறிய இலை, தொகுத்தல் விகாரம், இனியே – ஏகாரம் அசைநிலை, தேற்றம்.  நீக்கினன் – இறந்த காலம் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள என்மனார் புலவர் (தொல்காப்பியம், சொல்லதிகாரம் 243).

சொற்பொருள்:   எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை ஓதம் வாங்கும் துறைவன் – மணற்பரப்பில் நிற்கும் ஞாழல் மரங்களின் சிறிய இலைகளையுடைய பெரிய கிளைகளைக் கடல் அலைகள் பெருகி வந்து வளைக்கும் துறையின் தலைவன் (வாங்கும் – வளைக்கும்), மாயோள் பசலை நீக்கினன் இனியே – மாமை நிறமுடைய தலைவியின் பசலையை இப்பொழுது நீக்கினான் (இறந்த காலத்தால் கூறினாள்)

ஐங்குறுநூறு 146, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது
எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர்
நறிய கமழும் துறைவற்கு,
இனிய மன்ற, என் மாமைக் கவினே.

பாடல் பின்னணி:  தலைவன் வரையாது ஒழுகியதால் வருந்தியிருந்தாள் தலைவி.  அதுகண்ட தலைவன் வரைவுடன் வந்தான்.  அச்செய்தியை அறிந்த தலைவி பெரிதும் மகிழ்ந்து தோழியிடம் கூறியது.

பொருளுரை:  மணற்பரப்பில் நிற்கும் ஞாழல் மரங்களின் அரும்புகள் விரிந்து மலர்ந்த பூங்கொத்துக்களின் நறுமணம் வீசும் துறையின் தலைவனுக்குத் தேற்றமாக இனிமையானது, என்னுடை மாந்தளிர் போன்ற தன்மையுடைய அழகு.

குறிப்பு:  பழைய உரை – அரும்புமுதிர் ………………. துறைவன் என்றது, அவன் அன்பு முறையாலே முதிர்ந்து வெளிப்பட்ட திறம் கூறியவாறு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எக்கர் மேனின்ற ஞாழல் மரம் அரும்பெடுத்து நாளரும்பாகி நாளடைவிலே முதிர்ந்து மலர்ந்து நறுமணம் பரப்புமாறுபோல நம்பெருமான் நட்பும் களவாகி நாளடைவில் முதிர்ந்து இப்பொழுது பல்லோர் அறியும் வரைவாகிக் கற்பொழுக்கமாகி அன்பும் அறனும் கமழ்வதாயிற்று என்பது.  இலக்கணக் குறிப்பு – மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், நறிய – நறியவாய் என்று பொருள்படும் முற்றெச்சம், கவினே– ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  மாமைக் கவின் – ஒளவை துரைசாமி உரை – மாமையினால் உளவாகும் அழகுகள்.  உறுப்புத்தோறும் நிறத்தாலும் ஒளியாலும் தனித் தனி சிறத்தலின் பன்மையாற் கூறினார்.  ஒளவை துரைசாமி உரை, ஐங்குறுநூறு 134 – மாந்தளிரின் தன்மையினையுடைய அழகு.

சொற்பொருள்:  எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர் நறிய கமழும் துறைவற்கு – மணற்பரப்பில் நிற்கும் ஞாழல் மரங்களின் அரும்புகள் விரிந்து மலர்ந்த பூங்கொத்துக்களின் நறுமணம் வீசும் துறையின் தலைவனுக்கு, இனிய மன்ற – தேற்றமாக இனிமையானது, என் மாமைக் கவினே – என்னுடை மாந்தளிர் போன்ற தன்மையுடைய அழகு

ஐங்குறுநூறு 147, அம்மூவனார், நெய்தல் திணைதோழி தலைவியிடம் சொன்னது
எக்கர் ஞாழல் மலர் இன் மகளிர்
ஒண் தழை அயரும் துறைவன்,
தண் தழை விலையென நல்கினன், நாடே.

பாடல் பின்னணி:  தலைவன் தன்னை மணம்புரிய வருவானோ என ஐயுற்று வருந்தியிருந்தாள் தலைவி.  தலைவன் ஒரு நாட்டையே திருமணப் பரிசாக நல்கினான் என்ற செய்தியை அறிந்த தோழி, தலைவிக்கு மகிழ்ந்து உரைத்தது.

பொருளுரை:  மணற்பரப்பில் நிற்கும் ஞாழல் மரங்களில் மலர்கள் இல்லாததால் மகளிர் அவற்றின் ஒள்ளிய தழையைப் பறித்து ஆடையாகப் புனைந்து அணிந்து விளையாடும் துறையையுடைய தலைவன், உன்னுடைய குளிர்ந்த ஆடையின் விலையாக (பரிசமாக) ஒரு நாட்டையே நல்கினான்.

குறிப்பு:  பழைய உரை – ஞாழல் மலரில்லாத மகளிர் அதன் தழையை விரும்பும் துறைவன் என்றது, உலகை வழங்க வேண்டும் உள்ளத்தன் அஃது இன்மையான் நாட்டை வழங்கினான் என்பதாம்.  திருமணப் பரிசம் – அகநானூறு 90, புறநானூறு 343, 344, 345, 352. கலித்தொகை 103, ஐங்குறுநூறு 147.  தழை விலை (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை– தழைவிலை என்பது முலைவிலை என்றவாறு, உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலர் கிடைக்கப் பெறாத மகளிர் தழையையே கொண்டு விளையாட்டு அயர்வர் என்றது, நினக்கு முலை விலையாக இப்பேருலகம் முழுவதுமே பெறாது ஆயினும் அவ்வுலகத்தை அவன் முழுதும் உடையனவாயிருப்பின் அதனையே வழங்கியிருப்பன்.  அஃது அமையாமையின் அவன் சிறப்பாக ஓம்பும் நாட்டையே வழங்குவானாயினன் என்பது.  இலக்கணக் குறிப்பு –  நாடே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  எக்கர் ஞாழல் மலர் இன் மகளிர் ஒண் தழை அயரும் துறைவன் – மணற்பரப்பில் நிற்கும் ஞாழல் மரங்களில் மலர்கள் இல்லாததால் மகளிர் அவற்றின் ஒள்ளிய தழையைப் பறித்து ஆடையாகப் புனைந்து அணிந்து விளையாடும் துறையையுடைய தலைவன், தண் தழை விலையென நல்கினன் நாடே – உன்னுடைய குளிர்ந்த ஆடையின் விலையாக (பரிசமாக) ஒரு நாட்டையே நல்கினான்

ஐங்குறுநூறு 148, அம்மூவனார், நெய்தல் திணைதோழி தலைவியிடம் சொன்னது
எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை
வீ இனிது கமழும் துறைவனை,
நீ இனிது முயங்குமதி, காதலோயே.

பாடல் பின்னணி:  திருமணம் நிகழ்ந்த பின், தலைவியைப் பள்ளியிடத்து உய்க்கும் தோழி சொன்னது.

பொருளுரை:  அன்புமிக்க தோழியே!  மணற்பரப்பில் நிற்கும் ஞாழல் மரங்களின் ஓங்கி வளர்ந்த கிளைகளின்கண் உள்ள மலர்கள் இனிய நறுமணத்தை வீசும் துறையின் தலைவனை, நீ இனிமையுடன் தழுவி இன்புறுவாயாக.

குறிப்பு:  பழைய உரை – எக்கர் ஞாழல் ……………. கமழும் துறைவன் என்றது, அவன் அன்பு இதன்மேல் இல்லை என வளர்ந்து பயன்பட்ட திறம் கூறியவாறு.  காதலோயே – ஒளவை துரைசாமி உரை – அன்புடையாய், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெருங்காதல் கெழுமிய பெருமாட்டியே, தி. சதாசிவ ஐயர் உரை – காதலையுடையாளே, அ. தட்சிணாமூர்த்தி உரை – காதல் மிக்க தோழியே.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எக்கர் ஞாழலின்கண் இகந்துபடு பெருஞ்சினையினது பெருங்குடித் தோன்றலாகிய நம் பெருமானது மாண்புமிக்க நெஞ்சத்தே அரும்பிய காதலும் நன்கு முதிர்ந்து பதனடைந்து திகழ்கின்றது காண் என்பது.  இலக்கணக் குறிப்பு – மதி – முன்னிலையசை, காதலோயே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்:  எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை வீ இனிது கமழும் துறைவனை – மணற்பரப்பில் நிற்கும் ஞாழல் மரங்களின் ஓங்கி வளர்ந்த கிளைகளில் உள்ள மலர்கள் இனிய நறுமணத்தை வீசும் துறையின் தலைவனை, நீ இனிது முயங்குமதி – நீ இனிமையுடன் தழுவிக் கொள்வாயாக, காதலோயே – அன்புமிக்க தோழியே, காதல் மிக்க தோழியே

ஐங்குறுநூறு 149, அம்மூவனார், நெய்தல் திணைதோழி தலைவனிடம் சொன்னது
எக்கர் ஞாழல் பூவின் அன்ன
சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு,
அணங்கு வளர்த்து, அகறல் வல்லாதீமோ.

பாடல் பின்னணி:  திருமணம் முடிந்தபின் தலைவன் தலைவியுடன் இருந்தபொழுது தோழி தலைவனிடம் சொன்னது.

பொருளுரை:  மணற்பரப்பில் நிற்கும் ஞாழல் மரங்களின் பொன்னிற மலர்கள் போன்று தேமல் பரவிய முலைகளையும் மடப்பத்தையும் உடைய இவளுக்கு வருத்தம் விளைவித்துப் பிரிதல் செய்யாது இருப்பீராக.

குறிப்பு:  அணங்கு வளர்த்து (3) – ஒளவை துரைசாமி உரை –  வருத்தம் விளைவித்து, தி. சதாசிவ ஐயர் உரை – துயரத்தை வளரச் செய்து, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவளுடைய பெண்மைப் பேரழகைப் பெரிதும் பெருகச் செய்து.  அ. தட்சிணாமூர்த்தி உரை – தலைவியின் முலையை ஞாழற்பூப் போன்ற சுணங்குடையது என்றும் இளமையுடையதென்றும் சிறப்பித்தது, அவற்றின் அழகு மிகுதி காட்டி, அவ்வழகு கெட்டொழிய விடாதே என்று அறிவுறுத்தற்காம்.  இலக்கணக் குறிப்பு – பூவின் – இன் சாரியை, அகறல் – தொழிற்பெயர், அன்ன – உவம உருபு, வல்லாதீமோ – வல்லாதீம் – முன்னிலைப் பன்மை வினைமுற்று, மோ முன்னிலையசை.

சொற்பொருள்:  எக்கர் ஞாழல் பூவின் அன்ன சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு – மணற்பரப்பில் நிற்கும் ஞாழல் மரங்களின் பொன்னிற மலர்கள் போன்று தேமல் பரவிய முலைகளையும் மடப்பத்தையும் உடைய இவளுக்கு, அணங்கு வளர்த்து அகறல் வல்லாதீமோ – வருத்தம் விளைவித்துப் பிரிதல் செய்யாது இருப்பீராக

ஐங்குறுநூறு 150, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
எக்கர் ஞாழல் நறு மலர்ப் பெருஞ்சினைப்
புணரி திளைக்கும் துறைவன்,
புணர்வின் இன்னான், அரும் புணர்வினனே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  முன்னர்த் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் மீண்டு வந்தான்.  தலைவி அவனை ஏற்றுக்கொண்டாள்.  அதன்பின் பரத்தையரிடம் மீண்டும் சென்றுவிட்டு மனைக்கு வந்தான்.  தலைவி அவனுடன் ஊடி வாயில் மறுத்தாள்.  அதைக் கண்ட தோழி, ‘முன்பு போல் இல்லாமல் நீ ஊடியதற்குக் காரணம் என்ன?’ என வினவினாள்.  வினவிய தோழிக்குக் கூறுவாள்போல் தலைவன் கேட்கும்படி தலைவி சொன்னது.

பொருளுரை:  மணற்பரப்பில் நிற்கும் ஞாழல் மரங்களின் நறுமண மலர்களை உடைய பெரிய கிளைகளை அலைகள் தழுவும் துறையின் தலைவன், என்னுடன் கூடியபொழுது இன்னாமை செய்பவனாக உள்ளான். அரிதாக வந்து என்னைக் கூடுபவனாக இருக்கின்றான்.

குறிப்பு:  பழைய உரை – நறுமலர்ப் பெருஞ்சினை வருந்த வந்து திரை திளைக்கும் என்றது, ஓர் இடத்தானாய் ஒழுகாது வந்தும் பெயர்ந்தும் நம்மை வருத்தமுறுத்துவான் என்றவாறு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினையைப் புணரிதிளைக்கும் என்றது, கடல் அலைகள் வந்து வந்து மோதி மோதி மூழ்குவித்துப் போவது போன்று இவனும் நம்பால் அடிக்கடி வந்து அளி செய்வான் போன்று துன்ப நினைவுகளையே தோற்றுவித்துப் போய் விடுவான் என்பது.  இலக்கணக் குறிப்பு – புணர்வு – தொழிற்பெயர், இன்னான் – வினையாலணையும் பெயர், புணர்வினனே – புணர்வினன் – வினையாலணையும் பெயர், ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  எக்கர் ஞாழல் நறு மலர்ப் பெருஞ்சினைப் புணரி திளைக்கும் துறைவன் – மணற்பரப்பில் நிற்கும் ஞாழல் மரங்களின் நறுமண மலர்களை உடைய பெரிய கிளைகளை அலைகள் தழுவும் துறையின் தலைவன், புணர்வின் இன்னான் – என்னுடன் கூடியபொழுது இன்னாமை செய்பவனாக உள்ளான், அரும் புணர்வினனே – அரிதாக வந்து என்னைக் கூடுபவனாக இருக்கின்றான்

வெள்ளாங்குருகுப் பத்து

பாடல்கள் 151–160 – வெள்ளாங்குருகு என்னும் நெய்தல் நிலத்தின் பறவையைப் பற்றியவை.  இப்பறவையை உள்ளான்குருகு என்றலும் உண்டு.  இப்பாடல்கள் யாவும் மருதத் திணையின் சூழ்நிலைகள் கொண்டவை.  பாடல்களின் முதல் அடியில் வரும் ‘செத்து’ என்னும் சொல்லுக்குப் பொருள் – தி. சதாசிவ ஐயர் உரை – இறக்க, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இறந்துட்டது, ஒளவை துரைசாமி உரை – நினைத்து.  செத்தென – செத்து + என, அல்லது செத்தது என.  பிள்ளை – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).  அவற்றுள் பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை (தொல்காப்பியம், மரபியல் 4).

ஐங்குறுநூறு 151, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் வாயில் மறுத்தப் பின் சொன்னது
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மட நடை நாரை
மிதிப்ப, நக்க கண் போல் நெய்தல்
கள் கமழ்ந்து ஆனாத் துறைவற்கு,
நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  வாயில் வேண்டி வந்த (தலைவனின் தூதாக வந்த) தோழியிடம் தலைவி சொன்னது.

பொருளுரை:  வெள்ளாங்குருகின் பார்ப்பு (குஞ்சு) இறந்ததால் அதைக் காண்பதற்குச் சென்ற மெல்லிய நடையையுடைய நாரை மிதித்ததால், இதழ் விரிந்த மகளிரின் கண்களை ஒத்த நெய்தல் மலர்களின் தேன் மணம் விடாது கமழும் துறையின் தலைவனுக்கு, உடைந்த என் நெஞ்சத்தால் வாயில் நேர்தற்கு உடன்படேன்.

குறிப்பு:   பழைய உரை – வெள்ளாங்குருக்கின் பிள்ளை ………………….. துறைவன் என்றது, பரத்தை ஒருத்தியோடு ஒழுகுகின்ற ஒழுக்கம் இடையற்றதாகச் சென்ற வாயில்கள் நெருங்க அவள் நெஞ்சு நெகிழ்ந்து கூறிய காதல் மாற்றம் பரந்து செல்கின்ற துறைவன் என்பதாம்.  வெள்ளாங்குருகு என்றது பரத்தையாகவும், பிள்ளை என்றது பரத்தையோடு தலைமகனிடை உளதாகிய ஒழுக்கமாகவும், காணிய சென்ற மடநடை நாரை என்றது வாயில்களாகவும் கொள்க.  இனி வருகின்ற பாட்டு ஒன்பதுக்கும் ஒக்கும்.  மிதித்தது அவளை நெருங்குதலாகவும் நக்க நெய்தல் அவள் நெஞ்சாகவும் கட் கமழ்பு ஆனாமை அவள் அவர்க்குக் கூறிய மாற்றம் எல்லாருக்கும் புலப்படுதலாகவும் இப்பாட்டிற்குக் கொள்க.  நெக்க நெஞ்சம் (5) – அ. தட்சிணாமூர்த்தி உரை – உடைந்தது என் நெஞ்சம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெகிழ்ந்த நெஞ்சம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெள்ளாங்குருகு தன் பார்ப்பைப் போலத் தோன்றிற்றாக அதனைக் காண்டற்குச் சென்ற மடநடை நாரை மிதித்தலானே நெய்தல் மலர் சிதைந்து இடையறாது தேன்காலும் துறை எனப் பொருள் கொண்டு  தலைவனுக்குப் பரத்தை குலமடந்தையாகிய என்னைப் போலச் சிறந்தவளாகத் தோன்றுதலாலே அவளைக் காமுற்றுச் செல்வானாக அவன் நடையாலே (ஒழுக்கத்தாலே) என் நெஞ்சம் புண்பட்டு அன்பாலே இடையறாது கசிந்துருகி வருந்தா நின்றது காண் என்பது. வெள்ளாங்குருகு பரத்தையாகவும் பிள்ளை தலைவியாகவும் நாரை தலைவனாகவும் கொள்க.  இலக்கணக் குறிப்பு – காணிய – செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், நேர்கல்லேனே – ஏகாரம் அசைநிலை.  பிள்ளை – அவற்றுள் பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை (தொல்காப்பியம், மரபியல் 4).

சொற்பொருள்:  வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மட நடை நாரை – வெள்ளாங்குருகின் பார்ப்பு (குஞ்சு) இறந்ததால் அதைக் காண்பதற்குச் சென்ற மெல்லிய நடையையுடைய நாரை, மிதிப்ப நக்க கண் போல் நெய்தல் கள் கமழ்ந்து ஆனாத் துறைவற்கு – மிதித்ததால் இதழ் விரிந்த மகளிரின் கண்களை ஒத்த நெய்தல் மலர்களின் தேன் மணம் விடாது கமழும் துறையின் தலைவனுக்கு, நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே – உடைந்த நெஞ்சத்தால் வாயில் நேர்தற்கு உடன்படேன்

ஐங்குறுநூறு 152, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மட நடை நாரை
கையறுபு இரற்றும் கானலம் புலம்பந்
துறைவன் வரையும் என்ப,
அறவன் போலும் அருளுமார் அதுவே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம். தலைவி வாயில் மறுத்ததால், ‘இவன் உன் மேல் அன்புடையவன்.  அருளுடையவன்’ எனக் கூறி வாயில் வேண்டிய தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  வெள்ளாங்குருகின் பார்ப்பு (குஞ்சு) இறந்ததால் அதைக் காண்பதற்குச் சென்ற மெல்லிய நடையையுடைய நாரை செயலற்று ஒலிக்கும், கடற்கரைச் சோலைகளையுடைய கடல் நிலத்தலைவன் பரத்தை ஒருத்தியை மணம் புரிவான் எனக் கூறுகின்றனர்.  நீ கூறியது போல் அறம் உடையவன் போலும்.  நிறைந்த அருளும் அதுவே.

குறிப்பு:  பழைய உரை – துறைவன் வரையும் …………………… அதுவே என்றது, அப்பரத்தையைத் தனக்கு இற்பரத்தையாக வரைவான் என்று கூறுகின்றாராகலின், ‘நீ கூறுகின்றபடியே அறமுடையவன் போலும், அருளும் அதுவே’, என இகழ்ந்து கூறியவாறு. கையறுபு இரற்றும் கானலம் புலம்பந் துறைவன் என்றது, பரத்தையரிடத்துச் சென்ற வாயில்கள் கூற்றேயாய்ப் பிறிது மாற்றமின்றிச் செல்கின்ற துறைவன் என்றவாறு.  அருளுமார் அதுவே (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இகழ்ந்து கூறியது, தலைவன் வாய்மையில் அறவோனோ?  அவன் நம்பால் செய்யும் அருளும் அச்செயல்தானோ?  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மட நடை நாரை கையறுபு இரற்றும் என்றது, பரத்தை அன்பு மாறுபட்டு வாயில் மறுத்ததாலே தூதாகச் சென்ற வாயில்கள் அவளை வாயினேர்விக்க மாட்டாது தலைவன்பால் வந்து தம் கையறவு கூறி நிற்கின்றனர் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – காணிய – செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், கானலம் – அம் சாரியை, புலம்பம் – அம் சாரியை, கையறுபு – செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம், புலம்பந்துறைவன் – அம் சாரியை, அருளுமார் – ஆர் அசைநிலை, அதுவே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மட நடை நாரை – வெள்ளாங்குருகின் பார்ப்பு (குஞ்சு) இறந்ததால் அதைக் காண்பதற்குச் சென்ற மெல்லிய நடையையுடைய நாரை, கையறுபு இரற்றும் – செயலற்று ஒலிக்கும், கானல் அம் புலம்பந் துறைவன் வரையும் என்ப – கடற்கரைச் சோலைகளையுடைய கடல் நிலத்தலைவன் பரத்தை ஒருத்தியை மணம் புரிவான் எனக் கூறுகின்றனர், அறவன் போலும் – நீ கூறியது போல் அறம் உடையவன் போலும், அருளுமார் அதுவே – நிறைந்த அருளும் அதுவே

ஐங்குறுநூறு 153, அம்மூவனார், நெய்தல் திணைதோழி வாயில்களிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மட நடை நாரை
உளர ஒழிந்த தூவி குலவு மணல்
போர்வில் பெறூஉம் துறைவன் கேண்மை,
நன்னெடுங்கூந்தல் நாடுமோ மற்றே?

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  வாயில் வேண்டி வந்த தலைவன் கேட்கும்படி அவனுடைய வாயிலாகப் புகுந்தவர்களுக்குத் தோழி சொன்னது.

பொருளுரை:  வெள்ளாங்குருகின் பார்ப்பு (குஞ்சு) இறந்ததால் அதைக் காண்பதற்குச் சென்ற மெல்லிய நடையையுடைய நாரை, தன் அலகினால் கோதுவதால் உதிர்ந்த இறகுகளைக் காற்றால் குவிந்த மணல் குவியலின் மேல் அவற்றை வேண்டும் மக்கள் பெறும் துறைவனின் நட்பை நல்ல நீண்ட கூந்தலையுடைய என் தோழி விரும்புவாளா?

குறிப்பு:  பழைய உரை – நாரை உளற ஒழிந்த தூவி ……………….. துறைவன் என்றது, இவன் கூறி விட்ட வாயில்கள் மாற்றம் பரத்தை பெறும் துறைவன் என்றவாறு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மட நடை நாரை ஆங்கிருந்து சிறகு உளர்தலாலே வீழ்ந்த தூவி மணற் குன்றிலே பறந்து வீழ்தலாலே ஆண்டுப் பெறூஉம் ஊரன் என்றது, பரத்தையின் காதல் இடையறவு பட்டதாக அதனைச் சீர்திருத்தச் சென்ற தலைவன் தன் தவறின்மையைக் கூறும்பொருட்டு வெளியிட்ட சொற்களைத் தலைவி தன் இல்லத்திருந்தே தன் பாங்காயினர் கூறக் கேட்டிருக்கின்றாள் என்பது.  இலக்கணக் குறிப்பு – காணிய – செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், பெறூஉம் – செய்யுளிசை அளபெடை, நன்னெடுங்கூந்தல் – அன்மொழித்தொகை, மற்றே – மற்று, ஏ அசைநிலைகள்.  குலவு மணல் போர்வில் பெறூஉம் (4) – ஒளவை துரைசாமி உரை – மணல் குவியற்கண் பெறப்படும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மணற்குன்றின் மேல் கண்டெடுத்துக் கோடற்கிடமான,

சொற்பொருள்:  வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மட நடை நாரை – வெள்ளாங்குருகின் பார்ப்பு (குஞ்சு) இறந்ததால் அதைக் காண்பதற்குச் சென்ற மெல்லிய நடையையுடைய நாரை, உளர ஒழிந்த தூவி குலவு மணல் போர்வில் பெறூஉம் துறைவன் – தன் அலகினால் கோதுவதால் உதிர்ந்த இறகுகளைக் காற்றால் குவிந்த மணல் குவியலின் மேல் மக்கள் பெறும் துறைவன், கேண்மை நன்னெடுங்கூந்தல் நாடுமோ மற்றே – நட்பை நல்ல நீண்ட கூந்தலையுடைய என் தோழி விரும்புவாளா

ஐங்குறுநூறு 154, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கானல் சேக்கும் துறைவனோடு
யானெவன் செய்கோ? பொய்க்கும் இவ்வூரே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  தோழி வாயில் வேண்டியபொழுது வாயில் மறுத்துத் தலைவி சொன்னது.

பொருளுரை:  வெள்ளாங்குருகின் பார்ப்பு (குஞ்சு) இறந்ததால் அதைக் காண்பதற்குச் சென்ற மெல்லிய நடையையுடைய நாரை கடற்கரைச் சோலையில் தங்கும் துறையின் தலைவனுடன், யான் யாது செய்ய வல்லேன்?  இவ்வூர் மக்கள் பொய் கூறுகின்றனர்.

குறிப்பு:  பழைய உரை – துறைவனோடு யான் எவன் செய்கோ என்றது, அவனோடு யான் ஒழுகும் ஒழுக்கம் என் என்று வெறுத்துக் கூறியவாறு.  பொய்க்கும் இவ்வூர் என்றது தலைமகன் குணம் கூறுகின்ற தோழியை எனக் கொள்க.  நாரை கானற் சேர்க்கும் என்றது, வாயிலாய்ச் சென்றார் அவள்மாட்டுத் தங்குதல் நோக்கி எனக் கொள்க.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காணிய சென்ற நாரை கானல் சேக்கும் என்றது, பரத்தையர் சேரிக்குச் செல்லும் தலைவன் ஆண்டே தங்கி விடுகின்றான் என்பது.  இலக்கணக் குறிப்பு – காணிய – செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், செய்கோ – செய்கு தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை, இரக்கமுமாம், இவ்வூரே – ஊர் – ஊர்மக்களுக்கு ஆகுபெயர், ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை கானல் சேக்கும் துறைவனோடு – வெள்ளாங்குருகின் பார்ப்பு (குஞ்சு) இறந்ததால் அதைக் காண்பதற்குச் சென்ற மெல்லிய நடையையுடைய நாரை கடற்கரைச் சோலையில் தங்கும் துறையின் தலைவனுடன், யானெவன் செய்கோ – யான் யாது செய்ய வல்லேன், பொய்க்கும் இவ்வூரே – இவ்வூர் மக்கள் பொய் கூறுகின்றனர்

ஐங்குறுநூறு 155, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மட நடை நாரை
பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய
ஓதமொடு பெயரும் துறைவற்குப்,
பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  தலைவனின் பரத்தமையினால் தலைவி ஊடினாள்.  அப்பொழுது அவள் கருவுற்று இருந்தாள். தோழி அவளிடம் ‘இக்காலத்தில் நீ ஊடியிருப்பது நல்லது அன்று’ எனக் கூறியபொழுது, வெகுண்டு அவளிடம் தலைவி கூறியது.

பொருளுரை:  வெள்ளாங்குருகின் பார்ப்பு (குஞ்சு) இறந்ததால் அதைக் காண்பதற்குச் சென்ற மெல்லிய நடையையுடைய நாரை, மனம் பதைத்துத் தன் சிறகை அசைத்ததால் சிதைவுற்ற நெய்தல் மலர்கள், கழியில் வெள்ளத்துடன் இடம் பெயர்ந்து செல்லும் துறையின் தலைவனுக்கு, நான் பஞ்சாய்க் கோரையினால் செய்த பாவையை முன்பே ஈன்றிருக்கின்றேன்.

குறிப்பு:  பழைய உரை – பதைப்ப ……………. துறைவன் என்றது, வாயில்கள் கூறப் பரத்தை எய்திய இரக்கத்தினைத் தன் தண்ணளியால் தீர்ப்பான் என்றவாறு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குருகின் பிள்ளை இறந்தமைக்காகப் பதைத்த நாரையால் சிதறிய நெய்தல் மலர் ஓதமொடு பெயரும் துறைவன் என்றது, பரத்தையர் கேண்மை இடையறவுபட்டதாக அதன் பொருட்டு அவரைக் காணச் சென்ற தலைவன் அவர் ஊடலைப் பொறாமல் வருந்திக் கூறிய சொற்கள் என் பாங்காயினர் வாயிலாக என் செவிக்கு எட்டியிருக்கின்றன காண், இத்தகையோன் எங்கனம் நம்மோடு இருந்து இல்லறம் நடத்துவான் என்பது.  இலக்கணக் குறிப்பு – காணிய – செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், யானே – ஏகாரம் அசைநிலை.  ததைந்த (3) – ஒளவை துரைசாமி உரை – நெருங்கிய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிதறுண்ட.  பைஞ்சாய்ப் பாவை (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தண்டான் கோரையாலே செய்யப்படுகின்ற ஒரு விளையாட்டுப் பொம்மை.  பைஞ்சாய்க் கோரையால் பாவை செய்தல் – ஐங்குறுநூறு 383 – பஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும் அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே, குறுந்தொகை 276 – பணைத்தோள் குறுமகள் பாவை தைஇயும் பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்து மற்றிவள் உருத்தெழு வன முலை ஒளி பெற எழுதிய தொய்யில்.

சொற்பொருள்:  வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மட நடை நாரை – வெள்ளாங்குருகின் பார்ப்பு (குஞ்சு) இறந்ததால் அதைக் காண்பதற்குச் சென்ற மெல்லிய நடையையுடைய நாரை, பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய ஓதமொடு பெயரும் துறைவற்கு – மனம் பதைத்துத் தன் சிறகை அசைத்ததால் சிதைவுற்ற நெய்தல் மலர்கள் கழியில் வெள்ளத்துடன் இடம் பெயர்ந்து செல்லும் துறையின் தலைவனுக்கு, பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே – நான் பஞ்சாய்க் கோரையினால் செய்த பாவையை முன்பே ஈன்றிருக்கின்றேன்

ஐங்குறுநூறு 156, அம்மூவனார், நெய்தல் திணைதலைவனின் நண்பர்களிடம் தோழி சொன்னது
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மட நடை நாரை
பதைப்ப ஒழிந்த செம்மறுத் தூவி
தெண் கழிப் பரக்குந் துறைவன்,
எனக்கோ காதலன், அனைக்கோ வேறே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  தலைவன் தன்னுடன் ஊடிய பரத்தையருடன் கூடும்பொருட்டு வாயில்களை அனுப்பினான்.  பின் தலைவியின் ஊடலைத் தீர்ப்பதற்குப் பாணன் நண்பர்கள் ஆகியவர்களைத் தூதாக அனுப்பினான்.  தோழி வாயில் மறுத்தது.

பொருளுரை:  வெள்ளாங்குருகின் பார்ப்பு (குஞ்சு) இறந்ததால் அதைக் காண்பதற்குச் சென்ற மெல்லிய நடையையுடைய நாரை துயரத்தால் உடல் பதைத்தமையால் அதன் உடலிலிருந்து வீழ்ந்த சிவந்த மறுக்கள் கொண்ட இறகுகள் தெளிந்த நீரையுடைய கழியிடத்தில் பரவும் துறைவன், தலைவிபால் பெரும் அன்புடையவன் என்றே நான் எண்ணுகின்றேன்.  ஆனால் தலைவிக்கு அது ஒவ்வாததாக உள்ளது.

குறிப்பு:   பழைய உரை – எனக்கோ காதலன் அனைக்கோ வேறே என்றது, இவள் மேல் அவன் காதலன் என்று நீயிர் கூறுகின்ற மாற்றம் மெய்யென்பது எனக்கும் ஒக்கும்.  இவள் மனதிற்கு ஒவ்வாது என்பதாம்.  அன்னை என்றது தலைமகளை.  செம்மறுத்தூவி தெண்கழி பரக்கும் என்றது அப்பரத்தைக்குக் கூறிவிட்ட மாற்றம் எவ்விடத்தும் பரந்து செல்கின்ற துறைவன் என்றவாறு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெள்ளாங்குருகினை இழவு கண்டு அளாவலச் சென்ற நாரை பதைத்தலாலே உதிர்ந்த தூவி தெண்கழி நீரெலாம் பரவிக் கெடுக்கும் என்றது, தன்பால் ஊடியிருந்தமையாலே அன்பை இழந்திருந்த பரத்தையை ஊடல் தீர்க்கச் சென்ற துறைவன், அவள் பின்னும் பிணங்குதல் கண்டு உளம் நடுங்கி அவளைத் தெளித்ததற்குக் கூறிய வஞ்சகப் பொய்ம்மொழிகள் தலைவியின் பாங்காயினர் வாயிலாக அவள் நெஞ்சத்தே புகுந்து அவளை வருத்துகின்றன என்பது.  இலக்கணக் குறிப்பு – காணிய – செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், பதைப்ப – செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், எனக்கோ – ஓகாரம் பிரிநிலை, அனைக்கோ – அனை அன்னை என்பதன் இடைக்குறை, ஓகாரம் பிரிநிலை, வேறே – ஏகாரம் அசைநிலை.  செம்மறுத் தூவி  (3) – உ. வே. சாமிநாதையர் உரை – செந்நிறத்தையுடைய தூவி, ஒளவை துரைசாமி உரை – செவ்விய வரிகளையுடைய இறகு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிவந்த களங்கத்தையுடைய இறகுகள், அ. தட்சிணாமூர்த்தி உரை – சிவந்த மறுக்கள் கொண்ட இறகுகள், ச. வே. சுப்பிரமணியன் உரை – சிவந்த ஓரங்கள் உள்ள இறகுகள்.

சொற்பொருள்:  வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மட நடை நாரை – வெள்ளாங்குருகின் பார்ப்பு (குஞ்சு) இறந்ததால் அதைக் காண்பதற்குச் சென்ற மெல்லிய நடையையுடைய நாரை, பதைப்ப ஒழிந்த செம்மறுத் தூவி தெண் கழிப் பரக்குந் துறைவன் எனக்கோ காதலன் – துயரத்தால் உடல் பதைத்தமையால் அதன் உடலிலிருந்து வீழ்ந்த சிவந்த மறுக்கள் கொண்ட இறகுகள் தெளிந்த நீரையுடைய கழியிடத்தில் பரவும் துறைவன் தலைவிபால் பெரும் அன்புடையவன் என்றே நான் எண்ணுகின்றேன், அனைக்கோ வேறே – தலைவிக்கு வேறாக உள்ளது

ஐங்குறுநூறு 157, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தனக்குள் சொன்னது
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மட நடை நாரை
காலையிருந்து மாலைச் சேக்கும்,
தெண் கடல் சேர்ப்பனொடு வாரான்,
தான் வந்தனன், எம் காதலோனே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  பரத்தமை ஒழுக்கத்தை மேற்கொண்ட தலைவன்பால் ஊடியிருந்த தலைவி, தெருவில் விளையாடும் தங்கள் புதல்வனை அவன் தழுவிக்கொண்டு இல்லம் புகுவானாயின், அவனை விலக்குவது இயலாததாக இருக்கும் என அஞ்சியிருந்தாள். விளையாடச் சென்ற புதல்வன் தனியே வந்தான்.  அவனைத் தழுவிக்கொண்டு கூறியது.

பொருளுரை:  வெள்ளாங்குருகின் பார்ப்பு (குஞ்சு) இறந்ததால் அதைக் காண்பதற்குச் சென்ற மெல்லிய நடையையுடைய நாரை, காலை முதல் மாலை வரை அங்கேயே தங்கும் தெளிந்த நீருடைய கடல் நிலத் தலைவனொடு வரவில்லை, தனித்து வந்தான் என் பேரன்புக்குரிய மகன்.

குறிப்பு:  பழைய உரை – காதலன் என்றது, என்மேல் என் புதல்வன் காதலன் என்பதறிந்தேன்.  அவனோடு வராது தனித்து வருதலான் என்றவாறு.  நாரை காலையிருந்து மாலை சேக்கும் துறைவன் என்றது, பரத்தையிடத்து விட்ட வாயில்கள் செவ்வி பெறாது பகலெல்லாம் இருந்து இரவின்கண்ணும் அங்கே துயில்கின்றாரென்பதாம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெள்ளாங்குருகைக் காணச் சென்ற நாரை காலையிலிருந்து மாலைவரையிருந்தும் மீளாமல் ஆங்கேயே தங்கும் சேர்ப்பன் என்றது, தலைவன் பகற்பொழுதிலே சேரியிலே வதித்தலோடமையாது இரவினும் அவர்பாலே தங்கிவிடுகின்றான் எனத் தலைவன் கொடுமை கூறியவாறென்க.  இலக்கணக் குறிப்பு – காணிய – செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், காதலோனே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மட நடை நாரை – வெள்ளாங்குருகின் பார்ப்பு (குஞ்சு) இறந்ததால் அதைக் காண்பதற்குச் சென்ற மெல்லிய நடையையுடைய நாரை, காலையிருந்து மாலைச் சேக்கும் தெண் கடல் சேர்ப்பனொடு வாரான் – காலை முதல் மாலை வரை தங்கும் தெளிந்த நீருடைய கடல் நிலத் தலைவனொடு வரவில்லை, தான் வந்தனன் எம் காதலோனே – தனித்து வந்தான் என் பேரன்புக்குரிய மகன்

ஐங்குறுநூறு 158, அம்மூவனார், நெய்தல் திணைதோழி தலைவனிடம் சொன்னது
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மட நடை நாரை
கானலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும்
தண்ணந்துறைவன் கண்டிகும்,
அம் மா மேனி எம் தோழியது துயரே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  தலைவனுடன் உறவுகொண்ட பரத்தை அவனுடன் ஊடினாள்.  அப்பொழுது அவன் தலைவியின் ஊடலைத் தீர்க்க முயல்கிறான்.  தோழி அவனிடம் கூறியது.  வாயில் மறுத்தது.

பொருளுரை:  வெள்ளாங்குருகின் பார்ப்பு (குஞ்சு) இறந்ததால் அதைக் காண்பதற்குச் சென்ற மெல்லிய நடையையுடைய நாரை கானலையுடைய பெரிய கடற்கரையின்கண் தன் பெடையொடு சுற்றித் திரியும் இடமான குளிர்ந்த கடற்துறையையுடைய தலைவனே! அழகிய மாந்தளிர் போலும் மேனியுடைய உன்னுடைய பரத்தையாகிய எம்முடைய தோழியின் துயரை நீ காண்பாயாக!

குறிப்பு:   பழைய உரை – ‘கண்டிகும் அம் மா மேனி எம் தோழியது துயரே’ என்றது, எம்மிடத்துத் துயரமில்லை.  எம் தோழியாகிய பரத்தைத் தலைவிபால் துயரம் கண்டேம்.  நீ கடிதிற் சென்று அவள் வருத்தம் தீர்ப்பாயாக என்றவாறு. ‘நாரை கானலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும்’ என்றது, நினக்கு வாயிலாகச் சென்றார் அவள் கருத்தறிந்து மகிழ்ந்து ஒழுகுகின்றார் என்பதாம். உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெள்ளாங் குருகினைக் காணிய சென்ற நாரை (மீண்டும் வந்து) கானலம் பெருந்துறையிடத்துத் தன் துணையோடு சுற்றித் திரியும் என்றது, காமக்கிழத்தியின் அன்பு இடையறுந்தமையால் அவளை ஊடல் தீர்க்கச் சென்றாய்.  அவள் ஊடல் தீராமையால் மீண்டு வந்து தலைவியோடு அளவளாவ முயல்கின்றாய் என்பது.  இலக்கணக் குறிப்பு –  காணிய – செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், தண்துறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, கானலம் – அம் சாரியை, விரிக்கும் வழி விரித்தல், கண்டிகும் – இகும் முன்னிலை அசைச் சொல், கொட்கும் – செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம், துயரே – ஏகாரம் அசைநிலை.  கண்டிகும் (4) – உ. வே. சாமிநாதையர் உரை, அ. தட்சிணாமூர்த்தி உரை – கண்டோம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ காண், இகும் முன்னிலை அசைச் சொல், ஒளவை துரைசாமி உரை – கண்டேம்.  இகும் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  அவற்றுள் இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  எம் தோழி (5) – அ. தட்சிணாமூர்த்தி உரை – தோழி பரத்தையை ‘எம் தோழி’ என்றாள் தனக்கும் தலைவிக்கும் சமமான மதிப்பைப் பரத்தைக்கு அளித்தான் என்ற குறிப்பில்.  ‘எம் தோழி’ என்று பரத்தையைச் சுட்டியது ஊடற் குறிப்புடன் ஆகும்.   ‘எம் தோழி’ என்பது தலைவியையும் உள்ளடக்கியாகும்.

சொற்பொருள்:  வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மட நடை நாரை – வெள்ளாங்குருகின் பார்ப்பு (குஞ்சு) இறந்ததால் அதைக் காண்பதற்குச் சென்ற மெல்லிய நடையையுடைய நாரை, கானலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும் தண்ணந்துறைவன் – கானலையுடைய பெரிய கடற்கரையின்கண் தன் பெடையொடு சுற்றித் திரியும் இடமான குளிர்ந்த கடற்துறையையுடைய தலைவனே (தண்ணந்துறைவன்  – விளி), கண்டிகும் – காண்பாயாக, அம் மா மேனி எம் தோழியது துயரே – அழகிய மாந்தளிர் போலும் மேனியுடைய உன்னுடைய பரத்தையாகிய எம்முடைய தோழியின் துயரை

ஐங்குறுநூறு 159, அம்மூவனார், நெய்தல் திணைதோழி தலைவனிடம் சொன்னது
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மட நடை நாரை
பசி தின அல்கும் பனி நீர்ச் சேர்ப்ப
நின் ஒன்று இரக்குவென் அல்லேன்,
தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  தலைவன் பரத்தையின் இல்லத்திலிருந்து வந்து தலையின் ஊடலை நீக்கி அவளுடன் கூட எண்ணினான்.  தலைவி மறுக்க மாட்டாள் இவ்வேளையில் என உணவு உண்ணும் நேரத்திற்கு வந்தான்.  அவனிடம் தோழி சொன்னது.

பொருளுரை:  வெள்ளாங்குருகின் பார்ப்பு (குஞ்சு) இறந்ததால் அதைக் காண்பதற்குச் சென்ற மெல்லிய நடையையுடைய நாரை பசி தன்னை வருத்த அங்கே தங்கியிருக்கும், குளிர்ந்த கடற்துறையை உடைய தலைவனே!  உன்னிடம் ஒன்றை நான் இரந்து வேண்ட மாட்டேன்.  இவளிடமிருந்து கவர்ந்து கொண்ட நலனைத் தந்து விட்டு நீ செல்வாயாக.

குறிப்பு:  பழைய உரை – நீ கொண்ட இவள் நலம் தந்தனை செல் எனக் கூட்டுக.  நாரை ……………….. சேர்ப்ப என்றது, நின் பரத்தை மனைக்கண் வாயிலாய்ச் சென்றோர் நின்னைப் பார்த்திருந்து பசிப்பர்.  அவருடன் அருந்தக் கடிதின் அவள் மனைக்கண் செல்வாய் என்பதாம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குருகினைக் காணச் சென்ற நாரை பசி நலியவும் ஆண்டே உறையும் என்றது, பரத்தையரை வயப்படுத்தும் கருமமே கண்ணாகிய நீ பசியை ஒரு பொருளென மதியாமல் அவர்பாலே தங்கும் இயல்புடையை என்பது நாங்கள் உணர்குவம் என்பது.  இலக்கணக் குறிப்பு – காணிய – செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், தின – தின்ன என்பதன் விகாரம், தந்தனை – தந்து, சென்மோ – மோ முன்னிலையசை, நலனே – ஏகாரம் அசைநிலை.  எம் நலத்தைத் தா என்றல் – குறுந்தொகை 236தந்தனை சென்மோ, தண் கடல் சேர்ப்ப, நீ உண்ட என் நலனே. குறுந்தொகை 238தொண்டி அன்ன என் நலம் தந்து, கொண்டனை சென்மோ மகிழ்ந நின் சூளே, குறுந்தொகை 349 – தண்ணந்துறைவன் தொடுத்து, நம் நலம் கொள்வாம் என்றி தோழி, நற்றிணை 395 – எம் வேட்டனை அல்லையால், நலம் தந்து சென்மே, அகநானூறு 376 – மரந்தை அன்ன என் நலம் தந்து சென்மே, அகநானூறு 396 – வஞ்சியன்ன என் நலம் தந்து சென்மே, ஐங்குறுநூறு 159 – தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே.

சொற்பொருள்:  வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மட நடை நாரை – வெள்ளாங்குருகின் பார்ப்பு (குஞ்சு) இறந்ததால் அதைக் காண்பதற்குச் சென்ற மெல்லிய நடையையுடைய நாரை, பசி தின அல்கும் – பசி வருத்த அங்கே தங்கியிருக்கும், பனி நீர்ச் சேர்ப்ப – குளிர்ந்த கடற்துறையை உடைய தலைவனே, நின் ஒன்று இரக்குவென் அல்லேன் – உன்னிடம் ஒன்றை நான் இரந்து வேண்ட மாட்டேன், தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே – நீ கவர்ந்து கொண்ட இவளுடைய நலனைத் தந்து விட்டு நீ செல்வாயாக

ஐங்குறுநூறு 160, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தலைவனிடம் சொன்னது
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மட நடை நாரை
நொந்ததன் தலையும் நோய் மிகும் துறைவ!
பண்டையின் மிகப் பெரிது இனைஇ
முயங்குமதி பெரும, மயங்கினள் பெரிதே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  பரத்தை ஒருத்தி தலைவனுடன் ஊடினாள். அவளுடை ஊடலைத் தீர்க்காது, தலைவியிடம் வாயில் வேண்டி வந்தான் என அறிந்த தலைவி வாயில் மறுத்தது.

பொருளுரை:  வெள்ளாங்குருகின் பார்ப்பு (குஞ்சு) இறந்ததால் அதைக் காண்பதற்குச் சென்ற மெல்லிய நடையையுடைய நாரை, அப்பார்ப்பின் சாவினால் வருந்துவதற்கு மேலும் மிகவும் துன்புறும் இடத்தின் தலைவனே!  உன்னுடைய பரத்தை முன்பு உன்னுடன் பிணங்கி வருந்துதலை விடவும் மிகவும் வருந்தி உள்ளாள். மிகவும் மனம் கலங்கியுள்ளாள்.   ஆதலால், பெருமானே, நீ அவளை முயங்கி இன்புறுத்துவாயாக.

குறிப்பு:  பழைய உரை – புண்டையின் என்றது பண்டும் நீ புலவி தீர்த்து முயங்கும் இயல்புடையவை என்றவாறு.  நாரை ……………… துறைவ என்றது, நின் ஆற்றாமைக்குப் பிரிந்து வாயிலாய்ச் சென்றவர்கள் அவள் வருத்தம் கண்டு மிகவும் வருந்துகின்றார்கள் என்பதாம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெள்ளாங்குருகின் பிள்ளை இறந்தமை காணச் சென்ற மடநடை நாரை நொந்ததன் மேலும் நோய்மிகும் என்றது, பெருமானே!  நின் காமக் கிழத்தியின் அன்பு இடையறிவுபட்டமை கருதி வருந்தினாய்; அவள்பாற் சென்றுழி அவள் நின்னோடு பின்னரும் ஊடினாள் ஆகலின் மேலும் வருந்தினை; அவ்வூடல் பேர்த்து அவளைத் தழுவ வழியில்லாமல் ஈங்கு வந்தனை என்று இகழ்ந்தபடியாம்.  இதன்கண் அவ்வூடல் தீர்ந்து அவளை முயங்கமாட்டாயாய் ஈண்டுற்றனை என்பது.  இலக்கணக் குறிப்பு – இனைஇ – அளபெடை, மதி – முன்னிலையசை, பெரிதே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  . தட்சிணாமூர்த்தி உரை – ‘இனைஇ மயங்கினள் பெரிதே’ என்றும், ‘பண்டையின் முயங்குமதி’ என்றும் கூட்டிப் பொருள் கொள்க.  பண்டையின் என்பதிலுள்ள இன் உருபினை ஒப்புப் பொருளில் கொள்ள, ‘பண்டு போலவே அவள் ஊடலைத் தீர்த்து அவளொடு முயங்கி அவள் வருத்தம் தீர்ப்பாய்’ என்னும் பொருளும், உறழ்ச்சிப் பொருளில் கொள்ள, ‘முன்னினும் பேரன்புடையையாய் அவளை அணைத்து இன்புறுத்துவாய்’ என்ற பொருளும் தோன்றும்.  பண்டையின் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பண்டையினும், ஒளவை துரைசாமி உரை – பண்டு போல, தி. சதாசிவ ஐயர் உரை – பண்டு போல.  பொ. வே. சோமசுந்தரனார் உரைபண்டையின் – பண்டு நின்னோடு பிணங்கி வருந்துதலைக்காட்டிலும். பண்டையின் மிகப் பெரிது இனைஇப் பெரிது மயங்கினள் என்றதற்கிணங்க, நீயும் பண்டையின் மிகப் பெரிது அளி செய்து பண்டையினும் மிகப் பெரிது தேற்றுக என்று விரித்தோதுக.

சொற்பொருள்:  வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மட நடை நாரை – வெள்ளாங்குருகின் பார்ப்பு (குஞ்சு) இறந்ததால் அதைக் காண்பதற்குச் சென்ற மெல்லிய நடையையுடைய நாரை, நொந்ததன் தலையும் நோய் மிகும் துறைவ – அப்பார்ப்பின் சாவினால் வருந்துவதற்கு மேலும் மிகவும் துன்புறும் இடத்தின் தலைவனே, பண்டையின் மிகப் பெரிது இனைஇ – உன்னுடைய பரத்தை முன்பு உன்னுடன் பிணங்கி வருந்துதலை விடவும் மிகவும் வருந்தி உள்ளாள், முயங்குமதி – நீ அவளை முயங்கி இன்புறுத்துவாயாக, பெரும – பெருமானே, மயங்கினள் பெரிதே – மிகவும் மனம் கலங்கியுள்ளாள்

சிறுவெண்காக்கைப் பத்து

பாடல்கள் 161–170 – நெய்தல் நிலத்திற்குரிய கருப்பொருளான சிறுவெண்காக்கையை உடையன.  சிறுவெண்காக்கை – Larus ichthyactus, sea gull.

ஐங்குறுநூறு 161, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது
பெருங்கடற் கரையது சிறுவெண்காக்கை
கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்,
பயந்து நுதல் அழியச் சாஅய்
நயந்த நெஞ்சம், நோய்ப்பாலஃதே.

பாடல் பின்னணி:  களவொழுக்கம் நிகழ்வதால் ஊரில் அலர் எழுந்தபொழுது அவ்வலர் அடங்கும் பொருட்டுத், தலைவன் சிலநாட்களாக வராததால் வருந்தினாள் தலைவி.  தோழி அவளை ஆற்றுவித்தாள்.  ஆற்றுவிக்கும் தோழியிடம் அவள் கூறியது.

பொருளுரை:  பெரிய கடற்கரையில் வாழும் சிறிய வெள்ளை நிறக் கடல் காக்கை கரிய கிளைகளையுடைய புன்னை மரத்தின் மேல் தங்கும் துறையின் தலைவன் பொருட்டுப் பசலையுற்று நெற்றியின் ஒளி மழுங்க மெலிந்து, அவனை விரும்பிய நெஞ்சம் மிக்க துன்பத்தில் வீழ்ந்தது.

குறிப்பு:  பழைய உரை – சிறு வெண்காக்கை  ……………….. தங்கும் என்றது, வரைவதற்கு வேண்டுவன முயலாது தன் மனைக்கண்ணே தங்குவான் என்றவாறு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடற்காக்கை தனக்குரிய இரை தேர்தல் ஒழிந்து புன்னைக் கோட்டில் மடிந்து உறைதல் போன்று நம் தலைவனும் வரைதற்கு ஆவன முயலாது வாளா தன் மனைக்கண் அடங்கினான் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – வெண்காக்கை கருங்கோட்டுப் புன்னை – முரண்தொடை, சாஅய் – அளபெடை, சாஅய் என்னுஞ் செய்தெனெச்சமும் செயவென்னெச்சமாகத் திரிக்கப்பட்டது, நோய்ப்பாலஃதே – நோய்ப்பாலது விகார வகையான் நோய்ப்பாலஃது என விரிந்தது, ஏகாரம் அசைநிலை.  சாஅய் – ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (தொல்காப்பியம், உரியியல் 32).

சொற்பொருள்:  பெருங்கடற் கரையது சிறுவெண்காக்கை கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்கு – பெரிய கடற்கரையில் வாழும் சிறிய வெள்ளை நிறக் கடல் காக்கை கரிய கிளைகளையுடைய புன்னை மரத்தின் மேல் தங்கும் துறையின் தலைவனுக்கு, பயந்து நுதல் அழியச் சாஅய் நயந்த நெஞ்சம் நோய்ப்பாலஃதே – பசலையுற்று நெற்றியின் ஒளி மழுங்க மெலிந்து அவனை விரும்பிய நெஞ்சம் துன்பத்தில் வீழ்ந்தது

ஐங்குறுநூறு 162, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது
பெருங்கடற் கரையது சிறுவெண்காக்கை
நீத்து நீர் இருங்கழி இரை தேர்ந்து உண்டு,
பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும்
துறைவன் சொல்லோ, பிற ஆயினவே.

பாடல் பின்னணி:  களவொழுக்கம் நிகழ்வதால் ஊரில் அலர் எழுந்தபொழுது அவ்வலர் அடங்கும் பொருட்டுத், தலைவன் சிலநாட்களாக வராததால் வருந்தினாள் தலைவி.  தோழி அவளை ஆற்றுவித்தாள்.  ஆற்றுவிக்கும் தோழியிடம் அவள் கூறியது.

பொருளுரை:  பெரிய கடற்கரையில் வாழும் சிறிய வெள்ளை நிறக் கடல் காக்கை, ஆழமான நீரையுடைய கரிய (பெரிய) உப்பங்கழியில் இரையை ஆராய்ந்து உண்டு, பூ மணம் கமழும் சோலையின்கண் தங்கும் துறையின் தலைவனின் சொற்கள் பொய்மை உடையனவாய் ஆயின.

குறிப்பு:  பழைய உரை – துறைவன் சொல்லோ பிறவாயின என்றது, இன்ன நாளுள் வரைவல் என்ற சொற்கள் வேறாயின என்றவாறு.  சிறு வெண்காக்கை …………………….. சேக்கும் என்றது, வரைவிற்கு வேண்டுவன முயலாது தன் கருமம் செய்து மனைக்கண்ணே தங்குவான் என்றவாறு.  நீத்து நீர் (2) – தி. சதாசிவ ஐயர் உரை – செல்லு நீர், ஒளவை துரைசாமி உரை – நீந்துமளவு பெருகிய நீர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தனக்கு நிலைகெடாத நீர், ஆழமான நீர்.  நீத்து நீர் குறுந்தொகை 313 – உ. வே. சாமிநாதையர் உரை – வெள்ளமாகிய நீர், இரா. இராகவையங்கார் உரை – நீந்தற்குரிய வெள்ளம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காக்கை நீந்துநீர் இருங்கழி இரை தேர்ந்து உண்டு பூக்கமழ் பொதும்பர்ச் சேக்கும் என்றது, தலைவன் தான் விரும்புகின்ற களவின்பம் வாய்த்த அளவிலே அமைதியுடையவனாய்த் தன் மனைக் கண் சென்று ஆண்டு நுகரும் பிற இன்பங்களிலே நெஞ்சம் போக்கி நம்மைப் பற்றிச் சிந்தியாமலேயே தங்கிவிடுகின்றான் என்பது.  இலக்கணக் குறிப்பு – ஆயினவே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  பெருங்கடற் கரையது சிறுவெண்காக்கை நீத்து நீர் இருங்கழி இரை தேர்ந்து உண்டு பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவன் – பெரிய கடற்கரையில் வாழும் சிறிய வெள்ளை நிறக் கடல் காக்கை ஆழமான நீரையுடைய கரிய (பெரிய) உப்பங்கழியில் இரையை ஆராய்ந்து உண்டு பூ மணம் கமழும் சோலையின்கண் தங்கும் துறையின் தலைவன் (பொதும்பர் – சோலை), சொல்லோ பிற ஆயினவே – சொற்கள் பொய்மை உடையனவாய் ஆயின

ஐங்குறுநூறு 163, அம்மூவனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழித் துவலை ஒலியில் துஞ்சும்
துறைவன் துறந்தெனத், துறந்து என்
இறை ஏர் முன் கை நீக்கிய வளையே.

பாடல் பின்னணி:  களவொழுக்கம் நிகழ்வதால் ஊரில் அலர் எழுந்தபொழுது அவ்வலர் அடங்கும் பொருட்டுத், தலைவன் சிலநாட்களாக வராததால் வருந்தினாள் தலைவி.  தோழி அவளை ஆற்றுவித்தாள்.  ஆற்றுவிக்கும் தோழியிடம் அவள் கூறியது.

பொருளுரை:  பெரிய கடற்கரையில் வாழும் சிறிய வெள்ளை நிறக் கடல் காக்கை பெரிய உப்பங்கழியின் நீர்த் துவலையின் ஒலியில் உறங்கும் நெய்தல் நிலத் தலைவன் என்னைத் துறந்ததால், என்னுடைய இறை பொருந்திய அழகிய முன் கையைத் துறந்து நீங்கின என் வளையல்கள்.

குறிப்பு:  பழைய உரை – சிறுவெண்காக்கை …………………… துஞ்சும் என்றது, ஆண்டுத் தனக்கு இனியவாகக் கூறுவார் மாற்றம் கேட்டு முயற்சியின்றித் தங்குவான் என்பதாகும்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காக்கை இருங்கழித் துவலை ஒலியில் துஞ்சும் என்றது, காக்கை தன் மீது துவலை வீசி ஓவென இரையும் பேரொலியையும் பொருளாக மதியாமல் இனிதே உறங்குமாறு போல, நம் பெருமானும் இவ்வூரவர் கூறும் அம்பலும்  அலம் பொருளென மதியாமல் தன் மனைக்கண்ணே கவலையின்றி உறைகின்றான் என்பது.  இலக்கணக் குறிப்பு – வளையே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  பெருங்கடல் கரையது – பெரிய கடலின் கடற்கரையில், சிறுவெண் காக்கை – சிறுவெண் காக்கை, இருங்கழித் துவலை ஒலியில் – பெரிய உப்பங்கழியின் நீர்த் துவலையின் ஒலியில், துஞ்சும் – உறங்கும், துறைவன் – கடற்கரையின் தலைவன், துறந்தென – என்னைத் துறந்ததால், துறந்து என் இறை ஏர் முன் கை நீக்கிய வளையே – என் இறை பொருந்திய அழகிய முன் கையைத் துறந்து நீங்கின என் வளையல்கள்

ஐங்குறுநூறு 164, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது
பெருங்கடற் கரையது சிறுவெண்காக்கை
இருங்கழி மருங்கின் அயிரை ஆரும்
தண்ணந்துறைவன் தகுதி,
நம்மோடு அமையாது அலர் பயந்தன்றே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  தலைவன் புறத்தொழுக்கத்தை மேற்கொண்டதால் அதுபற்றி வருந்திய தலைவி தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  பெரிய கடற்கரையில் வாழும் சிறிய வெள்ளை நிறக் கடல் காக்கை கரிய கழியில் அயிரை மீன்களை உண்ணும் குளிர்ந்த துறையின் தலைவனின் ஒழுக்க முறைமை, நமக்கு வருத்தம் செய்ததோடு அமையாது, அவனுக்கும் பழியை உண்டாக்கிவிட்டது.

குறிப்பு:  பழைய உரை – சிறுவெண்காக்கை இருங்கழி மருங்கின் அயிரை ஆரும் என்றது, பரத்தையருள்ளும் புல்லியாரை விரும்புவான் என்றவாறு.  துறைவன் தகுதி நம்மோடு அமையாது அலர் பயந்தன்றே என்றது. அவன் தகுதியுடைமை நமக்குத் தீங்கு செய்தலேயன்றித் தனக்கும் அலர் பயந்தது என்பதாம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரை தேரும் சிறுவெண்காக்கை நல்லன தேராமல் புல்லிய அயிரையை உண்ணும் என்றது, பரத்தையருள்ளும் நல்லாரை நாடாது புல்லியோரை நாடுகின்றான் என்பது.  இலக்கணக் குறிப்பு – தண்ணந்துறைவன் – தண்துறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, அம் – சாரியை, விரிக்கும் வழி விரித்தல், பயந்தன்றே – ஏகாரம் அசைநிலை.   தகுதி (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒழுக்க முறை, அ. தட்சிணாமூர்த்தி உரை – தகாத ஒழுக்கம், தீயொழுக்கம்,

சொற்பொருள்:  பெருங்கடற் கரையது சிறுவெண்காக்கை இருங்கழி மருங்கின் அயிரை ஆரும் தண்ணந்துறைவன் தகுதி – பெரிய கடற்கரையில் வாழும் சிறிய வெள்ளை நிறக் கடல் காக்கை கரிய கழியில் அயிரை மீன்களை உண்ணும் குளிர்ந்த துறையின் தலைவனின் ஒழுக்க முறைமை, நம்மோடு அமையாது அலர் பயந்தன்றே – நமக்கு வருத்தம் செய்ததோடு அமையாது அவனுக்கும் பழியை உண்டாக்கிவிட்டது

ஐங்குறுநூறு 165, அம்மூவனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பெருங்கடல் கரையது சிறுவெண்காக்கை
ஆர் கழிச் சிறுமீன் ஆர மாந்தும்
துறைவன் சொல்லிய சொல், என்
நிரை ஏர் எல் வளை கொண்டு நின்றுதுவே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  தலைவன் புறத்தொழுக்கத்தை மேற்கொண்டதால் அதுபற்றி வருந்திய தலைவி தோழியிடம் சொன்னது.

பொருளுரை:   பெரிய கடற்கரையில் வாழும் சிறிய வெள்ளை நிறக் கடல் காக்கை, உப்பங்கழியில் உள்ள சிறிய மீன்களை நிறைய உண்ணும் துறையின் தலைவன் சொன்ன சொற்கள், என் அடுக்கிய, அழகிய, ஒளி மிகுந்த வளையல்களைக் கழன்று விழச் செய்தன.

குறிப்பு:  பழைய உரை – துறைவன் சொல்லிய சொல் என் இறையேர் எல் வளை கொண்டு நின்றதுவே என்றது, வளையைக் கொண்டு நின்றது இப்புறத்தொழுக்கம் அன்று.  முற்காலத்துத் தெளிவிப்பான் சூலுற்ற சொல் என்றவாறு.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை– சிறுவெண்காக்கை நீர் குறைந்த கழிக்கண் உள்ள சிறு மீனை அருந்தும் துறைவன் என்றதனால், நீர்மை குன்றிய பரத்தையர் சேரியுள்ளும் பொய்ச்சூள் புரிந்து புல்லியாரை நயந்து ஒழுகுகின்றான் என்பது.  இலக்கணக் குறிப்பு – நின்றதுவே – ஏகாரம் அசைநிலை.  ஒளவை துரைசாமி உரை:  வளை கொண்டு நின்றது – வளை கழன்று ஓடியது.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

சொற்பொருள்:  பெருங்கடல் – பெரிய கடல், கரையது – கரையின்கண், சிறுவெண்காக்கை – சிறுவெண்காக்கை, ஆர் கழி – உப்பு நீர் குளம், சிறுமீன் – சிறிய மீன், ஆர மாந்தும் – நிறைய உண்ணும், துறைவன் – நெய்தல் நிலத் தலைவன், சொல்லிய சொல் – சொன்ன சொற்கள், என் – என், நிரை – அடுக்கிய, ஏர் – அழகான, எல் வளை – ஒளிரும் வளையல்களை, கொண்டு நின்றுதுவே – கவர்ந்து கொண்டன, கழன்று விழச்செய்தன

ஐங்குறுநூறு 166, அம்மூவனார், நெய்தல் திணைதோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பெருங்கடற் கரையது சிறுவெண்காக்கை,
வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம்
மெல்லம்புலம்பன் தேறி,
நல்லவாயின, நல்லோள் கண்ணே.

பாடல் பின்னணி:  வரையாது வந்தொழுகும் தலைவன் சிறைப்புறத்தானாக, தலைவியின் பசப்பிற்கு வருந்திய தோழி அவனைப் பழித்தது.

பொருளுரை:  வரியுடைய வெள்ளைச் சோழிகளை வலை எனத் தவறாக எண்ணி அஞ்சும் மெல்லிய கடற்கரையின் தலைவனின் சொற்களை உண்மையென நம்பி, பசந்து நலமிழந்தன நல்ல இயல்புகளையுடைய என் தோழியின் கண்கள்.

குறிப்பு:  பழைய உரை – நல்லவாயின நல்லோள் கண் என்றது, கண் பசந்தன என்றவாறு.  சிறுவெங்காக்கை திரையால் கரையில் ஏற்றப்பட்ட பலகறைகளை வலைச் சுற்றிற் கோத்த பலகறையென வெரூஉம் என்றது, நாம் வரைதல் வேண்டிக் கடாவிய சொற்களைத் தனக்கு வருத்தம் செய்வனவாகக் கொண்டு வெருவுகின்றான் என்பதாம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காக்கை பலகறைகளைக் கண்டு வலையென்று அஞ்சி வாளா போனாற் போன்றது, தலைவனும் நாம் வரைவு வற்புறுத்தும் மொழிகளும் தம்முள் வஞ்சம் பொதிந்தனவோ என்று ஐயுற்று வரைவு நீட்டிப்பான் போலும் என்பது.  இலக்கணக் குறிப்பு – நல்லவாயின – குறிப்பு மொழி, வெரூஉம் – செய்யுளிசை அளபெடை, கண்ணே – ஏகாரம் அசைநிலை.  நல்லவாயின (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிழந்து புற்கென்றன, குறிப்புச் சொல், அழகிழந்து பசலையுள் மூழ்கிப் பொலிவிழந்தன என்பது கருத்து, புலியூர்க் கேசிகன் உரை – அழகு பெற்றன, ஒளவை துரைசாமி உரை – பசந்து நலமிழந்தன, எதிர்மறைக் குறிப்புமொழி, அ. தட்சிணாமூர்த்தி உரை – நலமிழந்தன, குறிப்புமொழி.

சொற்பொருள்:  பெருங்கடற் கரையது சிறுவெண்காக்கை – பெரிய கடற்கரையில் வாழும் சிறிய வெள்ளை நிறக் கடல் காக்கை, வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம் மெல்லம்புலம்பன் – வரியுடைய வெள்ளைச் சோழிகளை வலை எனத் தவறாக எண்ணி அஞ்சும் மெல்லிய கடற்கரையின் தலைவன், தேறி – உண்மையென நம்பி, நல்லவாயின நல்லோள் கண்ணே – பசந்து நலமிழந்தன நல்ல இயல்புகளையுடைய என் தோழியின் கண்கள்

ஐங்குறுநூறு 167, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது
பெருங்கடற் கரையது சிறுவெண்காக்கை
இருங்கழி இனக் கெடிறு ஆரும் துறைவன்
நல்குவன் போலக் கூறி
நல்கான் ஆயினும், தொல் கேளன்னே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  தலைவனின் வாயிலாக வந்தவர்களிடம் அவன் கொடுமை கூறித் தோழி பழித்தபோது, அவளிடம் தலைவி சொன்னது.

பொருளுரை:  பெரிய கடற்கரையில் வாழும் சிறிய வெள்ளை நிறக் கடல் காக்கை பெரிய உப்பங்கழியின்கண் கெளிற்று மீன்களை உண்ணும் கடற்துறையின் தலைவன், அருளுடையவன் போல் நம்மிடம் பேசி, அதன்பின் அருள் செய்யான் ஆயினும், நம்முடன் பண்டைய நட்புடையவன்.

குறிப்பு:  பழைய உரை – தொல்கேள் என்றது, நமக்கு பண்டு கேளாகிய தன்மையினையுடையான் என்றவாறு.  சிறுவெண்காக்கை ………………….. ஆரும் என்றது, பரத்தையர் பலரையும் தனக்கு வரும் வருத்தம் அறியாது நுகர்வான் என்பதாம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காக்கை நன்மீன் இருப்பவும் உண்டபின் துன்புறுத்தும் முள்ளுடைய கெடிற்றுமீனை உண்டாற்போன்று, நம் பெருமானும் இம்மைக்கும் மறுமைக்கும் ஆக்கந்தரும் எம் பெருமாட்டியிருப்பவே இம்மையிற் பழியும் மறுமைக்கண் நிரயமும் தருதற்கேதுவான பரத்தையரைத் தேடித் திரிகின்றான் என்பதாம், ஒளவை துரைசாமி உரை– பெருங்கடற்கரையதாகிய வெண்காக்கை ஆண்டுள்ள நன்மீன்களை உண்டற்கு அமையினும் கழிக்கண் வாழும் கெடிற்றுமீனை உண்ணும் துறைவன் ஆதலால், தலைமகன் தன் தலைமைக்கேற்ப நமக்கே தலையளி செய்து ஒழுக்கற்பாலனாயினும் சேரிக்கண் வாழும் சிறப்பில்லாத பரத்தையரை நுகர்கின்றான் என்பது.  இலக்கணக் குறிப்பு – கேளன்னே – கேளனே என்பது விகாரப்பட்டு கேளன்னே என்று ஆயிற்று, விரிக்கும் வழி விரித்தல், ஏகாரம் அசைநிலை.  தொல் கேளன் (4) – பழைய உரை – நமக்குப் பண்டு கேளாகிய தன்மையினை உடையான், ஒளவை துரைசாமி உரை – அவன் நமக்குப் பண்டே கேளாகிய தன்மையுடையவன், அ. தட்சிணாமூர்த்தி உரை – அவன் நமக்கு பல பிறவிகளிலும் உருவாக்கிய கிழமை உடையவனே.

சொற்பொருள்:  பெருங்கடற் கரையது சிறுவெண்காக்கை இருங்கழி இனக் கெடிறு ஆரும் துறைவன் – பெரிய கடற்கரையில் வாழும் சிறிய வெள்ளை நிறக் கடல் காக்கை பெரிய உப்பங்கழியின்கண் கெளிற்று மீன்களை உண்ணும் கடற்துறையின் தலைவன், நல்குவன் போலக் கூறி நல்கான் ஆயினும் – அருளுடையவன் போல் நம்மிடம் பேசி அதன்பின் அருள் செய்யான் ஆயினும், தொல் கேளன்னே – நம்முடன் பண்டைய நட்புடையவன்

ஐங்குறுநூறு 168, அம்மூவனார், நெய்தல் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
பெருங்கடற் கரையது சிறுவெண்காக்கை
துறைபடி அம்பி அக மனை ஈனும்
தண்ணந்துறைவன் நல்கின்,
ஒண்ணுதல் அரிவை பால் ஆரும்மே.

பாடல் பின்னணி:  தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.  நொதுமலர் வரைவு வேண்டி வந்ததை அறிந்த தலைவி பாலும் உண்ணாளாய் வருந்தியிருந்தாள்.  காரணம் கேட்ட செவிலித்தாயிடம் தோழி சொன்னது.

பொருளுரை:  பெரிய கடற்கரையில் வாழும் சிறிய வெள்ளை நிறக் கடல் காக்கை துறையில் இயங்காது இருக்கும் தோணியின் அகத்தே முட்டைகளை ஈனும் இடமான குளிர்ந்த துறையின் தலைவன் அருள் செய்தால், ஒளியுடைய நெற்றியையுடைய என் தோழி பாலைப் பருகுவாள்.

குறிப்பு:   பழைய உரை – துறைபடி அம்பி யகமனை ஈனும் என்றது யாவர்க்கும் எவ்விடத்தும் தீங்கு வராத துறைவன் என அவன் சிறப்புக் கூறியவாறு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காக்கை தன் முட்டையினைப் பாதுகாவலான தோணியின் அகமனைக்கண் இட்டு வைத்தாற் போன்று துறைவனும் தன்னுடைய சிறந்த கேண்மையினைத் தலைவியின் நெஞ்சத்தே நன்கு பதித்து வைத்தனன் என்பது.  இலக்கணக் குறிப்பு – தண்ணந்துறைவன்– தண்துறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, அம் – சாரியை, விரிக்கும் வழி விரித்தல், ஆரும்மே – விரித்தல் விகாரம்.

சொற்பொருள்:  பெருங்கடற் கரையது சிறுவெண்காக்கை துறைபடி அம்பி அக மனை ஈனும் தண்ணந்துறைவன் நல்கின் – பெரிய கடற்கரையில் வாழும் சிறிய வெள்ளை நிறக் கடல் காக்கை துறையில் இயங்காது இருக்கும் தோணியின் அகத்தே முட்டைகளை ஈனும் இடமான குளிர்ந்த துறையின் தலைவன் அருள் செய்தால், ஒண்ணுதல் அரிவை பால் ஆரும்மே – ஒளியுடைய நெற்றியையுடைய என் தோழி பாலைப் பருகுவாள்

ஐங்குறுநூறு 169, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது
பெருங்கடற் கரையது சிறுவெண்காக்கை
பொன் இணர் ஞாழல் முனையின் பொதி அவிழ்
புன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன்
நெஞ்சத்து உண்மை அறிந்தும்,
என் செயப் பசக்கும் தோழி என் கண்ணே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  தலைவனின் பரத்தமை ஒழுக்கம் காரணமாகப் புலந்திருந்தாள் தலைவி.  தலைவன் மீண்டும் மனைக்கு வரத் தலைவியின் உடன்பாடு பெற முயன்றாள் தோழி.  வாயில் வேண்டிய தோழி ‘உன் கண்கள் பசந்தன’ எனக் கூறியபொழுது அவளிடம் தலைவி உரைத்தது.

பொருளுரை:  தோழி!  பெரிய கடற்கரையில் வாழும் சிறிய வெள்ளை நிறக் கடல் காக்கை பொன்னிற மலர்க் கொத்துக்களை உடைய ஞாழல் மரத்தை வெறுத்ததால், அப்பொழுது பூவிதழ்கள் விரிக்கின்ற புன்னை மரத்தின் மலர்களையுடைய கிளையில் சென்று தங்கும் துறையின் தலைவன், என் நெஞ்சில் உள்ளான் என்பதை அறிந்தும், யாது செய்ய எண்ணி என் கண்கள் பசலை அடைந்தன?

குறிப்பு:  பழைய உரை – சிறுவெண்காக்கை ஞாழலை வெறுப்பின் புன்னைச் சினையிற் சேக்கும் என்றது, பரத்தையர் மனையில் ஒன்று வெறுப்பின் ஒன்றின்கண் தங்குதலையுடையான் என்பதாம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிறுவெண்காக்கை ஞாழல் மரத்தினை வெறுத்துழிப் புதிதாகப் பொதியவிழும் புன்னை மரக்கிளைதொறும் தாவித் தாவிச் சென்று உறையுமாறுபோல, நம் பெருமானும் நம்மையும் நம்மை ஒத்த காமக் கிழத்தியையும் வெறுப்புழிப் புதிதாகப் பருவமடைகின்ற சேரிப் பரத்தையர் மகளிரை நாடி நாடி அவர் மனைதோறும் சென்று உறைகின்றான் என்பது.  இலக்கணக் குறிப்பு – பசக்கும் – உம்மை இழிவு சிறப்பு, செய – இடைக்குறை, கண்ணே – ஏகாரம் அசைநிலை.  துறைவன் நெஞ்சத்து உண்மை அறிந்தும் (4) – தி. சதாசிவ ஐயர் உரை – துறைவனது நெஞ்சிலுள்ள உண்மை அறிந்து, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடற்றுறையையுடைய நம்பெருமான் எனது நெஞ்சத்தில் நொடிப்பொழுதும் அகலாமல் இருத்தலை நன்கு அறிந்துவைத்தும், ஒளவை துரைசாமி உரை – துறைவன் என் நெஞ்சத்து உளனாதலை அறிந்து வைத்தும்.

சொற்பொருள்:  பெருங்கடற் கரையது சிறுவெண்காக்கை பொன் இணர் ஞாழல் முனையின் பொதி அவிழ் புன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன் – பெரிய கடற்கரையில் வாழும் சிறிய வெள்ளை நிறக் கடல் காக்கை பொன்னிற மலர்க் கொத்துக்களை உடைய ஞாழல் மரத்தை வெறுத்ததால் அப்பொழுது பூவிதழ்கள் விரிக்கின்ற புன்னை மரத்தின் மலர்களையுடைய கிளையில் சென்று தங்கும் துறையின் தலைவன் (இணர் – கொத்து, சினை – மரக்கிளை, முனையின் – வெறுத்ததால்), நெஞ்சத்து உண்மை அறிந்தும் என் செயப் பசக்கும் தோழி என் கண்ணே – நெஞ்சில் உள்ளான் என்பதை அறிந்தும் யாது செய்ய எண்ணி என் கண்கள் பசலை அடைந்தன தோழி

ஐங்குறுநூறு 170, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது
பெருங்கடற் கரையது சிறுவெண்காக்கை
இருங்கழி நெய்தல் சிதைக்கும் துறைவன்
நல்லன் என்றியாயின்,
பல்லிதழ் உண்கண் பசத்தல் மற்று எவனோ?

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  தலைவனின் புறத்தொழுக்கம் காரணமாக வேறுபட்ட தலைவி, ‘உன் மேல் அன்புடையவன் அவன்’ எனக்கூறும் தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  பெரிய கடற்கரையில் வாழும் சிறிய வெள்ளை நிறக் கடல் காக்கை பெரிய கழியில் உள்ள நெய்தல் மலர்களைச் சிதைக்கும் துறையின் தலைவன், நல்லவன் என நீ கூறுவாயின், பல இதழ்களையுடைய மலர்கள் போன்ற என் மையுண்ட கண்கள் பசப்பதற்குக் காரணம் என்ன?

குறிப்பு:  பழைய உரை – சிறுவெண்காக்கை இருங்கழி நெய்தல் சிதைக்கும் என்றது, தான் பற்றிய பரத்தையருடைய நலம் சிதைப்பான் என்பதாம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காக்கை கழியின்கண் உள்ள நெய்தல் மலர்களைச் சிதைக்கும் என்றது, அது போலவே தலைவனும் சேரியின்கண்ணுள்ள பரத்தை மகளிர்களை நயந்து நயந்து பின்னர் நயன்தாரைக் கைவிட்டு அவர் நலத்தை என் நலம் கெடுமாறு போலக் கெடும்படி செய்கின்றான் என்பது.  இலக்கணக் குறிப்பு – என்றி – முன்னிலை ஒருமை, மற்று – இடைச்சொல், எவனோ – ஓகாரம் அசைநிலை, பல்லிதழ் – பூவிற்கு ஆகுபெயர், அகரம் கெட்டுக் ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ – தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 160, என்றதனால் லகரம் இரட்டித்து, பல்லிதழ் என முடிந்தது.

சொற்பொருள்:  பெருங்கடற் கரையது சிறுவெண்காக்கை இருங்கழி நெய்தல் சிதைக்கும் துறைவன் – பெரிய கடற்கரையில் வாழும் சிறிய வெள்ளை நிறக் கடல் காக்கை பெரிய கழியில் உள்ள நெய்தல் மலர்களைச் சிதைக்கும் துறையின் தலைவன், நல்லன் என்றியாயின் – நல்லவன் என நீ கூறுவாயின், பல்லிதழ் உண்கண் பசத்தல் மற்று எவனோ – பல இதழ்களையுடைய மலர்கள் போன்ற என் மையுண்ட கண்கள் பசப்பதற்குக் காரணம் என்ன

தொண்டிப் பத்து

பாடல்கள் 171–180 – சேரரின் கடற்கரை நகரமான (பட்டினமான) தொண்டி இப்பாடல்களில் உள்ளது.  பாட்டுக்கள் பத்தும் அந்தாதித் தொடையில் அமைந்தவை.  பதிற்றுப்பத்து 31–40, புறநானூறு 2ம் பாடலின் முதல் 5 அடிகள் ஆகியற்றில் அந்தாதித் தொடை உள்ளன.

ஐங்குறுநூறு 171, அம்மூவனார், நெய்தல் திணைதலைவன் தலைவியை நோக்கித் தன்னுள் சொன்னது
திரை இமிழ் இன்னிசை அளைஇ, அயலது
முழவு இமிழ் இன்னிசை மறுகு தொறு இசைக்கும்
தொண்டி அன்ன, பணைத்தோள்
ஒண்தொடி அரிவை, என் நெஞ்சு கொண்டோளே.

பாடல் பின்னணி:  தலைவியுடன் கூடியபின் நீங்கும் தலைவன், தோழியருடன் செல்லும் தலைவியைக் கண்டு தன்னுள் சொன்னது.

பொருளுரை:  கடல் அலைகள் ஒலிக்கும் இனிய இசையுடன் கலந்து, முழவின் இன்னிசை அயலில் உள்ள தெருக்கள்தோறும் முழங்கும் தொண்டி நகரம் போன்ற சிறப்புடைய, மூங்கில்போன்ற தோள்களையும் ஒளிரும் வளையல்களையும் உடைய அரிவையாகிய இவள், என் நெஞ்சைக் கவர்ந்துகொண்டாள்.

குறிப்பு:  பழைய உரை – திரையின் ஒலியொடு கலந்து முழவு ஒலிக்கும் என்றது, உடன் செல்கின்ற ஆயத்தார் மகிழ்ச்சியரவமும், உழையராய் எதிர் வருகின்றார் மகிழ்ச்சியரவமும் கூறியவாறு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தொண்டி மாந்தர் நுகர்தற்குரிய ஐந்து வகை இன்பத்தையும் தன்பால் கொண்டிருத்தல் போன்று இவளும் அவ்வின்பங்கள் அனைத்தையும் தன்பால் உடையாள் ஆயினள் என்பது.  இலக்கணக் குறிப்பு – இமிழ் இன்னிசை – ஈரிடத்தும் வினைத்தொகை, அளைஇ – சொல்லிசை அளபெடை, வினையெச்சம், பணைத்தோள் – உவமைத்தொகை, அன்ன – உவம உருபு, கொண்டோளே– ஏகாரம் அசைநிலை. பணைத்தோள் (3) – ஒளவை துரைசாமி உரை – பருத்த தோள்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மூங்கில் போன்ற தோள்கள்.  தொண்டி அன்ன (3) – அ. தட்சிணாமூர்த்தி உரை – அழகிய ஊர், நகரம், மலை, ஆறு முதலியவற்றைத் தலைவிக்கு உவமை கூறும் மரபு சங்க இலக்கியத்தில் சிறப்பாகக் காணத்தக்கது.  புலவர்கள் தாம் மதித்துப் போற்றிய மன்னர்களையும் தலைவர்களையும் நினைவு கூர்தற்பொருட்டு இந்த உத்தியைக் கையாண்டனர்.

சொற்பொருள்:  திரை இமிழ் இன்னிசை அளைஇ அயலது முழவு இமிழ் இன்னிசை மறுகு தொறு இசைக்கும் தொண்டி அன்ன – கடல் அலைகள் ஒலிக்கும் இனிய இசையுடன் கலந்து முழவின் இன்னிசை அயலில் உள்ள தெருக்கள்தோறும் முழங்கும் தொண்டி நகரம் போன்ற சிறப்புடைய, பணைத்தோள் ஒண்தொடி அரிவை – மூங்கில்போன்ற தோள்களையும் ஒளிரும் வளையல்களையும் உடைய அரிவையாகிய இவள், என் நெஞ்சு கொண்டோளே – என் நெஞ்சைக் கவர்ந்துகொண்ட இவள்

ஐங்குறுநூறு 172, அம்மூவனார், நெய்தல் திணை தலைவன் தன் தோழனிடம் சொன்னது
ஒண்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே,
வண்டு இமிர் பனித் துறைத் தொண்டி ஆங்கண்
உரவுக் கடல் ஒலித் திரையென,
இரவினானும், துயில் அறியேனே.

பாடல் பின்னணி:  ‘நீ கண் துயில்கின்றாய் அல்லை.  இதன் காரணம் ஏன்?’ எனக் கேட்ட தோழனிடம் தலைவன் சொன்னது.

பொருளுரை:  ஒளிரும் வளையல்களை அணிந்த இளம்பெண் ஒருத்தி என் நெஞ்சை கவர்ந்துகொண்டாள் என்பதால், வண்டுகள் ஒலிக்கும் குளிர்ந்த துறையுடைய தொண்டி நகரத்தின்கண் பரந்த கடலின் முழங்கும் அலைகள் போன்று இரவு நேரத்திலும் நான் உறக்கம் இல்லாது உள்ளேன்.

குறிப்பு:  பழைய உரை – உரவுக்கடல் ஒலித்திரையென இரவினும் துயிலறியேன் என்றது, தன் வலியழிவு கூறியவாறு.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – உரவுக்கடல் ஒலித்திரை என்றதனால், எழுந்தெழுந்து அடங்கும் திரைகளைப் போலக் கூடுவதற்கு உரிய காரணம் புலனாயவிடத்து எழுச்சியும், கூடாமை நினைந்தவழித் தளர்ச்சியும் தோன்றி இடையறாக் கலக்கம் எய்துவித்தமை பெறப்பட்டது என்றது, புலியூர்க் கேசிகன் உரை – உரவுக் கடல் ஒலித்திரை இரவினும் ஓயாதே எழுந்து மோதி துன்புறுமாறுபோல யானும் துயில் இழந்து உணர்வு எழுந்து அலைக்கழிப்ப வருந்தியிருப்பேன் என்றது.  இலக்கணக் குறிப்பு – ஒலித் திரை – இரண்டனுருபும் பயனும் தொக்க தொகை, இரவினானும் – உம்மை இறந்தது தழுவியது, உம்மை உயர்வு சிறப்பு, அறியேனே – ஏகாரம் அசைநிலை. உரவு (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய, ஒளவை துரைசாமி உரை – பரந்த.

சொற்பொருள்:  ஒண்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே – ஒளிரும் வளையல்களை அணிந்த இளம்பெண் ஒருத்தி என் நெஞ்சை கவர்ந்துகொண்டாள், வண்டு இமிர் பனித் துறைத் தொண்டி ஆங்கண் உரவுக் கடல் ஒலித் திரையென இரவினானும் துயில் அறியேனே – வண்டுகள் ஒலிக்கும் குளிர்ந்த துறையுடைய தொண்டி நகரத்தின்கண் பரந்த கடலின் முழங்கும் அலைகள் போன்று இரவு நேரத்திலும் நான் உறக்கம் இல்லாது உள்ளேன்

ஐங்குறுநூறு 173, அம்மூவனார், நெய்தல் திணைதலைவனின் தோழன் தன்னுள்ளே சொன்னது
இரவினானும் இன்துயில் அறியாது,
அரவுறு துயரம் எய்துப, தொண்டித்
தண் நறு நெய்தல் நாறும்
பின் இருங்கூந்தல் அணங்குற்றோரே.

பாடல் பின்னணி:  காதல் வயப்பட்ட தலைவனுடைய மெலிவின் காரணம் அறிந்த தோழன், சேய்மையில் நின்று குறியிடத்தில் தலைவியைக் கண்ட பின், தனக்குள் சொன்னது.

பொருளுரை:  இரவு நேரத்திலும் இனிய துயிலைப் பெறாது, மணியை இழந்த பாம்பு போன்று துன்பத்தை அடைவார்கள், தொண்டி நகரத்தில் மலரும் குளிர்ச்சியும் நறுமணமும் கொண்ட நெய்தல் பூக்கள் போல் நறுமணம் வீசும் பின்னப்பட்ட கரிய கூந்தலையுடைய பெண்ணால் தாக்குண்டோர்.

குறிப்பு:  பழைய உரை – தொண்டித் தண்ணறு நெய்தல் போல் நாறும் கூந்தல் என்றது, சேய்மைக்கண்ணே நாறுதல் நோக்கி.  உள்ளுறை – புலியூர்க் கேசிகன் உரை – தொண்டியின் தண் நறு நெய்தல் தொலைவுக்கும் மணங்கமழ்ந்து உணர்வெழுச்சி ஊட்டலேப் போலத் தன்னூரில் இருக்கும் அவளும் தொலைவிடத்தானான தலைவனிடத்தேயும் தன் நினைவாலே எழும் உணர்வு மீதூறச் செய்வாள் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – இரவினானும் – உம்மை உயர்வு சிறப்பு, இருங்கூந்தல் – அன்மொழித்தொகை, அணங்குற்றோரே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  இரவினானும் இன்துயில் அறியாது அரவுறு துயரம் எய்துப – இரவு நேரத்திலும் இனிய துயிலைப் பெறாது மணியை இழந்த பாம்பு போன்று துன்பத்தை அடைவார்கள், தொண்டித் தண் நறு நெய்தல் நாறும் பின் இருங்கூந்தல் அணங்குற்றோரே – தொண்டி நகரத்தின் மலரும் குளிர்ச்சியும் நறுமணமும் கொண்ட நெய்தல் பூக்கள் போல் நறுமணம் வீசும் பின்னப்பட்ட கரிய கூந்தலையுடைய பெண்ணால் தாக்குண்டோர்

ஐங்குறுநூறு 174, அம்மூவனார், நெய்தல் திணை தலைவன் தன்னுள்ளே சொன்னது
அணங்குடைப் பனித் துறைத் தொண்டி அன்ன,
மணங்கமழ் பொழில் குறி நல்கினள், நுணங்கு இழை
பொங்கு அரி பரந்த உண்கண்,
அம் கலிழ் மேனி, அசைஇய எமக்கே.

பாடல் பின்னணி:  குறியிடத்தில் தலைவியைக் கண்ட தோழன், அவள் முன்பு நின்ற இடத்தில் நிற்பதைத் தலைவனிடம் சொன்னான்.  அங்கு செல்ல நினைத்த தலைவன் தனக்குள் சொன்னது.

பொருளுரை:  நுண்ணிய இழையையும் மிக்க செவ்வரி படர்ந்த மையிட்ட கண்களையும் அழகு ஒழுகும் மேனியையுமுடையவள், கடவுள்கள் உறையும் குளிர்ந்த துறையையுடைய தொண்டியைப் போன்ற மணம் கமழும் சோலையில் குறியிடம் நல்கினாள், வருந்திய எமக்கு.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – இயற்கைப் புணர்ச்சிக்கண் தான் அவளைத் தலைப்பெய்து கூடி இன்புற்ற இடமாகலின், மணங்கமழ் பொழில் என்றான். ‘மணங்கமழ் கானல் இயைந்த நம் கேண்மை’ (நற்றிணை 203) என்றார் பிறரும்.  பண்டு தான் கூடிய  வந்தால் எனக் கேட்டவன், அவள் ஆண்டு வருதல் தான் சென்று கூடல் கருதியதென்றும், மேலும் அது தான் சென்று அவளை எய்வதற்கு இடம் குறித்ததென்றும் கருதினான் ஆதலின், குறி என்றும், அதுவும் குறிப்பாற் களஞ் சுட்டியதாகலின், குறி நல்கினள் என்றும் கூறினான்.  இலக்கணக் குறிப்பு – அன்ன – உவம உருபு, பொங்கு அரி – வினைத்தொகை, அம்கலிழ்மேனி – அன்மொழித்தொகை, கலிழ் – கலுழ் என்பதன் திரிபு, அசைஇய – அளபெடை, எமக்கே – ஏகாரம் அசைநிலை.  தொண்டி அன்ன (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தொண்டி அன்ன தலைவி, ஒளவை துரைசாமி உரை – தொண்டி அன்ன மேனி என இயையும்; பொழிற்கு ஏற்பின் சிறவாமை அறிக, அ. தட்சிணாமூர்த்தி உரை – தொண்டியைப் போன்ற பொழில்.

சொற்பொருள்:  அணங்குடைப் பனித் துறைத் தொண்டி அன்ன மணங்கமழ் பொழில் குறி நல்கினள் – கடவுள்கள் உறையும் குளிர்ந்த துறையையுடைய தொண்டியைப் போன்ற மணம் கமழும் சோலையில் குறியிடம் நல்கினாள், நுணங்கு இழை பொங்கு அரி பரந்த உண்கண் அம் கலிழ் மேனி – நுண்ணிய இழையையும் மிக்க செவ்வரி படர்ந்த மையிட்ட கண்களையும் அழகு ஒழுகும் மேனியையுமுடையவள், அசைஇய எமக்கே – மெலிவு பொருந்திய எமக்கு, வருந்திய எமக்கு

ஐங்குறுநூறு 175, அம்மூவனார், நெய்தல் திணைதலைவன் தலைவியிடம் சொன்னது
எமக்கு நயந்து அருளினை ஆயின் பணைத்தோள்
நன்னுதல் அரிவையொடு, மென்மெல இயலி
வந்திசின், வாழியோ மடந்தை,
தொண்டி அன்ன நின் பண்பு பல கொண்டே.

பாடல் பின்னணி:  தலைவியுடன் கூடி நீங்கும் தலைவன், ‘நீ இங்கு வரும்போது உன் தோழியையும் அழைத்து வா’ எனத் தலைவியிடம் கூறினான்.

பொருளுரை:  மடந்தையே!  நீ நீடு வாழ்வாயாக!  எமக்கு விரும்பி அருள் செய்தாய் எனின், மூங்கில் போன்ற தோள்களையும்  அழகிய நெற்றியையும் உடைய நின் தோழியுடன் மெல்ல மெல்ல நடந்து வருவாயாக, தொண்டி போலும் சிறப்புடைய நின் பண்புகள் பலவற்றைக் கொண்டு.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – ‘தொண்டியன்ன நின் பண்பு பல கொண்டு’ என்றான், எல்லாராலும் விரும்பப்படல், பேரழகுடையமை, சேய்மையில் உள்ளாராலும் அறியப்பட்ட சிறப்புடைமை, இடையறா இன்பத்திற்கு இருப்பிடமாதல், முதலான பண்புகள் தொண்டிக்குள்ளவாறு தன் காதலிக்கும் உள்ளமை கருதி.  இலக்கணக் குறிப்பு – பணைத்தோள் – உவமைத்தொகை, வந்திசின் – சின் முன்னிலை அசைச் சொல், வாழியோ – வியங்கோள் வினைமுற்று, ஓகாரம் அசைநிலை, பல – பலவும் எனல் வேண்டிய முற்றும்மை விகாரத்தால் தொக்கது, அன்ன – உவம உருபு, கொண்டே – ஏகாரம் அசைநிலை.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26), சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை.  பணைத்தோள் (1) – ஒளவை துரைசாமி உரை – பருத்த தோள்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மூங்கில் போன்ற தோள்கள்.

சொற்பொருள்:  எமக்கு நயந்து அருளினை ஆயின் – எமக்கு விரும்பி அருள் செய்தாய் எனின், பணைத்தோள் நன்னுதல் அரிவையொடு மென்மெல இயலி வந்திசின் – மூங்கில் போன்ற தோள்களையும்  அழகிய நெற்றியையும் உடைய நின் தோழியுடன் மெல்ல மெல்ல நடந்து வருவாயாக, வாழியோ – நீ நீடு வாழ்வாயாக, மடந்தை – மடந்தையே (விளி), தொண்டி அன்ன நின் பண்பு பல கொண்டே – தொண்டி போலும் சிறப்புடைய நின் பண்புகள் பலவற்றைக் கொண்டு

ஐங்குறுநூறு 176, அம்மூவனார், நெய்தல் திணைதலைவன் தோழியிடம் சொன்னது
பண்பும் பாயலும் கொண்டனள், தொண்டித்
தண் கமழ் புது மலர் நாறும், ஒண்தொடி,
ஐது அமைந்து அகன்ற அல்குல்,
கொய் தளிர் மேனி, கூறுமதி தவறே.

பாடல் பின்னணி:  தலைவியும் தோழியும் ஒருங்கு நின்றபோது, அங்குச் சென்ற தலைவன், தோழியிடம் வினவியது.

பொருளுரை:  என்னுடைய பண்புகளையும் இனிய துயிலையும் கவர்ந்து கொண்டாள், தொண்டி நகரில் உள்ள குளிர்ந்த நறுமணம் கமழும் புது மலர்கள் போல் மணமுடைய, ஒளிரும் வளையல்களையும் மெல்லிய அகன்ற அல்குலையும் கொய்யப்பட்ட மாந்தளிர் போன்ற மேனியையும் உடையவள்.  இதற்கு நான் செய்த தவறு என்ன என்று நீ கூறுவாயாக!

குறிப்பு:  பழைய உரை – கொண்டனள் என்றது தலைவியை எனக் கொள்க.  உரைகளில் வேறுபாடு – அறிஞர் தி. சதாசிவ ஐயர், அறிஞர் பொ. வே. சோமசுந்தரனார் ஆகிய இருவரும் ஒண்தொடி, அகன்ற அல்குல், தளிர்மேனி என்பன தலைவியையே குறித்தனவாகக் கொண்டு விளக்கம் அளித்துள்ளனர்.  அறிஞர் ஒளவை துரைசாமி இவை அனைத்தும் தோழியைக் குறிப்பன என்று கொண்டார்.  அறிஞர் அ. தட்சிணாமூர்த்தி ஒண்தொடி தலைவியையும் அகன்ற அல்குல், தளிர்மேனி ஆகியவை தோழியைக் குறிக்கின்றன என விளக்குகின்றார்.  இலக்கணக் குறிப்பு – ஒண்தொடி, அகன்ற அல்குல், கொய் தளிர் மேனி – அன்மொழித்தொகைகள், கூறுமதி – மதி, முன்னிலையசை, தவறே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்பண்பும் பாயலும் கொண்டனள் – என்னுடைய பண்புகளையும் இனிய துயிலையும் கவர்ந்து கொண்டாள், தொண்டித் தண் கமழ் புது மலர் நாறும் ஒண்தொடி ஐது அமைந்து அகன்ற அல்குல் கொய் தளிர் மேனி – தொண்டி நகரில் உள்ள குளிர்ந்த நறுமணம் கமழும் புது மலர்கள் போல் மணமுடைய ஒளிரும் வளையல்களையும் மெல்லிய அகன்ற அல்குலையும் கொய்யப்பட்ட மாந்தளிர் போன்ற மேனியையும் உடையவள் (அல்குல் – இடை, இடைக்குக் கீழ் உள்ள பகுதி), கூறுமதி தவறே – நான் செய்த தவறு என்ன என்று நீ கூறுவாயாக

ஐங்குறுநூறு 177, அம்மூவனார், நெய்தல் திணைதோழி தலைவனிடம் சொன்னது
தவறு இலர் ஆயினும் பனிப்ப மன்ற,
இவறு திரை திளைக்கும் இடு மணல் நெடுங்கோட்டு
முண்டக நறு மலர் கமழும்
தொண்டி அன்னோள், தோள் உற்றோரே.

பாடல் பின்னணி:  தலைவியும் தோழியும் ஒருங்கு நின்றபோது, அங்குச் சென்ற தலைவன், தலைவி தன்னை வருத்துவதற்கு என்ன காரணம் எனத் தோழியை வினவியபொழுது அவள் நகையாடிக் கூறியது.

பொருளுரை:  தவறு செய்யாதவர்கள் ஆயினும் நடுங்குவர் தேற்றமாக, உலவும் அலைகள் நெருங்கிக் குவித்த மணல் மேட்டின் உச்சியில் வளரும் முண்டகச் செடி மலர்களின் நறுமணம் கமழும் தொண்டி நகரம் போன்ற சிறப்புடையவளின் தோள்களைத் தழுவியவர்கள்.

குறிப்பு:  பழைய உரை – தோளுற்றோர் என்றது தோளை எதிர்ப்பட்டோர் என்றவாறு.  நீரறா நிலத்து முண்டக நறுமலர் கமழும் தொண்டி அன்னோள் என்றது இவள் நாம் அணுகி நுகர்தற்கரியள் என்றவாறு.  இதன் இறைச்சி …………….  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவறு திரை திளைக்கும் இடுமணல் நெடுங்கோட்டு முண்டக நறுமலர் கமழும் என்றது, இவள் நினக்கு இனியள் ஆயினும் இவர் தமர் கொடியவர்.  அடிக்கடி ஈண்டு வருவர்.  அவர் மனமுவந்து இவளை நினக்கு வழங்குவாருமல்லர் என்பது.  தோள் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இடக்கரடக்கல்.  இலக்கணக் குறிப்பு – இவறு திரை – வினைத்தொகை, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், தோள் – இடக்கடரக்கல், நகில்கள் என்பது கருத்து, உற்றோரே – ஏகாரம் அசைநிலை, பனிப்ப – பல்லோர் அறிசொல்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்:  தவறு இலர் ஆயினும் பனிப்ப மன்ற – தவறு செய்யாதவர்கள் ஆயினும் நடுங்குவர் தேற்றமாக (உறுதியாக), இவறு திரை திளைக்கும் இடு மணல் நெடுங்கோட்டு முண்டக நறு மலர் கமழும் தொண்டி அன்னோள் தோள் உற்றோரே – உலவும் அலைகள் நெருங்கிக் குவித்த மணல் மேட்டின் உச்சியில் வளரும் முண்டகச் செடி மலர்களின் நறுமணம் கமழும் தொண்டி நகரம் போன்ற சிறப்புடையவளின் தோள்களைத் தழுவியவர்கள்

ஐங்குறுநூறு 178, அம்மூவனார், நெய்தல் திணைதலைவன் தோழியிடம் சொன்னது
தோளும் கூந்தலும் பல பாராட்டி
வாழ்தல் ஒல்லுமோ மற்றே, செங்கோல்
குட்டுவன் தொண்டி அன்ன
என் கண்டும் நயந்து நீ நல்காக் காலே?

பாடல் பின்னணி:  தோழியை இரந்து தலைவியைக் காண வேண்டும் என்ற தன் விருப்பத்தை நிறைவேற்றுமாறு வேண்டியது.

பொருளுரை:  என்னுடைய காதலியின் தோள்களையும் கூந்தலையும் பலமுறை பாராட்டிக் கொண்டு உயிர் வாழ்தல் இயலுமோ, செங்கோன்மையுடன் ஆட்சி புரியும் சேரன் செங்குட்டுவனின் தொண்டி நகர் போன்ற என்னைக் கண்டும், நீ விரும்பி அவளை எனக்கு நல்காய் ஆயின்?

குறிப்பு:  குட்டுவன் தொண்டி அன்ன (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குட்டுவனின் தொண்டியின்கண் அவனது செங்கோன்மை காரணமாக அறம் நிலைபெறுதல் போன்று யானும் அறம் பிறழாச் செம்மையுடையோன் என்பான், செங்கோற் குட்டுவன் தொண்டியைத் தனக்கு உவமையாக்கினான்.  இலக்கணக் குறிப்பு – மற்றே – மற்று அசைநிலை, ஏகாரம் அசைநிலை, அன்ன – உவம உருபு, காலே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  தோளும் கூந்தலும் பல பாராட்டி வாழ்தல் ஒல்லுமோ மற்றே – என்னுடைய காதலியின் தோள்களையும் கூந்தலையும் பலமுறை பாராட்டிக் கொண்டு உயிர் வாழ்தல் இயலுமோ, செங்கோல் குட்டுவன் தொண்டி அன்ன என் கண்டும் – செங்கோன்மையுடன் ஆட்சி புரியும் சேரன் செங்குட்டுவனின் தொண்டி நகர் போன்ற என்னைக் கண்டும், நயந்து நீ நல்காக் காலே – நீ விரும்பி அவளை எனக்கு நல்காய் ஆயின்

ஐங்குறுநூறு 179, அம்மூவனார், நெய்தல் திணைதோழி தலைவனிடம் சொன்னது
நல்குமதி, வாழியோ, நளி நீர்ச் சேர்ப்ப!
அலவன் தாக்கத் துறை இறாப் பிறழும்
இன் ஒலித் தொண்டி அற்றே,
நின்னலது இல்லா, இவள் சிறு நுதலே.

பாடல் பின்னணி:  குறியிடத்து வந்து நீங்கும் தலைவனைத் தோழி எதிர்ப்பட்டு வரைவு கடாயது.

பொருளுரை:  பெரிய கடற்கரையையுடைய தலைவனே!  நீ நீடு வாழ்வாயாக!  நண்டுகள் தாக்கத் துறையின்கண் உள்ள இறால்மீன்கள் கலங்கிப் புரளும் இனிய இசையின் ஒலிகளை உடைய தொண்டி போன்ற சிறப்புடையது இவளுடைய சிறிய நெற்றி.  நீ இல்லாது தனித்து உயிர் வாழ்தல் என் தோழிக்கு இயலாது.  விரைவில் இவளை மணந்துகொள்வாயாக!

குறிப்பு:  பழைய உரை – அலவன் தாக்கத் துறை இறாப் பிறழும் என்றது, இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாகிய ஞான்று இவள் உயிர் வாழாள் என்பதாம்.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – அலவன் தாக்குதலால் துறைக்கண் வாழும் இறால் மீன் பிறழும் என்றது, இவள் நுதல் பசத்தலால் புறத்தார்க்கு இவ்வொழுக்கமுண்மை புலனாகும்; ஆகியவழி இவள் பெரு நாணினளாதலின் உயிர் வாழாள் என்றவாறுது, புலியூர்க் கேசிகன் உரை – அலவன் தாக்கத் துறை இறாப் பிறழுவதுப் போன்றே, உங்கள் களவுறவை அறிந்த அலவற் பெண்டிர் பழி தூற்றத் தலைவியும் அதனால் பெரிதும் நலிவடைவாள் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – நல்குமதி – மதி – முன்னிலையசை, நளி – உரிச்சொல், அற்றே – அற்று அத்தன்மைத்து, ஏகாரம் அசைநிலை, அலது – அல்லது என்பதன் இடைக்குறை, நுதலே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  நளி – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

சொற்பொருள்:  நல்குமதி – விரைவில் இவளை மணந்துகொள்வாயாக, வாழியோ – நீடு வாழ்வாயாக, நளி நீர்ச் சேர்ப்ப – பெரிய கடற்கரையையுடைய தலைவனே, அலவன் தாக்கத் துறை இறாப் பிறழும் இன் ஒலித் தொண்டி அற்றே – நண்டுகள் தாக்கத் துறையின்கண் உள்ள இறால்மீன்கள் கலங்கிப் புரளும் இனிய இசையின் ஒலிகளை உடைய தொண்டி போன்ற சிறப்புடையது, நின்னலது இல்லா – நீ இல்லாது தனித்து உயிர் வாழ்தல் என் தோழிக்கு இயலாது, இவள் சிறு நுதலே – இவளுடைய சிறிய நெற்றி

ஐங்குறுநூறு 180, அம்மூவனார், நெய்தல் திணைதோழி தலைவனிடம் சொன்னது
சிறு நனி வரைந்தனை கொண்மோ, பெருநீர்
வலைவர் தந்த கொழு மீன் வல்சிப்
பறை தபு முது குருகு இருக்கும்
துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே.

பாடல் பின்னணி:  காலம் தாழ்த்தி வரையக் கருதிய தலைவனைத் தோழி நெருங்கி விரைவில் வரையுமாறு வற்புறுத்தியது.

பொருளுரை:  கடலின்கண் பரதவர் வலைவீசிப் பிடித்துக் கொண்டுவந்த கொழுத்த மீனாகிய உணவை உண்ணக் கருதி பறக்கும் ஆற்றலை இழந்த முதிய குருகு காத்திருக்கும், துறையையுடைய தொண்டி நகரம் போன்ற இவளுடைய பெண்மை நலம். மிகக் குறுகிய காலத்தில் இவளை மணந்து உன்னுடன் அழைத்துச் செல்வாயாக.

குறிப்பு:  பழைய உரை – வலைவர் தந்த கொழு மீன் வல்சிக்கண்ணே பறத்தல் கெட்ட முதுகுருகு இருக்கும் என்றது, நொதுமலர்க்கு மகட் பேச வந்திருக்கின்ற சான்றோர் உளர் என்பது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நனிசிறிது எனற்பாலது ஈறு கெட்டு முன் பின்னாக மாறி வழங்கப்பட்டது போலும்.  இலக்கணக் குறிப்பு – நனி – உரிச்சொல், வரைந்தனை – முற்றெச்சம், கொண்மோ – மோ முன்னிலை அசை, பெருநீர் – ஆகுபெயர் கடலுக்கு, பறை – தொழிற்பெயர், அன்ன – உவம உருபு, நலனே – ஏகாரம் அசைநிலை.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).   சிறு நனி – அணி மாண் சிறுபுறம் காண்கம், அகநானூறு 261 – சிறு நனி ஏகு, அகநானூறு 301 – பிரிந்தோர் உள்ளுபு நினைதல் சிறு நனி ஆன்றிகம், ஐங்குறுநூறு 180 – சிறு நனி வரைந்தனை கொண்மோ, கலித்தொகை 12 – சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும், புறநானூறு 247 – சிறு நனி தமியள் ஆயினும் இன்னுயிர் நடுங்கும், புறநானூறு 376 – அந்தி சிறு நனி பிறந்த பின்றை, புறநானூறு 381 – சிறு நனி ஒருவழிப் படர்க என்றோனே.

சொற்பொருள்:  சிறு நனி வரைந்தனை கொண்மோ – மிகக் குறுகிய காலத்தில் இவளை மணந்து உன்னுடன் அழைத்துச் செல்வாயாக, பெருநீர் வலைவர் தந்த கொழு மீன் வல்சிப் பறை தபு முது குருகு இருக்கும் – கடலின்கண் பரதவர் வலைவீசிப் பிடித்துக் கொண்டுவந்த கொழுத்த மீனாகிய உணவை உண்ணக் கருதி பறக்கும் ஆற்றலை இழந்த முதிய குருகு காத்திருக்கும், துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே – துறையையுடைய தொண்டி நகரம் போன்ற இவளுடைய பெண்மை நலம்

நெய்தல் பத்து

பாடல்கள் 181–190 – நெய்தல் நிலத்தின் கருப்பொருளாகிய நெய்தல் மலர்கள் பாடல்தோறும் இடம் பெற்றுள்ளது.  பாடல்கள் 184, 188 ஆகியவை மருதத் திணையின் சூழலில் உள்ளன.

ஐங்குறுநூறு 181, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி தோழியிடம் சொன்னது
நெய்தல் உண்கண் நேர் இறைப் பணைத்தோள்
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்
குப்பை வெண்மணல் குரவை நிறூஉம்
துறை கெழு கொண்கன் நல்கின்,
உறைவு இனிது அம்ம, இவ் அழுங்கல் ஊரே.

பாடல் பின்னணி:  களவு நீடித்தால் அலர் எழும் என வருந்தினாள் தலைவி.  அப்பொழுது தலைவன் அவளை மணம் புரியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான் என அறிந்த தோழி, அச்செய்தியைத் தலைவியிடம் கூற, அதற்கு விடையாகத் தலைவி சொன்னது.

பொருளுரை:  நெய்தல் மலர்கள் போலும் மையுண்ட கண்களையும் நுண்ணிய இறை (முன்கை) பொருந்திய மூங்கில் போல் தோள்களையுடைய பொய்தல் விளையாட்டு ஆடிய பொய் அறியாத இளமகளிர், குவிந்த வெள்ளை மணலில் குரவைக் கூத்து நிகழ்த்தும் துறை பொருந்திய கொண்கன் அருளினால், வாழ்வதற்கு இனியதாகும் அலராகிய ஆரவாரத்தையுடைய இந்த ஊர்.

குறிப்பு:  பழைய உரை – இது சிறைப்புறம்..  மகளிர் குப்பை வெண்மணற் குரவை நிறூஉம் துறைகெழு கொண்கன் என்றது, மகளிர் தம் காதலரொடு ஆடும் இவ்வூரிடத்துத் தனித்தல் அரிது என்பதாம்.  குரவை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எழுவரேனும் எண்மரேனும் கைகோத்து ஆடும் கூத்து.  வரிக்கூத்தின் ஓர் உறுப்பு.  விநோதக் கூத்து ஆறனுள் ஒன்று.  இலக்கணக் குறிப்பு – பணைத்தோள் – உவமைத்தொகை, நிறூஉம் – செய்யுளிசை அளபெடை, உறைவு – தொழிற்பெயர், அம்ம – உரையசை (ஒளவை துரைசாமி உரை), கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல் (அ. தட்சிணாமூர்த்தி உரை), ஊரே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நெய்தல் உண்கண் நேர் இறைப் பணைத்தோள் பொய்தல் ஆடிய பொய்யா மகளிர் – நெய்தல் மலர்கள் போலும் மையுண்ட கண்களையும் நுண்ணிய இறை (முன்கை) பொருந்திய மூங்கில் போல் தோள்களையுடைய பொய்தல் விளையாட்டு ஆடிய பொய் அறியாத இளமகளிர், குப்பை வெண்மணல் குரவை நிறூஉம் துறை கெழு கொண்கன் நல்கின் – குவிந்த வெள்ளை மணலில் குரவைக் கூத்து நிகழ்த்தும் துறை பொருந்திய கொண்கன் அருளினால் (குப்பை – குவியல்), உறைவு இனிது அம்ம இவ் அழுங்கல் ஊரே – வாழ்வதற்கு இனியதாகும் ஆரவாரத்தையுடைய இந்த ஊர்

ஐங்குறுநூறு 182, அம்மூவனார், நெய்தல் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
நெய்தல் நறு மலர் செருந்தியொடு விரைஇக்
கை புனை நறுந்தார் கமழும் மார்பன்
அருந்திறல் கடவுள் அல்லன்,
பெருந்துறைக் கண்டு இவள் அணங்கியோனே.

பாடல் பின்னணி:  தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.  இற்செறிக்கப்பட்டதால் பெரிதும் வருந்தி மெலிந்திருந்தாள் தலைவி.  அவளுடைய மெலிவுக்கு முருகன் காரணம் என எண்ணி, தாய் வெறியாட்டம் நிகழ்த்த முயன்றபோது, தோழி கூறியது.

பொருளுரை:  நெய்தலின் நறுமண மலர்களையும் செருந்தி மலர்களையும் கலந்து கையால் தொடுத்த நறுமணம் கமழும் மாலையை மார்பில் அணிந்தவன், அரிய வலிமையையுடைய கடவுள் இல்லை.  அவன் பெரிய துறையின்கண் இவளைக் கண்டு வருத்தம் உறுவித்தவன் ஆவான்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கற்புக்கடம் பூண்ட தலைவி காப்பு மிகுதியான் தலைவனைக் காணப் பெறாது மெலிந்தனளாக, அவள் மெலிவு கண்ட செவிலி கட்டினும் கழங்கினும் பார்த்து இவட்கு இந்நோய் தெய்வத்தானாயது கொல் என ஐயுற்று வேலற்கு வெறியாட்டெடுப்ப முயலுதல் கண்ட தோழி செவிலிக்குத் தலைவி கற்புக் கடம் பூண்ட செய்தியைக் குறிப்பால் உணரக் கூறியது.  பழைய உரை – நெய்தலும் செருந்தியும் விரவிக் கூறியது, அவனது செல்வச் சிறப்பு கூறியவாறு.  பெருந்துறைக் கண்டு இவள் அணங்கியோன் என்றது, புனல் தரு புணர்ச்சி.  இலக்கணக் குறிப்பு – விரைஇ – அளபெடை, அணங்கியோனே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நெய்தல் நறு மலர் செருந்தியொடு விரைஇக் கை புனை நறுந்தார் கமழும் மார்பன் – நெய்தலின் நறுமண மலர்களையும் செருந்தி மலர்களையும் கலந்து கையால் தொடுத்த நறுமணம் கமழும் மாலையை மார்பில் அணிந்தவன், அருந்திறல் கடவுள் அல்லன் – அரிய வலிமையையுடைய கடவுள் இல்லை, பெருந்துறைக் கண்டு இவள் அணங்கியோனே – பெரிய துறையின்கண் இவளைக் கண்டு வருத்தம் உறுவித்தவன்

ஐங்குறுநூறு 183, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி மாலையிடம் சொன்னது
கணங்கொள் அருவி கான்கெழு நாடன்,
குறும்பொறை நாடன், வயல் ஊரன்,
தண் கடல் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையின்
கடும் பகல் வருதி கையறு மாலை,
கொடுங்கழி நெய்தலும் கூம்பக்
காலை வரினும் களைஞரோ இலரே.

பாடல் பின்னணி:  தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்துழி தலைவி மாலைக்குச் சொல்லியது.

பொருளுரை:  தனித்து உறைபவர்களைக் கையற்றுக் கலங்கச் செய்யும் மாலை நேரமே!  கூட்டமாக அருவிகள் வீழும் காடுகள் பொருந்திய நாடனும், சிறிய குன்றுகளையுடைய நாடனும், வயல்கள் பொருந்திய ஊரனும், குளிர்ந்த கடலின் தலைவனும் பிரிந்தபொழுது பண்டுபோல் இப்பொழுதும் கடும் பகல் வேளையில் வருகின்றாய்.  வளைந்த கழியின்கண் நெய்தல் மலர்களும் கூம்பும்படியாக நீ காலையிலே வருவாய் ஆயினும், நின்னைத் தடுப்பார் யாரும் இல்லை.

குறிப்பு:  பழைய உரை – பண்டையிற் கடும்பகல் வருதி என்றது, பண்டு வரும் காலத்திலே வந்தாற்போலப் பிறர்க்குத் தோன்றக் கடும்பகற் கண்ணே வாராநின்றாய் என்றவாறு.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – சேர்ப்பனுக்கு ஏனைய நிலங்களும் உடைமை கூறி அவனது திருவுடைமையைச் சிறப்பித்தது அன்றி நானிலத்திலும் ஓர் ஒழுக்கம் நிகழ்ந்ததாகக் கூறப்படாமையான் ‘நிலன் ஒருங்கு மயங்குதல் இன்றென’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 12) கூறிய விதியோடு முரணாமை உணர்க.  தலைவன் செல்வத்தைச் சிறப்பிப்போர் இவ்வாறு நானிலம் உடையோன் எனக் கூறுவதனை, ‘நாடன் என் கோ, ஊரன் என் கோ, பாடிமிழ் பனிக் கடல் சேர்ப்பன் என் கோ, யாங்கனம் மொழிகோ, ஓங்கு வாள் கோதையை? புனவர் தட்டை புடைப்பின் அயலது இறங்கு கதிர் அலமரு கழனியும் பிறங்கு நீர்ச் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே’ (புறநானூறு 49) என வரும் பொய்கையார் செய்யுளிலும் காண்க.  இலக்கணக் குறிப்பு – பிரிந்தென – செய்தென என்னும் எச்சம், பண்டையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, வருதி – முன்னிலை ஒருமை வினைமுற்று, இலரே – ஏகாரம் அசைநிலை.  கொடுங்கழி நெய்தலும் கூம்பக் காலை வரினும் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின் வருகை கண்டு கூம்பும் இயல்புடைய நெய்தல் மலர்கள் தாம் மலரும் பொழுதிலேயே கூம்பும்படியாகக் காலைப் பொழுதிலேயே வருவாய் எனினும் வருதலும் செய்வாய். நின்னை இவ்வாறு முறை பிறழ வாரற்க என்று தடுத்து அகற்றுவார் யாரே உளர், நின் கொடுமை மிகக் கொடிது காண்.

சொற்பொருள்:  கணங்கொள் அருவி கான்கெழு நாடன் – கூட்டமாக அருவிகள் வீழும் காடுகள் பொருந்திய நாடன், குறும்பொறை நாடன் – சிறிய குன்றுகளையுடைய நாடன், வயல் ஊரன் – வயல்கள் பொருந்திய ஊரன், தண் கடல் சேர்ப்பன் – குளிர்ந்த கடலின் தலைவன், பிரிந்தெனப் பண்டையின் கடும் பகல் வருதி – பிரிந்தபொழுது பண்டுபோல் இப்பொழுதும் கடும் பகல் வேளையில் வருகின்றாய், கையறு மாலை – தனித்து உறைபவர்களைக் கையற்றுக் கலங்கச் செய்யும் மாலை நேரமே, கொடுங்கழி நெய்தலும் கூம்பக் காலை வரினும் களைஞரோ இலரே – வளைந்த கழியின்கண் நெய்தல் மலர்களும் கூம்பும்படியாக நீ காலையிலே வருவாய் ஆயினும் நின்னைத் தடுப்பார் யாரும் இல்லை

ஐங்குறுநூறு 184, அம்மூவனார், நெய்தல் திணைதலைவி வாயில்களிடம் சொன்னது
நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி
மீன் உண் குருகு இனம் கானல் அல்கும்
கடல் அணிந்தன்று அவர் ஊரே,
கடலினும் பெரிது எமக்கு அவருடை நட்பே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  வாயில் வேண்டி வந்தவர்கள், தலைவனின் அன்புடைமை கூறியபொழுது, வாயில் மறுத்துத் தலைவி சொன்னது.

பொருளுரை:  நெய்தல் நிலத்தில் உள்ள பெரிய (கரிய) கழியில் நெய்தல் செடிகளை நீக்கி மீன்களை உண்ணும் குருகுகளின் கூட்டம் கடற்கரைச் சோலையில் தங்கும் கடலால் அழகு பெற்றது அவருடைய ஊர்.  அக்கடலினும் பெரியது எமக்கு அவருடைய நட்பு.

குறிப்பு:  பழைய உரை – நெய்தல் நீக்கி மீன் உண்ணும் குருகினம் கானலில் அல்கும் என்றது, பொதுமகளிரிடத்து ஊடல் நீக்கி இன்பம் நுகர்ந்து ஆண்டுத் தங்குவான் என்பதாம்.  ஒப்புமை – குறுந்தொகை 3 – நீரினும் ஆரளவின்றே சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெய்தல் நிலத்தின் பறவையாகிய குருகு தனக்குரிய இருங்கழியில் மீனுண்டு ஆண்டு நெய்தல் மலர்மிசைத் தங்குதலே இயல்பாகவும் அம்மலரை வெறுத்துச் செயற்கையாகிய நந்தவனத்தில் சென்று தங்குதல் போன்று நம் பெருமானும் தனக்குரிய இல்லற முறையாலே இல் இருந்து இன்பம் நுகர்ந்து தன் மனைவியோடு உறையாமல் வெறுத்துப் பரத்தையர் சேரியிலே சென்று உறைகின்றான் என்றாள்.  இலக்கணக் குறிப்பு – ஊரே – ஏகாரம் அசைநிலை, நட்பே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி மீன் உண் குருகு இனம் கானல் அல்கும் கடல் அணிந்தன்று அவர் ஊரே – நெய்தக் நிலத்தில் உள்ள பெரிய (கரிய) கழியில் நெய்தல் செடிகளை நீக்கி மீன்களை உண்ணும் குருகுகளின் கூட்டம் தங்கும் கடலால் அழகு பெற்றது அவருடைய ஊர், கடலினும் பெரிது எமக்கு அவருடை நட்பே – கடலினும் பெரியது எமக்கு அவருடைய நட்பு

ஐங்குறுநூறு 185, அம்மூவனார், நெய்தல் திணைதலைவன் தோழியிடம் சொன்னது
அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறை
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய்
அரம் போழ் அவ்வளைக் குறுமகள்,
நரம்பு ஆர்த்தன்ன, தீம் கிளவியளே.

பாடல் பின்னணி:  தலைவியைக் கூடிப்பிரிந்தவன், அதன் பின் அவளைக் காணாது வருந்தினான். அவளைக் கண்டு அவளுடன் கூடும்பொருட்டுத் தோழியின் உதவியை நாடினான்.  ஆயமகளிருள் (தோழியருள்) நின்னால் விரும்பப்பட்டவள் யாவள் என வினவிய தோழிக்குத் தலைவன் சொன்னது.

பொருளுரை:  அவள் அசையும் இதழ்களையுடைய நெய்தல் மலர்கள் நிறைந்த கொற்கையின் முன்துறையில் எடுக்கப்படும் ஒளிரும் முத்தை ஒத்த பற்கள் பொருந்திய பவளம் போன்ற சிவந்த வாயையுடையவள்.  அரத்தால் அறுத்து அமைக்கப்பட்ட சங்கு வளையல்கள் அணிந்த இளையவள்.  யாழின் நரம்பு ஒலித்தாற்போன்ற இனிய சொற்களையுடையவள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – கொற்கை நகரம் சங்க காலத்தே முத்துக்குப் பெயர் சிறந்து விளங்கிற்று.  ‘மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் பெருந்துறை முத்து’ (அகநானூறு 27) எனவும், ‘வினை நவில் யானை விறல் போர்ப் பாண்டியன் புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை, அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து’ (அகநானூறு 201) எனவும் ‘ஈண்டு நீர் முத்துப்படு பரப்பின் கொற்கை முன்துறை’ (நற்றிணை 23) எனவும் சான்றோர் பாராட்டிக் கூறுவர்.  மேனாட்டு யவனர் குறிப்பிலும் இச்செய்தி சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது. கிரேக்கர் குறிப்புகள் ‘முத்துப்படு பெருந்துறை’ (K.A.N. Sasthri’s Foreign Notices of South India, page 68) என்றும் கூறுகின்றன.  உறைக்கும் (2) – பொ. வே சோமசுந்தரனாரின் உரை – ‘நிகர்க்கும், உவமவுருபின் பொருட்டாய் நின்றது’, ஒளவை துரைசாமி உரை – உறைக்கும் என்பது “ஆறாறவையும் அன்ன பிறவும் (தொல்காப்பியம், பொருளதிகாரம் 286) என்பதனால் அமைந்து ‘தத்தம் மரபின் தோன்றுமன் பொருளே (தொல்காப்பியம், பொருளதிகாரம் 292) என்பதனால் உவமைப்பொருள் தருவதாயிற்று.  முத்தைப் போன்ற பற்கள் – அகநானூறு 27 – முத்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு, ஐங்குறுநூறு 185 – இலங்கு முத்து உறைக்கும் எயிறு, ஐங்குறுநூறு 380 – முத்து ஏர் வெண்பல், கலித்தொகை 64 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 93 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏய்க்கும் வெண்பல், கலித்தொகை 131 – முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய், பரிபாடல் 8 – எழில் முத்து ஏய்க்கும் வெண்பல், பரிபாடல் திரட்டு 2 – முத்த முறுவல், பொருநராற்றுப்படை 27 – துவர் வாய்ப் பல உறு முத்தில் பழி தீர் வெண்பல், சிறுபாணாற்றுப்படை 57 – நகாஅர் அன்ன நளி நீர் முத்தம், நெடுநல்வாடை 37 – முத்து உறழ் முறுவல்.  இலக்கணக் குறிப்பு – கிளவியளே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறை இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய் – அசையும் இதழ்களையுடைய நெய்தல் மலர்கள் நிறைந்த கொற்கையின் முன்துறையில் எடுக்கப்படும் ஒளிரும் முத்தை ஒத்த பற்கள் பொருந்திய பவளம் போன்ற சிவந்த வாய், அரம் போழ் அவ்வளைக் குறுமகள் – அரத்தால் அறுத்து அமைக்கப்பட்ட சங்கு வளையல்கள் அணிந்த இளையவள், நரம்பு ஆர்த்தன்ன தீம் கிளவியளே – யாழின் நரம்பு ஒலித்தாற்போன்ற இனிய சொற்களையுடையவள்

ஐங்குறுநூறு 186, அம்மூவனார், நெய்தல் திணைதோழி தலைவனிடம் சொன்னது
நாரை நல் இனம் கடுப்ப மகளிர்
நீர் வார் கூந்தல் உளரும் துறைவ!
பொங்கு கழி நெய்தல் உறைப்ப இத்துறைப்
பல் கால் வரூஉம் தேரெனச்
செல்லாதீமோ, என்றனள் யாயே.

பாடல் பின்னணி:  பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைவனிடம் தோழி இற்செறிப்பை அறிவித்தது. வரைவு வேண்டியது.

பொருளுரை:  நீரால் நனைந்த நல்ல நாரைகளின் கூட்டம் தம் அலகுகளால் தம் சிறகுகளைக் கோதி உலர்த்துவது போல மகளிர் தங்கள் நீர் வடியும் கூந்தலை உலர்த்தும் துறையின் தலைவனே!   நீர் மிகுந்துள்ள கழிகளில் நெய்தல் மலர்கள் நீர்துளிகளைச் சொரியும் இத்துறையின்கண் நின் தேர் பலமுறை வருகின்றது என்று அறிந்து ‘இனி அவ்விடம் செல்லாதீர்கள்’ எனக் கூறினாள் தாய்.

குறிப்பு:  பழைய உரை – நாரையினம் கடுப்ப மகளிர் நீர்வார் கூந்தல் உளரும் துறைவ என்றது, தம்மிடத்துக் குற்றம் நீக்கும் மகளிரையுடைய துறைவ என்றவாறு.  ஒளவை துரைசாமி உரை – நாரை நல்லினம் கடுப்ப என்றார், தம் சிறகுகள் நீரால் நனைந்தவழி, புலர்தற் பொருட்டு உதறி நாரை வயிற்றில் அடித்துக் கோடற்போல, ஓரை மகளிர் தம் கூந்தல் நனைந்தவழி புலரத் துவட்டித் தம் வயிறலைத்துக்கொண்டு ஏகுதல் பற்றி.  நீர் அலைக் கலைஇய கூழை வடியாச் சாஅய் அவ் வயிறு அலைப்ப உடன் இயைந்து ஓரை மகளிரும் ஊர் எய்தினரே (நற்றிணை 398) எனப் பிறரும் கூறுமாற்றால் அறிக.  இலக்கணக் குறிப்பு – கடுப்ப – உவம உருபு, வரூஉம் – செய்யுளிசை அளபெடை, செல்லாதீமோ – செல்லாதீம் – முன்னிலை பன்மை எதிர்மறை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை, யாயே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள் நாரை நல் இனம் கடுப்ப மகளிர் நீர் வார் கூந்தல் உளரும் துறைவ – நாரையின் நல்ல கூட்டத்தை ஒப்ப மகளிர் தங்கள் நீர் வடியும் கூந்தலை உலர்த்தும் (கோதும், புலர்த்தும்) துறையின் தலைவனே, பொங்கு கழி நெய்தல் உறைப்ப இத்துறைப் பல் கால் வரூஉம் தேரெனச் செல்லாதீமோ என்றனள் யாயே – நீர் மிகுந்துள்ள கழிகளில் நெய்தல் மலர்கள் நீர்துளிகளைச் சொரியும் இத்துறையின்கண் நின் தேர் பலமுறை வருகின்றது என்று அறிந்து ‘இனிச் செல்லாதீர்கள்’ எனக் கூறினாள் தாய்

ஐங்குறுநூறு 187, அம்மூவனார், நெய்தல் திணைதோழி தலைவனிடம் சொன்னது
நொதுமலாளர் கொள்ளார் இவையே,
எம்மொடு வந்து கடலாடு மகளிரும்
நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்,
உடலகம் கொள்வோர் இன்மையின்
தொடலைக்கு உற்ற சில பூவினரே.

பாடல் பின்னணி:  தோழி கையுறை மறுத்தது.  தலைவிக்குப் பரிசாகத் தழையாடையைக் கொண்டு வந்தான் தலைவன்.  தலைவியிடம் கொடுக்கும்படி தோழியை வேண்டினான்.  தோழி அதை மறுத்துக் கூறியது.

பொருளுரை:  அயலவர் இம்மலர்களைப் பறிக்க மாட்டார்கள். எம்முடன் கடலில் விளையாடும் மகளிரும் வெவ்வேறு தழைகளால் தொடுக்கப்பட்ட இத்தழை ஆடையைத் தங்கள் பாவைக்கு அணிவிக்க மாட்டார்கள்.  இவற்றை உடலில் அணிவோர் யாரும் இல்லாததால் மாலை தொடுப்பவர்கள் கூடச் சில பூக்களை மட்டுமே கொள்வார்கள். இத்தழை ஆடையை நீயே கொண்டு செல்க.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – ‘இவையே’ எனத் தோழியால் சுட்டப்பட்டவை தலைவன் கொணர்ந்த பூக்களும் தழைகளும் ஆகும்.  நொதுமலாளர் என்பார் பகையாவாரும் உறவாவாரும் அல்லாத பிறர்.  இங்குத் தலைவனைத் தவிர்த்த பிற மாந்தர் என்னும் பொருட்டு.  யாவராலும் விரும்பப்படாத மலரை இங்கு ஏன் கொணர்ந்தனை என அத்தழையின் இழிபினைச் சுட்டுவாளாய் ‘நொதுமலாளர் கொள்ளார்’ என்றாள்.  கடல் விளையாட்டு அயரும் இளம் பெண்கள் தம் விளையாட்டுப் பொம்மைக்கும் கூட இம்மலர்களையும் தழையையும் அணியார் என்று மேலும் இக்கையுறையின் இழிவைச் சொல்லுவாள், ‘மகளிரும் ……………… பாவை புனையார்’ என்றாள்.  பகைத்தழை (3) – ஒளவை துரைசாமி உரை – நிறத்தால் வேறுபட்ட மலர்களாலும் குழைகளாலும் தொடுக்கப்பட்ட தழையுடை, தி. சதாசிவ ஐயர் உரை – ஒன்றற்கொன்று மாறாகிய நெய்தல் தழை, அ. தட்சிணாமூர்த்தி உரை – தழைகள் ஒன்றோடொன்று மாறுபடும்படியாகத் தொகுகப்படுவது பற்றியது இப்பெயர்.  இச் செய்யுளில் சொல்லப்பட்டது நெய்தல் ஒன்றாலேயே தொகுக்கப்பட்டதேயாம்.  உடலகம் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மெய்யில், ஒளவை துரைசாமி உரை – முழுவதும், அ. தட்சிணாமூர்த்தி உரை – பயன்படுத்துவோர்.  ஒப்புமை – குறுந்தொகை 293 – ஆம்பல் அம் பகை நெறித் தழை, நற்றிணை 96 – நெய்தல் அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ.  இலக்கணக் குறிப்பு – பூவினரே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நொதுமலாளர் கொள்ளார் இவையே – அயலவர் இம்மலர்களைப் பறிக்க மாட்டார்கள், எம்மொடு வந்து கடலாடு மகளிரும் நெய்தல் அம் பகைத்தழைப் பாவை புனையார் – எம்முடன் கடலில் விளையாடும் மகளிரும் வெவ்வேறு மலர்களால் தொடுக்கப்பட்ட இத்தழை ஆடையைத் தங்கள் பாவைக்கு அணிவிக்க மாட்டார்கள், உடலகம் கொள்வோர் இன்மையின் தொடலைக்கு உற்ற சில பூவினரே – இவற்றை உடலில் அணிவோர் யாரும் இல்லாததால் மாலை தொடுப்பவர்கள் கூடச் சில பூக்களை மட்டுமே கொள்பவர் ஆவர்

ஐங்குறுநூறு 188, அம்மூவனார், நெய்தல் திணைதலைவன் தனக்குள் சொன்னது
இருங்கழிச் சேயிறா இனப்புள் ஆரும்
கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை
வைகறை மலரும் நெய்தல் போலத்
தகை பெரிது உடை காதலி கண்ணே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  பரத்தை இல்லத்திலிருந்து நண்பர்களுடன் திரும்பிய தலைவன் தன் இல்லத்தில் நுழைந்தபோது, தலைவியின் மனைவாழ்க்கைச் சிறப்பு கண்டு சொன்னது.

பொருளுரை:  பெரிய (கரிய) உப்பங்கழியில் செந்நிற இறால்மீன்களைப் பறவைகளின் கூட்டம் உண்ணும் கொற்கை மன்னனின் கொற்கைப் பட்டினத்தின் பெரிய துறையில் விடியற்காலையில் மலரும் நெய்தல் மலர்கள் போல், மிக்க அழகுடையன எம் காதலியின் கண்கள்.

குறிப்பு:  பழைய உரை – விடியற்காலை மலரும் நெய்தலைக் கண்ணிற்கு உவமையாகக் கூறிற்று, வந்த பொழுதே மலர்ந்த சிறப்பு நோக்கி எனக் கொள்க.  இருங்கழிச் சேயிறா இனப்புள் ஆரும் என்றது விருந்தினர் நுகர்ச்சி கூறியவாறு எனக் கொள்க.  இலக்கணக் குறிப்பு – சேயிறா – பண்புத்தொகை, கண்ணே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  இருங்கழிச் சேயிறா இனப்புள் ஆரும் கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை வைகறை மலரும் நெய்தல் போல – பெரிய (கரிய) உப்பங்கழியில் செந்நிற இறால்மீன்களைப் பறவைகளின் கூட்டம் உண்ணும் கொற்கை மன்னனின் கொற்கைப் பட்டினத்தின் பெரிய துறையில் விடியற்காலையில் மலரும் நெய்தல் மலர்கள் போல், தகை பெரிது உடை காதலி கண்ணே – மிக்க அழகுடையன எம் காதலியின் கண்கள்

ஐங்குறுநூறு 189, அம்மூவனார், நெய்தல் திணைதோழி தலைவியிடம் சொன்னது
புன்னை நுண் தாது உறைத்தரு நெய்தல்
பொன்படு மணியின் பொற்பத் தோன்றும்
மெல்லம்புலம்பன் வந்தென,
நல்லனவாயின தோழி என் கண்ணே.

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன் வரைய வரக் கண்டு உவகையோடு வந்தாள் தோழி.   தன் உவகைக்குக் காரணம் வினவிய தலைவியிடம் அவள் சொன்னது.

பொருளுரை:  தோழி!  புன்னை மரத்தின் நுண்ணிய பூந்தாது உதிர்தலைப் பெற்ற மலர்கள் பொன்னோடு பொருந்திய நீலமணி போன்று அழகுறத் தோன்றும் மெல்லிய நெய்தல் நிலத்தின் தலைவன் வந்ததால், மகிழ்ச்சி அடைந்தன என் கண்கள்.

குறிப்பு:  பழைய உரை – புன்னை நுண்டாது உறைத்தரும் நெய்தல் பொன்படு மணியின் பொற்பத் தோன்றும் என்றது, நின் குடிப்பிறப்புப் பண்டையினும் சிறத்தற்குக் காரணம் ஆயிற்று என்று அவன் வரவு கூறியவாறாம்.  நெய்தல் பொன்படு மணியின் பொற்பத் தோன்றும் (1–2) – ஒளவை துரைசாமி உரை – பொன்னிடைப் படுத்திய நீலமணிப் போல விளங்கித் தோன்றும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொன் அழுத்தப்பட்ட முத்துப் போல பொலிவுறத் தோன்றும், உ. வே. சாமிநாதையர் உரை – புன்னைத் தாதிற்குப் பொன்னும் நெய்தற் பூவிற்கு மணியும் உவமை.  இலக்கணக் குறிப்பு – கண்ணே – ஏகாரம் அசைநிலை, உறைத்தரு – எச்சம் திரிபு, உறைத்த என்றவாறு, மணியின் – இன் ஒப்புப் பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு.  பொற்பு – பொற்பே பொலிவு (தொல்காப்பியம், உரியியல் 39).

சொற்பொருள்:  புன்னை நுண் தாது உறைத்தரு நெய்தல் பொன்படு மணியின் பொற்பத் தோன்றும் மெல்லம்புலம்பன் வந்தென – புன்னை மரத்தின் நுண்ணிய பூந்தாது உதிர்தலைப் பெற்ற மலர்கள் பொன்னோடு பொருந்திய நீலமணி போன்று அழகுறத் தோன்றும் மெல்லிய நெய்தல் நிலத்தின் தலைவன் வந்ததால், நல்லனவாயின தோழி என் கண்ணே – மகிழ்ச்சி அடைந்தன தோழி என் கண்கள்

ஐங்குறுநூறு 190, அம்மூவனார், நெய்தல் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
தண் நறு நெய்தல் தளை அவிழ் வான் பூ
வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்
மெல்லம்புலம்பன் மன்ற, எம்
பல்லிதழ் உண்கண் பனி செய்தோனே.

பாடல் பின்னணி:  தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கற்புக்கடம் பூண்ட  தலைவியின் மெய் வேறுபாடு கண்டு இவட்கு இம்மெலிவு தெய்வத்தானாயது கொல் என்று ஐயுற்று அறிஞரை வினவியும் கட்டினும் கழங்கினும் பார்த்தும் வெறியாட நினைக்கின்ற தாய்க்குத் தோழி கூறியது.

பொருளுரை:  எம்முடைய பல இதழ்களுடைய நெய்தல் மலர் போன்ற மையுண்ட கண்களில் நீர்த்துளிக்கும்படி செய்தவன், தேற்றமாக, குளிர்ந்த நறுமண நெய்தலின் கட்டு அவிழ்ந்த வெள்ளை நிற மலர்களை வெள்ளை நெல்லை அறுப்பவர்கள் விலக்கிவிட்டு நெல்லை மட்டும் அறுவடை செய்யும் மெல்லிய நெய்தல் நிலத்தின் தலைவன்.

குறிப்பு:  பழைய உரை – அரிவோர் நெற்பூவை நீக்கி வெண்ணெல் அரியும் என்றது, தனக்கு அடுத்தது செய்தலன்றிப் பிறர்க்கு வருத்தம் செய்யான் எனத் தலைமகன் குணம் கூறியவாறாம்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கற்புக்கடம் பூண்ட  தலைவியின் மெய் வேறுபாடு கண்டு இவட்கு இம்மெலிவு தெய்வத்தானாயது கொல் என்று ஐயுற்று அறிஞரை வினவியும் கட்டினும் கழங்கினும் பார்த்தும் வெறியாட நினைக்கின்ற தாய்க்குத் தோழி கூறியது.  வான் பூ (1) – தி. சதாசிவ ஐயர் உரை – வெள்ளிய பூ, ஒளவை துரைசாமி உரை – அழகிய பூ, பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிறந்த மலர், அ. தட்சிணாமூர்த்தி உரை – ஒளிமிக்க பூ. உ. வே. சாமிநாதையர் உரை – பெரிய பூ.  மாற்றினர் அறுக்கும் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விலக்கிவிட்டு தாம் அரிகின்ற நெல்லை மட்டுமே அரிதற்கிடமான, ஒளவை துரைசாமி உரை – நீக்கி அந்நெற்பயிரையே அறுக்கும்.  இலக்கணக் குறிப்பு – மாற்றினர் – மாற்றி, முற்றெச்சம், மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், செய்தோனே – ஏகாரம் அசைநிலை, பல்லிதழ் – அன்மொழித்தொகை, அகரம் கெட்டுக் ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ – தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 160, என்றதனால் லகரம் இரட்டித்து, பல்லிதழ் என முடிந்தது.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்:  தண் நறு நெய்தல் தளை அவிழ் வான் பூ வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும் மெல்லம்புலம்பன் – குளிர்ந்த நறுமண நெய்தலின் கட்டு அவிழ்ந்த வெள்ளை நிற மலர்களை வெள்ளை நெல்லை அறுப்பவர்கள் விலக்கிவிட்டு நெல்லை மட்டும் அறுவடை செய்யும் மெல்லிய நெய்தல் நிலத்தின் தலைவன், மன்ற – தேற்றமாக, எம் பல்லிதழ் உண்கண் பனி செய்தோனே – எம்முடைய பல இதழ்களுடைய நெய்தல் மலர் போன்ற மையுண்ட கண்களில் நீர்த்துளிக்கும்படி செய்தவன்

வளைப் பத்து

பாடல்கள் 191–200 – நெய்தல் நிலத்தின் கருப்பொருள் ஆகிய வளையை (சங்கை) அறுத்து இயன்ற வளையல்கள் பற்றினவை.  பாடல் 198 நெய்தலுள் மருதம்.

ஐங்குறுநூறு 191, அம்மூவனார், நெய்தல் திணைதலைவன் தோழனிடம் சொன்னது
கடல் கோடு செறிந்த வளை வார் முன் கைக்,
கழிப்பூத் தொடர்ந்த இரும் பல் கூந்தல்,
கானல் ஞாழல் கவின் பெறு தழையள்,
வரையர மகளிரின் அரியள், என்
நிறை அரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே.

பாடல் பின்னணி:  தலைவியின் பிரிவு ஆற்றாது வருந்திய தலைவனிடம், ‘நின்னைக் கவர்ந்த இளையோள் எத்தன்மையுடையவள்?  அவள் வாழுமிடம் யாது?’ என வினவிய தோழனிடம் தலைவன் கூறியது.

பொருளுரை:  கடலில் உள்ள சங்கினை அறுத்துச் செய்த வளையல் அணிந்த நெடிய முன்கையையும், உப்பங்கழியில் மலர்ந்த நெய்தல் பூக்கள் சூட்டப்பட்ட கரிய அடர்ந்த கூந்தலையும், கடற்கரைச் சோலையின்கண் உள்ள ஞாழல் மரங்களின் அழகிய தழையால் செய்யப்பட்ட ஆடையையும் அணிந்தவள், மலையில் வாழும் சூரர மகளிரைப் போன்று பெறுவதற்கு அரியள்.  அவள் என்னுடைய அழித்தற்கரிய நிறையை அழித்து என்னுடைய நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்டு மறைந்தவள்.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – ‘கழிப்பூ’ என வாளா கூறினும், நெய்தற்பூவைக் குறிப்பால் உணர்த்திற்று.  கருமையும் அடர்த்தியும் தலைமயிரின் சிறப்பையும் அஃதுடையாரின் இளமைச் செவ்வியையும் உணர்த்துவனவாதலின் ‘இரும் பல் கூந்தல்’ என்றான். ‘கவின்பெறு தழையள்’ என்றான், தன் காதலியின் தழையுடை அவள் அல்குலில் அணிந்தமையான் தனித்ததோர் அழகு பெற்றது என்ற பொருளில்.  இயற்கைப் புணர்ச்சியின்பின் தன்னைப் பிரிந்து தோழியரோடு கூடியவளை, தான் மீண்டும் காண இயலாமை கருதியும், அவளின் பேரழகு கருதியும், வரையர மகளிரோடு அவளை ஒப்பிட்டான்.  ஒப்புமை – நெடுவரைக் கவாஅன் சூரர மகளிரின் பெறற்கு அரியோளே – அகநானூறு 162, வரையர மகளிரின் அரியள் – அகநானூறு 342.  இலக்கணக் குறிப்பு – தழை – ஆகுபெயர், தழை ஆடையைக் குறித்தது, ஒளித்தோளே – ஏகாரம் அசைநிலை, மகளிரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது.  நிறை அரு நெஞ்சம் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அருநிறையும் நெஞ்சமும் என உம்மை விரிக்க.  அருநெஞ்சம் அருநிறை என இரண்டிடத்தும் அருமையைக் கூட்டினுமாம், உ. வே. சாமிநாதய்யர் உரை – நிறுத்தல் அரிய என் உள்ளத்தை.  வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  கடல் கோடு செறிந்த வளை வார் முன் கைக் கழிப் பூத் தொடர்ந்த இரும் பல் கூந்தல் கானல் ஞாழல் கவின் பெறு தழையள் – கடலில் உள்ள சங்கினை அறுத்துச் செய்த வளையல் அணிந்த நெடிய முன்கையையும் உப்பங்கழியில் மலர்ந்த நெய்தல் பூக்கள் சூட்டப்பட்ட கரிய அடர்ந்த கூந்தலையும் கடற்கரைச் சோலையின்கண் உள்ள ஞாழல் மரங்களின் அழகிய தழையால் செய்யப்பட்ட ஆடையையும் அணிந்தவள், வரையர மகளிரின் அரியள் – மலையில் வாழும் சூரர மகளிரைப் போன்று பெறுவதற்கு அரியள், என் நிறை அரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே – என்னுடைய அழித்தற்கரிய நிறையை அழித்து என்னுடைய நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்டு மறைந்தவள்

ஐங்குறுநூறு 192,  அம்மூவனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கோடு புலம் கொட்பக் கடல் எழுந்து முழங்கப்
பாடு இமிழ் பனித் துறை ஓடு கலம் உகைக்கும்
துறைவன் பிரிந்தென, நெகிழ்ந்தன
வீங்கின மாதோ தோழி, என் வளையே.

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன் வந்தபோது தன் மகிழ்ச்சியைத் தன் தோழியிடம் தான் வெறுப்புடையவள் போல் குறிப்புத் தோன்றத் தலைவி கூறியது.  

பொருளுரை: தோழி! சங்குகள் கடற்கரையில் சுழல, கடல் அலைகள் ஆரவாரம் செய்ய, ஒலி மிகுந்த துறையிலிருந்து, விரைந்து செல்லும் கப்பல்கள் செலுத்தப்படும் குளிர்ந்த துறையின் தலைவன் என்னைப் பிரியும் பொழுது என் வளையல்கள் நெகிழ்கின்றன.  அவன் வரும் பொழுது என் கைகள் பருத்து வளையல்கள் செறிவு அடைகின்றன.

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – கோடு புலம் கொட்பக் கடல் எழுந்து முழங்கப் பாடு இமிழ் பனித் துறை ஓடு கலம் உகைக்கும் என்றது, நொதுமலர் அகல சுற்றத்தார் மகிழ அலர் கூறும் அயலார் சிதைய அவர் தேர் வந்தது என்பதாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பரதவர், கடல் கோடு புலங் கொட்ப எழுந்து முழங்கவும், அதனாலே அலைகள் ஆரவாரிக்கும் பனித்துறையிலே மரக்கலத்தை அஞ்சாமல் செலுத்தினாற் போன்று, நம்பெருமானும், அலர் தூற்றிய நொதுமலர் மனச் சுழற்சி எய்தவும், நம் சுற்றத்தார் மகிழ்ச்சி பொங்கி தன்னை எதிர் கொண்டழைக்கவும், நம் இல்லத்தே இன்னியங்கள் முழங்கவும் வரைவொடு புகுந்தான் என்பது.  வீங்கின (4) – ஒளவை துரைசாமி உரை – வீங்குதல் உடல் பூரித்துத் தடுத்தலால், தன்னிலையில் பெருகி விரிந்து காட்டுதல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கையின்கண் கிடந்தது விம்முவனவாயின, தி. சதாசிவ ஐயர் உரை – வளை இறுகின.  இலக்கணக் குறிப்பு – கொட்ப – செய்தென என்னும் வினையெச்சம், முழங்க – செய்தென என்னும் வினையெச்சம், மாதோ – மாது, ஓ – அசைநிலைகள், வளையே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  கோடு – சங்கு, புலம் கொட்ப – கரையில் சுழல, கடல் எழுந்து முழங்க – கடல் அலைகள் ஆரவாரம் செய்ய, பாடு இமிழ் –  ஒலி மிகுந்த, பனித்துறை – குளிர்ந்த துறையில், ஓடு கலம் உகைக்கும் – விரைந்து செல்லும் கப்பல்கள் செலுத்தப்படும்,  துறைவன் – நெய்தல் நிலத் தலைவன், பிரிந்தென – பிரியும் பொழுது, நெகிழ்ந்தன – நெகிழ்ந்தன, வீங்கின – பருத்தன, மாதோ – அசைச் சொல், தோழி – தோழி, என் வளையே – என் வளையல்கள்

ஐங்குறுநூறு 193,  அம்மூவனார்நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது (சங்கை அறுத்து வளையல் செய்வார்கள்)
வலம்புரி உழுத வார் மணல் அடைகரை
இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும்
துறை கெழு கொண்க! நீ தந்த
அறை புனல் வால் வளை நல்லவோ தாமே?

பாடல் பின்னணி:  வரையாது வந்தொழுகும் தலைவன், தலைவிக்கு வளையல் கொண்டு வந்து கொடுத்தபோது, தலைவியின் மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.  

பொருளுரை:   வலம்புரிச் சங்குகள் தோண்டும் நீண்ட மணல் நிறைந்த, இருட்டை விலகச் செய்யும்  ஒளி மிகுந்த முத்துக்கள் நிறைந்த கடற்கரைத் தலைவனே!  அவளுக்கு நீ முழங்குகின்ற அலைகள் கொணர்ந்த சங்கினால் செய்த வளையல்களைத் தந்தாய்.  இவை நீ  அவளுக்கு முன்பு  தந்ததைப் போன்றவையா?

குறிப்பு:  பழைய உரை – முத்தம் இருள் நீங்க இமைக்கும் துறைவனாகலின், இவட்கு வருகின்ற தீங்கைக் கடிதின் நீக்கி வரைந்து கொள வேண்டும் என்பதாம்.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – இலங்குகதிர் முத்தம் இருள் கெட இமைத்தல் போல, நின் வரைவால் இவள் மேனி வேறுபாடுகண்டு அலர் கூறுவாரால் உளதாகும் வருத்தம் நீங்குமென அலர் அச்சம் கூறி தோழி வரைவு கடாயவாறு.  இலக்கணக் குறிப்பு – அடைகரை – வினைத்தொகை, இலங்குகதிர் – வினைத்தொகை, அறைபுனல் – வினைத்தொகை, கடலைக் குறித்தலின் அன்மொழித் தொகையுமாம், நல்லவோ – ஓகாரம் எதிர்மறை, தாமே – ஏகாரம் அசைநிலை.  வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  வலம்புரி – வலம்புரிச் சங்கு, உழுத – தோண்டிய, வார் மணல் – மணலுடைய நீண்ட கடற்கரை, அடைகரை – மணல் அடைந்த கரை, நீர் அடைந்த கரை, இலங்கு கதிர் – ஒளியுடைய கதிர், முத்தம் – முத்துக்கள்,  இருள் கெட – இருள் நீங்குமாறு,  இமைக்கும் – ஒளித் தரும், துறை கெழு கொண்க – நெய்தல் நிலத் தலைவனே, நீ தந்த – நீ கொடுத்த,  அறை – முழங்குகின்ற, புனல் – ஓடும் நீர், வால் வளை – வெள்ளை வளையல்கள்,  நல்லவோ தாமே – நல்லவை தானா

ஐங்குறுநூறு 194, அம்மூவனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கடல் கோடு அறுத்த அரம் போழ் அவ்வளை
ஒள் தொடி மடவரல் கண்டிகும் கொண்க!
நன் நுதல் இன்று மால் செய்தெனக்
கொன் ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே.

பாடல் பின்னணிபகற்குறிக்கண் வந்து தலைவியோடு அளவளாவிச் செல்கின்ற தலைவனிடம் தோழி, ‘களவொழுக்கம் தாயால் அறியப்பட்டது.  இனி அவள் தலைவியை இல்லத்தில் சிறை வைப்பாள்’ என்று கூறி வரைவு (திருமணம்) வேண்டுகின்றாள்.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – தலைவியின் நெற்றி முன்னர் என்றும் இல்லா வகையில் மாறுபட்டு அன்னைக்கு மன மயக்கம் செய்தமையின் ‘நுதல் இன்று மால் செய்தன’ என்றாள்.  அன்னை காரணம் ஆராயத் தொடங்கினாளாதலின் இனி இல்லின்கண் செறித்துக் காவல் செய்வது உறுதி என்பதுபடக் ‘கொன்னென்று கடுத்தனள்’ என்றாள்.  இலக்கணக் குறிப்பு – மடவரல் – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, கண்டிகும் – முன்னிலை வினை, இகும் முன்னிலை அசைச் சொல், கடுத்தனள் – கடி என்னும் உரிச் சொல்லடியாகத் தோன்றிய வினைமுற்று, நிலையே – ஏகாரம் அசைநிலை.  கொன் – அச்சம், பயம் இலி, காலம், பெருமை, என்று அப் பால் நான்கே கொன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 6).  கொன் ஒன்று கடுத்தனள் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யாங்கள் அஞ்சும்படி இஃது ஒன்று உடைத்துப் போலும் என்று ஐயுறாநின்றாள், அ. தட்சிணாமூர்த்தி உரை – கொன் அச்சப்பொருள் கொண்ட சொல்.  ‘என் மகட்கு யாது நேருமோ எனத் தாய் அஞ்சுவது இயல்பாதலின் இங்கனம் கூறினாள். சங்கை வெட்டி இயற்றிய வளையல் – அகநானூறு 24 – வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த வளை, நற்றிணை 77 – வல்லோன் வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை, ஐங்குறுநூறு 194 – கடல் கோடு அறுத்த அரம் போழ் அவ்வளை, மதுரைக்காஞ்சி 316 – அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை.

பொருளுரை:   நெய்தல் நிலத் தலைவனே! அரத்தால் பிளந்து செய்யப்பட்ட அழகிய சங்கு வளையல்களையும் ஒளியுடைய தொடியையும் அணிந்த என் தோழியைப் பார்.  அவளுடைய நல்ல நெற்றி இன்று ஒளி இழந்து விட்டது.  அதைப் பார்த்து, இது அஞ்சும்படியானது என்று அன்னை ஐயமுற்றாள்.

சொற்பொருள்:  கடல் கோடு – கடல் சங்கு,  அறுத்த – அறுத்த,  அரம் – அரம்,  போழ் – பிளந்து,  அவ்வளை – அழகிய வளையல்கள், ஒள் தொடி – ஒளியுடைய வளையல்கள்,  மடவரல் கண்டிகும் – மடமையுடைய பெண்ணைப் பார்,  கொண்க – நெய்தல் நிலத் தலைவனே, நன் நுதல் – நல்ல நெற்றி,  இன்று – இன்று,  மால் செய்தென – ஒளி இழந்து விட்டது என, கறுத்து விட்டது என,  கொன் ஒன்று – அஞ்சும்படி இது ஒன்று என்று,  கடுத்தனள் – ஐயமுற்றாள்,  அன்னையது நிலையே – இது அன்னையின் நிலை

ஐங்குறுநூறு 195, அம்மூவனார், நெய்தல் திணைதலைவன் தனக்குள் சொன்னது
வளைபடு முத்தம் பரதவர் பகருங்,
கடல் கெழு கொண்கன் காதல் மட மகள்,
கெடல் அருந்துயரம் நல்கிப்,
படலின் பாயல் வெளவியோளே.

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்த தலைவன் ஆற்றானாய்த் தனக்குள் சொல்லியது.

பொருளுரை:  சங்கு ஈன்ற முத்தினைப் பரதவர்கள் விற்கும் கடல்பொருந்திய நெய்தல் நிலத்தின் தலைவனின் அன்பு இளமகள் (மடப்பத்தையுடைய மகள்), நீக்குதற்கு அரிய துன்பத்தை எனக்கு நல்கி, நான் படுக்கையில் உறங்குவதைக் கவர்ந்து கொண்டாள்.

குறிப்பு:  பழைய உரை – கடல் கெழு கொண்கன் என்றது, அவர்கள் தராதார் அல்லர்.  யாம் அவர்களுக்கு வேண்டுவன கொடுத்துக் கொள்ள மாட்டாது வருந்துகின்றோம் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – வெளவியோளே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  வளைபடு முத்தம் பரதவர் பகருங் கடல் கெழு கொண்கன் காதல் மட மகள் – சங்கு ஈன்ற முத்தினைப் பரதவர்கள் விற்கும் கடல்பொருந்திய நெய்தல் நிலத்தின் தலைவனின் அன்பு இளமகள் (மடப்பத்தையுடைய மகள்), கெடல் அருந்துயரம் நல்கிப் படலின் பாயல் வெளவியோளே – நீக்குதற்கு அரிய துன்பத்தை நல்கி படுக்கையில் உறங்குவதைக் கவர்ந்து கொண்டாள் (படல் – கண்படல், உறக்கம்)

ஐங்குறுநூறு 196,   அம்மூவனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கோடு ஈர் எல்வளைக் கொழும் பல் கூந்தல்
ஆய் தொடி மடவரல் வேண்டுதி ஆயின்,
தெண் கழி சேயிறாப் படூஉம்
தண் கடல் சேர்ப்ப! வரைந்தனை கொண்மோ.

பாடல் பின்னணி:  குறை மறுக்கப்பட்ட தலைவன் மீண்டும் குறை வேண்டியபோது தோழி சொன்னது.  

பொருளுரை:   சிவந்த இறால் மீன்களைக் கொண்ட தெளிந்த நீரையுடைய உப்பங்கழியையுடைய கடற்கரையின் தலைவனே! சங்குகளை அறுத்துச் செய்த ஒளி மிகுந்த வளையல்களையும், தழைத்த கூந்தலையும் உடைய தலைவியை வேண்டினாய் ஆயின்,  நீ அவளை மணந்து கொள்வாயாக.

குறிப்பு:  பழைய உரை – தெண்கழிச் சேயிறாப் படூஉம் சேர்ப்ப என்றது, நினைத்தன அகப்படுத்தும் துறைவன் என்றவாறு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கழியிடத்தே சேயிறாப் பிடிக்க விரும்பும் பரதவர் அதற்குரிய வலை முதலியன வீசி அம்மீனைப் பிடித்துக் கோடல் போன்று நீயும் எம்பெருமாட்டியைச் சான்றோரை விடுத்து மகட் பேசித் திருமணம் புரிந்து கொள்க என்பது.  ஆய் தொடி (2) – ஒளவை துரைசாமி உரை – நுண்ணிய தொடி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆராய்ந்தெடுத்த தொடலைக் குறுந்தொடி, ச. வே. சுப்பிரமணியன் உரை – ஆய்ந்து எடுக்கப்பட்ட தொடி, அழகிய தோள்வளை.  இலக்கணக் குறிப்பு – மடவரல் – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, வரைந்தனை – முற்றெச்சம், சேயிறா – பண்புத்தொகை, கொண்மோ – மோ முன்னிலை அசை.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

சொற்பொருள்:  கோடு – சங்கு,  ஈர் – அறுத்து,  எல் வளை – ஒளி மிகுந்த வளையல்கள், கொழும் பல் கூந்தல் – தழைத்த கூந்தல், ஆய் தொடி – அழகிய வளையல்கள், மடவரல் – மடப்பமுடையப் பெண், வேண்டுதி ஆயின் – வேண்டினாய் ஆயின்,  தெண் – தெளிந்த, கழி – உப்பங்கழி, சேயிறா – சிவப்பு நிறமுடைய இறால் மீன், படூஉம் – இருக்கும், தண்கடல் – குளிர்ந்தக் கடல், சேர்ப்ப – கடற்கரைத் தலைவனே, வரைந்தனை கொண்மோ – திருமணம் செய்துக் கொள்

ஐங்குறுநூறு 197, அம்மூவனார், நெய்தல் திணைதலைவன் தனக்குள் சொன்னது
இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி,
முகம் புதை கதுப்பினள் இறைஞ்சி நின்றோளே,
புலம்பு கொள் மாலை மறைய,
நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே.

பாடல் பின்னணி:  குறியிடத்தில் வந்து காத்திருந்த தலைவியைக் கண்ட தலைவன் தனக்குள் சொன்னது.

பொருளுரை:  ஒளிரும் வளையல்கள் ஒலிக்க நண்டுகளை விரட்டி விளையாடி, தன் கூந்தலால் தன் முகத்தை மறைத்துத் தலை தாழ்த்தி நிற்பவள், தனிமைத் துன்பத்தைத் தரும் மாலை நேரம் மறைந்தவுடன், நலம் பொருந்திய தன் மார்பை எனக்கு நல்குவாள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – நெய்தற்கண் புணர்தல் கூறினமையின், இது திணை மயக்கம்.  ‘திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 12) என்பது விதி.  இலக்கணக் குறிப்பு – நின்றோளே – ஏகாரம் தேற்றம், எனக்கே – ஏகாரம் அசைநிலை.  நலம் கேழ் ஆகம் (4) – ஒளவை துரைசாமி உரை – நன்மை பொருந்திய மார்பினை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இன்பம் கெழுமிய (பொருந்திய) தன் மார்பினை, அ. தட்சிணாமூர்த்தி உரை – இன்பத்திற்கு இருப்பிடமான தன் மார்பினை.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி முகம் புதை கதுப்பினள் இறைஞ்சி நின்றோளே – ஒளிரும் வளையல்கள் ஒலிக்க நண்டுகளை விரட்டி விளையாடி தன் கூந்தலால் தன் முகத்தை மறைத்துத் தலை தாழ்த்தி நிற்பவள், புலம்பு கொள் மாலை மறைய – தனிமைத் துன்பத்தைத் தரும் மாலை நேரம் மறைந்தவுடன், நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே – நலம் பொருந்திய தன் மார்பை எனக்கு நல்குவாள்

ஐங்குறுநூறு 198, நெய்தல் திணை, அம்மூவனார், தோழி தலைவியிடம் சொன்னது
வளையணி முன் கை, வால் எயிற்று அமர் நகை,
இளையர் ஆடும் தளை அவிழ் கானல்,
குறுந்துறை வினவி நின்ற,
நெடுந்தோள் அண்ணல் கண்டிகும் யாமே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  பரத்தையர் மனைக்கண் பன்னாட்கள் தங்கி, பின்பு ஆற்றாமையினால் வந்த தலைவனைக் கண்ட தோழி தலைவியிடம் சொன்னது.

பொருளுரை:  வளையல் அணிந்த முன்கையினையும் வெள்ளிய பற்களையும் யாவரும் விரும்பும் புன்னகையையும் கொண்ட இளமகளிர் விளையாடும், இதழ் விரியும் மலர்களையுடைய கடற்கரைச் சோலையில் முன்பு நம்மிடம், “சிறிய துறை எங்குள்ளது?” என வினவி நின்ற, நெடிய தோள்களை உடைய நம் தலைவரை நாம் மீண்டும் இங்கே கண்டோம்.

குறிப்பு:  பழைய உரை – குறுந்துறை வினவி நின்ற நெடுந்தோள் அண்ணல் என்று களவுக்காலத்து நிகழ்ந்ததனைக் கூறிற்று, தலைமகள் புலவி நீங்குதற்கும் தான் நெடுநாட் பிரிந்தமை கூறுகின்றவாறு என்று அவன் வருந்துதற்கும் எனக் கொள்க. உள்ளுறை – புலியூர்க் கேசிகன் உரை – தளை அவிழ் கானலிலே வளையணி முன்கை வால் எயிற்று அமர் நகை இளையர் ஆடும் இடத்தே சென்றும், அவருள் யாரிடத்தும் மனம்போக்கி மயங்காது நின்னையே நாடுவானாகிக் ‘குறுந்துறை யாது?’ என்றவனாகிய நெடுந்தோள் அண்ணல் என்றது, என்றும் அவன் நின்பாலேயே மாறாப் பேரன்பினன் என்பது.  கண்டிகும் யாமே (4) – உ. வே. சாமிநாதையர் உரை – யாம் கண்டோம், அ. தட்சிணாமூர்த்தி உரை – யாம் மீண்டும் இங்கே கண்டோம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – யாமே எதிர்சென்று காண்போமாக, ச. வே. சுப்பிரமணியன் உரை – யாம் மீண்டும் கண்டோம், ஒளவை துரைசாமி உரை – யாம் காண்போம் வருக, தி. சதாசிவ ஐயர் உரை – யான் கண்டேன்.  இலக்கணக் குறிப்பு – கண்டிகும் – இகும் தன்மை அசைநிலை, யாமே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்வளையணி முன்கை வால் எயிற்று அமர் நகை இளையர் ஆடும் தளை அவிழ் கானல் குறுந்துறை வினவி நின்ற – வளையல் அணிந்த முன்கையையும் வெள்ளிய பற்களையும் யாவரும் விரும்பும் புன்னகையையும் கொண்ட இளமகளிர் விளையாடும் இதழ் விரியும் மலர்களையுடைய கடற்கரைச் சோலையில் முன்பு நம்மிடம் சிறிய துறை எங்குள்ளது என வினவி நின்ற, நெடுந்தோள் அண்ணல் கண்டிகும் யாமே – நெடிய தோள்களை உடைய நம் தலைவரை நாம் மீண்டும் இங்கே கண்டோம்

ஐங்குறுநூறு 199, அம்மூவனார், நெய்தல் திணைதோழி தலைவியிடம் சொன்னது
கானலம் பெருந்துறைக் கலி திரை திளைக்கும்
வான் உயர் நெடு மணல் ஏறி, ஆனாது
காண்கம், வம்மோ தோழி,
செறி வளை நெகிழ்த்தோன் எறி கடல் நாடே.

பாடல் பின்னணி:  களவுக் காலத்தில் ஊரில் அலர் மிகுந்ததால், சில நாட்கள் தலைவன் வரவில்லை.  அப்பிரிவினால் வருந்தும் தலைவியைத் தோழி ஆற்றுப்படுத்தியது.

பொருளுரை:  தோழி!  என்னுடன் வருவாயாக!  கடற்கரைச் சோலையின்கண் உள்ள பெரிய துறையில் ஆரவாரிக்கும் அலைகள் வந்து நீங்கும் வானளவு உயர்ந்தாற்போல் தோன்றும் உயர்ந்த நெடிய மணல் மேட்டில் ஏறி, இடைவிடாது நாம் காண்போம், உன் கையில் அணிந்த செறிவுற்ற வளையல்களை நெகிழச் செய்தவனின் முழங்கும் அலைகள் உடைய கடல் பொருந்திய நாட்டை.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – செறிவளை நெகிழ்த்தோன் என்றாள் அவன் பிரிவால் தலைவி மெலிந்தாள் ஆதலின்.  ஆனாது காண்கம் என்றாள் அவ்வாறு காண்பது தலைவிக்குத் தலைவனையே காண்பது போன்றதோர் ஆர்வம் மிகவளிக்கும் ஆதலின்.  வானுயர் நெடுமணல் தலைவியின் ஊரகத்தது.  அதன் மேல் ஏறி நின்று தலைவன் நாட்டைக் காணலாகும் என்றது, அவர்கள் கண்ணுக்குப் புலனாகும் நாட்டவனே ஆதலின், அவன் வருவது எளிது என்பது பற்றியாகும். அங்ஙனம் அண்மையிலிருந்தும் அவன் வரவில்லை என்பது குறிப்பு.  ஒப்புமை – நற்றிணை 235 – குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறிக் கண்டனம் வருகம், சென்மோ தோழி. இலக்கணக் குறிப்பு – கானலம் – அம் சாரியை, கலி திரை – வினைத்தொகை, காண்கம் – தன்மைப் பன்மை வினைமுற்று, வம்மோ – மோ முன்னிலை அசை, நாடே – ஏகாரம் அசைநிலை.  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்:  கானலம் பெருந்துறைக் கலி திரை திளைக்கும் வான் உயர் நெடு மணல் ஏறி – கடற்கரைச் சோலையின்கண் உள்ள பெரிய துறையில் ஆரவாரிக்கும் அலைகள் வந்து நீங்கும் வானளவு உயர்ந்தாற்போல் தோன்றும் உயர்ந்த நெடிய மணல் மேட்டில் ஏறி, ஆனாது காண்கம் – இடைவிடாது நாம் காண்போம், வம்மோ – என்னுடன் வருவாயாக, தோழி – தோழி, செறி வளை நெகிழ்த்தோன் எறி கடல் நாடே – உன் கையில் அணிந்த செறிவுற்ற வளையல்களை நெகிழச் செய்தவனின் முழங்கும் அலைகள் உடைய கடல் பொருந்திய நாட்டை

ஐங்குறுநூறு 200, அம்மூவனார், நெய்தல் திணைதோழி தலைவியிடம் சொன்னது
இலங்கு வீங்கு எல் வளை ஆய் நுதல் கவினப்
பொலந்தேர்க் கொண்கன் வந்தனன், இனியே,
விலங்கு அரி நெடுங்கண் ஞெகிழ்மதி,
நலம் கவர் பசலையை நகுகம் நாமே.

பாடல் பின்னணி:  உடன்போக்கிற்குத் தலைவன் வந்ததைத் தோழி, துயில் எழுப்பித் தலைவியிடம் கூறியது.

பொருளுரை:  விளங்கும் செறிந்த ஒளியுடைய வளையல்களை அணிந்தவளே!  ஒளி குன்றிய நெற்றி மீண்டும் பண்டைய அழகை அடையும்படி பொன்னால் செய்த தேரினை உடைய தலைவன் வந்துள்ளான்.  இப்பொழுது குறுக்காகப் படர்ந்த செவ்வரியுடைய நின் நீண்ட கண்களைத் திறப்பாயாக.  நின் நலத்தினைக் கவர்ந்த பசலை நோயை நாம் எள்ளி நகைத்திடுவோம்.

குறிப்பு:  ஆய் நுதல் (1) – ஒளவை துரைசாமி உரை – ஆய்நுதல் என்புழி ஆய்தல் சுருங்குதல், பசலையால் ஒளி சுருங்கினமையின் ஆய்நுதல் எனப்பட்டது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒளி மழுங்கிய நுதல், பிறர் ஆராய்ந்து அலர் தூற்றுவதற்குக் காரணமான நுதலுமாம்.  இலங்கு வீங்கு எல் வளை (1) – தி. சதாசிவ ஐயர் உரை – விளங்குகின்ற இறுகிய ஒளியுடைய வளையல்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒளிருகின்ற விம்முகின்ற ஒளி வளையல்கள், ஒளவை துரைசாமி உரை – விளக்கமுற நெகிழ்ந்து இலங்குகின்ற வளையல்கள், அ. தட்சிணாமூர்த்தி உரை – விளக்கமும் செறிவும் ஒளியும் உடைய வளையல்.  நெடுங்கண் ஞெகிழ்மதி (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெடிய விழிகளைத் திறந்திடு, ஒளவை துரைசாமி உரை – கண்கள் துயில் நீக்கித் தெளிவாயாக.  இலக்கணக் குறிப்பு –   எல் வளை – அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, இலங்கு வீங்கு எல் வளை – வினைத்தொகை அடுக்கு, ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி, மதி – முன்னிலையசை, பொலம் – பொன் என்பது செய்யுளாகலின் பொலம் என வந்தது, பசலையை – இரண்டாம் வேற்றுமை உருபு, நகுகம் – பன்மைத் தன்மை வினைமுற்று, நாமே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

சொற்பொருள்:  இலங்கு வீங்கு எல் வளை – விளங்கும் செறிந்த ஒளியுடைய வளையல்களை அணிந்தவளே, ஆய் நுதல் கவினப் பொலந்தேர்க் கொண்கன் வந்தனன் – ஒளி குன்றிய நெற்றி மீண்டும் பண்டைய அழகை அடையும்படி பொன்னால் செய்த தேரினை உடைய தலைவன் வந்துள்ளான், இனியே விலங்கு அரி நெடுங்கண் ஞெகிழ்மதி – இப்பொழுது குறுக்காகப் படர்ந்த செவ்வரியுடைய நின் நீண்ட கண்களைத் திறப்பாயாக, நலம் கவர் பசலையை நகுகம் நாமே – நின் நலத்தினைக் கவர்ந்த பசலை நோயை நாம் எள்ளி நகைத்திடுவோம்

கபிலர், குறிஞ்சித் திணை புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

இங்கு நிகழ்பவை:  தலைவியும் தோழியும் தினைப்புனத்தைக் காப்பதற்குச் செல்லுவார்கள், தினையை உண்ண வரும் கிளிகளைத் தட்டை தழல் முதலிய கருவிகளால் ஒலி எழுப்பி விரட்டுவார்கள், தலைவியும் தோழியும் அருவியில் நீராடி விளையாடுவார்கள், தலைவியும் தலைவனும் தினைப்புனத்தில் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொள்வார்கள், தலைவன் மிகுதியாக இரவு வேளையில் தலைவியைக் காண வருவான், தோழி காதலர்களின் இரவுக்குறிக்கும் பகற்குறிக்கும் உதவுவாள், காதலை அறிந்த ஊரினர் அலர் எழுப்புவார்கள், தோழி தலைவனிடம் விரைவில் வந்து தலைவியை மணம் புரியுமாறு வேண்டுவாள், தலைவனை நினைத்துத் தலைவி ஏங்குவதால் அவள் உடல் மெலிந்து பசலை அடையும், தலைவியின் உடல் வேறுபாடு கண்டு அவள் தாயர் வருந்துவர், வேலனை அழைத்து வெறியாட்டம் நிகழ்த்துவார்கள், தலைவி இற்செறிக்கப்படுவாள், தோழி தலைவனிடம் இதைக் கூறி திருமணம் வேண்டுவாள், தலைவி சிறிது விலகியிருக்கும் வேளையில் திருமணம் வேண்டும் தலைவன் மடல் ஏறுவதாகத் தோழியிடம் அறிவிப்பான்.

அன்னாய் வாழிப் பத்து

பாடல்கள் 201–210 – இவை ‘அன்னாய்ப் பத்து’ என்ற தலைப்பில் உள்ளவை.   இவற்றில் சில, தலைவி தன் தோழியிடம் கூறும் பாடல்கள். சில, தோழி தலைவியிடம் கூறும் பாடல்கள். ‘அன்னாய்’ என்னும் சொல் அன்புடன் ‘அம்மா’ என்று இன்றும் நாம் இள வயது பெண்களிடம் சொல்வதைப் போன்றது.  அன்னை என்னை என்றலும் உளவே தொன்னெறி முறைமை சொல்லினும் எழுத்தினுந் தோன்றா மரபின என்மனார் புலவர் (தொல்காப்பியம், பொருளதிகாரம் 246)

ஐங்குறுநூறு 201, கபிலர், குறிஞ்சித் திணைதலைவி தோழியிடம் சொன்னது, செவிலித்தாய் கேட்கும்படி
அன்னாய் வாழி! வேண்டு அன்னை! என் ஐ
தானும் மலைந்தான், எமக்கும் தழை ஆயின
பொன் வீ மணி அரும்பினவே,
என்ன மரம் கொல் அவர் சாரல் அவ்வே?

பாடல் பின்னணி:  தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது.  பிறர் தன் சுற்றத்தாரிடம் தன்னை மணம் பேசி வரும் செய்தியை உணர்ந்து, செவிலித்தாய் கேட்கும்படி தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  அன்னையே!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக அன்னையே!  என் தலைவனின் மலைச்சரிவில் உள்ள மரங்கள் பொன் நிற மலர்களையும் நீலமணி நிற அரும்புகளையும் உடையன. என் தலைவன் அவற்றை அணிந்துகொண்டான்.  அம்மரங்களின் தழைகள் எமக்கு ஆடை ஆயின.  அவை என்ன மரங்கள்?

குறிப்பு:  எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல், கூறுதல் உசாதல், ஏதீடு, தலைப்பாடு, உண்மை செப்புங் கிளவியொடு, தொகைஇ எழு வகைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், பொருளியல் 12).  இங்கு தலைப்பாடு (நற்செயல்) பொருந்தும்.  அ. தட்சிணாமூர்த்தி உரை – பெண் கேட்டு வந்தாராம் அவர்க்கு உடன்பட்ட அன்னையும் தன்னிலையை நோக்கமாகக் கொண்டாளாதலின், தலைவனை ‘என் ஐ’ என்று கூறிப் பின்னும் ‘அவர்’ எனத் தனக்கு அவன்பாலுள்ள மதிப்புத் தோன்ற ஒருவரைக் கூறும் பன்மைச் சொல்லாலும் சுட்டினாள்.  அவன் கையுறை ஆகத் தந்த அவனுடைய நாட்டுத் தழையை ஏற்றுக் கொண்டதனை அறிவிக்க ‘எமக்கும் தழையாயின’ என்றாள், தன் காதலன் நாட்டு மரமாதலின் அதன் மலரையும் அரும்பையும் பொன்னென்றும் மணியென்றும் புகழ்ந்தாள்.  அன்னாய் வாழி (1) – தி. சதாசிவ ஐயர் உரை – முன்னிலையசை, அ. தட்சிணாமூர்த்தி உரை – அன்னையே!  நீ நீடூழி வாழ்வாயாக, ச. வே. சுப்பிரமணியன் உரை – அன்னையே வாழ்க.  வேண்டு அன்னை (1) – தி. சதாசிவ ஐயர் உரை – வேண்டுகின்றேன் அன்னையே, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நான் கூறும் இதனை விரும்பிக் கேட்பாயாக அன்னையே, என் சொல்லை விரும்பிக் கேள் அன்னாய்.  இலக்கணக் குறிப்பு – தழை – தழையுடையைக் குறித்ததால் ஆகுபெயர், கொல் – அசைநிலை, அவ்வே – ஏகாரம் அசைநிலை.  அன்னாய் – ஒளவை துரைசாமி உரை – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இச்செய்யுளை ‘முன்னிலை அறன் எனப்படுதல் என்று இருவகைப் புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என்னுந் துறைக்கு எடுத்துக் காட்டித் தோழி கூற்றாகக் கொள்வர் ஆசிரியர் நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும்.

சொற்பொருள்அன்னாய் – அன்னையே, வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, வேண்டு அன்னை – நான் கூறுவதைக் கேட்பாயாக அன்னையே, என் ஐ தானும் மலைந்தான் – என் தலைவன் அவற்றை அணிந்துகொண்டான், எமக்கும் தழை ஆயின – எமக்கும் அவை தழை ஆடை ஆயின, பொன் வீ மணி அரும்பினவே – பொன் நிற மலர்களையும் நீலமணி நிற அரும்புகளையும் உடையன, என்ன மரம் கொல் – அவை என்ன மரங்கள், அவர் சாரல் அவ்வே – அவருடைய மலைச்சரிவில்

ஐங்குறுநூறு 202, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகன் போலத் தாமும்
குடுமித் தலைய மன்ற,
நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே.

பாடல் பின்னணி:  வரைதல் வேண்டி வருகின்ற தலைவனின் தேரைக் கண்ட தோழி அதனைத் தலைவிக்கு மகிழ்ந்து அறிவித்தது. 

பொருளுரை:  அன்னையே!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக அன்னையே! நெடுமலை நாட்டவனான நம் தலைவன் ஊர்ந்து வரும் தேரை இழுத்து வரும் குதிரைகள்,  நம் ஊர் அந்தணச் சிறுவர்களைப் போல் குடுமித் தலைகள் உடையவை.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – தாமும் என்ற பன்மைக் குறிப்பால் தலைவன் ஒன்றுக்கு மேற்பட்ட குதிரைகள் பூட்டிய தேரில் வந்தமை பெறப்பட்டது.  தலைய என்னும் பன்மைக் குறிப்பையும் காண்க.  ‘நெடுமலை நாடன்’ என்றாள், அவன் மலை போலவே தானும் நெடுந்தகையாயினன் என்ற குறிப்பில்.  அன்றியும் அவன் செல்வ வளத்தைச் சுட்டியதாம்.  வற்புறுத்தல் இன்றித் தானே வந்தான்.  ஆதலான் அவன் நெடுந்தகையானான் என்க.  ஒப்புமை – புறநானூறு 273 – புல் உளைக் குடுமிப் புதல்வன், புறநானூறு 310 – மானுளை அன்ன குடுமி.  இலக்கணக் குறிப்பு – மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், மாவே – ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

சொற்பொருள்:  அன்னாய் – அன்னையே, வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, வேண்டு அன்னை – நான் கூறுவதைக் கேட்பாயாக அன்னையே, நம்மூர்ப் பார்ப்பனக் குறுமகன் போல – நம் ஊர் அந்தணச்  சிறுவன் போல், தாமும் குடுமித் தலைய  – தாமும் குடுமித் தலையை உடையன, மன்ற – அசை, தெளிவுப்பொருள் தந்தது, நெடுமலை நாடன் – பெரிய மலையின் நாடன், ஊர்ந்த மாவே – தேரில் கட்டி ஊர்ந்து வருகின்ற குதிரைகள்

ஐங்குறுநூறு 203, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அன்னாய் வாழி! வேண்டு அன்னை! நம் படப்பை
தேன் மயங்கு பாலினும் இனிய, அவர் நாட்டு
உவலை கூவல் கீழ
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே.

பாடல் பின்னணி:  தலைவனுடன் உடன்போக்கில் சென்று அதன்பின் தலைவி தன்னூர் மீண்டபோது, ‘நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல.  நீ எவ்வாறு பருகினை?’ என வினவிய தோழியிடம் சொன்னது.  

பொருளுரை:  அன்னையே!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக அன்னையே!  நம் தோட்டத்தின் தேன் கலந்த பாலை விட இனிப்பானது அவருடைய நாட்டில் உள்ள குழிகளில் இலைகளுக்கு அடியில் உள்ள, மான் குடித்து எஞ்சிய கலங்கிய நீர்.

குறிப்பு:  பழைய உரை – மானுண்டு கழித்த கலங்கற் சின்னீர் அருந்தக் கூடாவாயினும் அருந்தினேனுக்குத் தேன் மயங்கு பாலினும் இனியவாயின என்றது, அவன் நாட்டு நீர் நலமும் அன்புடைமையும் உணர்த்தியவாறு.  உவலை தாழ்வு, கீழ்மையுமாம்.  இலக்கணக் குறிப்பு – கலிழி – கலுழி என்பதன் திரிபு, தேன் மயங்கு – தேனோடு மயங்கிய, மூன்றாம் வேற்றுமைத் தொகை, நீரே – ஏகாரம் அசைநிலை.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).  படப்பை – ஒளவை துரைசாமி உரை – படப்பை, படைப்பை என்பதன் மரூஉ.

சொற்பொருள்:  அன்னாய் – அன்னையே, வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, வேண்டு அன்னை – நான் கூறுவதைக் கேட்பாயாக அன்னையே, நம் படப்பை – நம் தோட்டத்து, தேன் மயங்கு பாலினும் – தேன் கலந்த பாலை விட,  இனிய – இனியது, அவர்நாட்டு – அவருடைய நாட்டு, உவலை – காய்ந்த இலைகள், கூவல் – குழி,  கீழ – கீழ்,  மான் உண்டு – மான் குடித்து,  எஞ்சிய – மிஞ்சிப் போன, கலிழி நீரே – கலங்கிய நீர்

ஐங்குறுநூறு 204, கபிலர், குறிஞ்சித் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அன்னாய் வாழி! வேண்டு அன்னை! அஃது எவன் கொல்,
வரையர மகளிரின் நிரையுடன் குழீஇப்
பெயர்வுழிப் பெயர்வுழித் தவிராது நோக்கி,
‘நல்லள் நல்லள்’ என்ப,
தீயேன் தில்ல மலை கிழவோற்கே?

பாடல் பின்னணி:  வரையாது வந்தொழுகும் தலைவன் சிறைப்புறமாக இருப்பதை அறிந்த தலைவி தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  அன்னையே!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக அன்னையே!  மலையில் உள்ள சூரர மகளிர்போல் ஊரில் உள்ள மகளிர் பலரும் கூடி, நான் செல்லுமிடம் செல்லுமிடம் தோறும் என்னையே நோக்கி “இவள் நல்லவள், இவள் நல்லவள்” எனக் கூறுகின்றனர். ஆனால் மலைநாட்டின் தலைவனுக்கு மட்டும் நான் தீயவளாக இருக்கின்றேன்.  அது எதனால்?

குறிப்பு:  பழைய உரை – நல்லள் நல்லள் என்பது அலர் அறிவுறீயது.  இலக்கணக் குறிப்பு – கொல் – அசைநிலை, மகளிரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, குழீஇ – செய்யுளிசை அளபெடை, பெயர்வுழிப் பெயர்வுழி – அடுக்குத்தொடர், பெயர்வுழி = பெயர் + உழி, உழி ஏழாம் வேற்றுமை உருபு, நல்லள் நல்லள் – அடுக்குத்தொடர், தில்ல – தில் என்னும் இடைச் சொல் ஈறு திரிந்து வந்தது, ஒழியிசை என்னும் பொருளில் வந்தது, கிழவோர்க்கே – ஏகாரம் அசைநிலை.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).  ஒப்புமை – நற்றிணை 149 – சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற.

சொற்பொருள்அன்னாய் – அன்னையே, வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, வேண்டு அன்னை – நான் கூறுவதைக் கேட்பாயாக அன்னையே, அஃது எவன் கொல் – அது எதனால், வரையர மகளிரின் நிரையுடன் குழீஇ – மலையில் உள்ள சூரர மகளிர்போல் ஊரில் உள்ள மகளிர் பலரும் கூடி, பெயர்வுழிப் பெயர்வுழித் தவிராது நோக்கி ‘நல்லள் நல்லள்’ என்ப – செல்லுமிடம் செல்லுமிடம் தோறும் என்னையே நோக்கி ‘இவள் நல்லவள், இவள் நல்லவள்’ எனக் கூறுகின்றனர், தீயேன் தில்ல மலை கிழவோற்கே – மலைநாட்டின் தலைவனுக்கு மட்டும் நான் தீயவளாக இருக்கின்றேன்

ஐங்குறுநூறு 205, கபிலர், குறிஞ்சித் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
அன்னாய் வாழி! வேண்டு அன்னை! என் தோழி
நனி நாண் உடையள், நின்னும் அஞ்சும்,
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்
மலர்ந்த மார்பின் பாயல்
துஞ்சிய வெய்யள், நோகோ யானே.

பாடல் பின்னணி:  தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.  அயலார் பெண் வேண்டிச் சான்றோரை அனுப்பினர்.  அதுகண்ட தலைவி வருந்தினாள். அவளுடைய வருத்தம் எதனால் எனச் செவிலித்தாய் வினவியபொழுது தோழி கூறியது.

பொருளுரை:  அன்னையே!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக அன்னையே!  என் தோழி மிகவும் நாணம் உடையவள்.  நின்னையும் அஞ்சுகின்றாள்.  ஒலியுடன் வீழும் வெள்ளை அருவிகளையுடைய உயர்ந்த மலைநாட்டுத் தலைவனின் அகன்ற மார்பின்கண் கிடந்து பெறும் இனிய உறக்கத்தை விரும்புகின்றாள். இவள் நிலைக்காக நான் வருந்துகின்றேன்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ஒலி வெள்ளருவி ஓங்குமலை நாடன் என்றது, புனல்தரு புணர்ச்சி கூறியவாறு.  ஓங்குமலை நாடன் என்றது ஏத்தல்.  இலக்கணக் குறிப்பு – நனி – உரிச்சொல், நின்னும் – உம்மை சிறப்பு, வெய்யள் – வேண்டற் பொருட்டாய வெம்மை என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த வினைக்குறிப்பு முற்று, நோகோ – நோகு – செய்கென்னும் தன்மை வினை, ஓகாரம் அசைநிலை, இரக்கக் குறிப்பு, யானே – ஏகாரம் அசைநிலை.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  அன்னாய் – அன்னையே, வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, வேண்டு அன்னை – நான் கூறுவதைக் கேட்பாயாக அன்னையே, என் தோழி நனி நாண் உடையள்– என் தோழி மிகவும் நாணம் உடையவள், நின்னும் அஞ்சும் – நின்னையும் அஞ்சுகின்றாள், ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் மலர்ந்த மார்பின் பாயல் துஞ்சிய வெய்யள் – ஒலியுடன் வீழும் வெள்ளை அருவிகளையுடைய உயர்ந்த மலைநாட்டுத் தலைவனின் அகன்ற மார்பின்கண் கிடந்தது பெறும் இனிய உறக்கத்தை விரும்புகின்றாள், நோகோ யானே – நான் வருந்துகின்றேன்

ஐங்குறுநூறு 206, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது
அன்னாய் வாழி! வேண்டு அன்னை! உவக்காண்,
மாரிக் குளத்துக் காப்பாள் அன்னன்,
தூவலின் நனைந்த தொடலை ஒள்வாள்
பாசி சூழ்ந்த பெருங்கழல்
தண் பனி வைகிய வரிக் கச்சினனே.

பாடல் பின்னணி:  இரவுக்குறியிடத்திற்குத் தலைவன் வந்து நின்றமை அறிந்த தோழி, தலைவியிடம் சொன்னது.

பொருளுரை:  அன்னையே!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக அன்னையே!  உவ்விடத்தில் காண்பாயாக! மழைக்காலத்தில் குளத்தைக் காவல் செய்யும் காப்பாளன் போல், மழைத் துளிகளால் நனைந்ததும், மாலை போல் தோளிலிருந்து தொங்குவதுமாகிய ஒளிரும் வாளையும், நீர்ப்பாசி சூழ்ந்த பெரிய வீரக்கழல்களையும், குளிர்ந்த நீர்த்துளிகள் தங்கிய வரியுடைய கச்சினையும் உடையவனாக வந்துள்ளான் நம் தலைவன்.

குறிப்பு:  காப்பாள் – தி. சதாசிவ ஐயர் உரை – காவற்தொழிலையுடைய ஆள்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின்னுடைய துயர் பெருகி நின் நெஞ்சத்தை உடைத்துவிடாமல் நினக்கு அளி செய்வான் வந்தனன் என்பாள், மாரிக்குளத்துக் காப்பாள் அன்னன் என்றாள் என்க.  ஒப்புமை – எறி திரைத் திவலை தூஉம் சிறு கோட்டுப் பெருங்குளம் காவலன் போல (அகநானூறு 252).  இலக்கணக் குறிப்பு – தூவலின் – இன் மூன்றாம் வேற்றுமைப் பொருள்பட நின்றது, தொடலை ஒள்வாள் – உவமைத் தொகை, கச்சினனே – ஏகாரம் அசைநிலை.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).  பாடல் வேறுபாடு – மாரிக் குன்றத்து என்றும் பாடல் உண்டு.

சொற்பொருள்அன்னாய் – அன்னையே, வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, வேண்டு அன்னை – நான் கூறுவதைக் கேட்பாயாக அன்னையே, உவக்காண் – உவ்விடத்தில் காண்பாயாக, மாரிக் குளத்துக் காப்பாள் அன்னன் – மழைக்காலத்தில் குளத்தைக் காவல் செய்யும் காப்பாளன் போல், தூவலின் நனைந்த தொடலை ஒள்வாள் பாசி சூழ்ந்த பெருங்கழல் தண் பனி வைகிய வரிக் கச்சினனே – மழைத் துளிகளால் நனைந்ததும் மாலை போல் தோளிலிருந்து தொங்குவதுமாகிய ஒளிரும் வாளையும் நீர்ப்பாசி சூழ்ந்த பெரிய வீரக்கழல்களையும் குளிர்ந்த நீர்த்துளிகள் தங்கிய வரியுடைய கச்சினையும் உடையவன் (தொடலை – மாலை, வைகிய – தங்கிய)

ஐங்குறுநூறு 207, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது
அன்னாய் வாழி! வேண்டு அன்னை! நன்றும்
உணங்கல கொல்லோ நின் தினையே, உவக்காண்!
நிணம் பொதி வழுக்கின் தோன்றும்
மழை தலை வைத்த அவர் மணி நெடுங்குன்றே.

பாடல் பின்னணி:  மழையின்மையால் தினைக் கதிர்களை ஈனும் முன் தினைப்புனம் கரிந்துபோகும் நிலையை அடைந்தது.  காவல் புரிய இயலாததால் தலைவனை எதிர்ப்படுதல் கைகூடாதோ என ஐயுற்று வருந்திய தலைவியிடம் தோழி சொன்னது.

பொருளுரை:  அன்னையே!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக அன்னையே!  பெரிதும் உலர்ந்துவிடவில்லை நின் தினைப்புனம்.  உவ்விடத்தில் காண்பாயாக!  கொழுப்பால் மூடப்பட்டிருக்கும் ஊன் போல் தோன்றுகின்றது முகில்கள் உச்சியில் படிந்திருக்கும் அவருடைய நீலமணி நிற நெடிய மலை.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – மழை முகிலை முடியில் தாங்கித் தோன்றும் நெடுங்குன்றம் வழுக்குத் தோன்றிய நிணம்போலத் தோன்றினாற்போல, உணங்கித் தோன்றிய தினை, தலைமகனை எதிர்ப்படல் அருமை போல நினக்குக் காட்டிற்று என்றும், அவர் நெடுங்குன்றம் மழை முகிலை முடி மேற்கொண்டு மழை வரவினை வற்புறுத்துவதனால், எவ்வழியும் நீ அவரைத் தலைப்பட்டு இன்புறுதல் ஒருதலை என்றும் உள்ளுரைத்தவாறு.  உணங்கல கொல்லோ (2) – ஒளவை துரைசாமி உரை – தினை பெரிதும் உணங்கமாட்டா.  சிறுபான்மை உணங்கினும் மழை வந்தபின் அவை பெரிதும் தழைக்கும் என்பது உணர நின்றது, அ. தட்சிணாமூர்த்தி உரை – உலர்ந்து போகாதல்லவோ, பொ.வே. சோமசுந்தரனார் உரை – உலர்ந்துவிட்டனவுமல்ல.  மணி நெடுங்குன்றே (4) – ஒளவை துரைசாமி உரை – நீலமணி போலும் நெடிய குன்றம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மணிகட்கு உறைவிடமாகிய பெரிய மலை. இலக்கணக் குறிப்பு – கொல்லோ – கொல் அசைநிலை, ஓகாரம் எதிர்மறை, வழுக்கின் – ஐந்தாம் வேற்றுமை உருபு, இன் ஒப்புப் பொருளில் வந்தது, அவர் – பண்டறி சுட்டு, நெடுங்குன்றே – ஏகாரம் அசைநிலை.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

சொற்பொருள்:  அன்னாய் – அன்னையே, வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, வேண்டு அன்னை – நான் கூறுவதைக் கேட்பாயாக அன்னையே, நன்றும் உணங்கல கொல்லோ நின் தினையே – பெரிதும் உலர்ந்துவிடவில்லை நின் தினைப்புனம், உவக்காண் – உவ்விடத்தில் காண்பாயாக, நிணம் பொதி வழுக்கின் தோன்றும் மழை தலை வைத்த அவர் மணி நெடுங்குன்றே – கொழுப்பால் மூடப்பட்டிருக்கும் ஊன் போல் தோன்றுகின்றது முகில்கள் உச்சியில் படிந்திருக்கும் அவருடைய நீலமணி நிற நெடிய மலை

ஐங்குறுநூறு 208, கபிலர், குறிஞ்சித் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
அன்னாய் வாழி! வேண்டு அன்னை! கானவர்
கிழங்கு அகழ் நெடுங்குழி மல்க வேங்கைப்
பொன் மலி புது வீத் தாஅம் அவர் நாட்டு
மணி நிற மால் வரை மறைதொறு, இவள்
அணி மலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே.

பாடல் பின்னணி:  தோழி அறத்தொடு நின்றுத் தலைவியின் காதலைச் செவிலித்தாய்க்கு வெளிப்படுத்தினாள்.  செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தொடு நின்றாள்.  அதனால் திருமணம் கைகூடும் நிலை உண்டாயிற்று.  மகிழ்ந்த தோழி அவளைப் பாராட்டிக் கூறியது.

பொருளுரை:  அன்னையே!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக அன்னையே!  கானவர் (மலைக்குறவர்) வள்ளிக் கிழங்கையும் கவலைக் கிழங்கையும் தோண்டி எடுத்தபின் உண்டான நெடிய குழிகள் நிரம்பும்படி வேங்கை மரங்களின் மிக்க புதிய மலர்கள் அவற்றில் படியும், தலைவரின் நாட்டில் உள்ள நீலமணியின் நிறம் கொண்ட பெரிய மலை மறையும்பொழுதெல்லாம், இவளுடைய அழகிய மலர் போன்ற நீண்ட கண்களில் கண்ணீர்த் துளிகள் நிரம்பின.

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – கிழங்கு அகழ்குழி நிறைய வேங்கை மலர் பரக்கும் என்றது, கொள்வார்க்குப் பயன்பட்டுத் தமக்கு வந்த குறையைத் தம் புகழ் நிறைக்கும் பெருமையுடையர் என்பதாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கானவர் கிழங்கு அகற்குழியை வேங்கையின் பொன்னிற மலர் பரந்து மறைக்கும் என்றது, தலைவன் நற்குடியினின்றும் தலைவியைக் களவில் கைக் கொண்டமையால் உண்டாய அலர் மொழியை நீ உட்பட நம் சுற்றத்தார் வரைவு உடன்பட்டுச் செய்த இத்திருமணமாகிய நற்செயல் மாற்றிப் பெரும் புகழாக்கிவிட்டது என்பது.   இலக்கணக் குறிப்பு – தாஅம் – செய்யுளிசை அளபெடை, அவர் – பண்டறி சுட்டு, பனியே – ஏகாரம் அசைநிலை.  ஆர்ந்தன பனியே (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீர் நிரம்பின, ஒளவை துரைசாமி உரை – நீர் சொரிந்தன, தி. சதாசிவ ஐயர் உரை– நீர் நிறையப்பெற்றன.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

சொற்பொருள்அன்னாய் – அன்னையே, வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, வேண்டு அன்னை – நான் கூறுவதைக் கேட்பாயாக அன்னையே, கானவர் கிழங்கு அகழ் நெடுங்குழி மல்க வேங்கைப் பொன் மலி புது வீத் தாஅம் – கானவர் (மலைக்குறவர்) வள்ளிக் கிழங்கையும் கவலைக் கிழங்கையும் தோண்டி எடுத்தபின் உண்டான நெடிய குழிகள் நிரம்பும்படி வேங்கை மரங்களின் மிக்க புதிய மலர்கள் அவற்றில் படியும், அவர் நாட்டு மணி நிற மால் வரை மறைதொறு – தலைவரின் நாட்டில் உள்ள நீலமணியின் நிறம் கொண்ட பெரிய மலை மறையும்பொழுதெல்லாம், இவள் அணி மலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே – இவளுடைய அழகிய மலர் போன்ற நீண்ட கண்களில் கண்ணீர்த் துளிகள் நிரம்பின

ஐங்குறுநூறு 209, கபிலர், குறிஞ்சி திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அன்னாய் வாழி! வேண்டு அன்னை! நீ மற்று
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின்,
கொண்டல் அவரைப்  பூவின் அன்ன
வெண் தலை மா மழை சூடித்
தோன்றல் அனாது அவர் மணி நெடுங்குன்றே.

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தலைவி ஆற்றாளாகிய வழி, ‘சிறிது மறந்து ஆற்ற வேண்டும்’ என்ற தோழியிடம் தலைவி சொன்னது.

பொருளுரை:  அன்னையே!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக அன்னையே!  நான் அவரை மறக்க வேண்டும் என்று நீ கூறுகின்றாய்.  கீழ்க்காற்றால் மலரும் அவரைப் பூக்கள் போன்ற வெள்ளை நிற மேல் பகுதியைக் கொண்ட பெரிய (கரிய) முகில்கள் சூழ்ந்த மலை உச்சியை உடைய, அவருடைய நீலமணியைப் போன்ற மலை என் கண்களை விட்டு அகலாது நிற்கின்றது.  அவரை நான் எப்படி மறக்க முடியும்?

குறிப்பு:  பழைய உரை – வெண்டலை மாமழை சூடித் தோன்றல் ஆனாது என்றது, மழை பெய்தற்குக் கால் வீழ்ந்த இருட்சியால் மறையப் பெறாது விளங்கித் தோன்றுதலை நோக்கி எனக் கொள்க.  உள்ளுறை – புலியூர்க் கேசிகன் உரை – மழை பெய்தற்குக் கால்வீழ்த்த இருட்சியால் தான் மறையப் பெறாது விளங்கித் தோன்றும் அவர் மணி நெடுங்குன்றம் என்றது, என்ன தான் நாணும் அச்சமும் கொண்டு யான் அடக்கி மறைத்தற்கு முயலினும் என் உள்ளத்துத் துயரம் என்னை நலிவிப்பதனால் புறத்தும் வெளிப்படத் தோன்றி விடுகின்றது என்பது.  இலக்கணக் குறிப்பு – மற்று – வினை மாற்றில் வந்தது, வேண்டுதி – முன்னிலை வினைமுற்று, பூவின் – இன் சாரியை, அவர் – பண்டறி சுட்டு, அன்ன – உவம உருபு, நெடுங்குன்றே – ஏகாரம் அசைநிலை.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

சொற்பொருள்:  அன்னாய் வாழி – அன்னையே வாழ்வாயாக, வேண்டு அன்னை – நான் கூறுவதை கேட்க வேண்டுகின்றேன், நீ மற்று யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின் – நான் அவரை மறக்க வேண்டும் என்று நீ வேண்டுகின்றாய் ஆயின், கொண்டல் – கீழ்க்காற்று, அவரைப் பூவின் அன்ன – அவரைப் பூக்கள் போல, வெண் தலை – வெள்ளை நிற மேல் பகுதி, மாமழை – பெரிய முகில்கள், கரிய முகில்கள், சூடித் தோன்றல் ஆனாது – சூடினார்ப் போல விடாமல் தோன்றும், அவர் மணிநெடுங்குன்றே – அவருடைய நீலமணியைப் போன்ற (sapphire) உயர்ந்த மலை

ஐங்குறுநூறு 210, கபிலர், குறிஞ்சித் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
அன்னாய் வாழி! வேண்டு அன்னை! நம் படப்பைப்
புலவுச் சேர் துறுகல் ஏறி, அவர் நாட்டுப்
பூக் கெழு குன்றம் நோக்கி நின்று,
மணி புரை வயங்கிழை நிலைபெறத்
தணிதற்கும் உரித்து, அவள் உற்ற நோயே.

பாடல் பின்னணி:  தலைவி இற்செறிக்கப்பட்டபோது அவள் பெரிதும் மெலிவுற்றாள்.  அம்மெலிவிற்குக் காரணம் முருகன் என எண்ணி வெறியாட்டம் நிகழ்த்த எண்ணினர் தாயர்.  அவ்வேளையில் தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.

பொருளுரை:  அன்னையே!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக அன்னையே!  நம் தோட்டத்தில் உள்ள புலவு நாற்றமுடைய பாறையின் மேல் ஏறி, தலைவருடைய நாட்டில் உள்ள பூக்கள் நிறைந்த மலையை நோக்கி, நீலமணியை ஒத்த ஒளிரும் அணிகலன்களை அணிந்த என் தோழி, நிற்கும் நிலையைப் பெற்றால் தணிவதற்கு உரியதாகும், அவள் அடைந்த நோய்.

குறிப்பு:  பழைய உரை – புலவுசேர் துறுகல் என்றது, யாவும் தெய்வத்தினான் ஆயின என்று மறி முதலாயின கொன்று புலவு நாறும் நம் குன்று என்பதாம்.  மணி புரை (4) – தி. சதாசிவ ஐயர் உரை – நீலமணி போலும் விளங்குகின்ற ஆபரணம், ஒளவை துரைசாமி உரை – நீலமணி போலும் மலர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீலமணி போலும் விளங்கும் இழை, அ. தட்சிணாமூர்த்தி உரை – நீலமணியை ஒத்த குன்றம்.  நிலைபெற (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின்று நிலைபெற, ஒளவை துரைசாமி உரை – நிற்கும் நிலைப்பெறின், அ. தட்சிணாமூர்த்தி உரை – அணிகள் நெகிழாது அவை நின்ற நிலையிலே நிற்பதற்கு ஏதுவாக.  இலக்கணக் குறிப்பு – அவர் – பண்டறி சுட்டு, புரை – உவம உருபு, வயங்கிழை – அன்மொழித்தொகை, நின்று – நிற்ப என்பது நின்று எனது திரிந்தது, நோயே – ஏகாரம் அசைநிலை.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

சொற்பொருள்:  அன்னாய் – அன்னையே, வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, வேண்டு அன்னை – நான் கூறுவதைக் கேட்பாயாக அன்னையே, நம் படப்பைப் புலவுச் சேர் துறுகல் ஏறி, அவர் நாட்டுப் பூக் கெழு குன்றம் நோக்கி நின்று – நம் தோட்டத்தில் உள்ள புலவு நாற்றமுடைய பாறையின் மேல் ஏறி தலைவருடைய நாட்டில் உள்ள பூக்கள் நிறைந்த மலையை நோக்கி நின்று, மணி புரை – நீலமணியை ஒத்த, வயங்கிழை நிலைபெறத் தணிதற்கும் உரித்து – ஒளிரும் அணிகலன்களை அணிந்த இவள் நிற்கும் நிலையைப் பெற்றால் தணிவதற்கு உரியதாகும், அவள் உற்ற நோயே – அவள் அடைந்த நோய்

அன்னாய் பத்து

பாடல்கள் 211–220 – இவற்றில், முந்தைய பாடல்கள் போன்று, அன்னாய் என்னும் சொல் பாடல்தோறும் வந்துள்ளது.

ஐங்குறுநூறு 211,  குறிஞ்சித் திணை, கபிலர்  – தோழி தலைவியிடம் சொன்னது
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன,
வயலை அம் சிலம்பின் தலையது
செயலையம் பகைத்தழை வாடும், அன்னாய்.

பாடல் பின்னணி:  தலைவியுடன் கூட விரும்பிய தலைவன் கையுறையாகத் தழை ஆடையைக் கொண்டுவந்தான்.  அதைப் பெற்றுக்கொண்ட தோழி, அதனை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்துபவளாகத் தலைவியிடம் சொன்னது.  

பொருளுரை:   தோழியே!  உழுந்த மாவை நெய்யில் கலந்து நூலாகத் திரித்தாற்போல் தோன்றும் வயலைக் கொடிகள் உடைய அழகிய மலை உச்சியில் உள்ள அழகிய அசோக மரத்தின் தழையால் செய்த ஆடை வாடி விடும்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – சிலம்பின் தலையிடத்த தாய்ப் பெறுதற்கு அரிதுமாய தழையை எளிதிற் பெறத் தந்தமையால், இஃது ஏற்கற்பாலது என்றாளுமாம்.  அரிதிற் பெறற்பாற்றாய தழையை யாம் தேடி வருந்தா வகையில் தானே எளிதில் தந்தான் என்றதனால், வரைவு வேண்டியவழித் தமர் மறுத்தல் முதலிய அருமை செய்து அலைப்பினும், வென்றி பெற முயன்று வரைந்து கொள்ளும் தாளாண்மையன் என்று தலைவனது உரனுடையமை சுட்டியவாறு.  இலக்கணக் குறிப்பு – உழுந்து – ஆகுபெயர், உழுத்த மாவிற்கு ஆயிற்று, அன்னாய் – விளி.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

சொற்பொருள்:  நெய்யொடு மயக்கிய – நெய்யுடன் கலந்த,  உழுந்து நூற்றன்ன – உழுந்த மாவின் நூலைப் போன்று, வயலை – வயலைக் கொடிகள் (purslane creeper) அம் – அழகிய, சிலம்பின் தலையது – மலை உச்சியில், செயலை – அசோக மரங்கள், அம் – அழகிய, பகைத்தழை  – இலைகள் மாறி, வாடும் – வாடும்,  அன்னாய் – தோழியே

ஐங்குறுநூறு 212, கபிலர் குறிஞ்சித் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
சாந்த மரத்த பூழில் எழு புகை,
கூட்டு விரை கமழும் நாடன்
அறவற்கு, எவனோ நாம் அகல்வு அன்னாய்?

பாடல் பின்னணி:  தலைவன் வரைவு வேண்டி வந்தபோது தலைவியின் பெற்றோர் மறுத்தனர்.  தோழி அதை அறிந்தாள்.  செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றாள்.

பொருளுரை:  அன்னையே!  சந்தன மரங்களுக்கு இடையே உள்ள இடத்தில் அகில் மரத்துண்டுகளைச் சுடுவதால் எழும் புகை சந்தன மணத்துடன் கலந்து நறுமணமாகப் பரவும் நாட்டை உடைய அறவோனுக்கு, நம் குடும்பத்தார் மகட் கொடை மறுத்தல் எதனால்?

குறிப்பு:  பழைய உரை – சாந்த மரத்தின் இடை நிலத்து உளவாகிய அகில் சுடு புகை அச்சந்தனப்பூ நாற்றத்தோடு கமழும் நாடன் என்றது, தனக்கு வந்த வருத்தம் பாராது தனக்குத் துணையாயினர் நலத்தொடுங் கூடி எல்லார்க்கும் பயன்பட ஒழுகும் ஒழுக்கத்தை உடையான் என்பதாம்.  உள்ளுறை – தி. சதாசிவ ஐயர் உரை – சந்தன மரத்தின் இடைநிலத்துளவாகிய அகில் சுடு புகை அச்சந்தன நாற்றத்தோடு கமழு நாடன் என்றது, தனக்கு வந்த வருத்தம் பாராது தனக்குத் துணையாயினார் நலத்தொடுங்கூடி எல்லார்க்கும் பயன்பட ஒழுகும் ஒழுக்கத்துடையான் என்பதாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – சாந்த மரப் பொழில் என்றது தலைவியின் குடியை, அகில் என்றது உயர் குடித் தோன்றலாகிய தலைவனை, புகை என்றது அவன் உள்ளத்தே பொங்கியெழுந்த காதல் உணர்ச்சியை, சந்தன மரம் என்றது தலைவியை, அதன் மணம் என்றது தலைவியின் நெஞ்சத்தே கிளர்ந்து எழும் காதல் உணர்ச்சியை, கூட்டு மணம் கமழும் என்றது தலைவன் விடுத்த சான்றோர் அவ்விருவருக்கும் மணம் பேசிவந்த திருமணச் செய்தியை என்க.  இலக்கணக் குறிப்பு – சாத்த என்றும் பாடம் உண்டு, இதனை வலித்தல் விகாரமாகக் கொள்க, மரத்த – அகரம் பன்மை உருபு, பூழில் – பூழிலினின்றும் எழுந்த புகை என ஐந்தனுருபு விரிக்க, அகல்வு – விலக்குதல், நீக்கல், தொழிற்பெயர், எவனோ – ஓகாரம் அசை, அன்னாய் – விளி.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

சொற்பொருள்:  சாந்த மரத்த பூழில் எழு புகை கூட்டு விரை கமழும் நாடன் அறவற்கு – சந்தன மரங்களுக்கு இடையே உள்ள இடத்தில் அகில் மரத்துண்டுகளைச் சுடுவதால் எழும் புகை சந்தன மணத்துடன் கலந்து நறுமணமாகப் பரவும் நாட்டை உடைய அறவோனுக்கு, எவனோ நாம் அகல்வு – மகட் கொடை மறுத்தல் எதனால், அன்னாய் – அன்னையே

ஐங்குறுநூறு 213, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நறுவடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த
ஈர்ந்தண் பெருவடுப் பாலையில் குறவர்
உறை வீழ் ஆலியல் தொகுக்கும் சாரல்
மீமிசை நல் நாட்டவர் வரின்,
யான் உயிர் வாழ்தல் கூடும், அன்னாய்.

பாடல் பின்னணி:  வரையாது வந்தொழுகும் தலைவனிடம் வரைவு வேண்டினாள் தோழி.  அதற்கு இணங்கி வரைதற்கு வேண்டுவன கொண்டுவருவேன் எனக் கூறிச் சென்றான் தலைவன்.  தோழி அச்செய்தியைத் தலைவியிடம் கூறினாள்.  அதுகேட்ட தலைவி மகிழ்ந்து தோழிக்குக் கூறியது.  

பொருளுரைதோழி!  நறுமணமுள்ள, மிகக் குளிர்ந்த, பெரிய மா வடுக்கள் காம்பு அறுந்து, மழைத் துளிகளுடன் கீழே உதிர்ந்து விடும்.  அவற்றைப் பாலை நிலத்து மலை நாட்டவர் மலைச் சரிவில் ஆலங்கட்டியைக் குவித்து வைத்தது போல் குவித்து வைப்பார்கள்.  உயர்ந்த உச்சியையுடைய நல்ல நாட்டவன் என்னை மணம் புரிய வந்தால் தான் நான் உயிரோடு இருப்பேன்.

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – மாவின் மூக்கிற்று உதிர்ந்த வடுக்களை ஆலி போலத் தொகுக்கும் நாட்டையுடையார் என்றது, விரும்புவனவற்றுக்குத் தாமாக முயலாது பெற்றுழிப் பேணும் இயல்புடையார் என்றவாறு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இற்றுவீழும் வடியினைக் குறவர் தொகுப்பர் என்றது, பாலை நிலத்தின்கண் வெம்பி வீழும் வடுக்களைத் தொகுக்கும் குறவர் போன்று நம்பெருமானும் யான் துயரத்தாலே நைந்து இறந்துபடும் எல்லைவரை வாளாவிருந்து அவ்வெல்லைக்கண் வரைதற்கு வர முயல்வாயாயினன் எனத் தலைவனைப் பழித்தபடியாம்.  மூக்கு (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காம்பு.  ஒப்புமை – நற்றிணை 6 – அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி, நற்றிணை 24 – விளவின் ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு, நற்றிணை 372 – பெண்ணைத் தேனுடை அழி பழம் வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென, ஐங்குறுநூறு 213 – நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த.  இலக்கணக் குறிப்பு – இறுபு – செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம், மீமிசை – ஒருபொருட் பன்மொழி, அன்னாய் – விளி.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

சொற்பொருள்:  நறு வடி – நறுமணமுள்ள மா வடு, மாஅத்து –  மாமரத்தின், மூக்கு இறுபு – காம்பு அறுந்து, உதிர்த்த – உதிர்ந்த, ஈர்ந்தண் – ஈரமான குளிர்ச்சியான, மிகக் குளிர்ந்த, பெரு வடு – பெரிய மா வடு,  பாலையில் குறவர் – பாலை நிலத்தின் குறவர்கள், உறை – மழை, வீழ் – விழும், ஆலியல் – ஆலங்கட்டி போல, தொகுக்கும் – குவித்து இருக்கும், சாரல் – மலைச் சரிவு, மீ மிசை – உயர்ந்த உச்சி, நல் நாட்டவர் வரின் – நல்ல நாட்டவர் வந்தால், யான் – நான், உயிர் வாழ்தல் கூடும் அன்னாய் – உயிர் வாழ்வேன் தோழி

ஐங்குறுநூறு 214, குறிஞ்சித் திணை, கபிலர், தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
சாரல் பலவின் கொழுந்துணர் நறும் பழம்
இருங்கல் விடர் அளை வீழ்ந்தென, வெற்பில்
பெருந்தேன் இறாஅல் கீறும் நாடன்,
பேரமர் மழைக் கண் கலிழத், தன்
சீருடை நன்னாட்டுச் செல்லும் அன்னாய்.

பாடல் பின்னணி:  களவில் தலைவியுடன் கூடிய தலைவன், சில நாட்கள் கழித்து வருவதாகத் தோழியிடம் கூறித் தலைவியை ஆற்றுவிக்குமாறு வேண்டினான். அவன் அவ்வாறு பிரிதலைத் தான் விரும்பவில்லை என்பதை அவன் அறியும்வண்ணம் அவன் சிறைப்புறத்தில் இருக்கும்பொழுது அவள் தலைவியிடம் கூறியது.

பொருளுரை:  தோழி!  மலைச் சரிவில் உள்ள பலா மரத்தின் செழுமை மிகுந்த கொத்தில் உள்ள நறிய பழம் கரிய (பெரிய) மலைப் பிளவில் உள்ள பொந்தில் விழுந்ததால், மலையில் பெரிய தேனடைகள் சிதறும் நாட்டை உடைய நம் தலைவன், உன்னுடைய பெரிய குளிர்ந்த கண்கள் கலங்குமாறு நம்மை விட்டு விலகித் தன்னுடைய நாட்டிற்குச் செல்வானாம்.

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – பலவின் பழம் பிறர்க்குப் பயன்படாது கல் அளையில் வீழ்கின்றுழி அவ்விடத்து உளதாகிய தேனிறாலையும் சிதைக்கும் என்றது, தன்னாற் பெற்ற நலம் எங்கள் இயற்கை நலத்தினையும் சிதைக்கின்றது என்பதாம்,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பலாப்பழம் வீழ்தலானே விடரகத்துள்ள அளையின் கண்ணதாகிய தேனடை சிதைதற்கிடனான நாடன் என்றது, தனது ஒழுக்கத்தாலே நம்முடைய இயற்கை நலத்தையும் அழிப்பவன் என்பது.  இலக்கணக் குறிப்பு – இறாஅல் – அளபெடை, அன்னாய் – விளி.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

சொற்பொருள்சாரல் பலவின் கொழுந்துணர் நறும் பழம் இருங்கல் விடர் அளை வீழ்ந்தென – மலைச் சரிவில் உள்ள பலா மரத்தின் செழுமை மிகுந்த கொத்தில் உள்ள நறிய பழம் கரிய (பெரிய) மலைப் பிளவில் உள்ள பொந்தில் விழுந்ததால் (துணர் – கொத்து), வெற்பில் பெருந்தேன் இறாஅல் கீறும் நாடன் – மலையில் பெரிய தேனடைகள் சிதறும் நாட்டை உடையவன் (இறாஅல் – தேனடை), பேரமர் மழைக் கண் கலிழத் தன் சீருடை நன்னாட்டுச் செல்லும் – உன்னுடைய பெரிய குளிர்ந்த கண்கள் கலங்குமாறு நம்மை விட்டு விலகித் தன்னுடைய நாட்டிற்குச் செல்வானாம், அன்னாய் – அன்னையே, தோழியே

ஐங்குறுநூறு 215, குறிஞ்சித் திணை, கபிலர்தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
கட்டளை அன்ன மணி நிறத் தும்பி,
இட்டிய குயின்ற துறைவயின் செலீஇயர்,
தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்
தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும்,
புதல் மலர் மாலையும் பிரிவோர்,
இதனினும் கொடிய செய்குவர் அன்னாய்.

பாடல் பின்னணி:  பகற்பொழுதில் மட்டுமே வந்தொழுகும் தலைவனை இரவுக் குறியில் காண விரும்பிய தலைவி, அவன் சிறைப்புறமாக இருப்பதை அறிந்து தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  பொன் இழைக்கும் கட்டளைக் கல் போன்று இடையிடையே பொன் நிறம் பொருந்திய, நீலமணியின் நிறத்தையுடைய தும்பிகள், குறுகியதாக இயற்றப்பட்ட நீராடும் துறையின்கண் சென்று, தட்டை தண்ணுமை என்னும் கருவிகளின் பின் இசைக்கலைஞர்கள் இசைக்கும் இனிய ஆம்பல் குழலின் இனிய இசைபோல் ஒலிக்கும் இடமான புதர்களில் பூக்கள் மலர்கின்ற மாலை நேரமும் பிரிபவர், இதைவிட மிகக் கொடிய செயல்களையும் செய்யக்கூடியவர்.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இயவருடைய தட்டை தண்ணுமையாகிய வல்லோசையுடைய கருவிகள் முழங்கிப் போய பின்னர்ப் புதரினின்றும் வண்டெழுந்து முரன்று அலையுமாறு அவர் ஆரவாரமுடையன கூறிச் சென்ற பின்னர் என் நெஞ்சம் இனைந்து நைகின்றது என்பது.  இலக்கணக் குறிப்பு – அன்ன – உவம உருபு, செலீஇயர் – அளபெடை, இயர் ஈற்று வினையெச்சம், ஆம்பலின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, மாலையும் – உம்மை இழிவு சிறப்பு, அன்னாய் – விளி.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).  ஒப்புமை – நற்றிணை 25 – நறுந்தாது ஆடிய தும்பி பசுங்கேழ்ப் பொன் உரை கல்லின் நல் நிறம் பெறூஉம்.

சொற்பொருள்கட்டளை அன்ன மணி நிறத் தும்பி இட்டிய குயின்ற துறைவயின் செலீஇயர் – பொன் இழைக்கும் கட்டளைக் கல் போன்று இடையிடையே பொன் நிறம் பொருந்திய நீலமணியின் நிறத்தையுடைய தும்பிகள் ஒலிக்கும் குறுகியதாக இயற்றப்பட்ட நீராடும் துறையின்கண் சென்று (இட்டிய – குறுகிய, குயின்ற – இயற்றப்பட்ட), தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர் தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும் புதல் மலர் மாலையும் – தட்டை தண்ணுமை என்னும் கருவிகளின் பின் இசைக்கலைஞர்கள் இசைக்கும், இனிய ஆம்பல் குழலின் இனி இசைபோல் ஒலிக்கும் இடமான புதர்களில் பூக்கள் மலர்கின்ற மாலை நேரமும், பிரிவோர் இதனினும் கொடிய செய்குவர் – பிரிபவர் இதைவிட மிகக் கொடிய செயல்களையும் செய்யக்கூடியவர், அன்னாய் – அன்னையே, தோழியே

ஐங்குறுநூறு 216, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
குறுங்கை இரும்புலிக் கோள் வல் ஏற்றை,
நெடும் புதல் கானத்து, மடப் பிடி ஈன்ற
நடுங்கு நடைக் குழவி கொளீஇய, பலவின்
பழம் தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்குக்,
கொய்திடு தளிரின் வாடி, நின்
மெய் பிறிது ஆதல் எவன் கொல் அன்னாய்?

பாடல் பின்னணி:  வரையாது வந்தொழுகும் தலைவன் அருகில் இருப்பதை அறிந்த தோழி சொன்னது.  வரைவு வேண்டியது.

பொருளுரை:  தோழி!  குறுகிய முன்னங்கால்களை உடைய புலியின் கொல்லுவதில் வல்ல ஆண், நெடிய புதர்களுடைய காட்டில், இளம் பெண் யானை ஈன்ற நடுங்கும் நடையையுடைய கன்றைப் பற்றித் தின்னும் பொருட்டு, பழங்கள் தொங்கும் பலா மரத்தின் அடர்ந்த நிழலில் ஒளிந்திருக்கும் நாட்டின் தலைவன்பொருட்டு, உன் உடல் கொய்து இட்ட இளந்தளிர் போன்று வாட்டமுற்று மாறுபடுவது எதனால்?

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – புலி ஏற்றை பிடி ஈன்ற குழவியைக் கொள்ள வேண்டிக் காலம் பார்த்து மறைந்திருக்கும் நாடன் என்றது தன் வஞ்சனையால் நின் பெண்மையை வௌவுகின்றான் என்பதாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – புலிக் கோள் வல் ஏற்றை நெடும் புதல் கானத்து, மடப் பிடி ஈன்ற நடுங்கு நடைக் குழவி கொளீஇய பலவின் பழந்தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் என்பது, முகிழ்ந்துள்ள இளமை மிக்க பெண்மைப் பெருநலத்தைச் செவ்வி பெறும் பொழுதெல்லாம் பற்றி நுகர்தற் பொருட்டே இனிய வஞ்சக மொழிகளைப் போர்வையாகக் கொண்டு இக்களவொழுக்கத்தின் ஊடே மறைந்திருக்கின்றானல்லது வரைந்து கொண்டு அறவாழ்வு நடத்துதலில் கருத்திலன், அவன் பொருட்டு நீ வருந்துதலாற் பயனில்லை என்பது.  நெடும்புதற் கானம் தலைவியின் குடிக்கும், மடப்பிடி தலைவிக்கும், அஃதீன்ற குழவி தலைவியின்பாற் பருவங்கொண்டுள்ள பெண்மை நலத்திற்கும், பழம் அவன் இனிய வஞ்சக மொழிக்கும் ஒளித்தல் களவொழுக்கத்தே கரந்து திரிதற்கும் உவமையாக நுண்ணிதிற் கண்டு கொள்க.  இலக்கணக் குறிப்பு – கொளீஇய – செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், தளிரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, கொல் – அசைநிலை, அன்னாய் – விளி.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

சொற்பொருள்குறுங்கை இரும்புலிக் கோள் வல் ஏற்றை நெடும் புதல் கானத்து மடப் பிடி ஈன்ற நடுங்கு நடைக் குழவி கொளீஇய – குறுகிய முன்னங்கால்களை உடைய பெரிய புலியின் கொல்லுவதில் வல்ல ஆண் நெடிய புதர்களுடைய காட்டில் இளம் பெண் யானை ஈன்ற நடுங்கும் நடையையுடைய கன்றைக் பற்றித் தின்னும் பொருட்டு, பலவின் பழம் தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்கு – பழங்கள் தொங்கும் பலா மரத்தின் அடர்ந்த நிழலில் ஒளிந்திருக்கும் நாட்டின் தலைவன்பொருட்டு, கொய்திடு தளிரின் வாடி நின் மெய் பிறிது ஆதல் எவன் கொல் – கொய்யப்பட்ட தளிர் போன்று வாடி உன் உடல் மாறுபாடு அடைதல் எதனால், அன்னாய் – தோழி

ஐங்குறுநூறு 217, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது
பெருவரை வேங்கைப் பொன் மருள் நறு வீ
மான் இனப் பெருங்கிளை மேயல் ஆரும்,
கானக நாடன் வரவும், இவண்
மேனி பசப்பது எவன் கொல் அன்னாய்?

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன் திரும்பி வந்ததை அறிந்த தோழி, தலைவியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  பெரிய மலையில் உள்ள வேங்கை மரங்களின் பொன் போன்ற நிறமுடைய நறுமண மலர்களை மான் இனத்தின் பெரிய சுற்றம் மேய்ந்து உண்ணும் காட்டையுடைய நாடன் இங்கு வந்தும், உன் மேனி பசலை அடைவது எதனால்?

குறிப்புஉள்ளுறை – பழைய உரை – வேங்கைப் பூவை மானினம் ஆரும் என்றது அவன் மனைப் பெருஞ்செல்வம் நின் கிளையாகிய நாங்களும் நின்னோடு நுகர்வேம் என்பதாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மானும் அதன் இனமாகிய சுற்றமும் வேங்கைப் பொன்மலரைத் தின்னும் என்றது, இனி நின்னோடு கூடி யாங்களும் சுற்றமும் தலைவன் நின்னை வரைந்து கொண்டு இல்லறம் நிகழ்த்துங்கால் உண்டு மகிழ்ந்திருப்போம் என்பது.  இலக்கணக் குறிப்பு – மருள் – உவம உருபு, மேயல் – தொழிற்பெயர் (அ. தட்சிணாமூர்த்தி உரை), ஆகுபெயர் உணவிற்கு (பொ. வே. சோமசுந்தரனார் உரை), கொல் – அசைநிலை, அன்னாய் – விளி.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

சொற்பொருள்பெருவரை வேங்கைப் பொன் மருள் நறு வீ மான் இனப் பெருங்கிளை மேயல் ஆரும் கானக நாடன் வரவும் – பெரிய மலையில் உள்ள வேங்கை மரங்களின் பொன் போன்ற நிறமுடைய நறுமண மலர்களை மான் இனத்தின் பெரிய சுற்றம் மேய்ந்து உண்ணும் காட்டையுடைய நாடன் வந்தும், இவண் – இவ்விடம், மேனி பசப்பது எவன் கொல் – உன் மேனி பசலை அடைவது எதனால், அன்னாய் – அன்னையே, தோழியே

ஐங்குறுநூறு 218, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது
நுண் ஏர் புருவத்த கண்ணும் ஆடும்,
மயிர் வார் முன் கை வளையும் செறூஉம்,
களிறு கோள் பிழைத்த கதஞ்சிறந்து எழு புலி
எழுதரு மழையின் குழுமும்
பெருங்கல் நாடன், வருங்கொல் அன்னாய்.

பாடல் பின்னணி:  மகட்கொடை வேண்டித் தலைவன் அனுப்பிய பெரியவர்களுக்குத் தலைவியின் குடும்பம் உடன்படவில்லை என்பதால் வருந்தினாள் தலைவி.  அப்பொழுது நல்லது நடக்கும் என்ற நல்ல நிமித்தங்கள் தனக்குத் தோன்றியதைக் கூறித் தலைவியை ஆற்றுவித்தாள் தோழி.

பொருளுரை:  தோழி!  நுண்ணிய அழகிய புருவத்தையுடைய என் கண் துடிக்கின்றது.  மயிர் ஒழுகிய என் முன்னங்கையில் அணிந்த வளையல்களும் செறிந்தன.  தான் கொல்வதற்கு முயன்ற களிற்று யானை தப்பி ஓடியமையால் சினத்துடன் எழுந்த புலி, திரண்டு எழுந்த முகில்கள் போல் முழங்கும் பெரிய மலைநாட்டின் தலைவன் உறுதியாக வரைவொடு வருவான். நீ வருந்தாதே!

குறிப்பு:  கண்ணும் ஆடும் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டுக் குறிப்பால் இடதுகண் மேல் நின்றது, ஒளவை துரைசாமி உரை – மகளிர்க்கு இடக்கண் துடித்தல் நன்னிமித்தமாகலின் ‘கண்ணும் ஆடும்’ என்றார்.  உள்ளுறை – பழைய உரை – தன்னால் கொள்ளப்பட்ட களிறு தப்பினதற்குப் புலி கதம் சிறந்து குழுமும் என்றது, நினைத்தவற்றிற்குக் குறை வரின் அதற்கு வெகுண்டு முடிப்பான் என்றவாறு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – களிறுகோள் பிழைத்தமையால் கதஞ்சினந்து எழுபுலி முழங்கும் என்றது, நம் சுற்றத்தார் வரைவு மறுத்தலானே ஊக்கஞ்சிறந்து முன்னையினும் பன்மடங்கு முயன்று நம் சுற்றத்தாரை உடம்படுவித்துக் கொண்டு வரைவொடு வருவான் என்பது.  இலக்கணக் குறிப்பு – செறூஉம் – செய்யுளிசை அளபெடை, எழுபுலி – வினைத்தொகை, எழுதரு மழை – வினைத்தொகை, மழையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, கொல் – அசைநிலை, அன்னாய் – விளி.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

சொற்பொருள்நுண் ஏர் புருவத்த கண்ணும் ஆடும் – நுண்ணிய அழகிய புருவத்தையுடைய என் கண் துடிக்கின்றது, மயிர் வார் முன் கை வளையும் செறூஉம் – மயிர் ஒழுகிய என் முன்னங்கையில் அணிந்த வளையல்களும் செறிந்தன (இறுக்கமாக ஆயின), களிறு கோள் பிழைத்த கதஞ்சிறந்து எழு புலி எழுதரு மழையின் குழுமும் பெருங்கல் நாடன் வருங்கொல் – தான் கொல்வதற்கு முயன்ற களிற்று யானை தப்பி ஓடியமையால் சினத்துடன் எழுந்த புலி திரண்டு எழுந்த முகில்கள் போல் முழங்கும் பெரிய மலைநாட்டின் தலைவன் வருவான், அன்னாய் – அன்னையே, தோழியே

ஐங்குறுநூறு 219, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது
கருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள் வீ,
இருங்கல் வியல் அறை வரிப்பத் தாஅம்
நன் மலை நாடன் பிரிந்தென,
ஒண்ணுதல் பசப்பது, எவன் கொல் அன்னாய்?

பாடல் பின்னணி:  வரைவின்கண் பொருள் ஈட்டுவதற்குத் தலைவன் பிரிந்தான்.  வருந்தியிருந்த தலைவியிடம் தோழி சொன்னது.

பொருளுரை:  தோழி!  கரிய அடிப்பகுதியையுடைய வேங்கை மரங்களின் பெரிய இதழ்களையுடைய ஒளிரும் மலர்கள் பெரிய (கரிய) மலையின் அகன்ற பாறைகளில் அழகாகப் பரவிக் கிடக்கும் இடமான நல்ல மலையின் தலைவன் பிரிந்ததால், நின் ஒளியுடைய நெற்றி பசலை அடைவது எதனால்?   

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – இது குறிஞ்சியுட் பாலை என்பர் நச்சினார்க்கினியர்.  பழைய உரை – வேங்கை மலர் அகலறையிலே பரக்கும் நாடன் என்றது, நம் பொல்லா ஒழுக்கம் மறைய நல்லொழுக்கம் நமக்கு உதவும் நன்மையை உடையான் என்பதாம்.  ஒளவை துரைசாமி உரை – வேங்கையின் மலர் வியல் அறைக்கண் பரக்கும் என்றது, நீ பசப்பது புறத்தார்க்குப் புலனாகி ஊரெங்கும் அலராய் விடும் எனத் தோழி உரைத்தவாறு.  பழைய உரைக்காரர், வேங்கையின் ஒள் வீ வியல் அறைக்கண் பரப்பது போலத் தான் நின்னை வரைவுமாற்றால் தன் பெருமை நலம் ஊரறியச் செய்வன் என்ற கருத்துப்பட உரைத்தார்.  இலக்கணக் குறிப்பு – தாஅம் – செய்யுளிசை அளபெடை, அன்னாய் – விளி, கொல் – அசைநிலை.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

சொற்பொருள்கருங்கால் வேங்கை மாத் தகட்டு ஒள் வீ இருங்கல் வியல் அறை வரிப்பத் தாஅம் நன் மலை நாடன் பிரிந்தென – கரிய அடிப்பகுதியையுடைய வேங்கை மரங்களின் பெரிய இதழ்களையுடைய ஒளிரும் மலர்கள் பெரிய (கரிய) மலையின் அகன்ற பாறைகளில் அழகாகப் பரவிக் கிடக்கும் இடமான நல்ல மலையின் தலைவன் பிரிந்ததால், ஒள் நுதல் பசப்பது எவன் கொல் – ஒளியுடைய நெற்றி பசலை அடைவது எதனால், அன்னாய் – அன்னையே, தோழியே

ஐங்குறுநூறு 220, கபிலர், குறிஞ்சித் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
அலங்கு மழை பொழிந்த அகன் கண் அருவி,
ஆடு கழை அடுக்கத்து இழிதரு நாடன்
பெருவரை அன்ன, திரு விறல் வியன் மார்பு
முயங்காது கழிந்த நாள், இவள்
மயங்கிதழ் மழைக் கண் கலிழும் அன்னாய்.

பாடல் பின்னணி:  நொதுமலர் பெண் கேட்டு வந்த வேளையில், தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.

பொருளுரை:  அன்னையே!  அசையும் முகில்கள் பொழிந்த மழையினால் உண்டான அகன்ற இடத்தையுடைய அருவிகள், அசையும் மூங்கில்கள் உள்ள மலை அடுக்குகளில் (பக்க மலைகளில்) வீழும் நாட்டுத் தலைவனின் பெரிய மலையை ஒத்த அழகையும் வெற்றியையுமுடைய மார்பைத் தழுவாது கழிந்த நாட்கள், இவளின் கலங்கிய மலரிதழ் போலும் குளிர்ந்த கண்கள் கண்ணீரைச் சொரியும்.

குறிப்பு:  தொல்காப்பியம், பொருளியல் 12 – எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல், கூறுதல், உசாதல், ஏதீடு தலைப்பாடு, உண்மை செப்புங் கிளவியொடு, தொகைஇ எழு வகைய என்மனார் புலவர் – உண்மை செப்புங் கிளவி இங்குப் பொருந்தும்.  உள்ளுறை – பழைய உரை – அலங்கு மழை பொழிந்த அகன்கண் அருவி ஆடுகழை அடுக்கத்து இழிதரும் நாடன் என்றது, இவள் மேல் வைத்த தண்ணளி நம்மிடத்தும் வந்து இடையறாது ஒழுகும் என்றவாறு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மழைபொழியத் தோன்றிய அகன்ற அருவிகள் அடுக்கத்திடையே இழியும் நாடன் என்றது, தலைவன் புரிந்த தலையளியால் உயிர் வாழ்கின்றாள் என்றும், நொதுமலர்க்கு வரைவு உடன்படின் உயிர்வாழாள் என்பது.  இலக்கணக் குறிப்பு – அலங்கு மழை, ஆடு கழை – வினைத்தொகைகள், அன்ன – உவம உருபு, அன்னாய் – விளி.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).  மயங்கிதழ் (5) – ஒளவை துரைசாமி உரை – இணையொத்த மலர் இதழ், தி. சதாசிவ ஐயர் உரை – வாடுகின்ற பூ இதழ், பொ. வே. சோமசுந்தரனார் உரை, அ. தட்சிணாமூர்த்தி உரை – மயங்கிய இதழ்கள்.

சொற்பொருள்அலங்கு மழை பொழிந்த அகன் கண் அருவி ஆடு கழை அடுக்கத்து இழிதரு நாடன் பெருவரை அன்ன திரு விறல் வியன் மார்பு முயங்காது கழிந்த நாள் – அசையும் முகில்கள் பொழிந்த மழையினால் உண்டான அகன்ற இடத்தையுடைய அருவிகள் அசையும் மூங்கில்கள் உள்ள மலை அடுக்குகளில் (பக்க மலைகளில்) வீழும் நாட்டுத் தலைவனின் பெரிய மலையை ஒத்த அழகையும் வெற்றியையுமுடைய மார்பைத் தழுவாது கழிந்த நாட்கள், இவள் மயங்கு இதழ் மழைக் கண் கலிழும் – இவளின் கலங்கிய மலரிதழ் போலும் குளிர்ந்த கண்கள் கண்ணீரைச் சொரியும், அன்னாய் – அன்னையே

அம்ம வாழிப் பத்து

பாடல்கள் 221–230 – இவை யாவும் ‘அம்ம வாழி தோழி’ எனத் தொடங்குகின்றன.  பாடல்கள் 221, 222, 224 தலைவி தோழியிடம் கூறுவதாக அமைந்துள்ளன.  பாடல்கள் 223, 225-230 தோழி தலைவியிடம் கூறுவதாக  அமைந்துள்ளன.  அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல்.  அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

ஐங்குறுநூறு 221, கபிலர், குறிஞ்சித் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி! காதலர்,
பாவை அன்ன என் ஆய் கவின் தொலைய,
நன் மா மேனி பசப்பச்,
‘செல்வல்’ என்ப, தம் மலைகெழு நாடே.

பாடல் பின்னணி:  வரைவின் பொருட்டுத் தான் பிரிவதாகவும், தான் வரும் வரை ஆற்றியிருக்க வேண்டும் எனவும் தலைவியிடம் கூறி விலகினான். அதன் பின் அவன் அருகில் இருப்பதை அறிந்து அவள் தோழியிடம் கூறியது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நம் தலைவர், பாவையை ஒத்த என்னுடைய பலராலும் ஆராயப்படுகின்ற அழகு அழியவும், என் மாந்தளிர் மேனியில் பசலை அடையும்படியும், தன் மலைபொருந்திய நாட்டிற்குச் செல்வேன் என்கின்றார்.

குறிப்பு:  பழைய உரை – கடிதின் வரைதல் பயன்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலைகெழு நாடு என்றது, அந்நாட்டிற்குப் போகும் அவர் அம்மலை போன்று ஆண்டே நிலைபெற்றுவிடாமே வருதல் வேண்டும் என்பது.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, அன்ன – உவம உருபு, மா – மாந்தளிரைக் குறித்தலின் ஆகுபெயர், செல்வல் – தன்மை ஒருமை வினைமுற்று, நாடே – ஏகாரம் அசைநிலை.  ஆய் கவின் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பலராலும் ஆராயப்படுகின்ற பேரழகு, உ. வே. சாமிநாதையர் உரை – மெலிந்த அழகு.

சொற்பொருள்அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, காதலர் – நம் தலைவர், பாவை அன்ன என் ஆய் கவின் தொலைய நன் மா மேனி பசப்பச் ‘செல்வல்’ என்ப – பாவையை ஒத்த பலராலும் ஆராயப்படுகின்ற என்னுடைய அழகு அழியவும் என் மாந்தளிர் மேனியில் பசலை அடையவும் செல்வேன் என்கின்றார் (பாவை – ஓவியன் வரைந்த சித்திரப்பாவை, சிலை, பொம்மை), தம் மலைகெழு நாடே – தன் மலைபொருந்திய நாட்டிற்கு

ஐங்குறுநூறு 222, கபிலர், குறிஞ்சித் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி! நம் ஊர்
நளிந்து வந்து உறையும் நறும் தண் மார்பன்,
இன்னினி வாராமாறு கொல்,
சில் நிரை ஓதி என் நுதல் பசப்பதுவே?

பாடல் பின்னணி:  ‘நின் நுதல் பசத்தற்குக் காரணம் என்ன?’ என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.  இரவுக்குறியிலும் பகற்குறியிலும் வந்தொழுகும் தலைவன், இடையூறுகள் காரணமாக இடையே வருவானாயினன். இவ்வாறு அவன் வந்தபொழுது, அவன் இருப்பதை அறிந்து அவன் கேட்பத் தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நம் ஊர்க்கு அடுத்தடுத்து வந்து நம்முடன் தங்கும் நறுமணமும் குளிர்ச்சியையும் உடைய மலர்மாலை அணிந்த மார்புடைய நம் தலைவன், இப்பொழுது வாராமையினால் தான் சிலவாய் அடர்ந்த கூந்தல் தழுவிய என் நெற்றி பசந்ததோ?

குறிப்பு:  சில் நிரை ஓதி (4) – தலைவி தன் கூந்தலைப் பற்றிக் கூறியதாகக் கொள்ளலாம்.  அல்லது தோழியைச் ‘சில் நிரை ஓதி’ என்று அழைத்ததாகவும் கொள்ளலாம்.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, நளி – செறிவுப் பொருள் தரும் உரிச்சொல், மாறு – ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல், கொல் – அசைநிலை, பசப்பதுவே – ஏகாரம் அசைநிலை.  இன்இனி (3) – தி. சதாசிவ ஐயர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இப்பொழுது, ஒளவை துரைசாமி உரை – இனி இனி, ‘வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை, ஒல்வழி அறிதல் வழக்கத்தான (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 44) என்பதனுள் ‘வழக்கத்தான்; என்றதனால் இகரம் கெடுத்து, ‘குறியதன் முன்னர்த் தன் உருபு இரட்டலும் (தொல்காப்பியம், தொகை மரபு 18) என்றதனால் இன்இனி என முடித்துக் காட்டலும் ஒன்று.

சொற்பொருள்அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, நம் ஊர் நளிந்து வந்து உறையும் நறும் தண் மார்பன் – நம் ஊர்க்கு அடுத்தடுத்து வந்து நம்முடன் தங்கும் நறுமணமும் குளிர்ச்சியையும் உடைய மலர்மாலை அணிந்த மார்புடைய நம் தலைவன், இன்இனி வாராமாறு கொல் சில் நிரை ஓதி என் நுதல் பசப்பதுவே – இப்பொழுது வாராமையினால் தான் சிலவாய் அடர்ந்த கூந்தல் தழுவிய என் நெற்றி பசந்ததோ

ஐங்குறுநூறு 223, கபிலர், குறிஞ்சித் திணை தோழி தலைவியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! நம் மலை
வரை ஆம் இழியக், கோடல் நீடக்,
காதலர்ப் பிரிந்தோர் கையற நலியும்,
தண் பனி வடந்தை அச்சிரம்
முந்து வந்தனர், நம் காதலோரே.

பாடல் பின்னணி:  வரைவின்பொருட்டுப் பொருள் ஈட்டச் சென்ற தலைவன் குறித்த பருவத்திற்கு முன்னமே வருவதை அறிந்த தோழி, தலைவியிடம் மகிழ்ந்து சொன்னது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நம் மலையில் அருவி நீர் வீழவும், காந்தளின் நீண்ட இதழ்கள் மலரவும், காதலரைப் பிரிந்தவர்கள் செயலற்று வருந்தவும் செய்யும் குளிர்ந்த பனியையும் வாடைக் காற்றையும் உடைய அச்சிரக் காலத்திற்கு முன்பே வந்துவிட்டார் நம் தலைவர்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – அற்சிரம் முன்பனி.  இது அச்சிரம் எனவும் வழங்கும்.  அக்காலத்தில் காதலரைப் பிரிந்த மகளிர் கையற்று வருந்துவர் என்பது ‘அகன் துறை மகளிர் அணி துறந்து நடுங்க அற்சிரம் வந்தன்று ‘ (சிலப்பதிகாரம் 14:247) என்பதனால் அறிக. வடந்தை அற்சிரம் செய்யும் வருத்தம் தலைமகட்கு எய்தாது என்பாள், முந்து வந்தனர் நம் காதலோரே என்றாள்.  கோடல் நீட (2) – பொ. வே. சோமசுந்தரனார்உரை – ‘செங்காந்தளின் நீண்ட இதழ்கள் மலர’, ஒளவை துரைசாமி உரை – ‘காந்தள் வளர்ச்சியுறாநிற்பவே’.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, இழிய – செய என்னும் வாய்பாட்டு எச்சம், நீட – செய என்னும் வாய்பாட்டு எச்சம், கையற – ஏதுப்பொருள் தரும் செயவென் எச்சம், காதலோரே – ஏகாரம் அசைநிலை.  நம் காதலோரே (4) – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள்.  பனிக்காலம் பிரிந்திருப்போரை வருத்துதல் – வருவேம் என்ற பருவம் உதுக்காண் தனியோர் இரங்கும் பனி கூர் மாலை – குறுந்தொகை 358, யாங்குச் செய்வாம் கொல் தோழி, ஈங்கைய வண்ணத் துய் மலர் உதிர முன்னர்த் தோன்றும் பனிக் கடு நாளே – குறுந்தொகை 380.

சொற்பொருள்அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, நம் மலை வரை ஆம் இழியக் கோடல் நீடக் காதலர்ப் பிரிந்தோர் கையற நலியும் – நம் மலையில் அருவி நீர் வீழவும் காந்தள் மலர்கள் வளரவும் காதலரைப் பிரிந்தவர்கள் செயலற்று வருந்தும் (ஆம் – நீர்), தண் பனி வடந்தை அச்சிரம் முந்து வந்தனர் நம் காதலோரே – குளிர்ந்த பனியையும் வாடைக் காற்றையும் உடைய அச்சிரக் காலத்திற்கு முன்பே வந்துவிட்டார் நம் தலைவர்

ஐங்குறுநூறு 224, கபிலர், குறிஞ்சித் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி! நம் மலை
மணி நிறங் கொண்ட மா மலை வெற்பில்,
துணி நீர் அருவி நம்மோடு ஆடல்
எளிய மன்னால் அவர்க்கு, இனி
அரிய ஆகுதல், மருண்டனென் யானே.

பாடல் பின்னணி:  தன்னை தாய் இற்செறிப்பாள் என உணர்ந்த தலைவி, தலைவன் கேட்கும்படி தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நம் மலைநாட்டில் உள்ள நீலமணி நிறமுடைய பெரிய மலையின் பக்க மலைகளிலிருந்து வீழும் தெளிந்த நீருடைய அருவிகளில் நம்முடன் நீராடுவது எளிதாக இருந்தது முன்பு அவர்க்கு.  இனி அவை அரியதாக இருக்கும் என நான் மனம் கலங்குகின்றேன்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – அருவியாடல் முதலிய செயல்களால் தம் ஒழுக்கம் தமரால் உணரப்பட்டமையும். அதனால் அவர் இற்செறித்தமையும் குறிப்பால் உணர்த்துவாள், இனி அரியவாகுதல் மருண்டனென் யானே என்று கூறினாள்.  தலைமகன் சிறுபுறத்தான் ஆகலின் ஆடல் எளியமன்னால் அவர்க்கு என்றாள்.  இது முட்டுவயிற் கழறல்.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, மன்னால் – மன் கழிவுப்பொருள் உணர்த்தும் இடைச்சொல், ஆல் அசைநிலை, யானே – ஏகாரம் அசைநிலை.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  வெற்பு – மலை, இங்கு மலை வெற்பு என்றதனால், பக்கமலை எனக் கொள்ள வேண்டும்.  பாடல் 226ல் ‘மலை’ ‘சிலம்பின்’ ஆகிய இரண்டு சொற்கள் வருமிடத்து, பேரறிஞர் ஒளவை துரைசாமி இவ்வாறே விவரித்துள்ளார்.

சொற்பொருள்அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, நம் மலை மணி நிறங் கொண்ட மா மலை வெற்பில் துணி நீர் அருவி நம்மோடு ஆடல் எளிய மன்னால் அவர்க்கு – நம் மலைநாட்டில் உள்ள நீலமணி நிறமுடைய பெரிய மலையின் பக்க மலைகளிலிருந்து வீழும் தெளிந்த நீருடைய அருவிகளில் நம்முடன் நீராடுவது எளிதாக இருந்தது முன்பு அவர்க்கு, இனி அரிய ஆகுதல் மருண்டனென் யானே – இனி அவை அரியதாக இருக்கும் என நான் மனம் கலங்குகின்றேன்

ஐங்குறுநூறு 225, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! பைஞ்சுனைப்
பாசடை நிவந்த பனி மலர்க் குவளை
உள் அகம் கமழும் கூந்தல், மெல்லியல்,
ஏர் திகழ் ஒண்ணுதல் பசத்தல்,
ஓரார் கொல், நம் காதலோரே?

பாடல் பின்னணி:  தலைவியின் மெலிவைக் கூறிக் களவொழுக்கத்தில் வந்தொழுகும் தலைவனிடம் வரைவு வேண்டினாள் தோழி.  அவன் வரைவிற்குப் பொருள் ஈட்டப் பிரிந்தான்.  அப்பொழுது வருந்திய தலைவியிடம் தோழி சொன்னது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  பசிய சுனையில் உள்ள பசிய இலைகளிலிருந்து உயர்ந்த குளிர்ந்த குவளை மலர்களின் நறுமணம் போன்று தன்னுள் மணம் கமழும் கூந்தலையுடைய மெல்லிய பண்பு உடைய உன் அழகிய விளங்கும் ஒளிபொருந்திய நெற்றி பசலை அடைவதை எண்ணிப் பார்க்க மாட்டாரா நம் தலைவர்?  காலம் தாழ்த்தாது விரைவில் வருவார்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின் பேரழகினையும் பெண்மை நலத்தையும் நன்கு நுகர்ந்தவர்.  மேலும் மெய்க்காதல் நிரம்பிய நெஞ்சுடையார் ஆதலின் அவர் ஒருபொழுதும் நின்னை மறந்தமையார் அல்லர்.  காலம் நீட்டித்தற்குக் காரணம் கருதிய வினை முடியாமையே ஆகும்.  அவர் வினை முடிந்ததும் விரைந்து வருதல் ஒருதலை.  அவர் வருந்துணையும் ஆற்றியிருத்தலே நின் கடமை என அறிவுறுத்தியபடியாம்.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், உள் அகம் – இருபெயரொட்டு பண்புத்தொகை, வாழி – அசைநிலை, காதலோரே – ஏகாரம் அசைநிலை.  நம் காதலோரே – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், தலைவியின் பொருட்டு இவ்வாறு பன்மையாற் கூறினாள்.

சொற்பொருள்அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, பைஞ்சுனைப் பாசடை நிவந்த பனி மலர்க் குவளை உள் அகம் கமழும் கூந்தல் மெல்லியல் ஏர் திகழ் ஒண்ணுதல் பசத்தல் – பசிய சுனையில் உள்ள பசிய இலைகளிலிருந்து உயர்ந்த குளிர்ந்த குவளை மலர்களின் நறுமணம் போன்று தன்னுள் மணம் கமழும் கூந்தலையுடைய மெல்லிய பண்பு உடைய உன் அழகிய விளங்கும் ஒளிபொருந்திய நெற்றி பசலை அடைவது (பனி – குளிர்ச்சி), ஓரார் கொல் நம் காதலோரே – எண்ணிப் பார்க்க மாட்டாரா நம் தலைவர்

ஐங்குறுநூறு 226, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! நம் மலை
நறும் தண் சிலம்பின் நாறு குலைக் காந்தள்
கொங்கு உண் வண்டின் பெயர்ந்து, புற மாறி, நின்
வன்புடை விறல் கவின் கொண்ட
அன்பிலாளன், வந்தனன் இனியே.

பாடல் பின்னணி:  திருமணத்திற்குப் பொருள் ஈட்டச் சென்ற தலைவன் காலம் நீட்டித்து வந்தபொழுது, அவன் வரவு கண்ட தோழி தலைவியிடம் கூறியது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நம் மலையின் நறுமணம் பொருந்திய குளிர்ந்த பக்கமலையில் உள்ள மணம் கமழும் காந்தள் பூங்கொத்துக்களின் தேனை உண்ணும் வண்டு போல், பெயர்ந்து, மனம் வேறுபட்டுச் சென்று, உன்னுடைய வலிமையும் வெற்றியுமுடைய நெற்றியின் அழகைக் கவர்ந்த அன்பு இல்லாத நம் தலைவன் வந்துள்ளான் இப்பொழுது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின்னால் பழிகூறப்பட்டவன் உண்மையில் அப்பழிக்குரியன் அல்லன் என்பாள், வண்டிற் பெயர்ந்து புறமாறி நின் கவின் கொண்ட வஞ்சன் உதோ வந்தான் என்றவாறு.  இதனால் அவன் காலம் தாழ்த்தமைக்குக் காரணம் அவன் நின்னை மறந்து புறமாறியதும் அன்பில்லாமையும் அல்ல.  வினை முடியாமையே என்று உண்மை உணர்த்தினாளாயிற்று.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, வண்டின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, இனியே – ஏகாரம் அசைநிலை.  சிலம்பு – ஒளவை துரைசாமி உரை – மலை.  ஈண்டு மலைச் சிலம்பு என்றதனால், ஒரு மலையை அடுத்து இருக்கும் பக்கமலை எனக் கொள்க.

சொற்பொருள்:  அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, நம் மலை நறும் தண் சிலம்பின் நாறு குலைக் காந்தள் கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புற மாறி – நம் மலையின் நறுமணம் பொருந்திய குளிர்ந்த பக்கமலையில் உள்ள நறுமணம் மிக்க காந்தள் பூங்கொத்துக்களின் தேனை உண்ணும் வண்டு போல் பெயர்ந்து மனம் வேறுபட்டுச் சென்று, நின் வன்புடை விறல் கவின் கொண்ட அன்பிலாளன் வந்தனன் இனியே – உன்னுடைய வலிமையும் வெற்றியுமுடைய நெற்றியின் அழகைக் கவர்ந்த அன்பு இல்லாத நம் தலைவன் வந்துள்ளான் இப்பொழுது

ஐங்குறுநூறு 227, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி! நாளும்
நன்னுதல் பசப்பவும், நறுந்தோள் ஞெகிழவும்,
ஆற்றலம் யாம் என மதிப்பக் கூறி,
நப்பிரிந்து உறைந்தோர் மன்ற, நீ
விட்டனையோ, அவர் உற்ற சூளே?

பாடல் பின்னணி:  களவுக் காலத்தில் தலைவன் சில காலம் வராது, பின் மீண்டும் வந்தபொழுது, அவன் கேட்கும்வண்ணம் தோழி தலைவியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக! நாள்தோறும் உன் நல்ல நெற்றி பசலை அடையவும், நறுமணம் பொருந்திய தோள்கள் மெலியவும், “நின்னைப் பிரிந்து யாம் ஆற்றேம்” என நாம் ஏற்கும்வண்ணம் கூறி, அதன்பின் நம்மைப் பிரிந்து வேறிடத்தில் வாழ்ந்தவர் நம் தலைவர்.  தெளிவாக உண்மை எனக் கொள்ளாது விட்டாயோ அவருடைய உறுதிமொழியை?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நன்னுதல் பசப்பவும் தோள் நெகிழவும் யாம் செய்யேம் என்று கூறி அவை பசப்பவும் நெகிழவும் செய்து பிரிந்து உறைந்தாராகலின் இவர் சூளும் பொய்த்து வாராது அமைதலும் கூடும் என்று அவர் சூண்மொழியையும் நம்பாது விடுதனையோ என்று வினவியவாறு.  இங்ஙனம் கூறவே, தலைவனுடைய சிறு பிரிவினையும் அவள் ஆற்றாமல் பசந்து மெலித்தலையும், தலைவன் தான் தெளிவுப்படுத்தி உரைத்த உறுதிமொழி தப்ப ஒழுகுதலையும் இங்ஙனம் ஒழுகின் இவள் இறந்துபடுதலும் கூடும் என்பதனையும் இவ்வாறு ஒழுகுதல் நின் சூண் மொழிக்கு ஒவ்வாது என்பதனையும் தோழி தலைவனுக்குக் குறிப்பாக உணர்த்தினமை கூர்ந்துணர்க.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், சூளே – ஏகாரம் அசைநிலை, நப்பிரிந்து – நம்பிரிந்து என்றது நப்பிரிந்து என்றானது வலித்தல் விகாரம்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, நாளும் நன்னுதல் பசப்பவும் நறுந்தோள் ஞெகிழவும் – நாள்தோறும் நல்ல நெற்றி பசலை அடையவும் நறுமணம் பொருந்திய தோள்கள் மெலியவும், ஆற்றலம் யாம் என மதிப்பக் கூறி நப்பிரிந்து உறைந்தோர் – நின்னைப் பிரிந்து யாம் ஆற்றேம் என நாம் ஏற்கும்வண்ணம் கூறி அதன்பின் நம்மைப் பிரிந்து வேறிடத்தில் வாழ்ந்தவர், மன்ற – உறுதியாக, தெளிவாக, நீ விட்டனையோ அவர் உற்ற சூளே – உண்மை எனக் கொள்ளாது விட்டாயோ அவருடைய உறுதிமொழியை

ஐங்குறுநூறு 228, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, செவிலித்தாய் கேட்கும்படி
அம்ம வாழி தோழி! நம்மூர்
நிரந்து இலங்கு அருவிய நெடுமலை நாடன்,
இரந்து குறையுறாஅன் பெயரின்,
என்னாவது கொல், நம் இன் உயிர் நிலையே?

பாடல் பின்னணி:  தலைவன் வரைவு வேண்டினான். அவன் விடுத்த சான்றோரிடம் மகட் கொடை மறுத்தனர் தலைவியின் குடும்பத்தார்.  அதை அறிந்த தோழி, அவர்கள் கேட்குமாறு சொன்னது.  தோழி அறத்தொடு நின்றது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக! நான் கூறுவதைக் கேட்பாயாக!  ஒளிரும் அருவிகள் பொருந்திய உயர்ந்த மலைநாட்டில் தலைவன் நம் குடும்பத்தாரிடம் வேண்டித் தன் குறையைப் பெறாமையால், நம் ஊரிலிருந்து செல்வானாயின், என்ன ஆகும் நம்முடைய இனிய உயிரின் நிலைமை?

குறிப்பு:  பழைய உரை – நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன் என்றது, சேர்ந்தாருடன் இடையறாத நட்பினையுடையவன் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, குறையுறாஅன் – முற்றெச்சம், அளபெடை, பெயரின் – செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சம், கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், நிலையே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, நம்மூர் நிரந்து இலங்கு அருவிய நெடுமலை நாடன் இரந்து குறையுறாஅன் பெயரின் என்னாவது கொல் – நம் ஊரிலிருந்து ஒளிரும் அருவிகள் பொருந்திய உயர்ந்த மலைநாட்டில் தலைவன் வேண்டித் தன் குறையை பெறாமையால் செல்வானாயின் என்ன ஆகும், நம் இன் உயிர் நிலையே – நம்முடைய இனிய உயிரின் நிலைமை

ஐங்குறுநூறு 229, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! நாம் அழப்
பன்னாள் பிரிந்த அறன் இலாளன்,
வந்தனனோ மற்று இரவில்?
பொன் போல் விறல் கவின் கொள்ளும், நின் நுதலே.

பாடல் பின்னணி:  திருமணத்தின் பொருட்டுப் பொருள் ஈட்டச் சென்றான் தலைவன் என வருந்தியிருந்தாள் தலைவி. அவன் திரும்பி வந்தபொழுது அவள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தாள்.  அவளுடைய மகிழ்ச்சி நிலையைக் கண்ட தோழி, தலைவன் வந்ததை அறியாதவள் போல் சொன்னது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நாம் அழுமாறு நம்மைப் பல நாட்கள் பிரிந்த அறன் இல்லாத நம் தலைவன் வந்தானோ இரவில்?  பொன்னைப் போல் பேரழகைப் பெற்றுள்ளது உன் நெற்றி.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – தன்னைக் காதலித்தார் புலம்புற்று வருந்தப் பிரிதலும் பிரிந்து நீட்டித்தலும் காதலர்க்கு அறமாகாவாகலின், அவற்றைச் செய்தமை குறித்துத் தலைமகனை அறனிலாளன் என்றாள்.  ‘வருதும் என்ற நாளும் பொய்த்தன, அரி ஏர் உண்கண் நீரும் நில்லா, தண் கார்க்கு ஈன்ற பைங்கொடி முல்லை வை வாய் வான் முகை அவிழ்ந்த கோதை, பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார், அருள் கண் மாறலோ மாறுக அந்தில் அறன் அஞ்சலரே ஆயிழை நமர் எனச் சிறிய சொல்லிப் பெரிய புலம்பினும்’ (அகநானூறு 144) என்றார் பிறரும்.  புணர்ந்த மகளிர்பால் மெய்ப்பட்டுத் தோன்றும் நுதற்கவின் தலைமகள்பால் கண்டமையான், வந்தனனோ என்று வினவினாள்.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, அறன் – அறம் என்பதன் போலி, வந்தனனோ – ஓ வினா, மற்று – அசைநிலை, நுதலே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, நாம் அழப் பன்னாள் பிரிந்த அறன் இலாளன் வந்தனனோ மற்று இரவில் – நாம் அழுமாறு நம்மைப் பல நாட்கள் பிரிந்த அறன் இல்லாத நம் தலைவன் வந்தானோ இரவில், பொன் போல் விறல் கவின் கொள்ளும் நின் நுதலே – பொன்னைப் போல் பேரழகைப் பெற்றுள்ளது உன் நெற்றி

ஐங்குறுநூறு 230, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! நம்மொடு
சிறு தினைக் காவலன் ஆகிப், பெரிது நின்
மென்தோள் ஞெகிழவும், திரு நுதல் பசப்பவும்,
பொன் போல் விறல் கவின் தொலைத்த
குன்ற நாடற்கு, அயர்வர் நன் மணனே.

பாடல் பின்னணி:  தலைவன் வரைவு வேண்டித் தமரை விடுத்தபொழுது, தன் குடும்பத்தார் மறுப்பார்களோ என அச்சம் கொண்ட தலைவியிடம் தோழி சொன்னது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நம்முடன் நம் தினைப் புனத்தைக் காவல் செய்து, பெரிதும் உன்னுடைய மென்மையான தோள்கள் மெலியவும், உன் அழகிய நெற்றியில் பசலைப் படரவும், பொன் போன்ற வெற்றிகரமான அழகு தொலையவும் செய்த மலை நாட்டின் தலைவனுக்கு, நம் சுற்றத்தார் மகட்கொடை நேர்ந்து நல்ல திருமணத்தை நிகழ்த்துவார்கள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இச்செய்யுள், தமர் மறுப்பரோ என்று தலைவி ஐயுற்று வருந்தினளாக அவள் குறிப்பறிந்து தோழி செவிலி கேட்பத் தலைவிக்குக் கூறுவாளாய் அறத்தொடு நின்றது எனினுமாம்.  இதற்கு ‘அவன் வரைவு மறுப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என்னும் விதி கொள்க.  அ. தட்சிணாமூர்த்தி உரை – ‘தினைப்புனத்தில் நின்னைக் கண்டு பன்னாள் பழகி, அதனால் நின் மேனிக்கு அழகு கூட்டிய தலைவனே, பின்னர் நெடுநாள் இங்கு வாராமையை மேற்கொண்டு நின் பேரழகினை அழித்தான்.  அந்தக் குன்ற நாடன் இனி நின் விருப்பின்படியே நின்னை மணந்து, தொலைந்த நின் கவினை மீண்டும் தளிர்க்கச் செய்வான்’ என்று ஆறுதல் கூறினாள் தோழி என்க. குன்றநாடன் என்றது அவன் செல்வச்செழிப்பு நோக்கியாகும்.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, ஞெகிழ்வு – நெகிழ்வு என்பதன் போலி, மணனே – மணன் மணம் என்றதன் போலி, ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, நம்மொடு சிறு தினைக் காவலன் ஆகிப் பெரிது நின் மென்தோள் ஞெகிழவும் திரு நுதல் பசப்பவும் பொன் போல் விறல் கவின் தொலைத்த குன்ற நாடற்கு – நம்முடன் நம் தினைப் புனத்தைக் காவல் செய்து பெரிதும் உன்னுடைய மென்மையான தோள்கள் மெலியவும் உன் அழகிய நெற்றியில் பசலைப் படரவும் பொன் போன்ற வெற்றிகரமான அழகு தொலையவும் செய்த மலை நாட்டின் தலைவனுக்கு, அயர்வர் நன் மணனே – நம் சுற்றத்தார் நிகழ்த்துவார்கள் நல்ல திருமணத்தை

தெய்யோப் பத்து

பாடல்கள் 231–240 – தெய்யோ என்று முடியும் இப்பாடல்கள் யாவும் தோழியின் கூற்றாக அமைந்துள்ளன.  தெய்யோ– உ. வே. சாமிநாதையர் உரை – தெய்ய அசைநிலை இடைச்சொல் தெய்யோ எனத் திரிந்தது, அ. தட்சிணாமூர்த்தி உரை – தெய்யோ என்பது தெய்ய என்னும் அசையின் ஈறு திரிந்த வடிவம், ஒளவை துரைசாமி உரை – தெய்யோ என்பது ‘தம் ஈறு திரிதலும்’ (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இளம்பூரணர் 246) என்பதனால் திருந்தி வந்த தெய்ய என்னும் இடைச்சொல்; அசைநிலை, தி. சதாசிவ ஐயர் உரை – அசைநிலை.  தெய்ய என்னும் சொல் உடைய பாடல்கள் (யாவும் தோழியின் கூற்றாகவே உள்ளன) – அகநானூறு 60, 100, 182, 220, 240, 310, 360, 370, நற்றிணை 35, 67, 214, 230, 267, 323, 331, குறுந்தொகை 81, 345.  தெய்ய என்னும் சொல் தொல்காப்பியத்தில் இல்லை.  இது பழைய உரை ஆசிரியர்களால் ‘கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும் கிளந்தவற்றியலான் உணர்ந்தனர் கொளலே’ (தொல்காப்பியம், சொல்லதிகாரம் 298) என்ற விதியின் கீழ்க் காட்டப்படுகின்றது.

ஐங்குறுநூறு 231, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப,
இரும் பல் கூந்தல் திருந்திழை அரிவை,
திதலை மாமை தேயப்,
பசலை பாயப், பிரிவு தெய்யோ?

பாடல் பின்னணி:  களவுக் காலத்தில் சிறிது காலம் பிரிந்து சென்று மீண்டு வந்த தலைவனிடம் தோழி சொன்னது.

பொருளுரை:  உயர்ந்த மலையின் தலைவனே!  கரிய அடர்ந்த கூந்தலையும் திருத்தமான அணிகலன்களையும் உடைய இவளின் தேமல் படர்ந்த மாமை நிறம் மழுங்கவும் மேனியில் பசலைப் படரவும், இவளைப் பிரிந்து போகும் செயலைச் செய்வதற்கு எவ்வாறு வல்லவன் ஆயினையோ?

குறிப்புபொ. வே. சோமசுந்தரனார் உரை – ஓங்கல் வெற்ப என்றது உயர்குடிப் பிறப்பும் உருவும் திருவும் ஆற்றலும் பிறவும் உடைய எனக் குறிப்பாற் போதரக் கூறியபடியாம்.  இத்தகைய பெருந்தகையாளனாகிய நின்பால் கண்ணோட்டமின்மை இழுக்கு.  நீ இவ்வாறு உழுதல் தகாதெனக் கழறியபடியாம்.  மாமைக் கவின் – ஒளவை துரைசாமி உரை, ஐங்குறுநூறு 134 – மாந்தளிரின் தன்மையினையுடைய அழகு.  இலக்கணக் குறிப்பு – வல்லுநையோ – முற்றுவினைத் திரிசொல், ஓகாரம் அசைநிலை, தெய்யோ – தெய்ய என்னும் அசையின் ஈறு திரிந்த வடிவம்.

சொற்பொருள்யாங்கு வல்லுநையோ – எவ்வாறு வல்லவன் ஆயினையோ, ஓங்கல் வெற்ப – உயர்ந்த மலையின் தலைவனே, இரும் பல் கூந்தல் திருந்திழை அரிவை திதலை மாமை தேயப் பசலை பாயப் பிரிவு தெய்யோ – கரிய அடர்ந்த கூந்தலையும் திருத்தமான அணிகலன்களையும் உடைய இவளின் தேமல் படர்ந்த மாமை நிறம் மழுங்கவும் பசலைப் படரவும் பிரிந்து போகும் செயல்

ஐங்குறுநூறு 232, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க,
ஏதிலாளனை நீ பிரிந்ததற்கே,
அழல் அவிர் மணிப் பூண் நனையப்,
பெயல் ஆனா என் கண்ணே தெய்யோ.

பாடல் பின்னணி:  களவுக் காலத்தில் சிறிது காலம் பிரிந்து சென்று மீண்டு வந்த தலைவன், “நான் பிரிந்திருந்த நாட்களில் நீவிர் யாது செய்தீர்?” என வினவினான்.  அதற்குத் தோழி சொன்னது.

பொருளுரை:  மலர்கள் அணிந்த கூந்தலையுடைய இவளின் இயற்கை அழகுப் பாழ்படுமாறு, அயலவன் போல் நீ பிரிந்ததால், நெருப்பென ஒளிரும் மணிகள் பதிக்கப்பட்ட என் அணிகலன்கள் நனைய, விடாது கண்ணீரைச் சொரிந்தன என் கண்கள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ ஏதிலாளனாயிருப்பவும் நின் திறத்திலே பேதையராகிய யாங்கள் ஆற்றியிருக்கும் ஆற்றல் இலேம் ஆயினோம்.  அத்துணைப் பேதையேம் நாங்கள் என்றவாறு.  நீ பிரிந்திருந்த காலத்தே தலைவி இயலும் அணியும் அழுங்கத் துன்பக்கடலிலே வீழ்ந்துக் கிடந்தாள். அவள்பால் அன்புடையேனாகிய யானோ செயலறு நிலை எய்தினேன்.  என் கண்ணீரே பூசலிட்டது என்பதாம்.  இயல் அணி அழுங்க (1) – தி. சதாசிவ ஐயர் உரை – இயற்கையழகு குறைய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இயற்கையழகும் செயற்கையழகும் கெட்டொழியும்படி, ஒளவை துரைசாமி உரை – இயலும் அணியும் வருந்த, இயற்கையான அழகு இரங்கும் வண்ணம்.  இலக்கணக் குறிப்பு – போது ஆர் கூந்தல் – அன்மொழித்தொகை, ஏதிலாளனை – ஐகாரம் சாரியை, பிரிந்ததற்கே – ஏகாரம் அசைநிலை, கண்ணே – ஏகாரம் அசைநிலை, தெய்யோ – தெய்ய என்னும் அசையின் ஈறு திரிந்த வடிவம்.

சொற்பொருள்போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க – மலர்கள் அணிந்த கூந்தலையுடைய இவளின் இயற்கை அழகுப் பாழ்பட, ஏதிலாளனை நீ பிரிந்ததற்கே – அயலவன் போல் நீ பிரிந்ததால், அழல் அவிர் மணிப் பூண் நனையப் பெயல் ஆனா என் கண்ணே தெய்யோ – நெருப்பென ஒளிரும் மணிகள் பதிக்கப்பட்ட அணிகலன்கள் நனைய விடாது கண்ணீரைச் சொரிந்தன என் கண்கள்

ஐங்குறுநூறு 233, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
வருவை அல்லை, வாடை நனி கொடிதே,
அரு வரை மருங்கின் ஆய் மணி வரன்றி
ஒல்லென இழிதரும் அருவி, நின்
கல் உடை நாட்டுச் செல்லல் தெய்யோ.

பாடல் பின்னணி:  களவுக் காலத்தில், சிறிது நாட்கள் பிரிந்து சென்று வரைவிற்கு ஆவன செய்ய எம்மூர் செல்வேன் எனக் கூறிய தலைவனிடம் தோழி சொன்னது.

பொருளுரை:  ஏறுதற்கு அரிய மலையிலிருந்து அழகிய மணிகளை வாரிக்கொண்டு, ஒல்லென ஆரவாரத்துடன் ஒலித்து வீழும் அருவிகளுடைய உன் மலை நாட்டிற்குச் செல்ல வேண்டாம்.  சென்றால், நீ மீண்டும் வரமாட்டாய்.  வாடைக் காற்று மிகவும் கொடியதாய் வீசுகின்றது. நீ சென்றால் இவள் பெரிதும் வருந்துவாள்.

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – ஆய் மணி வரன்றி ஒல்லென இழிதரும் அருவி நின் கல்லுடை நாட்டு என்றது, செல்லின் வரைதற்கு வேண்டுவன கொண்டு வருவாயாக என்று உணர்த்தியவாறு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – போந்த பொருள் நின்னாட்டு அருவி விரைந்து மணிவரன்றி ஆரவாரத்தோடு வீழுமாறு போல நீயும் வரைதற்கு வேண்டும் பொருளை விரைந்து ஈட்டிக் கொண்டு ஆண்டுத் தங்குதலின்றி மணத்திற்குரிய ஆரவாரத்தோடு விரைந்து வருக என்பதாம்.  மீண்டும் அன்பு மாறி ஆண்டு தங்கிவிடாதே என்பதை நின்னாடு கல்லுடை நாடாயிற்றே என்று குறிப்பால் உணர்த்தினாள்.  இலக்கணக் குறிப்பு – நனி – உரிச்சொல், கொடிதே – ஏகாரம் அசைநிலை, ஒல் – ஒலிக்குறிப்பு, செல்லல் – முன்னிலை வினைமுற்று, தெய்யோ – தெய்ய என்னும் அசையின் ஈறு திரிந்த வடிவம்.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  வருவை அல்லை – நீ மீண்டும் வரமாட்டாய், வாடை நனி கொடிதே – வாடைக் காற்று மிகவும் கொடியது, அரு வரை மருங்கின் ஆய் மணி வரன்றி – ஏறுதற்கு அரிய மலையிலிருந்து அழகிய மணிகளை வாரிக்கொண்டு, ஒல்லென இழிதரும் அருவி நின் கல் உடை நாட்டுச் செல்லல் தெய்யோ – ஒல்லென ஆரவாரத்துடன் ஒலித்து வீழும் அருவிகளுடைய உன் மலை நாட்டிற்குச் செல்ல வேண்டாம்

ஐங்குறுநூறு 234, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
மின் அவிர் வயங்கிழை ஞெகிழச் சாஅய்,
நன்னுதல் பசத்தல் ஆவது, துன்னிக்
கனவில் காணும் இவளே,
நனவில் காணாள், நின் மார்பே தெய்யோ.

பாடல் பின்னணி:  தலைவன் களவில் இடைவிடாது வந்தொழுகுகின்றான்.  விரைவில் திருமணம் நிகழவும் முயன்றான்.  ஆயினும் தலைவி வருந்தினாள்.  அதற்குக் காரணம் வினவிய தலைவனிடம் தோழி சொன்னது.

பொருளுரை:  என் தோழி தன்னுடைய மின்னல் போன்று ஒளிரும் அணிகலன்கள் நெகிழுமாறு மெலிந்தும், நல்ல நெற்றி பசலை அடைந்தும் உள்ளாள்.  உன்னை நெருங்கிக் கனவில் காணும் இவள், நனவில் காண முடியாது உள்ளாள் உன் மார்பை.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – நன்னுதல் பசத்தலாவது என்றது பசலை பாய்தல்.  கனவிற் காணும் இவளே என்றது கனவொடு மயங்கல்.  நனவிற் காணாள் என்றது கண்துயில் மறுத்தல்.  நெகிழ்ந்து நீங்கும் இழைகள் பொருட்டும், பசந்து ஒளி மழுங்கும் நுதலின் பொருட்டும் இரங்குவாள், மின்னவிர் வயங்கிழை என்றும் நன்னுதல் என்றும் கூறினாள். ‘கேட்டிசின் வாழி தோழி, அல்கல் பொய்வலாளன் மெய்யுறல் மரீஇய வாய்த்தகைப் பொய்க் கனா மருட்ட ஏற்று எழுந்து அமளி தைவந்தனனே’ (குறுந்தொகை 30) எனத் தலைமகள் கனவொடு மயங்கி நனவின் அரற்றியவாறு காண்க.  இலக்கணக் குறிப்பு – சாஅய் – அளபெடை, இவளே – ஏகாரம் அசைநிலை, மார்பே – ஏகாரம் அசைநிலை, தெய்யோ – தெய்ய என்னும் அசையின் ஈறு திரிந்த வடிவம்.  சாஅய் – ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (தொல்காப்பியம், உரியியல் 32).

சொற்பொருள்மின் அவிர் வயங்கிழை ஞெகிழச் சாஅய் நன்னுதல் பசத்தல் ஆவது – மின்னல் போன்று ஒளிரும் அணிகலன்கள் நெகிழுமாறு மெலிந்து நல்ல நெற்றி பசலை அடைவது, துன்னிக் கனவில் காணும் இவளே நனவில் காணாள் நின் மார்பே தெய்யோ – நெருங்கிக் கனவில் காண்பவள் நனவில் காண முடியாது உள்ளாள் உன் மார்பை

ஐங்குறுநூறு 235, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது
கையுற வீழ்ந்த மை இல் வானமொடு
அரிது காதலர்ப் பொழுதே, அதனால்
தெரியிழை தெளிர்ப்ப முயங்கிப்
‘பிரியலம்’ என்கமோ, எழுகமோ தெய்யோ?

பாடல் பின்னணி:  இற்செறிப்பு முதலிய தடைகள் ஏற்பட்டமையால், தலைவனுடன் உடன்போக்கில் செல்வதற்குத் தலைவி துணிந்தாள். அவளை அழைத்துச் செல்ல நடு இரவில் தலைவன் வந்தபொழுது தலைவியிடம் தோழி சொன்னது.

பொருளுரை:  தம் தொழில் பொருந்தத் தோன்றும் முகில்கள் இல்லாத வானத்துடன் கூடிய நேரம் கிடைப்பது அரிது காதலர் வந்துள்ள நேரத்தில். அதனால் ஆராய்ந்து அணிந்த அணிகலன்கள் ஒலிப்ப அவரைத் தழுவிக்கொண்டு “நின்னைப் பிரியாது இருப்பேம்” எனக் கூறுவோமா?  அவருடன் செல்வதற்கு உடன்பட்டுப் புறப்படுவோமோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவி பெரும் நாணினள் ஆகலானும், உயர்குடிப் பிறப்பினள் ஆகலானும், ‘உதோ தலைவன் வந்துவிட்டான், அவனுடன் போதற்கு வருக’ என்பது நாகரிகம் இன்மையான் எழுக அவனுடன் போதற்குப் புறப்படுக என்னும் இவற்றையே வேறு சில வினவுவாள் போன்று பிரியலம் ‘என்கமோ?, எழுகமோ?’ என்று ஐயுற்றாள் போன்று வினவும் நயம் உணர்ந்து இன்புறுக.  இலக்கணக் குறிப்பு – பொழுதே – ஏகாரம் அசைநிலை, தெரியிழை – வினைத்தொகை, பிரியலம் – தன்மைப் பன்மை, என்கமோ – தன்மைப் பன்மை வினைமுற்று, ஓகாரம் வினா, எழுகமோ – தன்மைப் பன்மை வினைமுற்று, ஓகாரம் வினா, தெய்யோ – தெய்ய என்னும் அசையின் ஈறு திரிந்த வடிவம்.  கையுற (1) – ஒளவை துரைசாமி உரை – கை – பக்கம், முற்றவும் திரண்டு சென்று ஒடுங்குதல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன் தொழிலில் பொருந்த, அ. தட்சிணாமூர்த்தி உரை – முன்னர் யாம் கையறுமாறு மழையைப் பெய்த வானம், தி. சதாசிவ ஐயர் உரை – தொழில் பொருந்திய, ச. வே. சுப்பிரமணியன் உரை – இடம் நிரம்ப.  அ. தட்சிணாமூர்த்தி உரை – என்கமோ எழுகமோ என்னும் ஓகார வினாக்கள் என்கம் எழுகம் என்று பொருள் தந்தன.

சொற்பொருள்:  கையுற வீழ்ந்த மை இல் வானமொடு அரிது காதலர்ப் பொழுதே – தம் தொழில் பொருந்தத் தோன்றும் முகில்கள் இல்லாத வானத்துடன் கூடிய நேரம் கிடைப்பது அரிது காதலர் வந்துள்ள நேரத்தில், அதனால் தெரியிழை தெளிர்ப்ப முயங்கிப் பிரியலம் என்கமோ – அதனால் ஆராய்ந்து அணிந்த அணிகலன்கள் ஒலிப்ப அவரைத் தழுவிக்கொண்டு ‘நின்னைப் பிரியாது இருப்பேம்’ எனக் கூறுவோமா?  எழுகமோ தெய்யோ – அவருடன் செல்வதற்கு உடன்பட்டுப் புறப்படுவோமோ?

ஐங்குறுநூறு 236, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
அன்னையும் அறிந்தனள், அலரும் ஆயின்று,
நன் மனை நெடுநகர் புலம்பு கொள, உறுதரும்
இன்னா வாடையும் மலையும்,
நும் ஊர்ச் செல்கம், எழுகமோ தெய்யோ?

பாடல் பின்னணி:  வரையாது களவை நீட்டித்தான் தலைவன்.  உடன்போக்கு நயந்தாள் போல் தோழி வரைவு கடாயது.

பொருளுரை:  அன்னையும் களவொழுக்கத்தை அறிந்து கொண்டாள்.  ஊரில் பழிச்சொற்கள் பரவி விட்டன.  எங்கள் நல்ல மனையாகிய நெடிய இல்லமும் தனிமைத் துன்பத்தைத் தருகின்றது.  வருத்தும் வாடைக் காற்றும் எம்மைத் துன்புறுத்துகின்றது.  நும்முடைய ஊர்க்கு யாம் செல்வதற்கு எழலாமோ?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – இவை தோழியின் குறிப்பாயினும் ‘ஒன்றித் தோன்றும் தோழி மேன’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 39) என்னும் இலக்கணத்தால் தலைமகள் குறிப்பெனவே கொள்க.  இலக்கணக் குறிப்பு – வாடையும், மலையும் – உம்மைகள் எண்ணுப் பொருளன, செல்கம் – தன்மைப் பன்மை வினைமுற்று, முற்றெச்சம், எழுகமோ – தன்மைப் பன்மை வினைமுற்று, ஓகாரம் வினா, தெய்யோ – தெய்ய என்னும் அசையின் ஈறு திரிந்த வடிவம்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  அன்னையும் அறிந்தனள் – அன்னையும் களவொழுக்கத்தை அறிந்து கொண்டாள், அலரும் ஆயின்று – ஊரில் பழிச்சொற்கள் பரவி விட்டன, நன் மனை நெடுநகர் புலம்பு கொள உறுதரும் – எங்கள் நல்ல மனையாகிய நெடிய இல்லம் தனிமைத் துன்பத்தைத் தருகின்றது, இன்னா வாடையும் மலையும் – வருத்தும் வாடைக் காற்றும் எம்மைத் துன்புறுத்துகின்றது, நும் ஊர்ச் செல்கம் எழுகமோ தெய்யோ – நும்முடைய ஊர்க்கு யாம் செல்வதற்கு எழலாமோ?

ஐங்குறுநூறு 237, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
காமம் கடவ, உள்ளம் இனைப்ப,
யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின்,
ஓங்கித் தோன்றும் உயர் வரைக்கு,
யாங்கு எனப்படுவது நும்மூர் தெய்யோ?

பாடல் பின்னணி:  அல்ல குறிப்பட்டு நீங்கினான் தலைவன்.  அவன் குறியிடத்திற்கு வரவில்லை எனத் தவறாக எண்ணி, பின்பு அவன் வந்தபொழுது அவனிடம் தோழி சொன்னது.  வரைவு கடாயது.

பொருளுரை:  எம்மைக் காதல் தூண்ட உள்ளம் அதனால் வருந்த, யாம் வந்து உன்னைக் காணும் நிலையை அடைந்தால், மிக உயர்ந்துத் தோன்றும் மலைக்கு எத்திசையில் உள்ளது எனக் கூறப்படுவது நும் ஊர்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவன் வாராது ஒழிந்தமையும் அதனால் அவள் உற்ற இன்னலும் இங்ஙனமெல்லாம் இன்னல் உறாமல் இவளை நீ பாதுகாத்தல் கருதுவாயாயின் விரைவின் வரைந்து கோடல் வேண்டும் என்பதும் நுணுக்கமாகக் கூறப்பட்டமை காண்க.  காமம் கடவ (1) – ஒளவை துரைசாமி உரை – காதல் கைம்மிகல்.  இலக்கணக் குறிப்பு – கடவ – செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், இனைப்ப – செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், தெய்யோ – தெய்ய என்னும் அசையின் ஈறு திரிந்த வடிவம்.  ஓங்கித் தோன்றும் உயர்வரை (3) – ஒளவை துரைசாமி உரை – ஓங்கித் தோன்றும் உயர்வரை என்புழி ஒருபொருட்கண் வந்த இரு சொற்கள்.  அகநானூறு 42 – ஓங்கித் தோன்றும் உயர்வரை வான்தோய் வெற்பன்.  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லதிகாரம், உரியியல் 57).

சொற்பொருள்:  காமம் கடவ உள்ளம் இனைப்ப – எம்மைக் காதல் தூண்ட உள்ளம் அதனால் வருந்த, யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின் – யாம் வந்து உன்னைக் காணும் நிலையை அடைந்தால், ஓங்கித் தோன்றும் உயர் வரைக்கு யாங்கு எனப்படுவது நும்மூர் தெய்யோ – மிக உயர்ந்துத் தோன்றும் மலைக்கு எத்திசையில் உள்ளது எனக் கூறப்படுவது நும் ஊர்

ஐங்குறுநூறு 238, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
வார்க்கோட்டு வயத் தகர் வாராது மாறினும்,
குரூஉ மயிர்ப் புருவை ஆசையின் அல்கும்,
மாஅல் அருவித் தண் பெருஞ்சிலம்ப,
நீ இவண் வரூஉம் காலை,
மேவரும் மாதோ இவள் நலனே தெய்யோ.

பாடல் பின்னணி:  வரையாது வந்தொழுகும் தலைவனிடம், தலைவியின் அழகு அவன் வரும்பொழுது வந்து, அவன் சென்றவுடன் சென்று விடுவதால் அவள் அழகு அழியும் நிலையை அவன் அறியவில்லை எனக் கூறி வரைவு கடாயது.

பொருளுரை:  நீண்ட கொம்புகளையுடைய வலிய ஆட்டுக்கிடாய் தன்னிடம் வராது பொய்யிப்பினும், நிறம் பொருந்திய மயிரையுடைய அதன் பெண் ஆடு அது வரும் என்று விருப்பத்துடன் தங்கியிருக்கும் பெரிய அருவிகளையுடைய குளிர்ந்த பெரிய மலையின் தலைவனே!  நீ இங்கு வரும்பொழுது இவளுடைய அழகு இவளிடம் வருகின்றது.  நீ செல்லும் காலத்தில் அது கெடுதலை நீ அறியவில்லை.

குறிப்பு:  உள்ளுறை – புலியூர்க் கேசிகன் உரை – வார்கோட்டு வயத் தகர் வாராது மாறினும் பின்பு வரக்கூடும் என்னும் ஆசையாலே புருவை தங்கும் என்றது, இவளும் அவ்வாறே நின்னைக் காணலாம் என்னும் ஆசையால் உயிர் வாழ்கின்றாள் என்பது.   இலக்கணக் குறிப்பு – குரூஉ – செய்யுளிசை அளபெடை, மாஅல் அருவி – பண்புத்தொகை, மாஅல் – அளபெடை, ஆசையின் – இன் இடைச்சொல், மூன்றாம் வேற்றுமைப் பொருள் தந்தது, வரூஉம் – செய்யுளிசை அளபெடை, மாதோ – மாது, ஓ அசைநிலைகள், நலனே – ஏகாரம் அசைநிலை, தெய்யோ – தெய்ய என்னும் அசையின் ஈறு திரிந்த வடிவம்.  நீ இவண் வரூஉம் காலை மேவரும் மாதோ இவள் நலனே – ஒளவை துரைசாமி உரை – இவளது கவின் நீ இங்கு வருங்காலை வருதலால், நீ செல்லுங்காலத்து அது கெடுதலை அறியாய் ஆயினை என்றவாறு.  வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  வார்க்கோட்டு வயத் தகர் வாராது மாறினும் குரூஉ மயிர்ப் புருவை ஆசையின் அல்கும் மாஅல் அருவித் தண் பெருஞ்சிலம்ப – நீண்ட கொம்புகளையுடைய வலிய ஆட்டுக்கிடாய் தன்னிடம் வராது பொய்யிப்பினும் நிறம் பொருந்திய மயிரையுடைய அதன் பெண் ஆடு அது வரும் என்று விருப்பத்துடன் தங்கியிருக்கும் பெரிய அருவிகளையுடைய குளிர்ந்த பெரிய மலையின் தலைவனே, நீ இவண் வரூஉம் காலை மேவரும் மாதோ இவள் நலனே தெய்யோ – நீ இங்கு வரும்பொழுது இவளுடைய அழகு இவளிடம் வருகின்றது

ஐங்குறுநூறு 239, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
சுரும்பு உணக் களித்த புகர் முக வேழம்
இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம், நின்
குன்று கெழு நன்னாட்டுச் சென்ற பின்றை,
நேர் இறைப் பணைத்தோள் ஞெகிழ,
வாராய் ஆயின், வாழேம் தெய்யோ.

பாடல் பின்னணி:  திருமணத்திற்கு வேண்டும் பொருள் ஈட்டும் பொருட்டுச் சில நாட்கள் நான் பிரிந்து வருவேன் என்ற தலைவனிடம் தோழி சொன்னது.

பொருளுரை:  வண்டுகள் உண்டு மகிழும்படி மதநீர் ஒழுகுகின்ற புள்ளிகள் பொருந்திய முகத்தையுடைய களிற்று யானை, பெரிய (கரிய) சருச்சரையை (சொரசொரப்பை) உடைய குண்டுக்கல்லைத் தன் பிடி யானை எனத் தவறாக எண்ணித் தழுவும், உன் மலைகள் பொருந்திய நல்ல நாட்டிற்கு நீ சென்ற பின், இவளின் நேரிய வரிகள் அமைந்த மூங்கில் போன்ற தோள்கள் மெலியுமாறு நீ எம்மிடம் கூறிய நேரத்திற்கு வராமல் காலம் நீட்டித்தால், யாம் வாழ மாட்டோம்.

குறிப்பு:  பழைய உரை – மதவேழம் துறுகல்லைப் பிடியென்று தழுவும் நாடனாதலால் நினக்குத் தகுதியில்லாதாள் ஒருத்தியைத் தகுதியுடையாள் என்று நீ வரையவும் கூடும் என நகையாடிக் கூறியது. பாறை யானையைப் போல் தோன்றுதல்:  அகநானூறு 57 – இற்றிப் புன்தலை நெடுவீழ் இரும்பிணர்த் துறுகல் தீண்டி வளி பொரப் பெருங்கை யானை நிவப்பின் தூங்கும், அகநானூறு 178 – பிடி மடிந்தன்ன கல், அகநானூறு 269 – பிடி மடிந்தன்ன குறுந்தொகை 13 – மாசு அறக் கழீஇய யானை போலப் பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல், குறுந்தொகை 36 – துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சு களிறு இவரும், குறுந்தொகை 111 – கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன கேழ் இருந்துறுகல், குறுந்தொகை 279 – மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் துகள் சூழ் யானையிற் பொலியத் தோன்றும், கலித்தொகை 108 – பிடி துஞ்சு அன்ன அறை, ஐங்குறுநூறு 239 – புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம்.  இலக்கணக் குறிப்பு – உண – உண்ண என்பதன் விகாரம், தழூஉம் – அளபெடை, பணைத்தோள் – உவமைத்தொகை, ஞெகிழ – நெகிழ என்பதன் போலி, தெய்யோ – தெய்ய என்னும் அசையின் ஈறு திரிந்த வடிவம்.  களித்த வேழம் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காமவேகங் கொள்ளுங்கால் யானை மதம் பொழிதல் இயல்பு ஆதலான் சுரும்பு மதம் உண்டற்கு ஏதுவாகக் கூறினள்.  சுரும்பு உணக் களித்த – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வண்டுகள் உண்டு மகிழும்படி, அ. தட்சிணாமூர்த்தி உரை – வண்டுகள் வந்து மொய்த்து உண்டு மகிழுமாறு.  வாழேம் – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள் தோழி.

சொற்பொருள்சுரும்பு உணக் களித்த புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம் – வண்டுகள் உண்டு மகிழும்படி மதநீர் ஒழுகுகின்ற புள்ளிகள் பொருந்திய முகத்தையுடைய களிற்று யானை பெரிய (கரிய) சருச்சரையை (சொரசொரப்பை) உடைய குண்டுக்கல்லைத் தன் பிடி யானை எனத் தவறாக எண்ணித் தழுவும், நின் குன்று கெழு நன்னாட்டுச் சென்ற பின்றை – உன் மலைகள் பொருந்திய நல்ல நாட்டிற்கு நீ சென்ற பின் (நாட்டு – நாட்டிற்கு எனக் கொள்ளவும்), நேர் இறைப் பணைத்தோள் ஞெகிழ வாராய் ஆயின் – இவளின் நேரிய வரிகள் அமைந்த மூங்கில் போன்ற தோள்கள் மெலியுமாறு நீ வராமல் காலம் நீட்டித்தால், வாழேம் தெய்யோ – யாம் வாழ மாட்டோம்

ஐங்குறுநூறு 240, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
அறியேம் அல்லேம், அறிந்தனம் மாதோ,
பொறி வரிச் சிறைய வண்டினம் மொய்ப்பச்
சாந்தம் நாறும் நறியோள்
கூந்தல் நாறும், நின் மார்பே தெய்யோ.

பாடல் பின்னணி:  குறிஞ்சியுள் மருதம்.  தலைவனுக்குப் புறத்தொழுக்கம் உள்ளது என அறிந்து தலைவி ஊடியிருப்ப, இல்லத்திற்கு வந்த தலைவன் தன் புறத்தொழுக்கத்தை மறுத்தான்.  அது கேட்ட தோழி அவனிடம் சொன்னது.

பொருளுரை:  யாம் உன் புறத்தொழுக்கத்தை அறியாதவர்கள் இல்லை.  நன்கு அறிந்துள்ளோம்.  புள்ளிகளையும் வரிகளையும் தங்கள் சிறகுகளில் கொண்ட வண்டினம் மொய்க்கும்படி, சந்தனத்தின் நறுமணம் கமழும் உன் பரத்தையின் கூந்தல் மணம் கமழ்கிறது உன் மார்பில்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – பொறி வரிச் சிறைய வண்டினம் மொய்ப்பச் சாந்தம் நாறும் நறியோள் எனப் பரத்தையைக் கூறியது, ஆடவராகிய வண்டினம் சூழ்வரத் தன்னை மிகவும் வியந்து பாணரும் பிறரும் புகழ்ந்து பாடும் நலமுடையாள் எனப் புகழ்வாள் போல் இகழ்ந்து கூறியவாறு. ‘பரத்தையை ஏத்தினும், உள்ளத்து ஊடல் உண்டு என மொழிப’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 233) ஆகலின், இதுவும் புலவியென உணர்க.  இலக்கணக் குறிப்பு – மாதோ – மாது, ஓ அசைநிலைகள், பொறி வரி – பொறியும் வரியும் உம்மைத் தொகை, மார்பே – ஏகாரம் அசைநிலை, தெய்யோ – தெய்ய என்னும் அசையின் ஈறு திரிந்த வடிவம்.

சொற்பொருள்:  அறியேம் அல்லேம் – யாம் அறியாதவர்கள் இல்லை, அறிந்தனம் – யாம் அறிந்துள்ளோம், மாதோ – மாது, ஓ அசைநிலைகள், பொறி வரிச் சிறைய வண்டினம் மொய்ப்பச் சாந்தம் நாறும் நறியோள் கூந்தல் நாறும் – புள்ளிகளையும் வரிகளையும் தங்கள் சிறகுகளில் கொண்ட வண்டினம் மொய்க்கும்படி சந்தனத்தின் நறுமணம் கமழும் உன் பரத்தையின் கூந்தல் மணம் கமழ்கிறது, நின் மார்பே தெய்யோ – உன் மார்பில்

வெறிப்பத்து

பாடல்கள் 241–250 – இவை வெறியாட்டம் பற்றியவை.  ஒளவை துரைசாமி உரை – வெறி என்பது மணம் என்னும் பொருள்படுவதொரு பழந்தமிழ்ச் சொல்.  வெறிமலர், வெறிகமழ் பொழில் என்றெல்லாம் சான்றோர் செய்யுட்களில் இச்சொல் பெரிதும் வழங்கும்.  முருகனை வழிபடும் இடத்தே நறுமணம் மிக்க பூவும், தளிரும், புகையும் மிக்கு எங்கும் மணமே நிலவும்.  ஆதலின் அதனை வெறிக்களம் என முன்னோர் வழங்கினர்.  இளமையும் வனப்புமுடைய மகளிர் உடல் நலம் குன்றுவராயின், அது நீங்குதற் பொருட்டு அவர்களுடைய பெற்றோர் வேலனைக் கொண்டு வெறி அயர்வர்.  இள நங்கை ஒருத்தி நலம் குறைந்தாளெனின் அவளுடைய தாய் கட்டும் கழங்கும் கொண்டு அவள் நலக்குறைவுக்குரிய காரணத்தை அறிவாள்.  வெறியாடும் வேலன் நோய் முருகனால் உண்டாயிற்று என்று உரைத்து நோய்க்கு மருந்தாக முருகனுக்குரிய பூக்களைத் தந்து அவள் கூந்தலில் முடிக்கச் செய்வான்.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேலை) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.  வெறியாட்டம் – இல்லத்தின் முன் முற்றத்தில் நிகழும். அங்குப் புது மணல் பரப்பி, மலர்களால் இடத்தை ஒப்பனைச் செய்வார்கள். அங்கு இசைக்கருவிகள் ஒலிக்க வேலன் வெறியாட்டத்தை நிகழ்த்துவான். கழற்சிக்காயைப் பரப்பி, அது பரவிய முறையைக் கண்டு நோய் முருகனின் அணங்கினால் ஏற்பட்டது எனக் கூறுவான். தலைவியின் கையில் தாயத்தைக் கட்டுவான். முருகனுக்கு ஆட்டுக் குட்டி ஒன்றைப் பலியாகக் கொடுப்பான்.

ஐங்குறுநூறு 241, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, செவிலித்தாய் கேட்கும்படி
நம் உறு துயரம் நோக்கி அன்னை
வேலன் தந்தாள் ஆயின், அவ் வேலன்
வெறி கமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல, செறி எயிற்றோயே?

பாடல் பின்னணி:  தலைவி இற்செறிக்கப்பட்டாள். செவிலித்தாய் வேலனை அழைத்து வெறியாடல் நிகழ்த்தக் கருதினாள்.  தலைவி பெரிதும் வருந்தினாள். தோழியிடம் தாய்க்கு மறைச் செய்தியை உணர்த்துமாறு குறிப்பால் உணர்த்தினாள்.  மறைச் செய்தியை வெளிப்படுத்தற் பொருட்டுச் செவிலித்தாய் கேட்கும்படி தலைவியிடம் தோழி கூறியது.

பொருளுரை:  நெருங்கிய பற்களை உடையோய்!  நாம் அடைந்த துன்பத்தைக் கண்டு நம் அன்னை வெறியாட்டம் நிகழ்த்துவதற்கு வேலனை நம் இல்லத்திற்கு அழைப்பாள் ஆயின், அந்த வேலன் நறுமணம் கமழும் மலைநாட்டுத் தலைவனுடன் யான் கொண்ட காதல் நட்பை அறிவானோ?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – தலைமகட்கு உளதாகிய உடல் மெலிவு வேறு காரணங்களால் தோன்றியதன்று என்பது தோன்ற ‘நாம் உறு துயரம்’ எனல் வேண்டிற்று.  மெலிவுக்கு ஏதுவாகியது பற்றித் துயரம் என்றார்.  அவ்வேலன் என்ற சுட்டு, வேளாண் எல்லாவற்றிற்கும் வெறி அல்லது வேறே காரணமுண்மை அறியாதவன் என்பதுபட நின்றது.  இலக்கணக் குறிப்பு – உறு – மிகுதிப்பொருள் தந்த உரிச்சொல், அறியுமோ – ஓகாரம் வினா, தில்ல – தில் என்னும் இடைச் சொல் ஈறு திரிந்து வந்தது, ஒழியிசை என்னும் பொருளில் வந்தது, எயிற்றோயே – ஏகாரம் அசைநிலை.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  உறு துயரம் (1) – ஒளவை துரைசாமி உரை – எய்தியுள்ள துயரம், உ. வே. சாமிநாதையர் உரை – உற்ற துயரம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெருந்துன்பம்.

சொற்பொருள்:  நம் உறு துயரம் நோக்கி அன்னை வேலன் தந்தாள் ஆயின் – நாம் அடைந்த பெருந்துன்பத்தைக் கண்டு நம் அன்னை வெறியாட்டம் நிகழ்த்துவதற்கு வேலனை நம் இல்லத்திற்கு அழைப்பாள் ஆயின். அவ் வேலன் வெறி கமழ் நாடன் கேண்மை அறியுமோ தில்ல – அந்த வேலன் நறுமணம் கமழும் மலைநாட்டுத் தலைவனுடன் யான் கொண்ட காதல் நட்பை அறிவானோ, செறி எயிற்றோயே – நெருங்கிய பற்களை உடையோய்

ஐங்குறுநூறு 242, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது
அறியாமையின் வெறியென மயங்கி
அன்னையும் அருந்துயர் உழந்தனள், அதனால்
எய்யாது விடுதலோ கொடிதே, நிரை இதழ்
ஆய் மலர் உண்கண் பசப்பச்
சேய் மலை நாடன் செய்த நோயே.

பாடல் பின்னணி:  தலைவியின் மெலிவு கண்டு தாய் வெறியாட்டு நிகழ்த்துவதற்கு முயலுதல் கண்ட தோழி, இனி களவு உறவினைத் தாய்க்கு உணர்த்த வேண்டும் என்று தலைவியின் உடன்பாடு பெறுவதற்குக் கூறியது.

பொருளுரை:  நின் நோய்க்குரிய காரணத்தை அறியாததால் முருகனின் அணங்கினால் ஏற்பட்டது என மனம் கலங்கி பெருந்துயரால் அன்னை வருந்தினாள்.  அதனால், நிரல்பட்ட இதழ்களையுடைய அழகிய மலரை ஒத்த மையுண்ட கண்கள் பசலை அடையுமாறு, தொலைவில் தோன்றும் மலையின் தலைவன் தந்த காதல் நோய் என்ற உண்மையை அவள் அறியாது விடுதல் கொடியது.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – அன்னைக்கு நாம் அறிவித்தலே கடன் என்பது குறிப்பெச்சம்.  ‘அன்னைக்கு அறிவிப்பேம் கொல்? அறிவியேம் கொல் என இரு பால் பட்ட சூழ்ச்சி ஒரு பால் சேர்ந்தன்று’ (அகநானூறு 52), ஆதலின்.  ‘சிறந்து இவள் பசந்தனள் என்பது உணராய்; பல் நாள் எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி வருந்தல் வாழி வேண்டு அன்னை’ (நற்றிணை 351) என்பதனால் உணர்க.  சேய் மலை (5) – ஒளவை துரைசாமி உரை – சேய்மைக்கண் தோன்றும் மலை, உ. வே. சாமிநாதையர் உரை – நெடுந்தூரத்தில் உள்ள மலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – சேயோன் மேய மை மலை, அ. தட்சிணாமூர்த்தி உரை – உயர்ந்த மலை.  இலக்கணக் குறிப்பு – வெறி – ஆகுபெயர், வெறியாட்டத்திற்குக் காரணமான கடவுள் அணங்கு, விடுதலோ – ஓகாரம் அசைநிலை, கொடிதே – ஏகாரம் அசைநிலை, நோயே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  அறியாமையின் வெறியென மயங்கி அன்னையும் அருந்துயர் உழந்தனள் – நின் நோய்க்குரிய காரணத்தை அறியாததால் முருகனின் அணங்கினால் ஏற்பட்டது என மனம் கலங்கி பெருந்துயரால் அன்னை வருந்தினாள், அதனால் எய்யாது விடுதலோ கொடிதே – அதனால் அவள் அறியாது விடுதல் கொடியது, நிரை இதழ் ஆய் மலர் உண்கண் பசப்ப – நிரல்பட்ட இதழ்களையுடைய அழகிய (ஆராய்ந்து எடுத்த) மலரை ஒத்த மையுண்ட கண்கள் பசலை அடையுமாறு, சேய் மலை நாடன் செய்த நோயே – உயர்ந்த மலையின் தலைவன் (தொலைவில் தோன்றும் மலையின் தலைவன்) தந்த காதல் நோய்

ஐங்குறுநூறு 243, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி செவிலியிடம் சொன்னது
கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி
அறியா வேலன் வெறி எனக் கூறும்
அது மனம் கொள்குவை அனை, இவள்
புது மலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே.

பாடல் பின்னணி:  வெறியாட்டம் நிகழ்த்த முயன்ற தாயின் அறியாமையை எடுத்துக் காட்டித் தோழி களவை வெளிப்படுத்துகின்றாள்.  தொல்காப்பியம், பொருளியல் 12 – எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல், கூறுதல், உசாதல், ஏதீடு தலைப்பாடு, உண்மை செப்புங் கிளவியொடு, தொகைஇ எழு வகைய என்மனார் புலவர் – இங்குக் கூறுதல் பொருந்தும்.

பொருளுரை அன்னையே!  இவளுடைய புதிய மலரைப் போன்ற ஈரக் கண்கள் வருந்தியதால் ஏற்பட்ட பசலை நோயின் காரணம் அறியாத வேலன், மிளகுக் கொடி வளரும் மலையின் கடவுளான முருகனை வாழ்த்தி, அவனால் இது ஏற்பட்டது என்றும், இதைத் தீர்ப்பதற்கு வெறியாட்டம் நிகழ்த்த வேண்டும் என்றும் கூறுவதை நீ ஏற்றுக் கொள்கின்றாய்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – வேலனைப் படிமத்தான் என்று கூறி, ‘செவ்வேள் வேலைத் தான் ஏந்தி நிற்றலின் வேலன் என்றார்’ என்பர் நச்சினார்க்கினியர்.  பழைய உரை – அறியா வேலன் யாது கேட்பினும் வெறியெனக் கூறும் அவனை இதற்கும் கேட்க மனங்கொள்ளா நின்றாய் என்றவாறு. இலக்கணக் குறிப்பு – அனை – அன்னை என்பதன் தொகுத்தல் விகாரம், நோய்க்கே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி – மிளகுக் கொடி வளரும் மலையின் கடவுளான முருகனை வாழ்த்தி, அறியா வேலன் வெறி எனக் கூறும் – தலைவனால் ஏற்பட்டது என்பதை அறியாத வேலன் வெறியாட்டம் என்று கூறுவதை, அது மனம் கொள்குவை  – அவன் கூறுவதை ஏற்றுக்கொள்கின்றாய், அனை – அன்னை, இவள் – புது மலர் மழைக்கண் – இவளுடைய புதிய மலரைப் போன்ற ஈரக் கண்கள், புலம்பிய நோய்க்கே – வருந்தியதால் ஏற்பட்ட பசலை நோய், தனிமையுற்றதால் ஏற்பட்ட பசலை நோய்

ஐங்குறுநூறு 244, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, செவிலித்தாய் கேட்கும்படி
அம்ம வாழி தோழி பன் மலர்
நறும் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை
குன்றம் பாடான் ஆயின்
என் பயஞ்செய்யுமோ வேலற்கு அவ் வெறியே.

பாடல் பின்னணி:  தாய் வெறியாட்டத்திற்கு ஏற்பாடு செய்தமை கண்ட தோழி, அவள் உண்மையை உணரும்பொருட்டு, அவள் கேட்கும்வண்ணம் தலைவியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  பல்வேறு மலர்களின் நறுமணம் பொருந்திய குளிர்ந்த சோலைகளையுடைய நாட்டில் பொருந்திய நெடிய தகைமையையுடைய நம் தலைவனின் மலையைப் புகழ்ந்துப் பாடவில்லை என்றால், என்ன பயனைச் செய்யுமோ அறியாமையுடைய வேலனின் அந்த வெறியாட்டம்?  ஒரு பயனும் செய்யாது.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – வேலன் வெறி அயருங்கால் முதற்கண் தலைமகனது குன்றத்தைப் பாடுதலால், தான் கூறுவன வாயாதல் பெறுகின்றான் என்றும், அது செய்யானாயின், அவன் கூற்றுப் பொய்யாகி ஒரு பயனையும் எனக்கேயுமன்றி அவற்கும்செய்யாதொழியும் என்றும் கூறினாள், குன்றம் பாடானாயின், எவன் பயஞ்செய்யுமோ என்றாள்.  தனக்குப் பயன்படுதல் தலைமகன் உறுபெயர் கெட்டி மகிழ்வெய்தல்.  வேலற்குப் பயன், வெறியாடல் வாய்த்தமை குறித்து மகிழ்வும் பொருளும் பெறுதல்.  இலக்கணக் குறிப்பு – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, செய்யுமோ – ஓகாரம் எதிர்மறை, ஒரு பயனும் செய்யாது என்பது பொருள், வெறியே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி!  பன் மலர் நறும் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை குன்றம் பாடான் ஆயின் – பல்வேறு மலர்களின் நறுமணம் பொருந்திய குளிர்ந்த சோலைகளையுடைய நாட்டில் பொருந்திய நெடிய தகைமையையுடைய நம் தலைவனின் மலையைப் புகழ்ந்துப் பாடவில்லை என்றால், என் பயஞ்செய்யுமோ வேலற்கு அவ் வெறியே – என்ன பயனைச் செய்யுமோ அறியாமையுடைய வேலனுக்கு அந்த வெறியாட்டம்

ஐங்குறுநூறு 245, கபிலர், குறிஞ்சித் திணைதோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பொய்யா மரபின் ஊர் முது வேலன்,
கழங்கு மெய்ப்படுத்துக் கன்னம் தூக்கி
முருகு என மொழியும் ஆயின்,
கெழுதகை கொல் இவள் அணங்கியோற்கே.

பாடல் பின்னணி:  தோழி வரைவு கடாயது.  தாய் வேலனை அழைத்து வெறியாட்டம் நிகழ்த்த எண்ணினாள்.  அதை அறிந்த தோழி, வரைவு கடாவும் நோக்கத்தில், தலைவன் கேட்கும்படி தனக்குத்தானே சொன்னது.

பொருளுரை:  பொய் கூறாத முறைமையையுடைய நம் ஊரின் முதிய வேலன் கழங்கினால் உண்மையை அறிந்து தாயத்தை அணிவித்து முருகனால் ஏற்பட்டது எனக் கூறுவான் ஆனால், அவன் கூறுவது உண்மையாகுமா, இவளை வருத்திய தலைவனுக்கு?

குறிப்பு:  பழைய உரை – கன்னம் என்பது நோய் தணித்தற்குப் பண்ணிக் கொடுக்கும் படிமம்.  கெழுதகை என்பது உரிமை.  இவளை அணங்கியோற்கு வெறியாட்டு உரிமையன்று என்பதாம். கன்னம் (2) – ஒளவை துரைசாமி உரை – நோய் தணிதற்குப் பண்ணிக் கொடுக்கும் மந்திரத்தகடு உள்ளே வைத்துக் கட்டிய தாயத்து.  கொல் (4) – அ. தட்சிணாமூர்த்தி உரை – அசைநிலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஐயம்.  இலக்கணக் குறிப்பு – கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், அணங்கியோற்கே – அணங்கியோன் வினையாலணையும் பெயர், ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  பொய்யா மரபின் ஊர் முது வேலன் கழங்கு மெய்ப்படுத்துக் கன்னம் தூக்கி முருகு என மொழியும் ஆயின் – பொய் கூறாத முறைமையையுடைய நம் ஊரின் முதிய வேலன் கழங்கினால் உண்மையை அறிந்து தாயத்தை அணிவித்து முருகனால் ஏற்பட்டது எனக் கூறுவான் ஆனால், கெழுதகை கொல் – அவன் கூறுவது உண்மையாகுமா, இவள் அணங்கியோற்கே – இவளை வருத்திய தலைவனுக்கு

ஐங்குறுநூறு 246, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
வெறி செறித்தனனே வேலன், கறிய
கல் முகை வயப் புலி கழங்கு மெய்ப்படூஉ
புன்புலம் வித்திய புனவர் புணர்த்த
மெய்ம்மையன்ன பெண்பாற் புணர்ந்து
மன்றில் பையுள் தீரும்,
குன்ற நாடன் உறீஇய நோயே.

பாடல் பின்னணி:  தோழி வரைவு கடாயது.  தலைவியின் மெலிவு கண்டு தாய் வேலனை அழைத்து வெறியாட்டம் நிகழ்த்தினாள்.  அதனால் தலைவி பின்னும் பெருந்துயருற்றாள்.  அதனை வரையாது வந்தொழுகும் தலைவன் அறியும்படி தோழி கூறியது.

பொருளுரை:  மிளகுக் கொடிகள் படர்ந்த மலையின் குகையில் உறையும் வலிய ஆண் புலி, புஞ்செய் நிலத்தில் தினைப் பயிரை விதைத்த குறவர், கழற்சிக்காயைக் கண்ணாக உடலில் பொருத்தி இயற்றிய, மெய்யானது போல் தோன்றும் பெண்புலி பொம்மையைப் புணர்ந்து மன்றத்தில் தன் காம வருத்தம் நீக்கும் மலை நாடன், செய்த நோயின் காரணமாக, வெறியாட்டு அயர்வதற்கு உரியவற்றை முறைப்படி செய்தான்.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு – செறித்தனனே – ஏகாரம் அசைநிலை, மெய்ப்படூஉ – அளபெடை, அன்ன – உவம உருபு, உறீஇய – செய்யுளிசை அளபெடை, நோயே – ஏகாரம் அசைநிலை.  உள்ளுறை – பழைய உரை – பயிர் விளைப்பார் விலங்குகள் நலியாமைக்குக் கழங்கைக் கண்ணாகவுறுத்திப் பொய்ம்மை வகையாற் பண்ணி வைத்த பெண்பாற் புலியைப் புணர்ந்து புலிப் போத்துப் படப்பை நடுவே துன்பம் தீருமென்றது, வரைந்து கொள நினையாது இக்களவிற் புணர்கின்ற மாயப்புணர்ச்சியானே இன்பம் முடிய நுகர்கின்றான் என்பதாம், அ. தட்சிணாமூர்த்தி உரை – வயப்புலி பொய்யாகச் செய்து வைத்த பெண்புலி உருவினைப் புணர்ந்து வேட்கை தீரும் என்றது தலைமகன் வரைந்து கொண்டு மெய்யான இன்பத்தை நுகரக் கருதாது, களவுப் புணர்ச்சியிலேயே நிறைவடைகின்றான் என்றதை உள்ளுறுத்தது.

சொற்பொருள்வெறி செறித்தனனே வேலன் – வெறியாட்டு அயர்வதற்கு உரியவற்றை முறைப்படி செய்தான், கறிய கல் முகை வயப் புலி – மிளகுக் கொடிகள் படர்ந்த மலையின் குகையில் உறையும் வலிய ஆண் புலி, கழங்கு மெய்ப்படூஉ – கழற்சிக்காயைக் கண்ணாக உடலில் பொருத்தி, புன்புலம் வித்திய புனவர் – புஞ்செய் நிலத்தில் தினைப் பயிரை விதைத்த குறவர், புணர்த்த மெய்ம்மையன்ன பெண்பாற் புணர்ந்து மன்றில் பையுள் தீரும் குன்ற நாடன் – இயற்றிய மெய்யானது போல் தோன்றும் பெண் புலி பொம்மையைப் புணர்ந்து தோட்டத்தின் நடுவில் தன் காம வருத்தம் நீக்கும் மலை நாடன், உறீஇய நோயே – செய்த நோய்

ஐங்குறுநூறு 247, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, தமர் கேட்கும்படியாக
அன்னை தந்தது ஆகுவது அறிவென்
பொன் நகர் வரைப்பின் கன்னம் தூக்கி
‘முருகு’ என மொழியும் ஆயின்,
அரு வரை நாடன் பெயர் கொலோ அதுவே?

பாடல் பின்னணி:  வெறியாடலை விலக்கக் கருதிய தோழி, களவைப் புலப்படுத்தும் பொருட்டுச் சுற்றத்தார் கேட்கும்படி, தலைவியை நோக்கிக் கூறியது.

பொருளுரை: உன்னுடைய வளமை மிக்க இல்லத்தில், உன் கையில் தாயத்தைக்கட்டி, முருகனின் சினத்தைத் தணிப்பதற்கான வெறியாட்டம் நிகழ்த்த உன் தாய் ஏன் வேலனை அழைத்தாள் என்று புரிகின்றது.  ஒரு வேளை உன்னுடைய  அரிய மலை நாட்டுக் காதலனின் பெயர் முருகனோ?

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – அன்னை வேலனை அழைத்த தன்மை எனக் குறித்தது அவளது அறியாமையைச் சுட்டியது என்க.  ‘யான் அவனை அறிவேன்’ என்றாள், வேலன் யாண்டும் எதற்கும் முருகனையே காரணமாகக் கூறி ஏமாற்றும் தன்மையைத் தான் நன்கு அறிந்தமையை விளக்க.  ‘பொன்னகர்’ என்று தலைவியின் மனையைச் சிறப்பித்தாள், அவள் பிறந்த குடியின் செல்வ வளத்தை விளக்க.  ‘முருகென மொழியுமாயின்’ என்றாள் , வேலன் முருகு என மொழிதல் ஒருதலையாதலான்.  ‘அருவரை நாடன் பெயர் கொலோ அதுவே’ என்றாள், அருவரை நாடனாகிய நம் காதலன் பெயராக அஃது இருப்பின் (முருகு என்னும் பெயர்) வேலன் சொன்னது தகும் என்ற கருத்தில்.  இலக்கணக் குறிப்பு – கொலோ – இடைக்குறை விகாரம், ஓகாரம் எதிர்மறை, அதுவே – ஏகாரம் அசைநிலை.  அரு வரை நாடன் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரு வரை நாடன் என்றது ஏத்தல்.  இது தலைவியை முன்னிலையாக்கி உசாவியது. அரு வரை நாடன் பெயர் கொலோ என்று வினவியவழி செவிலிக்குச் சூழ்ச்சி பிறக்கும்.  பிறந்துழி அந்நாடன் யாரென உசாவித் தன்னை வினவுவாள்.  அவ்வழி அருமறை உயிர்த்து அறத்தொடு நிற்றல் தோழி கருத்தென்க.

சொற்பொருள்:  அன்னை தந்தது – உன் அன்னை தந்தது, ஆகுவது அறிவென் – எதனால் என்று புரிகின்றது, பொன் நகர் – வளமை மிக்க இல்லம், அழகிய இல்லம், வரைப்பின் – வீட்டின் எல்லை, கன்னம் தூக்கி – தாயத்தைக் கட்டி, முருகென மொழியும் ஆயின் – முருகன் தான் கரணம் என்று, அருவரை நாடன் – அரிய மலை நாட்டவன், பெயர் கொலோ அதுவே – பெயர் அதுவாக இருக்குமோ?

ஐங்குறுநூறு 248, கபிலர், குறிஞ்சித் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
பெய்ம் மணல் முற்றம் கவின் பெற இயற்றி
மலைவான் கொண்ட சினைஇய வேலன்
கழங்கினால் அறிகுவது என்றால்
நன்றால் அம்ம, நின்ற இவள் நலனே.

பாடல் பின்னணி:  தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.

பொருளுரை:  புது மணல் பரப்பிய இல்லத்தின் முற்றம் அழகுபெறுமாறு அமைத்துப் போரிடும்பொருட்டு முருகன் கைக்கொண்ட சினந்த வேலை ஏந்திய வேலன், இவளுடைய நிலையைக் கழங்கினை இட்டு அறிவான் ஆயின் மிகவும் நன்று, இவள்பால் நின்ற கற்பின் மாண்பு.

குறிப்பு:  மலைவான் கொண்ட சினைஇய வேலன் (2) – உ. வே. சாமிநாதையர் உரை – மாறுபாட்டினால் சினம் கொண்ட வேலன், பொ. வே. சோமசுந்தரனார் உரை – போரிடற்பொருட்டு முருகன் கைக்கொண்ட சினந்த வேலினை ஏந்திய இவ்வேல்மகன், ஒளவை துரைசாமி உரை – வேலன் ஏந்தியது செவ்வேளினது வேலாகலின் மலைவான் கொண்ட சினைஇய வேல் என்று கூறப்பட்டது, மலை என்பது குருகு பெயர்க்குன்றம்.  வான் என்றது வானோர் தலைவனாகிய இந்திரன் முதலியோரை, அ. தட்சிணாமூர்த்தி உரை – முருகன் ஏந்திய வேலையே வெறியாட்டாளன் ஏந்தியாடுகின்றான் என்பது நம்பிக்கை.  ஒளவை துரைசாமி உரை – ‘களவு அலர் ஆயினும்’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 115) என்ற சூத்திரத்துக் ‘கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் ஒட்டிய திறத்தான் செய்திக்கண்ணும்’ என்பதற்கு இதனைக்காட்டி, இது வேலன் கழங்கு பார்த்தமை கூறிற்று என்பர் நச்சினார்க்கினியர்.  இலக்கணக் குறிப்பு – சினைஇய – அளபெடை, நன்றால் – நன்று இகழ்ச்சி குறிப்பு, ஆல் அசைநிலை, அம்ம – அசைநிலை, நலனே – ஏகாரம் அசைநிலை.  

சொற்பொருள்பெய்ம் மணல் முற்றம் கவின் பெற இயற்றி மலைவான் கொண்ட சினைஇய வேலன் – புது மணல் பரப்பிய இல்லத்தின் முற்றம் அழகுபெறுமாறு அமைத்துப் போரிடும்பொருட்டு முருகன் கைக்கொண்ட சினந்த வேலை ஏந்திய வேலன், கழங்கினால் அறிகுவது என்றால் நன்றால் அம்ம – இவளுடைய நிலையைக் கழங்கினை இட்டு அறிவான் ஆயின் மிகவும் நன்று, நின்ற இவள் நலனே – இவள்பால் நின்ற கற்பின் மாண்பு

ஐங்குறுநூறு 249 – கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பெய்ம்மணல் வரைப்பின் கழங்கு படுத்து அன்னைக்கு
முருகென மொழியும் வேலன், மற்று அவன்
வாழிய, இலங்கும் அருவிச்
சூர்மலை நாடனை அறியாதோனே.

பாடல் பின்னணி:  முருகன் தான் தலைவியின் மெலிவிற்குக் காரணம் என வேலன் கூறியதை நம்பிய தாய் கேட்குமாறு தோழி சொல்லியது.  

பொருளுரை:   புதிதாகப் பெய்த மணலில் கழங்குக் காய்களை வைத்துச் சடங்குகள் செய்து, தாயிடம் “உன் மகளின் நோய் முருகனால் ஏற்பட்டது” என்று கூறினான் வேலன்.  அவன் வாழ்க.  சிறப்பான அருவிகளை உடைய அச்சம் தரும் மலைகளையுடைய நாடவனான உன் காதலனை வேலன் அறியவில்லை.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – முருகென மொழிதல் வேலற்கு இயல்பு என்பது தோன்ற மொழியும் என்றார். முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை எம் முறைச் சொல்லும் நிகழும் காலத்து மெய்ந் நிலைப் பொதுச் சொல் (தொல்காப்பியம், வினையியல் 43) ஆகலின் இறந்த காலம் கொள்ளப்பட்டது.  இலக்கணக் குறிப்பு – மற்று – அசைநிலை, வாழிய – இகழ்ச்சிக் குறிப்பு, அறியாதோனே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  பெய்ம்மணல் – புதிதாக பெய்த மணல், வரைப்பின் – மலையகத்தில், இல்லத்தில், கழங்குபடுத்து – கழங்குகளைப் பரப்பிக் குறி பார்த்து, அன்னைக்கு – தாயிடம்,  முருகென மொழியும் – இந்த நோய் முருகனால் ஏற்பட்டது எனக் கூறினான், வேலன் – முருகன் பூசாரி, மற்று அவன்  வாழிய – அவன் வாழ்க, இலங்கும் – விளங்கும், அருவி – அருவிகள், சூர் – அச்சம் தரும், வருத்தும் தெய்வங்களையுடைய,  மலை நாடனை –  மலை நாடவனை, அறியாதோனே – அறியாதவன்

ஐங்குறுநூறு 250, கபிலர், குறிஞ்சித் திணைதோழி கழங்கிடம் சொன்னது, செவிலித்தாய் கேட்கும்படி
பொய்படுபு அறியாக் கழங்கே! மெய்யே
மணி வரைக் கட்சி மட மயில் ஆலும் நம்
மலர்ந்த வள்ளியம் கானம் கிழவோன்,
ஆண்டகை விறல் வேள் அல்லன், இவள்
பூண் தாங்கு இள முலை அணங்கியோனே.

பாடல் பின்னணி:  தோழி அறத்தொடு நிலைக் குறித்துச் சொல்லியது.

பொருளுரை:  பொய்த்தல் அறியாத கழங்கே!  இது தான் உண்மை!  நீலமணி போலும் நிறமுடைய மலையின் காட்டில் இள மயில்கள் ஆடி மகிழும் நம் வள்ளிக்கொடிகள் படர்ந்த அழகிய காட்டின் தலைவன் தான் இவளுடைய அணிகலன் அணிந்த இள முலைகளைத் தன் முயக்கத்தால் வருத்தியவன்  ஆண்மையையும் வெற்றியையும் உடைய முருகவேள் இல்லை.

குறிப்பு:  பொய்படுபு அறியாக் கழங்கே (1) – உ. வே. சாமிநாதையர் உரை – பொய்படுதலை அறியாத கழற்காயே, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொய்படுதல் அறியாத என்று பிறரால் பாராட்டப்படுகின்ற கழங்கே, ஒளவை துரைசாமி உரை – பொய்மையிற் பட்டு மெய்ம்மையை அறியமாட்டாது ஒழிந்த கழங்கே.  வள்ளியம் கானம் (3) – ஒளவை துரைசாமி உரை – வள்ளிக்கொடிகள் நிறைந்த கானம். வள்ளிக்கொடிகள் காடுபோல் பரந்துள்ளமை பற்றி இவ்வாறு கூறப்பட்டது.  இனி வள்ளி மலையைச் சேர்ந்த காடு எனினுமாம்.  இப்பகுதி முதல் இராசராசன் காலத்தும் அவற்கு முன்பும் ‘சயங்கொண்ட சோழமண்டலத்துப் பெரும்பாணப்பாடி நாட்டுத் துய்ய நாட்டு வள்ளிமலைப் பற்று’ என்று கல்வெட்டுக்களில் வழங்கி வந்துள்ளது.  இலக்கணக் குறிப்பு – கழங்கே – விளி, மெய்யே – ஏகாரம் அசைநிலை, அணங்கியோனே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்பொய்படுபு அறியாக் கழங்கே – பொய்த்தல் அறியாத கழங்கே (பொ. வே. சோமசுந்தரனார் தன்னுடைய உரையில் விளக்குகின்றார் – இப்பொழுது நீ பொய் கூறுகிறாய் என்பாள் ‘பொய்படு அறியா கழங்கே’ என்று விளித்தாள்), மெய்யே – இது உண்மை, மணி வரைக் கட்சி மட மயில் ஆலும் நம் மலர்ந்த வள்ளி அம் கானம் கிழவோன் – நீலமணி போலும் நிறமுடைய மலையின் காட்டில் இள மயில்கள் ஆடி மகிழும் நம் வள்ளிக்கொடிகள் படர்ந்த அழகிய காட்டின் தலைவன், ஆண்டகை விறல் வேள் அல்லன் – ஆண்மையையும் வெற்றியையும் உடைய முருகவேள் இல்லை, இவள் பூண் தாங்கு இள முலை அணங்கியோனே – இவளுடைய அணிகலன் அணிந்த இள முலைகளைத் தன் முயக்கத்தால் வருத்தியவன்

குன்றக் குறவன் பத்து

பாடல்கள் 251–260 – குன்றக்குறவன் என்னும் தொடரை முதலாகக் கொண்டவை.

ஐங்குறுநூறு 251, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
குன்றக் குறவன் ஆர்ப்பின், எழிலி
நுண் பல் அழிதுளி பொழியும் நாட!
நெடு வரைப் படப்பை நும் ஊர்க்
கடுவரல் அருவி காணினும் அழுமே.

பாடல் பின்னணி:  வரையாது வந்தொழுகும் தலைவனிடம் விரைவில் அவன் தலைவியை மணம் புரிய வேண்டும் எனக் கூறியது.

பொருளுரை:  குன்றத்தின்கண் வாழும் குறவன் தான் விதைத்த தினை முதலிய பயிர்களை விளைத்தற்கு நீர் வேண்டிக் கடவுளை வாழ்த்தி ஆரவாரித்ததால், குன்றத்தில் தவழும் முகில்கள் பலவாகிய மிக்க மழைத் துளிகளைப் பெய்யும் நாடனே!  இவள், நெடிய மலையின்கண் உள்ள தோட்டங்கள் பொருந்திய நும் ஊரின் விரைந்து வீழும் அருவியைக் கண்டாலும் அழுவாள்.

குறிப்பு:  பழைய உரை – நம்மூர்க் கடுவரல் அருவி காணினும் அழும் என்றது, அது நின் மலையினின்றும் வீழ்கின்ற அருவி என்று கொண்டு அதற்கு நின் கொடுமை கூறி இவள் அழும் என்றவாறு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலி துளி பொழியும் என்றது, நின் மலையில் உறையும் எழிலிக்கு உளதாகிய அளியுடைமையும் நின் மாட்டில்லை.  அது தானும் குறவன் ஆரவாரிக்கவே அவள் குறையறிந்து அது தீர மழை பொழிகின்றது.  நீயோ இவள் கண்கனிந்து அழாநிரப்பவும் அளி செய்கின்றாயில்லை என்பது.  புலியூர்க் கேசிகன் உரை – கடுவரல் அருவி காணினும், அழும் என்றது, நின் நாட்டிடத்து மலையினின்றும் வருதலை நினைத்து, அதன்பால் நின் கொடுமையினைக் கூறுவாள் போல இவள் அழாநிற்பாள்.  இலக்கணக் குறிப்பு – ஆர்ப்பின் – செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அழிதுளி – வினைத்தொகை, பொழியும் – உம்மை உயர்வு சிறப்பு, வரல் – தொழிற்பெயர், காணினும் – உம்மை இழிவு சிறப்பு, அழுமே – ஏகாரம் அசைநிலை. ஒப்புமை – புறநானூறு 143 – “மலைவான் கொள்க!” என உயர் பலி தூஉய் “மாரி ஆன்று மழை மேக்கு உயர்க” எனக் கடவுள் பேணிய குறவர் மாக்கள் பெயல் கண் மாறிய உவகையர் சாரல் புனத் தினை அயிலும் நாட!  அழிதுளி (2) – ஒளவை துரைசாமி உரை – அழிதுளி என்பது ஈண்டு ‘அழிபசி’ என்புழிப் போல மிக்க பெயல் என்னும் பொருட்டு.

சொற்பொருள்:  குன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலி நுண் பல் அழிதுளி பொழியும் நாட – குன்றத்தின்கண் வாழும் குறவன் தான் விதைத்த தினை முதலியவற்றிற்கு நீர் வேண்டிக் கடவுளை வாழ்த்தி ஆரவாரித்ததால் முகில்கள் பலவாகிய மிக்க மழைத் துளிகளைப் பெய்யும் நாடனே, நெடு வரைப் படப்பை நும் ஊர்க் கடுவரல் அருவி காணினும் அழுமே – இவள் நெடிய மலைகளையும் தோட்டங்களையும் உடைய நும் ஊரின் விரைந்து வீழும் அருவியைக் கண்டாலும் அழுவாள்

ஐங்குறுநூறு 252, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது
குன்றக் குறவன் புல் வேய்க் குரம்பை
மன்றாடு இள மழை மறைக்கும் நாடன்
புரையோன், வாழி தோழி, விரை பெயல்
அரும் பனி அளைஇய கூதிர்ப்
பெருந்தண் வாடையின், முந்து வந்தனனே.

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன் குறித்த பருவத்திற்கு முன்பே மீண்டு வந்தான்.  தோழி பெரிதும் மகிழ்ந்து அச்செய்தியை தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  குன்றத்தின்கண் வாழும் குறவனின் புல்லால் வேயப்பட்ட சிறு குடிலை வானில் அசைந்து உலவும் இள முகில்கள் மறைக்கும் நாட்டையுடைய தலைவன் உயர்ந்த பண்பினை உடையவன்.  அவன் நீடு வாழ்வானாக!   விரைந்து பெய்யும் மழையுடன், தாங்குவதற்கு அரிய பனியுடன் கலந்த குளிர் மிக்க வாடைக் காற்று வருமுன்பே வந்து விட்டான். 

குறிப்பு:  பழைய உரை – குன்றக் குறவன் புல் வேய்க் குரம்பை மன்றாடு இள மழை மறைக்கும் நாடன் என்றது, பிரிவின்கண் தங்கட்கு வந்த துன்பத்தை இவன் மறைத்தது நோக்கிக் கூறியவாறு.  இலக்கணக் குறிப்பு – அளைஇய – சொல்லிசை அளபெடை, வந்தனனே – ஏகாரம் அசைநிலை, தேற்றம்.  இள மழை (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சூல் முதிராத பஞ்சு போன்ற வெண்முகில், ஒளவை துரைசாமி உரை – புகை முகிலாய் அசையும் இளமழை.  மன்றாடு (2) – அ. தட்சிணாமூர்த்தி உரை – மன்றத்தின்கண் அசைந்து ஆடும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வான்வெளியிலே அசையாநின்ற.

சொற்பொருள்:  குன்றக் குறவன் புல் வேய்க் குரம்பை மன்றாடு இள மழை மறைக்கும் நாடன் புரையோன் – குன்றத்தின்கண் வாழும் குறவனின் புல்லால் வேயப்பட்ட சிறு குடிலை வானில் அசைந்து உலவும் இள முகில்கள் மறைக்கும் நாட்டையுடைய தலைவன் உயர்ந்த பண்பினை உடையவன், வாழி – அவன் நீடு வாழ்வானாக, தோழி – தோழி, விரை பெயல் அரும் பனி அளைஇய கூதிர்ப் பெருந்தண் வாடையின் முந்து வந்தனனே – விரைந்து பெய்யும் மழையுடன் தாங்குவதற்கு அரிய பனியுடன் கலந்த குளிர் மிக்க வாடைக் காற்று வருமுன்பே வந்து விட்டான்

ஐங்குறுநூறு 253, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
குன்றக் குறவன் சாந்த நறும் புகை
தேங்கமழ் சிலம்பின் வரையகம் கமழும்
கானக நாடன் வரையின்,
மன்றலும் உடையள் கொல் தோழி, யாயே?

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன் திருமண ஏற்பாட்டுடன் வந்துள்ளான் எனத் தோழி வாயிலாக அறிந்த தலைவி தோழியிடம் சொன்னது.  

பொருளுரை:   மலையில் வாழும் குறவன் சந்தன மரத்தின் கட்டைகளை எரிப்பதால் நறுமணமான புகை, தேனின் மணத்தையுடைய மலைச் சரிவிலும் மலையிலும் பரவும் காடுகளை உடைய நாட்டவன், என்னை மணந்து கொள்வான் ஆயின், என் தாய் திருமண விழாவை நடத்துவாளா தோழி?

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – தேன் நாறுகின்ற மலைக்கண்ணே சாந்த நறும்புகை கமழும் என்றது, நம் மனைக்கண்ணே செய்கின்ற சிறப்புக்கு மேலே மணவினையால் அவர் செய்யும் சிறப்பு மிகும் ….. வண்ணம் விளைவிப்பாள் கொல் என்றவாறு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – சாந்தம் நறும்புகை இயல்பாகவே சிலம்பின்கண் கமழும் தேன் மணத்தோடு விரவிக் காடெல்லாம் கமழ்ந்து அக் காட்டினூடே இருக்கும் தீ நாற்றத்தை மாற்றுவது போன்று, எம் பெருமான் வரைதலானே உண்டாகும் சிறப்பு நம் சுற்றத்தார் செய்யும் மன்றச் சிறப்பொடு விரவி நாடெங்கும் பரவி ஊரில் உண்டாகிய அம்பலையும் அலரையும் அழிக்கும் என்பது.  இலக்கணக் குறிப்பு – கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், யாயே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  குன்றக் குறவன் – மலையில் வாழும் குறவன், சாந்த நறும் புகை – கொளுத்திய சந்தனத்தின் நறுமணமான புகை, தேங்கமழ் சிலம்பின் – தேனின் மணம் (இனிமையான மணம்) கமழும் மலைச் சரிவில்,   வரையகம் கமழும் – மலை முழுக்க கமழும், கானக நாடன் – காடுகளை உடைய நாட்டவன், வரையின் – மணந்து கொள்வான் ஆயின், மன்றலும் – திருமண விழாவையும், உடையள் கொல் தோழி – நடத்துவாளா தோழி, யாயே – தாய்

ஐங்குறுநூறு 254, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது
குன்றக் குறவன் ஆரம் அறுத்தென,
நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும்,
வண்டு இமிர், சுடர்நுதல் குறுமகள்,
கொண்டனர் செல்வர், தம் குன்று கெழு நாட்டே.

பாடல் பின்னணி:  இற்செறிப்பும் காப்பும் மிகுந்தால், தலைவன் தலைவியைக் காண்பது இயலாததால், தலைவியை உடன்கொண்டு போகும்படி அவனை உடம்படுவித்தாள் தோழி.  பின் அச்செய்தியைத் தலைவிக்குக் கூறி அவளுடைய உடன்பாட்டை வேண்டி இங்ஙனம் கூறினாள்.

பொருளுரை:  ஒளிரும் நெற்றியையுடைய இளையமகளே!  குன்றத்தின்கண் வாழும் குறவன் சந்தன மரத்தை அறுத்துச் சுட்டதால் நறுமணப் புகைப் பரவி, வண்டுகள் மொய்க்கும் நறிய காந்தள் மலர்களைச் சூழும், தன் மலைகள் பொருந்திய நாட்டிற்கு உன்னை அழைத்துக் கொண்டு செல்வார் நம் தலைவர். 

குறிப்பு:   ஒளவை துரைசாமி உரை – சந்தனத்தின் புகையும் காந்தள் மலரின் மணமும் ஒருங்கு கமழ்தல் தோன்ற நறும்புகை சூழ்ந்து காந்தள் நாறும் என்றார்.  இனி, சூழ்ந்து என்பதனைச் சூழ என்பதன் திரிபு எனக் கொண்டு, நறும்புகை சூழ, காந்தள் நாறும் நுதல் என இயைத்தலும் ஒன்று.  உள்ளுறை – புலியூர்க் கேசிகன் உரை – சாந்த நரம்புகை காந்தள் சூழ்ந்து நாறும் குன்றுகெழு நாடு என்று தலைவன் நாட்டைக் குறித்தது, நீயும் அவனுடன் சென்று அவன் ஊரில் மணம்கூடி இல்லறம் ஆற்றின் அதன் செவ்வியை அனைவரும் போற்றுவர் என்பது.  இலக்கணக் குறிப்பு – குறுமகள் – விளி, கொண்டனர் – கொண்டு எனப் பொருள்படும் முற்றெச்சம், நாட்டே – ஏகாரம் அசைநிலை.  வண்டு இமிர் (3) – தி. சதாசிவ ஐயர் உரை – வண்டு இமிழ் காந்தள் என்க, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வண்டுகள் இசை பாடாநின்ற ஒளியுடைய நுதல், ஒளவை துரைசாமி உரை – வண்டுகள் ஒலிக்கும் ஒளி பொருந்திய நுதல், ச.வே. சுப்பிரமணியன் உரை – காந்தள் மலர்களை வண்டுகள் சூழ்ந்து மொய்க்கின்றன.  சுடர்நுதல் குறுமகள் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒளியுடைய நுதலையுடைய பெருமாட்டியே, ஒளவை துரைசாமி உரை – ஒளி பொருந்திய நுதலினையுடைய இளைய மகளே, அ. தட்சிணாமூர்த்தி உரை – ஒளி பொருந்திய நுதலுடைய இளமகளே, தி. சதாசிவ ஐயர் உரை – ஒளி பொருந்திய நுதலையுடைய குறுமகள்.

சொற்பொருள்:  குன்றக் குறவன் ஆரம் அறுத்தென நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும் வண்டு இமிர் – குன்றத்தின்கண் வாழும் குறவன் சந்தன மரத்தை அறுத்துச் சுட்டதால் நறுமணப் புகைப் பரவி வண்டுகள் மொய்க்கும் நறிய காந்தள் மலர்களைச் சூழும், சுடர்நுதல் குறுமகள் – ஒளிரும் நெற்றியையுடைய இளையமகளே, கொண்டனர் செல்வர் தம் குன்று கெழு நாட்டே – உன்னை அழைத்துக் கொண்டு செல்வார் தன்னுடைய மலைகள் பொருந்திய நாட்டிற்கு

ஐங்குறுநூறு 255, கபிலர், குறிஞ்சித் திணைதலைவன் தோழனிடம் சொன்னது
குன்றக் குறவன் காதல் மட மகள்,
வரையர மகளிர்ப் புரையும் சாயலள்,
ஐயள், அரும்பிய முலையள்,
செய்ய வாயினள், மார்பினள் சுணங்கே.

பாடல் பின்னணி:  ‘உன்னால் காதலிக்கப்பட்டவள் எத்தகையவள்?’ எனக் கேட்ட தோழனிடம் தலைவன் சொன்னது.

பொருளுரை:  குன்றத்தின்கண் வாழும் குறவனின் அன்புக்குரிய மகள் இளமை உடையவள்.  வரையர மகளிர் போன்ற மென்மை உடையவள்.  அழகானவள்.  மலர் அரும்பு போன்ற முலையையும் சிவந்த வாயையும் உடையவள். தேமல் படர்ந்த மார்பை உடையவள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – அருமைக்கு வரையர மகளிரைக் கூறுதல் மரபு.  பிறரும், ‘கெடாஅ நல் இசைத் தென்னன் தொடாஅ நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ்வரையர மகளிரின் அரியள்’ (அகநானூறு 342) என்பது காண்க.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரும்பிய முலையள், செய்யவாயினள், சுணங்கு மார்பினள் என்னும் இவ்வடையாளங்களால் தனக்கும் அவட்கும் கூட்டமுண்டாமையைக் குறிப்பாக உணர்த்தியவாறாம்.  மார்பினள் சுணங்கே என்பதை சுணங்கு மார்பினள் என மாறுக.  இலக்கணக் குறிப்பு – புரை – உவம உருபு, சுணங்கே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  குன்றக் குறவன் காதல் மட மகள் – குன்றத்தின்கண் வாழும் குறவனின் அன்புக்குரிய மகள் இளமை உடையவள், வரையர மகளிர்ப் புரையும் சாயலள் – வரையர மகளிர் போன்ற மென்மை உடையவள், மலையில் வாழும் சூர் மகளிர் போல் மென்மையானவள், ஐயள் – அழகானவள், அரும்பிய முலையள் செய்ய வாயினள் – மலர் அரும்பு போன்ற முலையையும் சிவந்த வாயையும் உடையவள், மார்பினள் சுணங்கே – தேமல் படர்ந்த மார்பை உடையவள்

ஐங்குறுநூறு 256, கபிலர், குறிஞ்சித் திணைதலைவன் தோழியிடம் சொன்னது
குன்றக் குறவன் காதல் மடமகள்,
வண்டுபடு கூந்தல் தண் தழைக் கொடிச்சி,
வளையள், முளை வாள் எயிற்றள்,
இளையள் ஆயினும், ஆர் அணங்கினளே.

பாடல் பின்னணி:  ‘நீ கூறுகின்றவள் நின்னை வருத்தும் பருவத்தள் அல்லள்’ எனக் கூறிய தோழியிடம் தலைவன் சொன்னது.

பொருளுரை:  குன்றத்தின்கண் வாழும் குறவனின் அன்புக்குரிய இளைய மகள், வண்டுகள் மொய்க்கும் நறுமணமுடைய கூந்தலையும் குளிர்ந்த தழையாடையையும் உடைய கொடிச்சி.  அவள் வளையல்கள் அணிந்தவள். முளை போலும் ஒளியுடைய பற்களை உடையவள்.  அவள் இளையவள் ஆயினும் பெரும் துன்பத்தை எமக்குத் தருபவள்.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு – அணங்கினளே – ஏகாரம் அசைநிலை.  ஒளவை துரைசாமி உரை – கூந்தல் முடித்தல், தழை அறிந்து அணிதல், மொழி நிரம்புதல் முதலியன இல்லாத இளம்பருவத்தள் எனத் தலைமகளது இளமை கூறித் தன்னை மறுத்த தோழிக்கு, ‘நன் மலர் ஆய்ந்து அணியுங் கூந்தலும், மேதக்க தழையணியும் மதுகையும் உடையளாயினாளை’ வருத்தும் பருவத்து அல்லள் எனல் ஆகாதென்பான், வண்டுபடு கூந்தல் தண்டழைக் கொடிச்சி என்றான்.  மேலும், முளைவாள் எயிறும் இளமையுமுடையவள் என்று தோழி கூறியதனையே கொண்டு, அப்பெற்றியாளாயினும், தனக்கு உரித்தல்லாத அணங்குதல் தன்மை மிக்கு உடையளாய்த் தன்னாற் காணப்பட்டாரை வருத்துமாறு வல்லள் ஆயினாள் என்பான், இளையளாயினும் ஆர் அணங்கினளே என்றான்.

சொற்பொருள்:  குன்றக் குறவன் காதல் மடமகள் – குன்றத்தின்கண் வாழும் குறவனின் அன்புக்குரிய இளைய மகள், வண்டுபடு கூந்தல் தண் தழைக் கொடிச்சி வளையள் – வண்டுகள் மொய்க்கும் நறுமணமுடைய கூந்தலையும் குளிர்ந்த தழையாடையையும் உடைய கொடிச்சி (மலையில் வாழும் பெண்) வளையல்கள் அணிந்தவள், முளை வாள் எயிற்றள் – முளை போலும் ஒளியுடைய பற்களை உடையவள், இளையள் ஆயினும் ஆர் அணங்கினளே – இளையவள் ஆயினும் பெரும் துன்பத்தை எமக்குத் தந்தவள்

ஐங்குறுநூறு 257, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
குன்றக் குறவன் கடவுள் பேணி
இரந்தனன் பெற்ற எல் வளைக் குறுமகள்,
ஆய் அரி நெடுங்கண் கலிழச்
சேயதால் தெய்ய, நீ பிரியும் நாடே.

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்துப் பிரிவேன் என்ற தலைவனிடம் தோழி உடன்படாது கூறியது.

பொருளுரை:  குன்றத்தின்கண் வாழும் குறவன் குன்றத்தின் கடவுளான முருகனை வழிபட்டு இரந்துப் பெற்ற ஒளியுடைய வளையல்களை அணிந்த இளமகளின் அழகிய செவ்வரி படர்ந்த நீண்ட கண்கள் கலங்கிக் கண்ணீர் வடிக்கின்றன, நீ பிரிந்து செல்லும் நாடு தொலைவில் இருப்பதால்.  இவள் உன் பிரிவை ஆற்றாள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – தந்தை தவஞ் செய்து பெற்றுத் துன்பமறியாமை வளர்த்தான் என்பாள், குன்றக்குறவன் கடவுட் பேணி, இரந்தனன் பெற்ற எல்வளைக் குறமகள் என்றும், எனவே, அவள் சிறிது துன்பம் எய்தினும் பொறாள் என்றற்குச் சேயரி நெடுங்கண் கலிழ என்றும், நீ பிரிந்து செல்லின் விரைவின் மீளுதல் ஆகாதாகலின் இவள் ஆற்றாது இறந்துபடுவாள் என்பாள், சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே என்றும் கூறினாள். சேயரி நெடுங்கண் கலிழ என்றது துன்பத்துப் புலம்பல்.  கடவுள் பேணி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குன்றத்துறையும் முருகவேளை அன்புடன் பெரிதும் வழிபாடு செய்தும், அ. தட்சிணாமூர்த்தி உரை – குறவன் தன் குடித் தெய்வமாம் முருகனை வழிபட்டு.  இலக்கணக் குறிப்பு – கலிழ – கலுழ என்பது கலிழ எனத் திரிந்தது, சேயதால் – ஆல் அசைநிலை, தெய்ய – அசைநிலை, நாடே – ஏகாரம் அசைநிலை.  எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21).

சொற்பொருள்:  குன்றக் குறவன் கடவுள் பேணி இரந்தனன் பெற்ற எல் வளைக் குறுமகள் – குன்றத்தின்கண் வாழும் குறவன் குன்றத்தின் கடவுளான முருகனை வழிபட்டு இரந்துப் பெற்ற ஒளியுடைய வளையல்களை அணிந்த இளமகள், ஆய் அரி நெடுங்கண் கலிழ – அழகிய செவ்வரி படர்ந்த நீண்ட கண்கள் கலங்க, சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே – நீ பிரிந்துச் செல்லும் நாடு தொலைவில் இருப்பதால்

ஐங்குறுநூறு 258, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி செவிலித்தாயிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி 
குன்றக் குறவன் காதல் மடமகள்,
அணி மயில் அன்ன அசை நடைக் கொடிச்சியைப்,
பெருவரை நாடன் வரையும் ஆயின்,
கொடுத்தனெம் ஆயினோ நன்றே,
இன்னும் ஆனாது, நன்னுதல் துயரே.

பாடல் பின்னணி:  தலைவியை மணம் புரிய விரும்புவதாகத் தலைவன் சான்றோர் மூலம் செய்தி அனுப்பினான்.  ஆனால் அவள் தமர் அதற்கு உடன்படவில்லை.  அதனால் தலைவி பெரிதும் துயரத்தில் ஆழ்ந்தாள்.  தலைவன் சிறைப்புறமாக இருந்தான் என்பதை அறிந்த தோழி, அவனுக்கு உரைப்பாளாய்த் தம் சுற்றத்தார்க்கும் செவிலித்தாய்க்கும் சொன்னது.  

பொருளுரை:   குன்றக் குறவனுடைய அன்புக்குரிய மகளாகிய, மயிலைப் போன்ற சாயலையும் அசைந்த நடையையுமுடைய என் தோழியைப் பெரிய மலைநாடன் திருமணம் புரிய விரும்புவானாயின், நாம் அவளை அவனுக்குக் கொடுத்தோம் ஆயின் நல்லது.  நாம் மறுத்தோம் ஆயின், அழகிய நெற்றியையுடைய இவளுடைய துயரம் குறையாது மிகும்.

குறிப்புஅ. தட்சிணாமூர்த்தி உரை – தலைவனும் தலைவியும் கணவன் மனைவியாக இணைதற்குரிய குடித்தகுதிப்பாடு உடையோர் என உணர்த்துவாளாய், தலைவியை கொடிச்சி என்றும் தலைவனை பெருவரை நாடன் என்றும் சூட்டினாள் தோழி.  தலைமகளைப் பெண் கேட்டு வந்தான் எளியனன்றி உயர் மதிப்புடையோன் என்பது தமர் உணரும் வண்ணம் ‘பெருவரை நாடன்’ என்றும் சூட்டினாள் தோழி.  ‘வரையுமாயின்’ என்றாள் அவன் வரைதற்குப் பெரிதும் விரும்புவது விளங்கித் தோன்றுமாறு.  அவளை அவனுக்குக் கொடுத்தால் விளையும் நன்மை பெரிதாகுமெனின், கோடாவழித் தீமையும் பெரிதாகும் என்று கூறுவாளாய், ‘கொடுத்தெனம் ஆயின் நன்றே’ என்றாள்.  இலக்கணக் குறிப்பு – அன்ன – உவம உருபு, நன்னுதல் – அன்மொழித்தொகை, ஆயினோ – ஓகாரம் அசைநிலை, நன்றே – ஏகாரம் அசைநிலை, துயரே – ஏகாரம் அசைநிலை.  குன்றக் குறவன் காதல் மடமகள் (1) – தி. சதாசிவ ஐயர் உரை – குன்றக்குறவனின் காதல் மடமகள், ஒளவை துரைசாமி உரை – குன்றக் குறவனுடைய அன்புடைய மகள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நம் குன்றில் உறையும் குறவர் தலைவனாகிய நம் பெருமானுடைய பேரன்பிற்குப் பாத்திரமான இளமகள்.

சொற்பொருள்:  குன்றக் குறவன் காதல் மடமகள் – குன்றக் குறவனுடைய அன்புக்குரிய மகள், அணி மயில் அன்ன அசை நடைக் கொடிச்சியை – மயிலைப் போன்ற சாயலையும் அசைந்த நடையையுமுடைய என் தோழி,  பெருவரை நாடன் வரையும் ஆயின் – பெரிய மலைநாடன் திருமணம் புரிய விரும்புவானாயின், கொடுத்தனெம் ஆயினோ நன்றே – நாம் அவளை கொடுத்தோம் ஆயின் நல்லது, இன்னும் ஆனாது நன்னுதல் துயரே – நாம் மறுத்தோம் ஆயின் அழகிய நெற்றியையுடைய இவளுடைய துயரம் குறையாது மிகும்

ஐங்குறுநூறு 259, கபிலர், குறிஞ்சித் திணைதலைவன் தனக்குள் சொன்னது
குன்றக் குறவன் காதல் மடமகள்,
மன்ற வேங்கை மலர் சில கொண்டு,
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தித்
தேம்பலிச் செய்த ஈர் நறுங்கையள்,
மலர்ந்த காந்தள் நாறிக்
கலிழ்ந்த கண்ணள், எம் அணங்கியோளே.

பாடல் பின்னணி:  தலைவன் வரைதற்பொருட்டுச் சான்றோரை அனுப்பினான்.  தலைவியின் தமர் வரைவிற்கு உடன்பட்டார்கள்.  அதன் பின்பும் அவன் களவையே விரும்பி மணம் புரியாதிருந்தான்.  அதனால் வருந்திய தலைவி கடவுளிடம் வேண்டினாள். அப்பொழுது அங்கு வந்து தலைவனுக்குத் தோழி தலைவியின் துயரைக் காட்டினாள்.  அதுகண்ட தலைவன் தன்னுள் கூறியது.

பொருளுரை:  எம்மைப் பெரிதும் வருத்தியவள், குன்றக் குறவனுடைய அன்புக்குரிய இளமகள்.  ஊர் மன்றத்தின்கண் நிற்கின்ற வேங்கை மரத்தின் மலர்கள் சிலவற்றைக் கொய்து, மலையில் உறையும் தன் குடியின் கடவுளான முருகனை வாழ்த்தி, அவனுக்குத் தேனாகிய பலியைக் கொடுத்து வழிபட்டதால், ஈரமும் நறுமணமும் கொண்ட கைகளையும் காந்தள் மலர்களின் மணமுடைய உடலையும், கண்ணீர் வடிக்கின்ற கண்களையும் உடையவள் ஆவாள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை –  களவின்பமே வேண்டித் தான் வரைவு நீட்டித்தல் உணராமல் தன்பால் வாய்த்த பேரன்பு காரணமாகக் கடவுள்பால் குறை இரத்தல் கண்டு தன்னுள்ளே மகிழ்ந்தான் என்பது கருத்து.  குலமுதல் வழுத்தி (3) – அ. தட்சிணாமூர்த்தி உரை – மலையை உறைவிடமாகக் கொண்டவரும் தன் குடித் தெய்வமும் ஆன முருகவேளை வழிபட்டு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – குலதெய்வத்தை வாழ்த்தி.  ஈர் நறுங்கையள் மலர்ந்த காந்தள் நாறிக் கலிழ்ந்த கண்ணள் (4–6) – தி. சதாசிவ ஐயர் உரை – காந்தள் போலத் தோன்றிய ஈரிய நறிய கையையுடையாள் கலங்கிய கண்ணையுடையவளாய் வருந்துவாள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நனைந்த நறிய கையையுடையவளாய்ப் புதுவதாக மலர்ந்த காந்தட் பூவினது மணம் கமழ்ந்து கண்ணீர் உகுக்கின்ற கண்ணையுடையவளாய்த் தோன்ற என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – குலமுதல் – நான்காம் வேற்றுமைத் தொகை, தேம்பலி – இருபெயரொட்டுப் பண்புத்தொகை, நாறி – நாறிய என்பதன் திரிபு, கலிழ்ந்த – கலுழ்ந்த என்பதன் திரிபு, அணங்கியோளே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்குன்றக் குறவன் காதல் மடமகள் – குன்றக் குறவனுடைய அன்புக்குரிய இளமகள், மன்ற வேங்கை மலர் சில கொண்டு – ஊர் மன்றத்தின்கண் நிற்கின்ற வேங்கை மரத்தின் மலர்கள் சிலவற்றைக் கொய்து, மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி – மலையில் உறையும் தன் குடியின் கடவுளான முருகனை வாழ்த்தி, தேம்பலிச் செய்த – தேனாகிய பலியைக் கொடுத்து, ஈர் நறுங்கையள் மலர்ந்த காந்தள் நாறிக் கலிழ்ந்த கண்ணள் – ஈரமும் நறுமணமும் கொண்ட கைகளையும் காந்தள் மலர்களின் மணமுடைய உடலையும் கண்ணீர் வடிக்கின்ற கண்களையும் உடையவள், எம் அணங்கியோளே – எம்மைப் பெரிதும் வருத்தியவள்

ஐங்குறுநூறு 260, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
குன்றக் குறவன் காதல் மடமகள்,
மென்றோள் கொடிச்சியைப் பெறற்கு அரிது தில்ல,
பைம்புறப் படுகிளி ஓப்பலள்,
புன்புல மயக்கத்து விளைந்தன தினையே.

பாடல் பின்னணி:  பகற்குறிக்கண் வந்த தலைவனிடம் தோழி, இனித் தினைப்புனக்காவலுக்கு வர இயலாமைக் கூறி வரைவு கடாயது.

பொருளுரை:  குன்றக் குறவனுடைய அன்புக்குரிய மகளாகிய, மெல்லிய தோள்களையுடைய கொடிச்சியாகிய இவளை நீ பெறுவது அரிதாகும்.  புன்செய் நிலத்தில் உழுது விதைத்த தினையின் கதிர்கள் நன்கு முற்றிவிட்டன. பசிய முதுகினை உடைய தினைப் பயிர்கள் மேல் படியும் கிளிகளை ஓப்பும் வாய்ப்பு இவளுக்கு இனி இல்லை.

குறிப்புபழைய உரை – விளைந்தன என்பது முற்றின என்றவாறு.  ஒளவை துரைசாமி உரை – யாம் கிளி கடிந்து பேணிய தினை முற்றிப் பயன் தந்தாங்கு, நீ இவளைத் தலைபெய்து கொண்ட நின் நட்பு வரைவால் சிறப்பெய்தல் வேண்டும் என்று கூறினாளாம். தினை விளைவினால் தலைமகன் பெறுதற்கு அரிதாயொழிந்த கூட்டத்திற்கு இரங்குவாள், மென்றோள் கொடிச்சி என்றாள்.  மயக்கத்து (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மண்ணும் எருவும் பிறவுங்கலந்த நிலத்தில், ஒளவை துரைசாமி உரை – உழுது புழுதி செய்யப்பட்ட நிலத்தில்.  இலக்கணக் குறிப்பு – தில்ல – தில் என்னும் இடைச் சொல் ஈறு திரிந்து வந்தது, மயக்கத்து – அத்து சாரியை, தினையே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்குன்றக் குறவன் காதல் மடமகள் – குன்றக் குறவனுடைய அன்புக்குரிய மகள், மெந்தோள் கொடிச்சியைப் பெறற்கு அரிது தில்ல – மெல்லிய தோள்களையுடைய கொடிச்சியாகிய எம் தோழியை நீ பெறுவது அரிதாகும் (கொடிச்சி – மலையில் வாழும் பெண்), பைம்புறப் படுகிளி ஓப்பலள் – பசிய முதுகினை உடைய தினைப் பயிர்கள் மேல் படியும் கிளிகளை ஓப்பும் (விரட்டும்) வாய்ப்பு இவளுக்கு இனி இல்லை, புன்புல மயக்கத்து விளைந்தன தினையே – புன்செய் நிலத்தில் உழுது விதைத்த தினையின் கதிர்கள் நன்கு முற்றிவிட்டன

கேழல் பத்து

பாடல்கள் 261–270 – இவற்றில் குறிஞ்சித் திணையின் கருப்பொருளில் ஒன்றான கேழல் (காட்டுப் பன்றி) பாடல்தோறும் இடம்பெற்றுள்ளது.

ஐங்குறுநூறு 261, கபிலர், குறிஞ்சித் திணை தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
மென்தினை மேய்ந்த தறுகண் பன்றி,
வன் கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன்,
எந்தை அறிதல் அஞ்சிக் கொல்,
அதுவே மன்ற வாராமையே?

பாடல் பின்னணி:  அல்ல குறிப்பிட்டுத் தலைவன் நீங்கியதை அறியாதவள் போல் தோழி, மறுநாள் அவன் சிறைப்புறத்தானாய் இருப்பதை அறிந்துத் தலைவியிடம் சொன்னது.

பொருளுரை:  மென்மையான தினையை மேய்ந்த மறம் மிக்க பன்றி வலிய கற்கள் பொருந்திய பக்க மலையில் உறங்கும் நாடன், நம் தந்தை அறிவார் என அஞ்சி நேற்று குறியிடத்திற்கு வரவில்லையோ? 

குறிப்புஉள்ளுறை – பழைய உரை – தினை மேய்ந்த பன்றி கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன் என்றது, தான் வேண்டின இன்பம் நுகர்ந்து இனிது கண்படுவதல்லது வரைதற்கு வேண்டுவன முயலாதான் என்றவாறு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தினை மேய்ந்த பன்றி வன்கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன் என்றது, நம் பெருமானும் தான் வேண்டுமாற்றால் தன்னலமே கருதி இன்பம் துய்த்து நம்மைக் கருதாதவனாய்த் தன் மனைக்கண் அடங்கினான் என்பது.  இலக்கணக் குறிப்பு – கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், மன்ற – தெளிவுப்பொருளில் வரும் இடைச்சொல், வாராமையே – வாராமை தொழிற்பெயர், ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்மென்தினை மேய்ந்த தறுகண் பன்றி வன் கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன் – மென்மையான தினையை மேய்ந்த மறம் மிக்க பன்றி வலிய கற்கள் பொருந்திய பக்க மலையில் உறங்கும் நாடன், எந்தை அறிதல் அஞ்சிக் கொல் அதுவே மன்ற வாராமையே – நம் தந்தை அறிவார் என அஞ்சி நேற்று குறியிடத்திற்கு வரவில்லையோ

ஐங்குறுநூறு 262, கபிலர், குறிஞ்சித் திணைதலைவி தோழியிடம் சொன்னது
சிறு தினை மேய்ந்த தறுகண் பன்றி,
துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும்,
இலங்கு மலை நாடன் வரூஉம்
மருந்தும் அறியும் கொல் தோழி, அவன் விருப்பே?

பாடல் பின்னணி:  ‘வரைந்து கொள்ள நினைக்கிலன்’ என்று வருந்திய தலைவி, ‘அவன் நின்மேல் விருப்பமுடையவன். நீ நோவுகின்றது எதனால்?’ என்ற தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  சிறிய தினையை மேய்ந்த அஞ்சாமை மிக்க பன்றி, பாறைகள் உடைய பக்க மலையில் தன் துணையுடன் இனிது உறையும் விளங்கும் மலையின் தலைவன் வருவதற்குக் காரணமாகிய, அவன் என்மேல் கொண்ட விருப்பம், எனக்குத் துயர் தருவதன்றி, அது என் துன்பத்தைத் தீர்க்கும் மருந்து என்பதை அவன் அறிவானா?

குறிப்பு:  பழைய உரை – சிறு தினை மேய்ந்த தறுகண் பன்றி துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும் நாடன் என்றது, களவொழுக்கத்தான் வரும் சிற்றின்பமின்றியே வரைந்துகொண்டு நின்னொடு ஒழுகுவன் எனத் தோழி கூறுவதனைத் தலைமகள் கொண்டு கூறியது எனக் கொள்க.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிறு தினை மேய்ந்த தறுகண் பன்றி துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும் என்றது, களவின்பம் நுகர்ந்த தலைவன் நின்னை விரைவிலேயே வரைந்துகொண்டு தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று கவவுக்கை நெகிழாது அறவாழ்க்கை நடத்துவான் என்பது.  இலக்கணக் குறிப்பு – வரூஉம் – செய்யுளிசை அளபெடை, கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், விருப்பே – ஏகாரம் அசைநிலை.  . தட்சிணாமூர்த்தி உரை – ‘விருப்பு வரூஉம் மருந்தும் அறியும் கொல்’ எனக் கூட்டிப் பொருள் கொள்க.  வரூஉம் மருந்தாவது, வருதலாகிய மருந்தாம்.  இதனால், தலைவன் வாராமையே அவட்கு நோய் என்பது விளக்கப்பட்டது.

சொற்பொருள்:  சிறு தினை மேய்ந்த தறுகண் பன்றி துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும் இலங்கு மலை நாடன் – சிறிய தினையை மேய்ந்த அஞ்சாமை மிக்க பன்றி பாறைகள் உடைய பக்க மலையில் தன் துணையுடன் உறையும் விளங்கும் மலையின் தலைவன், வரூஉம் மருந்தும் அறியும் கொல் – அவன் இங்கு வருகின்றதாகிய என் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தை அறிவானா, தோழி – தோழி, அவன் விருப்பே – அவன் விருப்பம்

ஐங்குறுநூறு 263, கபிலர், குறிஞ்சித் திணைதலைவி தோழியிடம் சொன்னது
நன் பொன் அன்ன புனிறு தீர் ஏனல்,
கட்டளை அன்ன கேழல் மாந்தும்,
குன்று கெழு நாடன், தானும்
வந்தனன், வந்தன்று தோழி, என் நலனே.

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன் வந்தமை அறிந்த தலைவி ‘தொலைந்த நலத்தை நீ இன்று எய்தியதற்குக் காரணம் என்ன?’ என்று வினவிய தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  நல்ல பொன் போன்ற நிறமுடைய, இளமை தீர்ந்த தினைக்கதிரைப் பொன்னை உரசும் கட்டளைக் கல்போன்ற நிறமுடைய கேழல் உண்ணும் குன்றுகள் பொருந்திய நாடனும் வந்தான் ஆதலின், அவனுடன் சென்ற என் அழகும் மீண்டும் என்னிடம் வந்தது.

குறிப்பு:  பழைய உரை – பொன்போன்ற தினையைக் கேழல் மாந்தும் நாடன் என்றது, தன் நாட்டு வாழும் விலங்குகளும் தமக்கு வேண்டுவன குறைவின்றிப் பெற்று இன்பம் நுகரும் நாடன் என்றவாறு.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவனுடைய அளியுடைமையைப் பாராட்டுவாள் அவன் குன்று கெழு நாட்டின்கண் வாழும் கேழலும் பொன்னிறத்தினை தின்று இனிது வாழும் என்றாள்.  பொன்போல் தினை – குறுந்தொகை 133 – புனவன் துடவைப் பொன் போல் சிறு தினை.  புனிறு தீர்ந்த தினை – குறிஞ்சிப்பாட்டு 37–38 – துய்த்தலை வாங்கிய புனிறு தீர் பெருங்குரல் நல் கோள் சிறு தினைப் படு புள் ஓப்பி.  கட்டளைக் கல் நிறமுடைய பன்றி – அகநானூறு 178 – பரூஉ மயிர்ப் பன்றி …………….பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வரக் கிளை அமல் சிறு தினை விளை குரல் மேய்ந்து கண் இனிது படுக்கும் நன் மலை நாடனொடு.  கட்டளை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொன்னுரைகல்.  தினைக் கதிரினுட் புகுந்து மேயுங்கால் அக் கதிர்கள் கோடு கோடாக அப்பன்றியின் கரிய உடலின்கண் படிந்திருப்பன ஆகலின் பொன் தீட்டப்பட்ட கட்டளைக்கல் போன்று பன்றி தோற்றமளித்தல் நினைந்து காண்க.  இலக்கணக் குறிப்பு – அன்ன – உவம உருபு, நலனே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்நன் பொன் அன்ன புனிறு தீர் ஏனல் கட்டளை அன்ன கேழல் மாந்தும் குன்று கெழு நாடன் – நல்ல பொன் போன்ற நிறமுடைய இளமை தீர்ந்த தினைக்கதிரைப் பொன்னை உரசும் கட்டளைக் கல்போன்ற நிறமுடைய கேழல் உண்ணும் குன்றுகள் பொருந்திய நாடன், தானும் வந்தனன் வந்தன்று தோழி என் நலனே – அவனும் வந்தான் ஆதலின் அவனுடன் சென்ற என் அழகும் மீண்டும் என்னிடம் வந்தது தோழி

ஐங்குறுநூறு 264, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
இளம் பிறையன்ன கோட்ட கேழல்,
களங்கனியன்ன பெண்பால் புணரும்,
அயம் திகழ் சிலம்ப! கண்டிகும்,
பயந்தன மாதோ, நீ நயந்தோள் கண்ணே.

பாடல் பின்னணி:  பகற்குறிக்கண் வந்த தலைவனிடம் தோழி வரைவு கடாயது.

பொருளுரை:   இளம்பிறையை ஒத்த கோட்டுடைய (தந்தங்களையுடைய) ஆண் பன்றி களாப்பழத்தின் நிறமுடைய பெண் பன்றியைப் புணர்கின்ற, நீர் விளங்கும் மலைநாடனே! நீ விரும்பும் இவளின் கண்கள் பசலை அடைந்துள்ளன.  இதைக் காண்பாயாக!

குறிப்பு:  ஒப்புமை – அகநானூறு 322 – பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றி.  உள்ளுறை – பழைய உரை – கேழல் பிணவைப் புணரும் என்றது, அறிவில்லாதன ஒழுகும் ஒழுக்கமும் நின்மாட்டுக் கண்டிலேம் என்றவாறு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கேழல் செவ்வி அறிந்து பிணவைப் புணரும் என்பது, கீழ்ச் சாதி விலங்கினங்களின்பால் இயல்பாகவே காணப்படுகின்ற அளியுடைமைதானும் நின்பாற் கண்டிலேம் என்பது.  இலக்கணக் குறிப்பு – கண்டிகும் – இகும் முன்னிலை அசைச் சொல், மாதோ – மாது, ஓ அசைநிலைகள், கண்ணே – ஏகாரம் அசைநிலை.  பயந்தன (4) – ஒளவை துரைசாமி உரை – எதுகை நோக்கிப் பசந்தன என்பது பயந்தன என்றாயிற்று.

சொற்பொருள்:  இளம் பிறையன்ன கோட்ட கேழல் – இளம்பிறையை ஒத்த கோட்டுடைய (தந்தங்களையுடைய) ஆண் பன்றி, , களங்கனியன்ன பெண்பால் புணரும் – களாப்பழம் போன்ற நிறமுடைய பெண் பன்றியைப் புணர்கின்ற, அயம் திகழ் சிலம்ப – நீர் விளங்கும் மலைநாடனே, கண்டிகும் – காண்பாயாக, பயந்தன – பசலை அடைந்தன, மாதோ – மாது, ஓ அசைநிலைகள், நீ நயந்தோள் கண்ணே – நீ விரும்பும் இவளின் கண்கள்

ஐங்குறுநூறு 265, கபிலர், குறிஞ்சித் திணைதலைவி தலைவனின் நண்பர்களிடம் சொன்னது
புலி கொல் பெண்பால் பூ வரிக் குருளை,
வளை வெண்மருப்பின் கேழல் புரக்கும்,
குன்று கெழு நாடன் மறந்தனன்,
பொன் போல் புதல்வனோடு என் நீத்தோனே.

பாடல் பின்னணி:  குறிஞ்சியுள் மருதம்.  பரத்தையிடத்தானாக ஒழுகும் தலைவன், தன் மனைக்குத் திரும்பும் விருப்பத்துடன் தன் வாயில்களைத் தலைவிபால் அனுப்பினான்.  அங்ஙனம் வந்த வாயில்களிடம் தலைவி சொன்னது.

பொருளுரை:  புலியால் கொல்லப்பட்ட பெண் பன்றியின் அழகிய வரிகளையுடைய குட்டியை, வளைந்த வெள்ளை கோட்டினைக் கொண்ட (நீண்ட பற்களைக் கொண்ட) ஆண் பன்றி காக்கும் குன்றுகள் பொருந்திய நாட்டின் தலைவன், பொன் போன்ற பெறுவதற்கு அரிய புதல்வனோடு என்னையும் பிரிந்துச் சென்றான்.   

குறிப்புபழைய உரை – புலியால் கொல்லப்பட்ட தன் பிணவின் குட்டியைத் தந்தையாகிய கேழல் புரக்கும் என்றது, பரத்தையர் காரணமாக யான் இறந்தால் தன் புதல்வனைத் தானே வளர்க்கத் துணிந்து என்னை நீத்தான் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – வளைவெண் மருப்பு – வினைத்தொகை, மறந்தனன் – முற்றெச்சம், நீத்தோனே – ஏகாரம் அசைநிலை.  குருளை – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

சொற்பொருள்:  புலி கொல் பெண்பால் பூ வரிக் குருளை வளை வெண்மருப்பின் கேழல் புரக்கும் குன்று கெழு நாடன் – புலியால் கொல்லப்பட்ட பெண் பன்றியின் அழகிய வரிகளையுடைய குட்டியை வளைந்த வெள்ளை கோட்டினைக் கொண்ட (நீண்ட பற்களைக் கொண்ட) ஆண் பன்றி காக்கும் குன்றுகள் பொருந்திய நாட்டின் தலைவன், மறந்தனன் பொன் போல் புதல்வனோடு என் நீத்தோனே – பொன் போன்ற புதல்வனோடு என்னையும் பிரிந்துச் சென்றான்.

ஐங்குறுநூறு 266, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
சிறு கண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தலொடு,
குறுங்கை இரும்புலி பொரூஉம் நாட!
நனி நாண் உடைய மன்ற,
பனிப் பயந்தன, நீ நயந்தோள் கண்ணே.

பாடல் பின்னணி:  அயலார் மணம் பேசி வந்தபொழுது, தலைவியின் வேறுபாடு கூறி, வரைவு கடாயது.

பொருளுரை:  சிறிய கண்களையும் பெருஞ் சினத்தையும் கொண்ட ஆண் பன்றி குறுகிய முன்னங்கால்களை உடைய பெரிய புலியுடன் போரிடும் இடமான மலைநாட்டின் தலைவனே!   தெளிவாக மிக்க நாணம் உடையன ஆதலின், கண்ணீரை வடித்தன நீ விரும்பியவளின் கண்கள்.

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – பன்றி ஒருத்தலொடு புலி பொருதும் என்றது, நினக்கு நிகரல்லாதார் வந்து தலைப்படவும் அதனை நீக்காது இடங்கொடுத்து ஒழுகாநின்றாய் என்பதாம், புலியூர்க் கேசிகன் உரை – பன்றி ஒருத்தலோடு புலி பொருதும் நாட என்றது, நின் ஆண்மையும் உணர்வும் தோன்ற அயலவர் வரைவை வென்று, நினக்கே இவளைக் கொள்ளுதற்கு முயல்வாயாக என்பது.  இலக்கணக் குறிப்பு – பொரூஉம் – செய்யுளிசை அளபெடை, நனி – உரிச்சொல், மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், கண்ணே – ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்சிறு கண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தலொடு குறுங்கை இரும்புலி பொரூஉம் நாட – சிறிய கண்களையும் பெருஞ் சினத்தையும் கொண்ட ஆண் பன்றி குறுகிய முன்னங்கால்களை உடைய பெரிய புலியுடன் போரிடும் இடமான மலைநாட்டின் தலைவனே, நனி நாண் உடைய மன்ற – பெரிதும் நாணம் உடையன தேற்றமாக, பனிப் பயந்தன நீ நயந்தோள் கண்ணே – கண்ணீரை வடித்தன நீ விரும்பியவளின் கண்கள்

ஐங்குறுநூறு 267, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
சிறு கண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல்,
துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி,
ஐவனம் கவரும் குன்ற நாடன்,
வண்டுபடு கூந்தலைப் பேணிப்,
பண்பு இல சொல்லும், தேறுதல் செத்தே.

பாடல் பின்னணி:  களவின்பத்தில் ஈடுபாடு கொண்ட தலைவன், தான் விரைவில் மணம் புரிவதாக பொய்மொழி பல கூறி வரைவிற்கு முயலாது இருந்தான்.  அவன் கூறிய உறுதிமொழிகளை அறிந்த தோழி, அவன் சிறைப்புறத்தானாக இருக்கும்பொழுது சொன்னது.

பொருளுரை:  சிறிய கண்களையும் பெருஞ் சினத்தையும் கொண்ட ஆண் பன்றி, பாறைகள் மிகுந்த மலைப்பக்கத்தில், வில் ஏந்திப் புனம் காப்பவர்களை ஏமாற்றி, ஐவன நெல்லைக் கவரும் மலைநாடன், வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய இவளை விரும்பி, பண்பு இல்லாத சொற்களைக் கூறுவான் அவள் ஏற்பாள் என்று.

குறிப்புபழைய உரை – பண்பில சொல்லும் என்றது, பொய்ம்மொழிகளைச் சொல்லும் என்றவாறு.  தேறுதல் செத்தே என்றது, தான் சொன்ன சொற்களை இவள் மெய்யாகக் கொள்ளும் என்று கருதி என்றவாறு.  பன்றி ஒருத்தல் காவலரை ஓட்டி ஐவன நெல் கவரும் என்றது, களவினிற் காவலரை வென்று பெறும் இன்பமே விரும்புவான் என்றவாறு.  உள்ளுறை – புலியூர்க் கேசிகன் உரை – பன்றி வில்லோர் மாற்றி ஐவனம் கவரும் என்றது, அவனும் அவ்வாறே தமர் அறியாது விருப்பினன்.  முறையாக மணந்து வாழும் அறநெறி பேணுவான் அல்லன்.  இலக்கணக் குறிப்பு – வண்டுபடு கூந்தல் – அன்மொழித்தொகை, இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம், செத்தே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்சிறு கண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல் துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி ஐவனம் கவரும் குன்ற நாடன் – சிறிய கண்களையும் பெருஞ் சினத்தையும் கொண்ட ஆண் பன்றி பாறைகள் மிகுந்த மலைப்பக்கத்தில் வில் ஏந்திப் புனம் காப்பவர்களை ஏமாற்றி ஐவன நெல்லைக் கவரும் மலைநாடன், வண்டுபடு கூந்தலைப் பேணிப் பண்பு இல சொல்லும் தேறுதல் செத்தே – வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய இவளை விரும்பி பண்பு இல்லாத சொற்களைக் கூறுவான் அவள் ஏற்பாள் என்று

ஐங்குறுநூறு 268, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
தாஅய் இழந்த தழு வரிக் குருளையொடு,
வள மலைச் சிறு தினை உணீஇய, கானவர்
வரை ஓங்கு உயர் சிமைக் கேழல் உறங்கும்,
நன்மலை நாடன், பிரிதல்
என் பயக்கும்மோ, நம் விட்டுத் துறந்தே?

பாடல் பின்னணி:  தலைவன் சேய்மைக்கண் சென்று பொருள் ஈட்டி வந்தே வரைவான் என்றும் செல்லாதிருந்து வரைவான் அல்லன் என்றும் ஐயத்துடன் தலைவி தோழியிடம் சொன்னாள்.  தலைவன் சிறைப்புறத்தான் ஆக இருப்பதை அறிந்த தோழி, தலைவியிடம் சொன்னது.

பொருளுரை:  தாயை இழந்த நெருங்கிய வரிகளைக் கொண்ட குட்டியுடன், வளப்பமுடைய மலையில் வளர்ந்த சிறுதினையை உண்ண எண்ணிக் கானவர் வாழும் உயர்ந்த மலையின் உயர்ந்த உச்சியில், ஆண்பன்றி உறங்கும் நல்ல மலைநாட்டின் தலைவன், நம்மைவிட்டு நீங்கிப் பிரிந்துச் செல்வது என்ன பயனைத் தருமோ?

குறிப்புபழைய உரை – தாயிழந்த குருளையோடே தினையை உண்டு கேழல் உறங்குகின்ற இத்தன்மையையுடைய நாடனாதலால் இவ்வாறு நிகழ்தல் கூடாது என்பதாம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாய் இழந்த தழுவரிக் குருளையோடு வளமலையிலே சென்று சிறுதினை உண்ணக் கருதிய பன்றி அந்நெறியில் முயலாமல் ஏறுதற்கரிய மலைக் குவட்டிற் சென்று குட்டியையும் மறந்து உறங்கும் என்றது, தன் சுற்றத்தாரையும் இழந்து தலைவனையே புகலிடமாகக் கொண்டு வாழாநின்ற தலைவியை வரைந்து அழைத்துக் கொண்டுபோய் தன் வளமனைக் கண்ணிலிருந்து பேரின்பம் நுகரக் கருதிய தலைவன், ஈண்டிருந்தே வரைந்து கொண்டாதல் உடன் அழைத்துக் கொண்டு போய் ஆதல் தன் கருத்தினை நிறைவேற்றிக் கொள்ள அறியாமல் நொடிப்பொழுதும் பிரிவினைப் பொறாத இவளைப் பிரிந்து நெடுந்தொலைவு சென்று ஆண்டுத் தலைவியையும் மறந்து உறைவானாயின் ஈண்டுத் தலைவி இறந்து படுதலன்றி வேறு யாது பயன் என்றவாறு.  இலக்கணக் குறிப்பு  தாஅய் – செய்யுளிசை அளபெடை, உணீஇய – செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை துறந்தே – ஏகாரம் அசைநிலை.  குருளை – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் ).  நாயே பன்றி புலி முயல் நான்கும் ஆயும் காலை குருளை என்ப (தொல்காப்பியம், மரபியல் 8).

சொற்பொருள்:  தாஅய் இழந்த தழு வரிக் குருளையொடு வள மலைச் சிறு தினை உணீஇய கானவர் வரை ஓங்கு உயர் சிமைக் கேழல் உறங்கும் நன்மலை நாடன் – தாயை இழந்த நெருங்கிய வரிகளைக் கொண்ட குட்டியுடன் வளப்பமுடைய மலையில் வளர்ந்த சிறுதினையை உண்ண எண்ணிக் கானவர் வாழும் உயர்ந்த மலையின் உயர்ந்த உச்சியில் ஆண்பன்றி உறங்கும் நல்ல மலைநாட்டின் தலைவன், பிரிதல் என் பயக்கும்மோ – பிரிந்துச் செல்வது என்ன பயனைத் தருமோ, நம் விட்டுத் துறந்தே – நம்மை விட்டு நீங்கி

ஐங்குறுநூறு 269, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை,
விளைந்த செறுவின் தோன்றும் நாடன்,
வாராது அவண் உறை நீடின், நேர் வளை
இணையீர் ஓதி, நீ அழத்,
துணை நனி இழக்குவென் மடமையானே.

பாடல் பின்னணி:  களவுக் காலத்தில் தலைவியைக் கூட்டுவிக்குமாறு தோழியை வேண்டினான் தலைவன்.  அவள் உடன்பட்டுத் தலைவியைத் தலைவனுடன் கூட்டுவித்தாள்.  ஆனால் தலைவன் தொடர்ந்து வராது இடையிட்டு வருதலை மேற்கொண்டான்.  ஒரு நாள் அவன் இல்லத்தருகில் இருக்கும்பொழுது, அவன் கேட்கும்வண்ணம் தலைவியிடம் தோழி சொன்னது.

பொருளுரை:  அழகிய வளையல்களையும் நெய்ப்பினையுடைய கூந்தலையும் உடைய தோழி!  கேழல் கிண்டியதால் தழைத்து வளர்ந்த பஞ்சாய்க் கோரை விளைந்ததால் அவ்விடம் நெல்வயல் போன்ற தோற்றத்தைத் தரும் நாட்டின் தலைவன் வராது, நீ வருந்தி அழுமாறு தான் சென்ற இடத்தில் நீடித்து உறைவானாயின், நான் என் அறியாமையின் காரணமாக உனக்குத் துணையாக இருக்கும் தன்மையைப் பெரிதும் இழந்து விடுவேன்.

குறிப்புபழைய உரை – துணை நனி இழக்குவென் மடமையான் என்றது, நீ எனக்குத் துணையாதலை இழப்பேன் யான்.  அவனைத் தேறி முன் செய்த மடமையான் என்றவாறு.  இறந்துபடுவேன் என்பதாம்.  நீ அழ வாராது அவண் உறை நீடின் எனக் கூட்டுக. கேழல் உழுததாக எருவை நெல் விளைந்த செறுப் போலத் தோன்றும் என்றது, வேட்கை நலியத் தனக்கு வந்த வருத்தத்தானே தலை சாய்ந்து நல்லாரைப் போல ஒழுகிய துணையே உள்ளது என்பதாம்.  உள்ளுறை – புலியூர்க் கேசிகன் உரை – கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை விளைந்த செறுவில் தோன்றும் நாடன் என்றது சான்றாண்மை அற்ற அவனும் தன் விருப்பம் நிறைவேறற்பொருட்டுச் செய்தன எல்லாம் சிறந்தன போல் தோன்றினாலும், உண்மையில், சிறந்தவன் அல்ல அவன்.  இலக்கணக் குறிப்பு – செறுவின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, உறை – முதனிலைத் தொழிற்பெயர், இணையீர் ஓதி – விளி, அன்மொழித்தொகை, மடமையானே – ஏகாரம் அசைநிலை.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை விளைந்த செறுவின் தோன்றும் நாடன் வாராது அவண் உறை நீடின் – கேழல் கிண்டியதால் தழைத்து வளர்ந்த பஞ்சாய்க் கோரை விளைந்ததால் அவ்விடம் நெல்வயல் போன்ற தோற்றத்தைத் தரும் நாட்டின் தலைவன் வராது தான் சென்ற இடத்தில் நீடித்து உறைவானாயின், நேர் வளை இணையீர் ஓதி – அழகிய வளையல்களையும் நெய்ப்பினையுடைய கூந்தலையும் உடைய தோழி, நீ அழ – நீ அழும்படி, துணை நனி இழக்குவென் மடமையானே – உனக்குத் துணையாக இருக்கும் தன்மையைப் பெரிதும் இழந்து விடுவேன் நான் என் அறியாமையின் காரணமாக

ஐங்குறுநூறு 270, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது
கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில்,
தலைவிளை கானவர் கொய்தனர் பெயரும்,
புல்லென் குன்றத்துப் புலம்பு கொள் நெடுவரை
காணினும் கலிழு நோய் செத்துத்
தாம் வந்தனர், நம் காதலோரே.

பாடல் பின்னணி:  வரைபொருட்குப் பிரிந்த தலைவன் மீண்டு வரைவொடு வந்தமை அறிந்த தோழி உவந்த உள்ளத்துடன் தலைவியிடம் சொன்னது.

பொருளுரை:  கிழங்குளைத் தோண்டியெடுக்கும் பன்றிகள் தங்கள் மருப்பினால் உழுத மலைப்பக்கத்தில், தாம் விதைத்து விளைவித்த தினையின் முதல் விளைச்சலைக் கானவர் கொய்துகொண்டு போனதால் பொலிவிழந்த குன்றத்தில், தனிமையைக் கொண்ட நெடிய மலையைக் கண்டாலும், உன்னுடைய கண்கலங்கிக் கண்ணீர் வடிக்கும் துன்பத்தை எண்ணி வந்தார், நம் அன்பிற்குரிய தலைவர்.

குறிப்புபழைய உரை – கிழங்கு அகழ் கேழல் உழுத புழுதிக்கண்ணே வித்த விளைந்த பயிர் கானவர் கொய்யும் சிறப்புடையதேனும், அவன் அவ்விடத்து உறையாமையின் தனக்குப் புல்லென்று தோன்றுதலால் புல்லென் குன்றம் எனவும், புலம்புகொள் நெடுவரை எனவும் இழித்துக் கூறப்பட்டதெனக் கொள்க.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கானவர் தாம் உழுது வருந்தாமல் கேழல் உழுத புழுதியில் விளைந்த தலை விளைவினைக் கொய்து கொண்டு பெயரும் குன்றம் என்றது, பெருமகளே வருந்தற்க, நம் பெருமான் ஊழ்தானே காட்டிய நின்பால் வித்திய அன்பு விதையானது காதல் பயிராகி நன்கு விளைந்ததன்றோ? அதன் முதல் விளைவாகிய திருமணத்தை இனி நம் பெருமான் நிகழ்த்தி நின்னைத் தன் இல்லத்திற்குக் கொண்டு போவான் என்பது, ஒளவை துரைசாமி உரை – சிலம்பில் விளைந்த தலை விளைவைக் கானவர் கொய்துகொண்டு பெயர்வர் என்றது, தலைமகனைத் தலைப்பட்டுக் கூடியதன் தலைவிளைவாகிய வரைவினை நீ தலைமகன் வரவால் பெறுவாய் ஆயினை என்றவாறு.  பின் விளைவன மணமும் மனையறமும் மகப்பேறும் முதலாயினவாம்.  இலக்கணக் குறிப்பு – சிலம்பு – தினைப்புனத்தைக் குறித்தலின் ஆகுபெயர், காதலோரே – ஏகாரம் அசைநிலை.  நம் காதலோரே – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள் தோழி.

சொற்பொருள்கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில் தலைவிளை கானவர் கொய்தனர் பெயரும் புல்லென் குன்றத்துப் புலம்பு கொள் நெடுவரை காணினும் – கிழங்குளைத் தோண்டியெடுக்கும் பன்றிகள் தங்கள் மருப்பினால் உழுத மலைப்பக்கத்தில் தாம் விதைத்து விளைவித்த தினையின் முதல் விளைச்சலைக் கானவர் கொய்துகொண்டு போனதால் பொலிவிழந்த குன்றத்தில் தனிமையைக் கொண்ட நெடிய மலையைக் கண்டாலும் (தலைவிளை – முதல் விளைச்சல்), கலிழு நோய் செத்துத் தாம் வந்தனர் – உன்னுடைய கண்கலங்கிக் கண்ணீர் வடிக்கும் துன்பத்தை எண்ணி வந்தார், நம் காதலோரே – நம் அன்பிற்குரிய தலைவர்

குரங்குப் பத்து

பாடல்கள் 271–280 – குறிஞ்சி நிலத்தின் கருப்பொருளில் ஒன்றான குரங்கு ஒவ்வொரு பாடலிலும் இடம்பெற்றுள்ளது.  கடுவன் – போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும் யாத்த ஆண்பாற் பெயர் என மொழிப (தொல்காப்பியம், மரபியல் 2).  மந்தி – மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

ஐங்குறுநூறு 271, கபிலர், குறிஞ்சித் திணைதோழி செவிலித்தாயிடம் சொன்னது
அவரை அருந்த மந்தி பகர்வர்
பக்கின் தோன்றும் நாடன் வேண்டின்,
பல் பசுப் பெண்டிரும் பெறுகுவன்,
தொல் கேள் ஆகலின், நல்குமால் இவட்கே.

பாடல் பின்னணி:  தலைவன் வரைவு வேண்டிவிடத் தலைவியின் தமர் மறுத்தபொழுது, தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.

பொருளுரை:  அவரைக்காயை நிறைய உண்ட பெண் குரங்குகளின் கன்னம், பண்ட வணிகர்களின் பைபோல் தோன்றும் நாடன், மகட்கொடை வேண்டினால் பல பசுப்போலும் பெண்டிரைப் பெறுவான். ஆனால் இவளுடன் பண்டைய உறவு உடையவன் ஆதலால், இவளுக்கே தன்னுடைய தண்ணளியை வழங்குவான்.

குறிப்பு:  பழைய உரை – அவரையை நிறையத் தின்ற மந்தி பண்ட வாணிகர் பைபோல் தோன்றும் நாடன் என்றது, ஆண்டு வாழ்வனவும் மேலாம் உணவுகளில் குறைவின்றி வாழும் நாடன் என்றவாறு.  பல் பசுப் பெண்டிரும் என்றது வரைவு எதிர்கொள்ளார் தமர் மறுத்த தீங்கினைத் தங்கள் மேல் ஏற்றி இத்தீங்கு செய்யாது தான் நினைத்தவழி ஒழுகும் குணமுடைய பெண்டிர் பலரையும் பெருகுவன் அவனே வேண்டின் எனக் கொள்க.  பசுப்போற் பெண்டிரும் என்று பாடம் ஓதுவாரும் உளர்.  அவரை அருந்த மந்தி பகர்வர் பக்கின் தோன்றும் – ஒளவை துரைசாமி உரை – குரங்கின் மந்தி தின்று வாயின் இரு மருங்கினும் அடக்கிக் கொண்டிருப்பது கூறப்படுகின்றது. பல் பசுப் பெண்டிரும் (3) – ஒளவை துரைசாமி உரை – பசுவைப் போலும் இயல்புடைய பெண்டிர்.  பசு தன்னால் அன்பு செய்யப்பட்ட கன்றின்வழி நின்றொழுகுதல் போலத் தம்மால் காதலிக்கப்பட்டோர் நினைவுவழி ஒழுகும் மகளிரைப் பசுப்பெண்டிர் என்றார், பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆனேற்றைப் பெரிதும் விரும்பிப் பின்தொடர்ந்து வருகின்ற ஆன்களைப் போன்று தன்னை விரும்பிப் பின் வரும் குல மகளிர்.  உள்ளுறை – புலியூர்க் கேசிகன் உரை – அவரையைத் தின்ற மந்தியானது பண்ட வணிகரின் பை போலத் தோன்றும் நாடன் என்றது, அவன் நாட்டில் வாழ்வன பிறவும் மேலான உணவுகளில் குறைவின்றி இன்புற்று வாழும் செழுமை காட்டித் தலைவியும் அவனை மணப்பின் மிகச் செழுமையோடு கவலையற்று வாழ்வாள் என்பது.  இலக்கணக் குறிப்பு – அருந்த – அருந்திய என்னும் எச்சத்தின் திரிபு (அ. தட்சிணாமூர்த்தி உரை), ‘ஆர்ந்த’ அருந்த எனக் குறுக்கும் வழி குறுக்கிக் கூறப்பட்டது (ஒளவை துரைசாமி உரை), பக்கின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, நல்குமால் – ஆல் அசைநிலை, இவட்கே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்அவரை அருந்த மந்தி பகர்வர் பக்கின் தோன்றும் நாடன் – அவரைக்காயை உண்ட பெண் குரங்குகளின் கன்னம் பண்ட வணிகர்களின் பைபோல் தோன்றும் நாடன், வேண்டின் பல் பசுப் பெண்டிரும் பெறுகுவன் – மகட்கொடை வேண்டினால்  பல பசுப்போலும் பெண்டிரைப் பெறுவான், தொல் கேள் ஆகலின் நல்குமால் இவட்கே – இவளுடன் பண்டைய உறவு உடையவன் ஆதலால் இவளுக்கே தன்னுடைய தண்ணளியை வழங்குவான்

ஐங்குறுநூறு 272, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
கரு விரல் மந்திக் கல்லா வன்பறழ்,
அரு வரைத் தீம் தேன் எடுப்பி அயலது
உரு கெழு நெடும் சினைப் பாயும் நாடன்,
இரவின் வருதல் அறியான்,
“வரும் வரும்” என்பள் தோழி, யாயே.

பாடல் பின்னணிஇரவுக் குறியைச் சரியாகப் புரிந்துக்கொள்ளாமல் தலைவன் வந்து நீங்குகின்றான்.  மறுநாள் பகற்குறி இடத்தை அடைகின்றான்.  தலைவியும் தோழியும் அங்கு இருக்கின்றனர்.  அவன் ஒதுங்கி நிற்கின்றான்.  அவன் வந்ததை உணர்ந்த தலைவி, அவனுக்குத் தன்னுடைய மன நிலையை உணர்த்துவதற்காகத் தோழியிடம் கூறுவது போல் கூறுகின்றாள்.

பொருளுரை:  கருமையான விரலையுடைய பெண் குரங்கினுடைய, மரக் கிளைகளில் தாவுவது போன்ற தொழிலைக் கற்காத வலிமையான குட்டி ஏறுதற்கு அரிய மலையில் உள்ள தேன் கூட்டைக் கலைத்து விட்டு, அருகில் உள்ள நீண்ட கிளையின் மீது குதிக்கும் நாட்டவன் என் காதலன்.  அவன் இரவில் வருவதில்லை.  ஆனால் என் தாய், ‘அவன் வருவான், வருவான்’ என்று கூறுகின்றாள்.

குறிப்பு:   உள்ளுறை – பழைய உரை – மந்திக்கு ஒரு மகவாகிய பார்ப்பு மலைக்கண் பெருந்தேன் இறாலைக் கிளர்ந்து எழுப்பி ஈக்கு வெருவி (அஞ்சி) அதன் அயற் சிகரத்திலே பாயும் என்றது, தான் நுகரக் கருதி வந்து நம்மை உணர்த்திச் சுற்றத்தார் பலரும் உணர்ந்த அதற்கு வெருவிப் பெயர்வான் என்றவாறு, புலியூர்க் கேசிகன் உரை – மந்தியின் வன்பறழ் தலைவனாகவும், தேன் தலைவியோடு பெரும் காம இன்பமாகவும், தேனீக்கள் சுற்றத்தாராகவும், பறழ் சினையிற் பாய்ந்தது தலைவன் தமர்க்கு அஞ்சி தப்பியதாகவும், யாய் வரும் என்றது அதனைக் கேட்டு கூறியதாகவும் கொள்ளுக.   அஃதாவது இன்பம் மறந்து உயிர் தப்பினாற் போதும் என்று ஓடிச் செல்லுதல் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – கல்லா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், வரும் வரும் – அடுக்குத்தொடர், யாயே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  கரு விரல் மந்தி – கருமையான விரலையுடைய பெண் குரங்கு, கல்லா – மரக் கிளைகளில் தாவுவது போன்ற தொழிலைக் கற்காத, மன வளர்ச்சி அடையாத, வன் பறழ் – வலிமையான குட்டி, அரு வரை – ஏறுதற்கு அரிய மலை,  தீம் தேன் – இனிய தேன், எடுப்பி – உடைக்கும்,  அயலது – அருகில்,  உரு கெழு – அச்சம் தரும்,  நெடும் சினை – உயர்ந்த மரக்கிளை,  பாயும் – தாவும்,  நாடன் – நாட்டினன், இரவின் வருதல் அறியான் – இரவில் வருவதில்லை, வரும் வரும் என்பள் – அவன் வருவான் வருவான் என்கின்றாள், தோழி  – என் தோழியே, யாயே – என் தாய்

ஐங்குறுநூறு 273, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
அத்தச் செயலைத் துப்பு உறழ் ஒண் தளிர்,
புன்தலை மந்தி வன் பறழ் ஆரும்
நன்மலை நாட! நீ செலின்,
நின் நயத்து உறைவி, என்னினும் கலிழ்மே.

பாடல் பின்னணி:  அல்ல குறிப்பட்டு நீங்கும் தலைவன் சிறைப்புறத்தானாக இருப்பதை அறிந்து, முந்தைய நாள் நிகழ்ந்ததைத் தோழிக்குச் சொல்லுவாள் போல் தலைவி சொன்னது.

பொருளுரை:  அசோக மரத்தின் பவளம் போன்ற ஒளிரும் தளிர்களை மென்மையான தலையையுடைய பெண் குரங்கின் குட்டி உண்ணும் நல்ல மலைநாட்டின் தலைவனே!   நீ பிரிந்து சென்றால் உன்னையே விரும்பி வாழும் இவள் என்னினும் மிகுதியாகக் கலங்குவாள்.

குறிப்புபழைய உரை – பிரிவு உடம்பட்டாளே ஆயினும் நீ பிரிந்துழி ஆற்றாள் என்பதாம்.  அசோகந்தளிரை மந்திப்பார்ப்பு அருந்தும் என்றது, இளமை கழிவதற்கு முன்னே வரைதல் வேண்டும் என்பதாம்.  உள்ளுறை – புலியூர்க் கேசிகன் உரை – அசோகத் தளிரை மந்தியின் பறழ் தின்னும் என்றது, காலத்தால் இவளை நீயும் வந்து மணந்து கொள்ளாதிருப்பின், இவளை பிரிவு நோய் பற்றி அழித்துவிடும் என்பது.  இலக்கணக் குறிப்பு – கலிழ்மே – கலிழும் என்பது கலிழ்ம் எனத் திரிந்து நின்றது, ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்அத்தச் செயலைத் துப்பு உறழ் ஒண் தளிர் புன்தலை மந்தி வன் பறழ் ஆரும் நன்மலை நாட – அசோக மரத்தின் பவளம் போன்ற ஒளிரும் தளிர்களை மென்மையான தலையையுடைய பெண் குரங்கின் குட்டி உண்ணும் நல்ல மலைநாட்டின் தலைவனே (துப்பு – பவளம், பவழம்), நீ செலின் நின் நயத்து உறைவி என்னினும் கலிழ்மே – நீ பிரிந்து சென்றால் உன்னையே விரும்பி வாழும் இவள் என்னினும் மிகுதியாகக் கலங்குவாள்

ஐங்குறுநூறு 274, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மந்திக் கணவன் கல்லாக் கடுவன்
ஒண் கேழ் வயப்புலி குழுமலின், விரைந்து, உடன்
குன்று உயர் அடுக்கம் கொள்ளும் நாடன்
சென்றனன், வாழி தோழி, என்
மென் தோள் கவினும் பாயலும் கொண்டே.

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்துத் தலைவன் பிரிய, ஆற்றுவிக்கும் தோழியிடம் தலைவி சொன்னது.

பொருளுரை:   நீடு வாழ்வாயாகத் தோழி!  பெண் குரங்கின் கணவனான தன் தொழிலன்றி வேறு எதுவும் கற்காத ஆண் குரங்கு, ஒளியும் நிறமும் உடைய வலிமையான புலி முழங்குவதைக் கேட்டு உயர்ந்த மலையின் பக்க மலைக்குத் தாவி ஓடும் நாட்டவன், என்னிடமிருந்து விலகிச் சென்று விட்டான்.  அவன் போகும் பொழுது, என்னுடைய மென்மையான் தோள்களின் அழகையும் என் உறக்கத்தையும் தன்னோடு கொண்டு போய் விட்டான்.

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – மந்திக் கணவனாகிய கல்லாக்கடுவன் புலி முழக்கிற்கு அஞ்சி வரையகத்துப் பாயும் நாடன் என்றது, நமக்கு உரியனாய் ஒழுகுகின்றவன் யாம் எம்மைப் பாதுகாத்து உரைக்கின்ற உரைக்கு அஞ்சிச் சென்றான் என்பதாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நம்பெருமான் பிரிந்தானாக என்னலும் உறக்கமும் என்னைக் கைவிட்டுப் போயினகாண், என் வேறுபாடு கண்டு இவ்வூர் அலர் தூற்றுமே என்றும், எம்பெருமான் எப்பொழுது வருகுவன்? வராது தங்கிவிடுவானோ? வாரான் ஆயின் எவ்வாறு உய்குவன்? என எண்ணி எண்ணி வருந்துகின்றேன் என்பது,  புலியூர்க் கேசிகன் உரை –  புலியின் குழுமலுக்கு அஞ்சிக் கடுவன் குன்றின் உயர்ந்த பக்கத்தே ஓடும் நாடும் என்றது, யான் அவனை வரைவு முடுக்கற் பொருட்டுப் படைந்துக் கூறிய, ‘யாய் அறிந்தினள்’ ‘வேற்று வரைவு வருதலுண்டு’ என்னும் சொற்களைக் கேட்டு அஞ்சினனாக, அவன் விரைந்து பொருள்தேடி வருதற்பொருட்டு வேற்றுநாடு நோக்கிச் சென்றனன் என்றதாம்.  இலக்கணக் குறிப்பு – கல்லா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், மந்திக் கணவன் – நான்காம் வேற்றுமைத் தொகை, கொண்டே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  மந்திக் கணவன் – பெண் குரங்கின் கணவன், கல்லாக் கடுவன் – தன் தொழிலன்றி வேறு எதுவும் கற்காத ஆண் குரங்கு (அறியாமையுடைய ஆண் குரங்கு), ஒண் கேழ் – ஒளிப் பொருந்திய நிறமுடைய, வயப்புலி – வலிமையானப் புலி, குழுமலின் – முழங்குவதால், விரைந்து – விரைந்து, உடன் – உடனே, குன்று உயர் அடுக்கம் கொள்ளும் – உயர்ந்த மலையின் பக்க மலைக்குத் தாவி ஓடும்,  நாடன் – நாட்டவன், சென்றனன் – சென்று விட்டான், வாழி தோழி – நீடு வாழ்வாயாகத் தோழி, என் மென் தோள் – என்னுடைய மென்மையானத் தோள்களின், கவினும் – அழகையும், பாயலும் கொண்டே – உறக்கத்தையும் கொண்டுச் சென்றான்

ஐங்குறுநூறு 275, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
குரங்கின் தலைவன் குரூஉ மயிர்க் கடுவன்,
சூரலஞ் சிறு கோல் கொண்டு வியல் அறை
மாரி மொக்குள் புடைக்கும் நாட!
யாம் நின் நயந்தனம் எனினும், எம்
ஆய் நலம் வாடுமோ, அருளுதி எனினே?

பாடல் பின்னணி:  வரையாது வந்தொழுகும் தலைவன் இடையிட்டு வருவதால், அவனைக் கண்டு வரைவு கடாவ இயலாதவளாய், ஒரு நாள் குறியிடத்து அவனை எதிர்ப்பட்டு, அவன் கொடுமை கூறி வரையுமாறு வற்புறுத்தியது.

பொருளுரை:  குரங்கின் தலைவனான நிறம் பொருந்திய மயிரினை உடைய ஆண் குரங்கு சூரலின் சிறிய கோலைக் கையில் கொண்டு அகன்ற பாறைகளில் மழை நீரால் உண்டாகிய மொக்குகளைப் புடைத்து அழிக்கும் நாடனே!  யாம் நின்னை விரும்புகின்றோம்.  நீ எமக்கு அருள்செய்தாய் என்றால் எம் அழகிய நலம் வாடுமோ?  அது வாடாது.

குறிப்பு:  பழைய உரை – நின் நயந்த எம் நலம் வாடுதல் ஒருதலை அன்றே?  அங்ஙனமாயினும் நின்னை யாங்கள் நயந்தனை வெருளாது அருளப்பெறின் எம் நலம் வாடுமோ என்றவாறு.  குரங்கின் தலைவனாகிய கடுவன் சூரற்கோலைக் கொண்டு தானே அழிகின்ற மாரி மொக்குகளைப் புடைத்து அழிக்கும் நாட என்றது, இதனை நீ இவ்விடையிட்ட ஒழுக்கத்தாலே அழையாநின்றாய் என்பதாம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடுவன் மாரிமொக்குள் சிறுகோல் கொண்டு புடைக்கும் நாட என்றது, தாமே நொடிப்பொழுதில் அழிந்தொழியும் மொக்குகளைக் குரங்கு கோல் கொண்டு புடைத்து நனி விரைவில் அழித்தாற்போன்று நீ எம்மை நயவாமையால் வரையாது ஒழுகும் ஒழுக்கமே யாங்கள் மாரிமொக்குகள் போன்று நின்றாங்கு நின்று அழிந்தொழியப் போதியதாகவும் களவொழுக்கத்தானும் நீ இடையீடு செய்து செய்து எம்மைக் கொல்கின்றனை காண் என்பது.  இலக்கணக் குறிப்பு – குரூஉ – செய்யுளிசை அளபெடை, யாம் – தன்மைப் பன்மை, எம் – தன்மைப் பன்மை, வாடுமோ – ஓகாரம் வினா, எனினே – ஏகாரம் அசைநிலை.  எம் ஆய் நலம் – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள் தோழி.

சொற்பொருள்குரங்கின் தலைவன் குரூஉ மயிர்க் கடுவன் சூரலஞ் சிறு கோல் கொண்டு வியல் அறை மாரி மொக்குள் புடைக்கும் நாட – குரங்கின் தலைவனான நிறம் பொருந்திய மயிரினை உடைய ஆண் குரங்கு சூரலின் சிறிய கோலைக் கையில் கொண்டு அகன்ற பாறைகளில் மழை நீரால் உண்டாகிய மொக்குகளைப் புடைத்து அழிக்கும் நாடனே, யாம் நின் நயந்தனம் – யாம் நின்னை விரும்புகின்றோம், எனினும் எம் ஆய் நலம் வாடுமோ அருளுதி எனினே – என்றாலும் எம் அழகிய நலம் வாடுமோ நீ அருள்செய்தால்

ஐங்குறுநூறு 276, கபிலர், தோழி தலைவனிடம் சொன்னது
மந்திக் காதலன் முறி மேய் கடுவன்,
தண் கமழ் நறைக் கொடி கொண்டு வியல் அறைப்
பொங்கல் இள மழை புடைக்கும் நாட!
நயவாய் ஆயினும், வரைந்தனை சென்மோ,
கன்முகை வேங்கை மலரும்
நன்மலை நாடன் பெண்டு எனப்படுத்தே.

பாடல் பின்னணி:  வரையாது வந்தொழுகும் தலைவனை நெருங்கித் தலைவியை விரைவில் மணம் முடித்துக்கொள்ளுமாறு தோழி வற்புறுத்தியது.

பொருளுரை:  மந்தியின் காதலனாகிய இளம் தளிர்களை மேயும் ஆண் குரங்கு, குளிர்ச்சியையும் நறுமணத்தையும் கொண்ட நறைக் கொடியைத் தன் கையில் கொண்டு, அகன்ற பாறையில் படியும் இளமுகிலைப் புடைக்கும்  நாடனே!  நீ இவள் மீது அன்புடையவன் இல்லையானாலும், இவளை மணம் புரிந்து செல்வாயாக, மலைப்பிளவுகளில் வேங்கை மரங்கள் மலரும் நல்ல மலைநாடனின் பெண்டு எனப் பிறர் கூறுமாறு.

குறிப்பு:  பழைய உரை – மேல் கருக்கொண்டு முற்றிப் பயன்படுவதாய இளமுகிலைக் கடுவன் நறைக்கொடி கொண்டு புடைக்கும் நாட என்றது, வரைந்து மகட்பெறுதற்கு உரியவளாகிய இவளை இம் மறைந்த ஒழுக்கத்தாலே கொலை சூழ்கின்றாய் என்பதாம், ஒளவை துரைசாமி உரை – மேன்மேற் படிந்து குளிர்ந்து மழைபெயற்குரிய இள முகிலைக் கடுவன் நறைக் கொடி கொண்டு அலைக்கும் நாட என்றது, வரைந்து கூடி மகப் பெறுதற்குரியவளாகிய இவளைக் களவை நீட்டித்து அலைக்கின்றாய் என்பது.  சூழ்கின்றாய் – எண்ணுகின்றாய்.  இலக்கணக் குறிப்பு – சென்மோ – மோ முன்னிலை அசை, எனப்படுத்தே – ஏகாரம் அசைநிலை.  நயவாய் ஆயினும் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நயவாய் ஆயினும் என்றது, நீ வரைந்து கொண்டு நல்லறம் பேணலை விரும்பாயாயினும் என்பதுபட நின்றது.  கன்முகை (4) – ஒளவை துரைசாமி உரை – முழைஞ்சு (குகை, மலைப்பிளவு), அ. தட்சிணாமூர்த்தி உரை – கல்மேல் வளரும் வேங்கையின் முகைகள் (அரும்புகள்).

சொற்பொருள்மந்திக் காதலன் முறி மேய் கடுவன் தண் கமழ் நறைக் கொடி கொண்டு வியல் அறைப் பொங்கல் இள மழை புடைக்கும் நாட – மந்தியின் காதலனாகிய இளம் தளிர்களை மேயும் ஆண் குரங்கு குளிர்ச்சியையும் நறுமணத்தையும் கொண்ட நறைக் கொடியைக் கொண்டு அகன்ற பாறையில் படியும் இளமுகிலைப் புடைக்கும் (அடிக்கும்) நாடனே, நயவாய் ஆயினும் – நீ இவள் மீது அன்புடையவன் இல்லையானாலும், வரைந்தனை சென்மோ – இவளை மணம் புரிந்து செல்வாயாக, கல் முகை வேங்கை மலரும் நன்மலை நாடன் பெண்டு எனப்படுத்தே – மலைப்பிளவுகளில் வேங்கை மரங்கள் மலரும் நல்ல மலைநாடனின் பெண்டு எனப் பிறர் கூறுமாறு (கல் – மலை)

ஐங்குறுநூறு 277, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
குறவர் முன்றில் மா தீண்டு துறுகல்,
கல்லா மந்தி கடுவனோடு உகளும்,
குன்ற நாட!  நின் மொழிவல், என்றும்
பயப்ப நீத்தல், என் இவள்
கயத்து வளர் குவளையின் அமர்த்த கண்ணே?

பாடல் பின்னணி:  வரையாது வந்தொழுகும் தலைவன், ஒரு நாள் தலைவியைக் கண்டு அளவளாவி நீங்கியபொழுது, அவனை எதிரே கண்ட தோழி, தலைவியை மணம் புரியுமாறு வற்புறுத்தியது.

பொருளுரை:  மலைவாழ் குறவரின் இல்லத்தின் முன் விலங்குகள் தங்கள் உடலை உரசும் பாறையின் மீது ஏறி, தன் தொழில் தவிர வேறு எதுவும் கற்காத பெண் குரங்கு, தன் ஆண் குரங்குடன் தாவி விளையாடும் மலை நாடனே!  உன்னை ஒன்று வினவுகின்றேன். நீ என்றும் இவளை பிரிவது எதனால், குளத்தில் வளரும் குவளை மலர் போன்ற இவளுடைய ஒன்றுடன் ஒன்று மாறுபடும் கண்களில் பசலை பரவும்படி?

குறிப்பு:  பழைய உரை – குறவர் முன்றிலில் மா தீண்டு துருகற்கண்ணே நாணாது மந்தி கடுவனோடு உகளும் நாட என்றது, சுற்றத்தார் நடுவே இவ்வொழுக்கம் புலனாகிய ஞான்று விளையும் ஏதத்திற்கு நாணாதோய் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – முன்றில் – இல்முன் என்பது முன்பின்னாகத் தொக்கது, கல்லா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், மொழிவல் – தன்மை ஒருமை வினைமுற்று, கண்ணே – ஏகாரம் அசைநிலை.  அமர்த்த கண் (5) – தி. சதாசிவ ஐயர் உரை – சுழலுதலையுடைய கண்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒன்றனோடு ஒன்று எதிர்ந்த கண்கள், அ. தட்சிணாமூர்த்தி உரை – ஒன்றோடு ஒன்று மாறுபடும் கண்கள்.

சொற்பொருள்:  குறவர் முன்றில் மா தீண்டு துறுகல் கல்லா மந்தி கடுவனோடு உகளும் குன்ற நாட – மலைவாழ் குறவரின் இல்லத்தின் முன் விலங்குகள் தங்கள் உடலை உரசும் பாறையில் தன் தொழில் தவிர வேறு எதுவும் கற்காத பெண் குரங்கு தன் ஆண் குரங்குடன் தாவி விளையாடும் மலை நாடனே, நின் மொழிவல் – உன்னை ஒன்று வினவுகின்றேன், என்றும் – எப்பொழுதும், பயப்ப – பசலை பாயும்படி, நீத்தல் என் – நீ இவளை பிரிவது எதனால், இவள் கயத்து வளர் குவளையின் அமர்த்த கண்ணே – குளத்தில் வளரும் குவளை மலர் போன்ற இவளுடைய ஒன்றுடன் ஒன்று மாறுபடும் கண்கள்

ஐங்குறுநூறு 278, கபிலர், குறிஞ்சித் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்
குரங்கின் வன் பறழ் பாய்ந்தென, இலஞ்சி
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன்,
உற்றோர் மறவா நோய் தந்து,
கண்டோர் தண்டா நலம் கொண்டனனே.

பாடல் பின்னணி:  வரையாது வந்தொழுகும் தலைவன் சிறைப்புறத்தானாக, தலைவி தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  மலையின்கண் உள்ள மூங்கிலின் கணுக்களிலிருந்து எழுந்த கோலின் மேல் இருந்து குரங்கின் வலிய குட்டி  அக்கோலை விடுத்து வேறு கோலில் பாய்ந்ததால், குளத்தில் மீன்பிடிக்கும் தூண்டிலைப் போல் தாழ்ந்திருந்து நிமிரும் நாட்டையுடை நம் தலைவன், தன்னுடன் நட்புடையவர்களுக்கு மறக்க முடியாத பெரும் துன்பத்தைத் தந்து, கண்டவர்கள் மீண்டும் மீண்டும் காண விரும்பும் அழகைக் கவர்ந்து கொண்டான்.

குறிப்பு:  ஒப்புமை – குறுந்தொகை 54 – கான யானை கைவிடு பசுங்கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும், குறுந்தொகை 74 – விட்ட குதிரை விசைப்பினன்ன விசும்பு தோய் பசுங்கழை, புறநானூறு 302 – வெடி வேய் கொள்வது போல ஓடித் தாவுபு உகளும் மாவே, ஐங்குறுநூறு 278 – கழைக்கோல் குரங்கின் வன் பறழ் பாய்ந்தன இலஞ்சி மீன் எறி தூண்டிலின் நிவக்கும்.  உள்ளுறை – பழைய உரை – குரங்கு தன் மேல் இருந்துழி வளைந்து, அது போவுழி நிமிர்கின்ற மூங்கில்கோல் மீனெறி தூண்டில் போல ஓங்கும் நாட என்றது, தன் நெஞ்சத்து அன்புளதாகிய காலத்து வளைத்து வளைத்தொழுகி அன்பற்ற காலத்துப் பணிவின்றி தலைமை செய்து நம் நலம் கொண்ட தன் கொடுமை தோன்ற ஒழுகுகின்றான் என்பதாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவன் தன்னோடிருந்து அளவளாந்துணையும் நம் நோய் உணர்வான் போன்றும் விரைவின் வரைதற்கு முயல்வான் போலவும் நாம் வேண்டுதற்கும் இடனில்லாதபடி நம்பாற் பேரன்புடையவன் போன்று பன்மாயப் பொய்ம்மொழிகள் பலவும் பேசி நம்மைப் பிரிந்து அப்பாற் சென்ற பொழுதே நம்மை மறந்து ஏதிலான் போன்று ஆகிவிடுகின்றான் என்பது.  இலக்கணக் குறிப்பு – வெதிரத்து – அத்து சாரியை, பாய்ந்தன – செய்தென என்னும் வாய்பாட்டு வினை எச்சம், தூண்டிலின் – இன் ஒப்புப் பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, மறவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், கொண்டனனே – ஏகாரம் அசைநிலை.  உற்றோர் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காதற்கேண்மை கொண்டோர், ஒளவை துரைசாமி உரை – தன்னைச் சான்றோர்.

சொற்பொருள்:  சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல் குரங்கின் வன் பறழ் பாய்ந்தென – மலையின்கண் உள்ள மூங்கிலின் கணுக்களிலிருந்து எழுந்த கோலின் மேல் இருந்து குரங்கின் வலிய குட்டி பாய்ந்ததால், இலஞ்சி மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன் – குளத்தில் மீன்பிடிக்கும் தூண்டிலைப் போல் தாழ்ந்திருந்து நிமிரும் நாட்டையுடை நம் தலைவன், உற்றோர் மறவா நோய் தந்து – தன்னுடன் நட்புடையவர்களுக்கு மறக்க முடியாத பெரும் துன்பத்தைத் தந்து, கண்டோர் தண்டா நலம் கொண்டனனே – கண்டவர்கள் மீண்டும் மீண்டும் காண விரும்பும் அழகைக் கவர்ந்து கொண்டான்

ஐங்குறுநூறு 279, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
கல் இவர் இற்றி புல்லுவன ஏறிக்,
குளவி மேய்ந்த மந்தி, துணையொடு
வரை மிசை உகளும் நாட! நீ வரின்,
கல் அகத்தது எம் ஊரே,
அம்பற்சேரி அலர் ஆங்கட்டே.

பாடல் பின்னணி:  இரவுக்குறி வேண்டும் தலைவனைத் தோழி, அவன் அவ்வாறு வருவதில் உள்ள அருமைப்பாட்டைக் கூறி மறுத்தது.

பொருளுரைமலையை வேரால் பற்றிக் கொண்டு வளரும் இற்றி மரத்தின் மேல் படர்ந்த குளவியின் தளிரை மேய்ந்த பெண் குரங்கு, தன் துணையுடன் கூடி மலையின் மேல் தாவி விளையாடும் நாடனே!  மலைகள் சூழ்ந்த எங்கள் ஊரில் அம்பலும் அலரும் கூறும் மக்கள் வாழுமிடங்கள் உள்ளன.  நீ வருவது ஏற்றது இல்லை.

குறிப்பு:  பழைய உரை – எம்மூர் என்றது, சூழ்ந்த மலைகளின் நடுவகத்தது எம்மூர் என்றவாறு.  இற்றி மேல் படர்ந்த குளவித்தளிரை மேய்ந்து வரையகத்திலே மந்தி கடுவனோடு உகளும் நாடலாதலான் இதற்கு முன்பு இவள் நின்னொடு நுகர்ந்தே கொண்டு இனி இவள் நின் பதிக்கண் வாழ்தல் வேண்டும் என்பதாம்.  உள்ளுறை – புலியூர்க் கேசிகன் உரை – இற்றி மேல் படர்ந்த தளிரை மேய்ந்த மந்தி தன் துணையொடு வரையகத்தே உகளும் நாடன் என்றது, நின்னைத் தழுவி இன்புற்றவளான இவளும், நின் ஊர்க்கண்ணே இனி நின்னுடனேயே ஒன்றுபட்டாளாக ஊரறிய வாழ்தல் வேண்டும் என்பது.  இலக்கணக் குறிப்பு – புல்லுவன – புல்லுவனவாய், முற்றெச்சம், அம்பற்சேரி – அம்பலையுடை சேரி, இரண்டனுருபும் பயனும் தொக்க தொகை, ஊரே – ஏகாரம் அசைநிலை, ஆங்கட்டே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  கல் இவர் இற்றி புல்லுவன ஏறிக் குளவி மேய்ந்த மந்தி துணையொடு வரை மிசை உகளும் நாட – மலையை வேரால் பற்றிக் கொண்டு வளரும் இற்றி மரத்தின் மேல் படர்ந்த குளவியின் தளிரை மேய்ந்த பெண் குரங்கு தன் துணையுடன் கூடி மலையின் மேல் தாவி விளையாடும் நாடனே, நீ வரின் – நீ வந்தால், கல் அகத்தது எம் ஊரே அம்பற்சேரி அலர் ஆங்கட்டே – மலைகள் சூழ்ந்த எங்கள் ஊரில் அம்பலும் அலரும் கூறும் மக்கள் வாழுமிடங்கள் உள்ளன (சேரி – ஊர், குடியிருப்பு)

ஐங்குறுநூறு 280, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
கரு விரல் மந்திக் கல்லா வன் பார்ப்பு,
இரு வெதிர் ஈர்ங்கழை ஏறிச் சிறு கோல்
மதி புடைப்பது போல தோன்றும் நாட!
வரைந்தனை நீ எனக் கேட்டு, யான்
உரைத்தனென் அல்லனோ, அஃது என் யாய்க்கே.

பாடல் பின்னணி:  உடன்போகிய தலைவன் தலைவியை மணம் புரிந்தான்.  தோழி அவனை எதிர்பட்டபோது, தானும் தலைவியும் மணந்துகொண்ட செய்தியைக் கூறி, இச் செய்தியைத் தலைவியின் உறவினர்களிடம் கூறுமாறு வேண்டினான்.  தோழி அப்பொழுது அவனிடம் சொன்னது.

பொருளுரை:  கரிய விரலையுடைய மந்தியின் மரத்தில் ஏறும் தொழிலன்றி வேறு எதுவும் கல்லாத வலிய குட்டி, பெரிய மூங்கிலின் ஈரமுடைய கோலின் மேல் ஏறி இருந்து அக்கோல் அசையும்போது, காண்பவர்க்குச் சிறுகோலைக் கொண்டு அது நிலவைப் புடைப்பது போல் தோற்றத்தைச் செய்யும் நாடனே! நீ இவளை மணம் புரிந்தாய் என்பதனைக் கேட்டு, நான் அதை என் தாய்க்கு உரைத்தேன்.

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – குரங்கின் பார்ப்பு இருவெதிர் ஈர்ங்கழை ஏறி மதி புடைப்பது போல் தோன்றும் நாட என்றது, தீங்கு செய்வாயைப் போலத் தோன்றுவதல்லது உண்மை வகையாற் செய்யாய் என்பதாம், புலியூர்க் கேசிகன் உரை – மந்தியின் குட்டியானது மூங்கிற் கழையின் மீதேறிச் சிறுகோலால் மதியைப் புடைப்பது போலத் தோன்றினாலும், அஃது அவ்வாறு செய்ய இயலாமை எவரும் அறிதலே போல, நீயும் இவளை உடனழைத்துச் சென்று தமர்க்குக் கொடுமை இழைத்தாய் போலத் தோன்றினாலும், நீ தான் அவளை முறையாக மணந்துகொண்டு, அவட்கு நன்மையே செய்தாய் என்பதாம், எமக்கும் அதனால் மன நிறைவும் புகழுமே சேரச் செய்தாய் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – கருவிரல் – பண்புத்தொகை, கல்லா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், வரைந்தனை – முன்னிலை ஒருமை வினைமுற்று, யாய்க்கே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  கரு விரல் மந்திக் கல்லா வன் பார்ப்பு இரு வெதிர் ஈர்ங்கழை ஏறிச் சிறு கோல் மதி புடைப்பது போல தோன்றும் நாட – கரிய விரலையுடைய மந்தியின் மரத்தில் ஏறும் தொழிலன்றி வேறு எதுவும் கல்லாத வலிய குட்டி பெரிய மூங்கிலின் ஈரமுடைய கோலின் மேல் ஏறி இருந்து அக்கோல் அசையும் பொழுது அது காண்பவர்க்குச் சிறுகோலைக் கொண்டு அது நிலவைப் புடைப்பது போல் தோற்றத்தைச் செய்யும் நாடனே, வரைந்தனை நீ எனக் கேட்டு – நீ இவளை மணம் புரிந்தாய் என்பதனைக் கேட்டு, யான் உரைத்தனென் அல்லனோ அஃது என் யாய்க்கே – நான் அதை என் தாய்க்கு உரைத்தேன்

கிள்ளைப் பத்து

பாடல்கள் 281–290 – குறிஞ்சித் திணைக்குரிய கிளி பாடல்தோறும் உள்ளது.  கிளிகள் தினைக் கதிர்களை உண்ணுவதற்குத் தினைப்புனத்திற்கு வருவதால், அவற்றை ஓட்டுவதற்காகத் தலைவியும் தோழியும் அங்கு வருவார்கள்.  பாடல் 283 மட்டுமே, திருமணத்திற்குப்பின் ஏற்பட்ட புறத்தொழுக்கம் சூழ்நிலை உடையது.  அது குறிஞ்சியுள் மருதம்.

ஐங்குறுநூறு 281, கபிலர், குறிஞ்சித் திணை தலைவன் சொன்னது
வெள்ள வரம்பின் ஊழி போகியும்
கிள்ளை வாழிய பலவே, ஒள் இழை
இரும்பல் கூந்தல் கொடிச்சி
பெருந்தோள் காவல் காட்டியவ்வே.

பாடல் பின்னணி:  தலைவி தன் தோழியருடன் பொழிலில் விளையாடும்போது அவளைக் கண்ட தலைவன் அவள் மேல் காதல் கொண்டான்.  அவளும் அவனை விரும்பினாள்.  பின்னொரு நாள், தலைவி தினைப்புனத்தின்கண் நிற்பதைக் கண்டு அவன் மகிழ்ந்து சொன்னது.

பொருளுரை:  இந்தக் கிளிகள் நூறாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம் முடிந்தாலும் வாழட்டும், ஒளியுடைய நகையை அணிந்த, கருமையான அடர்ந்த கூந்தலையும், பெரிய தோள்களையும் உடைய குறிஞ்சி நிலத்தின் பெண்ணைப் புனத்தைக் காவல் புரிய வைத்தனவால்!

குறிப்பு:   பொ. வே. சோமசுந்தரனார் உரை – காண்டற்கு அரியளாயிருந்தாளைத் தினைப்புனத்தே நாளும் விரும்பிய போதெல்லாங் காண்டற்கு எளியவளாகச் செய்தமையால் அச் செயற்குக் காரணமான கிளிகள் நீடூழி வாழ்க என்று வாழ்த்தியபடியாம்.  ஒப்புமை – பதிற்றுப்பத்து 63 – ஆயிர வெள்ள ஊழி, பதிற்றுப்பத்து 90 – ஊழி வெள்ள வரம்பின ஆக.  வெள்ள வரம்பின் ஊழி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெள்ளம் வரம்பின் ஊழி என்றது வெள்ளம் என்னும் பேரெண்ணைத் தமக்கு அளவாகக் கொண்ட ஊழிகள் பற்பல என்றவாறு, ஒளவை துரைசாமி உரை – பேரெண்ணை வரம்பாக உடைய ஊழியாகிய காலம் முடியுனும் முடியாது நெடிது வாழுமாக என்றவாறு.  இலக்கணக் குறிப்பு – வாழிய – வியங்கோள் வினைமுற்று, பலவே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  வெள்ள வரம்பின் ஊழி போகியும் – நூறாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம் முடிந்தாலும், கிள்ளை வாழிய பலவே – கிளிகள் பல் ஊழிக்காலம் வாழட்டும், ஒள் இழை – ஒளியுடைய நகைகள், இரும்பல் கூந்தல் – கருமையான அடர்ந்த கூந்தல், கொடிச்சி – குறிஞ்சி நிலத்தின் பெண், மலையில் வாழும் பெண், பெருந்தோள் – பெரிய தோள், காவல் – காவல், காட்டிய – தோற்றுவித்தன, அவ்வே – அவை

ஐங்குறுநூறு 282, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
சாரல் புறத்த பெருங்குரல் சிறு தினைப்
பேரமர் மழைக் கண் கொடிச்சி கடியவும்
சோலைச் சிறு கிளி உன்னும் நாட!
ஆர் இருள் பெருகின, வாரல்,
கோட்டுமா வழங்கும் காட்டக நெறியே.

பாடல் பின்னணி:  இரவுக்குறியில் வந்து மீளும் தலைவனிடம் தோழி வரைவு வேண்டுகின்றாள்.

பொருளுரை:   மலைச் சரிவில் உள்ள நிலத்தில் கொத்துக்களாக வளர்ந்துள்ள சிறு தினையை உண்ண வரும் சோலைக் கிளிகளைப் பெரிய அமர்ந்த ஈரக் கண்களையுடையக் குறிஞ்சி நிலப் பெண் விரட்டவும், அக் கிளிகள் மீண்டும் வர நினைக்கும்  நாட்டின் தலைவனே!  அடர்ந்த இருள் மிகுந்துள்ளது.  காட்டு வழிகளில் தந்தங்களையுடைய யானைகள் திரியும். நீ அந்த வேளையில் வராதே.

குறிப்பு:   உள்ளுறை – பழைய உரை – கொடிச்சி கடியவும் சோலைச் சிறுகிளி தினையை உன்னும் நாட என்றது, காவலர் காத்தொழுகவும் களவொழுக்கத்தையே விரும்பாநின்றாய் என்பதாம், புலியூர்க் கேசிகன் உரை – கொடிச்சி கடியவும் சோலைச் சிறு கிளிகள் தினையையே உன்னும் நாட என்றது, காவலர் கவனமாகக் காத்து ஒழுகவும், களவு ஒழுக்கத்தையே நீயும் விரும்பாநின்றாய் என்பதாம்.  கிளி தான் மடமையானது.  வரும் துயர் பற்றி நினையாதது.  நீயுமோ அவ்வாறு அறியாமையுடையை? என்பது.  இலக்கணக் குறிப்பு – வாரல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று, நெறியே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  சாரல் புறத்த – மலைச் சரிவில் உள்ள நிலத்தில், பெருங்குரல் – பெரியக் கொத்துக்கள்,  சிறுதினை – சிறிய தினை, பேரமர் – பெரிய அமர்ந்த, மழைக் கண் கொடிச்சி – ஈரமுடைய கண்களையுடைய மலைப் பெண், குளிர்ச்சியுடைய கண்களையுடைய  மலைப் பெண், கடியவும் – விரட்டவும், சோலைச் சிறு கிளி – சோலையில் உள்ள சிறுக் கிளிகள், உன்னும் நாட – நினைக்கும் நாடனே, ஆர் இருள் பெருகின– மிகுதியான இருள் கூடிவிட்டது, அடர்ந்த இருள் கூடிவிட்டது, வாரல் – வராதே, கோட்டு மா – தந்தங்களையுடைய யானைகள், வழங்கும் – திரியும், காட்டக நெறியே – காட்டு வழிகளில்

ஐங்குறுநூறு 283, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
வன்கண் கானவன் மென் சொல் மடமகள்,
புன்புல மயக்கத்து உழுத ஏனல்
பைம்புறச் சிறு கிளி கடியும் நாட!
பெரிய கூறி நீப்பினும்,
பொய் வலைப்படூஉம் பெண்டு, தவப் பலவே.

பாடல் பின்னணி:  குறிஞ்சியுள் மருதம்.  பரத்தமை மேற்கொண்டான் தலைவன்.  தன்பால் அவன் வாயில் வேண்டி வந்தபோது அவனுக்கு வாயில் மறுத்தாள் தோழி.  அவன் ஆற்றாமை கண்டு தலைவி அவனை ஏற்றுக்கொண்டாள்.  தலைவனும் தலைவியும் பள்ளியறையில் ஒன்றாக இருக்கும்பொழுது, அங்குச் சென்ற தோழி தலைவனை நோக்கி கூறியது.

பொருளுரை:  வன்கண்மை மிக்க கானவனின் மெல்லிய சொற்களையுடைய இளைய மகள் புன்செய் நிலத்தில் உழுது வித்திய தினைப்பயிரின்கண் வீழும் பசிய முதுகையுடைய சிறிய கிளிகளை ஒப்பும் நாடனே!  தமர் நின் பெருங்குறைகளை எடுத்துக் கூறி விலக்கினாலும், உன் பொய்மொழியாகிய வலையில் அகப்படும் பெண்டிர் மிகப் பலர் ஆவர்

குறிப்புபழைய உரை – பெரிய கூறி நீப்பினும் பொய் வலைப்படூஉம் பெண்டு தவப்பலவே என்றது, தம் தமராயுள்ளார் நின் குறை பலவும் கூறி நீப்பினும், நின் பொய் வலைப்படூஉம் பெண்டிர் பலர் என்றவாறு.  இவளும் அவருள் ஒருத்தி என்பதாம்.  தினைப்புனத்துப் பலவாய்ப் படிகின்ற கிளிகளை ஒருத்தி தன்னாற் காக்க முடியாதாயினும் அவற்றை அவள் கடிய முயலும் நாட என்றது, நின்னோடு இன்பநுகர்ச்சி விரும்பும் மகளிரை யாங்கள் விலக்க முயல்கின்றது முடியாது என்பதாம்.  பெரிய கூறி நீப்பினும் பொய் வலைப்படூஉம் பெண்டு தவப் பலவே (4–5) – உ. வே. சாமிநாதையர் உரை – நின் குறை பல கூறி நீப்பினும் நின் பொய் வலைப்படூஉம் பெண்டிர் பலர்.  இவளும் அவர்களுள் ஒருத்தி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கணவன்மார் கூறுகின்ற பன்மாயப் பொய்ம் மொழிகளாகிய வலையின்கண் அகப்பட்டுக் கொள்கின்ற சாலப் பலர் உளர்.  மயக்கத்து (ஐங்குறுநூறு பாடல் 260–4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மண்ணும் எருவும் பிறவுங்கலந்த நிலத்தில்.  இலக்கணக் குறிப்பு – பெரிய – குறிப்பு வினையாலணையும் பெயர், பொய் வலை – குறிப்பு வினையாலணையும் பெயர், படூஉம் – அளபெடை, தவ – உரிச்சொல், பலவே – ஏகாரம் அசைநிலை.  தவ – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  வன்கண் கானவன் மென் சொல் மடமகள் புன்புல மயக்கத்து உழுத ஏனல் பைம்புறச் சிறு கிளி கடியும் நாட – வன்கண்மை மிக்க (கொடிய) கானவனின் மெல்லிய சொற்களையுடைய இளைய மகள் புன்செய் நிலத்தில் உழுது வித்திய தினைப்பயிரின்கண் வீழும் பசிய முதுகையுடைய சிறிய கிளிகளை ஒப்பும் (விரட்டும், ஓட்டும்) நாடனே, பெரிய கூறி நீப்பினும் – தமர் நின் பெருங்குறைகளை எடுத்துக் கூறி விலக்கினாலும், பொய் வலைப்படூஉம் பெண்டு தவப் பலவே – உன் பொய்மொழியாகிய வலையில் அகப்படும் பெண்டிர் மிகப் பலர்

ஐங்குறுநூறு 284, கபிலர், குறிஞ்சித் திணைதோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அளிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி,
குன்றக் குறவர் கொய் தினைப் பைங்கால்
இருவை நீள் புனம் கண்டும்,
பிரிதல் தேற்றாப் பேரன்பினவே.

பாடல் பின்னணி:  தினைக் கதிர்கள் முற்றியதால், தலைவியின் உறவினர்கள் தினையை அறுவடை செய்துவிட்டனர்.  தலைவி இனி தினைப்புனத்திற்கு வர வாய்ப்பில்லை.   தலைவன் அங்கு வந்து வறுங்கொல்லையை நோக்கி நின்றான்.  அது கண்ட தோழி கிளிகளை நோக்கிக் கூறுபவள் போல் தலைவன் கேட்கும்படி கூறியது.

பொருளுரை:  அளியத்தக்கன சிவந்த வாயையுடைய இப்பச்சைக் கிளிகள்!  குன்றத்தின்கண் வாழும் குறவர் கொய்த தினையின் பசிய அடியையுடைய தட்டைகள் மட்டுமே நிற்கும் நீண்ட புனத்தைக் கண்டும் பிரிதலை அறியாத பெரும் அன்புடையவை.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எம் சுற்றத்தார் தினையை அரிந்த பின்னர் இக்கிளிகள் பண்டு தாம் தின்ற தினைக் கதிர்களையே நினைந்துகொண்டு இவ்விடத்தேயே வருந்தி இருப்பது போன்றே, இதுகாறும் இத் தினைப்புனத்தே நின்னைக் கண்டு கண்டு பேரின்பமுற்ற எம் பெருமாட்டியும் எம் சுற்றத்தார் அவளை இல்லத்தில் வைத்த போதும் மறவாமல் நின் வரவினையே எதிர்பார்த்திருப்பாள்.  ஆதலால் இனி இடமில்லை என்று கருதி நீ வராது இருந்துவிடாதே.  இலக்கணக் குறிப்பு – தாமே – தாம், ஏ அசைநிலைகள், செவ்வாய் – பண்புத்தொகை, பைங்கிளி – பண்புத்தொகை, பேரன்பினவே – ஏகாரம் அசைநிலை, தேற்றம்.

சொற்பொருள்:  அளிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி – அளியத்தக்கன சிவந்த வாயையுடைய பச்சைக் கிளிகள், குன்றக் குறவர் கொய் தினைப் பைங்கால் இருவை நீள் புனம் கண்டும் பிரிதல் தேற்றாப் பேரன்பினவே – குன்றத்தின்கண் வாழும் குறவர் கொய்த தினையின் பசிய அடியையுடைய தட்டைகள் இருக்கும் நீண்ட புனத்தைக் கண்டும் பிரிதலை அறியாத பெரும் அன்புடையவை

ஐங்குறுநூறு 285, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பின் இரும் கூந்தல் நல் நுதல் குறமகள்
மெல் தினை நுவணை உண்டு தட்டையின்
ஐவனச் சிறுகிளி கடியும் நாட!
வீங்கு வளை நெகிழப் பிரிதல்
யாங்கு வல்லுநையோ ஈங்கு இவள் துறந்தே?

பாடல் பின்னணி:  களவுக்காலத்தில் சிறிது காலம் பிரிந்து சென்று வந்த தலைவனிடம் தோழி சொன்னது.

பொருளுரை:   பின்னிய அடர்ந்த கூந்தலையும் நல்ல நெற்றியையும் உடைய குறவனின் மகள் தினை மாவை உண்டு, ஐவன நெல்லைப் பாதுக்காக்க தட்டையால் கிளிகளை விரட்டும் நாடனே! இறுக்கமாக இருந்த இவளுடைய வளையல்கள் இப்பொழுது வழுக்கி விழுகின்றன.  இவளை இவ்வாறு துறக்க எவ்வாறு உன்னால் முடிகின்றது?  

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – குறமகள் தினைப் பிண்டியை உண்டு ஐவனச் சிறுகிளி கடியும் நாட என்றது, நின்னோடு இக்காலத்து இன்பம் நுகர்ந்து பின்பு நின் மனைச் செல்வமும் பிற மகளிர் ஒழியத் தானே நுகரும் வேட்கையுடையாளைப் பிரிந்து ஒழுகுகின்றாய் என்பதாம், ஒளவை துரைசாமி உரை – குறமகள் தினை மாவை உண்டு தட்டையினால் ஐவன நெல்லைக் கவரும் கிளிகளைக் கடிவள் என்றதனால் நின்னால் துறக்கப்பட்ட இவள், நின் பிரிவுத் துன்பத்தை உட்கொண்டு, தன் நிறையினால் பிறரறியா வண்ணம் தன் மறையினைக் காத்தொழுகினாள் என உள்ளுறையால் தலைமகள் ஆற்றியிருந்தமை கூறியவாறு.  இலக்கணக் குறிப்பு – ஐவனச் சிறு கிளி – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை, வல்லுநையோ – ஓகாரம் அசைநிலை, துறந்தே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  பின் இரும் கூந்தல் – பின்னிய அடர்ந்த (அல்லது கருமையான) கூந்தல்,  நல் நுதல் – அழகிய நெற்றி,  குறமகள் – மலைக்குறவனின் மகள், மெல்தினை – மெல்லிய தினை,  நுவணை – மாவை,  உண்டு – உண்டு,  தட்டையின் – தட்டையான மூங்கில் கிலுக்கினால், ஐவன – மலை அரிசி,  சிறுகிளி – சிறிய கிளி,  கடியும் – விரட்டும்,  நாட – நாட்டவனே, வீங்கு வளை – இறுக்கமான வளையல்கள், நெகிழ – வழுக்கி விழ, பிரிதல் – பிரிந்து செல்லுதல், யாங்கு வல்லுநையோ – எவ்வாறு உன்னால் முடிகின்றது, ஈங்கு இவள் துறந்தே – இங்கு இவளை நீ துறந்து

ஐங்குறுநூறு 286, கபிலர், குறிஞ்சித் திணைதலைவி தோழியிடம் சொன்னது
சிறுதினை கொய்த இருவை வெண்கால்
காய்த்த அவரைப் படுகிளி கடியும்
யாணர் ஆகிய நன்மலை நாடன்,
புகர் இன்று நயந்தனன் போலும்,
கவரும் தோழி, என் மாமைக் கவினே.

பாடல் பின்னணி:  1. உடன்போக்குத் துணிந்த தலைவன் அஃது ஒழிந்து, தானே வரைவிடை வைத்துப் பிரிய விரும்பியதைக் குறிப்பினால் உணர்ந்த தலைவி தோழிக்குச் சொன்னது.  2. தலைவன் ‘வரைவிடை வைத்துப் பிரிவல்’ என்றபோது தலைவி தோழிக்குச் சொன்னது.

பொருளுரை:  தோழி!  சிறுதினையின் கதிர்களைக் கொய்தபின் உள்ள அரிதாளாகிய வெள்ளைக் கால்களில் படர்ந்து காய்த்துள்ள அவரையின் மேல் படியும் கிளிகளை ஓட்டும், வளமை மிக்க நல்ல மலையின் நாடன், குற்றம் உடைய ஒன்றைச் செய்ய விரும்பினான் போலும்.  என் மாந்தளிர் போலும் நிறமுடைய அழகைக் கவர்கின்றான்.

குறிப்புபழைய உரை – புகர் என்றது உடன்போகலை.  உள்ளுறை – பழைய உரை –தினையிற் கடிந்த கிளியைத் தினை அரிகாற்கண் விளைந்த அவரைக்கண்ணும் கடியும் நாடன் என்றது, வரையாது ஒழுகுதலன்றி உடன்போதலையும் நம்மை விலக்காநின்றான் என்பதாம், புலியூர்க் கேசிகன் உரை – யாணராகிய நன்மலை நாடன் என்றது, விரும்பின் எளிதாகவே வரை பொருளைத் தந்து மணந்து கொள்ளும் வளமுடையவன் என்பதனை உளங்கொண்டு கூறியதாம்.  தினைகவர்ந்த கிளிகள், பின் அவரையையும் கவர்தற்கு வருமாறுபோலக் களவின்பம் பெற்றவன், உடன் போக்கையும் துணிதலே முறையாகும் என்பது கூறினதாகவும் கொள்க.  இலக்கணக் குறிப்பு – கவினே – ஏகாரம் அசைநிலை.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  மாமைக் கவின் – ஒளவை துரைசாமி உரை, மாந்தளிர் போலும் நிறம் திகழும் அழகு.

சொற்பொருள்:  சிறுதினை கொய்த இருவை வெண்கால் காய்த்த அவரைப் படுகிளி கடியும் யாணர் ஆகிய நன்மலை நாடன் – சிறுதினையின் கதிர்களைக் கொய்தபின் உள்ள அரிதாளாகிய வெள்ளைக் கால்களில் படர்ந்து காய்த்துள்ள அவரையின் மேல் படியும் கிளிகளை ஓட்டும் வளமை மிக்க நல்ல மலையின் நாடன் (யாணர் – புதுவருவாய், வளமை), புகர் இன்று நயந்தனன் போலும் – குற்றம் உடைய ஒன்றைச் செய்ய விரும்பினான் போலும், கவரும் – கவர்கின்றான், தோழி – தோழி, என் மாமைக் கவினே – என் மாந்தளிர் போலும் நிறமுடைய அழகு

ஐங்குறுநூறு 287, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நெடு வரை மிசையது குறுங்கால் வருடை
தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட!
வல்லை மன்ற, பொய்த்தல்
வல்லாய் மன்ற, நீ அல்லது செயலே.

பாடல் பின்னணி:  இன்ன நாளில் வரைவல் எனக் கூறி அந்நாளில் வரையாது மீண்டும் அவ்வாறு கூறும் தலைவனிடம் தோழி சொன்னது.

பொருளுரை:  தினையை உண்ண வரும் கிளிகள் குறுகிய கால்களையுடைய மலை ஆடுகளைப் பார்த்து அஞ்சும் மலை நாடனே!  நீ பொய் சொல்லுவதில் வல்லவன்.  ஆனால் துன்பம் விளைவிக்க மாட்டாய்.

குறிப்பு:  பழைய உரை – தமக்கு ஓர் இடையூறும் செய்யாத நெடுவரைக்கண்ணே வாழும் வருடையைத் தினை மேய்கின்ற கிள்ளை வெரூஉம் நாட என்றது, எம் சுற்றத்தார் வரைவிற்கு இடையூறு செய்யார் என்பது அறியாது வெருவுகின்றாய் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – வெரூஉம் – செய்யுளிசை அளபெடை, பொய்த்தல் – தொழிற்பெயர், வல்லை – முன்னிலை உடன்பாட்டு வினைமுற்று, வல்லாய் – முன்னிலை எதிர்மறை வினைமுற்று, செயலே – செயல் தொழிற்பெயர், ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்: நெடு வரை – உயர்ந்த மலை, மிசையது – மேல், குறுங்கால் வருடை – குறுகிய கால்களையுடைய மலை ஆடுகள், தினை பாய் கிள்ளை – தினையை உண்ண வரும் கிளிகள், வெரூஉம் – அச்சம் கொள்ளும், நாட – நாடனே, வல்லை – வல்லமை உடையை, மன்ற – உறுதியாக, அசைநிலை, பொய்த்தல் வல்லாய் – நீ பொய் சொல்லுவதில் வல்லவன், மன்ற – அசை, நீ – நீ, அல்லது செயலே – துன்பம் செய்வது இல்லை

ஐங்குறுநூறு 288, கபிலர், குறிஞ்சித் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
நன்றே செய்த உதவி நன்று தெரிந்து,
யாம் எவன் செய்குவம் நெஞ்சே, காமர்
மெல்லியல் கொடிச்சி காப்பப்,
பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே?

பாடல் பின்னணி:  கிளிகள் புனத்தின்கண் படிகின்றன என்று தினைப்புனம் காக்க தலைவியை அவள் குடும்பத்தார் ஏவியதை அறிந்த தலைவன், உவந்து தன் நெஞ்சிடம் சொன்னது.

பொருளுரை:  நெஞ்சே!  விருப்பம் வருவதற்குக் காரணமான மென்மையான இயல்பை உடைய குறமகள் காவல் புரிய வரும் பலவாகிய கதிர்களையுடைய தினைப்புனத்தில் பரவிப் படியும் கிளிகளுக்கு, அவை நமக்கு மிக்க நன்மையைச் செய்த உதவியை நன்கு அறிந்து, நாம் கைம்மாறாக என்ன செய்வோம்?

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – தலைமகளைக் கூடி இன்புறுதற்குரிய வாய்ப்பை எதிர்பார்த்திருந்த தலைமகனுக்குத் தலைவி தினைப்புனத்திற்கு வருதல் பெருவாய்ப்பாயிற்று.  அவள் புனத்திற்கு வருவதற்குக் காரணம், தினை முதிர்ந்ததும் அதனை உண்ணக் கிளிகள் அங்கு வந்தமையே.  கிளிகட்கு தான் எந்த நன்மையும் செய்தவன் அல்லன்.  எனவே, அவை செய்த உதவி செய்யாமல் செய்த உதவி என்பதும், பயன் கருதாது செய்த உதவி என்பதும் உணர்ந்தவன் தலைவன் ஆதலின் ‘யாம் எவன் செய்குவ?’ என்றான்.  என்ன உதவி செய்யினும், அது கிளிகள் செய்த உதவிக்கு ஈடாகாது என்பது கருத்தாம்.  இலக்கணக் குறிப்பு – கிளியே – ஏகாரம் அசைநிலை.  பாத்தரும் (4) – ஒளவை துரைசாமி உரை – பரந்து வருதல்.

சொற்பொருள்:  நன்றே செய்த உதவி நன்று தெரிந்து – மிக்க நன்மையைச் செய்த உதவியை நன்கு அறிந்து, யாம் எவன் செய்குவம் நெஞ்சே – நாம் கைம்மாறாக என்ன செய்வோம் நெஞ்சே, காமர் மெல்லியல் கொடிச்சி காப்பப் பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே – விருப்பம் வருவதற்குக் காரணமான மென்மையான இயல்பை உடைய குறமகள் காவல் புரிய பலவாகிய கதிர்களையுடைய தினைப்புனத்தில் பரவிப் படியும் கிளிகளுக்கு

ஐங்குறுநூறு 289, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது 
கொடிச்சி இன்குரல் கிளி செத்து அடுக்கத்துப்
பைங்குரல் ஏனல் படர் தரும் கிளியெனக்
காவலும் கடியுநர் போல்வர்
மால் வரை நாட! வரைந்தனை கொண்மோ.

பாடல் பின்னணி:  தலைவி இற்செறிக்கப்பட்டாள்.  விரைவில் தலைவியை மணம் புரியுமாறு தோழி தலைவனை வற்புறுத்தினாள்.  தினைப்புனக் காவல் நீங்கியபின் வரைவதாகக் கூறினான் அவன்.  அதற்கு விடையாகத் தோழி கூறியது.

பொருளுரை:   மலை நாடனே!  குறிஞ்சி நில மகளான கொடிச்சியின் இனிய குரலை தம்மை ஒத்த கிளியின் குரல் என்று நினைத்து, மலை அடுக்கத்தில் வளரும் பசுமையான தினைக் கதிர்களையுடைய தினைப் புனத்திற்குக் கிளிகள் வரும் என எண்ணி இவளுடைய உறவினர்கள் இவள் தினைப் புனத்தைக் காவல் செய்வதிலிருந்து இவளை நீக்குவார்கள்.  அதனால்  விரைவில் வந்து இவளை திருமணம் செய்து அழைத்துக் கொண்டு செல்வாயாக.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொடிச்சியின் குரலைத் தம் இனமாகிய கிளியின் குரல் என்று கருதி ஏனலிலே கிளி படரும் என்றது, குறிப்பாகத் தலைவி தினை காத்தற்குச் செல்லின் நின் போல்வார் அவளைக் கருதி ஆண்டு வருதலும் கூடும் என்று கருதியே அவளை இத்தொழிலில் விடார் ஆயினர் என்பது.  இலக்கணக் குறிப்பு – கிளி – கிளியின் குரலுக்கு ஆகுபெயர், காவலும் – உம்மை சிறப்பு, எச்ச உம்மையுமாம், வரைந்தனை – முன்னிலை வினைமுற்று, கொண்மோ – மோ முன்னிலை அசை.

சொற்பொருள்:  கொடிச்சி – மலை நாட்டுப் பெண், இன்குரல் – இனிய குரல், கிளி – கிளி, செத்து – நினைத்து, அடுக்கத்து – அடுக்கு மலையில், பைங்குரல் –  பசுமையான தினைக் கதிர், ஏனல் – தினை,  படர் தரும் – வந்து சேரும், கிளியென – கிளியின் குரல் என்று, காவலும் கடியுநர் போல்வர் – காவல் காப்பதிலிருந்து நீக்குவார்கள் போல் உள்ளது,  மால் – உயர்ந்த, வரை நாட – மலை நாடனே, வரைந்தனை கொண்மோ – இவளை மணந்து அழைத்துச் செல்

ஐங்குறுநூறு 290, கபிலர், குறிஞ்சித் திணைதோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அறம் புரி செங்கோல் மன்னனின், தாம் நனி
சிறந்தன போலும் கிள்ளை, பிறங்கிய
பூக்கமழ் கூந்தல் கொடிச்சி
நோக்கவும் படும், அவள் ஓப்பவும் படுமே.

பாடல் பின்னணி:  தலைவி இற்செறிக்கப்பட்டாள்.  அதனால் தோழி இரவுக்குறியை மறுத்தாள்.  தலைவன் வெறுப்புற்றான்.  அவன் வெறுப்பு தீரும்பொருட்டு மீண்டும் தலைவி தினைப்புனக் காவலுக்கு வருகின்றாள் எனத் தோழி சொன்னது.

பொருளுரை:  அறம் புரிகின்ற செங்கோன்மையுடைய மன்னனைப் போல் மிகவும் சிறப்புடையனவாக ஆயின போலும் கிளிகள்.  ஒளிரும் பூக்களால் மணம் கமழும் கூந்தலையுடைய கொடிச்சியால் அவை நோக்கப்படும்.  அவளால் கடியவும்படும்.

குறிப்பு:  செங்கோல் – ஒளவை துரைசாமி உரை – செவ்விய கோல் போறலின் அரசனின் நீதி செங்கோல் எனப்படுவது மரபு.  அஃது அளியும் தெறலும் என இருவகையின் இயன்ற அறப்பயன் விளைத்தலின் அறம்புரி செங்கோல் எனப்படுவதாயிற்று.  நல்லது செய்வோரை நயந்து அருள் செய்வது அளி.  அல்லது செய்வோரைக் கடிந்து ஒறுப்பது தெறல்.  போலும் (2) – ஒளவை துரைசாமி உரை – உரையசை, தி. சதாசிவ ஐயர் உரை – போலும்.  இலக்கணக் குறிப்பு – மன்னனின் – இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது, ஒப்புப் பொருளுமாம், நனி – உரிச்சொல், பூக்கமழ் – மூன்றாம் வேற்றுமைத் தொகை, நோக்கவும் – உம்மை சிறப்பு, ஓப்பவும் – உம்மை சிறப்பு, உம்மை எண்ணற்பொருட்டு, படுமே – ஏகாரம் அசைநிலை.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  மன்னனின் (1) – தி. சதாசிவ ஐயர் உரை – அரசனைக் காட்டிலும், பொ.வே சோமசுந்தரானார் உரை – மன்னன் போல்.  பூக்கமழ் கூந்தல் – அ. தட்சிணாமூர்த்தி உரை – விளங்கிய பூக்களால் மணங்கமழும் கூந்தல், பொ.வே சோமசுந்தரானார் உரை – விளங்கிய மலர் மணக்கும் கூந்தல்.

சொற்பொருள்:  அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி சிறந்தன போலும் கிள்ளை – அறம் புரிகின்ற செங்கோன்மையுடைய மன்னனைப் போல் (மன்னனை விடவும்) மிகவும் சிறப்புடையனவாக ஆயின போலும் கிளிகள், பிறங்கிய பூக்கமழ் கூந்தல் கொடிச்சி நோக்கவும் படும் – ஒளிரும் பூக்களால் மணம் கமழும் கூந்தலையுடைய கொடிச்சியால் நோக்கப்படும், அவள் ஓப்பவும் படுமே – அவளால் கடியவும்படும்

மஞ்ஞைப் பத்து

பாடல்கள் 291–300 – குறிஞ்சித் திணைக்குரிய மயில் பாடல்தோறும் உள்ளது.  பாடல்கள் 292, 294 ஆகியவை திருமணத்திற்குப் பின் உள்ள சூழ்நிலைகள் பற்றினவை.  பாடல் 292ல் இரண்டாம் மனைவி இல்லத்தில் இருப்பதாக உள்ளது.  தலைவனுக்கு இரண்டாம் மனைவி இருப்பதாக வேறு சங்கப் பாடல் எதுவும் இல்லை.

ஐங்குறுநூறு 291, கபிலர், குறிஞ்சித் திணை தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும்,
துறுகல் அடுக்கத்து அதுவே, பணைத்தோள்,
ஆய் தழை நுடங்கும் அல்குல்
காதலி, உறையும் நனி நல்லூரே.

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்ற தலைவன் சொன்னது.

பொருளுரை:  மயில்கள் மகிழ்ந்து ஆடப் பேராந்தைகள் மாறி மாறி ஒலித்தலைச் செய்யும், சிறு குன்றுகள் உள்ள மலைப்பக்கத்தில் உள்ளது, மூங்கில்போன்ற தோள்களையும் அழகிய தழையால் தொடுத்த ஆடை அசையும் அல்குலையும் உடைய என் காதலி உறையும் மிக்க நல்ல ஊர்.

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் என்றது, தான் அயரும் திருமணச் சிறப்பு கூறியது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவியும் தானுமாகிய மயிற் சேவலும் பெடையும் கூடிக் களித்தாடுவதற்கு உறுதுணையாக ஆங்குத் தோழி தமக்கு ஆவனவெல்லாம் கைம்மாறு கருதாது செய்த நன்றியை நினைந்து, மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் என்றான் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – அதுவே – ஏகாரம் அசைநிலை, பணைத்தோள் – உவமைத்தொகை, நனி – உரிச்சொல், நல்லூரே – ஏகாரம் அசைநிலை.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  குடிஞை இரட்டும் (1) – இரட்டுதலாவது சேவலும் பேடும் மாறி மாறித் தம்முள் ஒன்றனை ஒன்று கூவுதல்.  பணைத்தோள் (2) – ஒளவை துரைசாமி உரை – பருத்த தோள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மூங்கில் போன்ற தோள்.

சொற்பொருள்:  மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் – மயில்கள் மகிழ்ந்து ஆடப் பேராந்தைகள் மாறி மாறி ஒலித்தலைச் செய்யும், துறுகல் அடுக்கத்து அதுவே – சிறு குன்றுகள் உள்ள மலைப்பக்கத்தது அது, பணைத்தோள் ஆய் தழை நுடங்கும் அல்குல் காதலி உறையும் நனி நல்லூரே – மூங்கில்போன்ற தோள்களையும் அழகிய தழையால் தொடுத்த ஆடை அசையும் அல்குலையும் உடைய என் காதலி உறையும் மிக்க நல்ல ஊர் (அல்குல் – இடை, இடைக்குக் கீழ் உள்ள பகுதி)

ஐங்குறுநூறு 292, கபிலர், குறிஞ்சித் திணைதலைவி தலைவனிடம் சொன்னது
மயில்கள் ஆலப், பெருந்தேன் இமிரத்,
தண் மழை தழீஇய மா மலை நாட!
நின்னினும் சிறந்தனள், எமக்கே நீ நயந்து
நன் மனை அருங்கடி அயர,
எம் நலம் சிறப்ப, யாம் இனிப் பெற்றோளே.

பாடல் பின்னணி:  பெரும் பொருள் வதுவை முடித்தவளை இல்லத்துக் கொண்டு புகுந்துழி தலைமகள் உவந்து சொன்னது.  அதாவது, மகட்பேறு இன்மையால், தன் முதல் மனைவி இருக்கும்பொழுதே, தலைவன் தன் தகுதிக்கேற்ப இன்னொருத்தியை இரண்டாம் மனைவியாக ஏற்று அவளை இல்லத்திற்கு அழைத்து வந்தான். அப்பொழுது முதல் மனைவி அவளை ஏற்றுக் கொண்டு கூறியது.

பொருளுரை:  மயில்கள் மகிழ்ந்து ஆடவும் பெரிய தேனீக்கள் இசைக்கவும் குளிர்ந்த முகில்கள் தழுவியிருக்கும் பெரிய மலைநாட்டின் தலைவனே!  உன்னைவிடவும் சிறந்தவள் எமக்கு, நீ விரும்பி நல்ல மனையில் அரிய திருமணம் செய்து, எம்முடைய அறம் சிறக்கும்படி, யாம் இப்பொழுது தங்கையாகப் பெற்றவள். 

குறிப்பு:  தலைவனுக்கு இரண்டாம் மனைவி இருப்பதாக உள்ள சங்கப் பாடல் இது ஒன்றே.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரண்டாவதாக வதுவை செய்தல் மகட்பேற்றின் பொருட்டே என்றுணர்த்துதற்கு ‘பெரும்பொருள் வதுவை’ என்று கூறியிருத்தலும் ‘மகன்தாய்’ என வழிமுறைக் கிழத்தியைக் குறிப்பிட்டிருந்தாலும் நுண்ணிதி உணர்க (அவன் சோர்பு காத்தல் கடன் எனப்படுதலின் மகன்தாய் உயர்பும் தன் உயர்பு ஆகும் – தொல்காப்பியம், கற்பியல் 33). உள்ளுறை – பழைய உரை – மழைப்பருவம் வேண்டியிருக்கின்ற மயில்கள் ஆலத் தேன்கள் இமிர மழை பெய்யும் நாட என்றது, யாங்கள் கருதியிருக்கின்ற பெரும்பொருளை உவப்ப முடித்தனை என்றவாறு, புலியூர்க் கேசிகன் உரை – மயில்கள் ஆல, தேன்கள் இமிர, மழை பெய்யும் நாட என்றது, மழையும் அவற்றின் விருப்பினை அருளோடே நிறைவேற்றினமை போல, நீயும் யாம் விரும்பியவாறே எமக்கும் ஒரு தங்கையைக் கொணர்ந்தனை என்றதுமாம்.  இலக்கணக் குறிப்பு – தழீஇய – பெயரெச்சம், செய்யுளிசை அளபெடை, எமக்கே – ஏகாரம் அசைநிலை, மா மலை – மா உரிச்சொல், அயர – செய என்னும் எச்சம் பொருட்டு என்னும் பொருள்பட்டது, சிறப்ப – காரணப்பொருட்டாக செய என்னும் எச்சம், பெற்றோளே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிரத் தண் மழை தழீஇய மா மலை நாட – மயில்கள் மகிழ்ந்து ஆடவும் பெரிய தேனீக்கள் இசைக்கவும் குளிர்ந்த முகில்கள் தழுவியிருக்கும் பெரிய மலைநாட்டின் தலைவனே, நின்னினும் சிறந்தனள் எமக்கே – உன்னைவிடவும் சிறந்தவள் எனக்கு, நீ நயந்து நன் மனை அருங்கடி அயர எம் நலம் சிறப்ப யாம் இனிப் பெற்றோளே – நீ விரும்பி நல்ல மனையில் அரிய திருமணம் செய்து எம்முடைய அறம் சிறக்கும்படி யாம் இப்பொழுது தங்கையாகப் பெற்றவள்

ஐங்குறுநூறு 293, கபிலர், குறிஞ்சித் திணைதலைவன் தலைவியிடம் சொன்னது
சிலம்பு கமழ் காந்தள் நறுங்குலை அன்ன
நலம் பெறு கையின், என் கண் புதைத்தோயே,
பாயல் இந்துணை ஆகிய பணைத்தோள்
தோகை மாட்சிய மடந்தை,
நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே?

பாடல் பின்னணி:  பகற்குறியிடம் தலைவன் வந்தபொழுது, அவன் அறியாது அவன் பின் வந்து தலைவி அவன் கண்களைத் தன் கையால் பொத்தினாள்.  அப்பொழுது தலைவன் மகிழ்ந்து உரைத்தது.

பொருளுரை:  மலையெங்கும் மணம் கமழ்கின்ற காந்தள் மலர்களின் நறிய பூங்கொத்துப் போன்று அழகு பெற்ற கையால் என் கண்களைப் புதைத்தவளே!  படுக்கையின்கண் என் இனிய துணையாகிய, மூங்கில் போன்ற தோள்களையும் மயிலின் மென்மையையும் கொண்ட மாட்சிமையுடைய மடந்தை ஆகிய நீ இல்லாது, வேறு யாரும் உள்ளார்களா என் நெஞ்சில் அமர்ந்தவர்கள்?  வேறு யாரும் இல்லை.

குறிப்பு:  பழைய உரை – நீயலது உளரோ என் நெஞ்சமர்ந்தோரே என்றது, நீ அல்லது பிறர் உளராயினன்றே நான் கூறுவது அறிதல் வேண்டிக் கண் புதைக்கற்பாலத்து?  அஃது இல்லாதவழிப் புதைப்பது என் என்று அவள் பேதமை உணர்த்தியதாம்.  இலக்கணக் குறிப்பு – அன்ன – உவம உருபு, கையின் – ‘இன்’ கையினால் என மூன்றன் பொருள் தந்த இடைச்சொல், புதைத்தோயே – ஏகாரம் அசைநிலை, மடந்தை – விளி, பணைத்தோள் – உவமைத்தொகை, தோகை – ஆகுபெயர் மயிலுக்கு, உளரோ – ஓகாரம் எதிர்மறை, அமர்ந்தோரே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  சிலம்பு கமழ் காந்தள் நறுங்குலை அன்ன நலம் பெறு கையின் என் கண் புதைத்தோயே – மலையெங்கும் மணம் கமழ்கின்ற காந்தள் மலர்களின் நறிய பூங்கொத்துப் போன்று அழகு பெற்ற கையால் என் கண்களைப் புதைத்தவளே, பாயல் இந்துணை ஆகிய பணைத்தோள் தோகை மாட்சிய மடந்தை நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே – படுக்கையின்கண் இனிய துணையாகிய மூங்கில் போன்ற தோள்களையும் மயிலின் மென்மையையும் கொண்ட மாட்சிமையுடைய மடந்தை ஆகிய நீ இல்லாது வேறு யாரும் உள்ளார்களா என் நெஞ்சில் அமர்ந்தவர்கள்

ஐங்குறுநூறு 294, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
எரி மருள் வேங்கை இருந்த தோகை,
இழை அணி மடந்தையின் தோன்றும் நாட!
இனிது செய்தனையால் நுந்தை வாழியர்,
நன் மனை வதுவை அயர இவள்
பின்னிருங்கூந்தல் மலர் அணிந்தோயே.

பாடல் பின்னணி:  தலைவன் தலைவியை மணம் புரிந்த நாளில் திருமணச் சடங்கில் ஒன்றாகிய தலைவியின் கூந்தலில் அவன் மலர் சூடுதலைக் கண்ட தோழி, மகிழ்ந்து அவனைப் பாராட்டிக் கூறியது.

பொருளுரை:  அழல் போன்ற மலர்களையுடைய வேங்கை மரத்தின்கண் இருந்த மயிலானது, அணிகலன்களை அணிந்த இளமகள் போல் தோன்றும் நாடனே!  நல்ல இல்லத்தில் நிகழும் திருமணச் சடங்கில், இவளின் பின்னப்பட்ட கரிய கூந்தலில் மலர்களை அணிவித்து இனிய செயலை நீ செய்ததனால், உன்னை ஈன்ற தந்தை நீடு வாழ்வாராக!

குறிப்புபழைய உரை – இனிது செய்தனையால் என்றது, வதுவையில் தலைவிக்கு மலர் அணியக்கண்ட தோழி “இவ்வாறு ஆம்படி அன்றே சூட்டினை” எனச் சொல்லியவாறாம்.  மலர்ந்த வேங்கைக்கண் இருந்த தோகை இழையணி மடந்தையின் தோன்றும் நாட என்றது, நீ வரையாது ஒழுகுகின்ற ஞான்றும் நின் தமர் பொன்னணிந்த இன்று போல் சிறப்ப ஒழுகினாய் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – மருள் – உவம உருபு, தோகை – ஆகுபெயர் மயிலுக்கு, மடந்தையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, செய்தனையால் – ஆல் அசைநிலை, வாழியர் – வியங்கோள் வினைமுற்று, அணிந்தோயே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  எரி மருள் வேங்கை இருந்த தோகை இழை அணி மடந்தையின் தோன்றும் நாட – அழல் போன்ற மலர்களையுடைய வேங்கை மரத்தின்கண் இருந்த மயில் அணிகலன்களை அணிந்த இளமகள் போல் தோன்றும் நாடனே (வேங்கை மலர்கள் பொன்னிறமானவை), இனிது செய்தனையால் நுந்தை வாழியர் – இனிய செயலை நீ செய்ததனால் உன்னை ஈன்ற தந்தை நீடு வாழ்வாராக, நன் மனை வதுவை அயர இவள் பின் இருங்கூந்தல் மலர் அணிந்தோயே – நல்ல இல்லத்தில் திருமணம் நிகழ இவளின் பின்னப்பட்ட கரிய கூந்தலில் மலர்களை நீ அணிந்தாய்

ஐங்குறுநூறு 295, கபிலர், குறிஞ்சித் திணைதலைவி தோழியிடம் சொன்னது
வருவது கொல்லோ, தானே வாராது
அவண் உறை மேவலின் அமைவது கொல்லோ,
புனவர் கொள்ளியின் புகல்வரும் மஞ்ஞை
இருவி இருந்த குருவி வருந்துறப்,
பந்து ஆடு மகளிரின் படர்தரும்
குன்று கெழு நாடனொடு, சென்ற என்  நெஞ்சே?

பாடல் பின்னணி:  தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்தபொழுது அவனுடன் சென்ற தன் நெஞ்சினைத் தலைவி நினைந்து சொன்னது.

பொருளுரை:  புனத்தையுடைய குறவர்கள் கொளுத்திய கொள்ளிக்கு அஞ்சித் தம் புகலிடம் நோக்கிச் செல்லும் மயில்கள், அரிதாளில் இருந்த குருவிகள் பந்தாடு மகளிரைப் போன்று எழுவதும் விழுவதுமாய் வருத்தம் அடையும்படித் தங்கள் சிறகுகளை விரித்து ஆடிச் செல்லும், மலைகள் பொருந்திய நாட்டின் தலைவனுடன் சென்ற என் நெஞ்சம், என்னிடம் மீண்டும் வருமோ? வராது அங்கு அவனுடன் உறைதலை விரும்பி இருக்குமோ?

குறிப்பு:  அவண் உறை மேவலின் அமைவது கொல்லோ (2) – ஒளவை துரைசாமி உரை – அங்கு உறைவதை விரும்பி அமையுமோ, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவ்விடத்தே அதற்குச் சிறந்த உறைவிடம் பொருந்துகையினாலே வராது அமைவது கொல்லோ, மஞ்ஞை இருவி இருந்த குருவி வருந்துறப் பந்து ஆடு மகளிரின் படர்தரும் (3–5) – தி. சதாசிவ ஐயர் உரை – மயில், அரிதாளின்கண் இருந்த குருவிகள் பந்தாடு மகளிரைப் போன்று எழுவது விழுவதாய் வருந்துறச் சிறகை விரித்து ஆடிச் செல்லும், உ. வே. சாமிநாதையர் உரை – மயில் அரிதாளிலேயிருந்த குருவி எழுவதும் விழுவதாய் வருந்துறச் சிறகை விரித்து ஆடிச்செல்லும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மயில் தாமே தினை அரிதாளின் மிசை தமக்குரிய இரையை ஆராய்ந்து கொண்டிருக்கும் எளிய குருவிகள் அஞ்சிப் பதைத்து வருந்தும்படியாக பந்தாட்டம் நிகழ்த்துகின்ற மகளிர் தம் பந்தோடு கைகளை வீசி ஓச்சித் செல்லுதல் போன்று சிறகை விரித்து ஆரவாரத்தோடு செல்லும்.  உள்ளுறை – பழைய உரை – புனவர் கொள்ளிக்கு அஞ்சித் தன் புகலிலே செல்லும் மயில் புனம் கொய்த பின்பு அரிதாளிலே இருந்த குருவி எழுவது விழுவதாய் வருந்துறச் சிறகை விரித்து ஆடிச் செல்லும் நாடன் என்றது, பின்பு வரைந்து கொள்ளக் கருதாதே அலர் அஞ்சித் தன் மனைவயிற் சென்றவன் இக்காலத்து யானும் என் ஆயத்தாரும் வருந்துறப் பிரிந்தான் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – தானே – தான், ஏ அசைநிலைகள், கொல்லோ – ஈரிடத்திலும் ‘கொல்’ ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் இரக்கம், மகளிரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, நெஞ்சே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  வருவது கொல்லோ – என்னிடம் மீண்டும் வருமோ, தானே வாராது அவண் உறை மேவலின் அமைவது கொல்லோ – வராது அங்கு அவனுடன் உறைதலை விரும்பி இருக்குமோ, புனவர் கொள்ளியின் புகல்வரும் மஞ்ஞை இருவி இருந்த குருவி வருந்துறப் பந்து ஆடு மகளிரின் படர்தரும் – புனத்தையுடைய குறவர்கள் கொளுத்திய கொள்ளிக்கு அஞ்சித் தம் புகலிடம் நோக்கிச் செல்லும் மயில்கள் அரிதாளில் இருந்த குருவிகள் பந்தாடு மகளிரைப் போன்று எழுவதும் விழுவதுமாய் வருத்தம் அடையும்படித் தங்கள் சிறகுகளை விரித்து ஆடிச் செல்லும், குன்று கெழு நாடனொடு சென்ற என்  நெஞ்சே – மலைகள் பொருந்திய நாட்டின் தலைவனுடன் சென்ற என் நெஞ்சம்

ஐங்குறுநூறு 296, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல்,
அடுக்கல் மஞ்ஞை கவரும் நாட!
நடுநாள் கங்குலும் வருதி,
கடுமா தாக்கின், அறியேன் யானே.

பாடல் பின்னணி:  இரவுக்குறி வரும் தலைவனிடம், தோழி அவன் வரும் வழியின் இடையூறுகள் கூறிக் குறி மறுத்தது.  வரைவு கடாயது.

பொருளுரை:  குறமகள் காக்கும் பெரிய கொத்துக்களையுடைய தினையை மலைப்பக்கத்தில் வாழும் மயில்கள் கவர்ந்து உண்ணும் நாடனே!  இருள்மிக்க நடு இரவு வேளையிலும் நீ வருகின்றாய்.  கொடிய விலங்குகள் உன்னைத் தாக்கின், என்ன ஆகுமோ என்பதை நான் அறியேன்.

குறிப்பு:  பழைய உரை – அறியேன் யான் என்றது, இதனால் விளைவன யான் அறியேன் என்பதாம்.  குறத்தி காக்கும் தினையை மஞ்ஞை கவரும் நாட என்றது, நின் நாட்டுக்குத் தக்க களவின் நுகர்ச்சியே விரும்புகின்றாய் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – வருதி – முன்னிலை ஒருமை வினைமுற்று, கடுமா – கடி என்னும் உரிச்சொல் திரிபு, கங்குலும் – உம்மை சிறப்பு உம்மை, யானே – ஏகாரம் அசைநிலை.  கடி – கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 87).  அறியேன் யான் (4) – தி. சதாசிவ ஐயர் உரை, உ. வே. சாமிநாதையர் உரை – விளைவன யானறியேன், பொ. வே. சோமசுந்தரனார் உரை – விளையும் தீமைதான் எததகையதாயிருக்கும் என்று கூறவும் யான் அறிகின்றிலேன்.

சொற்பொருள்:  கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல் அடுக்கல் மஞ்ஞை கவரும் நாட – குறமகள் காக்கும் பெரிய கொத்துக்களையுடைய தினையை மலைப்பக்கத்தில் வாழும் மயில்கள் கவர்ந்து உண்ணும் நாடனே, நடுநாள் கங்குலும் வருதி – இருள்மிக்க நடு இரவு வேளையிலும் நீ வருகின்றாய், கடுமா தாக்கின் அறியேன் யானே – கொடிய விலங்குகள் உன்னைத் தாக்கின் என்ன ஆகுமோ என்பதை நான் அறியேன்.

ஐங்குறுநூறு 297 கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை,
பூக்கொய் மகளிரின் தோன்றும் நாட!
பிரியினும் பிரிவது அன்றே,
நின்னொடு மேய மடந்தை நட்பே.

பாடல் பின்னணி:  களவுக் காலத்தில் சில நாட்கள் பிரிந்து மீள்வதாகக் கூறிய தலைவனிடம் தோழி சொன்னது.  வரைவு கடாயது.

பொருளுரை:   பூத்த மலர்கள் விரிந்துள்ள வேங்கை மரத்தின் பெரிய கிளைகளில் தங்கி இருக்கும் மயில்,  பூப்பறிக்கும் மகளிரைப்போல் தோன்றும் நாடனே!  நீ பிரிந்தாலும் பிரியத்தக்கது இல்லை உன்னுடன் பொருந்திய இந்த மடந்தையின் நட்பு.

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – மலர்ந்த வேங்கைச் சினைக்கண் இருந்த தோகை மலர் கொய்யும் மகளிரைப் போலத் தோன்றும் நாட என்றது, நீ மனத்தால் எங்கட்கு நல்லது புரியாய் எனினும் நன்மை செய்கின்றாய் போலத் தோன்றுகின்றாய் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – தோகை – மயிலுக்கு ஆகுபெயர், மகளிரின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, பிரிவது – வினையாலணையும் பெயர், நட்பே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை – பூத்த மலர்கள் விரிந்துள்ள வேங்கை மரத்தின் பெரிய கிளைகளில் இருக்கும் மயில், பூக்கொய் மகளிரின் தோன்றும் நாட – பூப்பறிக்கும் மகளிரைப்போல் தோன்றும் நாடனே,  பிரியினும் பிரிவது அன்றே – நீ பிரிந்தாலும் பிரியத்தக்கது அன்று, நின்னொடு மேய மடந்தை நட்பே – உன்னுடன் பொருந்திய மடந்தையின் நட்பு

ஐங்குறுநூறு 298, கபிலர், குறிஞ்சித் திணைதலைவன் தோழியிடம் சொன்னது
மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும்,
அடுக்கல் நல்லூர் அசை நடைக் கொடிச்சி,
தான் எம் அருளாள் ஆயினும்,
யாம் தன் உள்ளுபு மறந்தறியேமே.

பாடல் பின்னணி:  தலைவன் தோழியை நெருங்கித் தன் குறையைத் தீர்க்குமாறு வேண்டினான். அதற்கு உடன்பட்ட தோழி, தலைவியைக் கண்டு அவள் உடன்பாட்டை வேண்டினாள். தலைவி தன் நாணத்தால் தனக்கும் தலைவனுக்கும் உள்ள உறவை மறைத்தாளாயினும் குறிப்பினால் உடன்பட்டாள். அதைத் தோழி தலைவனிடம் கூறியபொழுது அவன் மகிழ்ந்து இவ்வாறு கூறினான்.

பொருளுரை:  மழையின் வரவை அறிந்து மயில்கள் மகிழ்ந்து ஆடும் (ஆரவாரிக்கும்) மலைப்பக்கத்தில் உள்ள நல்ல ஊரின்கண் வாழும் அசைந்த நடையையுடைய தலைவி, எமக்கு அருள் செய்யாள் ஆயினும், அவளை நினைத்தலை யாம் மறக்க மாட்டோம்.

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – மழையினது வரவை அறிந்து மஞ்ஞை ஆலும் என்றது, யான் நின்னிடத்து வருகின்ற வரவினை அறிந்து இதற்கு அவள் மகிழாநிற்கும்.  நீ கூறுவது பொய் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – மறந்தறியேமே – ஏகாரம் அசைநிலை.  அறியா – அறிந்து என்பது பொருள், செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம், எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, தான் – அசைநிலை, உள்ளுபு – செய்பு என்னும் எச்சம்.

சொற்பொருள்மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும் அடுக்கல் நல்லூர் அசை நடைக் கொடிச்சி – மழையின் வரவை அறிந்து மயில்கள் ஆடும் (ஆரவாரிக்கும்) மலைப்பக்கத்தில் உள்ள நல்ல ஊரின்கண் வாழும் அசைந்த நடையையுடைய என் காதலி, தான் எம் அருளாள் ஆயினும் – எமக்கு அருள் செய்யாள் ஆயினும், யாம் தன் உள்ளுபு மறந்தறியேமே – அவளை நினைத்தலை யாம் மறக்க மாட்டோம்

ஐங்குறுநூறு 299 கபிலர், குறிஞ்சித் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன்,
பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்,
அம் சில் ஓதி அசை நடைக் கொடிச்சி
கண் போல் மலர்தலும் அரிது, இவள்
தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே.

பாடல் பின்னணி:  இயற்கைப் புணர்ச்சியில் கூடியபின், தலைவி ஆயத்தாருடன் நிற்கக் கண்டு, மகிழ்ந்த உள்ளத்தானாய்த் தலைவன் தனக்குள் சொன்னது.

பொருளுரை:  குன்றுகளையுடைய நாடனின் மலைச் சரிவில் உள்ள பசிய சுனையில் பூத்த அகன்ற வாயையுடைய குவளை மலர்களும், அழகிய மென்மையான கூந்தலையும் அசைந்த நடையையும் உடைய கொடிச்சியாகிய தலைவியின் கண் போல் மலர்தல் அரிது.  இவளைப் போலும் மென்மையாக இருத்தல் மயிலுக்கும் அரிது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பைஞ்சுனையின்கண் ஏனைய மலரினும் சிறப்பாக நிரைந்த இதழ்களோடும் அகன்ற வாயோடும் மலர்ந்துள்ள குவளை என்றது, முருகனால் விரும்பிச் சூடப்படுகின்ற தெய்வத்தன்மையுடைய பரிய (பருத்த) குவளை மலரை என்க.  பண்டை நாள், சுனை முதலியவற்றின்கண் ஏனைய மலரினும் காட்டில் இதழ் மிக்கதாய்ப் பரியதாய்க் காணப்படும் மலர் தெய்வங்களால் விரும்பப்படும் இயல்புடையது என்றும், அவற்றை மக்கள் கண்டு இன்புறலாம் அன்றி தீண்டுதல் கூடாது என்றும், தீண்டின் தெய்வத்தான் ஒறுக்கப்படுவர் என்றும் தமிழ்மக்கள் கருதினர்.  இதனை, ‘நீத்துடை நெடுங்கயந் தீப்பட மலர்ந்த கடவுளள் ஒண்பூ அடைதல் ஓம்பி’ (பெரும்பாணாற்றுப்படை 289–290) எனவும், ‘நிரை இதழ்க் குவளைக் கடிவீ தொடினும் வரையர மகளிர் இருக்கை காணினும் உயிர் செல வெம்பிப் பனித்தலும் உரியிர்’ (மலைபடுகடாம் 189–191) எனவும், ‘கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த பறியாக் குவளை மலரொடு’ (நற்றிணை 34) எனவும், பிறசான்றோர் கூறுமாற்றாலும் அறிக.  இனி திருமுருகாற்றுப்படையில் ‘சுரும்பு மூசா சுடர்ப்பூ காந்தள்’ என்பதற்கு, சுரும்பு மூசாமைக்கு ஏதுக் கூறும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘அதனை முருகன் விரும்புதல்’ என உரை வகுத்தமையும் உணர்க. ஈண்டுந் தலைவன் அச்சிறப்புடைய தெய்வக் குவளை மலரையே கூறுவான், குன்றநாடன் குன்றத்துச் சுனைப்பூத்த பகுவாய்க் குவளையும் என உயர்வு சிறப்பும்மையோடு விதந்து ஓதினான்.  விதந்து – சிறப்பித்து எடுத்துக் கூறுதல்.  இலக்கணக் குறிப்பு – கவாஅன் – செய்யுளிசை அளபெடை, மஞ்ஞைக்கும் – உம்மை சிறப்பு, அரிதே – ஏகாரம் அசைநிலை.  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).  குன்ற நாடன் (1) – பழைய உரை – குன்றநாடன் என்றது அந்நிலத்துக்கு உரியனாகிய முருகன், பொ. வே. சோமசுந்தரனார் உரை – குன்றநாடன் என்றது குறிஞ்சிக்கடவுளாகிய முருகப் பெருமானை, உ. வே. சாமிநாதையர் உரை – அந்நிலத்திற்குரிய முருகவேள், தலைவியின் தந்தையுமாம்.

சொற்பொருள்:  குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன் பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும் அம் சில் ஓதி அசை நடைக் கொடிச்சி கண் போல் மலர்தலும் அரிது – குன்றுகளையுடைய நாடனின் மலைச் சரிவில் உள்ள பசிய சுனையில் பூத்த அகன்ற வாயையுடைய குவளை மலர்களும் அழகிய சிலவாகிய (மென்மையான) கூந்தலையும் அசைந்த நடையையும் உடைய கொடிச்சியாகிய தலைவியின் கண் போல் மலர்தல் அரிது, இவள் தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே – இவளைப் போலும் மென்மையாக இருத்தல் மயிலுக்கும் அரிது

ஐங்குறுநூறு 300, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கொடிச்சி கூந்தல் போலத் தோகை
அம் சிறை விரிக்கும் பெருங்கல் வெற்பன்
வந்தனன், எதிர்ந்தனர் கொடையே,
அம் தீம் கிளவி பொலிக நின் சிறப்பே.

பாடல் பின்னணி:  தலைவன் வரைவு வேண்ட, தலைவியின் குடும்பத்தார் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டனர் என்னும் நற்செய்தியை அவளிடம் கூறுகின்றாள் தோழி.

பொருளுரை: குறிஞ்சி நிலப் பெண்ணின் கூந்தலைப் போன்று உள்ள தன் அழகிய சிறகுகளை விரித்து ஆடும் மயில்களை உடைய பெரிய மலை நாடன் வந்தான், உன்னைப் பெண் கேட்பதற்கு.  நம் குடும்பத்தார் உன்னை அவனுக்குத் தருவதற்கு ஒத்துக்கொண்டனர். அழகிய இனிய சொற்களையுடையவளே!  பொலிவு அடையட்டும் உன்னுடைய சிறப்பு.

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – கொடிச்சி கூந்தல் போல வேண்டி மஞ்ஞை சிறகை விரிக்கும் வெற்பன் என்றது, நின் மகிழ்ச்சிக்கு தக நின் தமர் மகிழ்ச்சி கூர்ந்தார் என்பதாம், புலியூர்க் கேசிகன் உரை – கொடிச்சி கூந்தல் போல மஞ்ஞை சிறகை விரிக்கும் வெற்பன் என்றது, நின் மகிழ்ச்சிக்கு தகுந்தவாறு தமரும் மகிழ்ச்சியோடு அவனுக்கே நின்னை கொடை நேர்ந்தனர் என்பது.  இலக்கணக் குறிப்பு – அம் தீம் கிளவி – அன்மொழித்தொகை, சிறப்பே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  கொடிச்சி  – குறிஞ்சி நிலப் பெண், கூந்தல் போலத் தோகை – கூந்தல் போன்ற தோகையுடைய, அம் சிறை – அழகிய சிறகுகளை, விரிக்கும் – விரிக்கும், பெருங்கல் வெற்பன் – பெரிய மலையின் தலைவன், வந்தனன் – வந்தான், எதிர்ந்தனர் –  ஏற்றுக்கொண்டனர், ஒத்துக்கொண்டனர் (உன் பெற்றோர்கள்), கொடையே – (உன்னை அவனுக்கு) தருவதற்கு, அம் தீம் கிளவி – அழகிய இனியச் சொற்களை உடையவளே, பொலிக நின் சிறப்பே – உன் சிறப்பு பொலியட்டும்

ஓதலாந்தையார், பாலைத் திணை பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

இங்கு நிகழ்பவை:  தலைவன் பொருள் ஈட்டும்பொருட்டுப் பிரிவான், கொடிய பாலை நிலத்தைக் கடந்து அவன் செல்வான், வருந்தும் தலைவியைத் தோழி ஆற்றுப்படுத்துவாள், தலைவன் தலைவியை எண்ணி தன் நெஞ்சிடம் தன் உணர்வுகளைக் கூறுவான், தலைவனும் தலைவியும் உடன்போக்கில் செல்லுவார்கள், செவிலித்தாய் அவர்களைத் தேடிச் செல்வாள், வழிப்போக்கர்கள் வருந்தும் அவளிடம் பேசுவார்கள், இல்லத்தில் இருக்கும் நற்றாய் பெரிதும் வருந்துவாள், பாலை நிலத்தில் ஆறலைக் கள்வர்கள் வழிப்போக்கர்களைத் துன்புறுத்துவார்கள், அவர்களைக் கொன்று அவர்கள் உடலை இலைகளால் மறைப்பார்கள், கழுகுகள் பிணத்திற்காகக் காத்திருக்கும், கொடிய விலங்குகள் கொல்லும் பொருட்டு மறைந்திருக்கும்.

செலவு அழுங்குவித்த பத்து

பாடல்கள் 301–310 – தலைவன் பிரியக் கருதியபோது, தலைவியின் நிலையை எடுத்துக் கூறிச் செலவைக் கைவிடுமாறு தோழி அவனிடம் வேண்டிச் செலவைத் தவிர்த்தது.

ஐங்குறுநூறு 301, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர்
அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும்,
அவ் வரை இறக்குவையாயின்,
மை வரை நாட! வருந்துவள் பெரிதே.

பாடல் பின்னணி:  பொருள் ஈட்டும்பொருட்டுப் பிரிய எண்ணிய தலைவன் அதைத் தோழியிடம் கூறினான்.  அப்பொழுது அவள் தலைவனிடம் சொன்னது.

பொருளுரை:  கருமுகில் தவழும் மலைநாடனே!   பெரிய வெள்ளோத்திர மரத்தின் குற்றமற்ற வெள்ளை நிறப் பூங்கொத்துக்களைக் கடத்தற்கு அரிய பாலை நிலத்தில் செல்பவர்கள் தலையில் அணியும் வழியில் நீ  ல்வாய் ஆயின், இவள் பெரிதும் வருந்துவாள்.

குறிப்பு:  பழைய உரை – வெள்ளிலோத்திரத்துக் குளிர்ச்சியுடைய மலரை ஆற்றின் வெம்மை தீரச் செல்வோர் அணிந்து செல்வர் என்றுழி வெம்மை கூறியவாறாயிற்று. வெள்ளோத்திரம் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெள்ளிலோத்திரம் ஈண்டு வெள்ளோத்திரம் என மருவி நின்றது.  இடைக்குறை எனினுமாம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ செல்லக்கருதிய பாலையிற் செல்வோர் அதன் வெம்மையை ஆற்றுவதற்கு  வெள்ளோத்திர மலரினும் உளது.  அந்தோ நீ பிரியின் அவள் அப் பிரிவு ஆற்றாது வெம்பும் வெப்பத்தை ஆற்றுவிக்க யான் மருந்தறியேன் காண் என்பது.  இலக்கணக் குறிப்பு – பெரிதே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர் அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும் – பெரிய வெள்ளோத்திர மரத்தின் குற்றமற்ற வெள்ளை நிறப் பூங்கொத்துக்களைக் கடத்தற்கு அரிய பாலை நிலத்தில் செல்பவர்கள் தலையில் அணியும், அவ் வரை இறக்குவை ஆயின் – அத்தகைய வழியில் செல்வாய் ஆயின், மை வரை நாட – கருமுகில் தவழும் மலைநாடனே, வருந்துவள் பெரிதே  – இவள் பெரிதும் வருந்துவாள்

ஐங்குறுநூறு 302, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
அரும் பொருள் செய் வினை தப்பற்கும் உரித்தே,
பெருந்தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்,
செல்லாய் ஆயினோ நன்றே,
மெல்லம்புலம்ப, இவள் அழப் பிரிந்தே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரியும் தலைவன் பிரிவு உடன்படுத்த வேண்டும் என்றான்.  அதற்குத் தோழி அவனிடம் கூறியது.

பொருளுரை:  மெல்லிய நெய்தல் நிலத்தின் தலைவனே!  அரிய பொருளை ஈட்டும் முயற்சி வெற்றி அடையாமல் இருப்பதற்கும் உரியது.  பெரிய தோளினையுடைய நின் காதலி நின்னைத் தடுப்பதற்கு உரியவள் ஆவாள். இவள் அழுமாறு, நீ இவளைப் பிரிந்து செல்லாது இருந்தால் நல்லது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ இவள் தகைப்பளென்று அஞ்சி அவட்குக் கூறாமலே போவாய் எனின் அதுதானும் பேரருள் உடையாய்க்கு ஒவ்வாது காண் என்றாள், மெல்லம்புலம்ப என்று அவனது அருட்பண்பினை அவன் நிலத்தின் மேலேற்றி விளித்தனள்.  இவள் அழுது அழுது சாம்படி நீ செல்லாமையே நன்று என்பாள், செல்லாய் ஆயின் நன்று என்றாள்.  எனவே, செல்வாயாயின் இவள் இறந்துபடுதலின் தீதாகவே முடியும் என்பது குறிப்பெச்சமாயிற்று.  இலக்கணக் குறிப்பு – உரித்தே – ஏகாரம் அசைநிலை, தகைத்தற்கும் – உம்மை உயர்வு சிறப்பு, பிரிந்தே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  அரும் பொருள் செய் வினை தப்பற்கும் உரித்தே – அரிய பொருளை ஈட்டும் முயற்சி வெற்றி அடையாமல் இருப்பதற்கும் உரிது, பெருந்தோள் அரிவை தகைத்தற்கும் உரியள் – பெரிய தோளினையுடைய நின் காதலி நின்னைத் தடுப்பதற்கு உரியவள், செல்லாய் ஆயினோ நன்றே – நீ செல்லாது இருந்தால் நல்லது, மெல்லம்புலம்ப – மெல்லிய நெய்தல் நிலத்தின் தலைவனே, இவள் அழப் பிரிந்தே – இவள் அழுமாறு பிரிந்து

ஐங்குறுநூறு 303, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
புதுக் கலத்தன்ன கனிய ஆலம்
போகில் தனைத் தடுக்கும் வேனில் அருஞ்சுரம்,
தண்ணிய இனியவாக,
எம்மொடுஞ் சென்மோ, விடலை நீயே.

பாடல் பின்னணி:  பொருள் ஈட்டப் பிரியும் தலைவனிடம் தானும் உடன்வருவதாகத் தலைவி கூறினாள்.  சுரம் கடத்தற்கு அரியது எனக் கூறி அவள் வேண்டுகோளை அவன் மறுத்தான்.  அவனிடம் தோழி சொன்னது.

பொருளுரை:   பாலை நிலத்தின் தலைவனே!  புதிய மண் பாத்திரத்தைப் போல் (சிவப்பாக) உள்ள ஆல மரத்தின் இனிய பழங்களை உண்ண வரும் போகில் பறவைகள், பாலை நிலத்தின் கடுமையான வெப்பத்திற்கு அஞ்சி அம்மரத்தை விட்டு விலகாமல் அங்குத் தங்கியிருக்கும்.  அப்படிப்பட்ட செல்வதற்கு அரிய (கடினமான) வழியில் என் தோழியுடன் நீ சென்றால், குளிர்ச்சியும் இனிமையும் உனக்குக் கிடைக்கும்.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கனியுடைய ஆலமரம் பறவையின் செலவைத் தடுத்துத் தன்பால் இருத்திக் கொள்ளும் வேனில் என்றது, எம் பெருமாட்டியை உடன் கொண்டு போகாய் எனின் அவள் ஒருதலையாக நின் செலவினைத் தடுத்து தன்பால் இருத்திக்கொள்வள் என்பது.  இலக்கணக் குறிப்பு –  கலத்து – கலம், அத்து சாரியை, அன்ன – உவம உருபு, கனிய – வினையாலணையும் பெயர், தண்ணிய – வினையாலணையும் பெயர், இனிய – வினையாலணையும் பெயர், சென்மோ – மோ முன்னிலையசை, விடலை – விளி, நீயே – ஏகாரம் அசைநிலை.  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்:  புதுக் கலத்தன்ன – புது மண் பானையைப் போல்,  கனிய – பழங்களையுடைய, ஆலம் – ஆல மரம், போகில் – போகில் என்ற வகைப்  பறவைகள்,  தனைத் தடுக்கும் – அதைத் தடுக்கும்,  வேனில் – கோடைக் காலம்,  அருஞ்சுரம் – செல்வதற்கு அரிய (கடினமான) பாலை நிலம்,  தண்ணிய – குளிர்ந்த, இனியவாக – இனியவாக,  எம்மொடுஞ் சென்மோ – என் தோழியுடன் சென்றால், விடலை – பாலை நிலத்தின் தலைவனே, நீயே – நீ

ஐங்குறுநூறு 304, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய
ஆன் நீர்ப் பத்தல் யானை வெளவும்
கல் அதர்க் கவலை செல்லின், மெல்லியல்
புயல் நெடும் கூந்தல் புலம்பும்,
வயமான் தோன்றல்! வல்லாதீமே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிய எண்ணிய தலைவனிடம் தோழி சொன்னது.

பொருளுரை:  அறியாமையுடைய இடையர்கள் தங்களின் பசுக்கள் நீர் குடிப்பதற்காகக் கோலினால் பள்ளங்களைத் தோண்டுவார்கள்.  அதில் நிறையும் நீரை யானைகள் குடிக்கும்.  பல பிரிவுகள் உள்ள அந்த மலைப் பாதையில் நீ சென்றால், வளமான நீண்ட கூந்தலை உடைய என் தோழி தனிமையால் வருந்துவாள்.  குதிரைகள் உடைய தலைவனே!  நீ அவ்வாறு  வல்லமையுடன் செல்லாதே.

குறிப்பு:  பழைய உரை – வல்லாதீமே என்றது எல்லாம் வல்லாய் ஆயினும் இது மாட்டாயாதற்கு மேற்பட்ட தலைமை இல்லை என்றவாறு.  உள்ளுறை – புலியூர்க் கேசிகன் உரை – கோவலர் நீரை யானை வௌவிக் கொண்டு அவரை நலிவுக்கு உட்படுத்தலே போல, இவள் நலனையும் பசலை பற்றிப் பறித்து வௌவிக் கொண்டு, இவளைப் பெரிதும் நலியச் செய்யும் என்பது,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கோவலர் கோல் கொண்டு அரிதின் முயன்று தோண்டிய குழியின் நீரை அயன்மையுடைய காட்டு யானைகள் கவர்ந்து கொள்ளுதற்கிடமான கல்லதர் என்றது, நீ இவளைப் பிரிந்து செல்லின் இவளது ஒப்பற்ற பேரெழில் பசலைப் பாய்ந்து அழியும் என்றது. கோவலர் குந்தாலி முதலியன இன்றிக் கோலாலே தோண்டிய குழியின் நீர் என்றது, கொள்வாரும் கொடுப்பாருமின்றி நீயிரே நும்முள் தலைப்பட்டு மேற்கொண்ட காதல் வாழ்க்கை என்பது.  ஆன் உண்ணாது யானை உண்ணும் என்றது நீ நுகராமல் பசலை உண்டழிக்கும் என்றது.  வயமான் தோன்றல் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாடல் 304 – குதிரைகளை ஊர்தலில் வல்லவனான பெருமானே, பாடல் 500 – அரிமான் போன்ற ஆற்றல் மிக்க பெருமானே.  ஒளவை துரைசாமி உரை – பாடல் 304 – வலிமிக்க குதிரைகளையுடைய தலைவனே, பாடல் 500–5 – புலி போலும் ஆற்றலையுடைய தலைவ.  இலக்கணக் குறிப்பு – மெல்லியல் – அன்மொழித்தொகை, நெடுங்கூந்தல் – அன்மொழித்தொகை, தோன்றல் – விளி, வல்லாதீமே – முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல், ஏகாரம் அசைநிலை.  புயல் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மழைக்கால்.  மெல்லியல் புயல் நெடுங்கூந்தல் – இப்பன்மொழித் தொடர் தலைவியைக் குறித்தது.

சொற்பொருள்:  கல்லாக் கோவலர் – அறியாமையுடைய இடையர்கள், கோலின் தோண்டிய – கோலினால் தோண்டிய, ஆன் – பசு, நீர்ப் பத்தல் – நீர் நிறையும் பள்ளம், யானை வெளவும் – யானைக் குடிக்கும், கல் அதர் – மலைப் பாதை அல்லது கல் நிறைந்த  வழி, கவலை – பிரிவுகள் உடைய வழி, செல்லின் – சென்றால், மெல்லியல் – மென்மையான என் தோழி, புயல் நெடும் கூந்தல் – மேகம் போன்ற கரிய நீண்ட கூந்தல், புலம்பும் – தனிமையில் வருந்தும், வயமான் – குதிரைகள் உடைய, தோன்றல் – தலைவனே, வல்லாதீமே – நீ வல்லமை இல்லாது இருப்பாயாக

ஐங்குறுநூறு 305, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
களிறு பிடி தழீஇப் பிற புலம் படராது,
பசி தின வருந்தும் பைது அறு குன்றத்துச்,
சுடர் தொடிக் குறுமகள் இனைய,
எனைப் பயன் செய்யுமோ விடலை, நின் செலவே?

பாடல் பின்னணி:  தலைவி வேண்டிய உடன்போக்கை மறுத்துத் தனியே செல்வேன் என்ற தலைவனிடம் தோழி சொன்னது.

பொருளுரை:  பசுமை இல்லாத குன்றத்தில், பசிப்பிணி தன்னைத் தின்பது போல் வருத்தம் தரும் என்றாலும், களிற்று யானை தன் பிடியைத் தழுவிக் கொண்டு அங்கேயே இருக்கும்.  அது உணவைத் தேடி பிற புலங்களுக்குச் செல்லாது.  ஒளிவிடும் வளையல்களை அணிந்த இளையவளாகிய இவள் வருந்துமாறு நீ செல்வதனால், என்ன பயன்?

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – களிறு பிடி ………… வருந்தும் என்றது, நீ அவற்றைக் கண்டால் செல்லாய் என்பதாம், புலியூர்க் கேசிகன் உரை – பிடி தழீஇய களிறு உணவற்றதாற் பசி மிக்கெழுந்து வருத்தஞ் செய்யும் நிலையினும் அதனைப் பிரிந்து செல்லாதே உடனிருக்கும் குன்றம் என்றது, அதனைக் காணும் நீயும் நின் செயற்கு வருந்தி துயருட்படுவை யாதலின், நீ மேற்கொண்ட வினையானும் நின் மனம் முற்றச் செல்லாத நிலையில், அதுவும் பயன் தராது போகும் என்றது.  இலக்கணக் குறிப்பு –  தழீஇ – செய்யுளிசை அளபெடை, தின – தின்ன என்பதன் விகாரம், செய்யுமோ – ஓகாரம் எதிர்மறை, விடலை – விளி, செலவே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  களிறு பிடி தழீஇப் பிற புலம் படராது – களிற்று யானை தன் பிடியைத் தழுவிப் பிற புலங்களுக்குச் செல்லாது, பசி தின வருந்தும் – பசிப்பிணி தன்னைத் தின்பது போல் வருத்தம் தரும், பைது அறு குன்றத்து – பசுமை இல்லாத குன்றத்தில் , சுடர் தொடிக் குறுமகள் இனைய – ஒளிவிடும் வளையல்களை அணிந்த இளையவளாகிய இவள் வருந்துமாறு, எனைப் பயன் செய்யுமோ – என்ன பயனைச் செய்யுமோ, விடலை – தலைவா, நின் செலவே – நின் செலவு

ஐங்குறுநூறு 306, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வெல் போர்க் குரிசில்! நீ வியன் சுரம் இறப்பின்,
பல் காழ் அல்குல் அவ்வரி வாடக்
குழலினும் இனைகுவள் பெரிதே
விழவு ஒலி கூந்தல் மாஅயோளே.

பாடல் பின்னணி:  பொருள் ஈட்டப் பிரியும் தலைவனிடம் தோழி தலைவியின் பிரிவாற்றாமையை உரைத்தது.

பொருளுரை:   போரினை வெல்லும் தலைவனே!  அகன்ற காட்டிற்கு நீ சென்றால், மணிகள் கோத்தச் சரங்களை அணிந்த அல்குலில் உள்ள அழகிய வரிகள் வாட, இவள் பெரிதும் வருந்துவாள்.  குழலைக் காட்டிலும் அதிகமான ஒலியுடன் அழுவாள், விழாக்களின் நறுமணத்தைக் கொண்ட அடர்ந்த கூந்தலையுடைய இந்த மாமை நிறத்தையுடையவள்.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பல்காழ் அல்குல் அவ்வரி வாட இனைகுவள் என்றது, நீ செல்லின் இவள் உண்டியிற் குறைந்து உடம்பு நனி சுருங்கிக் கண்துயில் மருத்துக் கலங்குதல் ஒருதலை என்றவாறு.  இலக்கணக் குறிப்பு – வெல்போர் – வினைத்தொகை, குரிசில் – விளி, குழலினும் – உம்மை சிறப்பு, பெரிதே – ஏகாரம் அசைநிலை, தேற்றம், மாஅயோளே – அளபெடை, ஏகாரம் அசைநிலை.  ஒப்புமை – புறநானூறு 143 – குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே.

சொற்பொருள்:  வெல் போர்க் குரிசில் – போரினை வெல்லும் தலைவனே, நீ வியன் சுரம் இறப்பின் – அகன்ற காட்டிற்கு நீ சென்றால், பல் காழ் அல்குல் அவ்வரி வாட – மணிகள் கோத்த சரங்களை அணிந்த அல்குலில் உள்ள அழகிய வரிகள் வாட (அல்குல் – இடை, இடைக்குக் கீழ் உள்ள பகுதி), குழலினும் – குழலைக் காட்டிலும், இனைகுவள் – வருந்துவாள், பெரிதே – பெரிதாக, மிகவும், விழவு ஒலி கூந்தல் – விழாக்களின் நறுமணத்தைக் கொண்ட அடர்ந்த கூந்தல், மாஅயோளே – மாமை நிறத்தையுடைய பெண், மாந்தளிர் நிறத்தையுடைய பெண்

ஐங்குறுநூறு 307, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
ஞெலி கழை முழங்கு அழல் வயமா வெரூஉம்,
குன்று உடை அருஞ்சுரம் செல அயர்ந்தனையே,
நன்று இல் கொண்க, நின் பொருளே,
பாவை அன்ன நின் துணை பிரிந்து வருமே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரியக் கருதிய தலைவன் அதன் சிறப்பைக் கூறியபோது தோழி அதனை இழித்துக் கூறியது.

பொருளுரை:  தலைவனே!  மூங்கில்கள் ஒன்றோடொன்று உரசுவதால் பிறந்த ஆரவாரித்து எழும் நெருப்பைக் கண்டு வலிமையுடைய புலிகள் அஞ்சும் குன்றுகள் பொருந்திய கடத்தற்கு அரிய பாலை நிலத்திற்குச் செல்வதற்கு நீ கருதுகின்றாய். பாவை போலும் அழகுடைய நின் காதலியை நீ பிரிந்துபோய் வருவதால், நீ ஈட்டும் பொருள் நல்லது இல்லை.

குறிப்பு:  உள்ளுறை – புலியூர்க் கேசிகன் உரை – மூங்கில்கள் உரசுதலாலே எழுந்த முழங்கு அழல் கண்டு வயப்புலி அஞ்சும் என்றது, அன்பினாலே இணைந்த நும்மிடைத் தோன்றும் பிரிவென்னும் பெரு நெருப்பைக் கண்டு, யானும் பெரிதும் அஞ்சுகின்றேன் என்பது. பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஞெலி கழை முழங்கு அழல் வயமா வெரூஉம் குன்று என்றது, மூங்கிற் புதரையே புகலிடமாகக் கொண்டு அதன்கண் இனிதே உறங்கும் புலி, அதன் கோலிலேயே தோன்றிய தீக்கு அஞ்சுதல்போன்று நின்னையே புகலிடமாகக் கொண்டு நின்னருளிலேயே இனிது வாழும் எம் பெருமாட்டி நின் நெஞ்சத்தே தோன்றிய இக் கருத்தினை உணரின் வருந்துவள் என்பது.  கொண்க (30) – அ. தட்சிணாமூர்த்தி உரை – கடற்கரைக்குத் தலைவனே, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெருமானே.  இலக்கணக் குறிப்பு – வெரூஉம் – செய்யுளிசை அளபெடை, செல – இடைக்குறை, பிரிந்து – பிரிய என்று செய என எச்சப்பொருள் தந்தது, அயர்ந்தனையே – ஏகாரம் அசைநிலை, தேற்றம், அன்ன – உவம உருபு, பொருளே – ஏகாரம் பிரிநிலை, வருமே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  ஞெலி கழை முழங்கு அழல் வயமா வெரூஉம் – மூங்கில்கள் ஒன்றோடொன்று உரசுவதால் பிறந்த ஆரவாரித்து எழும் நெருப்பைக் கண்டு வலிமையுடைய புலிகள் அஞ்சும் (ஞெலி – உரசுதல்), குன்று உடை அருஞ்சுரம் செல அயர்ந்தனையே – குன்றுகள் பொருந்திய கடத்தற்கு அரிய பாலை நிலத்திற்குச் செல்வதற்கு நீ கருதுகின்றாய், நன்று இல் – நல்லது இல்லை, கொண்க – கொண்கனே, தலைவனே, நின் பொருளே – நீ ஈட்டும் பொருள், பாவை அன்ன நின் துணை பிரிந்து வருமே – பாவை போலும் அழகுடைய நின் காதலியை நீ பிரிந்துபோய் வருவதால்

ஐங்குறுநூறு 308, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பல் இருங்கூந்தல் மெல்லியலோள் வயின்
பிரியாய் ஆயினும் நன்றே, விரி இணர்க்
கால் எறுழ் ஒள் வீ தாஅய,
முருகு அமர் மா மலை பிரிந்தெனப், பிரிமே.

பாடல் பின்னணி:  ‘பொருள் ஈட்டுவதற்கு நான் பிரிவேன்’ என்ற தலைவனிடம், ‘இம்மலை எம்மை விட்டுப் பிரிந்தால் நீயும் பிரி’ எனத் தோழி சொன்னது.

பொருளுரை:  அடர்ந்த கரிய கூந்தலையுடைய மெல்லிய இயல்பினையுடைய தலைவியை நீ பிரியாதிருந்தால் நல்லது. நீ பிரிய விரும்பினால், விரிந்த மலர்க்கொத்துக்கள் பொருந்திய எறுழ் மரத்தின் ஒளியுடைய மலர்கள் உதிர்ந்து பரவிய முருகன் விரும்பும் இப்பெரிய மலை எம்மைவிட்டுப் பிரியும்போது, நீயும் பிரிவாயாக.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு – ஆயினும் – உம்மை எச்சப்பொருட்டு, நன்றே – ஏகாரம் அசைநிலை, தாஅய – செய்யுளிசை அளபெடை, பிரிமே – மே முன்னிலையசை.  முருகு அமர் மா மலை பிரிந்தெனப் பிரிமே (4) – ஒளவை துரைசாமி உரை – முருகன் விரும்பும் இப்பெரிய மலையிடத்து இப்பருவத்தே எங்களைவிட்டு பிரிக, தி. சதாசிவ ஐயர் உரை – முருகணங்கு வீற்றிருக்கும் பெரிய மலையானது எங்களைவிட்டுப் பிரிய நீயும் பிரிவாயாக, உ.வே. சாமிநாதையர் உரை – முருக்கக்கடவுள் பிரிய நீ பிரிவாயாக, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முருகப்பெருமான் தான் விரும்புகின்ற இந்தப் பெரிய மலையைப் பிரியும் பொழுது அவளைப் பிரிந்து செல்வாய்.

சொற்பொருள்:  பல் இருங்கூந்தல் மெல்லியலோள் வயின் பிரியாய் ஆயினும் நன்றே – பலவாகிய (அடர்ந்த) கரிய கூந்தலையுடைய மெல்லிய இயல்பினையுடைய தலைவியை நீ பிரியாதிருந்தால் நல்லது, விரி இணர்க் கால் எறுழ் ஒள் வீ தாஅய முருகு அமர் மா மலை பிரிந்தெனப் பிரிமே – விரிந்த மலர்க்கொத்துக்கள் பொருந்திய எறுழ் மரத்தின் ஒளியுடைய மலர்கள் பரவிய முருகன் விரும்பும் இப்பெரிய மலை எம்மைவிட்டுப் பிரியும்போது நீயும் பிரிவாயாக (அமர், விருப்பம் இணர் – கொத்து)

ஐங்குறுநூறு 309, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து
செலவு அயர்ந்தனையால் நீயே நன்று,
நின் நயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன்
முறுவல் காண்டலின் இனிதோ,
இறுவரை நாட, நீ இறந்து செய் பொருளே?

பாடல் பின்னணி:  ‘பொருள் ஈட்டுவதற்கு நான் பிரிவேன்’ என்ற தலைவனிடம், தோழி சொன்னது

பொருளுரை:  பெரிய மலையின் தலைவனே!  வேனில் பருவத்தின்கண் வெப்பம் மிக்க சுரத்தைக் கடந்து செல்லும் முயற்சியை மேற்கொண்டாய்.  பெரிதும் உன்னை விரும்பி வாழும் இவளின் தலைச் சூலில் பிறந்த சிறுவனுடைய முறுவலைக் கண்டு மகிழ்வதைவிடவும் இனியதோ, நீ சுரத்தைக் கடந்து ஈட்டக் கருதும் பொருள்?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – திங்கள் ஈண்டுப் பருவத்தின் மேற்று. நன்று என்னும் உரிச்சொல் மிகுதிப்பொருட்டு.  கடுஞ்சூல் தலைச்சூல்.  இலக்கணக் குறிப்பு – அயர்ந்தனையால் – ஆல் அசைநிலை, காண்டலின் – இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது, இனிதோ – ஓகாரம் வினா, பொருளே – ஏகாரம் அசைநிலை.  இறுவரை (5) – அ. தட்சிணாமூர்த்தி உரை – பெரிய மலை, முறிந்த மலையுமாம், ஒளவை துரைசாமி உரை – கற்கள் முறிந்து சரிந்து கிடக்கும் பக்கத்தையுடைய மலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – செங்குத்தாக உயர்ந்திருக்கும் மலை.  நன்று – நன்று பெரிது ஆகும் (தொக்காப்பியம், உரியியல் 45).

சொற்பொருள்:  வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து செலவு அயர்ந்தனையால் நீயே – வேனில் பருவத்தின்கண் வெப்பம் மிக்க சுரத்தைக் கடந்து செல்லும் முயற்சியை மேற்கொண்டாய், நன்று நின் நயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன் முறுவல் காண்டலின் இனிதோ – பெரிதும் உன்னை விரும்பி வாழும் இவளின் தலைச் சூலில் (முதல் கர்ப்பத்தில்) பிறந்த சிறுவனுடைய முறுவலைக் கண்டு மகிழ்வதைவிடவும் இனியதோ, இறுவரை நாட – பெரிய மலையின் தலைவனே, நீ இறந்து செய் பொருளே – நீ சுரத்தைக் கடந்து ஈட்டக் கருதும் பொருள்

ஐங்குறுநூறு 310, ஓதலாந்தையார், பாலைத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல்,
இலங்கு வளை மெல் தோள் இழை நிலை நெகிழப்
பிரிதல் வல்லுவை ஆயின்,
அரிதே விடலை, இவள் ஆய் நுதல் கவினே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிகின்ற தலைவனிடம் தோழி ‘நீ நினைக்கின்ற கருமம் முடித்தாய் ஆயினும், இவள் நலம் மீட்டற்கு அரிது’ எனக் கூறிச் செலவு அழுங்குவித்தது.

பொருளுரை:  தலைவனே!  பொன்னால் செய்யப்பட்ட பசிய வட்ட வடிவமான காசுகளை வரிசையாகக் கோத்து அணிந்த அல்குலையும், ஒளிரும் வளையல்களையும் மெல்லிய தோள்களையுமுடைய இவளுடைய அணிகலன்கள் நெகிழுமாறு நீ பிரிவதற்கு வல்லமை உடையை ஆயின், இவளுடைய ஆராய்ந்து அழகெனக் கருதப்பட்ட நெற்றியின் அழகை மீண்டும் காண்பது அரிதாகும்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – பிரிந்தவழி எய்தும் மெலிவினால் வளையும் இழையும் நெகிழ்தல் ஒருதலையாதலின், நிலை நெகிழ என்றும், காதலாற் பிணிப்புண்டு ஈருடலும் ஓருயிருமாய் நிற்பார் ஒருவனின் ஒருவர் பிரிதல் அருமை தோன்றப் பிரிதல் வல்லுவையாயின் என்றும், அரிதிற் பிரிதலும், பிரிந்து வினை முடித்தலும் வல்லாயாயினும், இவள் நுதற்கவினை மீட்கும் வன்மையுடையை அல்லை என்பாள், கவின்மேல் ஏற்றி அரிது என்றும் கூறினாள். ‘நின் அளி பெற நந்தும் இவள் ஆய்நுதற் கவினே’ (கலித்தொகை 53) எனப் பிறரும் கூறுதல் காண்க.  இலக்கணக் குறிப்பு – அல்குல் – அன்மொழித்தொகை, அரிதே – ஏகாரம் அசைநிலை, விடலை – விளி, கவினே – ஏகாரம் அசைநிலை.  ஆய் நுதல் – ஒளவை துரைசாமி உரை – சிறுநுதல், தி. சதாசிவ ஐயர் உரை – அழகு மிகுந்த நெற்றி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆராய்ந்து நன்றென்றற்குக் காரணமான திருநுதல்.

சொற்பொருள்:  பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் இலங்கு வளை மெல் தோள் இழை நிலை நெகிழப் பிரிதல் வல்லுவை ஆயின் – பொன்னால் செய்யப்பட்ட பசிய (புதிய) வட்ட வடிவமான காசுகளை வரிசையாகக் கோத்து அணிந்த அல்குலையும் ஒளிரும் வளையல்களையும் மெல்லிய தோள்களையுமுடைய இவளுடைய அணிகலன்கள் நெகிழுமாறு நீ பிரிவதற்கு வல்லமை உடையை ஆயின் (அல்குல் – இடை, இடைக்குக்கீழ் உள்ள பகுதி), அரிதே – காண்பதற்கு அரிது, விடலை – தலைவனே, இவள் ஆய் நுதல் கவினே – இவளுடைய ஆராய்ந்து அழகெனக் கருதப்பட்ட நெற்றியின் அழகு, இவளுடைய சிறிய அழகிய நெற்றி

செலவுப் பத்து

பாடல்கள் 311–320 – பாலையின் உரிப்பொருளாகிய பிரிவு பற்றிய பாடல்கள் இவை.

ஐங்குறுநூறு 311, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்,
ஆர் இடைச் செல்வோர் ஆறு நனி வெரூஉம்
காடு இறந்தனரே காதலர்,
நீடுவர் கொல், என நினையும் என் நெஞ்சே.

பாடல் பின்னணி:  பிரிந்துச் சென்ற தலைவனைப் பற்றிப் பெரிதும் வருந்தினாள் தலைவி.  அது கண்ட தோழி, ‘தலைவனுடன் சென்ற சிலர் மீண்டு வந்தனர்.  தலைவன் சுரத்தைக் கடந்து அப்பால் போயினதாகக் கூறினர்.  ஆதலால் நீ வருந்த வேண்டாம்’ எனக் கூறியபொழுது தலைவி சொன்னது.

பொருளுரை:    வேங்கை மரத்தின் மலர்களைப் பறிப்பவர்கள் பஞ்சுரம் என்னும் பாலைப் பண்ணில் பாடினாலும், கடத்தற்கு அரிய வழியில் செல்பவர்கள் மிக்க அஞ்சும் இடமான காட்டைக் கடந்துச் சென்ற என் காதலர், அங்கு நீண்ட நாட்கள் தங்கி விடுவாரோ என்று நினைக்கின்றது என் நெஞ்சு.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வேங்கை கொய்யுநர் செவிக்கு இனியவாகினும் பாலைப் பண்ணைப் பாடுதலாலே வழிச் செல்வோர்க்குப் பாலை நிலத்தின் கொடுமையே தோன்றி அவரைப் பெரிதும் அச்சுறுத்தல் என நற்செய்தியே கூறவும் அவருடைய கொடுமையே என் நினைவில் வந்து வருத்துகின்றது என்பாள்.  இலக்கணக் குறிப்பு – வெரூஉம் – செய்யுளிசை அளபெடை, வேங்கை – மலருக்கு ஆகியமையால் ஆகுபெயர், இறந்தனரே – ஏகாரம் அசைநிலை, கொல் – ஐயப் பொருட்டு வந்த இடைச்சொல், நெஞ்சே – ஏகாரம் அசைநிலை.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  வேங்கை கொய்யுநர் – வேங்கை மரத்தின் மலர்களைப் பறிப்பவர்கள், பஞ்சுரம் விளிப்பினும் – பஞ்சுரம் என்னும் பாலைப் பண்ணில் பாடினாலும், ஆர் இடைச் செல்வோர் – கடத்தற்கு அரிய வழியில் செல்பவர்கள், ஆறு நனி வெரூஉம் – வழியில் மிக்க அஞ்சும், காடு இறந்தனரே காதலர் – காட்டைக் கடந்துச் சென்ற காதலர், நீடுவர் கொல் என – அங்கு நீண்ட நாட்கள் தங்கி விடுவாரோ என்று, நினையும் என் நெஞ்சே – நினைக்கின்றது என் நெஞ்சு

ஐங்குறுநூறு 312, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அறம் சாலியரோ! அறம் சாலியரோ!
வறன் உண்டாயினும், அறம் சாலியரோ!
வாள் வனப்பு உற்ற அருவிக்,
கோள் வல் என் ஐயை, மறைத்த குன்றே.

பாடல் பின்னணி:  உடன்போக்கில் சென்ற தலைவி மீண்டு வந்தபோது, ‘நின் ஐயன்மார் துரத்தி வந்த இடத்தில் நிகழ்ந்தது என்ன?’ என வினவிய தோழியிடம் தலைவி சொன்னது.

பொருளுரை:  அறத்தால் நிறைக!  அறத்தால் நிறைக!  ஒளியால் வனப்பு உடைய அருவிகளையுடைய, கொள்ளுதலில் வல்ல என் தலைவனை மறைத்து எமக்கு உதவிய குன்றம், எங்கும் வறட்சி உண்டாயினும் அறத்தால் நிறைக.

குறிப்புஅ. தட்சிணாமூர்த்தி உரை – அறஞ்சாலியர் என்று ஒருமுறை வாழ்த்தியதோடு அமையாது இருமுறை வாழ்த்தியது அவள் உள்ளத்தில் பெருக்கெடுத்த நன்றியின் மிகுதியை உணர்த்திற்றாம்.  ஈண்டு அறம் என்றது, அதன் வளத்தையாம்.  அஃதாவது மக்கள் பயன் எய்துமாறு அனைத்து இயற்கை வளங்களும் நிரம்புதலாம்.  இலக்கணக் குறிப்பு – சாலியரோ – நிறைக என்னும் பொருட்டாய வியங்கோள் வினைமுற்று, ஓகாரம் அசைநிலை, குன்றே – ஏகாரம் அசைநிலை.  கோள் வல் (4) – தி. சதாசிவ ஐயர் உரை – கொள்ளுதலில் வலிமையுடைய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொள்கையைக் கடைப்பிடித்துக் கொண்டொழுகுதலில் வன்மை உடைய, அ. தட்சிணாமூர்த்தி உரை – தன் பகைவரைக் கொன்றழிக்கும் பேராற்றல் படைத்த, ஒளவை துரைசாமி உரை – வலி மிக்க. தான் கருதியது கருதியாங்குத் தப்பாது கொள்ளும் வன்மை உணர்த்திற்று.

சொற்பொருள்:  அறம் சாலியரோ – அறத்தால் நிறைக, அறம் சாலியரோ – அறத்தால் நிறைக, வறன் உண்டாயினும் அறம் சாலியரோ – எங்கும் வறட்சி உண்டாயினும் அறத்தால் நிறைக, வாள் வனப்பு உற்ற அருவி – ஒளியால் வனப்பு உடைய அருவிகள், கோள் வல் என் ஐயை மறைத்த குன்றே – கொள்ளுதலில் வல்ல என் தலைவனை மறைத்து உதவிய குன்றம்

ஐங்குறுநூறு 313, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவியின் தாய் செவிலித் தாயிடம் சொன்னது
தெறுவது அம்ம நும் மகள் விருப்பே
உறு துயர் அவலமொடு உயிர் செலச் சாஅய்ப்
பாழ் படு நெஞ்சம் படர் அடக் கலங்க,
நாடு இடை விலங்கிய வைப்பின்
காடு இறந்தனள், நம் காதலோளே.

பாடல் பின்னணி:  தலைவி தலைவனுடன் உடன்போன பின்பு செவிலித்தாயின் ஆற்றாமை கண்ட நற்றாய் அவளிடம் சொன்னது.

பொருளுரை:   நெஞ்சு மிகுந்த வருத்தத்தால் சுடுகின்றது.  பெரும் துயரத்துடன்,  உயிரே போகும் படியான துன்பத்துடன் நாம் மெலிந்து நோயுடன் இருக்குமாறு நம்மை விட்டு அகன்று,  தன் காதலனுடன் சென்று விட்டாள் நம் மகள்.  நம் அன்புக்குரியவள் நாடுகளுக்கு இடையே உள்ள காட்டைக்  கடந்து சென்று விட்டாள்.

குறிப்பு:  நாடு இடை விலங்கிய வைப்பின் (4) – ஒளவை துரைசாமி உரை – நாட்டின் இடையே இனிது சென்று சேர்தற்கு இயலாதவாறு மாறாய்க் காடு பரந்து கிடக்கும் இடம்.  இலக்கணக் குறிப்பு – நும் மகள் – சுட்டு, விருப்பே – ஏகாரம் பிரிநிலை, உறு துயர் – உறு என்றது மிகுதிப்பொருள் உணர்ந்து வரும் உரிச்சொல், சாஅய் – அளபெடை, காதலோளே – ஏகாரம் அசைநிலை.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).  செவிலி – ஆய்பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாயெனப்படுவாள் செவிலியாகும் (தொல்காப்பியம், களவியல் 34).  தெறுவது (1) – ஒளவை துரைசாமி உரை – அவள் மேல் சென்ற என் காதல் துன்புறுத்துவதாயிற்று, பழைய உரை – யான் அவள் மேல் வைத்த காதல் என்னால் தெறப்படுவது என்றவாறு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நும்மகள்பால் நுமக்கு உண்டாகும் அவா நும்மால் அழிக்கப்படற்பாலது.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  சாஅய் – ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (தொல்காப்பியம், உரியியல் 32).

சொற்பொருள்:  தெறுவது – சுடுகின்றது, அம்ம – அசைச் சொல், நும் மகள் விருப்பே – உன் மகளின் விருப்பம், உறுதுயர் அவலமொடு – பெரும் துயருடனும் வருத்தத்துடனும், உயிர்செல – உயிர் செல்லும்படி,  சாஅய் – மெலிந்து, மிகவும் துயருற்று, பாழ்படு நெஞ்சம் – துன்பப்படும் நெஞ்சம், படர்  – நோய்,  அடக் கலங்க – வருந்தி கலக்கமுற, நாடு இடை – நாடுகளுக்கு இடையே, விலங்கிய வைப்பின் – விலக்கிய இடத்தில், காடு இறந்தனள் – காட்டைக் கடந்தாள், நம் – நம், காதலோளே – அன்புக்கு உரிய  மகள்

ஐங்குறுநூறு 314, ஓதலாந்தையார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
அவிர்தொடி கொட்பக், கழுது புகவு அயரக்,
கருங்கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவச்,
சிறு கண் யானை ஆள் வீழ்த்துத் திரிதரும்,
நீளிடை அருஞ்சுரம் என்ப, நம்
தோளிடை முனிநர் சென்ற ஆறே.

பாடல் பின்னணி:  தலைவன் பொருள் ஈட்டப் பிரிந்து சென்றபொழுது அவனுடன் சென்ற சிலர், மீண்டு வந்து வழியின் கொடுமைகளைத் தம்முள் பேசியதைக் கேட்ட தலைவி, தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  நம் தோள்கள் மீது வெறுப்புக் கொண்டு நம்மைப் பிரிந்து சென்ற நம் தலைவர் சென்ற வழியானது, நெடியதாகவும் கடத்தற்கு அரியதாகவும் உள்ளது என்றும், அங்கு, ஒளிரும் வளையல்கள் சுழலுமாறு சுற்றித் திரியும் பேய்களும் நிண உணவை உண்ணும் கழுதுகளும் உள்ளன என்றும், கரிய கண்களையுடைய காக்கைகளுடன் கழுகுகள் வானின்கண் கத்திப் பறக்கும் என்றும், சிறிய கண்களையுடைய யானைகள் வழிப்போவாரைக் கொன்றுத் திரியும் என்றும் கூறுகின்றனர்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – பேய் மகளிரும் கழுதும் காக்கையும் கழுகும் இயங்கும் சுரம் எவர்க்கும் விருப்பத்தைத் தராதாகலின், அதனை விரும்பிச் சென்றார் நம் தலைவர் எனின், அவர்க்கு நம்மிடை இன்பம் இல்லை என்பது இனிது விளங்கும் என்றதற்குச் சுரத்தின் கொடுமையை எடுத்து மொழிந்தாள்.  இலக்கணக் குறிப்பு – அவிர்தொடி – பேயைக் குறிப்பதால் அன்மொழித்தொகை, முனிநர் – வினையாலணையும் பெயர், ஆறே – ஏகாரம் அசைநிலை.  அவிர்தொடி – தி. சதாசிவ ஐயர் உரை – விளங்குகின்ற தொடி அணிந்த பேய் தான் கழுது என விளக்குகின்றார், ஒளவை துரைசாமி உரை – விளங்குகின்ற தொடியினை அணிந்த பேய்மகள். அன்மொழித்தொகை.  இவர் பேய் வேறு கழுது வேறு எனக் கொள்கின்றார், பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவரும் அவிர்தொடி என்பது பேயைக் குறிக்கின்றது என்றும் கழுது குற்றேவல் செய்யும் இன்னொரு ஒருவகையான பேய் என விளக்குகின்றார்.

சொற்பொருள்:  அவிர்தொடி கொட்பக் கழுது புகவு அயர – நிண உணவை உண்ணும் கழுதுகளும் ஒளிரும் வளையல்கள் சுழலுமாறு சுற்றித் திரியும் பேய்களும், கருங்கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவ – கரிய கண்களையுடைய காக்கைகளுடன் கழுகுகள் வானின்கண் கத்திப் பறக்க, சிறு கண் யானை ஆள் வீழ்த்துத் திரிதரும் நீளிடை அருஞ்சுரம் என்ப – சிறிய கண்களையுடைய யானைகள் வழிப்போவாரைக் கொன்றுத் திரியும் நீண்ட இடை நிறத்தையுடைய கடத்தற்கரிய பாலை நிலம் எனக் கூறுகின்றனர், நம் தோளிடை முனிநர் சென்ற ஆறே – நம் தோள்கள் மீது வெறுப்புக் கொண்டு பிரிந்து சென்ற நம் தலைவர்

ஐங்குறுநூறு 315, ஓதலாந்தையார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
பாயல் கொண்ட பனி மலர் நெடுங்கண்
பூசல் கேளார் சேயர் என்ப,
இழை நெகிழ் செல்லல் உறீஇக்
கழை முதிர் சோலைக் காடு இறந்தோரே.

பாடல் பின்னணி:  தன் பிரிவைச் சொன்னால் வருந்துவாள் என அஞ்சிச் சொல்லாமல் பிரிந்தான் தலைவன்.  அப்பொழுது தலைவி மனம் வருந்தியிருந்தாள். அவள் நிலையைக் கண்ட தோழி சொன்னது.

பொருளுரை:  உன் அணிகலன்கள் நெகிழும்படி வருத்தத்தைத் தந்து விட்டு, மூங்கில்கள் முதிர்ந்த சோலைகளையுடைய காட்டைக் கடந்த நம் தலைவர் பிரியும் முன், இனிது துயின்று இருந்த குளிர்ந்த மலர்போலும் நெடிய கண்கள், இப்பொழுது செய்யும் ஆரவாரத்தை அவர் கேட்பார் அல்லர் என அவரைக் கண்டவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பு:  பழைய உரை – பாயல் கொண்ட பனிமலர் நெடுங்கட் பூசல் என்றது, அவர் போகின்ற காலத்து விலக்காத வகைத் துயின்றீர் எனக் கண்ணொடு புலந்து கூறுகின்ற பூசல்.  என்ப (2) – ஒளவை துரைசாமி உரை – அசைநிலை, அ. தட்சிணாமூர்த்தி உரை – கூறுவார்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கூறுவர்.  இலக்கணக் குறிப்பு – கேளார் – கேளாராய், முற்றெச்சம், உறீஇ – செய்யுளிசை அளபெடை, இறந்தோரே – ஏகாரம் அசைநிலை.  செல்லல் – செல்லல் இன்னல் இன்னாமையே (தொல்காப்பியம், உரியியல் 6).

சொற்பொருள்:  பாயல் கொண்ட பனி மலர் நெடுங்கண் பூசல் கேளார் சேயர் என்ப – அவர் பிரியும் முன் இனிது துயின்று இருந்த குளிர்ந்த மலர்போலும் நெடிய கண்கள் இப்பொழுது செய்யும் ஆரவாரத்தை அவர் கேட்பார் அல்லர் எனக் கூறுகின்றனர் (பாயல் – உறக்கம்), இழை நெகிழ் செல்லல் உறீஇக் கழை முதிர் சோலைக் காடு இறந்தோரே – அணிகலன்கள் நெகிழும்படி வருத்தத்தைத் தந்து விட்டு மூங்கில்கள் முதிர்ந்த சோலைகளையுடைய காட்டைக் கடந்த நம் தலைவர் (கழை – மூங்கில்)

ஐங்குறுநூறு 316, ஓதலாந்தையார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
பொன் செய் பாண்டில் பொலங்கலம் நந்தத்,
தேர் அகல் அல்குல் அவ்வரி வாட,
இறந்தோர் மன்ற தாமே, பிறங்கு மலைப்
புல் அரை ஓமை நீடிய
புலி வழங்கு அதர கானத்தானே.

பாடல் பின்னணி:  தலைவன் பொருள் ஈட்டச் சென்றதனால் பெரிதும் வருந்தினாள் தலைவி.  அவளைக் கண்டு ஆற்றாளாகிய தோழி அவள் கேட்பக் கூறியது.

பொருளுரை:  பொன்னால் செய்த பாண்டில் என்னும் பொன் அணிகலன் நெகிழவும் தேர்த் தட்டுப் போன்ற அகன்ற அல்குலின் அழகிய வரிகள் வாடவும், தேற்றமாக நம்மைப் பிரிந்து அவர் மட்டுமே கடந்துச் சென்றார், உயர்ந்த (ஒளிரும்) மலையில் உள்ள புல்லென்ற அடியையுடைய ஓமை மரங்கள் வளர்ந்த புலிகள் இயங்கும் பாலை நிலத்தின் காட்டின்கண்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தொடக்கத்தே ‘கலம் நந்த அல்குல் வரிவாட’ எனத் தலைவிக்கு இரங்குவாள் போல் தொடங்கி இறுதியில், அவர் புலி வழங்கு அதரகானத்தே இறந்தார் எனத் தலைவன் சென்ற வழியின் கொடுமையை விதந்து அவள் மனத்தைத் தலைவன்பால் திருப்பி விடுகின்ற நுணுக்கம் உணர்ந்து கொள்க. விதந்து – சிறப்பித்து எடுத்துக் கூறுதல்.  இலக்கணக் குறிப்பு – பொன் செய் – மூன்றாம் வேற்றுமைத் தொகை, தேர் – தேர்த் தட்டைக் குறித்தலின் ஆகுபெயர், மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், தாமே – ஏகாரம் தேற்றம், கானத்தானே – ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்:  பொன் செய் பாண்டில் பொலங்கலம் நந்தத் தேர் அகல் அல்குல் அவ்வரி வாட – பொன்னால் செய்த பாண்டில் என்னும் பொன் அணிகலன் நெகிழவும் தேர்த் தட்டுப் போன்ற அகன்ற அல்குலின் அழகிய வரிகள் வாடவும் (பாண்டில் – வட்ட வடிவமுடையது, அல்குல் – இடை, இடைக்குக் கீழ் உள்ள பகுதி) இறந்தோர் மன்ற தாமே – கடந்துச் சென்றார் தேற்றமாக அவர் மட்டுமே, பிறங்கு மலைப் புல் அரை ஓமை நீடிய புலி வழங்கு அதர கானத்தானே – உயர்ந்த (ஒளிரும்) மலையில் உள்ள புல்லென்ற அடியையுடைய ஓமை மரங்கள் வளர்ந்த புலிகள் இயங்கும் பாலை நிலத்தின் காட்டின்கண்

ஐங்குறுநூறு 317, ஓதலாந்தையார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
சூழ்கம் வம்மோ தோழி, பாழ்பட்டுப்
பைது அற வெந்த பாலை வெங்காட்டு
அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச்
சென்ற நெஞ்சம் நீடிய பொருளே.

பாடல் பின்னணி:  தலைவன் பொருள் ஈட்டும்பொருட்டுப் பிரிந்தான்.  பல நாட்கள் ஆகியும் அவன் வராததால் தன் நெஞ்சைத் தூதாக அவனிடம் அனுப்பினாள் தலைவி.  அது தன்பால் வராததால் தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  வருவாயாக!  நீர் இல்லாது பாழாகி பசுமை அற்று வெந்த பாலைநிலத்தின் வெப்பமான காட்டின்கண் உள்ள, கடத்தற்கு அரிய வழியைக் கடந்து சென்ற தலைவர் இருக்கும் இடத்திற்குச் சென்ற என் நெஞ்சம் விரைய வராது நீட்டித்தலின் காரணத்தை நாம் ஆராய்வோம்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருள்வயின் பிரிந்த தலைவன் வருந்துணையும் ஆற்றியிருத்தலே அறிவுடைமை என்று வற்புறுத்திய தோழிக்கு ஆற்றியிருப்பேன் மன்!  என்னெஞ்சம் எனக்கு கைதர மறுத்து என் சொல்லினும் அவரையே நினைந்து நினைத்து என்னை வருத்தாநின்றது.  யான் என் செய்கோ? என ஆற்றாமைக்குக் காரணம் கூறியதாம் என்க.  பாலை (2) – ஒளவை துரைசாமி உரை, அ. தட்சிணாமூர்த்தி உரை – பாலை நிலம், பாலை மரமுமாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாலை நிலம்.  வெங்காட்டு அருஞ்சுரம் (2–3) – ஒளவை துரைசாமி உரை – காட்டினிடத்தாகிய அருஞ்சுரம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – காட்டின்கண்ணுள்ள கடத்தற்கரிய கொடு நெறி.  இலக்கணக் குறிப்பு  சூழ்கம் – தன்மைப் பன்மை வினைமுற்று, வம்மோ – மோ முன்னிலை அசை, தேஎத்து – அளபெடை, ஏழாவதன் சொல்லுருபு, பொருளே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  சூழ்கம் – ஆராய்வோம், வம்மோ – வருவாயாக, தோழி – தோழி, பாழ்பட்டுப் பைது அற வெந்த பாலை வெங்காட்டு அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச் சென்ற நெஞ்சம் நீடிய பொருளே – நீர் இல்லாது பாழாகி பசுமை அற்று வெந்த பாலைநிலத்தின் வெப்பமான காட்டின்கண் உள்ள கடத்தற்கு அரிய வழியைக் கடந்து சென்ற தலைவர் இருக்கும் இடத்திற்குச் சென்ற என் நெஞ்சம் நீட்டித்தலின் காரணத்தை

ஐங்குறுநூறு 318, ஓதலாந்தையார், பாலைத் திணைதலைவி தனக்குள் சொன்னது
ஆய் நலம் பசப்ப, அரும் படர் நலிய,
வேய் மருள் பணைத்தோள் வில் இழை நெகிழ,
நசை நனி கொன்றோர் மன்ற, இசை நிமிர்ந்து
ஓடு எரி நடந்த வைப்பின்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

பாடல் பின்னணி:  ‘நம்மைப் பிரியார்’ என கருதியிருந்த தலைவி, தலைவன் பிரிந்தபொழுது வருந்திச் சொன்னது.

பொருளுரை:  பிறரால் ஆராயப்பட்ட என் அழகு கெட்டுப் பசலையடைய, நான் துன்பத்தால் பெரிதும் வருந்தியிருக்க, மூங்கில் போன்ற என் பருத்த தோள்களில் அணிந்த ஒளியுடைய அணிகலன்கள் நெகிழ, நம் மனதில் உள்ள விருப்பத்தைப் பெரிதும் கொன்று விட்டார் தேற்றமாக, ஆரவாரத்துடன் எழுந்து படர்ந்த தீப் பரவி அழித்த இடத்தினையுடைய கோடுகளுடன் உயர்ந்த ஒளிரும் மலையைக் கடந்து சென்ற நம் தலைவர்.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – ‘நசை கொன்றார்’ என்றாள், தன் ஆசைகள் அனைத்தையும் கொன்றார் என்னும் பொருளில் தலைவர் கொலை சூழ்ந்தார் என்றாளாயிற்று.  தன் நம்பிக்கை முழுவதும் கெட்டமையக் கொன்றார் என்ற வாய்பாட்டால் கூறினாள்.  ‘நனி கொன்றார்’ என்றும் ‘மன்ற’ என்றும் கூறியதும் அதனையே குறித்தது.  இலக்கணக் குறிப்பு – மருள் – உவம உருபு, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், இறந்தோரே – ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  ஆய் நலம் பசப்ப – அழகிய நலம் கெட்டுப் பசலையடைய, பிறரால் ஆராயப்பட்ட அழகு கெட்டுப் பசலையடைய, அரும் படர் நலிய – துன்பத்தால் பெரிதும் வருந்தியிருக்க, வேய் மருள் பணைத்தோள் வில் இழை நெகிழ – மூங்கில் போன்ற பருத்த தோள்களில் அணிந்த ஒளியுடைய அணிகலன்கள் நெகிழ (வில் – ஒளி), நசை நனி கொன்றோர் மன்ற – விருப்பத்தைப் பெரிதும் கொன்று விட்டார் தேற்றமாக, இசை நிமிர்ந்து ஓடு எரி நடந்த வைப்பின் கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – ஆரவாரத்துடன் எழுந்து படர்ந்த தீப் பரவி அழித்த இடத்தினையுடைய கோடுகளுடன் (மலை உச்சிகளுடன்) உயர்ந்த ஒளிரும் மலையைக் கடந்து சென்றவர்

ஐங்குறுநூறு 319, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின்,
மண் புரை பெருகிய மரம் முளி கானம்
இறந்தனரோ நம் காதலர்?
மறந்தனரோ தில் மறவா நம்மே?

பாடல் பின்னணி:  தலைவியிடம் சொல்லாமல் பிரிந்தான் தலைவன்.  அதை அறிந்த தோழி, தலைவியிடம் சொன்னாள்.  அது கேட்ட தலைவி ஏங்கிக் கூறியது.

பொருளுரை:  கண்டவர்களின் கண்களைத் தாக்குவது போல் ஒளிர்கின்ற ஞாயிற்றின் கதிர்கள் எரித்ததால் பாழ்பட்ட இடத்தில், மண் மேடுகள் பெருகிய, மரங்கள் உலர்ந்த காட்டைக் கடந்துச் சென்றாரோ நம் தலைவர்?   அவரை மறக்காத நம்மை அவர் மறந்துவிட்டாரோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மறந்தனரோ என்னுமிடத்து ஓகாரங்கள் வினாப் பொருண்மையோடு இனி யான் உய்யேன் என்பதும்பட நின்ற ஒழியிசையுமாயின.  மறந்தனரோ என்றது, தலைவன் கொடுமையையும், மறவா நம்மே என்றது தனது பேரன்பினையும் குறித்து நின்றன.  மண் புரை (2) – அ. தட்சிணாமூர்த்தி உரை – மண் மேடுகள், மண் கூரையையுடைய வீடுகள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மண்ணால் உண்டாகும் தீங்கு, ஒளவை துரைசாமி உரை – மண் நிறைந்த மேடுகள்.  இலக்கணக் குறிப்பு – முளி கானம் – வினைத்தொகை, இறந்தனரோ – ஓகாரம் வினா, மறந்தனரோ – ஓகாரம் வினா, தில் – அசைநிலை, நம்மே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின் மண் புரை பெருகிய மரம் முளி கானம் – கண்டவர்களின் கண்களைத் தாக்குவது போல் ஒளிர்கின்ற ஞாயிற்றின் கதிர்கள் எரித்ததால் பாழ்பட்ட இடத்தில் மண் மேடுகள் பெருகிய மரங்கள் உலர்ந்த காட்டை, இறந்தனரோ நம் காதலர் – கடந்துச் சென்றாரோ நம் தலைவர், மறந்தனரோ தில் மறவா நம்மே – மறந்துவிட்டாரோ அவரை மறக்காத நம்மை

ஐங்குறுநூறு 320, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ,
முழங்கு அழல் அசை வளி எடுப்ப வானத்து
உருமுப்படு கனலின் இரு நிலத்து உறைக்கும்,
கவலை அருஞ்சுரம் போயினர்,
தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே.

பாடல் பின்னணி:  தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றபின், சுரத்தின் வெம்மை நினைந்து தலைவி சொன்னது.

பொருளுரை:  முட்கள் பொருந்திய அடிப்பகுதி உடைய இலவ மரங்களின் ஒளிரும் கொத்துக்களான வெண்ணிற மலர்கள், ஆரவாரத்துடன் எரிகின்ற தீ எழுப்பிய காற்று மோதியதால், வானில் இடி இடிப்பதால் உதிரும் தீக்கனல் போல் பெரிய நிலத்தின்கண் உதிரும், கவர்த்த வழிகளைக் கொண்ட கடத்தற்கு அரிய பாலை நிலத்திற்குச் சென்ற நம் தலைவர், தாங்க முடியாத அரிய நோயைத் தந்துவிட்டார்.

குறிப்பு:  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – அசைவளி எடுப்ப உதிரும் இலவத்தின் ஒள்ளிணர் வான்பூ உருமுப்படு கனல் போலத் தோன்றும் என்றது, பொருள் கடவுவதால் தலைமகன் செலவால் உளதாகிய பிரிவு, பொறுத்தற்கரிய பெருந்துயராய் என்னை வருத்துகிறது எனத் தலைமகள் கருதிக் கூறுவதை உணர்த்துமாறு அறிக.  இலக்கணக் குறிப்பு – முழங்கு அழல் – வினைத்தொகை, கனலின் – இன் ஒப்புப்பொருளில் வருவது, ஐந்தாம் வேற்றுமை உருபு, தந்தோரே – தந்தார் வினையாலணையும் பெயர், தந்தார் என்பது தந்தோர் என்றானது செய்யுள் விகாரம், ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ முழங்கு அழல் அசை வளி எடுப்ப வானத்து உருமுப்படு கனலின் இரு நிலத்து உறைக்கும் – முட்கள் பொருந்திய அடிப்பகுதி உடைய இலவ மரங்களின் ஒளிரும் கொத்துக்களான வெண்ணிற மலர்கள் ஆரவாரத்துடன் எரிகின்ற தீ எழுப்பிய காற்று மோதியதால் வானில் இடி இடிப்பதால் உதிரும் தீக்கனல் போல் பெரிய நிலத்தின்கண் உதிரும், கவலை அருஞ்சுரம் போயினர் – கவர்த்த (பிரிவுகளையுடைய) வழிகளைக் கொண்ட கடத்தற்கு அரிய பாலை நிலத்திற்குச் சென்றவர், தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே – தாங்க முடியாத அரிய நோயைத் தந்துவிட்டார் (தவல் – கேடு)

இடைச்சுரப் பத்து

பாடல்கள் 321 – 330 – தலைவியைப் பிரிந்த தலைவன் சுரத்திலிருந்து தலைவியை நினைந்து கூறியவை.  ஒளவை துரைசாமி உரை – இடைச்சுரம் என்பது கடைக்கண் என்பது போலப் பின் முன்னாகத் தொக்க ஆறாம்வேற்றுமைத் தொகை.  இது விரியுங்கால் சுரத்திடை என வரும்.

ஐங்குறுநூறு 321, ஓதலாந்தையார், பாலைத் திணைதலைவன் தனக்குள் சொன்னது
உலறுதலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை,
அலறுதலை ஓமை அம் கவட்டு ஏறிப்
புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்து,
மொழி பெயர் பன் மலை இறப்பினும்,
ஒழிதல் செல்லாது, ஒண்தொடி குணனே.

பாடல் பின்னணி:  தலைவியைப் பிரிந்து பாலை நிலத்தில் செல்லும் தலைவன் அவளுடைய நற்பண்புகளை எண்ணி இரங்கிச் சொன்னது.

பொருளுரை:  உலர்ந்த தலையையுடைய பருந்தின் உளி போன்ற வாயையுடைய பேடை, உலர்ந்து விரிந்த தலையையுடைய ஓமை மரத்தின் அழகிய கிளையில் ஏறித் தனிமைத் துன்பம் புலப்படுமாறு ஒலிக்கும், நிலம் வறண்ட காட்டினை உடைய, வேறு மொழிகள் வழங்கும் நாட்டில் உள்ள பல மலைகளைக் கடந்தும் என் நெஞ்சை விட்டு நீங்காது ஒளிரும் வளையல்கள் அணிந்த என் தலைவியின் நற்பண்புகள்.

குறிப்பு:  பழைய உரை – மொழிபெயர் பன்மலை இறப்பினும் என்றது, பின்னும் செல்லும் வழியை நோக்கி என்றவாறு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பருந்துப் பேடை வற்றிய ஓமை மரத்திலிருந்து சேவலைப் புலம்பு கொள விளிக்கும் என்றது, இப்பொழுது என் காதலி வறிய இல்லத்தின் மாடமிசையே என்னை நினைந்து யான் சென்ற திசை நோக்கி அழாநிற்பள் என்னும் நினைவாற் கூறியபடியாம்.   இலக்கணக் குறிப்பு – உலறுதலை – வினைத்தொகை, அலறுதலை – வினைத்தொகை, ஒண்தொடி – அன்மொழித்தொகை, குணனே – குணன் என்பது குணம் என்றதன் போலி, ஏகாரம் அசைநிலை. புலம்புபுலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  உலறுதலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை அலறுதலை ஓமை அம் கவட்டு ஏறிப் புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்து, உலர்ந்த தலையையுடைய பருந்தின் உளி போன்ற வாயையுடைய பேடை உலர்ந்து விரிந்த தலையையுடைய ஓமை மரத்தின் அழகிய கிளையில் ஏறித் தனிமைத் துன்பம் புலப்படுமாறு ஒலிக்கும் நிலம் வறண்ட காட்டில், மொழி பெயர் பன் மலை இறப்பினும் ஒழிதல் செல்லாது ஒண்தொடி குணனே – வேறு மொழிகள் வழங்கும் நாட்டில் உள்ள பல மலைகளைக் கடந்தும் என் நெஞ்சை விட்டு நீங்காது ஒளிரும் வளையல்கள் அணிந்த என் தலைவியின் நற்பண்புகள்

ஐங்குறுநூறு 322, ஓதலாந்தையார்பாலைத் திணை  – தலைவன் சொன்னது
நெடுங்கழை முளிய வேனில் நீடிக்
கடுங்கதிர் ஞாயிறு கல் பகத் தெறுதலின்
வெய்ய வாயின முன்னே, இனியே,
ஒண்ணுதல் அரிவையை உள்ளுதொறும்,
தண்ணிய வாயின, சுரத்திடை ஆறே.

பாடல் பின்னணி:  தலைவன் தலைவியின் நற்பண்புகளை நினைத்தலின் தனக்குற்ற வெம்மை நீங்கியது கண்டு சொன்னது.

பொருளுரை:   உயர்ந்த மூங்கில்கள் உலருமாறு வேனில் நீடுதலால், மிகுந்த வெப்பத்தையுடைய கதிர்களுடைய ஞாயிறு, கற்களும் பிளக்குமாறு காய்வதால், முன்பு வெம்மையாயிருந்தன பாலை நிலத்தின் வழிகள்.  இப்பொழுது அவளை நினைக்கும் பொழுதெல்லாம் அவை குளிர்ச்சியாக உள்ளன.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – வெயில் மிக்க வழி மூங்கில் பசுமை இழந்து உலர்ந்து கெடுவது இயல்பாதலின், நெடுங்கழை முளிய வேனில் நீடி என்றார்.  நீடி என்னும் செய்தெனெச்சம் காரணப் பொருட்டு.  ஞாயிற்றின் வெம்மை மிகுதி விளங்கக் கடுங்கதிர் ஞாயிறு என்றும், கடுங்கதிர் தெறுதலால் கற்பாறைகளும் வழியிழந்து பிளந்து விடுமாறு தோன்றக் கல் பகத் தெறுதலின் என்றும் கூறினார்.  இலக்கணக் குறிப்பு – இனியே – ஏகாரம் அசைநிலை, கல்பக – கல்லும் என்பதன் உம்மை தொக்கது, ஆறே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நெடுங்கழை – உயர்ந்த மூங்கில், முளிய – காய, வேனில் – வேனில் காலம், நீடி – நீடித்து, கடுங்கதிர் ஞாயிறு – மிக்க வெப்பத்தையுடைய ஞாயிறு, கல் பகத் தெறுதலின் – கற்களும் (மலைகளும்) பிளக்குமாறு எரிந்ததால், வெய்ய ஆயின – வெப்பமாக இருந்தன, முன்னே – முன்பு, இனியே – இப்பொழுது, ஒண்ணுதல் அரிவையை உள்ளுதொறும் – ஒளி பொருந்திய நெற்றியை உடைய இளம் பெண்ணை எண்ணும் பொழுதெல்லாம், தண்ணிய வாயின – குளிர்ச்சி அடைந்தன, சுரத்திடை ஆறே – பாலை நிலத்தின் வழிகள்

ஐங்குறுநூறு 323, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வள் எயிற்றுச் செந்நாய், வயவுறு பிணவிற்குக்
கள்ளியங் கடத்தினைக் கேழல் பார்க்கும்,
வெஞ்சுரக் கவலை நீந்தி
வந்த நெஞ்சம், நீ நயந்தோள் பண்பே.

பாடல் பின்னணி:  சுரத்தின்கண் தலைவியின் பண்பை நினைத்த தலைவன் ‘அவள் பண்பு வந்தன’ என உவந்து தன் நெஞ்சிடம் சொன்னது.

பொருளுரை:   என் நெஞ்சே!  கூரிய பற்களையுடைய செந்நாய், கர்ப்பமுடைய தன் பெண் நாய் உண்ண வேண்டி, கள்ளி மரங்களுடைய காட்டில் பன்றியைத் தேடும், வெம்மையான சுரத்தின் கவர்த்த வழிகளைத் தாண்டி நம்மிடம் வந்தன, நீ விரும்பும் பெண்ணின் பண்புகள்.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – செந்நாய் தன் பிணவின் பொருட்டு முள்ளுடைய கள்ளியங் காட்டினூடே பதுங்கிக் கிடந்து கேழல் வேட்டையாடுதல் போன்று யாமும் நம் ஆருயிர்க் காதலியோடு இருந்து அவள் இயற்றும் அறத்திற்கு ஆக்கஞ் செய்தற்பொருட்டு இவ்வெஞ் சுரக் கவலை நீந்தி செல்லா நின்றோம்.  இச் செயலும் நன்றே என்று நெஞ்சினை ஊக்கினான் என்பது.  இலக்கணக் குறிப்பு – வயவு –  வயா என்பது வயவு ஆயிற்று, பிணை – பிணா பிணவாயிற்று, நெஞ்சம் – விளி, பண்பே  – பால் பகா அஃறினைப் பெயர், ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  வள் எயிற்றுச் செந்நாய் – கூரிய பற்களையுடைய செந்நாய், வயவுறு பிணவிற்கு – கர்ப்பமுடைய தன் பெண் நாய்க்கு, கள்ளியங் கடத்தினைக் கேழல் பார்க்கும் – உண்ணுவதற்கு வேண்டி கள்ளி மரங்களுடைய காட்டில் பன்றியைத் தேடும், வெஞ்சுரக் கவலை நீந்தி வந்த – வெம்மையான சுரத்தின் கவர்த்த (பிரிவுகளையுடைய) வழிகளைத் தாண்டி வந்தன, நெஞ்சம் – நெஞ்சமே, நீ நயந்தோள் பண்பே – நீ விரும்பும் பெண்ணின் பண்புகள்

ஐங்குறுநூறு 324, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவன் தோழியிடம் சொன்னது
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடைச்
சிறிது கண்படுப்பினும், காண்குவென் மன்ற,
நள்ளென் கங்குல் நளி மனை நெடு நகர்,
வேங்கை வென்ற சுணங்கின்
தேம் பாய் கூந்தல் மாஅயோளே.

பாடல் பின்னணி:  பொருள் ஈட்டி மீண்டு வந்த தலைவன் தலைவியைப் பாராட்டியதைக் கண்ட தோழி, ‘இவள் பண்புகளை நீ எவ்வாறு மறந்து இருந்தாய்?’ எனக் கேட்டபோது தலைவன் சொன்னது.

பொருளுரை:  காட்டுத் தீ எரித்துப் பாழ்படுத்திய கதிரவனின் வெம்மை மிகுந்த நீண்ட வழியில் சிறிது கண் அயர்ந்தாலும் உறுதியாக நான் காண்பேன், நள்ளென்னும் இரவில், பெரிய மனையில் உள்ள வேங்கை மரத்தின் மலர்களை வென்ற அழகிய தேமலையும், தேன் சொட்டும் பூ அணிந்த நறிய கூந்தலையும் உடைய மாமை நிறத்தையுடைய என் தலைவியை.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – காட்டுத்தீ வெந்தொழிந்ததன் மேலும் வெயில் மிக்குத் தெறும் நீளிடை எனினுமாம்.  வெப்ப மிகுதியால் தலைமக்கள் நெடிது உறங்காராதலின், அது தோன்றச் சிறிது கண்படிப்பினும் என்றான்.  அல்லதூஉம் , வினைமேற் சென்றார்க்கு அது முற்றுங்காறும் நெடிய உறக்கம் வாராதாதலின், இவ்வாறு கூறினான் எனினுமாம்.  உறங்கும் பொழுது அவளைக் கனவின்கண் கண்டும் கூடியும் மகிழ்ந்தேன் என்பான், காண்குவென் மன்ற என்றான்.  இறந்த காலத்தாற் கூறற்பாலதனை எதிர்காலத்தாற் கூறியது தெளிவுபற்றி.  வேங்கை வென்ற சுணங்கின், தேம்பாய் கூந்தல் மாஅயோளே என்றது அவள் நலம் பாராட்டியது.  இலக்கணக் குறிப்பு – மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், நளி – உரிச்சொல், வேங்கை – ஆகுபெயராய் மலரைக் குறித்தது, தேம் – தேன் என்றதன் திரிபு, மாஅயோளே – அளபெடை, ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  நளி – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 22).  என்றூழ் – கதிரவனின் முதிர்ந்த கதிர்கள், எல் (கதிரவன்) + ஊழ் (முதிர்ச்சி).  முனைவர் கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம்.

சொற்பொருள்:  எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடைச் சிறிது கண்படுப்பினும் காண்குவென் மன்ற – காட்டுத் தீ எரித்து பாழ்படுத்திய கதிரவனின் வெம்மை மிகுந்த நீண்ட வழியில் சிறிது கண் அயர்ந்தாலும் காண்பேன் உறுதியாக, நள்ளென் கங்குல் நளி மனை நெடு நகர் வேங்கை வென்ற சுணங்கின் தேம் பாய் கூந்தல் மாஅயோளே – நள்ளென்னும் இரவில் பெரிய மனையில் உள்ள வேங்கை மரத்தின் மலர்களை வென்ற அழகிய தேமலையும் தேன் சொட்டும் பூ அணிந்த நறிய கூந்தலையும் உடைய மாமை நிறத்தையுடைய (மாந்தளிர் போன்ற நிறத்தையுடைய) தலைவியை

ஐங்குறுநூறு 325, ஓதலாந்தையார், பாலைத் திணை திரும்பி வந்த தலைவன் தோழியிடம் சொன்னது
வேனில் அரையத்து இலையொலி வெரீஇப்,
போகில் புகா உண்ணாது பிறிது புலம் படரும்,
வெம்பலை அருஞ்சுரம் நலியாது,
எம் வெங்காதலி பண்பு துணைப் பெற்றே.

பாடல் பின்னணி:  பொருள் ஈட்டப் பிரிந்த தலைவன் மீண்டு வந்தபின், ‘வெப்பம் மிக்க பாலை நிலத்தின் கொடுமையை எவ்வாறு பொறுத்தீர்?’ எனத் தோழி வினவியபோது அவன் கூறியது.

பொருளுரை:  வேனில் பருவத்தில் அரசமரத்தின் உலர்ந்த இலைகள் காற்றில் அசைந்து எழுப்பும் ஓசையைக் கேட்டு அஞ்சி, போகில் என்னும் பறவைகள் அம்மரத்தின் பழங்களை உண்ணாமல் வேறு நிலங்களை நாடிச் செல்லும், வெப்பம் மிக்க கடத்தற்கு அரிய பாலை நிலம் என்னை வருத்தவில்லை, யான் விரும்புகின்ற என் காதலியின் பண்புகளை நான் துணையாகப் பெற்றதால்.

குறிப்பு:  அரையம் (1) – ஒளவை துரைசாமி உரை – இக்காலத்தே இஃது அரசமரம் என மருவி வழங்கும்.  முன்னாளில் அரை என்றே நின்று பின்பு புணரியல் நிலையிடைப் பெற்ற அம்முச் சாரியையை இறுதியாகக் கொண்டு வழங்குவதாயிற்று. ‘பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும் நினையுங்காலை அம்மொடு சிவணும்’ – தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 284.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வேனில் அரையத்து இலை யொலி வெரீஇப், போகில் புகா உண்ணாது பிறிது புலம் படரும் வெம்பல் என்றது, இத்தகையாளொடு யான் பிரியாது இனிது உறைதற்கு இயலாமல் உலகியலை அஞ்சி இவள் வழங்கும் பேரின்பத்தை நுகராமல் பொருள் ஈட்டப் பிரிந்து போயினேன் என்பது.  இலக்கணக் குறிப்பு – வெரீஇ – செய்யுளிசை அளபெடை, வெம்பலை – ஐ சாரியை, பெற்றே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  வேனில் அரையத்து இலையொலி வெரீஇப் போகில் புகா உண்ணாது பிறிது புலம் படரும் – வேனில் பருவத்தில் அரசமரத்தின் இலைகள் காற்றில் அசைந்து எழுப்பும் ஓசையைக் கேட்டு அஞ்சி போகில் என்னும் பறவைகள் அம்மரத்தின் பழங்களை உண்ணாமல் வேறு நிலங்களை நாடிச் செல்லும், வெம்பலை அருஞ்சுரம் நலியாது எம் வெங்காதலி பண்பு துணைப் பெற்றே – வெப்பம் மிக்க கடத்தற்கு அரிய பாலை நிலம் வருத்தவில்லை யான் விரும்புகின்ற காதலியின் பண்புகளைத் துணையாகப் பெற்று (வெம்பலை – வெம்பல், வெப்பத்தையுடைய)

ஐங்குறுநூறு 326, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவன் தனக்குள் சொன்னது
அழல் அவிர் நனந்தலை நிழலிடம் பெறாது,
மட மான் அம் பிணை மறியொடு திரங்க,
நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவின்
இன்னா மன்ற சுரமே,
இனிய மன்ற, யான் ஒழிந்தோள் பண்பே.

பாடல் பின்னணி:  பொருள் தேடுவதற்குப் பிரிந்த தலைவன் சுரத்தின் வெம்மை ஆற்றானாகி, தலைவியின் நற்பண்புகள் நினைந்து நொந்து சொன்னது.

பொருளுரை:  சுரத்தின்கண் தீ போல் விளங்கும் வெப்பம் மிக்க அகன்ற இடத்தில் நிழலுடைய இடம் கிடைக்காதலால், மடப்பம் பொருந்திய மான் தன் அழகிய குட்டியுடன் வருந்த, முன்பு பெய்த மழை நீரால் பக்கங்கள் அறுக்கப்பட்ட நிரம்பப்பெறாத வழியில் துன்பம் உடையது தேற்றமாக இந்தப் பாலை நிலம்.  யான் பிரிந்து நீங்கிய என் காதலியின் பண்பு தேற்றமாக இனிமையானது.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – மடமான் பிணை மறியுடன் தனித்து நிழலிடம் பெறாது வருந்துவது காணும் தலைமகனைத் தன் பிரிவாற்றாது தனிமையுற்று வருந்தும் தலைமகளை நினைப்பித்து வருத்த, நீரால் அறுக்கப்பட்டுச் சிறிதாய வழி அவன் இனிது செல்லாவாறு இடையூறு செய்வது கண்டு வருந்துகின்றமையின், இன்னா மன்ற சுரமே என்றும், அந்நிலையில் தலைமகளின் பண்பு தோன்றி அவன் உள்ளத்திற்கு உவகையும் ஊக்கமும் நல்கி இன்பம் செய்தலின், இனிய மன்ற யான் ஒழிந்தோள் பண்பே என்றும் கூறினான்.  இலக்கணக் குறிப்பு – சுரமே – ஏகாரம் அசைநிலை, மன்ற – தேற்றப் பொருளில் வரும் இடைச்சொல், பண்பே – ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).

சொற்பொருள்:  அழல் அவிர் நனந்தலை நிழலிடம் பெறாது மட மான் அம் பிணை மறியொடு திரங்க – தீ போல் விளங்கும் வெப்பம் மிக்க அகன்ற இடத்தில் நிழலுடைய இடம் கிடைக்காதலால் மடப்பம் பொருந்திய மான் தன் அழகிய குட்டியுடன் வருந்த, நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவின் இன்னா மன்ற சுரமே – முன்பு பெய்த மழை நீரால் பக்கங்கள் அறுக்கப்பட்ட நிரம்பப்பெறாத வழியில் துன்பம் உடையது தேற்றமாக இந்த பாலை நிலம், இனிய மன்ற – இனிமையானது தேற்றமாக, யான் ஒழிந்தோள் பண்பே – யான் பிரிந்து நீங்கிய என் காதலியின் பண்பு

ஐங்குறுநூறு 327, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவன் தனக்குள் சொன்னது
பொறி வரித் தடக்கை வேதல் அஞ்சிச்,
சிறு கண் யானை நிலந்தொடல் செல்லா
வெயின் முளி சோலைய வேய் உயர் சுரனே
அன்ன ஆரிடையானும்,
தண்மை செய்த இத் தகையோள் பண்பே.

பாடல் பின்னணி:  பொருள் தேடுவதற்குப் பிரிந்த தலைவன், தலைவியின் நற்பண்புகள் நினைந்து இரங்கிச் சொன்னது.

பொருளுரை:  புள்ளிகளையும் வரிகளையும் கொண்ட பெரிய தும்பிக்கை வெந்துவிடும் என அஞ்சிச் சிறிய கண்களையுடைய யானைகள் நிலத்தைத் தீண்டாத, வெயிலினால் உலர்ந்த சோலைகளையுடைய, மூங்கில்கள் உயரமாக வளர்ந்த, இப்பாலை நிலம் கடத்தற்கு அரியது ஆனாலும், எனக்குக் குளிர்ச்சியை நல்கின, இத்தகவு உடைய என் காதலியின் நற்பண்புகள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – நீண்ட பெரிய கையாயினும் நிலத்தின் வெம்மைக்கு ஆற்றாது என்பார், பொறிவரி தடக்கை என்றும், சிறு கண்ணையுடையதாயினும் நிலத்திற் படாதவாறு ஓம்புதல் தோன்றச் சிறுகண் யானை என்று சிறப்பித்தார். ஒருபால் யானை நிலம் தொடல் செல்லாத வெம்மை நிலமும், ஒருபால் வெயிலால் உலர்ந்த சோலையும் உடைய சுரநெறிகள் என்றுமாம்.  இலக்கணக் குறிப்பு – பொறி வரி – பொறிகளையும் வரிகளையும் உம்மைத்தொகை, தடக்கை – உரிச்சொற்தொடர், தொடல் செல்லா – ஒரு சொல் நீர்மைத்தான பலவின்பால் வினைமுற்று, வெயின் முளி – வெயிலால் முளிந்த, மூன்றந்தொகை, சுரனே – ஏகாரம் அசைநிலை, அன்ன – உவம உருபு, ஆரிடையானும் – உம்மை உயர்வு சிறப்பு, பண்பே – ஏகாரம் அசைநிலை.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  தடக்கை (1) – தி. சதாசிவ ஐயர் உரை – பெரிய துதிக்கை, ஒளவை துரைசாமி உரை – நீண்ட பெரிய கை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெடிய பெரிய கை.

சொற்பொருள்:  பொறி வரித் தடக்கை வேதல் அஞ்சிச் சிறு கண் யானை நிலந்தொடல் செல்லா – புள்ளிகளையும் வரிகளையும் கொண்ட பெரிய தும்பிக்கை வெந்துவிடும் என அஞ்சிச் சிறிய கண்களையுடைய யானைகள் நிலத்தைத் தொடாத (தட – பெரிய), வெயின் முளி சோலைய வேய் உயர் சுரனே அன்ன ஆர் இடையானும் – வெயிலினால் உலர்ந்த சோலைகளையுடைய மூங்கில்கள் உயரமாக வளர்ந்த இப்பாலை நிலம் கடத்தற்கு அரியது ஆனாலும் (ஆர் – அரிய), தண்மை செய்த இத் தகையோள் பண்பே – குளிர்ச்சியை நல்கின இந்தத் தகவு உடையவள் நற்பண்புகள்

ஐங்குறுநூறு 328, ஓதலாந்தையார், பாலைத் திணை  – தலைவன் சொன்னது
நுண் மழை தளித்தென நறுமலர் தாஅய்த்
தண்ணியவாயினும் வெய்ய மன்ற,
மடவரல் இன் துணை ஒழியக்
கட முதிர் சோலைய காடு இறந்தேற்கே.

பாடல் பின்னணி:  ‘மழை விழுந்ததால் சுரம் குளிர்ச்சியாக உள்ளது. இனி வருத்தம் இன்றிப் போகலாம்’ என உடன் பயணம் செய்பவர்கள் கூறியபோது, தலைவன் சொன்னது.

பொருளுரை:  மடப்பம் பொருந்திய இனிய துணைவியைப் பிரிந்து, சுரத்தையும் பழமையான சோலைகளையுடைய காடுகளையும் கடந்து வந்த எனக்கு, நுண்ணிய மழைத் துளிகள் பெய்து, நறுமணமான மலர்கள் பரவி இருக்கும் இந்த இடம், குளிர்ச்சியுடையதாக இருந்தாலும், தேற்றமாக வெப்பம் உடையதாய் உள்ளது.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – இம்மழைப் பெயலைக் காணின், தலைமகள், தான் பிரியுங்கால் குறித்த பருவமெனக் கருதித் தன்னை எதிர்நோக்கி என்னாகுவளோ என நினைந்து வருத்தம் மீதூர்ந்தமையின், தலைமகன் வெய்ய மன்ற என்றும், அவளுடைய இளமையும் இனிய துணையையும் நோக்கத் தான் பிரிதல் போதரல் கூடாது என்பான் போல மடவரல் இத்துணை ஒழியக் கடமுதிர் சோலைய காடு இறந்தோற்கே என்றும் கூறினான்.  இலக்கணக் குறிப்பு – தளித்தென – தளித்தது என, தொகுத்தல் விகாரம், தாஅய் – செய்யுளிசை அளபெடை, தண்ணியவாயினும் – உம்மை இழிவு சிறப்பு, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், மடவரல் – அன்மொழித்தொகை, இறந்தேற்கே – ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  மடவரல் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மடம் வருதலை உடையாள் என விரித்துக் கொள்க.  கடம் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வற்கடம் என்பதன் முதற்குறை.  காடு எனினுமாம், ஒளவை துரைசாமி உரை – பாலை நிலம்.

சொற்பொருள்:  நுண் மழை தளித்தென – நுண்ணிய மழை விழுந்ததால், நறு மலர் – நறுமணமுடைய மலர்கள், தாஅய் – பரவி, தண்ணியவாயினும் – குளிர்ச்சியாக இருந்தாலும், வெய்ய – வெப்பமாக உள்ளது, மன்ற – தெளிவாக, மடவரல் இன் துணை – மடப்பம் பொருந்திய இனிய துணைவி, அழகு பொருந்திய இனிய துணைவி, ஒழிய – பிரிந்து, கட – பாலை நிலம், முதிர் சோலைய காடு – பழமையான சோலைகளையுடைய காடு, இறந்தேற்கே – கடந்த எனக்கு

ஐங்குறுநூறு 329, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவன் அருகில் உள்ளவர்களிடம் சொன்னது
ஆள் வழக்கு அற்ற பாழ்படு நனந்தலை
வெம்முனை அருஞ்சுரம் நீந்தி, நம்மொடு
மறுதருவது கொல் தானே, செறி தொடி
கழிந்து உகு நிலையவாக
ஒழிந்தோள் கொண்ட, என் உரங்கெழு நெஞ்சே?

பாடல் பின்னணி:  சுரத்தின்கண் மீளலுறும் தன் நெஞ்சினை நொந்து தலைவன் அருகில் இருப்பவர்களிடம் கூறியது.

பொருளுரை:  மக்கள் இயங்காத பாழாகிய பெரிய இடமாகிய, கொடிய ஆறலைப் போர் நிகழும் கடத்தற்கு அரிய சுரத்தைக் கடந்து, நம்முடன் வராது மீண்டு செல்லக் கருதுமோ, செறிவாக இருந்த வளையல்கள் கழன்று விழும் நிலைமை அடையும்படி என்னை நீங்கி மனையில் இருப்பவள் கவர்ந்துகொண்ட, என் வலிமை மிக்க நெஞ்சம்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவன் பிரிவு உன்னி வளை கழன்று உக வருந்தும் தலைவியின் நிலைமையையே இடையறாது நினைந்து நினைந்து தன் நெஞ்சம் உருகுவதாய்த் தான் மேற்கொண்ட பொருள் ஈட்டற்கண் ஈடுபட மறுத்தலின் போக்கு இடையூறுற்றுப் போகவும் இயலாமல் மீளவுந் துணிவின்றித் தடுமாறுந் தலைவன் அந்நிலையினை நெஞ்சின் மேலேற்றிக் கூறியபடியாம்.  இலக்கணக் குறிப்பு – வழக்கு – தொழிற்பெயர், கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், தானே – தான், ஏ அசைநிலைகள், நெஞ்சே – ஏகாரம் அசைநிலை,  நனந்தலை – அகன்ற இடம்.  நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).

சொற்பொருள்ஆள் வழக்கு அற்ற பாழ்படு நனந்தலை வெம்முனை அருஞ்சுரம் நீந்தி – மக்கள் இயங்காத பாழாகிய பெரிய இடமாகிய கொடிய ஆறலைப் போர் நிகழும் கடத்தற்கு அரிய சுரத்தைக் கடந்து, நம்மொடு மறுதருவது கொல் தானே – நம்முடன் வராது மீண்டு செல்லக் கருதுமோ, செறி தொடி கழிந்து உகு நிலையவாக ஒழிந்தோள் கொண்ட – செறிவாக இருந்த வளையல்கள் கழன்று விழும் நிலைமை அடையும்படி என்னை நீங்கி மனையில் இருப்பவள் கொண்ட, என் உரங்கெழு நெஞ்சே – என் வலிமை மிக்க நெஞ்சம்

ஐங்குறுநூறு 330, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வெந்துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி
வந்தனம் ஆயினும், ஒழிக இனிச் செலவே,
அழுத கண்ணள் ஆய் நலம் சிதையக்
கதிர் தெறு வெஞ்சுரம் நினைக்கும்,
அவிர் கோல் ஆய்தொடி உள்ளத்துப் படரே.

பாடல் பின்னணி:  பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்த தலைவன் சுரத்தின்கண் தன் நெஞ்சிடம் சொன்னது.

பொருளுரை:  நெஞ்சே!  அழும் கண்களை உடையவளாகவும், பிறரால் ஆராயப்பட்ட அவள் அழகு பாழ்பட்டு அழியவும், நாம் இருக்கும் வெயில் எரிக்கும் வெப்பமான பாலை நிலத்தை நினைக்கும், ஒளிரும் திரண்ட வளையல்களை அணிந்த நம் காதலி பெரும் துன்பம் அடைவதால், வெப்பத்தால் பொடியாகிக் கிடக்கும் வெயிலின் வெப்பம் மிக்க காட்டினைக் கடந்து வந்தோம் ஆனாலும், நாம் மேலே செல்வதை இனி ஒழிவேமாக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – யாம் புறப்படு முன்னரே அவள் கண் கனிந்து அழத் தொடங்கி விட்டால் என்பான் அழுத கண்ணள் என்றான்.  நாம் பன்முறையும் ஆராய்ந்து இவை நல்ல எனப் பாராட்டிய அவளது பெண்மைப் பெருநலம் சிதையும்படி அவளை இந்நிலையில் விட்டு நாம் போதல் தகுமோ என்பான் ஆய்நலம் சிதைய நினைப்பிக்கும் என்றான்.  அவள் நினைவெல்லாம் நம்பாலும் நாம் கடக்கும் இவ்வெஞ்சுரமும் பற்றியே நிகழ்வனவாம் என்பான் நலம் சிதையக் கதிர் தெறும் வெஞ்சுரம் நினைப்பிக்கும் என்றான்.  வெந்துகள் (1) – ஒளவை துரைசாமி உரை – வெயில் வெம்மையால் கல்லும் மண்ணும் கட்டுடைந்து ஆகிய நுண்ணிய பொடி.  ஆதலால் அப்பொடி வெந்துகள் எனப்பட்டது.  இலக்கணக் குறிப்பு – வெந்துகள் – விகாரம், செலவே – ஏகாரம் அசைநிலை, படரே – ஏகாரம் அசைநிலை, ஆய்தொடி – அன்மொழித்தொகை.

சொற்பொருள்:  வெந்துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி வந்தனம் ஆயினும் – வெப்பத்தால் பொடியாகிக் கிடக்கும் வெயிலின் வெப்பம் மிக்க காட்டினைக் கடந்து வந்தோம் ஆனாலும், ஒழிக இனிச் செலவே – நாம் மேலே செல்வதை இனி ஒழிவேமாக, அழுத கண்ணள் ஆய் நலம் சிதையக் கதிர் தெறு வெஞ்சுரம் நினைக்கும் – அழும் கண்களை உடையவளாகவும் பிறரால் ஆராயப்பட்ட அழகு பாழ்பட்டதாகவும் வெயில் எரிக்கும் வெப்பமான பாலை நிலத்தை நினைக்கும், அவிர் கோல் ஆய்தொடி உள்ளத்துப் படரே – ஒளிரும் திரண்ட வளையல்களை அணிந்த நம் காதலியின் பெரும் துன்பம்

தலைவி இரங்கு பத்து

பாடல்கள் 331 – 340 – பொருள் ஈட்டும்பொருட்டுத் தலைவன் பிரிந்தபோது மனையில் உறையும் தலைவி ஆற்றாமையால் இரங்குதல் பற்றியவை.  வருந்தும் தலைவி தோழியிடம் கூறியவை.

ஐங்குறுநூறு 331, ஓதலாந்தையார், பாலைத் திணை தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! அவிழ் இணர்க்
கருங்கால் மராஅத்து வைகு சினை வான் பூ,
அருஞ்சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள,
இனிய கமழும் வெற்பின்
இன்னாது என்ப, அவர் சென்ற ஆறே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்தபோது ‘செல்லும் வழியில் உளதாகிய நாற்றத்தால் நம்மை நினைந்து முடியச் செல்லார், மீள்வரோ?’ எனக் கேட்ட தோழியிடம் ‘அவர் முடியச் சென்றார்’ என்பது அறிந்து இரங்கித் தலைவி கூறியது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  கரிய அடிப்பகுதியையுடைய கடம்ப மரத்தின் கிளைகளில் உள்ள வெள்ளை மலர்க் கொத்துக்கள், கடத்தற்கரிய பாலை நிலத்திற்குத் தங்கள் துணைவியரை நீங்கிச் சென்றவர்கள் நினைக்குமாறு இனிமையாக நறுமணம் வீசும் மலையின்கண், நம் தலைவர் சென்ற வழி, துன்பம் தரும் தன்மையுடையது எனக் கூறுகின்றனர்.

குறிப்பு:  பழைய உரை – சென்ற சுரம் பிரிந்தார் தத்தம் துணைவியரை நினையும்படி வெறி கமழும் மலரை உடைத்தாகலும், செலற்கு அருமையால் இன்னாமை உடைமையும் தலைவி இரங்குவதற்குக் காரணமாயின என்றவாறு.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மராஅத்து வைகு சினை வான் பூ அருஞ்சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள இனிய கமழும் என்றது, குறிஞ்சி நிலத்துப் பூங்கொடி மகளிர் நறுமண மராவினது அழகிய மலரைப் பெரிதும் விரும்பிச் சூடும் இயல்பினர் ஆதலின் அந்த மணமே பெரிதும் கமழும் அவர் தம் கூந்தலாகிய பாயலிலே வைகி அவரைத் தழுவி இன்பம் நுகர்ந்த தலைவன்மார்க்கு மரா மலர் கமழ்ந்த இடமெல்லாம் தம் உயிர்க்காதலிமார் நினைவே மீக்கூர்ந்து மயங்குவர்.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, ஆறே – ஏகாரம் அசைநிலை.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, அவிழ் இணர் – மலர்ந்த கொத்துக்கள், கருங்கால் மராஅத்து வைகு சினை வான் பூ – கரிய (வலிய) அடிப்பகுதியையுடைய கடம்ப மரத்தின் கிளைகளில் உள்ள வெள்ளை மலர்கள் (வைகுதல் – தங்குதல், இருத்தல், மராம், கடம்பம் – Neolamarckia or Anthocephalus cadamba, Kadampa oak), அருஞ்சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள இனிய கமழும் வெற்பின் – கடத்தற்கரிய பாலை நிலத்திற்குத் தங்கள் துணைவியரை நீங்கிச் சென்றவர்கள் நினைக்குமாறு இனிமையாக நறுமணம் வீசும் மலையில் (உள்ள – நினைக்க), இன்னாது என்ப – துன்பமுடையது எனக் கூறுகின்றனர், அவர் சென்ற ஆறே – நம் தலைவர் சென்ற வழி

ஐங்குறுநூறு 332, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! என்னதூஉம்
அறன் இல மன்ற தாமே, விறல் மிசைக்
குன்று கெழு கானத்த பண்பில் மாக் கணம்,
‘கொடிதே காதலிப் பிரிதல்
செல்லல் ஐய’ என்னாது அவ்வே.

பாடல் பின்னணி:  தலைவன் பொருள் ஈட்டும்பொருட்டுப் பிரிந்தபோது வருந்திய தலைவி, சுரத்தில் உள்ள விலங்குகளை நொந்து தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!   வெற்றிகரமான உச்சியையுடைய மலைகள் பொருந்திய காட்டின்கண் உள்ள பண்பு இல்லாத விலங்குகளின் கூட்டம், தேற்றமாக அறம் இல்லாதவை, நம் தலைவரிடம், “ஐயா!  கொடியது காதலியைப் பிரிந்து செல்லுதல்.  அதை நீவிர் செய்யாதீர்?” எனக் கூறாதலால்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – எஞ்ஞான்றும் தம் துணையைப் பிரியாது உறையும் மாக்கணம். அப்பண்பு குறித்துப் பிரிந்து போதரும் தலைமகற்கும் பிரிதல் கொடியது என்னாமையின், பண்பின் (பண்பு இன்) மாக்கணம் என்றும், தம்மைக் கூடினார் வருத்த மெய்தகப் பிரிந்தாரைத் தெருட்டுமாறு கூறுதல் பண்புடையார்க்கு அறமாகலின், அறனில மன்ற என்றும் கூறினாள்.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, என்னதூஉம் – அளபெடை, அறன் – அறம் என்பதன் போலி, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், தாமே – தாம், ஏ அசைநிலைகள், கானத்த – கானம் என்னும் பெயரடியாக வந்த பெயரெச்சக்குறிப்பு, கொடிதே – ஏகாரம் அசைநிலை, தேற்றம், செல்லல் – எதிர்மறை வியங்கோள் வினைமுற்று, அவ்வே – ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, என்னதூஉம் அறன் இல மன்ற தாமே – அறம் இல்லாதவை தேற்றமாக (தெளிவாக), விறல் மிசைக் குன்று கெழு கானத்த பண்பு இல் மாக் கணம் – வெற்றிகரமான உச்சியையுடைய மலைகள் பொருந்திய காட்டின்கண் உள்ள பண்பு இல்லாத விலங்குகளின் கூட்டம், ‘கொடிதே காதலிப் பிரிதல் செல்லல் ஐய’ என்னாது அவ்வே – கொடியது காதலியைப் பிரிந்து செல்லுதல் செய்யாதீர் ஐயா எனக் கூறாது அவை

ஐங்குறுநூறு 333, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! யாவதும்
வல்லா கொல்லோ தாமே, அவண
கல் உடை நன் நாட்டுப் புள்ளினப் பெருந்தோடு,
‘யாஅம் துணை புணர்ந்து உறைதும்,
யாங்குப் பிரிந்து உறைதி’ என்னாது அவ்வே?

பாடல் பின்னணி:  தலைவன் பொருள் ஈட்டும்பொருட்டுப் பிரிந்தபோது வருந்திய தலைவி, சுரத்தில் உள்ள பறவைகளை நொந்து தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நம் தலைவர் சென்ற மலைகள் பொருந்திய நல்ல நாட்டில் உள்ள பறவைகளின் பெரிய தொகுதி, அவரை நோக்கி, “‘நாங்கள் எங்கள் துணையைப் பிரியாது வாழ்கின்றோம்.  நீ எவ்வாறு உன் காதலியைப் பிரிந்து உறைகின்றாய்?” எனக் கேட்காததால், அவை சிறிதும் வல்லமை உடையன இல்லையோ?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – கல்லுடை நன்னாட்டுப் புள்ளினத்துள், ‘புணர்ந்தீர் புணர்மினோ’ என இணர் மிசைச் செங்கண் இருங்குயில் எதிர் குரல் பயிற்றும் (நற்றிணை 224), ‘இருங்குயில் ‘கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு அகறல் ஓம்புமின் அறிவுடையீர்!’ எனக் கையறத் துறப்போர்க் கழறுவ (நற்றிணை 243), எனவும் மயில்கள் ‘ஆர் குரல், மணந்து தணந்தோரை ‘நீடன்மின் வாரும்’ என்பவர் சொல் போன்றனவே’ (பரிபாடல் 14: 8–9) எனவும் கூறுமென்றலின், புள்ளினப் பெருந்தோடு இவ்வாறு கூவித் தடுக்க வல்லுநவாகவும், ‘புணர்ந்தோர் பிரிதல் சூழ்தலின் அரிதுமுண்டோ’ (நற்றிணை 79) என்று மருண்டு ஒன்றும் சொல்லமாட்டாவாயின போலும் என்பாள், ‘யாதும் வல்லா கொல்லோ’ என்றாள்.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, கொல்லோ– கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ அசைநிலை, தாமே – தாம், ஏ அசைநிலைகள், யாஅம் – செய்யுளிசை அளபெடை, உறைதி – முன்னிலை வினைமுற்று, அவ்வே – ஏகாரம் அசைநிலை.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, யாவதும் வல்லா கொல்லோ தாமே – சிறிதும் வல்லமை உடையன இல்லையோ, அவண – அங்கு, கல் உடை நன் நாட்டுப் புள்ளினப் பெருந்தோடு – மலைகள் பொருந்திய நல்ல நாட்டில் உள்ள பறவைகளின் பெரிய தொகுதி, யாஅம் துணை புணர்ந்து உறைதும் யாங்குப் பிரிந்து உறைதி என்னாது அவ்வே – ‘நாங்கள் எங்கள் துணையைப் பிரியாது வாழ்கின்றோம். நீ எவ்வாறு உன் காதலியைப் பிரிந்து உறைகின்றாய்’ எனக் கேட்காத அவை

ஐங்குறுநூறு 334, ஓதலாந்தையார், பாலைத் திணை  தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! சிறியிலை
நெல்லி நீடிய கல் காய் கடத்திடைப்
பேதை நெஞ்சம் பின் செலச் சென்றோர்,
கல்லினும் வலியர் மன்ற,
பல் இதழ் உண்கண் அழப் பிரிந்தோரே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்து சென்று நீண்ட நாட்கள் ஆகியதால் வருந்திய தலைவி, தோழியிடம் சொன்னது.

பொருளுரை:   தோழி!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  சிறிய இலைகளையுடைய நெல்லி மரங்கள் நெடிதாக வளர்ந்த மிகுந்த வெப்பத்தினால் கற்கள் சுடும் பாலை நிலத்தின்கண், அறியாமையுடைய என் நெஞ்சம் தலைவரின் பின் சென்றது.  பல இதழ்களையுடைய மலர்களைப் போன்ற மையிட்ட என் கண்கள் அழும்படி என்னைப் பிரிந்த அவர் உறுதியாக கற்பாறையைவிட வலியவர்.

குறிப்பு:  பழைய உரை – பல்லிதழ் உண்கண் அழப் பிரிந்தோர் என்றது, தாம் குறித்த எல்லைக்கண் வராது நீட்டித்தார் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, சிறியிலை – சிறிய இலை அல்லது சிற்றிலை என்பதன் திரிபு, கல்லினும் – உம்மை உயர்வு குறித்தது, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், பிரிந்தோரே – ஏகாரம் அசைநிலை, மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  கல் காய் கடத்திடை (2) – தி. சதாசிவ ஐயர் உரை – கற்கள் சுடும் காட்டிடை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலைகள் சுடாநின்ற பாலைக் கானத்தின்கண்.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  அம்ம – கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி –  தோழி, சிறியிலை நெல்லி நீடிய – சிறிய இலைகளையுடைய நெல்லி மரங்கள் நெடிதாக வளர்ந்த, கல் காய் கடத்திடை – மலைகள் சுடும் பாலை நிலத்தின்கண், கற்கள் சுடும் பாலை நிலத்தின்கண், பேதை நெஞ்சம் பின் செலச் சென்றோர் – அறியாமையுடைய என் நெஞ்சம் பின்னால் செல்ல சென்ற தலைவர், கல்லினும் வலியர் மன்ற – உறுதியாக கற்பாறையைவிட வலியவர், பல் இதழ் உண்கண் அழப் பிரிந்தோரே – பல இதழ்களையுடைய மலர்களைப் போன்ற மையிட்ட கண்கள் அழும்படி பிரிந்தவர்

ஐங்குறுநூறு 335, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! நம் வயின்
நெய்த்தோர் அன்ன செவிய எருவை,
கல் புடை மருங்கில் கடு முடை பார்க்கும்,
காடு நனி கடிய என்ப,
நீடி இவண் வருநர் சென்ற ஆறே.

பாடல் பின்னணி:  தலைவன் சென்ற சுரத்தின் கொடுமையைப் பிறர் கூறக் கேட்ட தலைவி, ஆற்றாது தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  விரைவில் வராது நீட்டித்து, அதன்பின் இவ்விடம் நம்பால் வரும் நம் தலைவர் சென்ற வழி, குருதியை ஒத்த சிவந்த செவிகளையுடைய கழுகுகள் மலையின் பக்கங்களில் மிக்க தீய நாற்றம் வீசும் புலாலைப் பார்க்கும் மிகவும் கொடிய காட்டின்கண் உள்ளது, எனக் கூறுகின்றனர்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – உயிர்க்கொலை வேட்டுத் திரியும் விலங்குகளும் ஆறலை கள்வரும் வாழும் இடம் என்பது தோன்ற, எருவை கடுமுடை பார்க்கும் காடு என்றும், அதனால் அக்காட்டு வழி செல்வோர்க்குத் தீங்கு பயப்பது என்று பிறர் சொல்லக் கேட்டு உள்ளத்தே அச்சமுறத் தலைவி வருந்துமாறு புலப்படக் காடு நனிகடிய என்ப என்றும், தலைமகன் விரைந்து மீளுதல் வேண்டுமென விழைந்து கூறுதலால் நீடி இவண் வருநர் சென்ற ஆறு என்றும் கூறினாள்.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, அன்ன – உவம உருபு, புடை மருங்கு – இருபெயரொட்டுப் பண்புத்தொகை, கடு – கடி என்னும் உரிச்சொல்லின் திரிபு, நனி – உரிச்சொல், வருநர் – வினையாலணையும் பெயர், ஆறே – ஏகாரம் அசைநிலை.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, நம் வயின் – நம்மிடம், நெய்த்தோர் அன்ன செவிய எருவை கல் புடை மருங்கில் கடு முடை பார்க்கும் காடு நனி கடிய என்ப – குருதியை ஒத்த செவிகளையுடைய கழுகுகள் மலையின் பக்கங்களில் மிக்க தீய நாற்றம் வீசும் புலாலைப் பார்க்கும் காடுகள் மிகவும் கொடியன எனக் கூறுகின்றனர் (நெய்த்தோர் – குருதி), நீடி இவண் வருநர் சென்ற ஆறே – விரைவில் வராது நீட்டித்து அதன்பின் இவ்விடம் வரும் நம் தலைவர் சென்ற வழி

ஐங்குறுநூறு 336, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! நம் வயின்
பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற,
நின்றது இல் பொருள் பிணி முற்றிய
என்றூழ் நீடிய சுரன் இறந்தோரே.

பாடல் பின்னணி:  பிரிவதற்கு முன்பு தங்களிடம் தலைவன் ஒழுகிய திறம் நினைந்து தலைவி தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நம்மிடமிருந்து எப்பொழுதும் தான் பிரியாதவர் போல் நம்முடன் கூடிய நம் தலைவர், அதன்பின் நிலை இல்லாத பொருள் மேல் உள்ள பற்றினால், தான் கருதியதை முடிக்கும் பொருட்டுக் கதிரவனின் வெப்பம் மிக்க பாலை நிலத்தைக் கடந்து சென்றுள்ளார்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – முன்பு நிலையுதல் இல்லாத இளமையாற் பிணிப்புண்டு பிரிவென்பது ஒன்று உண்டு என்ற நினைவே தோன்றாதவாறு கூடியவர், இன்று அதுவே இயல்பாகவுடைய பொருளாற் பிணிப்புண்டு அதனை முற்றுவிப்பது கருதிச் சென்றது எனக்கு வியப்புத் தருகின்றது என்பாள், நின்றதில் பொருட்பிணி முற்றிய சுரன் இறந்தோர் என்றும், நீடுதல் இல்லாத பொருள் குறித்து வெயில் வெம்மை நீடிய சுரன் இறந்து போதல் நேரிதன்று எனத் தான் கருதியது முடித்தற்கு என்றூழ் நீடிய சுரன் என்றும் கூறினாள்.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, மன்ற – தெளிவுப்பொருளில் வரும் இடைச்சொல், சுரன் – சுரம் என்பதன் போலி, இறந்தோரே – ஏகாரம் அசைநிலை.   மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  என்றூழ் – கதிரவனின் முதிர்ந்த கதிர்கள், எல் (கதிரவன்) + ஊழ் (முதிர்ச்சி).  முனைவர் கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம்.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, நம் வயின் பிரியலர் போலப் புணர்ந்தோர் – நம்மிடமிருந்து எப்பொழுதும் தான் பிரியாதவர் போல் நம்முடன் கூடி, மன்ற – தேற்றமாக, தெளிவாக, நின்றது இல் பொருள் பிணி முற்றிய என்றூழ் நீடிய சுரன் இறந்தோரே – நிலை இல்லாத பொருள் மேல் உள்ள பற்றால் அதை முடிக்கும் பொருட்டுக் கதிரவனின் வெப்பம் மிக்க பாலை நிலத்தைக் கடந்து சென்ற நம் தலைவர்

ஐங்குறுநூறு 337, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! நம் வயின்
மெய்யுற விரும்பிய கை கவர் முயக்கினும்
இனிய மன்ற, தாமே
பனி இருங்குன்றம் சென்றோர்க்குப் பொருளே.

பாடல் பின்னணி:  தலைவன் பொருள்வயின் பிரிந்தபோது, ‘அவன் காதல் எல்லாம் பொருளின் மேல் தான்’ எனத் தலைவி தலைவனைப் பழித்துத் தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நம்மிடத்தில் மெய்யுடன் மெய் பொருந்தும்படி விரும்பிய ஒருவரை ஒருவர் கைகளால் அணைத்துக் கொள்வதைவிட, பொருளே தேற்றமாக இனிமையானது, நடுங்கச் செய்யும் பெரிய மலைகள் இருக்கும் வழியே சென்ற நம் தலைவற்கு.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின்னை மறந்து அவர் நீட்டிப்பார் அல்லர் என்றாட்கு அவர் என்னைக் காதலிப்பதினும் மிகுதியாகப் பொருளையே காதலிப்பவர் ஆவர் ஆதலின் அவர் மீண்டும் விரைந்து வருகுவர் என்பது பேதைமை எனத் தோழியைக் கடிவாள் அவர்க்கு முயக்கினும் பொருட்பேறுகளே இனிய என்றாள்.  பனி இருங்குன்றம் என்பதற்கு, பனிபடிந்த பெரிய மலை என்றும் நினைப்போர் நெஞ்சு பனித்தற்குக் காரணமான மலையென்றும் இரட்டுற மொழிதல் என்னும் உத்தியாற் கூறிக்கொள்க. பாலைத் திணைக்குப் பின்பனிப் பருவமும் உரித்தாகலின் பணியிருங்குன்றம் என்றார்.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், தாமே – தாம், ஏ அசைகள், பொருளே – ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  பனி இருங்குன்றம் (4) – ஒளவை துரைசாமி உரை – குளிர்ந்த பெரிய குன்றம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நினைத்தோர் நெஞ்சம் நடுங்குதற்குக் காரணமான பாலை நிலத்து மலை, தி. சதாசிவ ஐயர் உரை – பனிபொருந்திய பெரிய மலை, அ. தட்சிணாமூர்த்தி உரை – நினைத்தாலே நெஞ்சு நடுங்குதற்குரிய பெரிய மலைகள்.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்: அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, நம் வயின் மெய்யுற விரும்பிய கை கவர் முயக்கினும் – நம்மிடத்தில் மெய்யுடன் மெய் பொருந்தும்படி விரும்பிய ஒருவரை ஒருவர் கைகளால் அணைத்துக் கொள்வதைவிட, இனிய மன்ற – தேற்றமாக இனிமையானது, தாமே பனி இருங்குன்றம் சென்றோர்க்கு – நடுங்கச் செய்யும் (குளிர்ச்சி மிக்க) பெரிய மலைகள் இருக்கும் வழியே சென்ற நம் தலைவற்கு, பொருளே – பொருள்

ஐங்குறுநூறு 338, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! சாரல்
இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம்,
மலையுறு தீயின் சுர முதல் தோன்றும்,
பிரிவருங் காலையும், பிரிதல்
அரிது வல்லுநர் நம் காதலோரே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரியக்கூடாத பருவத்தில் பிரிந்தான் எனத் தலைவி வருந்திக் கூறியது.

பொருளுரை:  தோழி! நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  மலைச்சரிவில் இலைகள் உதிர்ந்து மலர்ந்த உயர்ந்த இலவ மரங்கள், அம்மலையில் பற்றி எரியும் தீயைப் போல் தோன்றும், பிரிந்து உறைய இயலாத இக்காலத்திலும், பிரிந்து செல்வதற்குப் பெறுவதற்கரிய ஆற்றலை உடையவர் நம் தலைவர்.

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – பிழையின்றி மலர்ந்த இலவம் மலையுறு தீயின் தோன்றும் என்றது அன்பின்றிப் பிரிந்தான் எனத் தலைவனது பிரிவைத் தான் ஆற்றாளாயினமை உரைத்தவாறு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலர்ந்த இலவம் தீப் போன்று தோன்றும் என்றது, தலைவன் நம்மைப் பிரிந்து போதல் அறமே ஆயினும் பருவம் ஒவ்வாமையின் அஃது எனக்குப் பெருந்துன்பமாகத் தோன்றுகின்றது.   இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம், தீயின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, காலையும் – உம்மை சிறப்பு, காதலோரே – ஏகாரம் அசைநிலை.  நம் காதலோரே (4) – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள்.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, சாரல் இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம் மலையுறு தீயின் சுர முதல் தோன்றும் பிரிவு அரும் காலையும் – மலைச்சரிவில் இலைகள் உதிர்ந்து மலர்ந்த உயர்ந்த இலவ மரங்கள் அம்மலையில் பற்றி எரியும் தீயைப் போல் தோன்றும் பிரிந்து உறைய இயலாத இக்காலத்திலும், பிரிதல் அரிது வல்லுநர் நம் காதலோரே – பிரிந்து செல்வதற்குப் பெறுவதற்கரிய ஆற்றலை உடையவர் நம் தலைவர்

ஐங்குறுநூறு 339, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! சிறியிலைக்
குறுஞ்சினை வேம்பின் நறும் பழம் உணீஇய
வாவல் உகக்கும் மாலையும்
இன்று கொல், காதலவர் சென்ற நாடே?

பாடல் பின்னணி:  தலைவன் குறித்த பருவ வரவின்கண் மாலைப் பொழுது கண்டு ஆற்றாளாய தலைவி தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  சிறிய இலைகளையும் குறிய கிளைகளையும் உடைய வேப்ப மரத்தின் நறிய பழத்தை உண்ணுவதற்காக வௌவால்கள் உயரமாகப் பறக்கும் மாலை நேரமும் இல்லையா, நம் தலைவர் சென்ற நாட்டில்?

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – குறுஞ்சினை வேம்பின் ஒண் பழத்தை உண்டற்கு வாவல் உகக்கும் என்றது, அன்பின்றிப் பிரிந்த அவரது கூட்டத்தை யாம் விரும்பாநின்றேம் என்றவாறு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வாவல் மாவும் பலாவும் வாழையுமாகிய சிறப்பையுடைய பழங்களின் பொருட்டன்றிக் கைக்கின்ற வேம்பின் பழத்தை உண்ண விரும்பி வானின்கண் ஏறப்பறந்து சுழலுதல் போன்று நம் பெருமானும் ஒப்பற்ற காதல் பேரின்பத்தைப் பொருட்டு நம்மை நீத்து மொழி பெயர் தேயங்களிலே சென்று சுழலா நிற்பர்; அருள் இலர், வன்கண்ணர் என்பது வேம்பின் பழத்தை உணீஇய வாவல் உகக்கும் என்பது.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, உணீஇய – செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை, சிறியிலை – சிறிய இலை, தொகுத்தல் விகாரம், கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், நாடே – ஏகாரம் அசைநிலை.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, சிறியிலைக் குறுஞ்சினை வேம்பின் நறும் பழம் உணீஇய வாவல் உகக்கும் மாலையும் இன்று கொல் – சிறிய இலைகளையும் குறிய கிளைகளையும் உடைய வேப்ப மரத்தின் நறிய பழத்தை உண்ணுவதற்காக வௌவால்கள் உயரமாகப் பறக்கும் மாலை நேரமும் இல்லையா, காதலவர் சென்ற நாடே – நம் தலைவர் சென்ற நாட்டில்

ஐங்குறுநூறு 340, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! காதலர்
உள்ளார் கொல், நாம் மருள் உற்றனம் கொல்,
விட்டுச் சென்றனர் நம்மே,
தட்டைத் தீயின் ஊர் அலர் எழவே?

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்தபோது விரைவில் வருவான் என ஆற்றியிருந்த தலைவி, அவன் வரவை நீட்டித்தபொழுது ஆற்றாது தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  மூங்கிலில் எழுந்த தீ போல் ஊரில் அலர் எழுமாறு நம்மை விட்டு நீங்கிய நம் தலைவர் நம்மை நினைப்பாரா?  இல்லை நாம் தான் அவர் குறித்த காலம் கடந்து விட்டது என்று மயங்கி விட்டோமோ?

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – ‘விட்டுச் சென்றார்’ என்றாள், ‘அவரின்றி நாம் இல்லை’ என்பதனைத் தாம் அறிந்திருந்தும் விட்டுச் சென்றார் என்ற குறிப்பில்.  அங்ஙனம் சென்றவர் தாம் செய்த சூளையும் நம் நிலை என்னவாகியிருக்கும் என்பதனையும் நினையாரோ என்றாள்.  ‘அவர் தவறிலர் எனின் நாம் தான் மதிமருண்டு அவர் மேல் பழி சுமத்துகிறோமோ’ என்று ஐயுற்றவள் ‘மருளுற்றனம் கொல்’ என்றாள்.  ஊரவர் தன் காதலனைப் பழி தூற்றுவது தன் துயரை மிகுவித்ததாதலின் ‘அலர் எழ’ என்றாள்.  அவ்வலரும் பெரிது என்பாள் மூங்கிற் புதரில் பற்றிய எரியை உவமையாக்கினாள்.  இலக்கணக் குறிப்பு – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசைநிலை, கொல் – இரண்டும் ஐயப்பொருட்டு வந்தன, நம்மே – ஏகாரம் அசைநிலை, தீயின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது. ஐந்தாம் வேற்றுமை உருபு, எழவே – ஏகாரம் அசைநிலை.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, காதலர் உள்ளார் கொல் – நம் தலைவர் நினைப்பாரா, நாம் மருள் உற்றனம் கொல் – நாம் மயங்கி விட்டோமோ, விட்டுச் சென்றனர் நம்மே – நம்மைப் பிரிந்து சென்றவர், தட்டைத் தீயின் ஊர் அலர் எழவே – மூங்கிலில் எழுந்த தீ போல் ஊரில் அலர் எழுமாறு

இளவேனில் பத்து

பாடல்கள் 341 – 350 – தலைவன் பிரியும்பொழுது தான் வருவதாகக் கூறிய இளவேனில் பருவம் வந்தும் அவன் வராமை கண்டு வருந்திய தலைவி கூறியவை.  ஒளவை துரைசாமி உரை – இப்பருவத்தே வருவல் என்று குறித்த தலைமகன் வாராது, அவனாற் குறிக்கப்பெற்ற பருவம் வருதலாற் பயனின்று என்பாள், ‘அவரோ வாரார் தான் வந்தன்றே’ என்றாள்.  ‘செவ்வி வேனில் வந்தன்று அம்ம தானே, வாரார் தோழி நம் காதலோரே’ என்றார் பிறரும் (அகநானூறு 277).  வேனில் வரவு கண்டதும் தலைமகன் வரவை உடன் நினைந்து நெஞ்சின்கண் அவன் திருவுருவைக் காண்டலின், அவர் என்று சுட்டி ஒழிந்தாள். பருவ வரவோடு அவன் வரவும் உடன் நிகழாமையால் புலந்து அவர் என்றாள் என்றுமாம்.

ஐங்குறுநூறு 341,  ஓதலாந்தையார், பாலைத் திணை –  தலைவி தோழியிடம் சொன்னது 
அவரோ வாரார், தான் வந்தன்றே,
குயில் பெடை இன் குரல் அகவ
அயிர்க் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்துழிக் குறித்த பருவம் வரக்கண்ட தலைவி சொன்னது.

பொருளுரை:   தலைவர் இன்னும் வரவில்லை. ஆனால் இளவேனில் பருவம் வந்து விட்டது.  பெண் குயில் தன் இனிய குரலில் பாடுகின்றது, நுண்மையும் கருநிறமுமுடைய மணல் தென்றல் காற்றினால் வரி வரியாக வளைந்துத் தோன்றும் இப்பொழுதில்.

குறிப்பு:  நுண் அறல் நுடங்கும் பொழுதே (3) – தி. சதாசிவ ஐயர் உரை – நுண்ணிதாய் அரித்தொழுகும் நீர் குறையும் காலம், ஒளவை துரைசாமி உரை – நுண்ணிய அசைவுற்ற மணல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நுண்ணிய மணல் தென்றல் காற்றினால் வரி வரியாக வளைந்து தோன்றும் காலம்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இச்செய்யுளில் குயிலோசை வெளிப்படையாகவும் தென்றல் வரவு குறிப்பாகவும் கூறப்படுகின்றன.  யாறுகளிலே நீர் வறந்து உலர்ந்த நுண்ணிய கருமணல் அறலாக நுடங்கும் என்றமையால், தென்றல் காற்றின் தொழில் குறிப்பாகப் போந்தமை காண்க.  இலக்கணக் குறிப்பு – அவரோ – ஓகாரம் அசைநிலை, இரக்கக்குறிப்புமாம், வந்தன்றே – ஏகாரம் அசைநிலை, கேழ் – நிறப்பண்பு குறிக்கும் உரிச்சொல் திரிபு (ஒளவை துரைசாமி உரை), பொழுதே – ஏகாரம் அசைநிலை.  கெழு – குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 5).  இளவேனிற்காலத்தில் குயில் கூவுதல் – மா நனை கொழுதிய மணி நிற இருங்குயில் படு நா விளியால் நடு நின்று அல்கலும் உரைப்ப போல ஊழ் கொள்பு கூவ – அகநானூறு 25, அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசைச் செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம் இன் இளவேனிலும் வாரார் – அகநானூறு 229, அஞ்சினைப் பாதிரி அலர்ந்தெனச் செங்கண் இருங்குயில் அறையும் பொழுதே – ஐங்குறுநூறு 341.

சொற்பொருள்:  அவரோ வாரார் – அவர் வரவில்லை, தான் வந்தன்றே – ஆனால் இள வேனில் வந்து விட்டது, குயில் பெடை இன் குரல் அகவ – பெண் குயில் இனிய குரலில் பாட, அயிர்க் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே – நுண்மையும் கருநிறமுமுடைய மணல் தென்றல் காற்றினால் வரி வரியாக வளைந்துத் தோன்றும் பொழுது (அறல் – ஓடும் நீர், வரி வரியாக உள்ள மணல்)

ஐங்குறுநூறு 342, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அவரோ வாரார், தான் வந்தன்றே,
சுரும்பு களித்து ஆலும் இரும் சினைக்
கருங்கால் நுணவம் கமழும் பொழுதே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்துழிக் குறித்த பருவம் வரக்கண்ட தலைவி சொன்னது.

பொருளுரை:   தலைவர் இன்னும் வரவில்லை.  ஆனால் இளவேனில் பருவம் வந்து விட்டது.   வண்டுகள், பெரியக் கிளைகளையுடைய நுணா மரங்களின் நறுமணமான மலர்களில் உள்ள தேனைக் குடித்து விட்டு மகிழ்வுடன் பாடுகின்றன.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – வண்டு தேனுண்டு களித்தாடும் பொழுது வந்ததேயன்றி என் நலனுகர்ந்து மகிழ்கொள்ளும் தலைவர் வந்திலர் என்றும், சுரும்பு படிந்து தேனுண்ண நுணவம் மலர்ந்து மணம் கமழும் பொழுது வந்தெய்திற்றே அன்றி, யான் படிந்து இன்புறுமாறு மலர்ந்து விளங்கும் அவரது மார்பினைப் பெறும் பருவம் எய்திற்று அன்று என இரங்கினவாராம்.  இலக்கணக் குறிப்பு – அவரோ – ஓகாரம் அசைநிலை, இரக்கக்குறிப்புமாம், வந்தன்றே – ஏகாரம் அசைநிலை, நுணவம் – நுணா என்பது ‘அம்’ சாரியை பெற்றது, பொழுதே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  அவரோ வாரார் – அவர் வரவில்லை, தான் வந்தன்றே – ஆனால் இள வேனில் வந்து விட்டது, சுரும்பு களித்து ஆலும் – தேனைக் குடித்து விட்டு மகிழ்வுடன் பாடும் வண்டுகள், இரும் சினை – பெரியக் கிளைகள், கருங்கால் – கரிய அடிப்பகுதி , நுணவம் – நுணா மரம், கமழும் பொழுதே – மலர்ந்து நறுமணம் கமழும் பொழுது

ஐங்குறுநூறு 343, ஓதலாந்தையார், பாலைத் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
அவரோ வாரார், தான் வந்தன்றே,
திணி நிலைக் கோங்கம் பயந்த
அணி மிகு கொழு முகை உடையும் பொழுதே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்துழிக் குறித்த பருவம் வரக்கண்ட தலைவி சொன்னது.

பொருளுரை:  தலைவர் இன்னும் வரவில்லை.  ஆனால் இளவேனில் பருவம் வந்து விட்டது.   திண்மையான கோங்க மரத்தின் மிகவும் அழகான பெருத்த அரும்புகள்  மலர்ந்துள்ளன.

குறிப்பு:  பழைய உரை – கோங்கின் அணிமிகு கொழுமுகை உடையும் பொழுது என்றது, தலைவன் குறித்த பருவ வரவு கண்டு நெஞ்சு நெகிழ்ந்திருந்தவாறு உணர்த்தியது.  திணி நிலைக் கோங்கம் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – திணிந்த நிலையினையுடைய கோங்கம்.  உறுதியாக நிற்கும் தன்மை.  இலக்கணக் குறிப்பு – அவரோ – ஓகாரம் அசைநிலை, இரக்கக்குறிப்புமாம், வந்தன்றே – ஏகாரம் அசைநிலை, பொழுதே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  அவரோ வாரார் – அவர் வரவில்லை, தான் வந்தன்றே – ஆனால் இள வேனில் வந்து விட்டது, திணி நிலை – திண்மையான நிலை, கோங்கம் – கோங்க மரங்கள், பயந்த – ஈன்ற, அணி மிகு – மிகுந்த அழகு, கொழு முகை – பெருத்த அரும்புகள், உடையும் பொழுதே – மலருகின்ற பொழுது

ஐங்குறுநூறு 344, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அவரோ வாரார், தான் வந்தன்றே,
நறும் பூங்குரவம் பயந்த
செய்யாப் பாவை கொய்யும் பொழுதே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்துழிக் குறித்த பருவம் வரக்கண்ட தலைவி சொன்னது.

பொருளுரை:  தலைவர் இன்னும் வரவில்லை.  ஆனால் இளவேனில் பருவம் வந்து விட்டது. நறிய மலர்களையுடைய குரவ மரம் ஈன்ற பாவை போன்ற மலர்களை மகளிர் மகவாகக் கொண்டு விளையாடும்பொருட்டுக் கொய்யும் பொழுது வந்து விட்டது.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – தலைவர்பால் தாய்மை உணர்வு தழைத்து வேட்கையால் முறுகி நிற்றலின், குரவம் பூத்த என்னாது குரவம் பயந்த செய்யாப் பாவை  என்றாள் என அறிக.  செய்யாப் பாவை (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குரவம் பூ உருவத்தால் பாவை போறலின் பாவை என்றே உவமவாகு பெயராற் கூறுப.  ஈண்டுச் செய்யாப் பாவை என்றது பாயா வேங்கை, பறவாக் கொக்கு என்பனபோல வெளிப்படை.  (பாயா வேங்கை – வேங்கை மலர், பறவாக் கொக்கு – மாம்பழம்).  செய்யாப் பாவை – இஞ்சி (மலைபடுகடாம் 125) – நச்சினார்க்கினியர் உரை – இஞ்சிக் கிழங்கைப் பாவை என்பது மரபு, ஒருவரால் பண்ணப்படாத பாவை.  இலக்கணக் குறிப்பு – அவரோ – ஓகாரம் அசைநிலை, இரக்கக்குறிப்புமாம், வந்தன்றே – ஏகாரம் அசைநிலை, குரவம் – குரா என்பது அம் என்னும் சாரியை பெற்று குரவம் ஆனது, செய்யாப் பாவை – வெளிப்படை, பொழுதே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  அவரோ வாரார் – அவர் வரவில்லை, தான் வந்தன்றே – ஆனால் இள வேனில் வந்து விட்டது, நறும் பூங்குரவம் பயந்த செய்யாப் பாவை கொய்யும் பொழுதே – நறிய மலர்களையுடைய குரவ மரம் ஈன்ற பாவை போன்ற மலர்களை மகளிர் மகவாகக் கொண்டு விளையாடும்பொருட்டுக் கொய்யும் பொழுது

ஐங்குறுநூறு 345, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அவரோ வாரார், தான் வந்தன்றே,
புதுப் பூ அதிரல் தாஅய்க்
கதுப்பு அறல் அணியும் காமர் பொழுதே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்துழிக் குறித்த பருவம் வரக்கண்ட தலைவி சொன்னது.

பொருளுரை:  தலைவர் இன்னும் வரவில்லை.  ஆனால் இளவேனில் பருவம் வந்து விட்டது.  புதிய பூக்களையுடைய அதிரல் கொடிகள் தனது மலர்களால் மகளிர் கூந்தல் போலும் கருமணலை அழகுபடுத்தும் அழகிய பருவம் வந்து விட்டது.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – ‘அதிரல் தாஅய்க் கதுப்பு அறல் அணியும் காமர் பொழுது’ என்றாள், என் அறல் போலும் கருங்கூந்தலுக்கு மலர் சூட்டி அழகுறுத்த அவர் இல்லையே என்ற ஏக்கத்தின் காரணமாக.  ஒப்புமை – கூந்தலைப் போன்ற மணல் – ஐங்குறுநூறு 345 – கதுப்பு அறல், கலித்தொகை 32 – எஃகு இடை தொட்ட கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் மை அற விளங்கிய துவர் மணல், சிறுபாணாற்றுப்படை 6 – கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல்.  இலக்கணக் குறிப்பு – அவரோ – ஓகாரம் அசைநிலை, இரக்கக்குறிப்புமாம், வந்தன்றே – ஏகாரம் அசைநிலை, தாஅய் – செய்யுளிசை அளபெடை, கதுப்பு அறல் – உவமைத்தொகை, பொழுதே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  அவரோ வாரார் – அவர் வரவில்லை, தான் வந்தன்றே – ஆனால் இள வேனில் வந்து விட்டது, புதுப் பூ அதிரல் தாஅய்க் கதுப்பு அறல் அணியும் காமர் பொழுதே – புதிய பூக்களையுடைய அதிரல் கொடிகள் தனது மலர்களால் மகளிர் கூந்தல் போலும் கருமணலை அழகுபடுத்தும் அழகிய பருவம்

ஐங்குறுநூறு 346, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அவரோ வாரார், தான் வந்தன்றே,
அஞ்சினைப் பாதிரி அலர்ந்தெனச்
செங்கண் இருங்குயில் அறையும் பொழுதே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்துழிக் குறித்த பருவம் வரக்கண்ட தலைவி சொன்னது.

பொருளுரை:  தலைவர் இன்னும் வரவில்லை. ஆனால் இளவேனில் பருவம் வந்து விட்டது. அழகிய கிளைகளையுடைய பாதிரி மரங்கள் மலர்ந்து விட்டதாகச் சிவந்த கண்களையுடைய கரிய குயில்கள் கூவும் பருவம் வந்துவிட்டது.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – இளவேனிற் பருவத்துக் குயில், புணர்ந்தீர் பிரியன்மின் என்ப போலக் கூவிக் கேட்போர் மனத்து வேட்கை எழச் செய்தலின், இருங்குயில் அறையும் பொழுது என்றாள்.  இளவேனிற்காலத்தில் குயில் கூவுதல் – மா நனை கொழுதிய மணி நிற இருங்குயில் படு நா விளியால் நடு நின்று அல்கலும் உரைப்ப போல ஊழ் கொள்பு கூவ – அகநானூறு 25, அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசைச் செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம் இன் இளவேனிலும் வாரார் – அகநானூறு 229, குயில் பெடை இன் குரல் அகவ அயிர்க் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே – ஐங்குறுநூறு 341.  இலக்கணக் குறிப்பு – அவரோ – ஓகாரம் அசைநிலை, இரக்கக்குறிப்புமாம், வந்தன்றே – ஏகாரம் அசைநிலை, பொழுதே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  அவரோ வாரார் – அவர் வரவில்லை, தான் வந்தன்றே – ஆனால் இள வேனில் வந்து விட்டது, அம் சினைப் பாதிரி அலர்ந்தெனச் செங்கண் இருங்குயில் அறையும் பொழுதே – அழகிய கிளைகளையுடைய பாதிரி மரங்கள் மலர்ந்து விட்டதாகச் சிவந்த கண்களையுடைய கரிய குயில்கள் கூவும் பருவம் (பாதிரி மரம் – trumpet flower trees, Stereospermum chelonoides)

ஐங்குறுநூறு 347, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அவரோ வாரார், தான் வந்தன்றே,
எழில் தகை இள முலை பொலியப்
பொரிப்பூம் புன்கின் முறி திமிர் பொழுதே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்துழிக் குறித்த பருவம் வரக்கண்ட தலைவி சொன்னது.

பொருளுரை:  தலைவர் இன்னும் வரவில்லை.  ஆனால் இளவேனில் பருவம் வந்து விட்டது. அழகும் பெருமையும் கொண்ட இள முலைகள் பொலியும்படி, மகளிர் நெற்பொரியைப் போன்ற மலர்களையுடைய புன்க மரத்தின் தளிர்களை அப்பிக்கொள்ளும் பொழுது வந்து விட்டது.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – தன் காதலன் இல்லாதவழித் தான் அங்ஙனம் தன்னை அழகுப்படுத்திக்கொள்ள இயலாத நிலை கருதி ‘எழில் தகை இள முலை பொலியப் பொரிப்பூம் புன்கின் முறி திமிர் பொழுதே’ என்று கூறி வருந்தினாள் என்க.  தலைவன் உடன் இருந்தால் அவனே அம்முறிகளை அப்பி அழகு செய்வான் என்று எண்ணி வருந்தினாளாம்.  நெற்பொரியைப் போல் புன்கு – அகநானூறு 116 – பொரி எனப் புன்கு அவிழ் அகன் துறை, பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி, நற்றிணை 9 – பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி, குறுந்தொகை 53 – நனை முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறி அயர் களந்தொறும் செந்நெல் வான் பொரி சிதறியன்ன, குறுந்தொகை 341 – பொரிப் பூம் புன்கொடு, ஐங்குறுநூறு 347 – பொரிப்பூம் புன்கின், ஐங்குறுநூறு 368 – எரிப்பூ இலவத்து ஊழ் கழி பன் மலர் பொரிப்பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும்.  இலக்கணக் குறிப்பு – அவரோ – ஓகாரம் அசைநிலை, இரக்கக்குறிப்புமாம், வந்தன்றே – ஏகாரம் அசைநிலை, பொழுதே – ஏகாரம் அசைநிலை.   

சொற்பொருள்:  அவரோ வாரார் – அவர் வரவில்லை, தான் வந்தன்றே – ஆனால் இள வேனில் வந்து விட்டது, எழில் தகை இள முலை பொலியப் பொரிப்பூம் புன்கின் முறி திமிர் பொழுதே – அழகும் பெருமையும் கொண்ட இள முலைகள் பொலியும்படி நெற்பொரியைப் போன்ற மலர்களையுடைய புன்க மரத்தின் தளிர்களை அப்பிக்கொள்ளும் பொழுது (புன்க மரம் – Indian beech tree, Pongamia Glabra or Pongamia Pinnata)

ஐங்குறுநூறு 348, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அவரோ வாரார், தான் வந்தன்றே,
வலஞ்சுரி மராஅம் வேய்ந்து நம்
மணங்கமழ் தண் பொழில் மலரும் பொழுதே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்துழிக் குறித்த பருவம் வரக்கண்ட தலைவி சொன்னது.

பொருளுரை:  தலைவர் இன்னும் வரவில்லை.  ஆனால் இளவேனில் பருவம் வந்து விட்டது.  வலப்புறமாகச் சுழித்த பூக்களையுடைய கடம்ப மரங்கள் அரும்புகளைத் தோற்றுவித்து நறுமணம் கமழும் குளிர்ந்த சோலையில் மலரும் பொழுது வந்து விட்டது.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – பலவகை மலர்களும் மலர்ந்து தம் இனிய மணத்தைப் பரப்பவும், ஆண்டுள்ள மரமும் செடியும் கொடியும் தண்ணிழலை அளிப்பவும், அப்பொழிலின்கண் உடன் இருந்து பிற காதலர் பலரும் இன்பம் துய்க்கத் தனக்கு அந்த வாய்ப்புச் சிறிதும் இல்லை என்று கவன்று உரைத்தாள் தலைவி என்க.  வலஞ்சுரி மராஅம் – அகநானூறு 83 – வலஞ்சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீ, ஐங்குறுநூறு 348 – வலஞ்சுரி மராஅம் வேய்ந்து நம் மணங்கமழ் தண் பொழில், ஐங்குறுநூறு 383 – நெடுங்கால் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி வலஞ்சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற, குறுந்தொகை 22 – சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து வேனில் அம் சினை கமழும்.  மராஅம் வேய்ந்து (2) – ஒளவை துரைசாமி உரை – வெண்கடம்பின் மலர்கள் உயர்ந்து கிளை பரப்பிப் பூத்து விளங்குவதால் மராஅம் வேய்ந்து என்றார், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன் சினைகளை அரும்பால் வேய்ந்தது.  இளவேனிற் பருவத்தில் தன் கிளைகள் அனைத்திலும் நிரம்ப மலரும் இயல்புடையது ஆகலின் மராஅம் வேய்ந்து என்றாள்.  இலக்கணக் குறிப்பு – அவரோ – ஓகாரம் அசைநிலை, இரக்கக்குறிப்புமாம், வந்தன்றே – ஏகாரம் அசைநிலை, (மராஅம் – அளபெடை, பொழுதே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  அவரோ வாரார் – அவர் வரவில்லை, தான் வந்தன்றே – ஆனால் இள வேனில் வந்து விட்டது, வலஞ்சுரி மராஅம் வேய்ந்து நம் மணங்கமழ் தண் பொழில் மலரும் பொழுதே – வலப்புறமாகச் சுழித்த பூக்களையுடைய கடம்ப மரங்கள் அரும்புகளைத் தோற்றுவித்து நறுமணம் கமழும் குளிர்ந்த சோலையில் மலரும் பொழுது (கடம்ப மம்ர – kadampam oak, Anthocephalus cadamba)

ஐங்குறுநூறு 349, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

அவரோ வாரார், தான் வந்தன்றே,
பொரிகால் மாஞ்சினை புதைய

எரிகால் இளந்தளிர் ஈனும் பொழுதே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்துழிக் குறித்த பருவம் வரக்கண்ட தலைவி சொன்னது.

பொருளுரை:  தலைவர் இன்னும் வரவில்லை.  ஆனால் இளவேனில் பருவம் வந்து விட்டது.  பொரிந்த (சொரசொரப்பான) அடிப்பகுதியை உடைய மாமரத்தின் கிளைகள் மறையும்படி, தீ வெளிப்படுத்துவது போன்ற ஒளியை வீசும் இளமை உடைய தளிர்களைத் தோற்றுவிக்கும் பருவம் வந்து விட்டது.

குறிப்பு:  எரிகால் – தி. சதாசிவ ஐயர் உரை – நெருப்பைக் கக்கும், அ. தட்சிணாமூர்த்தி உரை – நெருப்பை உமிழும்.  எரிகால் இளந்தளிர் (3) – ஒளவை துரைசாமி உரை – மாவின் தளிர் தீக்கொழுந்து போல நிறமும் ஒளியும் கொண்டு தோன்றலின் ‘எரிகால் இளந்தளிர்’ என்றார்.  இலக்கணக் குறிப்பு – அவரோ – ஓகாரம் அசைநிலை, இரக்கக்குறிப்புமாம், வந்தன்றே – ஏகாரம் அசைநிலை, பொழுதே – ஏகாரம் அசைநிலை.  ஒளவை துரைசாமி உரை – மாமரம் இளந்தளிர் ஈன்று மாமைநிறம் கொண்டு விளங்குதல் கண்டு, தான் அஃது இன்றிப் பசலைப் பாய்ந்து உள்ளமை கருதி இறங்கியவாறாம், மாவின் கரிய சினை தோன்றாவாறு இளந்தளிர் தோன்றி மறைக்கும் என்றதனால், தலைமகளின் மாமை தோன்றாதவாறு தலைமகன் பிரிவால் எழுந்த பசலை பாய்ந்து அழிக்கும் என்றவாறாம்.

சொற்பொருள்:  அவரோ வாரார் – அவர் வரவில்லை, தான் வந்தன்றே – ஆனால் இள வேனில் வந்து விட்டது, பொரிகால் மாஞ்சினை புதைய – பொரிந்த (சொரசொரப்பான) அடிப்பகுதியை உடைய மாமரத்தின் கிளைகள் மறையும்படி, எரிகால் இளந்தளிர் ஈனும் பொழுதே – தீ வெளிப்படுத்துவது போன்ற ஒளியை வீசும் இளமை உடைய தளிர்களைத் தோற்றுவிக்கும் பருவம் (காலல், கான்றல் – கக்கல்)

ஐங்குறுநூறு 350, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அவரோ வாரார், தான் வந்தன்றே,
வேம்பின் ஒண் பூ உறைப்பத்
தேம்படு கிளவி அவர்த் தெளிக்கும் பொழுதே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்துழிக் குறித்த பருவம் வரக்கண்ட தலைவி சொன்னது.

பொருளுரை:  தலைவர் இன்னும் வரவில்லை.  ஆனால் இளவேனில் வந்து விட்டது.  வேப்ப மரத்தின் ஒளிரும் மலர்கள் உதிர்ந்து படிய, இனிய சொற்களையுடைய நம் தலைவர் தெளிவாக உரைக்கும் பொழுது வந்து விட்டது.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – இளவேனிற் பருவத்தில் வேம்பு மலரும் இயல்பினது ஆதலின் ‘வேம்பின் ஒண்பூ உறைப்ப’ என்றாள்.  உடம்படாதவரை உடம்படுத்தல் வேண்டி இனிய மொழிகளைப் பேசுதல் இயல்பாதலின் ‘தேம்படு கிளவி அவர்; என்று சிறப்பித்தாள் என்க. ‘தெளிக்கும் பொழுது’ என்றது, தான் வருவதாக தெளிவிக்கும் பொழுதாம்.  பிரிவதற்கு முன்னர் அவர் தெளித்த பொழுது என்று கொள்க.  ஒப்புமை – குறுந்தொகை 24 – வேம்பின் ஒண் பூ யாணர் என் ஐ இன்றியும் கழிவது கொல்லோ, ஐங்குறுநூறு 350 – வேம்பின் ஒண் பூ உறைப்பத் தேம்படு கிளவி அவர்த் தெளிக்கும் பொழுதே.  இலக்கணக் குறிப்பு – அவரோ – ஓகாரம் அசைநிலை, இரக்கக்குறிப்புமாம், வந்தன்றே – ஏகாரம் அசைநிலை, பொழுதே – ஏகாரம் அசைநிலை.  தேம்படு கிளவி (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேனும் தோற்கும் இனிய மொழிகள், ஒளவை துரைசாமி உரை – இனிமையுற்ற சொற்கள், இனிமை பொருந்திய சொற்கள், தி. சதாசிவ ஐயர் உரை – இனிமையுண்டாகும் கிளவி.

சொற்பொருள்:  அவரோ வாரார் – அவர் வரவில்லை, தான் வந்தன்றே – ஆனால் இள வேனில் வந்து விட்டது, வேம்பின் ஒண் பூ உறைப்பத் தேம்படு கிளவி அவர்த் தெளிக்கும் பொழுதே – வேப்ப மரத்தின் ஒளிரும் மலர்கள் உதிர்ந்து படிய இனிய சொற்களையுடைய நம் தலைவர் தெளிவாக உரைக்கும் பொழுது

வரவுரைத்த பத்து

பாடல்கள் 351 – 360 – வினைவயின் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் மீண்டு வருதலைப் பொருளாக உடையவை இவை.

ஐங்குறுநூறு 351, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அத்த பலவின் வெயில் தின் சிறு காய்,
அருஞ்சுரம் செல்வோர் அருந்தினர் கழியும்
காடு பின் ஒழிய வந்தனர், தீர்கினிப்
பல்லிதழ் உண்கண் மடந்தை நின்
நல் எழில் அல்குல் வாடிய நிலையே.

பாடல் பின்னணி:  பிரிந்த தலைவனின் வரவு உணர்ந்த தோழி தலைவியிடம் சொன்னது.

பொருளுரை:  பல இதழ்களையுடைய மலர் போன்ற மையுண்ட கண்களை உடைய தோழியே!  பாலை நிலத்தில், பலா மரத்தின், வெயிலின் வெப்பத்தால் சிறிதாகிய காய்களை, கடத்தற்கரிய சுரத்தின்கண் செல்லுபவர்கள் தின்று நீங்கும் காடு பின் இருக்க வந்தார் நம் தலைவர்.  உன் நல்ல அழகு பொருந்திய அல்குலின் வருந்திய நிலையினை இனி நீ விடுவாயாக.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – அத்தப்பலாவானது, மாந்தர் நடந்து செல்லும் வழிமருங்கில் உள்ள பலா மரமாகும்.  வெப்பம் வாட்டினமையின் உரிய வளர்ச்சி இன்றித் திரங்கிய பலாவின் காய்களைத் தவிர வழிப் போவார்க்கு உணவாகும் பிற இன்மையின் சுவையற்ற அக்காய்களை உண்டு பசியாறினர் என்க.  தலைவரும் அதையே உண்டனர் என அவர்க்கு இரங்கினாள் என்க.  ‘எல்லாம் நின்பொருட்டாக’ என்று கூறித் தலைவன் அன்பை புலப்படுத்தினாளாம்.  இலக்கணக் குறிப்பு – அருந்தினர் – முற்றெச்சம், நிலையே – ஏகாரம் அசைநிலை, பல்லிதழ் – பூவிற்கு ஆகுபெயர், அகரம் கெட்டுக் ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ – தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 160, என்றதனால் லகரம் இரட்டித்து, பல்லிதழ் என முடிந்தது.  தீர்க – தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டாகும் (தொல்காப்பியம், உரியியல் 20).

சொற்பொருள்:  அத்த பலவின் வெயில் தின் சிறு காய் அருஞ்சுரம் செல்வோர் அருந்தினர் கழியும் காடு பின் ஒழிய வந்தனர் – பாலை நிலத்தில் பலா மரத்தின் வெயிலின் வெப்பத்தால் சிறிதாகிய காய்களைக் கடத்தற்கரிய சுரத்தின்கண் செல்லுபவர்கள் தின்று நீங்கும் காடு பின் இருக்க வந்தார் நம் தலைவர், தீர்க இனி – விடுவாயாக இனி, பல்லிதழ் உண்கண் மடந்தை – பல இதழ்களையுடைய மலர் போன்ற மையுண்ட கண்களை உடைய தோழியே, நின் நல் எழில் அல்குல் வாடிய நிலையே – உன் நல்ல அழகு பொருந்திய அல்குலின் வருந்திய நிலை (அல்குல் – இடுப்பு, இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதி)

ஐங்குறுநூறு 352, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் அன்ன விழுப்பிணர்ப்
பெருங்கை யானை இருஞ்சினம் உறைக்கும்
வெஞ்சுரம் அரிய என்னார்,
வந்தனர் தோழி, நம் காதலோரே.

பாடல் பின்னணி:  பிரிந்த தலைவனின் வரவு உணர்ந்த தோழி தலைவியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  பிழை இல்லாமல் அம்பினை செலுத்தும் மறவர்கள், தங்கள் வில்லினின்று எய்திய அம்பினால் உயிர் நீத்தவர்களின் பீடும் பெயரும் எழுதப்பட்ட நடுகல் போன்று, மிகுதியான சொரசொரப்புடைய பெரிய தும்பிக்கையுடைய யானைகள் மிகுந்த சினம் கொண்டு மிகுதியாக இருக்கும் பாலை நில வழிகள், கடத்தற்கு அரியன என்று நினையாராய் நம் தலைவர் வந்து விட்டார்.

குறிப்பு:   பழைய உரை – வெஞ்சுரம் அரிய என்னார் வந்தனர் என்றது, இன்று இடையிலே தங்காது வந்தனர் என்றவாறு.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).  விழுத்தொடை (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விழுமம் சீர்மை, அதாவது நன்மை என்னும் பொருள் குறித்து நின்றது.  விழுப்பிணர் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டு விழுமம் சிறப்புப் பொருள் குறித்து நின்றது, புலியூர்க் கேசிகன் – மிகுதியான சொரசொரப்பு.  இலக்கணக் குறிப்பு – அன்ன – உவம உருபு, என்னார் – என்னாராய், முற்றெச்சம், காதலோரே – ஏகாரம் அசைநிலை.  தொடை (1) – அ. தட்சிணாமூர்த்தி உரை – அம்பு, தொடுக்கப்படலின் அம்பு தொடையாயிற்று, அன்றியும் ஒன்றன்பின் ஒன்றாக எய்யப்படுத்தலின் தொடையாயிற்று என்றுமாம்.  உறைக்கும் (3) – ஒளவை துரைசாமி உரை – உறு என்னும் மிகுதி பொருட்டாய உரிச்சொல் அடியாகப் பிறந்த பெயரெச்சவினை.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  நம் காதலோரே (4) – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள்.

சொற்பொருள்:  விழுத்தொடை மறவர் – பிழை இல்லாமல் அம்பினை செலுத்தும் மறவர்கள், வில்லிடத் தொலைந்தோர் – வில்லினின்று எய்திய அம்பினால் உயிர் நீத்தவர்கள், எழுத்துடை நடுகல் அன்ன – பீடும் பெயரும் எழுதப்பட்ட நடுகல் போன்று, விழுப்பிணர்ப் பெருங்கை யானை – மிகுதியான செதும்புடைய (மிகுதியான  சொரசொரப்புடைய, மிகுதியான சருச்சரையுடைய) பெரிய தும்பிக்கையுடைய யானை, இருஞ்சினம் – மிகுந்த சினம், உறைக்கும் – மிகுதியாக இருக்கும், வெஞ்சுரம் அரிய என்னார் – பாலை நில வழிகள் கடத்தற்கு அரியன என்று நினையாராய், வந்தனர் – வந்து விட்டார், தோழி – தோழி, நம் காதலோரே – நம் தலைவர்

ஐங்குறுநூறு 353, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
எரிக்கொடி கவைஇய செவ்வரை போலச்
சுடர்ப்பூண் விளங்கும் ஏந்து எழில் அகலம்
நீ இனிது முயங்க வந்தனர்,
மா இருஞ் சோலை மலை இறந்தோரே.

பாடல் பின்னணி:  பிரிந்த தலைவனின் வரவு உணர்ந்த தோழி தலைவியிடம் சொன்னது.

பொருளுரை:  நெருப்புக் கொடி சூழ்ந்த சிவந்த மலை போல் தோன்றும், ஒளிவிடும் அணிகலன் அணிந்த உயர்ந்த அழகிய மார்பை, நீ இனிமையாக அணைத்துக் கொள்ளும்படி, வந்து விட்டார் மிகப்பெரிய சோலைகளையுடைய மலைகளைக் கடந்து சென்ற நம் தலைவர்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – இனிது முயங்க வந்தனர் என்றது, இனிப் பிரிவு இல்லையாகுமாறு வினை முற்றி மீண்டனர் என்றவாறு.  இலக்கணக் குறிப்பு – கவைஇய – அளபெடை, மா இரும் – ஒருபொருட் பன்மொழி, இறந்தோரே – ஏகாரம் அசைநிலை.  ஏந்து எழில் (2) – அ. தட்சிணாமூர்த்தி உரை – எழிலை ஏந்திய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – உயரிய அழகிய, ஔவை துரைசாமி உரை – உயர்ந்த அழகிய.

சொற்பொருள்:  எரிக்கொடி கவைஇய செவ்வரை போலச் சுடர்ப்பூண் விளங்கும் ஏந்து எழில் அகலம் நீ இனிது முயங்க – நெருப்புக் கொடி சூழ்ந்த சிவந்த மலை போல் தோன்றும் ஒளிவிடும் அணிகலன் அணிந்த உயர்ந்த அழகிய மார்பை நீ இனிமையாக அணைத்துக் கொள்ளும்படி, வந்தனர் மா இருஞ் சோலை மலை இறந்தோரே – வந்து விட்டார் மிகப்பெரிய சோலைகளையுடைய மலைகளைக் கடந்து சென்ற நம் தலைவர்

ஐங்குறுநூறு 354, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை,
மறியுடை மான் பிணை கொள்ளாது கழியும்,
அரிய சுரன் வந்தனரே,
தெரி இழை அரிவை நின் பண்பு தர விரைந்தே.

பாடல் பின்னணி:  பிரிந்த தலைவனின் வரவு உணர்ந்த தோழி தலைவியிடம் சொன்னது.

பொருளுரை:  ஆராய்ந்து அணிந்த அணிகலன்களையுடைய பெண்ணே!  உன்னுடைய நல்ல பண்புகள் அவரை இங்குச் செலுத்த, நம் தலைவர், அன்புடைய பெண் நாயைப் புணர்ந்த ஆண் செந்நாய், குட்டியையுடைய பெண் மானைக் இரையாகக் கொள்ளாமல் நீங்கும், கடத்தற்கரிய பாலை நில வழிகள் வழியாக விரைந்து வந்துவிட்டார்.

குறிப்பு:  பண்பு தர (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நினது பெண்மை நலமே நினக்குத் தூதாகி அழைத்து வர, தி. சதாசிவ ஐயர் உரை – நினது பண்பைத் தர. இலக்கணக் குறிப்பு – சுரன் – சுரம் என்பதன் போலி, வந்தனரே – ஏகாரம் அசைநிலை, விரைந்தே – ஏகாரம் அசைநிலை.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாலை நிலத்தே இவ்வாறு அருட் பண்பின் செயலைச் செந்நாயின்பாற் கண்ட நம் பெருமானும், அருட் பண்பு மேலிடப்பட்டு நின்னை நினைந்து, நினக்கு அளி செய்ய அரிய சுரன் என்றும் கருதாமல், விரைந்து வந்தார்.  ஒப்புமை – ஐங்குறுநூறு 397 – செந்நாய் ஏற்றை குருளைப் பன்றி கொள்ளாது கழியும்.

சொற்பொருள்:  ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை – அன்புடைய பெண் நாயைப் புணர்ந்த ஆண் செந்நாய், மறியுடை மான் பிணை கொள்ளாது கழியும் – குட்டியையுடைய பெண் மானைக் இரையாகக் கொள்ளாமல் நீங்கும், அரிய சுரன் – கடத்தற்கரிய பாலை நில வழிகள், வந்தனரே– வந்துவிட்டார், தெரி இழை அரிவை – ஆராய்ந்து அணிந்த அணிகலன்களையுடைய பெண்ணே, நின் பண்பு தர  – உன்னுடைய நல்ல பண்புகள் அவரை இங்கு செலுத்த, உன்னுடைய அழகை நீ மீண்டும் பெற, விரைந்தே – விரைந்து வந்துவிட்டார்

ஐங்குறுநூறு 355, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
திருந்திழை அரிவை! நின் நலம் உள்ளி,
அருஞ் செயல் பொருட் பிணி பெருந்திரு உறுக எனச்
சொல்லாது பெயர்தந்தேனே, பல் பொறிச்
சிறு கண் யானை திரிதரும்
நெறி விலங்கு அதர கானத்தானே.

பாடல் பின்னணி:  கருதிய அளவு பொருள் பெறாதாயினும், பெற்ற பொருள் கொண்டு தலைவியை நினைந்து மீண்ட தலைவன் அவளிடம் சொன்னது.

பொருளுரை:  திருத்தமான அணிகலன்களை அணிந்த பெண்ணே!  உன் அழகை நினைத்து, பல புள்ளிகளையும் சிறிய கண்களையுமுடைய யானைகள் திரியும் குறுக்கு வழிகளைக் கொண்ட காட்டிலிருந்து, ஈட்டுவதற்கு அரிதாக உள்ள பொருள் மீது உள்ள என் விருப்பம் முற்றிலும் கெட்டு ஒழிவதாக என, உடன் சென்றோரிடம் சொல்லாது, நான் மீண்டு வந்தேன்.

குறிப்பு:  பழைய உரை – பொருட்பிணி பெருந்திரு உறுக என்றது, மேல் உளதாகும் பொருட்பிணி திருவுருவதாக எனக் குறிப்பின் வெகுண்டு உரைத்தது.  சொல்லாது பெயர்தந்தேன் என்றது, உடன் சென்றோர் விலக்குவர் எனச் சொல்லாது மீண்டேன் என்றவாறு.  இலக்கணக் குறிப்பு – சொல்லாது – எதிர்மறை வினையெச்சம், பெயர்தந்தேனே – ஏகாரம் அசைநிலை, திரிதரும் – ஒரு சொல் நீர்மைத்தான பெயரெச்சம், பெயர்தந்தேனே – ஏகாரம் அசைநிலை, கானத்தானே – ஏகாரம் அசைநிலை.  பெருந்திரு உறுக என (2) – ஒளவை துரைசாமி உரை – பெருந்திரு உறுக என்றது வேண்டா என விலக்குதற் பொருளில் வந்த குறிப்புமொழி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘பெருந்திரு உறுக’ என்பது இகழ்ச்சி, மருங்கறக் கெட்டொழிக என அதை விட்டொழிந்து, தி. சதாசிவ ஐயர் உரை – பெரிய செல்வத்தை அடைகுக என்று, ச. வே. சுப்பிரமணியன் உரை – பெரிய திருவினை அடைக என வாழ்த்தி, பழைய உரையாசிரியர் – திரு உறுவதாக எனக் குறிப்பின் வெகுண்டு உரைத்தது.  சொல்லாது (2) – உ. வே. சாமிநாதையர் உரை – உடன் சென்றோர் விலக்குவர் எனச் சொல்லாது மீண்டேன்.  நெறி விலங்கு (5) – தி. சதாசிவ ஐயர் உரை – குறுக்கு வழி அமைந்த வழி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பல்வேறு கவர்த்த வழிகள், ஒளவை துரைசாமி உரை – குறுக்கிடும் சிறு வழிகள், அ. தட்சிணாமூர்த்தி உரை – குறுக்கும் நெடுக்குமாகப் பல கவர்த்த வழிகள்.

சொற்பொருள்:  திருந்திழை அரிவை – திருத்தமான அணிகலன்களை அணிந்த பெண்ணே, நின் நலம் உள்ளி – உன் அழகை நினைத்து, அருஞ் செயல் பொருட் பிணி பெருந்திரு உறுக எனச் சொல்லாது பெயர்தந்தேனே – ஈட்டுவதற்கு அரிதாக உள்ள பொருள் மீது உள்ள விருப்பம் முற்றிலும் கெட்டு ஒழிவதாக என உடன் சென்றோரிடம் சொல்லாது நான் மீண்டு வந்தேன், பல் பொறிச் சிறு கண் யானை திரிதரும் நெறி விலங்கு அதர கானத்தானே – பல புள்ளிகளையும் சிறிய கண்களையுமுடைய யானைகள் திரியும் குறுக்கு வழிகளைக் கொண்ட காட்டில்

ஐங்குறுநூறு 356, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
உள்ளுதற்கு இனிய மன்ற, செல்வர்
யானை பிணித்த பொன் புனை கயிற்றின்
ஒள் எரி மேய்ந்த சுரத்திடை
உள்ளம் வாங்கத் தந்த, நின் குணனே.

பாடல் பின்னணி:  வினை முற்றி வந்த தலைவன், தலைவியிடம் அவள் நற்பண்பு புகழ்ந்து சொன்னது.

பொருளுரை:  பெரும் செல்வமுடையவர்கள் தம் யானைகளைப் பிணிக்கும் பொன்னால் செய்யப்பட்ட கயிற்றைப் போல், தொடர்ந்த ஒளிபொருந்திய காட்டுத் தீ சுட்டு அழித்த பாலை நிலத்தில், வினையினால் பிரிந்த என் நெஞ்சைத் தடுத்துக் கொண்டுவந்தது, உன்னுடைய நற்பண்புகள். இது நினைப்பதற்குத் தேற்றமாக இனிமையானது!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – செல்வர் உலகிலுள்ள பொருட் செல்வம் எல்லாம் இயல்பாகவே உடையர் ஆதல் போன்று நீயும் பேண்டிற்குரிய நலமெல்லாம் இயல்பாகவே உடையை காண் என்பான் செல்வரை உவமையாக எடுத்தான்,  செல்வர் அடங்காத கயிற்றைத் தம் திரு மதுகையாலே கட்டித் தம் வயத்தாக்கிக் கோடல் போன்று நீயும் நின்னலத்தின் மதுகையால் என் நெஞ்சினைக் கட்டி முற்றும் நின்னுடையதாகவே ஆக்கிக் கொண்டனை காண் என்பது இறைச்சியால் போந்த பொருள்.  பொன் புனை கயிற்றின் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொன் நிறத்தாலே அழகு செய்யப்பட்ட அழகிய கயிறுகளைப் போன்ற, அ. தட்சிணாமூர்த்தி உரை – பொன்னால் செய்யப்பட்ட கயிற்றைப் போல.  இலக்கணக் குறிப்பு – மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், கயிற்றின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, குணனே – குணன் என்பது குணம் என்றதன் போலி, ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்:  உள்ளுதற்கு இனிய மன்ற – நினைப்பதற்குத் தேற்றமாக இனிமையானது, செல்வர் யானை பிணித்த பொன் புனை கயிற்றின் ஒள் எரி மேய்ந்த சுரத்திடை – செல்வமுடையவர்கள் (அரசர்கள்) தம் யானைகளைப் பிணிக்கும் பொன்னால் செய்யப்பட்ட கயிற்றைப் போல் ஒளிபொருந்திய காட்டுத் தீ சுட்டு அழித்த பாலை நிலத்தில், உள்ளம் வாங்கத் தந்த நின் குணனே – என் நெஞ்சைக் கவர்ந்துக் கொண்டுவந்த உன்னுடைய நற்பண்புகள்

ஐங்குறுநூறு 357, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
குரவம் மலர, மரவம் பூப்பச்,
சுரன் அணி கொண்ட கானம் காணூஉ,
அழுங்குக செய்பொருள் செலவு என, விரும்பி நின்
நலம் கலிழ் மாமை கவின
வந்தனர் தோழி, நம் காதலோரே.

பாடல் பின்னணி:  பிரிந்த தலைவனின் வரவு கண்டு தோழி தலைவியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  குரவ மரங்கள் மலர, கடம்ப மரங்கள் பூக்க, வழிகள் அழகுற்ற காட்டினை நோக்கி, மேலும் பொருள் ஈட்டுவதற்கு உரிய செலவைத் தவிர்த்து, உனக்கு அருள் செய்யும் விருப்பத்துடன், உன்னுடைய அழகு ஒழுகும் மாமை நிறம் மீண்டும் அழகுற, வந்துவிட்டார் நம் தலைவர்.

குறிப்பு:  பழைய உரை – அழுங்குக செய்பொருட் செலவு என்றது, மேல் உளதாகும் பொருட்பிணிச் செலவும் இனிக் கெடுவதாக என்றவாறு.  மாமைக் கவின் – ஒளவை துரைசாமி உரை, ஐங்குறுநூறு 134 – மாந்தளிரின் தன்மையினையுடைய அழகு, ஒளவை துரைசாமி உரை, ஐங்குறுநூறு 286 – மாந்தளிர் போலும் நிறம் திகழும் அழகு.   இலக்கணக் குறிப்பு – சுரன் – சுரம் என்பதன் போலி, காணூஉ – காணூஉ – இன்னிசை அளபெடை, செய்யூ என்னும் வாய்பாட்டு வினையெச்சம், குரவம் – குரா என்பது அம் என்னும் சாரியை பெற்று குரவம் ஆனது, மரவம் – மரா என்பது அம் என்னும் சாரியை பெற்று மரவம் ஆனது, காதலோரே – ஏகாரம் அசைநிலை.  நம் காதலோரே (4) – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள்.

சொற்பொருள்:  குரவம் மலர – குரவ மரங்கள் மலர (குரவ மரம் – webera corymbosa), மரவம் பூப்ப – கடம்ப மரங்கள் பூக்க (கடம்ப மரம் – Neolamarckia or Anthocephalus cadamba, Kadampa oak), சுரன் அணி கொண்ட கானம் காணூஉ – வழிகள் அழகுற்ற காட்டினை நோக்கி, அழுங்குக செய்பொருள் செலவு என – மேலும் பொருள் ஈட்டுவதற்கு உரிய செலவைத் தவிர்த்து, விரும்பி – உனக்கு அருள் செய்யும் விருப்பத்துடன், நின் நலம் கலிழ் மாமை கவின – உன்னுடைய அழகு ஒழுகும் மாமை நிறம் மீண்டும் அழகுற, வந்தனர் – வந்துவிட்டார், தோழி – தோழி, நம் காதலோரே – நம் தலைவர்

ஐங்குறுநூறு 358, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கோடு உயர் பன் மலை இறந்தனர் ஆயினும்,
நீட விடுமோ மற்றே, நீடு நினைந்து,
துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி,
உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண்ணே.

பாடல் பின்னணி:  பிரிந்த தலைவனின் வரவு கண்டு தோழி தலைவியிடம் சொன்னது.

பொருளுரை:  குவடுகள் (மலை உச்சிகள்) உயர்ந்த பல மலைகளைக் கடந்துச் சென்றார் ஆனாலும், கால நீட்டுதலைச் செய்ய விடுமோ, அவரை இடைவிடாது நினைந்துத் துடைத்துக் கொள்ளவும் துடைத்துக் கொள்ளவும் கலங்கி, கரையை உடைத்துப் பெருகும் வெள்ளம் போல் கண்ணீர் வடிக்கும் உன் கண்கள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – துடைத்தொறும் துடைத்தொறும் என்னும் அடுக்கு மிகுதி பற்றி வந்து அவளது பழியஞ்சு பண்பினைக் காட்டி நின்றது.  தனது ஆற்றாமையைக், கண்ணீர் ஊரறியத் தூற்றித்  தலைவனைப் பழிக்கு ஆளாக்கும் என்று கருதி அடிக்கடி துடைத்தனள் என்பது கருத்து.  இலக்கணக் குறிப்பு – விடுமோ – ஓகாரம் எதிர்மறை, மற்றே – மற்று அசைநிலை, ஏகாரம் அசைநிலை, துடைத்தொறும் துடைத்தொறும் – அடுக்குத்தொடர், கண்ணே – கண் ஆகுபெயர் கண்ணீருக்கு, ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  கோடு உயர் பன் மலை இறந்தனர் ஆயினும் நீட விடுமோ மற்றே – குவடுகள் (மலை உச்சிகள்) உயர்ந்த பல மலைகளைக் கடந்துச் சென்றார் ஆனாலும் கால நீட்டுதலைச் செய்ய விடுமோ, நீடு நினைந்து துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண்ணே – அவரை இடைவிடாது நினைந்துத் துடைத்துக் கொள்ளவும் துடைத்துக் கொள்ளவும் கலங்கி கரையை உடைத்துப் பெருகும் வெள்ளம் போல் கண்ணீர் வடிக்கும் உன் கண்கள்

ஐங்குறுநூறு 359, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
அரும் பொருள் வேட்கையமாகி, நின் துறந்து,
பெருங்கல் அதரிடைப் பிரிந்த காலைத்,
தவ நனி நெடிய ஆயின, இனியே
அணியிழை உள்ளி யாம் வருதலின்,
அணிய ஆயின, சுரத்திடை ஆறே.

பாடல் பின்னணி:  மீண்டு வந்த தலைவன், தலைவியைப் பிரிந்த காலத்துச் சுரத்து சேய்மையையும், வருகின்ற காலத்து அதன் அணிமையையும் கூறியது.

பொருளுரை:  பெறுதற்கரிய பொருள் மேல் விருப்பம் கொண்டேமாய் நின்னைப் பிரிந்து பெரிய மலைகள் இடையே உள்ள பாலை நிலத்தின் வழிகளில் சென்றபோது, அவை மிக மிக நெடியதாய் எமக்குத் தோன்றின.  யாம் மீண்டும் வரும் பொழுது, அழகிய அணிகலன்களை அணிந்த நின்னை நினைந்து யாம் வந்ததால், அவை எமக்குச் சிறியதாகத் தோன்றின.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – பொருளது அருமையும் இன்றியமையாமையும் பற்றி எழுந்த வேட்கை உள்ளத்தைக் கவர்ந்து கொண்டமையின், ஆண்டு நின்ற நின் காதல் துறக்கப்பட்டது என்பான், அரும் பொருள் வேட்கையமாகி நின்துறந்து என்றான்.  உள்ளத்தில் நிலவாவாறு நீக்கினமையின் துறத்தலாயிற்று.  இலக்கணக் குறிப்பு – வேட்கையம் – தன்மைப் பன்மை, தவ நனி – ஒருபொருட் பன்மொழி, இனியே – ஏகாரம் அசைநிலை, அணியிழை – அன்மொழித்தொகை, வேட்கையம் – தன்மைப் பன்மை, யாம் – தன்மைப் பன்மை, ஆறே – ஏகாரம் அசைநிலை.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).   

சொற்பொருள்:  அரும் பொருள் வேட்கையமாகி நின் துறந்து பெருங்கல் அதர் இடைப் பிரிந்த காலைத் தவ நனி நெடிய ஆயின – பெறுதற்கரிய பொருள் மேல் விருப்பம் கொண்டேமாய் நின்னைப் பிரிந்து பெரிய மலைகள் இடையே உள்ள வழிகளில் சென்றபோது அவை மிக மிக நெடியதாய் ஆயின, இனியே அணியிழை உள்ளி யாம் வருதலின் அணிய ஆயின – பின் அழகிய அணிகலன்களை அணிந்த நின்னை நினைந்து யாம் வந்ததால் சிறியதாகத் தோன்றின, சுரத்திடை ஆறே – பாலை நிலத்தின் வழிகள்

ஐங்குறுநூறு 360, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீளிடை
அரிய வாயினும், எளிய அன்றே,
அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பிக்,
கடுமான் திண் தேர் கடைஇ,
நெடுமான் நோக்கி, நின் உள்ளி யாம் வரவே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீண்ட தலைவனை நோக்கி, ‘கடத்தற்கு அரிய வழியில் நீவிர் வந்தது எவ்வாறு?’ என வினவிய தலைவியிடம் அவன் சொன்னது.

பொருளுரை:  காட்டுத்தீ படர்ந்து அழித்த கதிரவனின் வெப்பம் மிக்க நெடிய வழியைக் கடப்பது அரியது ஆனாலும், அது எளியதாய் ஆயிற்று, அவா மிக்க என் நெஞ்சம் நின்னைத் தழுவி அணைத்தலை விரும்பி, விரைந்து ஓடும் குதிரைகள் பூட்டிய வலிய தேரைச் செலுத்தி, நின்னை நினைந்து யாம் வந்ததால்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – மேற்கொண்ட வினையால் ஒதுங்கியிருந்த காதல், வினை முற்றியதும் உள்ளத்தில் எழுந்து, தலைமகளைக் காண்டல் வேட்கையை ஊக்குதலால் அவா மிகுதலின், அவவுறு நெஞ்சம் என்றும், அவாவின் வெம்மை காதலியின் முயக்கத்தாலன்றித் தணியாமையின் கவவு நனி விரும்பி என்றும் கூறினான்.  இலக்கணக் குறிப்பு – அன்றே – அன்று ஏ – அசைநிலைகள், யாம் – தன்மைப் பன்மை, கடுமான் – பண்புத்தொகை, கடைஇ – அளபெடை, வரவே – ஏகாரம் அசைநிலை.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  என்றூழ் – கதிரவனின் முதிர்ந்த கதிர்கள், எல் (கதிரவன்) + ஊழ் (முதிர்ச்சி).  முனைவர் கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம்.

சொற்பொருள்:  எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீளிடை அரிய வாயினும் – காட்டுத்தீ படர்ந்து அழித்த கதிரவனின் வெப்பம் மிக்க நெடிய வழியைக் கடப்பது அரியது ஆனாலும், எளிய அன்றே – எளியதாய் ஆயிற்று, அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பி – அவா மிக்க என் நெஞ்சம் தழுவி அணைத்தலை விரும்பி, கடுமான் திண் தேர் கடைஇ – விரைந்து ஓடும் குதிரைகள் பூட்டிய வலிய தேரைச் செலுத்தி, நெடுமான் நோக்கி – பிணை மான் விழிகளை ஒத்த நெடிய விழிகளைக் கொண்டவளே (நெடுமான் நோக்கி – ), நின் உள்ளி யாம் வரவே – நின்னை நினைந்து யாம் வர

முன்னிலைப் பத்து

பாடல்கள் 361 – 370 – இப்பாடல்கள் கேட்போரை முன்னிலைப்படுத்திக் கூறுவதாக அமைந்துள்ளன.

ஐங்குறுநூறு 361, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல் அகன் துறை,
வேனில் பாதிரி விரிமலர் குவைஇத்
தொடலை தைஇய, மடவரல் மகளே!
கண்ணினும் கதவ நின் முலையே,
முலையினும் கதவ நின் தட மென்தோளே.

பாடல் பின்னணி:  உடன்போக்கின்போது தலைவன் சுரத்தில் பூத்தொடுக்கும் தலைவியைக் கண்டு புகழ, அவள் அதற்கு நாணி, கண்களை மூடிக்கொண்டபோது அவன் சொன்னது.

பொருளுரைஉயர்ந்த கரைகளையுடைய காட்டு ஆற்றின் ஒளியுடைய மணல் பரவிய அகன்ற துறையின்கண், வேனில் பருவத்தில் மலரும் பாதிரி மரத்தின் மலர்களைக் குவித்து மாலை தொடுக்கும் மடப்பம் பொருந்திய பெண்ணே!  உன் முலைகள் உன் கண்களைவிடவும் சினம் உடையவை.  உன் முலைகளைவிடவும் சினமுடையவை உன்னுடைய பெரிய மெல்லிய தோள்கள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘ஒன்றாத் தமரினும்’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 41) ‘அப்பாற்பட்ட ஒருதிறத்தானும்’ என்றதனானே, தலைவியிடத்துத் தலைவன் கூறுவன பலவும் கொள்க என்று உரைத்து, இப்பாட்டைக் காட்டி, இஃது ‘உடன்போக்கு போயவழித் தலைவன் புகழ்ச்சிக்கு நாணித் தலைவி கண்புதைத்துழி அவன் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  இது புணர்தற் பொருளாயினும் கருப்பொருளாற் பாலையாயிற்று என்பர் இளம்பூரணர்.  இலக்கணக் குறிப்பு – உயர்கரை – வினைத்தொகை, அவிர்மணல் – வினைத்தொகை, விரிமலர் – வினைத்தொகை, குவைஇ – அளபெடை, தைஇய – சொல்லிசை அளபெடை, கண்ணினும் – உம்மை உயர்வு சிறப்பு, முலையினும் – உம்மை உயர்வு சிறப்பு, கதவ – குறிப்பு வினையாலணையும் பெயர், தோளே – ஏகாரம் அசைநிலை.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

சொற்பொருள்:  உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல் அகன் துறை வேனில் பாதிரி விரிமலர் குவைஇத் தொடலை தைஇய மடவரல் மகளே – உயர்ந்த கரைகளையுடைய காட்டு ஆற்றின் விளங்குகின்ற மணல் பரவிய அகன்ற துறையின்கண் வேனில் பருவத்தில் மலரும் பாதிரி மரத்தின் மலர்களைக் குவித்து மாலை தொடுக்கும் மடப்பம் பொருந்திய பெண்ணே (பாதிரி  மரம் – Yellow–flowered fragrant trumpet–flower tree, Stereospermum chelonoides,), கண்ணினும் கதவ நின் முலையே – உன் முலைகள் உன் கண்களைவிடவும் சினம் உடையவை, முலையினும் கதவ நின் தட மென்தோளே – உன் முலைகளைவிடவும் சினமுடையவை உன்னுடைய பெரிய மெல்லிய தோள்கள்.

ஐங்குறுநூறு 362, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பதுக்கைத்து ஆய ஒதுக்கு அருங்கவலைச்,
சிறு கண் யானை உறுபகை நினையாது,
யாங்கு வந்தனையோ, பூந்தார் மார்ப,
அருள் புரி நெஞ்சம் உய்த்தர,
இருள் பொர நின்ற இரவினானே?

பாடல் பின்னணி:  பொருள் ஈட்டும் முயற்சியில் நெடுந்தொலைவில் உள்ள இடம் சென்ற தலைவன் மீண்டு வந்தான்.  இடையில் தங்காது வந்தமையைத் தோழி பாராட்டியது.

பொருளுரைமலர்மாலை அணிந்த தலைவனே!  உன்னுடைய அருள் புரியும் நெஞ்சம் ஊக்குவிக்க, இருள் வழியில் செல்பவர்களைத் தடுக்கும் இரவில், பதுக்கைகள் உடைய ஒதுங்குவதற்கு இடம் இல்லாத, கடத்தற்கு அரிய கவர்த்த வழிகளில், சிறிய கண்களையுடைய யானைகளின் மிக்க சினத்தை நினையாது எவ்வாறு தான் நீ வந்தாயோ?

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – கற்பதுக்கைகள், ஆள் வீழ்த்துத் திரிதரும் யானைகள், செறிந்த இருள் என்னும் பல இடையூறுகளையும் சிறிதும் பொருட்படுத்தாது தலைவன் வந்தமைக்கு அவன் உள்ளத்தில் இருந்த அருளே காரணம் என்று பாராட்டுவாள், ‘அருள் புரி நெஞ்சம் உய்த்தர’ என்றாள்.  இடையூறு பேணாமைக்குத் தலைவனின் தறுகண்மையை விட, அவன் அருள் உடைமையே பெரிதும் காரணம் என்றாளாயிற்று.  ‘உய்த்தர’ என்றாள் , தலைவிமேல் உள்ள அருள் அவனை ஊக்கிச் செலுத்தியமையால்.  இலக்கணக் குறிப்பு – உறுபகை – உரிச்சொற்தொடர், வந்தனையோ – ஓகாரம் அசைநிலை, இரவினானே – இரவினான் என்பதில் ‘ஆன்’ ஏழன் பொருள்பட வந்த சாரியை, ஏகாரம் அசைநிலை.  ஒதுக்கு அரும் (1) – ஒளவை துரைசாமி உரை – செல்லுதற்கரிய, பொ. வே. சோமசுந்தரனார் உரை– ஒதுங்குவதற்கு இடம் அரிய.  இருள் பொர நின்ற (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தடுத்தற்குச் செறிந்து நின்ற, ஒளவை துரைசாமி உரை – இருள் மிக்க, தி. சதாசிவ ஐயர் உரை – இருள் செறிய நின்ற.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  பதுக்கை – கற்குவியல்.  ஆறலைக் கள்வரால் கொல்லப்பட்டவர்களின் மேல் குவிக்கப்படும் கற்கள். அகநானூறு 215 – வன்கண் வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர் ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை, அகநானூறு 231 – கொடுவிற் கானவர் கணைஇடத் தொலைந்தோர் படுகளத்து உயர்த்த மயிர்த்தலைப் பதுக்கை.

சொற்பொருள்:  பதுக்கைத்து ஆய ஒதுக்கு அருங்கவலைச் சிறு கண் யானை உறுபகை நினையாது யாங்கு வந்தனையோ – பதுக்கைகள் உடைய ஒதுங்குவதற்கு இடம் இல்லாத கடத்தற்கு அரிய கவர்த்த (பிரிவுகளுடைய) வழிகளில் சிறிய கண்களையுடைய யானைகளின் மிக்க சினத்தை நினையாது எவ்வாறு நீ வந்தாயோ, பூந்தார் மார்ப – மலர்மாலை அணிந்த மார்பனே, அருள் புரி நெஞ்சம் உய்த்தர – உன்னுடைய அருள் புரியும் நெஞ்சம் ஊக்குவிக்க, இருள் பொர நின்ற இரவினானே – இருள் தடுக்கும் இரவில்

ஐங்குறுநூறு 363, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
சிலை வில் பகழிச் செந்துவர் ஆடை,
கொலை வல் எயினர் தங்கை!  நின் முலைய
சுணங்கு என நினைதி நீயே,
அணங்கு என நினையும், என் அணங்குறு நெஞ்சே.

பாடல் பின்னணி:  உடன்போக்கின்போது, தலைவன் தலைவியின் நலம் பாராட்டியது.

பொருளுரைசிலை மரத்தால் செய்யப்பட்ட வில்லையும், அம்புகளையும், சிவந்த ஆடையையும் உடைய கொலைத் தொழிலில் வல்லவர்களான எயினரின் தங்கையே!   நின் முலைகளின் மேல் உள்ள தேமலை நீ தேமல் என எண்ணுகின்றாய்.  ஆனால் அவை வருத்தும் அணங்கு என நினைக்கும், அவற்றால் தாக்குண்ட என் நெஞ்சம்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – இஃது உடன்போகின்றான், பெருநாணத்தால் வருந்தும் தலைமகளது மெலிவு நீக்கும் கருத்தால் முன்னிலைப்படுத்தித் தன் பெருநயப்பால் தெளிவித்தவாறு எனக் கொள்க.  இஃது உடன்போகின்றான் நலம் பாராட்டிய கூற்றாம் என்பர் நச்சினார்க்கினியர்.  ‘செந்துவராடை’ என்னும் பாட்டினுள், கொலைவல் எயினர் தங்கையெனப் புணர்தற் பொருண்மை வந்ததாயினும் பாலைக்குரிய மக்கட்பெயர் கூறுதலின் பாலையாயிற்று என்பர் இளம்பூரணர்.  சிலை வில் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை, ஒளவை துரைசாமி உரை – சிலை மரத்தால் செய்யப்பட்ட வில்.  குறுந்தொகை 385, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆரவாரிக்கின்ற வில், கலித்தொகை 1, நச்சினார்க்கினியர் உரை – சிலை மரத்தாற் செய்த வில்.  இலக்கணக் குறிப்பு – சிலை வில் – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை, செந்துவர் – ஒருபொருட் பன்மொழி, முலைய – வினையாலணையும் பெயர், தங்கை – அண்மை விளி, அணங்குறு – அணங்கு முதனிலைத் தொழிற்பெயர், நெஞ்சே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  சிலை வில் பகழிச் செந்துவர் ஆடை கொலை வல் எயினர் தங்கை – சிலை மரத்தால் செய்யப்பட்ட வில்லையும் அம்புகளையும் சிவந்த ஆடையையும் உடைய கொலைத் தொழிலில் வல்லவர்களான எயினரின் தங்கையே (சிலை மரம் – Albyzzia stipulata), நின் முலைய சுணங்கு என நினைதி நீயே – நின் முலைகளின் மேல் உள்ள தேமலை நீ தேமல் என எண்ணுகின்றாய், அணங்கு என நினையும் – அவை அணங்கு என நினைக்கும், என் அணங்குறு நெஞ்சே – அவற்றால் தாக்குண்ட என் நெஞ்சம்

ஐங்குறுநூறு 364, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
முளமா வல்சி எயினர் தங்கை,
இளமா எயிற்றிக்கும் இந்நிலை அறியச்
சொல்லினென் இரக்கும் அளவை,
வெள்வேல் விடலை, விரையாதீமே.

பாடல் பின்னணி:  உடன்போக்கு விரும்பிய தலைவன் அதனைத் தோழிக்கு உணர்த்தினான். அவன் விருப்பத்தை நிறைவேற்ற உடன்பட்ட தோழி அவனுக்கு அறிவுறுத்தியது.

பொருளுரைவெற்றியுடைய வேலை ஏந்திய தலைவனே!  முள்ளம் பன்றியின் ஊனை உணவாகக் கொள்ளும் எயினர்களின் தங்கையாகிய இளமையையும் மாந்தளிர் நிறத்தையும் உடைய தலைவியிடம், அவள் உடன்படுமாறு, இச் சூழ்நிலையை விளங்கும்படி நான் கூறினேன். அவள் உடன்படும் அளவும் விரையாது இருப்பாயாக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இந்நிலையும் அறத்தொடு இயைந்த நிலையே என்பதனை அவட்கு உணரக் கூறுதற்குக் காலம் சிறிது வேண்டும் என்பாள், ‘சொல்லினேன் இரக்குமளவை விரையாதி’ என்றாள். நீ உலகியலோடு ஒன்ற எம் சுற்றத்தார்பால் மகட்பேசி வந்து வரைந்து கொள்ளுதற்கண் சிறிதும் முயலாது வைத்து உடன்கொண்டு போதற்கண் மிகவும் விரைவுடையை ஆகின்றாய். சிறிது அமைதியோடிருந்து வரைந்து கோடலே நன்றென்று குறிப்பால் உணர்த்துவாள் ‘விரையாதீம்’ என்றாள்.  இலக்கணக் குறிப்பு – சொல்லினென் – சொல்லி முற்றெச்சம், விரையாதீமே – தீம் முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்று, ஏகாரம் அசைநிலை.  வெள்வேல் – ஒளவை துரைசாமி உரை (ஐங்குறுநூறு 379வது பாடலின் உரை) – விளக்கம் மிக்க வென்றி தரும் வேல்.  வடித்துக் கூரிதாக்கி நெய் தடவப் பெற்றமையின் வெள்வேல் எனப்பட்டது.  இளமா எயிற்றி (2) – தி. சதாசிவ ஐயர் உரை – இளமை பொருந்திய அழகிய எயிற்றி, ஒளவை துரைசாமி உரை – இளமையும் அழகுமுடைய எயிற்றி, அ. தட்சிணாமூர்த்தி உரை – இளையவளும் மாமை நிறத்தவளுமான எயிற்றி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இளமையும் பெருமையுமுடைய பெருமாட்டி.

சொற்பொருள்:  முளமா வல்சி எயினர் தங்கை இளமா எயிற்றிக்கும் இந்நிலை அறியச் சொல்லினென் – முள்ளம் பன்றியின் ஊனை உணவாகக் கொள்ளும் எயினர்களின் தங்கையாகிய இளமையையும் மாந்தளிர் நிறத்தையும் உடைய தலைவியிடம் அவள் உடன்படுமாறு இச் சூழ்நிலையை விளங்கும்படி நான் கூறினேன், இரக்கும் அளவை – அவள் உடன்படும் அளவும், வெள்வேல் விடலை – வெற்றியுடைய வேலை ஏந்திய தலைவனே, விரையாதீமே – விரையாது இருப்பாயாக

ஐங்குறுநூறு 365, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவன் மாந்தளிரிடம் சொன்னது
கண மா தொலைச்சித் தன் ஐயர் தந்த
நிண ஊன் வல்சிப் படுபுள் ஓப்பும்
நலம் மாண் எயிற்றி போலப் பல மிகு
நன்னலம் நயவர உடையை,
என் நோற்றனையோ மாவின் தளிரே?

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்துப் பிரிந்து மீண்டு வருகின்ற தலைவன் வழியின்கண் மாந்தளிரைக் கண்டு சொன்னது.

பொருளுரை:  மாமரத்தின் தளிரே!  கூட்டமாக உள்ள மான்களைக் கொன்று, தன் அண்ணன்மார் கொணர்ந்த கொழுப்புடைய ஊனாகிய உணவின் மீது  விழும் பறவைகளை விரட்டும் வேட்டுவர் தங்கையான மாட்சிமையுடைய என் காதலி போல, பெரிதும் விரும்புவதற்குக் காரணமான மிகுந்த அழகை உடையை நீ!  என்ன தவம் செய்தாயோ!

குறிப்பு:   பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ அவளது இளமை நிறம் முதலிய ஒருசிலவே மும்மைச் செய் தவத்தாற் பெற்றனை.  யானோ அப்பெருமகளையே ஆருயிர்க் காதலியாகப் பெற்றுள்ளேன்.  ஆயின் நான் செய்தவமும் சாலப் பெரிதே என்று மகிழ்ந்தானாம் என்க.  நலம் மாண் எயிற்றி போலப் பல மிகு நன்னலம் நயவர உடையை – ஒளவை துரைசாமி உரை – ‘மகளிர் மேனி மாந்தளிர் போறலின் இவ்வாறு கூறினான்.  நறு வடிப் பைங்கால் மாஅத்து அம் தளிர் அன்ன நன் மா மேனி’ (குறுந்தொகை 331) என்பதாலும் அறிக.  கண மா (1) – உ. வே. சாமிநாதையர் உரை – கூட்டமான மான்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கூட்டமாகிய விலங்குகள்.  மாவின் தளிரே (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாமரத்தினது காட்சிக்கினிய மாந்தளிரே, தி. சதாசிவ ஐயர் உரை – மாவினது தளிரே.  இலக்கணக் குறிப்பு – நோற்றனையோ – ஓகாரம் அசைநிலை, தளிரே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  கண மா தொலைச்சி – கூட்டமாக உள்ள மான்களைக் கொன்று, தன் ஐயர் தந்த நிண ஊன் வல்சி – தன் அண்ணன்மார் கொணர்ந்த கொழுப்புடைய ஊனாகிய உணவு, படுபுள் ஓப்பும் நலம் மாண் எயிற்றி போல – விழும் பறவைகளை விரட்டும் வேட்டுவர் தங்கையான மாட்சிமையுடைய என் காதலி போல,  பல மிகு நன்னலம் நயவர உடையை – பெரிதும் விரும்புவதற்குக் காரணமான மிகுந்த அழகை உடையை நீ, என் நோற்றனையோ – என்ன தவம் செய்தாயோ, மாவின் தளிரே – மாமரத்தின் தளிரே

ஐங்குறுநூறு 366, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி செவிலித்தாயிடம் சொன்னது
அன்னாய் வாழி! வேண்டன்னை தோழி!
பசந்தனள் பெரிது எனச் சிவந்த கண்ணை
கொன்னே கடவுதியாயின், என்னதூஉம்
அறிய ஆகுமோ மற்றே,
முறி இணர்க் கோங்கம் பயந்தமாறே?

பாடல் பின்னணி:  தலைவியின் வேறுபாடு கண்டு வினவிய செவிலித்தாயிடம் தோழி அறத்தொடு நின்றது.  பாலையுள் குறிஞ்சி.

பொருளுரைஅன்னையே!  நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக!  என் தோழி பசலை மிகவும் அடைந்தாள் என நீ சினத்தால் கண் சிவந்து அஞ்சும்படி வினவுகின்றாய்.  தளிருடன் கொத்தாக உள்ள கோங்க மரத்தின் மலர்களால் ஆனதால், இதன் காரணத்தைப் பிறரால் அறிய முடியுமோ?

குறிப்பு:  பழைய உரை – இது முன்னாள் அவன் தந்த கோங்கம் பூவால் விளைந்தது எனப் பூத்தருபுணர்ச்சி  கூறியவாறாயிற்று. இது கருப்பொருளாற் பாலை.  உ. வே. சாமிநாதையர் உரை – இது பாலையிற் குறிஞ்சி.  இது கருப்பொருளாற் பாலை.  முறி இணர்க் கோங்கம் பயந்தமாறே (5) – உ. வே. சாமிநாதையர் உரை – இது முன்னாள் அவன் தந்த கோங்கம் பூவால் விளைந்ததென பூத்தரு புணர்ச்சி கூறியவாறு.  இலக்கணக் குறிப்பு – கண்ணை – முற்றெச்சம், கடவுதி – முன்னிலை வினைமுற்று, என்னதூஉம் – அளபெடை, ஆகுமோ – ஓகாரம் எதிர்மறை, மற்றே – மற்று, ஏ அசைநிலைகள், கோங்கம் – கோங்க மலருக்கு ஆகுபெயர், பயந்தமாறே – ஏகாரம் அசைநிலை, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்.  ஒப்புமை – அன்னாய் வாழி வேண்டு அன்னை! நின் மகள் பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு நனி பசந்தனள் என வினவுதி – அகநானூறு 48, அன்னாய் வாழி! வேண்டு அன்னை, என் தோழி மேனி விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் பரவியும், தொழுதும், விரவு மலர் தூயும் வேறு பல் உருவில் கடவுள் பேணி நறையும் விரையும் ஓச்சியும், அலவுற்று, எய்யா மையலை, நீயும் வருந்துதி (குறிஞ்சிப்பாட்டு 1–8).

சொற்பொருள்:  அன்னாய் – அன்னையே, வாழி – நீடு வாழ்வாயாக, வேண்டன்னை – நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக, தோழி பசந்தனள் பெரிது எனச் சிவந்த கண்ணை கொன்னே கடவுதியாயின் – என் தோழி பசலை மிகவும் அடைந்தாள் என நீ சினத்தால் கண் சிவந்து அஞ்சும்படி வினவுகின்றாய், என்னதூஉம் அறிய ஆகுமோ மற்றே – இதன் காரணத்தைப் பிறரால் அறிய முடியுமோ, முறி இணர்க் கோங்கம் பயந்தமாறே – தளிருடன் கொத்தாக உள்ள கோங்க மரத்தின் மலர்களால் ஆனதால் (கோங்க மரம் – Cochlospermum gossypium)

ஐங்குறுநூறு 367, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி செவிலித்தாயிடம் சொன்னது
பொரி அரைக் கோங்கின் பொன் மருள் பசு வீ,
விரி இணர் வேங்கையொடு வேறுபட மிலைச்சி,
விரவு மலர் அணிந்த, வேனில் கான்யாற்றுத்
தேரொடு குறுக வந்தோன்,
பேரொடு புணர்ந்தன்று அன்னை, இவள் உயிரே.

பாடல் பின்னணி:  அயலார் பெண்பேசி வந்தவேளையில் தோழி செவிலித்தாயிடம் அறத்தொடு நின்றது.

பொருளுரை:  அன்னையே!  பொரித்த அடியுடைய கோங்க மரத்தின் பொன் போலும் புதிய பூக்களை, மலர்ந்த கொத்துக்களையுடைய வேங்கை மலர்களுடன் வேறுபட அணிந்து, பல மலர்களும் கலந்து மலர்ந்திருக்கும் வேனில் காலத்தில், காட்டாற்றின் அருகில் தேரில் நெருங்கி வந்தவனின் பெயருடன் ஒன்றுபட்டுள்ளது, இவளது உயிர்.

குறிப்பு:  பழைய உரை – கான்யாற்றுத் தேரொடு குறுக வந்தோன் என்றது, கான்யாற்று யாங்கள் அழுந்துழிக் குறுக வந்தோன் என்றவாறு.  எனவே, புனல்தரு புணர்ச்சி கூறியவாறாயிற்று.  பேரொடு புணர்ந்தன்று இவளுயிர் என்றது, அன்று தோன்றிய இன்னான் தந்த உயிர் என அவன் பேரோடு பட்டது இவள் உயிர் என்றவாறு.  இது காலத்தாற் பாலை.  இலக்கணக் குறிப்பு – மருள் – உவம உருபு, விரி இணர் – வினைத்தொகை, புணர்ந்தன்று – இறந்தகால முற்றுவினை, உயிரே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  பொரி அரைக் கோங்கின் பொன் மருள் பசு வீ விரி இணர் வேங்கையொடு வேறுபட மிலைச்சி – பொரித்த அடியுடைய கோங்க மரத்தின் பொன் போலும் புதிய பூக்களை மலர்ந்த கொத்துக்களையுடைய வேங்கை மலர்களுடன் வேறுபட அணிந்து (கோங்க மரம் – Cochlospermum gossypium, வேங்கை மரம் – Kino Tree, Pterocarpus marsupium). விரவு மலர் அணிந்த வேனில் – பல மலர்களும் கலந்து மலர்ந்திருக்கும் வேனில் காலத்தில், கான்யாற்றுத் தேரொடு குறுக வந்தோன் பேரொடு புணர்ந்தன்று – காட்டாற்றின் அருகில் தேரில் வந்தவனின் பெயருடன் ஒன்றுபட்டுள்ளது, அன்னை – அன்னையே, இவள் உயிரே – இவளது உயிர்

ஐங்குறுநூறு 368, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
எரிப்பூ இலவத்து ஊழ் கழி பன் மலர்,
பொரிப்பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும்,
தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி
எம்மொடு கொண்மோ பெரும, நின்
அம் மெல் ஓதி அழிவிலள் எனினே.

பாடல் பின்னணி:  தலைவன் பொருள் ஈட்டப் புறப்படுமுன் இளவேனில் பருவத்தில் மீண்டு வந்து தலைவியுடன் விளையாடி மகிழ்வதாகக் கூறியபோது தோழி சொன்னது.

பொருளுரைபெருமானே!  தீயைப் போலும் நிறத்தினைக் கொண்ட இலவமரத்தின் முதிர்ந்து உதிர்ந்த பலவாகிய மலர்கள் பொரிபோலும் பூக்களையுடைய புன்க மரத்தின் புள்ளிகள் பொருந்திய நிழலில் கோலஞ்செய்யும், குளிச்சியுடைய இளவேனில் பருவத்தில், இன்ப நுகர்ச்சியை எம்முடன் கொள்க, அழகிய மென்மையான கூந்தலையுடைய நின் காதலியாகிய இவள் அழிவின்றி இருப்பாளாயின்.

குறிப்பு:  பழைய உரை – அம்மெல் ஓதி அழிவிலள் எனின் இன்ப நுகர்ச்சி எம்மொடு கொண்மோ என்றது, நீ வருந்துணையும் இவள் ஆற்றியுளளாயின் எம்மோடு நுகர்ச்சி கொள்வீராமின் என மறுத்தவாறு.  நெற்பொரியைப் போல் புன்கு – அகநானூறு 116 – பொரி எனப் புன்கு அவிழ் அகன் துறை, பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி, நற்றிணை 9 – பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி, குறுந்தொகை 53 – நனை முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறி அயர் களந்தொறும் செந்நெல் வான் பொரி சிதறியன்ன, குறுந்தொகை 341 – பொரிப் பூம் புன்கொடு, ஐங்குறுநூறு 347 – பொரிப்பூம் புன்கின், ஐங்குறுநூறு 368 – எரிப்பூ இலவத்து ஊழ் கழி பன் மலர் பொரிப்பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும்.  இலக்கணக் குறிப்பு – எரிப்பூ – உவமைத்தொகை, பொரிப்பூ – உவமைத்தொகை, கொண்மோ – மோ முன்னிலை அசை, அம் மெல் ஓதி – அன்மொழித்தொகை, எனினே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  எரிப்பூ இலவத்து ஊழ் கழி பன் மலர் பொரிப்பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும் – தீயைப் போலும் நிறத்தினைக் கொண்ட இலவமரத்தின் முதிர்ந்து உதிர்ந்த பலவாகிய மலர்கள் பொரிபோலும் பூக்களையுடைய புன்க மரத்தின் புள்ளிகள் பொருந்திய நிழலில் கோலஞ்செய்யும் (இலவ மரம் – Ceiba pentandra, புன்க மரம் – Indian Beech tree, Pongamia Glabra or Pongamia Pinnata), தண் பத வேனில் – குளிச்சியுடைய இளவேனில் பருவத்தில், இன்ப நுகர்ச்சி எம்மொடு கொண்மோ – இன்ப நுகர்ச்சியை எம்முடன் கொள்க, பெரும – பெருமானே, நின் – நின், அம் மெல் ஓதி அழிவிலள் எனினே – அழகிய மென்மையான கூந்தலையுடைய இவள் அழிவின்றி இருப்பாளாயின்

ஐங்குறுநூறு 369, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
வள மலர் ததைந்த வண்டுபடு நறும் பொழில்,
முளை நிரை முறுவல் ஒருத்தியொடு, நெருநல்
குறி நீ செய்தனை என்ப, அலரே,
குரவ நீள் சினை உறையும்
பருவ மாக்குயில் கௌவையின் பெரிதே.

பாடல் பின்னணி:  பரத்தை ஒருத்தியுடன் பொழிலகத்தில் தங்கி வந்த தலைவன், தலைவி வினவியபோது ‘யாரையும் அறியேன்’ என்றான்.  அப்பொழுது அவள் கூறியது.

பொருளுரைசெழிப்பான மலர்கள் நிறைந்த, வண்டுகள் படியும் நறுமணம் வீசும் பொழிலில், முளைபோலும் வரிசையாக அமைந்த பற்களையுடைய ஒருத்தியுடன், நேற்று நீ குறியிடம் கூறிக் கூடினாய் எனக் கூறுகின்றனர். அதனால் எழுந்த அலரோ குரவ மரத்தின் நீண்ட கிளையின்கண் வதியும் வேனில் பருவத்துக் கரிய குயிலின் ஆரவாரத்திலும் பெரிதாக உள்ளது.

குறிப்பு:  பாலையில் மருதம்.  பழைய உரை – இது பாலைக்கு உரித்தாயாகிய வேனிற்கண் நிகழும் குரவும் குயிலும் கூறுதலாற் பாலையாயிற்று.  ஒளவை துரைசாமி உரை – தலைவன் அறியேன் என்புழி, குறி செய்த இடம் முதலாயின யாவும் விளங்க அறிந்து அலர் கூறுவோர் பலர் என்பாள், குறி நீ செய்தனை என்ப என்றும், நீ கூறாது ஒழியினும் யான் அவளை அறிவேன் என்பாள், முளைநிரை முறுவல் ஒருத்தி என்றும் கூறினாள்.  இலக்கணக் குறிப்பு – ஒருத்தியொடு – ஒடு உடனிகழ்ச்சி (ஒருங்கு நிகழ்தல்), அலரே – ஏகாரம் அசைநிலை, பெரிதே – ஏகாரம் அசைநிலை.  ததைந்த (1) – ஒளவை துரைசாமி உரை – நெருங்கிய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – செறிந்த.

சொற்பொருள்:  வள மலர் ததைந்த வண்டுபடு நறும் பொழில் முளை நிரை முறுவல் ஒருத்தியொடு – செழிப்பான மலர்கள் நிறைந்த வண்டுகள் படியும் நறுமணம் வீசும் பொழிலில் முளைபோலும் வரிசையாக அமைந்த பற்களையுடைய ஒருத்தியுடன், நெருநல் குறி நீ செய்தனை என்ப – நேற்று நீ குறியிடம் கூறிக் கூடினாய் எனக் கூறுகின்றனர், அலரே குரவ நீள் சினை உறையும் பருவ மாக்குயில் கௌவையின் பெரிதே – அலரோ குரவ மரத்தின் நீண்ட கிளையின்கண் வதியும் வேனில் பருவத்துக் கரிய குயிலின் ஆரவாரத்திலும் பெரிது (குரவ மரம் – bottle flower tree, webera corymbosa)

ஐங்குறுநூறு 370, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
வண் சினைக் கோங்கின் தண் கமழ் படலை
இருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப,
நீ நயந்து உறைப்பட்டோள்
யாவளோ? எம் மறையாதீமே.

பாடல் பின்னணி:  பரத்தை ஒருத்திக்குப் பூக்களை அணிவித்தான் தலைவன் எனக் கேட்ட தலைவி, அஃது இல்லை என்று மறைக்கும் தலைவனிடம் கூறியது.

பொருளுரைவளமான கிளைகளைக் கொண்ட கோங்க மரத்தின் மணம் வீசும் மாலையினைக் கரிய சிறகுகளையுடைய வண்டுகளின் பெரிய கூட்டம் மொய்க்க, நீ விரும்பி அணியப்பட்டவள் எவளோ?  எம்மிடம் உண்மையை மறைக்காதீர்!

குறிப்பு:  பாலையில் மருதம். பாலையில் மருதம் – பழைய உரை – இது பாலைக்குரிய கருப்பொருளாகிய கோங்கு கூறினமையால் பாலையாயிற்று.  ஒளவை துரைசாமி உரை – பலர் காண பரத்தை ஒருத்திக்கு மாலை அணிந்து மகிழ்வித்தனை ஆகலின், நீ என்னை மறைத்தலாகாது என்பதை உள்ளுறுத்து, இருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப என்றும், அவள் பெருநலம் உடையவளாதலின், அவளை யான் காண்டற்கு விரும்புகின்றேன் என்பாள், யாவளோ எம் மறையாதேமே என்றும் கூறினாள்.  தன்வயின் உரிமை தோன்றக் கூறுதலின் தனித்தன்மைப் பன்மையால் யாம் என்றாள்.  இலக்கணக் குறிப்பு – யாவளோ – ஓகாரம் வினா, மறையாதீமே – தீம் முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்று, ஏகாரம் அசைநிலை.  உறைப்பட்டோள் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின்னால் உடன் உறையப்பட்டவள், அ. தட்சிணாமூர்த்தி உரை – அணியப்பட்டவள், ஒளவை துரைசாமி உரை – நின்னால் அணியப்பட்டவள், தி. சதாசிவ ஐயர் உரை – தங்கியவள்.

சொற்பொருள்:  வண் சினைக் கோங்கின் தண் கமழ் படலை இருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப – வளமான கிளைகளைக் கொண்ட கோங்க மரத்தின் மணம் வீசும் மாலையினைக் கரிய சிறகுகளையுடைய வண்டுகளின் பெரிய கூட்டம் மொய்க்க (கோங்க மரம் – Cochlospermum gossypium), நீ நயந்து உறைப்பட்டோள் யாவளோ – நீ விரும்பி அணியப்பட்டவள் எவளோ, எம் மறையாதீமே – எம்மிடம் உண்மையை மறைக்காதீர்

மகட் போக்கிய வழித் தாய் (நற்றாய்) இரங்கு பத்து

பாடல்கள் 371 – 380 – தலைவி தலைவனுடன் உடன்போக்கில் சென்ற பின், தாய் மகளின் பிரிவு ஆற்றாது இரங்கிக் கூறியவை.

தன்னும் அவனும் அவளும் சுட்டி
மன்னும் நிமித்தம் மொழிப் பொருள் தெய்வம்
நன்மை தீமை அச்சம் சார்தல் என்று
அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ
முன்னிய காலம் மூன்றுடன் விளக்கி
தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும்
போகிய திறத்து நற்றாய் புலம்பலும்
ஆகிய கிளவியும் அவ் வழி உரிய. (தொல்காப்பியம், அகத்திணையியல் 36)

ஐங்குறுநூறு 371, ஓதலாந்தையார், பாலைத் திணை – மகட் போக்கிய தாய் சொன்னது
மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர் நெடும் குன்றம் படுமழை தலைஇச்
சுர நனி இனிய ஆகுக தில்ல,
அற நெறி இதுவெனத் தெளிந்த என்
பிறை நுதல் குறுமகள், போகிய சுரனே.

பாடல் பின்னணி:  மகள் தலைவனுடன் அறநெறியில் சென்றாள் என உணர்ந்து, மகிழ்ந்து, தன் மகள் சென்ற பாலை நிலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என வேண்டியது.

பொருளுரை:   பாலை நிலத்து மறவர்களின் கொட்டுகள் முழங்கும் ஒலியைக்கேட்டு மயில்கள் நடனம் ஆடும் மிக்க உயர்ந்த மலைகளில்,  முகில்கள் மழையைச் சொரிந்து, காட்டுப் பாதைகள் மிகவும் இனிமையாக ஆகட்டும்.  எது அறம் என்று தெளிவாக உணர்ந்த, பிறையைப் போன்ற நெற்றியை உடைய என் இள மகள் போகும் வழிகள் அவை.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – இதனுள் ‘அறநெறி இதுவெனத் தெளிந்த என் மகள்’ என்று தாய் கூறவே, உடன்போக்குத் தருமமென்று மகிழ்ந்து கூறி அங்ஙனம் கூட்டிய நல்வினையைத் தன் நெஞ்சிற்கு விளக்கிப் புலம்பியவாறு காண்க என்பர் நச்சினார்க்கினியர்.  படுமழை (2) – ஒளவை துரைசாமி உரை – பெயல் கருதி முழங்கும் கருமுகிலைப் படுமழை என்ப.  இலக்கணக் குறிப்பு – தலைஇ – சொல்லிசை அளபெடை, நனி – உரிச்சொல், தில்ல – தில்  விழைவின்கண் வந்த இடைச்சொல், ஈறு திரிந்து வந்தது, சுரனே – ஏகாரம் அசைநிலை.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  மள்ளர் கொட்டின் – பாலை நில மறவர்களின் கொட்டு முழங்கும் ஒலியைக்கேட்டு,  மஞ்ஞை ஆலும் – மயில்கள் ஆடும், உயர் நெடும் குன்றம் – உயர்ந்த நெடிய மலைகள், படுமழை தலைஇ – முகில்கள் மழையைச் சொரிந்து, பெரிய மழையைக் கொட்டி, சுர நனி – காட்டுப் பாதைகள் மிகவும், இனிய ஆகுக – இனிமையாக ஆகட்டும், தில்ல – அசைச் சொல், அறநெறி இது வெனத் தெளிந்த  – அற நெறி என்னவென்று தெரிந்த,   என் பிறை நுதல் குறுமகள் – என்னுடைய பிறையைப் போன்ற நெற்றியை உடைய இள மகள், போகிய சுரனே – போன பாலை நிலம்

ஐங்குறுநூறு 372, ஓதலாந்தையார், பாலைத் திணை  – தலைவியின் தாய் சொன்னது
என்னும் உள்ளினள் கொல்லோ, தன்னை
நெஞ்சு உணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு,
அழுங்கல் மூதூர் அலர் எழச்,
செழும் பல் குன்றம் இறந்த, என் மகளே?

பாடல் பின்னணி:  மகட்போக்கிய தாய் ஆற்றாமையால் ‘என் மகள் என்னையும் மறந்தாளோ’ என இரங்கிக் கூறியது.

பொருளுரை:  அவள் நெஞ்சு ஏற்றுக் கொள்ளுமாறு தகுந்த சொற்களைக் கூறி உறுதிமொழிகளைக் கூறிய இளைஞனுடன், பேரொலியையுடைய பழைய ஊரில் அலர் எழுமாறு, வளமுடைய பல மலைகளைத் தாண்டிச் சென்ற என்னுடைய மகள் என்னை நினைத்தாளா?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – நற்றாய் மாட்டு நினைதல் என்னும் மெய்ப்பாடு தோன்றிற்று.  ‘இஃது என்னை நினைப்பாளோ என்றது’ என்பர் நச்சினார்க்கினியர்.  இது தலைமகள் கொடுமை நினைந்து கூறியது’ என்பர் இளம்பூரணர்.  அ. தட்சிணாமூர்த்தி உரை – ‘தன்னை’ என்றதற்கு விளைவறியா இளமையுடைய தன்னை என்று உரைத்தலும் பொருந்தும்.  தேற்றிய வஞ்சினம் என்பதனை வஞ்சினம் தேற்றிய என மாறுக.  இலக்கணக் குறிப்பு – உண – உண்ண என்பதன் விகாரம், காளை – உவமை ஆகுபெயர், மகளே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  என்னும் உள்ளினள் கொல்லோ – என்னை நினைத்தாளா, தன்னை நெஞ்சு உணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு – அவள் நெஞ்சு ஏற்றுக் கொள்ளுமாறு தகுந்த சொற்களைக் கூறி உறுதிமொழிகளைக் கூறிய இளைஞனுடன், அழுங்கல் மூதூர் அலர் எழ – பேரொலியையுடைய பழைய ஊரில் அலர் எழுமாறு, செழும் பல் குன்றம் இறந்த – வளமுடைய பல மலைகளைத் தாண்டிச் சென்ற, என் மகளே – என்னுடைய மகள்

ஐங்குறுநூறு 373, ஓதலாந்தையார், பாலைத் திணை  – தலைவியின் தாய் சொன்னது
நினைத்தொறும் கலிழும் இடும்பை எய்துக,
புலிக் கோள் பிழைத்த கவைக் கோட்டு முது கலை
மான் பிணை அணை தர ஆண் குரல் விளிக்கும்
வெஞ்சுரம் என் மகள் உய்த்த,
அம்பு அமை வல்வில் விடலை தாயே.

பாடல் பின்னணி:  தலைவியைத் தலைவன் உடன்போக்கில் கொண்டு கழிந்த கொடுமை நினைந்து நற்றாய் சொன்னது.

பொருளுரை:  புலியால் கொள்ளப்படுவதிலிருந்து தப்பிய கவைத்த கொம்பையுடைய ஆண் மான் ஒன்று, தன் பெண் மானை அணைப்பதற்காக, தன்னுடைய குரலால் அழைக்கும் வெப்பமுடைய பாலை நிலத்திற்கு என் மகளைக் கொண்டு சென்ற, அம்புடன் கூடிய வலிய வில்லையுடைய இளைஞனின் தாய் துயரத்தை அடையட்டும்.

குறிப்பு:  சில உரை நூல்களில், இறுதி வரி, ‘வம்பு அமை வல்வில் விடலை தாயே’ என்று உள்ளது.   பழைய உரை – இவட்காக யான் பட்ட துன்பம் அவன் தாயும் படவேண்டும் என்றவாறு.  இலக்கணக் குறிப்பு – எய்துக – வியங்கோள் வினைமுற்று, கோள் – முதனிலை திரிந்த தொழிற்பெயர், அணைதர – ஒரு சொல் நீர்மைத்து, தாயே – ஏகாரம் அசைநிலை.  வம்பு அமை வல்வில் – பொ. வே. சோமசுந்தரனார், ஒளவை துரைசாமி, தி. சதாசிவ ஐயர், உ. வே. சாமிநாதையர் உரைகள்.  வம்பு வில் – புதிய வில். அம்பு அமை வல்வில் – அ. தட்சிணாமூர்த்தி, ச. வே. சுப்பிரமணியன் உரைகள்.

சொற்பொருள்:  நினைத்தொறும் கலிழும் – நினைக்கும்பொழுதெல்லாம் அழும், இடும்பை எய்துக – துயரத்தை அடையட்டும், புலிக் கோள் பிழைத்த கவைக் கோட்டு முது கலை மான் பிணை அணை தர ஆண் குரல் விளிக்கும் – புலியிடமிருந்து தப்பிய கவைத்த கொம்பையுடைய ஆண் மான் ஒன்று தன்னுடைய பெண் மானை அணைப்பதற்காக தன்னுடைய குரலால் அழைக்கும், வெஞ்சுரம் – வெப்பமுடைய பாலை நிலம், என் மகள் உய்த்த – என் மகளைக் கொண்டு சென்ற, அம்பு அமை வல்வில் விடலை தாயே – அம்புடன் கூடிய வலிய வில்லையுடைய இளைஞனின் தாய்

ஐங்குறுநூறு 374, ஓதலாந்தையார், பாலைத் திணை தலைவியின் தாய் சொன்னது
பல் ஊழ் நினைப்பினும் நல்லென்று ஊழ,
மீளி முன்பின் காளை காப்ப,
முடி அகம் புகாக் கூந்தலள்,
கடுவனும் அறியாக் காடு இறந்தோளே.

பாடல் பின்னணி:  தலைவி உடன்போக்கில் சென்றபோது, ஆற்றாமை அடைந்த தாய், தன் மகளின் இளமை நினைந்து இரங்கிக் கூறியது.

பொருளுரை:  கூற்றுவனை ஒத்த வலிமையுடைய அவளுடைய தலைவன் அவளைப் பாதுகாக்க, கொண்டையாக முடிக்காத குட்டை முடியையுடைய என் மகள் ஆண் குரங்காலும் அறிய முடியாத காட்டிற்குச் சென்றாள்.  இதைப்பற்றிப் பலமுறை நினைத்தாலும் எனக்கு இது நல்லதாகவே தோன்றுகின்றது.

குறிப்பு:   அ. தட்சிணாமூர்த்தி உரை – ஒரு செயல்பற்றி ஒருகால் நினைக்கும்பொழுது ஒருவருக்கு அது நல்லதென்று தோன்றி, மறுமுறை நினைக்கும்பொழுது தீயதாகத் தோன்றலாம்.  இவ்வாறின்றி, எத்துணை முறை நினைத்தாலும், தன் மகளின் செயல்கள் நல்லவென்றே தோன்றும் என்றாள் தன் மகள் உடன்போக்கில் ஈடுபட்டதும் அது தொடர்பான செயல்களும் நல்லதாகுமோ எனப் பலகாலும் எண்ணி, இறுதியாக முடிவெடுத்தாள் ஆதலின், ‘நல்லென்றூழ்’ என்றாள்.  ஒப்புமை – அகநானூறு 92 – மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின், நற்றிணை 194 – மந்தியும் அறியா மரம் பயில், திருமுருகாற்றுப்படை 42 – மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து.  பல் ஊழ் நினைப்பினும் நல்லென்று ஊழ – ஒளவை துரைசாமி உரையில் இது தலைவி பலமுறை ஆராயினும் என உள்ளது.  இலக்கணக் குறிப்பு – காளை – உவமை ஆகுபெயர், கடுவனும் – உம்மை உயர்வு, இறந்தோளே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  பல் ஊழ் நினைப்பினும் நல்லென்று ஊழ – பலமுறை நினைத்தாலும் நல்லதாகவே தோன்றுகின்றது, மீளி முன்பின் – கூற்றுவனை ஒத்த வலிமையுடைய, காளை காப்ப – அவளுடைய தலைவன் அவளை பாதுகாக்க, முடி அகம் புகாக் கூந்தலள் – கொண்டையாக முடிக்காத குட்டை முடியையுடையவள், கடுவனும் அறியாக் காடு இறந்தோளே – ஆண் குரங்காலும் அறிய முடியாத காட்டிற்குச் சென்றாள்

ஐங்குறுநூறு 375, ஓதலாந்தையார், பாலைத் திணை – மகட் போக்கிய தாய் சொன்னது
இது என் பாவை பாவை, இது என்
அலமரு நோக்கின் நலம்வரு சுடர் நுதல்
பைங்கிளி எடுத்த பைங்கிளி, என்றிவை
காண்தொறும் காண்தொறும் கலங்க,
நீங்கினளோ என் பூங்கணோளே.

பாடல் பின்னணி:  சேரியும் அயலும் தேடிக் காணாது வந்தாரைக் கண்டு தலைவியின் தாய் சொன்னது.

பொருளுரை:  பொம்மையைப் போன்ற என் மகளின் பொம்மை இது.  தான் எடுத்து வளர்த்த கிளியை ஒத்தவள் என் மகள்.  அவளது பார்வை சுழலும் பார்வை.  அவளது அழகிய நெற்றி ஒளியுடையது.  அவள் விட்டுச் சென்ற பொம்மையையும் கிளியையும் காணும்தோறும் காணும்தோறும் நான் கண் கலங்குகின்றேன்.  பூப்போன்ற கண்களையுடைய என் மகள் என்னை விட்டுப் போய் விட்டாள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – தலைவி பலியிட்டுப் பரவியது பாவை.  பாலூட்டி வளர்த்தது கிளியை.  பாவை பலி பெறாமையும் கிள்ளை பாலுண்ணாமையும் கண்டு வருந்தியவாறு.  ‘செந்தார்க் கிள்ளையும் தீம் பால் உண்ணா மயில் இயல் சேயிழை மகளிர் ஆயமும் அயரா தாழியும் மலர் பல அணியா கேழ் கொளக் காழ் புனைந்து இயற்றிய வனப்பமை நோன் சுவர் பாவையும் பலி எனப் பெறாஅ நோய் பொர இவை கண்டு இனைவதன் தலையும் நினைவிலேன்’ (அகநானூறு 369) எனத் தான் கலங்கி மொழிவது காண்க.  இது தேடிக் காணாது வந்தாரைக் கண்டு புலம்பியது என்பர் நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம், பொருளதிகாரம் 36 உரை).  இது சேரியோரை வினாயது என்பர் இளம்பூரணர் (தொல்காப்பியம், பொருளதிகாரம் 40 உரை).  இலக்கணக் குறிப்பு – பாவை பாவை – முன்னது தலைவிக்கு உவமையாகு பெயர், பின்னது விளையாட்டுப் பாவை, பைங்கிளி எடுத்த பைங்கிளி – முன்னது தலைவிக்கு ஆகுபெயர், பின்னது அவள் வளர்த்த கிளி, பூங்கணோளே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  இது என் பாவை – இது என் பொம்மைப் போன்ற மகளின், பாவை – பொம்மை, இது என் – இது என், அலமரு நோக்கின் – சுழற்சிப் பொருந்தியப் பார்வை,  நலம்வரு சுடர் நுதல் – அழகிய ஒளியுடைய நெற்றி, பைங்கிளி எடுத்த பைங்கிளி – பைங்கிளியை எடுத்து வளர்த்த பைங்கிளி (என் மகள்),  என்றிவை – இவை, காண்தொறும் காண்தொறும் கலங்க – காணும்தோறும் காணும்தோறும் நான் அழுகின்றேன், நீங்கினளோ – என்னை விட்டு விட்டுப் போய் விட்டாளே,  என் பூங்கணோளே – பூவைப் போல கண்களையுடைய என் மகள்

ஐங்குறுநூறு 376, ஓதலாந்தையார், பாலைத் திணை  – தலைவியின் தாய் சொன்னது
நாள்தொறும் கலிழும் என்னினும், இடை நின்று
காடுபடு தீயின் கனலியர் மாதோ,
நல் வினை நெடு நகர் கல்லெனக் கலங்கப்,
பூப் புரை உண்கண் மடவரல்
போக்கிய புணர்த்த அறன் இல் பாலே.

பாடல் பின்னணி:  தலைவி போன பின் நற்றாய் விதியை வெகுண்டு சொன்னது.

பொருளுரை:  நாள்தோறும் அழும் என்னைவிட, காட்டில் எழுந்த தீயில் பட்டு அழியட்டும், நன்றாக கட்டப்பட்ட எங்கள் இல்லத்தில் உள்ளவர்கள் ஆரவாரத்துடன் வருந்த, மலர் போன்ற மையிட்ட கண்களையுடைய என்னுடைய இளைய மகளை நீங்குமாறு செய்த, அறம் இல்லாத தீவினையானது.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை செல்வ நெடுமனைக்கண் இனிதிருந்த தன்மகள் அதனின் நீங்கி வெஞ்சுரத்திற்குச் சேரற்குக் காரணம் ஊழ் என ஓர்ந்து உரைப்பாள், போக்கிய புணர்த்த என்றும், அறமல்லவை ஒன்றும் செய்தறியார்க்கு அவற்றைச் செய்தார்க்கு எய்தற்பாலாகிய துன்பத்தை எய்துவித்தல், பால் வரை தெய்வத்திற்குப் பாங்கன்று என்பாள், அறனில் பாலே என்றும், அதனால் அதனை ஆற்ற ஒறுத்தல் ஆவதே என்னும் கருத்தால், காடுபடு தீயிற் கனலியர் மாதோ என்றும் கூறினாள்.  நல் வினை நெடு நகர் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நல்லறமே நயந்து செய்யும் நெடிய மனை, அ. தட்சிணாமூர்த்தி உரை – நல்ல வினைத்திறத்தோடு கட்டப்பட்ட பெரிய மாளிகை.  இலக்கணக் குறிப்பு – கனலியர் – வியங்கோள் வினைமுற்று, மாதோ – மாது, ஓ அசைநிலைகள், கல் – ஒலிக்குறிப்பு, மடவரல் – அன்மொழித்தொகை, போக்கிய  – செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அறன் – அறம் என்பதன் போலி, பாலே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நாள்தொறும் கலிழும் என்னினும் – நாள்தோறும் அழும் என்னைவிட, இடை நின்று காடுபடு தீயின் கனலியர் – காட்டில் எழுந்த தீயில் பட்டு அழிவதாக, மாதோ – அசைநிலை, நல் வினை நெடுநகர் கல்லெனக் கலங்க – நன்றாக கட்டப்பட்ட எங்கள் இல்லத்தில் உள்ளவர்கள் ஆரவாரத்துடன் வருந்த, பூப் புரை உண்கண் மடவரல் – மலர் போன்ற மையிட்ட கண்களையுடைய என்னுடைய இளைய மகள், போக்கிய புணர்த்த – நீங்குமாறு செய்த, அறன் இல் பாலே – அறம் இல்லாத தீவினை/ஊழ்

ஐங்குறுநூறு 377, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை,
இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்
சென்றனள் மன்ற என் மகளே,
பந்தும், பாவையும், கழங்கும் எமக்கு ஒழித்தே.

பாடல் பின்னணி:  தலைவி உடன்போக்கில் சென்றபின் அவள் பந்து முதலியன கண்ட நற்றாய் கலங்கிச் சொன்னது.

பொருளுரைநீர் வேட்கையினால் அதனைப் பெறுவதற்கு எண்ணி வருந்தும் யானை, வேறு இசைக்கருவிகளுடன் சேர்ந்து இசைக்கும் தூம்பு என்னும் இசைக்கருவி போல் தும்பிக்கையைத் தூக்கிப் பிளிறும் சுரத்திற்குச் சென்ற என் மகள், தான் விளையாடிய தன்னுடைய பந்து பாவை கழங்கு ஆகியவற்றை எமக்கு விட்டுவைத்துச் சென்று விட்டாள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – விளையாட்டு பொருள்களை விரும்பிப் போற்றும் இளமை கழிந்து அறிவறியும் செவ்வி எய்தித் தன் கடன் அறிந்து உடன்போக்குத் துணிந்தனளாகலின், சென்றனள் மன்ற என் மகளே என்றும், தன்மகள் பேணிய பொருள்களைக் காண்டொறும் வருத்தம் மிகுதலின், பந்தும் பாவையுங் கலங்கும் எமக்கு ஒழித்தே என்றும் கூறினாள்.  இலக்கணக் குறிப்பு – தூம்பின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, மகளே – ஏகாரம் அசைநிலை, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், ஒழித்தே – ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  ஒப்புமை – களிறு எடுத்த நோயுடை நெடுங்கை தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும் அத்தம் – அகநானூறு 112.  நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை – அகநானூறு 171.

சொற்பொருள்:  நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம் சென்றனள் – நீர் வேட்கையினால் அதனைப் பெறுவதற்கு எண்ணி வருந்தும் யானை வேறு இசைக்கருவிகளுடன் சேர்ந்து இசைக்கும் தூம்பு என்னும் இசைக்கருவி போல் பிளிறும் சுரத்திற்குச் சென்றாள், மன்ற – தேற்றப்பொருளில் வந்தது, என் மகளே – என் மகள்,  பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே – தன்னுடைய பந்து பாவை கழங்கு ஆகியவற்றை எமக்கு விட்டுவைத்துச் சென்றுவிட்டாள்

ஐங்குறுநூறு 378, ஓதலாந்தையார், பாலைத் திணை – மகட் போக்கிய தாய் சொன்னது
செல்லிய முயலிப் பாஅய சிறகர்
வாவல் உகக்கும் மாலையாம் புலம்பப்
போகிய அவட்கோ நோவேன், தேமொழித்
துணையிலள் கலிழும் நெஞ்சின்
இணையேர் உண்கண் இவட்கு நோவதுமே.

பாடல் பின்னணி:  தலைவி தலைவனுடன் உடன்போக்கில் சென்றபின் அவளுடைய தோழியின் ஆற்றாமையைக் கண்ட நற்றாய் சொன்னது.

பொருளுரை:  மாலைப் பொழுதில், வௌவால்கள் முயன்று தாவிப் பறக்கும் வேளையில், என்னைத் தனிமையில் ஆழ்த்திவிட்டுச் சென்ற என் மகளுக்காக நான் வருந்த மாட்டேன்.  ஆனால் என் மகளை நினைத்துத் தவித்து அழும், இனிய சொற்களையுடைய, அழகிய ஒத்த கண்களில் மையிட்ட அவளுடைய தோழிக்காக நான் வருந்துகின்றேன்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – உடனிருந்து உடன் வளர்ந்து உடன் விளையாடி இன்மொழி வழங்கி இன்புறுத்திய தோழியாகிய தலைவியைப் பிரிந்து யாரொடும் சொல்லாடாது தனித்திருந்து வருந்துதலின் ‘தேமொழித் துணையிலள் கலிழும்’ என்றும், தன்னினும் தோழி எய்தும் வருத்தம் பெரிதாதல் காண்டலின், ‘இணையேர் உண்கண் இவட்கு நோவதுவே’ என்றும் கூறினாள்.  தானுறு துயரத்தினும் பிறர் துயரம் துடைத்தல் தகவுடைத்து என்னும் முறைமையால் ‘இவட்கு நோவுவதே’ என்றாள் எனினுமாம்.  இலக்கணக் குறிப்பு – பாஅய – செய்யுளிசை அளபெடை, தேமொழி – அன்மொழித்தொகை, சிறகர் – சிறகு என்பதன் போலி, நோவதுமே – ஏகாரம் அசைநிலை.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  செல்லிய – செல்ல, முயலி – முயன்று, பாஅய சிறகர் வாவல் உகக்கும் – தாவிப் பறக்கும் சிறகையுடைய வௌவால்கள், மாலையாம் – மாலைப் பொழுதில், புலம்பப் போகிய அவட்கோ நோவேன் – தனிமையில் என்னை ஆழ்த்திய அவளுக்காக நான் வருந்த மாட்டேன், தேமொழி – இனிய சொற்களையுடையவள், துணையிலள் – தன் தோழியை இழந்தவள், கலிழும் நெஞ்சின் – அழும் நெஞ்சையுடைய, இணை – ஒத்த, ஏர் உண்கண் – அழகிய மையிட்ட கண்கள், இவட்கு நோவதுமே – இவளுக்காக வருந்துகின்றேன்

ஐங்குறுநூறு 379, ஓதலாந்தையார், பாலைத் திணை – மகட் போக்கிய தாய் சொன்னது
தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியில்
இனிது ஆம் கொல்லோ, தனக்கே பனி வரை
இனக் களிறு வழங்கும் சோலை
வயக்குறு வெள்வேல் அவர் புணர்ந்து செலவே?

பாடல் பின்னணி:  தலைவி தலைவனுடன் உடன்போக்கில் சென்றபின் தோழி அறத்தொடு நிற்பக் கேட்ட நற்றாய், ‘அதனை முன்னே அறிவித்து நாம் மணம் புணர்த்த ஒழுகாது போயினள்’ என நொந்து சொல்லியது.

பொருளுரை:   என்னுடைய மகளுக்கு, தன்னுடைய விருப்பமான தோழியர் சூழ நல்ல ஒரு திருமணத்தை அனுபவிப்பதை விட இனிமையானதா, ஒளிரும் வெள்ளிய வேலையுடைய அவளுடைய தலைவனுடன், யானைக் கூட்டங்கள் உலவும் குளிர்ந்த மலைச் சோலை வழியே செல்வது?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – தலைமகட்குத் தலைமகனோடு உளதாகிய நட்பினை முன்னே தனக்கு அறிவித்துத் தான் மணம் புணர்த்த ஒழுகாது போயினாள் என்னுங் கருத்தால் பெற்றோரும் உடன்பயின்ற ஆயத்தோரும் ஒருங்கு கூடி நுகர்விக்கும் இன்பத்தினும், அவரல்லாத புதுவோர் புணர்க்கும் இன்பம் சிறப்புடைத்தன்று என்பாள், இனிதாங் கொல்லோ என்றாள்.  வெள்வேல் (4) – ஒளவை துரைசாமி உரை – விளக்கம் மிக்க வென்றி தரும் வேல்.  வடித்துக் கூரிதாக்கி நெய் தடவப் பெற்றமையின் வெள்வேல் எனப்பட்டதுஅ. தட்சிணாமூர்த்தி உரை – வெற்றி தரும் வேல், ச.வே. சுப்பிரமணியன் உரை – ஒளி பொருந்திய வேல், தி. சதாசிவ ஐயர் உரை – விளங்குதலுற்ற வெள்ளிய வேல்.  இலக்கணக் குறிப்பு – கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசைநிலை, தனக்கே – ஏகாரம் அசைநிலை, செலவே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  தன் அமர் ஆயமொடு – தன்னுடைய விருப்பமான தோழிகளுடன், நன் மண – நல்ல திருமணம், நுகர்ச்சியில் – அனுபவிப்பதில், இனிது ஆம் கொல்லோ – இனிமையானதா, தனக்கே – அவளுக்கு, பனி – குளிர், வரை – மலை, இனக் களிறு வழங்கும் சோலை – கூட்டமாக யானைகள் உலவும் சோலை, வயக்குறு வெள் வேல் அவர் புணர்ந்து செலவே – விளங்கும் வெள்ளிய வேலை உடைய தலைவனுடன் செல்லுவது

ஐங்குறுநூறு 380, ஓதலாந்தையார், பாலைத் திணை  – செவிலித்தாய் சொன்னது
அத்தம் நீள் இடை அவனொடு போகிய,
முத்து ஏர் வெண்பல் முகிழ் நகை மடவரல்
தாயர் என்னும் பெயரே வல்லாறு
எடுத்தேன் மன்ற யானே,
கொடுத்தோர் மன்ற அவள் ஆயத்தோரே.

பாடல் பின்னணி:  தலைவி உடன்போகியவழி அயலார் ஆறுதல் கூறித் தெளிவிக்க முயன்றனர்.  அப்பொழுது அவள் கூறியது.

பொருளுரை:   நீண்ட பாலை வழியில் அவனுடன் சென்ற, முத்து போன்ற பற்களையுடைய, புன்னகையையுடைய, மடமைப் பொருந்திய என்னுடைய மகளுக்கு, தாய் என்ற பெயரை மட்டுமே இயன்றவரை நான் பெற்றேன்.  தலைவனுக்கு மனைவி ஆகுமாறு அவளைக் கொடுத்தவர்கள் அவளுடைய தோழியர்.

குறிப்பு:   ஒளவை துரைசாமி உரை – ஆயத்தோர் என்றது தோழியை, இது முன்னிலைப் புறமொழி.  கொடுத்தோர் மன்ற அவள் ஆயத்தோரே (5) – அ. தட்சிணாமூர்த்தி உரை, ஒளவை துரைசாமி உரை – அவளை அவனுக்கு உரியவளாகக் கொடுக்கும் பேறு பெற்றோர் அவள் ஆயத்தோரே, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நற்பெயரைத் தோழிமாரே எனக்கு வழங்கினார்கள்.  முத்தைப் போன்ற பற்கள்: அகநானூறு 27 – முத்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு, ஐங்குறுநூறு 185 – இலங்கு முத்து உறைக்கும் எயிறு, ஐங்குறுநூறு 380 – முத்து ஏர் வெண்பல், கலித்தொகை 64 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 93 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏய்க்கும் வெண்பல், கலித்தொகை 131 – முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய், பரிபாடல் 8 – எழில் முத்து ஏய்க்கும் வெண்பல், பரிபாடல் திரட்டு 2 – முத்த முறுவல்,  பொருநராற்றுப்படை 27 – துவர் வாய்ப் பல உறு முத்தின் பழி தீர் வெண்பல், சிறுபாணாற்றுப்படை 57 – நகாஅர் அன்ன நளி நீர் முத்தம், நெடுநல்வாடை 37 – முத்து உறழ் முறுவல்.  செவிலித்தாய் – ஒளவை துரைசாமி உரை – ‘தாயெனப் படுவோள் செவிலியாகும்’ என்றதனால் தாயர் என்னும் பெயரே என்றும், தாயாவாள் தலைமகளின் அருமறை அறிந்து அறத்தொடு நிலை வகையால் மணம் புணர்த்தும் மாண்பினளாகத் தான் அது பெறாமையால் வருந்துகின்றமையின், வல்லாறு எடுத்தேன் என்றும், உண்மைத் தாயர் எனப்படுதற்கு உரியோரென்பாள்.  இலக்கணக் குறிப்பு – அவனொடு – ஒடு உடனிகழ்ச்சி (ஒருங்கு நிகழ்தல்), ஏர் – உவம உருபு, மடவரல் –  அன்மொழித்தொகை, பெயரே – ஏகாரம் அசைநிலை, பிரிநிலை, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், ஆயத்தோரே – ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34).  உடன்போக்கின்பின் நிகழும் திருமணம் – கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்து உடன் போகிய காலையான (தொல்காப்பியம், கற்பியல் 2).

சொற்பொருள்:  அத்தம் நீள் இடை அவனொடு போகிய – நீண்ட பாலை வழியில் அவனுடன் சென்ற, முத்து ஏர் வெண்பல் முகிழ் நகை மடவரல் – முத்து போன்ற பற்களையுடைய புன்னகையையுடைய மடமைப் பொருந்திய என்னுடைய மகள், தாயர் என்னும் பெயரே – தாய் என்ற பெயரை மட்டுமே,  வல்லாறு எடுத்தேன் யானே –  இயன்றவரை நான் பெற்றேன், மன்ற – அசைநிலை, கொடுத்தோர் மன்ற அவள் ஆயத்தோரே – தலைவனுக்கு மனைவி ஆகுமாறு கொடுத்தவர்கள் அவளுடைய தோழியர்

உடன்போக்கின் கண் இடைச் சுரத்து உரைத்த பத்து

பாடல்கள் 381 – 390 – சுரத்தில் கண்டோரும், தேடிச் சென்ற செவிலித்தாயும், தலைவியும், அந்தணர் ஒருவரும் நிகழ்த்தும் கூற்றுக்கள் கொண்டவை இவை.

ஐங்குறுநூறு 381, ஓதலாந்தையார், பாலைத் திணைகண்டோர் சொன்னது
பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து,
செங்கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர்
யார் கொல், அளியர் தாமே, வார் சிறைக்
குறுங்கால் மகன்றில் அன்ன,
உடன் புணர் கொள்கைக் காதலோரே?

பாடல் பின்னணி:  உடன்போக்கின்கண் சுரத்தில் கண்டவர்கள் சொன்னது.

பொருளுரைபசிய நெல்லிக்காய்கள் பலவற்றை உண்டு சிவந்த அடியையுடைய கடம்ப மரத்தின் இடையிட்ட நிழலில் தங்கி இருப்பவர்கள் யார்?  இரங்கத்தக்கவர்கள் இவர்கள்.  நீண்ட சிறகுகளையும் குறுகிய கால்களையும் உடைய மகன்றில் பறவைகள் போல் பிரிவு இல்லாது உடன் இருக்கும் கொள்கை மிக்க காதல் உடையவர்கள் போல் தோன்றுகின்றனர்.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – ‘பைங்காய் நெல்லி’ என்பதனை ‘நெல்லிப் பைங்காய்’ என மாறிப் பொருள் கொள்க.  பாலை நிலத்திலே அது வளர்வதாலும், கோடையில் காய்த்தலாலும், அஃதன்றி உண்பதற்குரியவை பிற இன்மையின் நெல்லிக்காய்களை உண்டனர் என்க.  பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து (1) – தி. சதாசிவ ஐயர் உரை – நெல்லியின் பசிய காயைப் பலவின் காயுடனே உண்டு, ஒளவை துரைசாமி உரை – நெல்லியின் பசிய காய்களைப் பலவின் கனியோடு உண்டு, பசிய காய்களையுடைய நெல்லியின் கனிகள் பலவற்றை உண்டு எனினுமாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பசிய நெல்லியின் காய்கள் பலவற்றை உண்டு, அ. தட்சிணாமூர்த்தி உரை – பசிய நெல்லிக்காய்கள் பலவற்றையும் உண்டு.  மகன்றில் புணர்ச்சி:  குறுந்தொகை 57 – நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல, பரிபாடல் 8–44 – அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி, ஐங்குறுநூறு 381 – குறுங்கால் மகன்றில் அன்ன உடன் புணர் கொள்கை, அகநானூறு 220 – நோலா இரும்புள் போல நெஞ்சு அமர்ந்து காதல் மாறாக் காமர் புணர்ச்சியின்.  இலக்கணக் குறிப்பு – கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், தாமே – தாம், ஏ அசைநிலைகள், அன்ன – உவம உருபு, காதலோரே – ஏகாரம் அசைநிலை.  வார்தல் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து செங்கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர் யார் கொல் – பசிய நெல்லிக்காய்கள் பலவற்றை உண்டு சிவந்த அடியையுடைய கடம்ப மரத்தின் இடையிட்ட நிழலில் இருப்பவர்கள் யார், அளியர் தாமே – இரங்கத்தக்கவர்கள், வார் சிறைக் குறுங்கால் மகன்றில் அன்ன உடன் புணர் கொள்கைக் காதலோரே – நீண்ட சிறகுகளையும் குறுகிய கால்களையும் உடைய மகன்றில் பறவைகள் போல் பிரிவு இல்லாது உடன் இருக்கும் கொள்கை மிக்க காதல் உடையவர்கள்

ஐங்குறுநூறு 382, ஓதலாந்தையார், பாலைத் திணைகண்டோர் சொன்னது
புள் ஒலிக்கு அமர்த்த கண்ணள், வெள்வேல்
திருந்து கழல் காளையொடு அருஞ்சுரம் கழிவோள்,
எல் இடை அசைந்த கல்லென் சீறூர்ப்,
புனை இழை மகளிர்ப் பயந்த
மனை கெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே.

பாடல் பின்னணி:  தலைவியும் தலைவனும் சுரத்தில் உள்ள ஊரில் தங்கியபொழுது அவ்வூர் பெண்டிர் தலைவியைப் பார்த்து இரங்குதலைக் கண்டவர்கள் சொன்னது.

பொருளுரைபாலை நிலத்தில் உள்ள பறவைகளின் ஒலிக்கு அஞ்சி மருண்ட கண்களை உடையவளாய், வெற்றியுடைய வேலையும் திருத்தமான கழல்களையும் உடைய இளைஞனுடன் செல்லும் இவள், இரவின்கண் (பகலில்) தங்குவதால், ஆரவாரம் மிக்க சிறிய ஊரில் உள்ள அழகாகச் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த பெண்களைப் பெற்ற தாய்மார்க்குப் பெரிதும் நோவு உண்டாகும்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – தாம் பயிலாதவிடத்துச் சென்ற காலை, ஆண்டுப் புள்ளினம் ஒலித்தாலும் இளமகளிர்க்கு வியப்பும் அச்சமும் தோன்றி மருட்சி உண்டாக்குமாகலின், புள் ஒலிக்கு அமர்த்த கண்ணள் என்றனர்.  புள் ஒலி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாலைக் கருப்பொருளாகிய கழுகும் பருந்தும் புறவுமாம்.  எல் (3) – தி. சதாசிவ ஐயர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை, அ. தட்சிணாமூர்த்தி உரை – பகல், ஒளவை துரைசாமி உரை – இரவு.  இலக்கணக் குறிப்பு – கல் – ஒலிக்குறிப்பு, புனை இழை – வினைத்தொகை, நோவுமார் – ஆர் அசைநிலை, பெரிதே – ஏகாரம் அசைநிலை.  அமர்த்த கண்ணள் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை, ஒளவை துரைசாமி உரை – அஞ்சி மருண்ட கண்களையுடையவள்.  வெள்வேல் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெற்றி வேல், ஒளவை துரைசாமி உரை – வெள்ளிய வேல்.  வெள்வேல் – ஒளவை துரைசாமி உரை (ஐங்குறுநூறு 379வது பாடலின் உரை) – விளக்கம் மிக்க வென்றி தரும் வேல்.  வடித்துக் கூரிதாக்கி நெய் தடவப் பெற்றமையின் வெள்வேல் எனப்பட்டது.

சொற்பொருள்:  புள் ஒலிக்கு அமர்த்த கண்ணள், வெள்வேல் திருந்து கழல் காளையொடு அருஞ்சுரம் கழிவோள் – பாலை நிலத்தில் உள்ள பறவைகளின் ஒலிக்கு அஞ்சி மருண்ட கண்களை உடையவளாய் வெற்றியுடைய வேலையும் திருத்தமான கழல்களையும் உடைய இளைஞனுடன் செல்லும் இவள், எல் இடை அசைந்த – இரவின்கண் (பகலில்) தங்குவதால், கல்லென் சீறூர்ப் புனை இழை மகளிர்ப் பயந்த மனை கெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே – ஆரவாரம் மிக்க சிறிய ஊரில் உள்ள அழகாகச் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த பெண்களைப் பெற்ற தாய்மார்க்குப் பெரிதும் நோவு உண்டாகும் (நோவுமார் – தி. சதாசிவ ஐயர் உரை – மார் அசைநிலை, அ. தட்சிணாமூர்த்தி உரை – ஆர் அசைநிலை)

ஐங்குறுநூறு 383, ஓதலாந்தையார், பாலைத் திணைகண்டோர் சொன்னது
கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற
நெடுங்கால் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி,
வலஞ்சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற
மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்றே,
பஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும்
அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே.

பாடல் பின்னணி:  உடன்போக்கில் சென்ற தலைவி வளைத்த மரக்கிளையில் பூக்கொண்டு தனக்கும் பாவைக்கும் வகுக்கக் கண்டோர் சொன்னது.

பொருளுரைதேன் கொள்ளும் தன்மையுடைய தேனீக்கள் ஒலிக்கும் நாட்காலையில் சுரத்தில் நெருங்கி வளரும் கடம்ப மரத்தின் நெடிய அடியையுடைய குறுகிய கிளையைப் பற்றித் தாழ்த்தி, வலதுபுறமாகச் சுழித்த வெள்ளை மலர்க்கொத்துக்களைக் கொய்வதற்கு, அவளை நோக்கி நின்ற இளமறவனின் உள்ளம், மகிழ்ச்சி மிக்க அடைந்தது, தன் பஞ்சாய்ப் பாவைக்கும் (கோரைப்புல்லால் செய்த பொம்மைக்கும்) தனக்கும் அழகிய மெல்லிய கூந்தலையுடைய தன் காதலி அம்மலர்களை வகுப்பது கண்டு.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – தம்மாற் காதலிக்கப்பட்டார் செயல் காணுந்தோறும் காதலர்க்கு உள்ளம் மகிழ்சிறத்தல் இயல்பாகலின் ஆய்வது கண்டு, மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்றே என்றார்.  வலஞ்சுரி மராஅம் – அகநானூறு 83 – வலஞ்சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீ, ஐங்குறுநூறு 348 – வலஞ்சுரி மராஅம் வேய்ந்து நம் மணங்கமழ் தண் பொழில், ஐங்குறுநூறு 383 – நெடுங்கால் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி வலஞ்சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற, குறுந்தொகை 22 – சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து வேனில் அம் சினை கமழும்.  இலக்கணக் குறிப்பு – கூர்ந்தன்றே – ஏகாரம் அசைநிலை, அம் சாய் கூந்தல் – அன்மொழித்தொகை, கண்டே – ஏகாரம் அசைநிலை.  சாய் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 27).

சொற்பொருள்:  கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற நெடுங்கால் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி – தேன் கொள்ளும் தன்மையுடைய தேனீக்கள் ஒலிக்கும் நாட்காலையில் சுரத்தில் நெருங்கி வளரும் கடம்ப மரத்தின் நெடிய அடியையுடைய குறுகிய கிளையைப் பற்றி, வலஞ்சுரி வால் இணர் கொய்தற்கு – வலதுபுறமாகச் சுழித்த வெள்ளை மலர்க்கொத்துக்களைக் கொய்வதற்கு (கடம்ப மரம் – Neolamarckia or Anthocephalus cadamba, Kadampa oak), நின்ற மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்றே – நின்ற இளமறவனின் உள்ளம் மகிழ்ச்சி மிக்க அடைந்தது, பஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும் அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே – தன் பஞ்சாய்ப் பாவைக்கும் (பொம்மைக்கும்) தனக்கும் அழகிய மெல்லிய கூந்தலையுடைய தன் காதலி வகுப்பது கண்டு

ஐங்குறுநூறு 384, ஓதலாந்தையார், பாலைத் திணைதலைவி அந்தணரிடம் சொன்னது
சேண்புலம் முன்னிய அசைநடை அந்தணிர்!
நும் ஒன்று இரந்தனென், மொழிவல், எம் ஊர்
யாய் நயந்து எடுத்த ஆய் நலம் கவின
ஆரிடை இறந்தனள் என்மின்,
நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே.

பாடல் பின்னணி:  உடன்போகிய தலைவி அங்கு எதிர்வரும் அந்தணர்களிடம் சொன்னது.

பொருளுரைநெடுந்தொலைவில் உள்ள நாட்டைக் கருதிச் செல்லும் அசைந்த நடையையுடைய அந்தணர்களே!  நும்மிடம் ஒன்றை இரந்துக் கேட்கின்றேன். எம்முடைய ஊரின்கண் நீங்கள் சென்றால், நேரிய இறை பொருந்திய முன்னங்கையை உடைய என் தோழியரிடம், ” நும் தோழி, தன் தாய் பேணி வளர்த்த அழகிய நலம் பொலியும்படி, செல்லுதற்கு அரிய இடங்களைக் கடந்து சென்றாள்” எனக் கூறுங்கள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – யாய் நயந்தெடுத்த ஆய்நலம் கவின என்றது, தன் அழகு தலைவனோடு கூடிச் சேறலான் புத்தொளியும் புதுப்பொலிவும் உடையதாய் நன்கு சிறந்திருந்தலைக் கருதிக் கூறியவாறு.  அ. தட்சிணாமூர்த்தி உரை – அசை நடை என்றாள் நெடுந்தொலைவு நடந்த களைப்பினால் மெதுவாகவும் துளக்கத்தோடும் நடந்தமை பற்றி.  பெரியோர்பால் ஒன்று வேண்டுவோர் ‘தங்கள்பால் செய்யும் ஓர் விண்ணப்பம் உண்டு’ என்று முன்மொழிந்து சொல்லல் மரபாதலின், ‘நும்மொன்று இரந்தனென், மொழிவல்’ என்றாள்.  இரந்து மொழிதலாவது கெஞ்சிக் கேட்டல் என்க.  இலக்கணக் குறிப்பு – அந்தணிர் – விளி, மொழிவல் – தன்மை ஒருமை வினைமுற்று, என்மின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, ஆயத்தோர்க்கே – ஏகாரம் அசைநிலை.  நேர் இறை முன்கை (5) – ஒளவை துரைசாமி உரை – நேரிய இறை பொருந்திய முன்னங்கை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நேரிய கோடுகள் அமைந்த முன்கை, தி. சதாசிவ ஐயர் உரை – ஒத்த சந்தினையுடைய முன்கை.

சொற்பொருள்:  சேண்புலம் முன்னிய அசைநடை அந்தணிர் – நெடுந்தொலைவில் உள்ள நாட்டைக் கருதிச் செல்லும் அசைந்த நடையையுடைய அந்தணர்களே, நும் ஒன்று இரந்தனென் – நும்மிடம் ஒன்றை இரந்துக் கேட்கின்றேன், மொழிவல் – கூறுவீர்களாக, எம் ஊர் – எம்முடைய ஊர், யாய் நயந்து எடுத்த ஆய் நலம் கவின ஆர் இடை இறந்தனள் என்மின் – தன் தாய் பேணி வளர்த்த அழகிய நலம் வனப்பு மிக செல்லுதற்கு அரிய இடங்களைக் கடந்து சென்றாள் எனக் கூறுங்கள், எம்  நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே – நேரிய இறை பொருந்திய முன்னங்கையை உடைய என் தோழியர்க்கு

ஐங்குறுநூறு 385, ஓதலாந்தையார், பாலைத் திணை தன் ஊரை நோக்கி செல்லுபவர்களிடம் தலைவி சொன்னது
கடுங்கண் காளையொடு நெடுந்தேர் ஏறிக்
கோள் வல் வேங்கை மலை பிறக்கு ஒழிய,
வேறு பல் அருஞ்சுரம் இறந்தனள் அவளெனக்
கூறுமின், வாழியோ, ஆறு செல் மாக்கள்
நல் தோள் நயந்து பாராட்டி
எற் கெடுத்து இருந்த அறன் இல் யாய்க்கே.

பாடல் பின்னணி:  வரைவு மறுத்துழி உடன்போக்கில் சென்ற தலைவி இடைச்சுரத்தில் கண்டாரை, ‘யான் போகின்றபடியே யாய்க்கு நீர் கூற வேண்டும்’ எனச் சொன்னது.

பொருளுரைஎம் ஊர் நோக்கிச் செல்லும் மக்களே!  நீவிர் நீடு வாழ்வீராக!  என்னுடைய நல்ல தோள்களை விரும்பிப் பாராட்டி வளர்த்து, யான் தலைவனுடன் கூடி வாழ முடியாமல் கெடுத்து இற்செறித்த அறம் இல்லாத தாயிடம், “தறுகண்மை உடைய இளைஞனுடன் நெடிய தேரில் ஏறிக், கொல்லும் வலிமையுடைய புலிகள் உள்ள மலைகள் பிற்பட, வேறு பல செல்லுதற்கரிய பாலை நிலங்களைக் கடந்துச் சென்றாள் நின் மகள்” எனக் கூறுங்கள்.

குறிப்பு:  எற் கெடுத்து இருந்த அறன் இல் யாய்க்கே (6) – ஒளவை துரைசாமி உரை – இற்செறிந்து (இல்லத்தில் அடைத்து) வைத்த அறன் இயல்பில்லாத என் தாய்க்கு.  உ. வே. சாமிநாதையர் உரை – வரைவு (திருமணம்) மறுத்து என்னைக் கெடுத்த மறம் மிக்க தாய்க்கு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தனது அறியாமையினாலே என்னை இழந்து அமைந்து மனைக்கண்ணிருந்த அற நெறி இஃதென அறிதல் இல்லாத மடவோளாகிய என் தாய்க்கு.  இலக்கணக் குறிப்பு – காளை – உவமை ஆகுபெயர், கோள் – முதனிலைத் தொழிற்பெயர், கூறுமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, வாழியோ – வாழி முன்னிலை அசை, ஓகாரம் அசைநிலை, மாக்கள் – விளி, அறன் – அறம் என்பதன் போலி, யாய்க்கே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  கடுங்கண் காளையொடு நெடுந்தேர் ஏறிக் கோள் வல் வேங்கை மலை பிறக்கு ஒழிய வேறு பல் அருஞ்சுரம் இறந்தனள் அவளெனக் கூறுமின் – தறுகண்மை (கொடிய வலிமை) உடைய இளைஞனுடன் நெடிய தேரில் ஏறிக் கொல்லும் வலிமையுடைய புலிகள் உள்ள மலைகள் பிற்பட வேறு பல செல்லுதற்கரிய பாலை நிலங்களைக் கடந்துச் சென்றாள் அவள் எனக் கூறுங்கள், ஆறு செல் மாக்கள் – வழியில் செல்லும் மக்களே, வாழியோ – நீடு வாழ்வீராக, நல் தோள் நயந்து பாராட்டி எற் கெடுத்து இருந்த அறன் இல் யாய்க்கே – என்னுடைய நல்ல தோள்களை விரும்பிப் பாராட்டி யான் தலைவனுடன் கூடி வாழ முடியாமல் கெடுத்து இற்செறித்த அறம் இல்லாத தாயிடம்

ஐங்குறுநூறு 386, ஓதலாந்தையார், பாலைத் திணை கண்டோர் தலைவியின் தாயிடம் சொன்னது
புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம்,
நயந்த காதலற் புணர்ந்து சென்றனளே,
நெடுஞ்சுவர் நல் இல் மருண்ட
இடும்பை உறவி, நின் கடுஞ்சூல் மகளே.

பாடல் பின்னணி:  உடன்போக்கில் சென்ற தலைவியை இடைச்சுரத்தில் கண்டவர்கள், மனையில் உள்ள அவள் தாயிடம் சென்று கூறியது.

பொருளுரைஉயர்ந்த சுவர்களால் சூழப்பட்ட நல்ல இல்லத்தின்கண் இருந்து மனம் கலங்கியதால், பெரும் வருத்தத்தை அடைந்தவளே!  துன்பத்தையுடைய யானைகளுடன் புலிகளும் இயங்கும் பாலை வழிகளில், தன்னை விரும்பும் காதலனுடன் கூடிச் சென்றாள், உன்னுடைய முதல் சூலில் பிறந்த மகள்.

குறிப்பு:  புன்கண் யானை (1) – தி. சதாசிவ ஐயர் உரை – வலியழிந்த யானை, உ. வே. சாமிநாதையர் உரை – துன்பத்தைச் செய்யும் யானை, ஒளவை துரைசாமி உரை – சிறிய கண்களையுடைய யானைகள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – புல்லிய கண்ணையுடைய யானை, அ. தட்சிணாமூர்த்தி உரை – துன்பத்தையுடைய யானைகள்.  அ. தட்சிணாமூர்த்தி உரை – புன்கண் யானை என்றது கோடை வெம்மையால் போதிய உணவும் நீருமின்றி வலியிழந்த யானையை. அன்றியும் மாந்தர்க்குப் புன்கண் செய்யும் யானை எனினும் பொருந்தும்.  வழியின் கொடுமைக்கு அதுவும் காரணம்.  இலக்கணக் குறிப்பு – சென்றனளே – ஏகாரம் அசைநிலை, மகளே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம் நயந்த காதலற் புணர்ந்து சென்றனளே – துன்பத்தையுடைய யானைகளுடன் புலிகளும் இயங்கும் பாலை வழிகளில் தன்னை விரும்பும் காதலனுடன் கூடிச் சென்றாள், நெடுஞ்சுவர் நல் இல் மருண்ட இடும்பை உறவி – உயர்ந்த சுவர்களால் சூழப்பட்ட நல்ல இல்லத்தின்கண் இருந்து மனம் கலங்கியதால் பெரும் துன்பத்தை அடைந்தவளே (உறவி – விளி), நின் கடுஞ்சூல் மகளே – உன்னுடைய முதல் சூலில் பிறந்த மகள்

ஐங்குறுநூறு 387, ஓதலாந்தையார், பாலைத் திணை அந்தணர் செவிலித்தாயிடம் சொன்னது
‘அறம் புரி அருமறை நவின்ற நாவின்
திறம் புரி கொள்கை அந்தணிர்! தொழுவல்!’ என்று
ஒண்தொடி வினவும் பேதையம் பெண்டே,
‘கண்டனெம் அம்ம! சுரத்திடை, அவளை
இன்துணை இனிது பாராட்டக்
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே’.

பாடல் பின்னணி:  பின்சென்ற செவிலித்தாயால் வினாவப்பட்ட அந்தணர் அவளிடம் சொன்னது.

பொருளுரை“அறத்தைச் சொல்லும் அரிய மறைகளை இடைவிடாது ஓதும் நாவினையும் அது கற்பிக்கும் முறையைப் பின் பற்றும் கொள்கையையுமுடைய அந்தணர்களே!  உம்மை யான் வணங்குகின்றேன்” என வினவும் ஒளிரும் வளையல்களை அணிந்த மகளின் தாயாகிய, வினவும் பேதமையுடைய பெண்ணே!  யாம் கண்டோம் உன் மகளை.  இன்னும் கேள்.  அவளை அவளின் இனிய துணைவன் இனிமையாகப் பாராட்ட, குன்றுகள் மிக்க உயர்ந்த மலையைக் கடந்து சென்றாள்.  நீ அவளைப் பின்தொடர்ந்து வருந்த வேண்டாம்.

குறிப்பு:  செவிலித்தாய் மட்டுமே உடன்போக்கில் சென்ற மகளைத் தேடிச் சுரம் செல்வாள்.  நற்றாய் செல்ல மாட்டாள்.  ஆய் பெருஞ் சிறப்பின் அரு மறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34).  பொ. வே. சோமசுந்தரனார் உரை – குன்றுயர் பிறன்கன் மலையென்றது சேய்மையில் தோன்றும் ஒரு உயரிய மலையைச் சுட்டிக் கூறியபடியாம்.  எனவே, அப்பெரிய மலைமிசை ஏறி இறங்கிப் பின் அவர்களைக் காணுதல் மூப்புப் பருவமுடைய நினக்கு மிகவும் அரிது என்றாராயிற்று.  இனி நீ அவர்களைத் தொடர்ந்து போதல் பயனின்று.  மீண்டு போதி என்பது குறிப்பெச்சம்.  இலக்கணக் குறிப்பு – அந்தணிர் – விளி, தொழுவல் – தன்மை ஒருமை வினைமுற்று, ஒண்தொடி – அன்மொழித்தொகை, பேதையம் – அம் சாரியை, கண்டனெம் – தன்மைப் பன்மை வினைமுற்று, அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், இறந்தோளே – ஏகாரம் அசைநிலை.  அறம் புரி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நல்லறத்தை விரும்பிச் செய்வதற்குக் காரணமான, அ. தட்சிணாமூர்த்தி உரை, ஒளவை துரைசாமி உரை – அறத்தைச் சொல்லும்.  சுரத்தில் அந்தணர்களிடம் வினவுதல் – “எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல், உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும், நெறிப்பட சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்துக் குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!  வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்! இவ் இடை, என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும், தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர் அன்னார் இருவரை காணிரோ பெரும?”.  “காணேம் அல்லேம்; கண்டனம் கடத்து இடை; ஆண் எழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறீர்! ………………………………என ஆங்கு, இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்!   சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்; அறம்தலை பிரியா ஆறும் மற்று அதுவே (கலித்தொகை 9).

சொற்பொருள்:  அறம் புரி அருமறை நவின்ற நாவின் திறம் புரி கொள்கை அந்தணிர் – அறத்தைச் சொல்லும் அரிய மறைகளை இடைவிடாது ஓதும் நாவினையும் அது கற்பிக்கும் முறையைப் பின் பற்றும் கொள்கையையுமுடைய  அந்தணர்களே, தொழுவல் – உம்மை யான் வணங்குகின்றேன், என்று ஒண்தொடி வினவும் பேதையம் பெண்டே – என ஒளிரும் வளையல்களை அணிந்த மகளின் தாயாகிய வினவும் பேதமையுடைய பெண்ணே,  கண்டனெம் – யாம் கண்டோம், அம்ம – கேட்பாயாக, சுரத்திடை – சுரத்தின்கண், அவளை இன்துணை இனிது பாராட்டக் குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே – அவளை அவளின் இனிய துணைவன் இனிமையாகப் பாராட்ட குன்றுகள் மிக்க உயர்ந்த மலையைக் கடந்து சென்றாள்

ஐங்குறுநூறு 388, ஓதலாந்தையார், பாலைத் திணை கண்டோர் செவிலித்தாயிடம் சொன்னது
நெருப்பு அவிர் கனலி உருப்பு சினம் தணியக்,
கருங்கால் யாத்து வரி நிழல் இரீஇச்,
சிறு வரை இறப்பின் காண்குவை, செறி தொடிப்
பொன் ஏர் மேனி மடந்தையொடு,
வென் வேல் விடலை முன்னிய சுரனே.

பாடல் பின்னணி:  மகளைத் தேடிச் சென்ற செவிலித்தாய்க்கு இடைச்சுரத்தில் அவளைக் கண்டவர்கள் சொன்னது.

பொருளுரை:  நெருப்பு ஒளிரும் கதிரவனின் கொடிய வெப்பம் தணியும் அளவும், கரிய அடியையுடைய யா மரத்தின் கோடு கோடாக அமைந்த செறிவில்லாத நிழலில் தங்கி இருந்து, அதன்பின் சிறிய மலைகளைக் கடந்து சென்றால் நீ  காண்பாய், இறுக்கமான வளையல்களை அணிந்த பொன் போன்ற மேனியையுடைய நின் மகளோடு வெற்றி வேல் ஏந்திய இளைஞன் சென்ற பாலை நிலத்தின் வழியை.

குறிப்பு:  செவிலித்தாய் மட்டுமே உடன்போக்கில் சென்ற மகளைத் தேடிச் சுரம் செல்வாள்.  நற்றாய் செல்ல மாட்டாள்.  ஆய் பெருஞ் சிறப்பின் அரு மறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34).  அ. தட்சிணாமூர்த்தி உரை – ‘செறிதொடி’ என்று தலைவியைக் குறித்தனர், அவள் உடல் மெலியாது நன்னிலையிலே உள்ளாள் என்பதுபட.  தொடி செறிந்தற்கு அவள் தன் காதலனோடு இருப்பதே காரணம் என்றவாறு.  இலக்கணக் குறிப்பு – இரீஇ – செய்யுளிசை அளபெடை, ஏர் – உவம உருபு, மடந்தையொடு – ஒடு உடனிகழ்ச்சி (ஒருங்கு நிகழ்தல்), சுரனே – சுரன் சுரம் என்றதன் போலி, ஏகாரம் அசைநிலை.  பொன் ஏர் மேனி (4) – அ. தட்சிணாமூர்த்தி உரை – பொன்னை நிகர்த்த மேனி என்றும் பொன் போலும் அழகிய மேனி என்றும் பொருள் கொள்க. ஒளவை துரைசாமி உரை – பொன் போலும் அழகிய மேனி.

சொற்பொருள்:  நெருப்பு அவிர் கனலி உருப்பு சினம் தணியக் கருங்கால் யாத்து வரி நிழல் இரீஇச் சிறு வரை இறப்பின் காண்குவை – நெருப்பு ஒளிரும் கதிரவனின் கொடிய வெப்பம் தணியும் அளவும் கரிய அடியையுடைய யா மரத்தின் கோடு கோடாக அமைந்த செறிவில்லாத நிழலில் தங்கி இருந்து அதன்பின் சிறிய மலைகளைக் கடந்து சென்றால் காண்பாய் (யா மரம் – Hardwickia binata), செறி தொடிப் பொன் ஏர் மேனி மடந்தையொடு வென் வேல் விடலை முன்னிய சுரனே – இறுக்கமான வளையல்களை அணிந்த பொன் போன்ற மேனியையுடைய நின் மகளோடு வெற்றி வேல் ஏந்திய இளைஞன் சென்ற பாலை நிலத்தின் வழியை

ஐங்குறுநூறு 389, ஓதலாந்தையார், பாலைத் திணை செவிலித்தாய் கண்டோரிடம் சொன்னது
செய்வினை பொலிந்த செறி கழல் நோன்தாள்
மை அணல் காளையொடு பைய இயலிப்,
பாவை அன்ன என் ஆய் தொடி மடந்தை
சென்றனள் என்றிர் ஐய,
ஒன்றினவோ, அவள் அம் சிலம்பு அடியே.

பாடல் பின்னணி:  பின் சென்ற செவிலித்தாயால் வினவப்பட்டோர் ‘கண்டோம்’ என்று சொன்னபோது அவள் சொன்னது.

பொருளுரைஐயன்மீர்!  தொழிலால் சிறப்பாகச் செய்யப்பட்ட விளங்கும் செறிந்த கழல்களையும், வலிய கால்களையும், கருமை நிறத் தாடியையுமுடைய இளைஞனுடன், மெல்ல நடந்துப் பாவை போன்ற அழகிய வளையல்களை அணிந்த என் மகள் சென்றாள் எனக் கூறினீர்கள்.  அவளுடைய அழகிய சிலம்புகள் அணிந்த கால்கள், நிலத்தில் பொருந்தினவோ?

குறிப்பு:  செவிலித்தாய் மட்டுமே உடன்போக்கில் சென்ற மகளைத் தேடிச் சுரம் செல்வாள்.  நற்றாய் செல்ல மாட்டாள்.  ஆய் பெருஞ் சிறப்பின் அரு மறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34).  இலக்கணக் குறிப்பு – செறி கழல் – வினைத்தொகை, காளையொடு – ஒடு உடனிகழ்ச்சி (ஒருங்கு நிகழ்தல்), காளை – உவமை ஆகுபெயர், அன்ன – உவம உருபு, என்றி – முன்னிலை வினைமுற்று, ஒன்றினவோ – ஓகாரம் எதிர்மறை, அடியே – ஏகாரம் அசைநிலை.  செய்வினைப் பொலிந்த (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – செய்வினைப் பொலிந்த என்றது கம்மத்தொழிலின் நுண்மையும் எழிலும் பெற்றுத் திகழும் சிறப்புடைமையை.  பாவை அன்ன (3) – ஒளவை துரைசாமி உரை – என் கண்ணிற் பாவை போலும், பொ. வே. சோமசுந்தரனார் உரை– கொல்லிப்பாவை போன்ற, தி. சதாசிவ ஐயர் உரை – கொல்லிப்பாவைப் போலும், அ. தட்சிணாமூர்த்தி உரை – பாவையைப் போன்றவளும், கண்ணின் பாவை அன்ன என்றாளுமாம், ச.வே. சுப்பிரமணியன் உரை – என் கண்மணி பாவை போன்றவள்.  ஒளவை துரைசாமி உரை – பரல் நிறைந்த நெறியில் நடந்து சேறல் தலைமகட்கு இயலாதென நினைந்து வருந்துகின்றாளாகலின் பைய இயலி என்றும், தன் ஆராக்காதல் புலப்படக் கண்ணின் பாவையன்ன என் ஆய்தொடி மடந்தை என்றும் கூறினாள்.  உண்கண் மணி வாழ் பாவை நடை கற்றன்ன என் அணி இயற் குறுமகள் (நற்றிணை 184) எனச் செவிலி கூறுதல் காண்க.

சொற்பொருள்:  செய்வினை பொலிந்த செறி கழல் நோன்தாள் மை அணல் காளையொடு – தொழிலால் சிறப்பாகச் செய்யப்பட்ட விளங்கும் செறிந்த கழல்களையும் வலிய கால்களையும் கருமை நிறத் தாடியையுமுடைய இளைஞனுடன், பைய இயலிப் பாவை அன்ன என் ஆய் தொடி மடந்தை சென்றனள் என்றிர் – மெல்ல நடந்துப் பாவை போன்ற (கொல்லிப்பாவையைப் போன்ற, பொம்மையைப் போன்ற) அழகிய (ஆராய்ந்து இடப்பட்ட) வளையல்களை அணிந்த என் மகள் சென்றாள் எனக் கூறினீர்கள், ஐய – ஐயன்மீர், ஒன்றினவோ அவள் அம் சிலம்பு அடியே – நிலத்தில் பொருந்தினவோ அவளுடைய அழகிய சிலம்புகள் அணிந்த கால்கள்

ஐங்குறுநூறு 390, ஓதலாந்தையார், பாலைத் திணைகண்டார் செவிலித்தாயிடம் சொன்னது
நல்லோர் ஆங்கண் பரந்து கைதொழுது,
பல் ஊழ் மறுகி வினவுவோயே,
திண் தோள் வல் வில் காளையொடு
கண்டனெம் மன்ற, சுரத்து இடை யாமே.

பாடல் பின்னணி:  பின்சென்ற செவிலித்தாய் பலரையும் வினாவக் கண்டவர்கள் தாம் கண்டவாறு அவளிடம் கூறியது.

பொருளுரைநல்லவர்களை நாடிச் சென்று, அவர்களைக் கைகுவித்து வணங்கி, பல முறை மனம் கலங்கி ‘என் மகளைக் கண்டீரா’ என வினவுபவளே! வலிமையான தோள்களையுடைய இளைஞனுடன் சுரத்தில் அவளைக் கண்டோம் யாம், தேற்றமாக.

குறிப்பு:  செவிலித்தாய் மட்டுமே உடன்போக்கில் சென்ற மகளைத் தேடிச் சுரம் செல்வாள்.  நற்றாய் செல்ல மாட்டாள்.  ஆய் பெருஞ் சிறப்பின் அரு மறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34).  அ. தட்சிணாமூர்த்தி உரை – நினைத்து நினைத்து மறுகியது தோன்றப் ‘பல்லூழ் மறுகி’ என்றனர்.  மகளை இழந்த மயக்கத்தினால், அவட்கு இந்நிலையெய்திற்றாம்.  திண்ணிய தோள், வலிய வில், காளை என்னும் குறிப்புக்களால், தலைவி தகுதியுடையான் ஒருவனையே தேர்ந்தாள் என்பது பெறப்பட்டது.  இதனால் அவளை அவனிடமிருந்து பிரிக்க வேண்டா என அறிவுறுத்தினார் ஆயிற்று.  இலக்கணக் குறிப்பு – வினவுவோயே – ஓகாரம் அசைநிலை, காளையொடு – காளை உவமை ஆகுபெயர், ஒடு உடனிகழ்ச்சி (ஒருங்கு நிகழ்தல்), கண்டனெம் – தன்மைப் பன்மை வினைமுற்று, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், யாமே – ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்:  நல்லோர் ஆங்கண் பரந்து கைதொழுது பல் ஊழ் மறுகி வினவுவோயே – நல்லவர்களை நாடிச் சென்று அவர்களைக் கைகுவித்து வணங்கி பல முறை மனம் கலங்கி ‘என் மகளைக் கண்டீரா’ என வினவுபவளே, திண் தோள் வல் வில் காளையொடு கண்டனெம் மன்ற – வலிமையான தோள்களையுடைய இளைஞனுடன் அவளைக் கண்டோம் தேற்றமாக, சுரத்து இடை – சுரத்தில், யாமே – யாம்

மறுதரவுப் பத்து

பாடல்கள் 391 – 400 – உடன்போக்கில் சென்ற தலைமக்கள் இருவரும் மீண்டு வருதல் பொருளாகக் கொண்டவை.

ஐங்குறுநூறு 391, ஓதலாந்தையார், பாலைத் திணைதலைவியின் தாய் சொன்னது
மறு இல் தூவிச் சிறு கருங்காக்கை!
அன்புடை மரபின், நின் கிளையோடு ஆரப்,
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ,
வெஞ்சின விறல் வேல் காளையொடு,
அம் சில் ஓதியை வரக் கரைந்தீமே.

பாடல் பின்னணி:  உடன்போகிய தலைவி மீண்டு வரும்பொருட்டுத் தலைவியின் தாய் நல்ல நிமித்தமாகக் கரையுமாறு காக்கையை வேண்டினாள்.

பொருளுரை:  குற்றமற்ற சிறகுகள் உடைய சிறிய கருங்காக்கையே!  சினத்தையும் வெற்றியையும் உடைய வேலை உடைய அவள் தலைவனுடன் சென்ற அழகிய மென்மையான கூந்தலையுடைய என் மகள் வருமாறு கரைவாயாக.  கரைந்தால், பகிர்ந்து உண்ணும் அன்புடைய நின் முறைமைக்கு ஏற்ப, நின் சுற்றத்துடன் நீ உண்ணும்படி, பசிய ஊனைப் பெய்த பசிய நிணத்தால் சமைத்த உணவை பொன்னால் செய்த கலத்தில் நான் தருவேன்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – கிளையோடு உண்டல் காக்கைக்கு மரபு.  இனத்தின்பால் உள்ள அன்பால் உளதாய மரபாதலின், அன்புடை மரபு என்றார். காக்கை கரவா கரைந்துண்ணும் (திருக்குறள் 257) என்பது காண்க.  ஒப்புமை – குறுந்தொகை 210 – திண் தேர் கானத்து அண்டர் பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு ஏழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.  இலக்கணக் குறிப்பு –   மாதோ – மாது, ஓ அசைநிலைகள், காளையொடு – காளை உவமை ஆகுபெயர், ஒடு உடனிகழ்ச்சி (ஒருங்கு நிகழ்தல்), அம் சில் ஓதி – அன்மொழித்தொகை, கரைந்தீமே – முன்னிலை முற்றுவினைத் திரிசொல், ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்மறு இல் தூவிச் சிறு கருங்காக்கை – குற்றமற்ற சிறகுகள் உடைய சிறிய கருங்காக்கையே! அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ – பகிர்ந்து உண்ணும் அன்புடைய நின் முறைமைக்கு ஏற்ப நின் சுற்றத்துடன் உண்ணும்படி பசிய ஊனைப் பெய்த பசிய நிணத்தால் (கொழுப்பால்) சமைத்த உணவை பொன்னால் செய்த கலத்தில் தருவேன், வெஞ்சின விறல் வேல் காளையொடு அம் சில் ஓதியை வரக் கரைந்தீமே – சினத்தையும் வெற்றியையும் உடைய வேலை உடைய அவள் தலைவனுடன் சென்ற அழகிய மென்மையான கூந்தலையுடைய என் மகள் வருமாறு கரைவாயாக

ஐங்குறுநூறு 392, ஓதலாந்தையார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
வேய் வனப்பு இழந்த தோளும், வெயில் தெற
ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கிப்
பரியல், வாழி தோழி, பரியின்
எல்லை இல் இடும்பை தரூஉம்
நல் வரை நாடனொடு வந்தமாறே.

பாடல் பின்னணி:  உடன்போக்கிலிருந்து தலைவி தன் ஊர்க்குத் திரும்பியபோது, அவள் உடல் வாட்டம் கண்ட தோழி வருந்தினாள். அவளுக்கு ஆறுதலாகத் தலைவி சொன்னது.

பொருளுரைதோழி!  நீடு வாழ்வாயாக!  நல்ல மலைகள் பொருந்திய நாடனொடு உடன்போய் மீண்டு வந்தமையால், மூங்கில் போன்றுள்ள அழகு இழந்த என் தோள்களையும் வெயில் தாக்கியதால் ஆராய்ந்து பாராட்டப்பட்ட அழகு தொலைந்த என் நெற்றியையும் நோக்கி நீ வருந்தாதே.  நீ வருந்துவாய் ஆயின், அது எல்லை இல்லாத துன்பத்தைத் தரும்.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – இல்லத்தையும் அதன் அண்மைப் பகுதியையும் அன்றி வேறிடம் சென்றறியாத மென்மையுடைய தலைவி, பல காவதம் பாழ்நிலத்தில் கோடை வெப்பம் தாங்கி இருமுறை நடந்தாளாகலின், தோள் கவினும் நுதல் அழகும் இழந்தாளாம்.  பரியின் அப்பரிவு இல்லத்தார் யாவர்க்கும் துன்பம் விளைக்கும் என்று கருதியும், தலைவியின் துன்பத்திற்குத் தான் காரணமாதலை எண்ணித் தலைவன் வருந்தக் கூடுமென்று கருதியும், ‘எல்லையில் இடும்பை தரூஉம்’ என்றாளாம்.  தன் காதலனை ‘நல்வரை நாடன்’ என்றாள் தனக்கு அவன்பால் உள்ள பேரன்பு தோன்ற.  இலக்கணக் குறிப்பு – பரியல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று, தரூஉம் – செய்யுளிசை அளபெடை, நாடனொடு – ஒடு உடனிகழ்ச்சி (ஒருங்கு நிகழ்தல்), வந்தமாறே – ஏகாரம் அசைநிலை, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்.  ஆய் கவின் (2) – ஒளவை துரைசாமி உரை – நுண்ணிய மென்மை அமைந்த அழகு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பலரும் ஆராய்ந்து பாராட்டற்குக் காரணமான அழகு, உ. வே. சாமிநாதையர் உரை – ஆய்ந்த பேரழகு, அ. தட்சிணாமூர்த்தி உரை – பலரும் ஆய்ந்த அழகு.

சொற்பொருள்:  வேய் வனப்பு இழந்த தோளும் வெயில் தெற ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கிப் பரியல் – மூங்கில் போன்றுள்ள அழகு இழந்த தோள்களையும் வெயில் தாக்கியதால் ஆராய்ந்து பாராட்டப்பட்ட அழகு தொலைந்த நெற்றியையும் நோக்கி வருந்தாதே, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, பரியின் – நீ வருந்துவாய் ஆயின், எல்லை இல் இடும்பை தரூஉம் – எல்லை இல்லாத துன்பத்தைத் தரும், நல் வரை நாடனொடு வந்தமாறே – நல்ல மலைகள் பொருந்திய நாடனொடு வந்தமையால்

ஐங்குறுநூறு 393, ஓதலாந்தையார், பாலைத் திணைஅயலோர் தலைவியின் தாயிடம் சொன்னது
துறந்ததன் கொண்டு துயர் அடச் சாஅய்
அறம் புலந்து பழிக்கும் அண்கணாட்டி,
எவ்வ நெஞ்சிற்கு ஏமமாக
வந்தனளோ நின் மகளே,
வெந்திறல் வெள்வேல் விடலை முந்துறவே.

பாடல் பின்னணி:  தலைவனுடன் உடன்போக்கில் சென்ற தலைவி மீண்டு வந்தாள். அதைக் கண்ட அயல் இல் பெண்டிர் அவள் தாயிடம் சொன்னது.

பொருளுரைநின்னைப் பிரிந்துத் தன் காதலுடன் சென்ற நாள் முதல் துன்பம் நின்னை வருத்த உடல் மெலிந்து அறத்தை வெகுண்டு பழிக்கும் அயல் இல் பெண்ணே! கடும் திறமையையும் வெள்ளிய வேலையும் கொண்ட தன் காதலன் முன்வர அவனைத் தொடர்ந்து, நின் துன்புறும் நெஞ்சிற்குப் பாதுகாப்பாக வந்துவிட்டாள் நின் மகள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – மகள் வரவு கேட்டு மகிழ் சிறந்து துயர் நீங்குவளாகலின், எவ்வ நெஞ்சிற்கு ஏமமாக வந்தனள் என்றும், தலைமகன் மனைக்கண் வதுவை முடித்துக்கொண்டு வருகின்றாள் என்பார், விடலை முந்துற என்றும் கூறினார்.  ‘கொடுப்போர் இன்றியுங் கரணம் உண்டே, புணர்ந்துடன் போகிய காலையான்’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 143) என்பதனால், தலைமகன் தன் மனைக்கண்ணே கொடுப்போரின்றியே வதுவை அயர்தல் இலக்கணமாதல் அறிக.  அண்கணாட்டி (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அயலிடத்தே இருப்பவள்,  அயலில்லாட்டி.  இலக்கணக் குறிப்பு – சாஅய் – அளபெடை, வந்தனளோ – ஓகாரம் அசைநிலை, மகளே – ஏகாரம் அசைநிலை, முந்துறவே – ஏகாரம் அசைநிலை.  வெள்வேல் – ஒளவை துரைசாமி உரை – வெள்ளிதாய உள்ள வேல், (ஐங்குறுநூறு 379வது பாடலில் அவருடைய உரை) – விளக்கம் மிக்க வென்றி தரும் வேல்.  வடித்துக் கூரிதாக்கி நெய் தடவப் பெற்றமையின் வெள்வேல் எனப்பட்டது.  சாஅய் – ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (தொல்காப்பியம், உரியியல் 32).

சொற்பொருள்:  துறந்ததன் கொண்டு துயர் அடச் சாஅய் அறம் புலந்து பழிக்கும் அண்கணாட்டி – நின்னைப் பிரிந்துத் தன் காதலுடன் சென்ற நாள் முதல் துன்பம் நின்னை வருத்த உடல் மெலிந்து அறத்தை வெகுண்டு பழிக்கும் அயல் இல் பெண்ணே, எவ்வ நெஞ்சிற்கு ஏமமாக வந்தனளோ நின் மகளே – துன்புறும் நெஞ்சிற்குப் பாதுகாப்பாக வந்துவிட்டாள் நின் மகள், வெந்திறல் வெள்வேல் விடலை முந்துறவே – கடும் திறமையையும் வெள்ளிய வேலையும் கொண்ட தன் காதலன் முன்வர

ஐங்குறுநூறு 394, ஓதலாந்தையார், பாலைத் திணை  – தலைவியின் தாய் சுற்றத்தார்க்குச் சொன்னது
மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த
அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற,
வெஞ்சுரம் இறந்த அம் சில் ஓதிப்
பெரு மட மான் பிணை அலைத்த
சிறு நுதல் குறுமகள் காட்டிய வம்மே.

பாடல் பின்னணி:  உடன்போக்கிலிருந்து மகள் மீண்டு வந்தபோது தலைவியின் தாய் அயலாரிடம் சொன்னது.

பொருளுரை:  மாண்பு இல்லாத கொள்கையுடன் கலக்கத்தினையுடைய துயரைச் செய்த அன்பு இல்லாத அறம் இப்பொழுது அருளையுடையதாயிற்று.  வாருங்கள்! வெப்பமான பாலை நிலத்தைக் கடந்த, அழகான மென்மையான கூந்தலையுடைய, பெரிய மடமையுடைய பெண் மானின் நோக்கையும் வென்ற, சிறிய நெற்றியையுடைய, என்னுடைய மகளை உங்களுக்கு நான் காட்டுகின்றேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மகட் பிரித்த அன்பு இல் அறனும் மீண்டும் குறுமகட் காட்டிய அருளிற்று என இயைபு காண்க.  வம்மின் என்றமையால் நமரங்காள் வம்மின், வந்து அவளைக் காண்மின் என்பன குறிப்பால் வருவித்துக்கொள்க.  இனி, உடன்போக்குக் கற்புடை மகளிர்க்குத் தலை சிறந்த அறமாம் என்னும் சான்றோர் கொள்கையை ‘இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்!  சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்; அறம்தலை பிரியா ஆறும் மற்று அதுவே’ (கலித்தொகை, பாலைக்கலி 9), என வருவது காண்க.  இலக்கணக் குறிப்பு – அறனும் – உம்மை சிறப்பு, அறன் – அறம் என்பதன் போலி, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், அம் சில் ஓதி – அன்மொழித்தொகை, மான்பிணை – உவமை ஆகுபெயர், வம்மே – வம் முன்னிலைப் பன்மை வினைமுற்று, மே முன்னிலையசை,  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்:  மாண்பு இல் கொள்கையொடு – மாண்பு இல்லாத கொள்கையுடன், மயங்கு துயர் செய்த – கலக்கத்தினையுடைய துயரைச் செய்த, அன்பு இல் அறனும் – அன்பு இல்லாத அறம், அருளிற்று – அருளையுடையதாயிற்று, மன்ற – ஓர் அசைச் சொல், வெஞ்சுரம் இறந்த – வெப்பமான பாலை நிலத்தைக் கடந்த, அம் சில் ஓதி – அழகிய சிலவாகிய கூந்தல், பெரு மட மான் பிணை அலைத்த – பெரிய மடமையுடைய  பெண் மானின் பார்வையையும் வென்ற, சிறு நுதல் – சிறிய நெற்றி, குறுமகள் – இளையவள், காட்டிய – காட்டுகின்றேன், வம்மே – வாருங்கள்

ஐங்குறுநூறு 395, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
முளி வயிர்ப் பிறந்த வளி வளர் கூர் எரிச்
சுடர்விடு நெடுங்கொடி விடர் குகை முழங்கும்,
இன்னா அருஞ்சுரம் தீர்ந்தனம், மென்மெல
ஏகுமதி, வாழியோ குறுமகள், போது கலந்து
கறங்கு இசை அருவி வீழும்
பிறங்கு இருஞ் சோலை நம் மலை கெழு நாட்டே.

பாடல் பின்னணி:  உடன்போய் மீளும் தலைவன் தலைவியிடம் சொன்னது.

பொருளுரைஇளையவளே!  உலர்ந்த மூங்கிலில் பிறந்த காற்றால் வளர்ந்த மிக்க காட்டுத் தீயானது சுடர் விட்டு எரியும் நெடிய கொடிகள் மலைப் பிளவுகளிலும் மலை முழைஞ்சுகளிலும் படர்ந்து முழங்கும் கடத்தற்கரிய சுரத்தின் வழியை நாம் கடந்துவிட்டோம்.  மலர்களைச் சுமந்து கொண்டு ஆரவாரித்து ஒலிக்கும் அருவிகள் விழும் உயர்ந்த சோலைகள் சூழ்ந்த நம் மலைகள் பொருந்திய நாட்டின்கண், மெல்ல மெல்ல நீ நடந்து செல்வாயாக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தீக்கொழுந்து விடரினும் முகையினும் உலர்ந்த செடி கொடிகளில் பற்றி உட்புகுந்து முழங்கும் முழக்கம் கேட்போர்க்கு அச்சந்தருதலின், ‘நெடுங்கொடி விடர்முகை முழங்கும் இன்னா அருஞ்சுரம்’ என்றான்.  அது கடத்தற்கு அரிதாயிருந்தும் எப்படியோ ஒருவாறு கடந்து தொலைத்தனம் என்று அயாவுயிர்ப்பிப்பான் ‘இன்னா அருஞ்சுரம் தீர்ந்தனம்’ என்றான்.  வெப்பமிக்க நிலத்திலே செல்வார் விரைந்து அடி பெயெர்த்தே செல்லுதல் வேண்டுமாதலின் இதுகாறும் வலிந்தேனும் விரைந்து நடந்தமை தோன்ற, இனி மெல்ல நட, இனி வரும் வழி செல்லுதற்குப் பெரிதும் இனிது காண் என்று ஆற்றுவித்தான் என்க.  ஒப்புமை – அகநானூறு 143 – கூர் எரிச் சுடர் நிமிர் நெடுங்கொடி விடர் முகை முழங்கும்.  இலக்கணக் குறிப்பு – ஏகுமதி – மதி முன்னிலை அசை, வாழியோ – வாழி முன்னிலை அசை, ஓகாரம் அசைநிலை, நாட்டே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  கூர் – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

சொற்பொருள்:  முளி வயிர்ப் பிறந்த வளி வளர் கூர் எரிச் சுடர்விடு நெடுங்கொடி விடர் குகை முழங்கும் இன்னா அருஞ்சுரம் தீர்ந்தனம் – உலர்ந்த மூங்கிலில் பிறந்த காற்றால் வளர்ந்த மிக்க காட்டுத் தீயானது சுடர் விட்டு எரியும் நெடிய கொடிகள் மலைப் பிளவுகளிலும் மலை முழைஞ்சுகளிலும் (குகைகளிலும்) படர்ந்து முழங்கும் கடத்தற்கரிய சுரத்தின் வழியை நாம் கடந்துவிட்டோம் (வயிர் – மூங்கில்), மென்மெல ஏகுமதி – மெல்ல மெல்ல நீ செல்வாயாக, வாழியோ– நீடு வாழ்வாயாக, அசைநிலை, குறுமகள் – இளையவளே, போது கலந்து கறங்கு இசை அருவி வீழும் பிறங்கு இருஞ் சோலை நம் மலை கெழு நாட்டே – மலர்களைச் சுமந்து கொண்டு ஆரவாரித்து ஒலிக்கும் அருவிகள் விழும் உயர்ந்த சோலைகள் சூழ்ந்த நம் மலைகள் பொருந்திய நாட்டின்கண்

ஐங்குறுநூறு 396, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
புலிப் பொறி வேங்கைப் பொன் இணர் கொய்து, நின்
கதுப்பயல் அணியும் அளவை பைபயச்
சுரத்திடை அயர்ச்சியை ஆறுக மடந்தை!
கல் கெழு சிறப்பின் நம்மூர்,
எல் விருந்தாகிப் புகுகம் நாமே.

பாடல் பின்னணி:  உடன்போய் மீளும் தலைவன் தலைவியிடம் சொன்னது.

பொருளுரைமடந்தையே!  புலியின் பொறிபோலும் (புள்ளிகள் போலும்) வேங்கை மரத்தின் பொன்னிற மலர்க் கொத்துக்களைப் பறித்து நின் கூந்தலில் அணியும் அளவும் மெல்ல மெல்ல பாலை நிலத்தில் நடந்ததால் ஆகிய அயர்ச்சியை நீக்குவாயாக.  மலைகள் பொருந்திய சிறப்பினை உடைய நம் ஊர்க்கு நாம் பகலில் விருந்தாகிச் செல்வோம்.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – ‘நம் பெருமலை நாடு’ என்றான், தலைவிக்கு உரிமை கொடுத்தமை தோன்ற.  தலைவி தன்னூருக்குள் நுழைகையில் களைப்புத் தீர்ந்து, மகிழ்வோடு செல்லலை விரும்பினான் தலைவன்.  ஆதலின் ‘அயற்சி ஆறுக மடந்தை’ என்றான்.  புதுவோரை வரவேற்று உணவு அளித்து மகிழ்வித்தல் மரபாகலானும், தாம் பகலில் செல்லுதலானும் ‘எல் விருந்தாகிப் புகுகம்’ என்றான்.  தன் தாய் தன் வீட்டுக்கு வரும் மருமகளை ஏற்பாள் என்றான் என்க.  வேங்கை மலரும் புலியும் –அகநானூறு 12 – வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் புலி செத்து வெரீஇய புகர் முக வேழம், அகநானூறு 141 – புலிக்கேழ் உற்ற பூ இடைப் பெருஞ்சினை நரந்த நறும்பூ நாள் மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை, அகநானூறு 227 – புலிக் கேழ் வேங்கை, அகநானூறு 228 – வேங்கை ஒள் வீப் புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், நற்றிணை 389 – வேங்கையும் புலி ஈன்றன, குறுந்தொகை 47 – வேங்கை வீ உகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றும், ஐங்குறுநூறு 396 – புலிப் பொறி வேங்கைப் பொன் இணர்.  இலக்கணக் குறிப்பு – பொன் இணர் – உவமைத்தொகை, புகுகம் – தன்மைப் பன்மை வினைமுற்று, நாமே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  புலிப் பொறி வேங்கைப் பொன் இணர் கொய்து நின் கதுப்பு அயல் அணியும் அளவை பைபயச் சுரத்திடை அயர்ச்சியை ஆறுக – புலியின் பொறிபோலும் (புள்ளிகள் போலும்) வேங்கை மரத்தின் பொன்னிற மலர்க் கொத்துக்களைப் பறித்து நின் கூந்தலில் அணியும் அளவும் மெல்ல மெல்ல பாலை நிலத்தில் நடந்ததால் ஆகிய அயர்ச்சியை நீக்குவாயாக (வேங்கை மரம்  – Kino Tree, Pterocarpus marsupium), மடந்தை – மடந்தையே (விளி), கல் கெழு சிறப்பின் நம்மூர் எல் விருந்தாகிப் புகுகம் நாமே – மலைகள் பொருந்திய சிறப்பினை உடைய நம் ஊர்க்கு நாம் பகலில் விருந்தாகிச் செல்வோம் (விருந்தாகி – புதியவர்களாக)

ஐங்குறுநூறு 397, ஓதலாந்தையார், பாலைத் திணை தன் ஊர் நோக்கி செல்பவர்களிடம் தலைவி சொன்னது
கவிழ்மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை
குருளைப் பன்றி கொள்ளாது கழியும்
சுரன் அணி வாரா நின்றனள் என்பது,
முன்னுற விரைந்த நீர் உரைமின்,
இன்னகை முறுவல் என் ஆயத்தோர்க்கே.

பாடல் பின்னணி:  உடன்போக்கில் தலைவனுடன் சென்ற தலைவி, மீண்டு தன் ஊர்க்கு வரும் வழியில், தன் ஊர்க்குச் செல்லும் சிலரைக் கண்டாள்.  அவர்களிடம் தான் வருவதைத் தன் தோழியரிடம் கூறுமாறு வேண்டினாள்.

பொருளுரைகீழ்நோக்கிக் கவிழ்ந்துள்ள மயிர் பொருந்திய கழுத்தையுடைய செந்நாயின் ஆண், குட்டியுடைய பன்றியைப் பற்றிக் கொள்ளாது நீங்கும் சுரத்தினைக் கடந்து அருகில் நும் தோழி வருகின்றாள் என, இனிய புன்னகையையுடைய என் தோழியரிடம், முன்னாக விரைந்து செல்லும் நீவிர் கூறுவீர்களாக.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – செந்நாய் ஏற்றை குருளைப் பன்றி கொள்ளாது கழியும் சுரம் என்றது, ஏற்றை தனக்கு எளிதாகவும் குட்டிகளையுடைய தாய்ப் பன்றி ஆதல் பற்றி இரக்கத்தால் அதனை வேட்டமாடிக் கொல்லாமல் வாளா போயினாற் போன்று எம்பெருமானும் உடன்போக்கின்கண் எம்மைப் பின் தொடர்ந்து வந்த எம் சுற்றத்தார்பால் இரக்கமே கொண்டு அவர்க்கு அஞ்சுவார் போன்று மலையிடை மறைந்திருந்து அவரைக் கொல்லாது விடுத்துப் போயினர் என்பது.  இலக்கணக் குறிப்பு – கவிழ்மயிர் – வினைத்தொகை, சுரன் – சுரம் என்றதன் போலி, வாராநின்ற – ஆநின்ற நிகழ்கால இடைநிலை, உரைமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, ஆயத்தோர்க்கே – ஏகாரம் அசைநிலை.  ஒப்புமை – ஐங்குறுநூறு 354 – செந்நாய் ஏற்றை மறியுடை மான் பிணை கொள்ளாது கழியும்.  குருளை – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

சொற்பொருள்:  கவிழ்மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை குருளைப் பன்றி கொள்ளாது கழியும் சுரன் அணி வாரா நின்றனள் என்பது – கீழ்நோக்கிக் கவிழ்ந்துள்ள மயிர் பொருந்திய கழுத்தையுடைய செந்நாயின் ஆண் குட்டியுடைய பன்றியைக் கொள்ளாது நீங்கும் சுரத்தினைக் கடந்து அருகில் வருகின்றாள் (செந்நாய் – Cuon alpinus dukhunensis), முன்னுற விரைந்த நீர் உரைமின் – முன்னாக விரைந்து செல்லும் நீவிர் கூறுவீர்களாக, இன்னகை முறுவல் என் ஆயத்தோர்க்கே – இனிய புன்னகையையுடைய என் தோழியரிடம்

ஐங்குறுநூறு 398, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
புள்ளும் அறியாப் பல் பழம் பழுனி,
மடமான் அறியாத் தட நீர் நிலைஇச்
சுர நனி இனிய ஆகுக என்று,
நினைத்தொறும் கலிழும் என்னினும்,
மிகப் பெரிது புலம்பின்று தோழி, நம் ஊரே.

பாடல் பின்னணி:  உடன்போக்கிலிருந்து தலைவி மீண்டு வந்தபோது அவளிடம் தோழி சொன்னது.

பொருளுரைதோழி!  பறவை இனமும் அறியாத பல வகையான பழங்கள் நிறைந்து மடப்பம் பொருந்திய மான்களும் கண்டறியாத பெரிய நீர்நிலைகள் நிலைபெற்றுப் பாலை நிலம் மிகவும் இனிதாக ஆகுக என்று, உன்னை நினைக்கும் பொழுதெல்லாம் கண் கலங்கும் என்னைவிடவும் மிகவும் பெரிதாக வருந்தியது நம் ஊர்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – தலைமைகளின் நினைவு எழுதற்குரிய செயலும் பொருளும் தோன்றியவிடத்து நினைத்துக் கண் கலுழும் தோழியினும் ஊரவர், அவளுடைய தாயாரையும் ஆயத்தாரையும் காண்டொறும் இரங்கிக் கலுழ்ந்தனராகலின் என்னினும் மிகப்பெரிது புலம்பின்று நம்மூர் என்றாள்.  இலக்கணக் குறிப்பு – புள்ளும் – உம்மை உயர்வு சிறப்பு , ஆகுக – வியங்கோள் வினைமுற்று, நிலைஇ – அளபெடை, புலம்பின்று – அஃறிணை ஒருமை வினைமுற்று, ஊரே – ஏகாரம் அசைநிலை.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  புள்ளும் அறியாப் பல் பழம் பழுனி மடமான் அறியாத் தட நீர் நிலைஇச் சுர நனி இனிய ஆகுக என்று – பறவை இனமும் அறியாத பல வகையான பழங்கள் நிறைந்து மடப்பம் பொருந்திய மான்களும் கண்டறியாத பெரிய நீர்நிலைகள் நிலைபெற்றுப் பாலை நிலம் மிகவும் இனிதாக ஆகுக என்று, நினைத்தொறும் கலிழும் என்னினும் மிகப் பெரிது புலம்பின்று தோழி நம் ஊரே – நினைக்கும் பொழுதெல்லாம் கண் கலங்கும் என்னைவிடவும் மிகவும் பெரிதாக வருந்தியது தோழி நம் ஊர்

ஐங்குறுநூறு 399, ஓதலாந்தையார், பாலைத் திணை – மகட் போக்கிய நற்றாய் கூறியது 
நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
எம் மனை வதுவை நன்மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ, மற்றே வென்வேல்
மையற விளங்கிய கழலடிப்
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே?

பாடல் பின்னணி:  தலைவியை உடன் கொண்டுபோன தலைவன், மீண்டு தலைவியைத் தன் இல்லத்திற்குக் கொண்டு சென்றபொழுது, “அவன் தாய், மகளின் சிலம்பு கழிதல் நோன்பு செய்கின்றாள்’ எனக் கேட்ட நற்றாய் (தலைவியின் தாய்) சொன்னது.

பொருளுரை:   “உன்னுடைய வீட்டில் என் மகளுடைய சிலம்பு கழிக்கும் நோன்பை நடத்தினாய்.  என்னுடைய வீட்டில் அவளுடைய நல்ல திருமணத்தை நடத்தலாம்” என்று  வெற்றி வேலையும் குற்றமில்லாது விளங்கும் வீரக் கழல்களையும் காலில் அணிந்த, பொய்யில் வல்லவனான அந்த இளைஞனின் தாய்க்கு நீங்கள் சொன்னால் என்ன?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – சிலம்புகழி என்பது சிலம்பு கழீஇ என நீண்டது,  செவியறிவுறூஉ என்றாற்போல.  கழி, முதனிலைத் தொழிற்பெயர்.  இஃது ஆகுபெயராற் கழித்தலாகிய திருமணத்தின் மேல் நின்றது.  ‘சிலம்பு கழீஇய செல்வம்’ என்றார் பிறரும் (நற்றிணை 279).  மக்களிற்கு மணமாகாமுன் பெற்றோர் அணிந்த சிலம்பு கன்னிமைச் சிலம்பு என்றும், மணநிகழ்ச்சிக்கண் கொழுநன் அணியும் சிலம்பு கற்புச்சிலம்பென்றும் கணவன் தரும் சிலம்பு அணியும் திருமணம் சிலம்பு கழீஇய மணம் என்றும் அறிக.  இலக்கணக் குறிப்பு – கழீஇய – செய்யுளிசை அளபெடை, கழி – முதனிலைத் தொழிற்பெயர், மற்றே – மற்று, ஏ அசைநிலைகள், காளை – உவமை ஆகுபெயர், தாய்க்கே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும் – உன்னுடைய வீட்டில் சிலம்பு கழிக்கும் நோன்பைச் செய்தாலும், எம் மனை – என்னுடைய வீட்டில், வதுவை நன்மணம் கழிகென – என்னுடைய வீட்டில் நல்ல திருமணத்தை நடத்தலாம், சொல்லின் எவனோ – சொன்னால் என்ன ஆகும், மற்றே – மற்றது, வென்வேல்  – வெற்றி வேல், மையற விளங்கிய கழலடி – குற்றமில்லாது விளங்கும் கழல்களை அணிந்த கால்கள், பொய் வல் காளையை – பொய் சொல்லுவதில் வல்லவனான இளைஞனை, ஈன்ற தாய்க்கே – பெற்ற தாய்க்கு

ஐங்குறுநூறு 400, ஓதலாந்தையார், பாலைத் திணை – செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது 
மள்ளர் அன்ன மரவம் தழீஇ,
மகளிர் அன்ன ஆடு கொடி நுடக்கும்,
அரும் பதம் கொண்ட பெரும் பத வேனில்,
காதல் புணர்ந்தனள் ஆகி, ஆய் கழல்
வெஞ்சின விறல் வேல் காளையோடு
இன்று புகுதருமென, வந்தன்று தூதே.

பாடல் பின்னணி:  உடன்போய் வதுவை அயரப்பட்ட தலைவி, தலைவனோடு இன்று வருவாள் எனக் கேட்ட செவிலித்தாய் நற்றாயிடம் சொன்னது.

பொருளுரைமள்ளரை ஒத்த கடம்ப மரத்தைத் தழுவி, ஆடுகின்ற மகளிரை ஒத்த அசைகின்ற கொடிகள் அரிய செவ்வி உடைய வேனில் பருவத்தில், அன்பு கொண்டவளாகி, ஆராய்ந்து அணியப்பட்ட கழலையும் கடுஞ்சினமுடைய வெற்றிவேலையும் உடைய தன் தலைவனுடன் நம் மகள் இன்று வருவாள் என்று தூது வந்துள்ளது.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – மள்ளரைத் தழீஇய மகளிர்போலக் கொடி மறவன் தழீஇ நுடங்கும் என இயைக்க.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – செவிலி மள்ளர் அன்ன மரவம் தழீஇ மகளிர் அன்ன ஆடு கொடி நுடக்கும் என்றது, நம் மகள் ஒப்பற்ற ஒரு மறவனை ஊழ்வகையான் காதலனாகக் கைப்பற்றிக் கற்புக்கடம்பூண்டு சிறப்புற்று வருகின்றாள்.  ஆதலால் அச்செயற்கு யாம் பெரிதும் மகிழ்ந்து அவளை அவள் காதலனோடு நன்கு வரவேற்று மகிழ்வோம்.  ஒப்புமை – பதிற்றுப்பத்து 52 – சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து முழா இமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை ஆகச் சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை தந்து நீ நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி.  இலக்கணக் குறிப்பு – தழீஇ – செய்யுளிசை அளபெடை, அன்ன – உவம உருபு, காளை – உவமை ஆகுபெயர், மரவம் – மரா என்பது அம் என்னும் சாரியை பெற்று மரவம் ஆனது, தூதே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  மள்ளர் அன்ன மரவம் தழீஇ மகளிர் அன்ன ஆடு கொடி நுடக்கும் அரும் பதம் கொண்ட பெரும் பத வேனில் காதல் புணர்ந்தனள் ஆகி – மள்ளரை ஒத்த கடம்ப மரத்தைத் தழுவி ஆடுகின்ற மகளிரை ஒத்த அசைகின்ற கொடிகள் அரிய செவ்வி உடைய வேனில் பருவத்தில் அன்பு கொண்டவளாகி (kadampam oak trees, (மள்ளர் – மறவர், கடம்ப மரம் – Neolamarckia or Anthocephalus cadamba, Kadampa oak), ஆய் கழல் வெஞ்சின விறல் வேல் காளையோடு இன்று புகுதருமென – ஆராய்ந்து அணியப்பட்ட கழலையும் கடுஞ்சினமுடைய வெற்றிவேலையும் உடைய தன் தலைவனுடன் இன்று வருவாள் என்று, வந்தன்று தூதே – தூது வந்துள்ளது

பேயனார், முல்லைத் திணைஇருத்தலும் இருத்தல் நிமித்தமும்

இங்கு நிகழ்பவை:  தலைவியும் தலைவனும் வாழும் இல்லத்திற்குச் சென்று மீண்ட செவிலித்தாய் நற்றாயிடம் தான் கண்டதைக் கூறுவது, வினைவயின் பிரியும் தலைவன் கார்ப்பருவம் தொடங்குவதற்கு முன்பே மீண்டு வருவேன் எனக் கூறிச் செல்கின்றான், வேந்தனின் போர்த்தொழில் பொருட்டு தலைவன் பிரிவான், கார்ப்பருவம் வரும்பொழுது தலைவனின் வரவிற்காக தலைவி காத்திருப்பாள், கார்ப்பருவம் தொடங்கியும் தலைவன் வரவில்லையானால் தலைவி வருந்துவாள், இது கார்ப்பருவம் அன்று எனக் கூறித் தலைவியைத் தோழி ஆற்றுவிப்பாள், பாசறையில் உள்ள தலைவன் மீண்டு வர ஆவலாக உள்ளான், தலைவன் வரும் வழியில் முல்லை நிலத்தில் காயா கொன்றை ஆகிய மலர்கள் மலர்ந்துள்ளன, தலைவன் தன் தேரோட்டியிடம் பேசுவான், மீண்டு வந்த தலைவன் தன் மகிழ்ச்சியைத் தலைவியிடம் வெளிப்படுத்துகிறான்.

செவிலி கூற்றுப் பத்து

பாடல்கள் 401–410 – இவை செவிலித்தாயின் கூற்றாக அமைந்தவை.

ஐங்குறுநூறு 401, பேயனார், முல்லைத் திணை செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது
மறி இடைப்படுத்த மான் பிணை போலப்,
புதல்வன் நடுவணனாக, நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை, முனிவு இன்றி,
நீல் நிற வியல் அகம் கவைஇய,
ஈனும் உம்பரும் பெறல் அருங்குரைத்தே.

பாடல் பின்னணி:  மணம் செய்த பின் மணமனை சென்று வந்த செவிலித்தாய், மகிழ்ந்த உள்ளத்தவளாய் நற்றாயிடம் சொன்னது.

பொருளுரைதம் குட்டி இடையில் கிடக்க, இருபுறமும் மானும் அதன் பிணையும் இருந்தாற் போல், தங்கள் புதல்வன் நடுவில் படுத்திருக்க நம் மகளும் அவள் கணவனும் இருபுறமும் படுத்திருந்த நிலை, வெறுப்பு இல்லாது, தேற்றமாக மிகவும் இனியது. இக்காட்சி, நீல நிறமுடைய அகன்ற வானால் சூழப்பட்ட இந்த உலகிலும் மேல் உலகிலும் பெறுவதற்கு அரியது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டுச் செவிலி தலைமகளின் வாழ்க்கை நலமே நற்றாய்க்கு உணர்த்துகின்றாளாகலின் அவன் அவள் என வேற்றுமை கருதாமல் வாழ்க்கை இருவருக்கும் பொதுவாகவே வைத்துக் கூறுவாள் அவர் கிடக்கை என்று பொதுமையிற் கூறுகின்றாள். இத்தகைய இன்பக்காட்சி நம்மனோர்க்கு யாண்டும் பெறவியலாது யான் கண்டு வந்தேன் என்பது கருத்து.  ஒளவை துரைசாமி உரை – ‘நல்லவை உரைத்தலும் அல்லவை கடித்தலும் செவிலிக்கு உரியவாகும் என்ப’ என்பதனுள் உவந்து கூறற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.  நீல் நிற வியல் அகம் கவைஇய (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீல நிறமுடைய அகன்ற வான வெளியாலே தழுவப்பட்டுள்ள உலகம், உ. வே. சாமிநாதையர் உரை – நீலக் கடல் சூழ்ந்த.  இலக்கணக் குறிப்பு – மான் பிணை – உம்மைத் தொகை, மானும் பிணையும் என விரியும், நன்றும் – மிகுதிப் பொருள் தந்த உரிச்சொல், மன்ற – தெளிவுப்பொருளில் வரும் இடைச்சொல், கிடக்கை – தொழிற்பெயர், நீல் – கடைக்குறை, கவைஇய – கவவு என்னும் சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சவினை, அருங்குரைத்தே – குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று, ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  குரை – ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப (தொல்காப்பியம், இடையியல் 24).

சொற்பொருள்:  மறி இடைப்படுத்த மான் பிணை போலப் புதல்வன் நடுவணனாக நன்றும் இனிது மன்ற அவர் கிடக்கை – தம் குட்டி இடையில் கிடக்க இருபுறமும் மானும் அதன் பிணையும் இருந்தாற் போலப் புதல்வன் நடுவில் படுத்திருக்க நம் மகளும் அவள் கணவனும் இருபுறமும் படுத்திருந்த நிலை தேற்றமாக மிகவும் இனியது, முனிவு இன்றி – வெறுப்பு இல்லாது, நீல் நிற வியல் அகம் கவைஇய ஈனும் உம்பரும் பெறல் அருங்குரைத்தே – நீல நிறமுடைய அகன்ற வானால் சூழப்பட்ட இந்த உலகிலும் மேல் உலகிலும் பெறுவதற்கு அரியது

ஐங்குறுநூறு 402, பேயனார், முல்லைத் திணை செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது
புதல்வன் கவைஇய தாய் புற முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை, பாணர்
நரம்புளர் முரற்கை போல,
இனிதால் அம்ம பண்புமார் உடைத்தே.

பாடல் பின்னணி:  மணம் செய்த பின் மணமனை சென்று வந்த செவிலித்தாய், மகிழ்ந்த உள்ளத்தவளாய் நற்றாயிடம் சொன்னது.

பொருளுரைதோழி! கேட்பாயாக!  புதல்வனைத் தழுவிக் கிடக்கும் நம் மகளின் புறத்தைத் தழுவி, விருப்பம் உடையவனாக அவள் கணவன் இருந்த படுக்கை நிலை, பாணர்களின் யாழ் நரம்பிடை எழும் இசை போல் இனியது. நல்ல பண்பும் உடையது.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – இசை தரும் இன்பம் உவமையில்லா இன்பமாதலின், சிறப்புடைய இசையின்பத்தினைக் காதலின்பக் காட்சிக்கு உவமை கூறினாள்.  இசை கேள்விக்கு இன்பமூட்டி நெஞ்சத்தில் மகிழ்ச்சியை நிறைத்தாற்போல, இக்காட்சியும் கண்ணின் வழிப் புகுந்து நெஞ்சிற்கு இனிமை நல்கிற்றாம்.  இலக்கணக் குறிப்பு – நசையினன் – முற்றெச்சம், முரற்கை – வினைத்தொகை, போல – உவம உருபு, இனிதால் – ஆல் அசைநிலை, அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், பண்புமார் – ஆர் அசைநிலை, உடைத்தே – ஏகாரம் அசைநிலை.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  புதல்வன் கவைஇய தாய் புற முயங்கி நசையினன் வதிந்த கிடக்கை – புதல்வனைத் தழுவிக் கிடக்கும் தாயின் புறத்தைத் தழுவி விருப்பம் உடையவனாக அவள் கணவன் இருந்த படுக்கை நிலை, பாணர் நரம்புளர் முரற்கை போல இனிதால் – பாணர்களின் யாழ் நரம்பிடை எழும் இசை போல் இனியது, அம்ம – கேட்பாயாக, பண்புமார் உடைத்தே – நல்ல பண்பும் உடையது

ஐங்குறுநூறு 403, பேயனார், முல்லைத் திணை செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது
புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிதாகின்றே,
அகன் பெருஞ்சிறப்பின் தந்தை பெயரன்
முறுவலின் இன்னகை பயிற்றிச்,
சிறு தேர் உருட்டும் தளர் நடை கண்டே.

பாடல் பின்னணி:  மணம் செய்த பின் மணமனை சென்று வந்த செவிலித்தாய், மகிழ்ந்த உள்ளத்தவளாய் நற்றாயிடம் சொன்னது.

பொருளுரைமிகப் பெரும் சிறப்பினையுடைய தன் தந்தையின் பெயரை உடைய, இனிய புன்முறுவலைத் தொடர்ந்து செய்து, சிறிய தேரை உருட்டும் தன் மகனின் தளர்ந்த நடையைக் கண்டு, புணர்ந்து மணந்த மனைவியின் மேல் உள்ள அன்பு போல், அவன்பால் பொருந்தியிருந்த நெஞ்சம் பெரிது மகிழ்ந்தது.

குறிப்பு:  . தட்சிணாமூர்த்தி உரை – முன்னர்க் காதலிமாட்டு மட்டுமே நிலைத்திருந்த தலைவனின் அன்பு, அதற்குச் சிறிதும் குறைவின்றி இப்பொழுது மகன் மீது பரவிற்று என்பாளாய், ‘புணர்ந்த காதலியின் அமர்ந்த உள்ளம் பெரிதாகின்று’ என்றாள்.  மகன்மேல் பாய்ந்த அவ்வன்பு, அவன் புன்முறுவலுடன் தளர்நடை பயிற்றுவதனைக் கண்ட அளவில் பன்மடங்கு வளர்ந்தது ஆதலின், ‘தளர்நடை கண்டு …………………………..அமர்ந்த உள்ளம் பெரிதாகின்று’ என்றாள்.  தன் மகன் மீது கொண்ட அன்பிற்கு இன்னொரு காரணமாவது அவன் தன் அகன்பெரும் சிறப்பின் தந்தையின் பெயரைக் கொண்டிருந்ததாம்.  முறுவல் இன் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பற்கள் தோன்றுதல் இல்லாத இனிய நகை.  ஒப்புமை – கலித்தொகை 75 – தன் முதல்வன் பெரும் பெயர் முறையூளிப் பெற்ற புதல்வன், கலித்தொகை 81– மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம், ஐங்குறுநூறு 403 – தந்தை பெயரன்.  காதலியின் (1) – உ. வே. சாமிநாதையர் உரை, தி. சதாசிவ ஐயர் உரை– ‘இன்’ உருபை உறழ்ச்சிப் பொருளாகக் கொண்டு, தலைவனுக்குக் காதலியிடத்துள்ள அன்பினும் மிகுதியான அன்பு மகன் மேல் ஏற்பட்டது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – காதலியின்பால், ஒளவை துரைசாமி உரை – மனைவிமாட்டு உளதாகிய அன்புபோல்.  இலக்கணக் குறிப்பு – காதலியின் – இன் உருபு ஒப்புப் பொருளது, உறழ்ச்சிப்பொருளுமாம் (திரிகை), கண்டே – ஏகாரம் அசைநிலை, தேற்றம்.

சொற்பொருள்புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும் அமர்ந்த உள்ளம் பெரிதாகின்றே – புணர்ந்து மணந்த மனைவியின் மேல் உள்ள அன்பு போல் புதல்வன்பால் பொருந்தியிருந்த நெஞ்சம் பெரிது மகிழ்ந்தது, அகன் பெருஞ்சிறப்பின் தந்தை பெயரன் – மிகப் பெரும் சிறப்பினையுடைய தன் தந்தையின் பெயரை உடையவன், முறுவலின் இன்னகை பயிற்றிச் சிறு தேர் உருட்டும் தளர் நடை கண்டே – இனிய புன்முறுவலைத் தொடர்ந்து செய்துச் சிறிய தேரை உருட்டும் தளர்ந்த நடையைக் கண்டு

ஐங்குறுநூறு 404, பேயனார், முல்லைத் திணை செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது
வாணுதல் அரிவை மகன் முலை ஊட்டத்,
தானவன் சிறுபுறம் கவையினன் நன்று,
நறும் பூம் தண் புறவு அணிந்த
குறும்பல் பொறைய நாடு கிழவோனே.

பாடல் பின்னணி:  மணம் செய்த பின் மணமனை சென்று வந்த செவிலித்தாய், மகிழ்ந்த உள்ளத்தவளாய் நற்றாயிடம் சொன்னது.

பொருளுரைஒளிபொருந்திய நெற்றியை உடைய நம் மகள் தன் மகனுக்கு முலைப்பால் ஊட்ட, அவளுடைய முதுகின் புறத்தை நன்கு தழுவினான், நறுமண மலர்களையுடைய குளிர்ந்த காடுகளால் அழகுபெற்ற சிறிய பல குன்றுகளையுடைய நாட்டின் தலைவனான அவள் கணவன்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – தலைமகள் தன் உள்ளத்தில் பெருகிய அன்பால் தான் பெற்ற மகனுக்குப் பாலூட்டுங்கால், மகனது முகப்பொலிவும் முறுவல் இன்னகையும் கண்டு கிளர்ச்சி மிக்கு விளங்குதலின் வாணுதல் அரிவை என்றும், தன் மனைக்கு விளக்காகியதே அன்றித் தன் மகற்குத் தாயாகி மாண்புறுவது கண்ட தலைமகன் பெருகிய காதலால், அவள் சிறுபுறம் தழுவி இன்பம் சிறக்குமாறு தோன்ற, தான் அவள் சிறுபுறம் கவையினன் நன்றும் என்றும் செவிலி கூறினாள்.  ‘மெல்ல என் மகன் வயின் பெயர்தந்தேனே, அதுகண்டு “யாமும் காதலம் அவற்கு” எனச் சாஅய் சிறுபுறம் கவையினனாக’ (அகநானூறு 26) எனத் தலைமகள் தலைமகன் தன் சிறுபுறம் தழுவியதைச் சிறப்பித்து உரைத்தல் காண்க.  இலக்கணக் குறிப்பு – முலை – ஆகுபெயர் முலைப் பாலுக்கு, கிழவோனே – ஏகாரம் அசைநிலை.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 71).

சொற்பொருள்:  வாள் நுதல் அரிவை மகன் முலை ஊட்டத் தான் அவன் சிறுபுறம் கவையினன் நன்று – ஒளிபொருந்திய நெற்றியை உடைய நம் மகள் தன் மகனுக்கு முலைப்பால் ஊட்ட அவளுடைய முதுகின் புறத்தை நன்கு தழுவினான், நறும் பூம் தண் புறவு அணிந்த குறும்பல் பொறைய நாடு கிழவோனே – நறுமண மலர்களையுடைய குளிர்ந்த காடுகளால் அழகுபெற்ற சிறிய பல குன்றுகளையுடைய நாட்டின் தலைவன்

ஐங்குறுநூறு 405, பேயனார், முல்லைத் திணை செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது
ஒண் சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல,
மனைக்கு விளக்காயினள் மன்ற, கனைப் பெயல்
பூப் பல அணிந்த வைப்பின்
புறவு அணி நாடன், புதல்வன் தாயே.

பாடல் பின்னணி:  மணம் செய்த பின் மணமனை சென்று வந்த செவிலித்தாய், மகிழ்ந்த உள்ளத்தவளாய் நற்றாயிடம் சொன்னது.

பொருளுரைஒளிவிட்டு மின்னும் பாண்டில் விளக்கின் செந்நிறம் உடைய சுடர் போல் தன் மனைக்கு விளக்காக விளங்குகின்றாள் தேற்றமாக, ஆரவாரத்துடன் பெருமழை பெய்ததால் பூக்கள் பலவும் மலர்ந்து அழகுற்ற ஊர்களைக் கொண்ட முல்லை நிலத் தலைவனின் புதல்வனுக்குத் தாயாகிய நம் மகள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – இல்லின்கண்படும் இருளை அகற்றும் பாண்டில் போல, மனைக்கண்படும் பழி முதலிய மாசு போக்குதலின் மனைக்கு விளக்காயினள் என்றாள்.  ‘மனைக்கு விளக்காகிய வாணுதல் கணவன்’ (புறநானூறு 314) என்றும் சான்றோர் கூறுதல் காண்க.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டுப் பாண்டில் தலைவன் மனைக்கும் அதன்கண் நின்றெரியும் செஞ்சுடர் தலைவிக்கும் உவமையாதல் நுண்ணுணர்வாற் கண்டு கொள்க. தலைவன் மனை வழிவழிப் புகழாற் சிறந்த மனை என்பாள் உவமையை ஒண்சுடர்ப் பாண்டில் என்று விதந்தாள். செஞ்சுடர் என்றது செவ்விதாய் வலஞ்சுழன்று நின்றெரியும் ஒளிப் பிழம்பினை.  இலக்கணக் குறிப்பு – மன்ற – தெளிவுப்பொருளில் வரும் இடைச்சொல், கனைப் பெயல் – எதுகை நோக்கிய திரிபு, தாயே – ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்:  ஒண் சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல மனைக்கு விளக்காயினள் மன்ற – ஒளிவிட்டு மின்னும் பாண்டில் விளக்கின் செந்நிறம் உடைய சுடர் போல் தன் மனைக்கு விளக்காக விளங்குகின்றாள் தேற்றமாக, கனைப் பெயல் பூப் பல அணிந்த வைப்பின் புறவு அணி நாடன் புதல்வன் தாயே – ஆரவாரத்துடன் பெருமழை பெய்ததால் பூக்கள் பலவும் மலர்ந்து அழகுற்ற ஊர்களைக் கொண்ட முல்லை நிலத் தலைவனின் புதல்வனின் தாய்

ஐங்குறுநூறு 406, பேயனார், முல்லைத் திணை செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது
மாதர் உண்கண் மகன் விளையாடக்,
காதலித் தழீஇ இனிது இருந்தனனே,
தாது ஆர் பிரசம் ஊதும்
போது ஆர் புறவின் நாடு கிழவோனே.

பாடல் பின்னணி:  மணம் செய்த பின் மணமனை சென்று வந்த செவிலித்தாய், மகிழ்ந்த உள்ளத்தவளாய் நற்றாயிடம் சொன்னது.

பொருளுரைஅழகிய மையுண்ட கண்களையுடைய மகன் விளையாட, நம் மகளாகிய தன் காதலியைத் தழுவி இனிமையோடு இருந்தான், தேன் உண்ணும் வண்டினம் ஒலிக்கும் மலர்கள் நிறைந்த முல்லை நிலத்தின் தலைவன்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – வண்டினம் தமக்குரிய தேன் பெற்றுக் களி சிறந்து இசைக்கும் நாடு கிழவோன் என்றது, அவன் எல்லாச் செல்வமும் பெற்று இசைபட வாழ்தல் கூறியவாறு.  இது வாழ்க்கை நலம் கூறியது.  மாதர் (1) – ஒளவை துரைசாமி உரை – காதல், உ. வே. சாமிநாதையர் உரை – காதல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய.  இலக்கணக் குறிப்பு – தழீஇ – செய்யுளிசை அளபெடை, இருந்தனனே – ஏகாரம் அசைநிலை, கிழவோனே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  மாதர் உண்கண் மகன் விளையாடக் காதலித் தழீஇ இனிது இருந்தனனே – அழகிய மையுண்ட கண்களையுடைய மகன் விளையாட அவன் நம் மகளாகிய தன் காதலியைத் தழுவி இனிமையோடு இருந்தான், தாது ஆர் பிரசம் ஊதும் போது ஆர் புறவின் நாடு கிழவோனே – தேன் உண்ணும் வண்டினம் ஒலிக்கும் மலர்கள் நிறைந்த முல்லை நிலத்தின் தலைவன்

ஐங்குறுநூறு 407, முல்லைத் திணை, பேயனார், செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது
நயந்த காதலித் தழீஇப், பாணர்
நயம்படு முரற்கையின் யாத்த பயன் தெரிந்து,
இன்புறு புணர்ச்சி நுகரும்,
மென்புல வைப்பின் நாடு கிழவோனே.

பாடல் பின்னணி:  மணம் செய்த பின் மணமனை சென்று வந்த செவிலித்தாய், மகிழ்ந்த உள்ளத்தவளாய் நற்றாயிடம் சொன்னது.

பொருளுரைதான் விரும்பிய காதலியைத் தழுவிப் பாணர்களின் விருப்பம் உண்டாகும் இசையில் அமைக்கப்பட்ட பயனைத் தெரிந்து, இன்பம் பயக்கும் புணர்ச்சியை நுகருபவன் ஆனான், மெல்லிய புலமாகிய முல்லை நிலத்தைக் கொண்ட நாட்டின் தலைவன்.

குறிப்பு:   நயம்படு முரற்கையின் யாத்த பயன் தெரிந்து இன்புறு புணர்ச்சி நுகரும் (2–3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இன்பம் பிறத்தற்குக் காரணமான பண்ணாற்றொடுத்த பாடலின் சுவையை நன்கு உணர்ந்து, பின்னர் அவளோடும் இன்பம் மிகுகின்ற புணர்ச்சியினால் ஐம்புலன்களையும் நுகராநிற்பன், ஒளவை துரைசாமி உரை – உயிர்களை இசை இன்பத்தில் படிவிக்கும் யாழின்கண் யாத்திசைத்த இசைப்பயனைத் தேர்ந்து நுகரும் இன்பம் போலும் புணர்ச்சியினை நுகருவான் ஆயினன்.  இலக்கணக் குறிப்பு – தழீஇ – செய்யுளிசை அளபெடை, கிழவோனே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நயந்த காதலித் தழீஇப் பாணர் நயம்படு முரற்கையின் யாத்த பயன் தெரிந்து – தான் விரும்பிய காதலியைத் தழுவிப் பாணர்களின் விருப்பம் உண்டாகும் இசையில் அமைக்கப்பட்ட பயனைத் தெரிந்து, இன்புறு புணர்ச்சி நுகரும் – இன்பம் பயக்கும் புணர்ச்சியை அனுபவிக்கும், மென்புல வைப்பின் நாடு கிழவோனே – மெல்லிய புலமாகிய முல்லை நிலத்தைக் கொண்ட நாட்டின் தலைவன்.

ஐங்குறுநூறு 408, பேயனார், முல்லைத் திணை செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது
பாணர் முல்லை பாடச், சுடர் இழை
வாணுதல் அரிவை முல்லை மலைய,
இனிது இருந்தனனே நெடுந்தகை,
துனி தீர் கொள்கைத் தன் புதல்வனொடு பொலிந்தே.

பாடல் பின்னணி:  மணம் செய்த பின் மணமனை சென்று வந்த செவிலித்தாய், மகிழ்ந்த உள்ளத்தவளாய் நற்றாயிடம் சொன்னது.

பொருளுரைபாணர் முல்லைப் பண்ணைப் பாடவும், ஒளிவிடும் அணிகலன்களை அணிந்த விளங்கும் நெற்றியை உடைய நம் மகள் முல்லை மலர்களை அணியவும், பெரும் தகைமையுடைய அவளுடைய கணவன், வெறுப்பில்லாத கொள்கையுடைய தன் புதல்வனுடன் சிறந்து இனிமையுடன் இருந்தான்.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – இசையின்பத்திலும் மக்கட்பேற்றால் விளையும் இன்பத்திலும் மனைமாட்சி மிக்க மனைவியால் வரும் இன்பத்திலும் திளைத்திருந்தான் தலைவன் என்க.  இலக்கணக் குறிப்பு – முல்லை – ஈரிடங்களிலும் ஆகுபெயர், இருந்தனனே – ஏகாரம் அசைநிலை, பொலிந்தே – ஏகாரம் அசைநிலை.  வாள்வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 71).

சொற்பொருள்:  பாணர் முல்லை பாடச் சுடர் இழை வாள் நுதல் அரிவை முல்லை மலைய இனிது இருந்தனனே நெடுந்தகை – பாணர் முல்லைப் பண்ணைப் பாடவும் ஒளிவிடும் அணிகலன்களை அணிந்த விளங்கும் நெற்றியை உடைய நம் மகள் முல்லை மலர்களை அணியவும் இனிமையுடன் இருந்தான் பெரும் தகைமையுடைய அவளுடைய கணவன், துனி தீர் கொள்கைத் தன் புதல்வனொடு பொலிந்தே – வெறுப்பில்லாத கொள்கையுடைய தன் புதல்வனுடன் சிறந்து

ஐங்குறுநூறு 409, பேயனார், முல்லைத் திணை செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது
புதல்வன் கவைஇயினன் தந்தை, மென் மொழிப்
புதல்வன் தாயோ இருவரும் கவையினள்,
இனிது மன்ற அவர் கிடக்கை,
நனி இரும் பரப்பின் இவ் உலகுடன் உறுமே.

பாடல் பின்னணி:  மணம் செய்த பின் மணமனை சென்று வந்த செவிலித்தாய், மகிழ்ந்த உள்ளத்தவளாய் நற்றாயிடம் சொன்னது.

பொருளுரை:  புதல்வனைத் தழுவிக்கொண்டான் தந்தை.   மெல்லிய மொழியுடைய புதல்வனின் தாயாகிய நம் மகள் அவர்கள் இருவரையும் தழுவிக்கொண்டாள்.  இனிது, தேற்றமாக, அவர்களின் படுக்கை நிலை.  அவர்களின் இன்பத்திற்கு, மிகப்பெரும் பரப்பினையுடைய இந்த உலகம் ஒக்கும்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – கணவன், மனைவி, புதல்வன் என்ற மூவரானாயது உலகமாகலின், அவர் மூவரும் கிடந்த கிடக்கைக்கு இவ்வுலகு முற்றும் உறுவதாகும் என்றாள்.  ஒப்புமை – குறுந்தொகை 359 – கண்டிசின் பாண, பண்பு உடைத்து அம்ம, மாலை விரிந்த பசு வெண்ணிலவின் குறுங்கால் கட்டில் நறும் பூஞ்சேக்கைப் பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ புதல்வற் தழீஇயினன், விறலவன் புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே.  இலக்கணக் குறிப்பு – தாயோ – ஓகாரம் அசைநிலை, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், நனி இரும் – ஒருபொருட் பன்மொழி, உறுமே – ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  புதல்வன் கவைஇயினன் தந்தை – புதல்வனைத் தழுவிக்கொண்டான் தந்தை, மென் மொழிப் புதல்வன் தாயோ இருவரும் கவையினள் – மெல்லிய மொழியுடைய புதல்வனின் தாய் இருவரையும் தழுவிக்கொண்டாள், இனிது மன்ற அவர் கிடக்கை – இனிது தேற்றமாக அவர்களின் படுக்கை நிலை, நனி இரும் பரப்பின் இவ் உலகுடன் உறுமே – மிகப்பெரும் பரப்பினையுடைய இந்த உலகம் ஒக்கும் (உறும் – ஒக்கும்)

ஐங்குறுநூறு 410, பேயனார், முல்லைத் திணை செவிலித்தாய் தனக்குள் சொன்னது
மாலை முன்றில் குறுங்கால் கட்டில்
மனையோள் துணைவியாகப், புதல்வன்
மார்பின் ஊரும் மகிழ் நகை இன்பப்
பொழுதிற்கு ஒத்தன்று மன்னே,
மென் பிணித்து அம்ம பாணனது யாழே.

பாடல் பின்னணி:  மணம் செய்த பின் மணமனை சென்ற செவிலித்தாய், தலைவியும் தலைவனும் மகனுடன் கூடியிருந்து பாடல் கேட்டு மகிழ்ந்திருந்த காட்சியைக் கண்டு தனக்குள் கூறியது.

பொருளுரைமாலை நேரத்தில் இல்லத்தின் முற்றத்தின்கண் குறுகிய கால்களையுடைய கட்டிலில் மனைவி துணையாக, மகன் மார்பின் மேல் தவழும், மகிழ்ச்சியுடன் நகையும் கொண்ட இன்பப் பொழுதிற்கு, ஒத்திருந்தது பாணனின் யாழ் இசை.  ஆயினும் அதன் பிணிப்பு மென்மையாக இருந்தது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இன்பப் பொழுதிற்கு ஒத்தன்று.  எனவே ஏனைப் பொழுதிற்குப் பெரிதும் ஒத்ததாம் என்றாளாயிற்று.  ஒவ்வாமையோடு சிறிது துன்புறுத்துவதுமாயிற்று என்பாள் மென்பிணித்து என்றாள்.  அஃதாவது தலைவன் தன் மைந்தன் மழலை கேட்டு மகிழ்தற்கு இவ்வின்னிசை ஓர் இடையூறு ஆகி மெல்ல வருத்துதல்.  இலக்கணக் குறிப்பு – முன்றில் – இல்முன் என்பது முன்பின்னாகத் தொக்கது, மன்னே – மன் ஒழியிசை என்னும் பொருளில் வந்த இடைச் சொல், ஏ அசைநிலை, அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், யாழே – ஏகாரம் அசைநிலை.  ஒத்தன்று (4) – ஒளவை துரைசாமி உரை – ஒத்திருந்தது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருந்திற்று இல்லை, தி. சதாசிவ ஐயர் உரை – ஒத்தன்று, அ. தட்சிணாமூர்த்தி உரை – ஒத்ததாயிற்று.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  மாலை முன்றில் குறுங்கால் கட்டில் மனையோள் துணைவியாக – மாலை நேரத்தில் இல்லத்தின் முற்றத்தின்கண் குறுகிய கால்களையுடைய கட்டிலில் மனைவி துணையாக, புதல்வன் மார்பின் ஊரும் – மகன் மார்பின் மேல் தவழும், மகிழ் நகை இன்பப் பொழுதிற்கு – மகிழ்ச்சியுடன் நகையும் கொண்ட இன்பப் பொழுதிற்கு, ஒத்தன்று மன்னே – ஒத்திருந்தது, மென் பிணித்து அம்ம – மென்மையான பிணிப்பாக இருந்தது, பாணனது யாழே – பாணனின் யாழ் இசை

கிழவன் பருவம் பாராட்டுப் பத்து

பாடல்கள் 411 – 420 – தலைவன் தலைவியிடம் தான் குறித்துச் சென்ற கார்ப்பருவம் வந்தமையைக் காட்டித் தான் அது வருவதற்கு முன்பே வந்தமை தோன்ற அவளைப் பாராட்டும் பாடல்கள் இவை.

ஐங்குறுநூறு 411, பேயனார், முல்லைத் திணை தலைவன் தலைவியிடம் சொன்னது
ஆர் குரல் எழிலி அழிதுளி சிதறிக்,
கார் தொடங்கின்றால் காமர் புறவே,
வீழ்தரு புதுப் புனல் ஆடுகம்,
தாழ் இருங்கூந்தல், வம்மதி விரைந்தே.

பாடல் பின்னணி:  பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் அப்பருவத்திற்கு முன்னே வந்தான்.  அவன் வந்த சில நாட்களில் கார்ப்பருவம் தொடங்கியது. தலைவிபால் பேரன்பு உள்ளமையால் குறித்த நாளினும் முன் வந்ததை அவளுக்கு உணர்த்தும் பொருட்டுக் கூறியது.

பொருளுரைதாழ்ந்த கரிய கூந்தலையுடையவளே!  பெரும் இடி முழக்கத்துடன் முகில்கள் மிக்க மழையைப் பெய்ததால், அழகிய முல்லை நிலத்தில் கார்காலம் தொடங்கிவிட்டது.  விருப்பம் தரும் புதுப்புனலில் நாம் விளையாடலாம்.  அதற்கு நீ விரைந்து வருவாயாக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இக்கார்ப்பருவத் தொடக்கத்தே கான்யாற்றில் பெருகிவரும் புதுப்புனலின்கண் காதலர் ஆடுதல் மிகவும் விரும்பத்தக்க விளையாட்டாம் அன்றோ!  இவ்விளையாட்டை நின்னோடு ஆடுதல் விரும்பியன்றே யான் குறித்த நாளினும் முந்துற வந்தது காண் என்பது குறிப்பெச்சம்.  இலக்கணக் குறிப்பு – தொடங்கின்றால் – ஆல் அசைநிலை, ஆடுகம் – தன்மைப்பன்மை, தாழ் இருங்கூந்தல் – விளி, அன்மொழித்தொகை, வம்மதி – மதி முன்னிலையசை, விரைந்தே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்:  ஆர் குரல் எழிலி அழிதுளி சிதறிக் கார் தொடங்கின்றால் காமர் புறவே – பெரும் இடியொலியுடன் முகில்கள் மிக்க மழையைப் பெய்ததால் கார்காலம் தொடங்கிவிட்டது அழகிய முல்லை நிலத்தில், வீழ்தரு புதுப் புனல் ஆடுகம் – விருப்பம் தரும் புதுப்புனலில் நாம் விளையாடலாம், தாழ் இருங்கூந்தல் – தாழ்ந்த கரிய கூந்தலையுடையவளே, வம்மதி விரைந்தே – வருவாயாக விரைந்து

ஐங்குறுநூறு 412, பேயனார், முல்லைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
காயா, கொன்றை, நெய்தல், முல்லை,
போது அவிழ் தளவொடு, பிடவு அலர்ந்து, கவினிப்
பூ அணி கொண்டன்றால் புறவே,
பேர் அமர்க் கண்ணி! ஆடுகம் விரைந்தே.

பாடல் பின்னணி:  பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் அப்பருவத்திற்கு முன்னே வந்தான்.  அவன் வந்த சில நாட்களில் கார்ப்பருவம் தொடங்கியது. தலைவிபால் பேரன்பு உள்ளமையால் குறித்த நாளினும் முன் வந்ததை அவளுக்கு உணர்த்தும் பொருட்டுக் கூறியது.

பொருளுரை:  பெரிய அமர்ந்த கண்களை உடையவளே!  முல்லை நிலத்தில் காயா, கொன்றை, குவளை, முல்லை மற்றும் தளவ அரும்புகள் பிடவத்துடன் மலர்ந்து, முல்லை நிலத்தை அழகுபடுத்தியுள்ளன.  நாம் அங்கு விளையாடலாம்.  விரைந்து வா.

குறிப்பு:  பழைய உரை – ஆடுகம் விரைந்தே என்பது விளையாட்டு.  ஒளவை துரைசாமி உரை – ஏன் ஒடு யாண்டும் கூட்டப்பட்டது.  ‘என்றும் எனவும் ஒடுவும் தோன்றி ஒன்று வழியுடைய எண்ணினுட் பிரிந்தே’ (தொல்காப்பியம், இடையியல் 46) என்பவாகலின்.  பூவணி, பூவால் உளதாகும் அணியென விரியும்.  நெய்தல் நெய்தனிலப் பூவாயினும், ‘எந்நில மருங்கிற் பூவும் புள்ளும். அந்நிலம் பொழுதொடு வாராவாயினும் வந்த நிலத்தின் பயத்தவாகும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 21) என்பதனால் அமைந்தது.  இலக்கணக் குறிப்பு – தளவொடு – ஒடு உடனிகழ்ச்சி (ஒருங்கு நிகழ்தல்), கொண்டன்றால் – ஆல் அசைநிலை, புறவே – ஏகாரம் அசைநிலை, பேர் அமர்க் கண்ணி – விளி, விரைந்தே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  காயா – காயா (ironwood flowers), கொன்றை – சரக்கொன்றை (laburnum flowers), நெய்தல் – குவளை  (blue water lilies), முல்லை – முல்லை (jasmine), போது – அரும்புகள், அவிழ் – திறந்து,  தளவொடு – தளவமோடு (golden jasmine), பிடவு – பிடவுடன் (wild jasmine, bedaly–nut vine), அலர்ந்து – மலர்ந்து,  கவினி – அழகுடன், பூ – மலர்கள், அணி கொண்டன்றால் – அழகுபடுத்தியுள்ளன, புறவே – முல்லைக்காடு, பேர் அமர் – பெரிய பொருந்திய,  கண்ணி – கண் உடையவளே, ஆடுகம்  –  நாம் விளையாடலாம், விரைந்தே – விரைந்து வா

ஐங்குறுநூறு 413, பேயனார், முல்லைத் திணை – தலைவியிடம் தலைவன் சொன்னது
நின் நுதல் நாறும் நறுந்தண் புறவில்,
நின்னே போல மஞ்ஞை ஆலக்,
கார் தொடங்கின்றால் பொழுதே,
பேரியல் அரிவை, நாம் நயத்தகவே.

பாடல் பின்னணி:  பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் அப்பருவத்திற்கு முன்னே வந்தான்.  அவன் வந்த சில நாட்களில் கார்ப்பருவம் தொடங்கியது. தலைவிபால் பேரன்பு உள்ளமையால் குறித்த நாளினும் முன் வந்ததை அவளுக்கு உணர்த்தும் பொருட்டுக் கூறியது.

பொருளுரை:   பெரும் நற்பண்புகளை உடைய பெண்ணே!  உன்னுடைய நெற்றியின்  நறுமணம் நாறும் குளிர்ந்த முல்லை நிலத்தில் உன்னைப் போல் மயில்கள் ஆட, கார்ப்பருவம் தொடங்கி விட்டது இப்பொழுது, நாம் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி இன்புற்று இருக்க.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – பேரியலாவது, மனைத்தக்காள் ஆதற்குரிய மாண்பு.  புறவம் நின் நுதல்போல் நாறலினாலும், மயில்கள் நின்னைப்போல் ஆலுதலாலும், இப்பருவம் நினக்கு இயைந்து தோன்றுதலின், நாம் கூடியாடி மகிழ்வெய்தலாம் என்பதாம்.  ‘நின்னே போல மஞ்ஞை ஆல நின் நன்னுதல் நாறு முல்லை மலர’ (நற்றிணை 492) எனத் தலைவன் கூறுதல் காண்க.  இலக்கணக் குறிப்பு – தண்புறவு – வினைத்தொகை, தொடங்கின்றால் – ஆல் அசைநிலை, பொழுதே – ஏகாரம் அசைநிலை, பேரியல் அரிவை – விளி, நயத்தகவே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நின் நுதல் நாறும் நறுந்தண் புறவில் – உன்னுடைய நெற்றியின் நறுமணம் நாறும் குளிர்ந்த முல்லை நிலத்தில், நின்னே போல மஞ்ஞை ஆல – உன்னைப் போல் மயில்கள் ஆட, கார் தொடங்கின்றால் பொழுதே – கார்ப்பருவம் தொடங்கி விட்டது இப்பொழுது, பேர் இயல் அரிவை – பெரும் நற்பண்புகளை உடைய பெண்ணே, நாம் நயத்தகவே – நாம் ஒருவரை ஒருவர் விரும்பி இன்புற்று இருக்க

ஐங்குறுநூறு 414, பேயனார், முல்லைத் திணை தலைவன் தலைவியிடம் சொன்னது
புள்ளும் மாவும் புணர்ந்து இனிது உகளக்,
கோட்டவும் கொடியவும் பூப் பல பழுனி,
மெல்லியல் அரிவை, கண்டிகும்,
மல்லல் ஆகிய மணம் கமழ் புறவே.

பாடல் பின்னணி:  பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் அப்பருவத்திற்கு முன்னே வந்தான்.  அவன் வந்த சில நாட்களில் கார்ப்பருவம் தொடங்கியது. தலைவிபால் பேரன்பு உள்ளமையால் குறித்த நாளினும் முன் வந்ததை அவளுக்கு உணர்த்தும் பொருட்டுக் கூறியது.

பொருளுரைமென்மையான இயல்பையுடைய பெண்ணே! பறவைகளும் விலங்குகளும் தம் துணையுடன் புணர்ந்து இன்புற்றுத் துள்ளித் திரியவும், கிளைகளிலும் கொடிகளிலும் பூக்கள் நிறைந்து தோன்றவும், அவற்றால் வளம் திகழும் நறுமணம் கமழ்கின்ற காட்டை நீ காண்பாயாக!

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – புள்ளினத்துக்கு உரிய பழவகையும் மா வகைக்குரிய மேயலும் இனிது பெறப்படுதலின், இனிது உறைகின்றன என்பார், இனிது உகள என்றார்.  தாய்மைக்குரிய சால்புடைமை பற்றி மெல்லியல் அரிவை எனச் சிறப்பித்தார்.  பூவும் தழையும் சிறந்து புள்ளும் மாவும் இனிதுறைவதால் மல்லலாகிய புறவு எனப்பட்டது.  கண்டிகும் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – கண்டோம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – காண்பாயாக.  இலக்கணக் குறிப்பு – மெல்லியல் அரிவை – விளி, கமழ்புறவு – வினைத்தொகை, புறவே – ஏகாரம் அசைநிலை.  மல்லல் – மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7).

சொற்பொருள்:  புள்ளும் மாவும் புணர்ந்து இனிது உகள – பறவைகளும் விலங்குகளும் தம் துணையுடன் புணர்ந்து இன்புற்றுத் துள்ளித் திரிய, கோட்டவும் கொடியவும் பூப் பல பழுனி – கிளைகளிலும் கொடிகளிலும் பூக்கள் நிறைந்து, மெல்லியல் அரிவை – மென்மையான இயல்பையுடைய பெண்ணே, கண்டிகும் மல்லல் ஆகிய மணம் கமழ் புறவே – காண்பாயாக வளம் திகழும் நறுமணம் கமழ்கின்ற காட்டை

ஐங்குறுநூறு 415, பேயனார், முல்லைத் திணை தலைவன் தலைவியிடம் சொன்னது
இதுவே மடந்தை நாம் மேவிய பொழுதே,
உதுவே மடந்தை நாம் உள்ளிய புறவே,
இனிதுடன் கழிக்கின் இளமை
இனிதால் அம்ம, இனியவர்ப் புணர்வே.

பாடல் பின்னணி:  பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் அப்பருவத்திற்கு முன்னே வந்தான்.  அவன் வந்த சில நாட்களில் கார்ப்பருவம் தொடங்கியது. தலைவிபால் பேரன்பு உள்ளமையால் குறித்த நாளினும் முன் வந்ததை அவளுக்கு உணர்த்தும் பொருட்டுக் கூறியது.

பொருளுரைமடந்தையே!  இதுவே நாம் விரும்பிய பொழுது.  அதுவே நாம் நினைத்த முல்லை நிலம்.  நாம் இணைந்து இனிமையுடன் பொழுது கழித்தால் இளமை இனியது ஆகும்.  விரும்பும் காதலருடன் கூடி இருத்தல் இனியது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பருவம் அண்மையின் வந்தமை தோன்றவும் நிலம் எப்பொழுதும் உளதாவுந் தோன்ற இதுவென்றும் உதுவென்றும் வேறு வேறாகச் சுட்டினான்.  அ. தட்சிணாமூர்த்தி உரை – இளமை சென்றால் மீளாது ஆதலின், அதனைப் பெற்ற போதே இன்பத்தைத் துய்த்துக் கழிக்க முந்த வேண்டும் என்பது தோன்ற ‘இளமை இனிதால் அம்ம இனியவர்ப் புணர்வே’ என்றான்.  இலக்கணக் குறிப்பு – இதுவே – ஏகாரம் அசைநிலை, பொழுதே – ஏகாரம் அசைநிலை, நாம் – ஈற்றிடங்களிலும் தன்மைப் பன்மை, உதுவே – ஏகாரம் அசைநிலை, புறவே – ஏகாரம் அசைநிலை, இனிதால் – ஆல் அசைநிலை, அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், புணர்வே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  இதுவே மடந்தை நாம் மேவிய பொழுதே – இதுவே மடந்தை நாம் விரும்பிய பொழுது, உதுவே மடந்தை நாம் உள்ளிய புறவே – அதுவே மடந்தை நாம் நினைத்த முல்லை நிலம், இனிதுடன் கழிக்கின் இளமை இனிதால் – துணையுடன் இனிமையுடன் கழித்தால் இளமை இனியது, அம்ம இனியவர்ப் புணர்வே – காதலருடன் கூடி இருத்தல் இனிது

ஐங்குறுநூறு 416, பேயனார், முல்லைத் திணை தலைவன் சொன்னது
போது ஆர் நறுந்துகள் கவினிப் புறவில் தாது ஆர்ந்து
களிச் சுரும்பு அரற்றும் காமர் புதலின்,
மடப் பிடி தழீஇய மாவே,
சுடர்த் தொடி மடவரல், புணர்ந்தனம் யாமே.

பாடல் பின்னணி:  குறித்த பருவத்திற்கு முன்பே வந்து தலைவியைக் கூடினான் தலைவன். மகிழ்ச்சியுடன் இருந்த அவன், தன் நெஞ்சிற்கு அதை வெளிப்படுத்துதல் போல் தலைவி கேட்கும்படி சொன்னது.

பொருளுரைமலர்களில் நிறைந்த நறுமணமுடைய பூந்தாது உடைமையால், அழகுபெற்ற காட்டின்கண் உள்ள மலர்களின் தேனைப் பருகிக் களித்து வண்டுகள் ஆரவாரம் செய்யும், அழகிய புதர்களுக்கு இடையே, களிற்று யானைகள் மடப்பம் பொருந்திய தங்கள் பிடி யானைகளைத் தழுவின. ஒளியுடைய வளையல்களை அணிந்த மடப்பம் பொருந்திய நம் காதலியை யாம் கூடி மகிழ்ந்தோம்.

குறிப்பு:  பழைய உரை – புறவில் தாது ஆர்ந்து சுரும்பு அரற்றும் புதல் என்றது, தலைவியது மனைமாட்சி வியந்து கூறியது.  உள்ளுறை – புலியூர்க் கேசிகன் உரை – போது ஆர் நறுந்துகள் கவினிப் புறவில் தாது ஆர்ந்து களிச் சுரும்பு அரற்றும் காமர் புதலின் மடப் பிடி தழீஇய மா என்றது, அவ்வாறே பலராய் விருந்தினரும் பல இடங்களிலே விருந்துண்டு பெற்ற களிப்புடன் தன் இல்லச் சான்று விருந்துண்டு களித்திருக்கத், தானும் தன் மனைவியோடும் மனையறம் பேணி இன்புற்று வாழ்கின்றான் என்றது. வண்டினம் விருந்தினர்க்கும் காமர் புதல் அவன் இல்லத்திற்கும் களிறும் பிடியும் அவனும் அவன் மனைவிக்குமாக பொருத்திக் கொள்க.  இலக்கணக் குறிப்பு – தழீஇய – செய்யுளிசை அளபெடை, மாவே – ஏகாரம் அசைநிலை, யாம் – தன்மைப் பன்மை, மடவரல் – அன்மொழித்தொகை, யாமே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  போது ஆர் நறுந்துகள் கவினிப் புறவில் தாது ஆர்ந்து களிச் சுரும்பு அரற்றும் – மலர்களில் நிறைந்த நறுமணமுடைய பூந்தாது உடைமையால் அழகுபெற்ற காட்டின்கண் உள்ள மலர்களின் தேனைப் பருகிக் களித்து வண்டுகள் ஆரவாரம் செய்யும், காமர் புதலின் மடப் பிடி தழீஇய மாவே – அழகிய புதர்களுக்கு இடையே மடப்பம் பொருந்திய பிடி யானைகளைத் தழுவின களிற்று யானைகள், சுடர்த் தொடி மடவரல் புணர்ந்தனம் யாமே – ஒளியுடைய வளையல்களை அணிந்த மடப்பம் பொருந்திய நம் காதலியைக் கூடி மகிழ்ந்தோம் யாம்

ஐங்குறுநூறு 417, பேயனார், முல்லைத் திணை தலைவன் சொன்னது
கார் கலந்தன்றால் புறவே, பலவுடன்
ஏர் பரந்தனவால் புனமே, ஏர் கலந்து
தாது ஆர் பிரசம் மொய்ப்பப்
போது ஆர் கூந்தல், முயங்கினள் எம்மே.

பாடல் பின்னணி:  குறித்த பருவத்திற்கு முன்பே வந்து தலைவியைக் கூடினான் தலைவன். மகிழ்ச்சியுடன் இருந்த அவன், தன் நெஞ்சிற்கு அதை வெளிப்படுத்துதல் போல் தலைவி கேட்கும்படி சொன்னது.

பொருளுரைகாட்டில் கார்ப்பருவம் நிகழ்ந்தது.  புனங்கள் பலவாக அழகு அடைந்தன.  எம் பிரிவினால் இழந்த அழகை என் வரவினால் மீண்டும் பெற்றவள் ஆகித் தேன் உண்ணும் வண்டுகள் மொய்க்கும் மலர்கள் அணிந்த கூந்தலையுடைய எம் தலைவி, எம்மைத் தழுவினாள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – தான் தன் காதலனொடு புணர்ச்சி பெற்று மகிழ்தற்குரிய கார்ப்பருவமும், புனத்தழகும் எய்த நோக்கிய தலைமகட்குக் கூட்டத்தின் மேல் உள்ளம் சேறலின், முயங்கினள் எம்மே என்றும், காதலன்பால் புலத்தற்குரிய தவறு இல்லையாயினும் வேட்கை மிகுதியால் புலத்தல் மகளிர்க்கு இயல்பாகலின், ஏர் கலந்து முயங்கினள் என்றும் கூறினான்.  தாதார் பிரசம் மொய்க்கும் போது என்றது, தான் நுகர்ந்த இன்பத்தைத் தலைவன் சுட்டியவாறு.  கார் கலந்தன்றால் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கார் நிகழா நின்றது, ஒளவை துரைசாமி உரை – கார்ப் பருவத்தை எதிரேற்றமை, தி. சதாசிவ ஐயர் உரை – கார்காலம் கலக்கப்பட்டது.  ஏர் பரந்தனவால் புனமே (2) – உ. வே. சாமிநாதையர் உரை – ஏர் = அழகு, ஏருமாம், புனம் – பயிரிடப்பட்ட நிலம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – காடுகள் நன்கு தழைத்து மலர்ந்து அழகு பரவப்பட்டன, ச. வே. சுப்பிரமணியன் உரை – பயிரிடப்பட்ட நிலங்களில் ஏர்கள் உழவுத் தொழிலைப் புரிந்தன.  இலக்கணக் குறிப்பு – கலந்தன்றால் – ஆல் அசைநிலை, பரந்தனவால் – ஆல் அசைநிலை, போது ஆர் கூந்தல் – அன்மொழித்தொகை, எம் – தன்மைப் பன்மை, எம்மே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  கார் கலந்தன்றால் புறவே – காட்டில் கார்ப்பருவம் நிகழ்ந்தது, பலவுடன் ஏர் பரந்தனவால் புனமே – புனங்கள் பலவாக அழகு அடைந்தன, ஏர் கலந்து – இழந்த அழகைப் பெற்று, தாது ஆர் பிரசம் மொய்ப்பப் போது ஆர் கூந்தல் – தேன் உண்ணும்  வண்டுகள் மொய்க்கும் மலர்கள் அணிந்த கூந்தலையுடைய எம் தலைவி, முயங்கினள் எம்மே – எம்மைத் தழுவினாள்

ஐங்குறுநூறு 418, பேயனார், முல்லைத் திணை தலைவன் தலைவியிடம் சொன்னது
வானம்பாடி வறம் களைந்து ஆனாது,
அழிதுளி தலைஇய புறவில், காண்வர
வானர மகளோ நீயே,
மாண் முலை அடைய முயங்கியோயே?

பாடல் பின்னணி:  தலைவன் தான் குறித்த பருவத்திற்கு  முன்பே வந்தான். வரும் வழியில் தலைவியின் நினைவே மிகுந்ததால், அவள் உருவின் தோற்றம் கண்டு மருண்டு, அதன் பின் இல்லம் புகுந்து தலைவியைக் கண்டபோது சொன்னது.

பொருளுரைமாட்சிமையுடைய உன் முலைகள் அழுந்துமாறு என்னைத் தழுவியவளே!  மழை இல்லாததால், வானம்பாடி அடைந்த வறுமை நீங்கும்படிப் பெய்த மிக்க மழையை ஏற்றுக்கொண்ட காட்டில், காணுமாறு என் முன் தோன்றிய நீ வானுலகத்தில் வாழும் வானரமகளோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – முகில் தன்னையே நினைத்திருக்கும் வானம்பாடிப் பறவையின் நல்குரவினை ஒரு சில துளியாலே அகற்றிப் பின்னரும் இவ்வுலகம் உய்யும்படி மிகவும் பெய்தாற் போன்று நீதானும் உருவெளித் தோற்றத்தானும் எம் எதிர் தோன்றி ஆறுதல் செய்து பின்னரும் என் நெஞ்செல்லாம் தித்திக்க மாண்முலையடைய முயங்கலும் செய்தனை என்னும் உள்ளுறை தோன்ற, ‘அழிதுளி தலைஇய புறவில்’ என்றான் என்க.  ஒப்புமை – கலித்தொகை 46 – துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின், பட்டினப்பாலை 3 – தற்பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி, அகநானூறு 67 – வானம் வாழ்த்தி பாடவும் அருளாது உறை துறந்து எழிலி, புறநானூறு 198 – துளி நசைப் புள்ளின்.   இலக்கணக் குறிப்பு – தலைஇய – அளபெடை, நீயே – ஏகாரம் அசைநிலை, முயங்கியோயே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  வானம்பாடி வறம் களைந்து ஆனாது அழிதுளி தலைஇய புறவில் – வானம்பாடி அடைந்த வறுமை நீங்கும்படிப் பெய்த மிக்க மழையை ஏற்றுக்கொண்ட காட்டில், காண்வர வானர மகளோ நீயே – காணுமாறுத் தோன்றிய நீ வானுலகத்தில் வாழும் வானரமகளோ, மாண் முலை அடைய முயங்கியோயே – மாட்சிமையுடைய உன் முலைகள் அழுந்துமாறு என்னைத் தழுவியவளே

ஐங்குறுநூறு 419, பேயனார், முல்லைத் திணை தலைவன் தலைவியிடம் சொன்னது
உயிர் கலந்து ஒன்றிய செயிர் தீர் கேண்மைப்
பிரிந்து உறல் அறியா விருந்து கவவி,
நம் போல் நயவரப் புணர்ந்தன,
கண்டிகும் மடவரல், புறவின் மாவே.

பாடல் பின்னணி:  இன்ப நுகர்ச்சிக்கு ஏற்ற பருவம் வந்துழித் தலைவியோடு புறவிற்குச் சென்றான் தலைவன்.  அங்குப் புணர்ந்து இன்புறும் விலங்குகளை அவளிடம் காட்டி அவன் கூறியது.

பொருளுரைமடப்பமுடைய பெண்ணே!  இக் காட்டில் உள்ள விலங்குகள், உயிரோடு உயிர் கலந்து இணைந்த குற்றம் இல்லாத நட்பினால் ஒன்றை ஒன்று பிரிந்து இருத்தலை அறியாதவையாய், புதுமையுறத் தழுவி, நம்மைப் போல் விருப்பத்துடன் புணர்ந்தன. இதனை நீ காண்பாயாக! 

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – காதலின்பம், பன்முறை புணர்ந்த பின்னும் முன் போன்று புதிதாகவே தோன்றுதல் உண்மையின் புதிது கவவி என்றான்.  கண்டிகும் (4) – தி. சதாசிவ ஐயர் உரை – காண்பாயாக, உ. வே. சாமிநாதையர் உரை – காண்போம், அ. தட்சிணாமூர்த்தி உரை – காண்போம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – காண்பாயாக.  இலக்கணக் குறிப்பு – இகும் – தன்மை வினைமுற்று திரிசொல், மடவரல் – விளி, அன்மொழித்தொகை, மாவே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  உயிர் கலந்து ஒன்றிய செயிர் தீர் கேண்மைப் பிரிந்து உறல் அறியா  – உயிரோடு உயிர் கலந்து இணைந்த குற்றம் இல்லாத நட்பினால் பிரிந்து இருத்தலை அறியாத, விருந்து கவவி – புதுமையுறத் தழுவி, நம் போல் நயவரப் புணர்ந்தன – நம்மைப் போல் விருப்பத்துடன் புணர்ந்தன, கண்டிகும் – காண்பாயாக, மடவரல் – மடப்பமுடைய பெண்ணே, புறவின் மாவே – காட்டில் உள்ள விலங்குகள்

ஐங்குறுநூறு 420, பேயனார், முல்லைத் திணை – தலைவன் காட்டிடம் சொன்னது
பொன் என மலர்ந்த கொன்றை, மணி எனத்
தேம்படு காயா, மலர்ந்த தோன்றியொடு,
நன்னலம் எய்தினை புறவே, நின்னைக்
காணிய வருதும் யாமே
வாணுதல் அரிவையொடு, ஆய் நலம் படர்ந்தே.

பாடல் பின்னணி:  தலைவன் தான் குறித்த பருவத்தில் மீண்டு வந்தான். ஊரை நெருங்கும்பொழுது, கார்ப்பருவதால் அழகு மிகுந்த முல்லைக் காட்டை நோக்கி அவன் சொன்னது.

பொருளுரை:  காடே!  பொன் நிறத்தில் மலர்ந்த கொன்றை மலர்களுடனும், நீலமணி நிறத்தில் மலர்ந்த தேன் உடைய காயா மலர்களுடனும், பூத்த தோன்றி மலர்களுடனும், நல்ல அழகை நீ அடைந்துள்ளாய்.  உன் மிக்க அழகை எண்ணி, உன்னைக் காண வருகின்றேன் நான், ஒளியுடைய நெற்றியையுடைய என் தலைவியுடன்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – இன்ப நுகர்ச்சிக்குரிய பருவமாகலின், காணிய வருத்தும் யாமே என்றும், தனியவரை முனிவு செய்யும் தன்மைத்து ஆதலின் வாணுதல் அரிவையொடு என்றும், புறவினை நோக்கி, தன்னலம் எய்திய நின்னை வாணுதல் அரிவையொடு காணிய வருதும் என்றவழி, தலைமகள் உள்ளத்தில் புலவியும் துனியும் பிறக்குமென்று அஞ்சி, அரிவையொடு ஆய்நலம் படர்ந்து என்றும் உரைத்தான்.  ஆய் நலம் படர்ந்தே (5) – ஒளவை துரைசாமி உரை – அவளது அழகிய நலத்தினையும் உள்ளி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவளது தேய்ந்து மெலியும் அழகினையும் கருதி, தி. சதாசிவ ஐயர் உரை – நினது மிக்க அழகை நினைந்து வருவேம், புலியூர்க் கேசிகன் உரை – நின்னையும் காண்பதற்கு வருகின்றேம்.  இலக்கணக் குறிப்பு – புறவே – ஏகாரம் அசைநிலை, தன்மைப் பன்மை, யாமே – தன்மைப் பன்மை, படர்ந்தே – ஏகாரம் அசைநிலை.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 71).  காயாவும் கொன்றையும் கார்காலத்தில் மலர்தல் – நற்றிணை 242 – பல் மலர் காயாங் குறுஞ்சினை கஞலக் கார் தொடங்கின்றே, நற்றிணை 371 – காயாங்குன்றத்துக் கொன்றை போல மா மலை விடர் அகம் விளங்க மின்னி மாயோள் இருந்த தேஎம் நோக்கி வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்ப் பெயல் தொடங்கினவே, ஐங்குறுநூறு 420 – பொன் என மலர்ந்த கொன்றை, மணி எனத் தேம்படு காயா, மலர்ந்த தோன்றியொடு நன்னலம் எய்தினை புறவே.

சொற்பொருள்:  பொன் என மலர்ந்த கொன்றை – பொன் நிறத்தில் மலர்ந்த கொன்றை மலர்கள், மணி எனத் தேம்படு காயா – நீலமணி நிறத்தில் மலர்ந்த தேன் உடைய காயா மலர்கள், மலர்ந்த தோன்றியொடு – மலர்ந்த தோன்றி மலர்களுடன், நன்னலம் எய்தினை – நல்ல அழகை நீ அடைந்தாய், புறவே – காடே, முல்லை நிலமே, நின்னைக் காணிய வருதும் யாமே – உன்னைக் காண வருகின்றேன், வாள் நுதல் அரிவையொடு – ஒளியுடைய நெற்றியை உடைய என் தலைவியுடன், ஆய் நலம் படர்ந்தே – அழகிய நலத்தை எண்ணி, மெலிந்த அழகைக் கருதி

விரவுப் பத்து

பாடல்கள் 421 – 430 – இவற்றில் முல்லைத் திணைக்குரிய பல்வேறு துறைகள் விரவி (கலந்து) வந்துள்ளன.

ஐங்குறுநூறு 421, பேயனார், முல்லைத் திணை தலைவனின் நண்பர்கள் சொன்னது
மாலை வெண்காழ் காவலர் வீச,
நறும் பூம்புறவின் ஒடுங்கு முயல் இரியும்,
புன்புல நாடன் மட மகள்,
நலம் கிளர் பணைத்தோள், விலங்கின செலவே.

பாடல் பின்னணி:  வினை பலவற்றிற்கும் பிரிந்தொழுகும் தலைவன் பின்பு மனைவயின் நீங்காது ஒழுகுகின்ற காதலை உணர்ந்தோர் சொல்லியது.

பொருளுரைமாலைக் காலத்தில் தினைப் புனங்காவலர் குறுந்தடியை நிலத்தில் வீசுவதால், நறிய பூக்கள் நிறைந்த முல்லை காட்டின்கண் ஒடுங்கியிருக்கும் முயல்கள் அஞ்சி நீங்கி ஓடும் முல்லை நிலத்தின் தலைவனின் செலவை, மடப்பம் பொருந்திய பெண்ணின் அழகுமிக்க மூங்கில் போன்ற தோள்கள் தடுத்துவிட்டன.

குறிப்பு:  பழைய உரை – வெண்காழ் என்றது, மாலைக்காலத்து முயல் எறியும் தடியை.  ஒளவை துரைசாமி உரை – காவலர் வெண்காழை வெறிதே வீசியவழியும் புதலின்கண் ஒடுங்கியிருந்த முயல் அஞ்சி நீங்கும் எனவே, தலைமகன் பிரிவு கருதியவழி மனைக்கண் உறையும் தலைமகள் பிரிவஞ்சித் தோள் மெலிந்து மேனிநலம் குன்றுவள் என்றவாறாம்.  வெண்காழ் (1) – ஒளவை துரைசாமி உரை – காழ்ப்பேறிய குறுந்தடியை காழ் என்றது ஆகுபெயர்.  நன்கு காழ்த்தது கறுத்திருக்குமாகலின், வெண்காழ் என சிறப்பித்தார், அ. தட்சிணாமூர்த்தி உரை – வைரம் பாய்ந்த வெள்ளிய மரத்தடி.  வெண்காழ் காவலர் வீச (1) – ஒளவை துரைசாமி உரை – காவலர் குறுந்தடியை நிலத்திலே எறிதலால், பொ. வே. சோமசுந்தரனார் உரை – காவலர் வெள்ளிய கைத் தடியை நிலத்தில் வீசா நிற்றலான்.  இலக்கணக் குறிப்பு – பணைத்தோள் – உவமைத்தொகை, செலவே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  மாலை வெண்காழ் காவலர் வீச நறும் பூம்புறவின் ஒடுங்கு முயல் இரியும் புன்புல நாடன் – மாலைக் காலத்தில் தினைப் புனங்காவலர் குறுந்தடியை வீசுவதால் நறிய பூக்கள் நிறைந்த முல்லை காட்டின்கண் ஒடுங்கியிருக்கும் முயல்கள் அஞ்சி நீங்கி ஓடும் முல்லை நிலத்தின் தலைவன், மட மகள் நலம் கிளர் பணைத்தோள் – மடப்பம் பொருந்திய பெண்ணின் அழகுமிக்க மூங்கில் போன்ற தோள்கள், விலங்கின செலவே – தடுத்துவிட்டன செல்லுதலை

ஐங்குறுநூறு 422, பேயனார், முல்லைத் திணை தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
கடும் பரி நெடுந்தேர்க் கால் வல் புரவி,
நெடுங்கொடி முல்லையொடு தளவ மலர் உதிர,
விரையுபு கடைஇ நாம் செல்லின்,
நிரை வளை முன் கை, வருந்தலோ இலளே.

பாடல் பின்னணி:    வினை முற்றி மீள்கின்ற தலைவன் தன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது.

பொருளுரைபாகனே!  விரைந்த செலவினையுடைய நெடிய தேரின்கண் காற்றுபோல் விரையும் குதிரைகளை, நீண்ட முல்லைக் கொடியும் செம்முல்லையும் உதிருமாறு, விரையத் தூண்டிச் செலுத்தி நாம் செல்வோமானால், வரிசையாக வளையல்களை முன்னங்கையில் அணிந்த எம் காதலி வருந்த மாட்டாள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – முல்லையும் தளவமும் மலர்ந்து யாம் குறித்த பருவ வரவில்லை உணர்த்தலின் அவள் ஆற்றாது வருந்துவாளாகலின், அவ்வருத்தம் இன்றாமாறு தேரினை விரைந்து கடாவுக என்பதாம்.  இதனால் வினைமுற்றி மீள்வோன் உள்ளத்துக் காதல் மிகுதி நன்கு புலப்படுமாறு காண்க.  இலக்கணக் குறிப்பு – விரையுபு – செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம், நிரை வளை முன் கை – அன்மொழித்தொகை, வருந்தலோ – ஓகாரம் அசைநிலை, தெரிநிலை, கடைஇ – அளபெடை, இலளே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  கடும் பரி நெடுந்தேர்க் கால் வல் புரவி – விரைந்த செலவினையுடைய நெடிய தேரின்கண் காற்றுபோல் விரையும் குதிரைகள், நெடுங்கொடி முல்லையொடு தளவ மலர் உதிர – நீண்ட முல்லைக் கொடியும் செம்முல்லையும் உதிருமாறு, விரையுபு கடைஇ நாம் செல்லின் – விரையுமாறு தூண்டிச் செலுத்தி நாம் செல்வோமானால், நிரை வளை முன் கை வருந்தலோ இலளே – வரிசையாக வளையல்களை முன்னங்கையில் அணிந்த எம் காதலி வருந்த மாட்டாள்

ஐங்குறுநூறு 423, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவனிடம் சொன்னது
மா மழை இடியூஉத் தளி சொரிந்தன்றே,
வாணுதல் பசப்பச் செலவு அயர்ந்தனையே,
யாமே நிந்துறந்து அமையலம்,
ஆய் மலர் உண்கணும் நீர் நிறைந்தனவே.

பாடல் பின்னணி:  கார்ப்பருவத்தில் பிரியக் கருதிய தலைவனிடம் தோழி தலைவியின் ஆற்றாமை கூறிச் செலவு அழுங்குவித்தது.

பொருளுரைகரிய முகில்கள் இடித்து மழையைப் பெய்கின்றது. தலைவியின் ஒளிபொருந்திய நெற்றி பசலை அடையும்படி நீ செலவு மேற்கொள்ள எண்ணுகின்றாய்.  யாம் நின்னைப் பிரிந்து ஆற்றியிருக்கும் வல்லமை இல்லாதவர்களாக உள்ளோம். என் தோழியின் அழகிய மலர் போன்ற மையுண்ட கண்களிலும் கண்ணீர் நிறைந்துள்ளது.

குறிப்பு:  முல்லையுள் பாலை.  பழைய உரை – இது கார்ப்பருவத்தே கூறுதலான், முல்லையாயிற்று.  ஒளவை துரைசாமி உரை – திணை மயக்குறுதலும் கடி நிலை இலவே நிலன் ஒருங்கு மயங்குதல் இல என மொழிப புலன் நன்கு உணர்ந்த புலமையோரே (தொல்காப்பியம், அகத்திணையியல் 14) என்றதனால், முல்லைக்கண் பாலை வந்து மயங்கிற்று.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மழை முன்னர் கேட்டற்கு இன்னாவாக அஞ்சத்தக்க இடித்ததாயினும், பின்னர்ப் புறவம் அணிகொள்ளுமாறு தளியே சொரிந்தாற் போன்று நீயும் இப்பொழுது தலைவி இன்னலுறும்படி செலவு அயர்ந்தனையேனும் அதனை விடுத்து இனி அவட்கு அளி செய்து இருத்தல் வேண்டும் என இறைச்சி தோன்றிற்று என்க.  இலக்கணக் குறிப்பு – சொரிந்தன்றே – ஏகாரம் அசைநிலை, அயர்ந்தனையே – ஏகாரம் அசைநிலை, யாமே – ஏகாரம் அசைநிலை, நிறைந்தனவே – ஏகாரம் அசைநிலை, கணும் – கண்ணும், இடைக்குறை, இடியூஉ – அளபெடை.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 71).  யாமே நிந்துறந்து அமையலம் (3) – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள் தோழி.

சொற்பொருள்:  மா மழை இடியூஉத் தளி சொரிந்தன்றே – கரிய முகில்கள் இடித்து மழையைப் பெய்கின்றது, வாள் நுதல் பசப்பச் செலவு அயர்ந்தனையே – என் தோழியின் ஒளிபொருந்திய நெற்றி பசலை அடையும்படி நீ செலவு மேற்கொள்ள எண்ணுகின்றாய், யாமே நிந்துறந்து அமையலம் – யாம் நின்னைப் பிரிந்து ஆற்றியிருக்கும் வல்லமை உடையவர்கள் இல்லாதவர்களாக உள்ளோம், ஆய் மலர் உண்கணும் நீர் நிறைந்தனவே – என் தோழியின் அழகிய மலர் போன்ற மையுண்ட கண்களிலும் கண்ணீர் நிறைந்துள்ளது

ஐங்குறுநூறு 424, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவனிடம் சொன்னது
புறவு அணி நாடன் காதல் மட மகள்
ஒண்ணுதல் பசப்ப நீ செலின், தெண்ணீர்ப்
போது அவிழ் தாமரை அன்ன நின்
காதலம் புதல்வன், அழும் இனி முலைக்கே.

பாடல் பின்னணி:  கார்ப்பருவத்தில் பிரியக் கருதிய தலைவனிடம் தோழி தலைவியின் ஆற்றாமை கூறிச் செலவு அழுங்குவித்தது.

பொருளுரைகாடுகளால் அழகு அடைந்த நாடனின் மடப்பமுடைய மகளின் ஒளிரும் நெற்றி பசக்கும்படி நீ சென்றால், தெளிந்த நீரின்கண் மலர்ந்த தாமரை போலும் நின் அன்புடைய மகன், இனி அழுவான் அவளுடைய முலைப்பாலுக்கு.

குறிப்பு:  முல்லையுள் பாலை.  அ. தட்சிணாமூர்த்தி உரை – ‘நின் காதலி’ என்றோ ‘நின் மனைவி’ என்றோ கூறாது, ‘புறவணி நாடன் காதல் மடமைகள்’ என்று கொண்டு, ‘தலைவா! நீ இவள்பால் காதல் கொண்டாயல்லை’ என இடித்துரைத்ததாகக் கொள்க.  இலக்கணக் குறிப்பு – பசப்ப – செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அன்ன – உவம உருபு, முலைக்கே – முலை ஆகுபெயர் முலைப்பாலுக்கு, ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  புறவு அணி நாடன் காதல் மட மகள் ஒள் நுதல் பசப்ப நீ செலின் – காடுகளால் அழகு அடைந்த நாடனுடைய மடப்பமுடைய மகளின் ஒளிரும் நெற்றி பசக்கும்படி நீ சென்றால், தெண்ணீர்ப் போது அவிழ் தாமரை அன்ன நின் காதலம் புதல்வன் – தெளிந்த நீரின்கண் மலர்ந்த தாமரை போலும் நின் அன்புடைய மகன், அழும் இனி முலைக்கே – இனி அழுவான் முலைப்பாலுக்கு

ஐங்குறுநூறு 425, பேயனார், முல்லைத் திணை தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
புன்புறப் பேடை சேவல் இன்புற
மன்னர் இயவரின் இரங்கும் கானம்,
வல்லை நெடுந்தேர் கடவின்,
அல்லல் அரு நோய் ஒழித்தல் எமக்கு எளிதே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது.

பொருளுரைபொலிவில்லாத புறச் சிறகைக் கொண்ட பேடை, தன் சேவல் இன்பம் அடையுமாறு மன்னரின் இசைக்கருவியாளர் போல் ஒலிக்கும் காட்டின் வழியே, விரைந்து நெடிய தேரைச் செலுத்தினால், என் காதலியின் நீக்குவதற்கு அரிய துன்பத்தைப் போக்குவது எமக்கு எளிது.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – வினை முற்றி மீள்கின்றான் ஆதலால், தன் பிரிவு ஆற்றாது தலைமகள் வருந்துதலையும், தான் துயர் உழத்தலையும் உட்கொண்டு கூறுகின்றான் ஆகலின், ‘அல்லல் அரு நோய்’ என்றான்.  புன்புறப் பேடை (1) – ஒளவை துரைசாமி உரை – தவிட்டுப் புறா என்னும் ஒரு வகைப் புள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொலிவற்ற முதுகினையுடைய மயிற்பெடை.  இலக்கணக் குறிப்பு – இயவரின் – இன் ஒப்புப்பொருளில் வந்த ஐந்தன் உருபு, வல்லை – முற்றெச்சம், எளிதே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  புன்புறப் பேடை சேவல் இன்புற மன்னர் இயவரின் இரங்கும் கானம் வல்லை நெடுந்தேர் கடவின் – பொலிவில்லாத புறச் சிறகைக் கொண்ட பேடை தன் சேவல் இன்பம் அடையுமாறு மன்னரின் இசைக்கருவியாளர் போல் ஒலிக்கும் காட்டின் வழியே விரைந்து நெடிய தேரைச் செலுத்தினால், அல்லல் அரு நோய் ஒழித்தல் எமக்கு எளிதே – என் காதலியின் நீக்குவதற்கு அரிய துன்பத்தைப் போக்குவது எமக்கு எளிது

ஐங்குறுநூறு 426, பேயனார், முல்லைத் திணை தலைவன் தலைவியிடம் சொன்னது
வென்வேல் வேந்தன் அருந்தொழில் துறந்து, இனி
நன்னுதல், யானே செலவு ஒழிந்தனெனே,
முரசு பாடு அதிர ஏவி
அரசுபடக் கடக்கும், அருஞ் சமத்தானே.

பாடல் பின்னணி:  வேந்தற்குத் தானைத் தலைவனாய் ஒழுகும் தலைவன் பிரிந்து வினைமுடித்து வந்து தலைவியோடு உறைகின்றபொழுது, ‘இன்னும் பிரிவானோ’ எனக் கருதிய தலைவியிடம் அவள் வருத்தம் தீரும்வண்ணம் தலைவன் சொன்னது.

பொருளுரைநல்ல நெற்றியை உடையவளே!  வெற்றிவேலை ஏந்திய நம் அரசன் விலக்குதற்கு அரிய போரைத் தவிர்ந்தமையால்,  இனி, முரசு முழக்கத்தால் அதிரும்படி படைகளை ஏவி பகை அரசைப் போரில் வெல்லும் அரிய போர்க்களத்திற்கு யான் செல்லுவதைத் தவிர்த்துள்ளேன்.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – ‘வென்வேல் வேந்தன் அருந்தொழில் துறந்து’ என்பதில் துறத்தலாகிய செயலைத் தலைவனுக்கு ஆக்கினால், அது தலைவன் தனக்குரிய அரசியற் கடமையைத் தன் மனைவி மேல் கொண்ட காதலால் புறக்கணித்தான் என்னும் பொருள் தந்து அவனுக்கு இழுக்குத் தரும் எனவே, துறத்தல் அரசனுக்குரியதாகக் கொள்ளப்பட்டது.  இலக்கணக் குறிப்பு – துறந்து – செய்தென் எச்சம் துறந்தனவால் எனக் காரணப்பொருளால் வந்தது, நன்னுதல் – அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, ஒழிந்தனெனே – ஏகாரம் அசைநிலை, அதிர – செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்,  பட – செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், சமத்தானே – சமத்தான் என்பதில் ஆன் உருபு கண் என்னும் இடப்பொருள்பட வந்தது, ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  வென்வேல் வேந்தன் அருந்தொழில் துறந்து – வெற்றிவேலை உடைய நம் அரசன் விலக்குதற்கு அரிய போரைத் தவிர்ந்தமையால், இனி – இனி, நன்னுதல் – நல்ல நெற்றியை உடையவளே, யானே செலவு ஒழிந்தனெனே – யான் செல்லுவதைத் தவிர்த்துள்ளேன், முரசு பாடு அதிர ஏவி அரசுபடக் கடக்கும் அருஞ் சமத்தானே – முரசு முழக்கத்தால் அதிரும்படி படைகளை ஏவி பகை அரசைப் போரில் வெல்லும் அரிய போர்க்களத்திற்கு

ஐங்குறுநூறு 427, பேயனார், முல்லைத் திணை தலைவன் தலைவியிடம் சொன்னது
பேர் அமர் மலர்க் கண் மடந்தை! நீயே,
கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே,
போருடை வேந்தன் பாசறை
வாரான் அவன் எனச், செலவு அழுங்கினனே.

பாடல் பின்னணி:  பிரிவானோ என்று ஐயுற்று உடன்படாத தலைவியிடம் தான் செல்லாமைக்குக் காரணம் கூறி அவள் ஐயத்தைப் போக்கியது.

பொருளுரைபெரிய, விரும்புவதற்குக் காரணமான மலர்போலும் கண்களையுடையவளே!  நீ காதலர்கள் இணைந்திருக்கும் கார்ப்பருவம் தொடங்கியது என்று, யான் பிரிவதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.  போர்த் தொழிலையுடைய நம் வேந்தன் பாசறைக்கு அவன் வரமாட்டான் எனக் கருதிப் போருக்குச் செல்வதைத் தவிர்த்தான்.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – கார்க்காலத்தில் போர்ச்செலவு மேற்கொள்வதாகப் பாடுவது பிற தொகை நூல்களில் காணவியலாத ஒன்று.  இது ஐந்குறுநூற்றில் காணும் பல புதுமைகளில் ஒன்றாகவே தோன்றுகின்றது.  இலக்கணக் குறிப்பு – மடந்தை – அண்மை விளி, நீயே – ஏகாரம் அசைநிலை, ஒல்லாயே – ஏகாரம் அசைநிலை, அழுங்கினனே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  பேர் அமர் மலர்க் கண் மடந்தை – பெரிய விரும்புவதற்குக் காரணமான மலர்போலும் கண்களையுடையவளே,  நீயே கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே – நீ கார்ப்பருவம் தொடங்கியது என்று யான் பிரிவதற்கு ஒத்துக்கொள்ளவில்லை, போருடை வேந்தன் பாசறை வாரான் அவன் எனச் செலவு அழுங்கினனே – போர்த் தொழிலையுடைய நம் வேந்தன் பாசறைக்கு அவன் வரமாட்டான் எனக் கருதிப் போருக்குச் செல்வதைத் தவிர்த்தான்

ஐங்குறுநூறு 428, பேயனார், முல்லைத் திணை தலைவன் தலைவியிடம் சொன்னது
தேர் செலவு அழுங்கத் திரு வில் கோலி
ஆர்கலி எழிலி சோர் தொடங்கின்றே,
வேந்து விடு விழுத்தொழில் ஒழிய,
யான் தொடங்கினனால் நின் புறந்தரவே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிவானோ என்று ஐயுற்ற தலைவியின் ஐயம் தீரத் தலைவன் சொன்னது.

பொருளுரை:  தேர் செல்லுவதைத் தடுப்பதற்கு வானில் வில்லைத் தோற்றுவித்து ஆரவாரத்தையுடைய முகில்கள் மழையைப் பெய்யத் தொடங்கிவிட்டன.  வேந்தன் என்னை விடுத்தற்குரிய சிறந்த தூதுத் தொழிலைக் கைவிட்டதால், யான் நின்னைப் பேணுதலை மேற்கொண்டேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – விழுத்தொழில் ஒழிதற்கு, எழிலி சோர் தொடங்கின்று என்றது, குறிப்பேதுவாய் நின்றது.  மழையின்கண் தேர் இயங்காமையான் விழுத்தொழில் ஒழிவதாயிற்று.  வினையே ஆடவர்க்கு உயிர் என்பது பற்றி நின்னை அரிதிற் பிரிந்துத் தூது போதற்கு எண்ணியிருந்தேன்.  ஆனால் இயற்கையே அப்போக்கினைத் தடுத்துவிட்டது.  ஆகலின் இப்பருவத்தே யான் நின்னோடிருந்து மகிழ்விப்பேன் என்றது.  இலக்கணக் குறிப்பு – தொடங்கின்றே – ஏகாரம் அசைநிலை, சோர் – முதனிலைத் தொழிற்பெயர், ஒழிய – செய என்னும் எச்சம், தொடங்கினனால் – ஆல் அசைநிலை, புறந்தரவே – ஏகாரம் அசைநிலை.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).

சொற்பொருள்:  தேர் செலவு அழுங்கத் திரு வில் கோலி ஆர்கலி எழிலி சோர் தொடங்கின்றே – தேர் செல்லுவதைத் தடுப்பதற்கு வானில் வில்லைத் தோற்றுவித்து ஆரவாரத்தையுடைய முகில்கள் மழையைப் பெய்யத் தொடங்கிவிட்டன, வேந்து விடு விழுத்தொழில் ஒழிய யான் தொடங்கினனால் நின் புறந்தரவே – வேந்தன் என்னை விடுத்தற்குரிய சிறந்த தூதுத் தொழிலைக் கைவிட்டதால் யான் நின்னைப் பேணுதலை மேற்கொண்டேன்

ஐங்குறுநூறு 429, பேயனார், முல்லைத் திணை தலைவன் தலைவியிடம் சொன்னது
பல் இருங்கூந்தல், பசப்பு நீ விடின்,
செல்வேம் தில்ல யாமே, செற்றார்
வெல் கொடி அரணம் முருக்கிய
கல்லா யானை வேந்து பகை வெலற்கே.

பாடல் பின்னணி:  குறிப்பினால் பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைவி உடன்படும் பொருட்டு அவளிடம் தலைவன் கூறியது.

பொருளுரைஅடர்ந்த கரிய கூந்தலை உடையவளே!  நீ நின் பசலையை நீக்குவாயாயின் யான் செல்வேன், பகைவர் வெற்றிக்கொடி உயர்ந்த மதில்களை அழித்த போர்த்தொழில் அன்றி வேறு எதுவும் கற்காத யானைப் படைகளையுடைய நம் வேந்தனின் பகைவரை வெல்வதற்கு.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பசப்புவிடின் என்றமையால் நீ இப்பொழுதே பசந்தமை என்றானுமாயிற்று.  இவ்வாறு என் கடமைக்கு இடையூறாக வருந்துதல் நினக்கு தகாது என்பது குறிப்பு.  கல்லா யானை (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – போர்த்தொழில் பிற கல்லாத யானைப் படைகள், ஒளவை துரைசாமி உரை – போர்ப்பயிற்சி இல்லாத யானைகள், தி. சதாசிவ ஐயர் உரை – பிற தொழிலைக் கற்றறியாத யானை, உ. வே. சாமிநாதையர் உரை – கொடுந்தொழிலையன்றி வேறு ஒன்றையும் கல்லாத யானை, அ. தட்சிணாமூர்த்தி உரை – பிறவியிலேயே போர்க்குணம் கொண்ட யானை.  இலக்கணக் குறிப்பு – பல் இருங்கூந்தல் – அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, விடின் – செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சம், தில்ல – தில்  விழைவின்கண் வந்த இடைச்சொல், ஈறு திரிந்து வந்தது, வேந்து பகை – ஆறாம் வேற்றுமைத் தொகை, வெலற்கே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  பல் இருங்கூந்தல் – அடர்ந்த கரிய கூந்தலை உடையவளே, பசப்பு நீ விடின் செல்வேம் தில்ல யாமே – நீ நின் பசலையை நீக்குவாயாயின் யான் செல்வேன், செற்றார் வெல் கொடி அரணம் முருக்கிய கல்லா யானை வேந்து பகை வெலற்கே – பகைவர் வெற்றிக்கொடி உயர்ந்த மதில்களை அழித்த போர்த்தொழில் அன்றி வேறு எதுவும் கற்காத யானைப் படைகளையுடைய நம் வேந்தனின் பகைவரை வெல்வதற்கு

ஐங்குறுநூறு 430, பேயனார், முல்லைத் திணை தலைவன் தலைவியிடம் சொன்னது
நெடும் பொறை மிசைய குறுங்கால் கொன்றை,
அடர் பொன் என்னச் சுடர் இதழ் பகரும்,
கான் கெழு நாடன் மகளே!
அழுதல் ஆன்றிசின், அழுங்குவல் செலவே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிவானோ என்று ஆற்றாளாகிய தலைவியிடம், தலைவன் பருவ வரவு கூறி, ‘இது காரணத்தாலும் பிரியேன்’ எனக் கூறியது.

பொருளுரைநெடிய மலை மேல் உள்ள குறுகிய அடியையுடைய கொன்றை மரங்கள், பொற்தகடுகள் போல் ஒளிவிடும் இதழ்கள் பொருந்திய மலர்களை வழங்கும் காடுகள் பொருந்திய நாட்டையுடையவனின் மகளே!  நீ அழுவதைக் கைவிடுவாயாக.  நான் செல்லுதலைத் தவிர்ப்பேன்.

குறிப்பு:  பழைய உரை – கொன்றை தான் பொன்னென மலர்ந்த பூக்களைச் சொரியும் என்றது, பருவங்காட்டித் தான் செல்லாமை வற்புறீஇயது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘நெடும் பொறை மிசைய குறுங்கால் கொன்றை …. இதழ் பகரும்’ என்றது, கார்ப்பருவம் வந்தெய்கிறது , நீயும் வருந்தா நின்றனை ஆதலால் யான் செலவு அழுங்குவல் என்று காரணம் தோற்றுவித்து நின்றது.  இலக்கணக் குறிப்பு – என்ன – உவமப்பொருள் தரும் சொல், சுடர் இதழ் – உவமைத்தொகை, ஆன்றிசின் – சின் முன்னிலை அசைச் சொல், செலவே – ஏகாரம் அசைநிலை.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

சொற்பொருள்:  நெடும் பொறை மிசைய குறுங்கால் கொன்றை அடர் பொன் என்னச் சுடர் இதழ் பகரும் கான் கெழு நாடன் மகளே – நெடிய மலை மேல் உள்ள குறுகிய அடியையுடைய கொன்றை மரங்கள் பொற்தகடுகள் போல் ஒளிவிடும் இதழ்கள் பொருந்திய மலர்களை வழங்கும் காடுகள் பொருந்திய நாட்டையுடையவனின் மகளே, அழுதல் ஆன்றிசின் – நீ அழுவதைக் கைவிடுவாயாக, அழுங்குவல் செலவே – நான் செல்லுதலைத் தவிர்ப்பேன்

புறவணிப் பத்து

பாடல்கள் 431 – 440 – காடும் காடு சார்ந்த நிலமான முல்லை நிலம் தனக்குரிய கார்ப்பருவத்தில் அழகுற்றுத் திகழ்வதனைப் பொருளாகக் கொண்டவை.

ஐங்குறுநூறு 431, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
நன்றே காதலர் சென்ற ஆறே,
அணி நிற இரும்பொறை மீமிசை,
மணி நிற உருவின தோகையும் உடைத்தே.

பாடல் பின்னணி:  ‘பிரிவு உடன்பட்டும் நீ ஏன் ஆற்றாளாய் இருக்கின்றாய்’ எனத் தோழி வினவிய வழி, ‘அவர் போன சுரம் போதற்கு அரிது என்பதால் ஆற்றேன் ஆக உள்ளேன்’ என்ற தலைவியை ஆற்றும்பொருட்டுத் தோழி சொன்னது.

பொருளுரைநம் தலைவர் சென்ற வழி நலம் மிகுந்தது.  ஏனெனில், அங்குள்ள அழகிய நிறம் பொருந்திய பெரிய மலைகளின் மேலிடம் எல்லாம் நீலமணி போலும் நிறத்தையும் அழகிய தோகையையும் உடைய மயில்கள் உள்ளன.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – வழியிடைத் தோன்றும் மலைகள், பசிய கானம் போர்த்துக் கார்வரலால் அழகிய காட்சி வழங்குகின்றன என்பாள், அணிநிற இரும்பொறை என்றும், மலையின் மேலிடம் மழைமுகில் தழுவி நிற்றல் கண்டு மயில்கள் தோகையை விரித்து மகிழ்ந்தாடும் காட்சி வழிநடை வருத்தத்தைக் காதலர்க்குத் தோற்றுவியாது இன்புறுத்தும் என்றற்கு ‘மீமிசை மணிநிற உருவின தோகையும் உடைத்து’ என்றும், எனவே அவர் சென்ற ஆறு போகற்கு அரிது என்று கவலற்க, நன்றே எனத் தெளிக என்றும் உரைத்தாள்.  இலக்கணக் குறிப்பு – நன்றே – ஏகாரம் தேற்றம், ஆறே – ஏகாரம் அசைநிலை, மீமிசை – ஒருபொருட் பன்மொழி, தோகையும் – உம்மை இறந்தது தழுவியது, தோகை – ஆகுபெயர், உடைத்தே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நன்றே காதலர் சென்ற ஆறே – நம் தலைவர் சென்ற வழி நலம் மிகுந்தது, அணி நிற இரும்பொறை மீமிசை மணி நிற உருவின தோகையும் உடைத்தே – அழகிய நிறம் பொருந்திய பெரிய மலைகள் மேலிடம் எல்லாம் நீலமணி போலும் நிறத்தையும் அழகிய தோகையையும் உடைய மயில்கள் உள்ளன

ஐங்குறுநூறு 432, பேயனார்முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
நன்றே காதலர் சென்ற ஆறே,
சுடு பொன் அன்ன கொன்றை சூடிக்
கடி புகுவனர் போல், மள்ளரும் உடைத்தே.

பாடல் பின்னணி:  ‘பிரிவு உடன்பட்டும் நீ ஏன் ஆற்றாளாய் இருக்கின்றாய்’ எனத் தோழி வினவிய வழி, ‘அவர் போன சுரம் போதற்கு அரிது என்பதால் ஆற்றேன் ஆக உள்ளேன்’ என்ற தலைவியை ஆற்றும்பொருட்டுத் தோழி சொன்னது.

பொருளுரைநம் தலைவர் சென்ற வழி நலம் மிகுந்தது.  ஏனெனில், அது சுட்ட பொன்போல் ஒளிவிடும் கொன்றை மலர்களை அணிந்து மண விழாவிற்குச் செல்பவர்கள் போல் உள்ள மறவர்களை உடையது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கார்ப்பருவத்தே யாண்டும் கொன்றை மரங்கள் மலர்ந்து அழகு செய்து நிற்றலின் ஆறு கொன்றை சூடியிருக்கும் என்றாள்.  இது காட்சி இன்பம் கூறியபடியாம்.  இனி நம்பெருமான் தனிமையானும் துயருறார் என்பாள், மள்ளரும் உடைத்து என்றாள்.  மள்ளர் – ஒளவை துரைசாமி உரை – இள வீரர்.  இவர் விழாக்காணும் விருப்பு மிக உடையராதலின், இவர்கட்குக் கடிபுகுவனர் உவமையாயினர்.  ‘வேறு நாட்டு விழவுப்படர் மள்ளர்’ (அகநானூறு 180) என்பது காண்க.  இலக்கணக் குறிப்பு – நன்றே – ஏகாரம் தேற்றம், அன்ன – உவம உருபு, ஆறே – ஏகாரம் அசைநிலை, சுடுபொன் – வினைத்தொகை, புகுவனர் – வினையாலணையும் பெயர், மள்ளரும் – உம்மை இறந்தது தழுவியது, உடைத்தே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நன்றே காதலர் சென்ற ஆறே – நம் தலைவர் சென்ற வழி நலம் மிகுந்தது, சுடு பொன் அன்ன கொன்றை சூடிக் கடி புகுவனர் போல் மள்ளரும் உடைத்தே – சுட்ட பொன்போல் ஒளிவிடும் கொன்றை மலர்களை அணிந்து மண விழாவிற்குச் செல்பவர்கள் போல் உள்ள மறவர்களை உடையது

ஐங்குறுநூறு 433, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
நன்றே காதலர் சென்ற ஆறே,
நீர்ப்பட எழிலி வீசும்
கார்ப்பெயற்கு எதிரிய கானமும் உடைத்தே.

பாடல் பின்னணி:  ‘பிரிவு உடன்பட்டும் நீ ஏன் ஆற்றாளாய் இருக்கின்றாய்’ எனத் தோழி வினவிய வழி, ‘அவர் போன சுரம் போதற்கு அரிது என்பதால் ஆற்றேன் ஆக உள்ளேன்’ என்ற தலைவியை ஆற்றும்பொருட்டுத் தோழி சொன்னது.

பொருளுரைநம் தலைவர் சென்ற வழி நலம் மிகுந்தது.  ஏனெனில், அது நீர் நிலைகளிலும் ஆறுகளிலும் நீர் நிரம்பும்படி முகில்கள் பெய்யும் கார்காலத்து மழையை ஏற்றுக்கொண்ட காடுகளை உடையது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மழைவளம் பெற்ற காடுகள் அவர் செல்லும் நெறிக்கண் உளவாகலான் அவர் நன்னீரும் நறுநிழலும் நறுங்கனிகளும் பெற்று இன்புற்றுச் செல்வர் என்பது கருத்து.  இலக்கணக் குறிப்பு – நன்றே – ஏகாரம் தேற்றம், ஆறே – ஏகாரம் அசைநிலை, உடைத்தே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நன்றே காதலர் சென்ற ஆறே – நம் தலைவர் சென்ற வழி நலம் மிகுந்தது, நீர்ப்பட எழிலி வீசும் கார்ப்பெயற்கு எதிரிய கானமும் உடைத்தே – நீர் நிலைகளிலும் ஆறுகளிலும் நீர் நிரம்பும்படி முகில்கள் பெய்யும் கார்காலத்து மழையை ஏற்றுக்கொண்ட காடுகளை உடையது

ஐங்குறுநூறு 434, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
நன்றே காதலர் சென்ற ஆறே,
மறியுடை மான் பிணை உகளத்,
தண் பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே.

பாடல் பின்னணி:  ‘பிரிவு உடன்பட்டும் நீ ஏன் ஆற்றாளாய் இருக்கின்றாய்’ எனத் தோழி வினவிய வழி, ‘அவர் போன சுரம் போதற்கு அரிது என்பதால் ஆற்றேன் ஆக உள்ளேன்’ என்ற தலைவியை ஆற்றும்பொருட்டுத் தோழி சொன்னது.

பொருளுரைநம் தலைவர் சென்ற வழி நலம் மிகுந்தது. ஏனெனில், தன் கன்றோடு கூடிய பெண் மான் மகிழ்ந்து துள்ளும்வண்ணம் குளிர்ச்சி பொருந்திய மழை பெய்தமையால் அது இன்பத்தை உடையது.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – அஞ்சும் இயல்புடைய பெண்மானும் அதன் இளைய மறியும் அச்சம் சிறிதுமின்றி இயங்கும் காடு என்றமையான், தலைவரும் துன்பம் சிறிதுமின்றி ஏகி இருப்பார் என்று தலைவியைத் தோழி தேற்றினாள் என்க.  இலக்கணக் குறிப்பு – நன்றே – ஏகாரம் தேற்றம், ஆறே – ஏகாரம் அசைநிலை, உடைத்தே – ஏகாரம் அசைநிலை.  மறி – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

சொற்பொருள்:  நன்றே காதலர் சென்ற ஆறே – நம் தலைவர் சென்ற வழி நலம் மிகுந்தது, மறியுடை மான் பிணை உகளத் தண் பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே – தன் கன்றோடு இணைந்த பெண் மான் மகிழ்ந்து துள்ளும்வண்ணம் குளிர்ச்சி பொருந்திய மழை பெய்தமையால் இன்பத்தை உடையது

ஐங்குறுநூறு 435,  பேயனார் , முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நன்றே காதலர் சென்ற ஆறே,
நிலனணி நெய்தல் மலரப்
பொலனணி கொன்றையும் பிடவமும் உடைத்தே.

பாடல் பின்னணி:  ‘பிரிவு உடன்பட்டும் நீ ஏன் ஆற்றாளாய் இருக்கின்றாய்’ எனத் தோழி வினவிய வழி, ‘அவர் போன சுரம் போதற்கு அரிது என்பதால் ஆற்றேன் ஆக உள்ளேன்’ என்ற தலைவியை ஆற்றும்பொருட்டுத் தோழி சொன்னது.

பொருளுரை:   நம் தலைவர் சென்ற வழி நலம் மிகுந்தது.  ஏனெனில், அங்கு நிலத்தை அழகுப்படுத்தும்படி குவளை மலர்கள் மலர்ந்துள்ளன.  பொன் போன்ற நிறமுடைய அழகிய கொன்றை மலர்களும், பிடவ மலர்களும் உள்ளன.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – நிலம் நெய்தலையும், கொன்றையையும், பிடவத்தையும் அணிகலன்களாக அணிந்து அழகு பெற்றது என்றாள்.  அழகே வடிவான முல்லை நில வழி, தலைவர் நடந்து செல்ல இனிதே அன்றி அருமையுடைத்தன்று என்று தேற்றினாள் என்க.  ஒளவை துரைசாமி உரை – நிலத்துக்கு அணியாய நெல்லும் கரும்பும் நின்ற வயலிடத்தே வளர்ந்து, இனிய காட்சி வழங்கும் ஏற்றமுடைமை பற்றி நெய்தல் நிலனணி நெய்தல் எனப்பட்டது.  பொலனணி என்றவிடத்து அணி உவமப்பொருட்டு.  பொலன் – பொன் என்னும் கிளவியின் செய்யுண் முடிபு. பொன் என் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடர் இயலான (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 356).  இலக்கணக் குறிப்பு – நன்றே – ஏகாரம் தேற்றம், ஆறே – ஏகாரம் அசைநிலை, நிலன் – நிலம் என்பதன் போலி, பொலன் – பொன் என்பதன் போலி, உடைத்தே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நன்றே காதலர் சென்ற ஆறே – உன் காதலர் சென்ற வழி நல்ல வழி,   நிலன் அணி – நிலத்தின் அழகு, நெய்தல் மலரப் – குவளை மலர,  பொலன் அணி – பொன் போன்ற நிறமுடைய அழகிய, கொன்றையும் பிடவமும் உடைத்தே. – கொன்றையும் பிடவமும் கொண்டது (கொன்றை – laburnum, பிடவம் – wild jasmine, bedaly)

ஐங்குறுநூறு 436, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
நன்றே காதலர் சென்ற ஆறே,
நன் பொன் அன்ன சுடர் இணர்க்
கொன்றையொடு, மலர்ந்த குருந்துமாரும் உடைத்தே.

பாடல் பின்னணி:  ‘பிரிவு உடன்பட்டும் நீ ஏன் ஆற்றாளாய் இருக்கின்றாய்’ எனத் தோழி வினவிய வழி, ‘அவர் போன சுரம் போதற்கு அரிது என்பதால் ஆற்றேன் ஆக உள்ளேன்’ என்ற தலைவியை ஆற்றும்பொருட்டுத் தோழி சொன்னது.

பொருளுரைநம் தலைவர் சென்ற வழி நலம் மிகுந்தது.  ஏனெனில், நல்ல பொன் போல் ஒளி விடும் பூங்கொத்துக்களை உடைய கொன்றை மரங்களும் மலர்களையுடைய குருந்த மரங்களும் அங்கு உள்ளன.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – கொன்றை போலக் குருந்தும் கார்காலத்து மலர்வதாகலின் குருந்துமாருடைத்தே என்றாள்.  ‘காசியன்ன போது ஈன் கொன்றை, குருந்தோடு அலம்வரும் பெருந்தண் காலை ‘ (குறுந்தொகை 148) என்று பிறரும் கூறுதல் காண்க.  இலக்கணக் குறிப்பு – நன்றே – ஏகாரம் தேற்றம், ஆறே – ஏகாரம் அசைநிலை, அன்ன – உவம உருபு, குருந்துமார் – ஆர் அசைநிலை, உடைத்தே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நன்றே காதலர் சென்ற ஆறே – நம் தலைவர் சென்ற வழி நலம் மிகுந்தது, நன் பொன் அன்ன சுடர் இணர்க் கொன்றையொடு மலர்ந்த குருந்துமாரும் உடைத்தே – நல்ல பொன் போல் ஒளி விடும் பூங்கொத்துக்களை உடைய கொன்றை மரங்களும் மலர்களையுடைய குருந்த மரங்களும் உள்ளன (கொன்றை மரம் – laburnum trees with flowers, Cassia fistula, குருந்த மரம் – wild citrus flowers, citrus indica)

ஐங்குறுநூறு 437 பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
நன்றே காதலர் சென்ற ஆறே,
ஆலித் தண் மழை தலைஇய,
வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே.

பாடல் பின்னணி:  ‘பிரிவு உடன்பட்டும் நீ ஏன் ஆற்றாளாய் இருக்கின்றாய்’ எனத் தோழி வினவிய வழி, ‘அவர் போன சுரம் போதற்கு அரிது என்பதால் ஆற்றேன் ஆக உள்ளேன்’ என்ற தலைவியை ஆற்றும்பொருட்டுத் தோழி சொன்னது.

பொருளுரைநம் தலைவர் சென்ற வழி நலம் மிகுந்தது.  ஏனெனில், ஆலங்கட்டியுடன் குளிர்ந்த மழை பெய்ததால், வெண்ணிறமுடையவாய் மலர்ந்த முல்லையையும் உடையது அது.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – இல்லிலிருந்து நல்லறம் புரியும் கற்புடை மகளிர்க்குரிய தூய முல்லையும் அவர் சென்ற நெறியின்கண் மலர்ந்து தோன்றி அவர்க்கு இன்பம் செய்தலின், நன்றே காதலர் சென்ற ஆறே என்றாள்.  அ. தட்சிணாமூர்த்தி உரை – ‘வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்து’ என்றாள், ‘அது முல்லை சான்ற கற்புடைய உன்னை நினைத்தலின் கொடிய வழியையும் இனிய வழியாகக் கொண்டு நின்னை விரைவில் வந்தடைவார்’ என்ற குறிப்பில்.  இலக்கணக் குறிப்பு – நன்றே – ஏகாரம் தேற்றம், ஆறே – ஏகாரம் அசைநிலை, தலைஇய – அளபெடை, உடைத்தே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நன்றே காதலர் சென்ற ஆறே – நம் தலைவர் சென்ற வழி நலம் மிகுந்தது, ஆலித் தண் மழை தலைஇய வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே – ஆலங்கட்டியுடன் குளிர்ந்த மழை பெய்ததால் வெண்ணிறமுடையவாய் மலர்ந்த முல்லையையும் உடையது

ஐங்குறுநூறு 438, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
நன்றே காதலர் சென்ற ஆறே,
பைம்புதல் பல் பூ மலர,
இன்புறத் தகுந பண்புமார் உடைத்தே.

பாடல் பின்னணி:  ‘பிரிவு உடன்பட்டும் நீ ஏன் ஆற்றாளாய் இருக்கின்றாய்’ எனத் தோழி வினவிய வழி, ‘அவர் போன சுரம் போதற்கு அரிது என்பதால் ஆற்றேன் ஆக உள்ளேன்’ என்ற தலைவியை ஆற்றும்பொருட்டுத் தோழி சொன்னது.

பொருளுரைநம் தலைவர் சென்ற வழி நலம் மிகுந்தது.  ஏனெனில், பசிய புதர்களில் பல வகையான பூக்களும் மலர்வதால் இன்புறுவதற்கு உரிய பண்புகளை உடையது அது.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – பண்புகள் மாவும், புள்ளும், மலரும் வழியில் மிக்குச் செல்வார்க்கினிய செயல்களை உடையவாதல்.  பைம்புதல் பசுமையான புதர்கள்.  பொருளின் பண்பு இடத்தின் மேல் நின்றது.  கண்டார் உள்ளத்தில் இன்பம் மிகுதற்கான அழகிய காட்சிகளைத் தனக்கே உரியவாகக் கொண்ட கானம் என்றும், எனவே அவ்வழியே செல்வார்க்குச் செலவருமையும் வருத்தமும் தோன்றா என்றும் கூறினாளாயிற்று.  இலக்கணக் குறிப்பு – நன்றே – ஏகாரம் தேற்றம், ஆறே – ஏகாரம் அசைநிலை, பண்புமார் – ஆர் அசைநிலை, உடைத்தே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நன்றே காதலர் சென்ற ஆறே – நம் தலைவர் சென்ற வழி நலம் மிகுந்தது, பைம்புதல் பல் பூ மலர இன்புறத் தகுந பண்புமார் உடைத்தே – பசிய புதர்களில் பல வகையான பூக்களும் மலர்வதால் இன்புறுவதற்கு உரிய பண்புகளை உடையது

ஐங்குறுநூறு 439, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
நன்றே காதலர் சென்ற ஆறே,
குருந்தங் கண்ணிக் கோவலர்
பெருந்தண் நிலைய, பாக்கமும் உடைத்தே.

பாடல் பின்னணி:  ‘பிரிவு உடன்பட்டும் நீ ஏன் ஆற்றாளாய் இருக்கின்றாய்’ எனத் தோழி வினவிய வழி, ‘அவர் போன சுரம் போதற்கு அரிது என்பதால் ஆற்றேன் ஆக உள்ளேன்’ என்ற தலைவியை ஆற்றும்பொருட்டுத் தோழி சொன்னது.

பொருளுரைநம் தலைவர் சென்ற வழி நலம் மிகுந்தது.  ஏனெனில், குருந்த மரத்தின் மலர்களால் தொடுத்த கண்ணியைச் சூடிய கோவலர் வாழும் மிகவும் குளிர்ச்சி உடைய சிற்றூர்களையும் உடையது அது.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – காதலர் சென்று நெறி முற்றிலும் காடும் மலையுமே ஆகாது இடையிடையே மக்கள் இருந்து இனிது வாழும் ஊர்களும் உடையதாகலின் நன்றே என்றாள்.  அ. தட்சிணாமூர்த்தி உரை – தலைவி ஆண்டுக் கொடுமையுடைய ஆறலை கள்வர் வாழ்வது பற்றிக் கவலையுற்றமையால், ஆண்டு நன்னெஞ்சமுடைய கோவலரும் வாழ்கின்றனர் என்று ஆறுதல் மொழிந்தாள் என்க.  பாக்கமும் என்றதில் உள்ள உம்மை இதற்கு இடம் தருகின்றது.  கோவலர் விருந்து வரின் உவக்கும் விழுப்பமுடையார் எனவே, தலைவர் குறித்துக் கவலையுற வேண்டா என்பது குறிப்பு.  இலக்கணக் குறிப்பு – நன்றே – ஏகாரம் தேற்றம், ஆறே – ஏகாரம் அசைநிலை, குருந்தம் கண்ணி – அம் சாரியை, உடைத்தே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நன்றே காதலர் சென்ற ஆறே – நம் தலைவர் சென்ற வழி நலம் மிகுந்தது, குருந்தங் கண்ணிக் கோவலர் பெருந்தண் நிலைய பாக்கமும் உடைத்தே – குருந்த மரத்தின் மலர்களால் தொடுத்த கண்ணியைச் சூடிய கோவலர் வாழும் மிகவும் குளிர்ச்சி உடைய சிற்றூர்களையும் உடையது (குருந்த மரம் – wild citrus flowers, citrus indica)

ஐங்குறுநூறு 440, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
நன்றே காதலர் சென்ற ஆறே,
தண் பெயல் அளித்த பொழுதின்,
ஒண் சுடர்த் தோன்றியும், தளவமும் உடைத்தே.

பாடல் பின்னணி:  ‘பிரிவு உடன்பட்டும் நீ ஏன் ஆற்றாளாய் இருக்கின்றாய்’ எனத் தோழி வினவிய வழி, ‘அவர் போன சுரம் போதற்கு அரிது என்பதால் ஆற்றேன் ஆக உள்ளேன்’ என்ற தலைவியை ஆற்றும்பொருட்டுத் தோழி சொன்னது.

பொருளுரைநம் தலைவர் சென்ற வழி நலம் மிகுந்தது.  ஏனெனில், குளிர்ந்த மழைபெய்த கார்ப்பருவத்தில், ஒளிரும் சுடர் போல் மலரும் தோன்றி மலர்களையும் தளவ மலர்களையும் உடையது அது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – வேனிற்பருவத்து வெப்பம் இப்பொழுது இராது.  பெரிதும் குளிர்ந்திருக்கும் என்பது தோன்ற வாளா கார்ப்பருவம் என்னாது ‘தண் பெயல் அளித்த பொழுதின்’ என்றாள்.  ஆதலால் நீ அவலமுறாதே கொள் என்பது குறிப்பெச்சம்.  இலக்கணக் குறிப்பு – நன்றே – ஏகாரம் தேற்றம், ஆறே – ஏகாரம் அசைநிலை, பொழுதின் – இன் உருபு கண் என்னும் உருபின் பொருளில் வந்தது, உடைத்தே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நன்றே காதலர் சென்ற ஆறே – நம் தலைவர் சென்ற வழி நலம் மிகுந்தது, தண் பெயல் அளித்த பொழுதின் ஒண் சுடர்த் தோன்றியும் தளவமும் உடைத்தே – குளிர்ந்த மழைபெய்த கார்ப்பருவத்தில் ஒளிரும் சுடர் போல் மலரும் தோன்றி மலர்களையும் தளவ மலர்களையும் உடையது

பாசறைப் பத்து

பாடல்கள் 441 – 450 – தலைவன் போர்க்கடன் ஆற்றுதல் பொருட்டுப் பாசறையில் இருந்தபோது கார்காலத்தின் வரவு கண்டு வருந்திக் கூறியது.

ஐங்குறுநூறு 441, பேயனார், முல்லைத் திணை தலைவன் தனக்குள் சொன்னது
ஐய ஆயின செய்யோள் கிளவி,
கார் நாள் உருமொடு கையறப் பிரிந்தென,
நோய் நன்கு செய்தன எமக்கே,
யாம் உறு துயரம், அவள் அறியினோ நன்றே.

பாடல் பின்னணி:  தான் குறித்த கார்காலம் வந்தும் இல்லம் செல்ல இயலாமல் போரின்பொருட்டு பாசறையில் இருந்த தலைவன் வருந்தினான். தலைவன் வராமையால், தலைவி வருந்தித் தூது அனுப்பினாள்.  தூதுவர்கள் கூறியதைக் கேட்ட தலைவன் கூறியது.

பொருளுரைவியப்பாக உள்ளன என் காதலியின் சொற்கள்.  அவை கார்ப்பருவத்தின் இடியுடன் சேர்ந்து, எம்மை மிகுந்த துன்பத்தில் ஆழ்த்தியுள்ளன.  அவள் செயலற்று வருந்துமாறு யாம் அவளைப் பிரிந்ததாலும் துன்பம் அடைந்துள்ளோம்.  இங்கு யாம் அடைந்துள்ள துயரத்தை அவள் அறியின் நன்றாகும்.

குறிப்பு:  பழைய உரை – கார்நாள் உருமொடு நோய் நன்கு செய்தன, செய்யோள் கிளவி எனக் கூட்டுக.  இலக்கணக் குறிப்பு –   கையற – செய என்னும் எச்சம், பிரிந்தென – என ஏதுப்பொருளில் வந்தது, எமக்கே – ஏகாரம் அசைநிலை, நன்றே – ஏகாரம் அசைநிலை. – ஐ வியப்பாகும் (தொல்காப்பியம், உரியியல் 87).  (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வியப்பு, ஒளவை துரைசாமி உரை – மென்மை, அழகுமாம்.  செய்யோள் (1) – ஒளவை துரைசாமி உரை – அவள் சிறப்பை நினைந்து கூறலின் செய்யோள் என்றான், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நடுநிலையினின்றும் விலகி அவள் இவ்வாறு என்னை இயற்பழித்தனள் என்பான், செய்யோள் என்னும் மொழியால் குறிப்பிட்டான்.  செய்யோள் என்பது குறிப்பு மொழி.  செவ்வியள் அல்லள் என்பது கருத்து.

சொற்பொருள்:  ஐய ஆயின செய்யோள் கிளவி – வியப்பாக உள்ளன என் காதலியின் சொற்கள், கார் நாள் உருமொடு – கார்ப்பருவத்தின் இடியுடன் சேர்ந்து, கையறப் பிரிந்தென நோய் நன்கு செய்தன எமக்கே – அவள் செயலற்று வருந்துமாறு யாம் அவளைப் பிரிந்ததால் மிகுந்த துன்பத்தில் உள்ளேம் யாம், யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றே – இங்கு யாம் அடைந்துள்ள துன்பத்தை அவள் அறியின் நன்றாகும்

ஐங்குறுநூறு 442, பேயனார், முல்லைத் திணை தலைவன் தனக்குள் சொன்னது
பெருஞ்சின வேந்தன் அருந்தொழில் தணியின்,
விருந்து நனி பெறுதலும் உரியள் மாதோ,
இருண்டு தோன்று விசும்பின் உயர் நிலை உலகத்து
அருந்ததி அனைய கற்பின்,
குரும்பை மணிப் பூண் புதல்வன் தாயே.

பாடல் பின்னணி:  வேந்தற்கு உதவுவதற்குப் பிரிந்த தலைவன் வினை முடியாமையினால் பாசறைக்கண் இருந்து பருவ வரவின்கண் சொன்னது.

பொருளுரைபெரிய சினத்தையுடைய நம் வேந்தன் போராகிய அரிய வினையைக் கைவிடுவானாயின், இருண்டு தோன்றும் வானின்கண் உயர்ந்த நிலையையுடைய வானுலகில் விளங்கும் அருந்ததி போலும் கற்பினை உடையவளாகிய, குரும்பையின் வடிவைக் கொண்ட மணிகளைக் கொண்ட கிண்கிணி அணிந்த என் புதல்வனின் தாய், விருந்தினரை மிகவும் பெற்று விருந்தோம்பல் செய்வதற்கு உரியவள் ஆவாள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – தமிழ்ச் சான்றோரிடையே கற்புப் பெருமை மிக்க மகளிர்க்கு அருந்ததியைக் காட்டல் மரபாயிற்று.  ‘வடமீன் புரையுங் கற்பின் மடமொழி’ (புறநானூறு 122) என்றும், ‘வடமீன் போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் ‘ (பரிபாடல் 5:43–45) என்றும் ‘பெருநல் வானத்து வடமீன் விளங்கும் சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்’ (பெரும்பாணாற்றுப்படை 302–303) என்றும் சான்றோர் கூறிப் போந்தமை அறிக.  குரும்பை – தென்னை பனை ஆகியவற்றின் இளங்காய். குரும்பை (5) – தி. சதாசிவ ஐயர் உரை, ஒளவை துரைசாமி உரை – குரும்பை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பனங்குரும்பை, அ. தட்சிணாமூர்த்தி உரை – தென்னங்குரும்பை.  குரும்பையை ஒத்த மணியுடைய கிண்கிணி – நற்றிணை 269 – குரும்பை மணிப் பூண் பெருஞ்செங்கிண்கிணிப் பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூண் புதல்வன்.  இலக்கணக் குறிப்பு – நனி – மிகுதிப்பொருள் தரும் உரிச்சொல், மாதோ – மாது, ஓ அசைநிலைகள், தாயே – ஏகாரம் அசைநிலை.  வடமீன், சிறுமீன், சாலினி – அருந்ததி, the star Alcor, புறநானூறு 122 – வடமீன் புரையும் கற்பின் மட மொழி அரிவை, ஐங்குறுநூறு 442 – அருந்ததி அனைய கற்பின், கலித்தொகை 2 – வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள், பெரும்பாணாற்றுப்படை 303 – சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல், பரிபாடல் 5 – கடவுள் ஒரு மீன் சாலினி.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  பெருஞ்சின வேந்தன் அருந்தொழில் தணியின் – பெரிய சினத்தையுடைய வேந்தன் அரிய வினையைக் கைவிடுவானாயின், விருந்து நனி பெறுதலும் உரியள் மாதோ – விருந்தினரை மிகவும் பெற்று விருந்தோம்பல் செய்வதற்கு உரியவள், இருண்டு தோன்று விசும்பின் உயர் நிலை உலகத்து அருந்ததி அனைய கற்பின் குரும்பை மணிப் பூண் புதல்வன் தாயே – இருண்டு தோன்றும் வானின்கண் உயர்ந்த நிலையையுடைய வானுலகில் விளங்கும் அருந்ததி போலும் கற்பினை உடையவளாகிய குரும்பையின் வடிவைக் கொண்ட மணிகளைக் கொண்ட கிண்கிணி (கொலுசு) அணிந்த என் புதல்வனின் தாய்

ஐங்குறுநூறு 443, பேயனார், முல்லைத் திணை தலைவன் தனக்குள் சொன்னது
நனி சேய்த்து என்னாது நல் தேர் ஏறிச் சென்று,
இலங்கு நிலவின் இளம் பிறை போலக்
காண்குவெம் தில்ல அவள் கவின் பெறு சுடர்நுதல்,
விண் உயர் அரண் பல வெளவிய
மண்ணுறு முரசின் வேந்து தொழில் விடினே.

பாடல் பின்னணி:  வேந்தற்கு உதவுவதற்குப் பிரிந்த தலைவன் வினை முடியாமையினால் பாசறைக்கண் இருந்து பருவ வரவின்கண் சொன்னது.

பொருளுரைவானளவு உயர்ந்த பகை அரசர்களின் அரண்கள் பலவற்றைக் கைப்பற்றிய, மார்ச்சனை அமைந்த முரசினையுடைய நம் வேந்தன் போர்த் தொழிலைக் கைவிடுவான் ஆனால், எம் ஊர் நெடுந்தொலைவில் உள்ளது என்று எண்ணாது, நல்ல தேரில் ஏறிச் சென்று, ஒளிமிக்க நிலவின் இளம்பிறை போல் உள்ள அவளுடைய அழகு பொருந்திய ஒளியுடைய நெற்றியைக் காண்போம் யாம்.

குறிப்பு:  பருவ வரவின்கண் கூறியது.  அ. தட்சிணாமூர்த்தி உரை – தன் மனைவியின் நுதலைக் ‘கவின்பெறு சுடர் நுதல்’ என்று குறித்தான், அத்தகையது தன் பிரிவினால் இப்பொழுது கவினிழந்தும் ஒளி குன்றியும் இருக்குமே என்ற வருத்தத்தினால்.  அன்றியும், தான் சென்று அடைந்த அக்கணமே, அதுகாறும் பசலையுற்று இருந்த நுதல் மீண்டும் கவின்பெரும் என்ற பொருளில் ‘கவின்பெறு சுடர்நுதல்’ என்றானுமாம்.  மண்ணுறு முரசின் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீராட்டி வணங்குதற்குரிய முரசினையுடைய, ஒளவை துரைசாமி உரை – மார்ச்சனை அமைந்த முரசினையுடைய.  பிறை போன்ற நெற்றி – குறுந்தொகை 129 – பசு வெண்திங்கள் தோன்றியாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறு நுதல், குறுந்தொகை 226 – பிறை என மதி மயக்குறூஉ நுதலும்.  இலக்கணக் குறிப்பு – நனி – மிகுதிப்பொருள் தரும் உரிச்சொல், தில்ல – தில் விழைவின்கண் வந்த இடைச்சொல், ஈறு திரிந்து வந்தது, விடினே – விடின் செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சம், ஏகாரம் அசைநிலை.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  நனி சேய்த்து என்னாது நல் தேர் ஏறிச் சென்று இலங்கு நிலவின் இளம் பிறை போல – ஊர் நெடுந்தொலைவில் உள்ளது என்று எண்ணாது நல்ல தேரில் ஏறிச் சென்று ஒளிமிக்க நிலவின் இளம்பிறை போல், காண்குவெம் தில்ல – காண்போம், அவள் கவின் பெறு சுடர்நுதல் – அவளுடைய அழகு பொருந்திய ஒளியுடைய நெற்றி, விண் உயர் அரண் பல வெளவிய மண்ணுறு முரசின் வேந்து தொழில் விடினே – வானளவு உயர்ந்த அரண்கள் பலவற்றைக் கைப்பற்றிய மார்ச்சனை அமைந்த முரசினையுடைய வேந்தன் போர்த் தொழிலைக் கைவிடுவான் ஆனால்

ஐங்குறுநூறு 444, பேயனார், முல்லைத் திணை தலைவன் தனக்குள் சொன்னது
பெருந்தோள் மடவரல் காண்குவெம் தில்ல,
நீண் மதில் அரணம் பாய்ந்தெனத் தொடி பிளந்து
வைந்நுதி மழுகிய தடங்கோட்டு யானை
வென் வேல் வேந்தன் பகை தணிந்து,
இன்னும் தன்னாட்டு முன்னுதல் பெறினே.

பாடல் பின்னணி:  வேந்தற்கு உதவுவதற்குப் பிரிந்த தலைவன் வினை முடியாமையினால் பாசறைக்கண் இருந்து பருவ வரவின்கண் சொன்னது.

பொருளுரைநீண்ட மதிலாகிய அரண்களைப் பாய்ந்து தாக்கியதால், தொடி உடைந்து கூரிய நுனி மழுங்கிய பெரிய கொம்புகளையுடை யானைகளையும் வெற்றியுடைய வேற்படையையும் உடைய வேந்தன், பகைமை குறைந்து தன் நாட்டிற்குச் செல்லுவதைக் கருதினால், பெரிய தோள்களையுடைய மடப்பம் பொருந்திய நம் தலைவியை யாம் காண்போம்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தொடிபிளந்து மழுகிய கோட்டியானை என்றது, வேந்தன் பல பகை மன்னரை வென்றமை குறித்தவாறு.  இன்னும் என்பது, இப்பொழுதேனும் என்னும் பொருளுடையது.  இத்துணை வென்றி எய்திய இப்பொழுதேனும் என்பதுபட நின்றது.  எனவே வேந்தன் மண்ணாசையால் மீள நினைத்திலன் என்று குறை கூறியவாறாயிற்று. தலைவியின் முயக்கினிமை நினைவான் பெருந்தோள் மடவரல் என்றான்.  இலக்கணக் குறிப்பு – மடவரல் – அன்மொழித்தொகை, தில்ல – தில் விழைவின்கண் வந்த இடைச்சொல், ஈறு திரிந்து வந்தது, மதில் அரணம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை, பாய்ந்தென – என ஏதுப்பொருளில் வந்தது, வை – உரிச்சொல், தட – உரிச்சொல், பெறினே – ஏகாரம் அசைநிலை.  வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

சொற்பொருள்:  பெருந்தோள் மடவரல் காண்குவெம் தில்ல – பெரிய தோள்களையுடைய மடப்பம் பொருந்திய நம் தலைவியை யாம் காண்போம், நீண் மதில் அரணம் பாய்ந்தெனத் தொடி பிளந்து வைந்நுதி மழுகிய தடங்கோட்டு யானை வென் வேல் வேந்தன் பகை தணிந்து இன்னும் தன்னாட்டு முன்னுதல் பெறினே – நீண்ட மதிலாகிய அரண்களைப் பாய்ந்து தாக்கியதால் தொடி உடைந்து கூரிய நுனி மழுங்கிய பெரிய கொம்புகளையுடை (மருப்புகளையுடைய, தந்தங்களையுடைய) யானைகளையும் வெற்றியுடைய வேற்படையையும் உடைய வேந்தன் பகைமை குறைந்து தன் நாட்டிற்குச் செல்லுவதைக் கருதினால் (தொடி – யானையின் மருப்புகளில் அணியப்படும் வளையம்)

ஐங்குறுநூறு 445, பேயனார், முல்லைத் திணை தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
புகழ் சால் சிறப்பின் காதலி புலம்பத்
துறந்து வந்தனையே, அருந்தொழில் கட்டூர்
நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை
உள்ளுதொறும், கலிழும் நெஞ்சம்,
வல்லே எம்மையும் வர விழைத்தனையே.

பாடல் பின்னணி:  பாசறைக்கண் இருந்த தலைவன் பருவ வரவின்கண் தலைவியை நினைந்து, நெஞ்சொடு புலந்து சொன்னது.

பொருளுரைசெய்தற்கரிய தொழில் அமைந்த பாசறைக்கண் தங்கள் நல்ல காளைகளைத் தழுவி ஆக்கள் செல்லும் மாலைப் பொழுதை நினைக்கும் பொழுதெல்லாம் கலங்கும் நெஞ்சமே!  புகழ் நிறைந்த சிறப்புடைய காதலி தனிமைத் துயரில் வருந்துமாறு அவளைத் துறந்துவிட்டு வந்துவிட்டாயே.  எம்மையும் விரைந்து உன்னுடன் வருமாறு நீ செய்தாய். இப்பொழுது நீ வருந்துவது எதற்காக?

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – புணர்ந்து செல்லும் மாடுகளைத் தான் நினைக்கும் பொழுதெல்லாம் தன் நெஞ்சம் கலுழ்வதாகக் கூறியது, அம்மாலைக் காலத்தே தன் காதலியும் இத்தகு காட்சியைக் கண்டு வருந்துவாள் என்பது பற்றியுமாகும்.  தன் நெஞ்சத்தினைத் தன்னினும் வேறான ஒரு பொருள் போலத் தனியே நிறுத்தி, ‘நீ வந்ததோடு அமையாது எம்மையும் வர விடுத்தனையே’ என்று கடிந்து கொண்டான்.  இஃதோர் இலக்கிய உத்தியாகும்.  இலக்கணக் குறிப்பு – தழீஇ – செய்யுளிசை அளபெடை, வந்தனையே – ஏகாரம் அசைநிலை, நெஞ்சம் – அண்மை விளி, எம்மையும் – உம்மை இறந்தது தழுவியது, எம்மை – தன்மைப் பன்மை, விழைந்தனையே – ஏகாரம் அசைநிலை.  நாகு – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

சொற்பொருள்:  புகழ் சால் சிறப்பின் காதலி புலம்பத் துறந்து வந்தனையே – புகழ் நிறைந்த சிறப்புடைய காதலி தனிமைத் துயரில் வருந்துமாறு அவளைத் துறந்துவிட்டு வந்துவிட்டாயே, அருந்தொழில் கட்டூர் நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை உள்ளுதொறும் – செய்தற்கரிய தொழில் அமைந்த பாசறைக்கண் தங்கள் நல்ல காளைகளைத் தழுவி ஆக்கள் செல்லும் மாலைப் பொழுதை நினைக்கும்பொழுதெல்லாம், கலிழும் நெஞ்சம் – கலங்கும் நெஞ்சமே, வல்லே எம்மையும் வர விழைத்தனையே – விரைந்து எம்மையும் உன்னுடன் வருமாறு நீ செய்தாய்

ஐங்குறுநூறு 446, பேயனார், முல்லைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
முல்லை நாறும் கூந்தல் கமழ் கொள
நல்ல காண்குவ மாஅயோயே!
பாசறை அரும் தொழில் உதவி நம்
காதல் நல் நாட்டுப் போதரும் பொழுதே.

பாடல் பின்னணி:  பாசறைக்கண் இருந்த தலைவன் பருவ வரவின்கண் உருவு வெளிப்பாடு கண்டு சொல்லியது.

பொருளுரை:   மாமை நிறமுடையவளே!  பாசறையில் தங்கி, கடுமையான போர்த் தொழிலை முடித்து விட்டு, காதலுக்குரிய நம்முடைய அன்புடைய நல்ல நாட்டிற்குத் திரும்பி வரும் பொழுது, நின் கூந்தலானது மேலும் புதுமணம் கொள்ளும்படியாக நல்லதை நிகழ்த்திக் காண்போம்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – தான் குறித்த பருவம் வரக்கண்ட தலைவன் உள்ளத்தில் தலைவியது நினைவு பெருகியெழுதலும், அவளது உரு வெளிப்பட்டுத் தோன்றக்கண்டு தன்னை மறந்து அதனொடு உரையாடுவானாய், மாஅயோயே என்றும், தன் காதலியுடன் கலந்து உரையாடிக் களித்து மகிழும் அன்பு சிறக்கும் நாடாகலின், காதல் நன்னாடு என்றும் கூறினான்.  இலக்கணக் குறிப்பு – கொள –- கொள்ள என்பதன் விகாரம், மாஅயோயே – அளபெடை, ஏகாரம் அசைநிலை, பொழுதே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  முல்லை நாறும் – முல்லையின் மணமுடைய, கூந்தல் கமழ் கொள – கூந்தல் நறுமணம் கொள்ள, நல்ல – நல்லது, காண்குவம் – நாம் காண்போம், மாஅயோயே – மாமை நிறமுடையவளே, பாசறை – பாசறை, அருந்தொழில் – கடினமானத் தொழில், உதவி – உதவி, நம் – நம், காதல் – காதல், அன்பு, நல் நாட்டு – நல்ல நாடு, போதரும் பொழுதே – செல்லும் பொழுது

ஐங்குறுநூறு 447, பேயனார், முல்லைத் திணை தலைவன் தனக்குள் சொன்னது
பிணி வீடு பெறுக மன்னவன் தொழிலே,
பனி வளர் தளவின் சிரல் வாய்ச் செம்முகை
யாடு சிறை வண்டு அவிழ்ப்பப்,
பாடல் சான்ற காண்கம் வாணுதலே.

பாடல் பின்னணி:  வேந்தன் கடமைக்குப் பிரிந்த தலைவன் வினை முற்றி மீளும் விருப்பம் உடையவனாய்ப் பருவ வரவின்கண் தலைவியை நினைந்து சொன்னது.

பொருளுரைதான் மேற்கொண்ட போர்த் தொழிலிலின் பிணிப்பிலிருந்து நம் மன்னன் விடுதலைப் பெருவானாக!  பனிக்காலத்தில் வளரும் செம்முல்லையின் கிச்சிலிப் பறவையின் அலகு போன்ற சிவந்த அரும்புகளை, அசைகின்ற சிறகுகளையுடைய வண்டுகள், ஊதுவதற்கு ஏற்ப மலரச் செய்த இக்கார்ப்பருவத்தில் யாம் காண்போம் ஒளிபொருந்திய நெற்றி உடையவளை.

குறிப்பு:  பருவ வரவின்கண் கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நாம் நம் காதலிக்குக் குறித்துச் சொன்ன பருவம் வந்துற்றதே என்று பரிவான், தளவின் செம்முகையை ஆடுவண்டு அவிழ்ப்ப அவை பாடல் சான்றன என்றான் என்னை?  ‘தண் பெயல் அளித்த பொழுதின், ஒண் சுடர்த் தோன்றியும், தளவமும் உடைத்தே’ (ஐங்குறுநூறு 440) என இவரே முன்னரும் கூறுதல் காண்க.  ஒப்புமை – நற்றிணை 61–8 – சிரல் வாய் உற்ற தளவின்.  இலக்கணக் குறிப்பு – தொழிலே – ஏகாரம் அசைநிலை, வாணுதலே – வாணுதல் அன்மொழித்தொகை, ஏகாரம் அசைநிலை, காண்கம் – தன்மைப் பன்மை, ஏகாரம் அசைநிலை.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 71).

சொற்பொருள்:  பிணி வீடு பெறுக மன்னவன் தொழிலே – தான் மேற்கொண்ட போர்த் தொழிலிலின் பிணிப்பிலிருந்து நம் மன்னன் விடுதலைப் பெருவானாக, பனி வளர் தளவின் சிரல் வாய்ச் செம்முகை யாடு சிறை வண்டு அவிழ்ப்ப – பனிக்காலத்தில் வளரும் செம்முல்லையின் கிச்சிலிப் பறவையின் அலகு போன்ற சிவந்த அரும்புகளை அசைகின்ற சிறகுகளையுடைய வண்டுகள் மலரச் செய்ததால், பாடல் சான்ற – பாடுதற்கு ஏற்ப, காண்கம் வாணுதலே – காண்போம் ஒளிபொருந்திய நெற்றி உடையவளை

ஐங்குறுநூறு 448, பேயனார், முல்லைத் திணை தலைவன் தனக்குள் சொன்னது
தழங்குரல் முரசம் காலை இயம்பக்
கடுஞ்சின வேந்தன் தொழில் எதிர்ந்தனனே,
மெல்லவல் மருங்கின் முல்லை பூப்பப்
பொங்கு பெயல் கனைதுளி கார் எதிர்ந்தன்றே,
அம் சில் ஓதியை உள்ளுதொறும்,
துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே.

பாடல் பின்னணி:  கார்ப்பருவத்தில் மீள்வதாகக் கூறிப் பிரிந்த தலைவன், கார்காலம் வந்தபின்பும் கடமை முடியாத நிலையில், தன் அரசனின் நிலை, கார்ப்பருவ வரவு, தன்னிலை ஆகியவற்றைக் கூறி ஆற்றாது வருந்தியது.

பொருளுரைமுழங்கும் ஓசையுடைய முரசுகள் காலையில் ஒலித்து அப்பொழுதே உணர்த்த, பெரும் சினமுடைய வேந்தன் போர்க்கடமையை மேற்கொண்டான். மெல்லிய பள்ளங்களில் முல்லைக் கொடிகள் மலரும்வண்ணம், ஆரவாரத்துடன் மிக்க மழை பெய்வதைக் கார்ப்பருவம் மேற்கொண்டது. அழகிய மெல்லிய கூந்தலை உடைய என் காதலியை எண்ணும்பொழுதெல்லாம் உறங்காது, மனம் சுழல்கின்ற நிலைமையை மேற்கொண்டுள்ளோம்.

குறிப்பு:  பருவ வரவின்கண் கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – சினந்தணிதற்கு ஏதுவாகப் பகைவர் பலரை வென்றும் மண்ணாசையால் மேலும் அரசன் போர் மேற்கொள்கின்றான் எனக் குறை கூறுவான் ‘கடுஞ்சின வேந்தன்’ என்றான். கார்ப்பருவம் போர்த்தொழிலுக்கு ஏற்ற பருவமாகாதிருந்தும் மன்னன் போர் தொடங்குகின்றான் என்பது அவன் கூறும் குறை.  முல்லை பூக்கும் பருவத்தே ஒருதலையாக மீண்டு வருவேன் ஆற்றுக என்று தலைவிக்குக் கூறி வந்தான் ஆகலின் ‘முல்லை பூப்பக் கார் எதிர்ந்தன்று’ என்றான்.  எதிர்ந்தன்றே (4) – ஒளவை துரைசாமி உரை – தொடங்கா நின்றது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மேற்கொண்டது.  இலக்கணக் குறிப்பு – தழங்குரல் – தழங்கு குர.ல் என்பதன் விகாரம், எதிர்ந்தனனே – ஏகாரம் அசைநிலை, அம் சில் ஓதி – அன்மொழித்தொகை, எதிர்ந்தன்றே – ஏகாரம் அசைநிலை, எதிர்ந்தனமே – தன்மைப் பன்மை, ஏகாரம் அசைநிலை.  அலமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).

சொற்பொருள்:  தழங்குரல் முரசம் காலை இயம்ப – முழங்கும் ஓசையுடைய முரசுகள் காலையில் ஒலிக்க, கடுஞ்சின வேந்தன் தொழில் எதிர்ந்தனனே – பெரும் சினமுடைய வேந்தன் போர்க்கடமையை மேற்கொண்டான், மெல் அவல் மருங்கின் முல்லை பூப்பப் பொங்கு பெயல் கனைதுளி கார் எதிர்ந்தன்றே – மெல்லிய பள்ளங்களில் முல்லைக் கொடிகள் மலரும்வண்ணம் ஆரவாரத்துடன் மிக்க மழை பெய்வதைக் கார்ப்பருவம் மேற்கொண்டது, அம் சில் ஓதியை உள்ளுதொறும் துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே – அழகிய மெல்லிய கூந்தலை உடைய என் காதலியை எண்ணும்பொழுதெல்லாம் உறங்காது மனம் சுழல்கின்ற நிலைமையை மேற்கொண்டுள்ளோம்

ஐங்குறுநூறு 449, பேயனார், முல்லைத் திணை தலைவன் தனக்குள் சொன்னது
முரம்பு கண் உடையத் திரியும் திகிரியொடு
பணை நிலை முனைஇய வயமாப் புணர்ந்து,
திண்ணிதின் மாண்டன்று தேரே,
ஒண்ணுதல் காண்குவம், வேந்து வினை முடினே.

பாடல் பின்னணி:  தன் வேந்தனொடு பாசறையில் இருந்தான் தலைவன்.  பகைவரிடம் திறை பெற்று மீள எண்ணிய வேந்தன் மனம் மாறிப் போர் புரிய முடிவு செய்தான். அப்பொழுது தலைவியை நினைந்த தலைவன் சொன்னது.

பொருளுரைபரல் கற்கள் நிறைந்த மேட்டு நிலம் உடையுமாறு செல்லும் உருளையுடன், பந்தியில் நிற்பதை வெறுத்த வலிமையான குதிரைகள் பூட்டிய தேர், திண்மையுடையதாய் மாட்சிமைப்பட்டது, யாம் செல்வதற்கு. வேந்தன் போர்த் தொழிலை விடுவானாயின், ஒளிரும் நெற்றியையுடைய எம் காதலியை யாம் காண்போம்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – இது வேந்தன் திறைகொண்டு மீள்வுழித் தானும் சமைந்த தேரை அமைத்துக் கொண்டு திண்ணிதின் மாண்டன்று தேர் எனப் பாகனொடு கூறியவழி, அவ்வேந்தன் திறை வாங்காது வினைமேற் சென்றானாகப் பாகனை நோக்கிக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.  இலக்கணக் குறிப்பு – தேரே – ஏகாரம் அசைநிலை, ஒண்ணுதல் – அன்மொழித்தொகை, காண்குவம் – தன்மைப் பன்மை, முடினே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  முரம்பு கண் உடையத் திரியும் திகிரியொடு – பரல் கற்கள் நிறைந்த மேட்டு நிலம் உடையுமாறு செல்லும் உருளையுடன் (சக்கரத்துடன்), பணை நிலை முனைஇய வயமாப் புணர்ந்து திண்ணிதின் மாண்டன்று தேரே – பந்தியில் நிற்பதை வெறுத்த வலிமையான குதிரைகள் பூட்டிய தேர் திண்மையுடையதாய் மாட்சிமைப்பட்டது, ஒள் நுதல் காண்குவம் வேந்து வினை முடினே – ஒளிரும் நெற்றியையுடைய எம் காதலியை யாம் காண்போம் வேந்தன் போர்த் தொழிலை விடுவானாயின்

ஐங்குறுநூறு 450, பேயனார், முல்லைத் திணை தலைவன் தனக்குள் சொன்னது
முரசு மாறு இரட்டும் அருந்தொழில் பகை தணிந்து,
நாடு முன்னியரோ பீடு கெழு வேந்தன்
வெய்ய உயிர்க்கும் நோய் தணியச்
செய்யோள் இளமுலைப்  படீஇயர் என் கண்ணே.

பாடல் பின்னணி:  வேந்தனின் போர்த் தொழிலுக்காகப் பிரிந்த தலைவன், வினை முற்றாமையின், பாசறைக்கண் இருந்து தன் விருப்பத்தைத் தன்னுள் கூறியது.

பொருளுரைபெருமை பொருந்திய வேந்தன், முரசுகள் மாறுபட்டு முழங்கும் அரிய போர்த்தொழிலைக் கைவிட்டுப், பகை தணிந்து, தன் நாட்டிற்குச் செல்ல விரும்புவானாக.  வெம்மை மிக்க பெருமூச்சு விடும்படி வருத்தும் என் காதல் நோய் தணிய, செவ்விய பண்புகளைக் கொண்ட என் காதலியின் இள முலை மேல் கிடந்து துயில்வனவாக என் கண்கள்.

குறிப்பு:  பழைய உரை – மாறு இரட்டும் என்றது, மாற்றார் முரசொலிக்கு மாறுபட்டு எழும் என்றவாறு.  ஒளவை துரைசாமி உரை – குறித்த பருவம் வந்தும், காதலன் வந்திலாமை எண்ணியும் அதுவே பற்றுக்கோடாக தன்கண் எழுந்த வேட்கை மிக்கும் வருந்தும் தலைவியது வருத்தத்தை வெய்ய உயிர்க்கும் நோய் என்றும், தன் சொல்வழி இருக்கும் அவளது கற்பு நலத்தை வியந்து செய்யோள் என்றும், தனது ஆராக்காதல் மிகுதி தோன்ற, இளமுலைப் படீஇயர் என் கண் என்றும் கூறினான்.  இலக்கணக் குறிப்பு – முன்னியரோ – ஓகாரம் அசைநிலை, படீஇயர் – செய்யுளிசை அளபெடை, கண்ணே – ஏகாரம் அசைநிலை.  செய்யோள் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – செவ்விய பண்புகளையுடையவள்.

சொற்பொருள்:  முரசு மாறு இரட்டும் அருந்தொழில் பகை தணிந்து – முரசுகள் மாறுபட்டு முழங்கும் அரிய போர்த்தொழிலைக் கைவிட்டுப் பகை தணிந்து, நாடு முன்னியரோ பீடு கெழு வேந்தன் – தன் நாட்டிற்குச் செல்ல விரும்புவானாக பெருமை பொருந்திய வேந்தன், வெய்ய உயிர்க்கும் நோய் தணியச் செய்யோள் இளமுலைப்  படீஇயர் என் கண்ணே – வெம்மை மிக்க பெருமூச்சு விடும்படி வருத்தும் என் காதல் நோய் தணிய செவ்விய பண்புகளைக் கொண்ட என் காதலியின் இள முலை மேல் கிடந்து துயில்வனவாக என் கண்கள்

பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து

பாடல்கள் 451 – 460 – தலைவன் குறித்துச் சென்ற கார்ப்பருவம் வந்தும், அவன் வராமை கண்ட தலைவியின் கூற்று இவை.

ஐங்குறுநூறு 451, பேயனார், முல்லைத் திணை தலைவி தோழியிடம் சொன்னது
கார் செய் காலையொடு கையறப் பிரிந்தோர்
தேர்தரு விருந்தில் தவிர்குதல் யாவது,
மாற்று அருந்தானை நோக்கி
ஆற்றவும் இருத்தல், வேந்தனது தொழிலே?

பாடல் பின்னணி:  வேந்தனின் போர்த் தொழிலுக்கு உதவும்பொருட்டுப் பிரிந்த தலைவன் குறித்த பருவம் நினைந்து ஆற்றியிருந்தாள் தலைவி. அப்பருவம் வந்தும் அவன் வரவில்லை.  அப்பொழுது பாசறையிலிருந்து வந்த சிலர், அரசன் போரை இன்னும் கைவிடவில்லை எனக் கூறியதைக் கேட்டு வருந்திய தலைவி சொன்னது.

பொருளுரைகார்ப்பருவம் வந்த இந்த வேளையில், நம்மைச் செயலற்று இருக்குமாறுப் பிரிந்த நம் தலைவர், தேரில் வந்து நம் இல்லில் விருந்தாய் தங்குதல் எவ்வாறு இயலும்? பகைவரால் தொலைத்தற்கு அரிய தன் தானையை நோக்கிப் பாசறையின்கண் மேலும் நீடித்து இருத்தல் வேந்தனது செயல் ஆயிற்று. யான் எங்ஙனம் ஆற்றியிருப்பேன்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கார்ப்பருவம் வருமுன்னர் அவர் வருவர் என்னும் தெளிவே பற்றுக்கோடாக யாம் உயிர் தாங்கியிருக்கின்றோம்.  இப்பருவத்தே அவர் வந்திலராயின் யாம் கையற்று இறந்துபடுதல் ஒருதலை என்பாள், கார் செய் காலையொடு கையற என்றாள்.  தேரோடு வந்து தனக்கு விருந்தினராகுஞ் செயலைத் தேர்தரு விருந்து என்றாள்.  அதன்கண் தவிர்தலாவது, வாராதிருத்தல் காண்க.  இலக்கணக் குறிப்பு – காலையொடு – அ. தட்சிணாமூர்த்தி உரை – ஒடு உருபு கண் உருபின் பொருளை உணர்த்திற்று, ஒளவை துரைசாமி உரை – ஒடு உருபு ஆனுருபின் பொருட்டு, இஃது உருபு மயக்கம், தொழிலே – ஏகாரம் அசைநிலை.  தவிர்குதல் (2) – ஒளவை துரைசாமி உரை – தங்குதல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தவிர்தல், வாராதிருத்தல், அ. தட்சிணாமூர்த்தி உரை – தங்குதல்,

சொற்பொருள்:  கார் செய் காலையொடு கையறப் பிரிந்தோர் தேர்தரு விருந்தில் தவிர்குதல் யாவது – கார்ப்பருவம் வந்த இந்த வேளையில் நம்மைச் செயலற்று இருக்குமாறுப் பிரிந்தவர் தேரில் வந்து நம் இல்லில் தங்குதல் எவ்வாறு இயலும், மாற்று அருந்தானை நோக்கி ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே – பகைவரால் தொலைத்தற்கு அரிய தன் தானையை நோக்கி மேலும் நீடித்தல் வேந்தனது செயல் ஆயிற்று

ஐங்குறுநூறு 452, பேயனார், முல்லைத் திணை தலைவி தோழியிடம் சொன்னது
வறந்த ஞாலம் தளிர்ப்ப வீசிக்
கறங்குரல் எழிலி கார் செய்தன்றே,
பகை வெங்காதலர் திறைதரு முயற்சி,
மென் தோள் ஆய் கவின் மறையப்
பொன் புனை பீரத்து அலர் செய்தன்றே.

பாடல் பின்னணி:  குறித்த பருவத்தில் வராத தலைவன் பகைமேல் முயல்கின்ற முயற்சி கேட்ட தலைவி கூறியது.

பொருளுரைநீரின்றி உலர்ந்த நிலம் செழிப்புற, மழை நீரைச் சொரிந்து முழக்கத்துடன் முகில்கள் கார்ப்பருவத்தைச் செய்தன.  பகைவர்களை எதிர்த்து வெல்லுதற்கு விருப்பம் மிக்க காதலர், அவர்கள் தரும் திறையைப் பெறுவதற்கு முயலும் முயற்சி, என் மென்மையான தோள்களின் அழகு மறையுமாறு, பொன்னிறம் உடைய பீர்க்கை மலர் போன்ற பசலையைச் செய்தது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவர் குறித்த பருவம் வந்து வறந்த ஞாலத்தைச் செழிக்கச் செய்கின்றது.  அவர் வந்து மெலிந்த என்னைத் தளிர்ப்பச் செய்திலர்.  வறிய பொருளீட்டல் முயற்சியே உடையராயினர்.  யானோ இறந்துபடுவன் என்று இரங்கியபடியாம்.  ஆய் கவின் (4) – ஒளவை துரைசாமி உரை – அழகிய நலம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேய்ந்த நலம், அ. தட்சிணாமூர்த்தி உரை – பலரும் ஆராய்வதற்குக் காரணமான அழகு.  இலக்கணக் குறிப்பு – செய்தன்றே – ஏகாரம் அசைநிலை, வறந்த – வறம் என்னும் சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சம்.

சொற்பொருள்:  வறந்த ஞாலம் தளிர்ப்ப வீசிக் கறங்குரல் எழிலி கார் செய்தன்றே – நீரின்றி உலர்ந்த நிலம் செழிப்புற மழை நீரைச் சொரிந்து முழக்கத்துடன் முகில்கள் கார்ப்பருவத்தைச் செய்தன, பகை வெங்காதலர் – பகைவர்களை எதிர்த்து வெல்லுதற்கு விருப்பம் மிக்க காதலர், திறைதரு முயற்சி – அவர்கள் தரும் திறையைப் பெறுவதற்கு முயலும் முயற்சி, மென் தோள் ஆய் கவின் மறையப் பொன் புனை பீரத்து அலர் செய்தன்றே – என் மென்மையான தோள்களின் அழகு மறையுமாறு பொன்னிறம் உடைய பீர்க்கை மலர் போன்ற பசலையைச் செய்தது

ஐங்குறுநூறு 453, பேயனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும்
வெங்குரல் புள்ளினம் ஒலிப்ப, உதுக்காண்,
கார் தொடங்கின்றால் காலை, அதனால்
நீர் தொடங்கினவால், நெடுங் கணவர்
தேர் தொடங்கின்றால் நம் வயிநானே.

பாடல் பின்னணி:  பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைவி தோழியிடம் சொன்னது.

பொருளுரை:   பள்ளங்கள் தோறும் தேரைகள் ஒலிக்கின்றன.  மேலிடந்தோறும் பறவைகள் விரும்பத்தக்க குரலில் ஒலிக்கின்றன.  அங்கே பார்.  மழைக் காலம் தொடங்கி விட்டது போல் தோன்றுகின்றது.  அதனால் என் நீண்ட கண்களில் இருந்து நீர் வடிகின்றது. என் கணவரின் தேர் நம்மை நோக்கி வரத் தொடங்கவில்லை.

குறிப்பு:  பழைய உரை – தேர் தொடங்கின்றால் என்பது, தேர் வரத் தொடங்குதல் இல்லையாயிற்று என்றவாறு.மிசைதொறும் (1) – ஒளவை துரைசாமி உரை – குன்றிடந்தோறும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மேட்டு நிலங்களில் எல்லாம், அ. தட்சிணாமூர்த்தி உரை – மேட்டு நிலந்தோறும், தி. சதாசிவ ஐயர் உரை – மேலிடந்தோறும். தொடங்கின்றால் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தொடங்கிவிட்டது.  தொடங்கின்றால் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரத் தொடங்குதல் இல்லை.  இலக்கணக் குறிப்பு – தொடங்கின்றால் – ஆல் அசைநிலை, தொடங்கினவால் – ஆல் அசைநிலை, வயினானே – ஏகாரம் அசைநிலை.  தவளை ஆரவாரித்தல் – இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை தட்டைப் பறையின் கறங்கு நாடன் – குறுந்தொகை 193, ஏறுடைப் பெருமழை பொழிந்தென, அவல் தோறு ஆடுகளப் பறையின் வரி நுணல் கறங்க – அகநானூறு 364, தேரை தெவிட்டக் கார் தொடங்கின்றே காலை – ஐங்குறுநூறு 468.

சொற்பொருள்:  அவல் தொறும் – பள்ளங்கள் தோறும், தேரை தெவிட்ட – தேரைக் கத்த,  மிசை தொறும் – மேலிடந்தோறும், வெங்குரல் – விரும்பத்தக்க குரலில், புள்ளினம் ஒலிப்ப – பறவைகள் ஒலித்தன, உதுக்காண் – அங்கே பார், கார் தொடங்கின்றால் காலை –  மழைக்காலம் தொடங்கி விட்டது, அதனால் நீர் தொடங்கினவால் – பிரிவால் என் கண்களில் நீர் வடிகின்றது, நெடும் – நீண்ட  (நெடிய கண்கள்), கணவர் தேர் தொடங்கின்றால் நம் வயிநானே – என் கணவருடைய தேர் நம்மை நோக்கி வரத்  தொடங்கவில்லை

ஐங்குறுநூறு 454, பேயனார், முல்லைத் திணை தலைவி தோழியிடம் சொன்னது
தளவின் பைங்கொடி தழீஇப், பையென
நிலவின் அன்ன நேர் அரும்பு பேணிக்,
கார் நயந்து எய்தும் முல்லை, அவர்
தேர் நயந்து உறையும், என் மாமைக் கவினே.

பாடல் பின்னணி:  பருவ வரவின்கண் ஆற்றாளாகிய தலைவி தோழியிடம் சொன்னது.

பொருளுரைசெம்முல்லையின் பசிய கொடிகளைச் சூழ்ந்து, மெதுவாக, நிலவின் ஒளி போன்ற நேரிய அரும்புகளைப் பாதுகாத்துக் கார்ப்பருவம் வந்தவுடன் விரும்பி அவற்றை மலரச் செய்யும் முல்லைக் கொடிகள். அவ்வாறே, தலைவரின் தேர் வரவை விரும்பிக் காத்திருக்கின்றது என் மாந்தளிர் போன்ற அழகு.  அவர் வந்தால், என் அழகும் சிறப்புறும்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – முல்லை, கார் வரவு நோக்கி அரும்பு பேணி, வந்தவழி மலர்தலை எய்துவது போலக் காதலன் தேர்வரவு நோக்கியிருக்கும் தன் மாமைக்கவின் வந்ததும் விளங்கித் தோன்றும் என்பாள், அவர் தேர் நயந்து உறையும் என் மாமைக் கவின் என்றாள்.  மாமைக் கவின் – ஒளவை துரைசாமி உரை, ஐங்குறுநூறு 134 – மாந்தளிரின் தன்மையினையுடைய அழகு, ஒளவை துரைசாமி உரை, ஐங்குறுநூறு 286 – மாந்தளிர் போலும் நிறம் திகழும் அழகு.  இலக்கணக் குறிப்பு – தழீஇ – செய்யுளிசை அளபெடை, நிலவின் – இன் சாரியை, அன்ன – உவம உருபு, கவினே – ஏகாரம் அசைநிலை.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – முல்லை, கார் வரவு நோக்கி அரும்பு பேணி, வந்தவழி மலர்தலை எய்துவது போலக் காதலன் தேர்வரவு நோக்கியிருக்கும் தன் மாமைக்கவின் வந்ததும் விளங்கித் தோன்றும் என்பாள், ‘அவர் தேர் நயந்து உறையும், என் மாமைக் கவினே’ என்றாள்.

சொற்பொருள்:  தளவின் பைங்கொடி தழீஇப் பையென நிலவின் அன்ன நேர் அரும்பு பேணிக் கார் நயந்து எய்தும் முல்லை – செம்முல்லையின் பசிய கொடிகளைச் சூழ்ந்து மெதுவாக நிலவின் ஒளி போன்ற நேரிய அரும்புகளைப் பாதுகாத்துக் கார்ப்பருவம் வந்தவுடன் விரும்பி மலரச் செய்யும் முல்லைக் கொடிகள், அவர் தேர் நயந்து உறையும், என் மாமைக் கவினே – தலைவரின் தேர் வரவை விரும்பிக் காத்திருக்கின்றது என் மாந்தளிர் போன்ற அழகு

ஐங்குறுநூறு 455, பேயனார், முல்லைத் திணை தலைவி தோழியிடம் சொன்னது
அரசு பகை தணிய, முரசு படச் சினைஇ,
ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே,
அளியவோ அளிய தாமே, ஒளி பசந்து
மின் இழை ஞெகிழச் சாஅய்த்
தொன்னலம் இழந்த என் தட மென்தோளே.

பாடல் பின்னணி:  ஆற்றுவிக்கும் தோழியிடம் தலைவி சொன்னது.

பொருளுரைஅரசனின் போர்ப்பகைமை தணியவும், முரசுகளின் ஒலிகள் அடங்கவும், சினத்துடன் பெரும் முழக்கத்தையுடைய முகில்கள் கார்ப்பருவத்தைத் தொடங்கின.  மிகவும் அளியத்தக்கன, ஒளி குன்றி, பசலை அடைந்து, மின்னுகின்ற அணிகலன்கள் நெகிழ்ந்து நீங்கும்படியாகத் தம் பண்டைய அழகை இழந்த என் பெரிய மெல்லிய தோள்கள்.

குறிப்பு:  பழைய உரை – அரசு பகை தணிந்து எல்லாரும் மீளும்வண்ணம் கார் வந்தது.  இத் தோளுக்கு உரியவரோ போதரார் என்றவாறு.  இலக்கணக் குறிப்பு – தொடங்கின்றே – ஏகாரம் அசைநிலை, அளியவோ அளிய – அடுக்கு விகுதி, தாமே – தாம், ஏ அசைநிலைகள், சாஅய் – அளபெடை, மென்தோளே – ஏகாரம் அசைநிலை.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  சாஅய் – ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (தொல்காப்பியம், உரியியல் 32).

சொற்பொருள்:  அரசு பகை தணிய முரசு படச் சினைஇ ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே – அரசனின் போர்ப்பகைமை தணியவும் முரசுகளின் ஒலிகள் அடங்கவும் சினத்துடன் பெரும் முழக்கத்தையுடைய முகில்கள் கார்ப்பருவத்தைத் தொடங்கின, அளியவோ அளிய தாமே – மிகவும் அளியத்தக்கன, ஒளி பசந்து மின் இழை ஞெகிழச் சாஅய்த் தொன்னலம் இழந்த என் தட மென்தோளே – ஒளி குன்றி பசலை அடைந்து மின்னுகின்ற அணிகலன்கள் நெகிழ்ந்து நீங்கும்படியாகத் தம் பண்டைய அழகை இழந்த என் பெரிய மெல்லிய தோள்கள்

ஐங்குறுநூறு 456, பேயனார், முல்லைத் திணை தலைவி தோழியிடம் சொன்னது
உள்ளார் கொல்லோ தோழி, வெள் இதழ்
பகல் மதி உருவின் பகன்றை மாமலர்
வெண்கொடி ஈங்கை பைம் புதல் அணியும்
அரும் பனி அளைஇய கூதிர்,
ஒருங்கு இவண் உறைதல் தெளித்து அகன்றோரே?

பாடல் பின்னணி:  குறித்த பருவம் வரவும் தலைவன் வராததால், ஆற்றாள் ஆகிய தலைவி தோழியிடம் சொன்னது.

பொருளுரைதோழி! வெள்ளை நிற இதழ்களையும் பகல் நேரத்தில் தோன்றும் நிலவைப் போன்ற உருவத்தையும் கொண்ட பகன்றையின் பெரிய மலர்கள் வெள்ளை நிறக் கொடியாகிய ஈங்கையின் பசிய புதர் மேல் மலர்ந்து அழகுற மலரும், பொறுத்தற்கு அரிய பனியுடன் கூடிய குளிர் காலத்தில், நம்முடன் இங்குக் கூடி வாழ்வதற்கு ஏற்ப, கார்ப்பருவத்தில் வருவேன் என நம்மிடம் தெளிவாகக் கூறி அகன்ற நம் தலைவர், நம்மை நினைப்பாரா?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – கூதிர்க்காலத்தே மலர்தற்குரிய பகன்றை கார்ப்பருவத்தே மலர்ந்து ஈங்கைப்புதலை அணிசெய்ய, நம் காதலர் வருவதற்குரிய கார்ப்பருவம் வந்தும், தாம் வந்து நலன் தாராராயின், இது தாம் குறித்த பருவமென்பதை அறவே மறந்தாரே ஆவர் என்றவாறு.  ஆகவே, யான் ஆற்றுமாறு என்னை என்பதாம்.  பகல் மதி உருவின் பகன்றை (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாதித் திங்கள் வடிவினையுடைய பகன்றை, ஒளவை துரைசாமி உரை – பகற் போதில் தோன்றும் திங்களைப் போலும் உருவினையுடைய பகன்றை.  வெண்கொடி ஈங்கை பைம்புதல் அணியும் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இண்டங்கொடி அரில் படப் பின்னிக் கிடத்தலின் புதர் எனப்பட்டது.   இலக்கணக் குறிப்பு – கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசைநிலை, அளைஇய – சொல்லிசை அளபெடை, அகன்றோரே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  உள்ளார் கொல்லோ – நினைப்பாரா அவர், தோழி – தோழி, வெள் இதழ் பகல் மதி உருவின் பகன்றை மாமலர் வெண்கொடி ஈங்கை பைம் புதல் அணியும் – வெள்ளை நிற இதழ்களையும் பகல் நேரத்தில் தோன்றும் நிலவைப் போன்ற உருவத்தையும் கொண்ட பகன்றையின் பெரிய மலர்கள் வெள்ளை நிறக் கொடியாகிய ஈங்கையின் பசிய புதர் மேல் மலர்ந்து அழகுற மலரும் (பகன்றை – jalap flowers, Ipomaea turpethum, ஈங்கை – mimosa vine, Mimosa Pudica), அரும் பனி அளைஇய கூதிர் – அரிய பனியுடன் கூடிய குளிர் காலத்தில், ஒருங்கு இவண் உறைதல் – நம்முடன் இங்குக் கூடி வாழ்தல், தெளித்து அகன்றோரே – தெளிவாகக் கூறி அகன்றவர்

ஐங்குறுநூறு 457, பேயனார், முல்லைத் திணை தலைவி தோழியிடம் சொன்னது
பெய் பனி நலிய உய்தல் செல்லாது,
குருகினம் நரலும் பிரிவருங் காலைத்,
துறந்து அமைகல்லார் காதலர்,
மறந்து அமைகல்லாது, என் மடங்கெழு நெஞ்சே.

பாடல் பின்னணி:  பருவ வரவின்கண் ஆற்றுவிக்கும் தோழியிடம் தலைவி சொன்னது.

பொருளுரைபெய்யும் பனி வருத்துவதால் உய்யும் வழி காணாது, குருகின் தொகுதி ஒலிக்கும், காதலர்கள் பிரிதற்கு அரிய கார்ப்பருவத்தில், நம்மைத் துறந்து பாசறையின்கண் உறைய மாட்டார் நம் தலைவர்.  அவரை மறந்து அமைதியுற இயலாது, என்னுடைய மடமை மிக்க நெஞ்சம். 

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கூதிர்ப் பருவத்தே பறவையும் உய்தல் செல்லாது.  காதலர் பிரிந்துறைதல் அரிது என்று என்பது நம் பெருமான் நன்கறிவர் காண.  ஆதலால் துறந்து அமைகல்லார் என்று தேற்றியவாறு.   துறந்து அமைகல்லார் என்பதை நன்கு அறிந்துவைத்தும் மறந்து அமைகல்லாமைக்குக் காரணம் என் மடங்கெழு நெஞ்சு என்றாள்.  ஒருவாறு ஆற்றியிருக்கவே முயல்கிறேன்.  நீ வருந்தற்க என்பது குறிப்பெச்சம்.  இலக்கணக் குறிப்பு – நெஞ்சே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  பெய் பனி நலிய உய்தல் செல்லாது குருகினம் நரலும் பிரிவு அருங் காலை – பெய்யும் பனி வருத்துவதால் உய்யும் வழி காணாது குருகின் தொகுதி ஒலிக்கும் காதலர்கள் பிரிதற்கு அரிய கார்ப்பருவத்தில், துறந்து அமைகல்லார் காதலர் – நம்மைத் துறந்து பாசறையின்கண் உறைய மாட்டார் நம் தலைவர், மறந்து அமைகல்லாது – மறந்து வாழ்தல் அமையாது, என் மடங்கெழு நெஞ்சே – என்னுடைய மடமை மிக்க நெஞ்சம்

ஐங்குறுநூறு 458, பேயனார், முல்லைத் திணை தலைவி தோழியிடம் சொன்னது
துணர்க்காய்க் கொன்றைக் குழற்பழம் ஊழ்த்தன,
அதிர் பெயற்கு எதிரிய சிதர் கொள் தண் மலர்,
பாணர் பெருமகன் பிரிந்தென,
மாண் நலம் இழந்த என் கண் போன்றனவே.

பாடல் பின்னணி:  பருவம் குறித்துப் பிரிந்த தலைவனின் வரவு பார்த்திருந்த தலைவி பருவ முதிர்ச்சி கூறி ஆற்றாளாய் உரைத்தது.

பொருளுரைகொத்தாகக் காய்க்கும் கொன்றை மரத்தின் உட்துளை உடைய பழங்கள் முற்றின.  முழக்கத்துடன் பெய்யும் மழையினால் சிதறி விழும் அதன் குளிர்ச்சி பொருந்திய மலர்கள், பாணர்களின் புரவலனான தலைவன் பிரிந்ததால், மாட்சிமையுடைய அழகை இழந்த என் கண்கள் போல் நிறம் பாழ்பட்டுத் தோன்றின. 

குறிப்பு:  பழைய உரை – சிதர்கொள் தண் மலர் என்றது, சிந்துதல் கொண்ட தண்ணிய கொன்றைப்பூ என்றவாறு.  சிதர் – சிந்துதல்.  இலக்கணக் குறிப்பு – போன்றனவே – ஏகாரம் அசைநிலை.  குழற்பழம் (1) – அ. தட்சிணாமூர்த்தி உரை – உட் துளையையுடைய பழங்கள், ஒளவை துரைசாமி உரை – மகளிர் குழல் போலும் பழங்கள், தி. சதாசிவ ஐயர் உரை – குழல்போலும் பழங்கள். பொ. வே. சோமசுந்தரனார் உரை – மகளிர் கூந்தல் போலும் பழங்கள்.

சொற்பொருள்:  துணர்க்காய்க் கொன்றைக் குழற்பழம் ஊழ்த்தன – கொத்தாகக் காய்க்கும் கொன்றை மரத்தின் உட்துளை உடைய பழங்கள் முற்றின, அதிர் பெயற்கு எதிரிய சிதர் கொள் தண் மலர் – முழக்கத்துடன் பெய்யும் மழையினால் சிதறி விழும் குளிர்ச்சி பொருந்திய மலர்கள், பாணர் பெருமகன் பிரிந்தென – பாணர்களின் புரவலனான தலைவன் பிரிந்ததால், மாண் நலம் இழந்த என் கண் போன்றனவே – மாட்சிமையுடைய அழகை இழந்த என் கண்கள் போல் நிறம் பாழ்பட்டுத் தோன்றின

ஐங்குறுநூறு 459, பேயனார், முல்லைத் திணை தலைவி தோழியிடம் சொன்னது
மெல் இறைப் பணைத்தோள் பசலை தீரப்
புல்லவும் இயைவது கொல்லோ, புல்லார்
ஆர் அரண் கடந்த சீர் கெழு தானை
வெல்போர் வேந்தனொடு சென்ற,
நல் வயல் ஊரன் நறும் தண் மார்பே?

பாடல் பின்னணி:  ‘வேந்தன் வினை முற்றினான்.  நின் காதலர் கடுக வருவர்’ எனக் கேட்ட தலைவி தோழியிடம் சொன்னது.

பொருளுரைமெல்லிய முன்னங்கையைக் கொண்ட, மூங்கில் போன்ற எம் தோள்களில் பசலை அழியுமாறு, நாம் தழுவிக்கொள்ள அமையுமோ, பகைவர்களின் கடத்தற்கு அரிய அரண்களை அழித்து வென்ற, சிறப்புப் பொருந்திய படைகளுடன் வெல்லும் போரைப் புரியும் வேந்தனுடன் சென்ற, வயல்கள் உடைய ஊரின் தலைவனின் நறிய மார்பை?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – வினைமேல் சென்ற வேந்தன் அதனை முடித்தனன் என்றும், அதனால் தலைமகன் வரற்கு அமைந்தான் என்றும் அறிந்துள்ளாள் ஆகலின், வேந்தனொடு சென்ற நல்வயலூரன் என்றும், தலைமகன் வரவு கேட்டு எய்திய உவகை மிகுதியால் புல்லுதல் நினைந்து ஐயுற்று மெலிதலின், புல்லவும் இயைவது கொல்லோ என்றும் கூறினாள்.  இஃது ஐயம் செய்தல்.  இலக்கணக் குறிப்பு – பணைத்தோள் – உவமைத்தொகை, கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசைநிலை, வேந்தனொடு – ஒடு உடனிகழ்ச்சி (ஒருங்கு நிகழ்தல்), மார்பே – ஏகாரம் அசைநிலை.  மெல் இறை (1) – தி. சதாசிவ ஐயர் உரை – மெல்லிய முன்சந்து, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மெல்லிய கோடுகள் (இரேகைகள்), அகங்கையில் உள்ள கோடுகள், ஒளவை துரைசாமி உரை – மெல்லிய தொடி (இறை ஆகுபெயர் தொடிக்கு), ச.வே. சுப்பிரமணியன் உரை – மென்மையான சந்து.  ஊரன் (5) – தி. சதாசிவ ஐயர் உரை – திணை மயக்குறுதலுங் கடிநிலை இலவே” என்று கூறலின் ஊரன் எனப்பட்டது.  திணை மயக்குறுதலும் கடி நிலை இலவே நிலன் ஒருங்கு மயங்குதல் இல என மொழிப புலன் நன்கு உணர்ந்த புலமையோரே (தொல்காப்பியம், அகத்திணையியல் 14).

சொற்பொருள்:  மெல் இறைப் பணைத்தோள் பசலை தீரப் புல்லவும் இயைவது கொல்லோ – மெல்லிய முன்னங்கையைக் கொண்ட மூங்கில் போன்ற (பருத்த) தோள்களில் பசலை அழியுமாறு நாம் தழுவிக்கொள்ள அமையுமோ, புல்லார் ஆர் அரண் கடந்த – பகைவர்களின் கடத்தற்கு அரிய அரண்களை அழித்து வென்ற, சீர் கெழு தானை வெல்போர் வேந்தனொடு சென்ற நல் வயல் ஊரன் நறும் தண் மார்பே – சிறப்புப் பொருந்திய படைகளுடன் வெல்லும் போரைப் புரியும் வேந்தனுடன் சென்ற வயல்கள் உடைய ஊரின் தலைவனின் நறிய மார்பு

ஐங்குறுநூறு 460, பேயனார், முல்லைத் திணை தலைவி தோழியிடம் சொன்னது
பெருஞ்சின வேந்தனும் பாசறை முனியான்,
இருங்கலி வெற்பன் தூதும் தோன்றா,
ததை இலை வாழை முழு முதல் அசைய,
இன்னா வாடையும் அலைக்கும்,
என் ஆகுவென் கொல், அளியென் யானே?

பாடல் பின்னணி:  வேந்தனுக்கு உதவும்பொருட்டுப் பிரிந்த தலைவனைப் பருவ முதிர்ச்சியினும் வரக் காணாத தலைவி சொன்னது.

பொருளுரைபெரும் சினமுடைய வேந்தனும் பாசறையில் தங்குதலை வெறுப்பான் இல்லை. அதனால் பெரிய மலை நாட்டையுடைய நம் தலைவனிடமிருந்து தூதும் வரவில்லை.  நெருங்கிய இலைகளையுடைய வாழை மரத்தின் பருத்த அடிப்பகுதி அசையுமாறு துன்புறுத்தும் வாடைக் காற்றும் வீசுகின்றது.  நான் என்ன ஆவேன்?  இரங்கத்தக்கவள் யான்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – வினை முடியாமையின் பாசறைக்கண் தங்கி அதனை முடித்தலே பொருளாகக் கருதினான் ஆகலின், வேந்தன் பாசறை முனியன் என்றும், போரிடைப் பகைவர்மாட்டுக் கண்ணோடாது வினைசெய்தல் வேண்டுதலின், பெருஞ்சின வேந்தன் என்றும், அவ் வேந்தனது தானை நோக்கியிருத்தலின், வெற்பன் தூதும் தோன்றா என்றும், காப்பருவம் முதிர்ந்து பனிப்பினைச் செய்து வருத்தலின், இன்னா வாடையும் அலைக்கும் என்றும் கூறினாள்.  இலக்கணக் குறிப்பு – வேந்தனும் – உம்மை எச்சம், தூதும் – உம்மை சிறப்பு, அசைய – அசையுமாறு என்னும் பொருட்டு, கொல் – அசைநிலை, யானே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  பெருஞ்சின வேந்தனும் பாசறை முனியான் – பெரும் சினமுடைய வேந்தனும் பாசறையை வெறுப்பான் இல்லை, இருங்கலி வெற்பன் தூதும் தோன்றா – பெரிய மலை நாட்டையுடைய நம் தலைவனிடமிருந்து தூதும் வரவில்லை, ததை இலை வாழை முழு முதல் அசைய இன்னா வாடையும் அலைக்கும் – நெருங்கிய இலைகளையுடைய வாழை மரத்தின் பருத்த அடிப்பகுதி அசையுமாறு துன்புறுத்தும் வாடைக் காற்றும் வீசும், என் ஆகுவென் கொல் – நான் என்ன ஆவேன், அளியென் யானே – இரங்கத்தக்கவள் யான்

தோழி வற்புறுத்த பத்து

பாடல்கள் 461 – 470 – தலைவன் பிரிந்தபோதும், பிரிவு நீட்டித்தபோதும், அவன் குறித்த பருவ வரவின்கண்ணும் ஆற்றாளாய் வேறுபட்ட தலைவியைத் தோழி ஆற்றுவிக்கும் பாடல்கள் இவை.

ஐங்குறுநூறு 461, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
வான் பிசிர்க் கருவியின் பிடவு முகை தகையக்
கான் பிசிர் கற்பக் கார் தொடங்கின்றே,
இனையல், வாழி தோழி, எனையதூஉம்
நின் துறந்து அமைகுவர் அல்லர்,
வெற்றி வேந்தன் பாசறையோரே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவியிடம் தோழி ‘ தலைவர் உரைத்த பருவம் வந்தது ஆகையால் அவர் வருவார்’ எனக் கூறி ஆற்றியிருக்குமாறு வற்புறுத்தியது.

பொருளுரை:  தோழி! முகில்கள் மழையை நுண்ணியத் துளிகளாக மின்னல் இடி முதலியவற்றின் கூட்டத்துடன் பெய்ததால் பிடவம் அரும்புகளைத் தோற்றுவிக்கவும், கானத்தில் மரங்கள் துளிகளைத் தெளிக்கவும், கார்ப்பருவம் தொடங்கிவிட்டது. நீ வருந்தாதே. நம் தலைவர் சிறிதளவும் நின்னைத் துறந்து, வெற்றி வேந்தனின் பாசறையின்கண் தங்கியிருக்க மாட்டார்.

குறிப்பு:  பழைய உரை – கான் பிசிர் கற்ப என்றது, மழை பெய்திட்டால் மரம் பெய்யும் என்னும் முறைமைபற்றிக் கூறியவாறு.  வான் பிசிர்க் கருவியின் (1) – தி. சதாசிவ ஐயர் உரை – மேகம் சிந்துகின்ற துளி முதலிய கூட்டத்தினால், பொ. வே. சோமசுந்தரனார் உரை – முகில் தூறல் ஆகிய கருவியைக் கொண்டு.  கான் பிசிர் கற்ப (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மழை பொழிந்து நின்ற பின்னர் மரங்கள் துளித்தல் இயல்பாகலின் அதனையே தற்குறிப்பேற்றமாக மரங்கள் முகிலிடத்தே கண்ட பெய்தற்தொழிலைத் தாமும் கற்பன போல துளிப்ப என்பாள் ‘கான் பிசிர் கற்ப’ என்றாள்.  ஒப்புமை – நெடுநல்வாடை 19–20, ‘பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண்மழை அகல் இரு விசும்பில் துவலை கற்ப’.  இலக்கணக் குறிப்பு – இனையல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று, எனையதூஉம் – அளபெடை, தொடங்கின்றே, பாசறையோரே – ஏகாரம் அசைநிலைகள். கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).

சொற்பொருள்:  வான் பிசிர்க் கருவியின் பிடவு முகை தகையக் கான் பிசிர் கற்பக் கார் தொடங்கின்றே – முகில்கள் மழையை நுண்ணியத் துளிகளாக மின்னல் இடி முதலியவற்றின் கூட்டத்துடன் பெய்ததால் பிடவம் அரும்புகளைத் தோற்றுவிக்கவும் கானத்தில் மரங்கள் துளிகளைத் தெளிக்கவும் (கானம் நீர்த்துளிகளை எங்கும் சிதறவும்) கார்ப்பருவம் தொடங்கிவிட்டது, இனையல் – நீ வருந்தாதே, வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, எனையதூஉம் நின் துறந்து அமைகுவர் அல்லர் வெற்றி வேந்தன் பாசறையோரே – சிறிதளவும் நின்னைத் துறந்து வெற்றி வேந்தனின் பாசறையின்கண் தங்கியிருக்க மாட்டார்

ஐங்குறுநூறு 462, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
ஏதில பெய்ம் மழை காரென மயங்கிய
பேதையம் கொன்றைக் கோதை நிலை நோக்கி,
எவன் இனி மடந்தை, நின் கலிழ்வே, நின் வயின்
தகை எழில் வாட்டுநர் அல்லர்,
முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே.

பாடல் பின்னணி:  பருவம் கண்டு வேறுபட்ட தலைவியிடம் தோழி ‘இது கார்ப்பருவம் அன்று’ என வற்புறுத்தியது.

பொருளுரைமடந்தையே!  காரணமின்றிப் பெய்யும் மழையைக் கார்ப்பருவ மழை என, அறியாமையால் மயங்கிய கொன்றை மரங்களின் மாலை போலும் பூக்கள் மலர்ந்த நிலையை நோக்கி நீ வருந்தி அழுவது என்ன தன்மையுடையது? அரும்புகள் மலரும் முல்லைக் காட்டைக் கடந்து சென்ற நம் தலைவர், உன்னுடைய மாட்சிமையுடைய அழகைப் பாழ்படுத்துபவர் இல்லை.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தான் குறித்த பருவத்தே வராமல் தன் மொழி பொய்க்குமாற்றால் நின் எழில் வாட்டுநர் அல்லர் என்பது கருத்து.  விரைந்து வந்து நின் தகை எழில் வளர்க்குவர் என்பதனை வற்புறுத்துதற்கு எதிர்மறை வாய்பாட்டாற் கூறினள் என்க.  இலக்கணக் குறிப்பு – மடந்தை – விளி, வயின் – ஏழாம் வேற்றுமைப் பொருள்பட வந்தது, இறந்தோரே – ஏகாரம் அசைநிலை.  மடவ கொன்றை – மடவ மன்ற, தடவு நிலைக் கொன்றை கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெரிதரக் கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த வம்ப மாரியைக் கார் என மதித்தே – குறுந்தொகை 66, மதி இன்று மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மா மழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல் கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல பிடவமும் கொன்றையும் கோடலும் மடவ ஆகலின், மலர்ந்தன பலவே – நற்றிணை 99.

சொற்பொருள்:  ஏதில பெய்ம் மழை காரென மயங்கிய பேதை அம் கொன்றைக் கோதை நிலை நோக்கி – காரணமின்றிப் பெய்யும் மழையைக் கார்ப்பருவ மழை என அறியாமையால் மயங்கிய கொன்றை மரங்களின் மாலை போலும் பூக்கள் மலர்ந்த நிலையை நோக்கி, எவன் – என்ன தன்மையுடையது, இனி – இப்பொழுது, மடந்தை – மடந்தையே (விளி), நின் கலிழ்வே – நீ அழுவது, நின் வயின் தகை எழில் வாட்டுநர் அல்லர் – உன்னுடைய மாட்சிமையுடைய அழகைப் பாழ்படுத்துபவர் இல்லை, முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே – அரும்புகள் மலரும் முல்லைக் காட்டைக் கடந்து சென்ற நம் தலைவர்

ஐங்குறுநூறு 463, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
புதல் மிசை நறு மலர் கவின் பெறத் தொடரி, நின்
நலமிகு கூந்தல் தகை கொளப் புனைய
வாராது அமையலோ இலரே, நேரார்
நாடுபடு நன்கலம் தரீஇயர்
நீடினர் தோழி, நம் காதலோரே.

பாடல் பின்னணி:  குறித்த பருவம் வந்தும் தலைவன் வராததால் தலைவி வருந்தினாள்.  தலைவன் வராமைக்குக் காரணம் கூறி, ஆற்றியிருக்குமாறு அறிவுறுத்துகின்றாள் தோழி.

பொருளுரைதோழி! புதர்களின் மேல் பூத்த நறுமண மலர்களை அழகுறத் தொடுத்து, நின் அழகுமிக்க கூந்தலின் அழகு மேலும் சிறக்குமாறு அதனைச் சூடுவதற்கு வராது அங்கே தங்குதல் செய்ய மாட்டார், நம் அன்பிற்குரிய தலைவர்.  பகைவரின் நாட்டின்கண் உள்ள நல்ல அணிகலன்களைக் கொண்டு வந்து உனக்குத் தருவதற்காகக் காலம் தாழ்த்தினார்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – புதன் மிசை நறுமலர் என்றது இக்கார்ப்பருவத்தே புதியனவாக அரும்பி மலரும் பல்வேறு நறுமலர்களையும் என்பதுபட நின்றது.  எனவே இக்கார்ப்பருவத்து இன்ப நுகர்ச்சிக்கு நின்னோடு உறைதற்கு வராது அமைதல் இலர் என்றாளாயிற்று.  வாராது அமையலோ இலர் என்பது வருவர் என்னும் உடன்பாட்டுப் பொருளை வற்புறுத்தி நின்றது.  இலக்கணக் குறிப்பு – அமையலோ – ஓகாரம் அசைநிலை, இலரே – ஏகாரம் அசைநிலை, தரீஇயர் – செய்யுளிசை அளபெடை, காதலோரே – ஏகாரம் அசைநிலை.  நம் காதலோரே (4) – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள்.

சொற்பொருள்:  புதல் மிசை நறு மலர் கவின் பெறத் தொடரி நின் நலமிகு கூந்தல் தகை கொளப் புனைய வாராது அமையலோ இலரே – புதர்களின் மேல் பூத்த நறுமண மலர்களை அழகுறத் தொடுத்து நின் அழகுமிக்க கூந்தலின் அழகு மேலும் சிறக்குமாறு அதனைச் சூடுவதற்கு வராது அங்கே தங்குதல் செய்ய மாட்டார், நேரார் நாடுபடு நன்கலம் தரீஇயர் நீடினர் – பகைவரின் நாட்டின்கண் உள்ள நல்ல அணிகலன்களைக் கொண்டு வந்து உனக்குத் தருவதற்காகக் காலம் தாழ்த்தினார், தோழி – தோழி, நம் காதலோரே – நம் அன்பிற்குரிய தலைவர்

ஐங்குறுநூறு 464, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
கண்ணெனக் கருவிளை மலரப், பொன்னென
இவர் கொடிப் பீரம் இரும் புதல் மலரும்
அற்சிரம் மறக்குநர் அல்லர், நின்
நல் தோள் மருவரற்கு உலமருவோரே.

பாடல் பின்னணி:  திருமணம் முடிந்த சில நாட்களில் தலைவன் பிரிந்தான்.  அவன் குறித்துச் சென்ற கார்ப்பருவம் வந்தும் அவன் வரவில்லை.  தான் கொடுத்த உறுதிமொழியை மறந்துவிட்டான் தலைவன் எனத் தலைவி வருந்தினாள்.  அவளிடம் தோழி சொன்னது.

பொருளுரைகண்கள் போல் கருவிளை பூக்கள் மலரவும், பொன் என எண்ணுமாறு படரும் பீர்க்கையின் மலர்கள் பெரிய புதர்களின் மேல் பூக்கவும் செய்யும், இப் பனிக்காலத்தில் நின்னை மறப்பவர் அல்லர், நின் நல்ல தோள்களை அணைப்பதற்குத் துடிக்கும் நம் தலைவர்.  

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கருவியை மலர் நின் கண்ணை நினைப்பித்துழி அவர் நின்னை மருவுதற்கு விரும்புவர்.  பீரம் நின் பசலையை நினைப்பித்துழி நினக்குப் பரிவர் என்பது கருத்து.  இலக்கணக் குறிப்பு – என – உவம உருபு, உலமருவோரே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  கண் எனக் கருவிளை மலரப் பொன் என இவர் கொடிப் பீரம் இரும் புதல் மலரும் அற்சிரம் மறக்குநர் அல்லர் – கண்கள் போல் கருவிளை பூக்கள் மலரவும் பொன் என எண்ணுமாறு படரும் பீர்க்கையின் மலர்கள் பெரிய புதர்களின் மேல் பூக்கவும் செய்யும் இப் பனிக்காலத்தில் நின்னை மறப்பவர் அல்லர் (கருவிளை – Clitoria ternatia, பீரம் – பீர்க்கை, Luffa acutangula), நின் நல் தோள் மருவரற்கு உலமருவோரே – நின் நல்ல தோள்களை அணைப்பதற்குத் துடிப்பவர்

ஐங்குறுநூறு 465, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
நீர் இகுவு அன்ன நிமிர் பரி நெடுந்தேர்
கார் செய் கானம் பிற்படக் கடைஇ,
மயங்கு மலர் அகலம் நீ இனிது முயங்க
வருவர், வாழி தோழி,
செரு வெங்குரிசில் தணிந்தனன் பகையே.

பாடல் பின்னணி:  பருவம் கண்டு வேறுபட்ட தலைவியிடம், வேந்தனின் போர்க்கடமைகள் முடிந்துவிட்டதால் தலைவர் விரைவில் வருவார் எனத் தோழி கூறியது.

பொருளுரைதோழி!  நீர் வீழ்ச்சி போன்ற விரைவையுடைய குதிரைகள் பூட்டிய நெடிய தேரினை, கார்ப்பருவத்தினால் அழகு அடைந்த கானம் பின்னால் செல்லும்படி செலுத்தி, பல்வகை மலர்களை மாலையாக அணிந்த அவர் மார்பை நீ இனிமையாக அணைக்கும்படி வருவார் நம் தலைவர்.  போரை விரும்பும் நம் மன்னன் போரில் வெற்றி அடைந்துப் பகைமையை நீக்கினான்.

குறிப்பு:  பழைய உரை – நீர் இகுவன்ன நிமிர்புரி என்றது, நீரோட்டம் போல் உயர்ந்து அசைந்து செல்லும் செலவினையுடைய மா என்றவாறு.  தி. சதாசிவ ஐயர் உரை – நீர் இகுவன்ன பரித்தேர் என்றதால், வினை உவமையும் உருபு உவமையுங் கொள்ளப்படும். உயரிடத்திலிருந்து வீழ்தல் பெறப்படும்.  அது மலையிலிருந்தும் அருவி வீழ்தல். விழும் நீர் பிறிதோரிடத்துத் தங்காது பள்ளத்தில் தங்குவதுபோலத் தேரும் பிறிதோரிடத்துத் தங்காது மனைக்கண் வந்து தங்கும் என்பது.  பரி (1) – பழைய உரை – மா, தி. சதாசிவ ஐயர் உரை – குதிரை, ஒளவை துரைசாமி உரை – மிக்க செலவு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – விரைந்த செலவு.  மயங்கு மலர் அகலம் (3) – ஒளவை துரைசாமி உரை – கூடுதற்குரிய அகன்ற மார்பு, மாலை அணிந்து விளங்கும் மார்பு என்றும் கூறுவர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – விருப்பம் போல் தழுவுவதற்கு ஏற்ற மார்பு, வாகை மாலை பொருந்திய மார்பு எனினுமாம்.  இலக்கணக் குறிப்பு – அன்ன – உவம உருபு, கடைஇ – அளபெடை, பகையே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நீர் இகுவு அன்ன நிமிர் பரி நெடுந்தேர் கார் செய் கானம் பிற்படக் கடைஇ – நீர் வீழ்ச்சி போன்ற விரைவையுடைய குதிரைகள் பூட்டிய நெடிய தேரினை கார்ப்பருவத்தினால் அழகு அடைந்த கானம் பின்னால் செல்லும்படி செலுத்தி, மயங்கு மலர் அகலம் நீ இனிது முயங்க வருவர் – பல்வகை மலர்களை மாலையாக அணிந்த மார்பை (அகன்ற மார்பை) நீ இனிமையாக அணைக்கும்படி வருவார், வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, செரு வெங்குரிசில் தணிந்தனன் பகையே – போரை விரும்பும் நம் மன்னன் போரில் வெற்றி அடைந்துப் பகைமையை நீக்கினான்

ஐங்குறுநூறு 466, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
வேந்து விடு விழுத்தொழில் எய்தி, ஏந்து கோட்டு
அண்ணல் யானை அரசு விடுத்து, இனியே
எண்ணிய நாள் அகம் வருதல், பெண் இயல்
காமர் சுடர்நுதல் விளங்கும்
தேமொழி அரிவை, தெளிந்திசின் யானே.

பாடல் பின்னணி:  பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவியிடம், ‘தலைவன் வினையை வெற்றியுடன் முடித்து வருவதை நான் பலவாறு எண்ணி உணர்ந்தேன்’ எனத் தோழி கூறியது.

பொருளுரைபெண்மைக்குரிய இயல்புகளையும் அழகிய ஒளி பொருந்திய நெற்றியையும் விளங்கும் இனிய மொழியையுமுடைய அரிவையே!  வேந்தனால் விடுக்கப்பட்ட சிறந்த தூதுத் தொழிலை முடித்துவிட்டு, உயர்ந்த மருப்புகளை உடைய தலைமை மிக்க யானைகளை உடைய அரசனால் விடை கொடுக்கப்பெற்று, இப்பொழுது குறித்த காலத்தில் நம் தலைவர் இல்லத்திற்கு வருவதை, தெளிவாக யான் அறிந்தேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – வேந்து என்றது தன் நாட்டு முடியுடை வேந்தனை.  தூது போதல் உயர்குடிப்பிறப்பும் பண்புடைமையும் அன்பு அறிவு ஆராய்ந்து சொல்வன்மையாகிய மூன்றும் உடைமையும் கல்வி வன்மையும் தூய்மையும் துணைமையும் வாய்மையும் இன்னோரன்ன பிறவுமாகிய நற்பண்புடைமையும் ஒழுங்கமைந்த சிறப்புடையார் செய்யுந் தொழிலாகலான் அச்சிறப்பினைத் தொழில் மேல் ஏற்றி விழுத்தொழில் என்றாள்.  ‘ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 26) என ஆசிரியர் தொல்காப்பியனார் ஓதலும் காண்க.  இலக்கணக் குறிப்பு – இனியே – ஏகாரம் அசைநிலை, தெளிந்திசின் – சின் தன்மை அசை, யானே – ஏகாரம் அசைநிலை.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27). விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).

சொற்பொருள்:  வேந்து விடு விழுத்தொழில் எய்தி – வேந்தனால் விடுக்கப்பட்ட சிறந்த தூதுத் தொழிலை முடித்து, ஏந்து கோட்டு அண்ணல் யானை அரசு விடுத்து – உயர்ந்த மருப்புகளை (தந்தங்களை) உடைய தலைமை மிக்க யானைகளை உடைய அரசனால் விடை கொடுக்கப்பெற்று, இனியே எண்ணிய நாள் அகம் வருதல் – இனி குறித்த காலத்தில் இல்லத்திற்கு வருதல், பெண் இயல் காமர் சுடர்நுதல் விளங்கும் தேமொழி அரிவை – பெண்மைக்குரிய இயல்புகளையும் அழகிய ஒளி பொருந்திய நெற்றியையும் விளங்கும் இனிய மொழியையுமுடைய அரிவையே , தெளிந்திசின் யானே – தெளிவாக யான் அறிந்தேன்

ஐங்குறுநூறு 467, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
புனை இழை நெகிழச் சாஅய், நொந்து நொந்து
இனையல், வாழியோ இகுளை, வினைவயின்
சென்றோர் நீடினர் பெரிதெனத், தங்காது
நம்மினும் விரையும் என்ப,
வெம்முரண் யானை விறல் போர் வேந்தே.

பாடல் பின்னணி:  தலைவன் வினைவயின் பிரிந்ததால் ஆற்றாளாகிய தலைவியைத் தோழி ஆற்றுவித்தது.

பொருளுரைதோழி!  நீடு வாழ்வாயாக!  வினையின்பொருட்டு நீங்கிய நம் தலைவர் பெரிதும் காலம் தாழ்த்தினார் என்று, அணிந்திருக்கும் அணிகலன்கள் நெகிழுமாறு, உடல் மெலிந்து மிகவும் வருந்தி நீ அழாதே.  கொடிய போரைச் செய்யும் யானைகளையும் போரில் வெற்றியையுமுடைய நம் வேந்தன், தங்காது, தலைவனை வர விரும்பும் நம்மைவிடவும் விரைவான் எனக் கூறுகின்றனர்.  ஆதலால் தலைவர் விரைவில் வந்து விடுவார்.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – ‘தங்காது …….. விரையும்’ என்பதற்கு ஏது ‘சென்றோர் நீடினர் பெரிது’ என்ற எண்ணமாகும்.  இப்படிக் கருதியமையால் மன்னன் தன் வீரர்கள்பால் கொண்ட பெரும் அன்பு உணரப்படுகின்றது.  ‘நாம் நம் தலைவரைக் காணத் துடிப்பதனை விட, தன் படை மறவரும் துணையரசரும் தத்தம் குடும்பத்தாரை விரைவில் சென்று கூடி இன்புற வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் வேந்தன் விதுப்புறுவதாக அறிகின்றேன்.  எனவே, அவனொடு நம் தலைவர் விரைந்து மீள்வது உறுதி’ என்று ஆறுதல் கூறினாள் என்க.  பழைய உரை – சென்றோர் நீடினர் என்றது பெயர்த்துரை.  புனை (1) – ஒளவை துரைசாமி உரை – அழகுற அணிந்த, ச.வே. சுப்பிரமணியன் உரை – புனைந்த, தி. சதாசிவ ஐயர் உரை – அலங்கரிக்கப்பட்ட, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அணிந்த.  இலக்கணக் குறிப்பு – புனை இழை – வினைத்தொகை, சாஅய் – அளபெடை, நொந்து நொந்து – அடுக்கு இடைவிடாமைப் பொருட்டு, இனையல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று, வாழியோ – வாழி முன்னிலை அசை, ஓகாரம் அசைநிலை, இகுளை – அண்மை விளி, நம்மினும் – உயர்வு சிறப்பு, வேந்தே – ஏகாரம் அசைநிலை.  சாஅய் – ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (தொல்காப்பியம், உரியியல் 32).

சொற்பொருள்:  புனை இழை நெகிழச் சாஅய் நொந்து நொந்து இனையல் – அணிந்திருக்கும் அணிகலன்கள் நெகிழுமாறு உடல் மெலிந்து மிகவும் வருந்தி அழாதே, வாழியோ – நீடு வாழ்வாயாக, இகுளை – தோழி, வினைவயின் சென்றோர் நீடினர் பெரிதென – வினையின்பொருட்டு நீங்கிய நம் தலைவர் பெரிதும் காலம் தாழ்த்தினார் என்று, தங்காது நம்மினும் விரையும் என்ப – தங்காது நம்மைவிடவும் விரைவான் எனக் கூறுகின்றனர், வெம்முரண் யானை விறல் போர் வேந்தே – கொடிய போரைச் செய்யும் யானைகளையும் போரில் வெற்றியையுமுடைய நம் வேந்தன்

ஐங்குறுநூறு 468, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
வரி நுணல் கறங்கத், தேரை தெவிட்டக்,
கார் தொடங்கின்றே காலை, இனி நின்
நேர் இறை பணைத்தோட்கு ஆர் விருந்தாக,
வடி மணி நெடுந்தேர் கடைஇ
வருவர் இன்று நம் காதலோரே.

பாடல் பின்னணி:  பிரிவு நீட்டித்ததால் ஆற்றாளாய தலைவியிடம் தோழி பருவம் காட்டித் தலைவர் ‘இன்றே வருவார்’ எனக் கூறித் தேற்றியது.

பொருளுரைவரிகளையுடை தவளைகள் ஆரவாரிக்க, தேரைகள் ஒலிக்க, இப்பொழுது கார்காலம் தொடங்கிவிட்டது.  இனி நம் தலைவர் நின் நேரிய முன்னங்கையை உடைய மூங்கில் போன்ற தோள்களுக்குப் பொருந்திய விருந்தாக, வடித்த மணிகள் கட்டப்பட்ட நெடிய தேரைச் செலுத்தி இன்று வருவார்.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – ‘இன்று வருவர்’ என்றாள், தலைவன் கார்காலத் தொடக்கத்தே வருவதாகக் கூறிப் பிரிந்தான் ஆதலாலும், அச்சொல் தவறுவது அவனுக்கு இயல்பின்மையின் வருவது உறுதி என்று அவள் நம்பியதாலும், ‘இன்று’ என்றாளேனும் ‘இன்று மாலை’ என்று கொள்க.  ஆர் விருந்தாக (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இனிது நுகரும் நல்விருந்தாகும்படி, ஒளவை துரைசாமி உரை, அ. தட்சிணாமூர்த்தி உரை – பொருந்திய விருந்தாக.  இலக்கணக் குறிப்பு – தொடங்கின்றே – ஏகாரம் அசைநிலை, கடைஇ – அளபெடை, காதலோரே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  வரி நுணல் கறங்கத் தேரை தெவிட்டக் கார் தொடங்கின்றே காலை – வரிகளையுடை தவளைகள் ஆரவாரிக்க தேரைகள் ஒலிக்க இப்பொழுது கார்காலம் தொடங்கிவிட்டது, இனி நின் நேர் இறை பணைத்தோட்கு ஆர் விருந்தாக – இனி நம் தலைவர் நின் நேரிய முன்னங்கையை உடைய மூங்கில் போன்ற தோள்களுக்குப் பொருந்திய விருந்தாக, வடி மணி நெடுந்தேர் கடைஇ வருவர் இன்று நம் காதலோரே – வடித்த மணிகள் கட்டப்பட்ட நெடிய தேரைச் செலுத்தி இன்று வருவார்

ஐங்குறுநூறு 469, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
பைந்தினை உணங்கல் செம்பூழ் கவரும்
வன்புல நாடன் தரீஇய, வலன் ஏர்பு
அங்கண் இரு விசும்பு அதிர ஏறொடு
பெயல் தொடங்கின்றே வானம்,
காண்குவம் வம்மோ, பூங்கணோயே.

பாடல் பின்னணி:  தலைவன் நீண்ட நாள் பிரிந்ததால் ஆற்றாது வருந்தினாள் தலைவி.  அப்பொழுது கார்ப்பருவம் வந்ததை அவளிடம் சுட்டிக் காட்டி, அவளைத் தோழி தேற்றுகின்றாள்.

பொருளுரைமலர்கள் போலும் கண்களையுடையவளே!  பசிய தினையின் உணங்கலை செம்பூழ் பறவைகள் கவர்ந்து உண்ணும் முல்லை நிலத்தின் தலைவனைக் கொணரும்பொருட்டு, வலமாக எழுந்து, அழகிய இடத்தையுடைய பெரிய வானில் அதிரும்படி, முழங்கும் இடியுடன் மழை பெய்யத் தொடங்கின முகில்கள்.  நாம் காணலாம்.  வருவாயாக.

குறிப்பு:  பழைய உரை – அங்கண் இருவிசும்பு அதிர ஏறொடு பெயல் தொடங்கின்றே வானம் என்றது, அவர் தப்பாது வருவர் என்பது கூறிற்று.  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.   இலக்கணக் குறிப்பு – பைந்தினை – பண்புத்தொகை, தரீஇய – செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், செய்யுளிசை அளபெடை, தொடங்கின்றே – ஏகாரம் அசைநிலை, வம்மோ – மோ முன்னிலை அசை, பூங்கணோயே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  பைந்தினை உணங்கல் செம்பூழ் கவரும் வன்புல நாடன் தரீஇய – பசிய தினையின் உணங்கலை (உலர்ந்ததை, காய்ந்ததை) செம்பூழ் பறவைகள் கவர்ந்து உண்ணும் முல்லை நிலத்தின் தலைவனைக் கொணரும்பொருட்டு, வலன் ஏர்பு அம் கண் இரு விசும்பு அதிர ஏறொடு பெயல் தொடங்கின்றே வானம் – வலமாக எழுந்து (வலிமையுடன் எழுந்து) அழகிய இடத்தையுடைய பெரிய வானில் அதிரும்படி முழங்கும் இடியுடன் மழை பெய்யத் தொடங்கின முகில்கள், காண்குவம் வம்மோ – காணலாம் வருவாயாக, பூங்கணோயே – மலர்கள் போலும் கண்களையுடையவளே

ஐங்குறுநூறு 470, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
இரு நிலம் குளிர்ப்ப வீசி, அல்கலும்
அரும் பனி அளைஇய அற்சிரக் காலை
உள்ளார் காதலர் ஆயின், ஒள்ளிழை,
சிறப்பொடு விளங்கிய காட்சி
மறக்க விடுமோ, நின் மாமைக் கவினே?

பாடல் பின்னணி:  பருவம் வந்தது கண்டு, தாம் குறித்த பருவத்தைத் தலைவர் மறந்தார் என வேறுபட்ட தலைவியைத் தோழி தேற்றியது.

பொருளுரைஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளே!  பெரிய நிலம் குளிருமாறு மழையைப் பெய்து, ஒவ்வொரு நாளும் பொறுத்தற்கரிய பனியைக் கலக்கும் அற்சிரப் பருவத்திலும் நம் தலைவர் நின்னை நினையார் ஆயின், அவர் மனதில் சிறப்புடன் திகழும் காட்சியை மறக்க விடுமோ, நின் மாமை அழகு?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – காட்சி என்றது ஆகுபெயர்.  தலைவனின் மனதின்கண் பதிந்துள்ள தலைவியின் உருவத்தை ஈண்டுக் கவின் காட்சி என்றாள்.   இலக்கணக் குறிப்பு – ஒள்ளிழை – அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, சிறப்பொடு – ஒடு உடனிகழ்ச்சி, அளைஇய – சொல்லிசை அளபெடை, விடுமோ – ஓகாரம் எதிர்மறை, கவினே – ஏகாரம் அசைநிலை.  மாமைக் கவின் – ஒளவை துரைசாமி உரை, ஐங்குறுநூறு 134 – மாந்தளிரின் தன்மையினையுடைய அழகு, ஒளவை துரைசாமி உரை, ஐங்குறுநூறு 286 – மாந்தளிர் போலும் நிறம் திகழும் அழகு.

சொற்பொருள்:  இரு நிலம் குளிர்ப்ப வீசி அல்கலும் அரும் பனி அளைஇய அற்சிரக் காலை உள்ளார் காதலர் ஆயின் – பெரிய நிலம் குளிருமாறு மழையைப் பெய்து ஒவ்வொரு நாளும் பொறுத்தற்கரிய பனியைக் கலக்கும் அற்சிரப் பருவத்திலும் நினையார் காதலர் ஆயின், ஒள்ளிழை – ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளே, சிறப்பொடு விளங்கிய காட்சி மறக்க விடுமோ – அவர் மனதில் சிறப்புடன் திகழும் காட்சியை மறக்க விடுமோ, நின் மாமைக் கவினே – நின் மாமை அழகை

பாணன் பத்து

பாடல்கள் 471 – 480 – இவை பாணன் பற்றினவை.  பாணனிடம் தலைவி கூறுவதாகவும் தோழி கூறுவதாகவும் தலைவன் கூறுவதாகவும், தலைவி பாணன் பற்றி தோழியிடம் கூறுவதாகவும், பாணன் தலைவனிடம் கூறுவதாகவும் அமைந்துள்ளன.

ஐங்குறுநூறு 471, பேயனார், முல்லைத் திணை தோழி பாணனிடம் சொன்னது
எல் வளை நெகிழ, மேனி வாடப்,
பல்லிதழ் உண்கண் பனி அலைக் கலங்கத்,
துறந்தோன் மன்ற மறங்கெழு குருசில்,
அது மற்று உணர்ந்தனை போலாய்,
இன்னும் வருதி, என் அவர் தகவே?

பாடல் பின்னணி:  பருவ வரவின்கண் தூதாக வந்த பாணனிடம் தோழி சொன்னது.

பொருளுரைஒளியுடைய வளையல்கள் நெகிழவும் மேனி மெலியவும் பல இதழ்களைக் கொண்ட மலர் போலும் மையுண்ட இவள் கண்கள் கண்ணீர் வடித்துக் கலங்கவும் துறந்தார் தேற்றமாக, மறம் பொருந்திய நம் தலைவர்.  அதை நீ உணராதவன் போன்றுள்ளாய்.  இப்பொழுதும் நீ வருகிறாய் அவர் பொருட்டு.  அவரது தகவு என்ன பயனுடையது?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – துறந்தோன் என ஒருமைப்பாலாற் கூறியவள் செறலால் ‘அவர்’ என்று பன்மையாற் சுட்டினாள்.  தகவு என்றது அன்புடைமையின் மேனின்றது.  நின்னை இவ்வாறு தூதாக விடுகின்ற அவர் அன்புடைமை தான் எத்தகையது என்று இகழ்ந்தபடியாம்.  இலக்கணக் குறிப்பு – அலை – முதனிலைத் தொழிற்பெயர், மன்ற – தெளிவுப்பொருள் தரும் இடைச்சொல், பல்லிதழ் – அன்மொழித் தொகையாய் குவளையை உணர்த்திற்று, பல்லிதழ் – அகரம் கெட்டுக் ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ – தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 160, என்றதனால் லகரம் இரட்டித்து, பல்லிதழ் என முடிந்தது, தகவே – ஏகாரம் அசைநிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21).  அது மற்று உணர்ந்தனை போலாய் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ உணர்ந்திருந்தும் உணராதாய் போன்று, ஒளவை துரைசாமி உரை – அதனையும் நீ உணர்ந்தில்லை போல்கின்றாய், தி. சதாசிவ ஐயர் உரை – அதை உணர்ந்தவனைப் போலாய்.

சொற்பொருள்:  எல் வளை நெகிழ மேனி வாடப் பல்லிதழ் உண்கண் பனி அலைக் கலங்கத் துறந்தோன் மன்ற – ஒளியுடைய வளையல்கள் நெகிழவும் மேனி மெலியவும் பல இதழ்களைக் கொண்ட மலர் போலும் மையுண்ட இவள் கண்கள் கண்ணீர் வடித்துக் கலங்கவும் துறந்தார் தேற்றமாக, மறங்கெழு குருசில் – மறம் பொருந்திய நம் தலைவர், அது மற்று உணர்ந்தனை போலாய் – அதை நீ உணராதவன் போன்றுள்ளாய், இன்னும் வருதி – இப்பொழுதும் நீ வருகிறாய் அவர் பொருட்டு, என் அவர் தகவே – அவரது தகவு என்ன பயனுடையது

ஐங்குறுநூறு 472, பேயனார், முல்லைத் திணை தோழி பாணனிடம் சொன்னது
கைவல் சீறியாழ் பாண! நுமரே
செய்த பருவம் வந்து நின்றதுவே,
எம்மின் உணரார் ஆயினும், தம் வயின்
பொய்படு கிளவி நாணலும்
எய்யார் ஆகுதல், நோகோ யானே.

பாடல் பின்னணி:  குறித்த பருவம் வரவும் தலைவன் வரவில்லை.  அவன் தூதாக வந்த பாணனிடம் தோழி சொன்னது.

பொருளுரைஇசையில் வல்ல சீரியாழை மீட்டும் பாணனே!  நும் தலைவர் குறித்த பருவம் வந்து விட்டது.  எம்பொருட்டு இப்பருவ வரவை அவர் உணராதவர் ஆயினும், தான் கொடுத்த உறுதிமொழிகள் பொய்யாவதற்கு நாணம் அடையாதவர் ஆகுதலால், யான் வருந்துகின்றேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெருந்தகையாகிய அவர் தம் மொழி பொய் படுதற்கேனும் நாணி விழிப்புடன் அப்பருவ வரவினை அறிதல் வேண்டாவோ? என்பாள், தம்வயிற் பொய்படு கிளவி நாணலும் அறியார் என்று இகழ்ந்தாள்.  அவன் நாணானாயினும் பிறர் பழியும் தன் பழிபோல் நாணும் பெருந்தகைப் பெண்ணாகிய நம் பெருமாட்டி அவன்பால் இப்பழி பிறத்தற்கே பெரிதும் வருந்தா நின்றாள் என்பாள், அதனை தன் மேல் இட்டு ‘யான் நோகு’ என்றாள்.  இலக்கணக் குறிப்பு – நுமரே – ஏகாரம் அசைநிலை, நின்றதுவே – ஏகாரம் அசைநிலை, நோகோ – நோகு – செய்கென்னும் தன்மை வினை, ஓகாரம் அசைநிலை, இரக்கக் குறிப்பு, யானே – ஏகாரம் அசைநிலை.  கைவல் சீறியாழ் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கைத்தொழில் வண்மை உடையாய் அன்றி மக்கட் பண்பு சிறிதும் இல்லாய் என்பது குறிப்பு.  எம்மின் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எம் பொருட்டு, ஒளவை துரைசாமி உரை – எம்மைப்போல், அ. தட்சிணாமூர்த்தி உரை – எம் பொருட்டு, தி. சதாசிவ ஐயர் உரை – எம் போல்.

சொற்பொருள்:  கைவல் சீறியாழ் பாண – இசையில் வல்ல சீரியாழை மீட்டும் பாணனே (பாண – விளி), நுமரே செய்த பருவம் வந்து நின்றதுவே – நும் தலைவர் குறித்த பருவம் வந்து விட்டது, எம்மின் உணரார் ஆயினும் தம் வயின் பொய்படு கிளவி நாணலும் எய்யார் ஆகுதல் – எம்பொருட்டு இப்பருவ வரவை அவர் உணராதவர் ஆயினும் தான் கொடுத்த உறுதிமொழிகள் பொய்யாவதற்கு நாணம் அடையாதவர் ஆகுதலால், நோகோ யானே – யான் வருந்துகின்றேன்

ஐங்குறுநூறு 473, பேயனார், முல்லைத் திணை தலைவி பாணனிடம் சொன்னது
பலர் புகழ் சிறப்பின் நும் குருசில் உள்ளிச்
செலவு நீ நயந்தனை ஆயின் மன்ற,
இன்னா அரும் படர் எம் வயின் செய்த
பொய்வலாளர் போலக்
கைவல் பாண! எம் மறாவாதீமே.

பாடல் பின்னணி:  பாணன் வினையின் பொருட்டுத் தலைவன் பிரிந்து உறையும் நாட்டிற்குச் செல்ல விரும்பினான்.  அதை அவன் தலைவியிடம் கூறியபோது அவள் அவனிடம் சொன்னது.

பொருளுரைஇசைத்தொழிலில் வல்ல பாணனே!  பலரும் புகழும் சிறப்புடைய நும் தலைவனை நினைந்து செல்லுதலை நீ விரும்பினை ஆயின், தெளிவாகத் துன்பமாகிய பொறுத்தற்கு அரிய வருத்தத்தை எமக்குச் செய்த பொய் பேசுவதில் வல்லமை உடையவர் போல், எம் துயரை நீ மறவாதே.  என் நிலையை அவர்க்கு உணர்த்துவாயாக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தனக்கு அவன் நொதுமலாளன் ஆயினன் என்பது தோன்ற நங்குருசில் என்னாது நுங்குருசில் என்றாள்.  தலைவன் தான் குறித்த பருவத்தே விரைந்து வந்து நும்மை அளிசெய்வேன் எனக் கூறிய உறுதிமொழியைப் பொய்யாக்கி விட்டனன் என்பாள், பொய்வலாளன் என்றாள்.  இலக்கணக் குறிப்பு – மன்– தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், மறாவாதீமே – முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்:  பலர் புகழ் சிறப்பின் நும் குருசில் உள்ளிச் செலவு நீ நயந்தனை ஆயின் – பலரும் புகழும் சிறப்புடைய நும் தலைவனை நினைந்து செல்லுதலை நீ விரும்பினை ஆயின், மன்ற இன்னா அரும் படர் எம் வயின் செய்த பொய்வலாளர் போல – தெளிவாகத் துன்பமாகிய பொறுத்தற்கு அரிய வருத்தத்தை எமக்குச் செய்த பொய் பேசுவதில் வல்லமை உடையவர் போல், கைவல் பாண – இசைத்தொழிலில் வல்ல பாணனே, எம் மறாவாதீமே – எம் துயரை நீ மறவாதே

ஐங்குறுநூறு 474, பேயனார், முல்லைத் திணை தலைவி தன் தோழியிடம்  சொன்னது, பாணன் கேட்கும்படி
மை அறு சுடர்நுதல் விளங்கக், கறுத்தோர்
செய் அரண் சிதைத்த செருமிகு தானையொடு,
கதழ் பரி நெடுந்தேர் அதர் படக் கடைஇச்
சென்றவர்த் தருகுவல், என்னும்
நன்றால் அம்ம, பாணனது அறிவே.

பாடல் பின்னணி:  தலைவியின் பிரிவுத் துயர் கண்டு ‘தூதாகிச் சென்று அவனைக் கொண்டு வருவேன்’ என்ற பாணனைப் பாராட்டும் முறையில், பாணன் கேட்ப அவள் தோழியிடம் சொன்னது.

பொருளுரைதோழி!  கேட்பாயாக!  குற்றம் இல்லாத ஒளி பொருந்திய என் நெற்றி விளங்கும்வண்ணம், பகைவர்களின் திறம்படச் செய்த அரண்களை அழித்த போரில் வல்லமையுடைய தானையுடன் விரைந்துச் செல்லும் குதிரைகள் பூட்டிய நெடிய தேரைச் செலுத்தி வழிகளைக் கடந்துச் சென்ற நம் தலைவரை யான் கொண்டு வருவேன் எனக் கூறும் இப்பாணனின் அறிவு மிகவும் நன்று.

குறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – கறுத்தோர் (சினந்தோர்) என்றது பகைவரை.  கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 74).  பேராரவாரத்தோடு சென்றவரை இப்பாணன் மிக எளிதாகவே கொணர்வல் என்கின்றான்.  அத்துணைச் சிறப்புடையது அவன் நம் பெருமான்பாலும் நம்பாலும் கொண்டுள்ள பேரன்பு என்று வியந்தவாறு.  அதர் படக் கடைஇ (3) – தி. சதாசிவ ஐயர் உரை – வழியுண்டாகச் செலுத்தி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – சுவடு உண்டாகும்படி விரையச் செலுத்தி, ஒளவை துரைசாமி உரை – வழிகள் பல கடந்து, அ. தட்சிணாமூர்த்தி உரை – வழிகள் பலவற்றையும் கடந்து.  இலக்கணக் குறிப்பு – கறுத்தோர் – வினையாலணையும் பெயர், தானையொடு – ஒடு உடனிகழ்ச்சி (ஒருங்கு நிகழ்தல்), நன்றால் – ஆல் அசைநிலை, அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், கடைஇ – அளபெடை, அறிவே – ஏகாரம் அசைநிலை.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  மை அறு சுடர்நுதல் விளங்க – குற்றம் இல்லாத ஒளி பொருந்திய நெற்றி விளங்கும்வண்ணம், கறுத்தோர் செய் அரண் சிதைத்த செருமிகு தானையொடு – பகைவர்களின் திறம்படச் செய்த அரண்களை அழித்த போரில் வல்லமையுடைய தானையுடன், கதழ் பரி நெடுந்தேர் அதர் படக் கடைஇச் சென்றவர்த் தருகுவல் என்னும் – விரைந்துச் செல்லும் குதிரைகள் பூட்டிய நெடிய தேரைச் செலுத்தி வழிகளைக் கடந்துச் சென்றவரை யான் கொண்டு வருவேன் எனக் கூறும், நன்றால் – நன்று, அம்ம – கேட்பாயாக, பாணனது அறிவே – பாணனின் அறிவு

ஐங்குறுநூறு 475, பேயனார், முல்லைத் திணை தலைவி தோழியிடம் சொன்னது
தொடி நிலை கலங்க, வாடிய தோளும்,
வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கிப்,
பெரிது புலம்பினனே சீறியாழ்ப் பாணன்,
எம் வெங்காதலொடு பிரிந்தோர்
தம்மோன் போலான், பேரன்பினனே.

பாடல் பின்னணி:  பிரிவின்கண் வேறுபட்ட தலைவி, தலைவனிடமிருந்து வந்த பிறர் கேட்பத் தோழியிடம் தன் மெலிவு கண்டு இரங்கிய பாணனைப் பாராட்டினாள்.

பொருளுரைஎன் வளையல்கள் நின்ற நிலையிலிருந்து நெகிழ்ந்து நீங்குமாறு மெலிந்த என் தோள்களையும், மாவடுப் போலும் அழகினை இழந்த என் கண்களையும் நோக்கிப் பெரிதும் வருந்தினான் சிறிய யாழில் வல்ல பாணன்.  எம் விருப்பம் மிக்க காதலுடன் பிரிந்துச் சென்ற நம் தலைவர் போல் இல்லாது, இவன் பெரும் அன்புடையவன்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – அவர் பிரிந்தாராயினும் அவர்மாட்டுச் சென்ற தன் காதல் நீங்காமையின் காதலொடு பிரிந்தோர் என்றும், அவர்க்கு உரியவனாயினும், அவர் நம்மை மறந்தது போல அன்றி இவன் நம்மை நோக்கிப் பெரிதும் இரங்கிப் புலம்புகிறான் என்பாள், தம்மோன் போலான் என்றும், பேரன்பினனே என்றும் கூறினாள்.  ‘தொடி நிலை கலங்க, வாடிய தோளும்’ என்றது, உடம்பு நனி சுருங்கல்.  ‘வடி நலன் இழந்த கண்ணும்’ என்றது அவன் பிரிவாற்றாமை.  இலக்கணக் குறிப்பு – புலம்பினனே – ஏகாரம் அசைநிலை, பேரன்பினனே – ஏகாரம் அசைநிலை.  எம் வெங்காதலொடு பிரிந்தோர் (4) – அ. தட்சிணாமூர்த்தி உரை – ‘எம் வெங்காதலொடு பிரிந்தோர்’ என்றாள், அவன் பிரிந்தபொழுது, தான் அவன் மேல் கொண்ட காதலையும் உண்டான் கொண்டு போனான் ஆதலின்.

சொற்பொருள்:  தொடி நிலை கலங்க வாடிய தோளும் வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கிப் பெரிது புலம்பினனே சீறியாழ்ப் பாணன் – என் வளையல்கள் நின்ற நிலையிலிருந்து நெகிழ்ந்து நீங்குமாறு மெலிந்த என் தோள்களையும் மாவடுப் போலும் அழகினை இழந்த என் கண்களையும் நோக்கிப் பெரிதும் வருந்தினான் சிறிய யாழில் வல்ல பாணன், எம் வெங்காதலொடு பிரிந்தோர் தம்மோன் போலான் பேரன்பினனே – எம் விருப்பம் மிக்க காதலுடன் பிரிந்துச் சென்ற நம் தலைவர் போல் இல்லாது பெரும் அன்புடையவன்

ஐங்குறுநூறு 476, பேயனார், முல்லைத் திணை தலைவி பாணனிடம் சொன்னது
கருவி வானம் கார் சிறந்து ஆர்ப்ப,
பருவம் செய்தன பைங்கொடி முல்லை
பல் ஆன் கோவலர் படலைக் கூட்டும்,
அன்பு இல் மாலையும் உடைத்தோ,
அன்பு இல் பாண, அவர் சென்ற நாடே?

பாடல் பின்னணி:  ‘பிரிவாற்றாமை அவர்க்கும் உளதன்றே.  நீ வேறுபடுவது எதனால்?’ என்ற பாணனிடம் தலைவி சொன்னது.

பொருளுரைஅன்பு இல்லாத பாணனே!  இடி மின்னல் முதலிய தொகுதியுடைய முகில்கள் மிக்கு முழங்க, பல பசுக்களையுடைய கோவலர், பசிய முல்லைக் கொடிகளின் பூக்களை இலைகளுடன் கூட்டி மாலையாகத் தொடுக்கும் அன்பு இல்லாத மாலை நேரமும் உண்டோ, அவர் சென்ற நாட்டில்?

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – ‘அன்பில் பாண’ என விளித்தாள், தன் நிலை எண்ணாது தலைவனுக்கும் ஆற்றாமை உண்டு எனக் கூறி அவள் வேறுபட்டதைக் குறை கூறியமையின்.  ‘அன்பு இல் மாலை’ என்றாள், அது தனித்துறையும் மாதர்க்கு நெருப்பாகலின்.  ‘அவர் சென்ற நாட்டில் மாலைப்பொழுதும் உண்டோ?’ என வினவினாள், அஃது இருக்குமாயின் அதன் கொடுமையைக் காதலரும் உணர்ந்திருக்கக் கூடுமே என்ற கருத்துப்பட.  அவர் உறையும் தேயத்தில் மாலைப்பொழுது உண்டோ? என்றது, அஃது இருந்தும் கூட அவர் என்னிலை எண்ணி வந்திலரே என்னும் வருத்தத்தினை விளங்கிற்று என்றுமாம்.  கருவி வானம் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மின்னல் இடி முதலிய தொகுதிகளையுடைய மேகங்கள்.  இலக்கணக் குறிப்பு – மாலையும் – உம்மை இழிவு சிறப்பு, உடைத்தோ – ஓகாரம் வினா, நாடே – ஏகாரம் அசைநிலை.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).

சொற்பொருள்:  கருவி வானம் கார் சிறந்து ஆர்ப்ப பருவம் செய்தன – இடி மின்னல் முதலிய தொகுதியுடைய முகில்கள் மிக்கு முழங்க, பைங்கொடி முல்லை பல் ஆன் கோவலர் படலைக் கூட்டும் அன்பு இல் மாலையும் உடைத்தோ – பசிய முல்லைக் கொடிகளின் பூக்களை இலைகளுடன் கூட்டிப் பல பசுக்களையுடைய கோவலர் மாலையாகத் தொடுக்கும் அன்பு இல்லாத மாலை நேரமும் உடையதோ, அன்பு இல் பாண – அன்பு இல்லாத பாணனே, அவர் சென்ற நாடே – அவர் சென்ற நாட்டில்

ஐங்குறுநூறு 477, பேயனார், முல்லைத் திணை தலைவன் பாணனிடம் சொன்னது
பனி மலர் நெடுங்கண் பசலை பாயத்,
துனி மலி துயரமொடு அரும் படர் உழப்போள்
கையறு நெஞ்சிற்கு உயவுத் துணையாகச்,
சிறு வரைத் தங்குவையாயின்,
காண்குவை மன்னால் பாண, எம் தேரே.

பாடல் பின்னணி:  கூறிய பருவத்தில் மீள இயலாத தலைவன் பாணனைத் தூதாக அனுப்பினான்.  அப்பொழுது அவன் பாணனிடம் கூறியது.

பொருளுரைபாணனே!  குளிர்ந்த மலர் போன்ற நீண்ட கண்கள் பசலை அடையப் பெரும் துயரத்துடன், தாங்க இயலாத வருத்தத்தில் இருக்கும் என் தலைவியின் செயலற்ற நெஞ்சிற்கு, அல்லல் வேளையில் துணையாகச் சிறிது போது நீ தங்குவாய் ஆயின், எம்முடைய தேரை நீ காண்பாய்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தான் குறித்த பருவத்தே செல்ல மாட்டாமையான் அவள் கையற்றுக் கலங்குதல் ஒருதலை என்பான் ‘கையறு நெஞ்சிற்குத் துணையாக’ என்றான்.  இனி யான் குறித்த பருவத்தே மீளமாட்டமைக்குரிய காரணங்களையும் எடுத்துக் கூறுக என்பான் ‘உயவுத் துணையாக’ என்றான்.  நான் மிகவும் அண்மையிலேயே வந்து விடுவல் என்பதும் உணர்த்துக என்பான் ‘சிறு வரைத் தங்குவையாயின் என் தேர் காண்குவை’ என்றான்.  இலக்கணக் குறிப்பு – காண்குவை – முன்னிலை ஒருமை வினைமுற்று, மன்னால் – மன் ஒழியிசை, ஆல் – அசைநிலை, தேரே – ஏகாரம் அசைநிலை.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்: பனி மலர் நெடுங்கண் பசலை பாயத் துனி மலி துயரமொடு அரும் படர் உழப்போள் கையறு நெஞ்சிற்கு – குளிர்ந்த மலர் போன்ற நீண்ட கண்கள் பசலை அடையப் பெரும் துயரத்துடன் தாங்க இயலாத வருத்தத்தில் இருப்பவள் செயலற்ற நெஞ்சிற்கு, உயவுத் துணையாகச் சிறு வரைத் தங்குவையாயின் – அல்லல் வேளையில் துணையாகச் சிறிது போது தங்குவாய் ஆயின், காண்குவை மன்னால் – காண்பாய், பாண – பாணனே, எம் தேரே – எம்முடைய தேரை

ஐங்குறுநூறு 478, பேயனார், முல்லைத் திணை தலைவன் பாணனிடம் சொன்னது
நீடினம் என்று கொடுமை தூற்றி
வாடிய நுதலள் ஆகிப் பிறிது நினைந்து,
யாம் வெங்காதலி நோய் மிகச் சாஅய்ச்
சொல்லியது உரைமதி நீயே,
முல்லை நல்யாழ்ப் பாண, மற்று எமக்கே.

பாடல் பின்னணி:  தலைவி விடுத்த தூதாய்ச் சென்ற பாணனிடம், ‘அவள் சொல்லிய திறம் கூறுக’ எனக் கேட்டது.

பொருளுரைமுல்லைத் திணையின் கருப்பொருளாகிய நல்ல யாழை ஏந்திய பாணனே!  காலம் தாழ்த்தினோம் என்று, எம் கொடுந்தன்மையைப் பிறரிடம் கூறி, வாடிய நெற்றியை உடையவளாகி, எம்மை வேறுபட எண்ணும் யாம் விரும்பும் காதலி, துன்பத்தினால் மிகவும் மெலிந்து, உன்னிடம் கூறியதை இப்பொழுது உரைப்பாயாக எம்மிடம்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – பருவ வரவில் வருவேன் எனச் சொல்லிப் போந்த தான் அது வந்து எய்தியவழியும் வினை முற்றாமையால் தாழ்த்தமையின், அச்சொல் கொடியது எனச் சொல்லித் தலைமகள் வருந்துவாளாயின், கொடுமை தூற்றி என்றான்.  தம் மாட்டுக் காதல் அன்புடையார் இன்னாத சொல்லினும், கேட்போர்க்கு அச்சொல் இன்பமே நல்குதல் இயல்பாகலின், சொல்லியது உரைமதி என்று சொல் மேல் வைத்து மொழிந்தான். இதனால் தலைமகள்மாட்டு அருள் மிகவுடைமை என்னும் மெய்ப்பாடு தோன்றிற்று.  இலக்கணக் குறிப்பு – உரைமதி – மதி முன்னிலையசை, மற்று – அசைநிலை, எமக்கே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  சாஅய் – ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (தொல்காப்பியம், உரியியல் 32).

சொற்பொருள்:  நீடினம் என்று கொடுமை தூற்றி வாடிய நுதலள் ஆகிப் பிறிது நினைந்து யாம் வெங்காதலி நோய் மிகச் சாஅய் – காலம் தாழ்த்தினோம் என்று எம் கொடுந்தன்மையைப் பிறரிடம் கூறி வாடிய நெற்றியை உடையவளாகி எம்மை வேறுபட எண்ணும் யாம் விரும்பும் காதலி துன்பத்தினால் மிகவும் மெலிந்து, சொல்லியது உரைமதி நீயே – உன்னிடம் கூறியதை உரைப்பாயாக நீ, முல்லை நல்யாழ்ப் பாண – முல்லைத் திணையின் கருப்பொருளாகிய நல்ல யாழை ஏந்திய பாணனே, மற்று எமக்கே – இப்பொழுது எமக்கு

ஐங்குறுநூறு 479, பேயனார், முல்லைத் திணை தலைவன் பாணனிடம் சொன்னது
சொல்லுமதி பாண, சொல்லுதோறும் இனிய,
நாடு இடை விலங்கிய எம்வயின், நாள்தொறும்
அரும்பனி கலந்த அருள் இல் வாடை
தனிமை எள்ளும் பொழுதில்,
பனி மலர்க் கண்ணி கூறியது எமக்கே.

பாடல் பின்னணி:  தலைவியின் தூதாகத் தலைவனிடம் சென்ற பாணன் தலைவியின் நிலைமையையும் அவள் கூறியதையும் அவனிடம் கூறினான்.  அதைக் கேட்ட தலைவன் கூறியது இது.

பொருளுரைபாணனே!  பல நாடுகள் இடையே கிடப்ப, அப்பால் உள்ள வேற்று நாட்டிற்கு வந்து இருக்கும் எம்பால், நாள்தோறும் பொறுத்தற்கரிய பனி கலந்த இரக்கம் இல்லாத வாடைக்காற்று வீசி எம் தனிமையை இகழ்ந்து வருத்தும் பொழுது, குளிர்ந்த மலர் போலும் கண்களை உடைய எம் காதலி கூறியதைக் கூறுவாயாக எம்மிடம். அவை எம் தனிமைக்கு மருந்தாகும்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – குளிரால் மிக்க நடுக்கத்தைச் செய்து வருத்துதலின், அரும்பனி கலந்த அருளில் வாடை என்றும், அது காதலர்ப் பிரிந்தார் கையற்று நலியும் பான்மைத்து ஆகலின், தனிமை எள்ளும் என்றும், ஆர்வலர் உரைக்கும் எல்லாச் சொல்லும் இனியவாகலின், சொல்லுதோறு இனிய என்றும், மீட்டும் கேட்டற்கு நெஞ்சம் அவாய்நிற்றலே அன்றி அவ்வாடை செய்யும் வருத்தத்தைச் சொற்களின் இனிமை மறப்பித்தலின், சொல்லுமதி என்றும் கூறினான்.  நாடு இடை விலங்கிய (2) – ஒளவை துரைசாமி உரை – தலைவன் வந்திருக்கும் நாட்டுக்கும் அவனுடைய நாட்டுக்கும் இடையே பல நாடுகளைக் கடந்து வந்தமை கூறியது.  இலக்கணக் குறிப்பு – சொல்லுமதி – மதி முன்னிலையசை, எமக்கே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்:  சொல்லுமதி – கூறுவாயாக, பாண – பாணனே, சொல்லுதோறும் இனிய – சொல்லும்பொழுதெல்லாம் இனிமையாக உள்ளன, நாடு இடை விலங்கிய எம்வயின் – பல நாடுகள் இடையே கிடப்ப வேற்று நாட்டிற்கு வந்து இருக்கும் எம்பால், நாள்தொறும் அரும்பனி கலந்த அருள் இல் வாடை தனிமை எள்ளும் பொழுதில் – நாள்தோறும் பொறுத்தற்கரிய பனி கலந்த இரக்கம் இல்லாத வாடைக்காற்று வீசி எம் தனிமையை இகழ்ந்து வருத்தும் பொழுது, பனி மலர்க் கண்ணி கூறியது – குளிர்ந்த மலர் போலும் கண்களை உடைய எம் காதலி கூறியதை, எமக்கே – எம்மிடம்

ஐங்குறுநூறு 480, பேயனார், முல்லைத் திணை பாணன் தலைவனிடம் சொன்னது
நினக்கு யாம் பாணரும் அல்லேம், எமக்கு
நீயுங் குருசிலை யல்லை மாதோ,
நின் வெங்காதலி தனி மனைப் புலம்பி,
ஈரிதழ் உண்கண் உகுத்த
பூசல் கேட்டும், அருளாதோயே.

பாடல் பின்னணி:  தலைவியின் தூதாகப் பாசறைக்கண் சென்ற பாணன் தலைவனிடம் சொன்னது.

பொருளுரைநினக்கு யாம் பாணர் இல்லை.  எமக்கு நீ தலைவன் இல்லை.  நின்னை விரும்பி உறையும் காதலி, மனையில் தனிமையுற்று வருந்திக் குளிர்ந்த மலர்போன்ற மையுண்ட கண்களில் கண்ணீர் வடிப்பதை யாம் கூறக் கேட்டும், நீ அவளுக்கு அருள் செய்யாது உள்ளாய்.

குறிப்பு:  தொல்காப்பியம், பொருளியல் 45 – வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல் தாவின்று உரிய தத்தங் கூற்றே.  ஒளவை துரைசாமி உரை – தன் காதலிமாட்டு அருளிலாத நீ பிறர்மாட்டும் அப்பெற்றியனே ஆவாய் எனக் கற்பித்துக் கொண்டு நினக்கு யாம் பாணரும் அல்லேம், எமக்கு நீயும் குருசிலை அல்லை என்றான்.  இதன்கண், பாணன், தலைவியின் ஆற்றாமை தோன்ற, அவளுடைய தனிமையும் ஆற்றாமையும் விளக்கிக் கூறியது.  அதற்குரிய இலக்கணம், ‘நிலம் பெயர்ந்துறைதல் வரைநிலை உரைத்தல், கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 169).  இலக்கணக் குறிப்பு – யாம் – தன்மைப் பன்மை, எமக்கு – தன்மைப் பன்மை, குருசிலை – ஐகாரம் அசைநிலை, மாதோ – மாது, ஓ அசைநிலைகள், அருளாதோயே – முன்னிலை விளி, ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நினக்கு யாம் பாணரும் அல்லேம் – நினக்கு யாம் பாணர் இல்லை, எமக்கு நீயுங் குருசிலை யல்லை – எமக்கு நீ தலைவன் இல்லை, மாதோ நின் வெங்காதலி தனி மனைப் புலம்பி ஈரிதழ் உண்கண் உகுத்த பூசல் கேட்டும், அருளாதோயே – நின்னை விரும்பி உறையும் காதலி மனையில் தனிமையுற்று வருந்திக் குளிர்ந்த மலர்போன்ற மையுண்ட கண்களில் கண்ணீர் வடிப்பதை யாம் கூறக் கேட்டும் நீ அவளுக்கு அருள் செய்யாது உள்ளாய்

தேர் வியங்கொண்ட பத்து

பாடல்கள் 481 – 490 – தேரை விரைந்து செலுத்துமாறு தலைவன் தேர்ப்பாகனை ஏவுதலைப் பொருளாகக் கொண்டவை இவை.

ஐங்குறுநூறு 481, பேயனார், முல்லைத் திணை தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
சாய் இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல்
சேய் இழை மாதரை உள்ளி நோய் விட,
முள் இட்டு ஊர்மதி வலவ, நின்
புள் இயல் கலிமாப் பூண்ட தேரே.

பாடல் பின்னணி:  வினைமுற்றி மீண்ட தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது.

பொருளுரைபாகனே!  மெலிந்த முன்னங்கையையும், மூங்கில் போன்ற தோள்களையும், அழகிய வரிகள் அமைந்த அல்குலையும் உடைய, சிவந்த அணிகலன்களை அணிந்த என் காதலியை நினைத்ததால் யான் அடைந்த துன்ப நோய் நீங்கும்வண்ணம், தாற்றுக் கோலை இட்டுத் தூண்டி, நின் பறவை போன்று விரையும் செருக்குற்ற குதிரை பூண்ட தேரை செலுத்துவாயாக!

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – பறவை போல விரைந்து செல்லும் ஆற்றலுடைய குதிரைகள் பூட்டப்பட்ட தேர், இயல்பாகவே விரைந்து ஏகும் தன்மையது எனினும், அது மேலும் விரைந்து ஏகுமாறு முள்ளால் தீண்டி முடுக்குமாறு கூறினான், தன் காதலியின் நீண்ட பிரிவுத் துயரை உடனே நீக்க வேண்டும் என்னும் ஆர்வம் காரணமாக.  நோய் விட (2) – தி. சதாசிவ ஐயர் உரை – நம் நோய் தீர, ஒளவை துரைசாமி உரை – எம் வருத்தம் தீர, பொ. வே. சோமசுந்தரனார் உரை – யாம் எய்திய பிரிவாற்றாப் பெருந்துயரமும் எம்மைவிட்டு அகலும்படி, அ. தட்சிணாமூர்த்தி உரை – அவள் அந்நோயிலிருந்து விடுதலைப் பெறுமாறு.  இலக்கணக் குறிப்பு – பணைத்தோள் – உவமைத்தொகை, ஊர்மதி – மதி – முன்னிலையசை, வலவ – விளி, தேரே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  மாதர் – மாதர் காதல் (தொல்காப்பியம், உரியியல் 30).

சொற்பொருள்:  சாய் இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல் சேய் இழை மாதரை உள்ளி – மெலிந்த முன்னங்கையையும் மூங்கில் போன்ற தோள்களையும் அழகிய வரிகள் அமைந்த அல்குலையும் உடைய சிவந்த அணிகலன்களை அணிந்த என் காதலியை எண்ணி (அல்குல் – இடை, இடைக்குக் கீழ் உள்ள பகுதி), நோய் விட – யான் அடைந்த துன்ப நோய் நீங்கும்வண்ணம், முள் இட்டு ஊர்மதி – தாற்றுக் கோலை குதிரைமேல் இட்டுத் தூண்டி, வலவ – பாகனே, நின் புள் இயல் கலிமாப் பூண்ட தேரே – நின் பறவை போன்று விரையும் செருக்குற்ற குதிரை பூண்ட தேரை செலுத்துவாயாக

ஐங்குறுநூறு 482, பேயனார், முல்லைத் திணை தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
தெரியிழை அரிவைக்குப் பெரு விருந்தாக,
வல் விரைத்து கடவுமதி பாக, வெள்வேல்
வென்று அடு தானை வேந்தனொடு
நாளிடைச் சேப்பின், ஊழியின் நெடிதே.

பாடல் பின்னணி:  வினைமுற்றி மீண்ட தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது.

பொருளுரைபாகனே!  ஆராய்ந்து அணிந்த அணிகலன்களையுடைய எம் காதலிக்குப் பெரு விருந்தாக இருக்குமாறு, நின் தேரை மிகவும் விரைந்து செலுத்துவாயாக.  வெள்ளிய வேல் ஏந்தி எதிர்த்தோரை வென்ற வேந்தனுடன் யாம் ஒரு நாள் தங்கினாலும், அது ஊழிக்காலத்தினும் நெடிதாகத் தோன்றும்.

குறிப்பு:  ஊழியின் நெடிதே (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஊழிக் காலத்தின் அளவு நீளிதாய்த் தோன்றும், ஒளவை துரைசாமி உரை – ஊழியினும் நெடிதாய்த் தோன்றுதலின், உ. வே. சாமிநாதையர் உரை – ஊழிக்காலத்தினும் நீண்ட தன்மையுடையது, அ. தட்சிணாமூர்த்தி உரை – ஊழினும் நெடிதாக.  இலக்கணக் குறிப்பு – தெரியிழை – வினைத்தொகை, கடவுமதி – மதி முன்னிலையசை, பாக – விளி, ஊழியின் – இன் உறழ்ச்சிப் பொருள் தந்தது, நெடிதே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  வெள்வேல் – ஒளவை துரைசாமி உரை (ஐங்குறுநூறு 379வது பாடலின் உரை) – விளக்கம் மிக்க வென்றி தரும் வேல்.  வடித்துக் கூரிதாக்கி நெய் தடவப் பெற்றமையின் வெள்வேல் எனப்பட்டது.  வெள்வேல் வென்று அடு தானை வேந்தனொடு – ஒளவை துரைசாமி உரை – வெள்ளிய வேலேந்தி எதிர்த்தோரை வஞ்சியாது வெல்லுகின்ற தானையையுடைய அரசனோடு, அ. தட்சிணாமூர்த்தி உரை – வெள்ளிய வேலைத் தாங்கிப் பகைவரைக் கொன்றழிக்கும் தானையை உடைய வேந்தனொடு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெள்ளிய வேலேந்திய பகைவரை வஞ்சியாது எதிர் நின்று வெல்லும் நால்வகைப் படையினையும் உடைய நம் முடி மன்னனோடு.

சொற்பொருள்:  தெரியிழை அரிவைக்குப் பெரு விருந்தாக – ஆராய்ந்து அணிந்த அணிகலன்களையுடைய எம் காதலிக்குப் பெரு விருந்தாக இருக்குமாறு, வல் விரைத்து கடவுமதி – மிகவும் விரைந்து செலுத்துவாயாக, பாக – பாகனே, வெள்வேல் வென்று – வெள்ளிய வேல் ஏந்தி எதிர்த்தோரை வென்று, அடு தானை வேந்தனொடு நாளிடைச் சேப்பின் ஊழியின் நெடிதே – வேந்தனுடன் ஒரு நாள் தங்கினாலும் அது ஊழிக்காலத்தினும் நெடிதாகத் தோன்றும்

ஐங்குறுநூறு 483, பேயனார், முல்லைத் திணை தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
ஆறு வனப்பு எய்த அலர் தாயினவே,
வேந்து விட்டனனே, மா விரைந்தனவே,
முன்னுறக் கடவுமதி பாக,
நன்னுதல் அரிவை தன்னலம் பெறவே.

பாடல் பின்னணி:  வினைமுற்றி மீண்ட தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது.

பொருளுரைபாகனே!  வழிகள் அழகு எய்தும்படி எங்கும் மலர்கள் பரவியுள்ளன.  வேந்தனும் வினை முடிந்து விடை கொடுத்துவிட்டான். குதிரைகள் விரைகின்றன. முன்பே நாம் செல்லும்படி, நீ தேரைச் செலுத்துவாயாக, நல்ல நெற்றியையுடைய எம் காதலி, எம் பிரிவினால் இழந்த பழைய நலனை மீண்டும் பெறுமாறு.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – முன்னுற என்றது நாம் குறித்த அந்தி மாலைக்கு முன்பே யாம் ஆண்டுச் சேரும்படி என்றவாறாம்.  நமது பிரிவாற் பெரிதும் நலமிழந்து வருந்துவாள் அல்லவோ?  அவ்வருத்தம் தீர்ந்து தனது பழைய பேரழகினை அவள் எய்தும்படி என்பான், நன்னலம் பெறவே என்றான்.  இலக்கணக் குறிப்பு – கடவுமதி – மதி முன்னிலையசை, பெறவே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்:  ஆறு வனப்பு எய்த அலர் தாயினவே – வழிகள் அழகு எய்தும்படி மலர்கள் பரவியுள்ளன (அலர் – மலர்), வேந்து விட்டனனே – வேந்தன் வினை முடிந்து விடைகொடுத்தான், மா விரைந்தனவே – குதிரைகள் விரைகின்றன, முன்னுறக் கடவுமதி – விரைந்து செல்லும்படி நீ செலுத்துவாயாக, பாக – பாகனே, நன்னுதல் அரிவை தன்னலம் பெறவே – நல்ல நெற்றியையுடைய எம் காதலி இழந்த பழைய நலனை மீண்டும் பெற

ஐங்குறுநூறு 484, பேயனார், முல்லைத் திணை தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
வேனில் நீங்கக் கார் மழை தலைஇக்
காடு கவின் கொண்டன்று பொழுது, பாடு சிறந்து
கடியக் கடவுமதி பாக,
நெடிய நீடினம் நேரிழை மறந்தே.

பாடல் பின்னணி:  வினைமுற்றி மீண்ட தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது.

பொருளுரைபாகனே!  கோடை வெப்பம் நீங்கும்படி கார்ப்பருவத்தின் மழை பெய்ததால் காடு அழகு அடைந்துள்ளது இப்பொழுது.  நேரிய அணிகலன்கள் அணிந்த எம் காதலியை மறந்து, நீண்ட நாட்கள் காலம் தாழ்த்திவிட்டோம்.  தேரின் பெருமை சிறக்க அதனை விரைவாக செலுத்துவாயாக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – வேனில் முடிந்து கார் தொடங்கும் நாளே மீண்டு வருகுவம் என்று அவட்கு உறுதி கூறி வந்தேன்.  இப்பொழுது வேனிலும் போய்க் கார்ப்பருவமும் தொடங்கி முதிரவும் முதிர்ந்தது என்பான், ‘வேனில் நீங்கக் கார் மழை தலைஇக் காடு கவின் கொண்டன்று’ என்றான்.  வினைமேற் சென்றமையான் அதனையே நினைத்து அவளை மறந்தே போனேன் என்று இரங்குவான், ‘நெடிய நீட்டினம்’ என்றான்.  இலக்கணக் குறிப்பு – கடிய – கடி என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம், கடவுமதி – மதி முன்னிலையசை, தலைஇ – அளபெடை, நீடினம் – தன்மைப் பன்மை வினைமுற்று – நேரிழை – அன்மொழித்தொகை, மறந்தே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  கடி – கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 87)

சொற்பொருள்:  வேனில் நீங்கக் கார் மழை தலைஇக் காடு கவின் கொண்டன்று பொழுது – கோடை வெப்பம் நீங்கும்படி கார்ப்பருவத்தின் மழை பெய்ததால் காடு அழகு அடைந்துள்ளது இப்பொழுது, பாடு சிறந்து கடியக் கடவுமதி – தேரின் பெருமை சிறக்க விரைவாக செலுத்துவாயாக, பாக – பாகனே, நெடிய நீடினம் நேரிழை மறந்தே – நீண்ட நாட்கள் காலம் தாழ்த்திவிட்டோம் நேரிய அணிகலன்கள் அணிந்த காதலியை மறந்து

ஐங்குறுநூறு 485, பேயனார், முல்லைத் திணை தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
அரும் படர் அவலம் அவளும் தீரப்,
பெருந்தோள் நலம்வர யாமும் முயங்க,
ஏமதி வலவ தேரே,
மா மருண்டு உகளும் மலர் அணிப் புறவே.

பாடல் பின்னணி:  வினைமுற்றி மீண்ட தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது.

பொருளுரைபாகனே!  விலக்குதற்கு அரிய பெரும் துன்பத்திலிருந்து அவள் நீங்கவும், அவளுடைய பெரிய தோள்கள் மீண்டும் அழகு அடையும்பொருட்டு யாம் அவளைத் தழுவவும், விரைந்து செலுத்துவாயாக உன் தேரை, மான்கள் மருண்ட விழிகளுடன் துள்ளித் திரியும் மலர்களால் அழகு அடைந்த காட்டில்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நம் பிரிவினை ஆற்றாது அவள் நலமிக்க தோள்கள் அந்நலம் இழந்து பெரிதும் மெலிந்திருப்பனவாம் என்று பரிவான், பெரும் தோள் நலம் வர என்றான்.  தேரினைக் கண்டு ஆண்டு எதிர்ப்படுகின்ற மான் முதலியன மருண்டு ஓடுங் காட்சியும் கார்ப்பருவ வரவினாலே யாண்டும் பன்னிற மலரும் மலர்ந்து அழகுற்றுத் திகழும் காட்சியும் தன் செலவிற்கு இன்பந்தருதலான் அந்நன்மையைப் பாராட்டுவான் மாமருண்டுகளும் மலரணிப்புறவு என்றான்.  இலக்கணக் குறிப்பு – அவளும் – உம்மை இறந்தது தழுவியது, ஏமதி – ஏவுமதி என்பது ஏமதி ஆயிற்று, மதி முன்னிலையசை, புறவே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்:  அரும் படர் அவலம் அவளும் தீரப் பெருந்தோள் நலம்வர யாமும் முயங்க – விலக்குதற்கு அரிய பெரும் துன்பத்திலிருந்து அவள் நீங்கவும் அவளுடைய பெரிய தோள்கள் அழகு அடையும்பொருட்டு யாம் அவளைத் தழுவவும், ஏமதி – விரைந்து செலுத்துவாயாக, வலவ – பாகனே, தேரே – தேரை, மா மருண்டு உகளும் மலர் அணிப் புறவே – மான்கள் மருண்ட விழிகளுடன் துள்ளித் திரியும் மலர்களால் அழகு அடைந்த காட்டில்

ஐங்குறுநூறு 486, பேயனார், முல்லைத் திணை தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
பெரும் புன் மாலை ஆனாது நினைஇ,
அரும் படர் உழத்தல் யாவது, என்றும்
புல்லி ஆற்றாப் புரையோள் காண,
வள்பு தெரிந்து ஊர்மதி, நின்
புள் இயல் கலி மாப் பூண்ட தேரே.

பாடல் பின்னணி:  வினைமுற்றி மீண்ட தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது.

பொருளுரைபாகனே!  பெரிய துன்பம் தரும் மாலை நேரத்தில் என்னை விடாது நினைத்து, தாங்குவதற்கு அரிய வருத்தத்தில் உழல்வது அவளால் எவ்வாறு இயலும்?  என்றும் தழுவி மகிழ்ந்தபோதும் ஆற்றாது இருந்த தகைமையுடைய என் காதலியை யான் காண்பதற்கு, குதிரைகளின் வாரினை ஆராய்ந்து பற்றிச் செலுத்துவாயாக, நின் பறவை போலும் விரைந்து செல்லும் செருக்குற்ற குதிரைகள் பூட்டிய தேரை.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின் குதிரைகள் இயல்பாகவே விரைந்து செல்லுமாயினும் இன்று மாலைப்பொழுது வருமுன்னர் யாம் ஆண்டுச் சேர்தல் வேண்டுமாகலின் இன்னும் விரையச் செலுத்துக என்பான் ‘புள்ளியற் கலிமா’ என்றும் வள்பு தெரிந்தூர் என்றும் இயம்பினான். இன்று மாலைப்பொழுதே யாம் குறித்த பொழுதாகலின் அது வருமுன்னர் யாம் செல்லேமாயின் அவள் ஆனாது நினைஇ அரும்படர் உழப்பாள். அத்துயர் அவள் உழவாமே யாம் முற்பட வேண்டும் என்பான், பெரும்புன் மாலை ஆனாது நினைஇ அரும்படர் உழத்தல் யாவது என்றான்.  இலக்கணக் குறிப்பு – நினைஇ – அளபெடை, ஊர்மதி – மதி முன்னிலையசை, வலவ – விளி, தேரே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்:  பெரும் புன் மாலை ஆனாது நினைஇ – பெரிய துன்பம் தரும் மாலை நேரத்தில் விடாது நினைத்து, அரும் படர் உழத்தல் யாவது – தாங்குவதற்கு அரிய வருத்தத்தில் உழல்வது எவ்வாறு இயலும், என்றும் புல்லி ஆற்றாப் புரையோள் காண – என்றும் தழுவி மகிழ்ந்தபோதும் ஆற்றாது இருந்த தகைமையுடைய என் காதலியை யான் காண்பதற்கு, வள்பு தெரிந்து ஊர்மதி – குதிரைகளின் வாரினை ஆராய்ந்து பற்றிச் செலுத்துவாயாக, நின் புள் இயல் கலி மாப் பூண்ட தேரே – நின் பறவை போலும் விரைந்து செல்லும் செருக்குற்ற குதிரைகள் பூட்டிய தேரை

ஐங்குறுநூறு 487, பேயனார், முல்லைத் திணை தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
இது மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே,
செறி தொடி உள்ளம் உவப்ப,
மதியுடை வலவ, ஏமதி தேரே.

பாடல் பின்னணி:  வினைமுற்றி மீண்ட தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது.

பொருளுரைஅறிவுடைய பாகனே!  பிரிந்து உறைபவர்கள் தங்கள் காதலர்களை நினைக்கும் இப்பொழுதில் செறிந்த வளையல்களை அணிந்த என் காதலியின் உள்ளம் மகிழும்படி, செலுத்துவாயாக நின் தேரை.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – மதியுடை வலவ என்றான், அவன் குதிரைகளின் ஐந்து கத்தியும் பதினெட்டுச் சாரியையும், கந்தும், மறமும் முதலிய இயல்புகளையும், வண்ணம், தோற்றம், கழிநிலை, உறுப்பியல் முதலிய இலக்கணங்களையும் முற்றவும் கற்றுத் துறைபோகியனாகலின்.  ‘நப்புலந்து உறையும் எவ்வம் நீங்க, நூலறி வலவ கடவுமதி’ (அகநானூறு 144) என்றும் ‘நூல் நவின்று பாக நீ நொவ்விதாகச் சென்றீக’ (ஐந்திணை ஐம்பது 10) என்று பிறரும் கூறுப.  இலக்கணக் குறிப்பு – மன் – ஒழியிசைப் பொருளில் வந்த இடைச்சொல், பொழுதே – ஏகாரம் அசைநிலை, செறி தொடி – அன்மொழித்தொகை, ஏமதி – ஏவுமதி என்பது ஏமதி ஆயிற்று, மதி முன்னிலையசை, தேரே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  இது மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே செறி தொடி உள்ளம் உவப்ப – பிரிந்து உறைபவர்கள் தங்கள் காதலர்களை நினைக்கும் இப் பொழுதில் செறிந்த வளையல்களை அணிந்த என் காதலியின் உள்ளம் மகிழும்படி, மதியுடை வலவ – அறிவுடைய பாகனே, ஏமதி தேரே – செலுத்துவாயாக நின் தேரை

ஐங்குறுநூறு 488, பேயனார், முல்லைத் திணை தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
கருவி வானம் பெயல் தொடங்கின்றே,
பெருவிறல் காதலி கருதும் பொழுதே,
விரி உளை நன் மாப் பூட்டிப்
பருவரல் தீரக் கடவுமதி தேரே.

பாடல் பின்னணி:  வினைமுற்றி மீண்ட தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது.

பொருளுரைபாகனே!  இடி மின்னல் முதலிய தொகுதிகளுடன் முகில்கள் மழை பொழியத் தொடங்கிவிட்டன.  பெரும் வெற்றியையுடைய எம் காதலி எம்மை நினைந்து வருந்தும் பொழுது இதுவே.  விரிந்த பிடரி மயிரையுடைய உன் நல்ல குதிரைகளை ஆராய்ந்து பூட்டி, அவளுடைய துன்பம் தீரும்வண்ணம், விரைந்து செலுத்துவாயாக நின் தேரை.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கார்ப்பருவம் தொடக்கத்தே மீண்டு வருவல் கவலற்க, என்று தெளித்து வந்தானாகலின் அப்பருவம் வந்துவிட்டது, அவளும் இன்றே நம் வரவினை எதிர்பார்த்து வருந்தத் தொடங்குவள் என்பான் ‘வானம் பெயல் தொடங்கின்று’ என்றும், காதலி ‘கருதும் பொழுது’ என்றும் கூறினான்.  நன்மா என்றது, விரைந்து செல்லும் நல்ல குதிரை என்றவாறு.  கருவி வானம் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மின்னல் இடி முதலிய தொகுதிகளையுடைய மேகங்கள்.  இலக்கணக் குறிப்பு – தொடங்கின்றே – ஏகாரம் அசைநிலை, பொழுதே – ஏகாரம் அசைநிலை, கடவுமதி – மதி முன்னிலையசை, தேரே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).

சொற்பொருள்:  கருவி வானம் பெயல் தொடங்கின்றே – இடி மின்னல் தொகுதிகளுடன் முகில்கள் மழை பொழியத் தொடங்கிவிட்டன, பெருவிறல் காதலி கருதும் பொழுதே – பெரும் வெற்றியையுடைய எம் காதலி எம்மை நினைந்து வருந்தும் பொழுது இதுவே, விரி உளை நன் மாப் பூட்டிப் பருவரல் தீரக் கடவுமதி தேரே – விரிந்த பிடரி மயிரையுடைய உன் நல்ல குதிரைகளை ஆராய்ந்து பூட்டி அவளுடைய துன்பம் தீரும்வண்ணம் விரைந்து செலுத்துவாயாக நின் தேரை

ஐங்குறுநூறு 489, பேயனார், முல்லைத் திணை தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
அஞ்சிறை வண்டின் அரியினம் மொய்ப்ப,
மென்புல முல்லை மலரும் மாலைப்,
பையுள் நெஞ்சின் தையல் உவப்ப,
நுண் புரி வண் கயிறு இயக்கி, நின்
வண் பரி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே.

பாடல் பின்னணி:  வினைமுற்றி மீண்ட தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது.

பொருளுரைபாகனே!  அழகிய சிறகுகளையுடைய வண்டின் அழகிய கூட்டம் மொய்க்குமாறு, மென்புலமான முல்லை நிலத்தில் முல்லை மலர்கள் மலர்ந்துள்ள மாலை வேளையில், வருந்தியிருக்கும் நெஞ்சையுடைய எம் காதலி மகிழும்வண்ணம், நுண்ணிதாகத் திரித்த உறுதியான கயிற்றை இழுத்துப் பிடித்து, நின் வளவிய குதிரைகள் பூட்டிய நெடிய தேரை விரைந்து செலுத்துவாயாக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இது யான் குறித்த பருவம் என்பான் ‘மென்புல முல்லை மலரும் மாலை’ என்றான்.  இப்பொழுது அவள் என் வரவு நோக்கிப் பெரிதும் துன்புறுவள் என்பான், ‘பையுள் நெஞ்சின் தையல்’ என்றான்.  நின் குதிரைகள் இயல்பாக விரைந்து செல்லினும், இவ்விரைவு போதியதாகாது என்பான் ‘வண்பரி’ என்றும் ‘கயிறியக்கிக் கடவுமதி’ என்றும் கூறினான்.  இலக்கணக் குறிப்பு – கடவுமதி – மதி முன்னிலையசை, விரைந்தே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  அஞ்சிறை வண்டின் (1) – ஒளவை துரைசாமி உரை – அழகிய சிறகுகளையுடைய வண்டின், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய சிறகுகளையுடைய வண்டினது, தி. சதாசிவ ஐயர் உரை – அகத்தே சிறகுடைய வண்டின், அ. தட்சிணாமூர்த்தி உரை – உள்ளிடத்தே சிறகுடைய வண்டின், அகம் + சிறை என்பது அஞ்சிறை எனவாயிற்று.  வண்டின் அரியினம் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வண்டின் அழகிய இனங்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை, அகநானூறு 223ம் பாடலில், அரியினம் கடுக்கும் – தும்பியாகிய வண்டின் கூட்டங்கள்.

சொற்பொருள்:  அம் சிறை வண்டின் அரியினம் மொய்ப்ப மென்புல முல்லை மலரும் – அழகிய சிறகுகளையுடைய (அகச் சிறகுகளையுடைய) வண்டின் அழகிய கூட்டம் மொய்க்குமாறு மென்புலமான முல்லை நிலத்தில் முல்லை மலர்கள் மலர்ந்துள்ள, மாலைப் பையுள் நெஞ்சின் தையல் உவப்ப – மாலை வேளையில் வருந்தியிருக்கும் நெஞ்சையுடைய எம் காதலி மகிழும்வண்ணம், நுண் புரி வண் கயிறு இயக்கி – நுண்ணிதாகத் திரித்த உறுதியான கயிற்றை இழுத்துப் பிடித்து, நின் வண் பரி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே – நின் வளவிய குதிரைகள் பூட்டிய நெடிய தேரை விரைந்து செலுத்துவாயாக

ஐங்குறுநூறு 490, பேயனார், முல்லைத் திணை தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
அம் தீம் கிளவி தான் தர எம் வயின்
வந்தன்று மாதோ காரே ஆவயின்,
ஆய்தொடி அரும் படர் தீர,
ஆய் மணி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே.

பாடல் பின்னணி:  வினைமுற்றி மீண்ட தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது.

பொருளுரை:   பாகனே!  அழகிய இனிய சொற்களைப் பேசும், அழகிய தொடி அணிந்த என் காதலியை நான் அடையும்பொருட்டுக் கார்காலம் வந்துள்ளது.  அவளுடைய வருத்தும் அரிய நோய் நீங்குமாறு, அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட உயர்ந்த தேரை வேகமாகச் செலுத்துவாயாக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கார்ப்பருவத் தொடக்கத்தே வருவல் எனக் குறிப்பிட்டு வந்தேன் அன்றோ, அப்பருவமும் வந்துவிட்டது என உவப்பான, ‘கார் வந்தன்று’ என்றான்.  இந்நாளிலே நான் என் ஏந்திழையை ஒருதலையாகக் கண்டு மகிழ்வேன் என்று களிப்பான், ‘அம் தீங்கிளவி என் வயின் தர’ என்றான்.  ‘ஆவயின்’ என்றது தனது இல்லத்தை.  மணியோசையைச் செவியால் ஓர்ந்திருப்பாள், அது கேட்டதும் மகிழ்வாள் என்னும் நினைவால் ‘ஆய் மணி நெடுந்தேர்’ என்றான்.  இலக்கணக் குறிப்பு – மாதோ – மாது, ஓ – அசைநிலைகள், காரே – ஏகாரம் அசைநிலை, அம் தீம் கிளவி – அன்மொழித்தொகை, ஆய்தொடி – அன்மொழித்தொகை, கடவுமதி – மதி முன்னிலையசை, விரைந்தே – ஏகாரம் அசைநிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்,  சொல்லதிகாரம்.  இடையியல் 26).

சொற்பொருள்:  அம் தீம் கிளவி – அழகிய இனிய சொற்கள், தான் தர – தான் தர, எம் வயின் வந்தன்று – என்னை அடைய வந்தது, மாதோ – அசைச் சொல், காரே – மழை, ஆவயின் – இந்த வேளையில், ஆய்தொடி – அழகிய தொடி, தேர்ந்த தொடி, அரும் படர் தீர – பெரும் துயரம் தீர, ஆய் மணி – அழகிய மணிகள், நெடுந்தேர் கடவுமதி விரைந்தே – உயர்ந்த தேரை விரைவாக ஓட்டு

வரவுச் சிறப்பு உரைத்த பத்து

பாடல்கள் 491 – 500 – வினைமேற் சென்ற தலைவனின் மீட்சியால் தோன்றிய சிறப்புத் தோன்றுமாறு இயற்றப்பட்டவை இவை.

ஐங்குறுநூறு 491, பேயனார், முல்லைத் திணை தலைவன் தலைவியிடம் சொன்னது
கார் எதிர் காலை யாம், ஓவின்று நலிய,
நொந்து நொந்து உயவும் உள்ளமொடு,
வந்தனெம் மடந்தை, நின் ஏர் தர விரைந்தே.

பாடல் பின்னணி:  வினை முற்றிப் புகுந்த தலைவன் தலைவியிடம் சொன்னது.

பொருளுரைமடந்தையே!  கார்ப்பருவம் தொடங்கும் இந்த வேளையில், யாம் ஓய்வின்றி வருந்தி நொந்து நொந்து துன்புறும் நெஞ்சத்துடன் விரைந்து வந்தோம், நின்னுடைய அழகை நினக்கு மீண்டும் தருவதற்கு.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தான் கூறிப்போந்த இக்கார்ப்பருவம் தொடங்கும் இற்றை நாள் என்பதுபடக் கார் எதிர் காலை என்றான்.  தான் கூறிய வாய்மை தப்பி நினைக்கும் துன்பம் மிகுமே என்னும் நினைவு இடையறாது எம்மை வருத்த என்பான், ஓவின்று நலிய நொந்து நொந்து வந்தேம் என்பான்.  இலக்கணக் குறிப்பு – ஓவின்று – இன்றி என்னும் எச்சம் செய்யுள் விகாரத்தால் இன்று ஆயிற்று, நொந்து நொந்து – அடுக்கு இடைவிடாமைப் பொருட்டு, வந்தனெம் – தன்மைப் பன்மை, மடந்தை – அண்மை விளி, விரைந்தே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்: கார் எதிர் காலை யாம் ஓவின்று நலிய நொந்து நொந்து உயவும் உள்ளமொடு வந்தனெம் – கார்ப்பருவம் தொடங்கும் இந்த வேளையில் யாம் ஓய்வின்றி வருந்தி நொந்து நொந்து துன்புறும் நெஞ்சத்துடன் வந்தோம், மடந்தை – மடந்தையே (விளி), நின் ஏர் தர விரைந்தே – நின்னுடைய அழகை நினக்கு மீண்டும் தருவதற்கு விரைந்து

ஐங்குறுநூறு 492,  பேயனார், முல்லைத் திணை – தலைவன் தலைவியிடம்  சொன்னது
நின்னே போலும் மஞ்ஞை ஆல, நின்
நன்னுதல் நாறும் முல்லை மலர,
நின்னே போல மா மருண்டு நோக்க,
நின்னே உள்ளி வந்தனென்
நன்னுதல் அரிவை, காரினும் விரைந்தே.

பாடல் பின்னணி:  வினை முற்றிப் புகுந்த தலைவன் தலைவியிடம் சொன்னது.

பொருளுரை:   மயில்கள் உன்னைப் போல் நடனம் ஆடுகின்றன.  முல்லை மலர்கள் உன் நெற்றியைப் போன்று நறுமணத்துடன் மலர்ந்துள்ளன.  மான்கள் உன்னைப்போன்ற மருண்ட பார்வையைக் கொண்டுள்ளன.  நான் உன்னை நினைத்தபடியே, கார்ப்பருவ முகிலைவிடவும் விரைவாக வந்தேன்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ஒருபால் மயிலும் ஒருபால் முல்லையும் ஒருபால் மானினமும் தலைமகளின் சாயல் முதலியவற்றைக் காட்டி அவளை நினைப்பித்தலின், காண்டல் வேட்கை மீதூர நின்னே உள்ளி வந்தனென் என்றும், அவன் வரவு கண்ட உவகையால் நுதல் ஒளி சிறந்து விளங்குதல் பற்றித் தலைவியை நன்னுதல் அரிவை என்றும் கார்ப்பருவத் தொடக்கத்தே வருகின்றான் ஆதலின் காரினும் விரைந்து என்றும் கூறினான்.  இலக்கணக் குறிப்பு – அரிவை – விளி, விரைந்தே – ஏகாரம் அசைநிலை.  காரினும் (5) – ஒளவை துரைசாமி உரை – கார்ப் பருவத்தின் தொடக்கத்தே வருகின்றான் ஆகலின் காரினும் விரைந்து என்றும் கூறினான், அ. தட்சிணாமூர்த்தி உரை – கார்மேகத்தினும்.  குறுந்தொகை 323 – பசு முகைத் தாது நாறும் நறுநுதல் அரிவை.

சொற்பொருள்:  நின்னே போலும் மஞ்ஞை ஆல – மயில்கள் உன்னைப் போல் நடனம் ஆடுகின்றன, நன்னுதல் நாறும் முல்லை மலர – முல்லை மலர்கள் உன் நல்ல நெற்றியைப் போன்று நறுமணத்துடன் மலர்ந்துள்ளன, நின்னே போல மா மருண்டு நோக்க – மான்கள் உன்னைப்போன்ற மருண்ட பார்வையைக் கொண்டுள்ளன, அரிவை – பெண்ணே, காரினும் – கார்ப்பருவ முகிலைவிடவும், விரைந்தே – விரைந்து

ஐங்குறுநூறு 493, பேயனார், முல்லைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
ஏறு முரண் சிறப்ப, ஏறு எதிர் இரங்க,
மாதர் மான் பிணை மறியொடு மறுகக்
கார் தொடங்கின்றே காலை
நேர் இறை முன்கை, நின் உள்ளியாம் வரவே.

பாடல் பின்னணி:  வினை முற்றிப் புகுந்த தலைவன் தலைவியிடம் சொன்னது.

பொருளுரை:   அழகிய முன் கைகளையுடையவளே!  யாம் நின்னை நினைத்து வரும்பொழுது, ஆமாவின் ஏறுகள் மாறி மாறி ஒலிக்க, அவற்றிற்கு எதிராக வானில் இடியேறுகள் முழங்க, காதலுடைய பெண்மான்கள் தங்கள் குட்டிகளுடன் மயங்கித் திரிய, கார்ப்பருவம் தொடங்கி விட்டது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாதர் மான்பிணை மறியொடு மறுக என்றது, இனி யான் நின்னோடு கூடிக்களித்துப் பேரின்பம் நுகர்வென் என இறைச்சிப்பொருள் தோற்றுவித்து நின்றது.  ஏறு முரண் சிறப்ப ஏறு எதிர் இரங்க (1) – ஒளவை துரைசாமி உரை – ஏறு முன்னது ஆனேறும் பின்னது இடியேறுமாம்.  ஏறுகள் மாறுபாடு மிக்குச் சிலைக்க, அவற்றிற்கு எதிராக விசும்பில் இடியேறு முழங்க.  இடியொலி கேட்டு அச்சுற்ற ஏற்றினம் குளிர் மிகுதியால் முரண் மிக்குச் சிலைத்தலின், ஏறு முரண் சிறப்ப என்றார்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – முரண் சிறந்து நின்ற ஆனேற்றுக்கும் தனக்கும் ஏறு என்னும் பெயர் பொதுவாகலினாலும் நிற்றலானும் இடியேறு அவ்வானேற்றின் எதிர் முழங்கிற்று எனத் தற்குறிபேற்றமாக ஓதினர்.  மாதர் மான் பிணை மறியொடு மறுக (2) – தி. சதாசிவ ஐயர் உரை – காதலையுடைய பெண்மான் மறியோடு மறுக, அ. தட்சிணாமூர்த்தி உரை – விருப்பத்தை மிகுவிக்கும் பெண்மான்கள் தங்கள் மறிகளுடன் மயங்கித் திரிந்தன, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய கலைமான்கள் தத்தம் பிணைமானோடும் மறிகளோடும் கூடிக் குலாவ.  இலக்கணக் குறிப்பு – தொடங்கின்றே – ஏகாரம் அசைநிலை, நேர் இறை முன்கை – அன்மொழித்தொகை, விளி, யாம் – தன்மைப் பன்மை, வரவே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  ஏறு முரண் சிறப்ப – காளை மாடுகள் ஒலிக்க, ஏறு எதிர் இரங்க – இடி பதிலாக இடிக்க, மாதர் – அழகிய, மான் – மான், பிணை – பெண் மான், மறியொடு – குட்டியோடு, மறுக – விளையாட, கார் தொடங்கின்றே காலை – மழைக் காலம் தொடங்கிய பொழுது, நேர் இறை முன் கை – அழகிய முன் கைகளையுடையவளே, நின் உள்ளி யாம் வரவே – நின்னை நினைத்து யாம் வர

ஐங்குறுநூறு 494, பேயனார், முல்லைத் திணை தலைவன் தலைவியிடம் சொன்னது
வண்டு தாது ஊதத், தேரை தெவிட்டத்,
தண் கமழ் புறவின் முல்லை மலர,
இன்புறுத்தன்று பொழுதே,
நின் குறி வாய்த்தனம், தீர்க இனி படரே.

பாடல் பின்னணி:  வினை முற்றிப் புகுந்த தலைவன் தலைவியிடம் சொன்னது.

பொருளுரைவண்டுகள் மலர்த் தாது உண்டு இசைக்கவும் (மலரின் தேனைப் பருகி இசைக்கவும்), தேரைகள் ஒலிக்கவும், குளிர்ந்த நறுமணம் கமழும் முல்லை நிலத்தில் முல்லை மலர்கள் மலரவும், இன்பம் செய்யும் இக்கார்ப் பருவத்தில் நின்னிடம் குறித்த பருவத்தில் யாம் வந்தோம்.  இனி நின் துன்பம் தீரட்டும்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – வினை முற்றி மீண்ட தலைமகன் தலைவியொடு கூடி இருக்கையில் மாலைப்பொழுது, வண்டின் இசையும், தேரை ஒலியும், மலர்ந்த முல்லையின் நறுமணமும் கொண்டு விளங்குவது கண்டு, உள்ளம் காதல் சிறப்பது உணர்ந்து உரையாடுகின்றான் ஆதலின், இன்புறுத்தன்று பொழுதே என்றான்.  வண்டு தாது ஊத (1) – தி. சதாசிவ ஐயர் உரை – வண்டுகள் தாதை உண்ணாநிற்க, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வண்டுகள் மலரின் தேனைப் பருகி இசை முரலா நிற்பவும், வண்டுகள் தேனுண்டு பாட, அ. தட்சிணாமூர்த்தி உரை – வண்டுகள் பூந்தாதினை உண்டு மகிழ.  இலக்கணக் குறிப்பு – பொழுதே – ஏகாரம் அசைநிலை, படரே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்: வண்டு தாது ஊதத் தேரை தெவிட்டத் தண் கமழ் புறவின் முல்லை மலர இன்புறுத்தன்று பொழுதே நின் குறி வாய்த்தனம் – வண்டுகள் மலர்த் தாது உண்டு இசைக்கவும் (மலரின் தேனைப் பருகி இசைக்கவும்) தேரைகள் ஒலிக்கவும் குளிர்ந்த நறுமணம் கமழும் முல்லை நிலத்தில் முல்லை மலர்கள் மலரவும் இன்பம் செய்யும் இக்கார்ப் பருவத்தில் நின்னிடம் குறித்த பருவத்தில் வந்தோம், தீர்க இனி படரே – தீரட்டும் இனி துன்பம்

ஐங்குறுநூறு 495, பேயனார், முல்லைத் திணை தலைவன் தலைவியிடம் சொன்னது
செந்நில மருங்கில் பல் மலர் தாஅய்ப்,
புலம்பு தீர்ந்து இனியவாயின புறவே,
பின்னிருங் கூந்தல் நன்னலம் புனைய,
உள்ளுதொறும் கலிழும் நெஞ்சமொடு,
முள் எயிற்று அரிவை, யாம் வந்தமாறே.

பாடல் பின்னணி:  வினை முற்றிப் புகுந்த தலைவன் தலைவியிடம் சொன்னது.

பொருளுரைகூரிய பற்களையுடைய அரிவையே!  நின்னை நினைக்கும்போதெல்லாம் தனிமையினால் கலங்கும் நெஞ்சத்துடன், நின் பின்னிய கரிய கூந்தலை மலர்ச் சூட்டி அழகுப்படுத்த, யாம் வந்த சிவந்த நிலப்பரப்பில் பலவகை மலர்களும் பரவி, எம் தனிமைத் துன்பத்திற்கு இனியதாக இருந்தது முல்லை நிலம்.

குறிப்பு:  இவ்வாறு சில பதிப்புகளில் உள்ளது – முள் எயிற்று அரிவை யாம் வந்த ஆறே.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கார்ப்பருவம் வந்தமையாலே பன்மலர் தாஅய் என்பது கருத்து.  இக்கார்ப்பருவத்தே அது தரும் பன்மலரானும் நின் பின்னிருங்கூந்தல் புனையக்கருதி யாம் வருதலான் ஆறும் இனியவாயின என்றானுமாயிற்று.  ஆறு புலம்பு தீர்ந்து இனியவாயின.  அங்ஙனமே நீயும் இனிப் புலம்பு தீர்ந்து இனியை ஆகுதி என்பது குறிப்பு.  வந்தமாறே (5) – ஒளவை துரைசாமி உரை – வந்தமையால், தி. சதாசிவ ஐயர் உரை – யான் வந்த காரணம்.  இலக்கணக் குறிப்பு – தாஅய் – செய்யுளிசை அளபெடை, அரிவை – அண்மை விளி, புறவே – ஏகாரம் அசைநிலை, வந்தமாறே – ஏகாரம் அசைநிலை, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்: செந்நில மருங்கில் பல் மலர் தாஅய்ப் புலம்பு தீர்ந்து இனியவாயின புறவே – சிவந்த நிலப்பரப்பில் பலவகை மலர்கள் பரவி எம் தனிமைத் துன்பத்திற்கு இனியதாகியது முல்லை நிலம், பின்னிருங் கூந்தல் நன்னலம் புனைய – நின் பின்னிய கரிய கூந்தலை மலர்ச் சூட்டி அழகுப்படுத்த, உள்ளுதொறும் கலிழும் நெஞ்சமொடு – நின்னை நினைக்கும்போதெல்லாம் கலங்கும் நெஞ்சத்துடன், முள் எயிற்று அரிவை – கூரிய பற்களையுடைய அரிவையே, யாம் வந்தமாறே – யாம் வந்தபோது

ஐங்குறுநூறு 496, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
மா புதல் சேர, வரகு இணர் சிறப்ப,
மா மலை புலம்பக் கார் கலித்து அலைப்பப்,
பேரமர்க்கண்ணி, நின் பிரிந்து உறைநர்
தோள் துணையாக வந்தனர்,
போது அவிழ் கூந்தலும் பூ விரும்புகவே.

பாடல் பின்னணி:  குறித்த பருவத்தின்கண் தலைவன் வந்தபின் தோழி தலைவியிடம் சொன்னது.

பொருளுரைபெரிய அமர்த்த கண்களை உடையவளே!  மான்கள் புதர்களில் சென்று அடையவும், வரகுக் கதிர்கள் திகழவும், பெரிய மலை இயங்குனர் இல்லாது தனிமைப்படவும், கரிய முகில்கள் முழக்கமிட்டு வருத்தம் செய்யும் இக்கார்ப் பருவத்தில், நின்னைப் பிரிந்து வாழ்ந்த நம் தலைவர், நின் தோள்களுக்குத் துணையாக வந்துவிட்டார், மலர்கள் இல்லாது அவிழ்ந்து இருந்த நின் கூந்தலில் மலர்களை விருப்பத்துடன் இனி நீ அணிவதற்கு.

குறிப்பு:  மா (1) – ஒளவை துரைசாமி உரை – விலங்கினம், ஈண்டு மான் இனங்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – விலங்கினம், அ. தட்சிணாமூர்த்தி உரை – மா என்பது விலங்குப் பொதுப்பெயர்.  ஈண்டு அது மான்களைச் சிறப்பாகச் சுட்டிற்று, அவையே புதர்களில் மறைந்து வாழ்தலின்.  இலக்கணக் குறிப்பு – சேர – செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், சிறப்ப – செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அலைப்ப – செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், விரும்புகவே – விரும்புக வியங்கோள் வினைமுற்று, ஏகாரம் அசைநிலை.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).   போது அவிழ் கூந்தலும் பூ விரும்புகவே (5) – பொ.வே. சோமசுந்தரனார் உரை – மலர்ந்து மணம் பரப்புதற்குரிய நின்னுடைய வறுங்கூந்தல் அம்மலர்களை விரும்பி அணிவதாக, ஒளவை துரைசாமி உரை – பூக்களை விரும்பாது அவிழ்ந்துக் கிடந்த நின் கூந்தலில் அவற்றை விரும்பி அணிந்து புனைவாயாக, அ, தட்சிணாமூர்த்தி உரை – பூக்களை விரும்பாது வறிதே கிடந்த நின் கூந்தல் பண்டுபோல் பூக்களால் அழகு பெறுதலை விரும்புமாக.

சொற்பொருள்: மா புதல் சேர வரகு இணர் சிறப்ப மா மலை புலம்பக் கார் கலித்து அலைப்ப – மான்கள் (விலங்குகள்) புதர்களில் சென்று அடையவும் வரகுக் கதிர்கள் திகழவும் பெரிய மலை இயங்குனர் இல்லாது தனிமைப்படவும் கரிய முகில்கள் முழக்கமிட்டு வருத்தவும், பேரமர்க்கண்ணி – பெரிய அமர்த்த கண்களை உடையவளே, நின் பிரிந்து உறைநர் தோள் துணையாக வந்தனர் – நின்னைப் பிரிந்து வாழ்பவர் நின் தோள்களுக்குத் துணையாக நம் தலைவர் வந்துவிட்டார், போது அவிழ் கூந்தலும் பூ விரும்புகவே – மலர்கள் இல்லாது அவிழ்ந்து இருந்த நின் கூந்தலில் மலர்களை விருப்பத்துடன் அணிவதற்கு

ஐங்குறுநூறு 497, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
குறும் பல் கோதை கொன்றை மலர,
நெடுஞ்செம் புற்றம் ஈயல் பகர,
மாபசி மறுப்பக் கார் தொடங்கின்றே,
பேரியல் அரிவை, நின் உள்ளிப்
போர் வெங்குருசில் வந்தமாறே.

பாடல் பின்னணி:  குறித்த பருவத்தின்கண் தலைவன் வந்தபின் தோழி தலைவியிடம் சொன்னது.

பொருளுரைபெருமைக்குரிய பண்புகளையுடைய அரிவையே!  போரை விரும்பிச் சென்ற நம் தலைவர், நின்னை நினைத்து வந்தமையால், குறிய பலவாகிய மாலைகளை ஒத்த பூங்கொத்துக்களைக் கொன்றை மரங்கள் தோற்றுவிக்கவும், நெடிய சிவந்த புற்றங்கள் ஈசல்களை வெளிப்படுத்தவும், விலங்குகள் குளிரால் வருந்தி உண்ணாது இருப்பவும், கார்ப்பருவம் தொடங்கிவிட்டது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இது கார்ப்பருவந் தொடங்கு முன்னரே யான் மீண்டு வருகுவல் கலங்காதே கொள் என்று கூறித் தெளித்துப் போந்த தலைவன், தான் கூறியபடியே மழை தொடங்கு முன்னரே மீண்டு வந்துவிட்டமை அறிந்த தோழி தலைவியை எய்தி நம் பெருமான் உதோ வந்துவிட்டார், அவர் கூறிய கார்ப்பருவமும் தொடங்கி விட்டது போலும் என்று மகிழ்ந்து கூறியது.  இலக்கணக் குறிப்பு – புற்றம் – அம் சாரியைதொடங்கின்றே – ஏகாரம் அசைநிலை, அரிவை – விளி, வந்தமாறே – ஏகாரம் அசைநிலை, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்.

சொற்பொருள்: குறும் பல் கோதை கொன்றை மலர நெடுஞ்செம் புற்றம் ஈயல் பகர மா பசி மறுப்பக் கார் தொடங்கின்றே – குறிய பலவாகிய மாலைகளை ஒத்த பூங்கொத்துக்களைக் கொன்றை மரங்கள் தோற்றுவிக்கவும் நெடிய சிவந்த புற்றங்கள் ஈசல்களை வெளிப்படுத்தவும் விலங்குகள் குளிரால் வருந்தி உண்ணாது இருப்பவும் கார்ப்பருவம் தொடங்கிவிட்டது, பேரியல் அரிவை – பெருமைக்குரிய பண்புகளையுடைய அரிவையே, நின் உள்ளிப் போர் வெங்குருசில் வந்தமாறே – போரை விரும்பிச் சென்ற நம் தலைவர் நின்னை நினைத்து வந்தமையால்

ஐங்குறுநூறு 498, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
தோள் கவின் எய்தின, தொடி நிலை நின்றன,
நீள் வரி நெடுங்கண் வாள் வனப்பு உற்றன,
ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டென,
விரைசெலல் நெடுந்தேர் கடைஇ,
வரையக நாடன் வந்தமாறே.

பாடல் பின்னணி:  குறித்த பருவத்தின்கண் தலைவன் வந்தபின் தோழி தலைவியிடம் சொன்னது.

பொருளுரைஉயர்ந்த மருப்புகளை (தந்தங்களை) உடைய யானைகளை உடைய வேந்தன் போர்த் தொழிலிலிருந்து விடுவித்ததால், விரைந்து செல்லும் நெடிய தேரைச் செலுத்தி மலைநாடன் வந்ததால், பிரிவால் அழகிழந்த நின் தோள்கள் இப்பொழுது அழகு அடைந்தன.  முன்பு கழன்ற வளையல்கள் இப்பொழுது கழலாது தமக்குரிய நிலையில் இருக்கின்றன.  நீண்ட செவ்வரி படர்ந்த கண்கள் ஒளியையும் அழகையும் பெற்றன.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இது தலைவன் வருகையாற் படர் அகன்று ஒரே பொழுதில் புத்தழகும் புதுப்பொலிவும் புத்தொளியும் பெற்ற தலைவியைக் கண்டு தோழி வியந்தவாறு.  நீடூழி வாழ்க என்பது குறிப்பெச்சம்.  இலக்கணக் குறிப்பு – கடைஇ – அளபெடை, வந்தமாறே – ஏகாரம் அசைநிலை, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்.

சொற்பொருள்: தோள் கவின் எய்தின – பிரிவால் அழகிழந்த தோள்கள் இப்பொழுது அழகு அடைந்தன, தொடி நிலை நின்றன – முன்பு கழன்ற வளையல்கள் இப்பொழுது கழலாது தமக்குரிய நிலையில் இருக்கின்றன, நீள் வரி நெடுங்கண் வாள் வனப்பு உற்றன – நீண்ட செவ்வரி படர்ந்த கண்கள் ஒளியையும் அழகையும் பெற்றன, ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டென – உயர்ந்த மருப்புகளை (தந்தங்களை) உடைய யானைகளை உடைய வேந்தன் போர்த் தொழிலிலிருந்து விடுவித்ததால், விரைசெலல் நெடுந்தேர் கடைஇ வரையக நாடன் வந்தமாறே – விரைந்து செல்லும் நெடிய தேரைச் செலுத்தி மலைநாடன் வந்ததால்

ஐங்குறுநூறு 499, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
பிடவம் மலரத், தளவம் நனையக்,
கார் கவின் கொண்ட கானம் காணின்,
வருந்துவள் பெரிதென, அருந்தொழிற்கு அகலாது
வந்தனரால் நம் காதலர்,
அம் தீம் கிளவி, நின் ஆய் நலம் கொண்டே.

பாடல் பின்னணி:  குறித்த பருவத்தின்கண் தலைவன் வந்தபின் தோழி தலைவியிடம் சொன்னது.

பொருளுரைஅழகிய இனிய சொற்களை உடையவளே!  பிடவம் மலரவும், தளவம் அரும்புகளைத் தோற்றுவிக்கவும், கார்ப்பருவத்தினால் அழகு அடைந்த காட்டைக் கண்டால் பெரிதும் வருந்துவாள் அவள் என்று, இழந்த நின் நலத்தை நீ மீண்டும் பெறுமாறு, அரிய போர்த்தொழிலுக்கு மேலும் செல்லாது மீண்டு வந்தார் நம் தலைவர்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவன் பிரிந்துழி அழிநிலை எய்தி அவன் வரவு காண்டலும் பெரிதும் தழைத்தலின், ஆய் நலங்கொண்டு வந்தார் என்றாள்.  வருந்தாதேகொள் என்பது குறிப்பெச்சம்.  அ. தட்சிணாமூர்த்தி உரை – ‘கார் கவின் கொண்ட கானம்’ என்றாள் கார்மழையால் கவின் கொண்டது கானம் என்ற பொருளில்.  கானத்தின் அழகு மிகுதிக்குப் பிடவ மலர்களும் தளவின் அரும்புகளும் ஏதுக்களாயின. மரமும் செடியும் கொடியும் நலம் பெறுவது போல் தலைவியும் தான் இழந்த நலனை மீண்டும் பெறுமாறு திரும்பினான் எனத் தலைவன் அன்பைப் புகழ்ந்தாள்.  இலக்கணக் குறிப்பு – வந்தனரால் – ஆல் அசைநிலை, அம் தீம் கிளவி – அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, கொண்டே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்: பிடவம் மலரத் தளவம் நனையக் கார் கவின் கொண்ட கானம் காணின் வருந்துவள் பெரிதென – பிடவம் மலரவும் தளவம் அரும்புகளைத் தோற்றுவிக்கவும் கார்ப்பருவத்தினால் அழகு அடைந்த காட்டைக் கண்டால் பெரிதும் வருந்துவாள் என்று (பிடவம் – Randia Malabarica – தளவம் – golden jasmine, நனை – அரும்பு), அருந்தொழிற்கு அகலாது வந்தனரால் – அரிய போர்த்தொழிலுக்கு மேலும் செல்லாது வந்ததால், நம் காதலர் – நம் தலைவர், அம் தீம் கிளவி – அழகிய இனிய சொற்களை உடையவளே, நின் ஆய் நலம் கொண்டே – இழந்த உன் நலத்தை மீண்டும் பெறுமாறு

ஐங்குறுநூறு 500, பேயனார், முல்லைத் திணை தோழி தலைவனிடம் சொன்னது
கொன்றைப் பூவின் பசந்த உண்கண்,
குன்றக நெடுஞ் சுனைக் குவளை போலத்
தொல் கவின் பெற்றன இவட்கே, வெல்போர்
வியன் நெடும் பாசறை நீடிய
வயமான் தோன்றல், நீ வந்தமாறே.

பாடல் பின்னணி:  வினை முற்றி வந்த தலைவனிடம் தோழி சொன்னது.

பொருளுரைவெல்லுகின்ற போரினைப் புரியும் அகன்ற நெடிய பாசறையில் நெடுநாள் தங்கிய அரிமான் போன்ற தலைவா!  நீ பிரிந்ததனால் கொன்றை மலர்களைப்போல் மஞ்சள் நிறம் கொண்ட என் தோழியின் மையுண்ட கண்கள், நீ மீண்டு வந்ததனால், இப்பொழுது குன்றில் உள்ள நெடிய சுனையில் உள்ள குவளை மலர்கள் போன்ற தம் பண்டைய அழகை மீண்டும் பெற்றன.

குறிப்பு:  அ. தட்சிணாமூர்த்தி உரை – குன்றிலுள்ள நெடிய சுனையில் பூத்த குவளை மலர் போலத் தொல்கவின் பெற்றன என்றாள், தலைவன் பிரிதற்கு முன்னர் அக்கண்கள் இருந்த நிலை நோக்கி.  நெடுமை ஆழத்தின்மேல் நின்றது.  அதனால் நீர்மிகுதி மலரின் செழுமைக்கு ஏதுவாயிற்று.  காட்டகத்தே வாழும் அரிமாவைப் பிற விலங்குகள் அஞ்சுவது போல், தலைவனை அவன் பகைவர் யாவரும் அஞ்சுவர் என்பது பட அவனை ‘வயமான் தோன்றல்’ என்றாள்.  வயமான் தோன்றல் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாடல் 304 – குதிரைகளை ஊர்தலில் வல்லவனான பெருமானே, பாடல் 500 – அரிமான் போன்ற ஆற்றல் மிக்க பெருமானே.  ஒளவை துரைசாமி உரை – பாடல் 304 – வலிமிக்க குதிரைகளையுடைய தலைவனே, பாடல் 500 – புலி போலும் ஆற்றலையுடைய தலைவ.  இலக்கணக் குறிப்பு – பூவின் – இன் உவம உருபு, இவட்கே – ஏகாரம் அசைநிலை, வந்தமாறே – ஏகாரம் அசைநிலை, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்.

சொற்பொருள்: கொன்றைப் பூவின் பசந்த உண்கண் குன்றக நெடுஞ் சுனைக் குவளை போலத் தொல் கவின் பெற்றன – கொன்றை மலர்களைப்போல் மஞ்சள் நிறம் கொண்ட இவளுடைய மையுண்ட கண்கள் குன்றில் உள்ள நெடிய சுனையில் உள்ள குவளை மலர்கள் போன்ற தம் பண்டைய அழகை மீண்டும் பெற்றன, இவட்கே – இவளின், வெல்போர் வியன் நெடும் பாசறை நீடிய வயமான் தோன்றல் – வெல்லுகின்ற போரினைப் புரியும் அகன்ற நெடிய பாசறையில் நெடுநாள் தங்கிய அரிமான் போன்ற தலைவா, நீ வந்தமாறே – நீ வந்ததனால்

One Response to “தமிழ் உரை – ஐங்குறுநூறு”

  1. Vengada Soupraya Nayaga's avatar
    Vengada Soupraya Nayaga February 2, 2012 at 5:17 pm #

    Thank you very much for your incredible efforts in safeguarding our Sangam Literature
    which has to be introduced to many Tamil and Tamilophones who are still unaware of their
    own treasure.
    Vengada Soupraya Nayagar.
    Pondicherry.

Comments are closed.