தமிழ் உரை – பதிற்றுப்பத்து

பதிற்றுப்பத்து

18, 47, 56, 61, 87

பதிற்றுப்பத்து 18,  பாடியவர் – குமட்டூர்க் கண்ணனார், பாடப்பட்டோன்  – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,*கூந்தல் விறலியர்*, துறை: இயன்மொழி வாழ்த்து, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

உண்மின் கள்ளே, அடுமின் சோறே,
எறிக திற்றி, ஏற்றுமின் புழுக்கே,
வருநர்க்கு வரையாது பொலங்கலந் தெளிர்ப்ப
இருள் வணர் ஒலிவரும், புரிய அவிழ் ஐம்பால்
ஏந்து கோட்டு அல்குல் முகிழ் நகை மடவரல்  5
*கூந்தல் விறலியர்* வழங்குக அடுப்பே,
பெற்றது உதவுமின், தப்பு இன்று, பின்னும்,
மன் உயிர் அழிய யாண்டு பல துளக்கி,
மண் உடை ஞாலம் புரவு எதிர் கொண்ட
தண் இயல் எழிலி தலையாது மாறி,  10
மாரி பொய்க்குவது ஆயினும்,
சேரலாதன் பொய்யலன் நசையே.

பொருளுரை:  மன்னனிடம் வரிசைப் பெற்ற கூந்தல் விறலியரே! கள்ளை உண்பீராக, சோற்றை ஆக்குவீர்களாக, இறைச்சியை அறுப்பீர்களாக, வேக வைத்ததற்குரிய கறி வகைகளை உலையில் ஏற்றுவீர்களாக, கருமையான, குழன்ற, அடர்ந்த ஐந்து பாகங்களாக முடிக்கப்பட்ட கூந்தலையும், உயர்ந்த பக்கங்களையுடைய அல்குலையும், அரும்பும் புன்னகையையும், இளமையினை உடைய, ஐந்து பாகங்களாகக் கருமையான கூந்தலை முடித்தவர்களே, வருபவர்களுக்கு எல்லையில்லாமல் வழங்கும் பொருட்டு, உங்கள் பொன் அணிகள் ஒலிக்க, உண்ணுவதற்குச் சமைப்பீர்களாக.

நீங்கள் பெற்ற செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து உதவுங்கள். அதனால் தவறு இல்லை. நிலைபெற்ற உயிர்கள் அழியுமாறு பல ஆண்டுகளாக உயிர்களை வருத்தி, மண்ணையுடைய உலகத்தில் காப்பதை மேற்கொண்ட, குளிர்ச்சியான இயல்பையுடைய முகில்கள் தாங்கள் மேற்கொண்ட மழைத் தொழிலிலிருந்து மாறி, மழைப் பெய்யாது பொய்த்தாலும், பின்னும், உங்கள் விருப்பம் பழுகாதாகா வண்ணம் சேரலாதன் உங்களுக்குக் கொடுப்பான்.

குறிப்பு:  கூந்தல் விறலியர் என்பவர்கள் ஆடல் பாடல் ஆகியவற்றில் சிறந்து, மன்னனின் வரிசைபெற்ற மகளிர்.

சொற்பொருள்:   உண்மின் கள்ளே – கள்ளை உண்பீராக, அடுமின் சோறே – சோற்றை ஆக்குவீர்களாக, எறிக திற்றி – இறைச்சியை அறுப்பீர்களாக, ஏற்றுமின் புழுக்கே – வேக வைத்தற்குரிய கறி வகைகளை உலையில் ஏற்றுங்கள், வருநர்க்கு வரையாது பொலங்கலந் தெளிர்ப்ப – வருபவர்களுக்கு எல்லையில்லாமல் வழங்கும் பொருட்டு உங்கள் பொன் அணிகள் ஒலிக்க, இருள் வணர் ஒலிவரும் புரிய அவிழ் ஐம்பால் – இருண்ட குழன்ற அடர்ந்த ஐந்து பாகங்களாக முடிக்கப்பட்ட கூந்தல், ஏந்து கோட்டு அல்குல் – உயர்ந்த பக்கத்தையுடைய அல்குல், முகிழ் நகை – அரும்பும் புன்னகை, மடவரல் – இளமையினை உடையவர்கள், கூந்தல் விறலியர் – மன்னனிடம் வரிசைப் பெற்ற விறலியர், வழங்குக அடுப்பே – உண்ணுவதற்கு சமைப்பீர்களாக, பெற்றது உதவுமின் – நீங்கள் பெற்ற செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து உதவுங்கள், தப்பு இன்று – தவறு இல்லை, பின்னும் – பின்பும், மன் உயிர் அழிய – நிலைபெற்ற உயிர்கள் அழிய, யாண்டு பல துளக்கி பல ஆண்டுகளாக வருத்தி, மண் உடை ஞாலம் – மண்ணையுடைய உலகம், புரவு எதிர் கொண்ட – காப்பதை மேற்கொண்ட, தண் இயல் எழிலி தலையாது மாறி – குளிர்ச்சியான இயல்பையுடைய முகில்கள் மேற்கொண்ட மழைத் தொழிலிலிருந்து மாறி, மாரி பொய்க்குவது ஆயினும் – மழைப் பெய்யாது பொய்த்தாலும், சேரலாதன் பொய்யலன் நசையே – உங்கள் விருப்பம் பழுகாதாகா வண்ணம் சேரலாதன் கொடுப்பான்

பதிற்றுப்பத்து 47, பாடியவர் – பரணர்,  பாடப்பட்டோன் – கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், *நன் நுதல் விறலியர்*, துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

அட்டு ஆனானே குட்டுவன், அடு தொறும்
பெற்று ஆனாரே பரிசிலர் களிறே,
வரை மிசை இழிதரும் அருவியின், மாடத்து
வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில்,
சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின்,  5
பாண்டில் விளக்குப் பரூஅச்சுடர் அழல,
*நன் நுதல் விறலியர்* ஆடும்
தொல் நகர் வரைப்பின், அவன் உரை ஆனாவே.

பொருளுரை:  சேரன் செங்குட்டுவன் பகைவரை அழித்தும் அமையாதவனாக இருக்கின்றான். அவன் போரிடும் பொழுதெல்லாம், களிற்று யானைகளைப் பெற்று அமையாதவர்கள் ஆகி அவன் போர்ச் சிறப்பைப் புகழ்ந்து பாடுவார்கள் பரிசில் மாக்கள். மலை மேலிருந்து கீழே விழும் அருவியைப் போல மாடங்களிலிருந்து காற்றால் அசையும் ஒளியுடைய கொடிகள் பறக்கும் தெருவில், எண்ணெயைச் சொரியும் திரிக்குழாயானது தான் ஏற்றுக் கொண்ட எண்ணெயைப் பரவுவதால், பாண்டில் விளக்கின் பருத்த திரி எரிய, அழகிய நெற்றியையுடைய விறலியர் ஆடும் பழைய நகரின் எல்லையில் அவனைப் புகழும் புகழுரைகள் நீங்காது நிலவின.

சொற்பொருள்:  அட்டு ஆனானே குட்டுவன் – சேரன் செங்குட்டுவன் பகைவரை அழித்தும் அமையான் ஆகின்றான், அடுதொறும் – அவன் போரிடும் பொழுதெல்லாம், பெற்று ஆனாரே – அடைந்து அமையாதவர்கள், பரிசிலர் – பரிசில் மாக்கள், களிறே – களிற்று யானை, வரை மிசை இழிதரும் அருவியின் – மலை மேலிருந்து கீழே விழும் அருவியைப் போல, மாடத்து வளி முனை அவிர்வரும் – மாடங்களிலிருந்து காற்றால் அசையும் ஒளியுடைய, கொடி நுடங்கு தெருவில் – கொடி பறக்கும் தெருவில், சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின் – எண்ணெயைச் சொரியும் திரிக்குழாய் தான் ஏற்றுக் கொண்ட எண்ணெய் பரவுவதால், பாண்டில் விளக்குப் பரூஅச்சுடர் அழல – பாண்டில் விளக்கின் பருத்த திரி எரிய, நன் நுதல் விறலியர் ஆடும் – அழகிய நெற்றியையுடைய விறலியர் ஆடும், தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே – பழைய நகரின் எல்லையில் அவனைப் புகழும் புகழுரைகள் நீங்காது நிலவின

பதிற்றுப்பத்து 56பாடியவர்காக்கை பாடினியார் நச்செள்ளையார், பாடப்பட்டோன் சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், *வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சி*, துறைஒள் வாள் அமலை, தூக்குசெந்தூக்கு, வண்ணம்ஒழுகு வண்ணம் 

விழவு வீற்று இருந்த வியல் உள் ஆங்கண்,
கோடியர் முழவின் முன்னர், ஆடல்
வல்லான் அல்லன், வாழ்க அவன் கண்ணி,
வலம்படு முரசம் துவைப்ப வாள் உயர்த்தி,
இலங்கும் பூணன், பொலங்கொடி உழிஞையன்,  5
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
*வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி*
வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே.

பொருளுரை:  விழாக்கள் சிறப்பாக எடுக்கப்பட்ட அகன்ற ஊரில் கூத்தர்களின் முழவு ஓசைக்கு ஏற்ப ஆடும் தொழிலில் வல்லவன் இல்லை சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்.  அவன் சூடிய மலர்ச்சரம் நீடு வாழ்வதாக!

வெற்றி முரசம் ஒலிக்க வாளை உயர்த்தி, ஒளியுடைய அணிகலன்களை அணிந்து,  பொன்னால் செய்த உழிஞைக் கொடியைச் சூடி,  அறியாமையின் மிகுதியால் வெகுண்டு, தன் மேல் வந்த பகை வேந்தர்கள் தங்கள் உடம்பை மறந்ததால் வந்த வெற்றிச் செல்வத்தையுடைய, பகைவர்கள் வீழும் போர்க்களத்தில்,  ஆடுவான் மன்னன்!

சொற்பொருள்:  விழவு வீற்று இருந்த – விழாக்கள் சிறப்பாக எடுக்கப்பட்ட,  வியல் உள் ஆங்கண் – அகன்ற இடத்தில், கோடியர் முழவின் முன்னர் – கூத்தர்களின் முழவு ஓசைக்கு ஏற்ப,  ஆடல் வல்லான் அல்லன் – ஆடும் தொழிலில் வல்லவன் இல்லை,  வாழ்க அவன் கண்ணி – அவன் சூடிய கண்ணி நீடு வாழ்வதாக,  வலம்படு முரசம் துவைப்ப – வெற்றி முரசம் ஒலிக்க,  வாள் உயர்த்தி – வாளை உயர்த்தி,  இலங்கும் பூணன் –  ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவன், பொலங்கொடி உழிஞையன் – பொன்னால் செய்த உழிஞைக் கொடியைச் சூடி,  மடம் பெருமையின் – அறியாமையின் மிகுதியால்,  உடன்று மேல் வந்த – வெகுண்டு தன் மேல் வந்த, வேந்து  – பகை வேந்தர்கள், மெய்ம்மறந்த வாழ்ச்சி – தங்கள் உடம்பை மறந்ததால் வந்த வெற்றிச் செல்வம், வீந்து உகு – பட்டு வீழும், போர்க்களத்து ஆடும் கோவே – போர்க்களத்தில் ஆடும் மன்னன்

பதிற்றுப்பத்து 61, பாடியவர் – கபிலர்,  பாடப்பட்டோன் – செல்வக்கடுங்கோ வாழியாதன் ,*புலாஅம் பாசறை*, துறை: காட்சி வாழ்த்து, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

பலாஅம் பழுத்த பசும் புண் அரியல்
வாடை துரக்கும் நாடு கெழு பெரு விறல்,
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்,
பாவை அன்ன நல்லோள் கணவன்,
பொன்னின் அன்ன பூவின் சிறி இலைப்  5
புன்கால் உன்னத்துப் பகைவன், என் கோ,
புலர்ந்த சாந்தின், புலரா ஈகை,
மலர்ந்த மார்பின், மா வண் பாரி,
முழவு மண் புலர, இரவலர் இனைய,
வாராச் சேண் புலம் படர்ந்தோன், அளிக்கென  10
இரக்கு வாரேன், எஞ்சிக் கூறேன்,
ஈத்தது இரங்கான், ஈத்தொறும் மகிழான்,
ஈத்தொறும் மா வள்ளியன் என நுவலும் நின்
நல் இசை தரவந்திசினே, ஒள் வாள்
உரவுக் களிற்றுப் *புலாஅம் பாசறை15
நிலவின் அன்ன வெள் வேல் பாடினி
முழவின் போக்கிய வெண் கை
விழவின் அன்ன, நின் கலி மகிழானே.

குறிப்பு:  பாவை அன்ன (4) – அருள் அம்பலவாணர் உரை – கொல்லிப் பாவை போன்ற.  ஒளவை துரைசாமி உரை – பாவை போன்ற.  உன்னத்துப் பகைவன் (6) – ஒளவை துரைசாமி உரை – உன்ன மரம் போர் வீரர் நிமித்தம் காண நிற்கும் மரம்.  காண்பார்க்கு வெற்றி எய்துவதாயின் தழைத்தும் தோல்வி எய்துவதாயின் கரித்தும் காட்டும் என்ப.  அது கரித்து காட்டிய வழியும் அஞ்சாது அறமும் வலியும் துணையாகப் பொருது வெற்றி எய்தும் வேந்தன் என்றதற்கு ‘உன்னத்துப் பகைவன்’ என்றார்.  தான் எய்துவது தோல்வி என்று உன்ன மரம் காட்டவும் காணாது, பொருது வென்றி எய்தி உன்னத்தின் நிமித்தத்தைக் கெடுத்தல் பற்றிப் பகைவன் என்பாராயினர் என்க.

பொருளுரை:  பலா மரத்தில் பழுத்து வெடித்த பழத்திலிருந்து ஒழுகும் சாற்றினை வாடைக் காற்று எறியும் பறம்பு நாட்டின் கோமான், பெரிய வெற்றியுடையவன், ஓவியத்தைப் போன்ற வேலைப்பாடமைந்த நல்ல மனையில் உள்ள பாவையைப் போன்ற நல்ல அழகுடைய பெண்ணின் கணவன், பொன்னைப் போன்ற பூக்களையும் சிறிய இலைகளையும் புல்லிய அடிப்பகுதியையையும் உடைய உன்ன மரத்திற்குப் பகைவனான என் மன்னன், உலர்ந்தச் சந்தனையுடைய அகன்ற மார்பையும் குன்றாத வள்ளன்மையுடைய பாரி. முழவின் மார்ச்சனை மண் புலர, பரிசிலர் வருந்த, திரும்பி வர முடியாத தொலைவில் உள்ள சாவிற்குச் சென்று விட்டான். எனக்கு அளிப்பாயாக என்று கேட்க வரவில்லை நான். உன் புகழை மிகைப்படவும் குறைவாகவும் கூற மாட்டேன். ஈதலால் பொருள் செலவானது என்று மனம் இரங்குவான் இல்லை. ஈதலால் புகழ் மிகுவதால் மகிழ மாட்டான். ஈயும் பொழுதெல்லாம் மிகுந்த வள்ளன்மையுடையவன் என்று கூறப்படும் உன் புகழ் எம்மை ஈர்ப்ப, நான் உன்னிடம் வந்தேன், ஒளியுடைய வாளினையும் வலிமையான களிற்று யானைகளையுமுடைய புலால் நாற்றமுடைய பாசறைக்கு. நிலவைப் போன்ற ஒளியுடைய வேலைச் சிறப்பித்துப் பாடும் பாடினி முழவின் தாளத்திற்கேற்ப வெறுங்கையை அசைத்துப் பாடும் உன்னுடைய ஆரவாரம் மிக்கத் திருவோலக்கத்தின்கண்.

சொற்பொருள்:   பலாஅம் பழுத்த பசும் புண் அரியல் – பலா மரத்தில் பழுத்து வெடித்த பழத்திலிருந்து ஒழுகும் சாறு, வாடை துரக்கும் – வாடைக் காற்று எறியும், நாடு கெழு பெரு விறல் – பறம்பு நாட்டின் பெரிய வெற்றியுடையவன், ஓவத்து அன்ன வினை புனை நல் இல் – ஓவியத்தைப் போன்ற வேலைப்பாடமைந்த நல்ல மனை, பாவை அன்ன நல்லோள் கணவன் – பாவையைப் போன்ற நல்ல அழகுடைய பெண்ணின் கணவன், பொன்னின் அன்ன பூவின் சிறி இலைப் புன்கால் உன்னத்துப் பகைவன் – பொன்னைப் போன்ற பூக்களையும் சிறிய இலைகளையும் புல்லிய அடிப்பகுதியையையும் உடைய உன்ன மரத்திற்கு பகைவன், என் கோ – என் மன்னன், புலர்ந்த சாந்தின் புலரா ஈகை மலர்ந்த மார்பின் மா வண் பாரி – உலர்ந்த சந்தனையுடைய அகன்ற மார்பையும் குன்றாத வள்ளன்மையுடைய பாரி, முழவு மண் புலர – முழவின் மார்ச்சனை மண் புலர, இரவலர் இனைய – பரிசிலர் வருந்த, வாராச் சேண் புலம் படர்ந்தோன் – திரும்பி வர முடியாத தொலைவிற்குச் சென்று விட்டான், அளிக்கென இரக்கு வாரேன் – எனக்கு அளிப்பாயாக என்று கேட்க வரவில்லை நான், எஞ்சிக் கூறேன் – உன் புகழை மிகைப்படவும் குறைவாகவும் கூற மாட்டேன், ஈத்தது இரங்கான் – ஈதலால் பொருள் செலவானது என்று மனம் இரங்குவான் இல்லை, ஈத்தொறும் மகிழான் – ஈதலால் புகழ் மிகுவதால் மகிழ மாட்டான், ஈத்தொறும் மா வள்ளியன் என நுவலும் நின் நல் இசை – ஈயும் பொழுதெல்லாம் மிகுந்த வள்ளன்மையுடையவன் என்று கூறப்படும் உன் புகழ், தரவந்திசினே – எம்மை ஈர்ப்ப நான் வந்தேன், ஒள் வாள் உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை – ஒளியுடைய வாட்களையும் வலிமையான களிற்று யானைகளையுமுடைய புலால் நாற்றமுடைய பாசறை, நிலவின் அன்ன – நிலவைப் போன்ற, வெள் வேல் பாடினி – ஒளியுடைய வேலைச் சிறப்பித்துப் பாடும் பாடினி, முழவின் போக்கிய வெண் கை விழவின் அன்ன நின் கலி மகிழானே – முழவின் தாளத்திற்கேற்ப வெறுங்கையை அசைத்துப் பாடும் உன்னுடைய ஆரவாரம் மிக்க திருவோலக்கத்தின்கண்

பதிற்றுப்பத்து 87, பாடியவர் – பெருங்குன்றூர்கிழார்,  பாடப்பட்டோன் – இளஞ்சேரல் இரும்பொறை, *வெண் தலைச் செம் புனல்*, துறை: விறலியாற்றுப்படை, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

சென்மோ பாடினி! நன்கலம் பெறுகுவை,
சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து
தெண் கடல் முன்னிய *வெண் தலைச் செம் புனல்*
ஒய்யும் நீர் வழிக் கரும்பினும்,
பல் வேல் பொறையன் வல்லனால், அளியே.  5

பொருளுரை:   செல்லுவாயாகப் பாடும் பெண்ணே! பொறையனிடம் நல்ல அணிகளை நீ பெறுவாய். சந்தனக் கட்டைகளோடும் அகில் கட்டைகளோடும், பொங்கும் நுரையைச் சுமத்துக் கொண்டு, தெளிந்த கடலை நோக்கிச் செல்லும் வெள்ளை நுரையையுடைய சிவந்த வெள்ளத்தின் நீரைக் கடப்பதற்குப் புணையாக உதவும் வேழக் கரும்பைக் காட்டிலும், பல வேற்படைகளையுடைய பொறையன், அளிக்க வல்லவன்.

சொற்பொருள்:  சென்மோ – செல்லுவாயாக, பாடினி – பாடும் பெண்ணே, நன்கலம் பெறுகுவை – நல்ல அணிகள் பெறுவாய், சந்தம் பூழிலொடு – சந்தனக் கட்டைகளோடும் அகில் கட்டைகளோடும், பொங்கு நுரை சுமந்து – பொங்கும் நுரையைச் சுமத்துக் கொண்டு, தெண் கடல் முன்னிய – தெளிந்த கடலை நோக்கிச் செல்லும், வெண்தலைச் செம் புனல் – வெள்ளை நுரையையுடைய சிவந்த வெள்ளம், ஒய்யும் நீர் வழிக் கரும்பினும் – நீரைக் கடப்பதற்கு புணையாக உதவும் வேழக் கரும்பைக் காட்டிலும், பல் வேல் பொறையன் – பல வேற்படைகளையுடைய பொறையன், வல்லனால் அளியே – அளிக்க வல்லவன்

%d bloggers like this: