தமிழ் உரை – ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு – தமிழ் உரையுடன்      

குறிஞ்சித் திணை – புணர்ச்சியும் புணர்ச்சி நிமித்தமும்

முல்லைத் திணை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

மருதத் திணை – ஊடலும் ஊடல் நிமித்தமும்

நெய்தற்  திணை – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

பாலைத் திணை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

குறிஞ்சித் திணையில் அடிக்கடி வரும் சொற்கள்:  வரை (mountain),  மலை, குன்று, சாரல் (mountain slope), அடுக்கம் (mountain range), கிளி,   ஏனல் (தினை), அவணை (millet field),  தினை,  இறடி (millet),  இருவி (millet stubble), தாள் (stubble), குரல் (millet spikes),  தட்டை (stubble) – and also bamboo rattle to chase parrots – வெதிர் புனை தட்டை, குளிர், தழல் (gadgets used to chase parrots), கவண், தினை, புனவன் (mountain farmer),  குறவன்,  கானவன், கொடிச்சி, கழுது, இதண், மிடை  (Platform in the millet field), ஓப்புதல் (chase parrots and other birds that come to eat the grain),   குறவன், கொடிச்சி, யானை, குரங்கு, மஞ்ஞை (peacock), புலி,  பாம்பு, பன்றி (wild boar), வரை ஆடு,  அருவி, சுனை, பலாமரம், பலாப்பழம், சந்தன மரம், மா மரம், பணை (bamboo), வேங்கை மரம், அகில் மரம், மாமரம்,   குறிஞ்சி, குவளை, காந்தள், தேன், வண்டு, சுரும்பு, ஞிமிறு, தும்பி (honeybee), மஞ்சு,  மழை (word is used for both cloud and rain),  பெயல் (rain), ஐவனம் (wild rice)

மருதத் திணையில் அடிக்கடி வரும் சொற்கள்:  வயல், பழனம் (pond), கழனி, குளம்,  வாளை மீன், கெண்டை மீன் , ஆமை, உழவர், அரிநர், நெல், மாமரம், ஞாழல் மரம் , நொச்சி மரம், கரும்பு, நீர்நாய்  (otter), ஆம்பல் (white waterlily), தாமரை, பொய்கை, கயம் (pond), குருவி, கோழி, சேவல்,  கழனி, கொக்கு, காரான் (buffalo), காஞ்சி மரம்,  மருத மரம், அத்தி மரம், எருமை, முதலை, களவன் (நண்டு)

முல்லைத் திணையில் அடிக்கடி வரும் சொற்கள் – புறவு (முல்லை நிலம்), இரலை மான், முயல், ஆ (பசு), கன்று, மழை, முல்லை, காயா, கொன்றை, தோன்றல், தேர், பாகன், மாரி, பித்திகம், கோவலர், ஆயர் (cattle herders), ஆடு, குழல், மஞ்ஞை (peacock),  குருந்தம், மழை

 நெய்தற் திணையில்  அடிக்கடி வரும் சொற்கள் –   கடல், கடற்கரை, பரதவர், மீன், சுறா, முதலை, திரை (wave), அலை, கானல் (கடற்கரை சோலை),  திமில் (boat), அம்பி (boat), சேரி (settlement) , புன்னை, ஞாழல், தாழை, கைதல், கைதை (screwpine),   உப்பு, உப்பங்கழி (backwaters, salty lakes), மணல், எக்கர் (மணல் மேடு), அலவன் (நண்டு), அடும்பு (a creeper with beautiful pink flowers), நெய்தல் ஆம்பல் (white waterlily), கோடு, வளை (conch shell), வலை, குருகு, நாரை, அன்றில்

பாலைத் திணையில்  அடிக்கடி வரும் சொற்கள்  –  அத்தம் (harsh path), சுரம் (wasteland), எயினர் (tribes living in the wasteland), வழிப்பறி கள்வர், பல்லி, ஓதி, ஓந்தி (big garden lizard), பாதிரி (summer blooming flower), கள்ளி (cactus), யா மரம், ஓமை மரம், குரவம், கள்ளிச்செடி, கோங்கு மரம்,  ஞெமை, இருப்பை மரம், வேம்பு, யாமரம், உகாய், கழுகு, கடுஞ்சுரம், அருஞ்சுரம் (harsh wasteland), செந்நாய் (red fox), யானை, புலி, மூங்கில், பதுக்கை (leaf heap, usually a shallow grave), நெல்லி, நெறி (path), ஆறு (path), வேனிற்காலம்,  பரல் கற்கள், இறத்தல் (கடப்பது)

ஐங்குறுநூறு  (66 பாடல்கள்) – 1, 2, 17, 18, 22, 43, 45, 50, 71, 74, 87, 90, 91, 92, 99, 100, 101, 113, 121, 134, 141, 163, 165, 193, 194, 196,  202, 203, 209, 211, 213, 243, 247, 249, 253, 272, 274, 277, 281, 282, 285, 287, 289,  300, 303, 304, 306, 311, 313, 322, 328, 341, 342, 343, 371, 375, 378, 379, 394, 399, 435, 446, 453, 490, 492, 493

.
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வாழி ஆதன்! வாழி அவினி!
நெல் பல பொலிக, பொன் பெரிது சிறக்க,
என வேட்டோளே யாயே, யாமே,
நனைய காஞ்சிச் சினைய சிறு மீன்
யாணர் ஊரன் வாழ்க,
பாணனும் வாழ்க, என வேட்டேமே.

பொருளுரை:   வாழ்க ஆதன்! வாழ்க அவினி! நெல் நிறைய விளையட்டும், செல்வம் கொழிக்கட்டும், என்று என் தோழி விரும்புகின்றாள். மொட்டுக்களையுடைய காஞ்சி மரங்களும், சிறிய சினை மீன்களுடைய செல்வம் நிறைந்த ஊரனான தலைவன் வாழ்க, அவனுடைய பாணனும் வாழ்க என்று நாங்கள் விரும்பினோம்.

பதவுரை: வாழி ஆதன் வாழி அவினி – வாழ்க ஆதன் வாழ்க அவினி (இவை சேர மன்னர்கள்), நெல் பல பொலிக – நெல் நிறைய விளையாட்டும், பொன் பெரிது சிறக்க – செல்வம் கொழிக்கட்டும், என வேட்டோளே யாயே – இவ்வாறு விரும்புகின்றாள் என் தோழி, யாமே – நாங்கள், நனைய காஞ்சி – மொட்டுக்களையுடைய காஞ்சி மரங்கள், சினைய சிறு மீன் – சிறிய சினை மீன்கள், யாணர் ஊரன் – செல்வம் பொருந்திய ஊர் தலைவன், வாழ்க – வாழ்க, பாணனும் வாழ்க – அவனுடைய பாணனும் வாழ்க, என வேட்டேமே – என்று நாங்கள் விரும்பினோம்

ஐங்குறுநூறு 2, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வாழி ஆதன்! வாழி அவினி!
விளைக வயலே, வருக இரவலர்,
என வேட்டோளே யாயே, யாமே,
பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண் துறை ஊரன் கேண்மை
வழி வழிச் சிறக்க, என வேட்டேமே.

பொருளுரை:   வாழ்க ஆதன்! வாழ்க அவினி! வயல்களில் விளைச்சல் சிறக்கட்டும், இரவலர் வரட்டும் என்று விரும்பினாள் என் தோழி. பல இதழ்களையுடைய நீல மலர்கள் நெய்தல் மலர்களைப் போல் தோன்றும் குளிர்ச்சியான துறையின் ஊரன் என் தோழியோடு கொண்டுள்ள ஆழ்ந்த நட்பு என்றும் தழைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.

பதவுரை:   வாழி ஆதன் வாழி அவினி – வாழ்க ஆதன் வாழ்க அவினி, விளைக வயலே – வயல்களில் நிறைய விளைச்சல் அமையட்டும், வருக இரவலர் – பிச்சை வேண்டி வருபவர்கள் வரட்டும், என வேட்டோளே யாயே – என்று விரும்பினாள் என் தோழி, யாமே – நானே, பல் இதழ் நீலமொடு – பல இதழ்களையுடைய நீல மலர்கள், நெய்தல் நிகர்க்கும் – நெய்தல் மலர்களைப் போல் தோன்றும், தண் துறை ஊரன் – குளிர்ச்சியான துறையைக் கொண்ட ஊரன், கேண்மை – தொன்மையான நட்பு, தோழமை, நட்பு, வழி வழிச் சிறக்க என வேட்டேமே – என்றும் தொடர்ந்து சிறக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்

ஐங்குறுநூறு 17, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
புதர் மிசை நுடங்கும் வேழ வெண் பூ
விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன்,
புதுவோர் மேவலன் ஆகலின்,
வறிதாகின்று, என் மடங்கெழு நெஞ்சே.

பொருளுரை:   புதர்களின் மேலே அசையும் வேழத்தின் வெள்ளை மலர்கள் வானத்தில் பறக்கும் குருகுகளைப் போன்று தோன்றும் ஊர் தலைவன் பரத்தையரை விரும்பிச் செல்கின்றான்.  அதனால் என் மட நெஞ்சம் வருந்துகின்றது.

பதவுரை:   புதர் மிசை நுடங்கும் – புதர்களின் மேலே அசையும், வேழ வெண் பூ – வேழத்தின் வெள்ளை மலர்கள், விசும்பு ஆடு குருகின் தோன்றும் – வானத்தில் பறக்கும் குருகுகளைப் போன்று தோன்றும், ஊரன் – ஊரில் உள்ளவன், புதுவோர் மேவலன் ஆகலின் – புதிய பெண்களை விரும்புவதால், வறிதாகின்று என் மடங்கெழு நெஞ்சே- என் மடமையுடைய நெஞ்சு வருந்துகின்றது

ஐங்குறுநூறு 18, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவி தலைவனின் தூதுவர்களிடம் (வாயில்களிடம்) சொன்னது
இருஞ்சாய் அன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி ஊரன்,
பொருந்தும் மலரன்ன என் கண் அழப்
பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே?

பொருளுரை:   தண்டாங்கோரைப் புல்லோடு, நெட்டிக்கோரைப் புல்லும், நாணலும், கரும்பினைப் போல் அசைகின்ற வயலை உடைய ஊரன், பிரிய மாட்டேன் என்று கூறியப்பின்,  மலர்களைப் போல் உள்ள என் கண்கள் அழுமாறு என்னைப் பிரிந்து விட்டான்.

பதவுரை:   இருஞ்சாய் – தண்டாங்கோரைப்  புல், அன்ன – போல்,  செருந்தியொடு – நெட்டிக்கோரையுடன்,  வேழம் – நாணல்,  கரும்பின் அலமரும் – கரும்புப்போல் ஆடும்,  கழனி – வயல்,  ஊரன் – ஊரில் உள்ளவன்,  பொருந்தும் மலரன்ன – பொருந்தும் பூக்களைப்போல்,  என் கண் அழப் – என் கண்கள் அழுமாறு, பிரிந்தனன் அல்லனோ – பிரிந்தான் அல்லவா, பிரியலென் என்றே – பிரியமாட்டேன் என்று கூறியப்பின்

ஐங்குறுநூறு 22, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அள்ளல் ஆடிய புள்ளிக் களவன்
முள்ளி வேர் அளைச் செல்லும் ஊரன்.
நல்ல சொல்லி மணந்து, இனி
நீயேன் என்றது எவன் கொல் அன்னாய்?

பொருளுரை:   சேற்றில் விளையாடும், புள்ளிகளை உடைய நண்டுகள் முள் செடியின் வேர்களில் உள்ள சிறிய பொந்துகளில் ஒளிந்துக்கொள்ளும் நாட்டவன் நம் தலைவன்.   நல்ல சொற்கள் கூறி, என்னுடன் இணைந்தான்.   உன்னை விட்டு பிரிய மாட்டேன் என்று என்னிடம் சொன்னான்.   இப்பொழுது பிரிந்துப் போய் விட்டான்.  அவன் சொன்னது என்ன ஆயிற்று?

குறிப்பு:  கள்வன், களவன் ஆகிய இரண்டு சொற்களும் நண்டைக் குறிப்பன.  நச்சினார்க்கினியரின் கலித்தொகை உரை நூலில் ‘களவன்’ என்று உள்ளது (பாடல் 88).  பொ. வே. சோமசுந்தரனார், வேங்கடசாமி நாட்டார், ஒளவை துரைசாமி, உ. வே. சாமிநாதையர் ஆகியவர்களின் அகநானூறு, ஐங்குறுநூறு உரை நூல்களில் ‘கள்வன்’ என்று உள்ளது.

பதவுரை:   அள்ளல் – சேறு,  ஆடிய – விளையாடிய,  புள்ளிக் களவன் – புள்ளியுடைய நண்டு (களவன், கள்வன் = நண்டு), முள்ளி வேர் – முள் செடியின் வேரில்,  அளை – ஒளிந்துக் கொள்ளும் இடம்,  செல்லும் – செல்லும்,  ஊரன் – ஊரன், நல்ல சொல்லி மணந்து – நல்ல வார்த்தைகள் சொல்லி என்னுடன் இணைந்தான்/என்னை மணந்தான்,  இனி – இனி, நீயேன் என்றது – உன்னை விட்டு பிரிய மாட்டேன் என்று சொன்னது, எவன் கொல் அன்னாய் – என்ன ஆயிற்று

ஐங்குறுநூறு 43, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவி சொன்னது – மருதத் திணையில் பாணர்கள் தலைவனின் நண்பர்கள். தலைவன் பரத்தையிடம் செல்லும் பொழுது தலைவி ஊடல் கொள்வாள். பாணன் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே தூது செல்வான் 
அம்பணத்தன்ன யாமை ஏறிச்
செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும்
யாணர் ஊர! நின்னினும்
பாணன் பொய்யன், பல் சூளினனே.

பொருளுரை:   மரக்காலைப் போல் இருக்கும் தாய் ஆமையின் முதுகில் ஏறும் செம்பு போன்ற சிவந்த நிறமுடைய குட்டிகளை உடைய செழிப்பான ஊரனே, உன்னை விட உன் பாணன் அதிகப் பொய் சொல்லுபவன். உறுதி மொழிகளையும் கூறும் சூது உடையவன்.

பதவுரை:   அம்பணத்தன்ன – மரக்கால் போல்,  யாமை – ஆமை,  ஏறி – ஏறி,  செம்பின் அன்ன – செம்பு நிறமுள்ள, பார்ப்பு – குட்டிகள்,  பல துஞ்சும் – சில தூங்கும், யாணர் – புது வருவாய், ஊர – ஊரன்,  நின்னினும் – உன்னை விட,  பாணன் பொய்யன் – உன் பாணன் பொய் சொல்பவன், பல் சூளினனே – உறுதி மொழிகளைக் கூறும் சூது நிறைந்தவன்

ஐங்குறுநூறு 45, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது – தலைவி கூறுவதைப் போல் தோழி தலைவனிடம் சொன்னது
கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து,
வேனில் ஆயின் மணி நிறங்கொள்ளும்
யாறு அணிந்தன்று நின் ஊரே,
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந, என் கண்ணே.

பொருளுரை:   தலைவா!  உன்னுடைய ஊரில் உள்ள ஆறு, குளிர் காலத்தில் குளிர்ந்த கலங்கிய நீரைக் கொண்டு வருகின்றது.  கோடைக் காலத்தில் அது நீலமணியின் நிறத்து நீரைக் கொண்டு அழகுடன் விளங்குகின்றது.  ஆனால் என் கண்களோ, நீ என்னை விட்டு அகன்றதால், எல்லாக் காலங்களிலும் பசலை நிறத்தைக் கொண்டுள்ளன.

குறிப்பு:   உ. வே. சாமிநாதையர் உரை – என் கண் என்றாள் ஒற்றுமைப்பற்றி தோழி தலைவி உறுப்பினைத் தன் உறுப்பென்றல் மரபாதலின், தொல்காப்பியம் பொருளதிகாரம் 27.

பதவுரை:   கூதிர் ஆயின் – குளிர் காலமானால், தண் கலிழ் தந்து – குளிர்ந்த கலங்கிய நீரைக் கொண்டு வரும், வேனில் ஆயின் – கோடை ஆனால், மணி நிறங் கொள்ளும் – நீலமணி நிறமாகும், யாறு – ஆறு,  அணிந்தன்று – அழகு செய்கின்றது, அணிகின்றது, நின் ஊரே – உன்னுடைய ஊர், பசப்பு அணிந்தனவால் – பசப்பு அடைந்தது, மகிழ்ந – தலைவா, என் கண்ணே – என் கண்கள்

ஐங்குறுநூறு 50, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது (அவன் பரத்தையிடம் சென்றப் பொழுது)
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர!
தஞ்சம் அருளாய் நீயே, நின்
நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே.

பொருளுரை:  வஞ்சிக் கொடி தழைக்கும் புது வருவாயை உடைய ஊரனே, நானும் இவளுடைய பெற்றோரும் தோழியரும் மிகவும் வருந்துகின்றோம்.  இவள் மீது கருணைக்காட்டு.  உன்னைத் தன் நெஞ்சில் வைத்திருக்கும் இவள் அழுகின்றாள்.

பதவுரை:   துணையோர் செல்வமும் – தோழியரும் பெற்றோரும்,  யாமும் – நானும்,  வருந்துதும் – வருந்துகின்றோம்,  வஞ்சி – வஞ்சிக் கொடி, (Tinospora Cardifolia) அல்லது இலுப்பை மரம் (Glabrous mahua of the Malabar coast, Bassia malabarica),  ஓங்கிய – தழைக்கும்,  யாணர் ஊர – புது வருவாயையுடைய ஊரனே,  தஞ்சம் அருளாய் நீயே – தயவு செய்து உன் கருணையைக் காட்டு,  நின் – உன்னை,  நெஞ்சம் பெற்ற – நெஞ்சில் வைத்திருக்கும்,  இவளுமார் அழுமே – இவள் அழுகின்றாள்

ஐங்குறுநூறு 71, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது – அவன் பரத்தையுடன் சென்றதை அறிந்தப்பின் சொன்னது
சூது ஆர் குறுந்தொடிச் சூரமை நுடக்கத்து
நின்வெங் காதலி தழீஇ நெருநை
ஆடினை என்ப புனலே, அலரே
மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந,
புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே?

பொருளுரை:   தலைவா, நேற்று நீ   உட் துளையுடைய அழகிய சிறு வளையல்களை அணிந்த உன் விருப்பமான காதலியை தழுவி ஆற்றில் விளையாடினாய் என்று கூறுகின்றனர்.  ஊரில் வம்புப்பேச்சு துவங்கி விட்டது.  அதை மறைக்க முடியுமா?  கதிரவனின் ஒளியை புதைக்க முடியுமா?

பதவுரை:   சூது  – உட் துளை, ஆர் – அழகிய,  குறுந்தொடி – சிறு வளையல்கள்,  சூரமை – பயந்து,  நுடக்கத்து – அசைந்து, நின்வெங் காதலி – நீ விரும்பியக் காதலி,  தழீஇ – தழுவி,  நெருநை – நேற்று,  ஆடினை என்ப – விளையாடினாய் என்கின்றனர், புனலே – ஆற்றிலே,  அலரே – பழி எழுந்தது,  மறைத்தல் ஒல்லுமோ – மறைக்க முடியுமோ,  மகிழ்ந – மருத நிலத்தின் தலைவனே,  புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே – சூரியனின் ஒளியை புதைக்க முடியுமா

ஐங்குறுநூறு 74  ஓரம்போகியார், மருதத் திணை – தலைவன் தோழியிடம் சொன்னது
விசும்பு இழி தோகைச் சீர் போன்றிசினே
பசும் பொன் அவிர் இழை பைய நிழற்றக்
கரை சேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண் நறும் அம் கதுப்பே.

பொருளுரை:   அவளுடைய பொன் நகைகள் ஒளியைப் பரப்ப, கரையில் உள்ள மருத மரத்தில் ஏறி, அவள் ஓடையில் பாய்ந்து நீராடினாள். பாய்ந்த பொழுது அவளுடைய நறு மணம் மிகுந்த அழகிய கூந்தல், வானத்திலிருந்து இறங்கும் மயிலின் தோகையைப்போன்று காட்சி அளித்தது.

பதவுரை:   விசும்பு – வானம், இழி – இறங்கும், வடியும்,  தோகை – மயிலின் தோகை,  சீர் – அழகு,  போன்று – போன்று,  பசும்பொன் – புதிய பொன் நகை,  அவிர் – ஒளி,  இழை – நகை,  பைய – மெதுவாக,  நிழற்ற – ஒளி நிறைந்த,  கரைசேர் –  கரையில் உள்ள, மருதம் – மருத மரம்,  ஏறி – ஏறி, பண்ணை – ஆறு,  பாய்வோள் – பாய்ந்தாள்,  தண் – குளிர்ச்சியான,  நறும் – நறுமணம், அம் – அழகிய, கதுப்பு – கூந்தல்

ஐங்குறுநூறு 87,  மருதத் திணை – பரத்தை தலைவனிடம் சொன்னது
பகன்றைக் கண்ணிப் பல் ஆன் கோவலர்
கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்
யாணர் ஊர! நின் மனையோள்
யாரையும் புலக்கும், எம்மை மற்று எவனோ?

பொருளுரை:   பல பசுக்களையுடைய பகன்றை மாலையை அணிந்த இடையர்கள், கரும்பைக் கோலாக உபயோகித்து  மாங்கனிகளை உதிர்க்கும் புது வருவாயுடைய ஊரனே!   உன் மனைவி எல்லோரையும் வெறுப்பவள்.  என்னை மட்டும் விட்டு வைப்பாளா?

பதவுரை:   பகன்றை – சிவதை மலர், சீந்தில் மலர், Indian jalap, கண்ணி – மாலை, பல்ஆன் கோவலர் – பல மாடுகளையுடைய இடையர்கள், கரும்பு குணிலா – கரும்பை குறும் தடியாக (உபயோகித்து), மாங்கனி உதிர்க்கும் – மாங்கனிகளை உதிர்க்கும்,  யாணர் ஊர – புது வருமானம் உடைய ஊரில் உள்ளவனே, நின் மனையோள் – உன் மனைவி,  யாரையும் புலக்கும் – எல்லோரையும்  வெறுப்பாள், எம்மை மற்று எவனோ – என்னை மட்டும் விட்டு வைப்பாளா?

ஐங்குறுநூறு 90, ஓரம்போகியார், மருதத் திணை – பரத்தை, தலைவியின் தோழியர் கேட்குமாறு தலைவனிடம் சொன்னது
மகிழ்நன் மாண் குணம் வண்டு கொண்டன கொல்?
வண்டின் மாண் குணம் மகிழ்நன் கொண்டான் கொல்?
அன்னது ஆகலும் அறியாள்,
எம்மொடு புலக்கும் அவன் புதல்வன் தாயே.

பொருளுரை:   தலைவனின் தன்மையை வண்டுகள் பெற்றுக் கொண்டனவா? அல்லது வண்டுகளின் தன்மையைத் தலைவன் பெற்றுக் கொண்டானா?  இதை அவள் அறியவில்லை.  அறியாது, என்னை வெறுத்துப் பேசுகின்றாள், அவனுடைய மனைவி.

பதவுரை:   மகிழ்நன் – தலைவன், மாண் குணம் – சிறந்த தன்மையை , வண்டு கொண்டன கொல் – வண்டுகள் பெற்றனவா, வண்டின் மாண் குணம் – வண்டின் சிறந்தத் தன்மையை, மகிழ்நன் கொண்டான் கொல் – தலைவன் பெற்றுக்கொண்டானா, அன்னது ஆகலும் அறியாள் – அவ்வாறு உள்ள அதை அறியவில்லை அவள்,  எம்மொடு புலக்கும் அவன் புதல்வன் தாயே – என்னை வெறுத்துப் பேசுகின்றாள் அவன் மனைவி

ஐங்குறுநூறு 91, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து
வெறி மலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும்
கழனி ஊரன் மகள் இவள்,
பழன வெதிரின் கொடிப்பிணையலளே.

பொருளுரை:   வளைந்த கொம்புகளையுடைய கரு நீல ஆண் எருமை, மிக்க நறுமணமுள்ள, குளத்தில் வளரும் வெள்ளை ஆம்பலின் மலர்களைச் சிதைக்கும் வயல்கள் நிறைந்த ஊரனின் மகள் இவள். வயலில் உள்ள கரும்பு மலர்களை மாலையாகப் பின்னி அணிந்துள்ளாள்.

பதவுரை:   நெறி மருப்பு – வளைந்த கொம்புகள், எருமை – எருமை,  நீல இரும் – நீல கருமையான, போத்து – ஆண் எருமை, வெறி மலர் – மிகுந்த நறுமணம்,  பொய்கை ஆம்பல் – குளத்தின் ஆம்பல்  (அல்லி மலர்),  மயக்கும் – சிதைக்கும், கழனி ஊரன் மகள் இவள் – வயலை உடைய ஊரனின் மகள் இவள், பழன வெதிரின் – வயலின் கரும்பின் (மலர்களை), கொடிப்பிணையலளே – மாலையாக அணிந்துள்ளாள்

ஐங்குறுநூறு 92, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
கருங்கோட்டு எருமைச் செங்கண் புனிற்று ஆக்
காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும்
நுந்தை நும்மூர் வருதும்,
ஒண் தொடி மடந்தை நின்னை யாம் பெறினே.

பொருளுரை:   ஒளியுடைய வளையல்களை அணிந்தப் பெண்ணே!  உன் தந்தையின் இல்லத்தில் கரிய கொம்புகளையும் சிவந்த கண்களையும் உடைய, அண்மையில் ஈன்ற தாய் எருமை தன் அன்புக் கன்றுக்கு பால் சுரந்துக் கொடுக்கும்.  நான் உன் ஊருக்கு வருவதானால், அது உன்னைப் பெண் கேட்பதற்குத் தான்.

பதவுரை:   கருங்கோட்டு – கருமையானக் கொம்புகளும்,  எருமைச் செங்கண் – சிவந்தக் கண்களையும் உடைய எருமை,  புனிற்று – குட்டி ஈன்றது,  ஆ – பெண் எருமை, காதல் குழவிக்கு – விருப்பமுள்ள கன்றுக்கு,  ஊறு முலை மடுக்கும் – மடுவில் ஊறும் பாலைக் கொடுக்கும், நுந்தை – உன் தந்தை,  நும்மூர் – உன்னுடைய ஊர்,  வருதும் – வருவதானால், ஒண் தொடி – ஒளியுடைய வளையல்கள்,  மடந்தை – பெண்,  நின்னை யாம் பெறினே – உன்னை மணம் செய்துகொள்வதற்கே

ஐங்குறுநூறு 99, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவன் சொன்னது
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி எருமை கதிரொடு மயக்கும்
பூக்கஞல் ஊரன் மகள் இவள்.
நோய்க்கு மருந்தாகிய பணைத் தோளோளே.

பொருளுரை:   வயலில் வளரும் பாகல் கொடியிடையே எறும்புகள் கூடு கட்டி வாழும்.  அங்கு உள்ள எருமைகள் பாகல் கொடியையும், நெற் கதிரையும் சிதைக்கும்.  இத்தகைய பூக்கள் நெருங்கி வளர்ந்த வளமான ஊரனின் மகள் இவள்.  இவளின் பருத்த தோள்கள் தான் என் நோய்க்கு மருந்தாகும்.

பதவுரை:   பழனப் பாகல் – வயலில் வளரும் பாகற்காய் கொடி, முயிறு – எறும்புகள்,  மூசு – கூடி,  குடம்பை – கூடுகள்,  கழனி எருமை – வயலில் உள்ள எருமைகள்,  கதிரொடு மயக்கும் – நெற்கதிரோடு இணையும்,  ஊரன் – ஊரன், மகள் – மகள், இவள் – இவள்,  நோய்க்கு மருந்தாகிய –  நோய்க்கு மருந்து ஆகுவள், பணைத் தோளோளே – பருத்த தோள்களை உடையவள், மூங்கிலைப் போன்ற தோள்களை உடையவள்

ஐங்குறுநூறு 100, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
புனலாடு மகளிர் இட்ட ஒள் இழை
மணலாடு சிமையத்து எருமை கிளைக்கும்
யாணர் ஊரன் மகள் இவள்,
பாணர் நரம்பினும் இன் கிளவியளே.

பொருளுரை:   நீராடும் பெண்கள் நீராடும் முன் தம் அணிகலன்களைக் கரையில் உள்ள மணலில் புதைத்து வைப்பர்.  காற்று வீசுவதால் அங்கு மணல் மேடுகள் உருவாகும். எருமைகள் தன் கொம்பால் அதைக் கிண்டி நகைகளை வெளிப்படுத்தும். அத்தகைய புது வருவாயுடைய வளமான ஊரனின் மகள் அவள். அவள் சொற்கள் பாணனின் யாழிசையை விட இனிமையானவை.

பதவுரை:   புனல் ஆடு மகளிர் – நீரில் (ஆற்றில் அல்லது குளத்தில்) விளையாடும் பெண்கள், இட்ட –  புதைத்து வைத்த,  ஒள் இழை – ஒளியுடைய நகைகள், மணல் ஆடு – காற்றினால் நகரும் மணலின், சிமையத்து – மேடுகளை,  எருமை கிளைக்கும் – எருமை கிண்டி தோண்டும்,  யாணர் – புது வருமானம் உள்ள வளப்பமான, ஊரன் – ஊரன் மகள் இவள் – ஊரன் மகள் இவள், பாணர் நரம்பினும் – பாணர்களின் யாழிசையை விட,  இன் கிளவியளே – இனிய சொற்கள்

ஐங்குறுநூறு 101 அம்மூவனார் – நெய்தற் திணை – தோழி செவிலித்தாயிடம் சொன்னது
அன்னை வாழி! வேண்டன்னை! உதுக்காண்!
ஏர் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று, நின் மகள்
பூப்போல் உண்கண் மரீஇய
நோய்க்கு மருந்தாகிய கொண்கன் தேரே.

பொருளுரை:   அன்னையே, வாழ்க! அங்கே பார்! உன் மகளின் பூப்போன்ற மை இட்ட கண்களில் தோன்றிய பசலை நோயைத் தீர்க்கும் மருந்து நெய்தல் நிலத்துத் தலைவன்.  அவனுடைய தேர் ஊர்ந்து, மேலும் கீழும் அசைந்து, அழகிய அடும்புக்கொடிகளைச் சக்கரத்தால் அறுக்கின்றது. அறுக்கப்பட்ட அந்தக் கொடிகள் குவளை மலர்களுடன் கலக்கின்றன.

பதவுரை:   அன்னை – அன்னை, வாழி வேண்டன்னை – வாழ்வாயாக, உதுக்காண் – அங்கே பார்,  ஏர்கொடி – அழகியக் கொடி,  பாசடும்பு – பசிய அடும்பு,  பரி – விரைவாக, ஊர்பு – நகரும், இழிபு – மேலும் கீழும்,   நெய்தல் – குவளை மலர்கள்,  மயக்கி – கலந்து, வந்தன்று – வந்துள்ளது,  நின் மகள் – உன்னுடைய மகள்,  பூப்போல் – பூப் போன்ற,  உண்கண் – மை உண்ட கண்கள், மரீஇய – தோன்றிய,  நோய்க்கு மருந்தாகிய – பசலை நோய்க்கு மருந்து ஆகிய, கொண்கன் – தலைவன்,  தேரே – தேர்

ஐங்குறுநூறு 113 அம்மூவனார் – நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! நென்னல்
ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு
ஊரார் பெண்டென மொழிய, என்னை
அது கேட்ட ‘அன்னாய்’ என்றனள் அன்னை,
பைபய, ‘எம்மை’ என்றனென் யானே.

குறிப்பு:  பைபய வெம்மை என்றனென் யானே (வரி 5), என்றும் பாடல் உண்டு.

பொருளுரை:   தோழி, நீ நீடு வாழ்வாயாக! உயர்ந்து வரும் அலைகளும், வெள்ளை மணலும் உடைய கடற்கரைத் துறைவனுக்கு நேற்று என்னைப் பெண்டு என ஊரார் பழித்துப் பேசினார்கள். அன்னை என்னை நோக்கி, அது உண்மையா என்று கேட்டாள். நான் மெதுவாக அது சரி தான் (நான் தான்) என்று கூறினேன்.

பதவுரை:   அம்ம வாழி தோழி – தோழி!  நீடு வாழ்வாயாக, நென்னல் – நேற்று,  ஓங்கு திரை – உயர்ந்த அலைகள்,  வெண்மணல் – வெள்ளை மணல்,  துறைவற்கு – துறைவனுக்கு (நெய்தல் நிலத்தின் தலைவனுக்கு),  ஊரார் – ஊர் மக்கள்,  பெண்டென – பெண் என, மொழிய – கூற,  என்னை – என்னைப் பற்றி, அது கேட்ட – அதனைக் கேட்ட (என் தாய்), அன்னாய் –  அத்தன்மை உடையவளா (நீ), என்றனள் அன்னை – என்றாள் என் தாய்,  பைபய – மெதுவாக,  எம்மை – நான் தான், என்றனென் – என்றேன்,  யானே – நான்

ஐங்குறுநூறு 121, அம்மூவனார்,  நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கண்டிகும் அல்லமோ கொண்க, நின் கேளே,
முண்டகக் கோதை நனையத்
தெண் திரைப் பௌவம் பாய்ந்து நின்றோளே.

பொருளுரை:   நெய்தல் நிலத் தலைவனே! நான் உன்னிடம் உறவுக் கொண்டவளைப் பார்த்தேன். முள்ளிச் செடியின் மலர்களால் பின்னப்பட்ட மாலையை அணிந்துக் கொண்டு, அது நனையுமாறு தெளிந்த கடல் நீரில் பாய்ந்து விளையாடினாள்.

பதவுரை:   கண்டிகும் அல்லமோ – கண்டேன் அல்லவா, கொண்க – நெய்தல் நிலத்தலைவன்,  நின் கேளே – உன் உறவினளை, முண்டகக் கோதை – முள்ளிச் செடியின் மலர்களால் பின்னப்பட்ட மாலை, நனைய – நனைய, தெண் திரை – தெளிந்த அலைகள்,  பௌவம் – கடல், பாய்ந்து நின்றோளே – பாய்ந்து ஆடினாள்

ஐங்குறுநூறு 134, அம்மூவனார், நெய்தல் திணை – தலைவி பாணனிடம் சொன்னது
காண்மதி பாண! இருங்கழிப்
பாய் பரி நெடுந் தேர்க் கொண்கனோடு
தான் வந்தன்று என் மாமைக் கவினே.

பொருளுரை: காண்பாயாகப் பாணனே! என்னுடைய கருமை அழகானது, பெரிய உப்பங்கழியிடத்து பாய்ந்து செல்லும் குதிரைகள் பூட்டிய நெடிய தேரினையுடைய என் தலைவன் வந்ததும், தானாகவே என்னிடம் வந்து விட்டது.

பதவுரை:   காண்மதி பாண – காண்பாயாக பாணனே,  இருங்கழி  – பெரிய உப்பங்கழி, கருமையான உப்பங்கழி, பாய் பரி – பாயும் குதிரைகள், நெடுந் தேர் – நெடிய தேர், கொண்கனோடு – என் தலைவனோடு, தான் வந்தன்று – அது வந்தது, என் மாமைக் கவினே – என் கருமை அழகு, என் மாந்தளிர் நிறமுடைய அழகு

ஐங்குறுநூறு 141, அம்மூவனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண் துளி வீசிப்
பயலை செய்தன பனி படு துறையே.

பொருளுரை: மணல் மேடுகளில் ஞாழல் மரங்களும் செருந்தி மரங்களும் நறுமணத்தைப் பரப்புகின்றன. குளிர்ந்த கடற்கரைத் துறையின் நீர்த் துவலைகள் என் மீது விழுந்தன. என் மேனி பசலை அடைந்தது.

பதவுரை:   எக்கர் – மணல் மேடு,  ஞாழல் – ஞாழல் மரங்கள், (Heritiera Littoralis,  Looking Glass Tree), செருந்தியொடு – செருந்தி மரங்களுடன், (Ochna squarrosa ), கமழ – நறுமணத்தை பரப்புகின்றன, துவலை – நீர்த் துளிகள்,  தண்துளி – குளிர்ந்த துளிகள்,  வீசி – வீசி,  பயலை – பசலை,  செய்தன – செய்தன,  பனிபடு துறையே – குளிர்ந்த கடற்கரைத் துறையில்

ஐங்குறுநூறு 163, அம்மூவனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழித் துவலை ஒலியில் துஞ்சும்
துறைவன் துறந்தெனத், துறந்து என்
இறை ஏர் முன் கை நீக்கிய வளையே.

பொருளுரை:  பெரிய கடலின் கடற்கரையில் சிறுவெண் காக்கை பெரிய உப்பங்கழியின் நீர்த் துவலையின் ஒலியில் உறங்கும் நெய்தல் நிலத்தின் தலைவன் என்னைத் துறந்ததால், என்னுடைய இறை பொருந்திய அழகிய முன் கையைத் துறந்து நீங்கின என் வளையல்கள்.

பதவுரை:   பெருங்கடல் கரையது – பெரிய கடலின் கடற்கரையில், சிறுவெண் காக்கை – சிறுவெண் காக்கை (sea gull), இருங்கழித் துவலை ஒலியில் – பெரிய உப்பங்கழியின் நீர்த் துவலையின் ஒலியில், துஞ்சும் – உறங்கும், துறைவன் – கடற்கரையின் தலைவன், துறந்தென – என்னைத் துறந்ததால், துறந்து என் இறை ஏர் முன் கை நீக்கிய வளையே – என் இறை பொருந்திய அழகிய முன் கையைத் துறந்து நீங்கின என் வளையல்கள்

ஐங்குறுநூறு 165, அம்மூவனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பெருங்கடல் கரையது சிறுவெண்காக்கை
ஆர் கழிச் சிறுமீன் ஆர மாந்தும்
துறைவன் சொல்லிய சொல், என்
நிரை ஏர் எல் வளை கொண்டு நின்றுதுவே.

பொருளுரை:   சிறிய வெண் காக்கைகள் பெரிய கடற்கரையின் கரையில் உள்ள உப்பங்கழியில் உள்ள சிறிய மீன்களை நிறைய உண்ணும் துறையின் தலைவன் என் காதலன். அவன் சொன்ன சொற்கள் என் அடுக்கிய, அழகிய, ஒளி மிகுந்த வளையல்களைக் கழன்று விழச் செய்தன.

பதவுரை:   பெருங்கடல் – பெரியக்கடல்,  கரையது – கரையின்,  சிறுவெண்காக்கை – சிறுவெண்காக்கை – sea gull, ஆர் கழி – உப்பு நீர் குளம்,  சிறுமீன் – சிறிய மீன்,  ஆர மாந்தும் – நிறைய உண்ணும்,  துறைவன் – துறைவன் – நெய்தல் நிலத்தின் தலைவன்,  சொல்லிய சொல் – சொன்ன சொற்கள்,  என் – என்,  நிரை – அடுக்கிய,  ஏர் – அழகான,  எல் வளை – ஒளிரும் வளையல்களை,  கொண்டு நின்றுதுவே – கவர்ந்து கொண்டன, கழன்று விழச்செய்தன

ஐங்குறுநூறு 192,  அம்மூவனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கோடு புலம் கொட்பக் கடல் எழுந்து முழுங்கப்
பாடு இமிழ் பனித் துறையோடு கலம் உகைக்கும்
துறைவன் பிரிந்தென, நெகிழ்ந்தன
வீங்கின மாதோ தோழி, என் வளையே.

பொருளுரை: தோழி! சங்குகள் கடற்கரையில் சுழல, கடல் அலைகள் ஆரவாரம் செய்ய, ஒலி மிகுந்த துறையிலிருந்து கப்பல்கள் செல்லும் குளிர்ந்த துறையின் துறைவன் என்னைப் பிரியும் பொழுது என் வளையல்கள் நெகிழ்கின்றன. அவன் வரும் பொழுது என் கைகள் பருத்துச் செறிவுருகின்றன.

பதவுரை:   கோடு – சங்கு, புலம் கொட்ப – கரையில் சுழல, கடல் எழுந்து முழுங்க – கடல் அலைகள் ஆரவாரம் செய்ய, பாடு இமிழ் –  ஒலி நிறைந்த , பனித்துறையோடு – குளிர்ந்த துறையில், கலம் உகைக்கும் – கப்பல்கள் ஓடும்,  துறைவன் – துறையவன் – நெய்தல் நிலத்தின் தலைவன், பிரிந்தென – பிரியும் பொழுது, நெகிழ்ந்தன – நெகிழ்ந்தன,  வீங்கின  – பருத்தன, மாதோ – அசைச் சொல், தோழி – தோழி, என் வளையே – என் வளையல்கள்

ஐங்குறுநூறு 193,  அம்மூவனார்,  நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது (சங்கை அறுத்து வளையல் செய்வார்கள்)
வலம்புரி உழுத வார் மணல் அடை கரை
இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும்
துறை கெழு கொண்க! நீ தந்த
அறை புனல் வால் வளை நல்லவோ தாமே?

பொருளுரை:   வலம்புரிச் சங்குகள் தோண்டும் நீண்ட மணல் நிறைந்த, இருட்டை விலகச் செய்யும்  ஒளி மிகுந்த முத்துக்கள் நிறைந்தக் கடற்கரைத் தலைவனே! நீ அவளுக்கு முழங்குகின்ற அலைகள் கொண்டுத் தந்த சங்கினால் செய்த வளையல்களைத் தந்தாய்.  இவை நீ  அவளுக்கு முன்பு  தந்ததைப் போன்றவையா?

பதவுரை:  வலம்புரி – வலம்புரிச் சங்கு,  உழுத – தோண்டிய,  வார் மணல் – மணலுடைய நீண்டக் கடற்கரை,  அடைகரை – மணல் அடையும் கரை,  இலங்கு கதிர் – ஒளியுடையக் கதிர்,  முத்தம் – முத்துக்கள்,  இருள் கெட – இருள் நீங்குமாறு,  இமைக்கும் – ஒளித் தரும்,  துறை கெழு கொண்க – நெய்தல் நிலத்தின் தலைவனே,  நீ தந்த – நீ கொடுத்த,  அறை – முழங்குகின்ற,  புனல் – ஓடும் நீர்,  வால் வளை – வெள்ளை வளையல்கள்,  நல்லவோ தாமே – நல்லவை தானா

ஐங்குறுநூறு 194,   அம்மூவனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கடல் கோடு அறுத்த அரம் போழ் அவ்வளை
ஒள் தொடி மடவரல் கண்டிகும் கொண்க!
நன் நுதல் இன்று மால் செய்தெனக்
கொன் ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே.

பாடல் பின்னணிபகற்குறிக்கண் வந்து தலைவியோடு அளவளாவிச் செல்கின்ற தலைவனிடம் தோழி, ‘களவொழுக்கம் தாயால் அறியப்பட்டது.  இனி அவள் தலைவியை இல்லத்தில் சிறை வைப்பாள்’ என்று கூறி வரைவு (திருமணம்) வேண்டுகின்றாள்.

பொருளுரை:   நெய்தல் நிலத்தின் தலைவனே! அரத்தால் பிளந்து செய்யப்பட்ட அழகிய சங்கு வளையல்களையும் ஒளியுடைய தொடியையும் அணிந்த என் தோழியைப் பார்.  அவளுடைய நல்ல நெற்றி இன்று ஒளி இழந்து விட்டது.  அதைப் பார்த்து, இது அஞ்சும்படியானது என்று அன்னை ஐயமுற்றாள்.

பதவுரை:  கடல் கோடு – கடல் சங்கு,  அறுத்த – அறுத்த,  அரம் – அரம்,  போழ் – பிளந்து,  அவ்வளை – அழகிய வளையல்கள், ஒள் தொடி – ஒளியுடைய வளையல்கள்,  மடவரல் கண்டிகும் – மடமையுடைய பெண்ணைப் பார்,  கொண்க – நெய்தல் நிலத்தின் தலைவனே, நன் நுதல் – நல்ல நெற்றி,  இன்று – இன்று,  மால் செய்தென – ஒளி இழந்து விட்டது என, கறுத்து விட்டது என,  கொன் ஒன்று – அஞ்சும்படி இது ஒன்று என்று,  கடுத்தனள் – ஐயமுற்றாள்,  அன்னையது நிலையே – இது அன்னையின் நிலை

ஐங்குறுநூறு 196,   அம்மூவனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கோடு ஈர் எல்வளைக் கொழும் பல் கூந்தல்
ஆய் தொடி மடவரல் வேண்டுதி ஆயின்,
தெண் கழி சேயிறாப் படூஉம்
தண் கடல் சேர்ப்ப! வரைந்தனை கொண்மோ.

பொருளுரை:   சிவந்த இறால் மீன்களைக் கொண்ட தெளிந்த நீரையுடைய கடற்கரையின் தலைவனே! சங்குகளை அறுத்து செய்த ஒளி மிகுந்த வளையல்களையும், செழிப்பானக் கூந்தலையையும் உடைய தலைவியை வேண்டினாய் ஆயின்,  நீ அவளை மணந்துக் கொள்.

பதவுரை:  கோடு – சங்கு,  ஈர் – அறுத்து,  எல் வளை – ஒளி மிகுந்த வளையல்கள், கொழும் பல் கூந்தல் – அடர்த்தி மிகுந்தக் கூந்தல்,  ஆய் தொடி – அழகிய வளையல்கள்,  மடவரல் – மடப்பமுடையப் பெண்,  வேண்டுதி ஆயின் – வேண்டினாய் ஆயின்,  தெண் – தெளிந்த,  கழி – உப்பு நீர்,  சேயிறா – சிவப்பு நிறமுடைய இறா,  படூஉம் – இருக்கும்,  தண்கடல் – குளிர்ந்தக் கடல், சேர்ப்ப – கடற்கரைத் தலைவனே,  வரைந்தனை கொண்மோ – திருமணம் செய்துக் கொள்

குறிப்பு:   கபிலரின் பாடல்கள்  – 201-210 – இவை ‘அன்னாய்ப் பத்து’ என்ற தலைப்பில் உள்ளவை.   இவற்றில் சில, தலைவி தன் தோழியிடம் கூறும் பாடல்கள். சில, தோழி தலைவியிடம் கூறும் பாடல்கள். ‘அன்னாய்’ என்று சொல் அன்புடன் ‘அம்மா’ என்று இன்றும் நாம் இள வயது பெண்களிடம் சொல்வதைப் போன்றது .

ஐங்குறுநூறு 202, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகன் போலத் தாமும்
குடுமித் தலைய மன்ற,
நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே.

பொருளுரை:   நீடு வாழ்வாயாகத் தோழி! நான் கூறுவதைக் கேட்க வேண்டுகின்றேன். நெடுமலை நாட்டவனான நம் தலைவன் ஊர்ந்து வரும் தேரை இழுத்து வரும் குதிரைகள்,  நம் ஊர் அந்தணச் சிறுவர்களைப் போல் குடுமித் தலைகள் உடையவை.

பதவுரை:  அன்னாய் வாழி – வாழ்த்துக்கள் என் தோழி அல்லது வாழ்த்துக்கள் அன்னையே,  வேண்டு அன்னை  – நான் கூறுவதை கேட்க வேண்டுகின்றேன்,  நம்மூர்ப் பார்ப்பனக் குறுமகன் போல – நம் ஊர் அந்தணச்  சிறுவன் போல், தாமும் குடுமித் தலைய  – தாமும் குடுமித் தலையை உடையன, மன்ற – அசைச் சொல், நெடுமலை நாடன் – பெரிய மலையின் நாடன், ஊர்ந்த மாவே – தேரில் கட்டி ஊர்ந்து வந்தக் குதிரைகள்

ஐங்குறுநூறு 203, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அன்னாய் வாழி! வேண்டு அன்னை! நம் படப்பை
தேன் மயங்கு பாலினும் இனிய, அவர் நாட்டு
உவலை கூவல் கீழ
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே.

பொருளுரை:   நீடு வாழ்வாயாகத் தோழி! நான் கூறுவதைக் கேள். நம் தோட்டத்து தேன் கலந்த பாலை விட இனிப்பானது அவருடைய நாட்டில் உள்ள குழிகளில் இலைகளுக்கு அடியில் உள்ள, மான் குடித்து எஞ்சிய கலங்கிய நீர்.

பதவுரை:  அன்னாய் வாழி – வாழ்த்துக்கள் என் தோழி, வாழ்த்துக்கள் அன்னையே,  வேண்டு அன்னை – நான் கூறுவதை கேட்க வேண்டுகின்றேன்,  நம் படப்பை – நம் தோட்டத்து, தேன் மயங்கு பாலினும் – தேன் கலந்த பாலை விட,  இனிய – இனிய, அவர்நாட்டு – அவருடைய நாட்டு, உவலை – காய்ந்த இலைகள், கூவல் – குழி,  கீழ – கீழ்,  மான் உண்டு – மான் குடித்து,  எஞ்சிய – மிஞ்சிப் போன, கலிழி நீரே – கலங்கிய நீர்

ஐங்குறுநூறு 209, கபிலர், குறிஞ்சி திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அன்னாய் வாழி! வேண்டு அன்னை! நீ மற்று
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின்,
கொண்டல் அவரைப்  பூவின் அன்ன
வெண் தலை மா மழை சூடித்
தோன்றல் அனாது அவர் மணி நெடுங்குன்றே.

பொருளுரை: நீடு வாழ்வாயாகத் தோழி! நான் கூறுவதைக் கேட்க வேண்டுகின்றேன். நான் அவரை மறக்க வேண்டும் என்று நீ கூறுகின்றாய்.  கீழ்க்காற்றால் மலரும் அவரைப் பூக்கள் போன்ற வெள்ளை மேகங்கள் அலங்கரிக்கும் மலை உச்சியை உடைய, அவருடைய நீலமணியைப் போன்ற மலை என் கண்ணை விட்டு அகலாது நிற்கின்றது. அவரை நான் எப்படி மறக்க முடியும்?

பதவுரை:  அன்னாய் வாழி – வாழ்த்துக்கள் என் தோழி, வாழ்த்துக்கள் அன்னையே, வேண்டு அன்னை  – நான் கூறுவதை கேட்க வேண்டுகின்றேன்,  நீ மற்று யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின் – நான் அவரை மறக்க வேண்டும் என்று நீ வேண்டுகின்றாய் ஆயின், கொண்டல் – கீழ்க்காற்று – அவரைப் பூவின் அன்ன – அவரைப் பூக்கள் போல, வெண் தலை – வெள்ளைத் தலை, மாமழை – பெரிய மேகங்கள்,  சூடித் தோன்றல் – சூடினார்ப் போல தோன்றும்,  அனாது அவர் மணிநெடுங் குன்றே – மறக்க முடியாது, அவருடைய நீலமணி (sapphire) நிறைந்த உயர்ந்த மலையை

ஐங்குறு நூறு 211,  குறிஞ்சித் திணை, கபிலர்  – தோழி தலைவியிடம் சொன்னது
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன,
வயலை அம் சிலம்பின் தலையது
செயலையம் பகைத்தழி வாடும், அன்னாய்.

பொருளுரை:   தோழியே! உழுந்த மாவை நெய்யில் கலந்து நூலாகத் திரித்தாற்போல் தோன்றும் வயலைக் கொடிகளையுடைய மலை உச்சியில் உள்ள அசோக மரத்தின் தழையால் செய்த ஆடை வாடி விடும்.

பதவுரை:  நெய்யொடு மயக்கிய – நெய்யுடன் கலந்த,  உழுந்து நூற்றன்ன – உழுந்த மாவின் நூலைப் போன்று ,  வயலையம் – வயலைக் கொடிகள் நிறைந்த (purslane creeper) அழகிய,  சிலம்பின் தலையது – மலைச் சிகரம்,  செயலையம் – அசோக மரங்கள், பகைத்தழி  – இலைகள் மாறி,  வாடும் – வாடும்,  அன்னாய் – தோழியே

ஐங்குறுநூறு 213, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நறுவடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த
ஈர்ந்தண் பெருவடுப் பாலையில் குறவர்
உறை வீழ் ஆலியல் தொகுக்கும் சாரல்
மீமிசை நல் நாட்டவர் வரின்,
யான் உயிர் வாழ்தல் கூடும், அன்னாய்.

பொருளுரை:   தோழி! நறுமணமுள்ள பெரிய மா வடுக்கள் காம்பு அறுந்து, மழைத் துளிகளுடன் கீழே உதிர்ந்து விடும். அவற்றைப் பாலை நிலத்து மலை நாட்டவர் மலைச் சரிவில் ஆலங்கட்டியை குவித்து வைத்தது போல் குவித்து வைப்பார்கள். உயர்ந்த உச்சியையுடைய நல்ல நாட்டவன் என்னை மணம் புரிய வந்தால் தான் நான் உயிரோடு இருப்பேன்.

பதவுரை:  நறு வடி – நறுமணமுள்ள,  மாஅத்து –  மாமரத்தின், மூக்கு இறுபு – காம்பு அறுந்து, உதிர்த்த – உதிர்ந்த, ஈர்ந்தண் – ஈரமான குளிர்ச்சியான, பெரு வடு – பெரிய மா வடு,  பாலையில் குறவர் – பாலை குறவர்கள், உறை – மழை, வீழ் – விழும், ஆலியல் – ஆலங்கட்டி, தொகுக்கும் – குவித்து இருக்கும், சாரல் – மலைச் சரிவு, மீ மிசை – உயர்ந்த உச்சி,  நல் நாட்டவர் வரின் – நல்ல நாட்டவர் வந்தால், யான் – நான், உயிர் வாழ்தல் கூடும் அன்னாய் – உயிர் வாழ்வேன் தோழி

ஐங்குறுநூறு 243, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி செவிலியிடம் சொன்னது
கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி
அறியா வேலன் வெறி எனக் கூறும்
அது மனம் கொள்குவை அனையிவள்
புது மலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே.

பொருளுரை அன்னையே!   இவளுடைய புதிய மலரைப் போன்ற ஈரக் கண்கள் வருந்தியதால் ஏற்பட்ட பசலை நோயைப் பற்றி அறியாத வேலன், மிளகு வளரும் மலையின் கடவுளான முருகனை வாழ்த்தி, அவனால் இது ஏற்பட்டது என்றுக் கூறி வெறியாட்டம் நிகழ வேண்டும் என்று கூறுவதை நீயும் ஏற்றுக் கொள்கின்றாய்.

பதவுரை:  கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி – மிளகு வளரும் மலையின் கடவுளான முருகனை வாழ்த்தி, அறியா வேலன் வெறி எனக் கூறும் – தலைவனால் ஏற்பட்டது என்பதை அறியாத வேலன் வெறியாட்டம் என்று கூறுவதை,  அது மனம் கொள்குவை  – அவன் கூறுவதை ஏற்றுக்கொள்கின்றாய், அனை – அன்னை, இவள் – புது மலர் மழைக்கண் – இவளுடைய புதிய மலரைப் போன்ற ஈரக் கண்கள், புலம்பிய நோய்க்கே – வருந்தியதால் ஏற்பட்ட பசலை நோய், தனிமையுற்றதால் ஏற்பட்ட பசலை நோய்

ஐங்குறுநூறு 247 – கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது  

அன்னை தந்தது ஆகுவது அறிவென்,
பொன் நகர் வரைப்பின் கன்னம் தூக்கி
முருகென மொழியும் ஆயின்,
அரு வரை நாடன் பெயர் கொலோ அதுவே.

பொருளுரை: உன்னுடைய அழகிய இல்லத்தில் புது மணல் பரப்பி, உன் கையில் தாயத்தைக்கட்டி, முருகனின் கோபத்தைத் தணிப்பதற்கான சடங்குகளைச் செய்ய உன் தாய் ஏன் வேலனை அழைத்தாள் என்று புரிகின்றது. ஒரு வேளை உன்னுடைய மலை நாட்டுக் காதலனின் பெயர் முருகனோ?

பதவுரை:  அன்னை தந்தது – உன் அன்னை தந்தது,  ஆகுவது அறிவென் – எதனால் என்று புரிகின்றது,  பொன் நகர் – அழிய இல்லம்,  வரைப்பின் – வீட்டின் எல்லை,  கன்னம் தூக்கி – தாயத்தைக் கட்டி,  முருகென மொழியும் ஆயின் – முருகன் தான் கரணம் என்று,  அருவரை நாடன் – அருமையான மலை நாட்டவன்,  பெயர் கொலோ அதுவே – பெயர் அதுவாக இருக்குமோ?

ஐங்குறுநூறு 249 – கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பெய்ம்மணல் வரைப்பின் கழங்கு படுத்து அன்னைக்கு
முருகென மொழியும் வேலன், மற்று அவன்
வாழிய, இலங்கும் அருவிச்
சூர்மலை நாடனை அறியாதோனே.

பொருளுரை:   புதிதாகப் பெய்த மணலில் கழங்குக் காய்களை வைத்துச் சடங்குகள் செய்து, தாயிடம் “உன் மகளின் நோய் முருகனால் ஏற்பட்டது” என்று கூறுகின்றான் வேலன். அவன் வாழ்க. சிறப்பான அருவிகளை உடைய அச்சம் தரும் மலைகளையுடைய நாடவனான உன் காதலனை வேலன் அறியவில்லை.

பதவுரை:  பெய்ம்மணல் – புதிதாக பெய்த மணல், வரைப்பின் – வரைந்துச் செய்யும் சடங்கு, எல்லை, கழங்குபடுத்து – கழங்குகளைப் பரப்பிக் குறி பார்த்து, அன்னைக்கு – தாயிடம்,  முருகென மொழியும் – இந்த நோய் முருகனால் ஏற்பட்டது எனக் கூறும், வேலன் – முருகன் பூசாரி, மற்று அவன்  வாழிய – அவன் வாழ்க,  இலங்கும் – விளங்கும், அருவி – அருவிகள், சூர் – அச்சம் தரும், வருத்தும் தெய்வங்களையுடைய,  மலை நாடனை –  மலை நாடவனை, அறியாதோனே – அறியாதவன்

ஐங்குறுநூறு 253, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
குன்றக் குறவன் சாந்த நறும் புகை
தேங்கமழ் சிலம்பின் வரையகம் கமழும்
கானக நாடன் வரையின்,
மன்றலும் உடையள் கொல் தோழி, யாயே?

பொருளுரை:   மலையில் வாழும் குறவன் சந்தன மரத்தின் கட்டைகளை எரிப்பதால் நறுமணமான புகை, தேனின் மணத்தையுடைய மலைச் சரிவிலும் மலையிலும் பரவும் காடுகளை உடைய நாட்டவன், என்னை மணந்து கொள்வான் ஆயின், என் தாய் திருமண விழாவை நடத்துவாளா தோழி?

பதவுரை:  குன்றக் குறவன் – மலையில் வாழும் குறவன், சாந்த நறும் புகை – கொளுத்திய சந்தனத்தின் நறுமணமான புகை, தேங்கமழ் சிலம்பின் – இனிமையான மணம் கமழும் மலைச் சரிவில்,   வரையகம் கமழும் – மலை முழுக்க கமழும், கானக நாடன் – காடுகளை உடைய நாட்டவன், வரையின் – மணந்து கொள்வான் ஆயின், மன்றலும் – திருமண விழாவையும், உடையள் கொல் தோழி – நடத்துவாளா தோழி, யாயே – தாய்

ஐங்குறுநூறு 272, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
கரு விரல் மந்திக் கல்லா வன் பறழ்,
அரு வரைத் தீம் தேன் எடுப்பி அயலது
உரு கெழு நெடும் சினைப் பாயும் நாடன்,
இரவின் வருதல் அறியான்,
வரும் வரும் என்பள் தோழி, யாயே.

பாடல் பின்னணிஇரவுக் குறியைச் சரியாகப் புரிந்துக்கொள்ளாமல் தலைவன் வந்து நீங்குகின்றான்.  மறுநாள் பகற்குறி இடத்தை அடைகின்றான்.  தலைவியும் தோழியும் அங்கு இருக்கின்றனர்.  அவன் ஒதுங்கி நிற்கின்றான்.  அவன் வந்ததை உணர்ந்த தலைவி, அவனுக்குத் தன்னுடைய மன நிலையை உணர்த்துவதற்காகத் தோழியிடம் கூறுவது போல் கூறுகின்றாள்.

பொருளுரை:   கருமையான விரலையுடைய பெண் குரங்கின் நல்ல அறிவில்லாத, வலிமையான குட்டி அரிதான மலையில் உள்ள தேன் கூட்டைக் கலைத்து விட்டு, அருகில் உள்ள நீண்ட கிளையின் மீது குதிக்கும் நாட்டவன் என் காதலன்.  அவன் இரவில் வருவதில்லை.  ஆனால் என் தாய், ‘அவன் வருவான், வருவான்’ என்று கூறுகின்றாள்.

பதவுரை:  கரு விரல் மந்தி – கருமையான விரலையுடைய பெண் குரங்கு,  கல்லா – நல்ல அறிவில்லாத, மன வளர்ச்சி அடையாத, வன் பறழ் – வலிமையான குட்டி, அரு வரை – அரிதான மலை,  தீம் தேன் – இனிய தேன், எடுப்பி – உடைக்கும்,  அயலது – அருகில்,  உரு கெழு – அச்சம் தரும்,  நெடும் சினை – உயர்ந்த மரக்கிளை,  பாயும் – தாவும்,  நாடன் – நாட்டினன், இரவின் வருதல் அறியான் – இரவில் வருவதில்லை, வரும் வரும் என்பள் – அவன் வருவான் வருவான் என்கின்றாள், தோழி  – என் தோழியே, யாயே – என் தாய்

ஐங்குறுநூறு 274, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மந்திக் கணவன் கல்லாக் கடுவன்
ஒண் கேழ் வயப்புலி குழுமலின், விரைந்து, உடன்
குன்று உயர் அடுக்கம் கொள்ளும் நாடன்
சென்றனன், வாழி தோழி, என்
மென் தோள் கவினும் பாயலும் கொண்டே.

பொருளுரை:   நீடு வாழ்வாயாகத் தோழி! பெண் மந்தியின் கணவனான முரட்டு ஆண் குரங்கு, ஒளியும் நிறமும் உடைய வலிமையான புலி உருமுவதைக் கேட்டு உயர்ந்த மலையின் பக்க மலைக்குத் தாவி ஓடும் நாட்டவன், என்னிடமிருந்து விலகிச் சென்று விட்டான். அவன் போகும் பொழுது, என்னுடைய மென்மையான் தோள்களின் அழகையும் என் உறக்கத்தையும் தன்னோடு கொண்டு போய் விட்டான்.

பதவுரை:  மந்திக் கணவன் – பெண் குரங்கின் கணவன், கல்லாக் கடுவன் – முரட்டு ஆண் குரங்கு (அறியாமையுடைய ஆண் குரங்கு), ஒண் கேழ் – ஒளிப் பொருந்திய நிறமுடைய, வயப்புலி – வலிமையானப் புலி, குழுமலின் – முழங்குவதால், விரைந்து – விரைந்து, உடன் – உடனே, குன்று உயர் அடுக்கம் கொள்ளும் – உயர்ந்த மலையின் பக்க மலைக்குத் தாவி ஓடும்,  நாடன் – நாட்டவன், சென்றனன் – சென்று விட்டான், வாழி தோழி – வாழ்த்துக்கள் தோழி, என் மென் தோள் – என்னுடைய மென்மையானத் தோள்களின், கவினும் – அழகையும், பாயலும் கொண்டே – உறக்கத்தையும் கொண்டுச் சென்றான்

ஐங்குறுநூறு 277, கபிலர், குறிஞ்சித் திணை –  தோழி தலைவனிடம் சொன்னது
குறவர் முன்றில் மாதீண்டு துறுகல்
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
குன்ற நாட! நின் மொழிவல் என்றும்
பயப்ப நீத்தல் என் இவள்
கயத்துவளர் குவளையின் அமர்த்த கண்ணே.

பொருளுரை: குன்ற நாடவனே! உன்னுடைய மலையில் குறவரின் வீட்டு முற்றத்தில் மிருகங்கள் உரசும் பாறையில் பெண் குரங்கு ஒன்றும் ஆண் குரங்கு ஒன்றும் துள்ளிக் குதித்து விளையாடுகின்றன.  உன்னிடம் நான் ஒன்று கேட்க வேண்டும்.  ஆழமான குளத்தில் வளரும் குவளை மலர்களைப் போன்ற என் தோழியின் அழகிய கண்கள், நீ நீங்கியதால் பசலை அடைந்தன.  அவ்வாறு நீ அவளைப் பிரிந்து செல்வதற்குக் காரணம் யாது?

பதவுரை:  குறவர் – மலையில் வாழும் குறவன்,  முன்றில் – வீட்டு முற்றத்தில்,  மா தீண்டு துறுகல் – மிருகங்கள் உரசும் பாறை, கல்லா மந்தி – மடமையுடைய பெண் குரங்கு,  கடுவனோடு – ஆண் குரங்கோடு,  உகளும் – விளையாடும், குன்ற நாட – குன்ற நாடவனே,  நின் மொழிவல் – உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்,  என்றும் – என்றும், பயப்ப – பசலை அடைய,  நீத்தல் என் – நீ நீங்குதல் எதற்காக,  இவள் –  இவள், கயத்து வளர் – குளத்தில் வளரும்,  குவளையின் – குவளை மலர்களைப் போன்ற, அமர்த்த கண்ணே – பொருந்தின கண்கள்

ஐங்குறுநூறு 281, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவன் சொன்னது
வெள்ள வரம்பின் ஊழி போகியும்
கிள்ளை வாழிய பலவே, ஒள் இழை
இரும்பல் கூந்தல் கொடிச்சி
பெருந்தோள் காவல் காட்டியவ்வே.

பொருளுரை:  இந்தக் கிளிகள் நூறாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம் முடிந்தாலும் வாழட்டும், ஒளியுடைய நகையை அணிந்த, கருமையான அடர்ந்த கூந்தலையும், பெரிய தோட்களையும் உடைய குறிஞ்சி நிலத்தின் பெண்ணைப் புனத்தைக் காவல் புரிய வைத்தனவால்!

பதவுரை:  வெள்ள வரம்பின் ஊழி போகியும் – நூறாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம் முடிந்தாலும், கிள்ளை வாழிய – கிளிகள் வாழட்டும், பலவே ஒள் இழை – ஒளியுடைய நகைகள், இரும்பல் கூந்தல் – கருமையான அடர்ந்த கூந்தல், கொடிச்சி – குறிஞ்சி நிலத்தின் பெண், மலையில் வாழும் பெண், பெருந்தோள் – பெரிய தோள், காவல் – காவல், காட்டியவ்வே – அவை தோற்றுவித்தன

ஐங்குறுநூறு 282, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
சாரல் புறத்த பெருங்குரல் சிறு தினைப்
பேரமர் மழைக் கண் கொடிச்சி கடியவும்
சோலைச் சிறு கிளி உன்னும் நாட!
ஆர் இருள் பெருகின, வாரல்,
கோட்டுமா வழங்கும் காட்டக நெறியே.

பொருளுரை:   மலைச் சரிவில் உள்ள நிலத்தில் கொத்துக்களாகச் சிறு தினை வளர்ந்துள்ளது. அதை உண்ணுவதற்குச் சோலைக் கிளிகள் வரும். அவற்றைப் பெரிய அமர்ந்த ஈரமானக்  கண்களையுடையக் குறிஞ்சி நிலப் பெண் விரட்டுவாள்.  அவை மீண்டும் வர நினைக்கும்.  அத்தகைய நாடவனே!  நீ மிகுந்த இருட்டில் வராதே. காட்டுப் பாதைகளில் தந்தங்களையுடைய  யானைகள் திரியும்.  (கோட்டுமா என்ற சொல் தந்தத்தை உடைய காட்டுப் பன்றியையும் குறிக்கும்).

பதவுரை:  சாரல் புறத்த – மலைச் சரிவில் உள்ள நிலத்தில், பெருங்குரல் – பெரியக் கொத்துக்கள்,  சிறுதினைப் – சிறிய தினை, பேரமர் – பெரிய அமர்ந்த, மழைக் கண் கொடிச்சி – ஈரமுடைய கண்களையுடைய  மலைப் பெண்,  கடியவும் – விரட்டவும், சோலைச் சிறு கிளி – சோலையில் உள்ள சிறுக் கிளிகள், உன்னும் நாட – நினைக்கும் நாடனே, ஆர் இருள் பெருகின- அதிக இருளாகி விட்டது,  வாரல் – வராதே, கோட்டு மா – தந்தங்களையுடைய யானைகள், வழங்கும் – திரியும், காட்டக நெறியே – காட்டு பாதைகளில்

ஐங்குறுநூறு 285, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பின் இரும் கூந்தல் நல் நுதல் குறமகள்
மெல் தினை நுவணை உண்டு தட்டையின்
ஐவனச் சிறுகிளி கடியும் நாட!
வீங்கு வளை நெகிழப் பிரிதல்
யாங்கு வல்லுநையோ ஈங்கு இவள் துறந்தே?

பொருளுரை:   பின்னிய அடர்ந்த கூந்தலையும் நல்ல நெற்றியையும் உடைய குறவனின் மகள் தினை மாவை உண்டு,  ஐவன நெல்லைப் பாதுக்காக்க தட்டியால் கிளிகளை விரட்டும் நாடவனே,  இறுக்கமாக இருந்த இவளுடைய வளையல்கள் இப்பொழுது வழுக்கி விழுகின்றன. இவளை  இவ்வாறு துறக்க எப்படி உன்னால் முடிகின்றது?  

பதவுரை:  பின் இரும் கூந்தல் – பின்னிய அடர்ந்த ( அல்லது கருமையான) கூந்தல்,  நல் நுதல் – அழிகிய நெற்றி,  குறமகள் – மலைக்குறவனின் மகள், மெல்தினை – மெல்லிய தினை,  நுவணை – மாவை,  உண்டு – உண்டு,  தட்டையின் – தட்டையான மூங்கில் கிலுக்கு, ஐவன – மலை அரிசி,  சிறுகிளி – சிறியக் கிளி,  கடியும் – விரட்டும்,  நாட – நாட்டவனே, வீங்கு வளை – இறுக்கமான வளையல்கள், நெகிழப் பிரிதல் – வழுக்கி விழ, யாங்கு வல்லுநையோ – எவ்வாறு நீ இப்படி செய்ய முடியும்? , ஈங்கு இவள் துறந்தே – இங்கு இவளை துறந்து

ஐங்குறுநூறு 287, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நெடு வரை மிசையது குறுங்கால் வருடை
தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட!
வல்லை மன்ற, பொய்த்தல்
வல்லாய் மன்ற, நீ அல்லது செயலே.

பொருளுரை:  தினையை உண்ண வரும் கிளிகள் குறுகிய கால்களையுடைய மலை ஆடுகளைப் பார்த்து அஞ்சும் மலை நாடனே!  நீ பொய் சொல்லுவதில் வல்லவன்.  ஆனால் துன்பம் விளைவிக்க மாட்டாய்.

பதவுரை: நெடு வரை – உயர்ந்த மலை, மிசையது – மேல், குறுங்கால் வருடை – குறுகிய கால்களையுடைய மலை ஆடுகள், தினை பாய் கிள்ளை – தினையை உன்ன வரும் கிளிகள், வெரூஉம் – அச்சம் கொள்ளும், நாட – நாடனே, வல்லை – வல்லமை உடையை, மன்ற – அசை, பொய்த்தல் வல்லாய் – நீ பொய் சொல்லுவதில் வல்லவன், மன்ற – அசை, நீ – நீ, அல்லது செயலே – துன்பம் செய்வது இல்லை

ஐங்குறுநூறு 289, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது 
கொடிச்சி இன்குரல் கிளி செத்து அடுக்கத்துப்
பைங்குரல் ஏனல் படர் தரும் கிளியெனக்
காவலும் கடியுநர் போல்வர்
மால் வரை நாட! வரைந்தனை கொண்மோ.

பொருளுரை:   மலை நாடனே!  குறிஞ்சி நில மகளான கொடிச்சியின் இனிய குரலை தம்மை ஒத்த கிளியின் குரல் என்று நினைத்து, மலை அடுக்கத்தில் வளரும் பசுமையான தினைக் கதிர்களையுடைய தினைப் புனத்திற்கு கிளிகள் வரும் என எண்ணி இவளுடைய உறவினர்கள் இவள் தினைப் புனத்தைக் காவல் செய்வதிலிருந்து இவளை நீக்குவார்கள்.  அதனால்  விரைவில் வந்து இவளை திருமணம் செய்து அழைத்துக் கொண்டு செல்வாயாக.

பதவுரை:  கொடிச்சி – மலை நாட்டுப் பெண்,  இன்குரல் – இனிய குரல்,  கிளி – கிளி, செத்து – நினைத்து, அடுக்கத்து – அடுக்கு மலையில்,  பைங்குரல் –  பசுமையான தினைக் கதிர்,  ஏனல் – தினை,  படர் தரும் – வந்து சேரும்,  கிளியென – கிளியின் குரல் என்று,  காவலும் கடியுநர் போல்வர் – காவல் காப்பதிலிருந்து நீக்குவார்கள் போல் உள்ளது,  மால் – உயர்ந்த, வரை நாட – மலை நாடனே,  வரைந்தனை கொண்மோ – இவளை மணந்து அழைத்துச் செல்

ஐங்குறுநூறு 300, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கொடிச்சி கூந்தல் போலத் தோகை
அம் சிறை விரிக்கும் பெருங்கல் வெற்பன்
வந்தனன், எதிர்ந்தனர் கொடையே,
அம் தீம் கிளவி பொலிக நின் சிறப்பே.

பொருளுரை: குறிஞ்சி நிலப் பெண்ணின் கூந்தலைப் போன்று உள்ள தன் அழகிய சிறகுகளை விரித்து ஆடும் மயில்களை உடைய பெரிய மலை நாடன் வந்தான், உன்னைப் பெண் கேட்பதற்கு. நம் குடும்பத்தார் உன்னை அவனுக்குத் தருவதற்குச் சம்மதித்து விட்டார்கள். அழகிய இனிய சொற்களையுடையவளே! பொலிவு அடையட்டும் உன்னுடைய சிறப்பு.

பதவுரை:  கொடிச்சி  – குறிஞ்சி நிலப் பெண்ணின், கூந்தல் போலத் தோகை – கூந்தல் போன்ற தோகையுடைய, அம் சிறை – அழகிய சிறகுகளை, விரிக்கும் – விரிக்கும், பெருங்கல் வெற்பன் – பெரிய மலையின் தலைவன், வந்தனன் – வந்தான், எதிர்ந்தனர் – சம்மதித்து விட்டார்கள் (உன் பெற்றோர்கள்), கொடையே – (உன்னை அவனுக்கு) தருவதற்கு, அம் தீம் கிளவி – அழகிய இனியச் சொற்கள், பொலிக நின் சிறப்பே – உன் சிறப்பு மேலும் பொலிக

ஐங்குறுநூறு 303, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
புதுக் கலத்தன்ன கனிய ஆலம்
போகில் தனைத் தடுக்கும் வேனில் அருஞ்சுரம்,
தண்ணிய இனியவாக,
எம்மொடுஞ் சென்மோ, விடலை நீயே.

பொருளுரை:   பாலை நிலத் தலைவனே! புதிய மண் பாத்திரத்தைப் போல் (சிகப்பாக) உள்ள ஆல மரத்தின் இனிய பழங்களை உண்ண வரும் போகில் பறவைகள், பாலை நிலத்தின் கடுமையான வெட்பத்திற்கு அஞ்சி அம்மரத்தை விட்டு விலகாமல் அங்குத் தங்கியிருக்கும். அப்படிப்பட்ட சிரமமான வழியில் என் தோழியுடன் நீ சென்றால், குளிர்ச்சியும் இனிமையும் உனக்குக் கிடைக்கும்.

பதவுரை:  புதுக் கலத்தன்ன – புது மண் பானையைப் போல்,  கனிய – பழங்கள்,  ஆலம் – ஆல மரம், போகில் – போகில் என்ற வகைப்  பறவைகள்,  தனைத் தடுக்கும் – அதைத் தடுக்கும்,  வேனில் – கோடைக் காலம்,  அருஞ்சுரம் – சிரமமான பாலை நிலம்,  தண்ணிய – குளிர்ந்த, இனியவாக – இனியவாக,  எம்மொடுஞ் சென்மோ – என் தோழியுடன் சென்றால், விடலை – பாலை நிலந் தலைவனே, நீயே – நீ

ஐங்குறுநூறு 304, ஓரம்போகியார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய
ஆன் நீர்ப் பத்தல் யானை வெளவும்
கல் அதர்க் கவலை செல்லின், மெல்லியல்
புயல் நெடும் கூந்தல் புலம்பும்,
வயமான் தோன்றல்! வல்லாதீமே.

பொருளுரை:  அறியாமையுடைய இடையர்கள் தங்களின் பசுக்கள் நீர் குடிப்பதற்காகக் கோலினால் பள்ளங்களைத் தோண்டுவார்கள். அதில் நிறையும் நீரை யானைகள் குடிக்கும். பல பிரிவுகள் உள்ள அந்த மலைப் பாதையில் நீ சென்றால், வளமான நீண்டக் கூந்தலை உடைய என் தோழி தனிமையால் வருந்துவாள். குதிரைகள் உடைய தலைவனே! நீ அவ்வாறு செல்லாதே.

பதவுரை:  கல்லாக் கோவலர் – அறியாமையுடைய இடையர்கள், கோலின் தோண்டிய – கோலினால் தோண்டிய, ஆன் – பசு, நீர்ப் பத்தல் – நீர் நிறையும் பள்ளம், யானை வெளவும் – யானைக் குடிக்கும், கல் அதர் – மலைப் பாதை அல்லது கல் நிறைந்தப் பாதை,  கவலை – பிரிவுகள் உடைய பாதை, செல்லின் – சென்றால், மெல்லியல் – மென்மையான என் தோழி, புயல் நெடும் கூந்தல் – வளமான நீண்டக் கூந்தல், புலம்பும் – தனிமையில் வருந்தும், வயமான் – குதிரைகள் உடைய, தோன்றல் – தலைவனே, வல்லாதீமே – நீ செல்லாதே

ஐங்குறுநூறு 306, ஓதலாந்தையார், பாலைத் திணை  – தோழி தலைவனிடம் சொன்னது
வெல் போர்க் குரிசில் நீ வியன் சுரம் இறப்பின்
பல் காழ் அல்குல் அவ்வரி வாடக்
குழலினும் இனைகுவள் பெரிதே
விழவு ஒலி கூந்தல் மாஅயோளே.

பொருளுரை:   போரினை வெல்லும் தலைவனே! அகன்ற காட்டிற்கு நீ சென்றால், மணிகள் கோத்தச் சரங்களை அணிந்த அல்குலில் உள்ள அழகிய வரிகள் வாட, இவள் பெரிதும் வருந்துவாள். குழலைக் காட்டிலும் அதிகமான ஒலியுடன் அழுவாள், விழாக்களின் நறுமணத்தைக் கொண்ட அடர்ந்த கூந்தலையுடைய இந்தக் கருமையான பெண்.

பதவுரை:   வெல் போர்க் குரிசில் – போரினை வெல்லும் தலைவனே,  நீ வியன் சுரம் இறப்பின் – அகன்ற காட்டிற்கு நீ சென்றால், பல் காழ் அல்குல் அவ்வரி வாட – மணிகள் கோத்த சரங்களை அணிந்த அல்குலில் உள்ள அழகிய வரிகள் வாட (அல்குல் – இடை, இடைக்கு கீழ் உள்ள பகுதி),  குழலினும் – குழலைக் காட்டிலும்,  இனைகுவள் – வருந்துவாள்,  பெரிதே –  பெரிதாக, மிகவும், விழவு ஒலி கூந்தல் – விழாக்களின் நறுமணத்தைக் கொண்ட அடர்ந்த கூந்தல்,  மாஅயோளே – கருமையான பெண்

ஐங்குறுநூறு 311, ஓதலாந்தையார், பாலைத் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்,
ஆர் இடைச் செல்வோர் ஆறு நனி வெரூஉம்
காடு இறந்தனரே காதலர்,
நீடுவர் கொல், என நினையும் என் நெஞ்சே.

பொருளுரை:    வேங்கை மரத்தின் மலர்களைப் பறிப்பவர்கள் பஞ்சுரம் என்னும் பாலைப் பண்ணில் பாடினாலும், கடினமான பாதையில் செல்பவர்கள் அஞ்சும் இடமான காட்டுக்குச் சென்ற என் காதலர், அங்கு அதிக நாட்கள் தங்கி விடுவாரோ என்று நினைக்கின்றது என் நெஞ்சு.

பதவுரை:  வேங்கை கொய்யுநர் – வேங்கை மரத்தின் மலர்களைப் பறிப்பவர்கள், பஞ்சுரம் விளிப்பினும் – பஞ்சுரம் என்னும் பாலைப் பண்ணில் பாடினாலும், ஆர் இடைச் செல்வோர் – கடினமான பாதையில் செல்பவர்கள், ஆறு நனி வெரூஉம் – பாதையில் அஞ்சும், காடு இறந்தனரே காதலர் – காட்டுக்குச் சென்ற காதலர், நீடுவர் கொல் என – அங்கு அதிக நாட்கள் தங்கி விடுவாரோ என்று, நினையும் என் நெஞ்சே – நினைக்கின்றது என் நெஞ்சு

ஐங்குறுநூறு 313, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவியின் தாய் செவிலித் தாயிடம் சொன்னது
தெறுவது அம்ம நும் மகள் விருப்பே
உறு துயர் அவலமொடு உயிர் செலச் சாஅய்ப்
பாழ் படு நெஞ்சம் படர் அடக் கலங்க,
நாடு இடை விலங்கிய வைப்பின்
காடு இறந்தனள், நம் காதலோளே.

பொருளுரை:   நெஞ்சு மிகுந்த வருத்தத்தால் சுடுகின்றது.  பெரும் துயரத்துடன்,  உயிரே போகும் படியான துன்பத்துடன் நாம் மெலிந்து நோயுடன் இருக்குமாறு நம்மை விட்டு அகன்று,  தன் காதலனுடன் சென்று விட்டாள் நம் மகள்.  நம் அன்புக்குரியவள் நாடுகளுக்கு இடையே உள்ள காட்டைக்  கடந்து சென்று விட்டாள்.

பதவுரை:  தெறுவது – சுடுகின்றது, அம்ம – அசைச் சொல், நும்மகள் விருப்பே – உன் மகளின் விருப்பம், உறுதுயர் அவலமொடு – பெரும் துயருடனும் வருத்தத்துடனும், உயிர்செல – உயிர் செல்லும்படி,  சாஅய் – மெலிந்து,  பாழ்படு நெஞ்சம் – துன்பப் படும் நெஞ்சம்,  படர்  – நோய்,  அடக் கலங்க – வருந்த,  நாடு இடை – நாடுகளுக்கு இடையே, விலங்கிய வைப்பின் – விலகிய இடத்தில், காடு இறந்தனள் – காட்டைக் கடந்தாள், நம் – நம், காதலோளே – அன்புக்கு உரிய  மகள்

ஐங்குறுநூறு 322, ஓதலாந்தையார், பாலைத் திணை  – தலைவன் சொன்னது
நெடுங் கழை முளிய வேனில் நீடிக்
கடுங்கதிர் ஞாயிறு கல் பகத் தெறுதலின்
வெய்ய வாயின முன்னே, இனியே,
ஒண்ணுதல் அரிவையை உள்ளு தொறும்,
தண்ணிய வாயின, சுரத்திடை ஆறே.

பொருளுரை:   உயர்ந்த மூங்கில்கள் உலருமாறு வேனில் நீடுதலால், மிகுந்த வெட்பத்தையுடைய கதிர்களுடைய ஞாயிறு கற்கள் பிளக்குமாறு காய்வதால், முன்பு வெம்மையாயிருந்தது பாலை நிலத்தின் பாதை. இப்பொழுது அவளை நினைக்கும் பொழுதெல்லாம் அது குளிர்ச்சியாக உள்ளது.

பதவுரை:   நெடுங் கழை – உயர்ந்த மூங்கில், முளிய – காய,  வேனில் – வேனில் காலம்,  நீடி – நீடித்து, கடுங்கதிர் ஞாயிறு – மிக்க வெட்பத்தையுடைய ஞாயிறு, கல் பகத் தெறுதலின் – கற்கள் பிளக்குமாறு எரிந்ததால், வெய்ய வாயின – வெட்பமாக இருந்தது,  முன்னே – முன்பு, இனியே  – இப்பொழுது, ஒண்ணுதல் அரிவையை உள்ளு தொறும் – ஒளி பொருந்திய நெற்றியை உடைய இளம் பெண்ணை என்னும் பொழுதெல்லாம், தண்ணிய வாயின – குளிர்ச்சி  அடைந்தன, சுரத்திடை ஆறே – பாலை நிலத்தின் பாதை

ஐங்குறுநூறு 328, ஓதலாந்தையார், பாலைத் திணை  – தலைவன் சொன்னது
நுண் மழை தளித்தென நறு மலர் தாஅய்த்
தண்ணியவாயினும் வெய்ய மன்ற,
மடவரல் இன் துணை ஒழியக்
கட முதிர் சோலைய காடு இறந்தேற்கே.

பொருளுரை:   மடப்பம் பொருந்திய இனிய துணைவியைப் பிரிந்து, சுரத்தையும் பழமையான சோலைகளையுடைய காடுகளையும் கடந்து வந்த எனக்கு, நுண்ணிய மழைத் துளிகள் பெய்து, நறுமணமான மலர்கள் உதிர்ந்து கிடைக்கும் இந்த இடம் குளிர்ச்சியாக இருந்தாலும், அது வெட்பமாகவே தோன்றுகின்றது.

பதவுரை:  நுண் மழை தளித்தென – நுண்ணிய மழை விழுந்ததால், நறு மலர் – நறுமணமுடைய மலர்கள், தாஅய் – உதிர்ந்து பரந்து, தண்ணியவாயினும் – குளிர்ச்சியாக இருந்தாலும், வெய்ய – வெட்பமாக உள்ளது, மன்ற – அசை, மடவரல் இன் துணை – மடப்பம் பொருந்திய இனிய துணைவி, அழகு பொருந்திய இனிய துணைவி, ஒழிய – பிரிந்து, கட – பாலை நிலம், முதிர் சோலைய காடு – பழமையான சோலைகளையுடைய காடு, இறந்தேற்க – கடந்த எனக்கு

ஐங்குறுநூறு 341,  ஓதலாந்தையார், பாலைத் திணை –  தலைவி தோழியிடம் சொன்னது 
அவரோ வாரார், தான் வந்தன்றே,
குயில் பெடை இன் குரல் அகவ
அயிர்க் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே.

பொருளுரை:   தலைவர் இன்னும் வரவில்லை. ஆனால் இளவேனில் பருவம் வந்து விட்டது. பெண் குயில் தன் இனிய குரலில் பாடுகின்றது. நுண்ணியக் கரு மணலையுடைய ஓடை நடுங்குகின்றது.

பதவுரை:  அவரோ வாரார் – அவர் வரவில்லை,  தான் வந்தன்றே – ஆனால் இள வேனில் வந்து விட்டது,  குயில் பெடை – பெண் குயில்,  இன் குரல் – இனியக் குரல்,  அகவ – பாட,  அயிர் – நுண்ணிய,  கேழ் – கருமையான,  நுண் – நுண்ணுய,  அறல் – ஓடை,  நுண்மணல், நுடங்கு – நடுங்குதல்

ஐங்குறுநூறு 342, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அவரோ வாரார், தான் வந்தன்றே,
சுரும்பு களித்து ஆலும் இரும் சினைக்
கருங்கால் நுணவம் கமழும் பொழுதே.

பொருளுரை:   தலைவர் இன்னும் வரவில்லை.  ஆனால் இள வேனில் வந்து விட்டது.   வண்டுகள், பெரியக் கிளைகளையுடைய நுணா மரங்களின் நறுமணமான மலர்களில் உள்ள தேனைக் குடித்து விட்டு மகிழ்வுடன் பாடுகின்றன.

பதவுரை:  அவரோ வாரார் – அவர் வரவில்லை, தான் வந்தன்றே – ஆனால் இள வேனில் வந்து விட்டது, சுரும்பு களித்து ஆலும் – தேனைக் குடித்து விட்டு மகிழ்வுடன் பாடும் வண்டுகள், இரும் சினை – பெரியக் கிளைகள் உடைய, கருங்கால் – கரிய அடிப்பகுதியை உடைய, நுணவம் – நுணா மரம், கமழும் பொழுதே – மலர்ந்து கமழும் பொழுது

ஐங்குறுநூறு 343, ஓதலாந்தையார், பாலைத் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
அவரோ வாரார், தான் வந்தன்றே,
திணி நிலைக் கோங்கம் பயந்த
அணி மிகு கொழு முகை உடையும் பொழுதே.

பொருளுரை:  தலைவர் இன்னும் வரவில்லை.  ஆனால் இள வேனில் வந்து விட்டது.   திண்மையான கொங்க மரத்தின் மிகவும் அழகான பெருத்த அரும்புகள்  மலர்ந்துள்ளன.

பதவுரை:   அவரோ வாரார் – அவர் வரவில்லை, தான் வந்தன்றே – ஆனால் இள வேனில் வந்து விட்டது, திணி நிலை – திண்மையான நிலை, கோங்கம் – கோங்க மரங்கள், பயந்த – ஈன்ற, அணி மிகு – மிகுந்த அழகு,  கொழு முகை – பெருத்த அரும்புகள், உடையும் பொழுதே – மலருகின்ற பொழுது

ஐங்குறுநூறு 371,  ஓதலாந்தையார், பாலைத் திணை – மகட் போகிய தாய்ச் சொன்னது (மகள் காதலுடன் சென்றப் பின் சொன்னது)
மள்ளர் கொட்டின மஞ்ஞை ஆலும்
உயர் நெடும் குன்றம் படு மழை தலைஇச்
சுர நனி இனிய ஆகுக தில்ல,
அற நெறி இதுவெனத் தெளிந்த என்
பிறை நுதல் குறுமகள், போகிய சுரனே.

பொருளுரை:   பாலை நிலத்து மறவர்களின் கொட்டுகள் முழங்கும் ஒலியைக்கேட்டு மயில்கள் நடனம் ஆடும் உயர்ந்த மலைகளில்,  பெரிய மழைக் கொட்டி, காட்டுப் பாதைகள் இனிமையாக ஆகட்டும். எது அறம் என்று தெளிவாக உணர்ந்த, பிறையைப் போன்ற நெற்றியை உடைய என் சிறிய மகள் போகும் பாதைகள் அவை.

பதவுரை:  மள்ளர் கொட்டின – பாலை நில மறவர்களின் கொட்டு,  மஞ்ஞை ஆலும் – மயில்கள் ஆடும், உயர் நெடும் குன்றம் – உயர்ந்த நெடிய மலைகள், படுமழை தலைஇ – பெரிய மழைக் கொட்டி, சுர நனி – காட்டுப் பாதை, இனிய ஆகுக – இனிமையாக ஆகட்டும், தில்ல – அசைச் சொல், அறநெறி இது வெனத் தெளிந்த  – அற நெறி என்னவென்று தெரிந்த,   என் பிறை நுதல் குறுமகள் – என்னுடைய பிறைப் போன்ற நெற்றியை உடைய மகள், போகிய சுரனே – போன பாலை நிலம்

ஐங்குறுநூறு 375, ஓதலாந்தையார், பாலைத் திணை – மகட் போகிய தாய்ச் சொன்னது (மகள் காதலுடன் சென்றப் பின் வருந்திச் சொன்னது)
இது என் பாவை பாவை, இது என்
அலமரு நோக்கின் நலம்வரு சுடர் நுதல்
பைங்கிளி எடுத்த பைங்கிளி, என்றிவை
காண் தொறும் காண் தொறும் கலங்க,
நீங்கினளோ என் பூங்கணோளே.

பொருளுரை:   பொம்மையைப் போன்ற என் மகளின் பொம்மை இது.  கிளியை எடுத்து வளர்த்த கிளியைப்போன்றவள் என் மகள்.  அவளது பார்வை சுழலும் பார்வை.  அவளது அழகிய நெற்றி ஒளியுடையது.  அவள் விட்டுச் சென்ற பொம்மையையும் கிளியையும் பார்க்கும் பொழுதெல்லாம் நான் கண் கலங்குகின்றேன்.  பூப்போன்ற கண்களையுடைய என் மகள் என்னை விட்டு விட்டுப் போய் விட்டாள்.

பதவுரை:  இது என் பாவை – இது என் பொம்மைப் போன்ற மகளின், பாவை – பொம்மை,  இது என் – இது என், அலமரு நோக்கின் – சுழற்சிப் பொருந்தியப் பார்வை ,  நலம்வரு சுடர் நுதல் – அழகிய ஒளியுடைய நெற்றி, பைங்கிளி எடுத்த பைங்கிளி – பைங்கிளியை எடுத்து வளர்த்த பைங்கிளி (என் மகள்),  என்றிவை – இவை, காண்தொறும் காண்தொறும் கலங்க – காணும் தோறும் நான் அழுகின்றேன், நீங்கினளோ – என்னை விட்டு விட்டு போய் விட்டாளே,  என் பூங்கணோளே – பூவைப் போல கண்களையுடைய என் மகள்

ஐங்குறுநூறு 378, ஓதலாந்தையார், பாலைத் திணை – மகட் போகிய தாய்ச் சொன்னது
செல்லிய முயலிப் பாஅய சிறகர்
வாவல் உகக்கும் மாலையாம் புலம்பப்
போகிய அவட்கோ நோவேன், தேமொழித்
துணையிலள் கலிழும் நெஞ்சின்
இணையேர் உண்கண் இவட்கு நோவதுமே.

பொருளுரை:   மாலைப் பொழுதில், வௌவால்கள் முயன்று தாவிப் பறக்கும் வேளையில், என்னைத் தனிமையில் ஆழ்திவிட்டுச் சென்ற என் மகளுக்காக நான் வருந்த மாட்டேன். ஆனால் என் மகளை நினைத்துத் தவித்து அழும், இனிய சொற்களையுடைய, அழகிய ஒத்த கண்களில் மையிட்ட அவளுடைய தோழிக்காக நான் வருந்துகின்றேன்.

பதவுரை:  செல்லிய – செல்ல, முயலி – முயன்று, பாஅய சிறகர் வாவல் உகக்கும் – தாவிப் பறக்கும் சிறகையுடைய வௌவால்கள், மாலையாம் – மாலைப் பொழுதில், புலம்பப் போகிய அவட்கோ நோவேன் – என்னை தனிமையில் ஆழ்த்திய அவளுக்காக நான் வருந்த மாட்டேன், தேமொழி – இனிய சொற்களையுடையவள், துணையிலள் – தன் தோழியை இழந்தவள், கலிழும் நெஞ்சின் – அழும் நெஞ்சையுடைய, இணை , ஏர் உண்கண் – அழகிய மையிட்ட கண்கள், இவட்கு நோவதுமே – இவளுக்காக வருந்துகின்றேன்

ஐங்குறுநூறு 379, ஓதலாந்தையார், பாலைத் திணை – மகட் போகிய தாய்ச் சொன்னது
தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியில்
இனிது ஆம் கொல்லோ, தனக்கே பனி வரை
இனக் களிறு வழங்கும் சோலை
வயக்குறு வெள்வேல் அவர் புணர்ந்து செலவே?

பொருளுரை:   என்னுடைய மகளுக்கு, தன்னுடைய விருப்பமான தோழியர் சூழ நல்ல ஒரு திருமணத்தை அனுபவிப்பதை விட இனிமையானதா, ஒளிரும் வெள்ளை வேலையுடைய அவளுடைய தலைவனுடன், யானைக் கூட்டங்கள் உலவும் குளிர்ந்த மலைச் சோலை வழியே செல்வது?

பதவுரை:  தன் அமர் ஆயமொடு – தன்னுடைய விருப்பமான தோழிகளுடன், நன் மண – நல்ல திருமணம், நுகர்ச்சியில் – அனுபவிப்பதில், இனிது ஆம் கொல்லோ – இனிமையானதா, தனக்கே – அவளுக்கு, பனி – குளிர், வரை – மலை, இனக் களிறு வழங்கும் சோலை – கூட்டமாக யானைகள் உலவும் சோலை, வயக்குறு வெள் வேல் அவர் புணர்ந்து செலவே – விளங்கும் வெள்ளை வேலை உடைய தலைவனுடன் செல்லுவது

ஐங்குறுநூறு 394, ஓதலாந்தையார், பாலைத் திணை  – தலைவியின் தாய் சுற்றத்தார்க்கு சொன்னது
மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த
அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற,
வெஞ்சுரம் இறந்த அம் சில் ஓதிப்
பெரு மட மான் பிணை அலைத்த
சிறு நுதல் குறுமகள் காட்டிய வம்மே.

பொருளுரை:   மாண்பு இல்லாத கொள்கையுடன் கலக்கத்தினையுடைய துயரைச் செய்த அன்பு இல்லாத அறன் இப்பொழுது அருளையுடையதாயிற்று. வாருங்கள்! வெட்பமான பாலை நிலத்தைக் கடந்த, அழகான மென்மையான கூந்தலையுடைய, பெரிய மடமையுடைய பெண் மானின் நோக்கையும் வென்ற, சிறிய நெற்றியையுடைய, என்னுடைய மகளை உங்களுக்குக் நான் காட்டுகின்றேன்.

பதவுரை:   மாண்பு இல் கொள்கையொடு – மாண்பு இல்லாத கொள்கையுடன்,  மயங்கு துயர் செய்த – கலக்கத்தினையுடைய துயரைச் செய்த, அன்பு இல் அறனும் – அன்பு இல்லாத அறன்,  அருளிற்று – அருளையுடையதாயிற்று, மன்ற – ஓர் அசைச் சொல், வெஞ்சுரம் இறந்த – வெட்பமான பாலை நிலத்தைக் கடந்த, அம் சில் ஓதி – அழகிய சிலவாகிய கூந்தல், பெரு மட மான் பிணை அலைத்த – பெரிய மடமையுடைய  பெண் மானின் பார்வையையும் வென்ற, சிறு நுதல் – சிறிய நெற்றி, குறுமகள் – இளையவள், காட்டிய – காட்டுகின்றேன், வம்மே – வாருங்கள்

ஐங்குறுநூறு 399, ஓதலாந்தையார், பாலைத் திணை – மகட் போகிய தாய்ச் சொன்னது – அவளுடைய மகள் தலைவனுடன் சென்றப் பின், தலைவனின் தாய் மீது உள்ள கோபத்துடன்  கூறியது
நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
எம் மனை வதுவை நன்மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ, மற்றே வென்வேல்
மையற விளங்கிய கழலடிப்
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே?

பொருளுரை:   உன்னுடைய வீட்டில் என் மகளுடைய சிலம்பு கழிக்கும் நோன்பை நடத்தினாய்.  என்னுடைய வீட்டில் அவளுடைய திருமணத்தை நடத்தலாம் என்று  வெற்றி வேலையும் குற்றமில்லாது விளங்கும் கால் வீரக் கழல்களையும் அணிந்த,  பொய்யில் வல்லவனான அந்த இளைஞனின் தாய்க்கு நீங்கள் சொன்னால் என்ன?

பதவுரை:  நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும் – உன்னுடைய வீட்டில் சிலம்பு கழிக்கும் நோன்பைச் செய்தாலும், எம் மனை – என்னுடைய வீட்டில், வதுவை நன்மணம் கழிகென – என்னுடைய வீட்டில் திருமணத்தை நடத்த, சொல்லின் எவனோ – சொன்னால் என்ன ஆகும், மற்றே – மற்றது, வென்வேல்  – வெற்றி வேல், மையற விளங்கிய கழலடி – குற்றமற்ற விளங்கிய கழல்களை அணிந்த,  பொய் வல் காளையை – பொய் சொல்லுவதில் வல்லவனான இளைஞன்,  ஈன்ற தாய்க்கே – பெற்ற தாய்க்கு

ஐங்குறுநூறு 412, பேயனார், முல்லைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது – தொழில் முடிந்தப்பின் வீடு வந்தக் கணவன் சொன்னது
காயா, கொன்றை, நெய்தல், முல்லை,
போது அவிழ் தளவொடு, பிடவு அலர்ந்து, கவினிப்
பூ அணி கொண்டன்றால் புறவே,
பேர் அமர்க் கண்ணி! ஆடுகம் விரைந்தே.

பொருளுரை:  பெரிய அமர்ந்தக் கண்களை உடையவளே! முல்லை நிலத்தில் காயா, கொன்றை, குவளை, முல்லை மற்றும் தலைவ மொட்டுக்கள் பிடவத்துடன் மலர்ந்து, முல்லை நிலத்தை அழகு படுத்துகின்றன.  நாம் அங்கு விளையாடலாம்.  விரைந்து வா.

பதவுரை:  காயா – காயா (ironwood flowers), கொன்றை – சரக்கொன்றை (laburnum flowers), நெய்தல் – குவளை  (blue water lilies), முல்லை – முல்லை (jasmine), போது – மொட்டுக்கள், அவிழ் – திறந்து,  தளவொடு – தளவமோடு (golden jasmine), பிடவு – பிடவுடன் (wild jasmine, bedaly-nut vine), அலர்ந்து – மலர்ந்து,  கவினி – அழகுடன், பூ – மலர்கள், அணி கொண்டன்றால் – அழகு உடையதால்,  புறவே – முல்லைக்காடு, பேர் அமர் – பெரிய பொருந்திய,  கண்ணி – கண் உடையவள்,  ஆடுகம்  –  நாம் விளையாடலாம், விரைந்தே – விரைந்து வா

ஐங்குறுநூறு 435,  பேயனார் , முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நன்றே காதலர் சென்ற ஆறே,
நிலன் அணி நெய்தல் மலரப்
பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே.

பொருளுரை:   உன்னுடைய காதலர் சென்ற வழி நல்ல வழி.  அங்கு நிலத்தை அழகுப்படுத்தும்படி குவளை மலர்கள் மலர்ந்துள்ளன.  பொன் நகைகளைப்போன்ற கொன்றை மலர்களும்,  பிடவ மலர்களும் அங்கே உள்ளன.

பதவுரை:  நன்றே காதலர் சென்ற ஆறே – உன் காதலர் சென்ற வழி நல்ல வழி,   நிலன் அணி – நிலத்தின் அழகு,  நெய்தல் மலரப் – குவளை மலர,  பொலன்அணி – பொன் நகை,  கொன்றையும் (laburnum) பிடவமும் (wild jasmine, bedaly) உடைத்தே. – கொன்றையும் பிடவமும் கொண்டது

ஐங்குறுநூறு 446, பேயனார், முல்லைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
முல்லை நாறும் கூந்தல் கமழ் கொள
நல்ல காண்குவ மாஅயோயே!
பாசறை அரும் தொழில் உதவி நம்
காதல் நல் நாட்டுப் போதரும் பொழுதே.

பொருளுரை:   மாமை நிறமுடையவளே! பாசறையில் தங்கி, கடுமையான போர்த் தொழிலை முடித்து விட்டு, காதலுக்குரிய நம்முடைய நல்ல நாட்டிற்குத் திரும்பி வந்து உன்னுடைய கூந்தலானது மேலும் புதுமணம் கொள்ளும்படியாக நல்லதை நிகழ்த்திக் காண்போம்.

பதவுரை:  முல்லை நாறும் – முல்லையின் மணமுடைய,  கூந்தல் கமழ் கொள – கூந்தல் நறுமணம் கொள்ள, நல்ல – நல்லது, காண்குவம் – நாம் காண்போம்,  மாஅயோயே – மாமை நிறமுடையவளே, மா நிறத்துப் பெண்ணே, பாசறை – போர், அருந்தொழில் – கடினமானத் தொழில், உதவி – உதவி, நம் – நம், காதல் – காதல், நல் நாட்டு – நல்ல நாடு,  போதரும் பொழுதே – வரும்பொழுது

ஐங்குறுநூறு 453, பேயனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும்
வெங்குரல் புள்ளினம் ஒலிப்ப, உதுக்காண்,
கார் தொடங்கின்றால் காலை, அதனால்
நீர் தொடங்கினவால், நெடுங் கணவர்
தேர் தொடங்கின்றால் நம் வயிநானே.

பொருளுரை:   பள்ளங்கள் தோறும் தேரைகள் ஒலிக்கின்றன. மேலே பறவைகள் விரும்பத்தக்க குரலில் ஒலிக்கின்றன. அங்கே பார். மழைக் காலம் துவங்கி விட்டது போல் தோன்றுகின்றது. அதனால் என் நீண்டக் கண்களில் இருந்து நீர் வடிகின்றது. என் கணவரின் தேர் நம்மை நோக்கி வரத் தொடங்கவில்லை.

பதவுரை:  அவல் தொறும் – பள்ளங்கள் தோறும், தேரை தெவிட்ட – தேரைக் கத்த,  மிசை தொறும் – மேலே, வெங்குரல் – விரும்பத்தக்க குரலில், புள்ளினம் ஒலிப்ப – பறவைகள் ஒலித்தன, உதுக்காண் – அங்கேப் பார், கார் தொடங்கின்றால் காலை –  மழைக்காலம் துவங்கி விட்டது,  அதனால் நீர் தொடங்கினவால் – பிரிவால் என் கண்களில் நீர் வடிகின்றது, நெடும் – நீண்ட  (நெடுங் கண் நீர் தொடங்கினவால்), கணவர் தேர் தொடங்கின்றால் நம் வயிநானே – என் கணவருடைய தேர் நம்மை நோக்கி வரத்  தொடங்கவில்லை

ஐங்குறுநூறு 490, பேயனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
அம் தீம் கிளவி தான் தர எம் வயின்
வந்தன்று மாதோ காரே ஆவயின்,
ஆய்த்தொடி அரும் படர் தீர,
ஆய் மணி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே.

பொருளுரை:   பாகனே! அழகிய இனிய சொற்களைப் பேசும், அழகிய தொடி அணிந்த என் காதலியை அடையும் கார்க் காலம் வந்து விட்டது. அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட உயர்ந்தத் தேரை வேகமாகச் செலுத்துவாயாக!

பதவுரை:  அம் தீம் கிளவி – அழகிய இனிய சொற்கள், தான் தர – தான் தர, எம் வயின் வந்தன்று – என்னை அடைய வந்தது, மாதோ – அசைச் சொல்,   காரே – மழை, ஆவயின் – இந்த வேளையில், ஆய்த்தொடி – அழகிய தொடி, தேர்ந்த தொடி, அரும் படர் தீர – பெரும் துயரம் தீர, ஆய் மணி – அழகிய மணிகள், நெடுந்தேர் கடவுமதி விரைந்தே – உயர்ந்த தேரை விரைவாக ஓட்டு

ஐங்குறுநூறு 492,  பேயனார், முல்லைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
நின்னே போலும் மஞ்ஞை ஆல, நின்
நன்னுதல் நாறும் முல்லை மலர,
நின்னே போல மா மருண்டு நோக்க,
நின்னே உள்ளி வந்தனென்
நன்னுதல் அரிவை, காரினும் விரைந்தே.

பொருளுரை:   மயில்கள் உன்னைப் போல் நடனம் ஆடுகின்றன.  உன்னுடைய அழகிய நெற்றியின் நறுமணம், முல்லையின் நறுமணத்தைப் போன்றது.  மான்கள் உன்னைப்போன்ற மருண்டப் பார்வையைக் கொண்டவை.  நான் உன்னை நினைத்தப்படியே, மழைக் கால மேகத்தை விட விரைவாக  ஓடி வந்தேன்.

பதவுரை:  நின்னே போலும் – உன்னைப் போன்ற,  மஞ்ஞை – மயில்,  ஆல – நடனம் ஆட,  நாறும் – நறுமணம் கொண்ட,  முல்லை – முல்லை,  நன் – அழகிய,   நுதல் – நெற்றி,   மா – மான்,  மருண்டு – மருண்டப் பார்வை,   உள்ளி – நினைத்து,  அரிவை – பெண்ணே,  கார் – மேகம்,  விரைந்தே – விரைந்து

ஐங்குறுநூறு 493, பேயனார், முல்லைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
ஏறு முரண் சிறப்ப, ஏறு எதிர் இரங்க,
மாதர் மான் பிணை மறியொடு மறுகக்
கார் தொடங்கின்றே காலை
நேர் இறை முன்கை, நின் உள்ளியாம் வரவே.

பொருளுரை:   மழைக் காலம் துவங்கி விட்டது. காளை மாடுகள் கத்துகின்றன. அதற்குப் பதிலாக இடி இடிக்கின்றது. அழகிய ஆண் மான் ஒன்று தன் துணையுடனும் குட்டியுடனும் குதித்து விளையாடுகின்றது. நேரான முன் கைகளையுடைய உன்னை நினைத்தபடி நான் வந்தேன்.

பதவுரை:  ஏறு முரண் சிறப்ப – காளை மாடுகள் ஒலிக்க, ஏறு எதிர் இரங்க – இடி பதிலாக இடிக்க, மாதர் – அழகிய, மான் – ஆண் மான், பிணை – பெண் மான், மறியொடு – குட்டியோடு, மறுக – விளையாட, கார் தொடங்கின்றே காலை – மழைக் காலம் துவங்கியப் பொழுது, நேர் இறை முன் கை – நேரான முன் கைகள், நின் உள்ளியாம் வரவே – உன்னை நினைத்து நான் வந்தேன்

 

Advertisements

One Response to “தமிழ் உரை – ஐங்குறுநூறு”

 1. Vengada Soupraya Nayaga February 2, 2012 at 5:17 pm #

  Thank you very much for your incredible efforts in safeguarding our Sangam Literature
  which has to be introduced to many Tamil and Tamilophones who are still unaware of their
  own treasure.
  Vengada Soupraya Nayagar.
  Pondicherry.

Comments are closed.